18

பழங்காலத் தமிழ்

பாடம் - 1

குகைக் கல்வெட்டுத் தமிழ்

1.0 பாட முன்னுரை

ஒரு மொழியின் வரலாற்றை அறிவதற்குரிய அடிப்படைச் சான்றுகள் பல. அவற்றுள் ஒன்று கல்வெட்டு. கல்லின் மீது எழுத்துகள் வெட்டப்பட்டமையால் இவை, கல்வெட்டுகள் எனப்பட்டன. இவை அழியாப் பொருட்கள் மீது எழுதப்பட்டுள்ளமையால் பல நூற்றாண்டுகள் கடந்தும் நமக்கு அப்படியே கிடைத்துள்ளன. தமிழில் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. இவை தமிழ்நாட்டில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு வரை பல்வேறு காலங்களில் பல்வேறு ஊர்களில் தோன்றியவை. இவற்றைக் குகைக் கல்வெட்டுகள் என்றும் கோயில் கல்வெட்டுகள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். ஊர்களை அடுத்துள்ள மலைகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் உள்ள பாறைகளில் காணப்படும் கல்வெட்டுகள் குகைக் கல்வெட்டுகள் (Cave Inscriptions) எனப்படும். ஊர்களில் உள்ள கோயில்களில் இருக்கும் மதில் சுவர், வாயில், கல் தூண் முதலியவற்றில் காணப்படும் கல்வெட்டுகள் கோயில் கல்வெட்டுகள் (Temple Inscriptions) எனப்படும். இக்கல்வெட்டுகள் யாவும் காலந்தோறும் தமிழ்மொழி எவ்வாறு எழுதப்பட்டது, எவ்வாறு வளர்ந்து வந்தது, எத்தகைய மாற்றங்களைப் பெற்றது என்பனவற்றைக் காட்டுவனவாக உள்ளன. தமிழில் உள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழைமை வாய்ந்தவை குகைக் கல்வெட்டுகள் ஆகும். இவற்றின் வழிநின்று பழங்காலத் தமிழ்மொழியின் எழுத்து வடிவம் பற்றியும், ஒலியனியல், உருபனியல் (சொல்லியல்), தொடரியல் ஆகியன பற்றியும் காண்பதே இப்பாடத்தின் நோக்கம்.

1.1 குகைக் கல்வெட்டுகள் - ஓர் அறிமுகம்

தொல் எழுத்தியல் அடிப்படையில் குகைக் கல்வெட்டுகளின் காலத்தைக் கி.மு. மூன்றாம் இரண்டாம் நூற்றாண்டுகள் என வரையறை செய்வர். தமிழ்க் கல்வெட்டுகளுள் மிகப் பழைமையான இந்தக் குகைக் கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் காணப்படும் இடங்கள், அவை அமைந்துள்ள சூழல், அவற்றின் தோற்றம், அவை கண்டுபிடிக்கப்பட்ட காலம் ஆகியன பற்றிக் காண்போம்.

1.1.1 குகைக் கல்வெட்டுகள் காணப்படும் இடங்கள் தமிழ்நாட்டில் கீழவளவு, மறுகால்தலை, ஆனைமலை, அழகர்மலை, மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, சித்தன்னவாசல், திருவாதவூர், விக்கிரமங்கலம், திருப்பரங்குன்றம், மாங்குளம், கருங்காலக்குடி, புகழூர், அரச்சலூர், அரிட்டாபட்டி, மாமண்டூர் போன்ற பல ஊர்களில் குகைக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

1.1.2 குகைக் கல்வெட்டுகள் காணப்படும் சூழல் மேலே குறிப்பிட்ட ஊர்களை அடுத்துள்ள மலைகளில் இயற்கையாக அமைந்த குகைகள் உள்ளன. இவற்றின் அருகில் தெளிந்த நீர்ச் சுனைகள் உள்ளன. பெரும்பாலான குகைகளுக்குச் செல்வது கூடக் கடினம். இருப்பினும் இங்குச் சென்றால் இயற்கையின் எழில் மன அமைதியை அளிக்கும் வண்ணம் உள்ளது. இக்குகைகளில் பழங்காலத்தில் பௌத்த, சமணத் துறவியர் தங்கி வாழ்ந்தனர். இத்துறவிகளுக்கு அவ்வவ்போது அரசர்களும், வணிகர்களும், ஊர் மக்களும் குகைகளின் தளத்தை வழ வழ என்று செதுக்கித் தந்துள்ளனர். மேலும் துறவிகள் உறங்குவதற்கும், தியானம் செய்வதற்கும் கல் படுக்கைகளை வழ வழப்பாகச் செதுக்கித் தந்துள்ளனர். குகையின் மேல் பாறை முகப்பிலும் படுக்கைகளின் தலைமாட்டிலும், பக்கவாட்டிலும் கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுக் காணப்படுகின்றன.

1.1.3 குகைக் கல்வெட்டுகளின் தோற்றம் வட இந்தியாவில் கி.மு. நான்காம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசை ஆண்டு வந்த சந்திரகுப்தனின் ஆட்சிக் காலத்தில் (கி.மு. 321 – 298) சமண சமயம் தமிழ்நாட்டில் வந்து பரவியது. இவனது பேரன் அசோகன் ஆண்டு வந்த காலத்தில் (கி.மு. 273 – 232) பௌத்த சமயம் தமிழ்நாட்டில் வந்து பரவியது. இவ்விரு சமயங்களைச் சார்ந்த துறவிகள் சமயம் பரப்புவதற்காகச் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் உள்ள மலைக் குகைகளில் வந்து தங்கினர். இவ்வாறு குகைக் கல்வெட்டுகளுக்கு இத்துறவிகளே காரணமானார்கள்.

1.1.4 குகைக் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குகைக் கல்வெட்டுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவை என்றாலும் நீண்ட காலமாக வெளி உலகு அறியாமல் இருந்தன. கி.பி. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்துதான் இவை கண்டுபிடிக்கப்பட்டன. கி.பி. 1903இல் வெங்கோபராவ் என்பவர் முதன்முதலில் கீழவளைவு என்னும் இடத்தில் இருந்த குகைக் கல்வெட்டைக் கண்டுபிடித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 1906இல் அப்போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக (District Collector) இருந்த கெமைடு என்ற ஆங்கிலேயர் மறுகால்தலை என்னும் இடத்தில் உள்ள கல்வெட்டைக் கண்டுபிடித்தார். இதன் பின்னர் மற்ற இடங்களிலும் இவை கண்டுபிடிக்கப்பட்டன. கே.வி. சுப்பிரமணியஅய்யர் பன்னிரண்டு இடங்களில் இருந்த முப்பது கல்வெட்டுகளைக் கண்டுபிடித்து ஆராய்ந்தார். மேலும் எச். கிருட்டின சாஸ்திரியார்,ஐராவதம் மகாதேவன், ஈரோடு இராசு ஆகியோர் பல இடங்களில் இருந்த குகைக் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தனர். இதுகாறும் இருபத்தோர் இடங்களில் மொத்தம் எழுபத்தொரு குகைக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

1.2 குகைக் கல்வெட்டுகளின் மொழியும் எழுத்தும்

குகைக் கல்வெட்டுகள் ஒன்றிரண்டு வரிகளையே உடையன. எல்லாக் கல்வெட்டுகளும் குறிப்பிடும் செய்திகள் சிலவே. குகைகளில் தங்கியிருந்த துறவிகளுக்கு அரசர்களும், வணிகர்களும் அளித்த தானம் பற்றித் தெரிவிக்கின்றன அதாவது, துறவிகள் தியானம் செய்வதற்கும், உறங்குவதற்கும் உரிய கல் படுக்கைகளையும், அமர்வதற்கு உரிய கல் இருக்கைகளையும் செதுக்கியோர் பற்றித் தெரிவிக்கின்றன. குகைகளில் தங்கியிருந்த துறவிகளின் பெயர்களைத் தெரிவிக்கின்றன.

இச்செய்திகளைக் குறிப்பிடும் குகைக் கல்வெட்டுகள் எந்த மொழியில் எழுதப்பட்டன என்பது பற்றியும் எந்த எழுத்து வடிவில் எழுதப்பட்டன என்பது பற்றியும் இங்கே காண்போம்.

1.2.1 குகைக் கல்வெட்டுகளின் மொழி குகைக் கல்வெட்டுகளின் வாசகங்களில் உள்ள ஒலிகள், சொற்கள், தொடர்கள் ஆகிய அனைத்தும் பெரும்பாலும் தமிழ் மொழியே ஆகும். இக்கல்வெட்டுகளை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் சமணர்கள். இவர்களின் தாய்மொழி பிராகிருதம். எனவே இக்கல்வெட்டுகளில் பிராகிருத மொழிச் சொற்கள் கலந்திருந்தன. எனினும் குகைக் கல்வெட்டு மொழியின் இலக்கண அமைப்பு முழுவதும் தமிழாகவே உள்ளது. எனவே குகைக் கல்வெட்டுகளின் மொழி தமிழே எனலாம்.

1.2.2 குகைக் கல்வெட்டுகளின் எழுத்து குகைக் கல்வெட்டுகளின் மொழி தமிழ். ஆனால் அம்மொழியை எழுதப் பயன்படுத்திய எழுத்தோ பிராமி வடிவம் ஆகும். இதனால் இவற்றைப் பிராமிக் கல்வெட்டுகள் என்றும் அழைத்தனர். பிராமி என்பது கி.மு. நான்காம் நூற்றாண்டு முதல் கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பேசப்பட்ட பல்வேறு மொழிகளை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவம் என்று கூறப்படுகிறது. இக்கால கட்டத்தில் இந்தியா முழுவதிலும் தோன்றியுள்ள கல்வெட்டுகளின் எழுத்து வடிவம் ஒன்று போல் உள்ளது. வட இந்தியாவில் அசோகர் காலத்தில் எழுதப்பட்ட பிராகிருதம் மற்றும் பாலி மொழிக் கல்வெட்டுகள், தமிழ்நாட்டுக் குகைகளில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள், ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டிப் புரோலு என்னும் இடத்தில் புத்தபிரானின் புனித எலும்பு வைக்கப்பட்டுள்ள கற்பேழை மீது உள்ள கல்வெட்டு, அண்டை நாடான இலங்கையில் உள்ள சிங்களக் கல்வெட்டுகள் முதலிய அனைத்தும் ஏறத்தாழ ஒரே எழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்து வடிவே பிராமி என்று சொல்லப்படுகிறது.

குகைக் கல்வெட்டுகளை உருவாக்கிய சமண, பௌத்த துறவிகளின் தாய்மொழி முறையே பிராகிருதமும் பாலியுமாம். இம்மொழிகளின் எழுத்து பிராமியாக இருந்தது. எனவே சமயம் பரப்ப வந்த இத்துறவிகள் தமிழ்மொழி வழியாகச் சமயம் பரப்பும்போது பிராமி எழுத்துகளைத் தமிழகத்தில் பயன்படுத்தினர். இதனால் குகைக் கல்வெட்டுத் தமிழும் பிராமி வடிவில் எழுதப்பட்டது என்று கூறுவர்.

1.2.3 பிராமி பற்றிய கருத்துகள் “தொடக்க காலத்தில் தமிழில் ஏதோ ஒரு வகையான தமிழ் எழுத்து வழங்கி வந்தது. பிராமி எழுத்து தமிழகத்துக்கு வந்து வழங்கிய பிறகு அதற்கு முன்பு வழங்கி வந்த பழைய தமிழ் எழுத்து மறைந்து போய்ப் பிராமி எழுத்து நிலைத்து விட்டது” என்று கூறுகிறார் மயிலை சீனி. வேங்கடசாமி. (சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டுகள், ப.9)

பிராமி எழுத்தானது திராவிட மொழிகளுக்காக உருவாக்கப்பட்டது என்றும், குறிப்பாக அவற்றுள் பழைமையானதான தமிழுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது என்றும், பின்னாளில் பிராகிருத மொழி அதனைப் பயன்படுத்திக் கொண்டது என்றும், நாளடைவில் இந்தியா முழுவதும் அதுவே வழக்கத்தில் நிலவியது என்றும் தி.நா.சுப்பிரமணியன் கருத்துத் தெரிவித்துள்ளார். (தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள், தொகுதி – 3, பகுதி-2.)

எவ்வாறாயினும், பழங்காலத்தில் இந்தியா முழுவதிலும் உள்ள மொழிகள் பிராமி எழுத்தைப் பயன்படுத்தின என்பதையும் வடநாட்டில் அது பிராமி எனவும் தமிழ்நாட்டில் தமிழ் எனவும் வழங்கியது என்பதையும் நடன. காசிநாதன் தெளிவுறுத்தியுள்ளார். தமிழைப் பிராகிருத மொழியில் தாமிலி என வழங்கியுள்ளனர்.

1.2.4 தென்பிராமியும் வடபிராமியும் தென் பிராமிக்கும் வடபிராமிக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் சில உண்டு. அசோகரது கல்வெட்டுகளில் (வடபிராமி) மெய்யெழுத்து புள்ளியிட்டு எழுதப்பட்டது. ஆனால் தென்பிராமியில் அமைந்த குகைக் கல்வெட்டுகளில் மெய்யெழுத்து புள்ளியில்லாமல் எழுதப்பட்டது.

க் என்பது அசோகர் கல்வெட்டில் +் என எழுதப்பட்டது.

குகைக் கல்வெட்டில் + என எழுதப்பட்டது.

தமிழுக்குச் சிறப்பான ஒலிகளாகிய எகர ஒகரக் குறில்களும், ற,ன,ழ எனும் மெய்களும் அசோகர் கல்வெட்டுகளில் இல்லை. ஆனால் தமிழ்க் குகைக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. பிராமி வருவதற்கு முன்பே தமிழகத்தில் வழக்கில் இருந்த பழைய எழுத்து வடிவத்திலிருந்து இவ்வடிவங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

1.2.5 கல்வெட்டுகளைப் படித்துப் பொருள் கூறிய முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்ட எழுத்துகள் தட்ப வெப்ப மாற்றங்கள், பாறைகளில் ஏற்பட்ட கீறல், வெடிப்பு, புள்ளி புரைசல்கள் போன்றவற்றால் மழுங்கியும் உருமாறியும் உள்ளன. எனினும் அறிஞர்கள் பெரும்பாலான கல்வெட்டுகளை மிகவும் முயன்று படித்துப் பொருள் கூறியுள்ளனர். இங்குச் சில கல்வெட்டுகள் படித்துப் பொருள் காணப்பட்டமையைக் காணலாம்.

திருப்பரங்குன்றக் கல்வெட்டு

மதுரை மாநகருக்குத் தெற்கே ஐந்து கல் தொலைவில் உள்ள திருப்பரங்குன்ற மலையில் உள்ள குகைகளில் பழங்காலத்தில் சமணர்கள் தங்கியிருந்தனர். இம்மலையின் மேற்குப் புறத்தில் 55 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட ஒரு பெரிய குகை உள்ளது. இக்குகையில் கற்படுக்கைகள் பல உள்ளன. அவற்றுள் ஒரு கற்படுக்கையின் தலைமாட்டில் 31 எழுத்துகளைக் கொண்ட ஒருவரிக் கல்வெட்டுக் காணப்படுகிறது. இதனை டி.வி. மகாலிங்கம்,

எருக்கோடூர் இழ குடும்பிகன் போலாலையன்

செய்த ஆய்சயன நெடு சாதன(ம்)

என்று படித்துள்ளார். இதற்கு இலங்கை (ஈழம்) யிலிருந்து வந்து எருக்கோட்டூரில் வசிக்கிற குடும்பிகனான போலாலையன் இந்தக் குகையின் கற்படுக்கைகளை, உறங்குவதற்கும் ஆழ்ந்த தியானம் செய்வதற்கும் அமைத்தான் என்று பொருள் கூறுகிறார். சயனம், சாதனம் என்ற வடசொற்களுக்கு முறையே உறக்கம், தியானம் என்று பொருள் கொள்கிறார். (Early South Indian Palaeography, pp. 250 – 251) மயிலை சீனி. வேங்கடசாமி இதே கல்வெட்டை.

எருக்காடூர் இழ குடும்பிகன் பொலாலையன்

செய்தா ஆய்சயன் நெடு சாதன்

என்று படித்து எருக்காட்டூர் ஈழக் குடும்பிகன் (வாணிகன்) பொலாலையன் இந்தக் குகையை முனிவர்களுக்குத் தானம் செய்தான். குகையின் கற்படுக்கைகளைச் செய்து அமைத்தவன் ஆய்சயன் நெடுஞ் சாத்தன் என்று பொருள் கூறுகிறார். (சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டுகள், பக். 124-125) செய்தா என்பதில் இறுதி னகர மெய் கெட்டுள்ளது. நெடு என்ற அடைக்குப் பின்னர் வல்லினம் வரும்போது ஞ் என்ற இன மெல்லினம் மிகவில்லை. சாத்தன் என்பதில் தகரம் இரட்டிக்கவில்லை. ஈழம் என்பது இழ என எழுதப்பட்டுள்ளது. பேசுவது போல் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.

மறுகால்தலைக் கல்வெட்டு

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பாளையங்கோட்டைக்கு வடகிழக்கே பத்து கல் தொலைவில் மறுகால்தலை என்னும் சிற்றூர் உள்ளது. இங்குப் பூவில் உடையார் மலை என்னும் மலையில் இயற்கையாக அமைந்த குகை உள்ளது. இங்கு ஒரே வரியில் பதினோர் எழுத்துகளைக் கொண்ட சிறிய கல்வெட்டு உள்ளது. இதனை ஐராவதம் மகாதேவன்,

வேண் காஸிபன் கொடுபித கல் காஞ்சணம்

என்று படித்து, வேண் காசிபன் என்பவனால் கொட்டுவிக்கப்பட்ட (செதுக்குவிக்கப்பட்ட) கல்லால் ஆகிய காஞ்சணம் என்று பொருள் கூறுகிறார்.

1.3 ஒலியனியல்

இக்கால மொழிநூலார் ஒரு மொழியின் அமைப்பை ஒலியனியல் (Phonology), உருபனியல் அல்லது சொல்லியல் (Morphology) தொடரியல் (Syntax) என வகைப்படுத்தி ஆராய்வர். தமிழ்மொழி வரலாற்றை மொழியியல் கண்ணோட்டத்தில் எழுதியுள்ள தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், சு. சக்திவேல் ஆகியோர் குகைக் கல்வெட்டுத் தமிழின் அமைப்பையும் இம்மூன்று வகைப்படுத்தியே ஆராய்ந்துள்ளனர். முதற்கண் குகைக் கல்வெட்டுத் தமிழின் ஒலியனியல் பற்றிக் காண்போம்.

ஒரு மொழியில் உள்ள ஒலிகளைப் பற்றி ஆராய்வதே ஒலியனியலாகும். குறைந்த வேற்றுமை உடைய இருசொற்களில் அமைந்து அவற்றின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் ஒலிகள் ஒலியன்கள் எனப்படும். எ-டு. உடல் – ஊடல். இவற்றில் ட்அல் எனும் மூன்று ஒலிகளும் இருசொற்களுக்கும் பொதுவானவை. உ-ஊ என்பவையே சொற்களின் பொருள் மாற்றத்திற்குக் காரணமானவை. ஆகவே இவை தனித்தனி ஒலியன்கள் ஆகும்.

தமிழில் குறில்களும் நெடில்களும் தனித்தனி ஒலியன்களாகும். தமிழிலக்கண நூலாரும் மொழிநூலாரும் ஒலிகளை உயிரொலிகள் (vowels), மெய்யொலிகள் (Consonants) என இரண்டாகப் பிரித்துள்ளனர். குகைக்கல்வெட்டுத் தமிழில் இவ்விரு வகை ஒலிகளும் மொழியின் (சொல்லின்) முதல், இறுதி, இடை ஆகிய மூன்று இடங்களிலும் எவ்வாறு வருகின்றன எனக் காணலாம்.

1.3.1 உயிரொலிகள் அ இ உ எ ஒ எனும் ஐந்தும் குறில் உயிர்கள் என்பதையும் ஆ ஈ ஊ ஏ ஓ எனும் ஐந்தும் நெடில் உயிர்கள் என்பதையும் அறிவீர்கள். ஐ, ஒள எனும் இரண்டும் கூட்டொலிகள் ஆகும்.

எல்லா உயிர்களும் மொழியின் முதலிலும் இடையிலும் வருகின்றன. மொழியின் இறுதியில் ஈ, எ, ஒ ஆகிய மூன்று உயிர்கள் வரவில்லை. பிற உயிர்கள் வருகின்றன. ஐ, ஒள ஆகிய கூட்டொலிகளுள் ஐயன், ஐம்பது போன்ற சொற்களில் மொழி முதலிலும் அந்தை, வெள்ளறை, பிடந்தை போன்ற சொற்களில் இறுதியிலும் ஐகாரம் வந்துள்ளது. ஆனால் ஒளகாரம் குகைக் கல்வெட்டுத் தமிழில் காணப்படவில்லை.

உயிர்மயக்கம்

சொல்லின் இடையிலோ இறுதியிலோ அடுத்தடுத்து இரண்டு உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது உயிர் மயக்கம் எனப்படும். குகைக் கல்வெட்டுகளில் உயிர் மயக்கங்கள் அதிகம் காணப்படுகின்றன.

(எ-டு) பளிஇ, பிணஊ, பணஅன், கொடி ஓர்

இச்சொற்களில் இஇ, அஊ, அஅ, இஓ என இரண்டு உயிர்கள் சேர்ந்து வந்துள்ளன. சொற்களில் இரண்டு உயிர்கள் அடுத்தடுத்து நிற்பதைத் தமிழ் இலக்கணம் ஏற்பதில்லை. இரண்டு உயிர்களுக்கும் நடுவே யகரம் அல்லது வகரம் உடம்படுமெய்யாக வரும். பளி+ய்+இ = பளியி, பிண+வ்+ஊ = பிணவூ என அவை வரவேண்டும். உடம்படு மெய் இல்லாமல் இரண்டு உயிர்களைச் சேர்த்து எழுதியிருப்பது குகைக் கல்வெட்டுத் தமிழில் காணப்படும் குறிப்பிடத்தக்க தனி இயல்பு எனலாம்.

1.3.2 மெய்யொலிகள் தமிழிலக்கண நூலார் குறிப்பிடும் மெய்யொலிகள் மொத்தம் பதினெட்டு, இவை அனைத்தும் குகைக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. ங், ஞ் ஆகிய இரண்டு தவிரப் பிற மெய்யொலிகள் ஒலியன்களாக வருகின்றன. ஆய்த எழுத்துக் குகைக் கல்வெட்டுகளில் காணப்படவில்லை. மெய்யொலிகளைத் தமிழிலக்கண நூலார் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று வகையாகப் பகுப்பர். மொழிநூலார் வல்லினத்தை வெடிப்பொலிகள் (Plosives) என்றும், மெல்லினத்தை மூக்கொலிகள் (Nasals) என்றும் குறிப்பிடுவர். இடையினத்தை அவ்வாறே குறிப்பிடுவர்.

குகைக் கல்வெட்டுகளில் காணப்படும் மெய்யொலிகள் வருமாறு :

வெடிப்பொலிகள் (வல்லினம்)     -    க், ச், ட், த், ப், ற்

மூக்கொலிகள் (மெல்லினம்)       -    ங், ஞ், ண், ந், ம், ன்

இடையின ஒலிகள்                           -    ய், ர், ல், வ், ழ், ள்

மொழிமுதல்

க், ச், த், ப் – ஆகிய நான்கு வெடிப்பொலிகளும் ந், ம் – ஆகிய இரண்டு மூக்கொலிகளும், ய், வ் – ஆகிய இரண்டு இடையின ஒலிகளும் மொழிக்கு முதலில் வருகின்றன.

சகர மெய் அ, ஐ, ஒள என்னும் மூன்று உயிர்களோடு கூடி மொழி முதலாகாது ; பிற ஒன்பது உயிர்களோடு மட்டுமே கூடி முதலாகும் என்பர் தொல்காப்பியர். ஆனால் அரிட்டாபட்டியில் உள்ள குகைக் கல்வெட்டுகளில் சடிகன், சந்தரிதன் போன்ற சொற்களில் சகர மெய் அகர உயிரோடு கூடி மொழி முதலாவதைக் காணலாம்.

யகர மெய் ஆகார உயிரோடு மட்டுமே சேர்ந்து மொழி முதலாகும் என்பர் தொல்காப்பியர். இவ்விதிக்கு ஏற்ப, புகழூர் என்னும் இடத்தில் உள்ள கல்வெட்டில் யாற்றூர் என்ற சொல் அமைந்து காணப்படுகிறது. (யாற்றூர் – ஆற்றூர்).

தனிமெய் மொழி முதலில் வாராது; உயிரோடு சேர்ந்து உயிர்மெய்யாகவே வரும். இது தமிழ் இலக்கண நூலார் வரையறுத்துக் கூறும் விதியாகும். குகைக் கல்வெட்டுகளில் இந்த விதி மீறப்படவில்லை.

குகைக் கல்வெட்டுகளில் வடமொழிக்கே சிறப்பாக உள்ள ஒலிகளில் ஒன்றாகிய ஸ என்ற மெய்யொலி மட்டும் அதற்குரிய வரிவடிவத்தோடு பல சொற்களில் காணப்படுகிறது. அரிட்டாபட்டிக் கல்வெட்டுகளில் ஸிரிய், ஸுதன், ஸாலகன் என்னும் சொற்கள் காணப்படுகின்றன.

மொழி இறுதி

குகைக் கல்வெட்டுத் தமிழில் க், ச், ட், த், ப், ற் – என்னும் ஆறு வெடிப்பொலிகளும் மொழிக்கு இறுதியில் வரவில்லை. மூக்கொலிகளைப் பொறுத்த வரை ண், ம், ன் – ஆகிய மூன்று ஒலிகள் மொழி இறுதியில் வருகின்றன. இடையின ஒலிகளில் ய், ர், ல், ள் – ஆகிய நான்கு ஒலிகள் மொழி இறுதியில் வருகின்றன.

மொழி இடை

மொழி இடையில் ஒன்றிற்கு மேற்பட்ட மெய்கள் சேர்ந்து வருவது மெய்ம்மயக்கம் எனப்படும். இது இரு வகைப்படும். ஒரு மெய் தன்னோடு தானே மயங்கி வருவது. அதாவது ஒரு மெய்க்கு அடுத்து அம்மெய்யே வருவது முதலாவது வகை. இதனைத் தமிழ் இலக்கண நூலார் உடனிலை மெய்ம்மயக்கம் என்று கூறுவர். ஒரு மெய் மற்றொரு மெய்யொடு மயங்கி வருவது இரண்டாவது வகை. இதனை வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்று கூறுவர். குகைக் கல்வெட்டுத் தமிழில் இவ்விருவகை மெய்ம்மயக்கங்களும் காணப்படுகின்றன.

(எ-டு)

வழுத்தி – த்த் – உடனிலை மெய்ம்மயக்கம்

குடும்பிகன் – ம்ப் – வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

1.3.3 ஒலி மாற்றங்கள் குகைக் கல்வெட்டுகள் பெரும்பாலும் பேச்சுத் தமிழ் நடையிலேயே எழுதப்பட்டுள்ளன. ஒலி மாற்றங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

மொழி இறுதி மூக்கொலி இழப்பு

மொழி இறுதியில் வரும் மூக்கொலி அதற்கு முன் நெடில் உயிர் வருமாயின் ஒலிக்கப்படாமல் விடப்படுகிறது.

(எ.டு) செய்தான் – செய்தா

இங்கு இறுதியில் ன் என்ற மூக்கொலி, அதற்கு முன்னர் ஆ என்னும் நெடில் உயிர் வருவதால் மறைந்துபோனது. இக்காலப் பேச்சுத் தமிழிலும் இந்த ஒலி மாற்றம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

வெடிப்பொலியின் முன் மூக்கொலி

அடைமொழியினை அடுத்து வெடிப்பொலி வரும்போது அதன் முன் இன மூக்கொலி தோன்றுகிறது.

(எ-டு)     நெடு + சழியன்     -     நெடுஞ்சழியன்     ச் என்பதன் இனமூக்கொலி ஞ் வந்தது

இள + சடிகன்         –     இளஞ்சடிகன்

நெடு+சாதன்           –     நெடுசாதன்     மூக்கொலி வராமையும் உண்டு.

மெய் இரட்டித்து வாராமை

இரட்டை மெய் வர வேண்டிய இடங்களில் ஒற்றை மெய் மட்டுமே எழுதப்பட்டது.

(எ-டு)     எருக்கோட்டூர்     -     எருகோடூர்

கொட்டுபித்த        –     கொடுபித

சாத்தன்                   –     சாதன்

கர உயிரின் பின் யகர மெய் வருதல்

இகர ஈற்று மொழிக்கண் இகரத்தோடு யகரமும் விரவி வருகிறது. குகைக் கல்வெட்டுகளில் இதை மிகுதியாகக் காணலாம்.

(எ-டு) கணிய், பளிய், வழுத்திய்

1.4 உருபனியல்

ஒரு மொழியில் உள்ள சொற்களின் அமைப்பைப் பலவாறு வகைப்படுத்தி ஆராய்வதே உருபனியல் என்பர் மொழிநூலார். தமிழ் இலக்கண நூலார் சொல்லியல் என்பர். ஓர் ஒலியன் தனித்து நின்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட ஒலியன்கள் சேர்ந்து நின்றோ பொருள் தருமாயின் அது உருபன் (Morpheme) எனப்படும். தமிழ் இலக்கணம் இதனைச் சொல், பதம், உருபு எனும் சொற்களால் குறிப்பிடுகிறது.

குகைக் கல்வெட்டுத் தமிழில் பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இருவகைச் சொற்களும் காணப்படுகின்றன. தமிழில் பெயர்ச்சொல், வினைச்சொல் இரண்டும் திணை, பால், எண், இடம் ஆகியனவற்றைக் காட்டும். பெயர்ச்சொல் வேற்றுமை உருபை ஏற்று வரும். வினைச்சொல் காலம் காட்டும். பெயர், வினை இரண்டிற்கும் உரிய இந்தப் பொது இயல்புகளைக் குகைக் கல்வெட்டுத் தமிழில் காணலாம்.

1.4.1 பெயர்ச்சொல் கல்வெட்டுகளில் பெயர்ச்சொற்கள் எவ்வாறு பால் உணர்த்துகின்றன என்பதை இங்குக் காண்போம்.

பால் காட்டும் விகுதிகள்

குகைக் கல்வெட்டுகளில் அன், ஆன், ஓன் என்னும் உயர்திணை ஈறுகள் ஆண்பால் ஒருமை விகுதிகளாக வருகின்றன; ஓர் என்னும் ஈறு உயர்திணைப் பன்மை (பலர்பால்) விகுதியாக வருகின்றது.

(எ-டு)     சாத்தன், நெடுஞ்சழியன், ஆரிதன்

கொடுபிதோன் (செதுக்கியவன்)

நிகமதோர் (நிகமம் -நகரம் ; நகரத்தைச் சார்ந்த வணிகர்)

பெண்பால் விகுதி எதுவும் இக்கல்வெட்டுகளில் காணப்படவில்லை. அதேபோல் அஃறிணை ஒருமை, பன்மை காட்டும் விகுதிகளையும் காண முடியவில்லை.

வேற்றுமை உருபுகள்

வேற்றுமை உருபுகள் குகைக் கல்வெட்டுகளில் அவ்வளவாக இடம் பெறவில்லை. நந்தாஸிரியற்கு என்ற சொல்லில் கு என்ற நான்காம் வேற்றுமை உருபு காணப்படுகிறது. எம் ஊர் சாதன் அ தானம் என்ற தொடரில் அ என்பது ஆறாம் வேற்றுமை உருபாக வருகிறது. இத்தொடருக்கு எம் ஊர் சாத்தனுடைய தானம் என்று பொருள்.

1.4.2 வினைச்சொல் குகைக் கல்வெட்டுத் தமிழில் வினைச்சொல் காலம் காட்டும் முறையையும், பால் காட்டும் முறையையும் இங்குக் காண்போம். மேலும் வினைச்சொல் முற்று, எச்சம் என்ற பாகுபாட்டையும் தன்வினை, பிறவினை முதலான வேறுபாடுகளையும் கொண்டது. இவற்றைக் குகைக் கல்வெட்டுகளில் காணலாம்.

காலம் காட்டல்

குகைக் கல்வெட்டுத் தமிழில் இறந்தகாலம் மட்டுமே காணப்படுகிறது. இறந்தகாலம் இரண்டு வகையில் உணர்த்தப்படுகிறது.

(1) வினையடிகளோடு த், த்த, ந்த் என்னும் வடிவங்கள் சேர்க்கப்படுவதால் இறந்தகாலம் உணர்த்தப்படுகிறது.

(எ-டு)     செய்தான்     - -த்-

கொடுபித்தான்     - -த்த-

தந்தான்     - -ந்த்-

(2) உகரத்தை இறுதியாகக் கொண்ட வினையடிகளில் உகர இறுதி மறைய இகர விகுதி சேர்க்கப்படுவதால் இறந்த காலம் உணர்த்தப்படுகிறது.

(எ-டு) வழுத்து + இ = வழுத்தி

எனவே குகைக் கல்வெட்டுத் தமிழில் இறந்தகாலம் உணர்த்த த், இ என்ற இரண்டு இடைநிலைகள் மட்டுமே உள்ளன எனலாம். மொழியியலார் த் எனும் இடைநிலை த்த், ந்த் எனும் வடிவங்களிலும் வருவதாகக் கூறுகின்றனர்.

எச்சங்கள்

குகைக் கல்வெட்டுகளில் அகர ஈற்று இறந்தகாலப் பெயரெச்சங்களும் இகர ஈற்று இறந்தகால வினையெச்சங்களும் காணப்படுகின்றன. ஆனால் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

(எ-டு)     செய்த     - பெயரெச்சம்

வழுத்தி     - வினையெச்சம்

வினைமுற்றுகள்

எச்ச வடிவங்களோடு ஆண்பால் ஒருமையைக் காட்டும் அன், உயர்திணைப் பன்மையைக் காட்டும் ஆர் அல்லது ஓர் ஆகிய விகுதிகள் சேர்வதால் வினைமுற்றுகள் உருவாகின்றன.

(எ-டு) செய்து (அல்லது) செய்த + ஆன் = செய்தான்

தன்வினை, பிறவினை வேறுபாடு

ஒரு வினையைத் தானே செய்தல் தன்வினை; பிறரைச் செய்வித்தல் பிறவினை. வினையடியோடு வி அல்லது பி என்னும் விகுதி சேர்வதால் பிறவினை உருவாக்கப்படுகிறது. (செய்+வி = செய்வி ; நட + பி = நடப்பி என்றாற் போல்வன) குகைக் கல்வெட்டுகளில் வினையடியோடு பி என்னும் விகுதி சேர்த்துப் பிறவினை உணர்த்தப்படுவது மிகுதியாகக் காணப்படுகிறது.

(எ.டு) கொட்டுபித்தோர்

இச்சொல்லில் கொட்டு என்பது வினையடி. இதற்குச் செதுக்கு என்று பொருள். இது தன்வினையாகும். இதனோடு பி என்னும் விகுதி சேர்க்கப்பட்டு, கொட்டுபி என்ற பிறவினை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குச் செதுக்குவி என்று பொருள். இப்பிறவினையோடு இறந்தகால இடைநிலை, உயர்திணைப் பன்மை விகுதி ஆகியன சேர்க்கப்பட்டு, (கொட்டுபி+த்த்+ஓர்) கொட்டுபித்தோர் (செதுக்குவித்தோர்) என்ற வினையாலணையும் பெயர் உருவாக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

1.4.3 பிற மொழிச்சொல் கலப்பு பிராகிருத மொழிச் சொற்களும் வடமொழிச் சொற்களும் குகைக் கல்வெட்டுகளில் கலந்துள்ளன. வடமொழிச் சொற்கள் பிராகிருத வடிவத்தில் வந்து வழங்குகின்றன. இச்சொற்கள் அஃறிணையாயின் மகர இறுதியையும், உயர்திணை ஆண்பாலாயின் னகர இறுதியையும் பலர்பாலாயின் ரகர இறுதியையும் பெறுகின்றன.

காஞ்சன               காஞ்சணம்       (இருக்கை)

குடும்பிக              குடும்பிகன்      (இல்லறத்தான்)

உபாஸக              உபாசஅன்         (பக்தன்)

தர்ம                        தம்மம்                (அறம்)

நிகம                       நிகமம்                (நகரம் அல்லது வணிகக் குழு)

ஸ்யாலாக          சாலகன்             (மனைவியின் உடன்பிறந்தாள் கணவன் இச்சொல் இக்காலத்தில்  சகலை என வழங்குகிறது)

1.5 தொடரியல்

குகைக் கல்வெட்டுகளில் சொற்றொடர் அல்லது வாக்கிய அமைப்பு தமிழ் இலக்கண முறைப்படி அமைந்துள்ளது. எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே உள்ள இயைபு (Concord), சொற்களின் வரன்முறை (Word Order) குறித்துத் தொல்காப்பியர் கூறும் விதிகளின்படி வாக்கிய அமைப்புக் காணப்படுகிறது. மேலும் மொழிநூலார் வாக்கிய வகைகளில் ஒன்றாகக் குறிப்பிடும் பெயர்த் தொடர் வாக்கியங்களும் (Substantive Sentences) காணப்படுகின்றன.

