75

நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்களைப் பரதர் என அழைத்தனர் .

மீன் பிடித்தல் , உப்புத் தயாரித்தல் , கடல்கடந்து வாணிபம் செய்தல் முதலிய தொழில்களை இவர்கள் செய்தார்கள் .

நெய்தல் நிலக்கடவுள் வருணன் .

மழைதரும் கடவுளாக வருணனை வழிபாடு செய்தனர் .

வருண பகவானால் மழைவரும் என்று நம்பினர் .

கடல்நீர் , சூரிய வெப்பத்தால் நீராவியாக மாறி , மழையைத்தரும் மேகம் ஆகிறது .

மழை தோன்றுவதற்குக் காரணமாக நெய்தல் நிலம் இருப்பதால் , மழைக்கு உரிய காரணகர்த்தாவாக வருணனை வழிபட்டனர் .

• பாலை

பாலை

பாலை நிலத்தில் வாழ்ந்தவர்கள் எயினர் , எயிற்றியர் என்று கூறப்படுகின்றனர் .

வழிப்பறி செய்தல் அவர்கள் இயல்பாகச் சுட்டப்படுகிறது .

நிலம் வளமில்லாது வறட்சியாகும்போது நிலத்தில் வாழ்வோரும் தம் வறுமையின் காரணமாக இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் .

3.1.4 நிலம் சார்ந்த இலக்கியம்

சங்ககாலத் தமிழ்ப்புலவர்களின் கவிதைகளின் ஊற்று அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த நிலமே .

ஐந்து நிலத்திற்கும் , ஐந்து வகையான திணையை அமைத்து அவற்றின் அடிப்படையில் தம் பாடுபொருளை வைத்து இலக்கியம் படைத்த பெருமை சங்க காலப் புலவர்களுக்கு உண்டு .

முல்லைநில வாழ்க்கையில் மனைவி அந்திப்போதில் கணவன் வரவுக்காகக் காத்திருத்தலையும் , குறிஞ்சி வாழ்க்கையில் நள்ளிரவில் காதலர் கூடி மகிழ்ந்திருத்தலையும் , மருத வாழ்க்கையில் விடியற் காலையில் கணவனும் மனைவியும் ஊடல் அல்லது மனப்பிணக்குக் கொண்டிருத்தலையும் , நெய்தல் வாழ்க்கையில் முன்னிரவில் கணவன் வரவு நோக்கி வருந்தி நிற்கும் மனைவியின் வருத்தத்தையும் இலக்கியங்கள் அழகாகப் பாடுகின்றன .

தமிழக வரலாறு

அன்பர்களே !

நாம் தமிழக வரலாற்றை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம் .

1. முற்காலம்

2. இடைக்காலம்

3. பிற்காலம்

என்ற மூன்று பகுதிகளாக இவ்வரலாற்றைக் காணலாம் .

3.2.1 வரலாற்றுக்கு முந்தைய காலம்

இந்தியத் துணைக்கண்டத்தைப் ( Subcontinent ) படத்தில் காணுங்கள் .

என்ன தோன்றுகிறது உங்களுக்கு ?

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்

வாழும் குமரிமுனை பாப்பா

கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்

கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா

( பாரதி - பாப்பாப்பாட்டு : 13 )

என்று பாரதியார் பாடியது நினைவிற்கு வருகிறதா இல்லையா ?

ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா இந்த உருவத்தில் இல்லை .

இமயமலையும் வடஇந்தியப் பகுதிகளும் கடலுக்குள் இருந்தன .

இன்று இந்துமாக்கடலாக உள்ள இடம் பெரிய நிலப்பரப்பாக இருந்தது .

அப்பெரும்பரப்பு குமரிக்கண்டம் அல்லது லெமூரியா ( Lemuria ) எனப்பட்டது .

அங்கே குமரிமலை என்று பெயர் பெற்ற நீண்ட மலைத்தொடர் இருந்தது .

பஃறுளியாறு எனப் பெயர் பெற்ற ஆறு இருந்தது .

அவையெல்லாம் ஒரு பெரிய கடல் வெள்ளத்தால் அழிந்தன .

தெற்கே இருந்த நிலப்பகுதி கடலில் மூழ்கியபின் வடக்கே கடலுக்குள்ளிருந்து இமயமலையும் அதனைச் சார்ந்த நிலப்பகுதிகளும் வெளியே தோன்றின .

