87

இவையெல்லாம் மனிதனை மாண்பு மிக்கவனாக்கும் வழிமுறைகள் ஆகும் .

பாடலைப் பாருங்கள் .

கொடுப்பின் அசனம் கொடுக்க - விடுப்பின்

உயிரிடை ஈட்டை விடுக்க - எடுப்பில்

கிளையுள் கழிந்தார் எடுக்க கெடுப்பின்

வெகுளி கெடுத்து விடல்

( நான் - 82 )

( அசனம் = உணவு ; ஈட்டை = பற்றை ; எடுப்பில் = உயர்த்த விரும்பினால் ; கிளை = உறவு ; கழிந்தார் = வறியவர் ; எடுக்க = காப்பாற்றுக ; கெடுப்பின் = கைவிடுவதாயின் ; வெகுளி = கோபம் )

2.4.2 இல்லாத இயல்புகள்

அறக்கருத்துகளைச் சொல்லும் நிலையில் விளம்பி நாகனார் பல்வேறு உத்திகளைக் கையாண்டிருப்பதை நான்மணிக்கடிகையில் காணலாம் .

கருத்துகளை நேரிடையாகச் சொல்வது , வலியுறுத்திச் சொல்வது , நகைச்சுவை இழையோடச் சொல்வது , தத்துவமாகச் சொல்வது என்ற வகைகளே அவ்வுத்திகள் ஆகும் .

பின்பற்றுக , நீக்குக என்று முன்னிலைப்படுத்திச் சொல்லாமல் பற்றற்ற நிலையில் சொல்வது போல் அறிவுரை கூறும் அழகைப்பாருங்கள் .

சென்று விட்ட பொருள்களைப் பற்றிய துன்பம் கற்றுத் தெளிந்தவரிடம் இல்லை .

முயற்சித் துன்பம் ஊக்கம் உடையாரிடத்து இல்லை .

அறத்தின் உண்மைகள் தீயவை செய்வாரிடத்து இல்லை .

சினம் கொண்டவரிடம் எந்த நன்மைகளும் இல்லை என்ற கருத்தை என்னும் பாடல் விளக்குகிறது .

கற்றார்முன் தோன்றா கழிவிரக்கம் காதலித்தொன்று

உற்றார்முன் தோன்றா உறாமுதல் - தெற்றென

அல்ல புரிந்தார்க்கு அறம்தோன்றா எல்லாம்

வெகுண்டார்முன் தோன்றாக் கெடும்

( நான் - 10 )

( கழிவிரக்கம் = வருத்தம் , துன்பம் ; உறா முதல் = முயற்சித் துன்பம் ; தெற்றென = தெளிவாக ; அல்ல = நல்லது அல்லாத )

2.4.3. கேடு விளைவிப்பன

உடலுக்கும் , உள்ளத்துக்கும் கேடு விளைவிப்பன யாவை என்பதைச் சுட்டிக் காட்டுகிறது நான்மணிக்கடிகை .

ஒற்றுமையின்மை நம் வலிமையைக் கெடுக்கும் .

பொய்ம்மை உடம்பைக் கெடுக்கும் .

தூய்மையற்ற பாத்திரம் பாலின் சுவையைக் கெடுக்கும் .

தகாதவரிடம் கொண்ட நட்பானது குலத்தை அழிக்கும் .

இக்கருத்தைச் சொல்லும் பாடலைப் பார்க்கலாம் .

மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்

பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப் பெய்த

கலம்சிதைக்கும் பாலின் சுவையைக் குலம்சிதைக்கும்

கூடான்கண் கூடி விடின்

( நான் - 23 )

( மொய் = வலிமை , கூடார் = தகுதியற்றவர் )

இனி , கேடு எப்பொழுது வரும் என்பதையும் நான்மணிக்கடிகை கூறுகிறது .

ஒருவனுக்கு நாணம் நீங்கினால்செல்வம் அழியும் .

