82

இதிலிருந்தே இலிங்க வழிபாடு வளர்ந்திருக்க வேண்டும் .

காக்கும் தெய்வமான திருமாலின் ஐந்து படைகளின் ( சங்கு , சக்கரம் , வில் , வாள் , கதாயுதம் ) உருவம் கொண்ட ஐம்படைத்தாலி என்ற அணியைச் சிறுபிள்ளைகளுக்குப் பெற்றோர் அணிவித்தனர் .

மலையின்மீது கார்த்திகை நாளில் விளக்கிட்டு வழிபடுதல் அக்கால வழக்கமாகும் .

தினைக்கதிரை உண்ண வந்த களிற்றுயானை ( ஆண் யானை ) யினைத் தினைப்புனம் காவல் காத்த பெண் குறிஞ்சிப்பண் பாடி , அதனை நின்ற நிலையிலிருந்து அகலாமல் உறங்கச் செய்தாள் என்று அகநானூறு கூறுகின்றது .

பண்டைக்காலத் திருமணமுறை , உணவு முறை , வழிபாடு , சிறுவர்களுக்கு ஐம்படைத்தாலி அணியும் வழக்கம் முதலிய பண்பாட்டுக் கூறுகளை அகநானூறு வெளியிடுகிறது .

6.3.5 புறநானூற்றில் பண்பாடு

புறநானூற்றை அக்காலப் பண்பாட்டுக் களஞ்சியம் என்று கூறலாம் .

அரசர்களுக்கு அஞ்சி வாழாத கல்விச்செருக்கு புலவர்களிடம் இருந்தது எனப் புறநானூறு கூறுகின்றது .

தம்மை மதிக்காமல் பரிசளிக்க வந்த வேந்தர் , காலந்தாழ்த்திப் பரிசளித்த கொடையாளி , அதுபோல் தகுதியறியாது பரிசில் வழங்க முயன்ற மன்னர் ஆகியோர் கொடையை அக்காலப் புலவர்கள் ஏற்கவில்லை .

“ எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே " ( புற : 206-13 )

“ பெரிதே உலகம் பேணுநர் பலரே " ( புற : 207-7 )

“ உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம் " ( புற : 197-16 )

என்பன போன்ற உயர்ந்த சிந்தனைக் கூற்றுகள் புறநானூற்றில் உள்ளன .

பிசிராந்தையார்

பண்பாட்டில் நட்பு சிறந்த இடம் பெறுகிறது .

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு உலகில் எங்கும் காண இயலாதது .

கோப்பெருஞ் சோழன் சோழ நாட்டு அரசன் ; ஆந்தை பாண்டி நாட்டிலுள்ள பிசிர் என்ற ஊரைச் சார்ந்த புலவர் .

இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததில்லை .

ஆனால் இருவரிடையே உயிர்நட்புப் பொருந்தியது .

கோப்பெருஞ்சோழன் தன் மக்களோடு மனம் மாறுபட்டு வெறுப்புற்ற நிலையில் உயிர் துறக்க எண்ணினான் .

வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பு கொண்டு உயிர்விடும் செயலை அக்காலத்தில் வடக்கிருத்தல் என்பர் .

சோழன் வடக்கிருந்தான் .

திருவரங்கம் என்ற ஊரில் காவிரிக்கரையில் சோழன் வடக்கிருந்தபோது தன் பக்கத்தே இருந்த சான்றோரிடம் ‘ என் நண்பன் ஆந்தை என்னைத் தேடி வருவான் .

நான் உயிர்நீத்தபின் வந்தால் , எனக்கு அருகே அவனுக்கும் உயிரடக்கம் கொள்ள இந்த இடத்தை நான் அளித்தேன் என்று கூறுங்கள் ’ என்று கூறி உயிர் விட்டான் .

அவன் சொன்னபடியே ஆந்தையும் வந்தார் .

நிகழ்ந்தது அறிந்து அவ்விடத்தேயே இருந்து அவரும் உயிர் நீத்தார் .

