84

பிறந்தும் பிறவாதார் இல்

( நாலடி - 7 )

என்ற பாடல் மூலம் எவ்வளவு அருமையான நிலைமையை எடுத்துரைக்கிறது நாலடியார் !

நீர் மேல் குமிழியே இவ்வுலக வாழ்க்கை .

பறவைகள் தாம் தங்கியிருக்கும் மரக்கிளையை விட்டுப் பறந்து சென்று விடும் .

அது போல உடலை விட்டு உயிர் பறந்து செல்லும் இயல்புடையது .

இதனை உணர்ந்து அறச் செயல்களை விரைந்து செய்க என்று வலியுறுத்துகிறது நாலடியார் ( நாலடி-30 )

நிலையாமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவரும் உயிரைப் பறவைக்கு ஒப்பிட்டுச் சொல்கிறார் .

முட்டைக்குள் இருக்கும் கரு உரிய காலம் வந்தபோது முட்டை தனித்துக் கிடக்கும் .

அது போன்ற உறவும் நட்பும் தான் நம் உடம்புக்கும் உயிருக்கும் இடையே இருக்கிறது .

இக்கருத்தைக் கூறும் குறட்பா ,

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு

( குறள் - 338 )

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி

இன்னினியே செய்க அறவினை

( நாலடி - 29 )

என்று நிலையாமைக்குப் பொருத்தமான உவமையாகப் புல் நுனி மேல் உள்ள நீரைச் சுட்டி விரைந்து அறம் செய்ய வேண்டுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது நாலடியார் .

செல்வம் , இளமை , யாக்கை ஆகியவற்றின் நிலையாமையை உணர்ந்து செய்யும் அறத்தின் பயன் மிகப் பெரியது .

மிகச் சிறிய ஆலம் விதை வளர்ந்து மரமாகிப் பெரிய நிழலைத் தரும் .

அது போல் தகுதியுடையவர்க்குச் செய்யும் அறமும் அளவால் சிறியதாயினும் அதன் பயன் வானத்தை விடப் பெரிதாகி வளர்ந்து நிற்கும் ( நாலடி - 38 ) .

இல்லற நெறி

இல்லற நெறி என்பது இல்லத்தில் மனையாளோடு கூடிவாழும் ஒழுக்கம் .

இல்லறத்திற்குரிய அறங்களை இல்லறவியலில் நாலடியார் கூறுகிறது .

இல்லறத்திற்குத் தேவையான நல்லறங்களை விவரிக்கின்றது .

1.5.1 இல்லறத்திற்கு வேண்டியன

நல்லறமாகிய இல்லறத்திற்குத் தேவையானவை எவை என்று பார்ப்போமா ?

ஈகை , பொறுமை முதலிய நற்குணங்கள் இனிய இல்லறத்திற்கு அடிப்படையாகும் .

• ஈகை

ஈகை என்றால் கொடுத்தல் ; இல்லாதவர்க்குக் கொடுத்தல் .

இரப்போர்க்கு இல்லையென்னாது கொடுப்பது சிறந்த அறமாகும் .

நம்மிடம் இருப்பதில் அரிசி அளவாவது மற்றவர்க்குக் கொடுக்க வேண்டும் .

மற்றவர்க்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கின்றதா ?

சிலருக்கு ஈகைக் குணம் உண்டு .

சிலருக்கு இல்லை என்பதைத் தக்க உவமை கொண்டு விளக்கும் நாலடிப் பாடற் கருத்தைப் பாருங்கள் .

ஈகைக் குணம் உடையவர் , ஊரின் நடுவே பலரும் அணுகிப் பயன் பெற முடியும் மரம் போன்று பலருக்கும் பயன் தருபவர் ; ஊர் நடுவே இருப்பதால் பெண்பனையைப் போன்றவர் .

ஈயாதவர் சுடுகாட்டில் உள்ள ஆண்பனையைப் போன்று பயன் தராதவர் .

மேலும் அணுக இயலாத இடம் என்று பனை மரங்களின் இயல்புகளை மக்களின் பண்புக்கு உவமையாக்கும் அழகை நாமும் ரசிக்கலாம் .

அவை எளிய உவமைகள் ; நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற உவமைகள் ( நாலடி - 97 ) .

