14

இலக்கிய வரலாறு -2

ஆறாம் நூற்றாண்டு

1.0 பாட முன்னுரை

அக வாழ்வாகிய காதலையும், புறவாழ்வின் சிறப்புக் கூறாகிய வீரத்தையும் சங்க இலக்கியங்கள் எடுத்துரைத்தன. வாழ்க்கையைச் செம்மையாக வாழ்வதற்கு உரிய நீதிக் கருத்துகளைச் சங்க காலத்துக்குப் பின்வந்த அறநூல்கள் வலியுறுத்தின. நம் பாடத்திற்குரிய காலப்பகுதியில் (கி.பி. ஆறாம் நூற்றாண்டு) இறைவனை வழிபடும் வழிபாட்டுப் பாடல்கள் தோன்றின. இவை சமய இலக்கியம் எனப்படும். கடவுளை மக்கள் மனம் நாடியதன் வெளிப்பாடு சமய இலக்கியம் எனலாம். சமணரின் அருகன், பௌத்தரின் புத்தபிரான, சைவரின் சிவன், வைணவரின் திருமால் ஆகிய கடவுளர்கள் தமிழ் இலக்கியத்தில் வழிபடப் பெற்றனர்.

சமண மத இலக்கிய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், வைணவ இலக்கியங்கள், பௌத்த இலக்கியங்கள் என்று ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கியங்கள் பற்றிய கருத்துகள் இப்பாடத்தில் தரப்பட்டுள்ளன.

1.1 சமய இலக்கியங்கள்

சமய இலக்கியங்கள் பக்திப் பெருக்கை எடுத்துரைப்பவை; சமயத் தத்துவங்களைப் புலப்படுத்துபவை. சமண சமயத் துறவிகளும், பௌத்த சமயத் துறவிகளும் மெய்ப்பொருளியலைக் (மெய்ப்பொருளியல் – அவரவர் சமயம் கூறும் உண்மைக் கருத்துகள்) கூறும் இலக்கிய நூல்களைப் படைத்தனர். நாயன்மார்களும், ஆழ்வார்களும் கல் நெஞ்சையும் கனிவிக்கும் பக்திப் பாடல்களை இயற்றிப் பரம்பொருளை வழிபடும் மரபைத் தோற்றுவித்தனர். இவ்வாறு சமயச் சான்றோர்களாம் ஞானச் செல்வர்கள் அருளியவை சமய இலக்கியங்களாம்.

முதலில், சமய இலக்கியம் தோன்றிய காலத்தின் தமிழக அரசியல் சமூகச் சூழல்கள் எவ்வாறு இருந்தன என்பதையும், அவை அவ்விலக்கியத் தோற்றத்திற்கு எவ்வாறு காரணமாயின என்பதையும் காண்போம்.

1.1.1 தோன்றுவதற்கான காலச் சூழல் தமிழகத்தைக் கி.பி. 250 முதல் 600 வரை களப்பிரர் அல்லது களப்பாளர் ஆண்டனர். களப்பிரர் தமிழகத்திற்கு வந்த அயலவர். அவர்கள் கருநாடக தேசத்திலிருந்து தமிழகத்தில் புகுந்து மூவேந்தர்களை வென்று தமிழகத்தைக் கைப்பற்றினர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்களும், பாண்டியர்களும் அதிகார வலிமை பெறும் வரை இவர்தம் ஆட்சி இருந்தது. இவர்கள் காலத்தில் தமிழகத்து அரசியலிலும், சமயத்திலும், சமூகத்திலும், இலக்கியப் பாடுபொருளிலும் மாறுதல்கள் ஏற்பட்டன.

அளவரிய அதிராஜரை நீக்கி அகலிடத்தைக்

களப்பாளன் என்னும் கலியரசன்

கைக்கொண்டனன்

என்று வேள்விக்குடிச் சாசன வரிகள். அச்சுதக் களப்பாளன் தமிழகத்தைக் கைப்பற்றியதைச் சொல்கின்றன.

ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் சிம்ம விட்டுணு எனும் பல்லவனும், பாண்டியன் கடுங்கோனும் களப்பாளரை வெற்றி கொண்டனர். பல்லவர்களும் தமிழகத்திற்கு அயலவரே. ஆந்திர தேசத்தில் கிருஷ்ணா ஆற்றுக்கும், வடபெண்ணை ஆற்றுக்கும் இடையே ஆட்சியை வலிமைப்படுத்திக் கொண்டிருந்த பல்லவ வம்சத்தினர் களப்பாளருடன் மோதித் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றினர். காஞ்சி அவர்தம் அரசிருக்கை ஆகியது.

அரசியல் சூழல்

கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் வடக்கில் முற்காலப் பல்லவர்களும், நடுப்பகுதியில் களப்பாளர்களும், தெற்குப் பகுதியில் பாண்டியர்களும் ஆண்டனர். கொங்கு நாட்டுப் பகுதியும், குமரிக்கு அருகில் வேள்நாடும் குறுநில மன்னர்களுக்கு உட்பட்டிருந்தன.

கருநாடக வேந்தன் ஒருவன் பாண்டிய நாட்டில் புகுந்து ஆண்டான் என்றும், அவன் காலத்தில் சைவம் அழிந்தது, சமணம் செழித்தது என்றும் பெரியபுராணம் (மூர்த்தி நாயனார் புராணம்-11-12), கல்லாடம் (கல்லாடம் – 56) ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன.

சிம்மவிஷ்ணு பல்லவன் களப்பிரர்கள் மீது படையெடுத்து வெற்றி கண்டான் என்று காசக்குடிச் சாசனம் கூறுகிறது.

தமிழகத்தின் வடக்கில் களப்பிரர்களைப் பல்லவர் ஒடுக்கினர். ஏறத்தாழ இதே காலத்தில் தமிழகத்தின் தெற்கில் பாண்டியன் கடுங்கோன் வலிவு பெற்றுக் களப்பிரர்களைத் தோற்கடித்துப் பாண்டிய நாட்டை மீட்டான்.

1.1.2 சமூக மாற்றம் தமிழகத்தின் மன்னராட்சி களப்பிரர், பல்லவர் எனும் அயலவர் கரங்களுக்கு மாறியது. விவசாய உற்பத்தி தேவைக்கு அதிக விளையுளைச் சேமிக்க, உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபத்தின் மூலம் விற்பனை செய்ய வழி செய்தது. செல்வர்கள், வணிகர்கள், அரசர்கள், உழைப்பவர்கள் என்ற வெவ்வேறான பகுப்பினர் ஆயினர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகின. அசோகர் முயற்சியால் ஆந்திர தேசத்தின் வழி தமிழகம் வந்த பௌத்த சமயம் களப்பிரர் ஆட்சியில் சிறந்து விளங்கியது. புத்தபிக்குகளும், பிக்குணிகளும் தமிழகமெங்கும் சுற்றி உரையாற்றினர். காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், புத்தமங்கலம், மயிலாடுதுறை, உறையூர் முதலியன செல்வாக்குப் பெற்ற பௌத்த மையங்களாகத் திகழ்ந்தன. காஞ்சியில் பிறந்த போதி தருமர் எனும் புத்தப் பெரியார் காண்டன் நகரம் வழியாகச் சீனாவுக்குச் சென்று புத்தசமயத்தைப் பரப்பினார்.

இந்நூற்றாண்டில் சமணர்கள் தொண்டை மண்டலத்திலும், தமிழகத்தில் பிற இடங்களிலும் சமணத்தைப் பரப்பினர். சமணர்களும், பௌத்தர்களும் நாடுகளின் எல்லைகளைத் தாண்டியும், மொழி மண்டலங்களின் எல்லைகளைத் தாண்டியும் தத்தம் சமயங்களைப் பரப்பியது குறிக்கத்தகு நிகழ்வாகும். சமணர்களும், பௌத்தர்களும் புதுவகைக் கல்வி முறையைப் பின்பற்றினர். பௌத்தர்களின் விகாரம் சிறந்த கல்வி நிலையமாகும். காஞ்சி, உறையூர், போதிமங்கை ஆகிய இடங்களில் பௌத்தக் கல்வி நிலையங்கள் இருந்தன. காஞ்சியில் பயின்ற போதி தர்மரும், தர்மபாலரும் காஞ்சியிலும், நாலந்தாப் பல்கலைக்கழகத்திலும் ஆசிரியர்களாகத் திகழ்ந்தனர்.

சமணர்கள் அமண் பள்ளிகளை வைத்துக் கல்வி புகட்டினர். சிம்மசூரி முனிவரும், சர்வநந்தியும் சிறந்த சமண ஆசிரியர்களாக இருந்தனர். சமண சமயப் பணிக்காக வச்சிரநந்தி மதுரைத் திரமிள சங்கத்தை நிறுவினார். காஞ்சியைக் கைப்பற்றிய பல்லவர்கள், கடிகைப் பள்ளி களை நிறுவினர். வேதக் கல்வியும் உடற்பயிற்சி, போர்ப் பயிற்சி ஆகியவையும் வழங்கப்பட்டன. அரசு செலவில், உண்டியும், உறையுளும் நல்கிச் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு மட்டும் கல்வி வழங்கும் கடிகைப் பள்ளியில், கடம்ப நாட்டு மயூரசன்மனும், சேர நாட்டு மேலத்தூர் அக்கினி ஹோத்திரியும் கல்வி பயின்றுள்ளனர். செல்வர்களின் பேராதரவும் கிடைத்தது.

தமிழகத்தின் தொன்மையான சமயம் சைவம். குடிமல்லம், கழாத்தூர், குடுமியான் மலை ஆகிய இடங்களில் கிடைத்துள்ள சிவலிங்கங்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று தொல்லாய்வினர் கூறுகின்றனர். களப்பாள மன்னர்கள் சைவம் சார்ந்தவர்கள் அல்லர். சோழ அரசன் செங்கணான் காவிரிப்படுகையில் கட்டிய சிவாலயங்கள் பல வழிபாடின்றிக் கிடந்தன. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் சிவ ஆலயங்கள் பல்லவர் ஆட்சியில் மீண்டும் பேணப்படும் நிலை தோன்றியது.

களப்பிரர்களை வென்று ஆட்சியைக் காஞ்சியில் தோற்றுவித்த பல்லவர்கள் வேதியர்களின் குடியிருப்புகளை விரிவுபடுத்தினர். உழவர்களது நிலங்கள் பிரம்மதேய (பிரம்மதேயம் – வேதியர்களுக்குக் கொடையாகத் தரப்படும் நிலம்) தானத்தின் வழி வேதியர்களுக்கு மாறின. தேவதானங்கள் (தேவதானம் – கோயிலுக்குக் கொடையாகத் தரப்படும் நிலம்) வழி கோயில்களுக்கு மாறின. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று திணை அடிப்படையில் பகுக்கும் முறை மாறியது. (திணை அடிப்படை – நிலத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு மலை, காடு,வயல், கடல், வறண்ட சுரவெளிப் பகுதிகளைத் திணைகளாகப் பகுக்கும் முறை) அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்று வர்ண சமுதாய அமைப்பும், மேலோர், கீழோர் என்ற அடுக்குமுறையும், வெவ்வேறு சாதிகளும் முன்னிறுத்தப்பட்டன. சாதிகளின் உரிமைகளும், கடமைகளும், எல்லைக் கோடுகளும், கட்டுப்பாடுகளும் வரையறுக்கப்பட்டன.

சைவத்தைப் போன்றே வைணவமும் தொன்மையான வழிபாட்டுச் சமயப் பிரிவு ஆகும். மாயோன் எனத் தொல்காப்பியம் திருமாலைக் குறிக்கிறது. பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் என்று பெரும்பாணாற்றுப்படை திருமாலைப் போற்றுகிறது. சிலப்பதிகாரத்தில் வைணவ ஆலயம் குறிக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் திருமால் பலவாறு போற்றப்படுகிறார். களப்பாள மன்னர்கள் சிலரும், பல்லவ மன்னர்கள் சிலரும் வைணவப் பெயர்களைத் தாங்கி உள்ளமையால் வைணவம் வெறுக்கப்படவில்லை எனலாம்.

பௌத்த விகாரைகள், சைத்தியங்கள், சமணப் பள்ளிகள், குகைகள், சைவ ஆலயங்கள், வைணவக் கோயில்கள் என்று கோயில்களை மையமிட்ட நகரங்கள் வளர்ந்தன. பழைய வாணிப நகரங்களின் ஆரவாரமும் சிறப்பும் கோயில்களுக்கு இடம்மாறின.

1.1.3 பாடுபொருளில் மாற்றம் சமண, பௌத்த சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தனர். சமயக் கருத்துகளை மையப்படுத்தித் தமது நூல்களை அமைப்பது இவர்தம் படைப்பு நெறியாக இருந்தது. அவ்வகையில் தமிழின் பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள் ஆகியவற்றில் சமண, பௌத்தரது ஆக்கங்கள் மிகுந்திருக்கக் காணலாம். அரசர்கள், செல்வர்களது ஆதரவு சமயஞ்சார்ந்த துறவியருக்கும், வேதியருக்கும் கிடைக்கலாயிற்று. சமய அறிஞர்கள் ஊர் ஊராகச் சென்று சமயங்களைப் பரப்ப இலக்கியத்தைக் கருவியாகக் கொண்டனர். பாடுபொருள், பக்தி உணர்வாக அமைந்தது. காதலாகிக் கசிந்து ஓதும் வழிபாட்டுப் பாடல்கள் உருவாயின. போட்டி போட்டுக் கொண்டு தத்தம் சமயஞ்சார்ந்த இலக்கியங்களைப் படைக்கும் நிலை ஏற்பட்டது. பல்லவர் காலத்தில் சைவ வைணவ சமயங்கள் செல்வாக்குப் பெற்றன. பழந்தமிழர் சமயம் ஏற்றம் பெற்றது. காரைக்காலம்மையாரும், முதலாழ்வார்களும் பாடிய பாடல்களில் முறையே சிவனையும், திருமாலையும் துதிக்கும் நிலையைக் காணலாம். தமிழும் இசையும் இணைந்து பொதுமக்களை ஈர்த்த இயக்கமாகப் பக்தி இயக்கம் தோன்றியது. வானளாவும் கோபுரங்களைக் கொண்ட கோயில்கள் எழுந்தன. கலைகள் வளர்ந்தன. உலக வாழ்வில் வெறுப்பும், துறவில் விருப்பும் கொண்ட சமண பௌத்த சமயங்களது செல்வாக்குக் குறைந்தது. இறைவனைத் துதிக்கும் துதிப்பாடல்களைச் சைவ, வைணவப் பெரியோர் இயற்றினர். அவை தலங்கள் தோறும் மக்களால் பாடப்பட்டன. தமிழ் உணர்ச்சி சமய உணர்ச்சியாகப் பரிணாமம் பெற்றது எனலாம்.

1.2 சமண சமய இலக்கியங்கள்

சமண சமயம் வட இந்தியாவில் தோன்றியது. அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் புகுந்தது. தமிழகத்தில் உள்ள காஞ்சி மாநகரும், மதுரை மாநகரும் சமண சமயத் தலங்களாகத் திகழ்ந்தன எனலாம். சமண சமயத்தைப் பின்பற்றுவோர் சமணர் எனப்பட்டனர். 1. உயிர்களைக் கொல்லாமை 2. வாய்மை 3. திருடாமை 4. துறவு ( துறவு – திருமணம் செய்து கொள்ளாமல், தனியனாய் உலக பந்தபாசங்களை விலக்கி வாழுதல்) 5. ஆசையைத் துறத்தல் என்ற ஐந்து நோன்புகளைச் சமணர் கடைப்பிடித்தனர். இவற்றை அவர்கள் மா விரதங்கள் என்றனர்.

பொய்கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றிச்

செய்தவம் நுனித்த சீலம்

(சீவக சிந்தாமணி – 2834)

இவற்றைச் சமணசமயம் வலியுறுத்திற்று. இவை தமிழ் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. எனவே சமணம் தமிழகத்தில் நன்றாக வேரூன்றியது. இதனால் தமிழ்மொழி பல நன்மைகள் பெற்றது. அறநூல்கள், காப்பியங்கள், இலக்கண நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள், நிகண்டுகள் ஆகியவற்றை அவர்கள் படைத்தனர்; இனி 6ஆம் நூற்றாண்டில் சமணர் செய்த தமிழ் இலக்கியங்கள் பற்றிக் காணலாம்.

1.2.1 ஆறாம் நூற்றாண்டுச் சமண இலக்கியங்கள் கிளி விருத்தம், எலி விருத்தம், நரி விருத்தம் ஆகிய நூல்கள் ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமணத் தமிழ் நூல்கள் ஆகும்.

இவை குழந்தைகளின் மனத்தைக் கவரும் வகையில் அறக் கருத்துகளைக் கதைவடிவில் சொல்லும் வெளிப்பாட்டு முறையைக் கொண்டிருந்தன.

அவ்வகையில் கிளி, எலி, நரி ஆகியனவற்றைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு, கதை வடிவில் குழந்தைகளுக்காகப் படைக்கப்பட்டன.

விருத்தம் என்பது செய்யுளில் ஓர் இனத்தின் பெயராகும்.

இந்நூல்கள் இப்போது கிடைக்கவில்லை.

கிளி விருத்தம்

கிளியின் மீது கதையையும், நீதியையும் ஏற்றிச் சொல்லுவதாக இந்த நூல் அமைந்திருத்தல் வேண்டும். வடமொழியில் இதுபோன்ற கதைகள் உள்ளன. வடமொழியில் இக்கதைகளை எழுதியவர் ஒரு சமணர் ஆவார். மேலும், கிளிவிருத்தம் பற்றி ஞானசம்பந்தர் கூறியுள்ளார். அவர் சொல்லும், கிளி விருத்தம் வடமொழிக்கும் முதல்நூலாகத் தமிழில் சமணர்களிடையே வழங்கியிருக்கலாம் என்று தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், சமணத் தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் கூறுகின்றார்.

எலி விருத்தம்

பஞ்சதந்திரக் கதைகள் என்ற நூலில் மித்ரலாபம் என்றொரு பகுதி உள்ளது. அதில் எலி ஒன்று புறாவைக் காப்பாற்றிய கதை உள்ளது. எலி விருத்தம் என்பது அந்தக் கதையைச் சொல்லுவதா அல்லது அதுபோன்ற ஒன்றா என்பது விளங்கவில்லை. ஆனால், எலி விருத்தம் என்றொரு தமிழ்நூல் இருந்தது என்று மட்டும் அறிகிறோம்.

நரி விருத்தம்

சீவக சிந்தாமணியின் ஆசிரியர் ஆகிய திருத்தக்கதேவர் எழுதிய நரி விருத்தம் வேறு; இந்த நரி விருத்தம் வேறு. இதைப் பழைய நரி விருத்தம் என்று கூறுவர். இந்த நரி விருத்தம் கதை வழியாக நீதி கூறும் நூல்.

பிற கதைகள்

சமண சமயம் கூறும் அறக் கருத்துகளை மக்களுக்கு எளிதில் விளக்கும் வகையில் கதைகள் பல உள்ளன. வசன நூல்களாக அவை அச்சிடப்படாமல் ஏட்டில் நிறைய உள்ளன.

1.2.2 சமண சமயப் பக்திப் பாடல்கள் யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக் காரிகை எனும் இலக்கண நூல்களில் மேற்கோளாகக் காட்டப்படும் பாடல்கள் சமண சமயப் பக்திப் பாடல்களாக உள்ளன.

போது சாந்தம் பொற்ப ஏந்தி

ஆதி நாதன் சேர்வோர்

சோதி வானம் துன்னுவாரே

(யாப்பருங்கலவிருத்தி-6 : 69,மேற்கோள்

யாப்பருங்கலக் காரிகை 5 மேற்கோள்)

அணிநிழல் அசோகமர்ந்து அருள்நெறி நடாத்திய

மணிதிகழ் அவிரொளி வரதனைப்

பணிபவர் பவநனி பரிசறுப் பவரே

(யாப்பருங்கலவிருத்தி-8,மேற்கோள்

யாப்பருங்கலக் காரிகை-5 மேற்கோள்)

ஆகிய பாடல்கள் சமணரது கடவுளாம் அருகனைப் பாடும் பாடல்களாக இருப்பதைச் சான்று காட்டலாம். எனவே பக்தி உணர்வே சமண சமயப் பக்தி இலக்கியத்திற்குத் தோற்றுவாயாக அமைந்திருத்தல் வேண்டும். பல தமிழ்ப்பாடல்கள் சமண சமயப் பக்திப்பாடல்களாக, வழிபாட்டிற்குரியனவாக ஓதப்பட்டிருப்பது உண்மை. ஆனால் சைவ சமயத் திருமுறைகள் போன்றோ, வைணவ திவ்வியப் பிரபந்தம் போன்றோ அவை தொகுக்கப் பெறாது மறைந்து போயிருக்கலாம்.

சான்றுகள்

சமண சமயம் சார்ந்த முழு நூல்கள் கிடைக்கவில்லை. ஆனால் இருந்துள்ளன என்று ஊகிக்கக்கூடிய அளவிற்குச் சான்றுகள் உள்ளன குண்டலகேசி விருத்தம், கிளி விருத்தம், எலி விருத்தம், நரி விருத்தம் முதலாயுள்ளவற்றுள் கலித்துறைகளுள் உளவாகும் என்று வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார் கூறியுள்ளதிலிருந்து அந்நூல்கள் இருந்தன என்று அறியலாம்.

கூட்டினார் கிளியின் விருத்தம் உரைத்ததோர்

எலியின் தொழில்

பாட்டு மெய் சொலிப் பக்கமே செலும் எக்கர்

தங்களைப் பல்லறம்

காட்டியே …………………………………………………………………………………

……………………………………… திருவாலவாய் அரன் நிற்கவே

(திருவாலவாய் பதிகம் : பா : 5 )

என்று திருஞானசம்பந்தர் கிளிவிருத்தம், எலியின் தொழில்பாட்டு (எலியின் விருத்தம்) பற்றிக் கூறுகிறார்.

அரி அயற்கு அரியானை அயர்த்துப் போய்

நரிவிருத்தம் அது ஆகுவர் நாடரே

(ஆதிபுராணத் திருக்குறுந்தொகைப் பா. 7)

(அரி = திருமால்; அயற்கு = அயனுக்கு; அயன்= பிரமன்)

என்று திருநாவுக்கரசர் பாடலிலும் அறியலாம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரது பாடல்களிலும், அந்நூல்கள் குறிக்கப்பட்டிருப்பதால் இவை அவர்களது காலமாகிய கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முந்தியவை. சமணம் செழித்திருந்த கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டனவாக இருத்தல் வேண்டும் எனலாம்.

1.3 சைவ சமய இலக்கியங்கள்

சிவனை முழுமுதல் தெய்வமாகப் போற்றுவது சைவ சமயம். சைவசமயப் பெரியோர்கள் பாடிய பாடல்கள் சைவத் திருமுறைகள் ஆகும். பக்தியுணர்வு மிக்க பாடல்கள் நிறைந்தவை. சிறந்த பக்தி வைராக்கியம் கொண்டு, இறைவன் உருவைக் கண்டு அனுபவித்தல், அவன் புகழ் பாடுதல் இவற்றையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த காரைக்காலம்மையார் போன்றோரது பாடல்கள் இந்த நூற்றாண்டில் தோன்றியவை ஆகும்.

சைவ அடியார் படைத்த பாடல்கள் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் காரைக்காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் I, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் II ஆகிய நான்கு நூல்களும் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.

1.3.1 அற்புதத் திருவந்தாதி காரைக்காலம்மையாரின் வரலாறு பெரியபுராணத்தில் உள்ளது. காரைக்காலில் செல்வ வணிகனின் மகளாகப் பிறந்த இவரது இயற்பெயர் புனிதவதியார் என்பதாம். பரமதத்தன் என்ற வணிகனை இவர் மணந்தார். புனிதவதியார் இறைவன் திருவருள் பெற்றவர் என்பதை உணர்ந்து மருண்ட பரமதத்தன் அவரை விட்டுவிட்டுப் பாண்டிய நாடுசென்று வேறொரு பெண்ணை மணந்து வாழ்ந்தான். புனிதவதியாரைச் சந்திக்க நேர்ந்தபோது அவரைத் தெய்வம் எனக் கூறி அவர் திருவடிகளைத் தொழுதான். அதனால் நாணமுற்ற புனிதவதியார் துறவு பூண்டு, சிவனை வேண்டிப் பேய் உருவம் கொண்டார்; கயிலைக்குச் சென்றபோது சிவன் அவரை அம்மையே என அழைத்தான். அப்பெருமை காரணமாக அவர் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்பட்டார்.

காரைக்காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி நூற்றியொரு வெண்பாக்களைக் கொண்டது. அந்தாதித் தொடை அமையப் பெற்றது.

அற்புதம் என்றால் சிறப்பு என்று பொருள். சிவனின் சிறப்புகளை – அற்புதங்களைப் பாடும் நூல். திரு என்ற சிறப்பு அடைமொழியோடு, அற்புதத் திருவந்தாதி என்று குறிக்கப்பெறுகின்றது.

அந்தாதி என்பது ஒரு பாடலின் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ அடுத்த பாடலுக்கு முதலாக வருமாறு பாடல்களைப் பாடும் முறை ஆகும்.

சிவன் எலும்பு மாலை அணிந்து, கபாலத்தைக் (மண்டை ஓடு) கையில் ஏந்தி, இடுகாட்டில் இரவில் ஒளிப்பிழம்பாக ஆடும் காட்சியை அம்மையார் சிறப்பாக வர்ணிக்கிறார்.

பிறர்அறிய லாகாப் பெருமையரும் தாமே

பிறர்அறியும் பேருணர்வும் தாமே – பிறருடைய

என்பே அணிந்துஇரவில் தீயாடும் எம்மானோர்

வன்பேயும் தாமும் மகிழ்ந்து

(அற்புதத் திருவந்தாதி – 30)

(என்பு = எலும்பு)

என்று சிவன் தீ வடிவில் ஆடுவதைக் கூறுகிறார். அழல் (நெருப்பு) ஏந்தி ஆடுவதால் அங்கை (சிவனது உள்ளங்கை) சிவந்து போனதா? அல்லது சிவன் கையில் பிடித்து ஆடுவதால் தீ சிவந்த நிறத்தைப் பெற்றதா? என்று அம்மை வியக்கும் அழகைப் பாருங்கள்.

அழலாட அங்கை சிவந்ததோ அங்கை

அழகால் அழல்சிவந்த வாறோ – கழலாடப்

பேயோடு கானிற் பிறங்க அனல்ஏந்தித்

தீயாடு வாய் இதனைச் செப்பு

(அற்புதத் திருவந்தாதி – 98)

அறிபவனும், அறிவிப்பவனும், அறிவாய் இருந்து அறிகின்றவனும், அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே. அவனே ஐம்பூதங்களாகவும் விளங்குகின்றான் என்கின்றார்.

அறிவானும் தானே அறிவிப்பான் தானே

அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற

மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாயம்

அப்பொருளும் தானே அவன்

(அற்புதத் திருவந்தாதி 20)

சிவபெருமான், யார் எந்தக் கோலத்தில், எந்த உருவில் வணங்கினாலும், எத்தகைய தவத்தில் ஈடுபட்டாலும், அவர்அவர்க்கும் அவரவர் விரும்பிய கோலத்தில் வந்து அருள் புரிவார் என்கின்றார்.

எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்

அக்கோலத்து அவ்வுருவே ஆம் (33)

1.3.2 திரு இரட்டை மணிமாலை இருபது பாடல்களைக் கொண்ட இந்நூலும் அந்தாதித் தொடையில் அமைந்ததே. திரு என்னும் சிறப்பு அடைமொழி கொண்டது. வெண்பாவும், கட்டளைக் கலித்துறையுமாய் இந்நூல் அமைந்துள்ளது. இருவித மணிகளால் கோத்த மாலை கழுத்திற்கு அழகு தரும். அதுபோல இருவிதப் பாவகையால் தொடுக்கப்பெற்ற இந்நூல் சிவபெருமானின் அழகினைச் சொற்கோலங்களாக வெளிப்படுத்துகிறது. இரட்டைமணிமாலை என்னும் இலக்கிய வகைக்கு முன்னோடியாக அம்மையாரின் இப்பிரபந்தம் கருதப்படுகிறது. கட்டளைக் கலித்துறை யாப்பை முதன்முதல் கையாண்டவரும் அம்மையாராகவே கருதப்படுகிறார்.

தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே

ஒல்லை வணங்கி உமையென்னும் – மெல்லியல்ஓர்

கூற்றானைக் கூற்றுருவம் காய்ந்தானை வாய்ந்திலங்கு

நீற்றானை நெஞ்சே நினை

(திருவிரட்டை மணிமாலை – 12)

(தொல்லை = பழைய; தாழாமே = காலம் தாழ்த்தாமல் ஒல்லை= விரைவாக; கூற்று = எமன்)

பழைய வினை வந்து சூழ்ந்து கொள்வதற்கு முன்பாகவே உமைஒரு பாகத்தினனாய்த் திகழும் சிவனை நெஞ்சமே நீ நினைப்பாயாக என்று நெஞ்சுக்கு அறிவுரை கூறுகிறார்.

1.3.3 திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் I & II பத்துப்பாடல்களின் தொகுதிக்குப் பதிகம் என்னும் பெயர் வழங்குகின்றது. அம்மையார் பாடிய பதிகங்களுக்கே முதலில் இப்பெயர் ஏற்பட்டது என்பர். இவை பழைமையானவை என்பதனைக் குறிக்க மூத்த என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது.

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஒவ்வொன்றிலும் 11 பாடல்கள் உள்ளன. இறுதிச் செய்யுள் திருக்கடைக்காப்பு எனப்படும். அது அப்பதிகத்தைப் பாடுவார் பெறும் நன்மையைக் குறிக்கும். இப்பதிகங்களுள் அம்மையார் தம்மைக் காரைக்கால் பேய் என்று குறிப்பிடுகிறார்.

முதற்பதிகம் நைவளம் என்னும் பண்ணிலும் (இராகம்), இரண்டாம் பதிகம் இந்தளம் என்னும் பண்ணிலும் அமைக்கப்பட்டுள்ளன. இசையோடு இறைவனைப் பாடும் மரபை முதலில் தோற்றிய பெருமை அம்மையார்க்கு உரியது. எனவே தமிழிசையின் தாய் என்று இவரைப் போற்றுவது பொருந்தும்.

சிவபெருமான் சுடுகாட்டையே ஆடும் அரங்கமாகக் கொண்டு ஆடும் திருக்கூத்தினைக் கற்பனை நயம் தோன்ற அம்மையார் பாடியுள்ளார். சிவபெருமான் ஆடும்பொழுது நீண்ட அவர் திருச்சடை எட்டுத்திசையும் வீசுகிறது. அவர் ஊழின் வலியால் இறந்த உயிர்கள் உள்ளம் குளிரவும், அமைதி அடையவும் திருக்கூத்து நிகழ்த்துகின்றார்.

ஈமம் இடு சுடு காட்டகத்தே

ஆகம் குளிர்ந்து அனலாடும்

எங்கள் அப்பன்

(மூத்ததிருப்பதிகம் – 3)

(ஈமம் = விறகு ; ஆகம் = உடம்பு)

என்கிறார் அம்மையார்.

வடதிருவாலங்காடு எனும் ஊர் தொண்டை மண்டலத்தில் இன்றைய சென்னை மாநகரின் அருகில் உள்ளது. அவ்வூரில் சிவன் உலகு எங்கும் நிலைபெற்று ஆடுவது பற்றிப் பாடப்பட்டுள்ளது.

இப்பதிகங்களின் இறுதிப் பாடல்களிலும் அற்புதத் திருவந்தாதியின் கடைசிப் பாட்டிலும் காரைக்காலம்மையார் தம்மைக் காரைக்கால் பேய் என்று சொல்லிக் கொள்கிறார். “மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய நற்கணத்தில் ஒன்றாய நாம்” (அற்புதத்திருவந்தாதி , 86)

திருவாலங்காட்டில் தலையால் நடந்து சென்று சிவனை அம்மையார் வழிபட்டார். அதைக் கேட்ட திருஞான சம்பந்தர் திருவாலங்காட்டில் காலால் மிதித்து நடக்க அஞ்சி ஊருக்கு வெளியிலேயே தங்கினார் என்று சேக்கிழார் கூறுகிறார். கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தர். அவருக்கு முன் வாழ்ந்தவர் காரைக்கால் அம்மையார் எனலாம். ஆகவே இவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதி அல்லது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பர்.

வைணவ சமயத்து முதலாழ்வார் மூவரின் இலக்கியங்கள் குறித்து முந்தைய பாடத்தில் ( A0 4116) படித்ததை நினைவிற் கொள்ளுங்கள்.

1.4 பௌத்த சமய இலக்கியம்

கௌதம புத்தர் புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட இம்மதம் அசோக மன்னரது காலத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பரவிச் செல்வாக்குப் பெற்றது. காஞ்சிபுரம், உறையூர், வஞ்சி, மதுரை முதலிய நகரங்கள் புத்தப் பெருநிலையங்களாக விளங்கின. உயிர்களிடம் அன்பு காட்டுதல், குலவேறுபாடு பாராட்டாமை, அறநெறிவழி நிற்றல் போன்ற இதன் கொள்கைகள் தமிழரை ஈர்த்தன. பலர் பௌத்தர் ஆயினர். சிறப்பிடம் பெற்றனர். தமிழ் இலக்கண இலக்கியத் துறைகளில் ஈடுபட்டனர். கற்றுத் தேர்ந்தனர். பல தமிழ்ப் படைப்புகளைத் தந்தனர். அவை முழுதுமாக இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. அழிந்தவைபோக எஞ்சியவை சிலவே.

1.4.1 குண்டலகேசி இது தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது. இதனை இயற்றியவர் நாதகுத்தனார் என்று நீலகேசி உரை கூறுகிறது. இது தவறு என்றும், நாகசேனர் என்பதே அவரது பெயர் என்றும் ஆராய்ச்சிப்புலவர் மயிலை. சீனி வேங்கடசாமி கூறுகிறார். இக்காப்பியம் புத்தர் காலத்தில் வடநாட்டில் வாழ்ந்த சமயத்துறவி ஒருத்தியின் வரலாற்றைக் கூறுவது. இது காப்பியமாகவும், தருக்கநூலாகவும் இருந்தது. இந்நூல் முழுதும் கிடைக்கவில்லை. புறத்திரட்டு முதலிய நூல்களிலிருந்து 224 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவற்றின் வழி அறியவரும் இதன் கதை வருமாறு:

இராசகிருக நாட்டு மன்னனின் மகள் பத்திரை, இவள், காளன் என்னும் திருடனைக் காதலித்து மணந்து கொண்டாள். ஒருநாள் ஊடல் காரணமாக அவனைக் கள்வன் என்று கூறிவிட்டாள். அதனால் அவன் அவளைக் கொல்ல நினைத்து மலையின் உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அவன் கொல்லப் போவதை அறிந்த அவள் அவனையே மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொன்று விடுகிறாள். பின்னர் உலக வாழ்வை வெறுத்துச் சமணத் துறவி ஆகிறாள். பலருடன் சமயவாதம் செய்கிறாள். இறுதியில் சமயவாதம் செய்ததில் சாரிபுத்தனிடம் தோற்றுப் பௌத்த சமயம் சார்கிறாள். குண்டலகேசி என்றால் சுருள் சுருளான முடியை உடையவள் என்பது பொருள்.

இந்நூலில் உலக வாழ்வு நிலையற்றது என்று கூறும் கருத்து வளமிக்க பாடல்கள் உள்ளன.

மனிதனின் வாழ்வு தோற்றம் முதல் இறந்து இறந்தே கழிகின்றது.கருவாக இருந்து குழந்தையாகப் பிறந்தபோது கருவுக்கு ஓர் இறப்பு; பாலகனாகும்போது குழந்தைப் பருவத்திற்கு இறப்பு; இளைஞனாகும் போது பால பருவத்துக்கு இறப்பு ; இப்படி நாளுக்கு நாள்செத்து நலிவடையும் நாம் முதலில் நமக்காக அழாமல் பிறருக்காக அழுவதன் பொருளற்ற நிலையைக் கேள்வி கேட்கும் பாடல் இதோ,

பாளையாம் தன்மை செத்தும்

பாலனாம் தன்மை செத்தும்

காளையாம் தன்மை செத்தும்

காமுறும் இளமை செத்தும்

மீளுமிவ் வியல்பும் இன்னே

மேல்வரும் மூப்பும் ஆகி

நாளும்நாள் சாகின் றோமால்

நமக்கு நாம் அழாதது என்னோ !

(குண்டலகேசி – 9)

1.5 தொகுப்புரை

ஆறாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியங்கள் பக்தியைப் பாடுபொருளாகக் கொண்டவை ; சமயம் சார்ந்தவை. சமண, பௌத்த சமயங்களது காப்பிய ஆக்கங்கள் முற்றுப்பெறும் சூழல் உள்ளது. குண்டலகேசி மட்டுமே காப்பிய அமைப்பில் உள்ளது. அறக் கருத்துகளைச் சொல்லும் சிறுசிறு விருத்தநூல்கள் உள்ளன. சைவ, வைணவ இலக்கியங்கள் வித்தாகத் தோற்றம் கொள்ளும் நிலையைக் காண்கிறோம். காரைக்காலம்மையார் போன்றோரின் ஆக்கங்களும், முதலாழ்வார்தம் படைப்புகளும் இந்நூற்றாண்டின் விலைமதிப்பற்ற செல்வங்கள் ஆகும்.

பாடம் - 2

ஏழாம் நூற்றாண்டு

2.0 பாட முன்னுரை

கி.பி. 600 முதல் 900 வரையிலான காலம் பல்லவர் காலம் எனப்படுகிறது. தமிழகத்தின் வடக்கில் பல்லவர்கள் ஆண்டனர். தெற்கில் பாண்டியர்கள் ஆண்டனர். இவ்விரு பேரரசினரின் கீழ்ச் சிற்றரசர்கள் இருந்தனர். கங்கர்கள், முத்தரையர்கள், சோழர்கள் முதலியவர்கள் பல்லவர்களுக்குட்பட்ட சிற்றரசர்களில் சிலர். அதியமான், ஆய் மன்னர், மலை நாட்டரசர் போன்றோர் பாண்டியர்களுக்கு உட்பட்டிருந்தனர். இக்காலத்தைய தமிழகம் மூவகைக் கல்வி நிலையங்களைக் கண்டது. அவை

சமணர்கள் நடத்திய அமண் பள்ளிகள்

பௌத்தர்களது விகாரங்கள்

வேதக்கல்விக்காகப் பல்லவ மன்னர்கள் நிறுவிய கடிகைகள்

என்பன. இவற்றில் சமய உண்மைகள், சமயக் கோட்பாடுகள், தத்துவம் முதலியன கற்பிக்கப்பட்டன. சமஸ்கிருத மொழிக்குப் பல்லவ மன்னர்கள் ஆதரவளித்தனர். அவ்வகையில் சமஸ்கிருதம், தமிழ் எனும் இருமொழி மக்கள் நாவில் புழங்கியது. சமஸ்கிருதம் – தமிழ் கலந்த மணிப்பிரவாளம் எனும் கலப்பு நடையும் இருந்தது.

இக்காலத்துத் தோன்றிய இலக்கியங்கள் சமயச் சார்பினவாகவும், அறம் உரைப்பனவாகவும், மன்னரது வெற்றிச் சிறப்பை விதந்தோதுவனவாகவும் திகழ்கின்றன.

பல்லவர் ஆட்சி வலுப்பெற்றுக் கொண்டிருந்த இந்நூற்றாண்டில் சமஸ்கிருதம் எனும் வடமொழி ஆதிக்கமும், வைதிகக் கோட்பாடுகளும் புகுந்தன. இந்து சமயத்தின் இரு கண்களாகிய சைவமும், வைணவமும் தழைக்கத் தொடங்கின. கோயில்கள் எழுந்தன. பக்தி தவழும் பதிகங்கள், பாசுரங்கள் உருவாயின. பக்தி இயக்கமும், பக்தி இலக்கியமும் தமிழகம் பெற்ற அருங்கொடையாகும்.

கி.பி.650 முதல் 860 வரை தஞ்சை, திருச்சி மாவட்டங்களை முத்தரையர்கள் எனும் சிற்றரசு வம்சத்தவர்கள் ஆட்சி செய்தனர்.

தமிழும் வடமொழியும் கலந்து எழுதும் மணிபிரவாளம் எனும் மொழி நிலவியதும் இக்கால கட்டமே. இவை பற்றிய செய்திகள் பாடத்தில் தொகுத்து கூறப்பட்டுள்ளன.

2.1 பின்புலங்கள்

இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி என்பர். இலக்கியம் அது தோன்றிய காலச் சூழலைப் பிரதிபலித்தும் காட்டும். காலச் சூழலுக்கேற்ப இலக்கியங்கள் தோன்றுகின்றன, மாறுகின்றன, வளர்ச்சியடைகின்றன. எனவே ஓர் இலக்கியத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் அது தோன்றிய அரசியல், சமூக, சமயச் சூழல்கள் தெரிந்திருக்க வேண்டும். ஏழாம் நூற்றாண்டின் இலக்கியங்களைத் தெரிந்து கொள்வதற்கு அக்காலக்கட்டத்தின் அரசியல், சமூகம், சமயம் ஆகியவை எத்தகைய பின்புலங்களாக இருந்தன என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

2.1.1 அரசியல் பின்புலம் களப்பிரர், சோழர், மழவர் ஆகியோரை வென்று காவிரி ஆறு வரை பல்லவப் பேரரசை நிறுவிய சிம்மவிஷ்ணு கி.பி.615 வரை ஆட்சி செய்தான். களப்பிரரிடமிருந்து காஞ்சியைக் கைப்பற்றினான். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு காவிரி வரை உள்ள நாட்டை அரசாண்டான்.

“பல்லவர் மரபில் சிம்மவிஷ்ணு என்பவன் தோன்றினான். கற்றவர் கூட்டத்தினின்று இறுதிப் பகைமையை அறவே நீக்கினான். அவன் தன் வீரத்தாலும், பெருந்தன்மையாலும், பகை அரசர்களுடைய அசையும் பொருட்களையும், அசையாப் பொருள்களையும் தனக்கு உரிமை ஆக்கிக் கொண்டான்”

என்று அவந்தி சுந்தரி கதாசாரம் எனும் வடமொழி நூல் கூறுகிறது. ‘கற்றவர் கூட்டம்’ என்பது காஞ்சி மாநகரைக் குறிக்கிறது. காஞ்சியைக் கைப்பற்றியதால் சிம்மவிஷ்ணு கற்றவரைப் பகைவரிடமிருந்து காப்பாற்றினான் என்று அந்த நூல் குறிக்கிறது. கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூர்ப் பட்டயத்தில், ‘சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்’ என்றுள்ளது. எனவே சோழநாட்டைச் சிம்மவிஷ்ணு வென்று பல்லவரது ஆட்சியின் கீழ்க்கொண்டு வந்தமை புலனாகும்.

சிம்மவிஷ்ணு பல்லவகுலம் என்ற உலகைத்

தாங்கும் குலமலை போன்றவன். அவன் நுகர்ச்சிப்

பொருள்கள் அனைத்தையும் உடையவன்; பல

நாடுகளை வென்றவன்; வீரத்தில் இந்திரனைப்

போன்றவன்; செல்வத்தில் குபேரனை ஒத்தவன்.

அவன் அரசர் ஏறு

என்று சிம்மவிஷ்ணு பற்றி அவனது மகன் மகேந்திரவர்மன் தான் இயற்றிய மத்தவிலாசப் பிரகசனத்தில் கூறியுள்ளான்.

சிம்மவிஷ்ணுவின் புகழ் உலகெல்லாம் பரவியுள்ளது.

இவன் காவிரி பாயப் பெற்ற செழிப்பான சோழ

நாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றினான்

என்று மூன்றாம் நந்திவர்மன் காலத்திய வேலூர்ப் பாளையப் பட்டயம் கூறுகிறது.

இப்பூவுலகில் சிங்கம் போன்ற சிம்மவிஷ்ணு தோன்றினான்.

அவன் பகைவரை அழிப்பதில் ஈடுபட்டிருந்தான். களப்பிரர்,

மழவர், சோழர், பாண்டியர் ஆகியவரை வெற்றி கொண்டான்

என்று இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசக்குடிப் பட்டயம் கூறுகிறது.

களப்பிரர் :

தொண்டை நாட்டின் ஒரு பகுதியையும், சோழநாட்டின் பெரும் பகுதியையும் ஆண்டு வந்தவர்கள்.

சோழர் :

களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்டும், உட்படாமலும் காவிரிப் பகுதியை ஆண்டவர்கள். தலைநகரம் உறையூர்.

மழவர் :

மழ (மலை) நாட்டினர். ‘மலாடர்’ என்றும் கூறப்படுவர். திருக்கோவலூர் முதலிய மலைப் பகுதிகளில் வாழ்ந்தவர்.

அவந்தி சுந்தரி கதா சாரம் :

சிம்மவிஷ்ணுவின் அரசவைப் புலவர் தண்டி எனும் வடமொழி வல்லுநர் எழுதிய நூல் ‘அவந்தி சுந்தரி கதா சாரம்’ ஆகும்.

சிம்மவிஷ்ணுவிற்குப் பின் அவனது மகன் முதலாம் மகேந்திர வர்மன் கி.பி.615 முதல் 630 வரை ஆண்டான். அவனது காலத்தில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி காஞ்சியின் மீது படையெடுப்பு நடத்தினான்.

துள்ளி விழும் கயல் மீன்களைக் கண்களாகக்

கொண்ட காவிரி, சாளுக்கியனது யானைகளின்

மதநீர் விழுந்ததால் ஓட்டம் தடைப்பட்டுக் கடலில்

கலக்க இயலாதது ஆயிற்று. புலிகேசியும்,

பல்லவப் பனியைப் போக்கும் கடும் கதிரவனாய்ச்

சேர, சோழ, பாண்டியரைக் களிப்புறச் செய்தான்.

என்று புலிகேசியின் கல்வெட்டு கூறுகிறது. காஞ்சிபுரத்திற்குப் பத்துக்கல் தொலைவில் உள்ள, ‘புள்ளலூரில் மகேந்திரன் தன் பகைவர்களை அழித்தான்’ என்று இரண்டாம் நந்திவர்ம பல்லவனது காசக்குடி பட்டயம் கூறுகிறது. இவன் காலத்தில் தொடங்கிய பல்லவ-சாளுக்கியப் போர் 150 ஆண்டுகள் வரை ஓயவில்லை. மகேந்திரவர்மன் வடமொழிப் புலமை மிக்கவன். குண்டூரில், ‘சேஜர்லா’ என்னுமிடத்தில் இவன் கல்வெட்டு உள்ளதால், கிருஷ்ணையாறு வரை ஆண்ட பேரரசன் என்பர்.

முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பிறகு அவனது மகன் நரசிம்ம வர்மன் பெரு வீரனாக கி.பி.630 முதல் 668 வரை தமிழகத்தை ஆண்டான்.

“கீழ் மலையிலிருந்து கதிரவனும் திங்களும் தோன்றினாற்போல

இப்பல்லவர் மரபில் வந்தவனும் – வணங்காமுடி மன்னர்

தம் முடிமேல் இருக்கும் சூடாமணி போன்றவனும்-

தன்னை எதிர்த்த யானைக் கூட்டத்திற்குச் சிங்கம்

போன்றவனும் – நரசிங்கப் பெருமானே தோன்றினாற்

போல வந்தவனும்- சேர, சோழ, பாண்டிய, களப்பிரரை

அடிக்கடி முறியடித்தவனும் – பலநூறு போர்கள்

புரிந்தவனும் – பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய

இடத்துப் போர்களில் புலிகேசி தோற்று ஓடிய போது

‘வெற்றி’ என்னும் மொழியை அவனது முதுகாகிய

பட்டயத்தின்மீது எழுதினவனும் ஆகிய நரசிம்மவர்மன்”

என்று கூரம் பட்டயங்கள் கூறுகின்றன. சேர, சோழ, பாண்டிய, களப்பிரர்களோடு அடிக்கடி போர் செய்ய வேண்டிய சூழல் பல்லவருக்கு இருந்ததைத் தெளியலாம்.

இரண்டாம் மகேந்திரவர்மன் நரசிம்மவர்மனின் மகன். ‘அந்தந்த வகுப்பார் நடக்க வேண்டிய முறைகளைக் கூறும் அறநூல் வழி ஆண்டான் இவன்’ என்று வேலூர் பாளையப்பட்டுக் கல்வெட்டு கூறுகிறது. இவனுக்குப் பின் பரமேசுவரவர்மன் கி.பி.670 முதல் 685 வரை ஆண்டான். “பரமேசுவரவர்மன் பிறர் உதவி இன்றி, பல இலக்கம் வீரரைக் கொண்ட விக்ரமாதித்தனை, கந்தையைச் சுற்றிக்கொண்டு ஓடும்படி செய்தான் என்று கூரம் பட்டயம் இவன் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனை வென்ற செய்தியைக் கூறுகிறது. எனினும், சாளுக்கிய புலிகேசியின் மகன் முதலாம் விக்கிரமாதித்தன், பாண்டியன் பராங்குச மாறவர்மனுடன் (கி.பி. 670-700) கூட்டணி அமைத்துக் காஞ்சியில், “பரமேசுவர வர்மனைத் தோற்கடித்தான்” என்று சாளுக்கியப் பட்டயங்கள் கூறுகின்றன. பின்னர் பல்லவ மன்னன் தனது படைகளைத் திரட்டி உறையூர் அருகில் உள்ள பெருவளிநல்லூரில் சாளுக்கிய மன்னனைத் தோற்கடித்து இழந்த புகழை மீட்டான்.

(சாளுக்கிய அரசு : பல்லவரது கொடிய பகைவர் சாளுக்கியர்.

கிருஷ்ணை ஆறு வரை ஆண்டவர் மேலைச் சாளுக்கியர் ஆவார். வடக்கே கோதாவரிக்கும், கிருஷ்ணை ஆற்றிற்கும் இடையில் கீழைச் சாளுக்கியர் ஆண்டனர்.)

2.1.2 சமூகப் பின்புலம் பல்லவர்கள் தமிழகத்தின் வடக்கிலிருந்து வந்தவர்கள். அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் எனும் நால்வகைச் சாதியின் புனித சட்டத்தை மகேந்திரவர்மன் காப்பாற்றினான் என்று கூரம் சாசனம் கூறுகிறது. ஒவ்வொரு சாதியினருக்கும் தனி விதிகளைப் பல்லவ வேந்தர்கள் நடைமுறைப்படுத்தினர் என்று காசக்குடி பட்டயம் கூறுகின்றது. அந்தணர்கள் மண்ணுலகத் தேவர்கள் என்று பட்டயங்கள் கூறுகின்றன. அரசுப்பணி, கோவில் பணி, கல்விச் சலுகை, இறையிலி நிலம், வரிச்சலுகைகள் அவர்களுக்குக் கிடைத்தன. சமூகத்தில் அவர்கள் நிலை உயர்ந்திருந்தது. அந்தணருக்காகப் புதியதாக உருவாக்கப்பட்ட குடியிருப்புகள் மிகுந்த ஊர்கள், ‘பிரம்மதேயச் சிற்றூர்கள்’ எனப்பட்டன. இச்சிற்றூர்கள் எத்தகைய வரியையும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டியது இல்லை. உதயச்சந்திர மங்கலம், தயாமுக மங்கலம், பட்டத்தாள் மங்கலம் என்பன இத்தகு பிரம்மதேயச் சிற்றூர்களாகும். இவை சமூகத்தில் அந்தணர் நிலையை உயர்த்தின.

வேதியர்களுக்கு அடுத்த நிலையில் ஆட்சியாளர்கள் இருந்தனர். ஆட்சிப் பொறுப்பும், பாதுகாப்புப் பொறுப்பும் அவர்களது நிலையை உயர்த்தின. சமூகத்தில் எஞ்சிய மக்கள் அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையில் பாகுபாடு செய்யப்பட்டிருந்தனர்.

2.1.3 சமயப் பின்புலம் சிம்மவிஷ்ணு என்னும் பெயரைக் கொண்டே அவன் வைணவன் என்று அறியலாம். ‘பக்தி ஆராதித்த விஷ்ணு – சிம்மவிஷ்ணு’ என்று இரண்டாம் நந்திவர்மன் காலத்திய உதயேந்திரப் பட்டயம் கூறுகிறது. மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் கோவிலின் உள்ளே வடபுறப் பாறையில், ‘ஸ்ரீ சிம்ம விஷ்ணு போதாதிராஜன்’ என்று பொறிக்கப்பட்டு, அதன் அடியில் அமர்ந்த நிலையில் ஓர் ஆண் உருவம் உள்ளது. கிரீடம் அணிந்து, மார்பிலும், கழுத்திலும் அணிகள் நிறைந்துள்ளன. அதன் இருபுறமும் முடியணிந்த பெண் உருவங்கள் நின்ற நிலையில் உள்ளன. தமிழ்நாட்டிற்கே புதிய குகைக்கோயிலை அமைத்தவன் சிம்மவிஷ்ணு ஆவான். அதன் எதிரே உள்ள தென்புறப் பாறை மீது ‘ஸ்ரீ மகேந்திர போதாதி ராஜன்’ என்று பொறிக்கப்பட்டு, அதன் அடியில் முடியும், அணிகளும் அணிந்த மகேந்திரன் நிற்பதாக உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவன் வலக்கை உட்கோவிலைச் சுட்டியபடி உள்ளது.

மகேந்திரன் ஆட்சியின் முற்பகுதியில் சமணம் உயர்நிலையில் இருந்தது. பிற்பகுதியில் சைவம் உயர்நிலைக்கு வந்தது. மகேந்திரவர்ம பல்லவனே சமணனாக இருந்து, பின் சைவனாக மாறினான். குகைகளைக் கோவில்களாகக் குடைந்தவன் இவனே. பாறைகளைக் கோயில்களாக மாற்றியவன் இவனே.

லிங்கத்தை வழிபடும் குணபரன் என்னும் பெயர்

கொண்ட அரசன் இந்த லிங்கத்தினால்

புறச்சமயத்திலிருந்து திரும்பிய ஞானம்

உலகத்தில் நீண்டநாள் நிலைத்திருப்பதாக

என்று திருச்சிராப்பள்ளி மலைக்கோயில் கல்வெட்டுக் கூறுகிறது. வல்லம், தனவானூர், சீயமங்கலம், பல்லாவரம், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் சிவன் கோயில்களையும், மகேந்திரவாடியில் பெருமாள் கோயிலையும் மகேந்திரவர்ம பல்லவன் அமைத்தான். இவன் சமணனாக இருந்தபோது, சமணர் சொற்கேட்டு, அப்பர்க்குக் கொடுமைகள் செய்தான். இறுதியில் இவன் சைவனாக மாறியதும், குடிகளும் சைவர் ஆயினர். சமணம் தளர்ந்தது. சைவம் வளர்ந்தது. திருப்பாதிரிப் புலியூரில் இருந்த சமணப் பள்ளியை இடித்து அக்கற்களைக் கொண்டு வந்து திருவதிகையில் சிவன் கோயிலைக் கட்டி அதற்குத் தன் பெயரால், ‘குணபர ஈச்சரம்’ என்று பெயரிட்டு வழங்கினான். (திருநாவுக்கரசர் புராணம்: 146) மண்டபப்பட்டில் மும்மூர்த்தி கோவிலும், சித்தன்னவாசலில் சமணர் கோவிலும் மகேந்திவர்ம பல்லவனால் குடையப்பட்டவை. மாமண்டூர், சிங்கவரம், நாமக்கல், மகேந்திரவாடி ஆகிய இடங்களில் குடைந்து அமைக்கப்பட்டவை பெருமாள் கோயில்களாம். இதனால் அவன் கோவில் திருப்பணிகளில் ஈடுபாடு மிக்கு வாழ்ந்தமை புலனாகும்.

செங்கல், மரம், உலோகம், சுண்ணாம்பு எதுவுமின்றி

பிரமன், சிவன், விஷ்ணு ஆகியோருக்கு விசித்திர

சித்தர் ஆலயங்கள் கட்டினார்.

என்று மண்டகப்பட்டுக் கல்வெட்டு மகேந்திரவர்மன் பாறையைக் குடைந்து கோவில் கட்டியதைக் கூறும். (விசித்திர சித்தர் என்பது மகேந்திரவர்மனுக்கு அமைந்த மற்றொரு பெயர் ஆகும்.)

நாமக்கல் மலையடியில் இருக்கின்ற நரசிங்கப் பெருமாள் குகைக்கோவில், கிழக்குப் பக்கத்தில் சிவன் கோவிலும், மேற்குப் பக்கத்தில் பெருமாள் கோவிலும் குடையப்பெற்ற திருச்சிராப்பள்ளி மலையடிக் குகைக்கோவில், மகாபலிபுரத்தில், ‘மண்டபங்கள்’ என்றழைக்கப்படும் கோயில்களாகிய, ‘மகிடாசுர மண்டபம், வராக மண்டபம், திருமூர்த்தி மண்டபம்’, ஒரு கல்லையே கோயிலாகச் செதுக்கி உருவாக்கிய “தருமராசன் தேர், பீமசேனன் தேர், அர்ச்சுனன் தேர், திரௌபதி தேர், சகாதேவன் தேர்” போல்வன நரசிம்மவர்ம பல்லவன் கட்டியவை. பாறை மீது செதுக்கிய கோவர்த்தன மலையைக் கண்ணன் ஏந்தி நிற்கும் காட்சி இவனது சமயப் பற்றினைப் புலப்படுத்தும்.

பரமேசுவரவர்ம பல்லவன் சிறந்த சிவபக்தன். ‘கூரம்’ என்ற சிற்றூரில் சிவன் கோவிலைக் கட்டி, அதற்குப் ‘பல்லவ பரமேசுவர கிருகம்’ என்று தன் பெயரையே இட்டான். கோயிலில் ‘பாரதம் சொல்லச் செய்த அரசன் இவன்’ என்று கூரம் பட்டயம் கூறுகிறது. மகாபலிபுரத்தில் ஒரே கல்லால் கணேசர் கோயிலைக் கட்டினான். இராமனுசர் மண்டபம் அமைத்தான். தர்மராசர் தேரின் மூன்றாம் அடுக்கை முடித்தான். கணேசர் கோவில், தருமராசர் மண்டபம், இராமானுசர் மண்டபம் ஆகியவை எல்லாம் சிவன் கோயில்களே என்பது அங்குள்ள கல்வெட்டுகளால் நன்கறியலாம்.

இராசசிம்ம பல்லவன் சிறந்த சிவபக்தன். காஞ்சியில் ஐராவதேச்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், மகாபலிபுரத்தில் கடற்கரை ஓரமாக உள்ள கோவில், பனைமலைக் கோயில் ஆகியவற்றைக் கட்டினான். விழுப்புரத்திற்கு 16 கல் தொலைவில் பனமலை உள்ளது. இராசசிம்மனின் மனைவி ரங்கபதாகை என்பவள் காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு முன்பு வலப்பக்கமாக உள்ள ஆறு சிறிய கோயில்களில் மூன்றாவதைக் கட்டியுள்ளாள்.

2.2 படைப்புகள்

முன்னர் குறிப்பிட்ட பின்புலத்தில் நோக்கும்பொழுது அரசர்களாலும், சமுதாய மாற்றத்தினாலும், பாடுபொருள் மாற்றத்தாலும் பல புதிய இலக்கியங்கள் தோன்றுவதற்கு இக்காலகட்டம் ஏற்புடையதாக இருந்தது என்பது தெளிவாகிறது

2.2.1 அரசரின் படைப்புகள் பல்லவர் தம் அரசவையைப் புலவரால் அலங்கரித்தனர். சிம்மவிஷ்ணு அவையை வடமொழி வல்லுநரான ‘தாமோதரர்’ எனப் பெயர் கொண்ட பார்வி என்பவர் அலங்கரித்தார். மகேந்திரவர்ம பல்லவனோ தானே வடமொழிப் புலவனாகத் திகழ்ந்தான். மத்தவிலாசப் பிரகசனம் எனும் நூலை மகேந்திரவர்ம பல்லவன் இயற்றியதை மாமண்டூர்க் கல்வெட்டு குறிக்கிறது.

நரசிம்மவர்ம பல்லவனின் தானைத் தலைவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான, ‘சிறுத்தொண்டர்’ என்ற பரஞ்சோதியார் என்பதும், அவரே வாதாபியுள் நுழைந்து, சாளுக்கியரை வென்று, செல்வத்தைக் கொணர்ந்து நரசிம்மவர்ம பல்லவன் முன் வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைச் சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகிறார்.

மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித்

தொன்னகரம் துகளாத் துளை நெடுங்கை வரையுகைத்துப்

பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்

இன்னன எண்ணில கவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்

(சிறுத்தொண்டர்புராணம்:6)

முதலாம் பரமேசுவரவர்ம பல்லவன் வடமொழிப் புலமை மிக்கவன். மகாபலிபுரத்தில் கணேசர் கோவிலில் இவன் வெட்டுவித்த 11 வடமொழிச் சுலோகங்கள் நயமானவை. அரசனுக்கும், சிவனுக்கும் பொருந்தக் கூடிய சிலேடையாக அவை உள்ளன.

இராசசிம்ம பல்லவன் சைவ சித்தாந்தத்தில் பேரறிவுடையவன் என்று கைலாசநாதர் கோவில் கல்வெட்டுக் கூறுகிறது.

2.2.2 சமூக மாற்றம் வாயிலான படைப்புகள் ஏழாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் பல சமயத்தாரும் தனிப்பட்ட நிலையில் வாழ்க்கை நடத்தியதை மகேந்திரவர்மனின் மத்தவிலாசப் பிரகசனம் கூறுகிறது. பௌத்தம், காபாலிகம், பாசுபதம் முதலிய சமயங்கள் இருந்தன. காஞ்சியில் பல புத்தப் பள்ளிகள் இருந்தன.

நரசிம்மவர்மன் காலத்தில் வந்த சீனவழிப் போக்கனான இயூன்சங் கி.பி. 642இல் காஞ்சிக்கு வந்தான். ‘காஞ்சியில் நூறு பௌத்த மடப்பள்ளிகள் உள்ளன. பதினாயிரம் பௌத்தத் துறவியர் இருக்கின்றனர். சைவ, வைணவ, சமணர் கோவில்கள் ஏறத்தாழ 80 இருக்கின்றன. திகம்பர சமணர் பலர் இருக்கின்றனர். நான் பாண்டிய நாட்டையும் கண்டேன். அங்குச் சிலரே உண்மைப் பௌத்தராக இருக்கின்றனர். பலர் பொருள் ஈட்டுவதிலேயே ஈடுபட்டுள்ளனர். பாண்டிய நாட்டில் பௌத்தம் அழிநிலையில் உள்ளது. காஞ்சி ஆறுகல் சுற்றளவுடையது’ என்று இயூன்சங் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பெருமை வாய்ந்த ஏழு நகரங்களுள் காஞ்சியும் ஒன்றாக இருந்தது. வர்ணாசிரம தர்மம் வேரூன்றியது. சலுகை பெறுவோர், உழைக்கும் சாதாரணர் என மக்கள் இரு தரப்பினராயினர். சமயஞ்சார்ந்த வாழ்வியல் நெறி உருவானது.

2.2.3 பாடுபொருள் மாற்றம் வாயிலான படைப்புகள் பல்லவப் பெருநாட்டில் இருந்த பெருங்கோயில்களில் எல்லாம் ஆடவரும், பெண்டிரும் அருட்பாடல்களை இசையுடன் கலந்து பாடினர். பக்திப் பதிகங்கள் தோற்றம் பெற்றன.

பண்ணியல் பாடல் அறாத ஊர்;

பத்திமைப் பாடல் அறாத ஊர்;

பா இயல் பாடல் அறாத ஊர்;

மாதர் மைந்தர் இசைபாடும் பூம்புகார்

(சம்பந்தர் பதிகம்: 89)

என்று சம்பந்தர் பூம்புகார் நகரத்தைப் பற்றிப் பாடுகிறார்.

ஆழ்வார் அருட்பாடல்கள் வைணவத் தலங்களில் நன்றாய்ப் பாடப்பட்டு வந்தன. ‘இறைவனைத் துதிக்கும் ஊடகமாகச்’ சைவ, வைணவ சமயஞ்சார்ந்த இலக்கியங்கள், ‘பக்தி’யை நுவல் பொருளாகக் கொண்டு எழுந்தன.

பல்லவர்கள் இந்து மதத்தினர். எனவே, மகாபாரத, இராமாயண நூல்கள் எழுந்தன.

அறநூல்களும், சமண நூல்களும் சமணர் முற்பகுதியில் செல்வாக்குடன் திகழ்ந்தமைக்குச் சான்றுகளாக உள்ளன.

அறக்கருத்தமைய எழுதுதல், இதிகாசக் கருப்பொருளைப் படைப்பாக்கம் செய்தல், சிவனையும், திருமாலையும் துதித்தல், பல்லவர் தம் வெற்றிச் சிறப்பை விதந்தோதல் என்ற அளவில் பாடுபொருள் அமையக் காணலாம்.

2.3 சமண இலக்கியங்கள்

இக்கால கட்டத்தில் சமணர்கள் பாடிய நூல்களாக இரண்டு கிடைத்துள்ளன. அவை காக்கை பாடினியம், சாந்தி புராணம் என்பனவாம்.

2.3.1 காக்கை பாடினியம் காக்கை பாடினியம் என்பது ஓர் இலக்கண நூல். இது காக்கைபாடினியார் என்பவரால் இயற்றப்பட்ட நூல். அகவல் யாப்பில் அமைந்த நூல். யாப்பு இலக்கண நூல். ஏழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல் என்பார் தேவநேயப் பாவாணர். பதினோராம் நூற்றாண்டுக்குப் பின் தனி நூலாகவோ, முழுநூலாகவோ வழக்கில் இல்லை. முழுநூலாக இன்று நமக்கு இந்த நூல் கிடைக்கவில்லை. ஆனாலும் இதன் பெரும்பகுதி யாப்பருங்கல உரையில் இடையிடையே மேற்கோள் ஆக எடுத்தாளப்பட்டு உள்ளது. அங்ஙனம் மேற்கோளாக இடம் பெற்றிருக்கும் பாக்களைத் தொகுத்துப் புலவர் இரா.இளங்குமரனார் என்பவர் நூலாக வெளியிட்டுள்ளார். அவரே பாடல்களுக்கு விளக்கவுரையும் எழுதி உள்ளார்.

2.3.2 சாந்தி புராணம் இந்த நூல் சமணநூல் ஆகும். விருத்தச் செய்யுளால் இந்நூல் இயற்றப்பட்டள்ளது. இந்நூல் இறந்துபட்டது. வெறும் ஒன்பது செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சமண சமய ஆசாரியரது வரலாற்றைச் சொல்லுவதற்காக எழுதப்பட்ட நூல் இதுவாகும். இயற்றியவர் பெயர் தெரியவில்லை.

2.4 சைவ இலக்கியங்கள்

சைவ சமயத் திருமுறைகள் எழுந்தது இக்காலத்தில்தான்.

2.4.1 முதல் மூன்று திருமுறைகள் பாண்டிய நாட்டில் சமணம் தழைத்து இருந்தது. சமணர் இருக்கைகள் இருந்தன. மக்களும், மன்னன் கூன் பாண்டியனும் சமணத்தை ஆதரித்தனர். கூன் பாண்டியனது மனைவி மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் இவர்கள் இருவரும் சிறந்த சிவபக்தர் ஆவர். கோயில்கள் பூசையற்றுத் தவித்ததைக் கண்டு இவர்கள் வாடினர். மன்னனின் மனத்தைத் திருப்ப ஞானசம்பந்தரை அழைத்துவரத் தூது அனுப்பினர். சம்பந்தரும் அத்தூதை ஏற்றார். பாண்டி நாட்டுக்கு வந்தார். வெப்ப நோயால் வாட்டப்பட்ட மன்னனைக் குணப்படுத்தினார். மன்னனின் பேராதரவைப் பெற்றார். சமணர்களுடன் விவாதத்தில் வென்றார். சைவம் உயர்வு பெற்றது. சமணம் தோல்விப் பாதைக்குத் திருப்பப்பட்டது. சமணப் பெரியார்களைக் கழுமரம் வரவேற்றது. பின்பு சம்பந்தர் பாண்டி நாட்டிலிருந்து கிளம்பி பௌத்தர்களது இருக்கையாகிய போதி மங்கையை அடைந்தார். அங்கே பௌத்தத் துறவிகளுடன் வாதில் ஈடுபட்டார். வாதில் தோற்ற பௌத்தர்கள் சைவர்களாயினர்.

ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பாடல்களின் தொகுப்புத் தேவாரம் எனப்படும், முதல் திருமுறை, இரண்டாம் திருமுறை, மூன்றாம் திருமுறை என்று அழைக்கப்படும் தேவாரத் திருமுறைகளைப் பாடியவர் திருஞானசம்பந்தர் ஆவார். இதுவரை கிடைத்துள்ள தேவாரத் திருப்பதிகங்களின் மொத்த எண்ணிக்கை 796 ஆகும். பாடல்களின் எண்ணிக்கை 8250 ஆகும். இவற்றுள் திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்கள் 1600 என்பர். ஆனால் இன்று 384 பதிகங்களே கிடைத்துள்ளன. (4181 பாடல்கள் மட்டுமே) பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு என்பதை முன்னமே படித்தோம்.

சொற்கோவும் தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும்

சிற்கோல வாதவூர்த் தேசிகரும் – முற்கோலி

வந்தில ரேல் நீறெங்கே மாமறை நூலெங்கே

எந்தைபிரான் அஞ்செழுத் தெங்கே.

(சொற்கோ – திருநாவுக்கரசர் ; தோணிபுரத் தோன்றல் – திருஞானசம்பந்தர் ; தோணிபுரம் – சீர்காழி; வாதவூர்த் தேசிகர் – மாணிக்கவாசகர்)

என்ற பாடல் உள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனும் நால்வர் இல்லாவிட்டால் திருநீறு இல்லை. பக்தி இலக்கியம் இல்லை. சிவனது ஐந்தெழுத்து மந்திரமாகிய ‘நமச்சிவாய’ இல்லை என்பது உண்மைதான். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரையும் சைவத்தின், ‘இருகண்கள்’ என்று போற்றுவர்.

திருஞானசம்பந்தர் சீர்காழியில் கவுணிய வேதியர் குலத்தில் பிறந்தவர். சிவபாத இருதயர்க்கும், பகவதியாருக்கும் மகவாய்த் தோன்றியவர். இவரது காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதி ஆகும். திருநாவுக்கரசர் இவர் காலத்தவர். சம்பந்தருக்கு, சிவனும் உமையும் ஒருங்கே தோன்றிக் காட்சி தந்தனர் என்றும், சிவபெருமான் கூறியவாறு உமையம்மை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டினார் என்றும் பெரியபுராணம் கூறுகிறது. பதினாறு ஆண்டு காலமே வாழ்ந்தவர். இறைவி ஞானப்பால் வழங்கியமையால் ‘திருஞானசம்பந்தர்’ என்ற பெயர் பெற்றார். ‘ஆளுடைய பிள்ளையார்’ என்றும் அழைக்கப்படுவார். சீர்காழியில் பிறந்ததால் ‘காழி வள்ளல்’ என்ற பெயரும் இவருக்கு உண்டு. ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்’ என்று சுந்தரரால் போற்றப்படுபவர். அவர் பாடிய பாடல்கள் ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் என்பர். இப்போது கிடைப்பவை 4181 பாடல்கள் மட்டுமே. எல்லாப் பாடல்களும் இசையோடு பாடுவதற்கு ஏற்றபடி பண் அமைக்கப்பட்ட பாடல்கள் ஆகும். அவரது காலத்திலேயே அவராலும், அவருடன் சென்ற சிவபக்தர்களாலும் இசையோடு பாடப்பட்டவை. தன்னுடன் தன் பாடல்களுக்கு யாழ் இசைத்த தீண்டாக் குலத்தைச் சார்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தன்னுடன் பல தலங்களுக்கும் கோயில்களுக்கும் அழைத்துச் சென்றார். சாதி வேறுபாடு, தீண்டாமை போன்ற மூட நம்பிக்கைகளுக்கு அவர் வாழ்விலும் இடம் இல்லை. பாடல்களிலும் இடம் இல்லை.

சோழ இளவரசியாகிய மங்கையர்க்கரசியார் ‘நின்றசீர் நெடுமாறன்’ எனும் கூன்பாண்டியனை மணந்து பாண்டிமாதேவியான நிகழ்ச்சி, சோழ நாட்டு அந்தணர் சம்பந்தரரைப் பாண்டிய நாட்டிற்கு வந்து சைவ சமய பிரச்சாரம் செய்ய வழி வகுத்தது. சம்பந்தரது பதிகத்தின் பொருள் அமைப்பு தனித்தன்மை உடையது. இது சம்பந்தர் பதிகமே என்று சொல்லும்படி உள்ளது. சைவ சமயப் பிரச்சாரம் செய்யும் சாதனமாகவே தன் பதிகத்தை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருஞானசம்பந்தர் தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்தவர். அவரது பாடல்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பாலும் இரண்டு அடிகள் இயற்கை வர்ணனையாக உள்ளன. அடுத்த இரண்டு வரிகள் இறைவனைப் பற்றி அமைகின்றன. எனவே அவரது பாடல்கள் இயற்கை மீதும், இறைவன் மீதும் அவருக்கு உள்ள நாட்டத்தைப் புலப்படுத்துவனவாக உள்ளன. “மக்கள் மனத்தில் அவர்தம் வாழிடத்தைப் போற்றிப் பாடினால் மகிழ்வர். சமய எழுச்சியை ஏற்படுத்துவதும் எளிது. எனவே இம்முறையில் அதிக அளவு மக்களைத் தம் பாடல் வாயிலாகச் சைவத்திற்கு ஈர்த்தார் திருஞான சம்பந்தர்” என்பார் ஆ.வேலுப்பிள்ளை.

திருஞானசம்பந்தர் பதிகம் ஒவ்வொன்றிலும் எட்டாவது பாட்டில் இராவணனைப் பற்றிய குறிப்பு வருகிறது. சம்பந்தருடன் சமகாலத்தில் வாழ்ந்த அப்பரும் இராவணனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இவர்கள் கூறுவதற்கு அக்காலச் சூழல் காரணமாக இருக்கலாம். இராவணன் ஒரு பேரரசன். சிவனை மதியாமல் அவரது வாழ்விடத்தையே அப்புறப்படுத்தப் பார்த்தான். அதன் பயனாய்ச் சிவனால் நசிவுண்டான். சிவனருள் பெற்றமையாலேயே உய்வடைந்தான். அப்பரும், சம்பந்தரும் வாழ்ந்த காலம் பல்லவர் காலத் தொடக்கம் ஆகும். அவர்கள் காலத்தில் சமண சமயம் பரவலாகப் பின்பற்றப்பட்டு வந்தது. சிவபெருமான் அருளே வடிவானவன். தவறு செய்தவர்களுக்கும் அருள் செய்பவன். இக்கருத்தை வலியுறுத்தி, சைவ சமயத்தின் பெருமையைப் பரப்பினர்.

திருஞானசம்பந்தர் ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாம் பாட்டில் திருமாலும், பிரமனும் சிவனின் அடி முடியைத் தேடியும் காண இயலாதவர் ஆயினர் என்ற குறிப்பு இடம் பெறும். சிவன் மூம்மூர்த்திகளில் ஏனைய இருவரிலும் உயர்ந்தவர் என்று சம்பந்தர் காட்டுவதாகக் கொள்ளலாம்.

திருஞான சம்பந்தரின் பத்தாம் பாடல் சமண பௌத்தர்களைப் பழித்துக் கூறும். அப்பர் பாடல்களிலும் சமண பௌத்தர் இழித்துக் கூறுப்படுகின்றனர். சமண, பௌத்தர் பற்றிய சம்பந்தர் குறிப்புகளில் மிகுந்த காழ்ப்பு உள்ளது. சமண பௌத்தரை இழித்துக் கூறுவதனால் அவர்களது போலி வேடம், ஒழுக்கக்கேடு என்பவற்றைப் பொது மக்களிடம் சொல்லி அவர்களை இச்சமயங்களிலிருந்து விடுவிக்க உதவியாக இருக்கும் என்பது இதன் நோக்கமாக இருக்கலாம்.

திருஞானசம்பந்தரின் திருக்கடைக் காப்புச் செய்யுள்கள் பலவற்றில் ‘நற்றமிழ் ஞானசம்பந்தன்’, ‘தமிழ் ஞானசம்பந்தன்’, ‘சம்பந்தன் செய்த தமிழ் மாலை’ என்று தமிழுடன் சேர்த்துச் சொல்லும் முறை உள்ளது. சமணருக்கு எதிரான சைவர் இயக்கத்தைத் தமிழன் எழுச்சியாக ஆக்கியவர் திருஞானசம்பந்தர் ஆவார்.

சைவ சமயத்திற்குச் சம்பந்தர் செய்த தொண்டு சிறப்பானது. சைவ சைமயக் குரவருள் அவரை முதல்வராகக் கொண்டு போற்றுவர். சம்பந்தரைப் பற்றி ஆறு பிரபந்தங்களை நம்பியாண்டார் நம்பி பாடியுள்ளார். பெரிய புராணம் பாடிய சேக்கிழார் அறுபத்து மூன்று தனியடியாரையும், ஒன்பது தொகையடியாரையும் பாட எடுத்துக்கொண்ட போதும் நூலின் பெரும்பகுதியைச் சம்பந்தருக்கே ஒதுக்குகின்றார். நூலில் பாதியைச் சம்பந்தருக்கும், மீதியைப் பிறருக்கும் ஒதுக்கி உள்ளார் என்பது பொருந்தும்.

திருஞானசம்பந்தரது பாடல்களில் தலையாய செய்தி தாய்மையின் தெய்வீகத் தன்மையே என்பார் தொ.பொ.மீ. அவர்கள். சமணம் பெண்களுக்குச் சமவுரிமை தரமறுத்தது. சமண சமயத் துறவிகள் பெண்களாக இருந்தால் அவர்களைத் திகம்பர சமணர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதைச் சம்பந்தர் ‘குரத்திகள் பேணார்’ என்று கூறுகிறார் (குரத்திகள் – சமண சமயப் பெண் துறவிகள்). ஆனால் பெண்மையின் சிறப்பை நிலைநாட்டுபவை சம்பந்தரது பதிகங்கள். பெண்களைக் கடியும் ஒரு சொல்லையும் காணுதல் அரிது. ‘இசை கீழான உணர்வுகளைத் தூண்டும்’ என்று சமணர் கருதினர். “இசை இறைவன்பால் இட்டுச் செல்லும்” என்பது சம்பந்தரது கருத்தாகும். அவர் செந்தமிழைப் பேணுவதைப் பெரிதும் விரும்பினார். தமிழ் இலக்கியத்தில் இவரது பங்களிப்பு மகத்தானது ஆகும்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை

கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

(மூன்றாம் திருமுறை, 24:1)

என்ற திருஞானசம்பந்தரது பாடல் சைவர்களின் திருமணத்தின்போது மகிழ்ச்சியுடன் பாடப்படுவது. இறைவன் பெண் ஒரு பாகனாய் இருப்பதைக் காட்டி உலகில் நல்லபடி வாழமுடியும், யாதொரு குறையும் வராது என்று நம்பிக்கை தருகிறார். அவரது பாடல்கள் ஊக்கமும், நம்பிக்கையும் ஊட்டுவன. சோர்வையோ, கலக்கத்தையோ, துன்பத்தையோ அவரது பாடல்களில் காண்பது அரிது. நாளும் கோளும் என்ன செய்ய முடியும்? அவை நல்லவையே! அடியார்க்கு மிக மிக நல்லவை” என்று மூடநம்பிக்கையைச் சாடுகிறார். ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை, ‘திராவிட சிசு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

2.4.2 நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் திருநாவுக்கரசர் எனும் அப்பர் பாடிய பதிகங்கள் 4900 என்பர். ஆனால் இன்று 312 பதிகங்களே (3066 பாடல்களே) கிடைத்துள்ளன. இவை ‘அப்பர் தேவாரம்’ என அழைக்கப்படுகின்றன. நான்காம் திருமுறை, ஐந்தாம் திருமுறை, ஆறாம் திருமுறை என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவர் பாடிய பாவகைகளில், ‘தாண்டகம்’ என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவரைத் ‘தாண்டக வேந்தர்’ என்று பாராட்டுவர். ஆற்றுவெள்ளம் போல் இறைவன் திருநாமங்களை ஒன்றன் பின் ஒன்றாய் அடுக்கிச் சொல்லும் அமைப்புடையது தாண்டகப்பாடல். இவரது திருத்தாண்டகம் போல் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் காண முடியாது என்பர். இவருக்கு, ‘அப்பர்’, ‘வாகீசர்’ என்ற பெயர்களும் உண்டு. இவர் திருஞானசம்பந்தர் காலத்தவர்.

அப்பர், சம்பந்தர் இருவருள் ஒவ்வொருவரும் மூவாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களுக்குப்பின் வந்த சுந்தரர் ஆயிரம் பாடல்கள் வரை பாடியுள்ளார். இம்மூவரும் பாடிய பாடல்களே தேவாரம் என்று அழைக்கப்பட்டன என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.

தே – தேவன்

வாரம் – சொல்லொழுக்கமும், இசையொழுக்கமும் உள்ள பாடல்.

தேவாரம் – இறைவனைப் பற்றிய இசைப்பாடல் என்று பொருள்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் சமணம் வீழ்ச்சியுறத் தொடங்கியது. சைவம் எழுச்சியுறத் தொடங்கியது. அப்பரது வாழ்க்கை சமணத்தோடும், சைவத்தோடும் பின்னிப் பிணைந்துள்ளது. சைவராகப் பிறந்த அப்பர் சமண சமயத்திற்கு மாறிப் பின்பு சைவராகிப் பெருந்தொண்டு செய்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது.

பாவுற்று அலர் செந்தமிழ்ப் பதிகத் தொடை

பாடிய பான்மையினால்

நாவுக்கரசு என்று உலகம் ஏழினும்

நின் நல்நாமம் நயப்புற மன்னுக

என்று இறைவன் இவருக்கு வழங்கினான் என்று பெரிய புராணம் (செய்யுள் 1344) குறிப்பிடுகிறது. சம்பந்தர் இட்டபெயர் ‘அப்பர்’ என்பது. திருநாவுக்கரசர் பாடிய பாடல்களுள் ஒருபகுதி தாளத்தோடு கூடிய இசையோடு அமைந்த பாடல்கள். மற்றொரு பகுதி தாளமில்லாமல் இசையமைத்துப் பாடப்படுபவை. பக்தியின் உருக்கம் ததும்பும் பாடல்கள் இவருடையவை. திருஞான சம்பந்தரைப் போல் ஆணையிட்டுக் கூறும் முறை இல்லை. பணிவும், குழைவும் மிகுதி. சிவனை நினைத்து ஏங்கும் பெண்ணாகத் தன்னைப் பாவித்துப் பாடியுள்ளார். இவரது பாடல்களில் சிவனை மறந்து காலத்தைப் போக்கியதால் ஏற்பட்ட துன்பச் சுவையைக் காணலாம். எதையும் எதிர்த்து நிற்கும் பேராற்றலைக் காணலாம். பல்லவ மன்னன் இவருக்குத் துன்பம் செய்தபோதும் மன உறுதியோடு இருந்தவர்.

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;

நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;

ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோம் அல்லோம்;

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.

(நடலை = துன்பம் ; ஏமாப்போம் = இன்புற்றமர்ந்திருப்போம்)

என்று இவரது முழக்கப்பாடல்கள் விடுதலை உணர்வு மிக்க எழுச்சிப் பாடல்களாக உள்ளன. அவ்வகையில் இவரைப் ‘புரட்சிக் கவிஞர்’ எனலாம். பக்தி மிக்கவர்; சமூகப் பணி செய்தவர்; உழவாரப் படை என்ற இரும்புக் கருவி ஒன்றைக் கொண்டு கோயிலைத் தூய்மை செய்தவர்; சாதி குல வேறுபாடு கருதாதவர்; சமுதாயக் கவிஞராகத் திகழ்ந்தவர்.

2.5 வைணவ இலக்கியங்கள்

திருமால் பக்தியில் ஆழ்பவர் ஆழ்வார்கள். கி.பி.ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை பன்னிரு ஆழ்வார்கள் வாழ்ந்தனர். திருமாலின்பால் நெஞ்சைக் கவரும் தமிழ்ப் பாக்களை இசையுடன் பாடித் தமிழகத்தில் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தவர்கள் ஆழ்வார்கள் ஆவர். பாகவத புராணம் திருமாலின் அவதாரங்களைக் கூறித் திருமால் அடியார்கள் திராவிட நாட்டில், தாமிரபரணிக் கரையிலும், வைகைக் கரையிலும், காவிரிக் கரையிலும், பாலாற்றின் கரையிலும், பேரியாற்றங்களையிலும் தோன்றி முக்தியடைவர் (Bhagavathapurana, Book IX, Chapter-5) என்கிறது. தாமிரபரணி ஆற்றங்கரையில் நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரும் தோன்றினர். வையை ஆற்றங்கரையில் பெரியாழ்வாரும், அவரது புதல்வி ஆண்டாளும் தோன்றினர். பாலாற்றங்கரையில் பொய்கை ஆழ்வாரும், பூதத்தாழ்வாரும், பேயாழ்வாரும், திருமழிசையாழ்வாரும் தோன்றினர். காவிரிக்கரையில் தொண்டரடிப் பொடியாழ்வாரும், திருப்பாணாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் தோன்றினர். பேரியாற்றங்கரையில் திருவஞ்சைக் களத்தில் குலசேகராழ்வார் தோன்றினார் என்பர்.

“மலையிலே போய் நின்றும், நீரின் நடுவே மூழ்கியும், நெருப்புகளின் நடுவே நின்றும் தவம் செய்யத் தேவை இல்லை. கடவுளை உண்மையான அன்புடன் மலர் தூவி வழிபடுதல் போதும்’ என்பதே வைணவ இலக்கியத்தின் அடிநாதக் கருத்து ஆகும். திருமாலை அன்புவழியில் அணுகச் செய்தவர்கள் ஆழ்வார்கள். இறைவனிடம் ஈடுபாடு உடையவர்கள். மக்களிடையே வாழ்ந்து ஒழுக்கத்தை வளர்த்தவர்கள். பாசுரங்களாலும், வழிபாட்டாலும் பத்தியைப் பெருக்கினர். வைணவத்தை வளர்த்தனர். வைணவம் பல்லவ நாட்டில் இருந்து சோழ நாட்டில் பரவி, பாண்டிய நாட்டிலும் மலர்ந்து மணம் பரப்பியது. இனி, இக்காலக்கட்டத்தில் தோன்றிய வைணவ இலக்கியங்களைக் காண்போம்.

2.5.1 நான்முகன் திருவந்தாதி ஆழ்வார்களின் பக்திப் பாசுரங்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் எனும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. நான்முகன் திருவந்தாதி இத்தொகுப்பில் இயற்பா என்னும் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 96 பாடல்கள் உள்ளன. திருமழிசை ஆழ்வார் பாடியது. திருமழிசை ஆழ்வார் பாடல்களுக்கும், திருநாவுக்கரசர் பாடல்களுக்கும் ஒற்றுமை உள்ளது. திருமழிசை ஆழ்வார் தாம் சமணத்தைக் கற்றதாகக் கூறுகிறார். இவர் வைணவராதற்கு முன்பு சமணராக இருந்ததாகக் கதை உண்டு. இவருடைய பாடல்களில் நிலையாமைக் கருத்து சிறப்பிடம் பெறுகிறது. இவர் தாம் பௌத்தத்தையும் கற்றதாகக் கூறியுள்ளார். பௌத்தமும் நிலையாமையைச் சிறப்பாக எடுத்தியம்பும் சமயமே. இவரை, ‘வீரவைணவர்’ என்பர். பிற சமயங்களிடம் அதிக காழ்ப்புக் கொண்டவராகவும் உள்ளார். சமணம், பௌத்தம், சைவம் ஆகியன இவரால் இழித்துக் கூறப்பட்டுள்ளன.

2.5.2 திருச்சந்த விருத்தம் திருச்சந்த விருத்தம் திவ்விய பிரபந்தத்தில் முதலாவது ஆயிரத்தில் உள்ளது. இதில் 120 பாக்கள் உள்ளன. ‘கண்ணனே என்றிருப்பேன்’ என்று கூறும் இவர் குணபரனைக் கூறுகிறார். அது மகேந்திரவர்ம பல்லவனது பெயர். எனவே, ‘திருச்சந்த விருத்தம்’ பாடிய திருமழிசை ஆழ்வார் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தவர் என்பர். ஆழ்வார் சென்னையை அடுத்த திருமழிசையில் தோன்றியவர். சந்தப்பா பாடுவதில் வல்லவர். ‘விதையாக நற்றமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்’ எனத் தமிழ்ப் பற்றைச் சமய அன்பில் வெளிப்படுத்தியவர். காஞ்சி மன்னன் துன்புறுத்த அதனால் இவரது சீடன் கணிகண்ணன் காஞ்சியை விட்டுச் செல்ல, ஆழ்வாரும் திருமாலும் கணிகண்ணனின் பின் சென்றனர் என்ற வரலாறும் உண்டு.

‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்று தொல்காப்பியம் திருமாலைக் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில் திருமால் வழிபாடு பற்றிய குறிப்புகள் உள்ளன. எனினும் பல்லவர் காலத்தில் வைணவ சமயம் பௌத்த சமயத்துடனும், சமண சமயத்துடனும் போராட வேண்டிய நிலை இருந்ததைத் திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன் பாடல்களும் தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரங்களும் உரைக்கும். பல்லவ அரசருள், விஷ்ணுகோபன், இரண்டாம் சிம்மவர்மன், விஷ்ணுகோப வர்மன் முதலியோர் தம்மைப் ‘பரம பாகவதர்’ என்றே கூறிக் கொள்கின்றனர். சிம்மவிஷ்ணு, நரசிம்மவர்மன், இரண்டாம் நந்திவர்மன் முதலியோர் சிறந்த வைணவப் பற்று உடையவர்கள். அவர்களால்தான் பல்லவ நாட்டில் பெருமாள் கோயில்கள் தோன்றின. குகைக் கோயில்கள் குடையப்பட்டன.

2.5.3 திருமாலை, திருப்பள்ளி எழுச்சி முதலாவது ஆயிரத்தில், திருமாலை உள்ளது. இதில் 45 பாடல்கள் உள்ளன. இதைப் பாடியவர் தொண்டரடிப் பொடியாழ்வார் ஆவார். சோழ நாட்டைச் சேர்ந்தவர். ‘விப்ர நாராயணர்’ என்பது இவரது இயற்பெயர். திருவரங்கத்தே கோயில் கொண்டுள்ள திருவரங்கனைத் துயில் எழுப்புவது போல் பாடுவது, திருப்பள்ளி எழுச்சி ஆகும். இதைப் பாடியவரும் தொண்டரடிப் பொடியாழ்வாரே ஆவார். திருப்பள்ளி எழுச்சியில் பத்துப் பாசுரங்கள் உள்ளன. இந்நூலும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் ‘முதலாவது ஆயிரம்’ பகுதியில் உள்ளது. தொண்டரடிப் பொடியாழ்வார் சமண – பௌத்தர்களை அறவே வெறுத்தவர்.

‘இரண்டாம் நந்திவர்மன் தரும சாத்திரமுறைப்படி நடவாத மக்களை அழித்து, நிலத்தைக் காப்பாற்றி, வரியிலியாகப் பிராமணர்க்கு அளித்தான்’ என்று உதயேந்திரப் பட்டயத்தில் உள்ளது. இக்குறிப்பு, ‘வைணவனான பல்லவமல்லன் தன் முன்னோர் சமணர்க்கு விட்டிருந்த நிலத்தைக் கவர்ந்து வைணவர்க்கு உரியதாக்கினான்’ என்ற செய்தியைத் தருவதாக வரலாற்றாசிரியர் கூறுவர்.

திருமால் அடியவரது திருவடி தூசி என்று தன்னைக் கருதிக் கொண்ட தொண்டரடிப் பொடியாழ்வாரது பாடல்களில் திருமாலின் மீது கொண்ட பக்தி வெளிப்படுகிறது. திருமாலின் மேனி அழகில் மனத்தைப் பறிகொடுத்த தன்மை புலப்படுகிறது.

பச்சை மாமலைபோல் மேனிப் பவளவாய்க் கமலச்செங்கண்

அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே

(திவ்வியப் பிரபந்தம், 8)

என்று இறைவனைத் தரிசித்து வாழும் வாழ்வே தேவை என்கிறார். திருவுருவ வழிபாடு செல்வாக்குப் பெற்ற நிலையை இப்பாடல் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

2.5.4 அமலனாதிபிரான் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதலாவது ஆயிரத்தில் இடம் பெற்றுள்ள பாசுரம் இது. ‘அமலன் ஆதிபிரான்’ என்று தொடங்கும் இப்பாசுரத்தில் உள்ள பத்துப் பாடல்களும் திருமாலின் மேனி அழகை அப்படியே ஓவியமாகச் சித்தரிக்கின்றன. இப்பாசுரத்தைப் பாடியவர் திருப்பாணாழ்வார். “மேகம் போன்ற கருமையான நிறத்தினன். கோவலனாய் மாடு மேய்த்தவன். வெண்ணெய் உண்ட மாயன். என் உள்ளம் கவர்ந்தவன், தேவர்களின் தலைவன், அணிகள் அணிந்த அரங்கன், என் அமுது, அவனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாது” என்று உறுதியாகக் கூறுகிறார் திருப்பாணாழ்வார்.

உறையூரில் பிறந்தவர் திருப்பாணாழ்வார். பாணர் மரபிலே பிறந்தவர் என்பர். ஆலயத்துள் வரமுடியாத எளிய குலத்தில் பிறந்தவர். எனினும் இவரைத் தோளில் இருத்தித் தன்முன் கொண்டு வரும்படி இறைவன் உலோக சாரங்க முனிவருக்குக் கட்டளை இடுகிறான். அந்தணக் குருக்களாகிய அவர் அழைத்து வர, ஆலயத்தில் இறைவனோடு இரண்டறக் கலந்துவிட்டார் என்பர்.

திருமாலின் பாதம், சிவந்த ஆடை, வயிறு, மார்பு, தோள், கழுத்து, வாய், கண்கள், நீலமேனி என்று ஒவ்வோர் பகுதியாக அடிமுதல் முடிவரை ஆழ்வார் அனுபவித்துப் பாடிய பாடல்கள், ‘பாண பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருள்’ என்று வேதத்தின் சாரமாகக் கருதப்படுகின்றன.

2.6 இதிகாசங்கள்

பல்லவர் காலத்தில் சமண, பௌத்த மதங்களது செல்வாக்குக் குன்றியது. சைவ, வைணவ சமயங்களின் பலம் வளர்ந்தது. மன்னர்களே தீவிர சைவராகவும், வைணவராகவும் இருந்ததையும், கோயில்களை அமைப்பதில் தீவிர விருப்பினராக இருந்ததையும், வழிபாடுகளுக்குக் கொடை தருவதில் ஈடுபாடு மிக்கவராக இருந்ததையும் இப்பாடத்தின் முற்பகுதியில் பார்த்தோம். அவ்வகையில், இராமாயண, மகாபாரத நூல்களை அடியொற்றி நூல்கள் எழுந்ததைக் காணமுடிகிறது.

பழைய இராமாயணம்

பெருந்தேவனாரின் பழைய பாரதம் போலவே, பழைய இராமாயணம் ஒன்று தமிழில் இருந்தது. அகவல் செய்யுளால் இயற்றப்பட்டது. இந்நூலின் ஐந்து செய்யுள்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன. மற்றப் பாடல்கள் கிடைக்கவில்லை. இந்நூலை இயற்றியவர் பெயரும் தெரியவில்லை.

சைன இராமாயணம்

சமணர்கள் பெரிதும் போற்றிய ‘சைன இராமாயணம்’ எனும் சமண இராமாயணம் நூலும் இருந்தது. அதிலும் சில செய்யுள்களே இப்போது கிடைக்கின்றன. பிற்காலத்துப் புலவர்கள் தாம் தொகுத்த நூலில் சேர்த்து வைத்ததால் அச்சில செய்யுள்கள் கிடைக்கின்றன. கம்பரது இராமாயணம் பிற்காலத்தில் வந்த பின்னர் அதன் சிறப்பிற்கு முன் நிற்க மாட்டாமல், இந்த இராமாயண நூல்கள் மறைந்திருக்க வேண்டும். ஒரு பொருள் பற்றிய சிறந்த நூல் வந்த பின்னர் அதற்கு முன்பிருந்த சிறப்புக் குறைந்த நூல்களைப் போற்றாமல் விட்டுவிடும் பழக்கம் உண்டு என்பதைத் தமிழ்இலக்கிய வரலாறு உணர்த்துவதாக மு.வரதராசனார் கூறுவார்.

2.7 தனி நூல்கள்

இக்காலக் கட்டத்தில் பல தனி நூல்களும் எழுந்தன. மன்னரது போர்த்திறன், வெற்றிச்சிறப்பு, கருணை, ஈகை, கொடை போன்ற பண்பு நலன்களைப் போற்றும் வண்ணம் இத்தனி நூல்கள் எழுந்தன.

2.7.1 தகடூர் யாத்திரை போர் பற்றிய நூல் இது. சங்க கால அரசன் அதியமானின் தலைநகர் தகடூர் என்பது. தகடூரின் மீது சேரன், படையெடுத்துப் போரிட்டுப் பெற்ற வெற்றி இந்நூலில் இடம் பெற்றுள்ளது. எனவே, தகடூர் யாத்திரை என்று பெயர் பெற்றது. தகடூர் மாலை என்றும் அழைக்கப்படும். உரைநடை கலந்த செய்யுள் நூல் இதுவாகும். இப்போது இந்நூலின் செய்யுள்கள் நாற்பத்து நான்கு மட்டுமே கிடைக்கின்றன. செய்யுள் நடை சங்க இலக்கியம் போன்றது. வீரச்சுவை அந்தச் செய்யுள்களில் சிறந்து நிற்கிறது.

2.8 தொகுப்புரை

பல்லவரும், பாண்டியரும் தமிழகத்தை ஆண்ட இக்காலக் கட்டத்தில் சைவ, வைணவ சமயங்கள் செல்வாக்குப் பெற்றன. சமண – பௌத்த சமயங்கள் சமயவாதங்களில் நலிந்ததை அப்பர், சம்பந்தர், திருமழிசை ஆழ்வார் ஆக்கங்களில் காணலாம். முதல் ஆறு தேவாரத் திருமுறைகள் தோன்றின. இதிகாச, இராமாயண நூல்கள் செல்வாக்குடன் இருந்தன. வைணவ இலக்கியம் தோற்றம் பெற்றது. அறநூல்கள், அரசர் புகழ் பாடும் தனிநூல்கள், சமணர் யாத்த இலக்கணநூல் (காக்கைப்பாடினியம்) பற்றி அறிய முடிகிறது. தமிழில் சைவ-வைணவ மறுமலர்ச்சியும், ‘பக்தி இயக்க’ எழுச்சியும், பக்திப் பாடல்களின் பெருக்கமும் ஒருசேர மலர்ந்ததைக் காண முடிகிறது.

பாடம் - 3

எட்டாம் நூற்றாண்டு

3.0 பாட முன்னுரை

எட்டாம் நூற்றாண்டில் சைவ, வைணவ இலக்கியங்கள் நன்முறையில் வளர்ந்தன. ஓயாத போர்கள் பல்லவரை நலிவுறச் செய்தன. பஞ்சம் தோன்றி மக்களை வாட்டியது. பஞ்ச வார வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு அறுவடையிலும் சிறுபகுதி நெல் ஒதுக்கப்பட்டு, பஞ்சத்தின்போது பகிர்ந்தளிக்கப்பட்டதை மூன்றாம் நந்திவர்மனது கல்வெட்டு, ‘திருக்காட்டுப் பள்ளி பஞ்சவாரம் ஆயிரக் காடி நெல்’ என்று விளக்குகிறது. பெரியபுராணம் பஞ்சம் நீக்க இறைவன் படிக்காசு நல்கியதைச் சொல்லும்.

3.1 பின்புலங்கள்

இக்காலக் கட்டத்திலுள்ள அரசியல், சமூக, சமயப் பின்புலங்களை முதலில் பார்ப்போம்.

3.1.1 அரசியல் பின்புலம் இராசசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் (700-728) அரசாண்டான். இவனது காலம் போர் இல்லாத அமைதியான ஆட்சிக்காலம் ஆகும். இராச சிம்மனது மகன் இரண்டாம் பரமேசுவரவர்ம பல்லவன் மூன்று ஆண்டுகள் (கி.பி.728 – 731) ஆட்சி செய்தபோது சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் மீண்டும் பல்லவர் மீது படையெடுத்துத் தாக்கினான். சாளுக்கியப் படை விரட்டியடிக்கப்பட்டது. இவனுக்குப் பின் அரியணை ஏறிய இரண்டாம் நந்திவர்ம பல்லவன் அறுபத்தைந்து ஆண்டுகள் (கி.பி.731-796) நிலையாக ஆட்சி செய்த மன்னன் ஆவான். நந்திவர்மன் கங்க நாட்டின் மீது படையெடுத்து வென்றான். கி.பி.767-இல் காவிரி ஆற்றின் தென் கரையில் உள்ள, ‘பெண்ணாடம்’ என்ற இடத்தில் பாண்டியன் முதலாம் வரகுணனிடம் போரிட்டு, நந்திவர்ம பல்லவனின் படைகள் தோற்றன. பாண்டியரது செல்வாக்கு வளர்வதைக் கண்ட நந்திவர்ம பல்லவன் கொங்கு மன்னருடனும், கேரள மன்னருடனும் தகடூரை ஆண்ட அதியமானுடனும் உடன்படிக்கை செய்து கொண்டு வலிய கூட்டணியை அமைத்தான். பாண்டியன் இக்கூட்டணியை வென்றான். கொங்கு நாடு பாண்டியர் வசமானது. கொங்கு அரசன் பாண்டியனால் சிறை பிடிக்கப்பட்டான். அதியமான் தோற்றான். பாண்டிய நாட்டுப் படை பல்லவ நாட்டை ஊடுருவிச் சென்றது. தஞ்சை மாவட்டத்தின் மையத்தில் உள்ள, ‘இடவை’ எனும் இடத்தில் பாண்டியன் பாசறையை அமைத்தான். பாண்டியனை வெல்வதற்கு நந்திவர்ம பல்லவன் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. சாளுக்கிய மன்னன் இரண்டாவது விக்கிரமாதித்தன் காஞ்சியின் மீது படையெடுத்து, வந்து, வென்று கைலாசநாதர் கோவிலுக்கு நன்கொடைகள் வழங்கிச் சென்றான். இராட்டிரகூட மன்னன் தந்திதுர்கனுக்கும், பல்லவ நந்திவர்மனுக்கும் போர் நடந்தது. பல்லவமன்னன், இராட்டிரகூட மன்னன் மகள் ரேவாவை மணந்து கொள்ளவே, பகை நட்பாக மாறியது. பல்லவரது செல்வாக்கு சரியத் தொடங்கியதை இந்நூற்றாண்டு அரசியல் வரலாறு பதிவு செய்கிறது. இரண்டாம் நந்திவர்மனின் மகன் தந்திவர்மன் (கி.பி.796 – 847) காலத்தில் பல்லவர் தேசம், பாண்டியர் மற்றும் இராட்டிரகூடரது தாக்குதலுக்கு உள்ளானது.

3.1.2 சமயப் பின்புலம் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் (கி.பி.700-728) காஞ்சியில் கைலாச நாதர் கோயிலையும், பனைமலையில் உள்ள சிவன் கோயிலையும், மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயிலையும் கட்டினான். பல்லவ நாட்டை அறுபத்தைந்து ஆண்டுகள் ஆண்ட இரண்டாம் நந்திவர்ம பல்லவன் மிகச் சிறந்த திருமால் பக்தனாகத் திகழ்ந்தான். பல பழைய கோயில்களைப் புதுப்பித்தான். புதிய கோயில்களைக் கட்டினான். காஞ்சியில் உள்ள வைகுந்தப் பெருமாள் கோயில் (பரமேசுவர விண்ணகரம்), முக்தேசுவரர் கோயில், கூரத்தில் உள்ள கேசவப் பெருமாள் கோயில் முதலியன இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கட்டிய கோயில்களாம். சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்து வந்து இரண்டாம் நந்திவர்ம பல்லவனை வென்று காஞ்சியைக் கைப்பற்றினான். கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட மற்றக் கோயில்களுக்குத் தாராளமாக நன்கொடைகள் தந்து, சில காலம் காஞ்சியில் தங்கியிருந்துப் பின்னர் சாளுக்கிய நாடு திரும்பினான். பகை அரசனையும் பக்தி எனும் சரடு பிணைத்திருந்ததை இதனால் அறிய முடிகிறது.

இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் வாழ்ந்தவர் திருமங்கை ஆழ்வார் ஆவார். ‘நந்திபுர விண்ணகரம், பரமேசுவர விண்ணகரம்’ என அவர் நூல்களில் வரும் பாசுரக் குறிப்புகள் இரண்டாம் நந்திவர்ம பல்லவனைக் குறிப்பனவாம்.

3.1.3 சமூகப் பின்புலம் சமூகத்தில் வேதியர்கள் உயர்நிலையில் இருந்தனர். நில உடைமை நிலக்கிழார்களை உயர்த்தியது. உழைக்கும் மக்கள் எளிய நிலையில் இருந்தனர். பல தொழில்கள் இழிவானவை என ஒதுக்கப்பட்டு அவற்றைச் செய்யும் தொழிலாளர்கள் சமூகத்தில் தாழ்ந்தவர்கள் என்று வைக்கப்பட்டனர். சமூகத்தின் அடிமட்டத்தில் வலுவற்று இருந்தவர்களை ஆளோலை முறைப்படி அடிமைப்படுத்தும் வழக்கம் இக்காலத்தில் இருந்ததைச் சுந்தரரின் சரிதம் புலப்படுத்துகிறது. சுந்தரருக்குத் திருமணம் நிகழ இருக்கின்ற தருணத்தில் அங்கே வரும் வயது முதிர்ந்த ஒருவர், சுந்தரரின் பாட்டனார் தம்மையும், தம்வழி வருவோரையும் அவருக்கு அடிமைப்படுத்தி ஆளோலை எழுதிக் கொடுத்ததைக் கூறித் திருமணத்தைத் தடுத்து விடுகின்றார். வறுமை மேலிட்டால், நிலத்தை அடமானம் வைத்துப் பணம் பெறும் முறை இருந்தது. இதற்கு, ‘ஒற்றி வைத்தல்’ என்று பெயர். பணம் கிடைத்ததும் அதைத் தந்து மீட்க வேண்டும். ‘ஒற்றியூர்’ என்ற இடத்துச் சிவனைப் புகழும் பதிகத்தில் இவ்வழக்கம் சொல்லப்பட்டுள்ளது.

(வேதியர் – அந்தணர்கள்; ஆளோலை – நானும், என் வழித் தோன்றல்களும் உங்களுக்கும் உங்கள் சந்ததியாருக்கும் அடிமை என்று ஒருவர் ஓலையில் எழுதித் தருதல்.)

சமூக மாற்றம்

அரசனால் கோயிலுக்கென்று விடப்படும் ஊர் தேவதானச் சிற்றூர் எனப்பட்டது. மூன்றாம் நந்திவர்மன் திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரைக் கோயிலுக்கு என்று (யக்ஞேசுவரர்) தந்தான். அதன் வருவாய் முழுதும் கோயில் பணிகளுக்குச் செலவிடப்பட்டது.

மறையவருக்கு விடப்படும் ஊர் பிரம்மதேயம் ஆகும். உதயச் சந்திர மங்கலம், தயாமுக மங்கலம், பட்டத்தாள் மங்கலம் என்பன இக்காலத்தில் அவ்வாறு விடப்பட்டனவாம். ‘பள்ளிச்சந்தம்’ என்பது சமணப் பள்ளிக்கு என விடப்பட்ட இறையிலி நிலம் ஆகும்.

பல்லவர் பட்டயங்களில் பௌத்தருக்கு நிலம் விட்டதாக ஒரு சான்றும் கிடைக்கவில்லை என்பது இந்நூற்றாண்டில் பௌத்தம் தொடர்பான ஓர் இலக்கியமும் தோன்றவில்லை என்பதுடன் ஒப்பு நோக்கற்குரியது.

சிவனடியார்களும் வைணவ ஆழ்வார்களும் போற்றப்பட்டனர். மக்களாலும், மன்னர்களாலும் ஓம்பப்பட்டனர். சாதி வேற்றுமை பக்தியின் முன் பாராட்டப்படவில்லை. அடியவர் சுந்தரரையும், அரசன் சேரமான் பெருமாளையும் நண்பர்களாக, பக்தி ஒரு தளத்தில் வைத்தது. சுந்தரர் சாதி வேற்றுமை பாராட்டாமல் திருவாரூரில் ஆடல், பாடலில் ஈடுபட்டு இருந்த கணிகையர்குலத்து மகள் பரவையாரையும், பின்னர்த் திருவொற்றியூரில் சங்கிலியாரையும் மணந்ததாகக் கூறப்படுகிறது.

ஓயாத பெரும்போர்களால் அரசியல் நிலைகுலைய இந்நூற்றாண்டில் பஞ்சம் ஏற்பட்டது. திருவீழிமிழலையில் இறைவனைப் பாடிப் பொற்காசு பெற்று அடியவரைச் சமயகுரவர்கள் உண்பித்த நிகழ்ச்சி, கோவில் பண்டாரம் அடியார் உணவுக்காகப் பொற்காசுகளை நல்கியதைக் குறிப்பதாகக் கொள்ளலாம் என்பர்.

(பண்டாரம் – களஞ்சியம்)

3.1.4 மக்கள் வாழ்வியல் பின்புலம் பல்லவ அரசர்கள் தந்த சலுகைகள் அந்தணர்களை ஏற்றமுறச் செய்தன. நால்வகை வருணக் கோட்பாடே சமூக நியதியாக இருந்தது. உழைக்கும் எளிய மக்கள் தத்தம் உழைப்பால் வாழ்ந்தனர். நீறுபூசி, கமண்டலம் ஏந்தி, பதிகங்களைப் பாடி, சிவனிருக்கும் தலங்கள்தோறும் சென்று வழிப்பட்டு, பிறர் இடும் பிச்சையில் வாழும் சிவனடியார்கள் பெருகினர். சிவனடியவர்களுக்கு உணவளிப்பது ஆயிரம் கோவிலைக் கட்டுவதைவிடச் சிறந்ததாகக் கருதப்பட்டது. இறைவனை வழிபட்டு, இரந்து உண்டு வாழ்தல் ஏளனத்திற்குரியதாகக் கருதப்படவில்லை. புண்ணியச் செலவுகள் பெருகின. அவரவர் வசதிக்கேற்பக் கோவிலுக்கும், அடியவர்களுக்கும் வழங்கினர். கல்லையும் கனிய வைக்கும் பக்திப் பாசுரங்கள் மக்களின் மனத்தைத் தொட்டன. மக்களிடமும், மன்னர்களிடமும் அடியவர்களுக்குச் செல்வாக்கு இருந்தது. (நால்வகை வருணம் – அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்று மக்களை வகைப்படுத்துதல்; கமண்டலம் – சிவனடியார் கையிலுள்ள பாத்திரம்)

அடியவர்கள் தலயாத்திரை செய்தனர். கோயில்கள் சிறப்புப் பெற்றன. கோயில் பணியாளர்கள், ஆடல் வல்ல பெண்டிர், இசை வல்லவர், வாத்தியம் இசைப்பவர், கட்டுமானக் கலைஞர்கள், சிற்பிகள், தச்சர்கள், ஓவிய விற்பன்னர்கள், ஓதுவார்கள் என்று கோயிலை ஒட்டி வாழ்வு நடத்துவோர் எண்ணிக்கை பெருகியது.

தமிழ்ப் புலவர்களைப் பல்லவர்களுக்கு உட்பட்ட முத்தரையர்கள் ஆதரித்ததாகத் தெரிகிறது. கி.பி.எட்டாம் நூற்றாண்டில் பெரும்பிடுகு முத்தரையர் அவையத்துப் புலவர்களாகிய பாச்சில்வேள் நம்பன் வெண்பாப் பாடல்களும், அநிருத்தன் கட்டளைக் கலித்துறையும், கோட்டாற்று இளம் பெருமானார் பாடல்களும் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளன. அவை பற்றிய விளக்கம் பாடத்தில் தரப்பட்டுள்ளது. (கட்டளைக் கலித்துறை – பாவகையுள் ஒன்று)

கோயில்களை அடுத்து அடியவர்கட்கும், ஏழைகளுக்கும் உணவு நல்கும் உணவுச்சாலைகள் இருந்தன. உணவுச் சாலைக்கு ஊராரிடமிருந்தும், வணிகர்களிடமிருந்தும், ஒரு பகுதி நெல், அரிசி ஆகியவற்றைப் பல்லவ அரசர்கள் பெற்றனர். இச்செய்தியை இரண்டாம் நந்திவர்மன் கல்வெட்டு அறிவிக்கின்றது. இத்தகைய உணவுச் சாலைகள் அல்லது சத்திரங்களில் ஏழையர், வழிப்போக்கர்கள், அடியவர்கள் உண்டு வாழ்ந்தனர். விழாக் காலங்களில் உள் ஊரினர், வெளி ஊரினர் என்று அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. அதற்கு அரசனும் பொருள் உதவி செய்வதுண்டு. திரு ஆதிரை, சித்திரை விசுத் திருவிழா போன்ற கோயில் விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. சித்திரை விசுத் திருவிழாவிற்கு ஒருவர் 15 1/2 கழஞ்சு பொன் திருத்தவத்துறைக் (லால்குடி) கோவிலுக்குத் தந்ததை ஒரு கல்வெட்டு குறிக்கிறது. கோயில்கள் வழிபாட்டுக்கூடங்களாகவும், ஊரினர்க்கு உணவூட்டும் அறச் சாலைகளாகவும், நெருக்கடி நேரத்தில் பணஉதவி செய்யும் சேமிப்புக் களன்களாகவும் திகழ்ந்தன. (கழஞ்சு – பொன்னை அளக்கும் அளவை)

3.1.5 இலக்கியப் பாடுபொருள் மாற்றம் பல்லவரது இலச்சினை நந்தி ஆகும். பல்லவரது கொடி நந்திக்கொடி ஆகும். பல்லவர் காசுகளிலும் நந்திப் பதிவு இருத்தலைக் காணலாம். தனிப்பட்ட பல்லவ அரசன் சமணனாக இருந்தபோதும், வைணவனாக இருந்தபோதும், சைவனாக இருந்தபோதும், இந்த நந்திக் கொடி, நந்தி இலச்சினை, நந்திப் பதிவு நாணயங்களே பயன்படுத்தப்பட்டன. இதிலிருந்து பல்லவர் ஆட்சியில் சைவமே அரசியல் சமயமாக இருந்தது எனத் தெளியலாம் என்பர். கூரம், காசக்குடி பட்டயங்களில் நந்திமீது லிங்கம் அமைந்திருப்பதும் கருதத்தக்கது. அவ்வகையில் சிவபக்தியைப் பாடுபொருளாகக் கொண்ட சைவ இலக்கியங்களே தோன்றின.

அறுபத்தைந்து ஆண்டுகள் அரசாண்ட இரண்டாம் நந்திவர்ம பல்லவன் சிறந்த வைணவன். இவனைக் காசக்குடிப் பட்டயம், ‘அரிசரணபரன்’ என்றும், தண்டன் தோட்டப் பட்டயம், ‘முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றிற்கும் அவன் தலை வணங்கவில்லை’ என்றும் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் பாடிய நந்திபுர விண்ணகரப் பதிகத்தையும், பரமேச்சுர விண்ணகரப் பதிகத்தையும் (வைகுந்தப் பெருமாள் கோயில்) கொற்றங்குடிப் பட்டயத்தின் பெருமாள் வணக்கமாக உள்ள முதல் இரண்டு பாக்களையும் ஒப்புநோக்கின் இவன் சிறந்த வைணவன் என்பது தெளியலாம். கூரத்தில் உள்ள கேசவப் பெருமாள் கோயில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குன்றாண்டார் கோயில் ஆகியவை இவனால் கட்டப்பட்டவை. எனவே இக்காலத்தில் வைணவ இலக்கியங்கள் தோன்றி நிலைத்தன.

இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் ஆர்க்காடு நகருக்கு அருகில் உள்ள பஞ்சபாண்டவர் மலையில் ஒரு குகை சமணருக்காக அமைக்கப்பட்டது. அங்குள்ள கல்வெட்டில், ‘நந்தி போத்தரையர்க்கு ஐம்பதாம் யாண்டு நாகநந்தி குரவர் வழிபடப் பொன் இயக்கியாருக்குப் படிமம் எடுக்கப்பட்டது’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனால் இப்பேரரசன் காலத்தில் பல்லவ நாட்டில் சமணர் சிலரும் இருந்தமை தெளிவாம். அவ்வகையில் சமண இலக்கியங்களாகப் பெருங்கதை, மேருமந்தர புராணத்தைக் காண முடிகிறது.

முத்தரையர்களின் ஆதரவில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் யாத்த பாடல்கள் மன்னர்களது சிறப்பை நுவலுகின்றன.

3.2 சைவ இலக்கியம்

இரண்டாம் நந்திவர்மனது காசக்குடி பட்டயம், நான்கு வேதம், ஆறு அங்கங்கள் கற்றவர் பல்லவ மன்னர் என்கிறது. காசக்குடி பட்டயம் முதலில் வடமொழியில் எழுதப்பட்டது. பின்னர் மக்கள் அனைவரும் படிக்கும் வண்ணம், தமிழில் எழுதப்பட்டது. தண்டன் தோட்டப் பட்டயம் பாரதம் படித்து ஊரார் கேட்கும் வண்ணம் விளக்கியவனுக்கு நிலம் தந்ததைக் கூறுகிறது. பாரதக் கதை கூறும் வழக்கம் இம்மன்னன் காலத்தில் தொடங்கப்பட்டு, இன்றளவும் சிற்றூர்களில் தொடர்கிறது எனலாம்.

வடமொழியிலும், தென்மொழியிலும் புலமை பெற்ற ஐயடிகள் காடவர் கோன் என்ற பல்லவ அரசர் ஒருவர் இருந்தார் என்றும் அவர் சிவத்தளி (கே்ஷத்திர) வெண்பாப் பாடினார் என்றும் பெரியபுராணம் குறிக்கிறது. அவரே மூன்றாம் சிம்மவர்ம பல்லவன் என்பர் ஆராய்ச்சியாளர், அவ்வகையில் இந்நூற்றாண்டில் தோன்றிய சைவ இலக்கியம் பற்றிக் காண்போம்.

3.2.1 தேவாரம் – ஏழாம் திருமுறை தேவாரத்தின் ஏழாவது திருமுறையாக நூறு பதிகங்கள் உள்ளன. அவற்றில் 1125 பாடல்கள் உள்ளன. இவற்றைப் பாடியவர் சுந்தரர் ஆவார். அப்பரிடமும், சம்பந்தரிடமும் சுந்தரர்க்குப் பெருமதிப்பு உண்டு. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களை ‘மூவர் தமிழ்’ என்ற சொல்லால் சுட்டுவர். சுந்தரரது திருத்தொண்டத் தொகை பெரிய புராணத்துக்கு மூலமாக இருந்தது. சுந்தரரின் சமகாலத்தவர் சேரமான் பெருமாள் நாயனார் ஆவார். சுந்தரரின் பாடல்கள் அனைத்தும் இசையுடன் பாடுதற்கு உரியவை. இயற்கைச் சூழலை அழகாக வர்ணிப்பவை, தமக்குத் தேவையானவற்றைச் சிவனிடம் உரிமையோடு கேட்பது இவரது வழக்கம். துறவும், உலக வெறுப்பும் இவரது பாடல்களில் காண்பதற்கு அரியவை.

சுந்தரர் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்த திருநாவலூர் என்னும் ஊரில் பிறந்தவர். ஆதி சைவ அந்தணர் குலத்தைச் சேர்ந்த சடையர் என்பவருக்கும் இசைஞானியார் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். திரு முனைப்பாடி நாட்டுச் சிற்றரசர் தொடர்பு இவருக்கு இருந்தது. இவரது முற்பிறப்பில் கைலாயத்தில் ஆலாலசுந்தரர் என்ற பெயரில் சிவனுக்குத் தொண்டு செய்து வந்தார். நந்தவனத்தில் மலர் எடுக்கும்போது பார்வதியின் தோழியர் இருவரைக் கண்டு இச்சை கொண்டார். அதனால் புவியில் பிறந்தார் என்று இவரது முற்பிறவி பற்றிப் பெரியபுராணம் குறிப்பிடும்.

வயது வந்ததும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. மணநாள் அன்று வயது முதிர்ந்த ஒருவர் வந்து சுந்தரரின் பாட்டனார் தம்மையும், தம்வழி வருவோரையும் அவருக்கு அடிமைப்படுத்தி ஆளோலை எழுதித் தந்ததைச் சொல்லி திருமணத்தைத் தடுத்து ஆட்கொண்டார். சுந்தரர் தவக்கோலம் பூண்டார். சிவனடியாராகச் சிவத்தலங்களுக்குச் சென்று பதிகம் பாடினார். திருவாரூரில் கணிகையர் குலத்து மகள் பரவையார் என்பவரையும், திருவொற்றியூரில் சக்கிலியார் என்பவரையும் மணமுடித்தார். இவர் தம் பார்வையை இழந்து மீண்டும் பெற்றதாகப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது. சுந்தரர் தேவாரத்திலும் இது பற்றிக் காணலாம். சேரமான் பெருமாளின் நண்பரான இவர் திருவஞ்சைக் களத்திற்குச் சென்றார். அங்குச் சிவனடி சேர்ந்தார். அப்பொழுது அவருக்கு வயது 18 என்பர். தம்மை இறைவனுக்குத் தோழராகக் கருதிப் பதிகங்கள் பாடியவர். ‘தம்பிரான் தோழர்’ என இவர் அழைக்கப்படுகிறார். ஆரூரர், நம்பியாரூரர், ஆளுடைய நம்பிகள், வன்தொண்டர் என்பன இவரது பிற பெயர்களாம்.

தேன்படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டைத் தினந்தோறும்

நான்படிக்கும் போதுஎன்னை நான்அறியேன் நாஒன்றோ

ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்கு உயிரும்

தான்படிக்கும் அநுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே

(திரு அருட்பா, ஐந்தாம் திருமுறை, 3253)

என்று இராமலிங்க வள்ளலார் சுந்தரரின் பாடல்களைப் படிக்கும் சுவையான அனுபவத்தைக் கூறுகிறார். நீங்களும் படித்துப் பாருங்களேன்.

சைவ சமயக் குரவர் நால்வருள் சுந்தரரது முற்பிறப்பு பற்றி மட்டுமே சொல்லப்படுகிறது. இவரைத் தலைவராக – பாட்டுடை நாயகராகக் கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தைச் செய்துள்ளார்.

3.2.2 சுந்தரரின் திருத்தொண்டத் தொகை சுந்தரர் பாடிய, தேவாரத்தில் ஒரு சிறு பகுதி திருத்தொண்டத் தொகை. தொண்டரை-சிவனை வழிபடும் அடியவரைத் துதிக்கும் புதிய நுவல்பொருள் ஒன்றினைத் தமிழ் இலக்கியத்திற்கு இந்நூல் தந்துள்ளது. கோயில் வழிபாட்டின் அவசியத்தை உணர்த்திய தொண்டர்களது திருப்பணியை இவ்வரலாறுகள் எடுத்துரைக்கின்றன. கோயில் கட்டுதல், குளங்கள் தோண்டுதல், விளக்கேற்றுதல், கற்பூர தீபம் ஏற்றுதல், சந்தனம் வழங்குதல், இசைக் கருவிகள் தருதல், இலிங்கத்துக்கு அபிடேகம் செய்தல், கோவில் விழாக்களை நடத்துதல், இறைவனை நாள்தோறும் தரிசித்தல் முதலியன கோவில் வழிபாட்டில் அடங்கும். இவற்றைச் செய்யும் சிவனடியாரைச் சிவனாகவே மதித்து வணங்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. திருத்தொண்டர் திருவந்தாதி, பெரியபுராணம் ஆகியவற்றுக்குத் திருத்தொண்டத் தொகை அடிப்படையாகத் திகழ்ந்தது.

சுந்தரரின் திருத்தொண்டத் தொகைப்படி 63 நாயன்மார்களும், 9 தொகையடியார்களும் இருந்தனர். தொகை அடியார் என்பது தனிப்பட்ட ஓர் அடியாரைக் குறிப்பிடாமல், ஒரே வகையான தொண்டில் ஈடுபட்டிருந்த பலரை இணைத்துச் சொல்வதாம். எடுத்துக்காட்டாக, தில்லைவாழ் அந்தணர், (தில்லையில் திருக்கோயில் வழிபாடுகளில் பங்கு கொண்டவர்கள்), முழுநீறுபூசிய முனிவர் (உடல் முழுதும் நீறு பூசிக் கொண்டிருந்த அடியார்கள்) ஆகிய தொகை அடியார்களைக் கூறலாம். 63 நாயன்மார்களைப் பொறுத்தவரையில் அப்பர், சம்பந்தருக்கு முன் 17 பேரும், அப்பர் காலத்தில் 11 பேரும், சுந்தரர் காலத்தில் 13 பேரும், அப்பர் காலத்துக்கும், சுந்தரர் காலத்தும் இடைப்பட்ட காலத்தில் 22 பேரும் வாழ்ந்திருந்தனர். இவர்களைப் பற்றி இந்நூல் சொல்கிறது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சாக்கிய நாயனார், திருநாளைப் போவார், கண்ணப்பர் ஆகியோரைத் தம் பாடல்களில் சுந்தரர் சிறப்பிக்கிறார்.

சிவன் எல்லாம் தருவான். எனவே மானிடரைப் புகழ்ந்து நலியாதீர்; சிவனை வழிபட்டு உய்தி பெறுங்கள் என்று மற்றையோரைச் சுந்தரர் அறிவுறுத்தும் அழகிய பாடல் இதோ.

நலமிலாதானை நல்லனேயென்றும் நரைத்த மாந்தரை இளையேனே

குலமிலாதானைக் குலவனே என்று கூறினும் கொடுப்பாரிலை

புலமெலாம் வெறிகமழும் பூம்புகலூரைப் பாடுமின் புலவீர்காள்!

அலமராது அமரருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

(தேவாரம் : 7569)

என்ற உறுதியான இலக்கு சுந்தரரிடம் வெளிப்படுகிறது.

3.2.3 சேரமான் பெருமாள் நாயனாரின் படைப்புகள் சேரமான் பெருமாள் நாயனார், திருக்கைலாய ஞான உலா, திருவாரூர் மும்மணிக்கோவை, பொன் வண்ணத்து அந்தாதி ஆகிய மூன்று நூல்களை இக்காலக் கட்டத்தில் இயற்றினார்.

திருக்கைலாய ஞான உலா

சேரமான் பெருமாள் நாயனார் பாடியது திருக்கைலாய ஞானவுலா ஆகும். ஆதி உலா என்றும் இது வழங்கப்படுகிறது. உலாவில் போற்றப்படும் தெய்வம் சிவன். சிவலோகத்தில் தேவர்கள் கூடிச் சிவன் உலா வந்து காட்சி தரவேண்டும் என்று வேண்டுகின்றனர். சிவனும் இசைகிறார். உமையவள் சிவனாருக்கு எல்லா அணிகலன்களையும் அணிவித்து அழகு பார்க்கிறாள். மன்மதன் மாலை தருகிறான். சந்தனம் பூசிக் கிளம்பும் சிவனைத் தெருக்களில் உள்ள மகளிர் கண்டு காதல் கொள்கின்றனர். முனிவர்கள் வாழ்த்துகின்றனர். தேவர்கள் தொண்டு செய்கின்றனர் என்று அமைந்துள்ளது. இந்நூல், காண்பவர் நெஞ்சங்களைக் கவரும் ஒப்பற்ற தலைவனாம் சிவனது திருவுலாக் காட்சியை விவரிக்கிறது.

‘உலா’ எனும் இலக்கிய அமைப்பை இந்த நூல் தோற்றுவித்தது. இதை இலக்கணமாகக் கொண்டு, இதே அமைப்பில் பின்னாளில் உலா நூல்கள் இயற்றப்பட்டன.

திருவாரூர் மும்மணிக்கோவை

சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய நூல். சிவனது அடியார்கள் செந்தமிழ் வல்லவர்களாகவும் இருந்தமை கண்கூடு. மூன்று வெவ்வேறு மணிகளை மாற்றிமாற்றித் தொடுத்த மாலை போல், வெவ்வேறு மூவகைச் செய்யுள்கள் மாறி மாறி வர முப்பது பாடல்களைக் கொண்டது இந்நூல். இதுவும் புதிய அமைப்பே ஆகும். இதுபோலவே, சிவனைப் போற்றுவதற்குக் கண்டுபிடித்த புதுப்புது இலக்கிய வடிவங்கள் பின்னாளில் சிற்றிலக்கியமாக மலர்ந்தன.

பொன் வண்ணத்து அந்தாதி

சேரமான் பெருமாள் நாயனார் பாடிய மற்றொரு நூல் பொன் வண்ணத்து அந்தாதி . இது பதினொராம் திருமுறையில் உள்ளது. சிவனைப் பாடல் தலைவனாகக் கொண்டது. 101 பாடல்களை உடையது. ஒரு செய்யுளின் இறுதிப் பகுதியே அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமைவது அந்தாதி ஆகும்.

3.2.4 பிற படைப்புகள் மேலும், க்ஷேத்திர திருவெண்பா, திருமும்மணிக்கோவை, மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை ஆகிய நூல்கள் தோன்றின.

க்ஷேத்திர திருவெண்பா

சிவத்தளி வெண்பா என்றும் இந்நூல் வழங்கப்படும். ஐயடிகள் காடவர்கோன் எனும் பல்லவ மன்னன் எழுதிய நூல் இது என்று பெரிய புராணம் கூறுகிறது. சிதைந்த நிலையில் பதினொன்றாம் திருமுறைத் தொகுப்பில் ஐந்தாவது நூலாக இடம் பெற்றுள்ளது. இதன் பாட்டுடைத் தலைவன் சிவன். 24 வெண்பாக்களைக் கொண்டது; 90 அடிகளில் மொத்த நூலும் அமைந்துள்ளது. “இறக்கும்போது எவ்விதத் துன்பமும் அடையாமல் இறப்பதற்கு இன்னின்ன தளிகளில் (தளி – தலம் – ஷேத்திரம் என்று பொருள்) வாழும் சிவனை நினைத்துக் கொள் மனமே” என்று மனத்திற்கு அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது. சிதம்பரம் (தில்லை), குடந்தை, ஐயாறு (திருவையாறு), ஆரூர் (திருவாரூர்), திருத்துருத்தி, திருக்கோடிகாவல், பாண்டவாய்த் தென்னிடைவாய், திருநெடுங்களம், குழித் தண்டலை, ஆனைக்கா, மயிலை, சேனைமாகாளம், வளைகுளம், சாய்க்காடு, திருப்பாச்சிலால் சிராமலை, திருமழபாடி, திரு ஆப்பாடி, காஞ்சிபுரம், திருப்பனந்தாள், திருக்கடவூர், திருவொற்றியூர் ஆகிய தலங்களில் உள்ள சிவன் போற்றப்பட்டிருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பாகும்.

சிவபெருமான் திருமும்மணிக் கோவை

இளம்பெருமான் அடிகள் பாடிய நூல். பதினொராம் திருமுறைத் தொகுப்பில் 24-வது நூலாக இந்நூல் இடம் பெற்றுள்ளது. ‘கோவை’ என்றால் ‘தொகுப்பு’ என்று பொருள். மூன்று மணிகள் சேர்ந்த மாலை போல் மூவகைச் செய்யுள்களது தொகுப்பாக இந்நூல் உள்ளது. இதன் பாட்டுடைத் தலைவன் சிவபெருமான்; முப்பது பாடல்களைக் கொண்டது. 145 அடிகளைக் கொண்டது. சிவனது பண்பு நலன்களைப் புலப்படுத்தும் நூலாகும்.

மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை

அதிராவடிகள் பாடிய நூல், மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவை. இது பதினொராம் திருமுறைத் தொகுப்பில் இருபத்தைந்தாவது நூலாக இடம்பெற்றுள்ளது. இந்நூலின் பாட்டுடைத் தலைவர் விநாயகர் ஆவார். எடுத்த செயலைத் தடையின்றி முடித்துத் தருபவர் கணேசர் எனும் விநாயகர் ஆவார். விநாயக வழிபாடு தமிழகத்தில் இந்நூற்றாண்டில்தான் தோன்றியது. இவ்வகையில் விநாயகரைப் பற்றி அமையும் முதல் தனி நூல் இது எனக் கொள்ளலாம். இருபத்துமூன்று பாடல்களைக் கொண்டது. பாடல்களின் மொத்த அடிகள் நூற்றுப்பதின்மூன்று ஆகும்.

பாடுபொருள், உள்ளடக்கம், பாடும் முறை, பயன்படுத்திய யாப்பு, பக்தி உணர்வு என யாவும் ஒன்று போலவே இருப்பதை ஒன்பது மற்றும் பதினொராம் திருமுறைகளில் காணலாம். இவ்விரு திருமுறைகளும் பல நூல் தொகுதிகளின் ஆக்கமாக உள்ளன. ஒவ்வொரு நூலையும் தனித்தனியே வியந்து போற்றிப் பரவசம் கொள்ளும் நிலை குறைவே. சிறுசிறு நூல்கள் எனும் நாற்பது தனிநூல்களின் தொகுப்பாகப் பதினொராம் திருமுறை உள்ளது.

இடைக்காலத்தில், ‘சிற்றிலக்கியம்’ எனும் தனித்தனி வடிவங்கள் பல்கிப் பெருகிட வித்தாக இவை அமைந்தன எனலாம்.

3.3 வைணவ இலக்கியம்

திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை, திருவரங்கம், திருஅத்தியூர் ஆகிய வைணவத் தலங்களது பெயரை வாயால் உச்சரித்தாலே சுகம் என்று திருமால், திருமால் உறையும் கோயில், திருமாலின் தலம் ஆகிய யாவுமே புனிதமானவை என்ற உணர்வை விதைத்தது வைணவம்.

தேனோங்கு சோலைத் திருவேங்கடம் என்றும்

வானோங்கு சோலை மலையென்றும் – தானோங்கு

தென்னரங்கம் என்றும் திரு அத்தியூர் என்றும்

சொன்னவர்க்கும் உண்டே சுகம்.

பல்லவ மன்னர்களது ஆதரவும், ஆழ்வார்களது பாசுரங்களும் வைணவ இயக்கத்தை வழி நடத்தின.

3.3.1 திருப்பல்லாண்டு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்பது ஆழ்வார்களது பாசுரங்களின் தொகுப்பு நூலாகும். இதன் ‘முதலாவது ஆயிரத்தில்’ முதல் நூலாகத் திருப்பல்லாண்டு அமைந்துள்ளது. திருப்பல்லாண்டைப் பாடியவர் பெரியாழ்வார். இந்நூல் 12 பாடல்களைக் கொண்டது. திருமாலை வாழ்த்துவது. ‘இன்றும், இனிவரும் ஏழு ஏழு (7 x 7= 49) பிறவிகளிலும் உனக்கே ஆள் ஆனோம்’ என்று உறுதிமொழி கூறும் பாட்டு இது.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்

சேவடி செவ்வி திருக்காப்பு

என ஆயிரம், கோடி, நூறு ஆகிய எண்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. என்றென்றும் திருமாலின் திருப்பாதங்களே சரண் என்று தஞ்சம் புகுவது பற்றிக் கூறுவன இப்பாசுரங்கள்.

3.3.2 பெரியாழ்வார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி முதல் ஆயிரத்தில், திருப்பல்லாண்டை அடுத்து அமைந்துள்ளது. இதில் 461 பாடல்கள் உள்ளன. கண்ணனைக் குழந்தையாகப் பாவித்துப் பெரியாழ்வார் பாடியுள்ளார். திருவில்லிபுத்தூரில் பிறந்தவர் பெரியாழ்வார். பட்டர்பிரான், விஷ்ணுசித்தன் எனக் குறிக்கப்படுபவர். ஆண்டாளை வளர்த்தவர். கண்ணனின் பிறப்பிற்காக மகிழ்தல், வந்து பிறந்த கண்ணனின் கால்விரல், தொடை, உந்தி, வயிறு, மார்பு, தோள்கள், கைகள், கழுத்து, வாய், கண்கள், புருவங்கள், காதின் குழை, நெற்றிமுடி ஆகியவற்றின் அழகைக் காண அயலவரை அழைத்தல், கண்ணன் தொட்டிலில் உறங்குமாறு பாடும் தாலாட்டுப் பகுதி, நிலவைக் குழந்தையுடன் விளையாட அழைத்தல், தளர்நடை நடக்கும் குழந்தையின் விளையாட்டு, குறும்புச்செயல் என்று யாவற்றையும் பாடுபொருள் ஆக்கிப் பாடியுள்ளார். பிற்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியைப் பத்துப் பருவங்கள் ஆக்கிப் பத்துப் பத்துபாடல்களில் பாடும், ‘பிள்ளைத் தமிழ்’ என்னும் சிற்றிலக்கிய வகைக்கு வித்தாக அமைந்தது பெரியாழ்வாரது பாசுரங்களேயாம். திருமாலுக்குத் திருட்டி படாமல் ‘பல்லாண்டு பாடியதால், ‘பெரியாழ்வார்’ என்று அழைக்கப்படுகிறார். பாண்டியன் ஸ்ரீவல்லபன் காலத்தில் அவனது அவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்று வெற்றி பெற்றவர் இவராவர்.

(திருட்டி – கண்ணேறு ; கண்பட்டு ஏதும் கெடுதல் விளைந்து விடுமோ என்று அஞ்சி அதை நீக்க முற்படுதல்.)

3.3.3 ஆண்டாள் அருளியவை இக்காலக் கட்டத்தில் ஆண்டாள் பாடியவை திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவையாகும்.

திருப்பாவை

ஆண்டாள் பாடியது, திருப்பாவை ஆகும். நாலாயிரத் திவ்வியப் பிரபந்த த்தில், ‘முதலாவது ஆயிரத்தில்’, பெரியாழ்வார் திருமொழியை அடுத்து, திருப்பாவை அமைந்துள்ளது. 30 பாடல்களைக் கொண்டது. ‘ஆண்டாள் என்பது கற்பனைப் பாத்திரம். அவர் பாடியதாகச் சொல்லப்படும் பாடல்கள் பெரியாழ்வாரே பாடியவை’ என்று மூதறிஞர் இராஜாஜி கூறுவார். திருப்பாவையில் இடம்பெறும், ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்ற பாடல் வரியைக் கொண்டு வானவியல் வல்லுநர்கள், ஆண்டாள் கி.பி. எட்டாம் நூற்றாண்டினர் என்பர். திருப்பாவை முப்பது பாடல்களும் மார்கழி மாதத்தில் இளம்பெண்களால் இன்றும் பாடப்படுகின்றன. இன்றளவும் தமிழகத்தில் உள்ள வைணவத் திருக்கோயில்களிலும், திருப்பதியிலும், வைணவர் இல்லங்களிலும் மார்கழி மாதத்தில் அதி காலையில் திருப்பாவை பாடப்படுகிறது. பெரியாழ்வார் பெற்ற பெண்கொடி என்று போற்றப்படுபவர் ஆண்டாள் ஆவார். பன்னிரு ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண் ஆழ்வார் ஆவார்.

நாச்சியார் திருமொழி

ஆண்டாள் பாடியது, நாச்சியார் திருமொழி ஆகும். முதலாவது ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் 143 பாடல்கள் உள்ளன. ஆண்டாள் பாசுரங்களில் திருப்பாவை தவிர மற்றவற்றைக் கற்பனை என்று சொல்ல முடியவில்லை. உண்மை உணர்வு ததும்பப் பாடப்பட்டுள்ளது. திருமாலையே மணந்துகொள்ள உறுதி பூண்டு, ‘மானிடர்களுக்கு என்று திருமணம் பேசினால் உயிர் வாழமாட்டேன்’ என்றவர் ஆண்டாள். திருமாலை மணந்து கொள்வதாகக் கனவு கண்டு இவர் பாடியது, ‘வாரண மாயிரம்’ என்ற பாடல். இப்பாடல் தென்கலை வைணவர்களது திருமணங்களில் இன்றும் தவறாமல் ஓதப்படுகிறது.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத

முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்,

மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்

(நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் : 561)

என்று தனது கனவைத் தோழியருடன் பகிர்ந்து கொள்வதாகப் பாடல் அமைந்துள்ளது.

ஆண்டாளின் பாடல்களுள் திருப்பாவை இன்றும் பெண்களால் போற்றிப் பாராயணம் செய்யப்படுகிறது. தமிழர் மட்டுமன்றிக் கன்னடர், ஆந்திரர் ஆகியோரும் தம்தம் மொழியில் எழுதி வைத்துப் பாடி வழிபடுகின்றனர். ஆண்டாளின், திருப்பாவையும், மாணிக்க வாசகரது, திருவெம்பாவையும் இடைக்காலச் சோழர் ஆட்சியில் கடல் கடந்து 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள சயாம் நாட்டில் பரவின. சயாம் அரசு கொண்டாடும் விழாவின் பெயர், ‘திரியெம்பாவ – த்ரிபாவ’ என்பது. அவ்விழாவில் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களை மந்திரம் போல் பாடி வருகின்றனர்.

3.3.4 குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி குலசேகர ஆழ்வார் பாடிய பாசுரத் தொகுப்பின் பெயர் பெருமாள் திருமொழி ஆகும். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில், முதலாவது ஆயிரத்தில் இந்நூல் உள்ளது. இதில் 105 பாடல்கள் உள்ளன. குலசேகர ஆழ்வார், இராம அவதாரத்தில் பெரிதும் ஈடுபாடு உடையவர். வித்துவக் கோடு எனும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைக் குறித்து இவர் பாடும் பாடல்கள் பக்திச்சுவை மிக்கன. குலசேகர ஆழ்வார், திருவஞ்சைக் களத்தில் சேர மரபில் பிறந்தவர். செல்வத்தையோ, மனிதப் பிறவியையோ இவர் பொருட்படுத்தவில்லை. திருப்பதி மலையில் ஒரு சிகரமாக, மீனாக, காட்டு ஆறாக, பாதைகளாக, படியாக இருக்க வேண்டும் என்ற ஆவலைத் தன் பாசுரங்களில் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு பதிகத்தில் இராமாயணக் கதைச்சுருக்கத்தைப் பாடியுள்ளார். பெரியாழ்வாரும் இராமனைப் பல இடங்களில் பாடியுள்ளார். இலங்கைக்குத் தூது சென்ற அனுமன் இராமன் கூறிய அடையாளங்களைச் சீதைக்குச் சொல்கிறான். கணையாழியைத் தந்து மகிழ்கிறான் என்று பெரியாழ்வாரின் பத்துப் பாடல்கள் கூறுகின்றன. கைகேயி கேட்டபடி இராமன் மரவுரி அணிந்து கானகம் செல்கிறான். அத்துன்பத்தை நினைத்துத் தசரதன் புலம்புகிறான். அத்துயரைக் குலசேகர ஆழ்வார் பத்துப்பாடல்களில் பாடியுள்ளார். ஏனைய ஆழ்வார்களும் இராமனின் அருஞ்செயல்களையும், பேரருளையும் விவரித்துப் பாடி உள்ளனர். ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் பாடப்பட்ட இப்பாடல்கள் கம்பரின் காப்பியத்துக்கு வழிவகுத்தன. வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் தனது இராமாயணத்தை எழுதினார். எனினும் இராமாயணத்தின் பக்திச் சுவைக்கு ஆழ்வார்களது பாடல்களே அடிப்படையாக அமைந்தன எனலாம்.

3.3.5 திருமங்கை ஆழ்வாரின் பிரபந்தங்கள் திருமங்கை ஆழ்வார் பல பிரபந்த நூல்களை இயற்றினார்.

பெரிய திருமொழி

திருமங்கை ஆழ்வார் பாடியது, பெரிய திருமொழி. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில், இரண்டாவது ஆயிரத்தில் பெரிய திருமொழி உள்ளது. இதில் 1084 பாடல்கள் உள்ளன.

சோழநாட்டில் திருக்குறையலூரில் பிறந்தவர் திருமங்கை ஆழ்வார். கள்ளர் மரபைச் சேர்ந்தவர். எல்லா வைணவத் திருப்பதிகளுக்கும் சென்று திருமாலைத் தரிசித்தவர். மிகச்சிறந்த புலமை பெற்றவர். ‘கலீர் கலீர்’ என ஒலிக்கும் இனிய பாசுரங்கள் இவருடையவை. அளவிலும், சுவையிலும் பெரிய திருமொழியாக இவரது பாசுரங்கள் உள்ளன. பெரிய திருமொழி பத்துத் திருமொழிகளாக உள்ளது. திருவரங்கத்தில் உறையும் அரங்கனைக் குறித்து முதல் மூன்று திருமொழிகளும், திருவேங்கடவனைக் குறித்து நான்காவது திருமொழியும், கிருஷ்ண அவதாரத்தைக் குறித்து ஆறு, ஏழு திருமொழிகளும், இராம அவதாரத்தைப் பற்றி எட்டு, ஒன்பது, பத்தாம் திருமொழிகளும் கூறுகின்றன.

திருக்குறுந்தாண்டகம்

திருமங்கையாழ்வார் அருளிய மற்றொரு நூல் திருக்குறுந்தாண்டகம் ஆகும். நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் இரண்டாவது ஆயிரத்தில் திருக்குறுந்தாண்டகம் உள்ளது. இதில் 20 பாடல்கள் உள்ளன. சமண, சைவ, புத்த சமயத்தவர்களைக் கண்டிக்கிறார். திருமங்கை ஆழ்வார் நாட்டுப்புறப் பாடல் மெட்டில் பக்திப் பாடல்களை அமைத்துள்ளார். பெண்கள் விளையாடும் விளையாட்டில் ‘சாழல்’ என்பது ஒன்று. குயிலே கூவுக என்று அழைப்பது ஒருவகை. திருமாலின் பெருமைகளைச் சொல்லிக் குயிலைக் கூவ அழைப்பதும், ச்ச்ச்….. என்று பல்லி வீட்டில் ஒலி எழுப்பினால் அன்று வீட்டிற்கு யாரோ விருந்தினர் வரப் போகிறார் என்ற நம்பிக்கை இன்றளவும் தமிழர்களிடம் உள்ளது. அதை வைத்துத் திருமால் வருமாறு ஒலி செய் பல்லியே! என்று பல்லியை அழைப்பதும் இவரது பாசுரங்களில் காண முடிகிறது.

திருநெடுந்தாண்டகம்

திருநெடுந்தாண்டகம் திருமங்கை ஆழ்வார் பாடியதே ஆகும். இதுவும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாவது ஆயிரத்தில் உள்ளது. இரண்டாவது ஆயிரத்தில் உள்ள அனைத்துப் பாடல்களுமே திருமங்கையாழ்வார் பாடியதாகவே உள்ளன. ‘தாண்டகம்’ என்பது ஒரு பா வகை.

ஆறு சீர்களாக அமைவது குறுந்தாண்டகம் என்றும், எட்டு சீர்களைக் கொண்டது திருநெடுந்தாண்டகம் என்றும் குறிக்கப்படும். இது 30 பாடல்களைக் கொண்டது.

திருவெழு கூற்றிருக்கை

திருமங்கை ஆழ்வார் பாடியது, திருவெழு கூற்றிருக்கை ஆகும். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில், நான்காவது ஆயிரத்தில் இப்பாடல் அமைந்துள்ளது. ஒரே பாடலைக் கொண்டது. இதுசொல் விளையாட்டு அமைந்த செய்யுள். ஒன்று முதல் ஏழுவரையுள்ள எண்களை அடுக்கியும், இறங்கு வரிசையில் ஏழுமுதல் ஒன்றுவரை குறைத்தும் படித்தால் பொருள் அமையும் ஒரு வகைச் சித்திர கவியாகும்.

சைவ சமயக் குருவாகிய திருஞானசம்பந்தரும் திருவெழு கூற்றிருக்கை பாடியிருக்கிறார் என்பதை இங்கே நினைவுகூரலாம். வைணவர்கள் சிவனை இழித்துக் கூறப் பயன்படுத்திய கதைகள் திருமங்கை ஆழ்வார் பாடல்களில் காணப்படுகின்றன.

சிறிய திருமடல்

திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல், சிறிய திருமடல் ஆகும். நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் நான்காவது ஆயிரம் தொகுப்பில் உள்ளது. இது ஒரே பாடல் ஆகும். பழைய காதல் மரபை ஒட்டிப் பாடப்பட்டது. காதலில் ஏமாற்றமுற்ற ஒருவன் தன்னைத் தானே வருத்திக் கொண்டு உயிர்விடத் துணிவதாக ஒரு துறை உண்டு. அது, ‘மடல்’ எனப்படும். பனை மடலைக் குதிரை வடிவில் செய்து அதன் மேல் இருந்தபடி தன் காதலியின் உருவம் தீட்டிய படத்தை ஏந்தியபடி ஊர் நடுவே உண்ணாநோன்பிருந்து அழியத் துணிவதாகப் பாடும் துறை அது. ஆசை எந்த அளவுக்குத் துன்புறுத்தினாலும் பெண் மடலேறுவது இல்லை என்று தொல்காப்பியம் கூறும். அந்த மரபு திருமங்கை ஆழ்வாரால் சிறிய திருமடலில் மாற்றப்பட்டு உள்ளது. திருமால் காதலன், அவனை அடையத் துடிக்கும் காதலியாகத் தன்னைக் கற்பனை செய்து கொள்கிறார். அவனை அடைய முடியாமல் மடல் ஏறுவதாக ஆழ்வாரின் பாடல் அமைந்துள்ளது. ‘பெண்கள் மடல் ஏறுவதில்லை’ என்ற மரபு தென்மொழியாகிய தமிழில் கேட்டதுண்டு. அதை யாம் கொள்ளவில்லை. வடக்கே உள்ள நெறியையே விரும்பினோம். எனவே பெண்ணாக இருந்தும் மடல் ஊர்வேன்’ என்று காதலி சொல்வதாகப் பாடி உள்ளார்.

பெரிய திருமடல்

திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல் பெரிய திருமடல். இதுவும் ஒரே பாடல்தான். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நான்காவது ஆயிரத்தில உள்ள ‘மடல் ஏறுதல்’ என்னும் அகப்பொருளில் வந்துள்ளது. ஒரு வேறுபாடு என்னவெனில் இங்குப் பெண் மடலேறுகிறாள் என்பது. திருமழிசை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல், திருவெழு கூற்றிருக்கை ஆகிய 6 பாடல்களும் திருவாய்மொழியின் ஆறு அங்கங்களாகப் பாராட்டப்படுகின்றன.

3.4 சமண இலக்கியம்

பல்லவர்கள் பௌத்தர்களுக்கு நிலக்கொடை தந்ததாக ஒரு குறிப்புக் கூடக் காணப்படவில்லை. சமணர் செல்வாக்கு பல்லவர் ஆட்சியில் நலிவுற்றதே அல்லாமல் அடியோடு அகற்றப்படவில்லை. சைவக் குடும்பத்தில் பிறந்து நாவுக்கரசர் சமண அறநூற்களைக் கற்று, சமணர்களது தலைவராக முடிந்தது. தருமசேனர் என்ற பெயரில் பாதிரிப்புலியூர் சமணப் பள்ளியை இருக்கையாக்கிக் கொண்டு சமணச் சமயப்பணி செய்ய முடிந்தது. தமக்கை திலகவதியாரால் சமணத்தை விடுத்து மீண்டும் சைவர் ஆனார். பல்லவப் பெருவேந்தன் மகேந்திரவர்ம பல்லவனைச் சமணத்திலிருந்து சைவன் ஆக்கினார். சமணர்களின் இருக்கையாகிய பழையாறையில் பூசையற்றிருந்த சிவதளியைக் கண்டு மனம் தாளமாட்டாத வேதனையுடன் அப்பர் உண்ணா நோன்பிருந்து மீட்டார். சம்பந்தர் வாதில் சமணரைத் தோற்கடித்தார். சமய வாதத்தில் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர் என்பர். இந்த நூற்றாண்டைப் பொறுத்தவரை சமண சமயஞ் சார்ந்ததாக ஒரு புராணமும் வடமொழி மூலத்தைத் தழுவிய ஒரு காப்பியமும் மட்டுமே தமிழில் காணப்படுகின்றன.

3.4.1 பெருங்கதை கொங்கு நாட்டு விசய மங்கலத்தில் பிறந்த கொங்கு வேளிர் எழுதிய நூல், பெருங்கதை ஆகும். இது வடமொழி நூலைத் தழுவியது. குணாட்டியர் என்பவர் எழுதிய வடமொழி நூல் பிருகத் கதை. அந்த நூல் தமிழில் பெருங்கதை யாக உருவாயிற்று. கொங்கு வேளிர் சமணர். எனவே இந்த நூலில் சமண சமயக் கருத்துகளைக் காணலாம்.

தீவினையாகும் கருமம் தீர்ந்த உயிர் மேலே செல்லும்

(பெருங்கதை, உஞ்சைக் காண்டம் : 40: 186)

அல்லூண் நீத்தல்

(பெருங்கதை, வத்தவ காண்டம் : 4 : 159)

என்பன சமண சமயக் கருத்துகளாம். பெருங்கதை உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என்ற ஐந்து பகுதிகளைக் கொண்டது. அகவல் யாப்பில் உள்ளது. இது தொடர்நிலைச் செய்யுள் ஆகும்.

குருகுலத்தவனும், கௌசாம்பி நகரத்து அரசனுமாகிய சதானிகனின் மகன் உதயணன். உதயணனின் நண்பன் யூகி ஆவான். உதயணன் வாசவதத்தை, பதுமாவதி, மானனீகை ஆகிய பெண்களை மணந்து இறுதியில் துறவு பூணுவதாகக் கதை முடிகிறது.

தெய்வம் பேணல், ஊழ்வினையின் வன்மை, கல்வியின் பெருமை, நட்பின் திறம், காலம் இடம் ஆகியவை அறிந்து செயல்படுதல், பெண் கல்விச் சிறப்பு, செய்நன்றி அறிதல், ஆசிரியர் மாணவரது இலக்கணங்கள், மந்திரிகளின் இயல்பு, துறந்தோர் பெருமை முதலிய பல குறிப்புகள் இந்நூலில் உள்ளன. பெருங்கதைப் பாடல்கள் நயமிகுந்தவை. இந்நூலின் கதை திருமங்கை ஆழ்வாராலும், சீத்தலைச் சாத்தனாராலும் எடுத்தாளப்பட்டு உள்ளது. சிலப்பதிகார உரைப் பாயிரத்துள் அடியார்க்கு நல்லார் இதனைக் குறிப்பிடுவார். இந்நூல் பகுதிகள் பல எடுத்தாளப்பட்டிருத்தலால் இந்நூல் அதிக வரவேற்புப் பெற்றிருந்தமையை உணரலாம்.

கங்க மன்னர்கள் சமணத்தை ஆதரித்தவர்கள். துர்விநீதன் எனும் கங்க மன்னன் கி.பி.550 முதல் 600 வரை ஆண்டான். அவன் ‘பிருகத் கதை’ யை வடமொழியில் மொழிபெயர்த்தான் என்பர். கொங்குவேளிர் எழுதிய, ‘பெருங்கதை’ துர்விநீதனின் மொழி பெயர்ப்பைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட நூலாக இருக்கலாம் என்பர் ஈ.எஸ்.வரதராச அய்யர்.

3.4.2 மேருமந்தர புராணம் சமணர் செய்த புராணங்களில் ஒன்று மேருமந்தர புராணம் என்பது. புராணம் என்றால் பழமை என்பது பொருள். மேரு, மந்தரன் எனும் இருவரது வரலாற்றை கூறும் நூல் மேருமந்தர புராணம் ஆகும். இதன் ஆசிரியர் வாமன முனிவர். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ஒவ்வொருவரும் தத்தம் வினைப்பயனை அனுபவித்தே தீரவேண்டும் என்பதை நல்ல தமிழில் இந்நூல் அறிவுறுத்தக் காணலாம்.

3.5 பிற பாடல்கள்

கி.பி.700 முதல் 800 வரை தஞ்சையை முத்தரையர்கள் ஆண்டனர். இந்நூற்றாண்டில் சிறப்புடன் திகழ்ந்த முத்தரைய மன்னன் பெரும் பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் என்பவன். அவன் புலவர் பலரை ஆதரித்தான். அவனைப் புகழ்ந்து (1) பாச்சில் வேள் நம்பன் (2) ஆசாரியர் அநிருத்தர் (3) கோட்டாற்று இளம்பெருமானார் (4) குவாவங் காஞ்சன் ஆகியோர் வெண்பாக்கள் பாடியுள்ளனர். அவை செந்தலையில் உள்ள சிவன் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளன. அவற்றிலிருந்து இம்மன்னன் அழுந்தியூர், மணலூர், கொடும்பாளூர், காரை, கண்ணனூர், அண்ணல் வாயில் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் வெற்றி பெற்றவன் என்று தெரிகிறது.

இந்நால்வரும் இந்நூற்றாண்டினர். என்றாலும் இவர்கள் என்னென்ன நூல்களைப் பாடினர் என்பது தெரியவில்லை. வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் இரு வடிவங்களில் பாக்கள் இவர்களால் ஆக்கப்பட்டு, கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. சங்க காலத்தில் அகவல் பா பெரிதும் கையாளப்பட்டது. கலிப்பா ஓரளவு பயன்படுத்தப்பட்டது. வெண்பா அருகியே வழங்கியது. பல்லவர் காலத்தில் வடமொழிப் புலவர் தமிழகத்தில் குடிபுகுந்து வடமொழியில் எழுதினர். வடமொழியின் செய்யுள் இலக்கண அமைதிகள் தமிழில் கலந்ததன் விளைவாக, ‘விருத்தம்’ முதலிய வடிவங்கள் தோன்றின. வடமொழியும் தமிழும் கலந்த ‘மணிப்பிரவாளம்’ எனும் கலப்புநடை உருவானது. சொற்களுக்கான பொருளை அறிந்து கொள்ளுவதற்கான நிகண்டு முதலிய கருவி நூல்கள் தோன்றின.

3.5.1 பாண்டிக் கோவை பாண்டிய அரசன் நெடுமாறனைப் புகழ்ந்து எழுதப்பட்ட நூல். 200 பாடல்களைக் கொண்டது. இப்பாடல்கள் இலக்கண நூல்களில் மேற்கோளாகக் காட்டப்பட்டவை. நூலாசிரியர் யார் என்பது தெரியவில்லை. பல செய்யுள்களைத் தொடர்பு உடையனவாகக் கோத்தல் கோவை எனப்படும். காதலர் இருவரது காதல் உணர்வுகளையும், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பழகும் நிகழ்ச்சிகளையும் ஒரு வரலாறு போல் படிப்படியாக ஒரே வகையான செய்யுள்களால் பாடுவது கோவை நூலின் அமைப்பு முறையாகும். நானூறு காதல் துறைகள் பற்றி நானூறு செய்யுட்களால் பாடப்படும். காதலர்கள் கற்பனைக் காதலர்களே. காதலர்கள் சந்தித்த இடம், பழகிய சோலை ஆகியவை பற்றிச் சொல்லும் போதும், உவமைகளைக் கூறும்போதும் ஓர் அரசனையோ, வள்ளலையோ,தெய்வத்தையோ புகழ்ந்து பாடுவது உண்டு. பாண்டிக் கோவையில், ‘பாண்டியன் நெடுமாறனின் வீரம், கொடை, போர்க்கள வெற்றிகள் முதலியவை புகழப்பட்டுள்ளன. இந்நூலைப் பின்பற்றிப் பிற்காலத்தில் கோவை நூல்கள் பல எழுந்தன.

3.5.2 இறையனார் அகப்பொருள் உரை இறையனார் என்னும் புலவர் செய்த நூல். அகவல் யாப்பில் அறுபது பாடல்களைக் கொண்டது. அகப்பொருளின் இலக்கணம் கூறுவது. களவு, கற்பு எனும் இருபொருள் பற்றி அமைந்துள்ளது. சிறப்பு பற்றி, இறையனார் களவியல் என்றே அழைக்கப்படுகிறது. உரைநூலில் இந்தப் பெயரே இடம் பெற்றுள்ளது. பிற்காலத்தில் வந்தவர்கள், இறையனார் என்னும் பெயர் காரணமாக இது ‘சிவபெருமான் செய்த இலக்கணநூல்’ என்று சொல்லத் தொடங்கினர் எனலாம்.

தமிழில் தோன்றிய உரைநூல்களில் இறையனார் களவியல் உரையே முதலாவதாகக் கருதப்படுகிறது. உரை காப்பிய இன்பம் தருவது. அக்காலத் தமிழை நினைத்து ஆசிரியர்கள் இந்த உரையை நன்கு படித்துத் தேர்ச்சி பெற்ற பின்னரே பிறநூல்களுக்கு உரை எழுதத் தொடங்கினர். அவ்வகையில் இவ்வுரை நூலின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது.

பாடம் - 4

ஒன்பதாம் நூற்றாண்டு – I

4.0 பாட முன்னுரை

தொண்டை நாட்டை மையமாக வைத்து அரசாண்ட பல்லவர்கள் வடமொழிக்கு ஏற்றம் தருபவர்களாகத் தம் அரசியல் வாழ்வைத் தமிழகத்தில் துவக்கினர். அந்நாளில் பௌத்தமும், சமணமும் தமிழகத்தில் இருந்தன. ஐந்து, ஆறு, ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் கோலோச்சி, ஒன்பதாம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கையில் சைவ, வைண சமயங்கள் மேலோங்கி, அடியவராலும், ஆழ்வாராலும் தமிழ் உயர் நிலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலை தோன்றியது. சமண, பௌத்த இலக்கியங்களும் சில இருந்தன.

4.1 பின்புலங்கள்

அரசியல், சமயம், சமூகம், வாழ்வியல் கோட்பாடுகள் ஆகியவை பின்புலங்களாக அமைந்து எத்தகைய பாடுபொருள் மாற்றங்களை ஏற்படுத்தின, எத்தகைய இலக்கியங்கள் படைக்கப்பட்டன என்பதைப் பார்ப்போம்.

4.1.1 அரசியல் பின்புலம் இரண்டாம் நந்திவர்மனின் மகன் தந்திவர்மன் (கி.பி.774-825) ஐம்பது ஆண்டுகள் பல்லவ அரசை ஆட்சி செய்தான். எனினும் இவனது ஆட்சிக்காலத்தில் இராட்டிரகூடர், பாண்டியர் தாக்குதலுக்குக் காஞ்சி உள்ளாயிற்று. இராட்டிரகூட அரசன் துருவன் காஞ்சி நகரத்தை முற்றுகையிட்டான். அப்போரில் தந்திவர்மன் தோல்வியுற்றான். தனது பெரிய யானைப் படையைத் துருவனுக்கு அளித்துச் சரண் புகுந்தான் என்று இரதனபுரப் பட்டயம் கூறுகிறது. இங்ஙனம் துருவனுக்கு அடங்கிக் கப்பம் கட்டும் நிலை ஏற்பட்டது. கி.பி.803இல் மீண்டும் இராட்டிரகூட – பல்லவப் போர் நடந்தது. இம்முறை போர் தொடுத்து வந்தவன் துருவனின் மூன்றாம் மகன் கோவிந்தன். அவனிடமும் தந்திவர்மன் தோற்றான். கோவிந்தன் இராமேச்சுவரம் வரை சென்று அங்கு கி.பி.804இல் பட்டயம் ஒன்றை வெளியிட்டு (பிரிட்டிஷ் காட்சிச் சாலை பட்டயம் E.P. Ind Vol. II P.126) மீண்டான். மூன்றாம் கோவிந்தன் வடநாடுகளை வெல்லச் சென்றான். அப்போது தந்திவர்மன், கங்கபாடி அரசன், சேர, சோழ, பாண்டியர் அனைவரும் ஒன்று சேர்ந்து கோவிந்தனை வெல்லத் திட்டமிட்டதாக, ‘கஞ்சன் பட்டயம்’ கூறுகிறது. கோவிந்தன் பெரும்படையுடன் வந்து கி.பி.808-810இல் தென்னாட்டு அரசர் அனைவரையும் வென்றான். காஞ்சியைக் கைப்பற்றினான். சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளில் இராட்டிரகூட வீரர்கள் திரிந்தனர். இதை அறிந்து இலங்கை அரசன் அவனுக்குப் பரிசுகள் பல அனுப்பி நட்புக் கொண்டான். இவ்வாறு பல்லவ தந்திவர்மன் சந்தித்த மூன்று பெரும் போர்களும், போர்த் தோல்விகளும் பல்லவ அரசைத் தளர்வுறச் செய்தன.

வரகுண பாண்டியன் கி.பி.800 முதல் 830 வரை பாண்டிய நாட்டை ஆண்டவன். அவன் தகடூர் அதியமானை எதிர்த்தபோது தந்திவர்ம பல்லவன் அதியமானை ஆதரித்தான். சேரனும் அவனை ஆதரித்தான். வரகுண பாண்டியன் கி.பி.806 இல் இவர்கள் அனைவரையும் தோற்கடித்தான். பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்த சோழநாடு முழுவதையும் தொண்டை நாட்டில் பெண்ணையாற்றங்கரை வரை உள்ள பகுதியையும் பாண்டியன் கைப்பற்றிக் கொண்டான். திருச்சிராப்பள்ளி மலைக்கோயில், திருநெய்த் தானம், திருவிசலூர் ஆகிய இடங்களில் வரகுணன் பட்டயங்கள் உள்ளன. வடக்கே இராட்டிரகூடர் படையெடுப்பும், தெற்கே பாண்டியர் படையெடுப்பும் பல்லவ மன்னன் தந்திவர்மனைத் தத்தளிக்கச் செய்தன. இவனது கல்வெட்டுகள் செஞ்சிக்கு அருகில் உள்ள தொந்தூர், உத்தர மல்லூர், திருவல்லிக்கேணி, கூரம், மலையடிப்பட்டு, திருவெள்ளறை, ஆலம்பாக்கம் ஆகிய இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன.

தந்திவர்மனுக்குப் பின் அவனது மகன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825 முதல் கி.பி.850 வரை) அரசன் ஆனான். “இவன் சந்திர குலத்தவன். சேர, சோழ, பாண்டியரை வெறியலூர், பழையாறு, வெள்ளாறு, தெள்ளாறு ஆகிய இடங்களில் நடந்த போர்களில் முறியடித்தவன். மூவேந்தரிடமும் வடபுலத்தவரிடமும் திறை பெற்றவன்” என்று நந்திக் கலம்பகம் கூறுகிறது.

இவன் ‘பல்லவர் கோள் அரி’ என்று குறிக்கப்படுகிறான். (பல்லவர் கோள் அரி – அரி என்றால் சிங்கம். கோள் – பகைவர்; பகைவருக்குச் சிங்கம் போன்றவன்.) பாண்டியனை, தெள்ளாறு என்ற இடத்தில் வென்றதால், தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்’ என்று அழைக்கப்பட்டான் என்று பெல்லாரிக் கோட்டத்தில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள குருக்கோடு என்ற இடத்தில் கி.பி.830இல் இராட்டிரகூட மன்னன் அமோகவர்சனை வென்று பல்லவ அரசின் இழந்த புகழை மீட்டான். இச்செய்தியை நந்திக்கலம்பகம் எடுத்துரைக்கின்றது

எனதே கலைவளையும் என்னதே மன்னர்

சினஏறு செந்தனிக்கோல் நந்தி – இனவேழம்

கோமறுகில் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்

பூமறுகில் போகாப் பொழுது (2)

குருக்கோட்டைக் குறுகா மன்னர்

போர்க்கின்ற புகர்முகத்துக் குளித்த வாளி (35)

-கேளாதார்

குஞ்சரங்கள் சாயக் குருக்கோட்டை அத்தனையும்

அஞ்சரங்கள் ஆர்த்தான் அருள் (34)

ஆடக மேரு வில்லார் அருளினால் அமரிற்சென்று

கூடலர் முனைகள் சாய வடபுலம் கவர்ந்துகொண்டு

(பெரியபுராணம், கழற்சிங்க நாயனார்புராணம்:2)

என்று இவனது வெற்றி பெரிய புராணத்தில் குறிக்கப்பட்டு உள்ளது.

வண்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால்

உண்மையால் பாராள் உரிமையால் – திண்மையால்

தேர்வேந்தன் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோடு

யார்வேந்தர் ஏற்பார் எதில்.

என்று பாரத வெண்பாவில் பெருந்தேவனார் இவனது வெற்றியைப் புகழ்ந்துள்ளார்.

மூன்றாம் நந்திவர்மனுக்கு, மூவேந்தரும் வடபுலத்து அரசரும் திறை தந்தனர் என்றும் (27), புகாராகிய காவிரிபூம்பட்டினம் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்றும் (44) நந்திக்கலம்பகம் பராட்டுகிறது.

அவனிட்ட வழக்கன்றோ

வழக்கிந்த வையத்தார்க்கே (53)

அறம் பெருகும் தனிச்செங்கோல் மாயன் (60)

பொதுவின்றி ஆண்ட பொலம்பூண் பல்லவன் (61)

தண் செங்கோல் நந்தி தனிக்குடையுடையவன் (72)

தமிழ்த் தென்றல் புகுந்துலவும் தண் சோழநாடன் (74)

என்றும் போற்றப்பட்டுள்ளான். தந்தையின் காலத்தில் இழந்த பல்லவர் புகழை மீட்டுத் தந்தான், மூன்றாம் நந்திவர்மன்.

4.1.2 சமயப் பின்புலம் பல்லவ மன்னன் தந்திவர்மனைப் பல்லவர் காலப் பட்டயங்கள் செந்தாமரைக் கண்ணனான திருமாலின் அவதாரம் போன்றவன்; அன்பு, அருள், ஈகை, ஒழுக்கம் இவற்றுக்குப் புகலிடமானவன் என்கின்றன. இவன் திருச்சிராப்பள்ளிக் கூற்றத்தில் உள்ள ஆலம்பாக்கத்திற்கு ‘தந்திவர்ம மங்கலம்’ எனத் தன் பெயரிட்டு அதனைப் பிரமதேயமாக வழங்கினான். அங்குக் கைலாசநாதர் கோயிலைக் கட்டினான். இவன் வைணவன். ஆயினும் சைவ-வைணவக் கோயில்கட்கு நிரம்பப் பொருள் தந்தான் என்பதைப் பட்டயங்கள் உறுதி செய்கின்றன. இவனது 16ஆவது ஆட்சி ஆண்டில் முத்தரைய மன்னன், திருவாலத்தூர் மலையைக் கோவிலாகக் குடைந்து பெருமாளை எழுந்தருளச் செய்தான் என்பது மலையடிப்பட்டி வாகீசர் கோவிலின் அழிந்த மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. தந்திவர்மன் காஞ்சிப்பரமேச்சுர விண்ணகரத்திற்குப் பொற்குடம் ஒன்றை அளித்துள்ள செய்தியைக் கல்வெட்டுத் தருகிறது.

மூன்றாம் நந்திவர்மன் சிற்றூர்களைத் தேவதானமாகத் தந்தான். திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சிவபெருமான் கோவிலுக்கு ஒரு சிற்றூர் தந்ததைக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இவன் திருநாகேச்சுரத்தைத் தன் பெயரால், ‘குமார மார்த்தாண்டபுரம்’ என்று அழைத்துத் தானமாகத் தந்தான். திருவல்லம் பெருமானுக்குப் பல அறங்கள் செய்துள்ளான். திருச்சிக்கு அருகில் உள்ள கற்குடி என்னும் இடத்தில் உள்ள நிலத்தை நான்மறையாளருக்கு அளித்தனன். திருவிடைமருதூரில் கோவில் திருப்பணி செய்து உள்ளான். இவனது மனைவி தஞ்சையை அடுத்த நியமம் என்ற சிற்றூரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சித்திரை நாளில் திருவமுது செய்தருள நெல், பால், தயிர், 5 நாழியும் அரிசி பதக்கும் வாங்க 5 கழஞ்சு பொன்னும் அளித்துள்ளாள். இவனது கீழிருந்த சிற்றரசர்களும் திருப்பணி செய்யத் தயங்கிடவில்லை. குன்றாண்டார் கோவில் (புதுக்கோட்டை) திருஆதிரை நாளில் 100 பேருக்கு உணவளிக்க வலுவூரான் என்பவன் அரிசி தானம் செய்தான். ஒருவன் திருநெய்த்தானம் சிவன் கோவிலில் நந்தாவிளக்குக்காகப் பொன் அளித்தான். ஒருவன் செந்தலை – சுந்தரேசுவரர் கோவிலுக்கு நிலம் அளித்தான். திருவல்லம் கோவிலுக்கு மூன்று சிற்றூர்கள் தேவதானமாக விடப்பட்டன. அங்குத் திருப்பதிகம் ஓதுவார் உள்படப் பலபணி செய்வோருக்கு 2000 காடி நெல்லும் 20 கழஞ்சு பொன்னும் தரப்பட்டன. ஒருவன் திருப்பராய்த்துறையில் உள்ள கோவிலில் இரண்டு விளக்குகள் எரிக்கப் பொன் தந்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. ஒருவன் குடிமல்லம் பரசுராமேசுவரர்க்குத் திருநந்தா விளக்குகட்கும் நெய்க்குமாக நிலம் அளித்தான்.

மூன்றாம் நந்திவர்மனை, ‘சிவனை முழுதும் மறவாத சிந்தையன்’ என்று நந்திக்கலம்பகம் போற்றுகிறது. சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையுள் இவனை ஒரு நாயனாராகப் பாடிப் புகழ்ந்து, “கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்று கூறியுள்ளார். இவனது கோயில் திருப்பணிகளும் இவனை ஒரு சிறந்த சிவபக்தன் என்று உரைக்கின்றன. வேலூர் பாளையப் பட்டய வரிகள் இதை அரண் செய்கின்றன. ‘சிவனது திரு அடையாளம் நெற்றியில் கொண்ட (திருநீறு அணிந்த) நந்திவர்மன் கைகளைக் குவித்து, எனக்குப் பின்வரும் அரசர் இந்தத் திருப்பணியைப் பாதுகாப்பராக என்று வேண்டுகின்றான்’ என்கிறது, அந்தப் பட்டயம்.

சைவ, வைணவ, சமண, பௌத்த இலக்கியங்கள் இக்காலக் கட்டத்தில் தோன்றியதில் வியப்பு இல்லை.

4.1.3 சமூகப் பின்புலம் பல்லவர் வடக்கிலும், தெற்கிலும் பெரும் போர் செய்ததால் நாட்டில் வறுமை ஏற்பட்டது. அதை மூன்றாம் நந்திவர்மன் நீக்கினான் என்று கலம்பகம் (செய்யுள் – 11) கூறுகின்றது. அதே காலத்தில் சோழநாட்டில் பெரும்பஞ்சம் உண்டானதைக் கோட்புலி நாயனார் வரலாற்றில் காண்கிறோம். அவர் போருக்குப் போயிருந்தபோது பெரும்பஞ்சம் உண்டானது. அதனால் அவர் சிவனடியார்களுக்கென வைத்திருந்த நெல்லை உறவினர் பயன்படுத்திக் கொண்டனர் என்ற செய்தியைக் கலம்பகச் செய்தியுடன் பொருத்திப் பார்த்தால் பஞ்சம் உண்மை என்பது புலனாகும்.

மக்கள் போர், பஞ்சம் இவற்றால் பாதிக்கப்பட்டதைத் தவிர பிறநிலைகளில் பாதிக்கப்படவில்லை. ‘அறம் பெருகும் தனிச் செங்கோல் மாயன்’ (நந்திக்கலம்பகம் – 60), தண்செங்கோல் நந்தி (72), பகை இன்றிப் பார் காக்கும் பல்லவர் கோன் (70) முதலிய தொடர்களால் அரசனது ஆட்சி குளிர்ச்சி மிக்கதாய் இருந்ததை அறியலாம். ‘கடல் சூழ்ந்த உலகமெல்லாம் காக்கின்ற பெருமான்’ என்று சுந்தரரும், ‘நாடு அறநெறியில் வைக நன்னெறி வளர்த்தான்’ என்று சேக்கிழாரும் பாராட்டினர். அவரவர் வாழ்வியல் நெறிகளின்படி வாழ்ந்தனர். அரசன் போர் செய்தான். குடிகளைக் காத்தான். அந்தணரை ஓம்பினான். அந்தணர்கள் பேணப்பட்டனர். வீரர்கள் போரிட்டனர். வணிகர்கள் கடல் வணிகமும் செய்தனர். மாமல்லபுரம், மயிலாப்பூர் இரண்டும் சிறந்த துறைமுகங்களாக இருந்ததை நந்திக் கலம்பகத் தொடர்கள் புலப்படுத்துகின்றன. சைவ, வைணவ, சமண, பௌத்த சமயத்தினர் தத்தம் சமயத் தொண்டினைச் செய்தனர். உழைக்கும் மக்கள் தம் உழைப்பில் அடியவரைப் புரந்தனர்; கோயில்களுக்குத் தம்மால் இயன்றதை நல்கினர்.

சமூக மாற்றம்

பல்லவர் போர்களைச் சந்தித்தனர். நாட்டில் பஞ்சம், வறுமை தலைகாட்டியது. அதைச் சரி செய்யலாயினர். தெய்வ பக்தியும், நால் வருணப் பகுப்பில் நம்பிக்கையும் உடையவராக இருந்தனர். சைவர்கள், வைணவர்கள், தத்தம் திருத்தொண்டினைத் தொடர்ந்தனர். சமணர்கள் கதை தழுவிய இலக்கிய நூல்களைச் செய்தனர். பௌத்தர்கள் கதையையும், சிறு பதிக நூலையும் செய்தனர்.

4.1.4 வாழ்வியல் பின்புலம் ‘நந்தி நூல் வரம்பு முழுதும் கண்டான்’ (செய்யுள் 3) நூற்கடல் புலவன் (26) என்று கலம்பகம் போற்றும் நந்திவர்மன் கல்வி கேள்விகளில் சிறந்திருந்ததுடன், சிறந்த வள்ளலாகவும் இருந்தான். ‘நந்தி வறியோர் சொன்ன பொருள் நல்கு வள்ளல்’ (24) ஒழியா வண்கைத் தண்ணருள் நந்தி (43) முதலிய தொடர்கள் உணர்த்தும், பல்லவனது வேலூர்ப் பாளையக் கல்வெட்டு

(1) நந்திவர்மன் ஆட்சியில் வசந்தகாலம் சிறப்பளித்தது போல முன்னர்ச் சிறப்பளித்ததில்லை.

(2) நல்லியல்புகள் பொருந்திய பல பெருமக்கள் பிறந்திருந்தனர்.

(3) பெண்மக்கள் சிறந்த கற்புடையவராக இருந்தனர்.

(4) வள்ளல்கள் பலர் இருந்தனர்.

(5) சான்றோர் அடக்கமாக இருந்தனர்.

(6) குடிகள் அரசனைச் சார்ந்து நின்றனர் என்று கூறுகிறது.

4.1.5 இலக்கியப் பாடுபொருள் மாற்றம் இறைவழிபாடு, சிவனன்பு, திருமாலன்பு, பக்தி, திருத்தலச் சிறப்பு போல்வன நுவல்பொருளாக அமைய, சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் இந்த நூற்றாண்டிலும் குறைவற்றுச் செழித்தன.

பௌத்த சமணப் போர்கள் பெரும்பாலும் ஏழாம் நூற்றாண்டோடு முடிந்துவிட்டன. அதற்குப் பிற்பட்ட எட்டாம் நூற்றாண்டில் வீராவேசத்துடன் சமண-சைவ வாதங்கள் நடந்த சம்பந்தர் காலத்தில்-அப்பரைப் பலவழிகளிலும் கொல்ல முயன்ற காலத்தில் சம்பந்தர் இருந்த மடத்திற்கே நெருப்பிட்ட காலத்தில் – சமணர்கள் கழுவேற்றப்பட்டனர்.

பரமேச்சுர விண்ணகரத்தின் உட்சுவர்ச் சிற்பக் காட்சி வருமாறு: அரசன் அரியணையில் அமர்ந்துள்ளான். அவனுக்குப்பின் ஒருத்தி கவரி வீசுகிறாள். அரசர்க்கு எதிரில் துறவிகள் இருவர் கழுவேற்றப்பட்டுள்ளனர். இச்சிற்பத்திற்கு வலப்புறம் ஆழ்வார் சிலை கொண்ட கோயிலையும், அதன் வலப்புறம் வைகுந்தப் பெருமாள் கோயில் போன்ற கோயிலையும் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன.

கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில், ‘புத்த மத கண்டன நூல்’ ஒன்றைச் சமணர் யாத்துள்ளமையைக் காண முடிகிறது. சமணர்கள் கதை தழுவிய இலக்கிய நூல்களை ஆக்கினர். புத்த சமயத்தினர் செய்த நூல்களும் உள்ளன.

இலக்கணத்தை விரித்துரைக்கும் நூல் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.

4.2 சைவ இலக்கியங்கள்

அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று சிவனடியார்கள் சிவன் கோயில்களில் பாடிய பதிகங்களில் மறைந்தவை போகக் கிடைத்தவை 8000 ஆகும். இதன் தொடர்ச்சியாக இந்தக் காலக்கட்டத்தில் மாணிக்கவாசகர் தோன்றிப் பதிகம் பாடினார். சுந்தரமூர்த்தி நாயனாரது திருத்தொண்டத் தொகை நூலில் மாணிக்கவாசகர் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் மாணிக்கவாசகரின் பாடல்களில் வரகுண பாண்டியனின் பெயர் இடம் பெறுகிறது. எனவே மாணிக்கவாசகர் வரகுணபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர் எனலாம். இவரது காலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும்.

4.2.1 திருவாசகம் திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர் ஆவார். இது 656 பாடல்களைக் கொண்டது. 51 பிரிவுகள் உள்ளன. எட்டாம் திருமுறை என்று அழைக்கப்படுகிறது. சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் வரை அமைந்துள்ளது. திருவாசகத்தைப் படித்தால் உள்ளம் இளகும். உயிர் உருகும். கரும்புச் சாற்றில் தேன் கலந்து, பால் கலந்து, கனியின் சுவை கலந்து இனிக்கும் திருவாசகப் பாடல்கள் உயிரில் கலந்து உவகை தரும் என்று இராமலிங்க வள்ளலார் கூறுவார்.

“திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற தொடர் பாடல்களின் கனிவுத் தன்மையைப் புலப்படுத்தும். ‘எலும்பை உருக்கும் பாட்டு’ என்று டாக்டர்.ஜி.யூ.போப் கூறுவார். திருவாசகத்தை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

தாயுமானவர், இராமலிங்கர் ஆகியோரது பாடல்கள் மாணிக்க வாசகரது பாட்டு அமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளன எனில் இதன் செல்வாக்குப் புலப்படும். சிவனைப் பற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே திருவாசகம். அப்பாடல்கள் இன்றும் சைவர்களது வீடுகளில் வழிபாட்டின்போது பாடப்படுகின்றன. பாடினால் மனத்தை நெகிழ்விப்பவை அவை. மக்களிடையே வழக்கத்தில் இருந்த சில நாட்டுப்புறப்பாடல் வடிவங்களை மாணிக்கவாசகர் பயன்படுத்தி உள்ளார்.

* இளம்பெண்கள் உட்கார்ந்து காய்களைத் தூக்கிப்போட்டு கையால் பிடித்து விளையாடும் விளையாட்டு அம்மானை. அப்போது அவர்கள் பாடுவர். அப்பாடல் அமைப்பில் மாணிக்கவாசகர் பாடியது திருவம்மானை ஆகும்.

* பெண்கள் வாசனைப்பொடி இடித்தபடியே பாடுவது பொற்சுண்ணம் ஆகும். அந்தப் பாடல்களின் அமைப்பில் மாணிக்கவாசகர் இயற்றியது, திருப்பொற்சுண்ணம் ஆகும்.

* பெண்கள் பூப்பறிக்கும்போது பாடும் அமைப்பில் அவர் எழுதியது, திருப்பூவல்லி.

* பெண்கள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடும்போது பாடும் பாடல் வடிவில் அவர் அமைத்த பாக்கள், திருப்பொன்னூஞ்சல் ஆகும்.

மாணிக்கவாசகரது உள்ளம் சிவனை மையமிட்டது.

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன் பேர்

வேண்டேன்

கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனியமையும்

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தாஉன் குரைகழற்கே

கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே

(திருப்புலம், 3)

என்று தான் வேண்டுவது பற்றி அவர் கூறுவது அவரது ஆழ்ந்த பக்தியைப் புலப்படுத்தும்.

மாணிக்கவாசகர் மதுரையை அடுத்த திருவாதவூரில் பிறந்தவர். ஆதிசைவ அந்தணர் இனத்தவர். அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தவர். ‘தென்னவன் பிரமராயன்’ என்ற விருது பெற்றவர். இயற்பெயர் வாதவூரர். ‘ஆளுடைய அடிகள், அழுது அடியடைந்த அன்பர்’ என்றெல்லாம் குறிக்கப்படுபவர்.

பாண்டியனுக்காகக் குதிரைகள் வாங்க நாகப்பட்டினத் துறைமுகத்துக்குச் சென்றார். செல்லும் வழியில் திருப்பெருந்துறையில் சிவனால் ஆட்கொள்ளப்பட்டார். வந்த வேலையை மறந்தார். கொண்டு வந்த பணத்தைச் சிவனுக்குக் கோயில் கட்டும் பணியில் செலவிட்டார். மன்னனால் பல தொல்லைகளை அடைந்தார். இறுதியில் மன்னன் இவரது சிறப்பை உணர்ந்து வணங்கினான் என்று அவரது வாழ்க்கைக் குறிப்பு உரைக்கும்.

திருவெம்பாவை

மாணிக்கவாசகர் பாடியது, ‘திருவெம்பாவை’. இது திருவாசகத்தில் ஒரு பகுதி. இன்றளவும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் சைவர்களால் பாடப்படுகிறது. 20 பாடல்களைக் கொண்டது. திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் ஒருவரை ஒருவர் துயில் எழுப்பி, கூடி, பொய்கைக்குச் சென்று நீராடி பாவை வைத்து வழிபடுவதைச் சொல்லுகிறது.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம் மறந்து

போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எம் தோழி பரிசேலோர் எம்பாவாய்.. (1)

என்று இறைவழிபாட்டுக்கு உயிர்களை ஆயத்தப்படுத்தும் அழகு நயமிக்கது.

திருப்பள்ளி எழுச்சி

அதிகாலையில் எழுக என்று பாடுவது ‘பள்ளி எழுச்சி’ ஆகும். மன்னர்களை எழுப்ப, பள்ளியெழுச்சி பாடும் நிலை அந்நாளில் இருந்தது. மாணிக்கவாசகர் சிவனைத் தூக்கத்திலிருந்து எழுப்புவதாகப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். இதுவும் திருவாசகத்தில் ஒரு பகுதியே.

கீர்த்தித் திரு அகவல்

மாணிக்கவாசகர் பாடியது. கீர்த்தி என்பது புகழ். சிவனது புகழைப் பாடும் நூல் இது. அடியார் பார்க்கும் வகையிலும், நினைக்கும் வகையிலும் அருள் செய்தவன் சிவன். தில்லையில் ஆடுபவன் சிவன். வேட்டுவன் வடிவம் தாங்கியவன். வலைஞன் ஆக வந்து கெளிற்று மீனைக் கொன்றவன்; உமையைக் கூடியவன் என்று போற்றுகிறார் மாணிக்கவாசகர். இதுவும் திருவாசகத்தின் ஒரு பகுதியே ஆகும்.

திருவண்டப் பகுதி

மாணிக்கவாசகர் பாடியது, ‘திருவண்டப் பகுதி’ ஆகும். சிவன் எல்லாம் வல்லவன். பெரியதில் பெரியவன், சிறியதில் சிறியவன் என்று அவனது வடிவத்தைப் போற்றுவது ‘திருவண்டப் பகுதி’ ஆகும்.

படைப்பாற் படைக்கும் பழையோன், படைத்தவை

காப்போற் காக்கும் கடவுள், காப்பவை

கரப்போன் கரப்பவை கருதாக்

கருத்துடைக் கடவுள்

(திருவண்டப் பகுதி : 13-16)

சூரியனுக்கு ஒளி தந்தவன். சந்திரனில் குளிர்ச்சியை வைத்தவன். தீயில் வெப்பத்தை வைத்தவன். காற்றில் இயக்கத்தை வைத்தவன். நீரில் சுவையைத் தந்தவன். மண்ணில் திட்பத்தை வைத்தவன் என்று சிவனை வியக்கிறார் மாணிக்கவாசகர்.

போற்றித் திரு அகவல்

‘போற்றி’ என்றால் வணக்கம் என்று பொருள். உலகில் உயிர்கள் உடம்புடன் பொருந்தித் தோன்றும் உலக உற்பத்தியைக் கூறுவது, போற்றித் திருவகவல் ஆகும்.

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

குறியே போற்றி குணமே போற்றி

நெறியே போற்றி நினைவே போற்றி

வானோர்க்கு அரிய மருந்தே போற்றி

ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி

(அடிகள் :112-117)

4.2.2 திருச்சிற்றலம்பலக் கோவை மாணிக்கவாசகர் அருளிய மற்றொரு நூல், திருச்சிற்றம்பலக் கோவை ஆகும். சிவன் பாட்டுடைத் தலைவன். தில்லையில் சிற்றம்பலத்தில் உறையும் சிவன் தலைவன் ஆதலால் இந்நூல், ‘திருச்சிற்றம்பலக் கோவை’ எனப்படுகிறது. இறைவன் தலைவன். மனித ஆன்மா தலைவி. இத்தலைவன் -தலைவியின் அன்பு கலந்த காதல் நுவல்பொருள் ஆக அமைந்த நானூறு பாடல்களைக் கொண்டது. பாடல்களில் சொற்சுவை, பொருள் சுவை மிகுந்துள்ளது. ‘தேனூறு செஞ்சொல் திருக்கோவை நானூறு’ என்பர். பாடல்கள் கட்டளைக் கலித்துறைப் பாவகையில் அமைந்துள்ளன.

மீண்டாரென உவந்தேன் கண்டும்மை இம்மேதகவே

பூண்டார் இருவர்முன் போயினரே புலியூரெனை நின்று

ஆண்டான் அருவரை ஆளியன்னானைக் கண்டேனயலே

தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே

(திருக்கோவையார் – 244)

என்று தலைவி பாடுவதாக வரும் பாடலில் பொங்கும் உணர்வு வேகத்தைப் பாருங்கள்.

4.2.3 மாணிக்கவாசகர் வெளிப்பாட்டு முறைகள் மாணிக்கவாசகரது பாடல்கள், ‘திருப்பிச் சொல்லும் முறையில்’ அமைந்துள்ளன.

தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன் காணேடீ

தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன் ஆயிடினும் (3)

என்றும்

தொக்கன வந்தவர் தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ!

தொக்கன வந்தவர் தமைத் தொலைத்தருளி அருள் கொடுத்தங்கு

(5)

என்று ‘திருச்சாழல்’ பகுதி முழுவதுமே திருப்பிச் சொல்லும் முறையில் உள்ளது. ஒருவர் பாட ஏனையோர் திருப்பிச் சொல்லும் முறை அனைவரிடமும் பாடல்களைக் கொண்டு சேர்க்க உதவியது எனலாம்.

மாணிக்கவாசகரது பாடல்கள் எல்லோரது மனதையும் கவர்பவை. ‘ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதியை’ என்ற திருவெம்பாவைப் பாடலையும், ‘நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! எனத் தொடங்கும் சிவபுராணத்தையும், ‘முத்திநெறி அறியாத மூர்க்கரொடு’ எனத் தொடங்கும் அச்சோப் பதிகத்தையும் எழுதப் படிக்கத் தெரியாத சிற்றூர் மக்களும் காதால் கேட்டு, மனப்பாடம் செய்து, வெகு எளிதாகப் பாடுவதைக் காணமுடியும்.

திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பொற்சுண்ணம், திருவம்மானை, திருப்பூவல்லி, திருவுந்தியார் முதலியன பலர் கூடிப் பாடும் கூட்டுப் பாடலாக அமைந்துள்ளன.

* நெல் முதலியவற்றைக் குத்தும் போது பெண்கள் கை சோர்வு தெரியாமலிருக்கப் பாடும் பாடல் ‘வள்ளைப் பாட்டு’ என்பது. இதைத் தான், ‘திருப்பொற்சுண்ணமாக’ மாணிக்கவாசகர் அமைத்துள்ளார்.

* விழாக் காலங்களில் மகளிர் ஒன்றாகக் கூடி வட்டமாக நின்று கைகொட்டி ஆடும் போது பாடும் பாடல் வடிவம் ‘திருத்தெள்ளேணம்’ ஆகும்.

* தோழியர் இருவர் ஒருவரை ஒருவர் வினாவி விடை கூறும் விளையாட்டுப் பாடல், ‘திருச்சாழல்’ ஆகும்.

இங்ஙனம் சிறுபெண்களது பாடல்கள் முறையமைய மாணிக்கவாசகர் பாக்களை அமைத்துள்ளமை சிறப்பானது. மாணிக்கவாசகரது திருவெம்பாவையும், ஆண்டாளின் திருப்பாவையும் மிகச் சிறந்த பாவைப் பாடல்கள் ஆக இன்றளவும் திகழ்கின்றன.

4.3 வைணவ இலக்கியங்கள்

சைவராகவும், வைணவராகவும் இருந்து ஆலயங்களை எழுப்பியும், ஆலயங்களுக்கு ஊர்களைத் தானமாக வழங்கியும், பிராமணர்களுக்கு நிலங்களைத் தந்தும், அடியவர்களையும், ஆழ்வார்களையும், உபசரித்துப் பேணியும் பல்லவ மன்னர்கள் தமிழ் இலக்கியப் பாதையை, ‘பக்தி இலக்கியத்திற்கு’ மடையாக மாற்றினர். மக்களும் அவ்வழியே சென்றனர். வைணவத் தலங்கள் 108, சிவதலங்கள் என்று தலயாத்திரைகள் பெருகின. இறைவன் மேல் அருளப்பட்ட பாசுரங்கள் மனத்தைக் கனிவிக்கின்றன.

ஒன்பதாம் நூற்றாண்டில் திருமாலின் மேல் பக்திப் பாசுரங்களைப் பாடியருளிய வைணவ ஆழ்வார்கள் நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரும் ஆவர். இவர்கள் இருவரும் பாடிய நூல்களைப் பற்றிக் காண்போம்.

4.3.1 நம்மாழ்வாரின் படைப்புகள் ஆழ்வார்களில் சிறப்பிடம் வகிப்பவர் நம்மாழ்வார் ஆவார். திருநகரியில் பிறந்தவர். திருமாலின் அவதாரமாகக் கருதப்படுபவர். நம் எல்லாருக்கும் உரியவர் என்ற பொருளில், ‘நம்மாழ்வார்’ என்று அழைக்கப்படுபவர். இவருக்குச் சடகோபன், பராங்குசன், தமிழ்மாறன் ஆகிய பெயர்களும் உண்டு.

நம்மாழ்வார் திருவாய்மொழி, பெரிய திருவந்தாதி, திருவாசிரியம், திருவிருத்தம் என்னும் நான்கு நூல்களைப் பாடியுள்ளார். நம்மாழ்வார் பாடியுள்ள இந்நான்கு நூல்களும் நான்கு வேதங்களை உள்ளடக்கியவை என்பார்கள். இறைவன், உயிர் என்னும் இரண்டின் இயல்புகள், எம்பெருமானை அடையும் வழி, இடையில் தோன்றும் இன்னல், அதனை நீங்கி இறைவனை அடைதல் என்னும் நிலைகளில் இவரது நூல்களின் பாசுரங்கள் அமைகின்றன.

திருவாய் மொழி

நம்மாழ்வார் அருளியது, திருவாய்மொழி ஆகும். நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாக, திருவாய்மொழி உள்ளது. இதில் 1102 பாசுரங்கள் உள்ளன. இப்பாசுரங்கள் யாவும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. இதனால் ஓதுவார்க்கு மறவாமல் நினைவில் வைத்து ஓதுவது எளிது. நம்மாழ்வாரை உடலாகவும், மற்ற ஆழ்வார்களை உடலின் உறுப்புகளாகவும் வைணவர்கள் கருதுவர். பக்தி உணர்வின் இருப்பிடமாகத் திருவாய்மொழி உள்ளது. வைணவ அறிஞர்கள் பலர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர். அந்த உரைகள் வியாக்கியானங்கள் எனப்படுகின்றன. இவை எழுத்து எண்ணிக் காக்கப்பட்டு வருகின்றன. மூவாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, பன்னீராயிரப்படி, இருபத்து நாலாயிரப்படி, முப்பதாறாயிரப்படி என்று எழுத்துகளின் எண்ணிக்கையே திருவாய்மொழி உரைநூல்களுக்குப் பெயராக அமைந்துள்ளது. வைணவர்கள் தம் வாழ்வின் இன்பத்திலும், துன்பத்திலும் மறவாமல் போற்றும் பாடல்கள் திருவாய்மொழிப் பாடல்கள் ஆகும். தென்கலை வைணவர்களுக்கு அவை மந்திரங்களை விட உயர்வாக உள்ளன.

நம்மாழ்வாரின் பாடல்களில் தத்துவ ஞானப் பாடல்கள் உள்ளன. காதல் துறைகள் அமையப்பட்ட பக்திப் பாடல்கள் உள்ளன. பழைய இலக்கியத் தொடர்கள் திருவாய்மொழியில் எடுத்தாளப்பட்டுள்ளன. நம்மாழ்வார் தம்மை நாயகியாக – காதலியாகக் கற்பனை செய்து கொண்டு நாரை முதலான பறவைகளைத் திருமாலிடம் தூது அனுப்புவதாகப் பாடும் பாடல்கள் நயம் மிக்கவை. உயிரினங்கள் சிறிதும் துயரின்றி வாழ ஒரே வழி இறைவனைத் தொழுவதே ஆகும் என்பது அவரது முடிவு.

தொழுமின் தூய மனத்தால் இறையும் நில்லா துயரங்களே

(2365)

என்றும்,

சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே (2095)

அற்றது பற்றெனின் உற்றது வீடு (2097)

என்றும் இறைவனை வழிபட வேண்டியதன் காரணத்தைக் கூறி மக்களை நல்வழிப்படுத்துவதைக் காண முடிகிறது.

பெரிய திருவந்தாதி

இது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நான்காவது ஆயிரத்தில் உள்ளது. இதில் மொத்தம் 87 பாடல்கள் உள்ளன. எல்லாப் பாடல்களும் அந்தாதி அமைப்பைக் கொண்டவை ஆகும். இந்நூல் திருமாலின் சிறப்புகளைப் பலவாறு புகழ்ந்து கூறுகிறது.

திருவாசிரியம்

நம்மாழ்வார் பாடிய திருவாசிரியம் ஏழு பாடல்களைக் கொண்டது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில், நான்காவது ஆயிரத்தில், 22வது பாடல் தொகுப்பாக இடம்பெற்றுள்ளது. நம்மாழ்வாரது இலட்சியம். ‘திருவேங்கடமலையில் உள்ள என் அப்பன் எம்பெருமான் புகழ் பாடுவது அல்லாமல் வேறு ஒருவரைப் புகழத் தனது கவிதைத் திறத்தைப் பயன்படுத்த மாட்டேன்’ என்பதாகும்.

திருமாலே கடவுளில் சிறந்தவர்.

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்

மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்

துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே

(2082)

என்று குறிப்பிடுகிறார்.

திருவிருத்தம்

நம்மாழ்வார் பாடியது. நூறு பாக்களைக் கொண்டது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில், நான்காவது ஆயிரத்தில் 19வது தொகை நூலாக அமைந்துள்ளது. நம்மாழ்வாரது காலத்தில் வறுமையில் உழலும் புலவர்கள் செல்வரைப் பாடிப் பரிசில் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். செல்வரைப் பொய்யாகப் பொருளுக்காகப் புகழ்ந்து பாடும் பொய்ம்மையை நம்மாழ்வார் வெறுத்தார். ஒரு பதிகம் முழுவதும் அவ்வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார். பாடல் பாடுவதன் நோக்கம் திருமாலைப் பாடுவதே. திருமாலை வழிபட்டால் சிறப்புப் பெறலாம் என்று அறிவுறுத்துகிறார்.

4.3.2 மதுரகவியாழ்வாரின் படைப்பு மதுரகவியாழ்வார் பாடியது கண்ணிநுண் சிறுத் தாம்பு என்ற ஒரு நூல் மட்டுமே. இந்நூலில் 11 பாடல்கள் உள்ளன. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதலாவது ஆயிரத்தில், ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பத்தாவது நூல் தொகுப்பாக உள்ளது. இப்பாடல்களில் மதுரகவியாழ்வார் திருமாலை புகழ்ந்து பாடாமல், தமது ஆசாரியரான நம்மாழ்வாரையே தெய்வமாகக் கருதி அவரைப் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். மதுரகவி ஆழ்வார் பாண்டி நாட்டில் திருக்கோளுரில் பிறந்தவர். காதுக்கும் மனத்துக்கும் இனிய பாடல்களைப் பாடியவர் என்பதால், மதுரகவி ஆழ்வார் என்றழைக்கப்படுகிறார். இவரது பதினொரு பாடல்களும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. அந்தணர் மரபினர் மதுரகவி ஆழ்வார். இவர் வேளாள குலத்தவராகிய நம்மாழ்வாரைப் புகழ்ந்து வழிபட்டு உயர்ந்தது, ‘இறைவனை அடையச் சாதி தடை இல்லை’ என்பதைப் புலப்படுத்துகிறது.

கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்

பண்ணிய பெருமாயன், என்னப்பனில்

நண்ணித் தென்குருகூர் நம்பி யென்றக்கால்

அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே (937)

(கண்ணிநுண் சிறுத்தாம்பு = கண்ணை விட மென்மையான சிறு கயிறு; அண்ணிக்கும் = இன்னிக்கும்)

எனவும்,

நாவினால் நவிற் றின்பம் எய்தினேன்

மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே

தேவுமற் றறியேன் குருகூர்நம்பி

பாவி னின்னிசை பாடித் திரிவனே

(நவிற்றி = கூறி; தேவு = இன்பம்)

எனவும் மதுரகவி ஆழ்வார் பாடிய பாசுரங்கள் அவரது பக்தியைப் புலப்படுத்தும்.

4.3.3 நாலாயிரத் திவ்வியப் பிரபந்த வெளிப்பாட்டு முறைகள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் மனப்பாடம் செய்வதற்கு, எளியவை; திருமாலின் மீது மனம் கசிந்து பாடுபவை; வழிபடுவோர் மனத்தைக் கொள்ளை கொள்பவை. ஆழ்வார்கள் வாழ்த்தி வழிபட்ட திருமாலின் தலங்கள், ‘திவ்விய தேசங்கள்’ என்றும், ‘திருப்பதிகள்’ என்றும் குறிப்பிடப்படும். அவை 108 என்பர். திருமால் கோவில் இருக்கும் ஊருக்குச் சென்று பாடல் இயற்றி வழிபடுவது, ‘மங்களா சாசனம் செய்தல்’என்று குறிக்கப்படும். இப்படி ஆழ்வார்கள் பாடி வழிபட்ட தலங்களில், பாற்கடல், பரமபதம் என்ற இரண்டு மட்டும் இவ்வுலகில் இல்லை. எஞ்சிய 106 வைணவத் தலங்களில் தமிழகத்தில் 96 தலங்கள் உள்ளன. பத்துத் தலங்கள் வடநாட்டில் உள்ளன. நம்மாழ்வாரைத் தெய்வமாகக் கொண்டவர் மதுரகவி ஆழ்வார். அவரைத் தவிர மீதி பதினொரு ஆழ்வார்களும் திருவரங்கத்தைப் போற்றிப் பாடி உள்ளனர். திருமாலைப் பாடித் துதித்தவர்கள் ஆழ்வார்கள். அப்பாசுரங்களை வழிபாட்டின்போது வாசித்து எளியோர் பயன் பெறும் நிலையை வைணவ இயக்கம் ஏற்படுத்தியது.

4.4 பல்லவரைப் பற்றிய படைப்புகள்

பல்லவர் காலத்து இலக்கிய நூல்கள் பற்றிய குறிப்புகள், அந்நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள் பாடல்கள் முதலியன யாப்பருங்கல விருத்தி உரையில் மிகுதியாக எடுத்தாளப்பட்டுள்ளன. முழு அளவில் ஒவ்வொன்றைப் பற்றியும், அறிய இயலாத நிலையில், இவையிவை இருந்தன என்று குறிப்பாக உணரவேனும் இவை உதவுகின்றன எனலாம்.

4.4.1 தனிப்பாடல்கள் ‘காடவர்கோன் கழற்சிங்கன்’ என்று பெரியபுராணத்திலும், ‘நந்தி, பல்லவர் கோளரி’ என்று நந்திக் கலம்பகத்திலும் சொல்லப்பட்ட மூன்றாம் நந்திவர்மனைப் பற்றி, ‘கச்சியார் கோ-சிங்கன்’ என்றும், ‘நந்தி’ என்றும், ‘கோன் நந்தி’ என்றும் புகழும் தனிப்பாடல்கள் ஐந்து யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளன.

நிலமகள் கேள்வனும் நேர் கழலினானும்

நலமிகு கச்சியார் கோ என்பவே

நலமிகு கச்சியார் கோ ஆயினானும்

சிலைமிகு தோள்சிங்கன் அவன் என்பவே

செருவிடை யானை அவன் என்பவே

என்று மன்னனின் சிறப்பைக் கூறுகிறது. அகப்பொருள் சுவை கனியும் இன்னொரு பாடல் இதோ:

செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்

சந்தனமென்று ஆரோ தடவினார் – பைந்தமிழை

ஆய்கின்ற கோல்நந்தி ஆகம் தழுவாமல்

வேகின்ற பாவியேன் மேல்

பாடல் ஒவ்வொன்றின் நயமும் முழுநூலின் நயத்துக்குச் சான்று பகர்கின்றன.

4.4.2 நந்திக் கலம்பகம் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிப் பாடப்பட்ட நூல் இது. பாடியவர் யார் என்று தெரியவில்லை. மன்னரைப் பற்றிப் பாடப்பட்ட கலம்பக நூல் இதுவேயாகும். பிற கலம்பகங்கள் இறைவனைப் பற்றி பாடப்பட்டவை. இந்நூலில் 144 பாடல்கள் உள்ளன. கலம்பக இலக்கிய வகையில் தோன்றிய முதல் நூல் இதுவே. பலவகை உறுப்பும், பலவகைப் பொருளும், பலவகைச் செய்யுளால் கலந்து பாடப்படும் இலக்கிய வகை ‘கலம்பகம்’ ஆகும். நந்திவர்மனது மாற்றாந்தாய் மக்கள் நால்வருள் புலமை மிக்கவனாகிய ‘காடவன்’ என்பவன், நந்திவர்ம பல்லவனைக் கொல்ல அறம் வைத்து இப்பாடலைப் பாடினான் என்றும், இதன் பாடல் ஒன்றைக் கேட்ட பல்லவன், முழுதும் கேட்க விரும்பி, முழுதும் கேட்டால் உடல் கருகி இறக்க நேரிடும் என்றறிந்தும் அரங்கேறச் செய்து கேட்டான் என்றும், இறுதிப் பாடலைப் படிக்கும் போது பந்தல் தீப்பிடித்து நந்தி இறந்தான் என்றும் கூறப்படுகிறது. ‘நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்’ என்று சோமேசர் முதுமொழி வெண்பாவும், ‘கள்ளாரும் செஞ்சொல் கலம்பகமே கொண்டு காலம் விட்ட தெள்ளாறை நந்தி’ என்ற தொண்டைமண்டலச் சதகப் பாடலும் கூறுகின்றன.

நாட்டுபுகழ் நந்திப் பாண! நீ எங்கையர்தம்

வீட்டிலிருந்து பாட விடிவளவும் கேட்டிருந்தோம்

பேய் என்றாள் அன்னை; பிறர் நரி என்றார்; தோழி

நாயென்றாள்; நீ என்றேன் நான்

என்று பரத்தையர் வீட்டுக்குச் சென்றிருந்த தலைவன் தூதாக அனுப்பிய பாணனைத் தலைவி விளித்துச் சொல்வதாக அமைந்த இப்பாடல் சுவை பருகுங்கள்! (அறம் அமைத்துப் பாடுதல் : யார்மீது பாடப்படுகிறதோ அவ்வரசன் அதைக்கேட்டதும் இறந்து போகும்படி, நச்சு எழுத்துகளை அமைத்துப் பாடுதல்.)

4.5 சமண இலக்கியங்கள்

சமணத் துறவியர் தனித்துத் துறவு நிலையில் கடுமையான நோன்பினராய், நீராடாமல், அழுக்குப் படிந்த மேனியராய் ஆடையின்றித் திரிந்து, இளமை நிலையாது, யாக்கை நிலையாது, செல்வம் நிலையாது, அழகு நிலையாது என்று வாழ்க்கை வெறுப்புச் சிந்தனைகளை அறக் கருத்துகளாய் போதித்தும், சமயத்தின் பெயரால் தற்கொலை செய்தும் வாழ்ந்தமை புறக்கணிக்கப்படவே, அறக்கருத்துகளை நேரே போதிக்காமல் கதைகளுடன் இணைத்துத் தந்து மக்களைக் கவரும் வண்ணம் கதை நூல்களைப் படைக்கலாயினர்.

4.5.1 சீவக சிந்தாமணி தமிழில் விருத்தப்பாவால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும். இதன் ஆசிரியர் திருத்தக்கதேவர். இது சமண சமய நூல் ஆகும். சமணர்கள் இன்றும் இந்நூலைப் பாராயண நூலாகப் பயில்கின்றனர். அழகிய நூல் என்பதால், ‘சிந்தாமணி’ எனப் பெயர் பெற்றது. காப்பியத் தலைவன் சீவகன். அவனை அவனது தாய் விசயை, ‘சிந்தாமணி’ என்று புகழ்கிறாள். அதனால், ‘சீவக சிந்தாமணி’ என்று பெயர் பெற்றது என்பர். 13 இலம்பகங்களைக் கொண்டது. 3145 செய்யுட்களைக் கொண்டது. நச்சினார்க்கினியர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். கம்பர் இந்நூலைப் பாராட்டுகிறார்.

காப்பியத் தலைவன் சீவகன், காந்தருவ தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை எனும் 8 பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறான். அவன் நாமகளையும், திரு வீற்றிருக்கும் பூமகளையும், வீரத்தால் மண்மகளையும், வீடுபேறு அடைந்ததால், ‘முக்தி மகளையும்’ மணந்தான் என்று கூறுவதால் இந்நூல் ‘மணநூல்’ எனவும் அழைக்கப்படுகிறது.

ஏமாங்கத நாட்டின் மன்னன் சச்சந்தன். அவனது மனைவி விசயை. அவள் மீது அளவற்ற காதல் கொண்டு அவன் ஆட்சியை மறந்தான். அமைச்சன் கட்டியங்காரன் ஆட்சியைப் கைப்பற்றினான். விசயையை மயில் வடிவ வான ஊர்தியில் ஏற்றி அனுப்பி விடுகிறான். கட்டியங்காரன் சச்சந்தனைக் கொன்று விடுகிறான். ஊர்தி இடுகாட்டில் இறங்கியது. விசயை சீவகனை ஈன்றெடுக்கிறாள். அவனைக் கந்துக்கடன் எனும் வணிகன் எடுத்து வளர்த்தான். சீவகன் வீரத்திலும், கல்வியிலும், இசையிலும் தேர்ச்சி பெறுகிறான். எண்மரை மணந்தான். கட்டியங்காரனைக் கொன்றான். தேசத்தைத் திரும்பப் பெறுகிறான். ஆட்சி செய்து இறுதியில் துறவு பூண்டான் என்று காப்பியம் துறவைக் கதையின் வழி வலியுறுத்துகிறது.

காப்பிய வெளிப்பாட்டு முறைகள்

தமிழில் பெரிய நூல்கள் எல்லாம் வெண்பாவில் இயற்றப்பட்டு வந்தன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இதில் புதுமையைப் புகுத்தியவர் திருத்தக்கதேவர் ஆவார். அவர் விருத்தம் என்ற செய்யுள் வகையைப் பயன்படுத்தி 3000க்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் காப்பியத்தையே பாடி முடித்தார். விருத்தம் என்பது நான்கு அடிகள் உடையது. முதல் அடியில் எத்தனை சீர்கள் வருமோ அத்தனை சீர்கள் மற்ற மூன்று அடிகளிலும் வரும். முதல் அடியில் அமைந்த சீர்களின் அமைப்பு அடுத்தடுத்த அடிகளிலும் அதே முறையில் வரும். அதனால் முதல் அடியின் ஓசையே மற்ற மூன்று அடிகளிலும் திரும்பத் திரும்ப ஒலிக்கும். ஒரு அடிக்கு இத்தனை சீர்கள் வரவேண்டும், இன்ன அளவான சீர்கள் வரவேண்டும் என்ற வரையறை இல்லை. அதனால் ஒரு விருத்தத்தின் அடிகள் நீண்டு ஒலிக்கலாம். மற்றொரு விருத்தத்தின் அடிகள் குறுகி ஒலிக்கலாம். சிறுசிறு சீர்கள் கொண்ட ஒரு விருத்தம் பரபரப்பாகவோ, துடிதுடிப்பாகவோ இருக்கலாம். நீண்ட சீர்கள் கொண்ட மற்றொரு விருத்தம் ஆழம் உடையதாகவோ, அமைதி உடையதாகவோ இருக்கலாம். ‘விருத்தம்’ என்பது இவ்வாறு பல நூற்றுக்கணக்கான ஓசை வேறுபாடுகளைப் படைத்துக் காட்ட இடம் தந்தது. வெண்பாவில் இதைச் செய்ய முடியாது. தமிழ்க் கவிதையில் ஏற்பட்ட இந்த புரட்சியால் உணர்ச்சிக்கு ஏற்றவாறு கவிதையின்நடையை வடிவமைக்கும் வடிவச் சிறப்பு வளர்ந்தது. இதற்கு வழிகாட்டியவர் என்ற அளவில் திருத்தக்கதேவர் சிறப்பான இடத்தைப் பெறுகிறார். பின்னர் வந்த கம்பர் இந்த காப்பியத்திலிருந்து ஒரு அகப்பை முகந்துகொண்டார் என்பர்.

ஒரே ஒரு சான்று இதோ: வயலில் நட்ட பயிர் தண்டு தடித்து இருப்பது பச்சைப்பாம்பு கருவுற்று இருப்பது போலக் காணப்படுகிறது. கதிர் வெளி வந்ததும் அன்னம் பிடிக்காததால் நற்குடி பிறவாதவர் செல்வம் போலத் தலை நிமிர்ந்து நிற்கின்றது. பால் கட்டி மணி பிடித்ததும் கல்வி அறிவுடையாரைப் போன்று தலை தாழ்ந்து நிற்கின்றது.

சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்

மெல்லவே கருவிருந்து ஈன்று மேல்அல்லார்

செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூல்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே

(சீவக சிந்தாமணி – 53)

சீவக சிந்தாமணி இலக்கியச் சுவை மிக்கது. எனவே சமணர்கள் மட்டுமன்றி அனைவரும் விரும்பிப் படித்தனர். சேக்கிழார் காலத்தில் சைவனாகிய சோழ அரசன் இக்காப்பியத்தை விரும்பிப் படித்தான் என்று ஒரு கதை கூறும். சங்க நூல்களுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ஒரு சைவர். இருந்தும் இவர் இச்சமண காப்பியத்திற்கு உரை எழுதியிருப்பது இதன் சிறப்பையே காட்டும்.

4.5.2 நரிவிருத்தம் திருத்தக்கதேவர் எழுதிய சிறுநூல். தான் ஒரு காப்பியம் செய்யப் போவதாக, இவர் கூறியதைக் கேட்ட அவருடைய ஆசிரியர் இவரது ஆற்றலைச் சோதிக்க விரும்பினார். அருகில் ஓடிய ஒரு நரியைக் காட்டி அதன் தொழிலை அடிப்படையாக வைத்து ஒரு சிறு நூல் எழுதச் சொன்னார். அதன்படி திருத்தக்கதேவர் எழுதிய நூலே நரிவித்தம் என்று ஒரு கதை வழங்குகிறது.

பழைய பஞ்ச தந்திரக் கதையில் வரும், ‘மித்ரலாபம்’ கதையே நரிவிருத்தத்தில் உள்ளது என்பர். கதை இதுதான். ஒரு வேடன் காட்டில் வேட்டையாடச் செல்கிறான். யானையைக் கொல்ல வில்லில் நாண் ஏற்றி அம்பு தொடுக்கிறான். அச்சமயத்தில் அவனைப் பாம்பு ஒன்று கடித்தது. உடனே வில்லால் பாம்பை அடித்துக் கொல்கிறான். வில்லில் இருந்து கிளம்பிய அம்பு யானையை அதே நேரத்தில் கொன்றது. சிறிது நேரத்தில் நஞ்சு தலைக்கு ஏறி வேடனும் இறக்கிறான். இப்படி வேடன், யானை, பாம்பு பிணமாகக் கிடந்த வழியில் நரி ஒன்று வருகிறது. பேராசை கொண்ட நரி யானை, பாம்பு, அம்பு ஏந்திய வேடன் ஆகியோரைக் கண்டு தனக்கு எத்தனையோ நாட்களுக்கு உணவு கிடைத்தது என்று மகிழ்கிறது. கணக்கிடுகிறது. முதல் நாள் உணவு என்று நாண் கயிற்றை நக்குகிறது. நாண் அறுந்து வில்லின் ஒரு முனை அதன் உடலில் பாய்கிறது. உடனே அது இறக்கிறது. இவ்வாறு உலகில் பேராசை தரும் துன்பத்தைக் கூறும்படி அமைந்துள்ளது. நரி விருத்தத்தில் இளமை நிலையாமை, உடல் அழகு நிலையாமை, செல்வம் நிலையாமை பற்றிச் சொல்லப்படுகிறது.

4.5.3 ஸ்ரீபுராணம் இது உரைநடை இலக்கியம். சமணநூல். குணபத்திராசாரியார் என்பவர் செய்தது. சமண சமயத்தைச் சேர்ந்த 63 பெரியோர்களது வரலாற்றைச் சொல்லும் நூல் உத்தர புராணம். ஸ்ரீபுராணம் அதை அடியொற்றி வந்த நூல். ‘புராணம் என்றால் பழமை’, ‘பழைய வரலாறு’ என்பது பொருள். ‘ஸ்ரீ’ என்பது திரு என்பதைக் குறிக்கும் அடைச்சொல். இது மணிப்பிரவாள நடையில் அமைந்த நூல். முத்தும் பவளமும் கலந்த மாலை போலத் தமிழும், வடமொழியும் கலந்த கலப்பு இலக்கிய நடை மணிப்பிரவாளம் ஆகும். உலகம், நாடு, நகரம், அரசு, ஈகை, பிறப்புகளின் வகை, வீடுபேறு அடையும் வழி, கொடைப்பயன் முதலியவை பற்றி இந்நூல் விளக்குகிறது. நாடு, நகரம், அரசு ஆகியவற்றை வர்ணித்து நூலைத் தொடங்கும் மரபைத் தமிழ் இலக்கியத்தில் தொடங்கி வைத்த சிறப்பு இந்நூலுக்கு உண்டு என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் கூறுவார்.

4.5.4 கிடைக்கப் பெறாத சமண நூல்கள் வளையாபதி, கலியாணன் கதை, எம்பாவை, புத்தமதக் கண்டன நூல் ஆகியவை பற்றிய செய்திகளே கிடைத்துள்ளன. அந்நூல்கள் கிடைக்கவில்லை.

வளையாபதி

இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இந்த நூல் கிடைக்கவில்லை. வைசிய புராணம் என்பது வேறு ஒரு நூல். அதில், ‘வைர வணிகன் வளையாபதி பெற்ற சருக்கம்’ என்று ஒரு பகுதி உண்டு. அதை அடிப்படையாக வைத்து ஒரு கதை வழங்குகிறது. புகார் நகரில் வைசிய மரபில் நாராயணன் எனும் வைர வியாபாரி இருந்தான். ஒன்பது கோடி பொன் படைத்தவன். எனவே, நவகோடி நாராயணன் எனப்பட்டான். சிவனை வழிபடுபவன். அவனுக்கு இரு மனைவியர். முதல் மனைவி வைசிய குலத்தவள். இரண்டாவது மனைவி வேறு சாதியினள். இதை ஊரார் எதிர்த்து சாதிக் கட்டுப்பாடு செய்தனர். எனவே நவகோடி நாராயணன் இரண்டாவது மனைவியை விலக்கி விடுகிறான். அச்சமயத்தில் அவள் கருவுற்றிருந்தாள். நாராயணனோ முதல் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். கணவன் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் தினமும் காளியை வணங்கி வந்தாள். கோயில் அருகிலேயே குடியிருந்தாள். அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் வளர்ந்து பள்ளிக்கூடம் செல்லும் பருவம் வந்தது. மாணவர்களிடையே சிறுசண்டை வருகிறது. ஒரு மாணவன், இவனைத் தந்தை பெயர் தெரியாதவன் என்று திட்டி விடுகிறான். தன் தாயிடம் வந்து அதுபற்றிக் கேட்டு உண்மையை அறிந்து கொள்கிறான். தந்தையிடம் சென்று தன்னை மகனாக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறான். முதலில் மறுத்த நவகோடி பின்னர் ஏற்றுக் கொள்கிறான். இரண்டாவது மனைவியையும் ஏற்றுக்கொண்டு இனிதாக வாழ்ந்தான் என்று கதை முடிகிறது. இதுதான் வளையாபதி என்பர். இதை ஏற்க இயலாது. ஏனெனில் வளையாபதி சமணக் காப்பியம். அருகனைத் தவிர வேறு தெய்வத்தைக் காப்பியத் தலைவன் வணங்க மாட்டான். ஆனால் இக்கதையில் தலைவன் சிவபக்தி உடையவன். அவனது மனைவியோ காளியை வணங்குபவள். மேலும் காப்பியத் தலைவனின் துறவே சமண காப்பியத்தின் முடிவாக அமையும். இதிலோ இளைய மனைவியுடன் கூடி இன்பமாக வாழ்ந்தான் என்று முடிகிறது. எனவே இது ‘வளையாபதிக் கதை’ என்று உறுதியாகக் கொள்ள முடியாது என்பர்.

புறத்திரட்டு என்ற நூலில் இருந்தும், உரையாசிரியர்களின் உரைகளில் இருந்தும் வளையாபதி பாடல்கள் 72 கிடைத்துள்ளன. அவை மிகச் சிறப்பானவை. குறள், குறுந்தொகை, திருமந்திரம் ஆகியவற்றின் கருத்துகள் அவற்றில் எடுத்தாளப்பட்டுள்ளன. தக்கயாகப் பரணி என்ற நூலின் உரை ஆசிரியர், ‘வளையாபதியை நினைத்தார் கவி அழகு வேண்டி’என்று போற்றுவார். அதிலிருந்து இதன் அழகு புலப்படும்.

தொழுவல் தொல்வினை நீங்குக’ என வரும் கடவுள் வாழ்த்துப் பாடல் சமணக் கடவுள் அருகனின் துதியாக உள்ளது. அடியார்க்கு நல்லார் எனும் உரையாசிரியர் காட்டும் மேற்கோள் பாடலில், ‘நிக்கந்த வேடத்து இருமுடி கணங்கள்’ என்ற தொடர் உள்ளது. நிக்கந்தன் என்றால் அருகன் என்பது பொருள். (நிக்கந்தன் – நிர்க்கந்தன் – பற்றுகளில் இருந்து விடுபட்டவன், அருகன்) இக்குறிப்பினால் இந்நூலாசிரியர் சமணர் எனலாம். அதற்குமேல் அறிந்து கொள்ள இயலவில்லை.

கலியாணன் கதை

இந்த நூலும் கிடைக்கவில்லை. யாப்பருங்கல விருத்தி உரையில் இறுதி எழுத்தும், சொல்லும் இடையிட்டுத் தொடுத்த செய்யுள் அந்தாதி என்பது இதை உதயணன் கதை, கலியாணன் கதை ஆகியவற்றில் கண்டு கொள்க என்றொரு குறிப்பு உள்ளது. அதே நூலில் (பக்கம் 262இல்), உதயணன் கதையும், கலியாணன் கதையும் என்று வந்துள்ளது. இதிலிருந்து கலியாணன் கதை என்றொரு நூல் இருந்ததாகத் தெரிகிறது. அவ்வளவே!

எம்பாவை

எம்பாவை என்றும், திருப்பாவை என்றும் அழைக்கப்படும் இந்நூல் சமணசமயஞ் சார்ந்த நூல். இதை இயற்றியவர் அவிரோதியார் என்பவர். ‘கோழியும் கூவின, கடல் சூழ்ந்த உலகில் அருகனை வணங்கி, குளிர்ந்த நீரில் குடைந்து விளையாட வாருங்கள்’ என்று ஒரு பெண் தனது தோழியரை அழைப்பது போன்ற ஒரு பாடல் யாப்பருங்கல விருத்தி உரையில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.

கோழியும் கூவின குக்கில் குரலியம்பும்

தாழியுள் நிலத் தடங்கணீர் போதுமினோ

ஆழிசூழ் வையத் தறிவன் அடியேத்தி

கூழை நனையக் குடைந்தும் குளிர்புனல்

ஊழியுள் மன்னுவோம் என்றேலோ ரெம்பாவாய்

(யாப்.விருத். உரை. மேற்கோள் பக்கம் – 345)

(குக்கில் = செம்போத்துப் பறவை; தாழி = கடல்; தடங்கணீர் = பெரிய கண்களையுடைவர்களே; கூழை = கூந்தல்)

என்ற இப்பாடலைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. மாணிக்க வாசகர் எழுதிய திருவெம்பாவை போலவும், ஆண்டாள் இயற்றிய திருப்பாவை போலவும், சமண சமயத்திற்குப் பாவைப் பாடலாக, எம்பாவை எனும் இந்நூல் இருந்தது என்று அறியலாம்.

புத்தமதக் கண்டனநூல்

இந்த நூலும் கிடைக்கவில்லை. எழுதியவர் யார் என்றும் தெரியவில்லை. புத்த சமயக் கருத்துகளை மறுக்கும்படியும், கண்டிக்கும்படியும் ஒரு எதிர்நூல் இருந்தது என்றும் அது சமண சமய நூல் என்றும் தேவநேயப் பாவாணர் கூறுவார்.

4.6 புத்த மத இலக்கியங்கள்

புத்த சமயத்து இலக்கியங்கள் இருந்தன. இந்நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்ட பல்லவ மன்னர்கள் சமய வெறுப்பினர் அல்லர். அவ்வகையில் புத்த சமய நூல்கள் உருவாயின. எனினும் போற்றுவாரும், பாதுகாப்பாரும் இல்லாமையால் புத்த சமயம் நலிவுற்றதைப் போலவே இந்நூல்களும் அழிந்துபட்டன.

4.6.1 விம்பசாரக் கதை விம்பசாரக் கதை புத்த சமய நூல் ஆகும். புத்தர் காலத்தவனும் அவரை ஆதரித்தவனுமாகிய விம்பசாரன் எனும் மன்னனின் வரலாற்றைக் கூறும் காவியம் இந்த நூல் என்பர். நீலகேசி உரையாசிரியர் இந்நூலிலிருந்து மேற்கோள் காட்டி, ‘இது விம்பசாரக் கதை’ என்று எழுதுவார். சிவஞானசித்தியார் உரையிலும் ஞானப்பிரகாசர் மேற்கோள் காட்டுவர். இது ஆசிரியப்பாவால் இயன்ற நூல் என்பர். இந்த நூல் கிடைக்கவில்லை. இதை எழுதியவரும் யார் என்று தெரியவில்லை.

விம்பசாரன் மகத நாட்டை (கி.மு.540 முதல் 590 வரை) ஆண்டான். சித்தார்த்தனைத் தனது அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான். அவரோ தான் துன்பத்தைப் போக்கும் வழி அறியச் செல்வதாகவும், தனது எண்ணம் நிறைவேறியதும் அரண்மனைக்கு வருகை தருவதாகவும் கூறிச் செல்லுகிறார். தான் சொன்னபடியே ஞானம் பெற்றுப் புத்தரானவுடன் தன் சீடர்களோடு விம்பசாரனது அரண்மனைக்கு வருகிறார். புத்தரை வணங்கி வரவேற்று உபதேசம் பெற்று விம்பசாரன் புத்த மதத்தைத் தழுவுகிறான். புத்தருக்கும், அவரது சீடர்களுக்கும் வேண்டிய உதவிகளைச் செய்கிறான். இதைப் பார்த்துப் புத்தரின் மைத்துனன் தேவதத்தன் பொறாமை கொள்கிறான். விம்பசாரனின் மகன் அஜாதசத்ருவைத் தன் பக்கத்தில் சேர்த்துக்கொண்டு மகனை விட்டே தந்தை விம்பசாரனைக் கொல்லச் செய்கிறான். புத்த சங்கத் தலைமையைத் தனக்கு வாங்கித்தர வேண்டுகிறான். அதற்கிசைந்த அஜாதசத்ருவும் தன் தந்தையைச் சிறையில் அடைக்கிறான். தேவதத்தன் சிலரை ஏவி, புத்தர் மீது அம்புகளை எய்யச் செய்கிறான். ஆனால் அவை அவரைத் துளைக்கவில்லை. அவர் மேல் பாறைகளை உருட்டச் செய்கிறான். காலில் அவருக்குச் சிறுகாயம் பட்டதே தவிர அவர் இறக்கவில்லை. மதம் பிடித்த யானைகளை ஏவிக் கொல்லச் செய்கிறான். ஆனால் யானைகளோ அவரைக் கொல்லாமல் பணிந்து வணங்கி விலகின. அஜாதசத்ரு தன் தாயைத் தவிர வேறு யாரும் சிறைக்கூடத்துக்குச் சென்று அரசரைப் பார்க்கக்கூடாது என்று உத்தரவிடுகிறான். அரசன் மனைவி பிறர் அறியாதபடி புடவை முன்றானைத் தலைப்பில் உணவு கொண்டு சென்று கணவனுக்குத் தந்து காப்பாற்றுகிறாள். இதை அறிந்த காவலர்கள் தடுத்து விடுகின்றனர். தன் தலைமுடியில் ஒளித்து வைத்துக் கொண்டு செல்கிறாள். அதையும் கண்டுபிடித்துத் தடுக்கின்றனர். தன் உடலில் நான்கு வகை இனிப்புகளைப் பூசிக்கொண்டு செல்கிறாள். அதுவும் கண்டுபிடிக்கப்படுகிறது. அரசியும் சிறையிலுள்ள அரசனைப் பார்க்கக் கூடாது என்று அஜாதசத்ரு கட்டளை இடுகிறான். முடிவில் விம்பசாரன் தன்மகன் அஜாதசத்ருவாலேயே கொல்லப்பட்டு உயிர் துறக்கிறான். இதற்கிடையில் அஜாதசத்ருவுக்கு ஒரு மகன் பிறக்கிறான். அவனை அன்புடன் வளர்க்கிறான். தன்னால் கொல்லப்பட்ட தன் தந்தையும் தன்னை அப்படித்தானே நேசித்திருக்க வேண்டும் என்று எண்ணி வருந்துகிறான். இதை அடிப்படையாகக் கொண்டு அமைந்த காப்பியமே விம்பசாரக் கதை என்பர். அது கிடைக்கவில்லை.

4.6.2 கிடைக்கப் பெறாத புத்தமத நூல்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றியதாகச் சில நூல்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. அவற்றுள் சித்தாந்தத் தொகை, திருப்பதிகம், மானாவூர்ப் பதிகம், புத்த நூல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

சித்தாந்தத் தொகை

புத்த சமயத்தினர் செய்த நூலுள் சித்தாந்தத் தொகையும் ஒன்று. அந்நூல் கிடைக்கவில்லை.

திருப்பதிகம்

திருப்பதிகம் என்ற நூல் இந்நூற்றாண்டில் தோன்றிய நூலே ஆகும். புத்த சமயம் சார்ந்தது. ஆனால் அது கிடைக்கவில்லை.

மானாவூர்ப் பதிகம்

மானாவூர் எது என்ற குறிப்பு இல்லை. பதிக அமைப்பில் இயற்றப்பட்ட புத்தசமயஞ் சார்ந்த நூல் இதுவாதல் வேண்டும். இந்த நூலும் கிடைக்கவில்லை.

புத்த நூல்

புத்த சமயக் கருத்துகளின் பொழிவாக இந்த நூல் இருந்திருக்க வேண்டும். இந்த நூலும் கிடைக்கவில்லை. சைவ வைணவ நூல்களைத் தொகுத்தது போல் புத்த சமய நூல்களைத் தொகுக்கவில்லை. புத்த சமயத்தினரே காலப்போக்கில் குறைந்து இல்லாது போனதைப் போலப் புத்த சமய இலக்கியங்களும் மறைந்து போயின போலும்.

4.7 தொகுப்புரை

பொதுமக்கள் உள்ளத்தைத் தம் பதிகங்களாலும், பாசுரங்களாலும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஈர்த்துப் பழைய சமயத்திற்குத் திருப்பினர். இம்முயற்சிக்குப் பல்லவ மன்னர்களது ஆதரவும், மக்களது ஆதரவும் கிடைத்தன. அறக்கருத்துகளை நேரடியாகச் சொல்ல முனையாது கதைகளுடே பொதிந்து தரும் வண்ணம் கதைசார் நூல்களை ஆக்குதல் மூலம் சமண, பௌத்தப் புலமை வல்லார் முயன்றனர். எல்லா வகை நூல்களும் தமிழுக்குக் கொடையாகவே அமைந்தன.

பாடம் - 5

ஒன்பதாம் நூற்றாண்டு- II

5.0 பாட முன்னுரை

ஆழ்ந்து சிந்தித்துத் தரவு (data) அடிப்படையில் எழுதப்படுவது இலக்கணம். ஆழ்ந்த அனுபவம், கற்பனை நயத்துடன் வெளிப்படுத்தப்படுவது இலக்கியம். மொழிக்கு, யாப்பிற்கு, அகவாழ்விற்கு என்று இலக்கண நூல்கள் அணி சேர்க்கின்றன. முறையாக அகரநிரலில் (அகர வரிசையில்) நிகண்டுகள் எழுதப்பட்டது இக்காலகட்டத்துப் புதுவரவு ஆகும்.

5.1 பின்புலங்கள்

ஒன்பதாம் நூற்றாண்டில் அரசர்களிடையே நடந்த போர்களால் குழப்பமான சூழலிருந்தது. சமஸ்கிருதம் செல்வாக்கு பெற்றிருந்தது. இருப்பினும், இலக்கண நூல்களும், இலக்கண உரைநூல்களும், நிகண்டுகளும் தோன்றுவதற்குரிய சூழலிருந்தது.

5.1.1 அரசியல் பின்புலம் மூன்றாம் நந்திவர்மனின் மகன் நிருபதுங்க வர்ம பல்லவன் (கி.பி.850-880) முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். இவன் காலத்துப் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணன் குடமூக்கில் (கும்பகோணத்தில்) பல்லவரைத் தோற்கடித்தான். “பாண்டியனிடம் முன்பு தோற்ற பல்லவர் படை அரசன் அருளால் (நிருபதுங்கன் படை செலுத்தியதால்) பாண்டியனையும், பிறரையும் அரிசிலாற்றங்கரையில் முறியடித்தது என்று பல்லவனது பாகூர்ப் பட்டயம் கூறுகிறது. கி.பி.882 இல் நிருபதுங்கவர்மன் இறந்தவுடன் அவனது மகன் அபராசிதவர்ம பல்லவன் (கி.பி.882-890) ஆளத் தொடங்கினான். இவனுடன் பல்லவ ஆட்சி முடிவுறுகிறது. திருப்புறம்பியம் (கும்பகோணத்துக்கு அருகில் உள்ள இடம்) என்ற இடத்தில் பல்லவன் அபராசிதவர்மனுக்கும், பாண்டியன் இரண்டாம் வரகுணனுக்கும் கி.பி.885இல் போர் நடந்தது. இதில் விசயாலய சோழன் (கி.பி.850-870) மகன் ஆதித்த சோழன் (கி.பி.870-907), கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் பல்லவருடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்தனர். பாண்டியன் தோற்றான். கங்க மன்னன் பிருதிவிபதி இறந்தான். அபராசிதவர்ம பல்லவன் வென்றான். எனினும் ஆதித்த சோழனுக்கே பெரும்பயன் கிடைத்தது. சோழநாடு முழுவதையும் அவன் மீட்டுக் கொண்டான். கி.பி.890இல் தொண்டை நாடு முழுவதையும் பல்லவரிடம் இருந்து ஆதித்த சோழன் மீட்டுக் கொண்டான். இவ்வாறு ஒன்பதாம் நூற்றாண்டின் இரண்டாவது காலக்கட்டம் பல்லவ அரசின் முடிவையும், சோழ அரசின் எழுச்சியையும் பதிவு செய்கிறது.

ஏறக்குறைய கி.பி.250இல் சோழரைத் துரத்திப் பல்லவர் தொண்டை நாட்டையும் பிறகு சோழ நாட்டையும் கைப்பற்றினர். பின்னர் கி.பி.890 வரையிலும், ஏறத்தாழ 650 வருட காலம் தமிழ்நாட்டை ஆண்டனர். அதன் பின்னர், சோழமரபில் ஆதித்த சோழனும், சோழ மரபினரும் பல்லவரை வென்று, இழந்த தம் பேரரசை மீட்டுக் கொண்டனர். காஞ்சியில் பல்லவர் ஆட்சி முடிந்ததும், பல்லவ அரச மரபினர் சோழப் பேரரசில் கூடலூர், சேந்தமங்கலம் முதலிய இடங்களில் சிற்றரசர்களாகவும் இருந்தனர். சிலர் தமது பழைய இடமாகிய பல்லாரிக் கோட்டமும், மைசூரின் ஒரு பகுதியும் சேர்ந்த நுளம்பபாடிக்கே சென்று குறுகிய நிலப்பகுதியை ஆண்டு வந்தனர். அவர்கள் தம்மைக் காஞ்சி பல்லவ மரபினர் என்றே சொல்லிக் கொண்டனர்.

5.1.2 சமயப் பின்புலம் நிருபதுங்கவர்மன் காலத்தில் பல திருப்பணிகள் செய்யப்பட்டன. பல்லவ அரசியார் ஒருவர் திருக்கடைமுடி மகாதேவரது கோவிலுக்குப் பொன் அளித்ததாகத் திருச்சன்னம்பூண்டிக் கல்வெட்டு கூறுகிறது. நிருபதுங்க வர்மனின் மனைவி பிருதிவி மாணிக்கம் உக்கலில் உள்ள பெருமாள் கோவிலைக் கட்டினாள்.

புதுக்கோட்டையில் உள்ள பழியிலி ஈச்சுரம் என்ற கோவில் நிருபதுங்க வர்மன் காலத்தில் குடையப்பட்டது என்பது அக்கோவில் கல்வெட்டினால் அறியப்படுகிறது.

அபராசிதவர்மன் ஆட்சியில் (கி.பி.890இல்) திருத்தணிகைக் கோவில் கட்டப்பட்டது. இதில் அவனது 18ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அக்கோவில் சுவர்களில் உள்ள நான்கு புரைகளில் சிவன், பிரமன், கொற்றவை (துர்க்கை), திருமால் ஆகியவரது சிலைகள் உள்ளன. இந்த கோவில் கல்வெட்டில் காணப்படும் வெண்பா அபராசிதவர்மன் பாடியது என்பர். அதுபற்றி இப்பாடத்தின் அடுத்த பகுதியில் காணலாம். அபராசிதவர்மனின் மனைவி மாதேவி அடிகள் திருவொற்றியூரில் உள்ள சிவன் கோவிலில் விளக்குகள் வைக்க 31 கழஞ்சு பொன் கொடுத்தாள். (கழஞ்சு-பொன் அளக்கும் அளவீட்டுக் கருவி) திருவொற்றியூரிலே உள்ள அபராசிதவர்மனது 8ஆம் ஆண்டுக் கல்வெட்டு, அக்கோவிலுக்கு அரிசி, நெய், வாழைப்பழம், சர்க்கரை, காய்கறிகள், பாக்கு, வெற்றிலை, இளநீர், சந்தனம், கற்பூரம் என்பன வாங்க ஒருவன் 50 கழஞ்சு பொன் தந்த செய்தியைக் கூறுகிறது. இங்ஙனம் கோவில் திருப்பணிகள் பல்லவ மன்னராலும், மக்களாலும் குறைவின்றிச் செய்யப்பட்டன. பழந்தமிழர்க் காலத்துப் பாடல் பெற்ற கோவில்களுக்கும், பல்லவமன்னர்கள் புதிதாகக் கட்டிய கோவில்களுக்கும் இக்காலக்கட்டத்தில் செய்யப்பட்ட திருப்பணிகள் பலவாகும்.

நாயன்மார், ஆழ்வார்தம் பாடல் பெற்ற தலங்களுக்கு அக்காலத்தில் இருந்த மதிப்பினை நன்கறியலாம். மக்களின் சமயப் பற்றும் தெரிய வருகிறது.

5.1.3 சமூகப் பின்புலம் பல்லவர் காலத்தில் நான்கு சாதிகளின் அடிப்படையில் தமிழகச் சமுதாயம் அமைந்திருந்தது. பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்ற பகுப்பு செவ்வனே இருந்து வந்தாக முதலாம் மகேந்திர வர்மனின் கூரம் பட்டயம் தெரிவிக்கிறது. கல்வியில் நாட்டம் உடையவர் களாகவும், மன்னர்களின் பெரும் மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர்களாகவும், அரசு அலுவலர்களாகவும் பிராமணர்கள் பணியாற்றினர். பக்தி இயக்கம், ‘கடவுள் முன் பக்தர்கள் சமம்’ என்ற கருத்தை நிலைப்படுத்த முயன்றது. வேட்டுவகுலத்துக் கண்ணப்பநாயனார், திருப்பாணாழ்வார் போன்றோர் எளிய சாதியினர் ஆவார்.

சமூக மாற்றம்

பல்லவ மன்னர்கள் எல்லோரும் ஒரே சமயத்தினர் என்பதற்கு இல்லை. மகேந்திரவர்ம பல்லவன் சமண, பௌத்த சமயத்தைப் பேணி வளர்த்தான். பின்னர் அப்பரால் சைவ சமயத்தைப் பின்பற்றினான். சிம்மவிஷ்ணு, நரசிம்மவர்மன் வைணவ சமயத்தினர். பரமேசுவரவர்மன், நந்திவர்மன் சைவர்கள், திருமங்கை ஆழ்வாரை ஆதரித்த இரண்டாம் நந்திவர்மன் வைணவன். வைகுந்தப் பெருமாள் கோவிலை இவன் கட்டினான். சிம்மவர்மன் சிறந்த சைவன் ஆவான்.

பாசுபாதர், காபாலிகர், காளாமுகர் ஆகிய சைவ சமயப் பிரிவினர் இருந்தனர். திருநீறு அணிந்து, சிவனே முழு முதல் கடவுள் என்பர் பாசுபதர். காபாலிகர் பைரவரை வணங்கினர். மண்டை ஓடுகளை மாலைகளாக அணிந்து, பெண்களை ஆதிபராசக்தி வடிவமாகக் கண்டு வணங்கினர். இறைவனைப் பாடி, ஆடி, மந்திரம் செபித்து, நரபலி இட்டு காளாமுகர் வணங்கினர். எல்லாச் சமயத்தவரும் வாழ்ந்தனர்.

பல்லவர் வடவர் ஆதலின் அவர்தம் பட்டயங்கள் வடமொழியிலேயே எழுதப்பட்டன. முதலாம் பரமேச்சுரவர்மனது கூரம் பட்டயம் கூறும் பெருவளநல்லூர்ப் போர் வர்ணனை சிறப்பானது. இரண்டாம் நந்திவர்மன் வெளியிட்ட காசக்குடிப் பட்டயம், தண்டன் தோட்டப் பட்டயம், மூன்றாம் நந்திவர்மனது வேலூர் பாளையப் பட்டயம் ஆகியவற்றில் வடமொழி நடை சிறப்பானது. இராசசிம்மன் காலத்துக் கயிலாசநாதர் கோயில் வடமொழிக் கல்வெட்டுகள் சுருக்கமும், தெளிவும் உடையன. முதலாம் பரமேச்சுரனுடைய மகாபலிபுரக் கல்வெட்டுகள் சிலேடைப் பொருள் கொண்ட சொல் தொடர்களைக் கொண்டவை.

லோக விபாகம், கிராதார்ச்சுனியம், அவந்தி சுந்தரி கதை, மத்த விலாசப் பிரகசனம், காவியாதர்சம் போன்ற வடமொழி நூல்கள் பல்லவர் காலத்தில் தோன்றியவை.

பிற்காலப் பல்லவர் காலத்தில்தான் தமிழ் மொழியில் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் வந்தன. அவற்றில் உள்ள அழகிய தமிழ்ப் பெயர்கள், தொடர்கள், வருணனை முதலியன பண்பட்ட தமிழ்ப் புலவர்களால் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் மக்களை ஆண்டு, தமிழராக மாறிய பல்லவ வேந்தர் தமிழ் அறிவுடையவராக இருந்தனர். தமிழ்மொழியை வளர்த்ததுடன், தமிழ்ப்புலவர்களையும் ஆதரித்தனர். தேவாரத் தமிழ்ப் பதிகங்களும், திவ்வியப் பிரபந்தத் தமிழ்ப் பாசுரங்களும் தமிழ் நயமிக்கன. எனினும் ஒவ்வோர் அரசன் அவையிலும் தமிழ்ப் புலவர் (பட்டயம் எழுதவும் கல்வெட்டில் பாட்டு எழுதவும் பிற சிறப்புடைய அரசியல் ஓலைகள் தீட்டவும்) இருந்திருத்தல் வேண்டும் என்பதை சான்றுகள் மூலம் உய்த்து உணரலாம்.

5.1.4 மொழிப் பின்னணி பல்லவர் காலத்தில் சமஸ்கிருத மொழி சிறப்பிடம் பெற்றிருந்தது. மன்னர்தம் அரசவை மொழியாகவும் சமஸ்கிருத மொழி இருந்தது. சமஸ்கிருத மொழிக் கல்லூரிகளுக்கு மன்னர்கள் ஆதரவு தந்தனர். காஞ்சியிலிருந்த கடிகை எனும் கல்லூரியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்து பயின்றனர். சிறந்த அறிஞர்கள் பலர் அதில் பணி புரிந்தனர். பாகூரில் வடமொழிக் கல்லூரி ஒன்று இருந்தது.

துறவியரின் இருப்பிடங்கள் மடங்கள் ஆகும். அவை கற்றறிந்த அறிஞர்தம் உறைவிடங்கள் ஆகும். அன்னதானம் வழங்கும் இடமாகவும், பயணிகள், வழிப்போக்கர்கள் தங்கும் விருந்தினர் மனைகள் ஆகவும், பொதுவாக ஏழை, எளியவர்களின் இருப்பிடங்களாகவும் அவை விளங்கின. இம்மடங்கள் கல்லூரிகளாகவும் இருந்தன. காஞ்சியில் பல பௌத்த மடங்கள் இருந்தன. சித்தன்னவாசல், தேனிமலை, நார்த்தாமலை ஆகியவற்றில் சமண மடங்கள் இருந்தன.

அப்பர், சம்பந்தர் காலத்தில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 20 சைவ மடங்கள் இருந்தன என்பதையும், அப்பூதி அடிகள், குங்குலியக் கல்யர், முருக நாயனார், சம்பந்தர், அப்பர் முதலியோர் மடங்களை ஏற்படுத்தினர் என்பதையும் பெரியபுராணம் கூறுகிறது. நந்திவர்மன் காலத்துப் பட்டயத்தில், கச்சி மேற்றளியைச் சார்ந்த மடம் கூறப்பட்டுள்ளது.

வடமொழிக் கல்லூரிகளில் வேதங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. மடங்கள் கற்பித்த பாடங்களில், இலக்கணம், சித்தாந்தம், அறநூல்கள், புராணங்கள், செய்யுள், நாடகம், தருக்கம், அந்தந்தச் சமயத்துக்குரிய இலக்கியங்கள் முதலியவை பயிற்றுவிக்கப்பட்டன. உண்டி, உறையுள் தந்து கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.

5.1.5 பாடுபொருள் மாற்றம் பல்லவம் என்பது தனிநாடு. தமிழ் வழங்காத நாடு என்று அகத்தியனார் பாடல் குறிப்பிடுகிறது. வடமொழி வழக்குப் பற்றி விளக்கக் கூடிய நிகண்டுகளும், புதுப்புது பாடல் வகைகளை விளக்க வந்த இலக்கண நூல்களும் தோன்றலாயின. ஆழ்வார், நாயன்மார்களின் பாடல்களில் பலவகைச் சொல் அணிகள் இடம்பெற்றுள்ளன. திருஞானசம்பந்தர் காலம் தொடங்கிச் சொல் அலங்காரச் செய்யுட்கள் வளரத் தொடங்கின. இவற்றுக்கு இலக்கணங்களும், விளக்கங்களும் எழுதும் அணி இலக்கண நூல்களும் வளர்ந்தன. பல இலக்கண நூல்கள் எழுந்தன. ‘பாட்டியல்’ என்பது பாடலின் இயல்பை விளக்குவதற்காக எழுந்த இலக்கண நூல் வகை ஆகும்.

இலக்கணத் துறையில் பெரும் கிளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட்டன. பலதுறை அறிஞர்களான இலக்கணப் புலவர்களைத் தம் மாணவர்களாகக் கொண்ட ஒரு பேராசிரியர் ‘அகத்தியர்’ என்ற பெயருடன் வாழ்ந்தார். இவர், ‘பாட்டியல்’ முதலான பலதுறை இலக்கண நூல் செய்தார். இவர் மாணாக்கர் பலர். தொல்காப்பியர் முதலான பண்டைப் பெயர்களையே அவர்கள் பூண்டிருந்தனர். இத்தொல்காப்பியரே ஒரு பாட்டியல் செய்தார். இத்தொல்காப்பியரும் பிறரும் சேர்ந்த பன்னிருவர், பன்னிரு படலம் என்ற புறப்பொருள் இலக்கணநூல் பாடினர். அணி இயல் என்றொரு நூல் முதல் முதல் தோன்றியது. நிகண்டு நூல் தோன்றியது. இறையனார் களவியல் எனும் அகப்பொருள் நூலும் அதன் உரையும் தோன்றின. அவிநயம், இந்திரகாளியம் (சிறப்பான இசைக்கு இலக்கணம் கூறும் தமிழ்நூல்) எனும் இலக்கண நூல்கள் தோன்றின. இக்காலத்தில்தான் சொல் பற்றிப் பரிசீலிக்கும், நிகண்டு எனும் புதுப்பிரிவு தோன்றியது. பின்னாளில் அது பெரிதும் வளர்ந்தது.

ஒன்பதாம் நூற்றாண்டில் அரசர்களிடையே நடந்த போர்களால் குழப்பமான சூழலிருந்தது. சமஸ்கிருதம் செல்வாக்கு பெற்றிருந்தது. இருப்பினும், இலக்கண நூல்களும், இலக்கண உரைநூல்களும், நிகண்டுகளும் தோன்றுவதற்குரிய சூழலிருந்தது.

5.1.1 அரசியல் பின்புலம் மூன்றாம் நந்திவர்மனின் மகன் நிருபதுங்க வர்ம பல்லவன் (கி.பி.850-880) முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். இவன் காலத்துப் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணன் குடமூக்கில் (கும்பகோணத்தில்) பல்லவரைத் தோற்கடித்தான். “பாண்டியனிடம் முன்பு தோற்ற பல்லவர் படை அரசன் அருளால் (நிருபதுங்கன் படை செலுத்தியதால்) பாண்டியனையும், பிறரையும் அரிசிலாற்றங்கரையில் முறியடித்தது என்று பல்லவனது பாகூர்ப் பட்டயம் கூறுகிறது. கி.பி.882 இல் நிருபதுங்கவர்மன் இறந்தவுடன் அவனது மகன் அபராசிதவர்ம பல்லவன் (கி.பி.882-890) ஆளத் தொடங்கினான். இவனுடன் பல்லவ ஆட்சி முடிவுறுகிறது. திருப்புறம்பியம் (கும்பகோணத்துக்கு அருகில் உள்ள இடம்) என்ற இடத்தில் பல்லவன் அபராசிதவர்மனுக்கும், பாண்டியன் இரண்டாம் வரகுணனுக்கும் கி.பி.885இல் போர் நடந்தது. இதில் விசயாலய சோழன் (கி.பி.850-870) மகன் ஆதித்த சோழன் (கி.பி.870-907), கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் பல்லவருடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்தனர். பாண்டியன் தோற்றான். கங்க மன்னன் பிருதிவிபதி இறந்தான். அபராசிதவர்ம பல்லவன் வென்றான். எனினும் ஆதித்த சோழனுக்கே பெரும்பயன் கிடைத்தது. சோழநாடு முழுவதையும் அவன் மீட்டுக் கொண்டான். கி.பி.890இல் தொண்டை நாடு முழுவதையும் பல்லவரிடம் இருந்து ஆதித்த சோழன் மீட்டுக் கொண்டான். இவ்வாறு ஒன்பதாம் நூற்றாண்டின் இரண்டாவது காலக்கட்டம் பல்லவ அரசின் முடிவையும், சோழ அரசின் எழுச்சியையும் பதிவு செய்கிறது.

ஏறக்குறைய கி.பி.250இல் சோழரைத் துரத்திப் பல்லவர் தொண்டை நாட்டையும் பிறகு சோழ நாட்டையும் கைப்பற்றினர். பின்னர் கி.பி.890 வரையிலும், ஏறத்தாழ 650 வருட காலம் தமிழ்நாட்டை ஆண்டனர். அதன் பின்னர், சோழமரபில் ஆதித்த சோழனும், சோழ மரபினரும் பல்லவரை வென்று, இழந்த தம் பேரரசை மீட்டுக் கொண்டனர். காஞ்சியில் பல்லவர் ஆட்சி முடிந்ததும், பல்லவ அரச மரபினர் சோழப் பேரரசில் கூடலூர், சேந்தமங்கலம் முதலிய இடங்களில் சிற்றரசர்களாகவும் இருந்தனர். சிலர் தமது பழைய இடமாகிய பல்லாரிக் கோட்டமும், மைசூரின் ஒரு பகுதியும் சேர்ந்த நுளம்பபாடிக்கே சென்று குறுகிய நிலப்பகுதியை ஆண்டு வந்தனர். அவர்கள் தம்மைக் காஞ்சி பல்லவ மரபினர் என்றே சொல்லிக் கொண்டனர்.

5.1.2 சமயப் பின்புலம் நிருபதுங்கவர்மன் காலத்தில் பல திருப்பணிகள் செய்யப்பட்டன. பல்லவ அரசியார் ஒருவர் திருக்கடைமுடி மகாதேவரது கோவிலுக்குப் பொன் அளித்ததாகத் திருச்சன்னம்பூண்டிக் கல்வெட்டு கூறுகிறது. நிருபதுங்க வர்மனின் மனைவி பிருதிவி மாணிக்கம் உக்கலில் உள்ள பெருமாள் கோவிலைக் கட்டினாள்.

புதுக்கோட்டையில் உள்ள பழியிலி ஈச்சுரம் என்ற கோவில் நிருபதுங்க வர்மன் காலத்தில் குடையப்பட்டது என்பது அக்கோவில் கல்வெட்டினால் அறியப்படுகிறது.

அபராசிதவர்மன் ஆட்சியில் (கி.பி.890இல்) திருத்தணிகைக் கோவில் கட்டப்பட்டது. இதில் அவனது 18ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அக்கோவில் சுவர்களில் உள்ள நான்கு புரைகளில் சிவன், பிரமன், கொற்றவை (துர்க்கை), திருமால் ஆகியவரது சிலைகள் உள்ளன. இந்த கோவில் கல்வெட்டில் காணப்படும் வெண்பா அபராசிதவர்மன் பாடியது என்பர். அதுபற்றி இப்பாடத்தின் அடுத்த பகுதியில் காணலாம். அபராசிதவர்மனின் மனைவி மாதேவி அடிகள் திருவொற்றியூரில் உள்ள சிவன் கோவிலில் விளக்குகள் வைக்க 31 கழஞ்சு பொன் கொடுத்தாள். (கழஞ்சு-பொன் அளக்கும் அளவீட்டுக் கருவி) திருவொற்றியூரிலே உள்ள அபராசிதவர்மனது 8ஆம் ஆண்டுக் கல்வெட்டு, அக்கோவிலுக்கு அரிசி, நெய், வாழைப்பழம், சர்க்கரை, காய்கறிகள், பாக்கு, வெற்றிலை, இளநீர், சந்தனம், கற்பூரம் என்பன வாங்க ஒருவன் 50 கழஞ்சு பொன் தந்த செய்தியைக் கூறுகிறது. இங்ஙனம் கோவில் திருப்பணிகள் பல்லவ மன்னராலும், மக்களாலும் குறைவின்றிச் செய்யப்பட்டன. பழந்தமிழர்க் காலத்துப் பாடல் பெற்ற கோவில்களுக்கும், பல்லவமன்னர்கள் புதிதாகக் கட்டிய கோவில்களுக்கும் இக்காலக்கட்டத்தில் செய்யப்பட்ட திருப்பணிகள் பலவாகும்.

நாயன்மார், ஆழ்வார்தம் பாடல் பெற்ற தலங்களுக்கு அக்காலத்தில் இருந்த மதிப்பினை நன்கறியலாம். மக்களின் சமயப் பற்றும் தெரிய வருகிறது.

5.1.3 சமூகப் பின்புலம் பல்லவர் காலத்தில் நான்கு சாதிகளின் அடிப்படையில் தமிழகச் சமுதாயம் அமைந்திருந்தது. பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்ற பகுப்பு செவ்வனே இருந்து வந்தாக முதலாம் மகேந்திர வர்மனின் கூரம் பட்டயம் தெரிவிக்கிறது. கல்வியில் நாட்டம் உடையவர் களாகவும், மன்னர்களின் பெரும் மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர்களாகவும், அரசு அலுவலர்களாகவும் பிராமணர்கள் பணியாற்றினர். பக்தி இயக்கம், ‘கடவுள் முன் பக்தர்கள் சமம்’ என்ற கருத்தை நிலைப்படுத்த முயன்றது. வேட்டுவகுலத்துக் கண்ணப்பநாயனார், திருப்பாணாழ்வார் போன்றோர் எளிய சாதியினர் ஆவார்.

சமூக மாற்றம்

பல்லவ மன்னர்கள் எல்லோரும் ஒரே சமயத்தினர் என்பதற்கு இல்லை. மகேந்திரவர்ம பல்லவன் சமண, பௌத்த சமயத்தைப் பேணி வளர்த்தான். பின்னர் அப்பரால் சைவ சமயத்தைப் பின்பற்றினான். சிம்மவிஷ்ணு, நரசிம்மவர்மன் வைணவ சமயத்தினர். பரமேசுவரவர்மன், நந்திவர்மன் சைவர்கள், திருமங்கை ஆழ்வாரை ஆதரித்த இரண்டாம் நந்திவர்மன் வைணவன். வைகுந்தப் பெருமாள் கோவிலை இவன் கட்டினான். சிம்மவர்மன் சிறந்த சைவன் ஆவான்.

பாசுபாதர், காபாலிகர், காளாமுகர் ஆகிய சைவ சமயப் பிரிவினர் இருந்தனர். திருநீறு அணிந்து, சிவனே முழு முதல் கடவுள் என்பர் பாசுபதர். காபாலிகர் பைரவரை வணங்கினர். மண்டை ஓடுகளை மாலைகளாக அணிந்து, பெண்களை ஆதிபராசக்தி வடிவமாகக் கண்டு வணங்கினர். இறைவனைப் பாடி, ஆடி, மந்திரம் செபித்து, நரபலி இட்டு காளாமுகர் வணங்கினர். எல்லாச் சமயத்தவரும் வாழ்ந்தனர்.

பல்லவர் வடவர் ஆதலின் அவர்தம் பட்டயங்கள் வடமொழியிலேயே எழுதப்பட்டன. முதலாம் பரமேச்சுரவர்மனது கூரம் பட்டயம் கூறும் பெருவளநல்லூர்ப் போர் வர்ணனை சிறப்பானது. இரண்டாம் நந்திவர்மன் வெளியிட்ட காசக்குடிப் பட்டயம், தண்டன் தோட்டப் பட்டயம், மூன்றாம் நந்திவர்மனது வேலூர் பாளையப் பட்டயம் ஆகியவற்றில் வடமொழி நடை சிறப்பானது. இராசசிம்மன் காலத்துக் கயிலாசநாதர் கோயில் வடமொழிக் கல்வெட்டுகள் சுருக்கமும், தெளிவும் உடையன. முதலாம் பரமேச்சுரனுடைய மகாபலிபுரக் கல்வெட்டுகள் சிலேடைப் பொருள் கொண்ட சொல் தொடர்களைக் கொண்டவை.

லோக விபாகம், கிராதார்ச்சுனியம், அவந்தி சுந்தரி கதை, மத்த விலாசப் பிரகசனம், காவியாதர்சம் போன்ற வடமொழி நூல்கள் பல்லவர் காலத்தில் தோன்றியவை.

பிற்காலப் பல்லவர் காலத்தில்தான் தமிழ் மொழியில் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் வந்தன. அவற்றில் உள்ள அழகிய தமிழ்ப் பெயர்கள், தொடர்கள், வருணனை முதலியன பண்பட்ட தமிழ்ப் புலவர்களால் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் மக்களை ஆண்டு, தமிழராக மாறிய பல்லவ வேந்தர் தமிழ் அறிவுடையவராக இருந்தனர். தமிழ்மொழியை வளர்த்ததுடன், தமிழ்ப்புலவர்களையும் ஆதரித்தனர். தேவாரத் தமிழ்ப் பதிகங்களும், திவ்வியப் பிரபந்தத் தமிழ்ப் பாசுரங்களும் தமிழ் நயமிக்கன. எனினும் ஒவ்வோர் அரசன் அவையிலும் தமிழ்ப் புலவர் (பட்டயம் எழுதவும் கல்வெட்டில் பாட்டு எழுதவும் பிற சிறப்புடைய அரசியல் ஓலைகள் தீட்டவும்) இருந்திருத்தல் வேண்டும் என்பதை சான்றுகள் மூலம் உய்த்து உணரலாம்.

5.1.4 மொழிப் பின்னணி பல்லவர் காலத்தில் சமஸ்கிருத மொழி சிறப்பிடம் பெற்றிருந்தது. மன்னர்தம் அரசவை மொழியாகவும் சமஸ்கிருத மொழி இருந்தது. சமஸ்கிருத மொழிக் கல்லூரிகளுக்கு மன்னர்கள் ஆதரவு தந்தனர். காஞ்சியிலிருந்த கடிகை எனும் கல்லூரியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்து பயின்றனர். சிறந்த அறிஞர்கள் பலர் அதில் பணி புரிந்தனர். பாகூரில் வடமொழிக் கல்லூரி ஒன்று இருந்தது.

துறவியரின் இருப்பிடங்கள் மடங்கள் ஆகும். அவை கற்றறிந்த அறிஞர்தம் உறைவிடங்கள் ஆகும். அன்னதானம் வழங்கும் இடமாகவும், பயணிகள், வழிப்போக்கர்கள் தங்கும் விருந்தினர் மனைகள் ஆகவும், பொதுவாக ஏழை, எளியவர்களின் இருப்பிடங்களாகவும் அவை விளங்கின. இம்மடங்கள் கல்லூரிகளாகவும் இருந்தன. காஞ்சியில் பல பௌத்த மடங்கள் இருந்தன. சித்தன்னவாசல், தேனிமலை, நார்த்தாமலை ஆகியவற்றில் சமண மடங்கள் இருந்தன.

அப்பர், சம்பந்தர் காலத்தில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 20 சைவ மடங்கள் இருந்தன என்பதையும், அப்பூதி அடிகள், குங்குலியக் கல்யர், முருக நாயனார், சம்பந்தர், அப்பர் முதலியோர் மடங்களை ஏற்படுத்தினர் என்பதையும் பெரியபுராணம் கூறுகிறது. நந்திவர்மன் காலத்துப் பட்டயத்தில், கச்சி மேற்றளியைச் சார்ந்த மடம் கூறப்பட்டுள்ளது.

வடமொழிக் கல்லூரிகளில் வேதங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. மடங்கள் கற்பித்த பாடங்களில், இலக்கணம், சித்தாந்தம், அறநூல்கள், புராணங்கள், செய்யுள், நாடகம், தருக்கம், அந்தந்தச் சமயத்துக்குரிய இலக்கியங்கள் முதலியவை பயிற்றுவிக்கப்பட்டன. உண்டி, உறையுள் தந்து கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.

5.1.5 பாடுபொருள் மாற்றம் பல்லவம் என்பது தனிநாடு. தமிழ் வழங்காத நாடு என்று அகத்தியனார் பாடல் குறிப்பிடுகிறது. வடமொழி வழக்குப் பற்றி விளக்கக் கூடிய நிகண்டுகளும், புதுப்புது பாடல் வகைகளை விளக்க வந்த இலக்கண நூல்களும் தோன்றலாயின. ஆழ்வார், நாயன்மார்களின் பாடல்களில் பலவகைச் சொல் அணிகள் இடம்பெற்றுள்ளன. திருஞானசம்பந்தர் காலம் தொடங்கிச் சொல் அலங்காரச் செய்யுட்கள் வளரத் தொடங்கின. இவற்றுக்கு இலக்கணங்களும், விளக்கங்களும் எழுதும் அணி இலக்கண நூல்களும் வளர்ந்தன. பல இலக்கண நூல்கள் எழுந்தன. ‘பாட்டியல்’ என்பது பாடலின் இயல்பை விளக்குவதற்காக எழுந்த இலக்கண நூல் வகை ஆகும்.

இலக்கணத் துறையில் பெரும் கிளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட்டன. பலதுறை அறிஞர்களான இலக்கணப் புலவர்களைத் தம் மாணவர்களாகக் கொண்ட ஒரு பேராசிரியர் ‘அகத்தியர்’ என்ற பெயருடன் வாழ்ந்தார். இவர், ‘பாட்டியல்’ முதலான பலதுறை இலக்கண நூல் செய்தார். இவர் மாணாக்கர் பலர். தொல்காப்பியர் முதலான பண்டைப் பெயர்களையே அவர்கள் பூண்டிருந்தனர். இத்தொல்காப்பியரே ஒரு பாட்டியல் செய்தார். இத்தொல்காப்பியரும் பிறரும் சேர்ந்த பன்னிருவர், பன்னிரு படலம் என்ற புறப்பொருள் இலக்கணநூல் பாடினர். அணி இயல் என்றொரு நூல் முதல் முதல் தோன்றியது. நிகண்டு நூல் தோன்றியது. இறையனார் களவியல் எனும் அகப்பொருள் நூலும் அதன் உரையும் தோன்றின. அவிநயம், இந்திரகாளியம் (சிறப்பான இசைக்கு இலக்கணம் கூறும் தமிழ்நூல்) எனும் இலக்கண நூல்கள் தோன்றின. இக்காலத்தில்தான் சொல் பற்றிப் பரிசீலிக்கும், நிகண்டு எனும் புதுப்பிரிவு தோன்றியது. பின்னாளில் அது பெரிதும் வளர்ந்தது.

5.2 இலக்கண நூல்கள்

இலக்கியம், இலக்கணம், நிகண்டு, இலக்கண உரை என அனைத்து நூல்களும் நூற்பாக்களால் எழுதப்பட்ட மரபு தமிழ் மரபு ஆகும். எப்படிச் செய்யுள் எழுத வேண்டும் என்று அறிவுறுத்தும் பணியைப் பொதுவாக இலக்கண நூல்கள் செய்தன.

5.2.1 கல்லாடம் கல்லாடர் இயற்றிய நூல் கல்லாடம் ஆகும். இது நூறு பாடல்களைக் கொண்டது. காதலனும் காதலியும் ஊரார் அறியாதபடி கலந்து பழகும் களவு வாழ்வு, திருமணம் முடித்து வாழும் கற்பு வாழ்வு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய அகப்பொருள் பற்றிய நூல் திருக்கோவை. அந்நூலின் செய்யுள்களைத் தழுவிக் கல்லாட நூல் அமைந்துள்ளது. திருக்கோவையில், ‘குற்றம் கூறிய புலவர்களைக் கண்டிப்பதற்காகக் கல்லாடம் பாடினார் என்பர்.

சிவனை வழிபடும் நெறிகள் பற்றிக் கல்லாட நூல் கூறுகிறது. எனவே இது ஒரு சைவ இலக்கியம்.

கல்லாடம் கற்றவனொடு சொல்லாடாதே !

கல்லாடம் கற்றவனொடு மல்லாடாதே

என்ற மொழிகள், ‘கல்லாடம் சிறந்த நூல்’ என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

5.2.2 அவிநயம் அவிநயனார் என்பவர் செய்த இலக்கண நூல் அவிநயம் ஆகும். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, பாட்டியல் ஆகிய பொருள்களைச் சொல்லும் நூல். இந்த இலக்கணநூல் கிடைக்கவில்லை.

5.2.3 பாட்டியல் பாட்டியல் என்பது இலக்கணநூல். அதன் முதல் பகுதி, ஒரு நூலின் முதல் சீர் எப்படி அமைய வேண்டும் என்று கூறுகிறது. அப்படிக் கூறும் போது நூலின் தலைவனுடைய சாதி, நட்சத்திரம் முதலியவற்றைக் கொண்டு முதல் சீர் அதற்கு ஏற்றாற் போன்று பொருந்தி வரவேண்டும் என்று விளக்குகிறது. நான்கு வருண வேறுபாடுகளுக்கு ஏற்றபடி பாட்டின் எண்ணிக்கையும் அமைய வேண்டும். உயர்ந்த சாதித் தலைவனாக இருந்தால் செய்யுள்களின் எண்ணிக்கையும் மிகுதியாக இருக்க வேண்டும். சாதி தாழ்வானதாக இருந்தால் செய்யுள்களும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் இந்த இலக்கணநூல் கூறுவது விந்தையாக இருக்கிறது என்று மு.வ. கூறுவார்.

தொடர்நிலைச் செய்யுளின் இலக்கணம் கூறுவது பாட்டியல் ஆகும். எந்த நெறிகளின் படி பிரபந்த இலக்கியம் செய்யப்பட வேண்டும் என்று வழிகாட்ட வந்ததே பாட்டியல் இலக்கணம் ஆகும்.

தமிழில் பாட்டியல் நூல்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றின. தோன்றியதன் காரணம் யாது? தொல்காப்பியர் காலத்திலும், சங்க காலத்திலும் தமிழ் நூல்களின் வகைகள் பெருகவில்லை. பதிற்றுப்பத்து ஒரு தனித்த இலக்கிய அமைப்பு உடையது. ஏனையவை யாவும் தனித்த இலக்கிய அமைப்பைப் பெறவில்லை. தொகை நூல்களாகவே உள்ளன. பின்னர்த் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சில எண்ணால் அமைப்புப் பெற்றனவே அல்லாது பிறவகை அமைப்பு அவற்றில் இல்லை. காப்பியங்கள் தனித்த பொருள் தொடர்நிலைச் செய்யுளால் கதையைக் கூறும் முறையில் அமைந்தன. அவற்றின் பின்னர் வந்த நாயன்மார் பதிகங்களும், ஆழ்வார் பாசுரங்களும் புதுப்புது இலக்கிய அமைப்புகளுக்கு வழி செய்தன. அந்தாதி, மடல், அங்கமாலை, எழுகூற்றிருக்கை, இரட்டைமணிமாலை, உலா, மும்மணிக்கோவை முதலிய புது அமைப்புகள் அவற்றில் இடம்பெற்றன. கோவை ஒன்றும் முன்பே இருந்தது. இந்த நிலையில், இவற்றுக்கு எல்லாம் இலக்கணம் வரையறுக்க வேண்டிய நிலை பின் வந்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது. இவ்வாறு இவை அனைத்தையும் தழுவி இவற்றுக்குச் செய்யப்பட்ட இலக்கண வகையே, பாட்டியல் எனப்படுகிறது.

பாட்டுடைத் தலைவன் ஒருவனைச் சார்ந்து தொடர்ந்த பாடல்களாக நூல் செய்வதற்குப் பாட்டியல் இலக்கணம் கூறுகிறது. மங்கலம், பொருத்தம் என்ற சோதிடக் கருத்துகள் இந்த இலக்கணத்தோடு தொடர்புடையன.

5.2.4 இறையனார் களவியல் அகப்பொருள் பற்றிய இலக்கணநூல் இறையனார் களவியல் ஆகும். இறையனார் களவியல் நூற்பாவால் ஆனது. யாப்பருங்கலம் என்ற நூலுக்கு விளக்க நூலாகக் காரிகை என்ற நூல் எழுந்தது போலவே, இறையனார் களவியல் என்ற நூலுக்கு ஒரு விளக்க நூல் 14ஆம் நூற்றாண்டில் எழுந்திருப்பது இந்த நூலுக்கு உரிய சிறப்பு ஆகும். அந்த நூலின் பெயர் களவியல் காரிகை ஆகும். இறையனார் களவியலுக்குச் சிறந்த உரை உண்டு. இறையனார் களவியல் நூல் 60 சூத்திரங்களைக் கொண்டது.

பன்னிரு படலம்

‘அளவால் பெயர் பெற்றது பன்னிருபடலம்’ என்று இறையனார் களவியல் கூறும். இந்த நூல் இன்று கிடைக்கவில்லை. புறப்பொருள் பற்றிப் பேசும் இலக்கண நூல் ஆகும். பண்டைத் தமிழரது போரிடும் முறைகளைக் கூறுவது புறப்பொருள் ஆகும்.

5.2.5 தமிழ்நெறி விளக்கம் தமிழ்நெறி விளக்கம் என்பதும் அகப்பொருளை விளக்கும் இலக்கண நூல் ஆகும். இது உ.வே.சாமிநாத அய்யரால் 1937இல் அச்சிடப்பட்டது. இந்நூல் முற்றுப்பெறாத நூல் ஆகும். இந்த நூலுக்கு முன்னர் இருந்த இறையனார் களவியல் நூல் 60 சூத்திரம் உடையதாக இருந்தது. ஆனால் தமிழ்நெறி விளக்கமோ அதைச் சுருக்கி 25 சூத்திரங்கள் ஆகக் கூறுகிறது. ஆசிரியப்பாவில் இந்த நூல் உள்ளது. வெண்பா முதலான பிற பா ஒன்றும் பயன்படுத்தப்படவில்லை. ‘முற்றுப் பெறாத பொருளியல்’ என்ற இந்த நூல், ‘களவு, கற்பு’ எனும் இரு பகுதிகளைக் கொண்டது. இந்த நூலின் காலம் தெரியவில்லை. இறையனார் களவியல் உரை, யாப்பருங்கல விருத்தி உரை, சிலப்பதிகார அரும்பத உரை, தொல்காப்பிய இளம்பூரணர் உரை, களவியல் காரிகை உரை ஆகிய நூல்களில் இந்த நூலின் பாடல்கள் மேற்கோள்களாக எடுத்தாளப்பட்டுள்ளன.

5.3 இலக்கண உரைநூல்கள்

இலக்கியம் தரம் உள்ளதாக அமைய இலக்கண நூல்கள் பின்புலமாக உள்ளன. அந்த இலக்கண நூல்களுக்கு எழுதப்படும் உரைகள் சிறந்த விளக்கம் தருகின்றன. எழுத்து, சொல், பொருள் மூன்றையும் தொல்காப்பியம் விளக்குகிறது. இறையனார் களவியலில் யாப்பதிகாரம் என்ற ஒரு நூல் குறிப்பிடப்படுகிறது. அப்படி ஓர் இலக்கணப்பகுதி அதற்கு முந்திய காலத்தைச் சேர்ந்ததாகக் கிடைக்கவில்லை. இந்த நூற்றாண்டு வரையில் இருந்து இறந்து போன எண்ணற்ற நூல்களில் ஐந்திலக்கணமும் இருந்ததா என்று அறிய வழியில்லை. ஆனால் யாப்பிலக்கண நூல்கள் பல இருந்தன என்று யாப்பருங்கல விருத்தியுரையால் அறியலாம். அணி இலக்கணநூல் ஒன்றும் (அணியியல்) இருந்தது என்று சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையால் அறியலாம் என்று போராசியர் அருணாசலம் கூறுவார். இருந்த இலக்கண நூல்களுக்கு உரைநூல்கள் இயற்றப்பட்டுள்ளன.

5.3.1 இறையனார் களவியல் உரை இலக்கணத் துறையில் குறிக்கத்தக்கது இறையனார் களவியல் உரை ஆகும். இந்நூலும் உரையும் ஒருகால் ஏழு, எட்டு நூற்றாண்டுகளில் செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் பல தலைமுறைகள் இவ்வுரை வாய்மொழியாகவே கற்கப்பட்டு வந்தது. இக்காலக்கட்டத்தில் தான் முசிறி ஆசிரியர் நீலகண்டனார் என்பவரால் ஏட்டில் எழுதி வைக்கப்பட்டது. தோன்றிய காலம் தொடங்கி இவ்வுரை தனது நடையின் சிறப்பால் தமிழ் அறிஞர்களது மனங்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. எளிமையாகவும், வருணனை நிறைந்ததாகவும், பெரும்பகுதி செய்யுள் ஓசை பெற்றதாகவும் இவ்வுரை உள்ளது. இவ்வுரையை நக்கீரர் இயற்றினார் என்பர். உரை செய்த நக்கீரர், அதை எழுதிய நீலகண்டனார் ஆகிய இருவரும் சைவர்கள் என்பது குறிக்கத்தக்கது.

உரைநடையாக எழுதப்பட்ட போதிலும், செய்யுள் போலவே சீர்களின் அமைப்பும், எதுகை, மோனை அடுக்கும், சொற்களின் செறிவும், அடைகளும் கொண்டு புலவர்கள் கையாண்ட செறிவான உரைநடைக்குச் சான்றாக களவியல் உரை உள்ளது. ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் புலவர்கள் விரும்பி எழுதிய தமிழ்நடையை அறிய விரும்புபவர்களுக்கு அந்த ஒரு நூலே சான்றாக உள்ளது. அவ்வகையில் நமக்குக் கிடைத்த உரைநூலில் இவ்வுரையே பழமையானது. ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் வாய்மொழியாக வழங்கப்பட்டுப் பின்னர் எழுதப்பட்டது என்பர். உரைச் சிறப்பிற்கு ஒரு சான்று இதோ :

‘பரத்தையில் பிரிவு’ என்று தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து வேறொரு பெண்ணை-பரத்தையை- நாடிப் பிரிந்து செல்லும் பிரிவு பற்றிக் கூறுகையில் உரைகாரர் தலைவனுடைய அன்றாடப் பணிகளை அடுக்கிக் கூறுவது போல எழுதுகிறார்.

இவன் கண்டாரை எல்லாம் காமுறுவானோ எனின்,

ஆகான் ; ஆகாதவாறு சொல்லுதும் ; தலை மகனால்

தலை நின்று ஒழுகப்படுவன அறம், பொருள், இன்பம்

என்ற மூன்று ; அம்மூன்றினையும் ஒரு மூன்று

கூறிட்டு, முதற்கண் பத்து நாழிகையும் அறத்தொடு

பட்டுச் செல்லும் ; இடையன பத்து நாழிகையும்

அருத்தத்தொடுபட்டுச்செல்லும் ;கடையன பத்துநாழிகையும்

காமத்தொடு பட்டுச் சொல்லும் ; ஆதலான்

தலைமகன் நாழிகை அளந்துகொண்டு கருமத்தொடு

படுவான். தலைமகளும் வேண்டவே தானும் வேண்டிப்

போந்து அத்தாணி புகுந்து அறம் கேட்பதும்

அறத்தொடுபட்டுச் செல்வதும் செய்யும் ; நாழிகை

அளந்துகொண்டு இடையன பத்து நாழிகையும், இறையும்

முறையும் கேட்டு அருத்தத்தினொடுபட்டு வாழ்வானாம்.

அவற்று நீக்கத்துக் கடையன பத்துநாழிகையும்

தலைமகள் உழைப்போதரும்

என்று, ‘பரத்தையிற்பிரிவு’ என்பதற்குத் தருமரீதியிலான ஓர் அமைதி (சமாதானம்) காண்பதற்கு இவ்வுரைகளுள் பெருமுயற்சி செய்வதைக் காண முடிகிறது.

உரையில் பல உவமைகள் நடைச் சிறப்புடன் அமைந்துள்ளன. பல வடசொற்கள் இவ்வுரையினுள் காணப்படுகின்றன. இருபதுக்கும் மேற்பட்ட தொல்காப்பியச் சூத்திரங்கள், குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் உரையில் காட்டப்பட்டுள்ளன.

5.3.2 ஆத்திரையன் பேராசிரியன் ஆத்திரையன் பேராசிரியன் என்பவர் ஓர் உரையாசிரியர். இவரைப் பற்றி இரு குறிப்புகள் கிடைத்துள்ளன. தொல்காப்பியத்துக்குப் பொதுப்பாயிரம் ஒன்றும், சிறப்புப்பாயிரம் ஒன்றுமாக இரண்டு பாயிரங்கள் உள்ளன. (பாயிரம் – நூலுக்குத் தரப்படும் அணிந்துரை போன்றது. இது பொதுப்பாயிரம் என்றும், சிறப்புப் பாயிரம் என்றும் இருவகைப்படும்.) ‘வலம்புரி முத்தின் குலம்புரி பிறப்பும்’ என்பது பொதுப்பாயிரம். ‘வடவேங்கடம் தென்குமரி’ என்பது சிறப்புப்பாயிரம். தொல்காப்பிய மரபியல் (நூற்பா 98) உரையில், பேராசிரியர்,

வடவேங்கடம் தென்குமரி என்னும் சிறப்புப்பாயிரம்

செய்தார் பனம்பாரனார் எனவும், ‘வலம்புரிமுத்தில்

குலம்புரி பிறப்பும்’ என்னும் பொதுப்பாயிரம்

செய்தான் ஆத்திரையன் பேராசிரியன் எனவும்

பாயிரம் செய்தான் பெயர் கூறியவாறு

என்று எழுதுகிறார். இப்பொதுப்பாயிரம் 33 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆனது. சிவஞான சுவாமிகள் (18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்) சங்கர நமசிவாயர் உரையைத் திருத்திய இடத்துச் சிறப்புப் பாயிரத்தை அடுத்து அதே பொதுப்பாயிரத்தையும், அதன் ஆசிரியர் பெயரையும் தந்துள்ளார். இவ்வாறு இரு குறிப்புகள் கிடைத்துள்ளன.

பொதுப்பாயிரம் உரையுடன் 1923 இல் தி.வை.சதாசிவப் பண்டாரத்தாரால் அச்சிடப்பட்டது. பொதுப்பாயிரம் செய்தாரே உரையும் செய்திருக்கிறார் என்ற கருத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். இது பொருந்துவதே ஆகும். இப்பாயிரம் இளம்பூரணருக்கு முன்னரே தோன்றியது ஆகலாம். முதல் சில உரைகளுள் ஒன்று என்று தெரிவதாகவும் கூறுவார், பேராசிரியர் அருணாசலம் அவர்கள்.

5.4 நிகண்டு நூல்கள்

நிகண்டுக்குத் தோற்றுவாய் தொல்காப்பியச் சொல் அதிகாரத்தின் உரியியல் ஆகும். அதில் உள்ள 100 நூற்பாக்களும் நிகண்டின் பொருளையே கூறுவன. சிறுபகுதி இதற்கு முந்திய இடையியலிலும், பொருளதிகார மரபியலிலும் காணப்படும். இவ்விடங்களில் தாம் விளக்க வேண்டும் என்று கருதிய சொற்களை மட்டுமே தொல்காப்பியர் விளக்கி உரைத்தார். எல்லாச் சொற்களையும் சொல்ல அவர் எண்ணவில்லை. உரியியல், ‘உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை’ என்று தொடங்குகிறது. நிகண்டு என்ற சொல் 15ஆம் நூற்றாண்டு வரை வழக்கத்திற்கு வரவில்லை.

கூட்டம் எனினும் நிகண்டு எனினும் ஒக்கும்

என்பது சங்கர நமசிவாயர் நன்னூலில் (சூத்திரம் 460க்கான உரை) எழுதியிருக்கும் குறிப்பு. ‘இவ்விலக்கணம் அறிவதற்கு முன் நிகண்டறிக’ என்றாம், அறியும் முறை அதுவாகலான்’ என்றும் அவர் எழுதுகிறார். திண்ணைப் பள்ளிக்கூடங்களில் சிறுபிள்ளைகள் – ஏழு எட்டுக்கு உட்பட்ட வயதில் – நிகண்டினை நெட்டுருச் செய்து வந்தார்கள்.

முதன்முதலாக 16வது நூற்றாண்டில் தான், ‘மண்டல புருடர்’ தம் நூலை, ‘நிகண்டு சூடாமணி என்று ஒன்று சொல்வேன்’ என்கிறார். அதற்கு முன்பு வரை நிகண்டுகள் உரிச்சொல் என்ற பெயராலேயே வழங்கின. சொல்லுக்குப் பொருள் விளக்கம் தரும் அகராதிகளாக நிகண்டுகள் இலங்கின.

5.4.1 திவாகர நிகண்டு ‘நிகண்டு’ எனும் பிரிவில் திவாகரம் முதலில் தோன்றிய நூல் ஆகும். இதன் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு ஆகும். பண்டைக்காலத்தில் வாழ்க்கையின் எத்துறையிலும் முக்கியமான பொருளை நினைவில் இருத்த வேண்டும் என்றால் அதைப் பாட்டாகவே எழுதி வைத்தார்கள். அதே நிலை இடைக்காலத்திலும் தொடர்ந்தது. இலக்கணமும் பாட்டாகவே எழுதி வைக்கப்பட்டிருத்தலைக் காணலாம். நிகண்டுகள் முதலியன இன்றுவரை பாட்டாகவே இருப்பதை இதற்கு உதாரணமாகச் சொல்லாம்.

தமிழின் ஆதி நிகண்டு திவாகரம் ஆகும். திவாகரத்தைச் செய்தவர் திவாகரர் ஆவார். ‘திவாகரர்’, ‘திவாகரன்’ என்ற சொற்களுக்கு, ‘பகலைச் செய்பவன், சூரியன்’ என்று பொருள். படைக்கலங்கள் பற்றி இவர் விரிவாகவும், விளக்கமாகவும் கூறி உள்ளார். எனவே இவர் ஒரு போர் வீரராக இருத்தல் வேண்டும் என்று பேராசிரியர் அருணாசலம் கூறுவார்.

“அம்பர் காவலன் சேந்தன் அம்பிகை மீது அந்தாதி பாடினான்” என்று சொல்ல வந்த திவாகரர், அம்பிகையைப் புகழ்வதால் இவர், சைவர் என்று கூறுவர். அம்பிகையைப் புகழ்வது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். முனிவர் என்ற பெயரை வைத்துச் சமணர் என்பது தவறு என்கிறார் பேராசியர் அருணாசலம். 880இல் திவாகரர் நிகண்டு செய்தார்.

திவாகரம் 12 பிரிவுகளைக் கொண்டது. அவை,

(1) தெய்வப் பெயர்த் தொகுதி

(2) மக்கள் பெயர்த் தொகுதி

(3) விலங்கின் பெயர்த் தொகுதி – மக்கள், தேவர், தாவரம் அல்லாத பிற யாவும்

(4) மரப் பெயர்த் தொகுதி – தேவதாரு முதல் மூங்கில் வரை 79 மரங்கள்.

(5) இடப் பெயர்த் தொகுதி – உலகு, திசை, கடல், மலை, ஆறு முதலியன.

(6) பல்பொருள் பெயர்த் தொகுதி – பிற தொகுதிகளில் சொல்லாதன – உலோகம், மணி போன்றவை.

முதலியவை ஆகும்.

பதினோராம் பகுதியாகிய ஒரு சொல் பலபொருள் பெயர்த் தொகுதியில் – ‘அரி’ என்ற ஒரு சொல்லை எடுத்து அதற்கு 23 பொருள் தந்து இதில் 15 தமிழ்ப் பொருள் ; 8 வடமொழியில் இருந்து வந்த பொருள் என்கிறார்.

12ஆம் பகுதி பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி ஆகும். இது பிற்காலத்தில், ‘தொகை அகராதி’ எனப்பட்டது (தொகை – தொகுதியாக, கூட்டமாக உள்ள பொருள்கள்)

கூறியது கூறினும் குற்றமில்லை

வேறொரு பொருளை விளக்குமாயின்

என்ற முன்னுரையோடு ஒன்றில் தொடங்கி 83 வரையில் தொகைப் பொருளைக் கூறுகிறார்.

ஆங்கிலத்தில் உள்ள, ‘Dictionary’, ‘Thesauras’ என்ற இரண்டும் நிகண்டை ஒத்தவை. சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி. திவாகர நிகண்டின் பதினொராம் பகுதி அகராதி போன்றது. ஒத்த கருத்துடைய சொற்களை ஓரிடத்தில் சேர்த்துக் கொடுப்பது, ‘thesauras’ ஆகும். நிகண்டின் முதல் பத்துத் தொகுதிகளும் இவ்வமைப்பினது. ஆங்கில மொழியில் ரோஜட் என்பவர் 19வது நூற்றாண்டில் முதன்முதலாக இப்படி ஒரு தொகுதி செய்து வெளியிட்டார். தமிழில் ஒன்பதாவது நூற்றாண்டிலேயே செய்யுள் வடிவத்தில் திவாகரரால் செய்யப்பட்டு, அதைத் தழுவிப் பின்னர் இருபதாம் நூற்றாண்டு வரை சுமார் இருபது நிகண்டுகள் வந்திருப்பது தமிழின் சிறப்பாகும்.

5.5 தனிப்பாடல்கள்

பல்லவர் மரபில் இறுதி அரசன் அபராசிதவர்மன் ஆவான். கி.பி.875க்குப் பிறகு நாட்டை ஆண்டான். அவன் காலத்தில் நம்பி அப்பி என்பவன் திருத்தணிகை – வீரட்டானேசுவரர் கோவிலுக்குத் திருப்பணிகள் பலவும் செய்தான். அவற்றைப் பாராட்டி அபராசிதவர்மன் ஒரு வெண்பாப் பாடினான். அப்பாடல் அக்கோவில் கல்வெட்டில் உள்ளது. பாடலின் கீழ், ‘இவ்வெண்பாப் பெருமானடிகள்தாம் பாடி அருளித்து’ என்ற குறிப்பு உள்ளது. அபராசிதனுக்குப் ‘பெருமானடிகள்’ என்ற பெயர் உண்டு. அவ்வெண்பா வருமாறு :

திருந்து திருத்தணியிற் செஞ்சடை ஈசற்குக்

கருங்கலாற் கற்றளியா நிற்க – விரும்பியே

நற்கலைகள் எல்லாம் நவின்றசீர் நம்பியப்பி

ராசிதவர்மன் பாடிய பாடல் சொல்லப்படுகிறது.

தண்டலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மரபினன் இராசபவித்திரப் பல்லவதரையன் என்பவன் ஆவான். அவன் அவிநயம் என்ற யாப்பிலக்கண நூலுக்கு உரை எழுதினான் என்று, நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர் கூறுகிறார். அதற்கு ஆதாரமாக ஒரு பாடலையும் காட்டுகிறார்.

இந்தப்பத் தெச்சமும்

புவிபுகழ் புலமை அவிநய நூலுள்

தண்டலங் கிழவன் தகைவரு நேமி

எண்டிசை நிறைபெயர் இராச பவித்திரப்

பல்லவ தரையன் பகர்ச்சி யென்றறிக.

என்பதே அந்தப் பாடல்.

அரக்கோணம் தாலூகாவில் தண்டலம் என்ற கிராமத்தில் உள்ள ஏரியைப் புதுப்பித்த பல்லவ மன்னன் சத்திபல்லவனைப் பற்றி அங்குள்ள கல்வெட்டில் இரண்டு வெண்பாக்கள் காணப்படுகின்றன.

பல்லவ அரசன் ஒருவனது ஆணைப்படி அவன் எல்லைப்புற வீரர் வடுகர் முனையைக் கடந்து பசு நிரையைக் கவர்ந்த செய்தியை மற்றொரு பாடல் குறிக்கிறது. அப்பாடல் தொல்காப்பிய அகத்திணை சூத்திரம் 54க்கான உரையில் காட்டப்பட்டுள்ளன. எனவே நச்சினார்க்கினியர் காலம் வரை அப்பாடல் வழக்கத்தில் இருந்தது எனலாம்.

நகில்பொழி தீம்பால் மண்சோறு படுப்ப

மலர்தலை உலகம் ஓம்பும் என்ப

பரிசிலை தொண்டைப் பல்லவன் ஆணையின்

வெட்சித் தாய்த்து வில்லேர் உழவர்

பொருந்தா வடுகர் முனைச்சுரம்

கடந்து கொண்ட பல ஆனிரையே

என்பதே அப்பாடல் ஆகும். இத்தனிப் பாடல்களால், பல்லவர் காலத்தில் புலவர்கள் பலர் இருந்தமை புலனாகும்.

5.6 உரைநூல்கள்வழி அறியலாகும் மறைந்த நூல்கள்

பல்லவர் காலத்தில் பல யாப்பிலக்கண நூல்கள் வடநூல் வழித் தமிழ் ஆசிரியர் பலரால் செய்யப்பட்டன என்பதை யாப்பருங்கல விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகை உரை, தொல்காப்பியச் செய்யுளியல் உரை ஆகியவற்றில் கூறப்படும் நூல்கள் பற்றிய குறிப்பிலிருந்து அறியலாம்.

சங்க யாப்பு, பாட்டியல் நூல், மாபுராணம் என்ற யாப்பு நூல்கள் இக்காலத்தன. இலக்கிய நூல்களாக, முத்தொள்ளாயிரம், புராண சாகரம், கலியாண கதை, குடமூக்கில் பகவர் செய்த வாசுதேவனார் சிந்தம், அடிநூல், அணி இயல், அமிர்தபதி, அரச சந்தம், அவிநந்தாமலை, ஆசிரியமுறி, காலகேசி, இரணியம், சயந்தம், தும்பிப்பாட்டு, தேசிக மாலை, பசந்தம், பாவைப்பாட்டு, பிங்கலகேசி, புணர்ப்பாவை, பெரியபம்மம், பொய்கையார் நூல் (களவழியன்று), போக்கியம், மணியாரம், மந்திரநூல், மார்க்கண்டேயனார் காஞ்சி, மதுவிச்சை, வளையாபதி முதலியன யாப்பருங்கல விருத்தியுரையில் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் இரண்டொன்று நீங்கலாக மற்றவை அனைத்தும் பல்லவர் காலத்தில் செய்யப்பட்டவை என்பது அவற்றின் வடமொழிப் பெயர்களைக் கொண்டே கூறலாம் என்பார் மா.இராசமாணிக்கனார்.

யாப்பருங்கலக் காரிகை உரையால் கலிதயனார் என்பவர் செய்த யாப்பு நூலும், பாடலானார் செய்த யாப்பு நூலும், பெயர் தெரியாப் புலவர் ஒருவர் செய்த யாப்பு நூலும் இருந்தன என்பது தெரிய வருகிறது.

தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் காணப்பெறும் நூல்கள் சிலவும் பல்லவர் காலத்தன. அவை யாழ்நூல், கந்தர்வ நூல், பருப்பதம், தந்திரவாக்கியம், வஞ்சிப்பாட்டு, மோதிரப் பாட்டு, கடகண்டு, விளக்கத்தார் கூத்து முதலியன.

5.7 தொகுப்புரை

பல்லவர் ஆட்சி முடிவுற்றுச் சோழர் ஆட்சி தோற்றம் பெற்ற காலக்கட்டம் இது. வடமொழி, தமிழ் எனுமிரு மொழிகளும் புழக்கத்தில் இருந்தன. பக்தி இலக்கியம் தந்த புதுப்புது இலக்கிய வகைகள், அணிகள் ஆகியவற்றுக்கு விளக்கம் தரும் வண்ணம் இலக்கண நூல்கள், நிகண்டுகள் ஆகியவற்றுடன் தனிப்பாடல்களும் தோன்றின.

பாடம் - 6

பத்தாம் நூற்றாண்டு

6.0 பாட முன்னுரை

இலக்கியத்தின் தோற்றத்திற்கும், பாடுபொருள் மாற்றத்திற்கும், சமூக நிலை, பொருளாதார நிலை, அரசியல் நிலை ஆகியவை அடிப்படையாக அமைகின்றன. பல்லவர் காலத்து அயலவர் ஆதிக்கம் தேய்ந்து, சோழர்கள் மீண்டும் தலைதூக்கிய இந்த நூற்றாண்டில் சோழ அரசர்கள் சைவ சமயக் காவலர்களாக இருந்தமையால், சைவ இலக்கியங்கள் மிகுதியாக வெளிவந்தன. ஆழ்வார்தம் பாசுரத் துதிகளாக வைணவத் தனியன்களும், சமண, பௌத்தம் முற்றிலும் ஒடுக்கப்படாததால் அச்சமயத்து ஆக்கங்களும், வடமொழியிலிருந்தும் தமிழிலிருந்தும் இலக்கணக் கருவி நூல்களும், மன்னர் புகழ்பாடும் மெய்க்கீர்த்திகளும் எழுந்தன.

6.1 பின்புலங்கள்

பத்தாம் நூற்றாண்டில் வெளிவந்த இலக்கியங்களுக்கு அக்காலக் கட்டத்திலுள்ள அரசியல், சமூக, சமய சூழல்களும் காரணங்களாக அமைந்திருந்தன.

6.1.1 அரசியல் பின்புலம் பல்லவரும் பாண்டியரும் நலிவுற்றுச் சோழர் பொலிவு பெற்ற காலம் இது. முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907) பல்லவ மன்னன் அபராசிதவர்மனிடம் இருந்து தஞ்சையைப் பெற்றான். பல்லவனது இறப்புக்குப் பின் தொண்டை மண்டலமும் சோழனது ஆட்சியின் கீழ் வந்தது. கொங்கு நாட்டையும் இவன் வென்றான். இவனது மகன் முதலாம் பராந்தக சோழன் (907-955) மதுரையை வென்று, ‘மதுரை கொண்டான்’ என்று பட்டம் பெற்றான். கி.பி.915இல் வெள்ளூரில் நடந்த போரில், பாண்டிய-சிங்களக் கூட்டுப் படையை வென்று, ‘மதுரையும் ஈழமும் கொண்டான்’ எனப் பெயர் பெற்றான். இவனது ஆட்சி வடபெண்ணாறு முதல் கன்னியாகுமரி வரை பரவி இருந்தது. அரக்கோணத்திற்கு ஆறுமைல் தென்கிழக்கில் உள்ள, தக்கோலம் என்ற இடத்தில் கி.பி.949இல் பராந்தக சோழனுக்கும், இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனுக்கும் நடந்த போரில் சோழனது மகன் இராசாதித்த சோழன் இறந்து விடுகிறான். தொண்டை மண்டலத்தைச் சோழர் இழந்தனர். கச்சியும், தஞ்சையும் கொண்ட காவலன் என்று மூன்றாம் கிருஷ்ணன் பெயர் பெற்றான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மற்றும் ஆனைமங்கலச் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. இது சோழருக்கு நேரிட்ட பின்னடைவு ஆகும்.

பராந்தக சோழனின் இரண்டாவது மகன் கண்டராதித்த சோழன் (953 – 957) சோழ மண்டலத்தில் மட்டுமே நிலைத்திருந்த அரசை ஆண்டான். இரண்டாம் பராந்தகச் சுந்தர சோழன் (கி.பி.957-970) கி.பி.962இல் சேவூரில் பாண்டியரை வென்றான். ‘பரகேசரி’ என்றும் ‘பாண்டியரைச் சுரம் இறக்கின பெருமாள்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளான். பரகேசரி உத்தம சோழன் (937-985) இறந்தபின் அரியணை ஏறிய முதலாம் இராசராசன் (கி.பி.985-1014) கி.பி988இல் திருவனந்தபுரத்தில் காந்தளூர்ச்சாலையில் சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனை வென்றமை, ‘காந்தளூர்ச் சாலை களம் அறுத்தருளி’ என்று குறிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து இலங்கைமீது படையெடுத்து வென்றான். அரபிக்கடலில் உள்ள முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரத்தைக் (மாலத்தீவுகள்) கைப்பற்றினான். கல்யாணிச் சாளுக்கியரை வென்றான். வேங்கிச் சாளுக்கியரை வென்று, நந்திவர்மனை அரியணையில் அமர்த்தி, அவரது இளவல் விக்கிரமாதித்தனுக்குத் தனது மகள் குந்தவையை மணமுடித்துத் தந்தான். வலிய தரைப்படை மற்றும் கடற்படையின் மூலம் இலங்கை உள்ளிட்ட தென்னிந்தியாவில் வலிமை மிக்க சோழப் பேரரசை அமைத்தான். இந்திய வரலாற்றில், ‘Rajaraja the great’ என்று சிறப்பிக்கப்படும் சோழப் பேரரசர் இவரே ஆவார்.

6.1.2 சமூகப் பின்புலம் முதலாம் பராந்தகன் (907-950) சிவாலயங்களை எழுப்பினான். பிராமணர்க்குத் தானங்கள் பல செய்து உள்ளான். வேளாண்மை விரிவடைய நீர்நிலைகளையும், கால்வாய்களையும் உருவாக்கினான். உள்ளாட்சி முறையையும் சீர்படுத்தினான் என்று உத்திரமேரூர்ச் சாசனம் கூறுகிறது. இரண்டாம் பராந்தகனின் (957-973) அறப்பணிகளையும் வேளாண்மை முன்னேற்றப் பணிகளையும் வரலாற்று அறிஞர்கள் பாராட்டுகின்றனர். உத்தம சோழன் காலத்தில் குவலாலயத்தைச் (கோலார்) சேர்ந்த அம்பலவன் பழுவூர்நக்கன் என்ற உயர் அதிகாரி திறமைக்காகப் பாராட்டப்பட்டுள்ளான். சோழர்கள் சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்தனர். அதிகாரம் அரசர் கையில் இருந்தது. மன்னரும் வேதியரும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தனர். தன்னாட்சி மிக்க கிராம நிர்வாகத்தைத் தோற்றுவித்து ஒரு புதுமையான ஆட்சிமுறையைப் பின்பற்றினர். மத்தியில் முழு அதிகாரத்தையும், ஊர்களில் மக்களாட்சிப் பண்புடைய கிராம சுய ஆட்சியையும் நடைமுறைப்படுத்தியது ஒரு சிறந்த முறை ஆகும். சோழர்கள் காலத்தில் சிறந்த அதிகாரிகள் பட்டங்களும், நிலதானங்களும் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர். எனினும் பல்லவர் காலத்தைப் போன்று சோழர் காலத்திலும் சாதாரண மக்கள் தாழ்வாகவே நடத்தப்பட்டனர்.

வணிகர்களது குடியிருப்புகள், ‘நகரங்கள்’ எனப்பட்டன. வேதியர்களுக்கு இறையிலியாக மன்னர்கள் வழங்கிய குடியிருப்புகள் ‘கிராமங்கள்’ எனப்பட்டன. செழிப்பான ஆற்றுப்படுகைகளில் கிராமங்கள் இருந்தன. ஏனையோர் வாழ்ந்த குடியிருப்புகள் ‘ஊர்’ எனப்பட்டன. ஊர்களிலும் நிர்வாகக் குழு இருந்தது. ஆனால் கிராமங்கள் பெற்ற சலுகைகளைச் சோழர் காலத்து ஊர்கள் பெறவில்லை. ‘ஊரை இசைந்து ஊரோம்’, ‘சபையோமும் ஊரோமும் ஆக இருதிறத்தோம்’ என்று கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. சோழர் காலத்தில் தஞ்சை, காஞ்சி, மதுரை போன்ற மாநகரங்கள் இருந்தன. நால்வகைச் சாதி பாகுபாடு நடைமுறையில் இருந்தது.

சமூக மாற்றம்

சோழர் காலத்தில் இடைவிடாப் போர்களின் விளைவாகப் போர் அடிமைகள் குவிந்தனர். கி.பி.பத்தாம் நூற்றாண்டில் திருச்சி வயலூர் திருக்கற்றளிப் பரமேசுவரர் கோவிலுக்குப் பணிப்பெண்களை அடிமைகளாக அளித்த நிகழ்ச்சி கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி.1000இல் மீவைப் பெண்கள் 12 பேர் தங்களைச் செங்கற்பட்டு மாவட்டம் திருப்படந்தை கோயிலுக்கு வறுமையின் காரணமாக அடிமைகளாக விற்றுக் கொண்டனர். கி.பி.10ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அரசு அதிகாரி ஒருவர் திருநெல்வேலி கருங்குளம் வராகதேவர் கோயிலுக்குப் பணியாட்களை அடிமைகளாகத் தானம் செய்துள்ளார். தேவர் அடியார்கள் நிலையான கோவில் அடிமைகளாக்கப்பட்டது சோழர் காலம் முதற்கொண்டே ஆகும். தனி நபர்களாகவும், குடும்பமாகவும், கூட்டமாகவும் விற்கப்படும் நிலை விரிவடைந்தது. குடும்பத்தினர் அடிமையாக்கப்படும்போது பிறக்கவிருக்கும் வாரிசுகள் தலைமுறை காலத்துக்கும் என அடிமைப்படும் நிலை நேரிட்டது.

மனிதர்களுக்கு ஆட்படுவதைவிட இறைவனுக்கு அடிமைப்படுவது மேல் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக சைவ, வைணவ, சமண, பௌத்த சமயஞ் சார்ந்த நூல்கள் தோன்றின.

6.1.3 சமயப் பின்புலம் சோழ அரசர்கள் சைவ சமயஞ் சார்ந்தவர்களாக இருந்தனர். முதலாம் ஆதித்த சோழன் சைவ சமயத்தொண்டு புரிந்தவன். திருப்புறம்பியத்தில் உள்ள ஆதித்தேச்சுரம் கோயிலும், திருவெறும்பூரில் உள்ள சிவாலயமும் இவனால் கட்டப்பட்டவை ஆகும்.

இவனது மகன் முதலாம் பராந்தக சோழன் சிதம்பரத்தில் உள்ள நடராசர் ஆலயத்தின் மேற்கூரையைப் பொன்னால் வேயச் செய்தான். தில்லைப்பெருமானிடத்தில் அளவில்லாத ஈடுபாடு உடையவனாக இவனது மகன் கண்டராதித்த சோழன் திகழ்ந்தான். திருவிசைப்பா எனும் பதிகம் கண்டராதித்த சோழன் செய்தது. தமிழ்ப் புலமையும், சிவ பக்தியும் இழையோட யாக்கப்பெற்ற நூல் அதுவாகும். இவனது மறைவிற்குப் பின்னர் இவனது மனைவி செம்பியன் மாதேவி கோவில்களுக்கு அணிகலன்களை வழங்கினார். நிபந்தங்கள் வழங்கினார். பரகேசரி உத்தம சோழன் (973-985) திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவிந்தபூரில் உள்ள சிவன் கோவிலுக்குப் பல நிபந்தங்களை வழங்கினார். (நிபந்தம்-நிவந்தம் = அறக்கட்டளை)

முதலாம் இராசராசன் (கி.பி.985-1014) சோழர் குலப் பேரொளியாகத் திகழ்ந்தவர். தஞ்சாவூரில் அவர் இராசராசேசுவரர் ஆலயம் அல்லது பிரகதீசுவரர் ஆலயம் (பெருவுடையார் கோயில்) எனும் கோயிலைக் கட்டினார். மிகச் சிறப்பு மிக்க சிவாலயம் அது. எல்லாச் சமயங்களிடமும் மதிப்பும், மரியாதையும் மிக்கவராகத் திகழ்ந்தவர். வைணவ சமய வளர்ச்சிக்கு மானியங்கள் அளித்தார். சிங்களத்துச் சைலேந்திர மன்னர் நாகப்பட்டினத்தில் புத்தமடம் கட்ட அனுமதி தந்தார். நம்பியாண்டார் நம்பி என்பவரது உதவியுடன், சைவத் திருமுறைகளைத் தொகுக்கச் செய்தவர் இவரே. கோயில்களில் அவை ஓதப்படுவதற்கு மானியங்கள் நல்கினார். சோழப் பேரரசைத் தென்னிந்தியா முழுவதும் விரிவுபடுத்தி இலங்கையையும் அணைத்துக் கொண்ட பெருமை இவரைச் சாரும்.

6.1.4 இலக்கியப் பாடுபொருள் விசயாலயன் வழிவந்த சோழர்கள் ஆழ்ந்த சிவபக்தர்களாக இருந்தனர். தேவாரத் திருவாசகப் பாடல்களை ஆலயங்களில் ஒலிக்கச் செய்தனர். சைவ சமயஞ்சார்ந்த நூல்கள் எழுந்தன. கோவில்களை எழுப்பிய மன்னர்கள் மடங்களையும் எழுப்பினர். திருவாவடுதுறை மடத்தில் பிராமணர்களுக்கும், தவசிகளுக்கும் உணவு அளித்து, இலக்கணமும், மருத்துவமும் கற்பித்ததாகக் கல்வெட்டுக் குறிப்பு கூறுகிறது. மடங்களுக்கும் கிராமங்கள் தானங்களாகத் தரப்பட்டன. திருமால் அடியவர்கள் வைணவத்தை வளர்த்தனர். நாதமுனிகள், ஆழ்வார்களின் பாசுரங்களை ‘நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்’ எனும் பெயரில் தொகுத்தளித்தார். அவற்றுக்குப் பாயிரம் போல் ‘தனியன்கள்’ தோன்றின. ஆழ்வார்களின் பெருமைகளையும், பாசுரச் சிறப்புகளையும் போற்றும் வகையில், பின்வந்தவர்கள் பாடிவைத்த தனிச்செய்யுட்கள், ‘தனியன்கள்’ என்று அழைக்கப்பட்டன. நாகப்பட்டினம் பௌத்தர்களது இருக்கையாக நீடித்தது. சமணப் பள்ளிகள் பள்ளிச் சந்தங்களால் பொருளாதாரப் பாதுகாவல் பெற்றிருந்தன. அவ்வகையில் சமண, பௌத்த நூல்கள் தோன்றின. அரசனது புகழ் பாடும் ‘மெய்க்கீர்த்தி’ எனும் கவிதைகள் தோன்றின.

பாடுபொருள் மாற்றம்

கோவில்களில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய பக்திப் பாடல்கள் மூலம் தலங்கள் தோறும் இலக்கிய, இலக்கண நூல்கள் பெயர்ந்து பரவின. புதிதாக நூலைப் படித்தவர்கள் தாமே முழுமையும் உணர வாய்ப்பில்லையே என வருந்தினர். ‘பொருளதிகாரம் வல்லாரைத் தலைப்படவில்லையே’ என்று பாண்டியன் வருந்தியதும் (இறையனார் களவியல் உரை), இசை உணர்ந்தாரைக் காணவில்லையே என்று நம்பியாண்டார் நம்பியும், சோழ மன்னனும் வருந்தியதுமான செய்திகள் இலக்கிய இலக்கண விளக்கம் குறைவான ஒரு பொதுநிலையை உணர்த்துவதாகக் கொள்ளலாம். தேவாரப் பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுக்கும்போது, அப்பாடல்களின் பண்களைத் தெரிந்து வகைப்படுத்திக் கொடுப்பவர் யாரும் இல்லை என்று நம்பியாண்டார் நம்பியும், அரசனும் வருந்தினர். திருநீலகண்ட யாழ்ப்பாணர் வழியில் வந்த ஒரு பெண் இருப்பதாகவும் அவளைக் கொண்டு இசைவடிவம் காணலாம் என்றும் அசரீரி கேட்டது. அதன்படி தேவாரப் பாடல்கள் தொகுக்கப்பட்டன. இந்நிலையை மாற்ற உரைகள் தோன்றின. சோழப் போரரசர்களின் புகழ் பேசும் தமிழ்நடை சிறந்த கல்வெட்டுக்கள், சாசனக் கவிதைகள், மெய்க்கீர்த்திகள் உருவாக்கப்பட்டன. தலைவனது வரலாற்றைக் கூறும் காப்பியங்கள் இயற்றப்பட்டன. விருத்தப்பா பயிலத் தொடங்கியது இக்காலத்தில்தான். சைவ, வைணவ, சமண, பௌத்தச் சமயத்தினர் செய்த இலக்கியங்கள் அணி செய்கின்றன.

மொத்தத்தில், ‘தமிழ்நாட்டின் பொற்காலம்’ என்று அறிஞர்கள் போற்றும் 12ஆம் நூற்றாண்டின் இலக்கியச் சிறப்புகளுக்கு நுழைவாயிலாகப் பத்தாம் நூற்றாண்டு அமைந்தது எனலாம்.

6.2 சைவ இலக்கியம்

இந்த நூற்றாண்டில் ஐந்து சைவப் பெரியோர் வாழ்ந்து நூல்களைச் செய்துள்ளனர். நக்கீர தேவ நாயனார், கபில தேவர், பரண தேவர், கல்லாட தேவர், பட்டினத்துப் பிள்ளையார் ஆகியோர் இக்காலத்தவர் ஆவர்.

பல்லவர் காலம் வரை தமிழகத்தில் விநாயகர் வழிபாடு நடைபெற வில்லை. நரசிம்மவர்ம பல்லவனின் வாதாபி வெற்றிக்குப் பின் வெற்றிச் சின்னமாக வாதாபி கணபதி சிலையைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்தான். இராசசிம்ம பல்லவன் காலம் வரை தமிழகத்துக் கோவில்களில் விநாயகர் சிலைக்கு இடமளிக்கவில்லை. சோழர் காலத்தில் தமிழகத்துக் கோயில்களில் இடம்பெறத் தொடங்கியது. பனங்குடி, திருப்பல்லாந்துறை, திருக்கட்டளை முதலிய ஆலயங்களில் கணபதி சிலைக்கு இடமளித்தனர். நவக்கிரக வழிபாடும் தமிழகத்தில் பரவியது. நாளும் கோளும் பற்றித் தமிழர் முன்பே அறிந்திருந்தனர். சங்க இலக்கியத்தில் காணும் கணியன் எனும் சொல் வானவியல் வல்லுநரைக் குறிக்கும். நாளும் கோளும் மக்களை வாட்டும் என்ற நம்பிக்கை ஏழாம் நூற்றாண்டில் இருந்தது. ஆகவேதான், ‘நாளும் கோளும் அடியார்களை நலிவுறச் செய்யமாட்டா’ என்று திருஞானசம்பந்தர் தமது ‘வேயுறுதோளி பங்கன்’ என்னும் பதிகத்தில் வலியுறுத்திக் கூறுகிறார். சமயஞ் சார்ந்த நூல்கள் தோன்றிட இவ்வழிபாடுகள் உதவின.

நம்பியாண்டார் நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பதினோராம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பியின் நூல்களும் இடம் பெற்றிருப்பதால், இத்திருமுறை அவர் காலத்திலேயோ அல்லது அவருக்குப் பின்னரோ தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். நக்கீரர், கபிலர், பாணர் முதலிய சங்க காலப் புலவர்களின் பெயர்களைத் தாங்கிய அடியார்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களைக் கபிலதேவ நாயனார், நக்கீரதேவ நாயனார் என்றே இத்திருமுறை குறிப்பிடுகிறது. சங்க இலக்கியமாகிய திருமுருகாற்றுப்படை இத்திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

6.2.1 நக்கீரதேவ நாயனார் இயற்றிய நூல்கள் கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி

இந்நூல் ‘அந்தாதி’யாக வரும் நூறு பாடல்களை உடையது. திருக்கைலை மலையும், திருக்காளத்தி மலையையும் மாறி மாறித் துதிக்கின்ற பாடல்களின் தொகுப்பாகும். முதல் பாடல் கைலையையும், இரண்டாம் பாடல் காளத்தியையும் குறிப்பதாலேயே இப்பெயர் பெற்றது.

பதினொராம் திருமுறையில் இந்நூல் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் அகத்துறைப் பாடல்கள் 25 உள்ளன. அஃறிணைப் பொருட்களை விளித்துத் தலைவி தூது விடுவதாக உள்ள பாடல்கள் பல. இயற்கை வர்ணனை மிகவும் குறைவு. சமயக் கருத்துகள் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன.

திருஎழு கூற்றிருக்கை

பதினொராம் திருமுறையில் உள்ளது. நக்கீரதேவர் பாடியது. ‘ஏழு கூறுகள் முறையாக அமையும்படி செய்யப்படும் சித்திரக் கவி வகை’ என்று திருஎழு கூற்றிருக்கைக்குப் பொருள். மிக முயன்று செய்கின்ற கவி எனவே, ‘மிறைக் கவி’ (சித்திரகவி) எனவும் அழைக்கப்படும். ஆசிரியப்பாவில் அமைவது. ஒன்று எனும் எண்ணுப்பெயரில் தொடங்கி, ஒவ்வொன்றாய்ப் படிப்படியாய் ஏறியும் இறங்கியும், ஒன்று முதல் ஏழு வரையில் எண்ணுப்பெயர்கள் அமையுமாறு பாடப்படும் செய்யுள் வகை. ஏழு எண்களும் ஏறியும், இறங்கியும் பாடலுள் அமைக்கப்படும் முறையை ஒரு படமாகப் பின்வருமாறு காட்டலாம்.

1

1 2 1

1 2 3 2 1

1 2 3 4 3 2 1

1 2 3 4 5 4 3 2 1

1 2 3 4 5 6 5 4 3 2 1

1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1

பாடலில் எண் ஏறிவரும் தன்மைக்குச் சான்றாக ஐந்துக்குரிய பின்வரும் பாடல் :

அந்நெறி

ஒன்று மனம்வைத்து இரண்டு நினைவிலோர்க்கு

முன்னெறி உலகம் காட்டினை ; அந்நெறி

நான்கென ஊழி தோற்றினை ; சொல்லும்

ஐந்தலை அரவசை கசைந்தனை ; நான்முகன்

மேன்முகக் கபாலம் ஏந்தினை ;

நூன்முக முப்புரி மார்பில் ;

இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய ஒருவ…

இங்கு எண்ணுப்பெயர் 1 2 3 4 5 4 3 2 1 என வருவது காணலாம். தமிழில் முதல் எழு கூற்றிருக்கை இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடியது. முதல் திருமுறையில் உள்ளது. இது சீர்காழி பற்றிய பாடல் ஆகும். அடுத்துத் தோன்றியது திருமங்கை ஆழ்வார் பாடியது. திருமால் பற்றியது. அதன்பின் நக்கீர தேவநாயனார் பாடிய இத் திருவெழுகூற்றிருக்கை சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது.

பெருந்தேவ பாணி

பதினொராம் திருமுறையில் உள்ளது. நக்கீர தேவ நாயனார் பாடியது. பாணி என்பது இசையோடு கூடிய பாட்டு. அது தெய்வத்தை முன்னிறுத்திப் பாடுவது. நக்கீரர் பாடிய இந்நூலில் ‘கூடல் ஆலவாய்க் குழகன்’ என்று வருவதால் ‘கூடல் ஆலவாய் அகவல்’ என்றே இதன் பெயர் இருக்கலாம். ஆசிரியப்பாவில் உள்ளது. தேவபாணி என்ற பெயர் தரப்பட்டுள்ளதே அல்லாது பிற பொருத்தம் இல்லை என்பார் மு.அருணாச்சலம்.

கோபப் பிரசாதம்

இறைவனது கோபமும் பிரசாதமுமாகிய (பிரசாதம் – அருள்) தன்மைகளை மாறிமாறிச் சொல்லுகின்ற சிறுபாடல். குற்றம் கூறிய தன்னைக் கோபித்துவிட்டுப் பின் தனது பாடல் கேட்டு (கைலை பாதி காளத்தி பாதி அந்தாதி) உவந்து கருணை செய்ததால் (பிரசாதம்) இப்பெயர் பெற்றது என்பர். நக்கீர தேவ நாயனார் பாடியது. பதினொராம் திருமுறையில் உள்ளது. ஆசிரியப்பாவில் அமைந்தது. 100 அடிகளைக் கொண்டது. ‘இன்னவை பிறவும் எங்கள் ஈசன் கோபப் பிரசாதம்’ என்று பாடலே கூறுகிறது. (அடி : 41-42) திருமாலுக்கு அருளியது தொடங்கிக் கருடனைக் காய்ந்தது வரையில் பிரசாதம், கோபம் ஒவ்வொன்றிலும் பதின்மூன்று தன்மைகள் மாறிமாறிச் சொல்லப்பட்டுள்ளன. அப்பர் தம் தேவாரத்தில் பயன்படுத்திய பழமொழிகள் எடுத்தாளப்பட்டுள்ளன.

போற்றிக் கலிவெண்பா

சிவனது வீரச்செயல்களையும், அருள் செயல்களையும் முறையாகக் கூறி, போற்றி என்ற சொல்லை இறுதியாக வைத்துத் துதிக்கின்ற பாடல்கள் ‘போற்றி’ என்ற பெயரிலேயே வழங்குவது மரபு. அப்பர் பாடிய ஒரு திருத்தாண்டகம், ‘போற்றித் திருத்தாண்டகம்’ என்பது. மாணிக்கவாசகர் பாடிய நான்காம் அகவல், ‘போற்றித் திருவகவல்’. அதே போல் நக்கீரர் பாடிய நூல், ‘போற்றிக்கலிவெண்பா’ ஆகும். பதினொராம் திருமுறையில் உள்ளது. 45 கண்ணிகளைக் கொண்டது. திருமால் சிவனது அடியையும், பிரமன் திருமுடியையும் காணாமை, காலனைக் காலால் உதைத்தமை என்று சிவபெருமானின் வீரச் செயல்களும், அருள் செயல்களும் முறையாகச் சொல்லிப் போற்றுகிறார். இறுதி வரிகளில் கண்ணப்பருக்கு அருள் செய்த திறத்தைத் துதித்துக் காளத்தியைப் போற்றுபவர்கள் சிவபெருமான் திருவடி நிழலைச் சேர்வர் என்று முடிப்பதையும் காணலாம்.

திருஈங்கோய்மாலை எழுபது

ஈங்கோய்மலை என்ற சிவதலத்தின் புகழைப் பாடும் 70 வெண்பாக்களைக் கொண்டது. பாடல் ஒவ்வொன்றும், “இத்தகைய பெருமை வாய்ந்த ஈங்கோய் சிவபெருமான் மலை” ஆகும் என்று பொருள்பட அமைந்துள்ளது. பாடல்தோறும் மலை, குன்று, சிலம்பு, வெற்பு, கடறு, பொருப்பு என்ற முடிவை உடையது. பாடல்களின் முதல் எழுத்துகள் அகரவரிசையில் உள்ளன. தலம் மலை ஆதலின், மலைவாழ் குறவர் குல மக்கள் வாழ்க்கை சொல்லப்படுகிறது. நயமான வர்ணனைகள் உள்ளன. ஒரு வேடன் வில்லில் அம்பு பூட்டி மானைக் குறி வைக்கிறான். அப்பெண் மானின் கண் தனது குறத்தியின் கண்ணை ஒத்து இருப்பதை உணர்ந்து கையில் கணையை நழுவ விட்டு, ‘மெதுவாகப் போ’ என்று அம்மானை எய்யாது அனுப்புகிறான்.

எய்யத் தொடுத்தான் குறத்திநோக் கேற்றதெனக்

கையில் கணைகளைந்து “கன்னிமான் – பையப்போ”

என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே ! தூங்கெயில்கள்

சென்றன்று வென்றான் சிலம்பு

(பாடல் – 12)

திருவலஞ்சுழி மும்மணிக் கோவை

பதினோராம் திருமுறை. சோழநாட்டுத் திருவலஞ்சுழி என்ற தலத்தில் எழுந்தருளிய சிவன் மீது ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் மூவகைப் பாக்களால் ஆக்கப்பட்ட நூல். அந்தாதியாக உள்ளது. 30 பாடல்களைக் கொண்டது மும்மணிக்கோவை என்று பாட்டியல் நூல் இலக்கணம் கூறும். ஆனால் இந்நூலில் 15 பாடல்கள் மட்டுமே அந்தாதி அமைப்பைப் பெற்றுள்ளன. இந்நூல் இனியது, குறைந்த சொற்களால் ஆக்கப்பட்டது. பொருள் செறிவு மிக்கது.

கார் எட்டு

‘கார்’ என்று முடியும் 8 வெண்பாப் பாடல்களைக் கொண்ட சிறு நூல். பிரிவால் வருந்தும் தலைவியிடம் தோழி, ‘கார்ப்பருவம் வந்தது. தலைவனும் வருவான். கவலைப்படாதே’ என்று கூறுவதாக உள்ளது. தலப்பெயர் இல்லை. பொதுவாகச் சிவபெருமானைப் போற்றிப் பாடப்பெற்றது.

திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

58 வரிகளைக் கொண்ட நீண்ட ஆசிரியப்பா. இதன் இறுதியில் ஒரு வெண்பா உள்ளது. மறம் என்றால் வீரம் என்று பொருள். சிவலிங்கத்தின் கண்ணில் வழிந்த இரத்தத்தை நிறுத்தத் தனது கண்ணை இடந்து அப்பிய கண்ணப்பரின் அருஞ்செயல் ‘மறம்’ எனப்படுகிறது. அது அவருக்கு வீடுபேறு தந்ததால், ‘திருமறம்’ ஆயிற்று. கண்ணப்பரின் வரலாற்றைச் சொல்லும் நூல் இது. சொல் செட்டு உடையது. வருணனை கலவாதது, உணர்ச்சி மிக்கது; சுவை உடையது. இதற்குப் பின் இரண்டு நூற்றாண்டுகள் கழித்துச் சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் 186 விருத்தப்பாக்களில் கண்ணப்பரது வரலாற்றைக் கூறுகிறார். அதற்கு மூலமாக அமைந்தது இந்த நூலே ஆகும். திருவெழுகூற்றிருக்கை யாப்பருங்கல விருத்தியில் சொல்லப்பட்டுள்ளது. அந்த நூல் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. எனவே நக்கீரர் எழுதிய நூல்கள் அதற்கு முன்னரே எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.

6.3 கபில தேவநாயனார் இயற்றிய நூல்கள்

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

மூத்தநாயனார் என்பது விநாயகரைக் குறிக்கும். 20 பாடல்களைக் கொண்ட நூல் இது. விநாயகரைக் குறித்து வெண்பா மற்றும் கட்டளைக் கலித்துறை ஆகிய இருவகைப் பாடல்கள் மாறி மாறி வர அந்தாதியாகப் பாடப்பட்ட நூல். கபிலதேவநாயனார் பாடியது. இவர் திருவாரூரில் வாழ்ந்தவர். இவர் பாடிய 3 நூல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. இவற்றில் 45 தலங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் 32 சோழநாட்டுக்கு உரியவை. இந்நூலில் வரும் ‘திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும்’, ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்’ என்ற இருபாடல்களும் இன்றுவரை மக்களால் பாடப்படுகின்றன. விநாயகரை, ‘ஆழ்வான்’ என்று குறிப்பிட்டுள்ளார் (பாடல்-3).

விநாயகக் கடவுளைக் குறித்துப் பாடப்பட்ட முதல் தமிழ்நூல் இது ஆகும். ‘அப்பம் அவலோடு எள் உருண்டை கன்னல் வடிசுவையில் தாழ்வான்’ (பாடல்-3), ‘வாழைக்கனி பலவின்கனி மாங்கனி தாம் சிறந்த கூழைச் சுருள் குழை அப்பம் எள்ளுருண்டை எல்லாம் துறுத்தும் பேழைப் பெருவயிறு’ (பாடல்-4) என்று உணவுப் பொருளில் விருப்பம் உள்ளவராக விநாயகரைக் காட்டுகிறார். இக்கருத்து மக்களிடையே இன்றளவும் வழங்கி வருவது கருதத்தக்கது.

சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை

37 பாடல்களைக் கொண்டது. அந்தாதி நூல். எனினும் நூலின் இறுதிச் செய்யுளின் சொல் முதல் செய்யுளின் தொடக்கமாக வரவில்லை. சிவன் கோவணம் உடுத்துப் பலி ஏற்ற செய்தி அதிகமாக இடம்பெறுகிறது. அகத்துறையில் பலபாடல்கள் உள்ளன. திருத்தலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ன. வர்ணனைகள், அகத்துறைக் கருத்துகள் அனைத்தும் சிவன் துதியாகவே உள்ளன.

சிவபெருமான் திரு அந்தாதி

நூறு வெண்பாக்களைக் கொண்ட நூல். அந்தாதி அமைப்புடையது. பல தலப்பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆனையூர், இடுமணல், கோவணம், தாங்கால், திருமாலுமங்கை, பனிச்சாங்காடு, வெள்ளங்காடு என்றெல்லாம் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள தலங்கள் குறித்து விளங்கவில்லை. சிவன் 1008 பேர்களைக் கொண்டவன் என்கிறது, ஒரு பாடல்(81). அகத்துறைப் பாடல்களே அதிகம் உள்ளன.

6.3.1 பரணர் பாடிய சிவபெருமான் திருஅந்தாதி அந்தாதி வகையில் 100 வெண்பாக்களைக் கொண்டது. பதினொராம் திருமுறையில் இந்நூல் இடம்பெற்றுள்ளது. 101ஆம் பாடலாக உள்ள தனிப்பாடல் ஆசிரியர் பெயரைக் கூறுகிறது. பத்துப் பாடல்களில், ‘ஆரூர்’ இடம் பெற்றுள்ளது. எனவே ஆசிரியர் திருவாரூரினர் என்பர். 64 பாடல்களில் தலப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 36 பாடல்களில் தலப்பெயர் இல்லை. சண்டீசருக்கு அருள் செய்தது (11), கண்ணப்பர் கண் தந்த செயல் (28) பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. நக்கீரதேவர், கபில தேவர், பரண தேவர் மூவரும் சமகாலத்தினர் எனலாம்.

6.3.2 கல்லாடதேவர் இயற்றிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம் 38 அடிகளைக் கொண்ட சிறுபாடல் இது. ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. கல்லாடதேவர் பாடியது. நக்கீரர் இதே பொருளில் பாடிய நூலுக்கு அடுத்து இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இதில் கண்ணப்பர் வரலாறு சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. கண்ணப்பர் என்ற பெயர் ஒரு இடத்திலும் இடம்பெறவில்லை. ‘வேட்டுவன்’ என்றே சொல்லப்பட்டுள்ளது. கோசரியார் என்று அந்தணர் பெயர் சொல்லப்பட்டுள்ளது. அனையவன் என்று ஓருமையில் தொடங்கி நூல் முடிவில் திருவேட்டுவர் என்று மரியாதைப் பன்மையில் முடித்து இருப்பது கண்ணப்பரிடம் நூலாசிரியருக்குள்ள ஈடுபாட்டைக் காட்டுகிறது.

6.3.3 பட்டினத்துப் பிள்ளையார் பாடிய நூல்கள் கோயில் நான்மணிமாலை

பட்டினத்தடிகள் பாடிய ஐந்து நூல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. திருமுறை ஆசிரியராகிய இவரும், துறவறத்தைப் பெரிதும் வலியுறுத்தியும் பெண்களைப் பழித்தும் பாடிய பட்டினத்தாரும் வெவ்வேறு காலத்தைச் சேர்ந்தவர்கள்.

கோயில் என்பது சிதம்பரம். நடராசப் பெருமான் துதியாக அமைவது இந்நூல். வெண்பா, கலித்துறை, ஆசிரியப்பா, விருத்தம் என்ற முறையில் மாறிமாறி அந்தாதியாக இந்த நூல் அமைந்துள்ளது. பட்டினத்தார் பாடினார். இவருக்கு முன் நான்மணிமாலை யாரும் பாடியதில்லை. பட்டினத்தடிகள் பாடிய கோயில்நான்மணிமாலையே இத்தகு இலக்கிய வகைக்கு முதல் நூல் ஆகும். இந்த நூலின் இறுதிப் பாடல் 53 அடிகளில் இறைவனைப் போற்றி, போற்றி என்று துதிக்கிறது. இந்நூலில் 11 பாடல்கள் அகத்துறையில் உள்ளன. இறைவனை ‘நாயனார்’ என்கிறார்.

திருக்கழுமல மும்மணிக்கோவை

‘கழுமலம்’ என்பது சீகாழி. சீகாழியில் உள்ள சிவபெருமானை ஆசிரியம், வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் மூவகை பாடல்கள் மாறிமாறி வர அந்தாதியாக இந்த நூல் அமைந்துள்ளது. ஆனால் பாடலின் இறுதித் தொடர் அங்ஙனம் அமையவில்லை. எனவே இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை என்று கருதுவதில் பிழை இல்லை. இந்த நூலில் 30 பாடல்கள் இருக்க வேண்டும். 12 பாடல்கள் மட்டுமே உள்ளன. பிற்காலத்தினர் 18 பாடல்களைச் சேர்த்து முப்பது பாடல் என்று கணக்கிட்டாலும், அப்பதினெட்டுப் பாடல்களில் சொல்லும், பொருளும் பிற்காலத்தனவாக உள்ளன என்று ம.பாலசுப்பிரமணிய முதலியார் கூறுவார். நொச்சியோ, கரந்தையோ, வெறும் இலையோ சிவனது வழிபாட்டுக்குப் போதுமானது என்று பட்டினத்தடிகள் கூறுவதைப் பாருங்கள். ‘நான் வழிபடும் நேரம்தான் பொழுது, இட்டதே மலர், சொன்னதே மந்திரம் ஏற்றுக்கொண்டு என்னை நீ காக்க வேண்டும்’ என்கிறார்.

இயன்றதோர் பொழுதின் இட்டது மலரா

சொன்னது மந்திரமாக, என்னையும்

இடர்ப்பிறப்பு இறப்பெனும் இரண்டின்

கடற்படா வகை காத்தல் நின்கடனே

(வரிகள்26-29,பாடல்7)

என்பதே அந்தப் பாடல்.

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

இந்த நூலில் 30 பாடல்கள் உள்ளன. பட்டினத்தடிகள் பாடியது. சைவர்களால் பெரிதும் பயிலப்படும் நூல் ஆகும். ‘உமையொரு பாகன்’ வடிவம் பாதம் முதல் தலைமுடி வரை வர்ணிக்கப்படுகிறது. திருவடி, திருவின் ஆகம் (மார்பு), திருக்கரம், திருநெடுநாட்டம் (கண்கள்), திருமுடி என்று ஆறு பகுதிகளாக அர்த்த நாரீசுவரர் வடிவத்தைப் பட்டினத்தடிகள் இந்த நூலில் வர்ணித்திருப்பதைப் போல் வேறு எங்கும் இடம் பெறவில்லை. பட்டினத்தடிகள் திருவுருவ வர்ணனையாகக் கூறும் விளக்கங்களில் பல சிற்ப சாத்திரங்களிலும் காணப்படுவது அறியத்தக்கது. மொழி ஆய்வு செய்பவருக்கு இந்த நூலில் இடம்பெறும் சொற்கள் சிறந்த ஆய்வுத் தளமாகத் திகழும். சிறந்த சைவ சமய நூல்.வாழ்வில் நல்ல கதி அடைய விரும்பும் சைவர்களுக்கு விளக்கமாக இந்த நூல் வழி காட்டுகிறது.

திரு ஏகம்பமுடையார் திரு அந்தாதி

காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதரைத் துதிக்கும் பாடல் இது. கட்டளைக் கலித்துறை வடிவத்தில் அந்தாதியாக அமைந்து 100 பாடல்களைக் கொண்டுள்ளது. துதிப்பாடல்கள் அகத்துறையில் அமைந்துள்ளன. அர்த்த நாரீசுவரத் தோற்றம் புகழப்படுகிறது. தலங்களின் பெயர் கூறித் துதிக்கும் தன்மையது. ஓரளவு துதியும், அகத்துறையும் மாறிமாறிப் பத்துப் பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது.

திரு ஒற்றியூர் ஒருபா ஒருபஃது

‘ஒருபா ஒருபஃது’ என்பது சிற்றிலக்கிய வகையில் ஒன்றாகும். வெண்பாவிலாவது, அகவல் பாவிலாவது பத்துப்பாடல் பாடுவது என்று பன்னிருபாட்டியல் இதற்கு இலக்கணம் கூறுகிறது. பட்டினத்தடிகள் பாடியநூல். அகவற்பாவால் அமைந்தது. திருவொற்றியூர் என்ற தலத்தில் எழுந்தருளிய சிவனை ஒவ்வொரு பாடலிலும் முன்னிறுத்திப் போற்றும் முறையில் அமைந்துள்ளது.

திருவிசைப்பா திருப்பல்லாண்டு (அ) ஒன்பதாம் திருமுறை

ஒன்பதாம் திருமுறை, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்றே பெயர் பெறும். இதில் 28 திருவிசைப்பாப் பதிகங்களும், ஒரு திருப்பல்லாண்டுப் பதிகமும் உள்ளது. ‘இசைப்பா’ என்பதால் இது தேவாரங்கள் போல இசைக்கு உரியது என்பது தெளிவு, பரம்பொருளின் புகழை இசைக்கின்ற பா என்று பொருள் கொள்ளத் தகுந்தது. இதைப் பாடியவர்கள் ஒன்பதின்மர் ஆவர். அவர்களது பெயர், அருளிச்செய்த பதிகங்களின் தொகை ஆகியவற்றைப் பழம் பாடல்கள் முறையாகச் சொல்கின்றன.

திருவிசைப்பாப் பாடினோர் திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பி காட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகிய ஒன்பதின்மர்.

இவர்களில் அதிகமான பதிகங்கள் பாடியவர் கருவூர்த்தேவர். அவர் பாடிய பதிகங்கள் பத்து. நான்கு பதிகங்கள் பாடியவர் திருமாளிகைத் தேவரும், திருவாலி அமுதனாரும் ஆவர். சேந்தனார் திருவிசைப்பா மூன்றும், திருப்பல்லாண்டு ஒன்றும் ஆக நான்கு பதிகங்களைப் பாடியுள்ளார். இரண்டு பதிகம் பாடியவர்கள் பூந்துருத்தி நம்பியும், புருடோத்தம நம்பியும் ஆவர். ஏனையோர் ஒவ்வொரு பதிகமே பாடி உள்ளனர்.

திருமுறைகள் பன்னிரண்டிலும், ஒன்பதாம் திருமுறையே அளவில் மிகவும் சிறியது. பழம்பாடல் ஒன்று 345 என்று பாடல் தொகை கூறும். ஆனால் கிடைத்திருப்பது 301 தான். கருவூர்த் தேவருடைய திருப்பூவணப்பதிகம் எட்டே பாடல்களைக் கொண்டது. பூந்துருத்தி நம்பி காட நம்பியின் திருவாரூர்ப் பதிகம் இரண்டே பாடல்களைக் கொண்டது. ‘சாளரபாணி’ என்ற பண் இத்திருமுறையில் மட்டுமே உள்ளது. சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறையின் இறுதிப்பகுதி ஆகும். சிவனுக்கு வேறு எங்கும் திருப்பல்லாண்டு பாடப்படவில்லை. சோழ அரசன் கண்டராதித்தனும், தீண்டாத வகுப்பைச் சேர்ந்த சேந்தனாரும் பதிகம் பாடிய சிறப்பு இத்திருமுறைக்கே உரியது. பதிகங்கள் யாவும் சிவனையே துதிப்பவை. முருகன் மீது சேந்தனார் பாடிய திருவிசைப்பா ஒன்றே ஒன்று உள்ளது. இதிலுள்ள 29 பதிகங்களில் 16 பதிகங்கள் தில்லைக்கு உரியன. தில்லைத் திருமுறை என்றே இதைக் கூறவும் இடம் தருகிறது. இத்திருமுறையில் சொல்லப்பட்ட தலங்கள் 14. தில்லைக்குரியன 16 பதிகங்கள். ஏனைய தலங்களாவன; வீழிமிழலை, ஆவடுதுறை, திருவிடைக்கழி (சேந்தனார்) களந்தை ஆதித்தேச்சுரம், கீழக்கோட்டூர் மணியம்பலம், முகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கைகொண்ட சோழேச்சுரம், பூவணம், சாட்டியக் குடி, தஞ்சை இராசராசேச்சுரம், இடைமருதூர் (கருவூர்த் தேவர்), ஆரூர் (பூந்துருத்தி நம்பிகாட நம்பி) என்பன. பதிகம் ஒவ்வொன்றுக்கும் பண் கூறப்பட்டுள்ளது. யார் பண் வகுத்தார்? எப்போது வகுத்தார்? என்பது தெரியவில்லை. இங்குப் பயிலும் பண்கள் ஆறு ; அவற்றில் பஞ்சமம் – 21, காந்தாரம் – 2, புறநீர்மை – 3, நட்டராகம் – 1, இந்தளம்-1, சாளரபாணி-1 என்பன.

சோழர் காலம் சைவத்துக்குப் பொற்காலம் எனலாம். மன்னர்கள் ஆழ்ந்த சிவபக்தர்களாகத் திகழ்ந்தனர். ஆலயங்களை எழுப்பினர். அவற்றைப் பொற்கூரைகளால் அலங்கரிக்க முற்பட்டனர். மடங்கள் தானங்கள் பெற்றன. ஆலயங்களில் தேவாரத் திருவாசகப் பாடல்கள் ஒலித்தன. நம்பியாண்டார் நம்பி திருமுறைகளாகத் தொகுக்கத் தூண்டிய சூழல் நிலவியது எனலாம். சிவனைத் துதிக்கும் பக்திச் சுவை கனிந்த பாடல்களும், பாசுரங்களும் ஆக்கப்பட்ட நிலையின் அடுத்த கட்டமான, சைவப் பெரியோர்கள் துவக்கிய வழியில் சமயப் பெரியார்கள் சைவ சித்தாந்தங்களை உருவாக்கும் பணிக்கு இக்காலம் தளமமைத்துத் தந்தது. சிற்றிலக்கியங்கள் இலக்கிய தளத்தில் கால் பதிக்கும் நிலை நேரிட்டது.

6.4 வைணவ இலக்கியம்

பத்தாம் நூற்றாண்டில் எந்தத் தமிழ்நூலும் வைணவத்தில் தோன்றவில்லை. சோழ அரசர்கள் அனைவரும் சைவ சமயத்தினர் என்பது கருதத்தக்கது. சைவர்-வைணவர் போட்டிகள் நடந்தன. வீரராசேந்திரன் காலத்திலும், அதிராசேந்திரன் காலத்திலும் வைணவர் கலகம் நடந்துள்ளன. நாதமுனிகள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்த த்தைத் தொகுத்தார். நாதமுனியின் சீடர் யமுனாச்சாரியார் விவாதங்களில் ஈடுபட்டு வென்று, ‘ஆளவந்தான்’ என்று போற்றப்பட்டார்.

6.4.1 தனியன்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களைப் போற்றியும், ஆழ்வார்களைப் போற்றியும் சிலசில தனிப்பாடல்கள் இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்டன. இலக்கியங்களுக்கு இவ்வாறு அமையும் சிறப்புப் பாடல்களுக்குப் ‘பாயிரம்’ என்று பெயர். அதுபோல் இத்தனிப் பாடல்களை வைணர் தனியன் என்பர். இங்ஙனம் இக்காலக்கட்டத்தில் சுமார் நாற்பதுபேர் தனியன்களைப் பாடியுள்ளனர். சிலர் நன்கு பெயர் தெரிந்தவர்கள். பலர் ஒரே ஒரு தனியன் செய்ததால்மட்டுமே அறியப் படுபவர்கள். அவ்வகையில் இந்த நூற்றாண்டில் வாழ்ந்து தனியன் பாடியவர்கள் பற்றிக் காணலாம்.

உய்யக்கொண்டார் ‘தனியன்’

உய்யக்கொண்டார் திருவெள்ளறையில் பிறந்தவர்; நாதமுனிகளின் சீடராக இருந்தவர். ஆண்டாள் பாடிய திருப்பாவைக்குரிய இரண்டு தனியன்களும் உய்யக்கொண்டார் செய்தவை என்பர்.

எடுத்துக்காட்டாக,

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்

பன்னு திருப்பாவை பல்பதியம் – இன்னிசையால்

பாடிக் கொடுத்தான் நாற்பாமாலை பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

மணக்கால் நம்பி தனியன்

நம்பி மணக்கால் என்ற ஊரில் பிறந்தவர். உய்யக்கொண்டாரின் சீடர். அவரிடம் சகல சமய நூல்களையும் கற்றவர். குலசேகர ஆழ்வார் பாசுரங்களாகிய பெருமாள் திருமொழிக்கு இவர் தனியன் பாடினார்.

பெருமாள் திருமொழிக்குரிய மற்றொரு தனியனை இயற்றியவர் இராமானுஜர் என்பது அறிஞர் பலரின் கருத்து.

குருகை காவலப்பன் தனியன்

இவர் நாதமுனிகளின் சீடர். பேயாழ்வாருடைய மூன்றாம் திருவந்தாதி க்கு உரிய தனியன் இவர் அருளியது என்பர்.

சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்

காரார் கருமுகிலைக் காணப்புக்கு -ஓராத்

திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் சூழலே

உரைக்கண்டாய் நெஞ்சே யுகந்து.

ஈசுவரமுனி தனியன்

ஈசுவரமுனி நாதமுனிவரது புதல்வர் ; ஆளவந்தாருடைய

தந்தை. இவர் நம்மாழ்வாரது திருவாய்மொழிக்குத் தனியன்

அருளிச் செய்துள்ளார்.

திருவழுதி நாடு என்றும் தென்குருகூர் என்றும்

மருவினிய வண்பொருநல் என்றும் – அருமறைகள்

அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்

சிந்தியாய் நெஞ்சே தெளிந்து.

திருக்கண்ணமங்கையாண்டான் ‘தனியன்’

நாதமுனியின் சீடர்களில் ஒருவர். ஆண்டாள் அருளிய

நாச்சியார் திருமொழி க்கான தனியன் இவர் செய்தது.

அல்லிநாள் தாமரைமேல் ஆரணங்கின் இன்துணைவி

மல்லிநாடு ஆண்ட மடமயில் – மெல்லியலாள்

ஆயர்குல வேந்தன் ஆகத்தாள், தென்புதுவை

வேயர் பயந்த விளக்கு.

வங்கிபுரத்து ஆய்ச்சி தனியன்

மணக்கால் நம்பியின் சீடர்களில் ஒருவர். கலிப்பாட்டாக ஒரு நீண்டபாடல் செய்துள்ளார். அதில் ஆழ்வார்களைக் குறிப்பிட்டு, திருமாலின் தலங்கள் நூற்றெட்டினையும் குறிப்பிடுகிறார். இந்நூலின் இறுதிப்பாடல் நூலாசிரியர் வங்கிபுரத்தாய்ச்சி என்று பெயரைக் குறிப்பிடுகிறது.

நாதமுனிகள் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பரமபதம் அடைந்தார். இங்குக் குறிப்பிட்டுள்ளவர்கள் அனைவரும் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவர்.

6.5 சமண இலக்கியம்

பத்தாம் நூற்றாண்டில் சோழர் பேரரசு வளர்ந்து வருவதும், பிற அரசுகள் யாவும் அதற்கு அடிபணிந்து விட்டதுமான அரசியல் சூழல் இலக்கிய ஆக்கத்திற்கு உகந்ததாக அமைந்தது. காப்பியம், இலக்கிய, இலக்கண சமயஞ்சார்ந்த நூல்கள் எழத் தொடங்கின.

காப்பிய நூல்கள்

காப்பியத் துறையில் பத்தாம் நூற்றாண்டு மிகவும் சிறப்புடையது. அது வடமொழியில், ‘காவியம்’ என்று அழைக்கப்படும். அறம், பொருள், இன்பம், வீடு (மோட்சம்) எனும் உறுதிப்பொருள் நான்கையும் உணர்த்துவது பெருங்காப்பியம் ஆகும். மக்கள் மேல்நிலைக்கு வரத் தூண்டுகோலாக இருக்கும்படி தன்னிகரற்ற தலைவன் ஒருவனின் வரலாற்றை எல்லாக் கவிச்சுவையும் பொருந்துமாறு பாடுவது, பெருங்காப்பியம் என்று நாம் வரையறுக்கலாம். அவ்வகையில் சூளாமணி, நீலகேசி போன்ற நூல்கள் இக்காலத்தில் தோன்றின.

6.5.1 சூளாமணி சூளாமணி விரிவான சமண சமயக் காப்பியம் ஆகும். பழங்காலத்து உரையாசிரியர் சீவகசிந்தாமணியிலும் சிறப்பாக இதை மேற்கோள் காட்டியிருப்பதிலிருந்து இதன் சிறப்புப் புலனாகும். ஆனால் சிந்தாமணி அளவு இந்த நூலைத் தமிழர் விரும்பிப் படித்ததாகத் தெரியவில்லை. சிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதிச் சிறப்பித்துள்ளது போல் சூளாமணிக்கு எழுதவில்லை. 1886இல் சி.வை.தாமோதரம் பிள்ளை சூளாமணியைப் பதிப்பித்தார். 1954வரை வேறு பதிப்புகளே வரவில்லை. ஆனால் உ.வே.சாமிநாத அய்யர் சீவகசிந்தாமணியைத் தொடர்ந்து பதிப்பித்துக் கொண்டே இருந்தார். மிகுதியாகப் பயிலப்படாததற்கு இவை காரணங்களாக இருக்கலாம்.

சூளாமணியை அச்சிட்ட தாமோதரம் பிள்ளை இது ஐஞ்சிறுகாப்பியங்களுள் இரண்டாவது என்று ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார். சூளாமணியைச் சிறுகாப்பியம் என்பது பிழை. உண்மையில் இது சிந்தாமணி போல் பெருங்காப்பியமே என்பார் மு.அருணாச்சலம் பிள்ளை அவர்கள்.

சூளாமணி, பாயிரம், 12 சருக்கங்கள், 2131 விருத்தப்பாக்கள் கொண்டது. முதல் பாடல் அருகன் துதி ஆகும். இறுதிப்பாடல் ‘செஞ்சொல் புராணத்துறையில் வழி வந்தது இது’ என்கிறது. இப்புராணம் சமண மகாபுராணம் போலும். இந்நூலுக்குப் பதிகம் இல்லை.

சூளாமணி என்ற பெயர் இந்த நூலில் நான்கு இடங்களில் இடம் பெற்றுள்ளதால், அதுவே இந்நூலுக்குப் பெயராயிற்று என்பர். சமண சமயத்து 24 தீர்த்தங்கரர் சரித்திரத்தைக் கூறுவது வடமொழியில் உள்ள ‘மகாபுராணம்’ என்ற நூல் ஆகும். சூளாமணி அதிலிருந்து எடுத்து விரித்த நூல் ஆகும். வடமொழி நூலான மகாபுராணம் சமணருக்குச் சூளாமணி. ஆதலால் அதன் ஒரு பகுதியைத் தமிழில் கூறும் இந்த நூலும் அப்பெயரால் அழைக்கப்பட்டது எனலாம். தோலாமொழித் தேவர் இந்த நூலின் ஆசிரியர் ஆவார். அவர் ‘சூளாமணி’ என்ற பாண்டியன் காலத்தே வாழ்ந்தவர். நூல் அவனது பெயரால் வழங்கப்பட்டது என்றும் சிலர் கூறுகிறார்.

‘தோலாமொழி’ என்றால் ‘பொய்யாத வாக்கு’ என்று பொருள். தோலா நாவில் (308வது பாடல்) ‘ஆர்க்கும் தோலாதாய்’ (பாடல் 1473) என்று இரண்டு இடங்களில் வருகிறது. எனவே அது இவரது சிறப்புப் பெயராக இருக்கலாம். ஸ்ரீவர்த்த தேவர் என்பது இயற்பெயர் என்பர். வடமொழியில் சிறந்த காப்பியமாகத் திகழ்ந்த, ‘சூடாமணி’யை ஸ்ரீவர்த்த தேவர் செய்தார் என்கிறது ஒரு பாடல். ஸ்ரீவர்த்த தேவர் என்ற பெயர் தமிழரால் ‘தோலாமொழித் தேவர்’ என்று சிறப்பிக்கப்பட்டிருக்கலாம். சோழரது அவையில் நூலை அரங்கேற்றியதாகப் பாயிரம் சொல்கிறது. எனவே இவர் சோழநாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகிறது. சோழரது அடையாளப் பொருட்களை இவரது பாடல் விரித்துக் கூறுவதும் கருதத்தக்கது.

சூளாமணியின் கதை தமிழில் அதிகம் பிரபலம் அடையவில்லை. போதனமா நகரத்தின் அரசன் பயாபதி. அவனுக்கு விசயன், திவிட்டன் என்று இரண்டு மகன்கள். வித்தியாதர அரசன் மகள் சுயம்பிரபை. திவிட்டன் தன்னைத் தாக்க வந்த சிங்கத்தின் வாயைப் பிளந்து கொல்கிறான். இது கண்டு மகிழ்ந்த வித்தியாதரன் தனது மகள் சுயம்பிரபையைத் திவிட்டனுக்கு மணமுடித்துத் தருகிறான். பொறாமை கொண்ட பகைவேந்தன் அச்சுவகண்டன் படையெடுத்து வரத் திவிட்டன் அவனை அழிக்கிறான். மக்கள் திவிட்டனை வாசுதேவன் என்றும் விசயனைப் பலராமன் என்றும் போற்றி முடிசூட்டினர். உரிய காலத்தில் சுயம்பிரபைக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர். அவர்கள் வளர்ந்தபின் சுயம்வரம் நடத்தி முறையாக மணம் செய்விக்கப்பட்டனர். பயாபதி மன்னன் தன் தேவியரோடு துறவு பூண, விசய திவிட்டர் நாட்டை நன்முறையில் ஆட்சி செய்வதாகக் கதை முடிகிறது. ‘அருங்கலம்’ என்ற சொல் நூலில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வடசொற்கள் சிறப்பாகத் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளன.

6.5.2 நீலகேசி நீலகேசியின் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. ஒரு கற்பனை உலகில் தன் கதாநாயகியை நிறுத்திக் கதையை நடத்திக் கொண்டு போகிறாரே தவிர, தம்மைப் பற்றியோ, தம் இடத்தைப் பற்றியோ, காலத்தைப் பற்றியோ எந்தக் குறிப்பையும் தரவில்லை. காப்பியத் தன்மை சிறிதுமே பொருந்தாத நீலகேசியைச் சிறுகாப்பியம் என்பதுதான் நியாயம் என்பார் மு.அருணாச்சலம். கேசி என்றால் அழகிய கேசத்தை உடையவள் என்று பொருள். நீலகேசி என்பது பெண்பாற் பெயர். ‘நீலகேசித் திரட்டு’ என்றும், ‘நீலகேசித் தெருட்டு’ என்றும் வழங்குவது உண்டு. நீலகேசி பாயிரமும், பத்துச் சருக்கங்களும், 894 பாடல்களும் உடையது. உரைகாரர் ஒவ்வொரு சருக்கத்தின் இறுதியிலும், நீலகேசித் திரட்டு என்றே கூறுகிறார்.

நீலகேசித் திரட்டு – நீலகேசி செய்த வாதங்களின் திரட்டு

நீலகேசித் தெருட்டு – நீலகேசி வாதம் செய்து அறிவைத் தெருட்டியது

என்று பொருள்படும். யாப்பருங்கல விருத்தி 2 இடங்களில், ‘நீலகேசி’ என்றே குறிப்பிட்டுள்ளபடியால் ‘நீலகேசி’ என்றே கொள்வதற்கு உரியது.

‘நல்லார் வணங்கப்படுவான்’ என்ற அருகன் பாடல் முதல் துதி. பாஞ்சால தேசத்தைச் சமுத்திரராசன் ஆள்கிறான். அந்நகரில் பலாலையம் என்ற சுடுகாட்டில் காளி கோவில் இருந்தது. அதில் முனிச்சந்திரன் எனும் சமணமுனிவர் தவம் செய்து வந்தார்.அரசிக்கு ஆண்மகவு பிறந்தது. மக்கள் நன்றி செலுத்தக் காளிக்குஆடுகளைப் பலியிட வருகின்றனர். முனிவர் அகிம்சையைப் போதித்துப் பலியை நிறுத்துகிறார். சினமுற்ற காளி நீலியிடம் முறையிடுகிறது. பழையனூர் நீலி முனிவனை அஞ்சுவிக்க முடியாமல் அழகிய பெண் வடிவில் வந்து மயக்க முயன்று தோற்கிறாள். முனிவனிடம் அகிம்சை உபதேசம் பெற்று, அதைப் பரப்பும் பணி மேற்கொள்ளலானாள். காம்பிலி நகரில், வாதிட்டு அறைகூவி குண்டலகேசி புத்த சமயத்தை நிலைநாட்டி இருந்தாள். நீலகேசி அங்கே சென்று அரசன் முன்னிலையில் குண்டலகேசியின் கூற்றுக்கள் அனைத்தையும் முறியடித்து வெற்றி பெற்று, அவளது ஆசிரியனான அருக்க சந்திரனை உச்சயினியில் வென்று சமணன் ஆக்குகிறாள். பதுமபுரம் சென்று மொக்கலன் எனும் புத்த சமயத்தவனை வென்று சமணன் ஆக்குகிறாள். புத்தனையே வெல்ல எண்ணி, கபிலபுரம் செல்கிறாள். ஆன்மா ஒன்று உண்டு என்பதை நிலைநாட்டி புத்தரை வெற்றி கொள்கிறாள். அகிம்சைக்கு உடன்பட்டாலும் பௌத்தர்கள் புலால் உண்பதைக் கடிகிறாள். பின்னர் நீலகேசி ஆகாய மார்க்கமாகச் சென்று ஆசீவகம், சாங்கியம், வைசேடிகம், வேதவாதம், பூதவாதம் ஆகிய ஐந்து சமய வேதங்களை வென்று, அரசனாலும் மக்களாலும் நன்கு மதிக்கப்பட்டு சமண சமயத்தை வளர்த்து வந்தாள் என்று நூல் முடிகிறது.

6.5.3 பிற சமண நூல்கள் மேற்குறிப்பிட்டவற்றைத் தவிர வேறு சில நூற்களைப் பற்றிய செய்திகள் உள்ளன.

அமிர்தபதி

யாப்பருங்கல விருத்தி ஆசிரியர் இதன் பெயரைக் குறிப்பிட்டு, முதல் வரியையும் குறிப்பிட்டுள்ளார். ‘குற்றங்கள் மூன்றும் இலனாய்க் குணங்கட்கு இடனாய்’ என்ற வரி அருகனது துதி என்பதால், அமிர்தபதி சமணநூல் எனலாம். “சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி, அமிர்தபதி என்றிவற்றின் முதல் பாட்டு வண்ணத்தான் வருவன” என்று எழுதுகிறார் உரைகாரர். இக்காப்பியம் செய்தவர் யார்? இக்காப்பியத்தின் கதை யாது? வரலாறு என்ன என்று எதையும் அறிந்து கொள்ள இயலவில்லை.

நாரத சரிதை

புறத்திரட்டில் இந்த நூல் சொல்லப்பட்டுள்ளது. பெயர் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. ஸ்ரீபுராணத்தில் நாரதன், பர்வதன் என்ற இருவரது வரலாறு சொல்லப்பட்டுள்ளது. அவ்விருவருள் நாரதன் என்பவன் சரிதத்தை இந்நூல் புனைந்து புராணமாகக் கூறுவது ஆகலாம் என்பது அறிஞர் கருத்து. பெண்ணைப் பழிக்கும் ஒரு பாடல், துறவைப் போற்றும் இரு பாடல்கள், பொதுமகளிர் பற்றி ஒரு பாடல், அரசனது சிறப்பு, அவனது நகரம் பற்றி ஒவ்வொரு பாடல், பிற பாடல்கள் 2 என்று மொத்தம் 8 பாடல்கள் புறத்திரட்டில் இடம்பெற்றுள்ளன. அதை ‘நாரத சரிதை’ என்பர்.

மங்கல சரிதை, வாமன சரிதை

‘செய்வித்தானால் பெயர் பெற்றவை பிங்கல சரிதை, வாமன சரிதை’ என்று நவநீதப் பாட்டியல் 66ஆம் கலித்துறை உரையில் உரைகாரர் எழுதுகிறார். ஆனால் இந்த நூல்கள் இன்று இல்லை. நூற்பொருள் என்னவென்றும் தெரியாது.

சினேந்திரமாலை எனும் சோதிட நூல்

உபேந்திராச்சாரியார் எனும் சமண மாமுனிவர் செய்தது. சினேந்திர மாலை ஆகும். சிலப்பதிகார அரும்பத உரையில் மேற்கோள் ஆக ஒரு பாடல் தரப்பட்டுள்ளது. “கேவல்ய ஞானம், சினேந்திர மாலை” ஆகிய சொற்கள் உள்ளதால் ஆசிரியர் சமணர் என உணரலாம். ஆனால் சமயக் கலப்பற்றே நூல் செய்யப்பட்டுள்ளது. 464 வெண்பாக்கள் உள்ளன. 23 காண்டங்களாக நூல் அமைந்துள்ளது.

சினேந்திரன் – அருகன், இந்நூலுக்குப் பழைய உரை உண்டு. மரக்கல வரவு பற்றிச் சொல்வதால், சோழமன்னர் கடற்படை வைத்துச் சிறப்புடன் ஆண்ட காலத்தில் வாழ்ந்த புலவர் செய்த நூல் இது எனக் கொள்ளலாம். ‘உபேந்திராச்சாரியார் என்னும் சமண மாமுனிவர் செய்தருளிய சினேந்திரமாலை மூலமும் உரையும் தஞ்சை தி.சாமிநாத சோதிடர் பார்வை’ என்ற குறிப்புடன் இந்நூல் பதிக்கப்பட்டுள்ளது.

திரையக் காணம்

யாப்பருங்கல விருத்தி உரையில் இந்த நூல் சொல்லப்பட்டுள்ளது. ‘திரையக் காணம்’ என்பதன் திருத்தமான வடிவம் திரேக்காணம் என்பது. இது, ஒரு இராசியில் மூன்றில் ஒரு பாகம் என்று சோதிட நூல்கள் கூறும். முதல் இரண்டு பாடல்கள், பின் இரண்டு பாடல்களில் வெண்பா ஒன்று, சந்த விருத்தம் ஒன்று என்று 4 பாடல்களே கிடைத்துள்ளன. இப்பாடல்கள் தரும் பொருளில் இருந்து இது சோதிடநூல் என்று மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது.

6.6 பௌத்த இலக்கியம்

சைவ, வைணவ சமயங்களின் எழுச்சியும், தேவார, திருவாசக, திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் ஆலயங்களில் கூட்டு வழிபாட்டு முறையில் துதிக்கப்படும் பாடல்களாக மாறிய நிலையும், பௌத்த, சமண சமயங்களின் செல்வாக்கை இழக்கச் செய்தன. நாகைப்பட்டினம் இக்காலத்தில் பௌத்தர்களின் இருக்கையாக நீடித்தது. தமிழகத்து மக்கள் மத்தியில் முற்றாகப் பௌத்தக் கொள்கைகள் அகற்றப்படவில்லை என்பதை இக்கால இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன.

6.6.1 குண்டலகேசி குண்டலகேசி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. பௌத்த சமயத்தைச் சார்ந்த நூல். பௌத்தர்கள் செல்வாக்கு இந்தியாவில் பின்னாளில் குறைந்துமறைந்தது போலவே இந்த நூலும் இறந்து போயிற்று. கேசி என்றால் கேசம் ; கூந்தல் ; சுருண்ட கூந்தல் உடைய கதைத்தலைவி குண்டலகேசியின் பெயரால் இக்காப்பியம் அமைந்துள்ளது. இதன் பாடல்கள் 19 புறத்திரட்டு எனும் நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன.

சொற்சுவை, பொருள்சுவை நிறைந்து உலக நீதிகளை உணர்த்தும் பாடல்களாகக் கிடைத்திருக்கும் பாடல்கள் உள்ளன. சான்றுக்கு ஒரு பாடலைப் பார்க்கலாம்.

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்

காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்

மீளும் இவ்வியல்பும், இன்னே மேல்வரும் மூப்புமாகி

நாளும்நாள் சாகின்றோமால் நமக்குநாம் அழாதது என்னே.

குண்டலகேசி தமிழில் இறந்து போன நூல். நீலகேசி நூலின் இரண்டாவது சருக்கம், குண்டலகேசி வாதச் சருக்கம் என்று உள்ளது. அதில் ஏறக்குறைய 100 குண்டலகேசிப் பாடல்களது முதல் குறிப்பை எடுத்துத் தந்து மறுக்கிறது. அவற்றில் 4 பாடல்கள் மட்டுமே முழுப்பாடல்கள். நீலகேசியின் உரை (பதினைந்தாம் நூற்றாண்டையது) தமிழில் குண்டலகேசியின் வரலாற்றைச் சொல்லும் நூல் ஆகும். இதில் முழுவடிவத்துடன் 24 பாடல்கள் உள்ளன. குண்டலகேசியை ‘நாதகுத்தனார்’ செய்தார் என்று நீலகேசி உரையில் குறிப்பு உள்ளது. நாத குப்தனார் என்றும் வழங்கப்படும். அவரைக் குறித்த எந்த வரலாறும் விளங்கவில்லை.

குண்டலகேசி – நீலகேசி தொடர்பு

நீலகேசியின் மொக்கலவாதச் சருக்கத்தில் (286) சமய திவாகர முனிவர் தம் உரையில் குண்டலகேசி வரலாற்றைக் கூறுகிறார். ‘குண்டலகேசி என்பவள் ஒரு வைசிய கன்னிகை. அவள் ஒருநாள் விளையாடும் போது அவ்வழியே திருடனாகிய ‘காளன்’ என்பவனைக் கொலைத் தண்டனையை நிறைவேற்றும்பொருட்டுக் காவலர் அழைத்துச் செல்கின்றனர். குண்டலகேசி அவனைக் கண்டு காதல் கொள்கிறாள். அவளது தந்தை அரசனைக் கண்டு காளனை மீட்டு அவளுக்கு மணமுடித்து வைக்கிறான். ஒரு நாள், நீ கள்வன் அன்றோ என்று சொல்லிவிடுகிறாள். சினமுற்ற அவன் அவளைத் தனியே அழைத்துக் கொண்டு மலையுச்சியை அடைந்ததும், நீ இவ்வாறு சொன்னதால் யான் உன்னைக் கொல்லத் துணிந்தேன்’ என்கிறான். இவளும் ‘தற்கொல்லியை முற்கொல்லிய’ எனவே நான் உன்னைக் கொல்வேன் என எண்ணுகிறாள். நான் சாவதானால் உன்னை வலம் வந்து சாவேன் என்கிறாள். அதற்கு இசைந்த காளனை வலம் வந்து அவனை மலையில் இருந்து கீழே தள்ளிவிடுகிறாள். அவன் இறக்கிறான். குண்டலகேசியோ, பிற சமயங்களை எல்லாம் அறைகூவி வென்று பௌத்த தரிசனம் கொண்டு முக்தி அடைகிறாள். குண்டலகேசி கதை வடமொழியில் பல இடங்களில் சொல்லப்பட்டு உள்ளது.

நீலகேசியின் காலம் பத்தாம் நூற்றாண்டு ஆகும். குண்டலகேசியின் காலம் பற்றிச் சொல்லுவதற்குரிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. ஆனால் குண்டலகேசியின் பாடலை எடுத்து ஒவ்வொன்றாக நீலகேசி மறுப்பதால் இது நீலகேசிக்கு முந்தியது என்பது விளங்கும். எனவே, இரண்டு நூல்களும் ஒரே நூற்றாண்டில் சற்று முன்பின்னாகத் தோன்றின என்று கொள்ளலாம்.

6.6.2 பெரும்பொருள் விளக்கம் எட்டாம் நூற்றாண்டில் தோன்றி இன்று இல்லாது போன சிற்றட்டகம் என்ற நூல் ஆசிரியப்பாவால் செய்யப்பட்ட சிறு அகப்பொருள் இலக்கிய நூலாகும். அதுபோலப் புறப்பொருளுக்குச் செய்யப்பட்டு இன்று கிடைக்காமல் போன நூல் பெரும்பொருள் விளக்கம் என்பது. இதன் பல பாடல்கள் தொல்காப்பியப் புறத்திணை உரையில் உள்ளன. எனினும் 15 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட, புறத்திரட்டு என்ற நூல் 41 பாடல்களைத் தொகுத்து ஒவ்வொரு இடத்திலும் கூறுகிறது. எல்லாப் பாடல்களும் வெண்பாப் பாடல்கள். புறத்துறைகளால் அமைந்தவை. இது பற்றியே, இது தனித்த புறப்பொருள் இலக்கியம் என்று கருத இடம் உள்ளது.

6.7 பிறவகைப் பாடல்கள் - நூல்கள்

பத்தாம் நூற்றாண்டில் கல்வெட்டில் எழுதிய பாடல், மெய்க்கீர்த்திகள், சாசனப் பாடல்கள், நிகண்டு போன்ற கருவி நூல்கள், இலக்கண நூல்கள் தோன்றின.

6.7.1 சிராமலை அந்தாதி திருச்சிராப்பள்ளி அந்தாதிஎன்பது நூற்பெயர். கல்வெட்டிலிருந்து பிரதி செய்யப்பட்டுக் கிடைத்த நூல் இது. திருச்சிராமலைக் குன்றின்மேல் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் அமைத்த குடைவரைக் கோயில் மதிலில் பொறிக்கப்பட்டு கல்வெட்டுத் துறையினரால் 1888இல் படிசெய்து 1923இல் வெளியிடப்பட்டது. அது தவிர வேறுவகையில் இந்த நூலோ, இதன் வரலாறோ தெரியவில்லை.

இதைப் பாடியவர் வேம்பையர் கோன் நாராயணன் ஆவார். ஊர் வேம்பை. நூலின் இறுதி, பாயிரச் செய்யுட்கள் மற்றும் பாட்டுள் வரும் குறிப்புகள் கொண்டு, இவர் மணியன் என்பவரது புதல்வர்; வணிகர்; வணிகத்தின் பொருட்டுத் தெற்கும் வடக்கும் சுற்றிவந்தவர்; சோழநாட்டினர்; பொருள் ஈட்டியும், மகப்பேறின்றி, சிராமலை வழிபட்டு, பெருமான் அருளால் புதல்வரைப் பெற்று, அந்த அருளை வியந்து, புலமையாலும், பக்திப் பெருக்காலும் நன்றி தெரிவித்து இவ்வந்தாதியைப் பாடினார் என்று கருத இடம் உண்டு. 102 கட்டளைக் கலித்துறைப் பாக்களைக் கொண்டது இந்த நூல். அந்தாதி அமைப்பினது நூலாசிரியர் சிவபக்தி உடையவர். சைவ தத்துவங்களை உணர்ந்தவர். பாடல்தோறும் இச்சிவபக்தி புலப்படுகிறது. 40 அகத்துறைப் பாடல்கள் உள்ளன. இவை அரிய சொல்லாட்சிகளைப் பெற்றவை. திருக்கோவையாரில் இருந்து ஒரு அடி எடுத்தாளப்பட்டுள்ளது. திருக் கோவையாரின் காலம் 9ஆம் நூற்றாண்டு, எனவே இந்த நூல் அதன் பின்னர் பத்தாம் நூற்றாண்டில் செய்யப்பட்டிருக்கலாம் என்று மு.அருணாசலம் கூறுவார்.

6.7.2 மெய்க்கீர்த்திப் பாடல்கள் பேரரசனது பெரும்புகழை – கீர்த்தியை, எடுத்துக் கூறும் பாடல் மெய்க்கீர்த்திகள். சோழர் காலத்துச் செய்யப்பட்டன. பன்னிருபாட்டியல் மெய்க்கீர்த்தி பற்றி இரு நூற்பாக்களைத் தருகிறது. சோழ மன்னர் தம் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் தோன்றியது.

யாப்பருங்கல உரை, வீரசோழிய உரைகளில் சுந்தர சோழனைப் போற்றும் நீண்ட கலிப்பாடல் தனிப்பாடலாகத் தரப்பட்டுள்ளது. படர்க்கைப் பன்மையில் மற்றொரு பாடலும் வீரசோழிய உரையில் இடம் பெற்றுள்ளது. அது இந்த நூற்றாண்டைச் சேர்ந்தது.

சாசனப் பாடல்கள்

அரசர்களாலும், அரசு அதிகாரிகளாலும் பொறிக்கப்பட்ட சாசனங்களில் கல்வெட்டுகளில் பல சமயப் பாடல்கள் உள்ளன. அவை தனிப்பாடல்கள்.

6.7.3 பிங்கல நிகண்டு – கருவிநூல் நிகண்டு என்ற பிரிவில் திவாகரத்துக்குப் பின் தோன்றியது பிங்கலந்தை நிகண்டு. பிங்கல முனிவர் செய்தது பிங்கலந்தை நிகண்டு ஆகும். திவாகரத்தைக் காட்டிலும் விரிவானது. கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது.

நிகண்டுகள் பத்துத் தொகுதிகளாக இருப்பது வழக்கம். இறுதியில் மேலும் இரு தொகுதிகள் உள்ளன. அவற்றை, ஒரு சொல் பலபொருள் பெயர்த்தொகுதி என்றும், பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்றும் கூறலாம். ஒரு சொல் பல்பொருள் என்பதுதான் இன்றைய அகராதி. அது ஒரு சொல்லுக்குரிய பலவகைப் பொருளையும் ஒரே இடத்தில் தொகுத்துத் தருகிறது.

பிங்கல நிகண்டு ஆசிரியர்

பிங்கல நிகண்டு செய்தவர் பிங்கல முனிவர் ஆவார். அவரது வரலாறு ஒன்றும் தெரியவில்லை. தம்மைக் குறித்த எச்செய்தியும் இவரது நூலில் இடம்பெறவில்லை. திவாகரர் தம்மை ஆதரித்த அம்பர்ச் சேந்தனை இயல்தோறும் சிறப்பாகப் போற்றியிருக்கிறார். பிங்கலர் சோழநாட்டினர். சைவர். சோழ நாட்டு ஊர்கள் பல இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கணபதி பெயரை வைத்துத் தொடங்கும் வானவர் வகைப் பகுதியில் சிவனுக்கு 96 பெயர்கள் சொல்லப்பட்டுள்ளதால் இவர் சைவர் என்பர். இந்த நூலில் அருகனுக்குச் சொல்லப்படும் பெயர்கள் 14 மட்டுமே. ஆனால் பின்னால் வந்த சைன ஆசிரியர் செய்த சூடாமணி நிகண்டில் அருகனுக்கு 96 பெயர்களும், சிவனுக்கு 61 பெயர்களுமே சொல்லப்பட்டுள்ளன என்பார் அருணாசலம்.

தமிழ்ப் பிங்கல நிகண்டு, பிங்கலந்தை எனப்படும். இது மிக விரிந்த நூல். இதனுள் 14700 சொற்கள் சொல்லப்பட்டுள்ளன. தொல்காப்பியர் சொல்லும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்ற நால்வகைச் சொற்கைளையும் இந்நூல் நன்கு ஆராய்ந்து தொகுத்துச் சொல்கிறது. முழுவதும் நூற்பாக்களால் ஆனது. பத்துப் பகுதிகளைக் கொண்டது. 4181 சூத்திரங்கள் உள்ளன. நூற்பகுதி ஒவ்வொன்றும் ‘வகை’ என்று சொல்லப்பட்டுள்ளது. திவாகரத்தில் ‘பெயர்’ என்று அழைக்கப்பட்டு உள்ளது. பின்னால் வந்த நிகண்டு நூல்கள் யாவும் திவாகர நிகண்டின் அமைப்பையே, பின்பற்ற, பிங்கல நிகண்டு மட்டும் நூற்பகுதியின் பொருள்களைச் சற்றே மாற்றி வைத்துள்ளது.

(1) வான் வகை

(2) வானவர் வகை

(3) ஐயர் வகை

(4) அவனி வகை

(5) ஆடவர் வகை

(6) அனுபோக வகை

(7) பண்பில், செயலில் பகுதி வகை

(8) மாப்பெயர் வகை

(9) மரப்பெயர் வகை

(10) ஒரு பொருள் பல்பெயர் வகை என்பன.

ஆகிய நால்வகைச் சொற்களுக்கும் இந்நூல் இடமளித்துள்ளது.

6.7.4 பன்னிரு பாட்டியல் தொடர்நிலைச் செய்யுளின் இலக்கணம் கூறுவது பாட்டியல் ஆகும். என்ன நெறியில் பிரபந்த இலக்கியம் செய்யலாம் என்று வழிகாட்ட வந்ததே பாட்டியல் இலக்கணம் ஆகும்.

பாட்டியல் நூல்களில் பழமையானது பன்னிரு பாட்டியல் ஆகும். இதை இரா.ராகவ அய்யங்கார் 1912இல் வெளியிட்டார். இந்நூலில் பதினைந்து பாட்டியல் புலவர் பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. பன்னிரெண்டு உறுப்புகளை/ பொருள்களைக் கூறுகின்றமையால் இந்நூல், ‘பன்னிரு பாட்டியல்’ எனப்படுகிறது. அவை,

(1) மங்கலம் – நலம் தருவது

(2) சொல் – நலம் தரும் சொல்

(3) எழுத்து – எழுத்துகளின் பிறப்பு

(4) தானம் – பகை, நட்பு முதலியன

(5) பால் – ஆண் பெண் முதலியன

(6) உண்டி – அமுத எழுத்து, நச்செழுத்து

(7) வருணம் – நால்வகைச் சாதி

(8) நாள் – எழுத்துக்குரிய நட்சத்திரம்

(9) கதி – தேவர்

(10) கணம் – அசை, சீர் முதலியன

(11) கன்னல் – நாழிகை

(12) புள் – பறவைகள்

என்பன. பன்னிருபாட்டியல், எழுத்தியல், சொல்லியல், இனவியல் என்ற மூன்று பாகுபாடுகளைக் கொண்டது.

பன்னிருபாட்டியல் கூறும் பிரபந்தங்களின் எண்ணிக்கை 74 ஆகும். பிரபந்தங்கள் 96 என்பது பிற்கால வழக்கு ஆகும். ‘மெய்க்கீர்த்தி’ என்ற சிறப்பான பிரபந்த வகை பற்றி இந்த நூலில் குறிக்கப்பட்டுள்ளது. முதல் மெய்க்கீர்த்தி சோழன் இராசராசனுடையது. அவனது ஆட்சி கி.பி.985இல் தொடங்கியது. அரசவைப் புலவர்கள் அவனைப் போற்றி மெய்க்கீர்த்தி பாடியிருப்பார்கள். அவற்றை உணர்ந்து இப்பாட்டியல் இலக்கணம் கூறுவதால் 985-1000க்குள், பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இந்நூல் தோன்றியிருக்கக் கூடும் என்பர்.

6.7.5 புறப்பொருள் வெண்பா மாலை இது ஐயனாரிதனார் செய்த நூல். பன்னிரு படலத்தின் வழி தன் நூலைச் செய்தார். புறப்பொருள் பற்றியது. இவர் பாடலை மேற்கோள் காட்டாத உரையாசிரியர்களே இல்லை எனலாம். புறப்பொருள் வெண்பாமாலை வெட்சித்திணை முதல் பெருந்திணை வரை 12 படலங்களைக் கொண்டது. வெட்சி மலர் அணிந்து பகைவரின் ஆன்நிரைகளைக் கவர்தல். இவ்வாறே ஒவ்வொரு திணைக்கும் அவ்வம் மலர் சூடிச் செயல் மேற்கொள்ளல்.

பாடாண் திணை: பிற திணைகளைப் போல இப்பகுதிக்கு மலர் சொல்வது இல்லை. அரசரது புகழ், வீரம், கொடை என்பவற்றைப் போற்றிப் பாடுதல்.

பொதுவியல் : வேந்தர் சிறப்பு, நடுகல் என்பன சொல்லப்படும்.

கைக்கிளை : ஒருதலைக் காமம் – ஆண்பால் – பெண்பால் கூற்று.

பெருந்திணை : பொருந்தாக் காமம்

ஒழிவு : இதுவரை சொல்லாதவற்றைச் சொல்லுதல் என்று அமைந்துள்ளது.

தேசிக மாலை

யாப்பருங்கலக் காரிகை உரை யில் குணசாகரர் ‘ஏழடியின் மிக்க பஃறொடை வெண்பாக்களை யாப்பருங்கலவிருத்தி உரைக்கும் தேசிகமாலை முதலியவற்றுள்ளும் கண்டுகொள்க’ என்று எழுதுகிறார். அக்குறிப்பிலிருந்து பஃறொடை வெண்பாக்களைக் கொண்ட நூல் என்பது தெரிகிறது. ஆனால் அத்தகு நூல் எதுவும் கிடைக்கவில்லை. நூலின் பெயரைத் தவிர வேறு எதுவும் அறிந்து கொள்ள இயலவில்லை.

6.7.6 மணக்குடவர் உரை திருக்குறளுக்கு உரை செய்த பதின்மரில் மணக்குடவரும் ஒருவர். ‘தருமர் மணக்குடவர்’ என்று இவரது பெயர் இரண்டாவதாக உள்ளது. இப்பெயருக்கு எவ்வித விளக்கமும் கிடைக்கவில்லை. உரைக்குச் சிறப்புப்பாயிரம் இல்லை. எனவே அவரது வரலாறு விளங்கவில்லை. தேவருரை என்றும் இவ்வுரை கூறப்படுகிறது. இவரது சமயமும் விளங்கவில்லை. பரிப்பெருமாள் உரை கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அவர் மணக்குடவர் உரையைத் தழுவியே தமது உரையை எழுதி உள்ளார். அவ்வகையில் இவரது உரை பரிப்பெருமாள் உரைக்கு முந்தையது என்பது தெளிவு. இவரது உரை 950-1000க்குள் செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்பார் மு.அருணாசலம்.

இவரது உரை குறளின் கருத்துகளை மட்டுமே நேரே விளக்குவதாக உள்ளது. ஒவ்வோர் அதிகாரத் தலைப்பிலும், அதிகாரப் பொருளைச் சில சொற்களால் விளக்குகிறார். அதிகாரப் பொருள் யாவற்றுக்கும் ஒரு தொடர்பு இருக்குமாறு கருத்துரை கூறுவது இவரது இயல்பு ஆகும்.

ஒவ்வொரு குறளின் கருத்தையும் இரண்டே சொற்களில் உணர்த்த எண்ணுவது தெரிகிறது. ‘நோற்றலால் மார்க்கண்டேயன் கூற்றத்தைத் தப்பினான்’ போன்ற புராணக் கதையையும் சொல்கிறார். அருஞ்சொற்கள் மிகவும் குறைவு. இவரே முதலில் உரை எழுதும் உரை மரபைத் தோற்றுவிக்கிறார்

6.8 தொகுப்புரை

சைவ இலக்கியங்களைத் தொகுத்துப் பாதுகாக்கும் நிலையைத் தோற்றுவித்தது சோழர் ஆட்சிக்காலம். அவ்வாறே வைணவப் பாசுரங்களும் வைணவ வழியினரால் போற்றப்பட்டமைக்குத் தனியன்களே சான்றாகலாம். சமண, பௌத்த சமயங்கள் இருந்தன என்பதை இலக்கியங்கள் புலப்படுத்தும். அவை இறந்துபட்ட நிலையும் சிதைந்த நிலையில் கிடைத்ததும் செல்வாக்குக் குறைந்த சூழலை வெளிப்படுத்தும். சிற்றிலக்கியத் தோற்றத்திற்குத் தயாரான தருணம் இது. பன்னிருபாட்டியல், புறப்பொருள் வெண்பாமாலை, பிங்கல நிகண்டு போன்ற இலக்கண மற்றும் மொழியறி கருவி நூல்கள் எழுந்துள்ளன. கல்வெட்டு, மெய்க்கீர்த்திப் பாடல், சாசனப் பாடல் என்பன மன்னரைப் போற்றும் ஊடகங்களாகத் திகழ்ந்தன.