வஞ்சி மலைந்த உழிஞை முற்றி
தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை
வெம்புசின மாற்றான் தானை வெங்களத்தில்
குருதிப் பேராறு பெருகும் செங்களத்து
ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே
(பன்னிரு: 240)
மன்னன் பகைவனது நாட்டை வெல்வதற்காக வஞ்சிப் பூமாலை அணிந்து போர்க்களம் சென்றான். உழிஞைப் பூமாலை அணிந்து பகைவனது மதிலை முற்றுகை இட்டான். தும்பைப் பூமாலையைச் சூடிப் பகைவனுடன் போர் செய்தான். பகை வீரர்கள் மடிந்தனர்; குருதி ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பகைவனை வென்றான். இவ்வாறு படை எடுத்துச் சென்று வாகை மாலை சூடிய மன்னனின் வீரத்தைப் புகழ்வதே பரணி இலக்கியம் ஆகும்.
பரணி, வீரத்தைப் பற்றிப் பாடினாலும் காதல் இலக்கிய மரபையும் கொண்டு உள்ளது. மகளிரை அழைத்துப் போர் பற்றிய செய்திகளைக் கூறும் பகுதி ‘கடைதிறப்பு’ எனப்படும். ‘தலைவன் புகழைக் கேட்கக் கதவைத் திறவுங்கள்’ என்று கூறுவது கடைதிறப்பு ஆகும். இப்பகுதி முழுவதும் காதல் இலக்கிய மரபை அடியொற்றி அமைந்துள்ளது.
பரணி இலக்கியத்திற்கான இலக்கணம் பாட்டியல் நூல்களில்தான் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நண்பர்களே! இதுபற்றிய சில செய்திகளை இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
இலக்கண விளக்கம்
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி
(இலக்.வி. 839)
(அமர் – போர்; மானவன் – படைவீரன்.)
என்று இலக்கண விளக்கம் கூறியுள்ளது. போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனின் வெற்றியைப் பாடுவதே பரணி – என்பது இதன் பொருள்.
பன்னிரு பாட்டியல்
எழுநூறு யானைகளைக் கொன்ற ஏந்தலை (தலைவனை)ப் பாராட்டுவதே பரணி என்று பன்னிரு பாட்டியல் கூறியுள்ளது.
ஏழ்தலை பெய்த நூறுஉடை இபமே
அடுகளத்து அட்டால் பாடுதல் கடனே
(பன்னிரு. 243)
(இபம் – யானை, அடுகளம் – போர்க்களம், அட்டால் – கொன்றால், கடன் – முறைமை.)
யானையைக் கொன்ற போர்க்களம் அல்லாத பிற போர்க்களங்கள் பரணி பாடுவதற்குத் தகுதி உடையன அல்ல. இதனை,
யானை சாய்த்த அடுகளத்து அல்லது
யாவரும் பெறாஅர் பரணிப் பாட்டே
(பன்னிரு. 242)
என்ற பாடலால் அறிய முடிகிறது.
வெண்பாப் பாட்டியல்
வெண்பாப் பாட்டியல் பரணியின் பாட்டுடைத் தலைவனைப் பற்றிப் பேசியுள்ளது.
மூண்ட அமர்க்களத்து மூரிக் களிறு அட்ட
ஆண்டகையைப் பரவி ஆய்ந்துரைக்க
(வெண்பா : 28)
(மூரி – வலிமை, களிறு – யானை, அட்ட – கொன்ற, ஆண்டகை – வீரன், பரவி – புகழ்ந்து.)
என்று கூறியுள்ளது. ‘போர்க்களத்தில் ஊறுபாடு (சேதம்) இன்றி இருத்தல் வேண்டும்; பகைவர் யானைகளை அழித்தல் வேண்டும்; போரில் வெற்றிவாகை சூட வேண்டும்; இவ்வாறு திகழ்பவனே பரணியின் பாட்டுடைத் தலைவன் ஆவான்.’
மேற்கூறிய பத்து உறுப்புகள் பண்டைய பரணி நூல்கள் அனைத்திற்கும் உரியன. இவை அல்லாமல் இந்திரசாலம் (பேயின் மாயாசாலம் பற்றியது), இராசபாரம்பரியம் (சோழர் பரம்பரை பற்றிய விளக்கம்), அவதாரம் (பாட்டுடைத் தலைவனின் பிறப்பு பற்றியது) ஆகிய உறுப்புகள் கலிங்கத்துப் பரணியில் காணப்படுகின்றன.
பரணியின் உறுப்புகள் கடவுள் வாழ்த்து முதலாக ஒரே அமைப்பாக எல்லாப் பரணி நூல்களிலும் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கலிங்கத்துப் பரணி நூலே இன்று நமக்குக் கிடைக்கும் முதல் பரணி நூலாகும். இதற்கு முன்பும் பரணி நூல்கள் இருந்துள்ளன. ஆனால் அவை கிடைக்கவில்லை.
1) முதல் இராசேந்திரசோழன்- 11- ஆம் நூற்றாண்டு – கொப்பத்துப் பரணி
2) வீரராசேந்திரசோழன்- 11- ஆம் நூற்றாண்டு – கூடல் சங்கமத்துப் பரணி
மேலே உள்ள பரணி நூல்களைப் பெயர் அளவில் மட்டுமே நாம் அறிகிறோம்.
பரணியின் பாடுபொருள் மாற்றம்
கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய பரணி நூல்களுக்குத் தலைவர்களாக இணையற்ற வீரர்கள் தமிழகத்தில் இருந்தார்கள். ஆனால் அதன் பின் தமிழக ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது.
அதன் பின் இணையற்ற வீரர்கள் அவ்வளவாகத் தமிழகத்தில் தோன்றவில்லை. எனவே பரணி நூல்கள் சமயச் சார்புடையனவாக அமைந்தன. வீரர்களின் போர்க்களத் திறனைப் பாடிய உள்ளம் தெய்வங்களின் போர்களை, சமயத் தத்துவங்களைப் பாடியது.
தக்கயாகப் பரணி
இந்நூலின் ஆசிரியர் ஒட்டக்கூத்தர். தக்கன், தான் செய்த யாகத்தின்போது சிவபெருமானை அழைக்காது விட்டான். இதனால் சிவனுக்கும் சக்திக்கும் மனவேறுபாடு ஏற்பட்டது. இறுதியில் சிவனின் அருளால் வீரபத்திரர் என்பவர் தக்கன் யாகத்தை அழித்தார். இந்தப் புராணத்தைக் கருவாகக் கொண்டு இப்பரணி அமைந்துள்ளது.
அஞ்ஞவதைப் பரணி
இந்நூலினைத் தத்துவராய சுவாமிகள் பாடி உள்ளார். அஞ்ஞானத்தினை (அறியாமை) ஓர் அரசனாக்கி, அகங்காரம் (ஆணவம்) முதலிய தீய பண்புகளைப் படைகள் ஆக்கி இவற்றை ஞானமாகிய இறைவன் அழித்ததாகப் பாடப்பட்டதே இந்நூல். இதனை ஞானப்பரணி என்றும் கூறுவர்.
திருச்செந்தூர்ப் பரணி
இந்த நூலினைச் சீனிப்புலவர் இயற்றி உள்ளார். முருகன் சூரனை அழித்த புராணத்தைப் பாடுகிறது இந்நூல்.
இரணியன் வதைப் பரணி
இந்நூலாசிரியர் யார் என்பதை அறிய முடியவில்லை. சிலர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் இந்நூல் ஆசிரியராக இருக்கலாம் என்பர். திருமாலின் நரசிம்ம அவதாரத்தைப் பாடுகிறது இந்தநூல்.
1) கலிங்கத்துப் பரணி – நூலாசிரியர் வரலாறு
2) கலிங்கத்துப் பரணி – பாட்டுடைத் தலைவன்
3) கலிங்கத்துப் பரணி – இலக்கியச் சிறப்புகள்
குலோத்துங்கனும் சயங்கொண்டாரும்
குலோத்துங்கன் கலிங்கத்துப் போரில் வெற்றி பெற்றான். வெற்றிக்குப் பின்பு சயங்கொண்டாரோடு உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது புலவரை நோக்கி, ‘புலவரே! கலிங்கத்தைச் சயங்கொண்டமையால் நானும் சயங்கொண்டான் ஆயினேன்’ என்று கூறினான். இதனைக் கேட்ட சயங்கொண்டார் உளம் மகிழ்ந்தார்.
‘அப்படி ஆனால் சயங்கொண்டானைச் சயங்கொண்டான் பாடுவது மிகப் பொருத்தம்’ என்று கூறிக் கலிங்கத்துப் பரணியைப் பாடினார் என்பர்.
கலிங்கத்துப் பரணியும் பொன் தேங்காயும்
சயங்கொண்டார் பரணி பாடி முடித்தார். பின்பு குலோத்துங்கன் அவையில் அரங்கேற்றம் செய்யத் தொடங்கினார். அந்தக் காலத்தில் ஒருவர் நூல் செய்தால் பலர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும்; பலரின் ஒப்புதலைப் பெற வேண்டும். இம்மரபினைத் தொல்காப்பிய அரங்கேற்றத்தில் இருந்தே காண்கிறோம்.
அரங்கேற்றம் செய்யும் காலத்தில் அரசர்கள் புலவர்களுக்குப் பரிசு அளித்துப் பாராட்டுவர். சயங்கொண்டார் பாடலைக் குலோத்துங்கன் சுவைத்தான்; ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொன்னால் ஆகிய தேங்காயை உருட்டிக் கவிஞரையும் நூலையும் சிறப்புச் செய்தான்.
சயங்கொண்டார் நூல்கள்
சயங்கொண்டார் புகார் நகரத்து வணிகரைப் புகழ்ந்து ‘இசை ஆயிரம்’ என்ற நூலைப் பாடி உள்ளார். விழுப்பரையர் மீது ‘உலாமடல்’ என்ற நூலையும் இயற்றி உள்ளதாகத் தெரிகிறது.
பரணி உருவான கதை
கலிங்கத்துப் பரணி உருவானதற்கான காரணம் பற்றிக் கதை ஒன்று உண்டு. குலோத்துங்கன் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தான். அப்போது தென்னவர், வில்லவர் முதலிய மன்னர்கள் திறை (தோற்ற மன்னர் தன்னை வென்றமன்னர்க்குக் கொடுக்கும் நிதி) செலுத்திப் பணிந்தனர். வட கலிங்க மன்னன் மட்டும் திறை செலுத்தாமல் இருந்தான். இதனை அறிந்த குலோத்துங்கன் சினம் கொண்டான். அவன் சினத்தைக் கண்டு ஏனைய மன்னர்கள் நடுங்கினார்கள். ‘வட கலிங்க மன்னனின் அரண்கள் (மதில்கள்) வலிமை உடையனவாம்! அவற்றை அழித்து வாருங்கள்; அவனுடைய யானைகளை வென்று வாருங்கள்’ என்று கூறினான். அந்த அளவில் குலோத்துங்கன் தளபதி கருணாகரன் எழுந்து நானே சென்று கலிங்கனை அடக்குவேன் என்று சபதம் இட்டான். பின்னர்க் கலிங்கப் போர் மூண்டது. சோழர்கள் வெற்றி வாகை சூடினர் என்று கதை முடிகிறது.
கலிங்கம் வென்ற கருணாகரன்
குலோத்துங்கனின் படைத்தலைவர்களுள் சிறந்தவன் கலிங்கத்துப் பரணியின் இன்னொரு கதாநாயகன் கருணாகரன் ஆவான். குலோத்துங்கன் ஆணையின்படி கலிங்க நாட்டின் மீது படை எடுத்துச் சென்று அந்நாட்டை அழித்தவன். திருவரங்கன் எனும் இயற்பெயரை உடையவன். ‘வேள்’ ‘தொண்டைமான்’ எனும்
பட்டங்கள் குலோத்துங்கனால் இவனுக்கு வழங்கப்பட்டன. இவன் பல்லவர் குலத்தைச் சேர்ந்தவன். கலிங்கப் போரினால் குலோத்துங்கனுக்குப் புகழ் தேடித் தந்தான் கருணாகரன்; கருணாகரனுக்குப் பரணியின் வாயிலாகப் புகழ் தேடித் தந்தார் செயங்கொண்டார்.
நண்பர்களே! இந்த பாடப்பகுதியில் கலிங்கத்துப் பரணியின் அமைப்பு, இலக்கியச் சிறப்பு எனும் இரு நிலைகளில் செய்திகளை அறிய இருக்கிறோம்.
காளி
போர்த் தெய்வமாகிய காளி வாழும் காட்டை விவரிப்பது காடு பாடியது எனும் பகுதி ஆகும். கோயில் பாடியது எனும் பகுதி காளி தேவியின் கோயிலை வருணிப்பதாகும். அடுத்துத் தேவி பாடியது எனும் பகுதி காளியைப் பாடுவதாகும். காளியைச் சூழ்ந்திருக்கும் பேய்களை விவரிப்பது பேய்களைப் பாடியது எனும் பகுதி ஆகும். ஒரு பேய் காளி தேவியின் முன் மாயாசாலங்களைச் செய்து காட்டுகிறது. இது இந்திரசாலம் எனும் பகுதி ஆகும்.
சோழர் வரலாறு
அடுத்துச் சோழர்களின் குல வரலாற்றை இராச பாரம்பரியம் எனும் பகுதி எடுத்துக் கூறுகிறது. குலோத்துங்க சோழன் பிறந்ததை அவதாரம் எனும் பகுதி விவரிக்கிறது.
போர்க்களமும் பேய்களும்
காளிக்குக் கூளி கூறியது எனும் பகுதி கலிங்கப் போர் ஏற்பட்டதற்கான காரணத்தை விளக்குகிறது. போர் நடவடிக்கைகள் முதலியவற்றை ஒரு பேய் காளியிடம் கூறுவதாக இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. போர் பாடியதும் களம் பாடியதும் போர் நிகழ்ச்சிகளைச் சுவையாக வருணித்துள்ளன. நூலின் நிறைவாகக் கூழ் அடுதல் (சமைத்தல்) எனும் பகுதி அமைந்துள்ளது. இறந்த வீரர்களின் உடல்களைக் கொண்டு கூழ் சமைத்துக் காளிக்குப் படைத்துப் பேய்கள் தாமும் உண்பதாகக் கூழ் அடுதல் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
நிழல் இல்லா நிழல்
காளியின் உறைவிடமாகச் சங்க இலக்கியங்கள் கூறுவது பாலை நிலம் ஆகும். பாலை என்பது மிகுந்த வறட்சி உடையது; வெப்பம் மிக்கது. கலிங்கத்துப்பரணியில் உள்ள காடு பாடியது எனும் பகுதி காளி கோயில் உள்ள காட்டைப் பாடுவதாக உள்ளது. இக்காடு, மிகுந்த வெப்பமும் வறட்சியும் உடையது.
இரை தேடுவதற்காக வானத்தில் வட்டமிட்டுப் பறந்து செல்கிறது பருந்து. அது பாலை வெப்பத்திற்கு அஞ்சிப் பறந்து ஓடுகிறது. அவ்வாறு ஓடுகின்ற பருந்தின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அந்நிலத்தில் இல்லை. இதனை,
ஆடுகின்ற சிறைவெம் பருந்தின் நிழல்
அஞ்சி அக்கடு வனத்தை விட்டு
ஓடுகின்ற நிழல் ஒக்கும்;நிற்கும் நிழல்
ஓரிடத்தும் உள அல்லவே
(காடு பாடியது: 80)
(கடு = கொடிய, சிறை = சிறகு, வனம் = காடு)
என்ற பாடல் வெளிப்படுத்துகிறது.
நக்கி விக்கும் நவ்வி (மான்)
பாலை நிலத்தில் கொடிய வெப்பம். அதனால் மானின் வாய் வெந்துபோய் உள்ளது. மானுக்குத் தண்ணீர்த் தாகமும் மிகுதி. நெருப்பிலிருந்து நீர் கிடைத்தாலும் குடித்துவிடும். தாகத்தினால் துன்புறும் மான் செந்நாயின் வாயிலிருந்து வடியும் எச்சில் நீரைக் குடிக்கிறது. செந்நாய்க்கு அஞ்சி ஓடும் மான் கூடத் தாகத்தால் இவ்வாறு செய்கிறது. இக்காட்சியைத்
தீயின் வாயின் நீர் பெறினும் உண்பதோர்
சிந்தைகூர வாய்வெந் துலர்ந்துசெந்
நாயின் வாயின்நீர் தன்னை நீர்எனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே
(காடு பாடியது: 83)
(தீயின் வாய் = நெருப்பிடையே, நீர் எனா = நீரெனக் கருதி, நவ்வி = மான்)
என்று புலவர் விவரிக்கிறார். இவ்வாறு காளி தேவி கோயில் கொண்டுள்ள காட்டைப் பற்றிய நிலையைப் புலவர் எடுத்துரைக்கின்றார்.
காளி வருணனை
காளிதேவி தனக்கு உரிய கோயிலில் வீற்றிருந்து தன்னைப் பணிபவர்க்கு அருள் வழங்குவாள். காளிதேவியின் சிறப்புகளைத் தேவியைப் பாடியது எனும் பகுதி விளக்குகிறது.
தேவர்கள் பாற்கடலைக் கடைய வாசுகி என்னும் பாம்பு பயன்பட்டது. உலகத்தைச் சுமந்து கொண்டு இருப்பது ஆதிசேடன் எனும் பாம்பு. இந்த இரண்டு பாம்புகளையும் கயிறாகக் கொண்டு பெரிய முத்துகள் உள்ளே இடப்பட்ட சிலம்புகளைக் காளி அணிந்திருக்கிறாள் (தேவியைப் பாடியது: 122)
சிவன் கொடுத்த பரிசு
சிவன், விரித்த சடையையும் மூன்று கண்களையும் உடையவர். அவருக்கு உண்டான காமநோயை நீக்கியவள் காளி. சிவன் அதற்காகக் காளிக்குப் பரிசுகளைத் தருகிறார். யானையின் தோலாகிய சேலையைத் தருகிறார். யானையின் குடலையும் பாம்பையும் சேர்த்து முறுக்கிக் கட்டிக் கொள்ளும் இடைக் கச்சினையும் தருகிறார். இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்
பரிவு அகலத் தழுவிப் புணர் கலவிக்கு உருகிப்
படர்சடை முக்கணுடைப் பரமர் கொடுத்த களிற்று
உரிமிசை அக்கரியின் குடரொடு கட்செவியிட்டு
ஒரு புரி இட்டு இறுகப் புனையும் உடுக்கையளே!
(தேவியைப் பாடியது: 125)
(பரிவு = காமத் துன்பம், பரமர் = சிவன், உரி = தோல், குடர் = குடல், கட்செவி = பாம்பு, புரி = கயிறு)
காளியின் பிள்ளைகள்
புலவர் காளியின் பிள்ளைகளைப் பாடுகிறார். காளிக்கு யார் யார் புதல்வர்கள்?
கலைகள் கற்று மேன்மை பெற்ற பிரமன் ஒரு பிள்ளை. கருமேகம் போன்ற நிறமுடைய திருமால் மற்றொரு பிள்ளை. யானை முகமுடைய விநாயகன் ஒரு பிள்ளை. அசுரர் அழிய அம்பு செலுத்திய முருகன் பிறிதொரு பிள்ளை. இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.
கலைவளர் உத்தமனைக் கருமுகில் ஒப்பவனைக்
கரடதடக் கடவுள் கனக நிறத்தவனைச்
சிலைவளைவுற்று அவுணத்தொகை செகவிட்ட பரித்
திறலவனைத் தரும் அத்திரு உதரத்தினளே
(தேவியைப் பாடியது: 126)
(உத்தமன் = பிரம்மன், முகில் ஒப்பவன் = திருமால், கரடதடக் கடவுள் = விநாயகர், கனகம் = பொன், அவுணர் = அசுரர், திறலவன் = முருகன், திரு = அழகு, உதரம் = வயிறு)
காளியின் அணிகலன்கள்
காளி தேவி இரண்டு காதுகளிலும் பெரிய மலைகளைக் காதணியாக அணிந்தாள். அவை காதோலைகள் ஆகும். அவற்றையே வரிசையாகக் கோத்து மாலையாக அணிய விரும்பினால் அவை மணிமாலை ஆகும். அம்மாலைகளே காளி தேவியின் கைகளின் மேல் இருக்கும் போது அம்மானை (மகளிர் விளையாட்டு), பந்து முதலிய விளையாட்டுக் கருவிகள் ஆகும். இதனைப் பின்வரும் பாடல் விளக்கும்.
அண்டம் உறுகுல கிரிகள்
அவள் ஒருகால் இருகாதில்
கொண்டு அணியின் குதம்பையுமாம்
கோத்து அணியின் மணிவடமாம்
கைம் மலர்மேல் அம்மானையாம்
கந்துமாம் கழங்குமாம்
(தேவியைப் பாடியது: 132, 133)
(அண்டம் = உலகம், கிரி = மலை, ஒருகால் = ஒரு சமயம், குதம்பை = காதோலை / அணிவகை, வடம் = மாலை, கந்துகம் = பந்து, கழங்கு = கழற்சிக்காய்)
இவ்வாறாகப் புலவர் காளிதேவியின் உருவ வருணனையைச் சுவைபட விவரித்துள்ளதை அறிய முடிகிறது.
பனைமரம் போன்றவை
பேய்கள் மிகப் பெரிய பசியை அடைத்து வைத்த ஒரு பாத்திரம் போலக் காணப்படுகின்றன. ஒரு நாள் போலப் பல நாளும் பசியால் மெலிகின்றன. அவற்றின் கைகளும் கால்களும் பெரிய பனை மரங்கள் போல் காணப்படுகின்றன. இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.
பெருநெடும் பசிபெய் கலம் ஆவன
பிற்றை நாள் முனைநாளின் மெலிவன
கருநெடும் பனம் காடு முழுமையும்
காலும் கையும் உடையன போல்வன
(பேய்களைப் பாடியது: 136)
(கலம் = ஏனம், பிற்றைநாள் = மறுநாள், பனம் = பனைமரம், கரு = கருமை நிறம்)
வாயும் வயிறும்
குகைகளோடு பேய்கள் வழக்காடுகின்றன. குகைகளின் வாயைவிடப் பேய்களின் வாய்களே பெரியனவாம். எவ்வளவு உணவு போட்டாலும் நிரம்பாத வயிற்றையும் உடையன. உட்கார்ந்தால் முகத்திற்கு மேலே மூன்று முழநீளம் போகும் முழங்கால்களைப் பெற்றிருந்தன. இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.
வன் பிலத்தொடு வாதுசெய் வாயின
வாயினால் நிறையாத வயிற்றின
முன்பு இருக்கின் முகத்தினும் மேல்செல
மும்முழம்படும் அம்முழந் தாளின
(பேய்களைப் பாடியது: 137)
(பிலம் = குகை, வாது செய்தல் = வழக்கிடுதல்)
மூக்கும் காதும்
பேய்களின் உடல் முழுவதும் நீண்டு தடித்துக் கறுத்து வளைந்த நிலையில் மயிர்கள் காணப்பட்டன. இவை பாம்புகளைப் போலத் தொங்கின. மூக்கின் துவாரங்களில் பழமையான பாசி படிந்திருந்தது. காதுகளின் துவாரங்களில் ஆந்தைகள் குடியேறின. இதனால் வால்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்தன (பேய்களைப் பாடியது: 141).
இவ்வாறாகப் பேய்களின் உருவத்தைப் புலவர் நயம்பட விளக்கி இருப்பதை அறிய முடிகின்றது. பேய்கள் கடும் பசியால் உணவு பெறாமல் வாடுகின்றன. காளியிடம் முறையிடுகின்றன. கலிங்கப் போர் நிகழ இருப்பதையும் அப்போது உணவு பெற இருப்பதையும் அறிந்து ஆறுதல் பெறுகின்றன.
சொல்லரிய ஓமத்தீ வளர்ப்பராலோ
தொழுது இருந்து பழுஎலும்பு தொடர வாங்கி
வல்எரியின் மிசைஎரிய விடுவராலோ
வழிகுருதி நெய்யாக வார்ப்பராலோ
(கோயில் பாடியது : 110)
(ஓமத்தீ = வேள்வித்தீ, பழு = விலா, வாங்கி = பிடுங்கி, வல்லெரி = மிகுதியான நெருப்பு, குருதி = இரத்தம், வார்ப்பர் = ஊற்றுவர்)
கும்பிட்டு நிற்கும் குறை உடல்
வேள்வி முடிந்தது. மறவர்கள் தம் தலைகளை அறுத்துத் தேவியின் கையில் கொடுக்கின்றார்கள். தலையற்ற உடல்கள் தேவியைக் கும்பிட்டு நிற்கின்றன. இதனை விவரிக்கும் பாடல் வருமாறு:
அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ
அரிந்தசிரம் அணங்கின் கைக்கொடுப்பராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவுமாலோ
குறைஉடலம் கும்பிட்டு நிற்குமாலோ
(கோயில் பாடியது- 111)
(சிரம் = தலை, அணங்கு = காளி, கொற்றவை = பெண் தெய்வம் (காளி), பரவும் = துதிக்கும், உடலம் = உடல்)
அச்சம் தரும் தலைகள்
இன்னும் சிலர் பலிபீடத்தில் தம் தலைகளை அறுத்து வைக்கின்றார்கள். அத்தலைகளை ஆண்டலை என்னும் பறவை தன் இனம் என்று எண்ணுகின்றது. அதனால் அத்தலைகளின் பக்கத்தில் வருகின்றது. வந்ததும் அறுபட்ட தலைகள் ஆண்டலைப் பறவையை அச்சமுறுத்துகின்றன. இதோ பாடல்,
நீண்ட பலிபீடத்தில் அரிந்து வைத்த
நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் இனம் என்று எண்ணி
ஆண்டலைப் புள் அருகு அணைந்து பார்க்குமாலோ
அணைதலும் அச்சிரம் அச்சம் உறுத்துமாலோ
(கோயில் பாடியது : 112)
(குஞ்சி – ஆணின் தலைமயிர்)
இவ்வாறாகச் சயங்கொண்டார் போர்க்களக் காட்சியையும், மறவர்களின் வீரச்செயல்களையும் புனைந்து இருப்பது படித்து மகிழத்தக்கது.
பிணம் உண்ணும் பேய்கள்
கலிங்கப் போர் முடிவிற்கு வருகிறது. சோழ வீரர்கள் வெற்றி வாகை சூடுகின்றனர். இராமாயணம், பாரதம் போன்ற வீரம் செறிந்த இந்தப் போர்க்களத்தைக் காண வருமாறு பேய் காளியை அழைக்கிறது. காளியும், பேய்கள் புடைசூழப் போர்க்களத்தைப் பார்க்கிறாள். களத்தைக் கண்டு மகிழ்ந்த காளி கூழ் சமைக்குமாறு பேய்களுக்குக் கட்டளை இடுகின்றாள்.
கூழ் சமைத்தல்
பேய்கள் கூழ் சமைக்க ஆயத்தமாகின்றன. வீரர்களின் தலைகள் கொண்டு, அடுப்பு அமைக்கப் படுகின்றது. யானைகளின் வயிறுகள் பானைகளாகப் பயன்படுகின்றன. குதிரையின் குருதி உலை நீராக ஊற்றப்படுகின்றது. வீரர்களின் மூளை தயிராகும்.
இறைச்சியாகிய செந்தயிர் பானைகளில் நிரப்பப்படுகின்றது. குதிரையின் பற்கள் பூண்டாகும். கலிங்க வீரர்களின் பற்கள் அரிசியாகும். இந்தப் பொருள்களைக் கொண்டு கூழ் சமைக்கப்படுகின்றது. (கூழ் அடுதல்)
தானே குடிக்கும் கூத்திப் பேய்
போர்க்களத்தில் கூழ் சமைத்து முடித்ததும் பேய்கள் உண்ணத் தொடங்குகின்றன. அவ்வாறு உண்ணும் பேய்களில் கூத்திப்பேய் என்பதும் ஒன்று. அப்பேய் தனக்கும் தன் கணவனுக்கும் சேர்த்துக் கூழ் வாங்குகிறது. பானையில் வாங்கிய அக்கூழ் பானையின் வெளிப்புறங்களில் வழிகின்றது. அவ்வாறு வழியாமல் மாமிசத் துண்டால் அதனைத் தடுத்துக் குடிக்கின்றது அப்பேய். அதனை மற்றொரு பேய் பார்க்கிறது. உன் கணவனுக்கு வாங்கிய கூழையும் சேர்த்து நீ குடிக்கின்றாயே! அவனுக்கு வேண்டாமோ என்று கேட்கிறது. உடனே கூத்திப்பேய் என் கணவன் குடிக்க மாட்டான் என்று சொல்லிக் கூழ் முழுவதையும் குடிக்கின்றது. இதனைக் கீழே உள்ள பாடல் விளக்கும்.
தடியால் மடுத்துக் கூழ் எல்லாம்
தானே பருகித் தன்கணவன்
குடியான் என்று தான்குடிக்கும்
கூத்திப் பேய்க்கு வாரீரே
(கூழ் அடுதல்: 575)
(தடி = தசை, மடுத்து = அமிழ்த்தி, கூத்திப்பேய் = கூத்தாடும் பேய், வாரீர் = ஊற்றுங்கள்)
நான்முகனுக்கும் கிட்டாத கூழ்
இவ்வாறு பேய்கள் கூழை உண்ணும்போது நான்முகனைப் (பிரம்மனை) பார்த்து நகைக்கின்றன. நான்முகன் தனக்கு மட்டும் நான்கு வாயைப் படைத்துக் கொண்டான். ஆனால் நமக்கு ஒரு வாயைத்
தந்துள்ளான். இதனால் நான்முகன் வஞ்சகன். என்றாலும் அமுதம் போன்ற இந்தக் கூழினைக் குடிக்க நான்முகனுக்குக் கொடுத்து வைக்கவில்லை: ஆனால் ஒரு வாய் பெற்ற நாமோ இக்கூழினைக் குடித்து மகிழ்கின்றோம். ஆதலால் நான்முகனும் வெட்கப்படும்படி மகிழ்ச்சியுடன் கூழினை உண்போமாக என்று பேய்கள் கூறி மகிழ்கின்றன. இதனைக் கீழே உள்ள பாடல் விவரிக்கும்.
தமக்கு ஒரு வாயொடு வாய்மூன்றும்
தாம் இனிதாப் படைத்துக் கொண்டு
நமக்கு ஒரு வாய் தந்த நான்முகனார்
நாணும்படி களித்து உண்ணீரே
(கூழ் அடுதல் : 581)
(நான்முகனார் = பிரமன், களித்து = மகிழ்ந்து)
இவ்வாறாகப் பல்வேறு பேய்களின் கூழ் உண்ணும் நிலைகளைச் சயங்கொண்டார் கற்பனை வளத்துடன் வருணித்துப் படைத்துள்ளதை அறிய முடிகின்றது.
செக்கச் சிவந்த கழுநீரும்
செகத்தில் இளைஞர் ஆருயிரும்
ஒக்கச் செருகும் குழல்மடவீர்
உம்பொற் கபாடம் திறமினோ
(கடை திறப்பு : 74)
(செக்கச் சிவந்த = மிகச்சிவப்பான, கழுநீர் = பூ, செகம் = உலகம், குழல் = கூந்தல், கபாடம் = கதவு)
இதனால் கதவில் உள்ள சுழலும் குடுமி தேய்ந்தது. இதனைப் புலவர் நயம்படப் புனைந்துள்ளார்.
வருவார் கொழுநர் எனத் திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
தேயும் கபாடம் திறமினோ
(கடை திறப்பு : 69)
(கொழுநர் = கணவர், குடுமி = கதவு திறக்கவும் மூடவும் உதவும் அச்சு)
இவ்வாறாகக் கடைதிறப்புப் பகுதி முழுவதும் அகப்பொருள் நிறைந்ததாகச் சுவைபடப் புலவர் புனைந்து இருப்பதை அறிய முடிகின்றது.
பரணி பற்றிப் பாட்டியல் நூல்கள் தரும் இலக்கண விளக்கங்களை அறிந்து இருப்பீர்கள்.
பண்டைய நாள் பரணி இலக்கியங்கள் தொடங்கிப் பரணியின் வளர்ச்சி மாற்றம் பற்றிய செய்திகளை அறிந்து இருப்பீர்கள்.
கலிங்கத்துப் பரணி பற்றிச் சிறப்பான செய்திகளை அறிந்திருப்பீர்கள். கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர், பாட்டுடைத் தலைவன், இலக்கியச் சிறப்புகள் முதலியன பற்றி விரிவாக உணர்ந்து இருப்பீர்கள்.
பாடம் - 2
இத்தகு சிற்றிலக்கிய வகையில் ஒன்றே பிள்ளைத்தமிழ். பிள்ளைத்தமிழ் இலக்கிய வகையாக உருவெடுத்த காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு என்பர். (கு. முத்துராசன், 1992). இதற்கு முன்பும் தமிழிலக்கியங்கள் பிள்ளைத்தமிழின் சில கூறுகளை வெளிப்படுத்தி உள்ளன.
நண்பர்களே! இந்தப் பாடம் பிள்ளைத்தமிழ் பற்றிய பொது அறிமுகத்தை முதலில் கூறுகின்றது. இரண்டாவதாக மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலை அறிமுகம் செய்கிறது. இனிப் பாடப்பகுதிக்குள் செல்வோமா?
ஆகும்ஓர் தெய்வம் உண்டோ
என்று குறிப்பிடுவார் பாரதி. அன்பு செலுத்துவதற்கும் அன்பு பெறுவதற்கும் உரிய பருவம் குழந்தைப் பருவமே. புலவர்கள் தம் அன்புக்குரிய ஒருவரைக் குழந்தையாக வைத்துப் பாடிமகிழ்ந்தார்கள். இதுவே பிள்ளைத்தமிழ் ஆயிற்று. புலவர் பெருமக்கள் தம் அன்பிற்குரியவராகப் பின்வருவோரை எண்ணினார்கள்.
இறைவன்
இறைவி
இறையடியார்கள்
வள்ளல்கள்
தலைவர்கள்
ஆசிரியர்கள்
இவர்களுள் ஒருவரைத் தலைவராகக் கொண்டு பிள்ளைத்தமிழ் பாடப்படும். இவர்களின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் மூலம் அரிய பெரிய சாதனைகளைப் புலவர்கள் விளக்கிக் கூறுவர். பிள்ளையைத் தமிழால் பாடுவது என்ற பொருளில் பிள்ளைத்தமிழ் என்ற பெயர் அமைந்துள்ளது.
குழவி மருங்கினும் கிழவது ஆகும்
(தொல். பொருள். புறம். 24)
என்ற தொல்காப்பிய நூற்பா பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு இலக்கணம் கூறி உள்ளது. குழந்தைப் பருவக்காலத்தில் குழந்தைகளை விரும்பி அவரது செயல்களைப் பாடுவது உண்டு என்ற பொருளில் உரையாசிரியர் இளம்பூரணர் உரை எழுதி உள்ளார்.
இன்னொரு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்குரிய பத்துப் பருவங்களைச் சுட்டி இருக்கிறார். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை ஆகியன பிள்ளைத்தமிழின் பத்துப் பருவங்கள் ஆகும். குழந்தையின் மூன்றாம் திங்கள் முதல் இருபத்து ஓராம் திங்கள் வரையில் உள்ள மாதங்களே பத்துப் பருவங்களாகப் பகுக்கப் பெறும். இந்தப் பத்துப் பருவங்களில் குழந்தையின் சிறப்பினைப் பாடுவதாகப் பிள்ளைத்தமிழ் அமைந்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மனின் பெருமைகளை எடுத்து உரைப்பதே இந்நூலின் நோக்கம். தேவி புராணங்களின் அடிப்படையிலும், கடவுள் தத்துவங்களின் அடிப்படையிலும் இந்த நூல் இயற்றப்பட்டுள்ளது.
தென்னற்கும் அம்பொன்மலை மன்னற்கும் ஒருசெல்வி
(மீனா.பிள். 13)
என்ற பிள்ளைத்தமிழ்ப் பாடலின் தொடர் குறிப்பிடத்தக்கது. மீனாட்சி பாண்டிய மன்னனின் மகளாகவும் இமயமலை இமயவர்மனின் செல்வியாகவும் விளங்குவதை அத்தொடர் குறிப்பிட்டுள்ளது.
தமிழோடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி
சப்பாணி கொட்டி அருளே
(மீனா.பிள். 34)
என்ற பாடல், தமிழுடன் மீனாட்சி பிறந்ததாகக் கூறித் தமிழுக்கு ஏற்றம் தந்துள்ளது.
இப்பிள்ளைத்தமிழ் மீனாட்சி எனும் சைவ சமயத் தாய்க்கடவுளையும் பாண்டிய நாட்டையும் தமிழ் மொழியையும் சேர்த்துப் பெருமைப்படுத்துவதில் முன் நிற்கிறது.
குமரகுருபரர் இளம் வயதில் ஐந்து ஆண்டுகள் வரை பேசாது இருந்தார். பின்பு திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் ஆற்றல் பெற்றார் என்று மரபு வழிச்செய்தி கூறுகிறது. பேச்சாற்றல் பெற்ற இவர் முருகனின் மீது கந்தர் கலிவெண்பா எனும் நூலைப் பாடினார். முருகப்பெருமான் இவர் கனவில் தோன்றி ”நீ குருபரன் ஆகுக” என்று கூறினார். அது முதல் இவர் குமரகுருபரர் என்று அழைக்கப்பட்டார்.
பயணமும் இறுதியும்
திருச்செந்தூர் முதல் இமயம் வரை நடைப் பயணம் மேற்கொண்டவர். இந்நடைப் பயணத்தின் போது சைவத்தையும் தமிழையும் பரப்புவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொண்டவர். இவர் காசியில் மடத்தில் தங்கி இருந்தபோது இறைவனடி சேர்ந்தார்.
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் காலத்தில் இப்புலவர் வாழ்ந்துள்ளார். திருமலை நாயக்கர் வாயிலாக மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் இயற்றப்பட்டது. மீனாட்சியம்மன் கோயில் திருமுன்பு அரங்கேற்றமும் செய்யப்பட்டது.
பிற படைப்புகள்
குமரகுருபரர் மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம் முதலிய நூல்களை இயற்றி உள்ளார்.
மேலும் நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, சிவகாமியம்மை இரட்டை மணிமாலை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம் முதலிய நூல்களையும் இயற்றி உள்ளார்.
1) மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
2) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
3) முத்துக்குமார சுவாமிப் பிள்ளைத்தமிழ்
இந்த மூன்றில் முதலாவதாகப் பேசப்படுவது மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழே. கற்பனை வளம், உவமை அமைப்புகள், சந்த நயம் முதலிய பல்வேறு இலக்கியச் சிறப்புகளால் இந்நூல் பெருமை பெற்றுள்ளது.
நண்பர்களே! இனி மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் இலக்கியச் சிறப்புகள் பற்றி அறிய இருக்கிறோம்.
தொடுக்கும் கடவுட் பழம்பாடல்
தொடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ்
சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
ஏற்றும் விளக்கே.
(மீனா.பிள். 61)
(தொடுத்தல் = கட்டுதல் / உருவாக்குதல், தொடை = மாலை, நறை = மணம், பழுத்த = கனிந்த, தீம் = இனிய, அகந்தை = செருக்கு, தொழும்பர் = அடியார்)
என்ற பாடல் விவரிக்கும். மேலும் இப்பாடலில் மீனாட்சியம்மையின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திருவுள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்து இருக்கும்
உயிர் ஓவியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழற் காடேந்தும்இள
வஞ்சிக் கொடியே வருகவே
மலயத் துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே
(மீனா.பிள். 69)
(பொருப்பு = மலை, பிடி = பெண்யானை, எறிதரங்கம் = கடல், புவனம் = உலகம், மதுகரம் = மதுவை வாயாகிய கரத்தால் உண்பவை, / வண்டுகள், குழல் = கூந்தல், மலயத்துவசன் = பாண்டியன்)
இப்பாடலை மீனாட்சியம்மையே கேட்டு மகிழ்ந்ததாகக் கூறுவர். இந்நூல் அரங்கேற்றப்பட்டபோது குமரகுருபரர் இசையுடன் பாடி உள்ளார். இப்பாடலைக் கேட்ட மீனாட்சியம்மை குழந்தை உருவில் வந்து திருமலை நாயக்கர் மார்பில் உள்ள மணிமாலையைக் கழற்றிப் புலவர்க்குப் பரிசாக வழங்கியதாக அவர் வரலாறு கூறுகிறது.
