79

மயிரை இழந்தால் கவரிமான் இறந்துவிடும் .

மனிதனும் மானத்தை இழக்க வேண்டிய சூழலில் உயிரை விட்டுவிட வேண்டும் என்று கருதினர் தமிழர் .

கரிகாலன் என்ற சோழ அரசனும் , பெருஞ்சேரலாதன் என்ற சேர அரசனும் போரிட்டனர் .

கரிகாலனின் வேல் சேரனின் மார்பில் தைத்து ஊடுருவி முதுகுவழியே போயிற்று .

மானம் போய்விட்டதாகக் கருதிய சேரன் வடக்கு நோக்கி உட்கார்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர் விட்டான் .

மானம் மிக்க அரசன் ஒருவன் வரலாறு இது. மானத்தைப் பிற்காலத்தில் தன்மானம் , சுயமரியாதை என்றும் கூறினர் .

பண்பாட்டு அடிப்படைகள் - II

இல்லறம் செய்பவர்களுக்குச் சில கடமைகளை நம் பண்பாடு வகுத்துக் கொடுத்துள்ளது .

தன் மனைவி மக்களுக்கென்று மட்டும் பொருள் சம்பாதித்து வாழ்கின்ற வாழ்க்கையாக அஃது இருக்கக் கூடாது .

தம் வீட்டுக்கு வருகின்ற விருந்தினரை வரவேற்றுப் பேணுதல் , பிறருக்குப் பொருள் வழங்குதல் , முடிந்த உதவிகளைச் செய்தல் , பொது நன்மைக்காகத் தாம் சில துன்பங்களைத் தாங்குதல் ஆகியன பண்பாட்டுச் செயல்கள் என்று போற்றத்தக்கன .

இப்பண்பாட்டுச் செயல்களின் அடிப்படைகளை இங்குக் காணலாமே !

5.2.1 விருந்தோம்பல்

தமிழகத்தில் உள்ள தென்மாவட்டத்தில் உள்ள இளையான்குடி என்ற ஓர் ஊர் உள்ளது .

இங்கே மாறனார் என்று ஒருவர் இருந்தார் .

அவர் உழவுத்தொழில் செய்பவர் .

அவருக்குச் சிறிதளவு நிலம் இருந்தது .

அதில் வந்த வருவாயைக் கொண்டு விருந்தினர்க்கு உணவு படைத்து வந்தார் .

ஒரு மழைக்காலம் .

இரவுநேரம் .

அப்பொழுது ஒரு விருந்தினர் அவரைத் தேடி வந்தார் .

மாறனார் வீட்டில் அரிசி ஒரு மணிகூட இல்லை .

காலையில்தான் வீட்டிலிருந்த விதை நெல்லைக் கொண்டுபோய் நாற்றங்காலில் விதைத்து விட்டு வந்திருந்தார் .

ஒன்றும் இல்லை என்று சொல்ல மனம் இல்லை .

விருந்தாளியை வீட்டில் காத்திருக்கக் கூறிவிட்டுக் கொட்டும் மழையில் வயலை நோக்கி நடந்தார் .

காலையில் விதைத்த விதைநெல்லை அரித்தெடுத்தார் .

வயலில் முளைத்திருந்த கீரையையும் பறித்து வந்தார் .

மாறனார் மனைவி நெல்லைக் குத்தி அரிசியாக்கிச் சோறு சமைத்தார் .

கீரையையும் சமைத்தார் .

விருந்தினர்க்கு உணவு இடப்பட்டது .

வந்த விருந்தினர் யார் தெரியுமா ?

மாறனாரின் விருந்தோம்பும் பண்பாட்டைச் சோதிக்க வந்த சிவபெருமானே அந்த விருந்தாளியாவார் .

இந்தச் செய்தி காட்டும் விருந்தோம்புதல் வழக்கமான எல்லைகளைக் கடந்தது இல்லையா ?

5.2.2 ஈகையும் ஒப்புரவும்

முல்லைக்குத் தேர்

ஈகை என்பது பொருள் வசதியுள்ளவர்கள் இல்லாதவர்களுக்குப் பொருள் அளவில்லாமல் வாரி வழங்குவதாகும் .

கடையெழு வள்ளல்களைப் பற்றி நீங்கள் கேட்டதில்லையா ?

பாரி என்பவன் முல்லைக்கொடி வாடுகிறதே என்று தேரைக் கொடுத்தான் .

முல்லைக் கொடிக்குப் போய்த் தேரை வழங்குவதா என்கிறீர்களா ?

எதற்கு எதைக் கொடுப்பது என்று தெரியாத இந்தத் தன்மைக்குத்தான் கொடைமடம் என்று பெயர் .

கொடுப்பவன் தன் தகுதியும் உள்ள உயர்வும் புலப்படக் கொடுக்கும்போது கொடைப்பொருளும் உயர்ந்ததாகி விடுகிறது .

மயிலுக்குப் போர்வை

பேகன் என்பவன் என்ன செய்தான் தெரியுமா ?

ஒரு மழைக்காலத்தில் மயில் குளிரில் உலாவிக் கொண்டிருந்தபோது அது குளிரில் வருந்துவதாகக் கருதி ஓர் அழகிய போர்வையைக் கொடுத்தானாம் .

ஒரு தேரையும் போர்வையையும் கொடுத்த இந்த வள்ளல்களின் செயல்களிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகின்றது ?

ஒரு கொடியும் பறவையும்கூடத் துன்பப்படக்கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள் என்றால் அரசர்களாகிய அவர்கள் தம் ஆட்சியில் மக்களை எப்படிக் காப்பாற்றியிருப்பார்கள் என்பதை உணரமுடியும் அல்லவா ?

உண்டாரை நெடுங்காலம் வாழவைக்கக்கூடிய நெல்லிக்கனியை அதியமான் ஒளவையாருக்குக் கொடுத்தான் .

ஆய் வள்ளல் தன்னை நாடி வந்த பரிசிலர்களுக்கு யானைகளைத் தந்தான் .

காரி என்பவன் எந்த நேரத்திலும் எளியவர்களுக்குப் பெரும்பரிசில்கள் தந்தவன் .

ஓரி தன்னை அடையாளம் தெரியாதவர்களிடம் தன் பெயரையும் சொல்லாமல் பொன்னையும் மணியையும் பரிசில்களாகத் தந்தவன் . நள்ளி என்பவன் தான் இன்னான் என்று பிறரிடம் தெரிவிக்காமல் பிறருக்கு வேண்டியன எல்லாம் கொடுத்து விருந்தோம்பியவன் .

இத்தகைய வள்ளன்மைப் பண்பு தமிழகத்தில் தொடர்ந்து வந்துள்ளது .

ஒப்புரவு என்பது உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தம்மால் முடிந்த உதவிகளை எந்தப் பயனையும் எதிர்நோக்காமல் செய்தலாகும் .

மேகம் மழை பொழிவது போல் வழங்குதல் ஒப்புரவாகும் .

மருந்துமரம் இலையும் கனியும் காயும் பட்டையும் கொடுத்து உதவுதல் ஒப்புரவாகும் .

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு

( குறள் : 215 )

என்கிறார் திருவள்ளுவர் .

இதோ ஓர் ஊருணியைப் பாருங்கள் .

ஊருணி என்றால் குடிநீர்க்குளம் என்று பொருள் .

ஊருணியில் நிறைந்த நீரை எல்லா மக்களும் கொள்ளுவது போல அறிஞனின் செல்வமும் எல்லார்க்கும் பயன்படும் என்கிறார் .

ஒப்புரவு தமிழரின் குறிப்பிடத்தக்க பண்பாகும் .

5.2.3 பொதுநலம் பேணுதல்

தமிழர் பொதுநலம் கருதி வாழும் பண்புடையவர் .

இதோ இந்தக் கல்லைப் பாருங்கள் .

இக்கல்லுக்குப் பெயர் ஆவுரிஞ்சுகல் என்பதாகும் .

பசுவுக்கு முதுகு தினவெடுத்து அரிக்கும்போது உராய்ந்து கொள்ள இந்தக் கல் பயன்படும் என்று கருதிப் பசுக்கள் உலாவும் இடங்களில் இதனை நட்டு வைப்பர் .

ஒரு விலங்கின் தேவையைக்கூட நினைந்து செயலாற்றும் பண்பாட்டைப் பாருங்கள் .

பழங்காலத்தில் வீடு கட்டும்போது சிட்டுக்குருவிகள் வந்து தங்குவதற்கு மரத்தடுப்பு வைத்திருப்பார்கள் .

இது மனிதநேயத்தைக் காட்டும் செயல் இல்லையா ?

இப்படிச் சிறிய உயிர்களையெல்லாம் பாதுகாப்பவர்கள் பிறர்க்குத் தீமை செய்பவர்களாக இருக்க முடியாது இல்லையா ?

இதுதான் தமிழர் பண்பாட்டின் அடிப்படையாகும் .

தமிழர்களின் பழைய கதைகளிலும் இந்த பொதுநலப்பண்பு விளங்கக் காணலாம் .

சிபிச் சக்கரவர்த்தி என்ற சோழவேந்தன் தன்னிடம் அடைக்கலம் என்று வந்த புறாவுக்கு ஈடாகத் தன் சதையை அரிந்து கொடுத்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது .

பண்பாட்டில் மக்கள் பங்களிப்பு

தமிழர் நீண்ட காலமாகக் கடைப்பிடித்த வாழ்க்கை நெறிகளும் பண்புகளுமே அவர்தம் பண்பாடாக உருவம் பெற்றுள்ளது .

ஒவ்வொரு தமிழனும் இதற்குத் தன் பங்களிப்பைச் செய்து வந்துள்ளான் .

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி

ஆரம் படைத்த தமிழ்நாடு

( பாரதியின் தமிழ்நாடு : 7 )

திருவள்ளுவர்

இதோ திருவள்ளுவரின் நெடிய சிலையைக் காணுங்கள் !

இதோ இளங்கோவடிகள் .

அவர் உருவாக்கிய கண்ணகி கையில் சிலம்புடன் நிற்கும் கோலம் காணுங்கள் .

தமிழ்ப் பண்பாட்டை உருவாக்கிய பெரியோர்கள் எல்லாம் சென்னைக் கடற்கரையில் சிலைவடிவில் நிற்பதைக் காணுங்கள் .

தமிழர் பண்பாட்டிற்குத் தகுந்தாற்போல் இராமாயணக் கதை நிகழ்ச்சிகளை மாற்றி எழுதினானே கம்பன் அவன் புன்னகைப்பது காணுங்கள் .

5.3.1 ஆண்

தமிழர் பண்பாட்டில் ஆண்மகனுக்கெனச் சில பங்களிப்புகள் இருந்துள்ளன .

போர்ச்சூழல் நிரம்பிய பழைய காலச் சமூகத்தில் ஆணின் பங்கு பெரிதாக இருந்தது .

வினையே ஆடவர்க் குயிரே

என்று கூறுகிறது பழைய இலக்கியம் .

இதன் பொருள் என்ன தெரியுமா ?

ஆண்மக்களுக்குத் தொழில்தான் உயிர் என்பது இதன் பொருள் .

ஒரு குடும்பத்திற்கு வேண்டிய பொருளை ஆண்மகன் சம்பாதிக்க வேண்டும் .

சமூகத்தில் பிறர்க்கு உதவவும் அறம் செய்யவும் வேண்டும் .

பொருளை அவன் தேடியாக வேண்டும் .

பொருள் தேடுவது என்பது எளிதான செயலா ? மனைவி மக்களைப் பிரிந்து சென்று , உடம்பை வருத்திப் பொருளைச் சம்பாதிக்க வேண்டும் .

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்

( குறள் : 615 )

என்கிறார் திருவள்ளுவர் .

அப்படியென்றால் என்ன ?

இன்பத்தை விரும்ப மாட்டான் .

தொழிலைப் பெரிதென்று கருதுவான் .

இப்படிப்பட்டவன்தான் தன் உறவினரின் துன்பம் துடைக்கும் தூண் போன்றவன் என்பதாகும் .

5.3.2 பெண்

தமிழ்ச் சமூகத்தில் பெண் எப்படிப்பட்டவள் தெரியுமா ?

பெண்ணைக் குடும்ப விளக்கு என்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் .

அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான்கு பண்புகளைக் கொண்டவள் அவள் .

அச்சம் என்பது அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சுதல் .

அதாவது தவறு செய்ய அஞ்சும் மனம் பெற்றிருத்தல் .

நாணம் என்பது வெட்கம் .

மடம் என்பது தனக்கென்று அறிவு இருந்தாலும் தந்தை , தாய் , கணவன் ஆகிய பெரியோர்கள் காட்டிய வழியில் அவ்வழியிலிருந்து தவறாமல் செல்லும் போக்கு .

மூத்தோர் கற்பித்த வழியில் ஆராய்ச்சி செய்யாமல் நடப்பதே மடம் .

