80

தலைவியின் காதல் அறிந்த பெற்றோர் தலைவியை வீட்டிலேயே வைத்துப் பாதுகாப்பர் .

பெற்றோர் முதலில் களவுக்காதலை அனுமதிக்க மாட்டார்கள் .

பின்பு தலைமக்களின் உள்ள உறுதி அறிந்து உடன்படுவர் .

பெற்றோர் உடன்படாத நிலையில் தலைவனும் தலைவியும் யாரும் அறியாதவாறு வேற்றூர் செல்வர் .

இதற்கு உடன்போக்கு எனப் பெயர் .

திருமணத்திற்குப் பின் நிகழும் வாழ்க்கையைக் கற்பு என்று கூறுவர் .

கற்பு என்பதற்குக் கல்வி என்பதே பொருள் .

ஒன்று மறியாத பேதையாக இருந்த தலைமகள் எப்படி இதையெல்லாம் கற்றுக் கொண்டாள் என்று பெற்றோர் வியந்து பேசுவர் .

தலைவன் வீட்டில் வசதியற்ற சூழ்நிலை இருப்பினும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வாள் .

தன் முயற்சியால் அந்தக் குடும்ப நிலையை உயர்த்துவாள் .

" ஒரே ஒரு பசு மாடு மட்டுமே இவள் வந்தபோது இந்த வீட்டில் இருந்தது .

இப்போது வருகின்றவர்களுக்கு எல்லாம் விருந்து அளிக்கும் விழாவுடையதாக இந்த வீடு மாறிவிட்டது " என்று வியந்து போற்றும் அளவுக்குத் தலைவி பாடுபடுவாள் .

கற்பு வாழ்க்கையில் அறவோர் , அந்தணர் , விருந்தினர் ஆகியோரை இல்லறத்தார் பாதுகாப்பர் .

5.4.2 திருமணம்

திருமணம் என்பது ஒரு சடங்கு .

ஒருவனையும் ஒருத்தியையும் கணவன் மனைவி என ஆக்கும் இந்நிகழ்ச்சி ஒரு பண்பாட்டின் அடையாளம் .

மிகப் பழங்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டுதல் இல்லை .

வீட்டிற்கு முன்பு இட்ட திருமணப் பந்தலில் மணமக்களை நீராட்டுதல் , மக்களைப் பெற்ற மூத்த மகளிர் நெல்லும் மலரும் தூவி வாழ்த்துதல் , உழுந்தால் செய்யப்பட்ட களியை எல்லார்க்கும் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளே இருந்தன .

கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து தீ வளர்த்தல் , தீயை வலம் வருதல் , பார்ப்பனர் மந்திரம் ஓதல் , அம்மி மிதித்து அருந்ததி காட்டுதல் போன்ற வழக்கங்கள் தமிழர் திருமணத்தில் புகுந்தன .

இடைக்காலத்தில் நகரமக்கள் வாழ்வில் திருமணம் வேதநெறிச் சடங்காகவே இருந்தது .

இருபதாம் நூற்றாண்டில் இந்த நிலை மாறியது .

பகுத்தறிவு சார்ந்த திருமணங்கள் , தமிழ்த் திருமணங்கள் ஆகியன நடைபெறத் தொடங்கின .

5.4.3 குடும்பக் கடமைகள்

குடும்பத்தின் தலைவனாகிய ஆண் பொருளைச் சம்பாதிக்க வேண்டும் .

மனைவி குடும்ப வருவாய்க்குத் தக்க நிலையில் குடும்பத்தை நடத்த வேண்டும் .

வறுமையை எதிர்த்துத் தலைமக்கள் போராடுவர் .

பழங்காலக் குடும்ப நிகழ்ச்சி ஒன்றைக் குறுந்தொகை என்ற இலக்கியம் சொல்வதைக் கேளுங்கள் !

“ காந்தள் மலர் போன்ற விரலால் முற்றிய தயிரைப் பிசைந்தாள் .

பிசைந்த விரல்களை உடுத்திய ஆடையில் துடைத்துக் கொண்டாள் .

குவளை மலர் போன்ற அவள் கண்களில் குழம்பைத் தாளித்த மணம் சென்று பொருந்தியது .

இவ்வாறு தலைவி சமைத்த இனிமையும் புளிப்புமுடைய குழம்பைக் கணவன் இனிதாயுள்ளது என்று உண்டான் .

அதனால் தலைவியின் மனம் மகிழ்ந்தது .

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குடும்பக் கடமைகளை விளக்கும் குடும்ப விளக்கு என்ற நூலைப் படைத்துள்ளார் .

இந்த நூலில் பெண் கல்வி கற்றவளாய் , இசை முதலிய கலைகள் அறிந்தவளாய் , கடைவீதி வணிகம் செய்யத் தெரிந்தவளாய் , பொதுத் தொண்டில் விருப்பம் உள்ளவளாய்ப் படைக்கப்பட்டுள்ளாள் .

பறந்தனள் பச்சைப் பசுங்கிளி ; மாடு

கறந்தனள் ; வீட்டை நிறம் புரிந்தனள் ;

செம்பு தவலை செழும்பொன் ஆக்கினாள் ;

பைம்புனல் தேக்கினாள் ; பற்ற வைத்த

அடுப்பினில் விளைந்த அப்பம் அடுக்கிக்

குடிக்க இனிய கொத்துமல்லி நீர்

இறக்கிப் பாலொடு சர்க்கரை இட்டு

நிறக்க அன்பு நிறையப் பிசைந்த

முத்தான வாயால் முழுநிலா முகத்தாள்

" அத்தான் " என்றனள் ; அழகியோன் வந்தான் .

இவ்வாறு குடும்பக் கடமைகளைச் செய்யும் பெண்ணைக் காட்டுகிறார் .

ஆண்மகன் வீட்டின் புறத்தே வேலை செய்வான் .

போர் உண்டாகும்போது பங்கேற்பான் .

வேறுநாடு சென்று பொருள் ஈட்டி வருவான் .

வேட்டையாடுதல் , கடலில் மீன் பிடித்தல் , ஆனிரைகளை மேய்த்தல் , வயலை உழுதல் போன்ற அந்தந்த நிலத்துக்குரிய பணிகளைச் செய்வான் . சமயப் பண்பாடு

சங்க காலம் வரையில் தமிழ்நாட்டில் சமயம் ஓர் ஆழமான இடத்தைப் பெறவில்லை .

கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் தமிழர் வாழ்வில் சமயம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றது .

சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ சமணர் ; அவருடைய அண்ணன் செங்குட்டுவன் சைவன் ; இளங்கோவின் நண்பர் சீத்தலைச் சாத்தனார் பௌத்தர் .

இந்தச் சமய வேறுபாடுகள் அவர்களைப் பிரித்து வைக்கவில்லை .

வைதிக சமயம் , பௌத்தம் , சமணம் , ஆசீவகம் , சாங்கியம் , சைவம் , வைணவம் ஆகிய சமயங்கள் தமிழகத்தில் ஒவ்வொரு காலத்தில் வளர்ந்தன .

பிற்காலத்தில் சமயப் போராட்டங்கள் நிகழ்ந்தன .

சான்றோர் இப்போராட்டங்களைக் கண்டித்துச் சமரச வாழ்வை வற்புறுத்தினர் .

பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்

புகுந்துகலந்து இடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே !

என்று இராமலிங்க அடிகளார் சமயங்கள் என்ற ஆறுகள் எல்லாம் இறைவன் என்ற கடலை அடைகின்றன என்றார் .

தமிழகத்தில் சமயப் போர்கள் பூசல்கள் குறைவாகவே நிகழ்ந்துள்ளன .

பிற்காலத்தில் இசுலாம் , கிறித்தவம் ஆகிய சமயங்கள் தமிழகத்தை அடைந்தன .

5.5.1 நல்லிணக்கம்

சமணர்களுக்கு மலைகளில் குகைகளை அரசர்களும் வணிகர்களும் செய்து தந்தனர் .

சைவநெறியில் வந்த அரசனின் அவையில் சமண பௌத்த நூல்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன .

பௌத்த இலக்கண நூலாகிய வீரசோழியம் வீரராசேந்திரன் என்ற சைவநெறி தழுவிய சோழன் பேரால் அமைந்தது .

நாகைப்பட்டினத்தில் புத்தவிகாரை கட்டுவதற்கு இராசராச சோழன் இடமளித்தான் .

தில்லையில் ஒரே வளாகத்தில் நடராசர் சன்னதியும் கோவிந்தராசப் பெருமாள் சன்னதியும் இன்றும் அமைந்து வழிபாடு செய்யப்படுகின்றன .

வள்ளல் சீதக்காதி பிற சமயப் புலவர்களை ஏற்றுப் பாராட்டிப் பொருள் உதவி செய்துள்ளார் .

ஜீவரத்தின கவி என்பவர் மதீனா நகர்மீது கலம்பகம் பாடியுள்ளார் .

இரண்டாம் சரபோசி மன்னரைச் சுவார்ட்சு பாதிரியாரே வளர்த்து அரசராவதற்கு உதவி செய்தார் .

இன்றும் கம்ப இராமாயணத்தை ஆராய்ந்து நூல்கள் படைக்கும் இசுலாமியர் , தேம்பாவணியில் ஈடுபடும் சைவர் , சைவ சித்தாந்த சாத்திரம் கற்கும் கிறித்துவர் , சீறாப்புராணத்தை விரித்துரைக்கும் வைணவர் தமிழ்நாட்டில் உள்ளனர் .

சமய நல்லிணக்கம் தமிழர் பண்பாட்டின் இயற்கையான பண்பாகும் .

5.5.2 மனிதநேயம்

புத்தர் மயங்கி வீழ்ந்து கிடக்கிறார் .

ஆடு மேய்க்கும் சிறுவன் அவரைக் காண்கிறான் .

தான் அவரைத் தொடக்கூடாது எனக்கருதி ஆட்டை இழுத்து வந்து அவர் முகத்துக்கு அருகில் நிறுத்திப் பாலைக் கறந்து அவர் வாயில் விழச்செய்கிறான் .

புத்தர் மூர்ச்சை நீங்கிக் " கலயத்தில் பாலைக் கறந்துதர " வேண்டுகிறார் .

அவன் நான் தாழ்ந்த குலத்தவன் என்கிறான் .

உடனே புத்தர் " ஓடுகின்ற இரத்தத்தில் , ஒழுகும் கண்ணீரில் தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவதில்லை அப்பா !

இரத்தம் எல்லார்க்கும் சிவப்பு நிறம் .

கண்ணீர் யாரிடத்திருந்து வந்தாலும் கரிக்கும் தன்மையுடையது .

இதில் உயர்வு ஏது ?

தாழ்வு ஏது " என்று கூறி அவனிடம் பால் பெற்று அருந்துகின்றார் .

சாதி வேறுபாடின்மையைப் புத்தரும் ஞானியர் பலரும் எடுத்துக் கூறியுள்ளனர் .

கொலை செய்த கொடியவராயிருந்தாலும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும் அதுவே சீவகாருணியம் என்று இராமலிங்க வள்ளலார் கூறியுள்ளார் .

அறிவை விரிவுசெய் !

அகண்ட மாக்கு !

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை !

அணைந்து கொள் உன்னைச் சங்கமம் ஆக்கு !

மானிட சமுத்திரம் நானென்று கூவு

பிரிவிலை எங்கும் பேதமில்லை

உலகம் உண்ணஉண் உடுத்த உடுப்பாய்

என்று பாரதிதாசன் மனிதநேயம் கொண்டு புதிய உலகம் படைக்கத் தூண்டுகிறார்

5.5.3 உயிரிரக்கம்

கொல்லாமை என்பது ஓர் அறம் .

ஊன் உணவு கொள்பவர்கள் கூடச் சில காலங்களில் அவ்வகை உணவை விலக்கி நோன்பு நோற்கின்றனர் .

உயிர்கள் பசி முதலிய துன்பத்தால் வருந்தும்போது அதனைப் போக்க வேண்டியது செல்வமுடையவர் கடமையாகும் . பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

( குறள் : 322 )

என்று இல்லாதவர்க்கு உணவிடுதலைத் திருவள்ளுவர் பெரிய அறம் என்கிறார் .

கண்ணியும் வலையும் தூண்டிலும் கண்டபோதெல்லாம் உள்ளம் நடுங்கினேன் என்கிறார் இராமலிங்க வள்ளலார் .

வண்டுகள் பூக்களில் தேன் அருந்தும்போது இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தேரின் மணிகளை ஒலி செய்யாதவாறு இழுத்துக் கட்டிவிட்டான் அருள் உணர்வுடைய தலைவன் என்று கூறுகிறது பழந்தமிழ் இலக்கியம் .

தேர் செல்லும்போது மழைக்காலத்தில் தம்பலப் பூச்சிகள் சக்கரத்தில் சிக்காதவாறு ஒதுக்கி ஓட்டினான் என்றும் அவ்விலக்கியம் கூறுகின்றது .

எந்த உயிரையும் பாதுகாப்பதே மனிதனின் கடமையாகக் கருதியது தமிழ்ப் பண்பாடு .

தொகுப்புரை

இதுவரை இந்தப் பாடம் கூறிய கருத்துகளை நினைத்துப் பார்ப்போமா ?

தமிழர் பண்பாட்டில் சில போற்றத்தக்க அடிப்படைகள் உள்ளன .

புகழை அவர்கள் விரும்புவர் .

அதற்காக உயிரையும் கொடுப்பர் .

மானத்தை எந்த நிலையிலும் எதற்காகவும் இழக்க மாட்டார்கள் .

மானம் போகக்கூடிய நிலை வந்தால் உயிரை விட்டுவிடுவர் .

போரிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கும் வீரம் அவர்களுடைய பண்பாகும் .

விருந்தோம்பல் , பிறர்க்கு உதவி செய்தல் , பொருள் மிகுதியாக இருக்கும் நிலையில் அளவில்லாமல் பிறர்க்கு வழங்குதல் , எல்லா உயிரிடத்தும் இரக்கம் பாராட்டுதல் , மனிதர் யாவரையும் சமமாக மதித்துப் போற்றுதல் ஆகிய பிறபண்புகள் அன்றைய மக்களிடம் இருந்தன .

இப்பண்புடையோர் சான்றோர் எனப் பெற்றனர் .

இவையே இப்பாடத்தின் வழியாக நாம் அறிந்தன அல்லவா ?

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. தமிழர் பண்பாட்டில் கணவன் மனைவி உறவு எத்தகைய நம்பிக்கையைக் கொண்டது ?

விடை

2. அலர்தூற்றுதல் என்பது யாது ?

விடை

3. பழந்தமிழர் திருமணத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் யாவை ?

விடை

4. பாரதிதாசன் குடும்ப விளக்கு என்று யாரைக் குறிப்பிடுகின்றார் ?

விடை

5. தமிழர் சமய நல்லிணக்கம் உடையவர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக .

விடை

6. தமிழர் உயிரிரக்கம் உடையவர் என்பதை ஓர் எடுத்துக்காட்டால் விளக்குக .

பழங்காலத் தமிழ்ப் பண்பாடு

பாட முன்னுரை

தமிழ்நாட்டின் வரலாற்றில் சங்க காலம் எனப்பெற்ற காலம் பொற்காலம் என்பது அறிஞர்களின் கருத்தாகும் .

அக்காலத்தில் மொழி , பண்பாடு , கல்வி , மெய்யுணர்வு ஆகியன மிக உயர்ந்த நிலையில் இருந்தமையால் அக்காலத்தைப் பொற்காலம் என்றனர் .

அப்படியாயின் அன்றைய வாழ்வு எப்படி இருந்தது ?

அந்த உலகம் யாரால் இருந்தது .

இதோ கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய அரசன் கூறுவதைக் கேளுங்கள் !

“ தேவர்களுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும் அதனைத் தாம் மட்டும் தனியே உண்ணமாட்டார் .

யார்மீதும் வெறுப்புக் கொள்ள மாட்டார் .

பிறர்க்கு வரும் துன்பம் கண்டு அவர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சி அத்துன்பத்தை நீக்கும் வரையில் கண் துயில மாட்டார் .

புகழ் தரக்கூடிய செயலென்றால் அதற்குத் தம் உயிரையும் கொடுப்பார் .

பழி வருவதாயின் அதன்பொருட்டு உலக முழுதும் பெறும் வாய்ப்பு வந்தாலும் அதனை ஏற்க மாட்டார் .

அவர்கள் தமக்கென்று முயற்சி செய்யும் தன்னலமற்றவர் .

பிறர்க்கென்றே முயற்சி மேற்கொள்வர் .

அத்தகையோர் இருப்பதால்தான் இந்த உலகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது "

இதுதான் இளம்பெருவழுதியின் உரை. இவ்வாறு வாழ்ந்த பலர் அக்காலத்தில் இருந்தனர் .

இப்படிப்பட்ட பண்பாடு உடையவரே நாட்டின் பெரிய செல்வம் ஆவர் .

இத்தகையோர் பேணிப் பாதுகாத்த தமிழ்ப் பண்பாடு பற்றிய கருத்துகள் இப்பாடப் பகுதியில் விளக்கப்படுகின்றன .

பண்டைக்காலப் பண்பாடு - ஒரு விளக்கம் வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோளை அடைவதையே பண்டைக் காலத் தமிழர் மிகச் சிறந்த பண்பாட்டுக் கூறாகக் கருதினர் .

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே ( புறம் : 214 )

( குறும்பூழ் = சிறு பறவை , வறுங்கை = வறிய கை )

என்று பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் கூறுகின்றார் .

இதன் பொருள் என்ன தெரியுமா ?

யானையை வேட்டையாட வேண்டும் என்று போகின்றவன் யானையை எளிதாகப் பெற்றுவிடக்கூடும் .

ஒரு சிறிய பறவையை வேட்டையாட வேண்டும் என்று போகின்றவன் அது கிடைக்காமலும் திரும்பக்கூடும் .

எனவே ஒருவன் உயர்ந்த குறிக்கோளைப் பெறவேண்டும் என்பது இதன் பொருள் .

பிறர்க்கு உதவ வேண்டும் ; தன்னலமின்றி வாழவேண்டும் ; நல்லவைகளைச் செய்ய இயலாவிட்டாலும் தீயவைகளைச் செய்யவே கூடாது .

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின் ( புறம் : 195 )

என்கிறார் புலவர் ஒருவர் .

மேலும் அறம் , பொருள் , இன்பம் என்ற மூன்றையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர் பண்டைத் தமிழர் .

அறத்திலிருந்து தவறுதல் கூடாது ; தவறினால் பழிவரும் என்று கருதினர் .

அப்பழி தாங்க முடியாதது என எண்ணினர் .

எனவே அறம் செய்வதைப் பண்பாட்டின் ஒரு கூறாகக் கருதிச் செயல்பட்டனர் .

6.1.1 சங்கங்களும் சங்க காலமும்

சங்ககாலம் என்று அக்காலம் கூறப்படுவதன் காரணம் யாது ?

சங்கம் என்றால் கூட்டம் , ஒரு தொகுப்பு , திரட்சி என்பது பொருள் .

பௌத்தர்களும் , சமணர்களும் துறவிகளின் கூட்டத்தைச் சங்கம் என்று குறித்தனர் .

புலவர்களின் கூட்டம் சங்கம் என்ற பெயரைப் பெற்றது .

புலவர்களின் சங்கம் இருந்தமையால் அக்காலம் சங்ககாலம் எனப்பட்டது .

பழந்தமிழ் நாட்டில் மூன்று சங்கங்கள் இருந்தன .

அக்காலத்தில் ஒன்றை ஒன்று அடுத்துவந்த இம்மூன்று சங்கங்களும் தமிழ் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தன .

முதற்சங்கம் பாண்டி நாட்டின் தென்பகுதியைக் கடல் கொள்வதற்கு முன்பிருந்த பாண்டியர் தலைநகரில் இருந்தது .

அச்சங்கத்தில் அகத்தியர் போன்ற பெரும்புலவர்கள் இருந்தனர் .

அச்சங்கம் நெடுங்காலம் நிலைபெற்றிருந்தது .

பின்பு அந்நகரைக் கடல் கொண்டபின் அச்சங்கமும் , அச்சங்கம் உண்டாக்கிய நூல்களும் அழிந்தன .

பிறகு , கபாடபுரத்தில் இரண்டாம் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது .

அச்சங்கத்திலேயே தொல்காப்பியர் இடம் பெற்றிருந்தார் .

புலவர் பலர் பலவகை நூற்களை இச்சங்கத்தில் இருந்து படைத்தனர் .

கபாடபுரம் கடலால் கொள்ளப்பட்டது .

மூன்றாம் சங்கம் இன்றுள்ள மதுரையில் தோற்றுவிக்கப் பட்டது .

இச்சங்கத்திலேயே பத்துப்பாட்டு , எட்டுத்தொகை என்னும் பதினெட்டுச் சங்க நூல்கள் அரங்கேறின .

சங்கங்கள் மூன்றும் இருந்த காலம் பற்றித் தெளிவாக அறிய முடியவில்லை .

எனினும் , மூன்றாம் சங்கமாகிய கடைச்சங்கம் கி.பி. 300 வரை இருந்தது என்று உறுதியாகக் கூறப்படுகிறது .

இடம் காலம் பெரும்புலவர் இயற்றிய நூல்கள்

முதற் சங்கம் கடல் கொண்ட பாண்டியர் தலைநகர் பழைய தென்மதுரை அறுதியிட்டுக் கூற முடியவில்லை அகத்தியர் அகத்தியம்

இடைச் சங்கம் கபாடபுரம் அறுதியிட்டுக் கூற முடியவில்லை தொல்காப்பியர் தொல்காப்பியம்

கடைச் சங்கம் மதுரை கி .

பி.300 வரை கபிலர்

பரணர் ஒளவையார் திருவள்ளுவர் பத்துப்பாட்டு எட்டுத்தொகை திருக்குறள்

சந்திரகுப்தன் மகனான பிந்துசாரன் கி.மு. 301 முதல் 273 வரை அரசாண்டவன் .

இவன் தமிழகத்தைத் தவிர்த்த தென்னாட்டுப் பகுதிகளை வென்றான் .

அவனால் தமிழகத்தை வெல்ல முடியவில்லை .

ஏனெனில் தமிழகத்தில் வலிமைமிக்க தமிழரசர் கூட்டணி ஒன்று இருந்தது .

தமிழரசர் கூட்டணி ஒன்று 113 ஆண்டுகளாக வலிமை பெற்றிருந்தது என்று கி.மு. 165இல் கலிங்க அரசனாக இருந்த காரவேலனின் கல்வெட்டு ஒன்று குறிக்கின்றது .

மௌரியர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்ததனைச் சங்க இலக்கியங்களான அகநானூறும் புறநானூறும் குறிக்கின்றன .

எனவே பல்லவர் தமிழ்நாட்டை ஆள்வதற்கு முற்பட்ட காலத்தைச் சங்க காலம் எனக் குறிக்கலாம் . சங்க இலக்கியங்கள் காட்டும் வரலாற்றுக் குறிப்பின் அடிப்படையில் கி.மு. மூன்று முதல் கி.பி. மூன்று வரையிலான அறுநூறு ஆண்டுக் காலத்தைச் சங்ககாலமெனக் கொள்ளலாம் .