15

இலக்கிய வரலாறு -3

பாடம் - 1

பதினோராம் நூற்றாண்டு

1.0 பாட முன்னுரை

பதினோராம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு காலம் எனலாம். பல்லவரும் பாண்டியரும் மறைய, சோழப் பேரரசு மறையும் நிலை அது. விசயாலயச் சோழன் (கி.பி. 848 – 881) தொடங்கி மூன்றாம் இராசேந்திரன் (கி.பி. 1246 – 1279) வரை ஆண்ட சோழப் பேரரசர்களின் காலம். அதைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியக் காலம் என்பர். இக்காலக் கட்டத்தில் சோழ மன்னர்கள் பெரும் கோயில்களைக் கட்டினர். சைவ இலக்கியத்தை வளர்த்தனர். இராசராசன் காலத்திற்கு முன் தமிழ்நாட்டில் பல இடங்களில் தேவாரப் பதிகங்கள் பாடப் பெற்றன. அவற்றைத் தொகுக்கும் பணி இக்காலத்தில் நடைபெற்றது. இம் மன்னனின் சைவ சமய ஈடுபாடே தேவாரம் தொகுக்கப்படக் காரணமாக அமைந்தது.

முதலாம் இராசேந்திரன் (கி.பி. 1012 – 1044) கட்டிய கங்கை கொண்ட சோழீச்சரம் மீது கருவூர்த்தேவர் திருவிசைப்பா பாடினார். இரண்டாம் இராசேந்திரன் (கி.பி. 1051 – 1063) தஞ்சைப் பெரிய கோயிலில் இராசராசேச்சர நாடகம் நடிக்க நிவந்தம் (நிதி உதவி) தந்துள்ளான். வீரராசேந்திரன் (கி.பி. 1063 – 1070) கல்விப் பணிகளுக்கு ஏற்பாடு செய்தான். இம்மன்னனின் பெயரால் வீரசோழியம் நூல் எழுந்தது. மன்னர்கள் பல போர்களில் ஈடுபட்டாலும் சமயம், கல்வி, கலை என்ற நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தினர். சோழப் பேரரசர்கள் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள். ஆனால், பிற சமயக் காழ்ப்பு இல்லை. சமயப்பொறையே அவர்களிடம் மேலோங்கி இருந்தது.

சமயப் பற்றின் காரணமாக இலக்கியங்கள் எழும் சூழல் ஏற்பட்டது. சமய ஈடுபாடு, இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. இராசராசன் (கி.பி. 985 – 1012) காலத்திற்கு முன்பே கோயில்களில் தேவாரப் பதிகங்கள் பாடிவரப் பெற்றதைப் பல்லவர் காலக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பௌத்த சமயத்திற்கு இம்மன்னன் தந்த ஆதரவு தொடர்ந்து நீடித்தது. சமணம் போற்றப்பட்ட நிலையில் சமணப் புலவர்களால் யாப்பிலக்கண நூல்கள் தோன்றின. இலக்கியம் வளரும் சூழலில் உரைகள் எழுதும் முயற்சியும் சிறப்பாக நடைபெற்றது.

இக்காலத்தில் தோன்றிய குறிப்பிடத்தக்க புலவர்களாகக் கல்லாடர், புத்தமித்திரனார், இளம்பூரணர் போன்றோரைக் கூறலாம். தேவாரப் பதிகங்களைத் தொகுத்தவர் என்ற நிலையில் நம்பியாண்டார் நம்பி சிறப்புப் பெறுகிறார்.

மேற்குறிப்பிட்டவை பற்றிய விரிவான செய்திகளை இப்பாடத்தில் படிக்கலாம்.

1.1 இலக்கியம், இலக்கணம்

பதினோராம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கிய நூலாகக் கல்லாடம் அமையும். யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம் போன்றவை இந்தக் காலக் கட்டத்தில் தோன்றிய இலக்கண நூல்களாக அமையும்.

1.1.1 கல்லாடம் கல்லாடம் (கி.பி. 1050) 100 செய்யுட்களைக் கொண்டது. பிற்காலத்தில் திருவிளையாடல் புராணங்கள் தோன்ற இது அடிப்படையாக அமைந்தது. வைணவ, சமணப் புராணங்கள் தோன்றவும், வடமொழி நூல்களின் தொடர்புகள் மிகுவதற்கும் இது வழிவகுத்தது. இயற்கைக் காட்சியின் வருணனை இதில் அதிகம் உண்டு. ஒரு முறை படித்து விட்டால் இன்னும் பலமுறை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கும். ‘கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே’ என்னும் பழமொழி இந்நூலின் பெருமையை விளக்கும். இதன் ஆசிரியர் கல்லாடர். இவர் சிவபெருமானிடமும், முருகனிடமும் தாம் கொண்டிருந்த அன்பை நன்கு காட்டுகிறார். உலகியல் செய்திகளையும் சில பழமொழிகளையும் சுட்டுகிறார். தமிழை இவர் போற்றியிருப்பதைக் காணுங்கள்.

விரிதிணை ஐந்தும் தேன் உறை தமிழும்… (9)

(விரிதிணை ஐந்து = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவை.)

‘குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்றவாறு அமைந்த ஐவகை நிலமும் தேனையும் விட இனிமையான தமிழும்’ என்பது இதன் பொருளாகும். மற்றொரு பாடலில், ‘அமுதம் போலச் சுரந்து எழுந்து மகிழ்ச்சியூட்டுவதற்குக் காரணமாகிய தமிழாகிய கடல்’ என்கிறார்.

அமுதம் ஊற்றெழுந்து நெஞ்சம் களிக்கும்

தமிழ் என்னும் கடலை ……. (17)

வைணவர்கள் இராமாயண, மகாபாரதக் கதைகளைப் பரப்பியதைப் போல, சைவர்கள் சிவனின் திருவிளையாடல்களை மக்களிடையே எடுத்துரைத்தனர். இவ்வகையில் சமய உணர்வுகளை மிகுவிக்க இலக்கியம் துணை புரிந்துள்ளது. கல்லாடம் திருவிளையாடல் புராணக் கதைகளைக் கொண்டது. சமயம் என்ற நிலையைவிடச் சமூகம் என்ற நிலையிலும் இவ்விலக்கியம் சிறப்புப் பெறுகிறது.

1.1.2 இலக்கண நூல்கள் பதினோராம் நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தக்க இலக்கண நூல்களாக யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். சமய இலக்கிய வளர்ச்சியின் தாக்கம் முற்றிலும் பரவியபின் இதுவரை அதிகம் கவனம் செலுத்தப்படாத துறையான இலக்கணத்தில் இக்காலப் புலவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொல்காப்பியம் தோன்றிய காலத்திற்குப் பின் இக்காலக்கட்டத்தில் இலக்கண நூல்கள் எழுதப்பட இவையே காரணம் எனலாம்.

யாப்பருங்கலம்

யாப்பருங்கலம் (கி.பி. 1000) அமிர்தசாகரரால் எழுதப்பட்டது. அருக தேவனுக்கு வணக்கம் கூறி நூலைத் தொடங்குவதால் அவர் சமணர் என்பது தெளிவாகிறது. இந்நூல் யாப்பிலக்கண நூலாகும். ‘அருங்கலம்’ என்றால் ‘அரிய அணி’ எனப்படும். இலக்கணப் பெயர் தெரிவதற்காக ஆசிரியர் இவ்வாறு பெயரை அமைத்துள்ளார். இந்நூல் யாப்பருங்கல விருத்தி என்றும் அழைக்கப்படுகிறது. காலம் செல்லச் செல்ல இந்நூலைப் பயில்வார் குறையவே, இவர் எழுதிய மற்றொரு நூலான யாப்பருங்கலக் காரிகையே இன்றும் தமிழ்க் கல்வியாளர்களிடம் ஆட்சியுடையதாக உள்ளது.

யாப்பருங்கலக் காரிகை

யாப்பருங்கலக் காரிகை (கி.பி. 1025) யாப்பருங்கலத்தைவிடச் சுருக்கமாகவும், எளிமையாகவும் உள்ள நூல். யாப்பருங்கலத்தையொட்டி இதுவும் மூன்று இயல்களைக் கொண்டு அமைந்துள்ளது. மனப்பாடம் செய்வோருக்கு உதவியாக ஆசிரியரே ஒவ்வொரு இயலிலும் அமைத்து சூத்திரங்களின் முதல் தொடரைச் சூத்திரமாக அமைத்துள்ளார். காரிகை தோன்றிய பிறகு வேறு எந்தவொரு யாப்பிலக்கண நூலும் தோன்றவில்லை. பிற பிரிவுகளில் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றியிருந்தும், யாப்புத் துறையில் எந்த நூலும் தோன்றாமை இதன் பெரும் தகுதிக்குச் சான்றாக உள்ளது.

வீரசோழியம்

வீரசோழியம் (கி.பி. 1060 – 75) இக்காலத்தில் தோன்றிய மற்றோர் இலக்கண நூலாகும். இதனை எழுதியவர் பொன்பற்றி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் பௌத்த சமயத்தவர். இச்சமயத்தவர் செய்த ஒரே இலக்கண நூல் என்ற பெருமை இந்நூலுக்கு உண்டு. சமணர்கள் காட்டிய ஆர்வம், பௌத்தர்களால் இலக்கணத்தில் காட்டப் பெறவில்லை. இந்நூலில் பௌத்தத் தத்துவங்கள் ஆராயப் பெறுகின்றன. இந்நூலாசிரியர் வீரராசேந்திரனிடம் (கி.பி. 1063 – 70) புலவர் தலைவராக இருந்தவர். அரசன் இவரை இவ்விலக்கணம் செய்யப் பணித்தான் எனலாம்.

வீரசோழியம் மிகச் சுருக்கமாக ஐந்து இலக்கணங்களையும் சொல்ல முயல்கிறது. வடமொழி இலக்கணத்தையொட்டித் தமிழில் இலக்கணம் கூற முற்பட்ட புது முயற்சியே இந்நூலாகும். தமிழ்த் தொல்காப்பியம், வடமொழித் தண்டியாசிரியர் செய்த காவியாதரிசம் முதலியவை இந்நூலாசிரியரின் மூல நூல்கள் ஆகும்.

சந்தி பற்றி வீரசோழியம் கூறும் இலக்கண விதி பிற்காலத்தில் எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டதென்பதைக் கந்த புராணம் அரங்கேற்றம் பற்றிய வரலாறு கூறுகிறது. அதில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடல் வரி, (‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என்பதாகும். திகழ் + தசக் கரம் = திகட சக்கரம் என்பதாயிற்று என்பர்.)

மேற்குறிப்பிட்ட இந்தச் சந்திக்கு இலக்கணம் இல்லை என அரங்கேற்றத்தின்போது ஒருவர் மறுத்துக்கூற, மறு நாள் முருகப் பெருமானே நூலாசிரியர் கச்சியப்பருக்காக அருள் சுரந்து ஒரு தமிழ்ப்புலவர் வடிவில் வந்து, வீரசோழிய இலக்கணத்தைக் காட்டி, அதில் இதற்கு விதி இருப்பதைத் தெரிவித்தார் என்கிறது கந்த புராண அரங்கேற்ற வரலாறு.

பதினோராம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கிய நூலாகக் கல்லாடம் அமையும். யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம் போன்றவை இந்தக் காலக் கட்டத்தில் தோன்றிய இலக்கண நூல்களாக அமையும்.

1.1.1 கல்லாடம் கல்லாடம் (கி.பி. 1050) 100 செய்யுட்களைக் கொண்டது. பிற்காலத்தில் திருவிளையாடல் புராணங்கள் தோன்ற இது அடிப்படையாக அமைந்தது. வைணவ, சமணப் புராணங்கள் தோன்றவும், வடமொழி நூல்களின் தொடர்புகள் மிகுவதற்கும் இது வழிவகுத்தது. இயற்கைக் காட்சியின் வருணனை இதில் அதிகம் உண்டு. ஒரு முறை படித்து விட்டால் இன்னும் பலமுறை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கும். ‘கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே’ என்னும் பழமொழி இந்நூலின் பெருமையை விளக்கும். இதன் ஆசிரியர் கல்லாடர். இவர் சிவபெருமானிடமும், முருகனிடமும் தாம் கொண்டிருந்த அன்பை நன்கு காட்டுகிறார். உலகியல் செய்திகளையும் சில பழமொழிகளையும் சுட்டுகிறார். தமிழை இவர் போற்றியிருப்பதைக் காணுங்கள்.

விரிதிணை ஐந்தும் தேன் உறை தமிழும்… (9)

(விரிதிணை ஐந்து = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவை.)

‘குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்றவாறு அமைந்த ஐவகை நிலமும் தேனையும் விட இனிமையான தமிழும்’ என்பது இதன் பொருளாகும். மற்றொரு பாடலில், ‘அமுதம் போலச் சுரந்து எழுந்து மகிழ்ச்சியூட்டுவதற்குக் காரணமாகிய தமிழாகிய கடல்’ என்கிறார்.

அமுதம் ஊற்றெழுந்து நெஞ்சம் களிக்கும்

தமிழ் என்னும் கடலை ……. (17)

வைணவர்கள் இராமாயண, மகாபாரதக் கதைகளைப் பரப்பியதைப் போல, சைவர்கள் சிவனின் திருவிளையாடல்களை மக்களிடையே எடுத்துரைத்தனர். இவ்வகையில் சமய உணர்வுகளை மிகுவிக்க இலக்கியம் துணை புரிந்துள்ளது. கல்லாடம் திருவிளையாடல் புராணக் கதைகளைக் கொண்டது. சமயம் என்ற நிலையைவிடச் சமூகம் என்ற நிலையிலும் இவ்விலக்கியம் சிறப்புப் பெறுகிறது.

1.1.2 இலக்கண நூல்கள் பதினோராம் நூற்றாண்டி

தோன்றிய குறிப்பிடத்தக்க இலக்கண நூல்களாக யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். சமய இலக்கிய வளர்ச்சியின் தாக்கம் முற்றிலும் பரவியபின் இதுவரை அதிகம் கவனம் செலுத்தப்படாத துறையான இலக்கணத்தில் இக்காலப் புலவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொல்காப்பியம் தோன்றிய காலத்திற்குப் பின் இக்காலக்கட்டத்தில் இலக்கண நூல்கள் எழுதப்பட இவையே காரணம் எனலாம்.

யாப்பருங்கலம்

யாப்பருங்கலம் (கி.பி. 1000) அமிர்தசாகரரால் எழுதப்பட்டது. அருக தேவனுக்கு வணக்கம் கூறி நூலைத் தொடங்குவதால் அவர் சமணர் என்பது தெளிவாகிறது. இந்நூல் யாப்பிலக்கண நூலாகும். ‘அருங்கலம்’ என்றால் ‘அரிய அணி’ எனப்படும். இலக்கணப் பெயர் தெரிவதற்காக ஆசிரியர் இவ்வாறு பெயரை அமைத்துள்ளார். இந்நூல் யாப்பருங்கல விருத்தி என்றும் அழைக்கப்படுகிறது. காலம் செல்லச் செல்ல இந்நூலைப் பயில்வார் குறையவே, இவர் எழுதிய மற்றொரு நூலான யாப்பருங்கலக் காரிகையே இன்றும் தமிழ்க் கல்வியாளர்களிடம் ஆட்சியுடையதாக உள்ளது.

யாப்பருங்கலக் காரிகை

யாப்பருங்கலக் காரிகை (கி.பி. 1025) யாப்பருங்கலத்தைவிடச் சுருக்கமாகவும், எளிமையாகவும் உள்ள நூல். யாப்பருங்கலத்தையொட்டி இதுவும் மூன்று இயல்களைக் கொண்டு அமைந்துள்ளது. மனப்பாடம் செய்வோருக்கு உதவியாக ஆசிரியரே ஒவ்வொரு இயலிலும் அமைத்து சூத்திரங்களின் முதல் தொடரைச் சூத்திரமாக அமைத்துள்ளார். காரிகை தோன்றிய பிறகு வேறு எந்தவொரு யாப்பிலக்கண நூலும் தோன்றவில்லை. பிற பிரிவுகளில் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றியிருந்தும், யாப்புத் துறையில் எந்த நூலும் தோன்றாமை இதன் பெரும் தகுதிக்குச் சான்றாக உள்ளது.

வீரசோழியம்

வீரசோழியம் (கி.பி. 1060 – 75) இக்காலத்தில் தோன்றிய மற்றோர் இலக்கண நூலாகும். இதனை எழுதியவர் பொன்பற்றி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் பௌத்த சமயத்தவர். இச்சமயத்தவர் செய்த ஒரே இலக்கண நூல் என்ற பெருமை இந்நூலுக்கு உண்டு. சமணர்கள் காட்டிய ஆர்வம், பௌத்தர்களால் இலக்கணத்தில் காட்டப் பெறவில்லை. இந்நூலில் பௌத்தத் தத்துவங்கள் ஆராயப் பெறுகின்றன. இந்நூலாசிரியர் வீரராசேந்திரனிடம் (கி.பி. 1063 – 70) புலவர் தலைவராக இருந்தவர். அரசன் இவரை இவ்விலக்கணம் செய்யப் பணித்தான் எனலாம்.

வீரசோழியம் மிகச் சுருக்கமாக ஐந்து இலக்கணங்களையும் சொல்ல முயல்கிறது. வடமொழி இலக்கணத்தையொட்டித் தமிழில் இலக்கணம் கூற முற்பட்ட புது முயற்சியே இந்நூலாகும். தமிழ்த் தொல்காப்பியம், வடமொழித் தண்டியாசிரியர் செய்த காவியாதரிசம் முதலியவை இந்நூலாசிரியரின் மூல நூல்கள் ஆகும்.

சந்தி பற்றி வீரசோழியம் கூறும் இலக்கண விதி பிற்காலத்தில் எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டதென்பதைக் கந்த புராணம் அரங்கேற்றம் பற்றிய வரலாறு கூறுகிறது. அதில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடல் வரி, (‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என்பதாகும். திகழ் + தசக் கரம் = திகட சக்கரம் என்பதாயிற்று என்பர்.)

மேற்குறிப்பிட்ட இந்தச் சந்திக்கு இலக்கணம் இல்லை என அரங்கேற்றத்தின்போது ஒருவர் மறுத்துக்கூற, மறு நாள் முருகப் பெருமானே நூலாசிரியர் கச்சியப்பருக்காக அருள் சுரந்து ஒரு தமிழ்ப்புலவர் வடிவில் வந்து, வீரசோழிய இலக்கணத்தைக் காட்டி, அதில் இதற்கு விதி இருப்பதைத் தெரிவித்தார் என்கிறது கந்த புராண அரங்கேற்ற வரலாறு.

1.2 உரைகள்

இக்காலப் பகுதியில் சிலப்பதிகாரம், திருக்குறள் முதலியவற்றிற்கு உரைகள் எழுந்தன. பிற உரை நூல்களாக யாப்பருங்கல விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகையுரை, தொல்காப்பிய உரை போன்றவற்றையும் சுட்டலாம்.

1.2.1 சிலப்பதிகார அரும்பதவுரை சிலப்பதிகார அரும்பதவுரையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்த உரையானது நூல் முழுமைக்கும் உள்ளது. இவ்வுரையாசிரியர் தாம் அறிந்த வரையில் இசை, நாடகம் ஆகிய பகுதிகளில் பல மேற்கோள்களையும், மரபுகளையும் உணர்த்தியுள்ளார். பொதுவாக மிகவும் சுருக்கமாக உரை எழுதும் இவர், அரங்கேற்றுகாதை, கானல் வரி முதலிய இடங்களில் மிக விரிவாக எழுத, இவ்வுணர்வினைக் காரணமாகக் கூறலாம். இவர் மேற்கோளாகக் காட்டியுள்ள நூல்களுள் தெரிந்தவை கலித்தொகை, புறநானூறு, திருமுருகாற்றுப்படை, திருக்குறள், புறப்பொருள் வெண்பாமாலை, திவாகரம் போன்றவை ஆகும். இவர் பெயர் குறிப்பிடுகின்ற மேற்கோள் நூல்கள் நற்றிணை, மதுரைக்காஞ்சி, சிந்தாமணி போன்றவையாகும். பெயர் தெரிந்தும் கிடைக்காத நூல்களாக ஆசிரிய மாலை, வளையாபதி போன்றவற்றைச் சுட்டலாம்.

சில சொற்களுக்கு இவர் கூறும் விளக்கம் சுவையாக உள்ளது. உதாரணத்திற்குச் சிலவற்றைக் காண்போம்.

ஒழியா விளக்கு விடி விளக்கு

பரதவர் கடலோடிகள்

வெண்குன்றம் சுவாமிமலை

இந்த உரையாசிரியர் சிறந்த வடமொழி வல்லுநர். இவர் கையாண்டுள்ள சில வடமொழிச் சொற்களைக் காண்போம் :

கருணை மறவ கிருபா வீரனே

வானவர் போற்றும் வழி மோட்ச மார்க்கம்

1.2.2 திருக்குறள் உரை மேற்குறிப்பிட்ட காலப் பகுதியில் திருக்குறள் உரை பரிப்பெருமாளால் எழுதப்பட்டது. கால முறைப்படி கூறும்போது மணக்குடவர், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர், பரிதியார் போன்ற ஐவரைக் கூறலாம். (தொண்டை மண்டல சதகம் 41ஆம் பாடல் உரையின் மேற்கோளாகக் காணப்படும் வெண்பாவிலிருந்து இத்தகவல் கிடைக்கிறது). பரிப்பெருமாள் குறித்து எவ்விதச் சிறப்பான செய்தியும் இல்லை. மணக்குடவர் உரையை அப்படியே பின்பற்றி, தேவையான இடத்தி்ல் திருத்தியும், மாற்றியும் எழுதியுள்ளார். பரிப்பெருமாள் தருக்க ரீதியாகவும், மறுப்புகளோடும் எழுதும் திறம்பெற்றவர். அலங்காரம் செய்யும் பழக்கம் இவரிடம் இல்லை. இவர் உரை பல இடங்களில் பொருளுரையும், நயமும் கொண்டதாக உள்ளது.

பிற மதங்களையும், கொள்கைகளையும் பல இடங்களில் சுட்டுகிறார். எடுத்துக்காட்டாகக் கீழ்க் காண்பவற்றைக் கூறலாம்:

சுக்கிர மதம் (503)

துரோணாசாரியார் மதம் (504)

கௌடில்யர் மதம் (505)

உரையின் சிறப்பு

பழமொழி போல உலகியற் கருத்துகளை இவர் தெரிவிப்பதும் மிகவும் அழகாக அமைந்துள்ளது. பொதுவாகக் கூறுமிடத்து, இவர் உரை சுவை தருவதாயும், நேரே பொருளை உணர்த்துவதாயும் உள்ளது.

1.2.3. பிற உரை நூல்கள் பிற உரை நூல்களாக யாப்பருங்கல விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகையுரை, தொல்காப்பிய உரை போன்றவற்றைக் கூறலாம்.

யாப்பருங்கல விருத்தியுரை

எழுதியவர் பெயர் தெரியவில்லை. இவர் மேற்கோள் காட்டியுள்ள பாடல்களில் மிகப் பல அருகன் துதியாக உள்ளன. இவருடைய ஆசிரியர் (அமிதசாகரர்) சமணராக இருப்பதால், இவரும் சமணராக இருக்கலாம். பிற சமயங்களையும் இவர் போற்றுகின்றார். முந்தையோர் கருத்துகளைக் கூறும் போது இவர் கீழ்க்காணும் முறைகளைப் பயன்படுத்துகின்றார்:

1) இவை ஒருசார் ஆசிரியர் கொள்கை

2) ஒருசார் வட நூல் வழித் தமிழாசிரியர் இவ்வாறு கூறுகிறார்.

3) மாபெரும் புலவர்

4) புராணக் கவிஞர்

இவ்வுரைக்காரர் பல நூல்களைச் சுட்டுகிறார். உதாரணத்திற்குச் சிலவற்றை இங்கே காண்போம் :

கேசி காலகேசி, குண்டலகேசி, நீலகேசி

ஊசிமுறி இடைக்காடனார் பாடியது

மாலை அணிநந்த மாலை, தேசிக மாலை, பன்மணி மாலை

யாப்பருங்கலக் காரிகையுரை

இது இக்காலப் பகுதியில் தோன்றிய மற்றொரு உரை. இதன் ஆசிரியர் குணசாகரர். இவர் அமிதசாகரரின் மாணாக்கர். பெரும்பாலும் யாப்பருங்கல உரையில் வரும் மேற்கோள்களையே தருகின்றார். மறைந்து போன நூல்களையும், இப்போதுள்ள சில நூல்களையும் சுட்டுகிறார். அதிகமாகச் சுட்டுபவை சூளாமணியும், திருக்குறளும் ஆகும். இவர் காலத்திலேயே இந்நூலைப் பயில்வோர் அதிகமாயினர். அவர்களுக்கு உதவ இவர் இந்நூலுக்கு உரை வகுத்தார். சமயத்தால் சமணராயினும், பிற சமயங்களையும் போற்றியுள்ளார். இந்நூல் யாப்பருங்கலத்துக்கு அங்கமாய் (பகுதியாய்) அலங்காரம் உடையதாகச் செய்யப்பட்டது என்பது இதன் சிறப்பாகும்.

தொல்காப்பிய உரை

இக்காலத்தில் தோன்றிய மற்றொரு உரை தொல்காப்பிய உரையாகும். தொல்காப்பியத்துக்குப் பலர் உரை செய்துள்ளனர். முதல் உரையாகிய இதனைச் செய்தவர் இளம்பூரணர். தாமாகவே முனைந்து இவர் தொல்காப்பியத்தைக் கற்றார் எனலாம். இவ்வுரையைத் தவிர இவர் வேறு எந்த நூலும் எழுதவில்லை. சோழ நாட்டைச் சேர்ந்த இவர், சமண சமயத்தவர். அனைத்துச் சமயங்களையும் போற்றும் பாங்கும் இவரிடம் இருந்தது. ‘ஆசீவகப்பள்ளி’ என்று சமணர் பள்ளியைக் கூறுமிடத்து, குமரக்கோட்டம் பிரமக்கோட்டம் என்பவற்றையும் குறிப்பிடுகிறார். இதன் பின் வேற்றுமையுணர்வின்றி முறையாகக் கீழ்வரும் கடவுளர் மீதான வணக்கப் பாடல்களை எடுத்துக் காட்டுகிறார்:

அருகன்

திருமால்

சிவபிரான்

ஆதிநாதர்

விநாயகர் (359 ஆம் சூத்திரவுரை

உரையின் சிறப்பு

‘தமிழ் நூல் ஒன்றே வல்ல உரையாசிரியர்’, என இவரைப் பற்றி, சிவஞான முனிவர் குறிப்பிடுகின்றார். இவருடைய உரை, தமிழ்ப் பண்பாட்டைப் போற்றிக் கூறுவதாகும். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய அனைத்திற்கும் இவர் உரை எழுதியுள்ளார். தெளிவாகவும், சுருக்கமாகவும் நடுநிலைமையோடும் இவர் எழுதியுள்ளார்.

ஆங்காங்கு இவர் சுவையான சொற் பொருள்கள் பலவற்றைக் கூறுகின்றார். இங்குச் சிலவற்றைக் காண்போம்:

செறிவு அடக்கம்

நிறைவு அமைதி

செப்பு சொல்லுதல்

இவரைப் பற்றி மு. இராகவையங்கார் கூறும் பாராட்டைக் காண்போம்:

பாராட்டுகள்

‘பிறர் உட்புகுந்து காணமுடியா வண்ணம் இருண்டு கிடந்த தொல்காப்பியம் எனும் சரக்கறையுள் தம் அறிவென்னும் அணையா விளக்கைக் கொண்டு துருவி ஆங்கே குவிந்து கிடந்த அரதனக் குவியல்களை (இரத்தினக் குவியல்) உலகிற்கு முதலில் விளக்கிக் காட்டிய பெருந்தகையார் இவரே’ ‘பேச்சு நடையை ஒட்டியே எழுத்து நடையும் சென்றால்தான் மொழி வளர்ச்சியுண்டு எனப்படும் கருத்திற்கேற்ப இவ்வியல்பை ஓரளவு இவருடைய உரையில் காணலாம்’ என்கிறார் மு. அருணாசலம்.

1.3 சைவ இலக்கியம்

பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாவது திருமுறையைப் பாடியவர்களில் நால்வர் இக்காலத்தைச் சேர்ந்தவர்கள். (‘முறை’ என்னும் சொல் ‘நூல்’ என்னும் பொருளை உடையது. ‘திருமுறை’ என்பது ‘மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெற வழிகாட்டும் நூல்’ என்பதைக் குறிக்கும். இந்நூல் 12 பகுதிகளாகத் தொகுக்கப் பெற்று இருப்பதால் ‘பன்னிரு திருமுறை’ எனப் பெயர் பெற்றது. திருமுறை என்னும் சொல்லாட்சி மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்துக் கல்வெட்டுகளில் தான் (கி.பி. 1185) முதன் முதல் காணப்படுகிறது.)

1.3.1 ஒன்பதாம் திருமுறை (திருவிசைப்பா, திருப்பல்லாண்டு) (ஒன்பதாம் திருமுறையில் முதல் ஒன்பது திருவிசைப்பா ஆகும். பத்தாவது, சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டு ஆகும்). அவர்களில் சிலரைப் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு :

பூந்துருத்தி காட நம்பி

திருவையாற்றுக்கு அருகிலுள்ள திருப்பூந்துருத்தியில் பிறந்தவர். இவருடைய சிறப்பு, தேவாரங்களில் காணப்படாத சாளரபாணி என்ற பண்ணைக் குறிப்பிடுவதாகும். திருவிசைப்பா இரண்டாம் பதிகத்தில் நடராசப் பெருமானுடைய திருக்கூத்தையே இவர் போற்றுகிறார். (பத்துப் பாடல்களைக் கொண்ட பனுவல் ‘பதிகம்’ ஆகும்.) முதல் பராந்தக சோழன் (கி.பி. 907 – 955) தில்லையைப் பொன் வேய்ந்த வரலாற்றையும் இவர் கூறுகிறார். சேரமானும், ஆரூரனும் ‘களையா உடலோடு’ (மனித உடம்போடு) கைலாயம் சென்றதையும் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

புருடோத்தம நம்பி

திருவிசைப்பா பாடிய ஆசிரியர்களில் எட்டாமவர். நம்பி என்பது ஒரு சிறப்புப் பெயராகும். சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் வழங்கப்படும் பெயரே அது. திருவிசைப்பாவில் இரு பதிகங்களை (26, 27) இவர் பாடியுள்ளார். இரண்டுமே தில்லையைக் குறிப்பன. முப்புரம், மார்க்கண்டேயன், யமன், இராவணன் போன்ற வரலாறுகள் இதில் உள்ளன. ‘வாரணி நறுமலர்’ எனத் தொடங்கும் பதிகம் திருச்சிற்றம்பலமேய செல்வனைக் காதலித்த மகளிர் அப்பெருமானை நோக்கி அகம் நெகிழ்ந்து உரையாடுவதாக உள்ளது. தன்னைத் தன்மையிலும், ஆடுகின்ற செல்வனை முன்னிலையிலும் வைத்துப் பாடும் தலைவி, உணர்ச்சி வேகத்தால் படர்க்கையில் வைத்துப் பாடும் பாடல் சிறப்பானதாகும்.

சேதிராயர்

பாடல்கள் திருவிசைப்பாவில் கடைசியாக (28ஆவது பதிகம்) உள்ளன. இவர் பாடியது தில்லைக்குரிய பதிகம் மட்டுமேயாகும்.

கருவூர்த்தேவர்

திருவிசைப்பாவில் பத்துப் பதிகங்கள் (8 முதல் 17 வரை) பாடியுள்ளார். கொங்கு நாட்டுச் சிவத்தலமான கருவூரில் பிறந்தவர். பத்துத் தலங்களுக்கு இவர் பதிகங்கள் பாடியுள்ளார். தலப்பெயரையும், கோயில் பெயரையும் இணைத்துப் பாடியுள்ளார். இராசராசனும் (கி.பி. 985 – 1014) முதலாம் இராசேந்திரனும் (கி.பி. 1012 – 1044) கட்டிய கோயில்களை நேரில் கண்டு மகிழ்ந்தவர்.

தலப்பெயரையும், கோயில் பெயரையும் இணைத்துப் பாடியுள்ளனவற்றில் உதாரணத்திற்குச் சிலவற்றைக் காண்போம்:

‘பெரும்பற்றப்புலியூர்த் திருச்சிற்றம்பலம்’

‘களந்தை ஆதித்தேச்சரம்’

‘கீழ்க்கோட்டூர் மணியம்பலம்’

‘தஞ்சை இராசராசேச்சரம்’

உலகச் சூழலிலிருந்து தம்மை விடுவித்து, தனித்த ஆன்ம வாழ்க்கை வாழ்ந்தவர். இவர் மக்களோடு கலந்து வாழ்ந்தவர் அல்லர். இதனால் இவரிடம் புதிய சொல்லாட்சி காணப்பட்டது. உதாரணத்திற்குச் சிலவற்றைக் காண்போம்:

அக்கடா வியப்பைக் குறிப்பது

கெந்துதல் விளையாடுதல்

தமிழ்ச் சித்தர்கள் பதினெண்மர். கருவூரார் என்பவர் அவர்களுள் ஒருவர். அவரும் திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவரும் வெவ்வேறானவர்கள்.

நம்பியாண்டார் நம்பி

தமிழ் வியாசர் எனப்பட்டார். பலவாறு சிதைந்து கிடந்த வேதங்களைத் திரட்டி வியாசர் ஒழுங்குபடுத்தினார். நம்பியாண்டார் நம்பி, இராசராசன் விரும்பியவாறு திருமுறைகளை அவை இருக்குமிடங்களைத் தேடி ஒழுங்குபடுத்தினார். இச்செயல் திருமுறை கண்ட புராணம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுறைகளைத் தொகுத்ததோடு மட்டுமன்றி, தாமும் 10 பதிகங்கள் பாடினார். (அவையனைத்தும் 11 ஆம் திருமுறையில் அடங்கும்). அவற்றில் சில கீழ்க்காண்பவை:

திருநாரையூர் இரட்டை

மணிமாலை திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் மீது பாடியது.

கோயில் திருப்பண்ணியர்

விருத்தம் தில்லைச் சிவபெருமான் மீது பாடியது.

திருநாவுக்கரசு தேவர்

திருஏகாதச மாலை அப்பர் மீது பாடியது.

இவை தவிர ஆளுடைய பிள்ளையார் மீது இவர் இயற்றிய நூல்கள் ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி, திருச்சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திரு உலா மாலை, திருக்கலம்பகம், திருத்தொகை ஆகியவையாகும்.

அடியார்களைப் போற்றிச் சுந்தரமூர்த்தி நாயனார், திருத்தொண்டர் தொகை பாடினார். அந்த நூலையே விரித்து, நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி இயற்றினார். இந்த இரண்டு நூல்களும் சேக்கிழாரின் பெரியபுராணத்துக்கு அடிப்படையாக அமைந்தன.

1.4 வைணவ இலக்கியம்

வைணவ இலக்கியத்தைப் பொறுத்தவரை சில தனிப்பாடல்களே இக்காலக் கட்டத்தில் எழுதப்பட்டன. அவை ‘தனியன்’ என அழைக்கப்பட்டன. ஆழ்வார்களையும் வைணவ ஆசாரியர்களையும் போற்றிப் புகழும் தனிப்பாடல் ‘தனியன்’ ஆகும். அப்பாடல்களைப் பாடிய சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

அ) திருக்கச்சி நம்பி

பூவிருந்தவல்லியில் பிறந்தவர். பெருமாளின் கட்டளைப்படி திருவரங்கம் சென்று பெரிய நம்பிகளை வணங்கினார். திருமழிசையாழ்வாருடைய திருச்சந்த விருத்தத் தனியன்கள் இரண்டும் இவர் இயற்றியவையாகும்.

ஆ) திருவரங்கப் பெருமாளரையர் (கி.பி 954 – 1059)

வைணவ ஆசாரியர் ஆளவந்தார் புதல்வர்களில் ஒருவர். அவருடைய சீடருமாவார். இவர், தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சிக்குப் பாடிய தனியனைக் கேளுங்கள்.

மண்டங்குடி என்பர் மாமாறையோர் மன்னியசீர்த்

தொண்ட ரடிப்பொடி தொன்னகரம்

(பாடல் 1828, பெருந்தொகை)

தொண்டரடிப் பொடியாழ்வார் பிறந்த ஊர் மண்டங்குடி ஆகும் என்பது இதன் பொருள். மண்டங்குடி சோழ நாட்டுப் பகுதியைச் சேர்ந்தது என்பர். பாண்டி நாட்டுத் திருவாடானையில் இதே பெயரில் ஓர் ஊர் உண்டு.

இ) திருமலைநம்பி (கி.பி. 974 – 1074)

ஆளவந்தாரின் சீடர். இவர் அமலனாதிபிரானுக்குத் தனியன் பாடியுள்ளார்.

ஈ) சொட்டை நம்பிகள்

ஆளவந்தாரின் புதல்வர். இவர் திருவாய்மொழித் தனியன் பாடியுள்ளார்.

1.5 பிரபந்த இலக்கியம் - பிறநூல்கள்

‘பிரபந்தம்’ என்ற சொல் மிகவும் பிற்காலத்தில் வந்தது. ஆனால் பிரபந்தங்கள் என்னும் நூல்வகை பழமையான காலம் முதல் இருந்து வந்துள்ளது. காப்பியத் தன்மை இல்லாது பாடப்பெற்ற சிற்றிலக்கியம் பிரபந்தம் ஆயிற்று. இக்காலப் பகுதியில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி செய்த நூல்கள் அனைத்துமே பிரபந்தங்கள் ஆகும். அவை பற்றிச் சைவ இலக்கியம் என்ற பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அன்று தோன்றி இன்று இல்லாமல் போன சில பரணிப் பிரபந்தங்கள் உள்ளன. (96 வகைப் பிரபந்தங்களில் பரணி, உலா, கோவை, தூது முதலியவை அடங்கும்).

பரணி என்ற நிலையில் கொப்பத்துப் பரணியும், கூடல சங்கமத்துப் பரணியும், பிரபந்தம் அல்லாத பிற நூல்கள் என்ற நிலையில் கனா நூல், ஓவிய நூல், திருவள்ளுவ மாலை போன்ற நூல்களும் அடங்கும்.

1.5.1 பிரபந்த இலக்கியம் ஏழாம் நூற்றாண்டில் நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் மீது பாடப்பெற்ற பாண்டிக்கோவையே தனியான முதல் பிரபந்தம் ஆகும்.

கொப்பத்துப்பரணி

இப்போது கிடைக்கின்ற பரணி நூல்களுள் தொன்மையானது கொப்பத்துப் பரணி. பரணி நூல்களுள் மிகப் பழமையானது முதல் குலோத்துங்கன் மீது பாடப் பெற்ற கலிங்கத்துப் பரணியாகும். அதற்கும் முந்தையது கொப்பத்துப் பரணி. இரண்டாம் இராசேந்திர சோழன் (கி.பி. 1051 – 63), மேலைச் சாளுக்கிய மன்னனான ஆகவமல்லனுடன் கொப்பம் என்ற இடத்தில் போரிட்டு வென்றான். இப்போர் பற்றிக் கீழ்க்கண்ட நூல்களில் காணப்படுகின்றன.

கலிங்கத்துப் பரணி (194)

விக்கிரம சோழனுலா (19 – 20)

வீர சோழியம் (உரை மேற்கோள், பன்னிரு ஆசிரியர் சந்த விருத்தம்)

இவ்வாறு போர் வென்ற இராசேந்திரன் மீது ஒரு பரணிப் பிரபந்தம் பாடப்பெற்ற செய்தி இராசராசன் உலாவிலும் உள்ளதாக மு. அருணாசலம் கூறுகிறார்.

கூடல சங்கமத்துப் பரணி

வீரராசேந்திர சோழன் (கி.பி. 1063 – 70) கூடல சங்கமத்துப் போரில் ஆகவ மல்லனை வென்று பாடியதைக் குறிக்கின்றது, இந்நூல். இச்செய்தியை விக்கிரம சோழனுலா மூலமாக அறிய முடிகின்றது. இராசராசன் உலாவிலும் இப்பரணி பற்றிக் கூறப்பட்டுள்ளது. இவ் வீரராசேந்திர சோழன் ஆதரவில் இயற்றப்பெற்ற வீரசோழியம் நூலின் உரையாசிரியர், இப்போரைப் பாடும் இரு வெண்பாக்களை அதன் உரையில் சுட்டியுள்ளார்.

1.5.2 பிற நூல்கள் – தொகுப்பு மேற்கண்ட தலைப்புகளில் அடங்காத நூல்கள் பற்றி இப்பகுதியில் விளக்கப்படுகின்றது. அடியார்க்கு நல்லார் உரையில் கனா நூல், ஓவிய நூல் என்பதைப் பற்றி அறிய முடிகின்றது.

கனா நூல்

கனா நூல், 30 பாடல்களைக் கொண்டது. இந்நூலிலிருந்து நான்கு பாடல்களை (2, 4, 10, 15) அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் (அடைக்கலக் காதை வரிகள் 95 – 106) கனா நூல் எனக் குறிப்பிட்டு மேற்கோளாகத் தந்துள்ளார். அடியார்க்கு நல்லாரின் காலம் 12ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியாகும். இந்நூலின் காலம் இதற்கு முன் நூறு ஆண்டுகள் எனக் கொண்டாலும், இது 11 ஆம் நூற்றாண்டிற்கு உரியதாகிறது. இந்நூலானது கனவு இன்ன யாமத்தில் (பொது வழக்கில் ‘ஜாமம்’ எனப்படும். பகலில் 4, இரவில் 4 என ஒரு நாளைக்கு 8 ஜாமங்கள்) கண்டால் இன்ன காலத்துக்குள் பலன், இன்ன கனவுக்கு இன்ன பலன் என்று கூறுகிறது.

ஓவிய நூல் பற்றி அடியார்க்கு நல்லார் உரை மூலமே தெரிய வருகிறது. சிலப்பதிகார உரையுள் அவர் கூறுவதைக் கேளுங்கள் ஓவிய நூலுள் நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குதல் என்னும் விகற்பங்கள் (வேறுபாடுகள்) பல உள்ளன.

திருவள்ளுவ மாலை

திருவள்ளுவ மாலை (கி.பி. 1050), 53 வெண்பாக்களும், ஒரு குறள் வெண்பாவும் கொண்ட ஒரு பாடல் தொகுப்பு. திருக்குறளின் பெருமையையும், திருவள்ளுவரின் சிறப்பையும் இது எடுத்துரைக்கிறது. முந்தையோரின் கருத்துகளையும், சொற்களையும் தழுவி அமைத்துப் பாடிய பாடல்கள் இவற்றுள் உள்ளன.

உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துஉள்ள

தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால் – வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும் எனக்

கொள்ளத் தகுங் குணத்தைக் கொண்டு…

(குலபதி நாயனார், பாடல் எண்: 48)

பொருள் :

நெஞ்சமாகிய தாமரையை மலரச் செய்வதாலும் (மக்களது) அகத்திலுள்ள பிறிதொன்றால் நீக்கப்படாத அஞ்ஞான இருளை நீக்குவதாலும் திருவள்ளுவரது குறள் வெண்பாவும் சூரியனும் குணத்தில் ஒப்பு எனக் கொள்ளலாம். இதைப்போல அமைந்த மற்றொரு பாடலைக் காணலாம்.

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்

தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்து உரைத்த – நூல்முறையை

வந்திக்க சென்னி வாய் வாழ்த்துக நல் நெஞ்சம்

சிந்திக்க கேட்க செவி

(திருவள்ளுவ மாலை – உக்கிரப்பெருவழுதியார் பாடல்.)

இதன் பின் இரு வரிகள் அப்பருடைய திருவங்கமாலைப் பதிகத்திலிருந்து எடுத்தவை என்பது நன்கு தெரிகிறது.

பொருள் :

பிரமன், திருவள்ளுவனாய் வந்து நான்மறையின் மெய்ப்பொருளை அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாற் பொருளாகத் திருவாய் மலர்ந்த நூலினை வாய் வாழ்த்தட்டும்; நல்ல மனம் நினைக்கட்டும்; காதுகள் கேட்கட்டும்.

1.6 தொகுப்புரை

பதினோராம் நூற்றாண்டில் இலக்கிய உணர்வு குறைவாகவே இருந்ததை அறிய முடிகிறது. அதிகமாகக் காணப்படுபவை சமய இலக்கியங்களேயாகும். மன்னர்கள் சைவ சமயத்திற்கு ஏற்றம் தந்ததும், பலவாறாகக் கோயில்கள் அமைத்ததும் இச்சூழல் அமையக் காரணமாக அமைந்தன. அவர்கள் சமயத்திற்கு ஏற்றம் தந்தமையே இக்காலப் பகுதியில் சமயம் சார்ந்த இலக்கியங்களையே எழுதும் பணியும், தொகுக்கும் பணியும் அமைய முக்கியக் காரணியாகும். சைவ சமயம் ஏற்றம் பெற்ற நிலையில், வைணவத்திற்கு ஏற்றம் சற்றே குறைந்த நிலையில் இருந்ததை அறிய முடிகிறது. தனியன்கள் எழுத இதுவே காரணம் எனலாம். சமணர்கள் சில உரை நூல்களை எழுதியுள்ளனர். சைவத்திற்கு அடுத்த படியாகக் சமணர் பங்களிப்பே அதிகம்.

நம்பியாண்டார் நம்பியின் தொகுப்புப் பணி இக்காலக் கட்டத்தின் முக்கியப் பணி எனலாம். தொகுப்புப் பணியுடன் சில பிரபந்தங்களை எழுதிய சிறப்பும் இவருக்கு உண்டு. மிகச் சிறந்த இலக்கியம் என்ற நிலையில் கல்லாடம் சிறப்பிடம் பெறுகிறது. இலக்கியம் வழியாகச் சமய வளர்ச்சி, சமயம் வழியாக இலக்கிய வளர்ச்சி என்ற நிலையைக் கல்லாடம் முன் வைக்கிறது. உரைகள் என்ற நிலையில், இலக்கண உரையில் தொல்காப்பிய உரை இக்காலத்தில் எழுந்த முக்கிய உரையாகும். அதிக நூல்கள் வெளிவராத நிலையில் அக்குறையை ஈடு செய்யும் பொருட்டே உரையாசிரியர்கள் உரையெழுதுவதில் தம் கவனத்தை அதிகம் செலுத்தியதாகக் கொள்ளலாம்.

பாடம் - 2

பன்னிரண்டாம் நூற்றாண்டு – முதற்பகுதி

2.0 பாட முன்னுரை

இலக்கிய வரலாற்றில் 12ஆம் நூற்றாண்டு ஒரு பொற்காலம் என்பார் மு.அருணாசலம். மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு எல்லாத் துறைகளிலும் இலக்கியத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. சோழ நாட்டிலும், தமிழ் நாட்டிலும் பொதுவாக இக்காலப் பகுதியில் போர் இல்லாமையால் தமிழ் மொழிக்கு இது ஒரு பொற்காலம். முதல் குலோத்துங்கனோடு (கி.பி. 1070 – 1120) தொடங்கி, மூன்றாம் குலோத்துங்கனோடு (கி.பி. 1178 – 1218) முடிவடையும் இக்காலப் பகுதியில் நான்கு மன்னர்கள் ஆட்சி செய்தனர். இந் நூற்றாண்டில் விரிவான பெரிய காவியம் எழவில்லை என்ற குறையைப் போக்குவது பெரியபுராணம் ஆகும். எக்காலத்திலும், எந்நாட்டிலும் இல்லாத ஓர் அரிய பக்தி நூல் இதுவாகும். வைணவத்தைப் பொறுத்தவரை வைணவரின் தினசரி ஒழுக்கத்தையும் ஆலய வழிபாட்டு முறைகளையும் இராமானுசர் ஒழுங்குபடுத்தினார். அது தவிர நாலாயிரத்திலிருந்து சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து எல்லா வைணவர்களும் தவறாமல் ஓதவேண்டும் என்று நியமித்தார். சமண இலக்கியத்தில் பிற நூற்றாண்டுகளைப் போல வளர்ச்சி இல்லை. வீரசோழிய உரை தவிர பௌத்தத்தில் இலக்கியம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இக்காலப்பிரிவின் முற்பகுதியில் தோன்றிய இலக்கியங்கள் பற்றி இப்பாடத்தில் விளக்கப்படுகின்றது. இந் நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி. 1151 – 1200) தோன்றிய இலக்கியங்கள் பற்றி ‘12 ஆம் நூற்றாண்டு – பிற்பகுதி’ என்ற தலைப்பில், அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

2.1 இலக்கியம், இலக்கணம்

12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய இலக்கியங்களாகக் கலிங்கத்துப் பரணி, பெரியபுராணம் போன்றவற்றையும் இலக்கணம் என்ற நிலையில் தண்டியலங்காரம் என்பதையும் கூறலாம்.

2.1.1 இலக்கியம் – கலிங்கத்துப் பரணி கலிங்கத்துப் பரணி (கி.பி. 1112) இக்காலப் பகுதியில் தோன்றிய குறிப்பிடத்தக்க இலக்கியங்களில் ஒன்றாகும். இதனை இயற்றியவர் செயங்கொண்டார். இவர் தீபங்குடியைச் சேர்ந்தவர். முதல் குலோத்துங்க சோழனால் (கி.பி. 1070 – 1120) போற்றப் பெற்றவர். இவர் செய்த நூலுள் சிவ வழிபாட்டையே கூறுகின்றார்.

அமைப்பு

இது கடவுள் வாழ்த்துத் தொடங்கி 13 பகுதிகளை உடையது. பரணி ஒரு போர்க்காவியம். இதில் போரின் வருணனை, பாலை நில வருணனை, பேய்கள், அவற்றின் செயல்கள் பற்றிய வருணனை போன்றவை காணப்படுகின்றன.

பல்வேறு சுவைகள்

போரில் வீரர் மாய்வதின் மூலமாக, வீரத்தையும் அச்சத்தையும் பெருமிதத்தையும் உருத்திரச் சுவையையும் காட்டலாம். ஆனால் அதே காட்சியை, மாய்ந்த வீரருடைய பெண்டிர் கண்டு அரற்றும் போது அது சோக நிலையின் உச்சத்தை எட்டுகிறது. இதையும் நூலாசிரியர் எடுத்துக் கூறுகிறார். இவை தவிர நகைச்சுவை, பக்திச்சுவை, அச்சச்சுவை, வீரச்சுவை, அவலச்சுவை போன்ற பல சுவைகளைக் காணலாம்.

சமணர் இயல்புகள்

சமணர் உயிர்க்கொலை செய்யாதவர்கள், இரவு உண்ணாதவர்கள், துகிலால் வடித்துக் குடிப்பவர்கள், இந்த இயல்புகளை ஆசிரியர் சமணப் பேய்க்கு ஏற்றிக் காட்டுகிறார். இப்பாடல் நகைச்சுவையை முன் வைப்பதுடன் ஆசிரியர் சமணர் அல்லர் என்பதையும் நிரூபிக்கின்றது.

பிற பரணிகள்

பரணியில் போர்க்களத்தைக் காளி பேய்களுக்குக் காட்டுவதாக மரபு. ஆனால் ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி இதிலிருந்து மாறுபட்டு, சிவபெருமான் உமாதேவிக்குக் காட்டியதாகப் பாடப்பட்ட பரணியாகும். இதற்குப்பின் வந்தவை அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணி, பாசவதைப் பரணி, சூரன்வதைப் பரணி போன்றவையாகும்.

கலிங்கத்துப் பரணிக்கு முன்பே கொப்பத்துப் பரணி, கூடல சங்கமத்துப் பரணி என்ற இரு பரணிகள் இருந்தாலும் அவை தற்போது கிடைக்கவில்லை.

2.1.2 பெரியபுராணம் இக்காலத்திய மற்றொரு குறிப்பிடத்தக்க இலக்கியம் பெரியபுராணம் ஆகும். இது, சேக்கிழாரால் இயற்றப்பட்டது. நம்பியாண்டார் நம்பி தேவாரப் பதிகங்களைத் தொகுத்தமை பற்றி 11ஆம் நூற்றாண்டுப் பாடப்பகுதியில் விளக்கப்பட்டது. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணம் இயற்றப்பட்டது.

தில்லையம்பலத்தில் இறைவன் ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்க, சேக்கிழார் ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்று நடராசப் பெருமான் துதியாகத் தொடங்கி இந்த நூலைப் பாடினார். அதனுடைய பக்திச் சுவை காரணமாக, தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற நூல்களுக்கு இணையாக மதித்து, 12 திருமுறைகளுள் ஒன்றாக, பன்னிரண்டாம் திருமுறையாக இதனைப் போற்றுவர்.

காட்சிகள்

இந்நூல், சுந்தரர் கயிலையிலிருந்து இவ்வுலகத்துக்கு வந்து சேரும் காட்சியுடன் தொடங்குகிறது. பெரியபுராணக் கதையின் காட்சிகளை, கருங்கல்லில் சிற்பங்களாக இன்றும் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலில் (தஞ்சாவூர் மாவட்டம், குடந்தை அருகே) காண முடிகின்றது. மிகச் சிறிய சிற்பங்களாக அழகிய வேலைப்பாடுகளுடன் அவை காணப்படுகின்றன.

சிவனடியார்களின் தொண்டு நெறி

பெரியபுராணத்தில் குறிப்பிடப்படும் சிவனடியார்கள் தொண்டு நெறியில் நின்றனர். இறைவனிடம் தாம் கொண்டிருந்த ஆழமான பற்றை வெளிப்படுத்தினர். தொண்டிலும் ஒரு குறிக்கோள். குறிக்கோளுக்குச் சோதனை, தடை வரும் போது உயிரை மாய்த்துக் கொள்ளவும் தயங்காதவர்கள். இவர்கள் பல்வேறு இடங்களையும் குலங்களையும் சேர்ந்தவர்கள்.

செய்திகள்

வரலாற்றியல், நாட்டியல்பு, சமயவியல், சமயத்தத்துவம், பக்திச் சுவை, இறையுணர்வு, அருள் போன்ற அனைத்து வகையான செய்திகளும் இக்காப்பியத்தில் விரித்துக் கூறப்பட்டுள்ளன.

தொடாத துறையே இல்லை என்று கூறும் அளவிற்குச் சேக்கிழார் அனைத்துக் துறைகளையும் பெரியபுராணத்தில் கையாண்டுள்ளார்.

2.1.3 திருவுந்தியார் இக்காலத்தில் தோன்றிய மற்றொரு சைவ இலக்கியம் திருவுந்தியார் ஆகும். சாத்திர நூல்கள் 14 ஆகும். அவற்றைக் கீழ்வரும் பாடல் பட்டியல் இடுகிறது :

உந்தி களிறே உயர்போதம் சித்தியார்

பிந் திருபா உண்மை பிரகாசம் – வந்த அருட்

பண்பு வினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு

உண்மை நெறி சங்கற்பம் உற்று

(வாழ்வியல் நெறிமுறைகளைக் கூறும் நூல்கள் சாத்திரங்கள் என்றும், இறைவன் புகழைப் போற்றுபவை தோத்திரங்கள் என்றும் அழைக்கப் பெறும்.) பன்னிரு திருமுறைகளின் கருத்தை, திருவுந்தியார் குறிப்பதாக அறிஞர் கூறுவர்.

சிவபெருமானின் இயல்பைக் கூறும் பாடல் இதோ:

சொல்லும் பொருளும் சொல்லா தனவும், அங்கு

அல்லனாய் ஆனான் என்று – உந்தீபற

அம்பிகை பாகன் என்று உந்தீபற

(திருவுந்தியார், 21)

(நமது அறிவுக்கு எட்டிய பொருள்களைச் சொற்களால் அளவுபடுத்திக் கூறுகிறோம். அவ்வாறு கூறும் பொருள்கள் அனைத்தும் நம்மால் சுட்டி அறியப்படுபவை. நமது கற்பனைக்கும் எட்டாத முயலின் கொம்பு, ஆகாயத்தாமரை போன்று நமது சொற்களில் அடங்காத பொருள்கள் இப்பொருள்கள் ஆகும். இவ்விரு வகைப் பொருள்களையும் போல் அல்லாமல், நமது மனத்துக்கும், சொல்லுக்கும் எட்டாத நிலையில் இறைவன் நிற்கிறான். என்றாலும் நாம் அவனை உணரும் பொருட்டு ‘அருள்’ ஆகிய அம்மையோடு கூடிய அம்மையப்பராய் இருக்கிறான்).

‘உந்தீபற’ என்பது இறைவனது புகழைப் போற்றிப் பரவும் முறையில் மகளிர் இருவர் கூடி விளையாடும் விளையாட்டு வகைகளில் ஒன்றாகும். (உந்தி – குதித்து, பற – வேகமாக மேலே எழுதல்) ‘உந்தீபற’ என்னும் இச்சொல் பாடல் ஒன்றில் இரண்டு வீதம் 45 பாடல்களில் 90 இடங்களில் வருவதைக் காணலாம்.

2.1.4 தண்டியலங்காரம் 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலக்கண நூல்களும், உரை நூல்களும் தோன்றியுள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றில் இலக்கண நூல்கள் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. தண்டியாசிரியர் இன்றும் தமிழ் மக்கள் போற்றி வருகின்ற தண்டியலங்காரம் என்ற நூலைச் செய்துள்ளார்.

அணியிலக்கணம்

‘அலங்காரம்’ என்பது வடமொழிச் சொல். தமிழில் ‘அழகு’ என்ற பொருளில் இச்சொல் வழங்கப்படுகிறது. பாட்டில் காணப்படும் அழகை அணி என்கிறோம். இலக்கணங்கள் அணி, அலங்காரம் என்ற இரு சொற்களையும் ஒரே பொருளில் வழங்கும். தண்டியலங்காரம் அணியிலக்கண நூல். பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்ற மூன்று இயல்களையும், 125 நூற்பாக்களையும் உடையது. இன்று கிடைக்கும் அணி பற்றிய இலக்கண நூல்களில் தண்டியலங்காரமே பழமையானது.

ஆசிரியர் சிறப்பும் புலமையும்

இந்நூலாசிரியர் கவிச்சுவை தேர்வதில் ரசிகத்தன்மையுடையவர். எடுத்துக்காட்டாக, இவர் வினையின் விபரீதப் பயனைச் சுவைபட ஒப்பிட்டுக் காட்டுவதைப் பார்க்கலாம்.

தலையிழந்தான் எவ்வுயிரும் தந்தான், பிதாவைக்

கொலை புரிந்தான் குற்றம் கடிந்தான் ; – உலகில்

தனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவரேல் தப்பாம்

வினையும் விபரீத மாம்

- (தண்டியலங்காரம், சுப்பிரமணிய தேசிகர் உரை, பொருளணியியல், 111 )

(எல்லா உயிர்களையும் படைத்த பிரமன் தன் தலையை இழந்தான். தந்தையைக் கொன்ற சண்டீசன் குற்றம் நீங்கினான். உலகத்தில் ஒப்பற்ற மேன்மையைக் கொண்டு உயர்ந்துள்ளோர் நினைத்தால் நல்வினை தீவினைகளின் பயனும் மாறுபடும் என்பது இதன் பொருளாகும்).

இதன் மூலமாக நல்வினைப் பயன் தீதாகவும், தீவினைப் பயன் நன்மையாகவும் முடிகிறது என்பது தெரிகிறது.

காவிய தரிசனம் என்னும் வடமொழியின் மொழி பெயர்ப்பே தண்டியலங்காரம். இந்நூலாசிரியர் வடமொழி, தென்மொழிகளில் மிக வல்லுநர். தமிழ் மொழியில் இவர் திறமுடையவர் என்பதை யாரும் மறுக்க இயலாது. முதல் பகுதியாகிய பொதுவணியியலில் ஆசிரியர் நாமகளை வணங்கிச் செய்யுள் வகையையும், இரண்டாம் பகுதியாகிய பொருளணியியலில் 35 செய்யுள் அணிகளைக் குறிப்பிடுகிறார். இதுவே இந்நூலின் சிறப்பான பகுதியாகும். சொல்லணியியலில் 35 நூற்பாக்கள் உள்ளன.

சிவனைத் தொழுதலின் பயன்

தில்லையைப் போற்றுகின்ற பாடல்கள் கூட இதில் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றை இங்கே காண்போம்.

காலை மாலையும் கைகூப்பிக் கால்தொழுதால்

மேலை வினையெல்லாம் கீழவாம் – கோலக்

கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப்

பெருமானைச்சிற்றம்பலத்து

(தண்டி. பொருளணியல், 171)

அழகு பொருந்திய கரிய யானைத் தோலையும், வெண்மையான திருநீற்றையும், சிவந்த திருமேனியையும், பசிய கொன்றை மாலையையும் உடையவன் சிவபெருமான். அந்தச் சிவபெருமானைச் சிதம்பரத்தில் காலையிலும் மாலையிலும் கைகளைக் கூப்பித் திருவடிகளைத் தொழுதால் ஊழ்வினையெல்லாம் குறைந்து நீங்கிவிடும் என்பது இதன் பொருளாகும்.

2.2 இலக்கண உரைகளும், இலக்கிய உரைகளும்

இக்காலப் பகுதியில் இலக்கண உரை என்ற நிலையில் வீரசோழியத்திற்கு உரை எழுந்தது. இலக்கியம் என்ற நிலையில் திருக்கோவையார், புறநானூறு போன்றவற்றிற்கு உரைகள் எழுந்தன.

2.2.1 வீரசோழிய உரை இக்காலக் கட்டத்தில் வீரசோழியம் என்ற இலக்கண நூலுக்குப் பெருந்தேவனாரால் உரை எழுதப்பட்டது. பெருந்தேவனார் என்ற பெயரில் தமிழ்நாட்டில் பெரும் புலவர்கள் பலர் இருந்துள்ளனர். குறிப்பிடத்தக்கவர் மூவர். முதலாமவர் சங்கப் புலவர்களுள் ஒருவர். மற்றொருவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். மூன்றாமவர் வீரசோழிய உரை எழுதியவர்.

பெருந்தேவனார் சமயமும் காலமும்

தம் ஆசிரியரிடம் கற்றனவாயும், நேரே ஆராய்ந்தனவாயும் உள்ள பௌத்த சமயம் தொடர்பான பல பாடல்களைக் குறிப்பிடுகிறார். இவரது ஆசிரியரான புத்தமித்திரரைப் போலவே இவரும் பௌத்த சமயத்தினர் எனக் கூறப்பட்டாலும், இவர் சைவர் என்பதற்கான குறிப்புகள் உள்ளன. உதாரணமாக இவருடைய பெயரே இவர் சைவர் எனக் காட்டும். பெருந் – தேவனார் என்பது ‘மகாதேவர்’ என்ற பெயரின் மொழி பெயர்ப்பாகும். இது சிவபெருமானின் பெயராகும். பொதுவாக இலக்கண, இலக்கிய உரைகளில் உரையாசிரியர் எவரும் திருமுறைகளைக் குறிப்பிடுவதில்லை. இவர் இரு திருமுறைப் பாடல்களைக் குறிப்பிடுகிறார்.

ழ, ள, ற, ச, என்ற எழுத்துகளைச் சில இடங்களில் மக்கள் பிழையாக உச்சரிக்கின்றார்கள் எனக் கூறும் போது அறிவில்லாதார் தமிழைப் பிழைக்க வழங்குவார் என்கிறார் இவ்வாசிரியர். முதலாம் இராசேந்திரனுடைய மெய்க்கீர்த்தி வரிகளையும் இவர் தம்முடைய நூலில் கையாண்டுள்ளார்.

வீரராசேந்திரன் காலத்துக்குப் பிற்பட்ட (கி.பி. 1063 – 70) நூல் எதையும் மேற்கோளாகக் காட்டாததால், இவர் இச்சோழன் காலத்தை அடுத்து வாழ்ந்தவர் என்பதை உணரலாம்.

2.2.2 திருக்கோவையார் உரை திருக்கோவையார் உரை தஞ்சை சரசுவதி மகால் நூலக வெளியீடாக 1951இல் வெளிவந்தது. உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. அவர் சைவர், தில்லையைக் குறிப்பிடும் இடங்களில் தெற்குத் திருப்பதி, திருச்சிற்றம்பலம் என்கிறார். பல சமயங்களில் நேரே பொருள் விளங்கும் பதவுரையாகவும், சில இடங்களில் தனியாக விசேட உரையாகவும் எழுதுகிறார். இவர் மேற்கோள் காட்டியது தொல்காப்பியம் ஒன்றே ஆகும். இவ்வுரையானது பேராசிரியர் உரை போன்று பெருஞ்சிறப்புடையது அல்ல. இருப்பினும் சிற்சில நயங்களை அது பெற்றுள்ளது.

2.2.3 புறநானூற்று உரை இக்காலப் பகுதியில் தோன்றிய மற்றொரு உரை புறநானூற்று உரையாகும். இதன் ஆசிரியர் பெயரும் வரலாறும் தெரியவில்லை. இவரது உரைநடையின் அமைதி, உரை நயம், இலக்கணம் கூறும் திறம் போன்றவை இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் போன்றோருடன் ஒப்பக் கருதும் அறிவுடையவராக இவரைப் புலப்படுத்துகின்றன.

இவரது உரை எளிய, நயம் மிக்க பொழிப்புரை. மூலத்திலுள்ள ஒவ்வொரு சொல்லையும் விடாது தெளிவாக விளக்கித் தொடர்புபடுத்தி உரை எழுதுகிறார். இவர் காலத்தில் அணியிலக்கணம் பெரிதும் ஆட்சிக்கு வரவில்லை. ஏனென்றால் சில அணிகளையே இவர் கூறுகின்றார். சிலவற்றின் பெயரைச் சொல்லவில்லை.

செய்யுளில் சொற்கள் அமைந்தவாறே இவர் பொருளைக் கூறிச் செல்கிறார். இதுவே இவ்வுரையின் சிறப்பு எனலாம். உரை எளிமையானது; வட சொல்லாட்சி மிகவும் குறைவு.

மேற்கோளாக இவர் எடுத்துக்காட்டும் நூல்கள் தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை, தமிழ்நெறி விளக்கம், பெரும்பாணாற்றுப் படை, குறுந்தொகை, கலித்தொகை, சிந்தாமணி போன்றவையாகும். நூற்பெயரைச் சொல்வது இவர் வழக்கமன்று. நாலடியார், திருக்குறள் வரிகளைத் தம் உரைநடையாகவே எழுதிச் செல்கிறார்.

2.3 சமய இலக்கியங்களும் பிரபந்த இலக்கியங்களும்

இக்காலப் பகுதியில் எழுந்த வைணவ இலக்கியங்களாக திருஅரங்கத்தமுதனார், திருக்குருகைப்பிரான் பிள்ளான், அருளாளப் பெருமாள், எம்பெருமானாரடியான் போன்றோரின் படைப்புகளையும், பல தனியன்களையும் கூறலாம். இராமானுசர் சாதித்த காரியங்கள் மிகவும் அற்புதம் பொருந்தியவை. பிற்கால வைணவ வளர்ச்சிக்கு இக்காலப் பகுதியில் தோன்றிய வைணவ இலக்கியங்கள் தோற்றுவாயாக அமைந்தன. சமண இலக்கியங்கள் என்ற நிலையில் அருங்கலச் செப்பு, தீபங்குடிப் பத்து போன்றவற்றைக் கூறலாம். பௌத்த சமய இலக்கியம் என்ற நிலையில் வீரசோழிய உரை பற்றி முன்னரே (2 : 3 : 1) விளக்கப்பட்டுள்ளது. சில பிரபந்த இலக்கியங்களும் 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றின.

2.3.1 வைணவம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த வைணவ இலக்கியங்களில், இராமானுச நூற்றந்தாதி, ஆறாயிரப்படி, பிரமேயசாரம், ஞானசாரம் ஆகியவை சிறப்புடையவை.

இராமானுச நூற்றந்தாதி

திருஅரங்கத்தமுதனாரால் இயற்றப்பட்டது. திருமால் ஆலயங்களையும், ஆழ்வார்களையும் குறிப்பிட்டு, இராமானுசர் புகழாக 108 பாடல்களைக் கொண்ட இந்த அந்தாதியைப் பாடியுள்ளார் ஆசிரியர். வைணவர்களுக்குக் கிடைத்த பெரும் பேறாக இந்நூலைக் கருதலாம். இராமானுசர் புகழைப் பாடும் இந்நூலில் இவர் ஒரு பாடலில் தம் நேர் ஆசாரியாரான கூரத்தாழ்வாரையும் குறிப்பிடுகின்றார்.

திருவரங்கத்தமுதனார் திருப்பதிக்கோவை என்ற நூலையும் இயற்றியுள்ளார். ஆழ்வார் மங்களா சாசனம் செய்தருளிய (போற்றிப் பாடிய) தலங்களை முறையாகத் தொகுத்துக் கூறும் நூலே திருப்பதிக்கோவையாகும். வைணவத்தில் இது போலப் பலர் பாடியுள்ளனர்.

ஆறாயிரப்படி

இது திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்பவரால் இயற்றப்பட்டது. இது நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு எழுதப்பட்ட விளக்கம். வைணவ மரபில் இந்த நூல் முதன்முதலாக எழுதப்பட்ட உரைநடை நூலாகும். இளமையிலேயே திவ்யப்பிரபந்தத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் இந்நூலாசிரியர். இவருக்கு முன் எந்தச் சமயத்திலும் (வைணவம், சமணம், சைவம்) மணிப்பிரவாள நடையில் இவ்வாறு நூலோ உரையோ எழுந்ததாகத் தெரியவில்லை. அது இந்நூலின் சிறப்பாகும். (மணியும் பவளமும் சேர்த்துக் கோத்தது போல் தமிழும் வடமொழியும் கலந்து எழுதும் நடையே மணிப்பிரவாள நடை) நல்ல தமிழிலும் இவர் எழுத வல்லவர்.

இவர் எழுதிய மற்றொரு நூல் பிள்ளான் ரகசியம் என்பதாகும்.

பிரமேயசாரம்

இக்காலப் பகுதியில் தோன்றியது. இராமானுசரின் சீடரான அருளாளப் பெருமாள் எம்பெருமானாரால் இது இயற்றப்பட்டது. இந்நூல் 10 வெண்பாக்களும் ஒரு தனியனும் கொண்டது. இறையருளைப் பெறுவதற்கு வழி கருமமும் ஞானமும் அல்ல, பாகவத சேவையே என்பதை உணர்த்துகிறது. இந்நூலின் பொருள் எளிதில் உணரக் கூடிய தன்று.

ஞானசாரம்

ஞானசாரம் என்பது அருளாளப் பெருமாள் எம்பெருமானார் எழுதிய மற்றொரு நூலாகும். 40 வெண்பாக்களும் ஒரு தனியனும் கொண்டது. இது, திருமால் திருவடிகளைப் பற்றிக் கொண்டால் நிச்சயம் வீடருளுவான் என்று கூறுகின்றது. பிரமேயசாரம், ஞானசாரம் ஆகிய இரு நூல்களுமே அழகான தமிழில் சுவைபடக் கூறப்பட்டுள்ளன.

மேலும் இக்காலக் கட்டத்தில் பல தனியன்கள் பாடப் பெற்றுள்ளன. ஆழ்வான், முதலியாண்டான் (1019 – 1124), சீராமப்பிள்ளை (1123), பிள்ளைத் திருநறையூர் அரையர், எம்பார் (1026 – 1131), சோமாசியாண்டான், வேதப்பிரான்பட்டர் போன்ற பலர் தனியன்களை எழுதியுள்ளனர்.

2.3.2 சமணம் சமணத்தைச் சேர்ந்த ஆசிரியர் பலர் பண்டை நாளிலிருந்து தமிழில் இலக்கிய இலக்கணங்கள் செய்து தமிழ் மொழிக்குத் தொண்டு செய்துள்ளனர். நூற்றாண்டு தோறும் அவர்கள் செய்த நூல்கள் பல இருந்தாலும் இக்காலப்பகுதியில் (12ஆம் நூற்றாண்டின் முதற்பகுதி) அருங்கலச் செப்பு, தீபங்குடிப் பத்து போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

அருங்கலச் செப்பு

இச்சொல்லுக்கு ‘அரிய அணிகலன்களை வைத்துள்ள பேழை’ எனப் பொருள் கொள்ளலாம். சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில் இத்தொடரைக் காணலாம்.

ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு

வாய்திறந் தன்ன மதிலக வரைப்பின்

(அடிகள் 68 – 69)

‘பெறுதற்கரிய மணிக்கலம் பெய்த மணிப்பெட்டகம்’ என்று அடியார்க்கு நல்லார் இதற்கு உரை எழுதுகிறார். இந்நூல் வடமொழியின் மொழி பெயர்ப்பாகும். இது குறட்பாக்களால் ஆன நூல். இது 108 குறட்பாக்களைக் கொண்டு அமைந்துள்ளது.

நூற்சிறப்பையும், பயனையும் கூறுமிடத்து ஆசிரியர் மூன்று பாடல்களில் நூலின் பெயரைக் குறிப்பிடுகின்றார். இந்நூலாசிரியர் குறள் யாப்பை மேற்கொண்டதோடு, ஒரு குறட்பாடலையும்

அப்படியே எடுத்துத் தம் நூலுள் வைத்துள்ளார்.

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்

(குறள் : 360)

முக்குற்றங்களையும் அவர் குறிப்பிட எண்ணியபோது, இக்குறட்பாவை விட்டு வேறு சொல்ல முடியவில்லை. இதன் மூலம் இவர் திருக்குறளில் கொண்ட ஈடுபாடு நன்கு விளங்கும். இவருக்கு மூல நூல் வடமொழி நூல் எனக் கருதப்பட்டாலும் கூறும் பொதுக் கருத்துகள் யாவும் தமிழில் வழங்கிய கருத்துகள் ஆகும்.

சமண சமயத்தில் இல்லறம், துறவறம் என இரண்டு அறங்கள் கூறப்படும். இல்லறத்தார் சாவகர் எனப்படுவர். இந்நூல் சாவகர்கள் மேற்கொண்டு ஒழுகத்தக்க அறங்களைப் பொதிந்து வைத்த பேழை என்பதால் இப்பெயர் பெற்றது.

நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மூன்றும் அறம் என்கிறார். நீலகேசிக்குப் பிறகு தோன்றிய தனிச் சமண நூல் இதுவே.

இந்நூலாசிரியரின் பெயரும் வரலாறும் தெரியவில்லை. இருப்பினும் இவர் தமிழிலும், வடமொழியிலும் பயிற்சியுடையவர். பிராகிருத மொழியிலும் பயிற்சியுடையவர். வடசொற்களை இவர் தமிழ்ப்படுத்தியுள்ளமை சிறப்பாக உள்ளது.

தீபங்குடிப்பத்து

இக்காலப் பகுதியில் தோன்றிய மற்றொரு சமண நூல் தீபங்குடிப்பத்து ஆகும். 10 பாடல்கள் கொண்ட நூலில் ஏழு பாடல்களே கிடைத்துள்ளன. இப்பாடல்கள் தீபங்குடிக் கோயிலில் எழுந்தருளியுள்ள அருகதேவனைப் புகழ்வன என்பர். இன்றும் சமணக் கோயில் உள்ள இடங்களாக கும்பகோணம், கருந்தட்டான்குடி (தஞ்சாவூர்), மன்னார்குடி, தீபங்குடி போன்ற ஊர்களைக் கூறலாம். நூற்பாடல்களின் முதல் இரு வரிகள் தீபங்குடியில் வாழ்வோரது சீலத்தையும், பின்னிரு வரிகள் பெண்களின் நிலைமையையும் கூறுகின்றன.

இவ்வூரிலுள்ள மக்கள் கல்விப் பொருளே செல்வப் பொருளாய்க் கருதிச் செய்யும் செயல்கள் பல. அவர்கள் காலையும், மாலையும் நற்குணனை நினைத்துத் தவமே புரிவார்; வினை செய்யார்; தேன், நறவு (மது), ஊன், பொய், கொலை, களவு தவிர்ப்பார்; தீமை செய்யார்; அருகன் பாதத் தாமரையே பணிவார்.

பெண் பிறப்பை இழித்துப் பேசும் சமணர் இந்நூலில் பெண்களைப் புகழ்ந்தும் வருணித்தும் உள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. பலவாறாகப் பெண்களைப் பற்றிய வருணனை இதில் காணப்படுகிறது.

2.3.3 பிரபந்தங்கள் பிரபந்த இலக்கியங்கள் என்ற நிலையில் இக்காலப் பகுதியில் எழுந்தவற்றில் தில்லையுலா, திருப்புகலூர் அந்தாதி, அம்பிகாபதி கோவை, வச்சத் தொள்ளாயிரம் போன்றவற்றைக் கூறலாம்.

தில்லையுலா

இது 96 வகை பிரபந்தங்களில் ஒன்றான உலா வகையைச் சார்ந்தது. 8 ஆம் நூற்றாண்டில் சேரமான் பெருமாள் பாடிய திருக்கயிலாய ஞான உலா காலத்தால் மிகவும் பழமையானது. தில்லையுலா இன்று முழுமையும் கிடைக்கவில்லை. உலாப் பிரபந்தங்களில் மிகவும் சிறப்பான இடம் பெறுகிறது. இத்தில்லையுலா கீழ்க்கண்ட வகைகளில் சிறப்புடையது :

1) ஆசிரியரின் இணையற்ற சிவபக்தியைக் காட்டுகிறது.

2) சில சரித்திர நிகழ்ச்சிகளுக்குச் சான்று பகர்கின்றது.

3)சிறப்பான பண்டைய ஒழுகலாறுகள் பலவற்றை, வேறெங்கும் காண்பதற்கு இல்லாதவற்றை, எடுத்துக் கூறுகின்றது.

ஆசிரியர் பக்தி முதிர்ச்சிக்கான இடங்களைப் பல இடங்களில் சுட்டியுள்ளார். சமயாசாரியார் நால்வரையும் மிக்க அழகாகப் போற்றுகின்றார். இவருக்கு, சிறுத்தொண்டர் சரித்திரத்தில் ஈடுபாடு உள்ளதை இந்நூல் மூலம் அறிய முடிகின்றது. திருநீற்றினிடத்தில் அன்புமிக்கவர் என்பதைப் பல இடங்களில் காண முடிகிறது. சோழ மன்னன் பெயர்களில் பல இருக்க ‘திருநீற்றுச் சோழன்’ என்ற பெயரையே இவர் கையாள்கிறார்.

திருப்புகலூர் அந்தாதி

திருப்புகலூர் அந்தாதி, மிகவும் பழமையான அந்தாதிப் பிரபந்தம் ஆகும். இதனை இயற்றியவர் நெற்குன்றவாணர். இந்நூல் பக்திச் சுவை கொண்டது. தில்லை இதனுள் பலமுறை சொல்லப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்ட பிற தலங்கள் திருப்பழனம், திருஐயாறு, திருநள்ளாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர் போன்றவையாகும்.

நெற்குன்றவாணர் தம்மிடம் பொருள் விரும்பி வரும் புலவர் வாய் திறந்து கேட்க நாணுவர் என எண்ணித் தம் வீட்டு முற்றத்தில் மணலைப் பரப்பி, வருவோர் தம் அவாவினை எழுதிக் காட்டினால் போதும் என்று கூட ஓர் ஏற்பாடு செய்திருந்தார். இதை மறைந்திருந்து பார்த்துத் தக்கபடி வழங்குவது இவர் வழக்கம் என்பர்.

அம்பிகாபதி கோவை

அம்பிகாபதி என்ற புலவரால் பாடப்பெற்ற கோவையாகும். இது ஒரு பழமையான கோவைப் பிரபந்தம் ஆகும். இதற்கு முன் எழுந்த கோவைகள் நெல்வேலி வென்ற சீர் நெடுமாறனைச் சிறப்பித்து எழுந்த பாண்டிக்கோவையும், தில்லை நடராசப் பெருமான் மீது பாடப்பெற்ற திருச்சிற்றம்பலக் கோவையும் ஆகும்.

இக்கோவையின் அவையடக்கச் செய்யுள் முன் வரியில் வரும் அம்பிகாபதி என்ற தொடர் சிவபெருமானைக் குறித்தது. இக்கோவையாசிரியர் பாட்டுடைத் தலைவனாக யாரையும் கொள்ளவில்லை. இதன் காரணமாக ஒரு தலைவனையோ, அவனுக்குரிய நாடு, நகர், மலை, ஆறு போன்ற அடையாளம் ஒன்றையோ ஒவ்வொரு பாட்டிலும் தவறாமல் குறிப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு இல்லாது போயிற்று. அதிகமான பாடல்களையுடைய கோவைப் பிரபந்தங்களுள் இதுவும் ஒன்று. கோவையில் 400 பாடல்கள் அமைய வேண்டும் என்பது விதிபோல கொள்ளப்பட்டாலும் இக்கோவையுள் 563 செய்யுட்கள் உள்ளன. இக்கோவையின் மற்றொரு சிறப்பு இந்நூலாசிரியர், இந்நூலுள், உடன் கால நிகழ்ச்சிகளை அறியத்தக்க எவ்விதக் குறிப்பையும் கொடுக்கவில்லை. புராணக் கதைகள், பழக்க வழக்கங்கள், பழமொழிகள் முதலியன இக்கோவையுள் அதிகமாகக் காணப்படுகின்றன. திருக்குறள், நாலடியார், ஆசாரக்கோவைச் செய்யுட்கள் பல அப்படியே எடுத்து அமைக்கப்பட்டுள்ளன.

கலித்தொகையின் கருத்துகள் பல இடங்களில் காணப்படுகின்றன. இந்நூலின் இறுதியில் இல்லறம், துறவறம் என்பவற்றை ஆசிரியர் இரண்டு செய்யுட்களால் கூறுவது அறிந்து மகிழத்தக்கதாகும். இந்நூலில் தமிழ்ப்பண், தமிழ் நூல்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளன.

வச்சத்தொள்ளாயிரம்

வச்சவராயன் மீது பாடப்பட்டது. இவன் குலோத்துங்க சோழனுடைய படைத்தலைவருள் ஒருவனாயிருந்து வத்ஸராசன் என்று பட்டம் பெற்றவன். இந்நூல் தற்போது இல்லை. இது 900 வெண்பாக்களைக் கொண்டது. இந்நூலாசிரியர் பெயரோ, வரலாறோ தெரியவில்லை. வீரசோழிய உரைகாரரான

பெருந்தேவனார் இந்நூலைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

இக்காலத்தில் தோன்றியவற்றில் சரசுவதியந்தாதி, சடகோபரந்தாதி, ஏர் எழுபது போன்றவை பற்றி 12ஆம் நூற்றாண்டு – பிற்பகுதி என்னும் பாடத்தில் படிக்கலாம்.

2.4 பிற வகை இலக்கியங்கள்

மேற்கண்ட தலைப்புகளில் அடங்காத நூல்கள் பற்றி இங்குக் காணலாம். இலக்கியப் பங்களிப்பு என்ற நிலையில் இவற்றைப் பற்றி அதிகம் எதுவும் இல்லை எனலாம்.

நம்பிகாளி

நம்பிகாளி என்ற புலவர் நெற்குன்றவாணர் காலத்தில் வாழ்ந்து அவரைப் பாடிப் பரிசில் பெற்றார். இவர் மிகச் சிறந்த புலவராய், ஒட்டக்கூத்தரோடு சேர்த்துச் சொல்லப் பெறும் தகுதியுடையவராய் வாழ்ந்தார். இவர் பல தலங்களையும் சுற்றி வந்தவர். இவரது பயணம் குறித்த அற்புத வரலாறுகள் கொங்குமண்டல சதகத்தில் கூறப்பட்டுள்ளன. நம்பிகாளி, முருக பக்தியும், தமிழ்ப் புலமையும் மிக்கவர். பிற்காலத்தில் அனதாரியப்பப் புலவரைச் சிறப்பிக்க வந்த பாடல்,

கம்பனென்றும் கும்பனென்றும் காளி

ஒட்டக்கூத்தனென்றும் பேர் கொள்வரோ

என்று சொல்வதிலிருந்து, இவரது புலமை பற்றி அறியலாம்.

வீரைத்தலைவன் பரசமய கோளரி மாமுனி

வீரைத்தலைவன் பரசமய கோளரி மாமுனி என்ற பெயர் கொண்ட புலவர் முதற்குலோத்துங்க சோழன் ஆட்சியின் இறுதியில் வாழ்ந்து நூல்கள் இயற்றியதாகக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். மாமுனி என்றமையால் இவர் துறவியும், மடாதிபதியுமாக இருந்தார் எனக் கொள்ளலாம். பரசமய கோளரி என்றமையால் சமயவாதத்தில் மிகவும் வல்லவராயிருந்து பிற சமயத்தாரை அடக்கினார் என்று கருதலாம். திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் மேற்குத் திருமதிலில் காணப்படும் பாடற்சாசனங்கள் இவரைப் பற்றிக் கூறுகின்றன. இவர், அஷ்டாதச புராணம், கன்னிவன (திருப்பாதிரிப்புலியூர்) புராணம், பூம்புலியூர் (திருப்பாதிரிப்புலியூர்) நாடகம் என்பனவற்றைப் பாடினார். இந்நாடகம் எங்கு ஆடப்பெற்றது. இவற்றின் பொருட்டு அரசன் இவருக்கு இறையிலியாக நிலங்கள் அளித்த செய்திகள் அக்கல்வெட்டுகளில் வருகின்றன.

2.5 தொகுப்புரை

விரிவான பக்தி இலக்கியம் என்ற நிலையில் பெரியபுராணம், பரணி வகையில் சிறந்து விளங்கும் கலிங்கத்துப்பரணி, பௌத்த சமயத்தைப் பொறுத்த வரை வீரசோழிய உரை போன்றவை இக்காலப் பகுதியில் குறிப்பிடத்தக்கவையாகும். பிற சமயங்களின், பிரபந்தங்களைப் பொறுத்த வரை சீரான நிலை இருந்துள்ளது. தத்துவ நூல்களின் பங்களிப்பும் இக்காலப் பகுதியில் ஓரளவு இருந்தது.

பாடம் - 3

பன்னிரண்டாம் நூற்றாண்டு – இரண்டாம் பகுதி

3.0 பாட முன்னுரை

பன்னிரண்டாம் நூற்றாண்டின் இலக்கியச் சூழல், இலக்கியம் தொடர்பான பிற செய்திகள் ‘12ஆம் நூற்றாண்டு முதற் பகுதி’ எனும் பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன. முதற்குலோத்துங்கனோடு தொடங்கி, மூன்றாம் குலோத்துங்கனோடு முடிவடையும் இந்நூற்றாண்டு, தமிழ் வளர்ச்சிக்குரிய பொற்காலமாக அமைந்தது. இக்காலம், பொதுவாக, சோழநாட்டிலும், தமிழ் நாட்டிலும் பெரும் போர்கள் இல்லாத காலம். எல்லா வகையாலும் தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் பொற்காலம் என்பதில் ஐயமில்லை. இந்நூற்றாண்டின் பெருஞ்சிறப்பு, பெரிய புராணம் தோன்றியதாகும். இந்நூற்றாண்டின் மற்றொரு சிறப்பு இராமானுச நூற்றந்தாதி தோன்றியதாகும்.

நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாருக்குப் பின் தோன்றிய வைணவ ஆசிரியர் அனைவரும் இராமானுசர் உட்பட, வடமொழியில் நூல் எழுதினார்கள். இராமானுசரும் வடமொழியில் எழுதினார். இராமனுசரை அடுத்து, இந்நிலை மாறுகிறது. இது தவிர, வைணவத்தில் முதல் மணிப்பிரவாள நூலும் இக்காலப்பகுதியில் தோன்றியது. சமண இலக்கியத்தில் வளர்ச்சி அவ்வளவாக இல்லை. பிரபந்த இலக்கியங்கள் சில தோன்றின.

3.1 இலக்கியம், இலக்கணம், சாத்திரம்

இலக்கியம் என்ற நிலையில் 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி.1150-1200) ஒட்டக்கூத்தர் மற்றும் ஒளவையாரின் பங்களிப்பு அதிகம். திருக்களிற்றுப்படியார், ஞானாமிர்தம் போன்றவையும் இக்காலப் பகுதியைச் சேர்ந்தவையாகும். இலக்கிய உரை என்ற நிலையில் அடியார்க்கு நல்லார் உரை இக்காலத்தைச் சேர்ந்ததாகும்.

3.1.1 ஒட்டக்கூத்தர் படைப்புகள் இவர் பாடிய நூல்கள் பலவாயினும் கிடைப்பவை மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. இவரது இயற்பெயர் கூத்தர். இப்பெயர் சிவபெருமானுக்குரியதாகும். தமிழ் இலக்கண இலக்கியப் புலமையுடன் வடமொழிப் புலமையும் உடையவர். இவர் கூத்தனூரில் கலைமகளுக்குக் கட்டிய கோயில் இன்றும் உள்ளது. தமிழ் நாட்டில் இங்கு மட்டுமே கலைமகளுக்குக் கோயில் உள்ளது. ‘கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர்’ என்பர். இவரது நூல்களில் கிடைக்கின்ற நூல்கள் மூவருலா (விக்கிரமசோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராசசோழன் உலா), குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி, உத்தர காண்டம் ஆகியவையாகும்.

விக்கிரமசோழன் உலா

சோழர் குலப் பெருமை, தலைவன் பெருமை, பள்ளியெழுதல், தலைவன் நீராடி அலங்கரித்துக் கொள்ளுதல், யானைமீது வருதல், யானையின் வீரச் செயல்கள் உட்படப் பல செய்திகளைக் கொண்டுள்ளது. விக்கிரமனை அவர் புகழ்வதைக் கேளுங்கள்:

மாடப் புகாருக்கும் வஞ்சிக்கும் காஞ்சிக்கும்

கூடற்கும் கோழிக்கும் கோமானே

(காவிரிப் பூம்பட்டினத்துக்கும், வஞ்சி நகருக்கும் காஞ்சி மாநகருக்கும் மதுரைக்கும் உறையூருக்கும் தலைவனே – என்பது இதன் பொருள்)

குலப்பெருமை அல்லது பாரம்பரியம் கூறும் பகுதியில் இவ்வுலகில் முறையாக அனைவரையும் (பிரமன், காசிபன் தொடங்கி விக்கிரமன் வரை) குறிப்பிட்டுள்ளார். இதில் பராந்தகன் தொடங்கி விக்கிரமன் வரையில் குறிப்பிட்ட அரசர்கள் ஒருவர்பின் ஒருவராய் முறையாக அரசாண்டவர்கள் ஆவர். கல்வெட்டுகள் வாயிலாகவும் இதற்குத் தக்க சான்றுகள் கிடைத்துள்ளன.

குலோத்துங்க சோழன் உலா

இது, இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாவது சிறப்பான நூலாகும். தொடக்கத்தில் குலப்பெருமை சொல்லப்பட்டுள்ளது. இராமானுசர் வரலாற்றில் குலோத்துங்க சோழன் அவருக்குத் தொல்லை கொடுத்ததாகவும், தில்லையில் எழுந்தருளியிருந்த பெருமாளைக் கடலில் தூக்கி எறிந்தான் என்றும் சில வரலாறுகள் கூறும். இவ்வுலாவில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. பின்னாளில் இம் மன்னனின் மகன் கடலிலிருந்து திருமாலைக் கொண்டுவந்து மீண்டும் தில்லையில் பிரதிட்டை செய்வித்ததாகக் கூறுவர். மூவர் உலாக்களில் இவ்வுலாவின் சிறப்பு எனப் பார்த்தால் அதற்கு எழுந்த பழைய உரையைக் கூறலாம்.

இராசராசன் உலா

இது, ஒட்டக்கூத்தர் பாடிய மூன்றாவது உலாவாகும். பிரமன் தொடங்கி இரண்டாம் இராசராசன் வரை உள்ள வரலாறுகளில், மார்பில் 96 புண் கொண்ட மன்னன் முதல் இப்பாட்டுடைத்தலைவன் வரையுள்ள அரசர்கள் முறை பிறழ்ச்சி இன்றிச் சொல்லப்பட்டுள்ளனர். இவ்வுலாவிற்கு, இம்மன்னன் கண்ணி தோறும் ஆயிரம் பொன் சொரிந்ததாகச் சங்கர சோழனுலா கூறுகிறது. (உலாவில், இரண்டு அடிகளைக் கொண்டது கண்ணி என்று கூறுவார்கள்) தில்லையை இராசராசன் உலா ஆசிரியர் மிகவும் உருக்கமாய்ப் பாடுவதைக் கேளுங்கள்

. . . . . . . . . . . பார்த்திபர்தம்

தொல்லைத் திருமரபுக்கெல்லாம் தொழுகுலமாம்

தில்லைத் திருநடனம் சிந்தித்து

(பார்த்திபர் = அரசர்)

தக்கயாகப்பரணி

ஒட்டக்கூத்தர் எழுதிய மற்றொரு நூல் தக்கயாகப்பரணி. இதுவும் இராசராசனைச் சிறப்பித்து எழுதப்பட்டது. பண்டைய பரணி நூல்களில் கலிங்கத்துப்பரணிக்கு அடுத்த பழமையும் சிறப்பும் உடையது இந்நூல். கலிங்கத்துப்பரணி உண்மையான ஒரு போர் நிகழ்ச்சியைக் குறித்துப் பாடப்பெற்ற நூல், தக்கயாகப்பரணி, இதிகாச வரலாற்றைப் பொருளாகக் கொண்டு பாடப்பெற்றது. தக்கனும் அவனுடைய யாகமும் அழிக்கப்பட்ட செய்தியை மையமாக வைத்துப் பாடப்பட்டது. இது சிறந்த இலக்கியச் சுவையுடையது. சந்தப் பொலிவுக்காக எல்லாப் பாடல்களிலும் வடமொழிச்சொற்களும் சந்திகளும் வந்துள்ளன. எளிதாக உள்ள ஒரு பாடலைக் கேளுங்கள்.

சிரமும் சிரமும் சொரிந்தன. சரமும் சரமும் தறிப்பவே

கனமும் கனமும் கனைத்தன. சினமும் சினமும் சிறக்கவே

(சிரம் = தலை; சரம் = அம்பு; தறிப்ப = அறுக்க; கனம் = குதிரை; சினம் = கோபம்)

இந்நூலுக்குப் பழமையான உரை ஒன்று உண்டு. அதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

உத்தரகாண்டம்

இராமர் பட்டம் சூட்டிக் கொள்வதுடன் இராமாயணம் முடிவுறும். அதன் பின்பு நடந்த செய்திகளைக் கூறுவது உத்தர ராமாயணம். இது, ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டதாகக் கூறுவர். இவர் உத்தர ராமாயணத்தைக் காவியமாகப் பாடினார். சமய நூலாகப் பாடவில்லை. இந்நூலில் படலப் பாகுபாடும், பாடல் தொகுதியும் கம்பராமாயணம் போல ஏட்டுக்கு ஏடு வேறுபடுகிறது. நூன்முகப்பில் உள்ள காப்புச் செய்யுள் இராமாவதாரத்துக்கு விளக்கம் கூறுவதாக உள்ளது. உத்தர ராமாயணம் குறித்து வடமொழிவாணர் கூறும் கருத்தை நோக்குவோம்:

இராமாயணம் இதிகாசம். உத்தர ராமாயணம் புராணம். இதிகாசத்தில் பல வரலாறுகள் காரண காரியத்தோடு சொல்லப்படவில்லை. ஆனால் அவற்றுள் பல உத்தர ராமாயணத்துள் விளக்கப்பட்டுள்ளன.

3.1.2 ஒளவையார் படைப்புகள் ஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர். வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளனர். வெவ்வேறு வள்ளல்களால் ஆதரிக்கப்பட்டனர். சிறப்பான நூல்கள் அல்லது பாடல்கள் பாடியுள்ளனர். தற்போது காணப்படும் வரலாறுகளை வைத்து ஒளவையார் கதைகளைத் தொகுத்தால் கீழ்க்கண்ட நால்வர் பற்றிய வரலாறுகளைத் தனிமைப்படுத்தலாம்.

1.சங்க கால ஒளவையார்

2.பாரி மகளிர் – பெண்ணை நதி என்ற கதைகளோடு தொடர்புடைய ஒளவையார்

3.சோழர் கால ஒளவையார்

4.ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார்

5.தனிப்பாடல்களின் அடிப்படையில் இன்னும் இரு ஒளவையார்கள்.

இக்காலப் பாடப் பகுதியில் நாம் காண இருப்பவர் சோழர் கால ஒளவையார். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். இவர் எங்கே பிறந்தார் என்பது தெரியவில்லை. இவர் தனிப்பாடல்களும் பாடியுள்ளார். இவர் பாடிய நாலு கோடிப்பாடல்கள் குறிப்பிடதக்கவையாகும். சோழ மன்னன் தம் புலவரை அழைத்து மறுநாள் பொழுது விடிவதற்குள் நாலு கோடிப்பாடல் பாடிவர வேண்டும் என்று கட்டளையிட்டார். புலவர்கள் எப்படிப் பாடுவது என அஞ்சினர். ஒளவையார், சிறப்பான பண்பு ஒவ்வொன்றும் ஒரு கோடிக்குச் சமானம் எனப் பொருள் படும்படியாகப் பாடிப் புலவர்களிடம் தந்தார். பாட்டின் சுவையறிந்த அரசனும் பாடியவர் ஒளவையாரே என உணர்ந்து அவருக்குச் சிறப்பும் செய்தான். அந்த நான்கு பாடல்களில் ஒரு பாடல் இதோ:

மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று

மிதியாமை கோடி யுறும்

(மதியாதார் = மதிப்புத் தராதவர்)

குலோத்துங்கசோழன் முடிசூடியபோது ‘வரப்புயர’ எனச் சொல்லி, ஒளவையார் அமர்ந்துவிட்டார். கேட்டோர் சமாதானம் அடையாத நிலையில் இத்தொடரைப் பின்வருமாறு விளக்கியதாகக் கூறுவர்.

வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்

(குடி = குடிமக்கள், கோல் = செங்கோல், கோன் = அரசன்)

இது அவர் உழவுத் தொழில் நுட்பத்தை உணர்ந்தவர் என்பதை நன்கு உணர்த்தும்.

3.1.3 சாத்திர நூல்கள் சாத்திரம் தோத்திரம் வேறுபாடு குறித்து முந்தைய பாடப்பகுதியில் விளக்கப்பட்டது. சாத்திர நூல்கள் பல இக்காலப் பகுதியில் தோன்றியுள்ளன.

திருக்களிற்றுப் படியார்

சாத்திர நூல்களுள் முதலிடம் பெறுவது திருக்களிற்றுப் படியார் ஆகும். இது 100 வெண்பாக்களை உடையது. இந்நூலை எழுதியவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார். இதில் வரும் பாடல்கள் திருவுந்தியார்ப் பாடல் தொடர்களை எடுத்து விரித்துக் கூறுகின்றன. அதன் கருத்தை விளக்கும் வகையில் அமைந்து உள்ளன. விளக்கம் கூறுமிடத்து, திருக்குறள் வரிகளையும் திருவாசக வரிகளையும் அமைத்து ஆசிரியர் பாடுகிறார். இவர் குறிப்பிடும் நாயன்மார் வரலாறுகள் அப்பர், கோட்புலி, சம்பந்தர், சிறுத்தொண்டர், சுந்தரர், திருக்குறிப்புத் தொண்டர், மங்கையர்க்கரசி, மூர்க்கர், மூர்த்தி முதலியவர்களுடையவை. திருவாதவூரடிகளையும் சேந்தனாரையும் இவர் குறிப்பிடுகின்றார்.

இறைவனின் பற்றற்ற தன்மை (பாடல் எண்.87), சிவபெருமானின் பொது இயல்பு (88), இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும்முறை (90) உட்படப் பலவற்றை நூலாசிரியர் நன்கு விளக்குகின்றார்.

திருவுந்தியாருக்குச் செய்யுள் வடிவில் அமைந்த உரையாகத் திருக்களிற்றுப்படியார் அமைந்துள்ளது. இந்நூலை எழுதியவர் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்.

ஞானாமிர்தம்

இது, இக்காலப் பகுதியில் தோன்றிய மற்றொரு சாத்திர நூல். இதனை எழுதியவர் வாகீச முனிவர். இந்நூல் காலத்தால் மெய்கண்டாருக்கு முந்தியதென்று கூறுவர். இதிலுள்ள சமயக் கருத்துகள் தமிழ்நாட்டினருக்கே உரிய பழமையான சைவக் கருத்துகள் எனலாம். நூலின் நடை கல்லாடம் போலப் பழமையான நடையாகும். இந்நூலில் சங்க நூல்களின் சொற்களும், தொடர்களும் அப்படியே காணப்படுகின்றன. ஆசிரியர் புராண, இதிகாசங்களில் நிறைந்த ஈடுபாடு உடையவர். வினையின் வகைகள், தீ வினை முதலியன பற்றிக் கூறும் போது இதிகாச வரலாறுகளை எடுத்துரைக்கின்றார்.

நூலாசிரியர் தாம் கூற எடுத்துக் கொண்ட பொருள் ஒவ்வொன்றையும் விரிவாகக் கூறுகின்றார். உதாரணமாக, பதி இலக்கணம் கூறும் பாடலில் (பாடல் எண் 55) அவர் சொல்லும் கருத்து முந்தைய நூல்களைத் தழுவியும், வரும் பாடலுக்கு வழிகாட்டியாகவும் உள்ளது. பல பாடல்கள் வினாவும் விடையுமாக உள்ளன. சைவ சித்தாந்தத்திற்குச் சிறந்த பிரமாண (அடிப்படை) நூலாக இந்த நூல் கொள்ளப்பட்டது.

அஞ்ஞானமாகிய கடலில் ஆகமங்கள் என்னும் மத்தை நாட்டிக் குருநாதரின் உபதேசம் என்னும் கயிற்றால், புத்தி என்னும் கையைக் கொண்டு கடையும்போது ஞானம் ஆகிய அமிர்தம் வெளிப்படும். எனவே இது ஞானாமிர்தம் எனப்பட்டது.

மெய்கண்டார் காலத்திற்கு (13ஆம் நூற்றாண்டு) முன் கீழ்க்காணும் சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் தோன்றியுள்ளன.

திருவுந்தியார்

ஞானாமிர்தம்

திருக்களிற்றுப்படியார்

திருவுந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும் பதினான்கு சைவ சித்தாந்த சாத்திரங்களுள் சேர்க்கப்பட்டுள்ளன. ஞானாமிர்தம் அந்தப் பதினான்கனுள் சேர்க்கப்படவில்லை. இதற்கான காரணம் ஆராய்ச்சிக்குரியதாகும். திருவுந்தியார் பற்றி 12ஆம் நூற்றாண்டு முதற்பகுதி பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது.

3.1.4 இலக்கணம் நேமிநாதம், வச்சணந்தி மாலை போன்ற சிறந்த இலக்கண நூல்கள் தோன்றின.

நேமிநாதம்

இச் சிறிய இலக்கண நூல் இக்காலப் பகுதியில் தோன்றியது. 97 வெண்பாக்களைக் கொண்டது. இது, எழுத்து, சொல் என்ற இரு அதிகாரங்களைக் கொண்டது. எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பகுப்பு இன்றி இரண்டையே எடுத்துக் கொண்டு சுருக்கமாக அமைந்தமையால் இதற்குச் சின்னூல் என்ற பெயரும் உண்டு. நேமிநாதம் சின்னூல் என்ற பெயரால் வழங்கும் என்பதைத் தொண்டை மண்டல சதகப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. சில தலைமுறையினருக்கு முன்பு வரை இலக்கணம் கற்போர் நேமிநாதம் பயின்ற பின்பே தொல்காப்பியம் பயில்வது மரபாக இருந்ததாம்.

இந்நூலை எழுதியவர் குணவீர பண்டிதர். அவர் 22 ஆம் தீர்த்தங்கரராகிய (சமண தீர்த்தங்கரர் மொத்தம் 24 பேர்) நேமிநாதர் பெயரால் இந்நூலை எழுதினார். தொல்காப்பியச் சொல்லதிகாரப் பிரிவுகளாகிய ஒன்பது இயல்களின் பெயர்களையே தம் சொல்லதிகாரம் பிரிவுகளுக்கும் பெயராகச் சிறிது மாறுதலுடன் அமைத்துள்ளார். எழுத்ததிகாரப் பிரிவில் இவர் இயல் பாகுபாடு எதுவும் செய்யவில்லை. கோயிற்புராணத்தின் பழைய உரைகாரர் நேமிநாதத்தை எடுத்து ஆள்கிறார். இருப்பினும் தமிழ் உலகத்தில் இந்நூலைப் பயில்கின்றவர் மிகக் குறைவே. இந்நூலுக்குப் பழமையான சிறப்புமிக்க உரையொன்று உண்டு.

வச்சணந்தி மாலை

கி.பி.1195இல் தோன்றிய சிறப்பான ஒரு பாட்டியல் நூல். இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர். பாட்டியல் என்ற இலக்கண நூற்பகுதி பொதுவாகப் பிரபந்த இலக்கணம் கூறுவது. பிற்காலத்தில் இது மிகவும் விரிந்து வளர்ந்துள்ளது. தொல்காப்பியர் கூறும் தமிழ் இலக்கணத்துள் மூன்றாம் பகுதி பொருளதிகாரம் என்று பெயர் பெறும். அதன் பிரிவுகள் பின்னர் தனித்தனி இலக்கண நூல்களாக விரிவு பெற்றன. செய்யுளியல் என்ற பிரிவின் ஒரு பகுதி பாட்டியலாக வளர்ந்தது. பழமையான பாட்டியல் நூல் பன்னிரு பாட்டியல் ஆகும். வச்சணந்தி மாலை நூலாசிரியரின் குரு வச்சணந்தி தேவர். தம் குருவின் கட்டளைப்படி அவர் பெயரால் இந்நூலைச் செய்துள்ளார். இந்நூல் மூன்று இயல்களை உடையது.

மாணாக்கர்களும், தமிழ்ப் புலவர்களும் பண்டைக் காலத்தில் இப்பாட்டியலை மனப்பாடம் செய்து நினைவில் வைத்திருந்தார்கள். இன்றுங்கூட பலர் இப்பாடல்களை நினைவில் கொண்டுள்ளார்கள். பன்னிரு பாட்டியல் பண்டைக் காலத்தில் கற்றோர் சிலரிடமேனும் ஆட்சியிலிருந்ததா என்பது ஐயம். ஆனால் வச்சணந்திமாலை ஓரளவு தமிழறிவு உடையோராலும்கூட விரும்பிப் பயிலப்பட்டு வந்துள்ளது.

இந்நூல் பற்றி மு.வரதராசனார் கூறுவதாவது: “பாட்டியல் என்பது புதிதாகப் புகுந்த இலக்கண நூல். நான்கு வருண வேறுபாடுகளுக்கு ஏற்றபடி பாட்டின் எண்ணிக்கையும் அமைய வேண்டும் என்று கூறுகிறது. உயர்ந்த சாதித் தலைவனாக இருந்தால் செய்யுளின் எண்ணிக்கையும் மிகுதியாக இருக்க வேண்டும் என்றும், சாதி தாழ்வானால் செய்யுளும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் கூறும் இந்த இலக்கணம் எப்படித் தமிழில் புகுந்ததோ எனத் தெரியவில்லை. இது முற்றிலும் வேண்டாதது. உண்மையான இலக்கிய வளர்ச்சிக்கு இடையூறானது”.

இந்திர காளியம் என்னும் பாட்டியல் மரபின் வழியாக வச்சணந்திமாலையாசிரியர் தமது நூலைச் செய்தார் என்று அறிய முடிகிறது. இப்பாட்டியலுக்குச் சிறப்பான உரை ஒன்று உண்டு. செய்தவர் யார் எனத் தெரியவில்லை. அவ்வுரை மிகவும் தெளிவாக எழுதப்பட்ட அரிய விளக்கவுரையாகும்.

3.2 இலக்கிய உரைகள்

12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய இலக்கிய உரை என்ற நிலையில் அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரையினைக் கூறலாம். இந்நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய புறநானூற்று உரை பற்றி முந்தைய பாடத்தில் படித்தோம்.

3.2.1 அடியார்க்கு நல்லார் உரை சிலப்பதிகாரத்துக்குப் பேருரை எழுத வந்த இவ் ஆசிரியருக்கு எல்லையில்லாத முத்தமிழ்ப் புலமையும், பயிற்சியும் அமைந்திருந்தது. அடியார்க்கு நல்லாருடைய உரையுள் வரிதோறும் இதனைக் காணமுடிகின்றது. இவருடைய உரை இல்லாதிருந்தால் சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை நாம் உணரவியலாத நிலை ஏற்பட்டிருக்கும். தவிரவும் பண்டைத் தமிழின் சிறப்புகளையும் அறிய வாயிலே இல்லாது போயிருக்கும். இவர், தம் காலத்திற்கு முன்பே இசைத் தமிழும், நாடகத் தமிழும் அழிந்து போனதை உணர்ந்தார். தம் காலத்தில் அவை பின்னும் அழிந்து வந்தமையையும் நேரில் கண்டார். பண்டைத் தமிழின் சிறப்புகளைத் தாமாவது உணர்த்தி வைக்க வேண்டும் என்று அவர் உணர்ந்தார். அதன் வெளிப்பாடே இந்த உரை எனலாம்.

இது உரை மட்டுமன்று. இசை, நாடகம் பற்றிய இலக்கண இலக்கியக் களஞ்சியம். மறைந்து போயிருந்த தொல்காப்பியத்தைப் பதினோராம் நூற்றாண்டில் இளம்பூரணர் கண்டார். அதைப் பயின்று உரை எழுதிச் சிறப்பித்தார். அது போல மறைந்துபோன இசை நாடகப் பொருள்களை அடியார்க்கு நல்லார் இந்த உரை மூலம் 12ஆம் நூற்றாண்டில் அளித்தார். பண்டை நாட்டுச் செய்திகளையும், இலக்கிய வரலாறுகளையும் விளக்கமாகக் கூறுபவை இரண்டு உரைகளேயாகும். அவை நக்கீரனாரது இறையனார் களவியலுரை மற்றும் சிலப்பதிகார உரை (அடியார்க்கு நல்லார்) ஆகியன. இவ்விரு உரைகளும் முன்னாள் இருந்த முச்சங்கங்கள் பற்றிய வரலாறு – தமிழ் ஆராய்ந்தார், புலவர் தொகை, பாடினார் தொகை, பாடிய நூல், மூல நூல், சங்கம் இருந்த கால எல்லை, அரசர், கவிஞர், சங்கம் இருந்த இடம் போன்ற விவரங்களைத் தருகின்றன.

இளங்கோவடிகள் சேர மரபினராயிருந்தும், தம் நாட்டுச் சார்பு சிறிதும் இல்லாமல் பிற மன்னர் இருவரையும் போற்றியுள்ளார். மூல நூலின் தன்மைகளுக்கு ஏற்ப உரை எழுதினார் என்பது அடியார்க்கு நல்லாருக்குரிய பெருமையாகும். அவருடைய மற்றொரு நோக்கம், மறைந்து போன இசைத் தமிழ், நாடகத் தமிழின் பகுதிகள் ஆகியவற்றிற்கு இயன்றவரை பின்வருவோர் உணரும்படி விரித்துரைத்தல் என்பதாகும்.

இவர், சொற்களுக்கும், தொடர்களுக்கும் பொருள் விளக்கம் தருகிறார். வடமொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறார். பழமொழிகள், வழக்குகள் வரும்பொழுது விளக்கம் தருகிறார். மேற்கோள் தந்தும், முன்னுள்ள உரை, பாடல்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டும் எழுதுகிறார். செய்யுளோசை படும்படி எழுதுவது இவரது சிறப்பு, அணியிலக்கணத்தையும் எடுத்துக்காட்டுகிறார். இவ்வுரை கடைச்சங்க காலத்துக்கு முன்னும், பின்னும், அக்காலத்திலும் இருந்த முத்தமிழ் இலக்கிய இலக்கணத்தைத் தெளிவு பெற உணர்த்தும் அடிப்படை நூல் ஆகும்.

3.3 வைணவ இலக்கியம்

இக்காலக் கட்டத்தில் ஓரிரு உரைநூல்களும் ‘தனியன்’ என அழைக்கப்படும் தனிப்பாடல்களும் தோன்றின.

3.3.1 கைசிக புராண உரை இது, பராசரபட்டர் என்பவரால் எழுதப்பட்டது. பட்டர், வராக புராணத்தில் சொல்லப்பட்டுள்ள கைசிக புராணம் என்ற பகுதிக்குத் (92 சுலோகங்களுக்கு) தமிழில் உரை எழுதினார்.

திருக்குறுங்குடி என்ற தென்னாட்டுத்தலத்தில் நம்பாடுவான் என்ற பாணன் இருந்தான். அவன் அதிகாலையில் கைசிகம் என்ற பண்ணை, நம்பி (இறைவன்) சந்நிதியில் பாடினான். ஒரு நாள் பாடிய ஒரு பாட்டின் பலத்தால் ஒரு பிரமராக்கதனைத் தேவனாகச் செய்தான். இவ்வரலாறே இதில் உள்ளது. இந்த உரையாசிரியர் பல வடமொழி நூல்களை எழுதியுள்ளார். திருமங்கையாழ்வார் பாடல் ஒன்றுக்கு வியாக்கியானமும் செய்துள்ளார். அதன் பெயர் மைவண்ண நறுங்குஞ்சி வியாக்கியானம் என்பதாகும்.

3.3.2 தனியன்கள் இக்காலப்பகுதியில் வைணவ இலக்கியத்தைப் பொறுத்தவரை அதிகமான தனியன்கள் (தனியன் = தனிப்பாடல்) தோன்றின. இத் ‘தனியன்கள்’ ஆழ்வார்களையும் அவர்கள் அருளிச் செய்த நூல்களையும் போற்றிப் பாடிய வாழ்த்துகள் ஆகும். இவ்வாறாகத் தனியன்கள் எழுதியோரில் குறிப்பிடத்தக்கவர்களைக் காணலாம்:

கிடாம்பியாச்சான் (கி.பி .1058-1158)

இவர் காஞ்சியில் பிறந்தவர். பெரிய திருமலை நம்பியின் மருமகன் ஆவார். இவர், நம்மாழ்வாரின் திருவிருத்தத்துக்குத் தனியன் செய்தார்.

அனந்தாழ்வான் (கி.பி. 1055 – 1205)

இவர் திருமலையில் ஒரு குளம் வெட்டியபோது பெருமாள் சிறுவனாக வந்து, மண் சுமந்து கொட்டியதாகக் கூறுவர். ‘ஏய்ந்த பெருங்கீர்த்தி….’ எனத் தொடங்கும் திருவாய்மொழித் தனியனை இவர் பாடியுள்ளார்.

மேற்கண்டவர்களைத் தவிர, பிள்ளை திருநறையூர் அரையர், சோமாசியாண்டான், வேதப்பிரான்பட்டர், பிள்ளை உறங்காவில்லி தாசர், கம்பர் (இராமாயணம் எழுதியவர் அல்ல) போன்ற பலர் தனியன்களைப் பாடியுள்ளனர். இக்காலப் பகுதியில் வைணவத்தைப் பொறுத்தவரை தனியன்களே அதிகமாக எழுதப்பட்டன எனலாம்.

3.4 பிரபந்த இலக்கியம்

12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பிரபந்த இலக்கியங்கள் என்ற நிலையில் கண்டனலங்காரம், கண்டன்கோவை, சரசுவதி அந்தாதி, சடகோபரந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலியவற்றைக் கூறலாம்.

3.4.1 கண்டனலங்காரம் இது, இக்காலப் பகுதியில் தோன்றிய பிரபந்த இலக்கியங்களில் ஒன்றாகும். அலங்காரம் என்பது வடமொழி. தமிழில் அது அணியிலக்கணம் என்று பொருள்படும். நூல் தண்டியலங்காரம், மாறனலங்காரம் போன்றவற்றையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். கந்தரலங்காரம் எனப் பிற்காலத்தில் நூற்பெயர்கள் அமைந்தன.

கண்டன் என்பது இரண்டாம் இராசராசனது பெயர்களுள் ஒன்றாகும். இது சிறப்புப் பெயர் என்பதை,

இதனை இயற்பெயரென்று மயங்காதொழிக

இராசராசன் என்பது இயற் பெயர்

(தக்கயாகப்பரணி, 549 தாழிசை உரை)

என்னும் விளக்கத்திலிருந்து அறியலாம். கண்டனலங்காரம் எனப் பெயர் கொண்ட நூல் இருந்ததாகக் களவியற் காரிகையுரையால் அறிய முடிகிறது. அங்கு இந்நூற் பாடல்கள் பத்து, மேற்கோளாகப் பெயருடன் காட்டப்பட்டுள்ளன. கண்டன் என்று பெயர் வராத பாடல்களும் உள்ளன. பாடல்கள் யாவும் அகப்பொருள் பற்றியே அமைந்துள்ளன. இதன்மூலம் அக்காலத்தில் அகப்பொருள் இலக்கியங்களாக வெண்பா நூல்கள் பல செய்யப்பட்டன என்பதை அறியலாம். இரண்டாம் இராசராசனால் போற்றப்பெற்று வாழ்ந்தவர் ஒட்டக்கூத்தர். கண்டன் பற்றி அவர் பல தனிப்பாடல்களும் பாடியுள்ளார். கண்டனலங்காரம் என்ற இந்த நூலை அவர் பாடியிருக்கலாம். இவ்வாறு முடிவு செய்ய வேறு சான்று இல்லை.

3.4.2 அந்தாதி சரஸ்வதி அந்தாதி, சடகோபரந்தாதி, ஏர் எழுபது ஆகிய இம்மூன்றையும் கம்பர் செய்ததாகக் கூறுவர். ஒரே புலவர் இம் மூன்று நூல்களையும் பாடினார் என்பது இதன் கருத்தாகும். இப்புலவர் இராமாயணம் பாடிய கம்பர் அல்லர்; பிற்காலத்தில் அதே பெயர் சூட்டப்பெற்ற வேறொருவர் ஆவார்.

சரசுவதி அந்தாதி

இந்நூல் 30 பாடல்களைக் கொண்டது. 23, 24ஆம் பாடல்கள் சடகோபரந்தாதி பாடலைத் தழுவியவை போலத் தோன்றுகின்றன. வடமொழித் தொடர்கள் இதில் மிகுதியாகக் காணப்படுகின்றன. (எடுத்துக்காட்டு : கமலாசனம், சந்திரோதயம், வேதாந்தமூர்த்தி) முன்னைய இலக்கியங்களின் சொல்லமைப்பையும் பொருளமைப்பையும் இந்நூலில் காண முடிகிறது. அதனால் இந்நூல், ஆசிரியரின் இளமையில் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

சடகோபரந்தாதி

இது கம்பர் பாடியதாக வழங்கப்படும் பிரபந்தமாகும். நம்மாழ்வாருக்குச் சடகோபர் என்றும் ஒரு பெயருண்டு. அவரைப் போற்றும் அந்தாதி நூல் இது. வைணவ மரபில் திருமால் முதலியோரை உரிமை பற்றி, அன்பு பாராட்டி ‘நம்’ என்றே குறிப்பிடுவர். இதை, ‘நம்பெருமான் நம்மாழ்வார், நம்சீயர், நம்பிள்ளை என்பர் அவரவர் தம் ஏற்றத்தால்’ என்று மணவாளமாமுனி தம் உபதேசரத்தின மாலையில் கூறுகிறார். அப்படியே சடகோபரந்தாதி பாடினோரையும் ‘நம் நாவலன்’ என்று உயர்த்திக் கூறுவது காணத்தக்கது. இந்நூல் மிகவும் இலக்கியச் சுவை கொண்ட நூலாகும். ஆசிரியர், தமக்கு ஆழ்வார் அருள் செய்தார் எனப் பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். திருமால் (சடகோபராகப்) பதினோராம் அவதாரம் எடுத்துத் தன்னையே பாடிக் கொண்டார் என்று ஒரு பாடலில் (78) கூறுகின்றார், நூலாசிரியர்.

அப்பர், மாணிக்க வாசகர் முதலிய சைவப் பெரியார் அருளிய தொடர்களை, இந்த நூலில் சில இடங்களில் காணலாம்.

ஏர் எழுபது

இதுவும் கம்பர் பாடியதாகக் கூறப்படும் மற்றொரு நூல். உழவுத் தொழிலின் சிறப்பை மிகவும் அருமையாகப் போற்றிக் கூறுகின்றது. நூலின் பாயிரப் பகுதியில் கணபதி, திரிமூர்த்திகள், நாமகள் ஆகியோரின் துதி சொல்லப்பட்டுள்ள சிறப்பும் அடுத்து சோழ மண்டலம், சோழ மன்னன் சிறப்பும் கூறப்பட்டுள்ளன. உழவு நாட்கோள் தொடங்கி, உழவுக் கருவிகள், உழவு செயல் முறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடலால் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளன.

ஏர் நடத்தலின் சிறப்பு, உழவின் சிறப்பு ஆகியவை பல பாடல்களில் கூறப்பட்டுள்ளன. கருத்துகளின் அமைப்பாலும், சொல்லமைப்பினாலும் இந்நூல் ஒரு சிறப்புடைய நூல் எனலாம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற நிலையில் உண்டி கொடுப்போர் ஆகிய உழவர் வாழ்வின் சிறப்பை இந்நூல் எடுத்துரைக்கிறது.

3.5 பிறவகை இலக்கியங்கள்

மேற்கண்ட பட்டியல்களில் அடங்காதவை பற்றி இத்தலைப்பில் பார்க்கலாம். இதுவரை கூறப்பட்டவை தவிர, நூல் செய்து பெயர் விளங்காதவர்களும், பெயர் விளங்கி நூல் செய்ததாகத் தெரியாதவர்களும் சிலர் உள்ளனர்.

கந்தியார்

கந்தியார் (கி.பி.1175) என்ற பெயர் ஒளவையார் என்ற பெயரை ஒத்தது. கந்தியார் என்ற சொல் சமண சமயத்தில் மணமாகாது துறவு பூண்ட ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்ட பெயராகும். ‘கந்தி’ என்ற சொல் சமணப் பெண்டிருள் தவக்கோலம் உடையோரைக் குறிப்பது. ‘தவப்பள்ளியிலிருக்கும் தவக்கோலமுடைய முதியவள் கவுந்தி’ என்று சிலப்பதிகார உரை கூறும். கைம்மைக் கோலமுடையவள் கவுந்தி; கந்தி எனவும் கூறுவதுண்டு,

கந்தியார் அருக தெய்வ பக்தியோடு சமய நூல்களை ஓதுவதில் பொழுது போக்கியவர்கள். இத்தகைய ஒரு கந்தியார் உதயணகுமார காவியம் என்ற ஒரு காப்பியத்தை இயற்றியுள்ளார்.

உதயணகுமார காவியத்துக்கு முன்பு இருந்த கந்தியருள் பெயரளவால் சிலர் இக்காலப்பகுதியில் வாழ்ந்தார்கள். ஒருவர் சுமார் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து சீவக சிந்தாமணியிலும், பரிபாடலிலும் இடையே இடைச் செருகலாகப் பல பாடல்களைப் பாடியுள்ளார். நச்சினாக்கினியர் உரைமூலம் சீவகசிந்தாமணியின் கந்தியார் மிகவும் அதிகமான பாடல்களைச் செருகியுள்ளார் என்பதை அறியலாம். கந்தியார், பரிபாடல் எழுபது பாட்டுக்களுள் இன்னாருக்கு இத்தனை பாட்டு உரியது என்று வரையறுக்கும் பாடலைப் பாடியதாகக் கூறுவர்.

ஓவாத கூத்தர்

ஓவாத கூத்தர் (கி.பி,1185) என்ற பெயருடையவரின் பாடலோ நூலோ கிடைக்கவில்லை. ஆனால் இவர் இருந்தார் என்பதை ஒரு கல்வெட்டின் மூலம் அறியலாம். தஞ்சை மாவட்டம் பூந்தோட்டத்திலிருந்து திருவீழிமிழலை செல்லும் சாலையருகேயுள்ள கூத்தனூர் சரசுவதி கோயிலில் கிடைத்த ஒரு சாசனத்தில் கீழ்க்கண்ட வரிகள் உள்ளன.

ஸ்ரீ சரசுவதி தேவியை எழுந்தருளுவித்தார்

இவ்வூர் நன்செய் 20ம் காணி உடைய

மலரி உடையார். இந்தக் கவிச்சக்கரவர்த்திகள்

பேரர் கவிப் பெருமாளான ஓவாத கூத்தர்

இதன் மூலம் இவ்வூரில் சரசுவதி தேவிக்குக் கோயில் கட்டியவர் மலரியுடையாரெனும் கவிச்சக்கரவர்த்தியின் பேரரான ஓவாத கூத்தர் என்ற கவிஞர் என அறியலாம். ஒட்டக்கூத்தர் மலரியில் பிறந்தவர் என்பது தண்டியலங்கார மேற்கோள் மூலம் அறியலாம். (மலரி என்பது தற்போது திருவெறும்பியூர் என அழைக்கப்படுகிறது. திருச்சி அருகே உள்ளது) மலரி ஒரு தேவாரத்தலம். இச்சாசனத்தில் குறிப்பிடப்பட்டவர் ஒட்டக்கூத்தரின் பேரரான ஓவாத கூத்தர் (ஓவாத = இடைவிடாத) நடராசப்பெருமான் இரவுபகல் இடைவிடாது ஆடுபவராதலால் ஓவாத கூத்தர் எனப்படுவார், அவர் பெயரை இவர் கொண்டுள்ளார் எனலாம். கவிப் பெருமாள் என்று சிறப்புப் பெயர் கூறுதலால் இவரும் கூத்தரைப்போலப் பெரும் புலவராயிருந்தார் எனக் கொள்ளலாம். முதுகுளத்தூர் – திருமாலுகந்தான் கோட்டைச் சிவன் கோயில், கோயிற்பட்டி ஆதனூர்ச் சிவன் கோயில் முதலியவற்றில் ஓவாத கூத்தருடைய அறக்கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஓவாத கூத்தர் 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த புலவராகின்றார். இலக்கியப் பங்களிப்பு என்ற நிலையில் இவரைப் பற்றி வேறு விவரம் எதும் கிடைக்கவில்லை.

குணாதித்தன்சேய்

குணாதித்தன்சேய் என்ற ஒரு புலவன் இருந்ததாகவும், அவன் காகுத்தன் கதை என ஒரு நூல் பாடியதாகவும் கூறுவர். இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை. அது, அல்லியரசாணி மாலை, தேசிங்குராஜன் கதை போன்ற அமைப்புடைய கதையாக இருக்க வாய்ப்புண்டு. காகுத்தன் – ககுத்தன் வமிசத்தில் பிறந்தவனாகிய இராமன், இராமனது கதை என இதை எண்ணுவதில் தவறில்லை.

3.6 தொகுப்புரை

இக்காலப்பகுதியில் ஒட்டக்கூத்தர், ஒளவையார் ஆகியோரின் பங்களிப்பு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. சாத்திர நூல்களைப் பொறுத்தவரை திருக்களிற்றுப்படியார், ஞானாமிர்தம் போன்றவை தோன்றின. பிற நூற்றாண்டுகளில் இருந்த அளவு இக்காலப்பகுதியில் சமண இலக்கியத்தில் வளர்ச்சி நிலை இல்லை. வைணவத்தில், கிடாம்பியாச்சான், அனந்தாழ்வான், திருநறையூர் அரையர், சோமாசியாண்டான், வேதப்பிரான்பட்டர், பிள்ளை உறங்கா வில்லிதாசர், கம்பர் போன்ற பலர் தனியன்களை எழுதியுள்ளனர். பிரபந்த இலக்கியத்தைப் பொறுத்த வரை சீராக இருந்த காலம் இது. உரைகளில் முக்கியப் பங்களிப்பு என்ற பெருமை அடியார்க்கு நல்லார் உரைக்கு உண்டு.

பாடம் - 4

பதின்மூன்றாம் நூற்றாண்டு

4.0 பாட முன்னுரை

கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டைப் பொறுத்தவரை இலக்கியங்களில் பேரிலக்கியம் என்று எதுவும் தோன்றவில்லை. சோழராட்சி முடிவுக்கு வந்த காலம் இதுவேயாகும். சோழ மன்னர்களில் இறுதியாக வந்த மூன்றாம் இராசேந்திரன் மக்களின்றி இறந்துபோனார். குறுநில மன்னரும், பிறரும் தலையெடுத்த நிலையை அடக்கும் வலிமை வாய்ந்த அரசு இல்லை. பாண்டியர் வலிமை ஓங்கிச் சோழ நாட்டைக் கைப்பற்றத் தொடங்கினர். இச்சூழலில் மூன்றாம் இராசேந்திரனோடு கி.பி. 1279இல் சோழராட்சி முடிவுக்கு வந்தது. பின்னர் பாண்டியராட்சி தமிழகத்தில் ஆரம்பமானது. ஆட்சி மாற்றம் மிகுந்த கொந்தளிப்பான சூழலை உண்டாக்கிய நிலையில் இலக்கியங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே தோன்றின.

குலோத்துங்க சோழன் மீது ஒரு கோவையும், அவன் தம்பி சங்கரசோழன் மீது ஓர் உலாவும் எழுந்தன. குறுநிலத் தலைவர்களுடைய ஆதரவால் தோன்றிய இலக்கியங்களில் புகழேந்தியின் நளவெண்பா, தஞ்சைவாணன் மீது பாடப்பெற்ற கோவை போன்றவற்றைக் கூறலாம். அரசியல் தடுமாற்றம் என்ற சூழ்நிலையில் சமயத் துறையில் எழுச்சி ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் முந்தைய நூற்றாண்டுகளில் சோழ மன்னர்கள் கட்டிய கோயில்களும் அவற்றால் ஏற்பட்ட சமய உணர்வுமாகும். சைவத்தைப் பொறுத்தவரை சித்தாந்த நூல்கள் எழுதப்பெற்றன. வைணவத்தில் சித்தாந்தங்களும், நாலாயிரத் திவ்யப் பிரந்த வியாக்கியானங்களும் அதிகம் தோன்ற ஆரம்பித்தன. சிறப்பிலக்கியங்கள் தோன்றுவதற்குரிய சூழ்நிலை இல்லாதுபோகவே, சிற்சில சிற்றிலக்கியங்கள் தோன்றின. பண்டைய இலக்கியங்களுக்கு உணர எழுதும் முயற்சியும் ஆரம்பமானது. இலக்கணங்களுக்கு உரைகள் தோன்றின. பொதுவான நிலையில் இந்நூற்றாண்டில் சமய நூல்களும், உரை நூல்களும் தோன்றி வளர்ந்ததைக் கூறலாம். சமண இலக்கியத்தில் வழக்கம்போலச் சீரான வளர்ச்சி நிலை இந்நூற்றாண்டில் காணப்படுகிறது.

4.1 இலக்கியம், இலக்கிய உரைகள்

இக்காலத்தில் தோன்றிய சைவ இலக்கியங்கள் மற்றும் பிற இலக்கியங்கள் பற்றியும், இலக்கிய உரைகள் பற்றியும் இங்குக் காணலாம்.

4.1.1 சைவ, பிற இலக்கியங்கள் சிவஞானபோதம்

சைவ இலக்கியம் என்ற வகையில் மெய்கண்டார் (கி.பி. 1232) முதல் இடத்தைப் பெறுகிறார். இன்றைய சைவ சித்தாந்த மரபைத் தோற்றுவித்த பெருமை இவரையே சாரும். இவர் இயற்றிய ஒரே நூல் சிவஞான போதம் ஆகும். இவர் நடுநாடாகிய திருமுனைப்பாடிநாட்டில் திருப்பெண்ணாடத்தில் பிறந்தார். கயிலாயத்தில் சிவஞான உபதேசம் பெற்று, பரஞ்சோதி முனிவர் வானவீதியில் சென்றபோது, மெய்கண்டார், குழந்தையாக வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார். பரஞ்சோதி முனிவர் அக்குழந்தையிடம் வந்து, தான் பெற்ற சிவஞானத்தை அதற்கு உபதேசம் செய்தார். சிவஞானம் பெற்ற மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை இயற்றினார். இதுவே தமிழில் வெளிவந்த முதல் சித்தாந்த சாத்திர நூல். மெய்கண்டாரிடம் 49 மாணாக்கர் இருந்ததாகக் கூறுவர். தமக்குப்பின் சிவஞானத்தைப் பரப்பி, சைவ ஆசாரிய பரம்பரையை வளர்த்துவர அருணந்தி சிவாசாரியாரைப் பணித்துவிட்டு மெய்கண்டார் இறைவன் திருவடியடைந்தார்.

சிவபெருமானைப் பற்றிய ஞானத்தை நமக்குப் போதிக்கும் (உணர்த்தும்) நூல் சிவஞானபோதம் எனப்படும். சிவஞானபோதம் நூற்பாவால் ஆகிய 12 சூத்திரங்களும் (40 வரிகள்), பொல்லாப்பிள்ளையார் வணக்கம், அவையடக்கம் என்ற இரு பாடல்களும் கொண்டது. இரண்டு அதிகாரங்கள், நான்கு இயல்கள், பன்னிரண்டு சூத்திரங்கள் என இந்நூல் பகுக்கப்பட்டுள்ளது.

1. பொது அதிகாரம் 1. பிரமாண இயல் – 3 சூத்திரங்கள்

2. இலக்கண இயல் – 3 சூத்திரங்கள்

2. உண்மை அதிகாரம் 3. சாதன இயல் – 3 சூத்திரங்கள்

4. பயனியல் – 3 சூத்திரங்கள்

சிவஞான போதம் நூலுக்குப் பல உரைகள் தோன்றியுள்ளன. சிவஞான போதத்தைத் தொடர்ந்து இக்காலப் பகுதியில் தோன்றிய பிற நூல்கள் சிவஞான சித்தியார், இருபா இருபஃது ஆகும். இரண்டுமே அருணந்தி சிவாசாரியாரால் எழுதப்பட்டதாகும். இவர் சிவாசாரியார் மரபில் வந்தவர். இவர் மெய்கண்டாரின் மாணவர் ஆவார்.

சிவஞான சித்தியார்

சிவஞான சித்தியார் (கி.பி 1253) என்னும் நூலானது சுபக்கம் (328 திருவிருத்தங்கள்),பரபக்கம் (301 திருவிருத்தங்கள்) என்ற இரு பகுதிகளை உடையது. சிவஞானபோதம் போலவே இதுவும் 12 சூத்திரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. சிவஞானபோதத்திற்குச் செய்யுள் வடிவில் அமைந்துள்ள ஓர் அரிய உரைநூலாகச் சிவஞானசித்தியாரைக் கூறலாம்.

சுபக்கம் – அரிய பெரிய சைவசித்தாந்த நுண்பொருளை விளக்குகிறது.

பரபக்கம் – பிற சமயக் கருத்துகளை எடுத்துக் கூறி, காரண காரியத்தோடு மறுக்கிறது.

சைவ சித்தாந்தக் கொள்கைகளில் 95 விழுக்காடு சிவஞான சித்தியாரில் உள்ளன. எனவே தான்,

சிவனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை

சித்தியாருக்கு மிஞ்சிய சாத்திரமும் இல்லை

என்ற ஒரு பழமொழி எழுந்தது எனலாம். இந்நூலுக்கு ஞானப்பிரகாசர், வெள்ளியம்பலத்தம்பிரான் சுவாமிகள், நிரம்ப அழகிய தேசிகர், மறைஞான தேசிகர், சிவாக்கிர யோகிகள், சிவஞான யோகிகள் போன்றோர் உரை எழுதியுள்ளனர்.

சைவ சித்தாந்த ஞானசாத்திரங்களில் இந்நூல் அளவால் மிகப் பெரியது. அன்று முதல் இன்றுவரையுள்ள சைவ சமயக் கருத்துகளின் விரிவுகளுக்கெல்லாம் இது இடம் கொடுக்கிறது. சமய ஆராய்ச்சியில் புகுவோருக்கு இது நன்கு விளங்கும்.

இருபா இருபஃது

அருணந்தி சிவாசாரியாரின் மற்றொரு நூலாகும். இது 20 செய்யுளால் ஆனது. ஆசிரியப்பா, வெண்பா ஆகிய இரண்டு வகை யாப்புகளில் பத்துப் பத்துச் செய்யுள்களைக் கொண்டது. மெய்கண்டாரைச்சிவபெருமானாகவே கருதிச் செய்யப்பட்ட இந்நூலில், பல அரிய சைவ சித்தாந்த நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன. சிவஞானசித்தியாரில் கூறப்படாத சிலசிந்தனைகளை இந்நூலில் வினாக்களாக எழுப்பி, அடுத்தடுத்து வரும் செய்யுள்களில் விடைகளை உள்ளடக்கி, இதனை அமைத்திருக்கும் முறை படித்து இன்புறத்தக்கதாகும். செய்யுள் நடை மிகச் சிறப்புடையது.

இந்நூலுக்கு சீகாழித்தத்துவநாதர், மதுரைச் சிவப்பிரகாசர், நமச்சிவாயத் தம்பிரான் போன்றோர் உரை எழுதியுள்ளனர். இவற்றுள் தத்துவநாதர் உரையே சித்தாந்த சாத்திரங்கள் அனைத்திலும் காலத்தால் மிகவும் முற்பட்ட உரையாகும்.

உண்மை விளக்கம்

உண்மை விளக்கம் என்ற நூல் மனவாசகங் கடந்தாரால் இயற்றப்பட்டது. (கி.பி 1225) இவர் மெய்கண்டாரின் மாணவர். இந்த நூல் 53 வெண்பாக்களால் ஆனது. இந்நூலில் 36 தத்துவம், ஆணவ மலம், இரு வினை, உயிர், இறைவனின் திருநடனம், ஐந்தெழுத்து அருள் நிலை, பரமுத்தி நிலை, அணைந்தோர் தன்மை என்பவை சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் நிலையில் அமைந்துள்ளன. இந்நூல் வினா விடை முறையில் அமைந்துள்ளது. சைவ சித்தாந்தத்தைச் சாத்திர வாயிலாகப் பயில விரும்புபவர்கள், இந்நூலை முதலில் படித்துவிட்டு பின்னர் மற்றவற்றைப் படித்தால் பொருள்கள் விளங்கிக் கொள்ள எளிதாக இருக்கும்.

நளவெண்பா

நளவெண்பா புகழேந்தியால் இயற்றப்பட்டது. புகழேந்தி தொண்டை மண்டலத்தில் களத்தூரில் பிறந்தவர். இக்காலப்பிரிவில் (13ஆம் நூற்றாண்டில்) இலக்கியம் என்று பெயர் சொல்லக்கூடிய அளவில் காவிய நூலாகக் கிடைப்பது இந்நூலாகும். இதற்கு முன்னர் எழுந்தது பெருந்தேவனார் பாடிய பாரத வெண்பாவாகும். இருப்பினும் நளவெண்பாவே நன்கு புகழ் பெற்றதாகும். இந்நூல் 424 வெண்பாக்களைக் கொண்டது. ‘வெண்பாவில் புகழேந்தி’ என்னும் சிறப்பு இந்நூலாசிரியருக்கு உண்டு. இந்நூல் சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலி நீங்கு காண்டம் என்ற மூன்று காண்டங்களைக் கொண்டது.

நளனுடைய சரித்திரம் தமிழிலும் வடமொழியிலும் நன்கு அறியப்பட்ட ஒன்று. மகாபாரதத்திலுள்ள கிளைக்கதைகளில் ஒன்று நளோபாக்கியானம் என்பது. இதைத் தழுவியே புகழேந்தி, நளவெண்பாவைப் பாடினார். இந்நூல் தோன்றிய காலம் முதல், கல்வி பயிலுகின்ற இளம்பிள்ளைகள் தவறாது படிக்கின்ற சிறிய காப்பியமாக அமைந்துள்ளது. நூலில் ஆங்காங்குப் பண்டைய நூற்கருத்துகளும் தொடர்களும் பயில்வதைக் காணலாம். இவ்வாறு பயிலும் நூல்கள் திருக்குறள், திருவாசகம், திருநெடுந்தாண்டகம், திருவாய்மொழி, கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவையாகும். இந்நூல் மிக உயர்ந்த நீதிகளை எளிய சொற்களால் புகட்டும் ஒரு சிறந்த காவியமாகும். இந்நூல் எழுந்த காரணமே சூதாட்டத்தின் தீமையை எடுத்துரைப்பதாகும்.

கற்பின் இலக்கணம், மக்கட்பேற்றின் சிறப்பு போன்ற கருத்துடைய பாடல்களை இதில் காணமுடிகிறது. வாய்மையின் சிறப்பு, தூதர் இலக்கணம், ஊழ்வினையின் வலிமை போன்ற பல பொருள்கள் இதில் கூறப்படுகின்றன. செஞ்சிக் கலம்பகம், அல்லி அரசாணி மாலை போன்ற நூல்களும் புகழேந்திப் புலவர் இயற்றியனவாகக் கருதப்படுகின்றன.

இவ்வாறாக, இலக்கியங்கள் என்ற நிலையில் சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருஃது, உண்மை விளக்கம் போன்ற சாத்திர நூல்களும் நளவெண்பாவும் அடங்கும்.

4.1.2 இலக்கிய உரைகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் 10 ஆம் நூற்றாண்டு தொடங்கி இலக்கியங்களுக்கும், இலக்கணங்களுக்கும் விரிவுரைகள் எழுந்துள்ளன. பல உரையாசிரியர்கள் தருக்க ரீதியாகப் பொருளை விளக்கியுள்ளனர். அதேசமயம் நூலாசிரியரின் இதயத்தைத் திறந்து காட்டுவதுபோல உரையெழுதி யிருக்கின்றார்கள். பல பண்டைய நூல்களையும் உதாரணமாக எடுத்துக்காட்டி நினைவூட்டியுள்ளார்கள். பல தனிப்பாடல்களைக் கூட எடுத்துக் காட்டுகிறார்கள். நாம் கற்று அறியக்கூடியதை விட, ஒரு பெருங் கல்வியாளரிடம் பாடம் பயின்ற அனுபவத்தை உரையாசிரியர்கள் நமக்கு ஊட்டுகின்றனர். இக்காலக்கட்டத்தில் தோன்றிய உரையாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் காலிங்கர் (காளிங்கர்) மற்றும் பரிமேலழகர் ஆகியோர். இவர்கள் இருவருமே திருக்குறளுக்கு உரை செய்தவர்கள்.

காலிங்கர் உரை

காலிங்கர் உரை (கி.பி 1225) திருக்குறளுக்கு உரை செய்த ஆசிரியர் பதின்மருள் பரிமேலழகருடைய உரை சிறப்பானது. மணக்குடவர் உரையும் நெடுங்காலமாக அச்சிடப்பெற்று வருவது, ஏனைய உரைகளுள் பரிதியார், பரிப்பெருமாள், காலிங்கர் போன்றோரின் உரைகள் சமீப காலத்தில் வந்துள்ளன. காலிங்கர் உரை ஓரளவு நூல் முழுமைக்கும் கிடைத்துள்ளது. இடையிடையே இரண்டொரு பாடல்களுக்குக் கிடைக்காத நிலையில், அச்சிட்டவர்கள் பரிதியார் உரையையே தந்துள்ளனர்.

காலிங்கர் என்ற பெயரில் பலர் சோழ அரசில் பெரும் பதவியில் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வளோள குலத்தினராயும், படைத்தலைவராயும் இருந்தனர். இவரும் அந்தப் பரம்பரையில் வந்திருக்கலாம். காலத்தால் இவர் பரிமேலழகருக்கு முற்பட்டவர். காலிங்கர் செய்ததாக, திருக்குறள் உரை ஒன்றுதான் கிடைத்துள்ளது. இவர் உரை சிறப்பான உரையாகும்.

இவரது உரையில் வடமொழிச் சொற்கள் சில உள்ளன. சிக்கலான பொருள் அமைப்போ வாக்கிய அமைப்போ இதில் இல்லை. விளக்கமாகப் பல இடங்களில் உரை எழுதியுள்ளார் (எடுத்துக்காட்டு : குறள் 774, 940, 714, 737, 833, 887, 910, 947 மற்றும் பிற).

பாரதத்துள் நூற்றுவரையும் இராமாயணத்தில் இராவணனையும் எண்ணிக்கொள்க என்று கீழ்க்காணும் குறளில் உதாரணம் கூறுகிறார்.

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத்திருந்து எண்ணிக் கொளல்

(530)

(தன்னிடமிருந்து பிரிந்து சென்ற ஒருவன் ஏதாவது ஒரு காரணத்துக்காக மீண்டும் தன்னுடன் சேர வந்தால், அரசன் நுணுக்கமாக, ஆராய்ந்து பார்த்து, பிறகு அவனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் – என்பது இதன் பொருள்.)

ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்தாவது குறள் உரையின் முடிவில் அடுத்த அதிகாரத்துக்குத் தோற்றுவாயை அழகாக அமைத்துக் காட்டுகிறார், காலிங்கர்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை (கி.பி.1272) இக்காலப் பகுதியில் தோன்றிய மற்றோர் உரையாகும். தலைசிறந்த உரையாசிரியர்களுள் இவர் மிகவும் சிறப்புடையவர். அந்தண மரபைச் சேர்ந்தவர். (திருக்குறளுக்கு உரை செய்த) பதின்மர் உரைகளுள், அச்சில் வந்துள்ள ஐந்து உரைகளில் எல்லா வகையிலும் இது சிறப்பானது. பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படைக்கும் இவர் உரை எழுதியுள்ளார்.

பரிமேலழகரின் திருக்குறள் உரை

இது பொழிப்புரையாகவே உள்ளது. பிற்காலத்தில் உரையை அச்சிட்டோர் கற்போர் நலன் கருதிப் பதவுரையாகப் பிரித்து அச்சிட்டனர். இந்த உரையாசிரியர் முந்தையோரின் செய்யுட்களையும்,தொடர்களையும் உரைநடையாகவே எழுதிச் செல்கிறார். பல நூல்களைப் பரிமேலழகர் மேற்கோளாக எடுத்துக் காட்டுகிறார். இடம் விளங்காத மேற்கோட்பாடல்களும் சில உள்ளன. உரையாசிரியரின் வடமொழிப்புலமையை இவ்வுரையில் காணமுடிகிறது.

பரிமேலழகர் சமய நூலறிவு மிக்கவர் என்பதை அவர் சொல்லும் குறிப்புகள் மூலம் அறிய முடிகின்றது. சாங்கிய நூல் (27), ஆருகதர்(286), வைசேடிகர்(307, 359) ஆகமங்கள் (300) ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் (2) ஆகிய குறிப்புகளிலிருந்து இதனை அறியலாம். மெய்யுணர்தல் (அதிகாரம் 36) என்பதற்குத் தத்துவ ஞானம் என்று பொருள் கூறுகிறார். இந்த அதிகாரத்தில் பத்துப்பாடல்களிலும் தத்துவப் பொருள்களையே விரித்துரைக்கிறார். பரிமேலழகர் உரை இலக்கண உரை என்பர். காரணம் அவர் ஆங்காங்குப் பல இலக்கணக் குறிப்புகளைத் தந்திருப்பதும், பிறவுரையாசிரியர்கள் இலக்கணப் பிழையால் செய்த தவறான உரைகளை எடுத்துக் காட்டியிருப்பதும் ஆகும் இவருடைய ‘மருத்துவக் குறிப்புகள்’ பெரிதும் ஆராய்ந்து வாழ்க்கைக்குப் பொருந்த எழுதப்பெற்றவை.

தமிழ் இலக்கிய உரையாசிரியர்களுள் மிகச் சிறந்தவர்கள் என்ற நிலையில் காலமுறைப்படி அடியாருக்கு நல்லார், பரிமேலழகர், நச்சினார்க்கினியர் என்ற மூவரைக் குறிப்பிடலாம்.

இக்காலப் பகுதிக்குச் சற்றுப்பின்னாக சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலியவற்றுக்கும், ஐம்பெருங் காப்பியங்களுக்கும் உரைகள் எழுந்தன. இந்த உரைகளின் காலம் பொதுவாக கி.பி. 11ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை எனலாம். உரை எழுதும் இம்முயற்சியானது இலக்கியம், இலக்கணம் ஆகிய இரு துறைகளிலும் வளர்ந்தது. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய பிற உரைகள் என்ற நிலையில் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு போன்றவற்றிற்கான உரைகளையும் பரிபாடலுக்குப் பரிமேலழகர் உரையினையும் கூறலாம்.

4.2 இலக்கண நூல்கள், உரைகள்

இக்காலப்பகுதியில் தோன்றிய இலக்கண நூல்கள் மற்றும் இலக்கண உரைகள் பற்றிக் காணலாமா?

4.2.1 இலக்கண நூல்கள் இந்நூற்றாண்டில் மிகவும் சிறப்பான இலக்கண நூல் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சமணர் இயற்றிய இரு இலக்கண நூல்கள் இக்காலப் பகுதியில் தோன்றின.

நன்னூல்

நன்னூல் (கி.பி. 1212) இன்று வரை தமிழுக்கு முக்கிய இலக்கண நூலாகத் திகழ்கிறது. இதனை எழுதியவர் பவணந்தி முனிவர். இவர் சமண சமயத்தவர். இந்நூலின் பெயரே இதனுடைய சிறப்பினை உணர்த்தும். பழங்காலத்தில் இலக்கணத் துறையில் தொல்காப்பியம் பெற்ற இடத்தினை இடைக்காலத்தில் நன்னூல் பெற்றது. தொல்காப்பியர் காலத்திற்குப்பின் வழக்காறு அற்றுப்போன இலக்கணங்களை விடுத்து, இடைக்காலத் தமிழுக்கு ஏற்ற முறையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

நன்னூல், எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறுகிறது. இவ்விரண்டிற்கு மட்டுமே அதிகாரங்கள் செய்யப்பட்டுள்ளன. பொருள், யாப்பு, அணி பற்றி இலக்கணம் கூறவில்லை. நன்னூல் 462 சூத்திரங்களைக் கொண்டது. எழுத்ததிகாரம் மற்றும் சொல்லதிகாரத்தின் தொடக்கத்தில் தனித் தனியாக அருகன் வணக்கம் கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியச் சூத்திரங்கள் ஏழு இந்நூலில் (நன்னூல் 90, 252, 317 396, 404, 404, 408) அப்படியே எடுத்து ஆளப்பட்டுள்ளன.

இந்நூலின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஒவ்வொன்றும் ஐந்து இயல்களைக் கொண்டது. நன்னூலின் சிறப்பைக் கருத்தில் கொண்டு, இலக்கணம் கற்கப் புகுபவர்கள் இந்நூலையே கற்கிறார்கள். 17ஆம் நூற்றாண்டில் இலக்கண விளக்கம் செய்த வைத்தியநாத தேசிகர் இதிலிருந்து 250 சூத்திரங்கள் எடுத்துக் கையாண்டுள்ளார்.

இந்நூலுக்கு மயிலைநாதர் உரையும், சங்கர நமச்சிவாயர் மற்றும் சிவஞான முனிவரின் விருத்தியுரையும் உள்ளன. விசாகப் பெருமாளையர், ஆறுமுக நாவலர், இராமானுஜ கவிராயர், வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் ஆகியோர் உரை எழுதியுள்ளனர். காலத்தால் முந்தியது மயிலைநாதர் (கி.பி. 14 ஆம் நூற்றாண்டு) உரையாகும்.

அகப்பொருள் விளக்கம்

நாற்கவிராச நம்பியால் இயற்றப்பட்டது. எனவே நம்பியகப் பொருள் என வழங்கப்படுகிறது. தமிழ் இலக்கணம் பயில்வோர் இந்நூலை அதிகமாகப் பயில்கிறார்கள். அகப்பொருள் இலக்கணத்தைத் தொகுத்தும் விளக்கியும் சொல்வதால் இந்நூல் விளக்கம் என்று பெயர் பெற்றது. தொல்காப்பியத்திலும், வேறு இடங்களிலும் இருந்த அகப்பொருள் இலக்கணங்களை, தம் காலத்துக்கு முன்னர் வந்த தமிழ்ச் சான்றோர் இலக்கியங்களுக்கும் பொருந்துமாறும் முறைப்படத் தொகுத்தும் எழுதியுள்ளார் ஆசிரியர். பொருள் நன்கு விளங்கும்படி சூத்திரம் வகுத்தும், தாமே உரை எழுதியும் அவர் இந்நூலைச் செய்துள்ளார்.

பிற்காலத்தில் இலக்கண விளக்கம் செய்த வைத்தியநாத தேசிகர் அகப்பொருள் இலக்கணம் கூறுமிடத்தில் பெரும்பாலும் இந்நூற் சூத்திரங்களைக் கொண்டே தம் நூலில் இலக்கணம் அமைத்துள்ளார். இந்நூலானது அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்ற ஐந்து இயல்களைக் கொண்டுள்ளது. 252 சூத்திரங்கள் உள்ளன. ‘பண்டைய சான்றோர் நூல்களிலிருந்து மேற்கோள் காட்டி உரை எழுதுகிறார் நூலாசிரியர். அவ்வாறு கிடைக்காதபோது ‘தமது சூத்திரங்களையே இலக்கணமாகக் கொள்ளலாம்’ என்று கூறுகின்றார். (சூத்திரம் 144 உரை), சிற்றட்டகம் என்ற நூல் பற்றிய விளக்கம் இந்நூலின் உரையில் கிடைக்கிறது.

4.2.2 இலக்கண உரைகள் இக்காலக்கட்டத்தில் தொல்காப்பியம், வச்சணந்திமாலை போன்றவற்றிற்கு உரைகள் செய்யப்பட்டுள்ளன.

தொல்காப்பிய உரை (பேராசிரியர்)

இவ்வுரை பேராசிரியரால் எழுதப்பட்டது. இவர் எழுதிய குறுந்தொகை உரை கிடைக்கவில்லை. இவ்வுரையாசிரியர் சைவராக இருக்க வாய்ப்புண்டு. ‘பொன்மேனி’ என்ற தொடரை உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார். ‘புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்’ என்கிறது திருவாசகம். பொதுவாக, தேவார திருவாசகங்களையோ ஆழ்வார் பிரபந்தங்களையோ உரையாசிரியர்கள் மேற்கோளாகக் காட்டுவதில்லை. இருப்பினும், பரிமேலழகர் திருவாய்மொழியையும், பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் திருவாசகத்தையும் காட்டுகிறார்கள்.

இவ்வுரையாசிரியர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை செய்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் இவர் உரை பொருளதிகாரம் முழுமைக்கும் கிடைக்கிறது. பாட பேதங்களைப் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். இவர் வடநூற் பயிற்சி மிக்கவர். இவர் உரையால் பல வரலாற்றுச் செய்திகள் தெரிய வருகின்றன.

வச்சணந்தி மாலை உரை

பாட்டியலைக் கூறுவது வச்சணந்தி மாலை (கி.பி. 1220). இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர். அவருடைய ஆசிரியரான வச்சணந்தி முனிவருடைய பெயர் இந்நூலுக்குச் சூட்டப் பெற்றது. இந்நூலுக்கு உரை செய்தவரின் பெயரோ வரலாறோ கிடைக்கவில்லை. பல மேற்கோள் பாடல்கள் இதன் உரையுள் உள்ளன.

இவ்வுரை சுருக்கமான பழைய உரையாகும். வடமொழி நூல்கள் பலவற்றை இவர் குறிப்பிடுகின்றார். சங்க நூல்கள் சிலவற்றையும் எடுத்துக் கூறுகிறார். நூலின் இறுதிப் பகுதியில் விரிவாக உரை எழுதவில்லை.

தொல்காப்பிய உரை (சேனாவரையர்)

சேனாவரையரால் இவ்வுரை எழுதப்பட்டது. சேனாவரையர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர். இவரை இலக்கணக் கொத்து எழுதிய சுவாமிநாத தேசிகரும், சிவஞான சுவாமிகளும் நன்கு பாராட்டுவர்.

இந்நடை எளிய நடையன்று. ஆனால் சுவைத்து எழுதுகின்ற நயம் மிக்க நடையாகும். இலக்கணப் பகுதிகள் அனைத்தையும் ஒரு பொது நோக்காகக் கருதியே இவர் சொல்லதிகாரத்துக்கும் அதன் ஒவ்வோர் இயலுக்கும் உரை எழுதுகின்றார். உரை எழுதும்போது முன்னோர் கொண்ட சூத்திர அமைப்புகளைச் சில சேர்த்தும், சில பிரித்தும் தக்க காரணத்தோடு எழுதுகிறார்.

தொல்காப்பியரைப் போற்றியே இவர் இவ்வுரை எழுதுகிறார். உரையைத் தருக்க முறையிலேயே எழுதுகிறார். தாம் மேற்கோள் காட்டும் இலக்கியப் பகுதிகளிலுள்ள, பொருத்தமான இலக்கணப் பகுதியையும் நன்கு விளக்குகிறார். இவர் பண்டை இலக்கியச் செய்திகளைக் குறிப்பிடுகின்றார். இவருடைய உரையுள் பத்துப்பாட்டு முழுமையும் மேற்கோளாக வருகிறது. எட்டுத்தொகையுள் பரிபாடலைப் பெயர் குறிப்பிடுகின்றார். மற்ற ஏழையும் கூட எடுத்தாள்கிறார். தொல்காப்பியத்துக்கு இரு உரைகள் எழுந்தமை இக்காலப் பகுதியில் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

4.3. பிற சமய இலக்கியங்கள்

இக்காலப் பகுதியில் தோன்றிய பிற சமய இலக்கியங்கள் என்ற நிலையில் வைணவம் மற்றும் சமண சமய இலக்கியங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பௌத்த சமய இலக்கியம் எதுவும் இக்காலப் பகுதியில் தோன்றவில்லை.

4.3.1 வைணவம் இக்காலப் பகுதியில் சிறப்பாக வாழ்ந்து தமிழிலும், மணிப்பிரவாளத்திலும் வைணவப் பிரபந்த வியாக்கியானங்களும் (விரிவுரைகள்) கிரந்தங்களும் (நூல்கள்) எழுதிய வைணவ ஆசாரியார்கள் சிலருடைய பங்களிப்பைக் காணலாம். மணிப் பிரவாளம் என்பது மணியும் பவளமும் சேர்த்துக் கோத்தது போல, தமிழும் வடமொழியும் கலந்து எழுதும் நடை என்பதை முன்பே பார்த்தோம்.

நஞ்சீயர்

இக்காலப் பகுதியில் தோன்றியவர். வைணவ இலக்கியத்திற்கு இவருடைய பங்களிப்பு மிகுதியாக இருந்தது. இவர் திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி, திருப்பாவை ஈராயிரப்படி, திருவந்தாதி, கண்ணினுண் சிறுத்தாம்பு, திருப்பல்லாண்டு வியாக்கியானம், ரகஸ்யத்ரயவிவரணம், நூற்றெட்டு சரணாகதி கத்யத்ரய வியாக்கியானம் போன்ற நூல்களைச் செய்தார்.

நஞ்சீயர் எழுதிய ஒன்பதினாயிரப்படியின் சிறப்பை,

தஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதாந்தி

நஞ்சீயர் தாம்பட்டர் நல்லருளால் – எஞ்சாத

ஆர்வ முடன்மாறன் மறைப்பொருளை ஆய்ந்துரைத்தது

ஏரொன் பதினாயிரம்

என்று உபதேச ரத்னமாலை (43) கூறுகிறது. (தன் புகழை ஞானியர்களும் வியக்கும்படி விளங்கும் அறிஞரான நஞ்சீயர், தம் குருவான பட்டர்பிரான் அருளால், நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு, அதன் வேதப்பொருள் விளங்குமாறு அழகாகச் செய்தது ஒன்பதினாயிரப்படி உரையாகும் – என்பது இதன் பொருள்).

நம்பிள்ளை (கி.பி.1207-1312)

சோழ நாட்டில் திருவரங்கம் அருகே நம்பூரில் பிறந்தார். தம் குருவான பட்டரின் அருளோடு திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி என்ற வியாக்கியானம் செய்தார். நஞ்சீயரின் ஒன்பதாயிரப்படி ஆற்றில் நழுவிச் சென்றதால், இவர் தம் நினைவாற்றலினால் அதை மீண்டும் எழுதினார். எழுதியதில் சொந்தக் கருத்துக்களும் சில கலந்திருந்தன. நம்பிள்ளையின் அரிய உபதேச மொழிகள் பலவற்றை வார்த்தாமாலையில் காணலாம்.

பெரியவாச்சான்பிள்ளை (கி.பி. 1228-1323)

இவர் வியாக்கியான சக்கரவர்த்தி என்று பெயர் பெற்றவர். சோழ நாட்டில் செய்நலூரில் பிறந்தார். இளமையிலிருந்தே இவருக்குக் கிருஷ்ண பக்தி அதிகமாக இருந்தது. நம்பிள்ளையை இவர் தமது ஆசிரியராகக் கொண்டார். இராமாயணத்தில் இவருக்கு அளவற்ற ஈடுபாடு உண்டு. இவருடைய ஆற்றலை நன்கு உணர்ந்த நம்பிள்ளை திருவாய்மொழிக்கு வியாக்கியானம் எழுதும்படி இவருக்குக் கட்டளையிட்டார். அதன்மேல் இவர் இராமாயண சுலோகங்கள் எத்தனையோ அத்தனை கிரந்தம் (24,000) கொண்ட வியாக்கியானம் செய்தார். இதுவே இருபத்து நாலாயிரப்படி எனப்படும். திருப்பாவைக்கு, மூவாயிரப்படி என்ற வியாக்கியானம் எழுதினார். திருப்பாவைக் (கி.பி. 1228 – 1323)குப் பலர் வியாக்கியானங்கள் எழுதியிருப்பினும் இவருடைய உரையே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இவர் எழுதியவை நாலாயிரப் பிரபந்தம் முழுமைக்குமான மணிப்பிரவாள வியாக்கியானம், திரிமத சித்தாந்த சார சங்கிரகம், பாசுரப்படி ராமாயணம், கலியன் அருள்பாடு உட்படப் பல நூல்களாகும். மணிப்பிரவாளம் இல்லாது சுவை பொருந்திய தமிழாகவே இவரால் எழுத முடியும் என்பதற்கு இவரது நூலில் அதிகமான சான்றுகள் உள்ளன. கடவுள், உலகம், உயிர் ஆகிய மூன்றின் தொடர்பு பற்றிக் கூறும்போது வடமொழிச் சொற்களைக் கையாளுகின்றார். இயற்கையை இனிய தமிழ்ச் சொற்களால் வருணிக்கின்றார். தம் குருவின் கட்டளைப்படி இவர், பெரியவாச்சான் பிள்ளை திருமொழி உரை செய்ததை உபதேச ரத்ன மாலை (44) பாராட்டுகிறது.

பின்பழகிய பெருமாள் ஜீயர்

நம்பிள்ளையின் சீடர். வைணவ சமயத்தினர் இவரை நினைவுகூர்வது இவர் செய்த ஆறாயிரப்படி குரு பரம்பராப்ரபாவம் என்ற மணிப்பிரவாள நடை நூலினால் ஆகும். இவர் செய்த நூல்கள் குருபரம்பராப்ரபாவம், பஞ்சார்த்த ரகசியம் என்பன. இவற்றுள் குரும்பரம்பரையே ஆழ்வார்கள் வரலாற்றை அறிவதற்கு அடிப்படையாக உள்ளது. நூலின் முதல் பகுதியான பிரவேசம் என்ற பகுதியில் வைகுண்டநாதன் ஆழ்வார்களை அவதரிக்கச் செய்ததையும், அவர்கள் மூலமாக நாலாயிரப் பிரபந்தங்களை உருவாக்கச் செய்ததையும் கூறியுள்ளார். பின்பு முறையாகப் பன்னிருவர் வரலாற்றைக் கூறி முடிக்கின்றார். பின்னர் வைணவ ஆசிரியர்களின் வரலாறுகள் கூறப்படுகின்றன.

வைணவ சமயக் கோட்பாடுகள் இந்த நூலில் அதிகம் காணப்படுகின்றன. இந்த பிரபாவத்தை பக்தியோடு படிப்பவர் இதில் ஈடுபட்டு ஒன்றிவிடுவர் என்பதில் ஐயமில்லை. பெரியபுராணம் ஒன்று நீங்கலாக, இவ்வளவு நயமும் சிறப்பும் கொண்ட வரலாற்று நூல் எதுவும் இல்லை. வார்த்தாமாலையும் இவரே தொகுத்தார் என்பது வரலாறு.

திருக்கோனேரி தாஸ்யை

வைணவப் பெண்மணியான இவர், திருவாய்மொழி வாசகமாலை என்ற நூலை எழுதினார். இந்நூல் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் தேர்ந்தெடுத்த 164 பாடல்களுக்கு வியாக்கியானம்போல அமைந்துள்ளது. திருவாய்மொழியில் 1102 பாடல்கள் உள்ளன.

10 அல்லது 11 பாடல்கள் கொண்டது 1 பதிகம்

10 பதிகம் கொண்டது 1 பத்து

10 பத்துகள் சேர்ந்ததே திருவாய்மொழி

வாசகமாலை ஆசிரியர் தம் நூலில் ஒவ்வொரு பதிகத்திலும் முதல் பாட்டையோ அல்லது முதல் பாட்டும் மற்றொரு பாட்டும் ஆக இரு பாட்டுக்களையோ எடுத்துக் கொண்டு, அவற்றுக்குத் திருவாய்மொழியின் முதல் பாடலுக்குத் தகுந்தவாறு பொருள் கூறுகின்றார். திருவாய்மொழிப் பாசுரங்கள் அனைத்திலும் சொல்லப்பட்ட பொருள் முதல் பாசுரத்தின் பொருளே என விவரிக்கின்றார். இவ்வாறு இவர் 100 பகுதிகளாக விவரிப்பதால் இந்த நூல் விவரண சதகம் என்று பெயர் பெற்றது. நாலாயிரப் பிரபந்த உரைகள் போல இந்நூலும் மணிப் பிரவாள நடையில் அமைந்துள்ளது. பல வடமொழி நூல்கள் இதில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. பல பழமொழிகளைக் கூறுகின்றார் ஆசிரியர்.

மேற்கண்டவர்களைத் தவிர வடக்குத் திருவீதிப்பிள்ளை, ஈயுண்ணி மாதவப்பெருமாள், நயினாராச்சான்பிள்ளை, நடாதூரம்மாள் போன்றோரும் அக்காலப் பகுதியில் தோன்றி வைணவ இலக்கியத்திற்குத் தொண்டாற்றியுள்ளனர். இக்காலப் பகுதியில் பல தனியன்களும் எழுதப்பட்டுள்ளன.

4.3.2 சமணம் சமணர்கள் பல நூற்றாண்டுகளாக, பின்வரும் துறைகளில் தம் கவனத்தைச் செலுத்தி வந்தனர்.

1) சமண சமய இலக்கியம், சரித்திரம் இயற்றுதல்

2) தமிழ் மொழிக்கான இலக்கணங்கள் செய்தல்

3) நீதி நூல்கள், நல்லொழுக்க போதனைக்குரியவை இயற்றுதல்

இவ்வகையில் இந்நூற்றாண்டில் இரண்டு நூல்கள் எழுந்தன. அவை அறநெறிச்சாரம் (நீதி நூல்), யசோதர காவியம் (புராணக்கதை) ஆகியவையாகும். யசோதர காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும்.

அறநெறிச்சாரம்

முனைப்பாடியாரால் (கி.பி.1275) இயற்றப்பட்டது. இவருடைய வரலாறு கிடைக்கவில்லை. இவர் சமணர், அதற்கேற்ப இந்நூலின் சில பாடல்கள் (1,225,226) அருகதேவனைக் குறிக்கின்றன. 226 வெண்பாக்களைக் கொண்டது இந்த நூல். சமண சமயத்தவருக்கான சிறப்பு ஒழுக்கங்களையும், அறநெறிகளையும் வரையறை செய்து கூறுகிறது. இதற்கு முன் வெளியான அருங்கலச் செப்பு என்ற சமண நூலின் விளக்கமாக இதனைக் கருதுவர். சமணச் சார்பினராய் இருந்தபோதிலும் பொது நீதிகளும், ஆசாரங்களும், நல்லொழுக்க விதிகளும் இதில் கூறியுள்ள அளவு வேறு எந்த நூலிலும் கூறப்படவில்லை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இவர் நன்கு தோய்ந்தவர். பல பாடல்களில் (89-95) ஆசிரியர், மகளிர் ஒழுக்கம் பற்றிக் கூறுகிறார். இவை தமிழ் மரபைச் சிறப்பாக உணர்த்துகின்றன. சமண மரபையொட்டிப் பெண்டிரைப் பழித்தல் என்ற கருத்தை இவை தெரிவிக்கவில்லை. இதே நூற்றாண்டில் பெண்டிரைப் பழிக்கவென்றே யசோதர காவியம் தோன்றியிருக்க, இவர் அவ்வாறு பழிக்காது நூல் செய்துள்ளது.

யசோதர காவியம்

யசோதர காவியம் (கி.பி. 1275) என்ற நூலின் ஆசிரியர் பெயரும் வரலாறும் தெரியவில்லை. இந்நூல் 320 பாடல்களைக் கொண்டது. பிறப்பு, வினை, இறப்பு, மீண்டும் பிறப்பு, வினை, இறப்பு என்று நூல் முழுவதும் அமைந்துள்ளது. இந்நூலில் வினை பற்றிய சில கருத்துகள் அதிகம் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:

உயிர்க்கொலை பெரும்பாவம், புலால் உண்ணல்

கொடிய பாவம்.

இசை பழிக்க வேண்டிய ஒன்று.

பெண்கள் மனம் தீய வழியையே நாடும்

உயிர்க்கொலை, புலாலுண்ணல் ஆகியவை அறிவுடைய மக்களால் பழிக்கப்படுபவை, மற்றவை அவ்வாறு அல்ல. பெண்ணினத்தைப் பற்றிய இவரது கருத்து தமிழிலும் மக்களிடத்தும் தவறான எண்ணத்தை வளர்த்தது எனலாம். இவர் சீவகசிந்தாமணிக் கருத்துக்களையும், தொடர்களையும் பல இடங்களில் எடுத்தாள்கிறார். இயங்கும் உயிர்களைக் கொலை செய்வது பெரிய பாவம் என்றும், இயங்கா உயிர்களான செடி, கொடியைக் கொலை செய்வது சிறிய கொலை என்றும் அருங்கலச் செப்பு கூறும். இந்நூலில் பெரியகொலை என்று (பாடல் எண்.236) முதல்வகைக் கொலை குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்காலம் சமண இலக்கியம் அருகிச் சுருங்கத் தொடங்கிய காலம் எனலாம்.

4.4 பிரபந்தங்கள், புராணங்கள்

பிரபந்தம் என்ற நிலையில் குலோத்துங்க சோழன் கோவை, சங்கர சோழன் உலா, தஞ்சைவாணன் கோவை போன்றவை தோன்றியன.

4.4.1 பிரபந்தங்கள் குலோத்துங்க சோழன் கோவை

இக்கோவையின் பாட்டுடைத்தலைவன் பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. பலருடைய கருத்து, இது மூன்றாம் குலோத்துங்கசோழன் மீது பாடப்பட்டது என்பதாகும். திருக்கோவையாரை அடுத்தும், தஞ்சைவாணன் கோவைக்கு முன்பும் தோன்றியது. இது ஐந்திணைக் கோவை எனப்படும். நீண்ட பிரபந்தங்களுள் ஒன்று. 510 பாடல்களைக் கொண்டது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

உறையூர், புகார், தஞ்சை, நாகை (சோழர்க்குரிய நகரங்கள்) என்பனவற்றை எல்லாவிடங்களிலும் இக்கோவை குறிப்பிடுகின்றது. குலோத்துங்கனின் போர்ச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. சேரனது கரூரை வென்று, தன் அடியில் பணிந்த அவனுக்கு மீண்டும் முடி வழங்கி அவ்வூருக்கு ‘முடிகொண்ட சோழபுரம்’ எனப் பெயரிட்டமை கூறப்பட்டுள்ளது. இம்மன்னனின் வள்ளல் தன்மை, தமிழ்ப்புலமை போன்றவையும் கூறப்பட்டுள்ளன. இம் மன்னனின் காலத்தில்தான் வச்சணந்திமாலை, நேமிநாதம், நன்னூல் முதலியவை எழுதப்பட்டன. இம்மன்னன் சிறந்த கலாரசிகன் என்பது இக்கோவையுள் பல இடங்களில், (கலையாதரன் (360), கற்றோர்க்கு வள்ளல் (327), இசை விருப்பமுடையவன் (46), பாவலர் காவியம் ஆடுபவன் (415) கூறப்பட்டுள்ளது. தன்முன் கவி பாடியவர்களின் கவிதைகளில் காணப்படும் குற்றங்களைக் களையும் ஆற்றல் பெற்றவன்; இம்மன்னன் சிவபிரானிடம் அன்பு கொண்டவன்.

சங்கர சோழன் உலா

இவ்வுலா சோழருடைய பாரம்பரியத்தைக் கூறுகிறது. இவ்வுலா ஆசிரியர் ஒட்டக்கூத்தர் செய்த உலாக்களைப் பின்பற்றிப் பாடியுள்ளார். அவர் பெயர் தெரியவில்லை. சோழர் குலத்தொன்மை, தலைவன் பெருமை, அவனுடைய அலங்காரம், அவன் பவனி வருதல் போன்றவையும், அரசன் உலாவருதலை கண்ட பெண்களின் மன நிலையும் கூறப்பட்டுள்ளன.

தஞ்சைவாணன் கோவை

இதனைப் பாடியவர் பொய்யாமொழிப்புலவர். தொண்டை நாட்டைச் சேர்ந்த துறையூரில் பிறந்தவர். சில தனியன்களும் பாடியுள்ளார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. பாண்டிக்கோவை, திருக்கோவையார், குலோத்துங்க சோழன் கோவை என்பவற்றை அடுத்துக் கிடைக்கின்ற நூல்களில் இதுவே பழமை வாய்ந்தது. தென் பாண்டி நாட்டிலுள்ள மறை நாட்டுத் தஞ்சாக்கூர்த்தலைவன் சந்திரவாணனைப் புகழ்வது இந்நூல். இவன் பாண்டி நாட்டுத் தலைவனாக இருந்தான். இவனும் இந்நூல் ஆசிரியரும் சிவ வழிபாடு உடையவர்கள் என்பதைப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. சொற்சுவை, பொருட்சுவை ஆகியவையும் எளிய நடையும் கொண்டது. தொல்காப்பியம், இறையனார் களவியல் என்ற பண்டை இலக்கணங்களை நன்கு பயின்றவர் இந்நூலாசிரியர். நாற்கவிராசநம்பியின் அகப்பொருள் விளக்கத்துக்கு இலக்கியமாகவே இக்கோவையைப் பொய்யாமொழிப் புலவர் பாடியுள்ளார்.

4.4.2 புராணம், வேதாந்தம் இக்காலப் பகுதியில் தோன்றிய புராண இலக்கியமாக, பெரும்பற்றப்புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணத்தைக் கூறலாம். வேதாந்த இலக்கியம் என்ற நிலையில், ஸ்ரீபட்டனாரின் பங்களிப்பைக் கூறலாம்.

திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம்

பெரும்பற்றப்புலியூர் நம்பியால் எழுதப்பட்டது. இவருடைய பெயரால் இது நம்பி திருவிளையாடல் எனவும் வழங்கப்படும். மதுரைப்புராணம் என்றும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இந்நூல் 1753 விருத்தங்களைக் கொண்டது. 64 திருவிளையாடல்கள் இதில் சொல்லப்பட்டுள்ளன. சந்தம் பாடுவதில் இவருக்கு விருப்பம் உண்டு. கடவுள் வாழ்த்துப் பகுதியில் பல பாடல்களில் துதிக்கப்பெறும் தலம் அல்லது மூர்த்தி பெயரின் சந்தத்திலேயே (திருச்சிற்றம்பலம், திருவம்பலம், பொன்னம்பலம்) அமைந்துள்ளன. புராணக் கதைகளை ஒட்டி, சில இலக்கியச் செய்திகளைக் கூறுகிறார். வாதவூரடிகள் சரிதத்தைத் தனியாக நான்கு படலங்களில் 241 பாடல்களில் கூறுகிறார். இதுவே தனியாக ஒரு புராணம் எனக் கருதும் அளவு உள்ளது. புராணம் படிப்பதன் பயனையும் கூறுகிறார்.

பரமார்த்த தரிசனம்

ஸ்ரீ பட்டனார் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் பகவத் கீதையை முதன்முதலில் தமிழில் பாடினார். ஆசிரியர் இந்நூலுக்குத் தமிழில் பரமார்த்த தரிசனம் எனப் பெயர் சூட்டிய போதிலும், பகவத் கீதை என்றே ஏடுகளில் காணப்படுகிறது. மூலமும் உரையுமாக நூல் உள்ளது. சங்கரர் அருளால் இந்நூலைச் செய்ததாக ஆசிரியர் கூறுகின்றார். ஆதலால் வைணவர்கள் இதனைப் படிப்பதில்லை. மொழி பெயர்ப்பு மூல நூலை ஒட்டியே செல்கிறது. எனினும் பாடல்கள் தமிழ் மரபும் பண்பும் குறையாமல் உள்ளன. இந்நூல் தற்போது தமிழ் இலக்கிய உலகில் வழக்கில் இல்லை.

4.5 தொகுப்புரை

இக்காலப் பகுதியில் இலக்கியம், இலக்கணம், உரைகள் என்ற அனைத்து நிலைகளிலும் சீரான வளர்ச்சி ஏற்பட்டது. சாத்திர நூல்கள் மற்றும் இலக்கண உரைகள் அதிகம் தோன்றியுள்ளன. ஒப்பு நோக்கும்போது, இக்காலப்பகுதியில் வைணவ இலக்கியங்களே அதிகம் தோன்றின எனலாம். பிரபந்த இலக்கியங்கள் சீரான நிலையில் காணப்பட்டன. சமண இலக்கியங்கள் வழக்கம் போல் தம் பங்களிப்பை இக்காலக் கட்டத்திலும் செலுத்தின. இக்காலப் பகுதியில் பௌத்த சமயம் தொடர்பான எவ்வித இலக்கியமோ, உரையோ எழவில்லை.

பாடம் - 5

பதினான்காம் நூற்றாண்டு

5.0 பாட முன்னுரை

பதின்மூன்றாம் நூற்றாண்டிலும், பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சோழப் பேரரசும், பாண்டிய அரசும் அழிந்தன. அதனால் குறுநில மன்னர்கள் ஆட்சி ஏற்பட்டது. இக்காலப் பகுதியில் தமிழகத்தில் வலிமையான அரசு எதுவும் இல்லை. குழப்பம், போர், கொந்தளிப்பு இல்லாத நிலை. சமய நூல்கள் பெருகின. உலகியல் துறையில் மக்கள் மனம் ஒடுங்கியிருக்க வேண்டிய நிலை காரணமாக ஆன்மிகத் துறையில் அவர்கள் உள்ளம் விரிவு காண முயன்றது. ஞான மார்க்கத்தில் இக்காலத்தில் நூல்கள் பெருகியது போல வேறு எந்தக் காலத்திலும் பரவவில்லை.

முகமதிய நாகரிக மோதல், மக்கள் மனத்தில் புரட்சியை உண்டாக்கியது. புனிதம், நாகரிகம், தெய்வீகம் அனைத்தும் இவர்களால் பாதிக்கப்பட்ட போது மக்கள் மனத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக முன்னைவிட அதிகமான சமயப்பற்றும், தெய்வ பக்தியும் ஏற்பட்டு, சமய இலக்கியம் தோன்ற வழிகோலியது. மக்கள் மனத்தில் இக்கொந்தளிப்பு நிலைத்து, எவ்வித முடிவும் காணாமல் தத்தளிப்பு நிலவியது.

இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பல பெரியோர்களால் புதிய ஞான மரபுகள் எழுந்தன. சிற்றம்பல நாடிகள் வாயிலாக ஞானாசிரியர் பல பிரிவுகளாகப் பிரிந்தனர். சீகாழிக் கண்ணுடைய வள்ளல் ஆதீனம் இக்காலத்தில் தோன்றியது. திருவாவடுதுறை ஆதீனம், காஞ்சி ஞானப்பிரகாசர் ஆதீனம், தருமபுரம் ஆதீனம், துழாவூர்மடம், செப்பறை மடம் முதலியவை பிற்காலத்தில் தோன்றக் காரணமாயிருந்த பெரியோர் பலர் இக்காலத்தில் தோன்றினர்.

5.1 சைவ இலக்கியங்கள்

இக்காலக் கட்டத்தில் சைவ இலக்கியங்கள் அதிக எண்ணிக்கையில் தோன்றின. இக்காலப் பிரிவில் வெளிவந்த சைவ இலக்கியங்களைச் சமய நூல்கள் என்றும் சாத்திர நூல்கள் (தத்துவ நூல்கள்) என்றும் பிரிக்கலாம். வில்லிபுத்தூரார் மற்றும் இரட்டைப்புலவரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கவை.

5.1.1 சைவ இலக்கியப் படைப்பாளர்கள் இக்காலக்கட்டத்தில், சைவ இலக்கியத்தை வளப்படுத்தியவர்கள் பலர். அவர்களுள் உமாபதி சிவாச்சாரியார், சிற்றம்பல நாடிகள், தத்துவப் பிரகாசர்,சம்பந்த முனிவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

உமாபதி சிவாச்சாரியார்

இவர் சைவசித்தாந்த ஆசிரியர் நால்வரில் கடைசியாக வந்தவர். உமாபதி சிவாச்சாரியார் சிவப்பிரகாசம், திருவருட்பயன் உட்படப் பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய பிற நூல்கள் வினா வெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம், திருமுறைத்திரட்டு, கோயிற்புராணம், திருமுறைகண்ட புராணம், திருத்தொண்டர் புராணசாரம், சேக்கிழார் புராணம் போன்றவையாகும்.

சிவப்பிரகாசம், சிவஞானபோதத்தின் சார்பு நூலாகும். (சிவஞானபோதம் பற்றிக் கடந்த பாடப்பகுதியில் விரிவாகப் படித்தோம்). இதன் பாயிரத்துள் ஆசிரியர், ஆசாரியார் மரபு, சைவ நூல்களின் இயல்பு, தீக்கை வகைகள் ஆகியவை பற்றிக் கூறியுள்ளார். சிவஞானபோதத்தின் பன்னிரு சூத்திரங்களையொட்டியே இந்நூல் பாடல்களைப் பாகுபடுத்திக் கூறுவர்.

திருவருட்பயன், திருக்குறள் போன்ற அமைப்பு உடையது. பத்து அதிகாரங்கள்; ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்து குறள்; பாடல்கள் அழகாக எளிமையாக உள்ளன. இதன் தலைப்புகள் எளிமையாக உள்ளன. சித்தாந்த சாத்திரம் கற்கப் புகுவோர் முதலில் பயில்வது இந்நூலேயாகும்.

சிற்றம்பல நாடிகள்

இவர் துகளறு போதம், இரங்கல் மூன்று, திருப்புன்முறுவல் முதலிய ஐந்து நூல்களை இயற்றியுள்ளார்.

துகளறு போதம் இவர் இயற்றிய நூல்களுள் முக்கியமானது. மெய்கண்டசாத்திரம் 14 எனக் கணக்கிட்டுக் காட்டும் ‘உந்திகளிறு’ என்ற வெண்பாவில் இந்நூலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் பல ஏட்டுப்பிரதிகளில், இப்பாடலில் வரும் உண்மைநெறி விளக்கம் என்ற பெயர் இல்லாமல் துகளறு போதத்தைச் சேர்த்து 14 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நூல் திராவிட மாபாடியம் செய்த சிவஞான சுவாமிகள் போன்ற சிறந்த சாத்திர உரையாசிரியர்களால் எடுத்தாளப்பெற்ற பெருமையுடையது. காப்புச் செய்யுளும், 100 வெண்பாக்களும், இறுதியில் நூற்பொருள் கூறும் இரு பிற்கால வெண்பாக்களும் உடையது. முக்தி நெறிக்குரிய மார்க்கம், தசகாரியம் (பத்து படிகள்) என்பது சைவ சாத்திர மரபு. தச காரியங்களை முப்பது நிலைகளாகச் சில சாத்திரங்கள் கூறும். இவ்வாறு கூறும் முதல் சாத்திரம் துகளறு போதம் ஆகும்.

சிற்றம்பல நாடிகளின் நேர்மாணாக்கர் நால்வர். அவர்களுள் தத்துவநாதர், தத்துவப் பிரகாசர் என்போர் நூல் எழுதினார்கள் (தத்துவநாதர் – உண்மைநெறி விளக்கம் என்ற நூலையும், தத்துவப் பிரகாசர் – தத்துவப் பிரகாசம் என்ற நூலையும் எழுதினர்). மற்ற இருவர் சம்பந்த முனிவர், ஞானப்பிரகாச முனிவர் என்போர் ஆவர். சம்பந்த முனிவரும் அவர் வழியில் வந்தவரும் நூல் எழுதியுள்ளனர். ஞானப்பிரகாசரும் அவரது பரம்பரையினரும் நூல் எழுதவில்லை. சிற்றம்பல நாடிகளின் மாணக்கர்களுடைய பணிகளை இங்கே காணலாம்.

தத்துவ நாதர்

சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் பதின்மூன்றாவதாக எண்ணப்படுவது உண்மைநெறி விளக்கம். இதன் ஆசிரியர் சீகாழித் தத்துவநாதர். இந்த நூலை உமாபதி சிவம் செய்தார் என்ற கருத்தும் அறிஞர்களிடையே உண்டு. இந்நூல் ஆறு அரிய பாடல்களை உடையது. அந்த ஆறு பாடல்களும் தசகாரியம் கூறும். இந்நூலுக்குப் பல உரைகள் உள்ளன. இந்நூலாசிரியர் தத்துவநாதர், அருணந்தி சிவாசாரியார் பாடிய இருபா இருபஃதுக்குச் சிறப்பான உரை எழுதியுள்ளார். இந்த உரை, மெய்கண்ட சாத்திர நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகள் அனைத்திலும் காலத்தால் மிகப் பழமையானது.

தத்துவப் பிரகாசர்

தத்துவப் பிரகாசர் எழுதிய நூல் தத்துவப் பிரகாசம். (தத்துவப் பிரகாசர் என்ற பெயரில் 14-16ஆம் நூற்றாண்டுகளில் பலர் இருந்தனர். அவர்களுள் சீகாழியைச் சேர்ந்தவர் இவர். இவ்வரிசையில் காலத்தால் முதலாமவர்.) இதற்குத் தத்துவ கவிதை என்ற பெயரும் உண்டு. சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் ஞானபாதம் ஒன்றையே விரித்தும், தொகுத்தும் கூறும். மற்றைய சரியை, கிரியை, யோகம் ஆகியவை மிகச் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. இவற்றையும் தமிழால் உணர்த்த வேண்டும் எனக் கருதி இந்நூலை இவர் செய்ததாகக் கொள்ளலாம்.

சம்பந்த முனிவர்

இவர் பாடிய நூல்களாக இக்காலத்தில் கிடைப்பவை சிவானந்தமாலை, சிற்றம்பல நாடிகள் சாத்திரக் கொத்திலுள்ள வெண்பா, தாலாட்டு போன்றவையாகும்.

சிவானந்த மாலை 414 வெண்பாக்களைக் கொண்டது. இது மிகச்சிறந்த சைவ சித்தாந்த நூல். பல சமய உண்மைகளைச் சுவையுடைய உவமைகளால் தெளிவாக விளக்குகிறது. பல பாடல்களில் ஞானசம்பந்தரைப் போற்றுகிறார் ஆசிரியர். இலக்கியச்சுவை ததும்பும் பல பாடல்கள் இந்நூலுள் உள்ளன.

இவர்களைத் தவிர, சம்பந்த சரணாலயர், சிவாலய முனிவர், அருள் நமச்சிவாய தேசிகர், சித்தர் சிவப்பிரகாசர், நமச்சிவாய தேசிகர் போன்றோர் உள்ளிட்ட பலர் இக்காலப் பகுதியில் சிறந்த இலக்கியப் பங்களிப்புச் செய்துள்ளனர்.

5.1.2 கச்சியப்பரின் படைப்பு கந்தபுராணம் கச்சியப்ப சிவாசாரியாரால் இயற்றப்பட்டது. இவருடைய காலம் தெளிவில்லாததாக உள்ளது. பலர் பல்வேறு கருத்துகளைக் கூறினாலும் பொதுவாக அனைவரும் ஒப்புக்கொள்வது, கச்சியப்ப சிவாசாரியார் கி.பி. 1400க்கு முன்னால் வாழ்ந்தார் என்பதுதான்.

கந்தபுராணம் ஆறு காண்டங்களை உடையது. இதில் முருகப் பெருமானது தோற்றமும் வீரமும், சூரபதுமன் ஆகியோர் கொடுமையும், அவர்கள் அழிவும், முருகப் பெருமான் அருளும், பிறவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கந்தபுராணத்தில் சொல்லப்படாத பொருள் எதுவும் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு. இராமாயணம், பாகவதம் ஆகிய நூல்களில் வைணவ சமயத் தத்துவங்கள் காணப்படுவது போல, சைவ சித்தாந்தத் தத்துவங்கள் கந்தபுராணத்தில் மிகவும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

5.1.3 இரட்டைப் புலவர் படைப்புகள் இக்காலப் பகுதியில் தோன்றியவர் இரட்டைப்புலவர். சோழ நாட்டில் ஆடுதுறைக்கு அருகேயுள்ள ஆலந்துறை என்ற ஊரில் இவர்கள் இருந்தனர். இவர்கள் அத்தை பிள்ளை, அம்மான் (தாய்மாமன்) பிள்ளையாக இருந்தனர். ஒரு பிள்ளை கண்ணில்லாத குருடர். மற்றொரு பிள்ளை காலில்லாத முடவர். குருடரின் பெயர் இளஞ்சூரியர். காலில்லாத முடவர் முதுசூரியர். இருவரும் சேர்ந்து ஒரே உள்ளத்தோடு செந்தமிழ்ப்பாக்கள் பாடும் தகுதி பெற்றிருந்தனர். இருவரும் எப்போதும் சேர்ந்தே இருந்தமையால் இருவருடைய இளமைப் பெயர்களும் மறைந்து இரட்டைப்புலவர் என்ற பெயரே நிலைத்தது.

இவர்கள் பாடிய நூல்கள் திருஆமாத்தூர்க் கலம்பகம், தில்லைக் கலம்பகம், காஞ்சி ஏகாம்பரநாதர் உலா, ஏகாம்பரநாதர் வண்ணம் என்பன. மூவர் அம்மானைப் பாடல்கள், தியாகேசர் பஞ்சரத்தினம் என்பனவும் இவர்கள் பாடியனவாகக் கூறுவர்.

திருஆமாத்தூர்க் கலம்பகம்

இந்நூல் 101 பாடல்களும், காப்பு விருத்தம் ஒன்றும் உடையது. இந்நூலுள் அகத்துறைப் பாடல்களும், சந்தப்பாடல்களும் அதிகமாக உள்ளன.

தில்லைக்கலம்பகம்

இரட்டைப்புலவர் பாடிய இரண்டாவது கலம்பகம், காப்பு வெண்பாவும், 100 பாடல்களும் உடையது. சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள நடராசப் பெருமான் மீது பாடப்பெற்றது. பெருமான் சிறப்பு, வழிபட்டோர், பிற தலங்கள், பஞ்சபூதத் தலங்கள், ஐந்து சபைகள் முதலியன விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

யார் எவ்விதம் இறந்தாலும், புரியைக் (புரி – பழுதை, வைக்கோல் தாளை முறுக்கிச் செய்த கயிறு) கட்டி இழுத்து எறிந்தாலும் கூட, சிதம்பரத்தில் சென்று இறத்தல் நன்று என்று கூறுகிறார்கள் இந்த இரட்டைப்புலவர்கள்.

பழுத்துச் செத்தாலும் பிறந்து செத்தாலுமிப் பாழுடலம்

கொழுத்துச் செத்தாலும் மெலிந்து செத்தாலும் கொலைப்படினும்

புழுத்துச் செத்தாலும் புதைத்தாலும் காலில் புரியைக் கட்டி

இழுத்துச் செத்தாலும் சிதம்பரத் தேசென் றிறத்தல் நன்றே

காஞ்சி ஏகாம்பரநாதர் உலா

இது, இரட்டைப்புலவரால் இயற்றப்பட்டது. நூலில் தலப்பெருமை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. கயிலாயத்தில் உமாதேவியார், சிவபெருமான் திருக்கண் புதைக்க (மறைக்க) உலகம் இருளில் மூழ்கியது. உலகத்தைத் துன்பத்தில் ஆழ்த்திய பாவம் தீருவதற்காகக் காஞ்சியில் சென்று தம்மைப் பூசிக்கும்படி பிராட்டிக்குப் பெருமான் உத்தரவிட்டார். அம்மையார் காஞ்சியின் சிறப்புகளையெல்லாம் பார்த்துக் கொண்டு வரும் செய்தி உலாவில் விளக்கமாக உள்ளது. பின்னர் அம்மையார் பூசித்தல், கம்பை நதியில் வெள்ளம் கண்டு பெருமான் திருவுருவை அணைக்க இறைவன் வெளிப்படுதல், பங்குனி விழா, அலங்காரச் சிறப்பு, உலா வருதல், பின்னர் ஏழு பருவப் பெண்களும் கண்டு விரும்புதல் என்ற செய்திகள் கூறப்பட்டுள்ளன.

பேரிளம்பெண் என்ற பருவத்தைக் கூறும் போது சிவபெருமானின் இயல்பை மிகவும் நன்றாக விளக்கியுள்ளனர் இந்த இரட்டைப்புலவர்கள். காலத்தால் ஓரளவு முற்பட்ட இந்த நூல், பின்வந்த புலவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறது.

5.2 இலக்கணமும், உரைகளும்

பதினான்காம் நூற்றாண்டில், சில இலக்கண நூல்களும் சிறப்புடைய சில உரைகளும் தோன்றின.

5.2.1 இலக்கணம் இக்காலப் பகுதியில் சிறப்புடைய எந்த இலக்கண நூலும் எழவில்லை எனலாம். இருப்பினும் இக்காலத்தில் தோன்றிய சில நூல்கள் பற்றி இங்குக் காணலாம்.

களவியற்காரிகை

இக்காலப் பகுதியில் தோன்றியது. களவியல் என்பது இறையனார் களவியல் என வழங்கப்படுகின்ற இறையனார் அகப்பொருள் நூலாகும். அகப்பொருள் இலக்கணம் இல்லையே எனக் கவலையுற்ற பாண்டிய மன்னனுக்காக மதுரை சோமசுந்தரக் கடவுள் அறுபது அகப்பொருள் சூத்திரங்களைச் செப்பேட்டில் எழுதித் தந்ததாக அந்நூல் உரையும், திருவிளையாடல் புராணமும் கூறும். இக்களவியல், நூற்பாவால் ஆன 60 சூத்திரங்களைக் கொண்டது. இந்த 60 சூத்திரங்களுக்கு நேராக 60 கட்டளைக் கலித்துறையால் அக்களவியலைத் தழுவி, மற்றோர் அகப்பொருள் இலக்கண நூல் எழுதப்பட்டுள்ளது. அதுவே களவியற்காரிகை எனப்படும். இதற்குச் சிறப்பான உரை உண்டு. இந்நூலுக்கு ஆசிரியர் பெயரும், நூற்பெயரும் தெரியவில்லை. மரபினையொட்டியே இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நவநீதப் பாட்டியல்

இந்நூலை இயற்றியவர் நவநீத நாடர். 13-16 நூற்றாண்டுகளிடையே பல பாட்டியல் நூல்கள் தோன்றின. அவற்றுள் இதுவும் ஒன்றாகும். பாட்டியல் என்பது பாட்டினாலான நூல்களுக்கு அமைய வேண்டிய இலக்கணங்களைத் தொகுத்துக் கூறும். கலித்துறையாப்பால் ஆனதால் இந்நூல், கலித்துறைப் பாட்டியல் எனப்படும். இது பொருத்தவியல், செய்யுள், மொழி இயல், பொது மொழி இயல் என்ற மூன்று பிரிவுகளை உடையது. 108 கலித்துறைகளை உடையது. இதனுள் சொல்லப்பட்ட பிரபந்தங்களின் தொகை 63 ஆகும்.

உரிச்சொல் நிகண்டு

இந்நூல் காங்கேயரால் இயற்றப்பட்டதாகும். இதன் காலம் திட்டவட்டமாகத் தெரியவில்லை. தமிழில் தோன்றிய ஆதி நிகண்டுகள், திவாகரமும், பிங்கலந்தையும் ஆகும். பின்னால் வந்த நிகண்டு நூல்களில் உரிச்சொல் நிகண்டு, கயாதர நிகண்டு, நிகண்டு சூடாமணி போன்றவை காலத்தால் பழமையானவையும் சிறப்பானவையும் ஆகும்.

5.2.2 உரைகள் இக்காலப்பகுதியில் உரையாசிரியர்கள் என்ற நிலையில் குறிப்பிடத்தக்கவர்களாக மயிலைநாதர், நச்சினார்க்கினியர் போன்றோரைக் கூறலாம்.

மயிலைநாதர்

மயிலைநாதர் நன்னூலின் பழைய உரையாசிரியர் ஆவார். சமயத்தால் சமணர். இவர் நன்னூல் உரையில் தொல்காப்பிய இளம்பூரணர் உரை, அவிநய உரை, யாப்பருங்கலக் காரிகை போன்றவற்றை எடுத்துக்காட்டியுள்ளதால் இவர், இவ்வாசிரியர்களின் காலத்துக்குப் பிற்பட்டவர் எனலாம். இவ்வுரையாசிரியர் சுவைபட எழுதுவார். எதுகை, மோனைத் தொடை நயம்பட எழுதுவார். பண்டைய ஆசிரியர்களை நயம்படப் போற்றுவார். இவர் உரையானது உரை இலக்கணம் முழுமையும் பொருந்தியது. நன்னூல் பாயிரச் சூத்திரங்கள் 52 ஆகும். இவை பவணந்தி செய்தனவல்ல என்பதை இவர் உரை மூலம் அறிய முடிகிறது.

நச்சினார்க்கினியர்

இக்காலத்தில் தோன்றிய மற்றோர் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி, கலித்தொகை போன்ற நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். நச்சினார்க்கினியர் என்பது சிவபெருமானின் பெயராகும். பத்துப்பாட்டுள் மதுரைக்காஞ்சியில் சில இடங்களில் (வரிகள் 365, 522) இவர் எழுதிய உரை நுட்பங்கள் இவர் மதுரைக்குரியவர் எனப் புலப்படுத்தும். தொல்காப்பியம் முழுமைக்கும் உரை செய்தவர்கள் இவரும் இளம்பூரணருமே. சங்க நூல்கள் அனைத்திலிருந்தும் இவர் மேற்கோள் காட்டுகின்றார். வடமொழி வழக்கு, உலக வழக்கு, சாதி சமய வழக்கு ஆகியன இவருடைய உரையுள் நிரம்பியுள்ளன. வடமொழி நூல்கள் பலவற்றை எடுத்துக் கூறுகிறார்.

5.3 வைணவமும், சமணமும்

சமயம் சார்ந்த பல இலக்கியங்கள் இக்காலக் கட்டத்தில் படைக்கப்பட்டன. குறிப்பாக, வைணவ இலக்கியங்களும் சமண இலக்கியங்களும் உரைகளும் தோன்றின.

5.3.1 வைணவம் வைணவ சமயம் செல்வாக்குடைய ஒரு சமயமாகத் திகழ்ந்தது. வைணவம் சார்ந்த படைப்பாளர்கள் பல இலக்கியங்களைப் படைத்தனர்.

வேதாந்த தேசிகர்

தேசிகப்பிரபந்தம் எனும் நூலை இயற்றியவர் வேதாந்த தேசிகர். இவர், வடமொழி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் நூல்களை இயற்றியிருக்கிறார். வடமொழியில் 95 நூல்கள்; தமிழில் 24 நூல்கள் (பிரபந்தங்கள்). இந்த 24 நூல்களின் தொகுப்பே தேசிகப்பிரபந்தம் ஆகும். மொத்தம் 405 பாடல்கள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன: சில நூல்கள் வடமொழித் தலைப்புகளைக் கொண்டுள்ளன.

1)அமிருதரஞ்சனி

2)அதிகார சங்கிரகம்

3)அம்ருதாஸ்வாதினி -இதில் கடைசி மூன்று பாடல்கள் திருப்பாணாழ்வாரைப் போற்றுகின்றன.

4)பரமபத சோபானம்

5)பரமதபங்கம்-பிற சமயங்களைக் கண்டித்தல்.

6)அத்திகிரிமகாத்மியம்- காஞ்சி அத்திகிரி வரதராசப் பெருமாளைப் புகழ்வது

7)அடைக்கலப் பத்து

8)அத்திகிரி பஞ்சகம்

9)வைணவ தினசரி

10)திருச்சின்னமாலை -வரதராசப் பெருமாள் உலாவரும் போது ஊதப்படும் ஊதுகுழல் திருச்சின்னம். இந்நூல் அதன் பெருமையைக் கூறுகிறது.

11)பன்னிரு நாமம் -திருமாலின் பன்னிரு திருநாமங்களைச் சொல்லித் துதிக்கிறது,

12)திருமந்திரச்சுருக்கு -மந்திரப்பொருளைச் சுருக்கி உரைப்பது

13)துவயச் சுருக்கு -என்பதும் மந்திரப் பொருளைச் சுருக்கி உரைப்பது

14)சரமசுலோகச் சுருக்கு-பார்த்தசாரதியாக நேரில் நின்ற கண்ணபிரான் எல்லாச் செயல்களையும் விட்டு விட்டு என்னைச் சரணாக அடைவாயாக என்று அருச்சுனனுக்குக் கூறிய உபதேசத்தைச் சுருக்கிக் கூறுகிறது.

15)கீதார்த்த சங்கிரகம்-கீதையின் சாரத்தைச் சுருக்கிக் கூறுவது

16)மும்மணிக்கோவை-நாராயணனைப் புகழ்கிறது.

17)நவரத்தினமாலை -திருவகீந்திரபுரத் தோத்திரம்

18)ஆகாரநியமம்-வைணவனாயிருப்பவன் உணவில் கொள்ள வேண்டிய முறைகளையும், தள்ள வேண்டியவைகளையும் கூறுகிறது,

19)பிரபந்தசாரம்-திவ்வியப்பிரபந்தம் பாடிய ஆழ்வார்களின் பெயர், அவதரித்த நாள், திங்கள், ஊர், பாடிய பாடல் தொகை முதலியவற்றைத் தொகுத்துரைப்பது.

