83

( குறள் - 35 )

( அழுக்காறு = பொறாமை , அவா = பேராசை , வெகுளி = கோபம் , இன்னாச்சொல் = கடும் சொல் , இழுக்கா ( இழுக்கி ) = நீக்கி )

என்றும் கூறுகிறார் .

இவ்விளக்கங்களின் அடிப்படையில் பார்க்கும்போது அறம் என்பது எண்ணம் , சொல் , செயல் ஆகிய மூன்றும் சேர்ந்த ஒன்று என்று கொள்ளலாம் .

இத்தகைய அறம் பற்றிப் பேச எழுந்தவையே அறநூல்கள் .

அறநூல்களுக்கு உயிராக இருப்பது கருத்து .

அறக் கருத்துகளையும் இலக்கியச் சுவை என்னும் இனிப்பிலே கலந்து கொடுக்கப்படும்பொழுது அவை அற இலக்கியங்கள் ஆகின்றன .

இனி அற இலக்கியங்களுள் ஒன்றாகிய நாலடியார் பற்றிப் பார்ப்போமா ?

நாலடியார்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாகக் குறிப்பிடப்படும் சிறப்புடையது நாலடியார் .

ஆலும் வேலும் பல்லுக்குறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

இதில் வரும் நாலும் என்ற சொல் நாலடியாரையும் இரண்டும் என்ற சொல் திருக்குறளையும் குறிக்கிறது .

ஆலும் , வேலும் பல்லுக்கு உறுதி அளிக்கிறது .

அதுபோல் நாலடியாரையும் , திருக்குறளையும் கற்றவர்கள் சொல்வன்மையும் உறுதியும் பெற்றவர்கள் ஆகிறார்கள் .

பொதுமறை என்று புகழ்பெற்ற திருக்குறளோடு ஒப்ப வைத்து எண்ணும் சிறப்புடையது நாலடியார் என்ற கருத்தையும் இப்பழமொழி விளக்குகிறதல்லவா ?

1.2.1 அமைப்பும் உள்ளடக்கமும்

நாலடியார் , கடவுள் வாழ்த்து நீங்கலாக நானூறு வெண்பாக்களைக் கொண்ட நூல் .

நாலடி நானூறு என்றும் வழங்கப் பெறும் நூல் .

இந்நூல் சமண முனிவர்களால் இயற்றப்பட்டது .

திருக்குறளைப் போல் மூன்று பால் பகுப்புகளை உடையது .

பதினொரு இயல்களும் , நாற்பது அதிகாரங்களும் கொண்டது .

அதிகாரத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் நானூறு பாக்களைக் கொண்டது .

• துறவுக்குச் சிறப்பிடம்

அறத்துப்பாலில் துறவு நெறி அறங்களும் , இல்லறநெறி அறங்களும் கூறப்படுகின்றன .

சமண முனிவர்கள் இயற்றிய நூல் ஆதலின் துறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் கூறப்படுகிறது .

நிலையாமை பற்றிய கருத்துகளும் அழுத்தமாகக் கூறப்படுகின்றன .

• இல்லறமும் பிறவும்

இனிய இல்லறத்தைப் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கின்றது .

இல்லறத்திற்குப் பொருந்தாதவை எவை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது .

மக்கள் வாழ வேண்டிய பாங்கினைச் சொல்கிறது .

கல்விச் சிறப்பையும் , கற்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது .

சான்றோர் இயல்பையும் பெருமையையும் எடுத்துரைக்கிறது .

பண்பிலார் இயல்பையும் பட்டியலிடுகிறது .

குறளின் அதிகாரப் பொருளோடு தொடர்புடைய கருத்தை ஒவ்வொரு குறளும் கூறுகிறது .

ஆனால் நாலடியாரில் ஒரே கருத்தைப் பல அதிகாரங்களுள் வெவ்வேறு உவமைகளோடு கூறும் பாடல்கள் உள்ளன .

1.2.2 நூல் சிறப்பு

சிறந்த உவமைகளை நாம் நாலடியாரில் காணலாம் .

பழமொழிகளாலும் , பழைய கதைகளாலும் , உறுதிப் பொருள்களை வலியுறுத்துதலில் இந்நூல் ஈடிணையற்றது .