பொன்னும் மணியும் முத்தும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் மாலை சமைக்கும்போது பக்கத்தில் நெருங்கி வந்து விடுதல் போலச் சான்றோர்கள் சான்றோரையே சேர்வர் என்று புலவர் ஒருவர் இந்நிகழ்வு குறித்துப் போற்றினார் .

குமணன்

புலவர் ஒருவர் பரிசில் பெறுவதற்காகத் தன் தலையையே கொடுக்க முன் வந்தான் குமணன் என்னும் மன்னன் .

புலவர் ஒருவர் வறுமையைத் துடைக்க வசதியற்ற நிலையில் கொடையாளி ஒருவன் தன் வாளை அடகு வைத்தான் ; மற்றொருவன் பகைவர்மீது போர் தொடுக்கவும் கருதினான் .

பூதப்பாண்டியன் என்ற அரசன் ‘ பகைவரை நான் வெல்லாவிடில் நான் என் மனைவியைப் பிரிந்த குற்றத்திற்கு ஆட்படுவேனாக ’ என்று சூள் உரைத்தான் .

பூதப்பாண்டியன் இறந்தபின் கைம்மை நோன்பு ஏற்க விரும்பாத அவன் மனைவி உடன்கட்டை ஏறினாள் .

சோழன் நலங்கிள்ளி ‘ பகைவரை நான் வெல்லாவிடின் என் கழுத்திலுள்ள மாலை பொது மகளிர் மார்பில் புரண்ட குற்றத்தை எய்தட்டும் ’ என்றான் .

சேர அரசன் ஒருவன் , ‘ என் மனைவி இறந்த பிறகும் நான் உயிர் வாழ்கிறேனே ’ என்று மனம் நொந்தான் .

புறநானூறு தமிழர் வரலாற்றின் கருவூலம் .

அது தமிழர்களின் வீரப் பெருமையையும் , மன்னர்களின் கொடைச் சிறப்பையும் , புலவர்களின் பெருமிதத்தையும் , நட்பின் சிறப்பினையும் வெளிப்படுத்துகிறது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. சங்ககாலம் என்று அக்காலம் பெயர் பெறக் காரணம் யாது ?

விடை

2. எட்டுத்தொகை நூல்களில் இரண்டன் பெயரைக் குறிப்பிடுக .

விடை

3. பதிற்றுப்பத்து எந்த அரசர்களைப் பற்றிப் பாடப்பெற்றது ?

விடை

4. அகப்பொருள் , புறப்பொருள் என்பன பற்றி விளக்குக .

விடை

5. புறநானூறு காட்டும் பண்பாட்டு நிகழ்வுகளில் இரண்டைக் குறிப்பிடுக .

சில பண்பாட்டு நிகழ்வுகள் ( அகம் )

பழங்காலத் தமிழக வரலாற்றில் சுவைமிக்க நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன .

பெருமையும் மகிழ்ச்சியும் அடையத்தக்க நிகழ்ச்சிகளும் , தமிழர் பண்பாட்டிற்கு விளக்கம் என்று கூறத்தக்கனவும் அக்காலத்தில் நிகழ்ந்துள்ளன . அவற்றில் சிலவற்றை இப்பகுதியில் காணலாம் .

6.4.1 ஆதிமந்தி

ஆதிமந்தி என்பவள் கரிகாற்சோழனின் மகள் .

இவளுடைய கணவன் ஆட்டனத்தி என்பவன் சேர இளவரசன் .

ஆட்டனத்தி ஆடற்கலையில் வல்லவன் .

ஒருமுறை சோழன் கழாஅர் என்னும் காவிரி ஆற்றுத் துறையில் ஒரு நீர்விழாக் கொண்டாடினான் .

வெள்ளம் பரந்து வந்த காவிரியில் ஆட்டனத்தி குளித்து நீந்துகையில் நீரினால் இழுத்துச் செல்லப்பட்டான் .

ஆதிமந்தி அழுது புலம்பினாள் .

காவிரியாற்றின் கரையில் தொடர்ந்து ஓடிக் கணவனைத் தேடினாள் .

மருதி என்ற மீனவனின் மகள் வெள்ளத்தில் மூழ்கிய ஆட்டனத்தியை நாகைப்பட்டினத்துக் கடற்கரையில் மீட்டுக் கொண்டு வந்தாள் .

ஆதிமந்தி கணவனை மீண்டும் பெற்றதனால் கற்புக்கரசி என்று போற்றப்பட்டாள் .

இந்த வரலாற்று நிகழ்ச்சியைப் பாரதிதாசன் உட்படப் பலர் சுவையான நாடகமாகவும் காப்பியமாகவும் வடித்துள்ளனர் .

6.4.2 தரையில் விழுந்த பூ

தலைவன் ஒருவன் தான் காதல் கொண்ட தலைவியிடம் ஒரு முல்லைச் சரத்தைக் கொடுத்தான் .

வெளியில் தெரியுமாறு அதனைச் சூடிக்கொள்ள முடியுமா ?

யார் கொடுத்த பூ என்று கேட்க மாட்டார்களா ?

எனவே கூந்தலில் உள்ளே அந்த மலர்ச்சரத்தை வைத்து முடித்துக் கொண்டாள் .

இவ்வாறு மலரை முடிந்ததை மறந்து விட்டாள் .

வளர்ப்புத்தாய் கூந்தலை ஒப்பனை செய்ய மறுநாள் அழைத்தபோது அவள் முன் போய் உட்கார்ந்தாள் .

தாய் கூந்தலை அவிழ்த்து விட்டவுடன் அவள்முன் அப்பூ விழுந்தது .

‘ யார் கொடுத்தது இப்பூ ’ என்று தாய் திடுக்கிட்டு எழுந்தாள் .

தோழியின் வழியாகக் காதலர் உறவு வெளியாயிற்று .

திருமணத்திற்கு ஒத்துக்கொண்டு பெற்றோர் மண ஏற்பாடுகளைச் செய்தனர் .

ஒரு மலர்ச்சரம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திவிட்டது பார்த்தீர்களா ?

தமிழர்களின் அகவாழ்க்கையில் காதல் பெறும் சிறப்பு இது போன்ற பல நிகழ்ச்சிகளின் மூலம் சங்ககால அக இலக்கியங்களில் வெளிப்படுத்தப்படுகிறது .

6.4.3 விக்கலுக்குத் தண்ணீர்

தாயும் மகளும் வீட்டில் இருந்தார்கள் .

மகளோடு சிறுவயதில் முன்பு தெருவில் விளையாடும் ஒருவன் இப்போது இளைஞனாய் வளர்ந்திருக்கிறான் .

அவன் இவர்களின் உறவுமுறைக்காரனும் ஆவான் .

அவன் இப்பெண்கள் இருக்கும் வீட்டிற்கு வந்தான் .

திண்ணையிலிருந்து கொண்டு ‘ வீட்டில் இருப்போரே !

குடிக்கத் தண்ணீர் கொடுங்கள் ’ எனக் கேட்டான் .

தாயும் தன் மகளைப் பார்த்து ‘ அவனுக்குத் தண்ணீர் கொடுத்துவா ’ என்றாள் .

தண்ணீர் எடுத்துச் சென்று இளைஞனிடம் அப்பெண் கொடுக்கும்போது அவன் அவள் கையைப் பற்றினான் .

அவள் உடனே ‘ அம்மா இவன் செய்ததைப் பார்த்தீர்களா ? ’ என்று அலறினாள் .

தாய் உடனே ‘ என்ன செய்தி ’ என்று கேட்டு விரைந்து வந்தாள் .

இப்போது அன்புடைய அத்தலைவனைக் காட்டிக் கொடுக்கத் தலைவி விரும்பவில்லை .

ஏனென்றால் அவன்மீது அவளுக்கும் காதல் இருந்தது .

எனவே ‘ ஒன்றுமில்லையம்மா !

தண்ணீர் குடித்தவுடன் இவனுக்கு விக்கல் வந்துவிட்டது ’ என்றாள் .

தாய் உடனே அவன் முதுகைத் தடவி விக்கல் நீக்க முயன்றாள் .

அவனோ திருட்டுத்தனமாகத் தலைவியைப் பார்த்துச் சிரித்தான் .

அருமையான இந்தக் காதல் நாடகத்தில் தமிழர் பண்பாடு விளக்கமாகத் தெரியும் .

சில பண்பாட்டு நிகழ்வுகள் ( புறம் )

மேலே காதல் வாழ்வில் சில சுவையான நிகழ்ச்சிகளைப் பார்த்தோம் .

இங்கு வெளியுலக வாழ்வில் குறிப்பாக வீரப்பண்பாடு வெளிப்படும் சில நிகழ்வுகளைக் காணலாம் .

6.5.1 சூளுரைத்த தாய்

நாட்டில் போர் மூண்டுவிட்டது .

வயதில் முதிர்ந்த தாய் ஒருத்தியின் மகனும் போர்க்களம் போயிருந்தான் .

போர் முடிவு என்ன ஆயிற்றோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் முதியவள் . அப்போது பண்பில்லாத சிலர் அந்த முதியவளிடம் வந்து ‘ அம்மா !

உன் மகன் முதுகிலே காயம்பட்டு இறந்துவிட்டான் ’ என்று பொய் கூறிச் சென்றனர் .

முதியவள் துடித்து விட்டாள் .

என் மகன் முதுகிலே புண்பட்டிருந்தால் அவனுக்குப் பால் கொடுத்த மார்பை அறுத்து எறிவேன் என்று சபதம் செய்தாள் .

வீட்டிலிருந்த வாளைக் கையிலே எடுத்தாள் .

போர்க்களத்திலே போய் ஒவ்வொரு பிணமாகப் புரட்டிப் பார்த்தாள் .

அங்கே அவள் மகன் மார்பிலே புண்பட்டு இறந்து கிடந்ததைக் கண்டாள் .

அப்போது அவனைப் பெற்ற நாளில் அடைந்த மகிழ்ச்சியைவிட அதிகமாக அந்தத் தாய் மகிழ்ந்தாள் .

இப்படி ஒரு வீரநிகழ்ச்சியைச் சங்ககால இலக்கியம் நமக்குக் காட்டுகிறது .

6.5.2 அறிவுறுத்திய புலவர்

பாண்டிய அரசன் குடிமக்களிடம் நிலவரி அதிகம் வாங்க முற்பட்டான் .

குடிமக்கள் துன்பப்பட்டனர் .

இதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாய் இருக்கப் புலவர் பிசிராந்தையார் மனம் இடம் கொடுக்கவில்லை .

உடனே அரசனிடம் சென்றார் .

‘ அரசே !

நல்ல விளைந்த வயலில் அறுவடை செய்த நெல்லைச் சோறாக்கி உருண்டை உருண்டையாய்க் கொடுத்தால் யானைக்குப் பலநாள் உணவாகும் .

அப்படி இல்லாமல் யானையையே வயலில் புகவிட்டால் அதன் வாயில் புகுவதைவிடக் கால்பட்டு அழிவது அதிகமாகும் .

அதுபோல முறையாகவும் அளவாகவும் வரி வாங்கினால் அழிவு வராது ; ஆக்கம் உண்டாகும் ’ என்று அறிவுறுத்தினார் .

அரசனும் இந்த அறிவுரையை ஏற்றான் .

இவ்வாறு புலவர் பலர் அரசர்களை நெறிப்படுத்திய காட்சிகள் பழைய இலக்கியத்தில் உள்ளன .

தொகுப்புரை

தமிழக வரலாற்றில் சங்க காலம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும் .

அன்று காதல் வாழ்விலும் வீர வாழ்விலும் சிறந்த பண்பாடு நிலவியதை மேலே கண்ட இலக்கியங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன .

பரிசு பெற்று வருபவர் , செல்வமின்றி வருந்தும் வறியவருக்கு வளமைபெற வழிகாட்டுதல் ; செல்வமிக்க அரசர்கள் , புலவரைப் போற்றி அவர்கள் முன் அடங்கி ஒழுகுதல் ; பாய்ந்து வரும் காளையை இளைஞன் பற்றி அடக்கித் தன் வீரத்தைக்காட்டிப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுதல் ; வைதிகச் சடங்குகள் அற்ற திருமணம் ; மனத்துன்பம் ஏற்பட்ட காலத்தில் வடக்குத் திசைநோக்கி அமர்ந்து உண்ணாநோன்பு கொண்டு உயிரை விடுதல் ஆகியன தமிழர் பண்பாட்டில் குறிக்கத்தக்க சில கூறுகளாகும் .

இச்செய்திகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளமையினை நீங்கள் அறிந்தீர்களா ?

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. ஆதிமந்தியின் துயரத்திற்குக் காரணம் யாது ?

விடை

2. பூவைக் கண்டு தாய் அதிர்ச்சி அடைந்தமை ஏன் ?

விடை

3. தண்ணீர் கொடுத்த தலைவி தலைவனைப் பற்றித் தாயிடம் என்ன கூறினாள் ?

விடை

4. முதுகு காட்டினான் மகன் என்று கேட்ட தாய் என்ன சபதம் செய்தாள் ?

நாலடியார்

பாட முன்னுரை

இலக்கிய வளமும் இனிமையும் கொண்டது தமிழ்மொழி .

இலக்கிய வகைகள் பலவற்றையும் எண்ணற்ற இலக்கியச் செல்வங்களையும் தமிழ்மொழியில் காணலாம் .

அவற்றுள் அற இலக்கியங்கள் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றிருக்கும் இலக்கிய வகையாகும் .

• பதினெண்கீழ்க்கணக்கில் அறம்

பண்டைத் தமிழ்ச் சான்றோர் நூல்களின் இயல்புக்கேற்பவும் , பாடல் அடிகளின் அளவிற்கேற்பவும் பாகுபாடு செய்து பத்துப்பாட்டு , எட்டுத்தொகையெனத் தொகுத்தனர் .

மேலும் மேற்கணக்கு நூல்கள் , கீழ்க்கணக்கு நூல்கள் என்று பாடல் அடிகளின் அளவைக் கொண்டும் பகுத்தனர் .

இவற்றுள் நான்கடிக்கு மேல் இயற்றப்பட்ட பாடல்களைக் கொண்டவை மேற்கணக்கு எனப்படும் .

நான்கடிக்குள் இயற்றப்பட்ட பாடல்களைக் கொண்டவை கீழ்க்கணக்கு எனப்படும் .

மேல் என்றால் பெரிது என்றும் கீழ் என்றால் சிறிது என்றும் பொருள்படும் .

கணக்கு என்பது நூலைக் குறிக்கும் .

பதினெண் மேற்கணக்கு பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமாம் .

கீழ்க்கணக்கு திருக்குறள் முதலாகக் கைந்நிலை ஈறாக உள்ள பதினெட்டு நூல்களுமாம் .

எனவே இவை பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன .

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்

பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம் இந்நிலைய காஞ்சி யுடன் ஏலாதி என்பவே

கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என வரும் பழைய பாடலொன்று பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடுகிறது .

இதனை நீங்கள் நினைவு வைத்துக் கொள்கிறீர்களா ?

• முப்பாலும் நாலடியும்

முப்பால் ( திருக்குறள் ) , நாலடி என்ற இரண்டு நூல்களும் உறுதிப் பொருள்களைப் பால் , இயல் என்னும் அதிகாரங்களாக வகுத்துக் கூறுகின்றன .

இன்னாமை இவை எனக் கூறுவது இன்னா நாற்பது .

இனியவை இவை எனக் கூறுவது இனியவை நாற்பது .

பெரும்பாலும் நிலையாமையைக் கூறுவது முதுமொழிக்காஞ்சி என்ற நூல் .

பழமொழி முற்காலத்துத் தமிழ் நாட்டில் வழங்கிய பழமொழிகள் பலவற்றைச் செய்யுளின் ஈற்றடியில் வைத்துச் சொல்ல வந்த கருத்தை விளக்குகிறது .

நான்மணிக்கடிகை அறிய வேண்டிய உறுதிப்பொருள்களில் நான்கினை ஒவ்வொரு பாடலிலும் விளக்குகின்றது .

ஆசாரக்கோவை , அன்றாட வாழ்க்கையில் கையாள வேண்டிய நெறிகளைத் தொகுத்து உணர்த்துகிறது .

திரிகடுகம் , சிறுபஞ்சமூலம் , ஏலாதி இவை மூன்றும் நோய் நீக்கும் மருந்துப் பெயர்களை மேற்கொண்டு உயிர்க்கு நலமான பொருட்களை முறையே மூன்று , ஐந்து , ஐந்தின் மேற்பட்டனவாக அமைத்து மொழிகின்றன என்பர் அறிஞர் வையாபுரிப்பிள்ளை .

அறம் - விளக்கம்

அறம் என்றால் என்ன ?

என்ற வினா எழுப்பினால் அதற்கு விடை காண்பது கடினமானது .

அறம் என்ற சொல்லின் பொருள் என்ன ?

‘ அறு ’ என்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘ அறம் ’ என்னும் சொல் .

இச்சொல்லுக்கு அறுத்துச் செல் , வழியை உண்டாக்கு , உருவாக்கு , துண்டி , வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன .

இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்குப் பின்வருமாறு விளக்கம் கூறலாம் .

மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே - முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர் .

‘ பிறவிதோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம் ’ என்ற ஆன்மீக விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு .

( திருக்குறள் - நீதி இலக்கியம் - பக் 23 )

1.1.1 அறம் பற்றிய கருத்துகள்

நம் முன்னோர் அறம் என்னும் சொல்லிற்குத் தந்துள்ள விளக்கத்தோடு எதிக்ஸ் ( Ethics ) என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தரப்படும் பொருள் விளக்கம் மிகவும் பொருந்துவதாக உள்ளது .

நல்ல அல்லது தீய செயல்கள் மூலம் தானே வெளிப்படும் மக்களுடைய நடத்தையைப் பற்றிய ஆய்வியல் கலையே ‘ எதிக்ஸ் ’ என்பதாகும் .

இதைத் தமிழில் அறவியல் எனலாம் .

எதிக்ஸ் என்னும் சொல் கிரேக்க மொழிச் சொல்லாகும் .

முதன் முதலில் இச்சொல் பழகிப்போன நடத்தை , வழக்கம் , மரபு என்னும் பொருள்களையே உணர்த்தி வந்தது .

பின்னர் நடத்தை என்னும் பொருளே போற்றப்பட்டது .

ஒழுக்கத்தைக் குறிப்பிடும் Moral என்னும் ஆங்கிலச் சொல்லும் பழக்க வழக்கம் என்னும் பொருளையே குறித்தது .

இதனால் மனித நடத்தை குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள் வழக்கமாகக் கொள்ளும் முடிவையே ஒழுக்கமாகக் ( Morality ) கொண்டனர் என்பது புலனாகின்றது .

இதனால் தனி மனித நடத்தை பெரும்பாலோரால் பின்பற்றப்பட்டபொழுது ஒழுக்கமெனும் பண்பாக மலர்ந்து வாழ்க்கை நெறியாக மாண்புற்றது எனலாம் .

1.1.2 அறத்தின் அடிப்படை

இனி அறம் என்பது செயலா , சொல்லா , எண்ணமா என்று பார்ப்போம் .

செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணமாகும் .

எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் சொல்லும் செயலும் தூய்மையாக அமைய முடியும் .

எண்ணம் எழுவதற்கு இருப்பிடமாக உள்ள மனம் மாசு இல்லாததாக இருக்க வேண்டும் .

மனத்தின் மாசினைப் போக்குவதற்கு முயலுவதே அறமாகும் .

மன மாசு என்பது யாது ?

மன மாசினைப் போக்குவது எவ்வாறு ?

பொறாமை , பேராசை , வெகுளி , கடுஞ்சொல் ஆகியவை மனமாசுகளாகும் .

அவை இல்லாமல் இருப்பதே அறம் .

இதையே குறளாசிரியர் .

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற

( குறள் - 34 )

( மாசு = குற்றம் , இலன் = இல்லாதவன் , ஆகுலநீரபிற = பிற ஆரவாரிக்கும் தன்மை உடையன )

என்றும் ,

அழுக்கா றுஅவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்