81

6.1.2 வழிகாட்டும் பண்பு

சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் .

அவற்றில் பத்துப்பாட்டு என்பது

1. திருமுருகாற்றுப்படை

2. பொருநராற்றுப்படை

3. சிறுபாணாற்றுப்படை

4. பெரும்பாணாற்றுப்படை

5. முல்லைப்பாட்டு

6. மதுரைக்காஞ்சி

7. நெடுநல்வாடை

8. குறிஞ்சிப்பாட்டு

9. பட்டினப்பாலை

10. மலைபடுகடாம்

என்ற பத்துப்பாடல்களையும் கொண்ட தொகுப்பாகும் .

இப்பத்தில் மலைபடுகடாம் என்பதற்குக் கூத்தராற்றுப்படை என்ற பெயரும் உண்டு .

எனவே பத்து நூல்களில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை என்னும் நூல்வகைக்கு உரியன .

ஆற்றுப்படை என்றால் வழிப்படுத்துதல் என்று பொருள் .

வள்ளல் ஒருவனிடம் செல்வம் பெற்று வறுமை நீங்கிய ஒருவன் , திரும்பி வரும் வழியில் காணுகின்ற வறியவன் ஒருவனிடம் , " இன்னாரை அடைந்தால் நீயும் செல்வன் ஆகலாம் " எனக் கூறி வழிகூறுதலாகும் .

6.1.3 புலவரைப் போற்றிய பண்பு

கபிலர் என்ற புலவர் சேரன் வாழியாதன் அரசவையில் இருந்தார் .

அரசன் அப்புலவரின் கையைப் பிடித்துப் பார்த்தான் .

அது மிகவும் மென்மையாக இருந்தது .

‘ என்ன உங்கள் கை மிகவும் மென்மையாக உள்ளதே ’ என்றான் அரசன் .

அதற்குக் கபிலர் ‘ கறிசோறு சாப்பிட்டு வருந்துவதைத் தவிர இந்தக் கைகள் வேறு என்ன கடுமையான தொழிலைச் செய்கின்றன ? ’ என்று கூறினார் .

இவ்வாறு புலவர்கள் அரசர்களின் நிழலில் இனிது வாழ்ந்தனர் .

முரசுகட்டில் அரசர்களின் வீரமுரசத்தை வைப்பதற்கு உரியது .

ஒருமுறை சேரமானின் முரசை நீராட்டிக் கொண்டு வரச் சென்றிருந்தார்கள் .

அந்த வேளையில் அரசனைக் காணவந்த மோசிகீரனார் என்ற புலவர் , நடந்துவந்த களைப்பால் முரசுகட்டிலில் அறியாமல் ஏறிப்படுத்து உறங்கி விட்டார் .

முரசு வைக்கும் கட்டிலில் வேறு யாராவது உட்காருவதுகூட அம்முரசுக்குரிய அரசனை அவமானப்படுத்தும் செயலாகும் .

முரசு நீராடி வந்தது .

அரசனும் வந்தான் .

யாரோ ஒருவர் முரசுகட்டிலில் உறங்குவதைக் கண்டு அரசன் சினம் கொண்டான் .

வாளை உருவி வெட்டிவிடவும் கருதினான் .

ஆனால் உறங்குபவர் புலவர் ஒருவர் என்பதை உணர்ந்தவுடன் அவன் மனம் மாறியது .

புலவர் தன்னை மறந்து வியர்வையோடு உறங்குவது கண்டு மனம் உருகினான் .

விசிறி ஒன்று எடுத்துப் புலவரின் வியர்வை தீர விசிறினான் .

இவை போலும் நிகழ்ச்சிகள் பல பழங்காலத்தில் நிகழ்ந்துள்ளன என்பதற்குப் பண்டை இலக்கியங்கள் சான்று பகர்கின்றன .

இத்தகைய நிகழ்ச்சிகள் மன்னர்கள் புலவர்களைப் போற்றிய பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன .

எட்டுத்தொகை நூல்கள் - I

எட்டுத்தொகை நூல்கள் என்பன

1. நற்றிணை

2. குறுந்தொகை

3. ஐங்குறுநூறு

4. பதிற்றுப்பத்து

5. பரிபாடல்

6. கலித்தொகை

7. அகநானூறு

8. புறநானூறு

என்பன . இவற்றில் நற்றிணை , குறுந்தொகை , ஐங்குறுநூறு , கலித்தொகை , அகநானூறு என்ற ஐந்தும் காதல் வாழ்க்கை பற்றிய பாடல்களாகும் .

காதல் வாழ்வு பற்றிப் பேசுவது அகப்பொருள் எனப்படும் .

பதிற்றுப்பத்து , புறநானூறு ஆகிய இரண்டும் வீரவாழ்வு பற்றியவை .

வீரத்தையும் , வெளியுலக வாழ்வையும் பற்றிப் பேசுவது புறப்பொருள் எனப்படும் .

பரிபாடல் இரண்டு பொருளும் பற்றிய நூலாகும் .

இனி இவை காட்டும் பண்பாட்டைத் தனித்தனியே காணலாம் .

பத்துப்பாட்டு , எட்டுத்தொகை நூல்கள் அக , புறப்பொருள்களாக வகைப்படுத்தப் பட்டிருப்பதை அட்டவணையில் காண்க .

ப த் து ப் பா ட் டு அகப்பொருள் ( காதல் வாழ்க்கை ) பற்றியது புறப்பொருள் வெளியுலக வாழ்க்கை ( வீரவாழ்வு ) பற்றியது

1. திருமுருகாற்றுப்படை

2. பொருநராற்றுப்படை

3. சிறுபாணாற்றுப்படை

4. பெரும்பாணாற்றுப்படை

5. முல்லைப்பாட்டு

6. மதுரைக்காஞ்சி

7. நெடுநல்வாடை

8. குறிஞ்சிப்பாட்டு

9.பட்டினப்பாலை

10. மலைபடுகடாம் ( கூத்தராற்றுப்படை )

எ ட் டு த் தொ கை 1 .

நற்றிணை

2. குறுந்தொகை

3. ஐங்குறுநூறு

4 பதிற்றுப்பத்து

5. பரிபாடல் பரிபாடல்

6. கலித்தொகை

7. அகநானூறு

8. புறநானூறு

6.2.1 நற்றிணையில் பண்பாடு

• ஆயர்

ஆயர்

நற்றிணையில் தமிழர் பண்பாட்டுக் கூறுகள் நன்கு விளக்கம் பெற்றுள்ளன .

இந்நூல் ஆயர்களின் வாழ்க்கை முறையைத் தெளிவாகக் காட்டுகின்றது .

முல்லை மலரையும் பனங்குருத்தையும் சேர்த்துத் தலைமாலையாகச் சூட்டிக் கொள்ளும் ஆயனைக் காணுங்கள் .

அவன் தோளில் ஓர் உறியும் தோல் பையும் விளங்குவதைப் பாருங்கள் .

உறியிலே அவனுக்குரிய உணவு ; தோற்பையில் தீக்கடை கோல் முதலியன உள்ளன .

முதுகில் ஒரு பனை ஓலைப் பாயைக் கட்டியிருக்கிறான் .

கையில் கோல் கொண்டு இருக்கும் ஆயன் சில சமயம் அக்கோலை ஊன்றி அதன் மீது ஒரு காலை ஊன்றி ஒடுங்கிய நிலையில் இருப்பான் .

ஆடு மாடுகளை நெறிப்படச் செலுத்த இவன் வீளை ( Whistle ) ஒலியும் எழுப்புவான் .

இது ஆயர்களின் வாழ்க்கை முறையைக் காட்டுகிறது .

• குறிஞ்சிக் காவலர்

மலை சார்ந்த குறிஞ்சி நில ஊர்களில் இரவு முழுவதும் குறிஞ்சிப்பண்ணைப் பாடிக்கொண்டு தூங்காமல் காவலர் வலம் வருவர் .

நெய்தல் நில ஊர்களில் காவலர் யாமம் தவறாமல் மணியடித்து ஓசை எழுப்பித் ‘ தலைக்கடை புறக்கடை வாயில்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் ’ என்பர் .

• நெய்தல் பரதவர்

இரவில் நெய்தல் நிலப் பரதவர் திமிங்கல வேட்டையாடுவர் .

மீன்களைப் பிடித்துக் கொண்டு விடியற்காலையில் கரைக்குத் திரும்புவர் .

புன்னைமர நிழலில் அமர்ந்து கள் அருந்துவர் .

மேற்குறிப்பிட்ட நற்றிணைச் செய்திகள் , பண்டைத் தமிழர்களின் வாழ்க்கை முறையையும் , பண்பாட்டுச் செம்மையினையும் வெளிப்படுத்துகின்றன .

• ஆடை

அக்காலத்தில் மெல்லிய ஆடை வகைகள் நேர்த்தியாக நெய்யப்பட்டன .

துகில் , நுண்துகில் , அம்துகில் , கலிங்கம் , பூங்கலிங்கம் , நூலாக்கலிங்கம் என அவை பல வேறு வகைப்பட்டன . பாலை நிலத்தவர் துவராடை உடுத்தியிருந்தனர் .

மலைநில மக்கள் நாணல் பின்னிய உடை உடுத்தியிருந்தனர் .

மகளிர் தழையாடை உடுத்தலும் உண்டு .

• மனச்செம்மை

மக்களின் மனச் செம்மையையும் சால்பையும் நற்றிணையில் சில காட்சிகள் விவரிக்கின்றன .

தேரின் உருளையில் நண்டுகள் நசுங்காதவாறு பாகன் தேரை ஓட்டினான் .

மருந்து மரமாக இருந்தாலும் அம்மரம் பட்டுப் போகும்படி அதனிடம் பயனைக் கொள்ள மாட்டார் .

இரவுப் பொழுதில் விருந்தினர் வந்தாலும் வீட்டில் உள்ளவர் மகிழ்ச்சியோடு அவர்களை வரவேற்றனர் .

இவையெல்லாம் நற்றிணை புலப்படுத்தும் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகள் .

6.2.2 குறுந்தொகையில் பண்பாடு

குறுந்தொகையில் மக்களின் பண்பட்ட உள்ளம் நன்கு வெளிப்படுகின்றது .

குறுந்தொகையில் , தமிழ் மக்களின் அகவாழ்க்கை சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது .

காதலர்களின் அன்பின் தன்மையும் , அதனை அவர்கள் வெளிப்படுத்திய பாங்கும் படித்துச் சுவைக்கத் தக்கன .

காதலர்கள் ஒருவருக்கொருவர் பேசும் உரையாடல்களிலிருந்து , பண்டைத் தமிழர்கள் , நம்பிக்கைகள் , பழக்க வழக்கங்கள் முதலியனவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது .

தலைவனைப் பார்த்துத் தலைவி கூறும் கூற்றாக வரும் பாடல் ஒன்றில் , இந்தப் பிறவியில் மட்டுமல்ல , இனி வரும் பிறவிகளிலும் , உன் நெஞ்சினுள் நிறைந்து நிற்கும் காதலி நானாகத்தான் இருக்க வேண்டும் எனச் சுவைபடக் கூறுகிறாள் .

இம்மை மாறி மறுமை யாயினும் நீயாகியர் என்கணவனை , யானாகியர் நின் நெஞ்சுநேர் பவளே

( குறுந்தொகை : 49 )

காதலர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அன்பின் பிணைப்பினை , இதைவிடச் சுவையாகச் சொல்ல இயலுமா ?

இதில் , காதலர்கள் , ஒருவருக்கொருவர் எத்தகைய அன்பு உள்ளங்கொண்டு வாழ்ந்தனர் என்பதுவும் , அந்தக்கால மக்கள் எந்த விதமான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் என்பதும் சிறப்பாக வெளியிடப்படுகிறது .

மேலும் பண்டைத் தமிழர்களுக்குப் பல பிறவிகளில் நம்பிக்கை இருந்திருக்கிறது என்பதுவும் புலப்படுகிறது .

இவை தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளாகத் திகழ்கின்றன .

6.2.3 ஐங்குறுநூற்றில் பண்பாடு

ஐங்குறுநூற்றில் பண்பாடு பற்றிய செய்திகள் பல உள்ளன .

அக்காலத்தில் ஓர் ஊரை அடுத்திருந்த பகுதி சேரி எனப்பட்டது .

குறிப்பிட்ட சாதியினர் வாழுமிடத்தைச் சேரி என்று அக்காலத்தவர் கூறுவதில்லை .

அக்காலத்தில் பகல் பன்னிரண்டு மணி முதல் இரவு பன்னிரண்டு மணி வரை உள்ள பொழுது பாதிநாள் எனக் கணக்கிடப்பட்டது .

பகல் பன்னிரண்டு மணியிலிருந்தே நாளைக் கணக்கிடுவது அக்கால வழக்கமென்பது இதனால் அறியப்படும் .

மகனுக்குத் தந்தை தன் தந்தையின் பெயரை வைத்தல் அக்கால மரபாகும் .

தந்தை பெயரன் என அதனால் பேரனைக் குறித்தனர் .

இவையெல்லாம் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளாக ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது .

எட்டுத்தொகை நூல்கள் - II

மேலே நற்றிணை , குறுந்தொகை , ஐங்குறுநூறு ஆகிய மூன்று நூல்களில் பண்பாடு அமைந்த பாங்கைக் கண்டோம் .

இப்பகுதியில் எஞ்சியுள்ள ஐந்து நூல்களில் பண்பாடு பற்றிய செய்திகளைக் காண்போம் .

6.3.1 பதிற்றுப்பத்தில் பண்பாடு

அக்காலச் சேரநாட்டுப் பகுதியில் விளங்கிய பண்பாடு பதிற்றுப்பத்தால் அறியப்படுகின்றது .

சேரநாட்டில் அக்காலத்திலேயே வேதநெறிக்கு மதிப்பிருந்தது .

அந்தணர்க்கு அந்நாட்டு வேந்தர் மிக மதிப்பளித்தனர் .

அரசர்கள் தவம் செய்வதால் பெரும் செல்வங்கள் கைகூடும் எனக் கருதினர் .

பெருஞ்சேரல் இரும்பொறை என்ற அரசன் தன் புரோகிதனைத் தவம் செய்து வருமாறு அறிவுறுத்தினான் .

அவ்வரசன் மன அமைதி , செல்வம் , மகப்பேறு , கொடை , தெய்வ உயர்வு ஆகியன தவத்தால் அமையும் எனத் தெரிவித்துப் புரோகிதனைத் தவம் செய்யக் காட்டிற்கு அனுப்பினான் .

சேரநாட்டு அயிரைமலையில் கொற்றவை கோயில் இருந்தது .

போரில் வெற்றி வேண்டி அரசர் அயிரைமலைக் கொற்றவையை வழிபட்டனர் .

பாலைக் கௌதமனார் என்ற அந்தணப் புலவர் வேண்டிக் கொண்டதற்கேற்பப் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்ற சேர அரசன் பத்துப் பெரு வேள்விகளைச் செய்வித்தான் .

இவை , பதிற்றுப்பத்திலிருந்து பெறும் பண்டைய தமிழர் பற்றிய செய்திகளாகும் .

6.3.2 பரிபாடலில் பண்பாடு

பரிபாடல் பாண்டி நாட்டுப் பழக்க வழக்கங்கள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றது .

கண்ணன் , பலதேவன் ஆகிய இருவரையும் அக்காலத்தவர் பெரும்பெயர் இருவர் எனக் கூறினர் .

இவ்விரு தெய்வங்களுக்கும் மதுரைக்குப் பக்கத்தில் உள்ள அழகர்மலையில் கோயில் இருந்தது .

இம்மலை அக்காலத்தில் திருமாலிருஞ் சோலைமலை எனப்பட்டது .

மக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று இம்மலையில் திருமாலையும் பலதேவனையும் வழிபட்டனர் . தலைவன் பரத்தையோடு சேர்ந்து வையையில் நீராடியதைப் பரிபாடல் காட்டுகின்றது .

மக்கள் வையையாற்றுப் புதுவெள்ளத்தில் நீராடும்போது பொன்னால் செய்த நத்தை , நண்டு , இறால் , வாளைமீன் ஆகியவற்றை நீரில் விட்டனர் .

மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் ஆகமம் அறிந்த பூசகர் விழா நடத்தினர் .

அப்போது பெண்கள் தைந்நீராடல் எனப்பெறும் நோன்பை மேற்கொண்டனர் .

‘ நிலம் மழை பெற்றுக் குளிர்க ’ என்று மகளிர் கூறி நீரில் மூழ்கி ஆடும் நீராடல் அம்பா ஆடல் எனப்பட்டது .

இவ்வழக்கமே பிற்காலத்தில் பாவை நோன்பாகியிருக்கிறது .

திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில் மண்டபத்தில் பல ஓவியங்கள் வரையப் பெற்றிருந்தன .

நாள் , மீன்கள் , சூரியன் முதலான கோள்கள் எவ்வெவ்விடத்தில் இராசிச் சக்கரத்தில் நிற்கின்றன என்பது குறித்த ஓவியம் ஒன்று வரையப்பட்டிருந்தது .

இரதி , மன்மதன் குறித்த ஓவியம் ஒன்று இருந்தது .

கௌதம முனிவன் , இந்திரன் , அகலிகை , இந்திரன் கொண்ட பூனை வடிவம் ஆகிய உருவங்கள் ஓவியமாக ஆக்கப்பட்டிருந்தன .

இவ்வாறு பாண்டிய நாட்டுப் பழக்க வழக்கங்களாகிய தமிழர் பண்பாட்டுக் கூறுகள் பரிபாடல் மூலம் வெளிப்படுகின்றன .

6.3.3 கலித்தொகையில் பண்பாடு

கலித்தொகையில் இடம்பெறும் ஏறு தழுவுதல் பற்றிய செய்தி தமிழர் பண்பாட்டில் குறிக்கத்தக்கதாகும் .

காடும் காடு சார்ந்த நிலமுமாகிய முல்லை நிலப்பகுதியில் இந்த வீரவிளையாட்டு நிகழ்ந்தது .

கொம்பு சீவப்பட்ட எருதுகளை அடக்கிய வீரர்களைப் பெண்கள் விரும்பி மணம் முடித்தனர் .

தொழுவில் ஏறுகள் கட்டவிழ்த்து விடப்படும் .

இளைஞர்கள் நீர்த்துறையிலும் ஆலமரத்திலும் மாமரத்திலும் உறையும் தெய்வங்களை வணங்கியபின் தொழுவில் பாய்ந்து காளைகளோடு போராடுவர் .

மகளிர் பரண்மீது நின்று ஏறுதழுவும் காட்சியைக் காண்பர் .

வீரர் சிலரின் மார்பில் காளைகள் கொம்புகளால் குத்தும் .

குடர் வெளியே தள்ளப்படும் .

ஏறுகளை அடக்கும் வீரர்கள் மக்களால் போற்றப்படுவர் .

ஏறு தழுவல் முடிந்தபின் ஊர்மன்றத்தில் மகளிரும் மைந்தரும் கைகோத்துக் குரவையாடுவர் .

ஏறு தழுவுதற்குத் தயங்கும் ஆயர் இளைஞனை ஆயர் மகள் கணவனாக ஏற்றுக்கொள்ள மாட்டாள் .

ஆயர் பெண் எருமையின் கொம்பைத் தெய்வமாக வைத்து வழிபட்டுத் திருமணத்தை நடத்துவர் .

கலித்தொகை கீழ்க்கண்ட வாழ்வியல் உண்மைகளை எடுத்துச் சொல்கிறது .

இவை இக்கால மாந்தரின் மனச்செம்மையையும் , முதிர்ச்சியையும் காட்டுகின்றன .

• செல்வம் நிலையில்லாதது .

• யாவர்க்கும் தீங்கு செய்பவன் இறுதியில் கெட்டு ஒழிவான் .

• கொடைப்பண்பு இல்லாதவனின் செல்வம் அவனைச் சேர்ந்தவரைப் பாதுகாக்காது .

• அறிவற்றவர் தம் இறுதி பற்றியும் முதுமை பற்றியும் எண்ண மறந்து விடுவர் .

• நிலவு நாள்தோறும் தேய்வது போல இளமையும் அழகும் தேயும் .

• நேர்மையற்ற முறையில் தேடிய பொருள் இம்மையிலும் மறுமையிலும் பகையே தரும் .

• இளமை , காமம் ஆகியன நாள்தோறும் கழிவன .

• சோம்பர் இல்லாதவன் செல்வம் வளரும் .

• பொருள் இல்லாதவன் நடத்தும் இல்லறம் இன்பம் தராது .

6.3.4 அகநானூற்றில் பண்பாடு

அகநானூற்றில் அக்காலத் தமிழர் திருமணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்குச் சான்றுகள் உள்ளன .

வீட்டுக்கு முன் உள்ள முற்றவெளியில் பந்தல் இடப்பட்டு மணல் பரப்பப்படும் .

பந்தலைச் சுற்றிலும் மலர் மாலைகள் தொங்கவிடப்படும் .

மனையின்கண் விளக்கு எரிந்து கொண்டிருக்கும் .

உழுத்தம் பருப்புடன் அரிசி சேர்த்துச் சமைத்த பொங்கல் விருந்து படைக்கப் பெறும் .

சந்திரன் உரோகிணியுடன் சேரும் நல்லோரையில் மக்களைப் பெற்ற வாழ்வரசியர் மணமகளை நீராட்டிக் ‘ கற்பில் வழுவாது , பல பேறுகள் தந்து கணவனுடைய விருப்பத்திற்கு உரியவளாய்த் திகழ்க ’ என வாழ்த்துவர் .

மணமக்களைப் பெரியோர் நெல்லும் மலரும் கொண்டு வாழ்த்துவர் .

இறைச்சியோடு சேர்ந்த நெய்ச்சோறு ஆக்கிப் படைத்தலும் இம்மணவிழாவில் நிகழும் .

மணமுழவும் பெரிய முரசமும் ஒலிக்கும் .

அப்போது வாகை இலையை அறுகம்புல்லின் அரும்புடன் சேரக்கட்டுவர் .

வெண்மையான நூலில் இலையும் அரும்பும் கொண்ட மாலையைச் சூட்டி மணமகளை அலங்கரிப்பர் .

இத்திருமணங்களில் எரி வளர்த்தல் , தீவலம் வருதல் , மந்திரம் கூறுதல் ஆகியன இல்லை .

ஒவ்வோர் ஊரிலும் அக்காலத்தில் பொதியில் எனப்படும் ஊர்மன்றம் ஒன்று இருந்தது .

அங்குக் கந்து எனப்படும் மரத்தூண் நடப்பட்டிருந்தது . அதனை மக்கள் வழிபட்டனர் .