அறத்தை உரைக்கும் போதும் அழகும் சுவையும் தோன்றக் கூறுகிறது .

இயற்றியவர் முனிவராயினும் இலக்கியத்திற்குச் சுவையூட்டும் கற்பனை உணர்வையும் இவர்கள் கைவிடவில்லை .

• கற்பனை

அறிவொளியால் உலகத்தை அறநெறிப்படுத்தும் பெரியோர் விரைவில் இறந்துபடுகின்றனர் .

அறிவிலிகளோ நெடுங்காலம் வாழ்கின்றனர் .

இம்முரண்பாட்டின் காரணம் யாதென எண்ணிய புலவர் கூறுவதைப் பாருங்கள் .

சாற்றை விரைவில் இழுத்துக் கொண்டு , சக்கையை விட்டு விடுதல் எவர்க்கும் இயல்பு .

கூற்றுவனும் சான்றோரை இளமையிலேயே எடுத்துக் கொண்டு மற்றோரை விட்டு விடுகிறான் .

இங்குப் புலவர் கூறிய காரணம் எதுவாக இருப்பினும் சரியோ ! தவறோ அதை நம்மால் ரசிக்காமல் இருக்க முடியாது .

இது போன்ற உலகியலை ஒட்டிய கற்பனைகளை நாலடியாரில் காணலாம் .

• பழமொழி

பொருள் விளக்கத்துக்காகப் பல பழமொழிகளும் ஆங்காங்கு எடுத்தாளப்பட்டுள்ளன .

மேன்மக்கள் என்றும் மேன்மக்களே , கயவர் எக்காலத்தும் கயவரே என்பதனைப் புலப்படுத்த ,

கைக்குமாம் தேவரே தின்னினும்வேம்பு

( நாலடி - 112 )

( கைக்குமாம் = கசக்குமாம் )

என்ற பழமொழி வந்துள்ளது .

ஒருவர் பொறை இருவர் நட்பு - 223

கற்கிள்ளிக் கையிழந்தற்று - 336

மகனறிவு தந்தையறிவு - 367

என்பன போன்ற பழமொழிகள் பலவற்றைக் காணலாம் .

• சுவைகள்

இதுவரை உவமைகளாலும் , உலக நடைமுறைகளைக் கூறுதலாலும் பழமொழிகளாலும் , உறுதிப் பொருள்களை உணர்த்துதலிலும் நாலடியார் தனிச் சிறப்புப் பெற்றுள்ளதைப் பார்த்தோம் .

அறப்பொருள் உரைக்கும் நிலையிலும் நகைச்சுவை தோன்றப் பாடுவதை நாலடியாரில் காணலாம் .

கொடுத்தாலன்றி விடாத இரவலர் பற்றி வழங்கப்படும் பாடல்களும் கதைகளும் தமிழில் மிக உண்டு .

கொடாக்கண்டன் விடாக்கண்டன் கதையைப் போன்றது .

இரவலர் ஒருவர் புகை நுழைய முடியாத இடத்திலும் நுழைந்து யாசித்தலைக் கண்டு வியந்து பாடிய பாடல் இது .

பொருள்கள் பலவற்றுள்ளும் நீரே நுட்பமானது .

அதனை விட நுட்பமானது நெய் .

நெய்யை விட நுணுக்கம் உடையது புகை .

நீர் நுழைய முடியாத இடத்திலும் நெய் நுழையும் .

நெய் நுழைய முடியாத இடத்திலும் புகை நுழையும் .

ஆனால் யாசிப்பவன் புகை நுழைய முடியாத இடத்திலும் புகுந்து செல்வான் என்கிறார் புலவர் ( நாலடி : 282 )

இங்கே புலவர் அனுபவிக்கும் வியப்புச் சுவை நம்மையும் மகிழ்விக்கிறது .

கல்லாத பேர்களிலும் கல்லே மிக நல்லது

( நாலடி - 334 )

என்ற பேதைமை பற்றிய பாடல்களில் இகழ்ச்சிச் சுவை மிளிர்கிறது .

உயிரற்ற கற்கள் கூட மனிதர்கள் அமரவும் படுக்கவும் உதவுகின்றன .

அறிவிலார் எதற்கும் பயனில்லாதவர்கள் என்பதைத்தான் அவ்வாறு வெளிப்படுத்துகிறார் கவிஞர் .

நிலையாமை பற்றிய பாடலில் எள்ளற் சுவையைக் காணலாம் .

இறந்தவனின் பிணத்தைச் சுமந்து கொண்டு செல்பவர்கள் தாங்களும் ஒருநாள் இறப்பவர்களே என நினைக்கிறார்களா ?

இல்லையே என்ற கருத்தில் இகழ்ச்சிக் குறிப்புடன் பிணத்தை இனிச் சாம்பிணங்கள் சுமந்து செல்கின்றன என்கிறார் .

செத்தாரைச் சாவார் சுமந்து

( நாலடி - 24 )

என்ற வரி கற்போர் நினைவை விட்டு நீங்காது .

எதுகை மோனை அழகுபட வரும் பல பாடல்களை நாலடியாரில் காணலாம் .

சான்றுக்கு ஒரு பாடலைப் பாருங்கள் .

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்

வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்

வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்

வைகலை வைத்துணரா தார்

( நாலடி - 39 )

இப்பாடலில் ஒவ்வொரு சொல்லிலும் முதல் எழுத்து ஒன்றாக வரும் மோனை என்னும் தொடை அழகினைக் காணலாம் .

அவ்வாறே ‘ வைகல் ’ எனும் சொல் அடுத்தடுத்து வருவதைக் கண்டு மகிழலாம் .

இனி நாலடியார் நூலிலிருந்து நாம் அறியலாகும் பிற செய்திகளைப் பார்ப்போம் .

இடைக்கால மக்களின் பழக்க வழக்கங்கள் , தொழில் , உணவு , மக்கள் பயன்படுத்திய நாழி , தூணி , பதக்கு முதலிய அளவு கருவிகள் , காணி , முந்திரி முதலிய நில அளவைகள் , காதம் , யோசனை முதலிய தொலைவு அளவைகள் பிறன் மனை விழைந்தார்க்குக் கொலைத் தண்டனை அளிக்கப்பட்டமை , இம்மை மறுமை உண்டு , வினைப்பயன் உண்டு , கூற்றுவன் பாசக்கயிற்றால் உயிர்களைப் பிணித்துக் கொண்டு செல்வான் என்ற நம்பிக்கைகள் இருந்தன என்பவை பற்றியும் அறிந்து கொள்கிறோம் .

இலக்கிய உலகில் நாலடியார் சிறந்ததோர் அற இலக்கியமாக விளங்குகிறது .

துறவறம் சமணத் துறவிகள் இயற்றிய நூலாதலின் துறவறவியல் முதலில் சொல்லப்படுகிறது .

வீடுபேறு அடைவதுதான் மனிதப் பிறவியின் உயர்ந்த நோக்கம் , அதற்குப் பற்றினை நீக்க வேண்டும் .

பற்றினை நீக்கத் தவத்தை மேற்கொள்ள வேண்டும் .

அதற்குத் துறந்து செல்வது சிறந்த வழியென்பது சமணர்தம் கோட்பாடு , அதனால் துறத்தல் பெருமை உடைய செயல் .

அதுபோல் அவர்கள் செய்யும் தவமும் பெருமை உடையது .

வலிமை வாய்ந்தது .

எந்த அளவுக்கு வலிமை வாய்ந்தது தெரியுமா ?

விளக்கொளிமுன் கரிய இருள் ஓடுவதுபோல் ஒருவன் தவத்தின் முன் பாவம் நில்லாது ஓடும் .

அந்த அளவுக்குச் சிறப்பு வாய்ந்தது தவம் .

1.3.1 துறவிகள் இயல்பு

துறவிகள் இளமை , அழகு , யாக்கை , செல்வம் ஆகியன நிலைத்து நில்லாதன என்பதனை நன்கு உணர்ந்தவர்கள் .

அதனால் ‘ நான் ’ என்னும் அகப்பற்றையும் ‘ எனது ’ என்னும் புறப்பற்றையும் அறவே நீக்கியவர்கள் .

முற்றும் துறந்த இவர்கள் மனவலிமை உடையவர்கள் .

பிறர் தம்மை இகழ்ந்தபோதும் அவர்கள் மீது சினம் கொள்ளாமல் இரக்கம் கொள்வார் .

ஏன் தெரியுமா ?

எம்மை இகழ்ந்த தீவினைப்பயனால் அவர்கள் நரகத்தில் சென்று வருந்துவார்களே என்ற நல்ல எண்ணத்தினால் அவர்களுக்காகவும் இரங்கும் கருணையுடையவர்கள் .

இத்தகைய உயர்ந்த பண்புகளே துறவியர் இயல்பாகின்றன .

நிலையாமை

செல்வம் , இளமை , யாக்கை ஆகியன நிலைத்த தன்மை உடையன அல்ல .

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு

( குறள் - 336 )

( நெருநல் = நேற்று )

என்று நிலையாமையைச் சொல்லும் குறட் கருத்தின் விளக்கத்தை நாலடியார் பல பாடல்களில் எடுத்துரைக்கிறது .

நிலையாமையை உணராத பேதைமையும் நாலடியாரில் சுட்டிக் காட்டப்படுகிறது .

1.4.1 செல்வம் நிலையாமை

அறுசுவை உணவுகள் ஒரு பக்கம் .

அவ்வுணவினை ஊட்ட அன்பு மனைவி அவன் பக்கம் .

கணவனோ எதை உண்ணுவது என்று தெரியாமல் ஒவ்வொன்றிலும் ஒரு பிடி அளவே உண்ணும் செல்வந்தன் .

இத்தகைய செல்வச் செழிப்பில் இருப்பவனும் ஒருநாள் அனைத்துச் செல்வங்களையும் இழக்கக் கூடும் .

அத்துடன் நில்லாமல் தனக்குத் தேவையான அற்பமான கூழையும் பிறரிடம் சென்று யாசிக்கும் நிலையை அடையலாம் என்ற கருத்தமைந்த பாடல் செல்வம் நிலையாமையை விளக்குகிறது ( நாலடி-1 )

வண்டியின் உருளை போன்று யார் மாட்டும் நில்லாது சென்று கொண்டே இருக்கும் செல்வம் என்று செல்வத்தின் நிலையாமைத் தன்மையைச் சொல்கிறது இன்னொரு பாடல் ( நாலடி - 2 ) .

மிகுந்த செல்வம் பெற்றிருக்கிறோம் என்று அறியாமையினால் செருக்குற்றுத் திரிவர் சிலர் .

அவர்கள் வருந்தும்படி செல்வம் அவர்களை விட்டு நீங்கும் .

எப்படித் தெரியுமா ?

இவர்கள் செல்வந்தர்களாய் இருந்தார்கள் என்ற அடையாளம் கூட இல்லாதபடி நீங்குமாம் .

இதற்கு எதனை உவமை சொல்கிறது நாலடியார் , பாருங்கள் .

இரவில் கரிய மேகம் வெளிப்படுத்திய மின்னல் , தோன்றிய வேகத்தில் சுவடில்லாமல் அழியும் .

அடையாளமில்லாமல் அழிந்து போகும் .

அதுபோலச் செல்வமும் அழிந்து விடும் .

இக்கருத்தமைந்த பாடல் இதோ ,

செல்வர்யாம் என்று செல்வுழி எண்ணாத

புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்

கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி

மருங்கறக் கெட்டு விடும்

( நாலடி - 8 )

( எல் = இரவு ; கொண்மூ = மேகம் ; மருங்கு = அடையாளம் )

எனவே செல்வம் இருக்கின்ற காலத்திலேயே விரைந்து அறம் செய்க என்ற கருத்து இங்கு வலியுறுத்தப்படுகிறது .

மலர் தோறும் தேனெடுத்துக் கூடுகளில் தேனீக்கள் தேன் சேகரிக்கின்றன .

ஆனால் அந்தத் தேனைத் தேனீக்கள் அனுபவிக்கின்றனவா ? இல்லையே .

தேனை யாரோ எடுத்துக் கொண்டு போய்விடுகிறார்கள் .

தேனீக்கள் தேனை இழக்கின்றன .

அதுபோல் பொருளைத் தேடி வைத்தவர்கள் செல்வத்தின் நிலையாமைப் பண்பின் காரணமாகச் செல்வத்தை இழக்கிறார்கள் .

செல்வம் இருந்த காலத்தில் இவர்கள் நல்ல அறம் செய்யவில்லை .

இல்லாதவர்களுக்குக் கொடுக்கவில்லை .

செல்வம் இழந்த நிலையில் அவர்களும் அனுபவிக்க இயலாது .

தேனீக்கள் தேன் சேகரித்து இழக்கும் செயலைச் சாட்சியாகக் காட்டி விரைந்து அறம் செய்வதை வலியுறுத்தும் நாலடிப் பாடல் இது .

உடாஅதும் உண்ணாஅதும் தம்முடம்பு செற்றும்

கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது

வைத்தீட்டி னார்இழப்பர் வான்தோய் மலைநாட

உய்த்தீட்டும் தேனீக் கரி .

( நாலடி - 10 )

( செற்றும் = கெட்டும் ; கரி = சாட்சி )

1.4.2 இளமை நிலையாமை

கூனி வளைந்து , தலை நடுங்கி , தடியினை ஊன்றி நடக்கிறாள் முதியவள் ஒருத்தி .

இவளும் இளமையில் கண்டோர் வியக்கும் தெய்வப் பெண்ணாக இருந்திருப்பாள் .

அழகும் இளமையும் நிலைத்து நில்லாதன என்பதைத்தானே இவை காட்டுகின்றன .

கடுங்காற்று அடிக்கும் போது முதிர்ந்த பழங்கள் உதிர்கின்றன .

பிஞ்சுகளும் உதிர்ந்து விடுதல் உண்டு .

கூற்றுவன் முதியவரை மட்டுமல்லாது இளைஞரையும் எடுத்துக் கொள்வதுண்டு .

அதனால் நாம் இளைஞர் , பின்னால் அறம் செய்து கொள்ளலாம் என்று காலம் தாழ்த்த வேண்டாம் .

எனவே இப்போதே அறம் செய்க என்றுரைக்கும் பாடல் இதோ .

மற்றறிவாம் நல்வினை யாம்இளையோம் என்னாது

கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம்செய்ம்மின்

முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு

( நாலடி - 19 )

( தீவளி = கடுங்காற்று ; நற்காய் = பிஞ்சுகள் ; கரவாது = மறைத்து வைக்காது )

எனவே இளமையிலேயே அறம் செய்க என்று எச்சரிக்கை செய்கிறது இப்பாடல் .

1.4.3 யாக்கை நிலையாமை

பிறப்பு உண்டென்றால் இறப்பும் உண்டு .

பிறந்தவர் யாவரும் இறந்துதான் ஆக வேண்டும் .

தவிர்க்க இயலாது .

ஒரு நாள் கழிந்தது என்றால் வாழ்நாளின் ஒரு பகுதி குறைந்தது என்று பொருள் .

கூற்றுவன் ஒவ்வொரு நாளாக அளந்து மனிதனின் வாழ்நாளை உண்ணுகிறான் .

இதனை வள்ளுவர் ,

நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்

வாள துஉணர்வார்ப் பெறின்

( குறள் - 334 )

என்கிறார் .

ஒருவனின் ஒரு நாள் உணவு ‘ நாழி ’யளவென்பர் .

நாளை அளந்துண்ணும் கூற்றுவனும் ஞாயிற்றை நாழியாகக் கொள்கிறான் .

மனிதனின் வாழ்நாளாகிய தானியத்தைத் தினம் தினம் அளந்து உண்ணுகிறான் .

உண்ண உண்ண மனிதனின் வாழ்நாள் குறைந்து கொண்டே வருகிறது .

ஒரு நாள் ஒன்றுமே இல்லாமல் போய்விடுகிறது .

கூற்றுவன் ஒரு மனிதனை உண்டு முடித்து விடுகிறான் .

இதனை ,

தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்

கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் - ஆற்ற அறம்செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும்