9

மொழி அமைப்பு

இலக்கணம் - 1 (எழுத்து)

பாடம் - 1

தமிழ் இலக்கண அறிமுகம் : எழுத்து, சொல்

1.0 பாட முன்னுரை

தமிழ், இலக்கிய வளமும் இலக்கண வளமும் உடைய மொழி. பல நூற்றாண்டுகளாகவே தமிழில் இலக்கியம் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இலக்கியங்களைப் போலவே இலக்கண நூல்களும் மிகுதியாகத் தமிழில் தோன்றியுள்ளன. இலக்கியம் மொழியை அடிப்படையாகக் கொண்டது. மொழி அமைப்பை விளங்கிக்கொள்ள இலக்கணம் உதவியாக இருக்கிறது. இந்தப் பாடத்தில் தமிழ்மொழியில் உள்ள எழுத்து இலக்கணமும், சொல் இலக்கணமும் எளிய முறையில் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றன.

1.1 இலக்கியமும் இலக்கணமும்

இலக்கியங்களை முதலில் வாய்மொழியாகப் பாடிக்கொண்டிருந்தனர். அவற்றை எழுதி வைக்கத் தொடங்கியபோது, மொழியின் அமைப்புப் பற்றிய சிந்தனை தோன்றியது. மொழி அமைப்புப் பற்றிய சிந்தனையின் காரணமாக இலக்கணம் தோன்றியது.

எனவே முதலில் தோன்றியது இலக்கியமே. அந்த இலக்கியத்தைப் பார்த்து, இலக்கணத்தை உண்டாக்கினார்கள். கால மாற்றத்தால் இலக்கியத்திலும் சில மாற்றங்கள் தோன்றின. இதனால் இலக்கணத்தை மீண்டும் மாற்றி எழுதவேண்டிய தேவையும் ஏற்பட்டது.

இவ்வாறு இலக்கியத்திலும் மொழியிலும் காலம்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்ததால், இலக்கணத்திலும் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. எனவே தமிழில் காலம்தோறும் புதிய இலக்கண நூல்கள் தோன்றிக் கொண்டே இருந்தன.

இலக்கண நூலை இயற்றுபவரை இலக்கண நூல் ஆசிரியர் என்று அழைப்பர். தமிழில் காலம் தோறும் பல ஆசிரியர்கள் இலக்கண நூல்களை எழுதி வந்துள்ளனர். சமண சமயத்தைச் சார்ந்த துறவிகளே இலக்கண நூல்களை மிகுதியாக இயற்றியுள்ளனர். எனினும் சைவம், வைணவம், கிறித்தவம் முதலிய சமயத்தைச் சேர்ந்தவர்களும் இலக்கண நூல்களை இயற்றியுள்ளனர்.

இலக்கண நூல் ஆசிரியர்கள் இலக்கணத்தை, விதிகளாகச் செய்யுள் வடிவில் அமைத்து இயற்றினார்கள். விதிகளைச் சூத்திரம் என்றும் நூற்பா என்றும் கூறுவர். ஒரு பொருள் பற்றிய சில விதிகள் எல்லாவற்றையும் தொகுத்து ஓர் இயலாக அமைப்பர். ஓர் இலக்கண நூலில் அப்படிப் பல இயல்கள் சேர்ந்து அமைந்திருக்கும்.

இலக்கண நூல்களை இயற்றும் ஆசிரியர்கள், அவற்றைச் சூத்திரங்களாக இயற்றியதால், எளிதில் பொருள் விளங்காமல் இருந்தன. மாணவர்கள் இவற்றைக் கற்பதற்கு மிகவும் இடர்ப்பட்டனர். அதனால், மாணவர்க்கு விளங்கும் வகையில் அச்சூத்திரங்களுக்கு எளிமையாக உரைநடையில் சிலர் பொருள் எழுதினார்கள். இவர்கள் எழுதியதை உரைகள் என்று வழங்குவர். இப்படி இலக்கண நூல்களுக்கும் இலக்கிய நூல்களுக்கும் விளக்கம் எழுதியவர்களை உரையாசிரியர் என்று அழைப்பர்.

1.2 இலக்கணத்தின் வகைகள்

தமிழ் இலக்கணம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே ஐந்திலக்கணம் என்ற சொல்மரபு வழங்கி வருகிறது. அவை, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவை ஆகும். இவற்றில் எழுத்து, சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும். பொருள் இலக்கணம் மொழியில் எழுதப்படும் இலக்கியத்தின் உள்ளடக்கத்திற்கு இலக்கணம் கூறுவது ஆகும். யாப்பிலக்கணம் என்பது இலக்கியம் எழுதப்படும் செய்யுளின் இலக்கணம் கூறுவதாகும். யாப்பிலக்கணத்தின் ஒரு வளர்ச்சியாகப் பாட்டியல் இலக்கணம் தோன்றியது. பாட்டியல் இலக்கணம் இலக்கிய வடிவங்களினது இலக்கணத்தைக் கூறுகிறது. பிள்ளைத்தமிழ், உலா, தூது போன்ற இலக்கியங்களின் இலக்கணம் பாட்டியல் நூல்களில் இடம்பெற்றுள்ளது. அணி இலக்கணம் செய்யுளில் அமையும் உவமை, உருவகம் முதலிய அணிகளின் இலக்கணத்தைக் கூறுகிறது. இந்தப் பாடத்தில் எழுத்து, சொல் ஆகிய இலக்கணங்களின் அமைப்பும், வரும் பாடத்தில் பொருள், யாப்பு, அணி, பாட்டியல் இலக்கணங்களின் அமைப்பும் அறிமுகம் செய்யப்படும்.

எழுத்து இலக்கணத்தில், எழுத்துகளின் வகைகள், அவை ஒலிக்கும் கால அளவு, எழுத்துகள் பிறக்கும் முறை ஆகியனவும் சந்தி இலக்கணமும் இடம்பெற்றுள்ளன. சந்தி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின் கடைசி எழுத்திலும் இரண்டாம் சொல்லின் முதல் எழுத்திலும் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லுவது ஆகும்.

சொல் இலக்கணத்தில், சொல்லின் வகைகளான பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியனவும் திணை, பால், எண், இடம், காலம் முதலியனவும் தொகை (எழுத்துகள் மறைந்து வருதல்), வேற்றுமை ஆகியனவும் சொல்லப்பட்டிருக்கும்.

பொருள் இலக்கணம் என்பது தமிழ் மொழிக்கே சிறப்பாக உரிய இலக்கணம் ஆகும். தமிழ் மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களின் பாடுபொருளுக்கு எழுதப்பட்ட இலக்கணமே பொருள் இலக்கணம் ஆகும். பழங்காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட சங்க இலக்கியம் என்ற இலக்கியத் தொகுப்புக்கு எழுதப்பட்டதே பொருள் இலக்கணம் ஆகும். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கொள்ளும் காதல் அகப்பொருள் எனப்பட்டது. போர், வீரம், இரக்கம், நிலையாமை, கொடை, கல்வி முதலியவை எல்லாம் புறப்பொருள் எனப்பட்டன.

தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுளில் இயற்றப் பட்டவையே. செய்யுள்களின் அமைப்பு, ஓசை, பாக்களின் வகைகள் முதலியவற்றைச் சொல்லுவதே யாப்பு இலக்கணம் ஆகும்.

சங்க காலத்திற்குப்பின் பக்தி இலக்கியக் காலத்திலும் அதற்குப் பின்பும் பல வகைச் சிறிய இலக்கிய வடிவங்கள் தோன்றின. தூது, உலா, அந்தாதி, மாலை, பிள்ளைத்தமிழ் முதலியவை இவ்வகையான இலக்கியங்களாகும். இவற்றுக்கு இலக்கணம் சொல்லுவது பாட்டியல் இலக்கணம் ஆகும்.

இலக்கியங்களில் அழகுக்காகவும் பொருள் விளங்குவதற்காகவும் உவமைகளைப் பயன்படுத்துவது கவிஞர்களின் இயல்பு. அவ்வாறு இடம்பெறும் உவமை, உருவகம் முதலியவற்றுக்கு அணி என்று பெயரிட்டு அவற்றின் இலக்கணத்தைச் சொல்லுவது அணி இலக்கணம் ஆகும்.

1.3 தமிழ் இலக்கண நூல்கள்

தமிழ் இலக்கியத்தின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்டது. இரண்டாயிரம் ஆண்டுகளில் ஏராளமான இலக்கியங்கள் தோன்றி, மொழியை வளப்படுத்தியுள்ளன. இலக்கியங்களைப் போலவே இலக்கண நூல்களும் தமிழில் மிகுதியாகத் தோன்றியுள்ளன. நீண்ட வரலாற்றில் அரசாட்சி, பிறமொழிகளின் தாக்கம், சமூக மாற்றம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மொழியும் இலக்கியமும் மாறின. எனவே இந்த மாற்றங்களை உள்வாங்கிப் புதிய இலக்கண நூல்கள் தோன்ற வேண்டியதும் அவசியம் ஆனது. இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு காலம் தோறும் புதிய இலக்கண நூல்கள் தோன்றி வந்தன. எனவே தமிழில் இலக்கண வளம் மிகுதியாக உள்ளது என்று கூறலாம். தமிழில் உள்ள சில இலக்கண நூல்கள் பற்றிச் சிறு குறிப்பு இங்கே தரப்படுகிறது.

1.3.1 தொல்காப்பியம் தமிழில் மிகவும் பழைய இலக்கண நூலாக விளங்குவது தொல்காப்பியம் ஆகும். இது கி.மு. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதை இயற்றியவர் தொல்காப்பியர் ஆவார். இந்த நூலில் எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என்ற மூன்று அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்திலும் ஒன்பது இயலாக இருபத்து ஏழு இயல்கள் உள்ளன. தமிழில் உள்ள இலக்கண நூல்களிலேயே மிகவும் பெரியது தொல்காப்பியம் ஆகும். பொருள் அதிகாரத்தில் தமிழின் பொருள் இலக்கணமும், யாப்பு இலக்கணமும் சொல்லப்பட்டுள்ளன. தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் உள்ள உவமை இயலில் அணி இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. இன்று தமிழில் உள்ள ஐந்திலக்கணங்களுக்கும் தோற்றுவாயாகத் தொல்காப்பியம் திகழ்கிறது.

தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் என்னும் அறிஞர் பாயிரம் எழுதியுள்ளார். இவர் தொல்காப்பியருடன் பயின்றவர் என்று அறிய முடிகிறது. பாயிரம் என்பது தற்காலத்தில் எழுதப்படும் முன்னுரை போன்றது. நிலந்தரு திருவின் பாண்டிய மன்னனின் அவையில் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேறியது என்று பாயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் இலக்கணத்தை மிகவும் விரிவாகக் கூறுகிறது. சூத்திரங்கள் இலக்கண அமைப்பை விளக்கும் முறையில் அமைந்துள்ளன. சிறு இலக்கண விதிகளைக்கூட விட்டுவிடாமல் மிகவும் நுட்பமாகத் தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர், பேராசிரியர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.

1.3.2 நன்னூல் பவணந்தி முனிவர் என்ற சமண சமய முனிவரால் இயற்றப்பட்டது நன்னூல் என்ற இலக்கண நூல். இது, எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம் ஆகிய இரண்டு இலக்கணங்களையும் கூறுகிறது. நன்னூல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றியது. நன்னூல், இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறும் நூல் ஆகும். நன்னூலில் முதலில் பாயிரம் என்று ஒரு பகுதி உள்ளது. இதில் ஐம்பத்தைந்து சூத்திரங்கள் உள்ளன. பாயிரப் பகுதியில் நூலின் இலக்கணம், நூலைக் கற்றுத்தரும் ஆசிரியர் இலக்கணம், கற்றுத்தரும் முறை, மாணவர்களின் குணங்கள், மாணவர்கள் கற்கும் முறை ஆகியவை இடம் பெற்றிருக்கும். எழுத்து அதிகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன; 202 சூத்திரங்கள் உள்ளன. சொல்லதிகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன; 205 சூத்திரங்கள் உள்ளன.

அருங்கலை விநோதன் என்ற பட்டப் பெயர் பெற்ற சீயகங்கன் என்ற அரசனின் வேண்டுகோளின்படி நன்னூல் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொல்காப்பியம் தோன்றிப் பல நூற்றாண்டுகள் சென்றுவிட்டதால் அதில் உள்ள மரபுகள் மாறிவிட்டன. மேலும் தொல்காப்பியம் கடல் போலப் பரந்துவிரிந்த நூல் ஆகும். எனவே நன்னூல் தோன்றிய பின்பு பரவலாக அனைவரும் நன்னூலையே கற்கத் தொடங்கினர். எனவே நன்னூலுக்குப் பல உரைகள் தோன்றின. மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், கூழங்கைத் தம்பிரான், விசாகப் பெருமாளையர், இராமானுச கவிராயர், ஆறுமுக நாவலர் முதலிய பலர் நன்னூலுக்கு உரை எழுதியுள்ளனர். நன்னூல் தோன்றியபிறகு எழுத்து, சொல் இலக்கணங்களைக் கற்போர் நன்னூலையே விரும்பிப் படித்து வருகின்றனர்.

நூல்                                   ஆசிரியர்                                   காலம்                                      இலக்கண வகை

தொல்காப்பியம்                    தொல்காப்பியர்                      கி.மு.4ஆம் நூற்              எழுத்து, சொல், பொருள்

நன்னூல்                            பவணந்தி முனிவர்              13ஆம் நூற்                                எழுத்து, சொல்

நேமிநாதம்                             குணவீர பண்டிதர்                12ஆம் நூற்                               எழுத்து, சொல்

இறையனார் களவியல்                      —                                          7ஆம் நூற்                                   அகப்பொருள்

நம்பியகப் பொருள்                நாற்கவிராசநம்பி                 13ஆம் நூற்                                     அகப்பொருள்

மாறனகப் பொருள்                   குருகைப்பெருமாள்          16ஆம்நூற்                                    அகப்பொருள்

கவிராயர்

புறப்பொருள்                              ஐயனாரிதனார்                         9ஆம் நூற்                                      புறப்பொருள்

வெண்பாமாலை

யாப்பருங்கலம்                               அமிர்தசாகரர்                        10ஆம் நூற்                                                யாப்பு

யாப்பருங்கலக் காரிகை                   அமிர்தசாகரர்                     10ஆம் நூற்                                               யாப்பு

தண்டியலங்காரம்                                  தண்டி                                 12ஆம் நூற்                                                 அணி

மாறன் அலங்காரம்                 குருகைப்பெருமாள்                16ஆம் நூற்.                                                    அணி

வீரசோழியம்                                   புத்தமித்திரர்                             11ஆம் நூற்                                            ஐந்திலக்கணம்

இலக்கண விளக்கம்                  வைத்தியநாத தேசிகர்          17ஆம் நூற்                                              ஐந்திலக்கணம்

கவிராயர்

தொன்னூல் விளக்கம்                வீரமாமுனிவர்                             18ஆம் நூற்                                              ஐந்திலக்கணம்

சுவாமிநாதம்                                சுவாமி கவிராயர்                        18ஆம் நூற்                                                 ஐந்திலக்கணம்

அறுவகை இலக்கணம்                     தண்டபாணி சுவாமிகள்        19ஆம் நூற்                                          ஐந்திலக்கணம்

முத்துவீரியம்                                   முத்துவீர உபாத்தியாயர்         19ஆம் நூற்                                           ஐந்திலக்கணம்

வெண்பாப் பாட்டியல்                       குணவீர பண்டிதர்                      12ஆம் நூற்                                           பாட்டியல்

இலக்கண விளக்கப் பாட்டியல்            தியாகராச தேசிகர்                   17ஆம் நூற்                                                பாட்டியல்

1.4 எழுத்து இலக்கண அறிமுகம்

தமிழ் மொழியில் எழுத்து இலக்கணம் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. எழுத்து இலக்கணத்தில், எழுத்தின் வகைகள், பத இலக்கணம், சந்தி இலக்கணம் ஆகியன முக்கியப் பகுதிகள் ஆகும்.

1.4.1 எழுத்தின் வகைகள் தமிழ் எழுத்து இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. அவை,

1.முதல் எழுத்து 2. சார்பு எழுத்து.

1. முதல் எழுத்து

மொழிக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் ஆகியவை முதல் எழுத்துகள் என்று கூறப்படும்.

உயிர் எழுத்துகள் குறில், நெடில் என்றும், மெய் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்றும் ஒலி அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

எழுத்துகளின் பயன்பாடு நோக்கிச் சுட்டு எழுத்து, வினா எழுத்து ஆகியனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

2. சார்பு எழுத்து

முதல் எழுத்துகளைச் சார்ந்து வருபவை சார்பு எழுத்துகள் எனப்படுகின்றன. உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பு எழுத்துகள் ஆகும்.

எழுத்துகள் ஒலிக்கும் நேரத்தை மாத்திரை என்று கூறுவர். எந்த எந்த எழுத்துகள் எவ்வளவு நேரம் ஒலிக்கும் என்பதைத் தெளிவாக வரையறுத்து இலக்கண நூல்கள் கூறுகின்றன.

மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுவது மொழி. மொழி, சொற்களால் உருவாகிறது. சொல், எழுத்துகளின் சேர்க்கை. எழுத்தின் அடிப்படை ஒலி. மனித உடலில் இருந்து ஒலி எப்படித் தோன்றுகிறது என்பதைத் தமிழ் இலக்கண நூல்கள் விளக்குகின்றன. மொழியின் அடிப்படை ஒலி என்பதால் ஒவ்வோர் எழுத்தும் எப்படிப் பிறக்கின்றன என்பது பற்றியும் இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளது. மூக்கு, உதடு, பல், நாக்கு, அண்ணம் ஆகிய உறுப்புகளின் செயல்பாட்டால் உயிர் எழுத்துகளும், மெய் எழுத்துகளும் எவ்வாறு தோன்றுகின்றன என்று இலக்கண நூல்கள் துல்லியமாகக் கூறுகின்றன.

தமிழில் எல்லா எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடிய எழுத்துகள் இவை என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே சொல்லுக்கு இறுதியில் வரக்கூடிய எழுத்துகள் பற்றியும் வரையறை செய்யப்பட்டுள்ளது. சொல்லுக்கு இடையில் ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து எந்த மெய் எழுத்து வரும் என்ற வரையறையும் தரப்பட்டுள்ளது.

1.4.2 பதவியல் தமிழ் ஓர் ஒட்டு நிலை மொழியாகும். ஒட்டுநிலை மொழி என்பது ஒரு வேர்ச் சொல்லுடன் விகுதி, இடைநிலை, சாரியை முதலியன சேர்ந்து ஒரு சொல்லாகத் தோன்றுவது ஆகும். (இவற்றைப் பற்றி விரிவாகப் பின்னர் படிக்கலாம்) தமிழில் முன் ஒட்டுகள் இல்லை; பின் ஒட்டுகளே உள்ளன. வேர்ச் சொல்லுடன் பல உருபுகளும் சேர்ந்து சொற்கள் உருவாகும் முறை இலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக

போ என்பது ஒரு வேர்ச் சொல்லாகும். இதனுடன் வ் என்ற எதிர் கால இடைநிலையும், ஆன் என்ற ஆண்பால் ஒருமை வினைமுற்று விகுதியும் இணைந்து,

போ + வ் + ஆன் = போவான்

என்று ஒரு சொல் உருவாகிறது. இலக்கணத்தில் இதைப் பற்றிச் சொல்லும் பகுதிக்குப் பதவியல் என்று பெயர்.

1.4.3 சந்தி இலக்கணம் தமிழில் எழுத்திலக்கணத்தில் முக்கியப் பகுதியாகவும் பெரிய பகுதியாகவும் இருப்பது சந்தி இலக்கணம் ஆகும். சந்தி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய இலக்கணம் ஆகும். இலக்கண நூல்களை இயற்றிய ஆசிரியர்கள் சந்தி இலக்கணத்தைப் புணர்ச்சி இலக்கணம் என்று கூறுவர்.

எடுத்துக்காட்டாக

ஓடி + போனான் = ஓடிப்போனான்

என்று வரும்.

இங்கு இரண்டு சொற்கள் சேரும்போது, இரண்டுக்கும் இடையில் ப் என்ற மெய் எழுத்துத் தோன்றி இருக்கிறது. இவ்வாறு இரண்டு சொற்கள் சேரும்போது பல வகையான மாற்றங்கள் ஏற்படும்.

1.4.4 சந்தி வகைகள் இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்கள் நான்கு வகைகளில் அமையும்.

1. கதவு + மூடியது = கதவுமூடியது – இயல்பாக இருக்கிறது.

2.மாலை + பொழுது = மாலைப்பொழுது – ஒரு மெய்எழுத்துத் தோன்றியது.

3.மரம் + நிழல் = மரநிழல் – ஓர் எழுத்துக் கெட்டது (அழிந்தது).

4.கல் + சிலை = கற்சிலை – ல் என்ற எழுத்து ற் என்ற எழுத்தாகத் திரிந்தது (மாறியது).

எனவே, இரண்டு சொற்கள் சேரும்போது இயல்பாக வருதல், தோன்றுதல், திரிதல், கெடுதல் ஆகிய நான்கு வகைகளிலும் வரும் என அறியலாம். இங்கு இரண்டு சொற்கள் இருக்கின்றன. முதல் சொல்லை நிலைமொழி என்றும், இரண்டாம் சொல்லை வருமொழி என்றும் கூறுவர். இந்த மாற்றங்கள் நிலைமொழியின் இறுதி எழுத்துக்கும், வருமொழியின் முதல் எழுத்துக்கும் ஏற்ப அமையும். எனவே ஒரு சொல்லின் முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் பற்றி அறிய வேண்டியது அவசியம் ஆகிறது.