முரசின் ஒலி ஒரு குறிப்பிட்ட தூர அளவுக்குக் கேட்க இயலும் .

இடியின் ஒலி இன்னும் அதிக தூரம் கேட்கும் .

சான்றோர் ஒருவர் யாசித்தவர்க்கு ஒன்றைக் கொடுத்தார் என்ற சொல் மூன்று உலகங்களிலும் கேட்கப்படும் சிறப்பை உடையது என்று ஈகையின் சிறப்பைச் சுவைபடச் சொல்லும் ஒரு நாலடிப் பாடல் ( நாலடி - 100 ) .

• பொறையுடைமை

ஈகைக்கு அடுத்தபடியாகப் பொறுமை உடைமை .

அதாவது பொறையுடைமை இல்லறத்திற்கு அடிப்படையான ஒன்று எனலாம் .

இப்பொறுமைப் பண்பு சிறந்தது .

பொறுமை இன்றி இருத்தல் பழிக்குக் காரணமாகிவிடும் ( நாலடி - 72 ) . கீழ் மக்கள் அறியாமையால் செய்யும் செயல்களைப் பொறுக்க வேண்டும் .

பொறுமையின்மை பழியை உண்டாக்கும் என்பதால் பொறுக்க வேண்டும் என்பார் .

நட்பில் கூடப் பொறுமை வேண்டுமென்பார் . தன்னுடைய நண்பர்கள் இனிமையல்லாதவற்றைக் கூறும் போதும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பார் ( நாலடி - 73 ) .

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை

( குறள் - 151 )

தன்னைத் தோண்டக் கூடியவரையும் பொறுத்துக் கொள்ளும் நிலம் போலத் தம்மை இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளுதல் தலை சிறந்த அறமாகும் .

• சுற்றம்

இல்லறத்தில் உறவுப்பாலம் அமைப்பவர்கள் சுற்றத்தார் .

வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் எல்லாம் அன்புள்ள உறவினரைக் கண்டால் நீங்கிவிடும் .

இப்படிப் பட்ட உறவினரைப் பாதுகாப்பவனே சிறந்தவன் .

தன்னிடம் வந்த உறவினரைப் பாதுகாத்துப் பழுத்த மரம் போலப் பலர்க்கும் பயன்படுபவனே சிறந்தவன் .

துன்பமடைந்தவர்க்கு உதவும் பண்பு இல்லறத்தார்க்கு வேண்டும் .

வெயிலினைத் தாங்காது வருகின்றவர்களுக்கு நிழலைத் தந்து இடம்தரும் ஆலமரம் போலவும் ; பறவைகள் பலவும் உண்ணும் பழங்களைத் தரும் ஆலமரம் போலவும் சுற்றத்தினருக்கு உதவ வேண்டும் ( நாலடி - 202 ) .

பல காய்களைத் தாங்கும் மரக்கிளை போலப் பெரியவர்கள் தம்மை வந்தடைந்த உறவினரைக் காப்பாற்ற மாட்டோம் என்று கூற மாட்டார் .

உண்மையான உறவின் உயர்வைக் கூறும் கருத்துச் சிறப்பை நாலடிப்பாடலில் காணலாம் .

பால் சோறு மிக இனிமையானதுதான் .

ஆனால் பகைவரிடமிருந்து அதைப் பெறும்போது அது இனிப்பதில்லை .

ஆனால் உயிர் போன்ற உறவினரிடம் பெறும் உப்பிலாக் கஞ்சியோ இன்பம் தரும் என்கிறது .

( நாலடி - 206 )

1.5.2 இல்லறத்தார் விலக்க வேண்டியன

இல்லறத்திற்குப் பொருந்தாதவையாக உள்ளனவற்றை நாலடியார் எடுத்துரைக்கின்றது .

உலகமே பெறுவதாயினும் பொய் பேசக் கூடாது .

நல்லோரைக் கெடுத்தல் , பிறன் மனை நயத்தல் ஆகியன இல்லறமாகிய நல்லறத்தைக் கெடுப்பனவாம் .

• பொய்யாமை

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு

( குறள் - 299 )

என்று பொய்யாமையை ஒளி தரும் விளக்காகக் கூறுகிறார் திருவள்ளுவர் .

நாலடியார் பொய்யாமை பற்றி என்ன கூறுகிறது என்று பார்ப்போம் .

