76

தில்லை

இதோ சிதம்பரம் எனப்படும் தில்லையம்பலத்தைக் காணுங்கள் !

ஆனந்தக் கூத்தனாக நடராசன் ஆடும் புகழ்மிக்க நடனம் மாபெரும் பிரபஞ்ச உண்மையை உணர்த்துவதாக அறிஞர் கூறுகின்றனர் .

திருநாவுக்கரசர் இறைவனின் திருநடனத்தைப் பற்றிப் பாடுவது கேளுங்கள் !

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்

குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்

பால்வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே !

( தேவாரம் , 4-ஆம் திருமுறை : 81 .

3 )

இதோ !

தமிழகத்தின் திருவரங்கத்தில் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டுள்ள அரங்கநாதனை

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே !

ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர்உளானே !

( நாலாயிரத் திவ்விய பிரபந்தம் , திருமாலை : 2 )

என்று தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் பாடுவதைக் கேட்கலாம் .

தமிழர் பண்பாட்டில் பக்தி இயக்கம் பேரிடம் பெற்றுவிட்டது .

3.2.5 பிற்காலம்

• நாயக்கர் ஆட்சி

தென்னாட்டில் ஆந்திரப் பகுதியில் தோன்றிய விஜயநகரப் பேரரசு மதுரையையும் வென்று தன் ஆட்சியின்கீழே கொண்டு வந்தது .

மதுரை , திருச்சி , தஞ்சை ஆகிய பகுதிகள் நாயக்க மன்னர்களால் ஆளப்பெற்றன .

நாயக்கர் ஆட்சியில் மதுரையில் கட்டிடக்கலை சிறப்படைந்தது .

இதோ திருமலை நாயக்கர் மகாலைக் காணுங்கள் .

இன்று மூன்றில் ஒருபகுதிதான் இருக்கிறது .

இரண்டு பகுதிகள் இடிந்து தரைமட்டமாகிவிட்டன .

நாயக்க மன்னர்களில் புகழ் பெற்றவர் திருமலை மன்னர் .

இவர் மதுரை மீனாட்சியிடம் பெரும் பக்தி கொண்டவர் .

தூணில் திருமலை மன்னர் சிற்பமாய் விளங்குவதைக் காணுங்கள் .

திருமலை மன்னர் சிற்பம்

திருமலை நாயக்கர் மகால்

• ஆங்கிலேயர் ஆதிக்கம்

தமிழ்நாடு குறுநில மன்னர்களாலும் , பாளையப்பட்டுத் தலைவர்களாலும் சிறுசிறு ஆட்சிப் பகுதிகளாக மாறியது .

ஒருவர் ஒருவரோடு மோதி அழிந்து கொண்டிருந்தனர் .

இந்த நிலையிலேயே ஆங்கிலேயர் ஆதிக்கம் தமிழகத்திற்குள் நுழைந்தது .

விடுதலை வேட்கை கொண்ட குறுநிலத் தலைவர்கள் சிலர் ஐரோப்பியப் படைகளோடு மோதி அழிந்தனர் .

1639இல் சென்னையில் குடியேறிய ஆங்கிலேயர் 1640இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர் .

19ஆம் நூற்றாண்டில் தேசிய அளவில் விடுதலை உணர்வு தோன்றியது .

போராட்டங்கள் தொடர்ந்தன .

அண்ணல் காந்தியடிகள் தலைமையில் அகிம்சை நெறியில் மாபெரும் விடுதலைப் போராட்டம் நிகழ்ந்தது .

1947இல் சுதந்திரம் பெறப்பட்டது .

இந்தியக் குடியரசு தோன்றி மொழிவாரி மாநிலங்கள் பிரிந்து , மக்களாட்சி அடிப்படையில் பொதுத் தேர்தல்கள் நடந்து , இன்று இந்தியா உலகில் பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது ; தமிழ்நாடு வேளாண்மை , தொழில் துறை , கல்வி , பொருளாதாரத் துறைகளில் மேம்பாடு அடைந்து வருகிறது .

• அயலவர் ஆட்சிக்காலம்

தமிழர் பண்பாட்டில் ஆரியர் , தெலுங்கர் , இசுலாமியர் , ஐரோப்பியக் கிறித்தவர் , மராட்டியர் எனப் பல அயலக மக்களின் பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்பட்டன .

ஆரியர் தமிழகத்தை ஆள்பவராக இல்லையெனினும் அவர்களின் நம்பிக்கைகளும் சடங்குகளும் பலப்பல தமிழர்களிடையே பரவிவிட்டன .

சகுனம் பார்த்தல் , பிராயச்சித்தம் செய்தல் , புரோகிதத் திருமணம் போன்றவை தமிழர்களிடையே வேகமாகப் பரவின . வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் தம் மொழி , பண்பாட்டுப் பழக்கங்களை மறக்கத் தொடங்கினர் .

ஆங்கில மோகம் தமிழர் வாழ்க்கையில் வேர்பிடித்துக் கொண்டது .

முந்நூறு ஆண்டுக்கால ஐரோப்பிய ஆட்சி தமிழகத்தின் உரிமைகளை அறவே நசுக்கிவிட்டது .

உப்பு விளைக்கின்ற உரிமை இல்லாமல் அதற்காகப் போராட வேண்டியதாகி விட்டது .

சரக்குக் கப்பல் ஓட்டும் முயற்சியில் இறங்கி வ.உ. சிதம்பரம் பிள்ளை என்ற தேசத்தலைவர் நாற்பதாண்டுக் காலச் சிறைவாசம் பெற்றார் .

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்

நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ ?

( பாரதி - சுதந்திரப்பயிர் , கண்ணிகள் : 5 )

என்று பாரதியார் அயலவர் ஆட்சிக் கொடுமையைப் பாடுகிறார் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. தமிழ்நாட்டின் பழைய வடக்கு எல்லை எது ?

விடை

2. முல்லை நிலம் என்பது எது ?

விடை

3. வள்ளியின் கதையைக் கூறும் நூல் எது ?

விடை

4. பழந்தமிழ்நாட்டில் ஆடவர் காளையை எதன் பொருட்டு அடக்குவர் ?

விடை

5. குமரிக்கண்டம் எங்கு இருந்தது ?

விடை

6. சிந்துவெளி நாகரிகத்தைத் தோற்றுவித்தவர் யாவர் ?

விடை

7. சிந்து வெளியில் கழிவுநீர் அகற்றும் முறை குறித்துச் சர் ஜான் மார்ஷல் கூறுவது யாது ?

விடை

8. உறையூர் பற்றிக் குறிப்பு எழுதுக .

விடை

9. மாமல்லபுரத்தில் காணப்படும் சிற்பம் குறித்து ஐந்து வரிகள் எழுதுக .

விடை

10 " மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே " என்று பாடியவர் யார் ?

விடை

11. சென்னைக் கோட்டை எப்போது யாரால் கட்டப்பெற்றது ?

விடை

12. கப்பலோட்டியதற்காக வெள்ளையரால் தண்டிக்கப்பட்டவர் யார் ?

பண்பாட்டு வரலாற்று மூலங்கள்

தமிழ்நாட்டின் பண்பாட்டையும் வரலாற்றையும் காட்டும் மூலச்சான்றுகள் பல உள்ளன .

1. இலக்கியப் பதிவுகள்

2. கல்வெட்டுகள்

3. அகழ்வாய்வுகள்

4. அயலகப் பயணிகளின் குறிப்புகள்

என்பவை இந்த வகையில் முக்கியமானவை .

இவற்றை ஆதாரங்களாகக் கொண்டு தமிழகப் பண்பாட்டையும் வரலாற்றையும் மீட்டுருவாக்கம் ( Reconstruction ) செய்ய இயலும் .

3.3.1 இலக்கியப் பதிவுகள்

பண்பாட்டுப் பதிவுகளாகப் போற்றத்தக்க இலக்கியங்கள் சங்ககாலத்தில் எழுதப்பெற்ற பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் , கி.பி. முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டு அளவில் தோன்றிய திருக்குறள் , சிலப்பதிகாரம் , கி.பி. ஆறிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தோன்றிய சைவத் திருமுறைகள் , வைணவ இலக்கியமான நாலாயிரத் திவ்விய பிரபந்தம் , பெரிய புராணம் , கம்ப இராமாயணம் ஆகியவை , கி.பி. பதினைந்து வரை தோன்றிய சிற்றிலக்கியங்கள் .

ஐரோப்பியர் வருகைக்குப்பின் தோன்றி வளர்ந்த உரைநடை , நாவல் , சிறுகதை , நாடகங்கள் ஆகியன எல்லாம் பண்பாட்டு மீட்டுருவாக்கம் செய்யத்தக்க கருவிகளாகும் .

இலக்கியம் காட்டும் சான்றாதாரம் ஒன்றை இங்கு எடுத்துக்காட்டாகக் காணலாம் .

சேரநாட்டின் அரசவை கூடியிருக்கிறது .

அரசன் இமயவரம்பனும் , அவனுடைய மகன்கள் இருவரும் அமர்ந்திருக்கின்றனர் .

அப்போது நிமித்திகன் ( சோதிடன் ) ஒருவன் வருகிறான் .

இமயவரம்பனை அடுத்து அரசாளும் பேறு இளைய மகனுக்கே உண்டென்று கூறுகிறான் .

மூத்த அரசகுமரனாகிய செங்குட்டுவன் துன்பம் நீங்கும் வகையில் இளையவன் நிமித்திகனைக் கோபத்தோடு பார்த்துவிட்டு அரசவையைவிட்டு வெளியேறுகிறான் . வெளியேறிய இளங்கோ துறவுக்கோலம் பூண்டு அரசவைக்குள் நுழைகிறான் .

அந்த இளங்கோவே இளங்கோ அடிகள் .

இந்தக் கதை சிலப்பதிகாரத்தின் இறுதியில் இடம்பெறுகிறது .

நெடுஞ்சேரலாதன் , செங்குட்டுவன் , இளங்கோ ஆகிய மூவர் வரலாற்றையும் கூறுவதோடு இளங்கோ அடிகளின் பண்பாட்டுப் பெருமையையும் கூறக் காணலாம் .

3.3.2 அகழ்வாய்வுகள்

முதுமக்கள் தாழி

இதோ பாருங்கள் !

எவ்வளவு பெரிய தாழி !

இதனை முதுமக்கள் தாழி என்று கூறுவர் .

பழங்காலத்தில் மிக வயது மூத்தவர்களை இத்தகைய பெரிய பானைகளில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம் .

இதைப்போன்ற தாழிகள் தமிழகத்தில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளில் கிடைத்திருக்கின்றன .

இறந்தவர்களைத் தாழியில் இடுதல் , புதைத்தல் , எரித்தல் போன்ற வழக்கங்கள் இருந்திருக்கின்றன .

தாழியில் இடும்போது , அவர்கள் பயன்படுத்திய சில பொருள்களையும் அவர்களோடு புதைப்பது வழக்கமாய் இருந்திருக்கிறது .

அகழ்வாய்வுகளில் , பழங்காலத்துப் பானை ஓடுகள் , மணிகள் , சிறு கலங்கள் , உமி , இரும்புக் கருவிகள் , கற்கருவிகள் ஆகியன கிடைக்கின்றன .

ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த கொடுமணல் , நாகைப்பட்டின மாவட்டப் பூம்புகார் , தஞ்சை மாவட்டப் பழையாறை , தாராசுரம் , திருநெல்வேலி மாவட்டத்து ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் நிகழ்ந்துள்ள அகழ்வாய்வுகள் குறிப்பிடத்தக்கன .

3.3.3 கல்வெட்டுகள்

கருவூர் கல்வெட்டு

கருவூர் மாவட்டத்தில் புகளூர் என்ற ஊரில் உள்ள மலையில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டைக் காணுங்கள் !

இந்தக் கல்வெட்டு என்ன சொல்கிறது தெரியுமா ?

ஓர் இயற்கைக் குகைத்தளத்தில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது .

ஆற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்ற சமணப் பெரியவருக்குச் செல்லிரும்பொறை என்ற சேர அரசனின் மகன் பெருங்கடுங்கோனின் மகன் இளங்கடுங்கோன் , இளவரசாக இருந்தபொழுது இந்தக் குகைத் தளத்தை உருவாக்கிக் கொடுத்ததை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது .

மூன்று தலைமுறை அரசர்களை இக்கல்வெட்டுக் குறிக்கின்றது .

மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன்

கோ ஆ .

ல்லிரும்பொறை மகன் பெருங்

கடுங்கோன் மகன் கடுங்கோன் இளங்கடுங்கோ

இளங்கோ ஆக அறுப்பித்த கல் .

இதுபோலப் பலப்பலக் கல்வெட்டுகள் தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் காட்டுகின்றன .

ஐரோப்பியர் வரவு அகத்திலும் புறத்திலும் நம்மிடம் பல மாற்றங்களைச் செய்துவிட்டன .

அவை எல்லாவற்றையும் நன்மைகள் என்று கூறிவிடுவதற்கில்லை .

நம் பண்பாட்டில் சில நலிவுகளையும் ஐரோப்பியப் பண்பாடு ஏற்படுத்திவிட்டது .

3.3.4 அயலகப் பயணிகளின் செய்திகள்

தாலமி , பிளினி ஆகிய அயல்நாட்டுப் பயணநூலாரும் பெரிப்ளூஸ் என்னும் நூலின் ஆசிரியரும் பழங்காலத்தில் தமிழ்நாடு மேற்கு நாடுகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பினை விளக்குகின்றனர் .

தமிழ்நாட்டின் விலை உயர்ந்த முத்துக்கள் ரோமாபுரியில் அரசகுடியினரால் விரும்பி ஏற்கப்பட்டன .

தமிழ்நாட்டிலிருந்து மிளகு , ஏலம் , இலவங்கம் , யானைத்தந்தம் , சந்தனம் , அகில் ஆகியன மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகியிருக்கின்றன .

கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாண்டியநாடு வந்த மார்க்கோபோலோ குதிரைகளை இறக்குமதி செய்வதில் பாண்டியநாடு பெரும் பொருளைச் செலவிட்டதைக் கூறுகின்றார் .

வாசப் என்பவரும் ஆண்டு ஒன்றுக்குப் பாண்டியர்களுக்காக மலபார் கடற்கரையில் 1400 குதிரைகள் வந்து இறங்கின என்கிறார் .

மார்க்கோபோலோ கூறும் செய்திகளில் மிகவும் கவனிக்கத்தக்கன கீழ்வருமாறு :

மார்க்கோபோலோ

• பாண்டியநாட்டு மக்கள் நாள்தோறும் இருமுறை குளித்தனர் .

• குளிக்காதவர்களைத் தூய்மைக் குறைவாகக் கருதினர் .

• நீரை உதட்டுக்கு மேலே தூக்கிப் பருகினர் .

• வலது கையால் சாப்பிட்டனர் .

• மன்னராயினும் தரையில் உட்கார்ந்து பேசுவதைக் குறைவாகக் கருதவில்லை .

• தமிழ்ப் பண்பாட்டு மையங்கள்

தமிழ்ப் பண்பாட்டின் மையங்களாக இன்று நாம் காணத்தக்க இடங்கள் பல. வரலாற்றுச் சிறப்புப் பெற்ற ஊர்களும் , இறைத் தொண்டிற்கும் கலைப்பணிக்கும் பெயர் பெற்ற கோயில்களும் தமிழ்ப் பண்பாட்டின் விளக்க வாயில்களாகத் திகழ்கின்றன .

3.4.1 வரலாற்றுப் புகழ்வாய்ந்த இடங்கள்

தமிழகத்தின் தலைநகரங்களான பூம்புகார் , உறையூர் , கருவூர் , மதுரை , காஞ்சி , திருச்சி , தஞ்சாவூர் ஆகியனவும் , துறைமுகப் பட்டினங்களான முசிறி , கொற்கை , தொண்டி ஆகியனவும் , கலை வளர்த்த இடங்களான மாமல்லபுரம் , கழுகுமலை , குடுமியாமலை , கங்கை கொண்ட சோழபுரம் , சிதம்பரம் ஆகியனவும் வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களாகும் .

ஆவுடையார் கோயில் , திருவலஞ்சுழி , திருவீழிமிழலை , நாமக்கல் ஆகிய ஊர்களும் கவின்கலை மாட்சிமிக்க இடங்களாகும் .

இதோ திருவலஞ்சுழியில் உள்ள பலகணியைப் பாருங்கள் . ஒரேகல்லில் அமைந்தது இது. இதன் நேர்த்தியான வேலைப்பாடு யாரையும் மயங்கச் செய்யும் .

3.4.2 கோயில்கள்

கோயில்களில் பழைமையான திருவாரூர்க் கோயிலைக் காணலாம் .

கோயில் ஐந்து வேலிப்பரப்பு ; குளம் ஐந்து வேலிப்பரப்பு .

ஆயிரக்கால் மண்டபம் , தியாகேசர் திருவுலா , ஆழித்தேர் ஓட்டம் ஆகியன இங்குக் காணத்தக்கன .

சிதம்பரம் நடராசர் திருக்கூத்து , சிவகாமியம்மையின் நின்றகோலம் , இறைவனோடு ஆடித் தோற்ற காளி , அப்பர் , சம்பந்தர் , சுந்தரர் , மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் நான்கு கோபுர வாயில்கள் வழியாக வந்து வழிபட்ட மாட்சி , சோழப் பெருவேந்தர்கள் பொன் வேய்ந்த தில்லைக் கோபுரம் , சிவகங்கைக்குளம் ஆகியன இங்குக் காணத்தக்கன .

ஸ்ரீரங்கம்

வைணவப் பெருங்கோயில்களில் திருவரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கம் மிகச் சிறந்தது .

பள்ளிகொண்ட நிலையில் உள்ள அரங்கநாதர் திருவுருவம் , ஆண்டாள் முத்தியடைந்த வரலாறு , மார்கழி மாதத்தில் பாடப்பெறும் திருப்பாவை ஆகியன இங்கு மிகச்சிறப்புடையன .

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழியே பிறந்துவிட்ட தமிழகத்தில் கோயில்களால் கலைகளும் அறங்களும் வளர்ந்தன .

" காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே "

என்ற பாட்டைக் கேட்டு மனத்தில் அசைவு தோன்றாதார் இருக்க முடியுமா ?

சிக்கல் , கோனேரிராஜபுரம் கோயில்களில் உள்ள சண்முகர் , நடராசர் திருமேனி அழகை யாரேனும் மறக்க முடியுமா ?

ஆதி தமிழிசையின் அடையாளங்களாக விளங்கும் திருமுறை இசையும் , நாதசுரமும் , தமிழகக் கோயில்களில் இன்றும் இடம்பெற்றுள்ளன .

தமிழகத்தின் உயிர்மூச்சாக விளங்குவது கலை. அதன் வெளிப்பாட்டை இன்றும் கோயில்களில் காணலாம் .

தொகுப்புரை

தமிழ்நாட்டின் நில வரலாறு , மக்கள் பிரிவுகள் , தொழில்கள் , சாதிமதப் பிரிவுகள் , அயலவர்க்கு அடிமைப்பட்டமை , விடுதலைப் போராட்டம் , அதன் பயன்கள் , தமிழக வரலாற்றின் பண்பாட்டின் மூலச்சான்றுகள் ஆகியன இப்பாடத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன .

ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக வேங்கடமும் தெற்கு எல்லையாகக் கன்னியாகுமரியும் இருந்தன .

இன்று வடக்கு எல்லை மாறிவிட்டது .

தமிழகம் நானிலப் பகுப்பு உடையது .

ஆயர் , குறவர் , உழவர் , பரதவர் என நானிலத்து மக்களைக் குறிப்பது பழங்கால வழக்கம் .

தமிழர் நாகரிகம் சிந்துவெளியிலிருந்து அறியப்படுகின்றது .

மொகஞ்சதாரோ , ஹரப்பா நகரங்களின் அகழ்வாய்வுகள் பழந்தமிழர் நாகரிகச் சிறப்பை உலகுக்குக் காட்டுகின்றன .

சேர சோழ பாண்டி வேந்தர்களால் ஆளப்பட்ட பண்டைக்காலம் , சமயங்களின் எழுச்சி பெற்ற இடைக்காலம் , அயலவர் ஆட்சி ஓங்கிய பிற்காலம் எனத் தமிழக வரலாறு மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது .

தமிழக வரலாற்றை அறிவதற்கு இலக்கியங்கள் , கல்வெட்டுக்கள் , அகழ்வாய்வுகள் , அயலகப் பயணிகளின் குறிப்புகள் ஆகிய பல சான்றுகள் உள்ளன .

தமிழகத்தில் இயற்கை வளமிகுந்த பகுதிகளும் , கலைநலம் பொலியும் கோயில்களும் தமிழகப் பெருமையை இன்றும் காட்டிக் கொண்டிருக்கின்றன .

இச்செய்திகளை இப்பாடத்தின் வழியாக அறிந்திருக்கிறீர்கள் அல்லவா ?

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. தமிழகப் பண்பாட்டையும் வரலாற்றையும் காட்டும் மூலச்சான்றுகள் எவை ?

விடை

2. இளங்கோ அடிகள் ஏன் துறவியானார் ?

விடை

3. மார்க்கோபோலோ தமிழ் மக்களின் பழக்கங்களில் எவற்றை முக்கியமானவையாகக் குறிக்கிறார் ?

பண்பாட்டு வரலாற்றுச் சான்றுகள்

பாட முன்னுரை

நாகரிகமும் பண்பாடும் மிகுந்த பழமையான நாடுகளுள் தமிழகமும் ஒன்று .

உலகில் இதுவரை இருபத்தி மூன்று நாகரிகங்கள் அரும்பி , மலர்ந்து அவற்றுள் இரண்டே நாகரிகங்கள் இன்றளவில் நின்று நிலவுகின்றன .

அவை சீன நாகரிகமும் , தமிழர் நாகரிகமும் என்பது வரலாற்றுப் பேரறிஞர் டாக்டர் .

தாயின்பி ( J.A. Toynbee ) - யின் கருத்து .

உயர்ந்த பண்பாடு மிகுந்த மக்களே சிறந்த நாகரிகத்தை வழங்க முடியும் .

எனவே , தமிழர்களின் பண்பாடே , அவர்களைச் சிறந்த நாகரிக மக்களாக உலகிற்கு அறிமுகப்படுத்தியது .

பொதுவாகப் பண்பாடுகளை அறிவதற்கான அடிப்படைச் சான்றுகளாகப் பல அமைந்துள்ளன .

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள இலக்கியங்கள் , கலைகள் , அகழ்வு ஆராய்ச்சிகள் , கல்வெட்டுகள் , நாணயங்கள் முதலியவை பண்பாட்டுக் கூறுகளை அறிந்து கொள்வதற்குரிய சான்றுகளாக உள்ளன .

தமிழர் பண்பாட்டைத் தெரிந்து கொள்வதற்கு , இத்தகைய சான்றுகள் பல காணப்படுகின்றன .

அவற்றைப் பற்றிய கருத்துகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன .

இலக்கியம்

இலக்கியம் மக்கள் வாழ்க்கையில் இருந்து மலர்கிறது .

எனவே , இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது .

இலக்கியத்தின் பாடுபொருளாக அமைவதும் வாழ்க்கையே .

வாழ்க்கை முறையே பண்பாட்டை வெளிப்படுத்தும் வாயில் . தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளை இனம் காண்பதற்குத் தமிழ் இலக்கியங்கள் சான்றாக அமைந்துள்ளன .