96

4. குறித்த பொருள் ஒன்றினை வரையறுத்துக் கூற வேண்டும் .

ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் தொல்காப்பியர் பழமொழிக்கு வகுத்த இலக்கணங்கள் , இன்று பழமொழிக்கு மேலைநாட்டார் கூறும் விளக்கத்தோடு பொருந்துகின்றன என்பது வியப்பைத் தருகிறது .

• மேலைநாட்டார் விளக்கம்

ஆர்.சி.டிரெஞ்ச் பழமொழிகளும் அவற்றின் படிப்பினைகளும் என்ற நூலில் பழமொழிக்குச் சில இலக்கணங்கள் வரையறுக்கிறார் .

அவை :

1. பழமொழி மூச்சை ஒருமுறை உள்ளெடுத்து வெளிவிடும் நேரத்திற்குள் குறைந்த சொற்களால் ஆக்கப்பட வேண்டும் .

2. நல்ல உணர்வுடன் இருக்க வேண்டும் .

3. நுட்பம் உடையதாய் இருக்க வேண்டும் .

உப்பிட்ட பண்டம் போல் தீமை தராத வகையில் அமைய வேண்டும் .

• தொல்காப்பியமும் பழமொழியும்

மேற்கூறிய கருத்துகள் பெரும்பாலும் தொல்காப்பியர் கருத்துகளுடன் ஒத்துச் செல்கின்றன .

தொல்காப்பியர் கூறிய பழமொழி இலக்கணங்களுக்கு ஏற்பவே பழமொழி நானூறு சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது .

எளிமையாக , அதே சமயம் கூர்மையாக , கூறவந்த கருத்தை வரையறுத்துச் சொல்வதாக இருக்கிறது .

சுவையாக அமைந்து எக்காலத்தும் பயன்படுத்தும் வண்ணம் நின்று நிலவும் பெருமை உடையதாய் உள்ளது .

• அமைப்பு

முதல் இரண்டடிகளில் ஆசிரியர் தாம் எடுத்துக் கொண்ட பொருளைக் கூறுவார் .

மூன்றாமடியில் ஆணையோ , பெண்ணையோ விளித்துக் கூறுதலைக் காணலாம் .

அதனைத் தொடர்ந்து நான்காம் அடியில் பழமொழியைக் காணலாம் .

• வரலாற்றுக் குறிப்புகளும் புராணக் குறிப்புகளும்

பண்டைய வரலாற்று நிகழ்ச்சிகள் பல இந்நூலில் குறிக்கப்படுவதைக் காணலாம் .

மனுநீதிச் சோழன் , பொற்கைப் பாண்டியன் , பாரி , பேகன் , கரிகாற் சோழன் , சேரன் செங்குட்டுவன் ஆகியோரைப் பற்றிய செய்திகள் சில குறிக்கப்படுகின்றன .

தவறு செய்த தன் மகனைத் தேரின் சக்கரத்தால் கொல்லும்படி ஆணையிட்ட , மனுநீதிச் சோழனைப் பற்றிக்

கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்

( பழ - 242 )

என்று பழமொழி கூறுகிறது .

தவற்றை நினைத்துத் தன் கை குறைத்தான் தென்னவனும்

( பழ - 76 )

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

( பழ - 74 )

நரைமுடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன்

( பழ - 6 )

இராமாயண , மகாபாரதக் கதைக் குறிப்புகளும் , மாவலி , வாமனன் , மதுகைடவர் என்போரைப் பற்றிய புராணக் குறிப்புகளும் இந்நூலில் காணப்படுகின்றன .

கல்வி

கல்வியின் சிறப்பைப் பற்றி அறநூல்கள் கூறுகின்றன .

அதைப்போல , பழமொழியும் கல்வியின் பெருமையைக் கூறுகின்றது .

கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு உண்டு .

அறிவுடையவர் புகழ் நான்கு திசைகளிலும் சென்று பரவும் .

