99

20. பாரதிதாசனின் இளையோர் ஆத்திசூடி

முதலியவை ஆகும் .

பிற அறநூல்கள் தோன்றக் காரணம்

பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பதினோர் அறநூல்களும் , மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறங்களை எடுத்துக் கூறியுள்ளன .

அவற்றிற்குப் பின்னரும் அறநூல்கள் ஏன் தேவைப்பட்டன என்பது எண்ணத்தக்கது ஆகும் .

1.2.1 எளிமை

பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்கள் ஆறாம் நூற்றாண்டுவரை எழுதப்பட்டவை .

அவற்றைப் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை வாழ்ந்த மக்கள் கற்று வந்தார்கள் .

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய பிறகு ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்த மக்களுக்கு அவற்றை விட எளிமையான நூல்கள் தேவைப்பட்டன .

எனவே , பிற அறநூல்கள் தோன்றியுள்ளன .

அவை எளிமையும் சுருக்கமும் கொண்டவையாக உள்ளன .

1.2.2 கல்வி பரவல்

பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன .

அக்கோயில்களைச் சார்ந்து கல்வி பயிற்றும் பணியும் நடைபெற்றிருக்கிறது .

இதே காலத்தில் மடங்களும் கல்விப் பணியை ஆற்றியுள்ளன .

இந்தக் கல்விப் பணிக்கும் எளிய அறநூல்கள் தேவைப்பட்டன .

இதற்காகவும் பல அறநூல்கள் தோன்றியுள்ளன .

கல்வி பயிற்றும் இடங்களுக்கு ஏற்ப அந்தப் பகுதிகளில் அறநூல்கள் உருவாக்கப் பட்டுள்ளன .

ஒளவையார் இயற்றிய பெரும்பாலான அறநூல்களில் காப்புச் செய்யுள்கள் சைவ சமயக் கடவுளர்களை வாழ்த்துகின்றன .

அதே காலத்திலும் அதற்கு அடுத்த நூற்றாண்டிலும் அருங்கலச்செப்பும் அறநெறிச்சாரமும் தோன்றியுள்ளன .

இவை சமண சமய கருத்துகளுக்கு இடையே அறநெறிகளைத் தெரிவிக்கின்றன .

சமண சமயம் சார்ந்த பள்ளிகளில் கற்பிப்பதற்கு என்று இந்நூல்கள் தோன்றியிருக்க வாய்ப்பு உண்டு .

ஏனெனில் சிவன்மீதும் முருகன்மீதும் விநாயகன்மீதும் காப்புச் செய்யுள்களைக் கொண்ட ஒளவையார் பாடல்களுக்கு மாற்றாக , சமணர்கள் இந்நூல்களைப் பயன்படுத்தியதாகக் கொள்ளமுடியும் .

1.2.3 பாவகை மாற்றம்

பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்கள் அனைத்தும் வெண்பாவால் பாடப்பட்டுள்ளன .

அந்தப் பாவகையிலிருந்து மாறுபட்டு நூற்பா அமைப்புக்கு ஏற்ப ஆத்திசூடி பாடப்பட்டுள்ளது .

கொன்றை வேந்தனும் வெற்றிவேற்கையும் ஆத்திசூடியைப் போன்றே ஓரடியுடன் காணப்படுகின்றன .

உலக நீதி விருத்தப்பா வகையைச் சேர்ந்தது .

மூதுரை , நல்வழி , நீதிநெறி விளக்கம் , நன்னெறி , நீதிவெண்பா ஆகியவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் போன்று வெண்பாவில் அமைந்துள்ளன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. எவை அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன ?

[ விடை ]

2. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்கள் எந்த நூற்றாண்டுவரை எழுதப்பட்டவை ?

[ விடை ]

3. ஒளவையார் இயற்றிய அறநூல்களின் கடவுள் வாழ்த்தில் போற்றப்பட்டுள்ள கடவுளர் யாவர் ?

[ விடை ]

4. சமண சமயம் சார்ந்த அறநூல்கள் யாவை ?

அறநூல்களின் அமைப்பும் காலமும்

பிற்கால அறநூல்கள் என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள இருபது நூல்களும் பல்வேறு காலத்தைச் சேர்ந்தவை .

பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டுவரை இவை எழுதப் பட்டுள்ளன .

நூல் அமைப்பிலும் ஒவ்வொன்றும் வேறு வேறு வகையில் அமைந்துள்ளன .

பிற்கால அறநூல்களை அறிமுகம் செய்யும் இத்தொகுதியில் ,

1. ஆத்திசூடி

2. கொன்றை வேந்தன்

3. மூதுரை

4. நல்வழி

5. வெற்றிவேற்கை

6. உலகநீதி

7. நீதிவெண்பா 8. நீதிநெறி விளக்கம்

9. நன்னெறி

என்னும் ஒன்பது நூல்கள் பாடங்களாக அமைக்கப்பட உள்ளன .

இவை அனைத்தும் பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டவை ஆகும் .

ஏனைய பதினொரு நூல்களும் இப்பாடத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன .

இவற்றில் அருங்கலச்செப்பு , அறநெறிச்சாரம் ஆகிய இரண்டும் சமண சமய இலக்கியப் பாடங்களில் இடம்பெறும் .

கபிலர் அகவல் , நீதிச் சதகங்கள் ஆகியவை சிற்றிலக்கியங்கள் ஆகும் .

எனவே இவை சிற்றிலக்கியங்கள் பற்றிய பாடங்களில் இடம்பெறும் .

பாரதியாரின் புதிய ஆத்திசூடி , பாரதிதாசனின் புதிய ஆத்திசூடி , இளையோர் ஆத்திசூடி முதலியவை பாரதியார் , பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகள் தொடர்பான பாடங்களில் இடம்பெறும் .

நீதி சிந்தாமணி , நீதிநூல் , பெண்மதிமாலை ஆகியவை மிகவும் பிற்காலத்தவை .

மேலும் இந்நூல்களை எழுதிய ஆசிரியர்களின் படைப்புகளைப் படிக்கும்போது இவையும் அவற்றுடன் இடம்பெறும் .

இந்தப் பதினோர் அறநூல்களைப் பற்றிய ஒரு பொது அறிமுகத்தை இங்கே காண்போம் .

ஏனைய ஒன்பது அறநூல்களைப் பற்றிய செய்திகளும் அந்தந்தப் பாடங்களிலே இடம்பெறும் .

1.3.1 அருங்கலச் செப்பு

அருங்கலச் செப்பு என்னும் இந்நூல் சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது .

அம்முனிவர் யார் என்று அறிய இயலவில்லை .

பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலில் 180 குறள் வெண்பாக்கள் உள்ளன .

‘ ரத்ன கரண்ட சிராவகாசாரம் ’ என்னும் வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு இது என்று அறிஞர்கள் கூறியுள்ளனர் .

இவை அனைத்தும் சைன சமய இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய கடமைகளை உணர்த்துகின்றன .

அறத்தின் பெருமையை யார்க்கும் உரைத்தல்

அறத்தை விளக்குதல் நற்கு

( அருங்கலச்செப்பு , 24 )

( நற்கு = நன்கு )

என்னும் குறள் அறத்தை விளக்க வேண்டிய தேவையை எடுத்து உரைக்கிறது .

அறியாமை உடையவர்களுக்கு அந்த அறியாமை அகலும் வகையில் அறக்கருத்துகளை நன்கு எடுத்துக் கூறுவது ‘ அறம் விளக்கல் ’ என்பதாகும் .

இதில் தெரிவிக்கப்பட்டுள்ள ‘ அறம் விளக்கல் ’ என்பது ‘ நற்காட்சி ’யின் எட்டு உறுப்புகளில் ஒன்று .

நற்காட்சி என்பது மெய்ப்பொருள் தெளிதலைக் குறிக்கும் .

இதைப் போன்று அருங்கலச் செப்பு என்னும் இந்நூலில் உள்ள குறட்பாக்கள் அனைத்தும் சமண சமய அறங்களை விளக்குகின்றன .

ஆணவம் என்னும் செருக்கு யாரிடம் இருந்தாலும் அவர்களிடம் அறம் இருக்காது .

இதை அருங்கலச் செப்பு , பின் வரும் குறள் மூலம் விளக்கியுள்ளது .

இவற்றால் பெரியோம்யாம் என்றே எழுந்தே

இகழ்க்கில் இறக்கும் அறம்

( 35 )

என்னும் குறள் , தன்னைப் பெரியவர்களாகக் கருதிக்கொண்டு செயல்படுபவர்களின் ஆணவப் போக்கால் அறம் அழியும் என்று தெரிவித்துள்ளது .

இக்குறட்பாவில் பெரியவர்கள் என்னும் ஆணவம் தோன்றுவதற்குரிய காரணங்கள் கூறப்பட்டுள்ளன .

‘ இவற்றால் ’ என்னும் சொல் இக்காரணங்களை உள்ளடக்கியதாக உள்ளது .

சாதி , குலம் , வலிமை , செல்வம் , அழகு , பெருமை , தவம் , அறிவு என்னும் எட்டுக் காரணங்களால் ஆணவம் ஏற்படுகிறது .

ஆணவத்தால் பிறரை இகழ்ந்து பேசினால் அறப்பண்பு அழிந்துவிடும் என்று இக்குறள் தெரிவிக்கிறது .

இதில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணவத்திற்கான எட்டுப் பொருள்களையும் பின்வரும் குறள் எடுத்துக் கூறுகிறது .

பிறப்பு , குலம் , வலி , செல்வம் , வனப்பு ,

சிறப்பு , தவம் , உணர்வோடு எட்டு

( 34 )

மேற்கூறிய பொருட்களால் மனித வாழ்க்கையில் மதிப்புக் கூடும் .

ஆனால் இவற்றின் காரணமாக ஆணவம் கொள்ளக்கூடாது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும் .

1.3.2 அறநெறிச்சாரம்

அறநெறிச்சாரம் என்னும் இந்நூலை இயற்றியவர் முனைப்பாடியார் என்பவர் ஆவார் .

இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் .

இந்நூலில் இருநூற்று இருபத்தாறு வெண்பாக்கள் உள்ளன .

இது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது .

விதிப்பட்ட நூல்உணர்ந்து வேற்றுமை நீக்கிக் கதிப்பட்ட நூலினைக் கைஇகந்து ஆக்கிப்

பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல்

மதிப்புறத்தில் பட்ட மறு

( 74 )

( விதி = ஒழுக்க நெறி ; கதி = நற்கதி ; பதி = ஊர் ; மதி = நிலவு ; கைஇகந்து = அளவில்லாமல் ; மறு = கறை )

என்னும் அறநெறிச்சார வெண்பா , கற்றவர் செய்யும் தவறு கண்ணுக்குப் ‘ பளிச் ’ எனத் தெரியும் என்பதைக் கூறுகிறது .

இப்பாடல் கற்றவர்க்கு அடையாளமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது .

1. ஒழுக்க நூல்களைக் கற்று உணர்தல் .

2. ஒழுக்க நூல்களுக்கு வேறானவற்றைச் செய்யாமல்

இருத்தல் .

3. நற்கதி வழங்கும் நூல்களை உருவாக்கல் .

4. அமைதியுடன் ஓரிடத்தில் வாழ்தல் .

இந்த நான்கு பண்புகளுடன் வாழ்கின்றவர் அனைவராலும் உயர்ந்தவராகப் போற்றப்படுவார் .

இத்தகைய உயர்ந்தவர்கள் செய்கின்ற பழிச்செயல்கள் எல்லோருக்கும் ‘ பளிச் ’ எனத் தெரியும் என்று அறநெறிச்சாரம் அறிவிக்கிறது .

இப்பாடலில் கற்றவர்கள் செய்யும் தவறு எல்லோருக்கும் தெரியும் என்பதை விளக்குவதற்கு முனைப்பாடியார் ஓர் உவமையைக் குறிப்பிட்டுள்ளார் பார்த்தீர்களா ?

மதிப்புறத்தில் பட்ட மறு

என்பதுதான் அந்த உவமை .

மதி என்பது நிலவுக்கு வழங்கப்படும் வேறு பெயர் .

மறு என்றால் களங்கம் அல்லது கரும்புள்ளி என்று பொருள் .

நிலவு நமது கண்ணுக்கு வெள்ளைப்பந்து போல் தெரியும்போது அதில் இருக்கும் மறுவும் நம் அனைவரின் கண்களுக்கும் தெரிகிறது .

அதுபோல் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள் செய்யும் தவறுகளும் அனைவருக்கும் தெரியும் என்பது இந்த உவமை உணர்த்தும் கருத்து ஆகும் .

இதில் நிலவை உயர்ந்தவர்களுக்கும் அதில் தெரியும் களங்கத்தை உயர்ந்தவர்கள் செய்யும் பழிச்செயலுக்கும் முனைப்பாடியார் ஒப்புமைப் படுத்தியுள்ளார் .

1.3.3 கபிலர் அகவல்

பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றிய கபிலரால் இயற்றப்பட்ட கபிலர் அகவல் என்னும் இந்நூல் அகவல் பாவால் அமைந்தது .

142 அடிகளைக் கொண்டது .

ஒன்றே செய்யவும் வேண்டும் ஒன்றும்

நன்றே செய்யவும் வேண்டும் நன்றும்

இன்றே செய்யவும் வேண்டும் இன்றும்

இன்னே செய்யவும் வேண்டும்..

( 29 - 32 )

( இன்னே = இப்போதே )

என்னும் அடிகள் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த உதவுவன ஆகும் .

ஒரு நேரத்தில் ஒரு செயலைச் செய்திட வேண்டும் .

அந்த ஒரு செயலையும் நல்ல செயலாகத் தேர்வு செய்து கொள்ள வேண்டும் .

அந்தச் செயலை நாளை செய்யலாம் என்று தள்ளிப் போடாமல் இன்றே செய்ய வேண்டும் .

இன்றும் அப்புறம் செய்துகொள்ளலாம் என்று நேரத்தைக் கடத்தாமல் இப்போதே செய்யத் தொடங்கிட வேண்டும் என்று , ஒரு செயலைச் செய்யும் வகையைத் தெளிவுபடுத்துகிறது .

இந்த உலகில் வாழ்கிற மக்கள் தங்களுக்குள் சாதி வேறுபாடு இன்றி ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்னும் கருத்தைக் கபிலர் அகவல் பின்வருமாறு தெரிவித்துள்ளது .

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ ?

காற்றும் சிலரை நீக்கி வீசுமோ

மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ

கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ

வாழ்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும்

கீழ்நான்கு சாதிக்கு உணவு காட்டிலுமோ

திருவும் வறுமையும் செய்தவப் பேறும்

சாவதும் வேறுஇலை தரணியோர்க்கே

குலமும் ஒன்றே குடியும் ஒன்றே

இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே

( 124 - 133 )

என்னும் அடிகள் பிறப்பினால் சாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்பதை விளக்குகின்றன .

ஒரு பகுதியில் உள்ளவர்களில் சிலருக்கு மட்டும் என்று மழை பெய்வதில்லை . காற்றும் சிலரை ஒதுக்கிவிட்டுப் பிறருக்கு மட்டும் வீசுவதில்லை .

இழிகுலத்தார் என்று யாரையும் பூமி சுமக்க மறுப்பதில்லை .

கதிரவனும் சிலருக்கு வெப்பத்தைத் தர மாட்டேன் என்று ஒதுக்குவதில்லை .

உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்குத் தேவையான உணவை நாடும் , தாழ்ந்த சாதியினர்க்கான உணவைக் காடும் வழங்குவதில்லை .

எல்லோர்க்கான உணவையும் நாடுதான் வழங்குகிறது .

செல்வமும் , வறுமையும் , தவத்தினால் உண்டாகும் நற்பயன்களும் , மரணமும் இந்த உலகில் உள்ள எல்லோர்க்கும் பொதுவானவைதாம் .

உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இவை வேறு வேறாக ஏற்படுவதில்லை .

எனவே சாதியில் ஏற்றத் தாழ்வு காணும் நோக்கத்துடன் செயல்படுவது மனிதப் பண்பு ஆகாது என்னும் கருத்தைக் கபிலர் அகவல் விளக்கியுள்ளது .

1.3.4 நீதிச் சதகங்கள்

சதகம் என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று .

நூறு பாடல்களைக் கொண்டது என்பதே ' சதகம் ' என்னும் சொல்லுக்குப் பொருளாகும் .

தொண்டை மண்டல சதகம் , கொங்கு மண்டல சதகம் , சோழ மண்டல சதகம் போன்றவை குறிப்பிட்ட மண்டலங்களின் ( நிலப்பிரிவுகளின் ) பெருமையை எடுத்து விளக்கும் வகையில் அமைந்துள்ளன .

சதகங்கள் அறக்கருத்துகளை வலியுறுத்தவே தோன்றின .

எனவே அவை நீதிச் சதகங்கள் என்று குறிப்பிடப்பட்டன .

இவற்றைப் பாடிய கவிஞர்கள் ஏதேனும் ஒரு கடவுளை வாழ்த்தும் வகையில் ஒவ்வொரு பாடலின் கடைசி அடிகளையும் அமைத்தனர் .

அதை ஒட்டி நூல்கள் பெயர் பெற்றன .

எடுத்துக்காட்டாக , குமரேச சதகம் , ‘ குமரேசனே ’ என்று முடியும் .

அதேபோல ' அறப்பளீசுரதேவனே ' என்று அறப்பளீசுர சதகப் பாடல் முற்றுப் பெரும் .

இந்த வகையில் சதகங்கள் அறக்கருத்துகளை உணர்த்துகின்றன .

எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்க்கலாம் :

பன்னக வேணிப் பரமர் தண்டலையார்

நாட்டில்உள பலரும் கேளீர் !

தன்அறிவு தன்நினைவு தன்மகி மைக்கு

ஏற்றநடை தகுமே அல்லால்

சின்னவரும் பெரியவர் போலே நடந்தால்

உள்ளதும் போம் !

சிறிய காகம்

அன்னநடை நடக்கப்போய்த் தன் நடையும்

கெட்ட வகை ஆகும் தானே !

( பாடல் : 78 )

( பன்னக வேணிப் பரமர் = சிவபெருமான் )

என்னும் தண்டலையார் சதகப் பாடல் அவரவர் இயல்புக்கு ஏற்ப வாழ வேண்டும் என்று தெரிவிக்கிறது .

ஒருவன் தனது அறிவுக்கும் திறமைக்கும் பெருமைக்கும் ஏற்ப வாழ்ந்திட வேண்டும் .

அவ்வாறு வாழாமல் அறிவு , திறமை , பெருமை முதலியவற்றை மிகுதியாகப் பெற்றவரைப் போல் வாழ நினைக்கக் கூடாது .

அவ்வாறு வாழ்ந்தால் தம்மிடம் இருக்கின்ற பெருமையையும் இழக்க நேரிடும் .

இந்தக் கருத்தை விளக்குவதற்கு இந்தப் பாடலில் ஓர் உவமை குறிப்பிடப்பட்டுள்ளது .

‘ சிறிய காகம் அன்ன நடை நடக்கப் போய்த் தன் நடையும் கெட்ட வகை ஆகும் ’ என்பது அந்த உவமை .

காக்கையின் நடைக்கும் அன்னத்தின் நடைக்கும் வேறுபாடு உண்டு .

இவை இரண்டின் நடையிலும் அன்னத்தின் நடை அழகாக இருப்பதாக உலக மக்களும் புலவர்களும் கருதுகிறார்கள் .

எனவே அழகிய நடையைக் குறிப்பிடுவதற்கு அன்ன நடை என்று கூறுகிறார்கள் .

அன்னத்திற்கு அதன் நடையால் கிடைத்த பெருமை , தனக்கும் கிடைக்க வேண்டும் என்று காகம் எண்ணியதாம் .

எனவே , அது அன்னம் நடப்பதைப் போல் நடப்பதற்கு முயற்சி செய்ததாம் .

முடிவில் தனது நடையையும் சரியாக நடக்க முடியாமல் போனதாம் .

அதைப்போல , தமது பெருமையின் அளவைப் புரிந்துகொள்ளாமல் அறிவில் பெரியவர்களைப் போல நடக்கத் தொடங்கினால் தம்மிடம் இருக்கும் பெருமையையும் இழந்து துன்பப்படுவார்கள் என்று தண்டலையார் சதகம் குறிப்பிடுகிறது .

1.3.5 நீதி சிந்தாமணி

நீதி சிந்தாமணி என்னும் நூல் வேதகிரி முதலியார் என்பவரால் இயற்றப்பெற்றது .

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான இந்நூல் உலக மக்கள் பின்பற்ற வேண்டிய அறங்களைத் தொகுத்துக் கூறுகிறது .

1.3.6 நீதிநூல் , பெண்மதிமாலை

நீதிநூல் , பெண்மதிமாலை என்னும் இரண்டு நூல்களும் வேதநாயகம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டவை .

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இவை அறநெறிகளை உணர்த்துவதற்கு உருவாக்கப்பட்டவை . 1.3.7 அறநூல்