1.4.5 முதலும் இறுதியும் உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து ஆகிய மூன்று வகை எழுத்துகள் சொற்களில் வரும். சந்தி இலக்கணத்தில் உயிர் எழுத்து, மெய் எழுத்து என்ற இருவகை எழுத்துகளை மட்டுமே கொண்டு இலக்கணம் சொல்லப்படும். உயிர்மெய் எழுத்து, உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உருவானது ஆகும். அதை மெய் எழுத்து, உயிர் எழுத்து என்று பிரித்துக் கொண்டு சந்தி இலக்கணத்தில் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக

பல் என்ற சொல்லின் முதலில் உள்ள ப என்ற உயிர்மெய்எழுத்து,

ப் + அ என்ற இரண்டு எழுத்துகள் சேர்ந்தது.

பாம்பு என்ற சொல்லின் இறுதியில் உள்ள பு என்ற உயிர்மெய்எழுத்து,

ப் + உ என்ற இரண்டு எழுத்துகள் சேர்ந்தது.

எனவே சொற்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்.

ஓடை- உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்.

மாடு- மெய் எழுத்தில் தொடங்கும் சொல்.

பழம்- மெய் எழுத்தில் முடியும் சொல்.

கிளி- உயிர் எழுத்தில் முடியும் சொல்

இவற்றைக் கொண்டு பார்க்கும்போது சொற்கள் அமையும் விதத்தைப் பின்வருமாறு காட்டலாம். ஈறு என்னும் சொல் இறுதி அல்லது கடைசி என்னும் பொருளைக் கொண்டது.

உயிர் ஈறு + மெய் முதல் (ஓடை + கரை)

உயிர் ஈறு + உயிர் முதல் (மணி + அடித்தது)

மெய் ஈறு + உயிர் முதல் (பழம் + உதிர்ந்தது)

மெய் ஈறு + மெய் முதல் (முள் + குத்தியது)

1.4.6 வேற்றுமையும் அல்வழியும் சந்திகளில் வேற்றுமைச் சந்தி, அல்வழிச் சந்தி என்று இருவகை உண்டு. வேற்றுமை அல்லாத சந்தி அல்வழிச் சந்தி எனப்படும்.

நாய் ஓடியது

நாயை விரட்டினேன்

நாய்க்கு மணி கட்டு

இந்தச் சொற்களில் நாய் என்ற சொல்லுடன் ஐ, கு என்ற எழுத்துகள் சேர்ந்துள்ளன. நாய் என்ற சொல்லுடன் இந்த எழுத்துகள் சேர்ந்தவுடன் நாய் என்ற சொல்லின் பொருள் வேறுபடுகிறது. முதல் தொடரில் நாய் எழுவாயாக இருக்கிறது. இரண்டாம் தொடரில் நாய் என்ற சொல்லுடன் ஐ என்ற எழுத்துச் சேர்ந்தவுடன் நாய் செயப்படுபொருளாக மாறுகிறது. மூன்றாம் தொடரிலும் அவ்வாறே கு என்ற எழுத்துச் சேர்ந்தவுடன் அதன்பொருள் வேறுபடுகிறது. இவ்வாறு ஒரு பெயர்ச்சொல்லுக்குப் பின்னால் நின்று அதன் பொருளை வேறுபடுத்தும் எழுத்தை அல்லது சொல்லை வேற்றுமை என்கிறோம்.

அவ்வாறு வேறுபடுத்துவதற்குக் காரணமாக உள்ளவற்றை வேற்றுமை உருபு என்பர். எழுவாய் வேற்றுமை முதல் விளிவேற்றுமை வரை எட்டு வகை வேற்றுமைகள் உள்ளன. அவற்றுள் முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள ஆறு வேற்றுமைகளுக்கே உருபு உள்ளது. வேற்றுமையின் இலக்கணம் பற்றிப் பின்னர் விரிவாக விளக்கப்படும்.

நாயை + கண்டேன்

இரண்டாம் வேற்றுமை

கல்லால் + அடித்தேன்

மூன்றாம் வேற்றுமை

பசிக்கு + உணவு

நான்காம் வேற்றுமை

இங்குச் சொற்களுடன் வேற்றுமை உருபுகள் சேர்ந்து வந்துள்ளன. இவற்றை வேற்றுமைத் தொடர்கள் என்று கூறுவர்.

மண் குடம்

பொன்வளையல்

இவையும் வேற்றுமைத் தொடர்களே. இவற்றை விரித்துப் பார்த்தால், மண்ணால் ஆகிய குடம், பொன்னால் ஆகிய வளையல் என்று வரும். இந்தத் தொடர்களில் பெயர்ச்சொற்களுக்குப் பின்னால் வரும் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்துள்ளன. எனவே இவை வேற்றுமைத் தொகை எனப்படும்.

வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்தாலும், மறைந்து வந்தாலும், அது வேற்றுமைச் சந்தி எனப்படும்.

வந்த + கண்ணன்                            (பெயர் எச்சம்)

வந்து + போனான்                        (வினை எச்சம்)

ஓடு + ஓடு                                       (அடுக்குத்தொடர்)

மழை + பொழிந்தது                 (எழுவாய்த்தொடர்)

கண்ணா + செல்                               (விளித்தொடர்)

மேலே காட்டப்பட்ட பெயர் எச்சம், வினை எச்சம், அடுக்குத் தொடர், எழுவாய்த் தொடர், விளித் தொடர் முதலியவை வேற்றுமை அல்ல என்பதால் இவற்றை அல்வழித்தொடர் என்று கூறுவர்.

1.4.7 பெயரும் வினையும் சொற்கள் பெயர், வினை, இடை, உரி, என நான்கு வகைப்படும். அவற்றுள் பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இரண்டும் முக்கியமானவை. இவை இரண்டும் பின்வருமாறு இணைந்து வரும்.

பெயர் + பெயர்=சேரன் பாண்டியன்

பெயர் + வினை=வளவன் சென்றான்

வினை + பெயர்=சென்றான் வளவன்

வினை + வினை=படித்துச் சென்றான்

சந்தி இலக்கணம் பொருள் அடிப்படையிலும் பெயர்ச்சொல்லின் வகை அடிப்படையிலும் சொல்லப்படும்.

மரப்பெயர்கள், திசைப் பெயர்கள், எண்ணுப் பெயர்கள் ஆகியவற்றையும் சுட்டி, சந்தி இலக்கணம் சொல்லப்படுகிறது.

மரப் பெயர்=தென்னை மரம்

திசைப் பெயர்=வட கிழக்கு

எண்ணுப் பெயர்=சேர, சோழ, பாண்டியர்

1.5 சொல் இலக்கண அறிமுகம்

எழுத்து இலக்கணத்திற்கு அடுத்து, எழுத்துகளால் ஆன சொல்லின் இலக்கணம் கூறப்படுகிறது. சொல்லுக்கு இருவகையான விளக்கம் தரப்படுகிறது.

1. சொல் எழுத்துகளால் உருவானதாக இருக்க வேண்டும்.

சொல், எழுத்து இலக்கணத்தில் சொல்லப்பட்ட உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் முதலிய எழுத்துகளால் உருவானதாக இருக்க வேண்டும். எழுத்துகள் அல்லாமல் வேறு ஓசைகளால் வருபவற்றைச் சொல் என்று கூறுவதில்லை.

தொண்டையைக் கனைத்தல்

முக்குதல்

சீழ்க்கை

இவற்றைச் சொல் என்று கூறுவதில்லை.

2. சொல் பொருள் தருவதாக இருக்க வேண்டும்.

எழுத்துகளால் உருவானதாக இருந்தாலும் பொருள் தருவதாக இருந்தால் மட்டுமே அது சொல் எனப்படுகிறது. பொருள் தராதவை சொல் எனப்படுவது இல்லை.

னேரூவீ லோபுவெ

இவை எழுத்துகளால் உருவாக்கப் பட்டிருந்தாலும் பொருள் தரவில்லை. எனவே இவற்றைச் சொல் என்று கூறுவதில்லை.

திணை

மக்கள், தேவர், நரகர் ஆகியவர்கள் உயர்திணை எனப்படுவர். இவர்களைத் தவிர்த்து உலகில் இருக்கும் உயிர் உள்ளவை, உயிர் அற்றவை யாவும் அஃறிணை எனப்படும்.

பால்

ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகிய மூன்றும் உயர்திணை ஆகும். ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய இரண்டும் அஃறிணை எனப்படும்.

எண்

ஒன்று என்கிற எண்ணைக் குறிப்பது ஒருமை ஆகும். மற்ற அனைத்தும் பன்மை ஆகும். இவற்றைப் பின்வருமாறு காட்டலாம்.

முருகன் வந்தான்                             உயர்திணை                        ஆண்பால் ஒருமை

நங்கை வந்தாள்                                 உயர்திணை                          பெண்பால் ஒருமை

மனிதர்கள் வந்தனர்                       உயர்திணை                           பலர்பால் பன்மை

மாடு வந்தது அஃறிணை            ஒன்றன்பால்                                  ஒருமை

நாய்கள் வந்தன அஃறிணை      பலவின்பால்                               பன்மை

இடம்

இடம் மூன்று வகைப்படும். அவை தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகியனவாகும்.

பேசுபவர் தன்னைக் குறிப்பது தன்மை ஆகும்.

நான், நாம்

பேசுபவர் தன் முன் உள்ளவரைக் குறிப்பது முன்னிலை ஆகும்.

நீ, நீர்

பேசுபவர் தன்னையோ முன் உள்ளவரையோ குறிக்காமல் தொலைவில் உள்ளவரைக் குறிப்பது படர்க்கை ஆகும்.

அவன், அவள்

1.5.1 செய்யுளில் வரும் சொற்கள் இலக்கியங்களில் வரும் சொற்கள் நான்கு வகைப்படும்.

1. இயற்சொல் 2. திரிசொல் 3. திசைச்சொல் 4. வடசொல்

செந்தமிழ் நாட்டில் வழங்கி, எல்லோருக்கும் இயல்பாகப் பொருள் விளங்கும்படி உள்ள சொல் இயற்சொல் எனப்படும்.

கல், மண், மரம், நிலம், அவன், நான், நீ முதலியன இயற்சொற்கள் ஆகும்.

• திரிசொல்

ஒரு பொருள் தரும் பல சொல்லாகவும், பல பொருள் தரும் ஒரு சொல்லாகவும் வந்து, எளிதாகப் பொருள் உணர முடியாதபடி உள்ள சொற்கள் திரிசொற்கள் ஆகும்.

ஒரு பொருள் தரும் பல சொல்: வெற்பு, விலங்கல், பொருப்பு, பொறை, நவிரம், குன்று முதலிய சொற்கள் மலை என்ற ஒரே பொருள் தருகின்றன.

பல பொருள் தரும் ஒரு சொல்: வாரணம் என்ற சொல் கோழி, சங்கு, யானை, பன்றி ஆகிய பொருள்களைத் தரும்.

இவ்வாறு எளிதில் பொருள் உணர இயலாமல் வரும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.

• திசைச்சொல்

செந்தமிழ் நிலத்தைச் சுற்றியுள்ள மற்ற நாடுகளில் பேசப்படும் மொழிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படுகின்றன.

சொல் பொருள் நாடு

தள்ளை = தாய் = குட்ட நாடு

அச்சன் = தந்தை = குட நாடு

கேணி = கிணறு = அருவாநாடு

எலுவன் = தோழன் = சீதநாடு

• வடசொல்

சமஸ்கிருத மொழியை வடமொழி என்று குறிப்பிடுகிறோம். அந்த வடமொழியிலிருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்களை வடசொற்கள் என்று கூறுவர்.

கந்தம், ஞானம், வீரம், சுகம், புராணம் முதலியன வடசொற்கள் ஆகும்.

1.5.2 சொல்லின் வகைகள் இலக்கண அமைப்புப்படி சொற்களை,

1. பெயர்ச்சொல்

2. வினைச்சொல்

3. இடைச்சொல்

4. உரிச்சொல்

என்று நான்கு வகையாகப் பிரிப்பார்கள்.

• பெயர்ச்சொல்

ஒன்றன் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லுவது பெயர்ச்சொல் ஆகும். மரம், கல், மண் முதலியன பெயர்ச்சொற்கள் ஆகும். பெயர்ச் சொற்களுக்கு இரண்டு வகையாக இலக்கணம் சொல்லப்படுகிறது.

1. பெயர்ச் சொல் வேற்றுமையை ஏற்கும்.

2. பெயர்ச் சொல் காலம் காட்டாது.

பெயர்ச் சொற்களுக்குப் பின் வேற்றுமை உருபுகள் வந்து நிற்கும்.

நாய் என்பது ஒரு பெயர்ச் சொல். இதனுடன் வேற்றுமை உருபுகள் சேர்ந்து பின்வருமாறு அமையும்.

நாய் + ஐ = நாயை – (இரண்டாம் வேற்றுமை)

நாய் + ஒடு = நாயொடு – (மூன்றாம் வேற்றுமை)

நாய் + கு = நாய்க்கு – (நான்காம் வேற்றுமை)

நாய், கல், மரம், முதலிய பெயர்ச் சொற்கள் காலத்தைக் காட்டவில்லை என்பதை அறியலாம்.

பெயர்ச் சொற்களை ஆறு வகையாகப் பிரிக்கலாம்.

பொருள் பெயர்             –          மரம், மாடு, பாண்டியன், குழலி

இடப்பெயர்                     –         ஊர், சென்னை, மேடு, மதுரை.

காலப்பெயர்                  -          ஆண்டு, வெள்ளிக்கிழமை, சித்திரை, காலை.

சினைப்பெயர்              -            கை, கண், மூக்கு, வால், கிளை, வேர்.

குணப்பெயர்                -               நன்மை, வெண்மை, தண்மை, கருமை.

தொழில் பெயர்          -                நடத்தல், கொடுத்தல், செய்தல், கற்றல்.

• வினைச் சொல்

ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

கற்றான், நிற்கிறாள், வருவார் முதலியன வினைச் சொற்கள் ஆகும். வினைச் சொல்லின் இலக்கணம் பின்வருமாறு.

1. வினைச்சொல் காலம் காட்டும்

2. வினைச்சொல் வேற்றுமையை ஏற்காது.

வினைச் சொற்கள் காலத்தைக் காட்டும் தன்மை கொண்டவை. காலம் மூன்று வகைப்படும்.

இறந்தகாலம் – சென்றான், உண்டான், வந்தாள், படித்தார்.

நிகழ்காலம் – செல்கிறான், உண்கிறான், வருகின்றாள், படிக்கிறார்.

எதிர்காலம் – செல்வான், உண்பான், வருவாள், படிப்பார்.

மேலே காட்டிய வினைச் சொற்களுடன் வேற்றுமை உருபுகளைச் சேர்க்க முடியாது. எனவே, அவை வேற்றுமை உருபுகளை ஏற்காது என்பதை அறியலாம்.

வினைச் சொற்கள் எதிர் மறையாகவும் வரும்.

செல்லும்    X        செல்லாது

நிற்கும்        X         நிற்காது

ஓடும்           X          ஓடாது

நடக்கும்    X           நடக்காது

வினைச் சொற்களில் பல வகைகள் உள்ளன.

முற்று

முற்றுப் பெறுகின்ற வினை, முற்றுவினை எனப்படும்.

நான் நம்பியைப் பார்த்தேன்.

இதில் பார்த்தேன் என்னும் சொல்லில் பார்த்தல் என்னும் செயல் முற்றுப் பெற்றுள்ளது. எனவே இது முற்று வினை எனப்படும்.

எச்சம்

முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் வினை, எச்ச வினை எனப்படும்

மணி வந்து போனான்.

மரத்திலிருந்து உதிர்ந்த பழம்.

இந்தத் தொடர்களில் உள்ள வந்து என்ற வினையும் உதிர்ந்த என்ற வினையும் முற்றுப் பெறாமல் உள்ளன. எனவே இவை எச்ச வினை எனப்படும். எச்ச வினை பெயரைக் கொண்டும் முடியும்; வினையைக் கொண்டும் முடியும். பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும். வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.

ஓடிய குதிரை.

பாடிய பாட்டு.

பாய்கின்ற வெள்ளம்.

பெய்யும் மழை.

இவை எல்லாம் பெயரைக் கொண்டு முடிவதால் பெயரெச்சம் எனப்படும்.

சென்று பேசினான்.

வந்து போனான்.

கற்றுத் தேர்ந்தான்.

இவை எல்லாம் வினையைக் கொண்டு முடிவதால் வினையெச்சம் எனப்படும்.

• இடைச்சொல்

தனித்து இயங்காமல் பெயருடன் அல்லது வினையுடன் சேர்ந்து வரும் சொற்கள் இடைச்சொற்கள் எனப்படும். இடைச்சொற்கள் தனித்துப் பொருள் தருவதில்லை.

இடைச் சொற்கள் எட்டு வகைப்படும்.

1. வேற்றுமை உருபுகள்

முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உண்டு. அவை,

இரண்டாம் வேற்றுமை – ஐ

மூன்றாம் வேற்றுமை – ஆல்

நான்காம் வேற்றுமை – கு

ஐந்தாம் வேற்றுமை – இன்

ஆறாம் வேற்றுமை – அது

ஏழாம் வேற்றுமை – கண்

என அமைந்துள்ளன.

2. காலம் காட்டும் இடைநிலைகளும் விகுதிகளும்.

வினைச் சொற்களில் வரும் காலம் காட்டுகின்ற இடைநிலைகளும் விகுதிகளும் இடைச் சொற்கள் ஆகும். கிறு, கின்று, ஆநின்று முதலியவை காலம் காட்டும் இடைநிலைகள். அன், ஆன் முதலியவை விகுதிகள்.

3. உவம உருபுகள்

உவமைத் தொடர்களில் வரும் உவம உருபுகள்.

தாமரை போல் மலர்ந்த முகம்.

இதில் போல் என்பது உவம உருபு

4. சாரியைகள்

சந்தி இலக்கணத்தில் வரும் சாரியைகள்.

ஆல்+அம்+காடு = ஆலங்காடு

என்பதில் அம் சாரியை ஆகும்.

5. தத்தம் பொருளை உணர்த்தி வருபவை

ஏ, ஓ, உம் முதலிய இடைச் சொற்கள் தத்தம் பொருளை உணர்த்தி வருபவை.

அவனே கொண்டான் – ஏ

அவனோ கொண்டான் – ஓ

அவனும் வந்தான் – உம்

6. இசைநிறை

ஏ, ஒடு முதலிய இடைச் சொற்கள் இசைநிறையாக வரும்.

ஏஏ இவள் ஒருத்தி பேடியோ – ஏ

இவளொடு – ஒடு

7. அசைநிலை

மன், மற்று, கொல் ஆகிய இடைச் சொற்கள் அசைநிலையாக வருபவை.

ஒப்பர்மன் – மன்

மற்றுஎன் – மற்று

ஆய்மயில்கொல் – கொல்

8. குறிப்பால் பொருள் உணர்த்துபவை

பொள்ளென, கதும்என, சரேல்என இவற்றில் வரும் என என்பது குறிப்புப் பொருள் உணர்த்தும் இடைச்சொல் ஆகும். மேலே காட்டியவாறு இடைச்சொல் எட்டு வகைகளில் அமைந்துள்ளது.

• உரிச்சொல்

உரிச்சொல் இலக்கணம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

1. பல வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தி வரும். (பண்பு – குணம்)

2. பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் சார்ந்து வரும்.

3. ஒரு சொல் ஒரு பொருளை உணர்த்துவதாகவும், ஒருசொல் பல பொருளை உணர்த்துவதாகவும் இருக்கும்.

4. செய்யுளுக்கு உரியதாய் வரும்.

மேலே காட்டியபடி உரிச்சொல்,

1. ஒரு குணம் தழுவிய உரிச்சொல்

2. பல குணம் தழுவிய உரிச்சொல்

என இரண்டு வகைப்படும்.

1. ஒரு குணம் தழுவிய உரிச்சொல்

ஒரு குணம் தழுவிய உரிச்சொல் என்பது, ஒரு பொருள்தரும் பல சொற்களைக் குறிக்கும்.

எடுத்துக்காட்டு

சால, உறு, தவ, நனி, கூர், கழி ஆகிய சொற்கள் மிகுதி என்ற ஒரே பொருள் தரும்.

எனவே இவற்றை ஒரு குணம் தழுவிய உரிச்சொல் எனலாம்.

2. பல குணம் தழுவிய உரிச்சொல்

பல பொருள்களைத் தரும் ஒரு சொல்லைப் பல குணம் தழுவிய உரிச்சொல் என்று கூறுவர்.

எடுத்துக்காட்டு

கடி என்ற சொல் காப்பு, கூர்மை, மிகுதி, விரைவு, அச்சம், சிறப்பு முதலிய பல பொருள்களைத் தரும்.

எனவே இதைப் பல குணம் தழுவிய உரிச்சொல் எனலாம்.

1.6 தொகுப்புரை

காலந்தோறும் இலக்கியத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கேற்ப இலக்கணத்திலும் மாற்றங்கள் தேவைப்பட்டுள்ளன. எனவே பல புதிய இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. அந்த இலக்கண நூல்கள் பற்றிய அறிமுகம் இப்பாடத்தில் தரப்பட்டுள்ளது. மேலும் தொல்காப்பியம், நன்னூல் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

தமிழ் இலக்கணம்,

1. எழுத்து இலக்கணம்

2. சொல் இலக்கணம்

3. பொருள் இலக்கணம்

4. அணி இலக்கணம்

5. யாப்பு இலக்கணம்

என்று ஐந்து பிரிவாக உள்ளது. எழுத்து இலக்கண அறிமுகத்தில் எழுத்துகளின் வடிவங்கள், வகைகள் முதலியவையும் இடம் பெற்றுள்ளன. பத இலக்கணம், சந்தி இலக்கணம் முதலியவையும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

சொல் இலக்கண அறிமுகத்தில் திணை, பால், எண், இடம் முதலியவையும் இலக்கிய வகைச் சொற்களும் இலக்கண வகைச் சொற்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பாடம் - 2

தமிழ் இலக்கண அறிமுகம் : பொருள், யாப்பு, அணி

2.0 பாட முன்னுரை

தமிழ் இலக்கிய வரலாற்றின் தொடக்க கால இலக்கியங்களைச் சங்க இலக்கியம் என்று அழைக்கிறோம். சங்க இலக்கியப் பாடல்கள் காதல், போர் முதலியவற்றைத் தெரிவிக்கின்றன. இந்த இலக்கியத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்களின் பாடுபொருள் பற்றிக் கூறுவதே பொருள் இலக்கணம் ஆகும். பொருள் இலக்கணம் என்பது இலக்கியத்தின் பாடுபொருள் பற்றிக் கூறும் இலக்கணம் ஆகும். பாடல்கள் எழுதப்படும் யாப்புப் பற்றிக் கூறுவது யாப்பு இலக்கணம் ஆகும். செய்யுள்களில் அமையும் அழகுகளைப் பற்றிக் கூறுவது அணி இலக்கணம் ஆகும்.  உலா, தூது முதலிய இலக்கிய வடிவங்களைக் கூறுவது பாட்டியல் இலக்கணம் ஆகும். இவற்றைப் பற்றி இந்தப் பாடத்தில் சுருக்கமாகக் காணலாம்.

2.1 பொருள் இலக்கண அறிமுகம்

தமிழில் உள்ள மிகவும் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணம் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் பொருள் இலக்கணத்தை மிகவும் விரிவாகக் கூறுகிறது. தொல்காப்பியத்தில் உள்ள பொருள் அதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில், ஐந்து இயல்கள் பொருள் இலக்கணத்தைக் கூறுகின்றன. தொல்காப்பியத்தைத் தொடர்ந்து, இறையனார் அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், புறப்பொருள் வெண்பாமாலை, களவியல் காரிகை, நம்பி அகப்பொருள் விளக்கம், மாறன் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்கள் பொருள் இலக்கணம் கூறும் நூல்கள் ஆகும். மேலும் ஐந்திலக்கணத்தையும் தெரிவிக்கும் நூல்களிலும் பொருள் இலக்கணம் இடம்பெற்றுள்ளது.

பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை. பாடல்களில் வரும் பொருள் எப்படி எல்லாம் இருக்கும் என்று எடுத்துக் கூறும் பொருள் இலக்கணம் தமிழுக்குத் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.

பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும். அகப்பொருள் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் உணர்ச்சியைப் பற்றிக் கூறுவதாகும். புறப்பொருள் என்பது வீரம், போர், வெற்றி, கொடை, நிலையாமை முதலிய புறப்பொருள்களைக் கூறுவதாகும்.

2.1.1 அகப்பொருள் இலக்கணம் ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அகப்பொருள் இலக்கணம் அமைந்துள்ளது. இதில் ஆணைத் தலைவன் என்றும் பெண்ணைத் தலைவி என்றும் கூறுவர். தலைவியின் தோழியும் அகப்பொருள் பாடல்களில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு பாத்திரம் ஆவாள். காதல் பற்றிப் பாடும்போது தலைவன் தலைவி என்று பொதுவாகப் பாடுவார்களே தவிர ஒருவருடைய இயற்பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை. காதல் உணர்ச்சி எல்லோருக்கும் பொது என்பதால் தனி ஒருவருடைய பெயரைச் சுட்டிப்பாடுவதில்லை. அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மை கொண்டிருக்கும். எல்லாப் பாடல்களும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும். ஒரே பாடலில் இருவர் மூவர் உரையாடுவது போல இருக்காது. ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை கூறப்பட்டிருக்கும். திணை, நிலம் சார்ந்த ஒழுக்கத்தைக் குறிக்கும். துறை என்பது பாடப்பெற்ற சூழலைக் குறிக்கும். அகப்பொருள் இலக்கணம் திணை அடிப்படையில் அமைந்ததாகும். அகப்பொருள் திணைகள் ஐந்து. அவை,

1. குறிஞ்சித் திணை

2. முல்லைத் திணை

3. மருதத் திணை

4. நெய்தல் திணை

5. பாலைத் திணை

இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும். அவை,

1. முதற்பொருள்

2. கருப்பொருள்

3. உரிப்பொருள்

ஆகியன ஆகும்.

• முதற்பொருள்

நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் எனப்படும். உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள் என்பர்.

நிலம்

ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு:

குறிஞ்சி         –        மலையும் மலை சார்ந்த இடமும்

முல்லை       –       காடும் காடு சார்ந்த இடமும்

மருதம்          -        வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல்        -       கடலும் கடல் சார்ந்த இடமும்

பாலை            -      பாலை நிலமும் பாலை நிலம் சார்ந்த இடமும்

தமிழ்நாட்டில் உள்ள நிலப்பகுதி இவ்வாறு ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பொழுது

பொழுது என்பது காலம் என்று பொருள்படும். பொழுது சிறு பொழுது, பெரும்பொழுது என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சிறு பொழுது

சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும். சிறுபொழுது பின்வருமாறு அமையும்.

வைகறை     –         விடியற்காலம்

காலை           –        காலை நேரம்

நண்பகல்      -        உச்சி வெயில் நேரம்

எற்பாடு         –       சூரியன் மறையும் நேரம்

மாலை         –      முன்னிரவு நேரம்

யாமம்           –     நள்ளிரவு நேரம்

சிறுபொழுது ஆறும் ஒரு நாளின் ஆறு கூறுகளாக இருப்பதை அறியலாம்.

பெரும்பொழுது

பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும். ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரிப்பர். இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால் பெரும்பொழுது எனப்படுகிறது. ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும் பொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

சித்திரை, வைகாசி      -        இளவேனில் காலம்

ஆனி, ஆடி                       –        முதுவேனில் காலம்

ஆவணி, புரட்டாசி     –         கார் காலம்

ஐப்பசி, கார்த்திகை    -        குளிர்காலம்

மார்கழி, தை                   –       முன்பனிக் காலம்

மாசி, பங்குனி               –       பின்பனிக் காலம்

சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றை இவை இவை இந்தத் திணைகளுக்கு உரியவை என்று பிரித்து வைத்துள்ளனர்.

திணை                    பெரும்பொழுது                                                 சிறுபொழுது

குறிஞ்சி                    குளிர்காலம், முன்பனிக்காலம்               யாமம்

முல்லை                   கார்காலம்                                                           மாலை

மருதம்                      ஆறு காலமும்                                                    வைகறை

நெய்தல்                    ஆறு காலமும்                                                       எற்பாடு

பாலை                        முதுவேனில், பின்பனி                                         நண்பகல்

ஒவ்வொரு நிலத்திற்கும் மேலே குறிப்பிட்ட காலங்கள் சிறந்தனவாக இருக்கும் என்பதால் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது.

• கருப்பொருள்

நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்கள் அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன. இவற்றின் காரணமாக ஒவ்வொரு திணையிலும் சூழல் வேறுபட்டுள்ளது. ஒவ்வொரு திணையிலும் வாழும் மக்கள், அவர்களின் தொழில், உணவு, பொழுதுபோக்கு, அந்த நிலத்தில் உள்ள மரங்கள், பறவைகள், விலங்குகள், நீர்நிலை முதலியவற்றைக் கருப்பொருள் என்கின்றனர். கருப்பொருள், பாடல்களில் பின்னணியாகச் செயல்படுகின்றது. எடுத்துக்காட்டாகக் குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

குறிஞ்சித் திணையின் கருப்பொருள்கள்

1            தெய்வம்          -         முருகன்

2           தலைமக்கள்  -          வெற்பன், கொடிச்சி

3             மக்கள்                -         குறவர், குறத்தியர்

4            பறவை                 –          கிளி, மயில்

5           விலங்கு             –             புலி, யானை

6            ஊர்                         –              சிறுகுடி

7         நீர்நிலை                    -              அருவி, சுனை

8         பூ                                 –        வேங்கை, குறிஞ்சி

9       மரம்                           –      தேக்கு, அகில்

10         உணவு                  -          மலைநெல், தினை

11        பறை                       –           தொண்டகம்

12            யாழ்                      -           குறிஞ்சி யாழ்

13             பண்                      -            குறிஞ்சிப் பண்

14             தொழில்             –           தேன் எடுத்தல், வெறியாடல்

இவ்வாறே ஏனைய திணைகளுக்கும் கருப்பொருள்கள் சொல்லப் பட்டுள்ளன.

•உரிப்பொருள்

ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருளை உரிப்பொருள் என்பர். உரிப்பொருள் திணைக்கு உரிய முக்கிய உணர்ச்சியைக் குறிக்கிறது. ஐந்து திணைகளுக்கும் உரிப்பொருள் பின்வருமாறு:

குறிஞ்சி           –       புணர்தல்    -         தலைவனும் தலைவியும் ஒன்று சேர்தல்.

முல்லை           –    இருத்தல்       –       தலைவி, பிரிவைப் பொறுத்துக் கொள்ளுதல்.

மருதம்               –       ஊடல்         –           தலைவனிடம் தலைவி பிணக்குக் கொள்ளுதல்.

நெய்தல்             –      இரங்கல்   –             தலைவி பிரிவுக் காலத்தில் வருந்துதல்.

பாலை                 –      பிரிவு           –        தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல்.

இவ்வாறு எல்லாத் திணைக்கும் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் சொல்லப்பட்டிருக்கின்றன. திணை, நிலத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றபடி உள்ள காலம், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை அந்தந்த நிலங்களுக்குச் சிறப்பாக அமையக் கூடியவை ஆகும். எல்லா நிலங்களுக்கும் சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவை பொதுவானவையே. ஆயினும் ஒவ்வொரு திணைக்கும் உரியதாகச் சொல்லப்பட்டவை அந்தந்தத் திணைக்குச் சிறப்பானவை ஆகும். பறவைகளும் விலங்குகளும் மரங்களும் பூக்களும் மற்ற நிலங்களிலும் இருக்கக்கூடும். எனினும் அந்தந்த நிலங்களுக்கு அவை சிறப்பு வாய்ந்தவை என்பதால் ஒரு திணைக்கு உரியதாக அவை சொல்லப்பட்டுள்ளன. உரிப்பொருள்களும் அவ்வாறே சிறப்புக் கருதிச் சொல்லப்பட்டுள்ளன. அகப்பொருள் இலக்கணம் களவு, கற்பு என்று இரண்டு கூறாகப் பிரிக்கப் பட்டுள்ளது. தலைவன், தலைவி இருவரும் ஒருவரை ஒருவர் பிறர் காணாதவாறு சந்தித்துக் காதல் கொள்ளுவது களவு எனப்படும். திருமணத்திற்குப் பின் உள்ள காதல் வாழ்க்கை, கற்பு எனப்படும். களவிலும் கற்பிலும் தலைவன் தலைவி இவர்களின் உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என்று விரிவாக இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. பொருள் இலக்கண அமைப்பைப் பின்வருமாறு காட்டலாம்.

அகப்பொருள் திணைகள் ஐந்துடன் கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டையும் சேர்த்துச் சொல்லுவது உண்டு. கைக்கிளை என்பது ஆண், பெண் ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே காதல் கொள்ளும் ஒருபக்கக் காதல் ஆகும். பெருந்திணை என்பது பொருந்தாத காதல் ஒழுக்கம் ஆகும். கைக்கிளை, பெருந்திணை இரண்டையும் அகப்புறத்திணை என்றும் கூறுவர். கைக்கிளை, பெருந்திணை இரண்டையும் புறப்பொருள் திணைகளாகவும் குறிப்பிடுவர்.

2.1.2 புறப்பொருள் இலக்கணம் புறப்பொருள் என்பது வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். ஒரு குறிப்பிட்ட அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோ பெயரைச் சுட்டி அவனுடைய வீரம், வெற்றி, கொடை முதலியவற்றைப் பாடுவது புறப்பொருள் மரபு ஆகும். இவ்வாறு அன்றி ஒருவருக்கு அறிவுரை சொல்லுவது போலவோ யாரையும் சுட்டிக் கூறாமலோ புறப்பொருள் பாடல் அமைவதும் உண்டு. அகப்பொருள் பாடல் போலவே புறப்பொருள் பாடல்களும் திணை, துறை அடிப்படையில் அமைந்துள்ளன. ஆனால் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்ற இலக்கணங்கள் புறப்பொருளுக்கு இல்லை. புறப்பொருள் திணைகள் போரை அடிப்படையாகக் கொண்டவை. போர் செய்யச் செல்லும் அரசனும் படைகளும் போரிடும் முறைக்கு ஏற்ப வெவ்வேறு பூக்களை அணிந்து சென்று போரிடுவர். அவர்கள் அணிந்து செல்லும் பூக்களின் பெயர்களே திணைகளுக்குப் பெயர்களாக அமைந்துள்ளன. பின்வரும் புறத்திணைகள் யாவும் பூக்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவையே.

புறப்பொருள் திணைகள்

வெட்சித் திணை

கரந்தைத் திணை

வஞ்சித் திணை

காஞ்சித் திணை

நொச்சித் திணை

உழிஞைத் திணை

தும்பைத் திணை

வாகைத் திணை

ஆகியவை புறப்பொருள் திணைகள் ஆகும். இந்த எட்டுத் திணைகளும் போரை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திணைகளுக்கான விளக்கமும் பிற திணைகளான

பாடாண் திணை

பொதுவியல்

கைக்கிளை

பெருந்திணை

ஆகியவற்றின் விளக்கமும் பின்வருமாறு:

வெட்சித் திணை:

பழைய காலத்தில் பகை அரசனிடம் போர் செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகை அரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான். இது வெட்சித் திணை எனப்படும். வெட்சி வீரன் வெட்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

கரந்தைத் திணை:

பகை அரசன் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை அவற்றிற்கு உரியவன் மீட்டுவரச் செய்யும் போர், கரந்தைத் திணை எனப்படும். கரந்தை வீரன் கரந்தைப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

வஞ்சித் திணை:

பகை அரசன் நாட்டைப் பிடிப்பதற்காக அந்த நாட்டின் மேல் படை எடுத்துச் செல்லுதல் வஞ்சித் திணை எனப்படும். வஞ்சி வீரன், வஞ்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

காஞ்சித் திணை:

படை எடுத்து வரும் பகை அரசனைத் தடுத்துத் தன் நாட்டைக் காக்க நினைக்கும் அரசன் போருக்குச் செல்லுதல் காஞ்சித் திணை எனப்படும். காஞ்சி வீரன் காஞ்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

நொச்சித் திணை:

பகை அரசன் படை எடுத்து வந்து கோட்டை மதிலைச் சூழ்ந்து கொண்டபோது, தன்னுடைய கோட்டையைக் காத்துக் கொள்ள அரசன் போர் செய்தல் நொச்சித் திணை எனப்படும். நொச்சி வீரன் நொச்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

உழிஞைத் திணை:

பகை அரசனுடைய கோட்டையை வெல்லக் கருதிய அரசன் தன் படைகளோடு மதிலைச் சுற்றி முற்றுகை இடுதல் உழிஞைத் திணை எனப்படும். உழிஞை வீரன் உழிஞைப்பூச் சூடி, போருக்குச் செல்வான்.

தும்பைத் திணை:

பகை அரசர்கள் இருவரும் போர்க் களத்தில் எதிர் எதிர் நின்று போரிடுதல் தும்பைத் திணை எனப்படும். தும்பை வீரன் தும்பைப் பூச் சூடி, போருக்குச் செல்வான். இந்தத் திணைகளுடன் வாகைத் திணை, பாடாண் திணை, பொதுவியல் திணை ஆகிய மூன்று புறத்திணைகளும் உள்ளன. இவற்றையும் சேர்த்து, பத்துப் புறத்திணைகள் என்று கூறுவர். கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டையும் சேர்த்து, பன்னிரண்டு புறத்திணை என்றும் கூறுவர்.

வாகைத் திணை:

போரில் வெற்றி பெற்ற அரசனைப் புகழ்ந்து பாடுதல் வாகைத் திணை எனப்படும். வெற்றி பெற்றவர்கள் வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவார்கள்.

பாடாண் திணை:

இதுவரை சொன்ன புறத்திணைகள் போர் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. பாடாண் திணையில் கொடை, கடவுள் வாழ்த்து, அரசனை வாழ்த்துதல் முதலியவை இடம்பெறும்.

பொதுவியல் திணை:

போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடுதல், போரில் இறந்த வீரர்களின் மனைவியர் இரங்கல், நிலையாமை முதலியவை பொதுவியல் திணையில் இடம்பெறும்.

கைக்கிளைத் திணை:

தன்னை விரும்பாத ஒரு பெண்ணிடம் ஒருவன் காதல் கொள்வது கைக்கிளைத் திணை எனப்படும். இதை ஒருதலைக்காதல் என்று கூறுவர்.

பெருந்திணை:

தன்னை விட வயதில் மிகவும் மூத்த பெண் ஒருத்தியிடம் ஒருவன் காதல் கொள்வது பெருந்திணை எனப்படும். இதைப் பொருந்தாக் காதல் என்று கூறுவர். கைக்கிளை, பெருந்திணை என்னும் இவ்விரண்டு திணைகளையும் அகப்பொருள் திணையாகவும் கூறுவர்.

2.2 யாப்பு இலக்கண அறிமுகம்

இலக்கியங்களை இயற்றும் போது இரண்டு வகையான ஊடகங்களில் இயற்றுவார்கள். அவற்றில் ஒன்று செய்யுள், மற்றது உரைநடை. பழைய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும் செய்யுளிலேயே இயற்றப்பட்டன. செய்யுளில் இயற்றப்பட்ட இலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் விளக்கம் கூறுவதற்கே உரைநடை பயன்படுத்தப்பட்டது. இலக்கியம் இயற்றப்பட்ட செய்யுள்களின் அமைப்புப் பற்றிப் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.

செய்யுள்களில் பல வகைகள் உள்ளன. செய்யுளின் முக்கியக் கூறாக இருப்பது ஓசை. வெவ்வேறு விதமான ஓசைகளை அடிப்படையாகக் கொண்டு பலவிதமான செய்யுள்கள் உருவாகியுள்ளன. பழைய காலத்தில் இருந்த முக்கியமான செய்யுள் வகைகள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவை ஆகும். இவற்றுடன் கலித்துறையும் பழைய காலத்தில் சிறப்பாக விளங்கியது. பக்தி இலக்கியமும் காப்பியங்களும் தோன்றிய காலத்தில் விருத்தம் என்ற செய்யுள் வகை பரவியது. பிற்காலத்தில் சிந்து, கும்மி முதலிய இசைப்பாடல் யாப்புகளிலும் செய்யுள்கள் இயற்றப்பட்டன. யாப்பு இலக்கணத்தில் செய்யுள் பற்றியும் செய்யுளின் உறுப்புகள் பற்றியும் கூறப்படும். அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் ஆகும். இந்த உறுப்புகளைப் பற்றியும் ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகிய பாக்களையும் அவற்றின் வகைகளையும் பற்றியும் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.

அசை

எழுத்துகள் சேர்ந்து அசையாக வருகின்றன. அசை நேர் அசை, நிரை அசை என்று இரண்டு வகைப்படும். ஒரு குறில் எழுத்து அல்லது நெடில் எழுத்து, தனியாகவோ மெய் எழுத்துடன் சேர்ந்தோ வருவது நேர் அசை எனப்படும்.

க – குறில் எழுத்து

கல் – குறில் + மெய் எழுத்து

கா – நெடில் எழுத்து

கால் – நெடில் + மெய் எழுத்து

குறில், நெடில் ஆகிய இரண்டும் தொடர்ந்து வருவதும் இரண்டு குறில் எழுத்துகள் தொடர்ந்து வருவதும் நிரை அசை ஆகும். இவற்றுக்குப் பின் மெய் எழுத்து வந்தாலும் நிரை அசை ஆகும்.

கிளி – இரண்டு குறில் எழுத்துகள்

மயில் – இரண்டு குறில் + மெய் எழுத்து

புறா – குறில் நெடில் எழுத்துகள்

இறால் – குறில் நெடில் + மெய் எழுத்து

மெய் எழுத்தைத் தவிர்த்துப் பார்த்தால் நிரை அசையில் இரண்டு எழுத்துகள் இருக்கும்.

சீர்:

அசைகள் இணைந்து வருவது சீர் ஆகும். ஒரே அசை சீராக இருப்பதும் உண்டு. இரண்டு, மூன்று, நான்கு அசைகள் சேர்ந்து சீராக அமைவதும் உண்டு. சீர்கள் பின்வருமாறு அமையும்:

ஓர் அசைச் சீர்

ஓர் அசை மட்டுமே வருவது ஓர் அசைச் சீர் ஆகும்.

க, கல், கா, கால் – நேர் அசை

கடு, கடல், பலா, வரால் – நிரை அசை

ஈர் அசைச் சீர்

இரண்டு அசைகள் சேர்ந்து வருவது ஈரசைச் சீர்ஆகும்.

நேர் நேர் நிரை

நேர் நேர் நிரை

நிரை நிரை

இவ்வாறு ஈர் அசைச் சீர்கள் நான்கு ஆகும்.

மூவசைச் சீர்

மூன்று அசைகள் சேர்ந்து வருவது மூவசைச் சீர் ஆகும்.

நேர் நேர் நேர்

நிரை நேர் நேர்

நேர் நிரை நேர்

நிரை நிரை நேர்

நேர் நேர் நிரை

நிரை நேர் நிரை

நேர் நிரை நிரை

நிரை நிரை நிரை

நேர் அசையில் முடியும் மூவசைச் சீர்கள்நான்கும், நிரை அசையில் முடியும் மூவசைச் சீர்கள் நான்கும் ஆக மூவசைச் சீர்கள் எட்டு ஆகும்.

நாலசைச் சீர்

நான்கு அசைகள் சேர்ந்து வருவது நாலசைச் சீர்எனப்படும்.

நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நிரை நேர் நிரை நிரை நேர் நிரை நிரை நிரை நிரை நிரை நிரை நிரை

நேர் அசையில் முடியும் நாலசைச் சீர் எட்டும், நிரை அசையில் முடியும் நாலசைச் சீர் எட்டும் ஆக நாலசைச் சீர்கள் பதினாறு ஆகும்.

சீர்களைப் பற்றிக் கூறும்போது அவற்றை எளிமையாக நினைவில் வைக்கும் பொருட்டு அவற்றுக்கு வாய்பாடு கூறப்பட்டுள்ளது. சீர் வாய்பாடுகள் பின்வருமாறு அமையும்: ஓரசைச் சீர்களில் நேர் அசைவரும் சீர் நாள் என்றும், நிரை அசை வரும் சீர் மலர் என்றும் கூறப்படும்.

