1

காப்பிய இலக்கியம்

ஐம்பெருங் காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும்

பாடம் - 1

காப்பியம் - ஓர் அறிமுகம்

1.0 பாட முன்னுரை

இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச் செவ்விலக்கிய வகையில் (Classical Literature) அடக்குவர். இலக்கிய வளம் நிறைந்த பழமையான மொழிகளில் முதல் இலக்கியம் காப்பியமாக அமைவதைக் காணலாம். இந்த நிலை தமிழுக்கு இருக்கிறதா? என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனால் மட்டுமே தமிழ் பழமையான செம்மொழி அன்று என்று கூறிவிட முடியாது. இங்குக் கர் என்பார் கூற்று நினைத்தற்கு உரியது. அவர் “வீரயுகத்தில் காப்பியம் மட்டுமே எழ வேண்டும் என்ற நியதி இல்லை. பல மொழிகளில் ஹோமரின் இலியத், ஒதீசி போன்ற காவியங்களுக்குப் பதிலாக, கதை எதுவும் இன்றித் தங்கள் தங்கள் நாட்டுச் சிற்றரசர்களையும் தலைவர்களையும் பாராட்டிப் பாடும் பாடல்கள் எழுந்துள்ளன” என்கிறார். சங்க இலக்கியமான புறநானூறும், பதிற்றுப்பத்தும் பத்துப்பாட்டில் பல பாடல்களும் இத்தகைய வீரயுகப் பாடல்கள்தாம். சீன மொழியிலும் இத்தகைய உதிரிப் பாடல்களே வீரயுகத்தில் எழுந்துள்ளன.

தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். இவர் எழுதிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும் அவை அனைத்தும் ஊகங்களே. தமிழில் தோன்றிய முதல் காப்பியமே சிலப்பதிகாரம்தான். இதனை அடியொற்றியே தமிழில் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன.

1.1 காப்பியம்

காப்பியம் என்றால் என்ன? இந்தச் சொல்லின் பொருள் என்ன? இச்சொல் விளக்கும் இலக்கியம் எத்தகையது? ஒருவகையில் சிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்றவை கதைப்பாடல்கள் என்பதை நாம் அறிவோம். இன்னொரு நிலையில் ‘காப்பியம்’ என்றால் என்ன? இந்தச் சொல் எங்கிருந்தது வந்தது? இதன் அடிப்படைப் பொருள் யாது? இதற்கு விடை காண்பதே நமது நோக்கம்.

● சொல் விளக்கம்

வடமொழியில் காவ்யா என்றால் பாட்டு என்பது பொருள். கவியால் படைக்கப்படுவன அனைத்தும் காவியமே. எனவே காவ்யா – காவியம் – காப்பியம் என ஆகியது என்பர். தமிழில் தொல்காப்பியம், காப்பியக் குடி, வெள்ளூர்த் தொல்காப்பியர், காப்பியஞ் சேந்தனார், காப்பியாற்றுக் காப்பியனார் முதலான பெயர்கள் காணப்படுகின்றன. இவை காப்பு + இயம் என்ற சொற்களின் சேர்க்கையாகக் கருதப்படுகின்றன. பழமரபுகளைக் காப்பது காப்பியம் எனக் கருத இடம் உண்டு. காப்பியம் என்ற இலக்கியமே, வரலாற்றுக்கு முற்பட்ட காலச் சமூக – சமய – அரசியல் வரலாற்றையோ அல்லது வரலாறாக நம்பப்படுவதையோதான் பாடுபொருளாகக் கொண்டுள்ளது. இவை வாய்மொழி மரபாகச் சொல்லப்பட்டு வந்த கதைகளாக அமைந்தன. இவ்வாறு வரலாற்றுக்கு முந்தைய கால மனிதனின் வாழ்வியல், சிந்தனை மற்றும் சமய நம்பிக்கை பற்றிச் சொல்லப்பட்டு வந்த கதைகளே ஹோமர் போன்ற கவிஞர்களால் காப்பியமாகத் தொகுக்கப்பட்டன.

ஆங்கிலச் சொல்லான Epic என்பதும் ‘epo’ என்ற கிரேக்கச் சொல்லின் ஆக்கமாகக் கருதப்படுகிறது; ‘epo’ என்றால் ‘to tell’ என்றும், ‘epos’ என்றால் ‘anything to tell’ என்றும் பொருள்படும். எனவே Epic என்பது மரபுவழியாகச் சொல்லப்பட்டு வருவது என்பது பொருளாகிறது. இவ்வகையில் காப்பியம் என்பதும் பழமரபுகளைக் காத்து இயம்புவது. அதாவது ‘சொல்லப்பட்டு வருவது’ என்பது விளங்குகிறது அல்லவா?

1.2 காப்பிய வகை

காப்பியம் என்றாலே தமிழர்களுக்குச் சிலப்பதிகாரம், சிந்தாமணி முதலான ஐம்பெருங் காப்பியங்களும், சூளாமணி, நீலகேசி முதலான ஐஞ்சிறு காப்பியங்களுமே நினைவுக்கு வரும். தொடர்ந்து பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான பலவும் நம் நினைவுக்கு வருவதுண்டு. 20ஆம் நூற்றாண்டில் பாரதியின் பாஞ்சாலி சபதம், பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, புலவர் குழந்தையின் இராவண காவியம், கண்ணதாசனின் ஏசு காவியம் போன்றனவும் காப்பியங்களாகவே எண்ணப்படுகின்றன. எனவே காப்பியம் என்ற இலக்கிய வகையைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

1.2.1 மேலை இலக்கியக் காப்பிய வகை கிரேக்கம், இலத்தீன், பாபிலோனியம் முதலான பழமை வாய்ந்த மொழிகளில் எழுந்துள்ள காப்பியங்களைப் பின் வருமாறு வகைப்படுத்துகின்றனர்.

1) முன்முறைக் காப்பியம் (Primitive or Oral Epic)

2) வழிமுறை அல்லது கலைக் காப்பியம் (Secondary or Literary Epic)

3) வீரயுகக் காப்பியம் (Chivalric Epic)

4) வீரயுகக் காதல் காப்பியம் (Chivalric Romance)

5) காதல் காப்பியம் (Romantic Epic)

6) நகைச்சுவைக் காப்பியம் (Burlesque Epic)

கலைத் தன்மை பெறாத – அதே நேரத்தில் உணர்ச்சிப் பெருக்காகக் கவிஞனால் தங்கு தடையின்றி வாய்மொழி மரபில் பாடப்பட்டு வருவன முன்முறைக் காப்பியங்கள்.

இதனை அடுத்துத் தோன்றுவன கலைக்காப்பியங்கள். இவற்றில் கவிஞனின் சிந்தனைக்கும் கற்பனைக்கும் இடம் உண்டு. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருத்தியல் இவ்வகைப் படைப்புகளில் சிறப்பான இடத்தைப் பெறும்.

வீரயுகக் காப்பியங்களில் வீரதீரச் செயல்கள், அற்புத ஆற்றல்கள், உணர்ச்சி பூர்வமாக மிகையான கற்பனையுடன் வெளியிடப் பெறும்.

வீரயுகக் காதல் காப்பியங்களில் காதல், காதலுக்காகப் போராடும் மிகப்பெரிய போராட்டம் முதன்மைப்படுத்தப் பெறும்.

நகைச்சுவைக் காப்பியங்களில் கிண்டலும் கேலியும் நிறைந்து, தன்னேரில்லாத் தலைவனாக உருவகப்படுத்தப்பட்ட காப்பியத் தலைவன், இங்குக் கிண்டலுக்கும் கேலிக்கும் உரியவனாக, ஆளுமையில் தரம் தாழ்ந்தவனாகச் சித்திரிக்கப்படுவான்.

1.2.2 வடமொழியில் காப்பிய வகை வடமொழியில் காப்பியங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப் பெறுகின்றன.

1) இதிகாசம்

2) மகாகாவியம்

3) காவியம்

4) புராண காவியம்

5) உத்பாத்தியம்

6) சம்பு காவியம்

7) சந்தேச காவியம்

8) கண்ட காவியம்

இதிகாசம் என்ற சொல்லுக்கு ‘இவ்வாறு முன் இருந்தது’ என்று பொருள். இதிகாசங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட கால வரலாறாக (Pre-historic Period) நம்பப்படுவன. வால்மீகி ராமாயணமும், வியாச பாரதமும் இவ்வகைப் படைப்புகளே. வடமொழியின் மகாகாவியம் என்பது இதிகாசக் கதையின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, விரிவாகப் பேசுவது. இதில் அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நாற்பொருள் இடம் பெறும். கற்பனை வளமும் வருணனைத் திறனும் பெற்றிருக்கும். மகா காவியத்திலிருந்து அளவால் குறைந்தது காவியம். நாற்பொருளும் இதில் இடம் பெறாது. ஒரு சில குறைந்து அமையும். உயரிய நோக்கமும் கற்பனை வளமும் குறைவாகவே காணப்படும். கடவுளர் பற்றிய புராண வரலாறாக அமைவது புராண காவியம். இதிகாசத்திலோ, புராணங்களிலோ இடம் பெறாத, புதிய கதையை மையமாகக் கொண்டு படைக்கப் பெறுவன உத்பாத்தியம் என்னும் காப்பிய வகையாகும். சம்புகாவியம் என்பது உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுளாகும். சந்தேச காவியம் என்பது தூது இலக்கிய வகையாகும். கண்ட காவியம் என்பது பழைய இதிகாச – காப்பியக் கதையை எடுத்துக் கொண்டு, கால வேறுபாட்டிற்கு ஏற்ப மாற்றங்களையும், புதுமைகளையும் சேர்த்துப் படைக்கப் பெறுவது. தமிழில் பாரதிதாசனின் கண்ணகி புரட்சிக் காப்பியம், சாலை இளந்திரையனின் சிலம்பின் சிறுநகை போன்றவை இக்கண்ட காவிய வகையைச் சார்ந்தவை.

1.2.3 தமிழில் காப்பிய வகை தமிழ்க் காப்பியம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவன ஐம்பெருங் காப்பியங்கள் – ஐஞ்சிறு காப்பியங்கள் என்பனவே. கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை என்ற ஒரு மிகச் சிறந்த காப்பியமும் உள்ளது. பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் என்பனவும் தமிழில் தோன்றிய மிகச் சிறந்த காப்பியப் படைப்புகளே. இருபதாம் நூற்றாண்டிலும் காப்பியம் என்ற பெயரில் பல படைப்புகள் வெளி வந்துள்ளன. இவற்றைப் பின்வரும் வகைப்பாடுகளில் பகுத்துக் காணலாம்.

1)  இதிகாசம்

2)  புராணம்

3)  பெருங்காப்பியம்

4)  சிறுகாப்பியம்

5)  மறைந்துபோன தமிழ்க் காப்பியம்

6)  மொழிபெயர்ப்புக் காப்பியம்

7)  இசுலாமிய சமயக் காப்பியம்

8)  கிறித்தவ சமயக் காப்பியம்

9)  தற்காலக் காப்பியம் – மற்றும் கதைப் பாடல்கள்

கம்பராமாயணமும் வில்லிபாரதமும் தமிழில் இதிகாசக் காப்பியங்களாகும். ஆனால் இவை இதிகாசத் தன்மையான வாய்மொழி மரபோ, உணர்ச்சியோ இன்றிக் கலைத்தன்மையோடு, கற்பனை வளமும், கருத்தியல் புனைவும் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. இதனால், இவை மேலை இலக்கியக் கலைக்காப்பியம் என்ற வகையைச் சார்ந்தன எனலாம்.

தமிழில் புராணக் காப்பியங்கள் மூன்று வகையாகப் படைக்கப் பட்டுள்ளன. ஒன்று, கந்தபுராணம் போன்ற கடவுளர் பற்றிய புராணக் காப்பியம். இரண்டாவது வகை திருவிளையாடல் புராணம் போன்ற கடவுளர் பற்றிய தலபுராணம். மூன்றாவது வகையைச் சார்ந்தவை மாமனிதர் பற்றிய பெரியபுராணம் போன்றவை ஆகும்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன பெருங்காப்பியங்கள் என்றும்; உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி ஆகியன சிறு காப்பியங்கள் என்றும் எண்ணப்படுகின்றன.

சமயப் போராட்டங்கள், மக்களின் கவனிப்பு இன்மை முதலான காரணங்களால் அழிந்து போன தமிழ்க் காப்பியங்கள் பல. உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு சில காப்பியங்களில் தகடூர் யாத்திரை, வளையாபதி, குண்டலகேசி, விம்பசார கதை, சாந்தி புராணம், நாரத சரிதை, கலியாணன் கதை, பருப்பதம், புராண சாகரம், அமிர்தபதி, பிங்கலகேசி, அஞ்சனகேசி, காலகேசி, இராசராச விசயம், வீரணுக்க சரிதம், குலோத்துங்க சோழன் சரிதை முதலான காப்பியங்களின் பெயர்கள் அறியப்படுகின்றன.

நச்சினார்க்கினியர் உரையிலும், புறத்திரட்டிலும் காணப்படும் இராமாயணச் செய்யுள்கள், பெருந்தேவனார் குறிப்பிடும் இராமாயண வெண்பா, யாப்பருங்கலத்திலும், வீரசோழியத்திலும் மேற்கோள் காட்டப்படும் வெண்பாவில் அமைந்த இராமாயணச் செய்யுள்கள், ஸ்ரீபுராணம் குறிப்பிடும் சைன ராமாயணம், பல திரட்டு என்னும் சுவடித் தொகுப்பில் உள்ள நான்கு இராமாயண வெண்பாக்கள் ஆகியவற்றின் மூல நூல்கள் அழிந்து போய்விட்டன.

இதே போன்று சங்ககாலம் தொட்டுப் பாரதக் கதை தொடர்பான பல காப்பியங்கள் எழுந்துள்ளன. சின்னமனூர்ச் செப்பேடு மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் எனச் சங்க காலத்ததான ஒரு பாரதம் பற்றிக் குறிப்பிடுகிறது. அடுத்தது பெருந்தேவனார் பாடிய பாரதம். இவர் பாரதம் பாடிய காரணத்தால் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப்பட்டார். இவர் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர் ஆவார். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு ஆகிய சங்கத் தொகை நூல்களுக்கு அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்களைப் பாடியவர் ஆவார். மேலும் வத்சராசன் பாரதம் அல்லது அருணிலை விசாகன் பாரதம் என்ற ஒரு பாரத நூலும் குறிப்பிடப்படுகின்றது. இப்பாரத நூல்கள் அனைத்தும் மறைந்து போயின.

தமிழில் பல தழுவல் காப்பியங்கள் எழுந்துள்ளன. இத்தகைய தழுவலன்றி மொழிபெயர்ப்பாகவும் பல காப்பியங்கள் எழுந்துள்ளன. மனுசரிதை, வசுசரிதை, பிரபுலிங்க லீலை, வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாரின் துறக்க நீக்கம் (மில்டனின் Paradise Lost), அனந்த நாராயணரின் இலியதம் (ஹோமர்), அ.சிங்கார வேலுவின் ஒதீசியம் (ஹோமர்), ஜமதக்னியின் மொழிபெயர்ப்பான இரகுவம்சம், குமார சம்பவம், மேக சந்தேசம் (காளிதாசர்), ஆதி வரகவி மொழிபெயர்த்த காதம்பரி ஆகியன இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.

இசுலாமியக் காப்பியங்களில் குறிப்பிடத்தக்கது சீறாப்புராணம். கிறித்தவக் காப்பியங்களில் தேம்பாவணியும், இரட்சணிய யாத்திரிகமும் சிறப்புடையன. தற்காலத்தில் பாரதியின் பாஞ்சாலி சபதம் முதலானவும், பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி முதலானவும் காப்பிய வரிசையில் குறிப்பிடப்படுவன. முடியரசனின் பூங்கொடி, கவியோகி சுத்தானந்த பாரதியின் பாரத சக்தி மகா காவியம், புலவர் குழந்தையின் இராவண காவியம் ஆகியன பழந்தமிழ்க் காப்பிய மரபில் பாடப்பட்டனவாகும். பஞ்சபாண்டவர் வனவாசம், கர்ணன் சண்டை, நல்லதங்காள் கதை முதலான பல எண்ணற்ற கதைப் பாடல்கள் தற்காலக் காப்பிய வரிசையில் இடம் பெற்றுள்ளன.

1.3 பெருங்காப்பியமும் சிறுகாப்பியமும்

வடமொழியில் மகாகாவியம், காவியம் என்ற வகைமையையே பெருங்காப்பியம் – சிறுகாப்பியம் என்று தமிழில் குறிப்பிடுகின்றனர். வடமொழியில் இதிகாசங்களான இராமாயண – மகாபாரதக் கிளைக் கதைகளை எடுத்துக் கொண்டு, அவற்றைக் கலைத் தன்மையுடன் தண்டியலங்காரம் கூறும் இலக்கணப்படி பாடினர். இவையே மகாகாவியம் – காவியம் எனப்பட்டன. வடமொழி தமிழ்க் காப்பியங்களுக்கிடையே பெயரில் இந்த ஒற்றுமை காணப்பட்டாலும், பாடுபொருளில் இருமொழிக் காப்பியங்களும் வேறுபடுகின்றன. தமிழில் எந்த ஒரு பெருங்காப்பியமோ அல்லது சிறு காப்பியமோ இதிகாசத் தழுவலாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1.3.1 பெருங்காப்பிய இலக்கணம் தமிழ்க் காப்பியக் கொள்கை பற்றிய விரிவான செய்தி பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இல்லை எனலாம். வடமொழி மரபை ஒட்டி எழுந்த தண்டியலங்காரமே முதல்முதலில் காப்பிய இலக்கணம் பற்றி விரிவாகப் பேசுகின்றது. தொடர்ந்து பன்னிரு பாட்டியல், நவநீதப் பாட்டியல், வச்சணந்திமாலை, மாறன் அலங்காரம் முதலான பாட்டியல் நூல்கள் இவ்விலக்கணம் பற்றிப் பேசுகின்றன.

பெருங்காப்பியம் தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனைப் பற்றிய கதையாக அமைய வேண்டும் என்று தண்டியலங்காரம் கூறுகிறது.

பெருங்காப்பியம் வாழ்த்து, வணக்கம், வருபொருள் கூறித் தொடங்கப் பட வேண்டும் என்பார் தண்டி. அவையடக்கம் இடம் பெற வேண்டும் என்பதை மாறன் அலங்காரம் வலியுறுத்தும். காப்பியப் பாடுபொருள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் தருவதாக அமைதல் வேண்டும் என்பது இலக்கண நூலார் அனைவரின் கருத்தாகும்.

பெருங்காப்பிய வருணனைக் கூறுகளாக மலை, கடல், நாடு, வளநகர், பருவம், இருசுடர்த் தோற்றம் என்பனவற்றைத் தண்டி கூறுகிறார். தென்றலின் வருகை, ஆற்று வருணனைகளை மாறன் அலங்காரம் சுட்டும். நவநீதப் பாட்டியல் மாலை (பொழுது), குதிரை, யானை, கொடி, முரசு, செங்கோல் பற்றிய வருணனைகளைச் சேர்க்கும்.

பெருங்காப்பிய நிகழ்ச்சிகளைப் பொது நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி என இரண்டாக வகைப்படுத்தலாம். திருமணம், பொழிலாடல், நீராடல், புதல்வர்ப் பேறு, புலவியிற் புலத்தல், கலவியில் கலத்தல் ஆகியவற்றைப் பொது நிகழ்ச்சிகளாகத் தண்டி ஆசிரியர் குறிப்பிடுவார். மாறன் அலங்காரம் இல்வாழ்க்கை, நிலையாமை, கைக்கிளை ஆகியவற்றைச் சேர்த்துக் கூறும். குலவரவு, உலகின் தோற்றம், ஊழின் இறுதி, தொண்ணூற்று அறுவரது இயற்கை, வேதியர் ஒழுக்கம் இவை பற்றிப் பேச வேண்டும் என்பவற்றைப் புராணக் காப்பிய நிகழ்வுகளாக வச்சணந்திமாலை முதலான இலக்கண நூல்கள் குறிப்பிடும்.

பெருங்காப்பிய அரசியல் நிகழ்ச்சிகளாக மந்திரம், தூது, செலவு, இகல் வென்றி, முடிசூடல் ஆகியவை தண்டி கூறுவன. இவற்றுடன் ஒற்றாடல், திறை கோடல் ஆகியவற்றை மாறன் அலங்காரம் சேர்த்துக் கூறும்.

சுவை, பாவம் (மெய்ப்பாடுகள்) காப்பியத்தில் இடம் பெற வேண்டும். அத்துடன் சந்தி, பாவிகம் ஆகிய கதைப் பின்னல் அமைதல் வேண்டும் என்பார் தண்டி. இதனைச் சற்று விரித்து வித்து, எண், துளி, கொடி, கருப்பம் எனப் பன்னிரு பாட்டியல் குறிப்பிடும்.

பெருங்காப்பியக் கட்டமைப்பாகச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் ஆகியவை அமையும் என்பார் தண்டி. இவற்றுடன் படலம், காண்டம் ஆகியவற்றை மாறன் அலங்காரம் குறிப்பிடும். வெண்பா, விருத்தம், அகவல், கொச்சகம் என்னும் பாவகை காப்பியம் பாடச் சிறந்தவை எனப் பன்னிரு பாட்டியல் குறிப்பிடும்.

இவை தவிர வழிப்படுத்துதல், வழிப்பயணம், பந்தாடல், அசரீரி, சாபம் முதலான நிகழ்வுகளும், சுடுகாடு, தீஎரி முதலான வருணனைக் கூறுகளும், காதை, புராணம் ஆகிய கட்டமைப்புக் கூறுகளும் பெருங்காப்பியக் கூறுகளாக அமைவதைக் காணலாம்.

● தமிழில் பெருங்காப்பியங்கள்

தமிழில் பெருங்காப்பியங்களை ஐம்பெருங் காப்பியங்கள் என்ற வகையுள் அடக்குகின்றனர். அவை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன. இவற்றுள் சிலப்பதிகாரம் மணிமேகலை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்பர். ஆனால் இந்தப் பாகுபாடுகள் எதன் அடிப்படையில் செய்யப்பட்டன. இப்பாகுபாடு சரிதானா? என்ற சிந்தனை அறிஞரிடையே இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. இங்கே குறிக்கப்பட்டுள்ள ஐம்பெருங் காப்பியங்கள் வரிசையில் உள்ள குண்டலகேசியும், வளையாபதியும் கிடைக்கப் பெறவில்லை. அவை எப்படி இருந்தன. அவை பெருங்காப்பிய மரபில் பாடப்பட்டவைதானா? என்பது யாருக்கும் தெரியாது. நன்னூல் மயிலைநாதர் உரையில் (நூ.387) ஐம்பெருங் காப்பியம் என்ற பெயர் காணப்படுகிறது. பின்னர் தோன்றிய தமிழ்விடுதூது கற்றார் வழங்கு பஞ்ச காப்பியம் என்று குறிப்பிடுகின்றது. இந்த இரு நூல்களிலும் எவை பஞ்ச காப்பியம் என்பது குறிக்கப்படவில்லை. கி.பி. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கந்தப்ப தேசிகர்,

சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்

நந்தா மணிமே கலைபுனைந்தான் – நந்தா

வளையா பதிதருவான் வாசகனுக்கு ஈந்தான்

திளையாத குண்டலகே சிக்கும்

என்று ஐம்பெருங்காப்பியங்களை எண்ணிச் சொல்கிறார்.

1.3.2 சிறுகாப்பிய இலக்கணம் சிறு காப்பியங்களுக்கான தனி இலக்கணம் மேற்சுட்டிய இலக்கண நூல்களில் இடம் பெறவில்லை. பெருங்காப்பியம் தரும் நாற்பொருளில் சில குறைந்து இயல்வது சிறு காப்பியம் என்பார் தண்டி. தமிழிலுள்ள ஐஞ்சிறு காப்பியங்களில் இவை அளவில் குறைந்திருப்பது தெரிய வருகிறது. பெருங்காப்பியச் சுருக்கமும் சிறுகாப்பியமாக எண்ணப் படுகின்றது. பெருங்காப்பியங்களுக்கு உள்ள உயர்ந்த, பரந்துபட்ட, நாடு தழுவிய ஓர் உன்னதத் தன்மை சிறுகாப்பியங்களுக்கு இல்லை என்றே சொல்லலாம். இவை குறிப்பிட்ட ஒரு கருத்தை, பகுதியை மட்டுமே மையப்படுத்துகின்றன எனலாம்.

● சிறுகாப்பியங்கள்

தமிழில் சிறுகாப்பியங்களை ஐஞ்சிறு காப்பியங்கள் என்று வகை செய்வர். இந்த வகைப்பாடும் கூடக் கருத்து வேறுபாடுகளுக்கு உரியதாக உள்ளது. யசோதர காவியம், நீலகேசி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம், சூளாமணி ஆகியவற்றை ஐஞ்சிறு காப்பியங்களாகத் தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர்.

1.4 தொகுப்புரை

இப்பாடப் பகுதியில் காப்பியம் என்ற இலக்கிய வகை மேலைநாட்டு மற்றும் இந்திய மொழிகளில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று பார்த்தோம். தமிழ்க் காப்பிய வகைகளையும், பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என்ற வகைப்பாடுகளையும் கண்டோம். பெருங்காப்பிய, சிறுகாப்பிய இலக்கணமும் இங்கு விளக்கப் பெற்றுள்ளது. காப்பியம் என்ற சொல்லின் பொருள் பற்றியும் அறிந்தோம். இவ்வகையான குறிப்புகள் மூலம் காப்பியம் என்றால் என்ன என்பதை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

மாணவ நண்பர்களே! இப்பாடத்தைப் பயின்று இது போன்ற இலக்கிய வகை பற்றிய கருத்துகளை மேலும் பல நூல்களைக் கற்றுத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, காப்பியம் என்ற இலக்கிய வகை பற்றிய அறிமுகமே இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான ஆழ்ந்த படிப்புக்கு இது ஒரு முன்னோடி எனக் கொண்டு மேலும் மேலும் காப்பிய இலக்கிய வகை பற்றிய கல்வியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

பாடம் - 2

சிலப்பதிகாரம்

2.0 பாட முன்னுரை

தமிழில் தோன்றிய முதல் காப்பியம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம். இது இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ்க் காப்பியமாகத் திகழ்வது; மூவேந்தர்களையும் கதைத்தொடர்பால் ஒருங்கிணைப்பது; சமண, பௌத்த, வைதீக சமயங்களைப் பத்தினி வழிபாட்டில் இணைத்துச் சமய ஒற்றுமை பேணுவது; புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் எனச் சோழ, பாண்டிய, சேர நாட்டுத் தலைநகரங்களையே காண்டத் தலைப்பாகக் கொண்டு தமிழ்த்தேசியம் காண்பது.

இது மன்னரைப் பாட்டுடைத் தலைவராகக் கொள்ளாது, வணிக மகளையும் கணிகை மகளையும் முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டது.

மொழியாலும், பொருளாலும், இலக்கிய நயத்தாலும், இன்சுவையாலும் முதன்மை பெறும் காப்பியம் இது. பல்வேறு வகையான சிந்தனை மரபுகளையும், பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கி இருப்பது. விரிந்த களப் பின்னணியும் காலப் பின்னணியும் கொண்டது. பல்வேறு இன மக்கட் பிரிவினர் பற்றிப் பேசுவது. சமூக, சமய, அரசியல் சிந்தனைகளின் களஞ்சியமாகத் திகழ்வது. எல்லாவற்றிற்கும் மேலாக, உலக இலக்கிய வரலாற்றில் பெண்மைக்கு முதன்மை தருகின்ற ஓர் உன்னதக் காப்பியமாகத் திகழ்வது சிலப்பதிகாரம்.

2.1 சிலப்பதிகாரம்

சிலம்பு ஓர் அணிகலன்; மகளிர் காலில் அணிவது. சிலப்பதிகாரத்தில் இருவர் சிலம்புகள் இடம் பெறுகின்றன. கண்ணகி அணிந்த சிலம்பு ஒன்று; அதன் உள்ளீடு மாணிக்கம்; பாண்டிமாதேவி அணிந்த சிலம்பு ஒன்று; அதன் உள்ளீடு முத்து. இவ் இரு சிலம்புகளால் விளைந்த பூசலே காப்பியக் கதை. இவ்விருவர் சிலம்பும் அழகில், தரத்தில், புற அமைப்பில் ஒரே மாதிரியாக அமைந்ததே இதற்குக் காரணம். எனவேதான் சிலம்பால் விளைந்த அதிகாரம் சிலப்பதிகாரம் ஆயிற்று.

● எந்தச் சிலம்பு?

யார் சிலம்பால், விளைந்தது சிலப்பதிகாரம்? கண்ணகி சிலம்பா? பாண்டிமாதேவி சிலம்பா? இது கேள்வி. தேவியின் சிலம்பு அரண்மனைப் பொற்கொல்லனால் திருடப்பட்டு இருக்காவிட்டால் கோவலன் கொலை நடந்திருக்காது. எனவே பாண்டிமாதேவி சிலம்பே காப்பியப் பெயர்க் காரணமானது என்பது பேராசிரியர் வ.சுப. மாணிக்கனாரது முடிவு. ஆனால் கண்ணகி சிலம்புதான் காப்பியப் பெயரில் இருப்பது என்பது பலரும் ஏற்கும் கருத்து. கண்ணகியே காப்பியத் தலைவி; அவள் கோவலனிடம் தன் சிலம்புகளைக் கொடுத்து இருக்காவிட்டால், இந்தக் கதை மதுரை வரை வந்திராது.

2.1.1 ஆசிரியர் – இளங்கோ வரலாறுயாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவன்போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை என்று பாரதியாரால் புகழப்பெற்ற முப்பெரும் புலவருள் ஒருவர் இளங்கோ. இளங்கோ சேரவேந்தன் சேரலாதனின் இளைய மகன்; மூத்தவன் சேரன் செங்குட்டுவன். இவர் இளவரசன் ஆதலால் இளங்கோ என அழைக்கப்பட்டார்; துறவு பூண்டதால் அடிகள் என்ற சிறப்புப் பெயருடன் இளங்கோ அடிகள் எனச் சிறப்பிக்கப் பெற்றார். இவர் துறவு பூண்டதற்கான காரணம் என்ன? அடிகளே வரந்தரு காதையில் குறிப்பிடுகிறார்; சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எழுப்பி விழா நடத்தியபோது, தெய்வமாகிய கண்ணகி தேவந்திமேல் வந்து தோன்றி அங்கு வந்திருந்த இளங்கோவடிகளை நோக்கி அவரது உயர் பண்பைப் பாராட்டிப் பேசுகிறாள். ‘இளவரசே! வஞ்சிமாநகரின் மணி மண்டபத்தில் நின் தந்தை சேரலாதன், தமையன் செங்குட்டுவனுடன் அமர்ந்திருந்தாய்; அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன், அரசனாக வீற்றிருக்கும் அழகிய வடிவ இலக்கணம் உனக்கே உண்டு என்று கூறினன்; அப்போது நீ நிமித்திகனைக் கோபத்துடன் பார்த்துச் செங்குட்டுவன் மனத்துயர் நீங்குமாறு உடனே துறவு பூண்டனை; இதனால் உனக்கு நாட்டை ஆளும் பொறுப்பு நீங்கியது; அதே நேரத்தில் மனத்தாலும் எண்ண முடியாத, எல்லை இல்லாத பேரின்பத்தை அளிக்கும் வீட்டுலகை ஆளும் அரசனாக ஆனாய்’, இவ்வாறு கண்ணகித் தெய்வம் இளங்கோவுக்கு அருள் செய்கிறாள்.

இச்செய்தி சிலப்பதிகாரப் பதிகத்திலும் இடம்பெறுகிறது. இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்றாலும், அவர் எல்லாச் சமயத்தையும் சமமாக மதித்தவர். எந்தவிடத்தும் அவர் சமயக் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. பிற சமயத்தை, சமயத்தினரைப் பழித்ததில்லை. மாறாகப் பிற சமயத்தை – சமயக் கணக்கரைப் போற்றியுள்ளார்.

2.1.2 சிலப்பதிகாரம் எழுந்த காலம்

சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த காப்பியம் என்பது பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. இதற்கான அடிப்படைச் சான்றுகளில் ஒன்று இளங்கோ சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பது. இச்செங்குட்டுவன் சங்க இலக்கியத்தில் ஒன்றான பதிற்றுப்பத்தில் பாடப் பட்டவன்; இவன் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

அடுத்த சான்று, வரந்தரு காதையில் இடம் பெறும் கண்ணகி வழிபாட்டில் இலங்கை வேந்தன் கயவாகு கலந்து கொண்டான் என்பது. இவன் காலமும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பது இலங்கை வரலாற்றால் அறியப்படுகிறது.

மூன்றாவதாகச் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களிலும் இடம்பெறும் பதிகங்களில் ‘‘இளங்கோ சிலம்பு பாடச் சாத்தனார் கேட்டார்’’ எனவும், ‘‘சாத்தனார் மணிமேகலை பாட இளங்கோ கேட்டார்’’ எனவும் கூறப்பட்டுள்ளன. இங்குக் குறிக்கப் பெறும் சாத்தனார் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்பது அறிஞர் கண்ட முடிவு. இவற்றால் சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த காப்பியம் என்பது உறுதி செய்யப்படுகிறது.

2.2 சிலப்பதிகாரம் - கதைப்பின்னல்

சிலப்பதிகாரம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது. புகார்க்காண்டம் – 10 காதைகள்; மதுரைக்காண்டம் – 13 கதைகள்; வஞ்சிக்காண்டம் – 7 காதைகள்; ஆக முப்பது காதைகளையுடையது. இங்கு, இக்காண்டங்களின் வழியே, சிலப்பதிகாரக் காப்பியத்தின் கதைப்போக்கைக் காண்போம்.

2.2.1 புகார்க் காண்டம் புகார் நகரப் பெருவணிகன் மாநாய்கன்; அவன் மகள் கண்ணகி; அதே நகரத்து உயர்ந்து ஓங்கு செல்வத்தான் மாசாத்துவான்; அவன் மகன் கோவலன். புகார் நகரமே விழாக்கோலம் கொள்ள, கோவலன்-கண்ணகி திருமணம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து தனிமனையில் குடியிருத்தப் பெறும் புதுமணத் தம்பதியர் புதுமண வாழ்வின் இனிமையைத் துய்த்து மகிழ்கின்றனர். சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த அவர்கள் வாழ்வில் இடையூறு வந்து சேர்கிறது. சோழன் அவையில் நடன அரங்கேற்றம் செய்து தலைக்கோல் அரிவை என்ற பட்டத்தையும், 1008 கழஞ்சு பொன் விலை பெறும் பச்சை மாலையையும் பரிசாகப் பெற்ற மாதவியைச் சேர்ந்து அந்த மகிழ்ச்சியில் தன் மனைவியை மறக்கிறான் கோவலன்.

விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்

வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்து

(சிலப்பதிகாரம் : 3:174-175)

(வடு = குற்றம்)

மாதவி ஆர்வ நெஞ்சத்தோடு கோவலனுடன் கூடி மகிழ்ந்திருக்க, கண்ணகி கையற்ற (செயலற்ற) நெஞ்சோடு தனித்துத் தவிக்கிறாள்.

இந்தச் சூழலில் புகார் நகரில் இந்திரவிழா தொடங்குகிறது. விழாவில் மாதவி விண்ணவரும் போற்றப் பதினோரு ஆடல்களை ஆடி மகிழ்விக்கிறாள். அவள் கலைமகள்; விழாவில் ஆடுவது அவளுக்குச் சிறப்பு. கோவலன் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஊடல் கொள்கிறான். அவன் ஊடல் தீர்க்கப் பலவாறாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு அவனோடு கடலாடச் செல்கிறாள் மாதவி. அவன் கையில் யாழைக் கொடுக்கிறாள். கோவலன் மாதவி மனம் மகிழ வாசிக்கிறான். அவன் பாடிய காதற் பாடல்களுள் வேறு யாரையோ விரும்பும் குறிப்பு இருப்பதாக நினைத்த மாதவி, தானும் ஒரு குறிப்புடையவள்போல யாழிசையோடு பாடுகிறாள். மாதவியின் பாடல் கேட்ட கோவலன்,

கானல்வரி யான்பாடத் தான் ஒன்றின்மேல் மனம்வைத்து

மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்

(சிலப்பதிகாரம்: 7: 52-2-3)

என அவளை இழிவாக நினைத்துப் பிரிந்து போகிறான்.

கோவலன் பிரிவால் வாடிய மாதவி தன் காதல் உணர்வை எல்லாம் தாழை மடலில் கடிதமாகத் தீட்டி வசந்தமாலை என்ற தன் தோழியிடம் கொடுத்தனுப்புகிறாள்; ‘கடிதம் காட்டிக் கோவலனை அழைத்து வா’ என வேண்டுகிறாள். கடிதம் கண்ட கோவலன் ‘அவள் ஒரு நாடக நடிகை; கை தேர்ந்த நடிகை; என்பால் அன்புடையவள் போல் இதுவரை நடித்திருக்கிறாள்’ என்று கூறி மடலை ஏற்காமல் வசந்த மாலையை அனுப்பி விடுகிறான். செய்தியறிந்த மாதவியோ ‘மாலைக்காலத்தே வாரார் ஆயினும் காலையில் காண்போம்’ என்று வருந்திக் காத்திருக்கிறாள்.

