72

உலகளாவிய நிலைகளிலும் சில பண்பாட்டுக் கூறுகள் அமைந்திருக்கும் .

1.5.1 உலகு போற்றும் பண்பாடு ( International Culture )

சில பண்பாட்டுக் கூறுகள் , குறிப்பிட்ட சில பண்பாட்டிற்கே உரியன .

சில ஒன்றிற்கு மேற்பட்ட பல பண்பாட்டிற்குப் பொதுவானவை .

சில பண்பாட்டுக்கூறுகள் உலகம் முழுவதும் பரவி உள்ளன .

குடியேற்ற நாடுகளாகிய ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து , தென் ஆப்ரிக்காவின் பகுதிகள் ஆகியவற்றில் , தாய்நாடாகிய இங்கிலாந்தின் பண்பாட்டுக் கூறுகளும் , ஆங்கில மொழியும் இருக்கின்றன .

இதனால் , ஆடை அணியும் முறை , இசை , விளையாட்டு முதலியவற்றில் ஒரு பொதுத்தன்மை அமைந்துள்ளது .

இவற்றில் சில உலகம் முழுவதும் பரவியுள்ளன .

• உலகளாவிய தமிழரின் பொதுத்தன்மை

இதைப்போல குடியேற்ற நாடுகளாகிய மொரீசியஸ் , தென் ஆப்பிரிக்கா , ரியூனியன் , பர்மா , மலேயா , சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் வாழும் தமிழர்களிடமும் தமிழ் மொழியும் , தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளாகிய தமிழர்களின் நம்பிக்கைகளும் , பழக்க வழக்கங்களும் , வழிபாட்டு முறைகளும் , சமயச் சடங்குகளும் பெருமளவில் பின்பற்றப்படுகின்றன .

இவற்றால் உலகளாவிய அளவில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே பயன்படுத்தும் மொழி , பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றிடையே ஒரு பொதுத்தன்மை ஏற்பட்டுள்ளது .

குடியேற்றம் உலகப் பொதுப் பண்பாட்டுக் கூறுகளை உருவாக்குகின்றது .

தற்காலத்தில் பெருகிவரும் தகவல் தொடர்புச் சாதனங்களும் உலகப் பொதுப்பண்பாட்டுக் கூறுகளை உருவாக்குவதில் துணை செய்கின்றன .

1.5.2 நாடு போற்றும் பண்பாடு

ஒரு நாட்டில் வாழ்வோர் அவர்கள் வாழும் நிலம் , சூழல் , பழக்க வழக்கங்கள் , நடவடிக்கைகள் , நம்பிக்கைகள் , உணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையாக ஒரு தனித்தன்மை வாய்ந்த பண்பாட்டை உருவாக்கிக் கொள்வர் .

அப்பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டே அவர்களை அடையாளம் காண இயலும் .

இதை நாட்டுப் பண்பாடு என்பர் .

மேற்குறிப்பிட்டவற்றின் அடிப்படையிலே , இந்தியப் பண்பாடு , சப்பானியர் பண்பாடு , அமெரிக்கப் பண்பாடு என்று சுட்டுவர் .

• இந்தியப் பண்பாடு

நெற்றியில் பொட்டு இடல் , திருமணத்தில் , விழாக்களில் , சடங்குகளில் மலருக்குக் கொடுக்கும் சிறப்பு முதலியன இந்திய நாட்டின் பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப்படுகின்றன .

• தமிழ்நாட்டுப் பண்பாடு

ஆடை அணிதல் , உணவுமுறை , பழக்க வழக்கங்கள் , நம்பிக்கை , வழிபாடு ஆகியவற்றில் தமிழர்களுக்கு என சில தனித்தன்மை அமைந்துள்ளது .

ஆடவர் வேட்டி அணிதல் , தலைப்பாகை அமைத்தல் , இளம் மங்கையர் தாவணி அணிதல் , முகத்தில் மஞ்சள் பூசுதல் , திருமணத்தின்போது கணவன் மனைவிக்குத் தாலி கட்டுதல் , மாட்டுப்பொங்கல் முதலியன தமிழர்களுக்குரியவை .

இக்கூறுகள் தமிழ்நாட்டுப் பண்பாட்டை வெளிப்படுத்துவன .

1.5.3 சமுதாயப் பண்பாடு ( Sub Culture )

ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு .

ஒரு நாட்டில் வாழ்வோர் , அந்த நாட்டிற்கு உரியதான தேசியப் பண்பாட்டில் கலந்து கொள்வார்கள் .

அதே நாட்டில் வாழும் சமுதாயக் குழுக்கள் , பிரிவுகள் , தாம் சார்ந்த சமுதாயத்திற்கு உள்ளேயே , தமது சொந்தப் பண்பாட்டு மாதிரிகளை உருவாக்குவார்கள் .

இதை சமுதாயப் பண்பாடு ( Sub - Culture ) என்று குறிப்பிடுவார்கள் .

பெரிய நகரங்களில் , தெருக்களில் சுற்றித்திரியும் இளைஞர்கள் ( Teenage Street Gang ) அவர்களாகவே சில பண்பாட்டுக் கூறுகளை உருவாக்கிக் கொள்வதும் உண்டு .

ஒரு நாட்டினுள் வாழும் , ஒவ்வொரு பிரிவினரும் அல்லது ஒவ்வொரு சாதியினரும் , மலைவாசிகள் போன்ற பழங்குடியினரும் தங்களின் நம்பிக்கைகள் , பழக்க வழக்கங்கள் , சடங்குகள் முதலியவற்றின் அடிப்படையில் தங்களுக்கு என சில பண்பாட்டுக் கூறுகளை அமைத்துக் கொள்வர் .

சமுதாயமும் பண்பாடும்

அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் , அரசியல் , சமூக மாற்றங்களினாலும் உலகம் முழுவதும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன .

இருப்பினும் , சில நாடுகள் , தங்களது , பண்பாடுகளைத் தனித் தன்மையுடன் பாதுகாத்து வருகின்றன .

எடுத்துக்காட்டாக , திபேத்திலுள்ள திபேத்தியர்கள் , தங்கள் பழைய பண்பாட்டை , இன்றைக்கும் தனித்தன்மை கெடாதவாறு பாதுகாத்து வருகின்றனர் .

1.6.1 பன்முகப் பண்பாடு ( Multiculture )

இங்கிலாந்து , அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளிலும் , வணிகம் , அலுவலகப்பணி ஆகியவை மிகுந்த நகரங்களிலும் பல நாட்டவர்களும் , பல மாநிலத்தவரும் வந்து குடியேறியமையால் , பல நாட்டுப் பண்பாடுகளும் கலந்துள்ளன .

எனவே , பல நாட்டுப் பண்பாடுகளின் சங்கமமாக , அந்த நாடுகளின் பண்பாடுகள் அமைந்துள்ளன .

எனவே , அத்தகைய பண்பாட்டைப் பன்முகப் பண்பாடு என்று அழைக்கின்றனர் .

1.6.2 ஒன்றுபடும் பண்பாடு

அரசியல் , பொருளாதாரம் , வணிகம் போன்ற காரணங்களுக்காக வேற்று நாடுகளின் குடியேற்றங்கள் ( Migration ) பல நாடுகளில் ஏற்பட்டன .

அவ்வாறு வந்தடைந்த நாடுகளில் , எதனுடைய பண்பாடு செல்வாக்குப் பெற்றிருந்ததோ , அதன் பண்பாட்டுக் கூறுகளோடு பிற பண்பாட்டுக் கூறுகள் ஒன்றிப் பிணைந்த ( assimilated ) ஒரு புதுவகைப் பண்பாடு தோன்றுகிறது .

தமிழரும் பிறரும்

தமிழ்நாட்டில் , நாயக்கர் காலத்திலும் , மராட்டியர் காலத்திலும் , அரசியல் படையெடுப்புகளைத் தொடர்ந்து வந்து குடியேறிய தெலுங்கர்கள் , மராட்டியர்கள் போன்றவர் , இன்று , இனம் பிரித்து அறியாதவாறு , பெரும் அளவில் தமிழர் பண்பாட்டுடன் ஒன்றிவிட்டனர் .

1.6.3 உலகத் தமிழரும் தமிழ்ப் பண்பாடு

மேற்குறிப்பிட்டவாறு , குடியேறியவர்களில் சிலர் , சில நாடுகளில் , குடியேறிய நாட்டுப் பண்பாடுடன் ஒன்று பட்டாலும் , தங்கள் பண்பாட்டின் தனித் தன்மையையும் ( Individual Identity ) காப்பாற்றி வருகின்றனர் .

உலகநாடுகள் பலவற்றில் குடியேறிய சீக்கியர்கள் இன்றளவும் தங்கள் பண்பாட்டைப் பாதுகாத்து வருகின்றனர் .

• புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள்

தமிழர்கள் உலகத்தின் பல பகுதிகளிலும் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர் . தாம் வாழும் பகுதிகளில் , தாய்த் தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளை அவர்கள் பாதுகாத்துப் பின்பற்றி வருகின்றனர் .

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் , தங்களை அடையாளம் காட்டவும் , தங்கள் தனித்தன்மையைப் புலப்படுத்தவும் , தங்கள் பண்பாட்டுப் பெருமையை உணர்ந்து பெருமைப்படவும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் பலவற்றை இன்றளவும் போற்றி வளர்த்து வருகின்றனர் .

இலங்கை , மலேசியா , சிங்கப்பூர் , பர்மா , மொரீசியஸ் , ரீயூனியன் , தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் பலவற்றைப் பாதுகாத்து வருகின்றனர் .

தமிழ்க் கடவுளாகக் கருதப்படும் முருகன் வழிபாடும் , முருகன் கோயில்களும் தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் இடம் பெற்றுள்ளன .

சிறு தெய்வங்களாகிய , மாரியம்மன் வழிபாடும் , பச்சையம்மன் வழிபாடும் , காவடி எடுத்தல் போன்ற சமயச் சடங்குகளும் பின்பற்றப்படுகின்றன .

தாங்கள் குடியேறிய நாடுகளில் கூட , திருநெல்வேலி , சேலம் போன்ற தமிழ்நாட்டு ஊர்களின் பெயர்களையே இட்டுள்ளனர் .

தாமும் தமிழ்ப் பெயர்களையே கொண்டுள்ளனர் .

இவ்வாறு , பிறநாடுகளிலும் தங்கள் பண்பாட்டைப் பெரும் அளவில் பாதுகாத்து வருகின்றனர் .

அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடுவதும் , தமிழ்ச் சங்கங்கள் அமைப்பதும் , விழாக்காலங்களில் , தமிழ்ப்பண்பாட்டின் கூறுகளாகிய , புடவை அணிதல் , பூச்சூடுதல் , வேட்டி கட்டுதல் , பூசை செய்தல் போன்றவற்றால் தங்கள் பண்பாட்டின் தனித்தன்மையைக் காத்து வருகின்றனர் .

பண்பாட்டு மாற்றங்கள்

அறிவியல் கண்டுபிடிப்புகளால் , இன்று உலகம் ஒரு சிறு கிராமமாகச் ( Global Village ) சுருங்கி விட்டது .

இதனால் , நாடுகள் இடையேயும் , மக்கள் இடையேயும் இடைவெளி குறைந்து விட்டது .

தொடர்புகள் மிகுந்துள்ளன .

இவற்றால் , மனிதச் சிந்தனைகளிலும் , பழக்க வழக்கங்களிலும் , நம்பிக்கைகளிலும் , சடங்குகளிலும் , வாழ்க்கை முறைகளிலும் சமுதாய அமைப்புகளிலும் , பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன .

இவை , கருத்துப் பரிமாற்றம் , பண்டப் பரிமாற்றம் ஆகியவற்றோடு , பண்பாட்டுக் கூறுகளிடையேயும் பரிமாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன .

இதனால் , நீண்ட நெடுங்காலமாகத் தனித்தன்மை சிதையாதவாறு பாதுகாக்கப்பட்டு வந்த பண்பாடுகளிடையே கூட பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன .

புதிய கண்டுபிடிப்புகள் , தொழில் புரட்சியை ஏற்படுத்தின .

இதனால் , தொழில் நிறுவனங்களில் , பல பண்பாட்டுப் பிரிவினர் கலந்து பணியாற்றும் புதிய சூழல்கள் ஏற்பட்டன .

இப்புதிய சூழல் மொழிக்கலப்பு , பண்பாட்டுக் கலப்பு , நம்பிக்கைகள் , சிந்தனைகள் ஆகியவற்றில் மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தின .

இம்மாற்றங்கள் , பண்பாடுகளின் இடையேயும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின .

முன்னேறாத நாடுகளில் ( Underdeveloped ) இருந்தும் , முன்னேறிக் கொண்டிருக்கும் ( Developing ) நாடுகளிலிருந்தும் , முன்னேறிய ( Developed ) நாடுகளுக்கு வணிகம் , அலுவலகப் பணி போன்றவற்றிற்குச் செல்வோர் , அந்த நாடுகளின் பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொண்டு வாழ்கின்றனர் .

அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழுகின்ற பிறநாட்டவர் , அமெரிக்கர்களின் வாழ்க்கை முறைகள் பலவற்றை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் .

1.7.1 புதிய சூழலும் தமிழர் பண்பாடும்

அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்ட புதிய சூழலில் , நவீன கருவிகள் கொண்டு மேற்கொள்ளும் செயல்களில் தமிழர்களிடையே பல மரபுவழி பண்பாட்டுக் கூறுகள் மறைந்துவிட்டன .

அந்நியர் படையெடுப்புகளாலும் , அந்நிய ஆதிக்கத்தினாலும் அவற்றின் வாயிலான குடிபெயர்ப்புகளினாலும் , புறப் பண்பாட்டுத் தாக்கம் அமைந்தது .

அதனாலும் , தமிழர்களிடையே பண்பாட்டு நெகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்பட்டன .

• படையெடுப்பு

இசுலாமியர் படையெடுப்பு , நாயக்கர் படையெடுப்பு , டச்சுக்காரர் , போர்த்துகீசியர் , பிரெஞ்சுக்காரர் , ஆங்கிலேயர் போன்ற அந்நியர்களின் ஆக்கிரமிப்புகளினாலும் ஆட்சியினாலும் , அரசியலில் மட்டும் அல்ல , சமுதாயத்திலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன .

அதனால் , தமிழர்களின் பண்பாட்டில் பல மாறுதல்கள் தோன்றின .

ஆடை அணிதல் , ஒப்பனை செய்தல் , பழக்க வழக்கங்கள் , நம்பிக்கைகள் , சமயக்கோட்பாடுகள் முதலியவற்றில் பல மாறுதல்கள் தோன்றியுள்ளன .

• வணிகம்

‘ திரைகடல் ஓடியும் திரவியம் தேடு ’ என்பது தமிழர்களின் முதுமொழி .

வணிகத்தின் பொருட்டு பல நாடுகளுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டு இருந்தனர் .

அவற்றால் பண்டமாற்றம் ஏற்பட்டதைப் போல் , பண்பாட்டு மாற்றங்களும் நிகழ்ந்தன .

வணிகத்தின் பொருட்டு வேற்று நாடுகளில் பலர் குடியேறினர் .

அவர்கள் , தங்கள் பண்பாட்டை எடுத்துச் சென்றாலும் , சூழலுக்கு ஏற்ப அங்குள்ள சில பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொண்டனர் .

• புலம் பெயர்தல்

டச்சு , போர்த்துகீசு , இங்கிலாந்து போன்ற ஆதிக்கச் சக்திகளால் ஏற்பட்ட குடியிருப்பு நாடுகளில் , குடியேறிப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் சென்றடைந்த நாடுகளின் பண்பாட்டுச் செல்வாக்காலும் , பண்பாட்டு ஆதிக்கத்தாலும் தம் பண்பாட்டில் பல மாற்றங்களை ஏற்றுக் கொண்டனர் .

எடுத்துக்காட்டாக , பல நாடுகளில் பல பகுதிகளில் , தொன்மைக் காலத்திலும் அண்மைக் காலத்திலும் சென்று வாழ்ந்து வருகின்ற தமிழர்களில் பலர் பழைய பண்பாட்டுக் கூறுகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர் .

சிலர் தம் பண்பாட்டுக் கூறுகளைப் பிற பண்பாடுகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர் .

சிலர் பெரும்பான்மையான பண்பாட்டுக் கூறுகளை விட்டுவிட்டு , ஒரு சிலவற்றை மட்டும் , அடையாளங்களுக்காகப் பாதுகாப்பாக வைத்துள்ளனர் .

மொரீசியஸ் , தென் ஆப்பிரிக்கா , ரீயூனியன் போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் , தமிழ்ப் பெயர்களையும் , தமிழ் வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி வந்தாலும் , தமிழ் மொழியை மறந்து விட்டனர் .

அதைப்போல் , பல பண்பாட்டுக் கூறுகளையும் இழந்து விட்டனர் .

இலங்கை , மலேசியா , சிங்கப்பூர் , பர்மா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்பவர்கள் , ஒரு சில பண்பாட்டுக் கூறுகளைத் தவிர பிற எல்லா பண்பாட்டுக் கூறுகளையும் தாயகத்தில் உள்ளவர்களைப் போல் , பேணிப் பாதுகாத்து வருகின்றனர் .

1.7.2 குடியேற்றமும் ( Colonization ) ஆக்கிரமிப்பும் ( Invasion )

குடியிருப்பு நாடுகளிலும் , அரசியல் ஆக்கிரமிப்பு நாடுகளிலும் பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்கின்றன .

இத்தகைய சூழல்களில் வாழ்வோர் செல்வாக்குடன் இருக்கும் பண்பாட்டுக் கூறுகளை அல்லது பெரும்பான்மையோர் பின்பற்றுகின்ற பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொண்டு , தமது பண்பாட்டுக் கூறுகளை விட்டு விடுகின்றனர் .

இவ்வாறு கலந்து வாழ்கின்ற பொழுது , தங்கள் பண்பாட்டின் தனித் தன்மையையும் இழந்து விடுகின்றனர் .

• கடன் வாங்குதல்

பிற பண்பாட்டுடன் தொடர்பு கொள்ளும் பொழுது , பண்பாட்டு நெகிழ்ச்சியும் மாற்றமும் நிகழ்கின்றன . இத்தகைய சூழல்களில் , பிற பண்பாட்டுக் கூறுகளைக் கடன் வாங்க நேர்கிறது .

இவை , சில நேரங்களில் , பிற பண்பாட்டுடன் நேரடியான தொடர்பு இல்லாவிட்டாலும் , தொடர்புடைய பிறர்வாயிலாகவும் நிகழ்கின்றன .

• பின்பற்றல்

பிற நாடுகளில் , பணியின் காரணமாகவோ , வணிகத்தின் பொருட்டோ , கல்வி கற்கவோ சென்று விட்டுத் தாயகம் திரும்பிய பலர் , தான் சென்று வந்த நாட்டின் பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றைப் பின்பற்றுகின்றனர் .

இதைப்பார்த்து , அவற்றில் தனக்குப் பிடித்த , தான் பின்பற்றுவதற்கு ஏற்ற சில பண்பாட்டுக் கூறுகளையும் ஏற்றுக் கொள்கின்றனர் .

இத்தகைய செயல்களும் பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன .

இவை , பெரும்பாலும் , ஆடை அணிதல் , பழக்க வழக்கங்கள் , கருவிகளைப் பயன்படுத்தல் , ஒப்பனை செய்து கொள்ளுதல் போன்ற பண்பாட்டுக் கூறுகளில் மாற்றங்கள் நிகழச் செய்கின்றன .

1.7.3 சூழலும் வளர்ச்சியும்

இவற்றைத் தவிர , ஒரே சமுதாயத்தில் , அல்லது ஒரே இனத்தில் , காலச் சூழலின் மாற்றத்தினாலும் , கல்வி வளர்ச்சியினாலும் , பண்பாட்டிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன .

எடுத்துக்காட்டாகப் பெண்கள் கல்வி கற்றல் , பணிக்குச் செல்லுதல் , கணவன் இறந்த பின்னரும் பூச்சூடிக் கொள்ளுதல் , பொட்டு வைத்தல் , வண்ணப் புடவைகளை அணிதல் , சமத்துவம் போன்ற பலவகை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன .

இவை , கல்வி வளர்த்த சூழலில் ஏற்பட்ட பண்பாட்டுக் கூறுகளின் மாற்றம் தானே ?

தொகுப்புரை

பண்பாடு என்பது ஒரு வாழ்க்கை முறை .

ஒரு சமுதாயத்தில் அமைந்துள்ள கலை , நம்பிக்கை , பழக்கவழக்கங்கள் , விழுமியங்கள் ஆகியவை பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப்படும் .

நாம் உண்ணும் உணவு , அணியும் ஆடை , உறைவிடம் முதலியன பண்பாட்டு வாயில்கள் .

மனிதனால் உருவாக்கப்படும் கட்டடங்கள் , ஓவியங்கள் , சிற்பங்கள் முதலியன புறத்தோற்றத்தால் வெளிப்படும் பண்பாடு .

அதைப்போல ஒரு சமுதாயத்தின் சிந்தனை வளம் , எண்ணச் சிறப்பு , விழுமியம் ஆகியவை அச்சமுதாயத்தின் அகப்பண்பாட்டின் வெளிப்பாடுகளாக அமைகின்றன .

உலகளாவிய நிலையிலும் , நாட்டளவிலும் , சமுதாய அளவிலும் சில வகையான பண்பாடுகள் அமைந்துள்ளன .

பல நாடுகளின் பண்பாடுகள் கலந்து பன்முகப் பண்பாட்டிற்கு வாய்ப்பு அளிக்கிறது .

அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகம் ஒரு கிராமம்போல் சுருங்கிவிட்டது .

அதனால் பல பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்கின்றன .

இவ்வாறு பண்பாடு பற்றிய ஒரு பொது விளக்கம் இப்பாடத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. இந்திய நாட்டுப் பண்பாட்டுக் கூறுகள் எவை ?

விடை

2. பன்முகப் பண்பாடு என்றால் என்ன ?

விடை

3. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் காணப்படும் பொதுத்தன்மைகள் யாவை ?

விடை

4. இன்றைய புதிய சூழலினால் ஏற்பட்ட மாற்றங்கள் எவை ?

விடை

5. எப்பொழுது பிற பண்பாட்டுக் கூறுகளைக் கடன் வாங்குகின்றனர் ?

மொழியும் பண்பாடும்

பாட முன்னுரை

மொழியும் பண்பாடும் என்பது இந்தப் பாடத்தின் தலைப்பு .

மொழி நாகரிகம் என்ற குழந்தையின் தொட்டில் !

அதைக் கண்டு பிடிப்பதற்கு மனித இனம் என்ன பாடுபட்டிருக்கும் .

இன்பமாக மனிதர்கள் ஆடியும் பாடியும் பொழுது போக்கிக் கொண்டிருந்த நிலையிலிருந்துதான் மொழி தோன்றியிருக்க வேண்டும் என்கிறார் , மேலைநாட்டு அறிஞர் ஒருவர் .

மொழி தோன்றுவதற்கு முன் சைகைகளாலும் , பல்வேறு குறியீடுகளாலும் மனிதர்கள் கருத்தைப் புலப்படுத்தியிருக்க வேண்டும் .

அறிவு இல்லாமல் மொய்த்துக் கிடந்த மனிதக் கூட்டம் என்ற வெள்ளத்தின் மேலே செந்தாமரைக் காடு பூத்ததுபோல் மொழி பூத்தது என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் .

முந்திய நாளினில் அறிவும் இலாது

மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது

செந்தாமரைக் காடு பூத்தது போலே

செழித்த என் தமிழே ஒளியே வாழி

( பாரதிதாசன் இசைஅமுது தொகுதி -1 , தமிழ் : 1 )

( மொய்த்த = நெருங்கிய , புனல் = நீர் )

மொழி மனிதனுக்குக் கிடைத்த ஒப்பற்ற கருத்துப் புலப்பாட்டுக் கருவியாகும் .

மொழியில் எழுத்து , பேச்சு என்று இரு வழக்குகள் உள்ளன .

உலக மொழிகளில் சில மொழிகள் பழைமையும் இலக்கிய வளமும் உடையன .

அச்சில மொழிகளில் தமிழ் ஒன்று . தமிழ் நல்ல பண்பாடு வளர்க்கும் ஒரு கருவியாக உள்ளது .

பல்வேறு காலப்பகுதிகளில் தமிழ் பாதுகாத்து வளர்த்த பண்பாடு பல அயல்மொழிகளின் தாக்கங்களைப் பெற்றிருக்கிறது .

இச்செய்திகள் இப்பாடத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளமை காணலாம் .

மொழி பற்றிய விளக்கம்

Audio

ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்துதற்கு ஒரு கருவியாகக் கொள்ளும் ஒலித்தொகுதியே ‘ மொழி ’ என்பார் பாவாணர் .

நம் மனத்தின் உள்ளே , ஏதாவது ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதும் மொழியின் ஒருநிலை ஆகும் .

பலர் சேர்ந்து ஓர் இனமாக வாழ்கிறார்கள் என்பதற்கு அவர்களின் நிறமோ , பழக்கவழக்கங்களோ காரணமில்லை ; அவர்கள் ஒருமொழி பேசுவோராக இருப்பதுதான் காரணமாகும் என்பர் .

எனவே மொழி என்பது ஓர் இனத்தின் புற அடையாளம் எனலாம் .

மொழிதல் என்றால் சொல்லுதல் என்பது பொருள் .

பேச்சு மொழியே முதலில் தோன்றியது .

அறிஞர் மு. வரதராசனார் ,

‘ பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி ; ஆயினும் எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும் .

இவைகளே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு .

எண்ணப்படுவது , நினைக்கப்படுவது , கனவு காணப்படுவது ஆகியவைகளும் மொழியே ஆகும் ’

என்று கூறுகிறார் .

எனவே மொழி என்பதைப் பேச்சு , எழுத்து , எண்ணம் என்றும் பல நிலைகளில் அறியலாம் .

ஒலிவடிவான குறியீடுகளைக் கொண்டது பேச்சுமொழி ; வரிவடிவான குறியீடுகளைக் கொண்டது எழுத்துமொழி .

2.1.1 உலக மொழிகள்

ஆசியா , ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியா , ஐரோப்பா , அமெரிக்கா ஆகிய கண்டங்களில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன .

இம்மொழிகள் பல மொழியினங்களில் அடங்குவன .

திராவிட மொழியினம் , ஆரிய மொழியினம் , முண்டா மொழியினம் என்பவை இந்தியாவில் உள்ளன .

கிரேக்கம் , இலத்தீன் , ஜெர்மன் , பிரெஞ்சு , ஆங்கிலம் , வெல்ஷ் ஆகிய ஐரோப்பிய மொழிகளும் ஆரிய மொழியினத்தைச் சார்ந்தனவே .

தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , துளு , குடகு , பிராகுவி போன்ற மொழிகள் திராவிட மொழியினத்தைச் சார்ந்தவை .

தமிழம் என்னும் பெயரே திராவிடம் எனத் திரிந்தது என்பார் மொழி அறிஞர் பாவாணர் அவர்கள் .

சீனமொழி , திபேத்திய மொழி , பர்மிய மொழி , சயாம் மொழி ஆகியவை ஓரினத்தைச் சேர்ந்தவை .

பெ.சுந்தரம் பிள்ளை

ரஷ்யாவிலும் துருக்கியிலும் வழங்கும் மொழிகள் சிந்திய மொழிகளாகும் .

அரேபியாவிலும் , வட ஆப்பிரிக்காவிலும் வழங்கும் மொழிகள் செமிட்டிக் மொழிகளாகும் .

தமிழ்மொழி , கிரேக்க மொழி , இலத்தீன் மொழி , எபிரேய மொழி , சீன மொழி , சமஸ்கிருத மொழி ஆகியவை உலக மொழிகளில் பழைமையானவை .

இவற்றில் தமிழ் மூவாயிரம் ஆண்டுக் கால வரலாற்றைக் காட்டுவதுடன் இன்று வரை வழக்கிலிருந்து மறையாமல் இருந்து வருகிறது .

எனவே , மனோன்மணியம் நாடகம் எழுதிய பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள் , தமிழ் வாழ்த்துப் பாடலில் , வட வாரியம் போல் வழக்கொழியா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துவமே என்று குறிப்பிடுகிறார் .

2.1.2 பேச்சு வழக்கு , எழுத்து வழக்கு

பேச்சு மொழி ஓடும் ஆறு போன்றது ; எழுத்து மொழி அந்த ஆற்றில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்பர் அறிஞர் .

குளிர் மிகுதியால் பனி உறைந்து வேறுபட்டதைப் போல் கற்றவர்களின் முயற்சியால் மொழி இறுகி அமைந்ததே எழுத்து மொழி .

பிரெஞ்சு மொழி , சீனமொழி ஆகியவற்றில் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மிகவும் வேறுபாடு உடையனவாக உள்ளன .

தமிழில் பேச்சு மொழியிலிருந்து எழுத்துமொழி மிகவும் வேறுபாடு உள்ளது .

பேச்சும் எழுத்தும்

பொதுவாக எல்லா மொழிகளிலும் பேச்சு மொழியில் வாக்கியங்கள் அளவில் சுருங்கியதாக இருக்கும் .

எழுத்து மொழியில் வாக்கியங்கள் நீண்டு அமையும் .

பேச்சு மொழியில் உணர்ச்சிக் கூறுகள் அதிகமாக இருக்கும் .

எழுத்து மொழியில் உணர்ச்சிக் கூறுகள் குறைந்திருக்கும் .

தமிழும் இதற்கு விதிவிலக்கு அல்ல .

அப்பா , எம்புட்டுப் பெரிசுப்பா இந்த மலை !

பேச்சு மொழி

ஏ !

அப்பா !

எவ்வளவு பெரிய மலை

பேச்சுமொழியின் உயர்நிலை

அது மிகப் பெரிய மலை எழுத்து மொழி