இரவலன் ஒருவன் பொருளை ஒருவனிடம் யாசிக்கிறான் .

அவன் உடனடியாகப் பொருளைத் தரவில்லை .

கொடுக்க மாட்டேன் என்று மறுக்கவுமில்லை .

பிறகு என்ன செய்தான் தெரியுமா ?

கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்து நீண்ட காலம் கழித்துச் சொன்ன சொல்லைப் பொய்யாக்கி விட்டான் .

இந்தப் பொய்யைத் தான் பெரிய குற்றம் என்கிறது நாலடியார் .

எவ்வளவு பெரிய குற்றம் என்றால் , பிறர் செய்த நன்றியைக் கொன்றவரது குற்றத்தைக் காட்டிலும் பெரிய குற்றம் உடையதாகும் .

இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்

வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க

நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ !

செய்ந்நன்றி

கொன்றாரின் குற்றம் உடைத்து .

( நாலடி - 111 )

( வசையன்று = குற்றமன்று ; நசை = விருப்பம் ; அழுங்க = குறைய ; நிரைதொடீஇ = வரிசையாக வளையல்களை அணிந்த பெண்ணே )

• பிறர் மனை நயவாமை

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் பண்பாடு , பிறர் மனை நயப்பது பண்புக்கு மாறுபட்டது .

பிறர் மனை நயப்பதால் வரும் அச்சம் பெரிது .

ஆதலால் நல்லோர் பிறர் மனைவியை விரும்ப மாட்டார் .

பிறர் மனைவியை விரும்புவாரிடம் அறம் , புகழ் , நட்பு , பெருமை இந்நான்கும் சேரா .

பகை , பழி , பாவம் , அச்சம் ஆகிய நான்கும் சேர்வனவாம் ( நாலடி - 82 ) . குலப்பழி உண்டாகும் ( நாலடி - 84 ) .

முற்பிறப்பில் அயலார் மனைவியை விரும்பியவரே , இப்பிறப்பில் பேடிகளாய்ப் பிறந்து கூத்தாடி உண்பவர்கள் ; என்று பிறன்மனை விரும்பியதால் வரும் தீங்கு அடுத்த பிறவியிலும் தொடரும் என்ற எச்சரிக்கையும் செய்யப்படுகிறது .

( நாலடி - 85 ) இப்பிறவியில் செய்யும் வினைக்குப் பயன் மறுபிறவியிலும் தொடரும் என்ற சமண சமயக் கொள்கையினையும் இங்குக் காணலாம் . தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. ‘ நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி ’ - நாலும் என்ற சொல் பதினெண் கீழ்க்கணக்கில் எந்த நூலைக் குறிக்கிறது ?

[ விடை ]

2. நாலடியார் எத்தனை வெண்பாக்களைக் கொண்டது ?

[ விடை ]

3. இல்லறத்திற்குரிய அறங்களை நாலடியாரில் எவ்வியலில் காணலாம் ?

[ விடை ]

4. ‘ புல் நுனி மேல் நீர் போல் ’ என்ற உவமை எதனை உவமிக்க எடுத்தாளப்படுகிறது ?

[ விடை ]

5. மூன்று உலகங்களிலும் கேட்கப்படும் சொல் எது ?

சமுதாயம்

அறத்துப்பாலை அடுத்துவரும் பொருட்பாலில் அரசியலுக்குரிய தகுதிகள் , தகுதியின்மைகள் விளக்கப்படுகின்றன .

கல்விச் சிறப்பும் சான்றோர் பண்புகளும் கூறப்படுகின்றன .

பெரியவர்களிடம் தவறு இழைக்காதிருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையும் செய்யப்படுகிறது .

தாளாண்மை ( முயற்சி ) மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்பதனையும் எடுத்துரைக்கிறது .

1.6.1 கல்வி

சமுதாயத்தை மேம்படுத்தும் ஆற்றல் உடையது கல்வி .

தலைமுடி அழகும் , ஆடை அழகும் , மஞ்சள் அழகும் அழகல்ல .

கல்வி அழகே சிறந்த அழகாகும் .

கல்விச் செல்வம் கற்பவர்க்கு இன்பத்தைக் கொடுக்கும் .

மற்றவர்க்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையாது .

மாறாக அதிகரிக்கும் பண்புடையது .

கல்வி , புகழைக் கொடுக்கும் ; அறியாமையைப் போக்கும் சிறந்த மருந்து .

பிறரால் திருட முடியாதது .

அரசரின் சினமும் அதைப் பறிக்க இயலாது .

ஆதலால் கல்விச் செல்வத்தையே ஒருவன் தன் மக்களுக்குச் சேர்க்க வேண்டும் .

இத்தகைய கல்வியின் அழகை ,

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு

( நாலடி - 131 )

( குஞ்சி = தலைமுடி ; கொடுந்தானை = வளைவுள்ள ஆடை )

என்று பாராட்டுகிறது நாலடியார் .

நெஞ்சத்தில் யாம் நற்குணமுடையோம் என்று கருதும் கல்வியால் வரும் நடுவுநிலைமையே அழகாகும் .

அழகை மட்டுமா தருகிறது கல்வி ?

இல்லையென்கிறது நாலடி .

வேறு என்ன பயன்களைத் தருகிறது என்று பார்க்கலாமா ?

இந்தப் பிறப்பின் பயனைத் தரும் .

பிறர்க்குக் கொடுப்பதால் குறைவுபடாமல் மேன்மேலும் வளரும் தன்மையது .

தம்மை இன்னாரென்று அறியச் செய்யும் .

அழிதல் இல்லாதது .

அதனால் கல்விபோல் அறியாமை நோயை நீக்கும் மருந்து யாம் பார்த்ததில்லை .

( நாலடி -132 ) அறியாமையை நோயாக்கி , அதனைத் தீர்க்கும் மருந்தாகக் கல்வியை உருவகப் படுத்தியிருப்பது சிறப்பாகும் .

கற்றவர் நட்பு மகிழ்ச்சி தரும் .

அவரோடு செய்யும் நட்பு கரும்பை நுனியிலிருந்து அடிவரை தின்றது போல் நாள் செல்லச் செல்ல இன்பம் மிகுப்பதாகும் .

நற்குணம் இல்லாதார் நட்பு கரும்பை அடியிலிருந்து தின்பது போல்வதாகும் .

அதாவது நாளாக ஆக இனிமை குறைந்து கொண்டே வரும் ( நாலடி - 138 ) .

கல்வி கரையிலாதது .

கற்பவர் வாழ்நாளோ சிறியது . ஆதலால் பொருத்தமான நூல்களையே கற்றல் வேண்டும் .

இக்கருத்தை எவ்வளவு எளிமையாகச் சொல்கிறது இப்பாடல் !

பாலையும் நீரையும் கலந்து வைத்தாலும் நீரை விட்டு விட்டுப் பாலை மட்டுமே உண்ணும் அன்னப்பறவை .

அதுபோல நாமும் தரமற்ற நூல்களை விட்டு நல்ல நூல்களைக் கற்க வேண்டும் என்கிறது ,

கல்வி கரையில கற்பவர் நாள்சில

மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்

ஆராய்ந்து அமைவுடைய கற்பவே - நீரொழியப்

பாலுண் குருகின் தெரிந்து

( நாலடி - 135 )

( அமைவுடைய = தரமான ; குருகு = அன்னம் )

பொருட்பாலில் அரசியலில் முதலாவதாகக் கல்வியைப் பற்றிப் பேசப்படுகிறது .

கல்வியை அரசியலில் வைத்ததால் பொது மக்களுக்குக் கல்வி தேவையில்லையென்று பொருளில்லை .

மன்னன் எவ்வழி அவ்வழி மக்கள் .

அவன் கல்வியறிவு உடையவனாய் இருந்தால் மக்களையும் அறிவுடையர்களாக ஆக்க முயற்சியை மேற்கொள்வான் .

அதனால் பொருட்பாலில் கல்வி பேசப்பட்டுள்ளது .

ஆளுகின்றவர்க்குத் தேவையான பண்புகளை விளக்கிப் பேசுகிறது நாலடியார் .

முதலில் கல்வி , பின் குடிச்சிறப்பு .

இவை மட்டும் போதாது .

நல்லினத்தைச் சேர்தலும் தேவையாகும் .

1.6.2 குடிச்சிறப்பு

குடிச்சிறப்பு ஆட்சியாளருக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்பாகும் .

