74

விடை

5. விடுகதை என்றால் என்ன ?

இலக்கணமும் பண்பாடும்

தமிழ் இலக்கணத்தில் இயல்பு வழக்கு , தகுதி வழக்கு என இரண்டு பிரிவுகள் உண்டு .

ஒரு பொருளை அறிவதற்கு அமைந்துள்ள சொல்லால் சொல்லுவது தகுதி அல்ல என்று கருதி வேறொரு சொல்லால் சொல்வது தான் தகுதி என்று எண்ணிக் கூறுவது தகுதி வழக்கு .

தகுதி வழக்கில் , இடக்கரடக்கல் , மங்கலம் , குழூஉக்குறி என்று மூன்று கூறுகள் உண்டு .

2.3.1 பகுத்தறிவுக்கு இசைந்த திணை பால் , பிரிவுகள்

பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நடைமுறை வழக்கில் இருந்து வருகிறது .

அதன் தனிச் சிறப்புகளாகக் கீழ்க்கண்டவற்றை அறிஞர் காட்டுகின்றனர் .

பகுத்தறிவுக்கு இசைந்த திணை , பால் முதலிய பிரிவுகள் தமிழ் இலக்கண மரபின் சிறப்பு எனலாம் .

எடுத்துக்காட்டாக ,

பெண் வந்தாள்

ஆண் வந்தான்

ஆணும் பெண்ணும் வந்தனர்

பசு வந்தது

பசுக்கள் வந்தன

என்று தமிழில் திணை , பால் முதலிய பிரிவுகள் பகுத்தறிவுக்கு உட்பட்டு வழங்கப்படுகின்றன .

ஆனால் சில மொழிகளில் இதுபோன்ற அமைப்பு இல்லை .

குறிப்பாகச் செர்மானிய மொழியில் கைகள் பெண்பாலாகவும் , கால்கள் ஆண்பாலாகவும் , கால்விரல்கள் பெண்பாலாகவும் கொள்ளப் பெறுகின்றன .

மனித உயிராகப் பிறந்து விட்டாலேயே அதனை உயர்திணையாக இலக்கணம் கருதவில்லை .

குழந்தை பேசிற்று , குழந்தை தூங்கிற்று என்றே கூறுவர் .

நன்மை , தீமைகளைப் பகுத்துணரும் அறிவுநிலை அடைந்த பிறகே உயர்திணை என்ற நிலையை ஒரு பிறப்பு அடையும் .

அதேபோலப் பண்பால் உயர்ந்த ஒருவன் இறந்து கிடக்கும் போது அவனைப் பிணம் கிடக்கின்றது என்று கூறாமல் உயிர் இழந்து ஒரு மகன் கிடந்தான் என்று உயர்திணையாகவே மொழிவர் .

பண்புகளுக்குத் தகுந்தாற்போல உயர்வு தாழ்வு கற்பித்து வழங்கும் நெறியைத் தமிழ் இலக்கணம் பெற்றுள்ளது .

' கள் ' என்ற விகுதி அஃறிணைக்கு உரியது என்றாலும் மரியாதையாக ஒருவரைக் குறிக்க ' ஐயா அவர்கள் வந்தார்கள் ' என்று குறிக்கும் பண்பாடு உள்ளது .

அக்கா வந்தாள் என்று சொல்ல வேண்டுவதே இலக்கணமாக இருக்க , அன்பு காரணமாக ' அக்கா வந்தது ' என்று கூறும் வழக்கம் நடைமுறையில் உள்ளது .

இங்கு அஃறிணைப்படக் கூறினாலும் இஃது உயர்ந்த தன்மையையே குறிக்கும் .

2.3.2 இடக்கரடக்கல்

சில தகாத சொற்களைச் சில இடங்களில் , குறிப்பாக சிறப்புடையோர் மத்தியில் சொல்லக்கூடாது .

எனவே அவற்றிற்குப் பதிலாகப் பிற சொல்லைச் சொல்வது இடக்கரடக்கல் எனப்படும் .

ஓர் இடத்தில் , சொல்லத்தகாத சொல்லை அடக்கி , இன்னொரு சொல்லைச் சொல்வதால் அதை ' இடக்கரடக்கல் ' என்று குறிப்பிட்டனர் .

( எடுத்துக்காட்டு ) ஒன்றுக்குப் போனான்

சிறுநீர் கழிப்பதற்குச் சென்ற ஒருவனை ' ஒன்றுக்குப் போனான் ' என்று சொல்வது இடக்கரடக்கல் எனப்படும் .

நாகரிகம் கருதி , சொல்லத்தகாத சொற்களைச் சொல்லாமல் , இன்னொரு சொல்லைச் சொல்ல நினைப்பதுவும் , சொல்வதுவும் ஒருவரது பண்பாடு .

இத்தகைய பழக்கத்தை இலக்கணம் வகுத்து நெறிப்படுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டின் உயர்வைச் சுட்டுகிறது .

2.3.3 மங்கலம்

நன்மை தரும் செயல்களை மகிழ்ச்சி தரும் செய்திகளைக் குறிப்பிடுவது மங்கலம் எனப்படும் .

மங்கலம் இல்லாத அமலங்கச் செய்தியாக இருந்தால் , பண்பாடு கருதி , மங்கலமாகச் சொல்லுதல் மங்கலம் எனப்படும் .

ஒருவன் இறந்துவிட்டால் , மங்கலமாகத் ' துஞ்சினான் ' ( தூங்கினான் ) என்று குறிப்பிடுவர் .

கணவன் இறந்து தாலி இழந்த பெண்ணைச் சுட்டி , அவளுக்குத் ' தாலி பெருகிற்று ' என்று கூறுவர் .

பசியோடு ஒருவன் இல்லம்தேடி வந்து , பிச்சை கேட்கும்போது உணவு இல்லாவிட்டால் , ' இல்லை ' என்று சொல்லாமல் ' உணவு மிஞ்சி விட்டது ' என்று சொல்வார்கள் .

எதையும் மங்கலமாகச் சொல்ல வேண்டும் என்ற மனநிலை தமிழர்களுக்குப் பாரம்பரியமாக வழங்கி வந்திருக்கிறது .

அது அவர்களது உயர்ந்த பண்பாட்டைக் காட்டுகிறது .

2.3.4 குழூஉக்குறி

ஒவ்வொரு கூட்டத்தாரும் அல்லது குழுவினரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக , ஒரு பொருள் தரும் சொல்லை விட்டுவிட்டு , அதனை வேறொரு சொல்லால் குறிப்பிடுவது குழூஉக்குறி என்பதாகும் .

நன்கு மது அருந்திக் கொண்டு தள்ளாடிக் கொண்டு செல்லுபவனைப் பார்த்து , ' குதிரையில் போகிறார் ' என்று சொல்வர் .

இது ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கே புரியும் .

சில சொற்களைச் சில இடங்களில் சொல்ல இயலாது .

அதைச் சொல்லவேண்டிய முறையில் பக்குவமாகச் சொன்னால் , சிறப்பாக இருக்கும் என்று கருதிக் கூறுவர் . இதற்கும் ஒரு வகையான மனப்பக்குவம் தேவை .

அந்த மனப்பக்குவத்தை வழங்குவது பண்பாடு .

தமிழர்களிடம் இத்தகைய பண்பாட்டுக் கூற்றை அவர்கள் வழங்கும் குழூஉக்குறியின் மூலம் அறிந்து கொள்ளலாம் .

தொகுப்புரை

மொழி கருத்துப் பரிமாற்றத்திற்குத் துணை செய்யும் கருவி .

அதில் பேச்சு வழக்கு , எழுத்து வழக்கு என இரு கூறுகள் உண்டு .

இலக்கியச் சிறப்புடைய மொழிகள் செவ்வியல் மொழி என அழைக்கப்பட்டன .

உலகிலுள்ள செம்மொழிகளுள் தமிழும் ஒன்று .

தமிழ் மொழி திராவிட குடும்பத்தில் மூத்த மொழி .

இதில் அமைந்த சொற்களும் , சொல்லாக்கமும் சிறப்பு வாய்ந்தவை .

தமிழ் மொழியில் வழங்கப்படும் பழமொழி , விடுகதை , இலக்கண வழக்கு ஆகியவை தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலங்களாக அமைந்துள்ளன .

எனவே , தமிழ்மொழி ஒரு பண்பட்ட மொழி என்பதோடு , அதன் இலக்கண வழக்குகளும் , சொற்களும் , பழமொழி போன்றவைகளும் தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்துவனவாகக் காணப்படுகின்றன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. இலக்கண வழக்கு எத்தனை வகைபடும் ?

அவை எவை ?

விடை

2.இடக்கரடக்கல் எவ்வாறு தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ?

விடை

3. இறந்து விட்ட ஒருவனைத் ‘ துஞ்சினான் ’ என்று குறிப்பிடுவது எதைக் காட்டுகிறது ?

விடை

4. குழூஉக்குறி என்றால் என்ன ?

அது எவ்வாறு பண்பாட்டுக்கூறாகக் கருதப்படுகிறது ?

தமிழ்நாடு - நில அமைப்பும் வரலாறும்

பாட முன்னுரை

உலகம் என்ற சொல்லை ஒரு மங்கலச் சொல்லாகக் கருதியவர் தமிழர் .

வான ஊர்தியில் ஒரு பறவையைப் போல் பறந்து இந்த உலகத்தைப் பார்க்கும்போது எவ்வளவு இனிய காட்சி நல்குகின்றது !

வையத்தில் மூன்று பகுதி கடல் ; ஒருபகுதி நிலம் .

கண்டங்களாகக் கடலால் துண்டாடப்பட்ட நாடுகளின் தொகை .

இதோ பூகோள உருண்டையைச் சுற்றினால் நம் கண்முன் தோன்றும் உலகப்படம் !

கடலால் வளைக்கப்பட்டது இந்த உலகம் .

" பெருங்கடல் வளைஇய உலகம் " என்று கூறுகிறது குறுந்தொகை என்ற இலக்கியம் .

கடலை ஆடையாக உடுத்த நில மங்கை என உருவகம் செய்கிறார் மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம்பிள்ளை .

உலகிலேயே நாட்டை ஒரு பெண்ணாக முதன் முதல் உருவகித்த பெருமை தமிழ்ப் புலவனுக்கே உரியது .

கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் இந்தியத் திருநாட்டை ஒரு பெண்ணாக இளங்கோவடிகள் ஓவியப்படுத்திக் காட்டுகின்றார் .

" அலைகளைக் கொண்ட நீரை ஆடையாக உடுத்தவள் .

மலைகளை மார்பகங்களாகக் கொண்டவள் .

ஆறுகளை முத்தாரமாக அணிந்தவள் .

மழை முகில்களைக் கூந்தலாகப் பெற்றவள் " என்பது அவர் காட்டும் சொல்லோவியம் .

உலகப் படத்தில் இந்தியாவைக் காணுங்கள் !

இமயம் தலையாக அமைந்துள்ளது .

குமரி திருவடிகளாக உள்ளது .

மகவை அணைக்க எழுந்த இரு கைகளாக மேற்கிலும் கிழக்கிலும் அகன்ற நிலப்பகுதிகள் அமையக் காணலாம் .

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்

வாழும் குமரிமுனை பாப்பா

( பாரதி - பாப்பாப்பாட்டு : 13 )

வாழும் குமரி என்றும் பிறிதொரு இடத்தில் நித்தம் தவம்செய் குமரி என்றும் பாரதியார் கூறியது குறித்துச் சுவாமி விபுலானந்தர் , " மேலும் கடல் நிலத்தைக் கொண்டு விடாமல் இருக்க வேண்டும் " என்று கருதியதைக் காட்டும் என்பர் .

இந்தியாவின் இன்றைய தென்னெல்லைதான் கன்னியாகுமரி !

முன்னொரு காலத்தில் அதற்கப்பால் பல நூறு கற்கள் நிலமாக இருந்தமையினை வரலாறு காட்டுகின்றது .

அவ்வாறு இருந்த காலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது .

சங்ககாலத் தமிழ் மக்கள் , தாம் வாழ்ந்த நிலத்தை அதன் பூகோள அமைப்பிற்கும் ( Geographical Structure ) தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ப , ஐந்து வகையாகப் பிரித்தனர் . அவர்கள் வாழ்க்கை முறையும் நிலப்பாகுபாட்டின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது .

அவர்களால் படைக்கப்பட்ட , கலைகளும் , பிறபண்பாட்டுக் கூறுகளும் நிலப்பிரிவினைப் பின்புலமாகக் கொண்டே அமைந்துள்ளன .

தமிழ்நாடு

“ வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் " என்று பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்தின் பாயிரம் கூறுகின்றது .

அன்றிருந்த நிலை மாறிவிட்டது .

இன்று வடவேங்கடம் என்று கூறப்படும் திருப்பதி திருமலை ஆந்திர நாட்டிற்கு உரியதாகிவிட்டது .

நீலத்திரைக்கடல் ஓரத்திலே - நின்று

நித்தம் தவம் செய்யும் குமரியெல்லை - வட

மாலவன் குன்றம் இவற்றிடை யேபுகழ்

மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு

( பாரதி - செந்தமிழ்நாடு : 5 )

என்று சுப்பிரமணிய பாரதியார் பாடியுள்ளார் .

அந்த நிலை மாறி இன்று திருத்தணியிலிருந்து கன்னியாகுமரி வரையிலான பகுதி ' தமிழ்நாடு ' என வழங்குகிறது .

சென்னை மாநிலம் என்றும் மெட்ராஸ் ஸ்டேட் ( Madras State ) என்றும் வழங்கிய இப்பகுதி அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் " தமிழ்நாடு " எனப் பெயர் மாற்றம் பெற்றது .

பாரதியார்

3.1.1 நிலவரையறை

தமிழகம் இந்தியத் தீபகற்பத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது .

வங்காள விரிகுடா இதன் கிழக்கு எல்லையாக நீண்டு கிடக்கின்றது .

மேற்கே கேரளமும் , வடக்கே ஆந்திரமும் , வடமேற்கில் கர்நாடகமும் , தெற்கில் இந்துமாக்கடலும் அமைந்துள்ளன .

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 1,30,057 சதுர கிலோமீட்டர் .

இதன் இன்றைய மக்கள் தொகை ஏறத்தாழ ஆறுகோடிப் பேர் .

வங்கக் கடற்கரையை ஒட்டிய சமவெளிப்பகுதி , மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு இணைந்து விளங்கும் மலை நிலப்பகுதி , இவ்விரண்டு பகுதிகளுக்கு இடையே உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் என மூன்று பெரும்பகுதிகளாகத் தமிழகம் விளங்குகின்றது .

மலைப்பகுதிகள் , காட்டுப்பகுதிகள் , கடற்கரைப்பகுதிகள் , வயல்வெளிப் பகுதிகள் என நால்வகை நிலங்களும் தமிழகத்தில் உள்ளன .

தேக்கு மரங்களும் சந்தன மரங்களும் , வேங்கை , கோங்கு , ஆச்சா மரங்களும் வானுயர வளர்ந்து நிற்கும் தமிழகக் காட்டுப் பகுதிகளைக் காணுங்கள் !

இத்தகைய காட்டைத்தான்

" மந்தியும் அறியா மரம்பயில் அடுக்கம் " ( அக : 92-8 )

என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது .

மந்திக் குரங்கிற்கும் தெரியாத மரங்கள் நெருங்கிய மலைக்காடு என்பது இதன் பொருள் .

இதோ !

குளிர் தூங்கும் குற்றால அழகைக் காணுங்கள் !

வானரங்கள் கனிகொடுத்து மந்தியுடன் கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

( குற்றாலக்குறவஞ்சி )

அருவிகள் வைரமாலை போலத் தொங்கும் அழகு காண்பதற்குரியது .

ஆண்டில் பாதிநாள் சுறுசுறுப்பாய் வேலை நடக்கும் இந்த வயல்வெளிகளைப் பாருங்கள் !

இந்த வயல் வெளிகளில் நாற்று நடுதல் , களையெடுத்தல் , அறுவடை போன்ற நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பண்பாட்டின் உயிர்மூச்சாய்த் திகழும் நாட்டுப்புறப் பாடல்கள் ஒலிப்பதைக் கேளுங்கள் !

களை எடுக்கும் பெரியகுளம்

கணக்கெழுதும் ஆலமரம்

கொத்தடிக்கும் கொட்டாரம்

கூறுவைக்கும் களத்துமேடு

கண்ணாடி வளையல்போட்டு

களையெடுக்க வந்த புள்ளே

கண்ணாடி மின்னலிலே

களை எடுப்புப் பிந்துதடி

வெள்ளிப் புடி வளையல் - நல்ல

விடலைப் பிள்ளை கைவளையல்

சொல்லி அடிச்சவளை - நல்லா

சுழட்டுதில்ல நெல்களையை

கடற்கரைகளில் விடியற்காலையில் கட்டு மரங்களில் புறப்பட்டுக் கடலில் சென்று மீன்பிடித்துக் கொண்டு அந்தியில் திரும்பும் மீனவர்களின் பாடல்களைக் கேளுங்கள் .

ஏலங்கடி ஏலோ ஏலங்கடி ஏலோ கட்டுமரம் ஏறிப்போனா ஐலேசா

காத்தம்மா துணையிருப்பா ஐலேசா

காத்தடிச்சாக் கடல் கலங்கும்

கல்லு போட்டாத் தலை ஒடையும்

கரையோரம் புன்னமரம் ஐலேசா

கண்ணாட்டி நிக்குநெழல் ஐலேசா

காத்திருக்க நா போறேன்

கவலையெல்லாம் மாறிப்போகும் .

3.1.2 நிலப் பாகுபாடு

கிரீஸ் நாடு மிக அழகான ஒரு நாடு என்று குறிப்பிடுவார்கள் .

அதற்குக் காரணம் அந்த நாட்டின் நில அமைப்பு என்பார்கள் .

அதன் கடற்கரை பல வளைவுகளை ( Gulf ) உடையது .

அதன் நதிகளும் தாழ்வான குன்றுகளும் , ஓர் அழகான பரப்பளவு உடையதாக அமைந்திருக்கும் .

ஒரு பகுதியோடு இன்னொரு பகுதி மிக நெருக்கமாக இணைந்திருக்கும் .

அளவிலே சிறியதாக இருந்தாலும் , சுய உணர்வும் , சுயசிந்தனையும் , தனித்தன்மையும் , சுதந்திரமும் அங்குச் சிறப்பாக உள்ளன என்று கூறுவார்கள் .

அதைப்போல , தமிழ்நாட்டின் நிலப்பரப்பும் , பிளவுபட்ட சிறிய மலைகளும் , காடுகளும் , நதிகளும் , கடலும் இயற்கையிலேயே மிக அழகாக அமைந்திருக்கின்றன .

கிரீஸைப்போல , சிற்றரசர்களும் , குறுநில மன்னர்களும் உருவாவதற்கும் தமிழ்நாட்டின் நிலஅமைப்பு வாய்ப்பு அளித்தது .

இந்த நில அமைப்பு பல பிரிவுகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது .

எனவே , சங்ககாலத் தமிழர் , மலைப்பகுதியையும் , காடுகள் அடர்ந்த பகுதியையும் , வயல்கள் நிரம்பிய பகுதியையும் , கடலோரப் பகுதியையும் , வறட்சியான வரண்ட பகுதிகளையும் , தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர் .

மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி நிலம் என்று அழைத்தனர் .

மலைக்கு அடுத்து இருந்த நிலப்பகுதி காடும் , காட்டைச் சார்ந்த இடமும் .

இப்பகுதியை முல்லைநிலம் என்று கூறினர் .

முல்லைக்கு அடுத்து இருந்த வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்று குறிப்பிட்டனர் .

பண்டைத் தமிழ்நாட்டின் கிழக்கும் , மேற்கும் , தெற்கும் கடல் எல்லையாக இருந்தது .

இந்தக் கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்றனர் .

பருவகாலத்தில் , பெய்ய வேண்டிய மழை பெய்யாமல் , வறட்சி ஏற்பட்டு , நிலம் பசுமை இல்லாமல் வரண்டு இருக்குமானால் அப்பகுதியைப் பாலை என்று சுட்டினார்கள் .

3.1.3 நிலம் சார்ந்த வாழ்வுமுறை

ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும் , நம்பிக்கைகளும் , குணநலன்களும் , பண்பாட்டுக் கூறுகளும் அந்த இனம் சார்ந்திடும் நிலத்தன்மை , தட்பவெட்ப நிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும் என குரோஸ் ஹோட்ஜ் ( Grose Hodge ) எனும் நிலவியல் அறிஞர் குறிப்பிடுவார் .

இக்கூற்று பண்டைத் தமிழர்களுக்கு முற்றிலும் பொருந்தும் .

ஐந்து வகை நிலப்பாகுபாட்டுடன் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை , செய்த தொழில் , வழிபாடு ஆகியவை ஹோட்ஜின் கருத்தை உறுதிப்படுத்தும் .

• குறிஞ்சி நிலம்

குறிஞ்சி நிலம்

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களைக் குறவர் , குறத்தியர் என்று அழைத்தனர் .

இவர்கள் தினை பயிரிடுதல் , தேன் எடுத்தல் , வேட்டையாடல் போன்ற தொழிலைச் செய்தனர் .

இவர்களது கடவுள் முருகன் .

• முல்லைநிலம்

முல்லைநிலம்

முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் ஆயர் , ஆய்ச்சியர் எனக் குறிக்கப்பட்டனர் .

இவர்கள் ஆடு , மாடு மேய்த்தலைத் தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தனர் .

முல்லை நிலக் கடவுள் திருமால் .

திருமாலைக் கண்ணன் என்றும் அழைப்பார்கள் .

கண்ணனாகிய திருமால் ஆயர்குலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறான் .

• மருதநிலம்

மருதநிலம்

மருதநில மக்கள் உழவர் , உழத்தியர் என்போர் ஆவர் .

இந்நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் , நெல் , கரும்பு முதலியவற்றைப் பயிர் செய்தார்கள் .

வாணிகத்தையும் செய்தனர் .

மருத நிலத்தில் விளைந்த நெல் முதலிய தானியங்களைப் பிற நிலத்தைச் சார்ந்தவர்களுக்குக் கொடுத்து , பண்டமாற்ற வாணிபம் செய்தனர் .

இந்திரன் , மருத நிலக் கடவுள் .

• நெய்தல் நிலம் நெய்தல் நிலம்