சிற்றில் அமைத்தல்
உயர்ந்த சக்கரவாள மலைச்சுவருக்கு ஈடாக எட்டு மலைகளைச் சுவர்களாக நிறுத்துகிறாள். விண்ணின் உச்சியை மூடி ஞாயிறு திங்கள் என்னும் விளக்குகளைப் பொருத்துகிறாள். உலகங்களாகிய பாத்திரங்களில் ஊழிக்கால வெள்ளத்தைக் கொண்டு கூழாகிய இனிய உணவைச் சமைக்கிறாள். இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்:
சுற்றுநெடு நேமிச்சுவர்க்கு இசையஎட்டுச்
சுவர்க்கால் நிறுத்தி மேருத்
தூண்ஒன்று நடுநட்டு வெளிமுகடு மூடிஇரு
சுடர் விளக்கு இட்டுமுற்ற
எற்றுபுனலில் கழுவு புவனப் பழங்கலம்
எடுத்து அடுக்கிப் புதுக்கூழ்
இன்அமுதமும் சமைத்து அன்னைநீ பன்முறை
இழைத்திட…
(மீனா.பிள். 15)
(நெடுநேமி = சக்கரவாளமலை, மேரு = மலை, முகடு = உச்சி, இருசுடர் = சூரியன், சந்திரன், எற்றுபுனல் = ஊழிக்கால வெள்ளம், புவனம் = உலகம், இழைத்த = அமைத்த)
உலக உருவாக்கம்
இவ்வாறாக உலகப் படைப்பையே மீனாட்சியின் சிற்றில் உருவாக்கமாகப் புலவர் கற்பனை செய்து பார்க்கிறார். அன்னை சிற்றில் புனையப் புனைய அதனைப் பித்தனாகிய கூத்தன் மீண்டும் மீண்டும் சிதைக்கிறான். அன்னை செய்யும் சிற்றிலை அழித்து அழித்து மதம் பிடித்த யானை போன்று பெரிய பித்தனாகிய கூத்தபிரான் (சிவன்) ஆடுகின்றான். அவன் அவ்வாறு செய்யவும் அதனை வெறுத்து ஒதுக்காமல் நாள்தோறும் அண்டங்களைக் கட்டிச் சிற்றில் விளையாடும் பச்சிளம் பிள்ளையே என்று புலவர் பாராட்டுகின்றார். அப்பாடல் தொடர்கிறது:
இன்னமுதமும் சமைத்து அன்னைநீ பன்முறை
இழைத்திட அழித்து அழித்துஓர்
முற்றவெளியில் திரியும் மத்தப் பெரும்பித்தன்
முன்நின்று தொந்தம் இடவும்
முனியாது வைகலும் எடுத்து அடுக்கிப் பெரிய
மூதுஅண்ட கூடம் மூடும்
சிற்றில் விளையாடும் ஒருபச்சிளம் பெண்பிள்ளை
செங்கீரை ஆடி அருளே
(மீனா.பிள். 15)
(அமுதம் = உணவு, இழைத்திட = செய்திட, மத்தப் பெரும்பித்தன் = சிவன், தொந்தம் = தொடர்பு, முனியாது = சினவாது, வைகல் = நாள்தோறும், மூது = முதிய)
இதில் உலக உருவாக்கமும் அழிவும் சுட்டப்படுகின்றன. அவை மீனாட்சி அம்மையின் சிற்றில் உருவாக்கமாகவும் சிதைத்தலாகவும் அமைந்துள்ளன. இவ்வாறு புலவர் பாடி இருப்பது சிறந்த கற்பனை நயம் வாய்ந்தது. ஆண்பாற் பிள்ளைத் தமிழில் தனிப் பருவமாகக் கொள்ளப்பெறும் சிற்றில் பருவத்தை, இப்பாடல் குறிக்கிறது; இறைவனின் ஆக்கலும் அழித்தலும் ஓயாமல் மாறி மாறி நடைபெறுவதை ஒரு தத்துவ நோக்கோடு கூறுகிறது.
முதுசொல் புலவர் தெளித்த பசுந்தமிழ்
நூல்பாழ் போகாமே
முளரிக் கடவுள் படைத்த வசுந்தரை
கீழ்மேல் ஆகாமே
அதிரப் பொருது கலிப்பகைஞன் தமிழ்
நீர்நாடு ஆளாமே
அகிலத்து உயிர்கள் அயர்த்தும் அறங்கடை
நீள்நீர் தோயாமே……..
செழியர்க்கு அபயரும் ஒப்புஎன நின்றுஉண
ராதார் ஓதாமே
மதுரைப் பதிதழை யத்தழை யும்கொடி
தாலோ தாலேலோ
(மீனா.பிள். 31)
(முது = பழைய, முளரி = தாமரை, வசுந்தரை = பூமி, கலி = வறுமை, அதிர = அதிர்ச்சியடையும்படி, அறங்கடை = பாவம், செழியர் = பாண்டியர், அபயர் = சோழர்)
பழந்தமிழ் நூல்களைப் பாதுகாப்பவளாகவும், பாண்டிய நாட்டைக் காப்பவளாகவும், உயிர்கள் பாவத்தில் மூழ்காமல் காப்பவளாகவும் காட்சியளிப்பவள் மீனாட்சி என்பது சிறப்புடன் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
வருக! வருகவே!
நறுமணம் கமழும் கூந்தலை உடைய பெண் யானையே வருக! அறிவின் வெள்ளப்பெருக்கே வருக! சிவபெருமானின் மூன்று கண் ஒளிகளுக்கு அளித்த நல்ல விருந்தே வருக! மூன்று கடவுளர்க்கும் வித்தாக (விதையாக) அமைந்தவளே வருக! வித்து இன்றி விளையும் பரமானந்தத்தின் விளைவே வருக! பழைய வேதங்களின் குருத்தே வருக! அருள் கனிந்த மேன்மையே வருக! பிறவியாகிய பெரும் பிணிக்கு மருந்தே வருக! மழலை பேசும் கிளியே வருக! மலயத்துவச பாண்டிய மன்னன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே! இவ்வாறு குழந்தையை வரவேற்கும் புலவரின் பாடல் இதோ!
பெருந்தேன் இறைக்கும் நறைக்கூந்தல்
பிடியே வருக முழுஞானப்
பெருக்கே வருக பிறை மௌலிப்
பெம்மான் முக்கண் சுடர்க்கு இடுநல்
விருந்தே வருக மும்முதற்கும்
வித்தே வருக வித்தின்றி
விளைக்கும் பரம ஆனந்தத்தின்
விளைவே வருக…….
……… பிறவிப் பெரும்பிணிக்கு ஓர்
மருந்தே வருக பசுங்குதலை
மழலைக் கிளியே வருகவே
மலயத்துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே!
(மீனா.பிள். 62)
(இறைக்கும் = சிதறும், நறை = மணம், பெருக்கு = வெள்ளம், மௌலி = முடி, பெம்மான் = சிவன், மும்முதல் = மும்மூர்த்திகள்/சிவன், பிரம்மா, விஷ்ணு, வித்து = விதை, குதலை = மழலை, மலயத்துவசன் = பாண்டியமன்னன்)
இதில், மீனாட்சி ஞானம் உடையவள், சிவன், திருமால், பிரம்மா ஆகிய மூவர்க்கும் மூலமானவள், அடியவர் பிறவி நோய்க்கு மருந்து போன்றவள் என்பன போன்ற மீனாட்சியின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன.
2.5.1 அகம் தரும் இயற்கைப் புணர்ச்சி
தலைவனும் தலைவியும் தாமே எதிர்ப்பட்டுக் கூடுதல் செய்வர். இதனை இயற்கைப் புணர்ச்சி என்பர். உள்ளப்புணர்ச்சி என்றும் கூறுவர். தலைவனாகிய சிவனுக்கும் தலைவியாகிய தடாதகைப் பிராட்டிக்கும் (மீனாட்சியம்மை) இயற்கைப் புணர்ச்சி கயிலாயத்திலே நிகழ்கின்றது. பொய்யோ என்று எண்ணும்படியான இடையை உடையவள் மீனாட்சி. இவள் மேரு மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானைக் காண்கிறாள். உள்ளப்புணர்ச்சி தோன்றும் நிகழ்ச்சி மூலம் புலவர் இயற்கைப் புணர்ச்சி மரபை விளக்கிய திறம் பாராட்டிற்கு உரியது. இதனைப் பின்வரும் பாடல் விளக்கும்.
பொய்வந்த நுண்இடை நுடங்கக் கொடிஞ்சிப்
பொலம்தேரொடு அமரகத்துப்
பொன்மேரு வில்லியை எதிர்ப்பட்ட ஞான்றுஅம்மை
பொம்மல் முலை மூன்றில் ஒன்று
கைவந்த கொழுநரொடும் உள்ளப் புணர்ச்சிக்
கருத்தான் அகத்துஒடுங்க
(மீனா.பிள். 34)
(நுடங்க = அசைய, கொடிஞ்சி = தேரின் உறுப்பு, பொலம் = பொன், அமரகம் = தேவருலகம், பொன்மேருவில்லி = சிவன், கொழுநர் = கணவன்)
இவ்வாறு அக இலக்கிய மரபாகிய இயற்கைப் புணர்ச்சி இங்குக் கூறப்படுகிறது.
இமயத் தொடும்வளர் குலவெற்பு எட்டையும்
எல்லைக் கல்லில்நிறீஇ
எண்திசை யும்தனிகொண்டு புரந்து
வடாது கடல்துறைதென்
குமரித் துறைஎன ஆடும் மடப்பிடி
(மீனா.பிள். 39)
(வெற்பு = மலை, நிறீஇ = நிறுத்தி, மடம் = இளமை, வடாது = வடக்கு, பிடி = பெண்யானை (போன்ற நடை)
என்று மீனாட்சியின் வெற்றிச் சிறப்பினைப் புகழ்ந்துள்ளார். இவ்வாறாகப் புலவர் தமிழ் இலக்கிய அக, புற மரபுகளையும் பிள்ளைத்தமிழில் சேர்த்துப் புனைந்திருப்பது படித்து மகிழ்வதற்கு உரியது.
சங்கம் வைத்து மொழி வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு. எனவே, மதுரை என்றவுடன் தமிழும், தமிழ் என்றவுடன் மதுரையும் நினைவுக்கு வருவது இயல்பு. இதை வெளிப்படுத்துவதுபோல்
தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி
(மீனா.பிள். 34)
என்று மீனாட்சி தமிழோடு பிறந்ததாகக் கூறித் தமிழுக்கு ஏற்றம் தந்துள்ளார்.
பணிகொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப்
பணைத்தோள் எருத்துஅலைப்பப்
பழமறைகள் முறைஇடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசும்கொண்டலே
(மீனா.பிள். 2)
(முடவு = வளைந்த, படப்பாய் = பாம்புப் படங்கள் உள்ள படுக்கை/ திருமாலின் படுக்கை, பணை = திரண்ட, எருத்து = பிடரி, பழமறைகள் = வேதங்கள்)
என்ற பாடல் அடிகள் திருமாலைப் போற்றியுள்ளன. திருமால் தமிழ்ப் புலவர் ஒருவருக்காகக் காஞ்சியை விட்டு நீங்கிய புராணக் கதையை இப்பாடல் அடிகள் விளக்கி உள்ளன.
ஆழ்வார் வரலாறு
பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டல் என்னும் தொடர் திருமழிசை ஆழ்வார் வரலாற்றைக் குறிப்பிடுகின்றது. திருமழிசை ஆழ்வாரின் பாடலுக்கு ஏற்ப அவர் பின்னால் திருமால் சென்றார் என்னும் பொருள் கொண்டது. கிழவி ஒருத்தியை ஆழ்வார் இளம் பெண்ணாக மாற்றினார். இதனை அறிந்தான் பல்லவ மன்னன். ஆழ்வாரின் மாணவன் கணிகண்ணன் மூலம் தன்னையும் இளம் பருவத்தினனாக ஆக்குமாறு ஆழ்வாரை வேண்டினான். கணிகண்ணன் மறுத்தான். இதனால் மன்னன் அவனை நாடு கடத்தினான். இச்செய்தி அறிந்ததும் ஆழ்வார்,
கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவன் யான் செல்கின்றேன் நீயும் உன்தன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்
(கச்சி = காஞ்சி, பைந்நாகப்பாய் = பாம்புப் படுக்கை)
என்று பாடுகின்றார். உடனே திருமாலும் காஞ்சிபுரத்தை விட்டு அகன்றார். தமிழ்ப் புலவருக்காகத் திருமால் இவ்வாறு செய்ததையே பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டல் என்று பிள்ளைத்தமிழ் குறிப்பிட்டுள்ளது.
தெள்ளித் தெளிக்கும் தமிழ்க்கடலின் அன்பின்ஐந்
திணைஎன எடுத்த இறைநூல்
தெள்அமுது கூட்டுஉணும்
(மீனா.பிள். 9)
(இறைநூல் = இறையனார் அகப்பொருள், இலக்கணநூல்)
எனும் பாடல் அடிகள் மேல் கருத்தை விவரிக்கும். தமிழ் பற்றிய குறிப்புகளைப் பல்வேறு இடங்களில் குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறாகத் தமிழ் சிறந்த அடைமொழிகளுடன் போற்றப் பெற்றுள்ளதை அறிய முடிகின்றது.
பிள்ளைத்தமிழ் என்றால் என்ன என்பது பற்றிய செய்திகளை அறிந்து கொண்டீர்கள்.
பிள்ளைத்தமிழ் இலக்கிய அமைப்புப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள்.
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பற்றிச் சிறப்பு நிலையில் செய்திகளைப் புரிந்து கொண்டீர்கள்.
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் ஆசிரியர் வரலாற்றை அறிந்து கொண்டீர்கள்.
இப்பிள்ளைத்தமிழின் இலக்கிய நயம் வாய்ந்த பாடல்கள் பற்றியும் தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றியும் தெரிந்து கொண்டீர்கள்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஓரளவு பாடுபொருள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அரசன் இறைவன் ஆகியோரைத் தலைமக்களாகக் கொண்டு இலக்கியங்கள் பாடப்பெற்றன. பள்ளு இலக்கியம் சமூக அடிமட்ட மக்களைத் தலைவர்களாக மாற்றியது.
இந்தப் பாடத்தில் தமிழில் சிறந்து விளங்கும் பள்ளு இலக்கிய வகைமை பற்றிய செய்திகளை நாம் அறிய இருக்கிறோம்.
பள்ளு என்றால் என்ன?
‘பள்’ என்ற சொல் உகர விகுதி பெற்று பள்ளு என்று ஆகி உள்ளது. பல்லு, கள்ளு, முள்ளு என்ற வழக்காறுகளை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.
உழவுத் தொழிலுக்குச் சிறந்த இடம் மருதம். இது பயிர்த்தொழில் செய்வதற்குத் தக்கவாறு தண்ணீர் தங்கும் பள்ளமான இடங்களை உடையது. பள்ளங்கள் நிறைந்த இடத்தில் வேலை செய்வோரைப் பள்ளர் என்று குறிப்பிட்டனர். பள்ளர்கள் பாடும் பாடலே பள்ளு என்று கூறுவர்.
பள்ளு இலக்கியம் பிற்காலத்தில் இலக்கிய வடிவைப் பெற்றாலும் அதன் கூறுகள் பண்டைய இலக்கியங்களிலேயே தென்படுகின்றன. பள்ளு இலக்கியம் முழு வடிவைப் பெறுவதற்குப் பல்வேறு கூறுகள் துணை செய்திருக்க வேண்டும். இவற்றைப் பின்வருமாறு பட்டியல் இடமுடியும்.
1) தொல்காப்பியர் ‘புலன்’ என்னும் செய்யுள் பற்றிக் கூறும் செய்திகள் பள்ளு இலக்கியத்தின் தோற்றம் பற்றிய செய்திகளோடு ஒத்துள்ளன. புலன் என்பது சேரி மொழிகளால் அதாவது வழக்கு மொழிகளால் புனையப்படுவது. (தொல்.பொருள். 542)
2) தொல்காப்பியர் கூறும் ஏரோர் களவழி எனும் புறத்துறையையும் இங்குக் கூறுதல் வேண்டும். ஏரோர் களவழி என்பது உழவர்களின் நெல்களத்தில் நிகழும் செயல்கள் ஆகும். (தொல்.பொருள். 75)
3) பன்னிருபாட்டியல் கூறும் உழத்திப் பாட்டும் பள்ளு இலக்கியத் தோற்றத்திற்குக் காரணமாகும். உழத்திப் பாட்டு என்பது உழவுப் பெண்களின் பாடல் என்று பொருள்படும்.
4) சிலப்பதிகாரம் சுட்டும் முகவைப் பாட்டு (10:137) (களத்தில் நெல் அடிக்கும்போது பாடும் பாட்டு) ஏர்மங்கலம் (10:135) (முதல் ஏர் பூட்டி ஓட்டும்போது பாடப்படும் மங்கலப்பாட்டு) ஆகியனவும் பள்ளு இலக்கியத் தோற்றத்திற்குக் காரணங்கள்.
இவ்வாறான கூறுகளே பிற்காலத்தில் இணைந்து பள்ளு இலக்கியமாக உருப்பெற்றன என்று கூறுவார் ந.வீ. செயராமன்.
சில பள்ளு இலக்கியங்கள் வருமாறு:
கதிரைப் பள்ளு
தென்காசிப் பள்ளு
மோகனப் பள்ளு
வைசியப் பள்ளு
வேதாந்தப் பள்ளு
வையாபுரிப் பள்ளு
செந்தில் பள்ளு
சிவ சயிலப் பள்ளு
இவ்வாறாக ஏராளமான பள்ளு இலக்கியங்கள் தோன்றி உள்ளன. பள்ளு இலக்கிய எண்ணிக்கையை எண்ணி அறிய முடியாது என்பதை
நெல்லு வகையை எண்ணினாலும்
பள்ளு வகையை எண்ண முடியாது
என்ற பழமொழி கூறுகின்றது.
பள்ளனும் பள்ளியரும்
பண்ணைக்காரன் வரும்போது, பள்ளியர் அவனிடம் பள்ளனைப் பற்றி முறையிடுகின்றனர். இளைய பள்ளியின் அழகில் மயங்கிக் கடமையை மறந்த பள்ளனைப் பண்ணைக்காரன் கடிந்து உரைக்கிறான். பள்ளன் தன் தவறுகளை மறைக்கப் பண்ணைக்காரனிடம் வித்துவகை, மாட்டு வகை, ஏர் வகை முதலியவற்றைக் கூறுகின்றான்.
மூத்தபள்ளி முறையீடு
மூத்த பள்ளி பண்ணைக்காரன் முன்பு தோன்றுகிறாள். தன்னை ஒதுக்கி வாழும் பள்ளனைப் பற்றிக் கூறி முறை இடுகிறாள். அதனைக் கேட்ட பண்ணைக்காரன் சினந்து பள்ளனைக் குட்டையில் (மரத்தால் பிணிக்கும் கருவி) மாட்டி விடுகிறான். பின்பு மூத்த பள்ளி மூலம் விடுவிக்கப்படுகிறான்.
பயிரிடும் பள்ளியர்
பண்ணையில் பயிர் இடும் வேலை தொடங்குகிறது. நிலத்தை உழுது விதைக்கிறார்கள். பயிர் முளையிட்டு வளர்கிறது. நாற்று நடுகிறார்கள். களை அகற்றி நீர் பாய்ச்சுகின்றனர். பயிர் விளைகிறது. முற்றிய கதிரை அறுத்து நெல்லடித்துக் குவிக்கிறார்கள். உழவு வேலையில் பள்ளியர் பங்குபெறும் நிகழ்ச்சிகள் பாடல்கள் மூலம் காட்சிப்படுத்தப் படுகின்றன.
பள்ளியர் மோதல்
பள்ளன் நெற்கணக்குக் கூறுகின்றான். பள்ளியர் இருவரும் கலகம் இட்டு ஒருவரை ஒருவர் ஏசிப் பேசுகின்றனர். இறுதியில் இருவரும் மனம் பொருந்தி வாழ இசைகின்றனர். நல்ல விளைவையும் நல்ல வாழ்வையும் அருளிய இறைவனை வேண்டிப் பணிவதோடு பள்ளு முடிவடைகிறது. இதுவே பள்ளு இலக்கிய நோக்கமாகவும் அமைகிறது.
மேலே கூறிய செய்திகளே பள்ளு இலக்கிய அமைப்பாக விளங்குகின்றன. பெரும்பான்மைப் பள்ளு இலக்கியங்கள் இந்த அமைப்பு முறையிலேதான் அமைந்துள்ளன.
நண்பர்களே! இதுவரை பள்ளு இலக்கியம் பற்றிய பொதுவான செய்திகளைப் பார்த்தோம். இனி முக்கூடற் பள்ளு பற்றிச் சிறப்பு நிலையில் செய்திகளை அறிய இருக்கிறோம்.
பெயர்க் காரணம்
முக்கூடற் பள்ளு என்பது இடத்தால் பெற்ற பெயர் ஆகும். முக்கூடல் இன்று சீவலப்பேரி எனக் குறிக்கப்படுகிறது. பாண்டியன் மாறவர்மன் ஸ்ரீவல்லபன் கி.பி. 12- ஆம் நூற்றாண்டில் தன் பெயரில் ஓர் ஏரி கட்டினான். அது ஸ்ரீவல்லபன் ஏரி எனப்பெயர் பெற்றது. இதனால் இவ்வூர் சீவலப்பேரி என வழங்கப்படுகிறது. இங்கு மூவேந்தர் கல்வெட்டுக்களுடன் கூடிய தொன்மையான திருமால் கோயில் உள்ளது. இங்குக் கோயில் கொண்டிருக்கும் திருமாலை ‘அழகர்’ என்றும் ‘செண்டு அலங்காரர்’ என்றும் முக்கூடற் பள்ளு புகழ்ந்து போற்றுகின்றது.
காலம்
இந்நூலின் காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு எனலாம். காவை வடமலைப் பிள்ளையன், ஆறை அழகப்ப முதலியார், திருமலைக் கொழுந்துப் பிள்ளையன் ஆகிய செல்வர்கள் முக்கூடற் பள்ளில் பாராட்டப்பட்டுள்ளனர். இவர்களின் காலம் கி.பி. 1676 முதல் கி.பி. 1682 வரை ஆகும். எனவே முக்கூடற் பள்ளுவின் காலத்தை 17-ஆம் நூற்றாண்டு என்று கணக்கிடலாம்.
ஆசிரியர்
இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை. புலவர் பெயரை அறிய முடியாவிட்டாலும் அப்புலவர் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழையும் நன்கறிந்த கவிஞர் என்பதைப் பாடல்கள் புலப்படுத்தி உள்ளன.
நூலின் தன்மை
பாத்திரங்கள் நாடகத் தன்மையுடன் அறிமுகப்படுத்தப் படுகின்றன. மேலும் உரையாடல் வழியே கதை நிகழ்த்தப்படுகின்றது. இந்நூல் இயல், இசை, நாடகம் கலந்த முத்தமிழ் நூல் என்று கூறுவது மிகையாகாது.
சிறந்த சந்த நயமும் நாட்டுப்புறவியல் கூறுகளும் வளமான கற்பனைகளும், உவமைகளும் நிறைந்து முக்கூடற் பள்ளு விளங்குகிறது. நண்பர்களே! இந்நூலின் சிறப்புகள் பற்றி இனி அறிய இருக்கிறீர்கள்.
கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும்
கொடிகள் வானம்
படிதர மூடும்
கண்ட பேரண்டம் தண்டலை நாடும்
கனக முன்றில்
அனம் விளையாடும்
விண்ட பூமது வண்டலிட்டு ஓடும்
வெயில் வெய்யோன் பொன்
எயில் வழி தேடும்
அண்டர் நாயகர் செண்டலங் காரர்
அழகர் முக்கூடல்
ஊர் எங்கள் ஊரே
(முக்.பள். 20)
(கொண்டல் = மேகம், அண்டையில் = அருகில், படிதர = பரவ, பேரண்டம் = பறவை, கனகம் = பொன், முன்றில் = முற்றம், அனம் = அன்னம், விண்ட = விழுந்த, வெய்யோன் = ஞாயிறு, அண்டர் = தேவர், செண்டு = கைத்தடி)
முக்கூடல் அழகர் கோயிலைப் பாடிய புலவர் அடுத்து நகர அழகைப் பாடுகின்றார்.
வீதியும் சோலையும்
ஒளி வீசும் சிறந்த மணிவகைகள் பதித்த மாளிகைகளை உடையன வீதிகள். வீதிகளின் நெருக்கம் அதிகமாக இருக்கும். மலர்ச் சோலைகளில் திரியும் வண்டு இனங்கள் தம் ரீங்காரப் பண்ணினைப் பாடும். அப்பாடல் இரும்பு உள்ளங்களையும் உருகச் செய்துவிடும். நால்வகை வருணத்து மக்களும் தம் வேற்றுமையை மறந்து ஒன்றுபட்டு நீதியைப் பெருக்குவர். நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்கள் நீர் முகப்பார் குடங்களில் புகும். புகுந்து குடத்தை நெருக்கும். இளம் எருமை மாடானது கழனிகளிலே உள்ள நீர்ப்பூக்களை மேயும்; அதில் உள்ள மதுவை உட்கொண்டு செருக்கித் திரியும். மேட்டு நிலங்களில் எல்லாம் குளிர்ந்த மலர்கள் இதழ் விரித்து மலர்ந்திருக்கும்.
இவ்வாறாக முக்கூடல் நகரின் இயற்கை வளத்தையும் செயற்கை வளத்தையும் புலவர் பாடியுள்ள திறத்தை அறிந்து மகிழலாம். இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.
சோதி மாமணி வீதி நெருக்கும்
சுரும்பு பாடி
இரும்பும் உருக்கும்
சாதி நால்வளம் நீதி பெருக்கும்
தடத்து வாளை
குடத்தை நெருக்கும்
போதில் மேய்ந்து இளமேதி செருக்கும்
புனம் எல்லாம் அந்தண்
மலர் விண்டு இருக்கும்
(முக்.பள். 24)
(சோதி = ஒளி, சுரும்பு = வண்டு, தடம் = நீர்நிலை/குளம், வாளை = மீன், போது = பூ, மேதி = எருமை, விண்டிருக்கும் = விரிந்திருக்கும்)
முக்கூடல் நகரே அன்றி வடகரை நாடு, தென்கரை நாடு, மருதூர் ஆகியவற்றின் வளங்களையும் சுவையாக இப்பள்ளு விவரிக்கிறது.
மூத்த பள்ளியின் தொல்குலம்
சித்திரா நதியானது முக்கூடலுக்கு வடப் பக்கமாக ஓடுவது. அதற்குத் தென்பக்கமாக ஓடுவது பொருநை ஆறு ஆகும். இவ்விரு நதிகளும் தோன்றி ஓடிவந்து முக்கூடலில் ஒன்று கலந்த காலம் மிகத் தொன்மையான காலம் ஆகும். உலகம் தோன்றிய தொடக்கக் காலத்திலேயே அவை ஒன்று கலந்தன. அப்படி அவை ஒன்று கலந்த காலம் தொட்டு வழி வழியாகத் தோன்றி வரும் மிகப் பழமையான குடும்பத்தில் பிறந்தவள் மூத்தபள்ளி ஆவாள். (முக்.பள். 13)
இளைய பள்ளியின் பெருமை
செஞ்சி நாட்டிலும, கூடலாகிய மதுரை நாட்டிலும் தஞ்சை நாட்டிலும், தம் ஆணையைச் செல்வாக்குடன் செலுத்தும் ஆட்சியாளன் வட மலையப்பப் பிள்ளையன் ஆவான். அவர் ஊரும் இளையபள்ளி ஊரும் ஒன்றே ஆகும். வடமலையப்பப் பிள்ளையன் உலக நன்மைக்காக ஐந்து குளங்களை வெட்ட நினைத்தான். குளம் வெட்ட, சக்கரக்கால் நிலை இட்ட போது (குளம் வெட்டுவதற்குரிய எல்லைகளை அளந்து எல்லைக் கற்கள் பதிப்பித்த போது) அந்த நாளிலேயே இளைய பள்ளி பண்ணையில் வந்து சேர்ந்தாள் என்று இளைய பள்ளியின் பெருமை பேசப்பட்டுள்ளது. (முக்.பள். 15).
பள்ளன்
பள்ளனின் பெருமை சமய உணர்வு அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. முக்கூடல் அழகர் திருவடிகளைக் கருதாத மனத்தை உடையோரும் உள்ளனர். அவர்களின் மனத்தைத் தரிசு நிலம் என்று எண்ணி, கொழுப் பாய்ச்சி உழுபவன் பள்ளன் ஆவான். சுருதிகள் போற்றும் எட்டு எழுத்துகள் (ஓம் நமோ நாராயணாய) வைணவத்தில் முதன்மை பெற்றவை. இந்த எழுத்துகளைப் பெரிய நம்பியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாத துட்டர்களின் காதுகளைப் பாம்புப் புற்றுகள் என்று கருதி வெட்டி எறிபவன் பள்ளன். பெருமானுடைய நூற்று எட்டுத் திருப்பதிகளையும் வலம் செய்து வணங்காதவர் கால்களை வடத்தால் பிணித்து ஏர்க்காலில் சேர்த்துக் கட்டுபவன் பள்ளன். திருவாய்மொழிப் பாசுரங்களைக் கல்லாதவர்களை இருகால் மாடுகளாக ஆக்கி ஏரிலே பூட்டித் ‘தீத்தீ’ என்று கோலால் அடித்து ஓட்டுபவன் பள்ளன். இவ்வாறாகப் பள்ளனின் பெருமை கூறப்பட்டுள்ளது. இதனைப் பின்வரும் பாடல் விளக்கக் காணலாம்:
ஒருபோதும் அழகர் தாளைக்
கருதார் மனத்தை வன்பால்
உழப் பார்க்கும் தரிசுஎன்று
கொழுப் பாய்ச்சுவேன்
சுருதி எண்எழுத்து உண்மைப்
பெரிய நம்பியைக் கேளாத்
துட்டர் செவி புற்று எனவே
கொட்டால் வெட்டுவேன்
பெருமாள் பதிநூற்று எட்டும்
மருவி வலம் செய்யார்தம்
பேய்க்காலை வடம் பூட்டி
ஏர்க்கால் சேர்ப்பேன்
திருவாய் மொழிகல்லாரை
இருகால் மாடுகள் ஆக்கித்
தீத்தீ என்று உழக்கோலால்
சாத்துவேன் ஆண்டே
(முக்.பள். 12)
(போது = பொழுது, தாள் = திருவடி, வன்பால் = வரட்டுநிலம், கொழு = உழும் கருவி, சுருதி = வேதம், கொட்டு = மண்வெட்டுங்கருவி, பதிநூற்றெட்டு = வைணவத் திருத்தலங்கள் 108, வடம் = கயிறு, திருவாய்மொழி = வைணவ இலக்கியம். ஆண்டே = தலைவனே)
மூத்த பள்ளியின் முறையீடு
மழை வெள்ளம் வந்து ஆற்றில் நீர் பெருகி உழவு வேலை தொடங்கும் சூழ்நிலை உருவாயிற்று. இந்நிலையில் பள்ளன் இளைய பள்ளியிடம் காதல் கொண்டு வேலை மறந்து கிடக்கிறான். இதனால் மூத்த பள்ளி பண்ணைக்காரனிடம் முறை இடுகின்றாள்
ஆட்டுக்கிடைக்குக் காவலாகப் போக வேண்டிய பள்ளன் இளையாளைப் பிரிய மனம் இன்றி அவள் குடிசையிலேயே தங்கி விட்டான் ஆண்டே! (ஆண்டே = ஆள்பவர்/தலைவர்) இப்படி அவளுடன் படுத்துக் கிடக்கும் பள்ளன், பண்ணை வேலைகளைக் கெடுத்துவிடும் கள்ளன் ஆவான். அவளுக்காக மடலேறவும் (விரும்பிய பெண்ணை மணந்து கொள்ளப் பழங்காலத்தில் ஆண்கள் மேற்கொண்ட ஒரு வழக்கம் மடலேறுதல்) துணிந்தவன். காமப்பேய் பற்றி இருக்கும் உடலினை உடையவன். அவனுடைய கள்ளத்தனமான செயல்களை இன்னமும் நீர் அறியாது இருக்கின்றீர். இவனைச் சிறையிலே போட்டால்தான் வேலையிலே ஈடுபடுவான் ஆண்டே (முக்.பள். 85, 86)
வரவை மீறிச் செலவு செய்பவனுக்குத் தரித்திரந்தான் வளர்ந்து கொண்டே போகும். கூத்தாட்டக்காரர்களுக்கும் கொட்டுக்காரர்களுக்கும் வாரி வாரி வழங்கி ஊதாரி ஆகிவிட்டான் ஆண்டே! காளை மாடுகள் சிலவற்றை அந்தப் புதியவனுக்குத் தந்து விட்டான். மற்றும் சிலவற்றை வில்லடிப் பாட்டுக்காரனுக்கு அளித்து விட்டான். பரத்தியிடம் (நெய்தல் நிலப்பெண்) வாங்கிய கருவாட்டிற்கும் கள்ளிற்கும் பணம் கொடுப்பதற்காக இருந்த ஐந்து பசு மாடுகளையும் கொண்டுபோய் விற்றுவிட்டான். இப்படிச் செய்வது அவமானம் அல்லவா என்ற எண்ணத்தையும் விட்டுவிட்டான். ஆண்டையே! இவன் இரண்டு கால்களிலும் விலங்கைப் பூட்டி வைப்பீரே! (முக்.பள். 87).
இவன் பலராலும் ஏசப்படுவதற்கு என்றே வந்து பிறந்தானோ? வரவரக் கூச்சம் என்பதையே கூட மறந்துவிட்டான். வயலில் உழுவதைப் பற்றி இவன் கொஞ்சமும் நினைப்பது இல்லை. என்னைத் தேடி ஒரு கனைப்புக் கூடக் கனைப்பது இல்லை. (முக்.பள். 91).
அவளுக்கு மீனைக் கொண்டு போய்க் கொடுப்பான். கருவாட்டு ஊனைக் கூட எனக்குக் காட்டாமல் அவளுக்கு மறைத்துக் கொண்டு போவான். நான் ஏதாவது சொன்னால் வீம்புக்காக என்னைப் போட்டு அடிப்பான். அவள் சொன்னால் பாம்பையும் கூடப் பிடிப்பான். இவ்வாறு மூத்த பள்ளி முறையிடுவதைப் பின்வரும் பாடல் விவரிக்கும்:
மீனைக் கொண்டு அளிப்பான் – கருவாட்டு
ஊனைக் கொண்டு ஒளிப்பான் – நான் சொன்னால்
வீம்புக்கு அடிப்பான் – அவள் சொன்னால்
பாம்பையும் பிடிப்பான்
(முக்.பள். 90)
(ஊன் = தசை)
இவ்வாறாக மூத்த பள்ளி பலவாறாகப் பள்ளன் மேல் முறையீடு செய்கிறாள். இதனால் பண்ணைக்காரன் சினம் கொள்கிறான். திருமுக்கூடல் அழகர் ஏரிப் பற்றுகளிலே நீ ஆடு வைத்துத் தந்த விதமோ? மருதூர்ச் சங்காத்தி (சங்காத்தம் -
நட்பு) வீட்டிலே கிடந்து உறங்கிய உறக்கமோ? நின் நெஞ்சைத் தொட்டுப் பாரடா? என்று சொல்லிப் பண்ணைக்காரன் சினத்தால் கண்கள் சிவந்தவனாகிறான். அங்கே வந்த பள்ளனின் காலிலே மரக்கட்டையைச் (தண்டனைக் கருவி) சேர்த்து அவனைக் காவலில் வைக்கிறான். பின்னர் மூத்த பள்ளி மனம் இரங்கி வேண்டப் பண்ணைக்காரன் பள்ளனை விடுவிக்கிறான்.
சாத்தன், பெரியான், கூத்தன் முதலாகச் சேரியிலுள்ள பள்ளர் எல்லாம் கூடிக் குரவை இட்டு ஏர்மங்கலம் பாடி நாளேர் பூட்டி உழவைத் தொடங்கினார்கள் (முக்.பள். 115). ஏர்பூட்டி உழுது பின்பு அங்குள்ள பள்ளர்களை எல்லாம் கூப்பிட்டான், பள்ளன். எல்லோருடனும் கூடித் தொழுது தெய்வக் கடன்களை எல்லாம் செய்து கழித்தான்.
அதன்பின் விதைகளை எடுத்துத் தெளிக்கத் தொடங்கினான். (முக்.பள். 121) விதைகள் முளைக்கத் தொடங்கின. நாற்றுகள் வளர்ந்தன. முறையாகத் தண்ணீர் விடப்பட்டது. அழகருடைய முக்கூடல் நகரிலே நாற்று நடுவதற்குரிய நாள் குறிக்கப்பட்டது. உழத்திகள் முக்கூடல் அழகரின் திருப்பாதங்களை வணங்கினர். நாற்று முடிகளை எடுத்து நெற்றியிலே வைத்துக் கொண்டு நாலுதிசையும் நோக்கி வாழ்த்திக் கும்பிட்டார்கள். பிறகு வயலில் நடத் தொடங்கினர். (முக்.பள். 125).
பதிந்த நடவுகள் தேறிப் பசுமை நிறம் கொண்டன. பின்பு குருத்து அடர்ந்து நிலத்தில் பரந்து செறிந்தன. கதிர் விட்டு முற்றின. கதிர்கள் எல்லாம் நன்றாக முற்றி விளைந்த செய்தியைப் பண்ணைக்காரனிடம் பள்ளன் சென்று சொன்னான். பின்பு அறுவடைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. நாட்கதிர் கொள்வதற்குத் தெய்வ வழிபாடுகளைச் செய்தனர். உரிய பொருள்களையும் படையலாக இட்டனர். (முக்.பள். 138)
பின்பு கதிர்களைக் கட்டிக் கொண்டு வந்து எருமைகளை விட்டுக் கதிர் அடித்தனர். தூசிகளைத் தூற்றித் தூய நெல்மணிகளைக் குவித்துப் ‘பொலிபொலி’ என்ற மங்கல ஒலியோடு அளந்து கட்டினர் (முக்.பள். 139). எது எதற்கெல்லாம் நெல் அளந்து கொடுக்கப்பட்டது என்பதைப் புலவர் பட்டியல் இட்டு உள்ளார்.
அடியார்க்குச் சோறிடும் தினச்சத்திரம் பெரியநம்பி அய்யங்காருடைய திருமாளிகைச் செலவு ஏழு திருப்பதிகள் காவை வடமலையப்பப் பிள்ளையன் மடம் முதலியவற்றிற்கு நெல் கொடுக்கப்பட்டது. மேலும் ஆடித் திருநாளுக்கு 1000 கோட்டைகள் பங்குனித் திருநாளுக்கு 1000 கோட்டைகள் மண்டகப்படி (திருவிழாக்காலங்களில் செய்யும் செலவு) சாத்து (கடவுளுக்கு மாலை முதலியன அணிவித்தல்) வகைகளுக்கு 1000 கோட்டைகள் நா வாணர்களுக்கும் மறையவர்களுக்கும் (அந்தணர்) 4000 கோட்டைகள் தினப்பூசைக்கு 8000 கோட்டைகள் (முக்.பள். 141-149) இவ்வாறாக வயல் வேளாண்மை முடிந்து நெல் பங்கிட்ட முறை விளக்கப்பட்டுள்ளது.
மழை வழிபாடு
அழகருடைய நல்ல நாட்டிலே மழை வளம் சிறக்க வேண்டும் என்று மன்னர்கள் வழிபாடு நடத்துகின்றனர்; மழை வரம் வேண்டுகின்றனர்; சேரியிலே குரவை ஒலிக்கத் தெய்வத்தைப் போற்றினர் (முக்.பள். 32)
பூலா உடையாருக்குப் பொங்கல் இட்டுத் தேங்காயும் கரும்பும் நிறைய படைத்தனர். குமுக்கா உடையார் அய்யனுக்குக் குங்குமத்தையும் சந்தனத்தையும் கலந்து சாத்திப் போற்றினர். கரையடிச் சாத்தானுக்குக் காப்புக் கட்டி ஏழு செங்கிடாய்களை வெட்டிப் பலியிட்டனர். புலியூர் உடையார் ஏற்றுக் கொள்ளுமாறு சேவலைச் சாத்திர முறைப்படி பலியிட்டனர். சாராயத்தையும், பனையில் இருந்து இறக்கும் கள்ளையும் வடக்குவாசல் செல்லி உண்ணுமாறு வைத்தனர். பள்ளர்கள் எல்லோரும் ஒன்று கூடினர். பண் பாடிப் போற்றினர். கூத்தாடித் தொழுதனர். அழகரின் திருநாமங்களை ஏத்தினர். (முக்.பள். 33, 34) (பூலா உடையார், கரையடிச் சாத்தான், புலியூர் உடையார், செல்லி – நாட்டுப்புறத் தெய்வங்கள்)
மழை அறிகுறி
பள்ளர்கள் அனைவரும் மழை வேண்டித் தெய்வங்களை வழிபட மழைமேகம் சூழ்ந்தது. மழைக் குறி தென்பட்டது. எல்லாத் திசைகளில்இருந்தும் மேகங்கள் வரத் தொடங்கின.
நண்பர்களே! இந்த மழைக் குறி பற்றிப் புலவர் பாடிய பாடல் சிறந்த இசைநயமும் அழகுணர்வும் கொண்டது. அறிவியல் செய்தி பொதிந்தது. நாளைய தினம் ஆற்றிலே வெள்ளம் வர இருப்பதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. தென்மேற்குத் திசையிலே மலையாள மின்னல் மின்னிக் கொண்டுள்ளது. தென் கிழக்குத் திசையிலே ஈழத்து மின்னல் மின்னிக் கொண்டுள்ளது. நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் சுற்றியவாறு காற்று அடிக்கிறது. கிணற்றிலே உள்ள சொறித்தவளைகள் கூப்பாடு போடுகின்றன. நண்டுகள் தம் வளைகளுள் மழை நீர் புகுந்து விடாதபடி வாயில்களைச் சேற்றினால் அடைக்கின்றன. மழை நீரைத் தேடிக் கோடி வானம்பாடிகள் அங்கும் இங்கும் பறக்கின்றன. இவ்வாறாக மழை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனை விவரிக்கும் பாடல் வருமாறு:
ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்றுதே குறி – மலை
யாளமின்னல் ஈழமின்னல்
சூழ மின்னுதே
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக்
காற்று அடிக்குதே – கேணி
நீர்ப்படு சொறித் தவளை
கூப்பிடுகுதே
சேற்று நண்டு சேற்றில் வளை
ஏற்று அடைக்குதே – மழை
தேடி ஒருகோடி வானம்
பாடி யாடுதே
போற்றுதிரு மால்அழகர்க்கு
ஏற்றமாம் பண்ணைச் – சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
துள்ளிக் கொள்வோமே
(முக்.பள். 30)
விதை வகைகள்
முக்கூடற்பள்ளு உழவுத் தொழிலை மையமாக வைத்துப் பாடப்பட்டது. உழவுத் தொழிலுக்கு அடிப்படையான வித்து (விதை), மாடு, ஏர் ஆகியன பற்றிய விரிவான விளக்கங்களும் அவற்றின் வகைகளும் இங்கே கூறப்பட்டுள்ளன. இவை பழங்கால வேளாண்மைக் கலைச் சொல்லாக விளங்குவதை அறிய முடிகிறது. சீரகச் சம்பா, நெடுமூக்கன், மூங்கிற் சம்பா, கருங்குறுவை, புனுகுச் சம்பா, பூம்பாளை முதலிய இருபதுக்கும் மேற்பட்ட நெல்விதை வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன (முக்.பள்.109).
மாட்டு வகைகள்
மேலே கூறப்பெற்ற பெயர்கள் நெல்வகையின் பெயர்களாகும். இதைப் போல் மாட்டுவகைகளுக்கும் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. குடைக் கொம்பன், குத்துக் குளம்பன், கூடு கொம்பன், மயிலை, மட்டைக் கொம்பன், கருப்பன், மஞ்சள்வாலன், வெள்ளைக்காளை முதலிய இருபதுக்கும் மேலான பல்வகை மாடுகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன (முக்.பள். 110). இப்பெயர்கள் மாட்டு வகைகளைக் குறிக்கும்.
இதனைக் கேட்ட இளைய பள்ளி, ”பள்ளியரிடம் முறையிட்டு என்னைப் பழித்து என்னடி பேச்சு முக்கூடற்பள்ளி, உன் பழைய செல்வம் எதையாவது எனக்குக் கொடுத்தானோ? தொண்டை கட்டிப் போகும்படி கூவாதேடி” என்று திருப்பித் திட்டுகிறாள் (முக்.பள். 153).
நாவி (புனுகுபூனை) என்றாய்! பூனை என்றாய்! மருதூர்ப்பள்ளி! இந்த நாவி நான்தானடி; பூனை மட்டுமல்ல, மூளி (அழகில்லாத / குறை உடைய) நாயும் நீதானடி.
சாகத்துடிப்பவள் போல் ஆட்டம் போட வேண்டாம் முக்கூடற் பள்ளி! மிஞ்சிப் பேசில் நெஞ்சை யறுப்பேன் அஞ்சிப் பேசடி!
மருதூர்ப் பள்ளி! உன்னைப் போல மந்திரமும் தந்திரமும் எனக்கு வகையாக வந்ததானால் பள்ளன் எனக்கு வசமாக மாட்டானோ?
சந்தியில் கிடக்கும் மாங்கொட்டையடி நீ முக்கூடற் பள்ளி! உன்னைப் போலச் சாரங்கெட்ட மருதூர்க்காரி என்றோ என்னையும் நினைத்தாய்? (முக்.பள். 160)
ஏசலில் சிவன், திருமால் ஆகியோரின் திருவிளையாடல், அவதாரச் செயல்கள் குறிப்பிடப்படுகின்றன.
அவதார நிகழ்ச்சிகள் குறிக்கப்படுவதில் உள்ள ஒரு செய்தியை இங்கே குறிப்பிட வேண்டும். ஒரு அவதாரத்தில் உள்ள நிகழ்ச்சியை வேறொரு அவதாரத்தின் பெயரால் சுட்டப்படுவதைக் கூறலாம். உதாரணமாக அகலிகை நிகழ்ச்சி இராமாவதாரத்தில் வருகிறது. ஆனால் பாடல் அகலிகைக்கு விமோசனம் கொடுத்தவன் கண்ணன் என்று குறிப்பிடுகிறது.
சாதிக்கிற தந்திரம் எல்லாம் உனக்குத்தான் வரும் மருதூர்ப்பள்ளி! நரிகளைப் பரிகளாக மாற்றிச் சாதித்தவன் உங்கள் சிவபெருமான் தானடி; இப்படிப் பேசிச் சாதிக்க வருகிறாய் முக்கூடற் பள்ளி! கல்லையும் பெண்ணாகச் சாதித்தவன் உங்கள் கண்ணன் தானடி (முக்.பள். 162).
பெண் ஒருத்திக்காக ஆசைப்பட்டுப் பொன் மயமான பனிமலை ஏறிப் போனவன் உங்கள் சிவபெருமான் அல்லோடி என்றும்.
காதல் கொண்டு தம்பியோடு சீதை பொருட்டாகக் கடல் கடந்து போனான் உங்கள் கண்ணன் அல்லோடி என்றும் பள்ளியர்கள் பேசுவதைக் கீழ்வரும் பாடல் காட்டுகிறது.
மாதொருத்திக்கு ஆசைப்பட்டுப்
பொன்னின் மாயமாம் – பனி
மலையேறிப் போனான் உங்கள்
மத்தன் அல்லோடி
காதலித்துத் தம்பியுடன்
சீதை பொருட்டால் – அன்று
கடலேறிப் போனான் உங்கள்
கண்ணன் அல்லோடி
(முக்.பள். 165)
(மத்தன் = சிவன்)
அடுத்து வருவது பெரியபுராணத்தில் வரும் செய்தி. சுந்தரமூர்த்தி நாயனார் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிவபெருமான் ஒரு முதியவர் வடிவில் சென்று, திருமணத்தைத் தடுத்தார்; சுந்தரர் தமக்கு அடிமை என்று வாதிட்டார். இதனால் கோபமுற்ற சுந்தரர் அந்த முதியவரைப் பார்த்துப் ‘பித்தரோ நீர்!’ என்று கேட்டு ஏசுகிறார். (தடுத்தாட்கொண்டபுராணம்) இந்தச் செய்தியையே மூத்த பள்ளி இங்கே குறிப்பிடுகிறாள். சுந்தரன் திருமணத்திலே வல்வழக்குப் பேசிச் சென்று அவன் வாயால் வையக் கேட்டு நின்றான் உங்கள் ஐயன் (சிவன்) அல்லோடி.
சிசுபாலன் புலிபோல எழுந்து நின்று வையவே சபை நடுவிலே ஏழை போல ஒடுங்கி நின்றான் உங்கள் நீலவண்ணன் (கண்ணன்) அல்லோடி!
வலிய வழக்குப் பேசிச் சுந்தரன் வாயால் அன்று
வையக் கேட்டு நின்றான் உங்கள் ஐயன்
அல்லோடி
புலிபோல் எழுந்து சிசுபாலன் வையவே – ஏழை
போல நின்றான் உங்கள் நெடுநீலன் அல்லோடி
(முக்.பள். 167)
(சிசுபாலன் = பாரதத்தில் வரும் ஒரு பாத்திரம், நீலன் = திருமால்)
இடுப்பிலே சுற்றிக் கட்டுவதற்கு நாலுமுழத் துண்டு கூட இல்லாமல் புலித் தோலை உடுத்திக் கொண்டான் உங்கள் சோதி (சிவன்) அல்லோடி. கற்றையாகச் சடையைக் கட்டி இடுப்பில் மர உரியையும் (ஆடை) கட்டிக் கொண்டான் சங்கு கையனாகிய உங்கள் திருமால் அல்லோடி
சுற்றிக் கட்ட நாலுமுழத் துண்டும் இல்லாமல் – புலித்
தோலை உடுத்தான் உங்கள் சோதி அல்லோடி
கற்றைச் சடை கட்டி மரஉரியும் சேலைதான் – பண்டு
கட்டிக் கொண்டான் உங்கள் சங்குக் கையன்
அல்லோடி
(முக்.பள். 169)
(சோதி = சிவன், சங்குக் கையன் = திருமால்)
ஏறிச் செல்வதற்குத் தக்க ஒரு வாகனமும் இல்லாமல் மாட்டின்மேல் ஏறித் திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி! வீறாப்பான பேச்சு என்னடி? அந்த மாடு கூட இல்லாமல் போனதால்தான் பறவை (கருடன்) மீது ஏறிக் கொண்டான் உங்கள் கீதன் அல்லோடி!
ஏறவொரு வாகனமும் இல்லாமையினால் – மாட்டில்
ஏறியே திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி
வீறு சொன்னது என்ன மாடுதானும் இல்லாமல்-பட்சி
மீதில் ஏறிக்கொண்டான் உங்கள் கீதன் அல்லோடி
(முக்.பள். 171)
(பட்சி = பறவை, கீதன் = திருமால்)
இவ்வாறு பேசிக்கொண்டே வந்த இருவரின் ஆத்திரமும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டே வந்தது. அவர்கள் பேச்சிலே ஒத்துப் போகும் எண்ணமும் பிறந்தது.
”மருதூர்ப் பள்ளி என்னதான் கோபப்பட்டாலும் சீர் அழியச் சொல்லலாமோ?” என்று மூத்தபள்ளி கேட்க இளையபள்ளி ”முதலில் வைதவரை வாழ்த்தினவர் உலகத்தில் உண்டோ” என்று வினவிச் சமாதானம் ஆனாள் (முக்.பள். 173)
”நீயும் பொறு. நானும் பொறுத்தேன். நம் உறவினர்கள் சூழ்ந்திருக்க நாம் இருவருமே ஒற்றுமையாகக் கூடி வாழலாம்” என்று கூறிய பள்ளியர் முக்கூடல் அழகர் பாதங்களை வாழ்த்திப் பாடுகின்றனர். சமாதானம் ஆகி ஒன்று சேர்கின்றனர்.
இவ்வாறாகப் பள்ளியர் சண்டை முடிவுக்கு வருவதோடு முக்கூடற் பள்ளு நிறைவு பெறுகின்றது. சைவ, வைணவப் பூசல் அந்தக் காலத்தில் இருந்ததை ஏசல் வெளிப்படுத்துகிறது. என்றாலும் இரு சமயங்களின் பிணைப்பை நிறைவாக வலியுறுத்தி முழுமை பெறுகிறது. பள்ளியர் ஏசுவது என்பது திட்டிக் கொள்வதாக ஆகாது. ஏசுதல் என்ற உத்தி மூலம் சமயப் பெருமையைக் கூறுவதே நோக்கமாகும்.
சிலேடை
விதை வகைகள் மாட்டுவகைகள் முதலியவற்றைக் கூறும் புலவர் சிலேடை நயம் தோன்றுமாறு பாடலை அமைத்துள்ளார். ஒரு சில சான்றுகளைப் பார்ப்போம்.
ஆயிரம் மல்லியன்
மாடுகள் பற்றிப் பண்ணைக்காரனிடம் கூறிவரும் பள்ளன் ஆயிரம் மல்லியன் எனும் மாடு மேல்திசை நோக்கி ஓடிப்போனது; அது எங்குப் போயிற்றோ இன்னமும் திரும்பி வரக்காணோம் என்று கூறுகிறான். இக்கூற்றில் ஒரு சிலேடை மறைந்துள்ளது. ஆயிரமல்லியன் என்பது ஆயிரமல்லி என்ற ஊரில் வாங்கிய மாடு என்று பொருள்படும். இதனைப் பிரித்து ஆயிரம் அல்லியன் என்று பொருள் காணமுடியும். ஆயிரம் அல்லி மலர்களை மலரச் செய்த சந்திரன் என்று ஒரு பொருள் உண்டு. ஆயிரம் இதழ்களை உடைய தாமரையை மலரச் செய்த சூரியன் எனவும் ஒரு பொருள் உண்டு. இவ்வாறு மலரை மலரச் செய்தவன் மேல் திசையில் மறைந்தான் என்பது இத்தொடரின் சிலேடைநயம் ஆகும்.(முக்.பள்.70).
‘ஒற்றைக் கொம்பன் எனும் காளையைத் தாண்டவராயன் என்பவன் உள்ளூர்க் கோயிலில் அடைத்து வைத்துவிட்டான் என்று ஒற்றைக் கொம்பன் காளையைப் பற்றிப் பள்ளன் கூறினான். இத்தொடரிலும் ஒரு சிலேடை உள்ளது. ஒற்றைக் கொம்பனாகிய யானைமுகனைத் (விநாயகன்) தாண்டவராயனாகிய சிவபெருமான் (நடராசன்) தன்னோடு கோயிலிலேயே வைத்துக் கொண்டான் என்பது சிலேடை ஆகும். (முக்.பள்.71).
இவ்வாறு புலவர் சிலேடைநயம் தோன்றுமாறு பாடல்களை அமைத்தவிதம் படித்து இன்பம் அடையத்தக்கது.
பள்ளு என்றால் என்ன என்பது பற்றியும் பள்ளுவின் தோற்றம் பற்றியும் செய்திகளை அறிந்து கொண்டோம்.
பள்ளு இலக்கிய அமைப்பைப் புரிந்து கொண்டோம்.
முக்கூடற் பள்ளு பற்றிய பொதுவான செய்திகளையும் இலக்கியச் சிறப்புகளையும் அறிந்து கொண்டோம்.
பள்ளர்களின் வாழ்க்கை முறை, வேளாண் தொழில், சமய நிலை பற்றிய செய்திகளை முக்கூடற் பள்ளு வழியே அறிந்து கொண்டோம்.
பாடம் -4
இந்த இலக்கியங்கள் உலா என்ற பெயரில் வழங்கி வந்தாலும் வேறு சில பெயர்களும் இவற்றிற்கு உண்டு. வலம் வருதல், ஊர்வலம் வருதல், பவனி, பவனி உலா, உலாப்புறம், உலா மாலை என்று இவ்வுலா இலக்கியத்திற்குப் பல பெயர்கள் உள்ளன.
நண்பர்களே! சுவையும் நயமும் நிறைந்த இத்தகைய தமிழ் இலக்கியங்களுள் ஒன்றாகிய உலா இலக்கியம் பற்றி இப்பாடத்தில் அறிய இருக்கிறோம். உலா பற்றிய செய்திகள் இங்குத் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
இறைவனின் திருமேனியோ, மன்னனோ உலா வருவது பழங்காலத்து மரபு. யானை, குதிரை, தேர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் ஏறி உலாவருவது உண்டு. உடன் வருவோர் அவர்களைச் சூழ்ந்து வருவர். இசைக்கருவிகள் முழங்கும். இவ்வாறாக வீதியில் பவனி வருவதை உலா வருதல் என்று கூறுவர். உலா வரும் தலைவன் மீது ஏழு பருவ மகளிர் காதல் கொண்டு வாடுவர். அவர்தம் வாட்டத்தைப் புலவர்கள் கற்பனை நயத்தோடு பாடுவர். பாட்டுடைத்தலைவரான இறைவன் அல்லது மன்னனின் பெருமை பேசப்படும்.
தொல்காப்பியத்தில் உலா இலக்கணம்
உலாவிற்கான இலக்கணம் தொல்காப்பியத்திலேயே அமைந்துள்ளது.
ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
வழக்கொடு சிவணிய வகைமையான
(தொல். பொருள். புறம். 25)
இந்நூற்பாவிற்குப் பழைய உரையாசிரியர் இளம்பூரணர் உரை எழுதி உள்ளார். அது வருமாறு:
நகர வீதிகளில் விருப்பத்திற்குரியவர்கள் உலா வருவது உண்டு. அவ்வாறு வரும் தலைவர்களைக் கண்டு மகளிர் காதல் கொள்வதும் உண்டு. ஆண் மகனுடைய பண்புகளை விரித்துக் கூறுவது பாடாண் திணை எனப்படும். இந்தப் பாடாண் திணையில் பெண்கள் தலைவன் மேல் கொள்ளும் காதலைப் பாடுவதும் அடங்கும். இக்கருத்து மேலே கூறப்பெற்ற நூற்பாவால் பெறப்படுகிறது. இக்கருத்தே பிற்காலத்தில் ‘உலா’ தனி இலக்கியமாக உருவாவதற்குக் காரணமாகியது.
பாட்டியல் நூல்களில் உலா இலக்கணம்
அவிநயம், பன்னிரு பாட்டியல் முதலான பாட்டியல் நூல்கள் உலா பற்றி விரிவான விளக்கங்களைக் கூறி உள்ளன. பன்னிரு பாட்டியல் உலா இலக்கியப் பாடுபொருளை இரண்டு வகையாகப் பிரித்துள்ளது.
முதல் நிலை
முதல் நிலைப் பகுதியில் பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் கூறப்படும். பாட்டுடைத் தலைவனின் குடிச்சிறப்பு – நீதிமுறை – கொடைப்பண்பு – உலாச் செல்ல நீராடுதல் – நல்ல அணிகளை அணிதல் – நகர் முழுவதும் மக்கள் வரவேற்றல் – நகர வீதிகளில் களிறு முதலியவற்றின் மீது ஏறி வருதல் – முதலிய செய்திகள் இப்பகுதியில் பாடப் பெறும்.
பின் எழு நிலை
பாட்டுடைத் தலைவன் உலா வரும்போது பெண்டிர் அவன் மீது காதல் கொண்டு வாடுவர். இப்பகுதியை விவரிப்பது பின் எழுநிலை ஆகும். காதல் கொள்ளும் மகளிரை ஏழுவகையாகப் பாட்டியல் நூல்கள் பிரித்து உள்ளன.
1) பேதை - வயது ஐந்து முதல் ஏழு வரை
2) பெதும்பை - வயது எட்டு முதல் பதினொன்று வரை
3) மங்கை - வயது பன்னிரண்டு முதல் பதின்மூன்று வரை
4) மடந்தை - வயது பதினான்கு முதல் பத்தொன்பது வரை
5) அரிவை - வயது இருபது முதல் இருபத்தைந்து வரை
6) தெரிவை – வயது இருபத்தாறு முதல் முப்பத்தொன்று வரை
7) பேரிளம் பெண் - வயது முப்பத்திரண்டு முதல் நாற்பது வரை
பாட்டுடைத் தலைவனைக் கண்டு விரும்புவதாகப் பாடும் எழுபருவ மகளிர்க்கு உரிய விளையாடல்களைப் பன்னிரு பாட்டியல் பட்டியல் இட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் வரும்
மங்கல அணி எழுந்தது
தலைக்கோல் வலம் வந்தது
முதலிய தொடர்கள் உலாவின் கூறுகளாக விளங்குகின்றன. மங்கல அணி உலாச் சென்றபோதும் தலைக்கோல் உலாச் சென்றபோதும் வெண்குடை முதலிய சின்னங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
திருநாவுக்கரசர் தாம் வாழ்ந்த காலத்தில் திருவாரூரில் நடைபெற்ற திருவாதிரைத் திருவிழாவைப் பற்றிக் கூறியுள்ளார். இறைவன் திருத்தேரில் ஏறித் திருத்தொண்டர் குழாம் புடைசூழ உலாச் சென்றதை வருணித்துள்ளார். (தேவா. 4.21.8)
உதயணனுக்கும் வாசவதத்தைக்கும் திருமணம் நிகழும் முன்பு உலாச் செல்கின்றனர். இதனைப் பெருங்கதை கூறுகின்றது. உதயணன் வீதி உலா வருவதை நகர் வலம் கண்டது எனும் பகுதி சிறப்புடன் விளக்கி உள்ளது. சீவக சிந்தாமணியில் சீவகன் உலா குறிக்கப்பட்டுள்ளது. வேடர்கள் கவர்ந்து சென்ற ஆநிரைகளைச் (பசு) சீவகன் மீட்டு வருகிறான். மீட்டு வந்த வெற்றிப் பெருமிதத்தோடு வீதி உலாச் செல்கிறான். சீதையை மணம் செய்து கொள்ளும் முன்பு இராமன் மிதிலை வீதிகளில் உலா வருகின்றான். இதனை உலாவியற் படலம் விவரிக்கிறது.
முத்தொள்ளாயிரம் போன்ற தொகுப்பு நூல்களிலும் உலாச் செய்திகள் இடம் பெற்று உள்ளன. மூவேந்தர்களாகிய சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் மகளிர்க்குக் காம நோய் உண்டாக வீதி உலாச் செல்கின்றனர். இதனை முத்தொள்ளாயிரம் கூறுகின்றது.
பல்லவர் காலத்தில்தான் முதல் உலா படைக்கப்பட்டுள்ளது. சேரமான் பெருமாள் நாயனார் படைத்த திருக்கயிலாய ஞான உலாவே உலா நூல்களில் காலத்தால் முந்தியது. இதனை ஆதி உலா என்றும் கூறுவர். இறைவன் முன்னர் அரங்கேற்றப்பட்ட சிறப்பினை உடையதால் இது ஞான உலா என்றும் பெயர் பெற்றது.
சில உலா நூல்கள் வருமாறு:
திருக்கயிலாய ஞான உலா
சேரமான் பெருமாள் நாயனார் சிவபெருமான் மீது பாடியது இந்த உலா. இதுவே முழுமை பெற்ற முதல் உலா நூல் என்பர். திருமாலும் பிரம்மனும் காணமுடியாத பரம்பொருள் ஆகிய சிவபெருமானின் காட்சியைத் தேவர்கள் காண விரும்பினர். இறைவனும் சிறந்த அணிகளை அணிந்த சுந்தரத் (அழகான) தோற்றத்துடன் திருவீதியில் உலாச் சென்றார். இந்நிகழ்ச்சியை விவரிப்பதே இந்த உலா.
ஆளுடைப் பிள்ளையார் திருவுலாமாலை
நம்பியாண்டார் நம்பி இயற்றியது. திருஞானசம்பந்தர் பாட்டுடைத்தலைவர். இவ்வுலாவில் ஏழு பருவ மகளிரின் செயல்கள் தனித்தனியே கூறப் பெறாமல், ஒன்றாகக் கூறப் பெற்றுள்ளன.
திருவாரூர் உலா
அந்தகக் கவி வீரராகவ முதலியார் இயற்றியது. திருவாரூர் இறைவனைப் பற்றியது.
திருக்கீழ்வேளூர் உலா
இந்த நூலையும் அந்தகக்கவி வீரராக முதலியாரே இயற்றி உள்ளார். இவ்வுலா வேளூர் இறைவன் கேடிலியப்பர் மீது பாடப்பட்டது.
தமிழன் உலா
இநநூலை இராசை. கி. அரங்கசாமி இயற்றி உள்ளார். தமிழர் வரலாற்று நாயகர்களின் பரம்பரையில் வந்த தமிழன் ஒருவன் உலா வருவதை இந்த உலா விவரிக்கிறது. தமிழரின் வரலாறு, பண்பாடு, மொழி முதலியவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடாக இத்தலைவனை ஆசிரியர் படைத்து உள்ளார்.
1) விக்கிரம சோழன் உலா
2) குலோத்துங்க சோழன் உலா
3) இராசராச சோழன் உலா
இம்மூன்றும் பாட்டன், தந்தை, மகன் ஆகிய மூவரையும் பாடுவன. மூவரைப் பாடுவதால் மூவர் உலா என்ற பெயரையும் பெற்றது.
ஒட்டக்கூத்தர் இராசராசசோழன் உலாவைப் பாடி அரங்கேற்றம் செய்தார். ஒவ்வொரு கண்ணியும் அரங்கேறும் போது ஓராயிரம் பொன் மன்னன் வழங்கி உள்ளான். இக்கொடையைச் சங்கர சோழன் உலாவும் தமிழ் விடு தூதும் விவரித்துள்ளன.
ஒட்டக்கூத்தர், விக்கிரமசோழன் காலத்தில் அவைப் புலவராக இருந்துள்ளார். தொடர்ந்து அவன் மகன் குலோத்துங்கன் காலத்திலும் அவன் மகன் இராசராசன் காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார். இம்மூவர் காலத்தைக் கி.பி. 1118-1173 வரை வரையறை செய்வர்.
இவன் காலத்தில் கும்பகோணத்திற்கு அடுத்துள்ள தாராசுரத்தில் சிவன் கோயில் ஒன்று கட்டப்பட்டது. இக்கோயில் சிற்பங்களால் புகழ் பெற்றுத் திகழ்கின்றது. தாராசுரம் சோழர் காலத்தில் இராஜராஜபுரம் என்று அழைக்கப்படடது. இக்கோயிலில் நாயன்மார் அறுபத்து மூவர் உருவங்கள் சிற்பங்களாக உள்ளன. ஒட்டக்கூத்தர் சிலையும் உள்ளது.
1) பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் பற்றிய செய்திகள் முதலில் கூறப்படுகின்றன.
2) தலைவன் உலாப் போகும் காலத்தில் ஏழு பருவ மகளிரின் காதல் செயல்கள் அடுத்து இடம் பெறுகின்றன.
நண்பர்களே! இவற்றைப் பற்றி விரிவாக நாம் பார்ப்போம்.
பாட்டுடைத் தலைவனின் முன்னோர்கள்
இந்த உலாவில் இராசராசசோழனுடைய முன்னோர்களின் புகழ் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றை இனிக் காண்போம்.
ஒரு புறாவின் துன்பத்தைப் போக்குவதற்காகத் தன் தசையை அரிந்து தராசுத் தட்டில் இட்டவன் இவனது முன்னோன் ஆவான்.
வானோர் பகைவனாகிய சம்பரன் என்ற அசுரனை அழித்துத் தேவர்களைக் காத்தவன் இவன் முன்னோன்.
மேல் கடலும் கீழ்க்கடலும் காவிரியால் ஒன்றாகிக் கலக்குமாறு இடையில் உள்ள மலைகளை எல்லாம் வெட்டியவன்.
ஆதிசேடனுடைய மகளாகிய நாகர் கன்னியை மணம் புரிந்து கொண்டவன்.
தெய்வத்தன்மை வாய்ந்தது மேருமலை. இம்மலையில் புலிக்கொடி பறக்குமாறு செய்தவன்.
பொய்கையார் எனும் புலவர் களவழி நாற்பது எனும் நூலைப் பாடினார். அந்நூலுக்காகச் சேரன் ஒருவனின் கால் விலங்கை நீக்கியவன்.
போர்க்களம் சென்று போர்புரிந்து கொண்டே இருந்ததால் 96 விழுப்புண்களைத் தன் உடம்பில் பெற்றவன்.
மதயானைகளால் பதினெட்டுப் பாலை நிலங்களையும் அழித்தவன். உதகை என்ற ஊரினை எரித்தவன்.
கங்கை, நருமதை, கௌதமி, காவிரி முதலிய ஆறுகளுக்குச் சென்று தன் மனைவியுடன் நீராடியவன்.
கொப்பம் எனும் ஊரில் பெரும்போர் நிகழ்ந்தது. யானைகள் பலவற்றைப் பேய்கள் உண்டு மகிழ்ந்தன. இதனால் ஒப்பற்ற பரணி நூலைப் பெற்றவன்.
நாட்டில் உண்டாகிய கலகத்தை நீக்கியவன்; சுங்க வரியைத் தவிர்த்தவன், வறுமையை விரட்டியவன்.
தில்லைக் கோயிலைப் பொன்னால் வேய்ந்தவன். தில்லையின் சிற்றம்பலம் – பேரம்பலம் – மண்டபங்கள் – கோபுரங்கள் முதலியவற்றைப் பொன்னால் செய்தவன்.
தில்லைக் கோயிலில் இருந்த திருமால் மூர்த்தியை எடுத்துக் கடலில் மூழ்கச் செய்தவன்.
(இராச.உலா. கண்ணி. 1-67)
இவ்வாறாக இராசராசசோழனின் முன்னோர்களின் புகழ்மிக்க செயல்கள் கூறப்பட்டுள்ளன. இத்தகு புகழ்மிக்க குலத்தில் தோன்றியவன் இராசராசன் என்று ஒட்டக்கூத்தர் விவரிக்கிறார்.
பாட்டுடைத் தலைவன் சிறப்புகள்
பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் அடுத்துக் கூறப்பட்டுள்ளன.
மங்கலமான இராசராசன் என்ற பெயரை உடையவன். சூரிய குலத்தில் தோன்றியவன். திருமால் பத்து அவதாரங்களைச் செய்தார். என்றாலும் தேவர் பகை முழுவதையும் தொலைக்க முடியவில்லை. எனவே எஞ்சிய தேவர் பகையைத் தொலைக்கச் சூரிய குலத்தில் இராசராசனாகப் பிறந்துள்ளான் என்பர்.
மனிதகுலத்தில் பிறந்து மேருமலை போன்ற உயர்ந்த புகழினை உடையவன். ஏழ்ஏழ் பதினான்கு உலகையும் வென்று தன் கீழ் வருமாறு செய்தவன். சக்கரப் படையை உடைய கண்ணன். சூரியனையும் குளிர வைக்கும் குளிர்ச்சி பொருந்திய வெண்கொற்றக் குடையை உடையவன். சூரிய குலத்திற்குத் திலகம் போன்றவன். இதனைப் பின்வரும் பாடல்அடி விவரிக்கிறது.
திருமகன் சீராசராசன் கதிரோன்
மருமகனாகி மறித்தும் திருநெடுமால்
ஆதிப் பிறவி அனைத்தினும் உம்பர்க்குப்
பாதிப் பகை கடிந்து பாதிக்கு மேதினியில்
செந்தாமரையாள் திருமார்பில் வீற்றிருக்க
வந்தான் மனு வம்ச மாமேரு.
(இராச.உலா.கண்ணி. 67-72)
(கதிரோன் = சூரியன், நெடுமால் = திருமால், உம்பர் = தேவர், மேதினி = உலகு, செந்தாமரையாள் = திருமகள்)
இவ்வாறாகப் பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் இவ்வுலா நூலில் கூறப் பெற்று உள்ளன.
மக்களின் மகிழ்வான பேச்சு
பாட்டுடைத் தலைவன் வீதியில் உலாப் போகிறான். அவனைக் காண ஆயிரக்கணக்கானோர் வீதியில் கூடி உள்ளனர். தலைவனின் அழகைப் பார்க்கின்றனர். அவனைப் பாராட்டிப் பேசுகின்றனர்.
நங்கையீரே! இந்திரனது வச்சிரப்படையை (ஒரு போர்க்கருவி) அழித்த வில்லின் அழகைப் பாருங்கள். பெரிய கடலானது வற்றுமாறு அம்பு விடுத்த வில்லினைப் பாருங்கள்.. சோழ நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழக் காவிரி ஆறு செல்வதற்கு மலைகளை வெட்டி வழிவிட்ட வாள் ஆயுதத்தைப் பாருங்கள். சந்திரனை வென்று மேகத்தை அகற்றித் தூங்கெயில் எனும் மதிலை அழித்த வாள் படையைப் பாருங்கள் என்று மக்கள் தம்முள் பேசிக் கொள்கின்றனர்.
இதனைத்
தற்கோடி ஓரிரண்டு கொண்டு சதகோடி
கற்கோடி சென்ற சிலைகாணீர் – முற்கோலி
வட்ட மகோததி வேவ ஒருவாளி
விட்ட திருக்கொற்ற வில்காணீர் – வெட்டிச்
சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு – வாழ
வழிவிட்ட வாள்காண வாரீர் – ஒழிய
மதியெறிந்து வல்லேற்று வான்எறிந்து தூங்கும்
பதியெறிந்த கொற்றவாள் பாரீர்
(இராச.உலா. 165-172)
(கோடி = முனை; வில்முனை, சதகோடி = நூறு முனைகளுடைய வச்சிராயுதம், மகோததி = கடல், சிலை = வில், வாளி = அம்பு, தூங்கும்பதி = தூங்கும் எயில்(மதில்), சோணாடு = சோழநாடு)
என்று புலவர் பாடுகின்றார்.
சேரர்களின் வஞ்சி நகரத்தை வென்று திறையாகப் பெற்ற முரசத்தைப் பாருங்கள். போரில் தோற்ற மன்னர்கள் பின்னர்த் தம் நாட்டைப் பெற்றுக் கொண்டனர். இதற்காக அம்மன்னர்கள் தலையில் மண் சுமந்து காவிரி அணையைக் கட்டினர். அவ்வாறு கட்டச் செய்த போர் முரசத்தைப் பாருங்கள். இருபத்தொரு தலைமுறை அரசர்களைக் கொன்று அவர் சூடிய முடிகளைக் கொண்ட மகுடத்தைக் காணுங்கள் என்று மக்கள் பேசுகின்றனர். இதனைப் பின்வரும் அடிகள் விவரிக்கும்:
………………………………………………………உதியர்
இடப்புண்ட பேர்இஞ்சி வஞ்சியில் இட்ட
கடப்ப முதுமுரசம் காணீர் – கொடுப்பத்
தரை கொண்ட வேற்று அரசர் தம்சென்னிப் பொன்னிக்
கரை கண்ட போர்முரசம் காணீர்.
(இராச.உலா. 173-177)
(இஞ்சி = மதில், வஞ்சி = சேரர் நகர், முது = பழைய / தொன்மையான, சென்னி = தலை, பொன்னி = காவிரி)
இவ்வாறாக மக்கள் பாட்டுடைத் தலைவனைப் பலவாறு புகழ்ந்து பேசுவதாகப் புலவர் பாடி உள்ளார். இப்புகழ் மொழிகள் பாட்டுடைத் தலைவனின் முன்னோர் செயல்களாக இருப்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
வணங்கினாள் பேதைப் பெண்
பேதைப் பருவம் உடைய பெண்மகள் ஒருத்தி, மன்னனைக் கண்டு பணியும் நிகழ்ச்சியைப் புலவர் நயம்பட விவரித்து உள்ளார். இப்பகுதியில் முதலில் பேதைப் பருவமகளின் இளம் பருவம் கூறப்பட்டுள்ளது. பேதைப் பெண் எப்படிப்பட்டவள்?
அண்மையில் பிறந்த கிளிக்குஞ்சு போன்றவள். தாய்ப்பாலை அண்மையில் மறந்த இளமான் போன்றவள். தோகை வளராத மயில் போன்றவள். சுற்றத்தார்க்கு மகிழ்ச்சி உண்டாக்கும் கரும்பு போன்றவள். முல்லை மாலை போன்ற பற்களை உடையவள். இது எம்முடைய பாவை; இது எம்முடைய கொல்லிப்பாவை என்று கூறிப் பாவைப் பாட்டுப் பாடும் விதம் அறிந்தவள் என இப்பருவமகளின் இளம் பருவம் வருணிக்கப்படுகிறது. இதனைப் பின்வரும் அடிகள் விவரிக்கும்.
பிறந்தணிய கிள்ளை பெறாத் தாயர் கொங்கை
மறந்தணிய செவ்விமடமான் – புறந்தணியத்
தோகை தொடாமஞ்ஞை தோற்றத்தால் சுற்றத்தார்க்கு
உவகை விளைக்கும் ஒரு கரும்பு – பாகைத்
தொடை போய முல்லைத் தொடையலே போல
இடை போய தூய எயிற்றாள்
(இராச.உலா. 231-236)
(கிள்ளை = கிளி, மஞ்ஞை = மயில், தொடைபோய = தொடுக்கப்பட்ட, தொடையல் = மாலை, எயிறு = பல்)
இத்தகைய பேதைப் பருவ மகள், உலா வரும் மன்னனைக் காண விரைகின்றாள். கோடிக் கணக்கான மாதர்களோடு தானும் பின் தொடர்ந்து ஓடுகின்றாள். மற்றவர் காணும் வேட்கை கண்டு தணிய, தானும் தணிகிறாள். சுற்றத்தாரும் பிறரும் பணியக் கண்டு தானும் பணிகிறாள், மன்னன் மார்பில் அணிந்துள்ள ஆத்தி மாலையைக் காணுகிறாள். பட்டத்து யானையைப் பார்க்கிறாள். கோரம் என்ற பட்டத்துக் குதிரையையும் பார்க்கிறாள். கும்பிட்டாள். மன்னனுடைய கொடியில் தீட்டிய புலி உருவம் பார்த்து மயங்கினாள், இதனைப் பின்வரும் அடிகள் விளக்கும்.
………………………………பலகோடித்
தோகைய ரோடத் தொடர்ந்து ஓடி-தாகம்
தணியத் தணியத் தமரும் பிறரும்
பணியப் பணியப் பணிந்தாள் – மணிமார்பில்
ஆரந்தான் கண்டாள் அயிரா வதம் தொழுதாள்
கோரம் தெரியவும் கும்பிட்டாள் – வீரன்
படாகைப் பெரும் புலியும் பார்த்து ஒழிந்தாள்
(இராச.உலா. 256-262)
(தோகையர் = மகளிர், தமர் = சுற்றத்தார், ஆரம் = மாலை, அயிராவதம் = பட்டத்துயானை, கோரம் = பட்டத்துக் குதிரை, படாகை = கொடி)
இவ்வாறாகப் பேதைப் பருவ மகளின் செயல்கள் விவரிக்கப் பட்டுள்ளன. பேதைப்பருவம் மிகவும் இளம்பருவம். எனவே காமச் செயல்கள் எதுவும் புனைவது வழக்கம் இல்லை.
மங்கை மன மயக்கம்
உலா வரும் தலைவனைக் கண்டு மங்கைப் பருவ மாது ஒருத்தி மயக்கம் கொள்கிறாள். இதனை ஆசிரியர் நயம்படப் புனைந்துள்ளார். மங்கையின் எழில் வருணனை முதலில் இடம் பெறுகிறது.
மங்கை முத்துகளைப் பதித்தது போன்ற பல் வரிசைகளை உடையவள்; பொன் மலையில் பிறந்த வயிரம் போன்றவள்; நாகலோக மன்னனது மணி முடியில் வெளிப்பட்ட நாக மணியை ஒத்தவள்; திருமாலாகிய சோழனைக் கூடுவதற்காகச் சோழநாட்டில் வந்து பிறந்த திருமகள்; இதனைப் புலப்படுத்தும் பாடல் அடிகள்.
நிலையிற் சிறந்த நிகரிலா மேரு
மலையிற் பிறந்த வயிரம் – தொழத்தகும்
முன்னை உலகம் முழுதும் தரும்முரக
மன்னன் அபிடேக மாணிக்கம் – முன்னவன்
பாற்கடல் நீங்கு நாள்நீங்கிப் பழம்படியே
நாற்கடல் நாயகனை நண்ணுவாள்
(இராச.உலா. 349-356)
(மேரு = மலை, உரக மன்னன் = நாகர் உலகத்து மன்னன், அபிடேகம் = மன்னன் திருமுடி, முன்னவன் = முதல்வன், நண்ணுதல் = பொருந்துதல்)
மேலும் மங்கையின் சிறப்பினைப் புலவர் புலப்படுத்துகிறார். அன்னப் பெடையின் ஒலியோ என்று எண்ணுமாறு ஒலிக்கும் மழலையை உடையவள்; நாகமணியைக் கோத்து அணியும் அரைக் கச்சினை உடையவள்; குபேரனது சங்கநிதியில் (குபேரனது நிதிகளில் ஒன்று) தோன்றிய முத்துமாலையை அணிந்தவள்; அவனது பதும நிதியில் தோன்றிய நவமணிகள் (ஒன்பது மணிகள்) பதித்த வளை அணிந்தவள்.
இத்தகைய மங்கைப் பருவத்தாளைச் சூழ்ந்து பாணரும் விறலியும் சோழனது புகார் நகரச் சிறப்பினைப் பாடுகின்றனர்.
அந்தச் சமயத்தில் மாது ஒருத்தி விரைந்து வந்து தலைவியே! கங்கைத் துறைவனும் பொறையனும் தமிழ் நாடனும் ஆகிய இராசராசன் நாளை பவனி வருகிறான் என்று கூறினாள்.
உடனே மங்கை மிகவும் மகிழ்ந்து உலாவைக் காண்பதற்கு விரும்பினாள். ஆனால் உலா மறுநாள் என்பதால் இரவுப் பொழுது தடையாக நின்றது. இதற்காக வருந்தினாள். (இராசராச. 357-382)
மன்னனைக் காண முடியாமல் மங்கை மதி மயங்கினாள்.
மங்கையர்க்குப் பகைவனான நிலவை வேண்டாமல் சோழனது குலமுதல்வனாகிய சூரியனின் ஒளி தன் மீது பட விரும்பினாள்.
காதலர் உயிரைக் கொல்லும் பொதியமலைத் தென்றலை வெறுத்தாள்; புலிக்கொடி பறக்கும் பொன்மலையிலிருந்து வரும் வாடைக்காற்றை விரும்பினாள்.
தனக்கு எதிராகப் போர் செய்ய வரும் கடல் ஒலி அடங்க விரும்பினாள்; தன் தலைவனாகிய திருமால் பள்ளி கொண்ட பாற்கடலை விரும்பினாள்.
மழையை விரும்பிப் பாடிக் கூவும் வானம்பாடிப் பறவைக்கு, நஞ்சை ஊட்டித் தலைவன் பெயரைப் பாடும் பறவைக்கு அமுதத்தை ஊட்ட வேண்டினாள். இரவுப் பொழுதை யுகமாக நீளச்செய்யும் குயிலை விரட்ட வேண்டினாள். விடியலைக் கூவி அழைக்கும் கோழியை விரும்பினாள்.
இவ்வாறாக மங்கையாகிய தலைவி இரவுப்பொழுதைக் கழித்தாள். இதனைப் பின்வரும் அடிகள் விவரிக்கும்.
தென் மலயத் தென்றலை ஓட்டிப் புலி இருந்த
பொன் மலய வாடாய் புகுதென்னும் – முன்மலையும்
கார்க்கடல் வாய்அடங்க நாயகன் கண்வளர்ந்த
பாற்கடல் வாராய் பரந்து என்னும் – மேற்பரந்து
கார் பாடும் புள்வாய்க் கடுப்பெய்து அமுது இறைவன்
பேர் பாடும் புள்வாயிற் பெய்க என்னும் -
(இராச.உலா. 385-390)
(தென்மலயம் = பொதியமலை, வாடை = காற்று, கார்க்கடல் = கரிய நிறக்கடல், கார் பாடும் புள் = வானம்பாடி, கடு = நஞ்சு)
இவ்வாறு இரவு முழுவதும் காதல் நோயினால் வாடிய தலைவி பொழுது விடிந்ததும் மன்னனை வரவேற்கத் தயார் ஆனாள். மலர்ச் சோலைக்குச் சென்று மலர் பறித்து எடுத்து வந்தாள்.
மன்னனின் உலா
தலைவியும் மலர்களைப் பறித்துச் சோலையில் இருந்து வெளிப்பட்ட போதே மன்னனும் உலா வந்தான். மகளிரும் மங்கை நல்லாளும் எதிரே நின்று மலர்களைத் தூவினர்; கையில் மலர்களைக் கொடுத்தனர். பருவம் அல்லாத காலத்திலும் மலர்ந்த மலர்களைக் கண்டு பரிசிலாக அவன் ஏற்றுக் கொண்டான். மங்கையின் அரிய பட்டாடையும் சேலையும் வளையலும் மேகலை மணியும் மன்னனைக் கவர்ந்தன. பலமுறை மங்கையையே நோக்கி நின்றான். மங்கை இதனைக் கண்டு நாணினாள். மன்னன் மணி முடியையும் பட்டத்து யானையையும் பதினான்கு உலகத்தையும் மங்கைக்கே கொடுப்பவன் போலப் பலமுறை பார்த்துப் பின்பு அவளை விட்டு நீங்கினான்.
இலகும் சுடர்முடியும் யானையும் ஈர்ஏழ்
உலகும் கொடுப்பானே ஒப்பப் – பலகால்
கொடாத திருநோக்கம் முற்றும் கொடுத்து
விடாது களிறு அகல விட்டான்.
