97

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் .

நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்ற சித்தாந்தப் பொருளையும் இப்பழமொழி விளக்கி நிற்கிறது .

6.3.4 உறவினர்

உறவினர் பற்றிப் பழமொழி என்ன சொல்கிறது என்று பார்ப்போமா !

உறவினர்க்கு உற்ற துன்பத்தைத் தமக்கு உற்றதாகவே உணர வேண்டும் .

உணர்ந்து அவர் துன்பங்களைக் களைய முற்படவேண்டும் .

அவ்வாறு களையாவிடில் அவர் நிலை உமியைக் குற்றுதலால் கை வருந்துமாற்றை ஒக்கும் .

உறவினரையே நம்பி அவர் வேறு முயற்சியின்றி இருத்தலின் அவர் கைவிட்ட விடத்து வருந்தித் துன்புறுவர் .

உமிக் குற்றுக் கை வருந்துமாறு

( பழ : 348 )

என்பது பழமொழி .

ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது அவர்க்கு நல்ல உறவினர் எனப்படுவார் விரைந்து அத்துன்பத்தை நீக்குபவரே .

அவ்வாறு நீக்கும் செயல் ஆற்றல் உள்ள உறவினர் , இல்லத்தின்கண் உள்ள மருந்து மரத்தினை ஒப்பர்

மனைமர மாய மருந்து

( பழ : 350 )

என்பது பழமொழி .

கோழி மிதித்தா குஞ்சு முடமாகி விடும் ?

என்ற பழமொழி நாம் அறிந்த ஒன்று .

சுற்றத்தார் , மனம் நோக உரைத்தாலும் அவரை நல்வழியில் நிறுத்தும் கருத்துடையர் என்பதை விளக்குகிறது ஒரு பழமொழிப் பாடல் .

தாயால் மிதிக்கப்பட்ட கால் முடம்படுதல் இல்லை அல்லவா ?

அதுபோல் மனம் வருந்த உரைக்கப்படும் மொழிகள் உறவினர்க்குத் துன்பம் தருவதில்லை .

நன்மையே செய்யும் .

பாடலைப் பாருங்கள் !

உளைய உரைத்து விடினும் உறுதி

கிளைகள்வாய்க் கேட்பது நன்றே - விளைவயலுள்

பூமிதித்துப் புட்கலாம் பொய்கைப் புனலூர !

தாய்மிதித்து ஆகா முடம்

( பழ : 353 )

( உளைய = வருந்தும்படி ; கிளை = சுற்றம் )

6.3.5 நல் ஒழுக்கம்

தான் அழிய நேர்ந்தாலும் பழியொடு பட்டவற்றைச் செய்யாதிருப்பதே நல்ஒழுக்கம் .

கடல் சூழ்ந்த இவ்வுலகில் மலைகள் தேய்வடையும் , பழிச்சொல் மாறுதல் இல்லை .

ஆதலால் தனக்குக் கேடு வருவதாக இருந்தாலும் தனக்கு ஒரு சிறிதும் பழி பயவாத செயல்களைச் செய்தலையே ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும் .

கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்

வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை

முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய

கல்தேயும் தேயாது சொல்...

( பழ : 39 )

( கெடுவல் = துன்பம் நேரும் ; வடு = குற்றம் )

பிறர்க்கு இன்னா செய்யாமையும் நல் ஒழுக்கமே .

எத்துணை எளியராயினும் தீங்கு செய்யக் கூடாது .

( பழ : 43 )

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ( பழ : 46 )

நம்மால் துன்புற்று ஒருவர் அழுத கண்ணீர் நம் செல்வத்தைத் தேய்க்கும் படை என்பார் வள்ளுவர் ( குறள் : 555 )

வலிமை உடையார் எளியாரை நலிவுறச் செய்தால் ஆற்றாது அவர் அழுத கண்ணீர் வலியவர்க்குக் கூற்றமாய் விடும் என்பது பழமொழி ( பழ : 47 )

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. பழமொழி நானூற்றின் ஆசிரியர் யார் ?

[ விடை ]

2. ‘ நிறைகுடம் நீர் தளும்பல் இல் ’ என்ற பழமொழி விளக்கும் கருத்து யாது ? [ விடை ]

3. தானும் துய்க்காமல் மற்றவர்க்கும் கொடுக்காமல் ஒருவன் வைத்திருக்கும் செல்வம் எதைப் போன்றது ?

[ விடை ]

4. ‘ கல் தேயும் தேயாது சொல் ’ என்பதன் மூலம் நூலாசிரியர் எந்தக் கருத்தை விளக்குகிறார் ?

அரசியல்

இல்லறத்தைப் பற்றிப் பேசிய பின் அரசியல் / அரசு பற்றிப் பேசுகிறது பழமொழி .

குடும்பம் சமூகமாக விரிகிறது .

அதற்குத் தலைமையான அரசன் பேசப்படுகிறான் .

அரசன் நடுவு நிலைமை உடையனாய் இருப்பது பற்றியும் , அவன் வரி வாங்கும் விதம் பற்றியும் பழமொழி விளக்குகிறது .

அமைச்சர்கள் இலக்கணம் , பகைத்திறம் , படைவீரர் பற்றியும் பழமொழி எடுத்துரைக்கிறது .

முடியாட்சியில் அரசன் செங்கோன்மைச் சிறப்பும் , அமைச்சர் சிறப்பும் அறிய முடிகிறது .

6.4.1 அரசியல்பு

நாடாளும் அரசன் குடிமக்களைத் தன் கண்ணின் மணி போலக் காக்க வேண்டும் .

அனைவர்க்கும் நீதி கூறும் தலைமைப் பொறுப்பில் இருப்பவன் அரசன் .

எனவே , தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற கண்ணோட்டமின்றி நீதி கூற வேண்டும் .

செல்வன் , வறியன் என்று நோக்காது நீதி கூறுதல் வேண்டும் ( பழ : 243 )

• தீயினம் சேராமை

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள் .

ஓர் அறைக்குள்ளே பாம்புடன் இருப்பது என்பது எப்படி இருக்கும் ?

அப்படி ஒரு நிலையைச் சொல்கிறது பழமொழிப் பாடல் .

வஞ்சனை உடையாரைத் தலைமைப் பொறுப்பில் வைத்து உடன் இருக்கும் மன்னன் நிலையும் அப்படித்தான் இருக்கும் என்கிறார் புலவர் .

தலைமை கருதும் தகையாரை வேந்தன்

நிலைமையால் நேர்செய் திருத்தல் - மலைமிசைக்

காம்பனுக்கும் மென்தோளாய் அஃதொன்றோ ஓரறையுள்

பாம்போடு உடனுறையும் ஆறு

( பழ : 253 )

( காம்பனுக்கும் - காம்பு ; அனுக்கும் - மூங்கிலை வருத்தும் )

ஓரறையுள் பாம்போடு உடனுறைந்தற்று என்பது பழமொழி .

உட்பகை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் மனவேறுபாடு உடையாரோடு வாழ்தல் என்பது ஒரு குடிலின் உள்ளே பாம்போடு வாழ்தலை நிகர்க்கும் என்கிறார் .

உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடனுறைந் தற்று

( குறள் : 890 )

ஒரு சிறு குடிலில் பாம்போடு வாழ்பவன் அப்பாம்பினால் தீண்டப்படுதல் உறுதி .

வஞ்சனை உடையாருடன் வாழும் மன்னனும் அழியக்கூடும் என்ற கருத்தைத்தான் பழமொழியாக்கிப் பாடுகிறார் முன்றுறையரையனார் .

6.4.2 அமைச்சர்

அரசனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் அமைச்சர் .

