78

கற்பனையும் , அழகும் , தொழில் நுட்பமும் பொருந்திய கட்டடக் கலை மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியைப் புலப்படுத்தும் என்பதை முன்னரே பார்த்தோம் .

மனிதன் , தன் வாழ்க்கை நோக்கத்தையும் , அழகு உணர்வோடு கூடிய பயன்பாட்டையும் , தான் அமைக்கும் கட்டடங்களில் வெளிப்படுத்து கின்றான் .

இது அவனது பண்பாட்டுக் கூறுகளில் சிறப்புடையது .

சிந்துவெளி நாகரிகம் வாயிலாக வெளிப்படும் தமிழர் பண்பாடு இதைத்தான் நமக்குப் புலப்படுத்துகிறது .

4.3.2 அரிக்கமேடு அகழ்வராய்ச்சி உணர்த்தும் பண்பாடு

புதுச்சேரிக்கு அருகாமையில் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சியும் தமிழர் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துகின்றது .

அரிக்கமேடு அகழ்வராய்ச்சியில் கிடைத்தவை

இங்கு மண்பாண்டங்கள் பல கிடைத்துள்ளன .

விற்பனைச் சாலைகள் , பண்டகச் சாலைகள் முதலியவை இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன .

இவற்றிலிருந்து என்ன புலப்படுகிறது ?

தொல் பழங்காலத் தமிழ் மக்கள் செம்மைப்பட்ட வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தனர் என்பது புலப்படுகிறது .

இத்தகைய வாழ்க்கை முறை அவர்களது தொன்மையான பண்பாட்டை வெளிப்படுத்துகிறது .

4.3.3 ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி உணர்த்தும் பண்பாடு

இந்தியாவிலேயே மிகப் பெரிய அகழ்வாராய்ச்சியாகக் கருதப்படுவது , திருநெல்வேலி பக்கத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியாகும் .

இங்கு மனித எலும்புக்கூடுகள் , மெருகிட்ட மண்பாண்டங்கள் , இரும்பாலான சில கருவிகள் , பொன்னாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட அணிகலன்கள் , சிறு வேல்கள் ஆகியவை அடங்கிய தாழிகள் பல கிடைத்துள்ளன .

தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று தாழிகள் அமைத்தல் .

இறந்தோரைப் புதைப்பதற்காகத் தாழிகளை நம் முன்னோர் பயன்படுத்தி உள்ளனர் .

அத்தாழிகளில் இறந்தோரைப் புதைக்கும் பொழுது , அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் , விரும்பிய பொருள்களையும் , இறந்தோர் உடலுடன் புதைத்த பழைய மரபை அகழ்வாராய்ச்சியின் மூலம் அறிய முடிகிறது .

இன்றைக்கும் சில இடங்களில் இந்தப் பழைய மரபு பின்பற்றப்படுகிறது .

தாழிகளைத் தோண்டி எடுத்ததின் மூலம் , தமிழர் பண்பாட்டுக் கூற்றை வெளிப்படுத்தும் பழக்க வழக்கத்தையும் , நம்பிக்கையையும் அறிய முடிகிறது .

கல்வெட்டுகள்

பழங்கற்கால மக்கள் ஓரிடத்திலும் நிலையாகத் தங்கி வாழ்ந்து வந்ததாகத் தெரியவில்லை .

அவர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டே இருந்தனர் .

பெரும்பாலும் சமவெளியில் வாழ்ந்து வந்தனர் .

சிற்சில நேரங்களில் காட்டு விலங்குகளுக்கு அஞ்சி மலைக் குகைகளில் ஒடுங்கி வாழ்ந்து வந்திருக்கின்றனர் .

தமிழிலுள்ள படிக்கும் நிலையிலுள்ள மிகப் பழைய வரி வடிவம் , தமிழ் - பிராமி வரிவடிவமாகும் .

தமிழகப் பிராமிக் கல்வெட்டுகள் பிராகிருதச் சொற்கள் கலந்து தமிழ் மொழியிலே எழுதப்பட்டன எனப் பேராசிரியர் கே.கே.பிள்ளை , கமில் சுவெலபில் , பேராசிரியர் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்றோர் குறிப்பிடுகின்றனர் .

கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள செய்திகளிலிருந்து , கல்வெட்டு எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் .

அவற்றின் மூலம் அவர்களது பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து கொள்ளலாம் .

4.4.1 கல்வெட்டு உணர்த்தும் பண்புகள்

தமிழகத்திலுள்ள மாங்குளம் என்ற பகுதியில் ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது .

இது நெடுஞ்செழியன் என்ற மன்னன் , சமண குருக்களுக்குக் குகைத்தானம் செய்த செய்தியைக் குறிப்பிடுகிறது .

இன்னொரு இடமாகிய புகளூர் என்ற பகுதியில் ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது .

இதில் நெடுஞ்செழியன் என்ற மன்னன் , சமண குருக்களுக்குக் குகைத்தானம் செய்த செய்தி இடம் பெற்றுள்ளது .

மேற்குறிப்பிட்ட கல்வெட்டுச் செய்திகளிலிருந்து பண்டைத் தமிழ் மன்னர்களின் ஈகைக் குணத்தை அறிய முடிகிறது .

• கல்வெட்டுச் செய்திகள்

மேலும் அரசாங்கம் பெற்ற வரிகள் , கோயில் அலுவலர்களின் தனித்தனிப் பணிகள் , கோயிலைச் சார்ந்த நகைகள் , சொத்துகள் உட்பட , பல செய்திகள் சோழர் காலக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது .

இவை அக்கால ஆட்சி முறையையும் , வழிபாட்டையும் அறிந்து கொள்வதற்கு உரிய சான்றுகளாக உள்ளன .

நாணயங்கள்

பண்பாட்டுக் கூறுகளை அறிவதற்குக் கல்வெட்டுகள் எவ்வாறு ஒரு மூலமாக அமைந்துள்ளதோ , அதைப்போல , நாணயங்களும் அமைந்துள்ளன .

கூடி வாழத் தொடங்கிய மனிதன் , கொடுக்கல் வாங்கலைப் பண்டமாற்றுதலிலேதான் தொடங்கினான் .

பின்னர் பொருட்களின் பெறுமதியைக் குறிக்கும் மையப் பொருட்களாகச் சோழிகள் , குன்றிமணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினான் ; பிற்காலத்தில் , பொருட்களின் பெறுமதியைத் தகுந்த முறையில் ஈடு செய்யும் சாதனங்களாக நாணயங்கள் உருவாக்கப்பட்டன .

நாணயங்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்திலேயே காணப்படுகின்றன .

• நாணயங்கள் வெளிப்படுத்தும் செய்திகள்

நாணயங்களின் அமைப்பு , பயன்படுத்திய உலோகங்கள் , அடையாளங்கள் , குறியீடுகள் , எண்கள் முதலியன அக்கால மக்களின் இயல்புகளைச் சுட்டிக் காட்டுகின்றன .

இவை பயன்படுத்தப்பட்ட இடங்கள் குறிப்பிட்ட காலத்து அரசியல் , வாணிபம் , பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துவனவாகவும் திகழ்கின்றன .

4.5.1 சோழர் கால நாணயங்கள்

சங்க காலச் சேரர் தலைநகரான கரூரில் , அமராவதி ஆற்றுப்படுகையில் , சங்ககாலச் சோழர் காசு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது .

காசின் முன்பக்கத்தில் காளை உருவம் நின்ற நிலையில் காணப்படுகிறது . காளையின் கீழே நந்திப் பாதச் சின்னங்கள் காணப்படுகின்றன .

பின்பக்கத்தில் புலி உருவம் கோடுகளினால் வரையப்பட்டுள்ளது .

காசின் வடிவம் நீள்சதுர வடிவத்தில் அமைந்துள்ளது .

காசில் உள்ள காளை , அச்சுக் குத்திய வெள்ளி முத்திரை நாணயங்களில் உள்ள காளையைப் போலவே உள்ளது .

எனவே இந்தச் செப்புக்காசு வார்ப்பு முறையில் அமைக்கப்பட்டுள்ளது .

எனவே இந்தக் காசில் வார்ப்பு முறையும் , முத்திரை முறையும் கலந்து உள்ளது .

இந்தக் காசின் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என ஆறுமுக சீதாராமன் போன்ற தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர் .

எனவே , கி.மு. 3-ஆம் நூற்றாண்டளவில் வார்ப்பு முறையில் காசைத் தயாரிக்கவும் , பயன்படுத்தவும் தமிழர்கள் அறிந்திருக்கின்றனர் .

இது அவர்களின் மேம்பட்ட வாழ்விற்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது .

4.5.2 பாண்டியர் நாணயங்கள்

முதன் முதலாக முத்திரை நாணயங்களை வெளியிட்டவர்கள் பாண்டியர்கள் .

இதைத் தொடர்ந்து செப்பு நாணயங்களை வெளியிட்டார்கள் .

இவர்கள் வெளியிட்ட செப்பு நாணயம் சதுர வடிவமானது .

முன்பக்கத்தில் இடது பக்கம் நோக்கி நிற்கும் குதிரை காணப்படுகிறது .

இதன் தலையின் கீழ் ஆமைகள் இரு தொட்டிகளில் உள்ளன .

பின்பக்கத்தில் உருவகப்படுத்தப்பட்ட மீன் உள்ளது .

தமிழ் - பிராமி வரி வடிவடிவத்தில் பெருவழுதி என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது .

இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கும் என்று நம்புகின்றனர் .

இதில் காணப்படும் ஆமை , வேள்வியோடு தொடர்புடையது .

இது பாண்டியர் வேள்வி மீது கொண்டிருந்த ஈடுபாட்டினை வெளிப்படுத்துகிறது .

இதைப்போல , நாணயத்தில் இடம் பெற்ற அடையாளங்களைக் கொண்டு , அக்கால மக்களின் நம்பிக்கை , அரசர்களின் இயல்புகள் ஆகிய பண்பாட்டுக் கூறுகளை அறிய இயலும் .

4.5.3 உரோமானிய நாணயங்கள்

தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் உரோம நாட்டுடன் வாணிபத் தொடர்பு இருந்திருக்கிறது .

இதற்குத் தமிழகத்தில் கிடைத்த உரோமானியக் காசுகள் சான்று பகர்கின்றன .

சேரநாட்டின் மிளகு , பாண்டிய நாட்டின் முத்து , சோழநாட்டின் துணிவகைகள் உரோமநாட்டு மக்களை மிகவும் கவர்ந்தன .

உரோமானியர்கள் , பொன் , வெள்ளி ஆகியவற்றால் செய்த காசுகளைக் கொடுத்து தமிழ்நாட்டிலுள்ள மேற்குறிப்பிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர் .

இதற்குச் சான்றாகப் பல உரோமானியக் காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன .

எடுத்துக்காட்டாக , உரோமானிய வெள்ளிக் காசு ஒன்று கொங்கு நாட்டிலுள்ள திருப்பூரில் கிடைத்துள்ளது .

இது ‘ திரைகடல் ஓடியும் திரவியம் தேடு ’ என்ற தமிழர்களின் குறிக்கோளுக்கு ஏற்ப , கடல் கடந்தும் பிற அயல்நாடுகளுடன் தமிழர்கள் கொண்ட வணிகத் தொடர்பைப் புலப்படுத்துகிறது .

இத்தகைய தொடர்பால் , கருத்துப் பரிமாற்றங்களும் , பண்ட மாற்றங்களும் , பண்பாட்டுத் தாக்கங்களும் நிகழ்ந்துள்ளமையை அறிய முடிகிறது .

மெய்க்கீர்த்திகள்

மன்னர்களின் ஆணை , ஊர் மன்றச் செயல்கள் , புலவர் பாடல்கள் போன்றவை துவக்கத்தில் ஓலைகளில் எழுதப்பெற்றன .

பின்னர் அழியக்கூடிய ஓலையிலிருந்து அழியாத் தன்மை உடைய செப்பேடுகளில் செய்திகள் பொறிக்கப்பட்டன .

இதில் திருத்தி அமைக்கும் வாய்ப்பு இருந்தது .

உலோகத் தகடுகளால் ஆகிய செப்பேடுகளும் மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட போர்களினால் அழிந்தன .

எனவே வன்மைப் பொருளாகிய கல்லில் , அரசர்களின் ஆணைகள் , ஆட்சி முறை , போர்கள் , பண்பு நலன்கள் ஆகியவற்றைப் பதிவு செய்தனர் .

அவையே பிற்காலத்தில் மெய்க்கீர்த்தி என அழைக்கப்பட்டன .

மன்னர்களைப் பற்றிய உண்மையான ( மெய் ) செய்திகளை , குறிப்பாக அவர்கள் புகழைப் புகழ்ந்து கூறுவதால் அதை மெய்க்கீர்த்தி என அழைத்தனர் .

