இடைக்காலம் - 2
பாடம் - 1
முற்காலப் பாண்டியர் ஆட்சி வீரபாண்டியன் என்பவன் ஆட்சியோடு முடிவுற்றது. கி.பி 966இல் சேவூர் என்னும் இடத்தில் நடந்த போரில் வீரபாண்டியன் சுந்தரசோழனின் மூத்த மகனாகிய ஆதித்த கரிகாலன் என்பவனால் கொல்லப்பட்டான். வீரபாண்டியனுக்குப் பின்பு கி.பி. 966 முதல் 1190 வரை இருநூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டிய நாட்டில் சோழரின் ஆதிக்கம் நிலைபெற்றிருந்தது. அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்கள் சோழர்களுக்குத் திறை செலுத்தும் சிற்றரசர்களாகவே விளங்கினர். எனவே அவர்களது வரலாற்றை அறிந்து கொள்வதற்கு உரிய கல்வெட்டுகள் பாண்டிய நாட்டில் கிடைக்கவில்லை.
கி.பி. 1190இல் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டு அரியணை ஏறி ஆட்சி செய்தான். இவனைத் தொடர்ந்து வந்த பாண்டிய மன்னர்கள் சோழர்களை வென்று, அவர்களிடமிருந்து பாண்டிய நாட்டை மீட்டதோடு, அவர்களுடைய சோழ நாட்டையும் கைப்பற்றி ஆண்டனர். இப்பாண்டிய மன்னர்களின் வரலாற்றை அறிவதற்கு உரிய கல்வெட்டுகள் பாண்டிய நாடு முழுவதும் நிறையக் கிடைத்துள்ளன. இவர்களைத்தான் வரலாற்றாசிரியர்கள் பிற்காலப் பாண்டியர் எனக் குறிப்பிடுகின்றனர். இவர்கள் பாண்டிய நாட்டைக் கி.பி. 1190 முதல் 1310 வரை 120 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி புரிந்துள்ளனர்.
இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் மூன்றாம் குலோத்துங்கன் தன் தந்தைக்குச் செய்த உதவியை மறந்து அவனோடு பகைமை கொண்டான். அவனுக்கு ஆண்டுதோறும் கொடுத்துவந்த திறையையும் செலுத்த மறுத்துவிட்டான். இதனால் சினமுற்ற மூன்றாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். சடையவர்மன் குலசேகரபாண்டியனும் பெரும்படையுடன் சென்று மூன்றாம் குலோத்துங்கனை எதிர்த்தான். கி.பி. 1202 இல் மட்டியூர், கழிக்கோட்டை என்னும் ஊர்களில் பெரும்போர்கள் நடைபெற்றன. (இவ்வூர்கள் தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டத்தில் முன்பு இருந்தவை.) இப்போர்களில் பாண்டியப் படைகள் பேரழிவிற்கு உள்ளாகிப் புறங்காட்டி ஓடின. தோல்வியுற்ற பாண்டியன் மதுரையை விட்டு வேறிடம் சென்று ஒளிந்துகொண்டான். வெற்றி பெற்ற மூன்றாம் குலோத்துங்கன் தன் படைகளுடன் மதுரை நகருக்குள் புகுந்தான். அங்குள்ள அரண்மனை மண்டபங்களை இடித்துத் தரை மட்டமாக்கினான். பின்பு மதுரை நகரில் சோழ பாண்டியன் என்ற பட்டப்பெயர் சூட்டிக் கொண்டு வீராபிடேகம் செய்து கொண்டான்.
மூன்றாம் குலோத்துங்கன் தான் வென்று கைப்பற்றிய பாண்டிய நாட்டை, ஒரு சில ஆண்டுகள் கழித்துக் குலசேகரபாண்டியனுக்கே மீண்டும் அளித்து, அவனைத் தனக்கு அடங்கித் திறை செலுத்தி ஆளும்படி ஆணையிட்டான். அதன்பின்பு சடையவர்மன் குலசேகரபாண்டியன் கி.பி. 1218 வரை மூன்றாம் குலோத்துங்கனுக்குத் திறை செலுத்தி ஒரு சிற்றரசன் போலப் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான்.
இவன் தன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் (கி.பி. 1216இல்) தனது தம்பியான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி அவன் ஆட்சித் துறையில் பயிற்சி பெற வழி செய்தான்.
இவன் தனது முன்னோர் சோழர்களுக்கு அடங்கித் திறை செலுத்தித் தம் வாழ்நாளைக் கழித்து வந்த இழிநிலையை எண்ணி மனம் வெதும்பினான். மேலும் தனது இளம்வயதில் மூன்றாம் குலோத்துங்கன் படையெடுத்து வந்து மதுரையில் உள்ள அரண்மனை மண்டபங்களைத் தரை மட்டமாக்கியதை எல்லாம் நேரில் கண்டிருந்தான். எனவே சோழ நாட்டை வென்று பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். இந்நிலையில் மூன்றாம் குலோத்துங்கன் இறந்தான். அவன் மகன் மூன்றாம் இராசராசன் சோழ நாட்டு அரியணை ஏறி ஆட்சி செய்துவந்தான்.
பழிவாங்கும் நோக்குடன் காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். மூன்றாம் இராசராசனைப் போரில் வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். சோழ நாட்டின் தலைநகர்களாக இருந்த தஞ்சையையும், உறையூரையும் தீக்கு இரையாக்கினான்; அங்குள்ள மணி மண்டபங்களையும், மாட மாளிகைகளையும் இடித்துத் தரை மட்டமாக்கினான். போரில் தோல்வியுற்ற மூன்றாம் இராசராசன் தனது சுற்றத்தாருடன் தலைநகரை விட்டு வெளியேறி ஒரு மறைவிடத்தில் தங்கி வாழ்ந்தான்.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர்களின் இரண்டாம் தலைநகராகிய பழையாறை சென்று அங்குள்ள அரண்மனையில் வீராபிடேகம் செய்து கொண்டான். பின்னர்ப் பாண்டிய நாடு திரும்பிச் செல்லும் வழியில், பொன்னமராவதியில் உள்ள தனது அரண்மனையில் தங்கினான். நாட்டை இழந்த மூன்றாம் இராசராசனை அழைத்துவரச் செய்து அவனுக்குச் சோழ நாட்டைத் திரும்ப அளித்து அவனைத் தனக்குத் திறை செலுத்தி ஆட்சி செய்து வருமாறு பணித்தான்.
சில ஆண்டுகளுக்குப் பின்பு மூன்றாம் இராசராசன் திறை செலுத்த மறுத்துவிட்டான். இதனால் சினங்கொண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது மீண்டும் ஒரு போர் தொடங்கினான். இப்போரில் தோல்வியுற்ற மூன்றாம் இராசராசன் சோழ நாட்டை விட்டு வடபுலம் நோக்கிச் சென்றான். செல்லும் வழியில் பல்லவ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு கொண்டிருந்த கோப்பெருஞ்சிங்கன் என்பவன் தெள்ளாறு என்னும் இடத்தில் மூன்றாம் இராசராசனைக் கைது செய்து, தனது தலைநகராகிய சேந்தமங்கலம் என்ற ஊரில் உள்ள கோட்டையில் சிறைவைத்தான்.
இதே காலத்தில் போசளநாட்டை வீரநரசிம்மன் (1220-1230) என்பவன் ஆண்டு வந்தான். இவன் தன் மகளை மூன்றாம் இராசராசனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தான். கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராசராசனைச் சிறை வைத்ததை அறிந்து மனம் கொதித்த வீரநரசிம்மன் பெரும்படையுடன் சென்றான். கோப்பெருஞ்சிங்கனைப் போரில் தோற்கடித்தான். அவன் சிறைவைத்திருந்த மூன்றாம் இராசராசனை மீட்டான். அதோடு மட்டும் அல்லாமல் தொடர்ந்து படையுடன் வீரநரசிம்மன் சென்று, காவிரியாற்றங்கரையில் உள்ள மகேந்திரமங்கலத்தில் சுந்தரபாண்டியனோடு போரிட்டு அவனை வென்று, அவன் கைப்பற்றியிருந்த சோழ நாட்டை மூன்றாம் இராசராசனுக்கு வழங்கினான். இத்தோல்விக்குப் பின்னர், பாண்டியரும் போசளரோடு மண உறவு செய்து கொண்டனர். தமிழ்நாட்டு அரசியலில் போசளரின் தலையீடு குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில் போசளரின் மேலாண்மை நிலைநாட்டப்பட்டது.
1.2.4 இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1239-1251)
இரண்டாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் மறைவுக்குப் பின்னர், இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239இல் பாண்டிய நாட்டு மன்னனாக அரியணை ஏறினான். இவனுக்குப் போசள மன்னனாகிய வீரசோமேசுவரன் மாமன் ஆவான்; (வீர சோமேசுவரன், வீரநரசிம்மனின் மகனாவான்) கொங்குச் சோழனாகிய விக்கிரமசோழன் மைத்துனன் ஆவான். இவர்களுடைய உறவும் நட்பும் இவனது ஆட்சிக்குப் பெருந்துணையாய் இருந்தன.
இவனது ஆட்சிக் காலத்தில் சோழ நாட்டை ஆண்டு வந்தவன் மூன்றாம் இராசேந்திர சோழன் ஆவான். அவன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இப்பாண்டியனைப் போரில் வென்று இவனுடைய பாண்டிய நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான். போசள மன்னன் வீரசோமேசுவரன் மூன்றாம் இராசேந்திர சோழனுடன் போர் புரிந்து, அவனை வென்று, பாண்டிய நாட்டு ஆட்சியை இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனிடம் ஒப்படைத்தான். இவ்வுண்மையை, அப்போசள மன்னன் தன்னைப் பாண்டியகுல சம்ரட்சகன் எனவும், இராசேந்திரனைப் போரில் வென்றவன் எனவும் தன் கல்வெட்டுகளில் கூறிக் கொள்வதால் அறியலாம்.
சேர நாட்டை வெற்றி கொளல்
இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் பாண்டியப் பேரரசின் பரப்பினை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டான். முதலில் சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அந்நாட்டை ஆண்டு வந்த வீரரவி உதயமார்த்தாண்டன் என்பவனை வெற்றி கொண்டான். இவ்வெற்றியின் காரணமாக இவனுக்குச் சேரனை வென்றான் என்ற சிறப்புப் பெயர் வழங்கலாயிற்று. இவன் தனது சேரநாட்டு வெற்றிக்கு நன்றி செலுத்தும் வகையில் திருவானைக்கா கோயிலில் ஆண்டுதோறும் விழா எடுப்பதற்கு முட்டைபாடி, வீர தெங்கபுரம், பாகன்குடி ஆகிய ஊர்களை வழங்கினான்.
சோழ நாட்டைக் கைப்பற்றல்
சேர நாட்டு வெற்றியால் திடம் கொண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1257இல் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். போரில் மூன்றாம் இராசேந்திரனை வென்று அவனைத் தனக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாக்கி விட்டான். அதற்குப் பின்பு மூன்றாம் இராசேந்திரன் தனது ஆட்சிக் காலம் முழுவதும் பாண்டியருக்குத் திறை செலுத்தியே வாழ்ந்தான். அவனோடு பிற்காலச் சோழர் ஆட்சி மறைந்தது. அவன் இறந்தபின்னர், சோழ நாடு பாண்டிய நாட்டுடன் இணைக்கப்பட்டது.
போசளரை அடக்குதல்
போசளர் என்போர் (கி.பி. 1026-1343) மைசூரையும் அதைச் சார்ந்த பகுதிகளையும் கொண்ட போசள நாட்டைத் துவாரசமுத்திரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தவர்கள் ஆவர். இவர்கள் மூன்றாம் இராசராச சோழன் காலத்தில், சோழ நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றி, அதனைக் கண்ணனூர்க் கொப்பம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். (கண்ணனூர்க் கொப்பம் என்பது இக்காலத்தில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே 12கி.மீ தொலைவில் சமயபுரம் என்ற பெயரில் உள்ளது.) இப்போசளர் பாண்டியரோடும், சோழரோடும் மண உறவு கொண்டு தங்களது மேலாதிக்கத்தைத் தமிழக அரசியலில் நிலைநாட்டியதை ஏற்கெனவே பார்த்தோம்.
சடையவர்மன் சுந்தரபாண்டியன் போசளரைத் தாக்கி அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சோழ நாட்டுப் பகுதியைத் தன் ஆளுகையின்கீழ்க் கொண்டுவர எண்ணினான். அதனை நிறைவேற்றும் பொருட்டுக் கி.பி. 1262இல் பெரும்படையுடன் சென்று, அப்போசளர்க்கு உரிய தலைநகராகிய கண்ணனூர்க் கொப்பத்தை முற்றுகையிட்டான். அப்போது நடந்த போரில் அவ்வூரில் தன் மகன் இராமநாதன் என்பவனோடு தங்கியிருந்த போசள மன்னன் வீரசோமேசுவரன் கொல்லப்பட்டான். சடையவர்மன் சுந்தரபாண்டியன் கண்ணனூர்க் கொப்பத்தைக் கைப்பற்றினான்
மகத நாட்டையும், கொங்கு நாட்டையும் கைப்பற்றல்
தோல்வியைக் கண்டறியாத சடையவர்மன் சுந்தரபாண்டியன் மகத நாட்டின் மீதும், கொங்கு மன்னர்களின் கொங்கு நாட்டின் மீதும் படையெடுத்துச் சென்று அந்நாடுகளை வென்று பாண்டிய நாட்டுடன் இணைத்துக் கொண்டான். (மகத நாடு என்பது தற்போது உள்ள சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியையும், விழுப்புரம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியையும் முற்காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்தது.)
இலங்கை வெற்றி
சடையவர்மன் சுந்தரபாண்டியன் கப்பற்படையுடன் இலங்கை சென்று, அங்கு ஆண்டு கொண்டிருந்த அரசனை வென்றான். அவனிடமிருந்து யானைகளையும், பலவகை மணிகளையும் திறைப் பொருளாகப் பெற்று நாடு திரும்பினான்.
பல்லவன் கோப்பெருஞ்சிங்கனை அடக்குதல்
சடையவர்மன் சுந்தரபாண்டியனது அடுக்கடுக்கான வெற்றிகளைக் கண்டு அஞ்சிய பல்லவ அரசன் கோப்பெருஞ்சிங்கன் அவனுக்குத் திறைப்பொருளை அனுப்பி வைத்தான். சுந்தரபாண்டியன் அதை ஏற்றுக் கொள்ளாமல், கோப்பெருஞ்சிங்கன் மீது படையெடுத்துச் சென்று, அவனுடைய தலைநகராகிய சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுப் போர் செய்தான். அப்போரில் கோப்பெருஞ்சிங்கனை வென்று சேந்தமங்கலத்தைக் கைப்பற்றிக் கொண்டான். மேலும் அவனுடைய யானைகளையும், குதிரைகளையும், பிற செல்வங்களையும் கவர்ந்து கொண்டான். பிறகு அவற்றையெல்லாம் அவனுக்கே அளித்து, அவனைத் தன் ஆணைக்கு அடங்கி நடக்கும் சிற்றரசனாக்கி விட்டுத் தன் நாடு திரும்பினான்.
காஞ்சிபுரத்தைக் கைப்பற்றல்
சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் காஞ்சிபுரத்தைத் தெலுங்குச் சோழனாகிய விசயகண்ட கோபாலன் என்பவன் ஆண்டு வந்தான். சடையவர்மன் சுந்தரபாண்டியன் அவன் மீது படையெடுத்துச் சென்று, போரில் அவனைக் கொன்று, காஞ்சிபுரத்தைக் கைப்பற்றினான். பின்பு விசயகண்ட கோபாலனுடைய தம்பியர் வந்து, தன்னடி பணிந்து வணங்கவே அவர்களுக்குக் காஞ்சிபுரத்தை அளித்து, அவர்களை ஆண்டுதோறும் தனக்குத் திறை செலுத்திக் கொண்டு ஆட்சி செய்து வருமாறு பணித்தான்.
நெல்லூரைக் கைப்பற்றல்
சடையவர்மன் சுந்தரபாண்டியன் இறுதியாகத் தமிழகத்தின் வடக்கே படையெடுத்துச் சென்றான். அங்கே காகதீய நாட்டை ஆண்டு வந்த கணபதிதேவன் என்பவனைப் போரில் வென்று, அவனுக்கு உரிய நெல்லூரைக் கைப்பற்றி, அந்நகரில் வீராபிடேகம் செய்து கொண்டான்.
எம்மண்டலமும் கொண்டருளியவன்
இவ்வாறு பல நாடுகளை வென்று தன்னடிப்படுத்தித் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் முடிமன்னனாக விளங்கிய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர் என்ற பட்டப் பெயரைப் புனைந்து கொண்டான்.
மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்துப் போர் நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கவை அவன் சேரநாட்டில் உள்ள கொல்லத்தைக் கைப்பற்றியதும், ஈழ நாட்டின் மீது படையெடுத்ததும் ஆகும்.
மாறவர்மன் குலசேகரபாண்டியன் கி.பி. 1274இல் சேரநாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அந்நாட்டில் உள்ள கொல்லத்தை வென்று அதனைக் கைப்பற்றிக் கொண்டான். அதனால் இவன் கொல்லம் கொண்ட பாண்டியன் என்னும் பட்டப்பெயர் பெற்றான்.
மாறவர்மன் குலசேகரபாண்டியனின் ஈழப் படையெடுப்பைப் பற்றி இலங்கை வரலாற்று நூலாகிய மகாவம்சம் விரிவாகக் கூறுகிறது. இப்பாண்டியன் கி.பி. 1284இல் ஆரியச் சக்கரவர்த்தி என்பவன் தலைமையில் பெரும்படை ஒன்றை இலங்கைக்கு அனுப்பிவைத்தான். அப்படைத்தலைவன் ஈழத்தின் பல பகுதிகளைப் பேரழிவிற்கு உள்ளாக்கி, நகரங்களைக் கொள்ளையிட்டுச் சுபகிரி என்னும் நகரில் இருந்த பெருங்கோட்டையைக் கைப்பற்றினான். இறுதியில் அந்நாட்டில் உள்ள பெருஞ்செல்வங்களையும், புத்தரது பல்லையும் கைப்பற்றிக் கொண்டு வெற்றியுடன் பாண்டிய நாட்டிற்குத் திரும்பினான். புத்தரின் பல்லை ஈழ நாட்டார் புனிதப் பொருளாகக் கருதி வந்தனர். பாண்டியரோடு போர் புரிந்து அப்பல்லைப் பெறுவதற்கு இயலாத நிலையில் இருந்த ஈழநாட்டு மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகு என்பவன் பாண்டிய நாடு வந்தான். மாறவர்மன் குலசேகரபாண்டியனைப் பணிந்து நட்புரிமை கொண்டு புத்தரின் பல்லைப் பெற்றுச் சென்றான்.
சோழ நாடு, கொங்கு நாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகளில் உள்ள பல ஊர்களில் இவன் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆகவே இந்நாடுகள் எல்லாம் இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன எனலாம். இவனுக்கு முன் அரசாண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனது ஆட்சியில் பாண்டியப் பேரரசின் கீழ் அடங்கியிருந்த எல்லா நாடுகளும் இவனது ஆட்சிக் காலத்திலும் அங்ஙனமே இருந்தன என்பதில் ஐயமில்லை. எனவே சடையவர்மன் சுந்தர பாண்டியனைப் போலவே இம்மாறவர்மன் குலசேகரபாண்டியனும் எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ குலசேகர பாண்டியன் என வழங்கப்பெற்றான். மேலும் இவன் தன் பேரரசிற்கு உட்பட்டிருந்த நாடுகள் எல்லாம் அமைதியாக இருத்தல் வேண்டித் தன் தம்பிமார்களான மாறவர்மன் விக்கிரமபாண்டியன், சடையவர்மன் குலசேகரபாண்டியன் ஆகியோரை அந்நாடுகளில் அரசப் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்து வருமாறு ஏற்பாடு செய்தான்.
குலசேகரபாண்டியன் தனக்குப் பின் முடிசூடுவதற்கு உரிமை படைத்த சுந்தரபாண்டியனைப் புறக்கணித்துவிட்டு, வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினான். இதனால் சினம் கொண்ட சுந்தரபாண்டியன் கி.பி.1310இல் தன் தந்தையைக் கொன்று தானே மதுரை அரியணையில் ஏறிக்கொண்டான். இளவரசனாய் இருந்துவந்த வீரபாண்டியன் சுந்தரபாண்டியன் மீது போர் தொடுத்தான். அப்போது நடைபெற்ற போரில் சுந்தரபாண்டியன் தோல்வியுற்று மதுரையைக் கைவிட்டு வடக்கு நோக்கி ஓடினான்.
இச்சமயத்தில் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி என்பவனுடைய படைத்தலைவன் மாலிக்காபூர் என்பவன் ஒரு பெரும்படையுடன் தமிழகத்தில் தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தான். சுந்தரபாண்டியன் அவனை அணுகித் தனக்குப் படைத்துணை அளிக்கும்படி வேண்டினான். சுந்தரபாண்டியனோடு வந்த மாலிகாபூர் மதுரையைத் தாக்கினான். மாலிக்காபூரின் பெரும்படையை எதிர்த்து வெல்லமுடியாது என எண்ணிய வீரபாண்டியன் மதுரையை விட்டு வெளியேறிப் பல இடங்களுக்கும் ஓடி ஓடி ஒளிந்து கொண்டு, கொரில்லா போர் முறையைப் பின்பற்றி, மாலிக்காபூருக்குத் தொல்லை கொடுத்தான்.
வீரபாண்டியன் தன் முன்னோர் போசளரிடமிருந்து கைப்பற்றி ஆண்ட கண்ணனூர்க் கொப்பம் சென்றான். அங்கிருந்த பாண்டியப் படையில் 20,000 முஸ்லீம்கள் இருந்தனர். இவர்கள் வீரபாண்டியனைத் தேடி வந்த மாலிக்காபூர் படையினருடன் சேர்ந்து கொண்டனர். எனவே வீரபாண்டியன் தில்லை (சிதம்பரம்) சென்று, அங்கே ஒளிந்து கொண்டான். மாலிக்காபூர் தில்லை வந்தடைந்தான். அங்கே உள்ள பொன்னம்பலத்தை அடியுடன் பெயர்த்தெடுத்துக் கொண்டு கோயிலுக்கு எரியூட்டினான். எனினும் வீரபாண்டியன் அவனிடம் அகப்பட்டான் இல்லை. பின்பு மாலிக்காபூர் மதுரை நோக்கித் திரும்பும் வழியில் ஆங்காங்குத் தன் கண்ணில் பட்ட கோயில்களை எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கினான். திருவரங்கத்தில் உள்ள திருவரங்கநாதர் கோயிலை இடித்துப் பாழாக்கினான். அடுத்து மதுரையின்மேல் பெருந்தாக்குதல் தொடுத்தான்.
மாலிக்காபூர் தாக்குதலை முன்னரே அறிந்த சுந்தரபாண்டியன் அரண்மனைப் பொக்கிசத்தை எடுத்துக்கொண்டு மதுரையை விட்டு ஓடிவிட்டான். இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்த மாலிக்காபூர் வெகுண்டு சொக்கநாதர் கோயிலைத் தீயிட்டுக் கொளுத்தினான். இதை அறிந்த சுந்தரபாண்டியனின் சிற்றப்பன் மாறவர்மன் விக்கிரமபாண்டியன் என்பவன் பாண்டிய வீரர்களைத் திரட்டிக்கொண்டு மாலிக்காபூரைத் தாக்கினான். அத்தாக்குதலுக்கு முன் நிற்க முடியாமல் மாலிக்காபூர் புறமுதுகிட்டு ஓடினான். மதுரையை விட்டு இராமேசுவரம் சென்று அங்குள்ள கோயிலைச் சூறையாடியும், மக்களைப் படுகொலை செய்தும், அவர்கள் உடைமைகளைக் கவர்ந்தும் பெருஞ்சேதம் விளைத்தான். அங்கு ஒரு மசூதி கட்டினான். பின்பு அவன் தென்னிந்தியப் படையெடுப்பின்போது கைப்பற்றிய 512 யானைகள், 5000 குதிரைகள் ஆகியவற்றுடனும், 500 மணங்கு எடையுள்ள தங்க அணிகலன்கள், விலை மதிப்பற்ற வைரங்கள், முத்து, மாணிக்கம், மரகதம் ஆகியவற்றுடனும் டெல்லி திரும்பினான்.
மாலிக்காபூர் படையெடுப்பினால் பாண்டிய நாடு தீப்பற்றி எரிந்தது; அங்குள்ள கோயில்கள் இடிந்து வீழ்ந்து பாழாயின; மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்; அவர்களின் உடைமைகள் பறிபோயின. ஆயினும் பாண்டியர் தளர்ச்சி அடையவில்லை. எனவே பாண்டியரை அடக்கி அடிமை கொள்ளாமலேயே மாலிக்காபூர் டெல்லி நோக்கிப் பயணமாக நேர்ந்தது. அவனுக்குப் பிறகு பாண்டிய நாட்டில் முஸ்லீம்களின் தலையீடும் சிறிது காலம் இல்லாமல் இருந்தது. மீண்டும் சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் தொடர்ந்து பாண்டிய நாட்டை ஆண்டுவரத் தொடங்கினார். ஆனால் வெவ்வேறிடங்களில் இருந்து பாண்டிய நாட்டை ஆண்டு வந்தார்கள். சுந்தரபாண்டியன் கி.பி.1320 வரையிலும், வீரபாண்டியன் கி.பி 1324 வரையிலும் அரசாண்டனர் என்பதை அவர்களுடைய கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன்
முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் பல சிற்றூர்களை இணைத்து, அதற்குச் சதுர்வேதி மங்கலம் எனப் பெயரிட்டு ஆயிரத்து முப்பது அந்தணர்களுக்குப் பிரமதேயமாகவும், திருப்புவனத்துக் கோயிலுக்குத் தேவதானமாகவும் வழங்கினான். கோயில்களில் நாள் வழிபாடு நடத்த மானியங்கள் வழங்கினான். இப்பாண்டியன் துணைவியார் தரணி முழுதுடையாள் என்பவள் அழகர் மலையின் உச்சியில் மலர்ச்சோலை ஒன்றை அமைத்துப் பராமரித்தாள். இவனது உடன் பிறந்தவனான சேர இளங்கோவும் பாண்டிய நாட்டுக் கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளான். மற்றொரு உடன்பிறந்தவன் சேத்தூரில் (இராமநாதபுரம் மாவட்டம்) விஷ்ணுவுக்குக் கோயில் ஒன்றை எழுப்பினான்.
குலசேகரபாண்டியன் மக்கள் நலம் பேணும் திட்டங்களில் அக்கறை கொண்டவன். இவன் நீர்நிலைகளைப் பெருக்கியதுடன் வேளாண்மையையும் விரிவுபடுத்தினான். இவன் வெட்டிய குளம் ஒன்றுக்குத் தனது பெயரையிட்டான். வைகையாற்றினின்று கால்வாய் ஒன்றை வெட்டிப் பல ஊர்களுக்குப் பாசனவசதி அளித்தான்.
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
இவன் மதுரையில் சுந்தரேசுவரர் கோயிலில் (மீனாட்சியம்மன் கோயில்) உள்ள ஒன்பது நிலைக் கிழக்குக் கோபுரத்தைக் கட்டினான். மேலும் மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோயிலையும் கட்டினான். திருவானைக் கோயில் ஜம்புகேசுவரர் ஆலயத்தின் ஏழடுக்குத் திருக்கோபுரத்தைக் கட்டும் பணியை இவன் தொடங்கி வைத்தான்.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் எங்கும் வெற்றி கொண்டான். இப்புகழ் பெற்ற சுந்தரபாண்டியன் அறப்பணிகள் செய்வதிலும் நிகரற்று விளங்கினான். சிதம்பரம், திருவரங்கம் ஆகிய கோயில்களுக்கு அறக்கொடைகள் வழங்கினான். தில்லைத் திருக்கோயிலைப் பொன்னால் வேய்ந்தான். சிதம்பரத்து விஷ்ணு கோயிலுக்கும் சிவன் கோயிலுக்கும் காணிக்கைகள் வழங்கினான். சிதம்பரம் ஆலயத்திலுள்ள சுந்தரபாண்டியன் கோபுரத்தை இவன் கட்டினான்.
திருவரங்கம் கோயிலையும் பொன் வேய்ந்து சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெருமையுற்றான். அந்த ஆலயத்திற்குப் பொன்னும், பொருளும் நிவந்தங்களும் அளித்துப் புகழ் பெற்றான்.
சடையவர்மன் சுந்தரபாண்டியன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் ஊரில் அமைந்திருக்கும் ஆலயத்திலும் திருப்பணிகள் செய்தான். திருப்பதி மலை உச்சியில் அமைந்திருக்கும் வெங்கடேசுவரர் ஆலயத்தில் பொற்கலசம் ஒன்று நிறுவினான். மதுரையம்பதி அழகர் கோயில் விஷ்ணு ஆலயத்தில் மண்டபம் ஒன்றைக் கட்டினான். திருவானைக்கா கோயிலில் திருவிழாக்கள் நடத்த நிவந்தம் அளித்தான். திருவைகுண்டத்து விஷ்ணு கோயிலில் உள்ள சுந்தரபாண்டிய கோபுரம் இவன் கட்டியதாகக் கருதப்படுகின்றது.
சீனாவுடன் உறவு
பன்னெடுங் காலமாகத் தமிழகமும் சீனாவும் வாணிக உறவும், கலாச்சார உறவும் கொண்டிருந்தன. இவ்வுறவு பிற்காலப் பாண்டியரது காலத்திலும் தொடர்ந்தது. கி.பி. 1280 இல் முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் ஜமாலுதீன் என்பவரைச் சீனாவிற்குத் தூதுவராக அனுப்பினான்.
பாண்டிய மன்னன் தூதுவரை அனுப்பியது போல் சீனநாடும் யாங்திங் பீ என்பவரைத் தூதுவராகப் பாண்டிய நாட்டிற்கு அனுப்பி வைத்தது. இத்தூதுவர் கி.பி. 1282 இல் தாயகம் திரும்பினார். இதனைத் தொடர்ந்து முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் கி.பி. 1283, 1284 ஆம் ஆண்டுகளில் இரண்டுமுறை தூதுக் குழுவைச் சீனாவிற்கு அனுப்பிவைத்தான். இதனால் சீனநாட்டுடன் மேலும் நட்புறவு வளர்ந்தது எனலாம். பாண்டிய மன்னனைப் போன்றே சீனநாடும் இரண்டாம் முறையாக ஒரு தூதுக் குழுவைத் தமிழகத்திற்கு அனுப்பிவைத்தது.
பாண்டிய மன்னன் ஒருவனின் அமைச்சரவையில் அரபு வணிகர்கள் அமர்ந்திருந்தனர் என்றும், சுங்க அமைச்சர் பொறுப்பு அப்துல் ரஹிமான் என்ற இஸ்லாமியர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததென்றும் முஸ்லீம் வரலாறுகள் கூறுகின்றன.
பாடம் - 2
சமுதாயத்தில் சாதிப் பாகுபாடு தலைவிரித்தாடியது என்பது பற்றி அறிகிறோம்.
மன்னர்கள் கோயில்களுக்குப் பல உதவிகளைச் செய்துவந்தனர் என்பதையும், தேவரடியார்கள் என்போர் கோயிலில் தங்கி இருந்தார்கள் என்பதையும், அவர்கள் அங்கேயே தங்கி நடனமாடியும், இசைபாடியும் இறைத்தொண்டில் ஈடுபட்டிருந்தனர் என்பதையும் அறிய இருக்கின்றோம்.
கல்வி வளர்ச்சியுற்றிருந்தது என்றும், பொருளாதாரம், தொழில்கள் மூலமும், வாணிபத்தின் மூலமும் 13ஆம் நூற்றாண்டின் நிலை உயர்ந்திருந்தது என்றும் அறிகிறோம். சிற்பக்கலை, நடனக்கலை, நாடகக்கலை போன்றவை சிறப்புப் பெற்றிருந்தன என்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.
சுமார் கி.பி. 1310 வரை பாண்டியர் ஆட்சி புரிந்தனர். பொதுமக்கள் நலனைக் காக்கும் நோக்குடன் நிருவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நல்லாட்சி நாட்டில் நிலவ வேண்டுமென அரசர்கள் எண்ணினர். கிராம அளவில் உள்ளூர் மக்கள் நிருவாகத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களது அரசாங்கம் மக்கள் நலம் நாடும் அரசாங்கமாக விளங்கியது.
பாண்டிய மன்னர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர்.
படையின் தலைவர் சேனாதிபதி என அழைக்கப்பட்டார். கலிங்கராயன், மல்லவராயன், பல்லவராயன் முதலிய பட்டங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. நிருவாக நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்கு எழுத்தர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர்.
எழுத்து மண்டபத்தில் தலைமைச் செயலகம் செயல்பட்டு வந்தது. வேறுபட்ட அலுவலகங்களும் அங்கு இயங்கி வந்தன. சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்குக் காவிதி, ஏனாதி ஆகிய பட்டங்கள் அளிக்கப்பட்டன. அறநெறிகள் பற்றிய ஆலோசனை வழங்குவதற்குத் தனி அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார்.
பிற்காலப் பாண்டியர் காலத்தில் பாண்டிய நாடு தற்போது உள்ள மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைக் கொண்டிருந்தது. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் பாண்டியப் பேரரசு தமிழகம் முழுவதும் மட்டுமின்றித் தமிழகத்துக்கு வடக்கே உள்ள நெல்லூரையும் தன்னகத்தே கொண்டிருந்தது.
பாண்டியப் பேரரசு முழுவதையும் நடுவண் அரசு நேரடியாக ஆட்சி செய்ய முடியாத காரணத்தால் அது பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. மண்டலம் பல நாடுகளாகவும், நாடு பல கூற்றங்களாகவும், கூற்றம் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மண்டலங்கள் அல்லது மாநிலங்களின் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் இவர்களது செயல்கள் பற்றி அறிவதற்குச் சரியான சான்றுகள் இல்லை.
சபை, மக்கள் சபை என அழைக்கப்பட்டது. சபைக் கூட்டம் பற்றிய செய்தியினை முரசு கொட்டி அறிவித்தனர். கோயில் மண்டபத்தில் அல்லது மரத்தின் அடியில் அல்லது ஒரு பொது இடத்தில் மக்கள் சபை நடைபெற்றது.
நிலங்களை அளப்பதற்குச் சுந்தரபாண்டியன் கோல், வீரபாண்டியன் கோல் என்னும் அளவைகளைப் பயன்படுத்தியதாக அறிகிறோம். இத்துடன் குழி, மா, வேலி என்னும் வேறு நில அளவைகளும் நடைமுறையில் இருந்தன. நீர்ப்பாசனவரி தனியாக வசூலிக்கப்பட்டது. இதற்கு வாய்க்கால் பாட்டம் என்று பெயர். அரசரின் முடிசூட்டு விழாவின்போது வரித்தள்ளுபடி செய்யும் வழக்கம் உண்டு. சில பண்டிகைகளின்போதும் வரி வசூலிக்கப்பட்டது. சிவன் கோயில், விஷ்ணு கோயில், பிராமணர்கள் பெற்றிருந்த நிலங்கள், மடங்கள் பெற்றிருந்த நிலங்கள் ஆகியவை வரிவிலக்குப் பெற்றன.
சமுதாயத்தில் வலங்கை என்றும் இடங்கை என்றும் இருபிரிவினர் இருந்தனர். இவ்விரு பிரிவினரிலும் சுமார் 98 கிளைப்பிரிவினர் இருந்ததாக அறியமுடிகிறது.
வறட்சியான பகுதியில் குடியிருப்புகள் இல்லை. வறட்சியான பகுதிகளில் மக்கள் குடியேறினால் அவர்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டன. அக்காலத்தில் இராமநாதபுரம் போன்ற வளமற்ற இடங்களும் இருந்தன.
இறைவனுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெண்கள் தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டனர். இப்பெண்கள் கோயில்களில் தங்கி இருந்து நடனமாடுவதிலும், இசை இசைப்பதிலும் ஈடுபட்டிருந்தனர். இவர்களுள் ஏழைப் பெண்களும் இருந்தனர். செல்வந்தப் பெண்களும் இருந்தனர். இவர்களது பணி கோயில்களைச் சுத்தம் செய்வதாகும்.
கணவன் இறந்த பின்னர் அவனது ஈமத்தீயில் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொள்ளும் வழக்கம் நிலவியது. உடன்கட்டை ஏறிய பெண்களைப் பற்றிச் சமுதாயம் உயர்வாக எண்ணியது என்று மார்க்கோ போலோ வியந்து கூறுகிறார்.
உள்நாட்டு வாணிபத்தில் ஈடுபட்டிருந்தோர் வாணிபக் கழகங்களை அமைத்திருந்தனர். இவை வாணிப வளர்ச்சிக்கு உதவின. வாணிபத்தை நடத்துவதற்குப் பாண்டிய நாட்டு மக்கள் பொன், கழஞ்சு, காணம் ஆகிய தங்க நாணயங்களைப் பயன்படுத்தினர். துலாம், பலம் என்னும் அளவைகள் பொன்னை நிறுத்தறியும் அளவைகளாக இருந்தன.
திருப்பரங்குன்றத்துக் கோயிலில் காணப்படும் நடராசரின் சதுரத் தாண்டவத் திருக்கோலம் நடனக்கலை வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுகின்றது. ஆடல்களில் சிறப்புற்று விளங்கிய மகளிருக்குத் தலைக்கோல் என்னும் பட்டம் வழங்கப்பட்டது. அவர்கள் அரண்மனையில் நடனமாடி அரச குடும்பத்தை மகிழ்வித்தனர்.
கோயில்களும், பிராமணர்களும் பெற்றிருந்த தேவதான நிலங்களும், பிரமதேய நிலங்களும் கைப்பற்றப்பட்டதால் இந்து மக்களிடையில் இசுலாமிய சமயத்தின் மீது வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது. இச்சூழ் நிலையிலும் கூட இந்து சமயம் வளர்ச்சியைக் கண்டது என்பதில் ஐயமில்லை. கோயில்கள் எழுப்பப்பட்டது மட்டுமேயன்றிச் சமய இலக்கியங்களும் தோன்றின.
பிற்காலப் பாண்டியர்கள் இக்காலத்தில் ஆட்சியில் உயர்ந்து காணப்பட்டனர். கோயில்களுக்குப் பல உதவிகளைச் செய்தார்கள்.
பெண்களும், ஆண்களும் சமமாக மதிக்கப்பட்டனர். கலை நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. இவற்றைப் பற்றிச் சான்றுகளுடன் கற்று அறிந்திருப்பீர்கள்.
பாடம் - 3
இசுலாமிய மதத்தைப் பரப்புவதே அவர்களின் கடமை என்ற காரணத்தாலும் தமிழகத்தின் மீது படையெடுத்தனர் என்பது பற்றியும் காண இருக்கிறோம்.
இந்துக்கள் கோயில்களில் அளவற்ற செல்வங்கள் குவிந்து இருந்தன என்றும், அவற்றைச் சூறையாடித் தங்களது நாட்டில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்றும் நினைத்துப் படையெடுத்தனர் என்பதை அறிய இருக்கிறோம்.
சில மன்னர்கள் திறை செலுத்தவில்லை என்ற காரணம் காட்டி, அந்நாட்டின் மீது படையெடுப்பு நடத்தினர் என்பதையும் அறிய இருக்கிறோம்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் டெல்லியிலும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இக்குழப்பத்தைப் பயன்படுத்தி, இரண்டாம் பிரதாபருத்திரன் என்பவன் தமிழகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டான். இதனைக் கண்டு பொறாமை கொண்ட டெல்லி அரசன் கியாசுதீன் துக்ளக் தமிழகத்தின் மீது படையெடுத்தான் என்பன போன்றவற்றை அறிய இருக்கிறோம்.
அலாவுதீன் கில்ஜி
தனக்கு உரிமை இருந்தும் நாடாளும் உரிமையைத் தனக்கு அளிக்காமல், தனது சகோதரனுக்கு அளித்ததைக் கண்டு சுந்தரபாண்டியன் கோபமுற்றான். பின்பு கி.பி. 1310இல் சுந்தரபாண்டியன் தனது தந்தையைக் கொன்றுவிட்டு மதுரையில் முடிசூட்டிக் கொண்டான். இதனால் இரு சகோதரர்களுக்கு இடையே போர் மூண்டது. இதில் சுந்தரபாண்டியன் தோல்வியுற்று ஓடிவிட்டான். பிறகு அலாவுதீன் கில்ஜியின் போர்ப்படைத் தளபதியான மாலிக்காபூரின் உதவியைச் சுந்தரபாண்டியன் நாடினான். மாலிக்காபூர் படை உதவியுடன் வந்து சுந்தரபாண்டியன் போரிட்டதால் வீரபாண்டியன் அஞ்சி ஓடிவிட்டான்.
மாலிக்காபூர் மதுரையைத் தாக்கிச் செல்வங்களைச் சூறையாடினான். இந்த வாரிசு உரிமைப் போரினால் இரு சகோதரர்களும் வெவ்வேறு மனப்பான்மை கொண்டிருந்த காரணத்தால் டெல்லியிலிருந்து வந்த மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் எளிதாக ஆதிக்கம் செலுத்த முடிந்தது.
மாலிக்காபூர் வீரபாண்டியனைத் தேடிக் கண்ணனூர்க் கொப்பம் சென்றான். அங்கிருந்த பெருஞ்செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டான். அச்சமயத்தில் தில்லைக் கோயில் செல்வங்கள் பற்றிக் கேள்விப்பட்டு அங்கிருந்த பொன்னையும் மணியையும் கைப்பற்றினான். பின்பு அக்கோயிலைத் தீக்கு இரையாக்கினான். இச்செய்தியை தரீக்-இ-அலைய் (Tarikh-i-Alai) என்னும் நூலில் அமீர்குஸ்ரு என்பவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் மாலிக்காபூர் தில்லையிலிருந்து மதுரை செல்லும் வழியில் திருவரங்கம் கோயில் செல்வங்களைக் கொள்ளையடித்தான். மதுரைக்குள் புகுந்து அங்குள்ள சொக்கநாதர் கோயில் செல்வங்களைக் கைப்பற்றினான். பின்பு இராமேஸ்வரம் சென்று கோயிலிலுள்ள பொன்னாலான ஆபரணங்களையும், சிலைகளையும், யானைகளையும் கைப்பற்றினான். கடைசியில் மாலிக்காபூர் 512 யானைகள், 5000 குதிரைகள், 500 மணங்கு எடையுள்ள ஆபரணங்கள், விலை மதிப்பற்ற வைரங்கள், முத்து, மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு டெல்லிக்குத் திரும்பினான்.
காகதீயரை முறியடித்து, குஸ்ருகான் கி.பி. 1317இல் தமிழ் நாட்டில் படையுடன் முன்னேறினான். மதுரை மீது போர் தொடுத்தான். குஸ்ருகான் மதுரையில் போரைத் தொடங்கியபோது அங்குப் பெரும் மழை பெய்து கொண்டிருந்தது. எனவே அவனால் வெற்றியைக் காணமுடியாமல் போயிற்று. ஆதலால் குஸ்ருகான் திரும்ப அழைக்கப்பெற்றான். குஸ்ருகானின் படையெடுப்பு, தமிழ் நாட்டு அரசியலில் எத்தகைய விளைவையும் ஏற்படுத்தாமல் முடிவுற்றது.
டெல்லி அரசியலில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களையும், மாற்றங்களையும் பயன்படுத்திக் கொண்டு வாராங்கலை ஆண்டு கொண்டிருந்த இரண்டாம் பிரதாபருத்திரன் தமிழ்நாட்டின் மீது குறிவைத்தான். பெரும்படையுடன் தமிழ்நாட்டிற்குள் புகுந்து முன்னேறினான். பாண்டியர் அவனை எதிர்த்துப் போரிட்டும் பயனில்லை. இரண்டாம் பிருதாபருத்திரன் வெற்றி பெற்றுக் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டான்.
இரண்டாம் பிரதாபருத்திரனின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் டெல்லியை ஆண்டு வந்த கியாசுதீன் துக்ளக் தனது மகனும் வாரிசுமாகிய உலூக்கான் என்பவனைத் தென் இந்தியாவில் படையெடுப்புகளை நடத்துமாறு அனுப்பினான். இந்த உலூக்கானே முகமதுபின் துக்ளக் ஆவான். டெல்லியின் உத்தரவுப்படி உலூக்கான் இரண்டாம் பிரதாபருத்திரனின் தலைநகரமான வாராங்கலைத் தாக்கினான். முதலில் உலூக்கான் தோல்வியைக் கண்டாலும், நம்பிக்கையை இழக்காமல் மீண்டும் வாராங்கலைத் தாக்கி வெற்றி கண்டு, அதனைத் தகர்த்தான்.
இப்போரில் வெற்றியடைந்த காரணத்தால் உலூக்கான் படை தமிழ் நாட்டில் புகுந்து முன்னேறியது. பாண்டிய நாட்டு அரசன் பராக்கிரமபாண்டியனுக்கும் உலூக்கானுக்கும் போர் மூண்டது. இதில் வெற்றி கண்ட உலூக்கான் தமிழ்நாட்டை டெல்லி சுல்தானியர் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான்.
இசுலாமியர் பாண்டிய நாடு வரை வந்து ஆதிக்கத்தை நிலை நாட்டியதைக் கண்ட தென் இந்திய இந்து அரசர்கள் வீர உணர்வு கொண்டு எழுந்து இசுலாமியர் மீது படையெடுப்பு நடத்தினர். துவார சமுத்திரத்தில் ஆட்சியில் இருந்த போசள அரசன் மூன்றாம் வீரவல்லாளன் தென் இந்தியாவை இசுலாமியர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகப் போரிட்டான். அதில் வெற்றியும் கண்டான். ஆனால் அவ்வரசனால் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியை மட்டும் கைப்பற்ற முடிந்தது. பின் அப்பகுதியை ஆட்சி செய்யும் பொறுப்பைச் சம்புவராயர்களிடம் ஒப்படைத்தான். இதனையடுத்து இசுலாமியர் படையெடுப்பைச் சந்திக்கும் பொருட்டு மூன்றாம் வீரவல்லாளன் திருவண்ணாமலையில் ஒரு படையை நிறுத்தினான்.
மதுரையில் அந்நியர்கள் ஆட்சிக்கு எதிராகச் சூழ்ச்சிகளும் போராட்டங்களும் தொடங்கின. கி.பி.1340இல் மதுரையை ஆட்சி செய்து வந்த ஜலாலுதீன் அசன்ஷா கொல்லப்பட்டான்.
தம்கானி இந்துப் பெண்களைக் கொன்று குவித்தான்; ஆண்களைக் கழுவில் ஏற்றினான்; தாயின் மார்பிலே பால் உண்டு கொண்டிருந்த பச்சிளங் குழந்தைகளை வாளால் வெட்டிக் கொன்றான். தான் கொன்று குவித்த மக்களின் தலைகளைக் கொய்து மாலைகளாகக் கோத்துச் சூலங்களில் தொங்க விட்டான். இவற்றை எல்லாம் இபன்பதூதா தனது குறிப்பில் விவரித்துள்ளான். கடைசிக் காலத்தில் தம்கானி காலராநோய் வாய்ப்பட்டு இறந்தான்.
பாடம் - 4
நாயக்க மன்னர்கள் பல சீர்திருத்தங்களைத் தாங்கள் ஆண்ட நிலப்பரப்பில் செய்து வந்தனர். கட்டடக்கலைப் பிரியர்களாக வாழ்ந்தார்கள். கோயில்களுக்கு அறப்பணிகளைச் செய்து வந்தனர். பாளையப்பட்டு முறை போன்றவைகளைப் புகுத்தினர். இவை பற்றிய செய்திகளையெல்லாம் இப்பாடத்தில் விரிவாகக் காண இருக்கிறோம்.
விசயநகரப் பேரரசு, தென்னிந்திய சுதந்திரப் பேரரசு வரலாற்றில் என்றும் மறக்க முடியாத பெருமை பொருந்தியது. அழியும் நிலையில் இருந்த இந்து சமயத்தையும், தென்னாட்டு மக்களின் கலைப்பண்பையும் வழிவழியாய்ப் பாதுகாத்துப் போற்றிய பேரரசாகும். தென்னாட்டில் புதிதாக வந்த இசுலாம் ஆதிக்கத்தை ஒழித்து, முன்னாள் போல எந்நாளும் முழுவுரிமையோடு விளங்கப் போராடிய போராட்டத்தின் வரலாறாய் விளங்கிய அரசாகும். நாயக்கர் வரலாறு விசயநகரப் பேரரசு வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து நிற்பதால் அப்பேரரசின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்வது இன்றியமையாததாகிறது.
கி.பி.பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்திய மக்கள் இசுலாமியரின் ஆதிக்கத்தை வெறுத்து அவர்களின் பிடிப்பிலிருந்து விடுபட விடுதலை இயக்கத்தைத் தொடங்கினர். அப்போது வீர சைவம் என்ற புதுச்சமயம் தோன்றியிருந்தது. இச்சமயம் இவ்விடுதலை இயக்கத்தை ஆதரித்தது. மேலும் இசுலாமியர் ஆட்சியில் வரிப்பளுவால் சொல்லொணாக் கொடுமைகள் அடைந்த மக்கள் இவ்வியக்கத்துக்கு ஆதரவளித்தனர். தென்னிந்தியாவை இசுலாமியருக்குக் கப்பம் கட்டி ஆண்டு கொண்டிருந்த சிற்றரசர்களுள் பெரும்பாலோர் இவ்வியக்கத்தைப் பயன்படுத்திச் சுதந்திர மன்னர்களாகி விட்டனர். இவர்களுள் ஒருவன் சோமதேவன் என்கிற கம்பிலித்தேவன் ஆவான். இவன் அப்போது கம்பிலி நாட்டு ஆளுநராக (கவர்னராக) இருந்த மாலிக் முகமது என்பவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, கம்பிலி நகரில் இருந்த கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான். கம்பிலி நாட்டுக் குடிமக்களும் ஆளுநருக்குத் திறை செலுத்த மறுத்தார்கள். கம்பிலி ஆளுநர் இன்னது செய்வது என்று அறியாதவனாய்த் தலைமைப் பீடமாகிய டில்லிக்கு நிலைமையை விளக்கிக் கடிதம் அனுப்பினான். இக்கடிதத்தைக் கண்ட டில்லி சுல்தான் முகமது பின் துக்ளக் கம்பிலித்தேவன் குடும்பத்தைச் சேர்ந்த ஹரிஹரர், புக்கர் என்ற இருவரை அனுப்பிக் கம்பிலியில் அமைதி நிலவும்படி செய்ய உத்தரவிட்டான். அதன்படி அவ்விருவரும் கம்பிலிக்கு வந்தனர். வந்து அங்குள்ள சில நாடுகளை வென்று ஒன்றுபடுத்தினர். துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில் ஆனைக்குந்திக்கு எதிரில் ஒரு நகரை நிறுவினர். அதற்கு விசயநகரம் என்று பெயரிட்டனர். இதற்கு வெற்றி நகரம் என்று பொருளாகும். பின்பு ஹரிஹரர் கி.பி.1336இல் முடிசூட்டிக் கொண்டு ஹொய்சள நாட்டையும் கைப்பற்றி விசயநகரத்துடன் இணைத்துக் கொண்டார். இது நாளடைவில் விரிந்து கொண்டே போயிற்று. இவ்விசயநகரத்தைச் சங்கமப் பரம்பரை, சாளுவப் பரம்பரை, துளுவப் பரம்பரை, ஆரவீட்டுப் பரம்பரை என்னும் நான்கு பரம்பரையைச் சார்ந்தவர்கள் ஆட்சி புரிந்தனர்.
சங்கமப் பரம்பரையைச் சேர்ந்த முதல் அரசர் ஹரிஹரர் ஆவார். இவரது ஆட்சி கி.பி.1357இல் முடிவுற்றது. இவருக்குப் பின் வந்த முதலாம் புக்கர் கி.பி.1377 வரை இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது காலத்தில் நெல்லூர், கடப்பை, பெனுகொண்டா, பெல்லாரி, அனந்தபூர், மைசூரின் வடபகுதி, கோவா, தமிழ்நாடு ஆகியவை சேரவே, விசயநகரப் பேரரசு விரிவடைந்தது. இவருடைய புதல்வரான இரண்டாம் கம்பணர், இசுலாம் ஆதிக்கத்தை ஒழிக்கக் கருதித் தெற்கே படையெடுத்துச் சென்றார். தமிழகத்துத் தொண்டை நாட்டில் இருந்த படைவீடு ராஜ்ஜியத்தை வென்று பின்பு மதுரையில் முகமது பின் துக்ளக்கின் காலத்தில் ஏற்பட்டு நடந்து வந்த சுல்தான் ஆட்சியை ஒழித்து, அங்கே மதுரை நாயக்கர் நேரடி ஆட்சிக்கு வழிகோலி வைத்தார்.
விசயநகரப் பேரரசின் பகுதிகளாய் இருந்த தஞ்சை, செஞ்சி, இக்கேரி, மைசூர், வேலூர் இவற்றைப் பற்றி இங்குப் பார்க்கலாம். தஞ்சை விசய நகரப் பேரரசின் ஒரு பகுதியாக கி.பி.1532இல் அமைந்தது. தஞ்சையில் முதன்முதலில் நாயக்கர் ஆட்சியைத் தொடங்கியவர் செவ்வப்ப நாயக்கர் ஆவார்.
செஞ்சியும் கி.பி.1526இலிருந்து விசயநகரப் பேரரசிற்கு உட்பட்டு இருந்தது. செஞ்சியில் முதன்முதலில் நாயக்கர் ஆட்சியைக் கிருஷ்ணதேவராயர் காலத்தில் தொடங்கி வைத்தவர் வையப்ப நாயக்கர் என்பவர் ஆவார்.
கி.பி.1540இல் இக்கேரி என்னும் இடம் (இது மைசூரில் அடங்கிய ஷிமோகா ஆகும்) விசயநகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. சதாசிவன் என்பவன் இக்கேரியில் நாயக்கர் ஆட்சியைத் தொடங்கிவைத்தான். இக்கேரியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்ததால் இவர்களை இக்கேரி நாயக்கர் என்பர்.
செஞ்சி நாயக்கருக்கு அடங்கிய நாயக்கர் ஆட்சி வேலூரில் ஏற்பட்டது. அங்கு நாயக்கர் ஆட்சியை நடத்தியவர் வீரப்ப நாயக்கர் என்பவர் ஆவார்.
நாயக்கர் என்னும் சொல் நாயக் என்னும் வடசொல்லின் திரிபாகும். இச்சொல் முதலில் தலைவன் என்னும் பொருளில் வழங்கி வந்து, பின்பு படைத்தலைவனைக் குறிக்கலாயிற்று. விசயநகரப் பேரரசில் இச்சொல், அப்பேரரசின் பகுதிகளாய் இருந்த தஞ்சை, செஞ்சி, இக்கேரி, வேலூர், மதுரை ஆகியவற்றை அரசச் சார்பாளர்களாகவோ (viceroys), ஆளுநர்களாகவோ (Governors) இருந்து ஆட்சி செய்தவர்களைச் சிறப்பாகக் குறிப்பிடலாயிற்று.
மதுரை நாயக்கர்கள் ஆட்சி கி.பி. 1529இல் விசுவநாத நாயக்கர் என்பவரால் தொடங்கப்பட்டுக் கி.பி. 1736இல் மீனாட்சி அரசியுடன் முடிவடைந்துள்ளது. இந்த மதுரை நாயக்கர் பரம்பரை மதுரை நாட்டில் 207 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது. மீனாட்சி அரசியின் ஆட்சியோடு விசுவநாத நாயக்கர் பரம்பரை மட்டும் முடியவில்லை, விசயநகரப் பேரரசே முடிந்துவிட்டது.
இனி மதுரையை ஆட்சி செய்து வந்த நாயக்க மன்னர்களைப் பற்றி ஒருவர் பின் ஒருவராகக் காண்போம்.
விசுவநாத நாயக்கர் ஏறக்குறையப் பதினாறு வயதினராய் இருந்தபோதே கிருஷ்ணதேவராயரிடம் அடைப்பைக்காரராகப் பணியாற்றினார் (அடைப்பைக்காரர் – அரசருக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கும் அரசாங்க ஊழியர்). இவர் இளமையிலே பல மொழிகளிலும், கணிதத்திலும், போர்ப் பயிற்சியிலும், பிறவற்றிலும் சிறந்து விளங்கினார். இதன் காரணமாகக் கிருஷ்ணதேவராயர் இவரிடம் மிகவும் அன்பு கொண்டிருந்தார். எனவே விசுவநாத நாயக்கரை மதுரை நாட்டுக்கு ஆளுநராக நியமித்தார். கி.பி.1529இல் விசுவநாத நாயக்கர் மதுரையின் ஆட்சியை மேற்கொண்டார். அவர் மதுரை நாட்டுக்கு வரும்போது தளவாய் அரியநாதர் என்பவருடன் வந்தார். தளவாய் என்பது படைத்தலைமைப் பதவியும், அமைச்சர் பதவியும் சேர்ந்ததாகும். கிருஷ்ணதேவராயர் கி.பி.1530இல் இறந்ததும் விசுவநாதர் மதுரை நாட்டைச் சீர்திருத்த வேண்டும் எண்ணிச் சீர்படுத்தலானார். பாண்டிய நாட்டுக்கு உரியதாயிருந்த வல்லம் என்னும் ஊரைத் தஞ்சை நாட்டுடன் சேர்த்தார். தஞ்சைக்குச் சொந்தமாயிருந்த திருச்சிராப்பள்ளியை மதுரை நாட்டுடன் இணைக்கச் செய்தார். இவ்வேற்பாட்டினால் தஞ்சை நாட்டிற்கும், மதுரை நாட்டிற்கும் திட்டவட்டமான எல்லை வகுக்கப்பட்டது.
சீர்த்திருத்தங்கள்
விசுவநாதர் திருச்சிராப்பள்ளியில் தெப்பக் குளத்தை வெட்டினார்.தாயுமானவர் கோயிலைச் செப்பனிட்டார். காவிரி ஆற்றின் இருமருங்கிலும் கள்ளர்களின் உறைவிடமாயிருந்த காடுகளை அழித்துச் சாலைகளை அமைத்துக் கள்ளர் தொல்லைகளை ஒழித்தார். திருவரங்கப் பெருங்கோயிலைச் சீர்திருத்தி அக்கோயிலைச் சுற்றித் தெருக்களை அமைத்து, வீடுகளைக் கட்டி அங்கு மக்களை குடியேற்றினார். இவ்வாறு பல சீர்திருத்தங்களைச் செய்தார். இச்சீர்திருத்தங்களால் மதுரை நாட்டின் வடபகுதியாகிய திருச்சிராப்பள்ளியில் ஒழுங்கும் அமைதியும் நிலவலாயின.
தென்பாண்டி நாட்டில் அமைதியைக் காக்க வேண்டும் என்பதற்காக விசுவநாத நாயக்கரும், தளவாய் அரியநாதரும் அங்குச் சீர்திருத்தங்களைச் செய்ய முற்பட்டார்கள். தாமிரபரணி ஆற்றின் இருகரைகளிலும் இருந்த காடுகள் அழிக்கப்பட்டுச் சாலைகள் அமைக்கப்பட்டன. இதனால் கள்ளர்களின் தொல்லை ஒழிந்தது. திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில் பழுது பார்க்கப்பட்டது. திருநெல்வேலி நகரமும் விரிவாக்கப்பட்டது. நீர்ப்பாசன வசதிகள் செய்யப்பட்டன. பயிர்த்தொழில் இதனால் வளர்ச்சியுற்றது.
பாளையப்பட்டு முறை
தற்காலத்தில் உள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களும், கேரளாவில் உள்ள திருவாங்கூரின் ஒரு பகுதியும் விசுவநாதர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த மதுரை நாடாகும். இப்பரந்த நாட்டில் செம்மையான ஆட்சி முறையை நிறுவ, கி.பி.1533இல் 72 பாளையப்பட்டு முறையை விசுவநாதர் ஏற்படுத்தினார். இந்தப் பாளையப்பட்டு முறை ஒரு வகையில் ஆங்கில நாட்டின் நிலமானிய முறையைச் (Feudal System) சார்ந்ததாகும். நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டும், நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற காரணங்களுக்காக மதுரை நாட்டைப் பல பகுதிகளாகப் (பாளையங்களாக) பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஓர் ஆட்சியாளரை நியமித்தனர். அவரைப் பாளையக்காரர் என அழைத்தனர். இந்த 72 பாளையக்காரர்களில் சிலர் கன்னடர், சிலர் தெலுங்கர் ஆவர். மேலும் பாண்டியர் பரம்பரையைச் சேர்ந்தவர்களும் சிற்றரசர்களாய் இருந்தவர்களும் பாளையக்காரர்களாக இருந்தார்கள்.
பாளையக்காரர்கள் தாங்கள் ஆளும் பாளையங்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியை மதுரை நாயக்கருக்குக் கொடுக்க வேண்டும். மற்றொரு பகுதியைப் படைவீரர்களுக்குச் செலவிட வேண்டும். இன்னொரு பகுதியைச் சொந்தச் செலவுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். இவர்கள் தங்கள் பகுதியைப் பாதுகாக்க வேண்டும். போர்க்காலங்களில் மதுரை நாயக்கர்களுக்குப் படைத்துணை புரிய வேண்டும். இவர்களே தங்கள் பகுதியில் ஏற்படக்கூடிய வழக்குகளை எல்லாம் விசாரித்து நீதியும் வழங்க வேண்டும்.
விசுவநாத நாயக்கர், விசயநகரப் பேரரசர்களாயிருந்த அச்சுதராயருக்கும், சதாசிவராயருக்கும், அமைச்சர் இராமராயருக்கும் கீழ்ப்படிந்து, நேர்மை குறையாமல், உண்மை ஊழியராய் இருந்து செங்கோல் ஆட்சி நடத்தி வந்தார். இதனை இவர் காலத்துச் சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இவர் சுமார் 35 ஆண்டுகள் மாட்சியுடன் ஆட்சி செய்தார். தமது 69ஆம் வயதில் கி.பி.1564இல் மறைந்தார்.
இவரின் மறைவுக்குப் பின் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1564-1572), வீரப்ப நாயக்கர் (கி.பி.1572-1595), இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1595 – 1601), முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1601 – 1609), முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1609-1623) ஆகியோர் மதுரையை ஆட்சி புரிந்து வந்தனர்.
திருமலை நாயக்கரின் காலத்தில் மதுரைப் பெருநாடு, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் ஒரு பகுதி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளைக் கொண்ட பெரும் பரப்புடைய நாடாய் இருந்தது.
தலைநகரம் மாற்றம்
விசுவநாத நாயக்கர் காலத்தில் மதுரையே மதுரை நாட்டின் தலைநகராய் இருந்தது. முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் கி.பி.1616இல் மதுரை நகரிலிருந்து தலைநகரைத் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார். திருமலை நாயக்கரும் தம் தமையனாரைப் போலவே மதுரையில் முடிசூட்டிக் கொண்டு, திருச்சிராப்பள்ளியில் இருந்தே ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்து வந்தார்.
திருமலை நாயக்கரின் தமையனார் மதுரையைத் தலைநகராகக் கொள்ளாததற்குச் சில காரணங்கள் உள்ளன. மதுரையில் தக்க காவல் நிறைந்த அரண்கள் இல்லை. சோழநாட்டில் பாயும் காவிரி ஆறு போன்று நீர் பெருகி ஓடும் ஆறாக வைகை இல்லை. அடிக்கடி மதுரையில் காய்ச்சல் பரவிக் கொண்டிருந்தது. இக் காரணங்களால் தலைநகரைத் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார்.
கி.பி.1634இல் திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியில் அமைந்திருந்த தலைநகரை மதுரைக்கு மாற்றினார். ஏனென்றால் ஒரு சமயம் திருமலை நாயக்கருக்குக் கடுமையான நோய் ஏற்பட்டது. பலவகை மருந்துகளை உட்கொண்டும் நோய் தீரவில்லை. அச்சமயத்தில் மதுரையில் மீனாட்சியம்மன் திருக்கோயில் திருவிழா நடந்து கொண்டு இருந்தது. திருமலை நாயக்கர் அத்திருவிழாவைக் காண மதுரைக்குச் சென்று கொண்டிருந்தபோது, நோய் மிகுதியானபடியால் பயணத்தைத் தொடரமுடியாமல், வழியில் திண்டுக்கல்லில் தங்கினார். அன்று இரவு ஒரு சித்தர் அவருடைய கனவில் தோன்றி “அரசே! நீ மதுரையில் நிலையாகத் தங்கி, மீனாட்சி அம்மையாருக்கும், சொக்கநாதப் பெருமானுக்கும் வழிபாடும் திருவிழாவும் நடத்தி ஆட்சி புரிந்து வந்தால் இந்நோய் நீங்கும்” என்றார். உடனே திருமலை நாயக்கர் அவ்வாறு நீங்குமானால் ஐந்து லட்சம் பொன்னுக்குத் திருப்பணி திருவாபரணம் செய்து வைக்கிறேன் என்று நேர்ந்து கொண்டார். மறுநாள் காலையில் அந்நோய் அவரை விட்டு நீங்கிவிட்டது. பின்பு தலைநகரையும் மதுரைக்கு மாற்றினார். திருமலை நாயக்கர் தலைநகரைத் திருச்சிராப்பள்ளியிலிருந்து மதுரைக்கு மாற்றியதற்குக் காரணமாக இக்கதை கூறப்படுகிறது.
திருமலை நாயக்கரின் போர்கள்
திருமலை நாயக்கர் ஆட்சிப் பீடத்தில் ஏறியதும் மதுரை நாட்டைப் பாதுகாக்க வேண்டியவற்றைச் செய்வதில் முற்பட்டு இரண்டு கோட்டைகளைக் கட்டினார். பின்பு சுமார் 20,000 வீரர்களைக் கொண்ட படையைத் திரட்டினார். திருமலை நாயக்கர் ஐந்து பெரும் போர்களை நடத்தினார்.
முதலாவதாக, முந்திய பகைமையாலும், செந்தமிழ் மதுரை நாட்டின் செழிப்பாலும் மைசூர் மன்னர் மதுரை மீது படையெடுத்தார். திருமலை நாயக்கர் அவரை எதிர்த்துப் போராட வேண்டியவரானார்.
இரண்டாவது, திருவாங்கூர் மன்னர் கேரளவர்மா என்பவர் கட்ட வேண்டிய கப்பத்தைக் கட்டாததனால் அவர் மீது படையெடுத்துச் சென்று போர் புரியலானார்.
மூன்றாவது, விசயநகரப் பேரரசின் பிடியிலிருந்து விடுபட்டு, முழுவுரிமை மன்னராக விரும்பி, விசயநகரப் பேரரசை எதிர்க்க வேண்டிப் போர் தொடுத்தார்.
நான்காவது, இராமநாதபுரத்தில் அரசுரிமைக் கலகங்கள் ஏற்பட்ட காலத்தில் அவற்றை அடக்கி அமைதியை நிலைநிறுத்த இராமநாதபுரத்தை ஆண்டு வந்த சேதுபதியுடன் போர் செய்தார்.
ஐந்தாவதாக மைசூர் மன்னர் படைகள் மதுரை நாட்டைத் தாக்கி மதுரைக் குடிமக்களின் மூக்குகளை அறுத்து அவமானப்படுத்தியதால், இரண்டாம் முறை பழிக்குப் பழி வாங்க மைசூரின் மீது மூக்கறுப்புப் போரை நடத்தினார். திருமலை நாயக்கரின் படைவீரர்கள் மைசூர் நாட்டு எல்லைக்குள் புகுந்து, அங்குள்ள மக்களின் மூக்குகளை அறுத்து மூட்டையாகக் கட்டி மதுரைக்குக் கொண்டுவந்தனர்.
இவ்வாறு திருமலை நாயக்கர் தமது வாழ்நாள் முழுவதும் பெரும்போர் புரிந்துகொண்டே இருக்க வேண்டியவராய் இருந்ததுமின்றி, அப்போர்களுக்காகப் பெரும்பொருள் செலவு செய்ய வேண்டிய நிலையிலும் இருந்து வந்தார். இப்போர்களினால் மதுரை நாட்டு மக்கள் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளானார்கள்.
கலைப் பணிகள்
திருமலை நாயக்கர் ஒரு தலைசிறந்த கலைப்பிரியர் ஆவார். மதுரையில் அவர் எழுப்பியுள்ள கட்டடங்கள் இன்றும் நின்று அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. திருமலை நாயக்கர் மகால் இவர் கட்டிய கட்டடங்களுள் புகழ்பெற்றதும், பெரியதுமாகும். ஷாஜகான் பெயர் சொல்லும் தாஜ்மகாலைப் போல, திருமலை நாயக்கரின் பெயர் சொல்லும் வகையில் மகால் அமைந்துள்ளது. இம்மகாலில் உள்ள அற்புதமான வேலைப்பாடு அமைந்த வளைவுகள், வட்டவடிவான மேற்கூரைகள், விரிந்து அகன்ற கூடங்கள், மிகப் பெரிய தூண்கள் காண்போர் கண்ணைப் பறிப்பனவாகும். ஒவ்வொரு தூணும் 40 அடி உயரமும், மூவர் அல்லது நால்வர் சேர்ந்தணைத்தாலும் அணைக்க முடியாத அளவு பருமனும் கொண்டு விளங்குவதை, மகாலின் முற்றத்தில் இன்றும் காணலாம்.
மேலும் திருமலை நாயக்கர் மீனாட்சியம்மன் கோயிலின் கிழக்கே உள்ள பெரிய கோபுரத்தின் எதிரே கட்டிய புதுமண்டபம், இராய கோபுரம் மற்றும் மதுரைக்குக் கிழக்கே உள்ள வண்டியூரில் அழகிய மையமண்டபத்துடன் உருவாக்கிய தெப்பக்குளம் ஆகியன அவருடைய புகழை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இராய கோபுரம் முற்றுப்பெறாத நிலையில் நின்றுவிட்டது. இதைத் திருமலை நாயக்கர் கட்டி முடித்திருப்பாரே என்றால், அதுவே மதுரைக் கோபுரங்களில் மிகவும் உயரமாக அமைந்திருக்கும் என்பர்.
பொதுநலப் பணிகள்
திருமலை நாயக்கர் அரிய பெரிய கட்டடங்களைக் கட்டுவதிலும், தெப்பக்குளம் அமைப்பதிலும் கவனம் செலுத்தியதோடு மட்டும் நிற்கவில்லை. பொதுநலத்திற்குரிய சாலைகள் அமைப்பதிலும், சத்திரங்கள் கட்டுவதிலும் அவர் நாட்டம் செலுத்தினார்.
திருமலை நாயக்கர் ஊட்டத்தூர் முதல் கன்னியாகுமரி வரையில் சாலை அமைக்கச் செய்து இடையிடையே பயணிகள் தங்குவதற்குச் சத்திரங்கள் பலவற்றைக் கட்டிவைத்தார். பின்பு அச்சத்திரங்களில் அன்னதானம் செய்யுமாறும் ஏற்பாடு செய்தார். இதனை மதுரைத் திருப்பணி மாலை என்னும் நூலில் உள்ள ஒரு செய்யுள் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
முனைவேல் விழிஅங் கயற்கண்ணி சந்நிதிமுன் மடத்துள்
அனைவோர்க்கும் அன்னமும் தோழியம் மாடன் அறைக்கும் அனு
தினம்மே தினியில் நடக்கும் படிக்(கு) ஈந்(து) இசையும் கொண்டான்
புனவேலி தந்தனன் கச்சித் திருமலை பூபதியே.
கோயில் நலப்பணிகள்
திருமலை நாயக்கர் கடவுள் பக்தி மிக்கவராய் இருந்ததால் மதுரைக் கோயில்களில் மட்டும் அன்றி, வேறு கோயில்களிலும் திருப்பணிகள் செய்ததாக அறிகிறோம்.
மதுரைக் கோயில் ஆட்சி, அபிடேக பண்டாரம் என்பவரிடம் இருந்தது. பண்டாரத்தின் ஆட்சியில் கோயில் சீர்கேடான நிலையில் கிடந்தது. வழிபாட்டு முறைகள் நன்றாக நடைபெறவில்லை. கோயில் வருவாய் முழுவதும் அப்பண்டாரத்தால் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இதனைத் தெரிந்து கொண்ட திருமலை நாயக்கர் அக்கோயில் ஆட்சியைத் தாமே ஏற்றுக்கொண்டு நடத்தினார். மேலும் கோயிலில் அறக்கட்டளைகளை ஏற்படுத்தினார். கோயில் ஆட்சியில் ஒழுங்கு ஏற்பாடுகளைச் செய்தார். மாசி மாதத்தில் நடைபெறும் விழாவைச் சித்திரைக்கு மாற்றினார். பல விழாக்களை எடுத்து நடத்தினார். சான்று : பிட்டுக்கு மண் சுமந்தது போன்ற திருவிளையாடல் விழாக்கள், தெப்பத் திருவிழா போன்றவை.
சதி
சொக்கநாதர் ஆட்சியை ஏற்றபோது அவர் இளைஞராய் இருந்தார். இதனால் அங்குத் தளவாயாகப் பணிபுரிந்த இலிங்கம நாயக்கனும், பிரதானியாய் இருந்தவனும், இராயசமாகப் பணி செய்தவனும் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து சதித் திட்டம் வகுத்தனர்; பெயரளவில் சொக்கநாதரை அரசராக இருக்க வைத்துவிட்டு, அவரிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர்; மன்னருக்கு ஆதரவாக இருந்தவர்களைச் சிறையில் அடைத்தனர். அச்சமயத்தில் செஞ்சி நகரம் பீஜப்பூர் சுல்தான் ஆட்சியில் இருந்தது. பிரதானியும், இராயசமும் மன்னர் சொக்கநாதரின் இசைவைப் பெறாமல் செஞ்சிமீது போர் தொடுப்பதாகச் சொல்லிப் படையை அங்கு நிறுத்தி வைத்துவிட்டு, மதுரையில் உள்ள மக்களிடம் போர்ச் செலவிற்காகப் பெரும்பொருள் வேண்டும் என்று மக்களைத் துன்புறுத்திப் பணத்தை வசூலித்தனர். அதோடு மட்டுமல்லாமல் செஞ்சியைக் கண்காணித்து வந்த சகோசி என்பவரிடமிருந்து லஞ்சமாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டனர். இதுபோன்ற சதித் திட்டம் அரண்மனைப் பெண் ஒருத்தி மூலம் சொக்கநாத நாயக்கருக்குத் தெரியவந்தது. உடனடியாகச் சொக்கநாத நாயக்கர் இராயசத்தைக் கொன்று, பிரதானியைக் குருடாக்கினார். பின்பு சொக்கநாத நாயக்கர் தமக்கு ஆதரவாக இருந்தவர்களைச் சேர்த்துக்கொண்டு விரைவில் அதிகாரத்தைக் கைப்பற்றி முழு உரிமையோடு நாடாளத் தொடங்கினார்.
பஞ்சமும் துன்பமும்
சொக்கநாதரும் அவர் தந்தையார் முத்துவீரப்பரும் இசுலாமியப் படையெடுப்புகளை இடைவிடாது தடுத்து நிறுத்தினாலும் மதுரைப் பெருநாட்டு மக்களைப் படையெடுப்புகளிலிருந்து பாதுகாத்திருந்தாலும், அந்த இசுலாமியப் படையெடுப்புகளால் நாட்டு மக்களுக்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு எல்லையற்ற தொல்லைகள் உண்டாயின. இத்தொல்லைகளோடு பஞ்சம் வேறு வந்துவிட்டது. மக்கள் தங்களின் சொந்த ஊர்களை விட்டுவிட்டு, பற்பல ஊர்களுக்குச் சென்று குடியேறினார்கள். உதாரணமாக, திருச்சியில் இருந்தவர்கள் மதுரையில் குடிபுகுந்தார்கள். கிறிஸ்தவர்களுள் சிலர் நெடுந்தொலைவிலுள்ள சென்னை மயிலாப்பூரில் தஞ்சம் புகுந்தனர். தென்னகத்து நெற்களஞ்சியமான தஞ்சையிலும், திருச்சியிலுமே இப்பஞ்சம் மிகுதியாய் இருந்தது.
பஞ்சத்தால் நாட்டு மக்கள் உணவின்றி வாடிக் கொண்டிருக்கும்போது டச்சு வணிகர்கள் வறுமையில் வாடும் மக்களுக்கு உணவு, உடை இவைகளைக் கொடுத்து மகிழ்ச்சியூட்டி அவர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அடிமைகளாக விற்றனர்.
தஞ்சையில் பஞ்சம் இருந்தபோது அங்கு ஆண்டுவந்த மன்னர் இப்பஞ்சத்தைப் போக்குவதற்கு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் சொக்கநாதரோ பஞ்சத்தில் வாழும் மக்கள் எந்நாட்டவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, தம் நாட்டைச் சேர்ந்த திருச்சியில் வாழ்பவராக இருந்தாலும் சரி எல்லோருக்கும் உணவுகளை வழங்கினார். இருப்பினும் அவர் அளித்த உணவுப் பொருட்கள் போதுமானதாக இல்லை.
இப்பஞ்சம் மட்டும் அல்லாமல் காடுகளிலிருந்து வனவிலங்குகள் நாட்டில் புகுந்து அதிக சேதத்தை விளைவித்தன. பயிர்கள் அழிக்கப்படலாயின. மதுரையில் உள்ள மக்கள் அதிகமாக நோய்வாய்ப்பட்டு மடிந்தனர். இவ்வாறான பேரின்னல்களைச் சொக்கநாத நாயக்கர் சந்தித்தார்.
சொக்கநாதர் தாம் அரசாட்சியை ஏற்றதிலிருந்து பல துன்பங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். இவர் ஓயாது போர் புரியவேண்டியிருந்தது. இவர் இளைஞராக இருந்த காரணத்தினால் போரில் ஈடுபட்டார். ஒரு சமயம் வனமியான் என்பவன் தஞ்சையின் உதவியுடன் திருச்சிக்குப் படையெடுத்து வந்தான். இவ்வனமியான் பீஜப்பூர் சுல்தான் அடில்ஷாவிடம் படைத்தலைவனாக இருந்தான். இவன் திருச்சியின் மீது படையெடுத்து வந்தபோது அங்குள்ள பயிர்களை எரித்தான். மக்களைத் துன்புறுத்தினான். மக்கள் சொல்லொணாத் துயருக்கு உள்ளானார்கள். மன்னர் சொக்கநாதரிடம் பெரும்படையிருந்தாலும் தன் குடிமக்களுக்குத் தொல்லை நேராமல் இருக்கும் பொருட்டு, வனமியான் நாட்டை விட்டு அகலுவதற்காக அவனுக்குப் பெரும்பொருளைக் கொடுத்து அனுப்பினார்.
சொக்கநாத நாயக்கர் போர்கள்
சொக்கநாத நாயக்கர் பல போர்களில் ஈடுபட்டிருந்தாலும் அவருடைய வரலாற்றில் மூன்று முக்கியப் போர்களைக் கூறலாம். அவையாவன: தஞ்சை மீது போர் தொடுத்தது, சேதுபதியுடன் போர் புரிந்தது, தஞ்சை மன்னர் விசயராகவ நாயக்கர் பெண் கொடுக்க மறுத்தமைக்காகப் போர் புரிந்தது என்பன.
தஞ்சை மீது போர்
பெரும்பொருள் கொடுத்து வனமியானை ஒழித்த பின்பு சொக்கநாத நாயக்கர் வெற்றிச் செருக்குற்றுப் பழி வாங்கும் திட்டத்தில் இறங்கி அழிவுப் பாதையில் செல்ல ஆரம்பித்தார். தஞ்சை விசயராகவ நாயக்கர் முன்னர் நடந்த வனமியான் படையெடுப்பில் தமக்கு உதவி புரியாமல் எதிரிகளோடு சேர்ந்து கொண்டதற்காக அவரைப் பழி வாங்கக் கருதித் தஞ்சை மீது கி.பி.1664இல் படையெடுத்துச் சென்று வல்லத்துக் கோட்டையைக் கைப்பற்றினார். தஞ்சை நாயக்கர் வேறொன்றும் செய்யமுடியாது, சொக்கநாத நாயக்கர் சொற்படி நடக்க ஒப்புக்கொண்டார். ஆதலால், சொக்கநாத நாயக்கர் வல்லத்தில் தமது பாதுகாப்புப் படையை நிறுத்திவிட்டு மதுரைக்குத் திரும்பினார். ஆனால் சிறிது காலம் கழித்து விசயராகவ நாயக்கர் வல்லத்தை மீட்டுக் கொண்டார்.
சேதுபதியுடன் போர்
சொக்கநாதர் வல்லத்தைக் கைப்பற்றித் தஞ்சை மன்னரைப் பழிவாங்கியதோடு விடாமல், தம் படை வீரர்களின் போர் ஆர்வம் குறைந்து போவதற்குள், வனமியான் படையெடுப்பில் திருமலைச் சேதுபதி தமக்குப் படையுதவி செய்யாமல் இருந்ததற்காக அவர்மீது போர் தொடுத்தார். முதலில் சொக்கநாத நாயக்கர் சேதுபதி ஆண்டு வந்த மறவர் சீமையில் புகுந்து திருப்பத்தூர், புதுக்கோட்டை, மானாமதுரை, காளையார் கோயில் போன்ற இடங்களைக் கைப்பற்றினார். இதை அறிந்த சேதுபதி சிறிதும் மனம் கலங்கவில்லை. நேர்நின்று எதிர்த்துப் போர் புரிவதைக் கைவிட்டு, மறைந்து தாக்கும் மாயப் போரில் ஈடுபட்டார். இதனால் மதுரையிலிருந்து வந்த சொக்கநாத நாயக்கரின் போர்வீரர்கள் மடியலானார்கள். அச்சமயத்தில் மதுரைத் தலைநகரில் சமயச் சார்பான விழாவை முன்னிருந்து நடத்த வேண்டிய பொறுப்பு இருந்ததால் சொக்கநாத நாயக்கர் மறவர் நாட்டுப் போர்ப் பொறுப்பைத் தம் படைத் தலைவரிடம் ஒப்படைத்துவிட்டு மதுரைக்குத் திரும்பினார்.
பெண் கொடுக்க மறுத்தமைக்காகப் போர்
தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான கலம்பகத்தில் பெண் கொடுக்க மறுத்துப் போர் செய்ததாகக் கூறும் மறம் என்னும் துறை இருக்கக் காண்கிறோம்.
தஞ்சை மன்னர் விசயராகவ நாயக்கரிடம் தமக்குப் பெண் கொடுக்குமாறு சொக்கநாத நாயக்கர் கேட்க, அவர் மகளைக் கொடுக்க மறுத்த காரணத்தால் சொக்கநாதர் அத்தஞ்சை மன்னரோடு கி.பி.1673இல் போர் தொடுத்தார். விசயராகவ நாயக்கர் அரசர் வழிவந்தவர், ஆனால் சொக்கநாத நாயக்கரோ அரசாங்க ஊழியராக இருந்த விசுவநாத நாயக்கர் பரம்பரையில் வந்தவர். அரசப் பரம்பரை இல்லாத காரணத்தால் சொக்கநாத நாயக்கருக்கு விசயராகவ நாயக்கர் பெண் கொடுக்கவில்லை. பலமுறை சொக்கநாத நாயக்கர் விசயராகவ நாயக்கருக்குத் தூது அனுப்பியும் பெண் கொடுக்க மறுத்துவிட்டார். கடைசியில் விசயராகவ நாயக்கர் அரண்மனையில் அந்தப்புரத்தை வெடிவைத்து அழிக்குமாறு கட்டளையிட்டு விட்டுப் போர்புரிந்து தம் மகளுடன் உயிர் நீத்தார்.
மங்கம்மாளின் ஆட்சி
ஔரங்கசீபு என்னும் மொகலாய அரசன் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டு வந்தான். தென்னகத்திலிருந்து அம்மன்னனை எதிர்த்துக் கொண்டிருந்த சிவாஜி என்ற மன்னர் மறைந்து விட்டார். இவரது மறைவின் காரணமாகத் தென்னகத்தில் ஔரங்கசீபின் ஆட்சி ஏற்படலாம் என எண்ணிப் பல அரசர்கள் அவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். மைசூர் மன்னன் சிக்கதேவராயன் ஔரங்கசீபுடன் உடன்படிக்கை செய்து கொண்டான். தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய வேந்தன் ஷாஜி என்பவனும் ஔரங்கசீப்புக்குத் தலைவணங்கித் திறை செலுத்த முற்பட்டு விட்டான். இவற்றையெல்லாம் அறிந்து கொண்ட மங்கம்மாளும் காலநிலை, மாற்றான் வலிமை அறிந்து ஔரங்கசீப்புக்குத் திறைப் பணம் செலுத்தி மதுரையைத் தக்கவைத்துக் கொண்டாள்.
மங்கம்மாள் ஔரங்கசீப்புக்குத் திறை செலுத்தி வந்தாலும் அவர்களுடன் நட்புக் கொண்டு அவர்கள் உதவியால் பகைவர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்த மதுரை நாட்டுப் பகுதிகளை எளிதாக மீட்டுக் கொண்டாள். தஞ்சை மன்னன் மதுரை நாட்டுப் பகுதிகள் சிலவற்றை முன்பே கைப்பற்றி ஆண்டு கொண்டிருந்தான். இருப்பினும் இந்தத் தஞ்சை மன்னன் ஷாஜி ஔரங்கசீப்புக்குத் திறை செலுத்தி வந்த காரணத்தால் அவனோடு போர் புரிய முடியவில்லை. இருந்தபோதிலும் மொகலாயப் படைத்தலைவன் சுல்பிர்கான் கி.பி. 1697இல் தெற்கே வந்தபோது, மங்கம்மாள் அவனுக்கு விலையுயர்ந்த பொருள்களை அன்பளிப்பாகக் கொடுத்து அவனுடைய உதவியால் தஞ்சை மன்னன் பிடித்து வைத்திருந்த அப்பகுதிகளை மீட்டுக் கொண்டாள்.
எனினும் மங்கம்மாளுக்கு மராட்டியர் அடிக்கடி தொல்லைகள் தந்து வந்தனர். அவர்களுக்கு மங்கம்மாள் பல முறை பணம் கொடுத்து அவர்களுடைய தொல்லைகளுக்கு ஓர் எல்லை கட்டி வைத்தாள். மதுரையைக் காக்க மங்கம்மாள் இவ்வாறு எல்லாம் செய்ய வேண்டியதாயிற்று.
மங்கம்மாள் செய்த போர்கள்
மங்கம்மாள் மைசூர், தஞ்சை போன்ற இடங்களை ஆண்டு கொண்டிருந்த மன்னர்கள் மீது போர் தொடுத்தாள்; சேதுபதியுடன் போர் புரிந்தாள்; இரவிவர்மன் என்பவனைத் தண்டிக்க வேண்டியும் படையெடுப்பு நடத்தினாள்.
மைசூர் படையெடுப்பு
திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்ற வேண்டி மைசூர் மன்னன் சிக்கதேவராயன் தனது படைத்தலைவன் குமரய்யா என்பவனை அனுப்பி வைத்தான். அப்படைத் தலைவன் திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டுக் கடும்போர் புரிந்து கொண்டிருந்தான். இச்சமயத்தில் மைசூரை மராட்டியர் தாக்க முற்பட்டனர். இதனை அறிந்த அப்படைத் தலைவன் குமரய்யா திருச்சிராப்பள்ளி முற்றுகையைக் கைவிட்டு, தன் நாட்டைக் காக்கும் பொருட்டுத் திரும்பினான். இந்தச் சந்தர்ப்பத்தை மங்கம்மாள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு எஞ்சி நின்ற மைசூர்ப் படையை அஞ்சாது தாக்கி வெற்றி பெற்றாள். இதனால் மைசூர்த் தொல்லை ஒழிந்தது.
தஞ்சைப் போர்
தஞ்சையை ஆண்டு வந்த ஷாஜி (கி.பி.1684-1712) என்பவன் கி.பி.1700இல் தனது படைத்தலைவன் மூலம் மதுரை நாட்டில் அடங்கிய திருச்சிப் பகுதியில் நுழைந்து நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தான். இதனை அறிந்த மங்கம்மாள் மொகலாயப் பேரரசின் உதவியின்றித் தனது படைத்தலைவன் தளவாய் நரசப்பய்யா என்பவனை அக்கொள்ளையைத் தடுக்கும்படி உத்தரவிட்டாள். (தளவாய்–படைத்தலைவன்.) எவ்வளவு செய்தும் அக்கொள்ளையைத் தடுக்க முடியாமல் போனதும், நரசப்பய்யா ஒருவருக்கும் தெரியாமல் கொள்ளிடத்தில் வெள்ளம் குறைந்தபோது தனது படைவீரர்களுடன் அக்கரைக்குச் சென்று தஞ்சை நாட்டில் உள்ள நகரங்களைக் கொள்ளையடிக்க முற்பட்டான். இதனை அறிந்து கொண்ட தஞ்சை நாட்டுப் படைவீரர்கள் செய்வது அறியாது திகைத்து நின்றனர். இந்நிலையில் தஞ்சை மன்னன் ஷாஜியின் முதல் அமைச்சனாகிய பாலோஜி என்பவன் நிறைய பொருள்களைத் தனது நாட்டின் பெரும் வியாபாரிகளிடமிருந்து வாங்கிக் கொண்டும், கஜானாவிலிருந்து எடுத்துக் கொண்டும் போய்க் கொடுத்து நரசப்பய்யாவிடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான். இதன் மூலம் மங்கம்மாளுக்கும், தஞ்சைக்கும் நல்லுறவு ஏற்பட்டது.
இரவிவர்மன் மீது படையெடுப்பு
மங்கம்மாளின் சம காலத்தவன் இரவிவர்மன் (கி.பி.1684-1718). இவன் திருவாங்கூரை ஆண்டு வந்தான். இந்த இரவிவர்மன் திருமலை நாயக்கர் காலந்தொட்டு மதுரைக்குச் செலுத்தி வந்த திறைப்பணத்தை நிறுத்திவிட்டான். இதனையறிந்த மதுரைநாட்டு வீரர்கள் திருவாங்கூர் மீது படையெடுத்தனர். அவ்வமயம் இரவிவர்மனின் நாட்டு அமைச்சர்கள் எட்டுவீட்டுப் பிள்ளைமார்கள் ஆவர். இவர்கள் இரவிவர்மனுக்குத் தொல்லை கொடுத்து வந்தனர். இவர்களை ஒழிக்க வேண்டும் என்று எண்ணி இரவிவர்மன் சூழ்ச்சி செய்தான். மதுரைப் படையினரை அணுகி எட்டுவீட்டுப் பிள்ளைமார்களை நாட்டைவிட்டு ஒழித்துக் கட்டினால் திருவாங்கூரில் பாதியைத் தருவதாக ஒப்புக் கொண்டான். இதை நம்பிய மதுரைப்படையினர் எட்டுவீட்டுப் பிள்ளைமார்களைத் தாக்கி ஒழித்தனர். ஆனால் ஒப்பந்தப்படி இரவிவர்மன் நடந்து கொள்ளவில்லை. அதற்கு மாறாக மதுரைப் படையினரைத் தாக்கி அழிக்கலானான். மதுரைப் படையினர் தப்பி ஓடி இச்செய்தியை மங்கம்மாளிடம் கூறினார்கள். இதுகேட்ட மங்கம்மாள் பொங்கி எழுந்தாள். கி.பி.1697இல் தளவாய் நரசப்பய்யா தலைமையில் ஒரு பெரும்படையைத் திருவாங்கூருக்கு அனுப்பினாள். தளவாய் நரசப்பய்யா கடும்போர் நடத்தி வெற்றி பெற்றான். திருவாங்கூர் மன்னன் வெகுநாள் வரைக்கும் கட்டாமல் இருந்த திறைப்பணம் முழுவதையும் பெற்றுக் கொண்டு மதுரை திரும்பினான்.
சேதுபதியுடன் போர்
மறவர் சீமை எனப்படும் சேதுநாட்டை ஆண்டுவந்த சேதுபதி, மங்கம்மாளின் ஆட்சிக் காலத்தில் கி.பி.1698இல் மதுரையைக் கைப்பற்றிச் சில காலம் ஆண்டு வந்தான். மங்கம்மாளின் ஆணைக்கு ஏற்பத் தளவாய் நரசப்பய்யா, மதுரையின் மீது படையெடுத்துச் சென்று வென்று, சேதுபதியை அங்கிருந்து சேதுநாட்டிற்கு விரட்டியடித்தான். ஆனால் மங்கம்மாள் சேதுபதியை அப்படியே விட்டுவிடவில்லை. கி.பி.1702இல் சேதுநாட்டின் மீது படையெடுத்துச் செல்லுமாறு தளவாய் நரசப்பய்யாவுக்கு ஆணையிட்டாள். அப்போது தஞ்சை மன்னன் ஷாஜி மங்கம்மாளுடன் கொண்டிருந்த நட்புறவைக் கைவிட்டுச் சேதுபதியோடு சேர்ந்து கொண்டான். போரில் நரசப்பய்யா கொல்லப்பட்டான். நரசப்பய்யா தலைமையில் சென்ற மதுரைப் படையும் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் சேதுபதியை மங்கம்மாளால் அடக்க முடியவில்லை. அவள் இறக்கும் முன்னரே சேதுநாடு முழுவுரிமை நாடாயிற்று. (சேது நாடு என்பது தமிழ்நாட்டில் தற்போது உள்ள இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியிருந்த ஒரு நாடு ஆகும்.)
இவ்வாறாக மங்கம்மாள் பல போர்களைச் செய்து வெற்றியையும் தோல்வியையும் சந்தித்தாள்.
சௌராஷ்டிர சாசனம்
சௌராஷ்டிரர் என்பவர்கள் ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள். சௌராஷ்டிரர் என்னும் சொல்லுக்குக் கதிரவனை வழிபடுவோர் என்பது பொருள். இவர்களின் முன்னோர்கள் கத்தியவார் என்று சொல்லப்படும் சௌராஷ்டிரா நாட்டைச் சேர்ந்தவர்களாதலால் சௌராஷ்டிரர் எனப்படுவர். இவர்களின் முன்னோர்கள் கத்தியவாரில் பட்டுநூல் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் கி.பி.5ஆம் நூற்றாண்டில் குமார குப்தன் என்ற குப்த மன்னன் விருப்பப்படி மேற்கு மாளவ நாட்டிலுள்ள மந்தகோர் என்ற நகரத்தில் குடியேறினர். அங்குக் கிடைக்கும் கல்வெட்டுகள் சௌராஷ்டிரர்களைப் பட்டவாயகர் என்று குறிப்பிடுகின்றன. இதற்கு நேரான தமிழ் மொழிபெயர்ப்பு பட்டுநூல்காரர் என்பதாகும். இன்றும் மதுரை நகரில் வாழும் சௌராஷ்டிரரைப் பட்டுநூல்காரர் என்றே அழைக்கின்றனர்.
இவர்கள் கஜினி முகமது படையெடுப்பால் மந்தகோரை விட்டுத் தேவகிரியை அடைந்து அங்கு வசித்தார்கள். அந்தத் தேவகிரி மீது மாலிக்காபூர் படையெடுத்தபோது இவர்கள் விசயநகரத்தை அடைந்து வாழ்ந்து வந்தனர். பின்பு விசயநகரம் தலைக்கோட்டைப் போரில் இசுலாமியரால் அழிக்கப்பட்டபோது சௌராஷ்டிரர்கள் விசயநகரத்தை விட்டு மதுரையை நோக்கி வரலாயினர். திருமலை நாயக்கர் காலத்தில் அவருடைய ஜரிகை வேலைப்பாடமைந்த துணிகளை நெய்வதற்காக மதுரைக்கு வந்து குடியேறி, அவரது அரண்மனையைச் சுற்றியுள்ள இடங்களில் வாழ்ந்து வரலானார்கள்.
மதுரையில் வந்து குடியேறிய சௌராஷ்டிரர்கள் பிராமணர்களுடைய ஆசாரங்கள் சிலவற்றை ( பூணூல் அணிதல் போன்றவற்றை) மேற்கொண்டனர். இதற்குப் பிராமண குலத்தைச் சார்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே, மங்கம்மாள் ‘சௌராஷ்டிரர்கள் பிராமணரது ஆச்சாரங்களுக்கு உரியவர்களா அல்லரா’ என்பதைச் சாத்திர வல்லுநர்களைக் கூட்டி ஆராய்ந்து, அவர்கள் கூறிய முடிவுப்படி ‘சௌராஷ்டிரர்கள் பிராமணரது ஆச்சாரங்களுக்கு உரியவர்களே’ என்று தீர்மானம் செய்தாள். அதைக் கி.பி.1705இல் பனை ஓலையில் ஒரு சாசனமாக அரசாங்க முத்திரையுடன் எழுதிக் கொடுத்தாள். இதனையே சௌராஷ்டிர சாசனம் என்பர்.
மங்கம்மாளும் கிறிஸ்தவமும்
மதுரை நாட்டின் அண்டை நாடான மறவர் நாடும், தஞ்சையும் கிறிஸ்தவ சமயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இவ்வெதிர்ப்பின் காரணமாக ஜான்-டி-பிரிட்டோ என்ற பாதிரியாரின் உடல் கண்டதுண்டமாக வெட்டப்பட்டுக் கழுகுகளுக்கு இரையாக்கப்பட்டது. மேலும் மறவர் நாட்டில் கிறித்தவ சமய ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். பெர்னார்டு பாதிரியார் என்பவரின் பற்கள் உடைக்கப்பட்டன. அவரைப் பின்பற்றியவர்களுக்குச் சவுக்கடி கொடுக்கப்பட்டது. மறவர் நாட்டில் எதிர்ப்பு தெரிவித்தது போல் தஞ்சையிலும் பல எதிர்ப்புகள் கிளம்பின. கிறித்தவ சமயம் பரவினால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்று மங்கம்மாளுக்கு அண்டை நாட்டினர் கடிதம் எழுதினர். ஆனால் அதற்கு மாறாக மதுரையை ஆண்ட மங்கம்மாள் கிறித்தவ சமயத்தைப் போதித்தவர்களுக்கும், அச்சமயத்தைத் தழுவியர்களுக்கும் பாதுகாப்பளித்தாள்; அவர்கள் மீது பரிவு காட்டினாள். மறவர் நாட்டுச் சிறையில் அடைபட்டுச் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மெல்லோ பாதிரியாரை விடுதலையடையும்படி செய்தாள்.
மங்கம்மாளும் இசுலாமும்
மங்கம்மாள் இசுலாமியரின் பள்ளிவாசல் மற்றும் தர்க்கா கட்டுவதற்கு நிலத்தைத் தானமாகக் கொடுத்ததைச் செப்பேட்டுச் சாசனங்கள் தெரிவிக்கின்றன. கி.பி.1692ஆம் ஆண்டுச் செப்புச் சாசனம் ஒன்று பள்ளிவாசலின் பாதுகாப்புக்காக, தன் பேரன் விசயரங்க சொக்கநாதர் பெயரால் நிலம் கொடுத்ததைக் கூறுகிறது. கி.பி.1701ஆம் ஆண்டுத் தெலுங்குச் சாசனம் ஒன்று, தர்க்காவுக்காகத் திருச்சிக்கு அருகில் இருக்கும் சில கிராமங்களை விட்டுக் கொடுத்ததைக் குறிப்பிடுகின்றது.
மங்கம்மாள் செய்த அறச் செயல்கள்
மங்கம்மாள் நாட்டு மக்களுக்குச் செய்து கொடுத்த வசதிகளும், சமய வேறுபாடு இல்லாமல் எல்லாச் சமயத்தார்க்கும் செய்த அறங்களும் இன்றும் மதுரைவாழ் மக்களால் பாராட்டப்படுகின்றன. மங்கம்மாள் கோயிலைக் கட்டி, குளங்களை வெட்டிக் கால்வாய்களைச் செப்பனிட்டுச் சாலைகளையும், சோலைகளையும் அமைத்து, சத்திரங்களையும் சாவடிகளையும் கட்டி, வழிப்போக்கர்களுக்குத் தண்ணீர்ப் பந்தல்களையும் ஏற்படுத்தினாள். கி.பி.1701ஆம் ஆண்டுச் சாசனம் ஒன்று, மங்கம்மாள் அன்ன சத்திரங்களுக்கு நிலங்களைக் கொடுத்ததைக் கூறுகிறது. மதுரையில் புகைவண்டி சந்திப்பிற்கு எதிரே உள்ள மங்கம்மாள் சத்திரம் மங்கம்மாள் கட்டியதாகச் சொல்லப்படுகிறது.
மீனாட்சி அரசிக்கு நாடாளும் ஆசையிருந்தாலும், மங்கம்மாளுக்கு இருந்தது போன்ற ஆற்றல் இல்லை; அரசியல் அறிவும் இல்லை; உலக அனுபவமும் இல்லை. சூழ்ச்சிகளும் வீழ்ச்சிகளும் நிறைந்த அக்கால அரச வாழ்வுக்கு அவள் ஏற்றவளாக இல்லை. இதனால் அவள் அரசியல் வாழ்க்கை குறுகிய காலத்திலேயே முடிந்துவிட்டது.
மீனாட்சி அரசி மகன்மை செய்து கொண்ட விசயகுமாரனின் தந்தை பங்காரு திருமலைக்கு மதுரை நாட்டு மன்னனாகும் ஆசை மனத்தில் புகுந்தது. தளவாய் வேங்கடாசாரியும் அவனது ஆசைக்கு ஆதரவு தந்தான். இருவரும் ஒன்று சேர்ந்து மீனாட்சி அரசியைக் கவிழ்க்க முயற்சி எடுத்தனர். முதலில் திருச்சிக் கோட்டைக்குள் நுழைந்து, மீனாட்சி அரசியை அரசபீடத்திலிருந்து அகற்றிவிட முயன்றனர். இம்முதல் முயற்சி கைகூடாமல் போயிற்று. எனினும் இருவரும் முயற்சியைக் கைவிடாமல் கலகம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஆர்க்காட்டை நவாப் தோஸ்து அலிகான் என்பவன் ஆண்டு வந்தான். இவன் மதுரை நாட்டில் நடந்துவரும் கலகத்தை அறிந்தான். மதுரை நாட்டைக் கைப்பற்றிக் கப்பம் வாங்கி வரும்படி தன் மகன் சப்தர் அலிகான், மருமகன் சந்தாசாகிபு ஆகிய இருவர் தலைமையில் மதுரைக்குப் படையை அனுப்பினான். இப்படையெடுப்பு கி.பி.1734இல் நிகழ்ந்தது.
சந்தாசாகிபு
ஆர்க்காட்டு நவாப் படை திருச்சியை வந்து அடைந்தது. இதை அறிந்த பங்காரு திருமலை சப்தர் அலிகானை நேரில் கண்டு, திருச்சியைக் கைப்பற்றித் தனக்கு அளித்தால் முப்பது இலட்சம் ரூபாய் அளிப்பதாகக் கூறி, அவனோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டான். சப்தர் அலிகான் அப்பணத்தை வாங்கிவருமாறு சந்தாசாகிபுவைப் படையுடன் நிறுத்திவிட்டு ஆர்க்காடு திரும்பினான்.
இதனைக் கேள்விப்பட்ட மீனாட்சி சந்தாசாகிபுவிடம் ஒரு கோடி ரூபாய் தருவதாகக் கூறி, பங்காருவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அதற்குக் குரான் மீது சத்தியம் செய்து தருமாறும் வற்புறுத்தினாள். சந்தாசாகிபு குரான் மேல் கைவைத்துச் சத்தியம் செய்து கொடுத்தான். இதற்கிடையில் பங்காருவுடனும் மீனாட்சி சமாதானம் செய்து கொண்டாள். பங்காரு திண்டுக்கல் பகுதியை ஆட்சி செய்யலானான். எனவே சந்தாசாகிபு இனி இவர்களை மோதவிட்டு இலாபம் பெற இயலாது என அறிந்து ஆர்க்காடு திரும்பினான்.
ஆனால் சந்தாசாகிபு கி.பி.1736இல் மீண்டும் மதுரையைக் கைப்பற்றும் திட்டத்தோடு திருச்சிக்கு வந்தான். மீனாட்சியோடு சாதுர்யமாகப் பேசி ஆட்சிப் பொறுப்பையும், படைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான். திருச்சிக் கோட்டையை வலுப்படுத்தினான். பங்காரு வசம் இருந்த திண்டுக்கல்லை ஒரு பெரும்படை ஒன்றை அனுப்பிக் கைப்பற்றினான். பங்காரு தன் மகன் விசயகுமாரனுடன் சிவகங்கை ஓடி ஒளிந்து கொண்டான். பின்பு மதுரையை முழுக்கத் தன் வசமாக்கிக் கொண்ட சந்தாசாகிபு திருச்சி சென்று மீனாட்சி அரசியைச் சிறை செய்தான். மீனாட்சிக்கு அப்போதுதான் சந்தாசாகிபுவின் வஞ்சகம் தெரிந்தது. வஞ்சகனால் கொலையுண்டு சாவதைவிட, நஞ்சுண்டு இறப்பதே மேல் என்றெண்ணி, நஞ்சு குடித்து உயிர் துறந்தாள். மீனாட்சி அரசியோடு மதுரை நாயக்கர் பரம்பரை மறைந்தது.
செவ்வப்ப நாயக்கர் விசநகரப் பேரரசுக்கு மிகவும் விசுவாசமாக நடந்து கொண்டார். விசயநகரப் பேரரசர்கள் மேற்கொண்ட படையெடுப்புகளின்போது தஞ்சை நாயக்கரின் பெரும்படையும் இணைந்து பணியாற்றியது. பீஜப்பூர், அகமத் நகர், கோல்கொண்டா, பிதார் என்னும் நான்கு பகுதிகளின் சுல்தான்களும் ஒன்று சேர்ந்து, விசயநகரப் பேரரசின் மீது படையெடுத்தனர். தலைக்கோட்டை என்னும் இடத்தில் கி.பி.1565 இல் பெரும்போர் நடைபெற்றது. இப்போரில் விசயநகரப் படைக்கு, விசயநகரப் பேரரசர் இராமராயர் தலைமை தாங்கி நடத்தினார். இப்படையில் செவ்வப்ப நாயக்கரின் தஞ்சைப் படையும் பங்கேற்றது. இருப்பினும் இப்போரில் விசயநகரப் படைகள் தோல்வியுற்றன. பேரரசர் இராமராயரும் கொல்லப்பட்டார். இப்பெரும்போரால் விசயநகரம் பேரரசு உதயமானதிலிருந்து சந்தித்திராத பெருந்தோல்வியையும் பேரழிவையும் சந்தித்தது.
செவ்வப்ப நாயக்கர் எல்லா மதத்தினரோடும் நட்புறவு கொண்டிருந்தார். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் கோபுரங்களில் மிகப் பெரியதும், கிழக்கு வாயிலாக திகழ்வதுமாகிய 11 நிலைகளை உடைய
இராஜகோபுரத்தைக் கட்டிய பெருமை உடையவர் செவ்வப்ப நாயக்கர். மேலும் இவர் திருப்பதி, ஸ்ரீசைலம் ஆகிய கோயில் கோபுரங்களின் விமானங்களுக்குப் பொன் வேய்ந்தார்; தஞ்சையில் உள்ள இசுலாமியர் மசூதி ஒன்றுக்கு ஏழுவேலி நிலம் வழங்கினார்; கிறித்தவர்களுக்கும் பல உதவிகள் செய்தார். இவர் காலத்தில் இவருக்கும் மதுரை நாயக்கருக்கும் இடையிலான உறவு குறித்து அறிய இயலவில்லை.
அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் விசயநகரப் பேரரசை ஆண்டு வந்தவர் வேங்கடபதிராயர் என்பவர் ஆவார். இவரிடம் அச்சுதப்ப நாயர் அரசு விசுவாசத்தோடும், நன்றி உடையவராகவும் திகழ்ந்தார். வேங்கடபதிராயர் விசயநகரப் பேரரரசரானதும், கோல்கொண்டா சுல்தான் பெரும்படையுன் வந்து, வேங்கடபதிராயரின் பெணுகொண்டா கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் வெகுண்ட வேங்கடபதிராயர் அச்சுதப்ப நாயக்கருக்குத் தகவல் அனுப்பினார். உடனே அச்சுதப்ப நாயக்கர் தன் மகன் இரகுநாத நாயக்கர் தலைமையில் பெரும்படை ஒன்றைத் தஞ்சையிலிருந்து அனுப்பி வைத்தார். அப்படை கோல்கொண்டா சுல்தானின் படையை வெற்றி கண்டு, பெணுகொண்டா கோட்டையை மீட்டுக் கொடுத்தது.
அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் மதுரைக்கும் தஞ்சைக்கும் பகையுணர்வு வளர்ந்தது. விசயநகரப் பேரரசர்களுக்கு எதிராக மதுரை நாயக்கரும், செஞ்சி நாயக்கரும் செயல்பட்டபோது அச்சுதப்ப நாயக்கர் விசயநகரப் பேரரசர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். இதுவே பகைக்கு அடிப்படை. தலைக்கோட்டைப் போருக்குப் பின் மதுரை நாயக்கர் தனியாட்சி நடத்த விரும்பினர். தஞ்சை நாயக்கராகிய இவரோ விசயநகரப் பேரரசுக்குப் பணிந்து வாழவே விரும்பினார்.
அச்சுதப்ப நாயக்கர் தன் தந்தையாரைப் போலவே எல்லாச் சமயங்களையும் மதித்து நடந்தார். திருவண்ணாமலைக் கோபுரங்களின் மேல் தங்கக் குடம் அளித்தார். திருவிடை மருதூர்க் கோயில் தேர்த்திருவிழா நடைபெற ஊர் அளித்தார். திருவரங்க நாதர் கோயிலில் திருவரங்கனுடைய விமானத்தைப் பொன் தகடுகளால் போர்த்தார். மூவலூர் மார்க்கசகாயர் ஆலயத்திற்கு நிலக்கொடை, சத்திரம் நிருவகிக்கக் கொடை ஆகியன வழங்கினார்.
இவர் தம்முடைய ஆட்சிக் காலத்திலேயே (கி.பி.1610இல்) தன் மகன் இரகுநாத நாயக்கருக்கு இளவரசுப் பட்டம் சூட்டி, அரசியல் பயிற்சி பெற வழி செய்தார்.
இவர் தமது ஆட்சிக்காலத்தில் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி கண்டார். ஈழத்தில் வெற்றி பெற்ற பிறகு தஞ்சையை நோக்கித் திரும்பும் வழியில் தோப்பூர் என்னும் இடத்தில் ஜக்கராயன் என்பவனோடு போரிட்டார். ஜக்கராயன் விசயநகரப் பேரரசுக்கு உட்பட்ட கோலார் பகுதியை ஆண்டு வந்தவன் ஆவான். இவன் விசயநகரப் பேரரசைக் கவரச் சதி செய்தான். இதனை யாசம நாயக்கர் என்ற குறுநில அரசர் அறிந்தார். இவர் விசயநகரப் பேரரசின் விசுவாசி ஆவார். யாசம நாயக்கர் ஒரு பெரும்படை திரட்டிச் சென்று ஜக்கராயனோடு போரிட்டார். போர் கல்லணைக்கு அருகில் உள்ள தோப்பூர் என்னும் இடத்தில் கி.பி.1616இல் நடைபெற்றது. இப்போரில் ஜக்கராயனுக்கு மதுரை, செஞ்சி நாயக்கர்கள் துணைநின்றனர். ஜக்கராயன் செஞ்சி, மதுரை நாயக்கர்களோடு சேர்ந்து கொண்டு தஞ்சைக்கு மேற்கே உள்ள கல்லணையை இடிக்க முற்பட்டான். இதனை அறிந்த இரகுநாத நாயக்கர் பெரும்படையுடன் சென்று தோப்பூர் என்னும் இடத்தில் ஜக்கராயன் படைகளோடு பெரும்போர் செய்தார். ஜக்கராயனுக்குத் துணைநின்ற மதுரை நாயக்கரும், செஞ்சி நாயக்கரும் தோல்வியுற்றுப் போர்க்களம் விட்டோடினர். ஆனால் ஜக்கராயன் போரில் கொல்லப்பட்டான். இரகுநாத நாயக்கர் மாபெரும் வெற்றி பெற்றார். தோப்பூர்ப் போர் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த போராகக் கருதப்படுகிறது. இரகுநாத நாயக்கர் தம் முன்னோர் போல, விசயநகரப் பேரரசிற்கு ஆதரவாளராகவே இருந்தார்.
இரகுநாத நாயக்கர் காலத்தில் டச்சு, டென்மார்க், இங்கிலாந்து, போர்த்துகீசு வாணிகர்கள் தஞ்சைக்கு வருகை புரிந்து வாணிபத்திற்காகப் போட்டியிட்டனர். டென்மார்க் நாட்டவர் தரங்கம்பாடி என்னும் சிறு துறைமுகப்பட்டினத்தில் தங்கி வாணிபம் செய்ய இரகுநாத நாயக்கர் அனுமதி வழங்கினார். டென்மார்க் நாட்டினர் தரங்கம்பாடியில் சிறுகோட்டை ஒன்றும் அமைத்தனர். இரகுநாத நாயக்கர், டென்மார்க் நாட்டவரின் கப்பலைத் தாக்கி மூழ்கடித்த போர்த்துகீசியரைக் கண்டித்து, அவர்கள் செய்த குற்றத்திற்காகப் பன்னீராயிரம் பொன்னைத் தண்டமாக வசூலித்தார். மேலும் டென்மார்க் நாட்டை ஆண்டு வந்த நான்காம் கிறிஸ்தியன் என்பவருக்குத் தங்கத் தகட்டில் நட்புறவுக் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். எனவே இரகுநாத நாயக்கர் டென்மார்க் நாட்டவரோடு கொண்ட வாணிப உறவும் நட்புறவும் புலனாகின்றன.
மதுரைக்கும் தஞ்சைக்கும் இடையே இவர் காலத்திலும் மோதல் தொடர்ந்தது. இவருடைய மகளைப் பெண்கேட்டு, மதுரை நாயக்கர் சொக்கநாத நாயக்கர் தூது விடுத்தார். ஆனால் இவர் மகளைக் கொடுக்க மறுத்துவிட்டார். எனவே சொக்கநாத நாயக்கர் இவர் மீது கி.பி.1673இல் போர் தொடுத்தார். சொக்கநாத நாயக்கரின் படை தஞ்சைப் பகுதியில் உள்ள வல்லம் என்னும் ஊரைக் கைப்பற்றியது. சொக்கநாத நாயக்கரின் தளவாய் கிருஷ்ணப்ப நாயக்கர், விசயராகவ நாயக்கரை அணுகி, இந்நிலையிலேனும் மகளைக் கொடுத்துச் சமாதானம் செய்து கொள்ளுமாறு அவரிடம் வேண்டினார். ஆனால் விசயராகவ நாயக்கர் அந்தபுரத்தை வெடிவைத்து அழிக்குமாறு சொல்லி விட்டுப் போரைத் தொடர்ந்தார். இறுதிவரை பணியவில்லை. இறுதியில் அவர் தம் மகளுடன் உயிர் நீத்தார்.
விசயராகவ நாயக்கர் மறைவுக்குப் பின்னர்த் தஞ்சை நாயக்கர் ஆட்சி மறைந்தது. தஞ்சையைக் கைப்பற்றிய சொக்கநாத நாயக்கர் தன் சிற்றன்னையின் மகனும், தன் தம்பியுமாகிய அழகிரி நாயக்கரைத் தஞ்சையின் அரசபிரதிநிதியாக்கினார். விசயராகவ நாயக்கரோடு தஞ்சை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது.
வெள்ளாறு கடலுடன் கலக்கும் இடத்தில் கிருஷ்ணப்ப நாயக்கர் கிருஷ்ண பட்டினம் என்ற ஊர் ஒன்றை அமைத்து அதில் ஜெசூட் பாதிரியார்கள் என்று கூறப்படும் ஏசு சபையினர்களுக்கு மாதா கோயில்கள் கட்டிக்கொள்ள உரிமை வழங்கினார். அவ்வூர் இப்போது பறங்கிப்பேட்டை என்னும் பெயரில் விளங்கி வருகின்றது.
மேலும் இவர் அப்பைய தீட்சிதர் என்ற புலவரின் புலமையைப் பாராட்டிக் கனகாபிடேகம் செய்தார்.
பாடம் - 5
நாயக்க மன்னர்கள் அதிகாரத்தினைத் தம்மிடம் வைத்துக் கொள்ளாமல் பிரித்து வைத்து ஆட்சி புரிந்தனர்.
சமயக் கொள்கையில் நாயக்க மன்னர்கள் நடுநிலையோடு இருந்து வந்தனர்.
நாயக்க மன்னர்கள் கோயில் வழக்குகளைத் தீர்த்து வைத்தனர். மங்கம்மாள் போன்றோர் சௌராஷ்டிர மக்களுக்கு என ஒரு சாசனத்தை அளித்தனர்.
பல வகையான வரிகளை நாயக்க மன்னர்கள் விதித்தனர்.
இவர்களது ஆட்சிக் காலத்தில் குறிப்பட்ட சில பெண்களைத் தவிர ஏனைய பெண்கள் கல்வி கற்றது போல் தெரியவில்லை.
மேலே கூறப்பட்ட செய்திகளைச் சான்றுகளுடன் இப்பாடத்தில் காணலாம்.
ஒவ்வொரு சிற்றூரிலும் பல வகைப்பட்ட அலுவலர் இருந்தனர். நாயக்கர் ஆட்சியில் சிற்றூர்களில் வரிவாங்கிய அலுவலர்களுக்கு மணியக்காரர் என்பது பெயர். இவர்களுக்கு உதவியாகக் கணக்கர் உண்டு. இக்கணக்கரின் உதவியைக் கொண்டு, மணியக்காரர்கள் வசூலித்த வரிப்பணத்தைத் தம் மாகாண அதிகாரிகளிடம் கொண்டுபோய்ச் செலுத்துவார்கள். மாகாண அதிகாரிகள் அதை மறுபடியும் கணக்குப் பார்த்துப் பிரதானியிடம் இருசால் செய்வார்கள் (இருசால் – ஒப்படைப்பு). இவ்வலுவலர்களின் வேலை பாரம்பரியமானது. ஊர்க்காவல் வேலை செய்யும் அலுவலர்க்குத் தலையாரி என்று பெயர். நாயக்கர் ஆட்சியில் சிற்றூர்கள் தனியுரிமை உடையனவாயிருந்தன. ஒவ்வொரு சிற்றூரிலும் இரண்டு நீதிபதிகள் இருந்தனர்.
சிற்றூரிலும் வழக்கு மன்றம் இருந்தது. ஒவ்வொரு சிற்றூரிலும் அங்கு வாழும் பொது மக்களால் நன்கு மதிக்கப்பட்ட இருவர் நடுவர்களாக இருந்தனர். அரசர்கள் சாத்திர வல்லுநர்களோடு கலந்து பேசித் தீர்ப்பு வழங்கினர். இதற்காக வேதம் உணர்ந்த பார்ப்பனர்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.
பெரும்பாலும் அரசர்கள் கோயில் வழக்குகளையும், யாருக்குக் கோயிலில் முதல் மரியாதை யாருக்கு இரண்டாம் மரியாதை, யார் யார் எந்தெந்த வாகனத்தில் செல்லலாம், யார் யார் பூணூல் அணியலாம் என்பன போன்ற வழக்குகளையும் விசாரித்துத் தீர்ப்புக் கூறியுள்ளனர். மங்கம்மாள் சௌராஷ்டிரர்களுக்குப் பூணூல் அணியும் உரிமை உண்டு என்று தீர்ப்புக் கூறியுள்ளாள். ஆட்சி, ஆவணம், சாட்சி இம்மூன்றையும் நோக்கியே தீர்ப்புக் கூறப்பட்டது.
வழக்குகள் பெரும்பாலும் பஞ்சாயத்தார் மூலம் முடிவு செய்யப்பட்டன. வழக்குகளுக்காக மக்களுக்கு வீண்செலவு ஏற்பட்டதில்லை; காலமும் வீணானதில்லை. பெரும்பாலும் குறுகிய காலத்தில் மிகுந்த செலவின்றி வழக்குகள் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்புகள் கூறப்பட்டன.
நாயக்கர் காலத்தில் களவுக்குக் கை, கால் வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. கி.பி. 1616 ஆம் ஆண்டு நெய்வாசல் சாசனத்தின்படி, நெய்வாசலில் இருந்த கோயிலில் புகுந்து கடவுளின் நகைகளைத் திருடிய ஒருவனது கைகளுள் ஒன்று வெட்டப்பட்டு, அவனுக்கு இருந்த நிலமும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இவ்வாறு நாயக்கர்கள் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை விதித்து, நீதியை நிலைநாட்டுவதில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர்.
இவ்வரிகளை நில வரி (Land Tax), சொத்து வரி (Property Tax), வணிக வரி (Commercial Tax), தொழில் வரி (Professional Tax), கைத் தொழில் வரி (Tax on Industry), படைக்கொடை (Military Contribution), சமுதாய – குழு வரி (Social and Communal Taxes), பலவின வரிகள் (Other Taxes) என எட்டுப் பிரிவுகளில் அடக்கலாம்.
ஏரி, கண்மாய், குளம் இவற்றிலுள்ள மீன்களைப் பிடித்து விற்ற பணம் அரசாங்கத்தைச் சாரும். இது பாசைவரி எனப்பட்டது. ஆற்றைக் கடக்க வேண்டிய இடங்களில் வத்தை, படகு இவற்றைப் பயன்படுத்துவதற்கு வாங்கிய வரி வத்தை வரி ஆகும். கருணீக ஜோடி, தலையாரிக்கம், நாட்டுக்கணக்கு வரி, இராசய வர்த்தனை, அவசர வர்த்தனை, அதிகார வர்த்தனை ஆகியவை அரசாங்கக் கிராம அலுவலர் நிருவாகச் செலவுகளுக்காக வாங்கிய வரிகள் ஆகும். அரசாங்கக் கட்டளையைக் கொண்டு வருபவனுக்காக வாங்கிய வரி நிருபச் சம்பளம் ஆகும். அவரவர் வயல்களுக்குத் தண்ணீர் விடுவதற்காக வழி செய்ய வைத்திருந்த ஆளுக்காக வாங்கப்பட்ட வரி நீர்ப் பாட்டம் என்பது. ஊர் காவலுக்காக உள்ள நிருவாகச் செலவுக்காக வாங்கிய வரி பாடிகாவல் என்பது. தரை வழிச் சுங்க வரி வாங்கப்பட்டது. கடல் வழிச் சுங்க வரி மதுரை நாயக்கர் ஆட்சியில் சிறிய அளவிலேயே இருந்தது.
கடமை, மகமை, காணிக்கை, கட்டணம், வரி, இறை, கட்டாயம் என்னும் சொற்கள் நாயக்கர் காலத்தில் வரியைக் குறிக்க வழங்கின.
சமூக மரபுகள்
பல்வேறு சாதிகள் இவர்கள் காலத்தில் இருந்தன. பார்ப்பனர்கள் சமுதாயத்தில் மதிப்புடையவர்களாக இருந்தனர். சாதிகளுள் ஒரு பிரிவு மற்றொன்றோடு கலக்காமல் பார்த்துக் கொண்டனர். கம்மாளர்களுக்குள் இருந்த ஐந்து பிரிவுகள் ஒன்றுக்கொன்று கலந்து விடுதல் கூடாது என்று 1623 ஆம் ஆண்டுச் சாசனம் கூறுகிறது. சௌராஷ்டிரர்களுக்குப் பார்ப்பனர்களைப் போலப் பூணூல் அணிந்து கொள்ள உரிமை வழங்கப்பட்டது. இடங்கைச் சாதிகள், வலங்கைச் சாதிகள் என்ற பிரிவுகளும் நாட்டில் இருந்தன.
ஆடவர்
ஆடவர்கள் பெண்கள் பலரை மணந்து கொண்டனர். இப்பழக்கம் அரசர்களிடத்தும், பெருங்குடி மக்களிடத்தும் இருந்தது. திருமலை மன்னருக்கு 200 மனைவிமார்கள் இருந்தனர். திருமலை மன்னர் இறந்தபோது அத்தனை மனைவிமார்களும் உடன்கட்டை ஏறினர். கிழவன் சேதுபதிக்கு 47 மனைவியர் இருந்தனர்.
மகளிர்
பொதுவாகப் பெண்கள் கல்வி கற்கும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. கல்விச் செல்வம் பெற்றவர்களாய் இல்லாவிட்டாலும், கேள்விச் செல்வத்தால் அறிவு பெற்றிருந்தார்கள். பெண்கள் மானமுள்ளவர்களாக வாழ்ந்தார்கள். உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. சில பெண்கள் இசை, நாட்டியம் போன்றவைகளில் தேர்ந்து விளங்கினர். ஒரு பெண் ஆணைப் போல் போர் புரியும் ஆற்றல் பெற்று, போர்த்தொழிலை மேற்கொண்டு சம்பளம் பெற்று வந்ததாகவும் தெரிகிறது. இதனை ஆண்டிரி பிரியர்ஸ் என்பவர் 1666இல் எழுதிய கடிதம் மூலம் அறிய முடிகிறது.
பழக்க வழக்கங்கள்
பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக்கட்டும் வழக்கம் இருந்தது. உறவினர் இறந்து விட்டால் பெண்கள் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. பிணங்களை ஆடம்பரமாக எடுக்கும் வழக்கம் இருந்தது. மந்திரத் தாயத்துகளை அணிந்து கொள்ளும் வழக்கமும் இருந்ததாகத் தெரிகிறது.
சமய வாழ்க்கை
சமரச நோக்கு ஆட்சியாளரிடம் இருந்தது. எனவே பெரிய அளவில் சமயப் பூசல் இல்லை எனலாம். எல்லாக் கோயில்களுக்கும் ஆட்சியாளர்களின் சார்பில் திருப்பணி செய்யப்பட்டது. திருமலை நாயக்கர் மதுரைக் கோயில்களில் திருவிளையாடல் விழா நடத்தவும், வேறு விழாக்கள் நிகழ்த்தவும் பல கிராமங்களை விட்டுக் கொடுத்தார்.
நாயக்கர் காலத்தில் தமிழகத்தில் வடகலை, தென்கலை என்ற இரு வைணவ இயக்கங்கள் பரவிக் கொண்டிருந்தன. இவ்விரண்டு இயக்கங்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டும் இருந்தன. வேதாந்த தேசிகர் வடகலை வைணவத்தையும், மணவாள மாமுனிகள் தென்கலை வைணவத்தையும் தலைமை தாங்கிப் பரப்பினர். முத்திநெறிக்கு வடமொழி வேதங்களை வழியாகக் கொண்டவர்கள் வடகலை வைணவர்கள். தென்மொழி எனப்படும் தமிழில் ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை முத்தி நெறிக்கு அடிப்படையாகக் கொண்டவர்கள் தென்கலை வைணவர்கள் வேறுபாடு காட்டும் நிலையில் வடகலை வைணவர்கள் பாதம் இல்லாத திருநாமத்தையும், தென்கலை வைணவர்கள் பாதமுள்ள திருநாமத்தையும் நெற்றியில் அணிந்து கொண்டனர்.
கிறித்தவ சமயம் வளர்ச்சியடையலாயிற்று, பௌத்தம், சமணம் மங்கத் தொடங்கின. மதுரைவீரன் வழிபாடு பரவலாக இருந்தது. மதுரை நாட்டில் எல்லையில்லாத் தொல்லைகள் கொடுத்துவந்த கள்ளர்களைக் கருவறுத்துப் பொதுமக்களுக்கு நன்மை புரிந்தான் மதுரைவீரன். ஆதலால் பொதுமக்கள் இவனைத் தெய்வமாகவே வணங்கினார்கள். மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கிழக்கு முன்புறத்தில் மதுரைவீரனுக்குச் சிறுகோயில் இருப்பதை இன்றும் காணலாம். மேலும் நாயக்கர் காலத்தில் சக்தி வழிபாடு என்ற வழிபாடு தோன்றியதாகத் தெரிகிறது.
திருவிழாக்கள்
திருமலை நாயக்கர் மதுரையில் சித்திரைத் திருவிழாவைப் பெருவிழாவாகக் கொண்டாடும்படி செய்தார். அடுத்து நவராத்திரி விழாவை மதுரையில் ஒன்பது நாட்கள் பெருஞ்சிறப்போடு நடத்தினார்.
திருமலை நாயக்கர் தமது பிறந்த நாளான பூச நாளைக் கொண்டாடும் பொருட்டுத் தைப்பூச நாளன்று மதுரையில் தெப்பத்திருவிழா நடத்த ஏற்பாடு செய்தார்.
மதுரைமாநகரில் இன்றும் சித்திரைத் திருவிழா வைகையாற்றிலும், தெப்பத்திருவிழா வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திலும் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
சிற்றூர்களில் தனிப்பட்டோர் முயற்சியால் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் நடப்பதுண்டு. பெற்றோர்கள் பண்டமும் பணமும் கொடுத்து ஆசிரியரைப் பேணினார்கள். நாயக்கர்கள் காலத்தில் ஏசு சபையைச் சேர்ந்தவர்கள் பள்ளிகளைத் தொடங்கினார்கள். மதுரையில் பெர்னாண்டஸ் பாதிரியார் இந்து சமய மாணவர்களுக்காக ஒரு தொடக்கப் பள்ளி வைத்து நடத்தினார்.
கிறித்தவரான பார்ப்பனர் ஒருவர் அப்பள்ளியில் ஆசிரியராய் இருந்து, மாணவர்களுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுத்தார். மதுரை வழியாகத் தற்செயலாகப் பயணம் செய்த பிமெண்டோ பாதிரியார் அப்பள்ளியைப் பார்வையிட்டுப் படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.
பார்ப்பனர்களுக்கு மட்டும் தனிப்பட்டவர்களால் வேதப் பாடசாலைகள் இருந்தன. இதற்கு நாயக்கர்கள் உதவியும் கிடைத்து வந்தது. இராபர்ட்-டி-நொபிலி என்னும் பாதிரியார் கூற்றுப்படி மதுரை நகரில் சுமார் 10,000 பார்ப்பன மாணவர்கள் வேதக்கல்வி பயின்றனர் எனத் தெரிகிறது.
திருமலை நாயக்கர் தெலுங்கு மொழியை ஆதரித்தது போல் தமிழ் மொழியையும், புலவர்களையும் ஆதரிக்கவில்லை. சுப்ரதீபக் கவிராயர் திருமலை நாயக்கன் காதல் என்ற ஒரு நூல் எழுதித் திருமலை நாயக்களிடம் கொண்டு சென்றபோது அவர் அதனை மதிக்கவில்லை. எனவே சுப்ரதீபக் கவிராயர் அதனைக் கூளப்ப நாயக்கன் காதல் என மாற்றிக் கூளப்ப நாயக்கனிடம் காட்ட அவன் அவரை மதித்துப் போற்றிப் பரிசில் வழங்கினான் என்பர். எனினும் திருமலை நாயக்கர் குமரகுருபரரை மட்டும் ஆதரித்ததாகத் தெரிகிறது. குமரகுருபரர் தாம் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலைத் திருமலை நாயக்கர் முன்னிலையில் அரங்கேற்றினார் என்று கூறுவர்.
விசயரங்க சொக்கநாத நாயக்கர் குற்றாலக் குறவஞ்சி இயற்றிய திரிகூடராசப்ப கவிராயரை ஆதரித்து, அவருக்குக் குற்றாலப் பகுதியில் கி.பி.1715இல் இறையிலியாக ஒரு நிலத்தைக் கொடுத்தார். இந்நிலம் இப்போது குறவஞ்சிமேடு என வழங்கப்படுகிறது.
நாயக்கர் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அதிவீரராம பாண்டியன், வரதுங்கராம பாண்டியன், திருக்குருகைப் பெருமாள் ஐயங்கார், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், சுப்ரதீபக் கவிராயர், உமறுப்புலவர், தாயுமானவர் போன்ற பல புலவர்கள் இருந்தனர். ஆனால் இவர்களை நாயக்கர்கள் ஆதரிக்கவில்லை.
எனினும் நாயக்க மன்னர்கள் தமிழகத்தோடு பிணைந்த வரலாற்றைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். அவர்கள் விட்டுச் சென்ற கலைச் செல்வங்கள் இன்றும் நின்று நிலவி அவர்களை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
பாடம் - 6
தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களுடைய ஆட்சி முறை எவ்வாறு அமைந்திருந்தது என்பது வகைப்படுத்தி விரிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
தஞ்சை நாயக்கர் இறந்ததும், மதுரைச் சொக்கநாத நாயக்கர் தனது சிற்றன்னை மகனும், தனது தம்பியுமாகிய அழகிரி நாயக்கர் என்பவரைத் தம்முடைய சார்பாகத் தஞ்சையிலிருந்து ஆட்சி செய்து வருமாறு அனுப்பினார். சில ஆண்டுகள் மதுரைக்கு அடங்கி ஆண்டுவந்த அழகிரி நாயக்கர், தாமே சுயேச்சையாகத் தஞ்சையை ஆளத் தொடங்கினார். விசயராகவ நாயக்கரிடம் பணிசெய்த வெங்கண்ணா என்பவர் அழகிரி நாயக்கருக்கும் இராயசமாய் (செயலாளராய்) இருந்து வந்தார். இவர் தஞ்சையைச் சுயேச்சையாக ஆளத் தொடங்கிய அழகிரி நாயக்கருக்கு ஆதரவாக இருந்தார். இதற்குக் கைம்மாறாக அழகிரி நாயக்கரின் புதிய ஆட்சியில் தமக்கு மேலான அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படிப்பட்ட பதவி கிடைக்கப் பெறவில்லை. எனவே வெங்கண்ணா வெறுப்படைந்து அழகிரி நாயக்கரை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார்.
விசயராகவ நாயக்கரின் மகன் செங்கமலதாசு நாகப்பட்டினத்தில் வளர்ந்து வருவதை வெங்கண்ணா அறிந்தார். அழகிரி நாயக்கரை நீக்கிவிட்டுச் செங்கமலதாசைத் தஞ்சை அரசனாக ஆக்க நினைத்தார். நாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து செங்கமலதாசை அழைத்துக் கொண்டு பீஜப்பூரை ஆண்டு வந்த சுல்தான் அடில்ஷா என்பவனிடம் சென்றார். (பீஜப்பூர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூருக்கு வடமேற்கே 530கி.மீ தொலைவில் உள்ளது.) ‘செங்கமலதாசு முந்தைய தஞ்சை நாயக்கரின் மகனாவான்; இவனைத் தஞ்சை அரசனாக்க வேண்டும்’ என்று அவனிடம் வேண்டினார். பீஜப்பூர் சுல்தான் செங்கமலதாசை அரசனாக்க ஒப்புக் கொண்டான். அவன் தன்னுடைய படைத்தலைவர் ஏகோஜி என்பவரைப் படை ஒன்றுடன் அனுப்பி வைத்தான்.
பீஜப்பூர் சுல்தானின் பெரும்படைக்குத் தலைமை தாங்கிய ஏகோஜி தஞ்சை நோக்கி வந்தார். இதை அறிந்த அழகிரி நாயக்கர் சொக்கநாதரின் உதவியை நாடினார். அவரது முந்தைய துரோகச் செயல் காரணமாகச் சொக்கநாதர் அவருக்கு உதவி செய்ய மறுத்துவிட்டார். தஞ்சைக்கு அருகில் உள்ள அய்யம்பேட்டை என்னும் இடத்தில் நடந்தபோரில் அழகிரி நாயக்கரை ஏகோஜி தோற்கடித்தார். போரில் வெற்றி பெற்ற ஏகோஜி செங்கமலதாசைத் தஞ்சைக்கு அரசன் ஆக்கினார். பின்பு தனது படைகளின் செலவுக்காகப் பெருந்தொகை ஒன்றை அவனிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டு கும்பகோணத்தில் சென்று தங்கினார்.
செங்கமலதாசு தன்னை அரசனாக்கப் பாடுபட்ட வெங்கண்ணாவைப் புறக்கணித்து, நாகப்பட்டினத்தில் தனக்கு ஆதரவளித்த வணிகக் குடும்பத்தாரை அமைச்சராகவும் படைத்தலைவராகவும் ஆக்கினான். இதனால் ஏமாற்றம் அடைந்த வெங்கண்ணா செங்கமலதாசுக்குப் பாடம் கற்பிக்க நினைத்து, கும்பகோணத்தில் இருந்த ஏகோஜியிடம் சென்று தஞ்சையைக் கைப்பற்றி அதன் ஆட்சிப் பீடத்தில் ஏறுமாறு அவரை வேண்டினார். ஏகோஜி பீஜப்பூர் சுல்தானுக்கு அஞ்சி முதலில் மறுத்தார். பின்பு சில நாட்கள் கழித்து, பீஜப்பூர் சுல்தான் இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அச்சம் தெளிந்தார். வெங்கண்ணாவின் ஒத்துழைப்போடு சென்று செங்கமலதாசை வென்று தஞ்சையைக் கைப்பற்றி அதன் அரியணையில் ஏறி அமர்ந்தார். இது கி.பி. 1676இல் நிகழ்ந்தது. இவ்வாறாகத் தஞ்சையில் மராட்டிய அரசினை ஏகோஜி தொடக்கி வைத்தார்.
ஷாஜி போன்ஸ்லேவுக்கு இரு மனைவியர் இருந்தனர். முதல் மனைவி துர்க்காபாய் ஆவார். இவருக்குக் கி.பி.1630இல் ஏகோஜி பிறந்தார். இரண்டாம் மனைவி ஜிஜாபாய் ஆவார். இவருக்குக் கி.பி. 1629இல் சத்திரபதி சிவாஜி பிறந்தார். சத்திரபதி சிவாஜி தக்காணத்தில் மாபெரும் மராட்டியப் பேரரசை நிறுவி, அதனைக் கி.பி.1674 முதல் 1680 வரை அரசாண்டவர் ஆவார்.
ஏகோஜி தன் தந்தையைப் போலவே பீஜப்பூர் சுல்தானிடம் படைத்தலைவராக இருந்தார். கி.பி.1676இல் தஞ்சையைக் கைப்பற்றி அரசாளத் தொடங்கினார். தன் தந்தை ஷாஜியின் கட்டளைப்படி ரகுநாத் பந்த் என்பவரைத் தனக்கு அமைச்சராக வைத்துக் கொண்டார். இருப்பினும் சில நாட்களில் ஏகோஜியிடம் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக ரகுநாத் பந்த் சிவாஜியிடம் சென்று அவர்க்கு உதவியாக இருக்கத் தொடங்கினார்.
ஏகோஜி அரச தந்திரமும், ஆட்சித் திறனும் மிக்கவர். மாபெரும் வீரராகவும் திகழ்ந்தார். இருந்தபோதிலும் அவர் தனது ஆட்சியின் முற்பகுதியில் தன்னுடைய தமையனார் சிவாஜியின் தொல்லைக்கு உட்பட வேண்டியவராகவே இருந்தார்.
ஏகோஜியும் சிவாஜியும்
சத்திரபதி சிவாஜி தக்காணப் பீடபூமியில் ஆங்காங்கு நடந்துவரும் இசுலாமியர் ஆட்சியை ஒழித்து, இந்துப் பேரரசு ஒன்றை நிறுவப் பெரிதும் பாடுபட்டவர் ஆவார். இவர் பீஜப்பூர் சுல்தானிடம் இருந்த மராட்டிய நாட்டை மீட்டு, கி.பி. 1674இல் அந்நாட்டின் மன்னராக முடி சூட்டிக்கொண்டார். இவர் மொகலாய மன்னர்களை எதிர்த்துப் போர் செய்வதற்குப் பெரும்பொருள் தேவைப்பட்டது. எனவே பெரும்பொருளைத் திரட்டுவதற்காகவும், தக்காண பீடபூமியில் இசுலாமியர் ஆட்சியை ஒழித்துக் கட்டுவதற்காகவும் சிவாஜி கி.பி. 1676இல் தென்னிந்தியாவின் மீது படையெடுத்தார். அவருடைய படை 30,000 குதிரை வீரர்களையும், 20,000 காலாட்படை வீரர்களையும் கொண்டிருந்தது.
பெரும்படையுடன் தமிழகத்தினுள் புகுந்த சிவாஜி பீஜப்பூர் சுல்தானின் ஆதிக்கத்தில் இருந்த செஞ்சிக்கோட்டையையும், வேலூர்க் கோட்டையையும் கைப்பற்றினார்.
பின்பு கடலூருக்கு 20கி.மீ. தொலைவில் உள்ள திருவதிகை என்னும் ஊரில் இருந்து அரசாண்டு வந்த ஷெர்கான் லோடி என்பவனைத் தோற்கடித்தார். அதன்பின்னர்க் கடலூரை விட்டுப் புறப்பட்டு, வெள்ளாற்றைக் கடந்து கொள்ளிட ஆற்றின் கரையில் உள்ள திருமழபாடி என்னும் ஊரில் வந்து தங்கினார். (திருமழபாடி – தஞ்சைக்கு வடக்கே 16கி.மீ. தொலைவில் உள்ளது.) அவ்வூரில் வந்து தன்னைக் காணும்படி ஏகோஜிக்குக் கடிதம் எழுதினார். ஏகோஜியும் சிவாஜியைச் சென்று கண்டார். அப்போது சிவாஜி ஏகோஜியிடம் தந்தையார் சொத்தில் (ஜாகிரில்) பாதியையும், ஏகோஜிக்கு உரிய நாட்டில் சரிபாதியையும் கொடுக்கும்படி வற்புறுத்தினார். ஏகோஜி சிவாஜியிடம் ஒன்றும் பேசாமல் வெறுமனே தலையசைத்துக் கொண்டிருந்தார். பின்பு சிவாஜிக்கு அஞ்சி இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் ஒரு கட்டுமரத்தில் ஏறிக் கொள்ளிடத்தைக் கடந்து தஞ்சைக்குப் போய்விட்டார். சிவாஜி தன் தம்பியின் செய்கை குறித்துப் பெரிதும் வருந்தினார். பின்பு கொள்ளிடத்திற்கு வடக்கே உள்ள பகுதிகளை எல்லாம் தனக்குரியதாக ஆக்கிக் கொண்டார். ரகுநாத் பந்திடம் தான் வென்ற பகுதிகளை ஆட்சி செய்து வருமாறு ஒப்படைத்துவிட்டு, சிவாஜி மராட்டிய தலைநகருக்குத் திரும்பினார்.
சிவாஜி திரும்பியதும் ஏகோஜிக்கு அதுவரை இருந்துவந்த அச்சம் நீங்கிவிட்டது. உடனே அவர் சிவாஜியிடம் தான் இழந்த பகுதிகளை மீட்க எண்ணி மதுரைச் சொக்கநாதர், மைசூர்ச் சிக்கதேவராயன், பீஜப்பூர் சுல்தான் ஆகியோரிடம் படையுதவி வேண்டினார். ஆனால் அவர்கள் சிவாஜியின் பெருவெற்றியை நினைத்து, ஏகோஜிக்குப் படையுதவி செய்ய மறுத்துவிட்டார்கள். பின்பு ஏகோஜி பெரும்படை ஒன்றைத் திரட்டிச் சென்று, கொள்ளிடத்தின் வடக்கே வாலிகொண்டாபுரம் என்னும் இடத்தில் இருந்த சிவாஜியின் படைகளைத் தாக்கிப் போர் புரிந்தார். தொடக்கத்தில் ஏகோஜி வென்றார். எனினும் இறுதியில் சிவாஜியின் படை ஏகோஜியின் படையைத் தோற்கடித்தது.
இச்செய்திகளை எல்லாம் ரகுநாத் பந்த் சிவாஜிக்கு ஒரு கடிதத்தில் எழுதினார். அதற்குப் பதிலாக சிவாஜி ஒரு நீண்ட கடிதத்தை ஏகோஜிக்கு எழுதினார். அதில் ரகுநாத் பந்தோடு கலந்து பேசி ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு ஏகோஜிக்கு அறிவுறுத்தினார். ஏகோஜியின் மனைவி தீபாபாய் என்பவளும் அவரைத் தன் தமையனார் சிவாஜியோடு ஒத்துப்போகுமாறு வற்புறுத்தினாள். அதற்கு இணங்கிய ஏகோஜி ரகுநாத் பந்தைத் தஞ்சைக்கு வரச்செய்தார். அவர் முன்னிலையில் நிரந்தரமான உடன்படிக்கை ஆவணம் எழுதப்பட்டது. அந்த ஆவணம் பத்தொன்பது விதிகளைக் கொண்டிருந்தது. பதினாறாவது விதியில் சிவாஜி, தான் தஞ்சையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வெற்றி கொண்டதாகவும், அவற்றை மனப்பூர்வமாக ஏகோஜிக்குக் கொடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கி.பி.1680இல் சிவாஜி இறந்தார். அதன்பின்பு ஏகோஜி யாருடைய தலையீடும் இல்லாமல் சுயேச்சையாகச் செயல்பட்டுக் கி.பி.1684 வரை தஞ்சையைத் திறம்பட ஆட்சி செய்துவந்தார்.
ஏகோஜிக்கு ஷாஜி, முதலாம் சரபோஜி, துக்காஜி என்ற மூன்று மகன்கள் இருந்தனர். இவர்கள் மூவரும் ஏகோஜிக்குப் பின்னர் ஒருவருக்குப்பின் ஒருவராகத் தஞ்சை மராட்டிய அரியணை ஏறி ஆட்சி செய்தவர்கள் ஆவர்.
ஏகோஜி செய்த சீர்திருத்தங்கள்
ஏகோஜி தஞ்சை நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெறவேண்டி, நாட்டில் உள்ள பல காடுகளைத் திருத்தி அவற்றை விளைநிலங்களாக்கினார். குளம், வாய்க்கால், ஏரிகளை வெட்டிச் செப்பனிட்டுப் பாசன வசதிகளை உண்டாக்கி நாட்டில் வளம் பெருக்கினார். பல போர்களினால் நெடுங்காலம் பாசன வசதி இன்றிக் கிடந்த தஞ்சை நாடு ஏகோஜி செய்த சீர்திருத்தங்களால் விளைச்சல் மிகவே வளம் கொழிக்கலாயிற்று. இதனால் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ஏகோஜியின் நிருவாக முறை
ஏகோஜியின் ஆட்சியில் தஞ்சை நாடு பல நிருவாகப் பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. ஆங்காங்குத் தேவையான இடங்களில் பாளையக்காரர்கள் நியமிக்கப்பட்டனர். இவருடைய ஆளுகைப் பகுதியின் தென்புறம் கள்ளர் பாளையக்காரர்களும், வடபுறம் வன்னியப் பாளையக்காரர்களும் காவல் காக்கும் பொறுப்பையும், இறை (வரி) வசூலிக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தனர். சிற்றூர்களில் காவல்காரர் முதல் சுபேதார் (இராணுவ அதிகாரி) வரை அரசியல் அலுவலர் நியமிக்கப்பட்டனர்.
இவர்களது காலத்தில் மொகலாய மன்னன் ஔரங்கசீபு (கி.பி. 1658-1707) இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டுவந்தான். தென்னகத்தில் அவனை எதிர்த்து வந்த சத்திரபதி சிவாஜியும் கி.பி.1680இல் மறைந்துவிட்டார். எனவே தென்னகத்தில் ஔரங்கசீபுவின் ஆட்சி ஏற்படலாம் என எண்ணிய பல அரசர்கள் அவனுடன் உடன்படிக்கை செய்துகொண்டனர். ஷாஜியும் ஔரங்கசீபுவுக்குத் தலைவணங்கித் திறைசெலுத்தி ஆண்டு வரலானார். இதனால் மனத்திட்பம் அடைந்த ஷாஜி மங்கம்மாளின் மதுரை நாட்டின் மீது படையெடுத்து, அந்நாட்டில் உள்ள சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார். ஷாஜி மன்னர் ஔரங்கசீபுவுக்குத் திறை செலுத்தி வந்த காரணத்தால் மங்கம்மாளால் அவரோடு போர் புரிந்து அப்பகுதிகளை மீட்க முடியவில்லை. கி.பி.1697இல் ஔரங்கசீபுவின் படைத்தலைவன் சுல்பிர்கான் தெற்கே வந்தபோது, அவனுக்கு விலையுயர்ந்த பொருள்களை அன்பளிப்பாகக் கொடுத்து அவனுடைய உதவியால் ஷாஜி கைப்பற்றியிருந்த தன் மதுரை நாட்டுப் பகுதிகளை மங்கம்மாள் எளிதாக மீட்டுக் கொண்டாள். இருப்பினும் ஷாஜிக்கும் மங்கம்மாளுக்கும் இடையே போர் நடைபெற்றுக் கொண்டே இருந்தது.
கி.பி. 1700இல் ஷாஜி தன் படைத்தலைவனை மதுரை நாட்டில் அடங்கியிருந்த திருச்சிப் பகுதிக்கு அனுப்பினார். அவனும் தன் படைவீரர்களுடன் திருச்சிப் பகுதியில் நுழைந்து கொள்ளையடித்தான். இதனை அறிந்த மங்கம்மாள் அக்கொள்ளையைத் தடுக்கத் தன் படைத்தலைவன் நரசப்பய்யா என்பவனை அனுப்பினாள். அவன் தஞ்சை நாட்டிற்குள் தன் படைவீரர்களுடன் புகுந்து அங்குள்ள நகரங்களைக் கொள்ளையடித்தான். மதுரைப் படைவீரர்களை வென்று அடக்கமுடியாத நிலையில் ஷாஜி தன் முதல் அமைச்சர் பாலோஜி என்பவரை அனுப்பினார். பாலோஜி பெரும் பொருள்களைக் கொடுத்து நரசப்பய்யாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். இதன் வாயிலாக ஷாஜிக்கும் மங்கம்மாளுக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டது.
கி.பி. 1702இல் மங்கம்மாளுக்கும் சேதுபதிக்கும் இடையே போர் மூண்டது. அப்போது ஷாஜி மங்கம்மாளுடன் கொண்டிருந்த நட்புறவைக் கைவிட்டுச் சேதுபதியோடு சேர்ந்து கொண்டு மங்கம்மாள் படையுடன் போர் புரிந்தார். இப்போரில் மங்கம்மாளின் படை தோல்வியுற்றது. அப்படைக்குத் தலைமை தாங்கி வந்த நரசப்பய்யாவும் கொல்லப்பட்டான். தனக்கு உதவி செய்ததற்காக, சேதுபதி ஷாஜிக்கு அறந்தாங்கி, பட்டுக்கோட்டைப் பகுதிகளில் சில ஊர்களை இனாமாக வழங்கினார்.
ஆனால் எக்காரணத்தாலோ ஷாஜிக்கும் சேதுபதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கி.பி.1709இல் சேதுபதியின் மறவர் சீமை பஞ்சத்தாலும், புயலாலும், வெள்ளத்தாலும் பெருந்துயர் உற்றது. அந்நேரத்தில் ஷாஜி சேதுபதியின் மீது போர் தொடுக்க எண்ணினார். ஒரு பெரும்படை ஒன்றை அனுப்பிவைத்தார். அப்போது நடந்த போரில் சேதுபதி ஷாஜியின் படையை வென்றதோடு, அறந்தாங்கிக் கோட்டையையும் கைப்பற்றிக் கொண்டார். இத்தோல்விக்குப் பின்னர் ஷாஜி சேதுபதியுடன் மீண்டும் உடன்பாடு செய்து கொண்டார்.
ஷாஜி தஞ்சை நாட்டில் மானாம்புச் சாவடி என்னும் ஊரில் விஜயமண்டபம் அமைத்து அதில் தியாகராசப் பெருமானை எழுந்தருளச் செய்தார். அவர் காலத்துச் செப்பேட்டில் அவர் கொடுத்த நன்கொடையைப் பற்றிக் காணலாம். அவரது ஆட்சிக்கு உட்பட்ட பண்டாரவாடை என்னும் ஊரில் குடியிருந்த குடியானவர்களும், அக்கிரகாரத்தில் இருந்த பெருமக்களும் ஒன்றாகக் கூடி, அகதிகளாக வந்த பிராமணர்களுக்கும் பரதேசிகளுக்கும் அன்னதானம் செய்வதற்காகவும், திருவாரூர்க் கோயிலில் உள்ள தியாகராசர், வன்மீகேசுவரர், கமலாலயம்மன், அல்லியங்கோதையம்மன் சன்னிதிகளில் திருப்பணி செய்வதற்காகவும், அச்சன்னிதிகளில் அபிஷேகம், நைவேத்தியம் செய்வதற்காகவும் கொடை அளிக்க முடிவு செய்தனர். இதற்காக நன்செய், புன்செய் விளைச்சலில் 100 கலத்துக்கு ஒரு குறுணி வீதம் சந்திரசூரியர் உள்ளமட்டும் பரம்பரை பரம்பரையாகத் திருவாரூர்க் கோயிலுக்குச் செலுத்தவேண்டும் என்று செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. (பண்டாரவாடை – தஞ்சாவூருக்கும் கும்பகோணத்திற்கும் இடையில் உள்ளது. தஞ்சாவூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது.)
இவரது காலத்தில் வாணிகர்களுக்கு வணிக இடங்கள் ஒதுக்கப்பட்டன. உயர் அலுவலர்கள் நாடு முழுவதும் சுற்றி வந்தனர். கோயிலுக்குக் கொடுக்க வேண்டிய வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன. சிதைந்து அழிந்துபோன திருவாரூர்க் கோயில் புதுப்பிக்கப்பட்டது. பல கோயில்களுக்கு முதலாம் சரபோஜியே நேரில் சென்று கொடைகள் கொடுத்தார். தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழா இவர் காலத்தில் நடைபெற்றது.
துக்கோஜி இசைமேதையாகவும், மருத்துவ வல்லுநராகவும் திகழ்ந்தார். இந்துஸ்தானி இசையை அறிமுகப்படுத்தியவர் இவரே. இவர் சங்கீதசாகரம் என்ற இசைநூலை இயற்றியுள்ளார். இவர் முதலாம் துளசா என்றும் அழைக்கப் பெற்றார்.
துக்கோஜிக்குப் பின்
துக்கோஜி கி.பி.1736இல் மறைந்தார். அவருக்கு ஐந்து மகன்கள். அவர்களில் முதல் இருவர் இறந்தனர். மூன்றாவது மகன் பாவாசாகிப் என்ற இரண்டாம் ஏகோஜி கி.பி.1736இல் பதவியேற்று ஓராண்டு மட்டுமே ஆட்சி புரிந்து மறைந்தார். அவருக்குப் பின் அவருடைய மனைவி சுஜன்பாய் என்பவர் இரண்டு ஆண்டுகள் ஆண்டார். அதன் பின்பு துக்கோஜியின் நான்காம் மகன் சாகுஜி என்பவர் தஞ்சை மராட்டிய அரசர் ஆனார். இவர் ஓராண்டு மட்டுமே ஆட்சி புரிந்தார், இவர் தனது ஆட்சிக்காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள் காரைக்காலில் புகுவதைத் தடுத்தார். இதனால் பிரெஞ்சுக்காரர்களின் ஆதரவாளனாகிய சந்தாசாகிபு கி.பி.1739இல் தஞ்சாவூர் மீது படையெடுத்துச் சாகுஜியைக் கைது செய்து, துக்கோஜியின் ஐந்தாவது மகனாகிய பிரதாப் சிங் என்பவரைத் தஞ்சை அரியணையில் ஏற்றினான்.
ஆங்கிலேயர் சாகுஜிக்கு உதவ, கி.பி.1740இல் கேப்டன் காப் (Captain Cope) என்பவர் தலைமையில் படை ஒன்றைத் தஞ்சைக்கு அனுப்பினர். இதை அறிந்த பிரதாப் சிங் அப்படையை எதிர்கொண்டு முறியடிக்க, தன் படைத்தலைவர் மனோஜிராவ் என்பவரை ஒரு படையுடன் அனுப்பிவைத்தார். மனோஜிராவ் தலைமையில் சென்ற அப்படை, ஆங்கிலேயப் படையைக் கடலூரை நோக்கித் திரும்பி ஓடுமாறு விரட்டியத்தது.
எனினும் ஆங்கிலேயர் கி.பி. 1749இல் ஒரு பெரும்படையெடுப்பைத் தேவிகோட்டையின் மீது நடத்தினர். அப்போது நடந்த போரில் ஆங்கிலேயரை வெற்றி கொள்ள முடியாத நிலையில், மனோஜிராவ் அவர்களுடன் ஓர் அமைதி உடன்பாட்டினைச் செய்துகொண்டார். அதன்படி பிரதாப் சிங் ஆங்கிலேயர்க்குத் தேவிகோட்டையைத் தரவும், சாகுஜிக்கு ஆண்டுதோறும் 4000 ரூபாய் வாழ்நாள் ஊதியமாக வழங்கவும் ஒப்புக்கொண்டார்.
இவரது ஆட்சிக் காலத்தில் வலங்கை – இடங்கைச் சாதிப் பூசல்கள் பல ஏற்பட்டன. ஆனால் அவை இவரால் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டன. இவர் நாகூர் தர்காவில் 131 அடி உயரமுடைய கோபுரம் ஒன்றைக் கட்டினார். இது பெரிய மினார் என்று அழைக்கப்படுகிறது. (மினார் – கோபுரம்) இவரது காலத்தில் கோயில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் உள்ள இடங்களுக்கு எல்லாம் அரசு அலுவலர்களும், பொதுமக்களும் சேர்ந்து சென்று, அந்நிலங்களை அளந்து சரிபார்த்தனர்.
நவாப் முகமது அலிகானின் செயல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இயக்குநர்களுக்கு வெறுப்பை ஊட்டியது. அவர்கள் துல்ஜாஜியைச் சிறையிலிருந்து விடுவித்து மீண்டும் அவரைத் தஞ்சை அரியணையில் ஏற்ற முடிவு செய்தனர். ஜார்ஜ் பிகட் (George Pigot) என்பவரைத் தஞ்சைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தஞ்சைக்கு வந்து துக்காஜியை விடுவித்து, அவரை கி.பி. 1776இல் தஞ்சை அரியணையில் அமர்த்தினார். அதன்பின்பு துல்ஜாஜி பெயரளவில் மட்டுமே தஞ்சை மன்னராக இருந்தார். துல்ஜாஜியின் படைகள் கலைக்கப்பட்டன. அப்படைகளுக்குப் பதிலாக ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள் நியமிக்கப்பட்டன. மேலும் துல்ஜாஜி ஆங்கிலேயருக்கத் தஞ்சை நாட்டில் உள்ள நாகூரையும் அதனை அடுத்துள்ள 277 ஊர்களையும் அளித்தார்.
இரண்டாம் சரபோஜி ஸ்வார்ட்ஸ் பாதிரியார் என்பவரால் வளர்க்கப்பட்டு அவர் மூலம் ஆங்கிலத்தை நன்கு கற்றறிந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, உருது, வடமொழி, பிரெஞ்சு, ஜெர்மன், டேனிஷ், கிரேக்கம், லத்தீன், டச்சு ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.
இரண்டாம் சரபோஜி கி.பி.1798 முதல் 1832 வரை தஞ்சையை ஆட்சி புரிந்தார். ஆங்கிலேயருடன் நல்லுறவு வைத்திருந்தார். இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்லெஸ்லி பிரபு (கி.பி.1798-1805) என்பவருடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். அதன்படி தான் வாழ்ந்து வந்த தஞ்சைக் கோட்டையையும், அதைச்சூழ்ந்த சில பகுதிகளையும் மட்டும் தான் வைத்துக் கொண்டு ஏனைய தஞ்சை மராட்டிய நாடு முழுவதையும் ஆங்கிலேயர்க்கு அளித்துவிட்டார்.
இரண்டாம் சரபோஜி தஞ்சை மராட்டிய மரபின் பழைய வரலாற்றையும், கி.பி. 1803ஆம் ஆண்டுவரை தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் ஆண்டு, தேதி வாரியாக எழுதி அவற்றைத் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலின் தெற்கில் உள்ள மீக நீளமான கல்சுவர் முழுவதிலும் வெட்டச் செய்தார். இதுவே உலகில் உள்ள மீக நீளமான கல்வெட்டு என்று கருதப்படுகிறது.
உலகின் தலைசிறந்த சிற்பி பிளாக்ஸ்மேன் (Flaksman) என்பவரைக் கொண்டு தம் உருவச் சிலையையும், சுவார்ட்ஸ் பாதிரியாருக்கு நினைவுச் சின்னத்தையும் வெண்பளிங்குக் கற்களில் செதுக்குமாறு செய்தார். சிற்ப உலகில் சிறந்து விளங்கும் அச்சிற்பங்கள் தஞ்சையில் இன்றும் நின்று நிலவிக் காண்போர் கருத்துக்கும் கண்களுக்கும் நல்ல விருந்தாக அமைந்துள்ளன.
தஞ்சாவூரில் மராட்டிய மன்னர்களால் தொடங்கப்பட்ட சரசுவதிமகால்நூலகத்தில் இரண்டாம் சரபோஜியும், ஸ்வார்ட்ஸ் பாதிரியாரும் வடமொழி, தெலுங்கு, தமிழ் ஆகிய பல்வேறு மொழிகளில் இலக்கியம், இசை, மருத்துவம் போன்ற துறைகளைச் சார்ந்த ஓலைச்சுவடிகள், அச்சில் இடப்பட்ட நூல்கள் ஆகியவற்றை இடம்பெறச் செய்தனர். மேலும் இரண்டாம் சரபோஜி உலகின் பல்வேறு பாகங்களில் இருந்து ஏறத்தாழ 4000 புத்தகங்களை வாங்கிச் சரசுவதி மகால் நூலகத்தில் இடம்பெறச் செய்தார்.
இரண்டாம் சரபோஜி தமிழ்ப் புலவர்கள் பலரைத் தம் அவையில் உரிய சிறப்புகள் செய்து ஆதரித்தார். கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் இவருடைய அவையில் தலைமைப் புலவராக வீற்றிருந்தார். இப்புலவர் பெருமான் இரண்டாம் சரபோஜி மீது சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்னும் நூலைப் பாடியுள்ளார். தமிழில் உள்ள குறவஞ்சி நூல்களில் திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய திருக்குற்றாலக் குறவஞ்சிக்கு அடுத்தபடியாக, சிறந்து விளங்குவது சரபேந்திர பூபாலக் குறவஞ்சியாகும்.
நிருவாக வசதிக்காக மராட்டியர் தங்களது தஞ்சை நாட்டை ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஆட்சி புரிந்தனர். ஒவ்வொரு பகுதியும் சுபா என்று அழைக்கப்பட்டது. அவ்வைந்து சுபாக்கள் ஆவன : பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், மாயவரம் (மயிலாடுதுறை), திருவையாறு என்பனவாம். ஒவ்வொரு சுபாவிற்கும் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் சுபேதார் என அழைக்கப்பட்டார். இவரிடம் சுபாவின் ஆட்சித் தலைமை மட்டுமன்றி, இராணுவத் துறையும் இருந்தது.
ஒவ்வொரு சுபாவும் பல சீமைகளாகவும், ஒவ்வொரு சீமையும் பல மாகாணங்களாகவும் பிரிக்கப்பட்டன. காரைக்கால் சீமை, சீர்காழிச் சீமை, தஞ்சாவூர்ச் சீமை, திருவாரூர்ச் சீமை, நாகப்பட்டினம் சீமை எனப் பல்வேறு சீமைகளும், ஏழு மாகாணம், சாமிமலை மாகாணம், பச்ச மாகாணம் எனப் பல்வேறு மாகாணங்களும் இருந்தன. மாகாணத்தில் வட்டம், பத்து, கரை எனப் பல்வேறு சிறு பகுதிகளும் இருந்தன. இப்பகுதிகளில் சிறுசிறு ஊர்கள் பல இருந்தன. ஊர்களில் சில தனியூர் என்று அழைக்கப்பட்டன. அவை தனி நிருவாகமுடைய ஊர்களாக இருந்தன. ஊரவையினர் ஊரார் என்றும், நாட்டை நிருவாகம் செய்யும் அவையினர் நாட்டார் என்றும் குறிக்கப் பெற்றனர்.
தஞ்சை மராட்டியர் நாட்டில் பல இடங்களில் கோட்டைகள் (Forts) இருந்தன. அவை, சாகக்கோட்டை, பந்தநல்லூர், மகாதேவ பட்டணம், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப் பள்ளி, தேவிகோட்டை என்பனவாம்.
சர்க்கேல் – தலைமை அமைச்சர்.
சுபேதார் – சுபாவுக்கு உரிய ஓர் அரசியல் அதிகாரி. சுபாவின் ஆட்சித் தலைமை மட்டுமன்றி, இராணுவத் துறையும் இவர் பொறுப்பில் இருந்தது.
அமல்தார் – வருவாய்த் துறை அதிகாரி.
சிரஸ்தேதார் – ஆவணக் காப்பாளர்.
தாசில்தார் – வட்டம் (தாலுகா) என்ற சிறிய பிரிவில் வரிவசூல் செய்யும் அலுவலர்.
கொத்தவால் – கோட்டைக் காவல் அதிகாரி.
கில்லேதார் – கோட்டையின் முழுப்பொறுப்பு அதிகாரி.
கமாவிஸிதார் – சத்திரங்களை மேற்பார்வை செய்யும் அதிகாரி.
திம்மதி – வழக்கு மன்றத் தீர்ப்பில் கையொப்பம் இடுபவர்.
இமாரதி – பழுதுபார்த்தல் (மராமத்து) முதலியவற்றைக் கவனிக்கும் அலுவலர்.
ஹேஜிப் – கணக்குப் பிள்ளை.
மேலே கூறப்பட்ட கருத்துகளை மெக்கன்சி என்பவர் மறுக்கின்றார். உழவர்கள் ஏகோஜியால் பெற்ற சிறப்புகள் முதலாம் சரபோஜியின் செப்பேடு ஒன்றினால் அறியப்படுகின்றன என்று அவர் கூறுகின்றார்.
பல செப்பேடுகள் குடியானவர் செய்த பல்வேறு அறச்செயல்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. பல ஊர்களில் குடியானவர்களும், வணிகர்களும், அந்தணர்களும், அரசு அலுவலர்களும் இணைந்து அறக் கொடைகள் பல தந்துள்ளனர். உழவர்கள் தங்களுக்குள் மகமை வைத்து ஆலயப்பணி செய்திருக்கின்றனர். பொதுவாக எல்லா மராட்டியச் செப்பேடுகளும் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து அறச்செயல்கள் செய்தமையையே கூறுகின்றன. எனவே மிகவும் கொடுமையான வரி, அதனைக் கசக்கிப் பிழிந்து வசூலித்தனர் என்ற கருத்துப் பொருந்தாது.
கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு நாற்பக்க எல்லைகளும் சரியாகக் கூறப்பட்டன. பொதுவாக நிலம் மா, குழி, வேலி எனக் கணக்கிடப் பெற்றது.
உள்நாட்டில் இருந்த உழவு சாராத மற்றத் தொழிலாளிகளும், வணிகர்களும் பலபட்டடை செட்டியள் வர்த்தகர் என்றும், பதினெட்டுப் பட்டடை வர்த்தகர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பொருட்களை மொத்தமாகக் கொண்டு வந்து பலர் விற்கும் இடங்களைப் பேட்டை என்றனர். அரிசிப்பேட்டை, ஆட்டுப்பேட்டை என்றெல்லாம் பல பேட்டைகள் இருந்தன. அரிசிப்பேட்டையில் அரிசி விற்கும் வணிகர் பலரும், ஆட்டுப்பேட்டையில் ஆடு விற்கும் வணிகர் பலரும் இருந்தனர். தனித்தனியாகப் பொருட்கள் விற்கும் இடங்களைக் கடை என்றும் (அரிசிக்கடை, ஜவுளிக்கடை, தேங்காய்க் கடை, நெல்லுக் கடை, கசாப்புக் கடை, காசுக்கடை, கறிகாய்க் கடை, சாராயக்கடை) அழைத்துள்ளனர்.
ஒரே கடையில் பல்வேறு பொருட்களையும் விற்கும் இன்றைய மளிகைக்கடை போன்ற கடைகளும் அன்று இருந்தன. அவை சரக்குக்கடை, பல சரக்குக்கடை, சில்லறைக்கடை, மூலமளியக்கடை எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெற்றன.
அரிசி, நெல், தானியம், பயறு முதலிய பொருட்கள் விற்பனை நிலையங்களுக்குப் பொதி, சுமை என்ற அளவுகளில் கொண்டு வரப்பட்டன. விற்பனை நிலையங்களில் அப்பொருள்கள் கலம், குறுணி, கண்டி, சேர், படி, நாழி, உரி, தூணி, மா போன்ற பல்வேறு அளவுகளில் அளந்து விற்கப்பட்டன. நிறுக்கக் கூடிய பொருட்கள் மனு, துலாம் என்ற அளவுகளில் நிறுக்கப்பெற்றன. நெய் தோண்டி என்றும், வெற்றிலை கட்டு என்றும், எண்ணெய் குடம், காணம், சேர் என்றும் பல்வேறு அளவுகளில் விற்கப்பட்டன.
மூன்றேகால் சேர் கொண்டது ஒரு படி என்ற அளவு முறை இருந்துள்ளது. பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டது மட்டுமின்றி, உள்ளூரிலும் கொண்டு போய் விற்கப்பட்டன. அன்றிருந்த பல்வேறு வணிகர்கள் பெயர்களையும் செப்பேடுகள் மூலம் அறிகின்றோம்.
ஒரு செப்பேட்டில் பொன் (துளைப்பொன்) என்று குறிக்கப்பெறுகிறது. அஃது உயர்ந்த பொன்னாக இருக்கலாம். கால் பணம், அரைப்பணம் என்ற வழக்கம் இருந்துள்ளது.
10 பணம் கொண்டது 1 பொன் என அழைக்கப்பட்டது. பொன்னும் ராசகோபாலச் சக்கரமும் சமமான மதிப்புக் கொண்டது காசாகும்.
நாணயம் உருவாக்கும் இடம் கம்பட்டம் எனப்பட்டது. நாகப்பட்டினத்தில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும், ஏகோஜியும் சேர்ந்து ஒரு கம்பட்டத்தில் கூட்டாகக் காசுகள் அடித்தனர். அக்காசு தங்கக் காசு ஆகும். தஞ்சாவூர்ச் சீமைக்காக மூன்றரை மாத்து உள்ள பணமும், பவழக்காடு சீமைக்காக எட்டரையே அரைக்கால் மாத்து உள்ள வராகனும் அடிக்கப்பட்டன. அக்கம்பட்டங்கள் முறையே பணக் கம்பட்டம், வராகன் கம்பட்டம் எனத் தனித் தனியாகப் பெயர் கொடுத்து அழைக்கப்பட்டன. இந்த வராகன், விராகன் என்ற பெயராலும் குறிக்கப்படுகிறது.
இந்த நாணயங்கள் அடிக்கிற கம்பட்டத்தில் வருகின்ற வருவாயில் டச்சுக் கம்பெனிக்குப் பாதியும், ஏகோஜிக்குப் பாதியும் சேர வேண்டும் என்றும், கம்பட்டத்தில் ஏகோஜியின் ஆள் ஒருவர் இருந்து கணக்குகளைச் சரிபார்க்கலாம் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
அரசர்களும், பாளையக்காரர்களும், முன்னின்று ஆலயத் திருப்பணிகள் செய்தனர். அரசு அலுவலர்கள் ஆங்காங்கு நடைபெற்ற சமயக் கொடைகளுக்கும் விழாவிற்கும், வழிபாட்டிற்கும் முன்னின்று உதவினர். பல்வேறு வணிகர்கள் சாதி மத பேதமின்றித் தங்கள் வாணிகத்திற்கு ஏற்ப மகமை வசூல் செய்தும், பொன்னை அளித்தும், சிவாலயத்திற்கு விழா எடுத்தனர். உழவர்களும் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பவும், விளைச்சலுக்கு ஏற்பவும் நாணயங்களையும், தானியங்களையும் சிவாலயத்திற்கு அளித்தனர்.
சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோயில் போன்ற பல ஊர்களில் மடங்கள் இருந்தன. ஒரே ஊரில் பல சாதியாருக்குத் தனித்தனி மடங்கள் இருந்தன. ஆங்காங்குச் சமய தருமம் இனிது நடத்தச் சான்றோர்கள் பலர் இருந்ததாகச் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது.
ஆலயங்களில், நாள் வழிபாடு, வார வழிபாடு, பட்ச வழிபாடு, மாத வழிபாடு ஆகியவையும், ஆண்டுச் சிறப்பு விழாக்களுடன் பல்வேறு பண்டிகைகளும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. வழிபாட்டின்போது அந்தணர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் திரு அமுது படைக்கப்பட்டது. ஏழைகளும், நோயாளிகளும் நாள்தோறும் உணவு பெற்றனர். அன்னதானத்துக்கு எனத் தனியாகச் சத்திரங்களும் அமைக்கப்பட்டன.
(i) முதலிலும், இடையிலும், இறுதியிலும் ரகரம் றகரமாக எழுதப் பெற்றுள்ளது.
சான்று :
ராமலிங்கம் – றாமலிங்கம்
கிராமம் – கிறாமம்
தர்மம் – தற்மம்
வீரராம – வீறறாம
நயினார் – நயினாற்
(ii) நகரம் னகரமாக எழுதப் பெற்றுள்ளது.
சான்று :
நாகப்பட்டினம் – னாகப்பட்டினம்
நாயக்கர் – னாயக்கர்
நாச்சியார் – னாச்சியார்
நாடு – னாடு
நாட்டாமை – னாட்டாமை
(iii) இரட்டை றகரம் இரட்டைத் தகரமாக எழுதப்பெற்றுள்ளது.
சான்று :
மற்றும் – மத்தும்
ஆற்றுக்கு – ஆத்துக்கு
முற்றிலும் – முத்திலும்
பெற்ற – பெத்த
(iv) இரட்டைத் தகரம் இரட்டைச் சகரமாக எழுதப்பெற்றுள்ளது.
சான்று :
சம்மதித்து – சம்மதிச்சு
நியமித்த – நியமிச்ச
(v) இகர, ஈகாரம் முறையே யிகர, யீகாரமாக எழுதப்பெற்றுள்ளது.
சான்று :
இந்தியக்கரை – யிந்தியக்கரை
இந்த – யிந்த
ஈழம் – யீழம்
(vi) யகர ஒற்று இகரச் சாரியை பெற்று எழுதப் பெற்றுள்ளது.
சான்று :
வாய் – வாயி
தேங்காய்க்கடை – தேங்காயிக் கடை
நெய்வேதனம் – நெயிவேதனம்
மேலே கூறப்பட்டவைகளைப் போல் இன்னும் பல எழுத்துகள் மாற்றிப் பயன்படுத்தப்பட்டன.
மராட்டியர் ஆட்சிமுறை எவ்வாறு இருந்தது என்பதை விளக்கமாக அறிந்து கொண்டிருப்பீர்கள். மராட்டியர் ஆட்சியில் நாட்டுப்பிரிவுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதைப் பற்றியும், அரசு அலுவலர், உழவர்கள் ஆகியோர் நிலைமை எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றியும், வாணிகம் எவ்வாறு நடைபெற்றது என்பதைப் பற்றியும் நன்கு படித்து அறிந்து கொண்டிருப்பீர்கள். மேலும் மராட்டியர் ஆட்சியின்போது சமயநிலை, தமிழ்மொழியின் நிலை ஆகியவை எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றியும் படித்துத் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.