94

ஊணொடு செய்யும் சிறப்பு

( ஆசாரக்கோவை - 54 )

( முறுவல் = புன்னகை ; இனிதுரை = இனிய பேச்சு ; கிடக்கை = படுக்கை ; தலைச் சென்றார் = விருந்தினர் )

என்ற பாடல் விளக்குவது புரிகிறதல்லவா ?

5.3.3 அன்றாட வாழ்க்கை நெறி

அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில நல்ல நெறிகளை ஆசாரக் கோவை எப்படிச் சொல்கிறது என்று பார்ப்போமா ?

• தூய்மை பற்றியன

முதலில் நம் இல்லத்தை எப்படிப் பாதுகாத்தால் நமக்கு நன்மை கிடைக்கும் ?

அதிகாலையில் எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து பாத்திரங்களைத் துலக்கி வீடு முழுவதும் சாண நீர் தெளித்துத் தூய்மைப்படுத்த வேண்டும் .

பின்னரே அடுப்பினுள் தீ மூட்டுதல் வேண்டும் ( ஆசா கோவை-46 )

இவ்வாறு செய்வதால் சுற்றுப்புறம் தூய்மை அடையும் .

சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை , அக்கால மக்கள் அறிந்திருந்ததை உணர முடிகிறது .

மேலும் , குளம் முதலிய நீர் நிலைகளில் நீராடும் காலத்து எச்சில் உமிழ்தல் முதலியன செய்யக்கூடாது என நீரின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டுவதைக் குறிப்பிடுகிறது ஒரு பாடல் ( ஆசா கோவை - 14 ) . இப்பாடல் பஞ்ச பூதங்களுள் ஒன்றாகிய நீர் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்று அக்கால மக்களும் கருதியதைப் புலப்படுத்துகிறதல்லவா ?

• பண்புகள் பற்றியன

பெரியோர் உவந்தனவற்றைத் தாம் விரும்புதலும் , தம் இல்லத்தின்கண் கீழ்மைப் பண்புடையவரை அழைத்துச் செல்லாதிருத்தலும் , தம்மோடு பழக்கமில்லாத சிறுவராய் இருப்பினும் இகழாதிருத்தலும் நன்னெறிகளாக ஆசாரக்கோவை காட்டுகிறது ( ஆசா கோவை - 68 ) .

மனிதராய்ப் பிறந்தவர் மற்றவரை மதிக்கும் மாண்புடையவராய் இருக்க வேண்டும் .

மனத்தில் கருணையும் , அருளும் , அன்பும் , பணிவும் இருக்க வேண்டும் .

அவர்களே மற்றவர்களால் போற்றப்படுவர் என்று மனிதனுக்கு இருக்க வேண்டிய உயர் பண்புகளை உரைக்கிறது ஒரு பாடல் .

அந்தணர் , தவம் உடையவர் , சுமையை உடையவர் , நோயுற்றவர் , மூத்தவர் , இளையவர் , பசு , பெண்கள் என்னும் இவர்களுக்கு வழி விட்டு விலகினவர்களே மக்களால் போற்றப்படுவர் என்கிறது மற்றொரு பாடல் ( ஆசா கோவை -64 )

இஃது அக்கால மக்களின் மனித நேய உணர்வைப் பிரதிபலிக்கிறது .

சான்றோர் நிறைந்த அவையில் அறிஞர் அங்க சேட்டை செய்யமாட்டார் , கடுஞ்சொல் கூறமாட்டார் , இருவராக இருந்து பேசுமிடத்திற்குப் போகமாட்டார் என்று அறிஞர் செயல் கூறி நன்னெறி உரைக்கிறது ஆசாரக்கோவை .

இருவர் தனியே இருந்து பேசுமிடத்திற்குப் போகல் ஆகாது ( ஆசா கோவை - 93 ) என்ற அறிவுரையில் பல நுட்பங்களைக் காணலாம் .

இருவர் பேசிக்கொள்வது மற்றவர் அறியக் கூடாத இரகசியமாக இருக்கலாம் .

அவர்கள் அந்தரங்கத்தில் குறுக்கிடக் கூடாது என்ற மனித நாகரிக மாண்பினைச் சொல்லும் அறவுரையல்லவா இது !

விலக்கக் கூடியன

நன்னெறிகளைக் கூறும் ஆசாரக்கோவை விலக்கக் கூடியன எவை என்பதையும் கூறுகிறது .

பிறர் மனை நயத்தல் , கள்ளுண்ணல் , களவு செய்தல் , கொலை செய்தல் , சூதாடல் போன்றவை இகழ்ச்சிக்கும் , நரகத்திற்கும் காரணமான செயல்கள் ஆகும் .

எனவே இவை விலக்க வேண்டியன என்று வலியுறுத்துகிறார் ஆசிரியர் ( ஆசா கோவை - 37 ) .

5.4.1 நினைக்கக் கூடாதவை

ஒரு தீமை தொடர்ந்து பல தீமைகளுக்குக் காரணமாகிறது .

பொய் பேசுதல் , கோள் சொல்லுதல் , பிறர் பொருளுக்கு ஆசைப்படல் , பொறாமை கொள்ளுதல் என இவை நான்கினையும் நினைக்கவும் கூடாது .

நினைத்தால் இம்மையில் பிச்சையெடுக்கும்படி வறுமை வரும் .

மறுமையில் நரகத்தில் செலுத்திவிடும் என்று கூறி மக்களை நல்வழிப்படுத்துகிறது ( ஆசா கோவை - 38 ) .

5.4.2 பேசக் கூடியவை

ஒருவன் பேச்சு எப்படி இருக்க வேண்டும் ?

வஞ்சனையின்றி இருக்க வேண்டும் .

பயன் உடையதாய் இருக்க வேண்டும் .

எப்படி இருக்கக் கூடாது ?

ஒருவன் பேசும் மொழி வஞ்சனையாய் இருக்கக் கூடாது .

பயனற்ற சொல்லாய் இருக்கக் கூடாது .

நாவடக்கமின்றிப் பேசுதல் கூடாது .

பிறரைப் பழித்துரைக்கக் கூடாது .

நிலையான நல்லொழுக்கம் உள்ளவர் செயலாக இவற்றைச் சொல்கிறது ஆசாரக் கோவை .

படிறும் பயனிலவும் பட்டி யுரையும்

வசையும் புறனும் உரையாரே யென்றும்

அசையாத உள்ளத்தவர்

( ஆசாரக்கோவை - 52 )

( படிறு = வஞ்சனை ; பயனில = பயனற்ற சொல் ; பட்டி உரை = நாவடக்கமில்லாத சொல் ; வசை = தூற்றுதல் ; புறன் = கோள் ; அசையாத = உறுதியான )

இன்னும் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போமா ? நாம் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும் .

அதை நாமே பாராட்டிக் கூறக் கூடாது .

பிறர் இட்ட உணவை இகழ்தல் கூடாது .

தம் அறச் செய்கையையும் நோன்பையும் தாமே புகழ்தலும் தகாது .

ஆகையால் இவற்றைத் தவிர்க்க வேண்டும் ( ஆசா கோவை - 88 ) .

உலகியலில் ஒருவர் எங்காவது புறப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது எங்குப் போகிறீர்கள் என்று கேட்கக் கூடாது என்பர் .

கிளம்பும் பொழுது பின்னால் நின்று அழைக்கக் கூடாது , தும்மக் கூடாது என்பர் .

பெருவாயின் முள்ளியாரும் ஒரு பாடலில் இவற்றைச் சொல்கிறார் .

பாடலைப் பாருங்கள் .

எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும்

எங்குற்றுச் சேறீரோ என்னாரே முன்புக்கு

எதிர்முகமா நின்று உரையார் இருசார்வும்

கொள்வர் குரவர் வலம்

( ஆசாரக்கோவை - 58 )

( கூவார் = கூப்பிட மாட்டார் ; சேறீரோ = செல்கின்றீர் ; இருசார்வு = இரண்டு பக்கங்கள் )

பேச்சு ஒரு கலை , ஒரே செய்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகச் சொல்வர் .

பலரும் பாராட்டும் வண்ணம் தக்கபடி சொல்வதன்றோ முறை !

இது பற்றி ஆசாரச் கோவை என்ன சொல்கிறது ?

மிக விரைவாக ஒருவரிடம் ஒரு செய்தியைச் சொல்லக் கூடாது .

பொய்யுரையும் மிகைப்படுத்தலுமின்றிக் கூறுதல் வேண்டும் .

எதைச் சொல்ல நினைக்கிறோமோ அதைச் சுருக்கமாகத் தெளிவாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் .

பாடலைப் பார்ப்போம் .

விரைந்துரையார் மேன்மேல் உரையார் பொய்யாய்

பரந்துரையார் பாரித்துரையார் - ஒருங்கனைத்தும்

சில்லெழுத்தி னாலே பொருளடங்கக் காலத்தால்

சொல்லுக செவ்வி யறிந்து

( ஆசாரக்கோவை -76 )

( விரைந்து = வேகமாக ; மேன்மேல் = அடுத்தடுத்து ; பரந்து = விரித்து ; பாரித்து = விவரித்து ; சில்லெழுத்து = சில சொற்கள் )

வள்ளுவரும் சொல்வன்மை உடையவரை வெல்வது அரிது ( 647 ) என்பர் .

சொல்வன்மை உடைய அனுமான் சொல்லின் செல்வர் என்று பாராட்டப்படுகிறார் அல்லவா ?

5.4.3 செய்யக் கூடாதவை

ஒருவர் செய்யும் செயல்களே அவர் எத்தகைய பண்பை உடையவர் என்பதைக் காட்டும் அல்லவா ?

ஒரு பொருளை வீசி எறிதல் , கல்லெறிதல் , மற்றவரை இகழ்ந்து பேசுதல் , கை தட்டல் முதலியன தீயொழுக்கம் உடையார் செயல்களாம் .

எனவே , இவற்றை விலக்க வேண்டும் என்கிறது ஆசாரக்கோவை ( 53 )

கிடைத்தற்கரியது என்று தெரிந்தவற்றை விரும்புதலும் இழந்த பொருளுக்கு வருந்தலும் , அரிய துன்பத்திற்கு மனம் கலங்குதலும் பயனற்ற செயல்கள் , இந்தப் பயனற்ற செயல்களை விலக்க வேண்டும் என்கிறார் பெருவாயின் முள்ளியார் ( ஆசா கோவை - 89 ) .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. ஆசாரக்கோவை நூலின் ஆசிரியர் யார் ?

[ விடை ]

2. எந்த நாளில் மரங்களை வெட்ட மாட்டார்கள் ?

[ விடை ]

3. எறும்பிடமும் , தூக்கணாங்குருவியிடமும் என்ன கற்றுக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும் ?

[ விடை ]

4. மாலைப் பொழுதை எப்படிக் கழிக்க வேண்டும் என்று ஆசாரக்கோவை கூறுகிறது ?

முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சி , காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று .

( காஞ்சித்திணை , பொதுவாக நிலையாமையைக் கூறும் )

உலகியல் உண்மைகளைத் தெளிவாகப் பெருமக்கள் கூறுவது முதுமொழிக்காஞ்சி .

அதுவே இந்நூலுக்குப் பெயராயிற்று .

மேலும் ‘ காஞ்சி ’ என்பது மகளிர் அணியும் ஒருவகை அணிகலக் கோவையைக் குறிக்கும் .

பல மணிகள் கோத்த காஞ்சி அணிபோல முதுமொழிக்காஞ்சி என்று கருதுவாரும் உண்டு . அவ்வாறு பொருள் கொண்டால் முதுமொழிக்காஞ்சி என்பது அறிவுரைக்கோவை என்று பொருள்படும் என்பர் அறிஞர் .

5.5.1 ஆசிரியர்

இந்த நூல் மதுரைக் கூடலூர் கிழாரால் இயற்றப்பட்டது .

இவரது ஊர் கூடலூர் .

இவர் சங்க காலத்தில் வாழ்ந்த புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் அல்லர் .

சங்க காலத்திற்குப் பிற்பட்டவர் .

இருவரும் வெவ்வேறானவர் என்பதை உ.வே. சாமிநாதய்யர் குறிப்பிடுகிறார் .

5.5.2 நூலின் அமைப்பும் பாடு பொருளும்

சிறந்த பத்து , அறிவு பத்து , பழியாப் பத்து , துவ்வாப் பத்து , அல்ல பத்து , இல்லைப் பத்து , பொய்ப் பத்து , எளிய பத்து , நல்கூர்ந்த பத்து , தண்டாப் பத்து என்னும் பத்து அதிகாரங்களைக் கொண்டது இந்த நூல் .

ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள்களாக 100 பாடல்கள் உள்ளன .

எல்லா அதிகாரத்திலும் முதல் செய்யுள் மட்டும் ‘ ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் ’ என்று தொடங்கி ஈரடியால் ஆன வெண்செந்துறை யாப்பில் அமைந்துள்ளது .

ஏனைய ஒன்பது செய்யுள்களும் ஓரடியால் ஆனவை .

முதல் அடியை ஏனைய அடிகளுக்கும் பொருத்திப் பொருள் கொள்ள வேண்டும் என்பது ஆசிரியர் கருத்தாக இருக்கலாம் .

பத்து என்பது பத்துப் பொருள்கள் ஆகும் .

முதல் பத்து சிறந்த பத்து .

சிறந்தனவாகிய பத்துப் பொருள்கள் இப்பகுதியில் கூறப்பட்டுள்ளன .

இதனால் இது சிறந்த பத்து என்னும் பெயரினைப் பெற்றுள்ளது .

இதன் கண் உள்ள பத்து அடிகளிலும் சிறந்தன்று என்ற ஒரு சொல் பயின்று வந்துள்ளது .

அதற்குச் " சிறந்தது " என்பது பொருள் .

பத்து அடிகளில் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு சிறந்த பொருளைக் கூறி அதைவிடச் சிறந்த இன்னொரு பொருளைக் கூறி விளக்குவது இதன் சிறப்பு .

சிறந்த பொருள்களை எவ்வாறு அறிவது என்பதை விளங்க வைப்பது ‘ அறிவுப்பத்து ’

பழியார் என்ற சொல்லால் உலகில் எதையெல்லாம் பழிக்க மாட்டார்கள் என்று பத்து அடிகளில் சொல்வது ‘ பழியாப்பத்து ’ எவையெல்லாம் நீங்காது என்பதைச் சொல்லும் அதிகாரம் ‘ துவ்வாப்பத்து ’

வாழ்க்கையில் அல்ல , அல்ல என்று கூறும் முறையால் நீதிகளைச் சொல்வது ‘ அல்ல பத்து ’

இல்லை என்பதைக் கூறும் பத்து முதுமொழிகளை உடையது ‘ இல்லைப்பத்து ’

‘ பொய்ம்மை ’ கூறும் பத்து முதுமொழிகளை உடையது ‘ பொய்ப்பத்து ’

எளிமை கூறும் பத்து முதுமொழிகளை உடையது ‘ நல்கூர்ந்த பத்து ’

தவிராமை பற்றிக் கூறும் பத்து ‘ தண்டாப்பத்து ’

முதுமொழிக்காஞ்சி கூறும் வாழ்வியல் உண்மைகளை இனி விரிவாகக் காண்போமா ?

சிறப்பானவை

நம் வாழ்க்கையில் சிறப்பானவையாகப் பல அமைந்துள்ளன அவற்றுள் எவை எவை சிறப்பானவை , அவற்றை எவ்வாறு அறிந்துகொள்வது , என்பன பற்றி முதுமொழிக் காஞ்சி பல கருத்துகளை வழங்கியுள்ளது .

5.6.1 சிறப்பை அறிதல்

சிறந்தனவற்றைக் கூறியபின் அவற்றை அறியும் வகைகளைக் கூறுவது முறையல்லவா ?

ஒருவன் மனத்தில் இரக்கம் உடையவன் என்பதனை அவன் பிறர்க்குக் கொடுக்கும் முறையினால் அறியலாம் .

உயர்ந்த நட்புடைமையை அவன் நண்பர்களுக்குச் செய்யும் உதவியினால் அறியலாம் .

சோரா நல்நட்பு உதவியின் அறிப

( அறிவுப் பத்து : 3 )

( சோரா = தளராத )

ஒருவனுடைய தவறுகளை அவனது மாறுபாடுள்ள சொல்லால் அறியலாம் .

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு

( குறள் : 642 )

என்ற குறட்பா சொல்லின் வன்மையை , வலிமையை வலியுறுத்துகிறதல்லவா ?

எனவே சொல்லின்கண் சோர்வு என்பது கூடாத ஒன்று .

சொல்லின்கண் சோர்வு இருந்ததால் தான் பாண்டிய மன்னன் ,

தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு

கன்றிய கள்வன் கையது ஆகின்

கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்குஎன

( சிலப்பதிகாரம் , 16,151-153 )

என்று கூறினான் , கோவலன் மாண்டான் .

சொல்லில் சோர்வு இல்லாவிடில் , ‘ கொல்ல அச்சிலம்பு கொணர்க ’ என்று கூறியிருப்பான் . எனவே சொல்கிற சொற்களில் இந்தப் பிழை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .

இப்பிழையை நீக்கிக் கொள்ளாத ஒருவன் தன்னிடத்தில் உண்டாகும் வேறு எந்தப் பிழைகளையும் அறிந்து கொள்ள மாட்டான் .

ஏனென்றால் இந்தப் பிழை அவனுடைய மற்றப் பிழைகளை அவன் அறியாமல் செய்துவிடும் .

ஆனால் மற்றவர்கள் அவனுடைய அந்தப் பிழைகளையெல்லாம் அறிவார்கள் .

இதனை முதுமொழிக்காஞ்சி

சொல்சோர்வு உடைமையின் எச்சோர்வும்அறிப

( அறிவுப் பத்து : 8 )

( சொல்சோர்பு = சொல்வதில் தவறு )

என்று குறிப்பிடுகிறது .

ஒருவன் முயற்சியின் திறம் அவன் முடிக்கும் செயலால் அறியப்படும் என்பது அறிவுப்பத்தில் நாம் அறிந்து கொள்ளக்கூடிய செய்தியாகும் .

இனி பழிக்கப்படாதன யாவை என்பது பற்றி முதுமொழிக்காஞ்சி என்ன கூறுகிறது என்று பார்ப்போம் .

5.6.2 மானிடப் பிறவி

பிறப்பிலேயே மக்கட்பிறப்பு மிக உயர்ந்தது .

ஆறறிவு பெற்றிருக்கின்றதால் நூல்களைக் கற்கும் வாய்ப்பும் அவர்களுக்கே உள்ளது .

அவ்வாறு கற்கும் கல்வி அவர்களுக்குச் சிறப்பைத்தரும் .

ஆனால் அதைவிடச் சிறப்புடையது அவர்கள் கற்ற வழியில் நடந்து ஒழுக்கம் உடையவர்களாக இருத்தல் .

கற்றவர்கள் கற்றவழி நடந்தால்தானே மனித சமுதாயம் மாண்பு உடையதாக விளங்கும் .

இதனை முதுமொழிக்காஞ்சி

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை

( சிறந்த பத்து - 1 )

( ஆர்கலி = நிறைந்த ( கடல் ) ஓசை , ஓதல் = கற்றல் , சிறந்தன்று = சிறந்தது )

என்கிறது .

வண்மை என்பது வளம் பொருந்திய செல்வம் .

மக்கள் , செல்வத்தைப் பெற்றிருப்பதன் பயன் இரப்போர்க்கு ஈதலே ஆகும் .

செல்வத்து பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே

( புறம் -189 )

என்று புறநானூற்றுப் பாடலும் , முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கார்க்கு உதவி செய்வதற்கே என்று திருக்குறளும் ஈதலின் இன்றியமையாமையை எடுத்துரைக்கின்றன .

என்றாலும் பலர் செல்வம் வந்தபொழுது அந்த ஈகைப் பண்பை மறப்பதோடு , செல்வச் செருக்கினால் தீமைகள் பலவற்றையும் செய்வர் .

செல்வ மிகுதியால் கேடுகள் உண்டாகும் வாய்ப்புகளே மிகுதி .

ஆனால் ஒருவர் வாய்மை உடையவர் ஆக இருந்தால் எப்படிப்பட்ட தீமையும் எவர்க்கும் உண்டாகாது .

எனவே ஒருவர் பலவகைக் கேடுகளையும் விளைவிக்கக் கூடிய செல்வத்தைப் பெற்றிருப்பதை விட , நன்மையைச் செய்யும் வாய்மை உடையவராக இருப்பதே மிகுந்த சிறப்பாகும் .

இதனை முதுமொழிக்காஞ்சி

வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை

( சிறந்த பத்து : 4 )

( சிறந்தன்று = சிறந்தது )

என்று கூறுகிறது .

இளமைப்பருவம் இன்பம் தரக் கூடியது .

ஆனால் அதைவிட நோயற்ற வாழ்வு தரும் இன்பமே மிகச் சிறந்தது .

கற்றல் சிறந்தது .

கற்றலை விடக் கற்றாரை வழிபடல் சிறந்தது .

இளமைக் காலத்தில் செல்வம் பெருகல் சிறந்தது .

முதுமையில் அது குறையாமல் இருப்பது அதைவிடச் சிறந்தது என்பன போன்ற அரிய கருத்துகளையும் மதுரைக் கூடலூர் கிழார் கூறுகிறார் .

சிறப்பு இல்லாதவை

சிறப்பான பொருள்களைப் பற்றி இலக்கியங்கள் பேசுவது இயல்பு .

சிறப்புள்ள பொருளும் சிறப்பில்லாமல் போவது எப்போது என்பதைப் பத்துப் பாடல்களில் சொல்கிறார் மதுரைக்கூடலூர் கிழார் .

5.7.1 விருப்பமில்லா விருந்து

இல்லையென்று வந்தவர்க்கு இல்லையென்னாது கொடுப்பது ஈகை. அதுவே விருப்பம் இல்லாமல் பிறருடைய கட்டாயத்திற்காகக் கொடுக்கப்படும்போது ஈகையே சிறப்பில்லாமல் போய்விடும் என்பதை ,

பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது ( துவ்வாப் பத்து : 4 )