ஈரசைச் சீர் வாய்பாடு பின்வருமாறு அமையும்.

நேர் நேர் – தேமா

நிரை நேர் – புளிமா

நேர் நிரை – கூவிளம்

நிரை நிரை – கருவிளம்

நேர் ஈற்றுச் சீர்களை மாச்சீர் என்றும் நிரை ஈற்றுச் சீர்களை விளச்சீர் என்றும் கூறுவர். மூவசைச் சீர்களில் நேர் ஈற்றுச் சீர்களுக்கு மேற்கண்ட வாய்பாடுகளுடன் இறுதியில் காய் என்பதும் நிரை ஈற்றுச் சீர்களுக்கு இறுதியில் கனி என்பதும் வாய்பாடாக வரும்.

நேர் நேர் நேர் தேமாங்காய்

நிரை நேர் நேர் புளிமாங்காய்

நேர் நிரை நேர் கூவிளங்காய்

நிரை நிரை நேர் கருவிளங்காய்

நேர் நேர் நிரை தேமாங்கனி

நிரை நேர் நிரை புளிமாங்கனி

நேர் நிரை நிரை கூவிளங்கனி

நிரை நிரை நிரை கருவிளங்கனி

நாலசைச் சீர்களுக்கு வாய்பாடு கூறும்போது இறுதியில் நேர் வந்தால் தண் பூ, நறும் பூ என்றும் இறுதியில் நிரைவந்தால் தண்ணிழல், நறு நிழல் என்றும் வாய்பாடு கூறுவர்.

நேர் நேர் நேர் நேர் தேமாந் தண்பூ

நிரை நேர் நிரை நேர் புளிமா நறும்பூ

நேர் நிரை நேர் நிரை கூவிளந் தண்ணிழல்

நிரை நிரை நிரை நிரை கருவிள நறுநிழல்

சீர்களை எளிதில் நினைவில் வைத்திருக்க உதவியாக இருக்கும் என்பதால் வாய்பாடு கூறப்படுகிறது.

தளை

இரண்டு சீர்கள் இணையும் விதம் தளை என்று கூறப்படுகிறது. தளை என்பதற்குக் கட்டு என்பது பொருள். சீர்கள் எவ்வாறு இணைந்து தளையாக வருகிறது என்பது கீழே காட்டப்படுகிறது.

கற் க கச டறக் கற் பவை கற் றபின்

நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நேர் நிரை

தேமா கருவிளம் கூவிளம் கூவிளம்

இந்த அடியில் நான்கு சீர்கள் உள்ளன. நான்கு சீர்களுமேஈரசைச் சீர்கள் ஆகும். கற்க என்ற சீர் நேர் அசையில் முடிகிறது. இதற்குப் பின் வரும் கசடறக் என்ற சீரில் முதல் அசை நிரை அசையாக உள்ளது. நேர் அசைக்குப் பின் நிரை அசை வந்துள்ளது. இதற்குப் பின் வரும் கற்பவை என்ற சீரில் முதல் அசை நேர் அசையாக உள்ளது. கற்றபின் என்ற சீரிலும் முதல்அசை நேர் அசையாக உள்ளது. இந்த அடியில் நேர் அசைக்குப்பின் நிரை அசையும், நிரை அசைக்குப் பின் நேர் அசையும் வந்து தளை கொண்டுள்ளன. முரண்பட்ட இந்தத்தளைக்கு இயற்சீர் வெண்டளை என்று பெயர் ஆகும். இந்தத்தளை வெண்பாவில் மிகுதியும் வரும். இதேபோல வெவ்வேறு அமைப்புகளில் ஏழுவகைத் தளைகள் உள்ளன.

அடி

செய்யுளின் அடுத்த உறுப்பு அடி என்பதாகும். அடிஎன்பது செய்யுளில் இடம்பெறும் ஒரு வரியைக் குறிக்கும். பல அடிகள் சேர்ந்து ஒரு செய்யுளாக வரும். அடிகளே செய்யுளை வகைப்படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கின்றன. அடியில் வரும்சீரின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிகள் பல வகைப்படும்.

இரண்டு சீர் அடி – குறள் அடி

மூன்று சீர் அடி – சிந்து அடி

நான்கு சீர் அடி – அளவு அடி

ஐந்து சீர் அடி – நெடில் அடி

ஆறு சீர் அடி – கழிநெடில் அடி

ஆறு சீர்களுக்கு மேலும் ஓர் அடியில் வருவது உண்டு. அவையும் கழிநெடில் அடி என்றே கூறப்படும்.

தொடை

தொடுக்கப்படுவது தொடை எனப்படும். இரண்டு அடிகள் தொடர்ந்து வரும்போது அவற்றில் முதல் எழுத்து இரண்டாம் எழுத்து முதலியவை ஒத்து வரும்படி இருப்பது தொடை என்று கூறப்படும். முதல் எழுத்து ஒத்து வருவது மோனை எனப்படும். இரண்டாம் எழுத்து ஒத்து வருவது எதுகை எனப்படும்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை (திருக்குறள் -411)

இந்தச் செய்யுளில் முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் முதல் எழுத்து செ என்றே வந்துள்ளது. இதுவே மோனைத் தொடை எனப்படும்.

கற்க கசடறக் கற்பவை

கற்றபின் நிற்க அதற்குத் தக (திருக்குறள்-391)

இந்தச் செய்யுளில் இரண்டு அடிகளிலும் இரண்டாம் எழுத்தாக ற் என்ற மெய் எழுத்து வந்துள்ளது. இதுவே எதுகை எனப்படும். இவைபோலவே வேறுபல தொடைகளும் உள்ளன.

பா

பா என்பது செய்யுளின் வகை ஆகும். பாக்கள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப்படும். ஒவ்வொரு பாவிலும் வரும் சீர், தளை, அடி ஆகியவை கூறப்பட்டுள்ளன. நான்கு பாக்களுக்கும் தனித்தனி ஓசை உண்டு. ஓசையை அடிப்படையாகக் கொண்டே பாக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாவிலும் பல வகைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, வெண்பாவின் வகைகள் பின்வருமாறு.

குறள் வெண்பா              -             இரண்டு அடிகள் கொண்டது.

சிந்தியல் வெண்பா      -              மூன்று அடிகள் கொண்டது.

இன்னிசை வெண்பா   –          நான்கு அடிகள் கொண்டது. (தனிச்சொல் வராது)

நேரிசை வெண்பா        -          நான்கு அடிகள் கொண்டது. (தனிச்சொல் வரும்)

பஃறொடை வெண்பா  -             ஐந்து அடிகளும் அதற்கு மேலும் வருவது.

ஒவ்வொரு பாவிற்கும் தனி ஓசை உண்டு. வெண்பாவின் ஓசை செப்பல் ஓசை எப்படும். இவ்வாறே மற்ற பாக்களுக்கும் ஓசைகளும் வகைகளும் உள்ளன.

பாவினம்

பாவினம் என்பது பாக்களை ஒட்டி வருவதாகும். பாக்களின் ஓசையை ஒட்டி வருவதால் இவற்றைப் பாவினம் என்று கூறுகின்றனர். தாழிசை, துறை, விருத்தம் ஆகிய மூன்றும் பாவினம் என்று கூறப்படும். இந்தப் பாவினங்கள் நான்கு பாக்களுக்கும் உள்ளன. ஆசிரியப் பாவிற்குரிய பாவினங்கள் பின்வருமாறு.

ஆசிரியத் துறை

ஆசிரியத் தாழிசை

ஆசிரிய விருத்தம்

இந்தப் பாவினங்களுக்குத் தனியே இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. இதைப் போலவே மற்ற பாக்களுக்கும் பாவினங்கள் உள்ளன.

2.2.1 பாட்டியல் இலக்கணம் இலக்கியங்கள் பலவகைப்படும். அவை பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி, உலா, தூது, பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு முதலியனவாகும். இவை பிற்காலத்தில் தோன்றிய இலக்கிய வகைகள் ஆகும். இத்தகைய இலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறுவது பாட்டியல் இலக்கணம் எனப்படும். பாட்டியல் நூல்கள் இலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுவதுடன் பொருத்த இலக்கணமும் கூறுகின்றன. செய்யுளில் அமைய வேண்டிய பொருத்தங்கள் பத்து என்று பாட்டியல்கள் கூறுகின்றன. ஒருநூலின் தொடக்கம் நன்றாக இருந்தால்தான் நூல் நன்றாக அமையும் என்பது அக்கால நம்பிக்கை. இந்த நம்பிக்கையை ஒட்டியே பொருத்தங்கள் அமைகின்றன.

பொருத்தங்கள்

1 மங்கலம் 2 எழுத்து 3 சொல் 4 தானம் 5 பால் 6 உண்டி 7 வருணம் 8 கதி 9 நாள் 10 கணம்

எடுத்துக்காட்டாக செய்யுளின் முதல் சொல் மங்கலமாக இருக்க வேண்டும் என்பது மங்கலப் பொருத்தம் ஆகும். பாட்டியல் நூல்கள் இதை வற்புறுத்திக் கூறுகின்றன. மங்கலச் சொற்கள் இவை என்ற ஒரு பட்டியலும் பாட்டியல் நூல்களில் தரப்பட்டுள்ளன. சீர், உலகம், மணி, பொன், பூ, திங்கள், கடல், மலை முதலியன மங்கலச் சொற்கள் ஆகும். இவற்றை முதல் சொல்லாகக் கொண்டே நூல் இயற்ற வேண்டும் என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.

2.3 அணி இலக்கணம்

அணி என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். செய்யுள்களில் உள்ள அழகுகளைப் பற்றிக் கூறுவது அணி இலக்கணம் ஆகும். அணிகளில் முக்கியமானது உவமை அணி ஆகும். மற்ற அணிகள் உவமையில் இருந்து கிளைத்தவையாகவே உள்ளன.

மலர் போன்ற முகம்

என்ற தொடரில் முகத்துக்கு மலர் உவமையாகக் கூறப்படுகிறது. இதில்

முகம் – பொருள்

மலர் – உவமை

போன்ற – உவம உருபு

இவ்வாறு கூறும்போது புரிந்து கொள்வது எளிதாக இருக்கும் என்பதால் நூல் இயற்றும் ஆசிரியர்கள் உவமையைக் கையாள்கிறார்கள். பொருள் அணி, சொல் அணி என்று அணி இரண்டு வகைப்படும். உவமை அணி, உருவக அணி, வேற்றுமை அணி, நிரல்நிறை அணி, வேற்றுப் பொருள் வைப்பு அணி, பிறிது மொழிதல் அணி முதலியவை பொருள் அணி வகையைச் சார்ந்தவை ஆகும். மடக்கும் சித்திர கவிகளும் சொல் அணி வகையைச் சார்ந்தவை ஆகும். சித்திர கவி என்பது சில சித்திரங்களை வரைந்து அவற்றில் உள்ள கட்டங்களில் பொருந்தும்படி இயற்றப்படும் செய்யுள் ஆகும். எழுகூற்றிருக்கை, காதை கரப்பு, மாலைமாற்று, சுழிகுளம், சக்கரம், நாகபந்தம் முதலியன சித்திர கவியின் வகைகள் ஆகும். அணிகளில் முதன்மையானது உவமை அணி என்று முன்பு பார்த்தோம். உவமை அணி என்பது கவிஞர், தாம் சிறப்பிக்க வந்த ஒரு பொருளை மக்களால் உயர்வாக மதிக்கப்படும் வேறு ஒன்றுடன் ஒப்பிடுவது ஆகும். பண்பு, தொழில், பயன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒப்புமை அமையும். உவமை அணியில் உவமை கூறப்படும் பொருள், உவமை, உவம உருபு ஆகிய மூன்றும் இருக்கும். பொதுவாகப் பொருளை விட உவமை உயர்ந்ததாக இருக்கும்.

எ.டு.

மலை போன்ற தோள்          -            பண்பு

புலி போலப் பாய்ந்தான்      -           தொழில்

மழை போன்ற வள்ளன்மை  -        பயன்

உவமை அணியில் பல உவம உருபுகள் வரும். அவை பின்வருமாறு:

போல                        உறழ

மான                         எதிர

புரைய                     சிவண

கடுப்ப                       கேழ்

அன்ன                        ஏற்ப

ஒப்ப                       இயைய

மலைய                   நேர

நிகர்ப்ப                   என்ன

எடுத்துக்காட்டாக உவமை அணி உள்ள ஒரு செய்யுளை இப்பொழுது காணலாம்.

“இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று” (திருக்குறள் 100)

இனிய சொற்கள் இருக்கும் போது கடுமையான சொற்களைப் பேசுவது, இனிமையான பழங்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் காய்களை உண்பது போல் ஆகும் என்பது இதன் பொருள். இதில் இனிய சொற்களை விட்டுக் கடுமையான சொற்களைப் பேசுதல் என்பது பொருள் ஆகும். இதற்குப் பழங்கள் இருக்கக் காய்களை உண்பது உவமை ஆகும். இப்படி உவமை மூலமாகச் சொல்லுவதால் எளிமையாக இருக்கிறது; தெளிவாகவும் புரிகிறது.

2.4 தொகுப்புரை

உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பாகத் தமிழ்மொழியில் பொருள் இலக்கணம் அமைந்துள்ளது. பொருள் இலக்கணத்தை இரண்டாகப் பகுத்து அகப்பொருள் இலக்கணம் என்றும் புறப்பொருள் இலக்கணம் என்றும் தமிழில் இலக்கணம் வழங்கியுள்ளார்கள்.

அகத்திணைகள் ஐந்து. புறத்திணைகள் பன்னிரண்டு.

யாப்பு இலக்கணத்தில் அசை வரையறை, சொல் வரையறை, அடி வரையறை முதலியவை விளக்கப்பட்டுள்ளன. மேலும் அணி என்றால் என்ன என்றும் அவை செய்யுளில் இடம் பெறுவதால் ஏற்படும் சிறப்புப் பற்றியும் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது.

பாடம் - 3

எழுத்து இலக்கணத்தின் அமைப்பு

3.0பாட முன்னுரை

மக்கள் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு உதவுவது மொழி. மொழி சொற்களால் ஆனது. சொற்கள் எழுத்துகளால் ஆனவை. எழுத்து என்பது மொழியின் சிறிய அலகு ஆகும். ஆகவே, ஒரு மொழியின் இலக்கணத்தைக் கற்பதற்கு அடிப்படையாக அமைவது எழுத்து இலக்கணமே ஆகும். எழுத்துகளின் வரிவடிவம். ஒலிவடிவம், எழுத்துகளின் வகைகள், மாத்திரை, போலி முதலியவற்றைப் பற்றி இந்தப்பாடத்தில் காணலாம்.

ஒலிவடிவம், வரிவடிவம்

எழுத்துகளுக்கு ஒலிவடிவம், வரிவடிவம் என்று இருவகை வடிவங்கள் உண்டு. எழுத்துகளை இந்த இரண்டு வடிவங்களிலும் காணலாம். இவற்றில் ஒலி வடிவம் முதன்மையானது. எழுத்துகளை ஒலிப்பதே ஒலி வடிவம் எனப்படுகிறது, எழுத்துகளை எழுதிக்காட்டுவது வரி வடிவம் எனப்படும்,

அ, இ, உ, க், ச், ப்

எழுத்து இலக்கணத்தில் வரி வடிவத்தைவிட, ஒலி வடிவம் முதன்மையானது, ஒலியை அடிப்படையாகக் கொண்டே, எழுத்துகளின் இலக்கணம் சொல்லப்படுகிறது,

3.1 எழுத்தின் வகைகள்

எழுத்துகளை முதல் எழுத்து என்றும் சார்பு எழுத்து என்றும் இருவகையாகப் பிரிக்கலாம். மொழிக்கு முதற்காரணமாகவும் பிற எழுத்துகள் தோன்றவும் ஒலிக்கவும் காரணமாக இருக்கும் எழுத்துகள் முதல் எழுத்துகள் எனப்படும். முதல் எழுத்துகளைச் சார்ந்து வரக்கூடிய எழுத்துகளைச் சார்பு எழுத்துகள் என்கிறோம். இதைப் பின் வரும் விளக்கப்படம் எடுத்துக்காட்டுகிறது.

3.1.1 முதல் எழுத்துகள் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பதினெட்டு மெய் எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். சொற்களை உருவாக்க இவையே அடிப்படையாக இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்கிறோம்.

• உயிர் எழுத்துகளும் அமைப்பு முறையும்

தமிழில், அடிப்படை ஒலிகளான அ முதல் ஒள வரை உள்ள ஒலிகளை – எழுத்துகளை உயிர் எழுத்துகள் என்கிறோம். இவை அமைந்துள்ள முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

இந்தப் பன்னிரண்டு எழுத்துகளும் இயல்பாகவும் எளிதாகவும் ஒலிக்கக் கூடியனவாக உள்ளன.

உயிர் எழுத்தை ஆவி எழுத்து என்றும் குறிப்பிடுவர். ஆவி என்றால் உயிர் என்று பொருள்.

• மெய் எழுத்துகளும் அமைப்பு முறையும்

உயிர் எழுத்துகளைப் போலவே மொழிக்கு அடிப்படையாக உள்ள மற்றொரு வகை எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். க், ங், ச் முதலியன மெய் எழுத்துகள் ஆகும். மெய் எழுத்துகளும் அவை வரிசையில் அமைந்துள்ள முறையும் கீழே தரப்பட்டுள்ளன.

க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

இந்த எழுத்துகளை ஒலிப்பது சற்றுக் கடினம். உயிர் இல்லாமல் உடல் இயங்காது. அதுபோல இந்த எழுத்துகள் உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தே இயங்கும், அதனால் இவற்றை மெய் எழுத்துகள் என்று கூறுவர். மெய் என்பதும் உடம்பு என்பதும் ஒரே பொருள் தரும் சொற்கள் ஆகும். மெய் எழுத்துகளை ஒற்று எழுத்துகள் என்றும் கூறுவர். இந்த எழுத்துகள் புள்ளியுடன் இருப்பதால் இவற்றைப் புள்ளி எழுத்து என்றும் கூறுவர். உயிர் எழுத்துகள் 12, மெய்யெழுத்துகள் 18 ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.

‘உயிரும் உடம்புமாம் முப்பதும் முதலே’ (59)

என்னும் நன்னூல் நூற்பா இதை விளக்குகிறது.

3.1.2 சார்பு எழுத்துகள் தமிழ் மொழியில் உயிர் எழுத்துகள் மெய் எழுத்துகள் மட்டும் அல்லாமல் வேறு சில வகை எழுத்துகளும் உள்ளன. இவை முதல் எழுத்துகளின் அடிப்படையில், அவற்றின் கூட்டாக அமைகின்றன. அதாவது முதல் எழுத்துகளைச் சார்ந்து (துணைஎழுத்தாக) நிற்கின்றன. எனவே சார்பு எழுத்துகள் என அழைக்கப் படுகின்றன. உயிர்மெய், ஆய்தம் முதலிய எழுத்துகள் சார்பு எழுத்துகள் ஆகும்.

• உயிர்மெய்

உயிர் (ஒலியும்) எழுத்துகளும் மெய் (ஒலியும்) எழுத்துகளும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகள் உண்டாகின்றன. உயிர் ஒலியே எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பதால் அதற்கு முதல் இடம் தந்து, ‘உயிர்மெய்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

மெய் உயிர் உயிர்மெய்(வரி வடிவம்)

க் + இ = கி

ச் + உ = சு

ப் + ஊ = பூ

வ் + ஆ = வா

த் + ஏ = தே

இந்த எழுத்துகள் எல்லாம் உயிர் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் சேர்ந்து உருவாகிய எழுத்துகள் என்பதால், இவற்றை உயிர்மெய் எழுத்துகள் என்று அழைக்கிறோம். மேலே காட்டிய எழுத்துகளை நீங்களும் ஒலித்துப் பாருங்கள், இந்த எழுத்துகளில் மெய் எழுத்தின் ஓசையும், உயிர் எழுத்தின் ஓசையும் இணைந்து இருப்பதைக் காணலாம்,

• ஆய்தம்

தமிழ் மொழியில் ஃ என்று ஓர் எழுத்து உள்ளது, இதைஆய்த எழுத்து என்று சுட்டுவர்.

இது சொற்களில் பின்வருமாறு வரும்.

அஃது, எஃகு

ஆய்த எழுத்து ஃ என்ற முக்கோண வடிவத்தில் உள்ளது. இதில் மூன்று புள்ளிகள் இருப்பதால் இதை முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்றும் அழைப்பர். ஆய்த எழுத்து உயிர் எழுத்தோடும் மெய் எழுத்தோடும் ஒன்றாமல் இருப்பதால் இதைத் தனிநிலை என்றும் சுட்டுவர். ஆய்த எழுத்துகள் சொல்லில் வரும்போது, அதற்கு முன்னும் பின்னும் வேறு எழுத்துகள் வருகின்றன. ஆய்த எழுத்தும் மற்ற எழுத்துகளைச் சார்ந்தே வருகிறது. எனவே இதுவும் சார்பு எழுத்து எனப்படுகிறது. தமிழில் வேறு சில சார்பு எழுத்துகளும் உள்ளன. அவை பின் வரும் பாடங்களில் விளக்கப்படும்.

3.1.3 உயிர் எழுத்தின் வகைகள் உயிர் எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை,

1. குறில் 2. நெடில்

என்பவை ஆகும்.

• குறில்

பன்னிரண்டு உயிர் எழுத்துகளில் சில எழுத்துகள் குறுகி ஒலிக்கின்றன. அவ்வாறு குறுகி ஒலிக்கும் எழுத்துகளைக் குறில் எழுத்துகள் என்று குறிப்பிடுவர்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை நோக்குங்கள்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள

இவற்றில் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறைந்த அளவு நேரமே ஒலிப்பதால் இவற்றைக் குற்றெழுத்து அல்லது குறில் எழுத்து என்று குறிப்பர்.

‘அ, இ, உ, எ, ஒ, குறில் ஐந்தே’ (64)

என்னும் நன்னூல் நூற்பா, அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்து எழுத்துகளும் குறில் எழுத்துகள் என்று குறிப்பிட்டுள்ளது.

• நெடில்

பன்னிரண்டு உயிர் எழுத்துகளில் சில எழுத்துகள் நீண்டு ஒலிக்கின்றன. அவ்வாறு நீண்டு ஒலிக்கும் எழுத்துகளை நெடில் எழுத்துகள் என்று குறிப்பிடுவர்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு எழுத்துகளும் நீண்டு ஒலிப்பதால் நெட்டெழுத்து அல்லது நெடில் எழுத்துகள் என்று குறிக்கப்படும்.

‘ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள நெடில்’ (65)

என்னும் நன்னூல் நூற்பா ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு எழுத்துகளும் நெடில் எழுத்துகள் என்று குறிப்பிட்டுள்ளது.

3.1.4 மெய் எழுத்தின் வகைகள் உயிர் எழுத்துகளில் இவ்வாறு குறில், நெடில் வேறுபாடு உண்டு, ஆனால் மெய் எழுத்துகளில் இவ்வாறான குறில், நெடில் வேறுபாடு இல்லை. உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உண்டாகும் உயிர்மெய் எழுத்துகளிலும் இதே போல குறில் நெடில் வேறுபாடு உண்டு.

மெய் எழுத்துகள் மூன்று வகைப்படும். அவை,

1. வல்லினம்

2, மெல்லினம்

3. இடையினம்

• வல்லினம்

மெய் எழுத்துகளில் வன்மையாக ஒலிக்கும் எழுத்துகளை வல்லினம் என்று கூறுவர். க், ச், ட், த், ப், ற் என்ற ஆறு மெய் எழுத்துகளும் வன்மையாக ஒலிப்பதால் வல்லின எழுத்துகள் ஆகும்.

வல்லினம் க, ச, ட, த, ப, ற என ஆறே (68)

என்னும் நன்னூல் நூற்பா வல்லின எழுத்துகள் எவை என்றுகுறிக்கிறது.

• மெல்லினம்

மெய் எழுத்துகளில் மென்மையாக ஒலிக்கும் எழுத்துகளை மெல்லினம் என்று கூறுவர். ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறு மெய் எழுத்துகளும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லின எழுத்துகள் ஆகும்.

மெல்லினம் ங, ஞ, ண, ந. ம, ன என ஆறே (69)

என்னும் நன்னூல் நூற்பா மெல்லின எழுத்துகள் எவை என்று குறிக்கிறது.

• இடையினம்

மெய் எழுத்துகளில் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிக்கும் எழுத்துகளை இடையினம் என்று கூறுவர். ய், ர், ல், வ், ழ், ள் என்ற ஆறு மெய் எழுத்துகளும் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிப்பதால் இடையின எழுத்துகள் ஆகும்.

இடையினம் ய, ர, ல, வ, ழ, ள என ஆறே (70)

என்னும் நன்னூல் நூற்பா இடையின எழுத்துகள் எவை என்று குறிக்கிறது.

3.1.5 இன எழுத்துகள் பிறப்பு, ஒலிப்பு முதலியவற்றில் ஒத்து இருக்கும் எழுத்துகளை இன எழுத்துகள் என்று கூறுவர். உயிர் எழுத்துகள் குறில். நெடில் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. குறில் எழுத்துகள் ஐந்தும் நெடில் எழுத்துகள் ஏழும் உள்ளன. இவற்றின் ஒத்த தன்மையைக் கொண்டு இன எழுத்துகளாகப் பிரிப்பர்.

அ ஆ

இ ஈ

உ ஊ

எ ஏ

— ஐ

ஒ ஓ

— ஔ

நெடில் எழுத்தாக; உள்ள ஐ, ஒள ஆகியவற்றுக்கு இனமான குறில் எழுத்துகள் இல்லை.

மெய் எழுத்துகளில் ஆறு மெல்லின எழுத்துகளும் ஆறுவல்லின எழுத்துகளுக்கு இன எழுத்துகளாக உள்ளன. மெய் எழுத்துகளில் இன எழுத்துகள் பின்வருமாறு அமையும்.

க் ங் தங்கம்

ச் ஞ் பஞ்சு

ட் ண் நண்டு

த் ந் பந்து

ப் ம் பாம்பு

ற் ன் கன்று

இந்தச் சொற்களில் உள்ள மெய் எழுத்துகளைக் கவனியுங்கள், இவற்றில் ங்க, ஞ்சு, ண்டு, ந்து, ம்பு, ன்று என்று வந்துள்ளதைக் கவனியுங்கள், இந்தச் சொற்களில் மெய் எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகளும் அடுத்தடுத்து வந்துள்ளன. முன்பு உயிர் எழுத்துகளில் இன எழுத்துகளைப் பார்த்தோம். இவை மெய் எழுத்துகளில் இன எழுத்துகள் ஆகும்.

க, ச, ட, த, ப, ற என்ற வல்லின எழுத்துகள் ஆறும் தனியே ஒலிக்கும்போது வன்மையாக ஒலிக்கும். மேலே காட்டியபடி சொற்களில் மெல்லின எழுத்துகளை ஒட்டி வரும்போது இவை மென்மையாகவே ஒலிக்கும். வல்லின எழுத்தை ஒட்டி வரும்போது வன்மையாக ஒலிக்கும்.

சங்கு பக்கம்

நஞ்சு நச்சு

பண்டம் பட்டம்

மந்தி கத்தி

பம்பரம் கப்பல்

இன்று நேற்று

மேலே காட்டப்பட்டுள்ள சொற்களில் இடப்பக்கம் உள்ளவை மென்மையாகவும் வலப்பக்கம் உள்ளவை வன்மையாகவும் ஒலிக்கும் என்பதை ஒலித்துப் பாருங்கள்.

3.1.6 சுட்டு எழுத்துகள் ஒரு பொருளைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்குப் பயன்படும் எழுத்துகள் சில உள்ளன, பின்வருவனவற்றைப் படியுங்கள்,

அவ்வீடு

இப்புத்தகம்

அம்மரம்

இப்பூனை

மேலே, வீடு, புத்தகம், மரம், பூனை முதலிய சொற்களுக்கு முன் அ, இ ஆகிய எழுத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் பொருள்களைச் சுட்டிக் காட்டப் பயன்படுகின்றன. ஒரு பொருளின் பெயருக்கு முன் இந்த எழுத்துகள் வந்து, அந்தப் பொருளைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டப் பயன்படுகின்றன.

ஒரு தென்னந்தோப்பில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் நிற்கும். மரங்கள் என்று சொன்னால் அது அந்தத் தோப்பில் உள்ள மரங்களைக் குறிக்கும். மரம் என்றால் அது தோப்பில் உள்ள ஏதோ ஒரு மரத்தைக் குறிக்கும். அம்மரம் என்று சொன்னால் அத்தோப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட மரம் சுட்டிக்காட்டப்படுவதை நாம் உணரமுடியும். இவ்வாறு சுட்டிக்காட்ட உதவும் எழுத்து, சுட்டு எழுத்து எனப்படும். அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும். உ என்ற சுட்டு எழுத்து, தற்காலத்தில் பயன்பாட்டில் இல்லை.

உதுக்காண்

உவன்

உங்கே

என்ற இடங்களில் உகரம் சுட்டு எழுத்தாக வந்துள்ளதைக் காணலாம். இக்காலத்தில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டும் உகரச் சுட்டைப் பயன்படுத்துகின்றனர், மற்றபடி இக்காலத் தமிழ் மொழியில் உகரச் சுட்டு இடம்பெறுவதில்லை.

அ, இ, உம் முதல் தனிவரின் சுட்டே (66)

என்னும் நன்னூல் நூற்பா சுட்டு எழுத்துகள் எவை என்று குறிக்கிறது.

• சேய்மைச் சுட்டு

அவ்வீடு

அக்கரை

அம்மரம்

அக்குளம்

மேலே காட்டப்பட்ட எடுத்துக் காட்டுகளில், அவ்வீடு, அம்மரம் முதலியன தொலைவில் உள்ள பொருள்களைச் சுட்டிக்காட்டுகின்றன, எனவே இதனைச் சேய்மைச் சுட்டு என்கிறோம். சேய்மை என்பது தொலைவு என்று பொருள்படும்.

• அண்மைச் சுட்டு

இப்பூனை

இப்புத்தகம்

இம்மாடு

இக்கட்டில்

இப்புத்தகம், இப்பூனை முதலியன அருகில் உள்ள பொருள்களைச் சுட்டிக் காட்டுகின்றன. எனவே இவற்றை அண்மைச் சுட்டு என்கிறோம். அண்மை என்பது அருகில் என்று பொருள்படும்.

• அகச்சுட்டு

அவன்

இவள்

அது

இது

இந்தச் சொற்களில் அ, இ ஆகிய எழுத்துகள் சுட்டுப்பொருளை உணர்த்தி வருகின்றன. இவை சொல்லுக்கு உள்ளேயே இருக்கின்றன. அவன் என்பதில் ’அ’ என்ற சுட்டு எழுத்தை நீக்கிவிட்டால் ‘வன்’ தனியே நின்று பொருள் இல்லாமல் போய்விடும். எனவே இவற்றைச் சொல்லில் இருந்து தனியே பிரித்துக் காணமுடியாது. ஒரு சொல்லுக்கு உள்ளே இருந்து, சுட்டுப் பொருளையும் உணர்த்துவதால், இவற்றை அகச் சுட்டு என்று கூறுவர். அகம் என்பது உள்ளே என்று பொருள்படும்.

• புறச்சுட்டு

அவ்வீடு

இம்மனிதன்

அக்குளம்

இம்மாடு

மேலே காட்டியவற்றில் அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் வீடு, மனிதன் முதலியவற்றுடன் கூடி. ஒரே சொல் போன்று காட்சி தருகின்றன. எனினும் இவற்றைத் தனியே பிரிக்க முடியும். எடுத்துக்காட்டாக மேலே உள்ள சொற்களில் சுட்டு எழுத்துகளை நீக்கிப் பார்க்கலாம்.

அ + வீடு

இ + மனிதன்

அ + குளம்

இ + மாடு

இவற்றில் சுட்டு எழுத்தை நீக்கிய பின் வீடு, மனிதன், குளம், மாடு ஆகிய சொற்கள் தனித்து நிற்கின்றன. இந்த எடுத்துக்காட்டுகளில் சொல்லுக்கு வெளியே இருந்து சுட்டு எழுத்துகள் சுட்டுப் பொருளை உணர்த்துவதால் இவை புறச் சுட்டு எனப்படுகின்றன, புறம் என்பது வெளியே என்று பொருள்படும்.

• சுட்டுத் திரிபு

அந்த மரம்

இந்த வீடு

அந்த மாடு

இந்த ஆடு

மேலே காட்டிய எடுத்துக் காட்டுகளில் மரம், வீடு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் அந்த, இந்த ஆகியவை சொல்லுக்கு வெளியே தனியே நின்றுள்ளன. இவை அடிப்படையில் அ, இ என்ற சுட்டு எழுத்துகளே. ஆனால் இங்கு அந்த, இந்த என்று மாறியுள்ளன. இவை தம் வடிவத்திலிருந்து திரிந்து, பொருளைச் சுட்டுகின்றன. எனவே இவற்றைச் சுட்டுத் திரிபு என்று கூறுவர்.

3.1.7 வினா எழுத்துகள் அ, இ ஆகிய எழுத்துகள் சுட்டுப் பொருள் தருவது போலவே, சில எழுத்துகள் வினாப் பொருளைத் தருகின்றன. கீழே உள்ளவற்றைக் கவனிக்க. வினா என்பதும் கேள்வி என்பதும் ஒரே பொருள் தருவன.

யார்? எங்கு? நீயா?

இந்தச் சொற்கள் வினாப் பொருள் தருவதை உணரலாம். தமிழில் ஆ, எ. ஏ. ஓ, யா ஆகிய எழுத்துகள், வினாப் பொருள்தரும் எழுத்துகள் ஆகும், இவை வினாப் பொருள் தருவதால் வினா எழுத்துகள் எனப்படுகின்றன, வினா எழுத்துகள் ஒருசொல்லைச் சார்ந்தே வினாப் பொருள் தரும். இவற்றில் எ, யா ஆகிய இரு எழுத்துகளும் ஒருசொல்லுக்கு முதலில் வந்து வினாப் பொருள் தரும்,

எப்படி? எவ்வரிசை? எம்மனிதர்? யார்? யாது?

ஆ, ஓ ஆகிய இரு எழுத்துகளும் சொல்லுக்கு இறுதியில் வந்து வினாப் பொருள் தரும்.

நானா சொன்னேன்? – ஆ

அவனா தருவான்? – ஆ

நானோ கள்வன்? – ஓ

அவர் வருவாரோ? – ஓ

ஏ என்னும் எழுத்து, சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வந்து வினாப் பொருள் தரும்.

ஏன், ஏது யாரே அனுபவிப்பார்

எ, யா, முதலும் ஆ, ஓ. ஈற்றும் ஏ, இருவழியும் வினா ஆகும்மே (67)

என்னும் நன்னூல் நூற்பா வினா எழுத்துகள் எவை என்று குறிப்பதுடன் சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துகளையும் இறுதியில் வரும் வினா எழுத்துகளையும் முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்தையும் குறிப்பிடுகிறது.

• அகவினா

சுட்டு எழுத்துகளைப் போலவே சொல்லுக்கு உள்ளே இருந்து வினாப் பொருளை உணர்த்துவது அகவினா எனப்படும்.

ஏன்? யார்? என்ன? எங்கு?

மேற்கண்ட சொற்களில் வினா எழுத்துகளை நீக்கிவிட்டால், அச்சொற்கள் பொருள் தர மாட்டா. ஆகவே இவை அக வினா எனப்படுகின்றன.

• புறவினா

வினா எழுத்துகள் சொல்லுக்கு வெளியே இருந்து, வினாப்பொருளைத் தந்தால் அது புறவினா எனப்படும்.

எம்மரம்? எ+மரம்

எப்படி? எ+படி

அவளா? அவள்+ஆ

நின்றானா? நின்றான்+ஆ

தருவாளா? தருவாள்+ஆ

மேலே உள்ள எடுத்துக்காட்டுகளில், வினாப் பொருள் தரும் எ, ஆ, ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கிவிட்டாலும் இந்தச் சொற்கள் பொருள் தரும்.

3.2எழுத்துச் சாரியை

எழுத்துகளை ஒலிக்கும்போது, அ, ப் என்று ஒலிக்கிறோம். எழுத்துகளை ஒலிக்கும்போது தனியே எழுத்தை மட்டும் ஒலிக்காமல், அகரம், இகரம் என்று ஒலிப்பதும் உண்டு. கரம் என்று சேர்த்துச் சொல்வதால், எழுத்துகளை எளிதாக ஒலிப்பதற்கு ஏதுவாக இருக்கும். எழுத்துகளை எளிதாக ஒலிக்கப் பயன்படும் இவற்றை எழுத்துச் சாரியை என்று வழங்குவர்.

மெய் எழுத்துகளைத் தனியாக ஒலிப்பது கடினம். எனவே அவற்றை அ என்ற உயிர் எழுத்துடன் சேர்த்தே சொல்லுவர். இலக்கணத்தில், க என்று கூறப்படும் எழுத்து க் என்ற மெய் எழுத்தையே குறிக்கும், கரம் என்பதைப் போலவே காரம், கான் ஆகியவையும் எழுத்துச் சாரியைகளாக வரும். கீழ்வரும் எடுத்துக்காட்டுகளைக் கவனிக்க.

அகரம், சகரம், எகாரம், வகாரம், மஃகான், வஃகான் ஆகாரம், யாகாரம் ஐகான், ஒளகான் க. ச. த. ப

இவற்றை நோக்குங்கள். இவற்றில் கரம், காரம், கான் ஆகிய சாரியைகள் வந்துள்ளன, மெய் எழுத்துகள் அ சாரியை பெறும் என ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது. எழுத்துச் சாரியைகளைக் கீழ்க்காணுமாறு காட்டலாம்.

குறில் எழுத்துகள் – கரம், காரம், கான்

நெடில் எழுத்துகள் – காரம்

ஐ, ஒள, – கான்

மெய் எழுத்துகள் – அ

குறில் எழுத்துகள் கான் சாரியை பெற்று வரும்போது, அதற்குமுன் ஆய்த எழுத்து வரும்,

எடுத்துக்காட்டாக, மஃகான், லஃகான், வஃகான் என்று வரும்.

மெய்கள் அகரமும் நெட்டுயிர் காரமும்

ஐ, ஒள, கானும், இருமைக் குறில் இவ்

இரண்டொடு காரமும் ஆம் சாரியை பெறும் பிற

(நன்னூல் 126)

3.3 மாத்திரை

மாத்திரை என்பது ஓர் எழுத்தை எவ்வளவு நேரம் ஒலிக்கிறோம் என்று கூறுவதாகும். ஒவ்வோர் எழுத்தையும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்று வரையறை செய்து வைக்கப்பட்டுள்ளது. மாத்திரை என்பது கால அளவைக் குறிப்பதாகும். மாத்திரை இரண்டு விதமான அளவுகளில் விளக்கப்படுகிறது.

இயல்பு எழும் மாந்தர் இமை, நொடி, மாத்திரை

(நன்னூல் 100)

1.மனிதர்கள் இயல்பாகக் கண் இமைக்கும் நேரம்.

2.மனிதர்கள் இயல்பாகக் கை நொடிக்கும் (சொடுக்குப் போடும்) நேரம்.

இவை ஒரு மாத்திரை எனப்படும். எழுத்துகள் கீழ்வருமாறு ஒலிக்கப்பட வேண்டும்.

உயிர்க் குறில் – ஒரு மாத்திரை – அ, இ

உயிர்மெய்க் குறில் – ஒரு மாத்திரை – ப, த

உயிர் நெடில் – இரண்டு மாத்திரை – ஊ, ஏ,

உயிர்மெய் நெடில் – இரண்டு மாத்திரை – போ, பூ

மெய் எழுத்து – அரை மாத்திரை – ய், ள்

மேலே குறிப்பிட்ட விதத்தில் எழுத்துகளை ஒலிக்கவேண்டும். எனினும், இந்த வரையறை சில இடங்களில் மீறப்படுவதும் உண்டு. இசை பாடும்போதும், ஒருவரை விளிக்கும்போதும், பொருள்களைக் கூவி விற்கும் போதும் இந்த வரையறையை மீறி ஒலித்தலும் உண்டு.

3.4 போலி

சொற்களில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு ஓர் எழுத்து வருவதைப் போலி என்று கூறுவர். அப்படி வேறு எழுத்து வரும்போது பொருள் மாறாமல் இருக்க வேண்டும். போலி எழுத்துகள் சொல்லின் முதலிலும், இடையிலும், இறுதியிலும் வரும். இவற்றை முறையே முதற்போலி, இடைப்போலி, இறுதிப்போலி என்று கூறுவர்.

3.4.1 முதற்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து, போலியாக வருவதை முதற்போலி என்று கூறுவர்.

பசல் பைசல்

மயல் மையல்

மஞ்சு மைஞ்சு

இந்தச் சொற்களில் அகரம் வரவேண்டிய இடங்களில் ஐகாரம் வந்துள்ளது.

3.4.2 இடைப்போலி சொல்லுக்கு இடையில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வருவது இடைப்போலி ஆகும்.

அரயர் அரையர்

இலஞ்சி இலைஞ்சி

இந்தச் சொற்களில் அகரம் வரவேண்டிய இடங்களில் ஐகாரம் வந்துள்ளது. இவை சொல்லுக்கு இடையில் வந்துள்ளதால் இடைப்போலி எனப்படும்.

3.4.3 இறுதிப்போலி சொல்லின் இறுதியில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வருவது இறுதிப் போலி எனப்படும். இதைக் கடைப் போலி எனவும் கூறுவர்.

முகம் முகன்

அகம் அகன்

நலம் நலன்

நிலம் நிலன்

சாம்பல் சாம்பர்

பந்தல் பந்தர்

இந்தச் சொற்களின் இறுதியில் மகர ஒற்று வரவேண்டிய இடத்தில் னகர ஒற்றும், லகர ஒற்று வரவேண்டிய இடத்தில் ரகர ஒற்றும் வந்துள்ளன. இவ்வாறு வருவது இறுதிப் போலி எனப்படுகிறது.

3.5தொகுப்புரை

தமிழ் எழுத்துகளின் வகைகளை இந்தப் பாடம் எடுத்துரைத்துள்ளது. குறில் நெடில் என்னும் உயிர் எழுத்தின் வகைகளும், வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் மெய் எழுத்தின் வகைகளும் விளக்கப் பட்டுள்ளன. இன எழுத்துகள் எவையெல்லாம் என்பதையும் சுட்டு எழுத்துகளையும் வினா எழுத்துகளையும் இந்தப் பாடம் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ் எழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் உரிய மாத்திரையையும் மாத்திரை என்றால் என்ன என்பதையும் இந்தப் பாடம் விளக்கியுள்ளது. போலி என்றால் என்ன என்பதைப் பற்றியும் போலியின் வகைகளையும் எடுத்துரைத்துள்ளது.

பாடம் - 4

சார்பு எழுத்துகள்

4.0பாட முன்னுரை

எழுத்துகள், முதல் எழுத்துகள் என்றும் சார்பு எழுத்துகள் என்றும் இரு வகைப்படும் என்று முன்பு கூறப்பட்டது. சென்ற பாடத்தில் முதல் எழுத்துகள் பற்றிய விளக்கம் கூறப்பட்டது. இந்தப் பாடத்தில் சார்பு எழுத்துகள் பற்றி விளக்கப்படும்.

4.1 உயிர்மெய்

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துத் தோன்றும். இதில் மெய் எழுத்து முன்னும் உயிர் எழுத்துப் பின்னும் ஒலிக்கப்படும். பதினெட்டு மெய் எழுத்துகள், பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து, இருநூற்றுப் பதினாறு உயிர்மெய் எழுத்துகள் தோன்றும்.