நற்குணங்கள் , நல்லொழுக்கம் இவை இவர்க்கு இயல்பாகும் .

தீயனவற்றுக்கு அஞ்சுதல் இவர்தம் இயல்பு , வறுமையிலும் தம் கடமையை மறக்காமல் செய்வர் .

வறுமையில் இவர்கள் செய்யும் அறங்களை அற்பர்கள் செல்வக் காலத்திலும் செய்யமாட்டார்கள் .

1.6.3. நல்லினம் சேர்தல்

நல்லோர் இணக்கத்தால் குற்றங்கள் நீங்கும் .

பாலோடு சேர்ந்த நீர் தன் நிறம் மாறுதலைப் போல , பெரியோரைச் சேர்தலால் சிறியோர் இழிகுணங்களும் வெளிப்பட்டுத் தோன்றாது .

எளியவராயிருப்பினும் நல்லோரைச் சார்ந்தவரைப் பகைவரின் சினம் ஒன்றும் செய்யாது .

சேர்கின்ற இனத்தைப் பொறுத்தே ஒருவரின் உயர்வும் தாழ்வும் அமையும் .

நல்ல கல்வியும் சிறப்பும் பெற்றிருந்தாலும் நல்ல இனத்தோடு ஒருவன் சேர்ந்திருக்க வேண்டும் .

காலையில் புற்களின் மீது பனி படர்ந்திருக்கிறது .

வெயில் ஏற ஏறப் புற்களின் மீதுள்ள பனி நீங்கி விடுவதைப்போல முன்னர் தம்மிடத்துள்ள குற்றங்கள் கூட நீங்கப் பெறுவராம் ( நாலடி -171 )

ஒளி பொருந்திய திங்களைச் சேர்ந்திருத்தலால் அதனிடத்துள்ள முயலும் வணங்கப்படும் .

பெரியோர் நட்பினைக் கொண்டால் சிறப்புக் குறைந்தவரும் சிறப்பினைப் பெறுவர் .

இக்கருத்தை எளிமையாக விளக்குகிறது நாலடியார் ( நாலடி -176 )

பாலோடு கலந்த நீர் பாலாக மாறுமே தவிர நீராகத் தன் நிறத்தினை வேறுபடுத்திக் காட்டாது .

அதுபோலவே நல்லினம் சேர்ந்தால் சிறியவரது இழிந்த குணங்களும் தோன்றாமல் போகும் .

சேர்கின்ற இனத்தைப் பொறுத்தே ஒருவன் உயர்வும் , தாழ்வும் அமையும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது ( நாலடி -177 )

மனத்தில் குற்றமற்றவர்களாயினும் தாங்கள் சேர்ந்த கூட்டத்தின் தீமையால் இகழப்படுவர் .

அதனால் நல்லினத்தைச் சேர வேண்டும் என்பதற்கு அழகான உவமை கூறப்படுகிறது .

வெட்டப்பட்ட மரச் செறிவில் நெருப்புப் பற்றினால் , அக்காட்டிலுள்ள வாசனை வீசுகின்ற சந்தன மரமும் வேங்கை மரமும் கூட வெந்து போகும் .

வாசனை உடைய மரம் என்பதால் அது வேகாமலா போகும் ?

அது போல , குற்றமற்றராயினும் தாங்கள் சேர்ந்த கூட்டத்தின் தீமையால் இகழப்படுவர் .

( நாலடி -179 ) அதனால் நல்லினத்தைச் சேர வேண்டும் என்பர் .

இப்படிப்பட்ட உவமைகள்தாம் அறக்கருத்துகளைக் கூறும்போது இலக்கியச் சுவையைத் தந்து இனிமை பயக்கின்றன .

1.6.4 பெரியாரைப் பிழையாமை

‘ நல்லினம் சேர வேண்டும் என்று கூறிய பின் பெரியோரைப் பிழையாமை ’ வேண்டுமென்று அறிவுறுத்துகிறது நாலடி .

பெரியவர்களைத் துணையாகக் கொண்டால் சமுதாயத்தில் முன்னேற முடியும் .

சமுதாயமும் மேம்படும் .

பெரியோர்தம் வெறுப்பால் வரும் துன்பங்களை நீக்குதல் அரிது . எனவே பெரியோர் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்யக் கூடாது .