நல்லாட்சி நடைபெற இவர்கள் மன்னனுக்குத் துணையாக வேண்டும் .

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்

( குறள் : 448 )

இடித்துரைக்கும் அமைச்சர்கள் இல்லாத மன்னன் கெடுப்பார் இல்லாமலே கெட்டுவிடுவான் என்பது மேற்கூறிய குறட்பாவின் கருத்து .

அறிவால் மூத்த அமைச்சர்கள் அரசன் நல்வழியில் செல்லவே அறிவுறுத்துவர் .

தீய நெறியில் செல்லும்போது இடித்துரைக்க வேண்டும் .

அரசனை வலியுறுத்தி அவனுக்கு உறுதியுரைக்கும்போது அச்சொற்கள் அப்போது துன்பம் தருவதாக இருந்தாலும் பின்னால் இன்பத்தையே அளிக்கும் .

செயல்வேண்டா நல்லன செய்விக்கும் ; தீய

செயல்வேண்டி நிற்பின் விலக்கும் ; இகல்வேந்தன்

தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால்

முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல்

( பழ : 263 )

என்ற பாடல் மேற்கூறிய கருத்தை விளக்குவதாகும் . 6.4.3 மன்னரைச் சேர்ந்தொழுகல்

மன்னரைச் சேர்ந்து பணியாற்றக் கூடியவர்கள் எவ்வாறு வினை செய்ய வேண்டும் என்பதைப் பழமொழி நன்கு விளக்குகிறது .

அரசன் ஆணையை உடனேயே அவன் கீழ் வாழ்வார் செய்தல் வேண்டும் .

அரசன் ஏவியதைத் தட்டாது செய்ய வேண்டும் .

அரசன் ஏவிய செயலைத் துன்புறுதலின்றிச் செய்யத் தொடங்குக என்பதனை , அச்செயல் செய்க என்று கூறியவன் உண்க என்று கூறியதை ஒக்கும் என்கிறது ஒரு பழமொழிப் பாடல் ( பழ : 267 )

வேலையைச் செய்யுமாறு தூண்டியவன் உண்க என்று சொல்லுதல்போல் , ஏவிய அரசன் செயல் முடிதற்கேற்ப உதவி செய்து முடிப்பான் என்பதாகும் .

அரசரேயன்றி அவரைச் சார்ந்தோரும் பிறருக்கு அஞ்சார் என்ற கருத்தை விளக்க வந்த பழமொழி இது .

கூரிது எருத்து வலியநன் கொம்பு

( பழ : 271 )

அரசன் சீர்கெட்ட விடத்தும் அவனை இகழ்வார் தீமையையே அடைவர் என்ற கருத்தை விளக்க வந்த பழமொழி

இளைதென்று பாம்புஇகழ்வார் இல்

( பழ : 277 )

6.4.4 பகைத்திறம்

பகையின் தன்மையை உணரும் ஆற்றல் மன்னனுக்கு இன்றியமையாதது .

பகையில் சிறிய பகை பெரிய பகை என்ற வேறுபாடு பாராமல் அரசன் விரைந்து செயலாற்ற வேண்டும் .

பகை தோன்றிய காலத்திலேயே அவர்களுடைய நண்பர்கள் எல்லோரையும் முற்ற அறுத்துத் தன்னை விரும்புமாறு செய்து கொண்டால் அப்பகைமை முதிர்வதில்லை .

தனியே ஒரு மரம் நின்று காடாதல் இல்லை .

‘ தனிமரம் தோப்பாகாது ’ என்று உலகில் வழங்கும் பழமொழியைப் பயன்படுத்தி , பகையைத் தோன்றியபோதே அழித்துவிட வேண்டும் என்ற கருத்தைக் கூறுகிறார் புலவர் .

இளைதாக முள்மரம் கொல்க என்ற குறட்பாக் கருத்தை இப்பழமொழியில் காணலாம் .

எதிர்த்த பகையை இளைதாய போழ்தே

கதித்துக் களையின் முதிராதே தீர்த்து

நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாந் தீரத்

தனிமரம் காடாதல் இல்

( பழ : 286 )

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதும் நாம் அறிந்த பழமொழி .

முள்ளினை முள்ளாற் களைதல் போலப் பகைவரை அவரைச் சார்ந்தோர் துணையைப் பெற்றுக் களைய வேண்டும் என்கிற கருத்தைப் பின்வரும் பாடலில் காணலாம் :

தெள்ளி யுணரும் திறனுடையார் தம்பகைக்கு

உள்வாழ் பகையைப் பெறுதல் - உறுதியே

கள்ளினால் கள்ளறுத்தல் காண்டும் அதுவன்றோ

முள்ளினால் முட்களையு மாறு

( பழ : 308 )

6.4.5 படைவீரர்

அரசர் வெற்றிக்குக் காரணமாக அமைவனவற்றுள் இன்றியமையாதது படைவீரர் இயல்பும் அவர்தம் இணையிலாத வீரமும் அல்லவா ?

அப்படை வீரர்களின் இயல்பும் சிறப்பும் பற்றிப் பழமொழி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போமா ?

உண்மையான படைவீரர் தம் அரசர்க்கே பணிசெய்வர் .

ஒருபோதும் வஞ்சித்துப் பகைவரோடு ஒன்றுதல் இலர் .

மாறு கொண்ட இரண்டு எருதுகள் ஒரு துறையில் நீர் உண்ணாதல்லவா ?

அதுபோல உண்மையான படைவீரரும் பகைவரோடு ஒன்றமாட்டார் .

உற்றால் இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்

மற்றவர்க்கு ஒன்னாரோடு ஒன்றுமோ ? - தெற்ற

முரண்கொண்டு மாறாய உண்ணுமோ ?

உண்ணா

இரண்டுஏறு ஒருதுறையுள் நீர்

( பழ : 312 )

வீரர்கள் தம்மை நலிய உரைத்தவர்களைப் பார்த்து , பதிலுக்குப் பேசுதல் கூடாது .

செயலால் அடக்க வேண்டும் .

சொல்லால் அடக்கப் புகுதல் நரியின் ஊளையிடும் ஒலியால் கடல் ஒலியை அடக்கப் புகுதலையொக்கும் என்கிறது இன்னொரு பாடல் ( பழ : 316 )

முயற்சி

சிறந்ததொரு வாழ்க்கைக்கு முயற்சி மிக மிகத் தேவை அல்லவா ?

நமக்கு யார் உதவி செய்வார்கள் என்று தேடிக் கொண்டிருக்கக் கூடாது . அளவுக்கு மீறி உண்டு நோயைத் தாமே உண்டாக்கிக் கொண்டால் , அந்நோயைப் போக்குவதும் அவராலேயே முடியும் .

அதுபோல் நமக்கு வரும் துன்பங்களை நாமே போக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் .

தமக்கு மருத்துவர் தாம்

( பழ : 149 )

என்பது பழமொழி .

முயற்சி மிக உடையராய் வருந்தி வினை செய்பவர் வாழ்க்கையே சிறப்புறும் .

முயன்று பாடுபடாதவர் வாழ்க்கை செம்மை உறுவதில்லை .

இக்கருத்தைச் சொல்லும் பழமொழி .

வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று

( பழ : 151 )

அறிவில்லாதவர் ஒரு தொழிலிலும் நிலைபெறாது சுற்றிச் சுற்றி வருவர் .

அதனால் எந்த நன்மையும் பெறாது வாழ்நாளை வீணே கழிப்பர் .

இக்கருத்தைச் சொல்ல முன்றுறையரையனார் பயன்படுத்தும் பழமொழியைப் பாருங்கள் !

உலக்கை மேல் காக்கை

( பழ : 157 )

காக்கை உரலின் கண் உள்ள அரிசியை உண்ணவும் உண்ணாது .

உலக்கையை விட்டு நீங்கவும் செய்யாது .

அதனைச் சுற்றி வருதல் போல அறிவிலாரும் ஒருவரிடமும் நிலைத்து நிற்கமாட்டார் .

எப்பயனும் பெறவும் மாட்டார் .

6.5.1 தெரிந்து செய்தல்

புராண இதிகாசங்களில் வரும் நிகழ்வுகளையும் பழமொழியில் எடுத்தாளுகிறார் முன்றுறையரையனார் .

மாவலி என்ற மன்னனின் செருக்கை அடக்க , கண்ணன் மிகச் சிறிய வாமன வடிவம் எடுத்து வந்து நின்றான் .

மாவலியிடம் மூன்றடி நிலம் கேட்டான் .

உடன் இருந்த அமைச்சன் கண்ணன் தந்திரம் மிக்கவன் ; நின் செருக்கை அடக்க வந்திருக்கிறான் ; மூன்றடி நிலம்தர ஒத்துக்கொள்ள வேண்டாம் என்கிறான் .

அதைக் கேளாமல் இது எனக்கு எளியது என்று கருதித் தருகிறேன் என்றான் மாவலி .

கண்ணன் பேருருவங்கொண்டு ஈரடியால் உலகளந்து மற்றோரடிக்கு இடமின்மையால் அவன் தலைமீதே கால் வைத்து அளந்தான் .

ஆராயாத செயலால் தனக்குத் தானே துன்பம் விளைவித்துக் கொண்டான் மாவலி .

ஒரு செயலைச் செய்யத் தொடங்குமுன் ஆராய்ந்து அதனைச் செய்ய வேண்டும் என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து .

ஆஅம் எனக்கெளி தென்று உலகம் ஆண்டவன்

மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்

தோஒ முடைய தொடங்குவார்க் கில்லையே

தாஅம் தரவாரா நோய்

( பழ : 183 )

( மேஎம் = மேவும் , தன்னோடு பொருந்தியிருக்கும் ; தாஅம் = தாமே ; தோஒம் = குற்றம் )

6.5.2 கருமம் முடித்தல்

ஒரு செயலைச் செய்து முடிக்க எண்ணுபவர் அதுவே குறிக்கோளாய் இருத்தல் வேண்டும் .

நம் செயலைச் செய்து முடிக்க வல்லாரது குறைகளைக் கூறித் திரியக் கூடாது .

இக்கருத்தைச் சொல்ல வந்த முன்றுறையரையனார் பயன்படுத்தும் பழமொழி

தொளை எண்ணார் அப்பம் தின்பார்

( பழ : 165 )

அப்பத்தை உண்ண விரும்பியவர்கள் அதைக் கையில் வாங்கிய பின்னர் அதில் உள்ள துளைகளை எண்ணிக் குற்றம் கூறி நீக்குவதில்லை .

துளைகளை எண்ணாது அப்பத்தைத் தின்பது போல , நாமும் குறை கூறித் திரியாமல் கொள்ள நினைத்த பயனைக் கொள்ள வேண்டும் .

பசுவிடம் பால் கறக்க நினைப்பவர் கன்றினைச் செலுத்திப் பால் அருந்த விட்டுப் பின்னரே பால் கறக்க வேண்டும் .

அங்ஙனம் கறவாது அம்பினைச் செலுத்தி பசுவிடம் பால் கறக்க இயலுமா ?

அதுபோல நமது செயலைச் செய்வோரிடத்தில் அன்பாகவும் விரைவின்றியும் இருந்து செயலை முடித்துக் கொள்ள வேண்டுமாம் .

இக்கருத்தைக் கூறும் பாடலைப் பாருங்கள் !

அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது

நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது

கன்றுவிட்டு ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்

அம்புவிட்டு ஆக்கறக்கு மாறு ( பழ : 166 )