98

( ஆ = பசு )

வினை முடிக்கும் நிலையில் சோம்பல் உடையானைக் கொண்டு செய்வித்தல் ஆகாது .

பொருள் உதவி செய்து செயலைச் செய்வித்துக் கொள்ள வேண்டும் .

நமக்காக நம் செயலைச் செய்பவரை ஊக்கப்படுத்த வேண்டும் என்பன போன்ற கருத்துகளையும் கூறுகிறார் முன்றுறையரையனார் .

6.5.3 ஊழ்

தலையெழுத்து , தலைவிதி என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம் அல்லவா ?

அதைத்தான் ஊழ் என்று இலக்கியங்கள் பேசுகின்றன .

ஊழிற் பெருவலி யாவுள ?

( குறள்-380 ) என்று வள்ளுவர் ஊழைவிட வலிமை படைத்தது இவ்வுலகில் என்ன இருக்கிறது என்று கேட்கிறார் .

மிகுந்த அறிவுடையாரிடத்தும் குற்றம் காணப்படுவது ஊழால்தான் என்கிறார் முன்றுறையரையனார் .

அறிவினை ஊழே அடும்

( பழ : 228 )

என்பது பழமொழி .

திருக்குறளின் ஊழ் அதிகாரத்தை ஒட்டிய பல கருத்துகளை நாம் பழமொழியில் காணலாம் .

தனக்கு ஆகாத செல்வத்தைப் பாதுகாப்பினும் நில்லாது

( பழ : 231 )

ஆகூழ் உடையார்க்குத் தீயனவும் நல்லனவாக முடியும்

( பழ : 238 )

( ஆகூழ் = நன்மை ஆக்குகின்ற ஊழ் )

நன்மை தீமை பற்றிய அறிவுடையவர்கள் , ஊழால் செலுத்தப்படும் அம்புகள் தரும் துன்பத்தால் வருந்த மாட்டார் .

இதுபற்றி வள்ளுவரும்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்

( 620 )

என்கிறார் .

( உப்பக்கம் = புறமுதுகு ; உஞற்றுபவர் = முயற்சி செய்பவர் )

துன்பமின்றி இடைவிடாது முயற்சி செய்பவர் ஊழையும் வலியிழக்கச் செய்வர் என்ற கருத்து இங்குக் கூறப்படுகிறது .

நட்பு

தனிமனிதருக்கும் அரசர்க்கும் நட்பு மிகத் தேவையானது .

இனி நட்பு பற்றி பழமொழி என்ன கூறுகிறது என்று பார்ப்போமா ?

அன்பை வெளிப்படுத்தும் முறைகளில் சிறந்தது நட்புணர்வு .

நல்லோர் , நண்பர்களிடத்துத் தாம் வேறு அவர் வேறு என்னும் வேறுபாடின்றி ஒழுகுவர் .

விலங்குகளும் தம்மோடு கூடிப் பழகியவரை விட்டு நீங்குதல் செய்யாது .

ஐந்தறிவுடைய விலங்குகளே இப்படி என்றால் ஆறறிவுடைய மனிதர்கள் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ ?

பிரிதல் என்பது கொடியது .

எவ்வளவு கொடியது என்பதை நுட்பமாகச் சொல்லும் பழமொழியைப் பாருங்கள் .

இன்னாதே பேயோ டானும் பிரிவு

( பழ : 126 )

( பேயோடானும் = பேயோடு ஆயினும் )

நண்பர் துன்புறுவாராயின் உடனே அவர் துன்பத்தைப் போக்க முயற்சி செய்ய வேண்டும் .

மன வருத்தமும் துன்பமும் நீங்க அவருக்கு ஆறுதல் மொழிகள் தேவை .

அதுமட்டும் போதுமா ?

பனியால் குளம் நிரம்புமா ?

நிரம்பாதல்லவா ?

அதுபோலத்தான் நண்பர் துன்பம் நீங்கும் முயற்சி வெறும் உரைகளாக மட்டும் இல்லாமல் செயலாகவும் இருக்க வேண்டும் .

அதுதான் உண்மையான நட்பு .

இனியாரை உற்ற இடர்தீர் உபாயம்

முனியார் செயினும் மொழியால் முடியா

துனியால் திரையுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப ! பனியால் குளம்நிறைதல் இல்

( பழ : 127 )

( துனி = சினம் )

தீயன செய்யும் பழைய நட்பை விட அஞ்சத்தகும் புதிய நட்பே நல்லது என்ற கருத்தைச் சொல்லும் இன்னொரு பாடல் இது .

பழமை கந்தாகப் பரியார் புதுமை

முழநட்பிற் சாணுட்கு நன்று

( பழ : 129 )

( கந்தாக = பற்றுக்கேடாக , பரியார் = நீங்கமாட்டார் , உட்கு = அஞ்சத் தகும் )

நண்பர்கள் இருவருள் ஒருவராவது பொறுமை மேற்கொண்டு ஒழுகுதல் , அவர்கள் நட்பு நீடித்து நிற்பதற்கு ஏதுவாகும் என்ற கருத்தைச் சுருக்கமாகச் சொல்கிறது .

எளிமையாகச் சொல்கிறது இந்தப் பழமொழி .

ஒருவர் பொறை இருவர் நட்பு

( பழ : 132 )

6.6.1 நட்புக்குத் தகுதியிலார்

நண்பர்களைத் தேர்ந்தெடுத்தல் என்பதும் நட்புக்குத் தகுதி இல்லாதவரை விலக்குதல் என்பதும் நாம் வரையறுக்க வேண்டியன .

பண்பிலா மக்கள் நட்பை விலக்க வேண்டும் .

தம் காரியம் முடியும் அளவும் அதை முடிக்க வல்லாருடன் நண்பராய் இருந்து முடிந்தவுடன் விட்டு நீங்குவது பண்பிலார் இயல்பு .

மச்சின்மீது ஏணியின் வழி ஒருவனை ஏற்றிவிட்டு அவன் இறங்குவதற்குள் ஏணியை நீக்குவது எப்படிப்பட்ட இழிந்த செயல் ?

இப்படிப்பட்ட செயலைச் செய்பவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் .

இவர்கள் நட்பை விலக்க வேண்டும் என்கிறது பின்வரும் பழமொழிப்பாடல் .

எய்ப்புழி வைப்பாம் எனப்போற்றப் பட்டவர்

உற்றுழி ஒன்றுக்கு உதவலர் பைந்தொடீஇ

அச்சிடை யிட்டுத் திரியின் அதுவன்றோ

மச்சேற்றி ஏணி களைவு

( பழ : 136 )

( எய்ப்புழி = தளர்வு வந்தவிடத்து , வைப்பு = பெருநிதி , அச்சு = அச்சம் )

பண்பிலாரோடு கொண்ட நட்பு கானகத்து நிலாப் போலப் பயனின்றிப் போகும் என்பதும் நாம் காணும் மற்ற செய்தியாம் .

6.6.2 சான்றோர் இயல்பு

சான்றோர் பெருமையை யாரும் மறைக்க இயலாது .

அவர் வறியராயினும் தம்நிலையினின்றும் திறம்பார் ( மாறுபடார் )

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதல்லவா ?

பசிபெரிது ஆயினும் புல்மேயா தாகும் புலி

( பழ : 70 )

என்பது பழமொழி .

கொல்லன் தெருவில் ஊசி விற்பாருண்டோ என்பது நாமறிந்த பழமொழி .

நற்குடிப் பிறந்தாரிடம் நற்குணங்கள் இயல்பாக அமைந்திருக்கும் .

கற்றோர் அவர்களிடம் நற்குணங்களை விரித்துரைக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தைச் சொல்ல வந்த பழமொழிதான்

கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல்

( பழ : 73 )

( கொற்சேரி = கொல்லர் சேரி ; துன்னூசி = தைக்கும் ஊசி )

படரக் கொம்பில்லாத முல்லைக் கொடிக்குத் தன் தேரை ஈந்தவன் பாரி .

வாடையால் வாடி நின்ற மயிலுக்குத் தன் போர்வையை அளித்தவன் பேகன் .

பாரியும் பேகனும் முல்லையின் இடரையும் , மயிலின் இடரையும் வேறு பொருள்களைக் கொடுத்து நீக்க அறிவார்கள் .

ஆனால் அறியார் போன்று உயர்வுடைய தம் பொருள்களைக் கொடுத்த செயல் ‘ அறிமடம் ’ எனப்படும் .

இது சான்றோர்க்கு அணியாகும் என்ற கருத்தைச் சொல்கிறது இந்தப் பாடல் .

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின்

நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப

அறிமடமும் சான்றோர்க் கணி

( பழ : 74 )

6.6.3 கீழ்மக்கள் இயல்பு பண்பிலா மக்கள் கீழ்மக்கள் ஆவர் .

நட்புக்கொண்ட ஒருவரைப் பொல்லாங்கு பேசுகிறார் ஒருவர் .

அப்படிப்பட்ட தீயவரை நம்பக் கூடாது .

உண்பவர்கள் தேவரேயாயினும் வேம்பு கசக்கும் தன்மையது .

தீயவர் தம்மோடு நட்புப் பூண்டவர்கள் மிகவும் சிறந்தவர்களாயினும் அவர்களுடன் நன்கு பழகமாட்டார்கள் .

இக்கருத்தைச் சொல்ல வந்த பழமொழிதான் ,

கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு

( பழ : 95 )

என்பது , திங்களை நோக்கி நாய் குரைத்ததுபோல என்ற பழமொழியும் நாமறிந்ததே .

சிறியோர் பெரியோரைப் பார்த்து அடாதவற்றைக் கூறுதல் திங்களைப் பார்த்து நாய் குரைத்தாற் போன்றதாகும் .

பெரியார் பெருமையை சிறியர் அறியும் தகுதியும் இல்லாதவர் .

எனவே , தகாதன கூறுதலே அவர் இயல்பாகின்றது .

அதனால் துன்பம் அவர்க்குத்தானே ஒழிய பெரியோர்க்கில்லை .

குரைக்கின்ற நாயைத் திங்கள் பொருட்படுத்தாததைப் போலப் பெரியோர் சிறியோரைப் பொருட்படுத்த மாட்டார் என்ற விளக்கத்தையும் காணலாம் .

தீயவர்களுக்கு நன்மை செய்வதும் கேடு தருவதாகவே முடியும் .

இக்கருத்தை ‘ புலிமுகத்து உண்ணி பறித்து விடல் ’ என்ற பழமொழி விளக்குகிறது .

தீயவர்களுக்கு நன்மை செய்தல் புலியின் மீது இரக்கம் கொண்டு அதன் முகத்தில் உள்ள உண்ணிகளை எடுத்து விடும் செயல் போன்றது .

புலி முகத்து உண்ணி பறிப்பவர் எவ்வாறு பிழைக்க மாட்டார்களோ அவ்வாறே தீயவர்களுக்கு உதவி செய்பவரும் பிழைக்க மாட்டார்கள் .

நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா ?

( நுணல் = தவளை )

மணலில் பதிந்து மறைந்திருக்கும் தவளை தன் குரலைக் காட்டுதலால் தன் வாயாலேயே தன்னைத் தின்பாரிடத்து அகப்பட்டுக் கொள்ளும் .

அதுபோலவே அறிவிலான் தன் வாயாலேயே தனக்குத் தீங்குத் தேடிக் கொள்வான் .

பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்

சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய்

மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்

நுணலும்தன் வாயால் கெடும்

( பழ : 114 )

தொகுப்புரை

சான்றோர்களின் அனுபவ வெளிப்பாடான பழமொழி இலக்கியம் படிப்பதற்குச் சுவையானது .

எக்காலத்தும் மக்களை வழிநடத்தும் சிறப்புடையது .

சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை அனைத்து இலக்கியங்களிலும் பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன .

திருக்குறள் , நாலடியார் கருத்துகள் பல பழமொழிகளில் பயின்று வருதலைக் காணலாம் .

வரலாற்றுச் செய்திகள் , புராண இதிகாசக் கருத்துகள் பழமொழியில் பேசப்படுகின்றன .

பொற்கைப் பாண்டியன் வரலாறும் , அரக்கு மாளிகையில் பாண்டவர் தப்பியோடிய நிகழ்ச்சியும் , கண்ணன் மாவலியிடம் மூன்றடி நிலம் கேட்டதும் பழமொழியில் பேசப்படுகின்றன .

ஒரு நாட்டின் அறிவின் மாட்சி , அறிவின் வழிப் பிறந்த நகைச்சுவை , இன்பம் , வீரம் ஆகியவற்றை அந்நாட்டுப் பழமொழியினின்றும் அறியலாம் .

பண்டைத் தமிழரின் வாழ்க்கை , வாழ்க்கை அனுபவங்கள் , அனுபவத்தை வெளிப்படுத்தும் அழகு , இலக்கியப் பயிற்சி ஆகியனவற்றைப் பழமொழி சுவைபட எடுத்துரைக்கிறது .

400 பழமொழிகளையும் இப்பாடத்தில் எடுத்துரைக்க இயலாது .

எனினும் வழக்கில் உள்ள பல பழமொழிகள் இவ்விலக்கியத்தில் பயின்று வருவதைச் சில சான்றுகளால் காண்போமா ?

உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்

( பழ : 144 )

( அகத்தின் அழகு முகத்தில் தெரியும் )

ஒழுக ஊரோடுமாறு.....

( பழ : 195 )

( உலகத்தோடு ஒட்ட ஒழுகு )

விரையின் கருமம் சிதையும்

( பழ : 164 )

( பதறாத காரியம் சிதறாது ) பதறிய காரியம் சிதறும் என்றும் சொல்வதுண்டு .

வெண்ணெய் மேல் வைத்து மயில் கொள்ளுமாறு

( பழ : 210 )

( கொக்குத் தலைமேல் வெண்ணெய் வைத்துப் பிடித்தல் ) நாய் வால் திருந்துதல் இல்..

( பழ : 336 )

( நாய் வாலை நிமிர்த்த முடியுமா ? )

இறைத்தோறும் ஊறும் கிணறு

( பழ : 378 )

( இறைக்கின்ற கிணறு சுரக்கும் )

இதுவரை நாம் படித்த செய்திகளால் பழமொழி நானூற்றின் சிறப்பும் , பழந்தமிழரின் அனுபவ வெளிப்பாட்டின் சிறப்பும் நன்கு அறியலாம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. ‘ முள்ளினால் முள் களையுமாறு ’ என்ற பழமொழி விளக்கும் பொருள் யாது ?

[ விடை ]

2. உலக்கைமேல் காக்கையை யாருக்கு ஒப்பிடுகிறார் முன்றுறையரையனார் ?

[ விடை ]

3. ‘ பனியால் குளம் நிறைதல் இல் ’ என்ற பழமொழி விளக்க வந்த கருத்து யாது ?

[ விடை ]

4. எப்படிப்பட்ட நட்பை விலக்க வேண்டும் என்கிறது பழமொழி ?

[ விடை ]

5. புலி முகத்து உண்ணி பறிக்கும் செயல் எதற்கு ஒப்பிடப்படுகிறது ?

பிற்கால அறநூல்கள் : பொது அறிமுகம்

பாட முன்னுரை

உலக வாழ்க்கை என்பது சமுதாய அமைப்பை அடிப்படையாகக் கொண்டது .

சமுதாயம் என்பது மக்கள் தொகுதி .

இந்த மக்கள் தொகுதியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன இயல்பைக் கொண்டவர்களாக இருப்பது இயல்பு .

அவரவர் மனநிலைக்கு ஏற்பவே அவர்களின் செயல்பாடுகளும் இருக்கும் .

மனிதனின் செயல்பாடுகள் அனைத்தும் பொதுவில் நன்மை தரக்கூடியவையாக இருத்தல் வேண்டும் .

அவ்வாறு பொது நன்மையைக் கருத்தில் கொள்ளாமல் ‘ தனக்கு மட்டும் ’ என்னும் தன்னல நோக்கம் கொண்டதாகச் செயல்பாடு இருந்தால் அந்தச் சமுதாய அமைப்பில் சிக்கல்கள் எழும் .

அவ்வாறு சிக்கல்கள் எழாமல் சமுதாயம் சீராகச் செயல்படுவதற்குச் சில பொதுவான அறங்களை முன்னோர்கள் உருவாக்கியுள்ளார்கள் .

அந்த அறங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன .

பிற்கால அறநூல்கள்

தமிழில் தோன்றிய அறநூல்கள் பல. அவற்றில் ‘ பதினெண்கீழ்க் கணக்கு ’ என்னும் தொகுதியில் பதினோர் அறநூல்கள் உள்ளன .

அவற்றை இதற்கு முந்தைய தொகுதியில் நீங்கள் படித்திருப்பீர்கள் .

இத்தொகுதியில் பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெறாத பிற்கால அறநூல்கள் இடம்பெறுகின்றன .

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பின்னர்த் தோன்றிய அறநூல்கள் பின்வருமாறு .

1. ஆத்திசூடி

2. கொன்றை வேந்தன்

3. மூதுரை ( வாக்குண்டாம் )

4. நல்வழி

5. வெற்றிவேற்கை ( நறுந்தொகை )

6. உலகநீதி

7. நீதிவெண்பா

8. நீதிநெறிவிளக்கம்

9. நன்னெறி

10. அருங்கலச்செப்பு

11. அறநெறிச்சாரம்

12. கபிலர் அகவல்

13. நீதிச் சதகங்கள்

14. நீதி சிந்தாமணி

15. நீதிநூல்

16. பெண்மதிமாலை

17. அறநூல்

18. பாரதியாரின் புதிய ஆத்திசூடி 19. பாரதிதாசனின் புதிய ஆத்திசூடி