16

இலக்கிய வரலாறு -4

பாடம் - 1

பதினாறாம் நூற்றாண்டு

1.0 பாட முன்னுரை

பதினான்காம் நூற்றாண்டின் முன்பகுதியில் வடநாட்டை ஆண்டு வந்த அலாவுதீன் கில்ஜி அனுப்பிய படைத்தலைவனான மாலிக்காபூர், தெற்கே நிலவிய பாண்டியர் ஆட்சியை வென்று அமைதியைக் கெடுத்தான். மதுரையில் அவன் படைகள் நுழைந்து குழப்பம் உண்டாக்கின. ஐம்பதாண்டுக் காலம் பாண்டிய நாடு முகமதியர் ஆட்சியில் இருந்தது. ஆந்திராவில் விஜயநகர ஆட்சி ஏற்படும் வரையில் தமிழ்நாட்டில் அமைதி இல்லை. அப்போது மதுரையில் விஜயநகரத்தாரின் செல்வாக்குப் பெற்ற நாயக்கர்கள் ஆட்சியை எற்படுத்தினர். நானூறு ஆண்டுகள் அந்தப் பேரரசு மதுரையில் நிலவியது. முகமதியர், ஐரோப்பியர் பிடியிலிருந்து தென்னாட்டை ஓரளவு விடுவித்தவர்கள் நாயக்க மன்னர்களே!

நாயக்க மன்னர்கள் வைணவர்கள் ஆனாலும் பிற மதங்களையும் ஆதரித்தனர். கம்பர், சேக்கிழார் போன்ற பெரும்புலவர்கள் இந்நூற்றாண்டில் தோன்றவில்லை. புராண காலம் என்று கூறுமளவுக்குத் தலபுராணங்களும், மொழியாக்கப் புராணங்களும் தோன்றின. சைவ சமய நூல்கள், உரைகள் தோன்றச் சைவ மடங்கள் காரணமாயின. இலக்கண நூல்கள், சிற்றிலக்கியங்கள் சில, நீதி நூல்கள் என்பன இக்காலத்தில் தோன்றுகின்றன.

திருவிளையாடற் புராணம், நைடதம் என இரண்டு காப்பியங்கள் தோன்றிய நூற்றாண்டு இது. வரதுங்கராம பாண்டியர், அதிவீரராம பாண்டியர் என்ற இரு அரசர்களும், குருஞான சம்பந்தர், ஞானப் பிரகாசர், மறைஞான சம்பந்தர் போன்றோர் சைவத்திலும் செவ்வைச் சூடுவார், திருக்குருகைப் பெருமாள் கவிராயர், பிள்ளைலோகம் ஜீயர் போன்றோர் வைணவத்திலும் மண்டலபுருடர் சமணத்திலும், சித்தர் மரபில் இரேவண சித்தரும் தோன்றிய காலம் இதுவே. நீதி நூல்களைப் பாடிய ஒளவையும் உலகநாதரும் இந்தக் காலத்தில் தோன்றியவர்களே! இவை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

1.1 புராணங்களும் தலபுராணங்களும்

பதினாறாம் நூற்றாண்டில் புராணங்களும், தல புராணங்களும் மிகுதியாக வெளிவந்தன.

1.1.1 புராணங்கள் புராணம் என்னும் சொல் வடமொழியில் இருந்து தமிழில் புகுந்தது. கதை, வடமொழிப் புராணம், பழமை என்று பல பொருள்களை இச்சொல் குறிக்கும். தமிழில் முதன்முதலில் சிலப்பதிகாரத்தில் இறைவன் புராணன் என்று குறிக்கப்படுகிறான். தமிழில் புராண இலக்கியம் இருநிலையில் அமைகின்றது. ஒன்று வடமொழிப் புராணங்களின் தழுவல் மற்றும் மொழி பெயர்ப்பு. மற்றது தமிழுக்கே உரியனவாகத் தோன்றியவை. பதினாறாம் நூற்றாண்டில் சைவ, வைணவ, சமணப் புராணங்களும் மொழியாக்கப் புராணங்களும் தோன்றின. பதினாறாம் நூற்றாண்டில் வடமொழியில் உள்ள புராணங்களைத் தமிழில் எழுதும் முயற்சி வளர்ந்தது. இவற்றை மொழியாக்கப் புராணங்கள் எனலாம். இவற்றுள் தலையானது பத்தாயிரம் செய்யுட்களை உடைய கந்தபுராணம்.

• கந்தபுராணம்

இந்நூல் வடமொழியிலுள்ள சிவசங்கர சங்கிதையைத் தழுவி கச்சியப்ப சிவாச்சாரியாரால் எழுதப்பட்டது. முருகனின் தோற்றம், சிறப்பு, திருவிளையாடல், சூரபதுமனுடன் நிகழ்த்திய போர், தெய்வயானையை மணந்து கொள்ளுதல், வள்ளியின் காதல் முதலியவற்றை விரிவாகச் சொல்கிறது. ஆசிரியர் பழைய இலக்கிய மரபுகளைப் போற்றியும், வருணனைகளுடன் கற்பனை கலந்தும் கவிச்சுவை நிரம்பியும் பாடியுள்ளார்.

முருகன் சூரபதுமனுடன் நிகழ்த்திய போர்

• சமணப் புராணங்கள்

சைனர்களுள் மண்டல புருடர் என்பவர் வடமொழி சமணப் புராணமாகிய ஆதிபுராணத்தைத் தமிழில் இயற்றி ஸ்ரீ புராணம் எனப் பெயரிட்டார். அது மணிப்பிரவாள நடையில் இயற்றப்பட்டது. கய சிந்தாமணி என்ற சமண நூலும் மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டதே. இயல்பான தமிழ்நடையில் வாமனமுனிவர் என்பவரால் மேருமந்தர புராணம் இயற்றப் பெற்றது.

1.1.2 தலபுராணங்கள் தலபுராணங்கள் அக்காலத்தில் மக்கள் உள்ளங்களை மிகக் கவர்ந்து இருந்தன. நாட்டுப் படலம், நகரப் படலம் என முதலில் அமையும் பகுதிகள் இலக்கியச் சுவையுடன் அமைக்கப்பட்டன. புலவர்கள் இயற்கையழகு பற்றியும், நிலவளம் பற்றியும் உழவர் தம் வாழ்க்கை பற்றியும் கண்ட கனவுகளை எல்லாம் அந்தந்தத் தல புராணங்களுள் அமைத்து நாடுகளையும், ஊர்களையும் சிறப்பித்தார்கள். அவற்றை அந்தந்த நாட்டு மக்கள் படித்துத் தம் நாடு மற்றும் ஊர் மீது பெருமையும் பற்றும் கொண்டு திகழ்ந்தார்கள். கொடியவர்களும் அதிகாரச் செருக்கு மிகுந்தவர்களும் துன்பமுற்று, மனம் திருந்திக் கோயில்களுக்கு வந்து வழிபட்டு நல்லவர்களாக மாறியதாகத் தலபுராணக் கதைகள் கூறும். கதைகேளாடு கலந்து கலை இன்பம் ஊட்டத் தலபுராணங்கள் பயன்பட்டன. பதினாறாம் நூற்றாண்டில் தருமபுர மடத்தைச் சார்ந்த புலவர்கள் திருமழபாடி, திருவொற்றியூர் போன்ற தலங்களுக்குப் புராணங்கள் பாடினர். நிரம்ப அழகிய தேசிகர் திருப்பரங்கிரிப் புராணம், சேது புராணம் என்னும் தலபுராணங்களை இயற்றினார். வடநாட்டுத் தலமாகிய காசியைப் பற்றி அதிவீரராம பாண்டியர் காசிக்கண்டம் என்ற நூலை இயற்றினார். திருமலை நாதர் சிதம்பர புராணம் பாடினார்.

1.2 திருவிளையாடற் புராணம்

மதுரையில் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்களை மையமாகக் கொண்டது திருவிளையாடற் புராணம். நடையிலும் அன்பு விளைக்கும் தன்மையிலும் இந்நூல் சுந்தர பாண்டியம், வேம்பத்தூரார் திருவிளையாடல் முதலிய நூல்களைவிட மேம்பட்டது.

மதுரை திருக்கோயில்

ஒரு திருவிளையாடல் காட்சி

சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த காட்சி

நூலாசிரியர்

இந்நூலை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர். இவர் தஞ்சை மாவட்டத்துத் திருமறைக்காட்டில் தோன்றியவர். சைவ வேளாள ஆசிரிய மரபில் பிறந்தவர்.

நூலின் அமைப்பு

68 படலங்களுடன் 3363 பாடல்கள் கொண்ட திருவிளையாடற் புராணம், மதுரை, கூடல், திருவாலவாய் என்ற 3 காண்டங்களை உடையது.

நூலின் சிறப்பு

இறைவனின் 64 திருவிளையாடல்களையும் காப்பியச் சுவையுடன் கூறுகிறது. கூடற்காண்டத்தில் விறகு விற்ற படலத்தில் இறைவனின் இசைக்கு உயிர்கள் மயங்கிய விதத்தைப் பின்வருமாறு விவரிக்கிறார் பரஞ்சோதியார்:

தருக்களும் சலியா முந்நீர்ச் சலதியுங் கலியா நீண்ட

பொருப்பிழி யருவிக் காலு நதிகளும் புரண்டு துள்ளாது

அருட்கடல் விளைத்த கீத வின்னிசை யமுத மாந்தி

மருட்கெட அறிவன் றீட்டி வைத்தசித் திரமே யொத்த

(பா, 37)

(தரு = மரம்; முந்நீர் = கடல்; பொருப்பு = மலை; மாந்தி = அருந்தி; அறிவன் = சிற்பவல்லான்)

“மரங்களும் அசையாமல், கடல்களும் ஒலிக்காமல், உயர்ந்த மலையில் இருந்து இழியும் அருவியாகிய கால்களும் ஆறுகளும் புரண்டு துள்ளாமல் மயக்கம் நீங்கக் கருணைக் கடலாகிய இறைவன் பாடி அருளிய இன்னிசைக் கீதமாகிய அமுதத்தைப் பருகிச் சிற்பநூல் வல்லான் எழுதி வைத்த சித்திரங்களை ஒத்திருந்தன” என்பது பாடலின் பொருளாகும். திருவாலவாய்க் காண்டத்தில் மண் சுமந்த படலத்தில் ஆசிரியர் இறைவன் எல்லா உயிர்களிலும் உள்ளான். என்பதை ஒரு பாடல் மூலம் காட்டுகிறார். பிட்டுக்கு மண் சுமந்து, பாண்டியனிடம் பிரம்படி படுகிறான் இறைவன். இறைவன் மீது பட்ட அந்த அடி எல்லா உயிர்களின் மேலும் விழுந்ததாம்.

பரிதியு மதியும் பாம்புமைங் கோளும் பன்னிறம் படைத்த நாண்மீனும்

இருநிலம் புனல்கால் எரிகடுங் கனல்வா னென்னும் ஐம்பூதமும் காரும்

சுருதியும் ஆறுசமய வாணவருஞ் சுரர்களும் முனிவருந் தொண்டின்

மருவிய முனிவர் கணங்களும் பட்ட மதுரைநாயகனடித் தழும்பு

(பா, 54)

(ஐங்கோள் = செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ; நாண்மீன் = நட்சத்திரம்; கால் = காற்று ; கார் = மேகம் ; சுருதி = வேதம்)

இரு சுடர்களும் ராகு, கேது என்ற இரு பாம்புகளும் ஐந்து கோள்களும் நட்சத்திரங்களும் ஐம்பூதங்களும் வேதங்களும் அறுவகைச் சமயத்திற்குரிய தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும் முனிவர் கூட்டங்களும் மதுரையின் நாயகன் மீது பட்ட அடியைப் பட்டன என வியந்து கூறுகிறார் பரஞ்சோதியார்.

1.3 சிற்றிலக்கியங்கள்

பதினாறாம் நூற்றாண்டில் புராணங்கள் மலிந்திருந்தாலும் சிற்சில சிற்றிலக்கியங்களும் தோன்றியுள்ளன. திருவண்ணாமலை குகையில் வசித்த குகை நமச்சிவாயர் அருணகிரி அந்தாதி, திருவருணைத் தனி வெண்பா, சோணகிரி வெண்பா என்ற நூல்களை இயற்றியுள்ளார். காஞ்சிபுரம் ஞானப்பிரகாசர் என்பவர் கச்சிக் கலம்பகம் பாடியுள்ளார். அதிவீரராம பாண்டியரால் ஆதரிக்கப் பெற்ற சேறைக் கவிராசர் சீட்டுக் கவிகளும், திருக்காளத்தி நாதருலா, திருவாட்போக்கி நாதர் உலா, சேயூர் முருகன் உலா என்ற நூல்களை இயற்றியுள்ளார்.

1.4 உரையாசிரியர்களும் மொழிநடையும்

தமிழ்மொழியில் உயர்ந்த இலக்கணங்களுக்கும் இலக்கியங்களுக்கும் நுட்பமான உரைகளும் நயமான விளக்கமும் எழுதி அவற்றைச் சிறப்படையச் செய்தவர்கள் உரையாசிரியர்கள். உரையாசிரியர்களில் திவ்வியப் பிரபந்த உரையாசிரியர்கள் பயன்படுத்திய நடை ‘மணிப்பிரவாள நடை’ எனப்படுகிறது. சமணர்களும் இந்நடையைப் பயன்படுத்தினாலும் வைணவர்கள் அதிகம் பயன்படுத்தினர்.

1.4.1 உரையாசிரியர்கள் இந்நூற்றாண்டில் பிள்ளைலோகம் ஜீயர், நஞ்சீயர் என்ற வைணவ உரையாசிரியர்கள் தோன்றினர்.

பிள்ளைலோகம் ஜீயர்

வரதாசாரி என்ற இயற்பெயர் கொண்ட இவர் துறவறம் ஏற்றபின் லோகம் ஜீயர் என்று பெயர் பெற்றார். பிள்ளைலோகாசாரியாரில் இருந்து இவரை வேறுபடுத்தவே, லோகம் ஜீயர் எனப்பட்டார். சைவப் பழிப்பு மிக்க இவர் மணிப்பிரவாள நடையில் பல நூல்களை எழுதியுள்ளார். இராமானுச நூற்றந்தாதி, அர்த்த பஞ்சகம், சப்த காதை முதலிய நூல்களையும், பிரபந்தத் தனியன்களும் இயற்றினார். மணவாள மாமுனிகளின் நூல்களுக்கு மணிப்பிரவாள நடையில் உரையெழுதினார். திருமந்திரார்த்த அரும்பத விளக்கம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

நஞ்சீயர்

திருநாராயணபுரத்தில் மாதவாசார்யா என்ற பெயர் கொண்டு வாழ்ந்த இவர் ‘சீரங்க நாதர்’ எனவும் அழைக்கப் பெறுகிறார். திருவாய்மொழிக்கு 9000படி உரை, திருப்பள்ளியெழுச்சி, திருவிருத்தம், பெரிய திருமொழி என்பவற்றிற்கு வியாக்யானமும் (உரை விளக்கம்) எழுதியுள்ளார்.

1.4.2 மணிப்பிரவாள நடை முத்தும் பவளமும் கலந்த கோவை போன்ற அழகுடைய நடை மணிப்பிரவாள நடையாகும். இது வடமொழிச் சொற்கள் விரவிய தமிழ் உரைநடையாகும். சமணரும் வைணவருமே இந்நடையைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த நடை ‘படி’ என்ற அளவு முறையைக் கொண்டது. திவ்வியப் பிரபந்த உரைகளை ஆறாயிரப் படி, ஈராயிரப் படி, முப்பதாயிரப் படி, இருபத்து நாலாயிரப் படி என வழங்குவர். ஆறாயிரப் படி என்றால் ஆறாயிரம் கிரந்த அளவினது என்று பொருள். அதாவது, ஒரு கிரந்தம் என்றால் ஒற்றெழுத்துக்களை விலக்கி விட்டு உயிரும் மெய்யுமாக அமைந்த 32 எழுத்துக்களை உடையதாகும்.

1.5 மடங்களும் படைப்புகளும்

பதினான்காம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் சைவ மடங்கள் கட்டப்பட்டன. நாயக்க மன்னர்களின் ஆதரவிலும் பல மடங்கள் கட்டப் பெற்றன. சமயத் துறைக்கு மடங்கள் பணியாற்றியதோடு, தமிழ் இலக்கிய இலக்கணத்தைப் போற்றுவதிலும் ஆர்வம் செலுத்தின. பழைய நூல்களைக் கற்பதற்கும் புதிய நூல்களைப் படைப்பதற்கும் மடங்கள் ஆதரவு தந்தன. அதனால் புலவர் பலர் மடங்களைச் சார்ந்து வாழ்ந்தனர். மடங்களின் தலைவர்களாக விளங்கியவர்களும் சமய நூல்களை இயற்றினர்.

1.5.1 திருவாவடுதுறை மடம் குரு நமச்சிவாயர் என்பவரால் கி.பி.16ஆம் நூற்றாண்டில் இம்மடம் நிறுவப் பெற்றது. இம்மடத்தின் புலவர்களால் இயற்றப் பெற்ற 14 நூல்கள் பண்டார சாத்திரம் என்றழைக்கப்படுகின்றன. இம்மடத்தில் வாழ்ந்த ஈசான தேசிகர் இலக்கணக் கொத்து என்ற நூலை எழுதினார். சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்கு உரையெழுதினார். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த காலத்தில் இம்மடத்தினரால் ஆதரிக்கப் பெற்றார்.

1.5.2 தருமபுர மடம் சைவ சித்தாந்தக் கருத்துக்களை மிகுதியும் பரப்பி வரும் இம்மடம் குருஞான சம்பந்தர் என்பவரால் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப் பெற்றது. இம்மடத்தால் ஆதரிக்கப்பெற்ற சம்பந்த சரணாலய சுவாமிகள் கந்த புராணச் சுருக்கம் என்ற நூலினையும், வெள்ளியம்பலத் தம்பிரான் சிவஞான சித்தியாருக்கு விரிவுரையும் எழுதியுள்ளார்.

1.5.3 துழாவூர் திருமடம் குருஞான சம்பந்தரின் மாணவரான நிரம்ப அழகிய தேசிகர் குன்றக்குடியின் மேற்கே துழாவூர் திருமடம் தோற்றுவித்தார். சிவஞான சித்தியார் சுபக்கம், திருவருட்பயன் என்ற இரண்டு நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார். திருஐயாற்றுப் புராணம், திருப்பரங்கிரிப் புராணம், சேது புராணம், வேணு வன புராணம் என்பனவும் இயற்றியுள்ளார். இவருடைய மாணவர்களான (1) அளகைச் சம்பந்த முனிவர், (2) ஞானக்கூத்தர், (3) சிதம்பரநாத பூபதி என்ற மூவருமே நூல்கள் படைத்துள்ளனர்.

1.5.4 சூரியனார் கோவில் மடம் சூரியனார் கோவில் சந்தானத்தின் 2ஆம் முதல்வர் சிவாக்கிரக யோகிகள். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் வடமொழியில் நூல்கள் செய்துள்ளார். சிவநெறிப் பிரகாசம் என்ற நூலையும் சிவஞான சித்தியார் சுபக்க, பரபக்க உரைகளையும் எழுதியுள்ளார்.

1.6 மேலும் சில படைப்பாளர்கள்

மேற்குறிப்பிட்டவர்களைத் தவிரவும் மேலும் குறிப்பிடத்தக்க சில படைப்பாளர்கள், தங்கள் படைப்புகள் மூலம் பதினாறாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினர்.

1.6.1 குறுநில மன்னர்கள் விஜய நகரத்தின் செல்வாக்குப் பெற்ற நாயக்கர் ஆட்சிக் காலத்திலிருந்த குறுநில மன்னர்களாகிய வரதுங்கராம பாண்டியனும், அதிவீரராம பாண்டியனும் சில நூல்களைப் படைத்தனர்.

வரதுங்கராம பாண்டியன்

இவர் வடமொழி ஸ்கந்த புராண மூன்றாம் பிரிவினை பிரமோத்தர காண்டம் என்று தமிழில் படைத்தார். குட்டித் திருவாசகம் என்று போற்றப்படும் திருக்கருவைப் பதிற்றுப்பத்தாந்தி, கலித்துறை அந்தாதி என்ற வேறு இரு நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவரது மனைவியான சிவகாம சுந்தரியும் தமிழ்ப் புலமை படைத்தவர்.

சிந்தனை உனக்குத் தந்தேன்

திருவருள் எனக்குத் தந்தாய்.

வந்தனை உனக்குத் தந்தேன்

மலரடி எனக்குத் தந்தாய்.

பைந்துணர் உனக்குத் தந்தேன்

பரகதி எனக்குத் தந்தாய்.

கந்தனைப் பயந்த நாதா

கருவையில் இருக்கும் தேவே!

(பைந்துணர் = பசுமையான பூங்கொத்து; தேவே = இறைவனே!; பரகதி = மேலான நிலை ; கருவை = கரிவலம் வந்த நல்லூர்)

என்ற பாடல் திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதியில் இடம் பெறுவதாகும்.

அதிவீரராம பாண்டியர்

ஹர்ஷர் இயற்றிய வடமொழி நைஷதத்தைக் கற்றோர் போற்றும் நைடதம் என்ற பெயரில் தமிழில் படைத்த பெருமை உடையவர். சிறுவர்க்கான நீதி நூலான வெற்றி வேற்கையும் இவரியற்றியது. நறுந்தொகை என்றும் இந்நூல் அழைக்கப் பெறும். இவர் கூர்ம புராணம், காசிக் காண்டம், இலிங்க புராணம், மாக புராணம் என்ற நூல்களையும் இயற்றினார்.

1.6.2 மொழிபெயர்ப்பு இலக்கியப் படைப்பாளர்கள் பதினாறாம் நூற்றாண்டிலும் அதற்கும் செல்வாக்குப் பெற்றிருந்த வடமொழி இலக்கியங்கள் பல தமிழில் தழுவல்களாகவும், மொழிபெயர்ப்புகளாகவும் வெளிவந்தன. அவற்றை மறைஞான சம்மந்தர், அநதாரியப்ப புலவர், செவ்வை சூடுவார் போன்றோர் வெளியிட்டனர்.

மறைஞான சம்பந்தர்

சிதம்பரத்தில் இருந்த கண்கட்டி மடத்தில் வாழ்ந்தவர். வடமொழியில் இருந்து சிவதருமோத்திரம் என்ற நூலை மொழிபெயர்த்து உள்ளார். அகத்தியர் சிவதருமங்கள் குறித்து கேட்க, முருகன் கூறிய உத்தரங்களை (பதில்களை) உரைப்பதால் இப்பெயர் பெற்றது. ஆகமம் எல்லாம் வரம்பு கண்டு தமிழ் செய்தவர் இவர் ஒருவரே. கமலாலய புராணம் என்ற இணையற்ற தலபுராணத்தைப் பாடிய இவர், அருணகிரி புராணம், சைவ சமய நெறி, பதிபசுபாசப் பனுவல், முதலிய சைவ சாத்திர நூல்களையும் எழுதியுள்ளார்.

திருவண்ணாமலைக் கோயில்

அநதாரியப்ப புலவர்

மதுரையை ஆண்ட முத்து வீரப்ப நாயக்கரின் அமைச்சர் திருவித்தனால் ஆதரிக்கப் பெற்ற இப்புலவர் வடமொழி சுந்தர பாண்டியத்தை அடியொற்றித் தமிழில் சுந்தர பாண்டியம் என்ற நூலைச் செய்தார். தடாதகைப் பிராட்டியின் (மதுரை மீனாட்சியம்மை) தோற்றம், திக்குவிசயம், திருமணம் என்பவற்றை மூவாயிரம் விருத்தப் பாக்களில் இந்நூலில் கூறுகிறார்.

செவ்வைச் சூடுவார்

வேம்பத்தூர் அந்தணப் புலவரான இவர் வடமொழி வியாசர் செய்த பாகவதத்தைத் தமிழில் தந்துள்ளார். இதிகாச பாகவதம் என்றும் விண்டு பாகவதம் என்றும் இந்நூல் வழங்கப் பெறும். தமிழில் தோன்றிய முதல் பாகவத நூல் இதுவே. (விண்டு – விஷ்ணு)

1.6.3 இலக்கண நூற் படைப்பாளர் இந்நூற்றாண்டில் சில இலக்கண நூல்களும் படைக்கப்பட்டன. திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் படைப்புகள் குறிப்பிடத்தக்கன.

திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

ஆழ்வார் திருநகரியில் பிறந்த இவர், திருக்குருகை மான்மியம் பாடியதால் இப்பெயர் பெற்றார். நம்மாழ்வார் மீது அளவற்ற பற்றுக் கொண்டவர். மாறன் அகப்பொருள், மாறன் பாப்பாவினம், மாறன் அலங்காரம் எனத் தான் இயற்றிய 3 இலக்கண நூல்களுக்குமே ‘மாறன்’ என்ற நம்மாழ்வார் பெயரையே வைத்துள்ளார். 3030 பாக்களில் இவரியற்றிய திருக்குருகை மான்மியம் சித்திரக் கவிகள், நிரோட்டகம், யமகம் போன்ற பா வகைகள் நிரம்பியது.

1.6.4 சாத்திர நூற் படைப்பாளர்கள் இக்காலக்கட்டத்தில் பல சாத்திர நூல்களையும் தத்துவ நூல்களையும் படைத்தனர்.

கமலை ஞானப்பிரகாசர்

சிதம்பர நாதன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் தம் 30வது வயதில் மெய்ஞ்ஞானம் பெற்று ஞானப்பிரகாசர் ஆனார். அற்புதம் பல நிகழ்த்தியவர். திருஆனைக்கா புராணம், திருமடிப் புராணம் இயற்றியுள்ளார். இவர் அனுட்டான அகவல், புட்பவிதி, சிவபூசை அகவல், சிவானந்த போகம் முதலிய சைவ சமயச் சாத்திர நூல்களும் படைத்தார். தருமையாதீனம் எனப்படும் தருமபுர ஆதினத்தைத் தோற்றுவித்த குருஞான சம்பந்தர், நிரம்ப அழகிய தேசிகர் என்பவர்கள் இவரது மாணவர்கள்.

திருஆனைக்கா

இரேவண சித்தர்

தொண்டை நாட்டுப் புலியூரில் பிறந்தவர். இவர் திருப்பட்டீச்சுரம், திருவலஞ்சுழி, திருமேற்றளி என்ற இடங்கட்குத் தலபுராணமும் சிவஞான தீபம் என்ற சைவ சாத்திர நூலும் அகராதி நிகண்டும் படைத்துள்ளார்.

1.6.5 பல்துறை நூல்கள் பதினாறாம் நூற்றாண்டில் இலக்கண நூல்கள், தத்துவ நூல்கள், நீதி நூல்கள் என்பனவும் சிறுபான்மை தோன்றியுள்ளன. புராணத் திருமலை நாதரின் மகனான பரஞ்சோதியார் சிதம்பரப் பாட்டியல் என்ற நூலை எழுதி உள்ளார். மண்டல புருடர் சூடாமணி நிகண்டு இயற்றினார். திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 3 இலக்கண நூல்கள் இயற்றினார். இரேவண சித்தர் அகராதி நிகண்டு இயற்றினார்.

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை முதலிய நீதி நூற்களை இயற்றினார். உலகநாத பண்டிதர் உலக நீதி என்ற நூலை இயற்றினார். வேண்டாம், வேண்டாம் என்று எதிர்மறை நல்வினைகளான உலகப் பொது நீதிகளைக் கைக்கொள்ள ஏவுகிறது உலக நீதி.

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

சேராத இடந்தனிலே சேர வேண்டாம்.

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்.

என்பன உலக நாதர் கூறும் நீதிகளில் சில.

1.7 தொகுப்புரை

நிலைத்த பேரரசு ஏதுமில்லாத காலமாகப் பதினாறாம் நூற்றாண்டு அமைகிறது. பெரும்பாலும் புராணங்கள் இயற்றப்பட, சிற்சில நீதி நூல்களும், இலக்கண நூல்களும் தோன்றின. மடத்தின் ஆதரவில் வாழ்ந்த புலவர்களும் மடத்து தலைவர்களும் நூல்களை இயற்றியும் உரைகளை இயற்றியும் உள்ளனர். அகராதி நிகண்டு, சூளாமணி நிகண்டு என்ற இரு நிகண்டுகள் தோன்றியுள்ளன. பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம், செவ்வைச் சூடுவார் பாகவதம் என்பன குறிப்பிடத்தக்க நூல்கள். மணிப்பிரவாள நடையால் புகழ்பெற்ற பிள்ளை லோகாச்சாரி ஜீயர் இக்காலத்தவரே. மொத்தத்தில் வடமொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப் பெற்ற புராணங்களின் செல்வாக்கு இந்நூற்றாண்டில் மிகுந்து காணப்படுகிறது.

பாடம் 2

பதினேழாம் நூற்றாண்டு

2.0 பாட முன்னுரை

இந்த நூற்றாண்டில் மடங்களின் ஆதரவில் தோன்றிய புலவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் சிவப்பிரகாசரும் குமரகுருபரரும் ஆவர். இக்காலப் புலவர்கள் எத்தனைப் புதிய படைப்புகளைப் படைத்தாலும் நீதிநூல் ஒன்றை இயற்றுவதைப் பெரிதும் விரும்பினர். எனவே நீதி இலக்கியமும் செழித்து வளர்ந்தது. சிற்றிலக்கியங்கள், மொழியாக்கப் புராணங்கள், இலக்கண நூல்கள், உரைகளும் தோன்றின. நாயக்க மன்னர்களின் ஆதரவு பெற்ற கிறித்தவர்கள் மிஷினரிகளை நடத்தினர்; தமிழில் நூல்களைப் படைத்தனர். பிற துறைகளில் எழுந்த நூல்களுள் இந்துக்களின் பழக்க வழக்கங்களும் சடங்குகளும் என்ற நூல் முக்கியமானது. ஆனந்தரங்கம் பிள்ளை எழுதிய நாட்குறிப்பு புதிய உரைநடை வடிவைத் துவக்குகின்றது. இவற்றை இனி விரிவாகக் காண்போம்.

2.1 சைவ இலக்கியம்

நாட்டை ஆண்ட நாயக்க மன்னர்களின் ஆதரவைப் பெற்ற கிறித்தவர்கள் மிஷனரிகளை ஏற்படுத்தித் தம் சமயத்தைப் பரப்பினர். ஆனால் சைவர்கேளா மடங்களைப் போற்றிச் சைவத்தை வளர்த்தனர். தருமபுர ஆதீனத்தில் கல்வி கற்ற சைவ எல்லப்ப நாவலர், குமரகுருபர் என்ற இருவரும் சைவ சமயத்தை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினர். வீர சைவ மடத்தைச் சேர்ந்தவர் ஆகிய சிவப்பிரகாசரும் தருமபுர மடத்தின் வெள்ளியம்பலவாணத் தம்பிரானிடம் கல்வி பயின்றார். சிற்றரசர்களும் வள்ளல்களும் கூடப் புலவர்களை ஆதரித்ததால் சிற்றிலக்கிய வகை வளர்ந்தது.

2.1.1 சைவ எல்லப்ப நாவலர் தொண்டை நாட்டிலே தாழை நகரில் பிறந்து வாழ்ந்தவர். இவர் பெருமை அருணாசலப் புராணம், அருணைக் கலம்பகம் என்பவற்றால் விளங்கும். செவ்வந்திப் புராணம், செங்காட்டங்குடி புராணம், திருவிரிஞ்சைப் புராணம், தீர்த்தகிரிப் புராணம், திருவெண்காட்டுப் புராணமும் பாடியுள்ளார். வட மொழியில் உள்ள சவுந்தர்ய லகரிக்கு உரை எழுதியுள்ளார். சைவத்தை நிலை நாட்டியதால், சைவ என்று அடைமொழி கொடுக்கப்பட்டார். தமது திருவருணைக் கலம்பகத்தில்,

சைவத்தின் மேற்சமயம் வேறில்லைஅதிற் சார்சிவமாம்

தெய்வத்தின் மேற்றெய்வம் இல்லெனும் நான்மறைச்

செம்பொருள்வாய்

மைவைத்த சீர்திருத் தேவார மும்திரு வாசகமும்

உய்வைத் தரச்செய்த நால்வர்பொற் றாள்எம்

உயிர்த்துணையே

என்று பாடியுள்ளார். தேவார, திருவாசகம் என்பவற்றை இயற்றிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற நால்வரின் நூல்களும் சைவத்தைவிட மேலான சமயம் வேறு இல்லை என்பதையும் சிவத்தை விட மேலான தெய்வம் வேறு இல்லை என்பதையும் கூறுகின்றன; அந்நால்வர் திருவடிகள் எனது உயிர்க்குத் துணையானவை என்பது பாடலின் பொருள்.

அக்காலப் புலவர்களைப் போன்று சிலேடை, மடக்கு, அணி என்பவற்றில் வல்ல இவர்,

ஆராயுங் காலெடுப்ப தையமன்றோ அம்மானை

அன்னமறி யாரெடுப்ப தையமோ அம்மானை

(ஐயம் = பிச்சை, சந்தேகம் ; அன்னம் = உணவு (அன்னத்தின் வடிவத்தில் சிவபெருமானின் திருமுடியைத் தேடிச் சென்ற, பிரமன்)

என்று பாடுகிறார்.

ஒன்றை ஆராயும்போது ஐயம் ஏற்படும். அதாவது சந்தேகம் தோன்றும்; உணவாகிய அன்னத்தை அறியாத போது, அதைப் பெறப் பிச்சை எடுப்பர் என்று சிலேடை நயந்தோன்றக் கூறுகிறார்.

2.1.2 குமரகுருபரர் தமிழ்மொழியையும் வடமொழியையும் கசடறக் கற்றுணர்ந்த குமரகுருபரர் நெல்லை மாவட்ட வைகுண்டத்தில் பிறந்தவர் ஐந்தாண்டு வரை ஊமையாக இருந்து, திருச்செந்தூர் முருகனருளால் பேசும் திறன் பெற்றார். திருமலை நாயக்கர் காலத்தில் குமரி முதல் காஷ்மீர் வரை சென்று சைவ நெறியைப் பரப்பிய துறவி இவர். திருமலை நாயக்கர் சபையில் ‘மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழை’ அரங்கேற்றம் செய்தார். அந்நூலின் வருகைப் பருவத்தில், தொடுக்கும் கடவுட் பழம்பாடல்…’ எனத் தொடங்கும் பாடல் பாடிய போது மீனாட்சி அம்மையே ஒரு சிறு பெண்ணாக வந்து, அரசன் கழுத்திலிருந்த முத்துமாலையை எடுத்துப் புலவரின் கழுத்தில் அணிவித்து மறைந்தாள். அரசனும் இவரது பெருமையுணர்ந்தார்.

குமரகுருபரர்

மதுரை மீனாட்சி அம்மன்

தம் காலப் புலவர்களைப் போன்றே சிலேடை, மடக்கு, யமகம், திரிபு என்பவற்றைப் பாடல்களில் அமைத்துப் பாடிய இவர் விண்ணைத் தொடும் கற்பனையை அதிகம் கையாள்கிறார் என்கிறார் மு.வ. தன் பண்டார மும்மணிக் கோவையில் ‘திரிகரணம்’ என்ற சொல்லைக் கொண்டு சிலேடையாகப் பாடல் இயற்றியுள்ளார்.

நின்புகழ் நவிற்றியு நினைத்து நின்றுணைத்தாள்

அன்புட னிறைஞ்சியு மின்பமுற் றனவால்

அவகர ணங்களே யல்லமற் றம்ம

சிவ கரணங்களாய்த் திரிந்தன வன்றே (11)

என்று கூறுவதன் மூலம் தன் மனம், வாக்கு, செயல் மூன்றும் குருவை நினைத்தும் அவர் புகழ் கூறியும் அவர்தாள் வணங்கியும் இன்பமுற்றுத் திரிகரணங்கள் சிவகரணங்களாக மாறின என்கிறார். நிலையாமையை மக்கட்கு உணர்த்தி இறைவன்தாள் வணங்க வேண்டியதை,

நீரில் குமிழி யிளமை நிறைசெல்வம்

நீரில் சுருட்டு நெடுந்திரைகள் – நீரில்

எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே

வழுத்தாத தெம்பிரான் மன்று

(நீதிநெறிவிளக்கம்-34)

நமரங்காள் = (நம்மவர்களே)

என்கிறார்.

ஞானாசிரியர் ஒருவரை அண்டிக் கல்வி கற்க விரும்பிய போது தருமபுர மடத்தின் மாசிலாமணி தேசிகரால் சோதிக்கப்பட்டு அவரது மாணவரானார் குமரகுருபரர். ஆசிரியர் கட்டளைப்படி தில்லை சென்று வந்தார்; நூல்கள் இயற்றினார்; நாயக்க மன்னர் தந்த பொருள் கொண்டு காசிக்குச் சென்று பாதுஷாவைச் சந்தித்தார். அற்புதங்களை நிகழ்த்தினார். அதனால் மன்னன் இவர் மீது மதிப்பு கொண்டான். இவருடைய பெருமையுணர்ந்து கொண்டான். காசியிலும் தம் பணியைத் தொடர்ந்த அடிகள் இந்தியிலும் தமிழிலும் கம்பராமாணயச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இவருடைய சொற்பொழிவுகளைத் துளசிதாசர் கேட்டு மகிழ்ந்தார். இதற்கு அடிப்படையாக, அவர் தமது இராமாயணத்தில், கம்பன் வகுத்த அமைப்பில் சில காட்சிகள் உருவாக்கியிருப்பதைக் காட்டுவதுண்டு காசியில் ‘கேதாரநாத்’ கோயிலும் ‘குமாரசாமி மடமும்’ கட்டுவித்தார். ‘பிரபந்த வேந்தர்’ என்று பாராட்டப் பெறும் இவர் 15 நூல்களை இயற்றியுள்ளார். குறம், மாலை, கோவை என்ற சிற்றிலக்கியங்களை அறிமுகப்படுத்தினார். நீதிநெறி விளக்கம் என்ற நீதிநூலை எழுதினார். தமிழ் மீது இவர் கொண்ட பற்று இவர் தமிழுக்குத் தரும் அடைமொழிகளால் புலனாகும். சிற்சில வடசொற்களையும் தம் படைப்பில் கலந்து வழங்கிய குமரகுருபரர் இயற்றிய நூல்கள்:

(1)கந்தர் கலிவெண்பா

(2)மீனாட்சியம்மை குறம்

(3)மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

(4)முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

(5)பண்டார மும்மணிக் கோவை

(6)சிதம்பரச் செய்யுட் கோவை

(7)சிதம்பர மும்மணிக் கோவை

(8)கயிலைக் கலம்பகம்

(9)மதுரைக் கலம்பகம்

10)காசிக் கலம்பகம்

(11)சகலகலாவல்லி மாலை

(12)திருவாரூர் நான்மணிமாலை

(13)மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை

(14)சிவகாமியம்மை இரட்டை மணிமாலை

(15)நீதிநெறி விளக்கம்

2.1.3 சிவப்பிரகாசர் இளவயதிலேயே தந்தையை இழந்தவர் சிவப்பிரகாசர்; வீரசைவர். துறைமங்கலத்தில் அண்ணாமலை ரெட்டியார் கட்டித் தந்த மடத்தில் வாழ்ந்து வந்தார். ரெட்டியார் தந்த பொற்காசு கொண்டு தருமையாதீன வெள்ளியம்பலத் தம்பிரானிடம் பாடங்கேட்க வந்தார். இவரது தகுதியறிந்து கொண்ட தம்பிரான், தமக்குக் காணிக்கையாகப் புலவர் ஒருவரை வாதில் அடக்குமாறு பணித்தார். இரு உதடுகளும் இணையாதபடி, ப, ம, வ என்ற எழுத்துகளைத் தவிர்த்து நிரோட்டக யமக அந்தாதியைப் பாடி வெற்றியுடன் திரும்பினார். தோற்ற புலவரைக் குருவின் மாணவராக்கினார். கிறித்தவத்தின் பெருமை கூறி, மக்களை மதமாற்றிய வீரமாமுனிவரைக் கண்டித்து ஏசுமத நிராகரணம் என்ற கண்டன நூலை இயற்றினார். ‘கற்பனைக் களஞ்சியம்’ என்றும், ‘கவிதா சார்வ பௌமர்’ என்றும் போற்றப் பெறும் இவர் 31 நூல்களை இயற்றியுள்ளார். அவை பின்வருமாறு:

(1)சோண சைல மாலை

(2)சிவப்பிரகாச விகாசம்

(3)சதமணி மாலை

(4)நால்வர் நான்மணி மாலை

(5)நிரோட்டக யமக அந்தாதி

(6)பழமலை அந்தாதி

(7)பிச்சாடன நவமணி மாலை

(8)கொச்சகக் கலிப்பா

(9)பெரிய நாயகியம்மை நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தம்

(10)பெரிய நாயகியம்மை கட்டளைக் கலித்துறை

(11)திருவெங்கைக் கோவை

(12)திருவெங்கைக் கலம்பகம்

(13)திருவெங்கை உலா

(14)திருவெங்கை அலங்காரம்

(15)சிவநாம மகிமை

(16)இட்டலிங்க அபிடேக மாலை

(17)இட்டலிங்க நெடுங்கழி நெடில்

(18)இட்டலிங்க குறுங்கழி நெடில்

(19)இட்டலிங்க நிரஞ்சன மாலை

(20)கைத்தல மாலை

(21)சிவஞான பாலைய சுவாமிகள் நெஞ்சுவிடு தூது

(22)சிவஞான பாலைய சுவாமிகள் தாலாட்டு

(23)சிவஞான பாலைய சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி

(24)சிவஞான பாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ்

(25)சிவஞான பாலைய சுவாமிகள் கலம்பகம்

(26)திருக்கூவப் புராணம்

(27)கண்ணப்பச் சருக்கமும் நக்கீரச் சருக்கமும்

(காளத்தி புராணம்)

(28)வேதாந்த சூடாமணி

(29)சித்தாந்த சிகாமணி

(30)பிரபுலிங்க லீலை

(31)தர்க்க பரிபாஷை (மொழிபெயர்ப்பு)

சிவப்பிரகாசரின் உடன்பிறந்தார் இருவரும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளனர். ‘நன்னெறி’ என்ற நீதிநூலையும் இயற்றினார்.

சிவப்பிரகாசர் இயற்றிய நூல்களுள் புகழ் பெற்று விளங்குபவை நால்வர் நான்மணிமாலை, பிரபுலிங்க லீலை, நன்னெறி என்பவையாகும். சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரைப் பற்றியும் பத்துப் பத்துப் பாடல்களாக 40 பாடல்கள் கொண்டு விளங்குவது நால்வர் நான்மணிமாலை. பிரபுலிங்கலீலை என்பது சிவபெருமானின் அவதாரமாகிய அல்லம பிரபு என்பவரைத் தலைவராகக் கொண்ட காப்பியம். இது, கன்னட மொழியில் அதே பெயரில் உள்ள நூலின் மொழிபெயர்ப்பு. நன்னெறி என்பது இவரியற்றிய நீதி நூல்.

வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி

நெஞ்சம்நெக்கு உருகி நிற்பவர்க் காண்கிலேம்

திருவா சகமிங்கு ஒருகால் ஓதின்

கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்

தொடுமணற் கேணியின் சுரந்துநீர் பாய

மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப்பு எய்தி

அன்பர் ஆகுநர் அன்றி

மன்பதை உலகில் மற்றையர் இலரே

(நால்வர் நான்மணிமாலை-4)

என்ற பாடலின் மூலம் வேதத்தை விடத் திருவாசகம் உயர்ந்தது என்கிறார். பிரபுலிங்க லீலையில் பிறவியெடுத்தவன் அறம் செய்து உய்ய வேண்டும். அதாவது செய்யாதவன் உடம்பு பொற்கலத்தில் ஊற்றவேண்டிய பாலை, நில வெடிப்பினிடையே ஊற்றுதல் போல் வீண் என்று கூறுகிறார்.

எய்தற்கரிய யாக்கைதனக் கெய்திற் றென்றா லதுகொண்டு

செய்தற்கரிய வறங்கள்பல செய்து துயர்கூர்

பிறவியினின்

றுய்தற் கொருமை பெறவொண்ணா துழல்வோ னுடம்பு

பொற்கலத்திற்

பெய்தற் குரியபால் கமரிற் பெய்த தொக்கு மென்பரால் (21)

யாக்கை = உடம்பு ; கமர் = நிலவெடிப்பு)

உடலுறுப்புகளைக் கொண்டு உயர்ந்த நீதிகளைத் தன் நன்னெறியில் கூறி மனம் கவர்கிறார் சிவப்பிரகாசர்.

பெரியவர் தந்நோய்போற் பிறர்நோய்கண் டுள்ளம் எரியி னிழுதாவ ரென்க – தெரியிழாய் மண்டு பிணியால் வருந்தும் பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண் (பா. 20)

என்ற பாடல் மூலம் பிறவுறுப்புகளின் துன்பம் கண்டு கண் அழுதல் போலப் பெரியவர்கள் பிறர் துன்பத்தைத் தம்துன்பம் போல் கொண்டு வருந்துவர் என்கிறார்.

2.2 வைணவ இலக்கியம்

இப்பதினேழாம் நூற்றாண்டில் சைவர்களைப் போன்றே வைணவர்களும் மத இலக்கியங்களையும் சிற்றிலக்கியங்களையும் வளர்ப்பதில் ஆர்வம் காட்டினர். அவ்வகையில் ’திவ்யகவி’ என்று அழைக்கப்படும் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் குறிப்பிடத்தக்கவர்.

2.2.1 பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இவர் அழகிய மணவாள தாசர் எனவும் அழைக்கப்பட்டார். சோழநாட்டு வைணவர்; அந்தணர்; திருவரங்கத்தில் வாழ்ந்தவர். சிலேடை, யமகம், திரிபு அமைத்துப் பாடுவதில் வல்லவர். அஷ்டப் பிரபந்தம் என்றழைக்கப்படும் அழகர் அந்தாதி, திருவரங்கக் கலம்பகம், திருவரங்க அந்தாதி, திருவரங்க மாலை, திருவரங்க ஊசல், திருவேங்கடத் தந்தாதி, திருவேங்கட மாலை, நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி என்ற எட்டு நூல்களை இயற்றி வைணவ இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்.

2.3 சிற்றிலக்கியப் புலவர்கள்

பெரும்புலவர்கள் இயற்றிப் புகழ்பெற்ற சிற்றிலக்கிய வகைகளையே தாமும் பாடிப் படைப்பதைச் சில புலவர்கள் இந்தக் காலகட்டத்தில் பெருமையாகக் கருதினார்; சில புதுவகைச் சிற்றிலக்கியங்களையும் படைக்கத் தவறவில்லை; அவர்களுள் முக்கியமானவர்கள் படிக்காசுப் புலவர், அந்தகக் கவி வீரராகவ முதலியார் முதலியோர் ஆவர்.

2.3.1 படிக்காசுப் புலவர் சந்தப் பாடல்கள், வசைப் பாடல்கள் பாடுவதில் வல்ல இவர் தருமையாதீனக் குரு முதல்வருக்கு அணுக்கமானார். புள்ளிருக்கு வேளுர் கட்டளைத் தம்பிரானாக உயர்ந்தார். வள்ளல் சீதக்காதியால் பாராட்டப் பெற்றவர். இவரைப் பற்றிப் பல பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. மாவண்டூர் கறுப்ப முதலியார் வேண்டுகோளை நிறைவேற்றத் தொண்டை மண்டல சதகம் பாடினார். இந்நூல் உவமை, உருவகம், பழமொழி என்பன நிறைந்த பெட்டகம். நாட்டு வரலாற்றை மட்டும் விரித்துக் கூறுவது அல்ல சதக இலக்கியம். வேறெந்தப் பொருளையும் கொண்டு இயற்றப்படலாம் என்ற மாற்றத்தை முதன்முதலில் கொண்டு வந்தவர் இவரே! வேலூர்க் கலம்பகம் இவர் இயற்றிய மற்றொரு நூல். இவரது பெருமையைச் சொக்கநாதர் எனும் புலவர் பாடியுள்ள முறையைப் பாருங்கள்:

மட்டாருந் தென்களந்தைப் படிக்காசான்

உரைத்ததமிழ் வரைந்த ஏட்டைப்

பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும்

பரிமளிக்கும் பரிந்துஅவ் ஏட்டைத்

தொட்டாலும் கைமணக்கும் சொன்னாலும்

வாய்மணக்கும் துய்ய சேற்றில்

நட்டாலும் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே

பாட்டில் உறு நளினம் தானே.

2.3.2 அந்தகக் கவி வீரராகவ முதலியார் திருக்கழுக்குன்றம் கோயில்

சைவ வேளாளரான இவர் பிறவிக் குருடர்; யாழ்ப்பயிற்சி உடையவர். விரைந்து பாடவும் வியக்குமாறு பாடவும் வல்லவர் என மது. ச. விமலானந்தம் குறிப்பிடுகின்றார். காஞ்சியை அடுத்த பூதூரில் பிறந்தாலும் சோழநாடு முழுவதும் சுற்றித் திரிந்தவர். ஈழநாட்டுக்குச் சென்று மன்னனிடம் யானையும் நாடும் பெற்றுத் திரும்பினார். திருக்கழுக்குன்ற புராணம், திருக்கழுக்குன்றத்து உலா, திருக்கழுக்குன்றத்து மாலை, திருவாரூர் உலா, சேயூர்க் கலம்பகம், சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், பரராச சிங்க வண்ணம், கீழ்வேளுர் உலா, கயத்தாற்று அரசன் உலா, சந்திரவாணன் கோவை, பஞ்சரத்தினம் எனப் பதினோரு நூல்களை இயற்றியுள்ளார்.

2.3.3 சுப்பிரதீபக் கவிராயரும் இரத்தின கவிராயரும் மேலும், சிற்றிலக்கியம் படைத்தவர்களுள் சிறப்புடையவர்களாகச் சுப்பிரதீபக் கவிராயரும் திருமேனி இரத்தின கவிராயரும் கருதப்படுகின்றனர்.

சுப்பிரதீபக் கவிராயர்

வீரமாமுனிவர்க்குத் தமிழ் கற்பித்தவர். அவர் காரணமாகக் கிறித்தவரானார். சொக்கநாத நாயக்க மன்னரின் அரண்மனை அதிகாரியாக இருந்த கூளப்ப நாயக்கனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட கூளப்ப நாயக்கன் காதல், கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது என்ற இரண்டு நூல்கள் பாடி உள்ளார். இரண்டுமே பொருட்சுவையும் வளமான நடையும் உள்ளவை.

திருமேனி இரத்தின கவிராயர்

இவர் இயற்றிய புலவராற்றுப்படை 17ஆம் நூற்றாண்டில் பிறந்த ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

2.4 நாட்குறிப்பு

புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர் ஆண்ட காலத்தில் பிரெஞ்சுக் கவர்னர் டூப்ளே என்பவருக்கு உறுதுணையாகத் திகழ்ந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை. இவருடைய நுண்ணறிவைக் கண்டு பிரெஞ்சுக்காரர்கள் இவரைத் தம் திவானாக அமர்த்திக் கொண்டனர். தமிழ்மொழி தவிர தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, போர்ச்சுகீசிய மொழி அறிந்தவர். சோதிடவியலும் வான இயலிலும் வல்லவரான இவர், சிறந்த தமிழ்ப் புரவலரும் ஆவார். இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு எனில் அது அவர் தம் கைப்படத் தமிழில் நாள்தோறும் எழுதிவைத்த நாட்குறிப்பே. அவருடைய காலத்தில் யாருமே புரிந்திராத அரியதோர் இலக்கியப் பணியை இதன்மூலம் பிள்ளை செய்துள்ளார். இந்நாட்குறிப்பு பெரும் வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது என வியக்கின்றார் கே.கே. பிள்ளை. பிரெஞ்சுக்காரர்களைப் பற்றிய அரிய செய்திகளைத் தருவதோடு அவர் கையாண்ட எழுத்து நடையே தமிழுலகிற்குப் புதுமையானதாகத் திகழ்கிறது.

2.5 இலக்கண நூல்கள்

பதினேழாம் நூற்றாண்டிலும் இலக்கண நூல்கள் இயற்றப்பெற்றன. ஏற்கனவே இருந்த தொல்காப்பியம், நன்னூல் என்பவற்றிற்கு உரை கூறுவன போல் சில நூல்கள் இயற்றப் பெற்றன. தனியாகச் சில நூல்கள் இயற்றப் பெற்றன. இக்கால கட்டத்தில் தான் வடமொழியே சிறந்தது எனக் கருதிக் குட்டுப்பட்டோரும் உளர். உரைநூல் எழுதப் புகுந்து, அதற்குரிய மறுப்புரையால் மருண்டவர்களும் உளர். இது மரபை அழியாமல் போற்றி வந்ததையும், அக்காலத் தமிழ்ச் சான்றோரின் தமிழ்ப்பற்றையும் எடுத்துக் காட்டுகிறது. வடமொழி ஏற்றம் பெற்றதால், அதனோடு தமிழ் போட்டியிட வேண்டிய நிலையையும் இது சுட்டிக் காட்டுகிறது.

2.5.1 வைத்திய நாத நாவலர் ஆசிரியத் தொழில் புரிந்த இவர் திருவாரூரைச் சார்ந்தவர். தமது ஊரான திருவாரூரின் மீது திருவாரூர்ப் பன்மணி மாலை, நல்லூர்ப் புராணம், மயிலம்மை பிள்ளைத் தமிழ் என்ற சிற்றிலக்கியங்களை இவர் இயற்றி யிருந்தாலும், ‘குட்டித் தொல்காப்பியம்’ எனப்படும் இலக்கண விளக்கம் என்ற நூலை இயற்றிச் சிறப்புப் பெற்றார். தனது மாணவர் ஒருவர்க்கு இலக்கணம் கற்பிக்க இந்நூலை இயற்றினார். இந்நூலில் தொல்காப்பிய, நன்னூல் நூற்பாக்களோடு தாமியற்றிய நூற்பாக்களையும் வைத்து உள்ளார். இந்நூலுக்கு மறுப்பாகச் சிவஞான முனிவர் இலக்கண விளக்கச் சூறாவளி என்ற நூலைப் படைத்தார். இவரது மகனான சதாசிவ நாவலர் என்பவரும் வடுகநாத தேசிகர் என்பவரும் இலக்கண, இலக்கியப் படைப்புகளைப் படைத்துள்ளனர்.

2.5.2 சுப்பிரமணிய தீட்சிதர் தமிழ்மொழி, வடமொழி என்ற இரண்டிலும் புலமைபெற்ற இவர் தஞ்சை அரசவைப் புலவர் இராமபத்ர தீட்சிதர் என்பவர் முன்னிலையில் பிரயோக விவேகம் என்ற நூலை இயற்றினார். இது வடமொழி நெறியினைப் போற்றுவது. இரு மொழிக்குமிடையே உள்ள இலக்கண ஒற்றுமைகளை உணர்த்தும் இந்நூல் போற்றுவாரின்றி அழிந்தது.

2.5.3 ஈசான தேசிகர் வைத்தியநாத நாவலர், சுப்பிரமணிய தீட்சிதர் போல இவரும் திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்தவர். அக்காலத்தில் மடத்தைச் சார்ந்தவர்கள் எல்லாரும் தமிழ்மொழியையும் வட மொழியையும் கசடறக் கற்றனர். அதனால் இவரும் இருமொழியையும் கற்றார் என்றாலும் இவர் தம் வடமொழிப் பற்றுக்குப் பேர் போனவர். தசகாரியம் என்னும் பண்டார சாத்திரமும் சிவஞான போதச் சூர்ணிக் கொத்தும் இவரியற்றி இருந்தாலும் தாமியற்றிய ’இலக்கணக் கொத்து’ நூலால் பெயர் பெற்றவர். அதில் தமிழ் மொழிக்கு மட்டுமே உரிய ‘ற, ன, ழ, எ, ஒ’ என்ற எழுத்துகளால் பெருஞ்சிறப்பு ஒன்றுமில்லை. அது சிறப்புடைய மொழி எனக் கூற அறிவுடையோர் வெட்கப்படுவர். அந்த எழுத்துக்கள் வடமொழியில் இல்லையெனினும் வடமொழியே தமிழைவிட உயர்ந்தது எனக் கூறித் தமிழரின் தீரா வெறுப்பைச் சம்பாதித்தார். இவரைத் தான், “மெல்லத் தமிழினிச் சாகும் என்றந்தப் பேதையுரைத்தான்” என மகாகவி பாரதியார் சாடுகிறார். இவரது மாணவரான சங்கர நமச்சிவாயப் புலவர் நன்னூலுக்கு விருத்தியுரை இயற்றிப் புகழ் பெற்றார்.

2.6 கிறித்தவர்களின் தமிழ்த்தொண்டு

இயேசுநாதர்

(1) சிறுவர் சிறுமியர்க்கான பாடசாலைகளைத் திறந்தனர்.

(2) தமிழ்க் கருவூலங்களை எல்லாம் பயிலும் ஆர்வத்தை ஏற்படுத்தினர்.

(3) ஏட்டுச் சுவடியிலிருந்தே தமிழை, இந்தியாவிலே முதன்முதலில் அச்சேற்றினர்.

(4) உரைநடை இலக்கியத்தை வளர்த்ததன் மூலம் நாவல், சிறுகதை, நாடகம், மொழியியல் துறைகள் தோன்றச் செய்தனர்.

(5) தமிழ் எழுத்தில் சில மாற்றங்கள் செய்து சிக்கலை நீக்கினர்.

(6) பிற நாட்டவர் தமிழ் கற்பதற்கு உதவியாக அகராதிகள் வெளியிட்டனர்.

(7) மேலைநாட்டு இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழிலக்கியத்தைப் பிற மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்தனர்.

(8) இலக்கிய, இலக்கண நூல்களைப் படைத்தனர்.

(9) தமிழில் திறனாய்வு முறையைப் புகுத்தினர்.

(10) கல்வெட்டு, சாசனம் போன்றவற்றைப் படியெடுத்துப் போற்றினர்.

(11) ஆவணக் காப்பகம் அமைத்தும் கீழ்த்திசை ஏட்டுப் பிரதி நூலகம் அமைத்தும் தமிழைப் போற்றினர்.

(12) நூற்பட்டியல் கண்டனர்.

(13) பழமொழிகள், நாட்டுப்புறப் பாடல்கள், சடங்குகள், குலங்கள் என்பவற்றைப் பற்றியெல்லாம் தொகுத்தனர்.

(14) கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம் என்ற வகையைத் தோற்றுவித்தனர்.

(15) உயர்தமிழை உலகத் தமிழ் ஆக்கினர்.

2.6.1 ராபர்ட் -டி-நொபிலி இத்தாலி நாட்டில் பிறந்து, 1606ல் தமிழ்நாடு வந்து தமிழும் வடமொழியும் கற்றார் நொபிலி. காவியும் பூணூலும் அணிந்து மரக்கறி உணவுண்டு, தத்துவ போதகர் என்று தம் பெயரை மாற்றி, தம்மை இத்தாலியப் பிராமணர் என்று கூறிக் கொண்டார். நூற்றுக்கணக்கான உயர் சாதி இந்துக்களைக் கிறித்தவராக்கினார். திருமலை நாயக்கரின் நண்பரான பின், சில ஆண்டுகள் கழித்து இலங்கையும் சென்று வந்தார். 1647ல் மயிலாப்பூரில் மறைந்தார்.

‘முதல் உரைநடை நூலை’த் தமிழில் எழுதிய பெருமை இவரையே சாரும். சமயச் சார்புடைய, வடசொல் கலந்த மேனாட்டு மொழி கலந்த ஒரு கொச்சை மொழியில் பல நூல்கள் எழுதினார். அச்சேறாத காரணத்தால் அவை அழிந்தன. பிற மதங்களைக் கண்டிப்பது இவர் காலத்தில் நிலவியதை அறிகிறோம். ஞானோபதேச காண்டம், மந்திர மாலை, ஆத்தும நிர்ணயம், தூஷணதிக்காரம், சத்திய வேத இலட்சணம், சகுண நிவாரணம், பரமசூட்சும அபிப்ராயம், கடவுள் நிர்ணயம், புனர்ஜென்ம ஆட்சேபம், நித்ய ஜீவன சல்லாபம், தத்துவக் கண்ணாடி, ஏசுநாதர் சரித்திரம், தவசுச் சதகம், ஞானதீபிகை, நீதிச்சொல், அநித்திய நித்திய வித்யாசம், பிரபஞ்ச விரோத வித்யாசம் முதலிய 17 நூல்களை இயற்றியுள்ளார்.

2.6.2 ஹென்றிக் பாதிரியார் (1520-1600) போர்ச்சுகீசிய நாட்டிலிருந்து தமிழகக் கடற்கரை மக்களுக்குத் தொண்டு புரிய வந்தவர். முதன்முதலில் தமிழ் எழுத்துக்களால் விவிலியத்தை அச்சேற்றியதால் இவர் ‘தமிழ் அச்சின் தந்தை’ என்று போற்றப்படுகிறார். இவர் எழுதியவற்றுள் பதினாறு பக்கம் கொண்ட தம்பிரான் வணக்கம், 132 பக்கம் கொண்ட கிரீசித்தாணி வணக்கம், 669 பக்கம் உடைய

os sanctorum என்ற மூன்று நூல்கள் மட்டும் கிடைக்கின்றன. இவர் எழுதிய இலக்கணம், அகராதி என்பன கிடைக்கவில்லை. பல்வேறு இடங்களிலிருந்து பல சமயம் இவரெழுதிய 70 மடல்களின் தொகுதியான ‘Documenta Indica’ என்பது ஒரு வரலாற்றுச் சுரங்கமாக விளங்குகிறது. ஐரோப்பியருள் முதன் முதலில் தமிழ் கற்று தமிழ் நூலை அச்சேற்றிய பெருமைக்குரியவர்.

2.6.3 சீகன்பால்கு ஐயர் (Ziegenbalg) பிராட்டஸ்டண்ட் மதத்தைப் போதிக்க ஜெர்மனி நாட்டிலிருந்து தமிழகத்திற்கு சீகன்பால்கு 1705இல் வந்தார். தரங்கம்பாடியில் தமிழ் கற்று, அங்கேயே தங்கினார். அங்கே ஓர் அச்சுக் கூடமும் காகிதத் தொழிற் சாலையும் அமைத்து, பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சடித்தார். தமிழ் – லத்தீன் ஒப்பிலக்கணமும், தமிழ் – இலத்தீன் அகராதியும் படைத்தார். கிறித்தவ சமய உண்மைகளை அச்சடித்து, பண்டிதரிடையே முடங்கிக் கிடந்த தமிழைப் பாமரரிடம் பரப்பினார். 1715-இல் பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டார். ஐரோப்பா சென்ற பொழுது தமிழ்மறவாதிருக்க, மலையப்பர் என்ற தமிழரையும் உடன் அழைத்துச் சென்றார். முதன்முதலில் தமிழில் நூல்களை அச்சிட்ட பெருமை இவருக்கே உரியது.

2.7 பல்துறை நூல்கள்

பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலும், 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சோதிடம், மருத்துவம் ஆகிய துறைகளில் சித்தர்கள் பேரால் பல நூல்கள் இயற்றப் பெற்றுள்ளன. அவற்றில் மருத்துவ நூல்களும் வாத நூல்களும் காயகற்ப மருந்துகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றன. இரசவாதக் கலை ஏற்றம் பெற்றிருந்ததைத் தாயுமானவர், திரிகூட ராசப்பக் கவிராயர், மஸ்தான் சாகிபு ஆகியோர் பாடல்களால் அறிகின்றோம்.

சோதிட நூல்களில் நாடிகள் என்னும் பெயருடைய நூல்கள் பல தமிழகத்தில் காணப்படுகின்றன. கௌசிக நாடி, கௌமார நாடி, சுக்கிர நாடி, காகபுசுண்டர் நாடி, துருவ நாடி, சப்தரிஷி நாடி, நந்தி நாடி, மார்க்கண்ட நாடி என்பன அவற்றுள் சில. ஒருவருடைய சாதகக் குறிப்பு அல்லது கைரேகை என்பதைக் கொண்டு அவரைப் பற்றிய முக்கால நிகழ்ச்சிகளையும் 1/300 அல்லது 1/600 வரையில் மிகவும் நுட்பமாக நாடிகள் பலன் தருகின்றன என்கிறார் கே.கே.பிள்ளை.

தமிழகத்தில் வாழ்ந்த ஆபி டூபாய் (Abbe Dubois) என்ற பாதிரியார் இந்துக்களின் பழக்க வழக்கங்களும் சடங்குகளும் என்ற நூலை எழுதியுள்ளார். இதிலுள்ள ஒரு சில செய்திகளைத் தவிர பிற தமிழகத்தைப் பற்றியன அல்ல.

சென்ற நூற்றாண்டைப் போலவே வடமொழியில் இருந்து நூல்களை மொழிபெயர்ப்பு செய்யும் பணி நடைபெற்றது. பிரபோத சந்திரோதயம் என்ற வடமொழி நாடகத்தை மாதை திருவேங்கட நாதர் தமிழில் மொழி பெயர்த்தார். வேம்பத்தூர் ஆளவந்தார் வடமொழி யோக வாசிட்டத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார். சிவப்பிரகாசர் பிரபுலிங்க லீலை என்ற நூலை கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தார்.

2.8 தொகுப்புரை

பதினேழாம் நூற்றாண்டைப் பொருத்தவரை தமிழ் மொழி பல வகையிலும் ஏற்றம் கண்டுள்ளது என்றே கூற வேண்டும். நாயக்க மன்னர்களின் ஆதரவு, செல்வர்கள் மற்றும் வள்ளல்களின் ஆதரவு, மேனாட்டார் தொண்டு, தஞ்சை மன்னர்கள் ஆதரவு, மடங்களின் ஆதரவு எனப் பல வகையாலும் புரக்கப் பெற்றவர்கள் படைப்புகளை இயற்றினர். இலக்கணம், இலக்கியம், காப்பியம், அகராதி, நிகண்டு, நாட்குறிப்பு, மொழி பெயர்ப்பு, மருத்துவம், சோதிடம் எனப் பல்துறையிலும் தமிழ் வளர்ச்சியடைந்தது. ஆனால் பழமையான காப்பியங்களும் சிற்றிலக்கிய வகையும் கூட இக்காலத்தில் மறையாமல் வளர்ந்தன. சதகம், குறம், மாலை, கோவை, கலம்பகம், அந்தாதி, திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத் தமிழ் போன்ற சிற்றிலக்கியங்கள் பெரும்புலவர்களாலும் பல சிற்றிலக்கியப் புலவர்களாலும் பாடப் பெற்றன. கிறித்தவர்களின் வருகையால் செய்யுளின் தளைகளில் இருந்து விடுபட்ட உரைநடை முதன்முதலில் தோன்றுகிறது. மொத்தத்தில் பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் தமிழ்மொழி இந்த நூற்றாண்டில் திகழ்கிறது.

பாடம் 3

பதினெட்டாம் நூற்றாண்டு

3.0 பாட முன்னுரை

பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிவஞான முனிவர் மடத்தின் ஆதரவில் வளர்ந்தவர். வடமொழியும் தமிழும் கற்றவர். சமய நூல்களும் இலக்கணவுரைகளும் படைத்தார். இவரைப் போன்றே இந்நூற்றாண்டில் தோன்றிய பெரியோர் இலக்கிய, இலக்கண நூல்களுக்கு உரை எழுதினர். புராணங்களை வடமொழியில் இருந்து மொழி பெயர்த்தனர். தங்கள் மதக் கருத்துக்களை இசுலாமியர் தமிழில் வெளியிட விரும்பியதால் இசுலாமியச் சிற்றிலக்கியங்கள், புராணங்கள், வசன உரைநடை நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், உரை நூல்கள் என்பன தோன்றின. அவ்வாறே கிறித்தவ சமய நூல்களும் வெளிவந்தன. மேனாட்டார் அகராதி, உரைநடை, மொழி பெயர்ப்பு, தொகுப்பு நூல் எனப் புதிய துறைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினர். இவற்றைப் பற்றி இனி விரிவாகக் காண்போம்.

3.1 சைவ இலக்கியம்

இலக்கியம், இலக்கணம், தத்துவம், தர்க்கம், மறுப்பு, கண்டனம், பேருரை எனப் பன்முகப் படைப்புகளைச் சைவ இலக்கியம் இந்நூற்றாண்டில் கண்டது. மடங்களின் ஆதரவும் செல்வர்களின் ஆதரவும் இவ்வகை இலக்கியத்தைப் போற்றி வளர்த்தன.

3.1.1 சிவஞான முனிவர் திருவாவடுதுறை மடத்தினால் புரக்கப் பெற்ற சிவஞான முனிவர் இளமையிலேயே துறவு பூண்டவர். பன்மொழிப் புலவர்; பல்கலைச் செல்வர்; சிவஞான போதத்திற்கு மாபாடியம் செய்தவர். வடமொழியிலிருந்து நூல்களை மொழிபெயர்த்த இவர் தாமே பாடிய பனுவல்கள் பின்வருமாறு:

(1)அகிலாண்டேசுவரி பதிகம்

(2)இளசைப் பதிற்றுப் பத்தாந்தாதி

(3)கச்சி ஆனந்தருத்ரேசர் பதிகம்

(4)கலைசைச் செழுங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ்

(5)கலைசைப் பதிற்றுப் பத்தாந்தாதி

(6)குளத்தூர்ப் பதிற்றுப் பத்தாந்தாதி

(7)சோமேசர் முதுமொழி வெண்பா

(8)திருத்தொண்டர் திருநாமக் கோவை

(9)திருமுல்லைவாயில் அந்தாதி

(10)திரு ஏகம்பர் ஆனந்தக் களிப்பு

(11)பஞ்சாக்கர தேசிகர் மாலை

(12)காஞ்சிப் புராணம்

(13)அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ்

முதலியன. வடமொழியும் தமிழ்மொழியும் நிகர் என்ற கொள்கையர். சித்தாந்த மரபு கண்டனக் கண்டனம், சிவசமவாதவுரை மறுப்பு என்பவை இவரியற்றிய பிற நூல்கள். முக்களாலிங்கர் என்பது சிவஞான முனிவரின் இயற்பெயராகும்.

3.1.2 கச்சியப்ப முனிவர் ’கவிராட்சதர்’ என்று போற்றப் பெறும் கச்சியப்ப முனிவர் சிவஞான முனிவரின் மாணவர். இலக்கணம், இலக்கியம், சைவ சித்தாந்தம் என்ற மூன்றிலும வல்லவர். திருத்தணிகைப் புராணம், பூவாளூர்ப் புராணம், பேரூர்ப் புராணம், விநாயக புராணம், திருவானைக்காப் புராணம், காஞ்சிப் புராணப் பிற்பகுதி, சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ், கச்சியானந்த ருத்ரேசர் வண்டு விடு தூது, பதிற்றுப் பத்தாந்தாதி, திருத்தணிகையாற்றுப் படை, பஞ்சாக்கர அந்தாதி முதலிய நூல்களை இயற்றினார். இவருடைய நண்பரான கடவுண் மாமுனிவர் திருவாதவூர்ப் புராணம் பாடினார்.

3.1.3 அம்பலவாண தேசிகர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தவர். அதிசய மாலை, உபதேச வெண்பா, சன்மார்க்க சித்தியார், சித்தாந்த சிகாமணி, சித்தாந்தப் பஃறொடை, தசகாரியம் முதலிய பத்து சைவ சாத்திர நூல்களை இயற்றிப் புகழ் பெற்றவர். அனுபோக வெண்பா, பாஷண்ட நிராகரணம், பூப்பிள்ளை யட்டவணை என்ற நூல்களையும் பாடியுள்ளார். சிவஞான முனிவரைப் போன்றே சமய, சாத்திர ஒழுங்கைக் காப்பதிலும் சமய மரபுகளை மீறுவோர்களைக் கண்டிப்பதிலும் சிறந்தவர்.

3.2 வீர சைவ இலக்கியம்

துறைமங்கலம் சிவப்பிரகாசர் காலத்திலேயே வீர சைவ இலக்கியம் வளர்ந்திருந்தது. இந்த நூற்றாண்டில் சாந்தலிங்க அடிகள், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், குமார தேவர் என்ற மூவரும் வீரசைவ இலக்கியத்தைத் தமிழில் வழங்கினர். பெரிய நிறுவனங்களைப் போன்ற சைவ மடங்களைப் போன்றே வீர சைவமும் மடங்களை அமைத்துச் சமயத்தையும் இலக்கியத்தையும் பரப்பியது.

3.2.1 சாந்தலிங்க அடிகள் இவர் பேரூரில் வீரசைவ மடத்தை நிறுவியவர். சிவப்பிரகாச சுவாமிகளின் தங்கை ஞானாம்பிகையின் கணவர். அவிரோத உந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது, வைராக்ய சதகம், வைராக்ய தீபம் என்ற வீரசைவ இலக்கியங்களைப் படைத்துள்ளார்.

3.2.2 திருப்போரூர் சிதம்பர அடிகள் சாந்தலிங்க அடிகளின் மாணவர். அவருடைய நூல்கட்கு உரை எழுதியவர். உபதேச உண்மை, உபதேசக் கட்டளை, திருப்போரூர் சந்நிதி முறை, தோத்திர மாலை, திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் முதலியனவும் திருப்போரூர் முருகன் மேல் கிளிப்பாட்டு, குயில்பாட்டு, தாலாட்டு, திருப்பள்ளி எழுச்சி, ஊசல், தூது என்பனவும் பாடியுள்ளார்.

3.2.3 குமாரதேவர் மகாராஜா துறவு என்ற நூலை இயற்றிய இவர் கன்னட நாட்டு அரசர். சாந்தலிங்க அடிகளிடம் உபதேசம் பெற்றவர். சிவாத்துவிதக் கொள்கையை விளக்கியவர். அத்வைத உண்மை, ஆகம நெறியகவல், உபதேச சித்தாந்தக் கட்டளை, சகச நிட்டை, சிவதரிசன அகவல் முதலிய பல நூல்களைப் படைத்துள்ளார். எனினும் மகாராசா துறவு என்ற நூலே பெரிதும் பயிலப்பட்டது; பாராட்டப்பட்டது.

அவரவர் வினையின் அவரவர் வருவார் அவரவர்

வினையள வுக்கே

அவரவர் போகம் என்றதே யாயின் ஆருக்கார்

துணையதா குவர்கள்

அவரவர் தேகம் உளபொழு துடனே ஆதர

வாரென நாடி

அவரவ ரடைதல் நெறி கன்மத் தடையும் ஆதர

வாதர வாமோ

(மகாராசா துறவு-29)

வினை = நல்வினை, தீவினை; போகம் = இன்பம்; கன்மம் = வினை)

அவரவர் செய்த நல்வினை, தீவினைகளால் பிறப்பெடுப்பர். அதன்படி தான் இன்பம் அடைவர் எனில் யாருக்கு யார் துணை? உடம்பு உள்ள போதே ஆதரவு யார்? என நாடி அடைய வேண்டும். ஒருவர் செய்த வினையாற் சேரும் துணை துணையாகாது என்று குமாரதேவர் அறிவுறுத்துகிறார்.

3.3 வைணவ இலக்கியம்

இந்நூற்றாண்டில் வைணவ இலக்கியத்தை அணி செய்தவை சிற்றிலக்கியங்களே. வீரை ஆளவந்தார், சீகாழி அருணாசலக் கவிராயர், நல்லாப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.

3.3.1 வீரை ஆளவந்தார் வைணவ வேதாந்தக் கடல் என்று போற்றப் பெறுபவர் ஆளவந்தார். வடமொழி ஞானவாசிட்டத்தின் ஒரு பகுதியை மொழிபெயர்த்துள்ளார். அதில் 6 பிரகரணங்கள், 43 கதைகள், 2055 விருத்தங்கள் உள்ளன. எளிய நடையில் அமைந்த இந்நூலை ஞான வாசிட்ட வமல ராமாயணம் என்றும் கூறுவர். இராமபிரானுக்கு ஆத்ம ஞானத்தை வசிட்டர் கூறியதால் இப்பெயர் வந்தது. இம்மொழி பெயர்ப்பு நூலின் விளைவாக திருஷ்டி சிருஷ்டி வாதம் (காட்சி, படைப்பு, வாதம்) பரவியது. அத்வைத, வேதாந்த மடங்களில் பாடம் கேட்கத் தகும் நூலாக இதனைப் போற்றுவர்.

தவங்களாற் றெய்வ நீராற் சாத்திரங் களினாற் போகாப்

பவங்களை யுயர்ந்தோர் பாதம் பணிந்துபற் றறுக்க

வேண்டும்.

அவங்களாங் காரங் கோப மறவுந் தேய்ந் தியற்கை யான

சுவங்களி டைந்து நன்னூற்று றைநின்றோ ருயர்ந்த

மேலோர் (27)

(பவம் = பிறவி; அவங்கள் = நன்மை தாராதவை ; சுவம் = நன்மைவழி)

என்ற ஞான வாசிட்டப் பாடலில் தவங்களாலும் புனித நீராலும் சாத்திரங்களாலும் போகாத பாவங்களை உயர்ந்தோர் பாதம் பணிந்து பற்று அறுக்க வேண்டும். அவ்வுயர்ந்தோர் யாரெனில் அகங்காரம், கோபம் என்பன நீக்கி இயற்கையிலே நல்வழி நடந்து உயர்ந்தோர் என்று கூறுகிறது.

43 கதைகள் மூலமாக நீதி கூறப்படுகிறது.

3.3.2 சீகாழி அருணாசலக் கவிராயர் அருணாசலக் கவிராயர் சீகாழி என்ற தலத்தின் மேல் ஒரு புராணமும் ஒரு கோவையும் பாடியுள்ளார். அனுமார்மேல் ஒரு பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். அசோமுகியின் கதையை அமைத்து ஒரு நாடகம் எழுதினார். நல்ல கீர்த்தனைப் பாடல்களாகப் பாடி இயற்றிய இராம நாடகக் கீர்த்தனை அவருக்கு நல்ல புகழைத் தேடித் தந்தது. முழுதும் இசைப்பாடல்களாலேயே நாடகம் அமையுமாறு அந்நூல் உள்ளது. நாடக அரங்கில் மக்கள் விரும்பிச் சுவைக்கக் கூடிய மெட்டு அமைத்து, கற்பனை நயத்தோடு பாடியுள்ளார்.

ஸ்ரீ ராமச் சந்திரனுக்கு ஜய மங்களம் – நல்ல

திவ்ய முகச்சந்திரனுக்கு சுப மங்களம். (ஸ்ரீரா)

மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு

ஈராறு ராமனுக்கு ரவிகுல ஸோமனுக்கு

கொண்டல் மணிவண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்

கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம் . . . . .

என்ற பாடல் இராம நாடகக் கீர்த்தனையில் உள்ளது. இவர் தில்லையாடி மணலி முத்துக் கிருட்டிண முதலியாரிடம் இராம நாடகத்தை அரங்கேற்றினார்.

3.3.3 நல்லாப்பிள்ளை பதினெட்டாம் நூற்றாண்டில் பாரதத்தைக் கற்பதும் சொற்பொழிவு செய்வதும் தமிழர்களிடையே செல்வாக்குப் பெற்றன. வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதமே அதற்கு அப்போது பெரிதும் பயன்பட்டது. வில்லிபாரதம் மிகச் சுருக்கமாக உள்ளதாக அக்காலத்தார் கருதினர். இக்குறையைப் போக்க வில்லிபாரதத்தில் உள்ள 4300 செய்யுளோடு மேலும் 16,400 செய்யுள் பாடி நல்லாப்பிள்ளை விரிவாக்கினார். “வில்லிபுத்தூராரின் செய்யுள் போலவே ஓசையும் நடையும் அமையப் பாடிச் சேர்த்த காரணத்தால், இந்தத் தொண்டு பழைய நூலொடு இணைந்த இலக்கியப் படைப்பாகவே விளங்குகிறது” என்கிறார் மு.வ.

3.4 சிற்றிலக்கியங்கள்

சென்ற நூற்றாண்டைப் போலவே, இந்த நூற்றாண்டிலும் மடத்தின் ஆதரவு பெற்ற புலவர்கள், பெரும் புலவர்கள், மன்னர்களின் ஆதரவு பெற்றோர் முதலியவர்கள் சிற்றிலக்கியங்களை வளர்த்தனர். இந்த நூற்றாண்டில் தான் பள்ளு இலக்கியங்களில் சிறப்புப் பெற்ற முக்கூடற்பள்ளு, குறவஞ்சிகளில் புகழ்பெற்ற திருக்குற்றாலக் குறவஞ்சி, சதக இலக்கியங்களில் புகழ் பெற்ற அறப்பளீசுர சதகம், தண்டலையார் சதகம் என்பன தோன்றின. தீயவன் ஒருவன் திருந்தி வாழ்வதாகக் கூறும் நொண்டி நாடகம் இந்நூற்றாண்டில் ஏற்றம் பெற்றது. தாயுமானவர் மிக எளிய தமிழில் பல்வேறு இலக்கிய வடிவங்களைக் கையாண்டு சமரச நெறியை நிறுவுகின்றார். அவற்றை இனி விரிவாகக் காண்போம்.

பகழிக் கூத்தர் திருச்செந்தூர்முருகன் பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றினார். பக்திச் சுவையும் இலக்கிய நயமும் மிகுந்த நூல். பிற்காலத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களில் சிறப்பு பெற்ற ஒன்று.

3.4.1 பள்ளு இலக்கியம் உழவுத் தொழிலில் ஈடுபட்டு வந்த மக்கள் பாடி வந்த நாட்டுப்பாடல்கள் பல நமக்கு கிடைக்காமல் போயின. உழவர் பாடல்களின் வடிவம், பொருள் ஆகியவை பற்றி விளக்கும் நூல்கள் இல்லை. ‘பள்’ என்பது தாழ்ந்த, பள்ளமான நன்செய் நிலங்களையும் அங்குச் செய்யப்படும் உழவுத் தொழிலையும் குறிப்பது. ஆகவே, பள்ளு என்பது உழவரின் பாட்டுக்குப் பெயராக அமைந்தது. தற்போது கிடைக்கும் பள்ளு நூல்களில் சிறப்புப் பெற்றது 18ஆம்நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ சமயப் புலவர் ஒருவர் எழுதிய முக்கூடற்பள்ளு ஆகும். அது ஒரு கதையாக நாடக வடிவில் அமைந்துள்ளது.

உழவுத் தொழில் உழவன்

பண்ணையார் என்பவர் நில முதலாளி. பள்ளன் என்பவன் உழுது பயிரிடும் தொழிலாளி. அவனுக்கு இரண்டு மனைவிகள் (பள்ளிகள்). இருவரும் வேறுவேறு சமயத்தினர். இவர்தம் வாழ்க்கையைச் சுற்றிப் பள்ளு நூல் அமைகிறது. ஆற்றில் வெள்ளம் வருதல், மாடுகளின் இயல்பு, விதை வகைகள், உழவு, நடவு, அறுவடை முதலிய தொழில் வகைகள், கிராமத்து மக்களின் பேச்சு, பழக்க வழக்கம் என்பன முக்கூடற்பள்ளில் கூறப்படுகின்றன.

பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே வாதங்களும் பூசல்களும் இருந்தன. அவற்றைப் புலவர் தம் பள்ளு இலக்கியத்தில் ஏசல் என்ற பகுதியாகப் புகுத்தினார்.

பள்ளு இலக்கியங்கள் அந்தந்த ஊர்களைப் புகழ்வதற்காகவும் அங்கே வாழ்ந்த செல்வர்களைப் புகழ்வதற்காகவும் பின்னர் இயற்றப்பட்டன. மொத்தம் 40 பள்ளு நூல்கள் இருப்பதாக மு.வ., கூறுகிறார். என்னயினாப் புலவர் என்பவர் மேடையில் நடிக்க ஏற்ற வகையில் முக்கூடற் பள்ளுவை முக்கூடற் பள்ளு நாடகமாகப் பாடினார். பல இடங்களில் நடிக்கப்பட்டும் வந்தது.

3.4.2 சதக இலக்கியம் 17, 18, 19ஆம் நூற்றாண்டுகளில் சதக இலக்கியம் பெரும் செல்வாக்குப் பெற்றது. நூறு பாடல்களைக் கொண்டு அமைப்பது சதகம் எனப்படும். திண்ணைப் பள்ளிக்கூடங்களில் சதகம் கற்பது கட்டாயமாக இருந்தது. எளிதில் மனப்பாடம் செய்யும் வகையில சதக நூல்கள் அமைந்திருந்தன. தாம் வாழ்ந்த பகுதியில் கண்டு, கேட்டுப் பெற்ற செய்திகளைக் கொண்டு புலவர் ஒருவர் சதகம் பாடினார்.உடனே வேறு சிலர் நாட்டின் மற்றப் பகுதிகளையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் தொகுத்துச் சதகங்களாகப் பாடினர். தொண்டை மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், சோழ மண்டல சதகம் என்பன அப்படித் தோன்றியவை. இச்சதக நூல்கள் மூலம் தமிழ்நாட்டு வரலாறு ஓரளவு அறியப்படுகிறது.

இதுபோன்றே அடியார்களின் வரலாறுகளைத் தொகுத்துக் கூறும் திருத்தொண்டர் சதகம், பழமொழிகளால் அமையப் பெற்ற தண்டலையார் சதகம், கோவிந்த சதகம், தெய்வங்களை வழிபடும் முறையில் அமைந்த திருவண்ணாமலை சதகம், திருப்பதி சதகம் என்பனவும் பிற சமயத்தவர் இயற்றிய அகத்தீசர் சதகம், அரபிச் சதகம், இயேசு நாதர் திருச்சதகம், நீதிகள் கூறும் குமரேச சதகம் என்பனவும் குறிப்பிடத்தக்கன.

சதக நூல்களில் நூறு பாடல்களில் ஒவ்வொன்றிலும் இறுதியடியோ அதற்கு முந்திய பகுதியோ ஒரே வகையான தொடரைப் பெற்று முடியும். உதாரணமாக ’மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே’ என்று குமரேச சதகத்தில் ஒவ்வொரு செய்யுளும் முடியும். வறுமை வந்தால் விளையும் நிலை பற்றிக் குமரேச சதகம் பின்வருமாறு கூறுகிறது:

வறுமைதான் வந்திடில் தாய்பழுது சொல்வாள்

மனையாட்டி சற்று மெண்ணாள்

வாக்கிற் பிறக்கின்ற சொல்லெலாம் பொல்லாத

வசனமாய் வந்து விளையும்

சிறுமையொடு தொலையா விசாரமே யல்லாது

சிந்தையில் தைரிய மில்லை

செய்யசபை தனிலே சென்றுவர வெட்கமாம்

செல்வரைக் காண நாணும்

உறுதிபெறு வீரமும் குன்றும் விருந்துவரில்

உயிருடன் செத்த பிணமாம்

உலகம் பழித்திடும் பெருமையோர் முன்புசென்

றொருவரொடு செய்தி சொன்னால்

மறுவசன முஞ்சொலார் துன்பினில் துன்பமிது

வந்தணுகி டாதருளுவாய்

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

மலைமேவு குமரே சனே

(பழுது = குற்றம்; மனையாட்டி = மனைவி; விசாரம் = கவலை; செய்ய = சிறந்த)

3.4.3 நொண்டி நாடகம் நகைச்சுவைக்கும் எள்ளல் சுவைக்கும் இடம் தரும் இலக்கியமான நொண்டி நாடகம் என்ற இலக்கிய வகை இந்த நூற்றாண்டில் செழித்து வளர்ந்தது. தீயவனான நொண்டி ஒருவன் தான் திருந்திய கதையை, ’சிந்து’ என்னும் யாப்பு வகையில் பாடியதால் ‘நொண்டிச் சிந்து’ என்றும் கூறப்பட்டது. சீதக்காதி என்ற முஸ்லீம் வள்ளல் வாழ்ந்த காலத்தில் துன்புற்ற கொள்ளைக்காரன் ஒருவன் கடைசியில் மனம் மாறி மெக்காவுக்குச் சென்று திருந்திக் காலும் பெற்றுத் திரும்பியதாகப் பாடப்படும் நாடகமே சீதக்காதி நொண்டி நாடகம் எனப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் மாரிமுத்துப் புலவர் என்பவர் திருக்கச்சூர் நொண்டி நாடகம் இயற்றிப் புகழ் பெற்றார். ஐயனார் நொண்டி நாடகம் என்பதும் பலர் போற்றிய நொண்டி நாடகமாகும்.

3.4.4 குறவஞ்சி குறவஞ்சி என்ற தொடர் குறவர் குலத்துப் பெண் என்று பொருள்படும். குறவஞ்சி இலக்கியம் ஒருவகையான நாடகம். பெருமைக்குரிய தலைவன் உலாவரக் கண்ட தலைவி அவன் மீது காதல் கொள்கிறாள். காரணம் கேட்ட தோழியிடம், தலைவனிடம் தூது சென்று தன்னைப் பற்றிக் கூறி வருமாறு வேண்டுவாள் தலைவி. அந்நிலையில் குறத்தி தெரு வழியே வருவாள். அவளிடம் குறி கேட்கத் தோழி அழைப்பாள். குறத்தி தன் மலை, தொழில் வளம் கூறி தலைவியின் காதல், தலைவன் புகழ் பற்றிக் கூறுவாள். தலைவியின் காதல் நிறைவேறும் என்றும் குறி கூறுவாள். அதைக் கேட்ட தலைவி, குறத்திக்குப் பல வகையான அணிகலன்களைப் பரிசாகக் கொடுப்பாள். குறத்தி தன் மலைக்குத் திரும்ப, அவள் கணவனாகிய குறவன் அவ்வணிகலன்கள் பற்றிக் கேட்பான். அவள் பதில் சொல்வாள். நாடகம் முடியும். நாடகத்தின் இடையே வரும் கட்டியங்காரன் நடிக்கும் மாந்தர்களையும் அவர்தம் பெருமைகளையும் அவையோர்க்கு எடுத்துச் சொல்வான். நாடகம் முழுதும் செய்யுளாகவே இருக்கும்.

குறவஞ்சி நூல்களுள் இன்றும் நாடகமாக நடிக்கப் பெறும் சிறப்பினை உடையது திரிகூட ராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சியே. இந்நூலைக் குறத்திப் பாட்டு என்றும் குறவஞ்சி நாடகம் என்றும் கூறுவர். இந்நூலாசிரியரைப் பாராட்டும் முகமாக மதுரையை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கர் குறவஞ்சி மேடு எனும் நிலப்பகுதியை இனாமாக வழங்கிக் கௌரவித்து உள்ளார்.

குற்றால மலை

திருக்குற்றால மலையினைக் கவிராயர் வர்ணிக்கும் போது, ”கவனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்” என்று கூறுகிறார். கன்னங்களில் குளிகையை அடக்கிக் கொண்டு பறக்கும் சித்தர் வந்து தங்கும் சிறப்புடையது இக்குற்றால மலை என்பதே அதன் பொருள். முருகனிடம் தனக்கு ஆறுதலைத் தரவில்லையே எனத் தலைவி கேட்பதை,

அஞ்சு தலைக்குள் ஆறுதலை வைத்தார் – எனது மனதில்

அஞ்சு தலைக் கோர் ஆறுதலை வையார்

என்று பாடுகிறார்.

தன்னை ஆதரித்த வள்ளலைத் தன் படைப்பில் இரண்டு இடங்களில் பாடியுள்ளார் கவிராயர். சைவ சமயத்தைப் போற்றும் குறவஞ்சியை அடியொற்றிக் கிறித்தவ, இசுலாமியப் புலவர்களும் கூடத் தங்கள் சமயங்களின் பெருமையை விளக்கும் வண்ணம் குறவஞ்சி பாடினர் எனில் இதன் சிறப்பை என்னென்பது.

திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலத் தலபுராணம், குற்றால மாலை, குற்றாலச் சிலேடை, குற்றால யமக அந்தாதி என்ற நூல்களையும் படைத்து உள்ளார். குமரகுருபரர் இயற்றிய மீனாட்சி அம்மை குறம் குறவஞ்சி இலக்கியத்தில் அமைந்தாலும் அது நாடகமாக அமையவில்லை.

3.5 சிற்றிலக்கியப் புலவர்கள்

இந்த நூற்றாண்டில் மடங்களைச் சேர்ந்த பெரும்புலவர்கள் சிற்றிலக்கியங்களைத தம் ஞானாசிரியன் மீதும் தம் ஊர் மீதும் தம் ஊர் இறைவன் மீதும் பாடினர். வள்ளல்களால் ஆதரிக்கப் பெற்றவர்கள அவர்களைப் பாடினர். இசுவாமிய, கிறித்தவச் சமயத்தவர்கள் கூட இதனால் சிற்றிலக்கியங்களைப் போற்றினர். எனவே சைவ, வைணவச் சமயங்களுக்கே உரியதாக இருந்த சிற்றிலக்கிய வகைகள் பரந்து விரிந்தன.

3.5.1 தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரானான இவர் தொண்டை நாட்டு தொட்டிக்கலையில் வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றார். இவர் சிவஞான முனிவரின் மாணவர். தம் ஆசிரியர் மீது கீர்த்தனைகள், துதி, விருத்தங்கள் பாடினார். நாட்டுப்பாடல் பாங்கில் பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். தம் ஞானாசிரியரான அம்பலவாண தேசிகர் மீது பஞ்சரத்தின மாலை, வண்ணம், ஆனந்தக் களிப்பு என்பன பாடியுள்ளார். தவிர திருவாவடுதுறைக் கோவை, திருக்கலசைக் கோவை, சிலேடை வெண்பா, திருக்கலசை சிதம்பரேசர் சந்நிதிமுறை, திருக்கலசை வண்ணம், திருக்கலசை பஞ்சரத்தினம், திருக்கலசை பரணி, திருக்கலசைக் கட்டியம் என்பன பாடியுள்ளார்.

3.5.2 கந்தப்பையர் கச்சியப்ப முனிவரின் மாணவரான இவர் வீர சைவராகத் திகழ்ந்தார். தணிகை ஆற்றுப்படை, தணிகையுலா, தணிகைக் கலம்பகம், தணிகை அந்தாதி, தணிகைப் பிள்ளைத் தமிழ், தணிகைப் புராணம் என்னும் நூல்களைப் பாடினார். சிவப்பிரகாச சுவாமிகளைப் போன்றே, திருச்செந்தூரைப் பற்றி நிரோட்டக யமக அந்தாதி பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3.5.3 பலபட்டடை சொக்கநாதப் பிள்ளை பலபட்டடை = பண்டமுள்ள அறை. மதுரை மன்னர்களிடம் பலபட்டடைக் கணக்கு அலுவல் பார்த்ததால் இவர் மரபினர்க்கு இப்பெயர் ஏற்பட்டது. கன்னிவாடி ஜமீன்தார் நரசிங்க நாயக்கரால் புரக்கப் பெற்ற இவர், அவர்மீது வளமடல் ஒன்று பாடினார். மதுரைச சொக்கநாதர் – அங்கயற்கண்ணி மீது தனிப்பாடல் பல பாடினார். மதுரை மும்மணிக் கோவை, இராமேசுவரத்தைப் பற்றிய தேவையுலா, திண்டுக்கல்லைப் பற்றிய பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது, அழகர் கிள்ளை விடு தூது என்ற நூல்களைப் பாடியுள்ளார்.

3.5.4 கந்தசாமிப் புலவர் கட்டபொம்மன் காலத்தவரான இவர், முத்தாலங்குறிச்சியில் வாழ்ந்தவர். சீதக்காதி நொண்டி நாடகம், செந்திற் பெருமான் நொண்டி நாடகம், திருவனந்தபுரம் நொண்டி நாடகம் என்ற நூல்களைப் பாடியுள்ளார். திருவிதாங்கூர் மன்னரால் புரக்கப் பெற்றவர்.

3.5.5 மாரிமுத்தாப் பிள்ளை ”இந்நூற்றாண்டின் பிரபந்த வேந்தர்” என்று அழைக்கப் பெற்றவர். மாரிமுத்தாப்பிள்ளை முத்தமிழ்ப் பெரும்புலவர். ஆதி மூலிசர் குறவஞ்சி, ஆதிமூலிசர் நொண்டி நாடகம், அநீதி நாடகம், புலியூர் வெண்பா, புலியூர் சிங்காரவேலர் பதிகம், சிதம்பரேசர் விறலி விடு தூது, வருணாபுரி விடங்கேசர் பதிகம் என்பவற்றுடன் பல சித்திரக் கவிகள், தனிப்பாடல்கள், வண்ணங்கள், இசைப்பாக்கள் என்பவற்றையும் பாடியுள்ளார்.

3.5.6 தத்துவராயர் தத்துவக் கருத்துகளை நாட்டுப் பாடல் வடிவங்களாகத் தந்தவர். அஞ்ஞவதைப் பரணியும் மோகவதைப் பரணியும் இவரியற்றிய புகழ் பெற்ற நூல்கள். அம்மானை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஊசல் முதலிய பாடல்களைத் திருவாசகத்தைப் பின்பற்றி இயற்றியுள்ளார். இவர் பாடிய பரணி நூல்களில் அரசர்களின் போர்க்களங்கள் இல்லை. மோகமும் அஞ்ஞானமும் ஞானத்தால் வெல்லப்படுதலை இப்போர்கள் குறிக்கின்றன. இவருடைய மோகவதைப் பரணியில்,

தொகுத்த நிதி பலகோடி யுண்டெனினும் தொல்லையிலே

வகுத்தவகை யல்லாது துய்ப்பவரார் மண்ணிலே

(தொல்லையில் = முன்பு ; துய்ப்பவர் = அனுபவிப்பவர்)

என்றும்,

ஒன்றிரண்டே யுடுப்பதுவு முண்பதுவும் நாழியே

என்றுமொரு வன்கிடையு மிருசாணுக் கெண்சாணே

(638, 64)

(கிடை = படுக்கை ; எண்சாண் = எட்டுச் சாண் நீளம்)

என்று ஊழின் வலிமையையும் பாடுகிறார்.

3.5.7 அபிராமி பட்டர் சரபோசி மன்னனிடம் அமாவாசையைப் பௌர்ணமி என்று தவறாகக் கூறி அதனை உண்மையாக்கினவர் அபிராமி பட்டர். இவர் திருக்கடவூரில் வாழ்ந்த ஆதிசைவர். இவர் பாடிய அபிராமி அந்தாதி உமையம்மையிடம் பேரன்பு விளைக்க வல்லது. அபிராமி அந்தாதியை, பட்டர் பாடி முடித்த பின் அம்மை தன் திருத்தோட்டினை மேலே எறிந்து மதி போல ஒளிவிடச் செய்தாள். கீழ்க்காணும் பாடல் பாடி முடித்தவுடன் அவ்விந்தை நிகழ்ந்ததாகக் கூறுவர்.

திருக்கடவூர் அபிராமி அம்மன்

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்

பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்

குழிக்கே அழுந்துங் கயவர்தம் மோடு என்னைக்

கூட்டினியே (அபிராமி அந்தாதி – 79)

(வெம்பாவம் = கொடிய பாவம்; கூட்டு = நட்பு)

3.6 புராணங்கள்

மடத்தின் தலைவர்களும் மடத்தின் ஆதரவில் வாழ்ந்தவர்களும் செல்வர்களும் வள்ளல்களும் ஆதரிக்கப்பட்டவர்களும் பிற இலக்கிய வகைகளைப் போலவே பல புராணங்களையும் இயற்றினர். தமிழில் பிற மதம் சார்ந்த காப்பியங்களும் இந்நூற்றாண்டில் இயற்றப்பட்டன.

3.6.1 புராணங்களும் மொழிபெயர்ப்பும் சிவஞான முனிவரின் காஞ்சிப் புராணம், கச்சியப்ப முனிவரின் 6 புராணங்கள், சிதம்பர சுவாமிகளின் திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம், கூழங்கைத் தம்பிரான் இயற்றிய ஏசு புராணம், வடமலையப்ப பிள்ளையின் மச்ச புராணம், நீடுர்ப் புராணம், நல்லாப்பிள்ளையின் தெய்வயானை புராணம், கவிராஜ பண்டிதரின் நாககிரி புராணம், திருப்பூவணம் கந்தசாமிப் புலவர் இயற்றிய திருப்பூவணநாதர் உலா, திருப்பூவணப் புராணம், ஆப்பனூர்ப் புராணம் என்பன இந்நூற்றாண்டில் தோன்றிய புராணங்கள். இவற்றுள் தல புராணங்களாக அமைந்தவை தவிர, பிற வடமொழிப் புராணங்களை மொழி பெயர்த்துத் தமிழில் இயற்றப்பட்டவையே.

3.6.2 சீறாப்புராணம் எட்டையபுர சமீன் ஆஸ்தானப் புலவராகத் திகழ்ந்த உமறுப்புலவர் இளவயதிலேயே தம் குருவின் எதிரியை வெற்றி கண்டவர். நபிகள் நாயகத்தின் வரலாற்றையும் அறிவுரையையும் சமயத் தொண்டையும் விளக்கி 5027 பாடல்கள் கொண்ட சீறாப் புராணத்தை இயற்றியதால் ‘இசுலாமியக் கம்பர்’ என்று போற்றப்படுபவர். தலைப்பாகை, முறுக்கு மீசை, கையில் தங்கக்காப்புப் பூண்டு இந்து போல விளங்கிய இவரை எட்டப்ப பூபதியும் சீதக்காதியின் பொருளாளரான அபுல்காசிமும் ஆதரித்து உள்ளனர்.

இசுலாமியத் தமிழ் இலக்கியங்களில் முதன்மையானது சீறாப் புராணம். ‘சீறத்’ என்னும் அரபுச் சொல்லில் இருந்தே ‘சீறா’ என்ற சொல் தோன்றியது. சீறத் – என்ற சொல்லுக்கு வாழ்க்கை வரலாறு என்றும் புராணம் என்றால் புனிதக் கதை என்றும் பொருள். அவ்வகையில் இஸ்லாமியத்தை உலகிற்குப் போதித்து நல்வாழ்வு வாழ்ந்த முகமதுநபி ஸல் அவர்களே இக்காப்பியத் தலைவர்.விருத்தப்பாக்களிலான இப்புராணம்,

விலாதத்துக் காண்டம் – நபியின் பிறப்பு, இளமை வாழ்வு கூறுவது.

நுபுவ்வத்துக் காண்டம் – இஸ்லாமிய சமயம், வானவர் மூலம் நபிக்கு அருளப்பட்டதைக் கூறுவது.

ஹிஜ்றத்துக் காண்டம் – நபி மக்காவிலிருந்து மதினா ஓடியதைக் கூறுவது

என மூன்று காண்டங்களாக உள்ளது. புராணத்தில் நபியின் வரலாறு சிறப்பாக அமைந்தாலும் முழுமை பெறவில்லை. பனீ அகமது மரைக்காயர் என்பவர் 2145 பாக்களை ‘சின்ன சீறா’ வாகப் பாடிச் சீறாப் புராணத்தை நிறைவு செய்தார்.

நபி இப்பூமியில் தோன்றியதை, உமறுப்புலவர்,

கோதறப் பழுத்து மதுரமே கனிந்த கொவ்வைவா

யரம்பையர் வாழ்த்தத்

தீதற நெருங்கி யேவல்செய் திருப்பச்

செழுங்கமலாசனத் திருந்த

மாதருக் கரசி யாமினா வுதர மனையிடத்

திருந்துமா நிலத்தில்

ஆதரம் பெருக நல்வழிப் பொருளாய் அகுமது

தோன்றினா ரன்றே

(சீறாப் புராணம், நபியவதாரப் படலம் – 86)

(கோது = குற்றம் ; மதுரம் = இனிமை; அரம்பையர் = தேவலோக மகளிர்; உதரம் = வயிறு ; ஆதரம் = அறம்)

என்ற பாடலின் மூலம் ஆமினா வயிற்றில் அகமது நபி இவ்வுலகில் அறம் பெருக, நல்வழிப் பொருளாய்ப் பிறந்தார் என்கிறார்.

3.7 இசுலாமிய இலக்கியமும் கிறித்தவ இலக்கியமும்

இசுலாமியச் சமயம் சார்ந்த நூல்கள் பல எழுதப்பட்டன. ஐரோப்பாவிலிருந்த சமயம் பரப்ப வந்த கிறித்தவர்களும் தமிழ் இலக்கியம் பல படைத்தனர்.

3.7.1 இசுலாமியத் தமிழிலக்கியம் ”தமிழகத்தில் 17, 18ஆம் நூற்றாண்டில் நவாபு ஆட்சி நிலவியது. அரசு மொழியாகப் பாரசீகமும் உருதும் அமைந்தன. குர்ஆன் போன்ற மத நூல்களைத் தெய்வ மொழியாகிய அரபியிலேயே படிக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் இருந்தது. எனவே, வேதத்தைப் படிப்பதற்கு அரபு மொழியையும் அரசியலை நடத்த உருது-பாரசீக மொழிகளையும் முஸ்லீம் மக்கள் பயின்றார்கள்” என்கிறார் மது.ச. விமலானந்தம். மதச் சார்பான நூல்களில் மிகுதியான அரபுச் சொற்கள் இதனால் கலந்தன. தமிழிலும் உருது, அரபிச் சொற்கள் கலந்தன. அரேபிய, பாரசீக மொழிகளைக் கற்ற இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள் அம்மொழி இலக்கிய வகைகளைக் கற்றுத் தமிழில் அவ்வாறே படைத்தனர். இதனால் இசுலாமியத் தமிழிலக்கியம் புது வடிவம் பெற்றது.

அரபி மொழியிலிருந்து பெற்ற வடிவங்கள்

படைப்போர், முனஜாத்து, கிஸ்ஸா, மசலா, நாமா என்ற இலக்கிய வகைகளைத் தமிழில் முதன்முதலில் இசுலாமியப் புலவர்கள் அறிமுகம் செய்தனர்.

பரணி இலக்கியம் போன்று இஸ்லாமியருக்கும் ஏனையோருக்கும் நடந்த போரைப் பற்றிப் பாடும் இலக்கிய வகை ’படைப்போர்’ ஆகும். ஐந்து படைப்போர், செய்தத்துப் படைப்போர், உசைன் படைப்போர் என்பன அவற்றுள் சில.

அல்லாவின் அருள் நாடி விண்ணப்பிப்பது ‘முன ஜாத்து’ ஆகும். செய்யது முகமது ஆலிம் இயற்றியது ’முனஜாத்து மாலை’ ஆகும்.

கதை கூறுதல் என்ற பொருளில் அமைந்த கிஸ்ஸா வகையில் மதார்சாகிபு புலவர் ’யூசுபுநபி கிஸ்ஸா’வையும், அப்துல்காதர் சாகிபு ’செய்த்தூன் கிஸ்ஸா’ வையும் பாடியுள்ளனர்.

மசலா என்பது கேள்விகள் அல்லது பிரச்சினை என்று பொருள்படும்.

மசலா இலக்கியத்தை, பரிமளப் புலவர் ஆயிரம் மசலா என்ற நூலாகவும் செய்து அப்துல் காதிறு லெப்பை வெள்ளாட்டி மசலா என்ற நூலையும் பாடியுள்ளனர். நூறு மசலாவின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

கதை, நூல், வரலாறு எனப் பொருள்படும் நாமா என்ற இலக்கியத்தை மிஃராஜ் நாமா என்ற நூலாக மதாறு சாகிபு புலவரும், நூறு நாமாவை செய்யதகம்மது மரைக்காயரும் பாடியுள்ளனர். நாமா என்பது பாரசீக இலக்கிய வகையாகும்.

தமிழ் நாட்டுப்புறப் பாடல் வடிவங்கள்

பாமரரும் படித்து இன்புறும் வகையில் இனிய எளிய சொற்களைக் கொண்டு, தமிழரிடையே காலம் காலமாக வழங்கி வருகின்ற நாட்டுப்புறப் பாடல் மரபையும் கொண்டு இசுலாமியப் புலவர்கள் இலக்கியம் இயற்றியுள்ளனர். ஏசல், சிந்து, கும்மி, தாலாட்டு, கீர்த்தனை, தெம்மாங்கு, ஊஞ்சல் பாட்டு, தோழிப் பெண்பாட்டு எனப் பலவகைகளில் அவர்கள் இலக்கியம் படைத்தனர்.

காதல் பற்றியும் சமயம் பற்றியும் பள்ளு இலக்கியத்தில் ஏசல் என்ற சிறுபகுதி அமையும். அதைப் பின்பற்றிச் சமயக் கோட்பாடுகளை விளக்குவனவாய் நபிகள் நாயகம் பேரில் ஏசல் கண்ணிகள், முகியத்தீன் ஆண்டவர் பேரில் தாய்-மகள் ஏசல் என்பன இயற்றப் பெற்றன.

காவடிச் சிந்து மெட்டமைப்பில் நவநீத ரத்னாலங்காரச் சிந்து, பூவடிச் சிந்து என்பன பாடப் பெற்றன.

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் சீவிய சரித்திரக் கும்மி, செய்கு முஸ்தபா ஒலியுல்லா கும்மி, திருக்காரண சிங்காரக் கும்மி என்பன கும்மி அமைப்பில் பாடப் பெற்றன.

அசலானிப் புலவர், ஞானத் தாலாட்டு, சுகானந்தத் தாலாட்டு, மணிமந்திரத் தாலாட்டு, மீறான் தாலாட்டு, பாலகர் தாலாட்டு என்பனவற்றை இயற்றியுள்ளார்.

சீறாக் கீர்த்தனை, ஆதி நூதன அலங்காரக் கீர்த்தனை என்ற இரண்டு கீர்த்தனை நூல்களும் மென்னான ஆனந்தக் களிப்பு என்ற நூலும் இந்த நூற்றாண்டில் இயற்றப் பெற்றன.

ஒழுக்க நூல்

மனிதர்களின் ஒழுக்கம், பின்பற்ற வேண்டியவை, செய்ய வேண்டிய கடமைகள், சான்றோரால் விலக்கப் பெற்றவை முதலியவற்றை விளக்கும் நூல்களே ஒழுக்க நூல்களாகும். அவ்வகையில ஆசாரக் கோவை என்ற நூலை அப்துல் மஜூதும் திருநெறி நீதம் என்ற நூலை பீர்முகம்மது சாகிபுவும் பாடியுள்ளனர்.

3.7.2 கிறித்தவத் தமிழ் இலக்கியம் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி, நம் நாட்டில் தமது சமயத்தைப் பரப்ப வந்த ஐரோப்பியரும் தமிழ்த் தொண்டு புரிந்தனர். தமிழ் மொழியை முறையாகக் கற்ற அவர்களுள் ஏறத்தாழ 30 பேர் தமிழுக்கு இலக்கியத் தொண்டும் புரிந்துள்ளனர் என்கிறார் மது.ச. விமலானந்தம். அவர்களுள் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் மூன்று பேராவர்.

இரேனியஸ்

தமிழில் தேர்ந்த அறிஞர் என்று போப் ஐயரால் பாராட்டப் பெற்ற இரேனியஸ் ஜெர்மன் நாட்டவர். சமயப்பணி மூலம் இந்துக்கள் பலரைக் கிறித்தவராக்கினார். பாளையங்கோட்டையில் பெண்கள் கல்லூரி ஒன்றைக் கட்டினார். புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தார். தமிழ் கற்கும் ஐரோப்பியருக்காக, A Grammar of Tamil Language என்ற நூலை எழுதினார். ஞான போசன விளக்க வினாவிடை, வேதப்பொருள், பூமி சாத்திரம், இலக்கணநூற் சுருக்கம், மோட்ச மார்க்கம், வேத உதாரணத் திரட்டு, வேத சாத்திரச் சுருக்கம், பொது அறிவு நூலான பலவகைத் திருட்டாந்தம் என்ற நூல்களை எழுதியுள்ளார்.

வீரமா முனிவர்

வீரமா முனிவர் என்று தமிழ்ச் சங்கத்தாரால் பாராட்டப் பெற்ற கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி இத்தாலியில் பிறந்தவர். தம் முப்பதாவது வயதில் சமயம் பரப்பத் தமிழகம் வந்தார். பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, இத்தாலி, பாரசீக, ஆங்கில மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார். தமிழைச் சுப்பிரதீபக் கவிராயரிடம் 20 ஆண்டுகள் கற்றார். தெலுங்கு, வடமொழியையும் கற்றார். தமிழர் பலரைக் கிறித்தவராக்கியதால், சைவர் இவர் மீது பகைமை கொண்டனர். பல நூல்கள் எழுதி இவரைக் கண்டித்தனர். தமது 66ஆம் வயதில் அம்பலக்காட்டில் மறைந்தார்.

வீரமா முனிவர்

இவரியற்றிய செய்யுள் நூல்கள்:

(1)திருக்காவலூர்க் கலம்பகம்

(2)கித்தேரி அம்மாள் அம்மானை

(3)அடைக்கல மாலை

(4)அடைக்கல நாயகி வெண்கலிப்பா

(5)அன்னை அழுங்கல் அந்தாதி

(6)தேவாரம்

(7)வண்ணம்

(8)தேம்பாவணி என்ற காப்பியம்

உரைநடை நூல்கள்:

(1)வேதியர் ஒழுக்கம்

(2)வேத விளக்கம்

(3)பேதகம் அறுத்தல்

(4)லூத்தோர் இனத்தியல்பு

(5)கடவூர்நாட்டு திருச்சபைக்குத் திருமுகம்

(6)திருச்சபைக்குப் பொதுத் திருமுகம்

(7)திருச்சபைக் கணிதம்

பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை ததும்பும் நூலைப் படைத்ததன் மூலம் தமிழின் அங்கத இலக்கியத்தைத் (Satire) தோற்றுவித்த பெருமையைப் பெறுகிறார். பைந்தமிழுக்கு இவர் ஆற்றிய பணிகள் பின்வருமாறு:

தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. சொற்களிடையே இடம் விட்டு எழுதுதல், நிறுத்தல் குறி, முற்றுப்புள்ளி என்பவற்றை அறிமுகம் செய்தது.

‘லூத்தோர் இனத்தியல்பு’ என்ற நூலில் முதன்முதலாகப் பொருளடைவை இடம் பெறச் செய்தது.

குட்டித் தொல்காப்பியம் எனப் புகழப் பெறும் தொன்னூல் விளக்கமும், கொடுந்தமிழ் இலக்கணமும் இயற்றியது.

திருக்குறளின் முதலிரு பால்களை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தது.

விவிலிய போதனை, ஆராதனை இரண்டும் தமிழில் நடத்தியது.

பெயர், பொருள், தொகை, தொடை என்ற 4 பகுதியாகத் தமிழில் அமைந்த சதுர் அகராதி, தமிழ் – லத்தீன் அகராதி, போர்ச்சுகீசியம் – தமிழ்- லத்தீன் அகராதி இயற்றியது.

இதனாலேயே இவர் தமிழ் அகராதியின் தந்தை எனப் போற்றப்படுகிறார். தமிழில் அமைந்த நல்ல நீதிகளைத் தொகுத்து, தமிழ்ச் செய்யுள் தொகை என்ற தொகுப்பு நூலை வெளியிட்டது.

காப்பியம் இலக்கியம், இலக்கணம் போன்ற பதினைந்து துறைகளில் பைந்தமிழை இவர் சிறக்கச் செய்து உள்ளார் எனப் போற்றுகிறார் மது.ச.விமலானந்தம்.

3.8 பல்துறை நூல்கள்

மொழிபெயர்ப்பு நூல்களும் சிற்றிலக்கியங்களும் பல்கிப் பெருகிய இந்த நூற்றாண்டில் அரிய செய்திகளை உடைய பல்துறை நூல்களும் தோன்றின.

3.8.1 தாயுமானவர் பாடல்கள் தாயுமானவர்

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1706-1744) திகழ்ந்த பெரியார் தாயுமான சுவாமிகள். திருமறைக் காட்டிலே சைவ வேளாளர் குலத்திலே கேடிலியப்பப் பிள்ளையின் இரண்டாவது மகனாய்ப் பிறந்தார். திரிசிரபுரத்தில் விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரின் கணக்கராகத் தந்தை பணி புரிய, வட மொழி, தென்மொழி இரண்டுங் கற்ற இவர் மௌன குரு என்பாரிடம் அறிவுரை பெற்றார். தந்தையார் இறந்தவுடன் அரசு வேலையிலமர்ந்தார்; நாயக்கர் இறந்த பின் அரசி மீனாட்சி தன்பாற் காட்டிய முறையற்ற அன்பு காரணமாக ஒரு நாளிரவு ஊரை விட்டோடினார். இராமநாதபுரத்தின் தன் தமையனோடு இருந்தார். அவர் கட்டாயப்படுத்தியதால் மட்டுவார்குழலி என்ற பெண்ணை மணந்தார். கனகசபாபதி எனும் ஆண்குழந்தை ஈன்ற மனைவி மறையவே யோகஞானங்களில் சிறக்கத் துறவு பூண்டார். சைவ சித்தாந்தம், அத்வைதம் ஆகிய இரு நிலைக்கும் ஒரு வகை சமரசம் கண்டவர். ‘உபநிடதக் கருத்துகளையும் மற்ற ஞான நூல்களின் உட்பொருளையும் மிகத் தெளிவாகத் தமிழில் பாடியவர்’ என பேராசிரியர் மு.வரதராசனார் இவரைப் பாராட்டுகிறார். இவரது பாடல்கள் தமிழ்மொழியின் உபநிடதம் எனப்படுகின்றன.

ஆழ்வார்களைப் போன்று காதல் துறைகளின் வாயிலாக உயர்ந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்தினார். கண்ணி என்றழைக்கப்படும் இரண்டடிப் பாடல் வகையை இவர் கையாள்கிறார். இவரது பாடல்கள் அனைத்தும் தாயுமானவர் பாடல்கள் என்ற நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. சிற்சில இடங்களில் சித்தர் கருத்தை ஒத்துப் பாடும் இவர், தம் காலத்தில் சமயப் போராட்டங்களையும் பூசல்களையும் கண்டு மனம் வெறுத்துச் சமரச ஒளியையே அதிகம் பாடியுள்ளார். தேசோமயானந்தம், கருணாகரம், பரஞ்சோதி, பரதெய்வம் போன்ற சொற்கள் இவர்க்கே உரியவை. “சும்மா இருக்க அருளாய்” என்று இறைவனிடம் வேண்டுபவர்,

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே

(பராபரக்கண்ணி – 221)

என்று பாடுகிறார்.

தான் செய்யும் இறைவழிபாட்டை,

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே

மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே

(பராபரக்கண்ணி -151)

என்று கூறுகிறார். ஆனந்தக் களிப்பு, பைங்கிளிக் கண்ணி, ஆகாரபுவனம் என்பன கண்ணி வடிவில் அமைந்தவை. மொத்தம் 1452 பாக்களை 56 பிரிவுகளில் இவர் பாடியுள்ளார்.

பொய்யுலகும் பொய்யுறவும் பொய்யுடலும்

பொய்யெனவே

மெய்யநினை மெய்யெனவே மெய்யுடனே

காண்பேனா – காண்

(காண்பேனா கண்ணி – 6)

என்று ஏங்கிய இவர் 1659-இல் இராமநாதபுரத்தில் உள்ள முகவையில் நித்திய சமாதியடைந்தார்.

3.8.2 பிற படைப்புகள் அச்சான தமிழ் நூல்களின் வகைதொகைப் பட்டியல் என்ற நூலை ஆங்கிலத்தில் ஜான்மர்டாக் (1865) எழுதி வெளியிட்டார்.

அரபுத் தமிழ் அகராதி குலாம் காதிறு நாவலரால் வெளியிடப் பெற்றது.

அரும்பொருள் விளக்க நிகண்டு, உசித சூடாமணி நிகண்டு, பொதிகை நிகண்டு, பொருட்டொகை நிகண்டு, ஒளவை நிகண்டு என்பன இந்நூற்றாண்டில் தொகுக்கப் பெற்றுள்ளன.

பிரபந்த மரபியல் என்னும் பாட்டியல் நூல் இக்காலப் பகுதியில் தோன்றியது. பிரபந்தங்கள் தொண்ணூற்று எனக் கூறும் முதல் பாட்டியல் நூல் இதுவே ஆகும். ஆயினும் இதில் 72 இலக்கிய வகைகளுக்கு மட்டுமே இலக்கணம் உள்ளது. இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.

3.9 தொகுப்புரை

பதினெட்டாம் நூற்றாண்டைப் பொருத்தவரை, வைணவர்களும் சைவர்களும் புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என்பவற்றையே போற்றினர். மடங்கள் மற்றும் செல்வர்களின் ஆதரவு பெற்றோர் மரபு போற்றியும், பிறர் விருப்பத்தை நிறைவேற்றவும் நூல்கள் இயற்றினர். மராட்டிய, நவாபு மன்னர்கள் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தனர். மருத்துவம், அகராதி, நிகண்டு, கீர்த்தனை, மொழிபெயர்ப்பு, தொகை நூல், நாவல், உரைநடை எனப் பல புதிய வடிவங்கள் தமிழுக்குக் கிடைத்தன. தமிழ் லெக்சிகன் தொகுக்கப் பெற்றது. தமிழின் பெருமையை உலகறியும்படி ஐரோப்பியரும் மேனாட்டவரும் செய்தனர். இசுலாமியத் தமிழ் இலக்கியம் தோன்றியது. திருப்புகழின் தாக்கத்தால் பல நூல்கள் இயற்றப் பெற்றன. ஏற்றம், சிந்து, கும்மி, ஆனந்தக் களிப்பு போன்ற நாட்டுப்புற வடிவங்கள் ஏற்றம் பெற்றதுடன் இசுலாமிய, கிறித்தவச் சமயங்களிலும் புராணங்கள், புதிய இலக்கிய வகைகள் தோன்றின. மொத்தத்தில் பதினெட்டாம் நூற்றாண்டு தமிழ் மறுமலர்ச்சியின் தொடக்கக் காலம் எனலாம்.

பாடம் - 4

பத்தொன்பதாம் நூற்றாண்டு

4.0 பாட முன்னுரை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சி ஓங்கியது. கிறித்தவமும் இசுலாமியமும் ஆதரவு பெற்று வளர ஆட்சியாளர் காரணமாயினர். கிறித்தவ மிஷினரிகளும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களும் தமிழ்க் கல்வியிலும் தமிழ்மொழி வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டினர். பதிப்புக் கலையும் அச்சுக் கலையும் ஏற்றம் பெற்றதால், பழைய தமிழ் நூல்கள் அச்சேறின. உரைநடை வளர்ந்தது. மரபு வழியிலான புராணங்கள், சிற்றிலக்கியங்கள், தோத்திரப்பாக்கள், இலக்கண நூல்கள் ஆகியவை இந்நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்ற, இசை நாடகங்கள், கீர்த்தனைகள், அகராதி, தொகை நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், மேடை நாடகங்கள், பல்துறை நூல்கள் ஆகியவை நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றின. சிலேடை, யமகம், சித்திரகவிகள் என்பவற்றில் இந்நூற்றாண்டின் முற்பகுதியினர் மூழ்கியிருக்க, சிந்து, கண்ணி, கீர்த்தனை என்ற வடிவங்கள் செய்யுளாகவும் நாடகங்களாகவும் இசைப் பாடல்களாகவும் ஏற்றம் பெற்றன. உயர்ந்தோர் கையாண்ட இலக்கியத்தை ஆங்கிலேயரின் பணியும் அரசியல் நிலையும் பரவலாக்கின. தமிழரிடையே படிக்கும் பழக்கம் அதிகமாயிற்று. எதையும் வரலாற்று அறிவுடன் பார்க்கும் திறன் பெருகியது. ஆறுமுக நாவலர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பெ. சுந்தரம் பிள்ளை, இராமலிங்க அடிகள், மஸ்தான் சாகிபு, போப், கால்டுவெல் போன்றோர் இந்நூற்றாண்டில் குறிப்பிடத்தக்கவர்கள்.

4.1 மரபு சார்ந்த இலக்கியங்கள்

சென்ற நூற்றாண்டைப் போலவே இந்நூற்றாண்டிலும் மடத்தின் ஆதரவிலும் செல்வர்களின் ஆதரவிலும் சிற்றரசர்களின் ஆதரவிலும் இலக்கியங்கள் தோன்றின. இப்பிரிவில் குறிப்பிடப்படுபவர்கள் எல்லாம் வானாளாவிய கற்பனை, சொல் அலங்காரங்கள், சித்திரக்கவிகள் என்பனவற்றில் கட்டுண்டு மரபு வழியான இலக்கியங்களையே படைத்தவர்கள், தெய்வத்தின் பேரிலும் ஊரின் பேரிலும் வள்ளல்களின் பேரிலும் இவர்கள் இலக்கியங்களைப் படைத்தனர்.

4.1.1 மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை மகாவித்வான் என்று பாராட்டப் பெறும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீனத்தின் மடத்துப் புலவராக விளங்கியவர். சிவஞான முனிவரைப் போன்றே புலமைப் பரம்பரையை உருவாக்கியவர். நவீன கம்பர் என்றும் பிற்காலக் கம்பர் என்றும் போற்றப் பெறுபவர். நாளொன்றுக்கு நானூறு பாடல் பாடும் ஆற்றல் பெற்றவர். 4 வகைக் கவிகளும் பாடவல்லவர். இவர் இயற்றிய 22 புராணங்களுள் 16 தலபுராணங்கள், பிள்ளைத் தமிழ் 10, அந்தாதி 16, உலா 1, மாலை 4, கோவை 3, கலம்பகம் 2 தவிர சேக்கிழார் பிள்ளைத்தமிழ், தில்லையமக அந்தாதி, திருவானைக்கா இரட்டை மணிமாலை என 61 நூல்கள் இயற்றியுள்ளார். இவரிடம் கல்வி கற்ற 11 பேர் தலைசிறந்த நூல்களைப் படைத்துள்ளனர். பழந்தமிழ் இலக்கிய வர்ணனைகள், கற்பனைகள், சொல் அலங்காரங்கள் எல்லாம் நிறைந்து இருந்தன.

சேக்கிழார் பக்திச்சுவை ததும்பப் பெரியபுராணம் பாடினார். அவரை அழகானதொரு வரியில் பின்வருமாறு பிள்ளையவர்கள் கூறுகின்றார்:

பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ

(வலவ = அறிஞன்)

4.1.2 இராமலிங்க அடிகள் இராமலிங்கர் வடலூர் சபை

இளமையிலேயே கவிதை பாடும் ஆற்றலை இறையருளால் பெற்றார் இராமலிங்கர்; அவரது எதிரிகள் கூட வணங்கிப் போற்றும் தூய வாழ்க்கை வாழ்ந்தவர். விருத்தம் எனும் பாவகையில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார். தாயுமானவர் போன்று சமய சமரச நெறியைப் போற்றியவர்; அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை என்பது இவரது தாரக மந்திரம். கீர்த்தனை, கும்மி, கண்ணி, சிந்து முதலிய நாட்டுப்புற வடிவங்களைத் தம் பாடலில் கையாண்டவர்.

சைவ, வைணவச் சமயங்களிடையே ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியை இந்நூற்றாண்டுப் புலவர்தம் படைப்புகளில் கண்டதாலோ என்னவோ சமயங்களிடையே சமரசத்தை வலியுறுத்துகிறார். “வைணவர்கள் சிவனையோ, சைவர்கள் திருமாலையோ போற்றிப் பாடாத காலத்தில் இவர் திருமாலின் மேல் ஸ்ரீராம நாமத் திருப்பதிகம், ஸ்ரீவீரராகவப் பெருமாள் போற்றித் திருப்பஞ்சகம் பாடியுள்ளார்” என்று வியக்கிறார் மு.வ.

இவருடைய பாடல்களை இவரது மாணவர்கள் அருட்பா என்று பெயரிட்டு அழைத்தனர். அதுவரை தேவார, திருவாசகத்தை மட்டுமே அவ்வாறு அழைத்து வந்தனர். இதனால் ஆறுமுக நாவலர் அருட்பா என்று அழைப்பது தவறென நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்; பின் தோற்றார்.

ஜீவகாருண்யம், ஆன்மநேய ஒருமைப்பாடு, சோதி வழிபாடு என்பவற்றைப் போற்றிய அடிகள் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற 2 உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். ஏறத்தாழ 6000 பாக்கள் கொண்ட திருவருட்பாவையும் வியாக்கியானங்கள், மருத்துவம், உபதேசம், கடிதம், அழைப்பிதழ், விண்ணப்பங்கள் எனப் பல்துறையிலும் படைப்புகளைப் படைத்துள்ளார்.