(இராசராச. 427-430)
(ஈர்ஏழ் = பதினான்கு, நோக்கம் = பார்வை, களிறு = யானை)
இவ்வாறாக மன்னன் உலாப் போகும் காலத்தில் மங்கைப் பருவத்தாள் காம நிகழ்ச்சிகளைப் புலவர் சுவைபடப் புனைந்துள்ளதைப் படித்து மகிழலாம்.
திருமகள் போன்றவள்
மன்னன் உலாப் போகும் காலத்தில் பேரிளம்பெண் ஒருத்தியின் மனநிலையை ஆசிரியர் புனைந்துரைத்துள்ளார்.
இத்தலைவி பவனி வரும் சோழ மன்னனை நேர் நின்று நோக்கினாள். பரந்த விழிகளின் வெண்மை சிவப்பு நிறமாக மாறியது. அவள் நெற்றித்திலகம் குறு வியர்வையால் மறைந்தது. அவளது மழலைச் சொற்கள் தடுமாற்றம் அடைந்தன. மனத்தெளிவு மன மயக்கமாக மாறியது. நாணம் தொலைந்தது. கூந்தலாகிய மேகம் அவிழ்ந்து தொங்கியது. இதனைப் பின்வரும் வரிகள் விவரிக்கும்.
கண்டனை மேதினியாள் காந்தனை வந்துய்யக்
கொண்டனை என்று குறுகுவாள் – கண்டு
மலர்க்கண் வெளுப்புச் சிவப்பூர மற்றத்
திலகம் குறுவியரால் தேம்ப – பல குதலை
மாற்றம் தடுமாற்றம் எய்த மனத்துள்ள
தேற்றம்பித் தேற்றம் சிதைவிப்ப -ஏற்று
துகில் அசைந்து நாணும் தொலைய….
(இராச.உலா. 717-723)
(கண்டன் = சோழனுடைய பட்டப்பெயர், மேதினியாள் = திருமகள், காந்தன் = கணவன், குறுகுவாள் = நெருங்குவாள், திலகம் = நெற்றிப்பொட்டு, வியர் = வியர்வை, குதலை = மழலை, தேம்ப = மறைய, பித்தேற்றம் = மயக்கம், துகில்= உடை)
இவ்வாறாக மன்னனைக் கண்ட பேரிளம் பெண்ணின் நிலையைப் புலவர் கூறியுள்ளதை அறியலாம்.
பேரிளம் பெண்ணின் காதல்
உலா வரும் சோழ மன்னனை நேருக்கு நேர் நின்று பேரிளம் பெண் வேண்டுகோள் விடுக்கிறாள். தம்மை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறாள். தங்களின் நிலையை விவரிக்கிறாள்.
”தலைவனே! குளிர்ச்சி இல்லாத நிலவு எங்களுடையது. உண்மையை அறியாத மயக்க உணர்ச்சியை உடையோம். விடியல் பொழுதையே அறியாத இரவினை உடையோம். நீங்காத காதலை உடையோம். ஓரிடத்திலும் தங்காத மேகலை அணியை உடையோம். கொங்கையினை இறுக்கி நில்லாத கச்சினை உடையோம்… மனத்தாலும் நினைப்பதற்கு அரிய பெருமையை உடையவன் நீ. ஆதலால் எங்கள் விண்ணப்பத்தையும் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று வேண்டுகிறாள். இவ்வாறு பேரிளம் பெண் கூறியது கேட்டு மன்னன் சிறுநகை செய்தான். பின்பு முத்துமாலை முதலான பல்வேறு அணி மணிகளும் அவளுக்குத் தர ஏவலர்க்கு ஆணை இட்டான். ஆனாலும் அவள் அவற்றை ஏற்காமல் காதல் துயரால் வாடிச் செவிலியர் மீது மயங்கி வீழ்ந்தாள்.
இவ்வாறாக மன்னன் மீது ஏழ்பருவ மகளிரும் மயக்கம் கொண்டு நிலை தடுமாறப் பதினான்கு உலகத்தையும் உடையவன் உலாச் சென்றான்.
பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாக
மாதர் மனம்கொள்ளா மால்கொள்ளச் – சோதி
இலகுடையான் கொற்றக் குடை நிழற்ற ஈர்ஏழ்
உலகுடையான் போந்தான் உலா.
(இராச.உலா. 779-782)
(மாதர் = பெண்கள், மால் = மயக்கம், சோதி = ஒளி, சோதி இலகுடையான் = திருமால்)
நண்பர்களே! இதுவரையும் இராசராசசோழன் உலாவில் இருந்து சில காட்சிகளை அறிந்து இருப்பீர்கள். மீண்டும் அக்காட்சிகளை நினைவுபடுத்திப் பாருங்கள்.
பாடம் - 5
நண்பர்களே! இப்பாடத்தின் மூலம் சதக இலக்கியம் பற்றிய செய்திகளை நாம் அறிய இருக்கிறோம்
விளையும் ஒருபொருள் மேலொரு நூறு
தழைய உரைத்தல் சதகம் என்ப
(இலக்.வி. 847)
என்ற நூற்பா சதக இலக்கணத்தைக் கூறுகிறது. அகப்பொருள் பற்றியோ அல்லது புறப்பொருள் பற்றியோ நூறு செய்யுள்களில் உரைப்பது சதகம் ஆகும் என்பது மேல் நூற்பாவின் பொருள் ஆகும்.
பயிலும் ஓர் பாட்டாய் நூறு உரைப்பதுதான் சதகம்
(சுவாமிநாதம். 168)
என்று, சுவாமிநாதம் எனும் பாட்டியல் நூற்பாவும் மேல் கருத்தையே உறுதி செய்கின்றது. பொருள் அமைப்பை விடப் பாடல்களின் எண்ணிக்கைக்கே இந்நூற்பாக்களில் முதன்மை தரப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலச் சதகம் முதலியன வரலாற்று நூல்களில் அடங்கும். போற்றி வகையில் அமைந்த நூல்கள் துதி நூல் வகையில் அடங்கும். உலகியல் நீதி கூறும் சதகங்கள் நீதி நூல் வகையில் அடங்கும்.
சமயத் தத்துவத்தைச் சில சதகங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. தமிழ் மொழியின் சிறப்பு, கல்வியின் பெருமை முதலியனவும் நோக்கங்கள் ஆகும். சமுதாயச் சீர்திருத்தம், உடல் நலம் பேணல், முன்னோர் மொழியைப் போற்றுதல் முதலியனவும் சதக இலக்கியங்களின் நோக்கங்கள் ஆகும்.
கார்மண்டலச் சதகம்
தமிழ்நாட்டின் பெரும்பகுதியாக விளங்கியது கார்மண்டலம் ஆகும். இது கருநாடு, கருநாடகம் எனவும் பிற்காலத்தில் அழைக்கப்பட்டது. இங்கு வாழ்ந்த வேளாளர் குடியினரின் பெருமையை உரைப்பதே கார்மண்டலச் சதகம் ஆகும். இதனை ஆறைகிழார் எனும் புலவர் இயற்றி உள்ளார்.
தொண்டை மண்டலச் சதகம்
தொண்டை நாட்டைச் சிறப்பித்து இச்சதகம் இயற்றப்பட்டுள்ளது. படிக்காசுப் புலவர் இதனை இயற்றி உள்ளார்.
சோழமண்டலச் சதகம்
சோழ நாட்டைப் பற்றியும் அந்நாட்டு மன்னர்கள், புலவர்கள், வள்ளல்கள் பற்றியும் பாடுவது சோழ மண்டலச் சதகமாகும். இதனை ஆத்மநாத தேசிகர் இயற்றி உள்ளார்.
கொங்கு மண்டலச் சதகம்
கொங்கு மண்டலச் சதகம் என்னும் இந்நூல் கொங்கு மண்டலத்தின் வரலாற்றுச் சுருக்கமாக அமைந்துள்ளது. கார்மேகக் கவிஞர் இந்நூலைப் படைத்துள்ளார்.
அறப்பளீசுவர சதகம்
கொல்லி மலையில் உள்ள ஒரு சிற்றூர் அறப்பள்ளி என்பது. இவ்வூரில் எழுந்தருளியுள்ள கடவுள் மீது பாடப்பட்டதே அறப்பளீசுவர சதகம். அம்பலவாணக் கவிராயர் இந்நூலை இயற்றி உள்ளார்.
நண்பர்களே! இதுவரையும் சதக இலக்கியங்கள் பற்றிப் பொதுவான செய்திகளை அறிந்தோம். இனித் தண்டலையார் சதகம் பற்றிய சிறப்புச் செய்திகளை அறிய இருக்கின்றோம்.
காயல்பட்டினம் சீதக்காதி முதலியோரிடம் புலமைக்காக வெகுமதிகள் பெற்றவர். இறையன்பு மிகுந்தவர். பல தலங்களுக்கும் சென்று வழிப்பட்டுள்ளார். தில்லையில் தங்கி இருந்தபோது கையில் பொருள் இல்லை. தில்லை சிவகாமி அம்மையைப் பாடினார். ஐந்து பொற்காசுகள் அம்மையின் அருளால் வீழ்ந்தன. காசுகள் விழும்போது ‘புலவருக்கு அம்மையின் பொற்கொடை’ என்ற ஒலி எழுந்தது. அவற்றைத் தில்லைவாழ் அந்தணர்கள் பொன் தட்டில் வைத்துப் பல சிறப்புகளுடன் புலவருக்கு அளித்தனர். இக்காரணத்தால் இவருக்குப் ‘படிக்காசுப் புலவர்’ என்ற பெயர் வழங்கலாயிற்று.
இப்புலவர் தருமபுர ஆதீனம் ஆறாவது குரு மகா சந்நிதானம் திருநாவுக்கரசு தேசிகரிடம் ஞானோபதேசம் பெற்றார். ஒரு நாள் தில்லையில் கூத்தப் பிரானது திருமுன்பு இருந்த திரைச்சீலை தீப்பற்றி எரிந்ததை யோகக் காட்சியால் உணர்ந்தார். தம்முடைய கைகளைப் பிசைந்தார். அங்கே பற்றிய தீ அணைந்தது. இவ்வாறாக அருளிச் செயல்கள் பலவற்றைப் புலவர் நிகழ்த்தி உள்ளார்.
இவரால் இயற்றப்பட்ட நூல்கள்
தொண்டை மண்டல சதகம்
தண்டலையார் சதகம்
சிவந்து எழுந்த பல்லவன் உலா
பாம்பு அலங்காரம் வருக்கக் கோவை
திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை
இந்நூலுக்குப் பழமொழி விளக்கம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
”இசைந்த பழமொழி விளக்கம் இயம்பத்தானே”
”விளங்கு பழமொழி விளக்கம் அறிந்துபாட”
(தண்.சத. 1, 2)
என வரும் காப்புச் செய்யுட்களால் இதனை அறியலாம். இந்தச்சதகப் பாடல்களின் ஈற்றடியில் உலகில் வழங்கும் ஏதேனும் ஒரு பழமொழி இடம்பெற்று இருக்கும். தண்டலைப் பதியில் கோயில் கொண்டிருக்கும் ‘நீள்நெறி நாதர்” இச்சதகத்தின் தலைவர் ஆவார். இந்நூலுள் நூறு என்ற எண்ணிக்கையை விடக் கூடுதலாகப் பாடல்கள் உள்ளன. அவை பிற்காலத்து இடைச் செருகலாக இருக்க வேண்டும் என்று ந.வீ. செயராமன் கருதுவார்.
தண்டலையார் சோழவள நாட்டில் மௌனமாய்ப் பெருந்தவம் செய்த சௌபரி என்ற முனிவர், பற்றற்ற நிலையை விட்டு நீங்கி மீளவும் இல்லறத்தை விரும்பி வாழ்ந்தார்; திருவள்ளுவர் போன்று மனைவி வாசுகியுடன் இல்லற வாழ்வை நடத்தி நின்றார். அதனால் இல்லற வாழ்வே சிறப்பானது ஆகும். துறவற வாழ்வும் பிறர் பழித்தல் இல்லாயின் அழகியது ஆகும். இதனைப்
புல்லறிவுக்கு எட்டாத தண்டலையார்
வளம்தழைத்த பொன்னி நாட்டில்
சொல்லற மாதவம்புரியும் சௌபரியும்
துறவறத்தைத் துறந்து மீண்டான்
நல்லறமாம் வள்ளுவர்போல் குடிவாழ்க்கை
மனைவியுடன் நடத்தி நின்றால்
இல்லறமே பெரியதாகும் துறவறமும்
பழிப்பின்றேல் எழிலது ஆமே
(தண்.சத. 5)
(புல்லறிவு = அற்ப அறிவு, பொன்னி நாடு = சோழநாடு, சௌபரி = ஒரு முனிவர்)
என்ற பாடல் விவரிக்கும். சௌபரி முனிவர் மீன்களின் வாழ்க்கையைக் கண்டு மீண்டும் இல்லறத்தை ஏற்றுள்ளார். துறவறத்திலிருந்து இல்லறம் மேற்கொண்டதால் இல்லறமே சிறப்பானதாகும் என்று புலவர் கூறியுள்ளார். இல்லறம் புரியும் மகளிர் கற்புடன் திகழவேண்டும் என்பதைப் புலவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். இதற்காகக் கற்புடை மகளிரின் புராணக் கதைகளை மேற்கோள்களாகக் காட்டியுள்ளார்.
முக்கண்ணராகிய சிவன் உறையும் தண்டலையார் நாட்டில் கற்புடைய மகளிரின் பெருமையைச் சொல்ல முடியுமோ? நெருப்பை ஒத்தவளாகிய சீதை அந்நெருப்பையே குளிரச் செய்தாள். தன்னிடம் தகாத வார்த்தை பேசிய வேடனை எரித்தவள் தமயந்தி. மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிப் பால் கொடுத்தவள் அநசூயை. சூரியன் உதிப்பதைத் தடுத்தவள் நளாயினி. முனிவர்களின் சாபம் கற்புடை மகளிரை அணுகாது என்பதைக் ‘’கொக்கென்று நினைத்தனையோ கொங்கணவா’’ என்று கூறி மெய்ப்பித்தவள் ஒரு பெண். இதனைப் பின்வரும் பாடல் விளக்கும்,
முக்கணர் தண்டலைநாட்டில் கற்புடை மங்கையர்
மகிமை மொழியப் போமோ
ஒக்கும்எரி குளிரவைத்தாள் ஒருத்தி வில்வேடனை
எரித்தாள் ஒருத்தி மூவர்
பக்கம்உற அமுதுஅளித்தாள் ஒருத்தி எழு
பரிதடுத்தாள் ஒருத்தி பண்டு
கொக்கெனவே நினைத்தனையோ கொங்கணவா
என்றே ஒருத்தி கூறினாளே
(தண்.சத. 6)
(முக்கணர் = சிவன், எழுபரி = ஏழு குதிரைகளைப் பூட்டிய தேரினை உடைய சூரியன், கொங்கணவர் = முனிவர்)
இவ்வாறாகக் கற்புடை மகளிரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கூறுவதன் மூலம் இல்லற மகளிர்க்குக் கற்பு நெறி வலியுறுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.
ஒரு பிள்ளை பெற்றாலும் நல்ல பிள்ளையாகப் பெறுவதே மக்கட்பேறு என்று புலவர் வலியுறுத்துகிறார். பயன் இல்லாத பலரைப் பெறுவது வீண் என்பதைப் பன்றி, யானை பழமொழி மூலம் விளக்கி உள்ளார்.
திருஇருந்த தண்டலையார் வளநாட்டில்
இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர்
ஒருவிருந்தாகிலும் இன்றி உண்டபகல்
பகலாமோ உறவாய் வந்த
பெருவிருந்துக்கு உபசாரம் செய்துஅனுப்பி
இன்னம்எங்கே பெரியோர் என்று
வருவிருந்தோடு உண்பதல்லால் விருந்தில்லாது
உணுஞ்சோறு மருந்து தானே
(தண்.சத. 9)
என்று புலவர் விவரித்துள்ளார்.
இன்சொல்லைப் போன்றே நன்றி மறவாமையும் சிறந்த பண்பாகக் கூறப்பட்டுள்ளது. ஆலம் விதை சிறியதாக இருந்தாலும் உருவம் பெரியதாகும். தினை அளவு ஒருவருக்குச் செய்த உதவியானது பனை அளவாய்ப் பெரியதாகித் தோன்றும். தண்டலையார் வளநாட்டில் உப்பிட்டவர்களை உயிர் உள்ளவரையும் மக்கள் நினைப்பர். இதனைத்
துப்பிட்ட ஆலம்விதை சிறிது எனினும்
பெரியதாகும் தோற்றம் போலச்
செப்பிட்ட தினைஅளவு செய்தநன்றி
பனைஅளவாய்ச் சிறந்து தோன்றும்
கொப்பிட்ட உமைபாகர் தண்டலையார்
வளநாட்டில் கொஞ்ச மேனும்
உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்
நினைக்கும் இந்த உலகம் தானே
(தண்.சத. 12)
(துப்பிட்ட (துப்பு + இட்ட) = பவளநிறம் உடைய, ஆலம் = ஆலமரம், கொப்பு = ஒருவகைக் காது அணி)
என்று புலவர் விவரித்து உள்ளார்.
கறுத்தவிடம் உண்டுஅருளும் தண்டலையார்
வளநாட்டில் கடிய தீயோர்
குறித்து மனையாள் அரையில் துகில்உரிந்தும்
ஐவர்மனம் கோபித்தாரோ
பறித்து உரியபொருள் முழுதும் கவர்ந்தாலும்
அடித்தாலும் பழிசெய் தாலும்
பொறுத்தவரே உலகாள்வர் பொங்கினவர்
காடுஆளப் போவர் தாமே
(தண்.சத. 17)
(கறுத்தவிடம் = பாற்கடலைக் கடையும்போது தோன்றிய நஞ்சு, ஐவர் = பாண்டவர்)
என்ற பாடல் விளக்கும். இவ்வாறாகப் புலவர் மானுட குல மேன்மைக்கு வேண்டிய பண்புகள் பலவற்றையும் எடுத்து விளக்கி உள்ளதை அறிய முடிகின்றது.
………………………பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும்
கிடையாது பொருள் நில்லாது
மைசொல்லும் காரளிசூழ் தாழைமலர்
பொய்சொல்லி வாழ்ந்தது உண்டோ
மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி
வாழ்வதில்லை மெய்ம்மை தானே
(தண்.சத. 31)
(போசனம் = உணவு, அளி = வண்டு, மெய் = உண்மை)
என்று புலவர் விவரிப்பர். ‘அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்’ என்ற பழமொழி மூலம் அற்பர்களின் குணங்களைச் சதகம் விளக்கி உள்ளது. அறிவுடையோர்க்கு வாழ்வு வந்தால் மிகவும் வணங்கிக் கண்ணோட்டம் செய்வர். அற்பருக்கு வாழ்வு வந்தால் கண் இருந்தும் குருடராய்ச் செருக்கு உற்றுப் பலருக்கும் துன்பம் செய்வர். (தண்.சத. 57)
மண்ணுலகில் பிறர்குடியை வஞ்சனையில்
கெடுப்பதற்கு மனத்தி னாலே
உன்னிடினும் உரைத்திடினும் அவன்தானே
கெடுவான்என்பது உண்மை அன்றோ
(தண்.சத. 65)
(உன்னிடினும் = நினைத்திடினும்)
இவ்வாறாகப் புலவர் மனித குலத்திற்கு ஆகாத தீய குணங்கள் பலவற்றைத் தண்டலையார் சதகத்தில் வெளிப்படுத்தியுள்ளதை அறிய முடிகின்றது.
நாற்கவியும் புகழவரும் தண்டலையார்
வளநாட்டில் நல்ல நீதி
மார்க்கமுடன் நடந்து செங்கோல் வழுவாமல்
புவிஆளும்வண்மை செய்த
தீர்க்கமுள அரசனையே தெய்வம் என்பார்
கொடுங்கோன்மை செலுத்தி நின்ற
மூர்க்கமுள்ள அரசனும் தன்மந்திரியும்
ஆழ்நரகில் மூழ்கு வாரே
(தண்.சத. 38)
(புவி = உலகம், வண்மை = வளமை, மூர்க்கம் = மூர்க்கத்தனம்/ கொடுமை)
இவ்வாறு அரச நீதி பற்றிப் புலவர் பாடியுள்ளதை அறிய முடிகின்றது.
சதகம் என்றால் என்ன என்பது பற்றித் தெரிந்து கொண்டோம்.
சதக இலக்கண வரையறையையும் வகைகளையும் அறிந்து கொண்டோம்.
சதக இலக்கியங்களின் பொதுவான நோக்கங்கள் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டோம்.
பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம் என்னும் நூல் பற்றிச் சிறப்பு நிலையில் செய்திகளை அறிந்து கொண்டோம்.
தண்டலையார் சதக ஆசிரியர் வரலாறு, நூல் அமைப்பு ஆகியன பற்றித் தெரிந்து கொண்டோம்.
தண்டலையார் சதகம் விவரிக்கும் இல்லறநெறி, உயர்ந்த பண்புகள், தீய பண்புகள், அரசியல் நெறி முதலிய செய்திகளை அறிந்து கொண்டோம்.
பாடம் - 6
நண்பர்களே! இந்தப் பாடம் அந்தாதி இலக்கியங்களின் பொதுத் தன்மைகளை அறிமுகப்படுத்துகிறது. மேலும் அபிராமி அந்தாதியைச் சிறப்பு நிலையில் விளக்குகிறது.
சிற்றிலக்கிய வகைகளில் இரட்டைமணிமாலை, அட்டமங்கலம், நவமணிமாலை, ஒருபா ஒருபது, இருபா இருபது, மும்மணிக்கோவை, மும்மணி மாலை, நான்மணி மாலை, கலம்பகம் ஆகியன அந்தாதித்து முடியும் நிலையைத் தம் இலக்கணமாகக் கொண்டு உள்ளன.
1) திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி
இந்நூலை இயற்றியவர் அதிவீரராம பாண்டியர் ஆவார். கரிவலம் வந்த நல்லூரில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் மீது இந்த அந்தாதி பாடப் பெற்றுள்ளது.
2) திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி
இந்நூலைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றியுள்ளார். திருச்செந்தூர் முருகனின் திருவருள் இந்நூலுள் புகழப்பட்டுள்ளது.
3) சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி
இந்த இரண்டு நூல்களையும் கம்பர் இயற்றியதாக அறிய முடிகின்றது. திருமால் அடியவராகிய சடகோபரைத் தலைவராகக் கொண்டு சடகோபர் அந்தாதி அமைந்துள்ளது. சடகோபரே நம்மாழ்வார் என்று அழைக்கப்பெற்றார். கல்விக் கடவுள் கலைமகள் (சரஸ்வதி) மேல் பாடப்பெற்றது சரஸ்வதி அந்தாதி.
4) திருவரங்கத்து அந்தாதி
மணவாள தாசர் என்று அழைக்கப்படும் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் திருவரங்கத்து அந்தாதியை இயற்றி உள்ளார். திருவரங்க நாதனின் அருட்செயல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
பாட்டியல் நூல்கள் காட்டிய அந்தாதிகள் தவிர மேலும் பல புதிய வகை அந்தாதிகள் காணப்படுகின்றன. செய்யுள் வகை, பாடல்களின் எண்ணிக்கை, அவற்றில் அமைந்த அணி நலன்கள், பாடல்களை உச்சரிக்கும் செயல் முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவை பல்வேறு வகையினவாகப் பெருகி உள்ளன.
பாதி அந்தாதியில் பாட்டுடைத் தலைவர் இருவர் ஆவார். தண்டபாணி சுவாமிகளின் குருநாதன் அந்தாதியில் ‘அருளுக்கு ஏங்குதல்’ எனும் ஒரு பொருண்மையே எல்லாப் பாடல்களிலும் காணப்படுகின்றது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் திருக்கடவூர் என்பது. இது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்புகளை உடையது. பாற்கடலில் தேவர்கள் அனைவரும் அமுதத்தைக் கடைந்து எடுத்து வந்து இத்தலத்தில் வைத்தனர். மீண்டும் எடுக்க முயலுகையில் அக்குடமே உருவமாகச் சிவன் தோற்றமளித்ததைக் கண்டனர். அமுதம் கிடைக்காத நிலையில் திருமாலையும் சிவனையும் வேண்டினர். திருவருள் கிடைக்கவில்லை. அம்பிகையை வணங்க மறந்த பிழை உணர்ந்து சிவபிரானையும் அபிராமியையும் பூசித்து வணங்கினர். பின் அமுதம் கிடைத்தது. ஊரில் கடம் (குடம்) அமையப் பெற்றதால் கடவூர் என்ற பெயர் வந்தது. இத்தலத்தில் உள்ள அபிராமி அம்மை மீது அளவற்ற பக்தி செலுத்தி வந்த அபிராம பட்டர் இயற்றிய நூலே அபிராமி அந்தாதி ஆகும். காப்புச் செய்யுள் ஒன்றும் நூற்பயன் செய்யுள் ஒன்றும் சேர இந்த அந்தாதி நூற்று இரண்டு செய்யுட்களை உடையது.
மன்னரும் பட்டரும்
அந்நாளில் தஞ்சையில் அரசாண்டவர் மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோசி. காவிரிப் பூம்பட்டினத்திற்குச் சென்று புகார் முகத்தில் (காவிரியாறு கடலில் கலக்கும் இடம்) குளித்துவிட்டு மீண்டவர், திருக்கடவூரில் தங்கினார்.
வழக்கம்போல் அங்குத் தங்கிய மன்னர் அபிராமியைத் தொழுது வெளியேறும்போது சந்நிதியில் பட்டரைக் கண்டார். யோகநிலையினை எய்தியவராகத் தோன்றிய அன்னாரைக் கண்டபின் அருகே இருந்தவர்களை அழைத்து இவர் யாவர் என வினவினார்.
அருகே வந்தோர் மன்னவருடைய கேள்விக்கு, இந்த மனிதர் பித்துப் பிடித்தவர் போன்றுள்ளார், அந்தணர்க்குரிய முறையைக் கடந்து ஒரு தேவதையை வழிபட்டுக் கொண்டுள்ளார் என்றனர். மன்னர் அவரோடு பேச வேண்டும் என்று விரும்பினார். பிரதமை நாளாகிய அன்று, ”அமாவாசை இன்று உண்டா? எவ்வளவு நாழிகை இருக்கிறது?” என்று பட்டரை நோக்கி மன்னர் கேட்டார். பட்டரின் உள்ளத்தில் முழுமதியாக, அன்னையின் திருமுகம் ஒளிவீசிக்கொண்டிருந்தது. இத் தரிசனத்தைக் கண்டு திளைத்தபடி இருந்த பட்டர் இன்று பௌர்ணமி அல்லவா? என்றார்.
அருகில் இருந்தவர் அனைவரும் பிரமித்தனர். மன்னரிடமும் இத்தகைய செருக்கோடு தம்மையறியாமல் பதில் சொன்னாரே இவர் என்று எண்ணித் தாம் கூறியது உண்மையாகி விட்டது என்று மகிழ்ந்தனர். மன்னர் இரண்டாம் சரபோசியும் குழுமியிருந்தவர் கூறிய வார்த்தைகள் உண்மையென்றே கருதிச் சென்றுவிட்டார். மன்னர் அங்ஙனம் கருதிச் சென்றபின் சுய உணர்வு பெற்ற பட்டர், மன்னனிடம் முறை தவறி நடந்து கொண்டதற்கு உளம் வருந்தினார். எல்லாம் அம்பிகையின் திருவிளையாடலே என எண்ணி இவ்வந்தாதியைப் பாடத் தொடங்கினார்.
மன்னனும் கனவும்
மன்னன் சரபோசி, பட்டரைப் பற்றிச் சிரத்தை கொள்ளாது சென்றாலும், பட்டருடைய மாட்சிமை மிகுந்த தோற்றம் அவர் உள்ளத்தே பதிந்து கிடந்தது. மன்னன் படுத்துத் துயில் கொள்ளும்போது ஒரு கனவு கண்டார்.
முழுநிலவு உதயமானது போலவும், தேவி அபிராமியம்மை தான் அணிந்திருந்த திருத்தோட்டைக் கழற்றி வீசி அருள, அது (அந்நாளில்) அமாவாசை இருட்டில் சுடர் விட்டுத் தண்ணிலவு பொழிந்து சந்திரன் போல விளங்கவும், அபிராம பட்டர் அவ்வமயம் அருகேயிருந்து முழுமதி வீசி அருளுவதைப் போலவும் கண்டார். தாம் கண்டது கனவாகிலும்கூட, அம்பிகையின் தரிசனத்தை ஒருவாறு பெற்றமையால் மகிழ்ச்சி மேலிட விழித்தெழுந்தார். அபிராம பட்டரின் உண்மைச் சிறப்பையுணர்ந்து, அவர் இல்லிற்குச் சென்று மன்னித்தருள வேண்டினார்.
மன்னனின் கொடை
பட்டருக்கு விளைநிலங்கள் பலவற்றை இரண்டாம் சரபோசி மன்னர் தானமாகக் கொடுத்தார். பாசபந்தத்திற்கு அப்பாற்பட்ட பட்டர் இணங்காவிடினும் மீண்டும் வற்புறுத்தி நிலங்களை அவருக்கு வழங்கினார். அம்பிகையின் திருவருளைப் பெற்ற அபிராம பட்டர் நூறு பாடல்களைப் பாடி அந்தாதியை நிறைவு செய்தார்.
கள்ளவாரணப் பிள்ளையார் பதிகம், அபிராமியம்மைப் பதிகம்; அமுதகடேசர் பதிகம் ஆகியவற்றையும் இவர் பாடினார்.
பட்டர் நிகழ்த்திய அற்புதம் அபிராமி பட்டரைப் பற்றிய இவ்வரலாற்றை வேறுவிதமாகவும் கூறுவர். மன்னன் சரபோசி கேட்ட வினாவிற்கு அபிராமபட்டர் நிதானம் தவறி இன்று பௌர்ணமி திதி என்று கூறினார். அதைக் கேட்டுச் சினமடைந்த மன்னன், ‘நீர் போய்வரலாம்’ என்று அனுப்பிவிட்டான்.
பின்னர்ப் பட்டர் தாம் கூறியது தவறு என்று எண்ணி வருந்தி, அபிராமி வல்லியே இதனின்று என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி அவள் எழுந்தருளியுள்ள கோயிலுக்குச் சென்று, அரிகண்டம் பாடத் தொடங்கினார். அரிகண்டம் என்றால் என்ன? நூறு கயிறுகளைக் கொண்டு உறி ஒன்று கட்டப்படும். அதன் கீழே தீக்குழி ஒன்று அமைத்து எரி ஊட்டப்படும். அந்த உறியின் மேல் இருந்து தனது தெய்வத்தைக் குறித்து வேண்டிப்பாடுவது மரபு. பாடும்போது அத்தெய்வத்தின் அருள் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு பாடலாகப் பாடி முடிக்க வேண்டும். அருள் கிடைக்காவிட்டால் ஒரு பாடல் பாடி முடித்ததும் ஒரு கயிற்றை வெட்டிவிடுவர். இவ்வாறு எல்லாக் கயிறுகளும் வெட்டப்பட்டால் புலவர் தீக்குழியில் விழுந்து உயிர் துறப்பார். அதற்கும் முன்பாகத் தெய்வம் அருள் செய்வது மரபு. பட்டர் இவ்வாறாக உறி கட்டி ‘உதிக்கின்ற’ எனத் தொடங்கும் பாடலை முதலாக வைத்துப் பாடத் தொடங்கினார். இவ்வாறு எழுபத்து எட்டுப் பாடல்கள் பாடி முடித்ததும்; எழுபத்து எட்டுக் கயிறுகள் அறுக்கப்பட்டன, அடுத்து ‘விழிக்கே அருள் உண்டாம் அபிராம வல்லிக்கு’ (79) என்று பாடத் தொடங்கும் போது அம்பிகை எழுந்தருளித் தனது திருத்தோடு ஒன்றை வானமண்டலத்தில் கழற்றி வீசியருள, அது சந்திரனைப்போல் ஒளி வீசியது. அம்பிகை பட்டரை நோக்கி ”நீ கவலைப்பட வேண்டாம், நீ கூறிய வார்த்தையை மெய்யாக்கி விட்டோம்” என்று கூறி மறைந்தருளினாள்.
திருத்தோடு வானத்தில் எழுந்தருள, மன்னன் இரண்டாம் சரபோசியும் பிறரும் ‘இன்று அமாவாசையை அடுத்த நாளாகிய பிரதமை அல்லவா? இன்று முழுநிலவு உதயமாயிற்றே என்று ஆச்சரியம் அடைந்தார்கள். அடியவராகிய அபிராமபட்டரே இந்த அற்புதத்தை நிகழ்த்திவிட்டார் என்று எண்ணினர். பின்னர் மன்னரும் மற்றவரும் பட்டரை வணங்கினர்.
1) அன்னை அபிராமியின் திரு உருவ வருணனைகள்.
2) அன்னை அபிராமியின் திரு அருள் செயல்கள்.
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே
(அபி.அந். 1)
(போது = மலர், கடி = குமணம், தோயம் = குழம்பு)
மணியின் ஒளியானவள்
அபிராமியின் திருக்கைகளில் குளிர்ச்சி பொருந்திய மலர்க்கணைகள் உள்ளன. கரும்பு வில் உள்ளது. பாச அங்குசம் எனும் கருவி உள்ளது. (அபி.அந். 2) அபிராமி மாணிக்க மணி போன்றவள்; அம்மணியின் ஒளி போன்று சுடர்விடக் கூடியவள்; மாணிக்க மணிகள் இழைக்கப் பெற்ற ஆபரணம் போன்றவள்; அணிந்த அந்த ஆபரணங்களுக்கு அழகு தரக்கூடியவள்; அபிராமியை அணுகாதவர்க்குப் பிணியைத் தரவல்லவள்; பிணிக்கு மருந்தானவள் என்று புலவர் பாடியுள்ளார். இதனை,
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே
(அபி.அந். 24)
(பத்மம் = தாமரை)
என்ற பாடல் விவரிக்கும். அபிராமியின் திருக்கைகளில் தங்குவது கரும்பு வில்லும் மலர்க்கணைகளுமே ஆகும். தாமரை போன்ற சிவந்த மேனியில் அணிவது வெண்முத்து மாலையாகும். மேலும் மணிகள் இழைத்த மேகலையும் பட்டுடையையும் அன்னை அணிந்து உள்ளாள் (அபி.அந். 37).
சிவந்த வாயினள்
பவளக் கொடிபோல இனிமை கனிந்த சிவந்த வாயை உடையவள் அபிராமி. குளிர்ச்சி பொருந்திய புன்முறுவலை உடையவள்; கூடவே வெண்மையான பற்களை உடையவள்; துடி இடையைத் துவளச் செய்யும் தனங்களை உடையவள் என்று பட்டர்பிரான் அன்னையை வருணித்து உள்ளார்.
பவளக் கொடியிற் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணைமுலையாள்
அவளைப் பணிமின் கண்டீரமராவதி யாளுகைக்கே.
(அபி.அந். 38)
(பனி = குளிர்ச்சி, அமராவதி = தேவர்களின் இருப்பிடம்)
என்ற பாடல் மேலே கூறிய கருத்தை விவரிக்கும்.
சின்னம் சிறிய இடையில் செம்பட்டுச் சாத்தப்பெற்றுள்ளது. தனங்களில் (மார்பில்) முத்து ஆரம் அணியப்பட்டுள்ளது. கரிய கூந்தலில் பிச்சிப்பூ மாலை சூட்டப் பெற்றுள்ளது. (அபி.அந்.53) ஆயிரம் மின்னல்கள் ஒன்றாய்த் திரண்டு பெண்ணாக மாறிக் கை கால் முதலிய உறுப்புகளோடு உருவமாக உருப்பெற்று ஒரு வடிவமாக விளங்குகின்றவள் அபிராமி (அபி.அந். 55). நீண்ட வில்லும், கரும்பு, தாமரை முதலிய கணைகளுமாக முத்தொழிலும் செய்து நிற்பவள் அபிராமி (அபி.அந். 59).
இவ்வாறாக அபிராம பட்டர் அன்னை அபிராமியைப் பல்வேறு நிலைகளில் வருணித்துப் பக்தி செலுத்தியதை அறிய முடிகின்றது.
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வுஅறியா
மனம்தரும் தெய்வவடிவும்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லனஎல்லாம்தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
(அபி.அந். 69)
(தனம் = பொருள், வடிவு = அழகு, கனம் – மேகம்)
முத்தொழில் புரிபவள்
படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்பவள் அன்னை அபிராமி என்கிறார் புலவர். பதினான்கு உலகங்களைப் பெறாமல் பெற்றவள் அன்னை அபிராமி; அவற்றைக் காப்பவளும் அவளே; பின்பு அவற்றை ஒடுக்குபவளும் அவளே ஆவாள். சிவபெருமானுக்கும் மூத்தவள் அபிராமி; திருமாலுக்கு இளையவளாகவும் இருப்பவள். அவள் பெரிய தவத்தை உடையவள். இச்செய்தியைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை யன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே
(அபி.அ. 13)
(புவனம் = உலகம், கரந்தவள் = மறைத்தவள், கறைக் கண்டன் – சிவன்)
அபிராமி அன்னையும் ஐயனும் உமையொருபாகன் வடிவில் வந்து திருவடித் தீக்கை அருளிய நிகழ்ச்சியை அபிராம பட்டர் உள்ளம் உருக விவரிக்கிறார்.
சிவனோடு உருவம் கொண்டவள்
அன்று பூத்த குவளை மலர் போலும் கண்களை உடைய அபிராமி தேவியும் சிவந்த நிறத்தை உடைய சிவபெருமானும் நம் பொருட்டு ஆண்பாதி பெண்பாதியாக உருவெடுத்து வந்து தம் மெய்யடியார்கள் நடுவில் இருக்கச் செய்து நமது சென்னியின் மீது திருவடிகளைப் பதித்து மலநீக்கம் செய்வதற்கு என்ன புண்ணியம் செய்தேனோ என்று புலவர் பாடுகிறார். இதனைப் பின்வரும் பாடல் விளக்கும்.
புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும்கூடி நம்காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம்அடியார்கள் நடுஇருக்கப்
பண்ணி நம்சென்னியின்மேற் பத்மபாதம் பதித்திடவே
(அபி.அந். 41)
(கண்ணி = கண்களை உடையவள், சென்னி = தலை, பத்மம் = தாமரை)
ஒரே உருவமாகத் தோன்றுபவள் அபிராமி; எல்லா இடத்திலும் பரவி நிற்கக் கூடியவள் (நீக்கமற நிறைந்திருப்பவள்); பாசக்கயிற்றையும் தோட்டி என்னும் கருவியையும் உடையவள்; ஐந்து கணைகளை உடையவள்; வஞ்சகர்களது உயிரை உண்ணும் சினமிக்கவள்; கரு நிறமுடைய காளி; வீரத்தை உடைய பைரவி; சூலத்தை உடையவள் என்று புலவர் அபிராமியை வாழ்த்துகிறார் (அபி.அந். 77).
அடியாரைக் காப்பவள்
பாலும் தேனும் பாகும் போலும் இனிய சொற்களை உடையவள் அபிராமி. இவள் கொடிய யமன் சூலத்தை அடியார் மேல் செலுத்தும்போது காப்பவள். அவ்வாறு சூலாயுதத்தை யமன் செலுத்தும் போது, திருமாலும் நான்முகனும் தேடவும் தேவர்கள் தேடவும் மறைகள் தேடவும் அப்பாற்பட்டு நிற்கும் அபிராமி தோன்றுவாள். திருவடிகளையும் வளையணிந்த திருக்கைகளையும் உடன்கொண்டு அடியார்முன் தோன்றிக் காப்பாள். திருவடிகளால் யமனை உதைக்கவும் கைகளால் புடைக்கவும் செய்வாள். இதனைப் பட்டர்.
மாலயன்தேட மறைதேட வானவர்தேட நின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்தகப்பு
வேலைவெங் காலன்என்மேல் விடும்போது வெளிநில்
கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும்போலும் பணிமொழியே
(அபி.அந். 86)
(மால் – திருமால், அயன் – பிரம்மன், சூடகம் – வளையல், கதித்த – வேகம், கப்பு – சூலாயுதம், காலன் – யமன்)
என்று போற்றிப் பாடுகின்றார்.
அன்பர்க்கு அருள்பவள்
உண்மையான அன்பு பொருந்திய உள்ளத்தில் மட்டுமே அபிராமி எழுந்து அருளுவாள் வஞ்சகர்களின் பொய் அன்பு பொருந்திய உள்ளத்தில் ஒருகாலத்தும் தோன்றாள். அபிராமியின் தாமரைத் திருவடியைத் தலையில் சூடி ஊடல் தீர்த்தார் சிவபெருமான். அவ்வாறு சூடியபோது சிவன் கையில் உள்ள வேள்வித் தீயும் தலையில் உள்ள கங்கையாறும் எங்கே ஒளிந்தன என்று புலவர் வினவுகிறார். இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.
தைவந்து நின்னடித் தாமரைசூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும் தலைவந்தவாறும் கரந்ததுஎங்கே
மெய்வந்த நெஞ்சின்அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகவறியா மடப்பூங்குயிலே
(அபி.அந். 98)
(விரகர் = தீயவர்)
இவ்வாறாக அபிராம பட்டர் அன்னை அபிராமியின் அருள் செயல்கள் பலவற்றைப் பாடிப் போற்றியுள்ளதை அறிய முடிகிறது.
அந்தாதி என்றால் என்ன என்பது பற்றித் தெரிந்து கொண்டீர்கள்.
அந்தாதியின் தோற்றம், அந்தாதியின் வகைகள், அந்தாதியின் பொருள் அமைப்பு ஆகிய செய்திகளை அறிந்து கொண்டீர்கள்.
சிறப்பு நிலையில் அபிராமி அந்தாதி பற்றிப் படித்தீர்கள்.
அபிராம பட்டரின் வரலாற்றைத் தெரிந்து கொண்டீர்கள்.
அன்னை அபிராமியின் உருவ வர்ணனை, அருள் செயல்கள் பற்றிப் பட்டர் பாடிய பாடல்களின் நயங்களைத் தெரிந்து கொண்டீர்கள்.