85

வளைக்குள் இருக்கும் நாகமும் இடியோசைக்கு அஞ்சும் .

பெரியோரின் சினத்துக்கு ஆட்பட்டவர்கள் கோட்டைக்குள் ஒளிந்திருந்தாலும் பிழைக்க மாட்டார்கள் என்று பெரியாரைப் பிழைத்தலின் வரும் துன்பம் கூறப்படுகிறது ( நாலடி - 164 ) .

1.6.5 தாளாண்மை

சமுதாய மேம்பாட்டிற்கும் தனி மனித உயர்வுக்கும் இன்றியமையாத ஒன்று தாளாண்மை .

ஓடியாடி உழைக்கும் முயற்சி உடையவர்கள் பெருமை உடையவர்கள் .

இவர்களுக்குப் பிறரை எதிர்பார்த்து வாழும் சிறுமையாகிய குற்றம் உண்டாகாது .

எப்படி ?

இவர்கள் எக்காலத்திலும் சோர்வு அடைவதில்லை .

வலிமை மிக்க புலி , தக்க இறைச்சி கிடைக்க வில்லையெனில் , ஒரு நாள் சிறிய தவளையையும் பிடித்து உண்ணுமாம் .

எத்தொழிலையும் அற்பமான தொழிலென்று கருத வேண்டாம் .

அதுவே முயற்சியால் மேலான தொழிலாக மாறும் ( நாலடி -193 )

தவம் , கல்வி , முயற்சி என்ற இவற்றாலேயே ஒரு குலம் உயர்வுடையதாகும் ( நாலடி .

195 )

1.6.6 நட்பு

நட்பின் பல நிலைகளை நட்பியலில் நாலடியார் விளக்குகிறது .

திருக்குறளை அடியொற்றி , நட்பாராய்தல் , கூடாநட்பு போன்ற அதிகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன .

• நட்பாராய்தல்

நம் வாழ்க்கையின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக அமையக் கூடியவர்கள் நண்பர்கள் .

எத்தகைய நட்பைப் போற்ற வேண்டும் .

யாருடைய நட்பை நீக்க வேண்டும் என்று வாழ்வு சிறக்க வழி கூறுகிறது , நாலடியார் .

யானையை ஒத்தவர் நட்பினை நீக்குக .

நாயைப் போன்றவர் நட்பினைப் போற்றுக என்றும் நண்பரைத் தேர்ந்தெடுக்க வழி கூறுகிறது .

யானை தினம் தனக்கு உணவு கொடுக்கும் பாகன் ஏதேனும் ஒரு நாள் தவறு செய்யின் அவனையே அழித்து விடும் .

எவ்வளவு உயர்ந்த மனிதனும் ஏதேனும் தவறு செய்யக் கூடும் .

ஆதலால் ஒருவன் தான் செய்த உதவியினை உள்ளத்தில் கொண்டு தீங்கு செய்தாலும் பொருட்படுத்தாத ஒருவனையே தன் நண்பனாகக் கொள்ளுதல் வேண்டும் .

உதவிகள் பல செய்தாலும் ஒரு போது செய்த தீங்கினையே கருத்திற் கொண்டு , காலம் பார்த்து அழிப்பவன் யானை போன்றவன் .

எனவே யானை போன்றவர் நட்பினை நீக்க வேண்டும் .

ஒரு வேளை உணவிட்டாலும் அதையே நினைத்திருக்கும் நாய் அந்த நன்றியை மறவாது .

அந்த நாயை வேல் கொண்டு எறிந்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு நிற்கும் .

அப்படிப்பட்டவரின் நட்பினையே போற்ற வேண்டும் என்று நட்பாராய்தலில் விளக்குகிறது நாலடியார் ( நாலடி - 213 ) .

பக்கத்தில் இருப்பதால் அன்பு பெருகாது .

தூரத்தில் இருப்பதால் நட்பு விலகாது என்றும் நட்பின் திறத்தினை வரையறை செய்கிறது .

மூவகை மரங்களை உவமையாக்கி மூவகை மக்களின் பண்புகளை வெளிப்படுத்தும் நாலடிப் பாடல் நயமுடையது .

பண்பிலா மக்கள் நாள்தோறும் நீர் பாய்ச்சப் பயன்தரும் கமுக மரத்தை ஒப்பர் .

இடைப்பட்டவர் விட்டு விட்டு நீர் பாய்ச்சப் பயன்தரும் தென்னை மரத்தை ஒப்பர் .

விதையிட்ட நாளில் நீர் இடப்பட்டதன்றி , தானே வளர்ந்து பயன்தரும் பனைமரம் ஒப்பர் மேன்மக்கள் என்று , அன்றாடம் மக்கள் பார்த்துப்பழகிய பொருள்களையே உவமையாகக் கூறுவது சிறப்பு ( நாலடி - 216 ) .

• கூடாத நட்பு

யாரை நட்பாகக் கொள்ள வேண்டும் என்று கூறியபின் யாருடைய நட்பை விலக்க வேண்டும் என்றும் கூறுகிறார் .

தம்முடைய காரியம் ஆகும் வரை ஒத்திருந்து காரியம் முடிந்ததும் விலகிச் செல்பவர் நட்புக் கூடாத ஒன்று .

அன்புப் பிணிப்பு இல்லாதவர் நட்பு வைக்கோலில் பற்றிய தீ போல் நீடித்து நிற்றலின்றி அழியும் ( நாலடி - 234 ) .

மன ஒற்றுமை இல்லாதவர் நட்பு துன்பம் தரும் என்ற எச்சரிக்கையும் செய்யப்படுகிறது ( நாலடி - 237 ) .

சான்றோர் இயல்பு

தனி மனித அறம் சிறப்பானது , தனி மனித அறம் மேம்பட்டுத் திகழ்ந்தால் சமுதாயமும் மேம்படும் .

ஒளி பரப்பும் நிலவும் சான்றோரும் ஒப்பாவர் .

சான்றோர் கெட்ட சொற்களை ஒரு போதும் சொல்லார் .

பொய் கூற மாட்டார் .

தீயனவும் , தேவையற்றனவும் எதிர்ப்படும் நிலையில் செவிடராகவும் , குருடராகவும் , ஊமையராகவும் நடந்து கொள்ளும் திறம் பெற்றவர்கள் என்று சான்றோர் இயல்பை மிக நுட்பமாகச் சித்திரிக்கும் நாலடிப் பாடல் இது .

பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்து

ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய புறங்கூற்றில் மூங்கையாய் நிற்பானேல் யாதும்

அறங்கூற வேண்டா அவற்கு

( நாலடி - 158 )

( மூங்கையாய் = ஊமையாய் )

1.7.1. அறிவுடைமை

சான்றோர் அறிவுடையராய் இருத்தலின் அவர் சேர்க்கையும் நட்பும் இன்பம் தரும் .

அறிவுடைமை என்னும் செல்வத்தைப் பெற்றவர் சான்றோர் .

சான்றோர் வறுமையில் வாடவும் , பண்பிலா மக்கள் செல்வம் பெற்றிருக்கவும் கூடும் .

வினைப்பயனே இதற்குக் காரணம் .

முற்பிறவியில் செய்த வினைகளின் விளைவு இப்பிறவியைச் சாரும் என்பதிலும் சமணர்கள் கொண்ட நம்பிக்கை நாலடியாரில் ஆங்காங்கு வெளிப்படுவதைக் காணலாம் .

1.7.2 மானம்

சான்றோர் மானம் உடையவர் .

நற்குணம் இலாதவர் செய்கையால் மனம் கொதிப்பர் .

எனினும் பண்பிலா மக்களிடம் தம் குறைகளைச் சொல்ல மாட்டார்கள் .

இறக்க நேர்ந்தாலும் பழி பாவம் உண்டாக்கும் செயல் செய்ய மாட்டார்கள் .

வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்

மானம் அழுங்க வரின்

( நாலடி - 300 )

( கையுறினும் = கிடைத்தாலும் ; விழுமியோர் = சான்றோர் ; அழுங்க = அழிய / கெட )

வானுலகம் கிடைப்பதாக இருந்தாலும் மானம் கெட வருவனவற்றை விரும்ப மாட்டார்கள் என்று மானம் உடையவரின் மன உறுதி மேற்கூறிய பாடலில் எடுத்துரைக்கப்படுகிறது .

1.7.3 இரவாமை

சான்றோர் இரவாமைப் பண்பு உடையவர் .

இரந்து உண்ணுதலை விடப் பசியோடிருப்பது சிறந்தது என்று எண்ணும் தகைமையர் .

கரவாத திண்அன்பின் கண்ணன்னார் கண்ணும்

இரவாது வாழ்வதாம் வாழ்க்கை

( நாலடி - 305 )

கேட்பவர்களுக்கு மறைக்காத அன்புடையார் மாட்டும் யாசிக்காமல் இருப்பதுதான் சிறந்த வாழ்க்கை என்று சான்றோரின் சிறப்பு மேற்கூறிய பாடலில் பேசப்படுகிறது .

தொகுப்புரை

சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் வாழ்க்கைக்குரிய பல அறங்களை எடுத்துரைக்கிறது .

இளமையும் , செல்வமும் யாக்கையும் நிலைத்தன அல்ல என்பதைப் பல பாடல்கள் எடுத்துரைக்கின்றன .

அறம் செய்து வாழ்தலே சிறப்பு என்பதை மனத்தில் பதியுமாறு கூறுகிறது .

இல்லற இயலில் தனி மனிதனுக்கும் , இல்லறத்தார்க்கும் இருக்க வேண்டிய பண்புகள் எடுத்துக் காட்டப்படுகின்றன .

அரசியலில் ஆட்சியாளருக்கு இருக்க வேண்டிய கல்வி முதலான பண்புகள் வலியுறுத்தப்படுகின்றன .

மேன்மக்கள் இயல்பும் , பண்பிலார் இயல்பும் பட்டியலிட்டுக் காட்டப்படுகின்றன .

நட்பின் பல நிலைகளை நயம்பட எடுத்துரைக்கின்றது .

இது உயர்ந்தது , இது சிறந்தது , இது கீழானது , இது பயனற்றது என்று வாழ்வியல் மதிப்புகளை மனம் கொள்ளக் கூறுகிறது நாலடியார் .

சமணத் துறவிகள் இயற்றிய நூல் ஆதலின் துறவுக் கொள்கையையும் , வினைகளுக்குப் பயன் பிறவிதோறும் தொடரும் என்ற கொள்கையையும் நூலில் பல இடங்களில் காணலாம் .

அறக்கோட்பாடுகளைக் கூறும் நூலாக இருந்தாலும் எளிமையான உவமைகளையும் உருவகங்களையும் கொண்டு தான் கூற வந்த கருத்துகளை விளக்கிச் செல்கிறது .

எதுகையும் மோனையும் நாலடிப் பாடல்களை இனிமையாகச் சுவை பயக்கும்படி செய்கின்றன .

இவற்றால் அற நூலாகிய நாலடியார் அற இலக்கியமாகிப் படிப்போர் உள்ளத்திற்குச் சுவை நல்கி இன்பத்தைத் தருகின்றது என்று கூறலாமல்லவா ?

வாழ்க்கையில் என்றும் நிலைத்திருக்கக் கூடிய உண்மைகளைப் பேசும் திருக்குறளைப் போல் நாலடியாரும் சிறந்து விளங்குகிறது .

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

என்ற பழமொழியும் மேற்கூறியதையே தெளிவாக்குகிறது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. கல்விச் செல்வத்தின் சிறப்பு யாது ?

[ விடை ]

2. யானை போன்றவரின் நட்பை நீக்க வேண்டும் .

ஏன் ?

[ விடை ]

3. மூவகை மரங்களில் எவ்வகை மரங்களை மேன் மக்களுக்கு உவமை கூறுகிறது நாலடியார் ? ஏன் ?

[ விடை ]

4. சான்றோர் இயல்புகளாக நாலடியார் குறிப்பிடுவன எவை ?

நான்மணிக்கடிகை

பாட முன்னுரை

பிற உயிரினங்களை விட மனிதன் உயர்ந்தவன் , சிந்திக்கத் தெரிந்தவன் , துன்பங்களையே நினைத்து வருந்திக் கொண்டிராமல் தெளிவாகச் சிந்தித்துத் துன்பங்களைப் போக்க வழி கண்டு பிடிக்கும் திறன் உடையவன் .

இம்முறையில்தான் சிந்தனையாளர் பலரும் தாம் கண்ட உண்மைகளைப் பிறர் அறிந்து பயன்பெற ஏட்டில் எழுதி வைத்தனர் .

இவ்வாறு எழுதப்பட்ட நூல்கள் மக்கள் வாழ்க்கைக்கு வழி காட்டுகின்றன .

இப்படி வழிகாட்டும் இலக்கியங்களுள் ஒரு வகை என அறநூல்களைச் சொல்லலாம் .

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நான்மணிக்கடிகை என்ற அறநூலைப் பற்றி இப்பாடத்தில் படிக்கலாம் .

பாடல்களில் கூறப்பெறும் நான்கு கருத்துகளினால் நான்மணிக்கடிகை என்று இந்நூல் பெயர் பெற்றது .

கடிகை என்ற சொல்லுக்குரிய பொருள்களில் துண்டம் என்பது ஒன்றாகும் .

ஆதலின் நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்று பொருள்படும் .

நான்கு வகையான நீதி மணிகளால் கோக்கப்பட்ட அணிகலன் எனவும் பொருள் கொள்ளலாம் .

ஒவ்வொரு பாடலிலும் சிறந்த நான்கு கருத்துகளைத் தேர்ந்தெடுத்துச் சிறந்த முறையில் கூறியுள்ளமை படித்துப் பயன்பெறும் வகையில் உள்ளது .

• ஆசிரியர்

இந்த நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் ஆவர் .

நாகனார் என்பது இவரது இயற்பெயர் எனவும் விளம்பி என்பது ஊர்ப் பெயர் எனவும் கொள்வர் .

கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இரண்டும் திருமாலைப் பற்றியவை .

ஆதலின் இவர் வைணவ சமயத்தைச் சேர்ந்தவர் எனக் கொள்ளலாம் .

அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே

இல்லத்துத் தீங்கொழுகுவாள்

( நான்மணிக்கடிகை .

85 )

என்ற பாடல் அடி ‘ அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றமாம்‘ என்னும் சிலப்பதிகார அடிகளை ஒத்துள்ளது .

எனவே ஆசிரியர் சிலப்பதிகார காலத்தை அடுத்து வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம் .

• நூல் அமைப்பும் பாடுபொருளும்

கடவுள் வாழ்த்து உட்பட 106 பாடல்கள் இந்நூலில் உள்ளன .

பாடல்கள் வெண்பா யாப்பால் ஆனவை .

வாழ்க்கை நெறிகளை அறிவுறுத்துவது இந்நூலின் நோக்கமாக உள்ளது .

வாழ்வியல் உண்மைகளைப் பல கோணங்களில் எடுத்துரைக்கிறது இந்நூல் .

நல்லறமாகிய இல்லறத்தின் சிறப்பைப் பேசுகிறது .

கல்வியின் உயர்வையும் சிறப்பையும் எடுத்துக் கூறி , கற்றலை வலியுறுத்துகிறது .

செல்வத்தின் சிறப்பையும் வலிமையையும் எடுத்துக்காட்டிப் பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற உண்மையைச் சுட்டிக் காட்டுகிறது .

நட்பின் சிறப்பு நயமுறக் காட்டப்படுகிறது .

இனியவை கூறவும் , வன்சொல் தவிர்க்கவும் பழகிக் கொள்வதே பண்புடைமை என்பதும் உணர்த்தப்படுகிறது .

இவ்வுலகில் காணப்படும் சில பொருள்களின் இயல்பைக் கூறி வாழ்க்கை நெறிகளை அவற்றோடு தொடர்புபடுத்திக் கூறும் முறையினை இந்நூலில் காணலாம் .

தம் செயலாலும் , தாம் செய்யும் தொழிலாலும் வேறுபடும் பலவகை மாந்தர்களின் இயல்புகளைத் தொகுத்துரைக்கிறது நான்மணிக்கடிகை .

குதிரைகள் அவற்றில் ஏறிச் செலுத்துவோன் திறத்திற்கேற்பவே இயங்கும் என்றும் ( நான் .

73 ) , நீரின் இருப்பை வானம்பாடிப் பறவை அறியும் என்றும் ( நான் .

97 ) அசுணப்பறவைகள் பறையோசை கேட்டால் இறந்துபடும் என்றும் ( நான் .

4 ) யானையைக் கட்டுத்தறியாலும் , பாம்பை மந்திரமொழியாலும் மக்கள் வயப்படுத்துவர் என்றும் ( நான் .

12 ) விலங்குகள் , பறவைகள் ஆகியவற்றின் இயல்பைச் சுட்டிக்காட்டி நீதி உரைப்பதை நான்மணிக்கடிகையில் ஆங்காங்கே காணலாம் .

நல்ல மணமுள்ள அகில்கட்டை கள்ளிமரத்தின் நடுவில் உண்டாகும் .

ஒளியுள்ள அரிதாரம் என்ற பொருள் மான் வயிற்றில் பிறக்கும் .

மிக்க விலையுடைய முத்துக்கள் பெரிய கடலில் தோன்றும் .

அதுபோல் எக்குடியிலும் நன்மக்கள் தோன்றுவர் என்ற கருத்தில் அமைந்த ,

கள்ளி வயிற்றில் அகில்பிறக்கும் மான்வயிற்றில்

ஒள்ளரி தாரம் பிறக்கும் - பெருங்கடலுள்

பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார் நல்லாள் பிறக்கும் குடி ?

( நான் .

6 )

( விலைய = விலைமதிப்புடைய ; முத்தம் = முத்து )

என்னும் புகழ்பெற்ற பாடல் இந்நூலில்தான் உள்ளது .

இல்லறம்

மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைவது இல்லற வாழ்க்கை .

இல்லறத்தை இனிமையாக்கும் மகளிர் சிறப்பு , மக்கட்பேறு முதலியவற்றை விளம்பி நாகனார் எளிமையாக எடுத்துரைக்கின்றார் .

அவை என்னவென்று பார்ப்போமா ?

2.1.1 மகளிர் சிறப்பு

மனைக்கு விளக்கம் தருபவள் நல்ல மனைவி .

மனைவிக்கு விளக்கம் சிறந்த மக்கள் .

அம்மக்களுக்கு விளக்கமாக அமைவது கல்வி .

கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு ( தத்துவ ஞானம் ) என்று தொடர்ந்து வரும் நன்னெறிகளுக்கு அடிப்படையானவர் மகளிர் என்று ஒன்றோடு ஒன்றைத் தொடர்புபடுத்தி உரைப்பதைக் காணலாம் .

பாடலைப் பாருங்கள் .

மனைக்கு விளக்கம் மடவார் மடவார்

தமக்குத் தகைசால் புதல்வர் - மனக்கினிய

காதல் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்

ஓதில் புகழ்சால் உணர்வு

( நான் - 105 )

( விளக்கம் = ஒளி , சிறப்பு )

பெண் , கணவனோடு ஒருமைப்பட்டு நிற்பவள் .

காவல் இன்றியும் கற்புடன் இருப்பவள் .

சுற்றத்தாரைப் போற்றியும் உறவைப் பாதுகாத்தும் வாழ்பவர் மகளிர் .

இதனால் மகளிர் குடும்ப வாழ்க்கையை மேம்படுத்தக் கூடியவர் என்பது சொல்லாமலே விளங்கும் .

மகளிர் நிலைகளில் தாய் என்ற உறவு மிகச் சிறந்தது .

இத்தனை சிறப்புகளை உடைய பெண் இல்லாத மனை எப்படி இருக்கும் ?

பாழ்மனையைப் போல் இருக்கும் என்கிறது நான்மணிக்கடிகை ‘ மனைக்குப் பாழ் வாள்நுதல் இன்மை‘ ( நான் - 22 ) .

( மனை - வீடு ; வாள்நுதல் - ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண் , மனைவி ) .

இனி மக்கட்பேறு பற்றி நான்மணிக்கடிகை என்ன சொல்கிறது என்று பார்ப்போம் .

2.1.2 மக்கட்பேறு

ஒருவனது மணவாழ்வைச் சிறப்பிக்க வருவது மக்கட்பேறு .

குழந்தைகளைப் பெறாதவர் அதனால் வருந்துவர் .

உலகம் அவர்களை இகழ்ச்சியாய்ப் பார்க்கும் ; அவர்களைப் பழிக்கவும் கூடும் .

இத்தனை குறைகளை நீக்க வரும் மக்கட்பேறு பெற்றோர்க்கு ஒளிதரும் செல்வமாகும் .

இக்கருத்தைக் கூறவரும் நான்மணிக்கடிகை ‘ மக்களின் ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை ' ( நான்-57 ) இதன் பொருள் , பெற்றோர்களுக்குத் தம் மக்களை விட உயர்ந்த பொருள் வேறு ஏதும் இல்லை என்பதாகும் .

( ஒண்மையவாய் = ஒளிபொருந்தியவையாக ; சான்ற = உயர்ந்த )

பழியின்மை மக்களால் காண்க

( நான் - 64 )

என்னும் மற்றொரு பாடலில் குழந்தைகளால் பழி நீங்குகிறது என்றும் சொல்கிறது இந்நூல் .

தந்தையின் நன்மையைப் புதல்வன் தன் இயல்பினால் அறிவிப்பான் .

அன்புடைய மக்கள் அணிகலனுக்கு ஒப்பாவர் .

மனைமாட்சியின் சிறப்பையும் , மக்கட்பேற்றின் சிறப்பையும் இணைத்து ,

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு

( குறள் - 60 )

என்று கூறுகிறார் வள்ளுவர் .

இக்குறட்பாவில் மக்கட்பேற்றை நல்ல அணிகலனுக்கு ஒப்பிட்டுச் சொல்வதைக் காணலாம் .

சிறப்புத்தருவன

இவ்வுலகில் சிறப்புடையன , பெருமைக்குரியன என்று கூறத்தக்கன யாவை என்பது பற்றி நான்மணிக்கடிகை என்ன சொல்கிறது என்று பார்ப்போமா ? எந்தப் பொருளிலும் அந்தந்தப் பொருளுக்குரிய சிறப்பு உண்டு .