எனவே அறிவுடையவர்க்கு எந்த நாடும் அயல்நாடாகாது .

அவர் சொந்த நாடேயாகும் .

தன் சொந்த ஊரில் இருப்பது போல இருக்க முடியும் .

ஆதலால் வழியில் உண்பதற்கு உணவு கொண்டு செல்ல வேண்டியதில்லை .

இதனை ,

ஆற்றுணா வேண்டுவதில்

என்று பழமொழி ( 4 ) கூறுகிறது .

அறிவுடைய ஒருவனை அரசனும் விரும்புவான் .

செல்கின்ற இடந்தோறும் அவன் பலராலும் உபசரிக்கப்படுவான் .

அவனுக்கு வேண்டுவன கிடைக்கும் என்று கல்வியின் சிறப்பும் உயர்வும் கற்றவர் சிறப்பும் உயர்வும் ஒருங்கே உணர்த்தப்படுவதைக் காணலாம் .

• கற்றோர் சிறப்பு

பல நூல்களைக் கற்றுணர்ந்தவர்கள் அடக்கம் உடையவராய் இருப்பர் . தம்மைப் புகழ்ந்து பேசமாட்டார்கள் .

நீர் நிறைந்த குடம் ஆரவாரம் செய்யுமோ ?

செய்யாதல்லவா ?

அதைப் போலவே நிறையக் கற்றுணர்ந்தவர்கள் ஆரவாரம் செய்யமாட்டார்கள் என்பதை விளக்க வந்த பழமொழி .

நிறைகுடம் நீர்தளும்பல் இல்

( பழ : 9 )

6.2.1 அறிவுடைமை

அறிவுடையார் சிறப்புப் பற்றி , பழமொழி என்ன சொல்கிறது என்று பார்ப்போமா ?

அறிவுச் செல்வம் சிறந்த செல்வம் .

பொன்னும் , இரத்தினமும் , சந்தனமும் , மாலையும் போன்ற பிற அணிகள் யாவும் ஒருவனை அழகுறச் செய்கின்றன .

எப்போது ?

அவன் அணிந்திருக்கின்ற ஆடை ஒழுங்காக இருக்கும்போதுதான் .

அதுபோல் அறிவாகிய பெருமை ஒருவனுக்கு ஆடை போன்றது .

அறிவாகிய பெருமை இல்லாதவன் செல்வத்தைப் பெற்றதனால் பெருமை அடையமாட்டான் .

அணியெல்லாம் ஆடையின் பின்

( பழ : 26 )

என்ற பழமொழி இவ்வாறு அறிவுடைமையின் சிறப்பைப் பேசுகிறது .

வானில் ஆயிரம் நட்சத்திரங்கள் மின்னுகின்றன .

ஒப்பற்ற ஒரு சந்திரனும் வானில் ஒளி வீசிக் கொண்டிருக்கிறான் .

ஆயிரம் நட்சத்திர ஒளி ஒன்று கூடினாலும் , ஒரு சந்திரனைப் போல் ஒளி தந்து உலகிற்குப் பயன்படாது .

அறிவிலார் பலர் சேர்ந்தாலும் அறிவுடையான் ஒருவனுக்கு நிகராக மாட்டார்கள் என்ற கருத்தை விளக்கும் பழமொழிப் பாடல் இதோ :

ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்

மாயிரு ஞாலத்து மாண் ( பு ) ஒருவன் போல்கலார்

பாய்இருள் நீக்கும் மதியம்போல் பல்மீனும்

காய்கலா ஆகும் நிலா

( பழ : 27 )

6.2.2 கல்லாதவர்

இனி , கல்லாதவர் நிலைபற்றிப் பழமொழி என்ன சொல்கிறதென்று பார்ப்போமா ?

நடக்க முடியாத முடவன் ஒருவன் ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு எழுகிறான் .

எழுந்து என்ன செய்யப் போகிறான் ?

யானையோடு விளையாடப் போகிறானாம் .

நமக்கு நகைப்பாக இருக்கிறது .

திகைப்பாக இருக்கிறது .

ஆனால் அவன் அடையப் போவது அவமானமும் துன்பமுமே .

இதுபோன்ற அவமானத்தையும் துன்பத்தையும் தான் கல்லாதவர் கற்றவரோடு வாதம் செய்யின் அடைவர் .

இக்கருத்தைச் சொல்லும் பழமொழிப்பாடல் இதோ !

கல்லாதார் ஆற்றுவாரைக் கறுப்பித்துக் கல்லாதார்

சொல்தாற்றுக் கொண்டு சுனைத்துஎழுதல் எற்றெனின்

தானும் நடவான் முடவன் பிடிப் ( பு ) ஊணி

யானையோடு ஆடல் உறவு

( பழ : 16 )

( கறுப்பித்து = கோபமூட்டி ; சுனைத்து = சினந்து ; பிடிப்பு ஊணி = ஊன்று கோலை ஊன்றி )

6.2.3 அவையறிதல்

அவையில் உள்ளாரின் இயல்பறிந்து , சூழல் அறிந்து பேசுதல் அவையறிதலாகும் .

அவையில் உள்ளவர் ஒருவர் ஒருவராகத் தம் கருத்தைக் கூறுதல் வேண்டும் .

மாறுபடுவோர் இருவரும் ஒரே காலத்தில் வாதம் செய்தால் அது தகுதி உடையது ஆகுமா ?

ஆகாதல்லவா ?

அவ்வாறு ஒரே நேரத்தில் வாதம் செய்தால் அது எப்படி இருக்கும் ?

ஒரே காலத்தில் இருவரும் ஒரு நாயைக் கொண்டு வேட்டை ஆடுதல்போலாகும் .

சிறிதேனும் இன்னாது , இருவர் உடன்ஆடல் நாய் ( பழ : 18 )

வாதம் செய்வோர் இருவரும் தம் கருத்தை ஒருவர் பின் ஒருவராகக் கூறினாலன்றி அவர்கள் கொண்ட கருத்தை நிலைபெறச் செய்ய முடியாது என்ற கருத்து இப்பழமொழியினால் தெளிவாகும் .

அவையில் ஒருவர் பேச்சைக் கேட்டபின் அதற்குரிய பதில் இறுத்தலே சரியானது .

அவர் கூறுவதைக் கேளாமலே பதில் சொன்னால் அவையில் என்ன நடக்கும் ?

குழப்பம்தான் மிஞ்சும் .

இச்செயலுக்கு , பழமொழி எவ்வாறு உவமை கூறுகிறது பாருங்கள் .

முழந்தாள் கிழிந்து புண்பட்டவனை அஃது அறியாது மூக்கை நூல் கொண்டு கட்டுவதைப் போலாகும் என்கிறது .

முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு

( பழ : 19 )

இல்வாழ்க்கை

• இல்வாழ்க்கைக்கு உரிய சில நெறிகள்

விதையின்றி விளைவில்லை .

செயல்கள் முயற்சியின்றி நடைபெறா .

உணவு இல்லாது உயிர் வாழ்தல் இயலாது ( பழ : 327 )

குறிப்பறிதலும் விருந்தோம்பலும் உடைய பெண் இல்வாழ்க்கைக்கு உகந்தவள் ( பழ : 330 )

மக்களுக்கு அறிவு ஊட்டுதல் தந்தையின் கடன் ( பழ : 331 )

கல்வியறிவால் சிறந்த மக்களைத் தாயார் பெரிதும் விரும்புவர் ( பழ : 332 ) என்று இல்வாழ்க்கைக்கு உரிய நெறிகளைச் சொல்கிறது பழமொழி இலக்கியம் .

6.3.1 பொருளைப் போற்றுதல்

இல்லறத்தில் இருப்போர்க்குப் பொருளைப் போற்றுதல் மிக அவசியம் .

ஏனென்றால் பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை .

எனவே பொருள் ஈட்டும் காலத்து , பின்னாளில் உதவும் பொருட்டு , பொருளைச் சேமித்துக் காவல் செய்ய வேண்டும் .

நத்தை எதிர்காலத்தை நோக்கி நீரைச் சேமித்துக் காவல் செய்வதைப் போலப் பிற்காலத்திற்காகக் பொருளைச் சேமிக்க வேண்டும் .

சேணோக்கி நந்துநீர் கொண்டதே போன்று

( பழ : 205 )

( நந்து = நத்தை ; சேண் நோக்கி = எதிர்காலம் நோக்கி )

என்ற பழமொழி இக்கருத்தை விளக்குகிறது .

6.3.2 ஈகை

இல்வாழ்பவன் ஈகைக்குணம் உடையவனாய் இருத்தல் வேண்டும் .

உலக வழக்கில் சிறிய மீனைப்போட்டு பெரிய மீனைப் பிடித்தல் என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள் .

இலாபநோக்கில் செய்யப்படும் ஒரு தந்திரமாகத்தான் இப்பழமொழியை நாம் அறிந்திருக்கிறோம் .

ஆனால் முன்றுறையரையனார் உண்மையில் நம் வாழ்க்கைக்குப் பயன்தரத்தக்க ஓர் உயரிய வழியைத்தான் இப்பழமொழி வாயிலாகக் கூறுகிறார் .

இம்மையில் தம்மால் இயன்ற சிறிய பொருளை உள்ளன்போடு வறியவர்க்கு ஈய வேண்டும் .

இந்த நல்வினை செய்து மறுமையில் வீடுபேறு முதலியன பெற நினைக்க வேண்டுமாம் .

அப்படி நினைப்பவர்கள் அயிரை என்னும் சிறிய மீனைத் தூண்டிலில் கோத்துவிட்டுப் பெரிய வரால் மீனை இழுப்பவரோடு ஒப்பர் .

சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்

பெரிய பொருள் கருதுவாரே - விரிபூ

விராஅம் புனலூர வேண்டயிரை விட்டு

வராஅல் வாங்கு பவர்

( பழ : 372 )

( விராஅம் = கலந்திருக்கின்ற , அயிரை = ஒருவகை மீன் , வராஅல் = ஒருவகை மீன் )

இறைத்தலால் குளத்து நீர் வற்றாதது போல

ஈதலால் செல்வம் குறைவுபடாது

( பழ : 374 )

வறியவர்க்குப் பொருள்ஈந்து ஏழையாயினார் இல்லை

( பழ : 377 )

இறைக்கின்ற கிணறு சுரப்பதைப்போலக் கொடுக்கக்

கொடுக்கப் பொருள் வளரும்

( பழ : 378 )

என்று சொல்லப்படும் கருத்துகள் மற்றவர்க்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கக் கூடியன .

• நன்றியில் செல்வம் செல்வம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் அதை நன்கு பயன்படுத்தத் தெரிந்தவராக இருக்க வேண்டும் .

இல்லையென்றால் அச்செல்வம் பயனின்றி அழியும் .

எப்படித் தெரியுமா ?

ஒரு நாயின் கையில் முழுத் தேங்காய் கிடைத்தது .

அதை உண்ண நாய்க்கு அளவிட முடியாத ஆசை. ஆனால் அதை உரித்துத் தின்னும் வழியறியாது .

மற்றவர்க்குக் கொடுக்கவும் மனமில்லாமல் தானும் உண்ண முடியாமல் உருட்டிக் கொண்டே இருக்கும் .

அதுபோலத்தான் மற்றவர்க்குக் கொடுக்கவும் தான் அனுபவிக்கவும் அறியாதவர் பெற்ற செல்வமும் பயனின்றி அழியும் .

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற

முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி

வேய்முற்றி முத்துதிரும் வெற்ப !

அதுவன்றோ

நாய்பெற்ற தெங்கம் பழம்

( பழ : 216 )

( வழங்கல் = ஈதல் ; துய்த்தல் = அனுபவித்தல் ; தெங்கம் பழம் = தேங்காய் )

சிலர் தம்மிடம் ஒரு பொருள் கேட்டவருக்குக் கொடுப்பதாகச் சொல்லிக் கேட்டவரை அலையவைப்பர் .

இத்தகைய ஏமாற்றுச் செயலைத் தக்க பழமொழியால் விளக்குகிறார் புலவர் .

பசுவுக்குப் புல் கொடுப்பார் , வாயிலிடுவது போல்காட்டி , புல்லை அதன் கழுத்தில் கட்டி விட்டால் என்ன ஆகும் ?

பசு தன் கழுத்தில் கட்டிய புல்லைத் தின்னும் பொருட்டு முயன்று துன்புறும் .

அது போலவே பொருளைக் கேட்டவர் பொருளைப் பெற வேண்டும் என்ற ஆசையால் கால நீட்டிப்பினால் பலநாளும் வந்து துன்புறுவர் .

வாயுறைப் புற்கழுத்தில் யாத்து விடல்

என்பது பழமொழி ( 222 )

6.3.3 அறம் செய்தல்

வாழ்க்கையில் பொருள் ஈட்டுவது இன்றியமையாத ஒன்று .

எல்லோரும் ஈட்டிய பொருளைச் செலவு செய்து அனுபவிப்பர் .

சேர்த்து வைப்பவரும் உண்டு .

சேர்த்து வைக்கும் பொருள் பின்னால் நமக்கு உதவாது .

ஆனால் செய்யத் தகுந்த இடம் நோக்கி அறம் செய்தால் பின்னால் தளர்ந்த காலத்து அதுவே உதவும் பொருளாகும் .

அதைத்தான் எய்ப்பினில் வைப்பு என்கிறது பழமொழி .

வைத்ததனை வைப்பென்று உணரற்க தாமதனைத்

துய்த்து வழங்கி இருபாலும் - அத்தகத்

தக்குழி நோக்கி அறம்செய்யின் அஃதன்றோ

எய்ப்பினில் வைப்பென் பது

( பழ : 358 )

( தக்குழி = தகுந்த இடம் நோக்கி ; எய்ப்பினில் = தளர்ந்த காலத்து )

செய்ய வேண்டிய அறத்தைப் பின்னால் செய்து கொள்ளலாம் எனக் காலம் கடத்தினால் முதுமை வந்துவிடும் .

முதுமை வந்தால் நோயும் உடன் வரும் .

நோய் வந்தால் அறம் செய்ய இயலாது .

சிந்தனை அறத்தில் நின்றாலும் நோய் அது செய்வதற்குத் தடையாகும் .

அந்நிலை , நாயைக் கண்ட பொழுது அதை ஓட்டக் கல்லைத் தேடினால் கல்லில்லாத தன்மையை ஒக்கும் என்பர் .

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்

என்ற உலகியல் வழக்கைக் கருத்தில் கொண்டு எழுந்த பாடல் இது .

மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை

ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து

நோய்காண் பொழுதின் அறம்செய்வார்க் காணாமை

நாய்காணின் கற்காணா வாறு

( பழ : 361 )

கலைவல்ல சிற்பி கல்லில் நாயைச் செதுக்கினான் .

நாய் கல்லில் அழகுற உருப்பெற்றது .

காண்பவர் அதைக் கல்லென்று நினைத்தபோது கல்லாகத்தான் அது காட்சியளித்தது . நாயின் உருவத்தைக் காணும்போது அது நாயெனவே தோன்றியது .