பயிர்ப்பு என்பது தனக்கு அறிமுகம் இல்லாதவற்றிடமிருந்து ஒதுங்கி நிற்கும் மனப்பாங்கு .

இந்நான்கும் தமிழ்ப்பெண்ணின் பண்புக் கூறுகள் .

ஆனாலும் அவள் வீரமில்லாதவளாகவும் போர்க்குணம் இல்லாதவளாகவும் இருக்க மாட்டாள் .

சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அவள் செயல்படுவாள் .

ஒரு பெண்பாற்புலவர் பாடும் பாட்டின் கருத்தைக் கேளுங்கள் !

“ பெற்றுப் பாதுகாத்தல் என்னுடைய கடமையாகும் .

வீரனாக்குதல் தந்தைக்குள்ள கடமையாகும் .

வேலை அடித்துத் திருத்திக் கொடுத்தல் கொல்லனுடைய கடமையாகும் .

நல்லொழுக்கத்தைக் கற்பித்தல் அரசனுடைய கடமையாகும் .

ஒளிவிடும் வாட்படையால் போரில் ஆண்யானைகளை வென்று வருதல் ஆண்மகனது கடமையாகும் "

என்கிறார் புலவர் .

வீரக்குடியிற் பிறந்த பெண் இப்படித்தான் இருப்பாள் .

முதல்நாள் போரிலே தந்தை இறந்துவிட்டான் .

மறுநாள் கணவன் இறந்துவிட்டான் .

இந்த நிலையில் இன்றும் போர்ப்பறை கேட்கிறது .

என்ன செய்வாள் ?

வீரக்குடும்பத்துப் பெண் என்ன செய்தாள் தெரியுமா ?

தனக்கு ஒரே ஒரு மகன் இருப்பதை நினைந்தாள் .

அவனை அழைத்து வந்து வெள்ளையாடை உடுத்தித் தலையை ஒழுங்குசெய்து .

போருக்குப் போ என அனுப்பினாள் .

இந்தச் செய்தியைப் புறநானூற்றில் காணலாம் .

5.3.3 சான்றோர்

ஒரு சமூகத்தின் பண்பாட்டு உருவாக்கத்தில் சான்றோர்க்குப் பெரும்பங்கு உண்டு .

அன்பு , நாணம் , ஒப்புரவு , கண்ணோட்டம் , வாய்மை என்ற ஐந்து பண்புடையவர் இச்சான்றோர் .

இவர்களைக் கொள்கைச் சான்றோர் என்றும் , புலன்களைக் கட்டுப்படுத்தி அடங்கிய நிலையில் இருப்பவர் என்றும் குறிப்பிடுவர் .

ஒரு மகனைச் சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடன் என்பர் .

சான்றோர் என்பவர் அரசன் தவறு செய்தாலும் அஞ்சாமல் திருத்துபவர் .

கோவூர் கிழார்

கோவூர் கிழார் என்ற சான்றோர் தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியைக் காணுங்கள் !

கிள்ளிவளவன் என்று ஓர் அரசன் இருந்தான் .

அவன் மலையமான் என்ற அரசன் மீது படையெடுத்துச் சென்று வென்றான் .

மலையமானின் மகன்கள் இருவரையும் சிறைப்பிடித்து வந்து யானையை ஏவி அவர்களைக் கொல்லுமாறு கூறினான் . இதைப் பொறுக்காத கோவூர் கிழார் என்ற சான்றோர் கிள்ளிவளவனிடம் சென்றார் .

" அரசே !

நீ புறாவொன்று அடைக்கலமாக வந்ததென்று காப்பாற்றிய சிபிச் சோழன் மரபில் வந்தவன் .

இந்தச் சிறுவர்களோ புலவர்களின் வறுமைத் துயரைத் துடைக்கும் வள்ளலின் பிள்ளைகள் .

யானையைக் கண்டவுடன் தம் அழுகையை மறந்து ஒருவித அச்சத்தோடு இச்சிறுவர்கள் இருக்கிறார்கள் .

இத்தகைய துன்பத்தை இவர்கள் இதற்குமுன் கண்டதில்லை .

இது நான் கூறவிரும்பும் செய்தி .

பிறகு நீ விரும்பியதைச் செய்துகொள் "

என்று கூறினார் .

உடனே கிள்ளிவளவன் சிறுவர்களைக் கொல்லாமல் விட்டுவிட்டான் .

பொன்னாலும் மணியாலும் முத்தாலும் செய்யப்பட்ட அணிகலன்கள் கெட்டுப் போகுமானால் அவற்றைச் சரி செய்து கொள்ளலாம் .

சான்றோர்களின் உயர்ந்த பண்புகள் கெட்டுவிடுமானால் திருத்திப் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. தமிழரின் புகழ் விருப்பத்தை விளக்குக .

விடை

2. விருந்தோம்பல் தமிழர் வாழ்வில் பெற்ற இடத்தைக் காட்டுக .

விடை

3. வீரத்தைத் தமிழர் போற்றிய வண்ணம் காட்டுக .

விடை

4. பண்பாட்டில் ஆணின் பங்கு யாது ?

விடை

5. பண்பாட்டில் பெண்ணின் பங்களிப்பு யாது ?

காதல் பண்பாடு

காதல் என்பது பாலுணர்ச்சியால் பருவமுற்ற ஆணும் பெண்ணும் ஒருவர்பால் ஒருவர் கொள்ளும் ஈடுபாடு .

மற்றவர்கள் அறியாதவாறு காதலர்கள் தங்கள் பார்வையால் அன்பைப் பரிமாறிக் கொள்வார்கள் .

காதல் என்பது உயிரோடு பிணைந்தது .

நினைத்தவாறு திருமணம் முடியாவிட்டால் காதலர் இறப்பைத் தேடிக்கொள்ளவும் அஞ்சமாட்டார்கள் .

காதல் கொண்ட உள்ளம் மாறுவதோ , விட்டுக் கொடுப்பதோ இல்லை .

உலகெங்கினும் எல்லாப் பண்பாடுகளிலும் காதல் உறுதியானதாகவும் தெய்வீகமானதாகவும் இருக்கிறது .

அப்படியானால் தமிழர் பண்பாட்டில் காதலுக்குரிய சிறப்பிடம்தான் யாது ?

போன பிறவியிலே கணவன் மனைவியாக இருந்தவர்கள்தாம் இந்தப் பிறவியிலும் கணவன் மனைவி ஆகிறார்கள் ; இனிவரும் பிறவிகளிலும் இவர்களே கணவன் மனைவியராக இருப்பார்கள் என்ற நம்பிக்கை தமிழர் பண்பாட்டில் உள்ளது .

இம்மை மாறி மறுமை ஆயினும்

நீயாகியர் என்கணவனை

யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே

( குறுந்தொகை : 49 )

என்று குறுந்தொகை கூறுகிறது .

இதன் பொருள் என்ன தெரியுமா ?

இந்தப் பிறவி மாறி அடுத்த பிறவியிலும் நீதான் என் கணவன் நான்தான் உன் மனைவி என்பதுதான் இதன்பொருள் .

நீயாகியர் என் கணவனை என்றால் நீயே என் கணவன் ஆவாய் என்பது பொருள் .

யானாகியர் நின்நெஞ்சு நேர்பவள் என்றால் யானே உன் நெஞ்சில் இருப்பவள் என்பது பொருள் .

எனவே காதல் என்பது ஏதோ திடீரென்று இருவர் சந்தித்துக் கொள்வதில் ஏற்பட்டு விடுவதன்று என்பது தெரியவரும் .

5.4.1 களவும் கற்பும்

திருமணத்திற்கு முன் ஒருவனும் ஒருத்தியும் பிறர் அறியாதவாறு காதல் கொள்வர் .

தாயும் பிறரும் அறியாதவாறு சந்தித்துக் கொள்வர் .

இதனைத் தமிழர் பண்பாடு களவியல் என்று போற்றுகின்றது .

தலைவியின் தோழி களவுக் காதலுக்குத் துணை செய்வாள் .

மெல்ல மெல்லக் களவுக் காதலை ஊரார் அறிவர் ; அறிந்து மூக்கில் விரல்வைத்து இரகசியமாகப் பேசுவர் .

ஊரார் இவ்வாறு மறைமொழியாகப் பேசும் நிலை அம்பல் எனப்படும் .

பின்னர் எல்லாரும் அறியுமாறு தலைமக்களின் காதலைப் பேசுவர் .

இதனை அலர் தூற்றுதல் என்பர் . இந்நிலையில் தோழியும் தலைவியும் தலைவனைத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யத் தூண்டுவர் .