77

கவிதை என்பது மெய்ம்மையின் நகல் என்று பிளேட்டோ எனும் அறிஞர் குறிப்பிடுவார் .

வாழ்க்கையை நகல் எடுத்துக் காட்டுவது இலக்கியம் .

இலக்கியம் அது படைக்கப்படும் காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் .

அதற்குத் தமிழ் இலக்கியங்கள் சிறந்த எடுத்துக்காட்டு .

தமிழகத்தில் ஒரு நீண்ட நெடிய தமிழ் இலக்கிய மரபு இருந்திருக்கிறது என்பதற்குச் சான்றாய்த் திகழ்பவை தமிழ் இலக்கியங்கள் .

இவ்விலக்கியங்களைப் படைத்த புலவர்கள் , தாம் வாழ்ந்த சூழலை மிகவும் சிறப்பான முறையில் எடுத்துக்காட்டியுள்ளனர் .

ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்கள் , அவர்களின் உணவு வகை , தொழில்வகைகள் , கலைகள் , பழக்க வழக்கங்கள் , நம்பிக்கைகள் , வாழ்க்கை முறை ஆகியவற்றைத் தாம் இயற்றிய இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர் .

4.1.1 அகப்புறப் பண்பாடு

தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ளான் .

அவன் நினைவாகவே இருக்கும் தலைவி , தலைவனைக் காண்பதற்கு விரும்புகிறாள் .

தலைவனைக் காண விழையும் துணிச்சலோடு செல்லும் அவளது நெஞ்சு , நாணத்தோடு திரும்பி வருகிறது .

இந்தச் செயல் அடிக்கடி அவள் நெஞ்சுள் நிகழ்கிறது .

இவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கும் தன் நெஞ்சைப் பார்த்துத் தலைவி ,

பெரும்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல

வரும் செல்லும் பேரும் என்நெஞ்சு

( முத்தொள்ளாயிரம் : 88 )

( நல்கூர்ந்தார் = வறுமையுடையவர் , பேரும் = மீண்டும் வரும் )

என்று குறிப்பிடுகிறார் .

செல்வந்தர் வீட்டில் அவர்களைக் காணச் சென்ற வறியவர்கள் , கதவு அடைத்திருப்பதைக் கண்டு , தட்டித் திறக்கச் செய்யத் தைரியம் இல்லாமல் , வெறும் கையோடு திரும்பி வரவும் விருப்பம் இல்லாமல் , போவதும் வருவதுமாக இருந்தால் எப்படி இருக்குமோ , அவ்வாறு தலைவனைக் காணச்சென்ற தன் நெஞ்சம் இருக்கிறது என்று தலைவி கூறுகிறாள் .

அவளது நெஞ்சம் தலைவனிடம் வெட்கத்தோடு போவதும் , திரும்பி வருவதும் செல்வந்தரை நாடிச் செல்லும் வறியவர்க்கு உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது .

இப்பாடலில் , உவமைச் சிறப்பு ஒரு பக்கம் இருந்தாலும் , இன்னொரு பக்கம் தமிழ்ப் பண்பாடு பற்றிய செய்தியும் புலப்படுகிறது .

தன்னை நாடி வரும் வறியவர்களுக்கு உதவும் தமிழரின் ஈகைப்பண்பு தெரிகிறது .

அது மட்டுமா ?

வறுமையின் காரணமாக மானமிழந்து எப்படியாவது பொருளைப் பெறவேண்டும் என்ற எண்ணம் வறியவர்களுக்கு இல்லை ; பிறரிடம் சென்று யாசிக்க அவர்கள் மனம் இடம் தரவில்லை ; அந்தச் செயலுக்கு நாணுகிறார்கள் ; வறுமை அவர்களைத் துரத்துகிறது ; தன்மானம் தடை செய்கிறது .

இவ்வாறு அவர்கள் மனம் போராடக் காரணம் என்ன ?

மானத்தோடு வாழ விரும்பும் அவர்களது பாரம்பரியம் .

மேலும் , காதல் வாழ்க்கையில் தலைவனைப் பிரிந்து வாழும் தலைவியின் துயரம் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகிறது .

நாணமும் பயிர்ப்பும் உடைய பெண்ணின் தயக்கம் திரும்பி வரச் செய்கிறது .

தலைவன்மீது கொண்ட அன்பு போகச் செய்கிறது .

இது தலைவி தலைவன் மீது கொண்ட காதலையும் , பிரிவினால் அவள் அடையும் துன்பத்தையும் வெளிப்படுத்துகின்றன .

காதலர்களிடையே காணப்பட்ட அன்பை இப்பாடல் நமக்குப் புலப்படுத்துகிறது .

தமிழர்கள் தம் வாழ்க்கையை அகம் புறம் என்று பிரித்து வாழ்ந்தனர் .

தலைவனுக்கும் தலைவிக்கும் இடையேயுள்ள காதல் வாழ்க்கை அகத்துள் அடங்கும் .

அதற்குப் புறம்பான போர் , கொடை போன்றவை புறமாகக் கருதப்படும் .

மேற்குறிப்பிட்ட இந்தப் பாடலில் முதல் வரி புறமும் இரண்டாவது வரி அகமும் ஆக அமைந்திருக்கிறது .

இது இரண்டு வகைப் பண்பாட்டிற்கும் தமிழர் கொடுத்த சிறப்பை வெளிப்படுத்துகிறது .

4.1.2 பரந்துபட்ட மனமும் பண்பாடும்

தொன்றுதொட்டே தமிழர்கள் உலகளாவிய நோக்கும் பரந்துபட்ட மனமும் கொண்டவர்கள் .

அதற்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் பல சான்றுகள் பகர்கின்றன .

இந்த உலகத்திலுள்ள மானிடர் யாவரும் ஓர் இனமே .

எனவே அவர்கள் நம் உறவினர்கள் .

அதனால் அவர்கள் வாழும் ஊரும் நமது ஊர்களே .

இத்தகைய ஒரு பரந்த மனப்பான்மையை

யாதும் ஊரே ; யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

( புறம் : 192 )

( யாதும் = எந்த ஊரும் , கேளிர் = உறவினர் , தீது = தீமை , வாரா = வராது )

என , கணியன் பூங்குன்றன் எனும் புலவர் குறிப்பிடுகிறார் .

சங்க காலத்தைச் சார்ந்த இந்தப் பாடலில் வரும் கருத்து , இந்தியச் சிந்தனைகளிலேயே மிகவும் புரட்சிகரமான ஒன்று . சாதிய அடிப்படையிலான இந்தியச் சமுதாய அமைப்பில் , எல்லை கடந்த ஓர் உலகளாவிய பார்வை , தமிழர் பண்பாட்டின் உயர்ந்த நிலையைக் கூறுகிறது .

மிகவும் பிற்பட்ட காலத்தில்தான் பெர்டர்ன் ரசல் ( Bertand Russel ) போன்றோர் ஓர் - உலகக் கோட்பாட்டை ( One World ) வெளியிட்டனர் .

ஆனால் தமிழர்கள் காலவரையறை சொல்ல இயலாத காலத்திலேயே உலகளாவிய தம் பரந்துபட்ட நோக்கை வெளிப்படுத்தியுள்ளனர் .

சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் சிந்தனை முதிர்ச்சியை எண்ணிப்பாருங்கள் .

4.1.3 நன்மையும் தீமையும்

இதற்கு முன்பகுதியில் சுட்டிய பாடலின் இரண்டாவது வரியைச் சற்று நோக்குங்கள் !

தீதும் நன்றும் பிறர் தர வாரா

நமக்கு வரும் தீமையும் நன்மையும் , பிறரால் நமக்கு வராது .

நமது செயல்களாலேயே நமக்கு வந்து சேரும் என்பது இந்த வரியின் பொருள் .

இதனால் வெளிப்படும் செய்தி என்ன ?

சற்று சிந்தித்துப் பாருங்கள் !

பிறருக்குத் தீங்கு விளைவிக்க நினைக்காத மன இயல்பு வேண்டும் .

அத்தகைய பண்பாடு கொண்ட தமிழர் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது இல்லையா ?

4.1.4 பொதுநலமும் பண்பாடும்

இந்த உலகத்தில் பல தீமைகள் நிகழ்கின்றன .

இதற்குக் காரணம் தன் நலத்திற்காக எத்தகைய தீமைகளையும் செய்யத் துணியும் தீயவர்கள் பலர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் .

இருந்தாலும் இந்த உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது .

இதற்கு என்ன காரணம் ?

சுயநலம் கருதாத பல நல்லவர்கள் இருக்கின்றார்கள் .

எத்தகைய நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கடலுள் மாய்ந்த இளம் பெரும்வழுதி எனும் புலவர் கீழ்க்குறிப்பிடும் பாடலில் சுட்டிக் காட்டுகிறார் .

உண்டால் அம்ம , இவ்வுலகம் , இந்திரர் ,

அமிழ்தம் இயைவதாயினும் , இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே .

முனிவிலர்

துஞ்சலும் இலர் , பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ் எனின் , உயிரும் கொடுக்குவர் , பழியெனின்

உலகுடன் பெறினும் , கொள்ளலர் ; அயர்விலர் ;

அன்ன மாட்சி அனைய ராகித் ,

தமக்கென முயலா நோன்தாள் ,

பிறர்க்கென முயலுநர் உண்மையானே

( புறம் : 182 )

( தமியர் = தனித்து , இலரே = இல்லாதவர் , முனிவு = கோபம் , துஞ்சலும் இலர் = சோம்பி இருக்க மாட்டார்கள் , அயர்வு = சோர்வு , அன்ன = அத்தகைய , மாட்சி = சிறப்பு , முயலா = முயற்சிக்காத , நோன்தாள் = வலிய முயற்சி )

தேவர் உலகத்தில் வாழ்பவர்கள் இந்திரர்கள் .

இவர்கள் உண்ணும் உணவு அமிழ்தம் .

இந்த அமிழ்தத்தை உண்ணுவதாலேயே இவர்களுக்குச் சாவு இல்லை .

இத்தகைய சிறப்பு வாய்ந்த அமிழ்தமே கிடைத்தாலும் , சுயநலத்துடன் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள் .

எந்தச் சூழலிலும் சினம் கொள்ளமாட்டார்கள் .

பிறருக்கு நன்மை செய்வார்கள் .

பழியான ஒன்றைச் செய்வதற்கு உலகமே பரிசாகக் கிடைத்தாலும் பழியான செயல்களைச் செய்ய மாட்டார்கள் .

இவ்வாறு பிறருக்காக வாழும் பொதுநலம் படைத்தோர் இருப்பதால்தான் இந்த உலகம் வாழ்கிறது .

மேற்குறிப்பிட்ட பாடலின் வாயிலாக நாம் பெற்றுக் கொண்ட செய்தி யாது ?

தமிழர்கள் எவ்வளவு பெரிய சிறப்புக்குரிய பொருள் கிடைத்தாலும் , தவறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் .

பொது நலத்திற்காகவே எதையும் செய்வார்கள் - செய்ய வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்ந்திருக்கிறார்கள் .

அவ்வாறு வாழவும் வற்புறுத்தி அறிவுரை கூறியுள்ளனர் .

இது அவர்களது பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகிறது .

தமிழ் இலக்கியங்கள் தரும் இத்தகைய செய்திகள் எல்லாம் இலக்கியம் எவ்வாறு பண்பாட்டை வெளிப்படுத்துவதற்குரிய வாயில்களாகத் திகழ்கின்றன என்பதனை இயம்பும் .

கலைகளும் பண்பாடும்

‘ கலை என்பது உணர்வின் வெளிப்பாடு .

அது உணர்வை வெளியிடுவதுடன் பிறருக்கு அவ்வுணர்வை ஊட்டும் பெருமை உடையது ’ என்பார் டால்ஸ்டாய் .

கலை கருத்தின் உறைவிடம் ; அழகின் பிறப்பிடம் ; மகிழ்ச்சியின் மாட்சி ; நாகரிகத்தின் ஒளிவிளக்கு ; பண்பாட்டின் உரைகல் என்று குறிப்பிடுவர் . இத்தகைய சிறப்பு வாய்ந்த கலையில் தமிழர்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர் .

பல அரிய கலைகளைப் படைத்தனர் .

கலை உணர்வு கொண்ட தமிழர்களின் பண்பாட்டைத் தெரிந்து கொள்வதற்கு அவை அடிப்படைச் சான்றுகளாக அமைந்துள்ளன .

4.2.1 கட்டடக் கலை

சிற்பம் , ஓவியம் ஆகிய கலைகளுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது கட்டடக்கலை .

தொழில்நுட்பம் , அழகு , கற்பனை ஆகிய மூன்றும் இணைந்த ஒன்று கட்டடக்கலை .

மனித இனப் பண்பாட்டின் முன்னேற்றத்தைத் தெளிவாக அறிவதற்குக் கட்டடக்கலையே சான்று பகர்கின்றது .

• கட்டடக்கலையும் தமிழர் பண்பாடும்

தொடக்கக் காலத்தில் சிறு குடிசை கட்டியதிலிருந்து , அரிய கலைகளின் கருவூலமாகக் காட்சியளிக்கும் கோயில்கள் கட்டப்பட்ட காலம் வரையிலும் கட்டடக்கலை பல்வேறு வகையான வளர்ச்சியை அடைந்துள்ளது .

இந்த வளர்ச்சி எதைக் காட்டுகிறது ?

தமிழர் தமது சமூக - சமயச் சூழல்களையும் , வாழ்க்கை முறைகளையும் நோக்கங்களையும் , நம்பிக்கைகளையும் வெளிப்படுத்துவதற்கு ஓயாமல் உழைத்து வந்திருக்கின்றனர் .

அவற்றின் வாயிலாகத் தம் பண்பாட்டுக் கூறுகளையும் புலப்படுத்தியுள்ளனர் என்பவை புலனாகும் .

• தஞ்சைப் பெருவுடையார் கோயில்

சோழப் பேரரசில் , முதலாம் இராசராசன் மிகச் சிறந்த ஒரு மன்னன் .

வெற்றி வீரனாகத் திகழ்ந்த இராசராசன் , சிறந்த சமயப் பற்றும் கலைத்திறனும் உடையவன் .

அவன் எழுப்பியது தஞ்சைப் பெருவுடையார் கோயில் .

• வியப்பு மிகு விமானம்

இக்கோயிலின் விமானம் அழகு மிகுந்த பிரமிடு போன்ற தோற்றம் உடையது .

இதில் வெளிப்படும் கலையழகும் , கட்டமைப்பும் , நுட்பமும் தமிழர்களின் பண்பாட்டை உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு சின்னம் .

இதன் விமானம் மாபெரும் தோற்றத்தோடு அழகு மிகுந்த வடிவம் உடையது .

இதன் உயரம் 64.5 மீட்டர் .

இதோ அதைப் பாருங்கள் !

விமானத்தின் அடித்தளம் சதுரமாகவும் செங்குத்தாகவும் அமைந்திருக்கிறது .

உச்சியில் கலசம் பொருத்தப்பட்ட வளைமாடம் ( dome ) உள்ளது .

பதினாறு மாடங்களைக் கொண்ட பிரமிட் போன்ற உடற்கட்டு மேல்நோக்கி , வடிவில் குறுகிக் கொண்டே செல்லும் .

இதன் முடியின் பரப்பு அளவு , அடித்தளத்தின் பரப்பு அளவில் மூன்றில் ஒரு பகுதியாகும் .

அம்முடியின் அமைப்பு சதுரமான மேடைபோல் அமைந்துள்ளது .

அதன் மீது , உள்நோக்கி வளைந்த கழுத்து அமைப்போடு கூடிய சிகரம் அமைந்துள்ளதைக் காணலாம் .

• நிழல் விழாக் கலசம்

கோயிலின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள கலசத்தின் நிழல் கீழே தரையில் விழுவதே இல்லை .

ஞாயிறு எத்திக்கிற்குச் சென்றாலும் கலசத்தின் நிழல் தரையில் விழாத வகையில் , அதை அமைத்திருப்பது , தமிழர்கள் கட்டடக்கலையில் அடைந்துள்ள உயர்ந்த நிலையை வெளிப்படுத்துகிறது .

அவர்கள் மதிநுட்பத்தையும் ஆற்றலையும் , முருகியல் உணர்வினையும் உணர்த்துகிறது .

சோழர்காலத் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பிற்குத் தஞ்சைப்பெருவுடையார் கோயில் ஒரு சிறந்த சான்று .

4.2.2 ஓவியக் கலை

தொல் பழங்காலம் முதலே மனிதன் தன் உள்ளத்தில் எழுந்த அழகு உணர்ச்சியைப் புறத்தே வடிவ அமைப்பில் காட்ட முயன்றான் .

அதன் வெளிப்பாடே ஓவியக்கலை .

குகைகளில் வாழ்ந்து வந்த கற்கருவிக் கால மனிதனும் , குகைகளின் சுவர்களிலும் , கூரைகளிலும் தான் கண்ட விலங்குகளையும் , தன்னுடன் வாழ்ந்த மக்களையும் , தனக்குக் கிடைத்த செம்மண்ணையும் , கரியையும் குழைத்து ஓவியங்கள் வரைந்து , தன் கலை ஆர்வத்தைக் காட்டினான் .

மனிதனின் அழகு உணர்ச்சியையும் , உள்ள நெகிழ்ச்சியையும் ஊற்றாகக் கொண்டு தோன்றிய ஓவியம் தமிழர்களின் பண்பாட்டைப் புலப்படுத்துவதற்குரிய அடிப்படைகளில் ஒன்று .

• ஓவியக் கலையும் தமிழர் பண்பாடும்

போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரர்களுக்கு நினைவுச் சின்னமாக , கல்லில் அவர்களது உருவத்தினைச் செதுக்கி அவர்களது பெயரும் , புகழும் பொறித்து நடுகல் நட்டு வழிபாடு செய்யும் வழக்கம் தமிழர்களிடம் இருந்தது .

அவ்வாறு கற்களிலே வீரர்களின் உருவங்களைச் செதுக்குவதற்கு முன்னர் , கல் தச்சர் , தாங்கள் செதுக்க விரும்பும் உருவத்தை முதலில் வரைந்து பார்ப்பர் .

பின்பு அந்த ஓவியத்தைச் சுற்றிலும் செதுக்கிக் கல்லில் உருவம் அமைப்பார்கள் .

இதிலிருந்து ஓவியக் கலை உணர்வு தமிழர்களுக்கு இருந்திருக்கிறது என்பது பெறப்படும் .

மேலும் , மகளிரும் , ஆடவரும் தங்கள் தோள்களிலும் , மார்புகளிலும் சந்தனக் குழம்பினால் மான் , மயில் , வல்லிக்கொடி முதலிய ஓவியங்களை வரைந்தனர் என்பது தொல்காப்பியத்தின் முலம் அறிய முடிகிறது .

• மடலேறுதல்

அகப்பொருள் துறையில் ஒன்று மடலேறுதல் .

தலைவி மீது காதல் கொண்டுள்ள தலைவன் , தன் காதலை ஊரார்க்கு வெளிப்படுத்த பனைக் கருக்கால் ( மடலால் ) குதிரை ஒன்று செய்து , அதன்மேல் அமர்ந்து தலைவியின் ஊரின் வீதிகளில் உலாவருவான் .

அப்பொழுது தன் கையில் , தான் விரும்பும் தலைவியின் உருவத்தை ஓவியமாக வரைந்து , ஊரார் அறிய " இவளைத்தான் நான் விரும்புகிறேன் " என்று காட்டிக் கொண்டே வருவான் .

ஓவியத்தில் இருக்கும் உருவத்தைக் கொண்டு , அந்தப் பெண் யார் என்பதை அடையாளங்கண்டு கொள்வர் .

அந்த அளவுக்கு உருவ ஒற்றுமையுடன் அந்த ஓவியம் வரையப்பட்டிருக்கும் . அது ஓர் உருவத்தைப் பார்த்த உடனே ஓவியமாக வரையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது .

தலைவி மீது தனது காதலை வெளிப்படுத்த தலைவியின் உருவம் பொருந்திய ஓவியத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறான் தலைவன் .

இது பண்டைத் தமிழ் மக்கள் , முருகியல் உணர்வுக்கும் அதன் வெளிப்பாடான ஓவியத்திற்கும் , காதலரிடையே உள்ள காதல் வெளிப்பாட்டிற்கும் கொடுத்த சிறப்பைப் புலப்படுத்தும் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. தலைவனைக் காண விரும்பும் தலைவியின் நிலை எவ்வாறு உள்ளது ?

விடை

2. இந்தியச் சிந்தனைகளிலே மிகவும் புரட்சிகரமான சிந்தனையாக இந்தப் பாடத்தில் எது சுட்டப்படுகிறது ?

விடை

3. இந்த உலகம் இயங்குவதற்குக் கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி என்ன காரணம் கூறுகிறார் ?

விடை

4. தமிழர் கட்டடக் கலைக்குச் சிகரமாகத் திகழும் பண்டைய கோயில் எது ?

அகழ்வாராய்ச்சி

உலகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்த பண்டைய மக்கள் , தனித்தும் பிறரோடு கலந்தும் பலவகை நாகரிகங்களையும் பண்பாட்டையும் வளர்த்து வந்தனர் .

கற்கால மக்கள் செம்பைப் பயன்படுத்தத் தொடங்கியதும் கல்லால் செய்யப்பட்ட பல பொருள்களைப் புறக்கணித்துவிட்டனர் .

பயன் இல்லாத மண்பாண்டங்களை விலக்கினர் .

இவ்வாறு நீக்கப்பட்ட அப்பொருள்கள் கவனிப்பு இல்லாமல் நாளடைவில் மண்ணுக்குள் புதையுண்டன .

மேலும் பண்டைய மக்கள் நல்லிடங்களைத் தேடி அடிக்கடி இடம் மாறித் திரிந்தனர் .

ஆதலின் ஆங்காங்குப் பழுது அடைந்த பொருள்களை விட்டுவிட்டுச் சென்றனர் .

அப்பொருள்கள் நாளடைவில் மண்ணுக்குள் புதைந்தன .

ஆற்று ஓரங்களிலும் கடற்கரை ஓரத்திலும் வாழ்ந்த மக்கள் இயற்கைச் சீற்றத்திற்கு அஞ்சி இடம் பெயர்ந்தனர் .

இயற்கைச் சீற்றத்தாலும் பல்வேறு காரணங்களினாலும் மக்கள் பயன்படுத்தியவை மண்ணுள் மறைந்தன .

ஆற்றின் அடியில் புதையுண்டன .

பல சமவெளிகளில் மண்மேட்டினுள் புதைந்தன .

இங்ஙனம் புதைந்து கிடப்பவற்றைக் கண்டுபிடிக்க மண்மேடிட்ட இடங்களைத் தோண்டிப் பார்த்தனர் .

அவ்விடங்களில் காணப்படும் பல திறப்பட்ட பொருள்களை ஆய்ந்தனர் .

அவற்றைப் பற்றிய உண்மை மற்றும் அவற்றைப் பயன்படுத்திய மக்களின் வாழ்க்கை முறை ஆகியவை பற்றி அறிய முயன்றனர் .

இத்தகைய முயற்சியே அகழ்வாராய்ச்சி .

• அகழ்வாராய்ச்சிகளின் பயன்

அகழ்வாராய்ச்சியின் வாயிலாக உண்மைச் செய்திகளையும் அவற்றைப் பயன்படுத்திய பண்டைய மக்களைப் பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்ள முடியும் .

அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் தொல் பழங்கால மக்களின் பண்பாட்டுக் கூறுகளான வாழ்க்கை முறை , நம்பிக்கை , சடங்கு , வழிபாடு , பேசிய மொழி , கலையார்வம் முதலியவற்றைத் தெரிந்து கொள்ளலாம் .

4.3.1 மொகஞ்சதாரோ - ஹரப்பா உணர்த்தும் பண்பாடு

கி.பி. 1922-ஆம் ஆண்டுவரை வேத கால நாகரிகமே இந்தியாவின் தொல் பழங்கால நாகரிகமெனக் கூறப்பெற்று வந்தது .

ஆனால் 1922-ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையினர் சிந்து மாநிலத்தில் மொகஞ்சதாரோ என்னும் இடத்திலிருந்த ஒரு பெரிய மண்மேட்டைத் தோண்டி அகழ்வாராய்ச்சி நிகழ்த்தினர் .

அதன் வாயிலாக , அங்கு மண்ணுக்கு அடியில் , ஓர் அழகிய நகரம் புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது .

அதேபோல மேற்குப் பஞ்சாப் மாநிலத்தில் , ஹரப்பா என்னும் நகரம் புதைந்து கிடப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது .

இவ்விடங்களில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்தி , மண்ணுக்கு அடியில் புதைந்து கிடந்த இந்த இரு நகரங்களைப் பற்றிய செய்திகளை உலகறியச் செய்தவர் , தொல்பொருள் ஆய்வியல் அறிஞர் .

சர். ஜான் மார்ஷல் ( Sir John Marshall ) என்பவர் .

இப்புதையுண்ட நகரங்களைப் பற்றிய செய்திகளின் தொகுப்பு .

பிற்காலத்தில் , சிந்துவெளி நாகரிகம் ( Indus Valley Civilization ) , ஹரப்பா பண்பாடு ( Harappan Culture ) என்ற தலைப்புகளில் அறியப்படலாயின .

• சிந்துவெளி நாகரிகமும் தமிழர்களும்

சிந்துவெளி நாகரிகத்தைத் திராவிடர் நாகரிகம் ( தமிழர் நாகரிகம் ) என்று கூறுவதற்கு அங்குத் தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களும் , வெளிப்பட்ட கட்டட அமைப்பும் , பயன்படுத்திய நாணயங்களும் சான்றாக அமைந்துள்ளன .

இவ்வுண்மையை , சர். ஜான் மார்ஷல் , சர். மார்டிமர் வீலர் ( Sir Mortimer Wheeler ) , ஹிராஸ் பாதிரியார் ( Father Heros ) போன்ற தொல்லியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வு முடிவுகளாக வெளியிட்டுள்ளனர் .

மேலும் டாக்டர் எச்.ஆர். ஹால் ( Dir .

H.R. Hall ) என்ற வரலாற்று அறிஞர் , சமீப கிழக்கின் தொன்மை வரலாறு ( Ancient History of the Near East ) என்ற நூலிலும் பல சான்றாதாரங்களுடன் நிறுவியுள்ளார் .

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் என்பவரும் , மொகஞ்சதாரோ முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் தமிழ் - பிராமி எழுத்துகளை ஒத்திருக்கின்றன என்று குறிப்பிடுகின்றார் .

மேலும் அங்குக் கிடைத்துள்ள பல தகவல்கள் எந்த வகையில் தமிழோடும் தமிழர்களோடும் தொடர்புடையன என்பதையும் தம் ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளார் .

மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் எனவும் , தமிழர் நாகரிகமும் பண்பாடும் இந்திய நாடு முழுவதும் பரவியிருந்தது எனவும் வரலாற்றுப் பேராசிரியர் கே.கே. பிள்ளை போன்றோர் குறிப்பிடுகின்றனர் .

• சிந்துவெளி புலப்படுத்தும் தமிழ்ப்பண்பாடு

சிந்து வெளியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட நகரங்களின் இல்லங்கள் வரிசையாகக் கட்டப்பட்டுள்ளன .

மாட மாளிகைகள் , மண்டபங்கள் , நீராடும் குளம் , கழிவு நீர்ப்பாதைகள் ஆகியவையும் காணப் பெறுகின்றன . எளிமையான வீடுகளிலும் தனித்தனியே சமையல் அறை , படுக்கை அறை , குளியல் அறை முதலியன இடம் பெற்றிருந்தன .