இராமலிங்கரின் பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுத்தவரும் வகுத்தவரும் முதன் முதலில் பதிப்பித்தவரும் தொழுவூர் வேலாயுத முதலியார். இறைவனைக் காதலனாகவும் தன்னைக் காதலியாகவும் கொண்டு பாடப்பட்ட பல பாடல்களை அருட்பாவில் நாம் காணலாம். “ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே” என்று தான் பாடல்களை இயற்றிய காரணத்தைக் கூறுகிறார். சிறிது கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் தம் பாடல் பயன்பட வேண்டுமென்பதே இவரது நோக்கம். நாரையையும், கிளியையும் இறைவனிடம் தூது அனுப்பும் முறையிலும், மாணிக்கவாசகரைப் பின்பற்றி உந்தீபற, என்றும் அடைக்கலமே என்றும் ஊதூதுசங்கு என்றும் முடியும் பாடல்களைப் பாடியுள்ளார்.

எளிய சொற்களுக்கு இடையே மிக நுட்பமான தத்துவ அனுபவங்கள் பொதிந்த, ஆழ்ந்த பாடல்களும் உண்டு.

ஆணிப்பொன் அம்பலத்தே கண்ட காட்சிகள்

அற்புதக் காட்சியடி அம்மா

அற்புதக் காட்சியடி (காட்சிக்கண்ணி – பாடல் 5)

வானத்தின் மீதுமயிலாடக் கண்டேன்

மயில் குயில் ஆச்சுதடி – அக்கச்சி

மயில் குயில் ஆச்சுதடி

என்ற பாடல்கள் அத்தகையன.

“தமிழ்க் கவிதைக்குத் தெளிவும் எளிமையும் உருக்கமும் தந்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய பெருமை இராமலிங்கரையே சாரும்” என்கிறார் மு.வ.

4.1.3 சிவக்கொழுந்து தேசிகர் சிவக்கொழுந்து தேசிகர் தஞ்சையில் ஆட்சி புரிந்த மராட்டிய அரசர் சரபோஜியின் அரசவைப் புலவராக இருந்தவர். இரண்டு தலபுராணங்களும் மூன்று உலா நூல்களும் ஒரு கோவையும் சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகமும் இயற்றினார். இவருடைய பாட்டுகள் எல்லாம் பழைய இலக்கியப் பாங்கில் அமைந்தவை. இவரது பாடல்களை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போற்றி மனப்பாடம் செய்தார்.

4.1.4 வேலுச்சாமிக் கவிராயர் வெண்பாப் பாடுவதில் வல்ல வேலுச்சாமிக் கவிராயர் கந்தபுராண வெண்பா, திருக்கச்சூர் ஆலக்கோயில் புராணம், திருவேட்டக்குடிப் புராணம், தில்லை விடங்கன் புராணம், தில்லை நிரோட்டக யமக அந்தாதி, தேவாரச் சிவத்தல வெண்பா போன்ற நூல்களைப் பாடியுள்ளார். இவர் சிவகங்கைச் சிற்றரசரால் ஆதரிக்கப்பட்டார். வெண்பா பாடுவதில் சிறந்து விளங்கிய இவரை வெண்பாப்புலிக் கவிராயர் என்பர்.

4.1.5 சோமசுந்தர நாயகர் வடமொழி, தென்மொழி என்னும் இருமொழிச் சமய நூல்களையும் கற்றவர். வைணவத்தில் இருந்து கடும் சைவப் பற்றாளராக மாறியவர். சமயச் சொற்பொழிவு ஆற்றுவதில் இணையற்ற திறமை பெற்றவர். பாஸ்கர சேதுபதி மன்னன் அவையில் வைதிக சைவ சித்தாந்த சண்ட மாருதம் என்ற பட்டம் பெற்றவர். சைவசமய உண்மைகளை விளக்கும் உரைநடை நூல்கள் நூற்றுக்கும் மேல் இயற்றினார். அவற்றில் வடமொழிப்புக் கலப்பு மிகுதி. செந்தமிழ்ச் சொற்களால் ஆன செய்யுள்கள் பலவும் எழுதியுள்ளார். பரசமய கோளரி என்றும் பாராட்டப் பெற்றார். பிரமாநுபூதி, சிவநாமப் பஃறொடை வெண்பா, ஆச்சாரியப் பிரபாவம், ரத்நாவளி என்பன இவரியற்றிய நூல்களுள் சில. மறைமலையடிகள் இவரது மாணவர்.

4.1.6 தண்டபாணி சுவாமிகள் தண்டபாணி சுவாமிகள்

எட்டு வயதிலேயே கவி பாடியவர். முருகபக்தி காரணமாக இளவயதிலேயே முருகதாச சுவாமிகள் என்று போற்றப்பட்டார். திருப்புகழ் போலச் சந்தப்பாக்கள் பல பாடியதால் திருப்புகழ் சுவாமிகள் என்று போற்றப்பட்டார். அருணகிரி நாதர் வரலாற்றை ஒரு புராணமாகப் பாடியுள்ளார். புலவர்களின் வரலாறுகளைக் கூறும் புலவர் புராணம் இவர் இயற்றியதே ஆகும். வண்ணங்கள் பாடும் தன்மையால் இவர் வண்ணச் சரபம் என்றும் அபர அருணகிரிநாதர் என்றும் சரபகவி வித்வான் என்றும் போற்றப்படுகிறார்.

தில்லைத் திருவாயிரம், தெய்வத் திருவாயிரம், ஏழாயிரப் பிரபந்தம், திருச்செந்தூர்க் கோவை, திருச்செந்தூர்த் திருப்புகழ், திருமயிலைக் கலம்பகம், சென்னைக் கலம்பகம் முதலிய நூல்களையும், ஆமாத்தூர்த் தலபுராணம், அறுவகை இலக்கணம் என்ற இலக்கண நூல்களும் இயற்றியுள்ளார்.

4.1.7 பூவை கலியாண சுந்தர முதலியார் பூவை கலியாண சுந்தர முதலியார் கற்பக விநாயகர் பதிகம், சித்தாந்த சாதனக் கட்டளை, காமாட்சி அம்மன் பதிகம், மாசிலாமணியீசர் பதிகம், சுந்தர விநாயகர் பதிகம், திருவான்மியூர் புராணம், சித்தாந்தக் காரியக் கட்டளை, திரிபுரசுந்தரி மாலை என்பவற்றுடன் சேக்கிழார் வரலாறு, செய்யுள் இலக்கணம், காளத்தி, புராண வசனம், திருவேற்காட்டுப் புராண வசனம், திருவொற்றியூர்ப் புராண வசனம் என 15 உரைநடை நூல்களும் எழுதியுள்ளார்.

4.2 சிற்றிலக்கியங்களும் பல்துறை நூல்களும்

கல்வியிற் சிறந்த பெரியோர் பலர் தமது புலமையை வெளிக்காட்ட இந்த நூற்றாண்டில் பல சிற்றிலக்கியங்களைப் படைத்தனர். அவற்றை இனிக் காண்போம்.

4.2.1 அழகிய சொக்கநாதப்பிள்ளை சிலேடை பாடுவதில் வல்ல அழகிய சொக்கநாதப்பிள்ளை திருநெல்வேலியைச் சார்ந்த தச்ச நல்லூரில் பிறந்தவர். தம்மை ஆதரித்து வந்த முத்துச்சாமிப் பிள்ளை என்பவர் மீது காதல் பாடியுள்ளார். 1885ல் மறைந்த இவர், அனவரதநாதர் பதிகம், காந்தியம்மை பதிகம், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழ்க் கலித்துறையந்தாதி, சங்கரநயினார் கோயில் அந்தாதி, சிங்காரப் பதம், நெல்லை நாயகமாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் கோதையந்தாதி என்ற நூல்களைப் படைத்துள்ளார்.

கல்லா லடியுறலாற் கண்மூன் றிருப்பதனால்

எல்லோரும் பூசைக் கெடுத்திடலால் – வல்லோடு

கொள்ளுகையாற் கங்கா குலமுத்துச் சாமிமன்னா

கள்ளிதழி யானிகர்தேங் காய்

என்ற பாடலில் சிவபெருமானுக்கும் தேங்காய்க்கும் சிலேடை கூறுகிறார். கல்லால் அடிபடல், முக்கண் இருத்தல், பூசைக்குரியதாதல், வன்மையான ஓட்டைப் பெற்றிருத்தல் ஆகிய காரணங்களால் சிவனும் தேங்காயும் ஒன்று என்கிறார் பிள்ளை.

4.2.2 இராமச்சந்திரக் கவிராயர் தொண்டை மண்டலத்தில் இராசு நல்லூர் என்னும் ஊரில் பிறந்து சென்னையில் வசித்தவர். எல்லிஸ் துரையால் புகழ்ந்து பாடப் பெற்றவர். சதபங்கி, நவபங்கி எனப்படும் சித்திரக் கவிகள் பாடுவதில் வல்லவர். இவர் சகுந்தலை விலாசம், தாருகா விலாசம், இரங்கோன் சண்டை நாடகம், இரணியவாசகப்பா முதலிய நாடகச் சார்பான நூல்களை இயற்றி உள்ளார். துன்பங்கள் பலவும் ஒருங்கு சேர்ந்து ஒருவனை வருத்தும் இயல்பை ஒரு தனிப்பாடலில் பின்வருமாறு குறித்துள்ளார்:

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ

அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ

மாவீரம் போகுதென்று விதைகொண் டோட

வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்

சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்

தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்

கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்

குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே

பசு ஈனுதல், மழை பொழிந்ததால் வீடு இடிந்து விழுதல், மனைவி உடல் நலமின்மை, அடிமை இறப்பு, கடன்காரர் மறிப்பு, விருந்து வரல், பாம்பு தீண்டல், அரசன் வரி கேட்டல், குருக்கள் தட்சணை கேட்டல் எனத் துன்பங்கள் அடுத்தடுத்து வந்தால் ஒருவன் என்ன செய்வான்? பாவம்!

4.2.3 மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பழனியில் கம்மியர் குலத்தில் பிறந்தவர். மூன்று வயதிலேயே அம்மை நோயால் தன் கண்பார்வையை இழந்தவர். நூல்களைப் பிறர் படிக்கக் கேட்டு உணர்ந்தார். முத்துராமலிங்க சேதுபதியிடம் கவிச்சிங்க நாவலர் என்ற பட்டம் பெற்றவர். அட்டநாக பந்தம், சதுரங்க பந்தம் முதலியவற்றிற்கு இலக்கணம் வகுத்துள்ளார். சிலேடை பாடுவதில் வல்லவர். ஏகசந்தக் கிரஹி, (ஒரு தடவை கேட்டாலே மனப்பாடம் ஆக்கிக் கொள்ளும் வல்லமை படைத்தவர்) வள்ளல்களும் ஜமீன்தார்களும் புரக்க வாழ்ந்தவர். நிரோட்டகம் பாடுவதிலும் வல்ல இவர், தேவாங்கு புராணம், பழநித் திருவாயிரம் என்ற நூல்களும் சில சிற்றிலக்கியங்களும் பாடியுள்ளார். அவை மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பிரபந்தத் திரட்டு என்ற பெயரில் தொகுக்கப் பெற்று வெளியாகி உள்ளன.

4.2.4 மேலும் சில படைப்பாளர்கள் மேற்குறிப்பிட்டவர்களைத் தவிர வேறு பிற படைப்பாளர்களும், தம் படைப்புகளால் சிற்றிலக்கியத்தை வளப்படுத்தினார்கள்.

தொழுவூர் வேலாயுத முதலியார்

வள்ளலாரின் வரலாற்றை எழுதி அருட்பாவை வெளியிட்டவர். உபய கலாநிதிப் பெரும்புலவர் என்ற பட்டம் பெற்றவர். திருத்தணிகை இரட்டை மணிமாலை, மும்மணிக்கோவை, நான்மணிமாலை, கலம்பகம், நெஞ்சாற்றுப்படை என 24 நூல்களைப் பாடியுள்ளார். பெரியபுராணம், மார்க்கண்டேய புராணம் என்பவற்றை உரைநடையில் எழுதினார். வாழ்க்கை வரலாற்று நூல்களும் எழுதியுள்ளார்.

பூண்டி அரங்கநாத முதலியார்

கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்தாலும் தமிழும் ஆங்கிலமும் வல்லவர். ஏக சந்தக் கிரஹி. இவரது கச்சிக் கலம்பகம் புகழ் பெற்றது. பல தனிப்பாடல்கள் பாடி உள்ளார்.

சரவணப் பெருமாள் கவிராயர்

முத்துராமலிங்க சேதுபதியின் அரண்மனைப் புலவரான இவர் முதுகுளத்தூரில் பிறந்தவர். நகைச்சுவை நயம் விளங்கக் கற்பனையோடு தனிப்பாடல்கள் பாடுவதில் வல்லவர். பணம்விடுதூது, அசுவமேதயாகபுராணம், விநாயகர் திருமுக விலாசம் என்பவற்றைப் பாடியுள்ளார். அட்டாவதானம் செய்தவர், “வசைமொழிகளைத் தொகுத்து உரைப்பதில் வல்ல இவர் தமது செருக்கு தோன்றப் பாடுவதிலும் வல்லவர்” என்று இவரை கா.சு. பிள்ளை குறிப்பிடுகிறார்.

இராமானுசக் கவிராயர்

பார்த்தசாரதி மாலை, திருவேங்கட அநுபூதி, வரதராசப் பெருமாள் பதிற்றுப் பத்தந்தாதி முதலிய சிறு காப்பியங்களை இவர் இயற்றியுள்ளார். சில வள்ளல்களைப் புகழ்ந்து பாடியுள்ளார். ஆத்ம போதப்பிரகாசிகை என்னும் வடமொழி நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரால் எழுதப்பட்ட இலக்கணச் சுருக்கம் ஒன்று உண்டு. திருக்குறள், நறுந்தொகை, நன்னூல், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலிய நூல்களுக்குக் காண்டிகையுரை வகுத்து உள்ளார். இவருடைய மாணவரான வேதகிரி முதலியார் மநுநீதி சதகம், நீதிசிந்தாமணி என்ற நீதி நூல்களை எழுதி உள்ளார்.

வீரராகவ முதலியார்

பொன்விளைந்த களத்தூர் என்ற ஊரில் பிறந்த இவர், திருவேங்கடக் கலம்பகம் திருக்கண்ணமங்கை மாலை, திருவேங்கட முடையான் பஞ்சரத்தினம், வரதராசர் பஞ்சரத்தினம், பெருந்தேவித்தாயார் பஞ்சரத்தினம் முதலிய நூல்களை இயற்றினார்.

பிச்சை இபுராகீம் புலவர்

இலக்கணக் கோடரி என்று புகழ் பெற்ற பிச்சை இபுராகிம் புலவர் ஆதமலை திருப்புகழ், சீதக்காதி பதிகம், நாகூர் பிள்ளைத்தமிழ், நாயகத் திருப்புகழ், மொகிதீன் ஆண்டவர் மாலை என 14 நூல்களை இயற்றியுள்ளார்.

புரசை சபாபதி முதலியார்

சந்தப்பாக்களும் வண்ணமும் பாடுவதில் வல்லவர். திருப்போரூர்ப் புராணம், திருப்போரூர்க் குறவஞ்சி, திருப்போரூர்க் கலம்பகம், வெண்பா மாலை, நான்மணிமாலை போன்ற 33 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

4.2.5 பல்துறை நூல்கள் ஆறுமுக நாவலரின் தந்தையான கந்தப்பிள்ளை என்பவர் இராமவிலாசம், சந்திர காசம் என்ற இசைநாடகங்களை இயற்றினார். தஞ்சை அனந்தபாரதி அய்யங்கார் என்பவர், உத்தர ராமாயண கீர்த்தனை, பாகவத தசமஸ்கந்த நாடகம், யானை மேலழகர் நொண்டிச் சிந்து என்ற இசை நாடக நூல்களை இயற்றி உள்ளார். புரசை வாக்கம் பரசுராம கவிராயர் என்பவர் சிறுத்தொண்டர் விலாசம் என்ற நூலை இயற்றினார். இக்கால கட்டத்தில் தான் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் இன்னிசைக் காவடிச் சிந்துகளைப் பாடினார்.

சந்திரசேகர கவிராச பண்டிதர் என்பவர் முதன்முதலில் தனிப்பாடல்களை எல்லாம் தொகுத்துத் தனிப்பாடல் திரட்டு என்று வெளியிட்டார். இதுவே முதல் தனிப்பாடல் திரட்டு.

பூண்டி அரங்கநாத முதலியார் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம் பற்றிப் பேசியும் எழுதியும் வந்தார்.

அமிர்தம் பிள்ளை என்பவர் வெண்பாவில் அமைந்த பெண்மை நெறி விளக்கம் என்ற நூலைப் பாடினார்.

சேலம் ராமசாமி முதலியார் சென்னையில் இருந்து Law Journal என்ற ஏட்டினை நடத்தினார். தேவராய சுவாமிகள் கந்தர் சஷ்டி கவசம் என்ற நூலை இயற்றினார்.

மேகதூதம், பகவத்கீதை, இதோபதேசம், சாந்தோக்கிய உபநிடதம் என்பவை யாழ்ப்பாண நாகநாத பண்டிதரால் மொழிபெயர்க்கப்பட்டன. எட்டயபுரம் மீனாட்சி சுந்தரம் கவிராயரால் குவலயா நந்தமும் கணபதிபிள்ளை என்பவரால் பில்கணீயம் என்ற வடமொழிக் காப்பியமும் மொழிபெயர்க்கப்பட்டன.

1876இல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தாதுவருடக் கொடிய பஞ்சம் நாட்டுப்புறப் பாடல் வடிவில் பிரமனூர் மிராசுக் கணக்கு வில்லியப்பப் பிள்ளை என்பவரால் பாடப் பெற்றுள்ளது.

தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் முயற்சிகளில் முன்னோடிகளாக இந்நூற்றாண்டில் தோன்றிய விநோதரச மஞ்சரி, திராவிடப் பிரகாசிகை என்பவற்றைக் கூறலாம். தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய ஆராய்ச்சி நூலை முதன் முதலில் எழுதியவர் சுந்தரம் பிள்ளை என மு.வ. கூறுகிறார்.

4.3 இலக்கணமும் அகராதியும்

தமிழ்க் கல்வி கற்ற சிலரே இலக்கண நூல்கள் படைத்தும் அவற்றிற்கு உரையெழுதியும் வந்துள்ளனர். சிற்சில அகராதிகளும் இந்த நூற்றாண்டில் தொகுக்கப் பெற்றன.

4.3.1 இலக்கண நூல்கள் முத்துவீரப்ப உபாத்தியாயர், விபுலாநந்தர், அரசஞ் சண்முகனார் போன்றோர் இலக்கண நூல்கள் பலவற்றை இயற்றினார்கள்.

முத்துவீரப்ப உபாத்தியாயர்

வித்வானாக இருந்த இவர், ஐந்திலக்கணம் பற்றிய முத்துவீரியம் என்ற நூலைப் பாடியுள்ளார். சூத்திரயாப்பில் இந்நூல் அமைந்துள்ளது.

விபுலாநந்தர்

இலக்கியம், சமயம், தத்துவ ஞானம், அறிவியல், இசை என்ற பல்துறைகளில் வல்ல விபுலாநந்தர் நாடகத்தின் இலக்கணமும் நாட்டியத்தின் இலக்கணமுமாக உள்ள மரபுகளைத் திரட்டி மதங்க சூளாமணி என்ற நூலைத் தந்துள்ளார். அரபத்த நாவலர் பரத நாட்டியத்தைச் செய்யுள் வடிவில் தந்து உள்ளார். இவர் எழுதிய யாழ்நூல் தமிழ் இசையைப் பற்றிய ஒரு கருவூலம் ஆகும்.

விபுலாநந்தர் வில்யாழ் மயில்யாழ்

அரசஞ் சண்முகனார்

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சார்ந்த புலவர் அரசஞ் சண்முகனார் இலக்கணம், இலக்கியம், சித்தாந்தம், சோதிடம் ஆகிய துறைகளில் வல்லவர். திருக்குறளில் ஆராய்ச்சி செய்த இவர், தொல்காப்பியப் பாயிர விருத்தி பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.

4.3.2 அகராதிகள் சிவ சுப்பிரமணியக் கவிராயர் எழுதிய நாமதீப நிகண்டு; வேதகிரி முதலியார் இயற்றிய – வேதகிரியார் சூடாமணி நிகண்டு, தொகைப் பெயர் விளக்கம் ஆகியவை; சுப்பிரமணிய தேசிகர் எழுதிய கந்த சுவாமியம்; முத்துச்சாமி பிள்ளையின் நாநார்த்த தீபிகை; வைத்தியலிங்கம் பிள்ளை இயற்றிய சிந்தாமணி நிகண்டு, கோபாலசாமி நாயக்கர் தொகுத்த அபிதானத்தனிச் செய்யுள் நிகண்டு, அருணாசல நாவலர் தொகுத்த விரிவு நிகண்டு என்பன இந்நூற்றாண்டில் அச்சேறிய நிகண்டுகளாம். இவை தவிர ஆசிரியர் பெயர் அறியப்படாத ஆரிய நிகண்டு, பொதிய நிகண்டு, ஒளவை நிகண்டு என்ற நூல்களும் உள்ளன. மருத்துவத்துறை சார்ந்த அகத்தியர் நிகண்டு, போகர் நிகண்டு, வான நூல் பற்றிய கால நிகண்டு, காரக நிகண்டு என்பன இந்நூற்றாண்டினவே.

4.4 இஸ்லாமியர் படைப்புகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இசுலாமியப் புலவர்கள் பலர் தமிழில் தம் சமயம் சார்ந்த கருத்துகளை விளக்கிப் பல படைப்புகளைப் படைத்தனர். அரபிய, பாரசீக இலக்கியங்களைப் பின்பற்றித் தமிழில் புதிய, புதிய இலக்கிய வகைகளைப் படைத்தனர். மக்களிடையே செல்வாக்குப் பெற்ற இலக்கியங்களான மாலை, ஏசல், சிந்து, கும்மி, கண்ணி என்பவற்றையும் படைத்தனர். இக்காலக் கட்டத்தில் தோன்றிய குணங்குடி மஸ்தான், செய்குத் தம்பி பாவலர், சேகனா லெப்பை போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

4.4.1 குணங்குடி மஸ்தான்சாகிபு இசுலாமியத் தாயுமானவர் என்று போற்றப் பெறும் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர் லெப்பை ஆலிம். இஸ்லாமியச் சமயப்பிரிவுகளில் ஒன்றான சூபி (Sufi) யைச் சார்ந்து மஸ்தான் (துறவி) பட்டம் பெற்றவர். இவர் பாடல்களைத் தொகுத்தவர் சீயமங்கலம் அருணாசல முதலியார். 1813இல் துறவியான பின் சென்னையிலே வாழ்ந்து மறைந்தார். அங்கு அற்புதங்கள் பல நிகழ்த்தினார் என்பர். பேச்சுத் தமிழின் நடையைத் தம் பாடல்களில் கையாண்ட இவர் தம் பாடல்களில் பல தாயுமானவர் பாடல்கள் போலச் சமரசக் கருத்துகளைக் கொண்டு விளங்குகின்றன. இவர் மனோன்மணிக் கண்ணி, முகையத்தீன் சதகம், அகத்தீசர் சதகம், நிராமயக் கண்ணி, ஆனந்தக் களிப்பு ஆகிய நூல்களை இயற்றி உள்ளார். இவரைத் திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயரும் அய்யாசாமி முதலியாரும் போற்றி நூல் இயற்றியுள்ளனர்.

ஏகப் பெருவெளியில் இருள்கடலில் கம்பமற்ற

காகம் அது வானேன் கண்ணே றகுமானே (7)

(ஏகம் = ஒன்று)

ஊனெடுத்த நாள்முதலா உபயோக மற்றநான்

கானில்நில வானேனென் கண்ணே றகுமானே (15)

(ஊன் = உடம்பு)

வேசந்தனைப் போட்டு மெய்மயக்கும் பொய்க்குருவாய்க்

காசுபணம் பறித்தேன் கண்ணே றகுமானே (47)

என்பன அவரியற்றிய றகுமான் கண்ணியின் சில பகுதிகள். இவரைப் பற்றிக் கா.சு. பிள்ளை அவர்கள் குறிப்பிடும் போது, “இவர் பாடல்கள் மிகவும் அன்பு விளைப்பன. கிறித்துமத கண்டனவச்சிர தண்டம் என்னும் ஒரு நூல் இயற்றியுள்ளார். இவர் தம் சொற்பொழிவுகள் திரட்டி அச்சிடப்பட்டுள்ளன. தேவைத் திரிபந்தாதி, அருணைச் சிலேடை வெண்பா மாலை என்ற நூற்களைப் படைத்ததன் மூலம் தன் இலக்கியப் புலமையை உணர்த்தியவர்” என்கிறார்.

4.4.2 சதாவதானம் செய்குத்தம்பி பாவலர் பதினாறு வயதிற்குள் பாப்புனையும் ஆற்றல் பெற்றுப் பாவலர் ஆனவர். சீறாப் புராணத்துக்கு உரை எழுதி உள்ளார். வள்ளலாரின் அருட்பா – மருட்பா விவாதம் நடந்த வேளையில் அருட்பா கட்சியில் நின்று அருஞ்சொற்பொழிவாற்றி வள்ளலாருக்குத் துணை புரிந்தார். அவதான அரசர் என்று போற்றப்படுகிறார். ஷம்சுத் தாசீன் கோவை, கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை, திருநாகூர்த் திரிபந்தாதி, திருக்கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ், நபிகள் நாயகமான்மிய மஞ்சரி, நாகைக் கோவை என்பவற்றைப் படைத்தார். நாகர்கோவில்காரரான இவருக்குத் தமிழக அரசு 1984இல் கோட்டம் எடுப்பித்தது.

4.4.3 சேகனா லெப்பை செய்கு அப்துல் காதர் நயினார் லெப்பை என்பது சேகனா லெப்பை என வழங்கப்படுகிறது. தமிழ், வடமொழி, அராபி, பார்சி முதலிய பன்மொழி வல்லவர். நபிகள் நாயகம் பற்றித் திருப்புகழ் பாடிய இவர் நவீன அகத்தியர் என்று பாராட்டப் பெறுகிறார். அட்டபந்தம், அந்தாதி, கமலபந்தம், நாகபந்தம் முதலிய சித்திர கவிகள் செய்துள்ளார். உமறுவின் சீறாவை நிறைவு செய்யும் வகையில் புதூகுஹ்ஷாம் என்ற புராணத்தை எழுதியுள்ளார்.

4.4.4 வண்ணக் களஞ்சியப் புலவர் ஹமீது இபுராகிம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் வண்ணப்பாக்கள் பாடுவதில் வல்லவர். நாகூர் தர்க்கா சாதுவின் வரலாற்றை மொகிதீன் புராணமாகப் பாடினார். இந்த நூலிற்காகப் பத்தானை மரக்காயர் தம் மகளை இவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். இராஜநாயகம், சுலைமான் நபியின்கதை, தீன் விளக்கம், குத்பு நாயகம் என்னும் நூல்களை இயற்றியுள்ளார்.

4.5 கிறித்தவர் படைப்புகள்

ஐரோப்பாவிலிருந்து சமயம் பரப்ப வந்து, தமிழ் கற்றுத் தொண்டு புரிந்த கிறித்தவர் மட்டும் அன்றி, கிறித்தவ சமயம் சார்ந்த தமிழ்நாட்டுப் பெருமக்களும் தமிழ்த் தொண்டாற்றி உள்ளனர். அவர் தம் பணி பற்றிக் காண்போம்.

4.5.1 ஐரோப்பிய கிறித்தவர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதி தொடங்கிச் சமயம் பரப்ப வந்த ஐரோப்பியர் தமிழ்த் தொண்டும் புரிந்தனர். தமிழ்மொழியை முறையாகக் கற்ற அவர்களுள் ஏறத்தாழ 30 பேர் தமிழ்த் தொண்டு புரிந்துளர் என்கிறார் மது. ச. விமலானந்தம். அவர்களுள் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். ஏறக்குறைய 10 பேராவார். அவர்களைப் பற்றி இனிக் காண்போம்.

டாக்டர் ஜி.யு.போப்

தமிழை முறையாகக் கற்ற போப் அவர்கள், 60 ஆண்டுகட்கும் மேலாகத் தமிழ்த்தொண்டு புரிந்தார். தனது கல்லறைமேல் நான் ஒரு தமிழ் மாணவன் என்று பொறிக்கப்பட வேண்டும் என விழைந்தவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து தமிழை உலகறியச் செய்தவர். மேல்நாட்டு அறிவுத் துறைகளான உளநூல், தத்துவ நூல், கணிதம், அளவை நூல் (Logic) என்பவற்றை முதன் முதலில் தமிழில் கற்பித்தவர் இவரே. திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை என்ற நூல்களின் சில பாடல்களையும் சிவஞான போதத்தையும் மொழி பெயர்த்தார். பல ஏடுகளில் தமிழ் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். தோடர் மொழி, துளுமொழி கற்று அவற்றின் இலக்கணத்தை வெளியிட்டார். தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என 3 பாகமாக எழுதினார். தமிழ்ப் புலவர்களையும், தமிழ்த் துறவிகளையும் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார்.

டாக்டர் கால்டுவெல்

அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் அவர்கள் 53 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தார். இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளுடன் தமிழ், தெலுங்கு, துளு, மலையாளம் போன்ற மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார் கால்டுவெல். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் ஓர் இனத்தைச் சார்ந்தவை என்பதை தாம் எழுதிய A Comparative Grammar of Dravidian Languages நூலில் புலப்படுத்தினார். தமிழ் மொழியின் வேர்ச் சொற்களைக் கொண்டு, பிறமொழிகளில் பயிலும் பல சொற்கள் தமிழ்ச் சொற்களின் சிதைவே என நிறுவினார். நெல்லை மாவட்ட வரலாற்றை ஆராய்ந்து எழுதிப் பரிசு பெற்ற இவர் கொற்கை, காயல், தூத்துக்குடி போன்ற துறைமுக இடங்களைத் தமது அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து வெளியிட்டார். நற்கருணைத் தியானமாலை, தாமரைத் தடாகம், ஞானஸ்நானம் போன்ற உரைநடை நூல்களும் இயற்றினார்.

வில்லியம் தெய்லர்

ஐரோப்பியர் தமிழைக் கற்க எளிதான பாடநூல்களைப் படைத்த தெய்லர், ஆர்வ மிகுதியால் செந்தமிழ் ஆய்வு புரிந்தார். கீழ்த்திசைக் கையெழுத்துச் சுவடி நிலையத்திலுள்ள ஏட்டுச் சுவடிகளின் பட்டியலை எழுதி வெளியிட்டார். வேதசாட்சி என்ற நூலை வெளியிட்டார். ராட்லர் என்பவர் அச்சிட்டு முடிக்காதுவிட்ட அகராதியை 1400 பக்கம் கொண்ட பேரகராதியாக வெளியிட்டார்.

எல்லீஸ் துரை

தமிழ், வடமொழி இரண்டையும் முறையாகக் கற்ற இவர் எல்லீசர் என்றும் அழைக்கப் பெறுகிறார். சென்னையில் வருவாய் வாரியச் செயலராக இருந்து, காணியாட்சி முறையும் வேளாண் சீர்திருத்தமும் கண்டவர். முத்துச் சாமி பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனிவரின் நூல்களை எல்லாம் தேடச் செய்தார். வீரமாமுனிவர் வரலாற்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். திருக்குறளின் முதல் 13 அதிகாரங்கட்கு முதன்முதலில் உரையெழுதினார். கால்டுவெல்லுக்கு முன்பே, திராவிட மொழிகளைக் கற்றுத் திராவிட மொழிகள் வடமொழியினின்றும் வேறானவை; கிளை மொழிகள் அல்ல; தனித்து இயங்குவன என்ற உண்மைக் கருத்துகளை வெளியிட்டார்.

பெர்சிவல் பாதிரியார்

ஆறுமுக நாவலரிடம் தமிழ் கற்று யாழ்ப்பாணத்தில் சமயப்பணி புரிந்த பெர்சிவல் பாதிரியார் யாழ்ப்பாணக் கல்லூரியைத் தோற்றுவித்தார். விவிலியத்தைத் தம் குருவுடன் சேர்ந்து மொழி பெயர்த்தார். 1874இல் 6156 பழமொழிகளைத் திரட்டி ஆங்கிலப் பெயர்ப்புடன் வெளியிட்டார். தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் – தமிழ் அகராதிகள் வெளியிட்டார். தமிழில் முதன்முதலில் சென்னையில் தினவர்த்தமானி என்ற செய்தித்தாளை நடத்தினார். ஆராதனை ஒழுங்கு, மெதடிஸ்த் வினாவிடை என்ற நூல்களை எழுதினார்.

பாவர்

ஆங்கிலோ இந்தியரான இவர் திருநெல்வேலியில் வாழ்ந்தார். கிறித்தவ மதம் இந்தியாவில் பரவியதைப் பற்றி நூல் எழுதியுள்ளார். 1871-இல் முழு தமிழ் பைபிள் வெளிவரத் துணை புரிந்தவர்களுள் இவரும் ஒருவர். ஆங்கிலத்தில் நன்னூல் முழுவதையும் சீவக சிந்தாமணியின் நாமகள் இலம்பகத்தினையும் தன் ஆங்கில உரையுடன் வெளியிட்டு உள்ளார். வேத அகராதி, நியாயப்பிரமாண விளக்கம், விசுவாசப் பிரமாண விளக்கம், பதமஞ்சரி, சாதி வித்யாச விளக்கம், தர்ம சாத்திர சாரம், பிரசங்க ரத்தினாவளி என்ற உரைநடை நூல்களை எழுதினார்.

லாசரஸ்

திருக்குறள், நன்னூல் இரண்டையும் முழுமையாக மொழிபெயர்த்து வெளியிட்டதுடன் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் பழமொழிகளைத் திரட்டி The Dictionary of Tamil Proverbs என்ற நூலும் வெளியிட்டார்.

4.5.2 தமிழ்க் கிறித்தவர்கள் மேலை நாட்டுக் கிறித்தவர்கள் குறிப்பாக ஐரோப்பியர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டைப் போல், தமிழ்நாட்டுக் கிறித்தவர்களும் தம் படைப்பால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினர்.

வேதநாயகம் பிள்ளை

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்று மாயூரத்தில் முனிசீப்பாகப் பணியாற்றினார். நீதிச் சட்டங்களை முதன்முதலில் தமிழில் எழுதியவர் இவரே.பிரதாப முதலியார் சரித்திரம் என்ற முதல் தமிழ் நாவலையும் எழுதியவர் இவரே. பின் சுகுண சுந்தரி சரித்திரம என்ற நாவலும் எழுதினார். கடிதம் எழுவதுபோல் சில தனிப்பாடல்கள் எழுதியுள்ளார். நலுங்குப்பாடல் வகையிலும் அங்கத இலக்கிய வகையிலும் பாடல் புனைந்துள்ளார். சாதிவேறுபாட்டை வெறுத்த இவர், பெண்கள் முன்னேற்றம், பெண்கல்வி என்பதிலும் செய்யுள், உரைநடை என்பதிலும் மகாகவி பாரதிக்கு முன்னோடியாகத் திகழ்கிறார். தாயுமானவரைப் போன்றே சமரசத்தை விரும்பி, சர்வசமயச் சமரசக் கீர்த்தனை பாடினார். நீதி நூல், பெண்மதி மாலை, தேவமாதா அந்தாதி, திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, பெரியநாயகி அம்மாள் பதிகம், சத்திய வேதக் கீர்த்தனை என்ற நூல்களைப் பாடினார். அக்காலத்தில், வழக்குகளில் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நேர்மையான எண்ணம் கொண்டவர். இலஞ்சம் வாங்கிப் பிழைப்பவர்களை, ‘ஏதுக்கோ வாங்குகிறீர் இலஞ்சம் ….’ என்ற பாட்டில் கடுமையாகச் சாடுகிறார். இவர் தம் பாடல்களில் வடமொழிச் சொற்கள் பல சர்வ சாதாரணமாய்க் கலந்து விளங்குகின்றன.

போதக யூரோப்பு மாதர்களைக்கண்டு

பொங்கிப் பொறாமை கொண்டோமே என்றும்

பேதம் இல்லா இந்தியா தனில்நாங்கள்

பிறந்தென்ன லாபம் கண்டோமா

நாதக் கல்விக்கு நகை எந்தமூலையே

நாங்கள் விரும்போம் நவரத்ன மாலையே

வேதநாயகன்செய் பெண்மதி மாலையே

வேண்டினோம் தாரும் விடோம் உங்கள் காலையே

(சர்வசமயச் சமரசக் கீர்த்தனைகள் – வேதநாயகம் பிள்ளை -கேளும் பூமான்களே என்ற 5 – ஆம் பாடல்)

என்று கல்வி வேண்டி ஒரு பெண் பாடுவதாக வேதநாயகம் பிள்ளை பாடியுள்ளார்.

.A கிருஷ்ணப் பிள்ளை

வைணவ வேளாளர் மரபில் தோன்றிக் கிறித்துவராக மாறி, கிறித்தவக் கம்பன் என்று புகழப் பெறுபவர். ஜான்பன்யன் என்பவர் எழுதிய Pilgrims Progress என்ற நூலை இரட்சண்ய யாத்திரீகம் எனத் தமிழப்படுத்தினார். இவர் பாடல்கள் ஆழ்வார், நாயன்மார் பாடல்கள் போல் உருக்கமாக அமைந்துள்ளன. கிறித்தவர்களின் தேவாரம் என்றழைக்கப் பெறும் இரட்சண்ய மனோகரம் என்ற நூலையும் இரட்சண்ய சமய நிர்ணயம், இரட்சண்யக் குறள், போற்றித் திருஅகவல் என்ற நூலையும் பாடினார். இலக்கணச் சூடாமணி, கிறித்தவரான வரலாறு என்ற உரைநடை நூல்களையும் காவிய தர்ம சங்கிரகம் என்ற தொகுப்பு நூலையும் எழுதினார். கால்டுவெல்லின் பரதகண்ட புராதனம் என்ற நூலையும் வேதமாணிக்க நாடாரின் வேதப் பொருள் அம்மானை என்ற நூலையும் பதிப்பித்தார். பெர்சிவல் பாதிரியாருக்குத் தமிழ் கற்பித்தார்; தினவர்த்த மானியின் துணை ஆசிரியராகவும் திகழ்ந்தார்.

வேதநாயகம் சாத்திரியார்

சரபோசி மன்னரின் ஆஸ்தான வித்துவானாக, அரசவைப் புலவராகத் திகழ்ந்த சாத்திரியார் கிறித்தவப் பாக்கள் பல்லாயிரம் இயற்றி, ஆஸ்தான வித்துவான் பட்டம் பெற்றவர். கிறித்தவப் பாடல்களைத் தமிழிசையுடன் இயைத்து இயற்றி முதன் முதலில் வழிகோலியவர் இவரே! வின்சுலோவுடன் இணைந்து குருட்டுவழி என்ற நூலையும், அக்காலத்திலே 100 வராகன் பரிசு பெற்ற நோவாவின் கப்பல் என்ற நூலையும் பாடினார். சரபோசி மன்னர் வேண்டியும் ‘கிறித்துவைத் தவிரப் பாடேன்!’ என்று கூறியவர். பெத்லகேம் குறவஞ்சி, சென்னைப் பட்டணப் பிரவேசம், ஞான ஏற்றப்பாட்டு, ஞானத்தச்சன் நாடகம், ஞானக் கும்மி, ஆதியானந்தம், பராபரன்மாலை, ஞானஉலா, ஞான அந்தாதி முதலான 52 நூல்களைப் பாடியுள்ளார். தமிழகப் பக்தி நெறிப்படி கர்த்தரை வழிபட வழிகாட்டியவர்.

அந்தோணிக்குட்டி அண்ணாவியார்

தூத்துக்குடி மகாவித்துவான் என்று போற்றப் பெறும் அந்தோணிக் குட்டி ஆசிரியத் தொழில் புரிந்து வந்தார். கிறித்துவின் மீது பாக்கள், கீர்த்தனைகள் பாடியுள்ளார். அருணகிரி நாதரைப் பின்பற்றி கிருத்து சங்கீதம் என்ற நூலை இயற்றினார். ஆசைப்பத்து, அருள்வாசகம், ஆனந்தமஞ்சம் என்பன இவரியற்றிய பிற நூல்கள்.

4.6 பதிப்பாசிரியர்களும் உரையாசிரியர்களும்

ஏடுகளில் உள்ள இலக்கியத்தை ஆராய்ந்து, பாட பேதங்கள் இன்றிப் பிழையின்றிப் பதிப்பித்தல் பதிப்பாசிரியர் பணியாகும். அச்சு இயந்திரங்களின் வரவால் அருமையான பல தமிழ் நூல்கள் இன்று பாதுகாக்கப்படுகின்றன. அதன் பின்னணியில் இருப்பவர்கள் பதிப்பாசிரியர்களே! இக்காலக் கட்டத்தில் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் பலர் உரை எழுதினர்.

4.6.1 சி.வை. தாமோதரம் பிள்ளை புதுக்கோட்டை நீதிமன்றத் தலைவராய் விளங்கிய இவர் சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயரிடம் கல்வி பயின்றார். தமிழ் நூல்களை அச்சியற்ற முயன்றவருள் மிக உழைத்தவர் என, கா.சு. பிள்ளை இவரைப் பாராட்டுவார். வீரசோழியம், இறையனாரகப் பொருள், தொல்காப்பியப் பொருள் அதிகாரம், இலக்கண விளக்கம் என்னும் பெருநூல்களை ஆராய்ச்சிமிக்க பதிப்புரையோடு வெளியிட்டார். இவர்தம் பதிப்புரைகள் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு எடுத்துக்காட்டாக அமைவன.

4.6.2 பிற பதிப்பாசிரியர்கள் பதிப்புத்துறையில் தாமோதரம் பிள்ளையின் பங்களிப்பு மிகவும் பாராட்டக் கூடிய ஒன்று. அவர் காலத்தில் வேறு பல பதிப்பாசிரியர்களும் பதிப்பித்தல் பணியைச் செய்தனர்.

சந்திர சேகர கவிராச பண்டிதர்

நன்னூல் விருத்தியுரை, தண்டியலங்கார உரை, வெண்பாப் பாட்டியல் உரை, பழமொழித் திரட்டு, செய்யுட் கோவை, அரபத்த நாவலரின் பரத சாத்திரம், விஷப்பிரதி விஷத்திரட்டு, விவேக சூடாமணி, வச்சணந்தி மாலை போன்ற நூல்களைப் பதிப்பித்தார்.

தாண்டவராய முதலியார்

வீரமாமுனிவரின் சதுரகராதி முதல் மூன்று பாகங்கள் பதிப்பித்தார். இலக்கணப் பஞ்சகம், சூடாமணி நிகண்டு, சேந்தன் திவாகரம், கதாமஞ்சரி என்பவற்றை முதன் முதலில் அச்சேற்றினார். 1824இல் பஞ்சதந்திரத்தை மராத்தியிலிருந்து மொழி பெயர்த்தார்.

சுப்பராய செட்டியார்

காங்கேயன் உரிச்சொல் நிகண்டு, சிதம்பர சுவாமிகளின் திருப்போரூர் சன்னிதி முறை, மாயூர புராணம், நாகைக் காரோணப் புராணம், பதினோராம் திருமுறை என்பனவற்றைப் பதிப்பித்தார்.

கோமளபுரம் இராசகோபால பிள்ளை

தென் திருச்சி புராணம், திருநீலகண்ட நாயனார் விலாசம், வில்லிபாரதம், சேனாவரையரின் உரை என்பன பதிப்பித்தார். சேனாவரையத்தை முதலில் பதிப்பித்தவர் இவரே!

திருமயிலை சண்முகம் பிள்ளை

மணிமேகலை காப்பியத்தை முதன்முதலில் அச்சிட்டவர் இவரே! நன்னூல் விருத்தியுரை, தஞ்சைவாணன் கோவை, மச்சபுராணம், சிவவாக்கியர் பாடல், மாயப்பிரலாபம் என்பவற்றைப் பதிப்பித்தார்.

சரவணப் பெருமாள் ஐயர்

சிறந்த உரையாசிரியரான இவர், திருவாசகம், பரிமேலழகர் உரை, நைடதம் என்பவற்றைப் பதிப்பித்து உள்ளார். ஒவ்வொரு செய்யுள் முடிவிலும் பயனும் மெய்ப்பாடும் கூறுவது, அணிகளைக் குறிப்பது இவருரையின் சிறப்பாகும்.

இவரது சகோதரரான விசாகப் பெருமாள் ஐயர் முதற்பதிப்பாசிரியர்களில் ஒருவர். அச்சு எழுத்தை எழுதா எழுத்து என்றழைத்தவர்.

4.6.3 உரையாசிரியர்கள் பழந்தமிழ் இலக்கியத்துக்கும் இலக்கணத்துக்கும் அனைவரும் பொருள் உணர்ந்து மகிழும்படி செய்தவர்கள் உரையாசிரியர்கள்.

இலக்கிய உரையாசிரியர்கள்

கிறித்துவக் கல்லூரித் தமிழ் விரிவுரையாளரான சடகோப ராமானுஜாசாரியார் 1888 முதல் பல்கலைக் கழகப் பாடப் பகுதிகட்கு உரை வரைந்து வந்தார். சீவகசிந்தாமணியில் சில இலம்பகங்கள், கம்பராமாயணத்தில் சில பகுதிகள், பாரதம், சூளாமணி, கந்தபுராண, திருவிளையாடற்புராணப் பகுதிகள், நாலடியார் முழுதும், தண்டியலங்காரம் குறிப்புரை, திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால்களின் பரிமேலழகர் உரை விளக்கம் என்பவற்றிற்கு, ஆசிரியர் துணையின்றி உணரும் வகையில் உரை எழுதியுள்ளார்.

இராமாநுச கவிராயர் பரிமேலழகர் உரையில் 63 அதிகாரங்கட்கு உரை எழுதியுள்ளார்.

சோடசாவதானம் சுப்பராய செட்டியார் அயோத்யா காண்டவுரை, பரஞ்சோதி திருவிளையாடற் புராணவுரை, காஞ்சிப் புராண உரை, புலியூர் வெண்பா உரை என்பன எழுதியுள்ளார்.

கோமளபுரம் இராசகோபால் பிள்ளை திருவாய்மொழி, நளவெண்பா, நாலடியார் என்பவற்றிற்கு உரை எழுதியுள்ளார்.

4.7 பத்திரிகைகளும் உரைநடை வளர்ச்சியும்

அச்சு இயந்திர அறிமுகத்தாலும், உரைநடை வளர்ச்சியாலும் பத்திரிகைகள் பல தொடங்கப்பட்டன. பல புதிய இலக்கிய வடிவங்கள் அறிமுகமாயின.

4.7.1 பத்திரிகைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல சுவையான கட்டுரைகளையும் அறிவுக்கு விருந்தான பகுதிகளையும் மக்களிடையே பரப்புவதற்குப் பயன்பட்டவை இதழ்களே! அவற்றுள் தினவர்த்தமானி (1856), ஜனவிநோதினி (1870), விவேக சிந்தாமணி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சுதேச மித்திரன் நாளிதழ் (1882), மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்தி வரும் செந்தமிழ் இதழ், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்தி வரும் தமிழ்ப் பொழில் இதழ், திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்க் கழகத்தார் நடத்தி வரும் செந்தமிழ்ச் செல்வி என்பன அதிக அளவில் விற்பனையான இதழ்கள். இவை தவிர பூவை கலியாண சுந்தரனாரைத் துணை ஆசிரியராகக் கொண்டு 1918இல் வெளிவந்த சித்தாந்தம், 1899இல் வெளிவந்த வித்யா விநோதினி, 1888இல் வெளிவந்த தமிழ்ச்செல்வம், விவேகபாநு என்பனவும் குறிப்பிடத்தக்க இதழ்களே! இவ்விதழ்களுள் பெரும்பான்மையானவை தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

4.7.2 உரைநடை வளர்ச்சி அச்சு இயந்திரங்களின் வரவால் தமிழில் உரைநடை இலக்கியம் புதிய பொலிவைப் பெற்றது. ஏட்டுச் சுவடிகளில் மட்டுமே அடைபட்டிருந்த தமிழ் இக்காலக் கட்டத்தில் பல்கிப் பெருகியது எனில் மிகையாகாது. உரைநடை வளர்ச்சியினால் புதினம் போன்ற புதிய இலக்கிய வடிவங்கள் தமிழில் வந்தன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பலதரப்பட்ட உரைநடை வகைகள் நிலவின. இறையனார் அகப்பொருள் போன்று சொற்செறிவு, அணி, நீண்ட தொடர்கள் கொண்ட உரைநடை, வடமொழிச் சொற்களைத் தாராளமாய்க் கலந்து உருவான பண்டித நடை, சிறிய சிறிய எளிய வாக்கியங்களால் ஆன நடை, எளிதில் பொருள் விளங்காத, கடுஞ்சொற்கள் கொண்டு அமையும் நடை எனப்பல வகைகள் நிலவின. பள்ளிகளில் மாணவர்க்குப் போதிப்பதற்கென்றே எளிய நடையில் அமைந்த உரைநடை நூல்களும் இந்நூற்றாண்டில் இயற்றப் பெற்றன. பாமரரையும் மகிழ்விக்கப் பெரிய பெரிய எழுத்துகளில் முதன்முதலாகப் புராணக் கதைகளும் நாட்டுப்புறக் கதைகளும் பதிப்பிக்கப் பெற்று வெளியிடப் பெற்றன. இவற்றை மக்கள் அதிகம் போற்றினர்.

திருச்சிற்றம்பல தேசிகர் கம்பராமாயணத்தையும் இராமாயண உத்தர காண்டத்தையும் உரைநடையில் எழுதினார்.

நகைச்சுவைக் கட்டுரைகள் நிரம்பிய விநோதரச மஞ்சரி என்ற நூல் வீராசாமி செட்டியாரால் வெளியிடப் பெற்றது.

நாகை தண்டபாணிப் பிள்ளை புத்தரின் வரலாற்றையும் தொழுவூர் வேலாயுத முதலியார் திருவெண்காட்டடிகள் வரலாறு, வேளாண் மரபியல், சங்கர விசயம் என்ற உரைநடை நூல்களையும் எழுதினர். பெரிய புராணத்தையும் மார்க்கண்டேய புராணத்தையும் கூட உரைநடையில் எழுதியுள்ளார் தொழுவூரார்.

யாழ்ப்பாணத் தமிழறிஞரான ஆறுமுக நாவலர் தமிழ்ப் பாட நூல்களைத் தாமே எழுதித் தனது அச்சகத்தில் அச்சிட்டார். பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் என்பவற்றை உரைநடையில் எழுதியதுடன் இலக்கணத்தை எளிதில் கற்பதற்கும் சைவ சமயத்தை அறிந்து கொள்வதற்கும் எளிய உரைநடை நூல்களை எழுதியதால், இவரைத் தமிழ் உரைநடையின் தந்தை எனலாம்.

புதினம் (Novel)

உரைநடை இலக்கிய வகையான நாவல்தான் தமிழ்மொழியில் முதன்முதலில் 1879-இல் தோன்றியது. சிறுகதை பின்னால் தோன்றியது. தென்னக நாவலாசிரியர்களின் தலைவராகி, தமிழ் நாவலின் தந்தை என்ற சிறப்பினை மாயூரம் வேதநாயகம் பிள்ளை பெறுகிறார். வேத நாயகம் பிள்ளை, குருசாமி சர்மா, ராஜம் அய்யர், மாதவையா, நடேச சாஸ்திரி என்ற ஐவரும் தமிழ் நாவல் உலகின் தொடக்கத்தை சமூகச் சீர்திருத்தம், பெண்மை போற்றல் என்பவற்றைக் கருவாகக் கொண்டு அமைத்தனர்.

மாவட்ட நீதிபதியாகத் திகழ்ந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1876-இல் தமிழில் பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவலைஎழுதினார். கதை கேட்கும் ஆர்வம் மக்களுக்கு இருந்ததால், தாம் உரைநடை வாயிலாகப் பல கருத்துகளை உணர்த்த முடியும் என அவர் நினைத்தார்.

தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் கிராமங்களிலும் நகரங்களிலும் தாம் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, குடும்ப, சமுதாய வாழ்க்கை நிலைகளைச் சொல்லோவியமாக வடித்துக் காட்டினார். இவரது இரண்டாவது நாவல் சுகுண சுந்தரி (1887) பெண்மையைப் போற்றுகிறது. முதல் நாவலில் கதைமாந்தர் ஒருவர் கதை கூற, இரண்டாவது நாவலில் ஆசிரியரே கதைகூறிச் செல்கிறார்.

பிரேமகலாவதீயம் என்ற நாவலை சு.வை. குருசாமி சர்மா என்பவர் எழுதினார். குடும்பச் சூழலைப் பின்பற்றி இந்நாவல் அமைந்துள்ளது.

1893இல் அ. மாதவையா எழுதிய சாவித்ரி சரித்திரம் என்ற நாவல் அரைகுறையாக விடப்பட்டது. இவர் எழுதிய பத்மாவதி சரித்திரத்தில் முதல்பாகமும், இரண்டாவது பாகமும் வெளிவந்தன. தெளிவான பாத்திரப் படைப்பும், ஆசிரியரின் சீர்திருத்த ஆர்வமும் இதில் புலனாகிறது. விஜய மார்த்தாண்டன், முத்துமீனாட்சி என்னும் நாவல்களையும் அவர் இயற்றினார். தமிழ்நாவல் துறையில் உள்ளீடு, வடிவு ஆகிய இருவகையிலும் புதுமை வளர்த்தவர் மாதவையா என மு.வ. புகழ்கிறார்.

1896இல் இராஜம் ஐயர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் வெளிவந்தது. தொடர்கதையாக வெளிவந்து பின் நாவலாக அச்சிடப்பட்டது. கிராம வாழ்க்கையும் ஜல்லிக்கட்டு விழாவும் அக்கால மக்களின் பழக்க வழக்கங்களும் உள்ளவாறே கூறப்பட்டுள்ளன. மனித வாழ்க்கைத் தத்துவம் செறிந்து காணப்படுகிறது நாவல்.

1894இல் பண்டித ச.ம. நடேச சாஸ்திரி என்பவர் தானவன் என்ற நாவலை எழுதினார். இவரே 1900ஆம் ஆண்டில் தீனதயாளு என்னும் நாவலை எழுதினார். இவருடைய திக்கற்ற இரு குழந்தைகள், மதிகெட்ட மனைவி ஆகிய நாவல்கள் 1902, 1903இல் வெளிவந்தன.

நாகை தண்டபாணி என்பவர் சதாநந்தர், ஏகம்பஞ்சநதம், கலாசுந்தரி, மாயாவதி முதலிய நாவல்களை அடுத்த ஆண்டுகளில் இயற்றினார். பொதுவாக, இக்கால கட்டத்தில் எழுந்த நாவல்களில் நீதி போதனைகள் அதிகம், கிளைக் கதைகளும் வலிந்து கூறப்பட்ட பாடல்களும், பெண் முன்னேற்றச் சிந்தனைகளும் காணப்படுகின்றன. இதே காலத்தில் இலங்கையிலும் மலேசியாவிலும் கூட நாவல்கள் இயற்றப் பெற்றன.

4.8 தமிழ் நாடக வளர்ச்சி

மகாராஷ்டிரத்தில் இருந்து நாடகக் கம்பெனிகள் வந்து தமிழ்நாட்டில் நடித்துப் புதுவழி காட்டிய பின் தமிழ்நாடகத்தில் சில சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. இசையே நாடகத்தில் பெரும்பங்கு வகித்த நிலை இக்கம்பெனிகளின் தாக்கத்தால் மாறியது. “பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நாடகங்கள் பல ஏட்டுப் பிரதிகளாகவே இருந்து மறைந்தன. அச்சாகி வெளிவந்த நாடகங்களும் ஒரு நூறு இருந்தன. அவற்றுள்ளும் பல மறைந்து போயின” என்கிறார் மு.வ. எனினும் இந்த நூற்றாண்டில் தோன்றிய மிகச் சிறந்த படிப்பதற்குரிய நாடகமாக மனோன்மணீயம் விளங்குகிறது. இக்காலத்தில் இசை ஆதிக்கம் பெற்ற இசைநாடகங்களும், கீர்த்தனை நாடகங்களும் புகழ்பெற்றன. அவற்றை இனிக் காண்போம்.

4.8.1 சுந்தரம் பிள்ளை சுந்தரம் பிள்ளை

தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்த சுந்தரம் பிள்ளை (1855-1897) தமிழில் தரமான நாடகங்கள் இல்லாததை உணர்ந்து மனோன்மணீயம் என்ற நூலை இயற்றினார். தம் நாடக நூலுக்கான கதைக்கருவை லார்ட் லிட்டன் எழுதிய மறைவழி (The Secret Way) என்ற நூலிலிருந்து எடுத்துக் கொண்டார். தமிழ்நாட்டு வாழ்க்கையை ஒட்டித் தம் நூலை இயற்றினார்.

“பாண்டிய அரசன் சீவகனின் மகள் மனோன்மணி. சீவகனின் அமைச்சன் குடிலன் தீயவன். நல்லெண்ணம் கொண்ட சுந்தர முனிவர் சீவகனின் குலகுரு. பக்கத்து நாடாகிய சேரநாட்டுப் புருடோத்தமனுக்கு மனோன்மணியை மணக்கும் விருப்பமுண்டு. தன் மகனுக்கு மனோன்மணியை மணமுடிக்க வேண்டும் என்பது குடிலனின் ஆசை. எல்லைப் பிரச்சனை காரணமாகப் பாண்டியனுக்கும் சேரனுக்கும் போர் மூள்கிறது. போரிலே தோல்வி கிட்டப் போகிறது என்ற நிலை ஏற்படும்போது அமைச்சன் மகனுக்கு மாலையிடத் துணிகிறாள் மனோன்மணி. அதுவும் தன் தந்தையின் கவலையினால். நள்ளிரவில் திருமண ஏற்பாடு நடக்கிறது. அப்போது குடிலனை விலங்கிட்ட சேர அரசன் அங்கே வருகிறான். தான் கனவில் கண்ட காதலனான, சேர அரசனுக்கே மனோன்மணி மாலை இடுகிறாள். குடிலன் சூழ்ச்சியை மன்னன் உணர்கிறான்” என்பது மனோன்மணீயத்தின் கதை.

இலக்கியமாக இன்றுவரை படிப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வரும் செய்யுள் நாடகம் மனோன்மணீயம். மாணவர் முதல் புலவர்கள் வரை அனைவரும் பாராட்டும் தமிழ் வாழ்த்துப் பாடல் (நீராருரங் கடலுடுத்த) இந்நூலில் உள்ளதே. தமிழ் மக்கள் வழங்கும் பழமொழிகளும், சிறந்த தமிழ் நூலின் கருத்துகளும் இந்நூலில் உள்ளன. வேதாந்த, சித்தாந்தக் கருத்துகள் நாடகப் பாத்திரங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு உள்ளன. நாடகத்துள் நாடகம் எனப்படும் வகையில் இந்த நாடகத்துள் சிவகாமி சரிதம் என்ற குறுநாடகம் உள்ளது. நாட்டுப்பற்றை ஊட்டும் வகையில் சீவகனின் பேசும் வீரவுரை ஒவ்வொருவர் உள்ளத்திலும் நாட்டுப்பற்றை எழுப்பும்.

4.8.2 கோபால கிருஷ்ண பாரதி இசைக்கலைக்கு உரிய பாட்டு வடிவங்கள் சில, இலக்கியத்தில் பழங்காலத்திலேயே புகுந்தன. முழுதும் கீர்த்தனையாலே ஆகிய இலக்கியங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டன. பெரிய புராணத்து அடியார் சிலருடைய வாழ்க்கையைப் போற்றிக் கீர்த்தனைகளாகிய இசைப்பாடல்கள் பாடினார் கோபால கிருஷ்ண பாரதி. திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை, இயற்பகைநாயனார் சரித்திரக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை என்பவை அவை. இந்நூல்கள் பலர்க்கு வழிகாட்டியாய் அமைந்தன. நந்தனார் சரித்திரக் கீர்த்தனை நாடு முழுவதும் பரவி, மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தது. இதனாலேயே பாரதியாரும் தம் பாடல்கள் சிலவற்றின் மெட்டு நந்தனார் சரித்திரக் கீர்த்தனையின் இன்ன மெட்டு என்று குறிப்பிடுகிறார். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதியே பாடல்களையும் உருக்கமாகப் பாடுவதைக் கேட்டு விட்டுச் சிறப்புப் பாயிரம் தந்தாராம்.

நந்தனார்

4.9 தொகுப்புரை

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அச்சு இயந்திரங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டாலும் கி.பி. 1577இல் தான் இந்திய மொழிகளில் முதன்முதலில் தமிழ் எழுத்துகளை அச்சிடும் முயற்சி நடந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் இந்திய மக்கள் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தும் உரிமை பெற்றார்கள். அதற்குமுன் அரசின் கருவியாகவும் கிறித்துவப் பாதிரிகளின் பயன்பாட்டிற்கும் அச்சுஇயந்திரங்கள் இருந்தன. தடை நீங்கப் பெற்றபின் முதலில் சமய நூல்கள் அச்சிடப் பெற்றன. பின்னர் பழைய செய்யுள் இலக்கியம், புதிய செய்யுள் இலக்கியம், உரைநடை நூல்கள், இதழ்கள் என்பன அச்சிடப் பெற்றன. இதனால் தமிழ்நாட்டில் படிப்போர் எண்ணிக்கை பெருகியது. பதிப்புக் கலையும் ஆராய்ச்சி நூல்களும் இதனால் வளர்ந்தன.

மரபு வழிப்பட்ட புராணங்கள், சிற்றிலக்கியங்கள் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்ற, இசைநாடகங்கள், கீர்த்தனை, சிந்து, கண்ணி என்பன பிற்பகுதியில் தோன்றின. அவதானக் கலை பரவலாகப் போற்றப்பட்டது. புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என்பன கிறித்துவத்திலம் இஸ்லாத்திலும் தமிழில் தோன்றின. பத்திரிகைகள், அகராதிகள், ஆராய்ச்சி நூல்கள் என்பன தமிழின் தரத்தை உயர்த்தின. தமிழ் இலக்கிய வரலாறு எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு அடிப்படையாகச் சில முன்னோடி நூல்களும் எழுந்தன.

இவ்வாறு இலக்கியம், உரை, பதிப்பு, வரலாறு, நாடகம், பத்திரிகைகள், சிற்றிலக்கியம், புராணம் என அனைத்துத் துறைகளிலும் தமிழ் இந்த நூற்றாண்டில் வேகம் கொண்டது.

பாடம் - 5

இருபதாம் நூற்றாண்டு – முதற்பகுதி

5.0பாட முன்னுரை

இருபதாம் நூற்றாண்டு அறிவியல் யுகம், நாவல் நூற்றாண்டு என்றெல்லாம் போற்றப்படுகின்றது. இக்காலத்தின் போக்கிற்கு ஏற்ப இலக்கியமும் புது வடிவம் பெற்றது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் விடுதலை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம், காந்தியம், பொதுவுடைமை, குழந்தை இலக்கியம் போன்றன இலக்கியத்தை இயக்கின. நாடகத் தமிழ் மலர்ச்சி பெற்றது. பல்துறையிலும் தமிழ் வளர்ச்சி பெற்றது.

5.1 உரைநடை வளர்ச்சி

அச்சு இயந்திரங்களின் வரவால் தமிழில் முதலில் மலர்ச்சி பெற்றது உரைநடையே. பல வகையான கட்டுரை நூல்கள், சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்புகள், திறனாய்வு, உரையாசிரியர்கள் எனப் பல்பிரிவுகளுள் உரைநடை வளர்ந்தது. 1904-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற தமிழ் உரைநடையின் வரலாறு என்ற (

istory of Tamil Prose) ஆங்கில நூல் வி.எஸ்.செங்கல்வராய பிள்ளை என்பவரால் எழுதப்பட்டது. தொல்காப்பியத்தில் வரும் உரைநடைக் குறிப்புக்கள் தொடங்கி, சுந்தரம் பிள்ளை, சூரிய நாராயண சாஸ்திரியார் வரையிலான தமிழ் உரைநடை வளர்ச்சியைக் காய்தல், உவத்தல் அகற்றி ஆராயும் இந்நூல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இனி, தமிழ் உரைநடை வளர்த்த சான்றோர்களைக் காண்போம்.

5.1.1 உரைநடை முன்னோடிகள் அச்சு இயந்திர அறிமுகம் தமிழ் உரைநடை வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. அச்சடித்த உரைநடை நூல்கள் பல வருவதற்குப் பல அறிஞர்கள் காரணமாகத் திகழ்ந்தார்கள். அத்தகைய முன்னோடிகளாகிய தமிழறிஞர்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை

வ.உ.சிதம்பரம் பிள்ளை

தேச விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்றவர்களும் இலக்கிய வளர்ச்சிக்குப் பணிபுரிந்திருக்கிறார்கள் பத்திரிகையாசிரியராகத் திகழ்ந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள், மெய்யறிவு, மெய்யறம் என்ற நீதி நூல்களைத் திருக்குறள் கருத்துக்களை ஒட்டி விளக்கி எழுதியுள்ளார். மக்களுக்காகத் தொண்டு செய்ய ஆர்வமும், மேடைப்பேச்சுப் பயிற்சியும் இருந்தபடியால் வ. உ. சி யின் நடையில் நெகிழ்ச்சி காணப்படுகிறது என்கிறார் மு.வரதராசனார்.

பழைய நாரதர் என்ற புனைபெயர் கொண்டு நகைச்சுவையும் வீரச்சுவையும் மிகுந்த கட்டுரைகள் பல எழுதினார் சுப்பிரமணிய சிவா.

மறைமலையடிகள்

மறைமலையடிகளால் இயற்றப் பெற்ற பல்வகை உரைநடை நூல்கள் பின்வருமாறு

1) அறிவியல் நூல்கள்

மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை (2 பாகம்), பொருந்தும் உணவும் பொருந்தா உணவும், யோகநித்திரை அல்லது அறிதுயில், மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி.

2) நாவல்

குமுதவல்லி நாகநாட்டரசி, கோகிலாம்பாள் கடிதங்கள்.

3) ஆராய்ச்சி நூல்கள்

சாகுந்தல நாடக ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, முல்லைப் பாட்டு ஆராய்ச்சி, மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், சிவஞான போத ஆராய்ச்சி, திருக்குறள் ஆராய்ச்சி.

4) கட்டுரை நூல்கள்

தொலைவில் உணர்தல், மரணத்தின்பின் மனிதர் நிலை, சிந்தனைக் கட்டுரைகள், இளைஞர்க்கான இன்றமிழ், சிறுவர்க்கான செந்தமிழ், உரைமணிக்கோவை, அறிவுரைக் கோவை, வேளாளர் நாகரிகம், பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும், முற்கால, பிற்காலத் தமிழ்ப் புலவோர், தமிழர் மதம், சைவ சித்தாந்த ஞானபோதம், பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்ற நூல்களுடன் இந்தி பொது மொழியா? சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்ற நூல்களும் திருவாசக விரிவுரையும் எழுதி உள்ளார். தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்ததால் தனித்தமிழ் இயக்கத் தந்தை என்று போற்றப்படுகிறார்.

திரு.வி.கலியாண சுந்தரனார்

திரு.வி.க

தமிழாசிரியராக இருந்து பின் பத்திரிகை ஆசிரியராகி, தொழிலாளர் தலைவராகவும் விளங்கிய திரு.வி. கல்யாண சுந்தரனாரின் உரைநடை எளியது; இனியது. இவரது பத்திரிகைத் தமிழை, தேசபக்தன், நவசக்தி என்ற பத்திரிகைகள் மூலம் அறியலாம். மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை என்ற நூல்களை எழுதியுள்ளார்.

பிறர்

க.ப.சந்தோஷம், மகிழ்நன் என்ற புனை பெயரில் வடக்கும் தெற்கும் என்ற நூலை எழுதியுள்ளார். பா.வே.மாணிக்க நாயக்கர் கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும், அஞ்ஞானம் என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார். இவ்விருவரும் தமிழில் நகைச்சுவை இலக்கியத்தை வளர்த்தவர்கள்.

செல்வக்கேசவராய முதலியார் திருவள்ளுவர், கம்பநாடர், தமிழ், தமிழ் வியாசங்கள், வியாச மஞ்சரி, கண்ணகி கதை, அவிநவக் கதைகள், பஞ்சலட்சணம் முதலிய நூல்களைப் பழமொழி கலந்த நடையில் எழுதித் தமிழுக்கு அழகும் மெருகும் தந்தார்.

பேராசிரியர் பூரணலிங்கம்பிள்ளை தமிழ்க் கட்டுரைகள், மருத்துவன் மகள், கதையும் கற்பனையும் என்ற நூல்களை எழுதியுள்ளார்.

பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் உரைநடைக் கோவை என்ற தனது நூலில் பழைய இலக்கியத்தில் உள்ள சொற்களைப் பயன்படுத்தி எழுதியுள்ளார். நீண்ட வாக்கியங்களை உடையது இவர் நடை.

சோமசுந்தர பாரதியார் தசரதன் குறையும் கைகேயி நிறையும், சேரர் தாயமுறை என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

பேராசிரியர். ரா.பி.சேதுப்பிள்ளை

அழகான நடையில் 25க்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை எழுதியவர் ரா.பி.சேதுப்பிள்ளை. ஊரும் பேரும், வேலும் வில்லும், செந்தமிழும் கொடுந்தமிழும், தமிழின்பம், வீரமாநகர் என்பன அவரியற்றிய சில நூல்கள்.

பேராசிரியர். அ.சிதம்பரநாத செட்டியார்

அ.சிதம்பரநாத செட்டியார் பழந்தமிழ்ச் சொற்களை இடையிடையே கலந்து மெருகு ஊட்டி எழுதுவதில் வல்லவர். முன்பனிக்காலம், தமிழோசை, தமிழ்காட்டும் உலகு என்பன அவர் எழுதிய சில நூல்கள். ஏ.சி.செட்டியார் என்று அன்புடன் அழைக்கப் பெற்றவரும் இவரே!

உ.வே.சாமிநாத அய்யர்.

தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே. சாமிநாத அய்யர் மணிமேகலை கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச்சுருக்கம் போன்ற பல உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.

பேராசிரியர். எஸ்.வையாபுரிப் பிள்ளை

வையாபுரிப் பிள்ளை தமிழ்ச்சுடர் மணிகள், சொற்கலை விருந்து, காவிய காலம், இலக்கியச் சிந்தனைகள், இலக்கிய உதயம் முதலிய உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.

5.1.2 சிறுகதை பாரதியார், வ.வே.சு. ஐயர், புதுமைப்பித்தன் போன்ற சிறந்த எழுத்தாளர்களால் வளர்க்கப் பெற்ற சிறுகதை இலக்கியம் அதற்கென ஆரம்பிக்கப் பெற்ற மணிக்கொடி பத்திரிகையால் மேலும் உரம் பெற்றது.

பாரதியார்

பாரதி பரம்பரை என்றொரு பரம்பரையே படைத்திட்ட பாரதி சிறுகதைத் துறையில் மட்டுமன்றி கவிதை, பத்திரிகை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு எனப் பல்துறையிலும் சிறந்து விளங்கியவர். இவரது சிறுகதைகள் பல சொந்தக் கதைகள் கட்டுக்கதைகள், நிகழ்வுக் கோவைகளாகவே நின்று விடுகின்றன. உயர்ந்த கலைவடிவம் இல்லை. கதைக்கொத்து, நவதந்திரக் கதைகள்-தொகுதிகள், ஆறில் ஒரு பங்கு, பூலோக ரம்பை, திண்டிம சாஸ்திரி, ஸ்வர்ணகுமாரி என்பன குறிப்பிடத்தக்கன. சின்ன சங்கரன் கதை, சந்திரிகையின் கதை என்ற இரண்டும் நாவலைப் போல் அமைந்தவை. புதுவையில் வசித்த போது 11 தாகூரின் கதைகளை மொழி பெயர்த்து இருக்கிறார். அதன் நடை உள்ளத்தைக் கவர்வது, இதுவே சிறுகதைத் துறைக்குப் பாரதி புரிந்த தொண்டு.

• வ.வே.சு ஐயர்

தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்று போற்றப்படும் இவர் சிறுகதை இலக்கணத்திற்கு ஏற்ற கதைகளை அந்தக் காலத்திலேயே எழுதியவர். இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற நூல் எட்டுக் கதைகளைக் கொண்டது. குளத்தங்கரை அரசமரம் என்பது தமிழில் தோன்றிய முதல் சிறுகதை. குழந்தை மணத்தைக் கருவாகக் கொண்டது இக்கதை. ஒரு குளக்கரையில் நிற்கும் அரசமரமே கதை கூறுவதாகக் கொண்டு அமைகிறது. மொத்தம் 8 கதைகளே படைத்திருந்தாலும் வடிவம் பற்றிய விழிப்பைத் தொட்டுக் காட்டியவர். சிறுகதையில் சில சோதனைகள் செய்து சாதனை புரிந்தவர். குளத்தங்கரை அரசமரம் தவிரப் பிற கதைகள் ஆசிரியர் கூற்றாகவே அமைந்தாலும் உயிரோட்டம் மிக்கநடை, காவியச் சாயல், நாடகப்பாணி என்பன இவர் கதைகளில் அமைந்துள்ளன.

• புதுமைப்பித்தன்

1933இல் சிறுகதை வளர்த்த இதழான மணிக்கொடியில் சிறந்த சிறுகதையாசிரியராகத் திகழ்ந்தவர் சொ. விருத்தாசலம் என்ற இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன். அவருடைய சிறுகதைகளில் வறுமையின் விளைவுகள், சமூகச் சிக்கல்கள், மக்களின் மூட நம்பிக்கைகள் ஆகியன அடிப்படையாக அமையும். அவரது கதைகளில் கேலியும் கிண்டலும் நையாண்டியும் நிறைந்து இருக்கும்.

தாம் காணும் காட்சிகளையும் கருதும் கருத்துகளையும் சிறுகதைகள் வாயிலாகவே தமிழர்க்கு உணர்த்திவிட முடியும் என நம்பியவர் புதுமைப்பித்தன்.

புதிய கருக்கள், அதற்கேற்ற புதிய வடிவங்கள், அவற்றை வெளிப் படுத்தும் புதிய உத்திகள், புதுவகையான நடை, சமுதாய சுகவாசிகளைக் கண்டு ஏங்கிக் கலங்கும் இரக்க நெஞ்சம் இவை எல்லாம் அவரது கதைக்குப் புத்துயிர் ஊட்டின.

சிறுகதை மன்னன் என்று பாராட்டப் பெறும் இவர், உலகத்துச் சிறந்த சிறுகதைகள், தெய்வம் கொடுத்த வரம் என்ற இரண்டு மொழிபெயர்ப்புத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். 1941க்கு முன் அகலிகை என்ற கதை எழுதிப் புரட்சி செய்த இவரே சாப விமோசனம் என்ற மற்றொரு கதையையும் எழுதிப் புரட்சி செய்கிறார். அகல்யை கதையில் கௌதமர் அகலிகையையும் இந்திரனையும் மன்னித்து விடுகிறார். ஆனால் சாப விமோசனம் கதையில் கௌதமர் விரக்தியினால் துறவியாகிறார். அகலிகை சாபவிமோசனம் கண்டாலும் பாப விமோசனம் கிடைக்காதா என்று ஏங்குகிறாள். மனதளவில் கல்லாகிப் போகிறாள் என்பது கதை.

ஆண்மை, கல்யாணி, பொன்னகரம் போன்ற கதைகளில் வாழ்க்கைச் சித்திரத்தை வடிக்கிறார் புதுமைப்பித்தன். வேதாளம் சொன்ன கதை, கட்டில் பேசுகிறது, கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்பன கற்பனைக் கதைகள். காஞ்சனை என்பது மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமலே உள்ள கதை. துன்பக்கேணி கதை இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண் பற்றியது. தன்னைக் கெடுத்த மானேஜர் தன் மகள் கற்பையும் அழித்தான் என அறிந்து அவனைக் கொலை செய்து விடுகிறாள் அந்தத் தாய். இவ்வாறு கொடுமையை எதிர்க்கும் பாத்திரங்களையும் புதுமைப்பித்தன் படைத்துள்ளார்.

• இராஜாஜி

சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் சமுதாய முன்னேற்றம் குறித்த சில கதைகளை எழுதியுள்ளார். அன்னையும் பிதாவும், தேவானை, முகுந்தன் பறையனான கதை என்பன அவற்றுள் சில.

• கு.ப. இராஜகோபாலன்

ஆண்-பெண் உறவுகளைக் கதைக்கருவாகப் படைப்பதில் நிகரற்றவர் கு.ப.இராஜகோபாலன். அவரது கதைகளுள் விடியுமா என்ற சிறுகதை, சிறுகதை இலக்கணத்திற்குரிய கூறுகள் அனைத்தும் கொண்டது. காணாமலே காதல், புனர்ஜன்மம், கனகாம்பரம் முதலியன அவரின் சிறுகதைத் தொகுப்புகளாகும்.

• பி.எஸ். இராமையா

மணிக்கொடி பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய பி.எஸ்.இராமையா 300க்கும் மேற்பட்ட கதைகளை எழுதி உள்ளார். நட்சத்திர குழந்தைகள் என்பது இவர் புகழ் பெற்ற கதை. மணிக்கொடி காலம் என்ற இவரது நூல் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.

• கல்கி

கல்கி அவர்களின் கேதாரியின் தாயார், வீணை பவானி, கணையாழியின் கனவு, திருவழுந்தூர் சிவக்கொழுந்து, மயிலைக்காளை முதலிய கதைகள் நம் நெஞ்சம் கவர்பவை.

• மௌனி

சிறுகதை எழுதுவதில் புதுப்போக்கு உடையவர் மௌனி. ஒருமுறை படித்தவுடன் அவரது கதைகள் புரிந்து விடுவதில்லை. அழியாச்சுடர், மனக்கோலம், சாவில் பிறந்த சிருஷ்டி, பிரபஞ்ச கானம் போன்ற பல சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று இவர் போற்றப்படுகிறார்.

• ந. பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தியின் ஒருநாள், நல்ல வீடு, திருடி, கலையும் பெண்ணும், முள்ளும் ரோஜாவும், கொலுபொம்மை போன்ற சிறுகதைகள் மனதில் நிற்பவை. மணிக்கொடி எழுத்தாளர். சிறுகதை இலக்கணம் பயில ஏற்புடையன இவர் கதைகள்.

• தி. ஜானகிராமன்

தஞ்சாவூர்ப் பகுதியை நம் கண்முன் கொண்டு வரும் எழுத்தாளர்களில் தலைசிறந்தவர் தி. ஜானகிராமன். சிவப்பு ரிக்ஷா, தேவர் குதிரை, அக்பர் சாஸ்திரி என்பன குறிப்பிடத்தகுந்த கதைகள்.

• தி.ஜ. ரங்கநாதன்

பல்துறை வல்லுநரான தி.ஜ.ரங்கநாதன் சிறப்புப் பெறுவது தம் சிறுகதைகளால் தான். சந்தனக் காவடி என்பது 1938இல் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுதி. நொண்டிக்கிளி, சமத்து மைனா, வீடும் வண்டியும், காளிதரிசனம், விசை வாத்து, மஞ்சள் துணி என்பன முக்கியமான கதைகள்.

• துமிலன்

துமிலன் என்ற புனைபெயர் கொண்ட ந.ராமசாமி விந்தையான புத்தகங்கள், ஸ்ரீமதி கண்டக்டர் போன்ற 11 சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

• க.நா. சுப்ரமணியம்

க.நா. சுப்ரமணியம் ஹைதர் காலம், காட்டுமல்லிகை, வாடாமலர், தோட்டியை மணந்த அரசகுமாரி போன்ற கதைகளை எழுதியுள்ளார். கருவால் சிறந்த வரலாற்றுச் சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.

• கி.வா. ஜகந்நாதன்

கலைமகள் பத்திரிகை வாயிலாகச் சிறந்த கதையாசிரியர்களை அறிமுகப்படுத்தியவர் கி.வா.ஜகந்நாதன் கலைமகளில் பல தரமான கதைகள் எழுதி உள்ளார். அறுந்த தந்தி, வளைச் செட்டி, பவள மல்லிகை, கலைஞன் தியாகம், அசையா விளக்கு, கோவில்மணி, கலைச்செல்வி என்பன இவரது சிறுகதைத் தொகுதிகள்.

• சிட்டி

சிட்டி என்ற பெயருடைய பெ.கோ.சுந்தர்ராஜன் மணிக்கொடி எழுத்தாளர். மதுவிலக்கு மங்கை, அந்தி மந்தாரை, என்ற 2 சிறுகதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலின் ஆசிரியர்களில் ஒருவர்.

• சி.சு. செல்லப்பா

மணிக்கொடி எழுத்தாளரான சி.சு,செல்லப்பா புதுமை இலக்கியப் போராளி. சரஸாவின் பொம்மை, மணல் வீடு, அறுபது, சத்யாக்ரகி, வெள்ளை என்ற 5 தொகுதிகள் இவருடையது.

• கரிச்சான் குஞ்சு

கலைமகள் இதழில் கதைகளைப் படைத்தவர்.

• லா.ச. ராமாமிருதம்

தனக்கென்று தனிச் சிந்தனைப் போக்கும் தனிநடையும் உடையவர் லா.ச.ரா எனப்படும் லா.ச. ராமாமிருதம். அவருடைய கதைகளில் ஒரே விதமான தத்துவம் அடிக்கடி படைக்கப்படுகிறது. அது பலர்க்கும் எளிதில் புரிவதில்லை. ஜனனி, இதழ்கள் என்பன அவரது சிறந்த கதைகள். 5 சிறுகதைத் தொகுப்புகளை அவர் படைத்துள்ளார்.

• வல்லிக்கண்ணன்

500 சிறுகதைகளுக்கு மேல் எழுதிப் புகழ்பெற்றவர் வல்லிக்கண்ணன். சந்திர காந்தக்கல் என்பது இவருடைய முதல் சிறுகதை. கல்யாணி முதலிய கதைகள், நாட்டியக்காரி, ஆண் சிங்கம், வாழ விரும்பியவன் முதலியன இவரது கதைத் தொகுதிகள்.

• சிதம்பர இரகுநாதன்

பொதுவுடமைக் கருத்துக்களை மையமாகக் கொண்டு எழுதியவர்களில் சிதம்பர இரகுநாதனும் ஒருவர். ஞானோதயம், ஆனைத்தீ, சேற்றில் மலர்ந்த செந்தாமரை, அபாய அறிவிப்பு மனைவி, ஞானமணிப் பதிப்பகம் போன்ற கதைகள் பல எழுதி உள்ளார். பிற மொழிகளிலிருந்து கதைகளையும் நாவல்களையும் மொழிபெயர்ப்புச் செய்து தந்துள்ளார்.

• கி.ராஜ நாராயணன்

கரிசல் காட்டு வாழ்வைக் கண்முன்னே நிறுத்துபவர் கி. ராஜ நாராயணன். கதவு, கன்னிமை, வேட்டி, கிராமியக் கதைகள், தாத்தா சொன்ன கதைகள், கரிசல் கதைகள், கொத்தைப் பருத்தி, தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள் என்பன இவர் படைப்புகள்.

• பிறர்

இவர்களைத் தவிர டாக்டர் மு.வரதராசனார், விந்தன், அகிலன், டி.கே.சீனிவாசன், ஜெகசிற்பியன், ரா.கி.ரங்கராஜன் போன்றவர்களுடன் அநுத்தமா, லட்சுமி, சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், கோமகள், சரஸ்வதி ராம்நாத் போன்ற பெண் எழுத்தாளர்களும் தோன்றிச் சிறுகதை உலகைச் செழிக்கச் செய்திருக்கின்றனர்.

5.1.3 நாவல் வேதநாயகம் பிள்ளையும் இராஜம் ஐயரும் மாதவையாவும் தொடங்கி வைத்த நாவல் இலக்கியம் வரலாற்று நாவல், துப்பறியும் நாவல், மொழிபெயர்ப்பு நாவல் எனப் பல கிளைகளாக வளர்ந்தது.

• துப்பறியும் நாவல்கள்

மேலைநாட்டு நாடகங்களில் வரும் பெயர்களையும் நிகழ்ச்சிகளையும் தமிழ் நாவல்களில் உலவவிட்டு வெற்றி கண்டவர் ஆரணி குப்புசாமி முதலியார். வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு. கோதை நாயகி அம்மாள், ஜே.ஆர். ரங்கராஜூ, தி.ம.பொன்னுச்சாமி, பி.டி.சாமி என்போர் அக்காலத்தில் துப்பறியும் நாவல்களையும் மர்ம நாவல்களையும் ‘ரெயினால்ட்ஸ்’ என்பவரை அடியொற்றி எழுதிப் புகழ் பெற்றவர்கள்.

எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு தாம் நடத்திய பிரஜானுகூலன் என்ற திங்கள் இதழில் துப்பறியும் மர்மத் தொடர்களையும் வெளியிட்டுள்ளார். வடமொழி விரவிய நடையில் ஆனந்த கதாகல்பம், பரிமளா என்ற 2 நாவல்களை எழுதியுள்ளார்.

• வரலாற்று நாவல்கள்

தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் என்று போற்றப்பெறும் கல்கி அவர்கள் தொடர்கதை படிக்கும் ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தியவர். அலையோசை, தியாகபூமி, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு போன்ற சிறந்த வரலாற்று நாவல்களைப் படைத்தவர். இவரது இறுதி நாவலான அமரதாராவை இவர் மகள் ஆனந்தி முடித்தார்.

1865இல் தி.த.சரவண முத்துப்பிள்ளை என்பவரால் எழுதப் பெற்ற மோகனாங்கி என்ற நாவலே தமிழில் தோன்றிய முதல் சரித்திர நாவலாகும். நாயக்கர் மன்னர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்ற நூல் இது.

• விடுதலை இயக்க நாவல்கள்

1926இல் தேசிய விடுதலை உணர்வினை நேரடியாகப் பேசிய நாவல் பனையப்ப செட்டியாரின் காந்திமதி. மாணிக்கவாசகன், அமிர்தம், சண்முக நாதன், சந்திரசேகரன் என்பன இவர் படைத்த பிற நாவல்கள்.

1930இல் தேசிய இயக்க நாவலாக வெளிவந்தது கே.எஸ்.வேங்கட ரமணியின் தேசபக்தன் கந்தன். ஆசிரியரின் அடுத்த நாவல் முருகன் ஓர் உழவன்.

சத்யாக்கிரகம் பற்றிய முதல் நாவல் சாண்டில்யன் எழுதிய பலாத்காரம் என்பதாகும்.

• பெண் பிரச்சனை நாவல்கள்

பாரதியின் தலைமைச் சீடரான வ.ரா, சுந்தரி அல்லது அந்தரப் பிழைப்பு, சின்னச்சாம்பு, கோதைத்தீவு, விஜயம் என்ற 4 புதினங்கள் படைத்தார். நான்கிலுமே பெண்முன்னேற்றச் சிந்தனைகள் தான் உள்ளன. அக்காலத்திலேயே விதவைத் திருமணம், சமுதாயச் சீர்திருத்த சிந்தனைகள் பற்றி எழுதியவர் இவரே.

• கிராமிய நாவல்கள்

மண்மணம் கமழும் நாவல் படைத்தவர்களுள் முன்னோடி சங்கரராம் என்ற டி.எல்.நடேசன். மண்ணாசை என்ற இவரது நாவல் முதல் முழுகிராமிய நாவல். இன்ப உலகம், வீர சிற்பி, நீலா, பானா பரமசிவம், பெண் இனம், பார்வதி, தீயும் வெடியும், நாட்டாண்மைக்காரன், காரியதரிசி, அருள்பண்ணை என்ற நாவல்களையும் படைத்துள்ளார்.

• சமூகச் சீர்திருத்த நாவல்கள்

நாகை கோபால கிருஷ்ணப் பிள்ளை, பத்மரேகை அல்லது கற்பகச் சோலை ரகசியம், தனபாலன், சந்திரோதயம், அலைகடல் அரசி என்ற சமுதாயச் சீர்திருத்த நாவல்களை இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதி எதிர்ப்புகள் பல சம்பாதித்தவர்.

சுதந்திரம் பெற்ற பிறகு நாவல் எழுத்தாளர்களின் எண்ணிக்கை கூடியது. அவர்கள் எடுத்துக் கொண்ட கருத்துகளும் பல்வேறு வகையானவை.

5.1.4 மொழிபெயர்ப்பு ஆங்கிலக் கல்வி பெற்றுப் பல்வேறு பதவி வகித்த சான்றோர் பலர் வடமொழியில் இருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் தாமறிந்த பிரெஞ்ச், ஸ்வீடிஷ் போன்ற மொழிகளில் இருந்தும் மொழிபெயர்ப்புச் செய்து தமிழை வளப்படுத்தினர்.

பண்டிதமணி என்று போற்றப் பெற்ற கதிரேசன் செட்டியார் மண்ணியல் சிறுதேர், மாலதி மாதவம், கௌடிலீயம், சுக்கிர நீதி, பிரதாப ருத்திரீயம் போன்றவற்றை வடமொழியிலிருந்து மொழிபெயர்த்தார். இவரது உரைநடை தனித்தன்மை வாய்ந்தது.

அண்ணல் காந்தியின் ஆங்கிலத்தைத் தமது ஏடுகளில் சின்னச் சின்ன வாக்கியங்களாக மொழிபெயர்த்து எழுதியவர் திரு.வி.கலியாண சுந்தரனார்.

ஜேம்ஸ் ஆலன் என்ற ஆங்கில அறிஞருடைய கருத்துக்களைத் தமிழ்ப்படுத்தி வ.உ.சி அவர்கள் மனம்போல் வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம் என்ற 3 நூல்களாகத் தந்துள்ளார்.

செந்தமிழ் இதழின் முதல் ஆசிரியரான ரா.ராகவ ஐயங்கார், பகவத் கீதையையும் சாகுந்தல நாடகத்தையும் வடமொழியிலிருந்து மொழி பெயர்த்தார்.

முத்தமிழிலும் வல்ல இலக்குமணப் பிள்ளை ஆங்கில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் மில்டனின் சுவர்க்க நீக்கம், ஸ்பென்சர் எழுதிய கல்வி என்ற இரண்டையும் மொழிபெயர்த்தார்.

தமிழ் மக்களுக்குத் தாகூரின் கவிதைகளை அறிமுகப்படுத்தியவர்கள் வி.ஆர்.எம்.செட்டியார், அரங்க.சீனிவாசன், இளங்கம்பன் ஆகியோர்.

ஜமதக்னி என்பவர் இந்தி மொழியிலிருந்து காமன் மகள் என்ற காப்பியத்தை மொழிபெயர்த்தார். காளிதாசரின் மேக சந்தேசம் என்ற நூலும் செய்யுள் வடிவில் இவரால் மொழிபெயர்க்கப்பட்டது.

சேக்ஸ்பியர் நாடகங்கள் ஒன்பதைத் தமிழ்க் கவிதையாக மொழி பெயர்த்துத் தந்துள்ளார் அ.கு. ஆதித்தர், கபீர்தாசர் பாடல்கள், காளிதாசர் உவமைகள் என்ற நூலையும் எழுதினார்.

ச.து.சு.யோகியார் வால்ட் விட்மனின் புல்லின் இதழ்கள், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும், வுட்ரோ வில்சனின் வாழ்க்கை வரலாறு, தாஸ்தாவஸ்கியின் கார்மேஸாவ் சகோதரர்கள், இதுதான் ரஷ்யா என்ற நூல்களை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

உலகத்துச் சிறந்த சிறுகதைகள். தெய்வம் கொடுத்த வரம் என்ற 2 மொழிபெயர்ப்புத் தொகுதிகளில் உலகத்திலுள்ள சிறந்த சிறுகதைகளை எல்லாம் புதுமைப்பித்தன் மொழிபெயர்த்து தந்துள்ளார்.

இந்திய மொழிகளுள்ளேயே மொழிபெயர்ப்புச் செய்வதும் நம் இந்திய விடுதலைக்கு முன்பே துவங்கி விட்டது. வங்கமொழியில் இருந்து ஏராளமான கதை, கட்டுரை, கவிதை, நாவல் என்பன தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. அன்னிய மொழிகளில் ரஷ்ய மொழியில் இருந்து ஏராளமாக மொழி பெயர்க்கப்பட்டன. இந்தி, மராத்திய மொழியிலிருந்தும் மொழி பெயர்க்கப்பட்டன. பிரெஞ்சு, ஜெர்மன், மொழிகளிலிருந்தும் சிலர் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளனர்.

5.1.5 திறனாய்வு விருப்பு வெறுப்பின்றி நடுநிலையில் நின்று ஒரு நூலை ஆராய்ந்து கூறுதல் திறனாய்வு ஆகும். இவ்வாறு கூறும் திறனாய்வு பல வகைப்படும். பாராட்டி மட்டும் செல்வது, குறை மட்டும் கூறுவது, ஒப்பிட்டு மட்டும் கூறுவது, விளக்கி மட்டும் கூறுவது என்பன அவற்றுள் சில. விடுதலைக்கு முந்திய நம் தமிழறிஞர்கள் எதையெல்லாம் பற்றித் திறனாய்வு செய்துள்ளனர் என இனிக் காண்போம்.

திருவள்ளுவர், சேரர் தாயமுறை, சேரர் பேரூர், தசரதன் குறையும் கைகேயியின் நிறையும், நற்றமிழ் ஆராய்ச்சிகள் என்ற நூல்களில் தனது வாதத்திறமையை நிரூபித்தவர் சோமசுந்தர பாரதியார்.

தமிழிலக்கியங்களைப் பற்றிய கால ஆராய்ச்சியில் இறங்கி முதன் முதலில் அதிர்ச்சி தரத்தக்க ஆராய்ச்சி முடிவுகளை அளித்தவர் வையாபுரிப் பிள்ளை. தமிழ்ச்சுடர் மணிகள், இலக்கியதீபம், இலக்கிய உதயம், இலக்கியச் சிந்தனைகள், சொற்கலை விருந்து, காவிய காலம், தமிழின் மறுமலர்ச்சி, தமிழர் பண்பாடு, உலக இலக்கியங்கள், திருமுருகாற்றுப்படை உரை, கம்பன் காவியம், இலக்கணச் சிந்தனைகள் என்ற 12 நூல்கள் படைத்தவர். இலக்கியங்களில் அறிவாராய்ச்சி அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர். திறனாய்வுக் கலையின் திறப்பாளர்.

சொல்லின் செல்வர் என்று புகழப் பெறும் ரா.பி.சேதுப்பிள்ளை சொல்லாராய்ச்சியில் வல்லவர். Tamil words and their significance என்பது இவரது நூல்.

தமிழ் ஆய்விற்குத் தடம் போட்டுத் தந்தவர் என்ற பெருமைக்கு உரியவர் மு.இராகவையங்கார். தம் கல்வெட்டறிவின் துணையால் ஆழ்வார்கள் காலநிலை, சாசனத் தமிழ்க் கவிசரிதம், இலக்கியச் சாசன வழக்குகள் என்ற நூல்களைப் படைத்துள்ளார்.

வேங்கடராஜூலு ரெட்டியார் வடமொழியும் திராவிட மொழிகளும் அறிந்தவர். அந்த மொழிகளின் இலக்கணங்களையும், சொல் அமைப்பையும் ஒப்பிடும் ஆராய்ச்சியில் தேர்ந்தவர். பழைய இலக்கண நடையில் பல கட்டுரைகளும் சில ஆராய்ச்சி நூல்களும் எழுதியுள்ளார்.

ஒழுங்காகவும் தெளிவாகவும் எழுதப்பட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர் மயிலை.சீனி.வேங்கடசாமி. கிறித்தவமும் தமிழும், சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் என்ற நூல்கள் அவரது நுண்ணறிவைக் காட்டும்.

இந்திய அரசால், National Professor of

umanities என்ற விருது வழங்கிச் சிறப்பிக்கப் பெற்ற தெ.பொ.மீ அவர்கள் தமிழ் மொழியியலின் தந்தையாவார். வள்ளுவரும் மகளிரும், அன்புமுடி, பிறந்தது எப்படியோ? கானல்வரி, குடிமக்கள் காப்பியம், தமிழும் பிற பண்பாடும், பாட்டிலே புரட்சி, சமணத் தமிழ் இலக்கிய வரலாறு, வாழும் கலை, தேனிப்பு எனப் பல நூல்களை இயற்றியுள்ளார்.

தனியொரு நூலைப் பலர் பலகோணங்களில் இருந்து திறனாய்வு செய்து புகழ் பெற்றுள்ளனர். சிலம்பைப் பற்றித் திறனாய்வு செய்தவர்களில் மார்க்கபந்து சர்மா, மா.பொ.சி, மு.வ, ந.சஞ்சீவி, வ.சுப.மாணிக்கம் என்போர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

கம்பராமாயணத் திறனாய்வு என்றவுடன் டி.கே.சி. பி.ஸ்ரீ, அ.சீனிவாச ராகவன், அ.ச.ஞானசம்பந்தன், கி.வா.ஜகந்நாதன், மகாராசன், ராமகிருஷ்ணன் போன்ற அறிஞர்கள் நினைவிற்கு வருவர்.

திருக்குறள் திறனாய்வு என்றாலே திரு.வி.க., நாமக்கல் கவிஞர், பாரதிதாசன், தெ.பொ.மீ, மு.வ., கோதண்டபாணி பிள்ளை என்போருடைய நூல்கள் நினைவிற்கு வரும்.

சங்க இலக்கியங்களைப் பற்றிய திறனாய்வில் கி.வா.ஜ. தெ.பொ.மீ, இலக்குவனார், வேங்கடராம செட்டியார், கு.ராஜவேலு, அ.ச.ஞான சம்பந்தன், மு.வ., ந.சஞ்சீவி முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

5.1.6 உரையாசிரியர்கள் ராபர்ட்-டி.நொபிலி, அருளானந்த அடிகள், வீரமா முனிவர், கால்டுவெல், போப்ஐயர் என்பவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ் உரை நடையானது 19ஆம் நூற்றாண்டு முதல் விரைந்து சிறந்தது. ஆங்கிலேயர் ஆட்சி நாட்டில் நிலைபெற்ற பின் நாடெங்கும் அச்சகங்கள் தோன்றின. கிறித்துவ மிஷனரிகளும் இந்துக்களும் போட்டிபோட்டுக் கொண்டு நூல்களை வெளியிட்டனர். சென்னைக் கல்விச் சங்கமும் சென்னைப் புத்தகக் கழகமும் பாட நூல்களையும் மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டதால் உரைநடை நல்ல நிலையை அடைந்தது.

கற்ற பண்டிதர்க்கு ஒரு நடை, கல்லாத பாமரர் கேட்டு ரசிக்க ஒரு நடை, சமயக் கருத்துக்களைக் கூற ஒரு நடை என மூவகை நடை வீரமாமுனிவர் காலத்திலேயே வழங்கினாலும் இருபதாம் நூற்றாண்டின் உரைநடை வேந்தராக ஒளிர்பவர் ஆறுமுக நாவலர். இலக்கணப் பிழைகள் அற்ற எளிய, இனிய, தெளிந்த நடையைத் தோற்றுவித்ததால் இவரை தமிழ்க் காவலர் என்றும் தற்காலத் தமிழ் உரைநடையின் தந்தை என்றும் கூறுவர். இலங்கையைச் சார்ந்த ஆறுமுக நாவலர் உரைநடையை வளர்த்தாலும், தமிழகத்தில் உரைநடைக்கு உயிர் ஊட்டியவர் பாரதியார். என்றாலும் கவிதைத் துறை போல உரைநடையில் அவரால் புகழ்பெற இயலவில்லை. காலத்தின் போக்கிற்கு ஏற்ப, இவரும் வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதத் தயங்கவில்லை.

தொடக்கத்தில் பண்டிதர் நடையில் எழுதி வந்த உ.வே.சா அவர்களும் காலப் போக்குணர்ந்த பின் மாறி எளிய நடையில் எழுதினார். இவரது பதிப்புரைகளே அதற்குச் சான்று.

கற்றோர்க்கே விளங்கும் தமிழில் எழுதியவர் பரிதிமாற்கலைஞர். (வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார்) உரையாசிரியர்களையும் மிஞ்சும் படி செறிவான நடையில் இவர் எழுதினார்.

தனித்தமிழ் நடையின் தந்தை என்று போற்றப் பெறும் மறைமலையடிகள் வடமொழிச் சொற்கள் கலக்காமல் தனித் தமிழில் எழுதும் முறையினைத் தொடங்கி வைத்தார். சங்கத் தமிழின் சாயல் கொண்ட ஏற்றமான நடை இவரது நடை எனலாம். இளவழகனார், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், டாக்டர்.வ.சுப. மாணிக்கம் போன்றோர் அடிகளின் போக்கைப் பின்பற்றினர் எனினும் இயக்கம் வந்த வேகம் குறைந்து காலப் போக்கில் கைவிடப்பட்டது எனலாம்.

மறைமலை அடிகள்

சமூகம், பொருளியல், அரசியல் என எத்துறையாயினும் தமிழில் எளிய நடையில் எழுத முடியும் எனக் காட்டியவர். மென்றமிழ் உரைநடையின் முதல்வர் என்று போற்றப்படும் திரு.வி.க. ஆவார்.

பண்டைய புலவர்களின் செந்தமிழ் நடையினைப் பின்பற்றி இக்காலத்தில் பண்டிதமணி, நாட்டார், செல்வக்கேசவராயர், விபுலானந்தர் போன்றவர்கள் எழுதினர்.

சொல்லின்பம் மிக்க, ஓசைச் சிறப்புடைய நடைக்குச் சொந்தக்காரர் ரா.பி.சேதுப்பிள்ளை. தெளிந்த, வெள்ேளாட்டமான நடையில் எழுதியவர்கள் கா.சு.பிள்ளை, ஜெகவீரபாண்டியனார், ஒளவை துரைசாமி என்பவர்கள்.

சிந்தனையும் செறிவும் கொண்ட நடை எழுதியவர்கள் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் அவர்களும் பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ அவர்களும். மு.வ அவர்களின் நடை தெளிவு எளிமை ஆகியவற்றுடன் அமைந்துள்ளது.

சான்றோர் உரை செய்த நூல்கள் பின்வருமாறு:

ஆறுமுக நாவலர் -பெரிய புராணம், திருவிளையாடல்புராணம்

உ.வே.சா -புறநானூறு, பத்துப்பாட்டு, பதிற்றுப்பத்து, உரைக்குறிப்புகள்

பின்னத்தூர் நாராயணசாமி அய்யர்-நற்றிணை

வி.கோ.சூ (பரிதிமாற்கலைஞர்)-நாடகவியல்

மறைமலையடிகள்-முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை

திரு.வி.க-பெரியபுராணக் குறிப்புரை, திருக்குறள்

பண்டிதமணி-திருவாசகம்

சி.கே.சுப்பிரமணிய முதலியார்-பெரிய புராணம்

கா.சு. பிள்ளை-திருவாசகம்

வேங்கடசாமி நாட்டார்-காரிகையுரைத் திருத்தம், திருவிளையாடற் புராணம், சிலம்பு, மேகலை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது

ரா. ராகவ ஐயங்கார் -குறுந்தொகை

சோமசுந்தர பாரதியார் -தொல்காப்பியத்தின் சில பகுதிகள்

ஒளவை துரைசாமிப் பிள்ளை-ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு

வை.மு.கோ-கம்ப ராமாயணம் முழுவதும்

சே.கிருஷ்ணமாச்சாரியார்-வில்லிபாரதம்

உரையாசிரியர்களால் உரைநடை வளர்ந்தது; செய்யுளைச் சுவைக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிற்காலத்தில் தமிழ் மேலும் பல துறைகளில் வளர உதவியது.

5.2 மரபுக்கவிதையும் புதுக்கவிதையும்

20ஆம் நூற்றாண்டில் மரபு சார்ந்த கவிதைகளையும் வடிவங்களையும் உரைநடை பின்னுக்குத் தள்ளி விட்டது. எனினும் செய்யுள் நூல்கள் இயற்றப் படாமலில்லை. நாடு விடுதலையை நோக்கி, முன்னேறிய அதே வேளையில் காந்திய இலக்கியம், பொதுவுடைமை இலக்கியம், பெரியாரியம், குழந்தை இலக்கியம் முதலான துறைகள் மரபு சார்ந்து வளர்ந்தன. அதே வேளையில் பாரதி தொடங்கி வைத்த ‘வசன கவிதை’ சற்று உருமாறி ‘புதுக்கவிதை’ என்ற பெயர் கொண்டு புகழ் பெற்றது. படிமம், குறியீடு என்பவற்றை உட்கொண்டு, பல்வேறு மேனாட்டு இலக்கியக் கொள்கைகளுக்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையில் பல்வேறு கவிஞர்களால் புதுக்கவிதை இயற்றப் பெற்றது. இனி இவற்றின் வளர்ச்சி பற்றிக் காண்போம்.

5.2.1 மரபுக் கவிதை நான்கு வகைப் பாக்களைக் கொண்டு, பழைய, புதிய வடிவங்களில் அமைக்கப் பெற்ற நூல்கள் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன. (முன்னுரை ப.37ல் தொடங்குகிறது)

திரு.வி. கலியாண சுந்தரனார்

சமயத் துறையில் தெளிவான அறிவைப் பெற்றிருந்த திரு.வி. கலியாண சுந்தரனார் அவர்கள் 1942ஆம் ஆண்டு முதல் பல செய்யுள் நூல்கள் எழுதத் துவங்கினர். திருமால் அருள் வேட்டல், முருகன் அருள் வேட்டல், சமரச தீபம், கிறிஸ்து மொழிக் குறள், சிவன் அருள் வேட்டல் என்ற நூல்களில் ஆழ்வார் நாயன்மார்களின் பாடல்களையும் அருட்பாவையும் பின்பற்றி எழுதியுள்ளார். புதுமை வேட்டல், பொதுமை வேட்டல் என்ற நூல்களில் சாதி வேறுபாடுகள் அற்ற புதிய சமுதாயத்தை வரவேற்கும் நெஞ்சத்தைக் காட்டுகிறார். ஏறத்தாழ 15 செய்யுள் நூல்களைத் திரு.வி.க எழுதியுள்ளார். ‘உரைநடையை விட அவரது செய்யுள் நூல்களில் எளிமை, தூய்மை, பொதுமைப் பண்புகள் நிறைந்திருந்தன’ என்கிறார் மு.வரதராசனார்.

• மகாகவி பாரதியார்

நெல்லை மாவட்டம் எட்டையபுரத்தில் தோன்றிய பாரதி, சுப்ரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்டவர். இவர் பண்டிதர் தமிழைப் பாமரர் தமிழாக்கியவர்; தமிழ்ப்பற்றும் நாட்டுப்பற்றும் ஊட்டியவர்; தேசபக்தி, தெய்வபக்தி என்ற இரண்டும் இருகண்களாகப் போற்றியவர்; கண்ணன், சக்தி புகழ் பாடியவர்; பெண்மைக்கு ஏற்றம் தந்து போற்றியவர்.

பாரதியின் கவிதையிலே ஷெல்லியின் கற்பனை, வோர்ட்ஸ்வொர்த்தின் கடவுட் கொள்கை, பிரௌனிங்கின் வாழ்வு நோக்கு, டென்னிசனின் கவிதை எளிமை என்பவற்றைக் காணலாம். முறையாகச் சங்கீதம் கற்றதால் தம் பாடல்களுக்குத் தாமே மெட்டமைத்துப் பாடியுள்ளார். தாயுமானவரின் ஆனந்தக் களிப்பு, காவடிச்சிந்து, கிளிக்கண்ணி, நொண்டிச்சிந்து என மனங்கவரும் இசை வடிவங்களைத் தந்தவர். சித்தர் பாடல் மெட்டுக்களையும், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மெட்டுக்களையும் பின்பற்றிப் பாடியுள்ளார். தெருவில் ஊசி விற்கும் பெண்கள் பாடும் பாட்டு, மாவு இடிக்கும் பெண்கள் பாடு்ம் பாட்டு, வண்டிக்காரன் பாடும் பாட்டு, பண்டாரங்கள் பாடும் பாட்டு, குடுகுடுப்பைக்காரன் பாட்டு என அவர் தம் கவனித்த இசை வடிவங்களை எல்லாம் தம் பாடல்களில் கையாளத் தவறவில்லை.

விநாயகர் நான்மணி மாலை, தசாங்கம் என்பன பழைய மரபை ஒட்டிப் பாடப்பெற்றவை. குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்பன சிறு காப்பியங்கள். பாஞ்சாலியின் துன்பத்தில் பாரதத்தாயின் துன்பத்தைக் கண்டவர். வாழ்க்கையில் தாம் கடைப்பிடித்த புரட்சி, சீர்திருத்தம் என்பவற்றைப் பாடல்களில் கையாளப் பாரதி தவறவில்லை. உரைநடையில் அமைந்த பாட்டுப் போன்ற கருத்துக் கோவைகளும் கற்பனைச் சொல் ஓவியங்களும் பல இவரால் படைக்கப்பட்டன. “தெளிவாக அறிதல், தெளிவாக மொழிதல், கற்பவரின் உள்ளத்தைக் களிப்பித்து உருக்குதல்” என்பன இவர் தம் கவிதைப் பண்புகள். பக்திப்பாடல், தேசியப் பாடல், பெண் விடுதலைப் பாடல், தலைவர்களைப் போற்றிப் பாடியது எனப் பலவகைப் பாடல்களைப் பாரதி பாடியிருந்தாலும் அவர்க்குப் புகழை தேடித்தந்தது தேசபக்தி பாடல்களே!

சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே

துஞ்சிடோம் – இனி- அஞ்சிடோம்

எந்த நாட்டிலும் இந்த அநீதிகள்

ஏற்குமோ-தெய்வம் – பார்க்குமோ?

வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை

வாழ்த்துவோம்- முடி தாழ்த்துவோம்

என்பது அவரது கவிதைத் திறத்திற்கு ஒரு சிறு சான்று.

• புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

பாரதிதாசன்

புரட்சிக் கவிஞர் என்று புகழ்பெற்று விளங்கும் பாரதிதாசன் கனக சுப்பு ரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்டவர். பாரதியார் அரசியல் காரணத்தால் புதுச்சேரியில் தங்கியிருந்த காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகி, அவரது அன்பையும் பாராட்டையும் பெற்றார். தமது பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.

முதல் முதலில் வெளியான அவரது கவிதைத் தொகுப்பு பாரதிதாசன் கவிதைகள் ஆகும். பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி, வீரத்தாய், எதிர்பாராத முத்தம், காதலா கடமையா, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு எனப் பல படைப்புகளை அவர் தந்துள்ளார். தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ் இனம் என்ற உணர்ச்சி மேலோங்கத் தமிழ் இயக்கம் என்ற தொகுதியைப் படைத்துள்ளார்.

பாரதிதாசனுடைய நடை அவர் உள்ளம் போலவே வேகம் மிகுந்தது. எல்லோரும் வழங்கும் எளிய சொற்களிலேயே வேகத்தையும் ஆற்றலையும் ஊட்டுவார். பழைய மரபாக வந்த எளிய விருத்தங்கள், சிந்து மெட்டுகள், சிறு சிறு கண்ணிகள் என்பவற்றையே பெரிதும் கையாண்டு உள்ளார். மூட நம்பிக்கையையும் கண்மூடிப் பழக்கங்களையும் ஆத்திரம் கொண்டு எதிர்த்தவர் பாரதிதாசன்.

இருட்டறையில் உள்ளதடா உலகம் – சாதி

இருக்கின்றது என்பானும் இருக்கின் றானே

எனக் கோபம் கொண்டு பாடுகிறார். புதிய உலகை அமைப்பதை,

புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட

போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்

என்று பாடுகிறார்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு

என்று பாடியவர் பாரதிதாசன். பாட்டாளி நலம்பெறப் புரட்சியே வழி என்பதை,

ஓடப்ப ராயிருக்கும் ஏழை யப்பர்

உதையப்ப ராகி விட்டால், ஓர்நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப் பாநீ

என்று கூறுகிறார்.

• கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

தேசிக விநாயகம் பிள்ளை என்ற இயற்பெயரை உடைய இவர் நாகர்கோயிலையடுத்த தேரூரைச் சேர்ந்தவர். எளிமை , இனிமை, இசை நயம் மிக்கவை இவர் பாக்கள். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் படித்து இன்புறும் வகையில் எளிய தமிழ்ச் சொற்களையே தம் பாடல்களில் கையாண்டவர். மலரும் மாலையும், தேவியின் கவிதைகள், ஆசிய ஜோதி, நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் என்பவற்றைப் பாடியுள்ளார். உமர்கய்யாம் பாரசீக மொழியில் பாடியதை தமிழில் உமர்கய்யாம் பாடல்கள் என மொழிபெயர்த்துள்ளார். இவரது ஆசிய ஜோதி என்பது எட்வின் அர்னால்டின் ‘Light of Asia’ வின் தமிழாக்கம்.

உள்ளத் துள்ளது கவிதை -

இன்ப உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் -

உண்மை தெரிந்துரைப்பது கவிதை

எனக் கவிதை இலக்கணம் கூறும் இவர், ஆசிய ஜோதியில்,

பிறப்பினால் எவர்க்கும் – உலகில் பெருமை வாராதப்பா!

சிறப்பு வேண்டுமெனில் – நல்ல செய்கை வேண்டுமப்பா!

என்கிறார்.

வெய்யிற் கேற்ற நிழலுண்டு – வீசும் தென்றற் காற்றுண்டு,

கையிற் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மதுவுண்டு,

தெய்வ கீதம் பலவுண்டு, தெரிந்து பாட நீயுண்டு,

வையந் தருமிவ் வளமின்றி வாழும் சொக்கம் வேறுண்டோ?

என்ற பாடல் உமர்கய்யாமின் “

ere with a loaf of bread” என்ற பாடலின் தமிழாக்கம்.

நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் ஒரு நகைச்சுவைப் பெட்டகம். நாஞ்சில் நாட்டில் நிலவிய பெண் வழிச் சொத்து முறையை இந்நூலில் கவிமணி சாடுகிறார். மாமியார் தன் மருமகளுக்கு செய்யும் கொடுமையைப் பின்வருமாறு கூறுகிறார்.

அரிசியை நிதமும் அளந்து வைப்பாள்;

நல்ல மிளகை நறுக்கி வைப்பாள்,

கொல்ல மிளகைக் குறுக்கி வைப்பாள்,

உப்பில் புளியை உருட்டி வைப்பாள்,

கடுகையும் எண்ணிக் கணக்கிட்டு வைப்பாள்

என்கிறார்.

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

என்ற பாடல் மலரும் மாலையில் இடம் பெற்ற எளிமையான இனிய பாடல்.

• சுத்தானந்த பாரதி

சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கவிதைகளும் இசைப் பாடல்களும் ஓயாமல் எழுதி வந்த துறவியார் சுத்தானந்த பாரதியார். அவருடைய பாடல்கள் பலவகை ஆனவை; நாட்டுணர்ச்சி ஊட்டும் பாடல்கள், சமய ஆர்வம் வளர்க்கும் கவிதைகள், புத்துலகக்கனவு பற்றிய பாடல்கள் என்று பலவகைக் கவிதைகளில் புதிய, பழைய மரபு வழிப்பட்ட வடிவங்கள் உண்டு. பாரத சக்தி மகாகாவியம் என்பது அவருடைய பெரிய செய்யுள் நூல்.

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் மாணாக்கர். ஆற்றுப்படை, தென்தில்லை உலா, தென்தில்லைக் கலம்பகம், களப்பாழ்ப் புராணம் போன்ற பல நூல்களைப் பாடினார். அவற்றுள் ஒரு தலபுராணமும், ஓர் ஆற்றுப் படையும் ஒரு கோவையும் மற்றும் சில நூல்களும் எழுதி அச்சிடப் படாமலேயே உள்ளன. நற்றிணை என்ற இலக்கியத்துக்கு அவர் எழுதிய உரைபுகழ் பெற்றது.

இலக்குமணப்பிள்ளை என்பவர் கட்டளைக் கலித்துறை என்ற செய்யுள் வகையில் எதுகை, மோனைகள் இல்லாமல் எழுதும் முறையைப் புகுத்தினார்.

ரா.ராகவ ஐயங்கார் புவியெழுபது, பாரிகாதை என்ற 2 நூல்களை எழுதியுள்ளார். பாரி காதை என்பது வெண்பாவால் ஆகிய ஒரு நல்ல காப்பியம்.

வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் எழுதிய ‘நெல்லைச் சிலேடை வெண்பா’ என்ற நூல் சிலேடை, யமகம், திரிபு என்னும் சொல் அலங்காரங்களை அமைத்து எழுதப்பட்டது. மில்டன் இயற்றிய சுவர்க்க நீக்கம் என்ற நூலை விருத்தப்பாவால் மொழிபெயர்த்துப் பாடியுள்ளார். கோம்பி விருத்தம், அகலிகை வெண்பா என்ற செய்யுள் நூல்களையும் பாடியுள்ளார்.

பாம்பன் குமரகுருதாச அடிகள் செந்தமிழ் என்னும் 50 தனித்தமிழ் வெண்பாவும் குமார சுவாமியம் என்னும் காப்பியமும் பாடியுள்ளார்.

வரத நஞ்சையப்ப பிள்ளை என்பவர் தமிழரசி குறவஞ்சியையும் கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார் பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் (2 பாகம்) என்ற நூலையும் பாடினர்.

மகாகவி என்ற பட்டம் பெற்ற அ.கு.ஆதித்தர் கடவுள் அனுபூதி, பள்ளி எழுச்சி, பரமரகசிய மாலை, கடவுள் வணக்கம், மாணவர் கடவுள் வணக்கம், தொழுகை முறை, நவரசக் கம்ப நாடகம், ஆண்டாள் பிள்ளைத் தமிழ், இரணியன் வதைப் பரணி என்ற நூல்களைப் பாடியுள்ளார்.

ச.து.சு. யோகியார் தற்காலக் கவிஞர்களில் காவிய நடையின் சிறந்த பிரதிநிதி என்று போற்றப்படுபவர். வேகம், வேதாந்தத் தெளிவு, வீரம், உட்பொருள் கொண்டவை இவரது கவிதைகள். தமிழ்க் குமரி, அகலிகை, மேரி மக்தலேனா, காமினி, காதல் மலர்கள், முருக காவியம், கதையைக் கேளடா (நாட்டுப்புறப் பாடல்) என்ற நூல்களை இயற்றியுள்ளார்.

5.2.2 புதுக்கவிதை பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகப் பிரான்சு நாட்டில் புரட்சிகரச் சமுதாயம் தோன்றியது. பாதலேர், ரிம்போ, மல்லார்மே போன்ற புரட்சிக் கவிகள் பழைய மரபுகளை விட்டுவிட்டு யாப்பு விடுதலை பெற்ற புதிய கவிதைகளைப் பாட முற்பட்டனர். அவற்றை ஆங்கிலத்தில் Free verse என்றனர். அப்புதிய போக்கைப் பின்பற்றி, சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் வால்ட் விட்மன் வசன கவிதை எழுதினார். தாகூர் தம் கீதாஞ்சலியை இலக்கணம் மீறிய புதுமைக் கவிதையாகப் படைத்தார்.

தாகூரின் கீதாஞ்சாலியையும் வால்ட் விட்மனின் புல்லின் இதழ் களையும் படித்த பாரதியார் அதே போக்கில் காட்சிகள் என்ற இலக்கணம் மீறிய புதிய கவிதைப் படைப்பைப் படைத்தார். தமிழில் அமைந்த புதுக்கவிதையின் தந்தை பாரதியாரே! அவர் பாடிய புதிய கவிதை ஒன்று இதோ:

வெம்மைத் தெய்வமே! ஞாயிறே! ஒளிக்குன்றே!

அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே

மீன்களாகத் தோன் றும் விழிகளின் நாயகமே!

பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே!

வலிமையின் ஊற்றே! ஒளி மழையே! உயிர்க்கடலே!

(பாரதியார் கவிதைகள், ஞாயிறு புகழ்-12, இரண்டாம் கிளை புகழ்)

பாரதியைத் தொடர்ந்து ந.பிச்சமூர்த்தி 1934 முதல் சோதனை ரீதியான கவிதைகளை எழுதத் துவங்கினார். அவருடன் சேர்ந்து கு.ப.ராவும் வல்லிக்கண்ணனும் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தனர். இப்புதுத்துறையை அயராமல் பேணிப் பாதுகாத்துக் காலூன்றச் செய்தவர் சி.சு.செல்லப்பா. எழுத்து, மணிக்கொடி, வானம்பாடி என்ற இதழ்கள் புதுக்கவிதைக்கு வலிமை சேர்த்தன.

• எழுத்துக் கவிஞர்கள்

ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, க.நா.சு மூவரும் முதலில் புதுக்கவிதையை ஆங்கிலத்தில் தான் எழுதினர். பாரதியின் கவிதை கண்டு தமிழில் கவிதை படைத்தனர். சி.மணி, பசுவையா (சுந்தர ராமசாமி), தருமு சிவராமு, வைத்தீஸ்வரன், ஷண்முக சுப்பையா, நகுலன் போன்றோர் எழுத்துக் கவிஞர்கள். வடசொற்களை இவர்கள் அதிகம் கையாண்டனர். மாறுபட்ட உள்ளடக்கமும் வேறுபட்ட உணர்த்து முறையும் எழுத்துக் கவிஞர்களின் வெற்றிக்கு அடிப்படைகள்.

• படைத்த கவிதை நூல்கள்

ந. பிச்சமூர்த்தி – கிளிக்குஞ்சு, பூக்காரி, வழித்துணை, கிளிக்கூண்டு, பிச்சமூர்த்தி கவிதைகள்

சி.சு. செல்லப்பா – நீ இன்று இருந்தால்? மாற்று இதயம்

கு.ப.ரா – சிறிது வெளிச்சம்

வல்லிக்கண்ணன் – அமர வேதனை

புதுமைப்பித்தன் – புதுமைப்பித்தன் கவிதைகள்

புவியரசு – புவியரசு கவிதைகள், இதுதான், மீறல், இப்போதே இப்படியே

5.3 குழந்தை இலக்கியமும் பதிப்புகளும்

இக்காலக் கட்டத்தில் குழந்தைப் பாடல்கள் பெருமளவில் வெளி வந்தன. உ.வே.சாமிநாதய்யர் போன்றோர் அரும்பணியால், பல அரிய நூல்கள் பதிப்பிக்கப் பெற்றன.

5.3.1 குழந்தை இலக்கியம் குழந்தை இலக்கியம் என்றாலே குழந்தைகள் மட்டும் படிப்பதற்கு என்று எண்ணிவிடக் கூடாது. குழந்தைகள் பற்றி எழுவதே குழந்தை இலக்கியம் ஆகாது. குழந்தைகள் படிப்பதற்கு ஏற்றன படைப்பதே குழந்தை இலக்கியமாகும். இந்த இலக்கியம் எழுதுவது அவ்வளவு எளிதன்று; பொறுமை, பொறுப்பு, புலமை என்பன இவ்விலக்கியம் படைக்கத் தேவை. இந்தக் குழந்தை இலக்கியமும் கூடப் பெரியோர் இலக்கியம் போல, சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, நாடகம், துணுக்குகள் என்பவற்றைக் கொண்டது. குழந்தை இலக்கியம் தனக்கெனச் சிறப்பாகக் கொண்டுள்ளவையாகப் படக்கதை, புதிர்கள் என்பவற்றைக் கூறலாம்.

1901இல் குழந்தைப் பாடல்கள் பாடினார் கவிமணி. 1915ல் பாப்பா பாட்டு பாடினார் பாரதி. இவர்கள் குழந்தை இலக்கியம் என்ற நோக்கோடு பாடவில்லை எனினும் குழந்தை இலக்கியத்தைத் தொடங்கி வைத்தார்கள். இதற்குப் பின் கா.நமச்சிவாய முதலியாரும் மணி திருநாவுக்கரசு முதலியாரும் மயிலை.முத்துகுமார சுவாமியும் குழந்தைகளுக்காகக் கதைகளும் பாடல்களும் எழுதிப் பாடப் புத்தகங்களில் சேர்த்தார்கள். அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றிப் பலர் இன்று வரையில் தொண்டு செய்து வருகிறார்கள்.

• அழ.வள்ளியப்பா

13வது வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கிய இவர், ஏறக்குறைய 60 நூல்கள் படைத்துள்ளார். குழந்தை எழுத்தாளர் சங்கம் நிறுவியது இவரது பெருஞ்சாதனை. இவரது முதல் நூல் மலரும் உள்ளம். பாட்டிலே காந்தி, பாப்பாவுக்குப் பாட்டு, பெரியோர் வாழ்விலே, நல்ல நண்பர்கள் (கதை), சின்னஞ்சிறு வயதில், பிள்ளைப்பருவத்திலே என்பன அவரியற்றிய சில நூல்கள்.

வட்டமான தட்டு

தட்டு நிறைய லட்டு

லட்டு மொத்தம் எட்டு

எட்டில் பாதி விட்டு

எடுத்தான் மீதி கிட்டு

மீதம் உள்ள லட்டு

முழுதும் தங்கை பட்டு

போட்டாள் வாயில் பிட்டு

கிட்டு நான்கு லட்டு

பட்டு நான்கு லட்டு

மொத்தம் தீர்ந்தது எட்டு

மீதிக் காலித் தட்டு

(அழ.வள்ளியப்பா, மலரும் உள்ளம், ப.28)

• மயிலை சிவமுத்து

குழந்தை இலக்கிய முன்னோடி என்று போற்றப்படுபவர். முத்துப் பாடல்கள், தங்க நாணயம், நல்ல எறும்பு, நல்ல குழந்தை, முத்துக் கதைகள், சிவஞானம், நாராயணன் முதலிய 25 நூல்கள் படைத்துச் சிறுவர் இலக்கியத்தைச் சிறக்கச் செய்தார். நித்தில வாசகம் என முதல் ஐந்து வகுப்புகளுக்கான பாடநூல் படைத்தார். குழந்தைகளுக்கான இதழ் ஒன்றையும் நடத்தி வந்தார்.

• தூரன்

சிறுவர் இலக்கியத் துறையில் பல சாதனை புரிந்தவர். சூரப்புலி, மாயக்கள்ளன், ஆனையும் பூனையும், பறக்கும் மனிதன், ஓலைக்கிளி, தம்பியின் திறமை, நாட்டிய ராணி, மஞ்சள் முட்டை, கொல்லிமலைக் குள்ளன், கடக்கிப்பட்டி முடக்கிப்பட்டி எனப் பல நூல்கள் படைத்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து தம்பி சீனிவாசன், நெ.சி.தெய்வசிகாமணி, பூவண்ணன் முதலியவர்களும் இத்துறையில் பங்கேற்று உள்ளனர். குழந்தைகளின் நன்மை கருதிப் பாடப் பெறும் அழகிய பாடல்களைச் சில சமயம் குழந்தை இலக்கியத்தில் சேர்க்க இயலவில்லை. உதாரணமாக அவ்வையாரைப் பின்பற்றிப் பாரதியார் எழுதிய புதிய ஆத்திச்சூடியைக் கூறலாம். வியப்பான, எளிய உணர்ச்சிகளை இனிய முறையில் எதுகை மோனை நிரம்பிய செய்யுள்களில் பாடினாலே குழந்தை இலக்கியம் சிறக்கும்.

5.3.2 பதிப்புகள் தம் பதிப்புப் பணிகளால், மறைந்தும் அழிந்தும் போகக் கூடிய நிலையிலிருந்த பல நூல்களைப் பதிப்பித்துத் தமிழ் இலக்கியங்களுக்குப் பாதுகாப்பு அளித்தவர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள்.

• உ.வே. சாமிநாதய்யர்

இருபதாம் நூற்றாண்டில் பதிப்புத் துறையில் மிக முக்கிய இடம் வகிப்பவர் உ.வே.சாமிநாதயைர். தமிழ்த் தாத்தா என்று போற்றப் பெறுபவர். சேலம் இராமசாமி முதலியார் என்பவரே இவரைப் பதிப்புப் பணியில் ஊக்குவித்தவர். 1906-இல் மஹாமஹோபாத்தியாய என்ற பட்டத்தை ஆங்கில அரசு இவருக்கு வழங்கியது

இவர் 1878இல் முதன்முதலில் பதிப்பித்த நூல் வேணுவனலிங்க விலாசச் சிறப்பு என்பது. தம்முடைய 60 ஆண்டுக்காலப் பணியில் 87 நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவையாவன:

(1)பத்துப்பாட்டு

(2)எட்டுத்தொகையில் 5

(3)காப்பியங்கள் 5

(4)புராணங்கள் 15

(5)பரணி 2

(6)அந்தாதி 3

(7)உலா 10

(8)தூது 6

(9)குறவஞ்சி 2

(10)பிற பிரபந்தங்கள் 9

(11) மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தியாகராஜ செட்டியார், சிவக்கொழுந்து தேசிகர், குமரகுரபரர் ஆகியோரின் பிரபந்தத் திரட்டு 4

(12)இலக்கணம் 3

இவருடைய பதிப்பு முன்னுரைகளைப் படித்தாலே புலமை பெற்று விடலாம். இறுதியில் தரும் சொல்லடைவு, பொருளடைவு என்பன ஆராய்ச்சியாளர்களின் மூலங்கள் எனலாம். தவிர பல்வகை நூல்கள் 21 எழுதியுள்ளார்.

5.4 இசைத் தமிழும் நாடகமும்

இசைத் தமிழ், ஆபிரகாம் பண்டிதர், அண்ணாமலை செட்டியார், முத்தையா செட்டியார் போன்றோரால் மேம்பாடு அடைந்தது. அதைப் போல சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், பாரதிதாசன் முதலியோரால் மேடை நாடகங்களும் இலக்கிய நாடகங்களும் மிகுதியாக வளர்ந்தன.

5.4.1 இசைத் தமிழ் மொழிக்கு முன்னே தோன்றியது இசை. இசையில் இருந்தே மொழி எழுந்தது. எனவே மொழிக்குத் தாயாகத் திகழ்வது இசையே என்பர். இறைவனையே, ‘ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே’ என்றும், ‘ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே’ என்றும் போற்றுவர். வாழ்விலே இசையையும் இசையிலே வாழ்வையையும் கண்டவர்கள் தமிழர்கள். இசைத் தமிழுக்கு அடிப்படையான முதற்கருவியான குழல் துளைக்கருவி. குழலில் இல்லாத வாய்ப்புக்களை எல்லாம் காட்ட அடுத்துத் தோன்றியது யாழ். இது நரம்புக் கருவி. இவ்விரண்டிலும் வேறுபட்டு ஐந்திணைக்கும் உரியதாகத் தோன்றியது முழவு. இது தோல் கருவி. தமிழரின் இசையறிவு இம்மூன்று கருவிகளால் புலனாகும்.

இருபதாம் நூற்றாண்டில் முப்பெரும் பெரியார்கள் தமிழிசைக்குப் பெருந்தொண்டாற்றி உள்ளனர். தம் படைப்புகளால் தமிழிசையை உயிர்ப்பித்தவர்கள் ஆபிரகாம் பண்டிதரும் விபுலானந்தரும். பணியால் உயிர் ஊட்டியவர் செட்டி நாட்டரசர். தமிழிசை இயக்கம் என்ற ஓர் இயக்கத்தையே துவங்கித் தமிழிசைக்கு மறுவாழ்வு தந்தார். பாரதியார், பாரதிதாசனார், கவிமணி என்ற மூன்று கவிஞர்கள் எளிய, இனிய இசைப் பாக்களைப் பாடித் தந்தனர். இலக்குமண பிள்ளை, கவியோகி சுத்தானந்த பாரதியார், தூரன், சரவண பவானந்தர், சுத்த சத்துவானந்தர், பாபநாசம் சிவன் ஆகியோர் இசைத்தமிழுக்குக் குறிப்பிடத்தக்கத் தொண்டாற்றி உள்ளனர்.

• ஆபிரகாம் பண்டிதர்

கருணாமிர்த சாகரம் என்ற இரு பகுதிகள் கொண்ட நூலைத் தந்ததன் மூலம் தமிழிசைக்கு உயிர் ஊட்டியவர் ஆபிரகாம் பண்டிதர். 1346 பக்கங்கள் கொண்ட முதல்பகுதி கருணானந்தர் பொற்கடகம் எனப்படுகிறது. இரண்டாம் பகுதி ராகங்கள், பண்கள் என்பவற்றை விளக்குகிறது. ஆபிரகாம் பண்டிதரின் மகனான வரகுண பாண்டியனார், ‘பண்டைக் காலத்தில் வழங்கிய செங்கோட்டி யாழே, தற்காலத்தில் வீணையாக வழங்குகிறது’ என்பதைப் பாணர் கைவழி என்ற நூலில் ஆராய்ந்து கூறியுள்ளார். பண்டிதரின் மருமகனான தனபாண்டியன் என்பவர் புதிய ராகங்கள் என்ற இசை நூலை அளித்துள்ளார்.

சிறந்த மருத்துவரான ஆபிரகாம் பண்டிதர் தமிழில் 103 பண்களும், 11,000-க்கும் மேற்பட்ட ராகங்களும் இருந்ததை உணர்த்தினார். தாமே புதியதொரு யாழ் செய்து, அதில் தமிழ்ப் பண்களை இசைத்துக் காட்டினார். எட்டு இசை மாநாடுகள் நடத்தி உள்ளார்.

• அண்ணாமலை செட்டியார்

தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர். இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே இடம் பெறவேண்டும் என வலியுறுத்துவதே தமிழிசை இயக்கம்.

தமிழிசைச் சங்கம் செயல்பட அக்காலத்தில் பொருள் வழங்கியவர். இதனால் 1943இல் இசைக் கல்லூரி எழுந்தது. ஆண்டுதோறும் தமிழிசை மாநாடு நடத்தப்படுகிறது. பண்ணாராய்ச்சி நடைபெறுகிறது. இராஜா சர். அண்ணாமலை செட்டியார் தோற்றுவித்ததே அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

• முத்தையா செட்டியார்

அண்ணாமலை செட்டியாரின் புதல்வரே முத்தையா செட்டியார். செட்டி நாட்டரசர் என்று போற்றப் பெற்றவர். மதுரையில் தமிழ் இசை மன்றம் இவர் முயற்சியால் கட்டி முடிக்கப் பெற்று இயங்கி வருகிறது. தமிழிசைக் காவலர் என்று பாராட்டும் பெற்றவர்.

தமிழிசை இயக்கத்தின் எண்ணத்தை நிறைவேற்றத் தமிழ்ப் பாடல்கள் தேவைப்பட்டன. தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் இதற்கு உதவின. புதியன தேவை என்ற போது பல அறிஞர்கள் தமிழ்ப் பாடல்களை இயற்றினர். அவை இசை நிகழ்ச்சிகளில் பாடப் பெற்றன.

5.4.2 நாடகம் இயல், இசை, நாடகம் என முப்பெரும் பிரிவாய் அமைந்தது தமிழ். பண்டைத் தமிழ் நூல்களில் நாடகம் கூத்து எனக் குறிக்கப் பெற்றது. 18ஆம் நூற்றாண்டில் வடநாட்டில் இருந்து வந்த மராத்தி, பார்சி நாடகக் கம்பெனிகளால் தமிழில் நாடகக் கலையானது மலர்ச்சி பெற்றது. முதன் முதலில் மேடையில் சமூக நாடகங்கள் நடிக்கப் பெற்றன. பாட்டு, புராணக்கதை, சாதி, விடுதலை என்ற பல்வேறு அம்சங்களால் சிறப்புப் பெற்ற நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டில் தோன்றின. என்றாலும் நாடக நடிகர்கள் மக்கள் மத்தியில் இழிவாகவே மதிக்கப் பெற்றனர். அக்குறையைப் போக்கி, தமிழ் நாடகத்திற்குப் புத்துயிர் அளித்தவர் சங்கரதாஸ் சுவாமிகள்.

• சங்கரதாஸ் சுவாமிகள்

தமிழ் நாடக மேதை, தமிழ் நாடக உலகின் தந்தை, தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என்றெல்லாம் போற்றப் பெறும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் 1918இல் தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா என்ற அமைப்பைத் தோற்றுவித்து நாடகக் கலையைக் கற்றுக் கொடுத்தார். அபிமன்யு சுந்தரி, கோவலன், சிறுத்தொண்டர் முதலான 40-க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றியவர். நீதி போதனைகளைத் தம் நாடகத்தில் பெரும் பான்மையாய் அமைப்பார். ஒரே இரவில் நான்கு மணிநேரம் நடைபெறக் கூடிய நாடகத்தை எழுதித் தந்தவர். தமிழ் மேடை நாடகங்கள் நசியாமல் காத்ததில் பெரும்பங்கு வகித்தவர் சுவாமிகள்.

• உடுமலை முத்துசாமிக் கவிராயர்

தஞ்சை ஜகன்மோகன நாடகக்குழு ஆசிரியரான உடுமலை முத்துசாமிக் கவிராயர் விபீஷண சரணாகதி, போஜ ராஜன், பீஷ்மர் சபதம், ஞானசவுந்தரி, தயாநிதி, மகாலோபி, கண்ணாயிரம், இலங்காதகனம் என்ற நாடகங்களை எழுதினார்.

• பம்மல் சம்பந்த முதலியார்

பம்மல் சம்பந்த முதலியார்

ஆங்கில அரசால் ராவ் பகதூர் பட்டம் பெற்ற பம்மல் சம்பந்த முதலியார் சுகுண விலாச சபை என்ற அமெச்சூர் நாடக மன்றம் நிறுவி நடிப்புக் கலையை வளர்த்தார். தொடக்கத்தில் பிறமொழி நாடகங்களைத் தழுவியே நாடகம் படைத்தார். மொத்தம் 94 நாடகங்களைப் படைத்துள்ளார். அவற்றுள் புகழ் பெற்றவை சபாபதி, மனோகரா, இரு நண்பர்கள் முதலியன. சங்கரதாஸ் சுவாமிகட்கு அடுத்தபடியாக நாடகக் கலைக்கு உயர்வும் மதிப்பும் தேடித் தந்தவர் இவரே.

கூத்தாடிகளைக் கலைஞர்கள் என்று மக்கள் மதித்தது இவர் செய்த புதுமைப் புரட்சிகளால் தான். நாடக மேடை நினைவுகள் (6 பகுதிகள்) நான் கண்ட நாடகக் கலைஞர்கள், நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி?, நாடகத் தமிழ், நடிப்புக் கலை என்ற நூல்களும் எழுதியுள்ளார். தமிழில் அமைந்த முதல் உரைநடை நாடகமான லீலாவதி சுலோசனாவைப் படைத்தும், நாடகத்தில் துன்பியல் முடிவுகளை அமைத்தும் சாதனை படைத்தவர்.

• மோசூர் கந்தசாமி முதலியார்

வாழ்நாள் முழுவதும் நாடகப் பயிற்றுநராகவே விளங்கி மறைந்த ‘தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை’ என்று போற்றப் பெறும் மோசூர் கந்தசாமி முதலியார் சந்திரமோகனா, பக்த துளசிதாஸ், மாயாமச்சேந்திரா போன்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவர் மகனே திரைப்பட நடிகர் எம்.ஆர்.ராதா.

• தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்

1922இல் பால மனோகர நாடகசபாவை அமைத்தவர் தெ.பொ.கிருஷ்ண சாமிப் பாவலர். அரிச்சந்திரன், கோவலன், வள்ளித் திருமணம், தேசிங்கு ராஜன், ராஜா பர்த்ருஹரி போன்ற நாடகங்களால் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றவர். இங்கிலாந்து சென்று தமிழ் நாடகம் நடத்தி ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பாராட்டும் பெற்றார். பிற்காலத்தில் நாட்டு விடுதலையுணர்வு உணர்த்தும் நாடகங்கள் நடத்தினார்.

பாரதிதாசன்

புரட்சிக் கவிஞர் என்று போற்றப் பெறும் பாரதிதாசன் இரணியன் அல்லது இணையற்ற வீரன், சௌமியன், கற்கண்டு, படித்த பெண்கள் கழைக் கூத்தியின் காதல், சேரதாண்டவம், பிசிராந்தையார் என்ற 7 பெரு நாடகங்களும் பொறுமை கடலினும் பெரிது, இன்பக்கடல், நல்ல தீர்ப்பு என நான்கு சிறுநாடகங்களும் வீரத்தாய், சத்திமுத்தப்புலவர், ஒன்பது சுவை, நல்லமுத்துக் கதை என நான்கு கவிதை நாடகங்களும் அமைதி என்ற மௌன (mime) நாடகத்தையும் படைத்துள்ளார்.

• அரு.இராமநாதன்

அரு. இராமநாதன் இராஜராஜசோழன், வானவில், சக்ரவர்த்தி அசோகன் என்ற 3 புகழ் பெற்ற நாடகங்களை எழுதினார்.

• டி.கே.எஸ்.சகோதரர்கள்

டி.கே.எஸ். சகோதரர்கள் நால்வரும் பால சண்முகாநந்த சபா என்ற அமைப்பைத் தோற்றுவித்து நாடகக் கலைக்குத் தொண்டாற்றியவர்கள். நாடகப் போட்டி, நாடக வளர்ச்சிக்கென மாநாடு, தமிழிசைப் பிரசாரம், தனியார்க்கு நிதி திரட்டித் தந்தது, நூல் வடிவில் நாடகங்களை வெளியிட்டது எனப் புதுமை பல செய்த சபா 56 நாடகங்களை அரங்கேற்றியது. சபா மூடப்படும் 3ஆண்டுகட்குமுன்பே அறிவிப்பு செய்து மூடுவிழா நிகழ்த்தியது. இந்நாடகக்கலை சுதந்திரப் போராட்டக் காலத்தில் மேலும் வீறு பெற்றது. மக்களைத் தூண்டும் மகத்தான சக்தியாக மாறியது.

5.5 இலக்கணமும் மொழிநூலும்

இருபதாம் நூற்றாண்டில் முற்பகுதியில் பிற காலங்களைப் போல் அல்லாமல் இலக்கணமும் மொழி ஆராய்ச்சியும் சற்றுப் பின்தங்கியே இருந்தது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். இலக்கணத் துறையில் அ.கு.ஆதித்தர், அரசஞ்சண்முகனார், தேவநேயப் பாவாணர் போன்றோரும் மொழி நூலாராய்ச்சியில் மாகறல் கார்த்திகேய முதலியார், தெ.பொ.மீ, ரா.பி.சேதுப்பிள்ளை, தேவநேயப் பாவாணர், வேங்கடராஜுலு ரெட்டியார் ஆகியோரும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

அ.கு. ஆதித்தர் என்பவர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான இலக்கணச் செப்பம் முதலிய நூல்களை இயற்றி உள்ளார். தொல்காப்பியம் – சொல்லதிகாரம் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார். உரிச்சொல் விளக்கம் – இவரது புலமையை எடுத்துக்காட்டும் நூல்.

அரசஞ்சண்முகனார், திருக்குறளாராய்ச்சி, தொல்காப்பியப் பாயிர விருத்தி முதலிய நூல்கள் எழுதியுள்ளார். மாகறல் கார்த்திகேய முதலியார் தமிழ்மொழி நூல் என்ற நூலை எழுதி உள்ளார். இதுவே முதன் முதலில் தமிழில் எழுந்த மொழியாராய்ச்சி நூல் ஆகும். கா.சுப்பிரமணியப்பிள்ளை தனித் தமிழ்க் காப்பாளருள் ஒருவர். தமிழ்மொழி அமைப்பும் மொழி நூற்கொள்கையும், தமிழ் இலக்கிய வரலாறு (2 பாகம்) என்ற நூல்களை எழுதியுள்ளார். மொழி ஞாயிறு எனப் போற்றப்படும் ஞா.தேவநேயப் பாவாணர் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் 78 படைத்துள்ளார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி தமிழ் உலகிற்கு இவரது நன்கொடை. முதல் தாய்மொழி, திராவிடத்தாய், பழந்தமிழாட்சி, வேர்ச்சொற் கட்டுரைகள், உயர்தரக் கட்டுரை இலக்கணம், வடமொழி வரலாறு, தமிழ் வரலாறு, The Primary classical Language of the world, சுட்டு விளக்கம், இயற்றமிழ் இலக்கணம் போன்ற பல நூல்களை இயற்றிய இவர் பாடல்களை இயற்றுவதிலும் வல்லவர். க.வெள்ளை வாரணனார் செய்த தொல்காப்பிய உரை வளம் இக்காலக் கட்டத்தில் குறிப்பிடத்தக்க நூலாகும்.

சொல்லாராய்ச்சியில் வல்லவரான ரா.பி. சேதுப்பிள்ளை ‘Tamil Words and their Significance’ என்ற நூலைப் படைத்தவர். ஊரும் பேரும், செந்தமிழும் கொடுந்தமிழும் போன்ற பல நூல்களைப் படைத்தவர்.

‘தமிழ் மொழியியலின் தந்தை’ என்ற பெருமைக்கு உரியவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார். A

istory of Tamil Language, Foreign Models in Tamil Grammar, Collected Papers of TPM என்ற நூல்கள் மூலம் உலக அரங்கில் தமிழை இடம்பெறச் செய்தவர். வேங்கட ராஜுலு ரெட்டியார் வடமொழியோடு திராவிட மொழிகளை ஒப்பிடும் ஆராய்ச்சியில் தலைசிறந்தவர்.

5.7 வாழ்க்கை வரலாற்று இலக்கியம்

வாழ்க்கை, வரலாறு என்னும் இரு சொற்களின் இணைப்பாக இப்பெயர் அமைகின்றது. பொதுமக்களிடையே கலை, அரசியல், இலக்கியம், அறிவியல் என ஏதாவது துறையில் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கையையோ, சுவையான அனுபவங்களையோ சுவைபடத் தொகுத்து அளிப்பது வாழ்க்கை வரலாறு இலக்கியம் ஆகும்.

ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு, விநோத ரசமஞ்சரி, வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளின் புலவர் புராணம், தமிழ்நாவலர் சரிதை, குருபரம்பரைப் பிரபாவம், சேய்த்தொண்டர் புராணம் என்பவற்றை வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் முன்னோடிகள் என நாம் கொள்ளலாம்.

வாழ்க்கை வரலாற்று இலக்கியம் பிறர் வரலாறு, தன் வரலாறு எனும் இருபெரும் பிரிவுகளை உடையது என்கிறார் ச.வே.சுப்பிரமணியன். இவ்விரு வகைப் பிரிவிலும் உரைநடை, கவிதை, கடிதம், நாடகவடிவில் நூல்கள் உள்ளன.

பிறர் வரலாறு கூறும் நூல்கள்

1டாக்டர் உ.வே.சா-மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் சரித்திரம்

2மு.நமச்சிவாயம்-காசி முதல் தாஷ்கண்ட் வரை

3சி.ஞானமணி-எழுத்தாளர் ம.பொ.சி

4திரு.வி.க -மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

5மு.வ -அறிஞர் பெர்னாட்ஷா

6ரகுநாதன் -புதுமைப்பித்தன் வரலாறு

7கல்கி -மாந்தருக்குள் ஒரு தெய்வம்

8மறை. திருநாவுக்கரசு-மறைமலையடிகள் வரலாறு

9சோ.சிவபாத சுந்தரம் -கௌதம புத்தர் அடிச்சுவட்டில்

10கௌசிகன்-டாக்டர் ராதாகிருஷ்ணன்

11சோமலெ-பண்டிதமணி

12அ.லெ. நடராசன்-ஏழைப்பங்காளன் லெனின்

13பி.ஸ்ரீ-பாரதி – நான் கண்டதும் கேட்டதும்

14ம.பொ.சி-வீரபாண்டிய கட்டபொம்மன்

15ரா. கணபதி-அறிவுக்கனலே அருட்புனலே

ஒருவர் தன் வரலாற்றினைத் தானே எழுதிக் கொள்ளுதல் தன்வரலாறு ஆகும். பாரதியின் பாரதி அறுபத்தாறு என்ற நூலைத் தன்வரலாற்றிலக்கிய முதல் நூல் எனலாம். பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகமேடை நினைவுகள் நீண்டதாக ஆறுபகுதிகள் கொண்டமைகிறது. உ.வே.சாவின் என் சரித்திரம், நான் கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி என்பன குறிப்பிடத் தக்கன.

• பிற குறிப்பிடத்தக்க நூல்கள்

1திரு.வி.க -வாழ்க்கைக் குறிப்புகள்

2நாமக்கல் கவிஞர்-என் கதை

3வ.உ.சி-சுயசரிதை

4கண்ணதாசன்-வனவாசம்

5ஜெயகாந்தன்-நினைத்துப் பார்க்கிறேன்

6ச.து.சு யோகியார்-ஆத்ம சோதனை

5.8 தொகுப்புரை

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் உரைநடையில் சாதனை படைத்தவர்கள் மறைமலையடிகள், திரு.வி.க., உ.வே.சா என்ற மூவராவர். தமிழில் முதன் முதலில் அறிவியல் நூல்களை எழுதியவர் மறைமலை அடிகளாகத் தானிருக்க வேண்டும். மணிக்கொடி என்ற பத்திரிகையால் சிறுகதை இலக்கியம் வளம் பெற்றுக் கொண்டிருக்கும் போது, நாவல் இலக்கியம் படைத்தோர் புதிய சமுதாயத்தைப் படைப்பதில் ஈடுபட்டனர். தமிழ்த் திறனாய்வு நெறியிலே புதுமை படைத்தார் வையாபுரிப்பிள்ளை. உரையாசிரியர்களால், பண்டிதர்கள் மட்டுமே படித்துச் சுவைத்த தமிழ் இலக்கியம் எளிமை பெற்றது. வெண்பாவும் விருத்தமும் மங்கிப் போகாத காலத்திலேயே புதுக்கவிதை தோற்றம் பெற்றது. புதுப்புது இலக்கியத் துறைகள் காலத்தின் தேவையொட்டி எழுந்தன. தமிழிசைக் சங்கத்தால் தமிழிசை ஏற்றம் பெற்றது. இலக்கணத் துறையில் உரிச்சொல் விளக்கம் என்ற நூல் முத்திரை பதித்தது. பார்சி மற்றும் மராட்டி நாடகக் குழுக்களின் தாக்கத்தால் படித்தவர்கள் சமுதாயத்தில் அந்தஸ்து உள்ள பெரியோரும் நாடக நடிகர்களாக நடிக்கும் அளவு நாடகத் துறை மலர்ச்சி பெற்றது. சிற்றிலக்கியத்தின் தோற்றம் இலக்கண நூலில் கூறப்பட்டது போலவே கடித, பயண, வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள் தனிப் பிரிவாகக் கிளைத்தன. மொத்தத்தில் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் ஏற்றம் பெற்றது.

பாடம் - 6

இருபதாம் நூற்றாண்டு – இரண்டாம் பகுதி

6.0 பாட முன்னுரை

இந்திய நாடு விடுதலை பெற்ற பின், தமிழில் உரைநடை, சிறுகதை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு என்ற துறைகளும் புதிதாக இதழியல், மொழிபெயர்ப்பியல் போன்றனவும் வளர்ந்தன. புதுக்கவிதையில் ஹைக்கூ கவிதைகளும், நாடக முயற்சிகளில் பாகவதமேளா, பரீக்ஷா, வீதி நாடகங்களும் தோன்றின. தமிழ் எழுத்துகளைக் குறைக்கும் முயற்சியில் எழுத்துச் சீர்திருத்தம் தோன்றியது. மாணவர்க்கு, அறிஞர்க்கு, ஆய்வாளர்க்கு எனப் பல தரங்களில் தமிழ் இலக்கிய வரலாறு தோன்றியது. இவை பற்றி இப்பாடம் தொகுத்துக் கூறுகிறது.

6.1 உரைநடை வளர்ச்சி

மக்கள் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியினால் உரைநடை நூல்கள், சிறுகதை, நாவல், நாடகம் போன்றவை மிகுதியாக வெளிவந்தன.

6.1.1 உரைநடை நூல்கள் ராபர்ட்-டி-நொபிலி, பெஸ்கி எனும் வீரமாமுனிவர், சிவஞான முனிவர், ஆறுமுக நாவலர், இராமலிங்கர், செல்வக்கேசவராய முதலியார் போன்றோரால் தமிழ் உரைநடை வளர்ச்சி பெற்றது.

விடுதலைக்கு முன் கவிதை, கட்டுரை என்ற இரண்டு துறையிலும் புதுமை படைத்தார் பாரதி. அவருக்குப் பின் பலதுறையினைச் சார்ந்தோர் உரைநடை இலக்கியத்தை வளர்த்தனர். வ. ராமசாமி எனும் ‘வ.ரா’, புதுமைப்பித்தன், சேதுப்பிள்ளை, செகவீர பாண்டியனார், சோமசுந்தர பாரதியார், அண்ணா, மு. கருணாநிதி என்போரின் நடை தமிழ் உரைநடையில் முத்திரை பதித்தவை.

காலந்தோறும் தமிழ் உரைநடை வளர்ந்து வந்துள்ள விதமும் சான்றோரின் கவனத்திற்கு வந்துள்ளது.

• வ.சு. செங்கல்வராய பிள்ளை – தமிழ் உரைநடை வரலாறு.

• வி. செல்வநாயகம் – தமிழ் உரைநடை வரலாறு

• அ.மு. பரமசிவானந்தம் – தமிழ் உரைநடை

• மா. இராசமாணிக்கனார் – இருபதாம் நூற்றாண்டு தமிழ் உரைநடை வளர்ச்சி

• மா. இராமலிங்கம் – புதிய உரைநடை

• மு. அருணாசலம் – இன்றைய தமிழ் வசனநடை

என்ற நூல்கள் உரைநடை வகைகள், அவை வளர்ந்த விதம் பற்றி ஆராய்கின்றன. இதன் வளர்ச்சியாக ஜெ. நீதிவாணன் என்பார் நடையியல் என்ற நூலை எழுதினார். இ. சுந்தரமூர்த்தி நடையியல் – ஓர் அறிமுகம் என்ற நூலை எழுதினார். இதன் பின் பல ஆராய்ச்சி நூல்களும் ஆய்வேடுகளும் வெளிவந்துள்ளன.

6.1.2 உரைநடை முன்னோடிகள் மேலும் இருபதாம் நூற்றாண்டில் உரைநடையை வளர்த்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

• இ.மு. சுப்பிரமணியப் பிள்ளை

தமிழ்ப் பெரும் புலவரான இவர், சித்த மருத்துவரும் ஆவார். உலகப் பொதுமறை, திருக்குறள் ஒழுக்க முறை, உலகப் பொதுச் சமயம், தம்பிரான் தோழர், நெல்லை மாவட்டக் கோவில் வரலாறு, இராமாயண ஆராய்ச்சி, திருமுருகாற்றுப்படை விளக்கவுரை, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் வரலாறு (5 பகுதிகள்) முதலியனவற்றை எழுதித் தமிழ் உரைநடையை வளர்த்து உள்ளார். கலைச்சொல்லாக்க மாநாடுகளும், தமிழ்த்தாய் என்னும் காலாண்டிதழும் நடத்தினார்.

• ச. தண்டபாணி தேசிகர்

இவர் திருக்குறள் அமைப்பும் அழகும், திருவாசகப் பேரொளி, திருக்குறள் உரைவளம், கணபதி, முருகன், ஆடவல்லான், சக்தி, சைவத்தின் மறுமலர்ச்சி, முதல் திருமுறை, முதற்கடவுள் வினாயகர், முழுமுதற் கடவுள் நடராஜர் என அறுபதுக்கும் மேற்பட்ட அரிய தமிழ் நூல்களைப் படைத்துள்ளார்.

• லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்

இவர் கட்டுரைக் கோவை, சங்ககாலத் தமிழர் வாழ்வு, வாழ்க்கை வளம், தொல்காப்பியச் செல்வம், நோக்கு, பத்துப்பாட்டு வளம், சோழவேந்தர் மூவர், எட்டுத் தொகைச் செல்வம் முதலிய நூல்களைப் படைத்தார்.

• அ.ச. ஞானசம்பந்தன்

இவர் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும், கம்பன்கலை, நாடும் மன்னனும், அரசியர் மூவர், தம்பியர் இருவர், அகம், புறம், மகளிர் வளர்த்த தமிழ், குறள் கண்ட வாழ்வு, தேசிய இலக்கியம் போன்ற நூல்களைப் படைத்தவர். இலக்கியக் கலை என்ற நூல் வழித் தமிழில் இலக்கியத் திறனாய்வுக்கு வழிவகுத்தவர்.

• மு. சண்முகம் பிள்ளை

இவர் வரலாற்றுமுறைத் தமிழகராதியை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தவர். சிற்றிலக்கிய வளர்ச்சி, சிற்றிலக்கிய வகைகள், அகப்பொருள் மரபும் குறளும், குறள்யாப்பும் பாட வேறுபாடும் போன்ற பல உரைநடை நூல்களையும் 300-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

• குன்றக்குடி அடிகளார்

இவர் இந்நூற்றாண்டின் அப்பர் என்று போற்றப் பெறுபவர். பொதுமைச் சிற்பி. வள்ளுவர் உலகம், குறள் வாழ்வு, உவமை நலம், அப்பர் அமுது, திருவாசகத்தேன், புனிதநெறி, வாழ்க்கை விளக்கு என 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தமிழகம் என்ற திங்கள் ஏட்டின் ஆசிரியராகவும் இருந்தார்.

• மு.மு. இசுமாயில்

சென்னை கம்பன் கழகத் தோற்றுநர்களில் ஒருவரான இவர் தம் நீதியியல் நோக்கில் இலக்கியப் போக்கினை அணுகி நுணுகி ஆராயும் அறிஞர். மும்மடங்கு பொலிந்தன, செவிநுகர் கனிகள், மூன்று வினாக்கள், உலகப்போக்கு, இலக்கிய மலர்கள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

• இராஜாஜி

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகத் திகழ்ந்தவர் இராஜகோபாலச்சாரி. இவர் விமோசனம் என்ற மாத இதழை நடத்தினார். ராஜாஜி கதைகள், ராஜாஜி கட்டுரைகள், ராஜாஜி மணிமொழிகள், ராஜாஜி உவமைகள், பஜகோவிந்தம், பாற்கடல், வள்ளுவர் வாசகம், சக்ரவர்த்தித் திருமகன், பித்தளையும் பொன்னும், வியாசர் விருந்து என 54 நூல்களை எழுதியுள்ளார்.

உரைநடையின் பிற துறைகளான கடித இலக்கியம், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று இலக்கியம் என்பனவும் காலத்திற்கேற்ப மாற்றங்களுடன் வளர்ந்து வருகின்றன.

6.1.3 சிறுகதை சிறுகதை வளர்ச்சிக்கு என்று தனி இதழ் தோன்றியுள்ளது. விளம்பரச் சிறுகதைகள், சமூகச் சீர்திருத்தக் கதைகள், புதிய உள்ளடக்கம் கொண்டவை எனச் சிறுகதை பன்முகம் கொண்டு திகழ்கிறது.

• சுந்தரராமசாமி

காகங்கள் என்ற இலக்கிய அமைப்பினை நடத்தும் இவர் அக்கரைச் சீமையில், பிரசாதம், பல்லக்குத் தூக்கிகள், பள்ளம் என்ற சிறுகதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

• கு. அழகிரிசாமி

திருநெல்வேலி மாவட்டத்தில் வாழும் கிராம மக்களின் வாழ்வையும், பழக்கவழக்கங்களையும் எடுத்துக் காட்டுபவர் கு.அழகிரிசாமி. இவரது அன்பளிப்பு, திரிவேணி, ராஜா வந்திருக்கிறார் போன்ற கதைகள் புகழ் பெற்றவை.

• விந்தன்

இவர், ஏழைத் தொழிலாளியாகத் தம் வாழ்க்கையைத் தொடங்கிய எழுத்தாளர். மனித நேயம் கொண்டு சமுதாய அவலங்களை விமர்சிப்பவர். முல்லைக் கொடியாள், ஒரே உரிமை, சமுதாய விரோதி, ஏமாந்துதான் கொடுப்பீர்களா? நாளை நம்முடையது, இரண்டு ரூபாய் போன்ற கதைத் தொகுதிகளைப் படைத்துள்ளார்.

• அண்ணா

அண்ணா

சமுதாயச் சீர்திருத்தத்தை நோக்கமாக உடையவை இவரது கதைகள். போலிச் சமயவாதிகளைச் சாடுதல், மூடப்பழக்க வழக்கங்கள், சகுன, சாதக நம்பிக்கைகளைச் சாடுதல், வர்க்கப் போராட்டம், சமுதாய ஏற்றத்தாழ்வு எனப் பலதரப்பட்ட கருத்துகளைக் கூறுபவை இவரது கதைகள். செவ்வாழை, சொர்க்கத்தில் நரகம், பேய் ஓடிப்போச்சு, சொல்வதை எழுதேன்டா, ராஜபார்ட் ரங்கதுரை போன்றவை புகழ்பெற்ற கதைகள்.

• மு. கருணாநிதி

இவர் பழக்கூடை, தன்னடக்கம், வாழ முடியாதவர்கள், சங்கிலிச்சாமி, கிழவன் கதை, அரும்பு, முதலைகள், தப்பிவிட்டார்கள், நளாயினி போன்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

• அகிலன்

கதை அமைப்பிலும் பாத்திரப் படைப்பிலும் நடையிலும் தனித்தன்மை பெற்றவர் எனத் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் அவர்களால் பாராட்டப் பெற்ற அகிலன் 18 சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார். குழந்தை சிரித்தது, சகோதரர் அன்றோ, ஒருவேளைச் சோறு, நெல்லூர் அரிசி, ஆண் – பெண், எரிமலை என்பன அவற்றுள் சில.

• ஜெயகாந்தன்

தமிழ்ச் சிறுகதையில் தனக்கென ஒரு தடம் பதித்த எழுத்தாளர் இவர். உதயம், ஒரு பிடிசோறு, இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா, சுமைதாங்கி, மாலைமயக்கம், யுகசந்தி, புதிய வார்ப்புகள், குருபீடம் என்பன போன்ற பல தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

• சு. சமுத்திரம்

சமூக அங்கத எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர், வர்க்கப் போராட்டம் பற்றிப் பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். குற்றம் பார்க்கில், உறவுக்கு அப்பால், ஒரு சத்தியத்தின் அழுகை, காகித உறவு என்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். ஒரே ஒரு ரோஜா, போதும் உங்க உபகாரம் என்பன சிறந்த சிறுகதைகள்.

• பிறர்

இவர்களைத் தவிர சுஜாதா, ஆதவன், ரா.கி.ரங்கராஜன், வண்ணதாசன், வண்ண நிலவன், பாவண்ணன், மேலாண்மை பொன்னுச்சாமி, பூமணி, அம்பை, திலகவதி போன்றோரும் சிறுகதை எழுதி வருகின்றனர்.

மொழிபெயர்ப்பின் மூலம் பல நல்ல சிறுகதைகள் தமிழில் அறிமுகம் ஆகியுள்ளன. சாகித்ய அகாதெமியும், நேஷனல் புக் டிரஸ்ட்டும், இலக்கியச் சிந்தனை அமைப்பும் தமிழ்ச் சிறுகதை நூல்களை வெளியிட்டு வருகின்றன.

6.1.4 நாவல் தொடக்கக்கால நாவல்களைப் பின்பற்றியே விடுதலைக்குப் பின்னும் நாவல்கள் எழுதப்பட்டாலும் ஆன்மீக நாவல், தெய்வீக நாவல், காந்தீய நாவல்கள், இன-வட்டார, வர்க்க, அறிவியல், நனவோடை எனப் பல்வகையில் நாவல் வளர்ச்சி அடைந்தது. எனினும் இவற்றை வரலாற்று, சமுதாய, அரசியல் நாவல்கள் என்ற பிரிவிற்குள் அடக்கி விடலாம். முதல் மானிடவியல் நாவலான குறிஞ்சித்தேன், சத்தியாக்கிரகம் பற்றிய நாவலான பலாத்காரம் போன்ற சில நாவல்கள் குறிப்பிடத்தக்கன.

• அரு. ராமநாதன்

வீரபாண்டியன் மனைவி என்ற நாவலைப் பத்து ஆண்டுகளாகத் தொடர்கதையாக எழுதினார். அசோகன் காதலி, குண்டுமல்லிகை, நாயனம், சௌந்தரவடிவு என்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

• அண்ணா

குமரிக்கோட்டம், பார்வதி பி.ஏ, ரங்கோன் ராதா, கபோதிபுரக் காதல், குமாஸ்தாவின் பெண், கலிங்கராணி, போன்ற நாவல்களை எழுதியுள்ளார்.

• கொத்தமங்கலம் சுப்பு

தில்லானா மோகனாம்பாள், ராவ்பகதூர் சிங்காரம், பந்தநல்லூர் பாமா, மிஸ் ராதா ஆகிய நாவல்கள் படைத்த இவர் நடிகர்; இயக்குநர்.

• மு.வரதராசனார்

செந்தாமரை, கள்ளோ? காவியமோ?, அந்தநாள், அல்லி, மலர்விழி, பாவை, கரித்துண்டு, வாடாமலர், அகல்விளக்கு, கயமை, பெற்றமனம் என்ற நாவல்களை எழுதினார்.

• தி. ஜானகிராமன்

அமிர்தம், மோகமுள், அன்பே ஆரமுதே, அம்மாவந்தாள், உயிர்த்தேன், செம்பருத்தி, மலர்மஞ்சம், மரப்பசு போன்ற நாவல்களில் தஞ்சை மண்ணின் மணம், பேச்சு, ஆண் – பெண் உறவுச் சிக்கல்கள் அழகாகச் சித்தரிக்கப் பெற்றுள்ளன.

• ஜெகசிற்பியன்

ஜீவகீதம், மண்ணின் குரல், கிளிஞ்சல் கோபுரம், காணக் கிடைக்காத தங்கம், சொர்க்கத்தின் நிழல், காவல் தெய்வம், இனிய நெஞ்சம், தேவதரிசனம், நாயகி நற்சோணை, மகரயாழ் மங்கை, பத்தினிக்கோட்டம், நந்திவர்மன் காதலி எனச் சமூகப் புதினங்களும் வரலாற்றுப் புதினங்களும் படைத்துள்ளார்.

• சாண்டில்யன்

ஐம்பது நாவல்கள் படைத்திருந்தாலும் யவன ராணி, உதய பானு, கன்னிமாடம், மலைவாசல், ஜலதீபம், ராஜதீபம், பல்லவ திலகம், ஜீவபூமி, மஞ்சள் ஆறு போன்றவை குறிப்பிடத்தக்கன.

• தமிழ்வாணன்

இவர் சங்கர்லால் என்ற துப்பறியும் நிபுணரைக் கற்பனையாகப் படைத்து உலவ விட்டவர். கருநாகம், கருகிய கடிதம், சங்கர்லால் துப்பறிகிறார், கடலில் தெரிந்த கை, துப்பாக்கி முனை என 76 மர்ம நாவல்கள் படைத்துள்ளார்.

• க.நா. சுப்ரமணியம்

பசி, பொய்த்தேவு, ஏழுபேர், ஒருநாள், அசுரகணம், விடுதலையா?, வாழ்ந்தவர் கெட்டால், அவரவர் பாடு, ஆட்கொல்லி, இரண்டு பெண்கள், குறுக்குச் சுவர், பெரிய மனிதன் என்பன இவரின் நாவல்கள். இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.

• லா.ச. ராமாமிருதம்

புத்ர, அபிதா, கல்சிரித்தது, பாற்கடல் என்ற இவரது நாவல்களில் இருண்மைப் பண்பு படர்ந்திருக்கும். தமது மந்திரச் சொற்களால் படிப்பவரை மயங்க வைத்து விடுகிறார். இவர் புறநிகழ்ச்சிகளை விட அகவுணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருபவர்.

• அகிலன்

தன் நாவல்களில் எல்லாம் பெண்மைக்கே முதலிடம் தந்தவர் இவர். பாவை விளக்கு, சித்திரப்பாவை,எங்கே போகிறோம், பொன்மலர், வெற்றித் திருநகர், பால்மரக் காட்டினிலே என 20 நாவல்களைப் படைத்தவர்.

• கோ.வி. மணிசேகரன்

இதுவரை 130 நாவல்கள் படைத்திருந்தாலும், வரலாற்றுப் புதின ஆசிரியராகவே போற்றப்படுகிறார். இவரது நாவல்களில், ஒரு தீபம் ஐந்து திரிகள், செம்பியன் செல்வி, செஞ்சி அபரஞ்சி, அசோகச் சக்கரம், முதல்வர் போன்றன குறிப்பிடத்தகுந்த நாவல்கள்.

• இந்திரா பார்த்தசாரதி

தலைநகரை மையமாகக் கொண்டு நாவல் படைத்தவர். கால வெள்ளம், தந்திரபூமி, சுதந்திரபூமி, குருதிப்புனல், கானல்நீர், வேஷங்கள் என்பன அவற்றுள் சில.

• நா. பார்த்தசாரதி

பாண்டிமாதேவி, மணிபல்லவம், வஞ்சிமாநகர், கபாடபுரம், நித்திலவல்லி என 5 வரலாற்று நாவல்களும் ஆத்மாவின் ராகங்கள், சத்திய வெள்ளம், நெஞ்சக்கனல், அனிச்சமலர், நீலநயனங்கள், குறிஞ்சிமலர் என 20 சமூக நாவல்களும் படைத்தார்.

• ஜெயகாந்தன்

வாழ்க்கைஅழைக்கிறது, பாரிசுக்குப் போ, உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், சில நேரங்களில் சில மனிதர்கள், ரிஷிமூலம், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சினிமாவுக்குப் போன சித்தாளு, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற இவரது நாவல்கள் புகழ் பெற்றவை. 1986-இல் ராஜராஜன் விருது பெற்றார்.

• சுஜாதா (எஸ். ரங்கராஜன்)

நைலான் கயிறு, அனிதா இளம் மனைவி, ஜன்னல் மலர், ப்ரியா, அப்ஸரா, ஒரு விபரீதக் கோட்பாடு, மேகத்தைத் துரத்தியவன், கொலையுதிர் காலம், மறுபடியும் கணேஷ், தேடாதே, விக்ரம் போன்ற பல நாவல்களைப் படைத்துள்ளார். துப்பறியும் பாங்கும் பாலுணர்வும் அறிவியல் நுட்பங்களும் கலந்துவரக் கதைகள் படைப்பதில் வல்லவர்.

• பிறர்

இவர்களைத் தவிர அசோகமித்ரன், நீல. பத்மநாபன், சா. கந்தசாமி, கி. விட்டல்ராவ், பாலகுமாரன், பிரபஞ்சன் ஆகியோரும் நாவல்களைப் படைக்கின்றனர். பெண் எழுத்தாளர்களில் அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், ஹெப்சிபா ஜேசுதாசன், சூடாமணி, லட்சுமி, வசுமதி ராமசாமி, குகப்பிரியா, கோமகள், சி.ஆர். ராஜம்மா, வாஸந்தி, சிவசங்கரி, இந்துமதி, அனுராதாரமணன், பாமா, சிவகாமி, திலகவதி போன்றோரும் ஜனரஞ்சக, சமுதாயச் சிந்தனைமிக்க நாவல்களைப் படைத்துள்ளனர்.

6.1.5 நாடகம் விடுதலைப் போரில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய நாடகத் தமிழானது விடுதலைக்குப் பின் பல்வேறு பிரிவுகளாகச் செழித்து வளர்ந்தது. நவாப். டி. எஸ். ராஜமாணிக்கம் தெய்வீகமும் தேசீயமும் கலந்த நாடகங்களைப் படைத்தார். எஸ்.வி. சகஸ்ரநாமம், ஆர். எஸ். மனோகர், எம்.ஆர். ராதா, சோ, கே. பாலச்சந்தர், பி.எஸ். ராமையா, எஸ்.டி. சுந்தரம், அரு. ராமநாதன், ரா. வேங்கடாசலம், கோமல் சுவாமிநாதன், கோரா, பூர்ணம் விசுவநாதன், மெரீனா போன்றோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

நாடகமானது புராண, பக்தி, சமூக, சீர்திருத்த, இலக்கிய, கவிதை, வரலாற்று, அங்கத, பிரச்சார, நகைச்சுவை நாடகம் எனப் பலவாறு வளர்ந்து உள்ளது. நாட்டிய நாடகங்களும் அதன் ஒரு வகையான பாகவத மேளாவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளன. கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய அந்தமான் கைதி, புதுமைப்பித்தனின் வாக்கும் வக்கும், நாமக்கல் கவிஞரின் மாமன்மகள், கண்ணதாசனின், புவனமுழுதுடையாள், மு.வரதராசனாரின் பச்சையப்பர் என்ற நாடகங்கள் குறப்பிடத்தக்கன.

• புதுவகை நாடகங்கள்

1973 முதல் மரபு முறையில் கூத்தினை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட கூத்துப்பட்டறை (Theatre Workshop) நாடகம் நடத்துவதோடு கூத்தின் வரலாறு பற்றி ஆராய்கிறது; கலந்து உரையாடுகிறது; கருத்தரங்கும் நடத்துகிறது. ஞாநி அவர்களைத் தலைமையாகக் கொண்ட பரீக்ஷா குழுவினர் தனிமனிதச் சிக்கலை, அங்கத நாடகங்களாகத் தந்து வருகின்றனர். பொதுமக்களுக்காக நாடகம் நடத்தி வருகிறது வீதி நாடகக்குழு. இயலிசை நாடகமன்றம் நாடகக் கலைக்கும் நாடகக் கலைஞர்களுக்கும் ஆதரவு தருகிறது. எனவே நாடகக் கலையானது அழியாமல் வளர்ந்து வருகிறது.

6.1.6 மொழிபெயர்ப்பு சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்பதற்கு ஏற்ப, விடுதலைக்குப் பின் தமிழ் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பு வளம் பெற்றது. பல மொழிகளில் இருந்து சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், கவிதை என்பன தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. படைப்பாளிகளாக இருந்த பாரதியார், புதுமைப்பித்தன் போன்றோரும் இதற்கு வழிகாட்டினர். ஆன்மீகச் செய்திகள், இலக்கியங்களும் கூட மொழிபெயர்ப்பு செய்யப் பெற்றதால் தமிழ் வளமடைந்தது.

• ச. தண்டபாணி தேசிகர்

திருவாவடுதுறை ஆதீன மகாவித்வானாக விளங்கி 60-க்கும் மேற்பட்ட நூல்கள் படைத்துள்ள இவர், வடமொழியிலிருந்து முருகன் அணியியல் (பிரதாப ருத்ரீயம்), பரதநாட்டிய சாத்திரம், சச்சபுட வெண்பா, தாளசாத்திரம் என்ற நூல்களை மொழிபெயர்த்துத் தந்துள்ளார். Introduction to Thirumanthiram என்ற நூலையும் எழுதியுள்ளார்.

• பெ. நா. அப்புஸ்வாமி

வழக்கறிஞரான இவர், சங்க இலக்கியங்களைப் புதுமுறையில் அழகும் ஆற்றலும் பொருந்த ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அறிவியல் செல்வங்களை எல்லாம் எளிய தமிழில் கலைமகள், தினமணி போன்றவற்றில் கட்டுரைகளாக எழுதி வந்தார். வாழ்வில் விஞ்ஞானம், காலயந்திரம், அணுவின் கதை என 70 நூல்கள் படைத்துள்ளார்.

• வன்மீகநாதன்

தமிழ்ச் சமய நூற்களை ஆங்கிலத்தில் தரும் இவர் தமிழாக்கங்களும் செய்துள்ளார். Pathway to God through Thiruvachakam, Pathway to God by Ramalinga Swamikal, Manickavachakar – a Monograph என்ற நூல்களும் இந்தி ஆத்மகதாவின் தமிழ் மொழிபெயர்ப்பும், திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.

• கா. அப்பாத்துரையார்

பன்மொழிப் புலவரான இவர், 90 மொழிபெயர்ப்பு நூல்களைப் படைத்துள்ளார். மாலதிமாதவம், செஞ்சி இளவரசன், இந்துலேகா, குழந்தை உலகம், செஸ்டர்பீல்டின் கடிதங்கள், சேக்ஸ்பியர் கதைக் கொத்து, விந்தைக் கதைகள் என்பன சில.

• மு.ரா. பெருமாள் முதலியார்

கலைச்சொற்கள் படைப்பதில் பெரும்பங்காற்றிய இவர், இந்திய வரலாற்றுச் சுருக்கம், நமது இந்தியா, வேலைச் செல்வம், கூலி, ருப்யார்டு கிப்ளிங் கதைகள், தென்னிந்திய வரலாறு, தென்னிந்தியா பற்றி வெளிநாட்டவர் குறிப்புகள் என்ற நூற்களை மொழி பெயர்த்துத் தந்துள்ளார்.

• த.நா. குமாரஸ்வாமி

பன்மொழி அறிந்தவரான இவர் வடமொழி நாகானந்தத்தைத் தமிழில் தந்தவர். போஜ சரித்திரத்தைத் தமிழில் எழுதியவர். சிலம்பை வங்கமொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தாகூரின் 12 நாவல்களையும் பல சிறுகதைகளையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். புதிய வங்க எழுத்தாளர்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் இவரைப் போன்றே ஆர். சண்முக சுந்தரம் என்பவரும் வங்கமொழி நாவல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.

• க.நா. சுப்ரமணியம்

இவர் அன்புவழி (ஸ்வீடிஷ்), தபால்காரன் (பிரெஞ்சு), உலகத்துச் சிறந்த நாவல்களை மொழி பெயர்த்துள்ளார்.

• கா.ஸ்ரீ.ஸ்ரீ

மராத்திய இலக்கியத்தைக் குறிப்பாகக் காண்டேகரைத் தமிழில் தந்தவர். இந்திக் கதைகளையும் தமிழில் தந்துள்ளார். பாரதியின் தராசு, சிவபோகசாரம், சொக்கநாத வெண்பா என்பவற்றை இந்தியில் அளித்துள்ளார்.

• த.நா. சேனாதிபதி

வங்க இலக்கியங்களை, தாகூரைத் தமிழில் தந்தவர். தாகூரின் கட்டுரைகள், கதைகள், தாராசங்கர் பானர்ஜி கதைகள் என்பவற்றைத் தமிழாக்கம் செய்துள்ள இவர் கண்ணப்பரின் வரலாற்றை வங்காளத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

• சரஸ்வதி ராம்னாத்

தமிழிலிருந்து இந்திக்கும் இந்தியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்புச் செய்தவர். கம்பராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்துத் தந்திருக்கின்றார்.

• பிறர்

இவர்களைத் தவிரத் தமிழில் சேக்ஸ்பியர் நாடகங்களைப் பலர் மொழி பெயர்த்துள்ளனர். காளிதாசர், சூத்ரகர், பாசன் என்பவர்களது நாடகங்களும் கிரேக்க நாடகங்களும் தமிழில் பலரால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன. சாகித்ய அகாதெமியும் நேஷனல் புக் டிரஸ்டும் ஒவ்வொரு மொழியிலும் உள்ள சிறந்த படைப்புகளைப் பிறமொழிகளுக்கு அறிமுகப்படுத்துவதில் முனைந்து நிற்கின்றன.

• மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கை

மொத்தத்தில் நாற்பது மொழிகளிலிருந்து அறிவியல் இலக்கியப் படைப்புகள் வந்துள்ளன. 2000க்கும் மேற்பட்ட இலக்கியங்கள் மொழிபெயர்ப்புச் செய்யப் பெற்றுள்ளன. 550 நாவல்கள், 300 சிறுகதைத் தொகுதிகள், 250 நாடக நூல்கள் மொழிபெயர்ப்பாகித் தமிழில் வந்துள்ளன. தமிழில் இருந்து 730 நூல்கள் பிற மொழிகளுக்குச் சென்றுள்ளன. தமிழிலிருந்து பக்தி இலக்கியம்தான் மிகுதியாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. எனினும் பாரதி கவிதைக்கு மட்டும் 15 மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் உள்ளன. இது மொழி பெயர்ப்பின் வளமான எதிர்காலத்தையே காட்டுகிறது.

6.1.7 திறனாய்வு திறனாய்வு என்ற வகை தமிழிலேயே உண்டு என்று வாதிடுவோரும் திறனாய்வு என்பது மேலை இலக்கியத் தாக்கத்தால் நாம் பெற்றது என்று கூறுவோரும் உண்டு. எவ்வாறு ஆயினும் மேலை நாட்டு இலக்கியக் கொள்கைகளைத் தமிழ் இலக்கியப் படைப்புகளில் ஏற்றி அல்லது பொருந்திப் பார்க்கும் செயலே திறனாய்வுத் தமிழாகத் தற்போதைக்கு உள்ளது. தமிழ்ப் பேராசிரியர்கள் சிலர் “தமிழிலே இலக்கியத் திறனாய்வு” என்ற துறையைத் தொடக்கி வைக்கச் சிலர் அதை விமர்சனத் தமிழாக வளர்த்தனர். சில அறிஞர்கள் தாங்கள் சார்ந்து உள்ள கொள்கை விளக்கச் சாதனமாக இலக்கியத்தை எடுத்துக் கொண்டனர். மேலும் சில அறிஞர்கள் தாங்கள் விரும்பும் இலக்கியம் அல்லது துறையிலே ஆழ்ந்த புலமையுடன் திறனாய்வு செய்து பெயர் பெற்றனர். இந்திய இலக்கியச் சான்றோர்களை ஒப்பிட்டுத் திறனாய்வு செய்து புகழ் பெற்றவர் பி.ஸ்ரீ. அவர்கள்.

இனி குறிப்பிடத்தகுந்த திறனாய்வு நூல்களும் ஆசிரியர்களும் பற்றிக் காண்போம்.

• ஆ. முத்துச்சிவன் – கவிதையும் வாழ்க்கையும்

• அ.ச. ஞானசம்பந்தன் – இலக்கியக் கலை

• மு. வரதராசனார் – இலக்கிய மரபு, இலக்கியத்திறன், இலக்கிய ஆராய்ச்சி

• கோதண்டராமன் – இலக்கியமும் விமர்சனமும்

தா.ஏ. ஞானமூர்த்தி, ந. சஞ்சீவி, க. கைலாசபதி, தி.சு. நடராசன், க. பஞ்சாங்கம் போன்றோர் இலக்கியத் திறனாய்வுக்கும் இலக்கியக் கொள்கைகளுக்கும் வழி காட்டியவர்கள்.

புதுமைப்பித்தன், க.நா. சுப்பிரமணியன், சிதம்பரரகுநாதன், சி.சு. செல்லப்பா, தா.வே. வீராசாமி, சி. கனகசபாபதி, தி.க. சிவசங்கரன், எழில் முதல்வன், வெங்கட்சாமிநாதன் போன்றோர் இலக்கியத் திறனாய்விற்கு வழி வகுத்தவர்கள்.

க. கைலாசபதி எழுதிய இருமகாகவிகள், நாவல் இலக்கியம் என்ற இரு நூல்களும் நா. வானமாமலையின் ஆய்வுக் கட்டுரைகளும் சிறப்புடையன.

6.2 மரபுக்கவிதையும் புதுக்கவிதையும்

இருபதாம் நூற்றாண்டில் விடுதலைக்குப் பின்னும் மரபுக் கவிதையானது பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்தது. மொழி, சமுதாயச் சிந்தனை, பொதுவுடமைக் கொள்கை, தலைவர்களைப் போற்றுதல், கவியரங்கக் கவிதைகள், பகுத்தறிவுக் கவிதைகள் எனப் பல்வேறு தலைப்புகளில் மரபுக் கவிதைகள் இயற்றப்பட்டன. மரபுக் கவிதையில் ஒரு பிரிவான குழந்தை இலக்கியமும் நன்கு உருப் பெற்றது.

புதுக்கவிதையைப் பொறுத்த வரை 1945 வரை உள்ள காலம் மணிக்கொடிக் காலம் என்பர் என முன்பே கண்டோம். புதுக்கவிதை வளர்ச்சியில் 1970 வரையுள்ள காலத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் அணியினர் என்றும் 1970க்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள் மூன்றாம் அணியினர் என்றும் பிரிக்கலாம். புதுக்கவிதை நன்கு பரவிய பின் புதுக்கவிதைக்கு என்றே 70க்கும் மேற்பட்ட இதழ்கள் தோன்றின. எனினும் தமிழ் உலகில் மரபுக் கவிதையும் புதுக்கவிதையும் அழியாமல் நிலைத்து வாழுகின்றனர்.

6.2.1 மரபுக் கவிதை இக்காலத்தில் மரபுக் கவிதை இயற்றுவதில் சிறப்புடைய புகழ் பெற்ற கவிஞர்கள் பலர் உள்ளனர்.

• மீ.ப. சோமசுந்தரம்

சோமு என்று அழைக்கப்படும் இவர் கவிதை கவிதைக்காகவே எனும் தூய கவிதைக்காரர். இளவேனில், தாரகை, பொருநைக் கரையிலே, வெண்ணிலா என்ற நூல்களைத் தந்தவர்.

வாணிதாசன், முடியரசன், கண்ணதாசன் முதலியவர்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள்.

• சுரதா

உவமைக் கவிஞர், தன்மானக் கவிஞர் என்று பாராட்டப் பெற்ற சுரதாவின் இயற்பெயர் ராஜகோபால், பாவேந்தரிடம் பற்றுக் கொண்டு தன் பெயரை மாற்றியவர். 55ல் முதன்முதலில் ஒரு கவிதை வார ஏட்டினை நடத்தினார். சாவின்முத்தம், தேன்மழை, உதட்டில் உதடு, பட்டத்தரசி, சுவரும் சுண்ணாம்பும், துறைமுகம், வார்த்தை வாசல் போன்ற பல கவிதை நூல்களைத் தந்தவர்.

• புத்தனேரி சுப்ரமணியம்

இவரும் பாவேந்தர் பரம்பரையினர். பொங்கல் விருந்து, அம்புலிப்பாட்டுப் பாடாதே, பெரியார் அண்ணா பெருமை, என்றும் இளமை, அரைமணிக்குள் இராமாயணம் என்பன படைத்தவர்.

• குலோத்துங்கன் (வா.செ.குழந்தைசாமி)

தமிழ், தமிழினம், காதல், இயற்கை பற்றி அறிவியல், ஆக்க நோக்கில் பாடுபவர். குலோத்துங்கன் கவிதைகள், வளர்க தமிழ், வாயில் திறக்கட்டும் என்பன இவர் படைத்தவை.

• சாலை இளந்திரையன்

தமிழ் எழுத்துச் சீர்திருத்த மாநாடு, அறிவு இயக்க மாநாடு நடத்தியவர். புரட்சிகரமான, சமுதாய, இலக்கியச் சிந்தனை செழிக்கச் செய்தவர். இளந்திரையன் கவிதைகள், சிலம்பின் சிறுநகை, பூத்தது மானுடம், வீறுகள் ஆயிரம், அன்னை நீ ஆட வேண்டும், காலநதி தீரத்திலே, கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே, காக்கை விடு தூது என்பன இவரது படைப்புகள்.

• மரபுக் கவிதை வடிவங்கள்

இனி மரபுக் கவிதையின் வடிவங்களான காப்பியம், சிற்றிலக்கியம், புராணம் என்பன இக்காலத்திலும் வழங்கி வருவதைக் காணலாம்.

காப்பியங்களில் இராவண காவியத்தை அடுத்து, எஸ்.கே. ராமராசனின் மேகநாதம், சொ. அரியநாயகம் எழுதிய வினோபாவின் வரலாற்றுக் காவியம், புரசை முருகேச முதலியாரின் பார்த்தனை வளர்த்த பாட்டன், சாரண பாஸ்கரனின் யூசுப் சுலைகா, கலைவாணனின் உதயம், டி.கே. ராமானுஜ கவிராயரின் மகாத்மா காந்தி மகாகாவியம், வே.சந்திரசேகரனின் காந்தீயம், மனசை கீரனின் காமராஜ் காவியம், ஜெகவீர பாண்டியனாரின் கண்ணகி காவியம், பாஞ்சாலங்குறிச்சி வீரகாவியம், சுத்தானந்த பாரதியின் பாரதசக்தி மகாகாவியம், முடியரசனின் வீரகாவியம், கருணாநந்தம் எழுதிய அண்ணா காவியம், பாரி எழுதிய பெரியார் பெருங்காவியம் என்பன தோன்றிக் காப்பிய இலக்கியத்தைத் தொடர்ந்துள்ளன.

அசலாம்பிகை அம்மையார் காந்தி புராணமும், திலகர் புராணமும் எழுதியுள்ளார்.

சிற்றிலக்கியங்களில் சில வகைகளும் தற்காலத்தில் அழியாமல் படைக்கப்பட்டுள்ளன. காமாட்சி நாதனின் வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ், புலமைப்பித்தனின் பெரியார் பிள்ளைத்தமிழ், முத்துலிங்கத்தின் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ், அமிர்தலிங்கரின் ம.பொ.சி. பிள்ளைத்தமிழ், இரா. செந்தாமரையின் பெரியார் உலா, அ.கு. ஆதித்தரின் தமிழ்ச் செல்வி உலா, காமராசர் உலா, புலவர் இரா. மணியனின் அண்ணா கோவை, அ.கு. ஆதித்தரின் அண்ணாத்துரைக் கோவை, கி. அரங்கசாமி எழுதிய திராவிடப் பரணி, அரங்கசீனிவாசன் எழுதிய வங்கத்துப் பரணி, இளந்தேவனின் இந்தியப் பரணி, சி. இலக்குவனாரின் மாணாக்கர் ஆற்றுப்படை, வெள்ளை வாரணனாரின் காக்கைவிடு தூது, துரை. சீனிவாசனின் கூட்டுறவுக் குறவஞ்சி என்பன சிற்றிலக்கியத்தை மறைந்து போகாமல் செய்து வருகின்றன.

6.2.2 புதுக்கவிதை சி.சு.செல்லப்பா தொடங்கிய எழுத்து இதழில் புதுக்கவிதை எழுதியவர்கள் ஒரு பெரிய அணியாகத் திரண்டனர். கே. இராசகோபால், நீல. பத்மநாபன், நகுலன், பாலகுமாரன், கலாப்பிரியா, ஞானக்கூத்தன் போன்றோர் தொடர்ந்து புதுக்கவிதையின் வளர்ச்சிக்குப் பணியாற்றினர். ந.பிச்சமூர்த்தி, சி.மணி, பசுவய்யா, வைத்தீஸ்வரன், தி.சொ. வேணுகோபாலன், பிரமிள், ஆத்மாநாம், தேவதேவன், ஆனந்த், தேவதச்சன் முதலியோரின் பங்கும் தொண்டும் குறிப்பிடத்தக்கவை.

மரபுக்கவிதையில் மேம்பட்டிருந்த, முறையாகத் தமிழ் கற்ற பேராசிரியர்களான அப்துல் ரகுமான், இன்குலாப், சிற்பி, தமிழன்பன், மீரா, மேத்தா போன்றோர் வருகையால் புதுக்கவிதை புத்தொளி பெற்றது. 70இல் கோவையில் கூடிய கட்சிச் சார்பற்ற முற்போக்குச் சிந்தனையுடைய சமூக நோக்கில் இலக்கியப் பணியாற்றும் கவிதை இயக்கம் தன்னை வானம்பாடிகள் என்று அறிவித்துக் கொண்டது.

ஞானி, சுந்தரம், புவியரசு, இளமுருகு, அக்னி புத்திரன், முல்லை ஆதவன், மீரா, இன்குலாப், சிற்பி, தமிழன்பன், கங்கை கொண்டான், மேத்தா போன்றோர் வானம்பாடி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் புதுக்கவிதை வளர்ச்சியின் இரண்டாம் அணியினர்.

வானம்பாடி, ழ, தடம், காற்று, கொல்லிப்பாவை, கூத்து, சோதனை, புகழ், தெறிகள், தேனலைகள், நடைபாதை, கவனம், விழிகள், யாத்ரா என 70க்கும் மேலாகப் புதுக்கவிதை ஏடுகள் இயங்கின. தற்போது அவை குறைந்து விட்டன. புதுக்கவிதைகளை வெளியிடுவதில் தாமரை இதழ் தனியிடம் பெறுகிறது. நடை, குருச்சேத்திரம், கணையாழி, கசடதபற போன்ற இதழ்கள் வாயிலாகப் புதுக்கவிதை இயக்கம் தொய்வுறாமலும் தொடர்ச்சி பெற்றும் வந்தது.

2ஆம் அணியின் வளர்ச்சியினால் 1970க்குப் பின் மானுடம் பாடும் வானம்பாடி இயக்கம் தோன்றியது. தெளிவான உள்ளடக்கம், புதுவகை உத்திகள், உருவகச்சிறப்பு, அளவும் அழகுமுடைய படிமம், குறியீடு, ஓசைநயம் போன்றவற்றால் இவ்வணியினர் புதுக்கவிதையை வளம்பெறச் செய்தனர். மரபுக் கவிதைத் துறையில் சாதனைகள் புரிந்துவிட்டுப் புதுக்கவிதைத் துறைக்கும் வந்து சாதனை புரிந்தவர்கள் நா. காமராசன், மீரா, அப்துல் ரகுமான், தமிழ்நாடன், மு. மேத்தா ஆகியோர். சிற்பி. புதுக்கவிதைத் துறைக்கு இன்குலாப், அபி, புவியரசு, கங்கை கொண்டான், ஞானி, பாலா, சக்திக்கனல் ஆகியோர் நேரடியாக வந்தவர்கள்.

• சி. மணி

புதுக்கவிதையில் நெடுங்கவிதை புனைகின்ற முயற்சியில் இறங்கி நரகம் என்ற சிறப்பான படைப்பை உருவாக்கியவர் விமர்சனக் கவிஞர் எனப் போற்றப்படுகிறார்.

தவளைக்குப் பாம்பின் வாய் விரிப்பாய்

அவள் வியப்பின் விழி விரிப்பை – காண்கிறார்.

நிலவே!

உன்னிடமிருந்து வெளிநாட்டவர்கள்

கல்லெடுத்து வருகிறார்கள்

நாங்களோ இன்னமும்

அரிசியில் கல்லெடுத்துக் கொண்டிருக்கிறோம்

எனக் கேலி பேசுகிறார்.

• சிற்பி

படிமக் கவிஞரான இவர் வானம்பாடியின் பொறுப்பாசிரியர். நிலவுப்பூ, ஒளிப்பறவை, சிரித்த முத்துகள், சர்ப்பயாகம், புன்னகை பூக்கும் பூனைகள், போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

மணியடிச்சாப் பணிதுவங்கும் வாத்தியாரு வேலை

மலிவுப்பதிப்பா ஆகிப்போச்சு வாத்தியாரு வேலை

….. ……………….. …………… ……….. ……… ……

……….. …………… ……… …………. ……….. ……

சாகுமட்டும் ஆசிரியன் வாழ்க்கை பெருந்தொல்லை!

திருமணமார்க் கட்டில் இவரைப் பெண்களும் மதிக்காது

மார்க்போடும் சீசனிலே ஏதோ கொஞ்சம் கிராக்கி

மற்ற நாளில் இவரு வெத்து வேட்டு எழும் துப்பாக்கி

என்கிற கவிதை யதார்த்தத்துடன் நகைச்சுவை கலந்தது.

• அப்துல்ரகுமான்

கவிக்கோ என்று பாராட்டப் பெற்றுள்ளார். இவர், பால்வீதி, நேயர் விருப்பம் போன்ற பல நூல்களைப் படைத்துள்ளார்.

தீப மரத்தின்

தீக்கனி உண்ண

விட்டில் வந்தது

கனியோ

விட்டிலை உண்டது

(பால்வீதி)

• இன்குலாப்

இன்குலாப் கவிதைகள், வெள்ளை இருட்டு போன்றவை படைத்த இவர் இடதுசாரிக் கவி. நீங்கள் என்னைக் கம்யூனிஸ்டு ஆக்கினீர்கள், தொங்கு தோட்டம் என்பன சிந்தனைக்கு விருந்து அளிப்பவை.

• நா. காமராசன்

பகுத்தறிவையும் சோசலிசத்தையும் இரு கண்களாகக் கொண்டு பாடுபவர். படிமக் கவிஞர். கறுப்பு மலர்கள், பூமிச்சருகு, ராஜதிரவம் என எழுதுபவர். கிறுக்கல்கள், நாவல்பழம், மகாகாவியம், சூரியகாந்தி, சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், ஆப்பிள் கனவு போன்ற பல நூல்களைப் படைத்துள்ளார்.

• மு. மேத்தா

கவியரங்கக் கவிஞரான இவர் ஒரு நாவல், கட்டுரைகள், விவாத நூலும் படைத்துள்ளார். செருப்புடன் ஒரு பேட்டி, தேசப்பிதாவுக்குத் தெருப்பாடகனின் அஞ்சலி என்ற இவரது கவிதைகள் புகழ் பெற்றவை. இவர் படிமக் கவிஞரும் ஆவார்.

• ஹைக்கூ கவிதைகள்

ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைக்கூ மூன்றடி கொண்டது. தமிழில் எண்பதுகளில் தான் ஹைக்கூ தோன்றியது. 84 முதல் அச்சில் வந்தது. அமுதபாரதியின் புள்ளிப் பூக்கள், காற்றின் கைகள், ஐக்கூ அந்தாதி என்பனவும், அறிவுமதியின் புல்லின் நுனியில் பனித்துளி, கம்ப்யூட்டர் மனிதர்கள், தமிழன்பனின் சூரியப் பிறைகள், கழனியூரனின் நிரந்தர மின்னல்கள், நட்சத்திர விழிகள் என்பன குறிப்பிடத்தக்கன. ஹைக்கூ கவிதைகளில் ஆய்வு செய்த நிர்மலா சுரேஷ், மித்ரா என்போர் பெண் கவிஞர்கள்.

நிலவென்ன மேற்பார்வையோ

வானம் விழாதிருக்க

எத்தனை நட்சத்திர ஆணிகள்

என்ற ஹைக்கூ கவிதை அமுதபாரதி எழுதியது.

6.3 இசைத்தமிழ்

விடுதலைக்குப் பின் குடந்தை ப. சுந்தரேசன், எஸ். இராமநாதன், எம்.எம். தண்டபாணி தேசிகர், கே.பி. சுந்தராம்பாள், சீர்காழி கோவிந்தராஜன், டி.கே.எஸ். கலைவாணன் போன்றோர் இசைப்பணி ஆற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

சீர்காழி கோவிந்தராஜன்

கே.பி. சுந்தராம்பாள்

• குடந்தை. ப. சுந்தரேசனார்

இவர் இசைத்தமிழ்ப் பயிற்சி நூல், இசைத்தமிழ் அகரமுதலி, ஐந்திசைப் பண்கள், இசைத்தமிழ் வரலாறு முதலியன எழுதியுள்ளார். பஞ்சமரபு எனும் பழைய இசைநூல் வெளியீட்டில் உதவினார்.

• எஸ். ராமநாதன்

இவர் தமிழிசை பற்றிய கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டார். வெளிநாட்டு மாணவர்க்குத் தமிழிசை வகுப்புகள் நடத்தி வந்தார்.

தமிழிசை பற்றிய ஆய்வுகள் நிறைய மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. தமிழிசை இயக்கம், இசைக் கல்லூரிகள் என்பன தமிழிசையை வளர்க்கின்றன. இயலிசை நாடகமன்றம் இசைக் கலைஞர்களைப் போற்றுகிறது. மதுரைத் தமிழ்ச் சங்கம் அண்மையில் 4 வகை யாழும் அவற்றின் நரம்புகளும், திருக்கடைக்காப்பு, யாழ் உறுப்புகள், தமிழிசையும் இசைத்தமிழும், யாழும் யாழ் முரிப்பண்ணும் என்ற நூல்களை வெளியிட்டுள்ளது.

6.4 இலக்கணமும் மொழியியலும்

இக்காலத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்தாக வளர்ந்த தமிழ் இலக்கணம் பழமையையும் புதுமையையும் கொண்டு வளர்ந்தது. திருவாரூர் சரவணத் தமிழன் புதுக்கவிதைக்கும் திரைத் தமிழுக்கும் கூட இலக்கணம் செய்து உள்ளார். மொழியியல் ஆய்வுகளும் பல வந்துள்ளன.

6.4.1 இலக்கணம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை இலக்கணக் கருத்தரங்குகள் நடத்தி, இலக்கணச் சிந்தனை என நூல்களும் வெளியிடுகிறது. சோம, இளவரசு இலக்கண வரலாறு என்ற நூல் எழுதியுள்ளார். செந்தமிழ், தமிழ்ப் பொழில், செந்தமிழ்ச் செல்வி, ஆய்வுக்கோவை என்பவற்றில் இலக்கணம் தொடர்பான கட்டுரைகள் வருகின்றன.

தொல்காப்பியத்தை எளிமைப்படுத்திக் கி.வா.ஜகந்நாதன், பயப்படாதீர்கள், வாழும் தமிழ் என்ற நூல்கள் எழுதியுள்ளார்.

தமிழ் இலக்கணத்தை எளிமைப்படுத்தியும், சுவைப்படுத்தியும் எழுதி வருபவர்களில் கு.மா. திருநாவுக்கரசு, ச. சாம்பசிவன், மோசசு பொன்னையா, தமிழண்ணல், ஆ. சிவலிங்கனார், நடேச நாயக்கர் என்பார் குறிப்பிடத்தக்கவர்கள். தொல்காப்பிய உரை வகுத்தவர்களில் ஆ. சிவலிங்கனார், கு. சுந்தரமூர்த்தி என்பார் குறிப்பிடத்தக்கவர்கள்.

6.4.2 மொழியியல் சங்க இலக்கியங்களை எல்லாம் இலக்கண நோக்கில் ஆய்வு செய்வது 1970-லேயே முடிந்து விட்டது. மொழியியல் நோக்கில் இலக்கியங்களைப் பார்க்கும் தன்மை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் போற்றப்பட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இலக்கண நூல்களை மொழியியல் நோக்கில் பார்க்கிறது. மொழியியல் துறையில் புகழ்பெற்றவர்களும் அவர் தம் துறைகளும் பின்வருமாறு:

• ச. அகஸ்தியலிங்கம் – தொடரியல்

• செ. வை. சண்முகம் – சமுதாய மொழியியல், ஒப்பியல், வரலாற்றியல் பார்வை, திராவிடப் பெயர்கள், எழுத்துச் சீர்திருத்தம்.

• க. முருகையன் – ஒலி, ஒலியன் இயல்கள், பேச்சொலியியல்.

• சு. சக்திவேல் – Tribal Languages.

• க. பாலசுப்ரமணியன் – 4 திராவிட மொழிகளின் இலக்கண ஒப்பீடு.

• வ.அய். சுப்ரமணியம் – புறநானூற்றுச் சொல்லடைவு

• ஆர். கோதண்டராமன் – தொடரியல்

• மோ. இசரயேல் – Tribal Languages.

• ஜெ. நீதிவாணன் – நடையியல்.

• இ. அண்ணாமலை – Adjectual Clause in Tamil.

• மா.சு. திருமலை – தமிழ் கற்பித்தல்.

• பொற்கோ – மாற்றிலக்கண மொழியியல், திராவிட மொழி ஒப்பியல்

• கே. எஸ். கமலேஸ்வரன் – வரலாற்று மொழியியல்.

• கி. அரங்கன் – Syntax & Semantics

• சு. ஆரோக்கிய நாதன் – சமுதாய மொழியியல், இரு மொழியாளரின் மொழிப் பிரச்சினை.

மொழியியல் ஆய்வை வளர்க்கப் பல மன்றங்களும் இதழ்களும் உள்ளன.

6.4.3 எழுத்துச் சீர்திருத்தம் தமிழில் உள்ள 247 எழுத்துகளைக் குறைக்கும் முயற்சி சுதந்திரத்துக்கு முன்பே (1933இல்) துவக்கப் பெற்றது. 1935இல் பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்கள் தன் குடியரசு, விடுதலை ஏடுகளில் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினார். கா. நமச்சிவாய முதலியார் சில புது எழுத்துகளை ஆக்கிக் காட்டினார். எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பாகக் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்கள் சாலை இளந்திரையனார், கா.சு. பிள்ளை, த.வே. உமாமகேசுவரனார் இக்கருத்தை எதிர்த்துப் பேசினர். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைப் பற்றி மட்டும் 17 நூல்கள் பல்வேறு அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளன. என்றாலும் அய், அவ் முதலிய எழுத்துகள் தற்போது பாட நூல்களிலும் பள்ளிகளிலும் இடம் பெற்றுவிட்டதால் பொதுமக்களுக்கும் இவை பழகி விட்டன.

6.5 தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு என்று கூறும்போது, தமிழிலுள்ள இலக்கியங்களின் வரலாற்றுக்கும், இலக்கியங்களின் வழி வரலாற்றுக்கும் என்று இரண்டு பொருள் உண்டு. இலக்கியங்களின் வழி வரலாறு எழுதுவது என்பது மிகச் சிறிய அளவிலே தான் நடைபெற்றுள்ளது. இலக்கியங்களின் வரலாற்றினைக் காலமுறைப் படுத்தி எழுதிச் செல்லுதல் தான் அதிக அளவில் நடைபெற்றுள்ளது.

• முன்னோடி முயற்சிகள்

இலக்கிய வரலாற்றுப் பார்வைக்கு முதன்முதலில் வழி வகுத்தவர் கா.சு. பிள்ளை. கே.எஸ். சீனிவாச பிள்ளையின் தமிழ் வரலாறு, ரா. ராகவையங்காரின் தமிழ் வரலாறு, க.பொ. இரத்தினத்தின் நூற்றாண்டுகளில் தமிழ், வி.செல்வ நாயகத்தின் தமிழ் இலக்கிய வரலாறு, இராமசாமி நாயுடுவின் தமிழ் இலக்கியம் என்பன முழுப் பார்வை தரும் நூல்கள்.

• கால ஆய்வு

ஆழ்வார்கள் காலநிலை, தொல்காப்பியர் காலம், சைவ இலக்கிய வரலாறு, பௌத்த, வைணவ சமண இலக்கிய வரலாறு, 13, 14, 15 நூற்றாண்டு வரலாறு, தற்காலத் தமிழ் வரலாறு என்பன ஒரு கால கட்டத்தை மட்டும் மையப்படுத்தும் நூல்கள்.

• புலவர் வரலாறு

தமிழ்ப்புலவர் சரித்திரம், சங்ககாலப் புலவர், உரையாசிரியர்கள், ஆழ்வார்கள் வரலாறு, தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம், தமிழவேள், மகாவித்வான் தியாகராச செட்டியார், பரிதிமாற் கலைஞர், கால்டுவெல் ஐயர், பிற்காலப் புலவர்கள், கம்பர், சாத்தனார், திருத்தக்க தேவர், தாயுமானவர், பரிமேலழகர், இளம்பூரணர் போன்ற நூல்கள் புலவர்தம் வரலாற்றை விரித்துக் கூறுவனவாகும்.

• இலக்கிய வரலாற்று நூல்கள்

எஸ். இராமகிருஷ்ணனின் தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம், சோமலெயின் வளரும் தமிழ், மா. இராசமாணிக்கனாரின் தமிழ்மொழி இலக்கிய வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியாரின் தமிழ்நூல் வரலாறு, கோவிந்தசாமியின் இலக்கியத்தோற்றம், ஞா. தேவநேயப் பாவாணரின் தமிழ் இலக்கிய வரலாறு என்பன குறிப்பிடத் தக்க நூல்களாகும்.

• ஆங்கில நூல்கள்

பிறநாட்டார், பிறமொழியாளர் தமிழின் தன்மை அறியும் பொருட்டு ஆங்கிலத்தில் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, ஏ.சி. செட்டியார், எம். சீனிவாச ஐயங்கார், ந. சுப்ரமணியம், சி. ஜேசுதாசன் – ஹெப்சிபா, தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், மு. அருணாசலம், ஜே.எம். சுந்தரம்பிள்ளை ஆகியோர் எழுதியுள்ளனர். சாகித்ய அகாதமி வெளியிட்ட மு.வ. வின் தமிழ் இலக்கிய வரலாறு வெளிமாநிலத்தவரும் தமிழ் பற்றி அறிய வைத்துள்ளது. கா. மீனாட்சி சுந்தரனாரின் Contribution of European Scholors to Tamil, உவைசின் Muslim Contribution to Tamil Literature என்பனவும் குறிப்பிடத்தக்கன.

• பிற நூல்கள்

மயிலை. சீனிவேங்கடசாமியின் பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும், கிறித்துவமும் தமிழும், தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் சமணத்தமிழ், அப்துற் றகீமின் முஸ்லீம் தமிழ்ப் புலவர்கள், சேர நாடும் தமிழும், செட்டி நாடும் தமிழும், புதுவை மாநிலத் தமிழ் வளர்ச்சி, சேதுநாடும் தமிழும், இலங்கையும் தமிழும், மலேயாவும் தமிழும், கொங்கு நாடும் தமிழும் போன்ற நூல்கள் ஒரு பகுதி சார்ந்த பார்வை தருவன.

மு. அருணாசலம் அவர்களின் 9-16ஆம் நூற்றாண்டு வரையிலான 8 தொகுதிகளை அடுத்து மது.ச. விமலானந்தம் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் என படைத்துள்ளார். இலக்கியத்தின் வழி வரலாற்றினை அறியும் முயற்சியில் கார்த்திகேசு சிவத்தம்பியின் தமிழில் இலக்கிய வரலாறு முதல் முயற்சியாகும். முழுப்பார்வை தருதல் மட்டுமின்றி சிற்றிலக்கியம், சிறுகதை, நாவல், கட்டுரை, உரைநடை, நாடகம் போன்ற இலக்கியங்கள் குறித்து முழுமையாகவும் தனித்தனியேயும் இலக்கிய வரலாற்று நூல்கள் வந்துள்ளன. இவை ஒரு துறைப் புலமை பெற உதவுவன.

6.6 பல்துறைத் தமிழ்

இன்று தமிழ், அறிவியல் தமிழ், மருத்துவம், கணினியியல், நாட்டுப்புறவியல், இதழியல் எனப் பன்முகம் கொண்டுள்ளது. அரசியல் தமிழ், பொருளியல் தமிழ், சட்டத் தமிழ், நூலகத்தமிழ், வேளாண் தமிழ், சுவடித் தமிழ், திரைத்தமிழ், தொலைக்காட்சித் தமிழ் எனத் தமிழ் வழங்கும் துறைகளும் தற்காலத்திற்கேற்ப வளர்ந்துள்ளன.

• மருத்துவம்

சித்த மருத்துவம்: சில தாவர மூலிகைகள்

சித்த மருத்துவம் பற்றிச் சுவடிகளிலிருந்து பல நூல்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வழி வெளிவந்துள்ளன. தமிழ்த் தாவரங்கள் மூலிகைகளாக வாழ்க்கைக்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பதை முருகேச முதலியாரின் பொருட்பண்பு நூல் – பயிர் வகுப்பு குணபாடம் என்ற நூல் விளக்குகிறது. கண்மருத்துவம், அகத்தியர் வைத்திய காவியம் 1500 என்ற பதிப்பு நூல்களும் குறிப்பிடத்தக்கன. சித்த மருத்துவ நூல்கள் 1249 வந்துள்ளன எனத் தமிழ்ப் பல்கலைக் கழகம் குறிப்பிடுகின்றது.

• கணினியியல்

அறிவியல் வளர்ச்சியால் நமக்குக் கிடைத்த சிறந்த சாதனம் கணினி. இணையம் உலகத்தை நம் வீட்டுக்குள்ளேயே கொண்டு வருகிறது. இக்கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து அறிந்து கொள்ள ஏராளமான நூல்கள் வந்துவிட்டன. கணினி என்றால் என்ன, அதை இயக்குவது எப்படி, நமக்கு வேண்டிய வசதிகளை எப்படிப் பெறுவது என்றெல்லாம் கூறும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

6.7 தொகுப்புரை

இருபதாம் நூற்றாண்டில் இயற்றமிழ்ப் பிரிவிலடங்கும் உரைநடை இலக்கியத்தில் சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை என்பன தனித்தனியே பல பிரிவுகளாக வளர்ச்சி பெற்றுள்ளன. இசைத்தமிழ் சுதந்திரத்துக்குப்பின் பெரிதான, குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஒன்றையும் பெறவில்லை. நாடகத்தமிழ், நசிந்து வந்தாலும் தொலைக்காட்சி, வானொலி என்பவற்றில் வாழ்கிறது. அதனை மீட்டு எடுக்கக் கூத்துப்பட்டறை, பரீக்ஷா, வீதிநாடகம் என்பன தோன்றியுள்ளன. சிறுகதை வளர்ச்சிக்கென 5 தனித்த இலக்கியப் பத்திரிகைகள் தோன்றியுள்ளன. நாவல் பல வகைகளுடன் கிளைத்துள்ளது. விடுதலைக்குப் பின் தொடர்கதையாக வந்து மக்கள் மனதில் நிலைத்த கல்கியின் வரலாற்று நாவல்கள், சமூக நாவல்கள், சர்ச்சைக்கு உள்ளான ஜெயகாந்தன் நாவல்கள், தலித் நாவல்களான கருக்கு, சங்கதி என்பன குறிப்பிடத்தக்கன. கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம், கவிதை எனப் பல்துறை நூல்கள் பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வந்தாலும் நாற்பது மொழிகளில் இருந்து அறிவியல் இலக்கியப் படைப்புகள் வந்துள்ளது அறிவியல் தமிழின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. தமிழின் பக்தி இலக்கியம் அதிக அளவில் பிறமொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. புதுக்கவிதையின் வளர்ச்சியாக ஹைக்கூ கவிதைகள் உள்ளன. இலக்கணமும் மொழியியலும் மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப இன்னும் வளர வேண்டியுள்ளது. தமிழ் இலக்கிய வரலாறு அறிஞர்க்கு, மாணவர்க்கு, ஆய்வாளர்க்கு எனப் பல்வகைத் தரம் உடையதாகத் தோன்றியுள்ளது. இலக்கியத்தின் மூலம் சமுதாய வரலாற்றை அறியும் முயற்சிகளும் ஆங்காங்கே தோன்றியுள்ளன. நாட்டுப்புறவியல், இதழியல், ஒப்பியல், கோயில் ஆய்வு எனப் பல துறைகள் புதிதாகத் தமிழில் வளர்ந்து வருகின்றன.