( மெய் = உண்மை , கீர்த்தி = புகழ் )

முதலாம் இராசேந்திரனின் மகன் இராசாதிராசனைப் பற்றிய மெய்க்கீர்த்தி கீழ்க்குறிப்பிடுமாறு கூறுகிறது .

வீரமே துணையாகவும்

தியாகமே அணியாகவும்

கொண்ட மாமன்னன்

இம்மெய்க்கீர்த்தி , இராசாதிராச மன்னன் , சிறந்த வீரனாய்த் திகழ்ந்தான் என்பதையும் , மக்களின் நலத்திற்காக எத்தகைய தியாகத்தைச் செய்வதற்கும் துணிந்தவன் என்பதையும் வெளிப்படுத்துகிறது .

இதிலிருந்து என்ன புலப்படுகிறது ?

மன்னன் , மக்களைப் பகைவரிடம் இருந்து காப்பாற்றும் ஆற்றல் மிகு வீரனாகவும் , மக்களின் நலத்திற்காக , எதையும் தியாகம் செய்யும் மனப்பக்குவம் பெற்றவனாகவும் இருந்திருக்கிறான் என்பது புலப்படுகிறது .

அத்தகையோரை மக்கள் விரும்பினார்கள் என்பதுவும் , அத்தகையோரைப் பற்றியே மெய்க்கீர்த்திகள் எழுதினார்கள் என்பதுவும் தெரிகிறது .

இவ்வாறு மெய்க்கீர்த்திகளும் , பண்பாட்டுக் கூறுகளை அறிவதற்குரிய வரலாற்றுச் சான்றுகளாகத் திகழ்கின்றன .

தொகுப்புரை

தமிழ் மக்களின் பண்பாட்டை அறிந்து கொள்வதற்குரிய சான்றுகளாக , அமைந்துள்ளவை பல. அவற்றுள் இலக்கியம் சிறப்பு வாய்ந்தது . பண்டைத் தமிழ் இலக்கியங்கள் , காதலர்களிடையே உள்ள அன்பை வெளிப்படுத்துகின்றன .

மேலும் தம் வறுமை நிலையிலும் மானத்தோடு வாழ விரும்பும் மக்களையும் எடுத்துக் காட்டுகின்றன .

சாதி சமய வேறுபாடு இன்றி உலகிலுள்ள அனைவரும் உறவினரே என்று எண்ணும் தமிழர்களின் பரந்த மனப்பான்மையையும் புலப்படுத்துகின்றன .

பிறருக்குத் தீமை செய்ய நினைத்தால் , தனக்கும் தீமை விளையும் .

எனவே பிறருக்கு நன்மை செய்யுங்கள் .

இத்தகைய பரந்த மனப்பான்மையும் , சுயநலமில்லாத பொதுநலமும் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்ற தமிழர்களின் மனப்பக்குவத்தையும் அதன் வெளிப்பாடான பண்பாட்டுக் கூறுகளையும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன .

இலக்கியங்களைப் போல , தமிழர்களின் கலைகளும் தமிழர்களின் பண்பாட்டைப் புலப்படுத்துவதற்கு உரிய சான்றுகளாகத் திகழ்கின்றன .

மனிதனின் அழகு உணர்ச்சியையும் , முயற்சியையும் , வளர்ச்சியையும் வெளிப்படுத்தும் கட்டடக்கலை தமிழர்களின் பண்பாட்டிற்கு உரிய சிறந்த சான்று .

எடுத்துக்காட்டாகத் தஞ்சாவூரில் அமைந்துள்ள பெருஉடையார் கோயிலும் , பிற ஓவியங்களும் தமிழர் பண்பாட்டிற்குச் சான்று பகர்கின்றன .

அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த தகவல்கள் , கல்வெட்டுகள் , நாணயங்கள் , மெய்க்கீர்த்திகள் ஆகியவையும் தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. அகழ்வாராய்ச்சியின் மூலம் தொல்பழங்கால மக்களைப் பற்றிய எவ்வகைச் செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம் ?

விடை

2. சிந்துவெளி நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்று கூறிய தொல்லியல் அறிஞர்கள் யாவர் ?

விடை

3. தாழிகளை எதற்குப் பயன்படுத்தினர் ?

விடை

4. எந்த இடங்களிலுள்ள கல்வெட்டுகள் தமிழர்களின் ஈகைக் குணத்தை வெளிப்படுத்துகின்றன ?

விடை

5. தமிழ்நாட்டில் முதன் முதல் முத்திரை நாணயங்களை வெளியிட்டவர் யார் ?