ஆனால் கோவலனோ, தன் மனைவி கண்ணகியிடம் செல்கிறான்; தன் செயலுக்கு வருந்துகிறான். அவேளா தீய கனவொன்று கண்ட குழப்பத்தில் இருக்கிறாள். அந்த நேரத்தில் ‘மாதவியோடு வாழ்ந்து என் குலம் தந்த குன்று போன்ற பொருளை எல்லாம் இழந்துவிட்டேன்; அது நாணமாக இருக்கிறது’ என்கிறான். ‘மாதவிக்குப் பொருள் கொடுக்க ஒன்றுமில்லை என வருந்துகிறான் போலும்’ என எண்ணிய கண்ணகி ‘சிலம்புகள் உள்ளன. கொள்க’ என்கிறாள். தன் மனைவியின் உள்ளத்தைப் புரிந்து கொண்ட கோவலன் ‘அச்சிலம்பையே முதலாகக் கொண்டு மதுரை சென்று வணிகம் செய்வேன்; புறப்படு’ என்கிறான். மறுப்பு இன்றி அவளும் புறப்படுகிறாள். புகார் நகரிலிருந்து மதுரை வரை அவர்களுக்கு வழித்துணையாகச் சமணப் பெண் துறவி கவுந்தியடிகள் வருகிறார். அவர்கள் சோழ நாட்டு வளங்களைப் பார்த்துக்கொண்டே பயணம் செய்து சீரங்கத்தை அடைகின்றனர். பின் காவிரியைக் கடந்து நடக்கின்றனர். இத்துடன் புகார்க் காண்டம் முற்றுப் பெறுகிறது.

2.2.2 மதுரைக் காண்டம் உறையூரைத் தாண்டி, ஒரு மறையவனிடத்தில் வழிகேட்டு, நடந்து ஒரு கொற்றவை கோயிலை அடைகின்றனர். அங்குப் பாலைநில மக்களின் கொற்றவை வழிபாட்டைக் கண்டு களிக்கின்றனர். சாலினி என்ற வேட்டுவப் பெண்ணின் மேல் வந்த கொற்றவை அங்கிருக்கும் கண்ணகியைப் பலவாறு போற்றுகிறாள்.

இவளோ கொங்கச் செல்வி குடமலை யாட்டி

தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து

ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமா மணி  (சிலப்பதிகாரம்: 12: 47-50)

(பொருள்: இவள் கொங்குநாடு, குடநாடு, தென்தமிழ்நாடு ஆகிய நாடுகளை ஆளும் தெய்வ மகள்; முற்பிறப்பில் செய்த தவத்தின் காரணமாக இத்தகைய சிறப்பினைப் பெற்றவள்; மிக உயர்ந்த மாணிக்க மணி திரண்டு பெண் உருக்கொண்டது போன்ற சிறப்புடையவள்.)

பின்னர்க் கோவல – கண்ணகியர் தம் பயணத்தைத் தொடர்கின்றனர். வழியில் மாதவி அனுப்பிய தூதுவனாகிய கோசிகன் எனும் அந்தணன் கோவலனைத் தனியே சந்திக்கிறான். மாதவி கொடுத்தனுப்பிய இரண்டாவது கடிதத்தைக் கொடுக்கிறான்.

கோவலனைப் பிரிந்த அவன் பெற்றோர், புகார் மக்கள், மாதவி முதலானோரின் துயரைக் கோசிகன் மூலம் கேட்டு உணர்கிறான். அதோடு மாதவி தீங்கற்றவள் என்பதைக் கடிதத்தின் மூலம் புரிந்து கொள்கிறான். எல்லாவற்றிக்கும் தன் செயலே காரணம் என உணர்கிறான்.

தன்தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி

என்தீது என்றே எய்தியது உணர்ந்து

(சிலப்பதிகாரம்: 13: 64-65)

பின்னர்ப் பயணம் தொடர்ந்து, அவர்கள் வையை ஆற்றைக் கடந்து மதுரையின் மதில் புறத்தில் உள்ள புறஞ்சேரியை அடைகின்றனர். விடிந்ததும், கோவலன் கவுந்தியிடம் கண்ணகியை ஒப்படைத்து விட்டு மதுரைக்குள் செல்கிறான். தன் வணிக இனத்தாரைக் கண்டு வணிகம் செய்து பொருள் ஈட்டும் நோக்குடன் செல்கிறான். மதுரையிலுள்ள இரத்தினக் கடைவீதி, பொன் கடைவீதி, கூலவீதி, பரத்தையர் வீதி எனப் பலவற்றைக் கண்டு மதுரையின் அழகில், வளத்தில் மகிழ்வு எய்தி, மெய்ம்மறந்து திரும்புகிறான்.

புறஞ்சேரி வந்த மாடலன் என்னும் மறையோன் கவுந்தியடிகளை வணங்குகிறான். மாடலனைக் கோவலன் வணங்குகிறான். தீவினையால் துயருற்ற கோவலனைக் கண்ட மாடலன், அவன் முன்னர்ச் செய்த நல்வினைகளை எல்லாம் எடுத்துரைக்கிறான்.

•   ஒரு முதிய பார்ப்பனன் உயிரைக் காப்பாற்ற மதயானையை எதிர் கொண்டு அடக்கிய கருணை மறவன்.

•   அறியாது கீரிப்பிள்ளையைக் கொன்ற ஒரு பார்ப்பனியின் துயர் துடைத்தவன்.

•   ஒரு பத்தினிபால் பழி சுமத்திய பொய்யன் உயிரைப் பூதத்திடமிருந்து காக்கத் தன் உயிரைக் கொடுக்க முன்வந்த தியாக சீலன்.

இப்படி இந்தப் பிறவியில் நல்வினையே செய்த கோவலன் துயர் அடையக் காரணம் முற்பிறப்பில் செய்த தீவினைப் பயன்போலும் – என உரைக்கிறான். அவனிடம் கோவலன் தான் கண்ட தீய கனவினைக் கூறுகிறான்.

கனவில் கீழ்மகன் ஒருவனால் தன் ஆடை களையப்பட்டு எருமைக் கடாவில் ஏறிச் செல்லவும், கண்ணகி மிகப்பெரிய துன்பம் அடையவும், பின்னர் இருவரும் சான்றோர் அடையும் துறக்க உலகம் செல்லவும், மாதவி, மணிமேகலையை பௌத்தத் துறவியாக்கவும் – கண்டதாகக் கூறுகிறான். உடன் கேட்டுக் கொண்டிருந்த கவுந்தியடிகள், இப்புறஞ்சேரி தவத்தோர் வாழும் இடம்; இங்கு இல்லறத்தார் தங்குதல் கூடாது என்று கூறி மாதரி என்னும் ஆயர் மகளிடம் கோவல-கண்ணகியரை அடைக்கலப் படுத்துகிறார். இங்கு அருகனைத் தவிரப் பிற கடவுளரை வணங்காத கவுந்தியடிகள் கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது, பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலம் எனக் கண்ணகியைக் கடவுள் நிலைக்கு உயர்த்திப் பேசுகிறார்.

மாதரி வீட்டில் அடைக்கலம் புகுந்த கண்ணகி, அவள் மகள் ஐயை துணையுடன் உணவு சமைத்துக் கோவலனுக்குப் படைக்கிறாள். அமுதுண்ட கோவலன், கண்ணகிக்குத் தான் செய்த தீங்கினை எண்ணி இரங்குகிறான்.

இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்

சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்

(சிலப்பதிகாரம்: 16: 67-68)

(முதுகுரவர் = பெற்றோர்; முதுக்குறைவி = பெரும் அறிவுடையவள்)

“நான் என்னுடைய தாய் தந்தையர்க்கு ஏவல் செய்வதிலிருந்து தவறிவிட்டேன். சிறிய வயதிலே பெரிய அறிவினை உடையவளாகிய நினக்கும் (கண்ணகிக்கும்) தீங்கு செய்தேன்” என்பது இவ்வடிகளின் பொருள்.

தன் தீங்கை எல்லாம் பொறுத்துக் கொண்ட கண்ணகியைப் போற்றுகிறான்.

என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த

பொன்னே கொடியே புனைபூங் கோதாய்

(சிலப்பதிகாரம் : 16: 88-89)

எனப் பாராட்டுகிறான்.

பின் அவளுடைய சிலம்பில் ஒன்றை எடுத்து விற்றுவரச் செல்கிறான். அவன் எதிரே, நூறு பொற்கொல்லர்களுடன் அரண்மனைப் பொற்கொல்லன் வருகிறான். அவனிடம், காவலன் தேவிக்கு ஆவதோர் காற்குஅணி, நீவிலை இடுதற்கு ஆதியோ (சிலப்பதிகாரம்: 16: 111-112) (அரசனுடைய தேவிக்குப் பொருத்தமான இச்சிலம்பின் விலையை நீ சொல்ல முடியுமா?) எனச் சிலம்பைக் காட்டிக் கேட்கிறான். இது பொற்கொல்லனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. தான் திருடிய சிலம்போடு இச்சிலம்பு ஒத்திருப்பது கண்டு, தேவியின் சிலம்பைத் திருடிய கள்வன் என அரசனிடம் காட்டிக் கொடுக்கிறான். அரசனோ, ‘கள்வன் கையில் அச்சிலம்பு இருப்பின் அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவருக’ என ஏவலர்க்கு ஆணையிடுகிறான். இதனால் கோவலன் கொலைப்படுகிறான். இதனை அவலச் சுவையுடன் அனைவர் நெஞ்சமும் நெகிழ வெளியிடுகிறார் இளங்கோ.

மண்ணக மடந்தை வான்துயர் கூரக்

காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்

கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து(சிலப்பதிகாரம்:16: 215-17)

(நிலமகள் மிகப்பெரிய துன்பம் அடையவும், அரசனின் நீதி பிறழவும், கோவலன் பண்டை வினை காரணமாக வீழ்ந்து படுகிறான்.)

புறஞ்சேரியில் ஆய்ச்சியர்கள் சில தீய நிமித்தங்களைக் கண்டதால் வரும் துயர்கள் நீங்குவதற்காகக் கண்ணனைப் போற்றிக் குரவைக் கூத்தினை நிகழ்த்துகின்றனர். ஆய்ச்சியர் கண்ணனுடைய அவதாரச் சிறப்புக்களை எல்லாம் வியந்து போற்றிப் பாடி ஆடுகின்றனர்.

கூத்தின் முடிவில் கோவலன் கொலைப்பட்டான் என்ற செய்தி வருகிறது. கேட்ட கண்ணகி அழுது புலம்பி அரற்றுகிறாள். அவளது அவலம், பின்னர் அவல வீரமாக மாறுகிறது. மன்னவன் தவற்றால், திருடன் என்று பழி சுமத்தப்பட்டு என் கணவன் கொலைப்பட்டான். அவனுக்கு ஏற்பட்ட பழியைத் துடைப்பேன் என்று வீறு கொண்டு எழுகிறாள். கதிரவனைப் பார்த்துக் கள்வனா என் கணவன்? என்று கேட்கிறாள். அப்போது கள்வன் அல்லன் என அசரீரியாகச் செய்தி வருகிறது. தன் எஞ்சிய ஒரு சிலம்பைக் கையில் ஏந்தியவளாய் மதுரை நகர்ப் பெண்களிடம் பலவாறு சூளுரைத்து நடக்கிறாள். காதற் கணவனைக் காண்பேன்; அவன் வாயில் தீதுஅறு நல்லுரை கேட்பேன் என்கிறாள். மதுரை மக்கள் தென்னவன் கொற்றம் சிதைந்தது என்றும், செம்பொற் சிலம்பொன்று கையேந்தி வம்பப் பெருந்தெய்வம் வந்தது என்றும் அஞ்சிப் பதறுகின்றனர். கொலைப்பட்டுக் கிடக்கும் கோவலன் பாதம் பற்றி அழுகிறாள் கண்ணகி. அப்பொழுது அவன் உயிர்கொண்டு எழுந்து, நீ இங்கு இரு என்று சொல்லி, மறுபடி உடம்பைத் துறந்து வானுலகு செல்கிறான். பின் கண்ணகி தீவேந்தனைக் கண்டு வழக்குரைப்பேன் என அரண்மனை செல்கிறாள்.

பாண்டிய மன்னனிடம், ‘தேரா மன்னா! என் கால் சிலம்பை விலைபேச முயன்று உன்னால் கொல்லப்பட்ட கோவலன் மனைவி நான். என் சிலம்பு மணிகளை உள்ளீடாகக் கொண்டது’ என வழக்குரைக்கிறாள். பாண்டியன் தன் தேவி சிலம்பு முத்துப் பரலை உடையது எனக் கூறிக் கோவலனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பை வரவழைத்துக் கொடுக்கிறான். கண்ணகி சிலம்பை உடைக்கிறாள். அதிலிருந்து மாணிக்கப் பரல் தெறித்து வீழ்கிறது; ‘பொற்கொல்லன் சொல்லைக் கேட்ட யான் அரசன் அல்லன்; யானே கள்வன்’ எனக் கூறிப் பாண்டிய மன்னன் உயிர்விடுகிறான்.

பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட

யானோ அரசன் யானே கள்வன்

(சிலப்பதிகாரம்: 20: 74-75)

பாண்டிமாதேவியும் உயிர்விடுகிறாள்.

கண்ணகி புகார் நகரில் வாழ்ந்த ஏழு பத்தினிப் பெண்களின் வரலாற்றைக் கூறி, ‘நானும் அவர்களைப் போன்ற ஒரு பத்தினியாகின் இந்த அரசையும் மதுரையையும் ஒழிப்பேன்’ எனச் சூள் உரைக்கிறாள்; தன் இடமுலையைத் திருகி, மதுரையை வலம்வந்து, வீதியில் எறிகிறாள். அப்போது தீக்கடவுள் தோன்றி அவளிடம் ஏவல் கேட்கிறான். பார்ப்பனர், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர், மூத்தோர், குழந்தைகள் இவர்களை விடுத்துத் தீயவர்களை மட்டுமே அழிக்க என அனல் கடவுளுக்கு ஆணையிடுகிறாள். மதுரை எரிகிறது; அங்கிருந்த அரச-அந்தண, வணிக-வேளாண் பூதங்கள் வெளியேறுகின்றன.

மதுரையின் காவல் தெய்வமான மதுராபதி கண்ணகி முன் தோன்றிக் கோவலன் கொலைப்பட்டதற்கான காரணம் அவன் முற்பிறப்பில் செய்த தீவினை காரணமாக அவனுக்கு இடப்பட்ட சாபமே என எடுத்துக்கூறி, மதுரையைத் தீயிலிருந்து விடுவிக்கிறாள். பின்னர்க் கண்ணகி மேற்கு நோக்கி நடந்து சேரநாட்டை அடைகிறாள். நெடுவேள் குன்றில் ஒரு வேங்கை மரத்தின் கீழ் நிற்கிறாள். பதினான்கு நாள் கடந்த பின்னர், இந்திரன் முதலிய தேவர் வந்து அவளைப் போற்றுகின்றனர். அவர்களோடு இருந்த கோவலனோடு சேர்ந்து வான ஊர்தியில் ஏறித் துறக்கம் செல்கிறாள் கண்ணகி. இத்துடன் மதுரைக்காண்டம் முடிகிறது.

2.2.3 வஞ்சிக் காண்டம் கண்ணகி வானுலகு சென்ற காட்சியைக் கண்ட மலைக்குறவர்கள், அவளைத் தம் குல தெய்வமாகக் கருதி அவளுக்காகக் குரவைக் கூத்து நிகழ்த்துகின்றனர். மலைவளம் காணவந்த அரசன் செங்குட்டுவனிடம் தாம் கண்ட காட்சியை எடுத்துரைக்கின்றனர். உடனிருந்து சாத்தனார் கோவல- கண்ணகியர் வரலாற்றை புகார், மதுரை நிகழ்வுகளை அரசனுக்கு விளக்குகிறார். அதைக் கேட்ட செங்குட்டுவன் மனைவி, ‘நம் சேரநாடு வந்த இப்பத்தினிக் கடவுளுக்கு வழிபாடு எடுக்க வேண்டும்’ என்கிறாள்.

நம் அகல்நாடு அடைந்த இப்

பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்

(சிலப்பதிகாரம்: 25: 113-114)

(பரசல் = வழிபடல்)

கண்ணகிக்குச் சிலை செய்ய இமயத்தில் கல் எடுத்துக் கங்கையில் புனித நீராட்டிக் கொண்டுவந்து வஞ்சியில் கோயில் எடுப்பதே நோக்கமானாலும், தமிழர் வீரத்தை நிலை நாட்டுவதற்காகவும் சேரன் படை எடுத்துச் செல்கிறான். வழியில் பல மன்னர்கள் திறைப் பொருளுடன் சேரனை வரவேற்கின்றனர்; வாழ்த்துகின்றனர். எதிர்த்த மன்னர்களைச் சேரன் வெல்கிறான்.

கண்ணகி சிலை வடிக்க, இமயத்தில் கல் எடுத்து, தமிழர் தம் வீரத்தைப் பழித்த கனக-விசயர் தலையிலே அக்கல்லைச் சுமந்து வரச் செய்து, கங்கை ஆற்றில் புனித நீராட்டுகிறான். அப்போது அங்கு வந்த மாடல மறையோன் சேரனின் வெற்றியைப் புகழ்கிறான். பின்னர்க் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்தவற்றைக் கேட்ட அவர்களின் தாயர் இறந்துபட்டனர் என்பதையும், அவர்தம் தந்தையர் துறவு மேற்கொண்டனர் என்பதையும், மாதவி-மணிமேகலை பௌத்தத் துறவியாகினர் என்பதையும், கவுந்தியடிகள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்பதையும், அடைக்கலமாகக் கண்ணகியைப் பெற்ற மாதரி தீப்பாய்ந்து உயிர் துறந்தாள் என்பதையும், கொற்கை அரசன் வெற்றிவேற் செழியன் ஆயிரம் பொற்கொல்லர்களைப் பத்தினிக் கடவுளுக்குப் பலியிட்டான் என்பதையும் தெரிவிக்கிறான். இவ்வாறு புகார், மதுரை நிகழ்வுகளைக் கேட்டறிந்த செங்குட்டுவன் வஞ்சி திரும்புகிறான்.

சேரன் சிற்பநூல் வல்லாரைக் கொண்டு கண்ணகிக்குக் கோயில் எழுப்புகிறான். இமயக் கல்லில் வடிக்கப்பட்ட கண்ணகி சிலையைப் பிரதிட்டை செய்து முறைப்படி வழிபாடு நடத்துகிறான். கண்ணகியின் அடித்தோழி, தேவந்தி, காவற்பெண்டு முதலானோர் அங்கு வந்து கண்ணகியை வாழ்த்திப் பாடுகின்றனர். பத்தினிக் கடவுள் மின்னல் கொடியாகச் செங்குட்டுவனுக்கும் காட்சியளிக்கிறாள். முன்பு பாண்டியனைப் பழிவாங்கிய வீரக்கண்ணகி, இங்கு அவனை மன்னித்து அருள் செய்யும் அருள் கடவுளாக மாறுகிறாள்.

தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில்

நல்விருந்து ஆயினான் நான்அவன் தன் மகள்

வெல்வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்

என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்(சிலப்பதிகாரம்: 29 பாடல் : 10)

என அருள்புரிகிறாள்.

(பாடல் பொருள்: பாண்டியன் தீமையற்றவன்; அவன் தேவர் உலகம் அடைந்து தேவர்களின் விருந்தினன் ஆகிவிட்டான்; நான் அவனுடைய மகள்; நான் இம்மலை நாட்டில் எப்போதும் நீங்காது தங்குவேன்; என் அருமைத் தோழியரே! நீங்கள் எல்லோரும் வாருங்கள்.)

கண்ணகிக் கடவுளின் அருள்பெற்ற தோழியர் அம்மானை வரி, கந்துகவரி, ஊசல்வரி முதலான வரிப்பாடல்களால் மூவேந்தரையும், பத்தினிக் கடவுளையும் வாழ்த்துகின்றனர். இப்பத்தினி வழிபாட்டில் பன்னாட்டு மன்னர்கள் கலந்து கொள்கின்றனர்; குறிப்பாக இலங்கைக் கயவாகு மன்னன் இவ்விழாவில் கலந்து கொள்கிறான். பத்தினிக் கடவுள், அவ்வந்நாட்டு வழிபாட்டில் தான் எழுந்தருளுவதாக வரமளிக்கிறாள். இத்துடன் வஞ்சிக்காண்டம் நிறைவு பெறுகிறது.

2.3 சிலப்பதிகாரம் - கருத்துக் களஞ்சியம்

சமயம், சமூகம், அரசியல் சார்ந்த பல கருத்துகளைக் கொண்டுள்ள ஒரு சிறந்த படைப்பு சிலம்பு. சிலப்பதிகாரத்தின் அடிப்படையாக மூன்று கருத்துகள் கூறப்படுகின்றன.

1) அரசியலில் தவறு செய்வோர்க்கு அறக்கடவுள் எமனாகும்

2) புகழ்பெற்ற பத்தினியை மேலோர் போற்றுவர்

3) ஊழ்வினை தவறாது தன் பயனை ஊட்டும்

என்பன அவை. இவற்றோடு தமிழர்தம் நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகவும் திகழ்கிறது சிலப்பதிகாரம். இதில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் உண்டு. சமண, பௌத்த, வைதீக நெறிகளும் உண்டு. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆய்ச்சியர், குறவர், பரத்தையர் எனப் பல இனத்தவர்களும் இங்குப் பேசப்படுகின்றனர். இவற்றை எல்லாம் தொகுத்துக் காண்பது ஓர் அரிய செயலே. மாணவர் தம் பயன்கருதி ஒரு சில இங்குச் சுட்டப்பெறுகின்றன.

2.3.1 அரசியல் அரசியல் பிழைத்தோர்க்கு அறமே எமனாக மாறும்; செங்கோல் வளைந்தபின் உயிர் வாழ்தல் நன்று அன்று; அரசன் நல்லாட்சி செய்தால்தான் அந்நாட்டில் வாழும் மகளிர்க்கும் கற்பு வாழ்க்கை சிறக்கும் என்பன போன்ற பல அரசியல் உண்மைகளைப் பேசுகிறது சிலம்பு.

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக (சிலப்பதிகாரம் – பதிகம் : 61-62) என்ற சாத்தனார் கூற்றிற்கு இணங்க இளங்கோ தம் காப்பியப் படைப்பை மூவேந்தர்க்கும் உரியதாகவே படைத்துள்ளார், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் குறிப்பிடுவது போலச் சிலம்பின் தொடக்கமும் அரசியல், முடிவும் அரசியல் என்ற நிலையில் அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கிறது சிலப்பதிகாரம். புகார், மதுரை, வஞ்சி எனக் காண்டப் பெயர்களை அமைத்து, மூவேந்தர்களையும், மூன்று நாடுகளையும், அவற்றின் தலைநகரங்களையும் ஒருங்கு இணைக்கிறார் இளங்கோ. மேலும் பத்தினி வழிபாட்டில் தமிழ் மன்னர்களை மட்டுமன்றிப் பிறநாட்டு மன்னர்களையும் இணைத்து ஒற்றுமைப்படுத்துகிறார்.

அறியாது பிழை செய்த பாண்டியன் தன் உயிரைக் கொடுத்து நீதியை நிலை நாட்டுகிறான்.

வல்வினை வளைத்த கோலை மன்னவன்

செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது

(சிலப்பதிகாரம்: 25: 98-99)

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் (சிலப்பதிகாரம்-பதிகம்: 55) என்ற காப்பிய அறம் மதுரைக் காண்டத்தில் எடுத்துரைக்கப்படுகிறது. பாண்டிய மன்னர்களின் நேர்மை, நீதி தவறாத ஆட்சிமுறை இங்கு விளக்கப்படுகிறது. ‘நற்றிறம் படராக் கொற்கை வேந்தே’ என்றும், ‘தேரா மன்னா’ என்றும் கண்ணகி பாண்டிய மன்னனைப் பழித்தும் கூட, அவன் அமைதியாகக் ‘கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று’ என்று கூறுவது அவனது நேர்மைக்கு – செங்கோன்மைக்கு எடுத்துக்காட்டு. நடுவுநிலையோடு வழக்கைக் கேட்டுத் தன் தவறு உணர்ந்து உயிரையே விடுகிறான் பாண்டியன்.

அறியாது பசுவின் கன்றினைக் கொன்ற இளவரசனைப் பலிகொடுத்துப் பசுவின் துயர் களைந்த மனுநீதிச் சோழனைப் பற்றிய குறிப்பைச் சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம். தமிழர் திறம் பழித்த வட ஆரிய மன்னரை வெற்றி கொள்கிறான் சேரன் செங்குட்டுவன். வடநாட்டுப் போர் தொடங்கத் திட்டமிட்ட சேரன் தூது அனுப்ப எண்ணுகிறான். ஆனால் வஞ்சி நகரில் முரசு அறைந்து அறிவித்தாலே போதும்; செய்தி வடநாடு எட்டிவிடும் என்கிறான் அமைச்சன். இது நாட்டில் பிறநாட்டு ஒற்றர்கள் நிறைந்திருந்ததைக் காட்டுகிறது. அரண்மனையைச் சுற்றி அகழி இருந்ததையும் கோட்டை மதிலில் பல்வேறு வகையான போர்க் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததையும் மதுரைக் காண்டத்தில் காண்கிறோம். அரசனுடன் புலவர் பெருமக்களும், பட்டத்து அரசியும் உடன் இருந்து அரசியல் முடிவுகளை எடுத்தமை சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுக்க முடிவு செய்ததன் மூலம் அறியலாம்.

பேரரசின் கீழ் ஆட்சி செய்து வரும் சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் பிறநாட்டு மன்னர்களும் திறை செலுத்திய செய்தியைச் சிலம்பு தெரிவிக்கிறது. அதோடு மன்னனைக் காண வரும் மக்களும் குறுநில மன்னர்களும் காணிக்கைப் பொருளுடன் வந்து அரசனைக் கண்டு வாழ்த்துவதும் அரசியல் வழக்கமாக இருந்திருக்கிறது. போரில் புறமுதுகு காட்டி ஓடியவர்களையும், தவக்கோலம் பூண்டு உயிர் பிழைத்துச் சென்றவரையும் தாக்குவது போர் அறம் அன்று என்பதையும் சிலம்பு சித்திரிக்கிறது. இப்படி எத்தனையோ பல அரசியல் செய்திகளைச் சிலம்பின் வழி அறியலாம். இப்படிப் பல சிறப்புக்களைச் சொன்னாலும், தமிழகத்தில் மூவேந்தர்களும் ஒற்றுமையாக இல்லை என்ற உண்மையைப் பதிவு செய்யவும் இளங்கோ தவறவில்லை; அதற்காகவே ஒற்றுமை உணர்வை வளர்க்கவே அவர் சிலம்பைப் படைத்தார் எனலாம்.

2.3.2 சமயம் சிலப்பதிகாரத்தில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய சமயச் சிந்தனைகள் நிறைந்து காணப்படுகின்றன. கவந்தியடிகளையும் சாரணர்களையும் படைத்து, அவர்கள் வாயிலாகச் சமண சமயக் கருத்துகளை வெளியிடுகிறார். ஆய்ச்சியர் குரவை என்னும் காதை திருமால் வழிபாட்டை எடுத்துரைக்கிறது. குன்றக்குரவை முருக வழிபாட்டைப் பேசுகிறது. வேட்டுவவரி கொற்றவை வழிபாட்டைச் சிறப்பிக்கிறது. மாதவி, மணிமேகலை துறவு மூலம் பௌத்தக் கோட்பாடுகள் சிறப்பிக்கப்படுகின்றன. இவை தவிர இந்திரவிகாரம், மணிவண்ணன் கோட்டம், இலகொளிச் சிலாதலம், நிக்கந்தக் கோட்டம், நிலாக்கோட்டம், ஊர்க்கோட்டம் எனப் பல கோவில்கள் இருந்ததைச் சிலம்பு சுட்டுகிறது. இவை பல்வேறு சமயக் கடவுளருக்குரிய கோயில்கள் ஆகும். இப்படிப் பல சமயங்களை, சமயக் கருத்துகளை விருப்பு வெறுப்பு இன்றி எடுத்துரைக்கும் இளங்கோவடிகள், பத்தினி வழிபாடு என்ற ஒன்றில் அனைத்துச் சமயங்களையும், சமயக் குரவர்களையும் ஒருங்கிணைக்கிறார். இது இளங்கோவின் தனிச் சிறப்பாகும்.

2.3.3 சமூக வாழ்வு இந்திய சமூகம் ஒரு சாதியச் சமூகம் என்பது அனைவரும் அறிந்ததே. இச்சாதியச் சமூகம் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற முறையிலும் இனக்குழுக்களான குறவர், ஆயர், வேட்டுவர் என்ற நிலையிலும் சிலம்பில் பேசப்படுகிறது. கோவல-கண்ணகியர் பெருவணிக குல மக்கள்; இவர்தம் வாழ்வியல் வளத்தோடு கணிகையர் குலம் இணைகிறது. பெருவணிகர் பற்றிப் பேசும் சிலம்பு சிறுவணிகர்களான அப்பம் விற்போர், பிட்டு விற்போர், பூவிலையாளர், இறைச்சி விற்போர் பற்றியும் பேசுகிறது. பொன்கடை வீதி, இரத்தினக்கடை வீதி, தானியம் விற்கும் கூலவீதி, துணி விற்கும் அறுவை வீதி, நாளங்காடி (பகல் நேரச் சந்தை), அல்லங்காடி (இரவு நேரச் சந்தை) எனப் பெருநகர் ஒரு பெரும் வணிகக் கூடமாகத் திகழ்ந்ததைச் சிலம்பு விரிவாகப் பேசுகிறது. இந்நகர்ப்புற நாகரிக வளர்ச்சியின் ஒரு கூறாகப் பரத்தையர் வீதி தனியாக இருந்ததையும் சிலம்பு எடுத்துரைக்கிறது. நகர அமைப்பே பொருளாதார நிலை, உயர் பதவி ஆகிய அடிப்படையில் அமைந்துள்ளதை இந்திர விழவூரெடுத்த காதை வாயிலாகப் பேசுகிறார் இளங்கோவடிகள். இவ்வகையில் குறிப்பிடத்தக்கது பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என்ற புகார் நகர அமைப்பு ஆகும். வணிகரில் பெருவணிகர் இருக்கிற இடம் பட்டினப்பாக்கம்; சிறு வணிகர் வாழிடம் மருவூர்ப்பாக்கம்; உயர் படைத்தளபதிகள் வாழிடம் பட்டினப்பாக்கம்; சாதாரணப் படைவீரர்கள் இருப்பிடம் மருவூர்ப்பாக்கம்; கணிகையரில் தலைக்கோல் பட்டம் பெறும் கணிகையர் வாழிடம் பட்டினப்பாக்கம்; சாதாரண கணிகை வாழிடம் மருவூர்ப்பாக்கம்.

கோவலன்-கண்ணகி திருமணம் கூட நகர்ப்புற நாகரிகத்தின் அடிப்படையில் சடங்குகள் கொண்டதாக அமைகின்றது. மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் (சிலப்பதிகாரம்: 1: 52-53) வந்து திருமணம் நடக்கிறது. மணிமேகலைக்குப் பெயர் சூட்டும் விழாவில் ஆயிரம் கணிகையர் வாழ்த்துகின்றனர்; மிகப் பெரிய அளவில் தானம் செய்கிறான் கோவலன். இறந்தோர்க்காகக் கங்கை நீராடி நீர்க்கடன் செய்கிறான் அரசன். இந்திரவிழா புகார் நகரில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அப்போது பல்வேறு கடவுளர்களுக்கு வழிபாடு நடக்கிறது. தலைக்கோல் பட்டம் பெற்ற மாதவி விழாவில் ஆடுகிறாள். இவை அனைத்துமே நகர்ப்புற நாகரிக வாழ்வின் வெளிப்பாடாக அமைகின்றன.

இவையன்றி நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் முறையும் சிலம்பில் சிறப்பிடம் பெறுகின்றது. வேட்டுவர்களின் கொற்றவை வழிபாடு, ஆய்ச்சியர்களின் கண்ணன் வழிபாடு, குன்றக் குறவர்களின் வேலன்-வள்ளி வழிபாடு, அம்மக்களின் ஆடல் பாடல்கள் முதலானவை நாட்டார் வாழ்வியலைச் சித்திரிப்பன. கோவலர் வாழ்க்கை குறையற்றது எனக் கவுந்தியடிகளால் சிறப்பிக்கப்படுகின்றது. வேட்டுவ மகள் சாலினி, தெய்வம் ஏறப்பெற்று, அம்மக்களால் தெய்வமாகவே வழிபடப்படுகின்றாள். வேட்டுவ மக்கள் கொற்றவைக்கு உயிர்ப்பலி கொடுப்பதும் தம்மையே பலிதருவதும் வழக்கமாக இருந்திருக்கின்றன.

கோவல-கண்ணகியரைத் தனிமனைப்படுத்தும் நிகழ்ச்சி அக்காலத்தே தனிக்குடும்ப வாழ்க்கை முறை வழக்கில் இருந்துள்ளதைத் தெளிவுபடுத்துகிறது.

அரசனும் அரசமாதேவியரும் ஆடம்பரமாக வாழ்ந்தனர். பாண்டிமாதேவி தான் கண்ட கனவினை அரசனுக்குத் தெரியப்படுத்தப் புறப்பட்டுவரும் காட்சி அவர்தம் ஆடம்பர வாழ்வுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. இங்குப் பல்வேறு மகளிரும் பணியாட்களும் எண்ணற்ற அணிகலன்களையும், மணப்பொருட்களையும், ஒளி விளக்குகளையும் ஏந்திச் செல்கின்றனர். ஆடி (கண்ணாடி) ஏந்தினர்; கலன் ஏந்தினர்; அவிர்ந்து விளங்கு அணியிழையினர்; கோடி எந்தினர்; பட்டு ஏந்தினர்; கொழுந்திரையலின் செப்பு ஏந்தினர் (சிலப்பதிகாரம்: 20: 13) என்று இவ்வாறு இளங்கோ காட்டும் காட்சி அரசியரின் பெருவாழ்வின் விளக்கமாக அமைகின்றது.

அரண்மனைப் பொற்கொல்லனை அறிமுகம் செய்கிறபோதும் கூட, அவன் நூறு பொற்கொல்லர்கள் பின்வர ஆடம்பரமாக வருவதாக இளங்கோ காட்டுகிறார். அதே நேரத்தில் துறவியர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததும் இங்குக் குறிப்பிடப்படுகிறது. இவர்களுக்குச் சாபமிடும் ஆற்றலும், வருவதுணரும் ஆற்றலும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இங்ஙனம் அரசன் முதல் ஆண்டிவரை பல்வேறு தளத்திலுள்ள மக்களின் வாழ்வியல் களஞ்சியமாகச் சிலம்பு திகழ்கிறது.

2.3.4 கலை நாகரிகத்தின் வெளிப்பாடே கலை; இயல், இசை, நாடகம், கூத்து, கோயிற்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை எனப் பல்வேறு கலைகள், கலைஞர்கள் கலைவாழ்வு சிறந்து விளங்கியமையைச் சிலப்பதிகாரம் வழி அறிகிறோம். கோயில்கள் கோட்டம், நியமம், விகாரம், சிலாதலம் எனப் பல பெயர்களில் வழங்கப்பட்டன. கண்ணகிக்குச் சிலை வடித்தமை, கருங்கல்லில் சிலை செய்த செய்தியைப் புலப்படுத்துகிறது. சிலம்பின் அரங்கேற்று காதை தமிழர்தம் இசைக்கலை, நாட்டியக் கலைக்குச் சிறந்த சான்றாகும். நாட்டியக் கலையில் வேத்தியல், பொதுவியல் என இருவகை இருந்தமை தெரிகிறது. இங்குப் பாடல் ஆசான் இயல்பு, யாழாசிரியன் இயல்பு, குழல் வாசிப்பவன் இயல்பு, தண்ணுமை முழங்குவோன் இயல்பு என இசைக் கலைஞர்களின் இயல்பு தெளிவாக விளக்கப்படுகிறது. மாதவியின் நாட்டியத்திறன், அவளது ஒற்றைக்கை மற்றும் இரட்டைக்கை அவிநயம் பற்றிய விவரிப்பு, அதனால் அவள் தலைக்கோல் அரிவை என்ற பட்டம் பெற்றது, நாட்டிய அரங்கம் (மேடை, விளக்குகள், திரைகள்) பற்றிய விளக்கம் ஆகிய அனைத்தும் சிலப்பதிகாரம் எழுந்த காலத்தில் இக் கலைகள் பெற்றிருந்த செல்வாக்கினை அறியத் துணைபுரிகின்றன. இவையன்றி மாதவி கடவுளர் வடிவுகொண்டு ஆடிய பாண்டரங்கம், குடை, துடி முதலான 11 வகைக் கூத்துகளும், கோவலன் முன்னின்றாடிய காட்சிவரி, தேர்ச்சிவரி, புன்புறவரி முதலான எண்வகை வரிக்கூத்துகளும் தமிழர்தம் கூத்துக்கலைக்குச் சிறந்த சான்றாகும். அதோடு இன்றைய சாமியாட்டம் போன்று சாலினி தெய்வமுற்று ஆடிய கூத்தும், ஆய்ச்சியர் எண்மர் வட்டமாக நின்று ஆடிய குரவைக் கூத்தும் நாட்டுப்புற மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கூத்து வகைகளைப் புலப்படுத்துவன. கண்ணகி-பாண்டிமாதேவி சிலம்பு மற்றும் மாதவி அணிந்த அணிகலன்கள் பற்றிய விவரிப்பும் அக்கால நுண்கலைகளின் திறத்திற்குச் சான்றாகின்றன. இவ்வாறு, சிலம்பு ஒரு கலையின் களஞ்சியமாகத் திகழ்வதை அறிகிறோமன்றோ!

2.3.5 நம்பிக்கைகள் கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும், எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன (சிலப்பதிகாரம்: 5: 237,239) என்பதில் பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நன்மையும், வலக்கண் துடித்தால் தீமையும் ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தது புலப்படுகிறது. கோவலன் கொல்லப்பட்ட அன்று குடத்துப்பால் உறையாது இருத்தல் முதலானவற்றை ஆய்ச்சியர்கள் தீய சகுனங்களாகக் கொள்கின்றனர். கோவல-கண்ணகியர் தாயரின் மறுபிறப்புப் பற்றிய செய்தி, பிறவிகள் தொடரும் என்ற நம்பிக்கையை எடுத்துரைக்கிறது. இறைவனுக்கு விழா எடுக்கவில்லையானால் தீமை நிகழும் என்ற நம்பிக்கை வேட்டுவ வரி மூலம் சுட்டப்பெறுகிறது. வேட்டுவ வரி வேடர்களின் பலி கொடுக்கும் வழக்கத்தை எடுத்துரைப்பதோடு, தன்மூலம் கொற்றவை வெற்றி தருவாள் என்ற நம்பிக்கை இருந்ததையும் காட்டுகிறது. பத்தினிக் கடவுளுக்காகப் பாண்டியன் வெற்றிவேற் செழியன் ஆயிரம் பொற்கொல்லர்களைப் பலியிட்டுச் சாந்தி செய்தான் என்ற செய்தியும் இத்தகைய நம்பிக்கையைத் தெரிவிக்கிறது. கனவு பலிக்கும் என்ற நம்பிக்கை இருந்ததைக் கோவலன், கண்ணகி, பாண்டிமாதேவி ஆகியோர் கண்ட கனவுகள் புலப்படுத்துகின்றன.

