93

எவற்றைச் செய்யாமலிருத்தல் இனிது என்பதை விளக்கும் இனிய பாடல் இதோ :

கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயம்

செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்

எய்தும் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்

பொல்லாங் குரையாமை நன்கு

( இனி .

நாற் .

-5 )

( கோல் கோடி = நீதி தவறி , மாராயம் = சிறப்பு )

4.6.4 குடிமக்களுக்கு இனியது

முல்லை நிலத்து ஆற்றங்கரையில் உள்ள ஊர் வாழ்வதற்கு இனியது ( இனி .

நாற். - 4 ) . குடிகள் மாட்டு அன்பு வையாத அரசன் கீழ் வாழாது இருத்தல் இனிது .

பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே

( இனி .

நாற். - 32 )

ஊரார் வெறுக்காதனவற்றைச் செய்து வருகின்ற பெருமை இனியது ( இனி .

நாற். - 33 ) . ஒதுக்குப்புறமாய்க் குடியிருந்தாலும் துன்பம் அடையாத மாட்சிமை இனியது என்கிறார் பூதந்சேந்தனார் ( இனி .

நாற் .

-39 )

தொகுப்புரை

கபிலரின் ‘ இன்னா நாற்பது ’ துன்பத்தின் மூலங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறது .

இவற்றைக் கற்பதன் வாயிலாகத் துன்பங்களைத் தடுத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது .

164 இன்னாதவைகளைக் கபிலர் கூறுகிறார் .

அறவழி வாழ்க்கை நடத்தலே சிறப்பு என்பதைக் கபிலர் எடுத்துரைக்கின்றார் .

தனி மனிதப் பண்புகள் செம்மையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் .

அவை ஈகை , கொல்லாமை , பொய்யாமை , நடுவு நிலைமை முதலியனவாம் .

பூதஞ்சேந்தனார் இனியவை நாற்பது என்ற தம் படைப்பில் தனி மனிதனுக்கும் , இல்லறத்தார்க்கும் , அரசனுக்கும் குடிமக்களுக்கும் இனியன யாவை என்பதைத் தொகுத்துரைக்கின்றார் .

127 இனிய கருத்துக்கள் இந்நூலில் கூறப்படுகின்றன .

இன்னா நாற்பது , இனியவை நாற்பது என்ற இரண்டு நூல்களிலும் திருக்குறட் கருத்தை அடியொற்றிப் பல பாடல்கள் அமைந்துள்ளன .

சில ஒழுக்க முறைகளையும் , பழக்கவழக்கங்களையும் நம்மால் அறிய முடிகிறது .

கள்ளும் ஊனும் உண்ணுதல் வெறுக்கப்பட்டது .

அடைக்கலப் பொருளைத் தனதாக்கிக் கொள்ளும் செயல் வெறுக்கப்பட்டது .

வேதம் ஓதும் அந்தணனை விரும்பல் , முறை செய்யும் அரசனைப் போற்றல் ஆகியவை இயல்பாக இருந்தன .

இன்னா நாற்பதின் நேர் எதிர்மறையாக இனியவை நாற்பது அமைந்துள்ளது எனலாம் .

யானையில் மன்னரைக் காண்டல் நனியின்னா

ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா

( இன் .

நாற் .

-23 )

யானை யுடையபடை காண்டல் முன்னினிதே

ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே

( இனி .

நாற் .

-4 )

கல்லார் உரைக்கும் கருமப்பொருள் இன்னா

( இன் .

நாற் .

-15 )

கற்றறிந்தார் கூறும் கருமப்பொருள் இனிதே ( இனி .

நாற் .

-32 )

இவ்வாறு கருத்துகளைச் சொல்லும் முறையில் இன்னா நாற்பதும் , இனியவை நாற்பதும் ஒன்றை ஒன்று சார்ந்து செல்லுகின்றன எனலாம் .

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் யார் ?

[ விடை ]

2. இனியன என்று மொத்தம் எத்தனை கருத்துகள் இனியவை நாற்பதில் சொல்லப்படுகின்றன ?

[ விடை ]

3. காவோடு _ _ _ _ _ _ _ _ _ _ தொட்டல் மிக இனிதே .

( நிரப்புக .

) [ விடை ]

4 ஏவது _ _ _ _ _ _ _ _ _ _ _ இளங்கிளைமை முன் இனிதே .

( நிரப்புக .

) [ விடை ]

5 குழவி _ _ _ _ _ _ _ _ _ _ காண்டல் இனிதே .

( நிரப்புக)

ஆசாரக்கோவை , முதுமொழிக்காஞ்சி

பதினெண்கீழ்க்கணக்கில் அறநூல்கள் வரிசையில் ஆசாரக்கோவையும் முதுமொழிக்காஞ்சியும் ஐந்தாவது பாடமாக வருகின்றன .

அறத்தை வலியுறுத்த எழுந்த 11 அற இலக்கியங்களில் இவை சிறந்த அறநூல்களாகத் திகழ்கின்றன .

ஆசாரக்கோவை , மக்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை விளக்கிக் கூறுகிறது .

ஆசாரம் என்றால் நல்ல முறையில் நடத்தல் என்பது பொருள் .

பொதுவாகக் கடவுள் வழிபாடு செய்கிறவர்கள் தினம் நீராடித் தூய ஆடை உடுத்து நல்ல உணவு உட்கொண்டு வாழ்கின்றனர் .

அவர்களை ஆசாரத்தோடு வாழ்கின்றவர்கள் என்று கூறுகிறோம் .

காலப்போக்கில் கடவுள் வழிபாடு செய்து நல்ல நெறிகளைக் கடைப்பிடித்துப் புறத்தே தூய்மையாக உடையவர்கள் ஆசாரம் உடையவர்கள் என்றாகிவிட்டது .

இது முற்றிலும் தவறானது .

உள்ளும் , புறமும் தூய்மை உடைமையே ஆசாரமாகும் .

இவ்விருவகை ஆசாரத்தைப் பற்றியும் கூறுவதுதான் ஆசாரக்கோவை .

ஐந்தாவது பாடத்தில் முதல் பகுதியாக ஆசாரக்கோவையைப் பார்க்கப் போகிறோம் .

இந்தப் பாடத்தின் இரண்டாம் பகுதியாக நாம் பார்க்க இருப்பது முதுமொழிக்காஞ்சி .

முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளில் ஒன்று .

இந்தத் துறையின் பெயரையே தலைப்பாகக் கொண்டு இந்த நூல் விளங்குகிறது .

ஆசாரக்கோவை என்பதற்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருளாம் .

இந்த நூலினுள் ஆசார வித்து ( 1 ) , ஆசாரம் எப்பெற்றியானும் படும் ( 96 ) , ஆசாரம் வீடு பெற்றார் ( 100 ) என்று வரும் இடங்களில் ஆசாரம் என்ற சொல் ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது .

இந்த நூலுக்கு மூல நூல் ஆரிடம் என்ற வடமொழி நூலாகும் .

5.1.1 ஆசிரியர்

இந்த நூலை இயற்றியவர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் .

வண்கயத்தூர் என்பது இவரது ஊர்ப் பெயர் .

முள்ளியார் என்பது இவரது இயற்பெயர் .

ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடியேத்தி என்ற ( எயில் - மதில் ; மூன்று மதில்களை அழித்தவன் சிவபெருமான் ) சிறப்புப் பாயிர அடிகளால் இவர் சைவ சமயத்தவர் எனலாம் .

ஆசிரியருடைய காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பர் .

5.1.2 நூலின் அமைப்பும் பாடுபொருளும்

இந்நூல் பாயிரம் நீங்கலாக நூறு வெண்பாக்களைக் கொண்டது .

குறள் வெண்பா , சிந்தியல் வெண்பா , இன்னிசை வெண்பா , நேரிசை வெண்பா , பஃறொடை வெண்பா என வெண்பாவின் வகைகள் யாவும் இந்த நூலில் காணப்படுகின்றன .

அடிப்படை ஒழுக்கங்களைத் தவிர நாள்தோறும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியவை இவை , தவிர்க்க வேண்டியவை இவை என்பதையும் இந்நூல் தெளிவாகக் கூறுகின்றது .

பேரறிஞர்கள் தம் அனுபவத்தில் ஆராய்ந்து சொன்ன ஒழுக்க நெறிகள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது .

அறம் , பொருள் , இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருள்களும் இந்நூலுள் விரவி ( கலந்து ) நிற்பதைக் காணலாம் .

அன்றாட வாழ்க்கையில் நாம் காலையில் எழுந்திருக்கிறோம் .

நீராடுகிறோம் .

உணவு உண்ணுகிறோம் . அவரவர் வாழ்க்கைக்கும் இயல்புக்கும் தகுந்தாற்போல் அவரவர் விருப்பம்போல் காலையில் எழவும் , குளிக்கவும் உண்ணவும் செய்கிறார்கள் .

இந்த அன்றாட வாழ்க்கை முறைகளில் கூட நாம் ஒரு நெறிப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை , பெருவாயின் முள்ளியார் இந்நூலில் சொல்கிறார் .

‘ தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் ’ என்பது பழமொழி .

இளம்பருவம் முதல் நல்ல பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டால் பின்னர் நற்பண்புகள் உருவாக வழிவகுக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்நூல் அமைந்துள்ளது .

இன்னின்ன செய்யத் தக்கவை , இதனால் இன்ன நலம் உண்டாகும் என்பதும் இன்னின்ன செய்யத் தகாதன , அவற்றைச் செய்யின் இன்னின்ன கேடுகள் உண்டாகும் என்பதும் இந்நூலில் தெளிவாக விளக்கப்படுகின்றன .

இது வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய சிறந்த வழிமுறைகளைக் குறிப்பிடுவது ஆகும் .

நல்லொழுக்கங்களுக்குக் காரணமான நற்குணங்கள் , வணங்க வேண்டியவர்கள் , அறம் செய்தல் , ஏனைய உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை போன்றவற்றைப் பற்றிப் பெருவாயின் முள்ளியார் விவரிக்கின்றார் .

5.2.1 நற்பண்புகள்

ஆசாரக்கோவை முதற் பாடலிலே நல்லொழுக்கங்கட்கு வித்தாக , காரணமாக விளங்குவன எவை என்று வரையறை செய்து எட்டு நற்குணங்களைக் கூறுவதைக் காணலாம் .

நன்றியறிதல் , பொறுமை , இன்சொல் , எவருக்கும் இன்னாதன செய்யாமை , கல்வி , ஒப்புரவறிதல் , அறிவுடைமை , நல்லினத்தாரோடு சேர்தல் என்ற இந்த எட்டு வகைப் பண்புகளும் நல்லோரால் சொல்லப்பட்ட ஆசாரங்களுக்குக் காரணம் ஆகும் என்கிறார் ஆசிரியர் .

எல்லா நீதி நூல்களும் சொல்லக்கூடிய இந்த எட்டுப் பண்புகளையும் முதற்பாடலிலேயே குறிப்பிட்டுச் சொல்லி விடுகிறது , ஆசாரக்கோவை .

5.2.2 வணங்கத் தக்கவர்

பக்தியின் அடிப்படையில் அவரவர் விரும்பும் தெய்வத்தை வணங்குதல் நம்முடைய மனச் செருக்கை அடக்கும் ஒரு சிறந்த நெறியாகும் .

காலையில் எழுந்தவுடன் பல்துலக்கிச் சுத்தம் செய்து தாம் வணங்கும் தெய்வத்தைத் தாம் அறியும் நெறியால் வணங்குக என்கிறார் .

பெருவாயின் முள்ளியார் ( ஆசாரக்கோவை - 9 ) .

தம்மைவிடப் பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுவதே உயர்ந்த பண்பு .

சிறு வயதிலிருந்தே அதைப் பழகிக்கொள்ள வேண்டாமா ?

அதனை ஒரு சிறந்த நெறியாகக் கூறுகிறது ஆசாரக்கோவை .

அரசன் , ஆசிரியர் , தாய் , தந்தை , நம்மைவிடப் பெரியவர் அனைவரையும் தொழுது வணங்க வேண்டும் என்பதே எல்லோரும் கண்ட நெறி என்கிறது .

அரசன் உபாத்தியான் தாய்தந்தை தம்முன்

நிகரில் குரவர் இவரிவரைத்

தேவரைப் போலத் தொழுதெழுக என்பதே

யாவரும் கண்ட நெறி

( ஆசாரக்கோவை - 16 )

( குரவர் = பெரியோர் )

5.2.3 அறம் செய்தல்

இயன்ற இடங்களில் எல்லாம் தம்மால் முடிந்தவரை அறம் செய்ய வேண்டும் என்பதை வள்ளுவர் ,

ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே

செல்லும் வாயெல்லாம் செயல்

( குறள் : 33 )

என்று கூறுகிறார் .

