சாதவாகனரின் வீழ்ச்சிக்குப் பின்னர்த் தமிழக அரசியலில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன. தொண்டை மண்டலத்தின் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் பல்லவர்கள் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்டு வரலாயினர். இதே நேரத்தில் தமிழகத்திற்கு வடக்கிலும், வடமேற்கிலும் உள்ள பகுதிகளில் வாழ்ந்திருந்த களப்பிரர் என்னும் வேற்றுமொழி இனத்தவர் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தனர். தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள் ஆட்சி செய்து வந்தபடியால் களப்பிரர் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்ற முடியவில்லை. எனவே அவர்கள் தமிழகத்தின் தெற்கு நோக்கிப் படையெடுத்துச் சென்றனர். அப்போது தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்டு வந்த மூவேந்தர்கள் வலிமை குன்றியும், தங்களுக்குள் ஒற்றுமை இன்றியும் இருந்தனர். களப்பிரர் முதலில் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினர். பின்பு சேர, சோழ நாடுகளைக் கைப்பற்றினர். கி.பி. 250 முதல் 575 வரை முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தின் பெரும்பகுதிகளைக் களப்பிரர் ஆட்சி செய்தனர். களப்பிரர் ஆட்சி செய்த இக்காலமே தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் எனப்படுகிறது.
களப்பிரர் காலத்தில் தமிழகத்தை ஆண்டு வந்த களப்பிர மன்னர்கள் யார் யார் என்பது பற்றியும், அவர்களது ஆட்சி முறை பற்றியும், அவர்கள் காலச் சமுதாய நிலை பற்றியும் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே களப்பிரர் காலம் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் (Dark Age) என்றும் கூறப்படுகிறது.
இப்பாடத்தில் களப்பிரர் வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. களப்பிரர் யார் என்பது பற்றியும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியும் கூறப்படும் பல்வேறு கருத்துகள் விளக்கிக் காட்டப்படுகின்றன. தமிழகத்தை ஆண்ட களப்பிர மன்னர்கள் பற்றித் தெரியவரும் செய்திகள் காட்டப்படுகின்றன. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் சமுதாய நிலை, சமய நிலை ஆகியவை எவ்வாறு இருந்தன என்பது விளக்கிக் கூறப்படுகிறது. களப்பிரர் காலம் இருண்ட காலம் எனப்பட்டாலும் நல்லதொரு இலக்கிய வளர்ச்சியைப் பெற்றிருந்தது என்பது விளக்கிக் காட்டப்படுகின்றது.
ஆனால் களப்பிரரைப் பற்றிய குறிப்புகள் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கிய, இலக்கண நூல்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றிய கல்லாடம், பெரிய புராணம் என்னும் இலக்கிய நூல்களிலும், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூல்களிலும் களப்பிரர் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. பல்லவர் மற்றும் முற்காலப் பாண்டியர் காலத்தில் வெளியிடப்பட்ட வேள்விக்குடிச் செப்பேடு, சின்னமனூர்ச் செப்பேடு, வேலூர்ப்பாளையம் செப்பேடு, காசக்குடிச் செப்பேடு, தளவாய்புரம் செப்பேடு, வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு ஆகியவற்றிலும் களப்பிரர் பற்றிய சில செய்திகள் இடம்பெறுகின்றன. மேலும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் தமிழ் நாவலர் சரிதை என்னும் நூலிலும் களப்பிரர் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது.
கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
(அகநானூறு, 61:11-13)
இவ்வடிகளில் மாமூலனார் புல்லியைக் கள்வர் கோமான் (கள்வர்களுக்குத் தலைவன்) என்றும், மழவர்களது நாட்டைப் பணியச் செய்தவன் என்றும், திருவிழாக்களை உடைய மிகச் சிறப்புவாய்ந்த வேங்கட மலையை ஆண்டவன் என்றும் குறிப்பிடுகிறார். இதனால் புல்லி என்பவன் கள்வர் இனத்தவன் என்பது பெறப்படும். இக்கள்வர் இனத்தவர் அண்டை நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று, ஆங்குள்ள ஆநிரைகளைக் கவர்ந்து வரும் களவுத் தொழிலை மேற்கொண்டு வந்தவர்கள் ஆவர்.
புல்லி ஆண்டு வந்த வேங்கட மலைப்பகுதியில் வேற்றுமொழி வழங்கியதாக மாமூலனார் மற்றோர் அகநானூற்றுப் பாடலில் குறிப்பிடுகிறார்.
புடையல்அம் கழல்கால் புல்லி குன்றத்து….
மொழிபெயர் தேஎம்
(அகநானூறு, 295:11.15)
(புடையல் – ஒலிக்கின்ற; அம் – அழகிய; கழல் – வீரக்கழல்; குன்றம் – வேங்கடமலை; மொழிபெயர் தேஎம் – வேற்றுமொழி வழங்கும் நாடு; தேஎம் – தேயம், தேசம், நாடு.)
வேங்கட மலைப்பகுதியை ஆண்டு வந்த புல்லியின் கள்வர் இனத்தவர் தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்து தமிழ்நாடடின் பல பகுதிகளைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றி ஆண்டனர். அக்கள்வர் இனத்தவரே களப்பிரர் ஆவர் என்று கருதுகின்றனர். கள்வர் என்ற சொல் தமிழில் களவர் (களவு செய்பவர்கள்) என்றும் வழங்கும். களவர் என்பது வடமொழியில் களப்ரா என வழங்கும். அதுவே தமிழில் களப்பிரர் என்று வழங்கியது என்று கூறுகின்றனர்.
கி.பி.250 அளவில் வேங்கடத்திலிருந்து வந்த களப்பிரர் சிறிது சிறிதாகச் சேர, சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்னும் மூன்று தரைப் பகுதிகளையும் கைப்பற்றி ஆண்ட காரணத்தால் களப்பிரர் தங்களை முத்தரையர் என அழைத்துக் கொண்டனர். களப்பிரர் முத்தரையரின் மூதாதையர் என்பதை வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.
முத்தரையர்களில் குறிப்பிடத்தக்கவன் பெரும்பிடுகு முத்தரையன் (கி.பி. 655 – 680) என்பவன் ஆவான். இவனுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று ஸ்ரீ கள்வர கள்வன் என்பதாகும். இதனைச் செந்தலை மற்றும் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. எனவே கள்வர கள்வர் எனப்படும் முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே எனலாம்.
மேலே கூறியவற்றால் களப்பிரர் வேங்கடமலைப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதும், அவர்கள் களவர் இனத்தவர் என்பதும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் சேர, சோழ, பாண்டிய நாடுகள் மூன்றையும் கைப்பற்றி ஆண்டனர் என்பதும், அதனால் தங்களை முத்தரையர் என அழைத்துக் கொண்டனர் என்பதும் புலனாகும்.
கொங்கணர், கலிங்கர், கொடுங்கரு நாடர்,
பங்களர், கங்கர், பல்வேல் கட்டியர்
(சிலப்பதிகாரம், காட்சிக் காதை:156-157)
பெரிய புராணம்
பெரிய புராணத்தில் சேக்கிழார் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறார். அவர்களுள் ஒருவர் மூர்த்தி நாயனார். இவர் மதுரையில் இருந்து சிவபெருமானுக்குத் திருப்பணி செய்து வந்தார். அவ்வாறு செய்து வரும் நாளில், கருநாடர் மன்னன் ஒருவன் நால்வகைப் படையுடன் வந்து, அப்போது மதுரையை ஆண்டு வந்த பாண்டிய மன்னனை வென்று மதுரை மாநகரைக் கைப்பற்றிப் பாண்டிய நாட்டை ஆட்சி புரியலானான் என்று சேக்கிழார் மூர்த்தி நாயனார் புராணத்தில் கூறுகிறார்.
கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவல்
மானப் படைமன்னன் வலிந்து நிலம் கொள் வானாய்
யானை, குதிரை, கருவிப்படை வீரர், திண்தேர்
சேனைக் கடலும் கொண்டு தென் திசை வந்தான்
வந்துற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச்
சந்தப் பொதியில் தமிழ் நாடுடை மன்னன் வீரம்
சிந்தச் செருவென்று தன்ஆணை செலுத்தும் ஆற்றால்
கந்தப் பொழில்சூழ் மதுரா புரி காவல் கொண்டான்.
(பெரிய புராணம், மூர்த்தி நாயனார் புராணம், 11-12)
(வடுகக் கருநாடர் – வடுகு என்னும் ஒரு மொழியைப் பேசும் கருநாடர்; சிந்த – அழிய; செரு – போர்; மதுராபுரி – மதுரை மாநகர்.)
கல்லாடம்
கி.பி. பதினோராம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் நூல் கல்லாடம். இது ஓர் அகப்பொருள் நூல். இந்நூலை இயற்றியவர் கல்லாடர் என்பவர் ஆவார். இவர் இந்நூலில் கருநாட வேந்தன் ஒருவன் நால்வகைப் படையுடன் வந்து மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான் என்றும், அவன் சமணர்களோடு சேர்ந்து கொண்டு, சிவபெருமானுக்குச் சைவர் செய்யும் திருப்பணிகளைச் செய்ய விடாமல் தடுத்தான் என்றும் குறிப்பிடுகிறார்.
படைநான்கு உடன்று பஞ்சவன் துரந்து
மதுரை வவ்விய கருநாட வேந்தன்
அருகர்ச் சார்ந்து அரன்பணி அடைப்ப
(கல்லாடம்,56)
(உடன்று-போர் செய்து; பஞ்சவன்-பாண்டியன்; துரந்து-விரட்டியடித்து; வவ்விய-கைப்பற்றிய; அருகர்-சமணர்; அரன்-சிவபெருமான்; அடைப்ப-தடுக்க)
வேள்விக்குடிச் செப்பேடு
வேள்விக்குடிச் செப்பேடு முற்காலப் பாண்டியருள் ஒருவனாகிய நெடுஞ்சடையன் பராந்தகன் என்பவனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. 765-790இல்) வெளியிடப்பட்டதாகும். பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசனுக்குப் பின்வந்த அளவற்ற பாண்டிய அரசர்களைக் களப்ரன் எனும் கலியரசன் போரில் வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது.
அளவரிய அதிராசரை நீக்கி அகலிடத்தைக்
களப்ரன் எனும் கலியரசன் கைக்கொண்டான்
(அளவரிய-எண்ணற்ற; அதிராசர்-பாண்டிய அரசர்கள்; அகலிடம்-அகன்ற பாண்டிய நாடு; களப்ரன் – களப்பிரன்; கலியரசன்-கலி அரசன்)
எனவே பெரியபுராணமும், கல்லாடமும் குறிப்பிடும் கருநாட அரசனும், வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடும் களப்ரன் எனும் கலி அரசனும் ஒருவனே எனலாம். கலி அரசன் என்பதற்குக் கொடிய அரசன் என்று பொருள். பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய களப்பிர அரசன் தமிழன் அல்லன் ஆதலானும், சமண சமயத்தைச் சேர்ந்தவன் ஆதலானும் அவனை வேள்விக்குடிச் செப்பேடு கலிஅரசன் எனக் குறிப்பிடுகிறது.
கர்நாடகத்தில் உள்ள கல்வெட்டுகளில் கலிகுலம், கலிதேவன் என்னும் குறிப்புகள் காணப்படுகின்றன. கன்னட நாட்டுக் கலிதேவன் என்பவனைப் பற்றிக் கொப்பரம் செப்பேடுகள் கூறுகின்றன.
களபோரா என்னும் பெயருள்ள குலம் ஒன்று இருந்ததாக மைசூர் இராச்சியத்தின் (கர்நாடக மாநிலத்தின்) பேலூர்க் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. களபோரா குலத்தினர் சாதவாகனரின் வீழ்ச்சிக்குப் பின்னர் எழுச்சியுற்றனர். அவர்களால் தெற்கில் தொண்டை மண்டலத்தில் ஆண்டு கொண்டிருந்த பல்லவர்களை வெற்றி கொள்ள முடியவில்லை எனவே அவர்கள் அக்காலத்தில் வலிமை குன்றியிருந்த சோழர்களையும், பாண்டியர்களையும் வென்று அவர்களுடைய நாடுகளைக் கைப்பற்றி ஆண்டனர். இந்தக் களபோரா இனத்தவரே களப்பிரர் என்று ஒரு சிலர் கருதுகின்றனர்.
மேற்கூறியவற்றால் சங்க காலத்தின் இறுதியில் கி.பி. 250அளவில், படையெடுத்து வந்து பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய களப்பிரர் கர்நாடகத்துடன் (கன்னட நாட்டுடன்) தொடர்பு கொண்டவர்கள் என்பது புலனாகும். இருப்பினும் இவர்கள் பண்டைக் கர்நாடகத்தில் எப்பகுதியிலிருந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தார்கள் என்பதை அறிய முடியவில்லை.
களப்ரன்
சங்க காலத்தின் இறுதியில் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்து, அப்போது பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களை வென்று கைப்பற்றியவன் களப்ரன் என்பவன ஆவான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது. தமிழ் நாட்டில் களப்பிரர் ஆட்சியை முதலில் நிலைநாட்டியவன் இவனே எனலாம். கருநாடகத்திலிருந்து படையெடுத்து வந்து மதுரையைக் கைப்பற்றியவன் எனப் பெரியபுராணமும், கல்லாடமும் குறிப்பிடுகின்ற அரசனும், வேள்விக்குடிச் செப்பேடு கலியரசன் எனக் குறிப்பிடுகின்ற இக்களப்ரனும் ஒருவனே என்பர்.
களப்ரன் என்னும் இவன் மதுரையைக் கைப்பற்றியபோது வேள்விக்குடி என்னும் ஊர் பிராமணர்களுக்கு உரிமை உடையதாய் இருந்தது. சங்க காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டு வந்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்பவன், யாகங்கள் செய்வதற்குத் தனக்கு உதவிய பிராமணர்களுக்கு வேள்விக்குடி என்னும் ஊரைப் பிரம்மதேயமாக வழங்கியிருந்தான். அவன் காலம் முதல் பிராமணர்கள் இந்த ஊரின் உரிமையை வரி எதுவும் செலுத்தாமல் அனுபவித்து வந்தனர். களப்பரன் மதுரையைக் கைப்பற்றியதும், பிராமணர்களிடமிருந்து பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி அவர்களுக்கு வழங்கியிருந்த வேள்விக்குடி என்னும் ஊரையும் கைப்பற்றிக் கொண்டான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது. இவன் சமண சமயத்தைச் சார்ந்தவன் என்றும், சைவ அடியார்கள் சிவபெருமானுக்குச் செய்யும் திருப்பணிகளைச் செய்யவிடாமல் தடுத்தான் என்றும் கல்லாடம் குறிப்பிடுகிறது.
அச்சுதக் களப்பாளன்
தமிழ் நாவலர் சரிதை என்னும் நூல் அச்சுதக் களப்பாளன் என்ற பெயருடைய களப்பிர மன்னன் ஒருவனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவன் முடியுடை வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் மூவரையும் சிறைப்படுத்தினான் என்று இந்நூல் கூறுகிறது. இவனைப் பற்றிய பாடல்கள் சில யாப்பருங்கலக் காரிகை உரையிலும், யாப்பருங்கல விருத்தி உரையிலும் இடம்பெறுகின்றன. அச்சுதன் என்பது சமணசமயக் கடவுளுக்கு உரிய பெயராகும். எனவே அச்சுதக் களப்பாளன் சமணசமயம் சார்ந்தவன் எனலாம்.
அச்சுத விக்கிரந்தன்
புத்ததத்தர் என்பவர் கி.பி. நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்து வந்த பௌத்த மதப் பெரியார் ஆவார். இவர் பாலிமொழியில் அபிதம்மாவதாரம் என்னும் நூலை எழுதியுள்ளார். இந்நூலில் இவர் தம்முடைய காலத்தில் அச்சுத விக்கிரந்தன் என்னும் களப்பிர அரசன் காவிரிப்பட்டினத்திலிருந்து (புகாரிலிருந்து) சோழ நாட்டை ஆண்டு வந்தான் எனக் குறிப்பிடுகிறார்.
கூற்றுவ நாயனார் நம்பியாண்டார் நம்பி என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைச் சுருக்கமாகத் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலில் பாடியுள்ளார். அவர்களுள் ஒருவர் கூற்றுவ நாயனார் என்பவர் ஆவார். இவர் களப்பிர அரசன் என்பதை நம்பியாண்டார் நம்பி,
ஓதம் தழுவிய ஞாலம் எல்லாம் ஒருகோலின் வைத்தான்
கோதை நெடுவேல் களப்பாளன் ஆகிய கூற்றுவனே
(திருத்தொண்டர் திருவந்தாதி, 47:3-4)
என்ற அடிகளில் குறித்துள்ளார்.
(ஓதம் – கடல்; தழுவிய – சூழ்ந்த; ஞாலம் – உலகம்; கோல் – செங்கோல்)
சேக்கிழார் பெரியபுராணத்தில் கூற்றுவ நாயனாரின் வரலாற்றை விரிவாகப் பாடியுள்ளார். கூற்றுவ நாயனார் பகையரசர் பலரை வென்று முடிசூடிக் கொள்ள விரும்பித் தில்லை வாழ் அந்தணரை வேண்டினார். இவர் சோழர் குலத்தைச் சார்ந்தவர் அல்லர் என்பதால் தில்லைவாழ் அந்தணர் இவருக்கு முடிசூட்ட மறுத்து விட்டனர். பின்பு இவர் சிவபெருமானைத் தனக்கு முடிசூட்டுமாறு வேண்டினார். சிவபெருமானும் தமது திருவடியை இவருக்கு முடியாகச் சூட்டி அருளினார். இவ்வாறு சேக்கிழார் கூற்றுவ நாயனார் வரலாற்றைக் கூறுகிறார்.
கி.பி. 575இல் கடுங்கோன் என்ற பாண்டியன், பேராற்றல் படைத்த பெருவீரர்களுடன் வந்து, அப்போது பாண்டிய நாட்டை ஆண்டு வந்த களப்பிர அரசனைப் போரில் வென்று, தன் நாட்டைக் கைப்பற்றி, மதுரையில் வீற்றிருந்து அரசாளத் தொடங்கினான். இதனை வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடுகிறது. ஏறத்தாழ இதே காலத்தில் சிம்மவிஷ்ணு என்ற பல்லவ மன்னன் (கி.பி 575-615) களப்பிரர்களை வென்று, அவர்களின் ஆட்சியின்கீழ் இருந்த சோழ நாட்டினைக் கைப்பற்றிப் பல்லவர் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தான் என்று வேலூர்ப் பாளையம் செப்பேடுகள் கூறுகின்றன.
பாண்டியராலும், பல்லவராலும் வீழ்ச்சியடைந்த களப்பிரர் கி.பி ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் சிற்றரசர்களாக முத்தரையர் என்ற பெயரில் தஞ்சாவூர், செந்தலை, கொடும்பாளுர் என்ற ஊர்களில் இருந்து ஆட்சி புரியலானார்கள். இம்முத்தரையர் சிலபோது பல்லவர்களுக்கும், சிலபோது பாண்டியர்களுக்கும் போர்த்துணைவர்களாக இருந்து வந்தனர்.
அதே சமயத்தில் களப்பிரர்கள் பொருளாதாரத்தில் சமத்துவம் ஏற்படுவதற்கு முற்படலாயினர். அவர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி மதுரையை ஆளத் தொடங்கிய காலத்தில் பிராமணர்கள் பிரம்மதேயமாகச் (வரியில்லா ஊராக) சில ஊர்களைப் பெற்றிருந்தனர். வேள்விக்குடி என்னும் ஊர் அவற்றுள் ஒன்றாகும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அவர்களிடமிருந்து அவ்வூர்களைக் களப்பரன் என்னும் அரசன் பறிமுதல் செய்தான்.
இந்தக் காலக்கட்டத்தில் சமணமும், பௌத்தமும் பிறப்பால் மக்களிடையில் ஏற்றத்தாழ்வு இல்லை எனப் போதித்துக் கொண்டிருந்தன.
சமணமும் இக்காலத்தில் படிப்படியாக வளர்ந்து வந்தது. மதுரையில் நிறுவப்பட்ட திராவிட சங்கம் சமணக் கொள்கையைப் பரப்பி வந்தது. சமண ஆசிரியர்களான சமாந்தபத்திரன், சர்வநந்தி ஆகியோர் இக்காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆவர். சமணப் பள்ளிகள் பல எழுப்பப்பட்டன. அருகனைச் சமணர்கள் கடவுளாக வணங்கினர். வைதிக சமயக் கருத்துகள் சிலவற்றை இவர்கள் ஏற்றுக் கொண்டனர். வாசுதேவன், பலதேவன் ஆகியோரைக் கடவுளாகக் கருதினர்.
இருண்ட காலத்தில் வைதீகம், சைவம், பிரமவாதம், ஆசீவகம், நிகண்டம், சாங்கியம், வைசேடிகம் முதலிய வேறு சமயங்களும் நிலவி வந்தன. இவற்றுள் சைவ சமயக் கொள்கைகள் நாடு எங்கிலும் பரவியிருந்தன. ஆலயங்கள் பல எழுப்பப்பட்டிருந்தன. சிவ வழிபாடும் நடைபெற்றது.
சமயங்கள் பல நடைமுறையில் இருந்தாலும் சமயச் சண்டைகள் நிகழவில்லை. களப்பிரர் காலத்தில் வாழ்ந்த திருமூலர், காரைக்கால அம்மையார் ஆகிய சைவ நாயன்மார் பாடிய நூல்களிலும், முதல் ஆழ்வார்கள் பாடிய திருவந்தாதி நூல்களிலும் சமண சமயத்தையோ, பௌத்த சமயத்தையோ பழித்துப் பேசும் எந்த ஒரு பாடலும் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சமயக் கருத்து வேறுபாடுகளைப் பட்டி மண்டபங்களில் சொற்போர் நடத்தித் தீர்த்துக் கொண்டனர். இதனை மணிமேகலை அறிவிக்கிறது.
பூச்சியபாதர் என்ற சமண முனிவரின் மாணவராகிய வச்சிரநந்தி என்பவர் மதுரையில் திராவிட சங்கம் என்ற ஒரு சங்கத்தைக் கி.பி. 470இல் நிறுவினார். இதனை நான்காம் தமிழ்ச் சங்கம் என்று கூறுவர். இச்சங்கத்தின் நோக்கம் சமண சமய அறங்களைப் பரப்புவதும், சமண சமயக் கொள்கைகளை விளக்கக் கூடிய நூல்களைத் தோற்றுவிப்பதுமாக இருந்தது.
தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் இருண்ட காலம் எனப்பட்டாலும் நல்லதொரு இலக்கிய வளர்ச்சியைப் பெற்றிருந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றில் தனி நீதி நூல்களும், பக்தி இலக்கியமும் முதலில் தோன்றியது களப்பிரர் காலத்திலேயே ஆகும். சங்க காலத்தில் ஆசிரியப்பாவும், கலிப்பாவும் செல்வாக்குப் பெற்றிருக்க, களப்பிரர் காலத்தில் வெண்பா செல்வாக்குப் பெற்றது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி நானூறு, திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக் காஞ்சி, ஆசாரக்கோவை, ஆகிய ஒன்பது நீதி நூல்களும், கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறு அகப்பொருள் நூல்களும், களவழி நாற்பது என்ற ஒரு புறப்பொருள் நூலும் களப்பிரர் காலத்தில் தோன்றியவை ஆகும். (பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள திருக்குறள் சங்க காலத்தில் தோன்றியது; நாலடியார் களப்பிரர் காலத்திற்குப் பின்பு தோன்றியது.)
அறுபத்து மூன்று சைவ சமய நாயன்மார்களில் காலத்தால் முற்பட்டவர்கள் எனக் கருதப்படுபவர்கள் திருமூலர், காரைக்கால் அம்மையார் ஆகிய இருவரும் ஆவர். இவர்கள் இருவரும் களப்பிரர் காலத்தில் வாழ்ந்தவர்கள். திருமூலர் திருமந்திரம் என்ற ஒப்பற்ற நூலை எழுதினார். காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திரு இரட்டை மணிமாலை என்னும் நூல்களை எழுதினார். சைவ சமய நாயன்மார்கள் பாடிய நூல்கள் பிற்காலத்தில் பன்னிரு திருமுறையாகத் தொகுக்கப்பட்டன பன்னிரு திருமுறையில் திருமந்திரம் பத்தாவது திருமுறையாகத் தொகுக்கப்பட்டது. காரைக்கால் அம்மையார் நூல்கள் பதினொன்றாம் திருமுறையில் வைத்துத் தொகுக்கப்பட்டன.
பன்னிரு ஆழ்வார்களில் காலத்தால் முற்பட்டவர்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவர் ஆவர். இவர்கள் முதலாழ்வார்கள் எனச் சிறப்பித்துக் கூறப்படுவர். இவர்களும் களப்பிரர் காலத்தில் வாழ்ந்தவர்களே ஆவர். இவர்கள் ஒவ்வொருவரும் திருமால் மீது நூறு பாடல்கள் கொண்ட திருவந்தாதி என்னும் பெயருடைய நூலைப் பாடினர்.
களப்பிரர் காலத்தில் தோன்றிய மற்றொரு நூல் முத்தொள்ளாயிரம் ஆகும். இந்நூல் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடும் நூல் ஆகும்.
மேலே குறிப்பிட்ட களப்பிரர் கால இலக்கிய நூல்களைப் பற்றி இலக்கிய வரலாறு என்ற தாளில் விரிவாகப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
களப்பிரர் சமண சமயத்தையும், பௌத்த சமயத்தையும் சார்ந்து இருந்தனர் என்பது பற்றி அறிந்து கொண்டீர்கள். களப்பிரர் காலத்தில் பல்வேறு சமயங்கள் நிலவினாலும், எந்த ஒரு சமய பூசலும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டீர்கள்.
தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் இருண்ட காலம் எனப்பட்டாலும், இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரை நல்லதொரு இலக்கிய வளர்ச்சியைப் பெற்றிருந்தது என்பதனை விளங்கிக் கொண்டீர்கள்.
பாடம் - 2
இப்பல்லவர்களைப் பற்றிய சான்றுகளை இலக்கியச் சான்றுகள், நினைவுச் சின்னங்கள், பட்டயங்களும் கல்வெட்டுகளும், அயல்நாட்டுச் சான்றுகள் என்ற நான்கு வகையாகப் பிரித்து விளக்குகிறது.
பல்லவ மன்னர்களை முற்காலப் பல்லவர்கள், இடைக்காலப் பல்லவர்கள், பிற்காலப் பல்லவர்கள் என்று மூவகையாகப் பிரித்து விளக்குகிறது. இப்பல்லவர்களில் யார் யார் சிறந்து விளங்கினார்கள் என்பது பற்றியும் விளக்குகின்றது.
மேலும் இப்பாடம் பல்லவ மன்னர்கள் அண்டை நாட்டாருடன் எப்போதும் போர் புரிந்தனர் என்பது பற்றியும் விளக்குகின்றது.
பல்லவர்களைப் பற்றிய பல்வேறு கருத்துகள் வரலாற்று ஆசிரியர்களிடம் நிலவுகின்றன. இக்கருத்துகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவையாவன:
1. பல்லவர்கள் அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
2. பல்லவர்கள் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்கள்
3. பல்லவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்
இம்மூன்று பிரிவுகளை ஒன்றன்பின் ஒன்றாகக் காண்போம்.
காஞ்சியிலுள்ள வைகுண்டப் பெருமாள் கோயிலில் மணிமுடியை அளிக்கும் சிற்பம் ஒன்று உள்ளது. இம்மணிமுடி பாக்டீரிய (Bactria) மன்னர் டெமிட்டிரியஸின் (Demetrius) மணிமுடியை ஒத்திருக்கின்றது. எனவே, பல்லவர்கள் பாக்டீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று வெங்கட சுப்பைய ஐயர் கருதுகின்றார்.
சோழ மன்னர் பம்பரையினருக்கும், இலங்கைச் சாகவம்சத்திற்கும் தொடர்புடையவர்கள் பல்லவர்கள் என்ற கருத்தும் உண்டு. தொண்டைமான் நெடுமுடிக்கிள்ளி என்ற சோழ இளவலுக்கும் மணிபல்லவத்து நாக கன்னிகை பீலிவளை என்பவளுக்கும் பிறந்தவன் தொண்டைமான் இளந்திரையன். இச்செய்தி மணிமேகலைக் காப்பியம் வாயிலாக அறியப்படுகிறது. (மணிமேகலை, தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, 3-11). இத்தொண்டைமான் இளந்திரையனே பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை என்னும் பாட்டுக்குத் தலைவன் என்று கருதப்படுகிறான். நாககன்னிகை பீலிவளையின் ஊர் மணிபல்லவம். மணிபல்லவம் என்னும் சொல்லின் இறுதியான பல்லவம் என்ற சொல்லே பல்லவர் எனத் திரிந்தது என்பர். மணிபல்லவம் என்பது பழங்காலத்தில் இலங்கைக்கு அருகில் இருந்த ஒரு தீவு என இலங்கையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் இராசநாயகம் என்பவர் கூறுகிறார்.
பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த குறும்பர்களுடன் தொடர்புடையவர்கள் என்று சத்தியநாத ஐயர் என்னும் வரலாற்று ஆசிரியர் கருதுகின்றார். அசோகரது கல்வெட்டுகளில் புலிந்தர் என்னும் இனத்தவர் அவனது பேரரசில் வாழ்ந்து வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. புலிநாடு, புலியூர்க் கோட்டம் என்னும் இரு கோட்டங்கள் தொண்டை மண்டலத்தில் இருந்தன. இப்பகுதியில் புலிந்தர்கள் வாழ்ந்து வந்தனர். புலிந்தரும் குறும்பரும் ஒருவரே. புலிந்தர்களுக்குப் பலடர் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. பலடர் என்னும் சொல் பல்லவர் என்று மருவியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் என்பவர் பல்லவர்கள் சாதவாகன மன்னர்களின் கீழ்ச் சிற்றரசர்களாகவும், அரசு அலுவலர்களாகவும் பணியாற்றிய ஓர் இனத்தவர் என்று கூறுகிறார். கி.பி. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சாதவாகனர்கள் வீழ்ச்சியுற்றனர். அந்நிலையில் காஞ்சியை அரசு இருக்கையாகக் கொண்டு பல்லவர்கள் ஆட்சியைத் தொடங்கினர். பல்லவர் என்ற சொல்லும் தொண்டையர் என்ற சொல்லும் ஒரே பொருளையே உணர்த்துகின்றன. அதோடு சாதவாகனர்களின் ஆட்சி முறையும், முற்காலப் பல்லவர்களின் ஆட்சி முறையும் ஒத்திருந்தது கவனிக்கத்தக்கது.
எது எவ்வாறு இருப்பினும் பல்லவர்கள் தமிழர்கள் என்னும் கொள்கையினை முன்பின் பாராது மறந்து விடலாம். ஏனெனில் பல்லவர்கள் தமிழை ஆட்சி மொழியாகக் கொள்ளவோ அல்லது அதற்கு ஆதரவு அளிக்கவோ இல்லை. பல்லவர்கள் சாதவாகனப் பேரரசர்களுக்கு அடங்கி அப்பேரரசின் தெற்கில் ஆண்டு வந்த அரசர்கள் என்பதே பொருத்தமுடையது எனலாம்.
1. இலக்கியச் சான்றுகள்
2. நினைவுச் சின்னங்கள்
3. பட்டயங்களும் கல்வெட்டுகளும்
4. அயல்நாட்டுச் சான்றுகள்
நந்திக்கலம்பகம், பாரத வெண்பா என்னும் நூல்கள் மூன்றாம் நந்திவர்மனின் வீரத்தையும், கொடையையும், அவன் செய்த போர்களையும் குறிப்பிடுகின்றன.
முதலாம் நரசிம்மவர்மன் சாளுக்கியரைப் போரில் வென்று அவர்களின் தலைநகராகிய வாதாபியை வென்றான். இவனுக்குப் படைத் தளபதியான பரஞ்சோதியார் என்பவர் பின்பு சிறுத்தொண்ட நாயனார் என்று சைவ நாயன்மார்களில் ஒருவராகச் சிறப்பிக்கப்பட்டார் என்ற செய்தியினைப் பெரிய புராணம் எடுத்துரைக்கின்றது.
முதலாம் மகேந்திரவர்மன் முதலில் சமணனாக இருந்து பின்பு சைவனாக மாறியவன் எனப் பெரியபுராணம் கூறுகிறது.
பெரியபுராணம் என்னும் நூல் இயற்றிய சேக்கிழார், பல்லவர்கள் ஆட்சி செய்த தொண்டை மண்டலத்தைச் சார்ந்தவர். ஆதலால் பல்லவர் காலத்துத் தமிழகத்தின் நிலையை அவர் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார். மேலும் முதலாம் நரசிம்மவர்மன் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்த நிகழ்ச்சியையும், சோழநாடு பல்லவர்களுக்கு உட்பட்டிருந்த நிலையையும் பெரிய புராணத்தில் அவர் உணர்த்துகிறார்.
வைணவப் பெரியோர்கள் பாடியருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திலும் பல்லவர் பற்றிய சான்றுகள் கிடைக்கின்றன.
அவந்தி சுந்தரி கதையில் சிம்மவிஷ்ணு காஞ்சியைக் களப்பிரர்களிடமிருந்து கைப்பற்றினான் என்று கூறப்பட்டிருக்கின்றது.
முதலாம் பரமேசுவரவர்மன் சிறந்த சிவத்தொண்டன். காஞ்சிபுரத்திற்கு அண்மையில் கூரம் என்னும் இடத்தில் சிவன் கோயில் ஒன்று எழுப்பினான். மாமல்லபுரத்திலும் சில கோயில்கள் செதுக்கி வைத்தான்.
முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில்தான் மாமல்லபுரம் நகரமே அமைக்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரத்தில் இராசசிம்மன் எனப்படும் இரண்டாம் நரசிம்மவர்மன் எழுப்பிய கைலாசநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது.
முதலாம் மகேந்திரவர்மன் சித்தன்னவாசலில் குகைக்கோயில் அமைத்துள்ளான். இக்குகைக் கோயிலில் உள்ள ஓவியங்கள் புகழ் பெற்றவை.
பல்லவர்களுடைய கல்வெட்டுகள் மகேந்திரவாடி, தளவானூர், பல்லாவரம், திருச்சிராப்பள்ளி, திருக்கழுக்குன்றம், வல்லம், மாமண்டூர், மண்டகப்பட்டு, சித்தன்னவாசல், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வயலூர் என்ற இடத்தில் இராசசிம்மன் தூண் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது.
தளவானூர்க் குகைக் கல்வெட்டுகளில் மகேந்திரவர்மப் பல்லவன், தொண்டை மாலையணிந்தவன் எனக் குறிப்பிடப்படுகின்றான்.
பல்லவர்களின் ஆட்சியானது காஞ்சிபுரத்திலிருந்து வடக்கில் கிருஷ்ணா நதி வரையில் பரவிற்று என்பதற்கான சான்றுகள் மயிதவொளு, ஹீரஹதஹள்ளி என்னும் ஊர்களில் கிடைத்துள்ள சிவஸ்கந்தவர்மனின் பிராகிருத மொழிச் செப்பேடுகளில் காணப்படுகின்றன.
பல்லவ சமஸ்கிருதச் செப்பேடுகளில் 16 பல்லவ மன்னரின் பெயர்கள் காணப்படுகின்றன. அவர்களின் காலம் கி.பி. 330-575 ஆகும் எனத் தெரிகிறது.
மகேந்திரவர்மன் முதலில் சமணனாக இருந்தான். பின்பு திருநாவுக்கரசரிடம் ஈடுபாடு கொண்டு சைவ சமயத்தைத் தழுவினான். இவன் சிவலிங்க வழிபாடு உடையவன் என்று திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டுக் கூறுகின்றது.
சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனிடம் பரமேசுவரவர்மன் தோல்வியுற்றான் எனவும், பல்லவ குடும்பத்தையே சாளுக்கியர்கள் அழித்துவிட்டனர் எனவும் விக்கிரமாதித்தனுடைய கடவால் செப்பேடுகள் (கி.பி. 674) தெரிவிக்கின்றன.
இரண்டாம் நந்திவர்மன் தனது பன்னிரண்டு வயதில் அரசு கட்டில் ஏறினான் என்று வைகுண்டப் பெருமாள் கோயில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது.
பட்டத்தாள் மங்கலம் செப்பேடுகள் இரண்டாம் நந்திவர்மனின் தந்தை இரணியவர்மன் என்றும், இம்மன்னன் இளமையிலே அரசாட்சி ஏற்றுக் கொண்டான் என்றும் கூறுகின்றன.
காசாக்குடிக் கல்வெட்டுகள் இரண்டாம் நந்திவர்மன், சிம்மவிஷ்ணுவின் தம்பியான பீமவர்மனின் வழிவந்தவன் என்றும், மக்களால் அரசாட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்றும் தெரிவிக்கின்றன.
சாளுக்கிய மரபின் அழிவிற்கும் தாழ்விற்கும் பல்லவரே பொறுப்பாளிகள் என்று சோரப் பட்டயம் கூறுகிறது.
இலங்கையைச் சார்ந்த மகாவம்சம் என்ற வரலாற்று நூல், பல்லவர் இலங்கை மீது படையெடுத்துச் சென்ற நிகழ்ச்சியைக் கூறுகின்றது.
இவர்களைப் பற்றி ஒருவர் பின் ஒருவராக நாம் கீழே காண்போம்.
இப்பட்டயங்கள் வரலாற்று உண்மைகளை அவ்வளவாகத் தரவில்லை. ஆகையால், இவைகளைக் கொண்டு அக்காலத்துப் பல்லவ மன்னர்களைப் பற்றியும், அரசியல் பண்பாட்டு நிலைகளைப் பற்றியும் அவ்வளவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் பப்பதேவன், சிம்ம வர்மன், சிவஸ்கந்தவர்மன், விஷ்ணுகோபன் என்போர் முற்காலப் பல்லவர் என்று கூறப்படுகின்றனர். இவர்களுள் சிவஸ்கந்தவர்மன் முக்கியமானவன்.
சிவஸ்கந்தவர்மன்
சிவஸ்கந்தவர்மன் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சிபுரத்திலிருந்து அரசாண்டான். அப்போது அவனுடைய அரசு வடக்கே கிருஷ்ணா நதியிலிருந்து தெற்கே தென்பெண்ணை நதிவரையில் பரவியிருந்தது.
சிவஸ்கந்தவர்மன் வழிவந்தவன் விஷ்ணுகோபன் ஆவான் என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஏனென்றால் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் இடையில் காஞ்சியை விஷ்ணுகோபன் ஆண்டு வந்ததாகச் சமுத்திரகுப்தன் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. (சமுத்திர குப்தன் என்பவன் கி.பி. 335 முதல் 380 வரை வட இந்தியாவில் குப்தப் பேரரசை ஆண்டு வந்த அரசன் ஆவான்.)
சிம்மவிஷ்ணு (கி.பி. 575-615)
இடைக்காலப் பல்லவர்களை மகா பல்லவர்கள் என்றும் கூறுவர். ஏனெனில் இவர்கள் தமிழகத்திற்குப் புகழ் சேர்த்தனர். இடைக்காலப் பல்லவ மன்னருள் முதல்வன் சிம்மவிஷ்ணு ஆவான். முதலில், தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த களப்பிரர்களை அடக்கினான். பின்பு சோழருடன் போராடி வெற்றிவாகை சூடினான்; சேரனையும், இலங்கை வேந்தனையும் புறங்கண்டான்.
முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 615-630)
சிம்ம விஷ்ணுவை அடுத்து அவனது புதல்வனான முதலாம் மகேந்திரவர்மன் பதவி ஏற்றான். இவனுக்கு மகேந்திர விக்ரமன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவன் விசித்திரசித்தன் எனப் புகழப்பட்டான். தென்னிந்திய வரலாற்றில் பல்லவர் காலத்தில் கலையும், கல்வியும் சிறப்புற்று விளங்கின. இவற்றைத் துவக்கி வைத்த பெருமை மகேந்திரவர்மனுக்கு உண்டு. இவன் சாளுக்கியரை வென்றான்; கங்கர்களை அடக்கினான்.
முதலாம் மகேந்திரவர்மன் பொதுப்பணிகளில் ஈடுபட்டு நாட்டு மக்களுக்கு நன்மைகள் பல செய்தான். இவன் முதலில் சமணனாக இருந்தான். பின்னர், சைவ சமயத் தொண்டரான திருநாவுக்கரசர் முயற்சியால் சைவ சமயத்திற்கு மாறினான். கட்டடக் கலை, சிற்பக்கலை, சித்திரக் கலை, இசைக்கலை ஆகியவற்றிற்கு இவன் ஆற்றிய தொண்டுகள் அளவிடற்கு அரியன.
முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630-668)
முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பின்னர் அவனது மகன் முதலாம் நரசிம்மவர்மன் அரியணை ஏறினான். இவனது காலத்தில் அரசியல், பண்பாடு ஆகியவை சிறப்புப் பெற்று விளங்கின. இவன் வாதாபியை ஆண்டு வந்த சாளுக்கியரை வென்றான். இதனால் இவனை வாதாபி கொண்டான் என்றனர். இவ்வெற்றிக்குக் காரணமான தளபதி பரஞ்சோதியே பிற்காலத்தில் சிறுத்தொண்ட நாயனார் எனப் போற்றப் பெற்றார்.
முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் அரிய பெரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவன் சாளுக்கியரை வென்றதோடு பாண்டியருடனும், இலங்கையருடனும், கங்கருடனும் போர் புரிந்து வெற்றி பெற்றான். யுவான்-சுவாங் என்ற சீனப் பயணி இவனது ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்திற்குக் கி.பி. 640இல் பயணம் செய்தார். அவர் தமது குறிப்பில் காஞ்சி மாநகரைப் பற்றிச் சிறப்புறக் கூறியுள்ளார்.
முதலாம் நரசிம்மவர்மன் கட்டடக் கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் வளர்ச்சிக்குச் செய்த தொண்டுகள் அளவிடற்கரியன. பல்லவ நாட்டில் மலையைக் குடைந்து பல குகைக்கோயில்களை அமைத்தான். நாமக்கல் மலையடியில் தென் மேற்கு மூலையில் உள்ள நரசிங்கப் பெருமாள் குகைக்கோயில், மாமல்லபுரத்தில் உள்ள மகிடாசுர மண்டபம், வராக மண்டபம் ஆகிய குகைக் கோயில்கள் இவன் அமைத்தன ஆகும். முதன்முதலாக ஒரே கல்லில் ஆன ஒற்றைக்கல் கோயில்களை அமைத்த பெருமை இவனையே சாரும். மகாபலிபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவர் தேர்கள் எனப்படும் ஒற்றைக்கல் கோயில்கள் ஐந்தும் இவனால் அமைக்கப்பட்டனவே ஆகும்.
முதலாம் நரசிம்மவர்மனுக்கு மாமல்லன் என்ற பட்டப் பெயரும் உண்டு. இப்பட்டப் பெயர் கொண்டு மகாபலிபுரம் மாமல்லபுரம் என்றும் அழைக்கப்பட்டது. மகாபலிபுரம் இவன் ஆட்சிக் காலத்தில் ஒரு சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியது.
முதலாம் நரசிம்மவர்மனுக்குப் பின்பு அவன் மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் பல்லவ அரசனாக முடிசூட்டிக் கொண்டான். இவன் இரண்டு ஆண்டுகளே (கி.பி. 668-670) அரசாண்டான்.
முதலாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 670-695)
இரண்டாம் மகேந்திரவர்மனுக்குப் பின்பு அவனுடைய மகன் முதலாம் பரமேசுவரவர்மன் பட்டத்திற்கு வந்தான். இவன் சாளுக்கிய அரசன் முதலாம் விக்கிரமாதித்தனோடும் அவனுக்குத் துணையாக வந்த மேற்குக் கங்க அரசன் பூவிக்கிரமனோடும் செய்த போரில் தோல்வியுற்றான். இவன் சிறந்த சிவத் தொண்டனாக விளங்கினான். காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கூரம் என்னும் இடத்தில் இவன் கட்டிய சிவன் கோயில் புகழ் வாய்ந்தது.
இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி. 695-722)
முதலாம் பரமேசுவரவர்மனுக்குப் பின்னர் அவனுடைய மகன்இரண்டாம் நரசிம்மவர்மன் பதவி ஏற்றான். இவனுக்கு இராசசிம்மன் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. இவன் காலத்தில் பல்லவப் பேரரசிற்கும், சாளுக்கியப் பேரரசிற்கும் இடையில் நடைபெற்று வந்த போர் ஓய்ந்திருந்தது. இதனால் உள்நாட்டில் அமைதி நிலவியது. இதைச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு கலைத்தொண்டில் ஈடுபட்டான் இராசசிம்மன். இவனுக்குப் பெரும்புகழையும், சைவ சமய வரலாற்றில் அழியாத இடத்தையும் பெற்றுக் கொடுத்தது காஞ்சிபுரத்தில் இவன் எழுப்பிய கைலாசநாதர் கோயில் ஆகும். மகாபலிபுரத்தில் சிறந்து விளங்கும் கடற்கரைக் கோயிலும் இவன் எழுப்பியதே ஆகும்.
இரண்டாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 722-730)
இரண்டாம் நரசிம்மவர்மனுக்குப் பின்பு அவனுடைய மகன் இரண்டாம் பரமேசுவரவர்மன் அரியணை ஏறினான். இவனது ஆட்சிக் காலத்தில் சாளுக்கியருக்கும் பல்லவருக்கும் இடையே பகைமை உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்போது சாளுக்கிய நாட்டை ஆண்டு வந்த இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியின் மீது போர் தொடுத்தான். இப்போரில் இரண்டாம் பரமேசுவரவர்மன் தோல்வியுற்றான். இவனுடன் சிம்மவிஷ்ணுவின் பரம்பரையில் வந்த மகாபல்லவர்களின் ஆட்சி முடிந்தது. அதன் பின்பு சுமார் கி.பி. 731 அளவில் சிம்மவிஷ்ணுவின் தம்பியாகிய பீமவர்மன் பரம்பரையில் வந்த பிற்காலப் பல்லவ மன்னர்களின் ஆட்சி தொடங்கியது.
இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 731-795)
பன்னிரண்டு வயதே நிரம்பிய இரண்டாம் நந்திவர்மன் பல்லவ நாட்டிற்கு மன்னன் ஆனான். இவன் ஆட்சிக்கு வந்ததும் சாளுக்கியருடன் போர் செய்ய வேண்டியதாயிற்று. அரசபதவி கிடைக்காமல் போன சித்திரமாயன் வெகுநாள் பகைவரான சாளுக்கியரின் உதவியை நாடி, காஞ்சியைக் கைப்பற்றி அரச பதவியை இரண்டாம் நந்திவர்மனிடமிருந்து கைப்பற்றினான். இருப்பினும் இரண்டாம் நந்திவர்மன் இராஷ்டிரகூட மன்னரின் உதவியை நாடி மீண்டும் காஞ்சியைச் சித்திரமாயனிடமிருந்து கைப்பற்றினான்.
தனது சொந்த நாட்டை இழந்த சித்திரமாயன் பாண்டிய நாட்டின் உதவியை நாடினான். அப்போது பாண்டிய நாட்டை அரிகேசரி பராங்குச மாறவர்மன் ஆண்டு வந்தான். கொங்கு நாட்டைப் பல்லவரிடமிருந்து கைப்பற்ற வேண்டுமென்ற ஆசை அவனுக்கு இருந்தது. அரிகேசரி பராங்குச மாறவர்மன் பாண்டிய படையுடன் பல்லவ நட்டைத் தாக்கத் தொடங்கினான். தற்போதைய தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டுப் பகுதியில் பல போர்கள் நடைபெற்றன. இரண்டாம் நந்திவர்மன் நந்திபுரம் (கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது) கோட்டையில் தங்கி இருந்தபோது சிறைபிடிக்கப்பட்டான். இதனை அறிந்த அவனுடைய படைத்தலைவன் உதயசந்திரன் பெரும்படையுடன் நந்திபுரம் வந்து இரண்டாம் நந்திவர்மனைச் சிறைமீட்டான். இரண்டாம் நந்திவர்மன் அரச பதவியை மீண்டும் பெற்றான்.
பல போர்களில் ஈடுபட்ட பிற்காலப் பல்லவர்கள் சமய, கலைத் தொண்டுகளிலும் ஈடுபட்டார்கள். இரண்டாம் நந்திவர்மன் சுமார் 65 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இம்மன்னன் அதிக பகைமையை வளர்த்துக் கொண்ட போதிலும் சமயம், கலை இவைகளில் அக்கறை கொண்டிருந்தான். இம்மன்னன் வைணவ சமயத்தைத் தழுவினான். இவனது ஆட்சியில் திருமங்கை ஆழ்வார் என்னும் பெரியார் வாழ்ந்தார்.
இரண்டாம் நந்திவர்மன் காஞ்சியிலுள்ள வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டினான். அதோடு மட்டுமல்லாமல் காஞ்சியில் பரமேஸ்வர விண்ணகரம், முத்தீச்சுவரர் ஆலயம் முதலிய கோயில்களையும் கட்டினான். இவனது காலத்தில் கல்வியின் நிலை ஓங்கி இருந்தது. கல்வி நிலையங்கள் நிறையத் துவங்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டாம் நந்திவர்மன் அவன் காலத்துப் பட்டயங்களைக் கிரந்தத் தமிழில் வெளியிட்டான். இதனால் தமிழ்மொழி இவனது ஆட்சியில் சிறப்புப் பெற்றது.
தந்திவர்மன் (கி.பி. 796-846)
இராஷ்டிரகூடர்களின் ஆதரவுடன் இரண்டாம் நந்திவர்மன் ஆட்சியைப் பெற்றதால் இராஷ்டிரகூட இளவரசி ரேவாவை இரண்டாம் நந்திவர்மன் மணம் புரிந்து கொண்டான். இவர்களுக்குப் பிறந்தவன் தந்திவர்மன் என்பவன் ஆவான்.
தந்திவர்மன் ஆட்சிக் காலத்தில் இராஷ்டிரகூட நாட்டில் வாரிசு உரிமைப் போர் நடைபெற்றது. முதலாம் கிருஷ்ணனின் மகன்கள் இரண்டாம் கோவிந்தன், துருவன் ஆகிய இருவருக்கும் இடையே வாரிசு உரிமைப் போர் தொடங்கிற்று. தந்திவர்மன் இரண்டாம் கோவிந்தனுக்கு ஆதரவு அளித்தான். வாரிசு உரிமைப் போரில் துருவன் வெற்றியடைந்தான். தனது பகைவனுக்கு ஆதரவு அளித்த தந்திவர்மனைத் துருவன் பழிவாங்க எண்ணினான்; காஞ்சியைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் தந்திவர்மன் இராஷ்டிரகூடர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு கப்பம் செலுத்தினான். துருவன் இறந்தபின்னர் இரண்டாம் கோவிந்தன் மகன் மூன்றாம் கோவிந்தன் இராஷ்டிரகூட மன்னன் ஆனான். இராஷ்டிரகூட மன்னராட்சி மாறியவுடன் தந்திவர்மன் கப்பம் கட்ட மறுத்துவிட்டான். எனவே மூன்றாம் கோவிந்தன் பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தான். இப்போரிலும் தந்திவர்மன் தோல்வியுற்றான். இதன் காரணமாகப் பல்லவப் பேரரசு சிற்றரசாக மாறியது.
மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 846-869)
தந்திவர்மனுக்கும் கதம்ப இளவரசிக்கும் பிறந்தவன் மூன்றாம் நந்திவர்மன். இவன் ஆற்றல் மிக்கவனாக விளங்கினான். இழந்த பல்லவப் பேரரசினை மீட்டான். இவனது வெற்றியை நந்திக்கலம்பகம் விளக்குகின்றது.
மூன்றாம் நந்திவர்மன் சிறந்த போர்த்திறம் படைத்தவன். இவனுக்கு நந்திபோத்தரசன், நந்தி விக்கிரமவர்மன், விஜய நந்தி, விக்கிரமவர்மன் என்று பல பெயர்கள் உண்டு. நந்திக் கலம்பகத்தில் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் எனப் பாராட்டப்படுகிறான். தெள்ளாறு என்னும் இடத்தில் நடந்த போரில் பாண்டியரை வெற்றி பெற்றதால் இவ்வாறு பாராட்டப்படுகிறான். நந்திக்கலம்பகம் அவனுக்காகவே எழுந்த இலக்கியம் ஆகும்.
தெள்ளாற்றில் மட்டுமின்றி, வெள்ளாறு, கடம்பூர், வெறியலூர், தொண்டி, பழையாறு ஆகிய இடங்களிலும் பகைவரை வென்றான். மூன்றாம் நந்திவர்மன் நந்திக்கலம்பகத்தில் ‘அவனி நாராயணன்’ என்றும், ‘ஆட்குலாம் கடற்படை அவனி நாரணன்’ என்றும், ‘நுரை வெண்திரை நாற்கடற்கு ஒரு நாயகன்’ என்றும் பாராட்டப் பெறுகின்றான். இவன் காலத்தில் மல்லையிலும், மயிலையிலும் துறைமுகங்கள் அமைந்திருந்தன. இம்மன்னன் கடல் கடந்துசென்று அயல் நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தான்.
மூன்றாம் நந்திவர்மன் இராஷ்டிரகூடர்களைத் தோற்கடித்தான். பாண்டியருடன் போர்செய்து வெற்றி வாகை சூடினான். பாண்டியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல்லவ நாட்டுப் பகுதிகளை மீட்டான். வடக்கிலும், தெற்கிலும் பல்லவப் பேரரசிற்கு ஏற்பட்ட ஆபத்துகள் இவனது ஆட்சிக் காலத்தில் ஒழிந்தன.
நிருபதுங்கவர்மன், அபராசிதவர்மன் (கி.பி. 869-890)
மூன்றாம் நந்திவர்மனுக்குப் பின்பு அவனது முதல் மனைவியின் மூத்த மகன் நிருபதுங்கவர்மன் முடி சூட்டிக் கொண்டான். மூன்றாம் நந்திவர்மனின் இன்னொரு மனைவியின் மகன் அபாரசிதவர்மன் அரச பதவியைக் கைப்பற்ற எண்ணினான். இதனால் பல்லவ அரசாட்சிக்கு வாரிசு உரிமைப் போர் தொடங்கியது.
நிருபதுங்கவர்மன் இரண்டாம் வரகுண பாண்டியனின் உதவியைக் கோரிப் பெற்றுக்கொண்டான். கங்கரும் சோழரும் அபராசிதவர்மனுக்குத் துணைநின்றனர். வாரிசு உரிமைப் போரில் அபராசிதவர்மன் வெற்றி பெற்றுப் பல்லவ நாட்டு அரியணையைக் கைப்பற்றிக் கொண்டான்.
அபராசிதவர்மன் பதினெட்டு ஆண்டுகள் அரசு புரிந்தான். நிருபதுங்கவர்மன் இழந்த நாட்டை மீண்டும் பெற முயன்றான். ஆனால் அதில் அவனுக்கு வெற்றி கிட்டவில்லை. அப்போது தலையெடுத்து வந்த சோழருடைய ஆதரவை அபராசிதவர்மன் பெற்றிருந்ததே அதற்குக் காரணம் ஆகும்.
இவனது ஆட்சிக் காலத்தில் இரண்டாம் வரகுண பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். இப்பாண்டியன் தன் தந்தை சீமாற சீவல்லபன் இழந்த சோழநாட்டுப் பகுதியை மீட்க எண்ணி, அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி கொண்டான். இழந்த பகுதியை மீட்டுக் கொண்டான். இவ்வெற்றியால் பாண்டியன் செல்வாக்கு உயர்ந்தது. பாண்டியரால் பல்லவ நாட்டிற்கு ஆபத்து வரும் என எண்ணிய அபராசிதவர்மன் பெரும்படையுடன் சோழ நாட்டுப் பகுதியில் இருந்த பாண்டியருடன் போர் புரியச் சென்றான். கங்க அரசன் முதலாம் பிருதிவிபதியும், விசயாலய சோழனுடைய மகன் ஆதித்த சோழனும் அபராசிதவர்மனுக்குத் துணையாகச் சென்றனர். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்புறம்பயம் என்னும் இடத்தில் நடந்த போரில் முதலாம் பிருதிவிபதி கொல்லப்பட்டான். அபராசிதவர்மனும், ஆதித்த சோழனும் வெற்றி பெற்றனர். இரண்டாம் வரகுண பாண்டியன் தோல்வியடைந்து மதுரை திரும்பினான். அபராசிதவர்மன் போரில் தனக்கு வெற்றி தேடித் தந்த ஆதித்த சோழனுக்கு, சோழநாட்டில் உள்ள சில ஊர்களைப் பரிசாக வழங்கினான்.
எனினும் சோழ மன்னன் முதலாம் ஆதித்தன் தனக்குப் பலன் கருதியே இப்போரில் அபராசிதவர்மனுக்குத் துணை நின்றான். விரைவில் அவன் பல்லவ நாட்டைத் தாக்கி அபராசிதவர்மனை வென்று பல்லவ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். இச்செய்தியை வீரராசேந்திரனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிகிறோம். நிருபதுங்கவர்மன், அபராசிதவர்மன் இருவருக்குப் பின் பல்லவர் ஆட்சி சிறுசிறு தலைவர்களின் கைக்கு மாறித் திறன் குன்றி மறைந்து போயிற்று. அச்சமயத்தில் இராஷ்டிரகூட மன்னன் படையெடுத்து வந்து காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டான்.
1. சாளுக்கியருடன் போர்
2. இராஷ்டிரகூடருடன் போர்
3. கங்கருடன் போர்
4. சோழருடன் போர்
5. பாண்டியருடன் போர்
6. இலங்கையருடன் போர்
7. களப்பிரருடன் போர்
8. வாகாடருடன் போர்
9. சேரருடன் போர்
முதலாம் மகேந்திரவர்மன் – இரண்டாம் புலிகேசி போர்
சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி வட இந்தியாவில் வெற்றிமேல் வெற்றி கொண்ட ஹர்ஷரைத் தோற்கடித்தான். இந்நிலையில் முதலாம் மகேந்திரவர்மன் இரண்டாம் புலிகேசியின் படையெடுப்பைச் சந்திக்க வேண்டியதாயிற்று. ஏற்கெனவே கதம்பர்களை அடக்கி அவர்களுடன் இரண்டாம் புலிகேசி நட்புறவு கொண்டிருந்தான். அவர்களின் உதவியுடன் பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனைப் பழிவாங்கி, தமிழகத்தில் சாளுக்கியரின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என எண்ணிப் படையெடுத்தான். இதனைக் கண்ட முதலாம் மகேந்திரவர்மன் காஞ்சிக் கோட்டைக்குள் மறைந்து கொண்டான். பல்லவ நாட்டினுள் சுமார் 30 கி.மீ தூரம் இரணடாம் புலிகேசியின் படை நுழைந்ததும் திடீரென மகேந்திரவர்மன் தாக்கினான். உதவி பெறும் நிலையில் இல்லாத சாளுக்கியர் புறமுதுகு காட்டி ஓடினர். இதனைக் காசாக்குடிச் செப்பேடு உணர்த்துகிறது. மற்றும் பல கல்வெட்டுகள் இதற்குச் சான்று பகர்கின்றன.
முதலாம் நரசிம்மவர்மன் – இரண்டாம் புலிகேசி போர்
முதலாம் நரசிம்மவர்மன் பல்லவ மன்னனாகப் பதவியேற்றான். ஏற்கெனவே இரண்டாம் புலிகேசி பல்லவரிடம் தோல்வியடைந்துள்ளதால் ஆட்சி மாறியதும் மீண்டும் காஞ்சியின் மீது படையெடுத்தான். இப்போரில் சாளுக்கியருக்கு மிகுந்த சேதம் ஏற்பட்டது. இதனை உதயசந்திர மங்கலப் பட்டயங்கள், வேலூர்ப் பாளையப் பட்டயங்கள் ஆகியவை கூறுகின்றன. முதலாம் நரசிம்மவர்மன் சாளுக்கியரின் தலைநகரான வாதாபியை அழித்தான். அங்கு ஒரு வெற்றித் தூணையும் நாட்டினான். ஆதலால் முதலாம் நரசிம்மவர்மனை வாதாபி கொண்டான் என்பர். மணிமங்கலத்தில் ஒருமுறையும், வாதாபியில் இரு முறையும் முதலாம் நரசிம்மவர்மன் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்டான். இதன் மூலமாகச் சாளுக்கிய நாட்டினைச் சுமார் 13 ஆண்டுக் காலம் பல்லவரே ஆட்சி செய்தனர்.
தந்திவர்மன் – துருவன் போர்
தந்திவர்மன் பல்லவ மன்னனாக இருந்த சமயத்தில் இராஷ்டிரகூட நாட்டில் இரண்டாம் கோவிந்தன் என்பவனுக்கும் துருவன் என்பவனுக்கும் இடையே வாரிசு உரிமைப் போர் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் முதலாம் கிருஷ்ணனின் மகன்கள் ஆவர். இப்போரில் தந்திவர்மன் இரண்டாம் கோவிந்தனுக்கு ஆதரவு அளித்தான். போரில் துருவன் வெற்றியடைந்தான். பின்பு துருவன் காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டான். தந்திவர்மன் இராஷ்டிரகூடர்களின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டான்.
தந்திவர்மன் – மூன்றாம் கோவிந்தன் போர்
துருவன் இறந்த பின்னர் இரண்டாம் கோவிந்தன் மகனாகிய மூன்றாம் கோவிந்தன் இராஷ்டிரகூட மன்னன் ஆனான். இராட்டிரகூட நாட்டில் ஆட்சி மாறியவுடன் தந்திவர்மன் இராஷ்டிரகூடர்களின் மேலாண்மையை அவமதித்தான். அதனால் மூன்றாம் கோவிந்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான். இப்போரிலும் தந்திவர்மன் தோற்கடிக்கப்பட்டான். இதன் விளைவாகப் பல்லவப் பேரரசு ஒரு சிற்றரசாகத் தாழ்வடைந்தது.
மூன்றாம் நந்திவர்மன் – முதலாம் அமோகவர்ஷன் போர்
தன்னுடைய தந்தையாகிய தந்திவர்மன் தோல்வி அடைந்தது, பல்லவப் பேரரசு ஒரு சிற்றரசாகத் தாழ்ந்த நிலை அடைந்தது ஆகிய இந்த அவல நிலையைப் போக்க மூன்றாம் நந்திவர்மன் இராஷ்டிரகூட நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். இராஷ்டிரகூட அரசனான முதலாம் அமோகவர்ஷன் என்பவனை வென்றான்; தான் ஒரு பேரரசன் என்பதை நிலைநாட்டினான்.
முதலாம் மகேந்திரவர்மன் – துர்விநீதன் போர்
சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியும், கங்க அரசன் துர்விநீதன் என்பவனும் உறவினர்கள். பல்லவ-சாளுக்கியப் போரில் இரண்டாம் புலிகேசிக்குத் துர்விநீதன் உதவியளித்தான். துர்விநீதனை அடக்குவது தனது கடமை என எண்ணி முதலாம் மகேந்திரவர்மன் கங்கர்களுடன் போரிட்டு அவர்களைப் பணிய வைத்தான்.
முதலாம் நரசிம்மவர்மன் – துர்விநீதன் போர்
இரண்டாம் புலிகேசி இறந்த பின்னர் (கி.பி. 642) சாளுக்கிய நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. புலிகேசியின் புதல்வர்களான முதலாம் விக்கிரமாதித்தன், ஆதித்தவர்மன் ஆகியோருக்கு இடையே வாரிசு உரிமைப் போர் தொடங்கியது. கங்க நாட்டு அரசன் துர்விநீதன் தன் மகள் வயிற்றுப் பேரனான முதலாம் விக்கிரமாதித்தனுக்கு ஆதரவு அளித்தான். முதலாம் நரசிம்மவர்மன் ஏற்கெனவே கொங்கு நாட்டைக் கங்கர்களிடமிருந்து கைப்பற்றி, அதற்குத் துர்விநீதனின் ஒன்றுவிட்ட தம்பியை அரசனாக்கியிருந்தான். இந்தக் காரணங்களால், துர்விநீதன் முதலாம் நரசிம்மவர்மன் மீது படை எடுத்தான். இப்போரில் துர்விநீதன் வெற்றி பெற்றான்; முதலாம் விக்கிரமாதித்தனைச் சாளுக்கிய நாட்டுக்கு அரசனாக்கினான். ஆயினும் துர்விநீதனின் இவ்வெற்றியால் பல்லவ நாட்டிற்கும், ஆட்சிக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
முதலாம் பரமேசுவரவர்மன் – பூவிக்கிரமன் போர்
சாளுக்கிய நாட்டின் அரசனாகப் பதவியேற்ற முதலாம் விக்கிரமாதித்தன், தனது தந்தை இரண்டாம் புலிகேசிக்கு ஏற்பட்ட இழிவை அகற்றவேண்டும், வாதாபியை அழித்தமைக்குப் பல்லவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று கருதினான். எனவே பல்லவ நாட்டின் மீது படை எடுத்தான். மேற்குக் கங்க அரசன் பூவிக்கிரமன் என்பவன் முதலாம் விக்கிரமாதித்தனுக்கு உதவியாக வந்தான் அப்போது பல்லவ நாட்டை முதலாம் பரமேசுவரவர்மன் ஆண்டு வந்தான். நடைபெற்ற போரில் முதலாம் பரமேசுவரவர்மன் பூவிக்கிரமனிடம் தோல்வி அடைந்தான். இப்போரில் பூவிக்கிரமன் பல்லவரின் வைரக் கழுத்தணியைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் பல்லவப் பேரரசு தாழ்வடைந்தது.
இரண்டாம் நந்திவர்மன் – ஸ்ரீ புருஷன் போர்
இரண்டாம் நந்திவர்மனின் சமகாலத்தவன் கங்க நாட்டு மன்னன் ஸ்ரீ புருஷன் என்பவன் ஆவான். இவன் சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்து, பல்லவ நாட்டின் மீது படை எடுத்து வந்தான். போரின் தொடக்கத்தில் கங்க மன்னன் இரண்டாம் நந்திவர்மனை வெற்றி கண்டான்; பல்லவரின் வெண்கொற்றக் குடையையும், பெருமானபு என்ற விருதையும் பறித்துக் கொண்டான். ஆனால் போரின் முடிவில் வெற்றி இரண்டாம் நந்திவர்மனுக்கே கிடைத்தது. போரில் இறுதி வெற்றி பெற்ற இரண்டாம் நந்திவர்மன் கங்க மன்னனிடமிருந்து உக்கிரோதயம் என்ற மணிமாலையையும், பட்டவர்த்தனம் என்ற பட்டத்து யானையையும் கைப்பற்றிக் கொண்டான்.
இவ்வாறாகப் பல்லவர்கள் சோழர், பாண்டியர், களப்பிரர், வாகாடர், சேரர், இலங்கையர் ஆகியோருடனும் போர் புரிந்தனர்.
பல்லவர்கள் தமிழகத்தை ஆண்டு இருந்தாலும், தமிழ் மொழியை ஆட்சி மொழியாகக் கொள்ளவில்லை என்பது பற்றியும் அறிந்து கொண்டீர்கள்.
பல்லவர்கள் தங்கள் அரசியலைப் பற்றிப் பட்டயங்கள், கல்வெட்டுகள் மூலம் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை நன்கு புரிந்து கொண்டீர்கள்.
பல்லவ மன்னர்கள் தங்களின் பட்டயங்களை வெளியிடும்போது பிராகிருதம், சமஸ்கிருதம். கிரந்தத் தமிழ் என்னும் மொழிகளைப் பயன்படுத்தினர் என்பதைப் புரிந்து கொண்டீர்கள். இதன் காரணமாகப் பல்லவ மன்னர்களை, வரலாற்று ஆசிரியர்கள் முற்காலப் பல்லவர்கள், இடைக்காலப் பல்லவர்கள், பிற்காலப் பல்லவர்கள் என மூவகையாகப் பிரித்து விவரித்தனர் என்பதையும் விளங்கிக் கொண்டீர்கள்.
இப்பல்லவ மன்னர்களுள் சிறந்து விளங்கியவர்கள் யார் என்பது பற்றியும் படித்துப் புரிந்து கொண்டீர்கள். மேலும் பல்லவ மன்னர்கள் தமது அரசாட்சியை விரிவுபடுத்த எண்ணி அண்டை நாட்டாருடன் போர் புரிந்தனர் என்றெல்லாம் படித்துணர்ந்தீர்கள்.
பாடம் - 3
தமிழகத்தில் சங்க காலம் முதல் சேர, சோழ, பாண்டிய அரசுகளும், வட இந்தியாவில் மௌரிய அரசும் நல்ல முறையில் ஆட்சியை அளித்தன. அது போலவே பல்லவர்களும் நல்லதொரு ஆட்சியை மேற்கொண்டனர் என்பது பற்றிய செய்தி நமக்குக் கிடைக்கப்பெறுகிறது.
பல்லவர்கள் காலத்தில் சமுதாயத்தில் பல்வேறு சாதிப் பிரிவுகள், தொழிலினால் ஏற்றத்தாழ்வு, வரியில் பாகுபாடு போன்றவை இருந்தது விளக்கப்பட்டிருக்கின்றது.
பொருளாதார நிலை நன்கு இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றது பற்றி விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாகப் பல்லவ மன்னர்கள் தமிழகத்திற்கு நிறைய கலைத் தொண்டு புரிந்தது பற்றிய செய்தி ஏராளமாக நமக்குக் கிடைக்கப்பெறுகிறது.
பல்லவ மன்னர்கள் தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டிராவிடிலும், இவர்கள் காலத்தில் நிறைய இலக்கியங்களும், இலக்கிய வகைகளும் தோன்றின. சைவ சமய நாயன்மார்கள், வைணவ சமய ஆழ்வார்கள் பக்தி இயக்கத்தை நடத்தியது பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றது.
சேர மன்னர்களைப் பற்றிப் பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கிய நூல்கள் புகழ்ந்து கூறுகின்றன.
சோழ மன்னர்களைப் பற்றிப் புறநானூறு, பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை என்னும் நூல்கள் கூறுகின்றன.
பாண்டிய மன்னர்களைப் பற்றிய சிறப்புச் செய்திகள் புறநானூற்றில் காணப்படுகின்றன. மேலும் மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை ஆகிய நூல்களிலும் பாண்டிய மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறாகச் சங்க காலத்தில் தமிழகம் சிறந்து விளங்கியது.
அதுபோலவே, வட இந்தியாவில் ஆட்சி செய்த மௌரியர்கள் ஆட்சியும் மிகச் சிறப்பு வாய்ந்திருந்தது என வரலாற்று ஆசிரியர் கூறுவர்.
இங்கு நாம் காண இருக்கும் பல்லவர்களின் ஆட்சியும் மேலே கூறப்பட்டவர்களின் அரசியல் கூறுகளைப் பெற்றிருந்தது என்பர். இவ்வாறான பல்லவர் ஆட்சி பிற்காலச் சோழர்கள் நல்லதொரு நிருவாக முறையை அவர்கள் நாட்டில் ஏற்படுத்துவதற்குத் துணை நின்றது எனலாம்.
மன்னன்
பேரரசின் தலைவனாக மன்னன் விளங்கினான். அரச பதவி பரம்பரை பரம்பரையாகச் சென்றது. குறிப்பாக மூத்த மகன் அரச பதவியை ஏற்றான். அரசனுக்கு வாரிசு இல்லையென்றால் உறவினர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வழக்கம் நிலவியது. சில சமயங்களில் மக்களே மன்னனைத் தேர்ந்தெடுத்தனர். இதனை இரண்டாம் பரமேசுவரவர்மன் மகன் சித்திரமாயன் மன்னன் ஆவதற்குத் தகுதியற்றவன் எனக் கருதப்பட்டு, வாரிசு உரிமைப் போர் தொடங்கி முடிவில் இரண்டாம் நந்திவர்மன் மன்னன் ஆன நிகழ்ச்சி காட்டுகிறது. துவக்கத்தில் வாரிசு உரிமைப் போர் எதுவும் ஏற்படாவிட்டாலும், பிற்காலத்தில் வாரிசு உரிமைப் போர் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
மன்னன் இறைவனுக்குச் சமமாகக் கருதப்பட்டான். இருப்பினும் மன்னன் மரபுகளுக்கும் நெறிமுறைகளுக்கும் கட்டுப்பட்டவன் ஆனான்; நிருவாகம், இராணுவம் போன்றவைகளுக்குத் தலைவனாக விளங்கினான்; மேலும் நீதியின் இருப்பிடமாகத் திகழ்ந்தான். இருப்பினும் ஒரு சில அரசர்கள் ஆட்சியின்போது நெறிமுறை தவறி வாழ்ந்தது உண்டு.
அமைச்சர்கள்
அரசனுக்கு ஆலோசனை வழங்குவது அமைச்சர்களது கடமையாகும். அவர்கள் அரசியலில் அரசனுக்குத் துணை புரிந்து வந்தனர்.
அரசனின் ஆணையை அமைச்சர்கள் செயல்படுத்திக் கொண்டிருந்தனர். மேலும் அயல்நாட்டுக் கொள்கையை வகுப்பது அவர்களின் முக்கியமான கடமைகளில் ஒன்றாக விளங்கியது. ஆமாத்தியர் என்ற அமைச்சர் குழு மன்னனுக்கு இருந்தது. இரண்டாம் நந்திவர்மனது தலைமை அமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன், மூன்றாம் நந்திவர்மனது அமைச்சர்கள் நண்பன் இறையூர் உடையன், தமிழ்ப் பேரரரையன் ஆகியோர் பெயர்களைக் கல்வெட்டுகளில் நாம் காணமுடிகிறது. தகுதியுடைய பிராமணப் பெருமக்களும், வேறு பெருமக்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதும் தெரியவருகிறது.
அதிகாரிகள்
பல்லவர் ஆட்சியல் பல நிருவாகத் துறைகள் காணப்பட்டன. அதுபோன்ற துறைகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். ரகசியகர்த்தா என்ற உயர் அதிகாரி பல்லவ அரசருக்கு அந்தரங்கச் செயலாளராக விளங்கினான். வருவாய், நிலவரித்திட்டம், நில அளவை போன்ற துறைகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவுவதற்குக் கிராம அதிகாரி, கால்நடை அதிகாரி, வன அதிகாரி, படை அதிகாரி போன்றோர் செயலாற்றினர். சாசனங்களைச் செப்பேடுகளில் பொறிக்கும் பொறுப்பை மேற்கொண்டிருந்த அலுவலர் தபதி எனப்பட்டான். தானங்களையும், நிவந்தங்களையும் ஆவண வடிவத்தில் எழுதுபவன் காரணத்தான் அல்லது காரணிகன் எனப்பட்டான். இன்று கிராமங்களில் கர்ணம் எனக் கூறுப்படுபவன் காரணிகனே ஆவான்.
நாட்டுப் பிரிவுகள்
பல்லவர் ஆட்சியில் நிருவாக நலன் கருதிப் பல நிலப் பிரிவுகளாகப் பேரரசு பிரிக்கப்பட்டிருந்தது. பேரரசு மண்டலங்களாகவும், மண்டலங்கள் கோட்டங்களாகவும், கோட்டங்கள் நாடுகளாகவும், நாடுகள் ஊர்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன.
மண்டல நிருவாகம் ஆளுநர்களின் தலைமையின் கீழ் இருந்தது. நாளடைவில் இவ்வாளுநர்கள் வழிவழியாக அம்மண்டலங்களை வழிநடத்திச் செல்லலாயினர். ஒரு காலகட்டத்தில் பல்லவப் பேரரசின் வடக்கிலும் தெற்கிலும் பகைவர்கள் அதிகமாக நெருங்கிக் கொண்டிருந்த காரணத்தால் இந்த ஆளுநர்களுக்குப் பல்லவப் பேரரசர்கள் அதிக அதிகாரம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வரி
நாட்டினை நல்ல முறையில் நடத்திச் செல்ல வேண்டும் என்றால் அந்நாட்டிற்கு வருவாய் தேவை. இந்த வருவாய் இன்றியமையாதது என்பதை உணர்ந்த பல்லவப் பேரரசர்கள் பதினெட்டு வகையான வரிகளை நாட்டு மக்களிடம் இருந்து வசூலித்தனர். இதற்கான சான்றுகளை நாம் அவர்களது பட்டயங்களைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
சான்று:
தென்னை, பனை, பாக்கு ஆகிய மரங்களைப் பயிரிடும் உரிமை பெற அரசாங்க வரி விதிக்கப்பட்டது.
கள் இறக்கவும், சாறு இறக்கவும், பனம்பாகு காய்ச்சவும், கடைகளில் பாக்கு விற்கவும் வரி விதிக்கப்பட்டது.
நூல் நூற்போர், வலைஞர், ஆடை நெய்வோர், கால்நடை வைத்துத் தொழில் செய்வோர் வரி செலுத்தி வந்தனர்.
நிலங்கள் அளந்து திட்டமிடப்பட்டன. நிலங்களை அளப்பதற்குத் தனி அதிகாரிகள் இருந்தனர். அரசின் வருவாயில் நிலவரியே முக்கிய இடத்தை வகித்தது.
சில சமயங்களில் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டம் அதாவது அபராதம் மூலமாகவும் அரசாங்கத்திற்கு வருவாய் வந்தது.
கோயில்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிலங்களுக்குத் தேவதான நிலம் என்று பெயர். இதுபோன்ற நிலங்களுக்கு வரிவிலக்கு இருந்தது.
நில அளவைகள்
பல்லவர் காலத்தில் விளங்கிய நில அளவைகள் குழி, வேலி என்பன. குறிப்பிட்ட நிலத்தை அளந்து, கள்ளி, கல் போன்றவற்றை நட்டு அதன் எல்லைகளை வகுத்தனர். மேலும் கலப்பை, நிவர்த்தனம், பட்டிகா, பாடகம் என்பனவும் நில அளவைகளாக வழங்கின. நிவர்த்தனம் என்பது 100 அல்லது 125 முழம் அளவுள்ள ஒரு கோல், இது நிலத்தை அளப்பதற்காக அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
முகத்தல் அளவைகள்
முகத்தல் அளவைகளாகக் கருநாழி, நால்வாநாழி, மாநாய நாழி, பிழையா நாழி, நாராய நாழி, உழக்கு மற்றும் சிறிய அளவைகளான பிடி, சோடு, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் என்பனவும் பயன்பட்டன.
நிறுத்தல் அளவைகள்
பொன் நிறுக்கும் அளவைகளாகக் கழஞ்சு, மஞ்சாடி என்பன இருந்தன.
நாணயங்கள்
பல்லவர் காலத்து நாணயங்கள் பொன்னாலும், வெள்ளியாலும், செம்பாலும் செய்யப்பட்டிருந்தன.
நீதித்துறை
பல்லவப் பேரரசில் நீதித்துறையின் தலைமையிடத்தை மன்னரே வகித்தார். கோட்டங்களிலும், கிராமங்களிலும் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காஞ்சி போன்ற பெரு நகரங்களில் இருந்த நீதிமன்றங்கள் அதிகரணங்கள் எனப் பெயர் பெற்றன. அவற்றின் தலைவர்கள் அதிகரண போசகர் எனப்பட்டனர். சிற்றூரில் இருந்த நீதிமன்றங்கள் கரணங்கள் எனப்பட்டன. அதன் தலைவர்கள் கரண அதிகாரிகள் எனப்பட்டனர். சிற்றூரில் இருந்த மன்றங்களில் வழக்குகளை ஆட்சி (Traditional evidence), ஆவணம் (Document evidence), அயலார் காட்சி (Eye witness) ஆகிய சான்றுகளின் அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்புக் கூறினர்.
படை
கதம்பர், சாளுக்கியர், பாண்டியர் ஆகியோர் பல்லவப் பேரரசினைச் சிதைவுறச் செய்வதற்கு முயன்று கொண்டிருந்த காலம் அது. இதன் காரணமாகப் பல்லவ மன்னர்கள் சிறந்த படை ஒன்றினைப் பெற்றிருந்தனர். அதில் காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை, மிக வலிமை வாய்ந்த கப்பல்படை ஆகிய நால்வகைப் படைகளும் இருந்தன. படைக்கு மன்னர் தலைமை வகித்தார். அவரோடு வீரமும், போர் ஆற்றலும் மிக்க சேனைத் தளபதிகளும் இருந்தனர். சிம்மவர்மன் காலத்தில் விஷ்ணுவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் வாதாபி கொண்ட பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்), இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் உதய சந்திரன், மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் பூதி விக்கிரமகேசரி என்னும் கொடும்பாளூர்ச் சிற்றரசன் ஆகியோர் சிறந்த படைத்தலைவர்களாக விளங்கிப் பல்லவ நாட்டைக் காத்தனர். மகாபலிபுரம் வழியாகக் குதிரைகள் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. மகாபலிபுரம், காவிரிப் பூம்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் கப்பல் படையை இயக்குவதற்கு உதவின. மாமல்லனான நரசிம்மவர்மன் இலங்கை நாட்டு மானவன்மனுக்கு அரசுரிமை கிடைக்க ஈழத்தின் மீது படையெடுத்தான். போர்க் காலங்களில் பல்லவப் பேரரசின் பேராண்மையை ஏற்றுக் கொண்ட சிற்றரசர்கள் பேரரசருக்குப் படை உதவி அளித்தனர்.
சிறந்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நல்ல முறையில் அமர்த்திப் பல்லவ பேரரசர்கள் நாட்டில் அமைதி காத்து வந்தனர்.
பிராமணர்கள்
சமுதாயத்தில் உயர்ந்த இடத்தைப் பிராமணர்கள் வகித்தனர். இவர்கள் மண்ணுலகத் தெய்வங்கள் எனக் கருதப்பட்டனர். அரச பதவி வகிப்பதிலும், அறப்பணி செய்வதிலும் அவர்களுக்குத் தனி உரிமை இருந்தது. அவர்கள் பெற்றிருந்த நிலங்கள் வரிவிலக்குப் பெற்றிருந்தன. அவர்களுக்குக் கல்விச் சலுகைகள் வழங்கப்பட்டன. பெரும்பாலான பிராமணர்கள் வேதங்களைக் கற்பதிலும், சமய வாழ்விலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கிடையில் பல உட்பிரிவுகளும் இருந்தன.
சத்திரியர்கள்
பழங்கால வட இந்திய சமுதாயத்தை ஒத்த சாதியின் அடிப்படையில் அமைந்த சமுதாயம் பல்லவர்கள் காலத்தில் தோன்றியது என ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது. பிராமணர்களுக்கு அடுத்த இடத்தைச் சத்திரியர்கள் வகித்தனர். நாட்டின் பாதுகாப்பு சத்திரியர்களிடம் இருந்த காரணத்தால் அவர்களுக்கு மதிப்பு இருந்தது. பெரும்பாலும் பிராமணர்கள் பற்றியும், சத்திரியர்கள் பற்றியும் மட்டுமே பட்டயங்கள் கூறுகின்றன. இருப்பினும் கிராமங்களில் நிலச்சுவான்தார்கள் மதிக்கப்பட்டனர்.
பிற சாதியினர்
பிராமணர்களையும், சத்திரியர்களையும் தவிர்த்துப் பிற சாதியினர் யாவரும் மிகவும் தாழ்வான இடத்தையே பெற்றிருந்தனர். தாழ்த்தப்பட்ட குடிமக்கள் ஒதுக்கப்பட்ட சேரிகளில் குடியேறினர். அவர்கள் குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். செங்கல்லால் கட்டிய ஓடு வேய்ந்த வீடுகளில் தங்குவதற்கு அவர்கள் வரி கொடுத்தல் வேண்டும். இத்துடன் சாதாரண மக்களை அடிமைப்படுத்தும் வழக்கமும் இருந்தது.
பாசன வசதி
பல்லவர்கள் காடுகளை அழித்து அவற்றை விளைச்சல் நிலமாக்கினர். நீர்ப்பாசனத்திற்காக ஏரிகளையும், கால்வாய்களையும், கிணறுகளையும் வெட்டினர். இப்பல்லவப் பேரரசர்கள் வெட்டிய நீர் நிலைகளில் இராச தடாகம், திரளய தடாகம், மகேந்திர தடாகம், சித்திரமேக தடாகம், பரமேசுவர தடாகம், வைரமேகன் தடாகம், காவேரிப்பாக்கம் ஏரி, மருதாடு ஏரி முதலியன குறிப்பிடத்தக்கவை ஆகும். மேலும் காவிரி ஆறு, பாலாறு முதலிய ஆறுகளிலிருந்து நீரைக் கொண்டு செல்லப் பல கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தன. அவை ஆற்றுக்கால், நாட்டுக்கால் எனப் பெயர் பெற்றன. அவற்றும் வைரமேகன் வாய்க்கால், பெரும்பிடுகு வாய்க்கால் என்பன குறிப்பிடத்தக்கவை ஆகும். பெரிய கால்வாய்களிலிருந்து நீரை எடுத்துச் செல்லச் சிறுசிறு கால்வாய்கள் பல்லவ நாடெங்கும் அமைக்கப்பட்டிருந்தன. கல்லணையின் நீர் பாய்ந்த இடங்களில் கல்லணைக் காணம் என்னும் தனிவரி வசூலிக்கப்பட்டது.
ஊர்ச்சபையின் தனிக்குழுவான ஏரிவாரியம் நீர்நிலைகளையும், நீரோடைகளையும் கண்காணித்து வந்தது.
பயிர்கள்
நெல்லையும், பிற தானியங்களையும் விவசாயிகள் சாகுபடி செய்தனர். எண்ணெய் வித்துகள், பருத்தி, வாழை, மருக்கொழுந்து முதலியனவற்றையும் பயிரிட்டனர். தென்னை, பனை, கமுகு, மாமரம் ஆகிய மரங்களையும் வளர்த்தனர். இதுபோன்ற விளைச்சலால் பல்லவ நாடு தன்னிறைவு பெற்று விளங்கியது எனலாம். ஒவ்வொரு ஊரிலும் பொதுக்களங்கள் இருந்தன. அவற்றைப் பயன்படுத்துவது என்றால் வரிகொடுத்தல் அவசியமாக இருந்தது.
கிராம வாணிகம்
பல்லவர் காலத்தில் மக்கள் பெரும்பாலும் சிற்றூர்களில் வாழ்ந்து வந்தனர். நன்செய் புன்செய் நிலங்கள், குளங்கள், புறம்போக்கு நிலங்கள், சிற்றூர்ப் பொது நிலங்கள், கடைவீதிகள், கோயில்கள், சுடுகாடுகள் முதலியன எல்லாச் சிற்றூர்களிலும் இருந்தன.
பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் கிராமங்களில் சந்தைகள் இருந்தன. இச்சந்தைகளில் தேங்காய், நெய், எண்ணெய், சர்க்கரை, காய்கறிகள், வெற்றிலை, பாக்கு முதலியவை விற்கப்பட்டன. இப்பொருட்களை வாங்குவதற்குச் செம்பாலும், வெள்ளியாலும், பொன்னாலும் செய்யப்பட்ட நாணயங்களைப் பயன்படுத்தினர். ஊரில் உள்ள வாணிகர்கள் கிராமங்களில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கி விற்றுப் பொருள் ஈட்டினர்.
கோயில் போன்ற இடங்களுக்கு அருகில் வாணிபம் செய்வதற்கு அரசின் அனுமதி பெறுவது இன்றியமையாதது.
கப்பல் கட்டும் தொழிலும், மீன் பிடித்தலும் பிற தொழில்களாகும். ஒவ்வொரு தொழிலைச் செய்வோரும் தனித்தனியாக அரசிற்கு வரி செலுத்தி வந்தனர்.
பல்லவ மன்னர்கள் இந்து சமயத்தைப் (சைவ,வைணவ சமயங்களை) பின்பற்றினர். அதன் பணிக்காகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதன் காரணமாக அவர்கள் கோயில்களைக் கட்டத் தொடங்கினர். பல்லவர் ஆண்ட பகுதிகளில் ஏராளமான கற்கள் கிடைத்தன. இதன் காரணமாகக் கட்டடக்கலை ஓங்கி வளர ஆரம்பித்தது. இதனுடன் கட்டடக் கலை வல்லுநர்களும், சிற்பிகளும் பல்லவ நாட்டில் இருந்தனர். கலையில் ஆர்வம் காட்டியதால் பல்லவ நாடு கலைக்கூடமாக மாறியது.
1. குடைவரைக் கோயில்கள் (Cave temples)
2. ஒற்றைக் கோயில்கள் (Monolithic temples)
3. கட்டுமானக் கோயில்கள் (Structural temples)
குடைவரைக்கோயில்கள் ஒற்றைக் கோயில்கள் கட்டுமானக் கோயில்கள்
(Cave temples) (Monolithic temples) (Structural temples)
மகேந்திரவர்மன் எழுப்பிய கோயில்கள் மலைச் சரிவுகளில் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. தூண்களின் அடியிலும், உச்சியிலும் சதுர வடிவமான பட்டைகள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றில் தாமரை மலர்கள் செதுக்கப்பட்டுள்ளன.
நரசிம்மவர்மன் அமைத்த மண்டபங்களில் உள்ள தூண்களின் கீழ்ப் பகுதியில் திறந்த வாயையுடைய சிங்கத்தின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களின் போதிகைகள் அதாவது தாங்குகின்ற கட்டைகள் உருண்டு காடிகள் வெட்டப்பட்டுள்ளன.
பரமேசுவரவர்மன் காலத்தில் கட்டுமானக் கோயில்கள் தோன்றின. பல்லவ மன்னர்கள் எழுப்பிய கோயில்கள் பெரும்பாலும் பெருமாள், சிவன் கோயில்களாகும்.
குடைவரைக் கோயில்கள்
குடைவரைக் கோயில் என்பது குகைக்கோயில் ஆகும். அதாவது மலையின் நடுப்பகுதியை வெட்டிக் குடைந்து, மேல் பகுதியைத் தூண்கள் தாங்கும் வண்ணம் படைத்துக் கோயில் அமைப்பது வழக்கம். இவ்வாறு அமைக்கப்படும் கோயில்களில் செங்கல், மரம், உலோகம், சாந்து போன்றவைகள் பயன்படுத்த மாட்டார்கள். இதற்கான சான்று மண்டகப்பட்டுக் கல்வெட்டில் உள்ளது.
மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தைத் தழுவினான். பின்பு சிவபக்தனாக மாறிச் சைவ சமயத்தில் ஆழ்ந்திருந்தான். அவன் சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் குடைந்தவை சிவன் கோயில்கள் ஆகும்; மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்கவரம், நாமக்கல் என்னும் இடங்களில் குடைந்தவை பெருமாள் கோயில்கள் ஆகும்.
மண்டகப்பட்டில் உள்ள மும்மூர்த்தி கோயிலும், சித்தன்னவாசலில் உள்ள சமணர் கோயிலும் மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்டவை ஆகும்.
மகேந்திரவர்மனைப் போன்றே அவனது மைந்தனான நரசிம்மவர்மனும் கலை ஆர்வம் கொண்டவன். ஆதலால் நரசிம்மவர்மன் காலத்திலும் குகைக்கோயில்கள் பல தோன்றின. நாமக்கல் மலையடியில் இருக்கின்ற நரசிங்கப் பெருமாள் குகைக் கோயில், திருச்சிராப்பள்ளி மலையடியில் தென்மேற்கு மூலையில் உள்ள குகைக்கோயில், திருவெள்ளறை (இவ்வூர் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ளது) மலையின் அடியில் உள்ள குகைக்கோயில், குடுமியாமலையில் உள்ள குகைக்கோயில், திருமயத்தில் உள்ள வைணவக் குகைக்கோயில் ஆகியவை நரசிம்மவர்மன் காலத்தில் குடையப்பட்டவை ஆகும்.
மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரத்தில் காணப்படும் மகிடாசுர மண்டபம், வராக மண்டபம், திருமூர்த்தி மண்டபம் ஆகிய மூன்று குகைக்கோயில்களும் நரசிம்மவர்மன் அமைத்தவை ஆகும்.
ஒற்றைக்கல் கோயில்கள்
ஒரே கல்லில் கோயிலை உருவாக்கும் வழக்கம் பல்லவர் காலத்தில் இருந்தது. இக்கோயில்களும் ஒருவகையில் குடைந்து தோற்றுவிக்கப்பட்டவை ஆகும். மகாபலிபுரத்தில் உள்ள தருமராசன் தேர், பீமசேனன் தேர், திரௌபதி தேர், சகாதேவன் தேர் ஆகியவை பாண்டவர்களைக் குறிக்கும் வண்ணம் எழுப்பப்பட்ட ஒற்றைக்கல் கோயில்கள் ஆகும். இவற்றிற்குத் தேர்கள் என்ற பெயர் இருப்பினும் கோயில்களே ஆகும். இக்கோயில்களை அமைத்தவன் முதலாம் நரசிம்மவர்மன் ஆவான்.
கட்டுமானக்கோ யில்கள்
இராசசிம்மன் காலத்தில் நிலவிய அமைதியும், பொருளாதார வளமும் கட்டுமானக் கோயில்களைக் கட்டக் காரணமாக அமைந்தன. துவக்கத்தில் கட்டுமானக் கோயில்கள் சிறியதாக இருந்தன. காலம் செல்லச்செல்ல இம்மாதிரியான கோயில்கள் பெரியதாகக் கட்டப்பட்டன.
இராசசிம்மன் கட்டிய காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில், பனைமலைச் சிவன் கோயில் ஆகியவை கட்டுமானக் கோயில் வகையைச் சார்ந்ததாகும்.
இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கட்டுமானக் கோயில் கலை உச்ச நிலையை அடைந்தது. காஞ்சியிலுள்ள வைகுண்டப் பெருமாள் கோயில், முத்தீச்சுவரர் கோயில், மதங்கேஸ்வரர் கோயில் ஆகியவை நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டன. அவைபோல திருத்தணியில் வீரட்டானேஸ்வரர் கோயிலும், கூரத்தில் கேசவப்பெருமாள் கோயிலும், திருவதிகையில் வீரட்டானேஸ்வரர் கோயிலும் இவன் காலத்தில் கட்டப்பட்டனவாகும்.
மகாபலிபுரத்தை ஒரு சிற்பக் கலைக்கூடம் எனக் கூறலாம். அங்குள்ள வராக மண்டபம், மகிடாசுர மண்டபம் ஆகிய குகைக்கோயில்களில் உள்ள சுவர்களிலும், தூண்களிலும் காணப்படும் சிற்பங்கள் கண்ணைக் கவர்வனவாக உள்ளன. பஞ்சபாண்டவர் தேர்களில் அழகான சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. பஞ்சபாண்டவர் தேர்களை ஒட்டி அமைந்திருக்கும் யானை, நந்தி ஆகியவற்றின் சிற்பங்கள் வேலைப்பாடு மிக்கவை. மேலும் மகாபலிபுரத்தில் உள்ள கற்பாறைகளில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் புராணக் கதைகளை விளக்கி நிற்கின்றன. கோவர்த்தன மலையைக் கண்ணன் குடையாக ஏந்தி நிற்கும் காட்சி, ஒருவன் பால் கறக்கும்போது பசு தன் கன்றை நாவால் நக்கும் காட்சி, அருச்சுனன் தவம் செய்யும் காட்சி ஆகியவை பற்றிய சிற்பங்கள் பல்லவர் காலச் சிற்பிகளின் கற்பனைத் திறத்தையும், கைவண்ணத்தையும் காட்டுகின்றன.
சித்தன்னவாசல் குகைக்கோயில் ஓவியம் பல்லவர் கால ஓவியக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இங்குப் பெரிதும் போற்றப்படுவது அரசன், அரசி ஆகியோரின் ஓவியங்களும், நடனமாதர் ஓவியங்களும், தாமரைக் குளக் காட்சியும் ஆகும்.
பல்லவர் காலத்து நடனக் கலையின் நுட்பத்தினையும், பெண்களின் அணிகலன்களையும் பற்றிய தகவல்களை இவ்வோவியங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இராசசிம்மன் என்னும் பல்லவ மன்னன் இசைப்புலமை பெற்றிருந்தான். இவனுக்கு வீணா நாரதன் என்ற சிறப்பு பெயர் உண்டு. இதன்மூலம் இவன் இசையில் வல்லமை படைத்தவன் என்பது தெரிகிறது. அதோடு இம்மன்னன் கைலாசநாதர் கோயிலில் யாழ் வாசிப்பது போன்ற சிற்பங்களைச் செதுக்கச் செய்தான்.
இசையும் நடனமும் சமயத்துடன் தொடர்புடையவை ஆகும். கோயில்களில் இசைவாணர் பலர் தங்கி இருந்தனர். இவர்களேயன்றி, அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர் முதலியோரும் ஆலயங்களில் தங்கியிருந்து இசை, நடனம் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தனர். கைலாசநாதர் கோயில், குடுமியாமலைக் கோயில், மாமண்டூர்க் கோயில் ஆகியவற்றில் உள்ள கல்வெட்டுகள் பல்லவர் காலத்து இசை வளர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றன.
பல்லவ மன்னர்கள் இசையுடன் நடனக் கலைக்கும் ஆதரவு நல்கினர். குறிப்பாக மகேந்திரவர்மன், இராசசிம்மன் ஆகியோர் காலத்தில் நடனக்கலை மேல்நிலை அடைந்திருந்தது. சித்தன்னவாசல் ஓவியம் நடனக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். வைகுண்டப் பெருமாள் கோயில் ஓவியம், அரசர் அவையில் கூத்து நடைபெற்றது என்பதை உணர்த்துகிறது. கைலாசநாதர் கோயிலில் சிவபெருமானின் நடனங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. கோயில்களில் நடன மாதர் நிரந்தரமாகத் தங்கி இருந்து அங்குக் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கும், மக்களுக்கும் கண்ணுக்கினிய நடனங்களை ஆடிக் காட்டினர். இவைகளின் மூலம் பல்லவப் பேரரசில் இசையும் நடனமும் புகழ் பெற்று விளங்கின என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
காஞ்சி, வள்ளியமலை, பொன்னூர், திருக்காட்டுப்பள்ளி, சேந்தமலை, நாகமலை, சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் சமணர் இருக்கைகளும், பள்ளிகளும் இருந்தன. அண்டை நாடான பாண்டிய நாட்டின் மதுரையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் சமணம் தழைத்திருந்தது. சேர நாட்டின் தென்பகுதியான வேணாட்டிலும் சமணம் பரவியிருந்தது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இந்து சமயம் மறுமலர்ச்சி அடைந்த காரணத்தால் சமணத்தின் வளர்ச்சி குன்ற ஆரம்பித்தது.
பல்லவர் காலத்தில் தமிழகத்தின் வடபகுதியில் பௌத்தம் வளர்ச்சியுற்றிருந்தது. குறிப்பாகக் காஞ்சி மாநகரம் பௌத்தத்தின் இருப்பிடமாக இருந்தது. அங்குப் பௌத்தக் கோயில்கள் இருந்தன. மணிமேகலையில் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன.
யுவான்-சுவாங் குறிப்பும் இதற்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது.
சைவம், வைணவம் என இரு பெரும்பிரிவாக இந்துமதம் விளங்கியது. சிவனை வழிபட்டோர் சைவம் என்றும், விஷ்ணுவை வழிபட்டோர் வைணவம் என்றும் கூறிக் கொண்டனர்.
சைவம்
பல்லவப் பேரரசு அமைந்திருந்த காலத்தில் அதாவது கி.பி. 7,8 ஆம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் போன்ற சிவனடியார்கள் இந்து மதத் தத்துவத்தை எடுத்துரைத்துச் சைவ சமயத்தை வளரச் செய்தனர். முதலாம் மகேந்திரவர்மனைச் சமண சமயத்திலிருந்து சைவசமயத்திற்குத் திருநாவுக்கரசர் மாற்றினார். இம்மன்னன் தன் பெயரிலேயே குணபதீச்சுரம் என்ற கோயிலை எழுப்பினான் என்று பெரியபுராணம் கூறுகிறது. குணபரன் என்பது மகேந்திரவர்மனைக் குறிக்கும் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகும். இச்செய்தியைத் திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது.
திருநாவுக்கரசர் கூன் பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனையும் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார். திருநாவுக்கரசரே சமணத்திலிருந்துதான் சைவத்திற்கு மாறியவர் ஆவார். சுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில், கடல் சூழ்ந்த உலகெல்லாம் காண்கின்ற பெருமான் காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் என்று தாம் வாழ்ந்த காலத்து ஆட்சி புரிந்துவந்த பல்லவ மன்னனைக் குறிப்பிடுகின்றார்.
வைணவம்
வைணவ சமயம் சங்க காலத்தில் தமிழ் நாட்டில் பரவியிருந்தது என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மாயோன் மேய காடுறை உலகம்
(தொல்காப்பியம்,அகத்திணையியல், 5:1)
மாயோன் மேய ஓண நன்னாள்
(மதுரைக்காஞ்சி::591)
இதுபோலச் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை வாயிலாகத் திருமாலின் பெருமை அறியக் கிடக்கின்றது. வைணவர் திருமாலை முழுமுதல் கடவுளாக எண்ணினர். வைணவ நெறிமுறைகளையும், திருமாலின் பெருமைகளையும் பக்தியுடன் நாடு முழுவதும் பரப்பியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். பல்லவர் ஆட்சிக் காலத்தில் வைணவம் கிளர்ச்சியுற்று எழுந்தது. இதற்குப் பல்லவ மன்னர்கள் பெருமாள் கோயில்களைக் கட்டி எழுப்பியதே காரணமாகும். வைணவ சமயம் பல்லவ நாட்டில் தோன்றிச் சோழ நாட்டில் வளர்ந்து பாண்டிய நாட்டில் மலர்ச்சியுற்றது எனலாம்.
பல்லவர் காலத்தில் தோன்றிய ஆழ்வார்கள் பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார் போன்றோர் ஆவர். இவர்கள் பெரும்பாலும் மயிலாப்பூர், காஞ்சிபுரம், மகாபலிபுரம், திருமழிசை போன்ற பல்லவ நாட்டு ஊர்களில் பிறந்தவர்கள் ஆவர்.
பல்லவ மன்னர்களும் திருமாலுக்குக் கோயில் கட்டலானார்கள்.
இயல், இசை என்னும் இரு கலைகளும் நன்கு வளர்ச்சியுற்றன.
தமிழில் இலக்கிய வளர்ச்சி காணப்பட்டது. பல புராண இதிகாசக் கதைகள் தமிழ் இலக்கியத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. குறிப்பாக வட மொழிச் சொற்கள் தமிழில் கலக்கலாயின.
நாயன்மார்கள், ஆழ்வார்கள் முயற்சியால் இந்து சமயம் ஏற்றம் பெற்றது. சமணம், பௌத்த சமயங்கள் தாழ்வடைந்தன. இதற்குப் பக்தி இயக்கமே காரணம் எனலாம்.
பல்லவர் காலத்தில் இந்துமதம் புத்துயிர் பெற்றவுடன் கோயில்கள் எழுப்பப்பட்டன. இதனால் சிற்பக்கலை, ஓவியக்கலை போன்ற துறைகள் வளர்ச்சி கண்டன.
(அப்பர், நான்காம் திருமுறை 4.43 431 3)
என்று அப்பர், தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் கல்வியைக் கரைகண்ட சான்றோர் வாழும் காஞ்சி நகர் என்று பொருள். இத்தகைய சிறப்பு வாய்ந்த காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட பல்லவப் பேரரசில் கல்வி, இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சியைக் காணமுடிகிறது.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பல்லவர் காலத்தில் சமணர்களது பள்ளிகளும், பௌத்தர்களது விகாரங்களும் கல்வி நிலையங்களாக விளங்கின எனலாம். இக்கல்வி நிலையங்களில் சமயக் கருத்துகள், தத்துவக் கருத்துகள் என்பனவும், தர்க்கம், காவியம், இலக்கணம் முதலியனவும் போதிக்கப்பட்டன.
பல்லவ மன்னர்கள் வடமொழியை ஆட்சி மொழியாகக் கொண்டனர். இதனால் தமிழில் வடமொழி கலக்கலாயிற்று. இதன் விளைவாகத் தோன்றியதே மணிப்பிரவாள நடை (தமிழும் வடமொழியும் சரிக்குச் சரியாகக் கலந்த மொழிநடை).
திவாகரனார் எழுதிய திவாகர நிகண்டு, பிங்கல முனிவர் எழுதிய பிங்கல நிகண்டு என்பன இக்காலத்துப் படைப்புகளேயாகும்.
பொதுவாகக் கூறவேண்டும் என்றால், பல்லவர் காலம் தமிழ் இலக்கிய உலகில் புதுமையைக் கண்டது எனலாம். அதே சமயத்தில் அகம், புறம் தழுவிய சங்க கால இலக்கிய மரபு மறைந்தது எனலாம்.
அந்தாதி, உலா, பரணி முதலிய புதியவகை இலக்கியங்கள் தோன்றின.
நந்திக்கலம்பகம் என்னும் நூல் மூன்றாம் நந்திவர்மன் மேல் பாடப்பட்டதாகும். இவன் காலத்திலே பாரத வெண்பா என்னும் மற்றொரு நூலும் தோன்றியது. இதனைப் பாடியவர் பெருந்தேவனார் ஆவார். முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாசப் பிரகசனம் என்ற நாடகத்தை வடமொழியில் எழுதினான்.
பக்தி இலக்கியம்
சமயங்களை வளர்த்த பக்தர்கள் பாடிய பாடல்களே பக்தி இலக்கியம் ஆகும். சங்க காலம் தொட்டுத் தமிழர் சமயப் பற்றுடையவராக இருந்தாலும் பல்லவர்கள் காலத்தில்தான் பக்தி இலக்கியங்கள் தோன்றலாயின. இப்பக்தி இலக்கியத்தை இரு வகையாகப் பிரிக்கலாம்.
1. சைவ இலக்கியம்
2. வைணவ இலக்கியம்
சைவ இலக்கியம்
தேவாரம், திருவாசகம், திருக்கோவையார் போன்ற இலக்கியங்கள் பல்லவப் பேரரசின் காலத்தில் பல்லவ நாட்டிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் பாடப்பட்டு அவை திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன.
வைணவ இலக்கியம்
பன்னிரு ஆழ்வார்கள் பல்லவ நாட்டிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்தும் வைணவப் பாடல்களைப் பாடி திருமாலைத் துதித்தனர். அவ்வாறு பாடப்பட்ட பாடல்களைத் தொகுத்து நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என்ற நூலை உருவாக்கினர்.
பிற இலக்கியங்கள்
பதினெண் கீழ்க்கணக்கில் தொகுக்கப்பட்டுள்ள சிறுபஞ்சமூலம், ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது, நாலடியார், ஆசாரக் கோவை ஆகியவை சமணர் படைத்த இலக்கியங்கள்.
அயல்நாட்டு வாணிபம், தொழில் போன்றவை சிறந்து விளங்கின. பல்லவ மன்னர்கள் கலைத் தொண்டு அதிகமாகச் செய்திருந்தனர் என்றும், பக்தி இயக்கம் வளர்ச்சியுற்றதோடு, அவ்வியக்கத்தின் வாயிலாகப் பல இலக்கிய வகைகளும், இலக்கியங்களும் தோன்றின என்றும் படித்து உணர்ந்திருப்பீர்கள்.
பாடம் - 4
சுமார் கி.பி.575 ஆம் ஆண்டிலிருந்து முற்காலப் பாண்டியர் ஆட்சியைத் தமிழகத்தில் நிலைநாட்டினர் என்பதை விளக்குகின்றது.
கடுங்கோன், மாறவர்மன் அரிகேசரி, நெடுஞ்சடையன் பராந்தகன் போன்ற பாண்டிய மன்னர்கள் சிறந்து விளங்கினர் என்ற செய்தியைச் சான்றுகளுடன் விளக்குகின்றது.
முற்காலப் பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டை விரிவுபடுத்த வேண்டிச் சேரருடனும், சோழருடனும், கங்கருடனும், ஈழத்தாருடனும் போர் புரிந்ததை விவரிக்கின்றது.
பெரும்பாலும் எல்லா முற்காலப் பாண்டிய மன்னர்களும் சைவ சமயத்தைத் தழுவினார்கள் என்றும், ஒரு மன்னன் மட்டும் சமணத்தைச் சார்ந்திருந்தான் என்றும், பின்பு அம்மன்னனும் சைவத்திற்கு மாற்றப்பட்டான் என்றும் தெரிவிக்கின்றது.
பாண்டிய மன்னர்களைப் பற்றிய வரலாற்று உண்மைகளை வேள்விக்குடிச் செப்பேடு அறிவுறுத்துவதைக் குறிப்பிடுகிறது.
சங்க காலத்திற்குப் பின்பு, ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் கழித்துப் பாண்டிய நாட்டில் கடுங்கோன் நிறுவிய அரசு முதலாம் பாண்டியப் பேரரசு என அழைக்கப்படுகிறது. இப்பேரரசைக் கடுங்கோனை முதலாகக் கொண்டு மொத்தம் பதினான்கு பாண்டிய மன்னர்கள் கி.பி.575 முதல் 966 வரை ஏறத்தாழ 400 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களைத்தான் முற்காலப் பாண்டியர் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
மாறவர்மன் அவனி சூளாமணி கடுங்கோனின் மைந்தன் ஆவான். இவன் (கி.பி. 600 – 625) காலத்தில் தமிழகத்தின் வட பகுதியில் பல்லவர் ஆட்சி நிலவியது. அப்போது பல்லவ மன்னனாகச் சிம்ம விஷ்ணு (கி.பி. 575-615) ஆட்சி செய்து வந்தான். சிம்ம விஷ்ணு பாண்டியரை வென்றதாக இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசாக்குடிப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே பாண்டியப் பல்லவப் போர் மாறவர்மன் அவனி சூளாமணி காலத்தில் துவங்கியது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவனது காலம் முதல் பாண்டிய மன்னர்கள் மாறவர்மன், சடையவர்மன் என்னும் பட்டங்களைப் புனைந்து கொண்டார்கள்.
மாறவர்மன் அவனி சூளாமணி என்ற பாண்டிய மன்னனின் மகன் செழியன் சேந்தன் (கி.பி. 625-640) ஆவான். இம்மன்னன் சேரர்களை வென்றதால் வானவன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான். இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டியரும், பல்லவரும் தங்களது ஆட்சியைத் தமிழகத்தில் விரிவுபடுத்துவதற்காக ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டிருந்தனர். செழியன் சேந்தனின் பல சிறப்புப் பெயர்களை வேள்விக்குடிச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இப்பாண்டிய மன்னன் சாளுக்கியருடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டான். இதனால் பல்லவரின் பகைமை தற்காலிகமாகக் குறைந்தது என்பர். செழியன் சேந்தன் ஆட்சியின் இறுதிப் பகுதியில் சீனப் பயணியான யுவான் சுவாங் பல்லவரின் தலைநகரான காஞ்சிக்கு வந்திருந்தார். அவர் பாண்டிய நாட்டிற்குப் புறப்படும் சமயத்தில் அந்நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது என்றும், அதனால் செழியன் சேந்தன் இறந்தான் என்றும் காஞ்சி மக்கள் தம்மிடம் கூறியதாகத் தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அரிகேசரி சோழருடன் போர் புரிந்து ஒரே நாளில் அவர்களை வென்று அவர்களுடைய உறையூரைக் கைப்பற்றிக் கொண்டான். அப்போரின் இறுதியில் பாண்டியருக்கும் சோழருக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்படி அரிகேசரி சோழ வேந்தனின் மகளான மங்கையர்க்கரசியாரை மணந்து கொண்டான். இதனால் பாண்டிய, சோழ நாடுகளுக்கு இடையில் நல்லுறவு ஏற்பட்டது.
மாறவர்மன் அரிகேசரி கொடும்பாளூரை ஆண்ட களப்பிரர்களையும், பாண்டிய நாட்டின் தென் பகுதியில் ஆட்சி புரிந்து வந்த குறுநில மன்னரான பரவர் என்பாரையும் வென்று அடக்கினான். மேலும் சேரர்களையும் அவர்களுக்குத் துணை நின்ற குறுநில மன்னர்களையும் அடக்கினான். இதனால் இம்மாறவர்மன் அரிகேசரிக்குச் சேரர்களும் குறுநில மன்னர்களும் திறை செலுத்தினர்.
அரிகேசரி முதலில் சமண சமயத்தைத் தழுவியிருந்தான். அவனது மனைவி மங்கையர்க்கரசியார் ஒரு சிவபக்தர். அவர் தம் கணவனைத் திருஞான சம்பந்தர் துணையுடன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார்.
பாண்டியன் அரிகேசரி காலத்தில் வாணிபம் வளம் பெற்று விளங்கியது. பாண்டிய நாட்டில் உப்பும், முத்தும் மிகுதியாகக் கிடைத்தன. மேலும் அருகில் உள்ள தீவுகளிலிருந்து எல்லாம் முத்துக்கள் சேகரித்துக் கொண்டு வரப்பட்டன. முத்துக்களை அயல்நாடுகளுக்கு எடுத்துச் சென்று விற்றுப் பாண்டிய நாட்டினர் பெருஞ்செல்வம் ஈட்டினர்.
இம்மன்னனுக்குக் கூன் பாண்டியன், சுந்தர பாண்டியன் என்னும் வேறுபெயர்களும் இருந்தன.
சான்று :
மின்னார் மௌலிச் சத்துரு சா
தன பாண்டியன் ஆம் விறல்வேந்தன்
இன்னான் மகன் கூன் பாண்டியன் ஆம்
இவன் தோள் வலியால் இசைமிக்கான்
(திருவிளையாடல் புராணம்,3108:3-4)
(மௌலி-மணிமுடி; சத்துரு சாதன பாண்டியன்-கூன் பாண்டியனின் தந்தை.)
அன்னது ஒரு காரணத்தால் சௌந்தரிய பாண்டியன் என்றாகி
(திருவிளையாடல் புராணம், 3173:1)
(சௌந்தரிய பாண்டியன் – சுந்தர பாண்டியன்)
இவன் சமண சமயத்தைத் தழுவியிருந்தபோது, கூன் விழுந்த முதுகினை உடைய காரணத்தால் கூன் பாண்டியன் என்று பெயர் பெற்றிருந்தான் என்பதையும், திருஞான சம்பந்தர் துணையால் சைவ சமயத்திற்கு மாறியதும், சிவபெருமான் திருவருளால் கூனல் நீங்கி நிமிர்ந்து, சுந்தர (அழகிய) வடிவத்தைப் பெற்றதால் சுந்தர பாண்டியன் என்று பெயர் பெற்றான் என்பதையும் மேலே காட்டிய திருவிளையாடல் புராணப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
இம்மன்னன் அரிகேசரியைப் பெரிய சின்னமனூர்ப் பட்டயங்கள் அரிகேசரி பராங்குசன் எனக் குறிப்பிடுகின்றன.
கோச்சடையன் ரணதீரன், மாறவர்மன் அரிகேசரிக்குப் பின்னர் பட்டம் எய்தினான். இவனும் தனது ஆட்சிக் காலத்தில் (கி.பி. 670-710) பல போர்களைச் செய்து வெற்றி கண்டான். இவன் தென்னகத்தில் இறைமையைப் பெறுவதற்குப் பல மன்னர்களுடன் போரிட வேண்டியிருந்தது. இவனது வெற்றியைப் பற்றி வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. ரணதீரன் சேரர், சோழர், கொங்கர், கர்நாடர், ஆய்மன்னர் போன்றோரைப் போரில் வென்றான். சேரரை வென்றதால் வானவன் என்றும், சோழரை வென்றதால் செம்பியன் என்றும், கர்நாடரை வென்றதால் மதுர கருநாடகன் என்றும், கொங்கரை வென்றதால் கொங்கர் கோமான் என்றும் புகழப்பட்டான். இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டின் ஆதிக்கம் மேலும் பெருகியது. ரணதீரன் சாளுக்கியரை முறியடித்ததாகவும் தெரிகிறது.
கோச்சடையன் ரணதீரனின் புதல்வன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கி.பி. 710-765) ஆவான். தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்தான். அதற்கு முன்பே பாண்டியர்களுக்கும், பல்லவர்களுக்கும் கொங்கு நாட்டு உரிமை பற்றிப் பகைமை ஏற்பட்டிருந்தது. இக்காரணங்களால் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் இவனது ஆட்சியின்போது பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தான். இப்போரில் பாண்டியன் வெற்றியடைந்தான்.
கோச்சடையன் ரணதீரன் தனது நாட்டை விரிவுபடுத்த எண்ணி வடக்கில் உள்ள மாளவ நாட்டை நோக்கிப் படையெடுத்தான். இப்போரிலும் வெற்றி பெற்றான். பின்னர் மாளவநாட்டு மன்னரின் மகளை மணந்து கொண்டான்.
அதன் பின்னர்க் கங்கருடன் போர்புரிந்து வென்று, அவர்ளைக் கப்பம் கட்டச் சொல்லி, கங்க மன்னரது மகளான பூசுந்தரியை மணம் செய்து கொண்டான். இவனது ஆட்சியில் பாண்டிய நாடு உயர்வடைந்தது எனலாம்.
இம்மன்னனுக்கு முதலாம் இராசசிம்மன், தேர்மாறன் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவன் சிறந்த சிவ பக்தனாகவும் விளங்கினான். வேதங்ளைக் கற்றுத் தேர்ந்த பிராமணர்களுக்கு மிகவும் உதவினான். கர்ப்ப தானங்களும், துலாபார தானங்களும் செய்து உயர்வடைந்தான்.
நெடுஞ்சடையன் பராந்தகன், பராங்குச மாறவர்மனுக்கும், பூசுந்தரிக்கும் மகனாகப் பிறந்தவன் ஆவான். இன்றைய தஞ்சை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய பரந்துபட்ட பாண்டியப் பேரரசினை அவன் தனது தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டான். இவன் கி.பி 765 முதல் 790 வரை அரசாண்டான்.
பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்காகப் பெரும்படையுடன் வந்தான். காவிரியின் தென் கரையிலுள்ள பெண்ணாகடம் (இவ்வூர் தஞ்சைக்கு அருகில் உள்ளது) என்னும் ஊரில் கடும்போர் நடைபெற்றது. இறுதியில் பாண்டிய மன்னனே வெற்றி வாகை சூடினான். இதனால் கோபம் கொண்ட இரண்டாம் நந்திவர்மன் சேர மன்னன், கொங்கு நாட்டு அரசன் ஆகியோருடனும், ஆய்வேள் என்ற பொதிகைமலைத் தலைவனுடனும், தகடூர் அதிகமானுடனும் கூட்டினை ஏற்படுத்திக் கொண்டு போர் தொடுக்கலானான். இதிலும் பாண்டியரே வெற்றி கண்டனர். இப்போரில் கொங்குநாட்டு அரசன் கைதியாகப் பிடிபட்டான்.
நெடுஞ்சடையன் பராந்தகன் பாண்டிய நாட்டின் தென்பால் அமைந்துள்ள வேணாட்டின் மீது படையெடுத்துச் சென்று அங்கிருந்த யானைகளையும், குதிரைகளையும், பெருஞ்செல்வத்தினையும் கைப்பற்றினான். இவற்றுடன் வேணாட்டையும் கைப்பற்றினான். ஆய் நாட்டு அரசன், வேணாட்டு மன்னனுடன் உறவுவைத்து இருந்ததால் அம்மன்னனையும் நெடுஞ்சடையன் பராந்தகன் வெற்றி கண்டான். மேலும் முத்தரையர்களையும் வென்றான். இவ்வாறு ஒருவர்பின் ஒருவராக வென்று பல்லவர் கூட்டினை உடைத்தான். இதன் மூலம் இம்மன்னன் மிக வலிமையுள்ளவன் எனத் தெரிய வருகிறது. இவனது காலத்தில் பாண்டியரின் ஆட்சி திருச்சி, தஞ்சை, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இம்மன்னன் மற்றப் பாண்டிய மன்னர்களைப் போல் அல்லாது வைணவ நெறியைக் கடைப்பிடித்தான். திருமாலுக்கு என்று காஞ்சிவாய்ப் பேரூரில் கோயில் ஒன்றைக் கட்டினான். வைணவக் கோயில்களுக்கு நன்கொடைகள் அளித்தான். மதுரைக்குக் கிழக்கே ஆனைமலையில் விஷ்ணுவுக்குக் கோயில் அமைத்தான். கோயிலைச் சுற்றி அக்கிரஹாரங்களைக் கட்டி வேதியருக்கு இலவசமாக அளித்தான். வேற்று நாட்டிலிருந்து கிடைத்த செல்வங்களை எல்லாம் அறப்பணிக்கெனச் செலவிட்டான். கொடைகள் பல வழங்கிப் புகழ் பெற்றான். இவன் வைணவ நெறியைக் கடைப்பிடித்தாலும் சைவ சமயத்தாரைத் துன்புறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சடையன் பராந்தகன் சாசனங்களையும், கல்வெட்டுகளையும் வெளியிட்டு உயர்வடைந்தான். இவன் தனது ஆட்சிக்கு வந்த மூன்றாவது ஆண்டில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேள்விக்குடிச் செப்பேட்டினை வெளியிட்டான். இவன் ஜதிலா பராந்தகன், வரகுண மகாராஜா, மாறன் சடையன், நெடுஞ்சடையன் என்னும் பட்டங்களைப் புனைந்து கொண்டான்.
நெடுஞ்சடையன் பராந்தகனை அடுத்து, அவன் மகன் இரண்டாம் இராசசிம்மன் ஆட்சிக்கு வந்தான். இவன் இரண்டு ஆண்டுகள் மட்டுமே (கி.பி. 790-792) ஆட்சி புரிந்தான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை
இவன் சைவ நெறியைக் கடைப்பிடித்தான். இவனது தொண்டினைப் பற்றிப் பட்டினத்து அடிகளும், நம்பியாண்டார் நம்பியும் புகழ்ந்து பாடியுள்ளனர். அதோடு இல்லாமல் மாணிக்கவாசகப் பெருமான் புகழ்ந்து பாடும் பெருமையினையும் இவன் பெற்றுள்ளான்.
இவன் அறப்பணியிலும் சிறந்து விளங்கினான். சிராப்பள்ளி இறைவனுக்குத் திருவிளக்குகள் எரிப்பதற்கு நிவந்தமாக 125 கழஞ்சு பொன் அளித்தான். அம்பாசமுத்திரத்துக் கோயிலுக்கு 240 பொற்காசுகள் நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாக வழங்கினான். இவனுக்குச் சடையவர்மன், மாறன் சடையன் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவன் காலத்துக் கல்வெட்டுகள் சோழ நாடு முழுவதும் கிடைத்துள்ளன. இதை நோக்கும்போது இவனது ஆதிக்கம் சோழநாட்டிலும் பரவியிருந்தது என வரலாற்று ஆசிரியர் கூறுகின்றனர்.
சீமாறன் சீவல்லபன் விழிஞம் என்றும் ஊரில் சேர நாட்டு மன்னனை வெற்றி கொண்டான். விழிஞம் என்பது திருவனந்தபுரத்திற்கு அண்மையில் உள்ளது. இங்கு நடைபெற்ற போரில் சேரமன்னன் உயிர் இழந்தான்.
முதலாம் சேனன் என்னும் மன்னன் ஈழத்தை ஆண்டு வந்தான். அப்போது சீமாறன் சீவல்லபன் அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அங்கே உள்ள புத்த விகாரங்களிலிருந்த பொன்னால் ஆகிய படிமங்களையும் பிறபொருள்களையும் சூறையாடினான். அச்செல்வங்களைப் பாண்டிய நாட்டிற்கு எடுத்து வந்தான். தோல்வியடைந்த முதலாம் சேனன் பாண்டிய மன்னனுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான். இதன் விளைவாகச் சேனனுக்கே பாண்டிய மன்னன் அவனது ஈழ நாட்டை வழங்கினான்.
சீமாறன் சீவல்லபன் ஆண்ட காலத்திலேதான் பல்லவ நாட்டை மூன்றாம் நந்திவர்மன் ஆண்டு வந்தான். அவன் ஒரு சிறந்த வீரனாக இருந்தான். தனது மூதாதையர்கள் பாண்டிய மன்னர்களிடம் தோல்வியுற்றதை மனதில் கொண்டு பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தான். இப்போரில் மூன்றாம் நந்திவர்மன் வெற்றி கொண்டான். இதன் விளைவாகப் பாண்டியரது நாடு தனது வடக்குப் பகுதியை இழந்து விட்டது. இப்போர் தெள்ளாறு என்னுமிடத்தில் நடைபெற்றது.
தெள்ளாற்றுப் போர் நடைபெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு குடமூக்குப் போர் நடைபெற்றது. குடமூக்கு என்பது இந்நாளில் உள்ள கும்பகோணத்தைக் குறிக்கும். இப்போரில் மூன்றாம் நந்திவர்மனையும் அவனுக்கு உதவியாக இருந்த கூட்டு அரசர்களையும் சீமாறன் சீவல்லபன் புறமுகுது காட்டி ஓடுமாறு செய்து வெற்றி பெற்றான். இவ்வெற்றியின் மூலம் பாண்டியனது பெயர் சற்று மேலோங்கியது.
சீமாறன் சிறிது காலம் கழித்துப் பல்லவ மன்னனான நிருபதுங்கவர்மனுடன் போர் புரிந்தான். இதில் நிருபதுங்கவர்மன் வெற்றி அடைந்தான். இதன் மூலம் பாண்டியன் சோழ நாட்டின் வட பகுதியை இழந்தான். இப்போர் அரிசிற்கரை என்னுமிடத்தில் நடந்தது.
சீவல்லபன் வடக்கில் ஓயாமல் போரில் ஈடுபட்டிருந்ததால் பாண்டிய அரியணையைக் கைப்பற்றுவதற்கு மாயப் பாண்டியன் என்பவன் சூழ்ச்சி செய்தான். அவன் இலங்கை வேந்தன் இரண்டாம் சேனனை அணுகி மதுரை மீது படையெடுக்குமாறு அவனைத் தூண்டினான். ஈழப்படை மதுரையைத் தாக்கி, சீவல்லபனை மதுரையை விட்டு ஓடுமாறு விரட்டியது என்று மகாவம்சம் கூறுகிறது.
சீமாறன் சீவல்லபனுக்குச் சடையன் மாறன் என்ற பெயரும் உண்டு. இவனது வரலாற்றைச் சின்னமனூர்ச் செப்பேடுகளும், தளவாய்புரச் செப்பேடுகளும் மேலும் சில கல்வெட்டுகளும் கூறுகின்றன.
இரண்டாம் வரகுண பாண்டியன் தன் தந்தை இழந்த சோழ நாட்டுப் பகுதியை மீண்டும் அடைய எண்ணி அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி கொண்டான். இதனால் அவனுக்குக் காவிரிக்கு வடக்கேயுள்ள இடவை என்னும் நகர் கிடைத்தது. இப்போரில் சோழ இளவரசனான ஆதித்த சோழன் இரண்டாம் வரகுண பாண்டியனை எதிர்த்துப் போர் புரிந்தும் அவனால் வெற்றி பெறமுடியவில்லை.
இவ்வாறு வெற்றி பெற்றதால் வரகுண பாண்டியனின் செல்வாக்கு உயர்வடைந்தது. இதனால் பல்லவ நாட்டிற்கு ஆபத்து வரும் என எண்ணினான். அபராசிதவர்மன் என்னும் பல்லவ மன்னன். எனவே அவன் பெரும்படையுடன் வரகுண பாண்டியனுடன் போர் புரியச் சென்றான். கங்க அரசன் முதலாம் பிருதிவிபதியும், சோழ இளவரசன் ஆதித்த சோழனும் பல்லவ மன்னனுக்கு உதவியாகச் சென்றனர். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்புறம்பயம் என்னும் இடத்தில் பாண்டியப் படைக்கும் பல்லவக் கூட்டுப் படைக்கும் இடையே போர் நடைபெற்றது. இப்போரில் கங்க அரசன் முதலாம் பிருதிவிபதி கொல்லப்பட்டான். ஆயினும் அபராசித வர்மனும், ஆதித்த சோழனும் போரில் வெற்றி பெற்றனர். இரண்டாம் வரகுண பாண்டியன் தோல்வியடைந்தான். தோல்வி அடைந்த வரகுண பாண்டியன் சோழ நாட்டில், தான் கைப்பற்றியிருந்த பகுதியை விட்டுவிட்டு மதுரைக்குத் திரும்பினான். இவ்வெற்றியால் மகிழ்ந்த அபராசிதவர்மன் ஆதித்த சோழன் தனக்குச் செய்த உதவிக்காக, அவனுக்குச் சோழ நாட்டில் உள்ள சில ஊர்களைப் பரிசாக வழங்கினான்.
இரண்டாம் வரகுண பாண்டியன் நிறைய அறப்பணிகளைச் செய்தான். இதற்குச் சான்றாக, இம்மன்னன் சுமார் 1400 பொற்காசுகளைத் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாள் வழிபாடு நடத்துவதற்கு நிவந்தமாக வழங்கினான். இதனால் இவன் திருச்செந்தூர் முருகனின் மீது பக்தி கொண்டிருந்தது தெரியவருகிறது.
பராந்தக பாண்டியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் வேணாட்டு அரசனை வெற்றி கொண்டான் என்று கூறப்படுகிறது. அதோடு கொங்கு நாட்டின் மீதும் படையெடுத்து வெற்றி கொண்டான்.
இவனது வெற்றிகளையும், அறச் செயல்களையும் தளவாய்புரச் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகின்றது. இம்மன்னன் தேவதானங்களும், பிரமதேயங்களும், பள்ளிச் சந்தங்களும் அளித்து உயர்வடைந்தான்.
மூன்றாம் இராசசிம்மன்(கி.பி. 900-920), பராந்தக பாண்டியனுக்கும், சேர நாட்டு இளவரசி வானவன்மாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன். இவன் ஆட்சிக்கு வந்தபின் தஞ்சை, கொடும்பாளூர் ஆகிய இடங்களை ஆண்ட மன்னர்களை வென்றான். இச்சமயத்தில் சோழர்கள் நன்கு வலிமை பெற்றிருந்தனர். சோழர்கள் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றனர். இப்போருக்காகப் பாண்டிய மன்னன் இலங்கை அரசன் ஐந்தாம் காசிபன் உதவியை நாடியும் பயன் இல்லாமல் போயிற்று. இதன் காரணமாகப் பாண்டிய நாடு சோழர் வசமானது.
இதன் விளைவாகப் பாண்டிய நாடு கி.பி. 966 முதல் சோழ நாட்டுப் பேரரசின் ஒரு மண்டலமாக மாறியது. இது சோழ நாட்டு ஆளுநர்களால் நிருவாகம் செய்யப்பட்டுவந்தது. இத்துடன் முற்காலப் பாண்டியர் வரலாறு முடிவுற்றது எனலாம்.
பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு (கி.பி. 575-615) பாண்டியனை வென்றதாக அவன் காலத்துக் காசாக்குடிப் பட்டயத்தின் மூலம் தெரியவருகிறது. அன்று முதல் பல்லவருக்கும் பாண்டியருக்கும் பகைமை ஆரம்பம் ஆனது எனலாம். அச்சமயம் முற்காலப் பாண்டியருள் ஒருவனான மாறவர்மன் அவனி சூளாமணி ஆட்சி புரிந்து வந்தான்.
மாறவர்மன் அரிகேசரி பல வெற்றிகளை அடைந்திருந்ததால் அவன் புகழ் ஓங்கியிருந்தது. இப்பாண்டிய மன்னன் பல்லவ நாட்டினுள் படையுடன் புகுந்து சங்கர மங்கை என்னும் இடத்தில் பல்லவர்களை வெற்றி கொண்டான்.
இரண்டாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் காலத்தில் அவனுடன் புதுகோட்டை மாவட்டத்தில் போர் புரிந்தான். இப்போரில் நந்திவர்மன் சிறைபிடிக்கப்பட்டான்.
நெடுஞ்சடையன் பராந்தகன் தஞ்சைக்கு அருகில் உள்ள பெண்ணாகடத்தில் பல்லவரை எதிர்த்துப் போரிட்டான்.
முதலாம் வரகுணபாண்டியன் பலம் குன்றிய பல்லவ மன்னன் தந்திவர்மனைப் புறங்கண்டான்.
சீமாறன் சீவல்லபன், பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனுடன் போர் புரிந்து தெள்ளாறு என்னுமிடத்தில் அவனிடம் தோல்வியுற்றான்.
முற்காலப் பாண்டிய மன்னர்களுள் பெரும்பாலோர் பல்லவ நாட்டாருடன் போர் புரிந்து வந்தனர் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
கோச்சடையன் ரணதீரன் அரசியலில் இறைமை பெற விரும்பிச் சோழருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான்.
முதலாம் வரகுண பாண்டியனின் கல்வெட்டுகள் சோழநாடு முழுவதும் கிடைக்கப் பெற்றுள்ளதால் பாண்டியரது ஆதிக்கம் சோழ நாட்டிலும் பரவியது தெரிய வருகிறது.
இரண்டாம் வரகுண பாண்டியன் சோழ நாட்டையும், தொண்டை நாட்டையும் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணிச் சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றான். காவிரியாற்றுக்கு வடக்கேயுள்ள இடவை என்னும் நகரை அவன் கைப்பற்றிக் கொண்டான். அவ்வமயம் சோழ மன்னன் ஆதித்த சோழன் அவனுடன் போர் புரிந்தான்.
முற்காலப் பாண்டியருள் கடைசி மன்னர்களான மூன்றாம் இராசசிம்மன் மற்றும் வீரபாண்டியன் போன்றோர் சோழருடன் போர் புரிந்தனர் இருப்பினும் சுந்தரசோழன் மகன் ஆதித்த கரிகாலனிடம் வீரபாண்டியன் வீழ்ந்ததற்குப் பின்னர், பாண்டிய நாடு சோழர் வசம் மாறியது.
கோச்சடையன் ரணதீரன் சேரருடன் போர் புரிந்தவன் ஆவான்.
சீமாறன் சீவல்லபன் விழிஞத்தில் சேர மன்னனை வென்றதாகச் சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன.
சீமாறன் சீவல்லபன் வடக்குப் பகுதியில் இடைவிடாது போர் புரிந்து கொண்டிருந்ததால், அச்சூழ்நிலையைப் பயன்படுத்திப் பாண்டிய அரியணையைக் கைப்பற்றுவதற்காக மாயப்பாண்டியன் என்பவன் இலங்கை வேந்தன் இரண்டாம் சேனனை அணுகி மதுரை மீது படையெடுக்குமாறு தூண்டினான். இப்போரில் சீமாறன் சீவல்லபன் மதுரையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டான்.
மூன்றாம் இராசசிம்மன் இலங்கைவேந்தன் ஐந்தாம் காசிபன் என்பவனின் உதவியைப் பெற்றுச் சோழருடன் போர் புரிந்தான். இப்போரில் சோழர் வெற்றி பெற்றனர்.
முற்காலப் பாண்டியருள் சற்று மாறுபட்டுக் காணப்பட்டவன் நெடுஞ்சடையன் பராந்தகன் ஆவான். எவ்வாறு எனில் பெரும்பாலான முற்காலப் பாண்டியர்கள் சைவ சமயத்தைத் தழுவினர். ஆனால் இம்மன்னனோ வைணவ நெறியைப் பின்பற்றினான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் திருவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வைணவ சமய ஆழ்வாருள் ஒருவராகிய பெரியாழ்வார் வாழ்ந்து வந்தார். இவருடைய செல்வாக்கால் இம்மன்னன் வைணவ சமயத்திற்கு மாறியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இவன் திருமாலுக்கு என்று கோயில் ஒன்றினை எழுப்பினான். மதுரைக்குக் கிழக்கே ஆனைமலையில் விஷ்ணுவுக்குக் கோயில் அமைத்தான். மேலும் வைணவ ஆலயங்களுக்கு நன்கொடைகள் வழங்கினான். இம்மன்னன் வைணவனாக இருந்தபோதிலும் சைவ சமயத்தைச் சார்ந்தவர்களைத் துன்புறுத்தவில்லை.
முதலாம் வரகுண பாண்டியன் சிவநெறியைக் கடைப்பிடித்து வந்தவன் ஆவான். இவனது சிவபக்தியின் மாட்சியைக் கண்ட பட்டினத்தடிகளும், நம்பியாண்டார் நம்பியும் புகழ்ந்து கூறியுள்ளனர். மாணிக்கவாசகப் பெருமான் புகழ்ந்து பாடும் பெருமையினையும் முதலாம் வரகுண பாண்டியன் பெற்றிருந்தான். இவன் அறப்பணிகள் நிறையச் செய்தான்.
நெடுஞ்சடையன் பராந்தகன் தான் கேட்டு அறிந்தவற்றை அச்செப்பேட்டினில் பதித்துள்ளான். பாண்டியன் கடுங்கோன் களப்பிரருடன் போர் செய்து அவர்களைப் பாண்டிய நாட்டிலிருந்து துரத்திவிட்டுத் தனது ஆட்சியை நிறுவினான். இச்செய்தியானது வேள்விக்குடிச் செப்பேட்டில் காணப்படுகின்றது.
செழியன் சேந்தன் பல சிறப்புப் பெயர்களால் புகழப்பட்டது இச்செப்பேட்டில் காணப்படுகின்றது.
கோச்சடையன் ரணதீரன் கொண்ட வெற்றிகளையும் வேள்விக்குடிச் செப்பேடு உணர்த்துகின்றது.
முற்காலப் பாண்டியர் தங்களது ஆட்சியைத் தமிழகத்தில் விரிவுபடுத்த வேண்டும் என்று எண்ணிப் பல்லவர்களுடன் அவ்வப்போது எதிர்த்து நின்றனர் என்பதைப் படித்து உணர்ந்திருப்பீர்கள்.
மாறவர்மன் அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் சோழருடன் போர் புரிந்து அதில் வெற்றியடைந்து அதன்பின் சோழ இளவரசியை மணம் புரிந்து கொண்டு இருநாடுகளுக்கு இடையே நட்புறவை நிலைநாட்டியது பற்றித் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
மாறவர்மன் அரிகேசரி எல்லாப் பாண்டிய மன்னர்களையும் போல் சைவ சமயத்தைச் சார்ந்திராமல் சமண சமயத்தைச் சார்ந்திருந்ததும், பின் அவனது மனைவியால் சைவத்திற்கு மாற்றப்பட்டதும் பற்றிப் படித்துணர்ந்தீர்கள்.
பாண்டிய மன்னர்கள் அறப்பணிகளைச் செய்தது. கோயில்களுக்கு நிலங்களைத் தானமாக அளித்தது போன்ற செய்திகளைப் படித்திருப்பீர்கள்.
முற்காலப் பாண்டிய மன்னர்களுக்கான வரலாற்றுச் சான்றுகளை வேள்விக்குடிச் செப்பேடு அதிகமாகத் தந்திருப்பது பற்றிப் படித்துணர்ந்திருப்பீர்கள்.
பாடம் - 5
பிற்காலச் சோழ மன்னர்கள் விசயாலயன் பரம்பரை, முதலாம் குலோத்துங்கன் பரம்பரை என்னும் இருவேறு பரம்பரைகளின் வழிவந்து ஆட்சி செய்தார்கள்.
பிற்காலச் சோழர்கள் அயல்நாட்டு வாணிபத்தைப் பெருக்கினர். இதற்காகச் சீனாவுக்குத் தூதுக் குழுவை அனுப்பிவைத்தனர்.
பிற்காலச் சோழ மன்னர்கள் சைவ சமயத்தைச் சார்ந்திருந்தனர். இருப்பினும் பிற சமயங்களைச் சார்ந்தவர்களைக் கடிந்து கொள்ளவில்லை. இரண்டாம் குலோத்துங்கன் என்ற ஒருவன் மட்டுமே வைணவ சமயத்தாரிடம் பகைமை பாராட்டினான்.
இவற்றையெல்லாம் பற்றி இப்பாடத்தில் விரிவாகவும், விளக்கமாகவும் காண இருக்கிறோம்.
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் பாண்டியருக்கும் பல்லவருக்கும் கடும்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. முத்தரையர் பாண்டியருக்குத் துணைநின்றனர். இந்த அரசியல் சூழ்நிலையில் சோழ மரபில் தோன்றிய விசயாலயன் என்பவன் பல்லவருடன் கூட்டுச் சேர்ந்து முத்தரையரைத் தஞ்சையில் எதிர்த்துப் போர் புரிந்தான். இப்போரில் விசயாலயன் வெற்றி பெற்றுத் தஞ்சையைக் கைப்பற்றினான். அந்த விசயாலயனே சோழ நாட்டில் சோழர் ஆட்சிக்கு மறுபடியும் வித்திட்டவன் ஆவான். இவன் வழிவந்தவர்கள் சோழநாட்டைக் கி.பி. 850 முதல் 1279 வரை ஆண்டு வந்தனர். இவர்களையே பிற்காலச் சோழர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
திருப்புறம்பயப் போர்
இவனது ஆட்சிக் காலத்தில் இரண்டாம் வரகுணபாண்டியனுக்கும், அபராசிதவர்மப் பல்லவனுக்கும் இடையே திருப்புறம்பயம் என்னும் இடத்தில் போர் நடந்தது. (திருப்புறம்பயம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது.) இப்போர் கி.பி. 880 இல் நடைபெற்றது. அபராசிதனுக்கு முதலாம் ஆதித்தனும், கங்க அரசன் முதலாம் பிருதிவிபதியும் துணை நின்றனர். இப்போரில் பிருதிவிபிதி கொல்லப்பட்டான். ஆயினும் அபராசிதனும் முதலாம் ஆதித்தனும் வெற்றி பெற்றனர். இவ்வெற்றியால் மகிழ்ந்த அபராசிதன் சோழநாட்டில் சில பகுதிகளை முதலாம் ஆதித்தனுக்கு அளித்தான்.
அபராசிதவர்மனுடன்போர்
எனினும் சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் இருந்துவருவது கண்டு, அதை வென்று பெறும் எண்ணத்தில் முதலாம் ஆதித்தன் அபராசிதவர்மன் மீது போர் தொடுத்தான். யானை மீதிருந்து போர் புரிந்த அபராசிதவர்மனை ஆதித்தன் வாளால் வெட்டிச் சாய்த்தான் என்று கன்னியாகுமரிக் கல்வெட்டுக் கூறுகிறது. இவ்வெற்றியின் மூலம் ஆதித்தன் பல்லவ நாட்டைச் சோழ நாட்டுடன் இணைத்துக் கொண்டான்.
கொங்கு நாட்டைக் கைப்பற்றல்
முதலாம் ஆதித்தன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அந்நாட்டையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தான். கொங்கு நாட்டிலிருந்து கொண்டு வந்த பொன்னைக் கொண்டு தில்லைச் சிற்றம்பலத்தின் முகட்டை (கூரையை) வேய்ந்தான்.
சேரநாட்டுடன் நட்புறவு
இவனுடைய சமகாலத்தில் சேரநாட்டில் தாணுரவி என்பவன் ஆண்டுவந்தான். ஆதித்தன் அவனுடன் நட்புறவு கொண்டிருந்தான். ஆதித்தனின் மைந்தன் பராந்தகன், சேரனின் மகளை மணம்செய்து கொண்டான். இதனால் இந்த நட்புறவு மேலும் வலுப்பெற்றது.
இம்மன்னன் ஒரு சிவபக்தன். காவிரியின் இரு மருங்கிலும் பல சிவாலயங்களைக் கட்டினான். கி.பி. 907 இல் காளத்திக்கு அருகில் உள்ள தொண்டைமான் ஆற்றூர் என்னும் இடத்தில் இம்மண்ணுலகை நீத்தான்.
பாண்டிய நாட்டைக் கைப்பற்றல்
சோழநாட்டின் எல்லையை மேலும் விரிவுபடுத்துவதற்காகப் பாண்டிய நாட்டின் மீது பராந்தகன் கி.பி. 910 இல் படையெடுத்தான். அப்போது பாண்டிய நாட்டை மூன்றாம் இராசசிம்மன் ஆட்சி புரிந்து வந்தான். பராந்தகனை எதிர்த்து நிற்கும் ஆற்றலின்றி, இராசசிம்மன் இலங்கைக்கு ஓடினான். இலங்கை வேந்தன் ஐந்தாம் காசிபன் என்பவனிடம் பராந்தகனை எதிர்ப்பதற்குப் படை உதவி நாடினான். ஐந்தாம் காசிபன் தனது பெரும்படை ஒன்றை இராசசிம்மனுடன் அனுப்பி வைத்தான். வெள்ளூர் என்னும் இடத்தில் நடந்த போரில் பாண்டியனையும், அவனுக்குத் துணையாக வந்த ஈழப்படையையும் புறங்கண்டான் பராந்தகன். இப்போரின் இறுதியில் பாண்டிய நாடு சோழ நாட்டின் ஒரு பகுதியானது.
இராஷ்டிரகூடரை வெல்லல்
இராஷ்டிரகூட மன்னனான இரண்டாம் கிருஷ்ணன் என்பவன் சோழப் பேரரசின் அரியணையைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் சோழநாட்டின் மீது போர் தொடுத்தான். இவனுக்கு வாணர், வைதும்பர் ஆகியோர் துணை புரிந்தனர். பராந்தகனுக்குக் கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதி துணைபுரிந்தான். தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லம் என்னும் இடத்தில் நடந்த போரில் இரண்டாம் கிருஷ்ணனும் அவனது ஆதரவாளர்களும் படுதோல்வி அடைந்து புறங்காட்டி ஓடினர். இவ்வெற்றியால் பராந்தகனுக்கு வீரசோழன் என்ற விருதுப்பெயர் கிடைத்தது.
தக்கோலப் போரும் பராந்தகன் வீழ்ச்சியும்
பராந்தகனிடம் தோற்றோடிய இராஷ்டிரகூடர், சோழ நாட்டைக் கைப்பற்றி அவனைப் பழிவாங்க வேண்டும் என்று காலம் கருதி இருந்தனர். பராந்தகனின் ஆதரவாளனான கங்க நாட்டு மன்னன் இரண்டாம் பிருதிவிபதி வாரிசு இல்லாமல் திடீரென இறந்துபோனான். இதனால் கங்க நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. பிருதிவிபதி மறைவுக்குப் பின்னர்ப் பூதுகன் என்பவன் கங்க நாட்டு ஆட்சியைப் பிடித்துக் கொண்டான். இதைத் தக்க தருணமெனக் கருதி அப்போது இராஷ்டிரகூட நாட்டை ஆண்டுவந்த மூன்றாம் கிருஷ்ணன் சோழநாட்டின் மீது படையெடுத்து வந்தான். அவனுக்கு வாணரும், வைதும்பரும் உதவியாக வந்தனர். மேலும் பூதுகனும் அவனுக்குத் துணையாகப் படையுடன் வந்தான். இராஷ்டிரகூடர் படைகளைத் தடுத்துப் போரிடுவதற்குப் பராந்தகன் தன் மைந்தன் இராசாதித்தன் தலைமையில் பெரும்படை ஒன்றை அனுப்பி வைத்தான். தக்கோலம் (அரக்கோணம் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது) என்னும் இடத்தில் இரு படையினர்க்கும் இடையில் (கி.பி.949இல்) கடும்போர் நடைபெற்றது. இப்போரில் பராந்தகனின் மைந்தன் இராசாதித்தன் யானை மேல் இருந்து போரிடும்போது, பூதுகன் விடுத்த அம்பொன்றால் தாக்குண்டு இறந்தான். தலைவனை இழந்து திகைத்து நின்ற, மனம் தளர்ந்துபோன சோழர் படையை இராஷ்டிரகூடப் படையினர் தாக்கி வெற்றி கண்டனர். தொடர்ந்து சோழ நாட்டினுள் முன்னேறிச் சென்று காஞ்சி, தஞ்சை ஆகிய பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டனர். எனவே, தக்கோலப் போர் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
சமயப்பணி
முதலாம் பராந்தகன் தன் தந்தை ஆதித்த சோழனைப் போலவே தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்னால் வேய்ந்து அழகுபடுத்தினான். ஆதித்த சோழன் ஆரம்பித்து வைத்த கோயில் பணிகளைத் தொடர்ந்து நடத்தினான். இவன் பல சிவன் கோயில்களை எழுப்பினான்.
பராந்தகன் காலத்தில் இராஷ்டிரகூடர் பெற்ற வெற்றியால், கண்டராதித்தன் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டான். கண்டராதித்தனின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாண்டியர் எழுச்சி பெறத் தொடங்கினார். அப்போது பாண்டிய நாட்டை ஆண்டு வந்த வீரபாண்டியன் என்பவன் சோழருக்கு அதுவரை தந்து வந்த திறையையும் நிறுத்திவிட்டான். இதன் மூலம் அவன் பாண்டிய நாட்டை முற்றிலும் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்து விட்டான். எனவே, பராந்தகனது ஆட்சிக் காலத்தில் சோழநாடு மிகவும் சிறியதொரு நாடாகி விட்டது.
கண்டராதித்தனின் மனைவி செம்பியன் மாதேவி என்பவள் ஆவாள். இவர்கள் இருவரும் சைவ சமய வளர்ச்சிக்காகப் பாடுபட்டனர். கண்டராதித்தன் பாடிய பாசுரங்கன் பன்னிரு திருமுறைகளுள் ஒன்றான ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன.
அரிஞ்சயன் (கி.பி. 956 – 957)
கண்டராதித்தன் மறைந்தபோது அவன் மகன் உத்தம சோழன் வயதில் மிகவும் சிறியவனாக இருந்தான். எனவே, கண்டராதித்தனைத் தொடர்ந்து அவன் தம்பி அரிஞ்சயன் என்பவன் ஆட்சிக்கு வந்தான். இவன் குறுகிய காலமே ஆட்சி புரிந்தான். இவனது காலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை.
இவன் ஆட்சிக்கு வந்தபோது சோழநாட்டின் வடபகுதியாகிய தொண்டை மண்டலம் இராஷ்டிரகூடர் வசம் இருந்தது. அதனை அவர்களுடன் போரிட்டு மீட்டுக்கொண்டான்.
கண்டராதித்தன் காலத்தில் வீரபாண்டியன் திறை செலுத்தாமல் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பாண்டிய நாட்டைக் கைப்பற்றச் சுந்தரசோழன் கருதினான். தன் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் துணையுடன் பாண்டிய நாடு நோக்கிச் சென்றான். சேவூர் என்னும் இடத்தில் சோழப் படைக்கும் பாண்டியப் படைக்கும் இடையே பெரும்போர் நடைபெற்றது. இப்போரில் ஆதித்தகரிகாலன் வீரபாண்டியனைக் கொன்றான். வீரபாண்டியனுக்குத் துணையாக வந்த ஈழத்துப் படைகளைச் சுந்தரபாண்டியன் புறங்காட்டி ஓடுமாறு செய்தான். இவ்வெற்றியால் சுந்தரசோழனுக்கு மதுரை கொண்ட இராஜகேசரி என்ற விருதுப்பெயர் கிடைத்தது. இவன் கி.பி. 973 இல் காஞ்சியில் உள்ள தனது பொன்மாளிகையில் உயிர்நீத்தான். இவனது மனைவி வானவன் மகாதேவி ஆறாத்துயரால் உடன்கட்டை ஏறினாள்.
சுந்தர சோழனுக்கு ஆதித்த கரிகாலன் மட்டுமன்றி, அருண்மொழிவர்மன் என்ற மற்றொரு மகனும் இருந்தான். இவர்களுள் ஆதித்தகரிகாலன் சுந்தர சோழன் ஆட்சியின் இறுதிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்டான். இதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை. மற்றொரு மகனான அருண்மொழிவர்மனே சோழப் பேரரசை ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்த முதலாம் இராசராசன் ஆவான்.
உத்தம சோழன் (கி.பி. 973-985)
கண்டராதித்தனுக்கும் செம்பியன் மாதேவிக்கும் பிறந்தவன் உத்தம சோழன் ஆவான். இவன் அரிஞ்சயன், சுந்தரசோழன் ஆகியோர் ஆட்சிக்கு வந்தபோது சிறுவனாகவே இருந்தான். எனவே சுந்தரசோழனுக்குப் பின்னர்ச் சோழ நாட்டின் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தான். இவனது ஆட்சிக் காலத்தில் போர் எதுவும் நடந்ததாகக் குறிப்பில்லை. சோழ நாடு அமைதியாக இருந்தது.
விசயாலயன் தொடங்கிவைத்த சோழப் பேரரசைத் தன்னுடைய ஒப்பற்ற பேராற்றல், நுண்ணறிவு, துணிவு ஆகியவற்றால் மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்த பெருமை சான்றவன் இராசராசன். இவன் சோழ நாட்டை ஆட்சி புரிந்த முப்பது ஆண்டுகள் தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கன ஆகும் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
முதலாம் இராசராசன் வரலாற்றைக் கூறும் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. இவனுடைய 29ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட கல்வெட்டு ஒன்று, ‘திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்’ என்று தொடங்கி, அவன் போர் செய்து வெற்றி பெற்றுக் கைப்பற்றிய நாடுகள் எல்லாவற்றையும் குறிப்பிட்டுக் கூறுகிறது. மேலும் திருவாலங்காட்டுச் செப்பேடு, கரந்தைச் செப்பேடு, தஞ்சைக் கல்வெட்டுகள், காஞ்சிக் கல்வெட்டுகள், ஒரு சாளுக்கியக் கல்வெட்டு ஆகியவையும் இவன் வரலாற்றைக் கூறுகின்றன. சோழர் காலத்தில் தோன்றிய கலிங்கத்துப் பரணி, மூவருலா என்னும் சிற்றிலக்கிய நூல்கள் இவனுடைய வரலாற்றை அறிய உதவும் இலக்கியச் சான்றுகளாகத் திகழ்கின்றன.
பாண்டிய நாட்டுப் போர்
இராசராசன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், அண்டை நாடுகளை வென்று சோழ நாட்டின் எல்லையை விரிவுபடுத்தும் வீரச்செயலில் ஈடுபடலானான். பாண்டியரும், சேரரும், சிங்களரும் (ஈழநாட்டாரும்) சோழர்களை என்றுமே ஒன்று கூடி எதிர்த்துப் போரிடுவது என்று தங்களுக்குள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தனர். எனவே இராசராசன் அம்மூவரையும் வென்று ஒடுக்குவது தனது முதற்கடமை எனக் கருதினான்.
முதலில் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். அப்போது பாண்டிய நாட்டை அமரபுசங்கன் என்பவன் ஆண்டு வந்தான். அவனைப் போரில் வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.
சேர நாட்டுப் போர்
பின்பு சேரநாட்டின் மீது படையெடுத்தான். அந்நாட்டினை ஆண்டு வந்த பாஸ்கரரவிவர்மன் என்பவனைக் காந்தளூர்ச் சாலை என்னும் இடத்தில் நடந்த போரில் வெற்றி கொண்டான். காந்தளூர்ச் சாலையில் இருந்த கடற்படையில் உள்ள மரக்கலங்களை (கப்பல்களை) எல்லாம் அழித்தான். இவ்வெற்றியை இராசராசனின் 29ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, காந்தளூர்ச் சாலைக் கலம் அறுத்து அருளி என்று குறிப்பிடுகிறது. காந்தளூர்ச் சாலை திருவனந்தபுரத்திற்குத் தெற்கே பத்துமைல் தொலைவில் உள்ள கடற்கரை சார்ந்த ஊராகப் பண்டைய நாளில் விளங்கியது.
ஈழத்துப் போர்
பாண்டிய நாடும், சேர நாடும் தன் ஆட்சியின் கீழ் வந்துவிடவே, முதலாம் இராசராசன் ஈழத்தின் மீது படையெடுத்தான். வலிமை வாய்ந்த கப்பற் படை ஒன்றைத் தன் மகன் இராசேந்திரன் தலைமையில் ஈழத்துக்கு அனுப்பி வைத்தான். அப்போது ஈழ நாட்டை ஐந்தாம் மகிந்தன் என்பவன் ஆண்டுவந்தான். அவனுக்கு எதிராக அவனுடைய படை வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதை அடக்கும் ஆற்றலின்றி ஐந்தாம் மகிந்தன் ஈழத்தின் தென்பகுதியில் உள்ள ரோகண நாட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டான். இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழப் படையினர் ஈழப் படையினரைத் தாக்கி, அவர்களை வென்று ஈழநாட்டின் வடபகுதியைக் கைப்பற்றினர். ஈழத்தின் தலைநகராக அதுவரை இருந்துவந்த அனுராதபுரம் அழிக்கப்பட்டது. பொலன்னருவா என்ற நகரம் புதிய தலைநகராயிற்று. அதற்கு ஜனநாத மங்கலம் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. ஈழநாட்டின் வடபகுதி சோழநாட்டு மண்டலங்களுள் ஒன்றாகியது. அதற்கு மும்முடிச் சோழமண்டலம் என்ற பெயர் இடப்பட்டது.
கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடிப் போர்கள்
சோழநாட்டின் எல்லையை மேலும் விரிவுபடுத்த எண்ணி முதலாம் இராசராசன் வடக்கு நோக்கியும் படை எடுத்தான். கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி என்னும் நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று அந்நாடுகளை வெற்றிகொண்டு கைப்பற்றினான். (கங்கபாடி – தென்னிந்தியாவில் இப்போது உள்ள கர்நாடக மாநிலத்தின் தென்பாகத்தில் இருந்த பண்டைய நாடு; நுளம்பபாடி – கர்நாடக மாநிலத்தில் கிழக்குப் பகுதியையும், அம்மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டத்தையும் உள்ளடக்கிய பண்டைய நாடு; தடிகைபாடி – கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தை உள்ளடக்கிய பண்டைய நாடு.)
கீழைச்சாளுக்கிய நாட்டோடு மண உறவு
பிற்காலச் சோழர் காலத்தில் சாளுக்கியநாடு கீழைச் சாளுக்கிய நாடு, மேலைச் சாளுக்கிய நாடு என இருவகைப்பட்டதாய் விளங்கியது. கீழைச் சாளுக்கிய நாடு தக்காண பீடபூமியின் கிழக்கில் (தற்போதைய ஆந்திர மாநிலத்தில்) வேங்கியைத் தலைநகராகக் கொண்டு, கிருஷ்ணா நதி, கோதாவரி நதி ஆகியவற்றிற்கு இடையே பரந்துபட்டுக் கிடந்தது. மேலைச் சாளுக்கிய நாடு தக்காண பீடபூமியின் மேற்கில் (தற்போதைய கர்நாடக மாநிலத்தில்) கல்யாணி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு, காவிரி, துங்கபத்திரை ஆகிய ஆறுகளுக்கிடையில் பரந்துபட்டு இருந்தது.
முதலாம் இராசராசன் ஆட்சிக் காலத்தில் கீழைச் சாளுக்கிய நாட்டில் உள்நாட்டுக் கலகம் நடைபெற்றது. அதனால் அப்போது வேங்கியை ஆண்டு வந்த சக்திவர்மன் (கி.பி. 1000 – 1011) வலிமையிழந்து முடங்கிக் கிடந்தான். அதே நேரத்தில் மேலைச் சாளுக்கிய நாட்டைச் சத்தியாசிரியன் என்பவன் ஆண்டு வந்தான். இவன் கீழைச் சாளுக்கிய நாடு, மேலைச் சாளுக்கிய நாடு ஆகிய இரண்டையும் ஒன்றுபடுத்தி, ஒரே சாளுக்கிய நாடாக்கி அதனைத் தன் ஒரு குடைக்கீழ்க் கொண்டுவரத் திட்டமிட்டிருந்தான். இராசராசன் இத்திட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் வேங்கியின் மீது படையெடுத்துச் சென்று, அங்கு நடந்துவந்த உள்நாட்டுக் கலகத்தை ஒடுக்கி, சக்திவர்மனை அதன் அரசனாக்கினான். மேலும் சத்திவர்மனுடைய தம்பி விமலாதித்தனுக்குத் (கி.பி. 1011–1018) தன் மகள் குந்தவையை மணம் முடித்தான். இத்திருமண உறவால் கீழைச் சாளுக்கிய நாடும், சோழநாடும் ஒன்றாக இணையும் ஓர் அரிய வாய்ப்பு உருவானது.
மேலைச் சாளுக்கியருடன் போர்
அதன்பின்பு, இராசராசன் தன் மகன் இராசேந்திரன் தலைமையில் பெரும்படை அனுப்பி, மேலைச் சாளுக்கிய நாட்டை ஆண்டுவந்த சத்தியாசிரியனை (கி.பி. 997 – 1008) வென்று, அவனுடைய நாட்டில் உள்ள இரட்டபாடி ஏழரை இலக்கம் என்ற பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். இதன் விளைவாகச் சோழநாட்டின் எல்லை வடக்கில் துங்கபத்திரை நதி வரையிலும் பரவியது.
முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் மீது போர்
இராசராசன் பெற்ற வெற்றிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது மேற்குக் கடலில் இருந்த முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் என்ற தீவுகளை மாபெரும் வலிமை வாய்ந்த கப்பற்படையுடன் சென்று தாக்கிக் கைப்பற்றியதாகும். இத்தீவுகள் தற்போது அரபிக்கடலில் உள்ள மாலத்தீவுகளே ஆகும்.
நிருவாகப் பணி
முதலாம் இராசராசன் போரில் மட்டுமின்றி, நிருவாகத்திலும் சிறந்து விளங்கினான். தன்னுடைய மகன் இராசேந்திரனைத் தன்னோடு அரசியலில் ஈடுபடுமாறு செய்து, அவனை நாட்டிற்குப் பெரும்பணி புரியும்படி செய்தான். மத்திய அரசைப் பலப்படுத்தியதோடு நில்லாது, அதை முறைப்படி சீர்ப்படுத்தியும் அமைத்தான். மத்திய அரசு அலுவலர்கள் கிராம மன்றங்களின் செயல்பாட்டை மேற்பார்வையிட்டு வந்தனர். இதனால் கிராம மன்றங்களின் ஆட்சி நல்லமுறையில் நடைபெற்றது.
இராசராசனது ஆட்சியில் சோழநாட்டில் உள்ள நிலம் முழுவதும் அளக்கப்பட்டது. நிலத்தை அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கோல் 16 சாண் நீளமுடையதாக இருந்தது. அது உலகளந்த கோல் எனப்பட்டது. நில வரியை ஒழுங்காக வாங்கவே இச்செயல் மேற்கொள்ளப்பட்டது. இச்செயலால் இராசராசன் உலகளந்தான் என்ற சிறப்புப் பெயர் பெற்றான். மேலும் இராசராசன் நீர்ப்பாசன வசதிக்காகக் குளங்கள், ஏரிகள் பல வெட்டிக் குடி மக்களின் நன்மதிப்பைப் பெற்றான்.
கட்டடக் கலைப்பணி
இராசராசன் கட்டடக் கலைக்கு அருந்தொண்டுகள் பல செய்தான்.தஞ்சையில் இவன் கட்டிய பிரகதீசுவரர் கோயில் உலகப்புகழ் வாய்ந்தது. இதன் கோபுரம் 216 அடி உயரம் உடையது. இதன் உச்சியில் உள்ள விமானம் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது. இதன் எடை 80 டன் ஆகும். இவன் கட்டிய இக்கோயில் தென்னிந்தியக் கட்டடக் கலைக்குத் தக்க சான்றாகும்.
சமயப்பொறை
இராசராசன் சைவ சமயத்தைச் சார்ந்திருந்தான். ஆயினும் இவன் எல்லாச் சமயங்களையும் சமமாகவே நடத்தினான். நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரம் ஒன்று கட்டுவதற்கு இவன் ஆதரவு அளித்தான். தான் கட்டிய பிரகதீசுவரர் கோயிலில் விஷ்ணுசிலை இடம்பெறச் செய்தான். மேலும் திருமாலுக்குப் பல கோயில்களையும் எழுப்பினான்.
இளமைக் கால வெற்றிகள்
இராசேந்திரன் முடி சூட்டிக்கொள்வதற்கு முன்னரே தந்தையுடன் நிருவாகத்தில் ஈடுபட்டுப் பயிற்சி பெற்றவன் ஆவான். இராசராசன் ஈழநாட்டின் மீது படையெடுத்தபோதும், மேலைச் சாளுக்கிய நாட்டின்மீது படையெடுத்தபோதும் அப்படைகளுக்குத் தலைமை தாங்கிச் சென்று, அந்நாடுகளை வெற்றி கொண்டான். இதனால் தனது இளமைப் பருவத்திலேயே தந்தையைப் போன்று தனயனும் சிறந்த வீரன் என்பதை நிரூபித்துக் காட்டினான். இவை யாவும் இராசேந்திரனின் பிற்கால அரசியல் வாழ்க்கைக்கு முன் அனுபவங்களாக அமைந்தன. இராசராசன் கி.பி. 1012 இல் இராசேந்திரனைத் தன் வாரிசாக நியமித்து, அவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினான். கி.பி. 1014 இல் இராசராசன் மறைந்ததும், சோழப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பு முழுவதும் இராசேந்திரன் கைக்கு வந்தது. அப்போது சோழப்பேரரசு பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. அதை மேலும் விரிவுபடுத்திய பெருமை உடையவனாய் இராசேந்திரன் விளங்கினான்.
ஈழம் முழுவதும் கைப்பற்றுதல்
இராசராசன் ஈழத்தின் வடபகுதியை மட்டுமே வென்று ஆட்சி புரிந்தான். ஆனால் இராசேந்திரனோ ஈழத்தின் தென்பகுதியையும் வென்று, ஈழநாடு முழுவதையும் சுமார் 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
பாண்டிய, சேர நாடுகளைக் கைப்பற்றுதல்
இராசராசன் பாண்டிய நாட்டையும், சேர நாட்டையும் கைப்பற்றியிருந்தாலும், அவன் ஆட்சிக்குப் பின்பு அவை சோழர் பிடியிலிருந்து நழுவிவிட்டன. எனவே இராசேந்திரன் பெரும்படையுடன் சென்று போரிட்டுப் பாண்டிய நாட்டையும், சேர நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான். அந்நாடுகளில் சோழரின் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டினான்.
மேலைச் சாளுக்கியருடன் போர்
ஒவ்வொரு சோழ மன்னருக்கும் மேலைச் சாளுக்கியர் தொல்லை தந்து வந்தனர். எனவே சோழ – மேலைச் சாளுக்கியப் போர் தொடர்ந்து நடைபெறுவது தொடர்கதையாயிற்று. இராசேந்திரன் மேலைச் சாளுக்கியர்மேல் படையெடுத்துச் சென்றான். முயங்கி என்னும் இடத்தில் நடந்த போரில் மேலைச் சாளுக்கிய மன்னன் சயசிங்கன் என்பவனை வென்று அவனுடைய இரட்டபாடி ஏழரை இலக்கத்தைக் கைப்பற்றினான்.
கங்கைப் படையெடுப்பு
இவனது ஆட்சியின் பதினோராம் ஆண்டில் வடநாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்தது. மாபெரும் வீரனாகத் திகழ்ந்த இராசேந்திரன் வடக்கே படையெடுத்துச் சென்று கங்கை நீரைக் கொண்டு வந்து தனது சோழ நாட்டைத் தூய்மைப்படுத்த விரும்பினான். சோழர்க்கு உறவுநாடான வேங்கிநாடு, கோதாவரி கிருஷ்ணா ஆறுகளுக்கு இடையில் உள்ள பகுதியாகும். வேங்கிக்குத் தெற்கில் இருந்த நாடுகள் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால் முதலாம் இராசேந்திரனின் வடநாட்டுப் படையெடுப்பு வேங்கிக்கு வடக்கே இருந்து தொடங்கியது. அங்கிருந்து கலிங்கம், ஒட்டவிசயம் என்னும் நாடுகளின் வழியாகச் சென்ற சோழப்படை வங்காள நாட்டைத் தாக்கியது. வங்காளத்தை அப்போது மகிபாலன் என்பவன் ஆண்டு வந்தான். சோழப்படை மகிபாலனைப் புறங்காட்டி ஓடச் செய்தது. மேலும் கங்கை செல்லும் வழியில் பல வடநாட்டு மன்னர்களோடும் போர் செய்து வெற்றி கண்டது; பின்பு கங்கையாற்று நீரை வடநாட்டு மன்னர்களின் தலையில் சுமக்கச் செய்து சோழநாடு திரும்பியது. இராசேந்திரன் கங்கையில் இருந்து கொண்டு வந்த நீரைத் தான் புதிதாக உருவாக்கியிருந்த தலைநகரத்தில் வெட்டுவித்த ஏரியில் நிரப்பி, அந்த ஏரிக்குச் சோழகங்கம் என்ற பெயரைச் சூட்டி வெற்றிவிழா நடத்தினான். தனக்குக் கங்கை கொண்ட சோழன் என்ற சிறப்புப் பெயரையும் சூடிக்கொண்டான். புதிய தலைநகரத்துக்குக் கங்கை கொண்ட சோழபுரம் எனப் பெயர் இட்டான்.அந்நகரில், தன் தந்தை தஞ்சையில் கட்டிய பிரகதீசுவரர் கோயில் போன்ற அமைப்புடைய ஒரு கோயிலைக் கட்டினான். தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் கோபுரம் 216 அடி உயரம் உடையது. கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கோயில் கோபுரம் 185 அடி உயரம் உடையது. கங்கை கொண்ட சோழபுரம் தற்போது தமிழகத்தில் அரியலூருக்கு அருகில் ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கிறது.
கடார வெற்றி
இராசேந்திரனின் ஆட்சியின் முற்பகுதியில் சோழநாட்டிற்கும் கடாரத்திற்கும் இடையே நல்லுறவு இருந்தது. (கடாரம் – கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றாகத் தற்போது சுமத்ரா என அழைக்கப்படும் தீவு). இராசேந்திரன் சீன நாட்டிற்குச் சோழத் தூதுவர்களை அனுப்பினான். இதனால் சோழநாடு சீனநாட்டோடு வாணிபத் தொடர்பினைப் பெருமளவு பெற்றது. அப்போது கடாரத்தை ஆண்டுவந்த ஸ்ரீவிஜயன் என்ற மன்னன், சோழநாட்டுக்கும் சீனநாட்டிற்கும் இடையிலே நடந்து வந்து வாணிபத்தைத் துண்டித்துவிட முயன்றான். இதனால் கோபம் கொண்ட இராசேந்திரன் மாபெரும் வலிமை வாய்ந்த கப்பற்படையுடன் கடாரத்தின் மீது போர் தொடுத்தான். கடார மன்னன் ஸ்ரீவிஜயனைப் போரில் வென்று, அங்குச் சோழர் ஆட்சியை நிறுவித் தாயகம் திரும்பினான். கடாரத்தை வென்று கைப்பற்றியதால், கடாரம் கொண்டான் என்ற சிறப்புப் பெயர் பெற்றான்.
முதலாம் இராசேந்திரன் கடாரம் கொண்ட வெற்றியைக் கலிங்கத்துப்பரணி,
குளிறு தெண்திரைக் குரை கடாரமும்
கொண்டு மண்டலம் குடையுள் வைத்தும்
(கலிங்கத்துப்பரணி, 202)
என்று கூறுகிறது. இதற்குப் பொருள் ‘ஒலிக்கின்ற தெளிந்த அலைகளையும், பலவகை ஒலிகளையும் உடைய கடாரத்தைக் கைப்பற்றி அதைத் தன் குடையின்கீழ் இராசேந்திரசோழன் வைத்தான்’ என்பதாகும்.
முதலாம் இராசேந்திரனுக்கு இராசாதிராசன், இராசேந்திரன், வீரராசேந்திரன் என்ற மூன்று ஆண்மக்கள் இருந்தனர். இம்மூவரும் முதலாம் இராசேந்திரன் மறைவுக்குப் பின்னர், ஒருவருக்குப்பின் ஒருவராகச் சோழநாட்டின் அரியணை ஏறி ஆட்சி செய்தவர்கள் ஆவர். மேலும் முதலாம் இராசேந்திரனுக்கு அருண்மொழி நங்கை, அம்மங்காதேவி என்ற இரண்டு பெண்மக்கள் இருந்தனர். இவர்களுள் அம்மங்காதேவியைக் கீழைச் சாளுக்கிய வேங்கி மன்னன் இராசராச நரேந்திரன் என்பவனுக்கு மணம் முடித்துத் தந்தான். இதனால் முதலாம் இராசராசன் காலத்தில் முகிழ்த்த சோழ – கீழைச் சாளுக்கிய உறவு இவன் காலத்தில் மேலும் வலுப்பெற்றது.
ஈழத்துப் போர்
முதலாம் இராசாதிராசன் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நேரத்தில், ஈழத்தில் சோழரின் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சிகள் நடந்தன. இவன் கடுமையான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு அக்கிளர்ச்சிகள் அனைத்தையும் ஒடுக்கினான்.
மேலைச் சாளுக்கியருடன் போர்
சோழ நாட்டுக்கு மேலைச் சாளுக்கியரின் தொல்லை முதலாம் இராசேந்திரன் காலத்தைப் போலவே, முதலாம் இராசாதிராசன் காலத்திலும் தொடர்ந்தது. எனவே அவர்களை வென்று அடக்கும் பொருட்டு, மேலைச் சாளுக்கிய நாட்டின் மீது இராசாதிராசன் படையெடுத்துச் சென்றான். அப்போது அந்நாட்டை ஆண்டு வந்த முதலாம் சோமேசுவரன் என்பவனை எதிர்த்துப் போரிட்டான். அப்போரில் இராசாதிராசன் மேலைச் சாளுக்கிய மன்னனையும், அவனுக்குத் துணையாக வந்த மன்னர்களையும் தோற்கடித்தான். காம்பிலி என்னும் நகரில் இருந்த சாளுக்கிய அரண்மனையைத் தகர்த்தான். அவர்களின் தலைநகராகிய கல்யாணியையும் மண்ணோடு மண்ணாக்கினான்.
ஆயினும், மேலைச் சாளுக்கியருடன் மேலும் பல போர்கள் நடந்தன. இறுதியாகக் கி.பி. 1054இல் கொப்பம் என்னும் ஊரில் நடைபெற்ற போரில் முதலாம் இராசாதிராசனும், அவனது தம்பி இரண்டாம் இராசேந்திரனும் இணைந்து ஈடுபட்டனர். (கொப்பம், கிருஷ்ணா நதிக்கரையில் உள்ளது) மேலைச் சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரன் இம்முறையும் சோழர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்காமல் தோற்றோடினான். ஆனால் போர்க்களத்தில் யானை மேல் இருந்து போர் புரிந்த முதலாம் இராசாதிராசன் பகைவர்களின் அம்புகள் தாக்கிப் புண்பட்டு வீரமரணம் எய்தினான். இதனால் அவனைக் கல்வெட்டுகள் ஆனைமேல் துஞ்சிய மன்னன் என்று புகழ்கின்றன. முதலாம் இராசாதிராசன் மறைந்ததும் உடனடியாக அவன் தம்பி இரண்டாம் இராசேந்திரன் போர்க்களத்திலேயே சோழப் பேரரசனாக முடி சூடிக் கொண்டான்.
இரண்டாம் இராசேந்திரன் (கி.பி. 1052-1064)
இராசாதிராசனுக்குப் பின்னர் அவனது தம்பி இரண்டாம் இராசேந்திரன் சோழநாட்டு மன்னன் ஆனான். இவன் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தினான்.
கொப்பம் என்னும் இடத்தில் தோல்வியுற்று ஓடிய முதலாம் சோமேசுவரன், தான் அடைந்த அவமானத்தை நினைத்து, அதனைப் போக்கிக் கொள்ளப் பெரும்படை திரட்டிக்கொண்டு வந்தான். முடக்காறு என்னும் இடத்தில் இரண்டாம் இராசேந்திரனை எதிர்த்துநின்று போர் செய்தான். (முடக்காறு கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ளது.) இப்போரிலும் அவன் இரண்டாம் இராசேந்திரனிடம் தோல்வி அடைந்து மேலும் அவமானத்திற்கு ஆளானான்.
இரண்டாம் இராசேந்திரன் அறப்பணிகள் பல செய்துள்ளான். திருவரங்கம் கோயிலுக்கு நன்கொடைகள் வழங்கினான். அக்கோயிலைப் பழுது பார்த்தான். கோயில்களில் பாரதமும், இராமாயணமும் விளக்கிக் கூறுவதை ஊக்குவித்தான்.
மேலைச் சாளுக்கியருடன் போர்
மேலைச் சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரன் தனக்கும் தன் குலத்திற்கும் தொடர்ந்து ஏற்பட்ட பெரும்பழியைப் போக்கிக்கொள்ள எண்ணினான். கூடல் சங்கமம் என்னும் இடத்தில் படையுடன் வந்து நேருக்குநேர் நின்று தன்னோடு போர்புரிய வருமாறு வீரராசேந்திரனுக்கு அறை கூவல் விடுத்தான். (கூடல் சங்கமம் கிருஷ்ணா, துங்கபத்திரை ஆகிய இரண்டு ஆறுகளும் கூடும் இடத்தில் உள்ளது). வீரராசேந்திரன் அவ்விடத்தில் பெரும்படையுடன் சென்று ஒரு திங்கள் வரை காத்திருந்தான். ஆனால் சோழர் படை இருந்த பக்கம் முதலாம் சோமேசுவரன் வரவேயில்லை. பின்பு வீரராசேந்திரன் துங்கபத்திரை ஆற்றின் கரையில் வெற்றித் தூண் ஒன்றை நாட்டிவிட்டுத் தன் நாடு திரும்பினான். முதலாம் சோமேசுவரன் கொடும் நோய்க்குள்ளாகி, மருத்துவம் பல செய்தும் பலன் அளிக்காததால் துங்கபத்திரை ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான் என்று மைசூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. தனது அடுக்கடுக்கான தோல்விகளைத் தாங்கமுடியாத காரணத்தால் கூட அவன் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கூறுகின்றனர்.
மேலைச் சாளுக்கியருடன் மண உறவு
மேலைச் சாளுக்கிய நாட்டில் முதலாம் சோமேசுவரனுக்குப் பின்னர் அவனுடைய மூத்த மகன் இரண்டாம் சோமேசுவரன் அரியணை ஏறினான். இவனை எதிர்த்து அவனுடைய தம்பி ஆறாம் விக்கிரமாதித்தன் என்பவன் அரியணை மீது உரிமை கொண்டாடினான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மேலைச் சாளுக்கியருடன் தொடர்ந்து போரிடுவதை விட்டு உறவு ஏற்படுத்திக் கொள்ளலாம் என எண்ணினான் வீரராசேந்திரன். எனவே வாரிசு உரிமைப் போரில் வீரராசேந்திரன் ஆறாம் விக்கிமாதித்தனை ஆதரித்தான். வீரராசேந்திரனின் தலையீட்டுக்கு அஞ்சி, இரண்டாம் சோமேசுவரன் தன் நாட்டை இரண்டாகப் பங்கிட்டு, ஒரு பாதியைத் தன் தம்பி ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு அளித்துவிட்டு, எஞ்சிய பாதியை மட்டும் தன் ஆளுகைக்குள் வைத்துக் கொண்டான். வீரராசேந்திரன் தன் மகளை ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். இத்திருமணத்தின் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு ஏற்பட்டது.
வீரராசேந்திரன் பல அறப்பணிகள் செய்தான். சிதம்பரம் கோயிலுக்கு நன்கொடைகள் வழங்கினான். பிராமணர்களுக்குப் பரிசில்கள் வழங்கிக் கௌரவித்தான். இவனது காலத்தில் புத்தமித்திரர் என்பவர் வீரசோழியம் என்னும் இலக்கண நூலை இயற்றினார்.
அதிராசேந்திரன் (கி.பி. 1070)
வீரராசேந்திரன் மறைவுக்குப் பின்பு அவன் புதல்வன் அதிராசேந்திரன் அரியணை ஏறினான். அரியணை ஏறிய சில மாதங்களிலேயே இவன் வாழ்நாள் முடிந்துபோனது. இவன் நோய்வாய்ப்பட்டு இறந்தான் என்றும், உள்நாட்டுக் கிளர்ச்சியில் கொல்லப்பட்டான் என்றும் இரு கருத்துகள் நிலவுகின்றன.
அதிராசேந்திரன் ஆட்சியுடன், விசயாலய சோழன் பரம்பரையில் வந்த சோழ மன்னர்களின் ஆட்சி முடிவடைந்து விடுகிறது. அதற்குப் பின்னர்ப் புதிய பரம்பரை ஒன்று தோன்றிச் சோழநாட்டை ஆட்சி செய்யத் தொடங்கியது.
கீழைச் சாளுக்கிய நாட்டை வேங்கியைத் தலைநகராகக் கொண்டு இராசராச நரேந்திரன் (கி.பி. 1011-1060) ஆண்டுவந்தான். இவன் முதலாம் இராசராச சோழனுடைய மகள் குந்தவைக்கும் கீழைச் சாளுக்கிய அரசன் விமலாதித்தனுக்கும் பிறந்தவன் ஆவான். முதலாம் இராசேந்திர சோழன் தன் மகள் அம்மங்காதேவியை இராசராச நரேந்திரனுக்கு மணம் முடித்துத் தந்திருந்தான். இராசராச நரேந்திரனுக்கும் அம்மங்காதேவிக்கும் பிறந்தவன்தான் இந்த இரண்டாம் இராசேந்திரன்.
இவன் சோழ நாட்டில் தாய் வீட்டில் பிறந்து, தாய்ப்பாட்டனுடன் வளர்ந்து, தமிழ் கற்று, அதனுடன் வேறு பல கலைகளையும் பயின்றவன் ஆவான். எனவே இவன் இளம்பருவத்திலேயே சோழநாட்டு மக்களின் அன்பைப் பெற்றிருந்தான். பின்பு வேங்கி சென்று, தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே இளவரசுப் பட்டம் சூட்டப் பெற்றான். எனினும் கி.பி. 1060 இல் தந்தை இராசராச நரேந்திரன் இறந்தது முதல் சுமார் பத்து ஆண்டுகள் இவனது வரலாறு அறியப்படவில்லை. இக்காலத்தில் கீழைச் சாளுக்கிய நாட்டை இரண்டாம் சக்திவர்மன், ஏழாம் விசயாதித்தன் ஆகியோர் அடுத்தடுத்து ஆண்டனர் எனத் தெரிகிறது. எனினும் இவர்கள் இருவருடைய வரலாறும் சரியாக அறியப்படவில்லை.
கி.பி. 1070 இல் அதிராசேந்திரன் வாரிசு இல்லாமல் இறந்துபட்ட நிலையில், சோழநாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் சோழநாடு முடிசூடுவதற்கு உரிய அரச மரபினர் எவரும் இல்லாமல் அல்லலுற்றது. இந்தச் சூழ்நிலையில் இரண்டாம் இராசேந்திரன் சோழநாட்டின் அரசுரிமையைப் பெற எண்ணி வேங்கியிலிருந்து வந்தான். இவனது வருகை, காலத்தே பெய்த மழை போலச் சோழநாட்டிற்குப் பயன் தருவதாயிற்று. சோழநாட்டு அமைச்சர்கள் ஆட்சியை இவனுக்கே அளிக்க முடிவுசெய்து முடிசூட்டினர். முடி சூட்டியவுடன் இரண்டாம் இராசேந்திரன் முதலாம் குலோத்துங்கன் என்ற பட்டப்பெயர் பெற்றான். இவனை முதலாகக் கொண்டு சோழப் பேரரசைக் கீழைச் சாளுக்கிய – சோழப் பரம்பரையினர் ஆளத் தொடங்கினர்.
முதலாம் குலோத்துங்கன் பரம்பரையில் வந்து சோழ நாட்டை ஆட்சிபுரிந்தவர்கள் மொத்தம் எண்மர் ஆவர். அவர்கள், முதலாம் குலோத்துங்கன், அவன் மகன் விக்கிரமசோழன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன், அவனது மைந்தன் இரண்டாம் இராசராசன், விக்கிரசோழனுடைய மகள் வயிற்றுப் பேரன் இரண்டாம் இராசாதிராசன், அவனை அடுத்து மூன்றாம் குலோத்துங்கன், அவன் மகன் மூன்றாம் இராசராசன், அவன் மகன் மூன்றாம் இராசேந்திரன் என்போர் ஆவர். இவர்களைப் பற்றி ஒருவர்பின் ஒருவராகக் காண்போம்.
மேலைச் சாளுக்கியருடன் போர்
இவன் சோழ நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற காலத்தில், மேலைச் சாளுக்கிய நாட்டின் ஒரு பகுதியை ஆறாம் விக்கிரமாதித்தன் என்பவன் ஆண்டு வந்தான். இவன் வேங்கி நாட்டைத் (கீழைச் சாளுக்கிய நாட்டை) தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவர வேண்டும் என எண்ணியிருந்தான். ஆனால் சோழ நாடும் வேங்கி நாடும் முதலாம் குலோத்துங்கனின் ஒரு குடைக்கீழ் இருந்து வந்தது. இது தன்னுடைய எண்ணம் நிறைவேறத் தடையாக இருப்பதை உணர்ந்தான். எனவே அவன் சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். முதலாம் குலோத்துங்கனும் ஆறாம் விக்கிரமாதித்தனை எதிர்ப்பதற்குப் பெரும்படையுடன் சென்றான். அது மட்டுமன்றி, மேலைச் சாளுக்கிய நாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டுவந்த இரண்டாம் சோமேசுவரனைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். இந்தச் சோமேசுவரன் ஆறாம் விக்கிரமாதித்தனுடைய தமையன் என்பதை ஏற்கெனவே கண்டோம். மைசூர்ப் பகுதியில் கோலார் என்னுமிடத்தில் கடும்போர் நடைபெற்றது. முதலாம் குலோத்துங்கன் வெற்றி பெற்று, ஆறாம் விக்கிரமாதித்தனைத் துங்கபத்திரை ஆற்றிற்கு அப்பால் துரத்தினான். ஆனால் ஆறாம் விக்கிரமாதித்தன் முதலாம் குலோத்துங்கன் சோழ நாட்டிற்குத் திரும்பிச் சென்றவுடன், பெரும்படை திரட்டிச் சென்று இரண்டாம் சோமேசுவரனோடு போர் செய்து அவனைத் தோற்கடித்துச் சிறை பிடித்தான். இதன் விளைவாக ஆறாம் விக்கிரமாதித்தன் மேலைச் சாளுக்கிய நாடு முழுவதிற்கும் மன்னனாக முடி சூடிக்கொண்டான்.
பாண்டிய, சேர நாடுகளின் மீது போர்
அதிராசேந்திரன் மறைவை அடுத்துச் சோழநாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்திப் பாண்டியரும் சேரரும் தங்கள் நாடுகளைச் சோழர் ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினர். எனவே முதலாம் குலோத்துங்கன் இவ்விரு நாடுகள் மீதும் படையெடுத்துச் சென்றான். அந்நாடுகளை ஆண்டுவந்த மன்னர்களோடு போர் செய்து அவர்களை வெற்றி கொண்டான். இருப்பினும் அந்நாடுகளை அவர்களுக்கே திருப்பித் தந்து, அவர்களை ஆண்டுதோறும் சோழ நாட்டிற்குத் திறைப்பொருளை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தான்.
இலங்கையை இழத்தல்
இலங்கையில் சோழர் ஆட்சி அகன்று, தன்னுடைய ஆட்சி ஏற்படவேண்டும் என்று விசயபாகு என்பவன் நீண்டகாலமாக முயன்றுவந்தான். அதிராசேந்திரன் மறைவினால் சோழநாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, கி.பி. 1070 இல் அனுராதபுரத்தைக் கைப்பற்றி இலங்கை முழுவதிற்கும் மன்னனாக விசயபாகு முடி சூடிக் கொண்டான். இலங்கையில் இருந்த சோழர் படை விசயபாகுவுடன் கடும்போர் செய்து வெற்றி பெற்றது. எனினும் விசயபாகு மீண்டும் பெரும்படை திரட்டிச்சென்று அனுராதபுரம், பொலன்னருவை ஆகிய இடங்களைத் தாக்கி, அங்கிருந்த சோழர் படையைத் தோற்கடித்து இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டான். தோல்வியடைந்த சோழர் படை தாயகம் திரும்பியது. முதலாம் இராசராசன் காலம் முதல் சோழப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இலங்கை, முதலாம் குலோத்துங்கன் காலத்தில் சோழர்களின் பிடியிலிருந்து விலகித் தன்னுரிமை தேடிக்கொண்டது.
தென்கலிங்கப் போர்
முதலாம் குலோத்துங்கன் கலிங்க நாட்டை எதிர்த்து இரண்டு போர்கள் செய்து வெற்றி பெற்றான். இவற்றில் முதல் போர் தென்கலிங்கப் போர் ஆகும். இது இவனது ஆட்சியின் 26ஆம் ஆண்டில் (கி.பி. 1096 இல்) நடைபெற்றது. அப்பொழுது தென் கலிங்க நாட்டை வீமன் என்பவன் வேங்கிக்கு உட்பட்ட சிற்றரசனாய் ஆண்டு வந்தான். அதே நேரத்தில் முதலாம் குலோத்துங்கன் மகன் விக்கிரமசோழன் வேங்கியின் அரசுப் பிரதிநிதியாக இருந்து வந்தான். வீமன் தன்னாட்சி பெறுவதற்காக வேங்கியின்மீது படையெடுத்தான். விக்கிரமசோழன் பெரும்படையுடன் சென்று வீமனோடு போர் செய்து அவனை வென்றான். தோல்வியுற்ற வீமன் சிற்றரசனாகவே இருந்து வேங்கிக்குத் திறை செலுத்த ஒப்புக்கொண்டான். இதுவே முதல் கலிங்கப்போர்.
வடகலிங்கப் போர்
முதலாம் குலோத்துங்கன் தனது ஆட்சியின் 42 ஆம் ஆண்டில் (கி.பி. 1112 இல்) மற்றொரு கலிங்கப் போரை மேற்கொண்டான். இது வடகலிங்கப் போர் ஆகும். வடகலிங்க நாட்டு அரசன் அனந்தவர்மன் சோழருக்கு உட்பட்ட வடகலிங்கத்தைத் திறை செலுத்தி ஆண்டுவந்தான். அவன் தான் செலுத்த வேண்டிய திறையைத் தொடர்ந்து இருமுறை செலுத்தாதலால், அவனை வென்று திறை வாங்கி வருமாறு முதலாம் குலோத்துங்கன் தன் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் தலைமையில் பெரும்படை ஒன்றை அனுப்பினான். கருணாகரத் தொண்டைமான் படையானது காஞ்சியிலிருந்து புறப்பட்டது; பாலாறு, வடபெண்ணை, கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளைக் கடந்து சென்று வடகலிங்க நாட்டைத் தாக்கியது. அப்போது நடந்த போரில் அனந்தவர்மன் தோல்வியடைந்து புறங்காட்டி ஓடினான். மாபெரும் வெற்றி கண்ட கருணாகரத் தொண்டைமான் அளவற்ற செல்வம், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கைப்பற்றிக் கொண்டு சோழநாடு திரும்பினான். இந்த மாபெரும் கலிங்க வெற்றியைப் புகழ்ந்து சயங்கொண்டார் என்ற புலவர் கலிங்கத்துப் பரணி என்ற நூலை இயற்றினார்.
கங்கபாடி, நுளம்பபாடி நாடுகளை இழத்தல்
முதலாம் குலோத்துங்கன் தன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் முதிர் வயது காரணமாகச் சோழப் பேரரசின் சில பகுதிகளை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. கி.பி. 1116 இல் விஷ்ணுவர்த்தன் என்ற போசள அரசன் (
மேலும் முதலாம் குலோத்துங்கன் தன் தந்தையின் நாடான வேங்கியையும் இழந்தான். வேங்கியில் தன்னுடைய மகன் விக்கிரமசோழன் என்பவனை அரசுப் பிரதிநிதியாக நியமித்து ஆட்சி புரிந்துவரும்படி செய்தான் முதலாம் குலோத்துங்கன். விக்கிரமசோழன் கி.பி. 1093 முதல் வேங்கி நாட்டைச் சோழருடைய அரசு பிரதிநிதியாக இருந்து ஆண்டு வந்தான். பின்பு, முதலாம் குலோத்துங்கன் தன் ஆட்சிக் காலத்திலேயே விக்கிரம சோழனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுவதற்காக கி.பி. 1118 இல் அவனைச் சோழநாட்டுத் தலைநகருக்கு வரவழைத்துக் கொண்டான். விக்கிரமசோழன் இருந்த இடத்தில் தெலுங்குச் சோழர்களில் ஒருவனை அரசு பிரதிநிதியாக நியமித்து வேங்கி நாட்டை ஆண்டு வரும்படி செய்தான். முதலாம் குலோத்துங்கனின் இச்செயலை வேங்கி நாட்டு மக்கள் விரும்பவில்லை. இதனால் வேங்கி நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டது. வேங்கியை மேலைச் சாளுக்கிய நாட்டோடு இணைத்துக்கொள்ள வேண்டுமென்று நெடுங்காலமாக முயன்று கொண்டிருந்த ஆறாம் விக்கிரமாதித்தன் இதைத் தக்க வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டான். வேங்கி நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டை எளிதாக வென்று கைப்பற்றிக் கொண்டான். இதனால் முதலாம் குலோத்துங்கன்மேல் இருந்த தன் பரம்பரை வஞ்சத்தை ஆறாம் விக்கிரமாதித்தன் தீர்த்துக்கொண்டான்.
அயல்நாட்டுத் தொடர்பு
முதலாம் குலோத்துங்கன் சீனம், கம்போடியா, கடாரம் ஆகிய கடல் கடந்த நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தான். இவன் தன் ஆட்சிக்காலத்தில் சீன நாட்டோடு வாணிபத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக அந்நாட்டிற்கு 72 பேர் அடங்கிய ஒரு தூதுக் குழுவினைக் கி.பி. 1077 இல் அனுப்பி வைத்தான். கம்போடிய மன்னன், கடாரத்து அரசன் ஆகியோர் இவனுடைய நண்பர்கள் ஆவர்.
சுங்கம் தவிர்த்தல்
முதலாம் குலோத்துங்கன் தன் ஆட்சியின்போது செய்த பாராட்டற்குரிய அரிய செயல் நாட்டில் இருந்துவந்த சுங்க வரியை நீக்கியதே ஆகும். சுங்கவரி இல்லாத நாட்டில் வாணிபம் பெருகும்; பொருள்கள் வந்து குவியும்; விலைகள் குறையும். இதனாலேயே அவன் இவ்வாறு செய்தான். சுங்கவரி நீக்கியதால் மக்கள் அவனை வாழ்த்திச் சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைத்தனர்.
சமயப் பணி
முதலாம் குலோத்துங்கன் தன்னுடைய முன்னோர்களைப் போலச் சிவபெருமானிடத்தே எல்லையில்லா அன்பு கொண்டிருந்தான். சிவபெருமானிடத்தில் கொண்ட அன்பால் திருநீற்றுச் சோழன் என்ற விருதுப்பெயர் இவனுக்கு வழங்கியது. சைவசமயம் சார்ந்தவனாக இருந்தாலும், வைணவம், பௌத்தம் போன்ற பிற சமயங்களையும் ஆதரித்தான். இவ்வேந்தனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் சயங்கொண்டார். இவர் முதலாம் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் புகழ்ந்து கலிங்கத்துப்பரணி என்ற நூலை எழுதினார்.
விக்கிரம சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் ஒட்டக்கூத்தர். இவர் விக்கிரம சோழன் மீது உலா பாடியுள்ளார். அது விக்கிரம சோழன் உலா என்பதாகும்.
சோழ மன்னர்கள் அனைவரும் சைவ சமயத்தினராக இருந்தாலும், சமயப் பொறையுடன் அனைத்துச் சமயங்களையும் மதித்து வாழ்ந்தனர். ஆனால் இவன் ஒருவன் மட்டுமே வைணவ சமயத்தாரிடம் பகைமை பாராட்டினான். இதனால் இவன் காலத்தில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே சண்டைகள் மூண்டன. இவன் சிதம்பரம் நடராசர் கோயிலில் இருந்த கோவிந்தராசப் பெருமாளின் சிலையைப் பெயர்த்தெடுத்து, அதை வங்கக் கடலில் வீசி எறிந்தான். இவனது இச்செயல் வைணவர் உள்ளங்களைக் கொதிப்புக்கு உள்ளாக்கியது.
இவனது அவைக்களப் புலவராய் இருந்தவரும் ஒட்டக்கூத்தரே ஆவார். அவர் இவன் மீது இராசராசன் உலா என்ற நூலைப் பாடியுள்ளார். ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் என்னும் மூன்று சோழ மன்னர்களின் அவைக்களப் புலவராகவும் இருந்த பெருமை உடையவர் ஆவார். இவர் இம்மூன்று சோழ மன்னர்கள் மீது பாடிய மூன்று உலா நூல்கள் மூவருலா என்ற பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இவன் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் இராசராசேச்சுவரம் என்னும் பெயரில் புகழ்பெற்ற சிவன் கோயில் ஒன்றைக் கட்டினான்.
இவன் காலத்தில் பாண்டிய நாட்டில் பராக்கிரம பாண்டியன் என்பவனுக்கும், குலசேகர பாண்டியன் என்பவனுக்கும் இடையே அரசுரிமை பற்றி மோதல் ஏற்பட்டது. இதில் பாராக்கிரம பாண்டியன் இலங்கை மன்னன் பராக்கிரமபாகு என்பவனின் படை உதவியை நாடினான். ஆனால் இலங்கை மன்னனின் படை வருவதற்குள், குலசேகர பாண்டியன் பராக்கிரம பாண்டியனையும், அவன் மனைவியையும் கொன்றுவிட்டு, மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான். பராக்கிரம பாண்டியனின் மகன் வீரபாண்டியன் மட்டும் தப்பி ஓடி ஒரு மறைவிடத்தில் ஒளிந்துகொண்டான். இந்நிலையில் இலங்கை மன்னன் அனுப்பிய சிங்களப் படையினர் மதுரையை அடைந்தனர். சிங்களப் படையினர் குலசேகரப் பாண்டியன் படையுடன் போரிட்டு வெற்றி பெற்று, பராக்கிரம பாண்டியனுடைய மகனாகிய வீரபாண்டியனை அரியணை ஏற்றினர்.
போரில் தோல்வியுற்ற குலசேகர பாண்டியன் இராசாதிராசனிடம் படைத்துணை வேண்டினான். இராசாதிராசன் அனுப்பிய சோழப் படை வீரர்கள், பாண்டிய நாட்டில் வீரபாண்டியனுக்கு ஆதரவாக இருந்த இலங்கை மன்னனின் படைவீரர்களோடு போர் செய்து, அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தனர். பின்பு வீரபாண்டியனை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு, குலசேகர பாண்டியனை ஆட்சியில் அமர்த்தினர். அத்தோடு அமையாமல் சோழரின் படை வீரர்கள் இலங்கையின் மேலும் படையெடுத்துச் சென்றனர். இந்நிலையில் பராக்கிரமபாகு குலசேகர பாண்டியனைப் பாண்டிய மன்னனாக ஏற்றுப் பரிசில் அனுப்பினான். குலசேகர பாண்டியனும் சோழர் தனக்குச் செய்த நன்றியை மறந்து இலங்கை வேந்தன் பராக்கிரமபாகுவுடன் நட்பும், மணவினைத் தொடர்பும் கொண்டு சோழர்களையே எதிர்க்கலானான். குலசேகர பாண்டியன் தனக்குச் செய்த நம்பிக்கைத் துரோகத்திற்குப் பாடம் புகட்டக் கருதிய இராசாதிராசன், ஒரு படையை மதுரைக்கு அனுப்பிக் குலசேகர பாண்டியனை அரியணையிலிருந்து இறக்கி, வீரபாண்டியனை மீண்டும் பாண்டிய நாட்டு மன்னனாக்கினான்.
இரண்டாம் இராசாதிராசன் காலத்துக்கு முன்பு வரை பாண்டிய மன்னர்கள் சோழ வேந்தர்கட்குப் பெரும்பாலும் பரம்பரைப் பகைவர்களாகவே இருந்து வந்தனர். ஆனால் இவனது காலத்தே சோழ வேந்தர்கள் பாண்டிய மன்னர்களுக்கு மாறி மாறி உதவிபுரியும் நண்பர்களாக ஆனதைக் காணமுடிகிறது.
மூன்றாம் குலோத்துங்கன் உதவியால் அரசனான மாறவர்மன் விக்கிரம பாண்டியன் இறந்தபின், அவன் மகன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் பாண்டிய நாட்டு மன்னனானான். இவனும் நன்றி மறந்து சோழரின் மேலாட்சியை எதிர்க்கலானான். எனவே மூன்றாம் குலோத்துங்கன் கி.பி. 1203இல் பெரும்படையுடன் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தான். சடையவர்மன் குலசேகர பாண்டியனும் படைகொண்டு எதிர்த்தான். போர் முடிவில் பாண்டியன் தோல்வியைத் தழுவினான். போரில் வெற்றி பெற்ற மூன்றாம் குலோத்துங்கன் மதுரை நகரினுள் புகுந்து அங்குள்ள அரண்மனையின் மண்டபங்களை இடித்து மண்ணோடு மண்ணாக்கினான். தான் அடைந்த வெற்றியின் காரணமாக மதுரை நகரில் சோழ பாண்டியன் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டு வீராபிடேகம் (வீர+ அபிஷேகம் = வீராபிஷேகம், வீராபிடேகம்) செய்து கொண்டான். பாண்டிய மண்டலம் சோழ பாண்டியன் மண்டலம் எனப் பெயர் பெற்றது. எனினும் சில ஆண்டுகளுக்குப் பின்பு மூன்றாம் குலோத்துங்கன், பாண்டிய நாட்டைச் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்கே அளித்து, அவனைத் தனக்குத் திறை செலுத்தி அடங்கி ஆளும்படி செய்தான்.
மூன்றாம் குலோத்துங்கன் கொங்குநாட்டின் மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டை வென்று, அதன் தலைநகராகிய கருவூரையும் கைப்பற்றிக் கொண்டான்.
இவனுடைய ஆட்சிக்காலத்தில் சோழ நாட்டில் இரண்டு ஆண்டுகள் (கி.பி. 1201-1202) கொடும்பஞ்சம் ஒன்று ஏற்பட்டுக் குடிமக்கள் துன்புற்றனர். பஞ்ச நிவாரணப் பணிகள் பலவற்றை அரசின் சார்பில் இவன் மேற்கொண்டான். தனிப்பட்டவர்களும் நிவாரணப் பணியில் பங்குகொண்டனர்.
இவன் தலைசிறந்த வீரனாக விளங்கினான். தன் தந்தை காலத்தில் வீழ்ச்சியுற்ற சோழ நாட்டின் ஆட்சியையும் பெருமையையும் தன் ஆற்றல் கொண்டு ஓரளவு உயர்த்தினான்.
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின்மீது போர் தொடுத்து நிகழ்த்திய கொடுஞ்செயல்கள் உண்டாக்கிய அவமானத்தைத் தன் இளமைக் காலத்திலேயே கண்டு மனம் வெதும்பியவன் மூன்றாம் இராசேந்திரன். எனவே, பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து இழந்த பெருமையைப் பெறத் தக்க காலத்தை எதிர்பார்த்திருந்தான். பாண்டிய நாட்டில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் இறந்தான். அவனுக்குப் பின்பு இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் அரியணை ஏறினான். இப் பாண்டிய மன்னன் தன் முன்னோர் போல் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. இதுவே நல்ல தருணம் என்று எண்ணி மூன்றாம் இராசேந்திரன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று போரிட்டுப் பாண்டியனை வென்றான். தனது ஆட்சியை ஏற்றுக்கொண்டு அவனைத் திறை செலுத்துமாறு செய்தான். இப்போர் இவனுடைய தந்தையினுடைய ஆட்சியின் இறுதிக்காலத்தில் (கி.பி. 1251) இவனே முழுப்பொறுப்பு ஏற்று நடத்தியதாகும்.
பாண்டிய நாட்டில் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனை அடுத்து முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்பவன் அரியணை ஏறினான். இவன் கி.பி. 1257 இல் சோழநாட்டின் மீது படையெடுத்தான். போரில் மூன்றாம் இரசேந்திரனை வென்று தனக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாக்கிவிட்டான். அதற்குப் பிறகு மூன்றாம் இராசேந்திரன் தனது ஆட்சிக்காலம் முழுவதும் பாண்டியனுக்குத் திறை செலுத்தியே வாழ்ந்தான். ஆற்றலும் வீரமும் இருந்தும் சோழப் பேரரசின் வீழ்ச்சியை மூன்றாம் இராசேந்திரனால் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது.
மூன்றாம் இராசேந்திரனுக்குப் பின் சோழர் பரம்பரையே இல்லாது போயிற்று. சோழநாடு பாண்டிய நாட்டுடன் இணைந்தது. ஏறத்தாழ நானூறு ஆண்டு காலம் சோழநாடு என்ற பெயரில் தமிழகத்தை ஆட்சி செய்து வந்த பிற்காலச் சோழர்களின் ஆட்சி மறைந்தது. தமிழக வரலாற்றில் பிற்காலப் பாண்டியர் ஆட்சி மலரத் தொடங்கியது.
பிற்காலச் சோழ மன்னர்கள் தங்கள் ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தப் பலநாடுகளோடு போர் புரிந்தனர் என்பதை அறிந்துகொண்டீர்கள்.
பிற்காலச் சோழ மன்னர்கள் நாட்டில் நல்லாட்சியை அளித்தனர் என்பதையும், சைவ சமயத்தைப் பின்பற்றினர் என்பதையும் அறிந்துகொண்டீர்கள். மேலும் சீனம், கடாரம், கம்போடியா ஆகிய நாடுகளுடன் நட்புறவு கொண்டு வாணிபத்தைப் பெருக்கினர் என்பதையும் தெரிந்துகொண்டீர்கள்.
பிற்காலச் சோழ மன்னர்கள் கோயில்களைக் கட்டினர்; நீர்ப்பாசன வசதிக்காகக் குளங்களையும், ஏரிகளையும் வெட்டினர்; கட்டடக் கலைக்கு முக்கியத்துவம் அளித்தனர். முதலாம் இராசராசனும், அவன் மகன் முதலாம் இராசேந்திரனும் கோயில் கட்டடக் கலைக்கு மாபெரும் பணியாற்றினர். முதலாம் குலோத்துங்கன் சுங்க வரியைத் தீர்த்து அருளாட்சி புரிந்தான். இவற்றையெல்லாம் அறிந்துகொண்டீர்கள்.
பாடம் - 6
விசயாலயன் காலத்திலிருந்து சோழப் பேரரசு வீழ்ச்சியடைவது வரையிலும் நிலவிய பிற்காலச் சோழர் ஆட்சி முறையை அறிவதற்குக் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் பெரிதும் துணை புரிகின்றன.
மன்னன்
சோழப் பேரரசில் மன்னர் ஆட்சி நிலவி வந்தது. மன்னனின் மூத்த மைந்தன் முடிசூட வேண்டுமென்ற வழக்கம் சோழப் பேரரசில் நிலவியது. தகுதியுடையவர் அரியணையில் அமர வேண்டுமென்ற அடிப்படையில் சில சமயம் இம்முறை கைவிடப்பட்டதுண்டு. வாரிசு உரிமைப் போரைத் தவிர்ப்பதற்காக அல்லது அரசியல் அனுபவம் பெறுவதற்காக மன்னன் தனது மைந்தர்களுள் ஒருவனை இளவரசனாக நியமித்து அவனை நிருவாகத் துறையில் ஈடுபடச் செய்தான். மன்னனுக்கு நேரடி வாரிசு இல்லாதபோது, வாரிசு அல்லாத ஒருவன் வேந்தனாக நியமிக்கப்பட்டான். இதற்கு முதலாம் குலோத்துங்கன் சான்றாவான். சில நேரங்களில் மன்னன் மறைந்தபோது, அவனுடைய மகன் சிறுவனாக இருந்தால், அம்மன்னனுடைய உடன் பிறந்த சகோதரர்கள் ஆளும் உரிமை பெற்றனர்.
சோழப் பேரரசின் நிருவாகத் தலைமைப் பதவியை மன்னனே வகித்து வந்தான். மன்னன் கடவுளாக மதிக்கப்பட்டான். மேலும் மன்னன் ஆடம்பர வாழ்வில் ஈடுபட்டிருந்தான்.
மன்னன் தலைநகரத்தில் இருந்து நாட்டை ஆட்சி செய்து வந்தான். தஞ்சை, பழையாறை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய ஊர்கள் தலைநகரங்களாக விளங்கின. மேலும் நிருவாகத்தைச் செம்மையாகவும், நேர்த்தியாகவும் செய்ய வேண்டும் என்பதற்காகத் திருவாரூர், சிதம்பரம், காஞ்சிபுரம் முதலிய ஊர்களைத் துணைத் தலைநகரங்களாகக் கொண்டிருந்தனர்.
இராஜகுரு என்ற அதிகாரி சமய நிறுவனங்களை நிருவகிக்கும் பணியில் மன்னருக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.
மக்களின் குறைகளை அதிகாரிகள் கேட்டறிந்து மன்னனின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இக்குறைகளை மத்திய அரசோ, உள்ளாட்சி நிறுவனங்களோ தீர்த்து வைத்தன. மன்னன் சில சமயங்களில் பேரரசின் பல பாகங்களுக்கும் சென்று, அங்குள்ள குடிமக்களை நேரில் கண்டு, அவர்களின் குறைகளைக் கேட்டறிவான். மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு அரசன் வாய்மொழியான ஆணையைப் பிறப்பிப்பான். அதற்குத் திருவாய்க் கேள்வி என்று பெயர்.
சட்டங்களை இயற்றுவதற்கு என ஒரு தனி அமைப்பு ஏதும் இல்லை. சோழ நாட்டில் உள்ள ஊர்கள்தோறும் சபைகள் அமைக்கப்பட்டிருந்தன. அச்சபைகள் கொண்டுவந்த தீர்மானங்களை மத்திய அரசு செயல்படுத்தக் கடமைப்பட்டிருந்தது. வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவது ஊர்ச் சபையின் பணியாகும். ஊர்ச் சபையால் நீதி வழங்க இயலாத நிலை ஏற்பட்டால் மட்டும்தான் மத்திய அரசு வழக்குகளைத் தீர்த்து வைக்கும்.
மன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்கென நிரந்தரமான அமைச்சரவை ஒன்று இல்லை எனலாம். நிருவாகப் பணியைப் பொறுத்தவரையில் மன்னனுக்கு அரசு அலுவலர்கள் ஆலோசனை அளித்து வந்தார்கள். படைத்துறையையும், நிருவாகத்துறையையும் சார்ந்த உயர்ந்த அலுவலர்கள் அதிகாரிகள் என அழைக்கப்பட்டனர்.
நாட்டுப் பிரிவுகள்
படையெடுப்புகளால் வெற்றி கொண்டு விரிவுபடுத்தப்பட்ட சோழப் பேரரசை மத்திய அரசின் துணைக் கொண்டு மட்டும் நிருவாகம் செய்வது எளிதன்று. எனவே, சோழப் பேரரசு பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முதலாம் இராசராசன் காலத்தில் சோழப் பேரரசு மொத்தம் ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை வருமாறு:
1. சோழ மண்டலம்- சோழ நாடு
2. இராசராசப் பாண்டி மண்டலம்-பாண்டிய நாடு
3. செயங்கொண்ட சோழ மண்டலம்-தொண்டைநாடு (பல்லவ நாடு)
4. மும்முடிச் சோழ மண்டலம்- இலங்கை
5. முடி கொண்ட சோழ மண்டலம்-கங்கபாடி
6. நிகரிலிச் சோழ மண்டலம்-நுளம்பபாடி
7. அதிராசராச மண்டலம்-கொங்கு நாடு
8. மலை மண்டலம்- சேர நாடு
9. வேங்கை மண்டலம்-கீழைச்சாளுக்கிய நாடு (வேங்கி நாடு)
இவற்றுள் சோழ மண்டலத்தை மன்னனே நேரடியாக ஆட்சி செய்து வந்தான். ஏனைய மண்டலங்களுக்கு இளவரசர்கள் அல்லது மன்னனுடைய உறவினர்கள் மண்டலங்களின் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். மண்டலத்தில் அமைதி காப்பது, அங்குள்ள பிரச்சனைகளை மத்திய அரசிற்கு எடுத்துக் கூறுவது, மத்திய அரசின் ஆணைகளைச் செயல்படுத்துவது ஆகியவை ஆளுநர்களின் பணிகளாகும்.
மண்டலம் பல வளநாடுகளாகவும், வளநாடு பல நாடுகளாகவும், நாடு பல கூற்றங்கள் அல்லது கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கோட்டமும் தன்னாட்சி பெற்ற பல ஊர்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது.
வாரியங்கள்
பிற்காலச் சோழர் காலத்தில் ஊராட்சி நடத்திவந்த சபைகளின் கடமைகள் மிகப் பலவாக இருந்தன. அவற்றை நிறைவேற்றுவதற்குத் தனித்தனிக் கழகங்கள் அமைக்கப்பட்டன. அக்கழகங்கள் வாரியம் என்று அழைக்கப்பட்டன. சம்வத்சர வாரியம், ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம் எனப் பல வாரியங்கள் இருந்தன.
அறங்களை ஏற்று நடத்தல், அற நிலையங்களைக் கண்காணித்தல், ஊர் மக்கள் கொண்டு வந்த வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறுதல் போன்றவை சம்வத்சர வாரியத்தின் கடமைகள் ஆகும்.
ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளைப் பாதுகாத்தலும், விளைநிலங்களுக்கு வேண்டிய நீரை முறையாகப் பாய்ச்சுதலும் ஏரிவாரித்தின் கடமைகள் ஆகும்.
விளைநிலங்கள், புறம்போக்கு நிலங்கள், தோட்டங்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்வது தோட்ட வாரியத்தின் கடமை ஆகும்.
ஊரார் செலுத்த வேண்டிய நில வரியையும், பிற வரிகளையும் வசூலித்து அரசுக்கு ஆண்டுதோறும் அனுப்பிவைக்க வேண்டியது பஞ்சவார வாரியத்தின் கடமை ஆகும்.
பொன்னை உரை காண்பதும், பொன் நாணயங்களை ஆராய்வதும் பொன் வாரியத்தின் கடமைகள் ஆகும்.
இவ்வாரியங்களே அல்லாமல் தடிவழி வாரியம், கழனி வாரியம், கணக்கு வாரியம் என்பன போன்ற வேறுபல வாரியங்களும் இருந்தன.
மேலே குறிப்பிட்ட வாரியங்களுக்கான உறுப்பினர்கள் பிற்காலச் சோழர் காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் குடவோலை என்னும் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உத்திரமேரூர்க் கல்வெட்டு
உத்திரமேரூர் என்னும் ஊர் தற்போது தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது பிற்காலச் சோழர் காலத்தில் ஒரு சிறிய ஊராக விளங்கியது. இவ்வூரில் உள்ள வைகுந்தப் பெருமாள் கோவிலின் கற்சுவரில் ஒரு பெரிய கல்வெட்டுக் காணப்படுகின்றது. இது உத்திரமேரூர்க் கல்வெட்டு எனப்படுகிறது. இக்கல்வெட்டு முதலாம் பராந்தகனின் பதினான்காம் ஆட்சியாண்டில் (கி.பி. 920இல்) அவனது ஆணைப்படி செதுக்கப்பட்டது ஆகும். இக்கல்வெட்டு, பிற்காலச் சோழர் காலத்தில் உத்திரமேரூரில் இருந்த ஊர்ச் சபைக்கு நடந்த தேர்தல் முறையைப் பற்றிய விரிவான செய்திகளைத் தருகின்றது.
உத்திரமேரூர் ஊர்ச் சபையில் உறுப்பினர்களாவதற்குத் தகுதி உடையோர், தகுதி இல்லாதோர் பற்றியும், தகுதி உடையோரில் தேவையான உறுப்பினர்களைக் குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கும் முறை, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைப் பல்வேறு வாரியங்களுக்கு நியமிக்கும் முறை, அவர்களின் பதவிக்காலம் போன்றவை பற்றியும் உத்திரமேரூர்க் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.
உறுப்பினராகத் தகுதி உடையோர்
குறைந்தது கால் வேலி நிலம் உடையவராக இருத்தல் வேண்டும். தமது சொந்த நிலத்தில் வீடு கட்டிக் குடி இருப்பவராக இருத்தல் வேண்டும். முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவராகவும், எழுபது வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். செயல் திறன் வாய்ந்தவராகவும், கல்வி அறிவு உடையவராகவும், நல்லொழுக்கம் உடையவராகவும், நேர்வழியில் பொருள் ஈட்டி வாழ்ந்து வருபவராகவும் இருத்தல் வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறாதவராக இருத்தல் வேண்டும்.
உறுப்பினராகத் தகுதி இல்லாதோர்
ஏற்கெனவே வாரிய உறுப்பினராக இருந்து கணக்குக் காட்டாதோர், அவர்களுடைய உறவினர்கள், பெரும்பாதகங்கள் புரிந்தோர், கூடா நட்புறவால் கெட்டுப் போனோர், பிறர் பொருளைக் கவர்ந்தோர், கையூட்டு வாங்கியோர், ஊருக்குத் துரோகம் செய்தோர், குற்றம் புரிந்து கழுதை மேல் ஏறினோர், கள்ளக் கையெழுத்து இட்டோர் ஆகியோர் உறுப்பினராகும் தகுதி இல்லாதோர் ஆவர்.
உறுப்பினர்களைக் குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கும் முறை
உத்திரமேரூர் முப்பது குடும்புகளைக் கொண்டிருந்தது. தற்காலத்தில் உள்ளாட்சி அமைப்பில் ஓர் ஊரினை அல்லது நகரினைப் பல பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் வட்டம் (Ward) என்று நாம் குறிப்பிடுகிறோம். அதைத்தான் பிற்காலச் சோழர் காலத்தில் குடும்பு என வழங்கினர்.
ஒவ்வொரு குடும்பிற்கும் ஓர் உறுப்பினர் வீதம் மொத்தம் முப்பது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் நாளன்று ஒவ்வொரு குடும்பையும் சார்ந்தவர்கள், தங்கள் குடும்பில் உறுப்பினராவதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்களின் பெயர்களைத் தனித்தனி ஓலைகளில் எழுதி அவற்றை ஒன்று சேர்த்துக் கட்டுவர். பின்பு அதன் மேல் ‘இது இந்தக் குடும்பைச் சார்ந்தது’ என்பது விளங்க, அந்தக் குடும்பின் பெயர் எழுதிய வாயோலை ஒன்றைப் பூட்டி அந்த ஓலைக்கட்டை ஒரு குடத்தில் இடுவர். இவ்வாறே முப்பது குடும்பினரும் தங்கள் குடும்புகளுக்கு உரிய ஓலைக்கட்டுகளை அக்குடத்தில் இடுவர். பின்பு ஊர் மக்கள் கூடியிருக்கும் சபையின் நடுவில் ஊர்ப் பெரியவர் ஒருவர் அக்குடத்தை எல்லோரும் காணுமாறு தூக்கி வைத்துக் கொண்டு நிற்பார்; நடப்பது இதுவெனச் சிறிதும் அறியாத ஒரு சிறுவனைக் கொண்டு, அக்குடத்திலிருந்து ஓர் ஓலைக்கட்டை எடுக்கச் சொல்லி, அதில் உள்ள ஓலைகளை மற்றொரு குடத்தில் இட்டுக் குலுக்கி, அச்சிறுவனைக் கொண்டே அதிலிருந்து ஓர் ஓலையை மட்டும் எடுக்கச் செய்வார். மத்தியஸ்தன் என்னும் அலுவலர் ஒருவர் அவ்வோலையை ஐந்து விரலும் அகல விரியுமாறு உள்ளங்கையிலே வாங்கி அதில் உள்ள பெயரை உரக்கப் படிப்பார். சபையினுள்ளே இருக்கும் ஆண் மக்கள் எல்லோரும் அதை வாங்கிப் படிப்பர். அந்த ஓலையில் உள்ள பெயருடையவர் அந்தக் குடும்பிற்கு உரிய உறுப்பினராக அறிவிக்கப்படுவார். இவ்வாறே மற்றக் குடும்புகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது உறுப்பினர்களில் கல்வியிலும் வயதிலும் முதிர்ந்த பன்னிருவரைச் சம்வத்சர வாரியத்திற்கும், மற்றவர்களில் பன்னிரண்டு பேரைத் தோட்ட வாரியத்திற்கும், எஞ்சியுள்ள ஆறு பேரை ஏரி வாரியத்திற்கும் நியமித்தனர்.
உத்திரமேரூரைச் சுற்றிப் பன்னிரண்டு சேரிகள் இருந்தன. அச்சேரிகளிலிருந்து சேரிக்கு ஓர் உறுப்பினர் வீதம் மேலும் பன்னிரண்டு உறுப்பினர்களை இதே போலக் குடவோலை முறையில் தேர்ந்தெடுத்தனர். அவர்களில் ஆறு பேரைப் பஞ்சவார வாரியத்திற்கும், ஆறு பேரைப் பொன் வாரியத்திற்கும் நியமித்தனர்.
இவ்வாறு நடைபெற்ற உத்திரமேரூர்ச் சபைத் தேர்தலின்போது, மத்திய அரசைச் சார்ந்த அரசு அலுவலரான சோமாசிப் பெருமான் என்பவன் உடனிருந்தான் என்றும், அவன் சபைத் தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்தான் என்றும் உத்திரமேரூர்க் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
இவ்வாறு ஊர்ச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிய உறுப்பினர்கள் திருவடியார் எனப்பட்டனர். அவர்களைக் கொண்ட ஊர்ச்சபை மகாசபை எனப்பட்டது. வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓர் ஆண்டாகும்.
சபை கூடும் இடமும் காலமும்
வாரிய உறுப்பினர்களைக் கொண்ட மகாசபை ஊரின் மன்றத்திலோ (மன்றம் – பொது இடம்), குளக்கரையிலோ, மரத்தின் அடியிலோ, கோயில் மண்டபத்திலோ கூடியது. சபை கூடும் நேரத்தையும், இடத்தையும் முரசடித்தும், பறையடித்தும் அறிவித்தனர். பகல் நேரத்திலே சபை கூடியது. இரவில் கூடினால் விளக்கு எரியச் செலவாகும் என்று கருதிப் பகலில் கூடினர்.
சபைக்குரிய பணியாளர்களும் அவர்களின் கடமைகளும்
சபை உறுப்பினர்கள் இட்ட பணிகளை நிறைவேற்ற மத்தியஸ்தன், காரணத்தான், பாடிகாப்பான், தண்டுவான் போன்றோர் இருந்தனர். மத்தியஸ்தன் கூட்ட முடிவுகளை எழுதுபவன். காரணத்தான் கணக்கு எழுதுபவன். பாடிகாப்பான் ஊரில் கலகம், திருட்டு நிகழாது காப்பவன். தண்டுவான் தண்டனைகளை நிறைவேற்றுபவன். இவர்கள் சபையிடம் ஊதியம் பெற்றுப் பணிபுரிந்தனர்.
குறைகள்
பிற்காலச் சோழர் காலத்தில் ஊராட்சிச் சபைத் தேர்தலில் உறுப்பினராகப் போட்டியிடப் பெண்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை. பாமர மக்கள் உறுப்பினராக இடம்பெற வாய்ப்புத் தரப்படவில்லை. இவற்றைக் குறைகள் என்றே கூறவேண்டும்.
உத்திரமேரூரில் இருந்த ஊராட்சி முறையானது, பிற்காலச் சோழர் ஆட்சியின்போது சோழ நாட்டில் இருந்த எல்லா ஊர்களிலும் அப்படியே அல்லது சிற்சில மாற்றங்களுடன் நிலவியது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
நிலவரி அல்லாத பிற வரிகள் குடிமை என்று கூறப்பட்டன. இவ்வரிகளும் அரசின் வருவாயைப் பெருக்கின. சுங்கவரியும் அவற்றுள் ஒன்றாகும். ஊர்க்கழஞ்சு என்ற வரி ஊரில் பொதுவாக வைக்கப் பெற்றிருந்த ஓர் எடையைப் பற்றிய வரி ஆகும். மீன் பாட்டம் என்பது மீன் பிடிக்கும் உரிமைக்கான வரி. தசபந்தம் என்பது குளம் முதலிய நீர் நிலைக்கான வரி, முத்தாவணம் என்பது அந்நாளில் உள்ள விற்பனை வரி. வேலிக்காசு என்பது ஒரு வேலி நிலத்துக்கு இவ்வளவு என்று வசூலிக்கப்பட்ட வரி. மேலும் நாடாட்சி, ஊராட்சி, வட்டி நாழி, பிடா நாழி அல்லது புதா நாழி, வண்ணாரப் பாறை, குசக்காணம், நீர்க்கூலி, தறிப்புடவை, தரகு அல்லது தரகு பாட்டம் போன்ற எண்ணற்ற வரிகளைக் குடி மக்களிடமிருந்து வசூலித்து நாட்டை நிருவாகம் செய்து வந்தனர் சோழ மன்னர்கள்.
முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் ஆகியோர் காலத்தில் மூன்று கை மகாசேனை என்று ஒரு படையும் திரட்டப்பட்டிருந்ததாகத் தெரிகின்றது. சோழ நாடு முழுவதிலும் ஆங்காங்குப் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. படைகள் தங்கியிருந்த தண்டுகளுக்குக் கடகங்கள் என்று பெயர். எந்தெந்த ஊர்களில் படைகள் தங்கியிருந்தனவோ அந்தந்த ஊர்களில் இருந்த கோயில்களின் பாதுகாப்பும், கோபுரங்களின் பாதுகாப்பும் அப்படைகளின் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஆனால் படைகள் திரட்டப்பட்ட விதமும், அவற்றுக்குப் பயிற்சியளிக்கப்பட்ட முறையும் அறிந்து கொள்ள முடியவில்லை.
சோழ மன்னர் போர்ப்படைகளில் சுமார் 60000 யானைகளும், பல்லாயிரக்கணக்கான குதிரைகளும் இருந்தன.
உடலைப் பற்றிய குற்றங்கள் என்றும், உடமைகளைப் பற்றிய குற்றங்கள் என்றும் இப்போது செய்யப்பட்டுள்ள பாகுபாடுகள் சோழர் காலத்தில் காணப்படவில்லை. குற்றங்களைப் பெரும்பாலும் ஊர் நீதிமன்றங்களே விசாரித்துத் தீர்ப்புக் கூறின. குற்றங்களுக்குத் தண்டனையாகக் குற்றவாளியின் உடைமைகளைப் பறிமுதல் செய்வதைத்தான் அவை முறையாகக் கொண்டிருந்தன. திருட்டு, பொய்க் கையொப்பம், விபசாரம் ஆகியவை கொடுங்குற்றங்களாகக் கருதப்பட்டன. இக்குற்றங்களைப் புரிந்து தண்டனை பெற்றவர்கள் ஊராட்சி அவைகளில் உறுப்பினராக அமரும் தகுதியை இழந்து விடுவார்கள்.
தெரிந்தோ தெரியாமலோ செய்த சில குற்றங்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதில்லை. குற்றவாளிகள் கோயில்களுக்கோ அன்றி மடங்களுக்கோ இவ்வளவு தானம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
கலப்பினத்தைச் சார்ந்தவர்களில் அனுலோமர்கள், பிரதிலோமர்கள் ஆகிய இரு பிரிவினரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். உயர்சாதியைச் சேர்ந்த தந்தைக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர்கள் அனுலோமர்கள் என்றும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தந்தைக்கும், உயர் சாதியைச் சார்ந்த தாய்க்கும் பிறந்தவர்கள் பிரதிலோமர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
சோழர் காலத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாகக் கருதப்பட்டனர். அவர்களுக்குச் சொத்துரிமை இருந்தது. தங்களது சீதனச் சொத்தின் மீது பெண்கள் ஏகபோக உரிமையைப் பெற்றிருந்தனர். உயர்குடிப் பெண்கள் இன்னும் உயரிய நிலையை வகித்தனர். அரசியர்கள் பேரரசின் நிருவாகத்தில் தலையிட்டு அதனைத் திறம்பட நடத்துவதற்கு உதவினர். கோயில்கள் அவர்கள் ஆதரவைப் பெற்றன. உடன்கட்டை ஏறும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது.
இடங்கையர்
பிராமணர், கம்மாளர் (கொல்லர்), வேளாளர், வாணிகர் போன்றவர்கள் உயர்ந்த சாதியினர் எனக் கருதப்பட்டனர். இவர்கள் இடங்கையர் என அழைக்கப்பட்டனர். அரசு இவர்களுக்கு அதிகமான உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கியிருந்தது. இதனால் இவர்கள் வசதியுடன் வாழ்ந்தனர்.
வலங்கையர்
உழுதொழில் செய்து அதனால் வரும் கூலியில் வாழ்க்கை நடத்தும் பல்வேறு சாதியினர், மற்றும் குயவர், வண்ணார், நாவிதர் போன்றவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று கருதப்பட்டனர். இவர்கள் வலங்கைர் என அழைக்கப்பட்டனர். இடங்கையர்க்கு வழங்கப்பட்ட சலுகைகளும், உரிமைகளும் இவர்களுக்குத் தரப்படவில்லை. இவர்கள் செய்யும் தொழில்களுக்கு ஏற்ப அரசு இவர்களுக்கு வரிகளை விதித்தது. இதனால் இவர்கள் இடங்கையரைப் போல வசதியுடன் வாழ முடியவில்லை.
வலங்கை – இடங்கையரிடையே பூசல்கள்
சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்த வலங்கையர், இடங்கையர்க்கு வழங்கப்பட்ட உரிமைகளையும், சலுகைகளையும் பெற வேண்டிப் போராடினர். இதனை இடங்கையர் எதிர்த்தனர். இதனால் வலங்கை – இடங்கைப் பிரிவினரிடையே பல பூசல்கள் ஏற்பட்டன. இதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் பல உள்ளன.
முதலாம் குலோத்துங்கனின் இரண்டாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1071இல்), இராசமகேந்திர சதுர்வேதி மங்கலம் என்ற பிராமண ஊரில் வலங்கை – இடங்கைப் பிரிவினரிடையே ஒரு பெரிய கலகம் நடைபெற்றது. இக்கலகத்தின்போது, கலகக்காரர்கள் ஊரைத் தீயிட்டுக் கொளுத்தினர்; கோயில்களை இடித்துத் தள்ளினர். இக்கலகம் முடிந்த பின்னர் ஊரை மீண்டும் சீரமைக்கவும், கோயில்களை மீண்டும் எழுப்பவும் ஊர்ச்சபையினர் கோயில் பண்டாரத்திலிருந்து ஐம்பது கழஞ்சு பொன்னைக் கடன் வாங்கினர். இக்கலகம் பற்றிய செய்தியை முதலாம் குலோத்துங்கனின் பதினோராம் ஆட்சியாண்டில் திருவரங்கக் கோயிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று விரிவாகத் தெரிவிக்கிறது.
காலப்போக்கில் வலங்கை – இடங்கையர் பூசல்கள்
வலங்கை – இடங்கையர்க்கு இடையிலான பூசல்கள் பிற்காலச் சோழப் பேரரசர் காலத்தில் தோன்றி, விசயநகரத்துப் பேரரசர் காலத்தில் தொடர்ந்து வளர்ந்துவந்து, ஆங்கிலேயர் அரசாட்சியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் தீவிரம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் இவ்விரு பிரிவினர்க்கு இடையே நடந்த பூசல்கள் காரணமாகச் சென்னை நகரின் தெருக்களில் மனித இரத்தம் சிந்தப்பட்டது உண்டு. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலங்கை – இடங்கை வேறுபாடுகள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்துவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு அப்பெயர்களின் பொருள்கூட இன்னதென விளங்குவதில்லை.
பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றிய இலக்கியங்களைப் பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், இலக்கண நூல்கள், உரை நூல்கள் என வகைப்படுத்திக் காணலாம்.
குண்டலகேசி பௌத்த சமயம் சார்ந்த பெருங்காப்பியம் ஆகும். இதனை இயற்றியவர் நாதகுத்தனார்.
பெரிய புராணம் சைவசமயம் சார்ந்த பெருங்காப்பியம் ஆகும். இதனை இயற்றியவர் சேக்கிழார்.
கம்பராமாணம் வைணவ சமயம் சார்ந்த பெருங்காப்பியம். இதனை இயற்றியவர் கம்பர்.
சூளாமணி, உதயணகுமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம், நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படுகின்றன. இவை அனைத்தும் பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றியவை ஆகும். மேலும் இவை எல்லாமே சமணப் புலவர்களால் எழுதப்பட்டவை ஆகும். இவற்றுள் சிறந்தது சூளாமணி. இதனை இயற்றியவர் தோலாமொழித் தேவர்.
நளவெண்பா, திருவிளையாடற் புராணம் ஆகிய காப்பிய நூல்களும் பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றின.
நாற்கவிராச நம்பி என்பவரால் எழுதப்பட்ட நம்பியகப் பொருள் அகப்பொருள் சார்ந்த இலக்கண நூல் ஆகும். இந்நூலில் இடம் பெற்றுள்ள அகப்பொருள் துறைகளுக்குத் தஞ்சைவாணன் கோவைப் பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டன.
யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலம் ஆகிய இரு நூல்கள் யாப்பிலக்கணம் பற்றியவை ஆகும். இவற்றை இயற்றியவர் அமிர்தசாகரர் ஆவார்.
புத்தமித்திரர் என்பவர் எழுதிய வீரசோழியம் என்னும் இலக்கண நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கணங்களையும் பற்றியதாகும்.
தமிழ் மொழியில் சொற்களைப் பொருள் அடிப்படையில் தொகுத்தளிக்கும் நூல்கள் நிகண்டு எனப்படும். திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு ஆகியன நிகண்டு நூல்களில் குறிப்பிடத்தக்கன.
இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடர், நச்சினார்க்கினியர் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர்.
சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு முழுமைக்கும், எட்டுத்தொகையில் ஒன்றான கலித்தொகைக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதினார். மேலும் இவர் சீவக சிந்தாமணி முழுமைக்கும் உரை எழுதியுள்ளார்.
சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் என்பவர் அரியதோர் உரை வரைந்துள்ளார். சிலப்பதிகாரக் கருவூலத்தைத் திறக்கும் திறவுகோல் இவரது உரையாகும்.
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், மணக்குடவர் ஆகியோர் பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆவர்.
மேலே கூறப்பட்ட நூல்களேயன்றிச் சோழர் காலத்தில் கற்களில் பொறிக்கப்பட்ட மன்னர்களின் மெய்க்கீர்த்திகளும் சிறந்த இலக்கியங்களாக விளங்குகின்றன. இராசராசேசுவர நாடகம், இராசராச விசயம் முதலிய நாடக நூல்கள் இயற்றப்பட்டன. ஆனால் அவை நமக்குக் கிடைக்காமல் போயின.
பிற்காலச் சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட கோயில்களின் வரிசையில் தாராசுரம், திருப்புவனம் போன்ற இடங்களில் உள்ள கோயில்கள் குறிப்பிடத்தக்கன.
கோயில்கள் மட்டும் அல்லாமல் கட்டடக் கலைக்குச் சான்றாகச் சோழப் பேரரசரின் அரண்மனைகளும் அமைந்துள்ளன. இதற்குத் தஞ்சையிலுள்ள அரண்மனையைச் சான்றாகக் கூறலாம். தஞ்சை மட்டுமின்றிப் பழையாறை, சிதம்பரம், காஞ்சி ஆகிய இடங்களிலும் அரண்மனைகள் இருந்தன. அதுபோலக் கங்கைகொண்ட சோழபுரத்திலும் அரண்மனை இருந்தது. இவைகளோடு அரசியர்களுக்கு என்று அந்தப்புரங்களும், விளையாட்டு அரங்கங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
இவைகளைத் தவிர சோழர்கள் காலத்தில் இசை, நடனம், நாடகம் போன்ற கலைகளும் சிறப்புற்றிருந்தன.
மேலும் நாட்டு மக்கள் ஏற்கெனவே வழங்க வேண்டிய வரியை வழங்க முடியாத சூழ்நிலையில் அதிகப்படியான வரிகள் மேலும் மேலும் விதிக்கப்பட்டன. இதுபோன்ற பொருளாதாரச் சீர்குலைவால் சோழப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் ஆட்சி செய்த பின்னர் அது மறைந்து விட்டது.