24 பிரபந்தங்களுள் மேற்கண்டவை (19) தவிர, பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல் என்பனவும் மும்மணிக்கோவையுள் 20 பாடல்களும் கிடைக்கவில்லை.

இந்த 24இல் முதல் பிரபந்தமான அமிருதரஞ்சனி ‘திருமால் திருவடியைச் சேர்க’ என்று அறிவுரை கூறுகிறது. திருவடிப்பெருமை கூறும் 51ஆம் பாடல் சிறப்பானது. இவருடைய பாடல்கள் எளிமையான நடையுடையன.

பிள்ளை லோகாசாரியார் (கி.பி. 1264-1369)

வசன பூஷணம் உட்பட 18 நூல்கள் இவரால் இயற்றப்பட்டன. இவர் பெண்களும், பேதைகளும் உய்ய வேண்டும் என்ற பெருநோக்கோடு அட்டாதச ரகசியங்கள் என்னும் 18 சாத்திரங்களை எழுதினார். இதனை வடமொழியும் – தமிழ் மொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதினார். சாதியால் உயர்வு, தாழ்வு இல்லை; ஞானத்தினாலும், பக்தியாலுமே உயர்வு தாழ்வு ஏற்படுகிறது என்ற கொள்கை உடையவர்.

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்

அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரால் ஆசார்ய ஹிருதயம் இயற்றப்பட்டது. அவருடைய தமையனார் செய்த வசனபூஷணத்திற்கு விளக்கமாக இந்நூலைச் செய்துள்ளதாகக் கூறுவர். நம்மாழ்வார் புகழையும் அவர் செய்த நூல்களின் பொருளையும் இந்நூல் விளக்குகிறது. இவர் திருப்பாவை ஆறாயிரப்படி, திருவந்தாதி, அமலனாதிபிரான், கண்ணிநுண்சிறுத்தாம்பு போன்றவற்றிற்கு வியாக்கியானம் செய்துள்ளார். மாணிக்கமாலை, அருளிச்செயல் ரகசியம் ஆகிய சமய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

இதே காலக்கட்டத்தில் வாழ்ந்து, வைணவ இலக்கியம் வளரப் பங்காற்றியவர்களில் நயினாராசாரியர் (கி.பி. 1316-1375), வாதிகேசரி – அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் (கி.பி. 1266-1320) போன்றோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.

வில்லிபுத்தூரார்

வில்லிபுத்தூரார் தமிழில் மகாபாரதத்தை எழுதியவர். தமிழ் இலக்கிய இலக்கணங்களையும், வடமொழி நூல்களையும், சமய நூல்களையும் நன்கு கற்றவர். வடமொழி மகாபாரதம் 18 பருவங்களைக் கொண்டது. இவர் எழுதிய மகாபாரதம் 10 பருவங்களைக் கொண்டது. இவருக்கு முன்பு 9ஆம் நூற்றாண்டில் பெருந்தேவனார் பாடிய பாரதவெண்பா புகழ் பெற்றது. வியாசபாரதமே, வில்லிப்புத்தூரார் நூலுக்கு மூல நூல் என்பது மரபாகும். வியாசபாரதத்துக்கும், இவர் நூலுக்கும் கதையமைப்பில் வேறுபாடு உண்டு. நூலாசிரியர் வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்.

சமயப் பற்றினாலும், தமிழில் பாரதம் பாடிய பெருமையாலும் பின்வந்த ஆன்றோர் இவரை வில்லிபுத்தூராழ்வார் என்றே வழங்குவர். எனினும் மதவெறியின்றி ஓரளவு கதைகளில் வழங்கும் செய்திகளுக்கேற்ப சிவபெருமானைப் போற்றியும் இருக்கிறார். அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கத்தில் காஞ்சி, திருவண்ணாமலை, திருவெண்ணெய்நல்லூர், திருவதிகை வீரட்டானம் ஆகிய தலங்களைச் சிறப்பித்துப் பாடுகின்றார். இந்நூலாசிரியர் தொடக்கத்தில் நூலை மிகவும் சுருக்கியே பாடியுள்ளார். இதன் காரணமாக விரிவான வருணனைகள் இந்நூலின் தொடக்கத்தில் இல்லை. பண்டைய நூல்களாகிய திருக்குறள், சங்க நூல்கள், சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவற்றின் கருத்துகளும் தொடர்களும் இந்நூலில் பரந்து காணப்படுகின்றன. பாத்திரங்களின் குணம் நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில்

நகைச்சுவையும், தமிழ்ப்பற்றும் காணப்படுகின்றன.

வில்லிபுத்தூரார் பாரதம் பற்றி மு. வரதராசனார் பின்வருமாறு கூறுகிறார்:

…. அவருடைய பாரதம் இலக்கிய உலகில் இடம்பெற்று வாழ்கிறது. பாடல்கள் நல்ல ஓட்டம் உள்ள நடையில் அமைந்தவை. போர்க்கள நிகழ்ச்சியைப் பாடும் இடத்தில் நடை மிக மிடுக்காகச் செல்கிறது. போரின் வேகத்தை நடையே புலப்படுத்துவதாக உள்ளது. அவ்வாறே வியப்பு, அவலம் முதலான சுவை மிகுந்த நிகழ்ச்சிகளைப் புலப்படுத்தும் இடங்களிலும், அந்தந்த உணர்ச்சிக்கு ஏற்றவாறு நடையின் இயக்கம் உள்ளது.

வில்லிபுத்தூராரின் புதல்வரான வரந்தருவார், தந்தையார் பாடிய பாரதம் முதல் 10 பருவங்கள் போக, எஞ்சிய எட்டுப் பருவங்களையும் விரித்துப் பாடினார் என்று சொல்லப்படுகிறது. அது இப்போது கிடைப்பதாகத் தெரியவில்லை.

5.3.2 சமணம் சமண நூல்களின் பங்கு ஒவ்வொரு நூற்றாண்டிலும் தொடர்ந்து இருந்து வருகிறது. இக்காலப் பகுதியில் தோன்றிய சமண இலக்கியம் பற்றிப் பார்க்கலாம். 14-15 ஆம் நூற்றாண்டில் சமணர்களின் பங்களிப்பு சற்று அதிகம் எனலாம்.

மேருமந்தர புராணம்

மேருமந்தர புராணம் என்னும் நூல் வாமன முனிவரால் இயற்றப்பட்டது. இவர் நீலகேசி நூலுக்கு உரையெழுதியிருக்கிறார். இந்நூலாசிரியர் வடமொழியிலும், தென்மொழிகளிலும் வல்லவர். இவரது மேருமந்தர புராணம் 13 சருக்கங்களில் 1405 பாடல்களைக் கொண்டது. இந்நூல் மேரு, மந்தரர் என்ற இருவரின் முற்பிறப்பு, அவர்கள் முக்தி பெறுதல் முதலியனவற்றைக் கூறுகிறது. மேருமந்தர புராணத்துக்கு ஸ்ரீபுராணமே மூல நூலாகும். ஸ்ரீபுராணம் வடமொழியில் அமைந்த நூலாகும்.

நீலகேசி விருத்தியுரை

இவ்வுரையானது சமய திவாகர முனிவரால் எழுதப்பட்டதாகும். இதில் குண்டலகேசியின் 20 பாடல்கள் காணப்படுகின்றன. இன்று கிடைக்கப்பெறாத பல இலக்கணச் சூத்திரங்கள், புத்த சமய நூல்களான பிம்பிசாரக்கதை, மானாவூர்ப்பதிகம் போன்றவை இதனுள் காணப்படுகின்றன. உரையாசிரியர் சமயக் கருத்துகளை மட்டும் விளக்கிச் சொல்கிறார். இவ்வுரையுள் வடமொழி நூல்கள், உபநிடதங்கள், இலக்கண நூல்கள், சமண நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் போன்றவை உட்படப் பல நூல்கள் சுட்டப்பட்டுள்ளன. உரையை மணிப்பிரவாள நடையில் ஆசிரியர் எழுதியுள்ளார்.

சீவசம்போதனை

இது ஒரு சிறப்பான சமண நூலாகும்; 550 பாடல்களையுடையது. இந்நூலின் ஆசிரியர் தேவேந்திர மாமுனிவர் ஆவார். சமண சமயத்தின் கொள்கைகளை இது விளக்கிக் கூறுகிறது. மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. சீவனுக்கு (உயிர்களுக்கு) நன்மை பயக்கும் 12 சிந்தனைகளைப் போதிப்பதால் இது சீவசம்போதனை எனப்பட்டது. சமண சித்தாந்தத்திற்கு இது ஒரு சிறப்பான நூல். பாடல்களின் ஓசை, செய்யுள் அமைப்பு, கருத்தமைதி போன்ற பல கூறுகள் நளவெண்பாவை நினைவூட்டுகின்றன. நூலாசிரியர் நளவெண்பாவை நன்கு பயின்று அதன் எளிமையான கவிதைச் சுவையில் பெரிதும் ஈடுபட்டுள்ளார். அந்நூலையே தமக்கு முன்மாதிரியாகக் கொண்டு தம் சமய நூலைச் செய்தார் எனலாம். சமணத்தில் இக்காலத்தில் அதிக நூல்கள் தோன்றியுள்ளன. திருநூற்றந்தாதி, மேருமந்தர புராணம், ஸ்ரீபுராணம், திருக்கலம்பகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

5.4 பிரபந்தங்களும் சித்தர்பாடல்களும்

பதினான்காம் நூற்றாண்டில், பிரபந்த வகை நூல்கள் சிலவும், பிறவகை நூல்களும் எழுதப்பட்டன.

5.4.1 பிரபந்தங்கள் கோவை, மாலை போன்ற பிரபந்த நூல்கள் இக்காலக் கட்டத்தில் தோன்றின.

கருமாணிக்கன்கோவை

இந்தப் பிரபந்தம் இக்காலப் பகுதியில் தோன்றியது. கப்பலூரில் வாழ்ந்த கருமாணிக்கன் என்ற யாதவகுல வள்ளல் மீது இக்கோவை பாடப்பட்டது. காலத்தால் பழமையான நூல்களுள் இதுவும் ஒன்றாகும். நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. இக்கோவை 400 பாடல்களைக் கொண்டது. ஆசிரியர் திருமால் பக்தியுடையவர் என்பதை, பாடலின் அடிகள் உணர்த்துகின்றன. திருக்கோவலூரில் இருந்த வைணவ ஆசாரியார் ஒருவரைக் கருமாணிக்கன் கப்பலூருக்கு அழைத்துச் சென்று சிறப்புச் செய்தான் என்னும் செய்தியை இந்நூல் தெரிவிக்கின்றது.

மதுரைக்கோவை

இது, இக்காலப் பகுதியில் தோன்றிய மற்றொரு கோவையாகும். இதனை இயற்றியவர் சங்கரநாராயணர் என்பவர். கோவைப் பிரபந்த வரிசையில் பாண்டிக்கோவை, திருக்கோவையார், குலோத்துங்கசோழன் கோவை, தஞ்சைவாணன் கோவை, அம்பிகாபதிக்கோவை, நாலாயிரக்கோவை போன்ற பல கோவை நூல்கள் உள்ளன. இவ்வரிசையில் மிகவும் பழமையான கோவைகளில் மதுரைக்கோவை ஒன்றாகும். இதன் செய்யுள் தொகை 403 ஆகும். இந்நூல் மதுரையில் கோயில் கொண்டுள்ள சொக்கேசப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. திருவிளையாடற் புராண சரிதங்கள் பலவற்றை ஆசிரியர் இக்கோவையுள் சுட்டிக் காட்டியுள்ளார். 25 வரலாறுகள் இதில் கூறப்பட்டுள்ளன. இலக்கண விளக்கவுரை மேற்கோள் அமைப்பை ஆராயும்போது, ஆசிரியர் பண்டைய நூல்கள் என்று தாம் கருதியவற்றை மட்டுமே பயன்படுத்துகிறார் எனப் புலப்படுகிறது.

பல்சந்த மாலை

பல்சந்த மாலை என்பது 96 வகை பிரபந்தங்களுள் ஒன்று. இப்போது இந்நூல் கிடைக்கவில்லை. இந்நூலில் 8 பாடல்கள் உள்ளன. வேறு எங்கும் இதன் பாடல்கள் சொல்லப் பெறவும் இல்லை. கிடைக்கின்ற பாடல்கள் கட்டளைக் கலித்துறையில் அமைந்தவையாகும். இவை கலித்துறையாக உள்ளதாலும், அகப்பொருளையே கொண்டுள்ளதாலும் கோவை போன்ற நூலோ என்ற ஐயம் உண்டாகிறது.

5.4.2 சித்தர் பாடல்கள் சித்தர்களின் பங்களிப்பு முந்தைய நூற்றாண்டுகளில் ஆங்காங்கே இருந்துள்ளது. சித்தர் பாடல்கள், அவர்களின் வரலாறு பற்றித் தனியாகப் படிக்கவுள்ளோம் (15ஆம் நூற்றாண்டு – பாடப்பகுதி). இக்காலப் பகுதியில் தோன்றிய சித்தர்கள் பற்றி இங்குக் காண்போம்.

சிவவாக்கியர் பாடல்கள்

சிவவாக்கியர் தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களுள் ஒருவர். பதினெண் சித்தர்ஞானக்கோவை என்ற தொகுப்பு இவருடைய பாடல்களையே முதலாவதாகக் கொண்டுள்ளது. இவரது பாடல் தொகுப்பில் கடைசியாக உள்ள பாடல்,

நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே…

என்று தொடங்கும். இப்பாடல் பரவலாக எல்லோருக்கும் தெரிந்த பாடல் எனலாம். சிவவாக்கியர் பாடல்களில் குலாமர் என்ற சொல் காணப்படுகிறது. குலாம் இடுபவர் குலாமர். குலாம் இடுதல், அடிமைத்தொழில் புரிதல், அடிமையாயிருத்தல் போன்றவை போலிச் சடங்குகளுக்கு அடிமையாயிருத்தலையே குறிக்கின்றன. தமிழ்நாட்டில் முகமதியர் ஆதிக்கம் ஏற்பட்ட காலத்தில் அவர்களுடைய சொற்கள் பல தமிழில் புகுந்தன. அவ்வாறு புகுந்த சொற்களில் இதுவும் ஒன்று. குலாமர் என்ற சொல் வரும் பாடலைக் கேளுங்கள்:

கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே

கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே

ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே

(பாடல் 35)

பட்டினத்தார் பாடல்கள்

பட்டினத்தார் என்று கூறும் போது தமிழறிஞர்கள் பட்டினத்தார் இருவரைக் கூறுவர். முதல் பட்டினத்தார், நம்பியாண்டார்நம்பியால் குறிப்பிடப்பட்டவர். நம்பியின் காலம் பத்தாம் நூற்றாண்டின் இறுதி. பட்டினத்தார் பாடிய பாடல்களில் ஐந்து பிரபந்தங்கள் பதினோராம் திருமுறையுள் தொகுக்கப் பெற்றுள்ளன. இந்தப் பட்டினத்தார் 10ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்.

மேற்கண்ட பிரபந்தங்கள் அல்லாமல், பட்டினத்தடிகள் பெயரால் பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டு என்ற ஒரு பாடல் தொகுதி வழக்கத்தில் உள்ளது. இவற்றைப் பாடியவர் முன்கூறிய பட்டினத்தார் அல்லர் என்றும், இவை பட்டினத்தார் என்ற பெயரோடு சில நூற்றாண்டுகளின் பின்பு வாழ்ந்த மற்றொரு பட்டினத்தார் பாடியவை என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். இக்காலப் பகுதிக்கு நாம் எடுத்துக் கொள்வது இரண்டாம் பட்டினத்தாரே. (ஒளவையாரைப் பற்றிப் படிக்கும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ஒளவையாரைப் பற்றி முந்தைய பாடத்தில் படித்தது நினைவிருக்கலாம்).

தமிழ்நாட்டில் பிச்சையெடுப்போர்கூட, சில பக்தருடைய அருட்பாசுரங்களைப் பாடிப் பிச்சை எடுத்து வருகின்றனர். அவர்களில் பட்டினத்தார் பாடலைப் பாடுவோர் உளர். மற்ற சித்தர்களைப்போல இவருடைய பாடல்களிலும் உலக வாழ்க்கையின் நிலையாமை, அடியவர் சிறப்பு, பக்தியின் சாதனை, அருளின் அனுபவம், போலிக் கிரியைகளைப் பழித்தல், உண்மை அன்பின் உயர்வு முதலியவை மிகச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலும் சிறப்புடையது என்றாலும், தில்லை, காளத்தி பற்றிய பாடல்கள் மிகவும் சுவையுடையவையாகும். உள்ளத்தில் இறைவன் உறைகின்ற முறையை உணர்ந்த பெருமிதம் பாடல்கள்தோறும் காணப்படுகிறது.

பத்திரகிரியார் பாடல்கள்

பத்திரகிரியார் என்பவர் இக்காலப் பகுதியில் பேசப்படும் மற்றொரு சித்தர். இவருடைய வரலாறு பட்டினத்தார் (இதற்கு முன்பு விளக்கப்பட்ட இரண்டாவது பட்டினத்தார்) வரலாற்றோடு தொடர்புடையது. பத்திரகிரியாரின் பெயரை முதன்முதலாகக் கண்ணுடைய வள்ளல் குறிப்பிட்டுப் பாடுகின்றார்.

பட்டினத்துப்பிள்ளையினைப் பத்ரகிரி யைப்பரவி

விட்டு விட மாட்டார்வெறுவீணர்

(ஒழிவிலொடுக்கம், 167)

235 கண்ணிகள் கொண்ட சிறு நூலை இவர் பாடியுள்ளார். இவர்தம் பாடல் கருத்தையும் சொற்களையும் தத்துவப் பிரகாசத்திலிருந்து எடுத்துக் கொண்டுள்ளார். இந்நூலில் 178ஆம் பாடலைக் கேளுங்கள் :

எவரெவர்கள் எப்படிக் கண்டு எந்தப்படி நினைத்தார்

அவரவர்க்குத் தான் அப்படி ஆவதுவும் எக்காலம்

இக்கருத்தும் சொற்களும் தத்துவப்பிரகாசம் 137ஆம் பாடலில் பூசையை முடித்தவிடத்து வேண்டுகோளாகக் கூறும் இடத்தில் காணப்படுகின்றன.

தேவனே எவரெவர்எப்படிச் சிந்தித்தார்

சிந்தித்த இடத்து அந்த வடிவு ஆகை திடமே

(ஆகை = ஆதல்)

5.5 தொகுப்புரை

இக்காலப்பகுதியில் சாத்திரம் மற்றும் சித்தர் பாடல்கள் அதிகம் எனலாம். அடுத்த நிலையில் இலக்கணம், உரைகள் காணப்படுகின்றன. சமண இலக்கியத்தின் பங்களிப்பு வழக்கம்போல இந்நூற்றாண்டிலும் சீராக இருந்துள்ளது. இரு பட்டினத்தார் இருந்த செய்தியை இங்கு அறிய முடிகிறது.

பாடம் - 6

பதினைந்தாம் நூற்றாண்டு

6.0 பாட முன்னுரை

பதினைந்தாம் நூற்றாண்டில் சைவ இலக்கியங்கள் பெருகின. சில தத்துவ நூல்கள் உருவாயின. 50க்கும் மேற்பட்ட புலவர்கள் தோன்றி இலக்கியப் பணி செய்தனர். இவர்களில் அருணகிரிநாதர், காளமேகப் புலவர் போன்றோர் உட்பட்ட சிலரே பலமுறை விவாதிக்கப்படும் ஆசிரியர்கள் ஆவர். ஏனையோரைப் பற்றி இலக்கிய வரலாறுகளில் காண்பது மிகவும் அரிதாகும். வள்ளல் பரம்பரையினர் சிலருடைய பங்களிப்பும் இக்காலத்தில் இருந்தது. ஒப்புநோக்கும்போது இக்காலப் பகுதியில் சித்தர்களின் இலக்கியப் பணி மிகுதி எனலாம்.

விசயநகர ஆட்சி சிறப்பான நிலையில் இருந்தது. கோயில் சிற்பம் போன்ற கலைகளுடன் இலக்கிய வளர்ச்சியும் காணப்பட்டது. உரைகள் மிகுதியாகத் தோன்றின. இக்காலத்திற்குச் சற்று முன்னதாகச் சித்தர்கள் தோன்றினர். முகமதியருடைய தாக்குதலால் தமிழ்நாட்டின் சமயக் கட்டமைப்பும் பண்பாடும் சீர்குலைந்தன. விசயநகர மன்னரது ஆதரவு இவற்றை மாற்றி அமைத்தது. இம்மன்னர்களது காலத்தில் தோன்றிய பல கலைகளும், இலக்கியங்களும் மக்களின் விழிப்புணர்ச்சியின்மை, ஒற்றுமையின்மை காரணமாக நெடுநாள் நிலைத்து நிற்காமல் வீழ்ச்சியடைந்தன. அடுத்த இரு நூற்றாண்டுகளில் வெள்ளையர் வரவின் விளைவாகக் கிறித்தவ சமயம் பரவவும், அதன் வழியாக மேலை நாட்டு நாகரிகமும் ஆதிக்கமும் நிலைக்கவும் வழியேற்பட்டன.

இக்காலத்தில் 50க்கும் மேற்பட்ட புலவர்கள் தோன்றினர். இருப்பினும் குறிப்பிடத்தக்க புலவர்கள் என்ற நிலையில் காளமேகப்புலவர், அருணகிரிநாதர், கயாதரர், கல்லாடர், ஞானவரோதயர், சத்தியஞானப்பண்டாரம், களந்தை ஞானப்பிரகாசர், மணவாள மாமுனிகள், உதீசித்தேவர் போன்றோரைக் கூறலாம். இவை பற்றிய செய்திகளை இப்பாடம் குறிப்பிடுகிறது.

6.1 காப்பியங்களும் புராணங்களும்

இக்காலக் கட்டத்தில் பல காப்பியங்களும், புராணங்களும் தோன்றின. அரிச்சந்திர புராணம், உதயண குமார காவியம், காதம்பரி போன்றவை இக்காலத்தில் தோன்றிய குறிப்பிடத்தக்க இலக்கியங்களாகும்.

6.1.1 காப்பியங்கள் பெருங்கதையில் இடம் பெற்ற உதயணன் பற்றிய ஒரு காப்பியமும், காதம்பரி போன்ற மொழி பெயர்ப்புக் காப்பியங்களும் தோன்றின.

உதயண குமார காவியம்

இது, கௌசாம்பி நாட்டு மன்னனான உதயணனின் வரலாற்றைக் கூறுகிறது. ஆறு காண்டப் பாகுபாடு உடையது. 369 விருத்தப்பாக்களைக் கொண்டது. பெருங்கதையின் முற்பகுதியும், பிற்பகுதியும் கிடைக்காமையால் உதயணனின் வரலாற்றை அறிய இது உதவுகிறது. (பெருங்கதை காலத்தால் மிகவும் முற்பட்டது – உதயணனின் வரலாற்றைக் கூறுவது.) பெயர்தான் காவியமே தவிர, இதில் காவிய இயல்புகள் இல்லை. பெருங்கதையை அடியொற்றியே இக்காவியம் செல்கிறது. இக்காவியம் போற்றப்படாததற்குக் காரணம் இதில் இலக்கியச் சுவை குறைந்திருப்பதே என்பது அறிஞர் கருத்து.

காதம்பரி

மொழிபெயர்க்கப்பட்ட காவியங்களில் குறிப்பிடத்தக்க ஒரு நூல், காதம்பரி. இது, கந்தர்வப்பெண் காதம்பரியை உச்சயினி மன்னன் சந்திராபீடன் மணந்த வரலாற்றைக் கூறுகிறது. ஹர்ஷருடைய சபையில் கவிஞராக இருந்த பட்டபாணர் வடமொழியில் வசன நடையில் இதனை எழுதியுள்ளார். அதன் மொழிபெயர்ப்பே இந்நூல். இதன் ஆசிரியர் ஆதிவராக கவி ஆவார்.

6.1.2 புராணங்கள் கி.பி 11 முதல் 15ஆம் நூற்றாண்டு வரையிலான இக்காலக் கட்டத்தில் புராணங்களும் தோன்றின. தமிழில் தோன்றிய புராணங்களைப் புராணங்கள் எனவும், புராணக் காப்பியங்கள் எனவும் இரு வகையாகப் பிரிக்கலாம். முதற்புராணம் பெரியபுராணம் ஆகும். புராணம் என்பது பழமையான நிகழ்வுகளைக் கதை வழியாகக் கூறும் முயற்சியாகும். இந்நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தக்கப் புராணங்களாக திருவாதவூரடிகள் புராணம், ஸ்ரீபுராணம் போன்றவற்றைக் கூறலாம்.

அரிச்சந்திர புராணம்

அரிச்சந்திர புராணம் எனப்படும் அரிச்சந்திர சரித்திரம், தமிழ் மக்கள் நன்கு அறிந்த இதிகாசக் கிளைக் கதையாகும். இதனுடைய முதற்பதிப்பு இதனை அரிச்சந்திர சரிதம் எனக் கூறுகிறது. இதனைப் பாடியவர் நல்லூர் வீரை ஆசு கவிராயர். நூலின் பாக்கள் சுவையுடையன. எடுத்துக்காட்டாக, அரிச்சந்திரன் தன் மனைவியின் கழுத்தை வெட்ட வேண்டிய நேரத்தில் கூறுவதாவது:

உலகுயிர்க்கெலாம் பசுபதி ஒருமுதல் ஆயின்

அலகில் சீர்உடை அவன்மொழி மறையெனின் அதன்கண்

இலகுஅறம் பலவற்றினும் வாய்மை ஈடுஇலதேல்

விலகு உருமல் அவ் வாய்மையை விரதமாக்கொளின்யான்

(அரிச்சந்திரபுராணம், மயான காண்டம், 135)

(பசுபதி = உயிர்களின் தலைவனாகிய சிவபெருமான்; ஒருமுதல் = தனிப்பெருந்தெய்வம்; அலகில் – அலகுஇல் = அளவில்லாத; இலகு = விளங்கும்; வாய்மை = உண்மை)

சிவபெருமான்தான் முழுமுதற் கடவுள் என்பதும், அப்பெருமான் உரைத்ததே வேதம் என்பதும், அவ்வேதத்தில் கூறப்பட்டுள்ள அறங்களில் இணையற்றது, உயர்ந்தது உண்மை பேசுதலே என்பதும், அந்த அறத்தை நான் இடைவிடாமல் கடைப்பிடிக்கிறேன் என்பதும் உண்மையானால், இவ்வாள் இவளைக் கொல்லாது இருக்கட்டும் என்பது இதன் பொருள்.

திருவாதவூரடிகள் புராணம்

கடவுள் மாமுனிவர் இயற்றிய திருவாதவூரடிகள் புராணம் 545 செய்யுட்களைக் கொண்டது. அளவில் இது சிறிய நூல். சுந்தரரும், சேக்கிழாரும் மாணிக்கவாசகரைப் பாடவில்லை. பின்னர் வந்த கடவுள் மாமுனிவர் அக்குறையைச் சரி செய்யும் வகையில் மாணிக்கவாசகர் வரலாற்றைப் பாடியதாகக் கொள்ளலாம். இதன் முக்கியச் சிறப்பு இதுவேயாகும். மந்திரிச்சருக்கம், திருப்பெருந்துறைச் சருக்கம், குதிரையிட்ட சருக்கம், மண் சுமந்த சருக்கம், திருவம்பலச் சருக்கம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், திருவடி பெற்ற சருக்கம் என்ற பல பகுதிகள் இப்புராணத்தில் அடங்கியுள்ளன. சைவசித்தாந்தக் கருத்துகள் இதில் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்நூல் ஒரு தலபுராணமே ஆயினும் மாணிக்கவாசகரின் பெருமையைக் கூறுவதால் பெருமை பெறுகிறது எனலாம்.

ஸ்ரீபுராணம்

இக்காலத்தில் தோன்றிய மற்றொரு சமணப் புராணமாகும். இது மகாபுராண சங்கிரகத்தின் மொழிபெயர்ப்பாகும். இதன் ஆசிரியர் பெயர் கிடைக்கவில்லை. இவர் வடமொழிப்புலமையும், தமிழ்ப்புலமையும் மிக்கவர் என்பது இந்நூல் மூலம் தெரிய வருகிறது. இந்நூல் 23 தீர்த்தங்கரர்களின் வரலாற்றைக் கூறுகிறது. இராமாயண, பாரத, பாகவதக் கதைகள் இதில் பல் வகையான வேறுபாடுகளுடன் கூறப்பட்டுள்ளன. இந்நூல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது. இது உரைநடையாக உள்ளது. கவிதைக்குரிய வருணனைகள் இந்நூலில் சேர்க்கப்படவில்லை. சமண நூல்களில் இது அளவில் பெரியது.

இக்காலக் கட்டத்தில் திருப்புத்தூர்க் கோயிலிலுள்ள சிவபெருமானின் திருவிளையாடல்களைக் கூறும் ஓங்குகோயில் புராணம் (கி.பி. 1484) எழுந்தது. இப்புராணம் தற்போது கிடைக்கவில்லை.

6.2 பிறவகை இலக்கியங்கள்

மேற்கண்ட காப்பியங்கள், புராணங்கள் தவிர இக்காலக் கட்டத்தில் வேறு சில சிற்றிலக்கியங்களும், தோன்றின. அவை சமயம் சார்ந்த நிலையிலும், சமயம் சாரா நிலையிலும் அடங்கும்.

6.2.1 சமயம் சார்ந்தவை சமயம் சார்ந்த நிலையில் திருப்புகழ், திருஆனைக்காஉலா, திருவாய்மொழி நூற்றந்தாதி, திருக்கலம்பகம் போன்றவை உள்ளிட்ட பல நூல்களாகும்.

திருப்புகழ்

இதனைப் பாடியவர் அருணகிரிநாதர். சைவ இலக்கியங்களில் திருப்புகழுக்குச் சிறப்பான இடம் உண்டு. பண்டைய ஆசிரியர்கள் திருப்புகழ் பாடல்கள் 16,000 என்பர். தோன்றிய காலம் முதல் திருப்புகழ் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது.

திருப்புகழைக் கேட்கத் திருப்புகழைக் கற்கத்

திருப்புகழை நித்தந் தியானிக்கத் – திருப்புகழை

உற்றிருந்து கேட்பாருக் குற்ற வினையிரண்டும்

அற்றிருக்கத் தானே யறும்

நூலின் பெயர் திருப்புகழாய் அமைந்திருப்பதோடு மட்டுமன்றி, நூலில் அமைந்துள்ள 1307 பாடல்கள் ஒவ்வொன்றுமே திருப்புகழ் என்றே வழங்கப்படுகின்றன. இதுவே இதன் சிறப்பாகும். முருகப் பெருமானின் பெருமைகளை இந்நூல் கூறுகிறது. இந்நூலில் சபாஷ், சலாம், ராவுத்தன் போன்ற முகமதியச் சொற்கள் கலந்திருப்பது நோக்கத்தக்கது. அக்கால ஆட்சிப்போக்கினையும், மொழிப் போக்கினையும் இது உணர்த்துகிறது. இதைப் போலவே அளவுக்கு மீறிய வடசொற்களும் இதில் கலந்துள்ளன. இந்நூலாசிரியர் பாடிய பிற நூல்கள் கந்தர் அலங்காரம், கந்தரனுபூதி, திருஎழுகூற்றிருக்கை, கந்தரந்தாதி போன்றவையாகும். கல்வியில் குறைந்தவர்கள்கூட இவரது பாடல்களில் ஆர்வம் செலுத்துவர். முருகனைப் போற்றும் பாடல்கள் இக்காலக் கட்டத்தில் அதிகம் தோன்றியுள்ளன.

திருஆனைக்காஉலா

இந்நூலும் சமயம் சார்ந்த நூல்களில் ஒன்றாகும். ஆனைக்காவில் உள்ள வெண்ணாவலீசர் மீது பாடப்பெற்றது. தலச்சிறப்பில் இங்குப் பேறு பெற்றவர்களின் செய்தி கூறப்பட்டுள்ளது.

இந்நூலைப் பாடியவர் காளமேகப்புலவர். நினைத்தவுடன் தங்குதடையின்றி எப்பொருளைப் பற்றியும், எவ்விதமாகவும் சாமர்த்தியமாகப் பாடும் ஆற்றல் இவருக்கு இருந்தது. கார்மேகம் போல இவர் கவிதை மாரி பொழிந்தமை கண்ட பெரியோர் இவரைக் காளமேகம் என்றனர். இந்நூலிலுள்ள கண்ணிகள் 461, வெண்பாக்கள் 2 ஆகும். இந்நூல் சிறந்த பக்திச்சுவை கொண்டது. இறைவனின் பெயரைக் கூறும் போது இவர் பயன்படுத்தும் தொடர்கள் திருமுறைகளில் இவருக்கு உள்ள ஈடுபாட்டைக் காட்டுகின்றன. இவர் இயற்றிய பிற நூல்கள் சித்திர மடல், சமுத்திர விலாசம் போன்றவை ஆகும்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

மணவாள முனிகளால் இயற்றப்பட்டது. இவர் பல பிரபந்தங்கள் செய்தவர். முருகன் மீதான நூல்கள் எழ அருணகிரிநாதர் காரணமாக இருந்தார். அதுபோல வைணவ நூல்கள் இக்காலத்தில் எழுதப்பட இவரே முக்கிய காரணமாகும். நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப் பதிகங்கள் அனைத்தையும் எடுத்து, பதிகத்துக்கு ஒரு வெண்பா வீதம் 100 வெண்பாக்கள் பாடியுள்ளார். ஒவ்வொரு பதிகத்தின் முதற்பாட்டின் முதற்சொல்லையும், கடைசிப்பாட்டின் கடைசிச் சொல்லையும் தாம் பாடிய ஒவ்வொரு வெண்பாவுக்கும் முதலும் முடிவுமாக வைத்துப் பாடியுள்ளார். இவருடைய பிற நூல்கள் உபதேச ரத்ன மாலை, ஆர்த்திப் பிரபந்தம் போன்றவையாகும்.

திருக்கலம்பகம்

திருக்கலம்பகம் இக்காலத்தில் தோன்றிய சமண நூலாகும். இதன் ஆசிரியர் உதீசித்தேவர். இந்நூல் அருகனின் தோத்திர நூலாகும். 110 பாடல்களையுடையது. கலம்பக இலக்கணங்கள் கொண்டது. ஒரு தலம் குறித்துப் பாடப் பெறாமல் பொதுவாய் அருகனைத் துதிக்கின்றபடியால், தலத்தைச் சுட்டியதாக வழங்காமல் திருக்கலம்பகம் என்று பெயர்பெற்றது. நீயே சிவபிரான், நீயே திருமால், நீயே பிரமன், நீயே முருகன், உனது சக்தியே அம்பிகை எனப் பலவாறாக அருகனைப் போற்றிய வகையில் பாடல்கள் உள்ளன. இக்காலக் கட்டத்தில் தோன்றிய பிற சமண நூல்கள் ஆதிநாதர் பிள்ளைத் தமிழ், அனந்தகவி உரை போன்றவையாகும்.

6.2.2 சமயம் சாராதவை சமயம் சாராத நூல்களாக இக்காலக் கட்டத்தில் தோன்றியவை வருணகுலாதித்தன் மடல், சித்திர மடல், கபிலரகவல் போன்றவையாகும்.

வருணகுலாதித்தன் மடல்

96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான மடல் வகையைச் சார்ந்தது இந்த நூல். தலைவன் தான் காதலித்த தலைவியைப் பெறாத நிலையில், அவளை அடைய, பனங்கருக்கால் குதிரை போல் ஓர் ஊர்தி செய்து ஊர்தலே இந்நூலின் வடிவமாகும். நாகையில் வாழ்ந்த வள்ளல் மீது காளிமுத்து என்னும் தாசி பாடியது. சொல் நயம், அடுக்கு, எதுகை, மோனை, தொடை நயம், முரண் தொடை, மடக்கு முதலிய அனைத்துச் செய்யுள் நலன்களையும் இம்மடலில் காணலாம். வருணனை, சந்த நடை சிறப்பாக அமையப் பெற்றது. சிறப்பான இலக்கிய நடையும், சில சமயம் பேச்சு நடையும் இதில் இழைந்து வருவதைக் காணலாம்.

சித்திர மடல்

இது, மடல் வகையைச் சார்ந்த மற்றொரு நூலாகும். 174 கண்ணிகளும், ஒரு காப்புச் செய்யுளும் உடையது. பின்னர்த் தோன்றிய மடல் பாட்டுடைத் தலைவனின் சிறப்பை விரித்துக் கூறும். அக்கூற்றுகள் இதில் காணப்படாதது இதன் சிறப்பம்சமாகும். மடல் மரபைக் கூறும் திருக்குறளைக் கேளுங்கள்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்

மடல் அல்லது இல்லை வலி (1131)

(காமத்தால் துன்புற்று (காதலியின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்கு மடலூர்தல் அல்லாமல் வலிமையான துணை வேறு எதுவும் இல்லை என்பது இதன் பொருளாகும்).

கபிலரகவல்

கபிலர் அகவல், சமூகப் புரட்சியைக் கவிதை வடிவில் வெளிப்படுத்தியது எனலாம். கடவுளுக்குச் சாதி வேற்றுமை இல்லை, அவருடைய மெய்யடியார்களுக்கும், ஞானிகளுக்கும் சாதிவேற்றுமை இல்லை என்பதை நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் வரலாறுகள் காட்டுகின்றன. மக்களாய்ப் பிறந்தோர் இரப்பவர்க்கு இட்டு, புலையும் (ஊன்), கொலையும், களவும் தவிர்த்து அறத்தில் நிற்பார்களாக என்று இவர் அறிவுரை கூறுகிறார். எக்காலத்திலும் பொருந்தும் வகையில் கபிலரகவல் கூறும் அறிவுரையைக் கொஞ்சம் கேளுங்கள்:

குலமு மொன்றே குடியு மொன்றே

இறப்பு மொன்றே பிறப்பு மொன்றே

இதைப் போலவே சாதியால் உயர்வு கூறுவோரைக் கண்டிக்கும் மற்றொரு நூல் பாய்ச்சலூர்ப்பதிகம் எனப்படும். அது ஒரு நாடோடிப்பாடல் ஆகும்.

6.3 சித்தர் பாடல்கள்

இலக்கியத்திற்கு, சித்தர்களின் பங்களிப்பு மிகுதி. பல்வேறு காலக்கட்டங்களில் சித்தர்கள் தோன்றியுள்ளனர். அவர்கள் சாகாக்கலை கற்றவர்கள். உடலைத் தாம் விரும்பும் காலம் வரையில் அழியா நிலையில் வைத்திருந்தனர். அண்டவெளியில் சஞ்சரித்தனர். உலகின் எந்த மூலையில் என்ன நடந்த போதிலும் தாம் இருந்த இடத்திலிருந்தே அறியவும், செயல்படவும் ஆற்றல் பெற்றிருந்தனர். அத்தகு ஆற்றலை மனித குலம் முழுவதுமே அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பாடல்களைப் பாடினர். சித்தர்கள் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்தவர்கள்.

காலத்திற்கு உட்பட்டவர்கள் பக்தர்கள். காலத்தை வென்றவர்கள் சித்தர்கள். வேளை வரும் போது இறப்பவர்கள் பக்தர்கள். விரும்பும் வரை மரணத்தைத் தள்ளிப் போடுபவர்கள் சித்தர்கள். இவர்கள் சடங்குகளையும், சடங்குகளோடு ஒட்டிய வழிபாடுகளையும் போற்றவில்லை.

இவர்களின் பாடல்களில் நாட்டுப்புறப்பாடல்களிலுள்ள செய்யுள் வடிவம் காணப்படுகிறது. எளிய பேச்சு வழக்குச் சொற்கள் சில பாடல்களில் காணப்படுகின்றன. மருந்து பற்றிய பாடல்களில் வெவ்வேறு பெயர் காணப்படுவதும் உண்டு. இதுபோன்ற பாடல்களைப் படித்து நேரே பயன்பெற முடியாது. மரபு வழியில் கற்றவர்கள் மூலமே உணர முடியும். சித்தர்கள் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் தமிழில் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றன. அவற்றின் தொகுப்பு சித்தர் ஞானக்கோவை எனவும், பதினெண் சித்தர் ஞானக்கோவை எனவும் தனி இலக்கியமாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சித்தர்களின் பாடல்கள் பரவிய அளவிற்குச் சித்தர்கள் பற்றிய வரலாறுகள் பரவவில்லை.

6.3.1 பொதுக் கூறுகள் சித்தர் பாடல்கள் பொதுவாகத் தெளிந்த நடையைக் கொண்டவை. தெருப் பிச்சைக்காரர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும், பெரும் பணக்காரரின் ஆன்ம விழிப்பிற்கும் உரமளிப்பவை இப்பாடல்கள். குழந்தைகளும் பாடி மகிழத்தக்க எளிமையும், பெரியவர்கள் சிந்தித்துப் பயிலத்தக்க பொருட்திண்மையும் உடையவை. மனத்தைப் பேயாகக் கருதிப் பாடிய சித்தர்கள் உண்டு. கடவுளைப் பற்றியும், ஞானநெறி பற்றியும் பாடிய சித்தர்களும் உண்டு.

பாமர மக்களும் அறிந்த சித்தர் பாடல்கள் பல உண்டு. ஆனால் அனுபவ வழியே அவற்றின் பொருளை உணரமுடியும். உதாரணத்திற்குக் கீழ்க்காணும் பாடலைப் பாருங்கள்:

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

(சித்தர் பாடல்கள் – கடுவெளிச் சித்தர், பாடல் எண்:4)

‘பத்து மாதங்களாகத் தவம் செய்து இந்த உடலைப் பெற்று வந்தாயே? மனிதா! கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைப்பதற்குத் தானா? ஏன் சிந்திக்க மாட்டேன் என்கிறாய்? இந்த உடல் உள்ளபோதே ஆன்மா கடைத்தேற வழி காண வேண்டாமா?’ எனச் சொல்லாமல் சொல்லி நெஞ்சில் இடித்துக் காட்டுகிறார் இச்சித்தர். உடல் என்ற தோண்டியை மனிதன் போட்டு உடைக்கிறான் என்பதன் மூலம் மனிதனின் ஜீவ ரகசியத்தை வெளிப்படுத்துகிறார். இவ்வாறாகப் பெரும்பாலான பாடல்கள் மறை பொருள் கொண்டு அமைந்துள்ளமை சித்தர் பாடல்களின் பொதுக் கூறுகளில் ஒன்றாகும்.

6.3.2 குறிப்பிடத்தக்க சித்தர்கள் இக்காலத்தில் தோன்றிய சித்தர்களாக அகப்பேய்ச்சித்தர், அழுகுணிச்சித்தர், இடைக்காட்டுச்சித்தர், கடுவெளிச்சித்தர், ஏனாதிச்சித்தர், காளைச்சித்தர், பாம்பாட்டிச்சித்தர் போன்ற பலரைக் குறிப்பிடலாம். ஏனாதிச்சித்தர், காளைச்சித்தர் ஆகியோரின் பாடல்கள் அச்சாகவில்லை.

இடைக்காட்டுச்சித்தர்

இவர் பாடிய பாடல்கள் 130 ஆகும். இவை வெவ்வேறு சந்தங்களில் உள்ளன. இவரது பாடல்களில் ஆயரோடு தொடர்புடைய பல சொற்கள் உள்ளன. இவரது பாட்டோடு ஆட்டமும் கலந்துள்ளது. இவரது பாடல்களில் பலரொடு கிளத்தல், நெஞ்சோடு கிளத்தல், அறிவோடு கிளத்தல் போன்ற பகுதிகளும் உண்டு.

நாட்டுப்புறங்களில் திருவிழாக் காலங்களில் இன்றும் பாடப்படும் ஒரு பாடலைக் கேளுங்கள். இப்பாடல்களைப் பாடிக் கொண்டு ஒயிலாட்டம் முதலிய கூத்துக்களை ஆடுபவர்களை இன்றும் காண முடிகிறது.

தாம் திமி திமி தாந்தக் கோனாரே

தீம் திமி திமி தீந்தக் கோனாரே

ஆனந்தக் கோனாரே – அருள்

ஆனந்தக் கோனாரே

(இடைக்காட்டுச் சித்தர் பாடல் எண் : 24)

சித்தர் நெறியையும், சமய உணர்வையும் ஆழப்பதிக்கும் பாடல் இதுவாகும். இடைக்காட்டுச் சித்தர் ஆனந்தக் கோனாரையும், ஆட்டையும், பசு மாட்டையும், அன்னத்தையும், புல்லாங்குழலையும், அறிவையும், நெஞ்சையும், மயிலையும், குயிலையும் தம் முன் நிறுத்தி, பல உலகியல்புகளையும் உண்மைகளையும் உணர்த்தியிருக்கிறார். ஜீவன் என்னும் பசுவிலிருந்து ஞானப்பால் கறக்கும்படி தூண்டியிருக்கிறார்.

குதம்பைச்சித்தர்

குதம்பை (காதணி) அணிந்த பெண்ணை விளித்துப் பாடியமையால் குதம்பைச்சித்தர் என்னும் பெயர் பெற்றார். இவரது பாடலிலும் எளிய சொற்கள் உள்ளன. உண்மையறிவு பெற்று இறைவனை நாடும் மெய்ஞ்ஞானிக்கு உலகப் பொருள்களும், சடங்குகளும் தேவையில்லை என்பது இவரது கருத்து. இவருடைய பல பாடல்கள் யோக நெறி, பக்தி நெறி, புறப்பூசை போன்றவற்றைப் பழிக்கும் வகையில் அமைந்துள்ளன. சித்த நெறியினர் காயகற்பம் (உடலினை உறுதியாக்கி, முதுமை வாராமல் தடுக்கும் சித்தவைத்திய மருந்து) தேடி அலைய வேண்டியதில்லை என்று கூறும் இவரது பாடலைக் கேளுங்கள்.

மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ்ஞானிக்குக்

கற்பங்கள் ஏதுக்கடி -குதம்பாய்

கற்பங்கள் ஏதுக்கடி

(குதம்பைச் சித்தர், பாடல் எண் : 2)

(கற்பம் = காயகற்பம்)

இவர் பாடிய பாடல்கள் 246 ஆகும்.

பாம்பாட்டிச்சித்தர்

இவர், பாண்டி நாட்டைச் சேர்ந்தவர். சட்டைமுனியின் சீடர். இவர் பாடிய ‘ஆடு பாம்பே..’ எனத் தொடங்கும் பாடல் தமிழ்நாடு முழுவதும் எங்கும் பாடப்பெறுகிறது. இவர் பாடல்களைப் பின்பற்றிப் பலருடைய புதிய பாடல்களில் நடனக் கோலங்களைக் காணமுடிகிறது. சித்தர் பாடல்களில் இவரது பெயரில் 129 பாடல்கள் உள்ளன. இவையனத்தும் புன்னாகவராளி ராகத்தில் அமைந்தவை.

நாதர் முடிமேலிருக்கும் நாகப்பாம்பே

நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே

பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே

பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே

(பாம்பாட்டிச்சித்தர் பாடல் எண் : 20)

இப்பாடலில் பாம்பினது சிறப்பு கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான பாடல்களில் இவர் பாம்பு என்று கூறுவது பாம்பு உருவாக மண்டலமிட்டுக் கிடக்கும் குண்டலினி சக்தியையே ஆகும். அதையெழுப்பல் யோகிகளுக்கு இன்றியமையாதது. ஆகவே அதனை அவர் எழுப்பும் முயற்சியில் இறங்கினார்.

மேற்கண்ட பாடல் அடிகளுடன் கீழ்க்காணும் வரிகளைப் பல்லவியாகக் கொண்ட சில பாடல்களும் அமையும்.

ஆடுபாம்பே – தெளிந்தாடு பாம்பே – சிவன் அடியினைக் கண்டோமென்று ஆடுபாம்பே

(பாம்பாட்டிச்சித்தர் பாடல் எண் : 1)

6.4 தத்துவ நூல்களும், திரட்டுநூல்களும்

இக்காலப் பகுதியில் தோன்றிய தத்துவ நூல்களில் குறிப்பிடத்தக்கவை தச காரியம், அட்டாங்க யோகக்குறள், ஒழிவிலொடுக்கம், பேரானந்த சித்தியார், பிராசாத தீபம் போன்றவையாகும். திரட்டுகள் என்ற நிலையில் பெருந்திரட்டு, குறுந்திரட்டு போன்றவற்றைக் கூறலாம்.

6.4.1 தத்துவம் இக்காலக் கட்டத்தில், தசகாரியம், அட்டாங்க யோகக்குறள், ஒழிவில் ஒடுக்கம் முதலிய தத்துவ நூல்கள் வெளிவந்தன.

தச காரியம்

இது, களந்தை ஞானப்பிரகாசரால் எழுதப்பட்டது. தேச, கால, பாத்திர இலக்கணம் (வழிபாடு செய்யும் முறைகளைக் கற்க முற்படுவோர் கருத்தில் கொள்ள வேண்டியவை, தகுந்த இடம், தகுந்த நேரம், தகுந்த ஆசிரியர் முதலியனவாகும்), சற்குரு (குருவாக இருப்பதற்கு உரியவர்) இலக்கணம், அசற்குரு (சற்குரு அல்லாதவர்) இலக்கணம், தீட்சை (ஒருவர் இறைவழிபாடு செய்ய விரும்பினால், தக்க குருமூலமாகப் பயிற்சி பெற வேண்டும். இதையே தீட்சை என்று ஆகமங்கள் கூறும்.) என்பன இந்நூலில் குறிப்பிடத்தக்கவையாகும். தச காரிய நூல்கள் பல இருந்தாலும் இதுவே அளவால் பெரியது. 302 பாடல்களைக் கொண்டது.

அட்டாங்க யோகக்குறள்

65 குறட்பாக்களை உடையது. அட்டாங்க யோகம் என்பது எட்டு அங்கங்களை (உறுப்புகள்) உடைய யோகம். எட்டும் எட்டுப் படிகளைப் போன்றவையாகும். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு உறுப்புகளைப் பற்றிக் கூறுகிறது.

ஒழிவிலொடுக்கம்

ஒழிவில் ஒடுக்கம் 253 வெண்பாக்களைக் கொண்டது. இதனை இயற்றியவர் கண்ணுடைய வள்ளல். இந்நூலை அக்கறையோடு ஓதி உணர்பவர் உலக வாழ்வில் ஈடுபாடு கொள்ளமாட்டார். புதுமையான தொடர்களும், சொற்களும் இதில் உள்ளன. இதன் பாடல்களில் வழக்குச் சொற்களும், வழக்கிலுள்ள உவமைகளும், பல்வகைத் தொழிற்பெயர்களும் காணப்படுவதால், ஆசிரியர் ஓரளவு பாமர மக்களும் உணரும் வகையில் இந்நூலை இயற்றியதாகக் கொள்ளலாம். இந்நூலில் புதிய சொற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்குச் சிலவற்றைக் காண்போம்.

சன்னை – சைகை

கிஞ்சு – சிறிது

கிடீர் – அறிவீர்

பிராசாத தீபம்

பிராசாத தீபம் என்னும் நூல் ஒரு வகையான யோக நெறியைப் பற்றிக் கூறுகிறது. சிவஞானத்தின் பயனாகிய முக்தியைக் கொடுப்பது பிராசாதம். இது ஒரு யோக நெறி. சிவஞான சித்தியாரில் குறிப்பாகவும், தத்துவப் பிரகாசத்தில் விளக்கமாகவும் இது சொல்லப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்த நூல் தமிழில் மிகவும் விரிவான பிராசாத சாத்திரமாகும்.

6.4.2 திரட்டுகள் வேதாந்த சமயத்தைப் பரப்பும் நிலையில் திரட்டு நூல்கள் தோன்றின. அவற்றுள் பெருந்திரட்டும், குறுந்திரட்டும் குறிப்பிடத்தக்கவை.

பெருந்திரட்டு

இது, தத்துவராயரால் தொகுக்கப்பட்டது. இவையனைத்தும் வேதாந்தப் பாடல்கள் ஆகும். தத்துவராயரின் குரு சிவப்பிரகாசரால் தொகுக்கப்பட்ட காரணத்தால் சிவப்பிரகாசப் பெருந்திரட்டு எனப்படும். பாயிரமாக 12 பாடல்களையும், நூலாக 2821 பாடல்களையும் கொண்டது. இதிலுள்ள நூல்கள் 147 ஆகும். தற்போதுள்ளவை மிகச் சிலவேயாகும். அவற்றில் சைவத்திருமுறைகள், ஞானாமிர்தம், சிவானந்த மாலை, தத்துவரத்தினாகரம், தத்துவ விளக்கம் போன்றவை அடங்கும்.

வேதாந்த சமயம் தமிழில் செல்வாக்கு அடையாத காலத்தில் இத்திரட்டு தோன்றியது. அதனைப் பரப்பும் முயற்சியில் இது தோன்றியது எனலாம். தத்துவப்பிரகாசம், வேதாந்த தீபிகை, ஞானசாரம், ஞானசித்தி முதலிய சைவசித்தாந்த நூற்பெயர்களை இவர் தம் பாடல்களில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவாசகம் என்ற தலைப்பிலும் பாடல்கள் அமைந்துள்ளன. திருவாசகம் எனும் தலைப்பில் வரும் இரு பாடல்களைப் பார்க்கலாம்:

அன்னையும் ஆயமும் கேண்மின்களோ, எனது ஆர்உயிர் ஆய சிவபெருமான்…

(பெருந்திரட்டு 11, சுவானுபூதி பாடல் எண்: 21)

வானும் நிலனும் அடையக் கேண்மோ வள்ளல், பெருந்துறை மேய பெம்மான்

(பெருந்திரட்டு 11, சுவானுபூதி பாடல் எண்: 22)

மேற்கண்ட பாடல்கள் மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் காணப்படவில்லை என்பது வியக்கத்தக்க செய்தியாகும். பண்டைய நூல்களில் தம் கருத்துக்கு ஏற்ற பாடல்களைத் தத்துவராயர் தொகுத்துத் தம் கருத்துக்குப் பொருத்தமானவற்றைச் சேர்த்தார்; பண்டை நூல்களில் தக்க மேற்கோள் கிடைக்காதபோது பல புதிய பாடல்களைப் பாடியும் சேர்த்துள்ளார். அவ்வாறு சேர்க்கும்போது பண்டைய பெயர்களைப் புதிய பாடல்களுக்குச் சூட்டி, திரட்டைப் பெருந்திரட்டாக ஆக்கினார்.

குறுந்திரட்டு

இந்நூல் தத்துவராயர் பெருந்திரட்டில் தொகுத்தவற்றில் சிலவற்றைச் சுருக்கமாகத் திரட்டி 424 செய்யுட்களாக எழுதப்பட்டதாகும். இத்திரட்டில் பல மிகைப்பாடல்களும் உள்ளன. திருவாசகப் பாடல்களும் இதில் காணப்படுகின்றன. குறுந்திரட்டுப் பாடல்களில், சில தேவாரம் போலவே செய்யப் பெற்ற பாடல்கள் ஆகும். உதாரணத்திற்குப் பின்வரும் பாடல்:

இந்நூலாசிரியர் தம்மை மறந்து எங்கும் சிவமே பேசுகிறார். இவர் சிவப்பிரகாச வெண்பா, தத்துவாமிர்தம், அடங்கன்முறை, பிள்ளைத்திருநாமம், தசாங்கம் உட்பட பல நூல்களை எழுதியுள்ளார்.

6.5 பிற நூல்கள்

மேற்கண்டவை தவிர நிகண்டுகளும் உருவாயின. இக்காலக் கட்டத்தில் தோன்றியவை கயாதர நிகண்டு, உவமான சங்கிரகம், அளவை விளக்கம் போன்றவை. இலக்கணத்தைப் பொறுத்தவரை பெரிய அளவில் இந்நூற்றாண்டில் எதுவும் எழவில்லை. நிகண்டு, தமிழில் தோன்றிய அகராதிக்கலை ஆகும். முற்காலத்தில் நிகண்டு கற்ற பின்னரே தமிழ் படிக்கத் தொடங்குவர்.

6.5.1 நிகண்டு, இலக்கணம் தமிழில் எழுதப்பட்ட அகராதிகளுக்கு முன்னோடியாக அமைந்தது நிகண்டு. நிகண்டுகள் இக்கால எல்லையில் தோன்றின. இலக்கண நூல்களும் தோன்றின.

கயாதர நிகண்டு

கயாதரரால் எழுதப்பட்டது. இந்நூலில் ஆசிரியரின் கல்வி கேள்வியையும், சிவ பக்தியையும் அறியலாம். பிங்கல நிகண்டைப் போலவே ஆசிரியர் பெயரால் பெயர் பெற்றது இது. மனப்பாடம் செய்ய எளிமையானது. தெய்வப்பெயர், இடம், மக்கள் என்ற பெயர்கள் உட்படப் பல பெயர்கள் பற்றிய பத்துத் தொகுதிகளைக் கொண்டது. பழைய நிகண்டுகளின் பயன்பாடின்மை பற்றி மு.வரதராசனார் கூறும் கருத்தைக் கேளுங்கள்.

அகர வரிசையில் சொற்கள் சேர்க்கப்பட்டு பொருள்கள் உணர்த்தப்படும் அகராதிகள் ஐரோப்பியர் தொடர்பால் ஏற்பட்ட பிறகு பழைய நிகண்டுகள் அவ்வாறு பயன்படவில்லை.

நிகண்டு செய்தோர் வேறு இலக்கியம் செய்ததாக வழக்கு இல்லை என்றாலும், இந்நூற்றாண்டில் கயாதரர், நிகண்டுடன் வேறு சில நூல்களையும் எழுதியுள்ளார்.

உவமான சங்கிரகம்

உவமான சங்கிரகம் என்ற பெயரில் மூன்று நூல்கள் உள்ளன. இக்காலப் பகுதிக்கு உரியது முதல் நூலாகும். தொல்காப்பியத்தின் மூன்றாவது பிரிவான பொருளதிகார இயல் பிற்காலத்தில் தனிப்பிரிவாக வளர்ந்தது. இதனோடு நெருங்கிய தொடர்புடைய உவமவியல் கருத்துகளின் ஒரு பகுதியே உவமான சங்கிரகம் எனப்படும் இந்நூலாகும். ஆசிரியரின் வரலாறு தெரியவில்லை. நூலின் இறுதியில் பெண்களுக்குரிய சில பொது உவமைகளும் கூறப்பட்டுள்ளன.

அளவை விளக்கம்

இந்நூலைச் செய்தவர் களந்தை ஞானப்பிரகாசர் என்பதாக, வெள்ளியம்பலவாணத் தம்பிரான் தமது முத்தி நிச்சயப் பேருரையில் கூறுகிறார். இந்நூல் அளவை இலக்கணம் கூறுகிறது. இந்நூல் பற்றி, சாமிநாதய்யர் தம் ‘சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்ற நூலில் கூறுவதாவது:

அளவை நூல் ஒன்று தமிழில் இருந்ததாகப் பழைய உரைகளால் தெரிய வருகின்றது. அதிலுள்ள பாடல்கள் கட்டளைக் கலித்துறையாக உள்ளன. அந்நூலில் காண்டல் முதல் சம்பவம் இறுதியாகவுள்ள பத்து அளவைகளின் இலக்கணங்கள் கூறப்பட்டிருத்தல் வேண்டுமென்று கிடைத்த பாடல்கள் தெரிவிக்கின்றன.

6.5.2 உரை நூல்கள் சிறப்பு மிகுந்த தமிழ் இலக்கியங்களுக்கும், இலக்கணங்களுக்கும் சிறந்த உரைகள் எழுதப்பட்டன. குறிப்பாகத் திருக்குறள், தொல்காப்பியம் போன்றவற்றிற்கு உரை நூல்கள் தோன்றின.

திருக்குறள் உரை

இக்காலக் கட்டத்தில் பரிதியாரால் திருக்குறளுக்கு உரை எழுதப்பட்டது. (காலமுறைப்படி திருக்குறளுக்கு உரை எழுதிய ஐவரைப் பற்றி 11ஆம் நூற்றாண்டு பாடப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.) பரிதியார் உரையில் வடசொற்களும், வடமொழித் தொடர்களும் அதிகம் உள்ளன. வேறு யாரிடமும் இல்லாத சொல்லாட்சி இவரிடம் உண்டு. பதவுரையோ பொழிப்புரையோ கூறப்படாமல் பாடலின் கருத்து மட்டும் சொல்லப் பெறுவதால் குறளின் கருத்தை மட்டும் அறிய இது உதவுகிறது. இதுவே இவ்வுரையின் சிறப்பு எனலாம். இவ் உரையாசிரியர் திருமுருகாற்றுப்படைக்கும் உரை எழுதியுள்ளார்.

தொல்காப்பியச் சொல்லதிகார உரைகள்

கல்லாடர் தொல்காப்பியம் – சொல்லதிகாரத்துக்கு உரை எழுதியுள்ளார். இவர் தமது உரையை, இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர் உரைகளைத் தழுவி அமைத்துள்ளார். பரிமேலழகரின் திருக்குறள் உரையில் காணும் தொடர்களும் இவரது உரையில் வருகின்றன. இவரைத் தவிர, சொல்லதிகாரத்துக்குத் தெய்வச்சிலையாரும் உரை எழுதியுள்ளார். அந்தவுரை விருத்தியுரை எனப் பெயர் பெற்றது.

நேமிநாதம் நூலுக்கு உரை

நேமிநாதம் என்னும் இலக்கண நூலுக்கு உரை இக்காலக் கட்டத்தில் தோன்றியது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. (நேமிநாதம் என்பது 22வது சமண தீர்த்தங்கரர் பெயரால் குணவீர பண்டிதர் 12ஆம் நூற்றாண்டில் எழுதிய இலக்கண நூலாகும். 12ஆம் நூற்றாண்டு இரண்டாம் பகுதி பாடத்தில் இந்நூல் பற்றி விளக்கப்பட்டுள்ளது). நேமிநாதம் நூலுக்கான இந்த உரை பொழிப்புரையாகவும், கருத்துரையாகவும் உள்ளது. வினா, விடை விளக்கங்களைக் கொண்ட விருத்தியுரையாகவும் இது உள்ளது. சமயத்தால் ஆசிரியர் சமணர். இவர் தொல்காப்பியச் சூத்திரங்களை எடுத்துக் காட்டுகிறார். சங்க நூல்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகியவையும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் இதில் சுட்டப்படுகின்றன.

தக்கயாகப் பரணிக்கு உரை

தக்கயாகப் பரணிக்கு உரை ஒன்று இக்காலத்தில் எழுதப்பட்டது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. கலிங்கத்துப் பரணிக்குப் பிறகு வந்த நூல் தக்கயாகப் பரணி ஆகும். கலிங்கத்துப் பரணிக்குப் பழைய உரைகள் இல்லை. தக்கயாகப் பரணிக்கு உண்டு. இவ்வுரையாசிரியர் தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர். தமிழில் சங்க நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், சூளாமணி, உதயணன் கதை போன்றவற்றை எடுத்துக்காட்டுகிறார். இவருக்குக் கவியழகில் ஈடுபாடு உண்டு. சொல்லையும் பொருளையும் மிகவும் ஆராய்ந்து எழுதுபவர். எல்லாவிடத்திலும் சுவைபடவே பொருள் எழுதுவார். ஒரு சொல்லிற்குரிய இரு பொருளைச் சேர்த்து எழுதுவார். அதேபோல ஒரே பொருளைத் தருகின்ற இரு சொற்களைச் சேர்த்து வழங்குவார். பல சமயங்களை நன்கு அறிந்தவர். 15 சமயங்களைத் தன் உரையில் கூறுகின்றார்.

புறப்பொருள் வெண்பா மாலையுரை

புறப்பொருள் வெண்பா மாலை, தொல்காப்பியத்துக்குப் பின் வந்து, இன்று வரை கிடைக்கின்ற ஒரே புறப்பொருள் இலக்கண நூலாகும். இந்நூலுக்கு சாமுண்டிதேவ நாயகர் உரை எழுதினார். இவ்வுரை பதவுரையாக மட்டுமே உள்ளது. மூலநூலைப் போலவே இதுவும் 12 பகுதிகளாக, படலம் என்றே உள்ளது. இலக்கணக் குறிப்பு முதலியன மிகுதியாகக் காணப்படவில்லை. நூலாசிரியரும் உரையாசிரியரும் சைவ சமயத்தினர் என்று கருதுவதற்கான சான்றுகள் நூல் முழுவதும் காணப்பெறுகின்றன.

தேவார உரை

தேவார உரை, கண்ணுடைய வள்ளலால் இக்காலத்தில் எழுதப்பட்டது. இவர் சம்பந்தர் தேவாரத்துள் சித்திரக் கவிகளாக உள்ளவற்றிற்கு உரை எழுதியுள்ளார். தாம் வழிபடும் கடவுளாகக் கொண்ட ஞானசம்பந்தருடைய பாடல்களுக்கு இவர் உரை எழுதியதில் வியப்பில்லை. பொருள் விளங்காத சித்திரக் கவிகளுக்கு இவர் உரைஎழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். திருக்களிற்றுப்படியாருக்கும் இவர் உரை எழுதியதாகக் கூறுவர்.

இருபா இருபஃது மற்றும் சிவப்பிரகாசம் உரை

இந்த உரை நூல் மதுரை சிவப்பிரகாசரால் எழுதப்பட்டது. சிவப்பிரகாசர் என்ற பெயரில் பலர் இருந்ததால் இவரை வேறுபடுத்திக்காட்ட மதுரை சிவப்பிரகாசர் என்பர். இவர் முன்னோர் நூல்களையும், உரைகளையும் நன்கு ஆராய்ந்து, இருபா இருபஃது, சிவப்பிரகாசம் ஆகிய இரு சித்தாந்த சாத்திரங்களுக்கும் உரை எழுதியுள்ளார். முதலில் இவர் எழுதியது இருபா இருபஃது உரையாகும். சாத்திர மேற்கோள்கள் இதில் அதிகமாகக் காணப்பெறவில்லை. சிவப்பிரகாச உரையைப் பொறுத்தவரை அவர் ஆராய்ச்சித்துறையில் தாம் கூறும் ஒவ்வொரு விளக்கக் கருத்துக்கும் உரிய ஆதாரத்தைப் பண்டைய நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகிறார். எந்தப் பாடலையும் நூலின் பெயரைக் குறிப்பிட்டு எழுதுகிறார். தாம் கூறும் சமயக் கருத்துகளுக்குத் திருமுறையையே மேற்கோளாகக் காட்டுகிறார். இவர் வடமொழியிலும் பயிற்சியுள்ளவர்

6.6 தொகுப்புரை

புதிய நூல் முயற்சி குறைந்து பண்டை நூல்களுக்கு விளக்கம் விரிவாக ஏற்படக் காரணம் அரசியல் சூழலே எனலாம். இக்காலப் பகுதியில் உரைகள் அதிகம் தோன்றின. பெரும்பாலான ஆசிரியர்களும், உரையாசிரியர்களும் வடமொழியறிவைக் கொண்டிருந்தனர். முகமதியர் ஆதிக்கம் காரணமாக அவர்களது சொற்கள் தமிழ் இலக்கியத்தில் புகுந்தன.

தமக்கெனத் தனிச் சொல்லாட்சி கொண்ட பரிதியார் உரை; பிற நூலில் காணாத அளவு பாடலமைதி கொண்டது. பெருந்திரட்டு, குறுந்திரட்டு முதலிய பல திரட்டுகளும் தோன்றின. மணிப்பிரவாள நடையில் அமைந்த முதல் உரைநடை நூலாக ஸ்ரீபுராணம் அமைகிறது. இக்காலக் கட்டத்திலுள்ள இலக்கிய வளர்ச்சியில் சித்தர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது.