13

இலக்கிய வரலாறு -1

பாடம் - 1

தொல்காப்பியர் காலம்

1.0 பாட முன்னுரை

அன்பார்ந்த மாணாக்கர்களே! வாழ்வியல் துறை ஒவ்வொன்றும் அவ்வக் காலத்தில் நிலவும் அரசியல், பொருளாதார, சமூக, சமயச் சூழ்நிலைகளின் செல்வாக்குக்கு உட்படுகின்றது. மனித அறிவின் ஆற்றல் மிக்க வெளிப்பாடான இலக்கியத்திற்கு இதில் விதிவிலக்கு இல்லை. தமிழ்நாட்டை மூவேந்தர்கள், சங்க நாளில் ஆண்டனர். அவர்களை அடுத்துக் களப்பிரரும், பல்லவரும் ஆண்டனர். பின்னர்ச் சோழரும் பாண்டியரும் சிறிது காலம் ஆட்சி புரிந்தனர்; பின்னர் இசுலாமியரும், நாயக்கரும், மராட்டியரும், ஐரோப்பியரும் ஆண்டனர். சைவம், வைணவம், சமணம், பௌத்தம், இசுலாம், கிறித்துவம் ஆகியவை மக்களால் பின்பற்றப்பட்ட சமயங்கள் ஆகும். பின்னர் நாடு விடுதலை பெற்றது. அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டது. இவ்வாட்சி மாற்றங்களாலும், சமயப் போட்டிகளாலும், அறிவியல் தாக்கத்தாலும், தமிழ் இலக்கியம் பெற்ற மாற்றங்கள் உருவம், உள்ளடக்கம் ஆகிய இரண்டிலும் காணத்தக்கன. தமிழில் கடந்த ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளது. இவ்வரலாற்றுக் காலத்தைப் பல்வேறு காலக்கட்டங்களாகப் பிரித்து நீங்கள் பயிலுகின்றீர்கள். இப்பாடம், தமிழ் இலக்கிய வரலாற்றின் முதற் காலக் கட்டத்தைப் பற்றியதாகும். இதில், தமிழ் மொழியின் தொன்மையும், தமிழ் வளர்த்த சங்கங்களின் வரலாறும், தமிழுக்கு முதல் இலக்கணம் செய்தவராகப் புகழப்பெறும் அகத்தியர் வரலாறும், இன்று கிடைக்கும் தமிழ் நூல்களுள் தொன்மையான தொல்காப்பியத்தின் அமைப்பும், சிறப்பும் பற்றி அறிந்து கொள்வீர்கள்.

1.1 தமிழ்மொழியின் தொன்மை

மக்கள் இனம் முதலில் தோன்றிய நிலப்பகுதியாகத் தென்னகம் கருதப்படுகின்றது. எனவே, உலக முதன் மொழியாகவும் தமிழைப் பாராட்டும் நிலை ஏற்பட்டது. மிகப் பழங்காலத்திலேயே சிறந்த நாகரிகத்தைப் படைத்து உலகின் பல பகுதி மக்களோடும் வாணிக உறவும் பண்பாட்டு உறவும் கொண்டனர் தமிழ் மக்கள். பாபிலோனியா, சுமேரியா, எகிப்து, இத்தாலி, கிரீசு, உரோம், மெசபடோமியா முதலான நாடுகளோடு தமிழர் நடத்திய வாணிகம் பற்றிச் சான்றுகள் உள்ளன. தமிழ்நாட்டுப் பொருள்களான அகில், சந்தனம், முத்து, பவழம், பொன், விலைமதிப்புள்ள கல் வகைகள் ஆகியவற்றைப் பிற நாட்டு மக்கள் விரும்பிப் பெற்றனர். கி.மு. 4000 ஆண்டுகட்குமுன் சுமேரியாவோடு வாணிகம் நடந்தது. யூதர்களின் தலைவர் மோசசு (கி.மு.1490) தமிழகத்து ஏலக்காயைப் பயன்படுத்தினார். சாலமன் (கி.மு. 1000) தென் அரேபிய நாட்டு அரசி ஷீபாவிடமிருந்து காணிக்கையாகப் பெற்ற பொருள்கள் தமிழகத்தைச் சார்ந்தவையாம். கிரேக்கர்களோடு கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே வணிகம் நிகழ்ந்துள்ளது. கி.மு. 1000 அளவில் சீனத்தோடு வணிகம் நடந்தது. இந்தியாவின் வடபகுதியோடு தமிழர்க்கு இருந்த உறவினைக் காத்தியாயனர், பதஞ்சலி, வரருசி, சாணக்கியர் முதலான பேரறிஞர்கள் தத்தம் நூல்களில் காட்டியுள்ளனர்.

இத்தகு பழைய நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழரின் தாய்மொழி கடந்த 2500 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இலக்கிய வரலாறுடையது. இதன் தொல்பழமையுடைய இலக்கணமான தொல்காப்பியமே கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குரியது என்கின்றனர். இதில் சொல்லப்படும் இலக்கணங்கட்கு அடிப்படையான இலக்கியங்கள் எப்போது உருவாயின என்று இன்று வரையறுத்துச் சொல்ல முடியவில்லை. அப்பொழுதே செந்தமிழ் என்ற பிரிவு உருவாகிவிட்ட முதல்மொழி என்று பாராட்டுவதில் வியப்பு ஒன்றும் இல்லை.

பழைமையானது

உலகில் இன்று ஏறத்தாழ 3000 மொழிகள் உள்ளன. இவற்றுள் எழுத்து வடிவம் கொண்டன 250 அளவினவே. இன்று அறியப்படும் மொழிகளுள் விரல்விட்டு எண்ணத் தக்க சிலவே காலப்பழமையும் இலக்கிய வளமையும் உடையன. அவை உயர் தனிச்செம்மொழிகள் என்று பாராட்டப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாகத் தமிழ் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏனையவை வடமொழி, கிரேக்கம், இலத்தீன், ஈபுரு, சீனம் ஆகியனவாகும். இவற்றுள் ஈபுரு, வடமொழி, இலத்தீன் ஆகியவை வழக்கு ஒழிந்து விட்டன. எத்தனையோ மொழிகள் உருச்சிதைந்து அடையாளம் காணமுடியாமல் ஆகிவிட்ட நிலையிலும், பழைமைக்குப் பழைமையானதாயும், புதுமைக்குப் புதுமையானதாகவும் தமிழ் விளங்குகிறது. இன்று பேச்சு வழக்கிலுள்ள உலகமொழிகளில் தமிழே முதன்மையானது என்று இந்தியக் கலைக் களஞ்சியம் மொழிகிறது. திருத்தந்தை சேவியர் தனிநாயகம் அவர்கள் தமிழின் கன்னித்தன்மையைப் பாராட்டி, “தமிழ் கிரேக்கம், இலத்தீன், வடமொழி ஆகியன போல் ஓர் உயர்தனிச் செம்மொழியாக விளங்குகிறது. ஆனால் தன்னையொத்த பல மொழிகள் உருத்தெரியாமல் மறைந்தொழியவும், தமிழ் இன்றும் பேச்சுமொழியாக நிலைபெற்றுள்ளது. ஒரு பழைமையான உயர்தனிச் செம்மொழி இன்றளவும் இளமையோடு நிலைபெற்றிருத்தலுக்குத் தமிழே ஒரே சான்றாக விளங்குகிறது” என்று கூறுவதனை நோக்குக.

சொல் வளம்

வின்சுலோ என்ற அகராதி இயல் அறிஞர் தமிழ் சொல்வளத்திலும், பயன்பட்ட தன்மையிலும் கிரேக்கத்தை விடவும், இலத்தீனை விடவும் சிறந்த மொழி என்று பாராட்டியுள்ளார்.

தொல் திராவிட மொழி

ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்த தொல்திராவிட மொழிக்கும் மூத்த உறுப்பினராகத் தமிழ் விளங்குகின்றது. இந்தியா முழுவதும் பேசப்பட்ட பழந்தமிழையே தொல்திராவிட மொழி என்று மொழியறிஞர்கள் குறிக்கின்றனர். கோலாமி, பர்ஜி, நாய்க்கி, கோந்தி, கூய், குவி, கோண்டா, மால்டா, ஒரொவன், கட்பா, குரூக், பிராகூய் என்று பற்பல பெயர்களுடன் இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும் தமிழோடு

உறவுடைய திராவிட மொழிகள் வழங்கி வருகின்றன.

சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்

அரியதுனது இலக்கணம் என்று அறைகுவதும் வியப்பாமே

என்று பெ. சுந்தரம்பிள்ளை பாராட்டுவது சரியானதே. வடஇந்திய மொழிகளில் தமிழின் செல்வாக்கு மிகுந்துள்ளதையும், தமிழின் தொடர் அமைப்பு வடநாட்டு ஆரியமொழிகளில் செலுத்துகின்ற செல்வாக்கினையும் மிகப்பெரிய மொழியறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

திராவிட மொழிகளில் வழங்கும் சொற்கள் பலவும் தமிழில் வழங்குகின்றன. கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் வழங்கும் நாடுகளின் மிகப் பழைய கல்வெட்டுகள் வடமொழியில் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அவை தூய தமிழில் உள்ளன. கி.பி. 7, 8ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மலையாள மொழிக் கல்வெட்டுகளில் தமிழ் இலக்கணச் செல்வாக்கு மிகுந்துள்ளது. தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், வடமொழியின் செல்வாக்கால் தமிழிலிருந்து வேறுபட்டுவிட்டன. ஆனால் தமிழ் மட்டும், சிற்சில சொற்களைக் கடன் வாங்குவதோடு தன் உறவை மட்டுப்படுத்திக்கொண்டு, தனித்து நிற்கும் பண்பை நிலைநாட்டி வருகின்றது. சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிபாடுகளில் கிடைக்கும் எழுத்து வடிவம் தமிழோடு நெருங்கிய ஒற்றுமை உடையது என்ற ஈராசு அடிகள் கருத்தும் எண்ணத்தக்கது.

1.2 தமிழ்ச் சங்கங்கள்

சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களும், குறுநில மன்னர் பலரும், தமிழ்ப்புலவர்களை மதித்துப் போற்றினர்; அவர்களுக்குப் பெரும் பொருளைப் பரிசாக அளித்தனர். இச்செய்தி சங்க இலக்கியங்களால் அறியப்படுகிறது. எனினும், தம் தலைநகர்களில் தமிழ் வளர்ச்சிக்கு எனச் சங்கங்களை நிறுவிப் பன்னூறாண்டுகள் தமிழ்ப்பணி புரிந்தோராகப் பாண்டியர்களே அறியப்படுகின்றனர்.

பிற்கால இலக்கியங்கள் பாண்டிய நாட்டையே சிறப்பாகத் தமிழ்நாடு என்று பாராட்டியுள்ளன. சங்க இலக்கியத்தில்

‘தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின்

மகிழ் நனை மறுகின் மதுரை’

‘தமிழ் வையைத் தண்ணம்புனல்’

‘இவனே, தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே’

என்று வரும் பகுதிகள் மதுரைக்கும் தமிழுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும்.

பாண்டியர் மூன்று சங்கங்களை நிறுவித் தொண்டு செய்த விவரத்தினை கி.பி. 8ம் நூற்றாண்டைச் சார்ந்த இறையனார்களவியல் உரையே முதன் முதல் தருகின்றது. அவ்விவரம் ஒரு பட்டியலாகத் தரப்படுகிறது. அது வருமாறு:

இறையனார் களவியல் உரை கூறும்

முச்சங்கம் பற்றிய விவரங்கள்

தெளிவான அட்டவணையைக் காண

1.2.1 சங்கம் பற்றிய கருத்துகள் தென் மதுரையிலும், கபாடபுரத்திலும், இப்பொழுதுள்ள மதுரையிலும் மூன்று சங்கங்கள் நிலவின என்ற இறையனார் களவியல் உரை கூறும் செய்தியை, முழுமையாக ஏற்றுக் கொள்வார் உண்டு. முன்னோர் பொய்கூறார் என்ற நல்ல நம்பிக்கையே இதற்குக் காரணம்.

இன்னொரு சாரார் சங்கம் என்ற அமைப்புப் பற்றிக் கூறப்படுவன அனைத்தும் முழுமையான கற்பனையே என்று வாதிடுகின்றனர்.

மூன்றாவது சாரார், முதல் இரண்டு சங்கங்களும் நிலவியமைக்கு வலுவான சான்றுகள் இல்லாவிடினும், ஒரு சங்கம் இருந்திருக்க வாய்ப்புண்டு என்பர். இவர்களுள் டாக்டர் எஸ். கிருட்டினசாமி அய்யங்கார், கே.ஏ. நீலகண்ட சாத்திரியார், இரா. இராகவ ஐயங்கார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர்.

1.2.2 சங்கம் இருந்தமைக்குச் சான்றுகள் இறையனார் களவியல் உரையில் காணப்படும் முச்சங்கங்கள் பற்றிய செய்திகளைப் பட்டியலில் கண்டீர்கள். தமிழ்ச் சங்கம் மதுரையில் நிலவியது ஒரு வரலாற்று உண்மையென்பதற்கு உதவும் சான்றுகளை இங்குக் கண்டு கொள்ளுங்கள்.

சங்க நூல் சான்றுகள்

தமிழிலுள்ள மிகத் தொன்மையான நூலான தொல்காப்பியம் நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்தில், அதங்கோட்டாசான் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட செய்தியை அந்நூலின் சிறப்புப் பாயிரம் கூறுகின்றது. பேரறிஞர்களான புலவர் பெருமக்கள் கூடித் தமிழ்ச் சுவையினை நுகர்ந்த இடமாக மதுரையைப் பாராட்டுகிறது மதுரைக்காஞ்சி.

தொல்லாணை நல்லாசிரியர்

புணர்கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன்

(மதுரைக் காஞ்சி, வரிகள் 761-3)

சிறுபாணாற்றுப்படை,

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்

மகிழ்நனை மறுகின் மதுரை

(சிறுபாணாற்றுப்படை, வரிகள் 65-66)

என்று புகழ்கிறது.

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவர், சோழனைக் காவிரிக் கிழவன் என்று பாராட்டி, பாண்டியனைத் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்து (புறநானூறு, 58) என்று புகழ்ந்தார்.

வஞ்சினம் கூறும் பாண்டிய மன்னன்

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவனாக

உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைக என் நிலவரை

(புறம். 72)

என்றான். மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்டு சங்கம் நிலவியதற்கு இது நல்ல சான்றாகும்.

பாண்டி நாட்டிற் பாயும் வைகையாற்றைப் பாடும் புலவர்,

தமிழ்வையைத் தண்ணம்புனல்

(பரிபாடல், 6)

என்றார். நாவினால் புலனை உழுது அறிவுப்பயிர் வளர்ப்போர் என்று புலவர்களைப் பாராட்டும் புலவர் ஒருவர் கூற்றைக் காண்மின்!

செதுமொழி சீத்த செவிசெறுவாக

முதுமொழி நீராப் புலன் நாவுழவர்

புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர்

(கலித்தொகை, 68)

கூட்டுண்ணலாவது இலக்கியச் சுவை உணர்தலாகும்.

சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் தென்தமிழ் நாட்டுத் தீதுதீர் மதுரை என்றார். மணிமேகலை ஆசிரியர் சாத்தனார், தென்தமிழ் மதுரை என்றார்.

இடைக்காலச் சான்றுகள்

இனி, இடைக்காலப் புலவர்கள் பலரும் தமிழோடு மதுரையை இணைத்தே பேசுகின்றனர் என்பதற்குச் சான்றுகளைக் காணுங்கள்.

திருமங்கை மன்னர் சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ் எனப்புகழ்வார். சங்கத்தமிழ்மாலை என்று நாச்சியார் தம் திருப்பாவையைப் பெருமையோடு குறிப்பிட்டார். அப்பர் பெருமான், நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண் என்று சிவபெருமானைப் புகழ்ந்துள்ளார். மாணிக்கவாசகப் பெருந்தகை தம் திருக்கோவையாரில், சிவபெருமான் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் ஆய்ந்தார் என்றார்.

சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்பலத்தும் என்

சிந்தையுள்ளும்

உறைவான், உயர் மதில்க் கூடலின் ஆய்ந்த ஒண்தீ்ந்தமிழ்

என்பது அவர் திருவாக்கு.

ஆச்சாரிய மாலை என்னும் நூல், பாண்டியன் பாடுதமிழ் வளர்த்த கூடல் என்கிறது. தென்தமிழ்நாட்டு அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச்சங்கம்’ என்று கம்பர் பாராட்டுவார். பொதிகையும் பாண்டிய நாட்டிலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யாப்பருங்கல விருத்தியின் மேற்கோள் ஒன்று, வீயாத் தமிழ் உடையான் பல்வேல் கடல் தானைப் பாண்டியன் என்கிறது.

பிறசான்றுகள்

தொல்காப்பிய உரையாசிரியர்களான பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பிறரும் மூன்று சங்கங்கள் பற்றிப் பேசியுள்ளனர். வால்மீகி இராமாயணம், சுக்கிரீவன் தன் வீரர்கட்குக் கூறும் அறிவுரையில் இடைச்சங்கம் இருந்த இடமாகக் கூறப்படும் கபாடபுரம் இடம் பெறுகின்றது. கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்கு உரிய சின்னமைனூர்ச் செப்பேடு,

மாபாரதம் தமிழ்ப்படுத்தும்

மதுராபுரிச் சங்கம் வைத்தும்

என்கிறது. இதனால், மதுரையில் தமிழ்ச் சங்கம் நிலவியதும், தமிழ்ப்புலவர் தமிழாய்ந்ததும் வரலாற்றுண்மை என்று தெளியப்படும்.

1.2.3 சங்கம் கற்பனையா? தமிழ் வளர்க்கும் நோக்குடன் சங்கம் என்ற அமைப்பு இருந்திருக்க இடமுண்டு என்பதற்குப் பல சான்றுகள் இருப்பது உண்மை என்றாலும், இக்கருத்தை மறுத்துரைப்பாரும் உண்டு. அவர்களுள் கே.என். சிவராச பிள்ளையும், பி.தி. சீனிவாசய்யங்காரும் குறிக்கத்தக்கவர்களாவர்.

அவர்கள் கூறும் காரணங்களுள் குறிக்கத்தக்க சில மட்டும் இங்குச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

1. சங்க இலக்கியங்கள் என்று அழைக்கப்படும் நூல்களில் கூட, சங்கம் என்ற சொல் காணப்படவில்லை. சங்கம் என்ற சொல் வடசொல்லாகும்.

2. புலவர்கள் ஒன்று கூடித் தம் புலமையை நிலைநாட்டுதல் என்பது தற்காலக் கருத்து. போரும் பூசலும் நிலவிய அப்பழங்காலத்தில் பன்னாட்டுப் புலவர்கள் கூடித் தமிழ் வளர்த்திருக்க வாய்ப்பு இல்லை.

3. சிவன், முருகன், குபேரன் முதலான கடவுளரும் சங்கத்தில் இடம் பெற்றனர் என்பது கற்பனையே.

4. 59 அரசர்கள் 3700 ஆண்டுகளும், 89 அரசர்கள் 4400 ஆண்டுகளும் 49 அரசர்கள் 1850 ஆண்டுகளும் வாழ்ந்தனர் என்பது நம்பற்குரியதன்று. இவ்வாறே புலவர்களின் எண்ணிக்கையும் நம்பற்குரியதன்று.

5. புத்த, சமண சமயச் சங்கங்கட்குப் போட்டியாகக் கற்பனையில் உருவாக்கியனவே இச்சங்கங்கள்.

முடிவு

இறையனார் களவியல் உரையில் நம்புவதற்குக் கடினமான புராணத் தன்மை கொண்ட விவரங்கள் உள்ளன என்பது உண்மையே. ஆனால், அதுகொண்டு சங்கம் என்ற அமைப்பே இல்லையென்று மறுப்பது முறையாகாது.

சங்கம் என்ற சொல் இல்லை எனினும், அவை, மன்றம், புணர்கூட்டு, தமிழ் நிறை என்றவாறு பல சொற்களும் தொடர்களும் காணப்படுகின்றன. இன்று கிடைக்கும் சங்கநூல்கள் தொகுக்கப்பட்டிருக்கும் முறையைக் காண்கையில், ஒரு பெரிய அறிஞர் கூட்டம் இருந்தே இச்சீரிய பணியை முடித்திருக்க முடியும் என்று கருத வேண்டியுள்ளது. அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை ஆக்கினானும் என்ற சம்பந்தப் பெருமான் திருவாக்கு பாண்டிய நாட்டில் சங்கம் நிலவியமைக்கு நல்ல சான்றாகலாம். வழிவழியாகத் தமிழ்ச் சான்றோர் மதுரையைத் தமிழோடு இணைத்துப் பேசுதலை முற்றாக மறுக்க இயலாது. மூன்று சங்கங்கள் இருந்தன என்பதனை உறுதிப்படுத்திட முடியாவிட்டாலும், தொடர்ந்து மதுரையை ஆண்ட பாண்டியர்கள் தமிழ்ச் சங்கத்தைப் பேணி வந்தனர் என்று கொள்வது தவறாகாது.

1.3 அகத்தியரும் அகத்தியமும்

தமிழுலகில் நன்கு அறிமுகமான பெயர் அகத்தியர் என்பது. இவர் பற்றித் தமிழிலும் வடமொழியிலும் வழங்கும் புராணக் கதைகள் பல. இவர் பேராற்றல் கொண்ட முனிவராகவும், இலக்கியம், இலக்கணம், இசை, கூத்து, மருத்துவம், சோதிடம் உளவியல் முதலான பல்கலை வல்லுநராகவும் கருதப்படுகின்றார். இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும், சோதிட சாத்திரங்களும் வழங்குகின்றன. இவர் முத்தமிழுக்கும் இலக்கணமாக இயற்றியது அகத்தியம் என்பர். இதனைப் பேரகத்தியம் என்றும் கூறுவர். இதில் 12000 சூத்திரங்கள் இருந்தன என்பர்.

1.3.1 தமிழ் தந்த முனிவர் இவர் தமிழுக்குச் செய்த பெருந்தொண்டினைப் பாராட்டும் வகையில், கம்பர் பெருமான், தமிழ் என்னும் அளப்பரும் சலதி (கடல்) தந்தவன் என்றும், தழல்புரை சுடர்க்கடவுள் (சிவன்) தந்த தமிழ் தந்தான் என்றும் பாராட்டுகிறார். யாப்பருங்கலக் காரிகை, தேனார் கமழ் தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீர் அருவிக் கானார் மலையத்து அருந்தவன் சொன்ன கன்னித்தமிழ் என்று புகழ்கிறது. வீரசோழிய ஆசிரியர், அகத்தியன் புவனிக்கு இயம்பிய தண்டமிழ் என்று புகழ்ந்தார்.

அகத்தியரின் வருகை

அகத்தியர் சிவபெருமான் கட்டளைப்படி தமிழகம் வந்து பொதிகை மலையில் தங்கினார் என்று கந்தபுராணம் கூறுகிறது. அகத்தியர் கடல் கொண்ட குமரி நாட்டில் தோன்றியவர் என்பது ஓர் பழஞ்செய்தி. சிவபெருமான் பார்வதியை மணந்த நாளில் தேவரெல்லாம் ஒன்று கூடியமையால் வடமலை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது என்றும், நாவலந்தீவினைச் சமன் செய்வதன் பொருட்டே அகத்தியரைச் சிவபெருமான் இங்கு அனுப்பினார் என்றும் கந்தபுராணம் கூறுகிறது.

அகத்தியர் பற்றிய கதைகள்

அகத்தியர்க்குத் தமிழ் அறிவுறுத்தியவர் சிவன் என்றும், முருகன் என்றும் கதைகள் உண்டு. இவர் மகேந்திர மலையில் தங்கி ஆகமம் கேட்டார் என்றும் கூறுவர். இவர் பற்றி வழங்கும் கதைகள் மிகப்பல. இவர் விந்திய மலையின் ஆணவத்தை அடக்கினார்; வில்வலன், வாதாபி என்னும் அரக்கர்களை அழித்தார்; விதர்ப்ப மன்னன் மகள் உலோபா முத்திரையை மணந்து சித்தன் என்னும் மகனைப் பெற்றார்; இவர் கமண்டலத்து நீரே காவிரி ஆயிற்று. இப்படிப் பல கதைகள் உள்ளன.

சங்கப்புலவர்

இவர் முதற் சங்கத்திலும் இடைச் சங்கத்திலும் வீற்றிருந்தவர் என்றும், அவ்விரு சங்கத்திற்கும் அகத்தியமே இலக்கணம் என்றும் கூறுவர். இவர் பொதிகையில் தமிழ் வளர்த்தமை பற்றி வால்மீகியும் கம்பரும் பாராட்டுகின்றனர்.

அகத்தியரின் மாணாக்கர்

இவருக்குத் தொல்காப்பியர் உள்ளிட்ட பன்னிருவர் மாணாக்கர் என்பர். அவர்களில் சிலர் பெயர்கள் வருமாறு:

1. தொல்காப்பியர்

2. அதங்கோட்டாசான்

3. பனம்பாரனார்

4. அவிநயன்

5. காக்கைபாடினி

6. செம்பூண்சேய்

7. துராலிங்கன்

8. வையாபிகன்

9. கழாரம்பன்

10. நத்தத்தன்

1.3.2 அகத்தியச் சூத்திரங்கள் அகத்தியச் சூத்திரங்கள் என உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்டன பல உள்ளன. ஆனால், அவற்றின் நடையும், பொருளும் ஐயத்திற்கு இடமானவையாகும். இவை பிற்காலத்தவரால் இயற்றப்பட்டன என்பதில் ஐயம் இல்லை. எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் சூத்திரங்களைக் காணுங்கள்.

ஆலும் ஆனும் ஓடும் ஒடுவும்

சாலும் மூன்றாம் வேற்றுமைக்கு….

அகத்தியரின் மாணாக்கராகக் கருதப்படும் தொல்காப்பியர் ஒடு உருபை மட்டுமே மூன்றாவதன் உருபாகக் கூறினார். ஓடு என்ற வடிவத்தையோ ஆல் உருபையோ அவர் சொல்லவில்லை. சங்க இலக்கியத்தில் ஆல் உருபு இல்லை.

இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே

எள் இன்றாகில் எண்ணெயும் இன்றே

எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல

இலக்கியத்தினின்றும் எடுபடும் இலக்கணம்

இதில் உள்ள இலக்கியம் என்பது பிற்காலச் சொல். எள் என்ற வடிவம் சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும் இல்லை. மாறாக எண் என்றே உள்ளது.

இச்சான்றுகள் அகத்தியர் பெயரால் வழங்கும் சூத்திரங்கள் பிற்காலத்தவரால் இயற்றப்பட்டன என்பதனைக் காட்டும்.

1.4 தொல்காப்பியம்

இன்று கிட்டும் தமிழ் நூல்களுள் மிகத்தொன்மையானது தொல்காப்பியம் என்னும் பேரிலக்கணம். தமிழ்மொழியின் பெருமையையும், தமிழ் மக்களின் அறிவு மேம்பாட்டையும் உலகறியச் செய்யும் நூல் இது.

1.4.1 நூல் ஆசிரியர் தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர் எனப்படுகிறார். பல பெரும்புலவர்களின் வரலாறு சரிவர அறியப்படாதவாறு இவர் வரலாறும் அறியப்படவில்லை. தொன்மையான காப்பியக்குடி என்னும் ஊரினர் என்பதால் இப்பெயர் பெற்றார் என்பர் ஒரு சாரார். தஞ்சை மாவட்டத்தில் சீகாழிப்பகுதியில் உள்ள காப்பியக் குடியை மேற்கோள் காட்டுவர் ஒரு சாரார். காவிய கோத்திரத்தைச் சார்ந்த பிராமணராக இவரைக் கருதுவாரும் உண்டு. தொன்மையான தமிழ் மரபுகளைக் காக்கும் நூலை இயற்றியமையால் இவ்வாறு பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

இவர் திரணதூமாக்கினியார் என்ற இயற் பெயருடையார் என்றும் சமதக்கினி மாமுனிவரின் மகன் என்றும் நச்சினார்க்கினியர் கூறினார். இதற்கு எச்சான்றும் இல்லை. இவரை அகத்தியரின் மாணாக்கருள் ஒருவர் என்பர். இக்கருத்திற்கு, இவர் நூலில் எந்தச் சான்றும் இல்லை.

சிறப்புப் பாயிரம்

சூத்திர யாப்பில் அமைந்த தொல்காப்பியம் 1610 சூத்திரங்கள் அடங்கியது. இதற்குப் பனம்பாரனார் என்பார் எழுதிய சிறப்புப்பாயிரம் உள்ளது. தொல்காப்பியம் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில், அதங்கோட்டு ஆசான் முன்னிலையில் அரங்கேறியதாக இவர் கூறியுள்ளார். மேலும், தொல்காப்பியர் தமக்கு முன் தோன்றிய நூல்கள் பலவற்றையும் ஆய்ந்து வழக்கு, செய்யுள் ஆகிய இரண்டையும் தழுவி நூல் செய்தார் என்கின்றார். மேலும் ஆசிரியர் ஐந்திரத்தில் பெரும் பயிற்சியுள்ளவர் என்றும் கூறுகிறார். (ஐந்திரம் = ஒரு வடமொழி இலக்கண நூல்)

தொல்லாசிரியர் பலர்

தொல்காப்பியர் காலத்தும், அவர் காலத்திற்கு முன்னும் இலக்கண ஆசிரியர் பலர் வாழ்ந்தனர் என்று தொல்காப்பியத்தால் அறிகிறோம். ‘என்ப’, ‘என்மனார் புலவர்’, ‘யாப்பறி புலவர்’, ‘தொன்மொழிப் புலவர்’, ‘குறியறிந்தோர்’ என அத்தொல்லாசிரியர்களை இவ்வாசிரியர் சுட்டியுள்ளார்.

அவர்களின் நூல்கள் அழிவுற்றன. இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் தொல்காப்பியம் இலக்கணமாக இருந்தது என்கிறார் இறையனார் களவியல் உரையாசிரியர்.

தொல்காப்பியரின் காலம்

தொல்காப்பியரின் காலம் பற்றி அறிஞர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. மிகப்பலர் இவர் கி.மு. 5 அல்லது 3ஆம் நூற்றாண்டுக்குரியவர் என ஒப்புகின்றனர். பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை போன்ற சிலர், இவர் கி.பி.5ஆம் நூற்றாண்டினர் என்பர். பொருளதிகாரத்தின் சில பகுதிகள் தொல்காப்பியராலன்றிப் பிற்காலத்தாரால் இயற்றப்பட்டன என்ற கருத்தும் உண்டு. சங்க இலக்கியங்களில் தொல்காப்பியக் கருத்திற்கு மாறான வழக்காறுகள் உள்ளன. எனவே, தொல்காப்பியம் சங்க இலக்கியங்கட்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்ட நூலே என்பது மிகப்பலர்க்கு உடன்பாடான கருத்து.

1.4.2 நூலின் அமைப்பு இந்நூல் சூத்திர யாப்பில் அமைந்துள்ளது. இதில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒன்பது இயல்கள் அமைந்துள்ளன. அவ்வியல்களின் பெயர்களைக் கீழ்க் காணும் பட்டியலில் காணுங்கள்.

1.4.3 எழுத்ததிகாரச் செய்திகள் இதில் தமிழ் எழுத்துகளாகிய உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய முப்பதும், குறில் நெடில் என்றும், வல்லினம், மெல்லினம், இடையினம் என்றும் பாகுபடுத்தப்படும் செய்திகள் இடம்பெறுகின்றன. இவற்றுள் சொல்லின் முதலிலும் இறுதியிலும் வருபவை இன்னவை என்பதும் விளக்கப்பட்டுள்ளன.

தமிழ் ஒலிகள் பிறக்கும் பொது இயல்பும், தனித்தனி எழுத்துகளின் பிறப்பு முறையும் இன்றைய ஒலியியலாரும் வியக்கும் வண்ணம் விளக்கியுள்ளார் ஆசிரியர்; ஒலிவடிவத்தை மட்டுமல்லாது, வரிவடித்தையும் குறித்துள்ளார்; எகரமும், ஒகரமும், குற்றியலுகரமும் புள்ளி பெறும் என்கின்றார்.

இவ்வதிகாரத்தின் பெரும்பகுதி, சொற்கள் நிலைமொழியாகவும் வருமொழியாகவும் நின்று புணரும் நிலைகளையே விளக்கிச் செல்கிறது. புணர்ச்சியை வேற்றுமைப் புணர்ச்சி என்றும், வேற்றுமை அல்லாத புணர்ச்சி என்றும், இயல்புப் புணர்ச்சியென்றும், விகாரப்புணர்ச்சி என்றும் இவர் பாகுபாடு செய்து விளக்குகின்றார்.

இவ்வதிகாரத்தில் தொல்காப்பியர் பண்டு தமிழ்நாட்டில் வழங்கிய இசை இலக்கணத்தைக் குறிக்கிறார். அதனை, நரம்பின் மறை என்கின்றார்.

மாதங்களின் பெயர்களை இகர ஈற்றிலும், ஐகார ஈற்றிலும் மட்டுமே பேசுகின்றார். எனவே, இன்றைய மாதப் பெயர்கள் பழைமையானவை என்று கருத வேண்டியுள்ளது.