திருமண நாளின் கண்ணும் , தேவர்க்குரிய சிறப்பு நாளின் கண்ணும் , முன்னோர்க்குச் சிறப்புச் செய்யும் நாளின் கண்ணும் , விழா நாட்களிலும் , யாகம் செய்யும் போதும் தானம் செய்வதுடன் விருந்தினர்க்குச் சோறிட வேண்டும் என்கிறது ஆசாரக்கோவை ( 48 )

தானத்தில் சிறந்தது அன்னதானம் .

போதும் போதும் என்று சொல்லும் வண்ணம் கொடுக்க முடிந்த தானம் இதுவே .

ஆகவே அதை வலியுறுத்திக் கூறுவதைக் காணலாம் .

நல்லறிவுடையவர் நிறைஉவா ( பௌர்ணமி ) நாளில் மரங்களை வெட்ட மாட்டார்கள் .

பல் தேய்ப்பதற்குக் கூட மரத்திலிருந்து குச்சியை ஒடிக்க மாட்டார்கள் .

நிறைமதி நாளில் மரம் , செடி , கொடி முதலிய உயிர்களுக்குக் கூட ஊறு செய்யலாகாது .

குரவர் உரையிகந்து செய்யார் விரதம்

குறையுடையார் தீர மறவார் - நிறையுவா

மெல்கோலும் தின்னார் மரம்குறையார் என்பதே

நல்லறி வாளர் துணிவு

( ஆசாரக்கோவை - 17 )

( மெல்கோல் = பற்குச்சி , குறைத்தல் = வெட்டுதல் , நிறையுவா = பௌர்ணமி நாள் )

என்ற பாடலில் இக்கருத்தை வலியுறுத்திப் பாடுவதைப் பாருங்கள் !

கற்றுக் கொள்ள வேண்டிய நெறிகள்

நாம் , நம் வாழ்க்கையில் முன்னேறுவதற்குப் பிறரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நெறிகள் பல உள்ளன .

நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களின் பழக்க வழக்கங்களிலிருந்து சிலவற்றைக் கற்று கொள்கிறோம் , அதைப்போல நம் உடலைப் பாதுகாப்பதற்காக உண்ணும் உணவை எவ்வாறு உண்ண வேண்டும் என்பதையும் பிறரிடமிருந்து தெரிந்து கொள்கின்றோம் .

இவை பற்றிய செய்திகளை ஆசாரக்கோவை எடுத்துரைக்கிறது .

5.3.1 இயற்கையிடமிருந்து கற்றல் மனிதர்கள் தம்மைச் சுற்றியுள்ள பறவைகள் , விலங்குகள் ஆகியவற்றிடமிருந்தும் சில நல்ல பழக்கங்களைக் கற்றுத் தம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் பெருவாயின் முள்ளியார் .

சிறிய எறும்பும் கிடைக்கின்றபோதே உணவுப்பொருளை எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்துக் கொள்ளும் .

தூக்கணாங்குருவி குளிர் , காற்று முதலியவற்றால் இடையூறு ஏற்படாத வகையில் தனக்குரிய வீட்டைக் கட்டிக் கொள்ளும் .

காக்கை தன் இனத்தாரை அழைத்த பின்னரே உண்ணும் பழக்கமுடையது .

இம்மூன்று பழக்கங்களையும் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் சிறப்புறுவர் .

சுறுசுறுப்பும் , எதிர்காலச் சேமிப்பும் , சுற்றத்தாரை அழைத்து உண்ணலும் சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டுவன அல்லவா ?

இவற்றைச் சொல்லும் பாடலைப் பார்ப்போமா ?

நந்தெறும்பு தூக்கணம்புள் காக்கை யென்றிவைபோல்

தங்கருமம் நல்ல கடைப்பிடித்துத் - தங்கருமம்

அப்பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்

எப்பெற்றி யானும் படும்

( ஆசாரக்கோவை - 96 )

( நந்து = ஆக்கமுள்ள , சேகரிக்கும் ; ஆசாரம் = ஒழுக்கம் ; பெற்றி = தன்மை ; படும் = சிறப்படையும் )

5.3.2 உணவு உண்ணும் முறை

உடலைப் பாதுகாக்க உணவு அவசியம் அல்லவா !

அந்த உணவை எவ்வாறு உண்ண வேண்டும் என்பது பற்றியும் உண்ணுதல் தொடர்பாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பற்றியும் ஆசாரக்கோவையில் பல பாடல்கள் சொல்லுகின்றன .

உடல் தூய்மையைக் காப்பது உடல் நலத்திற்கு முதற்படி அல்லவா ?

நீராடிய பின்னரே உண்ண வேண்டும் ( ஆசாரக்கோவை-18 )

உணவினைத் தொழுது , சிந்தாமல் உண்ண வேண்டும் ( ஆசா கோவை - 20 ) . எப்படி உண்ணக்கூடாது ?

படுத்தோ , நின்றோ வெளியிடையில் இருந்தோ கட்டில் மேல் இருந்தோ உண்ணல் கூடாது .

இது போன்ற கருத்துகள் நாம் பின்பற்ற வேண்டிய நல்ல நெறிகள் அல்லவா ?

உணவுப்பொருளை வீணாக்கக்கூடாது .

கிழக்குத் திசை நோக்கி இருந்து உண்ண வேண்டும் ( ஆசா கோவை - 20 , 23 ) .

பிறநாடுகளில் உணவுப் பொருள்களில் எதை முதலில் உண்ண வேண்டும் , எதைக் கடைசியில் உண்ண வேண்டும் என்ற பழக்கங்கள் உள்ளன அல்லவா ?

அதுபோல் நம் நாட்டிலும் உண்டு .

நம் முன்னோர் அதனையும் அறிந்து வைத்துள்ளனர் .

முதலில் இனிப்பான பண்டங்களை உண்ண வேண்டும் .

இறுதியில் கசப்பானவற்றை உட்கொள்ள வேண்டும் .

வேறு சுவைப் பொருள்களை இடையே சுவைத்தல் வேண்டும் .

பாடலைப் பார்ப்போமா ?

கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப

மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்

துய்க்க முறை வகையால் ஊண்

( ஆசாரக்கோவை - 25 )

( கைப்பன = கசப்பன , கடை = கடைசி , தலை = முதல் , துய்க்க = உண்க )

உண்டபின் வாயை நன்கு கொப்புளித்து எச்சில் இல்லாத வகையில் சுத்தம் செய்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும் சொல்லப்படுகிறது ( ஆசா கோவை - 27 ) . இது உடல் நலத்தோடு வாழ வழி காட்டுகிறது அல்லவா ?

விருந்தினர் , மிக மூத்தோர் , பசுக்கள் , பறவைகள் , பிள்ளைகள் இவர்களுக்குக் கொடுத்த பின்னரே ஒருவர் உணவு உண்ண வேண்டும் என்ற உயர்ந்த பண்பாட்டினையும் ஒரு பாடல் எடுத்துச் சொல்கிறது ( ஆசா கோவை - 21 ) .

நாம் எப்படி உணவு உண்ண வேண்டும் , எப்படி நீர் பருக வேண்டும் என்பன போன்ற சாதாரண செய்திகளும் இங்கு நல்ல ஆசார அடிப்படையில் அமையும் அறிவுரைகளாகின்றன .

தண்ணீரை இரு கையாலும் குடித்தலாகாது .

( ஆசா கோவை - 28 ) உண்ணும் போது உணவிலே கருத்துடையவனாய் உண்ணல் வேண்டும் ( ஆசா கோவை-20 ) .

மனக்கவலையால் பிறிதொன்றை நினைத்துக் கொண்டு உண்டால் அது உடல் நலத்துக்குக் கேடாகும் என்ற கருத்தைச் சொல்கிறது மேற்கூறிய பாடல் வரிகள் .

இனி , பிறரை உண்பிப்பதாகிய விருந்தோம்பல் பற்றி ஆசாரக்கோவை என்ன சொல்கிறது என்று பார்ப்போமா ?

விருந்தினர் நம் முகத்தைப் பார்த்தே நம் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொள்வார்கள் .

நம் முகம் மாறிவிட்டால் அவர்கள் உள்ளமும் மாறிவிடும் .

விருந்தினர் அனிச்ச மலரை விட மென்மையானவர்கள் .

அதனால் சிரித்த முகத்தோடு அவர்களை வரவேற்க வேண்டும் .

பின்னர் இனியவை கூற வேண்டும் .

அவர்கள் கால் கழுவ நீரும் , படுக்கப்பாயும் , அமர இருக்கையும் அளித்து அவர்களைப் பாராட்ட வேண்டும் .

இதன்பின்னர் , நல்ல உணவு படைத்து அவர் பசியைப் போக்குதல் வேண்டும் என்பதை ,

முறுவல் இனிதுரை கால்நீர் மணைபாய் கிடக்கையோடு இவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு