70

உத்தமசோழன் ( 970-985 ) மதுராந்தகப் பேரேரியையும் , சுந்தரசோழன் ( 957-970 ) சுந்தர சோழப் பேரேரியையும் , அவன் மகள் குந்தவையார் குந்தவைப் பேரேரியையும் உருவாக்கினர் .

முதலாம் இராசேந்திரன் கங்கை வெற்றியின் நினைவாகக் கங்கை கொண்ட சோழப் பேரேரியை வெட்டினான் .

அது ‘ நீர் மயமான வெற்றித்தூண் ’ என்று புகழப்பட்டது .

இப்போது பொன்னேரி என வழங்கப்படுகிறது .

சோழநாட்டிலும் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் வேளாண்மை செழிக்கும் பொருட்டுச் சோழர் பல ஏரிகளை ஏற்படுத்தினர் .

6.1.2 நீர்நிலை பாதுகாத்தல்

ஆண்டுதோறும் ஏரிகள் தூர்வாரப்பட்டது .

இதனை ஏரி குத்திக்கட்டுதல் என்பர் .

‘ எம்மூர் ஏரி ஆட்டாண்டு தோறும் கல்லுவிப்போமானோம் ’ என்பது ஒரு கல்வெட்டுத் தொடர் .

( ஆட்டாண்டு – ஆண்டாண்டு ) சில ஏரிகளில் மாதம் தோறும் குழி குத்துதல் என்ற பெயரில் தூர்வாரப்பட்டதை அறிகிறோம் .

( கல்லுவிப்போம் – குழிதோண்டுவோம் )

• தூர் வாருதல்

நங்கவரம் கல்வெட்டில் ஓடத்தைக் குளத்தில இயக்கி நாள்தோறும் ஆறு ஆள் மண் தோண்ட வேண்டும் என்றும் , ஒரு நடைக்கு 140 கூடை மண் கரைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் , ஒரு நாளைக்கு 4 முறை மண் தோண்டிக் கொண்டுவர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது .

நிலங்கள்

வேளாண்மைக்குப் பயன்படும் நிலத்தைப் பூமி , செய் , செறு , குண்டில் , அறை , தடி , துடவை , பட்டி , நன்செய் , புன்செய் , கருஞ்செய் என்று பல்வேறு பெயர்களில் கல்வெட்டுக் கூறுகிறது .

நிலங்களுக்குப் பெயர்கள் வைத்திருந்தார்கள் .

‘ கொற்றன் வயல் என்று பேருடைய நிலம் ' , ‘ பூலாஞ்செய் என்று பெயர் கூவப்பட்ட நிலம் ' என்ற தொடரால் அவைகளை அறியலாம் .

• உடைமை மாறுதல்

ஒருவருக்கு உரிமையான நிலம் அடுத்தவருக்கு விலைக்கு விற்கப்படும் பொழுது , அதன் உடைமையாளர் மாறும்போது , பெரும்பாலும் அந்நிலத்தின் பெயரும் மாற்றமடையும் .

‘ பண்டுடையாரையும் பழம்பேரையும் தவிர்த்து ' நிலம் வாங்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன .

• விளைநிலம்

கமுகந்தோட்டம் , மாந்தோட்டம் , மஞ்சள் விளையும் பூமி , எள்ளு விளையும் பூமி , வழுதிலை கருணை விளையும் பூமி போன்று விளை பொருள்களால் நிலம் சில கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றது .

வழுதிலை அல்லது வழுதுணங்காய் என்பது கத்தரிக்காயைக் குறிக்கும் .

கருணை என்பது ஒரு கிழங்கு வகை .

6.2.1 நிலம் அளத்தலும் வரிமுறையும்

நாட்டில் பயிரிடும் வேளாண்மை நிலம் எவ்வளவு என்று தெரிந்தால்தான் விளைநிலம் எவ்வளவு , அதனால் வரும் வருவாய் காணிக்கடன் எவ்வளவு என்று திட்டவட்டமாகத் தெரியும் .

அதனால் முதலாம் இராசராசன் ( 1001 ) , முதலாம் குலோத்துங்கன் ( 1086 ) , மூன்றாம் குலோத்துங்கன் ( 1216 ) ஆகியோர் காலங்களில் சோழ நாட்டில் நிலம் அளக்கப்பட்டது .

• நிலம் அளத்தல்

நில அளவு செய்த அலுவலர்கள் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் , உலகு அளவித்த திருவடிகள் சாத்தன் , உலகளந்த சோழப் பல்லவரையன் , குளத்தூருடையான் உலகளந்தான் ஆன திருவரங்க தேவன் ஆகியோர் ஆவர் .

அளவு செய்த கோல்கள் ‘ திருவுலகு அளந்த ஸ்ரீபாதக்கோல் ' , ‘ உலகளந்த கோல் ' எனப்பட்டது .

இதன்மூலம் விளைநிலம் மிகச் சரியாகக் கணக்கிடப்பட்டது .

ஊரின் மற்ற பகுதிகளும் அளந்து குறிக்கப்பட்டன .

• வரிமுறை

நிலம் ‘ தரம் ' வாரியாகப் பிரிக்கப்பட்டது .

தரம் இல்லாத நிலங்கள் ‘ தரமிலி ' எனக் குறிக்கப்பட்டு வரி இல்லாமல் ஆக்கப்பட்டன .

சில காரணங்களால் சில காலங்களில் நிலத்தின் தரம் கூட்டப்பட்டது ; அல்லது குறைக்கப்பட்டது .

பயிர் பார்த்து பயிர் நின்ற நிலத்திற்கு மட்டுமே வரி வசூலிக்கப்பட்டது .

வெள்ளத்தாலும் , வறட்சியாலும் பாதிக்கப்பட்ட நிலங்கட்கு வரி குறைக்கப்பட்டது .

‘ வெள்ளச்சாவி , வறட்சிச்சாவிக்கு இறை இல்லை ' எனப்பட்டது .

வரி நெல்லாகவும் , பணமாகவும் வசூலிக்கப்பட்டது .

‘ விதைத்துப் பாழ் , நாற்றுப்பாழ் , நட்டுப்பாழ் ' ஆனால் நெல்லோ பணமோ வரியாக வசூலிக்கக் கூடாது என்று கூறப்பட்டது .

நந்தவனம் , கன்றுமேய் பாழ் , உவர்நிலம் , காடு , மானிய பூமிகள் இவைகட்கு வரியில்லை .

புது ஊர் ஏற்படுத்தி உழவர்களைக் குடியேற்றினால் முதல் நான்காண்டுக்கு நிலவரி இல்லை ; பின்னர் மூன்று ஆண்டுகட்கு மூன்றில் ஒரு பகுதி மட்டுமே நிலவரி வசூலிக்கப்பட்டது .

தானாக நீர் பாய்ந்த நிலத்திற்கு ஒரு மாவுக்கு 12 கலம் நெல்லும் , ஏற்றம் இறைத்துப் பயிர்செய்த நிலத்திற்கு ஒரு மாவுக்கு 6 கலம் நெல்லும் வரியாகப் பெறப்பட்டதாக ஒரு கல்வெட்டுக் கூறுகிறது .

6.2.2 பயிரிடலும் விளைச்சலும்

நில உடைமையாளர்கள் தாங்களாகவே பயிர் செய்யலாம் .

அல்லது பிறரைக் கொண்டு பயிர் செய்விக்கலாம் .

அவர்கள் உழுதுண்போர் , உழுவித்துண்போர் எனப்பட்டனர் .

கல்வெட்டுகளில் ` பயிர்செய்தும் செய்வித்தும் ' ` நிலம் உழுதும் உழுவித்தும் ' என்றும் குறிக்கப்படுகின்றன . பயிரிடும் உரிமையைக் ` காராண்மை ' என்றும் , நில உரிமையை ` மீனாட்சி ' என்றும் குறித்தனர் .

• நிலம் திருத்துதல்

பயிர் செய்யத் தகுதியற்ற நிலங்களைப் பயிர் நிலமாக மாற்றும் முயற்சிகள் பல நடைபெற்றுள்ளன .

‘ பிரம்ம தேசத்துப் புறக்காலில் காடுவெட்டிப் பயிர் செய்ய ஒண்ணாது நின்ற நிலத்தைக் காடுவெட்டிக் கட்டை பறித்து மேடும் தாழ்வும் ஒக்க இட்டு ஆறும் அடைத்து பயிர்நிலமாகத் திருத்தி ' அவ்வூரில் நிலம் பயிர் செய்யத் தகுதி ஆக்கியதைக் கல்வெட்டு ஒன்று விளக்குகிறது .

( ஒண்ணாது - இயலாது , ஒக்க - சமமாக ) .

வெள்ளப் பெருக்கால் அழிந்த நிலங்களையும் சரி செய்துள்ளனர் .

‘ ஆற்றுப் படுகையில் ஆறு உடைந்து மணலிட்டு மணல்மேடாய்க் கிடந்த நிலம் '

` காவேரி உடைந்து மடுவாய் நீர்நிலை ஆன நிலம் '

ஆகியவைகளைத் திருத்தி வேளாண்மைக்கு உரிய நிலங்கள் ஆக்கினர் .

( மடு - பள்ளம் )

• இருவகைப் பயிர்கள்

பயிர்கள் வான் பயிர் , புன்பயிர் என்று இரண்டு வகையாக அழைக்கப்பட்டன .

நெல் , கரும்பு , வாழை , தெங்கு , கமுகு , மா , பலா , மஞ்சள் , செங்கழுநீர் , கொழுந்து ஆகியவை வான் பயிர்கள் எனப்பட்டன .

மானவாரி , புழுதிநெல் , எள் , வரகு , பருத்தி , ஆமணக்கு ஆகியவை புன்பயிர்கள் எனப்பட்டன .

வான்பயிருக்கு வரி அதிகமாகவும் , புன்பயிருக்கு வரி குறைவாகவும் விதிக்கப்பட்டது .

• விளைச்சல்கள்

ஒரு போகம் விளைவு பூ எனப்பட்டது .

இது முதற்பூ , இடைப்பூ , கடைப்பூ என அழைக்கப்பட்டது .

புதியதாகப் பயிர் செய்தால் வம்பு எனப்பட்டது .

பருவத்திற்கு ஏற்ப குறுவை , சம்பா , கார் , பசானம் , தாளடி , மறு , கார்மறு என அவை அழைக்கப்பட்டன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1 ) உணவை உயிர் என்று பாடிய சங்கப் புலவர் யார் ?

( விடை )

2 ) கிணறு தோண்டுவதைப் பற்றிய பண்டைய தமிழ் நூலின் பெயர் என்ன ?

( விடை )

3 ) குடமுருட்டி ஆற்றின் பழைய பெயர் என்ன ?

( விடை )

4 ) வீரநாராயணன் ஏரியை வெட்டியது யார் ?

( விடை )

5 ) ' நீர் மயமான வெற்றித் தூண் ' என்று புகழப்பட்ட ஏரி எது ?

( விடை )

6 ) ஏரிகள் தூர் வாருவதை எவ்வாறு அழைப்பர் ?

வணிகக் குழுக்கள்

கல்வெட்டுகளில் பல்வேறு வணிகக் குழுவினர் பெயர்கள் காணப்படுகின்றன .

நானாதேசி , திசையாயிரத்து ஐநூற்றுவர் , மணிக்கிராமத்தார் , ஆயிரவர் , பன்னிரண்டார் , இருபத்துநான்கு மனையார் , நகரத்தார் , வளஞ்சியர் , அஞ்சு வண்ணம் , சித்திரமேழிப் பெரியநாடு என அவர்கள் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன .

நானாதேசி என்போர் எல்லா நாடுகட்கும் சென்று வணிகம் செய்வோர் .

திசையாயிரம் என்பது வணிகர் செல்லும் எல்லாத் திசைகளும் என்று பொருள்படும் .

ஐநூற்றுவர் என்பது ஐந்நூறு வணிகர்களைக் குறிக்கும் .

கல்வெட்டுகள் அவர்களைப் பஞ்சசதவீரர் என்று கூறுகின்றன .

மணிக் கிராமத்தார் என்னும் வணிகக் குழுவினர் பல ஊர்களில் இருந்துள்ளனர் .

' கொடும்பாளூர் மணிக்கிராமத்தார் ' என்போர் அவர்களில் ஒருவர் .

மணிக்கிராமம் என்பது வணிகர்க்குரிய பட்டம் என்று ஒரு கல்வெட்டால் அறிகிறோம் .

' இரவி கொற்றனாகிய சேரமான் லோகப்பெரும் செட்டிக்கு மணிக்கிராமப்பட்டம் கொடுத்தோம் ' என்பது ஒரு கல்வெட்டுத் தொடர் .

‘ அஞ்சு வண்ணம் ' என்பது இசுலாமிய வணிகக்குழு என்பர் .

வெளிநாட்டில் இருந்த தமிழ்வணிகர் நலன் காக்கவே முதலாம் இராசேந்திரன் கடாரத்தின்மீது படையெடுத்தான் என்பர் .

வணிகக்குழு

கல்வெட்டு

6.3.1 வணிகக் குழுக்கூட்டம்

பல ஊர்களில் வணிகர்கள் கூட்டம் கூடியதைப் பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன .

அக்கூட்டத்தில் கூடியவர்கள் பற்றிய விபரத்தைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன . ஈரோடு மாவட்டம் சர்க்கார் பெரியபாளையத்திலும் , சிவகங்கை மாவட்டம் பிரான்மலையிலும் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பெரும் வணிகக் கூட்டங்கள் கூடியுள்ளன .

அவர்களைப் பின்வருமாறு கல்வெட்டுக்கள் கூறுகின்றன .

( 1 ) நான்கு திசை சமஸ்தலோக பதினெண் விஷயத்தார் ,

( 2 ) ஏறுசாத்து , இறங்கு சாத்து விளங்கு திசையாயிரத்து ஐநூற்றுவர் ,

( 3 ) நாடு , நகரங்களில் திசைவிளங்கு திசையாயிரத்து ஐநூற்றுவர் ,

( 4 ) கேரளசிங்க வளநாட்டு அருவிமாநகரமான குலசேகரபட்டினத்து நகரத்தார்

( 5 ) திருக்கோட்டியூர் மணியம்பலத்து நகரத்தார் .

( 6 ) ஐம்பொழில் வளநாட்டு கல்வாயல் நாட்டு சுந்தரபாண்டியபுரத்து நகரத்தார்

( 7 ) மண்டலிகள் கம்மரப் பெருந்தெரு நகரத்தார்

( 8 ) கருவூர் , கண்ணபுரம் , பட்டாலி , தலையூர் , இராசராசபுரம் , கீரனூர் உள்ளிட்ட கொங்கு நகரத்தார்

ஆகியவர்களைப் பிரான்மலைக் கல்வெட்டுக் கூறுகிறது .

• சித்திரமேழி

வணிகர்குழுக் கூட்டம் பெரும்பாலும் ‘ சித்திரமேழிப் பெரியநாட்டார் சபை ' என்று கூறப்படும் .

வணிகர் குழுக் கூட்டம் பற்றிய கல்வெட்டுகளில் வணிகர்களுக்குரிய தனி மெய்க்கீர்த்தி கூறப்பட்டிருக்கும் .

‘ தென்தமிழ்வடகலை தெரிந்துணர்ந்து

நீதிசாத்திர நிபுணர்ஆகி

இன்சொல்லால் இனிதளித்து

வன்சொல்லால் மறங்கடிந்து

செங்கோலே முன்னாகவும்

சித்திரமேழியே தெய்வமாகவும்

செம்பொற்பசும்பையே வேலியாகவும்

உன்னியதுமுடிக்கும் ஒண்டமிழ்வீரர்

வாட்டம் இன்றிக் கூட்டம் பெருகி '

கூடியதாக அவர்கள் மெய்க்கீர்த்திப் பகுதிகள் உள்ளன .

அவர்கள் ஐம்பொழில் பரமேசுவரியை வணங்குபவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது .

• வணிகர் திருப்பணி

தமிழக வணிகர்களின் பக்திப் பெருமையை அவர்கள் வைத்துக் கொண்டிருந்த பெயர்களே காட்டும் .

‘ காடையூரில் சிறியான் பிள்ளையான பிறைசூடும் பெருமாள் '

‘ முத்தூர் வியாபாரி மன்றுள் ஆடுவான் சம்பந்தப் பெருமாள் '

‘ கரையான் அடிக்கீழ்த்தளம் சடையன் நம்பியான சேரமான் தோழன் '

என்பன சில வணிகர் பெயர்களாகும் .

நெல்லைப் போல் இரு பங்கு அரிசிக்கும் , பருத்தியைப் போல் இரு பங்கு நூலுக்கும் மகமை நிர்ணயம் செய்யப்பட்டது .

சந்தனம் , சவ்வாது , பன்னீர் , அகில் ஆகியவற்றிற்கு மகமை அதிகமாக இருந்தது .

இந்த மகமை மூலம் பல கோயில்களில் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தனர் .

திருப்பணிகள் பலவற்றையும் மேற்கொண்டனர் .

இத்திருப்பணிகள் கிழக்காசிய நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன .

இவர்கள் அமைத்த கோயில்கள் தேசி விநாயகர் கோயில் , தேசீசுவரம் , பதினெண் விஷய விண்ணகரம் என அழைக்கப்பட்டன .

இக்கோயில்கட்கு வணிகர் மட்டுமின்றி அவர்கள் மனைவியரும் கொடையளித்தனர் .

இதனைக்

‘ காங்கயநாட்டு வியாபாரி சொக்கன் மனைக்கிழத்தி தேவி '

‘ அறுவை வாணிகன் எழுவன் பிடவன் மணவாட்டி உத்தி ’

என்ற கல்வெட்டுத் தொடர்களால் அறிகின்றோம் .

தொண்டை மண்டலத்துப் பழுவூர்க் கோட்டம் பூதலப்பட்டு பீமீசுரமுடையார் கோயிலுக்கு ` நாவலன் பெருந்தெருவில் நானாதேசத்தில் அம்பத்தாறு தேசத்தில் அய்யாவளி சாலுமூலை பெக்கண்டாரும் , பலபட்டடை யாரும் , அளநாட்டு ராசசிம்ம சோழீசுவரர் கோயிலுக்கு ` நாலு நகரம் பதினெண் விஷயத்தாரும் , பதினெட்டு ராச்சியத்தில் பதினெண் விஷயத்தாரும் , தரகரும் , நாட்டுச் செட்டிகளும் , தளச் செட்டிகளும் ' அறக்கொடைகள் அளித்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன .

வணிகப் பொருள்கள்

வணிகப் பொருள்களை வண்டிகளிலும் , பொதி எருதுகளின் மீதும் ஏற்றிச் சென்றுள்ளனர் .

அவைகளின் மூட்டைகள் பொதி என்றும் , பாக்கம் என்றும் அழைக்கப்பட்டன .

தலைச்சுமையாகவும் பொருள் கொண்டு செல்லப்பட்டது .

பொதிகள் மூலைப்பொதி , நிசப்பொதி என இருவகைப்பட்டன .

6.4.1 விற்பனையும் வாங்குதலும்

வணிகர்கள் ஓர் ஊருக்குப் பொருள்களைக் கொண்டு சென்று விற்பதுடன் , அங்கு கிடைக்கும் பொருள்களைத் தம் ஊர்க்கும் வாங்கி வந்தனர் . எனவே அவர்கள் இருவழி வணிகமும் செய்தனர் எனலாம் .

ஒரு கல்வெட்டு

' தீவாந்தரங்களில் வியாபாரிகட்கும் , பட்டணங்

களில் நாநாதேசி வியாபாரிகளுக்கும் சரக்கு

வேண்டினபடி வேண்டுவார்க்கு விற்றும் மறு

சரக்குக் கொண்டும் '

என்று கூறுகிறது .

6.4.2 சந்தைப் பொருள்கள்

வணிகப் பொருள்கள் சாத்து எனப்படும் .

அதனால் வணிகர்கள் சாத்தர் எனப்பட்டனர் .

ஐம்பெரும் காப்பியத்துள் ஒன்றான மணிமேகலையை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எனப்பட்டார் .

கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும் பெயராகும் .

தானியங்கள் 18 வகைப்படும் என்பர் .

ஏற்றுமதிப் பொருள்கள் ஏறுசாத்து என்றும் , இறக்குமதி பொருள்கள் இறங்குசாத்து என்றும் கூறப்படும் .

சோழநாட்டு வணிகப் பொருளுக்குப் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது .

வணிகக்குழு

குறியிடுகள்

கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டுப் பிரான்மலை என்னும் திருக்கொடுங் குன்றத்தில் மிகப் பெரிய வணிகச் சந்தை கூடியது .

அங்கு விற்கப்பட்ட பொருள்களை அக்கல்வெட்டு பட்டியலிட்டுக் காட்டுகிறது .

உப்பு , அரிசி , பயிற்றம் , அவரை , ஆமணக்கு , பாக்கு , மிளகு , மஞ்சள் , சுக்கு , வெங்காயம் , கடுகு , சீரகம் , இரும்பு , பருத்தி , நூல் , புடவை , மெழுகு , தேன் , சந்தனம் , அகில் , பன்னீர் , சவரிமயிர் , கற்பூரத்தைலம் , சாந்து , புனுகு , சவ்வாது , மாடு , குதிரை , யானை ஆகியவை விற்கப்பட்டதாக அக்கல்வெட்டுக் கூறுகிறது .

தேன் , பன்னீர் ஆகியவை குடத்திலும் , சாந்து , புனுகு , சவ்வாது ஆகியவை கொம்பு மூலமும் கொண்டு வரப்பட்டன .

தொகுப்புரை

உலகில் மிக இன்றியமையாத தொழிலாக விளங்கிய வேளாண்மை பற்றியும் அதன் அடிப்படையில் எழுந்த வணிகம் பற்றியும் இதுவரை படித்தீர்கள் , வேளாண்மைத் தொழில் சிறந்து விளங்கத் தேவையான ஆறுகள் , ஏரிகள் , கிணறுகள் போன்ற நீர்நிலைகளை முறையே சோழ , பாண்டிய , பல்லவ மன்னர்கள் ஏற்படுத்தினர் .

ஏரிகளைத் தூர்வாரிப் பாதுகாத்தனர் .

கல்வெட்டுகளில் காணப்படும் பல்வேறு வணிகக்குழுக்கள் , வணிக ஊர்கள் , வணிகத் தளங்கள் , வணிகப் பெருவழிகள் , சந்தைப் பொருள்கள் , வணிகர் சமயத் தொடர்பு முதலியவை பற்றிய செய்திகள் பண்டைத் தமிழர்கள் வாணிகத்தில் சிறந்திருந்ததை வெளிப்படுத்துகிறது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1 ) ‘ அஞ்சு வண்ணம் ’ என்றால் என்ன ?

( விடை )

2 ) குடத்தில் கொண்டு வரப்பட்ட வணிகப் பொருட்கள் எவை ?

( விடை )

3 ) வணிகர் குழுக் கூட்டம் எவ்வாறு அழைக்கப்பட்டது ?

( விடை )

4 ) வணிகப் பொருள்களை எவற்றின் மீது ஏற்றிச் சென்றனர் ?

( விடை )

5 ) ஏற்றுமதிப் பொருள்களும் இறக்குமதிப் பொருள்களும் எவ்வாறு அழைக்கப்பட்டன ?

தமிழகப் பண்பாட்டு வரலாறு

பண்பாடு - ஒரு விளக்கம்

பாடமுன்னுரை

பொதுவாகப் பண்பாடு ( Culture ) என்பதைப் பற்றிப் பல்வேறு வகையான கருத்துகள் கூறப்படுகின்றன .

நாகரிகத்திற்கும் ( Civilization ) பண்பாட்டிற்கும் வேறுபாடு தெரியாமல் நாகரிகக் கூறுகளைப் பண்பாட்டுக் கூறுகளாகக் குறிப்பிடுகின்றனர் .

எனவே பண்பாடு என்றால் என்ன என்பதனைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது .

மேலும் தமிழர் பண்பாடு பற்றிப் பல பாடங்கள் அமைய உள்ளன .

அதனால் , பண்பாடு என்பதனைப் பற்றி ஒரு தெளிவான , முழுமையான விளக்கம் தேவை என்பதனை உணர்ந்து இந்தப் பாடம் உருவாக்கப்பட்டுள்ளது .

இந்தப் பாடத்தில் பண்பாடு என்றால் என்ன என்பது பற்றிய விளக்கம் , பண்பாட்டின் வகைகள் , பண்பாட்டின் கூட்டுவடிவங்கள் , பண்பாட்டின் எல்லை , பண்பாட்டின் மாற்றங்கள் முதலியன எடுத்துக் காட்டுகளுடன் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன .

பண்பாடு - ஒரு விளக்கம்

சமூக இயல் அறிஞர்களின் ( Social Scientists ) கருத்தின் படி , பண்பாடு என்பது , வாழ்க்கை முறை ( way of life ) என்பதாகும் .

ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு .

ஒரு சமுதாயத்தில் வாழுகின்ற பெரும்பான்மை மக்களின் ஒருமித்த நடத்தைகளையும் எண்ணங்களையும் அது வெளிப்படுத்தும் .

ஒரு சமுதாயத்தில் அமைந்துள்ள கலை , நம்பிக்கை , பழக்கவழக்கங்கள் , மொழி , இலக்கியம் , விழுமியங்கள் ( Values ) முதலியன அந்தச் சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகள் எனப்படும் .

பண்பாட்டு வாயில்கள் மனிதன் சமுதாயத்தின் ஓர் அங்கம் .