1.4.4 சொல்லதிகாரச் செய்திகள் தமிழ் இலக்கணத்தில் சிறப்பாக அமைந்த கூறுகளுள் திணைப்பாகுபாடும் ஒன்று. உயர்திணை அஃறிணை என்ற அடிப்படையிலே பெயர்கள் தோன்றுவதனை விளக்கி, இருதிணைக்கும் உரிய ஐந்து பால்களையும், அவற்றுக்கு உரிய பெயர், வினை ஆகியவற்றின் ஈறுகளையும் விளக்குகின்றார்.

தமிழ்த் தொடர்களின் இலக்கணம் இவ்வதிகாரத்தில் சிறப்பாக விளக்கப்படுகிறது. தொடர்களின் ஆக்கம், தொடரில் சொற்கள் நிற்கும் நிலை முதலியன விளக்கம் பெறுகின்றன.

வேற்றுமை உருபுகள், அவை ஏற்கும் பொருள்கள், ஒரு வேற்றுமைப் பொருளை இன்னொரு வேற்றுமையின் உருபு கொண்டு விளங்கும் வேற்றுமை மயக்கம், இருதிணைப் பெயர்களும் விளியேற்கும் மரபு, விளியை ஏற்காத பெயர்கள் முதலானவை தெளிவுறுத்தப்படுகின்றன.

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல் ஆகியவற்றின் பொது இலக்கணம், அவற்றின் பாகுபாடுகள், வினைமுற்று, வினைஎச்சம், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, பெயரெச்சம், வியங்கோள், எதிர்மறை முற்றுகள் ஆகியனவும், வேற்றுமைத் தொகை, உவமத் தொகை, வினைத்தொகை முதலான தொகைச் சொற்களின் இலக்கணமும், சொற்கள் பொருள் உணர்த்தும் முறையும், செய்யுளில் பயன்படும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நால்வகைச் சொற்களின் தன்மைகளும் கூறப்பட்டுள்ளன.

வடசொல் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் (66) என்பதன் மூலம், ஆசிரியர் பிறமொழிக்குரிய ஒலிகளைக் கடன் வாங்குவது தகாது என்ற மிகச் சிறந்த கருத்தை வலியுறுத்தக் காணலாம். வரம்பின்றி, வடமொழி ஒலிகளைக் கடன் பெற்ற ஏனைத் திராவிட மொழிகள் தமிழிலிருந்து பெரிதும் வேறுபட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

1.4.5 பொருளதிகாரச் செய்திகள் பொருள் இலக்கணம் தமிழுக்கே சிறப்பாக அமைந்தது. இது அகம், புறம் என்ற இரு பிரிவுகளுள் அடங்கும் இலக்கியங்களை உருவாக்கும் படைப்பாளன் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வகுத்துக் கூறுகின்றது. இது தமிழரின் கவிதை இயலாகும். அரிஸ்டாட்டிலின் கவிதை இயலோடு இதனை ஒப்பிடலாம்.

பொருளதிகாரம் கூறும் செய்திகளில் குறிப்பிடத்தக்கனவற்றை மட்டும் இங்கு விளக்குவோம். ஏழு அகத்திணைகளும், அவற்றின் கூறுகளும் அகத்திணை இயலுள் சொல்லப்படுகின்றன. அகத்திணை இலக்கியத்திற்கு ஏற்ற யாப்பாக, பரிபாடலும் கலியும் ஆசிரியரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அகத்திணை ஒவ்வொன்றுக்கும் புறமாக, ஒவ்வொரு புறத்திணை வகுத்துரைக்கப்பட்டுள்ளது. இம்மரபு பின்னர் மாறிவிட்டது. அகத்திணை ஏழு என்றும், புறத்திணை பன்னிரண்டு என்றும் பின்னாளில் கொள்ளப்பட்டன. புறத்திணை இயல் தமிழரின் போர் முறையை விவரிக்கிறது. இறந்துபட்ட மறவர்களுக்குக் கல்நட்டு வழிபாடு செய்யும் மரபினைத் தொல்காப்பிய ஆசிரியர் வெட்சித்திணையில் கூறியுள்ளார்.

அகவிலக்கியம் களவு, கற்பு என்ற இரு நிலைகளில் இயற்றப்படுகிறது. இவ்விரு ஒழுக்கங்களிலும் இடம் பெறும் மாந்தர், அவர்கள் பேசும் சூழல்கள் முதலியனவே களவியலிலும் கற்பியலிலும் விவரிக்கப்பட்டுள்ளன. கற்பு என்பது திருமணச் சடங்குடன் தொடங்குகின்றது. ஒரு காலத்தில் சடங்கு ஏதும் இன்றி ஆணும் பெண்ணும் இணைந்த வாழ்க்கை நிலை இருந்தமையை ஆசிரியர் குறிப்பாகக் கூறுவார். பெற்றோர் ஒத்துக் கொள்ளாதபோது காதலர் உடன்போய், சடங்குடன் திருமண வாழ்வில் புகுவது உண்டு என்றும் ஆசிரியர் கூறுகின்றார்.

கவிதைக்கலைக்கு அழகு தருவது அணிகளாகும். அணியிலக்கண நூல்கள் பல பிற்காலத்தில் தோன்றின. தொல்காப்பியர் அணிகளுக்கெல்லாம் தாயாகிய உவமையை மட்டும் ஓர் இயலில் விளக்குகின்றார். வினை, பயன், மெய், உரு என்னும் நான்கும் உவமையின் தோற்றத்திற்கு நிலைக்களங்கள் என்கிறார் ஆசிரியர்.

உள்ளத்தில் தோன்றும் இன்பம், துன்பம் முதலிய உணர்வுகள் உடம்பின் வாயிலாக வெளிப்படுகின்றன. அங்ஙனம் வெளிப்படுதலை மெய்ப்பாடு என்பர். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம் வெகுளி, உவகை, என அவை எட்டாகும். இவற்றையும் இவற்றுக்குரிய நிலைக்களன்களையும் ஓர் இயலில் விளக்குகின்றார். இது இயற்றமிழுக்கும், நாடகத் தமிழுக்கும் பொதுவானதாகும்.

பொருளதிகாரத்தில் அமைந்த செய்யுள் இயலும், மரபியலும் பழந்தமிழரின் அறிவு மேம்பாட்டிற்குச் சான்றாக அமைந்துள்ளன. வெண்பா, அகவல், வஞ்சி, கலி என்று நான்கு வகையான யாப்புகளை விளக்கும் ஆசிரியர், முதற்கண் மாத்திரை முதலாக 26 அகவுறுப்புகளைச் சொல்லி அம்மை, அழகு, தொன்மை, தோல் முதலான எட்டுவகைப் புற உறுப்புகளையும் சொல்லியுள்ளார்.

ஆசிரியர் பல்வேறு இலக்கிய வகைகளைக் குறிப்பிடுகிறார். அவற்றுள் அடி வரையில்லாதனவாக ஆறு உள்ளன. பிசி, அங்கதம், மந்திரம், முதுமொழி, வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ முதலிய செய்யுள் வகைகள் அன்று வளர்ச்சியுற்றிருந்தமை அறியப்படுகின்றது.

மரத்தையும், புல்லையும் ஆசிரியர் வேறுபடுத்திக் காட்டுவதும், உயிர்களை ஆறு வகையாக வகுத்துக் காட்டுவதும், ஆசிரியரின் நுண்ணிய அறிவியற் பார்வைக்குச் சான்றாகும்.

இவர் விலங்குகள், பறவைகள், செடி கொடிகள் முதலியவற்றோடு தொடர்புடைய மரபுகளையும், அரசர் அந்தணர் முதலான பிரிவினர்க்குரிய மரபுகளையும் மரபியலில் கூறியுள்ளார். இறுதியில், இலக்கியப் படைப்பாளி கையாள வேண்டிய 32 வகையான உத்திகளைத் தொகுத்துக் கூறியுள்ளார்.

இங்ஙனம், வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பகுத்து, அவற்றைப் பற்றிய இலக்கியப் படைப்பிற்கு வேண்டிய கூறுகளையெல்லாம் நிரல்படத் தொகுத்துக் கூறும் பேரிலக்கணத்தைப் படைத்த தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி எனப் போற்றப்படுவதில் வியப்பில்லை.

1.5 தொகுப்புரை

தமிழ்மொழி உலகத்திலுள்ள தொன்மையான மொழிகளில் ஒன்று; தொடக்க காலத்தில் மூன்று சங்கங்கள் நிறுவித் தமிழ் இலக்கியங்களை வளர்த்தமைக்குரிய சான்றுகள் பல உள்ளன.

தமிழ் தந்த முனிவராகக் கருதப்படும் அகத்தியரால் அகத்தியம் என்ற முத்தமிழ் இலக்கணநூல் இயற்றப்பட்டது என்பர். அவருக்குத் தொல்காப்பியர் உட்பட 12 மாணாக்கர் இருந்திருக்கின்றனர் என்ற கருத்து உள்ளது.

தமிழ் நூல்களுள் மிகவும் தொன்மையான இலக்கணம் தொல்காப்பியம். அதை இயற்றியவர் தொல்காப்பியர். அதில் எழுத்திற்கும், சொல்லிற்கும், பொருளுக்கும் உரிய இலக்கணங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

வாழ்க்கையை அகம், புறம் என்று பிரித்து, அவற்றைப் பற்றி இலக்கியம் படைப்பதற்கு இலக்கணம் வகுத்துள்ளது தொல்காப்பியம். தமிழ்மொழியின் சிறப்பினைப் பறைசாற்றும் ஓர் இலக்கண நூல் தொல்காப்பியம்.

பாடம் - 2

சங்க இலக்கியக் காலம்

2.0 பாட முன்னுரை

தமிழரின் பொற்காலம் எனக் கருதப்படுவது சங்க காலமாகும். இங்குக் குறிக்கப்படும் சங்கம் என்பது கடைச்சங்கமாகும். இக்காலத்தில் எழுந்த இலக்கியம் உலகின் பழைமையான இலக்கியச் செல்வத்தின் ஒரு பகுதியாக அமைகிறது. சமயச் சார்பற்ற உயர்ந்த இலக்கியமாக இது போற்றப்படுகிறது. இக்காலத்தில் தனித்தனிச் செய்யுட்களை இயற்றுவதே வழக்கமாக இருந்தது. அங்ஙனம் இயற்றப்பட்டவை பல்லாயிரக்கணக்காக இருந்திருக்க வேண்டும். அவற்றுள் அழிந்தவை போக இன்று எஞ்சியிருப்பவை 2381 செய்யுட்கள். இவை மூன்றடி முதல் 782 அடி வரை அமைந்தவை. இவற்றை இயற்றியோராக 473 புலவர்கள் அறியப்படுகின்றனர். பல பாடல்கட்கு ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. இவை அகம், புறம் என்ற இலக்கணக் கட்டுக்கோப்புடன் படைக்கப்பட்டவை. இவை மன்னர் பலர் முயற்சியாலும் அறிஞர்களின் உழைப்பாலும் தொகுத்துக் காக்கப்பட்டுள்ளன. பண்டைத் தமிழரின் அரசியல், சமூக, சமயப் பண்பாட்டு வரலாற்றினை வரைய விலைமதிப்பற்ற செல்வமாகப் பயன்படும் சங்க இலக்கியங்களின் சிறப்பை உணர்த்துவது இப்பாடம். இதில் சங்க காலம் பற்றியும், சங்கத் தொகைநூல்கள் உருவானமை பற்றியும், அத்தொகைகளில் இடம்பெறும் தனித் தனி நூல்களின் அமைப்பு, சிறப்பு ஆகியவை பற்றியும் கூறப்படும்.

2.1 சங்க காலம்

கடைச் சங்க காலத்தின் மேல் எல்லையைக் கி.மு.500 என்றும் கி.மு.300 என்றும் கூறுவார் உளர். கி.மு.800 என்ற கருத்தும் உண்டு. கி.பி.100-250, கி.பி.500, கி.பி.800 என்று கூறுவோரும் உளர். ஆனாலும் மிகப்பெரும்பான்மையோர் இக்காலத்தைக் கிறித்துநாதருக்குப் பின் வரும் முதல் மூன்று நூற்றாண்டுகட்கு உரியதாகக் கூறுகின்றனர். கி.பி.300 முதல் கி.பி.900 வரை தமிழகத்தில் ஆண்ட பல்லவர் பற்றிய ஒரு குறிப்பும் சங்க நூல்களில் இல்லை. எனவே, கி.பி.3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே சங்க காலம் என்பர். இதற்கு வலிமை சேர்க்க அகழ்வாராய்ச்சி முடிவுகளும், சங்க நூலில் இடம்பெறும் யவனர் பற்றிய குறிப்புகளும், தாலமி, பிளைனி முதலானோர் எழுத்துகளும்

அகழ்வாய்வில் கிடைத்த சங்ககாலப்பொருட்கள்

உதவுகின்றன. பாண்டிச்சேரிக்குப் பக்கத்தில், அரிக்கமேட்டிலும், பிற இடங்களிலும் செய்த அகழ்வாராய்ச்சிகளும், கண்டெடுத்த பானை ஓடுகளும், கிரேக்க உரோமர்களின் காசுகளும் பிறவும் சங்க இலக்கியக் குறிப்புகளோடு ஒத்துச் செல்கின்றன. எனவே கடைச்சங்க காலம் என்பது கி.பி. முதல் மூன்று நூற்றாண்டுகட்கு உட்பட்டது என்பதே சரியான முடிவாகத் தெரிகிறது.

2.1.1 தொகை நூல்கள் பழமையும் இலக்கிய வளமும் கொண்ட மொழிகளை உயர்தனிச் செம்மொழிகள் என்பர். கிரேக்கம், இலத்தீன், வடமொழி, எபிரேயம், சீனம் ஆகியவற்றோடு ஒத்த பழைமையுடைய தமிழும் இவ்வரிசையில் இடம் பெறுகிறது. மேற்சொன்ன பலமொழிகளிலும் செய்யுட்கள் தொகுக்கப்பட்டுத் தொகை நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழில் அவை தோன்றியதில் வியப்பில்லை.

சங்க காலத்தில் எண்ணற்ற தனிச் செய்யுட்கள் இயற்றப்பட்டிருக்க வேண்டும். அவற்றுள் பல கால வெள்ளத்தில் அழிந்தன. எஞ்சியவற்றையாவது காப்பாற்ற வேண்டுமென்ற உணர்ச்சி ஏற்பட்டமையால் கிடைத்தனவே இன்றுள்ள தொகைகள். இம்முயற்சியில் மன்னர்களும் அறிஞர்களும் ஈடுபட்டனர். அவர்களின் பெயர்கள் சில அறியப்படுகின்றன.

கிடைத்தவற்றுள் பெரும்பான்மையானவை அகவற்பாக்கள். கலி, பரிபாடல் என்னும் பாவகைகளில் இயற்றப்பட்ட செய்யுட்கள் குறைவாகவே இருந்தன. இவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை அகப்பாடல்கள். புறப்பாடல்கள் குறைவாகவே இருந்தன. இவற்றைத் தொகைப்படுத்தும் பொழுது அகத்தொகை, புறத்தொகை, இரண்டும் கலந்த தொகை என்ற அடிப்படையிடப்பட்டதாகத் தெரிகிறது. அகவலால் செய்த அகப்பாடல்கள் மிகுதியானமையால் செய்யுட்களின் அடிவரையினை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகள் உருவாக்கப்பட்டன. 4-8, 9-12, 13-31 என்று அடியளவு அமைந்தவை மூன்று தொகுதிகளாயின. ஐவர் பாடிய தனித்தனி நூறு செய்யுட்கள் கொண்ட 500 அகவற்பாக்கள் ஒரு தொகையாயிற்று. கலிப்பாவால் ஆன பாடல்கள் ஒரு தொகுதியாக உருவாக்கப்பட்டது. பரிபாட்டால் ஆனது ஒரு தொகுதியாயிற்று.

புறப்பாடல்களுள் பல குடியினரையும் பல பொதுவான கருத்துக்களையும் பற்றி அகவற்பாக்கள் ஒரு தொகுதியாக்கப்பட்டது. சேரர் பற்றி மட்டுமே கூறும் 100 பாடல்களை இன்னொரு தொகுதியாக்கினர்.

103 அடி முதல் 782 அடிவரை அமைந்த பத்து நீண்ட பாடல்கள் பத்துப்பாட்டு என்று ஒரே தொகுதியாக அமைந்தது.

இவ்வாறு தொகுக்கப்பட்டவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று வழங்கலாயின.

எட்டுத்தொகையுள் அடங்குவன எவை என்று கூறும் வெண்பா வருமாறு:

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம்என்று

இத்திறத்த எட்டுத்தொகை.

இவ்வாறே பத்துப்பாட்டுள் அடங்குவன பற்றியும் ஒரு வெண்பா கூறுகிறது. அது பின்வருமாறு:

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய

கோலநெடுநல் வாடைகோல் குறிஞ்சிப் பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து.

2.2 எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை நூல்கள் (1) அகம் சார்ந்தவை (2) புறம் சார்ந்தவை (3) இரண்டும் சார்ந்தவை என்று மூன்று வகையாக அமையும். அவற்றுள்,

அகம் சார்ந்தன

1.நற்றிணை

2.குறுந்தொகை

3.அகநானூறு

4.ஐங்குறுநூறு

5.கலித்தொகை

என்ற ஐந்துமாகும்.

புறம் சார்ந்தன

1.புறநானூறு

2.பதிற்றுப்பத்து

என்ற இரண்டுமாகும்.

அகமும் புறமும் கலந்தமைந்த தொகுதி

பரிபாடல் மட்டுமே.

இனி ஒவ்வொரு நூலின் அமைப்பும் சிறப்பும் பற்றிக் காண்போம்.

2.2.1 நற்றிணை அகநானூறு போல் மிக நீண்டனவாகவும் குறுந்தொகை போல் மிகச் சிறியனவாகவும் அமையாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட அளவினதான 400 அகவல்கள் நற்றிணை என்ற தொகுப்பில் உள்ளன. இதன் அடியளவு 9 முதல் 12 அடிகள். இதில் 110, 379 ஆம் எண்ணுள்ள பாடல்கள் ஆகிய இரண்டும் 13 அடிகள் கொண்டவை. இந்த நூலுக்கு அமைந்த திருமால் வணக்கப் பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியது.

நற்றிணையில் உள்ள பாடல்களை இயற்றிய புலவர்கள் நூற்று எழுபத்தைவர். 56 பாடல்களை இயற்றியோர் பெயர் தெரியவில்லை. இதனைத் தொகுத்த புலவர் பெயரும் தெரியவில்லை. தொகுத்தவன் பாண்டியன் பன்னாடு தந்த மாறன் வழுதி.

உண்மைக்காதல் பிறவிதொறும் தொடரும் என்பதனை,

சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவில்

பிறப்புப் பிறிதாகுவ தாயின்

மறக்குவென் கொல்என் காதலன் எனவே (397)

என்னும் அடிகள் காட்டுகின்றன.

செல்வக் குடும்பத்தில் பிறந்தவள் தலைவி. அவளை மணந்தவன் குடி வறுமையுற்றது. அந்நிலையிலும் தலைவி தன் செல்வத் தந்தையின் உதவியை எதிர்பாராமல், எளிய உணவை வேளை தவறி உண்டு வாழ்கிறாள்.

கொண்டகொழுநன் குடிவறன் உற்றெனக்

கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்

ஒழுகுநீர் நுணங்கு அறல்போலப்

பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே (110)

என்ற பகுதி இதனைக் காட்டுகிறது.

ஒருவனுக்கு உண்மையான செல்வம் என்பது, தன்னை நம்பியோரின் துன்பம் கண்டு மனம் நெகிழ்ந்து அவர்களின் துயர்துடைக்கும் கருணை உள்ளமே என்கின்றார் இன்னொரு புலவர்.

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின்

மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே (210)

பெரியோர் நன்கு ஆராய்ந்து ஒருவரோடு நட்புக் கொள்வர் என்றும், மாறாக நட்டபின்னர் அதன் பொருத்தத்தை ஆராயார் என்றும் ஒருவர் கூறுகின்றார். (32)

முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் (355)

என்ற நற்றிணைப் பகுதி ‘பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்’ என்ற திருக்குறளை நினைவூட்டக் காணலாம்.

ஏனைய சங்க நூல்கள் போன்றே இந்நூலும் தமிழர் பண்பாட்டின் விளக்கமாகவும், உவமைகள் நிரம்பிய உயர்ந்த இலக்கியச் செல்வமாகவும் விளங்குகின்றது.

2.2.2 குறுந்தொகை குறுகிய அடிகளால் ஆன 400 ஆசிரியப்பாக்களால் ஆன நூல் குறுந்தொகை ஆயிற்று. இதில் நாலடி முதல் எட்டடி வரை அமைந்த பாடல்கள் இடம் பெற்றன. இதனை இயற்றியோர் 205 புலவர்கள். இதற்குக் கடவுள் வாழ்த்தொன்று உண்டு. இதன் ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இது முருகவேள் வணக்கமாக அமைந்துள்ளது. இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ என்பவர். தொகுப்பித்தார் பெயர் தெரியவவில்லை. இதற்குப் பேராசிரியரும், நச்சினார்க் கினியரும் எழுதிய உரைகள் கிடைக்கவில்லை. இதன் 235 பாடல்கள் பல்வேறு உரையாசிரியர்களால் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன.

இயற்பெயரான் அன்றிச் சிறப்புப் பெயரால் அறியப்பட்ட புலவர் பலர் இதில் இடம் பெறுவர். அணிலாடு முன்றிலார், குப்பைக்கோழியார், விட்ட குதிரையார் என்பவை அவற்றுள் சில. தாம் பாடிய பாடல்களில் இடம் பெற்ற அழகிய தொடரே இப்பெயர்களுக்கு அடிப்படையாக அமைந்தது.

காதல் வாழ்வின் பல்வேறு சிறப்புகளும் இந்நூலில் சுவைபடக் கூறப்பட்டுள்ளன.

இம்மை மாறி மறுமை ஆயினும்

நீயாகியர் என் கணவனை

யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே (49)

(இம்மை = இப்பிறவி ; மறுமை = அடுத்து வரும் பிறவி; நெஞ்சுநேர்பவள் = மனம் கவர்ந்தவள்)

என்ற பகுதி, காதலின் அமரத் தன்மைக்குச் சான்றாகும்.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே (3)

என்ற பகுதியால் காதலின் ஆழமும், விரிவும், உயர்ச்சியும் உணர்த்தப்படுகின்றன.

ஒரு பெண், ஊரார் பேசும் பழிச் சொல்லால் தன் உள்ளம் நைவதற்கு உவமையாக, யானையால் மிதிக்கப்பட்ட நன்கு முதிர்ந்த அத்திப் பழத்தைக் குறிப்பிடுகிறாள். (24)

மற்றொரு தலைவி தனக்கும் ஆகாது, தன் காதலனுக்கும் பயன்படாது வீணாகும் தன் பெண்மை நலத்துக்கு, கன்றும் உண்ணாமல், கலத்திலும் (பாத்திரத்திலும்) கறக்கப்படாமல், மண்ணில் வீழ்ந்து பாழாகும் நல்ல ஆவின் பாலை உவமை கூறுகின்றாள் (27). தாய்வழியிலும் தந்தை வழியிலும் உறவினராகாத ஓர் ஆணும் பெண்ணும் அன்பினால் ஒன்றுபடுதலுக்குச் செம்மண் நிலத்திலே பெய்த மழையை உவமை கூறினார் ஒரு புலவர். அவரே செம்புலப்பெயல் நீரார். அவரது இறவா வரிகள்:

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே (40)

(புலம் = நிலம்)

தன் காதலனாகிய கடுவனை இழந்த பெண் குரங்கு, தன் இளங்குட்டியைத் தன் இனத்திடம் விட்டு, மலையிலிருந்து வீழ்ந்து உயிர் துறத்தலை ஒரு புலவர் காட்டுகின்றார்.

ஆடவனுக்குக் கடமையே உயிராக, வீட்டிலிருந்து இல்லறம் செய்யும் பெண்களுக்குத் தம் ஆடவரே உயிர் என்பதை ஒரு செய்யுள்,

வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல்

மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் (135)

என்று கூறுகிறது.

2.2.3 ஐங்குறுநூறு இந்த நூலில் உள்ள பாடல்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளும் உயர்ந்த அளவாக ஆறு அடிகளும் கொண்டவை. இந்நூல் 500 குறும்பாடல்களால் ஆனது. ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் பாடியுள்ளனர். ஒவ்வொரு நூறும் பத்துப் பத்துக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பத்தும் ஒரு பெயர் பெறுவது சிறப்பு. கருப்பொருள், உரிப்பொருள், பேசும் பாத்திரம், கேட்கும் பாத்திரம் முதலியவற்றுள் ஒன்று அப்பெயர்க்கு அடிப்படையாக அமையும்.

இதற்கும் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து இயற்றியுள்ளார். இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார். தொகுப்பித்தவர் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவர். இதன் 129, 130 ஆம் செய்யுட்கள் கிட்டவில்லை.

இதில் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற முறையில் திணைகள் கோக்கப்பட்டுள்ளன. இதற்குச் சுருக்கமான பழைய உரை கிடைத்துள்ளது.

இதனை இயற்றியோர் பற்றிய விவரம் வருமாறு:

மருதம் – ஓரம்போகியார்

நெய்தல் – அம்மூவனார்

குறிஞ்சி – கபிலர்

பாலை – ஓதலாந்தையார்

முல்லை – பேயனார்

இதில் பல புதுமைகள் உண்டு. இதில் தொண்டிப்பத்து என்னும் பகுதி அந்தாதியாகவுள்ளது. மேலும் இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என்ற கிளவிகளும் தொடர்ச்சியாக உள்ளன. இதில் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதி. அவ்வாறே புதிய கிளவிகளும் பலவாக அமைந்துள்ளன.

ஒரு குறிப்பிட்ட அரசனை வாழ்த்திப் பாடும் போக்கை இந்நூலில் மட்டுமே காண முடியும். ‘வாழி ஆதன் வாழி அவினி!’ என்ற அடி பாடல்தோறும் இடம் பெறலை வேட்கைப் பத்தில் காண்க.

நாட்டில் பசியும் பிணியும், வறுமையும், அறமற்ற செயல்களும் இல்லாது ஒழியவும், அன்பும் அறமும், ஒழுக்கமும், செல்வ வளமும் பெருகவேண்டும் என வேண்டும் பெண்களை இந்நூலிலன்றி வேறெதிலும் காண முடியாது.

தன் கணவன் ஊரில், பாலை நிலத்தில் உள்ள கிணற்றடியில் கிடக்கும் அழுகல் நீர், தன் தாய் வீட்டில் தான் உண்ட தேன்கலந்த பாலை விட இனிமையாகக் கருதும் பெண்ணைக் கபிலர் அறிமுகப்படுத்துகின்றார். (203)

2.2.4 அகநானூறு இது 13 அடிச் சிற்றெல்லையும் 31 அடிப்பேரெல்லையும் உடைய 400 பாடல்களைக் கொண்டது. ஆசிரியப்பா யாப்புடையது. பாரதம் பாடிய பெருந்தேவனார் இதற்கு வாழ்த்துப் பாடியுள்ளார். அது சிவ வணக்கப் பாடலாகும். இதற்கு நெடுந்தொகை என்ற பெயரும் உண்டு. இது களிற்று யானை நிரை (1-120) மணிமிடை பவளம் (121-300) நித்திலக்கோவை (301 – 400) என்று மூன்று தொகுதிகளாக உள்ளது. தொகுப்பு முறையில் இது ஏனையவற்றை விட வேறுபட்டுள்ளது. பாட்டின் எண் கொண்டு அதன் திணையைச் சொல்லும் வகையில் இவை கோக்கப்பட்டுள்ளன. ஒற்றைப்படை எண் கொண்ட 200 செய்யுட்கள் பாலைக்கு உரியன. 2, 8 என்ற எண்களில் முடிவன குறிஞ்சிக்குரியன. 4 என்ற எண்ணில் முடிவன முல்லைக்கும், 6 என்ற எண்ணில் முடிவன மருதத்திற்கும், 10, 20 என்றவாறு முடிவன நெய்தலுக்கும் உரியன. மதுரை உப்பூரிகுடி கிழாரைக் கொண்டு இதனைத் தொகுப்பித்தவன் உக்கிரப்பெருவழுதி என்பர். இதில் 175 புலவர்களின் செய்யுட்கள் உள்ளன. மூன்று பாடல்கட்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

அரசியல், சமூக வரலாறுகள்

அகநானூறு பண்டைத் தமிழரின் அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும் அறியப் பெருந்துணை செய்யவல்லது. மூவேந்தர் பலர் பற்றியும் குறுநில மன்னர் பலர் பற்றியும் இது பதிவு செய்துள்ளது. வெண்ணிப் போர், ஆலங்கானத்துப் போர் முதலான பெரும்போர்கள் உவமை வாயிலாக விளக்கப்பட்டுள்ளன. யவனரின் கப்பல்கள் முசிறித் துறை முகத்திற்குப் பொன்னொடு வந்து, மிளகொடு திரும்பியதாக ஒரு செய்யுள் குறிப்பிட்டுள்ளது (149). ஒரு கன்னிப் பெண்ணின் மனத்தைக் கவர்ந்து, ‘அவளைத் தெரியாது’ என்று வாதிட்ட அறம் அற்ற ஒருவனுக்குக் கள்ளுர் அவையினர் தண்டனையளித்த செய்தியும் (256) அகநானூற்றில் காணப்படுகிறது.

வெண்ணிப்போரில் புண்பட்ட பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து மாண்ட செய்தி கேட்டுச் சான்றோர் பலர் மாண்ட செய்தியும் (58) பேசப்படுகின்றது. குடவோலை முறையில் அவை (கிராம சபை) உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டதை 77 ஆம் பாட்டால் அறியலாம். மக்களின் அன்றாட வாழ்வு பற்றியும், பழக்க வழக்கங்கள் பற்றியும் அரிய செய்திகள் இதில் உள்ளன. சிலவற்றை மட்டும் இங்குக் குறிப்போம்.

மக்கட்பேற்றின் சிறப்பினை,

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

மறுமை உலகமும் மறுவின்று எய்துப

செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்

சிறுவர்ப் பயந்த செம்மலோர் (66)

(இம்மை = இப்பிறவி; இசை = புகழ்; மறுமை உலகம் = வான் உலகம்; மறு = குறை; எய்துப = அடைவார்கள்; செறுநர் = பகைவர்; செயிர்தீர் = குற்றமற்ற; பயந்த = பெற்ற; செம்மலோர் = உயர்ந்தோர்)

என்று ஒரு புலவர் குறிக்கின்றார்.

தமிழர் திருமணமுறை பற்றி இந்நூலின் 86, 136 ஆகிய செய்யுட்கள் விரிவாகக் கூறுகின்றன.

இசை

இந்நூலின் 82, 111, 352, 301 ஆகிய பாடல்கள் பண்டைத் தமிழிசையைப் பற்றி அறிய உதவுகின்றன. 352ஆம் செய்யுள் இசை இலக்கணத்தைக் குறிப்பிடுகின்றது.

இதிகாசச் செய்திகள்

சேதுக்கரையில் ஓர் ஆல மரத்தடியில், கடல் கடந்து இலங்கைக்குச் செல்வது பற்றிய ஆலோசனையில் இராமன் ஆழ்ந்திருந்த போது, ஆலமரத்திலிருந்து பறவைகள் ஒலி எழுப்பி இடையூறு செய்தன. அப்போது இராமன் தலைநிமிர்ந்து பார்த்த பார்வையில் அவை ஒலி அடங்கின. தலைவியின் திருமணச் செய்தி அறிந்த அலர்தூற்றுவோர் அடங்கிப் போயினர் என்பதை உணர்த்தத் தோழி இராமனது நிகழ்ச்சியை எடுத்துக் கூறுகிறாள். கம்பர் காப்பியத்தில் கூட இல்லாத இச்செய்தியை அகநானூறு (70) கூறுகிறது. கண்ணபிரான் கோபியர் தழை உடுத்திக் கொள்ளுதற்கு ஏற்ப மரத்தின் கிளையை மிதித்த செய்தி ஒருபாட்டில் காணப்படுகிறது. (59)

2.2.5 கலித்தொகை கலிப்பா என்னும் பாவகையால் யாக்கப்பட்ட 150 பாடல்கள் கொண்டது இந்நூல். அகப்பொருளைப் பாட ஏற்ற யாப்பாகத் தொல்காப்பியரால் சொல்லப்பட்டவை கலியும் பரிபாடலும் என்பது நினையத்தக்கது.

பிற்காலத்து வெண்பாவொன்று, இதிலுள்ள ஐந்திணைகளையும் பாடிய புலவர்களைக் குறிப்பிடுகின்றது. இதன்படி, பாடியோரும் அவர் பாடிய திணையும் பின்வருமாறு அமையும்.

பாலை – பாலை பாடிய பெருங்கடுங்கோ

குறிஞ்சி – கபிலர்

மருதம் – மருதன் இளநாகனார்

முல்லை – சோழன் நல்லுருத்திரன்

நெய்தல் – நல்லந்துவனார்

நல்லந்துவனார் இந்நூலைத் தொகுத்தவர் ஆவார். நூல் முழுவதனையும் ஒரு புலவரே பாடியிருக்க வேண்டும் என்ற கருத்தும் உண்டு.

காதல் வாழ்வின் நுட்பங்களை மிக அழகாகக் கூறுவது கலித்தொகை. இதன் உவமைகள் அழகு மிக்கன; ஓசை இனிமை மிக்கது; எண்ணங்கள் மிக உயர்ந்தன.

இருக்கின்ற ஒரே ஆடையைப் பகுத்து உடுத்து வாழும் கொடிய வறுமை நிலையிலும், மனம் ஒன்றி வாழும் வாழ்க்கையே சிறந்த இல்லற வாழ்க்கை என்பதை ஒரு புலவர் பின்வருமாறு பாடுகிறார்.

ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை ! (18)

காதலன் துன்பத்தில் பங்கு ஏற்றலைவிடக் காதலிக்குப் பெரிய இன்பம் இல்லை என்கிறாள் ஒரு தலைவி.

அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு

துன்பம் துணையாக நாடின் அதுவல்லது

இன்பமும் உண்டோ எமக்கு? (6)

(அன்பற = அன்பு நீங்க; சூழாதே = கருதாமல்; ஆற்றிடை =வழியில்; நாடின் = சிந்தித்தால்)

மனத்தில் வருத்தம் உண்டாகும்படி பிரிந்து செல்வதைப் பற்றி எண்ணாமல் உன்னுடன் வந்து வழியில் ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதைவிட வேறு இன்பம் எங்களுக்கு உண்டா? என்பது பொருள்.

கலித்தொகையில் மதுரையும், வையையும் மீண்டும் மீண்டும் புகழப்படுகின்றன. பாண்டியனும் பல பாடல்களில் புகழப்படுகிறான். இதில் இராமாயணக் கதை நிகழ்வுகளும், பாரதக் கதை நிகழ்வுகளும் உவமைகளாக ஆளப்பட்டுள்ளன. ஆயர்கள் ஏறுதழுவிப் பெண்ணை மணத்தல் இந்நூலில் மட்டுமே காணப்படுகிறது. கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் இந்நூலில் மட்டுமே காணப்படுகின்றன.

2.2.6 புறநானூறு புறப்பொருள் பற்றிய 400 அகவற்பாக்களைக் கொண்டது புறநானூறு. இதனைத் தொகுத்தாரும், தொகுப்பித்தாரும் யாவர் எனத் தெரியவில்லை. 267, 268 ஆகிய இரு செய்யுட்களும் அழிந்தன. 266 ஆம் செய்யுட்குப் பின்னர் வரும் செய்யுள்களில் சிதைவுகள் உள்ளன. இதற்கு வணக்கச் செய்யுள் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். அது சிவ வணக்கமாகும். இதற்கு 266 செய்யுட்கள் வரையில் பழைய உரை உண்டு. இதனை இயற்றியோர் 157 பேர் என்பர். பல பாடல்களை இயற்றியோர் பெயர் தெரியவில்லை. (16 செய்யுட்கள்) இதனை நமக்குத் தேடித் தந்தவர் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயராவார்.

தமிழரின் பொற்கால நாகரிகத்தை நாம் அறிந்து போற்றத் துணை நிற்கும் அரும்பெரும் பெட்டகம் புறநானூறு. தமிழகத்தின் அரசியல், சமூகநிலை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கலைச்சிறப்பு, வானியல் முதலிய அறிவுத் துறைகளில் பெற்றிருந்த வளர்ச்சி ஆகியவற்றை இந்நூல் நிழற்படம் போல் தெரிவிக்க வல்லதாகும்.

சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடைய மூவேந்தர்கள், பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி என்னும் கடையெழு வள்ளல்கள் முதலிய பலருடைய போர் வெற்றிகள், கொடைவண்மை ஆகியவற்றை இந்நூல் விளக்கமாகத் தருகின்றது. மன்னர் சிலர்க்கும், புலவர் பெருமக்கட்கும் இடையே நிலவிய வியத்தகு நட்புறவும், புலவர்களின் தன்மான வாழ்வும் உலகம் வியக்கும் தன்மை உடையனவாகும்.

கணவனை இழந்த பெண்டிர் தம் கூந்தலையும், வளையலையும், பிற அணிகளையும் களைதல், உடன்கட்டை ஏறி உயிர்விடல், இறந்தாரைத் தாழியில் இட்டுப் புதைத்தல், தீ மூட்டி எரித்தல், வீரர்கட்கு நடுகல் நட்டு வழிபடல், நோய் கொண்டு இறந்த அரச குடும்பத்தார் உடலை வாளால் கீறிப் புதைத்தல், கணவனை இழந்த பெண்டிர் கைம்மை நோன்பு மேற்கொள்ளுதல் முதலான தமிழர் பண்பாட்டு நிலைகளை இந்நூல் காட்டி நிற்கின்றது.

தமிழர் கையாண்ட இசைக்கருவிகளைப்பற்றியும், இருபத்தொரு இசைத் துறைகளை பற்றியும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழர் வானியல் அறிவில் மேம்பட்டிருந்தனர் என்பது பற்றியும் இந்நூலிலிருந்து அறியலாம்.

மானம் அழிய வந்த பொழுது, வடக்கு நோக்கியிருந்து இறத்தலையும் (219) பகைவர்க்கு முன்னறிவிப்புச் செய்து படையெடுத்தலும் (9) அக்கால மரபுகளாம்.

உலகம் உள்ள அளவும் நிலைத்திருக்கத்தக்க உயர்ந்த அறநெறிகளின் அரங்கமாக இந்நூல் விளங்குகின்றது.

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (18)

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்போம் எனினே தப்புந பலவே (189)

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே (187)

நெல்லும் உயிர்அன்றே நீரும் உயிர்அன்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் (186)

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா (192)

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின் (195)

அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (55)

என்பவை அவற்றுள் சிலவாகும்.

2.2.7 பதிற்றுப் பத்து பத்துச் சேர மன்னர்கள் பற்றிப் பத்துப் புலவர்கள் தலைக்குப் பத்துச் செய்யுள் வீதம் பாடிய 100 செய்யுட்களின் தொகுப்பு இது. இதன் முதற்பத்தும், இறுதிப்பத்தும் அழிவுற்றன. எஞ்சியவை 80 செய்யுட்களே. இதனைத் தொகுத்தார் தொகுப்பித்தார் இன்னார் எனத் தெரியவில்லை. இதற்குப் பழைய உரையொன்று உண்டு.

இந்நூலின் ஒவ்வொரு பத்துக்கும் ஒவ்வொரு பதிகம் உண்டு. அதன் முற்பகுதி செய்யுளாகவும் பிற்பகுதி உரைநடையாகவும் உள்ளன. இது, பாடிய புலவர், பாடப்பட்ட மன்னன், அவன் பெற்றோர், செய்த அருஞ்செயல்கள், ஆண்ட கால அளவு, பாட்டுகளின் பெயர்கள், புலவர் பெற்ற பரிசில் முதலிய அரிய செய்திகளைத் தருகின்றது.

இந்நூலிற் காணும் பத்துக்களை இயற்றியோர் பெயரும், பாடல் பெற்ற மன்னர் பெயரும் பின்வரும் அட்டவணை வழி அறிக.

பத்தின் பெயர்                               பாட்டுடைத் தலைவன்                                            பாடிய     புலவர்

முதற் பத்து                                                    -                                                                                             -

இரண்டாம் பத்து                                  இமயவரம்பன்                                               குமட்டூர்க் கண்ணனார்

நெடுஞ்சேரலாதன்

மூன்றாம் பத்து                                 பல்யானைச்

செல்கெழுகுட்டுவன்                                                                       பாலைக்

கௌதமனார்

நான்காம் பத்து                                   களங்காய்க்

கண்ணிநார்முடிச்சேரல்                                                               காப்பியாற்றுக்

காப்பியனார்

ஐந்தாம் பத்து                                  கடல்பிறக்கோட்டிய

செங்குட்டுவன்                                                                                                பரணர்

ஆறாம் பத்து                                ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்                                            காக்கை பாடினியார்

நச்செள்ளையார்

ஏழாம் பத்து                                          செல்வக் கடுங்கோ

வாழியாதன்                                                                                          கபிலர்

எட்டாம் பத்து                           தகடூர் எறிந்த பெருஞ்சேரல்

இரும்பொறை                                                                                             அரிசில் கிழார்

ஒன்பதாம் பத்து                              இளஞ்சேரல் இரும்பொறை                                        பெருங்குன்றூர் கிழார்

பத்தாம் பத்து                                                         -                                                                                                              -

இந்நூலில் உள்ள ஒவ்வொரு செய்யுட்கும், அதிலுள்ள ஒரு அழகிய தொடரால் தலைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அருவியாம்பல், தசும்பு துளங்கு இருக்கை, பிறழ நோக்கு இயவர் என்பன அவற்றுள் சில.

ஒவ்வொரு பாட்டுக்கும் திணை, துறை, வண்ணம், தூக்கு என்பன காணப்படுகின்றன. இவை இசையுடன் பாடப்பட்டன போலும். இதன் நான்காம்பத்து அந்தாதித் தொடையால் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேர வேந்தர்களின் வீரமும் கொடையும், அவர்தம் தேவியரின் அழகும், சிறப்பும், கற்பு மேம்பாடும் இப்பாடல்களில் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

பந்தர், கொடுமணம் என்ற இரண்டு ஊர்களின் செல்வ வளமும் இவ்விடங்களில் சேரரின் பண்டக சாலைகள் இருந்தமையும் அறியத் தக்கன. அண்மையில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள் இப்பகுதிகளின் பண்டைப் பெருமையைக் காட்டவல்லன.

நன்மக்கள் வேண்டி வேள்வி செய்தல் உண்டு என்பதனை இந்நூலால் அறிகின்றோம். அந்தணரின் ஆறு கடமைகள் இன்னின்னவென்று ஒரு செய்யுள் (24) கூறுகின்றது. அறநெறிப்படி ஆளப்படும் அரசுக்குத் தடையாக அமைவன இன்னவை என இந்நூல் கூறுகின்றது. அதனைக் காண்க:-

சினனே காமம் கழிகண்ணோட்டம்

அச்சம் பொய்ச்சொல் அன்புமிக உடைமை

தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து

அறம் தெரி திகிரிக்கு வழியடையாகும் (22)

(சினன் = கடுங்கோபம்; கழிகண்ணோட்டம் = அளவுக்கு விஞ்சிய அருள்; தெறல் கடுமை = மிகக் கடுமையாகத் தண்டித்தல்; திகிரி = சக்கரம்)

2.2.8 பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் அகமும், புறமும் கலந்து அமைந்த நூல் பரிபாடலாகும். பரிபாடல் என்பது யாப்பு வகையால் பெற்ற பெயர். இதில், திருமால், முருகன், கொற்றவை என்ற தெய்வங்கள் பற்றியும், மதுரை நகர் பற்றியும், வையையாறு பற்றியும் புகழ்ந்து பேசும் எழுபது பாடல்கள் இருந்தன. அழிந்தவை போக இப்போது 22 பாடல்களும் சில சிதைந்த உறுப்புகளுமே எஞ்சியுள்ளன. புறத்திரட்டிலிருந்து வேறு இரு பாடல்கள் கிடைத்துள்ளன.

இந்நூலைத் தொகுத்தார் தொகுப்பித்தார் பற்றிய விவரம் கிடைக்கவில்லை. இதிலுள்ள பாடல்களை இயற்றியோர் பதின்மூவர். இவற்றுக்கு இசை வல்லுநர்களைக் கொண்டு பண் வகுக்கப்பட்டுள்ளன. பாடலாசிரியர் பெயருடன், இசை வகுத்தவர் பெயரும், பண்ணின் பெயரும் ஒவ்வொரு பாடலுக்கும் கீழ் தரப்பட்டுள்ளன. கண்ணகனார் முதல் மருத்துவன் நல்லச்சுதனார் ஈறாகப் பத்து இசையறிஞர்கள் பண் வகுத்துள்ளனர்.

இதில் திருமால் பற்றியனவும், முருகன் பற்றியனவுமான புராணச் செய்திகள் மிகுதி. மேலும், புதிய இலக்கணக் கூறுகளும், புதிய சொல்லாட்சியும், வடசொற் கலப்பும் மிகுந்து காணப்படுகின்றன.

முருகப் பெருமானுக்கும் திருமாலுக்கும் தொடர்புடைய புராணச் செய்திகளும், வையையில் நீராடுவாரின் பல்வேறு செயற்பாடுகளும் சுவையுடன் இதில் கூறப்பட்டுள்ளன. இசை, கூத்து ஆகிய கலைகள் பற்றிய நுட்பமான செய்திகள் இதில் உண்டு. திருப்பரங்குன்றத்தில் ஓவிய மண்டபம் இருந்த செய்தியை அறியலாம்.

பிற உயிர்களைக் கொல்வோர், வெகுளி உடையோர், அறநெறியைப் பின்பற்றாதார், கூடா ஒழுக்கம் கொண்டோர், மறுமையை நம்பாதோர் ஆகியோர் முருகன் அருள் பெற மாட்டார்கள் என்று ஒரு பாட்டுக் கூறுகின்றது. (5 : 73-77)

முருகப்பெருமானிடம் பொன்னும் பொருளும் போகமும் வேண்டாமல், அருளும் அன்பும் அறனும் வேண்டும் அன்பர்களையும் இந்நூலில் காணலாம்.

- யாம் இரப்பைவ

பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்

அருளும் அன்பும் அறனும் மூன்றும்

உருள் இணர்க் கடம்பின் ஒலிதாரோயே (5 : 78-81)

2.3 பத்துப்பாட்டு நூல்கள்

திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது. இதனைப் பாட்டு என்றே வழங்கலும் உண்டு.

பத்துப்பாட்டுள் அடங்கிய நூல்கள் இன்னவை எனக் கூறும் பழைய வெண்பா ஒன்றுண்டு. அது வருமாறு:-

முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி – மருஇனிய

கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து.

இவ்வெண்பாவின் படி, அந்நூல்கள்

1.திருமுருகாற்றுப் படை

2.பொருநராற்றுப் படை

3.சிறுபாணாற்றுப் படை

4.பெரும்பாணாற்றுப் படை

5.முல்லைப்பாட்டு

6.மதுரைக் காஞ்சி

7.நெடுநல்வாடை

8.குறிஞ்சிப் பாட்டு

9.பட்டினப்பாலை

10.மலைபடுகடாம்

என்பனவாகும்.

பத்துப்பாட்டு என்னும் பெயர் வழக்கு இடைக்காலத்தில் தோன்றியது. கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுக்குரிய பன்னிருபாட்டியல் எனும் இலக்கண நூல் பத்துப்பாட்டிற்கு இலக்கணம் கூறிற்று. கி.பி.15ஆம் நூற்றாண்டினரான மயிலை நாதர் (நன்னூல் எனும் இலக்கணத்துக்கு உரை எழுதியவர்) பத்துப்பாட்டு என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.

பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு 103 அடிகளைக் கொண்டது. மிக நீண்டது 782 அடிகளைக் கொண்டது. இனி, பத்துப்பாட்டிலுள்ள நூல்களின் வகைப்பாட்டையும் ஒவ்வொரு வகையிலும் உள்ள செய்யுட்களின் தனித் தனியான சிறப்புகளையும் காணலாம்.

நூல்களின் வகைப்பாடு

பத்துப்பாட்டில் உள்ள செய்யுட்களும் எட்டுத்தொகையில் உள்ள நூல்களைப் போலவே அகம், புறம் என்ற இரு பிரிவுகளில் அடங்கும்.

முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, நெடுநல்வாடை என்ற நான்கும் அகப்பொருள் நூல்களாகும்.

திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, பொருநராற்றுப் படை, மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை, மதுரைக் காஞ்சி ஆகிய ஆறும் புறப்பொருள் பற்றியன. இவ்வாறனுள்ளும் முதல் ஐந்தும் ஆற்றுப்படை என்ற பிரிவில் அடங்கும். இறுதியானது நிலையாமை பற்றிக் கூறும் காஞ்சித்திணையின் பாற்படுவதாகும்.

இனி ஒவ்வொரு பிரிவிலும் அமைந்த தனித்தனி நூல்கள் பற்றிக் காண்போம்.

2.3.1 முல்லைப் பாட்டு பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன. இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார். இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.

முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது. கார்ப்பருவம் வருவதற்குமுன் திரும்புவதாக வாக்குறுதி தந்து போர்க்கடமை ஆற்றச் சென்ற தலைவன் வரும் வரையில், பிரிவுத் துயரைத் தாங்கி, இல்லறம் காக்கும் மனைவியின் ஒழுக்கம் பேசுவதே முல்லைத்திணை.

இப்பாட்டில், தலைவன் பிரிந்துபோய்ப் பாசறையில் இருக்கிறான். தலைவி அரண்மனையில் இருக்கின்றாள். கார்காலம் வருகிறது. தலைவன் வாராமை கண்டு அவள் வருந்துகின்றாள். அரண்மனையில் அவளுக்குத் துணையாகவுள்ள முதிய பெண்டிர், தலைவன் வெற்றியோடு திரும்பி வருவான் என உறுதி கூறித் தேற்றுகின்றனர். அப்பொழுது தலைவனும் திரும்புகின்றான். இதனை, பாணர், கூத்தர் முதலிய வாயில்கள் தம்முள் கூறிக் கொள்வதாக இப்பாட்டுப் புனையப்பட்டுள்ளது.

இப்பாட்டில், தமிழர்களின் பாசறை அமைப்பும், அதில் மகளிர் கச்சணிந்தும், வாள் ஏந்தியும் நின்று பணியாற்றல், கவசம் பூண்ட யவன வீரர்கள் காவல் புரிவது, பாவை விளக்கு எரிதல், கன்னல் என்னும் கருவியால் நாழிகை கணக்கிடுதல் முதலிய செய்திகள் அழகுறக் கூறப்பட்டுள்ளன.

அரசன் வெற்றியோடு திரும்பி வரும் முல்லை நிலத்தில் பல்வேறு மலர்களும் மலர்ந்து மணம் பரப்பி நிற்றலை, நப்பூதனார் பாடும் அழகே அழகு!

2.3.2 குறிஞ்சிப் பாட்டு இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும். குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று. பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு. இது அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. காதல் நோயால் அவதியுறும் தலைவியின் மேனி வேறுபாடுகளைக் கண்ட அன்னை, கடவுளர்க்குப் பூசைகள் நிகழ்த்தியும், நிமித்திகர்களைக் கலந்தும் (சோதிடர்கள்) துயர் உறுவது கண்ட தோழி, தலைவியின் துயருக்கு, அவள் ஒரு மலைநிலத் தலைவனிடம் கொண்ட காதலே காரணம் என்று வெளிப்படக் கூறும் வகையில் இப்பாட்டு இயற்றப்பட்டுள்ளது. ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழ் அகத்திணைச் சிறப்பைக் கூறும் நோக்கத்தில் குறிஞ்சிக் கபிலர் இயற்றியது இச்செய்யுள் என்பர் அறிஞர். அருவியில் நீராடிய பெண்கள் பறித்து, பாசறையில் குவித்துச் சூடி மகிழ்ந்த 99 வகையான மலர்கள் பற்றிய வருணனை, கபிலரின் இயற்கையீடுபாட்டுக்குச் சான்றாகும்.

மிளகு உதிர்ந்து பரவிக் கிடக்கும் பாசறையிடையே காணப்பட்ட சுனையொன்றில், மாம்பழமும், பலாச்சுளையும், தேனும் விழுந்தமையால் உண்டான தேறலை நீரென்று கருதி உண்ட மயிலொன்று மயக்கமுற்றுத் தள்ளாடித் தள்ளாடி நடப்பது, பேரூர் ஒன்றில் விழாவில் கயிற்றின்மேல் ஏறி நின்று ஆடும் விறலிபோல் தோன்றுவதாகக் கபிலர் பாடுவது சிறப்பாக உள்ளது.

கதிரவன் மேற்றிசையில் மறையும் மாலைப் பொழுதின் நிகழ்வுகளையும், தலைவன் வரும் வழியில் தோன்றும் பல்வேறு இடையூறுகளையும், தலைவனுடைய உருவத் தோற்றத்தையும் கபிலர் தமக்கே உரிய வகையில் விளக்கியுள்ளார்.

2.3.3 பட்டினப்பாலை பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது இப்பெயரின் பொருள். இங்குப் பட்டினம் என்பது புகார் நகர். 301 அடிகள் கொண்ட இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர். இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான். இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியரும் இவரே.

பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது. அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல் என்று கூறும்.

இதில் வரும் கிளவித் தலைவன் (தலைவியின் கணவன்), பாட்டுடைத் தலைவனாகிய கரிகாலன் பெருமைகளை யெல்லாம் விவரித்து, அவனால் ஆளப்படும் புகார் நகரின் பல்வேறு சிறப்புகளையும் பலபடப் பாராட்டி, அத்தகைய பட்டினத்தினையே பெறுவதாக இருப்பினும் தன் மனைவியைப் பிரிந்து செல்ல மனமில்லாது செலவைக் கைவிடுவான்.

முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்

வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய

வாரேன் வாழியே நெஞ்சே

என்று தன் நெஞ்சிற்குக் கூறுவான்; தன் செயலுக்குக் காரணம் கூறுவான்.

திருமாவளவன் தன் பகைவரை நோக்கி ஓச்சிய வேலைவிடத் தான் செல்ல வேண்டிய பாலை வழி கொடுமையானது என்றும், தன் காதலியின் மெல்லிய பெரிய தோள்கள், சோழனுடைய செங்கோலினும் இனிமையானது என்றும் கூறுவான்.

301 அடிகள் கொண்ட இப்பாட்டில் 217 அடிகள் பட்டினச் சிறப்பையே பேசுகின்றன. பண்டைத் தமிழரின் வணிகச் சிறப்பையும், கலைச்சிறப்பையும், சமய வழிபாட்டுச் சிறப்பையும் பிறவற்றையும் இப்பாட்டு உலகறியச் செய்கிறது. துறைமுகத்தில் நடக்கும் ஏற்றுமதியும் இறக்குமதியும், அங்குச் சுங்க அதிகாரிகள் புலிச் சின்னம் பொறித்தலும், சுங்கம் பெறுதலும், அறச்சாலைகளில் உணவளிக்கும் சிறப்பும், வணிகர்களின் நடுவுநிலைப் பண்பும், அவர்களுடைய அறப் பண்பும் பாராட்டப்படுகின்றன.

திருமாவளவனின் நாட்டில் பல மொழியாளரும் வந்து குழுமியிருந்தனர் என்றும் அவர்கள் பலரும் ஒற்றுமையாக இனிது வாழ்ந்தனர் என்றும் புலவர் கூறுவார். திருமாவளவன் பகைவர் நாட்டில் செய்த அழிவுச் செயல்களையும், உறையூரை விரிவு செய்த தன்மையையும் புலவர் பாராட்டுவார். காடு கொன்று நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கியதாகப் பாராட்டுவார். சுருங்கச் சொன்னால், இந்நூல் தமிழக வரலாற்றின் பெட்டகம் ஆகும்.

2.3.4 நெடுநல்வாடை இது 188 அடிகள் கொண்ட அகவல். இதனை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவரும் திருமுருகாற்றுப்படை ஆசிரியரும் வெவ்வேறு புலவர்கள் என்பர். இருவரும் ஒருவரே என்பாரும் உளர்.

காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில் இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள். காதலியின் துயரைப் போக்க முடியா அரண்மனைப் பெண்டிர், தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவைக்கு வழிபாடு செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.

பிரிவுத் துயரால் வருந்தும் காதலிக்கு வாடைக் காற்று நெடியதாகத் தோன்றுகிறது. அதாவது, ஒரு பொழுது ஓர் ஊழி போல் காண்கின்றது. ஆனால் பாசறையில் இருக்கும் தலைவன் புண்பட்ட வீரர்க்கும், யானைகளுக்கும் குதிரைகளுக்கும் அன்பு காட்டி ஆறுதல் செய்கிறான். காமச் சிந்தனையற்றுக் கடமையில் கருத்தூன்றுகிறான். இதனால் வாடை அவனுக்கு நல்லதாயிற்று. பாட்டின் பெயர்ப் பொருத்தம் இதனால் விளங்கும்.

இப்பாட்டில் இடம்பெறும் கூதிர்கால வருணனையொன்றே புலவரின் பெருமையை நிலைநாட்ட வல்லது. இவ்வருணனை 70 அடிகளால் அமைகிறது. பண்டைத் தமிழர் மனையைச் சதுரமாகப் பிரித்து வீடு கட்டும் கலையில் தேர்ந்திருந்தமை இப்பாட்டால் விளங்கும். கட்டிடச் சிற்பியை நூலறிபுலவர் என்கின்றார் புலவர்.

அரசியின் கட்டில் வனப்பும், அரண்மனை அமைப்பும், பாசறையின் இயல்பும்; அரசன் வீரன் ஒருவன் துணையுடன் இரவுப் பொழுதிலும் வீரரையும் விலங்குகளையும் பார்வையிடும் காட்சியும் நிழற்படம் போல் இனிமை செய்கின்றன.

பாவை விளக்குகளின் அகலில் நெய்யூற்றிப் பெரிய திரிகளில் தீக்கொளுவுதல், நிலா முற்றத்தில் இருந்து மழைநீர் குழாய்களின் மூலம் வழிதல், குன்றத்தினைக் குடைந்தமைத்தது போல் அமைந்த அரண்மனை வாயில், வென்றெடுத்த கொடியோடு யானை புகுந்து செல்லும் அளவில் இருந்த அதன் உயர்ச்சி ஆகியவற்றைப் புலவர் திறம்படக் காட்டியுள்ளார்.

2.3.5 ஆற்றுப்படை நூல்கள் புறப்பொருள் பற்றியவற்றுள் 5 ஆற்றுப்படை நூல்கள் ஆகும். அவை பற்றிக் குறிப்புகள் பின்வருமாறு:

சிறுபாணாற்றுப் படை

இது ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய 269 அடிகள் கொண்ட அகவற்பாட்டு. சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது. பெரும்பாணாற்றுப்படையை விட அளவால் சிறியது என்பதால் பெற்ற பெயர் இது என்றலும் பொருந்தும்.

இதில் சீறியாழின் உருவ அமைப்பு அழகாக, உவமைகளுடன் விளக்கப்பட்டுள்ளது. நல்லியக்கோடன் நாட்டு வளமும், மக்கள் வாழ்வுச் சிறப்பும், விருந்தோம்பும் பண்பும் காட்டப்பட்டுள்ளன. கடையெழு வள்ளல்களின் வரலாறுகள் சுருக்கமாகக் கூறப்பட்டிருத்தலும், மூவேந்தர் நாடுகள் வருணிக்கப்பட்டிருத்தலும் இந்நூலின் வரலாற்றுத் தன்மைக்குச் சான்றாகும்.

நல்லியக் கோடன், கடையெழு வள்ளல்கள் எழுவரும் தாங்கிய ஈகையாகிய செவ்விய நுகத்தைத் தான் ஒருவனே தாங்கியதாகப் புலவர் புகழ்வார். பாணனுடைய வறுமை நிலை நெஞ்சை உருக்கும் வகையில் விளக்கப்படுகிறது.

ஆமூர், வேலூர், கிடங்கில் என்னும் ஊர்களின் சிறப்பை இப்பாட்டில் காணலாம். விறலியின் மேனியழகினை அழகிய உவமைகளால் புலவர் பாராட்டுவது கற்பாரைக் கவருகிறது. மதுரையைத் “தமிழ்நிலை பெற்ற தாங்கரும் மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” என்று பாராட்டுவார் புலவர்.

பாணரின் அடுக்களையில் நாய்க்குட்டி ஈன்றுள்ளதையும், கண்ணும் திறவாத அதன் குட்டிகள் பாலில்லாத வறுமுலையைப் பற்றி இழுத்ததனால் துன்பம் தாளாது தாய் நாய் குரைத்தலையும் புலவர்,

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை

கறவாப் பான்முலை கவர்தல் நோனாது

புனிற்று நாய்குரைக்கும் புல்லென் அட்டில்

(குருளை = குட்டி ; நோனாது = பொறுக்காமல்; புனிற்று = அண்மையில் குட்டியீன்ற; புல்லென் = பொலிவு அற்ற; அட்டில் = அடுக்களை)

என்று கூறுவார். பாணர் குடும்பப் பெண் குப்பையில் முளைத்த வேளைக் கீரையைக் கொய்து கொண்டு வந்து, நீரை உலையாக ஏற்றி அதில் அதை வேகவைத்து, அதனைப் பிறர் காணாது கதவை அடைத்துத் தன் சுற்றத்தோடு உண்ணும் அவலத்தை, புலவர் அழகாகப் படம் பிடித்துள்ளார்.

பெரும்பாணாற்றுப் படை

இது கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர், காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனைப் புகழ்ந்து பாடிய 500 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும். பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று. 269 அடிகள் கொண்ட சிறுபாணாற்றுப் படையை நோக்க இது பெரியது என்பது பற்றி இப்பெயர் பெற்றதாகவும் கொள்வர்.

இது சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்தது. இளந்திரையன் நாட்டின் ஐந்திணை வளமும், அவ்வத்திணையில் வாழ்ந்த வேடர், எயினர், மறவர், உழவர், பரதவர், ஆயர், அந்தணர் ஆகிய இனத்தவர் வாழ்க்கையும், அவர்களின் விருந்தோம்பற் பண்பும் பிறவும் பற்றி விரிவாகப் பேசுகிறது. மாந்தரின் குடியிருப்பும் செயல்களும் உண்மைத் தன்மையுடன் இதில் பாடப்பட்டுள்ளன.

திருவெஃகாவில் குடிகொண்ட திருமாலின் கோலத்தையும், கடலோரத்தில் அமைந்த விண்ணுயர்ந்த கலங்கரை விளக்கத்தையும், தொண்டைமானின் கொடைத்திறத்தையும், பேரியாழின் வருணனையையும், யானைகள் தவம் செய்யும் முனிவர்கட்கு உதவும் திறத்தையும், இளந்திரையன் ஆட்சிச் சிறப்பால் இடியும் காட்டுவிலங்குகளும் கூட வழிச் செல்வார்க்குத் தீங்கு செய்யாத தன்மையும், உமணர்கள் (உப்பு வணிகர்கள்) உப்பு மூட்டைகளை வண்டிகளில் ஏற்றி ஊர் ஊராக சேர்தலும், வம்பலர் என்ற வணிகர் கவசம் பூண்டும், காலிற் செருப்பணிந்தும், கழுதைச் சாத்துடன் (கூட்டத்துடன்) செல்லும் இயல்பும், ஆயர்குடிப் பெண் ஆன்படு பொருள்களை (பால் உணவுப்பொருட்களை) விற்றுக் குடும்பத்தைக் காத்தலும் பிறவும் இந்நூலில் கற்றுச் சுவைக்கத் தக்கனவாகும்.

பொருநராற்றுப் படை

சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு முடத்தாமக் கண்ணியார் இயற்றிய இப்பாட்டு 248 அடிகள் கொண்டது. போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது.

பொருநன் கையாண்ட யாழ் பற்றிய வருணனை பாட்டின் முன் பகுதியிலேயே அமைந்துள்ளது. (4-22) கொடியவரான ஆறலை கள்வரின் (வழிப்பறிசெய்வோர்) கல்மனத்தையும் அருள் மனமாக மாற்ற வல்லது பாலை யாழ் என்கிறார் புலவர்.

யாழ் வருணனையைத் தொடர்ந்து, விறலியின் மேனியழகு பற்றிய அழகிய விளக்கம் காணப்படுகிறது (25-47). விறலியின் அழகு தகுந்த உவமைகளால் விளக்கப்படுகின்றது. அவள் குழையணிந்த காதிற்குக் கத்தரிக்கோலின் கடைப்பகுதி உவமையாகும். அடியின் மென்மைக்கு, ஓடி இளைத்த நாயின் நாக்கினை உவமை கூறியுள்ளார்.

கலைஞர்கட்கு அருள் சுரந்து பரிசளிக்கும் கரிகாலனின் வண்மையைப் புலவர் சிறப்புறப் பாராட்டியுள்ளார். கண்ணால் பருகுவது போலப் பார்த்து, எலும்பையும் குளிரச் செய்யுமாறு அன்பு செலுத்தி, ஈரும் பேனும் தங்கியுள்ள கந்தலாடையினை நீக்கி, கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய இழைகளால் நெய்யப்பட்ட பட்டாடையை உடுத்தி, உயர்ந்த அரிசியால் சமைத்த புலால் உணவினை உண்ணச் செய்து, கன்றொடு கூடிய

யானைகளைப் பரிசாக அளித்துப் பிரியாவிடை தருவான் கரிகாலன் என்கின்றார் புலவர். பால்போல் வெண்மையான நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் கொடுத்து, காலில் ஏழடிகள் பின் சென்று அவர்கட்கு விடையளித்தான் என்கின்றார் புலவர். பல திணைகளும் அடுத்தடுத்து இருந்தமையால் ஒவ்வொரு திணை மாந்தரும் தம் பொருள்களை அடுத்துள்ள நில மக்களோடு பண்ட மாற்றிக் கொண்டனர் என்பதனை விளக்கியவர்,

குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்

நறும்பூங் கண்ணி குறவர் சூட,

கானவர் மருதம் பாட, அகவர்

நீல்நிற முல்லைப் பஃறிணை நுவல

என்று அவர்களின் பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் விளக்கியுள்ளார்.

மலைபடுகடாம்

வேளிர்குடியைச் சேர்ந்த நன்னன் சேய் நன்னன் என்பானை இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் பாடிய 583 அடிகள் கொண்ட அகவற்பாட்டு இது. பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது. மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.

இதில் பேரியாழும் பிற இசைக் கருவிகளும் அருமையான உவமைகளால் விளக்கப்படுகின்றன. ஆகுளி, பாண்டில், கோடு, களிற்றுயிர்த் தூம்பு, குறுந்தூம்பு, குழல், தட்டை, எல்லரி, பதலை என்பன பிற கருவிகள்.

மலைச் சாரலில் தோன்றும் பல்வேறு ஓசைகள் பற்றிய வருணனையும், நன்னனைக் காணச் சென்ற குறவர்கள் கொண்டு போன கையுறைப் பொருள்கள் பற்றிய வருணனையும் நூலின் சிறந்த பகுதிகள்.

நன்னன் நாட்டு மக்கள் பலரும் வாழும் வாழ்க்கை முறைகளும், அவர்களின் விருந்தோம்பல் சிறப்பும் அழகாகக் கூறப்பட்டுள்ளன. நன்னன் ஊரின் பெருமையும், அவன் கலைஞர்கட்குப் பரிசளிக்கும் சிறப்பும் கூறப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினரும் உண்ட உணவுகள் பற்றியும், மலைவழியில் போவார் எதிர்கொள்ளும் இடையூறுகளும் கூறப்பட்டுள்ளன.

நன்னன் மலையான நவிரத்தில் தோன்றும் சேயாற்றின் தன்மையும், அங்குக் குடிகொண்ட காரி உண்டிக் கடவுளும் (சிவபெருமான்) பற்றிய செய்தியும் இதில் காணப்படுகின்றன.

திருமுருகாற்றுப் படை

பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை. இது 317 அடிகள் கொண்ட அகவல். முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த இதனை இயற்றியவர் நக்கீரர். இவரும் நெடுநல்வாடையைப் பாடியவரும் ஒருவரே என்பார் பலர். இருவரும் வெவ்வேறு ஆசிரியர்கள் என்பாரும் உளர். ஆற்றுப்படுத்தப் படுவோன் பெயர் நூலுக்கு அமைவது ஏனைய ஆற்றுப்படைகளின் பண்பு. இது, அதற்கு மாறாக, பாட்டுடைத் தலைவன் பெயரால் அழைக்கப்படுகிறது. இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.

இதில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆறுபடை வீடுகள் பற்றியும், ஆங்காங்கு நடக்கும் வழிபாடுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. முருகப் பெருமானின் திருஉருவச் சிறப்பும், அவர் மார்பில் அசையும் மாலையழகும், சூரரமகளிர் இயல்பும், பெருமான் சூரபன்மனை அழித்த செயலும், மதுரையின் பெருமையும், திருப்பரங்குன்றத்தின் இயற்கை அழகும் முதற்பகுதியில் இடம்பெறுகின்றன.

பெருமான் ஏறும் பிணிமுகம் என்னும் யானையின் இயல்பு, அவருடைய ஆறு திருமுகங்கள், பன்னிரு திருக்கைகளின் செயல்கள், அவர் திருச்சீரலைவாயில் (திருச்செந்தூரில்) எழுந்தருளியிருக்கும் மேன்மை ஆகியன இரண்டாம் பகுதியில் இடம்பெறுகின்றன.

மூன்றாம் பகுதியில் திருவாவினன்குடியில் (பழனியில்) முனிவர்கள் பெருமானை வழிபடும் முறையும், சிவபெருமானும், திருமாலும், பிறதேவர்களும் பெருமானைக் காண வருதலும் விளக்கப்படுகின்றன.

நான்காவது பகுதியில், பெருமான் ஏரகத்தே (சுவாமிமலை) எழுந்தருளியிருத்தலும், அந்தணர் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்து வழிபடலும் கூறப்பட்டுள்ளன. அம்மந்திரம் “நமோ குமராய” என்பார் நச்சினார்க்கினியர்.

ஐந்தாவது பகுதியில் பெருமான் ஒவ்வொரு குன்றிலும் ஆடும் பண்பு விளக்கப்படுகிறது.

ஆறாம் பகுதியில் முருகப் பெருமான் ஊர் தோறும் கொண்டாடப்படும் விழாவிலும், வெறியாடும் களத்திலும், காட்டிலும், சோலையிலும், ஆற்றிடைக் குறைகளிலும் (திட்டு), ஆறுகளிலும், குளங்களிலும் சதுக்கங்களிலும் மன்றங்களிலும் பிறவிடங்களிலும் உறையும் நிலை விளக்கப்பட்டுள்ளது.

குறவர்கள் தமக்கே உரிய முறையில் உயிர்க் கொலையுடன் முருகனை வழிபடும் பண்பு இப்பாட்டில் விளக்கப்படுவது சிறப்பு.

முருகப் பெருமானை வழிபடும் முனிவர்களின் உருவத் தோற்றத்தையும், பழமுதிர்சோலையின் இயற்கை அழகையும் விளக்கும் பகுதிகள் நக்கீரர் புலமைக்குச் சான்று.

இந்நூலின் அருமை கருதி, பிற்காலத்தில் சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையில் ஒரு பகுதியாக இதனைச் சேர்த்துள்ளனர். இது, சைவர்களின் வழிபாட்டு நூலாக விளங்குகிறது.

2.3.6 மதுரைக் காஞ்சி பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது. இது, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறி, தனக்கென வரையறுத்த நாட்களை நல்ல முறையில் வாழுமாறு அறிவுறுத்தும் வகையில் மாங்குடி மருதனார் இயற்றிய காஞ்சித்திணைப் பாட்டாகும். மதுரை மன்னனுக்குக் கூறிய காஞ்சியாகையால் மதுரைக்காஞ்சியாயிற்று (காஞ்சி – நிலையாமை).

இதில் பாண்டிய நாட்டின் ஐந்திணை வளம், அவ்வந்நிலங்களில் நடக்கும் வாழ்க்கை முறைகள், பாண்டியன் பகைவர் நாட்டை அழித்தல், பணிந்தார்க்கு நலம் செய்தல், இருபெருவேந்தரையும் ஐம்பெருவேளிரையும் வென்றமை, சாலியூரையும், முதுவென்னிலையும் கைக்கொண்டமை, பரதவர்களை வென்றமை முதலான வெற்றிச் செயல்கள் ஆகியன விரிவாகக் கூறப்படுகின்றன.

வையையாற்று வளம், மதுரையைச் சூழ்ந்த அகழி, இரவும் பகலும் நடக்கும் அல்லங்காடி, நாளங்காடியின் தன்மைகள், அந்தணர் இருக்கை, சாவகர், சமணர், பௌத்தர்களின் இருக்கைகள், பெரியோர்களின் ஒழுகலாறுகள் ஆகியவற்றை ஆசிரியர் இனிதே விளக்கியுள்ளார். மாலை முதல் விடியற்காலம் வரையில் பல்வேறு மாந்தரின் செயல்களை அழகுறக் காட்டும் புலவர், பரத்தையர் தம்மை அழகுறுத்திக் கொண்டு செல்வக்குடி இளைஞர்களை மயக்கிப் பொருள் பறித்தலையும், உளியும், நூலேணியும் கொண்டு களவாடப்போகும் கள்வர் இயல்பையும், அவர்களைப் பற்றுதற்கு மறைந்து செல்லும் காவலர் இயல்பையும் காட்டுவது இதனுள் அழகாகவுள்ளது.

அமைச்சர்கள் காவிதிப் பட்டம் பெறுதல், அறங்கூர் அவையத்தின் சிறப்பு, சங்கறுத்து வளையல் செய்தல் முதலிய தொழில் வல்லுநரின் இயல்புகள், பாணர்களின் நிலை, அவர்களின் கலைவன்மை, கட்டிடக்கலை, நெசவுக்கலை முதலியவற்றின் மேம்பாடு என்பவை இப்பாட்டில் விளக்கப்படுவது சிறப்பாகவுள்ளது.

மதுரைக் காஞ்சி கூறும் நிலையாமை உலக வாழ்க்கையை இகழ்ந்து ஒதுக்குவது அன்று. உலகம் நிலையானது. இதில் நிலைத்த புகழை நிலைநிறுத்த வேண்டும் என்பதே புலவரின் அறிவுரை.

2.4 சங்க இலக்கியத்தின் தனிப் பண்புகள்

சங்க இலக்கியங்கள் தனிப்பாடல்களின் தொகுப்புகளாக அமைந்தவை. அரசர் முதல் பலகுடியினரும் புலவர்களாக இருந்துள்ளனர். இவர்களுள் பெண்பாற்புலவர்கள் முப்பதின்மருக்கு மேற்பட்டோராவர். இக்காலச் செய்யுட்கள் யாவும் அகம், புறம் என்ற இரு பகுப்புள் அடங்குவனவாகவும், கடுமையான விதிகட்கு உட்பட்டனவாகவும் அமையும். சங்கப் புலவர்களின் நடையும், கற்பனையும், உத்திகளும் புலவர்க்குப் புலவர் வேறுபடாமல், ஒரு தன்மையான போக்குடையவை. சங்கநடை என்று பொதுவாகக் கூற இடமுண்டே தவிர, கபிலர் நடை, ஒளவையார் நடை என்று பிரித்துக் காண இடமில்லை. சங்கப் புலவர்கள் இயற்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டோர். ஆனால், அவர்கள் இயற்கையைத் தனித்துப் பாடவில்லை. உணர்ச்சிகளை ஆழமாக வெளியிட உதவும் பின்புலமாகவும், குறியீடாகவுமே இயற்கையைப் பயன்படுத்தியுள்ளனர். அன்றைய மக்கள் வாழ்க்கையின் உண்மையான வெளிப்பாடாகச் செய்யுட்கள் அமைவதால், அவை காலக்கண்ணாடியாக விளங்குகின்றன. காலஞ் செல்லச் செல்ல வடசொற் கலப்புத் தமிழில் மிகுந்தது. ஆனால் சங்க இலக்கியத்தில் இரண்டு விழுக்காட்டிற்கு மேல் வடசொற் கலப்பு இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, யாதும் ஊரே யாவரும் கேளிர், செல்வத்துப் பயனே ஈதல், ஈயென இரத்தல் இழிந்தன்று என்பன போலும் எண்ணற்ற வாழ்வியல் உண்மைகட்கு இருப்பிடமாக அவை விளங்குகின்றன.

2.5 தொகுப்புரை

இப்பாடத்தினால் நாம் அறிந்து கொள்ளும் சிறப்பான செய்திகள் பின்வருமாறு:

சங்க காலம் தமிழ்மக்களின் பொற்காலம்.

இக்காலம் அகம், புறம் என்ற அடிப்படையில் அமைந்த தனிச் செய்யுட்களின் காலமாகும்.

சங்க காலத்தை வரையறுத்தலில் கருத்து ஒற்றுமை இல்லை. எனினும் கி.பி.முதல் மூன்று நூற்றாண்டுகள் என்பது பலரும் வற்புறுத்தும் கருத்து.

மன்னர் சிலர் உதவி பெற்றுச் சான்றோர்கள் இவ்வுதிரிப் பாடல்களைத் தொகுத்தனர்.

அகம், புறம் என்ற திணைப்பாகுபாடும், பா வகையும், செய்யுட்களின் அடியளவும் தொகைகள் அமைய அடிப்படைகளாயின.

எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்று மொத்தம் 9 தொகுதிகளை உடையது சங்க இலக்கியம்.

எட்டுத்தொகை நூல்களை (1) அகம் சார்ந்தன (2) புறம் சார்ந்தன (3) இரண்டும் கலந்தன என்று மூன்று பகுதிகளாகக் காணலாம்.

பத்துப்பாட்டிலுள்ளவை (1) அகம் (2) புறம் என்ற இரு பிரிவுகள் அடங்கும். புற இலக்கியங்களுள் ஆற்றுப்படைகள் ஐந்து என்பது குறிக்கத்தக்கது.

திருமுருகாற்றுப்படை பாட்டுடைத்தலைவன் பெயரால் அறியப்படுவது தனிச்சிறப்பு.

ஒவ்வொரு நூலின் தனித்த பண்புகளையும் அறிந்து கொள்ள முடிந்தது.

சங்க இலக்கியங்கட்குரிய சில தனிப்பட்ட பண்புகளை அறிந்து கொண்டோம்.

பாடம் - 3

சங்கம் மருவிய காலம்(கி.பி. 300 – 600)

3.0 பாட முன்னுரை

தமிழ் இனத்தின் பொற்காலம் சங்க காலம் என்பது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியோடு முடிவுற்றது. உலகம் போற்ற வாழ்ந்த மூவேந்தரும் தம் உரிமையை இழந்தனர். பாண்டிய நாட்டைக் களப்பிரரும் தொண்டை நாட்டைப் பல்லவரும் பிடித்துக் கொண்டனர். பின்னர் இடைப்பட்ட சோழநாடும் இவர்கட்கு அடிமைப்பட்டது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் இருள் சூழ்ந்தது. தமிழர் மொழியும், கலையும், பிற பண்பாட்டுக் கூறுகளும் பெரும் மாற்றத்துக்கு ஆட்பட்டன. பாலியும், பிராகிருதமும், வடமொழியும் செல்வாக்குப் பெற்றன. சமணமும் பௌத்தமும் பெருமை பெற்றன. வைதிகர்களுக்கும், சமண பௌத்தர்கட்கும் இடையே பூசல்கள் நிகழ்ந்தன. இத்தகைய காலத்தில் உருவான 18 நூல்களையே இலக்கிய வரலாற்றாசிரியர்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்கின்றனர். இவற்றுள் பெரும்பான்மையானவை நீதிநூல்கள். எனவே இக்காலப்பகுதியை நீதிநூல் காலம் என்பது பொருந்தும். இதே காலத்தில்தான் (கி.பி. 470) மதுரையில் வச்சிரநந்தி என்ற சமணப் பெரியவர் நான்காம் தமிழ்ச்சங்கத்தினை நிறுவினார் என்பர். இச்சங்கத்தில் பல நீதிநூல்கள் உருவாயின என்பர் அறிஞர்.

இப்பாடத்தில் பதினெண்கீழ்க்கணக்கு என்ற பெயர் வரலாறு, இத்தொகுப்பில் இடம் பெறும் பதினெட்டு நூல்களின் பெயர்கள், பொருள் பற்றிய இவற்றின் வகைப்பாடுகள், இவற்றில் இடம்பெறும் ஒவ்வொரு நூலையும் பற்றிய செய்திகள் ஆகியவை விளக்கப்படுகின்றன.

3.1 கீழ்க்கணக்கு

‘இச்செயலைக் கணக்காகச் செய்தான்’ என்பர் தமிழர். இதன் பொருளாவது, பெரியோர் நூல்களில் சொல்லியபடியே சரியாகச் செய்தான் என்பதாகும். ஆசிரியர் கணக்காயனார் எனப்பட்டார். நூலை ஆய்பவர் என்பது இப்பெயரின் பொருள். கணக்கினை முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக் கற்றலின், கேட்டலே நன்று என்ற பழமொழிப் பகுதியால், கணக்கு என்னும் சொல் நூல் என்ற பொருள் கொண்டது என்று அறியலாம்.

பல்வேறு நூல்வகைகளுக்கும் இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்கள் பிற்காலத்தில் தோன்றின. பன்னிருபாட்டியல் என்பது அவற்றுள் ஒன்று. அது ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகிய பாவகைகளில் மிகுதியான அடிகள் கொண்டனவாக ஐம்பது முதல் ஐந்நூறு பாடல்களைத் தொகுத்தமைப்பது மேற்கணக்கு என்று கூறிற்று. அதுவே, வெண்பா யாப்பினைப் பயன்படுத்தி, குறைவான அடிகளால் ஐம்பது முதல் ஐந்நூறு பாடல்களைக் கொண்டு விளங்குவது கீழ்க்கணக்கு என்றும் கூறுகிறது.

இதனால் பாட்டிலுள்ள அடிகளின் மிகுதியும் குறைவுமே மேல் கீழ் என்ற அடைமொழிகளால் விளக்கப்பட்டன என்பது விளங்கும்.

இடைக்காலத்தில் எழுந்த நூல்களிலும், உரைகளிலும் – கீழ்க்கணக்கு என்று அடையில்லாமலும், பதினெண்கீழ்க்கணக்கு என்று அடையோடும் இவை குறிக்கப்படுகின்றன.

மூத்தோர்கள் பாடியருள் பத்துப்பாட்டும்

எட்டுத்தொகையும் கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்

என்பது தமிழ்விடுதூது.

நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதரும், நச்சினார்க்கினியரும் பதினெண்கீழ்க்கணக்கு என்ற குறியீட்டைக் கையாள்கின்றனர். எனவே இந்த வழக்கு, கி.பி. 13, 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியது என்பது விளங்குகின்றது.

3.1.1 கீழ்க்கணக்கு நூல்கள் இத்தொகுப்பில் அடங்கும் நூல்களின் பெயர்களை எளிதில் நினைவில் கொள்வதற்கு ஏதுவாக இடைக்காலத்துச் சான்றோர் ஒருவரால் எழுதப்பட்ட வெண்பாவொன்று வழங்குகின்றது. அது வருமாறு:

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்

பால் கடுகம் கோவை பழமொழி மா மூலம்

இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே

கைந்நிலையும் ஆம்கீழ்க் கணக்கு.

இப்பாட்டின்படி, இத்தொகுப்பில் அடங்கும் பதினெட்டு நூல்களின் பெயர்களும் கீழே தரப்படுகின்றன.

1)நாலடியார்

2)நான்மணிக்கடிகை

3)இன்னா நாற்பது

4)இனியவை நாற்பது

5)கார் நாற்பது

6)களவழி நாற்பது

7)ஐந்திணை ஐம்பது

8)ஐந்திணை எழுபது

9)திணைமொழி ஐம்பது

10)திணைமாலை நூற்று ஐம்பது

11)திருக்குறள்

12)திரிகடுகம்

13)ஆசாரக்கோவை

14)பழமொழி

15)சிறுபஞ்சமூலம்

16)முதுமொழிக்காஞ்சி

17)ஏலாதி

18)கைந்நிலை

மேலே காட்டிய வெண்பாவில் ஒரு பாடவேறுபாட்டைப் புகுத்தி, கைந்நிலையின் இடத்தில் இன்னிலை என்ற நீதி நூலை வைத்து எண்ணுவாரும் உளர். எனினும் கைந்நிலையே பெரும்பாலோருக்கும் உடன்பாடானது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் வகைப்பாடு

இப்பதினெட்டு நூல்களையும் 1. நீதி உரைப்பவை (11 நூல்கள்) 2. காதலைச் சிறப்பிப்பவை (6 நூல்கள்) 3. போர் பற்றியது (ஒன்று) என மூன்று பிரிவுகளுள் அடக்கலாம்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலம்

பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுதியில் அடங்கும் தனித்தனி நூல்களின் காலத்தை வரையறுப்பது எளிதன்று. எனினும், இவற்றை இருண்ட காலத்துக்கு உரியன என்று பொதுவாகச் சுட்டுகின்றனர். கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் 6ஆம் நூற்றாண்டு வரை அமைந்துள்ள காலம் இருண்ட காலம் எனப்படுகிறது.

இனி, இம்முப்பிரிவுகளிலும் இடம்பெறும் நூல்கள் பற்றித் தனித்தனியே அறியலாம்.

3.2 நீதி நூல்கள்

பதினெண்கீழ்க்கணக்குத் தொகுதியில் நீதி பற்றியனவே பெரும்பான்மையென்று முன்னர்ச் சுட்டப்பட்டது. அவை வருமாறு:

1)திருக்குறள்

2)நாலடியார்

3)பழமொழி

4)திரிகடுகம்

5)நான்மணிக்கடிகை

6)சிறுபஞ்சமூலம்

7)ஏலாதி

8)இன்னா நாற்பது

9)இனியவை நாற்பது

10)முதுமொழிக்காஞ்சி

11)ஆசாரக்கோவை

3.2.1 திருக்குறள் தமிழில் உள்ள அறநூல்களுள் காலத்தால் முந்தியதும் தன்மையால் தலைசிறந்ததும் திருக்குறளாகும். ஈரடி வெண்பா, குறள் வெண்பா எனப்படும். அவ்வெண்பாவால் ஆன நூலும் ஆகுபெயராகக் குறள் என்று பெயர் பெற்றது. அதன் சிறப்பு நோக்கித் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருக்குறள் என்று வழங்கி வருகின்றோம்.

நூல் அமைப்பு

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பெரும்பிரிவிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. இவை இயல்கள் எனப்படும். இயல்களின் உட்பிரிவுகளாக அதிகாரங்கள் அமைகின்றன. ஒவ்வோர் அதிகாரத்தி்லும் பத்துப்பத்துக் குறட்பாக்கள் இடம் பெறுகின்றன. இதில் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் உள்ளன. மூன்று அதிகாரங்களிலும் அடங்கும் இயல்கள், அவற்றி்ற்குரிய அதிகாரங்கள் பற்றிய பட்டியலைக் கீழே காணலாம்.

பால்கள்                                                    இயல்கள்                                                             அதிகாரங்கள்

அறத்துப்பால்                                    பாயிர இயல்                                                           1 முதல் 4 = 4

5 முதல் 24 = 20

இல்லற இயல்                                                         25 முதல் 37= 13

ஊழ் இயல்                                                                       38 = 1

துறவற இயல்                                                                        —–

38

—–

பொருட்பால்                                                                             அரசியல்

ஒழிபியல்                        39 முதல் 63 = 25

அங்க இயல்                          64 முதல் 95 = 32

96 முதல் 108 = 13

—–

70

—–

காமத்துப்பால் களவு இயல்                    கற்பு இயல்                                                                                 109 முதல் 115 = 7

16 முதல் 133 = 18

—–

25

—–

திருவள்ளுவர் வரலாறு

பெரும்புகழ்க்குரிய திருவள்ளுவர் பற்றிய உண்மையான வரலாறு, அறிய முடியாததாக உள்ளது. இவர் மயிலையில் பிறந்தவர் என்று ஒருசாரார் கருதுகின்றனர். அவ்வூரில் அவர்க்குக் கோயில் ஒன்றும் எழுப்பியுள்ளனர். அவர் மதுரையைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர்.

இவர்க்குரிய இயற்பெயர் யாது என்றும் தெரியவில்லை. பிறந்த குடி பழம் பெருமை மிக்க வள்ளுவக்குடி என்பர். இக்குடியினர் இன்றும் சோதிடம் வல்லவர்களாக அறியப்படுகின்றனர். இவர்கள் பண்டை மன்னர்களுக்கு மிக அணுக்கமாக இருந்தவர்கள் என்று பெருங்கதை முதலிய தமிழ் நூல்கள் அறிவிக்கின்றன. வள்ளுவர் – வாசுகி கதை, வள்ளுவர் – ஏலேல சிங்கன் உறவு, வள்ளுவரின் நூல் அரங்கேற்றம் ஆகியன பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. இவற்றை உண்மையெனக் கருத முடியவில்லை.

வள்ளுவர் காலம்

இவர் வாழ்ந்த காலம் பற்றியும் ஒருமித்த கருத்து இல்லை. கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 6ஆம் நூற்றாண்டுவரை, பல வேறு காலங்களை அறிஞர் கூறுகின்றனர்.

திருக்குறளில் வெளிப்படும் சில பண்பாட்டு நிலைகள், மொழிக்கூறுகள் ஆகியவை கொண்டு அது, சங்க இலக்கியங்களை அடுத்துத் தோன்றியது என்று பொதுவாகக் கூறலாம்.

திருக்குறள் உரையாசிரியர்கள்

திருக்குறளுக்குப் பத்துப்பேர் இடைக்காலத்தில் உரையெழுதி உள்ளனர். இவ்வுரையாசிரியர் பெயர்களைப் பின்வரும் வெண்பாவால் அறியலாம்.

தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்

பரிமேலழகர், பருதி, திருமலையர்,

மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர், வள்ளுவர் நூற்கு

எல்லை உரை செய்தார் இவர்

இவர்களுள் மணக்குடவர், காளிங்கர், பரிப்பெருமாள், பரிதியார், பரிமேலழகர் ஆகியோர் உரைகளே இப்பொழுது கிடைக்கின்றன. இவற்றுள் பரிமேலழகர் உரையே பெரியோர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றது. இக்காலத்தில் எண்ணற்ற புதிய உரைகள் நாளும் தோன்றிக் கொண்டே உள்ளன.

நூலின் சிறப்பு

வடமொழியில் உள்ள மனுநீதி முதலிய நீதி நூல்கள் வருணங்களின் அடிப்படையில் அறம் உரைப்பவை. திருக்குறள் ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கருத்தின் அடிப்படையில் மனித குலம் அனைத்திற்கும் பொதுவான அறம் கூறுவது.

வள்ளுவர் காலத்தில் வைதீகம், சமணம், பௌத்தம் முதலான பல சமயங்கள் வழக்கில் இருந்தன. ஆனால் வள்ளுவர் எச்சமயத்தையும் சார்ந்து நின்று அறம் உரைக்கவில்லை. அதனால்தான் ‘சமயக்கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இது என்ற வள்ளுவர்’ என ஒரு புலவர் பாராட்டினர்.

சங்கத்தமிழர் விரும்பி உண்ட கள்ளையும் ஊனையும் வள்ளுவர் கண்டித்தார்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (260)

என்றும்,

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எந்நாளும்

நஞ்சுண்பார் கள் உண்பவர் (926)

என்றும் கூறியுள்ளார்.

வேள்விகள் ஆயிரம் செய்வதனைவிட, ஓர் உயிரைக் கொன்று அதன் தசையை உண்ணாதிருத்தல் பெரிய அறம் என்றார்.

சங்கப்புலவர்கள் பரத்தைமை ஒழுக்கத்தை வெளிப்படையாகவே பாடினர். ஊடல் என்ற உரிப்பொருளை விளக்க அவர்களுக்குப் பரத்தையின் துணை தேவைப்பட்டது. வள்ளுவரோ, பரத்தைமை சமூகத்திற்குச் செய்யும் தீமையைக் கருதி, பரத்தையை அகத்திணையில் இருந்து விலக்கிப் புரட்சி செய்தார். மேலும் பொருட்பாலில் ‘வரைவின் மகளிர்’ என் அதிகாரம் அமைத்துப் பரத்தைமையைக் கண்டித்தார்.

ஈன்ற தாயும் பிறரும் துன்பமுறும் பொழுது, அறத்திற்கு மாறான செயல்களைச் செய்தாயினும் அவர்களைக் காக்க வேண்டும் என்று மநு முதலிய வடநூல்கள் கூறின. ஆனால் வள்ளுவரோ,

“ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க;

சான்றோர் பழிக்கும் வினை” (656)

என்றார்.

இங்ஙனம் வள்ளுவர் கூறும் நெறிகள் உலகப் பொதுமை உடையனவாக விளங்குவதனால் திருக்குறள் உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்பது பாரதியார் வாக்கு.

3.2.2 நாலடியார் திருக்குறளுக்கு அடுத்த இடத்தில் வைத்து எண்ணப்படுவது நாலடியார். நாலடி வெண்பாக்கள் கொண்ட நீதி நூல்கள் வேறு பல உண்டு. எனினும், இதன் சிறப்புக் கருதி இதனை மட்டும் நாலடி என்று வழங்கினர்; மேலும் ‘ஆர்’ விகுதி சேர்த்து நாலடியார் என்று வழங்குகிறது. நானூறு வெண்பாக்கள் உடைமையால் நாலடி நானூறு என்றும் வழங்கும். இதற்கு வேளாண் வேதம் என்ற பெயரும் உண்டு.

நாலடியாரின் தோற்றம்

இந்நூல் ஒருவரால் இயற்றப்பட்டதன்று. இதனை, சமண முனிவர் பலரும் இயற்றிய 8000 வெண்பாக்களில் இருந்து தொகுத்த 400 வெண்பாக்களைக் கொண்ட நூல் என்பர்.

நாலடியார் சமணர்களின் நூல் என்பதும், அதிலுள்ள செய்யுட்கள் அழிந்து போன ஒரு பெருந்தொகுதியின் பகுதி என்பதும் அறிதற்கு உரியது.

நூலின் அமைதி

இந்நூல் திருக்குறள் போன்றே முப்பால்களாகவும், பல இயல்களாகவும், அதிகாரங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது.

அறத்துப்பாலில் துறவற இயல், இல்லற இயல் என்ற இரண்டு இயல்களும் 13 அதிகாரங்களும் உள்ளன.

பொருட்பாலில் அரசு இயல், நட்பு இயல், இன்ப இயல், துன்ப இயல், பொது இயல், பகை இயல், பல்நெறி இயல் என ஏழு இயல்களும் 24 அதிகாரங்களும் அடங்கும்.

காமத்துப்பாலில் இன்ப துன்ப இயல், இன்ப இயல் என இரண்டே இயல்களும், 3 அதிகாரங்களும் உள்ளன.

சிறப்புச் செய்திகள்

நாலடியாரில் சமண சமயத்திற்கே சிறப்பாகவுரிய பல உண்மைகள் அழகாகக் கூறப்பட்டுள்ளன. செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியவற்றை அழகிய உவமைகள் வாயிலாக இந்நூல் விளக்கியுள்ளமை சிறப்பாகும்.

இளமையின் கழிவினுக்குப் பயன்தரும் மரங்களில் இருந்து கனிகள் உதிர்வதனை உவமையாக்குகிறது ஒரு செய்யுள்.

பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம்

கனி உதிர்ந்து வீழ்ந்தற்று இளமை – 17

சமண சமயத்தின் உயிர்நாடியான கொள்கைகளுள் கொல்லாமையும், புலால்மறுத்தலும் அடங்கும். புலால் உண்பாரின் வயிற்றினைப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உரிய சுடுகாடு என்று இழித்துரைக்கிறது இந்நூல்.

இதனை, தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலம்கெட்ட புல்லறிவாளர் வயிறு என்கின்றது.

3.2.3 பழமொழி நாலடி போலவே நானூறு வெண்பாக்கள் கொண்ட நீதிநூல் பழமொழியாகும். பழமொழி நானூறு என்றும் இது வழங்கும். இதிலுள்ள ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெறும். பாட்டு முழுவதும் அப்பழமொழியின் விளக்கமாக அமையும். பழமொழிகளைத் தொகுத்து இலக்கியமாக்கப்பட்டவற்றில் தொன்மையான தமிழ்நூல் இதுவேயாகும். திருக்குறள், நாலடியார் போன்ற அற நூல்களைத் தழுவிச் செல்வது இந்நூல்.

நூலாசிரியர்

பழமொழியின் ஆசிரியர் முன்றுறை அரையனார் என்பவர். அரையனார் என்பது இயற்பெயர் அன்று. அரையர் குடியில் பிறந்தவர் என்பதால் இவர் அரையனார் எனப்பட்டார் எனலாம் (அரையர் – அரசர்). எனவே இவர் ஒரு குறுநில மன்னராகவோ, அரசியலில் உயர் பதவி வகித்தவராகவோ இருந்திருக்கலாம். முன்றுறை என்பது ஊர்ப்பெயர். இவ்வூர் எப்பகுதியில் இருந்தது என்று அறியமுடியவில்லை.

இவ்வாசிரியர் சமண சமயத்தினர் என்பது நூலின் தற்சிறப்புப் பாயிரத்தில் ‘பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி ——- முன்றுறை மன்னவன் செய்து அமைத்தான்’ என்று வருவது கொண்டு உணரலாம்.

சிறப்புச் செய்திகள்

இந்நூலகத்தே பண்டை மன்னர்கள் பலரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

மனுநீதிச் சோழன் தன் மகனைத் தேரினைச் செலுத்திக் கொன்ற செய்தியும் (93), பாரி முல்லைக்குத் தேரும், பேகன் மயிலுக்குப் போர்வையும் அளித்த வரலாறும் (361), கரிகாலன் இரும்பிடர்த் தலையார் உதவியால் அரசு பெற்று ஆண்ட வரலாறும் (105), கரிகாலனுக்கு யானை மாலையிட்டு மன்னனாக்கிய செய்தியும் (62), அவனே நரைமுடிந்து வந்து நீதி வழங்கிய வரலாறும் (21), வேறு பல வரலாறுகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

இந்நூலில் இடம் பெறும் குறிப்பிடத்தக்க சில பழமொழிகள் வருமாறு:

குலவிச்சை கல்லாமல் பாகம்படும் (21)

கற்றலின் கேட்டலே நன்று (61)

வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று (175)

நுணலும் தன் வாயால் கெடும் (184)

முதல் இல்லார்க்கு ஊதியம் இல்(லை) (312)

ஒருவர் பொறை இருவர் நட்பு (247)

3.2.4 எண் அடிப்படையிலான நூல்கள் திரிகடுகமும், நான்மணிக்கடிகையும், சிறுபஞ்சமூலமும் முறையே மூன்று, நான்கு, ஐந்து பொருள்களை உடையனவாக அமைந்துள்ளமையைக் கண்டு மகிழலாம்.

திரிகடுகம்

கடவுள் வாழ்த்தோடு சேர்ந்து 101 வெண்பாக்களைக் கொண்ட நீதிநூல் இது. இதில், திரிகடுகம் என்ற மருந்தில் அடங்கியுள்ள சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று காரப் பொருள்கள் போன்ற மூன்று அறக்கருத்துக்களை ஒவ்வொரு பாடலும் கூறுவதால் இப்பெயர் பெற்றது. (திரி = மூன்று; கடுகம் = காரப்பொருள்) திரிகடுகச் சூரணம் உடல் நோயைத் தீர்ப்பது போல், அப்பெயர் கொண்ட இந்நூல் அகநோயைத் தீர்க்கவல்லது.

நூலின் ஆசிரியர்

இதன் ஆசிரியர் நல்லாதனார். திருத்து என்னும் ஊரில் பிறந்தவர் இவர் என்பது செல்வத்திருத்து உளார் செம்மல் என்ற சிறப்புப்பாயிரச் செய்யுளால் தெரிகின்றது. இவ்வூர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது என்பர். இவ்வாசிரியர் இயற்றிய கடவுள் வாழ்த்தில் திருமாலின் புகழ் பேசப்படுவதால் இவர் வைணவ நெறியினர் என்பது பெறப்படுகிறது.

சிறப்புச் செய்திகள்

இந்நூலாசிரியர் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை ஆகியவற்றின் கருத்துக்களை எடுத்தாண்டுள்ளார். இதில் காணும் பழமொழிகளாவன (1) உமிக்குற்றுக் கை வருந்துவார் (2) தம் நெய்யில் தாம் பொரியுமாறு (3) துஞ்சு ஊமன் கண்ட கனா (4) தூற்றின்கண் தூவிய வித்து முதலியனவாகும்.

இந்நூலில் நெஞ்சில் நிறுத்தத்தக்க பொன்மொழிகளுள் சில வருமாறு:

ஈதற்குச் செய்க பொருளை (90)

நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும் (72)

கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் (52)

நெஞ்சம் அடங்குதல் வீடாகும் (43)

ஊன் உண்டலையும், வேள்வியில் உயிர்க்கொலை செய்தலையும் இந்நூல் கண்டிக்கின்றது (36). சூதினால் வந்த பொருளை விரும்பல் ஆகாது (42). விருந்தின்றி உண்ட பகல் அறிவுடையவர்க்கு நோயாகும் (44). பொய் நட்பின் சிறப்பை அழித்து விடும் (83) முதலிய இந்நூற் கருத்துகள் என்றும் நினைவில் நிற்பனவாம்.

நான்மணிக்கடிகை

நான்கு உயர்ந்த மணிகளால் ஆன அணிகலன் போல ஒவ்வொரு பாட்டிலும் நான்கு அரிய உண்மைகளைத் தொகுத்துக் கூறும் வெண்பாக்களைக் கொண்ட நூல் நான்மணிக்கடிகை. கடவுள் வாழ்த்து இரண்டு உட்பட, இதில் 104 செய்யுட்கள் உள்ளன. வாழ்த்துச்செய்யுட்கள் திருமாலை வாழ்த்துவதால் இதன் ஆசிரியர் விளம்பி நாகனார் வைணவர் என்பது விளங்கும்.

வெற்றுச்சொல் யாதும் இன்றி ஒவ்வொரு பாட்டிலும் மிக உயர்ந்த வாழ்வியல் உண்மைகள் நான்கினைத் திறம்படத் தொடுத்துக் கூறியுள்ள ஆசிரியர் திறம் பாராட்டத்தக்கது. இதன் சிறந்த பாடல்களில் ஒன்று வருமாறு:

கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை கொண்டானின்

துன்னிய கேளிர் பிறர் இல்லை, மக்களின்

ஒண்மைய வாய்சான்ற பொருள் இல்லை ; ஈன்றாளொடு

எண்ணக் கடவுளும் இல்.

(கொண்டான் = கணவன்; கேளிர் = உறவினர்; ஒண்மை = சிறப்பு)

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்னும் தொடர் ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவ்வேர்களாவன : சிறுவழுதுணை, நெருஞ்சி, சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி என்பனவற்றின் வேர்களாகும். இவ்வேர்கள் உடற்பிணி போக்கி நலம் செய்வது போல, மக்களின் உயிர்ப்பிணியாகிய அறியாமையைப் போக்கி அதன் ஈடேற்றத்திற்கு உதவும் அரிய பெரிய உண்மைகளை ஐந்து ஐந்தாகச் செய்யுள்தோறும் கூறும் நூலும் சிறுபஞ்சமூலம் என்று பெயர் பெற்றது.

ஆசிரியர்

இதன் ஆசிரியர் காரியாசான். இவர் மதுரையாசிரியர் மாக்காயனார் என்பவரின் மாணாக்கர் என்றும், சைன சமயத்தினர் என்றும் நூலிலிருந்து தெரிய வருகிறது. இதில், சிறப்புப்பாயிரங்கள் இரண்டும் 104 வெண்பாக்களும் உள்ளன. இரு செய்யுட்கள் இடைச்செருகல் எனக் கருத இடமுண்டு.

சிறப்புச் செய்திகள்

உயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை உண்பவன் நாக்கு அழியும் என்கிறார் ஆசிரியர். இவ்வாறே பொய்ச்சான்று கூறுபவன் நாக்கும் சாகும் என்கின்றார் (8). வலிமையில்லாதவன் சேவகம் செய்வதும், செந்தமிழை அறியாதான் கவிபுனைதலும் நகைப்புக்கு இடமானவை என்கிறார் (10). கொல்லுதலும், கொன்றதன் ஊனை உண்டலும் கொடும் நஞ்சு; தனக்கு நிகர் இல்லாதவனை எதிர்த்து வெல்லுதலும் கொடும் நஞ்சு என்கிறார் (11).

3.2.5 ஏலாதி ஏலம், இலவங்கம், நாக கேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு என்னும் ஆறு பொருள்களையும் முறையே 1 : 2 : 3 : 4 : 5 : 6 என்ற விகிதத்தில் கலந்து செய்வது ஏலாதிச் சூரணமாகும். இம்மருந்து போல, ஒவ்வொரு செய்யுளாலும் ஆறு அரிய அறக்கருத்துக்களைக் கொண்ட 80 வெண்பாக்களால் ஆன நூலும் ஏலாதி எனப் பெயர் பெற்றது. உடல்நோய் தீர்க்கும் ஏலாதிச் சூரணம் போல, இச் செய்யுட்களில் வற்புறுத்தப்படும் அறங்களும் அகநோய் நீக்கி நலம் செய்யும் என்பது கருத்து.

நூலாசிரியர்

இதன் ஆசிரியர் கணிமேதையார். கணிமேதாவியார் என்றும் கூறுவர். இவர் சோதிட நூல் வல்லவர் என்பது இவர் பெயரால் அறியப்படுகின்றது. திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியரும் இவரே. இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கராவார். அருகனுக்கு வணக்கம் சொல்லி நூலைத் தொடங்குவதால் இவர் சமணர் எனக் கருதலாம்.

சிறப்புச் செய்திகள்

இந்நூலின் (2, 19, 42, 46) பாடல்கள் சமணர் சிறப்பாகப் போற்றும் கொல்லாமை, புலால்மறுத்தல், கள்ளுண்ணாமை என்னும் ஒழுக்கங்களை வற்புறுத்துகின்றன.

வீடுஇழந்தவர், கண்ணில்லார், தம் செல்வத்தை இழந்தவர், நெல் இழந்தவர், கால்நடைச் செல்வம் இழந்தவர் ஆகியோர்க்கு உணவு கொடுத்தவர் பல்யானைகளைக் கொண்டு உலகாளும் மன்னராய் வாழ்வர் (52) என்றும், கடன்பட்டவர், பாதுகாப்பு இல்லாதவர், கையில் பொருள் இல்லார், கால் முடம்பட்டவர், வயது முதிர்ந்தவர், வயதில் இளையார் ஆகியோருக்கு உணவு ஈந்தவரும் மண்மேல் படை கொண்டு ஆளும் பேறு அடைவர் (53) என்றும் இவர் கூறுவது சிறப்பாக உள்ளது. கல்வியின் சிறப்பை வற்புறுத்தும்

இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும்

நடை வனப்பும், நாணின் வனப்பும் – புடை சால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல ; எண்ணோ(டு)

எழுத்தின் வனப்பே வனப்பு (74)

என்ற செய்யுள் நினைந்து இன்புறுத்தக்கது.

3.2.6 இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் நாற்பது பாடல்களைக் கொண்டவை எனும் ஒற்றுமையுடன் இனியவை, இன்னாதவை என்பவற்றை ஒன்று கூட்டிச் சொல்லும் தன்மை உடையவை.

இன்னா நாற்பது

இது கடவுள் வாழ்த்து உள்பட 41 வெண்பாக்களைக் கொண்ட அறநூல். இதிலுள்ள ஒவ்வொரு பாட்டும் இன்னது இன்னது துன்பம் தருவது என்று கூறுவதால் இன்னா நாற்பது என்று பெயர் பெற்றது. தொல்காப்பியர் கூறும் அம்மை என்னும் வனப்பைச் சார்ந்தது இது.

இதன் ஆசிரியர் கபிலர். இவர் சங்க காலத்துக் கபிலர் அல்லர்.

இந்நூலில் கூறியது கூறல் எனும் முறை காணப்படுகின்றது. கருத்தின் பெருமை கருதி, அக்கருத்து மக்கள் உள்ளத்தில் நன்கு பதிய வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் மீண்டும் கூறியிருக்கக்கூடும் என்பர்.

இன்னா, ஈன்றாளை ஓம்பாவிடல் (18)

அடைக்கலம் வவ்வுதல் இன்னா (41)

ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா (23)

உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா (16)

அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா (29)

பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா (38)

இனியவை நாற்பது

வாழ்விற்கு நன்மை தரும் இனிய அறக்கருத்துக்களைக் கூறும் நாற்பது வெண்பாக்களைக் கொண்ட நூல் இனியவை நாற்பதாயிற்று. இதன் கடவுள் வாழ்த்தில் சிவபெருமானும், திருமாலும், நான்முகனான பிரம்ம தேவனும் வாழ்த்தப்படுகின்றனர்.

இந்நூலின் நான்கு பாடல்கள் மட்டும் (1, 3, 4, 5) நான்கு இனிய பொருள்களைக் கூறுகின்றன. ஏனையவற்றில் மும்மூன்று கருத்துகளே கூறப்பட்டுள்ளன. இந்நூல் திரிகடுகத்தினை அடியொற்றிச்செல்வது என்பர்.

இந்நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். பூதன் என்பது இவர் தந்தையார் பெயர் ஆகும்.

நட்டார்க்கு நல்ல செயல் இனிது (17)

மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே (13)

கற்றறிந்தார் கூறும் கருமப்பொருள் இனிதே (32)

என்பவை நினைவில் நிறுத்தத்தக்க சில சிறந்த வரிகள். இந்நூலுக்குப் பழைய உரையொன்று உண்டு.

3.2.7 முதுமொழிக்காஞ்சி முதுமொழி என்பது மூதுரை அல்லது முதுசொல்லாகும். ஆண்டாலும் அறிவாலும் மூத்தோர் ஏனையோர்க்கு உலகியல் உண்மைகளை எடுத்துக் கூறுவது என்னும் பொருளில் முதுமொழிக் காஞ்சி எனப்பட்டது. பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும் உலகியல் பொருள் முடிவு உணரக் கூறின்று என்பது புறப்பொருள் வெண்பாமாலையில் இடம்பெறும் முதுமொழிக்காஞ்சித் துறைக்கு உரிய விளக்கமாகும்.

காஞ்சியென்பது மகளிர் இடையில் அணியும் மணிக்கோவையும் ஆகும். அது போல முதுமொழிகள் பல கோக்கப்பட்ட நூல் என்னும் பொருளில் இப்பெயர் அமைந்தது என்றும் கூறலாம்.

இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்கிழார் எனக் குறிக்கப்படுகின்றார். புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் என்ற சங்கப் புலவரினும் இவர் வேறானவர்.

இந்நூலில் பத்துப்பத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு பத்திலும் பத்து அறிவுரைகள் உள்ளன. ஒவ்வொரு பத்தும் ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் என்று தொடங்குகின்றது. ஒவ்வொரு பத்துக்கும் ஒவ்வொரு பெயர் தலைப்பாக அமைகிறது. அப்பெயர் அப்பத்தில் அமைந்த எல்லாப் பத்துப் பாடல்களின் அடிகளிலும் இடம்பெறும். சிறந்த பத்து, அறிவுப்பத்து, துவ்வாப்பத்து என்றவாறு அப்பெயர்கள் அமையும்.

இந்நூலின் பாடல்களை உரையாசிரியர்கள் மேற்கோளாகக் காட்டியுள்ளனர். இதற்குத் தெளிவான பழைய பொழிப்புரை உள்ளது.

திருக்குறளின் கருத்துக்களும் தொடர்களும் இதில் பரவலாகக் காணப்படுகின்றது.

3.2.8 ஆசாரக்கோவை ‘ஆசாரம்’ என்னும் வடசொல் ஒழுக்கம் என்று பொருள்படுவது. நல்லொழுக்கக் கோட்பாடுகளைத் தொகுத்துக் கோவையாகத் தருவதனால் இப்பெயர் பெற்றது. சிறப்புப் பாயிரம் நீங்கலாக இதில் நூறு வெண்பாக்கள் உள்ளன. வெண்பா வகையில் குறள், சிந்தியல், நேரிசை, இன்னிசை, பஃறொடை ஆகிய பல வகையும் இதில் உள்ளன.

இது வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. இதனை

ஆரிடத்துத் தானறிந்த மாத்திரையான் ஆசாரம்

யாரும் அறிய அறனாய மற்று அவற்றை

ஆசாரக் கோவை எனத் தொகுத்தான்

என்ற சிறப்புப்பாயிரப் பகுதியால் அறியலாம்.

ஆசிரியர்

இதன் ஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயில் முள்ளியார் என்னும் சான்றோர். பெருவாயில் என்ற ஊரினர் இவர் என்று தெரிகிறது. கயத்தூர் என்ற பெரிய ஊர் இதன் அருகில் இருந்தது போலும்! இவர் வடமொழி வல்ல கல்வியாளர் என்பது நூலால் விளங்கும்.

சிறப்புச் செய்திகள்

அகந்தூய்மையளிக்கும் உயர்ந்த அறங்களை வற்புறுத்துவதோடு, அன்றாட வாழ்க்கையில கடைப்பிடிக்க வேண்டிய நல்ல ஒழுகலாறுகளையும் இது வற்புறுத்தியுள்ளது. காலையில் எழுதல், காலைக்கடன் கழித்தல், நீராடல், உணவு உட்கொள்ளல், உறங்குதல் ஆகிய நடைமுறைகளின் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை இது போல் வேறு எந்த நூலும் சொல்லவில்லை.

3.3 அகநூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அகப்பொருள் பற்றியன ஆறு நூல்களாகும். அவை (1) கார்நாற்பது (2) ஐந்திணை ஐம்பது (3) திணைமொழி ஐம்பது (4) ஐந்திணை எழுபது (5) திணைமாலை நூற்றைம்பது (6) கைந்நிலை என்பன.

3.3.1 கார் நாற்பது இது முல்லைத்திணைக்குரிய ஆற்றியிருக்கும் ஒழுக்கத்தினை அழகிய நாற்பது வெண்பாக்களால் விளக்கும் நூலாகும். முல்லையின் பெரும்பொழுதான கார்காலம் ஒவ்வொரு பாட்டிலும் சிறந்த முறையில் பாடப்படுவதால் இது கார் நாற்பதாயிற்று.

இதன் ஆசிரியர் மதுரைக் கண்ணங் கூத்தனாராவார். கண்ணனார் என்பவர் இவர் தந்தையார் என்பர். தம் முதற்பாட்டிலேயே வானவில்லைத் திருமாலின் மார்பில் அசைந்தாடும் பல வண்ண மாலையோடு உவமித்தமையாலும், பத்தொன்பதாம் பாட்டில் கடப்ப மலர்களின் வெண்ணிறத்திற்குப் பலராமன் வெண்ணிறத்தை உவமையாகக் கூறலாலும் இவரை வைணவர் என அடையாளம் காட்டுவர்.

சிவபெருமானுக்காகப் பண்டைத் தமிழர் கொண்டாடிய கார்த்திகை விழாவையும் இவர் (பா. 26) சுட்டத் தவறவில்லை. இது இவருடைய சமயப் பொதுமைப் பண்பாட்டிற்கு சான்றாகும்.

அரசன் பொருட்டுப் போர்க்கடமை ஆற்றத் தன் காதலியைப் பிரிந்து போன தலைவன், தான் குறித்துச் சென்ற கார்காலம் வந்தும் திரும்பவில்லை. அதனால் பிரிவாற்றாமல் தலைவி வருந்தினாள். அவளை அவள் தோழி அன்பு மொழிகள் பல கூறித் தேற்றினாள். அப்பொழுது தலைவன் திரும்பி வந்தான். இதனை நாடகப் பாங்கில் கூறுவதே இந்த நூல்.

தலைவி பிரிவாற்றாமல் கூறுவது, அதற்குத் தோழி ஆறுதல் கூறுவது, தலைவன் தன் உள்ளத்து உணர்வுகளைத் தன் தேர்ப்பாகனிடம் வெளிப்படுத்துவது முதலியன இந்நூலில் இடம் பெறுவனவாகும்.

இந்நூலில் நெஞ்சைக்கவரும் உவமைகள் மலிந்துள்ளன. கார்கால மழையால் வழியெல்லாம் குமிழம் பூக்கள் கொத்துக் கொத்தாய் அசைந்தாடுகின்றன. அவை பொன்னால் செய்த குழைகளாகக் கவிஞர்க்குத் தோன்றுகின்றன.

இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப்

பொன்செய் குழையின் துணர்தூங்கத் தண்பதம்

செவ்வி உடைய சுரம் (28)

நொச்சியின் பூவுக்கு நண்டின் கண்களும் (39) தளவ மலருக்குச் சிரல் பறவையின் அலகும் (36) உவமைகளாகக் கூறப்பட்டுள்ளன.

3.3.2 ஐந்திணை ஐம்பது ஒவ்வொரு திணைக்கும் பத்துப் பாக்களாக ஐந்து திணைகளுக்கும் ஐம்பது வெண்பாக்களைக் கொண்ட நூல் ஐந்திணை ஐம்பது என்று பெயர் பெற்றது. முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற வரிசையில் திணைகள் வைக்கப்பட்டுள்ளன. கருத்து வளமும் நடை வளமும் கொண்டது

இந்நூல்.

இதனை இயற்றியவர் மாறன் பொறையனார். மாறன் என்பது இவருடைய தந்தையார் பெயராதல் கூடும். எனவே பொறையனார் என்பது இவர் இயற்பெயர் எனலாம்.

இந்நூலின் முதற் செய்யுளிலேயே திருமால், முருகவேள், சிவபெருமான் என்னும் மூன்று கடவுளரின் திருப்பெயர்களும் இடம் பெறச் செய்தமையின் இவருடைய சமயம் வைதீகம் என்பது தெரிகின்றது.

இந்நூலுக்குச் சிறப்புப்பாயிரம் ஒன்று உள்ளது. இதற்குப் பழைய உரையொன்று கிடைத்துள்ளது. இதன் செய்யுட்களைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பிறரும் மேற்கோள்களாகக் காட்டியுள்ளனர்.

தலைவனால் தனியே விடப்பட்ட பெண்ணொருத்தி, தன் காம மிகுதியால் வாடுகின்றாள். தன் தலைவன் ஊர்ந்து சென்ற தேரின் சுவட்டைக் கண்டேனும் ஆறுதல் பெற விரும்புகின்றாள். எனவே, அங்கும் இங்கும் ஊர்ந்து மகிழும் நண்டினை அழைத்து, வளைந்த காலையுடைய நண்டே! உன்னை யான் ஒன்று வேண்டுகின்றேன். என்றும் ஒடுங்காத ஆரவாரமுடைய கடற்கரை நாட்டின் தலைவனாகிய என் காதலன் ஏறிச் சென்ற தேர் விட்டுச் சென்ற சுவட்டினை யான் கண்ணாரக் காணும்படியாக, அதனை நின் நடையாலே சிதைத்து விடாதே! என்று வேண்டுகின்றாள் (42). இது போன்ற பாடல்களைக் கொண்ட இந்நூல் அகஉணர்வுகளை அழகுபடச் சித்திரிக்கின்றது.

3.3.3 திணைமொழி ஐம்பது இந்நூலும் ஐந்து திணைகளையும் பற்றிய ஐம்பது பாக்களைக் கொண்டதே. ஒவ்வொரு திணைக்கும் பத்துப்பாடல்களைக் கொண்டிருக்கும் இந்நூல் ஐந்திணை ஐம்பதிற்கு வழி காட்டிற்றா அன்றி ஐந்திணை ஐம்பது இதற்கு வழி காட்டிற்றா என்பது விளங்கவில்லை. திணைகள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் அமைந்துள்ளன.

இதன் ஆசிரியர் கண்ணஞ்சேந்தனார். இவர் தந்தை பெயர் சாத்தந்தையார். கார்நாற்பதின் ஆசிரியர் கண்ணங்கூத்தனாரும், கண்ணஞ்சேந்தனாரும் உடன்பிறந்தவரோ என ஐயுறுவார் உளர்.

பன்றிகள் தம் கொம்புகளால் தோண்டி வெளிப்படுத்திய மாணிக்கக் கற்கள் இரவில் ஒளிவிட்டமையால், அதனைத் தீயெனப் பிறழ உணர்ந்த கானவர் தம் கைகயை நீட்டிக் குளிர்காய முனைந்தனர் என்பார் இவர் (4).

பலாக்கனியொன்றைப் பெற்ற ஆண்குரங்கு அதனைத் தன் காதலியோடு உண்டு மகிழ விரும்பி அதனை அன்போடு அழைக்கும் என இவர் கூறுவது (10) அகநானூற்றின் 353 ஆம் செய்யுளை நினைவூட்டுகின்றது.

அஞ்சனம் காயா மலரக் குருகிலை

ஒண்தொடி நல்லார் முறுவல் கவின்கொளத்

தண்கமழ் கோடல் துடு்ப்பு ஈனக் காதலர்

வந்தார் திகழ்க நின்தோள் (21)

என்பது இந்நூலின் மிக அழகிய பாட்டுகளுள் ஒன்றாகும்.

“காயாச் செடி கண்மை போலப் பூக்க, குருக்கத்திச் செடி பெண்களின் பற்களைப் போன்று விளங்க, வெண் காந்தள் துடுப்பைப் போன்று மலர, நம் தலைவர் மணம் பேச வந்தார்; எனவே உன் தோள்கள் முன் போல் பூரிக்க” – என்பது இதன் பொருள்.

3.3.4 ஐந்திணை எழுபது அன்பின் ஐந்திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்பவற்றுள் ஒவ்வொன்றுக்கும் 14 செய்யுட்கள் வீதம் எழுபது செய்யுட்களைக் கொண்டிருப்பதனால் இப்பெயர் பெற்றது. இப்பொழுது இந்நூலில் 66 வெண்பாக்கள் மட்டுமே உள்ளன. எஞ்சிய நான்கும் அழிந்து போயின (25, 26, 69, 70).

இன்னிசை வெண்பாக்களாலும் நேரிசை வெண்பாக்களாலும் ஆனது இது. இதில் கடவுள் வாழ்த்துப்பாவொன்று உண்டு. அது விநாயகர் வணக்கமாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் பிள்ளையார் வணக்கம் தமிழ்நாட்டில் வழக்கிற்கு வந்தது. எனவே கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு உரிய இந்நூலில் உள்ள இவ்வாழ்த்துப் பிற்காலத்தில் இணைக்கப்பட்டது என்பர். இதற்குப் பழைய உரை இல்லாமை இதற்குச் சான்றாகும்.

ஆசிரியர்

இதனை இயற்றியவர் மூவாதியார். இவரைச் சமணர் என்பர் சிலர். ஆனால், நூலில் இதற்குச் சான்று இல்லை. இவருடைய பெயருக்கு உரிய காரணம் புலப்படவில்லை. ஒருவேளை அயன், மால், சிவன் என்னும் மூன்று கடவுளர்க்கும் மூலமான பரம்பொருள் என்று இப்பெயருக்கு விளக்கம் கூறலாம்.

சிறப்புச் செய்திகள்

இந்நூல் ஐந்திணை ஐம்பது என்ற நூலை அடியொற்றியது. பெயர் ஒற்றுமையும் வேறு சில குறிப்புகளாலும் இதனை உணரலாம். ஐந்திணை ஐம்பதின் 38 ஆம் செய்யுளில் வரும்.

கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்

உள்ளம் படர்ந்த நெறி

என்பதும் ஐந்திணை எழுபதில் 36 ஆம் செய்யுளில் வரும்,

கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர்

உள்ளம் படர்ந்த நெறி

என்பதும் ஒத்திருத்திருக்கின்றன.

சான்றோருடனான நட்பு இப்பிறப்பில் சிதைவுபடாமல் ஊன்றி நின்று வலிமை பயப்பதோடு, வரும் பிறவிகளிலும் உறுதுணையாகும் என்கிறார் இவ்வறிஞர்.

சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி

வலிஆகி, பின்னும் பயக்கும் – (5)

புல்லுநர் இல்லார் நடுங்க, சிறு மாலை,

கொல்லுநர் போல வரும் (17)

(புல்லுநர் = அணைக்கும் காதலர்) என்ற இந்நூலின் பகுதி,

காதலர் இல்வழி மாலை, கொலைக்களத்து

ஏதிலர் போல வரும்

(திருக்குறள் : 123 : 4)

என்ற திருக்குறளின் எதிரொலியாகும்.

பெண்களுக்கு இடக்கண் துடித்தல், நல்ல இடத்தில் பல்லி ஒலி செய்தல், நல்ல கனாக்கள் காணல் என்பன நல்லவை நிகழ்வதனை உணர்த்தும் அறிகுறிகள் என்று இந்நூலின் 41ஆம் செய்யுள் கூறுகின்றது. இது சமுதாய நம்பிக்கைகளின் வெளிப்பாடு.

3.3.5 திணைமாலை நூற்றைம்பது பதினெண்கீழ்க்கணக்கிலுள்ள அகநூல்களுள் பெரியது இதுவே. குறிஞ்சி முதலான அகத்திணை ஒழுகலாறுகளை வரிசைப்படுத்தி மாலைபோலத் தொகுத்து அமைத்தமையால் திணைமாலை ஆயிற்று. பாடல் எண்ணிக்கையால் திணைமாலை நூற்றைம்பதாயிற்று. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் எனத் திணை வரிசை அமைந்துள்ளது. ஒவ்வொரு திணைக்கும் முப்பது செய்யுட்கள் அமைந்திருத்தல் முறை. எனினும் குறிஞ்சி, நெய்தல், முல்லை என்னும் திணைகள் தலைக்கு 31 செய்யுட்களைப் பெற்றுள்ளன. மூன்று செய்யுட்கள் மிகைப்பாடல்களாகக் கருதத்தக்கனவாகும். இதிலுள்ள 153 செய்யுட்களுக்கும் பழைய உரை காணப்படுகிறது.

இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார். இவர் சமணர். மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் என்று இவர் அறியப்படுகிறார். தலைவியை, கோடாப்புகழ் மாறன் கூடல் அனையாள் (4) என இவர் குறித்தலால் இவர் மதுரையின்பாலும் பாண்டியன்பாலும், பேரன்புடையவர் என்பது உணரப்படும்.

இந்நூலின் மூன்று செய்யுட்களில் மாந்தர் நல்ல நாள் பார்த்துத் தம் கடமையாற்றுவது பற்றிய குறிப்புண்டு. (46, 52, 54) இவர் கணியர் என்பது இதனால் தெளியப்படும்.

அளகம், வகுளம், பாலிகை, சாலிகை, சுவர்க்கம், அலங்காரம் முதலிய வட சொற்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்நூலின் எட்டாம் செய்யுளில் காமவேளின் அம்புகள் ஐந்து என்ற குறிப்புள்ளது.

கடலுக்கும், கானலுக்கும் முறையே மாயவனும் பலராமனும், உவமையாகக் கூறப்பட்டுள்ளனர். (58) அவ்வாறே இருளுக்கும், நிலவுக்கும் இக்கடவுளர் உவமையாக்கப்பட்டுள்ளனர். (96, 97) இப்பிறவியில் செய்த நன்மை, தீமைகளின் பயன்களை அடுத்த பிறவியில் துய்ப்பர் என்ற நம்பிக்கைக்கு மாறாக, அப்பயன்களை இப்பிறவியிலேயே துய்க்க வேண்டும் போலும் என்ற கருத்தை இவர் வெளியிடுகிறார்.

இம்மையால் செய்ததை இம்மையே ஆம்போலும்

உம்மையே ஆம் என்பார் ஓரார் காண் (123)

சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரம், கலித்தொகை, சீவக சிந்தாமணி, திருக்குறள் முதலான நூல்களின் கருத்துக்களோடு ஒத்த பகுதிகளை இந்நூலில் காண முடிகிறது. இதனால், இந்நூல் காலத்தால் பிற்பட்டது என்ற உண்மை புலப்படுகின்றது.

இந்நூலுக்கு 127 ஆம் செய்யுள் வரை பழைய உரை கிடைக்கிறது. எஞ்சியவற்றுக்குக் கிடைக்கவில்லை. இந்நூல் உரையாசிரியர்கள் பலராலும் மேற்கோளாகக் காட்டப்பட்ட சிறப்புக்குரியது.

3.3.6 கைந்நிலை ‘கை’ என்பது ஒழுக்கம். இங்கு அகவொழுக்கத்தை இது குறிக்கும். ஐந்திணை ஒழுக்கம் பற்றிய நூல் என்பது ‘கைந்நிலை’ என்பதன் பொருள். திணைக்குப் பன்னிரண்டு வெண்பாக்கள் கொண்டது. எனவே இது ஐந்திணை அறுபது என்ற பெயர்க்குத் தகுதியானது. இதில் பாடல்கள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. இதன் 18 பாடல்கள் சிதைவுகளுடன் காணப்படுகின்றன.

ஆசிரியர்

இதன் ஆசிரியர் மாறோகத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். புல்லங்காடனார் இவரது இயற்பெயர். இவர் தந்தையார் காவிதிப்பட்டம் பெற்றவர் எனத் தெரிகிறது. மாறோகம் என்பது கொற்கையைச் சூழ்ந்த பகுதி. தென்னவன் கொற்கைக் குருகு இரிய என்ற தொடர் இந்நூலின் 60 ஆம் பாடலில் இடம் பெறுவதால் இவர் பாண்டியனால் ஆதரிக்கப்பட்டவர் என்று கருதலாம்.

சிறப்புச் செய்தி

அகப்பொருளைப்பாடுவதில் இந்நூலும் ஏனைய நூல்களையொத்தே காணப்படுகிறது. தாரா (40) பாசம் (3) ஆசை (3) இரசம் (5) கேசம் (12) இடபம் (36) உத்தரம் (48) முதலிய வடசொற்களை இதில் காணலாம்.

இதன் சில பகுதிகட்கு மட்டுமே உரை கிடைக்கிறது. இதன் செய்யுட்களை இளம்பூரணர் முதலான பழைய உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ளனர். இதிலுள்ள அழகிய பாடல்களுள் ஒன்று வருமாறு:

காந்தள் அரும்பகை என்று கதவேழம்

ஏந்தல் மருப்பிடைக் கைவைத்து இனன் நோக்கிப்

பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நாடன்

காய்ந்தான் கொல் நம் கண் கலப்பு ! (9)

(சுதவேழம் = யானை; மருப்பு = தந்தங்கள்; இனன் = இனம்; பயமலை = பயன் மிகுந்த மலை; காயந்தான் கொல் = வெறுத்தானோ?; கலப்பு = கூட்டுறவு)

3.4 போர் இலக்கியம்: களவழி நாற்பது

போர்க்கள நிகழ்ச்சிகளை நாற்பது வெண்பாக்களில் வருணித்துப் பாடும் நூல் களவழி நாற்பது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புறத்திணை சார்ந்த நூல் இஃது ஒன்றேயாகும்.

ஏரோர் களவழி அன்றிக் களவழித்

தேரோர் தோற்றிய வென்றியும்

என்பது தொல்காப்பிய நூற்பா. இது வாகைத்திணையின் உட்பிரிவுகளுள் ஒன்று. ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப்படுவது களவழி என்ற இலக்கிய வகை. கலிங்கத்துப் பரணி முதலியவற்றுள் இடம் பெறும் களம்பாடியது என்பதும் போர் வருணனையே.

களவழி நாற்பதில் உள்ள நாற்பது வெண்பாக்களும் ‘களத்து’ என்று முடிகின்றன. தொல்காப்பியம் கூறும் எட்டு வகை நூல் வனப்புக்களுள் இதுவும் அம்மை என்ற வகையைச் சார்ந்ததே.

நூலாசிரியர்

இதன் ஆசிரியர் பொய்கையார். சோழன் செங்கணானுக்கும், சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் நடந்த போர் பற்றியது இந்நூல். இப்போரில் சோழன் வென்றான். சேரன் சிறையில் வாடினான். பொய்கையார், இந்நூலைப் பாடிச் சோழனை மகிழ்வித்தார். அதற்குப் பரிசாகச் சேரன் விடுதலையை வேண்டிப் பெற்றார். இது இந்நூல் தோன்றியது குறித்த வரலாறு.

இச்செய்தியைக் கலிங்கத்துப் பரணி, தமிழ்விடுதூது, மூவர் உலா முதலிய நூல்கள் குறிப்பிட்டுள்ளன. மூவர் உலாவில் உள்ள ஒரு கண்ணி,

நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு

வில்லவன் கால் தளையை விட்டகோன்

(வில்லவன் = சேரன்; தளை = விலங்கு)

என்கிறது.

களவழிக் கவிதை பொய்கை உரை செய்ய உதியன்

கால்வழித் தளையை வெட்டி அரசு இட்ட அவனும்

(உரை செய்ய = பாட; உதியன் = சேரன்)

என்பது, கலிங்கத்துப் பரணி.

சிறப்புச் செய்திகள்

களவழி நாற்பதில் இப்பொழுது 41 செய்யுட்கள் உள்ளன. மிகையான ஒரு பாட்டுக்கும் பழைய உரை உள்ளது. இந்நூலில் நான்கடி வெண்பாக்களோடு பஃறொடை வெண்பாக்களும் உள்ளன. யானைப் போர் பற்றியே மிகுதியாகப் பாடுகிறது.

அழகிய தேரை அழித்து அதன் சக்கரத்தைத் துதிக்கையால் தூக்கி எழுந்த யானை, மாலைக் கதிரவனை உச்சியிலே கொண்ட மலைபோல் காட்சியளிக்கிறது என்கிறார் பொய்கையார்.

உருவக் கடுந்தேர் முருக்கி மற்று அத்தேர்

பருதி சுமந்து எழுந்த யானை – இருவிசும்பில்

செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால்

புல்லாரை அட்ட களத்து. (4)

(முருக்கி = அழித்து; பருதி = சக்கரம்; விசும்பு = ஆகாயம்; செல்சுடர் = மறையப்போகும் சூரியன்)

போர் தொடங்குவதற்கு முன்பு மைக்குன்று போல் தோன்றிய யானை, போர் முடிந்த பின்னர் இங்குலிகக் குன்றம் போல் காட்சியளித்ததாம்.

அஞ்சனக் குன்று ஏய்க்கும் யானை அமர் உழக்கி,

இங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே (7)

(அஞ்சனம் = கண் மை; இங்குலிகம் = செவ் அரக்கு)

வெட்டப்பட்ட யானையின் துதிக்கை குருதி வழியக் காட்சி தருகிறது. இது பவளத்தைச் சொரியும் பை போல் தோன்றுகிறது புலவர்க்கு. (14)

3.5 தொகுப்புரை

இதுகாறும் சொல்லப்பட்டவற்றைத் தொகுத்துக் காண்போம். தமிழகம் முதன் முதல் அயலவர்க்கு அடிமைப்பட்ட இருண்ட காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இக்காலம் கி.பி. 300 முதல் கி.பி. 600 வரையில் அமைந்தது.

கீழ்க்கணக்கு என்பதன் பொருளாவது குறைந்த அடிகளைக் கொண்ட செய்யுட்களைக் கொண்டு அமைந்தது என்பதாகும். பாட்டியல் நூல்கள் இதற்கு இலக்கணம் கூறுகின்றன.

இத்தொகுதியில் உள்ளவற்றை 1) நீதி உரைப்பன 2) காதலைப்பாடுவன 3) போரைச் சிறப்பிப்பது என மூன்று பிரிவில் அடக்கலாம்.

நீதிநூல்களே மிகுதியாகையால், இக் காலத்தை நீதி நூல்களின் காலம் எனலாம்.

அகவலும், கலியும், பரிபாடலும் செல்வாக்குப் பெற்றது சங்க காலம். வெண்பா செல்வாக்குப் பெற்ற காலம் இருண்ட காலம். இத்தொகுப்பிலுள்ள பலவும் ‘அம்மை’ என்னும் நூல் வனப்பைச் சார்ந்தவை.

இதிலுள்ள நூல்களில் வடசொற்களும், பிற்கால இலக்கணக் கூறுகளும் காணப்படுகின்றன. பழைய இலக்கியத்தின் கருத்தும், சொல்லும், தொடர்களும் புலவர்களால் எடுத்தாளப்படுகின்றன.

பாடம் - 4

காப்பியக் காலம்

4.1 சிலப்பதிகாரம்

தமிழில் வழங்கும் ஐம்பெருங்காப்பியங்களில் இது முதலாவதாக வைக்கப்பட்டுள்ளது. இக்காப்பியத்தின் தலைவியான கண்ணகியின் காலில் அணியப்பெற்ற சிலம்பே கதையின் நிகழ்விற்கு அடிப்படையானமையால் அவ்வணியின் பெயராலேயே காப்பியம் அழைக்கப்பட்டது. பூம்புகாரில் பெரும் புகழ்மிக்க வணிகர் குடியில் தோன்றிய கோவலனும், கண்ணகியும் இக்கதையில் தலைவனும் தலைவியுமாக அமைகின்றனர். அரசனால் தலைக்கோல் பட்டம் பெற்ற மாதவி இரண்டாம் தலைவி என்றும் நிலை பெற்றுள்ளாள். இவர்களைத் தவிர, பாண்டிய மன்னன், சேர மன்னன், கவுந்தியடிகள், ஆயர்குலமகள் மாதரி, அவள் மகள் ஐயை, கண்ணகியின் தோழி தேவந்தி, மாடலமறையோன், அரண்மனைப் பொற்கொல்லன் ஆகியோர் இதில் பாத்திரங்களாக அமைகின்றனர்.

4.1.1 நூலாசிரியர் சிலப்பதிகாரத்தைப் படைத்தவர் இளங்கோவடிகள். இவர் சமணர் என்பது பலர் கருத்து. ஆயினும் வைதீகச் சமயத்தவர் என்ற கருத்தும் உண்டு. இவர், சேரமான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இளைய மகன் என்றும், இவர்க்கு மூத்தவனே புகழ்மிக்க கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்றும் கூறுவர். இவர் வரலாறு, இந்நூலின் கடைசிக் காதையில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. சேரமான் அரசவைக்கு வந்த சோதிடன் ஒருவன், இளையவரான இளங்கோவுக்கே தம் தந்தைக்குப் பின்பு அரசனாகும் வாய்ப்பு உண்டு என்று கூற, அதுகேட்டு மூத்தவனான செங்குட்டுவன் மனம் வருந்தினான் என்றும், அதனைக் கண்ட இளங்கோ, தன் அண்ணன் ஆட்சி பெறும் வகையில் தாம் துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் தவம் செய்தார் என்றும் சிலப்பதிகாரம் சொல்கிறது.

செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டினன். எனவே, இளங்கோவடிகள் அக்காலத்தவரே என்பர். வரந்தரு காதையில் பத்தினி விழாவிற்கு வந்தவர்களுள் கடல்சூழ் இலங்கைக் கயவாகுவும் ஒருவனாக இடம் பெறுகிறான். இவன் காலம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு. எனவே, அடிகளும் அக்காலத்தவரே என்பர். ஆயினும் ஆராய்ச்சியாளர்கள் சிலர், இளங்கோவடிகள் கி.பி.5 அல்லது 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.

4.1.2 காப்பியத்தின் அமைப்பு இக்காப்பியம் (1) புகார்க் காண்டம் (2) மதுரைக் காண்டம் (3) வஞ்சிக் காண்டம் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு காண்டமும் பல உட்பிரிவுகள் கொண்டது. பெரும்பான்மையான பிரிவுகள் காதை என்ற பெயரும், சிறுபான்மையானவை பாடல், வரி, குரவை என்றும் பெயர் பெறுகின்றன. உரைப்பாட்டுமடை, உரைபெறு கட்டுரை என்ற உறுப்புக்களும், சில வெண்பாக்களும் இதனுள் உண்டு.

புகார்க் காண்டத்தில் பத்தும், மதுரைக் காண்டத்தில் பதின்மூன்றும், வஞ்சிக் காண்டத்தில் ஏழும் என உட்பிரிவுகள் அமைந்துள்ளன. நூலின் முகப்பில் பதிகம் என்ற உறுப்பும் உள்ளது. இது பின்னால் சேர்க்கப்பட்டது என்பர். இது சிலப்பதிகார நிகழ்ச்சிகளைத் தொகுத்துச் சொல்கிறது. இக்காப்பியம் மூன்று அடிப்படைக் கருத்துக்களைக் கூறுகிறது. அவையாவன:

1)அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்.

2)புகழ்மிக்க பத்தினியை உலகம் போற்றும்

3)ஊழ்வினை தவறாது வந்து தன் பலனை அடையச் செய்யும்

என்பனவாகும். இக்கதையை, இதன் ஆசிரியரான இளங்கோவடிகள் சொல்ல, அதனை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் கேட்டார் என்கிறது சிலப்பதிகாரம்.

4.1.3 கதைச் சுருக்கம் கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தில் புகழ் ஒங்கிய இரு வணிகர்களின் மக்களாகத் தோன்றியோர். இருவரும் மணந்து கொண்டு இனிதே இல்லறம் நடத்திவரும் காலத்தில், அந்நகரத்தில் கணிகையர் குடும்பத்தில் பிறந்த கலையரசி மாதவியின் அழகால் கவரப்பட்ட கோவலன் தன் மனைவியைத் தனியே விடுத்து மாதவி இல்லத்திலேயே வாழ்ந்தான். ஒரு நாள் கடற்கரை மணல் வெளியில் இருவரும் அமர்ந்து யாழ் வாசித்துப் பாடும்போது கோவலனுக்கு மாதவி மீது ஐயம் தோன்றிற்று. அவன் தன் வீடு நோக்கிச் சென்றான்; தன் குறைகளை வெளிப்படையாகக் கண்ணகியிடம் சொல்லி வருந்தினான்; தன் செல்வம் குறைவுற்றது பற்றிப் புலம்பினான்; இழந்த பொருளை மீட்க மதுரைக்குச் செல்ல விரும்பினான்.

கண்ணகி தன் விலையுயர்ந்த கால் சிலம்பை மூலப்பொருளாகக் கொடுத்தாள். இருவரும் கவுந்தியடிகள் என்னும் சமணப் பெண் துறவி துணையுடன் மதுரை அடைந்தனர். கண்ணகி, ‘மாதரி’ என்னும் இடையர் குலத்துப் பெண் வீட்டில் அடைக்கலப்படுத்தப்பட்டாள். கோவலன் ஒரு சிலம்பை மட்டும் எடுத்துக் கொண்டு மதுரைக்குச் சென்றான். பாண்டி மாதேவியின் சிலம்பைத் திருடிய கள்வனாக, ஒரு பொற்கொல்லனால் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, மன்னனால் கோவலன் கொல்லப்பட்டான். செய்தி அறிந்த கண்ணகி, பாண்டியன் அவையில் வழக்குரைத்துத் தன் கணவன் குற்றமற்றவன் என்று மெய்ப்பித்தாள். தன் பிழை உணர்ந்த பாண்டியன் உயிர் துறந்தான். சினம் அடங்காக் கண்ணகி மதுரையைத் தீக்கிரையாக்கினாள். மேற்கு நோக்கி நடந்து சேரநாட்டை அடைந்தாள். அங்கே ஒரு வேங்கை மரத்தடியில் அவள் நின்றபோது, தேவர்கள் வந்து இறந்த கோவலனை அவளுக்குக் காட்டி, தம் ஊர்தியில் அவர்களை ஏற்றி விண்ணுலகிற்கு இட்டுச் சென்றனர்.

இக்காட்சியைக் கண்ட குறவர்கள் மலைவளம் காண அங்கு வந்து தங்கியிருந்த சேரன் செங்குட்டுவனிடம் அதனைத் தெரிவித்தனர். உடனிருந்த அரசமாதேவியின் விருப்பப்படி அவன் கண்ணகிக்குச் சிலை நிறுவி, கோயில் கட்ட விரும்பினான்.

இமயமலையில் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி, தமிழர் வீரத்தைப் பழித்த கனகவிசயர் தலைமீது அதனை ஏற்றிவந்து, வஞ்சி மாநகரில் பத்தினிக் கோட்டம் நிறுவினான். அவ்விழாவிற்குத் தமிழரசர்களும் குடகுநாட்டுக் கொங்கரும், மாளுவ வேந்தரும், இலங்கை மன்னன் கயவாகுவும் வந்தனர். அவர்கள் வேண்டுதலை ஏற்று அவர்களின் நாட்டிலும் எழுந்தருளுவதாகப் பத்தினித் தெய்வம் வரம் கொடுத்தது. கண்ணகித் தெய்வம் செங்குட்டுவனுக்கும் பிறருக்கும் காட்சியளித்ததோடு பாண்டியன் குற்றமற்றவன் என்றும், தான் அவனுடைய மகள் என்றும், வென்வேலான்குன்றத்தில் தான் எப்போதும் விளையாடப் போவதாகவும் கூறி மறைந்தாள். தேவந்தியின் மேல் தோன்றி வரலாற்றைக் கூறினாள்.

4.2 சிலப்பதிகாரத்தின் சிறப்புச் செய்திகள்

இளங்கோவடிகளின் கற்பனைத் திறன், பக்தி இலக்கிய முன்னோடியாக அமைந்தமை, பத்தினியின் பெருமை, முத்தமிழ்த் தன்மை, வரலாற்றுச் சிறப்பு ஆகிய சிறப்புச் செய்திகளைப் பற்றிப் பார்ப்போம்.

4.2.1 இளங்கோவடிகளின் கற்பனைத் திறன் சிலப்பதிகாரம் உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று. ஒரு பேரிலக்கியத்தில் எதிர்பார்க்கும் அனைத்துச் சுவைகளும் இதில் உண்டு. அடிகளின் கற்பனை வளத்திற்குச் சில எடுத்துக்காட்டுக்கள் காண்போம்.

அடிகளின் கற்பனைத் திறத்திற்கு நல்ல சான்றாக அமைவது அவருடைய வையை வருணனையாகும். வையை என்னும் பொய்யாக் குலக்கொடி, புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி என்று புகழும் அடிகள், அக்கொடியின் பேரழகினை வருணிக்கும் அழகே அழகு!

இவ்வாறே மதுரைக் கோட்டையின் மீது பறக்கும் பாண்டியனின் வெற்றிக் கொடிகளைப் பாராட்டும் அடிகள்,

போருழந்து எடுத்த ஆர்எயில் நெடுங்கொடி

வாரல் என்பன போல் மறித்துக்கை காட்ட

(மதுரைக்காண்டம், புறஞ்சேரியிறுத்த காதை,

வரிகள்: 189-190)

என்றார். பாண்டியன் கோட்டை மீது நாட்டிய வெற்றிக் கொடிகள், கண்ணகிக்கும், கோவலனுக்கும் விரைவில் வரப் போகும் துயரத்தை மனம் கொண்டு அவர்களை நோக்கி “மதுரைக்கு வாராது நீங்குக” என்பது போல் மறித்து ஆடின என்கின்றார். இவ்வாறே வையை, தன் உடம்பைப் பூவாடையால் போர்த்துக் கொண்டும், தன் கண்ணீரை அடக்கிக் கொண்டும் சென்றாள் என்கிறார். அடிகளின் கற்பனை ஆற்றலை வரிப்பாடல்களால் தெளிவாக உணரலாம்.

4.2.2 பக்தி இலக்கிய முன்னோடி அடிகளின் ஆய்ச்சியர் குரவையும், வேட்டுவ வரியும், குன்றக் குரவையும் பல்லவர் காலத்துப் பக்திப் பாடலாசிரியர்களாம் நாயன்மார்கட்கும் ஆழ்வார்கட்கும் வழிகாட்டியாய் அமைகின்றன. பின்வரும் பாடல்களைக் காண்க.

மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்

தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் தான் போந்து

சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த

சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே

திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!

(மதுரைக்காண்டம், ஆய்ச்சியர் குரவை)

இது திருமால் துதியாகும்.

அணிமுகங்கள் ஓராறும் ஈராறு கையும்

இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே

பிணிமுகம் மேற் கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம்

அணிவிசும்பின் கோன் ஏத்த மாறட்ட வெள்வேலே

(மதுரைக்காண்டம், குன்றக் குரவை)

இது முருகப் பெருமான் புகழ்ச்சியாகும்.

4.2.3 பத்தினியின் பெருமை பெண்ணின் பெருமை பேச வந்த காப்பியம் சிலப்பதிகாரமாகும். மதுரை மாநகரைக் காவல் செய்த மதுராபதி தெய்வம் கண்ணகியின் முன் தோன்றுவதற்கு அஞ்சுகிறது. பின்பக்கமாக நின்று பேசுகிறது. தீக்கடவுள் அவள் ஏவல் கேட்கின்றது. தேவர்கள் விண்ணூர்தியில் வந்து கண்ணகியை அழைத்துச் செல்கின்றனர். இப்படித் தெய்வங்கட்குத் தெய்வமாகக் கண்ணகியைக் காட்டுகிறார் அடிகள். விண்ணரசு போற்றும் தெய்வத்தை மண்ணரசர் போற்றுவதில் உயர்வில்லையே! சேரன் எடுத்த பத்தினிக் கோட்டத்திற்குக் கொங்கரும், ஈழ மன்னரும் வருகின்றனர்; மாளுவ நாட்டரசன் வருகின்றான். இப்படி, பத்தினி வழிபாட்டை முதன் முதலாக அறிமுகம் செய்கிறார் இளங்கோவடிகள்.

வானம் பொய்யாது வளம்பிழைப்பு அறியாது

நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது

பத்தினிப் பெண்டிர் இருந்தநாடு.

(மதுரைக்காண்டம், அடைக்கலக்காதை, வரிகள்: 145 -147)

என்பது அடிகள் வாக்கு.

கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது

பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்

(மதுரைக்காண்டம், அடைக்கலக்காதை, வரிகள்: 143 -144)

என்று கண்ணகியை ஒரு முழுமுதல் தெய்வமாகத் துறவியான கவுந்தியடிகளைச் சொல்ல வைத்துள்ளார் அடிகள்.

4.2.4 முத்தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரத்திற்குப் பல சிறப்புகள் உண்டு. அவற்றுள் ஒன்று அது முத்தமிழ்க் காப்பியம் என்பது. செஞ்சொற்களால், கற்பனை சிறக்கப் பாடப்பட்ட இயற்றமிழ்க் காப்பியத்தில் முத்தமிழின் சிறந்த கூறுகளான இசைத்தமிழ்க் கூறுகளும் நாடகத்தமிழ்க் கூறுகளும் செறிந்து கிடக்கின்றன.

பண்டையத் தமிழக மக்கள் நாட்டுப்புறங்களில் பாடியும், ஆடியும் களித்தனர். அக்களிப்பினை நேரில் கண்ட அடிகள் அவர்தம் ஆடலுக்கும், பாடலுக்கும் முதன்முறையாக இலக்கிய வடிவம் தந்தார். அவைகளே கானல் வரியும், வேட்டுவ வரியும், ஆய்ச்சியர் குரவையும், அம்மானையும், கந்துக வரியும், ஊசல் வரியும்.

தமிழிசையின் கூறுகளான பண், திறம், தூக்கு ஆகியனவும், குரல், முதலிய ஏழு சுரங்களும், ஏழு பாலைப் பாடல்களும், பாடலாசிரியன், யாழாசிரியன், குழலாசிரியன் தண்ணுமை ஆசிரியன் ஆகியோரின் இலக்கணங்கள் ஆகியவையும் அரங்கேற்று காதையில் விளக்கப்பட்டுள்ளன.

இவ்வாறே மாதவி ஆடிய அல்லியம், கொடுகொட்டி, பாண்டரங்கம், முதலிய பதினொருவகை ஆடலையும் தேசி, மார்க்கம், வேத்தியல், பொதுவியல் என்று பாகுபாடு செய்யப்பட்ட பல்வேறு ஆடல் மரபுகளையும் ஆசிரியர் இக்காதையில் விளங்கியுள்ளார்.

நாடக மேடையின் அமைப்பு, அதில் தூணின் நிழல் புறம்படுமாறு விளக்கமைத்தல், மூன்று வகையான திரைச்சீலைகள் முதலிய கூறுகள் பலவற்றையும் ஆசிரியர் இந்நூலில் பொதிந்து வைத்துள்ளார்.

குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்

தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்

பின்வழி நின்றது முழவே முழவொடு

கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை

(புகார்க்காண்டம், அரங்கேற்றுக்காதை, வரிகள்: 139 -142)

என்ற பகுதி பல கருவிகளும் கூடி இசைக்கும் அழகைக் கூறுவது காண்க.

குடிமக்கள் காப்பியம்

உலகமொழிகள் பலவற்றிலும் காப்பியங்கள் உண்டு. அவையாவும் பெரும்பாலும் மன்னர் குடும்பத்தினரையே தலைமக்களாய்க் கொண்டவை. ஆனால் தமிழின் முதற்காப்பியமோ குடிமக்கள் காப்பியமாகத் திகழ்கின்றது. நாடாளும் மன்னன், குடிமக்களுள் ஒரு பெண்ணிடம் தோற்றுப் போகிறான். முடி மன்னர்களுக்கு வரம் கொடுக்கும் கடவுளாகக் குடிமகள் ஒருத்தி உயர்ந்து நிற்கிறாள் என்று காட்டும் சிலம்பு தனிச்சிறப்பு மிக்க காப்பியமாம்.

4.2.5 ஒற்றுமைக் காப்பியம் தமிழின ஒற்றுமையையும், சமய ஒற்றுமையையும் வலியுறுத்தும் முதற்காப்பியம் சிலப்பதிகாரம்.

தமிழ் இன ஒற்றுமை

சிலப்பதிகாரமே முதலில் தமிழகத்தை ஒன்றாகக் கண்டது; தமிழன் என்ற இன உணர்ச்சிக்கு வித்திட்டது; பிறவிப் பகைவர்களாகத் தம்முள் போரிட்டழிந்தனர் தமிழ் மன்னர்கள். அடிகளோ பாண்டியன் அவல முடிவைக் கேட்டுச் சேரன் வருந்துவதனைக் காட்டியுள்ளார். தமிழரசர் வீரத்தை இகழ்ந்த ஆரிய மன்னரை அடக்க ஒன்றுபட்ட தமிழ் இனத்தின் சார்பாளனாக வடநாடு சென்றான் சேரமன்னன்.

வாழ்த்துக் காதையில் சேரநாட்டுப் பெண்கள் சோழநாட்டுப் பெண்களோடு கூடிநின்று மூவேந்தர் புகழையும் பாடி மகிழ்கின்றனர். இப்படி, தம் காப்பியத்தைக் கருவியாகக் கொண்டு ஒன்றுபட்ட தமிழகத்தை நமக்கு முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்த இளங்கோவடிகள் பாராட்டுக்கு உரியவர்.

சமய ஒற்றுமை

சிலம்புக்குள்ள இன்னொரு சிறப்பாவது அது சமயங்களுக்கிடையே சகிப்புத் தன்மையை வற்புறுத்துவதாக அமைந்துள்ளது. அடிகள் சமணர். ஆனால் பிற சமய வெறுப்பை ஓரிடத்தும் காட்டவில்லை. சமணத் துறவி கண்ணனை வழிபடும் மாதரியிடம் மதிப்புக் கொண்டுள்ளார். மாதரியும் சமணத் துறவியைக் கண்டு காலில் வீழ்ந்து பணிகின்றாள். குன்றக் குரவையில் முருகனையும், வேட்டுவ வரியில் கொற்றவையையும், ஆய்ச்சியர் குரவையில் திருமாலையும் அடிகள் வாழ்த்துகிறார். அவ்வக் கடவுளையும் பாடும்பொழுது சமமான பக்தி கொண்டவராக அடிகள் தோன்றுகின்றார். சாவக நோன்பியான கோவலன் வைதீக அந்தணர்களிடம் பரிவு காட்டுகிறான்; அவர்களுக்குச் செல்வத்தை வாரி வழங்குகின்றான். மாடல மறையோன் என்ற அந்தணன் கோவலனை உளமார வாழ்த்துகின்றான். இங்ஙனம் பல நிலையினரும் பகையின்றிக் கூடி வாழும் இனிய நிலையினை ஒரு சமரச ஞானியைத் தவிரப் பிறர் யாரும் காட்ட முடியாது.

4.2.6 வரலாற்றுப் பெட்டகம் எல்லாவற்றுக்கும் மேலாக, சிலப்பதிகாரம் பண்டைத் தமிழரின் வரலாற்றையும், பண்பாட்டையும் உணர உதவும் பெட்டகமாக விளங்குகின்றது. சேர சோழ பாண்டிய மரபினர் பலருடைய போர் வெற்றியும், அவர் தம் தலைநகர்களின் அமைப்பும், வளமும், தமிழரின் வணிகச் சிறப்பும், சமய வாழ்க்கையும், கலைமரபும், நம்பிக்கையும், பழக்க வழக்கங்களும் மிக விரிவாக விளக்கப்பட்ட ஒரு தலைசிறந்த காப்பியமாகச் சிலப்பதிகாரம் விளங்குகின்றது. தமிழர் திருமணத்தில் நான்மறை அந்தணர் சடங்கு செய்தலைச் சிலப்பதிகாரமே முதலில் கூறுகின்றது. இந்திரவிழாவைத் தமிழர் கொண்டாடியது பற்றிய விரிவான செய்தி இந்நூலில் தான் முதன்முதல் சொல்லப்படுகிறது. தமிழரின் இசை, கூத்து ஆகிய கலைகள் பற்றிய முழுமையான செய்திகளை விரிவாகத் தருவதும் இந்நூலேயாகும். சுருங்கச் சொன்னால் சிலப்பதிகாரம் தமிழர் தம் அரசியல், மற்றும் பண்பாட்டு வரலாற்றுப் பெட்டகம் ஆகும்.

4.3 மணிமேகலை

தமிழில் வழங்கும் ஐம்பெருங்காப்பியங்களுள் இது இரண்டாவது. சிலப்பதிகாரத் தலைவன் கோவலனுக்கு மாதவியிடத்துப் பிறந்தவளான மணிமேகலையைக் காவியத் தலைவியாகக் கொண்டமையால், அவள் பெயராலேயே இந்நூலும் அறியப்படுகிறது. மணிமேகலை துறவு என்பது ஆசிரியர் இட்ட பெயர் என்று கூறுவர். இது சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் பாத்திரங்கள் பல இதிலும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தின் கதையென்பதால், சிலப்பதிகார சாரத்தையும் இதனையும் இணைத்து இரட்டைக் காப்பியங்கள் என வழங்குவர்.

4.3.1 நூலாசிரியர் இதனை இயற்றியவர் வளம்கெழு கூலவாணிகன் சாத்தன், மதுரைக் கூல வாணிகன் சாத்தன், சீத்தலைச் சாத்தன் என்று பலவாறு கூறப்படுகிறார். அகநானூறு, நற்றிணை, புறநானூறு ஆகிய நூல்களில் சில செய்யுட்களை இயற்றியவரும் கூலவாணிகன் சாத்தன் எனப்படுகிறார். ஆயினும் இவர் மணிமேகலை ஆசிரியரிலிருந்து வேறானவர் என்பர்.

சீத்தலை என்னும் ஊரினரான இவர், மதுரையில் பதினெண் கூலங்களை விற்று வாழ்ந்தார் (கூலம்-தானியம்) என்பது பற்றிக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் எனப்பட்டார். பிழையான செய்யுட்களைக் கேட்டபோதெல்லாம் எழுத்தாணியால் குத்திக் கொண்டமையால், அவர் தலையில் எப்பொழுதும் சீழ் நிறைந்திருந்தது என்றும், அதனால் அவர் சீத்தலை என்ற அடைமொழி பெற்றார் என்றும் கூறுவர். இது தவறான கருத்தாகும்.

இவர் இளங்கோவடிகளின் நண்பர் என்றும், அவர் படைத்த சிலம்பை முதலில் கேட்டவர் இவரே என்றும் கூறுவர். அவ்வாறே, இவருடைய இக்காவியத்தை இளங்கோவடிகள் கேட்டார் என்பர். இதனை மறுப்பார் உளர்.

4.3.2 மணிமேகலையின் அமைப்பு மணிமேகலை ‘விழாவறை காதை’ முதல் ‘பவத்திறம் அறுக எனப் பாவைநோற்ற காதை’ முடிய முப்பது காதைகள் கொண்டது. இது சிலப்பதிகாரம் போல் பல செய்யுள் வகைகளைக் கொண்டதன்று. இது முழுவதும் அகவற்பாவாலான காவியமாகும்.

இதற்கும் சிலப்பதிகாரத்திற்கு உள்ளவாறே ஒரு பதிகம் அமைந்துள்ளது. இது, கதை நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறுகிறது. மணிமேகலை துறவு என்ற பெயர் இதில்தான் காணப்படுகிறது.

4.3.3 கதைச் சுருக்கம் கோவலன் மதுரை மன்னனால் கொல்லப்பட்ட செய்தி கேட்ட மாதவி, உலக வாழ்வை வெறுத்தாள்; புத்தர் நெறியைத் தழுவினாள். மேலும் அழகும் இளமையும் கொண்ட தன் மகள் மணிமேலையையும் துறவியாக்கினாள். புகாரில் இந்திர விழா வந்தது. புத்தபகவானை வழிபட மலர் பறிக்க மணிமேகலையும் அவள் தோழி சுதமதியும் உவ வனத்திற்குச் (பூங்காவிற்குச்) சென்றபோது சோழ இளவரசன் உதயகுமரன் அவளைப் பின் தொடர்ந்தான். மணிமேகலை ஒரு பளிங்கு அறையுள் புகுந்து தப்புகிறாள்.

இந்திரவிழாக் காண வந்த மணிமேகலா தெய்வம் அவளை வான்வழியே எடுத்துச் செல்கிறது. மணிபல்லவத் தீவில் அவளுக்குப் பழம்பிறப்பை உணர்த்துகிறது. தீவதிலகை என்பவள் அறிவுரைப்படி மணிமேகலை அமுதசுரபி என்னும் அற்புதப் பாத்திரத்தைப் பெற்று மீண்டும் புகார் நகருக்கு வருகிறாள். தன் தாயுடனும், சுதமதியுடனும் அறவண அடிகளைச் சந்திக்கிறாள். அவர் அவளுக்கு ஆபுத்திரன் கதையை எடுத்துரைக்கிறார். பசிப்பிணி நீக்கும் அறத்தைச் செய்யுமாறு அறிவுறுத்துகின்றார். காயசண்டிகை என்பாள் அறிவுரைப்படி ஆதிரையிடம் முதற் பிச்சை பெறுகிறாள்.

ஆதரவு அற்றவர்களுக்கும், காலில்லார், கண்ணில்லார், காது கேளாதார் முதலியோர்க்கும் உணவளிக்கும் அறப்பணியைத் தொடர்கிறாள். உலக அறவி என்ற இடத்திற்கு அவள் சென்றபொழுது, உதயகுமரன் அவளைத் தொடர்கிறான். தன் மந்திர வலிமையால் காயசண்டிகை வடிவத்தை அவள் மேற்கொள்கின்றாள். சிறைச்சாலைக் கைதிகட்கு உணவூட்டுகிறாள். அரசன் இவள் அறிவுரை கேட்டுச் சிறையை அறச்சாலை ஆக்குகிறான்.

காயசண்டிகை வடிவில் இருப்பவள் மணிமேகலையே என்று உணர்ந்த உதயகுமரன் அவளை மீண்டும் காணப் போனபோது, அவள் அவனுக்கு அறிவுரை கூறுகிறாள். அப்போது காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் என்பவன் கைவாளால் உதயகுமரன் இறக்கிறான். மணிமேலை சிறை செய்யப்பட்டு பல துன்பங்கட்கு ஆளாக்கப்படுகிறாள். அரசமாதேவி செய்த தீமைகளையெல்லாம் தன் தவ வலிமையால் வென்று அவளுக்கு அறிவுரை கூறுகின்றாள். எல்லா உயிர்க்கும் அன்பு செய்யுமாறு அவளுக்கு அறிவுறுத்துகின்றாள்.

பின்னர் ஆபுத்திரன் அரசனாக ஆளும் நாகபுரம் செல்கிறாள். அவனுடன் மணிபல்லவத்திற்கு வருகிறாள். ஓர் ஆண் வடிவம் தாங்குகின்றாள். பல சமயவாதிகளிடம் அவரவர் சமயத் தத்துவங்களையும் கேட்டறிகின்றாள். கச்சி மாநகரில் இருந்த அறவண அடிகளைத் தன் தாயுடன் அடைகிறாள்; அவரை வணங்குகின்றாள். அவர் அவளுக்குப் புத்த தருமத்தைப் போதித்தார். இறுதியாகத் தவ நெறியை மேற்கொண்டு, தன் பிறவிப் பிணி நீங்குமாறு முயல்கின்றாள்.

இக்காவியத்தில் ஆதிரை, ஆபுத்திரன், சுதமதி, விசாகை, மருதி முதலானோர் பற்றிய கிளைக்கதைகளும் உண்டு. இவை மூலக்கதையோடு தொடர்புற்றுக் கதைக்குச் சுவையூட்டுகின்றன.

4.4 மணிமேகலையின் மாண்புகள்

தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம், பத்தினியின் சிறப்பைக் கூறும் காப்பியம், சீர்த்திருத்தக் கொள்கை உடைய காப்பியம், பசிப்பிணியின் கொடுமையை எடுத்தியம்பும் காப்பியம், பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழும் காப்பியம், கற்பனை வளம் மிகுந்த காப்பியம் என்ற பெருமைகளெல்லாம் மணிமேகலைக்கு உண்டு.

4.4.1 சமயக் காப்பியம் தமிழில் தோன்றிய பழைய இலக்கியமான சங்க இலக்கியம் சமயச் சார்பற்றது. சிலப்பதிகாரத்தில் பல சமயச் சிந்தனைகள் சொல்லப்பட்டாலும், எச்சமயத்தையும் பரப்பும் நோக்கம் அதன் ஆசிரியர்க்கு இல்லை. ஆனால் மணிமேகலை, பௌத்த சமயத்தைப் பரப்புதலையே முதன்மை நோக்கமாகக் கொண்டது. இத்தகைய சிறப்புப் பெற்ற முதல் நூல் மணிமேகலை.

சமயத் தத்துவம்

சாத்தனார் தம் காலத்தில் தமிழகத்தில் அறிமுகமாகியிருந்த பல்வேறு சமயத் தத்துவ மரபுகள் அனைத்தையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மரபுகளாவன சைவம், வைணவம், வைதீகம், ஆசீவகம், நிகண்டம், சாங்கியம், வைசேடிகம், பூதவாதம் ஆகியனவாகும்.

புத்தபெருமான்

புத்த பெருமானின் புகழை இக்காப்பியம் முழுவதும் நாம் காணலாம். ஐந்தாம் காதையும் பதினோராம் காதையும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. இவ்விரு காதைகளிலும் புத்த பெருமான் அருளறம் பூண்டவர், அறவழியை ஊட்டியவர், காமனைக் கடந்தவர், தனக்கென வாழாதவர், பிறர்க்கென வாழ்பவர், துறக்கமும் வேண்டாதவர், தீய சொற்களைக் கேட்க விரும்பாதவர் என்று பலவாறு புகழப்பட்டுள்ளார்.

நிலையாமை

யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை ஆகியவற்றை இக்காவியம் ஆழமாகக் கற்பிக்கின்றது. சக்கரவாளக் கோட்டத்தை இதற்காகவே புலவர் அறிமுகம் செய்தார்.

இளமையும் நில்லா யாக்கையும் நில்லா

வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்

மிக்க அறமே விழுத்துணை ஆவது

(மணிமேகலை, சிறைசெய் காதை, வரிகள் : 135 – 138)

என்பது சாத்தனார் அறிவுரை.

4.4.2 பத்தினியின் சிறப்பு கண்ணகி வாயிலாகப் பத்தினிப் பெண்ணின் தெய்வீக ஆற்றலை இளங்கோவடிகள் காட்டினார். அவள் தீயை ஏவ, அத்தீ மதுரையை எரித்தது. ஆனால் சாத்தனார் படைத்த ஆதிரையைத் தீயும் நெருங்க அஞ்சிற்று. இது சாத்தனார் வெளிப்படுத்தும் கற்பின் மாண்பு. அரசர் முறை செய்யவில்லையேல், பெண்களுக்குக் கற்பு சிறக்காது என்றும் கூறுகின்றார். கணவன் இறந்தவுடன் உயிர் விடும் தலையாய கற்புடையாரையும், உடன்கட்டையேறி உயிர்விடும் இடையாய கற்புடையாரையும், கைம்மை நோன்பு இயற்றி மறுமையிலும் கணவனைக் கூடத் தவம் புரியும் கடையாய கற்புடையாரையும் இவர் அறிமுகப்படுத்துகின்றார்.

4.4.3 சீர்திருத்தக் கொள்கை மணிமேகலை மாபெரும் சீர்திருத்தக் காப்பியமாகும். சங்க காலத்தில் பெருவழக்காக இருந்த கள்ளும், ஊன் உணவும் சமண பௌத்த சமயங் களால் பெரிதும் கண்டிக்கப்பட்டன. இவ்வகையில் திருவள்ளுவர்க்கு அடுத்தபடியாகச் சிறந்து நிற்பவர் சாத்தனாரே. சாதுவன், நாகர்குருமகனுக்குக் கூறிய அறிவுரைகள் பல. அவற்றுள் இன்றியமையாதவை கள்ளும் ஊனும் கைவிடத்தக்கவை என்பதாகும்.

மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்

கயக்கு அறு மாக்கள் கடிந்தனர்

(ஆதிரை பிச்சையிட்டகாதை, வரிகள் : 84-85)

என்றும்,

மூத்துவிளி மாவொழித்து எவ்வுயிர் மாட்டும்

தீத்திறம் ஒழிக,

(மேற்படி வரிகள்: 116-117)

என்றும் கூறிய சாதுவன்,

நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்

அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்

உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்

(மேற்படி வரிகள்: 88-90)

என்று அதன் பலனையும் எடுத்துக் கூறினான்.

பரத்தையாகப் பிறந்தவளும், உலகம் போற்றத்தக்க பத்தினியாக வாழமுடியும் என்பதனை மாதவியின் வாழ்வின் மூலம் நிறுவினார் சாத்தனார். அவ்வாறே பரத்தைக்கு மகளாகப் பிறந்தவளாலும் உலகம் போற்றும் அறச் செல்வியாக வாழ முடியும் என்று மணிமேகலை வாயிலாக உணர்த்தினார். ஒழுக்கம் இல்லாத பெண்ணின் மகன் ஆபுந்திரன் பசிப்பிணி மருத்துவனாக உயர்ந்து நிற்றலைச் சாத்தனார் காட்டுகின்றார். பிறப்பால் உயர்ந்தவன் அல்லாத ஆபுத்திரன், வேதம் பயின்ற அந்தணர்கட்கு உண்மையையும் ஒழுக்கத்தையும் உணர்த்துகின்றான். பரத்தைமை யொழுக்கம் மேற்கொண்ட ஆடவர்கள் தம் செல்வம் இழந்து சிறப்பிழந்து அவலம் உறுவர் என்பதனைச் சாதுவன் வாயிலாக உணர்த்தியுள்ளார்.

4.4.4 பசிப்பிணி நீக்கல் மணிமேகலைக் காப்பியம்,

பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்க

(மணிமேகலை, பதிகம், வரிகள்: 116-117)

என வாழ்த்தித் தொடங்குகின்றது.

அறம் எனப்படுவது யாது எனக் கேட்பின்,

மறவாது இது கேள், மன்னுயிர்க்கு எல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டது இல்

(பாத்திரம் பெற்ற காதை, வரிகள்: 116-117)

என்பது சாத்தனார் கோட்பாடாகும். எனவே தான் ‘மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ (பாத்திரம் பெற்ற காதை, வரிகள் 95-96) என்பதனையே பாவிகமாகக் கொண்டு காவியம் பாடினார் சாத்தனார். அவர் பசியின் கொடுமையைப் பின்வருமாறு விளக்குவார்.

குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

நாண்அணி களையும் மாண் எழில் சிதைக்கும்

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவி

(பாத்திரம் பெற்ற காதை, வரிகள்:76-80)

இக்கொடுமையை ஒழித்தலே உலகிலுள்ள அறத்திலெல்லாம் சிறந்தது என்பதனை,

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

(மேற்படி வரிகள்: 92-94)

என்று வற்புறுத்துகின்றார். மேலும் பிறர் உதவியில்லாமல் வாழ முடியாத குருடர், செவிடர், முடவர் முதலியவர்க்கு உதவுதலே உயர்வு என்பார்.

காணார் கேளார் கால்முடப் பட்டோர்

பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர்

யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி

உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலைமடுத்துக்

கண்படை கொள்ளும் காவலன்

(ஆபுத்திரன் அறிவித்த காதை, வரிகள்: 111-115)

என்ற பகுதியில், ஆபுத்திரன், இயலாத மக்கள் உண்டது போக, மிஞ்சியிருந்த உணவினை உண்டு உறங்கினான் என்கின்றார்.

இங்ஙனம் பசியின் கொடுமையை எடுத்துக்காட்டி, அதை ஒழிப்பதே பேரறம் என்று வற்புறுத்துதற்கு ஒரு காவியத்தைப் படைத்த மாபெரும் புலவனை உலகில் வேறு எங்கும் காண முடியாது.

4.4.5 பண்பாட்டுப் பெட்டகம் தமிழ்ப்பண்பாட்டுக் கருவூலமாக மணிமேகலை விளங்குகின்றது. புகார், வஞ்சி ஆகிய நகர்களின் பண்பாட்டுச் சிறப்பு அழகாகக் காட்டப்பட்டுள்ளது. அறங்கூறவையம், ஐம்பெருங்குழு, எண்பேராயம் முதலியவையும், பொற்கொல்லர், தச்சர், குயவர், மணித்தொழிலாளர்,ஓவியர் முதலான பல்வினைஞர் தம் இயல்பும், திறமும் விளக்கப்பட்டுள்ளன. மாதவியின் திறன் பற்றிக் கூறுமிடத்தில் நாட்டியக் கலைஞர்க்குரிய அறுபத்து நான்கு கலைகளும் விளக்கப்பட்டுள்ளன. பத்தினிப் பெண்டிரின் வரலாறுகள் பல இடம் பெற்றுள்ளன. அரசியல் அறம் குறித்த செய்திகளும், ஆன்மீகச் செய்திகளும் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளன. திருவிழாக்கள், பொழுது போக்குகள் முதலியனவும் விளக்கம் பெற்றுள்ளன.

4.4.6 சாத்தனாரின் கற்பனைத் திறன் மணிமேகலை, சிலம்பைப் போல் கலைத்தன்மை கொண்ட நூலன்று. மாறாக, இது அறத்தன்மை கொண்ட நூல். ஆயினும், சாத்தனார் தம் கலையுணர்வையும், கற்பனை ஆற்றலையும் ஆங்காங்கே காட்டத் தவறினாரல்லர். மலர் வனம் புக்க காதையில், உவவனத்தின் அழகை விளக்குகையில், பின்வருமாறு அதனை வருணிக்கின்றார்.

குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்

திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்

நரந்தமும் நாகமும் பரந்துஅலர் புன்னையும்

பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்

குடகமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்

செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்

எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி

வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்

சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே

ஒப்பத் தோன்றிய உவ வனம்.

(மலர்வனம் புக்க காதை, வரிகள் : 160-169)

இந்நூலின் ஐந்தாம் காதை, புகார் நகரத்தையும் அந்திப் பொழுதையும் வருணிக்கும் அழகே அழகு. அந்திப் பொழுதை, கணவனைப் போர்க் களத்தில் இழந்தபின், தாய்வீடு புகும் ஒரு பெண்ணோடு ஒப்பிடும் சாத்தனாரின் புனைதிறனை எண்ணி மகிழ்வோம்.

4.5 தொகுப்புரை

இதுவரை கூறிய செய்திகளை இங்குத் தொகுத்துக் காண்போம்.

சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியம். அதற்கு அடுத்து இடம் பெறுவது மணிமேகலையாகும். கதைத் தொடர்புடைய இவை இரட்டைக் காப்பியங்கள் எனப்படுகின்றன. இவற்றை யாத்த இளங்கோவடிகளும் சாத்தனாரும் நண்பர்கள் என்பர். ஒருவர் நூலை மற்றவர் கேட்டதாகக் கூறுவர். இவர்கள் வாழ்ந்த காலம் சங்க காலமே என்ற கருத்து நிலவினாலும், இவர்கள் சற்றுப் பின்னால் வாழ்ந்தவர் என்று பலர் கருகின்றனர். இதில் கிளைக்கதைகள் சில இடம் பெற்றுள்ளன.

சிலப்பதிகாரம் குடிமக்கட்குச் சிறப்புத் தந்த காப்பியம். அது இயல் இசை, நாடகம் என்ற மூன்றையும் சிறப்பித்த முத்தமிழ்க் காப்பியம். தமிழகத்தை முழுமையாகப் பார்க்கும் தமிழ்த் தேசியக் காப்பியமாகவும் இது விளங்கும். சமயப் பொதுமை போற்றுவதாகவும், வரலாற்றுக் காப்பியமாகவும், பத்தினியைப் போற்றும் பெண்மைக் காப்பியமாகவும் தமிழர் பண்பாட்டின் பெட்டகமாகவும் இது விளங்குகின்றது.

மணிமேகலை மாதவி பெற்ற மகள். அவள் துறவைக் கூறும் மணிமேகலைக் காப்பியம் தமிழின் முதல் சமயக் காப்பியமாகும். மணிமேகலை, சிலப்பதிகாரம் தோன்றிய காலத்ததாகவே கருதப்படுகிறது. மணிமேகலை 30 காதைகள் கொண்டது. இதில் வேறு பலரின் வரலாறுகளும் அடங்கும். அக்காலத்தில் இருந்த சமயங்களின் தத்துவங்களை உணர இந்நூல் உதவுகிறது. புத்தரின் பெருமைகள் இதில் பரவலாகச் சொல்லப்பட்டுள்ளன. யாக்கை, செல்வம், இளமை முதலிய நிலையாமைகளைச் சொல்லி அறத்தை வற்புறுத்துகிறார் சாத்தனார். பசிப்பிணியின் கொடுமையையும், அதனைப் போக்குவார் பெருமையையும் இது கூறுகிறது. மது ஒழித்தலையும், ஊன் உண்டலைத் தவிர்த்தலையும் இது வற்புறுத்துகிறது. சாத்தனார் சிறந்த கற்பனை வளம் கொண்டவர். மணிமேகலை, பழந்தமிழர்களின் பண்பாட்டை அறிவிப்பதில் சிறந்து நிற்கிறது.

பாடம் - 5

சைவ இலக்கியத் தோற்றக் காலம்

5.0 பாட முன்னுரை

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகம் முதன்முறையாக அயலவர்க்கு அடிமையாயிற்று. பாண்டிய நாடும் சோழநாடும் களப்பிரர் என்ற கூட்டத்தார்க்கு அடிமைப்பட்டன. நடுநாடும் தொண்டைநாடும் பல்லவர்க்கு அடிமைப்பட்டன. இவர்கள் இருவரும் வேற்றுமொழியினர். பிராகிருதம் இவர்களின் ஆட்சிமொழியாயிற்று. பாலிமொழியும் வடமொழியும் இவர்களால் பேணப்பட்டன. தமிழ் வளர்ச்சி இதனால் தடைப்பட்டது. சமணமும் பௌத்தமும் வைதீக மதத்தை எதிர்த்துப் போராடிய காலம் இதுவாகும். காஞ்சியில் வடமொழிக் கல்லூரி செயல்பட்டது. அது கடிகா எனப்பட்டது. புதுச்சேரியை அடுத்த பாகூரிலும், தொண்டை நாட்டுச் சோழ சிங்கபுரத்திலும் வடமொழிக் கல்லூரிகள் இருந்தன. தமிழ் மொழிக்கு இத்தகைய வாய்ப்புச் சிறிதும் இல்லை. மாறாக மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கம் வீழ்ச்சியுற்றது. இத்தகைய இருண்ட சூழ்நிலையில், சமணர், பௌத்தர், சைவர், வைணவர் ஆகிய சமயத்தவர் தத்தம் சமயக் கொள்கைகளைப் பரப்பும் நோக்குடன் நூல்கள் இயற்றினர். அவர்களுள் சைவ சமய முன்னோடிகளாகத் திகழ்ந்தோர் இருவர். அவர்கள் காரைக்கால் அம்மையாரும், திருமூலநாயனாரும் ஆவர். இவ்விருவரும் களப்பிரர் தமிழ் நாட்டைக் கைப்பற்றி ஆண்ட இருண்ட காலப்பகுதியில் வாழ்ந்து, சைவ சமயத்தின் எழுச்சிக்கு அடிக்கல் நாட்டினர். இவர்கள் காலத்தில் வாழ்ந்த சமணச் சான்றோர் சிலர் எலி விருத்தம், கிளி விருத்தம், நரி விருத்தம் என்ற பெயர் கொண்ட நூல்களை இயற்றியுள்ளனர். சமயச் சார்பற்ற நூல்கள் பல இயற்றப்பட்டிருப்பினும் அவை கிட்டாது மறைந்தன. எஞ்சியது முத்தொள்ளாயிரம் என்னும் நூலின் ஒரு பகுதி மட்டுமே.

இப்பாடம் சைவ சமய முன்னோடிகளில் ஒருவரான திருமூலரது அருளிச் செயல் பற்றியும், முத்தொள்ளாயிரம் பற்றியும் விளக்குகின்றது.

5.1 திருமந்திரம்

திருமந்திரம் தமிழ் ஆகம நூல். வேதம் பொது நூல் என்றும், ஆகமம் சிறப்பு நூல் என்றும் சைவர் கூறுவர். திருமந்திரத்தில் ஒன்பது உட்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தந்திரம் என்பது பெயர். இதில் 232 அதிகாரங்கள் உள்ளன. இப்பொழுது இதில் 3100 செய்யுட்கள் உள்ளன. ‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்’ என்பதனால் இதற்கு உரியவை 3000 செய்யுட்களே என்று அறியலாம். எஞ்சியவை பிற்சேர்க்கையாம்.

ஆசிரியர் இதற்கு இட்ட பெயர் திருமந்திர மாலை. தமிழ் மூவாயிரம் என்றும் இதனைக் கூறுவர். தமிழில் தோன்றிய ஒன்பது ஆகமங்களே ஒன்பது தந்திரங்களாக இயற்றப்பட்டன என்பது அறிஞர் கருத்து. இதற்கு வடமொழியில் மூலநூல் இல்லையென்பர். முழுத்தமிழில் பாடினார் திருமூலர் என்ற நம்பியாண்டார் நம்பியின் வாக்கினை இங்கே எண்ணிப் பார்க்கலாம்.

5.1.1 திருமூலநாயனார் சைவ சமய அடியாருள் காலத்தால் முந்தியவர்கள் திருமூல நாயனாரும், காரைக்கால் அம்மையாரும் ஆவர்.

திருமூலநாயனார் காரைக்கால் அம்மையார்

திருமூலர் சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவர். சுந்தர மூர்த்தி நாயனார், ‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’ என்று தம் பேரன்பு தோன்றக் கூறினார். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பிகள், தம் திருத்தொண்டர் திருவந்தாதியில்,

குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம்

மேய்ப்போன் குரம்பை புக்கு

முடி மன்னு கூனல் பிறையாளன்

தன்னை முழுத்தமிழின்

படிமன்னு வேதத்தின் சொற்படியே

பரவி விட்டு என் உச்சி

அடிமன்ன வைத்த பிரான் மூலன்

ஆகின்ற அங்கணனே (36)

என்று பாடினார். மூலன் என்பவர், சாத்தனூரைச் சேர்ந்தவனும், ஆக்களை மேய்ப்பவனும் ஆன இடையன் ஒருவன் இறந்தபோது, அவன் உடம்பில் தன் உயிரைச் செலுத்தியவர். அவர் வேதத்தில் சொன்னவாறே சிவபெருமான் பெருமையினை முழுத்தமிழில் பாடினார் என்பது இச்செய்யுளால் அறியப்படும் செய்திச் சுருக்கமாகும்.

கி.பி. 12ஆம் நூற்றாண்டினரான தெய்வச் சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் திருமூலர் வரலாற்றை விரிவாகப் பாடுகின்றார். அவர் கூறும் வரலாற்றுச் சுருக்கம் வருமாறு:-

திருமூலர் திருக்கயிலையில் வாழ்ந்த சிவயோகியார். அவர் தமிழகத்தில் பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய மாமுனிவரைக் காண விரும்பினார். பல தலங்களை வணங்கினார். அவர் காவிரிக்கரைப் பகுதிக்கு வந்து சேர்ந்தார். ஆவடுதுறையில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானை வணங்கி, சில நாள் அங்கே தங்கியிருந்தார். அவ்விடம் விட்டு நீங்கும்பொழுது, காட்டில் பசுக்களின் கதறலைக் கேட்டார். அவற்றை மேய்த்த இடையன் இறந்தமையே ஆக்களின் துயருக்குக் காரணம் என உணர்ந்தார். தம் ஆற்றலால் தம் உயிரை ஆயனின் உடம்பில் புகச் செய்தார். ஆக்களை உரியவரிடம் சேர்த்தார். ஆயன் மனைவி, இவரைத் தன் கணவன் என்று கருதி நெருங்கியபொழுது, ‘எனக்கு உன்னோடு உறவு இல்லை’ என்று கூறி, சாத்தனூரின் பொதுவிடத்தில் சிவயோகத்தில் அமர்ந்தார்.

பின்னர்த் தம் உடம்பைத் தேடிச் சென்றார். இறைவன் அதனை வேண்டும் என்றே மறைத்தருளினார். பின்னர் அவர் ஆவடுதுறைக்குச் சென்றார். திருக்கோயிலுக்கு மேற்கில் இருந்த அரசமரத்தடியில் அமர்ந்தார். மூவாயிரம் ஆண்டுகள் தவம் இருந்தார். ஆண்டுக்கு ஒரு செய்யுளாக 3000 செய்யுட்களை இயற்றினார். அங்ஙனம் இயற்றப்பட்டதே திருமந்திரம் என்னும் ஆகம நூல் என்பார் பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார்.

காலம்

சுந்தரர் கி.பி. எட்டாம் நூற்றாண்டினர். அவர் திருமூலருக்கு வணக்கம் சொல்வதனால் திருமூலர் காலத்தால் முந்தியவர். அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடல்களில் திருமூலரின் செல்வாக்குக் காணப்படுவதால், அவர்களின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கும் முற்பட்டவர் திருமூலர் என்று தெரிகிறது. தில்லைத் திருக்கோயிலில் உள்ள சிற்றம்பலத்திற்குக் கி.பி. 500இல் ஆண்ட பல்லவ அரசன் சிம்மவர்மன் பொன் வேய்ந்தான்.

அதன்பின் அது பொன்னம்பலம் ஆயிற்று. திருமூலர் இப்பெயரைக் கையாள்கின்றார். எனவே, திருமூலர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்பர் அறிஞர்.

5.1.2 திருமந்திரத்தின் பாடுபொருள் சைவ சமயத்தின் தத்துவத்தைச் சைவசித்தாந்தம் என்பர். பதி, பசு, பாசம் என்ற மூன்றும் இச்சித்தாந்தத்தின் அடிப்படைக் கூறுகள். (பதி – இறைவன்; பசு – உயிர்கள்; பாசம் – ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்கள்). திருமந்திர நூலின் பெரும் பகுதி சைவ சமயத் தத்துவங்களை விளக்குவது. அத்துடன், எல்லாருக்கும் பொதுவான அறக் கருத்துகளும் இதில் உள்ளன. அன்புடைமை, அருள் உடைமை, நிலையாமை, கொல்லாமை, புலால் மறுத்தல் முதலானவை இவற்றுள் சிலவாகும்.

இந்நூலின் முதல் நான்கு தந்திரங்கள் சிவஞானத்தைப் பெற விரும்புவோர் அதற்குத் தம்மைத் தகுதியாளராக்கிக் கொள்ளுதற்கு உரிய வழிகளை விளக்குகின்றன.

ஐந்தாவது தந்திரம் சைவ சித்தாந்த உண்மைகளை விவரிக்கின்றது. ஆறு முதல் ஒன்பது இறுதியான தந்திரங்கள் ஞானம் பெறும் நிலையில் உணர்ந்து பெறத்தக்கனவாக உள்ள நல்ல பயன்கள் பற்றி உணர்த்துகின்றன.

ஆசனம், பிராணாயாமம், தியானம், சமாதி முதலியன பற்றியும், எண்பெரும் சித்திகள் பற்றியும், உடம்பைப் பேணிக் காக்கும் வழி பற்றியும் இந்நூல் விளக்கியுள்ளது.

சைவ சமயத்தின் நான்கு பிரிவுகள், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகள், அந்த நெறிகளில் நிற்பார் அடையும் நான்கு நிலைகள் ஆகியன ஐந்தாவது தந்திரத்தில் விளக்கப்பட்டுள்ளன.

இறைவன் இயல்பு, உயிர்களின் இயல்பு, பாசத்தின் பண்பு, குருவின் இன்றியமையாமை, நல்வினை தீவினைகள், இவற்றின் நீக்கம், ஞானம் கைவரப்பெற்ற சிவயோகிகளின் பெருமையும், தன்மைகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. திருமந்திரம் கூறும் தத்துவங்களில் சிலவற்றை இங்கே பார்த்தோம்.

5.1.3 திருமந்திரச் சிந்தனைகள்

திருமந்திரம் உலகுக்கு வழங்கும் உயர்ந்த கருத்துகள் மிகப் பல. சான்றுக்குச் சில மட்டுமே இங்குச் சுட்டிக் காட்டப்படுகின்றன.

அன்பும் சிவமும் ஒன்றே

அன்பு வேறு சிவம் வேறு என்பார் அறிவில்லாதவர் என்றும், அன்பும் சிவமும் ஒன்று என்பதே உண்மையென்றும், இதனை உணர்ந்தார் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பர் என்றும் கூறுகின்றார் திருமூலர்.

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.

இரு கோயில்கள்

உலகில் இரு கோயில்கள் உண்டென்கிறார் திருமூலர். அவை, 1. படமாடுகின்ற கோயில் 2. நடமாடும் கோயில். நடமாடும் கோயிலாவது உயிர்கள். குறிப்பாக மனிதர்கள். கடவுளைப் படமாக எழுதி வைத்து வழிபட்டமையால் படமாடக் கோயில் என்றார்.

தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடக் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று கூறுவார் திருமூலப் பெருந்தகை.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே

(பகவன் = கடவுள்)

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்

சிவஞானம் பெற்றுப் பிறவியை நீக்குவதற்கு உடம்பைப் பேணுவது இன்றியமையாதது என்று வற்புறுத்துகிறார் திருமூலர்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

உடம்பு என்பது இழிவானதன்று. அது இறைவனுக்கு உரிய திருக்கோயில் என்பார் அவர்.

ஆசை அறுமின்

ஆசையே துன்பத்திற்கு அடிப்படை என்பர். ஆசை அற்றால் அனைத்துத் துன்பங்களும் அழிந்துபோகும். எஞ்சி நிற்பது பேரானந்தமே.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்

ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்

ஆசை விடவிட ஆனந்தம் ஆமே!

ஒன்றே குலம் ஒருவனே கடவுள்

தமிழர் என்றும் எண்ணிப் பெருமைப்படத்தக்க பொதுமைத் தத்துவத்தை வழங்கியவர் திருமூலர். சாதி, மதம், நாடு, மொழி என்று பல தடைச் சுவர்களால் சிதறிக்கிடக்கும் மனித குலத்தை நோக்கி,

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமன் இல்லை

என முழங்கினார்.

என்றும் நெஞ்சில் நிறுத்தி வாழ்வில் பின்பற்றத்தக்க உயர்ந்த நெறிகள் பலவற்றை உள்ளடக்கியது திருமந்திரம் என்று குறிப்பிட்டோம். சில பகுதிகள் வருமாறு:-

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் (85)

ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின் (250)

உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம் (1823)

5.2 முத்தொள்ளாயிரம்

இது வெண்பா யாப்பில் எழுதப்பட்ட நூல், இது சேர சோழ பாண்டியர்களின் புகழ் பாடுவது. எந்தக் குறிப்பிட்ட மன்னனையும் இது பாடவில்லை. மூன்று குடியினருக்கும் உரிய கோதை, கிள்ளி, மாறன் முதலான பொதுவான பெயர்களே இதில் இடம் பெற்றுள்ளன. நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. புறத்திரட்டு என்னும் தொகுதியில் இருந்து எடுக்கப்பட்ட 108 செய்யுட்களே இன்று முத்தொள்ளாயிரம் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிட்ட விருந்து என்னும் வகையைச் சாரும்.

பெயர்க்காரணம்

இந்நூலின் பெயர் இருவகைகளில் விளக்கப்படுகிறது. மூன்று வேந்தர்களையும் பற்றிய 900 பாடல்கள் கொண்டது என்பது ஒரு சாரார் கருத்து. மூவேந்தருள் ஒவ்வொருவரையும் தனித்தனியே தொள்ளாயிரம் பாடல்களில் புகழும் நூல் இது என்பது இன்னொரு சாரார் கருத்து. இவ்விரண்டாவது கருத்தின் படி இந்நூலுக்குரிய செய்யுட்கள் 2700 ஆகும்.

இவற்றுள் முதற் கருத்தே ஏற்புடையது என்கின்றார் இலக்கண விளக்கத்தின் ஆசிரியர். எண் இலக்கியத்திற்கு உதாரணம் கூறும்போது, அது பத்து முதல் ஆயிரம் பாடல்கள் கொண்டது என்று குறிப்பிட்டு, அரும்பைத் தொள்ளாயிரம் என்பதனையும் முத்தொள்ளாயிரத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

5.2.1 நூலாசிரியர் இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர், பதினெண்கீழ்க்கணக்கு நூலாசிரியர்களோடு முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியரையும் சேர்த்துப் பிற சான்றோர் எனக் குறிப்பிட்டார். எனவே இவர் சங்கப் புலவர் அல்லர் என்பது வெளிப்படையாகும். ஆராய்ச்சி அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். இந்நூலின் உள்ள சில அகச் சான்றுகளை எடுத்துக்காட்டி, இந்நூலாசிரியரை கி.பி. 5ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்கின்றார்.

நூலாசிரியர் சமயம்

இந்நூலின் கடவுள் வாழ்த்து, சிவபெருமான் பற்றியது. சிவபெருமான் நாள்மீன்களையும், திங்களையும், சூரியனையும் படைத்தவன் என்றும், ஆனால் உலகம் அவனை ஆதிரையான் என்பது வியப்பானது என்றும் கூறுகின்றார் ஆசிரியர். மேலும், தாம் பாண்டியனைப் புகழ்ந்து பாடும் பாட்டு, மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகப்பெருமானைக் கடப்ப மலர் தூவிப் பாடிப் புகழ்தலை ஒத்தது என்கிறார். இதனால் இவர் சைவ சமயச் சார்புடையவர் என்பது விளங்கும்.

5.2.2 பாடுபொருள் முத்தொள்ளாயிரம் மூவேந்தர் புகழ்பாடுவது என்று முன்பே கூறப்பட்டது. மன்னர்களின் வீரம், கொடை, தலைநகர், அவர்கள் குதிரைகளின் மறம், களிறுகளின் மறம் ஆகியவையும், பகை மன்னர்களின் நாடுகளை அழித்துப் புகழ் பெற்றமையும், அவர்களிடம் திறை கொண்டமையும் புகழப்பட்டுள்ளன. மன்னர்களைப் புகழ்வதற்குக் கைக்கிளை என்னும் அகத்திணைப் பிரிவை இவ்வாசிரியர் பயன்படுத்தியுள்ளார். இடைக்காலத்துச் சமயச் சான்றோர்கள் இம்மரபைப் பின்பற்றியது நினைவிருக்கலாம். ஆழ்வார்களும் நாயன்மார்களும் அகத்துறைகளைப் பயன்படுத்தி ஆன்மா இறைவனோடு கூடுவதற்குத் துடிக்கும் துடிப்பினை வெளியிட்டனர். அம்மரபினைப் பின்பற்றிய முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியரும் சேரன், சோழன், பாண்டியன் என்னும் மூன்று வேந்தர்களின் பாலும் தமக்குள்ள அன்பினை, ஒருதலைக் காதல் கொண்ட பெண்களின் கூற்றாகப் பாடி வெற்றி கண்டுள்ளார். இந்நூலின் பெரும் பகுதி பெண்பால் கைக்கிளையாகவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைக்கிளைப் பாடல்

இந்நூலின் பெரும்பாலான செய்யுட்கள் கைக்கிளை சார்ந்தன என்று பார்த்தோம். அவற்றுள் ஒன்றை இங்கு உதாரணமாகக் காணலாம்.

பாண்டியன் நகர் வலம் வந்தான். அவனை ஒரு கன்னிப் பெண் கண்டாள். உடன் அவன்பால் மட்டில்லாக் காதல் கொண்டாள். அதன் காரணமாக உடல் முழுதும் பசலை படர்ந்தது. தன் உடம்பிலே பசலை படரக் காரணம் தன் கண்கள் அவனைக் கண்டமையே என்று எண்ணினாள். அவ்வாறெனில் அதற்குரிய தண்டனையை அடைய வேண்டியவை அக்கண்களல்லவா? ஆனால் அதற்கு மாறாக, ஒரு பாவமும் அறியாத அவள் தோள்களல்லவா தண்டனை பெற்றன! இஃது எவ்வாறு என்றால் உழுத்தஞ்செடி வளர்ந்த வயலில் மேய்ந்து அழிவு செய்தது ஊர்க்கன்றுகளாக இருக்க, ஒன்றும் அறியாத கழுதையின் காதை அறுத்துத் தண்டித்தது போன்றது என்று நினைத்து வருந்தினாள். இப்பொருள் அமைந்த பாட்டு வருமாறு:

உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்

கழுதை செவி அரிந்தற்றால் – வழுதியைக்

கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்

கொண்டன மன்னோ பசப்பு (60)

(செய் = வயல்; பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்; பசப்பு = மேனியில் தோன்றும் நிற வேறுபாடு)

5.2.3 கற்பனை வளம் கற்பனையே கவிதைக்கு உயிர். முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒவ்வொன்றும் கற்பனை ஊற்று என்றால் அது மிகையாகாது. சேர நாட்டின் வளத்தினையும், மக்களின் அச்சமற்ற வாழ்வினையும் ஒரு சேரப் புகழும் ஆசிரியர் பின் வருமாறு பாடுகின்றார்:

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய் அவிழ

வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ, – புள்ளினம் தம்

கைச் சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கௌவை உடைத்து அரோ

நச்சிலை வேல் கோக் கோதை நாடு

(வாய்அவிழ = விரிய; வெரீஇ = அஞ்சி; புள்ளினம் = பறவையினம்; பார்ப்பு = குஞ்சு; கௌவை = ஒலி)

இதன் பொருள்

சேறு நிறைந்த பொய்கைகள் சேர மன்னன் நாட்டில் மிகுதி. அப்பொய்கைகளில் அரக்கு நிறம் கொண்ட செவ்வல்லி மலர்கள் பூத்துள்ளன. அவற்றைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்து விட்டது என்று எண்ணின. தம் குஞ்சுகளைத் தீயிலிருந்து காப்பாற்ற நினைத்துத் தம் கைகளான சிறகுகளைப் படபடவென அடித்து அவற்றை அணைத்துக் கொண்டன. இந்த ஆரவாரம் தவிர, மக்கள் துயர் மிகுதியால் செய்யும் ஆரவாரத்தை, சேரநாட்டில் காண்பது அரிது என்கின்றார் புலவர். இதற்குக் காரணம் கூறுவார் போல, நச்சிலை வேல் கோக்கோதை என்று மன்னனைக் குறிப்பிடுகின்றார். அவன் ஏந்திய வேல் நஞ்சு பூசப்பட்டிருப்பது; எனவே, பகைவர் அவன்பால் பேரச்சம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பு.

கூடிழந்த சிலந்தி

சோழன் பிறந்த நாள் வருகின்றது. அது இரேவதி விண்மீன் சந்திரனோடு கூடி நிற்கும் நல்ல நாள். அரண்மனைக்குப் பரிசிலர் வருகின்றனர். வருவோர்க்கெல்லாம் உயர்ந்த பரிசிலை வாரி வழங்குகின்றான் சோழன். ஆம்! அந்தணர் வந்தனர்; அவர்கள் ஆவையும் பொன்னையும் வாங்கிச் சென்றனர். நாவன்மை மிக்க புலவர்கள் வந்தனர்; அவர்கள் மந்தர மலைபோல் உயர்ந்த களிறுகளைப் பெற்றுத் திரும்பினர். இங்ஙனம் மனிதரெல்லாம் பரிசு பெற்றுத் திரும்பிய நாள், சோழன் அரண்மனையில் இருந்த சிலந்திப்பூச்சிக்கு மட்டும் சோக நாளாயிற்றாம்! ஆம்! அது தானே கட்டிக் கொண்டு வாழ்ந்த தன் வீடாகிய கூட்டை இழந்து விட்டது! ஒட்டடை நீக்கப் பெற்றுத் தூய்மையாயிற்று என்ற செய்தியையே புலவர் என்னோ! சிலம்பிதன் கூடு இழந்தவாறு! என்று நயமாகப் புலப்படுத்தினார்.

5.2.4 பண்பாட்டுச் செய்திகள் முத்தொள்ளாயிரம் எழுந்த காலத்துத் தமிழர்தம் பண்பாட்டு நிலையை அறிய, அதன் ஆசிரியர் நமக்கு வாய்ப்பளித்துள்ளார்.

அசுவனி முதலாக எண்ணப்படும் 27 விண்மீன்கள் பற்றிய அறிவு அன்று தமிழர்க்கு இருந்தது. மன்னிய நாண்மீன், ஆதிரையான் (1) தென்னன் திருஉத்திராட நாள் (7) என்ற குறிப்புகளை நோக்குக.

பெண்கள் குங்குமச் சாந்தினை அணிந்தனர் (9). கணவனை இழந்த பெண் எரி மூழ்கி இறக்கும் வழக்கம் இருந்தது (19). நீரில் நின்று தவம் செய்தனர் (25). உலக்கை கொண்டு குற்றும்பொழுது பாடல் இசைத்தல் உண்டு (34). வேட்டுவர்கள் பறவைகளைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைத்தனர் (35), முதலான செய்திகள் இதனுள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

5.3 தொகுப்புரை

இருண்ட காலத்தில் வாழ்ந்த சைவ சமய முன்னோடிகள் காரைக்கால் அம்மையாரும், திருமூலரும் ஆவர்.

திருமூலர் கயிலையில் வாழ்ந்த சிவயோகியார். திருமூலர் இயற்றிய திருமந்திரம் தோத்திரமாகவும் சாத்திரமாகவும் அமையும். திருமந்திரம் 3000 செய்யுட்களால் இயற்றப்பட்டது. இதில் ஒன்பது தந்திரங்கள் உள்ளன. திருமந்திரம் சைவ சித்தாந்தத்தை விளக்கிக் கூறுகின்றது.

முத்தொள்ளாயிரம் மூன்று வேந்தர்களையும் பற்றிய 900 வெண்பாக்களை உடையது. கைக்கிளைப் பாடல்கள் இதில் மிகுதி. பண்டைத் தமிழர் பண்பாடு பற்றிய பல செய்திகள் இந்நூலில் உள்ளன.

பாடம் - 6

முதல் ஆழ்வார்கள் காலம்

6.0 பாட முன்னுரை

அன்பார்ந்த மாணாக்கர்களே! கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் நிலவிய அரசியல், சமய, சமூகச் சூழ்நிலைகள் பற்றியும், அக்காலம் பாலி, பிராகிருதம், வடமொழி ஆகியவற்றுக்கு ஆக்கம் அளிப்பதாகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவாததாகவும் இருந்தமை பற்றியும் இதற்கு முந்தைய பாடத்தில் கூறப்பட்டன. சமண பௌத்தர்களும், சைவ வைணவரும் தத்தம் சமயக் கருத்துக்களை இலக்கியங்கள் வாயிலாக மக்களிடையே பரப்ப முயன்றனர் என்பதும், சைவ சமய வளர்ச்சிக்கு முன்னோடிகளாகக் காரைக்காலம்மையாரும், திருமூலநாயனாரும் விளங்கி அரிய தமிழ் நூல்களை இயற்றியருளினர் என்பதும் விளக்கப்பட்டன. இதே இருண்டகாலப் பகுதியில் சில வைணவ சமயப் பெரியோர் வாழ்ந்து சமயத் தொண்டும், தமிழ்த் தொண்டும் ஆற்றியுள்ளனர். அவர்கள் முதலாழ்வார்கள் எனப்பட்டனர். பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும், பேயாழ்வாருமே முதலாழ்வார்கள் ஆவர். இவர்களின் வரலாறும் இவர்கள் இயற்றிய நூல்களின் சிறப்பும் இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.

6.1 ஆழ்வார்கள்

திருமாலை முழுமுதல் கடவுளாகக் கொண்டது வைணவ சமயம். திருமாலின் அடியார்களை ஆழ்வார்கள் என்று வழங்குவர். சைவ சமயத் தொண்டர்களை நாயன்மார்கள் என்று வழங்குவதற்கு இணையானது இவ்வழக்கம்.

ஆழ்தலாவது மூழ்குதல். உலக இன்பங்களில் ஈடுபாடு கொள்ளாது, எந்நேரமும் திருமால் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடப்போர் என்று ஆழ்வார் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வர். உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் அவர்களுக்குத் திருமாலே என்பர்.

சைவ அடியார்கள் அறுபத்து மூவர் என்பதுபோல், வைணவச் சமய அடியார் பன்னிருவர் என்று வழங்குவர். அவர்களின் திருப்பெயர்கள் வருமாறு:

1. பொய்கையாழ்வார்

2. பூதத்தாழ்வார்

3. பேயாழ்வார்

4. திருமழிசை ஆழ்வார்

5. பெரியாழ்வார்

6. ஆண்டாள்

7. தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்

8. திருப்பாணாழ்வார்

9. நம்மாழ்வார்

10. மதுரகவி ஆழ்வார்

11. திருமங்கை ஆழ்வார்

12. குலசேகர ஆழ்வார்.

இவர்கள் இயற்றியருளிய பாடல்களின் தொகுப்புக்கு நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் என்று பெயர்.

6.1.1 முதல் ஆழ்வார்கள் பொய்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

பேயாழ்வார்

இப் பன்னிருவருள்ளும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் ஏனையோர்க்குக் காலத்தால் முற்பட்டோர் ஆவர். எனவே இவர்களை முதல் ஆழ்வார்கள் என்பது மரபு.

உபதேச ரத்தினமாலை என்ற நூல் மணவாள மாமுனிகள் என்னும் பெரியாரால் செய்யப்பட்டது. இந்நூல் பன்னிரு ஆழ்வார்கள் பற்றிய அரிய பல செய்திகளைத் தருகின்றது. முதல் ஆழ்வார்கள் பற்றிக் குறிப்பிடும்போது ஏனைய ஒன்பதின்மருக்கும் முதலாழ்வார்கள் காலத்தால் முற்பட்டோர் எனக் கூறியுள்ளது.

இம்மூவரின் வரலாறுகள் வைணவ மரபில் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன. இம்மூவரும் ஐப்பசி மாதத்தில் அவதரித்தனர். மேலும் இவர்கள் மானுடத் தாயின் வயிற்றில் தோன்றாதவர்கள் என்று கருதுவர். தமக்கு எல்லாமே திருமால் என்று கொண்டு, இறைத் தொண்டில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் அறியாமல், தனித்தனியே நாடு முழுவதும் அலைந்து திரியும் வாழ்வை நடத்தினர்.

இவர் மூவரையும் ஒரே நேரத்தில் ஆட்கொள்ள விரும்பின திருமாலின் அருள் ஆணையின்படி இம்மூவரும் திருக்கோவலூரில் சந்திக்கும் நிலை தோன்றிற்று. ஒரு நாள் கதிரவன் மறைந்த மாலை வேளையில் பொய்கையாழ்வார் திருக்கோவலூர்க்குச் சென்றார். அங்கு இருந்த மிருகண்டு முனிவர் திருமாளிகைக்குச் சென்று வழிபட்டார். அம்மாளிகையின் இடைகழியில் (ரேழி) படுத்தார்.

சிறிது நேரத்தில் பூதத்தாழ்வாரும் அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் வைணவ மரபுப்படி ஒருவரையொருவர் வணங்கி மகிழ்ந்தனர். அப்போது பொய்கையார் மற்றவரிடம், “இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம்” (அமர்ந்திருக்கலாம்) என்றார். அவ்வாறே இருவரும் அமர்ந்த நிலையிலேயே பெருமானின் பெருமைகள் பற்றி உரையாடியிருந்தனர். அப்போது பேயாழ்வாரும் அவ்விடம் வந்து சேர்ந்தார். அவர்கள் ஒருவரையொருவர் வணங்கி மகிழ்ந்தனர். அப்போது, முதலிருவரும் பேயாழ்வாரிடம், “இவ்விடம் இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்” என்றனர். அவ்வாறே மூவரும் நின்ற நிலையிலேயே பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது உலகளந்த பெருமான் தம் திருவிளையாடலை நிகழ்த்தினார். அவர் திரு ஆணைப்படி செறிவான இருள் சூழ்ந்தது; பெருமழை பொழிந்தது. பெருமான் ஒரு பெரிய உருவமெடுத்து அம்மூவரிடையே புகுந்து நெருக்குதலை உருவாக்கினார். சட்டென உருவான அந்த நெருக்கத்திற்குக் காரணம் அறியாமல் மூவரும் திகைத்தனர்.

பொய்கையாழ்வார் இருளை ஓட்டிட விளக்கேற்ற விரும்பினார். இம்மண்ணுலகத்தையே அகலாகக் கொண்டு, உலகை வளைத்துக் கிடக்கும் கடலையே நெய்யாக வார்த்து, கதிரவனையே சுடராகக் கொளுத்தினார். பூதத்தாழ்வாரும் விளக்கேற்றினார். அவர் அன்பையே தகழியாக்கினார்; ஆர்வத்தையே நெய்யாக ஊற்றினார்; உருகும் தம் சிந்தையையே திரியாக அமைத்தார்; ஞானத்திருவிளக்கை ஏற்றினார். இப்பெருமக்கள் ஏற்றிய விளக்குகளின் ஒளி இருளை ஓட்டியது. அதன் வெளிச்சத்தில் பேயாழ்வார் பெருமானின் திருவடிவினைக் கண்டார். அவர் கண்ட காட்சியை மற்றைய இருவரும் பின்னர்க் கண்டனர். அவர்கள் பெற்ற வியப்புக்கு உரிய அந்த இறைக்காட்சியைப் பொருளாக வைத்து மூன்று திருநூல்களை வெளியிட்டருளினர். அவை ஒவ்வொன்றும் நூறு வெண்பாக்களால் ஆனவை. அவை அந்தாதித் தொடையில் அமைந்தன. அவற்றின் திருப்பெயர்கள் முறையே முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி என்பனவாகும். இவை, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் உட்பிரிவுகளுள் இயற்பா என்ற பகுப்பில் அடங்குவனவாகும். மேலே சொன்ன வரலாற்றை விளக்குவனவாக, திருவந்தாதிகளின் முதல் வெண்பாக்கள் விளங்குகின்றன.

ஒரே கோயில், ஒரே வழிபாடு

வைணவத் திருப்பதிகளில் முதலாழ்வார் மூவர்க்கும் கோயில் உள்ளது. பூசைகளும், திருவிழாக்களும் ஒன்றாகவே செய்யப்படுகின்றன.

இவர் மூவரும் இயற்றிய நூல்களில் திருமாலின் உருவச்சிறப்பும், அவருடைய அவதார நிகழ்ச்சிகளும் வைணவ சமயத் தத்துவங்களும் மாறுபாடின்றி ஒன்றாகவே அமைந்திருப்பதும் கண்டு மகிழத்தக்கது. இனி இம்மூவரின் நூல்கள் பற்றித் தனித் தனியே அறிந்து கொள்ளலாம்.

6.2 பொய்கையாழ்வார்

முதலாழ்வார் மூவருள்ளும் முதலில் வைத்துப் போற்றப்படுபவர் பொய்கைஆழ்வார். சங்க காலத்தில் வாழ்ந்து சேரமான் புகழ்பாடிய பொய்கையாரினும், பின்னர்க் களவழி நாற்பது பாடிய பொய்கையாரினும், இப்பொய்கை ஆழ்வார் வேறானவர். இவர் காஞ்சிமாநகரில் உள்ள திருவெஃகா என்ற வைணவத் திருப்பதியின் வடபகுதியில் இருந்த ஒரு பொய்கையில், ஒரு பொற்றாமரை மலரில் திருஅவதாரம் செய்தார் என்கிறது வைணவ மரபு. இவரைத் திருமால் ஏந்திய படைக்கலங்களுள் பாஞ்சசந்நியம் (திருமால் கைச்சங்கின் பெயர்) என்பதன் அமிசம் (ஒருகூறு) என்று வைணவர் கருதி வருகின்றனர். ஒரு பொய்கையில் தோன்றியவராதலால் பொய்கையாழ்வார் எனப்பட்டார்.

6.2.1 பொய்கையாரின் அருளிச்செயல் (திருநூல்) பொய்கையார், திருக்கோவலூரில், திருமாலின் திருவருளால் ஏற்பட்ட இருளில் இருந்து விடுதலை பெறுவதற்காக வையம் தகளியா எனத் தொடங்கி இயற்றியருளிய 100 வெண்பாக்களைக் கொண்டது முதல் திருவந்தாதி என்று பெயர் பெற்றது. அந்தாதித்தொடையில் இயற்றப்பட்ட மிகப் பழைய பிரபந்தங்களுள் இதுவும் ஒன்றாகும்.

6.2.2 விளக்கு ஏற்றிக் கண்ட வித்தகர் ஆழ்வார் இறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும், அழிவற்ற மெய்ஞ்ஞானமாகவும், ஞானமுடையார் செய்யும் வேள்வியாகவும், அறமாகவும் கண்டு மகிழ்கின்றார்.

இங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை அவர். இறைவன் தகுதிக்கு ஏற்பப் பெரிய விளக்கேற்ற உள்ளம் கொண்டார். எனவே இம்மண்ணுலகத்தையே தகளியாகக் கொண்டார்; அதனை வளைத்துக் கிடக்கும் பெரிய கடல்நீரையே நெய்யாக வார்த்தார். அக்கடற்பரப்பின் ஒரு விளிம்பிலே தோன்றுவதுபோல் காட்சியளிக்கும் உதயஞாயிற்றையே (சூரியன்) அதிலேற்றும் சுடராக்கி ஞான விளக்கேற்றி வழிபட்டார். அது அகவிருள் அகற்றும் விளக்காதலால், உலக மாயையையே உண்மையெனக் கருதியிருக்கும் ஆன்மாக்களுக்கு வீடுபேறளிக்கும் என்பது அவர் நம்பிக்கையாகும்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று

(பொய்கையார்)

(வையம் = மண்ணுலகம்; தகளி = அகல்; வார் = நீண்ட; வெய்ய = வெம்மையான; சுடர்ஆழி = ஒளிமிக்க சக்கரப்படை; இடர்ஆழி = துன்பமாகிய கடல்)

6.2.3 மூவர்க்குள் முதல்வன் திருமாலின் மேலாம் தன்மையை (பரத்துவம்) விளக்குவதே ஆழ்வார்களின் நோக்கம். ஆயிரம் தெய்வங்களை மக்கள் வணங்கினாலும், அத்தெய்வங்களுக்குள் முதன்மையானோர் சிவன், திருமால், பிரமன் ஆகிய மூவருமே என்றும், அவருள்ளும் முதன்மையானவர் கடல் நிறம் கொண்ட திருமாலே என்றும் உறுதிபடப் பேசுகிறார், இந்த ஆழ்வார்.

முதல் ஆவார் மூவரே அம் மூவருள்ளும்

முதலாவான் மூரிநீர் வண்ணன் (15)

(மூரிநீர் = கடல்)

என்பார் அவர்.

சிவபெருமானே மேலானவர் என்பார்க்கு, அச்சிவபெருமானும் திருமாலேயன்றி வேறாகார் என்கின்றார் அரன் என்பது, நாராயணனுக்கு அமைந்த இன்னொரு பெயர் என்கின்றார். தாம் வணங்கும் திருமாலுக்குப் பெயர் இரண்டு ஆனதுபோல், ஊர்திகளும், நூல்களும், கோயில்களும், செயல்களும், கையிலேந்திய படைக்கருவிகளும், மேனியின் நிறங்களும் இரண்டு இரண்டானவை என்கின்றார்.

6.2.4 வழிபடும் முறையும் பயனும் ஆழ்வார் காலத்தில் இறைவழிபாடு எவ்வாறு நடந்தது என்பதனை முதல் திருவந்தாதி நன்கு விளக்கியுள்ளது.

பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி

தாம் தொழா நிற்பார் தமர் (43)

மலரும், நீரும், நறும்புகையும், ஒளிவிளக்கும் கொண்டு வழிபட்டும் வேள்விகள் செய்தும், மந்திரம் சொல்லியும் பிறவாறும் தொழுதனர் என்பது அவர் தம் பாடல்களால் அறியலாம்.

திருமாலை வணங்குவார் அடையும் பேறுகள் இன்னின்ன என்பதனைப் பொய்கைஆழ்வார் நன்கு எடுத்து உரைத்துள்ளார்.

திருமாலின் அடியவர், எத்தகைய தீவினைகளைச் செய்தவராயினும், அவர்களைத் தண்டிக்க எமன் அஞ்சி விலகிப் போவான் என்கின்றார்.

அவன் தமர் எவ்வினையர் ஆகிலும் எம்கோன்

அவன் தமரே என்று ஒழிவது அல்லால் – நமன் தமரால்

ஆராயப் பட்டு அறியார்….. (55)

(தமர் = அடியார்; நமன் = எமன்)

என்பது ஆழ்வார் கூற்றாகும்.

திருமாலின் அடியவர்களை அடைந்த தீவினைகள், துன்பங்கள், பாவங்கள் ஆகிய அனைத்தும் ஒழிந்து போகும் என்று உறுதியளிக்கின்றார்.

6.3 பூதத்தாழ்வார்

முதலாழ்வார் மூவருள் இரண்டாம் இடம் வகிப்பவர் பூதத்தாழ்வார். இவரும் தொண்டை நாட்டில் பிறந்தவரே. கடல்மல்லை என்று சிறப்பிக்கப்படும் மகாபலிபுரத்தில், ஒரு குருக்கத்திப் பந்தலில், ஒரு குருக்கத்தி மலரில் பிறந்தவராக இவர் பாராட்டப்படுகின்றார். இவர் ஐப்பசித் திங்களில் அவிட்ட விண்மீனில் பிறந்தவர் என்பர். இவர் திருமாலின் கையிலுள்ள கதை என்னும் படைக்கருவியின் அமிசம் எனக் கருதுவது வைணவ மரபாகும்.

பெயர்க்காரணம்

பூதம் என்னும் வடசொல் பூ என்ற அடிச்சொல்லில் இருந்து தோன்றியது. இதன் பொருளாவது, சத்தைப் பெற்றது என்பது. (சத்து = அறிவு) திருமாலின் திருக்குணங்களை அநுபவித்தே அறிவைப் பெற்றவர் பூதத்தாழ்வார் என்பர்.

6.3.1 பூதத்தாழ்வாரின் அருளிச்செயல் (திருநூல்) பூதத்தாழ்வாரின் அருளிச்செயல் இரண்டாம் திருவந்தாதி. இது இயற்பா என்னும் பிரிவில் அடங்குவது. தனிப்பாடல் நீங்கலாக இதில் 100 இனிய வெண்பாக்கள் அடங்கியுள்ளன. பாடல் தோறும் எம்பெருமானின் கலியாண (நல்ல) குணங்கள் பற்றிய புகழ்ச்சியும், அவருடைய அருட்செயல்களும் நிரம்பிய நூல் இது.

ஞானச்சுடர் விளக்கு

அன்பே விளக்காகவும், ஆர்வமே நெய்யாகவும், சிந்தையே திரியாகவும் கொண்டு ஞான விளக்கை ஏற்றி நாராயணனைத் துதித்தவர் பூதத்தாழ்வார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான் (1)

(சிந்தை = உள்ளம்; நன்பு = நன்மை)

6.3.2 கைதொழுவார் கண்ட பயன் திருமாலைக் கைதொழுதால், அதன்பிறகு ஒருவனுக்கு மண்ணுலகை ஆளும் பெருவளமும், வானவர்க்கு வானவனாய் வாழும் வாழ்க்கையும், விண்ணுலகப் பேறும் ஒரு பொருளாதல் இல்லை என்கின்றார் பூதத்தாழ்வார்.

பூதத்தாழ்வாரின் இக் கூற்றினை, ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் என்ற குலசேகர ஆழ்வாரின் கூற்றோடு ஒப்பிடலாம்.

கற்பனை வளம்

திருவேங்கட மலையின் வளத்தைக் கூறவந்த ஆழ்வார், மதம் பெருகும் களிறு ஒன்று, இளமூங்கிலைத் தன் துதிக்கையால் வளைத்து, அருகிலுள்ள தேனடையில் இருந்த தேனில் தோய்த்துத் தன் காதல் பிடிக்கு ஊட்டும் சிறப்புடையது என்று கூறுவது சிறப்பாகும். (75)

6.3.3 பெருந்தமிழன் தம்மைப் போல் தவம் செய்தவர் யாரும் இல்லையென்றும், தாமே ஏழு பிறவிகளிலும் தவமுடையவர் என்றும் இறுமாப்புக் கொள்கின்றார் இவ் ஆழ்வார். இதற்குக் காரணம் கூறுவாராய், யானே, இருந்தமிழ் நன்மாலை இணைடியக்கே சொன்னேன் என்றார். பெருமானின் இணையடிகளுக்குப் பெருமை வாய்ந்த தமிழால் தொடுத்த மாலையை அணிவித்தமையால் தாம் பெருந்தமிழனான பெருமையினை, பெருந்தமிழன் நல்லேன் பெரிது (74) என்று கூறிப் பெருமிதம் அடைகின்றார்.

6.4 பேயாழ்வார்

முதலாழ்வார் மூவருள் மூன்றாமவராக விளங்குபவர் இவர். இவர் தொண்டைநாட்டில் உள்ள சென்னை நகரின் ஒரு பகுதியான திருவல்லிக்கேணிக்குத் தென்திசையிலுள்ள திருமயிலையில் (மயிலாப்பூர்) ஒரு கிணற்றில் மலர்ந்த செவ்வல்லி மலரில் உதித்தவர் என்பர். இவர் உதித்த புனித நாள் ஐப்பசி மாதம் சதய விண்மீன் கூடிய நாள். இவர் திருமால் ஏந்திய வாள் படையின் அமிசமாகப் பிறந்தார் என நம்புகின்றனர்.

பெயர்க்காரணம்

இவர் திருமாலிடம் ஆழ்ந்த அன்புடையவர். இவருடைய பக்தி வைராக்கியத்தால் இவர் செய்த செயல்கள் சராசரி மனிதரினும் வேறுபட்டவராக இவரைக் காட்டின. தம்மை மறந்த நிலையில், பேய் பிடித்தவர் போல, கண்கள் சுழலும்படி விழுந்தார்; சிரித்தார்; தொழுதார்; குதித்து ஆடினார்; பாடினார்; அலறினார். இதனால் இவரைப் பேயாழ்வார் என்று யாவரும் கொண்டாடினர்.

பேயாழ்வாரும் திருமழிசையாழ்வாரும்

பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார்களை அடுத்துப் பிறந்த பெருமை திருமழிசையாழ்வாருக்கு உண்டு. இவர் காஞ்சிக்கு அருகே உள்ள திருமழிசையில் பிறந்தவர். பார்க்கவர் என்னும் முனிவரின் புதல்வர் இவர். இவரைப் பத்திசாரர் என்று புகழ்வர். இவர் சமயப் பொறையுடையவரல்லர்.

இவரைப் பேயாழ்வார் திருத்திப் பணி கொண்டார் என்கிறது வைணவ சமய வரலாறு.

6.4.1 பேயாழ்வாரின் அருளிச்செயல் (திருநூல்) பேயாழ்வார் அருளியது மூன்றாம் திருவந்தாதி. இது இயற்பாவில் இடம் பெற்றது. 100 வெண்பாக்கள் இதில் உள்ளன. இத்திருநூல் திருக்கண்டேன் எனத் தொடங்கி, சார்வு நமக்கு என்றும் எனத் தொடங்கும் வெண்பாவில் முடிகின்றது. இது திருக்கோவலூரில் அருளிச் செய்யப்பட்டது.

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணி நிறமும் கண்டேன் – செருக் கிளரும்

பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்

என்ஆழி வண்ணன்பால் இன்று

(அருக்கன் = கதிரவன்; செருக்கிளரும் = போர்க்களத்தில் கிளர்ச்சியுடன் விளங்கும்; பொன்ஆழி = பொன்மயமான சக்கரப்படை; சங்கம் = சங்கு; ஆழிவண்ணன் = கடல் நிறம் கொண்ட பெருமான்.)

நூற்சிறப்பு

முதல் இருவர் போலவே இந்த ஆழ்வாரும் திருமாலின் பல்வேறு அவதாரச் செய்திகளைப் பல செய்யுட்களில் பாடியுள்ளார். திருமால் எழுந்தருளியுள்ள தலங்கள் பலவற்றைப் பாராட்டியுள்ளார். அவற்றுள் வெஃகா, திருவேங்கடம், தென்குடந்தை, திருவரங்கம், திருக்கோட்டியூர் ஆகிய தலங்கள் ஒரு பாட்டிலேயே (62) குறிக்கப்பட்டுள்ளன.

சிவனும் திருமாலும் ஒருவரே

இவரும் பொய்கையாழ்வார் போலவே சிவனையும், திருமாலையும் ஒருவராகவே காண்கின்றார். அஃதாவது சங்கர நாராயணனாகக் காண்கின்றார்.

தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்

சூழ்அரவும் பொன்னாணும் தோன்றுமால் – சூழும்

திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு

இரண்டு உருவும்ஒன்றாய் இசைந்து (63)

எல்லாம் தானே ஆன இறைவன்

திருமால் தானே தனக்கு உவமையானவன்; எல்லாத் தெய்வ உருவங்களிலும் வெளிப்படுபவனும், தவ உருவும், விண்ணில் மின்னும் விண்மீன்களும், தீயும், பெரிய மலைகளும், எட்டுத்திசைகளும், சூரியனும் சந்திரனும் ஆகிய இருசுடர்களும் அவனே எனப் பாடுகிறார். (38)

6.4.2 கற்பனை வளம் இவ்வாழ்வார் சிறந்த கற்பனை வளம் மிக்கவர். இவர் கற்பனைத் திறத்துக்கு எடுத்துக்காட்டாக,

திருமாலின் உந்தியில் உள்ள தாமரை அவர் கையில் ஏந்தியுள்ள சக்கரத்தைக் காலைக் கதிரவன் என்று கருதி மலர்கிறதாம். அவர் மற்றொரு கையில் ஏந்திய வெண் சங்கினைச் சந்திரன் எனக் கருதிக் குவிகிறதாம் என்று பாடியதைக் கூறலாம்.

ஆங்கு மலரும் குவியுமாம் உந்திவாய்

ஓங்கு கமலத்தின் ஒண்போது – ஆங்கைத்

திகிரிசுடர் என்றும்; வெண் சங்கம் வானில்

பகரும் மதி என்றும் பார்த்து (67)

(போது = மலர்)

எல்லாம் தாமரை

பெருமாளின் திருமேனியில் ஈடுபட்ட ஆழ்வார்க்கு அவர் உறுப்பு ஒவ்வொன்றும் தாமரை மலராகவே காட்சி தருகின்றது.

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்

மண்ணளந்த பாதமும் மற்றவையே – எண்ணில்

கருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்

திருமா மணிவண்ணன் தேசு (9)

என்பது அவரது பாடல்.

6.4.3 வணங்குவார் அடையும் பேறு திருமாலின் திருப்பெயரை ஓதிடுவார் யாவரும் ஒளியும், ஆற்றலும், செல்வமும், உருவச் சிறப்பும், உயர்குடிப் பிறப்பும், பிற எல்லா நன்மைகளும் அடைந்து மகிழ்ச்சியாய் வாழ்வர் என உறுதிபடக் கூறுகின்றார். (10)

கைதொழுதலே போதும்

மலையில் நின்றும், நீரில் மூழ்கியும், ஐந்து நெருப்பிலே (நாற்புறமும் தீ; மேலே கதிரவன்) நின்றும் தவம் செய்தவர் பெறும் பேரின்பத்தை மலர் தூவிக் கைதொழுதவர்க்கு உடன் அளிப்பவர் திருமால் என்கின்றார். (76)

6.5 தொகுப்புரை

இப்பாடத்தால் அறியும் செய்திகள் இங்குத் தொகுத்துக் கூறப்படுகின்றன.

வைணவ சமயத் தொண்டர்கள் ஆழ்வார் எனப்பட்டனர். இறைவன் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருப்போர் என்பது ஆழ்வார் என்பதன் பொருள்.

ஆழ்வார்கள் பன்னிருவர். அவருள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற மூவரும் முதலாழ்வார் எனப்படுவர்.

இம்மூவர்க்கும் பொதுவான வரலாறு அமைந்துள்ளது. மூவரும் தொண்டை நாட்டில் பிறந்தோர்; வெண்பாவில் திருமாலைப் பாடியோர்; மூவரையும் சேர்த்தே வணங்குவது வைணவ மரபு. மூவரும் திருமாலால் திருக்கோவலூரில் ஆட்கொள்ளப்பட்டனர்.

மூவரும் பாடிய பிரபந்தங்கள் நாலாயிரத்தி்ல் இயற்பா என்ற பிரிவில் அடங்கும்.

மூவரும் தம் பிரபந்தங்களில் திருமாலின் திருமேனி, திருமாலின் அவதாரச் செயல்கள், அவரை வழிபடும் முறை, வழிபடுவதால் அடையும் பேறு முதலியவற்றை விளக்கியுள்ளனர்.

ஆழ்வார்கள் ஐம்புலன்கள், எண்திசைகள், ஐம்பூதங்கள், வேதம், அறம் முதலிய அனைத்தையும் திருமாலாகவே காண்கின்றனர்.

சிவபெருமானை முழுமுதற் பொருளாகக் கொள்வர் சைவர். ஆனால் ஆழ்வார்கள் சிவபெருமானிடத்தும் திருமாலையே காண்கின்றனர். அஃதாவது, சிவனும் திருமாலின் ஒரு கூறு என்கின்றனர்.