மெய்-உயிர்=உயிர்மெய்18×12=216

எடுத்துக்காட்டாக

க் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க் + அ = க

க் + ஆ = கா

க் + இ = கி

க் + ஈ = கீ

க் + உ = கு

க் + ஊ = கூ

க் + எ = கெ

க் + ஏ = கே

க் + ஐ = கை

க் + ஒ = கொ

க் + ஓ = கோ

க் + ஒள = கௌ

இவ்வாறே மற்ற மெய் எழுத்துகளும் 12 உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து 216 உயிர்மெய் எழுத்துகள் தோன்றுவதை இணைப்பில் காண்க.

உயிர் எழுத்துகளுக்கு உரிய மாத்திரையே உயிர்மெய் எழுத்துகளுக்கும் பொருந்தும். அதாவது உயிர்மெய்க் குறில் எழுத்துகள் ஒரு மாத்திரையும், உயிர்மெய் நெடில் எழுத்துகள் இரண்டு மாத்திரையும் பெறும். உயிர்மெய் எழுத்துகள் மெய் எழுத்துகளைப் போலவே வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று இனமாகவும் வரும்.

உயிர்மெய் எழுத்துகளின் ஒலிவடிவம் உயிர் எழுத்தின் ஓசையும் மெய் எழுத்தின் ஓசையும் கலந்ததாக இருக்கும். உயிர்மெய் எழுத்துகளை ஒலித்து, அதில் மெய்யின் ஓசையும் உயிர் எழுத்தின் ஓசையும் கலந்து இருப்பதை அறிக.

உயிர்மெய் எழுத்துகளில் மெய் எழுத்து முன்னும் உயிர் எழுத்து பின்னும் வரும்.

க=க்+அ

மு=ம்+உ

உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவம் மெய் எழுத்துகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

எடுத்துக்காட்டு:

க் = க, கா, கி, கீ

ப் = பி, பு, பெ, பை

ட் = டி, டீ, டொ, டோ

உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவம் பின்வருமாறு அமையும்.

அகர உயிருடன் கூடிய மெய் எழுத்துகள், புள்ளி இல்லாத மெய் எழுத்தாக இருக்கும்.

க, ங, ச, ஞ, ட

மற்ற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வரும்போது மேற்கண்ட வடிவத்தில் சில மாற்றங்கள் பெற்று வரும்.

ஆகார உயிருடன் சேர்ந்த மெய் எழுத்துகள், அகரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகளுடன் வலதுபக்கம் கால் ‘ா’ பெற்று வரும்.

கா, சா, ஞா, டா

இகர உயிருடன் சேர்ந்த மெய் எழுத்துகள் மேலே ‘ி’குறியீடு பெற்று வரும்

பி, சி, தி, டி

ஈகார உயிருடன் சேர்ந்த மெய் எழுத்துகள் மேலே ‘ீ’குறியீடு பெற்று வரும்

நீ, ளீ, ரீ, தீ

உகரத்துடன் கூடிய மெய் எழுத்துகள் தனியான குறியீடு இல்லாமல் முழு உருவமும் மாறி வரும்.

கு, ஙு, சு. ஞு, டு, ணு, து, நு, பு,மு, யு, ரு, லு, வு, ழு, ளு, று, னு.

ஊகாரத்துடன் கூடிய மெய் எழுத்துகளும் தனிக் குறியீடு இல்லாமல் மாறி வரும்.

கூ, ஙூ, சூ, ஞூ, டூ, ணூ, தூ, நூ. பூ,மூ, யூ, ரூ, லூ, வூ, ழூ, ளூ, றூ, னூ.

எகரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ஒற்றைக் கொம்பு என்னும் ‘ெ’ குறியீடு பெற்று வரும்.

கெ, செ, டெ, மெ

ஏகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் இரட்டைக் கொம்பு என்னும் ‘ே’ குறியீடு பெற்று வரும்.

கே, பே, ளே, வே, யே

ஐகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ை’என்ற குறியீட்டைப் பெற்று வரும்.

மை, லை, றை, ழை, னை

ஒகரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ெ’என்ற குறியீடும், வலதுபக்கம் ‘ா’ என்ற குறியீடும் பெற்று வரும்.

பொ, யொ, ரொ, சொ

ஓகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ே’என்ற குறியீடும், வலதுபக்கம் ‘ா’ என்ற குறியீடும் பெற்று வரும்.

கோ, டோ, மோ, யோ, ழோ

ஒளகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ெ’என்ற குறியீடும், வலதுபக்கம் ‘ள’ என்ற குறியீடும் பெற்று வரும்.

பௌ, சௌ, நௌ, ரௌ

புள்ளி விட்டு அவ்வொடு முன் உரு ஆகியும்

ஏனை உயிரொடு உருவு திரிந்தும்

உயிர் அளபாய் அதன் வடிவு ஒழித்து இருவயின்

பெயரொடும் ஒற்று முன்னாய் வரும் உயிர் மெய்

(நன்னூல் 89)

(பொருள்: அகர உயிர் எழுத்துடன் சேர்ந்து வரும்போது புள்ளி இல்லாமலும் மற்ற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வரும்போது வடிவம் திரிந்தும் வரும். மாத்திரை கொள்ளும்போது உயிர்எழுத்தின் மாத்திரையே கொண்டு வரும். மெய் எழுத்து முன்பும் உயிர் எழுத்து பின்பும் வந்து உயிர் மெய் என்று இரண்டின் பெயரையும் பெற்று வரும்.)

4.2 ஆய்தம்

ஆய்த எழுத்தும் சார்பு எழுத்துகளில் ஒன்று. இதன் வரிவடிவம் முக்கோணத்தில் அமைந்த மூன்று புள்ளிகள் போன்று இருக்கும்.

ஆய்த எழுத்து அரை மாத்திரை நேரம் ஒலிக்கும். ஆய்த எழுத்து, தனியாக வராது. சொல்லுக்கு நடுவில் மட்டும் வரும். ஆய்த எழுத்துக்கு முன்பு குறில் எழுத்தும், பின்னால் உகரத்துடன் சேர்ந்த வல்லின எழுத்தும் (கு, சு, டு, து, பு, று) வரும்.

அஃது

எஃகு

இது தனிமொழி ஆய்த எழுத்து ஆகும். இரண்டு சொற்கள் சேரும்போதும் ஆய்த எழுத்து உருவாகும். இதைப் பின்னர் காணலாம்.

குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே

(நன்னூல் 90)

பொருள்:

ஆய்த எழுத்து குறில் எழுத்திற்குப் பின்பும், குற்றியலுகர எழுத்திற்கு முன்பும் வரும்.

4.3 உயிரளபெடை

பழங்காலத்தில் தமிழ் மொழியில் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுள்களாகவே இருந்தன. செய்யுள், ஓசையை அடிப்படையாகக் கொண்டது. குறள் வெண்பா முதல் பல வகையான செய்யுள் வடிவங்கள் இருந்தன. செய்யுளில் ஓசை குறையும் இடங்களில் ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துகள் நீண்டு ஒலிக்கும். இவ்வாறு நீண்டு ஒலிப்பதை, அளபெடுத்தல் என்று கூறுவர். அளபெடை இரண்டு வகைப்படும். அவை,

1. உயிரளபெடை

2. ஒற்றளபெடை

என்பவை ஆகும்.

நெடில் எழுத்துகளே அளபெடுக்கும். நெடில் எழுத்து அளபெடுக்கும் போது, அந்த நெடில் எழுத்திற்கு இனமான குறில் எழுத்து அளபெடுப்பதற்கு அடையாளமாக அதன் அருகில் எழுதப்படும். செய்யுளில் இவ்வாறு எழுதப்பட்டுள்ள இடங்களில் நீட்டி ஒலிக்க வேண்டும் என்பது அதன் கருத்தாகும். நெடில் எழுத்து இரண்டு மாத்திரை. அளபெடுக்கும்போது அதற்கு இனமான குறில் எழுத்தையும் எழுதுவதால், குறிலுக்கு உரிய ஒரு மாத்திரையும் சேர்த்து உயிரளபெடை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்கும்.

இன எழுத்துகள் ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ என்பனவாகும், ஐகாரத்திற்கும் ஒளகாரத்திற்கும் இணையான குறில் இல்லை என்பதால், முறையே இகரம், உகரம் ஆகியவை அடையாளமாக எழுதப்படும்.

மாஅயோள்

பேஎய்ப் பக்கம்

இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்

அளபு எழும் அவற்று அவற்று இனக் குறில் குறியே

(நன்னூல் 91)

(பொருள்: செய்யுளில் ஓசை குறையும்போது சொல்லுக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் நெடில் எழுத்து நீண்டு ஒலிக்கும். அதற்கு அடையாளமாகக் குறில் எழுத்து எழுதப்படும்.)

பொதுவாக, செய்யுளில் ஏற்படும் ஓசைக் குறைவை நிறைவு செய்யவே அளபெடுக்கிறது. எனினும் வேறு காரணங்களுக்காக அளபெடுப்பதும் உண்டு. உயிரளபெடை நான்கு வகைப்படும்.

1. இயற்கை அளபெடை

2. சொல்லிசை அளபெடை

3. இன்னிசை அளபெடை

4. செய்யுளிசை அளபெடை.

4.3.1 இயற்கை அளபெடை இயல்பாகவே சொல்லில் வரும் எழுத்துகள் அளபெடுத்து நின்றால் அதை இயற்கை அளபெடை என்று கூறுவர்.

மரூஉ, ஒரூஉ, ஆடூஉ, மகடூஉ, குரீஇ

குழூஉக்குறி, குளாஅம்பல்

பேரூர்கிழாஅன்

இவை இயற்கையாகவே அளபெடுப்பதால் இயற்கை அளபெடை எனப்படுகின்றன

4.3.2 சொல்லிசை அளபெடை ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும்.

நசை என்பது விருப்பம் என்று பொருள்படும். அதையே

நசைஇ என்று அளபெடை ஆக்கினால், விரும்பி என்றுபொருள் தரும். இதுவே சொல்லிசை அளபெடை ஆகும்

தொகை தொகைஇ (தொகுத்து)

வளை வளைஇ (வளைத்து)

4.3.3 இன்னிசை அளபெடை செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகள் ஆகி, அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

கெடுப்பதும் என்ற சொல்லில் உள்ள து என்ற குறில்எழுத்து, தூ என நெடில் எழுத்தாகி, கெடுப்பதூஉம் என அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்

இந்தக் குறளில் உள்ள உடுப்பதூஉம் உண்பதூஉம் என்ற இரண்டும் இன்னிசை அளபெடைகளே.

4.3.4 செய்யுளிசை அளபெடை செய்யுளில் ஓசை குறையும்போது அளபெடுத்து ஓசையைநிறைவு செய்வது செய்யுளிசை அளபெடை ஆகும்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

இந்தக் குறளில் தொழாள் என்று இயல்பாக இருந்தால், அது ஒரே நிரை அசை ஆகிவிடும். இந்த இடத்தில் ஓசை கெடாமல் இருக்க நிரை, நேர் என்ற இரு அசைகள் தேவை. தொழாஅள் என்று அளபெடுத்தபின், தொழா என்பது நிரை அசையாகவும், அள் என்பது நேர் அசையாகவும் அமைந்து ஓசையை நிறைவு செய்கின்றன. செய்யுளிசை அளபெடையை அறிந்துகொள்ள யாப்பிலக்கணம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். யாப்பிலக்கணப் பாடங்களில் அளபெடை பற்றி விரிவாக விளக்கப்படும்.

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்

நற்றாள் தொழாஅர் எனின்

என்று வரும் இவையும் செய்யுளிசை அளபெடை ஆகும். செய்யுளிசை அளபெடை சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும். செய்யுளிசை அளபெடையை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்

அளபெடைச் சொற்களைச் சொல்லும் போது, நெடில் எழுத்தைத் தனியாகவும் அதனோடு ஒட்டி வரும் குறில் எழுத்தைத் தனியாகவும் ஒலிக்கக் கூடாது. இரண்டு எழுத்துகளின் ஓசையும் ஒட்டி வரும்படியே நீட்டி ஒலிக்க வேண்டும். அளபெடையில் எழுத்துகளை விட்டு இசைப்பது ஓசை இனிமையைக் கெடுக்கும்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

4.4ஒற்றளபெடை

உயிர் எழுத்துகள் அளபெடுப்பது போலவே மெய் எழுத்துகளும் அளபெடுக்கும். மெய் எழுத்து அளபெடுக்கும்போது, அதற்கு அடையாளமாக, அதே மெய் எழுத்து எழுதப்படும். ங், ஞ். ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்து மெய்எழுத்துகளும் ஆய்த எழுத்தும் அளபெடுக்கும். ஒரு மெய்எழுத்து அரை மாத்திரை நேரம் ஒலிக்கும் என்று கூறப்பட்டது. மெய்எழுத்து அளபெடுக்கும்போது இரண்டு மெய்எழுத்துகள் வருவதால், இரண்டும் சேர்ந்து ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும்.

வணங்ங்கினான்.

மன்ன்னன்

ங, ஞ. ண, ந, ம, ன, வ, ய, ல, ள, ஆய்தம்

அளபு ஆம், குறில் இணை, குறில் கீழ், இடை, கடை

மிகலே அவற்றின் குறி ஆம் வேறே

(நன்னூல் 92)

(பொருள்: செய்யுளில் ஓசை குறையும்போது, குறில் எழுத்தை அடுத்தும், தொடர்ந்து வரும் இரண்டு குறில் எழுத்துகளை அடுத்தும், சொல்லின் இடையிலும் இறுதியிலும் ங், ஞ், ண், ந்,ம், ன், வ், ய், ல், ள் ஆகிய மெய் எழுத்துகளும் ஆய்த எழுத்தும் நீண்டு ஒலிக்கும். அளபெடுப்பதற்கு அடையாளமாக அதே மெய்எழுத்து எழுதப்படும்.)

பெயர்:ஒற்றளபெடை

எழுத்துகள்:ங், ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள், ஃ

வரும் இடம்:

ஒரு குறில் எழுத்து இரு குறில் எழுத்து } இவற்றுக்குப் பிறகு

சொல்லின்

முதல்

இடை

இறுதி } ஆகிய இடங்களில் அளபெடுக்கும்அடையாளம்:

அதே எழுத்து மீண்டும் எழுதப்படும்.

4.5குற்றியலுகரம்

உகரம் ஒரு மாத்திரை உடையது. இந்த ஒரு மாத்திரை அளவும் குறைந்து (குறுகி) ஒலிக்கிற இடங்களும் உண்டு. அப்போது அது குற்றியலுகரம் (குறுகி ஒலிக்கின்ற உகரம்) என்று அழைக்கப்படும்.

அதற்குச் சில வரையறைகள் உண்டு.

வல்லின மெய்களோடு சேர்ந்த உகரம் மட்டுமே குற்றியலுகரமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதாவது, கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே இந்த வகையில் அடங்கும்.

இந்த ஆறும் சொல்லின் கடைசி எழுத்தாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டு: பாக்கு, பேசு, நாடு, காது, அம்பு, ஆறு.

தனிக்குறில் எழுத்தை அடுத்து வந்தால் அது குற்றியலுகரம் ஆகாது. எடுத்துக்காட்டு: அது, பசு, வடு, அறு முதலியவை.

குற்றியலுகரத்தை ஆறு வகையாகப் பிரிக்கலாம். அவை,

நெடில் தொடர்க் குற்றியலுகரம்

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்

வன்தொடர்க் குற்றியலுகரம்

மென்தொடர்க் குற்றியலுகரம்

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

என்பவை ஆகும்.

• நெடில் தொடர்க் குற்றியலுகரம்

தனியாக உள்ள நெடில் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் நெடில் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.டு :

பாகு

மூசு

பாடு

காது

ஆறு

• ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

ஆய்த எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு ,து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ,டு :அஃது (அது என்பது பொருள்)

கஃசு (பழங்காலத்து நாணயம் ஒன்று)

• உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்

உயிர் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

நெடில் எழுத்துகள், நெடில் தொடர்க் குற்றியலுகரத்தில் இடம் பெற்றதால் உயிர்மெய் எழுத்துகளில் உள்ள குறில் எழுத்துகள் மட்டும் உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் வரும். எனவே, இது, குறில்தொடர்க் குற்றியலுகரம் என்றும் அழைக்கப்படும்.

உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் மட்டுமே வரும்.

எ.டு :

வரகு

தவிசு

முரடு

வயது

கிணறு

• வன்தொடர்க் குற்றியலுகரம்

வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.டு :

பாக்கு

கச்சு

பட்டு

பத்து

மூப்பு

காற்று

• மென்தொடர்க் குற்றியலுகரம்

மெல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.டு :

சங்கு

பஞ்சு

நண்டு

பந்து

பாம்பு

கன்று

• இடைத்தொடர்க் குற்றியலுகரம்

இடையின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.டு :

மூழ்கு

செய்து

மார்பு

பல்கு

4.5.1 முற்றியலுகரம் மேலே காட்டிய கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகள் தனிக் குறிலை அடுத்து வந்தால் ஓசை குறைவதில்லை.

நகு, பசு, தடு, எது, மறு

கு, சு, டு, து, பு, று ஆகிய வல்லின மெய்யுடன் கூடிய உகர எழுத்துகள் வந்தாலும், முதல் எழுத்து, குறில் எழுத்தாக இருப்பதால், இவை குற்றியலுகரம் அல்ல.

மெல்லின, இடையின மெய்களோடு சேர்ந்த உகரமும் சொல்லுக்கு இறுதியில் வரும்போது குறைந்து ஒலிப்பதில்லை.

அணு, தனு, உறுமு, குழுமு, தும்மு, பளு,

எரு, ஏவு இரவு, நிறைவு, உறவு, விரிவு

ஓய்வு, பிறழ்வு, நிகழ்வு

வலு, ஏழு, உழு, துள்ளு

மேலே காட்டப்பட்டுள்ள சொற்களின் இறுதியில் மெல்லின, இடையின மெய் எழுத்துகள் உகரத்துடன் சேர்ந்து வந்துள்ளன. அவை குறைந்து ஒலிப்பதில்லை. எனவே அவை குற்றியலுகரம் அல்ல. ஒரு சொல்லின் இறுதியில் உள்ள உகரம் குறைந்து ஒலிக்காமல் முழு அளவில் ஒலிக்குமாயின் அது முற்றியலுகரம் எனப்படும். மேலே காட்டியுள்ள சொற்களில் உள்ள உகரங்கள் எல்லாம் முற்றியலுகரங்கள் ஆகும்.

ஒரு சொல்லின் இறுதியில் வரும் உகரம் முற்றியலுகரமாகவோ குற்றியலுகரமாகவோ இருக்கும்.

4.6குற்றியலிகரம்

உகரம் சில இடங்களில் குறுகி, குற்றியலுகரம் ஆவது போலவே, இகரமும் சில இடங்களில் குறுகும். இவ்வாறு இகரம் குறுகி வருவதைக் குற்றியலிகரம் என்று கூறுவர். குற்றியலிகரம் இரண்டு வகையாக வரும்.

4.6.1 தனிமொழிக் குற்றியலிகரம் மியா என்ற அசைச்சொல்லில் ம் என்ற எழுத்தோடு சேர்ந்த இகரம் குறுகும். இதில் ம் என்ற எழுத்திற்குப் பின் யகரம் வருவதால் குறைந்து ஒலிக்கிறது. இதுவே தனிமொழிக் குற்றியலிகரம் ஆகும்.

கேண்மியா

சென்மியா

இந்தச் சொற்களில் உள்ள ‘மி’ என்ற எழுத்தில் உள்ள இகரம் தனக்கு இயல்பான ஒரு மாத்திரையில் இருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும்.

4.6.2 புணர்மொழிக் குற்றியலிகரம் புணர்மொழி என்பது இரண்டு சொற்கள் சேர்ந்து வருவதாகும். புணர்மொழிக் குற்றியலிகரம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது உருவாகும் குற்றியலிகரம் ஆகும். முதலில் உள்ள சொல்லின் இறுதியில் குற்றியலுகர எழுத்து வந்து, இரண்டாம் சொல் ‘ய’ என்ற எழுத்தில் தொடங்கும்போது, குற்றியலுகரத்தில் உள்ள உகரமானது, இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம், உகரம் குறைந்து ஒலிப்பது போலவே அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்.

நாடு(ட்+உ) + யாது = நாடியாது(ட்+இ)

களிற்று(ற்+உ) + யானை = களிற்றியானை(ற்+இ)

கொக்கு(க்+உ) + யாது = கொக்கியாது(க்+இ)

குரங்கு(க்+உ) + யாது = குரங்கியாது(க்+இ)

யகரம் வரக் குறள் உத் திரி இகரமும்

அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய

(நன்னூல் 93)

(பொருள்: இரண்டு சொற்கள் சேரும் இடத்தில் முதல் சொல்லின் இறுதியில் வரும் குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இரண்டாம் சொல்லின் முதலில் யகரம் வரும்போது இகரமாக மாறும். இந்த இகரமும் அசைச் சொல்லாகிய மியா என்பதில் உள்ள இகரமும் குறைந்து ஒலிக்கும்.)

4.7 குறுக்கங்கள்

குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகிய இரண்டிலும் உகரம் குறுகி ஒலிப்பதைப் பற்றிப் படித்தோம். அதைப்போல, ஐ, ஔ, ம், ஆய்தம் ஆகியவையும் குறுகி ஒலிக்கும். இவற்றை ஐகாரக் குறுக்கும், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம் என்று சொல்கிறோம்.

4.7.1 ஐகாரக்குறுக்கம் ஐ என்கிற உயிர் எழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும்.

ஐப்பசி, வைகல் – முதல்

கடைசி, இறைவன் – இடை

மழை, நகை , கடை – இறுதி

மேலே ஐ என்ற எழுத்து, சொல்லின் மூன்று இடங்களிலும் வந்திருப்பதைக் காணலாம். ஐ என்பது நெடில் எழுத்து என்று முன்பே கூறப்பட்டது. நெடில் எழுத்து என்பதால் ஐகாரம் இரண்டு மாத்திரை நேரம் ஒலிக்கும். தனியே இருக்கும் ஐகாரம் மட்டுமே இவ்வாறு இரண்டு மாத்திரை ஒலிக்கும். சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் ஐகாரம் இரண்டு மாத்திரையில் குறைந்து ஒரு மாத்திரையாக ஒலிக்கும். இதை ஐகாரக் குறுக்கம் என்று கூறுவர்.

மேலே காட்டியுள்ள எடுத்துக்காட்டுகளில் உள்ள ஐகாரம், இரண்டு மாத்திரையில் இருந்து குறைந்து ஒரு மாத்திரையாகவே ஒலிக்கும். ஐகாரம் அளபெடுக்கும்போது குறைந்து ஒலிப்பதில்லை,

நசைஇ, அசைஇ

இந்த இடத்தில் ஐகாரத்திற்கு இரண்டு மாத்திரையும் இகரத்திற்கு ஒரு மாத்திரையும் வரும்.

4.7.2 ஒளகாரக்குறுக்கம் ஒளகாரம் நெடில் எழுத்து என்பதால் இரண்டு மாத்திரை பெறும். ஒளகாரம் சொல்லுக்கு முதலில் வரும்போது குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதை ஒளகாரக்குறுக்கம் என்பர். ஒளகாரக்குறுக்கம் ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும்.

ஒளவையார், மௌவல், வௌவால்.

ஒளகாரம் தனியே ஒலிக்கும்போது குறைந்து ஒலிப்பதில்லை.

தற்சுட்டு அளபு ஒழி ஐம் மூவழியும்

நையும் ஒளவும் முதல் அற்று ஆகும்

(நன்னூல் 95)

(பொருள்: ஐகார எழுத்து சொல்லில் வரும்போது, தன்னைச்சுட்டிக் கூறும் இடத்திலும் அளபெடையிலும் தவிர மற்ற இடங்களில் (சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும்) குறைந்தே ஒலிக்கும். ஒளகார எழுத்தும் சொல்லின் முதலில் வரும்போது குறைந்து ஒலிக்கும். )

4.7.3 மகரக்குறுக்கம் மகரக்குறுக்கம் என்பது மகர ஒற்று, குறைந்து ஒலிப்பதைக் குறிக்கும். மகரக்குறுக்கம் இரண்டு வகைப்படும்.

தனிமொழி

ணகர, னகர ஒற்று எழுத்துகளை அடுத்து வரும் மகரமெய் எழுத்து, குறைந்து ஒலிக்கும்.

மருண்ம், உண்ம்

போன்ம், சென்ம்

புணர்மொழி

இரண்டு சொற்கள் சேரும்போது, முதல் சொல்லின் இறுதியில் மகர ஒற்று வந்து, இரண்டாம் சொல்லின் முதல் எழுத்தாக வகரம் வந்தால் மகர ஒற்று குறுகும்.

தரும் வளவன்

வாழும் வகை

மகர ஒற்று அரை மாத்திரை ஒலிக்க வேண்டும். மேற்கண்ட இடங்களில் குறைந்து ஒலிக்கும் மகரக்குறுக்கம் கால் மாத்திரையே பெறும்.

ண, ன முன்னும், வஃகான் மிசையும் மக்குறுகும்.

(நன்னூல். 96)

பொருள்:

வகரத்திற்கு முன்பும் ண், ன் மெய் எழுத்துகளுக்குப் பின்பும் மகர ஒற்று, குறைந்து ஒலிக்கும்.

4.7.4 ஆய்தக்குறுக்கம் இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின் இறுதியில் ல், ள் ஆகிய மெய் எழுத்துகள் வந்து இரண்டாம் சொல்லின் முதலில் தகர எழுத்து வந்தால் ல், ள் ஆகியவை ஆய்த எழுத்தாக மாறிவிடும்.

அல்+திணை=அஃறிணை

முள்+தீது =முஃடீது

இந்த ஆய்த எழுத்து, குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும். இதையே ஆய்தக்குறுக்கம் என்று கூறுவர்.

ல, ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்

(நன்னூல் 97)

(பொருள்: ல், ள் ஆகிய எழுத்துகள் ஆய்த எழுத்தாகத் திரியும். அந்த ஆய்த எழுத்து, குறைந்து ஒலிக்கும். )

• சார்பு எழுத்துகளுக்கு மாத்திரை

சார்பு எழுத்துகள் எல்லாம் எப்படி மாத்திரை பெறும் என்பதைப் பின்வரும் பட்டியல் காட்டும்.

உயிரளபெடை மூன்று மாத்திரை

உயிர்மெய் நெடில் இரண்டு மாத்திரை

உயிர்மெய்க் குறில் ஒரு மாத்திரை

ஒற்றளபெடை ஒரு மாத்திரை

ஐகாரக்குறுக்கம், ஒரு மாத்திரை

ஒளகாரக்குறுக்கம் ஒரு மாத்திரை

குற்றியலுகரம், குற்றியலிகரம் அரை மாத்திரை

ஆய்தம் அரை மாத்திரை

மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் கால் மாத்திர

மூன்று உயிரளபு; இரண்டு ஆம் நெடில்; ஒன்றே

குறிலோடு, ஐ, ஒளக் குறுக்கம் ஒற்றளபு;

அரை ஒற்று. இ, உக் குறுக்கம், ஆய்தம்;

கால் குறள் மஃகான், ஆய்தம், மாத்திரை.

(நன்னூல். 99)

(பொருள்: உயிரளபெடை மூன்று மாத்திரை பெறும். உயிர்மெய்க்குறில், ஒற்றளபெடை, ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம் ஆகியவை ஒரு மாத்திரை பெறும். மெய் எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகியவை அரை மாத்திரை பெறும். மகரக்குறுக்கமும் ஆய்தக் குறுக்கமும் கால் மாத்திரை பெறும். )

4.8 தொகுப்புரை

சார்பு எழுத்துகளின் பத்து வகையையும் இப்பாடம் விளக்குகிறது. உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய் எழுத்து உருவாவதை இப்பாடத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

ஆய்த எழுத்தின் வடிவம், மாத்திரை முதலியவற்றை இப்பாடம் தெரிவிக்கிறது. அளபெடையின் வகைகளையும் அவை பற்றிய விளக்கங்களையும் குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகியவற்றையும் இப்பாடம் அறிவிக்கிறது.

ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் முதலியவை குறுகி வரும் தன்மையையும் அவற்றின் மாத்திரையையும் இப்பாடம் உணர்த்துகிறது.

பாடம் - 5

மொழி முதல், மொழி இறுதி எழுத்துகள்

5.0பாட முன்னுரை

தமிழ் மொழியில் எழுதும்போது சொற்களின் முதலில் இந்த எழுத்துகள் தான் வரும் என்ற வரையறை உண்டு. ஆங்கில மொழியில் உள்ள எல்லா எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரும். ஆனால் தமிழ் மொழியில் உள்ள எல்லா எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவது இல்லை. தனி மெய் எழுத்துகள் சொல்லின் முதல் எழுத்தாக வாரா. ழு, வு, லு முதலிய உயிர்மெய் எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவது இல்லை. அதேபோல, சொல்லுக்கு இறுதியிலும் எல்லா எழுத்துகளும் வருவதில்லை. சொல்லில் ஒரு மெய் எழுத்தை அடுத்து மற்றொரு மெய் எழுத்து வருவதற்கும் சில வரையறைகள் உள்ளன. தமிழ் மொழியில் சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் பற்றியும் சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகள் பற்றியும் இந்தப் பாடத்தில் காணலாம்.

5.1உயிர்மெய் எழுத்துகளின் நிலை

தமிழில் உள்ள எழுத்துகளை முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் என வகைப்படுத்தலாம் என முந்தைய பாடங்களில் பார்த்தோம். உயிர் எழுத்து, மெய் எழுத்து ஆகிய முதல் எழுத்துகளும், சார்பு எழுத்துகளில் உயிர்மெய் எழுத்துகளும் சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வரும் தன்மையை இந்தப் பாடம் வரையறுத்துச் சொல்கிறது.

உயிர் எழுத்து, மெய் எழுத்து என்று முதல் எழுத்துகள் இரு வகைப்படும்.

அவற்றில் உயிர் எழுத்துகள் சொல்லுக்கு முதலில் வரும். மெய் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வரும். உயிர் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை. மெய் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு முதலில் வருவது இல்லை. வல்லின எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை.

எடுத்துக்காட்டு

சொல்லின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து வருதல்.

அம்மா

எறும்பு

சொல்லுக்கு இறுதியில் மெய் எழுத்து வருதல்.

மணல்

முள்

கண்

உயிர்மெய் எழுத்துகள் சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வரும்.

சொல்லுக்கு முதலில் உயிர்மெய் எழுத்து வருதல்.

பல்

கண்

மரம்

நிழல்

சொல்லுக்கு இறுதியில் உயிர்மெய் எழுத்து வருதல்.

எலி

அப்பா

உணவு

ஒற்றுமை

உயிர் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் சேர்ந்து உண்டாவதே உயிர்மெய் எழுத்து என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் உயிர்மெய் எழுத்துகளில் மெய் எழுத்துகள் முன்னும் உயிர் எழுத்துகள் பின்னும் அமைந்துள்ளன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துகளைப் பற்றிப் பார்க்கும்போது உயிர்மெய் எழுத்துகளை மெய்+உயிர் என்று தனித்தனியே பிரித்துவிட வேண்டும். அவ்வாறு பிரித்துவிட்டால் சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் உயிர்எழுத்து அல்லது மெய் எழுத்து ஆகிய இரண்டு மட்டுமே வரும் என்பது தெளிவாகிவிடும்.

மரம் என்ற சொல்லின் முதல் எழுத்து ம. இதைப் பிரித்துப் பார்த்தால் ம்+அ என்று வரும். மரம் என்ற சொல் ம் என்ற மெய் எழுத்தில் தொடங்கிய சொல் என்று கொள்ள வேண்டும்.

கிளி என்ற சொல்லின் இறுதி எழுத்து ளி என்பதாகும். இதைப் பிரித்துப் பார்த்தால் ள்+இ என்று வரும். கிளி என்ற சொல் இ என்ற உயிர் எழுத்தில் முடிகின்ற சொல் என்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு பிரித்துப் பார்க்கும் போது எல்லா எழுத்துகளையும் உயிர் எழுத்து அல்லது மெய் எழுத்து என்ற பகுப்புக்குள் கொண்டு வந்து விடலாம். ஒருசொல் உயிர் எழுத்திலோ அல்லது மெய் எழுத்திலோ தான் தொடங்குகிறது என்று கூறிவிட இயலும். அதே போல ஒரு சொல் உயிர் எழுத்திலோ அல்லது மெய் எழுத்திலோ தான் முடிகிறது என்றும் கூறிவிட இயலும்.

சொல் என்பது ஒரு பொருளைக் குறிப்பது. பல எழுத்துகளின் சேர்க்கை ஒரு சொல் ஆகிறது. ஒரே எழுத்தும் ஒரு பொருளைக் குறிக்கப் பயன்படும். அப்போது அந்த ஒற்றை எழுத்தும் ஒருசொல் ஆகிறது. நெடில் எழுத்துகள் மட்டுமே தனித்து ஒரு சொல்லாக வரும்.

தீ, பூ, வா, போ

இவற்றை ஓர் எழுத்து ஒரு மொழி என்று கூறுவர். இந்தச் சொற்கள் எல்லாம் உயிர்மெய் எழுத்துகள் வரும் ஓர் எழுத்துச் சொற்கள். இவற்றைப் பிரித்துப் பார்க்கலாம்.

தீ=த்+ஈ

பூ=ப்+ஊ

வா=வ்+ஆ

போ=ப்+ஓ

மேலே பிரித்துக் காட்டியுள்ளதைக் கவனியுங்கள். இவற்றில் மெய் எழுத்து முன்னும், உயிர் எழுத்து பின்னும் அமைந்துள்ளன. எனவே இவற்றை மெய் எழுத்தில் தொடங்குகின்ற சொற்களாகவும், உயிர் எழுத்தில் முடிகின்ற சொற்களாகவும் கொள்ள வேண்டும்.

நின்ற நெறியே உயிர்மெய் முதல் ஈறே

(நன்னூல் -109)

(பொருள் : உயிர்மெய் எழுத்துகளில் மெய் எழுத்து முன்னும், உயிர் எழுத்து பின்னும் இருக்கும்.)

தனி உயிர் நெடில் எழுத்துகள் சொற்களாக அமைவதும் உண்டு.

எடுத்துக்காட்டு

ஆ (பசு)

ஏ (அம்பு)

5.2மொழி முதல் எழுத்துகள்

ஒரு சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் பற்றி இந்தப் பாடத்தில் காணலாம். சொல்லுக்கு முதலில் உயிர் எழுத்துகளோ மெய் எழுத்துகளோ வரும். சொல் என்பதும், மொழி என்பதும், பதம் என்பதும் ஒரே பொருள் தரும் சொற்கள் ஆகும். முதலில் சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துகளைப் பற்றிப் பார்ப்போம்.

5.2.1 சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துகள் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.

எடுத்துக்காட்டு:

அம்மா அல்லி

ஆடு ஆறு

இடை இரண்டு

ஈடு ஈரம்

உடை உடல்

ஊர் ஊக்கம்

எறும்பு எலி

ஏணி ஏடு

ஐந்து ஐப்பசி

ஒன்று ஒட்டகம்

ஓடு ஓடம்

ஒளவையார் ஒளவியம் (பொறாமை)

5.2.2 சொல்லுக்கு முதலில் வரும் மெய் எழுத்துகள் இந்தப் பாடத்தின் முதல் பகுதியில் உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள் இயல்பாக மெய் எழுத்தில் தொடங்குகின்றன என்பது விளக்கப்பட்டது. இப்போது சொல்லின் முதலில் வரும் மெய் எழுத்துகள் பற்றிக் காணலாம். மெய் எழுத்துகள் உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தே சொல்லின் முதலில் வரும் என்று கூறப்பட்டது. மெய்எழுத்துகள் எந்தெந்த உயிர்எழுத்துகளுடன் சேர்ந்து சொல்லின் முதலில் வரும் என்றும் பின்வரும் பகுதியில் விளக்கப்படும்.

ஒரு மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளை வருக்க எழுத்துகள் என்று கூறுவர். எடுத்துக்காட்டாக, க் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து உருவான க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ என்னும் பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகளையும் ககர வருக்கம் என்று கூறுவர்.

• க் என்னும் மெய்எழுத்து

ககர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தும் சொல்லுக்கு முதலில் வரும்.

கல் கரும்பு

கால் காகம்

கிளி கிழமை

கீரி கீரை

குயில் குரங்கு

கூடு கூத்து

கெட்ட கெடுதி (அழிவு)

கேள்வி கேணி (கிணறு)

கை கைத்தடி

கொடி கொம்பு

கோடு கோட்டை

கௌதாரி

• ங் என்னும் மெய் எழுத்து

ஙகரம். அ, இ ஆகிய சுட்டு எழுத்துகளுக்குப் பின்னும், யா, எ, ஆகிய வினா எழுத்துகளுக்குப் பின்னும் சொல்லுக்கு முதலில் வரும்.

அங்ஙனம் (அப்படி)

இங்ஙனம் (இப்படி)

எங்ஙனம் (எப்படி)

யாங்ஙனம் (எப்படி)

சுட்டு, யா, எகர வினா வழி, அவ்வை

ஒட்டி ஙவ்வும் முதல் ஆகும்மே (106)

என்னும் நன்னூல் நூற்பா, ஙகர எழுத்து மொழிக்கு முதலில் வருவதை விளக்குகிறது.

• ச் என்னும் மெய்எழுத்து

சகரம் பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும். ஆனால் பழங்காலத்தில் அ, ஐ, ஒள என்னும் ழூன்று உயிர் எழுத்துகளுடனும் மொழிக்கு முதலில் வருவதில்லை. அ என்னும் எழுத்துடன் சேர்ந்து சக்கரம், சங்கு, சங்கம் முதலான சொற்கள் பழங்காலம் முதலே பயன்படுத்தப் படுகின்றன. ஐ, ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் சகரம் சேர்ந்துவரும் சொற்கள் தமிழில் இல்லை. சைகை, சௌக்கியம் முதலான பிறமொழிச் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன.

சக்கரம் சந்தனம்

சாலை சாறு

சிரிப்பு சிலந்தி

சீற்றம் சீப்பு

சுட்டு சுண்ணாம்பு

சூடு சூடாமணி

செறிவு செம்பு

சேறு சேரன்

சைகை சைவம்

சொல் சொட்டு

சோறு சோழன்

• ஞ் என்னும் எழுத்து

ஞகரம் அ, ஆ, எ, ஒ ஆகிய நான்கு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.

ஞமலி (நாய்) ஞலவல் (மின்மினிப் பூச்சி) =ஞ்+அ

ஞாலம் (உலகம்) ஞாயிறு =ஞ்+ஆ

ஞெகிழி (தீப்பொறி) ஞெலிகோல் (தீக்கடையும் கோல்) =ஞ்+எ

ஞொள்குதல் (இளைத்தல்) =ஞ்+ஒ

அ, ஆ, எ, ஒவ்வொடு ஆகும் ஞம் முதல்

(நன்னூல்.105)

(பொருள் : ஞகர மெய் எழுத்து அ, ஆ, எ, ஒ, ஆகிய நான்கு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும். )

• த் என்னும் மெய்எழுத்து

தகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.

தரை தம்பி

தாமரை தாய்

திசை திணை

தீர்ப்பு தீமை

துடிப்பு துன்பம்

தூண் தூக்கம்

தென்னைமரம் தென்றல்

தேன் தேங்காய்

தைமாதம் தையல்

தொழில் தொட்டி

தோட்டம் தோகை

தௌவை (அக்காள்)

• ந் என்னும் மெய்எழுத்து

நகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.

நன்றி நகை

நாடு நாள்

நிறம் நிழல்

நீர் நீளம்

நுங்கு நுனி

நூல் நூறு

நெல் நெஞ்சு

நேற்று நேர்மை

நையாண்டி(கேலி) நைதல்

நொடி நொறுங்குதல்

நோக்கம் நோட்டம்

நௌவி (மான்)

• ப் என்னும் மெய்எழுத்து

பகரமெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.

பல் பழம்

பால் பாட்டு

பிடி பிரிவு

பீலி (தோகை) பீடு (பெருமை)

புகழ் புல்

பூங்கா பூட்டு

பெட்டி பெண்

பேச்சு பேழை (பெட்டி)

பை பையன்

பொன் பொங்கல்

போட்டி போர்

பௌத்தர் (புத்த சமயத்தவர்)

• ம் என்னும் மெய் எழுத்து

மகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.

மண் மக்கள்

மான் மாடு

மின்னல் மிதியடி

மீன் மீண்டும்

முரசு முடி

மூங்கில் மூன்று

மெய் மெழுகு

மேடு மேளம்

மை மையம்

மொழி மொட்டு

மோதிரம் மோசடி

மௌனம் மௌவல்(முல்லை மலர்)

• ய் என்னும் மெய்எழுத்து

யகர மெய் எழுத்து அ, ஆ, உ, ஊ, ஓ, ஓள ஆகிய ஆறு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும். யகர மெய் எழுத்து, பழங்காலத்தில் ஆ (ய்+ஆ=யா) என்னும் எழுத்துடன் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

யவனர் யவை (நெல்வகை)

யானை யாழ்

யுகம் (கால அளவு)

யூகி (அறிவாளி)

யோகம் (இணைந்து நிற்றல்)

யௌவனம் (இளமை)

அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள யம் முதல்

(நன்னூல். 104)

(பொருள்: அ, ஆ, ஊ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து யகர மெய் சொல்லுக்கு முதலில் வரும். )

• வ் என்னும் மெய் எழுத்து

வகர மெய் எழுத்து அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள ஆகிய எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.

வணக்கம் வரிசை

வால் வாய்

வில் விண்

வீடு வீண்

வெற்றி வெண்மை

வேல் வேங்கை

வைகை வையகம் (உலகம்)

வௌவால்

உ, ஊ, ஒ, ஓ அலவொடு வம் முதல்

(நன்னூல் – 103)

(பொருள்: வகர மெய் எழுத்து உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கு தவிர மற்ற (அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள) எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.)

5.2.3 சொல்லுக்கு முதலில் வராத மெய் எழுத்துகள் க, த, ந, ப, ம, ச, ஞ, ய, வ, ங என்னும் பத்து மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும் என்பதை அறிந்தோம். இவை தவிர உள்ள ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வருவதில்லை. ஆனால் இந்த எழுத்துகளைக் குறிக்கும் போது இவை மொழிக்கு முதலில் வரும்.

‘ட‘ என்னும் எழுத்து, ‘ண‘ என்னும் எழுத்து என்று எழுத்தைக் குறிப்பிடும் போது இவையும் முதலில் வருகின்றன.

தமிழ்மொழி பேசும் மக்கள் பிறமொழி பேசுகிறவர்களுடன் கலந்து பழகி வாழ்கின்றனர். அவ்வாறு அவர்களுடன் பழகும்போது பிறமொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறார்கள். அப்படிப் பேச்சுவாக்கில் தமிழ் மொழியில் நுழைந்த பிறமொழிச் சொற்கள் பலவும் தமிழ்மொழியில் பயன்பாட்டில் உள்ளன. அவற்றையும் தமிழ் மக்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பிறமொழிச் சொற்களில் ட, ண, ர, ல, ற என்னும் ஐந்து மெய்எழுத்துகளும் முதலில் வருகின்றன.

ராமன்

லலிதா

முதலான பிறமொழிப் பெயர்களைத் தமிழில் பயன்படுத்துகிறோம். இவ்வாறு பிறமொழிப் பெயர்களைத் தமிழ்மொழியில் பயன்படுத்தும் போது அவற்றைத் தமிழ்மொழியின் இயல்புக்கு ஏற்பவே காலங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம்.

ரகர வருக்க எழுத்துகளும் லகர வருக்க எழுத்துகளும் தமிழ்மொழியில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை என்பதை அறிந்து அவற்றுக்கு முன் ‘இ’ என்னும் எழுத்தைச் சேர்த்து அப்பெயர்களை எழுதுகிறோம்

ராணி இராணி

ரவி இரவி

ராமன் இராமன்

லலிதா இலலிதா

லாபம் இலாபம்

லாடம் இலாடம்

மேலே ‘இ’ என்னும் எழுத்தைச் சேர்த்தது போல் ‘அ’என்னும் எழுத்தைச் சேர்த்துப் பயன்படுத்துவதும் உண்டு.

ரங்கன் அரங்கன்

இ, அ என்னும் எழுத்துகளைச் சேர்த்துப் பயன்படுத்துவதுபோல் ‘உ’ என்னும் எழுத்தைச் சேர்த்தும் பிறமொழிப் பெயர்களைப் பயன்படுத்துவது உண்டு.

ரோம் உரோம்

ரோமம் உரோமம்

ரொட்டி உரொட்டி

இவ்வாறு பிறமொழியிலிருந்து பெற்றுப் பயன்படுத்தும் சொற்கள் அனைத்தும் பெயர்ச் சொற்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும். அந்தப் பிறமொழிப் பெயர்களையும் நம் தமிழ் மொழியின் தன்மைக்கு ஏற்பவே அமைத்துப் பயன்படுத்துகிறோம். பிற மொழிப் பெயர்களைத் தேவை கருதிப் பயன்படுத்துவதைப் போல் பிறமொழி வினைச் சொற்களையும் பிறசொற்களையும் பயன்படுத்தக் கூடாது.

• ஒலிக்குறிப்புச் சொற்கள்

சில ஒலிக்குறிப்புகளை நாம் நமது அன்றாடப் பேச்சில் பயன்படுத்துகிறோம்.

கோழி கொக். . . கொக் என்று கொக்கரிக்கும்

காக்கை கா. . . கா என்று கரையும்

நாய் லொள் . . . லொள் என்று குரைக்கும்

இவற்றில் இடம்பெற்றுள்ள கொக். . . கொக். . ., கா. . .கா. . ., லொள். . . லொள். . . என்பவை ஒலிக்குறிப்புச் சொற்கள். இவை போன்று வேறு பல ஒலிக்குறிப்புகளையும் பயன்படுத்துகிறோம். இத்தகைய ஒலிக்குறிப்புச் சொற்களில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகளும் இடம்பெறுவது உண்டு.

மணி டாண். . . .டாண் என்று ஒலித்தது.

பட்டாசு டமார். . . டமார் என்று வெடித்தது.

இவை போன்ற ஒலிக்குறிப்புச் சொற்களைத் தமிழ்மொழியில் இரட்டைக் கிளவி என்று சொல்கிறோம். இரட்டைக் கிளவி பற்றி, பின்னர் விரிவாகப் படிப்போம்.

5.3மொழி இறுதி எழுத்துகள்

சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்று கூறுவர். மெய் எழுத்துகள் இயல்பாகவே சொல்லுக்கு இறுதியில் வரும். சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர்மெய் எழுத்துகளை உயிர் எழுத்துகளாகவே கொள்ளவேண்டும் என்று இந்தப் பாடத்தின் முன்பகுதியில் படித்தது நினைவிருக்கிறதா?

5.3.1சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர் எழுத்துகள் உயிர் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும். சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வருவது இல்லை; மெய் எழுத்துடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகவே சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும். அவ்வாறு வரும் உயிர் எழுத்துகளில் எவை சொல்லுக்கு இறுதியில் வரும் என்பதைப் பார்க்கலாம்.

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லுக்கு இறுதியில் வரும். அவற்றில் எகரக் குறில் அளபெடையாக மட்டுமே சொல்லுக்கு இறுதியில் வரும். ஏனைய அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வரும்.

எடுத்துக்காட்டு

அ பல சில திற

ஆ நிலா பலா சுறா

இ பனி எலி நரி

ஈ தேனீ தீ

உ ஏழு கதவு மிளகு

ஊ பூ தூ (வெண்மை)

எ சேஎ

ஏ எங்கே யானே

ஐ மழை தாமரை மலை

ஒ நொ (துன்பம்)

ஓ நிலவோ மலரோ

ஒள கௌ (கொள்) வௌ (திருடு)

குற்றியலுகரமும் சொல்லுக்கு இறுதியில் வரும்.

ஆறு காடு

பட்டு காற்று

பந்து பாம்பு

செய்து மூழ்கு

பழகு விளையாடு

அஃது எஃகு

5.3.2 சொல்லுக்கு இறுதியில் வரும் மெய் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மெய் எழுத்துகள் மூன்று வகைப்படும். இவற்றில் வல்லின மெய் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை. மெல்லின மெய் எழுத்துகள் ஐந்தும், இடையின மெய் எழுத்துகள் ஆறும் சொல்லுக்கு இறுதியில் வரும்.

மெல்லின மெய் எழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஐந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும்.

உரிஞ்(தேய்க்கும்)

ஆண் பெண்

வெரிந் (முதுகு) பொருந் (போரிடும், பொருந்தும்)

மரம் வெள்ளம்

மன்னன் பொன்

உரிஞ் என்னும் ஒரு சொல்லில் மட்டும் ‘ஞ்‘ என்னும் மெய்எழுத்து, இறுதியில் வரும்.

வெரிந், பொருந் என்னும் இரு சொற்களில் மட்டும் ‘ந்‘ என்னும் மெய்எழுத்து இறுதியில் வரும்.

இடையின மெய் எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) சொல்லுக்கு இறுதியில் வரும்.

நாய் தாய்

வேர் தண்ணீர்

கால் நடத்தல்

தெவ் (பகை)

கீழ் ஊழ்

முள் வாள்

அவ், இவ், உவ், தெவ் என்னும் நான்கு சொற்களில் மட்டும் ‘வ்’ என்னும் மெய் எழுத்து இறுதியில் வரும்

ஆவி, ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள மெய்

சாயும் உகரம் நால் ஆறும் ஈறே.

(நன்னூல் – 107)

(பொருள் : உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், ஞ, ண, ந, ம, ன,ய, ர, ல, வ, ழ, ள ஆகிய பதினொரு மெய் எழுத்துகளும் குற்றியலுகரமும் ஆக இருபத்து நான்கும் சொல்லுக்கு இறுதியில் வரும். )

5.4 தொகுப்புரை

உயிர் எழுத்துகள் ஒரு சொல்லுக்கு முதல் எழுத்தாக வரும் என்பதையும் மெய்எழுத்துகள் சொல்லுக்கு இறுதி எழுத்தாக வரும் என்பதையும் இந்தப் பாடம் விளக்கியுள்ளது.

உயிர் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை. மெய் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு முதலில் வருவதில்லை என்பதையும் இந்தப் பாடம் உணர்த்தியுள்ளது.

சொல்லுக்கு முதல் எழுத்தாக வரும் உயிர் எழுத்துகள் யாவை என்பதையும், சொல்லுக்கு முதலில் வரும் மெய் எழுத்துகள் யாவை என்பதையும் இந்தப் பாடம் தெரிவித்துள்ளது.

சொல்லுக்கு முதலில் வராத மெய் எழுத்துகள் யாவை என்பதையும் அவற்றில் சில எழுத்துகள் பிறமொழிச் சொற்கள் வாயிலாகத் தமிழ் மொழியில் பயன்படுத்தப்படுவதையும் இந்தப் பாடம் அறிவித்துள்ளது.

சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர் எழுத்துகள், மெய்எழுத்துகள் யாவை என்பதையும் இந்தப் பாடம் உணர்த்தியுள்ளது.

பாடம் - 6

மெய்ம்மயக்கம்

6.0பாடமுன்னுரை

தமிழ் மொழியில் சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் பற்றியும் சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகள் பற்றியும் முந்தைய பாடத்தில் பார்த்தோம். இந்தப் பாடத்தில் சொல்லின் இடையில் வரும் மெய் எழுத்துகள் பற்றிப் பார்ப்போம். இவ்வாறு சொல்லுக்கு இடையில் மெய் எழுத்து வருவதை இடைநிலை என்று கூறுவர். ஒரு மெய் எழுத்தை அடுத்து எந்த மெய் எழுத்து வர வேண்டும் என்பதற்குச் சில வரையறைகளைத் தமிழ் இலக்கண நூலோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். அந்த வரையறைகளைப் பற்றி இந்தப் பாடத்தில் காண்போம்.

6.1மெய்ம்மயக்கம்

உயிர் எழுத்துடன் உயிர் எழுத்துச் சேர்ந்து வருதல் இல்லை. எனவே இரண்டு உயிர் எழுத்துகள் சேர்ந்து வருதல் பற்றி இப்பாடத்தில் குறிப்பிடவில்லை. மயக்கம் என்பது சேர்ந்து வருதலைக் குறிக்கும். மெய் எழுத்துகள் இரண்டு சேர்ந்து வருதலைக் குறிப்பது மெய்ம்மயக்கம் எனப்படும். உயிர் எழுத்துடன் மெய்எழுத்துச் சேர்ந்து மிகப் பல இடங்களில் வரும். அவற்றைப் பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் படித்துத் தெரிந்து கொள்ள இயலும். எனவே, இப்பாடத்தில் மெய்ம்மயக்கம் பற்றி மட்டுமே தெரிவிக்கப்படுகிறது.

மெய்ம்மயக்கம் இரண்டு வகைப்படும். அவை:

1. வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

2. உடன்நிலை மெய்ம்மயக்கம்

என்பவை ஆகும்.

6.2வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

ஒரு மெய் எழுத்தை அடுத்து வேறு ஒரு மெய்எழுத்துச் சேர்ந்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

ஒரு சொல்லின் முதல் எழுத்தாக உயிர் மெய் எழுத்து இருந்தால் அதனை மெய்+உயிர் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதை முந்தைய பாடத்தில் பார்த்தோம். எனவே ஒரு சொல்லில் ஒரு மெய் எழுத்தை அடுத்து ஓர் உயிர்மெய் எழுத்து வரும்போது இரண்டு மெய் எழுத்துகள் அடுத்தடுத்து வருகின்றன. அப்படி வரும்போது அவை இயல்பாக அமைகின்றனவா என்று பார்க்க வேண்டும். இயல்பாக இருந்தால் அது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

எடுத்துக்காட்டாக, நான்கு என்னும் சொல்லில் ன் என்னும் மெய்எழுத்தும் க் என்னும் மெய் எழுத்தும் இயல்பாக இணைந்து ஒலிக்கின்றன. எனவே இது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்று அழைக்கப்படுகிறது.

மெய்எழுத்துகள் பதினெட்டில் க, ச, த, ப என்னும் நான்கு மெய் எழுத்துகள் தவிர்த்து, ஏனைய பதினான்கு மெய்எழுத்துகளும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் வரும்.

வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் வரும் மெய் எழுத்துகள்

ங், ஞ், ட், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

என்பன ஆகும்.

• ங் என்னும் மெய்எழுத்து

‘ங்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின், ‘க்’ என்னும் மெய்எழுத்து மட்டுமே வரும் பிற மெய் எழுத்துகள் வருவது இல்லை.

எடுத்துக்காட்டு:

தங்கம்

வங்காளம்

அங்கி (நெருப்பு, சட்டை)

அங்கு

அங்கூடம் (அழகிய கூடம்)

அங்கே

அங்கை (உள்ளங்கை)

எங்கோமான்

• ஞ் என்னும் மெய் எழுத்து

‘ஞ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ச், ய் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

கஞ்சம் (தாமரை)

அஞ்சாமை

அஞ்சி

அஞ்சீறடி (அழகிய சிறிய பாதம்)

கஞ்சுகம் (சட்டை)

உரிஞ்(தேய்) யாது

• ட் என்னும் மெய் எழுத்து

‘ட்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும்

எடுத்துக்காட்டு:

வெட்கம்

வெட்சி (ஒரு பூ)

மாட்சி (பெருமை)

நட்பு

நுட்பம்

• ண் என்னும் மெய் எழுத்து

‘ண்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின் க், ச், ஞ், ட், ப், ம், ய், வ் ஆகிய எட்டு மெய் எழுத்துகளும் வரும்.

எடுத்துக்காட்டு:

வெண்கலம்

கண்காட்சி

}

க்

வெண்சோறு

மண்சேறு

}

ச்

வெண்ஞமலி

உண்ஞமலி (உண்கின்ற நாய்) }ஞ்

மண்டலம்

வண்டல்

}

ட்

நண்பகல்

நண்பன்

}

ப்

வெண்மலர்

உண்மை

}

ம்

மண்யாது -ய்

மண்வலிது -வ்

• ந் என்னும் மெய் எழுத்து

‘ந்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் த், ய் என்னும் மெய்எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

வந்த

வந்தான் } த்

வெரிந்யாது

-

ய்

• ம் என்னும் மெய்எழுத்து

‘ம்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின் ப், ய், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

கம்பன்

அம்பு

}

ப்

கலம்யாது

புலம்யாது

}

ய்

கலம்வலிது

வலம்வரும்

}

வ்

• ய் என்னும் மெய் எழுத்து

‘ய்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப்,ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

பொய்கை (நீர்நிலை)

மொய்குழல்(அடர்ந்த கூந்தல்)

}

க்

வேய்சிறிது

காய்சினம்

}

ச்

வேய்ஞான்ற

(மூங்கில் முதிர்ந்தது) -ஞ்

நெய்தல்

நொய்து (மெல்லியது)

}

த்

மெய்நீண்டது- ந்

மெய்பெரிது-ப்

பேய்மனம் -ம்

பேய்வலிது- வ்

• ர் என்னும் மெய் எழுத்து

‘ர்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

வேர்கள்- க்

வேர்சிறியது- ச்

வேர்ஞான்றது- ஞ்

தேர்தல்- த்

நீர்நிலம் – ந்

மார்பு – ப்

கூர்மை – ம்

வியர்வை- வ்

• ல் என்னும் மெய் எழுத்து

‘ல்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ் என்னும் மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

கால்கோள் (தொடக்கம்)- க்

வல்சி (உணவு)- ச்

கல்பாக்கம் – ப்

நல்யாறு- ய்

பல்வலி- வ்

• வ் என்னும் மெய் எழுத்து

‘வ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ய்‘ என்னும் மெய்எழுத்து மட்டும் வரும்.

எடுத்துக்காட்டு : தெவ்யாது (தெவ் – பகை)

• ழ் என்னும் மெய் எழுத்து

‘ழ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

ழூழ்கினான் – க்

பாழ்செய் (பாழ்படுத்து)- ச்

வீழ்ஞான்ற (தொங்கிய விழுது)- ஞ்

ஆழ்தல்- த்

வாழ்நாள்- ந்

வாழ்பவன் – ப்

வாழ்மனை- ம்

வாழ்வு- வ்

• ள் என்னும் மெய் எழுத்து

‘ள்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

கொள்கலம்- க்

வாள்சிறிது – ச்

வாள் பெரிது – ப்

வாள்யாது – ய்

கள்வன்- வ்

• ற் என்னும் மெய்எழுத்து

‘ற்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

கற்க- க்

கற்சிலை- ச்

கற்பவை- ப்

• ன் என்னும் மெய் எழுத்து

‘ன்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், ப், ம், ய், வ், ற் என்னும் மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

பொன்கலம்- க்

புன்செய் – ச்

புன்ஞமலி – ஞ்

புன்பயிர் – ப்

நன்மை – ம்

பொன்யாது- ய்

பொன்வலிது- வ்

தென்றல் – ற்

இதுவரை க், ச், த், ப் என்னும் நான்கு மெய் எழுத்துகள் தவிர, ஏனைய பதினான்கு மெய் எழுத்துகளும் பிற மெய் எழுத்துகளுடன் சேர்ந்து வரும் தன்மையைப் பார்த்தோம்.

6.3உடன்நிலை மெய்ம்மயக்கம்

ஒரு மெய் எழுத்துக்குப் பின் அதே மெய் எழுத்து வருவது உடன்நிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

மெய் எழுத்துகள் பதினெட்டில் ர், ழ் என்னும் மெய் எழுத்துகளைத் தவிர ஏனைய பதினாறு மெய் எழுத்துகளும் உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் வரும்.

உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் வரும் மெய்எழுத்துகள்:

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ல், வ், ள், ற், ன்

என்னும் மெய் எழுத்துகள் உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் இடம்பெறும்.

• ‘க்’ என்னும் எழுத்து

மக்கள்

அக்காள்

• ‘ங்’ என்னும் எழுத்து

அங்ஙனம் (அவ்விதம்)

எங்ஙனம் (எவ்விதம்)

• ‘ச்’ என்னும் எழுத்து

உச்சி

அச்சு

• ‘ஞ்’ என்னும் எழுத்து

அஞ்ஞான்று (அப்பொழுது)

எஞ்ஞான்று (எப்பொழுது)

• ‘ட்’ என்னும் எழுத்து

பட்டம்

சட்டை

• ‘ண்’என்னும் எழுத்து

அண்ணன்

கண்ணீர்

• ‘த்’என்னும் எழுத்து

கத்தி

பத்து

• ‘ந்’என்னும் எழுத்து

வெந்நீர்

செந்நீர்

• ‘ப்’என்னும் எழுத்து

கப்பல்

குப்பை

• ‘ம்’ என்னும் எழுத்து

அம்மை

அம்மாடு

• ‘ய்’ என்னும் எழுத்து

செய்யான்

வெய்யோன் (கதிரவன்)

• ‘ல்’ என்னும் எழுத்து

எல்லாம்

நல்லவன்

• ‘வ்’ என்னும் எழுத்து

செவ்வாய்

கொவ்வை

• ‘ள்’ என்னும் எழுத்து

பள்ளம்

தள்ளு

• ‘ற்’ என்னும் எழுத்து

குற்றம்

காற்று

• ‘ன்’ என்னும் எழுத்து

மன்னன்

பின்னால்

மேலே நாம் பார்த்த உடன்நிலை மெய்ம்மயக்கங்களில் ஒரு மெய் எழுத்திற்கு அடுத்து அதே மெய்எழுத்து வந்துள்ளது. ஆனால் அந்த மெய் எழுத்துத் தனித்து வராமல் உயிர்மெய் எழுத்தின் உருவில் வந்துள்ளது. க்+அ = க என்பது போல் இடம்பெற்றுள்ளது.

6.4 ஈர்ஒற்று மயக்கம்

ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து வேறொரு மெய்எழுத்து, உயிர்மெய் எழுத்துடன் வராமல் தனி மெய் எழுத்தாகவும் வருவது உண்டு. அவ்வாறு இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருவதை ஈர்ஒற்று மயக்கம் என்று கூறுவர்.

எடுத்துக்காட்டு: புகழ்ச்சி

இதில் ‘ழ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ச்’ என்ற மெய் எழுத்து வந்துள்ளது. இந்த ‘ச்’ என்னும் எழுத்து உயிர்மெய்யுடன் சேர்ந்து வராமல் தனி மெய் எழுத்தாகவே வந்துள்ளது.

ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள்:

ய், ர், ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து வரும்.

• ‘ய்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

நாய்க்கால் – க்

வேய்ங்குழல் – ங்

காய்ச்சல் – ச்

மெய்ஞ்ஞானம்- ஞ்

மேய்த்தல்-த்

பாய்ந்தது- ந்

வாய்ப்பு- ப்

செய்ம்மன (செய்யுளில் மட்டுமே வரும்)

• ‘ர்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

பார்க்கிறாள்- க்

ஆர்ங்கோடு- (ஆத்திமரக்கிளை) – ங்

உயர்ச்சி- ச்

ஞ்- வழக்கத்தில் இல்லை.

பார்த்தல்- த்

ஊர்ந்து- ந்

தீர்ப்பு- ப்

ம்- வழக்கத்தில் இல்லை.

• ‘ழ்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

வாழ்க்கை- க்

பாழ்ங்கிணறு- ங்

வீழ்ச்சி- ச்

ஞ்- வழக்கத்தில் இல்லை

வாழ்த்து- த்

வாழ்ந்து- ந்

தாழ்ப்பாள்- ப்

ம்- வழக்கத்தில் இல்லை.

6.5செய்யுளில் ஈர்ஒற்று மயக்கம்

மேலே நாம் படித்த மெய்ம்மயக்கங்கள் செய்யுளிலும் பேச்சு வழக்கிலும் இடம் பெறும் மெய்ம்மயக்கங்கள் ஆகும்.

செய்யுளில் மட்டுமே இடம் பெறும் ஈர்ஒற்று மயக்கமும் உள்ளது. அதை இங்கே காண்போம்.

சார்பு எழுத்துகள் என்னும் பாடத்தில் மகரக்குறுக்கம் என்று ஒரு சார்பு எழுத்தைப் பற்றி நீங்கள் படித்திருக்கிறீர்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதை மீண்டும் நினைவு கூர்வோம்.

‘ம்’ என்னும் மெய்எழுத்து, தனக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பது மகரக்குறுக்கம் எனப்படும். இந்த மகரக்குறுக்கத்தில் இரண்டு மெய் எழுத்துகள் அருகில் இருக்கும்.

எடுத்துக்காட்டு

போன்ம்

மருண்ம்

இந்த மகரக் குறுக்கங்களும் ஈர் ஒற்று மயக்கம் ஆகும். இது செய்யுளில் மட்டுமே இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

6.6தொகுப்புரை

ஒரு மெய் எழுத்தை அடுத்து எந்த மெய் எழுத்து வரும் என்னும் வரையறைக்கு மெய்ம்மயக்கம் என்று பெயர் என்பதை இந்தப் பாடம் தெரிவித்துள்ளது.

மெய்ம்மயக்கத்தின் வகைகளான வேற்றுநிலை மெய்ம்மயக்கம், உடன்நிலை மெய்ம்மயக்கம் ஆகியவற்றை இப்பாடம் விளக்கியுள்ளது.

ஈர்ஒற்று மயக்கம் என்றால் என்ன? என்பது பற்றியும் செய்யுளில் மட்டும் இடம் பெறும் மகரக்குறுக்கமும் ஈர்ஒற்றுமயக்கம் என்பது பற்றியும் எடுத்துரைத்துள்ளது.