95

( பேணில் ஈகை = விருப்பமில்லாத ஈகை ; துவ்வாது = நீங்காது )

என்ற பாடல் உணர்த்துகிறது .

ஒருவர்தாம் உண்ணும்பொழுது இரப்பவர்க்கு இயன்ற அளவு கொடுத்துவிட்டு உண்ண வேண்டும் .

தான் ஒருவனே உண்டு வாழும் வாழ்வு சிறப்புடையது அன்று .

எவனொருவன் தன் ஒருவனுக்காகச் சமைத்துக் கொள்கிறானோ அவன் பாவத்தை உண்கிறான் என்று குறிப்பிடுகிறது பகவத் கீதை .

எனவே ஒருவன் பிறர்க்கு ஈயாது தான் மட்டும் உண்டு வாழ்தல் கூடாதது ஆகும் .

இதனை முதுமொழிக்காஞ்சி ,

தான்ஓர் இன்புறல் தனிமையில் துவ்வாது

( துவ்வாப் பத்து : 10 )

என்று குறிப்பிடுகிறது .

ஆசாரக்கோவையும் " தமக்கென்று உலை ஏற்றார் " ( 39 ) என்று கூறுவதைக் காணலாம் .

5.7.2 மாண்பில்லா மனைவி

எதிர்மறையாகக் கூறும் உண்மைகள் ‘ அல்ல பத்து ’ என்ற தலைப்பில் வரும் முதுமொழிகளாகும் .

இல்லறத்தில் மனையாள் பங்கைச் சிறப்பிற்குரியதாக இலக்கியங்கள் பேசுகின்றன .

மனையாள் மாண்புடன் இருந்தால் மனைவாழ்க்கை சிறப்படையும் .

இல்லையெனில் இல்லறம் நல்லறமாகாது என்பது

தாரம் மாணாதது வாழ்க்கை அன்று

( அல்ல பத்து : 2 )

( மாணாதது = சிறவாதது )

என்னும் பாடலில் கூறப்பட்டுள்ளது .

5.7.3 அறமில்லா ஈகை

ஈகையானது அறவழியில் இருக்கவேண்டும் .

வறியார்க்கு ஒன்று ஈதல் , அறச்சாலைகட்குப் பயன்படுத்துதல் , அறிவுமுறைகட்கு வழங்கல் முதலிய வகைகளில் அமைய வேண்டும் .

பசுவைக் கொன்று செருப்பைத் தானம் செய்வது போல அமையக்கூடாது .

இதனை முதுமொழிக்காஞ்சி எப்படிச் சொல்கிறது பாருங்கள் !

அறத்தாற்றின் ஈயாதது ஈகை யன்று

( அல்ல பத்து : 8 )

ஈகையும் அறவழியில் நிற்கும் தகுதியுடைவர்க்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறது .

ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் விட்டால் ஒழுகிவிடும் அல்லவா ?

இளமைக்காலம் தொட்டு முதுமைக்காலம் வரை ஒருவன் அறம் செய்து பயன் அடையவேண்டும் .

அவ்வாறு அறம் செய்யாமல் அடைந்த மூப்பு சிறப்புடையதாகாது என்று வாழும் வாழ்க்கைக்குப் பொருளாயிருப்பது மற்றவர்க்கு உதவும் அறஉணர்வே என்பதை முதுமொழிக்காஞ்சி ,

மறுபிறப் பறியாதது மூப்பு அன்று

( அல்ல பத்து : 10 )

என்று சொல்கிறது .

மறு பிறவி உண்டு என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி வாழாமல் முதிர்ந்த மூப்பு சிறந்த மூப்பாகாது என்பது இதன் பொருள் .

5.7.4 மக்கட்பேறு இல்லா வாழ்க்கை

இவ்வுலகில் கிடைத்தற்கரிய பேறுகள் எத்தனையோ உள்ளன .

அவற்றில் மக்கட்பேறே சிறந்த பேறு என்பதை ,

பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த

மக்கட் பேறல்ல பிற

( குறள் : 61 )

என்பார் திருவள்ளுவர் .

படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்

உடைப் பெருஞ் செல்வ ராயினும் .

மயக்குறு மக்களை யில்லோர்க்குப்

பயக்குறை யில்லை தாம்வாழும் நாளே

என்று புறநானூற்றுப் பாடலும் ( 188 ) மக்கட்பேற்றைச் சிறப்பித்துக் கூறுகின்றது .

இந்தக் கருத்தையே முதுமொழிக்காஞ்சி

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் மக்கட் பேற்றிற் பெறும் பேறில்லை

( இல்லைப் பத்து : 1 )

என்று பிரதிபலிக்கிறது .

செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தலை விடத் தக்க செயல் வேறில்லை .

விருப்பமும் விளைவும்

இன்பமும் துன்பமும் எல்லோரது வாழ்க்கையிலும் நிகழக் கூடியவை .

இன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதைப் போல , துன்பத்தை ஏற்றுக் கொள்வதில்லை .

துன்பத்தைக் கண்டு அஞ்சுவார்கள் .

சிலர் அதைப் பொறுமையோடு பொறுத்துக்கொள்வர் .

அத்தகையோருக்கு என்ன சிறப்பு கிட்டும் என்று ஆசாரக்கோவை கூறுகிறது .

சிலர் , உடல் வளத்தை மனத்திற்கொண்டு , எப்பொழுதும் அளவுக்கு அதிகமான உணவையே உண்டு மகிழ்வர் .

அத்தகையோருக்கு எத்தகைய தீமை வரும் என்பதனை முதுமொழிக் காஞ்சி வெளிப்படுத்துகிறது .

5.8.1 துன்பமும் இன்பமும்

ஒருவர் ஒரு நல்ல செயலை முயற்சியுடன் செய்கின்றபொழுது அதில் அவர்க்குப் பல துன்பங்கள் உண்டாகலாம் .

ஆனாலும் அவர் அத்துன்பங்களை விரும்பி ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் .

துன்பங்களைக் கண்டு அஞ்சி , செயலைக் கைவிடுதல் கூடாது .

அத்தகையவர்க்கு முடிவில் அச்செயல் கைகூடி இன்பம் உண்டாகும் .

எனவே ஒரு செயலைக் செய்து முடிப்பதில் உண்டாகக் கூடிய துன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்கின்றவர்கட்கு இன்பம் மிகவும் எளிமை உடையது ஆகும் ( எளிய பத்து : 5 )

துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது

( எளிய பத்து - 5 )

( வெய்யோர் = விரும்புவோர் )

5.8.2 உணவும் நோயும்

ஒருவன் உண்ணும் போது அளவறிந்து உண்ண வேண்டும் .

அவ்வாறு உண்டால் நோய் உண்டாகாது .

அளவு கடந்து உண்டால் அவ்வுணவு செரிக்காது .

உண்டவனுக்கு மிகுந்த நோயை உண்டு பண்ணும் .

எனவே , உணவை அளவுக்கு மேல் உண்பவர்கட்கு நோயானது எளிமையாக வந்து சேரும் .

உண்டிவெய் யோர்க்கு உறுபிணி எளிது

( எளிய பத்து - 7 )

( வெய்யோர் = விரும்புவோர் )

இவ்வாறு அளவறிந்து உண்ண வேண்டியதன் அவசியத்தை முதுமொழிக்காஞ்சி வலியுறுத்துகிறது , எனவேதான் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்றார் ஆன்றோர் .

தொகுப்புரை

நம் வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளான உண்ணுதல் , உறங்குதல் , பேசுதல் போன்றவற்றிற்கும் விதிமுறைகளைக் கூறும் ஆசாரக்கோவை , கடவுள் வழிபாட்டை வலியுறுத்துகிறது .

மனிதனின் உயர்பண்புகள் இவை , இப்பண்புகளைக் கொண்டவர்தான் சிறந்த மனிதன் என்று வாழ்வியல் மதிப்புகளை வரையறை செய்கிறது .

முடியாட்சி நிலவிய சமுதாயமாகையால் அரசனை மையமாக வைத்துப் பல பாடல்கள் அமைந்துள்ளதை இந்நூலில் காணலாம் .

சான்றோர் செயல் இதுவெனக் கூறும் பாடல்கள் வாழ்க்கைக்குத் தேவையான நன்னெறிகளை எடுத்துரைக்கின்றன .

முதுமொழிக்காஞ்சி , காஞ்சித்திணையின் துறைகளில் ஒன்று .

பத்துப் பாடல்களைக் கொண்ட பத்து அதிகாரங்களில் நூறு முதுமொழிகளை இந்நூலில் காணலாம் .

சிறந்தனவற்றைக் கூறி அவற்றை விடச் சிறந்த பொருள்களை எடுத்துரைப்பது இதன் சிறப்பாகும் .

சிறந்தனவற்றை எப்படி அறிவது என்பதை , இந்நூல் எடுத்துரைக்கிறது .

எளிமையானவை எவை , பொய்யானவை எவை , பயன் இல்லாதன யாவை என்பதையும் இந்நூல் பட்டியலிடுகிறது .

யாருக்கு எது எளிது என்பதையும் இந்நூல் எடுத்துச் சொல்கிறது .

எதிர்மறையால் கூறும் வாழ்வியல் உண்மைகளை , அல்ல பத்து , இல்லைப் பத்து என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறது .

வாழ்க்கையில் இன்ப துன்பங்களை , இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவ நிலையை மனிதன் அடைய வேண்டும் என்ற உண்மைகளையும் உணர வைக்கிறது .

அளவில் சிறிய நூலாக அமைந்து , ஆன்றோர் அனுபவ மொழிகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நூலாக முதுமொழிக்காஞ்சி விளங்குகிறது .

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. முதுமொழிக்காஞ்சி ஆசிரியர் யார் ?

[ விடை ]

2. முதுமொழிக்காஞ்சி மொத்தம் எத்தனைச் செய்யுட்களைக் கொண்டது ?

[ விடை ] 3. ‘ சிறந்த பத்து ’ அதிகாரத்தின் பெயர்க் காரணத்தைக் குறிப்பிடுக .

[ விடை ]

4. மனைவாழ்க்கை சிறப்படையக் காரணமாக விளங்குவது எது ?

[ விடை ]

5. நோய்கள் யாரிடம் சுலபமாகச் சேரும் ?

பழமொழி நானூறு

பாட முன்னுரை

பழமொழி நானூறு என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று .

இந்நூல் பழமொழி என்றும் வழங்கப்படும் .

இந்நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக உள்ள நானூறு வெண்பாக்களும் நானூறு பழமொழிகளைக் கொண்டு விளங்குகின்றன .

ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வொரு சிறந்த கருத்தை உணர்த்துகிறது .

படிப்பவர் எளிமையாகக் கற்கும் வண்ணம் சொல்லும் கருத்துகளின் அடிப்படையில் 34 அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன .

சில அதிகாரங்கள் 10 வெண்பாக்களைக் கொண்டுள்ளன .

சில அதிகாரங்களில் 10-க்கு மேற்பட்ட வெண்பாக்கள் உள்ளன .

எஞ்சியவற்றில் 10-க்குக் குறைவான வெண்பாக்கள் உள்ளன .

இவற்றைப் பற்றிய கருத்துகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன .

இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் .

முன்றுறை என்பது ஊர். அரையனார் என்பதால் சிற்றரசராக இருக்கலாம் .

சமண சமயத்தைச் சேர்ந்த இவர் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் .

பழமொழிகள்

பழமொழிகள் சான்றோர்களின் அனுபவ மொழிகள் , மக்களை நன்னெறியில் செலுத்தக் கூடிய வழிகாட்டிகள் .

உலகெங்கிலும் பழமொழிகள் காணப்படுகின்றன .

எல்லா நாடுகளிலும் , எல்லா மொழிகளிலும் பழமொழிகள் உண்டு .

உலக நாடகக் கவிஞர் செகப்பிரியர் தம் நாடகங்களில் பழமொழிகளைப் பயன்படுத்தியிருக்கிறார் .

‘ விரும்பிய வண்ணமே ’ ( As you Like it ) என்ற நாடகத்தில் எல்லாம் ( கேடுகளும் ) நன்மைக்கே என்ற கருத்தமைந்த பழமொழியைப் பயன்படுத்தியுள்ளார் .

அவருடைய நாடகத் தலைப்புகள் பழமொழிகள் போன்றே காணப்படுகின்றன .

சான்றாகச் சிலவற்றைக் கீழே காணலாம் .

‘ As you like it ’ , ‘ Measure for Measure ’

‘ Much Ado About Nothing ’ , ‘ All ' s well that ends well ’

ஏசுநாதர் தம் குழுவில் உள்ள நற்சீடர்களுக்குப் பழமொழிகள் வாயிலாகவே அறவுரை பகர்ந்திருக்கிறார் .

‘ மருத்துவனே , உன்னை முதலில் குணப்படுத்திக் கொள் ’என்று அறிவுரை கூறுவார் .

‘ Physician , heal thyself '

அறிஞர் பெருமக்களான அரிஸ்டாட்டில் , சாலமன் ஆகியோரும் பழமொழிப் பித்தர்கள் என்பார்கள் .

6.1.1 இலக்கியங்களில் பழமொழிகள்

சங்க இலக்கியம் முதலாக அனைத்து இலக்கியங்களிலும் பழமொழிகள் பயின்று வருகின்றன .

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

பழகப் பழகப் பாலும் புளிக்கும்

என்ற இரண்டு பழமொழிகளும் மக்களிடையே மிகவும் அறிமுகமானவை .

குறுந்தொகையில் இப்பழமொழி எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்று பார்ப்போமா ?

தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையிடம் ( பொதுமகளிர் ) சென்று விட்டான் தலைவன் .

தலைவி வருந்தியிருக்கிறாள் .

அவள் மீது அன்புடைய தோழி தலைவன் வந்தவுடன் அவனை வீட்டின் உள்ளே விடாமல் வாயிலில் நிறுத்திக் கீழே குறிப்பிட்டுள்ளவாறு பேசுகிறாள் .

குளிர்ச்சியான நீரில் அளவிற்கு மேல் நீராடினால் உடம்பிற்குத் துன்பம் உண்டாகும் .

தேன்இனிப்புடையதுதான் .

அதையே இடைவிடாது பலமுறை உண்டால் உண்டவர்க்கு அது வெறுப்பைக் கொடுக்கும் .

சுவை உடைய தேன் இப்போது புளிப்பாய் இருக்கும் .

அதுபோல நாங்களும் உனக்கு இதுநாள் வரை இனிய இன்பப் பொருளாய்த் தோன்றினோம் .

பழக்க மிகுதியால் இப்போது வெறுப்புடைப் பொருளாக மாறினோம் என்று கூறுகிறாள் .

இந்தக் கருத்தை உட்படுத்தி ,

நீர் நீடாடிற் கண்ணும் சிவக்கும் ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்

( குறுந்தொகை : 354 )

( நீடு ஆடில் = நீண்ட நேரம் நீராடினால் , ஆர்ந்தோர் = அதிகமாக உண்டோர் )

என்ற பாடலைப் பாடுகிறார் புலவர் கயத்தூர் கிழார் .

காப்பியங்களிலும் , புராணங்களிலும் பழமொழிகள் எடுத்தாளப்படுகின்றன .

கம்பராமாயணம் , வில்லிபாரதம் , திருமுறைகள் , திருவருட்பா ஆகிய நூல்களிலும் பல பழமொழிகளைக் காண முடிகிறது .

• நாடகங்களில் பழமொழி

நாடக இலக்கியங்களிலும் பழமொழிகள் பல இடம்பெற்றுள்ளன .

எடுத்துக்காட்டாக ‘ பெண் என்றால் பேயும் இரங்குமே ’ என இராம நாடகத்திலும் , ‘ பூவையை வளர்த்துப் பூனைக்கு ஈயவோ ’ என்று மனோன்மணீயம் நாடகத்திலும் பழமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன .

• இலக்கியப் பெருமையும் பழமொழியும்

தமிழ் இலக்கியங்களில் சிறப்பு வாய்ந்தவை திருக்குறளும் , நாலடியாரும் .

இவற்றின் பெருமையை வெளிப்படுத்துகின்ற வகையிலும் பழமொழிகள் வழங்குகின்றன .

பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்

ஆலும் வேலும் பல்லுக்குறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

என்பவை குறளுக்கும் நாலடியாருக்கும் சிறப்பைத் தரும் பழமொழிகள் .

அதைப்போல , ‘ திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் ’ என்று பழமொழிகளால் குறிப்பிடுவதைக் காணலாம் .

• தமிழ்மொழியின் சிறப்பு

ஆங்கிலம் , பிரெஞ்சு போன்ற அனைத்து மொழிகளிலும் பழமொழிகள் உண்டு .

ஆனால் எம்மொழியிலும் பழமொழிக்கென்று ஒரு தனி நூல் இருப்பதாகத் தெரியவில்லை .

தமிழில் பழமொழிக்கென்று நூல்கள் உள்ளன .

அவை ‘ பழமொழி நானூறு ’ மற்றொன்று பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம் என்பன .

இத்தனைச் சிறப்பு பழமொழிக்கு உரியது ஆவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமோ ?

6.1.2 பழமொழி - அமைப்பும் சிறப்பும்

• பழமொழி என்ற சொல் - விளக்கம்

1. பழமையான மொழி - தொன்மையானது ( அனுபவ மொழிகள் )

2. பழம் போன்ற மொழி - பழம் போல் இனிமையானது .

சுவை உடையது .

( இலக்கியச் சுவை )

3. பழம் போல நன்மையளிப்பது ( வாழ்க்கையில் நெறிப்படுத்துவது )

4. பழம் போல் நெகிழ்ந்த தன்மை - புரிந்து கொள்ள எளிமையானது .

என்கிற அனைத்துப் பொருளையும் உள்ளடக்கியுள்ளது .

பழமொழி என்ற சொல் மிகவும் பொருளாழம் உடையது இல்லையா ?

• இலக்கணம்

தொல்காப்பியர் பழமொழியை ‘ முதுமொழி ’என்று குறிப்பிடுகிறார் .

அங்கதம் முதுசொலோடு

( தொல் .

பொருள் .

செய் : 79 )

இம்முதுமொழிக்குரிய இலக்கணத்தைத் தொல்காப்பியர் வகுத்தும் , தொகுத்தும் உரைக்கிறார் .

நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்

எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏது முதலிய முதுமொழி யென்ப

( தொல் .

பொருள் .

செய் : 177 )

இதன் பொருளாவது :

1. பழமொழி கூர்மையோடு திட்ப நுட்பம் உடையதாய் இருத்தல் வேண்டும் .

2. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும் . 3. சிறந்ததாக எளிமையாக அமைந்து இருக்க வேண்டும் .