ஐம்பொறிகள் நல்வழி நடந்தால் செய்யும் தீவினை கெட்டுப்போகும் .

நீர் இல்லையென்றால் பயிர் விளைச்சல் கெடும் .

நன்மை மாறினால் நட்புக் கெடும் .

பொறிகெடும் நாணற்ற போழ்தே நெறிப்பட்ட

ஐவரால் தானே வினைகெடும் - பொய்யா

நலம்கெடும் நீரற்ற பைங்கூழ் - நலமாறின்

நண்பினார் நண்பு கெடும்

( நான் - 46 )

என்பது அப்பாடல் .

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு .

( குறள் - 788 ) என்று உற்றுழி உதவுதலை வள்ளுவர் குறிப்பிடுகிறார் அல்லவா ?

அத்தன்மை இல்லாதபோது நட்பு கெட்டுப்போகும் என்கிறார் விளம்பி நாகனார் .

இதையடுத்துத் துன்பம் செய்வன எவை என்று காட்டுகிறார் ஆசிரியர் .

அவை , பிணியுள்ள உடம்பில் சேரும் உணவு துன்பம் தரும் .

அறிவிலாரை அவர் வாய்ச்சொல்லே வருத்தும் .

முன் செய்த தீவினைகள் இம்மையில் வந்து துன்புறுத்தும் என்பனவாம் .

( நான் - 52 )

2.4.4 உலக இயல்பு

உலக இயல்பு , மாந்தர் இயல்பு என்று வகைப்படுத்தி , சில உண்மைகளைச் சுட்டிச் காட்டுவதை நான்மணிக்கடிகையில் காணலாம் .

எக்குடியிலும் நன்மக்கள் தோன்றுவர் .

உயிர்கள் பிறக்கும் போதே நீங்கென நீங்காது .

இறக்கும்போது நில்லென நில்லாது .

விண்மீன்களும் , திங்களும் , சூரியனும் என்றும் உள்ளன .

நோயும் முயற்சியும் என்றும் உள்ளன .

ஈவாரும் ஏற்பாரும் என்றும் உள்ளனர் .

பிறப்பாரும் இறப்பாரும் என்றும் உள்ளனர் .

என்றும் உளவாகும் நாளும் இருசுடரும்

என்றும் பிணியும் தொழில்ஒக்கும் - என்றும்

கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்

சாவாரும் என்றும் உளர்

( நான் - 60 )

( நாள் = நட்சத்திரம் ; இருசுடர் = சூரியன் , சந்திரன் ; தொழில் = முயற்சி )

இவையே இவ்வுலக இயல்பு என்று கூறுகிறது நான்மணிக்கடிகை .

உலகில் எதுவுமே நிலைத்து நிற்பதில்லை , எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு என்பதை எவ்வளவு எளிமையாகச் சொல்கிறார் விளம்பிநாகனார் , பாருங்கள் !

உலகில் இறவாத உயிர்களும் இல்லை .

கெடாத வலிமைகளும் இல்லை .

மூப்பு அடையாத இளமையும் இல்லை .

குறையாத செல்வங்களும் இல்லை என்ற இக்கருத்தை ,

சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம்

தாவாத இல்லை வலிகளும் - மூவாது

இளமை இசைந்தாரும் இல்லை வளமையிற்

கேடுஇன்றிச் சென்றாரும் இல்

( நான் - 79 )

( தாவாத = கெடாத ; மூவாது = முதிராது ; வளமை = செல்வம் )

என்ற பாடலில் ஆசிரியர் குறிப்பிடுகிறார் .

தொகுப்புரை

நான்கு மணிகள் போன்ற நீதிகளை ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கிறார் விளம்பிநாகனார் .

இல்லற நெறிகள் எவை என்று கூறுகிறார் ஆசிரியர் .

வாழ்வியல் உண்மைகளைப் பல கோணங்களில் அவர் கூறுவதைக் காண முடிகிறது .

கல்வியின் பயன் நல்லொழுக்கமே என்பது வலியுறுத்தப்படுகிறது .

உலக இயல்பு , மாந்தர் இயல்பு , கற்றார் இயல்பு என்று வகுத்தும் , தொகுத்தும் உரைக்கிறார் விளம்பி நாகனார் .

வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளைக் கற்பவர் மனத்தில் பதியும் வண்ணம் சிறப்பாகச் சொல்கிறது நான்மணிக்கடிகை .

எவற்றையெல்லாம் நீக்கினால் மனிதனாக வாழ்ந்து சிறப்படைய முடியும் என்பதையும் பட்டியல் இடுகிறது இந்நூல் .

உலக இயல்பு என்ற நிலையில் வாழ்வியல் உண்மைகள் பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது .

வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளைத் தொகுத்துரைக்கும் சிறந்த நூல் நான்மணிக்கடிகை எனலாம் .

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

கோடிட்ட இடங்களை நிரப்புக .

1. அரசனும் _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ இல்வழி இல். [ விடை ]

2. கல்லாத _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ உலகம் மதியாது .

[ விடை ] 3. அழகும் இளமையும் _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ கெடும் .

[ விடை ]

4. மூப்பு அடையாத _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ இல்லை .

[ விடை ]

5. பிறப்பாரும் இறப்பாரும் _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ உள்ளனர் .

திரிகடுகம் , சிறுபஞ்சமூலம் , ஏலாதி

பாட முன்னுரை

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும் என்பது பழமொழி .

சுவர் இடிந்து போனால் அதன் மேலே உள்ள சித்திரமும் அழிந்து போகும் .

அதுபோல் உடல் நலிந்தால் வாழ்க்கையே சிதைந்து போகும் .

அதனால் இவ்வுலகில் எச்செயலையும் செய்து முடிக்க உடல் நலத்தைப் பேணிப் பாதுகாப்பது இன்றியமையாதது .

உடம்பின் சார்பில்தான் உயிர் நிற்கிறது .

உடம்பு அழியும் போது உயிரும் அழிந்து போகிறது .

இதனால் தான் திருமூலரும் ,

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

என்றும் ,

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

( திருமந்திரம் - 708 )

என்றும் கூறுகிறார் .

உடலை வருத்தும் நோயை வராமல் செய்வதுதான் மருந்து .

மறுப்பது உள் நோய் மருந்து எனல் சாலும்

( திருமூலர் - எண்ணாயிரம் )

என்கிறார் திருமூலர் .

உடம்பினை அழியாது வைத்து இயங்கச் செய்யும் மருந்து முறையே வைத்தியம் எனப்பெறும் .

இந்த வைத்தியத்தை இறைவன் திருவருளால் கண்டறிந்தவர்கள் சித்தர்கள் .

இதனால் இது சித்த வைத்தியம் எனப் பெயர் பெறும் .

சித்த வைத்தியத்தில் எளிய மக்களும் நல்வாழ்வு பெற்று உய்வதற்காக அதிகச் செலவில்லாமல் மிகுந்த பயன் விளைவிக்கும் மருந்துகள் கூறப்பெற்றுள்ளன .

சித்தர் மருந்துகள் பல உள்ளன .

அவை தம்முள் சிறந்தனவாகத் திரிகடுகம் , சிறுபஞ்சமூலம் , ஏலாதி என்பனவற்றைக் குறிப்பிடலாம் .

உடல் நோயைத் தீர்க்கும் மருந்துகளைப் போல உள நோயைத் தீர்க்கும் மருந்துகள் நல்லொழுக்க முறைகளே .

அவற்றைத் தொகுத்துத் திரிகடுகம் , சிறுபஞ்சமூலம் , ஏலாதி என்று உடல் நோய் மருந்துப் பெயர்களையே இட்டு உளநோய் மருந்து நூல்களைப் பாடியிருக்கின்றனர் மூன்று புலவர்கள் .

கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டைக் குறிக்கும் கீழ்க்காணும் பாடல் .

நாலடி நான்மணி நானாற்ப ( து ) ஐந்திணைமுப்

பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே

கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

கடுகம் , திரிகடுகத்தையும் , மாமூலம் சிறுபஞ்சமூலத்தையும் குறிக்கிறது .

ஏலாதி , ஏலாதி என்றே குறிக்கப்பட்டுள்ளது .

மருந்துப் பெயர் கொண்ட திரிகடுகம் , சிறுபஞ்சமூலம் , ஏலாதி என்ற இம்மூன்று நூல்களும் மூன்றாவது பாடமாக வருகின்றன .

இப்பாடம் மூன்று பகுதிகளாக உள்ளது .

முதல் பகுதியில் திரிகடுகம் பற்றியும் , இரண்டாவது பகுதியில் சிறுபஞ்சமூலம் பற்றியும் , மூன்றாவது பகுதியில் ஏலாதி பற்றியும் பார்க்கலாம் .

இனி முதற்பகுதியான திரிகடுகம் பற்றிப் பார்ப்போமா ?

திரிகடுகம்

காரம் , கார்ப்பு ( உறைப்பு ) என்று பொருள்படும் .

கடுக்கும் பொருளாகிய சுக்கு , மிளகு , திப்பிலிகளுள் ஒன்றையோ அல்லது இம்மூன்றையுமோ கடுகம் என்பது உணர்த்தும் .

சுக்கு , மிளகு , திப்பிலி ஆகிய மூன்றையும் குறிக்கும்போது இது திரிகடுகம் என்று சொல்லப்பெறும் .

( பிங்கல நிகண்டு , 352 )

• ஆசிரியர்

திரிகடுகம் என்ற உயிர் மருந்து நூலை ஆக்கியவர் நல்லாதனார் .

ஆதனார் என்பது இயற்பெயர் . ‘ நல் ’ என்பது அடைமொழி .

காப்புச் செய்யுளில் , பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது , குருந்தமரம் சாய்த்தது , மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தவர் என்பது பெறப்படும் .

இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு .

3.1.1 நூல் அமைப்பும் சிறப்பும்

திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது .

முதற் பாடலிலேயே நூலின் பெயர்க்காரணத்தை , ‘ திரிகடுகம் போலும் மருந்து ’ என்று ஆசிரியரே குறிப்பிடுகின்றார் .

திருக்குறள் , நாலடியார் போன்ற நூல்களின் கருத்துகளை இந்நூல் பெரிதும் பின்பற்றுகிறது .

கொல்லாமை , ஊன் உண்ணாமை , அருளுடைமை , இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும் அவாவறுத்தல் , மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது .

இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் காட்டும் நூலாகும் .

ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன .

இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது .

இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது .

இது இல்லறத்தின் உயர்வை உணர்த்தும் வகையில் விளங்குகிறது .

‘ கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி .

பெய் எனப் பெய்யும் மழை ’ ( திரி-96 ) என்று இல்லறத்தில் மனையாள் பெருமை பேசப்படுகிறது .

பாடுபட்டுச் செல்வத்தைச் சேர்த்து அதைப் பாதுகாக்கவும் முற்படுகின்றனர் மக்கள் .

தம்மையே புகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தக்கார் துணையைப் பெறுதல் முடியாது .

அதனால் அவர்தம் செல்வம் குறையும் .

காரணமின்றியே பலரையும் சினந்துரைப்பவரிடத்தில் உள்ள செல்வம் பகையினால் அழியும் .

தன் நிலை அறியாமல் பார்க்கும் பொருளையெல்லாம் விரும்புபவரிடத்தும் செல்வம் நில்லாமல் நீங்கும் என்பதைச் ‘ செல்வம் உடைக்கும் படை ’ எனக் குறிப்பிடுகிறார் .

தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்

கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய

பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும்

செல்வம் உடைக்கும் படை

( திரி - 38 )

( கொன்னே = வீணாக ; வெஃகுதல் = விரும்புதல் )

மேலே கூறிய மூன்றும் செல்வத்தை முற்றிலுமாக அழிக்கும் என்ற கருத்தை இந்தப் பாடல் உணர்த்துகிறது அல்லவா !

அரசர் இயல்பு , அமைச்சர் இயல்பு , இளவரசன் , ஒற்றர் ஆகியோர் செய்ய வேண்டுவன என்றெல்லாம் கூறப்படும் கருத்துகள் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய நோய் நீக்கும் மருந்துகளாகும் .

தக்க வயது வந்ததும் திருமணம் செய்து கொள்ள நினைப்பதும் , மக்கட் பேற்றை விரும்புவதும் மனித இயல்பு .

ஆனால் எல்லோருக்கும் இப்பேறு கிடைப்பதில்லை அல்லவா !

மக்கட் பேற்றினைப் பெறவும் மனிதன் நல்ல அறங்களைச் செய்திருக்க வேண்டும் என்று கூறி அறத்தை வலியுறுத்தும் பாடலும் திரிகடுகத்தில் உண்டு ( திரி-62 )

காப்பாற்ற வேண்டியன பெண்டிர் , பொருள் , உணவு ஆகியவை இவை உரிய முறையில் காப்பாற்றப் படாமல் போனால் கெட்டுப்போகும் என்று காட்டுகிறது ஒரு பாடல் ( திரி-47 )

நட்புக் கொள்ளத் தகுதியற்றவர் , நட்புக்கொள்ள ஏற்றமுடையவர் யாரென்பதை எடுத்துச் சொல்கிறார் நல்லாதனார் ( திரி-12,15 )

கல்வியின் பயன்கள் கூறப்படுவதால் கல்வியின் வலிமையும் பயனும் நமக்கு உணர்த்தப்படுகிறது .

வாழ்வியல் உண்மைகள் பல ஆங்காங்கே வெளிப்படுவதைத் திரிகடுகத்தில் காணலாம் .

எப்படி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதும் பயன்தராத செயல்கள் எவை என்பதும் எடுத்துரைக்கப்படுகின்றன .

பிறப்பு நீக்குவது வாழ்வின் முடிந்த நோக்கமாகும் என்பதையும் திரிகடுகம் எடுத்துரைக்கிறது .

3.1.2 அறத்தின் உயர்வும் சிறப்பும்

இளமையில் கல்வி கற்பதும் , பெற்றோர்களை வழிபட்டுப் போற்றுதலும் , சான்றோர் நெறியில் செல்வதும் உயர்ந்த அறங்களாகும் .

நல்லவருள் நல்லவர் எனப்படுதல் , நட்பு கொள்வதில் சிறந்தவர் எனப்படுதல் ஆகியன நல்லவர் மேற்கொள்ளும் அறங்களாகும் .

உலகிலேயே சிறந்த அறம் வறியவர்க்கு வேண்டுவன கொடுத்தல் ஆகும் .

வறுமை நிலையிலும் கீழான செயல்களைச் செய்யாதிருத்தல் சிறந்த அறம் ஆகும் .

( திரி-41 )

• இயற்கையும் அறமும்

அறச் செயல்களுக்கும் இயற்கை நெறிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது .

மன்னனும் மக்களும் நெறி தவறி நடந்தால் இயற்கை தன் நிலை மாறும் .

குடிமக்களை வருத்தி வரி வாங்கும் அரசனுடைய நாட்டில் மழை பெய்யாது .

பொய் பேசுபவர் நாட்டில் மழை பெய்யாது .

வலிமை வாய்ந்த இயற்கையை நெறிப்படுத்தும் ஆற்றல் அறத்திற்கு உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது திரிகடுகம் .

( திரி-50 ) • அறத்திற்கு வழி வகுப்பன