தமிழர் பண்பாட்டு அடிப்படைகள்

பாட முன்னுரை

தமிழர் பண்பாட்டில் குறிப்பிடத்தக்க சில அடிப்படைகள் உள்ளன .

இப்பண்பாட்டு அடிப்படைகளைக் கூர்ந்து நோக்கினால்

1. இயற்கையோடு நெருக்கமான உறவு

2. பலரும் போற்ற வாழும் புகழில் விருப்பம்

3. பழி வராமல் தற்காத்துக் கொள்ளும் பண்பு

4. எல்லா உயிர்களிடத்தும் அன்பு

5. மானுட வாழ்வில் நாகரிக வரம்புகளை மீறாமை

6. மனத்தின் தூய்மையை எல்லாவற்றுக்கும் மேலாகப் போற்றுதல்

7.மானத்தையும் ஒழுக்கத்தையும் உயிரைவிட மதிப்புமிக்கனவாகக் கொள்ளுதல்

ஆகிய ஏழு செய்திகள் புலப்படும் .

இவற்றின் விளக்கத்தை இப்பாடத்தில் காணலாம் .

பண்பாட்டு அடிப்படைகள் - I

திரைப்படம் பார்க்கும் நாம் , சில காட்சிகள் நம் பண்பாட்டுக்கு ஒவ்வாதன என்று கருதுகிறோம் .

ஆங்கிலப் படத்தில் காதலன் காதலியை முத்தமிடுவது காட்டப்பெறுகிறது .

தமிழ்ப்படத்தில் அத்தகைய காட்சியைக் காட்ட அனுமதி இல்லை .

ஏன் ?

அதுதான் பண்பாடு .

இத்தகைய காட்சியைத் தமிழர் பண்பாடு ஒத்துக் கொள்ளவில்லை .

முத்தம் என்பது வாழ்க்கையில் இல்லையா ?

இருக்கிறது .

ஆனால் இது பிறர்முன் நிகழ்வதில்லை .

தாய் குழந்தையை முத்தமிடும் காட்சி அனுமதிக்கப்படுகிறது .

ஆனால் காதலர் முத்தம் காட்சிப் பொருளாக அனுமதிக்கப்படுவதில்லை .

வயது வந்த பெண்ணைத் தந்தை அன்புடன் தழுவிக்கொள்ளும் நிகழ்ச்சியைத் தமிழர் இல்லங்களில் காணமுடியாது .

இவையெல்லாம் பண்பாட்டின் தனித்தன்மைகள் .

இவற்றுக்கு ஓர் அடிப்படை இருக்கிறது .

அந்த அடிப்படை பாலுணர்வில் சில நாகரிக வரம்புகளைப் பேணுதலாகும் .

இத்தகைய அடிப்படைகள் சிலவற்றை இங்கே காணலாம் . 5.1.1 புகழ்

புகழ்பெற வேண்டும் என்ற விருப்பம் உலகத்தில் எல்லார்க்கும் உரியதுதான் .

செய்தித்தாளில் பெயர் வருவது , புகைப்படம் வெளியிடப்படுவது , பலர்முன் மாலை சூட்டப்பெறுவது , பலர் கையொலி எழுப்பிப் பாராட்டுவது , மேடையில் புகழ்ந்து உரைக்கப் பெறுவது , தெருக்களில் வளைவுகள் வைத்து வரவேற்பது , ஊர்வலமாக அழைத்து வருவது ஆகியவற்றில் பலரின் கவனத்தைக் கவர்தற்கு வாய்ப்புகள் உள்ளன .

மற்றவர்களைவிட நாம் சிறந்தவர் என்ற பெருமித உணர்வில் பலர்க்கும் நாட்டம் இருக்கவே செய்யும் .

இந்தப் புகழ் விருப்பமே சமூகத்தில் பல அறச்செயல்கள் நடக்க அடிப்படையாகும் .

தமிழரின் புகழ்விருப்பம் சில தனித்தன்மைகளைக் கொண்டது .

பெரிய கோபுரத்தைக் கட்டியவனின் பெயரை எங்கும் காணவில்லை .

கல்லணையைக் கட்டியவன் பெயர் எங்கும் பொறிக்கப் பெறவில்லை .

திருப்பரங்குன்றச் சிற்பங்களைச் செய்தவன் பெயர் தெரியவில்லை .