2.4 சிலப்பதிகார இலக்கியச் சிறப்பு

இயல், இசை, நாடகம் கலந்தமைந்த சிலப்பதிகாரத்தின் இலக்கியச் சிறப்புக் காரணமாக அதை நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றார் பாரதி. கவிதைச் சுவையும், நிகழ்வுகளும், பாத்திரப் படைப்பும் சிறந்தமைந்த காப்பியச் சுவை கொண்டது சிலப்பதிகாரம். இங்குச் சில எடுத்துக்காட்டுகள் கொண்டு அவற்றைக் காணலாம்.

2.4.1 இலக்கிய நயம் தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம் என்பது மட்டும் அன்று அதன் சிறப்பு. இலக்கிய நயத்திலும் தரத்திலும் சுவையிலும் கூட முதன்மை பெற்று விளங்குகிற ஓர் அருந்தமிழ்க் காப்பியம் சிலம்பு. சிலப்பதிகாரம் என்ற முழுமையான காப்பியத்தைச் சுவைக்க, ரசிக்க இதோ ஒரு சான்று:

சிலம்பின் முதல் காதை மங்கல வாழ்த்துப் பாடல். அதனை எவ்வளவு மங்கலமாகத் தொடங்குகிறார் பாருங்கள்.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று இவ்

அங்கண் உலகளித்த லான்.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு

மேரு வலம் திரிதலான்

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்

மேல்நின்று தான்சுரத்த லான்

(சிலப்பதிகாரம்:1: 1-9)

(திங்கள் = நிலவு; போற்றுதும் = போற்றுவோம்; கொங்குஅலர் தார் = தாது நிறைந்த மலர்மாலை; சென்னி = சோழமன்னன்; அங்கண் = அழகிய இடம்; ஞாயிறு = சூரியன்; திகிரி = ஆணைச்சக்கரம்; பொற்கோட்டு = பொன் மயமான சிகரம்; மழை = மேகம்; நாமநீர் = அச்சம் தரும் கடல்; அளி = கருணை)

எனத் தொடங்குவதில் எத்தனை நயங்கள் பாருங்கள். ‘திங்களை முதலில் கூறினார். இது பெண்மைக்கு முதன்மை தரும் காப்பியம் ஆதலால்’ என விளக்கம் கூறுவர். திங்கள் மங்கலமான சொல் என்பதால் முதலில் கூறினார் என்பர். இன்றைய திறனாய்வாளர்கள் திங்கள், ஞாயிறு, மழை ஆகியவற்றை வாழ்த்துவது இயற்கை வாழ்த்து; இயற்கையில் இறைவனைக் கண்டவர்கள் தமிழர்கள். எனவே இவை இறைவாழ்த்து என்கின்றனர். அரசனையே இறைவனாகக் கண்ட இனம் தமிழ் இனம்; எனவே இவை அரசவாழ்த்து என்கின்றனர். சோழனுடைய வெண்கொற்றக் குடை போல் இருப்பதால் திங்களைப் போற்றுகிறார். அவன் ஆட்சிச் சக்கரம் போல் இமயத்தை வலம் வருவதால் ஞாயிற்றைப் போற்றுகிறார். அவன் கொடைபோன்று மேல்நின்று பொழிவதால் மழையைப் போற்றுகிறார். எனவே இவை அரசியல் வாழ்த்தே என்பர். திங்கள், ஞாயிறு, மழை ஆகிய இவை மூன்றும் முக்குடை; முக்குடை அருகக் கடவுளுக்கு உரியவை; பின்னர் மதுரைக்காண்டத் தொடக்கத்தில் அருகக் கடவுளைத் திங்கள் மூன்றடுக்கிய திருமுக்குடைக்கீழ் இருந்த அறிவன் (சிலப்பதிகாரம்: 11: 1) என்கிறார். எனவே இத்தொடக்க வாழ்த்து அருகக் கடவுள் வாழ்த்தே என்பர்.

இவை மட்டுமா? திங்கள், ஞாயிறு, மழை என்பன மூன்று காண்டப் பொருண்மையை உள்ளடக்கியுள்ளன என்பர். திங்கள் என்பது தண்மை-குளிர்ச்சி; அது இன்பத்தின் குறியீடு. இன்ப வாழ்வைக் கருவாகக் கொண்ட புகார்க் காண்டத்துக்குத் திங்கள் குறியீடு. ஞாயிறு என்பது வெம்மை-அனல்; அது துன்பத்தின் குறியீடு; துன்பியல் சார்ந்த மதுரைக் காண்டத்துக்கு ஞாயிறு குறியீடு. மழை என்பது அருளின் குறியீடு; அது தெய்வம் சார்ந்தது. வஞ்சிக் காண்டம் தெய்வீகம் நிறைந்தது; ஆகவே மழை வஞ்சிக் காண்டத்துக்குக் குறியீடு.

கண்ணகியின் வாழ்வின் மூன்று நிலைகளை (இன்ப-துன்ப-தெய்வநிலை) உணர்த்தும் குறியீடுகளாகவும் இவற்றைக் கொள்வர். இவை மட்டும்தான் இவ்வாழ்த்தில் அடங்கியிருக்கின்றனவா? இல்லை. இன்னும் எத்தனை எத்தனை பொருளையோ உணர்த்தும் வகையில் இது அமைந்துள்ளது. திங்கள் – கண்ணகி; ஞாயிறு – கோவலன்; மழை – மாதவி என மூன்று பாத்திரங்களைக் குறியீடாகக் கொண்டது என்பர். எப்படி? பொருத்திக் காண்போமா? பாருங்கள் எவ்வளவு நயமாக, பொருத்தமாக இது அமைகிறது!

மழை பிறக்கிற மூலம் உவர்நீர்க் கடல்; குடிநீருக்குப் பயன்படாது வெறுத்து ஒதுக்கப்படுவது; அதுபோல மாதவி பிறப்பது உவர்நீர்க் கடல் போன்று சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்படுகிற பரத்தையர் குலம். உவர்நீர்க் கடலில் ஞாயிற்றின் வெம்மை பட உவர்நீர் நன்னீர் ஆவியாகிறது; மேகமாகிறது; அதுபோலக் கோவலனாகிய ஞாயிறு உவர்நீர் ஆகிய மாதவிபால் பட அவள் நன்னீர் மேகமாக நல்ல குலமகளாக மாறுகிறாள். திங்கள் – தண்மையின் குறியீடு. அது மழை மேகத்தில் பட, மேகம் மழையாகப் பொழிகிறது; அதுபோல் நன்னீர் மேகமாய மாதவிபால் கண்ணகியின் தண் ஒளிபட அவள் நல்ல மனைவியாக – தாயாக அமைகிறாள். எனவே திங்கள், ஞாயிறு, மழை என்பன சிலம்பின் முக்கியப் பாத்திரங்களின் குறியீடாக அமைந்து, அவற்றிற்கு இடையேயான புனிதமான உறவு நிலையையும் விளக்குகிறதன்றோ? இவ்வாறு ஆழ்ந்து பார்த்தால் பல பொருள் நயங்களை இவ்வாழ்த்துப் பாடலில் காண முடிகிறது.

2.4.2 நாடக முரண் நாடகத்தில் பின்னால் நிகழவிருக்கும் செயலை முன்னரே குறிப்பாகச் சுட்டிக் காட்டுவதும், முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சியைப் பின்னர் எடுத்துரைப்பதுமான உத்திகள் கையாளப்படும். நாடகத்தின் சுவையை, பார்வையாளர்களின் ரசனைத் திறனை அதிகரிக்க இவ்வுத்தி இடம்பெறும். நாடகக் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இவ்வுத்தி சிறப்பிடம் பெறுகிறது. கோவல – கண்ணகியர் திருமண வாழ்த்தில்,

காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்

தீது அறுக

(சிலப்பதிகாரம்: 1: 61-62)

(காதலனைப் பிரியாமல், அவன் அவளைப் பற்றிய கை நெகிழாமல் வாழ்க) என வாழ்த்துகின்றனர். பின்னால் கோவலன் பிரியப் போகிறான் என்பதைக் குறிப்பாக இது முன் உணர்த்துகிறது.

இதே போன்று, கோவலனும் கண்ணகியும் வையை ஆற்றைக் கடக்கும் போது வையை என்ற பொய்யாக் குலக்கொடி (சிலப்பதிகாரம்: 13: 170) கண்ணகிக்கு நேரப் போவதை அறிந்தவள் போலப் பூக்களாகிய ஆடையால் தன் கண்ணீரை மறைத்துக் கொண்டாள் எனவும்,

கோட்டை மீது பறந்த கொடிகள் ‘வராதீர்கள்’ என்பதுபோல மறித்துக் கைகாட்டின எனவும் தற்குறிப்பேற்ற அணியின் மூலமாகப் பின்னர்வரும் அவலத்தை முன் அறிவிக்கும் இளங்கோவின் நாடகத் திறனை நன்கு உணரலாம்.

இனிய இசைப்பாடல்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்ட ஒரு தனிப்பெரும் படைப்பு சிலம்பு. கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை ஆகிய காதைகளில் வரும் இசைப்பாடல்கள் ஆழ்வார், நாயன்மார்களின் பக்திப்பாடல்களுக்கு முன்னோடியாவன. இவற்றில் கவிதைச் சுவையும், இசைநயமும், ஆடல் சிறப்பும் நிறைந்துள்ளன.

2.5 காப்பியக் கட்டமைப்பு

காப்பியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றித் தண்டியலங்காரம் கூறுகிறது. அவ்வழியில் காப்பியக் கட்டமைப்பை இரு வகையாகப் பகுக்கலாம்; ஒன்று புறநிலைக் கட்டமைப்பு (External Structure); மற்றது அகநிலைக் கட்டமைப்பு (Internal Structure). பரிச்சேதம், இலம்பகம், படலம், காதை, காண்டம், சருக்கம் போன்ற பாகுபாடுகளைப் புறநிலைக் கட்டமைப்பாகக் குறிப்பிடலாம்.

2.5.1 சிலப்பதிகாரத்தில் புறநிலைக் கட்டமைப்பு சிலப்பதிகாரப் புறநிலைக் கட்டமைப்பில் பெரும் பிரிவாகக் காண்டமும் சிறுபிரிவாகக் காதையும் அமைகின்றன. இவை பெரும்பாலும் நிலைமண்டில ஆசிரியப் பாவால் அமைவன. இவை பொருள் தொடர்நிலையாகவும் (Continuous Narration) சில போது தொடராத் தொடர்நிலையாகவும் (Discontinuous Narration) அமைகின்றன. மங்கல வாழ்த்துப் பாடலும் மனையறம்படுத்த காதையும் தொடர்நிலை. அடுத்துவரும் அரங்கேற்றுகாதை தொடராத் தொடர்நிலை. சில காதைகள் கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி என இசைப்பாட்டாக அமைவன. காதை என்ற தலைப்புப் பெறுவன அனைத்தும் உரை இலக்கிய (Narrative Poetry) வகையைச் சார்ந்தன. காப்பியப் பெயர், காண்டப் பெயர், காதைத் தலைப்பு இவை அனைத்தும், அவ்வப் பகுதியின் உட்பொருளுக்குப் பொருத்தமுற அமைவதோடு சிற்சில இடங்களில் குறியீட்டுப் பொருளையும் உணர்த்தி நிற்கின்றன. காடுகாண்காதை என்ற மதுரைக்காண்ட முதல் காதையே குறியீட்டுப் பொருளில் கண்ணகி வாழ்வு சுடுகாடாக – அவலமாக மாறப்போவதை விளக்கி நிற்கிறது. இதே போன்று குன்றக்குரவை என்ற வஞ்சிக்காண்டத் தொடக்கக் காதைத் தலைப்பு கண்ணகி கடவுளாகப் போவதைக் குறியீடாகக் காட்டுகிறது.

2.5.2 சிலப்பதிகாரத்தில் அகநிலைக் கட்டமைப்பு காப்பிய அகநிலைக் கட்டமைப்புகளில் வருணனைக் கூறுகள், நிகழ்ச்சி விளக்கக் கூறுகள் குறிப்பிடத்தக்கன. வருணனைக் கூறுகளாக மலை, கடல், நாடு, வளநகர், சூரியன், சந்திரன் ஆகிய இருசுடர்த் தோற்றம் முதலானவற்றைத் தண்டியலங்காரம் குறிப்பிடுகிறது. இவ்வருணனைக் கூறுகள் பல சிலம்பில் உயர்வு நவிற்சி இன்றி இயல்பாக அமைகின்றன. இந்திரவிழவூரெடுத்த காதை – வளநகர் வருணனை; நாடுகாண் காதை – நாட்டு வருணனை; காட்சிக்காதை – மலை வருணனை; அந்திமாலைச் சிறப்புச்செய் காதை, வேனில்காதை – இருசுடர்த் தோற்றம் பற்றிய பொழுது வருணனைகள்; கடலாடு காதை – கடல் வருணனை. இவ்வருணனைக் கூறுகள் அனைத்தும் காப்பியக் கதை நிகழ்வுகளோடு இணைந்து செல்வதே சிலம்பின் தனிச் சிறப்பாகும். வருணனைக்காகவே ஒரு படலம் அமைத்துச் செய்யும் செயற்கைத் தன்மையைச் சிலம்பில் காண முடியாது.

அரசியல் நிகழ்வுகளாகத் தண்டியலங்காரம் சுட்டும் மந்திரம், செலவு, தூது, இகல், வெற்றி முதலான பற்றிய விவரிப்புகள் காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், வாழ்த்து, வரந்தருகாதைகளில் சிறப்புப் பெறுகின்றன. (மந்திரம் = ஆலோசனை; செலவு = பயணம்; இகல் = பகைமை, போர்) கோவல-கண்ணகியர் திருமணம், மணிமேகலை பிறப்பு, மாதவி-கோவலன் பாடிய கானல்வரி முதலியன இல்வாழ்வியல் நிகழ்வுகளாகச் சிலம்பில் சித்திரிக்கப் பெறுகின்றன.

காப்பியம் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பயனையும் கூறவேண்டும் என்பது தண்டியலங்கார இலக்கணம். திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் மட்டுமே பேசப்படுவது போலச் சிலம்பிலும் இம்மூன்று மட்டுமே பேசப்படுகின்றன. வடமொழி மரபான வீடுபேறு இங்கு இடம் பெறவில்லை. இது ஒன்றே சிலம்பு தமிழ் அறம், தமிழர் மரபு பற்றிப் பேசுவது என்பதைத் தெளிவுபடுத்தும்.

2.6 தொகுப்புரை

இப்பாடப் பகுதியில் சிலப்பதிகாரம் என்ற ஒரு மிகச்சிறந்த தமிழ்க் காப்பியத்தின் சிறப்புகளைப் பார்த்தோம். தமிழில் தோன்றிய முதல் காப்பியம் என்பது மட்டுமன்றி முதன்மைக் காப்பியமாகவும் திகழ்வது சிலப்பதிகாரமே. வெர்ஜில் எழுதிய ஏனியட் என்ற ரோமானியக் காப்பியத்துடன் கலைத் தன்மையில் கருத்தியல் அடிப்படையில் ஒப்புநோக்கத்தக்கது சிலம்பு. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பன போன்ற பல உயர்ந்த கருத்துகளை-உண்மைகளை உள்ளடக்கியுள்ள காப்பியமே சிலப்பதிகாரம். சமய, சமூக, அரசியல் ஒருமைப்பாட்டை எடுத்துரைப்பது; தொட்ட தொட்ட இடமெல்லாம் இலக்கியச் சுவை மிக்க பகுதிகளைக் கொண்டது. நாடகத் தன்மை மிகுந்திருப்பதால் இதனை ஒரு நாடகக் காப்பியம் என்பர். சிலம்பின் ஆசிரியர் இளங்கோவின் வரலாறு, சிலம்பு எழுந்த காலம், சிலம்பின் கதைப்பின்னல், சிலம்பின் சமூக, சமய, அரசியல் சிந்தனைகள், சிலம்பு வெளிப்படுத்தும் கலைச்சிறப்பு, இலக்கிய நயம், சிலம்பின் காப்பியக் கட்டமைப்பு முதலான பகுதிகள் இங்கே சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இங்கு எடுத்துரைக்கப்பட்ட செய்திகள் மட்டும்தாம் சிலம்பின் சிறப்புச் செய்திகள் என்று எண்ணிவிட வேண்டாம். மாணவர்களின் தேவை கருதிக் கருத்துக்கள் இங்குச் சுருக்கமாகவே தரப்பட்டுள்ளன. இவற்றை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு சிலம்பை மேலும் ஆழமாகக் கற்றால் அதன்பயன் பெரிது; சுவை இனிது; அதன் கருத்துக் கடலில் மூழ்கி முத்தெடுக்கலாம்; அதன் பயனை, பெருமையை, நயத்தைப் பன்னாட்டு அன்பர்களுக்கும் எடுத்துக்காட்டுங்கள்; அதுவே சிலம்பைக் கற்றதன் பயன் எனலாம்.

பாடம் - 3

மணிமேகலை

3.0     பாட முன்னுரை

தமிழில் சிலப்பதிகாரத்திற்கு அடுத்துத் தோன்றிய ஒரு தனித்தமிழ்க் காப்பியம் மணிமேகலை ஆகும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழில் இரட்டைக் காப்பியங்கள் என்று சிறப்பிக்கப் பெறுகின்றன. மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார். இக்காப்பியம் தமிழில் தோன்றிய முதல் பௌத்த சமயக் காப்பியம்; முதல் தருக்கக் காப்பியமும் இதுவே. பல்வேறு சமயச் சிந்தனைகளை எடுத்துக் கூறுவதுடன், பௌத்த சமயக் கொள்கைகளை மிகச் சிறப்பாகப் போற்றுவதும் இக்காப்பியமே. காலத்தாலும் பழமையானது. பல்வேறு கிளைக் கதைகளைக் கொண்டு இலக்கியச் சுவைபடப் புனையப்பட்டுள்ளது. இது, கி.பி. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். சிலப்பதிகாரத்தில் சிறப்பிடம் பெற்ற கோவலன்-மாதவி இருவரின் மகள் ஆகிய மணிமேகலையின் துறவை மையமாகக் கொண்டு, அவள் ஆற்றிய சமூகத் தொண்டினை எடுத்துரைக்கிறது. பல்வேறு சமூக-சமய அறக்கருத்துக்களைக் கதைப் போக்கில் சுவைபட எடுத்துரைக்கிறது. மீஇயற்கைப் (Super-natural) பாத்திரங்களும், கடவுளர்களும் மிகுதியாக இடம் பெறும் முதல் தமிழ்க் காப்பியமும் இதுதான். இந்தப் பெருங்காப்பியம் பற்றி இப்பாடம் விளக்குகிறது.

3.1 மணிமேகலை

தமிழ்க் காப்பியங்களின் தலைப்புக்களே பல சிந்தனை உணர்வுகளை எழுப்புகின்றன. சிலப்பதிகாரம் கண்ணகி, பாண்டிமாதேவி ஆகிய இருவரின் சிலம்பை மையமாகக் கொண்டு அமைகின்றது. சீவக சிந்தாமணி  காப்பியத் தலைவன் சீவகன் பெயரைத் தாங்கி நிற்கிறது. சூளாமணி  அணிகலன் பெயரைக் கொண்டு அமைகின்றது. மேலை நாட்டுக் காப்பியங்களும், வடமொழிக் காப்பியங்களும் ஆண் பாத்திரங்களையே முதன்மைப்படுத்தி அமையத் தமிழில்தான் பெண் பாத்திரங்களை முதன்மைப்படுத்திப் பல காவியங்கள் எழுந்துள்ளன. அவ்வகையில் குறிப்பிடத்தக்க ஒரு காப்பியப் படைப்பே மணிமேகலை.

● தலைப்பு

காப்பியத் தலைவி மணிமேகலை பெயரால் இக்காப்பியத் தலைப்பு அமைகின்றது. இந்த மணிமேகலை என்ற பெயர் கோவலனின் குல தெய்வமான மணிமேகலா தெய்வத்தின் பெயர் என்பது சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகிறது. பொது நிலையில் மணிமேகலை என்பது ஒருவகை அணிகலன் ஆகும். மகளிர் தம் இடையில் அணியும் நகை மேகலை. இது மணியால் (மாணிக்கம்) செய்யப்பட்டதால் மணிமேகலை எனப்படும்.

இந்தப் பெருங்காப்பியத்தின் தலைப்பு, இதன் கதைத் தலைவியான மணிமேகலையின் பெயரால் அமைந்துள்ளது. மேலும், ஒரு சிறப்பாக, முந்திய காப்பியத் தலைப்பு சிலம்பின் பெயரால் அமைந்துள்ளது போன்றே, மகளிர் அணியாகிய மணிமேகலையின் பெயராலும் அமைந்துள்ளது இக்காப்பியம்.

3.1.1 காப்பிய ஆசிரியர் மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். இதனைப் பதிகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்

மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு

ஆறைம் பாட்டினுள் அறியவைத்தனன்.

(வளங்கெழு = வளம் மிக்க; ஆறைம் = 6×5=30)

இங்குக் கூல வாணிகன் சாத்தன் என்று இவர் பெயர் குறிப்பிடப்படுகிறது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர், ‘சீத்தலைச் சாத்தனாரால் செய்யப்பட்ட மணிமேகலை’ என்று குறிப்பிடுகிறார். இதனால் கூல வாணிகன், சீத்தலை என்ற இரு அடைமொழிகள் இவர் பெயரோடு இணைகின்றன. சாத்தன் என்பது இவரது இயற்பெயர். இப்பெயர் வணிகர்க்கே உரிய பெயர். சீத்தலை என்பது அவரது ஊர்ப் பெயராக இருக்க வேண்டும். சீத்தலை என்ற ஊர் திருச்சி மாவட்டப் பெரம்பலூர் வட்டத்தில் உள்ளது. இவர் மதுரையில் சென்று நெல், வரகு, தினை முதலான தானியங்களை (கூலம்) வியாபாரம் செய்ததால் இப்பெயர் பெற்றார் என்று கூறுவர்.

3.1.2 காப்பியக் காலம் இவ்வாசிரியர், சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் காலத்தில் வாழ்ந்தவர் என்பது இவ்விரு காப்பியங்களின் பதிகம் வழி அறிய முடிகிறது. ‘‘இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றச் சாத்தனார் கேட்டார்’’ என்றும், ‘‘சாத்தனார் மணிமேகலை பாட அடிகள் கேட்டார்’’ என்றும் இப்பதிகங்கள் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரத்தில், மலைவளம் காணச் சென்ற செங்குட்டுவனுடன் இளங்கோவும் சாத்தனாரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், கண்ணகி விண்ணகம் சென்ற காட்சியைக் கண்டு, செங்குட்டுவனுக்குக் குன்றக் குறவர்கள் அறிவிக்க, உடன் இருந்த சாத்தனார் “யான் அறிகுவன்” என்று சொல்லிக் கோவலனும் கண்ணகியும் அடைந்த துன்பக் கதையை எடுத்துரைக்கிறார். கதை கேட்ட இளங்கோ ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’ என்று கூற, சாத்தனார் ‘அடிகள் நீரே அருள்க’ என்கிறார். இங்கு, இளங்கோ சிலப்பதிகாரம் பாடக் காரணமாக இருந்தவர் சாத்தனார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே காலக் கட்டத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பர். இளங்கோ ‘தண்டமிழ்ச் சாத்தன்’, ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’, ‘நன்னூல் புலவன்’ என்று சாத்தனாரைக் குறிப்பிடுவதால் இவர் இளங்கோவடிகளுக்கு ஆசிரியராக இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது. சாத்தனார் பாடியதாகச் சங்க இலக்கியங்களில் சில பாடல்கள் காணப்படுகின்றன. ஆயின், சங்கப் பாடல்கள் பாடிய கூலவாணிகன் சாத்தன் வேறு; மணிமேகலை பாடிய சாத்தன் வேறு என்பது அறிஞர் முடிவு. எவ்வாறாயினும் இக்காப்பியம் எழுந்த காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது தெளிவு.

3.1.3 காப்பியக் கட்டமைப்பு இக்காப்பியம் முப்பது காதைகளைக் கொண்டது. இவற்றுடன் பதிகம் ஒன்றும் இடம் பெறுகின்றது. இவற்றை நோக்கச் சிலப்பதிகாரத்தை அடியொற்றி இந்நூல் எழுந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இரு காப்பியங்களின் பதிகங்களுமே மூல நூலாசிரியர்களால் பாடப் பெறவில்லை என்பது தெளிவு. சிலப்பதிகாரம் முதன் முதலில் காதை என்ற பெயரைப் பயன்படுத்தினாலும் அதில் சில உட்பிரிவுகள் காதை என்ற பெயரைப் பெறவில்லை. மணிமேகலையில் முப்பது காதைகளுமே காதை என்ற பெயரையே தாங்கி நிற்கின்றன. மணிமேகலைக் காப்பிய உட்பிரிவு காதை என்றிருந்தாலும் சிலம்பு போலக் காண்டம் என்ற பெரும் பிரிவு இடம் பெறவில்லை. இவ்வேறுபாடுகள் மட்டுமல்ல; காதைப் பாடல் அமைப்பிலும் கூட மணிமேகலை வேறுபட்டு நிற்கிறது. சிலம்பின் காதைகள் பெரும்பாலும் நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமைந்தன. என்றாலும் சில காதைகள் பல, யாப்பு அமைப்பைக் கொண்டுள்ளன. மணிமேகலைக் காப்பியத்திலோ அனைத்துக் காதைகளும் நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன. தொடர்நிலை அமைப்பிலும் சிலம்பிலிருந்து இக்காப்பியம் வேறுபடுகிறது. சிலம்பில் பல காதைகள் தொடராத் தொடர் நிலையாக (Discontinuous narration) அமைந்துள்ளன. மணிமேகலைக் காப்பியக் காதைகள் அனைத்தும் சொற்பொருள் தொடர்நிலையாகவே அமைந்துள்ளன.

3.2 காப்பியக் கதை

மணிமேகலைக் காப்பியம் தமிழ் மாணவர்களாகிய நீங்கள் அறிந்ததுதான். என்றாலும் அதன் கதைப் போக்கு எவ்வாறு அமைந்துள்ளது? கதை நிகழ்ச்சிகள் எங்கு நிகழ்கின்றன என்பது பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? அதற்காகவே இங்குக் கதைச் சுருக்கம் தரப்படுகிறது.

3.2.1 மலர்வனத்தில் மணிமேகலை காப்பியத் தலைவி மணிமேகலை கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள்; கோவலன் கொலையுண்டதை அறிந்த மாதவி தன் அக வாழ்வைத் துறந்து, அறவண அடிகள் என்னும் துறவியிடம் அறங்கேட்டுத் தெளிந்து பௌத்தத் துறவியாகிறாள். தன்மகள் மணிமேகலையையும் துறவி ஆக்குகிறாள். அப்போது புகார் நகரில் இந்திர விழா தொடங்கியது. முறைப்படி மாதவியும் மணிமேகலையும் ஆடல் பாடல்களில் கலந்து கொள்ள வேண்டும். கலை வாழ்க்கையைத் துறந்ததனால் இருவரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் சினமுற்ற மாதவியின் தாய் சித்திராபதி, வயந்தமாலை என்பவளை அனுப்பி மாதவியை விழாவில் ஆட வருமாறு அழைக்கிறாள். மாதவியோ,

மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை

அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்

திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்

(ஊர் அலர் உரைத்த காதை: 55-57)

என்று கூறி மறுத்து விடுகிறாள்.

மணிமேகலையைக் கற்பரசி கண்ணகியின் மகள் என்றும், அவள் தீய தொழிலில் ஈடுபட மாட்டாள் என்றும் அறிவிக்கிறாள்.

கோவலன் கொலைப்பட்ட துன்ப நிகழ்ச்சியைப் பற்றி மாதவி கூறக் கேட்ட மணிமேகலை கண்ணீர் வடிக்கிறாள். அவள் கண்ணீர்த் துளி புத்த பெருமானுக்காகத் தொடுத்த பூமாலையில் பட்டுப் புனிதம் இழக்கச் செய்கிறது. அதனால் புதிய பூக்கள் பறித்து வந்து மாலை தொடுக்க மணிமேகலையும், அவள் தோழி சுதமதியும் உவவனம் என்னும் பூங்காவுக்குச் செல்கின்றனர்.

● உதயகுமரன் வருகை

அப்போது, மதங்கொண்ட யானையை அடக்கிய சோழ மன்னனின் மகன் உதயகுமரன், மணிமேகலை மலர் வனம் புகுந்ததை அறிந்து அவளைத் தேடி உவவனம் வருகிறான். உதயகுமரன் தன்பால் மிகுந்த வேட்கை கொண்டுள்ளான் என்பதை உணர்ந்த மணிமேகலை, செய்வதறியாது அங்குள்ள பளிக்கறை மண்டபத்தில் ஒளிந்து கொள்கிறாள். அவளைப் பற்றிச் சுதமதியிடம் உதயகுமரன் கேட்க, அவளோ “மணிமேகலை தவ ஒழுக்கம் உடையவள்; சபிக்கும் வன்மையும் காமம் கடந்த வாய்மையும் உடையவள்” என்கிறாள். பளிக்கறைக்குள் மணிமேகலையின் உருவத்தைக் கண்ட உதயகுமரன், உள்ளே செல்ல வழியறியாது தடுமாறுகிறான். மணிமேகலையைச் சித்திராபதியால் அடைவேன் எனச் சினத்துடன் கூறி நீங்குகிறான்.

● மணிபல்லவம் செல்லல்

பளிக்கறை விட்டு வெளிவந்த மணிமேகலை, தன் நெஞ்சம் அவன்பால் செல்வது கண்டு, “அவன் என்னை இகழ்ந்து பேசினான். இருந்தும் என் நெஞ்சம் அவனை நோக்கிச் செல்கிறது. காதலின் இயற்கை இது தானா? அப்படியாயின் அது கெட்டு அழியட்டும்” என்று தோழியிடம் கூறுகிறாள். அப்போது, இந்திரவிழாக் காண வந்த மணிமேகலா தெய்வம் அவர்களை அணுகி, “இது முனிவர் வனமாதலின் உதயகுமரன் தீங்கு செய்யாது சென்றனன்; நீவிர் இருவரும் சக்கரவாளக் கோட்டம் செல்க” என அறிவுறுத்துகிறது. சக்கரவாளக் கோட்டத்தில் சுதமதி சிறிது கண் துயில்கிறாள். மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மயக்கி மணிபல்லவம் எடுத்துச் செல்கிறது. பின் அத்தெய்வம் உதயகுமரனைக் கண்டு “தவத்திறம் பூண்ட மணிமேகலைபால் வைத்த வேட்கை ஒழிக” என அறிவுறுத்துகிறது. தொடர்ந்து மணிமேகலா தெய்வம் சுதமதியிடம் சென்று, “மணிமேகலை மணிபல்லவத்தில் இருக்கிறாள்; அங்குத் தன் பழம் பிறப்பை அறிந்து ஏழு நாட்களில் திரும்பி வருவாள்” என்கிறது. சக்கரவாளக் கோட்டத்திலுள்ள கந்திற்பாவையும், மணிமேகலை ஏழு நாட்களில் “தன் பிறப்பதனோடு நின்பிறப்பும் உணர்ந்து வருவாள்” என்கிறது. அப்போது பொழுது விடிகிறது. சுதமதி மாதவியிடம் வந்து நிகழ்ந்தவற்றைக் கூறி வருந்தி இருக்கிறாள்.

3.2.2 மணிபல்லவத்தில் மணிமேகலை மணிபல்லவத்தில் தனித்து விடப்பட்ட மணிமேகலை உவவனத்தையோ சுதமதியையோ காணாது புலம்புகிறாள். தன் தந்தை கோவலனை நினைக்கிறாள். பலவாறு புலம்பும் மணிமேகலையின் முன் புத்த பெருமானின் மறுவடிவான தரும பீடிகை காட்சியளிக்கிறது. கண்ணில் நீர் வழிய, கைகள் தலைமேல் குவிய, பீடிகையை மும்முறை வலம் வந்து முறைப்படி தொழுகிறாள். தொழுத அளவில் தன் முந்திய பிறவி பற்றி அறிகிறாள். தான் அசோதர நகர் அரசன் இரவிவர்மனுக்கும் அவன் மனைவி அமுதபதிக்கும் இலக்குமி என்னும் மகளாகப் பிறந்து, அத்திபதி அரசன் மகன் இராகுலனை மணந்ததை அறிகிறாள். இராகுலன் ‘திட்டிவிடம்’ என்னும் பாம்பு தீண்டி இறந்துபடத் தான் தீப்புகுந்து இறந்ததுமாகிய பழம்பிறப்பினை உணர்கிறாள். பின், அங்குத் தரும பீடிகை தொழுது நிற்கும் மணிமேகலா தெய்வத்தின் மூலம் மாதவி, சுதமதி ஆகியோர் தம் முற்பிறப்பு வரலாற்றை அறிகிறாள். முற்பிறப்பில் இராகுலன் ஆக இருந்தவன்தான் உதயகுமரன் என்பதையும் அறிகிறாள். மணிமேகலா தெய்வம், மணிமேகலைக்கு இனி எதிர்காலத்தில் நிகழ விருப்பதைக் கூறுகிறது. வேற்று உருவம் கொள்ளுதல், பசியைத் தாங்கிக் கொள்ளுதல், வான்வழிச் செல்லுதல் ஆகிய ஆற்றல்களைத் தரும் மூன்று மந்திரங்களை மணிமேகலைக்கு அருளிச் செல்கிறது.

● அமுத சுரபி பெறல்

பின் மணிமேகலை அங்குள்ள மணற்குன்றுகள், பூஞ்சோலை, பொய்கை முதலானவற்றைக் கண்டு களிக்கிறாள். அவள்முன் தீவ திலகை என்னும் தெய்வம் தோன்றி, “கோமுகிப் பொய்கையில் அமுதசுரபி தோன்றும் நாள் இது; ஆபுத்திரன் கையில் இருந்த அப்பாத்திரம் உன் கைக்குக் கிடைக்கும்” என்று கூறி அழைத்துச் செல்கிறது. இருவரும் கோமுகிப் பொய்கையை வலஞ்செய்து வணங்க, அமுதசுரபி மணிமேகலையிடம் வந்து சேர்கிறது.

● அமுத சுரபியின் சிறப்பு

அமுதசுரபியில் இடும் அன்னம் எடுக்க எடுக்கக் குறையாது பெருகும் என்று அதன் சிறப்பினைத் தீவதிலகை மணிமேகலைக்கு எடுத்துரைக்கிறாள்.

ஆங்கு அதின்பெய்த ஆருயிர் மருந்து

வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது

தான்தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்

(பாத்திரம் பெற்ற காதை : 48-50)

(ஆருயிர் மருந்து = உணவு; தான் தொலைவு இல்லா = தான் குறையாத)

என்றும்,

அறம் கரியாக அருள்சுரந்து ஊட்டும்

சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது

(பாத்திரம் பெற்ற காதை :  120-121)

(கரியாக = சான்றாக; சுரவாது = பெருகாது)

என்றும் அமுதசுரபியின் சிறப்பும், அது சுரப்பது அருள் உடையவர்க்கே என்பதும் இங்கு எடுத்து உரைக்கப்படுகின்றன.

3.2.3 புகார் நகரில் மணிமேகலை மணிபல்லவத்தில் ஆபுத்திரனின் அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை வறியவரின் பசிப்பிணி தீர்க்க வான்வழியே புகார் வருகிறாள். அங்கு மாதவியையும் சுதமதியையும் கண்டு அவர்தம் பழம்பிறப்பும் அமுதசுரபியின் சிறப்பும் கூறுகிறாள். இங்குப் பழம்பிறப்பில் ‘இலக்குமி’யாகப் பிறந்த மணிமேகலைக்குத் தாரை, வீரை என்ற தமக்கை (அக்காள்) யராகப் பிறந்தவர்களே மாதவி, சுதமதி என்பது தெரிய வருகிறது. பின்பு மூவரும் அறவண அடிகளைக் கண்டு தொழுது நிகழ்ந்தவற்றை எடுத்துரைக்கின்றனர். அடிகள் அவர்களின் பழம்பிறப்பை உணர்த்தி, அவர்களைப் புத்த நெறிப்படுத்துகிறார். இங்கு, அவரால் ஆபுத்திரன் வரலாறு சொல்லப்படுகிறது.

ஆபுத்திரன் சிந்தாதேவி என்னும் தெய்வத்தின் அருளால் அமுதசுரபி பெற்றுப் பசிப்பிணி தீர்த்து வருகிறான்; இதனால் அவன் புகழ் பரவுகிறது. பொறாமை கொண்ட இந்திரன் நாட்டை மழையால் செழிக்கச் செய்கிறான். இதனால் அமுதசுரபிக்குத் தேவையில்லாமல் போகிறது. எனவே சாவக நாடு சென்று பசிப்பிணி போக்கச் செல்லும் ஆபுத்திரன் மணிபல்லவத்தில் தனித்து விடப்படுகிறான். அங்கு மக்களே இல்லாததால் வருந்திய ஆபுத்திரன் அமுதசுரபியைக் கோமுகிப் பொய்கையில் எறிந்து விட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறான். அவன் செய்த அறப்பயனால் சாவக நாட்டில் ஒரு பசு வயிற்றில் தோன்றி, பூமிச்சந்திரன் என்ற அரசனால் தத்தெடுக்கப்பட்டு அரசனாகி நல்லாட்சி செய்கிறான்.

● சிறையும் அறமும்

இவ்வாறு ஆபுத்திரன் வரலாறு கூறிய அடிகள் மணிமேகைலையைப் பசிப்பிணி தீர்க்கும் பேரறத்தை மேற்கொள்ளப் பணிக்கிறார். அவளும் துறவுக் கோலங்கொண்டு, காயசண்டிகை வழிப்படுத்த ஆதிரையிடம் பிச்சை ஏற்றுப் பசிப்பிணி தீர்க்கிறாள்; காய சண்டிகையின் ‘யானைத் தீ’ என்னும் அடங்காப் பசிநோயும் நீங்க அவள் தன்னுடைய விண் நாடு புறப்பட்டுச் செல்கிறாள்.

மணிமேகலையின் துறவு வாழ்வை விரும்பாத சித்திராபதி உதயகுமரனைத் தூண்டி விடுகிறாள். அவன் மணிமேகலையை அடைய முயற்சி செய்ய, அவள் காய சண்டிகையாக உருவத்தை மாற்றிக் கொண்டு அறம் செய்கிறாள். காய சண்டிகை உருவில் இருப்பவள் மணிமேகலை என உணர்ந்த உதயகுமரன் பாதி இரவில் அவளைக் காண வருகிறான். இதனை அறிந்த காய சண்டிகையின் கணவன் காஞ்சனன், தன் மனைவியிடம் உதயகுமரன் தவறுதலாக நடந்து கொண்டதாக நினைத்து அவனைக் கொன்று விடுகிறான். மணிமேகலை இதனை உணர்ந்து புலம்ப அவளைக் கந்திற்பாவை தடுத்துத் தேற்றுகிறது. இளவரசன் கொலைக்குக் காரணமான மணிமேகலையை அரசன் கைது செய்கிறான். அவன் தேவி, அவளைப் பலவாறு துன்புறுத்த, மணிமேகலை தான்பெற்ற மந்திரத்தால் அனைத்துத் துன்பத்திலிருந்தும் விடுபடுகிறாள். சிறையிலும் அறம் செய்கிறாள். இதனால் அஞ்சிய தேவி மணிமேகலையை வணங்க, அவள் காமம், உயிர்க்கொலை, பொய் முதலானவற்றின் குற்றங்களைத் தேவிக்கு எடுத்துரைக்கிறாள்.

மீண்டும் மணிமேகலையைக் கலை வாழ்வில் ஈடுபடுத்தச் சித்திராபதி அரசமாதேவியிடம் வேண்டுகிறாள். தேவி மறுத்து விடுகிறாள். அதே நேரத்தில் மணிமேகலையை மீட்க அறவண அடிகள், மாதவி, சுதமதி வருகின்றனர். தேவிக்கு அறவுரை கூறிய அறவணர் வேற்று நாடு செல்கிறார்.

● ஆபுத்திரனோடு மணிமேகலை

சிறையிலிருந்து விடுதலை பெற்ற மணிமேகலை, ஆபுத்திரன் புண்ணியராசனாய் ஆட்சி புரியும் சாவக நாடு செல்கிறாள். அங்குத் தருமவாசகன் எனும் முனிவன் இருப்பிடம் உள்ளது. அங்கு வந்த ஆபுத்திரன் மணிமேகலையை யார் என அறிகிறான். அவனது பழம்பிறப்பை அறிய மணிபல்லவத்துக்கு மணிமேகலை அழைத்துச் செல்கிறாள்; அங்குத் தரும பீடிகையை வணங்கித் தன் முற்பிறப்பு வரலாற்றை அறிகிறான். பின் தீவ திலகையும் மணிமேகலையும் ஆபுத்திரனை அவன் நாடு செல்லப் பணிக்கின்றனர்; மணிமேகலை வான்வழியாக வஞ்சி நகர் அடைகிறாள்.

3.2.4 துறவு வாழ்வில் மணிமேகலை வஞ்சி நகர் வந்த மணிமேகலை கண்ணகிக் கடவுளை வணங்குகிறாள். பத்தினி கடவுளாகிய கண்ணகி தன் பழம்பிறப்பு வரலாற்றை மணிமேகலைக்கு விரித்துரைக்கிறாள். பின்னர் வேற்றுருக் கொண்டு பிற சமயக் கருத்துக்களை அறிந்து வர வேண்டுகிறாள். மணிமேகலையும் ‘மாதவன்’ வடிவு கொண்டு பிரமாணவாதி முதல் பூதவாதி வரை, அனைத்துச் சமயவாதிகளின் கொள்கைகளைத் தெரிந்து கொள்கிறாள். பின் அங்குள்ள பௌத்தப் பள்ளியில் தவம் செய்யும் கோவலன் தந்தை மாசாத்துவானைக் காணுகிறாள். அவன், தன்வரலாறு கூறியதுடன், மாதவியும் சுதமதியும் கச்சி மாநகர் சென்றுள்ளதை அறிவிக்கிறான். அங்கு மழையின்றி மக்கள் பசியால் வாடுவதை எடுத்துக் கூறி, அங்குச் சென்று பசிப்பிணி நீக்குமாறு வேண்டுகிறான்.

மணிமேகலை தன் உண்மை வடிவுடன் கச்சி மாநகர் அடைந்து, அந்நாட்டு அரசன் இளங்கிள்ளிக்கு நல்லறம் கூறி, நாட்டு மக்களின் பசிப்பிணி போக்குகிறாள். அங்குத் தீவ திலகைக்கும், மணிமேகலா தெய்வத்துக்கும் படிமமும் கோவிலும் எழுப்பப்படுகின்றன. அறவணர், மாதவி, சுதமதி ஆகியோர் அவளது அறச்சாலை அடைந்தனர். அவர்களை, மணிமேகலை இனிதே வரவேற்க, அடிகள் காவிரிபூம்பட்டினம் கடலால் அழிந்ததை எடுத்துரைக்கிறார். மணிமேகலை, தான் பல சமயக் கணக்கர் கொள்கைகளை அறிந்தும், அவற்றில் சிறப்பில்லை என்று உணர்ந்ததாகக் கூறுகிறாள். பௌத்த சமயத் தருக்க நெறிகளை அறவணர் அவளுக்குப் போதிக்கிறார். மணிமேகலை புத்தம் சரணம் கச்சாமி; தர்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி என்ற மந்திரத்தை மும்முறை தியானம் செய்து தன் பவத்திறம் நீங்க நோன்பு மேற்கொள்கிறாள். இத்துடன் மணிமேகலைக் காப்பியக் கதை முற்றுப் பெறுகிறது.

3.3 கதைப்பின்னலும் பாவிகமும்

காப்பியத்தில் இடம்பெறும், கதைப்பின்னல் பற்றியும் காப்பியப் பாவிகம் பற்றியும் இனி பார்ப்போம்.

3.3.1 கதைப்பின்னல் மேற்கண்ட காப்பிய நிகழ்வுகளை ஆசிரியர் சாத்தனார் வெளிப்படுத்தும் முறை சுவையானது. அவரது காப்பிய நடை எளிமையானது. பல்வேறு கிளைக் கதைகளை இணைத்துக் காப்பியச் சுவைபடக் கதையை நகர்த்திச் செல்கிறார். பல்வேறு பழம்பிறப்புக் கதைகளைக் கதைப் போக்கில் இணைத்து நயம்பட உரைப்பது குறிப்பிடத்தக்கது. காப்பியக் கதையுடன் மாதவி, சுதமதி, காய சண்டிகை, ஆதிரை, கண்ணகி, உதயகுமரன், ஆபுத்திரன், கோவலன் முதலானோரின் பழம்பிறப்புக் கதைகளை இணைத்துக் காப்பியத்திற்கு ஒரு பெருமித உணர்வை ஊட்டியிருக்கிறார் சாத்தனார்.

தீவ திலகை, மணிமேகலா தெய்வம், தரும பீடிகை, கந்திற்பாவை முதலான தெய்வீகப் பாத்திரங்களும், இயற்கைக்கு மிகையான நிகழ்வுகள் பலவும் காப்பியத்தில் இடம்பெறுவது காப்பியத்திற்கு மேலும் ஓர் பெருமித உணர்வை ஏற்படுத்துகின்றது. காவிரிப் பூம்பட்டினத்தில் கால் கொள்ளும் காப்பிய நிகழ்ச்சி, மணிபல்லவம், சாவக நாடு வரை சென்று வஞ்சிக்குப் போய்க் காஞ்சியை அடைந்து இறுதி வடிவம் பெறுகிறது. மணிமேகலையை மலர்வனம் செலுத்தக் கருதிய சாத்தனார் விழாவறை காதை, ஊரலர் உரைத்த காதைகளை அமைத்து மலர் வனத்துள் புகச் செய்கிறார்.

அங்கிருந்து அவளை மணிபல்லவத்திற்கு எடுத்துச் செல்லக் கருதி உதயகுமரன் காதலைத் தோற்றுவிக்கிறார். மணிமேகலைக்கும் அவன்பால் இருந்த காதலே, மணிமேகலா தெய்வம் அவளை மணிபல்லவத்திற்கு எடுத்துச் செல்லக் காரணமாக அமைகிறது. இங்கு, மணிமேகலை பழம்பிறப்பு வரலாறும், தரும பீடிகை வரலாறும், அமுதசுரபி வரலாறும், தீவ திலகை வரலாறும் வந்து சேர்கின்றன.  மணிமேகலா தெய்வம் கொடுத்த மந்திரம், பின்னர், உலக அறவியில் இருந்து, காய சண்டிகை வடிவில் உதயகுமரனிடமிருந்து தப்பிக்க உதவுகிறது; அரசன்தேவி ஒரு முரடனை ஏவி, அவள் கற்பை அழிக்க ஏற்பாடு செய்யும் போது, ஆணாக உருமாறுவதற்கு உதவுகிறது; தேவி உணவளிக்காது வருத்த, பசித்துன்பத்தைத் தாங்குவதற்கும் உதவுகிறது; மாதவன் வடிவு கொண்டு, சமய அறம் கேட்கவும், வான்வழிச் செல்வதற்கும் அவளுக்கு அருந்துணையாகிறது.

காய சண்டிகை வரலாறு, உதயகுமரன் இறப்பிற்குக் காரணமாகிறது. ஆபுத்திரன், ஆதிரை வரலாறு அமுத சுரபியோடு இணைகிறது. சக்கரவாளக் கோட்டம் பற்றிய கதை, உடம்பின் நிலையாமையை வலியுறுத்த வந்துள்ளது. இவ்வாறு, பல்வேறு வரலாறுகளும் கிளைக் கதைகளும் நிகழ்வுகளும் வந்து இணைந்து காப்பியக் கதைப்பின்னலைச் சுவைபட நடத்திச் செல்கின்றன.

3.3.2 காப்பியப் பாவிகம் பாவிகம் என்பது என்ன என்று அறிந்து கொள்வோமா? ஒரு பாடலைப் படிக்கிறோம். அது முழுமையாக உணர்த்தும் பொருள் என்ன என்று சூழ்ந்து நோக்கி (எண்ணிப் பார்த்துப்) புரிந்து கொள்கிறோம். ஒரு நீண்ட கதையைப் படித்து முடிக்கும்போதும் அது முழுமையாக என்ன கருத்தை உணர்த்துகிறது என்பதைப் புரிந்து கொள்கிறோம். அல்லவா?

‘அடுத்தவனின் மனைவியை அடைய நினைப்பவனின் குலமே அழியும்’ என்பது இராமாயணக் காப்பியத்தின் பாவிகம் ஆகும். அரிச்சந்திரன் கதை ‘உண்மையே பேசுவோர் பல துன்பங்களை அடைந்தாலும் இறுதியில் பெருமை அடைவர்’ என்பதை உணர்த்துகிறதல்லவா? இது அரிச்சந்திர புராணத்தின் பாவிகம். ‘பொறுமையை விடச் சிறந்த கவசம் இல்லை’ என்பது பாரதக் கதையின் பாவிகம். சிலப்பதிகாரம் மூன்று பெரிய உண்மைகளைப் பாவிகமாகக் கொண்டிருப்பது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?

பாவிகம் என்பது காப்பியப் பண்பே என்பார் தண்டி. சாத்தனார் மேற்கண்டவாறு கதை நிகழ்ச்சிகளைப் பல கோணங்களில் எடுத்துச் சொல்வதற்கான காரணம் என்ன? பாவிகமாக அவர் எதை உணர்த்த விரும்புகிறார்? உலகில் மக்கள் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு காரணம் பற்றி நிகழ்கின்றதேயன்றி வேறில்லை. இப்பிறப்பில் மக்களுக்கு உண்டாகும் நன்மை தீமைகளுக்குக் காரணம் முன்னை வினைப் பயனே. “பிறப்புப் பல மாறினும் வினைப் பயன் விடாது வந்து பற்றும் என்பதைப் பாவிகமாக வலியுறுத்தவே சாத்தனார் இக்காப்பியம் படைத்தார்” என்று தோன்றுகிறது. ஏனைய சமயக் கணக்கர் தம் சமயச் சிந்தனையிலும் பௌத்த சமயச் சிந்தனையே மேலோங்கியது என்பதை வலியுறுத்துவதும் இதன் நோக்கமாக அமைகின்றது.

3.4 காப்பிய மாந்தர்கள்

மணிமேகலைக் காப்பியத்தின் முதன்மைப் பாத்திரமும் முக்கியப் பாத்திரமும் மணிமேகலையே. அவளைச் சுற்றியே கதை நிகழ்கிறது. ஒரு சாதாரணக் கணிகை மகளாகத் தோன்றி, உதயகுமரன்பால் காதல் உள்ளம் உடையவளாய் இருந்து, உள்ளம் தெளிந்து அறத்தின் நாயகியாக அவள் மிளிர்வதையே காப்பியம் எடுத்துரைக்கிறது. அவள் தூய்மையான துறவு வாழ்க்கை மேற்கொள்ள எத்தனையோ துணைப் பாத்திரங்கள் துணை நிற்கின்றன. இந்தத் துணைப் பாத்திரங்கள் இல்லை என்றால் மணிமேகலை துறவு கனவாகவே முடிந்திருக்கும்.

தமிழ்க் காப்பியங்களில் பெண்ணைத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டு எழுந்த இரண்டாவது பெருங்காப்பியம் மணிமேகலை. இளங்கோவடிகள், குல மகளான கண்ணகியை இல்லற மகளாகக் காட்டிக் கடவுள் நிலைக்கு உயர்த்தினார். இதைவிட ஒருபடி உயர்ந்து நிற்கிற நிலையில் மணிமேகலையைச் சாத்தனார் படைத்திருக்கும் திறன், அக்காலத்தில் அவர் செய்த மாபெரும் புரட்சியே எனலாம். இழிவாகக் கருதப்பட்ட கணிகைக் குலத்தில் பிறந்த மாதவியை ஒரு கற்பரசியாக உயர்த்தியவர் இளங்கோ அடிகள். அவள் வயிற்றில் உதித்த மணிமேகலையை ஓர் அறச்செல்வியாக மேலும் உயர்த்திய பெருமைக்கு உரியவர் சாத்தனார்.

3.4.1 மணிமேகலை காவலன் பேரூர் (மதுரை) கனைஎரி (தீ) ஊட்டிய, மாபெரும் பத்தினி (கண்ணகி) மகள் என்றே மணிமேகலை அறிமுகம் செய்கிறார் சாத்தனார். மாதவி தன் மகள் ஆனாலும் அவளைக் ‘கண்ணகி மகள்’ என்று கூறுவதில் பெருமிதம் கொள்வதாகச் சாத்தனார் பாடுகிறார். தொடக்கத்தே அவளைக் கலைமகளுக்குரிய பேரழகியாகவே காட்டுகிறார் ஆசிரியர். அவள் அழகு கண்டால் காமனும் தன் வில்லை எறிந்து விட்டு நடுங்குவான். ஆடவர்கள் கண்டால் அகன்று செல்லமாட்டார்கள். அசையாமல் நின்றிருந்தாலும் அவர்கள் பேடியரே. “அழகும் இளமையும் கொண்ட இவளைத் துறவறப்படுத்திய தாய் கொடியவள்” என்றனர் நகர மக்கள். மணிமேகலையைக் கண்ட புண்ணியராசன் என்ற ஆபுத்திரன் “பெண் இணையில்லாப் பெருவனப்பு (அழகு) உற்றாள்” என வியக்கிறான்.

இத்தகைய அழகும் இளமையும் மிக்க மணிமேகலை ஊழ்வினைப் பயனால் உதயகுமரன்மீது காதல் கொண்டவளாகவே காணப்படுகிறாள். அவன் தேரொலி கேட்ட அளவில், தன்நெஞ்சு நெகிழ்ந்து ‘என் செய்வேன்’ எனப் பதறுகிறாள். பளிக்கறைக்குள் இருந்து அவனைக் கண்டபோது, காதல் அரும்ப, அவன் தன்னைக் கற்பில்லாதவள், விலைமகள் என்று இகழ்ந்தபோதும் “இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது, புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்; இதுவோ அன்னாய் (தோழியை அழைக்கும் சொல்) காமத்து இயற்கை” என வியக்கிறாள். புத்த பீடிகையால் தன் பிறப்புணர்ந்த மணிமேகலை, “காதலன் பிறப்பும் காட்டாயோ” எனக் கேட்கிறாள். அவளை அடைய விரும்பும் உதயகுமரன், “நற்றவம் ஏற்றது ஏன்?” எனக் கேட்கிறான். அப்போது அவள் மனநிலை என்ன? சாத்தனார் குரலாக வருவதைக் காண்போம்.

என்னமர் காதலன் இராகுலன் ஈங்கிவன்

தன்னடி தொழுதலும் தகவுஎன

(உதயகுமரன் அம்பலம் புக்க காதை: 128-129)

(என்னமர் காதலன் இராகுலன் – முற்பிறப்பில் என்னை விரும்பிய கணவனாகிய இராகுலன்; தகவு – தகுதி)

வணங்குகிறாள். அது மட்டுமா?

அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்

இறைவளை முன்கை ஈங்கிவன் பற்றினும்

தொன்று காதலன் சொல்எதிர் மறுத்தல்

நன்றி அன்றுஎன நடுங்கினள் மயங்கி

(உதயகுமரன் அம்பலம் புக்க காதை: 130-133)

(அறைபோய் = உள்ளம் தன் நிலை இழந்து; இறைவளை – சிறிய வளையல்; தொன்று - முற்பிறப்பில்; நன்றி அன்று – நல்லது அன்று)

என்று துறவிக் கோலம் பூண்ட மணிமேகலையின் இளமைத் துடிப்பையும், காதல் மயக்கத்தையும் சாத்தனார் வெளிப்படுத்துகிறார்.

உதயகுமரன் இறந்த பின்னும் கூட, அவன்பால் உள்ள காதல் அவளை விட்டு நீங்கியபாடில்லை. அவன் (உதயகுமரன்) விஞ்சையன் (காய சண்டிகையின் கணவன் காஞ்சனன்) வாளால் வீழ்ந்துபட்டபோது, ‘வெவ்வினை உருப்ப விளிந்தனையோ (இறந்தனையோ) காதல’ எனப் புலம்பி அவனைத் தழுவ நினைக்கிறாள். அதைத் தடுக்கிறது கந்திற்பாவை. மணிமேகலைக்குத் துன்பம் செய்த உதயகுமரனின் தாய் அவளது ஆற்றலை உணர்ந்து, காலில் விழுந்து வணங்க, “தகுதி செய்தில்லை; காதலன் பயந்தோய்” என்கிறாள். இப்படிக் காதல் வயப்பட்ட மணிமேகலைக்குத் தீவ திலகை, மணிமேகலா தெய்வம், அறவண அடிகள், கந்திற்பாவை, கண்ணகிக் கடவுள், மாசாத்துவான் – இவர்தம் பெருங்காவலும் வழிப்படுத்தலுமே, தூய்மையான அறவாழ்க்கையை மேற்கொள்ள அடிகோலின எனலாம்.

3.4.2 பிற மானுடப் பாத்திரங்கள் மணிமேகலை வாழ்வில் நெருங்கிய உறவுத் தொடர்புடைய பாத்திரங்களாக மாதவி, சுதமதி, மாசாத்துவான் அமைவர். இவர்கள் மணிமேகலை துறவு வாழ்வுக்கு உறவு நிலையில் நின்று வழி காட்டியவர்கள். உதயகுமரன், அவன் தாய், தந்தை மாவண்கிள்ளி ஆகியோர் எதிர்நிலையில் நின்று அவள் துறவைப் பலப்படுத்தியவர்கள். இவ்வகையில் சித்திராபதியின் படைப்பும் குறிப்பிடத்தக்கது. இந்நால்வருமே மணிமேகலை வாழ்வில் குறுக்கிட்டுத் தோல்வி கண்டவர்கள். மாவண்கிள்ளி மணிமேகலையைச் சிறை செய்து துன்புறுத்தியவன். அவன் தேவியோ எந்த ஒரு பெண்ணும் செய்யத் துணியாத ஒரு செயலை மணிமேகலையைக் கற்பழிக்க ஆடவரை ஏவி அதில் தோல்வி அடைகிறாள். உதயகுமரன் மணிமேகலையை அடைய முயல்கிறான். மணிமேகலைக்கு அவன்பால் காதல் இருந்தும் அது தோல்வியில் – அவனது இறப்பில் முடிகிறது. இவ்வாறு, இவர்தம் முயற்சிகள், மணிமேகலையின் மன வலிமையாலும் தெய்வ ஆற்றலாலும் முறியடிக்கப்பட்டு, அவள் ஆற்றலை வெளிப்படுத்த மறைமுகமான துணையாக அமைகின்றன.

மாதவி தன் மகள் மணிமேகலையைத் துறவி ஆக்குகிறாள். தானும் துறவி ஆதலால் பற்றுக்களில் இருந்து ஒதுங்கி விடுகிறாள். ஆனால், செவிலித்தாயாக உடனிருந்து உதயகுமரனிடமிருந்து அவளைக் காப்பாற்றுகிறாள் சுதமதி. அதோடு உதயகுமரனுக்கும் அறிவுரை கூறி, “தீ நெறிப் படரா நெஞ்சினை ஆகுமதி” என வேண்டுகிறாள். தான் மாருதவேகன் என்பவனால் கற்பிழந்த நிலை மணிமேகலைக்கு வராவண்ணம் தடுப்பவளும் இவளே.

இவர்கள் நீங்கலாக உறவுத் தொடர்பு இல்லாத ஆபுத்திரன், அறவண அடிகள், காஞ்சனன், காய சண்டிகை, ஆதிரை ஆகியோர் பாத்திரங்களும் மணிமேகலைக் காப்பியத்தில் முக்கியப் பங்கு பெறுபவைதாம். ஆபுத்திரன் கதை காப்பியத்தில் நீதி உணர்த்தவும், வினைப் பயன் உணர்த்தவும் பல காதைகளில் எடுத்துரைக்கப்படுகிறது. ஆயினும், அவன் வைத்திருந்த அமுதசுரபி மணிமேகலையிடம் வந்து சேர்கிற தொடர்பே முக்கியத்துவம் பெறுகிறது. அதுவே மணிமேகலை அறச்செல்வியாக உருமாற வழி கோலுகிறது.

அறவண அடிகள் மாதவி, சுதமதி, மணிமேகலை, உதயகுமரன் ஆகியோரின் முற்பிறப்புக் காலத்தே வாழ்ந்த முதுபெரும் துறவியாக அறிமுகமாகிறார். இவரே மாதவியை பௌத்த நெறிப்படுத்தியவர். இவர்களின் பழம்பிறப்பினை அறிவித்தவரும் இவரே. இவரே மணிமேகலை, பிற சமயக் கணக்கர் திறம் அறிதற்கும், பௌத்த நெறியில் தவம் மேற்கொள்ளுவதற்கும் துணையாக நின்றவர்.

3.4.3 தெய்வப் பாத்திரங்கள் மணிமேகலையின் துறவு வாழ்க்கையைச் செந்நெறிப்படுத்திய தெய்வப் பாத்திரங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று மணிமேகலா தெய்வம். மணிமேகலை பெயர் சூட்டுதற்கே இத்தெய்வ வாக்கே காரணம். இத்தெய்வம் மணிபல்லவத்திற்கு மணிமேகலையை எடுத்துச் சென்றது. அமுத சுரபி பெறவும், பழம்பிறப்பு அறியவும் அவளுக்கு உதவியது. மந்திரம் கூறி மணிமேகலையைப் பல்வேறு துன்பங்களிலிருந்தும் காப்பாற்றியது இத்தெய்வமே. இத்தெய்வம் இல்லை என்றால் மணிமேகலை இல்லை; காப்பியமும் இல்லை என்று கூறும் அளவிற்கு, இதன் பாத்திரப் படைப்பு, காப்பியத்தில் பெருஞ்சிறப்புப் பெறுகின்றது. இதற்குத் துணையாகவே புத்த பீடிகை, கந்திற்பாவை முதலான தெய்வப் படிமங்களும், தீவ திலகை போன்ற தெய்வப் பாத்திரங்களும் அமைந்து, மணிமேகலையின் துறவு வாழ்வை மிளிரச் செய்கின்றன.

3.5 சமூகச் சிந்தனை

மணிமேகலைக் காப்பியம் ஒரு குறிக்கோள் இலக்கியம் என்பது அதன் பாவிகப் பண்பால் அறியலாம். அது முன்னர் விளக்கப்பட்டது. அப்பாவிகம் அன்றியும் வேறு பல சமூக, சமயம் சார்ந்த பல அறக்கருத்துகளையும் இக்காப்பியம் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை அறியலாம்.

3.5.1 சமூக நீதி “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. அதுபோல இக்காப்பியம் பசிப்பிணி போக்கும் அறம் செய்வதை முதன்மையாகக் கொண்டுள்ளது. மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே என்று எல்லாரும் உணவும், பாதுகாப்பும் பெறும் வகையில் பொருளைக் கொடுத்தலே சிறந்த அறம்; அதனின் வேறான அறம் இல்லை என்கிறது.

பசுக் கொலை செய்வது பாவம் என்பதை, ஆபுத்திரன் கதை வாயிலாக எடுத்துரைக்கிறது. இது ஒரு வகையில், ஆரிய மரபுக்கு எதிரான ஒரு சிந்தனையை முன்மொழிகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. ஆபுத்திரன் இளம்பூதி என்னும் அந்தணனின் வளர்ப்பு மகன். மறையோர் வேள்வித் தீயில் பசுவைக் கொலை செய்யக் கொண்டு வரும்போது, அப்பாவச் செயலைத் தடுக்கிறான். மறையோர் அவனை ‘ஆ (பசு) மகன்’ என ஏசுகின்றனர்; அதோடு “காப்புக் கடை கழிந்து கணவனை இழந்து கெட்ட சாலி மகன்” என்று அவன் பிறப்பைப் பழிக்கின்றனர். ஆபுத்திரன் அந்தணர் போற்றும் முனிவர்களான அசலன், சிருங்கி, விரிஞ்சி, கேச கம்பளன் முதலோர், முறையே பசு, மான், புலி, நரி இவற்றின் மக்களே என்பதை எடுத்துரைக்கிறான். அதோடு வசிட்டர், அகத்தியர் ஆகிய முனிவர்கள் திலோத்தமை என்ற கணிகை மக்களே என்பதை எடுத்துரைத்துப் பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்பதை முன் வைக்கிறான். இது ஆரியர் தம் நால்வருணப் பாகுபாட்டுணர்வின் எதிர்க்குரலாக அமைகின்றது.

ஆபுத்திரன் அறச்செயல் கண்டு மகிழ்ந்த இந்திரன் “வேண்டும் வரம் கேள்” என்கிறான். அதற்கு ஆபுத்திரன்,

அறஞ்செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர்

நற்றவம் செய்வோர் பற்றுஅற முயல்வோர்

யாவரும் இல்லாத் தேவர்நல் நாட்டுக்கு

இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே

(பாத்திர மரபு கூறிய காதை: 40-43)

என்று இந்திரனைப் பழிக்கிறான். இதுவும் வேத மரபுக்கு எதிரான சிந்தனையே என்பது தெளிவாகிறது. இதனால் சினமுற்ற இந்திரன் பெருமழை பெய்யச் செய்து, ஆபுத்திரனின் அமுதசுரபிக்கு தேவையில்லாமல் செய்து விடுகிறான்.

3.5.2 சமய நீதி ‘சமயம் இல்லையேல் காப்பியம் இல்லை’ என்பர். இது அனைத்து மொழிக் காப்பியங்களுக்குமான பொதுநீதி. தமிழ்க் காப்பியங்களும் இதற்கு விதி விலக்கல்ல. மணிமேகலையில் வரும் கடவுளர் பாத்திரங்களும், அறவண அடிகளும் சமய நீதி உணர்த்தவே வருகின்றனர். ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ என்பதில் சமண, பௌத்த மதங்கள் ஆழ்ந்த நம்பிக்கை உடையன. இவ்வகையில் பௌத்த சமயக் காப்பியமான மணிமேகலையில் வரும் அனைத்துப் பாத்திரங்களின் செயல்களுக்கும் காரணம் ‘வினைப்பயனே’ என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. அதோடு இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகிய நிலையாமைக் கோட்பாடுகளை வற்புறுத்துவதில் இவ்விரு சமயங்களும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்வன.

இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா;

வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா;

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்;

மிக்க அறமே விழுத்துணை ஆவது

(சிறைசெய் காதை: 135-138)

(புத்தேள் உலகம் = தேவர் நாடு; விழுத்துணை = சிறந்த துணை)

என மணிமேகலை உணர்த்தும்.

வீடுபேறு பெறுவதே வாழ்வின் நோக்கம் என்பது இவற்றின் முடிந்த முடிவு. இதற்கு அடிப்படை காமத்தைக் கடத்தல் வேண்டும் என்பது. இதனால் தான் மணிமேகலையின் காம உணர்வுகளை ஆங்காங்கே எடுத்துக் காட்டி, அவை நல் அறச் சிந்தனையால் முற்றிலும் கடியப்படுவதைக் காப்பியம் காட்டுகிறது. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதைகளில் பௌத்த அறச் சிந்தனை விரிவாகச் சாத்தனாரால் பேசப்படுகிறது. காப்பியத்தில் இடம் பெறும் சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை, யாக்கை நிலையாமையை உணர்த்தும் அருமையான பகுதி. அதோடு ‘மங்கையர் உடல்’ காமத்தின் குறியாக அமையும் உறுப்புகள்  இடுகாட்டில் காக்கை கூகை, கழுகு, நாய், நரிகளால் எவ்வாறு சிதைக்கப்படுகின்றன என்பதைச் சுட்டி யாக்கை நிலையாமையை, காமத்தின் இழிவை எடுத்துரைக்கிறது.

பிறப்பு, இறப்பு என்பது உலக இயற்கை; இதற்காகக் கவலைப்படுவது பேதைமை என்பதை அறவண அடிகள் வாயிலாக எடுத்துரைக்கிறார்.

உதயகுமரன் இறந்ததற்காகப் புலம்பும் மணிமேகலை இதே கருத்தையே முன்வைக்கிறாள்.

பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்

அறந்தரு சால்பும் மறம்தரு துன்பமும்

(கந்திற்பாவை வருவது உரைத்த காதை: 19-20)

உணர்த்தவுமே காய சண்டிகை வடிவு கொண்டேன் என்கிறாள்.

மாதவி துறவறம் மேற்கொள அறவண அடிகளைத் தொழுகிறாள். அவளுக்குச் சமய நீதி உணர்த்தும் அடிகள்,

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்;

பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்;

பற்றின் வருவது முன்னது; பின்னது

அற்றோர் உறுவது; அறிகஎன்று அருளி,

ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி,

உய்வகை இவைகொள்

(ஊர் அலர் உரைத்த காதை: 64-69)

(ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி – கள், காமம், கொலை, பொய், களவு என்னும் ஐந்தினையும் முற்றும் துறத்தலாகிய ஐவகைச் சீலங்களையும் உணர்த்தி; சீலம் – ஒழுக்கம்)

என அறவுரை கூறுகிறார்.

3.5.3 புராண இதிகாச வரலாறு மணிமேகலைக் காப்பியம் சமூக நீதி, சமய நீதி பேசுகிற இடங்களில் பல புராண மரபுக் கூறுகளை உவமையாக எடுத்தாண்டு கூற வந்த கருத்துக்கு வலிவு சேர்க்கிறது. முருகன் கிரவுஞ்ச மலையைத் தகர்த்ததும், திருமால் இராமாவதாரத்தில் கடலடைத்த வரலாறும், அவன் வாமன அவதாரத்தில் மூவடியால் நிலம் அளந்து மாவலியை அழித்ததும் ஆகிய புராண வரலாறுகள் இங்குக் குறிப்பிடத்தக்கன. அதோடு மட்டுமல்லாமல், திருமகள் ஆடிய பாவைக் கூத்து, மணிவண்ணன் ஆடிய குரவைக் கூத்து ஆகியனவும், காமன், இந்திரன், சயந்தன் பற்றிய புராண மரபுக் கூறுகளும் மணிமேகலைக் காப்பியத்திற்குச் சிறப்புச் செய்கின்றன.

3.6 தொகுப்புரை

அன்பார்ந்த மாணவர்களே! இதுவரையிலும் மணிமேகலைக் காப்பியம் பற்றி அறிந்தோம். இது ஒரு வழிகாட்டியே தவிர, இதனால் மணிமேகலைக் காப்பியத்தை முழுமையாக அறிந்து விட்டோம் என்று கூறிவிட முடியாது. இன்னும் எத்தனை எத்தனையோ செய்திகள் இதில் பொதிந்து கிடக்கின்றன.

பல்வேறு மலர் வனம் பற்றிச் சுதமதி கூறிச் சொல்லும் பகுதி இலக்கிய நயம் மிக்கது. மணிமேகலை பேசும் சமயத் தர்க்க வாதமும் சமயச் சிந்தனைகளும் இங்கு எடுத்துரைக்கப்படவில்லை. காரணம் சமயப் புலமை மிக்கவருக்கே அது புரியும் என்பதால் இங்கு விட்டுவிட்டோம். தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல் மணிமேகலையே என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இம் மணிமேகலையில் பேசப்படும் பௌத்த சமயச் சிந்தனை ஹீனாயானம், மகாயானம் இவற்றில் எது என்பதைப் பற்றி மேலும் சிந்திக்கலாம். கிளைக் கதைகளால் நிறைந்தது மணிமேகலை; இவற்றைப் பற்றிய ஆராய்ச்சி ஒரு தனிப்பகுதியாகும். இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் பற்றி மணிமேகலை தரும் கருத்துகள் சுவையானவை. ‘சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை’யை ஆழ்ந்து படிப்பவர் ஆன்மீக வாதியாக மாறிவிடக் கூடும்; அந்த அளவிற்கு உடலின்பத்தை – உலகியல் இன்பத்தை மறுத்துப் பேசுகிறது மணிமேகலை. சிலம்பிலே இடம்பெறும் கோவலன், கண்ணகி கதைகள் மீள்பார்வைக்கு உள்ளாகின்றன. கால மாற்றமும் சமயக் காழ்ப்பும் கதை அமைப்பைக் கூட மாற்றிக் காட்டுகின்றன. சிலம்பும் மேகலையும் ஏன் இரட்டைக் காப்பியங்கள் என்று சுட்டப்படுகின்றன. இவ்வாறு யார் சொன்னார்கள்? ஏன் சொன்னார்கள் என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்கலாம். இவ்வாறு இக்காப்பியத்தை உங்கள் சிந்தனைத் தளத்தில் அசைபோட்டு, அதிலே பொதிந்து கிடக்கும் கருத்துகளை வெளிக்கொணர இது ஒரு பதச்சோறு.

பாடம் - 4

சீவக சிந்தாமணி

4.0 பாட முன்னுரை

தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் முதலில் வைத்து எண்ணப்படுவது சீவக சிந்தாமணி. இது ஒரு சமண சமயக் காப்பியம். இது, முதன் முதலில் விருத்தப்பாவில் பாடப்பட்ட காப்பியம். கம்பர் ‘சிந்தாமணியிலிருந்து ஒரகப்பை முகந்து கொண்டேன்’ என்று கூறியதாகப் பழைய பிரதி ஒன்று குறிப்பிடுகிறது. இது இந்நூலின் சிறப்பினை எடுத்துரைக்கும் அன்றோ? நூற்பொருளான அறம், பொருள், இன்பம், வீடுபேறு பற்றி இந்நூல் பேசுவதால் இதனை, ‘முடிபொருள் தொடர்நிலை’ என அடியார்க்கு நல்லார் என்ற சிலப்பதிகார உரையாசிரியர் சிறப்பிக்கின்றார்.

சிந்தாமணியே கிடத்தியால் என்ற வரி இந்நூலில் இடம்பெறுவதால் இதன் பெயர் சிந்தாமணி எனப் பெயர் பெற்றது. பின் காப்பியத் தலைவன் சீவகன் பெயரையும் இணைத்துச் சீவக சிந்தாமணி எனப் பெயர் பெற்றது. சீவகன், குணமாலை முதல் இலக்கணை ஈறாக எட்டுப் பெண்களை மணந்ததாலும், மண்மகள் மற்றும் முக்தி மகள் ஆகியோரை அடைந்ததாலும் இந்நூலுக்கு மணநூல் என்ற பெயரும் நிலை பெறுவதாயிற்று.

4.1 சீவக சிந்தாமணி

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய தமிழ்க் காப்பியங்கள் தமிழ் மண்ணில் தோன்றிய பெண் மக்களைக் காப்பியத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டிருக்க, இச் சீவக சிந்தாமணி வடநாட்டு வேந்தனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டு அமைகிறது. காப்பியக் கதை, கதை மாந்தர்கள், கதைக்களம் முதலானவை தமிழ் மண்ணுக்குச் சொந்தமல்ல; இவை வடவர் மரபு; வடநாட்டார் மரபு; என்றாலும் காப்பிய ஆசிரியர் தமிழர்; தமிழ் நாட்டைச் சார்ந்தவர். தம் சமயச் சார்பு காரணமாக தன் சமயம் சார்ந்த வடமொழிக் கதையை எடுத்துக் கொண்டு, கதைப் போக்கை மாற்றாமல், அதே நேரத்தில் தமிழர் மரபு பிறழாமல் காப்பியத்தைப் புனைந்திருக்கின்ற திறன் அருமையினும் அருமை. இதனால்தான் இக்காப்பியம், சோழர் காலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்ததாகச் சேக்கிழார் புராணம் குறிப்பிடுகின்றது.

இன்றும் கூடத் தமிழ் அறிஞர்களால், தமிழ் ஆசிரியர் மற்றும் மாணாக்கர்களால் பெரிதும் போற்றப்பட்டு வருவதற்கான அடிப்படைக் காரணம் இதன் இலக்கியச் சிறப்பும், தமிழ் இலக்கிய மரபுமே என்றால் அது மிகையாகாது.

4.1.1 காப்பிய ஆசிரியர் காப்பிய ஆசிரியர் திருத்தக்க தேவர். இவர், சமண முனிவர். சோழர் குலத்தில் தோன்றியவர். வஞ்சி எனும் ஊரில் இருந்த பொய்யாமொழிப் புலவரால் புகழப்பட்டவர். திருத்தகு முனிவர், திருத்தகு மகா முனிவர், திருத்தக்க மகாமுனிகள், தேவர் என்ற சிறப்புப் பெயர்களால் சிறப்பிக்கப்பட்டவர். இவர், அகத்தியம், தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலான தமிழ் நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர். வடமொழிப் புலமை மிக்கவர். சமண சமய நூல்களைக் கற்றவர். அன்பு, அருள், வாய்மை, அடக்கம் ஆகிய நற்பண்புகளைப் பெற்றவர். அறிவு முதிர்ச்சி அடைந்தவர். இளமையிலேயே துறவு நெறியைப் பின்பற்றியவர். தம் நல்லாசிரியருடன் பாண்டி நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர். அங்குச் சங்கப் புலவர்களுடன் இருந்து தமிழ்ச் சுவையைப் பருகியவர். அப்போது தமிழ்ப் புலவர் ஒருவர் ‘சமணர்களுக்குத் துறவை மட்டுமே பாடத் தெரியும்; காமச் சுவைபட இலக்கியம் படைக்க வல்லார் அல்லர்’ எனப் பழித்தார். இதனைக் கேட்ட திருத்தக்க தேவர் ‘சமணர்கள் காமத்தை வெறுத்தனரே யன்றிப் பாடத் தெரியாதவர்கள் அல்லர்’ என்றார். ‘அப்படி என்றால் காமச் சுவைபட ஒரு நூல் இயற்றுக’ என்றார் புலவர். இதனைத் தேவர் தன் ஆசிரியரிடம் கூற, அவர் தம் மாணாக்கரின் புலமைத் திறத்தை உணர்த்த, எதிரே ஓடிய நரி ஒன்றைக் காட்டி ‘இது பற்றிப் பாடுக’ என்றார். உடனே நரிவிருத்தம் பாடினார் தேவர்.

திருத்தக்க தேவரின் புலமைத் திறத்தை நரிவிருத்தம் பாடியதன் மூலம் சங்கப் புலவருக்கு வெளிப்படுத்திக் காட்டிய ஆசிரியர், மீண்டும் தம் மாணவரை நோக்கி ‘ஜீவகன் வரலாற்றைப் பெருங்காப்பியமாகப் பாடுக’ எனப் பணித்தார். அதோடு நின்றாரா? இல்லை; ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியும் கொடுத்தார். பின் தேவரும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடிக் காப்பியத்தைத் தொடங்கினார். தான் பாடிய கடவுள் வாழ்த்தினும் தேவர் பாடிய கடவுள் வாழ்த்து சிறந்ததாக அமைந்ததை அறிந்த ஆசிரியர், தேவர் பாடிய பாடலை முதலிலும், தான் பாடிய பாடலை அடுத்தும் வைத்துக் காப்பியத்தைப் படைக்குமாறு பணித்தார்.

ஆசிரியரின் ஆணையைத் தலைமேல் ஏற்ற திருத்தக்க தேவர், காவியம் முழுவதையும் பாடி முடித்து ஆசிரியரிடம் சமர்ப்பித்தார். ஆசிரியரின் வேண்டுகோளின்படி, அதைச் சங்கப் புலவர்தம் அவையில் அரங்கேற்றினார். புலவர்களும் அரசனும் அதனை வெகுவாகப் புகழ்ந்தனர். காப்பியத்தில், காமச்சுவையும் இன்பச் சுவையும் மிகுதியாகவும் சிறப்பாகவும் இருப்பதைக் கண்ட சில புலவர்கள், தேவரின் துறவில் சற்று ஐயம் கொண்டனர். சிற்றின்ப அனுபவம் இல்லாத ஒருவரால் இந்த அளவுக்குச் சிற்றின்பத்தைப் பாடமுடியுமா? என்பது அவரது கேள்வியாக இருந்தது; தேவரின் துறவு வாழ்வில் கூட இவர்களுக்குச் சந்தேகம். இவர் சிற்றின்ப அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் எனப் பேசிக் கொண்டனர். அவர்தம் உள்ளக் கிடக்கையை அறிந்த தேவர், ‘நான் உண்மையான பாலசன்னியாசியாகின் இப்பழுக்கக் காய்ச்சிய இரும்பு சுடாதிருக்க’ எனக் கூறிக் கையால் தொட்டும், காலால் தீண்டியும், அது அவருக்கு எவ்விதத் துன்பமும் கொடுக்கவில்லை. இதனால் தேவரின் தவ ஆற்றலை அறிந்து அஞ்சிய புலவர்கள் தம்மை மன்னிக்குமாறு வேண்டினர். அவர்களது பிழை பொறுத்த தேவர், ‘நீவிர் எனது துறவைப் பலரும் அறியச் செய்து, நன்மையே செய்தீர்’ எனக் கூறி அவர்களது அச்சத்தைப் போக்கினார். இவ்வாறு கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது. இதுவே இவ்வாசிரியர் பற்றி நாம் அறியக் கிடக்கின்ற வரலாறாகும்.

இக்கதை வழி நாம் அறியும் செய்தி என்ன தெரியுமா? ஆசிரியர் திருத்தக்க தேவர் ஒரு சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பது புலப்படுகிறது; அதோடு அவர் சிறந்த இளந்துறவி என்பதும்,  தவ ஆற்றல் பெற்றவர் என்பதும் தெரியவருகிறது. மேலும், ஆசிரியர் சிறந்த தமிழ்ப் பற்றாளர் என்பதோடு, சிறந்த தமிழ்நூல் கல்வியாளர் என்பதும் தெரிய வருகின்றது.

4.1.2 காப்பியத்தின் காலம் சீவக சிந்தாமணியின் காலம், ஆசிரியர் வரலாறு முதலானவை அறியப்படவில்லை என இதன் பதிப்பாளர் உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகிறார். என்றாலும் இதன் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு என்று சிலர் கருதுகின்றனர். கம்பர், இதில் ஒரகப்பை முகர்ந்து கொண்டார் என்பதால் இதன் காலம் கம்பராமாயணத்திற்கு முந்தியதாகலாம் என்பர். சேக்கிழார் காலத்தில், இந்நூல் செல்வாக்குப் பெற்றிருந்தாகச் சேக்கிழார் புராணம் குறிப்பிடுகிறது. எனவே இந்நூலினது காலம். இவற்றிற்கு முற்பட்டதென்பது தெரிகிறது. கம்பராமாயணம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு என்பது பொதுவான கருத்து. அதற்கு முந்தியது என்பதால் இந்நூலினது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். இக்காப்பியத்தின் மொழிநடை, விருத்தப்பா அமைப்பு ஆகியவை கொண்டு, இது பெருங்கதைக் காப்பியத்திற்குப் பின்னர் எழுந்திருக்க வேண்டும் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. தமிழ்க் காப்பியங்களில் விருத்தப்பாவின் தொடக்கம் சிலம்பில் தோற்றம் பெற்றாலும், தொடக்க காலக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகியன நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமைந்தனவே. முதன்முதலாக விருத்தப்பாவில் அமைந்த காப்பியம் சீவக சிந்தாமணியே. எனவே, விருத்தப்பாவின் தொடக்கம் சிந்தாமணியே எனலாம். தொடர்ந்து இதன் செல்வாக்கு சூளாமணி, கம்பராமாயணம், பெரிய புராணம் முதலானவற்றில் இருப்பதை அறியலாம். காப்பிய இலக்கணம் கூறும் தண்டியலங்காரம் (காவ்யா தர்சம்) நூலில் கூறப்பட்டுள்ள இலக்கணம் முழுவதுமாகப் பின்பற்றப்பட்ட முதல் தமிழ்க் காப்பியம் இதுவே.

4.1.3 காப்பியத்தின் கதை மூலம் தமிழ்க் காப்பியங்களில் சிலம்பு, மேகலைக்கு அடுத்து எழுந்தவை அனைத்தும் வடமொழிச் சார்புடையனவே. பெரிய புராணம் காப்பிய அமைப்பில் பாடப்பட்டாலும், அதனைக் காப்பியம் என்ற இலக்கிய வகையில் சேர்ப்பதா-வேண்டாமா? என்ற ஆராய்ச்சி இன்னும் நடந்து வருகிறது. இந்திய மொழிகள் அனைத்திலுமே தொடக்க காலக் காப்பியங்கள் வடமொழிச் சார்புடனேயே அமைகின்றன.

இந்நூலுக்கான முதல் நூல் இன்னதென்று ஆசிரியர் குறிப்பிடவில்லை. இதனால் இந்நூலின் மூலநூல் எது என்பது அறியப்படவில்லை என்பார் உ.வே.சாமிநாதையர். ஆயினும், வடமொழியில் சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, ஜீவந்தர நாடகம், ஜீவந்தர சம்பு என நான்கு நூல்கள் உள்ளன. இவை சீவகன் சரித்திரம் கூறுவனவே. சமண சமயத்தின் வேதாகமமாகக் கருதப்படும் ஸ்ரீபுராணத்திலும், மகாபுராணத்திலும் இக்கதை சொல்லப்பட்டுள்ளது. இவை, இக்காப்பியத்தின் மூலமாகலாம் என்ற கருத்து நிலவுகிறது. தமிழில் சிந்தாமணி மாலை என்ற நூலொன்றும் அறியப்படுகிறது. சமணர்கள் இந்நூலுக்கான மூலநூல் சத்திர சூடாமணியே என்கின்றனர். என்றாலும், மேற்கண்ட நூலின் கதைக்கும் சீவக சிந்தாமணி கதைக்கும் அடிப்படையில் சில வேறுபாடுகளும் உண்டு என்கிறார் உ.வே.சாமிநாதையர். இதற்கான காரணம் தமிழ் மரபுக்கு ஏற்பச் சிந்தாமணி ஆசிரியர் செய்து கொண்ட மாற்றமே எனலாம். வால்மீகி ராமாயணத்திற்கும் கம்பராமாயணத்திற்கும் உள்ள வேறுபாடு போன்றதே இதுவும் எனலாம். சமண சமயச் சிந்தனைகளைத் தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற நோக்கில் இக்கதை தமிழ்க் காப்பியமாகப் பாடப்பட்டிருக்க வேண்டும் என்று கருதலாம். சோழர் காலத்தில் சமண சமயம் அரசர்களாலும், ஆழ்வார்-நாயன்மார்களாலும் நசுக்கப்பட்ட சமூகச் சூழலில் அதன் எழுச்சியைச் சீவகனின் அரசுருவாக்கம் மூலம் மீட்டுருவாக்குவதே இக்கதையை – வடமொழி வரலாற்றை எடுத்தாண்டதற்கான நோக்கமாவும் கொள்ளலாம். சமணர்கள் இசைக்கு எதிர்ப்பு, இன்பத்திற்கு எதிர்ப்பு என்ற பிரச்சாரம் ஓங்கியிருந்த சூழலில் தாங்கள் இவற்றிற்கெல்லாம் எதிர்ப்பாளர்கள், மறுப்பாளர்கள் அல்ல என்பதை எடுத்துரைக்கவே இக்கதையை அருமையான விருத்தப்பாவில் பாடியுள்ளார் திருத்தக்க தேவர் எனக் கருதலாம். பக்தி இயக்கத்தின் உச்ச கட்டக் காலத்தில், தம் சமயக் கொள்கையை நிலை நிறுத்த ஆசிரியருக்குச் சீவகன் வரலாறு ஒரு நிலைக்களனாக அமைந்ததில் வியப்பில்லை. தம் சமயத்தை நிலை நிறுத்துவதில், சமயக் கொள்கைகளைப் பரப்புவதில், தாங்கள் இசைக்கோ, சிற்றின்பத்திற்கோ எதிர்ப்பாளர்கள் அல்ல என்பதை உறுதி செய்வதில், தேவர் மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்நூலின் ஏட்டுப் பிரதிகள், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைத்துள்ளமை இதனை உறுதி செய்யும்.

4.2 காப்பியக் கட்டமைப்பு

ஒரு கதையைக் காப்பியமாக வடிவமைப்பதில் அதன் கட்டமைப்பு முக்கிய இடத்தைப் பெறும். காப்பியக் கட்டமைப்புக் கூறுகளில் புறநிலைக் கட்டமைப்பும் அகநிலைக் கட்டமைப்பும் சிறப்பான இடத்தைப் பெறும். காப்பியத் தலைவனின் பிறப்பு முதல் அவன் மேற்கொள்ளும் தவ வாழ்க்கை வரையிலான செயல்பாடுகளை விளக்குவது, விவரிப்பது ஒரு வகை; மற்றொரு வகை அவனது வாழ்வின் முக்கிய நிகழ்ச்சியில் தொடங்கித் தேவைக்கேற்ப முன் பின் நிகழ்வுகளை நிரல்படுத்துவது மற்றொரு வகை; இவ்வகையில் சீவக சிந்தாமணி முதல் வகையில் அமைவது. சீவகன் பிறப்பு முதல் தொடங்கி அவன் பல்வேறு திருமணங்களைச் செய்து, கட்டியங்காரனை வென்று, தன் நாட்டு ஆட்சியை முறைப்பட நிகழ்த்தி, இறுதியில் அவன் துறவு மேற்கொள்வதையே காப்பியம் நிரல்படச் சொல்கிறது.

4.2.1 புறநிலைக் கட்டமைப்பு புறநிலைக் கட்டமைப்பு என்ற நிலையில் தண்டியலங்காரம், சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் பற்றிக் குறிப்பிடுகிறது. மேலும், காதை, படலம், காண்டம் முதலானவும் காப்பியப் பிரிவுகளாக அமைகின்றன. இவ்வகையில் சீவகசிந்தாமணி இலம்பகம் என்ற பிரிவில் நாமகள் இலம்பகம், கோவிந்தையார் இலம்பகம், காந்தருவ தத்தையார் இலம்பகம், குணமாலையார் இலம்பகம், பதுமையார் இலம்பகம், கேமசரியார் இலம்பகம், கனகமாலையார் இலம்பகம், விமலையார் இலம்பகம், சுரமஞ்சரியார் இலம்பகம், மண்மகள் இலம்பகம், பூமகள் இலம்பகம், இலக்கணையார் இலம்பகம், முத்தி இலம்பகம் எனப் பதின்மூன்று இலம்பகங்களைக் கொண்டுள்ளது. இப்பாகுபாட்டை நோக்க ஓர் உண்மை புலனாகிறதன்றோ? அது என்ன உண்மை? தெரியவில்லையா? இவை அனைத்தும் பெண்ணை மையமாகக் கொண்டு அமைகிறதல்லவா?

சீவகன் எட்டு மகளிரை மணந்தது அவர் தம் பெயராலேயே எட்டு இலம்பகங்களாக அமைகின்றன. அவன் தோழன் பதுமுகன் கோவிந்தையை மணந்தது கோவிந்தையார் இலம்பகம்; சீவகன் கல்வி கேள்விகளில் சிறப்புற்றது நாமகள் (கலைமகள்) இலம்பகம்; தன் நாட்டை மீட்டது மண்மகள் இலம்பகம்; நல்லாட்சி நடத்தியது பூமகள் இலம்பகம்; துறவு மேற்கொண்டு வீடுபேறு பெற்றது முத்தி இலம்பகம்.

இவற்றோடு, காவிய மரபுப்படி வாழ்த்து, வணக்கம், அவையடக்கம் எனத் தற்சிறப்புப் பாயிரமாக மூன்று பாடல்களுடன் காவியம் தொடங்குகிறது. பதிகம் பாடுகிற மரபு சிலம்பில் தொடங்கினாலும் அங்குக் காப்பிய ஆசிரியர்களே பதிகம் பாடுகிற மரபு இருந்ததாகத் தெரியவில்லை. சிலம்பிலும் மணிமேகலையிலும் உள்ள பதிகம் பிற்சேர்க்கை என்பது குறிப்பிடத்தக்கது. காப்பியப் பதிகம் ஆசிரியரால் முதன் முதல் பாடப்படுவது சீவக சிந்தாமணியிலேயே. இங்கு, 26 பாடல்கள் காப்பியக் கதைச் சுருக்கமாக அமைகின்றன. காப்பியம் 3145 விருத்தப்பாக்களால் அமைந்துள்ளது. அவை பெரும்பாலும் நான்கு சீர்களாலான விருத்தப்பாக்களே. ஒரு சில இடங்களில், இரு சீர் அடிகளும், 5, 6 சீர் அடிகளும் இடம் பெற்றுள்ளன. ஒரு பொருள் மேல் மூன்றடுக்குக் கொச்சக ஒருபோகு என்ற பாவகைப் பாடல்கள் எட்டு இடங்களில் அமைகின்றன. ஒரே சொல், நான்கு அடிகளிலும் தொடர்ந்து, பொருள் வேறுபாட்டுடன் படைக்கப்பட்டிருப்பதும் சிந்தாமணியின் கவிதைச் சிறப்பினை எடுத்துக் காட்டும்.

4.2.2 அகநிலைக் கட்டமைப்பு காப்பிய அகநிலைக் கட்டமைப்புக் கூறுகள் சிலவற்றைத் தண்டியலங்காரம் குறிப்பிடும். இவற்றை வருணனைக் கூறுகள், நிகழ்ச்சிச் சித்திரிப்புக் கூறுகள் என வகைப்படுத்தலாம்.

வருணனைக் கூறுகளைத் தண்டியலங்காரம் மலை, கடல், நாடு, நகர், இருசுடர்த் தோற்றம் என வகைப்படுத்தும். இந்த இலக்கண மரபு அப்படியே பின்பற்றப்படுவது சிந்தாமணியில்தான். நாட்டு வளம், நகர் வளம், கோயிற் சிறப்பு (அரண்மனை) எனக் காப்பியத் தொடக்க வருணனை இங்குச் சிறப்புப் பெறுகிறது. அதோடு பொழில் வருணனை, மகளிர் வருணனை முதலான வருணனைக் கூறுகளும் சிறப்பிடம் பெறுகின்றன.

நிகழ்ச்சிச் சித்திரிப்பில் பொது நிகழ்வுகளாகத் திருமணம், புதல்வர்ப் பேறு, புனல்-பொழில் ஆடல், கலவியில் கலத்தல், புலவியில் புலத்தல் முதலானவும், அரசியல் நிகழ்வுகளாக மந்திரம், செலவு, தூது, இகல், வெற்றி ஆகியனவும் சிறப்பாகப் பேசப்படுகின்றன. சிலம்பில் வீடுபேறு பற்றிப் பேசப்படவில்லை. இங்கு அதற்கு என்றே முத்தி இலம்பகம் பாடப்பட்டுள்ளது. தவிரச் சுயம்வரம் நிகழ்த்துதல், இசைப்போட்டி பற்றிய செய்தி முதலான பெருங்காப்பிய இலக்கண மரபைப் பின்பற்றிப் பாடப்பட்டுள்ள தன்மை புலப்படுகிறது.

4.2.3 காப்பியக் கதைச் சுருக்கம் காப்பியத்திற்குக் கதை முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. அக்கதையைக் கட்டமைப்பதில்தான் கவிஞனின் திறன் வெளிப்படுகிறது என்பர். இத்திறன் சிலம்பில் மிகச் சிறப்பாக அமைவதைக் காணலாம். இங்குச் சச்சந்தன் வரலாறு முதல் சீவகன் துறவு வரையான ஓர் அரசனின் வாழ்வியல் நிகழ்வுகள் ஒரே சீராக, தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டுள்ளது. கதையைக் காண்போம்.

● நாமகள் இலம்பகம்

ஏமாங்கத நாட்டின் தலைநகர் இராசமாபுரம்; அதன் அரசன் சச்சந்தன், தன் மனைவி விசயையுடன் காம இன்பத்தில் அதிக கவனம் செலுத்தி, அரசாட்சியில் கவனம் செலுத்தத் தவறி விடுகிறான். சூழ்ச்சியால் அமைச்சன் கட்டியங்காரன், அரசனைக் கொன்று ஆட்சியைப் பிடித்துக் கொள்கிறான். கட்டியங்காரன் சூழ்ச்சியையும், தன் இறுதி முடிவையும் அறிந்த சச்சந்தன் கரு உற்றிருந்த தன் மனைவியை, மயிற்பொறியில் ஏற்றி அனுப்பி விடுகிறான். பொறியை இயக்கத் தெரியாததால் அது சுடுகாட்டில் இறங்க, அங்கு அவளுக்குச் சீவகன் பிறக்கிறான்.

ஏதுமற்ற சூழலில் தன்மகனை எப்படிக் காப்பாற்றுவது என எண்ணிய போது, தெய்வ அருளால் கந்துக்கடன் என்ற வணிகன் குழந்தையை எடுத்துச் சென்று வளர்க்கிறான். பின்னர்க் கந்துக்கடனுக்கு நந்தட்டன், நபுலன், விபுலன் என்ற மகன்கள் பிறக்கின்றனர். சீவகன் தம்பியரொடும் தோழர்களோடும் சேர்ந்து அச்சணந்தி என்ற ஆசிரியரிடம் வித்தைகளைக் கற்றனர். ஆசிரியரே சீவகன் தந்தை சச்சந்தன் என்பதை அவனுக்குத் தெரிவித்துக் கட்டியங்காரனை வெல்லும் வழிவகைகளைச் சொல்கிறார். இவை நாமகள் இலம்பக நிகழ்வுகள்.

● கோவிந்தையார் இலம்பகம்

கட்டியங்காரனின் அரசவைப் பசுக்களை வேடர்கள் கவர்ந்து செல்ல, ஆநிரை மீட்பதற்குக் கட்டியங்காரன் படை வீரர்களால் இயலாது போகிறது. இதனை அறிந்து வருந்திய இடையர் தலைவன் நந்தகோபன் ஆநிரை மீட்போர்க்குத் தன் மகள் கோவிந்தையை மணம் செய்து தருவதாக அறிவிக்கிறான். சீவகன் ஆநிரைகளை மீட்டுக் கொடுத்துக் கோவிந்தையைத் தன் தோழன் பதுமுகனுக்குத் திருமணம் செய்கிறான்.

● காந்தருவ தத்தையார் இலம்பகம்

வெள்ளி மலை வித்தியாதர அரசன் கலுழவேகன், தன்மகள் காந்தருவ தத்தையை மணப்பவன் இராசமாபுரத்தில் உள்ளான் என்பதைச் சோதிடத்தால் அறிந்து, தத்தையை அந்நகர் வணிகன் சீதத்தன் இல்லத்தில் தங்கச் செய்கிறான். அங்குத் தத்தையை யாழ் இசைப்போட்டியில் வெல்வார்க்கு அவளை மணஞ்செய்து கொடுப்பதாக அறிவிக்கிறான். அப்போட்டியில் பன்னாட்டு அரசர்களும், மேல்வருணத்தாரும் தத்தையிடம் தோல்வி அடைகின்றனர். சீவகன் தத்தையை யாழிசைப் போட்டியில் வென்று அவளை மணக்கிறான். இதனை எதிர்த்த அரசர்களைச் சீவகன் போரில் வெல்கிறான்.

● குணமாலையார் இலம்பகம்

இளவேனில் காலத்தில் பொழில் விளையாடச் சென்ற தோழியர் குணமாலை, சுரமஞ்சரி ஆகியோருக்கு இடையே சுண்ணப் போட்டி எற்படுகிறது. யார் இடித்த சுண்ணம் சிறந்தது என்பதே இங்குப் பிரச்சினை; இப்பிரச்சினை பலரால் தீர்க்கப்படாதிருக்க, சீவகனிடம் காட்டுகின்றனர். அவன் இருவரின் சுண்ணத்தை எடுத்து வானிலே வீச, குணமாலையின் சுண்ணத்தை வண்டுகள் உண்ணக் கண்டு, அதுவே சிறந்தது என்கிறான். சுரமஞ்சரி, சீவகன் தன் சுண்ணத்தை இகழ்ந்தான் என வருந்தித் ‘தன்னை வந்து சீவகன் கெஞ்சும்படி செய்வேன்’ என வஞ்சினம் கூறி, ‘ஆடவரையே பார்க்கமாட்டேன்’ எனச் சூளுரைத்துக் கன்னிமாடத்தில் தவமிருக்கிறாள். அப்போது, அந்தணன் ஒருவனின் சோற்றை நாய் கவ்வ, அதனை அவன் அடித்துத் துன்புறுத்துகிறான். அதற்கு இரங்கிய சீவகன், அதன் காதில் பஞ்ச நமஸ்காரம் எனும் மந்திரம் ஓதினான். அது, சுதஞ்சணன் எனும் தேவனாக மாறுகிறது. தன்னை எப்பொழுது நினைத்தாலும் உடனே உதவிக்கு வருவதாகக் கூறிச் சுதஞ்சணன் விண்ணகம் செல்கிறான்.

அப்போது, கட்டியங்காரனின் பட்டத்து யானை அசனிவேகம் மதம் கொண்டு, குணமாலையைக் கொல்ல முற்பட, சீவகன் யானையை அடக்கிக் குணமாலையைக் காக்கிறான். அன்னத்தைத் தூது விட்டுக் குணமாலை தன் காதலைச் சீவகனுடன் பரிமாறிக் கொள்கிறாள். அவள் பெற்றோர் சம்மதத்துடன் சீவகன் அவளை மணக்கிறான். சீவகன் அடக்கிய அசனிவேகம் யானை சீவகனிடம் தோற்றதற்காக நாணி உணவு கொள்ளாதிருக்க, கட்டியங்காரன் சீவகனைச் சிறைப்பிடிக்கிறான். ஓராண்டுக் காலம், தான் யார் என்பதை வெளிப்படுத்தக் கூடாது என்ற ஆசிரியர் ஆணையால் சிறைப்பட்ட சீவகனை மீட்கத் தத்தையின் ஏவலால் தெய்வங்கள் வருகின்றன. இதனால் நாணிய சீவகன், சுதஞ்சணனை நினைக்க, அவன் சீவகனை மீட்டுத் தேவலோகம் எடுத்துச் செல்கிறான். சீவகனைச் சிறைப்பிடித்த மதனன், கட்டியங்காரனுக்கு அஞ்சி, வேறு ஒருவனைக் கொன்று, சீவகனைக் கொன்றதாகக் கூறிப் பரிசு பெறுகிறான்.

● பதுமையார் இலம்பகம்

சீவகன் பல நாடுகளைக் காணவேண்டும் என விரும்பியதை அறிந்த சுதஞ்சணன், அழகுமேனி பெறுதல், விடம் நீக்குதல், விரும்பிய உருவம் எடுத்தல் குறித்த மூன்று மந்திரங்களைச் சீவகனுக்கு உரைக்கிறான். அதோடு, சீவகன் செல்லும் வழி கூறி, நெறிப்படுத்துகிறான். அவ்வழி, சீவகன், பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடும் வேடனைத் திருத்தி, கொல்லாமை விரதம் ஏற்கச் செய்கிறான். பின் காட்டுத்தீயால் சூழப்பட்டு வருந்திய யானைகளை மீட்கிறான். அடுத்து அரணபாதம் மலையை அடைந்து, அருகனை வழிபடுகிறான். இறுதியில், பல்லவ நாடு அடைந்து, அதன் தலைநகர் சந்திராபம் சென்று, அந்நாட்டு அரசன் தனபதியின் மகன் உலோகபாலனுடன் நட்புக் கொள்கிறான். அங்கு, உலோகபாலன் தங்கை பதுமையைப் பாம்பு தீண்ட, அதன் விடம் நீக்கிப் பதுமையை மணந்து இரு திங்கள் தங்குகிறான்.

● கேமசரியார் இலம்பகம்

பின், பதுமையைப் பிரிந்து சித்திர கூடம் எனும் தவப்பள்ளி அடைந்து அங்குள்ள தாபதர்களைத் திருத்தி, தக்கநாட்டின் தலைநகர் கேமமாபுரம் அடைகிறான். அந்நகரத்தில் சுபத்திரன் என்ற வணிகனுக்கு கேமசரி என்ற ஓர் அழகிய மகள் இருந்தாள். சுபத்திரனிடம் சோதிடர்கள் “நின் மகள் எவனைக் கண்டு நாணுகின்றாளோ, அவனே அவளுக்குக் கணவன் ஆகுவன்; பிற ஆடவரைக் கண்டால் அவளுக்கு நாணம் தோன்றாது” எனக் கூறியிருந்தனர். கேமமாபுரத்தை அடைந்த சீவகன் சுபத்திரன் வீடு செல்ல, அங்கே கேமசரி அவனைக் கண்டு நாணுகிறாள். சோதிடர்கள் கூறியபடி, சீவகனே தன் மகளுக்குக் கணவன்  என்பதறிந்து மணஞ்செய்கிறான். கேமசரியுடனும் இரு திங்கள் இருந்துவிட்டுப் பின் பிரிகிறான்.

● கனகமாலையார் இலம்பகம்

தன் பயணத்தைத் தொடர்ந்த சீவகன், பல இடங்களைக் கடந்து மத்திம நாட்டின் தலைநகர் ஏமமாபுரம் சென்று, அந்நகருக்கு அருகே உள்ள ஒரு சோலையை அடைகிறான். அங்கு, காந்தருவ தத்தை மற்றும் குணமாலையை எண்ணிக் கலங்கி இருக்க, அந்நாட்டு அரசன் மகன் விசயன் வருகிறான். அவனால் எய்து வீழ்த்த முடியாத மாங்கனியைச் சீவகன் ஒரே அம்பில் வீழ்த்தித் தன் கைக்கு வரச் செய்கிறான். சீவகனின் வில்லாற்றலை அறிந்த விசயன், தன் நாட்டுக்கு அழைத்துச் சென்றதுடன், அரசன் மக்களுக்கு வில் வித்தை கற்பிக்கும் ஆசிரியராக்குகிறான். மகிழ்ந்த அரசன், தன்மகள் கனகமாலையைச் சீவகனுக்கு மணம் முடித்து வைக்கிறான். சீவகன் பிரிவால் வருந்திய நந்தட்டன் காந்தருவ தத்தையின் வித்தையால் சீவகன் இருப்பிடம் அறிந்து அவனைக் காண்கிறான். ஏனையத் தோழர்களும் அவனைக் காணச் சென்ற வழியில் உள்ள தவப் பள்ளியில் சீவகன் தாயைக் கண்டு, சீவகன் அரச குமாரன் என்பதை அறிகின்றனர். பின்னர் சீவகனைக் கண்டு அவன் தாயின் இருப்பிடத்தை அறிவிக்கின்றனர். சீவகன் தோழர்களுடன் தாயைக் காணப் புறப்படுகிறான்.

● விமலையார் இலம்பகம்

சீவகன் தண்டகாரணியம் சென்று தாயை வணங்கி அறிவுரை பெறுகிறான். அங்கு ஆறு திங்கள் தங்கி, பின் தாயின் ஆணைப்படி, மாமன் கோவிந்தனைக் காண ஏமாங்கத நாட்டின் தலைநகர் இராசமாபுரம் செல்கிறான். அங்குப் பந்தாடிய விமலையைக் கண்டு காமுற்று, அவள் தந்தை சாகரதத்தன் கடையில் சென்று அமர, கடைப்பொருள் அனைத்தும் விற்பனையாகி விடுகிறது. சோதிடத்தின்படி, அவனே தன் மகளுக்குரிய மணாளன் என்பதை அறிந்து, சீவகனுக்கு விமலையைத் திருமணம் செய்து வைக்கிறான். அவளுடன் இருநாட்கள் தங்கிய சீவகன், மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கிறான்.

● சுரமஞ்சரியார் இலம்பகம்

சீவகனைக் காம திலகன் என நண்பர்கள் பாராட்ட, புத்திசேனன், ‘இங்குச் சுரமஞ்சரி ஆடவரையே வெறுத்து வாழ்கிறாள்; அவளை மயக்கித் திருமணம் செய்தால்தான் அவனைக் காமத் திலகனாக ஏற்க முடியும்’ என்கிறான். சீவகன் முதிய அந்தணர் வடிவு கொண்டு, சுரமஞ்சரியின் அந்தப்புரம் அடைந்து அவளை மயக்கி மணக்கிறான். ஒருநாள் அவளுடன் தங்கி, பின்னர், வளர்ப்புத் தந்தை கந்துக்கடனை வணங்கி, தத்தை, குணமாலையார் துயரினை நீக்கி, ஏமாங்கத நாட்டைக் கடந்து செல்கிறான்.

● மண்மகள் இலம்பகம்

விதேய நாடு சென்று, மாமன் கோவிந்தனின் படைத்துணை பெற்று ஏமாங்கத நாட்டுக்கு மீண்டும் வந்து, கட்டியங்காரனுடன் போரிட்டு வென்று, இழந்த தன் நாட்டின் ஆட்சியைப் பெறுகிறான். மாமன் கோவிந்தன் அறிவித்த சுயவரம்படி திரிபன்றிப் பொறி போட்டியில் வென்று இலக்கணையைப் பெறுகிறான்.

● பூமகள் இலம்பகம்

சீவகன் ஆட்சியைத் தொடங்குகிறான். கட்டியங்காரன் உறவினர்களுக்கு ஆறுதலும் பாதுகாப்பும் அளிக்கிறான். கட்டியங்காரனால் துன்புறுத்தப்பட்டவர்களுக்குச் சீவகன் வாழ்வளிக்கிறான்.

● இலக்கணையார் இலம்பகம்

சீவகன் தன்தோழர் எல்லோரையும் வரவழைத்து, முறைப்படி இலக்கணையை மணம் செய்கிறான். பின், நகர்வலம் சென்று அருகனை வழிபடுகிறான். தன்னை அன்புடன் வளர்த்த தந்தையாகிய கந்துக்கடனுக்கும் தாயாகிய சுநந்தைக்கும் அரசு பட்டம் வழங்குகிறான்; நந்தட்டனை இளவரசனாக்குகிறான். மற்றைத் தோழர்களுக்கும் உரிய சிறப்புகளைச் செய்கிறான். சுதஞ்சணனுக்குக் கோயில் எழுப்புகிறான்; தான் இளமையில் விளையாடிய ஆலமரத்துக்குச் சிறப்புச் செய்கிறான்.

● முத்தி இலம்பகம்

தவப் பள்ளியில் விசையை அருகனுக்கும் தன்னைப் பாதுகாத்த தெய்வங்களுக்கும் கோயில் எடுக்கிறாள். தன்னையும் மகனையும் காப்பாற்றத் துணை செய்த மயிற்பொறியை அரண்மனை மாடத்தில் இடம்பெறச் செய்கிறாள். சீவகன் பிறந்த சுடுகாட்டை அன்னதானச் சாலையாக்கி நாளும் 505 குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்குகிறாள். பின்னர் ‘பிறவிக்கடல் நீந்த’ச் சுநந்தையுடன் தவப்பள்ளி அடைந்து தன் துறவைத் தொடர்கிறாள். சீவகன் தேவியர்க்கு எட்டு மகன்கள் பிறக்கின்றனர். சீவகன் தேவியர் எண்மருடன் பொழில் வளம் காணச் செல்கிறான். அங்குக் கடுவன் – மந்தி (குரங்குகள்) பெற்ற பலாப்பழத்தை வேடன் கவர்ந்து செல்வதைக் கண்டு செல்வம் நிலையாமையை உணர்கிறான். பின் நகரை அடைந்து அருகனை வழிபட்டுச் சாரணர் மூலம் பிறவிப் பெருங்கடல் நீந்தும் முறையைத் தெரிந்து கொள்கிறான். அவர் மூலம் தன் முற்பிறப்பு வரலாற்றையும் அறிகிறான். பின் அரண்மனை சென்று தன் துறவை அறிவிக்கிறான்; தன் மகன் சச்சந்தனை அரசனாக்கித் தேவியர் எண்மரோடும் துறவு மேற்கொள்கிறான். வர்த்தமானரைத் தரிசித்து, விபுலகிரியில் தவம் செய்து சித்த சேத்திரம் அடைந்து வீடுபேறு அடைகிறான்.

4.3 இலக்கியச் சிறப்பு

ஒரு இலக்கியப் படைப்பு பலரால் படிக்கப்படுவதற்கும் பாராட்டப்படுவதற்கும் அதன் இலக்கிய நயமே காரணம் எனலாம். அது உணர்த்தும் சமூகவியல் சிந்தனையும் பிறிது ஒரு காரணம் ஆகலாம். எனவேதான் இலக்கியம் இலக்கியத்திற்காகவே (கலை கலைக்காகவே) என்ற கோட்பாடு எழுந்தது; இலக்கியம் வாழ்க்கையைக் காட்டும் காலக் கண்ணாடி என்பது இதன் மற்றொரு பகுதி. இவ்வகையில் சீவக சிந்தாமணி சோழர் காலம் முதல் இன்று அளவும் படிக்கப்பட்டும் பயிலப்பட்டும் வருவதற்கான காரணம் என்ன? அதன் இலக்கிய நயமே.

4.3.1 அணிநயம் சிந்தாமணியின் யாப்பமைப்பும், உவமை முதலான அணி நயமும் இலக்கியச் சுவைஞர்களால் பாராட்டப்படாமல் இருக்க முடியாது. சிந்தாமணியின் யாப்பு பற்றிப் புறநிலைக் கட்டமைப்பில் முன்னர்க் கூறப்பட்டுள்ளதை அறியலாம். சீவக சிந்தாமணி விருத்த யாப்பில் அமைந்தாலும், ஆசிரியத்துறை, வஞ்சித்துறை, ஒரு பொருள்மேல் முன்றடுக்கிய கொச்சக ஒருபோகு முதலான யாப்பமைப்பையும் சிறப்பாகக் கையாண்டுள்ளார் என்பது சுவைத்து இன்புறத்தக்கது.

சீவக சிந்தாமணியின் அணிநயத்துக்கு இதோ ஒரு பாடல்: இலக்கணையின் (சீவகன் மணந்த ஒரு பெண்ணின் பெயர்) அழகில் மயங்கிய சீவகன் கூற்று இது. இலக்கணையின் கண்ணை நீல மலருக்கு ஒப்பிட்ட கவிஞர் அழகிய கற்பனை நயம்பட,

நிறைஓதம் நீர்நின்று நீள்தவமே

செய்யினும் வாழிநீலம்

அறையோ அரிவை வரிநெடுங் கண்

ஒக்கிலையால் வாழி நீலம்

கண் ஒவ்வாயேனும் களித்து நகுதி நின்

வண்ணம் இதுவோ மதுஉண்பார்

சேரியையோ வாழி நீலம்(சீவக சிந்தாமணி – 2514)

(ஓதம் = கடல்; அறையோ = கூறவோ; அரிவை = இலக்கணை)

(பொருள்: நீல மலரே! நீ கடலில் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் இவள் கண்ணை ஒவ்வாய்; என்றாலும் தேன் உண்ட களிப்பால் நகுகின்றாய்! நீ மது அருந்துவார் பகுதியில் இருந்ததன் தொடர்பால் இவ்வாறு சிரிக்கின்றனையோ? அறியேன்.)

இங்கே காட்டிய பாடலில் உவமை நயம் சிறந்து நிற்பதைக் காணலாம்.

4.3.2 இலக்கிய உத்திகள் இலக்கிய வெளியீட்டு நிலையில் காப்பியங்களுக்கே சிறப்பாக உள்ள உத்திகள் பல. காப்பியம் ஒரு வகையில் கூற்று வகைப்பாடல் (Narrative Poetry) ஆகும். இங்கு, ஆசிரியர் காப்பியத்தின் கதையைப் பாத்திரம் (Character)   வாயிலாகவோ அல்லது ஆசிரியரின் மறை கூற்றாகவோதான் பாடிச் செல்வது இயல்பு. சில நேரங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதும் உண்டு. ‘யானும் சென்றேன் என்னெதிர் எழுந்து’ என்று சிலம்பில் இளங்கோ தன்னையும் ஒரு பாத்திரமாக இணைத்துக் கொள்கிறார். சிந்தாமணியில், ‘கோ வீற்றிருந்த குடிநாட்டு அணி கூறலுற்றேன்’, ‘அண்ணலங் கடிநகர் அமைதி செப்புவாம்’, ‘முக்குடையான் தாளினை என்தலை வைத்தேன்’ என 40 இடங்களில் ஆசிரியர் கூற்று வெளிப்படுகிறது.

● பின்னோக்கு உத்தி

பின்னால் நிகழ விருப்பதை, முன் உணர்த்துவதும், முன் நிகழ்ந்தவற்றைப் பின் உணர்த்துவதுமாகிய உத்திகளும், நாடக முரண் உத்தியும் சிந்தாமணியில் சிறப்புப் பெறுகின்றன. சீவகன் காந்தருவ தத்தையை மணப்பான் என்பது முன்னரே சோதிடர் வாயிலாக உரைக்கப்படுகிறது; இவ்வாறே பல பின் நிகழ்வுகளும் முன்னரே சுட்டிக் காட்டப்படுகின்றன. இசைப் போட்டிக்குச் சீவகன் வருவதைக் கண்டதுமே மடந்தை தோற்றாள் எனப் பின்னிகழ்வு சுட்டப்படுகிறது.

சீவகன் மத்திம நாட்டில் இருந்தபோது அவனைச் சந்தித்த நந்தட்டன், சீவகன் பிரிந்த பின் இராசமாபுரத்தில் நிகழ்ந்த செய்திகளை எல்லாம் தொகுத்துரைக்கிறான். விசயை கனவு, சுரமஞ்சரியின் தாயின் கனவு, கேமசரி கனவு பின் நிகழ்வை உணர்த்துவன. சுரமஞ்சரியின் தாய் நீரற்ற குளத்தைக் கனவில் காண்கிறாள்; இது சீவகன் பிரிவை முன் உணர்த்துகிறது. விசயை மலர்களால் நிறைந்த அசோகமரம் பூக்களுடன் சிதறி வீழ்வதாகவும், சிதறிய அசோக விதை பெரிதாக வளர்ந்து எட்டு மாலைகளுடன் நிமிர்ந்து நின்றதாகவும் கனவு காண்கிறாள். இது, சச்சந்தன் வீழ்ச்சியையும் பின் சீவகன் எட்டுப் பெண்களை மணந்து அரசு கட்டில் ஏறுவதையும் முன் உணர்த்துகிறது.

பறவைகளின் குரலும், பல்லியின் குரலும் கூடச் சீவக சிந்தாமணியில் பின் நிகழ்வை, முன் உணர்த்தும் உத்தியாகப் பயன்பட்டுள்ளன.

4.3.3 இசைப்பா அமைப்பு இசைப் பாடல்களை அக உணர்வு வெளிப்பாட்டிற்கும் அற வழிபாட்டிற்கும் சிந்தாமணி ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். இவை, சுவைபட அமைந்து, சிலப்பதிகார இசைப் பாடல்களை நினைவுபடுத்துகின்றன. இத்தகைய இசைப் பாடல்களைச் சிந்தாமணியில் பரக்கக் காணலாம். சான்றிற்காக ஓரிரு பாடல்களை இங்குக் காண்போம்.

கருவி வானம் கான்ற புயலின்

அருவி அரற்றும் மலைஎன்கோ யான்

அருவி அரற்றும் மலைகண்டு அழுங்கும்

மருவார் சாயல் மனம் என்கோயான்

(சீவக சிந்தாமணி – 725)

(கான்ற புயல் = பொழிந்த நீர், மழை)

இப்பாடல், கூதிர்கால வருணனையாக, தலைவியின் பிரிவாற்றாமையை உணர்த்துவதாக அமைகின்றது. சீவகன் பாடும் இசைப்பாடல் இது; இது கோவலன், மாதவி பாடும் இசைப்பாடல்களுடன் ஒப்புமை உடையதாக அமைகிறது.

இறை வழிபாடு குறித்த மற்றொரு பாடல் வருமாறு:

அடியுலகம் ஏத்தி அலர்மாரி தூவ

முடியுலக மூர்த்தி உறநிமிர்ந்தோன் யாரே

முடியுலக மூர்த்தி உறநிமிர்ந்தோன் மூன்று

கடிமதிலும் கட்டழித்த காவலன் நீஅன்றே

(சீவக சிந்தாமணி-1245)

(அலர்மாரி = பூமழை; முடியுலக மூர்த்தி = இறைவன் (அருகன்); நிமிர்ந்தோன் = முத்தி அடைந்தோன்; கடிமதில் = காமம், வெகுளி, மயக்கம்)

இப்பாடல், சாரணர் வாழ்த்தாக அமைகின்றது. உலகமூர்த்தியை அடைபவர் முத்தி பெற்ற சாரணர்களே; அவர்கள் காமம், வெகுளி, மயக்கம் நீத்தவர்கள் என்பது பாடல் கருத்து. இவ்வாறு சீவகன் தன் இசைப்பாடல் மூலம் சாரணரைத் தொழுது புகழ்கிறான்.

4.4 சமூகச் சிந்தனை

சீவக சிந்தாமணி தமிழ் மரபைச் சாராத காவியம் என்று பலர் ஒதுக்குகின்றனர். அதற்குக் கதை அமைப்பும் கதைக் களங்களுமே காரணம். ஆனால் அங்குப் பேசப்படுகின்ற சமூகம், சமூக உணர்வு முதலானவை தமிழ்ச் சமூக அமைப்பைப் பின்பற்றியனவே. தமிழர் தம் அகப்பாடல்கள் மரபுகள், போர் மரபுகள் முதலானவை இங்கு இடம்பெறுதல் குறிப்பிடத்தக்கது. சமூகத்திலுள்ள பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் திருத்தக்க தேவர் எடுத்துரைக்கிறார்.

4.4.1 சமூகம் சமூகத்தில் திருமண உறவு என்பது மிகவும் முக்கியமானது. திருமணத்தில் எத்தனையோ வகையான நடைமுறைகள், சடங்குகள் முதலானவை நிகழ்கின்றன. பெரிய செல்வந்தர்கள் திருமணம் மிகவும் பொருட்செலவில் சிறப்பாக நடைபெறுவதை இன்று அறிகிறோம்.

சிந்தாமணியில் பல மணமுறைகளைக் காணுகிறோம். இதில், பலர் வெறுப்படைவதும் உண்டு. ஆனால், எண் குணத்தை அடைந்தான் என்பதையே இத்திருமணங்கள் தத்துவ ரீதியாகப் பேசுகின்றன. இத்திருமணங்களில் சோதிடக் கணிப்பு சிறப்பிடம் பெறுகிறது. கோவிந்தை மணம், ஆயர்குல மரபுப்படி ‘பசுவும் தொழுவும் போல்’ இணைந்திருப்பீர் என்ற மகளிர் வாழ்த்துடன் நடக்கிறது. 2000 பசுக்களும் ஏழு பொற்பாவையும் சீதனமாக வழங்கப்படுகின்றன.

காந்தருவதத்தை மணம் வணிகர் குல மரபிற்கு ஏற்ப, பால்குடங்கள், அரிசி, பயறு, உப்பு வண்டிகள், கனி, கிழங்கு முதலான பொருட்கள் திருமணத்திற்கு வந்து குவிகின்றன. பெருவணிகன் மகள் திருமணம் என்பதால் தீ வலம் வர வேதமுறைப்படி நடக்கிறது.

குணமாலைக்கு எழுநூறு பணிப்பெண்கள், அணிகலன்கள், ஒருகோடி செம்பொன், ஐந்து மூதூர் பரிசாக வழங்கி மணம் நடைபெறுகிறது.

திருமணத்தில் நல்ல நாள் குறித்தல், காப்புக் கட்டுதல், யானை மேல் புனித நீர் கொணர்ந்து மணமக்களை நீராட்டுதல், மணநாளை அனைவருக்கும் முரசு அறைந்து அறிவித்தல், பொருட்கொடை அளித்தல் எனப் பல சடங்குகள் நிகழ்வதைச் சிறப்பாகக் காணலாம்.

குழந்தையின் பிறப்புச் சடங்கும் சிந்தாமணியில் சிறப்பாக நடைபெறுவதைக் காணுகிறபோது அக்காலச் சமூகத்தையே – சமூக நடைமுறையையே பார்க்கிறோம். சீவகனுக்குக் குழந்தை பிறந்தபோது அரசமுறைப்படி, வரி ஒழிப்பு, சிறைப்பட்டோரை விடுதலை செய்தல், பொருட்கொடை அளித்தல், ஆடை அணிகலன், பண்டங்கள் முதலான வழங்குதல் முதலான சடங்குகள் 7 நாள் வரை நிகழ்கின்றன. புலவர்கள் பெருமங்கலம் பாடுதல், முறைப்படி குழந்தைக்கு முன்னோர்களின் பெயர்களைச் சூட்டுதல் முதலானவை நடைபெறுவதாகச் சிந்தாமணி குறிப்பிடும் செய்தி இன்றும் நடைமுறையில் இருப்பதைக் காண்கிறோம் அன்றோ?

இவையன்றி, சீவக சிந்தாமணி விருச்சி கேட்டல், சகுனம் பார்த்தல், கனவில் நம்பிக்கை முதலான சமூக நம்பிக்கைகள் பற்றியும் விருந்தோம்பல் முறை பற்றியும் சிறப்பாகப் பேசுகிறது. உணவு உண்ட பிறகு எவ்வாறு வாய் கழுவ வேண்டும் என்பதைக்கூட, ‘சீவகன் மும்முறை வாய்பூசினான் (கழுவினான்)’ என்கிறபோது, காப்பிய ஆசிரியர், சமூக வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்துப் பதிவு செய்திருக்கிறார் என்று தெரிகிறது.

4.4.2 சமயம் சமயம் இல்லாமல், காப்பியம் இல்லை. (‘Without Religion, there is no epic’) என்பார் ஜான் கிளார்க். இந்த வகையில் தமிழ்க் காப்பியங்கள் அனைத்திலுமே சமயச் சிந்தனைகள் உண்டு. இன்னும் சொல்லப் போனால் சமயத்தை பரப்பும் நோக்கத்திற்காகவே பல தமிழ்க் காப்பியங்கள் படைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சீவக சிந்தாமணி சமண சமயத்தின் தத்துவங்களையும், சமய வழிபாட்டையும் எடுத்துரைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. என்றாலும் பொதுவான தமிழ்ச் சமூகத்தின் சமய வழிபாடுகளைப் பதிவு செய்யத் தேவர் தவறவில்லை.

அருகன் வழிபாடு கடவுள் வாழ்த்திலேயே தொடங்குகிறது. அருகனை வழிபடுகிறபோது பிரமன், மால், சிவன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அரி, அயன், அரன் மூவரும் அருகனே என்பது இவர் கருத்து. வினைப்பயன் நீங்கவும், வீடுபேறு பெறவும், வானுலகு அடையவும் அருக வழிபாடு செய்யப்படுகிறது. அருகன் மலர்க்கமல பாதம் ‘ஏத்தார் வீட்டுலகம் நண்ணார்’ என வழிபாட்டின் நோக்கம் சுட்டிக் காட்டப்படுகிறது. அருகன் பாதம் சேர்ந்தால் நன்மை அடையலாம் என்கிறார் காப்பிய ஆசிரியர்.

சமயச் சிந்தனையில் குறிப்பிடத்தக்கது ஊழ்வினை. இது சிந்தாமணியில் சிறப்பாகவே பேசப்படுகிறது. சீவகன் எட்டுப் பெண்களை மணந்து பின் அவர்களைப் பிரிந்து செல்வதற்கு ஊழ்வினையையே காரணம் காட்டுகிறார் ஆசிரியர். ‘வாழ்வுப் பயிருக்கு நோய் செய்வன தீவினையாகிய விலங்கு’ என்றும், ‘வினையது விளைவின் வந்த வீவரும் (நீக்க முடியாது) துன்பம்’ என்றும் வினைக்கோட்பாடு பலவிடங்களில் சுட்டப்படுகிறது. விசயை உற்ற துன்பத்திற்கும்,

உம்மை நின்றதொர் ஊழ்வினை உண்மையால்

இம்மை இவ்இடர் உற்றனள்

(உம்மை = முற்பிறப்பு; இம்மை = இப்பிறப்பு)

என ஊழ்வினையே காரணம் என்கிறார் தேவர்.

சமய நம்பிக்கைகளில் குறிப்பிடத்தக்க மற்றொன்று மறுபிறப்புக் கோட்பாடு. இதில் முற்பிறப்பும் அடங்கும். சீவகன் முற்பிறப்பில் அசோதரனாகப் பிறந்தவன்; சீவகன் தேவியர் தேவருலகில் இந்திரராய்ப் பிறந்தனர். நந்தட்டன் தேவனாகப் பிறந்தான் எனச் சமண சமய பிறப்புக் கோட்பாடு அமைகின்றது. இளமை, செல்வம், யாக்கை பற்றிய நிலையாமைக் கோட்பாடும் சிந்தாமணியின் சமயச் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்கது. தேன், ஊன் உண்ணாமை பற்றிப் பேசுகிறது. சிந்தாமணியில் ஓரிடத்தும் கூட ‘ஊன் உணவு’ பற்றிய பேச்சே இல்லை. நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் முதலான சமண அறம் தெளிவுபடுத்தப்படுகிறது. இங்ஙனம் சிந்தாமணி தரும் சமயச் சிந்தனை. சமண சமயச் சார்புடையதாகவே அமைகின்றது.

4.4.3 அரசியல் சிந்தாமணியின் கதைப் பின்னணி அரசியல் சார்ந்தது ஆதலின் அரசு சார்ந்த கருத்துகள் சிறப்பிடம் பெறுகின்றன. கட்டியங்காரன் அரசன் சச்சந்தனைக் கொன்று தானே அரசனாக ஆசை கொள்கிறான். அவனுக்கு எழுந்த ஆசை தவறானது என்பதை எடுத்துரைக்கிறான் தருமதத்தன். இங்குப் பல நீதிமுறைகளை, அரசனது இயல்பினை, அரசனுக்குப் பிழை செய்வோர் அடையும் கதியினைத் தொகுத்து உரைக்கிறான். இதோ சில:

தன்னை ஆக்கிய அரசனைக் கொல்வான் குலமும் திருவும் கெடும். மன்னன் உறங்கினாலும் அவன் ஒளி உலகைக் காக்கும். தேவர்கள் விழித்திருந்தாலும் அவர்களைப் போற்றும் உலகத்தாரைக் காக்க இயலார். எனவே தேவரின் உயர்ந்தவர் மன்னர். நண்பர்களை வஞ்சித்தவர், பிறன்மனை நாடியவர், உயிர்க்கொலை செய்து ஊன் உண்பவர் ஆகியோர் இப்பிறப்பில் குட்டநோயும், மறுபிறப்பில் நரகமும் அடைவர். கணவனை விட்டு வேறு ஒருவனை நாடியவள், மனைவியை நேசிக்காதவன், பெற்றோரைப் பேணி பாதுகாக்கத் தவறியோர் கொடுநோய்க்கு ஆளாவர். நிலவிலுள்ள மறு நிலவு தேயத் தேயும்; அது வளர வளரும். அதுபோல அரசனொடு பொருந்தி, அவனொடு தேய்ந்து ஒழுகும் ஒழுக்கம் இருளை ஓட்டும் மதிபோலப் பழியை நீக்கும்; புகழை ஆக்கும். அரசன் தன் செங்கோன்மை பிறழ்வானாயின் கோள்கள் நிலைகுலையும்; இரவு நேரம் குறைந்து பகல் அதிகரிக்கும்; மழை சுருங்கும்; நிலத்தில் விளைச்சல் குறையும்; பசி மிகும்; மகளிர் கற்பு அழியும்; அறச்சாலைகள் அழியும் என்கிறான்.

இதே போன்று சீவகனுக்கு, அவன் தாய் விசயை கூறும் அரச நீதியும் இங்குக் குறிப்பிடத்தக்கது. ‘நீதியால் மக்களிடம் வரி பெறல் வேண்டும். பழம்பகையை நெஞ்சில் நிறுத்த வேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பது போலப் பகையை பகை கொண்டு முடிக்க வேண்டும். ஒரு ஒற்றனை மற்றொரு ஒற்று கொண்டு ஆய்தல் வேண்டும். கற்ற அமைச்சரைக் கண் எனப் போற்ற வேண்டும். சுற்றத்தினரைத் திறன் ஆய்ந்து போற்றுதல் வேண்டும். பொருள் மிக ஈட்டுதல் வேண்டும். அது இருந்தால் பெரும்படை வந்து சேரும். அப்படைப் பெருக்கால் நாடு கிடைக்கும். பல வெற்றிகளைப் பெறலாம். அதனால் மதிப்பு மிகும். கல்வி அழகும் உண்டாகும். சிங்கம் நரியை வெல்ல வேண்டுமானால் கூடச் சூழ்ச்சித் திறன் வேண்டும். காட்டில் வாழும் காகம் பகற்பொழுதில் பல கூகைகளை வெல்ல முடியும். சிங்கம் இடன் அறியாது சென்றால் நரியின் வலையில் சிக்கி இறக்க நேரிடலாம். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய எண்ணும் மகளிர்போலச் செயல்படாமல் காலம், இடம் அறிந்து செயல்பட வேண்டும்’ (1919-28) என்கிறாள். இவ்வாறு அரசியல் கருத்துகள் பலவற்றைக் கூறுகிறது சீவகசிந்தாமணி.

4.5 கலைகள்

இலக்கியமே ஒரு கலையல்லவா? கலைக்குள் கலை என்பது போல இலக்கியம் பல கலைகளை நமக்கு எடுத்துரைக்கிறது. ஓர் இலக்கியம் தோன்றிய காலகட்டத்தில் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கலைகளை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. அதிலும் வரலாற்றுப் பெட்டகமாக மதிக்கப்பெறும் காப்பியங்களில் கலைகள் மிகச் சிறப்பாகவே சித்திரிக்கப்பெறுகின்றன. பொதுவாகத் தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்கள் சமணர்கள் இசைக்கு எதிர்ப்பு, கலைக்கு எதிர்ப்பு என்று சமயக் காழ்ப்புடன் பேசி வருவதை அறியலாம். ஆனால் உண்மை அதுவன்று. சமணத் தமிழ்ப் புலவர்கள் போன்று கலைகளைப் போற்றியவர்கள், கலைகள் பற்றிய இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்தவர்கள் வைதீக சமயத்தில் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவு கலைகளுக்கு முதன்மை தந்தவர்கள் சமணத் தமிழ்ப் புலவர்கள். சீவக சிந்தாமணியில் இடம் பெற்றுள்ள கலை பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கண்டால் இவ்வுண்மை விளங்கும்.

4.5.1 இசைக்கலை சிலப்பதிகாரம் தொடங்கி, பல தமிழ்க் காப்பியங்களில் இசைக்கலை மிகச் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காண்கிறோம். சிலம்பின் அரங்கேற்று காதை ஓர் இசைக்கலைப் பெட்டகம். அது போன்று சீவக சிந்தாமணியில் காந்தருவதத்தையார் இலம்பகத்தில் நடத்தப் பெறும் இசைப்போட்டியும், அதற்காக அமைத்த இசை அரங்கும், அதிலே தத்தையும் – சீவகனும் பாடிய இசைத் திறனும் தமிழரின் இசைக் கலைப் புலமையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இசைப் போட்டியில் கலந்து கொள்ள வரும் சீவகனிடம் யாழ் கொடுக்கப்படுகிறது. அவன் அதன் தன்மையும் நரம்பின் தன்மையும் பற்றிக் கூறுகிற செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

“இந்த யாழ் நீரில் நின்று மெலிந்த மரத்தால் ஆனது. இது நீரில் நின்று அழுகிய மரத்தால் ஆனது. இந்த யாழ் நோயுற்ற மரத்தால் ஆனது. இந்த யாழ் இடி தாக்கிய மரத்தால் ஆனது. இந்த யாழ் சிறப்புடையதன்று. இந்த யாழ் வெந்த மரத்தால் ஆனது. இது முறிந்து வீழ்ந்த மரத்தால் ஆனது என்று பல யாழை விலக்கி, உகந்த நல்ல மரத்தாலான யாழைத் தேர்கிறான். பின்னர் யாழின் நரம்பின் முறுக்கை உடைத்து அதில் சிக்கியுள்ள முடியைக் காட்டி விலக்குகிறான்” என்று சுட்டப்படுகிறது.

இதுபோன்று, காந்தருவதத்தை யாழிசையுடன் பாடுகிறபோது புருவம் ஏறாது, கண் ஆடாது, மிடறு வீங்காது, பல் தெரியாது, வாயை மிகைபடத் திறவாது பாடினாள் என்கிற செய்தி இடம் பெற்றுள்ளது. இது, இசைக் கலைஞர் எவ்வாறு பாட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக  அமைகின்றது.

4.5.2 கட்டிட சிற்பக் கலைகள் சிந்தாமணியில் நகரச் சிறப்புக் கூறுகின்ற பகுதியில் அரண்மனை, மாட மாளிகை பற்றிப் பேசப்படுகிறது. இங்கு அக்காலக் கட்டிடக் கலைச் சிறப்பை உணரலாம். அரண்மனை மதிலில் ஒரே நேரத்தில் நூறுபேரைக் கொல்லும் சதக்கினி என்ற பொறி, களிறு, பாம்பு, கழுகு, புலி, குதிரை முதலானவற்றின் வடிவில் அமைக்கப்பட்ட பொறிகள் இருந்தனவாகக் குறிக்கப்படுகிறது. மாடங்கள் பல மாடிகளைக் கொண்டிருந்தன. அவற்றின் மேற்பகுதிகள் பானைவடிவில் அமைந்துள்ளன. மேற்கூரை தங்கம், வெள்ளி, பளிங்குகளால் வேயப்பட்டமை குறிப்பிடப்படுகிறது. சீவகன் சுதஞ்சணனுக்கும், ஆலமரத்துக்கும் கோயில் எடுத்தமையும் கட்டிட சிற்பக் கலைக்குச் சான்றாகும்.

4.5.3 பிற கலைகள் ஆடல் கலை பற்றிய ஆடல், கூத்து, நாடகம் என்ற சொற்கள் சிந்தாமணியில் இடம் பெறுகின்றன. அனங்க மாலை, தேசிகப் பாவை ஆகிய இருவர்தம் ஆடல் சிறப்பாக அமைகிறது. சீவகன், சுதஞ்சணனுக்குக் கோயில் எழுப்பி, அவன் வரலாற்றை நாடகமாக நடிக்கச் செய்கிறான். சீவகன் அனங்கமாலைக்கு ஒப்பனை செய்தது ஒப்பனைக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது.

வாழைக் குருத்து இலையை நகத்தால் கிள்ளிச் சில அழகிய வடிவங்களைச் செய்து மகளிர் மார்பில் அணிந்தனர். மலர்களை இணைத்து மாலையும் பந்தும் ஆக்கி, அதனுள் சில குறிகளை விரல் நுனியால் அமைத்துக் கனக மாலைக்குச் சீவகன் தன் காதலை வெளிப்படுத்துகிறான்.

சச்சந்தன் விசயைக்காகத் தயார் செய்த எந்திர ஊர்தி (மயில்பொறி) பொறியியல் கலைக்கு எடுத்துக்காட்டு. சீவகன் குணமாலை உருவை ஓவியமாக எழுதிய செய்தி குறிக்கப்படுகிறது. பல இடங்களில் சோதிடக்கலை பற்றிய செய்தி இடம் பெறுகின்றது. இப்படி, தொட்ட தொட்ட இடமெல்லாம் கலையின் பெட்டகமாகச் சிந்தாமணி திகழ்வதைக் காணலாம்.

4.6 தொகுப்புரை

அன்பார்ந்த மாணவர்களே! இதுவரை சீவக சிந்தாமணியின் பல்வேறு சிறப்புகளைத் தொகுத்துக் கண்டோம். இவை மட்டும்தான் சிந்தாமணியின் சிறப்பு என்று எண்ணி விடாதீர்கள். இன்னும் எத்தனை எத்தனையோ சிறப்புக்கள், நயங்கள் இதிலே உண்டு. இதிலே இடம் பெற்றுள்ள கவிதை நயம் சுவைத்து இன்புறத்தக்கது. நூல் அறிமுகம், ஆசிரியர் அறிமுகம், காப்பியக் கட்டமைப்பு, இலக்கிய நயம், சமூக, சமய, அரசியல் சிந்தனைகள், கலைகள் பற்றிய செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் நன்கு பயின்று மேலும் இந்நூலின் சிறப்பினை நுணுகிக் காண்க.

பாடம் - 5

குண்டலகேசி - வளையாபதி

5.0 பாட முன்னுரை

குண்டலகேசி, வளையாபதி ஆகிய இரண்டும் காப்பியங்கள் வரிசையில் அடங்கும். இவை முழுமையாகக் கிடைக்கவில்லை. குண்டலகேசி பௌத்த மதம் சார்ந்தது. வளையாபதி சமணம் சார்ந்தது. இவை பற்றிக் கிடைத்த செய்திகள் இப்பாடத்தில் இடம்பெற்றுள்ளன.

5.1 குண்டலகேசி

குண்டலகேசி ஒரு பௌத்த சமய நூல். குண்டலகேசி விருத்தம் எனவும் இந்நூல் குறிப்பிடப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாக இந்நூல் குறிப்பிடப்படுகிறது. சமய வாதங்களைக் கூறுகிற நீலகேசி, பிங்கலகேசி, அஞ்சனகேசி, காலகேசி முதலிய கேசி நூல்களில் ஒன்றாகவும் இந்நூல் கருதப்படுகிறது. குண்டலகேசி பற்றிய செய்திகள் இங்குத் தொகுத்துக் கூறப்படுகின்றன.

5.1.1 நூல் வரலாறு கேசி என்பது பெண்ணின் கூந்தலால் (முடி) வந்த பெயர். சுருண்ட கூந்தல் காரணமாகக் குண்டலகேசி என இக்காப்பியத் தலைவி பெயர் பெற்றாள். அவள் பெயரையே தலைப்பாகக் கொண்டுள்ளது இந்நூல். யாப்பருங்கல விருத்தி நான்கு இடங்களில் இந்நூல் பற்றிக் குறிப்பிடுகிறது. வீரசோழிய உரை இந்நூலை இரண்டு இடங்களில் குறிப்பதுடன் இதன் ஒரு பாடலையும் மேற்கோள் காட்டுகிறது. புறத்திரட்டில் இந்நூலின் பாடல்கள் 10 எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருவொற்றியூர் ஞானப்பிரகாசர், தம் சிவஞான சித்தியார் பரபக்க உரையில் இதன் பாடல்கள் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். வைசிய புராணம் குண்டலகேசி பெயரால் ஒரு கதை சொல்கிறது. என்றாலும் நீலகேசி உரையே குண்டலகேசி வரலாற்றை அறிய உதவுகிறது. குண்டலகேசியின் வாதத்தை மறுப்பதாகப் பல பாடல்களின் முதற்குறிப்பைத் தருகிறது நீலகேசி. மறைந்து போன தமிழ் நூல்கள் என்ற நூலில் ஏறத்தாழ 92 குண்டலகேசிப் பாடல்களின் முதற்குறிப்பைத் தொகுத்துத் தந்துள்ளார் மயிலை. சீனி. வேங்கடசாமி, அவர்கள். 14ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் இருந்து, பின்னர் அழிந்திருக்கக் கூடும்.

“தருக்கமாவன: ஏகாந்த வாதமும் அனேகாந்த வாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவ தரிசனம், காலகேசி முதலிய செய்யுட்களுள்ளும், சாங்கியம் முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க” என யாப்பருங்கலவிருத்தி குறிப்பிடுவதால், இந்நூல் தருக்க வாதம் குறித்த ஒன்று என அறிய முடிகிறது. வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார், குண்டலகேசி விருத்தம் என இந்நூலைக் குறிப்பிடுகிறார்.  இதனைத் ‘தெரியாத சொல்லும் பொருளும் வந்த அகலக் கவி’ (நீண்ட கவிதை) என்கிறார்.

5.1.2 நூலாசிரியர் குண்டலகேசி காவியத்தை இயற்றியவர் நாதகுத்தனார் எனும் பௌத்தர் என்று நீலகேசி உரை (பாடல் 344) குறிப்பிடுகிறது. நாதகுப்தனார் என்பதே மருவி நாதகுத்தனார் என வழங்கிற்று என்பர். சோழ நாட்டில் வாழ்ந்த பௌத்தத் துறவி காசியப தேவர், விமதிவினோதனீ எனும் பாலிமொழி நூலுக்குத் தாம் எழுதிய டீகா என்னும் உரையில் குண்டலகேசி ஆசிரியர் நாகசேனர் என்கிறார். அவர் கூறுவதாவது, “பழங்காலத்தில், இந்தத் தமிழ்நாட்டில் மாறுபட்ட கொள்கை உடைய நாகசேனனன் என்னும் ஒரு தேரர், எதிரிகளின் கொள்கைகளை அழிக்க எண்ணிக் குண்டலகேசி என்ற காப்பியத்தைத் தமிழில் இயற்றினார்.” குப்தர் என்பது செட்டி மரபின் ஒரு பெயர் என்கிறார் மு. அருணாசலம்.

இந்நூலாசிரியர் புத்தரிடம் பக்தி மிக்கவர் என்பதும், அவருடைய முற்பிறப்பு வரலாறு முழுவதையும் நன்கு அறிந்தவர் என்பதும், உலகியல் அறிவு மிக்கவர் என்பதும், அரச வாழ்வில் தொடர்புடையவர் என்பதும் அவர்தம் பாடல் மூலமாக அறிய முடிகிறது. நூலாசிரியரின் காலம் நீலகேசியின் காலமான கி.பி. 10ஆம் நூற்றாண்டு என யூகிக்க முடிகிறது.

5.1.3 கதை குண்டலகேசி கதை வடமொழியில் தேரீகாதை உரையிலும் (தர்ம பாலர்), தேரீ அவதானம், தம்மபதாட்ட கதா, அங்குத்தர நிகாய என்னும் நூல்களிலும் தமிழில் நீலகேசி மொக்கலவாதச் சருக்க உரையிலும் (சமய திவாகர முனிவர் உரை – பாடல் 286) சிற்சில வேறுபாடுகளுடன் கூறப்படுகிறது.

● கதைச் சுருக்கம்

இராச கிருக நாட்டு அமைச்சன் மகள் பத்திரை. அவள் தனது மாளிகையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அரச சேவகர்கள் கள்வன் ஒருவனைக் கொலைக்களத்திற்கு அழைத்துச் சென்றதைக் கண்டாள். அவனுடைய இளமையும் அழகும் அவள் மனதைக் கவர்ந்தன. அவன்மேல் அவள் காதல் கொண்டாள். இதை அறிந்த தந்தை, கள்வனை விடுவித்துத் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறான். இருவரின் அன்பு வாழ்க்கை, காதல் வாழ்க்கை இனிதே நடக்கிறது. ஒரு நாள் ஊடல் கொண்ட பத்திரை, ‘நீ கள்வன் மகன் அல்லனோ’ என விளையாட்டாகச் சொல்ல, அது அவன் உள்ளத்தைப் பாதிக்கிறது. அவளைக் கொல்லக் கருதிய அவன், அவளை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று, அவளைக் கீழே தள்ளிக் கொல்லப் போவதாகக் கூறுகிறான். நிலைமையை உணர்ந்த பத்திரை, அவனுக்கு உடன்பட்டவள் போல் நடித்து, “நான் இறப்பதற்குமுன் உம்மை வலம் வரவேண்டும்’ என்கிறாள். பின் அவனை வலம் வருபவளைப் போல, பின் சென்று அவனைக் கீழே தள்ளிக் கொன்று விடுகிறாள்.

பிறகு, பத்திரை, வாழ்க்கையை வெறுத்தவளாய், பல இடங்களில் அலைந்து திரிந்து, பின் சமண சமயத்தவர் வாழும் மடத்தை அடைந்து, சமணத் துறவியாகிறாள். அங்குச் சமணக் கொள்கைகளைக் கற்றுத் தேர்ந்து, பின் பிற சமயக் கருத்துகளை எல்லாம் முறைப்படி கற்றுத் தேர்கிறாள். பின் சமயவாதம் செய்யப் புறப்பட்டு, நாவல் கிளையை நட்டுச் சமய வாதம் செய்து வென்று, பலரைச் சமண சமயம் சாரச் செய்கிறாள். ஒரு நாள், நாவல் நட்டு விட்டு ஊருக்குள் பிச்சை ஏற்கச் செல்கிறாள். அப்போது கௌதம புத்தரின் மாணவர் சாரிபுத்தர், பத்திரை நட்டு வைத்த நாவலைப் பிடுங்கி எறிந்து விடுகிறார். இதனால் இருவருக்கும் இடையே சமய வாதம் நிகழ்கிறது. வாதத்தில் பத்திரை தோற்க, சாரிபுத்தர் ஆணைப்படி பௌத்தத் துறவியாகிறாள். சாரிபுத்தர் குண்டலகேசியைப் (பத்திரை) பகவான் புத்தரிடம் அழைத்துச் செல்ல, அவர் முன்னிலையில் அவள் பௌத்தத் துறவியாகிறாள்.

இங்குப் பத்திரை சமண சமயம் சார்ந்தபோது அவள் தலைமயிர் மழிக்கப்பட, அது உடனடியாகச் சுருண்டு வளர்கிறது. இதனால் அவள் குண்டலகேசி எனப் பெயர் பெறுகிறாள். இக்கதையில் ‘கள்வன் மகன் அல்லனோ’ என்றதற்காக அவளைக் கொல்லத் துணிகிறான். ஆனால் தேரீ அவதானம் முதலான வடமொழிக் கதைகளில், குண்டலகேசியின் (பத்திரை) கணவன், அவள் நகைகளைக் கொள்ளையடிப்பதற்காகவே அவளைக் கொல்லப் போவதாகக் குறிப்பிடுகிறான்.

5.2 நூல் நுவலும் பொருள்

‘சமயம் இல்லையேல் காப்பியம் இல்லை’ என்னும் அளவிற்குப் பெரும்பாலான காப்பியங்கள் சமயக் கருத்துகளைப் பரப்புவதில் முனைந்து செயல்படுகின்றன. இதற்குக் குண்டலகேசியும் விதிவிலக்கு அல்ல. கிடைத்துள்ள பாடல்களில் தீவினை அச்சம், கூடா ஒழுக்கம், புணர்ச்சி விழையாமை, யாக்கை நிலையாமை, தூய தன்மை, இறைமாட்சி, குற்றம் கடிதல், இடுக்கண் அழியாமை முதலான உலகியல் நீதிகள் வலியுறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

5.2.1 யாக்கை நிலையாமை இளமை மற்றும் யாக்கை நிலையாமை குறித்த பாடல் இங்குக் குறிப்பிடத்தக்கது. ‘நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைக்கிறோம். அதற்கெல்லாம் அழுது புலம்பாத நாம், இவ்வுடலை விட்டு உயிர் பிரிகிறபோது மட்டும் அழுவது ஏன்’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்

காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்

மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி

நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ

(பாளையாம் = இளமை; நாளும் நாள் சாகின்றாமால் = தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறோம்)

5.2.2 அறிவுடையார் செயல் எது நிகழ்ந்தாலும் அதை விருப்பு வெறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்வார்கள் அறிவுடையார் என்று அறிவுடையாரின் செயல் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என்ற கீதையின் வார்த்தைகளை நினைவுகூரச் செய்கிறது பின்வரும் பாடல்.

மறிப மறியும் மலிர்ப மலிரும்

பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும்

அறிவது அறிவார் அழுங்கார் உவவார்

உறுவதும் உறும் என்று உரைப்பது நன்று

(மறிப மறியும் = நடப்பது நடந்தே தீரும்; மலிர்ப மலிரும் = நடக்க இருப்பது நடந்தே ஆகவேண்டும்; பெறுப பெறும் = நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்)

பொருள்:

நடப்பது நடந்தே தீரும். நடக்க இருப்பது நடந்தே ஆகவேண்டும். நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். நாம் பெற்றதை இழக்க நேரிடும்போது இழந்தே தீர வேண்டும், இதனை யாரும் தடுக்க முடியாது. இதற்காக அழுவதோ, உவப்பதோ செய்யார் அறிவுடையார்.

5.2.3 குற்றம் கடிதல் ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என இறைவனோடு வாதாடிய நக்கீரன் வாழ்ந்த மண் இது. எனவே இங்கு யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான் என்று சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டதே அன்று வாய்மை

நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா

விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த

கண்ணுளான் கண்டம் தன்மேல் கறையை யார் கறையன்று என்பார்?

பொருள்:

சாதாரண மனிதர்க்கு மட்டுமன்றி, வாய்மை மிக்க சான்றோர் தவறு செய்யினும் தவறுதான். நெற்றிக் கண்ணன் சிவன் கண்டத்திலுள்ள கறை கறைதான்; அன்று என்று யாரும் சொல்லார்.

5.3 இலக்கிய நயம்

குண்டலகேசிப் பாடல்கள் கிடைத்துள்ளவை சிலவே ஆகினும் இலக்கியச் சிறப்பும் நயமும் மிக்கன என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சொல்லாட்சியாலும், உவமை நயத்தாலும் இந்நூல் சிறந்து விளங்கியுள்ளது என்பது விளங்கும். மேலும், சிறந்த கற்பனை வளமும் மிகுந்துள்ளது.

5.3.1 உவமை நயம் ‘நாவாய் (ஓடம்) காற்றை நம்பியே செல்லும். அது போலவே வாழ்க்கையானது ஊழ்வினையை அடிப்படையாக் கொண்டே அமையும். மேலும் மனத்தூய்மை என்பது, எவ்விதத் தீமையும் நினைக்காத தூய சிந்தனையுடைய புத்த பிரானை நாளும் நினைவில் நிறுத்துவதே’ ஆகும். இதனை உணர்த்தும் பாடல் பின்வருமாறு:

வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய்

ஆயுவினை நோக்கியுள வாழ்க்கை யதுவேபோல்

தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்லாத்

தூயவனை நோக்கியுள துப்புரவும் எல்லாம்

(வாயுவினை = காற்று; மாண்ட வய = சிறப்பு மிக்க; ஆயுவினை = ஊழ்; தூயவனை = புத்த பிரானை; துப்புரவு = தூய்மை)

● காமத்தைக் கைவிடல் பற்றிய உவமை

துறவிகளுக்குக் காமம் கூடாது என்பது சமண, பௌத்த மதங்களின் போதனை. இதனை மிகச் சிறந்த உவமை வாயிலாக விளக்கிச் செல்கிறார் ஆசிரியர். ‘காமத்தைப் புணர்ச்சியினால் அடக்குவம் என்பது வெள்ளத்தை நீரால் அடைக்க முடியும்’ என்பதற்கு ஒத்தது என்கிறார். மேலும் அது தீயை நெய் ஊற்றி அணைப்பதற்கு ஒப்பாவது என்றும் கூறிக் காமத்தைப் புணர்ச்சி இன்பம் துய்த்து அடக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறார். இதோ பாடல் வருமாறு:

வகைஎழில் தோள்கள் என்றும் மணிநிறம் குஞ்சி என்றும்

புகழ்எழ விகற்பிக்கின்ற பொருளில் காமத்தை மற்றோர்

தொகைஎழும் காதல் தன்னால் துய்த்துயாம் துடைத்தும் என்பார்

அகைஅழல் அழுவம் தன்னை நெய்யினால் அவிக்க லாமோ

(குஞ்சி = கூந்தல்; அகைஅழல் அழுவம் = கொழுந்துவிட்டு எரியும் அனல்கடல்)

தன் மதிப்பீடு : வினாக்கள் – I

5.4 வளையாபதி

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாக எண்ணப்படுவது வளையாபதி. 19ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த இவ்விலக்கியம் பின்னர் எப்படியோ அழிந்துவிட்டது. இதன் பிரதியைத் திருவாவடுதுறை ஆதினத்தில் பார்த்ததாக உ.வே. சாமிநாதய்யர் குறிப்பிடுகிறார். பின்னர் இதனைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு தேடியபோது, எங்கும் கிடைக்கப் பெறவில்லை என வருத்தத்துடன் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் குறிப்பிடுகிறார்.

5.4.1 நூல் வரலாறு வளையாபதி காப்பிய ஆசிரியர் யார்? எப்போது இந்நூல் இயற்றப்பட்டது? காவியத் தலைவன் பெயர் என்ன? காவியத்தின் கதைதான் என்ன? இந்த வினாக்களுக்கு யாதொரு விடையும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இக்காப்பியத்தின் சில செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு நோக்குகிறபோது, இது ஒரு சமண சமய நூல் என்பது மட்டும் உறுதியாகிறது.

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர் முதலானோர் இந்நூலின் பாடல்களை மேற்கோள் காட்டுகின்றனர். இந்நூற்பாடல்கள் அறுபத்து ஆறு புறத்திரட்டு நூலில் தொகுப்பட்டுள்ளன. எங்ஙனம், அங்ஙனம் என்ற சொற்கள் எங்ஙனே அங்ஙனே என்று வந்துள்ளன. “இவர் வளையாபதியை நினைத்தால் கவியழகு வேண்டி” எனத் தக்கயாகப் பரணி உரையாசிரியர் குறிப்பிடுகிறார். எனவே இந்நூல் கவியழகு மிக்கது என்பது தெரிய வருகிறது. இந்நூற் பாடல்கள் மொத்தம் எழுபத்தி இரண்டு கிடைத்துள்ளன.

5.4.2 நூலாசிரியர் நூலைப் போலவே நூலாசிரியர் யார்? அவர் எந்த ஊரைச் சார்ந்தவர்? எந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர் என்பதெல்லாம் அறியப்படவில்லை. நூற்பாடலைக் கொண்டு இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என யூகிக்கலாம். நூலாசிரியர் இலக்கிய ரசனையுடன் பாடல் புனையும் ஆற்றல் மிக்கவர். அறத்தில் சமண சமயக் கொள்கையில் ஆழ்ந்த பற்றும் பிடிப்பும் கொண்டவர் என்பது கிடைத்துள்ள பாடல்கள் வழி அறிய முடிகிறது.

5.4.3 கதை வளையாபதி கதை இன்னதுதான் என்பது அறியப்படாத ஒன்று. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டும் கூட இதன் கதையை அறிய முடியவில்லை. வளையாபதி கதை என ஒரு கதை வழக்கில் உள்ளது. அதற்கும் வளையாபதி பாடல் கருத்துகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உணரலாம். கதை வருமாறு:

நவகோடி நாராயணன் ஒரு வைர வாணிகன். அவன் தன் குலத்தில் ஒரு பெண்ணையும், வேறு குலத்துப் பெண்ணையும் திருமணம் செய்ததால், அவனைக் குலத்தை விட்டுத் தள்ளி வைத்து விடுகின்றனர். இதனால் துன்பமுற்ற நாராயணன், வேறு வழியின்றி வேறு குலத்துப் பெண்ணைத் தள்ளி வைத்து விடுகிறான். அவளோ, தனக்கு மறுவாழ்வு அளிக்கும்படி காளியை வேண்டுகிறாள். காளியின் அருளால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகிப் புகார் நகர் வணிகர் அவையில் ‘தன் தந்தை நாராயணனே’ என்று நிறுவுகிறான். காளிதேவியும் சாட்சி கூறி அதனை மெய்ப்பிக்கிறது. இதனால் குடும்பம் ஒன்றுசேர, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

5.5 வளையாபதி உணர்த்தும் அறம்

வளையாபதியின் கடவுள் வாழ்த்தே வாலறிவன் அருகனை வாழ்த்துகிறது. மேலும், ‘தொல்வினை நீங்குக’ என்றும் வேண்டப்படுகிறது. இங்கு வினைப்பயன் நீங்கி வீடுபேறு பெற வேண்டும் என்ற ஆசிரியர் எண்ணம் வெளிப்படுகிறது.

5.5.1 அரிய பிறப்பு மனிதப் பிறவி மிக உயர்ந்தது. அதுவும் செல்வராக, உயர்குடிப் பிறப்பாளராக, ஊனமில்லாத யாக்கை உடையவராக, கல்வி கேள்விகளில் சிறந்தவராகப் பிறப்பது அரிது என்கிறார் ஆசிரியர்.

வினைபல வலியினாலே வேறுவேறு யாக்கை ஆகி

நனிபல பிறவி தன்னுள் துன்புறூஉம் நல்லுயிர்க்கு

மனிதரின் அரியதாகும் தோன்றுதல் தோன்றினாலும்

இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்னதேயாம்

உயர்குடி நனியுள் தோன்றல் ஊனம்இல் யாக்கை யாதல்

மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்லர் ஆதல்

பெரிதுணர் அறிவே ஆதல் பேரறம் கோடல் என்றாங்கு

அரிதிவை பெறுதல் ஏடா பெற்றவர் மக்கள் என்பார்

(நனிபல பிறவி = பல பிறவிகள்; மயர்வறு = மயங்குதல் இல்லாத; ஏடா? = ஏடா என முன்னிலையாரை அழைத்தல்)

5.5.2 நல்ல அறம் எல்லா நீதி நூல்களும் சொல்வது போல, கொலை, களவு, கள், காமம், பொய் நீங்குக, பிறரை ஏசாதே, புறங்கூறாதே, வன்சொல் சொல்லாதே, பிறரை எளியர் என்று எள்ளி நகையாடாதே, ஏதில் பெண் தழுவாதே, உயிர்கள் மாட்டு அன்பு கொள். மானம் போற்றுக; புலால் உண்ணற்க; உலகில் குற்றமே செய்யாதார் எவரும் இலர்; பொருளாசை கொள்ளற்க; அருளொடு அறம் செய்க; சீற்றம் நீங்குக; தவம் செய்க; தேர்ந்து தெளிக; இளமையும் இன்பமும் செல்வமும் நில்லாது நீங்கும்; நாளும் துன்பமே; நல்லதை யாரும் மதிக்க மாட்டார்; கல்வியும் கைப்பொருளும் இல்லாதார் சொல் புல்லாய் மதிக்கப் பெறும் என்று முழுக்க முழுக்க, அறம் சொல்வதாகவே நமக்குக் கிடைத்துள்ள வளையாபதிப் பாடல்கள் அமைகின்றன.

5.5.3 பெண்கள் பெண் மனம் நிலையற்றது; அதிலும் குறிப்பாகப் பொருட்பெண்டிர் மனம் மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போன்றது. புல் மேயும் மாடுகள் புல் தீர, பிறிதொரு புல்வயல் நாடுவது போலப் பொருட்பெண்டிர் அமைவர் என்று குறிப்பிடப்படுகிறது.

மேய்புலம் புல்அற மற்றோர் புலம்புகும்

மாவும் புரைப மலரன்ன கண்ணார்

(புரைப = ஒப்பர்)

பெண்ணால் வருவது பெருந்துன்பம். அதைவிடப் பெருந்துன்பம் வேறு இல்லை. ஆழமான நீர் நிலையில் வாழும் மீன்கள் புது வெள்ளம் காணின் அதை நோக்கிப் பாயும். அதுபோலப் பெண் காமனொடு உறவு கொண்டாலும் அவர்தம் உள்ளம் பிறிதொன்றை எதிர்நோக்கி உருகும். உண்டி, பொருள் மற்றும் கல்வி இவற்றைக் கூடக் காக்கலாம். ஆனால் பெண்ணைக் காப்பது, கட்டுப்படுத்துவது என்பது இயலாத ஒன்று. இவ்வாறு பெண்ணை ஒருவகையில் இழிவாகப் பேசுவது இங்குக் குறிப்பிடத்தக்கது.

5.5.4 குழந்தைச் செல்வம் ‘குழல் இனிது, யாழ் இனிது என்ப, தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்’ என்று குழந்தைச் செல்வம் பற்றி வள்ளுவர் பேசுவார். இதுபோன்று குழந்தைச் செல்வம் பற்றி எதிர்மறை உவமானத்துடன் சிறப்பிக்கிறார் வளையாபதி ஆசிரியர். அப்பாடல் இதோ:

பொறைஇலா அறிவு போகப்புணர்வு இலா இளமை மேவத்

துறைஇலா வனசவாவி துகில்இலாக் கோலத் தூய்மை

நறைஇலா மாலை கல்வி நலம்இலாப் புலமை நன்னீர்ச்

சிறையிலா நகரம் போலும் சேய் இலாச் செல்வம் அன்றே

பொருள்:

பொறுமை இல்லாத அறிவு, போகம் (காம இன்பம்), துய்க்காத இளமை, படித்துறை இல்லாத நீர்நிலை (குளம்), ஆடை அணியாத தூய்மை, மணமற்ற மாலை, மேலும் மேலும் கல்லாத புலமை, காவல் அகழிகள் இல்லாத நகரம் இவை போன்றது குழந்தை இல்லாத செல்வம் என்கிறார்.

‘யாகாவாராயினும் நா காக்க’ என்றார் வள்ளுவர். அதுபோல வளையாபதி ஆசிரியர். “காக்கப் படுவன இந்திரியம் (ஐம்புலன்கள் – கண், வாய், செவி, மூக்கு, உடல்) ஐந்தினும், நாக்கு அல்லது இல்லை’ என்கிறார். இங்ஙனம் முழுக்க முழுக்க அறக் கருத்துகளையே மையப்பொருளாகக் கொண்டுள்ளன வளையாபதிப் பாடல்கள் என்றால் அது மிகையாகாது.

5.6 கற்பனை வளம்

கிடைத்துள்ள வளையாபதிப் பாடல்கள் சமய, தத்துவ, அறச் சிந்தனைகள் தொடர்பானவை என்றாலும், அவற்றில் கற்பனை நயம் மிக்க பாடல்களும் உண்டு. இயற்கை வளம் பற்றிப் பேசும் கவிஞரின் கற்பனைக்கு இதோ ஒரு சான்று.

செந்நெல்அம் கரும்பினோடு இகலும் தீஞ்சுவைக்

கன்னல்அம் கரும்பு கமுகைக் காய்ந்து எழும்

இன்னவை காண்கிலன் என்று பூகமும்

முன்னிய முகில்களால் முகம் புதைக்குமே

(இகலும் = போட்டியிட்டு வளரும்; கன்னல்அம் = சுவை மிக்க; கமுகு = பாக்கு மரம்; காய்ந்து எழும் = போட்டியிட்டு வளரும்; பூகம் = பாக்கு மரம்)

பொருள்:

நெற்பயிர் கரும்புடன் போட்டி போட்டுக் கொண்டு அதனினும் உயரமாக வளரும். பாக்கு மரத்துடன் போட்டியிட்டுக் கரும்பு உயரமாக வளரும். இதனைக் காண விரும்பாத பாக்கு மரம் மேகத்திடை தன் முகத்தை மறைத்துக் கொள்ளும்.

உவமை நயம் மிக்க பல பாடல்கள் இடம் பெறுவதுடன் சொற்பின்வரு நிலையாகவும், இடை மடக்காக வரும் பாடல்களும் இடம் பெறுவது வளையாபதியின் இலக்கிய நயத்திற்குச் சான்றாகின்றன. இடை மடக்குப் பாடல் ஒன்று இதோ:

நீல நிறத்தவனவாய் நெய்கனிந்து போது அவிழ்ந்து

கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே

கோலங் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும்

காலக் கனல்எரியில் வேம்வாழி நெஞ்சே

காலக் கனல் எரியில் வேவன கண்டாலும்

சால மயங்குவதுஎன்? வாழி நெஞ்சே

பொருள்:

இது ஒரு அகப்பாடல். நீல நிறமுடைய, எண்ணெய் தேய்த்துப் பூச்சூடிக் கோலம் செய்யப்பட்ட கூந்தலானது, காலமாகிய தீயில் வெந்து அழியும். அவ்வாறு வெந்து அழிவது கண்டும் நெஞ்சே! நீ மயங்குவது ஏன்? என்று காதல் வயப்பட தலைவி வருந்துவதாக அமையும் இப்பாடல், இடைமடக்கு அணி நயம் பெற்றுச் சிறப்பதைக் காணலாம். இங்கு இரண்டாவது அடி மூன்றாவது அடியாகவும், நான்காவது அடி ஐந்தாவது அடியாகவும் மடக்கி வருவதைக் காணலாம்.

● சொற் பின்வரு நிலை

இது போன்றே சொற்பின்வரு நிலையாக அமையும் பாடல் ஒன்றும் வளையாபதியின் இலக்கியச் சிறப்பினை மெய்ப்பிக்கும். பாடல் இதோ:

நாடொறும் நாடொறும் நந்திய காதலை

நாடொறும் நாடொறும் நைய ஒழுகலின்

நாடொறும் நாடொறும் நந்திஉயர்வு எய்தி

நாடொறுந் தேயும் நகைமதி ஒப்ப

(நாடொறும் = நாள்தோறும்; நந்திய = வளர்ந்த; நைய = துய்ந்துத் தீர்க்க)

இங்குத் தினம் தினம் வளர்ந்து கொண்டே இருக்கும் காதலைத் துய்த்துத் தீர்ப்போம் என்று கூறுவது இயலாத ஒன்று. அது துய்க்கத் துய்க்க (அனுபவிக்க அனுபவிக்க) வளர்ந்து கொண்டே வரும். இது தேய்ந்து வளரும் மதி போன்றது. எனவே காதல் உணர்வைத் துய்த்துத் தீர்ப்போம் (அழிப்போம்) என்பது இயலாத ஒன்று என்கிறார் ஆசிரியர். இங்கு நாடொறும் என்ற சொல் தொடர்ந்து நான்கு அடிகளிலும் வருவது குறிப்பிடத்தக்கது. எனவே வளையாபதி காவியம், தக்கயாகப் பரணி உரையாசிரியர் குறிப்பிட்டது போலக் ‘கவியழகு மிக்க ஒரு காவியமே’ என்பது தெரிகிறது.

5.7 தொகுப்புரை

தமிழ்க் காப்பியங்களில் குண்டலகேசியும் வளையாபதியும் எப்படிப்பட்ட காப்பியங்கள்? யாரால் எழுதப்பட்டன? உண்மையில் இவை காப்பியங்கள்தாமா? என்ற வினாக்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தாலும், தமிழ் மாணவர்களிடையே, தமிழ் ஆர்வலர்களிடையே, தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களிடையே இவை காப்பிய வரிசையில் அதிலும் குறிப்பிடத்தக்க பெருங்காப்பிய வரிசையிலே வைத்துத்தான் எண்ணப்படுகின்றன, பேசப்படுகின்றன.

பாடம் - 6

ஐஞ்சிறு காப்பியங்கள்

6.0 பாட முன்னுரை

வடமொழியில் பஞ்ச மகா காவியம். பஞ்ச காவியம் என்ற பாகுபாடு உண்டு. இதனை ஒட்டியே தமிழிலும் ஐம்பெருங் காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் என்ற பாகுபாடு காணப்படுகிறது. தமிழில் ஐஞ்சிறு காப்பியங்களாகச் சூளாமணி, யசோதர காவியம், நீலகேசி, உதயண குமார காவியம், நாக குமார காவியம் என்ற ஐந்தினை எண்ணிச் சொல்வர்.

தண்டியலங்காரம் என்ற இலக்கண நூல், காப்பியப் பாடுபொருளான அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவற்றில் ஒன்று குறைபடினும் அது சிறுகாப்பியம் என்று குறிப்பிடுகிறது. ஆனால் இங்குள்ள ஐந்து காப்பியங்களில் சூளாமணிக்கு இந்த இலக்கணம் பொருந்தவில்லை. அது அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கு பொருளையும் எடுத்தியம்பும் ஒரு பெருங்காப்பியமாகவே அறிஞர்களால் போற்றப் பெறுகிறது. மேலும் சீவக சிந்தாமணிக்கு இணையான ஒரு பெருங்காப்பியம் என்பது இன்று அனைத்துத் தமிழ் அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. என்றாலும், இது, தமிழ் இலக்கிய வரலாற்றுக் கல்வியில் சிறு காப்பிய வகையாகவே பழமரபுப்படி பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

6.1 சூளாமணி - பெயர்க் காரணம்

சூளாமணி என்பது மகுடத்தின் முடிமணி. சூளாமணி என்பதற்கு நச்சினார்க்கினியர் முடியின் மணி என்றும், நாயக மணி என்றும் பொருள் கூறுகிறார். இதனைச் சூடாமணி என்றும் அழைப்பர். இதன் ஆசிரியர் தோலாமொழித் தேவர். செங்கண் நெடியான் சரிதம் என்றுதான் தம் நூலைக் குறிப்பிடுகிறார். இந்நூலில் இரத்தின பல்லவ நகரம் “சூளாமணியின் ஒளிர்வது”, “அருஞ்சயன் அவனை நங்கள் மலைக்கோர் சூளாமணி எனக் கருது”, திவிட்டன் (சூளாமணிக் காப்பியத் தலைவன்) குன்றேந்தி நின்ற கோலம் “முடிமேல் சூளாமணி முளைத்த சோதி” போன்றது; முத்தி நிலை அடைந்த திவிட்டன் தந்தை பயாபதி மன்னன் “உயர்ந்து உலகின் முடிக்கோர் சூளாமணியானான்” என நான்கு இடங்களில் சூளாமணி என்ற சொல் இடம் பெறுகின்றது. இவை கொண்டு இந்நூலுக்குச் சூளாமணி எனப் பெயர் வழங்கிற்று என்பர். மேலும் வடமொழி மூலமான மகாபுராணம் சைனருக்குச் சூளாமணி போன்றது. எனவே அந்நூலின் ஒரு பகுதியான இந்நூலுக்கும் சூளாமணி என்ற பெயர் வழங்கலாயிற்று என்றும் கூறுவர். இந்நூலாசிரியர் அவனி சூளாமணி என்ற பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர். எனவே அவன் பெயரால் இந்நூல் வழங்கலாயிற்று என்ற கருத்தும் உண்டு.

6.1.1 நூலாசிரியர் வரலாறு நூலாசிரியர் தோலாமொழித் தேவர். இது இவரது இயற்பெயர் என்று தோன்றவில்லை. இவரது இயற்பெயர் ஸ்ரீவர்த்த தேவர் எனக் கருதுகிறார் து.அ. கோபிநாதராவ். கன்னட நாட்டிலுள்ள சிரவண பெல்கொளாவில் உள்ள வடமொழிக் கல்வெட்டு, ‘சூடாமணி என்பது காவியங்களுக்கெல்லாம் சூடாமணி போன்றது; இதைக் கீர்த்திபெறத் தக்க புண்ணியம் செய்த ஸ்ரீவர்த்த தேவர் இயற்றினார்’ எனக் குறிப்பிடுகிறது. இங்கு ஸ்ரீவர்த்த தேவர் என்பார் ‘ஸ்ரீவர்த்தமான தேவரே’ என்பர். இவர் சொல்லில் தோற்காதவர்; வெல்லும் சொல் வல்லார் என்பதால் தோலாமொழித் தேவர் என அழைக்கப் பெற்றார் என்று கருதுகின்றனர். இவர் தரும தீர்த்தங்கரரிடத்து ஈடுபாடு கொண்டவர். கார்வெட்டி அரையன் என்ற தலைவன் ஆதரவுடன் வடமொழி மகாபுராணத்தில் உள்ள ‘சிரேயாம்ச சுவாமி சரிதத்தின்’ ஒரு பகுதியான பிரசாபதி அரசன் வரலாற்றைப் பாடுவதே சூளாமணிக் காப்பியமாகும்.

6.1.2 காப்பியக் கட்டமைப்பு சூளாமணிக் காப்பியம் பாயிரமும், 12 சருக்கங்களும், 2131 விருத்தப் பாக்களும் கொண்டது. பாயிரப் பகுதி 6 பாடல்களைக் கொண்டது. முதல் பாடல் அருகன் துதி; அடுத்த பாடல் ‘செங்கண் நெடியான் சரிதம் செப்பலுற்றேன்’ எனக் காப்பியம் யாரைப் பற்றியது என்பதை எடுத்துரைக்கிறது. நூல் ‘நெடுஞ்சேந்தன்’ அவையில் அரங்கேற்றப் பெற்றதாகப் பாயிரம் குறிப்பிடுகிறது. நாட்டுச் சருக்கம், நகரச் சருக்கம், குமார காலச் சருக்கம், இரத நூபுரச் சருக்கம், மந்திர சாலைச் சருக்கம், தூதுவிடு சருக்கம், சீயவதைச் சருக்கம், கல்யாணச் சருக்கம், அரசியற் சருக்கம், சுயம்வரச் சருக்கம், துறவுச் சருக்கம், முத்திச் சருக்கம் எனப் பன்னிரு சருக்கங்களைக் கொண்டது சூளாமணிக் காப்பியம்.

6.1.3 காப்பியக் கதை பரத கண்டத்தில் சுரமை நாட்டின் தலைநகர் போதன மாநகர். அதன் அரசன் பயாபதி. அவனுக்கு மிகாபதி, சசி என இரு மனைவியர். அவர்களுக்கு வெண்ணிறமான விசயன், கருநிறமான திவிட்டன்  ஆகிய இருவரும் பிறந்தனர். இவர்கள் பலராமன், கண்ணன் அவதாரமாகக் கருதப்பட்டனர். திவிட்டன் வித்தியாதர நாட்டு இளவரசியை மணப்பான் என்று நிமித்திகன் (சோதிடன்) கூறுகிறான். அதே நேரத்தில், வித்தியாதரர் (வானவர்) உலகிலுள்ள இரத நூபுரம் என்ற நகரில் ஆட்சி புரியும் சுவலனசடி தன் மகளுக்குச் சுயம்வரம் நடத்த எண்ணுகிறான். சுவலனசடியின் மகள் சுயம்பிரபை. அவளைப் பூலோகத்தில் உள்ள திவிட்டனே மணப்பான் என்று நிமித்திகன் கூறுகிறான். தன் சோதிடக் குறிப்பிற்குச் சான்றாக, திவிட்டன் ஒரு மாதத்திற்குள் ஒரு சிங்கத்தை அடக்குவான் என்கிறான். எனவே சுவலனசடி, மருசி என்பவனைப் பயாபதியிடம் மணத் தூதாக அனுப்புகிறான். பயாபதியின் ஒப்புதலை அறிந்த சுவலனசடி, திவிட்டன் சிங்கத்தை அடக்குகிறானா என்பதை அறிய விரும்புகிறான். சுவலனசடி திவிட்டனுக்குப் பெண் கொடுக்க இருப்பதை அறிந்த மற்றொரு வித்தியாதர அரசன் அச்சுவ கண்டன் பயாபதியைத் தனக்குத் திறை செலுத்த ஆணையிட்டுத் தூதனுப்புகிறான். அத்தூதுவனைத் திவிட்டன் விரட்டியடித்து விடுகிறான். விரட்டியடிக்கப்பட்ட தூதுவன், அச்சுவ கண்டனிடத்தே செல்வதற்கு அஞ்சி, அவனுடைய அமைச்சனாகிய அரிமஞ்சு என்பவனிடம் சென்று திவிட்டன் செயலைக் கூறினான். அதுகேட்ட அவ்வமைச்சன் மாயவித்தையில் வல்ல அரிகேது என்பவனை மாயச் சிங்க உருவில் பயாபதி நாட்டுக்கு அனுப்பி அச்சுறுத்துகிறான். வீரன் திவிட்டன் விட்டுவிடுவானா? அம்மாயச் சிங்கத்தைக் கொல்லும் பொருட்டுத் துரத்திச் செல்கிறான். மாயச்சிங்கமாகிய அரிகேதுவோ உயிருக்குப் பயந்து, உண்மைச் சிங்கம் உறங்கும் ஒரு குகைக்குள் புகுந்து மறைந்து விடுகிறான். உண்மையான சிங்கம் குகையை விட்டு வெளிவர, திவிட்டன் அதனோடு எதிர்த்துப் போரிட்டு, அதன் வாயைப் பிளந்து கொன்று விடுகிறான்.

நிமித்திகன் கூற்று மெய்யாகி விட்டதல்லவா? சுவலனசடிக்கு மிகுந்த மகிழ்ச்சி. தன் மகளைத் திவிட்டனுக்கு மணம் செய்து மகிழ்கிறான். பழியுணர்ச்சியால் குமுறுகிறான் அச்சுவ கண்டன். தன் பெரும்படையுடன் தாக்குகிறான். ஆனால் திவிட்டன் கண்ணனுடைய அவதாரமல்லவா? எனவே அவனிடம் திருமாலின் ஆயுதங்களான பாஞ்ச சன்னியமும் சக்கரமும் வந்து தாமே பொருந்தின. கருடன் வந்து அவன் தோளிலே தங்கினான். பின் கேட்கவா வேண்டும்! போரில் திவிட்டனுக்கே வெற்றி கிடைக்கிறது. வெற்றி வாகை சூடிய திவிட்டனை வாசுதேவன் என்றும், விசயனைப் பலராமன் என்றும் வாழ்த்தி முடி சூட்டினர். கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கியது போலத் திவிட்டனும் கோடிமாசிலை என்ற மலையைத் தூக்கித் தன் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தினான். உரிய காலத்தில் திவிட்டன் – சுயம்பிரபை தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர்; சுயம்பிரபை தமையன் அருக்க கீர்த்திக்கும் ஒருமகனும் மகளும் பிறக்கின்றனர் இவர்கள் வளர்ந்து திருமண வயதுக்கு வர, முறைப்படி அவர்களுக்கு சுயம்வரம் நடத்தித் திருமணம் நடத்தப்படுகிறது. பயாபதி தன் தேவியருடன் துறவு பூண்டு தவம் மேற்கொண்டு முக்தி அடைய முயற்சி மேற்கொள்கிறான். திவிட்டன், விசயன் நாட்டை நன்முறையில் ஆளுகின்றனர். இத்துடன் இக்காப்பியக் கதை முற்றுப் பெறுகிறது.

6.1.4 காப்பியப் பண்பு சூளாமணி காப்பியப் பண்பில் சிறப்பானது; விரிவானது; நுட்பமானது. கவிதைச் சிறப்புடன் பல்வேறு பண்புகளுடனும் சிறந்து விளங்குவது. காப்பியக் கதை பயாபதி மன்னன் ஆட்சியோடு தொடங்கி, அவன் முக்தி மகளை மணந்து, உயர்ந்து, உலகின் முடிக்கோர் சூளாமணியானான் என்று முடிகிறது. பயாபதி வரலாற்றை முழுமையாக பெருங்காப்பிய அமைப்பில் பேசுகிறது. இடையில் காவியம் முழுக்கத் திவிட்டனின் ஆற்றல், வீரம், காதல் எனத் திவிட்டனே காப்பியத் தலைவனாக உருவெடுக்கிறான். மூன்று தலைமுறையினர்தம் வாழ்வைக் காப்பியம் எடுத்துரைக்கிறது. ஐந்திணை நிலவளம், நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, அறம், பொருள், இன்பம், வீடுபேறு; மந்திராலோசனை, தூது, போர், வெற்றி, வேனில் விழா, சுயம்வரம், தெய்வப் போர் எனக் காப்பியம் முழுக்கத் தமிழ் மணம், தமிழர் மரபு ஆதிக்கம் செலுத்துகிறது. சமண சமயக் கொள்கையைக் கற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது இதன் கோட்பாடாக அமைந்தாலும், பிற சமயக் காழ்ப்பு மற்றும் பழிப்பை ஓரிடத்தில் கூடக் காண முடியவில்லை.

சூளாமணி, கவிதைச் சுவையில் சீவக சிந்தாமணியைக் காட்டிலும்  சிறந்தது என்கிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. அருகனை வணங்கும் துதிப்பாடல்கள் சுவைமிக்கன. இவற்றில் பல ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வந்த கொச்சக ஒருபோகுப் பாடல்கள்.

ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை

போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை

போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை

சோதியஞ் செல்வநின் திருவடி வணங்கினம்

காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை

தேமலர் மாரியை திருமறு மார்பனை

தேமலர் மாரியை திருமறு மார்பனை

மாமலர் வணங்கிநின் மலரடி வணங்கினம்

ஆரருள் பயந்தனை ஆழ்துயர் அவித்தனை

ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை

ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை

சீரருள் மொழியைநின் திருவடி தொழுதனம்

இங்குப் பிரமன், சிவன், திருமால் ஆகிய மும்மூர்த்திகளை அருகனாகவே கண்டு ஆசிரியர் வழிபடுகிறார்.

6.1.5 தத்துவச் சிந்தனை சமயம், சமூகம், அரசியல் சார்பான உயர்ந்த கருத்துகளை வெளியிடுவதில் இக்காப்பியம் சிறந்து ஓங்குகிறது. மனித வாழ்க்கை என்பது என்ன? அது துன்பமா? இன்பமா? இரண்டும் கலந்ததே. அது ஒரு திரிசங்கு சொர்க்கம் போன்றது என்பதை ஓர் அருமையான பாடலால் விளக்கி விடுகிறார் ஆசிரியர். பாடல் இதோ:

யானை துரப்ப அரவுஉறை ஆழ்குழி

நால்நவிர் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்

தேனின் அழிதுளி நக்கும் திறத்தது

மானுடர் இன்பம் மதித்தனை கொள்நீ

(துரப்ப = விரட்ட; நால்நவிர் = தொங்கும் கொடி; பற்றுபு = பற்றி; அழிதுளி = தேனடையிலிருந்து சொட்டும் தேன்)

பாடல் பொருள்

மதயானை ஒருவனை விரட்டுகிறது; அதினின்று தப்பிக்க ஓடும்போது ஆழமான ஒரு குழியில் விழுகிறான். உள்ளே விழுந்துவிடாமல் இருக்க, அங்குத் தொங்கும் மெல்லிய கொடியைப் பற்றிக் கொண்டு தொங்குகிறான்; கீழே ஒரு பாம்பு படமெடுத்து ஆடுகிறது; கொடியை விட்டுக் கீழே விழுந்தால் பாம்பு கடித்து இறந்துவிடுவான்; மேலே சென்றால் யானை மிதித்துக் கொன்றுவிடும்; இவ்வாறு உயிருக்குப் போராடும் நிலையில் தேன் கூட்டிலிருந்து தேன் சொட்டுகிறது. அதனை நக்கிச் சுவைக்கிறான். மனிதர் துய்க்கும் இன்பம் இத்தகையதுதான் புரிந்து கொள்.

வாழ்க்கை துன்பங்களே நிறைந்தது. இதில் இடையிடையே கிடைக்கும் இன்பம் சிறிய அளவுடையதுதான். ஆயினும் அதைத் துய்க்க விரும்புவதே மனித இயற்கை. இந்த அரிய உண்மையை எவ்வளவு எளிமையாக, சுவையாகக் காட்டி விட்டார் தோலாமொழித் தேவர்.

இது மட்டுமா? இன்னும் மேலே மேலே சென்று நரககதி, விலங்குகதி, மனிதகதி, தேவகதி என மானுட உடல் நான்கு வகையான பிறப்புகளை எடுத்துத் துன்புறுவதைச் சமண சமயப் பின்னணியில் மிக அற்புதமாக எடுத்தியம்புகின்றார். மனைவியர்கள், தேன் உண்ணாமல், கணவனுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்ந்தால் தேவர் உலகில் பிறப்பர். தானம், தவம், சீலம், ஒழுக்கம் ஆகிய நற்குணங்களே முக்திக்கு வழிவகுக்கும். பணமோ, பொருளோ இல்லை என்றால் இவ்வுலகியல் இன்பம் இல்லை. இரக்கச் சிந்தனை இல்லாதான் வீடுபேறு அடைய முடியாது. நல்ல நீதி நூல்களைக் கல்லாதவனிடத்துத் திருமகள் வந்து தங்க மாட்டாள் என்றிவ்வாறு பல நீதிக் கருத்துகளை அள்ளி வழங்கியுள்ளது சூளாமணிக் காப்பியம்.

6.2 யசோதர காவியம்

ஐஞ்சிறு காப்பியங்களில் யசோதர காவியம், உதயண குமார காவியம், நாக குமார காவியம் ஆகிய மூன்று மட்டுமே ‘காவியம்’ என்ற பெயரால் சுட்டப்படுகின்றன. எஞ்சியுள்ள சூளாமணி, நீலகேசி இரண்டும் அவ்வாறு சுட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் ‘காவியம்’ என்று பெயர் பெற்ற இம்மூன்றின் காப்பியக் கட்டமைப்பு மற்றும் கலைச் சிறப்பு சூளாமணி, நீலகேசி ஆகியவற்றை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நூல் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. யசோதரன் சரிதம் தமிழில் வேறு எந்த நூலிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடமொழியில் யசோதரன் கதை பல படைப்புகளில் இடம் பெறுகின்றது. சைன புராணங்களில் மகாபுராணம் சிறப்புடைய ஒன்று. அதில் தீர்த்தங்கரர் இருபத்து நால்வர், அரசர்கள் பன்னிருவர், பலதேவர் ஒன்பது பேர், வாசுதேவர் ஒன்பது பேர், பிரதி வாசுதேவர் ஒன்பது பேர் என அறுபத்து மூவர் வரலாறு இடம்பெறும். இம்மகாபுராணத்தைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஜினதேவரும், கி.பி. 10ஆம் நூற்றாண்டில் மல்லிசேனரும் எழுதினர். மற்றொரு புராணமான உத்தர புராணத்தை ஜினசேனரின் மாணாக்கர் குணபத்திர முனிவர் எழுதினார் என்பர். இந்த உத்தர புராணத்தில்தான் முதல் முதலாக யசோதரன் சரிதம் கூறப்படுகிறது.

6.2.1 நூல் வரலாறு யசோதரன் சரிதத்தை வடமொழியில் எழுதியவர்களில் மூவர் குறிப்பிடத்தக்கவர்கள். ஒருவர் சோமதேவ சூரி என்பார். இவர் யகஸ்திலகம் என்ற பெயரில் சம்பு காவியம் படைத்துள்ளார். ‘யசோதர சரிதம்’ என்ற பெயரில் வாதிராஜ சூரியும், அரிபத்திரர் புட்பதந்தரும் காவியம் படைத்துள்ளனர். பூர்ண தேவர் என்பாரும் யசோதர காவியத்தை வடமொழியில் படைத்துள்ளதாக அறியப்படுகிறது. வடமொழியில் வாதிராஜ சூரியின் காவியத்தைத் தழுவியே தமிழில் ‘யசோதர காவியம்’ படைக்கப் பட்டுள்ளதாகக் கூறுவர்.

6.2.2 நூலாசிரியர் தமிழில் ‘யசோதர காவியம்’ படைத்த ஆசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. வடமொழியில் நாக குமார காவியம் படைத்த மல்லிசேனரே தமிழிலும் அக்காவியத்தைப் படைத்தது போல, வடமொழியில் ‘யசோதர சரிதம்’ படைத்த வாதிராஜ சூரியே தமிழிலும் இக்காவியம் படைத்திருக்க வேண்டும் என்று வேங்கட ராமையங்கார் கருதுகிறார்.

புட்பதந்தன் சொன்ன பொருள்சேர் கதைதன்னைத்

திட்பமாய்ச் செந்தமிழில் செப்பினான் – நட்புடையார்

நண்ணார் இவர்என்ன நாடாக் கொடைக்கையர்

வெண்ணாவல் ஊருடைய வேள்

(நட்புடையார் நண்ணார்…..கொடைக்கையர் = வேண்டியவர்,  வேண்டாதவர் என்று பார்க்காத வள்ளல்)

என்ற ஏட்டுப் பிரதியில் காணப்படும் வெண்பாவால் இந்நூலாசிரியர் வெண்ணாவல் என்ற ஊரில் வாழ்ந்த வள்ளல் வேள் என்பது தெரிய வருகிறது. ‘வேள்’ என்பது கூட இவரது குடிப்பெயராகவே அறியப்படுகிறது. இவர் புட்பதந்தரின் ‘யசோதர சரிதம்’ என்ற நூலைத் தழுவியே இக் காவியம் படைத்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இங்கு இடம் பெறும் வெண்ணாவலூர் திருவானைக்காவாக இருக்கவேண்டும் என்பர். திருவானைக்கா திருச்சிக்கு அருகில் உள்ளது.

6.2.3 காப்பியக் கதையும் கட்டமைப்பும் இக்காப்பியம் ஐந்து சருக்கங்களைக் கொண்டது. பாடல்கள் 330. சில பதிப்புகளில் 320 பாடல்கள் மட்டுமே காணப்படுகின்றன. அபயருசி என்பான் ஔதய நாட்டு மன்னன் மாரி தத்தனுக்குத் தன் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சைன நெறிப்படுத்தி நற்கதி பெறச் செய்ததே காப்பியக் கதை.

ஒளதய நாட்டின் தலைநகரான இராசமாபுரத்திலிருந்து நாட்டை ஆண்ட அரசன் மாரிதத்தன். அவன் ‘சண்டமாரிதேவி’க்குப் பலியிட அபயருசி, அபயமதி என்ற இரு சிறுவர்களைக் கொண்டுவரச் செய்தான். அவர்கள் அச்சம் சிறிதுமின்றித் தெய்வத்தை வாழ்த்தியபடி அரசன் முன் சென்றனர். அரசன் வாளை ஓங்கி அவர்களை வெட்டிப் பலியிட முற்பட்டபோது, நகர மக்கள் “அரசன் வாழ்க” என்று அவர்களைச் சொல்லுமாறு பணித்தனர். அபயருசி புன்முறுவலுடன் “இம்மன்னன் பலியிடும் தீய தொழிலை விட்டு விட்டு அருள் கொண்டு வாழ்வானாக” என்று வாழ்த்தினான். அரசன் அவர்களைப் பலியிடுவதை நிறுத்தி, அவர்தம் அஞ்சாமை கண்டு மகிழ்ந்தான். அபயருசி மன்னனுக்குத் தன் பூர்வ வரலாற்றை எடுத்துரைக்கிறான்.

அவந்தி நாட்டு உஞ்சயினி நகர அரசன் அசோகன்; அவன் மனைவி, சந்திரமதி. அவர்தம் மகனே யசோதரன்; அவன் அமிர்தமதியை மணந்து யசோமதி என்ற மகனைப் பெற்றான். தன் தலையில் நரைமுடி கண்ட அசோகன் துறவியாகிறான். தொழுநோயாளனான யானைப் பாகன் அட்டபங்கன், மாளவ பஞ்சம் என்ற இசைபாடுகிறான். அந்த இசையில் மயங்கிய யசோதரன் மனைவி அமிர்தமதி அட்டபங்கனுடன் உடலுறவு கொள்கிறாள். இதனை நேரில் கண்ட யசோதரன் துறவு மேற்கொள்ள விழைகிறான். மனைவியின் கூடா ஒழுக்கத்தை மறைத்துத் தீக்கனாக் கண்டதாகத் தன் தாயிடம் கூறுகிறான். தாய் மாரிக்குப் பலியிட வேண்டுகிறாள். உயிர்க்கொலை செய்ய விரும்பாத யசோதரன் மாக்கோழியைப் (மாவால் செய்த கோழி) பலியிடுகிறான். அவனது கெட்ட காலம் அம்மாக் கோழிக்குள் புகுந்திருந்த ஒரு தெய்வம் துடிதுடித்து இறந்துபடுகிறது. இதனால் துன்புற்ற அரசனின் கருத்தறிந்த அவன் மனைவி அமிர்தமதி, அவனையும் அவன் தாய் சந்திரமதியையும் நஞ்சு கலந்த லட்டைக் கொடுத்துக் கொன்றுவிடுகிறாள். பின் இவர்கள் இருவரும் மயிலும் நாயுமாகப் பிறந்து அரசன் யசோமதி அரண்மனையில் வாழ்கின்றனர். அப்போது மயிலாக வாழும் யசோதரன் தன் மனைவியின் கள்ளக் காதலனான யானைப்பாகனின் கண்ணைக் கொத்த, அவன் மயிலைக் கடித்து விடுகிறான். நாய் கடித்ததாக அரசனிடம் பொய் சொல்கிறான். ஆத்திரமடைந்த மன்னன் நாயைக் கொல்ல அது பாம்பாகப் பிறக்கிறது. மயில் இறந்து முள்ளம் பன்றியாய்ப் பிறக்கிறது. முள்ளம் பன்றி பாம்பைக் கடிக்க, அது இறந்து முதலையாய்ப் பிறக்கிறது. முள்ளம் பன்றியைக் கரடி கொல்ல அது மீனாய்ப் பிறக்கிறது. முதலை மீனை விழுங்க விரட்டிய போது காவலரால் பிடிபட்டுக் கொல்லப்படுகிறது. அம்முதலை பெண் ஆடாகப் பிறக்கிறது. மீன் அந்தணரால் கொல்லப்பட்டு அப்பெண் ஆட்டின் குட்டியாகப் பிறக்கின்றது. பின் தாய் ஆடு எருமையாய்ப் பிறந்து அரசனுடைய குதிரையைக் கொன்று விடுகிறது. அரசன் எருமையைக் கொல்ல, எருமை கோழியாகப் பிறக்கிறது. குட்டி ஆட்டையும் அமிர்தமதி கொல்ல – அதுவும் கோழியாகப் பிறக்கிறது. கோழிகளை வளர்த்தவன் ஒரு முனிவனிடம் அறம் கேட்டபோது கோழிகளும் உடனிருந்து கேட்டன. அறவுரை கேட்ட மகிழ்ச்சியில் கோழிகள் கூவ, அங்குத் தூங்கிக் கொண்டிருந்த அரசன் தன் தூக்கத்திற்கு இடையூறாக அமைந்த கோழிகளைக் கொல்ல, அவை முனிவரிடம் அறம் கேட்ட அறப்பயனால், அரசன் தேவி புட்பாவலிக்கு இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கின்றன. அக்குழந்தைகளே அபயருசி, அபயமதியாவர்.

புடபாவலி மீண்டும் கருவுற்று யசோதரன் என்ற மகனைப் பெறுகிறாள். மக்கள் மூவரும் வளர்கின்றனர். வேட்டைக்குச் சென்ற மன்னன் யசோமதி எதிரில் சுதத்தர் என்ற முனிவரைக் காண்கிறான். அவர் திகம்பரக் கோலத்தில் (ஆடையின்றி) இருக்கிறார். வேட்டையில் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு அந்த முனிவரை முதலில் கண்டதுதான் காரணம் என்று கருதிய யசோமதி, 500 வேட்டை நாய்களை ஏவி அவரைக் கொல்ல முயல்கிறான். அவரது தவ வலிமையால் நாய்கள் அவரை நெருங்க முடியாமல் நிற்கின்றன.

இந்த மறுபிறப்பு, விலங்குப் பிறப்பு வரலாற்றைத் தன்னைக் கொல்ல வந்த யசோமதி அரசனுக்கு சுதத்த முனிவர் கூறி அவனை நல்வழிப்படுத்துகிறார். இந்த வரலாற்றை அபயருசி, அபயமதி மாரிதத்தனுக்குக் கூற, அவன் நல்லுணர்வு பெற்று ஜின தருமத்தைக் கடைப்பிடித்து முக்தி – நற்கதி அடைகிறான். இதுவே கதை.

அன்பார்ந்த மாணவர்களே! இந்தக் கதை உங்களுக்குப் புரிகிறதா? குழப்பமாக இருக்கிறதா? யசோதரன். அவன் தாய் எவ்வாறெல்லாம் விலங்குப் பிறவி எடுத்தனர் எனத் தெளிவாக அறிய முடிகிறதா? இதோ தெளிவுக்காக இங்கே இவர்களில் யார் என்ன பிறவி எடுத்தனர் என்பதைத் தருகிறோம்.

தாய் சந்திரமதி நாய், பாம்பு, முதலை, ஆடு, கோழியாகப் பிறக்கிறாள்;

யசோதரன் மயில், முள்ளம்பன்றி, மீன்,

ஆட்டுக்குட்டி, எருமை, கோழியாகப் பிறக்கிறான். இப்பொழுது இப்பிறப்புக் கதைக் குழப்பம் தீருமல்லவா? இந்தக் கதையைப் படித்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இதன் தேவை என்ன? தத்துவம் என்ன? சிந்தித்துப் பாருங்கள்; சிந்தனைக்காகச் சில செய்திகள் இதோ தரப்படுகின்றன. இவற்றைக் கொண்டு மேலும் சிந்தியுங்கள். ஆங்கிலக் கவி தாந்தேயின் டிவைன் காமடி (Divine Comedy) காவியத்தை இது நினைவு ஊட்டுகிறதல்லவா? ஒப்பிட்டுப் பாருங்கள்.

6.2.4 காப்பியத் தத்துவம் மக்களுக்குத் தீவினை தொடரும் வழி இன்னதென உணர்த்தி, அவ்வழியில் செல்லாது தடுத்து, நல்வினை செய்யச் செய்து, அதனால் வரும் புண்ணியத்தையும் போகத்தையும் அடையச் செய்வதே சமணக் காப்பியங்களின் அடிப்படை நோக்கமாகும். வினைப்பயன் தொடரும் என்பதே இக்காப்பியம் நமக்குத் தரும் செய்தி. உயிர்க்கொலை பெரும்பாவம்; அது கீழான விலங்குப் பிறவிக்கு இட்டுச் செல்லும். மீளாத நரகத்தில் புகச் செய்யும். பலியிடுதலும், பாவனையால் பலியிடுதலும் கொலையே. அறியாமல் செய்தாலும் கொலை கொலையே. புலால் உண்ணுதல் கொடிய பாவம். இசை உலக இன்பத்தை மிகுவிக்கும். கூடா ஒழுக்கம் பஞ்சமா பாதகத்தைச் செய்யத் தூண்டும். பாவங்களைப் போக்கும் வழி அறவோர் அறவுரை கேட்டலே. இதுவே இக்காப்பியத் தத்துவம், சிந்தனை, நோக்கம்.

6.2.5 இலக்கிய நயம் கொலை, பொய், களவு, பிறன்மனை நயத்தல், புலால் உண்ணல், கள் உண்ணல், தேன் உண்ணல் முதலான பாவச் செயல்களைச் செய்யாமையே அறம் ஆகும். அந்த அறங்களை இந்நூல் சொல்கிறது. சொல்லும் முறையில் உள்ள எளிமை, இனிமை நம்மைக் கவர்கிறது.

ஆக்குவது ஏதுஎனில் வெகுளி ஆக்குக

போக்குவது ஏதுஎனில் வெகுளி போக்குக

நோக்குவது ஏது எனில் ஞானம் நோக்குக

காக்குவது ஏது எனில் விரதம் காக்கவே

இந்தப் பாடல் உணர்த்தும் பொருள் அனைவரும் புரிந்து கொள்ளுகிற முறையில் எளிமையைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘கொலையினது இன்மை (கொல்லாமை) கூறில் குவலயத்து இறைமை செய்யும்; மலைதல் இல் வாய்மை யார்க்கும் வாய்மொழி மதிப்பை ஆக்கும்’ (237: 1-2) என்று அறக் கருத்துகளை மிக எளிமையாக எடுத்து மொழிகிறது இந்த நூல்.

6.3 நீலகேசி

தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல் இதுவெனக் கூறலாம். இது குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நூலாகும். பழையனூர் நீலியே குண்டலகேசியாகப் பிறந்து சமண சமயத்தினும் பௌத்த சமயமே மேலோங்கியது என உணர்த்துவது குண்டலகேசிக் காப்பியம். அதே பழையனூர் நீலியே நீலகேசியாகப் பிறந்து குண்டலகேசியை வாதில் வென்று சமணமே உயர்ந்த சமயம் என நிறுவுகிறது நீலகேசிக் காவியம். குண்டலகேசி, நீலகேசி, அஞ்சனகேசி, காலகேசி போன்ற நூல்கள் தருக்க நூல்களாகவே அமைந்துள்ளன. தருக்கவியல் சிந்தனையை மணிமேகலைக் காப்பியம் பின்னைய காதைகளில் பேசினாலும், அதனை முழுமையாகப் பேசுவது நீலகேசி மட்டுமே. பின்னர் இத்தருக்கச் சிந்தனை சிவஞான சித்தியார், சிவஞான போதம் முதலான சைவ சித்தாந்த நூல்களில் சிறப்பாகப் பேசப்படுகிறது. என்றாலும் இத்தகைய சித்தாந்த நூல்களுக்கு நீலகேசியே மூலாதாரம் என்பது தெளிவு.

6.3.1 நீலகேசி – பெயர்க்காரணம் நீலகேசி என்பது ‘கேசி’ என்று முடியும் பெண்பால் பெயர்களுள் ஒன்று. கேசி அழகிய கூந்தலை உடையவள்; நீலகேசி – அழகிய கருங்கூந்தலை உடையவள் என்பது பொருள்.

நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதுஅவிழ்ந்து

கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே

(வளையாபதி 3: 1-2)

என்ற வளையாபதிப் பாடல் ‘நீலகேசி’ சொல்லுக்கு விளக்கமாக அமையும். மகாபாரத்தில் திரௌபதி கூந்தலை அவிழ்த்து விட்டுச் சூளுரைத்ததுபோல இங்கு நீலகேசி, சமய வாதத்தில் இறங்கி, தர்க்க ரீதியாகப் பிற சமயத்தாரோடு வாதிட்டுத் தன் சமயத்தை நிலைநாட்டிய பின்னரே கூந்தலை முடிப்பது எனச் சபதம் செய்து வென்றதையே நீலகேசி உணர்த்துகிறது.

6.3.2 காப்பியக் கட்டமைப்பு நீலகேசி 894 பாடல்களைக் கொண்டது; இவை விருத்தப்பாக்களில் அமைந்தவை. தரும உரைச் சருக்கம், குண்டலகேசி வாதச் சருக்கம், அருக்க சந்திர வாதச் சருக்கம், மொக்கல வாதச் சருக்கம், புத்தவாதச் சருக்கம், ஆசீவக வாதச் சருக்கம், சாங்கியவாதச் சருக்கம், வைசேடிக வாதச் சருக்கம், வேதவாதச் சருக்கம், பூதவாதச் சருக்கம் எனப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்று இக்காப்பியமும் பெண்ணையே தலைமைப் பாத்திரமாகக் கொண்டு திகழ்கின்றது. அருகன் துதி, சித்தர் – ஆச்சாரியர் – உபாத்தியாயர் – சாதுக்கள் துதி, அவையடக்கம், பதிகம் எனப் பாயிரப் பகுதி ஒன்பது பாடல்களில் அமைகின்றது. காப்பியம் நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு கூறித் தொடங்குகிறது. இந்நூல் நீலம், நீலகேசித் தெருட்டு, நீலகேசித்திரட்டு என்னும் வேறு பெயர்களாலும் வழங்கி வருகின்றது.

6.3.3 பௌத்த சமய வாதம் பாஞ்சால நாட்டின் புண்டர வருத்தனம் என்னும் நகரில் கதை தொடங்குகிறது. இங்கு ஆட்சி செய்தவன் சமுத்திர ராசன். இந்நகரின் சுடுகாட்டுப் பகுதியே பாலாலயம் என்ற சுடுகாடு. பேய்க்கணம் சூழ இங்குக் குடி கொண்ட தெய்வமே பிடாரி. இத்தெய்வ அருளால் ஆண்மகவு பெற்ற நங்கைக்காக நன்றிக் கடன் செலுத்த நகர மக்கள் ஆட்டைப் பலி கொடுக்க வருகின்றனர். அங்குத் தவம் செய்து கொண்டிருந்த சமண முனிவர் முனிச்சந்திரன் “தெய்வங்களுக்கு உயிர்ப் பலியிடுதல் தீவினை” என அறிவுறுத்தினார். அதோடு அவர் அருளுரை ஏற்ற நகர மக்கள் அவர் ஏவல்படியே மண்ணால் ஆட்டு உருவம் செய்து பலி கொடுத்துத் தம் விரதம் முடிக்கின்றனர். இதனால் தமக்கு ஊன் உணவு கிடைக்கப் பெறாத பேய்க்கணம் முனிவரை அகற்ற வலிமை வாய்ந்த ‘நீலகேசி’ என்ற பேயை அழைத்து வருகின்றான். முனிச்சந்திரனின் தவ ஆற்றலை அறிந்த நீலகேசி புறத்தே நின்று அச்சுறுத்தியும், மாயாஜாலம் காட்டியும், கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறது. பல்வேறு உருவங் கொண்டு முனிவரை வீழ்த்தவும் முயற்சி செய்கிறது. பின் அழகிய காமலோகை என்னும் பெண் உருக் கொண்டு காமத்தால் மயக்க முற்படுகிறது. எதற்கும் சிறிதும் அஞ்சாத முனிச்சந்திரன் தன் ஒதி ஞானத்தால் அவள் யார் என்பதை உணர்ந்து அவளை நல்லறப்படுத்துகிறார். மேலும் அவர், நீலகேசிக்கு மக்கள், தேவர், நரகர், விலங்கு எனும் நான்கு வகைப் பிறப்பால் வரும் தீமைகளை எடுத்துரைக்கிறார். அதோடு சமணத் தத்துவங்களை எல்லாம் அவளுக்குப் போதிக்கிறார்.

‘உயிர் முதலிய உள்பொருள்களை மனம் மற்றும் பொறிகளால் காணுதல்; நினைவு, மீட்டுணர்வு, ஊகம், கருத்து, நூல் என்னும் அளவைகளால் உணர்தல்,  இவை நன்ஞானம், உலக மூடம், பாசண்டி மூடம், தெய்வ மூடம் இவற்றை அழித்து, காமம், அச்சம், அவா, உலகியல், பிற சமயக்கணக்கர், போலித் தலைவர் இவற்றை நீக்கி, ஞானம், பூசை, குலம், சாதி, பலம், இருத்தல், தவம், உடல் இவற்றால் தோன்றும் எட்டுவகைச் செருக்கை நீக்கி, நிலைத்தல், நற்காட்சி. நன்ஞானம், நற்காட்சியோடு நன்றின்பால் செல்வது நல்ஒழுக்கம்.

இவ்வாறு சமண அறம் உரைத்த முனிச்சந்திர முனிவர் இந்நல் அறங்களை உலகிற்குப் பரப்புமாறு நீலகேசியைப் பணிக்கிறார். அவளும் அவ்வண்ணமே காம்பிலி நாடு சென்று பௌத்த சமயக் கொள்கையில் நிறைந்த புலமையும் சிறந்த வாதத் திறமையும் கொண்ட குண்டலகேசியுடன் சமய வாதம் செய்து, பௌத்த சமயக் கொள்கை ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று; ஜின தருமமே உயர்ந்தது என நிலைநாட்டிக் குண்டலகேசியைத் தன் சமயக் கொள்கையை ஏற்கச் செய்கிறாள். அடுத்துக் குண்டலகேசியின் ஆசிரியர் அருக்க சந்திரனை உஞ்சை மாநகரில் சந்தித்து அவரையும் வாதில் வெல்கிறாள். பின் அருக்க சந்திரனின் ஆசிரியர் மொக்கலனைப் பதுமபுரத்தில் சந்தித்து வாதிட்டு வெல்கிறாள். அவர் நீலகேசியை ஞானாசிரியராகக் கொண்டு சமண சமயத்தைத் தழுவுகிறார். இறுதியாகக் கபிலபுரம் சென்று பௌத்த சமயத்தை நிறுவிய புத்தரையே சந்தித்து வெல்கிறாள். இவ்வாறு நூலின் பாதிக்கு மேற்பட்ட பகுதி பௌத்த சமய மறுப்பாகவே அமைகிறது. புத்த சாதகக் கதைகளிலுள்ள குறைபாடு, சமயத் தத்துவத்தில் காணப்படும் முரண்பாடு மற்றும் பௌத்த சமயத் துறவிகளின் ஆடம்பரமான வாழ்க்கை ஆகியவற்றைச் சுட்டியே சமய வாதம் நிகழ்கிறது.

6.3.4 பிற சமய வாதம் பௌத்த சமய மறுப்பாக எழுந்த நீலகேசி பௌத்த சமயக் கோட்பாடுகளை முழுமையாக விவாதித்து, அவற்றினும் மேலானவை சமண சமயக் கோட்பாடுகள் என எடுத்துரைப்பது. ஆசிரியரின் சமயப் புலமைக்கு இது சான்றாகிறது. பௌத்த சமயம் மட்டுமன்றி ஆசீவகம், சாங்கியம், வைசேடிகம், வேதம், லோகாயுதம் ஆகிய அறிவார்த்தமான சமயச் சிந்தனைகளையும், அவ்வச் சமயக் கணக்கரொடு வாதம் செய்து சமணத்தின் சிறப்பினையும் எடுத்துரைக்கும் நீலகேசி ஆசிரியரின் பிற சமயப் புலமை மேலும் விளங்குகிறது.

நீலகேசி கபிலையில் புத்தனை வென்று, தமிழகத்தில் உறையூரை அடைந்து அங்குள்ள அருகக் கடவுளை வணங்கி மீண்டும் வடநாடு செல்கிறாள். அங்குச் ‘சமதண்டம்’ நகரை அடைந்து ஆசீவக சமயத் தத்துவ ஞானி பூரணனைச் சந்தித்துச் சமய வாதத்தில் ஈடுபடுகிறாள். இங்குச் சாங்கியத்தைத் தோற்றுவித்த ‘மற்கலி’ பற்றியும், அவர்தம் வேதமான ‘நவகதிர்’ நூல் பற்றியும் விவாதம் நிகழ்கிறது. இங்கு ஆசீவகரின் நிலம், நீர், தீ, காற்று, உயிர் ஆகிய அணுக்கோட்பாடும், உள்ளது கெடாது, இல்லது தோன்றாது, ஆவது ஆகும், ஆகுமாறே ஆகும், ஆகும் அளவே ஆகும், ஆகும் காலத்தே ஆகும் என்னும் கோட்பாடுகளும் தருக்க ரீதியாக மறுக்கப்படுகின்றன.

அடுத்து அத்தினாபுரத்தில் சமயச் சொற்போர் நிகழ்த்தும் பராசரன் என்னும் சாங்கியத் தத்துவ வாதியுடன் விவாதிக்கிறாள் நீலகேசி. இங்குச் சாங்கியத் தத்துவத்தில் ‘பரமாத்மா’ பற்றிய கோட்பாடு விவாதிக்கப்படுகிறது. அவன் செயலற்றவன், குணமற்றவன், உள்பொருளாய் உள்ளவன், வேற்றுமை இல்லாதவன், பற்றில்லாதவன், அழிவற்றவன், காண்பானும் நுகர்வானும் ஆவான் என்பவை விவாதத்தில் நீலகேசியால் மறுக்கப்படுகின்றன. பின் பராசரன் கொள்கையைச் சிதைத்து அவனைச் சமணத்தைத் தழுவச் செய்து, வைசேடிக சமய ஆசிரியன் உலக சித்து என்பவனை வெல்ல அவனது தவப் பள்ளி அடைகிறாள். இங்குத் திரவியம், குணம், தொழில், பொது, சிறப்பு, கூட்டம் என்னும் வைசேடிக தத்துவங்களில் பின்னைய மூன்றும் மறுக்கப்பட்டு உலக சித்து சமண சமயம் சார்கிறான்.

உலக சித்தை வென்ற நீலகேசி பூதியன் என்னும் வேதியனைக் காகந்தி நகரில் எதிர் கொண்டு, வேத சமயத்தை குறிப்பாக வேதம் அநாதி; அது ஆதியும் அந்தமும் இல்லாத சுயம்பு என்பதை அநாதியாகக் கிடக்கும் மலத்தைச் சுட்டி மறுக்கிறாள். பின் வேதியரின் சாதீயக் கோட்பாடும், அவர்தம் வேள்விக் கொலையும், ஊன் உண்ணும் வழக்கமும் பழிக்கப்படுகின்றன. இது ஒருவகையில் ஆரியர் எதிர்ப்புக் குரலாக வெளிப்படுகிறது. இறுதியாகக் கடவுளும் மறுபிறப்பும் இருவினைப் பயனும் இல்லை என்கின்ற பூதவாதச் சிந்தனையாளரான பிசாசிகனுடன் வாதிட்டு, வென்று அவனுக்கும் சமண நல்லறம் ஓதி அவனைத் திருத்துகிறாள். இங்ஙனம் நீலகேசியின் காப்பியக் கட்டமைப்பு முழுக்க முழுக்கச் சமய வாதமாக அமைகின்றது. தமிழில் தோன்றிய முதல் ‘தருக்க இலக்கியம்’ இது எனலாம்.

6.3.5 காப்பிய நோக்கம் நீலகேசிக் காப்பியம் முழுக்க முழுக்கப் பல சமயத் தத்துவங்களின் உண்மைத் தன்மையை விவாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஏன்? எதற்காக இப்படி ஒரு நூலை ஆசிரியர் எழுதியுள்ளார்? தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய மு. அருணாசலம் உட்பட இக்காப்பியம் சுவையற்றது; கற்பனையானது என்று, எதிரான, முரணான கருத்தையே சொல்கின்றனர். ஆனால் உண்மை அது அல்ல. இதன் தத்துவம் பலருக்கும் விளங்காத ஒன்று என்பதாலே இக்காப்பியம் போற்றப்படவில்லை. ஆனால் இந்தியத் தத்துவம் படித்தோர் இதனைப் போற்றுவர். ஆசிரியர் தம் காலத்தில் நிலவியிருந்த அனைத்துச் சமயச் சிந்தனைகளையும் எடுத்துரைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்.

தெய்வங்களுக்கு உயிர்ப்பலி இடுதல் தீமையே என்பதை எடுத்துரைக்கிறது. இறைவன் அருளிய அறநெறியில் ஐயுறல் கூடாது; பேராசை தவிர்க்க வேண்டும்; மெய்த்துறவோரை மதித்தல் வேண்டும்; நட்பு, புகழ் இவற்றால் மயங்குதல் கூடாது; பிறர் குற்றங்களை அகற்ற வேண்டும்; முறை தவறி நடப்பாரைத் திருத்த வேண்டும்; யாவரிடமும் மெய்யான அன்பு செலுத்த வேண்டும்; மாந்தர்தம் அறியாமை போக்க வேண்டும் என்று பல உலக நீதிகளை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

6.4 உதயண குமார காவியம்

சீவக சிந்தாமணி, கந்தபுராணம் முதலான பேரிலக்கியங்களுக்குச் சுருக்கம் பாடுகிற மரபு காணப்படுகிறது. இவ்வகையில் கொங்குவேளிரின் பெருங்கதைக் காப்பியத்திற்குச் சுருக்க நூலாகப் பாடப்பட்டதே உதயணகுமார காவியம். இது சமண சமயப் பெண்பால் துறவியரில் ஒருவரான கந்தியர் என்பவரால் பாடப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதுவர். 369 பாடல்களைக் கொண்டது. பெருங்கதை அமைப்பையே கொண்டு இந்நூலும் உஞ்சை காண்டம், மகத காண்டம், இலாவண காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என ஐந்து காண்டங்களுடன் அமைகிறது. கூடுதலாகத் துறவுக் காண்டம் ஒன்றும் இதில் இடம் பெறுகின்றது. பெருங்கதையின் முதல் பகுதியும் இறுதிப் பகுதியும் நமக்குக் கிடைக்கவில்லை. பெருங்கதையில் கிடைக்கப் பெறாத கதைக் குறிப்புகளை ஓரளவு அறிந்து கொள்வதற்கு இந்நூல் துணை செய்கிறது. ஏனைய சிறுகாப்பியங்களுக்கு இருந்த நோக்கம், நெறி இந்நூலுக்கு இல்லை. பெருங்கதைக்குச் சுருக்க நூலாக அமைவதன்றி வேறு சிறப்புகள் இந்நூலுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. காப்பிய வருணனைக் கூறுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. கதையை மட்டும் தெளிவாகக் கூறிச் செல்கிறது.

6.4.1 இலக்கியச் சுவை உதயண குமார காவியம் இலக்கியச் சுவை இன்றிக் காணப்படுவதாக அறிஞர் கருதுவர். கதைச் சுருக்கத்தைச் சொல்வதால், வருணனைத் திறன் இன்றிக் காணப்படுகிறது எனலாம். காப்பியக் கதை அமைப்பிற்கு ஏற்பத்தான் கவிதை அமையும் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. வஞ்சிக் காண்டம் சிலப்பதிகாரத்தில் சுவை குறைந்து காணப்படுவதாகக் கருதுவதற்கும் அக்காண்டப் பாடுபொருளே காரணமாகும். அந்த வகையில்தான் இக்காவியமும் அமைகிறது. என்றாலும் முழுக்க முழுக்க இதன் கவிதைச் சிறப்பைத் தள்ளிவிட முடியாது. இதன் ‘விருத்தப்பா’ அமைப்பு சில இடங்களில் இலக்கிய நயமுடன் அமைவது குறிப்பிடத்தக்கது.

மதயானையின் கம்பீரமான நடையை இதன் கவிதை நடையில் காண முடிகிறது.

வடிப டும்முழக் கிடியென விடும்

கொடியு டைமதில் கிடுகி டென்றிடும்

விடுபற் கோட்டினில் வெட்டி விட்டிடப்

படப டென்னவே பயண மானதே

இங்குச் சொற்களை உடைத்துப் போட்டு, யானையின் கம்பீர நடையைக் கவிதையின் ஓசையில் கண் புலனாகக் கொண்டு வந்து விடுகிறார் ஆசிரியர்.

(பொருள்: நிலம் வெடிக்குமாறு நடக்கும் மதயானையின் பிளிறல் இடிஇடிப்பது போல இருக்கும்; கொடிகளை உடைய மதில் கிடுகிடு என அசையும்; யானைப் பாகர் அதன் கொம்பினை வெட்டி அடக்க முயன்றும், அது அடங்காமல் படபட என விரைந்து ஓடலாயிற்று)

இதே போன்று வாசவ தத்தையைப் பிரிந்த உதயணன் புலம்பலாக வரும் பாடல், மென்மையான ஓசையுடைய சொற்களால் அவலச் சுவையை வெளிப்படுத்துவதைக் காணலாம்.

வீணைநற் கிழத்திநீ வித்தக உருவுநீ

நாணிற் பாவை தானும்நீ நலந்திகழ் மணியும்நீ

காண என்றன் முன்பதாய்க் காரிகையே வந்துநீ

தோணிமுகம் காட்டெனச் சொல்லியே புலம்புவான்

6.5 நாக குமார காவியம்

ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றாகக் கருதப்படும் நாக குமார காவியமும் சமண சமயத்தைச் சார்ந்ததே. ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி மூன்றும் சமண சமயச் சார்புடையன; மணிமேகலை, குண்டலகேசி இரண்டும் பௌத்த சமயச் சார்புடையன. ஆனால் ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்துமே சமண சமயச் சார்புடையன. இந்த நாக குமார காவியம் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பர். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சென்னைப் பல்கலைக் கழகம் ‘அச்சில் வாரா அருந்தமிழ் நூல்’ வரிசையில் 1973இல் இந்நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலை மு. சண்முகம் பிள்ளை பதிப்பித்துள்ளார்.

6.5.1 காப்பியக் கட்டமைப்பு நாக குமார காவியம் ஐந்து சருக்கங்களையும் 170 விருத்தப்பாக்களையும் கொண்டு அமைகின்றது. இதன் கதை வடமொழியில் மல்லிசேனர் எழுதிய நாக பஞ்சமி கதையினை ஒட்டியதாகக் கருதப்படுகிறது. மகத நாட்டு அரசன் நாக குமாரனின் பிறப்பு, அவன் பல பெண்களைத் திருமணம் செய்தது, பல வீர தீரச் செயல்களைச் செய்தது, அவனது முற்பிறப்பு வரலாறு, அவன் செய்த பஞ்சமி நோன்பு, அதனால் அவன் அடைந்த பயன், பின் தன் மகனான இளவரசனுக்கு முடி சூட்டித் துறவு மேற்கொண்டது ஆகிய கதை நிகழ்ச்சிகளைச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. அருகனை வாழ்த்துவதும், அருக சமயக் கோட்பாடுகளை ஆங்காங்கே எடுத்துரைப்பதும் நூலின் நோக்கமாக அமைகின்றன. நூலில் இடம் பெறும் அருக வாழ்த்து, சீவக சிந்தாமணி அருக வாழ்த்தை நினைவுகூரச் செய்கிறது. இப்பாடல்கள் பக்திச் சுவையுடன் பாடப்படுகின்றன.

அறவன்நீ கமலன்நீ ஆதி நீயே

ஆரியன்நீ சீரியன்நீ அனந்தன் நீயே

திரிலோக லோகமொடு தேயன் நீயே

தேவாதி தேவன்எனும் தீர்த்தன் நீயே

எரிமணிநற் பிறப்புடைய ஈசன் நீயே

இருநான்கு குணமுடைய இறைவன் நீயே

திரிபுவனம் தொழுது இறைஞ்சும் செல்வன் நீயே

சீர்வர்த்த மானன்எனும் தீர்த்தன் நீயே          (1:8)

என்ற பாடலில் வரும் அருக வழிபாடு கவிஞரின் சமய உணர்வுக்குச் சான்றாகிறது.

6.6 தொகுப்புரை

‘ஐஞ்சிறு காப்பியங்கள்’ என்ற பாகுபாடு எழுந்ததற்கான காரணம் புலப்படவில்லை. இது வடமொழி மரபைப் பின்பற்றினாலும் சூளாமணியை இப்பகுதியில் அடக்கியது பொருந்தாத ஒன்றே. இங்குப் பேசப்படும் ஐந்தும் சமண சமயம் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவை ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு நோக்கங்கள் உண்டு என்பதைப் பார்த்தோம். சூளாமணி பெருங்காப்பிய அமைப்புடன் மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை முழுமையாக விவரிக்கிறது. அருக சமயப் பிரச்சார நோக்கில் காப்பியம் எழுதப்பட்டாலும், இக்காப்பியம் கட்டமைப்பில் சீவகசிந்தாமணியை ஒத்தே அமைகின்றது என்பதைத் தெரிந்துகொண்டீர்கள்.

யசோதர காவியம் நான்கு வகையான பிறப்புகளில் விலங்குப் பிறப்பின் துன்பங்களை மிக விரிவாகப் பேசுகிறது. மனிதப் பிறவியில் நாம் செய்கிற பாவங்களில் ஊன் உண்ணுதல், உயிர்க் கொலை, பரத்தமை ஒழுக்கம் இவற்றால் ஏற்படும் விலங்குகதித் துன்பத்தை விரிவாக எடுத்துரைக்கிறது என்பதை அறிந்தீர்கள். மேற்கண்ட பாவங்களிலிருந்து மனிதனை விலக்குவதே இக்காப்பியத்தின் நோக்கமாக அமைகின்றது என்பதையும் புரிந்து கொண்டீர்கள்.

நீலகேசிக் காப்பியம், பிற காப்பியங்கள் போன்று பொய், களவு, கொலை, காமம் இவற்றை நீக்குவதைக் கருத்தாகக் கொண்டிருந்தாலும், இது தத்துவ வாதத்திற்கே முதன்மை தருகிறது. தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல் இதுவே எனப் பார்த்தோம். இதனை ஒரு சிறந்த ‘தத்துவ ஞானநூல்’ என்றால் அது மிகையாகாது. தமிழுக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய கொடையாகிய இந்நூல் இன்று வரை தமிழ் அறிஞர்களிடம், தமிழ் மாணவர்களிடம் முழுமையாக அறிமுகப்படுத்தப்படவில்லை. பொதுவாக சைன சமய இலக்கிய வாதிகள் பல்துறை அறிவுடையவர்களாக அமைவர் என்பதற்கு ‘நீலகேசி’ சிறந்த சான்றாக அமையும். உதயண குமார காவியமும், நாககுமார காவியமும் அவ்வளவு சிறப்புடையன அல்ல. இவை பெயரளவில் மட்டுமே தமிழர் இலக்கியத்தில் அறிமுகமாகியுள்ளன.