இதுதான் பழைய இந்திய வரலாறு .

3.2.2 சிந்துவெளி நாகரிகம்

மனிதன் முதன் முதலாகப் பரிணாம அடிப்படையில் ( Evolution ) குமரிக்கண்டத்திலேயே தோன்றியதாக அறிஞர் கருதுகின்றனர் .

குமரிக்கண்ட மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்த நிலையில் வடஇந்தியப் பகுதிகளில் சென்று குடியேறினான் .

அங்குச் சிந்துநதிக்கரையின் சமவெளிப்பகுதியில் அவன் அழகிய குடியிருப்புகளையும் , நகரங்களையும் உருவாக்கினான் .

அந்த நகரங்களே இன்று மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப்பெற்றுள்ள மொகஞ்சதாரோ , ஹரப்பா என்னும் நகரங்களாகும் .

இங்குத் தோன்றிய நாகரிகமே சிந்துவெளி நாகரிகம் எனப்படும் .

இதனைத் தோற்றுவித்தவர் தென்னாட்டிலிருந்து சென்று பரவிய திராவிடரே ஆவர் .

• ஹரப்பா 1920ஆம் ஆண்டு ஹரப்பா என்ற பழைய நகரம் மண்ணுக்கடியில் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .

கல்லறை ஒன்றும் , மட்பாண்டங்களும் , விலங்குகளின் எலும்புகளும் , சில முத்திரைகளும் இங்குக் கிடைத்தன .

ஹரப்பா பஞ்சாப் பகுதியில் ராவி , சட்லெஜ் ஆறுகளுக்கு இடையில் லாகூர் - முல்ட்டான் தொடர்வண்டி வழியில் உள்ளது .

எம். எஸ். வாட் ( M.S. Watt ) என்னும் அறிஞர் ஹரப்பாவின் அகழ்வாய்வுகள் என்னும் நூலில் ஹரப்பா பற்றிக் கூறும் செய்திகள் வியப்பளிக்கின்றன .

இந்த நகரத்தின் சுற்றளவு 4 கிலோ மீட்டராகும் .

இங்கு ஆறு பெரிய மண்மேடுகள் உள்ளன .

இவற்றில் பெரியது 29,000 செ. மீ. நீளமும் , 23,000 செ. மீ. அகலமும் , 1,800 செ. மீ. உயரமும் உடையது .

இந்த மண்மேடுகள் எட்டு அடுக்குகளைக் காட்டுகின்றன .

எட்டுமுறை புதுப்பிக்கப்பட்ட நகரம் என்பதை இந்த அடுக்குகள் காட்டுகின்றன .

கி.மு. 3,500க்கும் கி.மு. 2,750க்கும் இடைப்பட்ட காலத்தின் நாகரிகம் என்று இதனைக் கருதலாம் .

• மொகஞ்சதாரோ

மொகஞ்சதாரோ நகரம் நிலத்தின் அடியில் புதையுண்டிருப்பது 1922-இல் கண்டறியப்பட்டது .

சிந்து ஆற்றின் மேற்குப் பகுதியில் உள்ளது .

இந்நகரை அகழ்ந்தபோது நாற்கோணமுள்ள ஒரு முற்றம் , முற்றத்தைச் சூழ முப்பது சிற்றறைகள் , சில நாணயங்கள் ஆகியன காணப்பெற்றன .

அங்கே சில எழுத்து முத்திரைகளும் கிடைத்தன .

மொகஞ்சதாரோ ஏழு அடுக்குகளையுடைய நிலப்பகுதியைக் காட்டிற்று .

வரிசை வரிசையான வீடுகள் , நீண்ட தெருக்கள் , பெருமாளிகைகள் , நீராடும் குளம் , மண்டபங்கள் , கழிவுநீர்ப் பாதைகள் , மட்பாண்டங்கள் , பல நிறந் தீட்டப்பெற்ற பானைகள் , பொம்மைகள் , அணிவகைகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன .

இதன் காலம் கி.மு. 3,250 முதல் கி.மு. 2,750ஆக இருக்க வேண்டும் என்பர் .

மொகஞ்சதாரோ ஓர் உயர்ந்த நாகரிகத்தைக் காட்டுகின்றது .

காற்றோட்டமும் வெளிச்சமும் தடையின்றி அமையும் வகையில் பெருந்தெருக்களும் குறுந்தெருக்களும் அமைக்கப்பட்டிருந்தன .

கழிவுநீர்க் கால்வாய் அப்பெருநகரில் அமைந்த முறைபற்றிக் கூறப்படுவது கவனிக்கத்தக்கது .

" மொகஞ்சதாரோவில் கால்வாய் இல்லாத நெடுந் தெருவோ குறுந்தெருவோ இல்லை .

கால்வாய்கள் அனைத்தும் ஒரே அளவில் வெட்டிச் சுட்டுத் தேய்த்து வழவழப்பாக்கிய செங்கற்களால் அமைந்தவை .

பொதுவாக எல்லாக் கால்வாய்களும் 50 செ.மீ. ஆழமும் 22 செ.மீ. அகலமும் உடையனவாக இருக்கின்றன .

இக்கால்வாய்களைப் போலவே இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கழிவுநீர்க் கால்வாய்களும் இத்தகைய சிறந்த முறையில் செய்யப்பட்ட செங்கற்களைக் கொண்டே கட்டப்பெற்றவை ஆகும் .

இவ்வீட்டு வடிகால்கள் தெருக் கால்வாயுடன் சேரும் இடங்களில் , சதுர வடிவில் செங்கற்கள் கொண்டு கட்டப்பெற்ற சிறு குழிகள் அமைந்துள்ளன .

அக்குழிகள் 22 செ.மீ. சதுரமும் 45 செ.மீ. ஆழமும் உடையவை .

அக்குழிகளில் 90 செ.மீ. உயரமுடைய தாழிகள் புதைக்கப் பட்டுள்ளன .

அத்தாழிகளின் அடியில் சிறிய துளைகள் இருக்கின்றன .

வீட்டு வடிகால்கள் வழியே கழிவுநீருடன் குப்பை கூளங்கள் வந்த தாழிகளில் விழுதல் இயல்பு .

தாழிகளின் அடியில் உள்ள சிறிய துளைகள் வழியே கழிவுநீர் தொட்டியில் நிரம்பித் தெருக்கால்வாயில் கலக்கும் .

அந்நீருடன் வந்த குப்பை கூளங்கள் தாழியின் அடியிலேயே தங்கிவிடும் .

நகராண்மைக் கழகப் பணியாட்கள் அக்குப்பை கூளங்களை அவ்வப்போது தாழிகளிலிருந்து அப்புறப்படுத்தித் தூய்மை செய்வர் .

" ஆ !

இச்சிறந்த முறை வேறு எந்தப் பண்டை நகரத்திலும் இருந்ததாக யாம் கண்டதில்லை ; கேட்டதுமில்லை " என்று சர் ஜான் மார்ஷல் போன்றோர் கூறிப் பெருவியப்பு எய்தியுள்ளனர் "

என்று கூறுவதிலிருந்து மிகப்பெரிய ஒரு நாகரிகம் மண்ணுக்கடியில் புதைந்து போனதை அறியலாம் .

• புதையுண்ட நாகரிகத்தின் பெருமை

சிந்து வெளியில் வாழ்ந்தோர் பெரும்பாலோர் வணிகர்கள் .

மேற்காசிய நாடுகளோடும் , காஷ்மீர் , மைசூர் , நீலகிரி , ராஜபுதனம் போன்ற உள்நாட்டுப் பகுதிகளோடும் அவர்களுக்கு வாணிகத் தொடர்பிருந்தது .

தங்கம் , செம்பு , தகரம் , வெள்ளி , விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அவர்கள் இறக்குமதி செய்தனர் .

வணிகத்தில் பயன்படுத்தப்பட்ட எடைக் கற்கள் தசாம்ச முறையில் அமைந்துள்ளன .

முகத்தல் , நீட்டல் அளவைகளும் அம்முறையிலேயே அமைந்துள்ளன .

இந்த முத்திரைகளில் யோக நிலையில் அமர்ந்திருக்கும் சிவபெருமான் உருவம் குறிக்கத்தக்கது .

திராவிட நாகரிகத்தின் சமயப் பண்பாடு இதன் மூலம் வெளிப்படுகிறது .

ஆற்றைத் தலையிலிருந்து கீழே விடும் சிவனின் வடிவம் கவனிக்கத்தக்கது .

நீண்ட காலம் இத்தெய்வம் பற்றிய கருத்து திராவிடர்களிடையே இருந்திருக்கின்றது .

சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையில் யோகநிலையில் அமர்ந்த கடவுள் உருவம் பற்றிய வருணனை உள்ளது .

இக்காலத்தில் அவ்வடிவைத் தட்சிணாமூர்த்தி எனக் கூறுகின்றனர் .

கையில் தண்டமும் நீர் கொண்ட கரகமும் இத்தெய்வம் கொண்டிருந்ததாகக் கலித்தொகை குறிக்கின்றது .

திராவிடப் பண்பாட்டின் அடிப்படையான சமயச் சிந்தனையை இவ்வுருவம் உணர்த்துகின்றது . இன்றும் சிவன் கோயில்களின் முதல் திருச்சுற்றில் தெற்கு நோக்கி அமர்ந்த வடிவில் இருக்கும் இவ்வுருவம் காணத்தக்கது .

3.2.3 பண்டைக் காலம்

தமிழ்நாடு சேரநாடு , சோழநாடு , பாண்டியநாடு என்னும் மூன்று பகுதிகளையுடையது .

தொன்மையான குடிகளுக்கு எடுத்துக்காட்டாகச் சேர சோழ பாண்டியர் குடிகளைக் குறிப்பது வழக்கம் .

வால்மீகி இராமாயணம் சேர சோழ பாண்டிய நாடுகளைக் குறிப்பிடுகின்றது .

கிரேக்கத் தூதர் மெகஸ்தனீஸ் தம் இண்டிகா என்ற நூலில் சேர சோழ பாண்டியரைக் குறிக்கின்றார் .

அசோகனின் பிராமிக் கல்வெட்டில் சேரலபுத்திரர் எனச் சேரர் குறிப்பிடப்படுகின்றனர் .

• சேரநாடு

சேரநாடு மலை சார்ந்தது .

சங்க இலக்கியங்களில் " சாரல் நாடன் " என்ற வழக்கு உள்ளது .

சாரல் நாடு என்பதே சேரநாடு என மருவியிருக்க வேண்டும் .

சேரநாட்டில் குட்டநாடு , குடநாடு , பூழிநாடு , குன்றநாடு , மலைநாடு , கொங்குநாடு , பொறைநாடு முதலிய உட்பகுதிகள் இருந்தன .

அயிரைமலை , நேரிமலை , செருப்புமலை , கேப்பாக்கோட்டை , உம்பற்காடு , நறவுத் துறைமுகம் , முசிறித் துறைமுகம் , தொண்டித் துறைமுகம் ஆகிய குறிப்பிடத்தக்க இடங்கள் சேரநாட்டிற்குரியவை .

சேர அரசர்களில் வஞ்சி மாநகரையும் சிலர் மாந்தை நகரையும் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர் .

• சோழநாடு

சோழநாடு தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரமாக உள்ளது .

வங்கக் கடற்கரையில் இதன் தலைநகராகிய பூம்புகார் இருந்தது .

கடலைக் கிழக்கு எல்லையாகவும் புதுக்கோட்டைக்கு அருகில் ஓடும் வெள்ளாற்றைத் தெற்கு எல்லையாகவும் கொண்டிருந்தது பழைய சோழநாடு .

உறையூர் , காவிரிப்பூம்பட்டினம் ஆகிய இருபெருநகரங்கள் அக்காலத்தில் சோழர்க்கு உரியனவாக இருந்தன .

உறையூர் காவிரி ஆற்றின் தென்கரையில் இன்றைய திருச்சி நகரின் ஒருபகுதியாக உள்ளது .

தாலமி என்னும் யவன ஆசிரியர் இவ்வூரை ஓர்தொவுர என்று குறிக்கின்றார் .

காவிரி வடகரையில் அமைந்த காவிரிப்பூம்பட்டினம் பூம்புகார் என்னும் பெயருடையது .

காவிரி புகும் பட்டினம் என்பதே மருவிக் காவிரிப்பூம்பட்டினம் என்றாயிற்று .

இப்பட்டினம் பட்டினப்பாக்கம் , மருவூர்ப்பாக்கம் என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது .

இவ்விரு பகுதிகளுக்கும் நடுவே பெரிய கடைத்தெருக்கள் இருந்தன .

பெரிப்புளூஸ் என்னும் பயணநூல் இவ்வூரைக் கமரா எனக் குறிக்கின்றது .

குடந்தை , கழார் , கோயில்வெண்ணி , போர் , குராப்பள்ளி , தலைச்செங்காடு , பிடவூர் , வல்லம் ஆகிய ஊர்களும் சோழநாட்டில் புகழ் பெற்றிருந்தன .

• பாண்டிய நாடு

பாண்டிய நாடு சங்க காலத்தில் மூன்று பக்கமும் கடலை எல்லையாகக் கொண்ட தென்தமிழ்நாடாக விளங்கிற்று .

இம்மூன்று கடல்களையும் அயல்நாட்டவரான யவனர் எரிதிரையக்கடல் எனக் குறித்தனர் .

இன்று தீவாக இருக்கும் பாம்பன் பகுதி பாண்டிய நாட்டோடு ஒருசேர இணைந்திருந்தது .

பாண்டிய நாட்டின் மேற்குக்கரை இன்றைய தென்திருவாங்கூர் வரை பரவியிருந்தது .

பொதிகைமலையை ஆண்ட ஆய் என்னும் வள்ளல் பாண்டிய அரசர்களைச் சார்ந்திருந்த ஒரு குறுநில மன்னர் .

பாண்டிய நாட்டின் வடக்கு எல்லை தென்வெள்ளாறு ஆகும் .

திண்டுக்கல் மலை , கோடைமலை , பன்றிமலை ஆகிய மலைப்பகுதிகள் பாண்டிய நாட்டின் வடபகுதியில் இருந்தன .

பாண்டியரின் தலைநகர் மதுரை .

தாலமி இதனை மதௌர என்று குறிக்கின்றார் .

மருதமரங்கள் மிகுதியாக இருந்தமையால் இந்நகர் மருதையெனப் பெற்றுப் பின் மதுரை எனத் திரிந்ததென்பர் .

வையையாற்றின் தென்கரையில் அமைந்தது இவ்வூர் .

வையையாற்றில் அமைந்த திருமருதந்துறை அக்காலத்தில் புகழ்மிக்க நீராடுதுறையாக விளங்கிற்று .

பாண்டிய நாட்டின் புகழ்மிக்க துறைமுகம் கொற்கையாகும் .

இத்துறைமுகம் வளைகுடாப் பகுதியில் அமைந்தது .

விலையுயர்ந்த முத்துக்கள் இப்பகுதியில் கிடைத்தன .

இம்முத்துக்கள் அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன .

மற்றொரு துறைமுகமான தொண்டி பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையில் இருந்தது .

3.2.4 இடைக்காலம்

கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு சங்க காலம் மறைந்தது .

களப்பிரர் என்னும் அயலவர் தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செலுத்தினர் .

இவர்கள் காலத்தில் நீதி நலிவுற்றது .

இவர் காலத்தை வரலாற்றில் இருண்ட காலமென்பர் . கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழ்நாட்டின் வடபகுதியைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர் .

மகேந்திரவர்ம பல்லவன் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் " தொண்டை நாடு " எனப்பெற்ற தமிழகப் பகுதி பல்லவ நாடாக விளங்கி அவர்களின் ஆட்சி சேரநாட்டிலும் பரவியது .

பல்லவர் காலத்தின் மிகப்பெரிய கலைச்சின்னம் மாமல்லபுரமாகும் .

இதோ கடற்கரையில் இருக்கும் மாமல்லபுரத்தைக் காணுங்கள் !

கற்களை அடுக்கிக் கட்டாமல் பாறைகளைக் குடைந்து செதுக்கப்பட்ட கோயில்களையும் ரதங்களையும் இங்குக் காணலாம் .

பகீரதன் கங்கையாற்றை நிலவுலகத்திற்குக் கொண்டு வந்ததைக் குறிக்கும் சிற்பம் மிகச் சிறப்பாக இல்லையா ?

அதோ அந்தக் கல்யானை எவ்வளவு அழகாக இருக்கிறது ?

இதன் அழகை ரசித்தவர் அந்த இடத்தை விட்டு அகல்வார்களா ?

பல்லவர்கோன் கண்ட மல்லை - கோலப்

பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை

என்ற பாட்டுக் கேட்கிறதல்லவா ?

சங்ககாலச் சோழர் பூம்புகார் , உறையூர் ஆகிய தலைநகரங்களை யெல்லாம் விட்டுக் குறுநில மன்னராய்ப் பழையாறை என்ற ஊரில் வாழ்ந்தனர் .

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தச் சோழர் மீண்டும் தலையெடுத்தனர் .

விஜயாலய சோழன் என்பவன் தஞ்சாவூரைத் தலைநகராக்கிக் கொண்டு சோழப் பேரரசை நிறுவினான் .

இந்தச் சோழர்குடியில் பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய இராசராசன் தமிழகத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றினான் .

இதோ காணுங்கள் !

தஞ்சாவூர் 216 அடி உயரமுள்ள கோபுரத்தைக் கொண்ட தஞ்சைப் பெருவுடையார் கோயிலை .

இதனைக் கட்டிய பெருவேந்தன் இராசராசனே சைவத் திருமுறைகளைத் தொகுக்கக் காரணமாக இருந்தவன் .

இவன் மகன் இராசேந்திரன் கங்கைக்கரை வரையில் படையெடுத்து வெற்றி கொண்டான் .

ஈழநாட்டையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வந்தான் .

சோழர்களுக்குப் பின் தெற்கே பாண்டியர் ஆட்சி ஓங்கியது .

பாண்டியர்க்குப் பின் மதுரை நாயக்க அரசர்களால் ஆளப்பட்டது .

• சமயங்களின் தோற்றம்

சங்க காலத்தில் வைதிகம் , பௌத்தம் , சமணம் ஆகிய சமயங்கள் தமிழ்நாட்டுக்கு வெளியேயிருந்து தமிழகத்திற்கு வந்தன .

அதற்குமுன் தமிழர் சமயநெறி ஒரு பொதுமையைத் தழுவியிருந்தது .

இயற்கை நெறிப்பட்டதாக அவர்கள் வழிபாடு இருந்தது .

சங்க காலத்தின்பின் சமண பௌத்த வைதிக நெறிகள் தமிழ்நாட்டில் ஓங்கின .

இடைக்காலத்தில் சைவமும் வைணவமும் புதிய எழுச்சி பெற்றன .

சமண பௌத்த சமயங்கள் மெல்லச் செல்வாக்கு இழந்தன .

சைவ சமயத்தைத் திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் , சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் மக்களிடையே பரப்பினர் .

வைணவ சமயத்தைப் பரப்புவதில் நம்மாழ்வார் , பெரியாழ்வார் , ஆண்டாள் , திருமங்கையாழ்வார் , திருப்பாணாழ்வார் போன்றோர் பெருமுயற்சி மேற்கொண்டனர் .

• வருணமும் சாதிகளும்

வைதிக சமயத்தின் தாக்கத்தால் சங்க காலத்திலேயே வருணப் பாகுபாடு புகுந்துவிட்டது .

மேலோர் கீழோர் என்ற பாகுபாடு மெல்ல வளரத் தொடங்கிவிட்டது .

வேள்வி செய்தல் ( யாகம் செய்தல் ) அரசர்களாலும் ஆதரிக்கப்பட்டது .

நான்கு வருணக் கோட்பாடு தமிழகத்திற்குள் செல்வாக்குப் பெறத் தொடங்கியது .

திருவள்ளுவர் பிறப்பால் உருவாக்கப்படும் உயர்வு தாழ்வுகளை மறுத்தார் .

சமண பௌத்த சமயங்கள் வருணப் பாகுபாடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை .

சாதி வேறுபாடுகள் பெருகி வளர்ந்த காலத்தில் சைவ வைணவ சமயங்களும் அவ்வேறுபாட்டை ஒத்துக்கொள்ளவில்லை .

நந்தனார் என்ற தாழ்த்தப்பட்டவர் சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார் .

திருப்பாணாழ்வார் என்ற தாழ்த்தப்பட்டவர் ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார் .

இவற்றையெல்லாம் மீறிச் சாதிகள் வளர்ந்தன .

சாதிகளின் வளர்ச்சியில் தீண்டாமை என்ற கொடுமையும் தோன்றிவிட்டது

.

• பக்தி இயக்கம்

நால்வர்

இதோ இந்த நால்வர் உருவங்களைப் பாருங்கள் !

இதோ பன்னிரண்டு ஆழ்வார்களைக் கவனியுங்கள் !

இவர்கள் தாம் இந்தியாவின் பக்தி இயக்கத்தின் ஊற்றுக்கண்கள் .

ஊர் ஊராகச் சென்று இசையோடு பாடிப் பக்தி இயக்கத்தை வளர்த்தவர்கள் இவர்களே ! ஒவ்வொரு தலமும் புனிதமானதாகக் கருதப்பட்டு இவர்களால் பாடப்பெற்றன .