தமிழ்விடுதூது என்னும் சிறந்த நூலை எழுதிய ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை .

இன்னும் எத்தனையோ ?

தங்கள் பெயரை வெளியிட்டுப் புகழ்தேடிக் கொள்ளாத நல்ல உள்ளங்கள் இருக்கின்றன .

இவர்கள் நல்ல செயல்கள் நடந்தால் போதும் நம் பெயர் தெரிய வேண்டியது இல்லை என்ற உணர்வுடையவர்களாக இருந்தனர் .

புகழ்எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்

( புற : 185-5 )

என்று சங்ககாலப் புலவர் கூறுகின்றார் .

புகழுக்காக உயிரையும் கொடுப்பார்கள் .

பழியை உலகத்தோடு சேர்த்துத் தந்தாலும் பெறமாட்டார்கள் .

இத்தகைய தன்னலமற்ற பெரியோர்களால்தான் உலகமே நிலைபெற்றிருக்கிறது என்று அப்புலவர் பாடுகின்றார் .

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதுஒன்று இல்

( குறள் : 233 )

என்பர் திருவள்ளுவர் .

இதன் பொருள் என்ன தெரியுமா ?

புகழுக்கு நிகராக இந்த உலகத்தில் இறவாது நிற்பது வேறொன்றில்லை என்பது இதன் பொருள் .

5.1.2 வீரம்

வீரப்பண்பு பெருமை தரத்தக்க பண்புகளில் ஒன்று .

ஆண்மக்களுக்கு வீரம் திருமணத்திற்குரிய ஒரு தகுதியாகவும் கருதப்பட்டது .

வில்லை முறிப்பவர்கள் , குறிபார்த்து ஒன்றை வீழ்த்துபவர்கள் , காளையை அடக்குபவர்கள் , பகைவர் கொண்டு சென்ற பசுமாடுகளை மீட்டு வருபவர்கள் ஆகியோரை மணந்து கொள்ளப் பெண்கள் முன்வந்த நிகழ்ச்சிகள் பல உள்ளன .

வீரம் இரண்டு வகைப்படும் .

• புறத்தே வரும் பகையைத் தன் போர்த்திறனால் வெல்லுதல் .

• அகத்தே தோன்றும் மன அசைவுகளை , ஆசைகளை , புலன் விருப்பங்களை அடக்கி ஆளுதல் .

முதலாவது வீரத்தைவிட இரண்டாவது வீரம் பெருமைக்குரியதாக இருந்தது .

புலன்களை வென்ற சமய முனிவர் மகாவீரர் என்று அழைக்கப்பட்டார் .

பழந்தமிழர் வீரப்பண்பாட்டில் குறிப்பிடத்தக்க கூறுகள் உண்டு .

அவையாவன :

• தனக்குச் சமமானவனோடு மட்டும் போரிடுதல் .

• முதுகு காட்டுபவனைத் தாக்காமை .

• மார்பில் வந்து தைத்த வேல் முதுகை ஊடுருவிப் போதல் மானக்கேடு என்று கருதுதல் .

• போரில் மார்பில் புண்பட்டு இறப்பவரே வானஉலகம் செல்ல முடியும் என்ற நம்பிக்கை .

யானையை அடக்கி வெல்லும் வீரம் ஆண்மகனுக்கு வேண்டுமெனக் கருதினர் பழந்தமிழர் .

மார்பில் தொண்ணூற்றாறு புண்களை ஒரு சோழ அரசன் பெற்றிருந்ததாக வரலாறு கூறுகின்றது .

போர்க்களத்தில் வீரன் ஒருவன் கையிலே இருந்த வேலை ஓர் ஆண்யானையின்மீது செலுத்தினான் .

அடுத்தபடி வந்த யானையைத் தாக்க என் செய்வது என்று கருதியபோது அவன் உடலில் தைத்திருந்த வேல் நினைவுக்கு வரவே அதனைப் பறித்து மகிழ்ச்சியடைந்தான் என்று திருவள்ளுவர் கூறுகின்றார் .

5.1.3 மானம்

சேரன் வடக்கிருத்தல்

தனது நிலையிலிருந்து ஒருவன் தாழ்வு அடையக்கூடாது .

அப்படித் தாழ்வு அடைய வேண்டிய நிலை வருமானால் அவன் உயிர் வாழக்கூடாது .

இதைத்தான் மானம் என்பர் . காட்டிலே திரியும் கவரிமானைப் பாருங்கள் .