1.5.1 இயைபு எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே திணை, பால், எண், இடம் ஆகியவற்றில் இயைபு இருக்க வேண்டும் என்பர் தொல்காப்பியர். எழுவாய் என்ன திணை, பால், எண், இடம் காட்டுகிறதோ, அவற்றையே அது கொண்டு முடியும் பயனிலையும் காட்ட வேண்டும். இம்முறைப்படி வாக்கியங்கள் அமைந்திருப்பதைக் குகைக் கல்வெட்டுகளில் காணலாம்.

(எ.டு)     ஆரிதன் கொட்டுபித்தோன்     (ஆரிதன் செதுக்குவித்தான்)

நிகமத்தோர் கொட்டிஓர்           (வணிகர் செதுக்கினர்)

1.5.2 சொற்கள் வரன்முறை வாக்கியத்தில் சொற்கள் எம்முறையில் தொடர்ந்து நிற்க வேண்டும் என்பது பற்றித் தொல்காப்பியர் பல விதிகள் கூறியுள்ளார். குகைக் கல்வெட்டுகளில் காணப்படும் வாக்கியங்கள் தொல்காப்பிய விதிகளுக்கு ஒப்ப அமைந்துள்ளன.

சிறப்புப் பெயரும் இயற்பெயரும்

ஒருவர்க்கு இயற்பெயரோடு சிறப்புப் பெயர் இருக்குமாயின் அவ்விரண்டையும் சேர்த்து வாக்கியத்தில் கூறும்போது சிறப்புப் பெயரை முன்னும் இயற்பெயரைப் பின்னும் கூற வேண்டும்.

(எ.டு)     கணியன் இயக்குவன்

வேண் கோசிபன்

உபாசன் போத்தன்

இடப் பெயர்களும் இயற்பெயரும்

ஊர், நகரம், நாடு பற்றிய இடப் பெயர்களும் இயற்பெயருக்கு முன்னர் வர வேண்டும். வெள்ளடை, பாகனூர், எருக்கோட்டூர், எவோமி நாடு, தெங்கு (நாடு), ஈழம், குன்றத்தூர், மதுரை, குமட்டூர் போன்ற இடப் பெயர்கள் பலவும் குகைக் கல்வெட்டுகளில் உள்ளன. இவை இயற்பெயருக்கு முன்னர் அடையாக வரக் காணலாம்.

(எ.டு)     எருக்கோட்டூர் ஈழக் குடும்பிகன்

பாகனூர் போதாதன்

1.5.3 பெயர்த் தொடர் வாக்கியங்கள் குகைக் கல்வெட்டுகளில் உள்ள வாக்கியங்கள் கருத்து (Topic), கருத்து விளக்கம் (Comment) என்ற அமைப்பில் உள்ள பெயர்த்தன்மை கொண்ட வாக்கியங்களாகும் என்று தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் குறிப்பிடுகிறார். (தமிழ்மொழி வரலாறு, ப.65.) இவ்வாக்கியங்களில் வழக்கமாக எழுவாய் குகையை வெட்டியவர் யார் அல்லது அதைத் தானமாக வழங்கியவர் யார் என்பதைக் குறிப்பிடும். பயனிலை கொட்டியோர் அல்லது கொட்டுவித்தோர் என்பதைத் தெரிவிக்கும்.

(எ.டு) ஆரிதன் கொட்டுபித்தோன்

1.5.4 மாதிரி வாக்கியம் குகைக் கல்வெட்டு மொழியின் வாக்கிய அமைப்பை விளங்கிக் கொள்வதற்கு மாதிரி வாக்கியம் ஒன்றைக் காண்போம்.

வேண் கோசிபன்

கொட்டுபித்த கல் காஞ்சணம்

இவ்வாக்கியத்தில் வரும் வேண் என்பது குறுநிலத் தலைவர் குழுவின் பெயர். கோசிபன் என்பது காசியப என்ற வடமொழிப் பெயர்ச் சொல்லின் தமிழாக்க வடிவம். கொட்டுபித்த என்பது பிறவினைப் பெயரெச்சம். காஞ்சணம் என்பது பெயர்ப் பயனிலை (காஞ்சணம் – இருக்கை) கல் என்பது அதன் அடைமொழியாகிறது. எனவே இவ்வாக்கியத்தின் பொருள்,

இது வேண் வகுப்பைச் சேர்ந்த

கோசிபன் என்பவனால் கொட்டுவிக்கப்பட்ட

கல்லால் ஆகிய இருக்கை

என்பதாகும்.

1.6 தொகுப்புரை

குகைக் கல்வெட்டுகள் பழங்காலத் தமிழ்மொழி வரலாற்றை அறிய உதவும் தலைசிறந்த சான்றாக விளங்குகின்றன. பழங்காலத்தில் இந்தியா முழுவதிலும் பேசப்பட்ட பல்வேறு மொழிகளுக்கும் பிராமி என்ற ஒரே எழுத்து வடிவமே வழக்கில் இருந்தது. வட இந்தியாவில் வழங்கிய வடபிராமிக்கும் தமிழ்நாட்டில் குகைக் கல்வெட்டுகளில் வழங்கிய தென்பிராமிக்கும் இடையே வரி வடிவிலும் ஒலியமைப்பிலும் வேறுபாடுகள் உள்ளன. குகைக் கல்வெட்டுகள் பண்டைத் தமிழின் ஒலி, சொல், தொடர் ஆகியவற்றின் அமைப்பை அறிந்து கொள்ள மிகவும் உதவி புரிகின்றன. பழங்காலத் தமிழில் பிறமொழிச் சொற்கள் கலக்கும்போது, அச்சொற்கள் தமிழ்மொழியின் ஒலியமைப்பிற்கு ஏற்ப மாற்றியே ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் குகைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. பழங்காலத்தில் தமிழ் மக்கள் பேசிய பேச்சுத் தமிழின் போக்கை ஓரளவு அறிந்து கொள்ளக் குகைக் கல்வெட்டுகள் மட்டுமே உதவுகின்றன.

பாடம் - 2

தொல்காப்பியர் காலத் தமிழ் - ஒலியனியல்

2.1 தொல்காப்பியமும், ஒலியனியலும்

ஒரு மொழியில் உள்ள ஒலிகளைப் பலவாறு பகுத்து ஆராய்வதே ஒலியியல் அல்லது ஒலியனியல் எனப்படும். இக்கால மொழி நூலார் ஒரு மொழியின் ஒலியியலை ஆராயும்போது, அந்த மொழியில் உள்ள ஒலிகளின் எண்ணிக்கை, அவற்றின் பாகுபாடு, அமைப்பு, ஒலிப்பு முறை ஆகியவை பற்றி விளக்கிக் காட்டுகின்றனர். அவர்கள் மொழியின் பேச்சு ஒலி அமைப்பையே முக்கியமாகக் கொண்டு ஆராய்கின்றனர்.

ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியர், ஓசை, ஒலி, ஒலிப்பு முயற்சிகள் தொடர்பான அறிவியல் வளராத அப்பழங்காலத்தில், ஒலிகளின் ஒலிப்பு முறையை விளக்குவதற்காகவே எழுத்ததிகாரத்தில் பிறப்பியல் எனத் தனி இயல் ஒன்றை வகுத்துள்ளார். மேலும் தமிழ் ஒலிகளின் எண்ணிக்கை, அவற்றின் பாகுபாடு, அவை சொற்களுக்கு முதலிலும், இடையிலும், இறுதியிலும் வருகின்ற முறை ஆகியவை பற்றியும் விரிவாக விளக்கிக் காட்டியுள்ளார். இங்கு அவற்றை வரன்முறையாகத் தொகுத்துக் காண்போம்.

2.2 ஒலிகளின் பாகுபாடு

தொல்காப்பியர், தமிழ் ஒலிகளை (எழுத்துகளை) முப்பது என வரையறுத்துக் கூறுகிறார். அவை அகரம் முதல் னகரம் இறுதியாக அமைந்தவை என அவற்றின் முறை வைப்புப் பற்றியும் கூறுகிறார். இவையே அன்றிச் சார்ந்து வரும் இயல்பினை உடைய வேறு மூன்று எழுத்துகளும் உண்டு என்று கூறுகிறார். அவை குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்பன. உயிரும் மெய்யும் ஆகிய முப்பதும் முதல்எழுத்து எனவும், சார்ந்து வரும் மூன்றும் சார்பெழுத்து எனவும் பின்னர் வழங்கப்பட்டன.

2.2.1 உயிரொலிகள் அகரம் முதல் ஒளகாரம் இறுதியாக உள்ள பன்னிரண்டும் உயிரொலிகள். இவ்வொலிகள், அவற்றை உச்சரிப்பதற்கு ஆகும் கால அளவாகிய மாத்திரையைக் கொண்டு குறில், நெடில் என இரண்டாகப் பகுக்கப்பட்டன. ஒரு மாத்திரை ஒலிக்கக் கூடிய அ, இ, உ, எ, ஒ என்பன ஐந்தும் குறில், இரண்டு மாத்திரை ஒலிக்கக் கூடிய ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஐந்தும் நெடில், இவற்றொடு ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் இரண்டையும் சேர்த்து நெடில் ஒலிகள் ஏழு எனப்பட்டன.

கூட்டொலிகள் (Diphthongs)

உயிரொலிகளில் ஐ, ஒள ஆகியவற்றிற்குப் பிற ஐந்து நெடில்களுக்கு இருப்பது போலத் தனியான குறில் இல்லை. இவற்றைக் கூட்டொலிகள் (Diphthongs) என்று மொழிநூலார் குறிப்பிடுவர்; வடமொழி இலக்கண நூலார் சந்தியக்கரம் எனக் குறிப்பிடுவர். சந்தியக்கரம் என்பதற்குக் கூட்டெழுத்து என்று பொருள்.

வடமொழியில் அ, இ என்னும் இரண்டு உயிர்களின் கூட்டொலியாக ஐகாரமும், அ, உ என்னும் இரண்டு உயிர்களின் கூட்டொலியாக ஒளகாரமும் கூறப்படுகின்றன. தொல்காப்பியர் இவ் வடமொழிக் கருத்தை உடன்பட்டு,

அகர இகம் ஐகாரம் ஆகும்

அகர உகரம் ஒளகாரம் ஆகும்

(தொல். எழுத்து. 54, 55)

என்று கூறுகிறார். ஆனால் அவர் ஐகாரம் பற்றி மற்றொரு கருத்தையும் குறிப்பிடுகிறார். அகர உயிரும் யகர மெய்யும் சேர்ந்த கூட்டொலி (அய்) ஐகாரம் என்றும் கூறுகிறார்.

எனவே தொல்காப்பியர் காலத்தில் ஐ என்ற கூட்டொலி பற்றி இருவேறு கருத்துகள் நிலவின எனலாம். இந்த இருவேறு கருத்துகளில் அகரமும் யகரமும் சேர்ந்த கூட்டொலி ஐ என்பதாகும் என்ற கருத்தே பொருந்துவதாக உள்ளது. தொல்காப்பியர் ஐகார ஈற்றுப் பெயர்கள் விளியேற்கும்போது,

ஐ ஆய் ஆகும்

(தொல். சொல். 123)

என்கிறார்.

(எ.டு) அன்னை – அன்னாய்

இங்கு, ஐ (அஇ) என்பது ஆய் என்றாகியது என்பதை விட, அய் என்பது ஆய் என்றாயிற்று என்பதே பொருத்தமாக உள்ளது.

(எ.டு) அன்னய் – அன்னாய்

தொல்காப்பியர் ஐகாரத்திற்குக் கூறியது போல, அகர உயிரும் வகர மெய்யும் சேர்ந்து ஒளகாரமாகும் என்ற மற்றொரு கருத்தைக் கூறவில்லை. சங்க இலக்கியங்களில் காணப்படும் ஒளவை, பௌவம் போன்ற சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியிருக்க இடமுண்டு, இச்சொற்களும் கீழ்க் கண்டவாறு அகரமும் வகரமுமாகச் சேர்த்து எழுத இடம் தருகின்றன.

ஒளவை     - அவ்வை

பௌவம்     - பவ்வம் (கடல்)

மேற்கூறியவற்றால் ஐ, ஒள என்பவை அய், அவ் என்பனவற்றிலிருந்து வேறானவை அல்ல என்றும், வடமொழியைப் பின்பற்றி இவற்றை இரண்டு உயிர்களின் கூட்டொலி என்று கூறுவது பொருந்தவில்லை என்றும் உணரலாம்.

உயிர் மயக்கங்கள்

தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் உயிரளபெடை என்ற ஒன்றைக் கூறுகிறார். ஒரு நெடில் உயிரும் அதற்கு இனமான குறில் உயிரும் ஆகிய இரண்டு உயிர்கள் மயங்கி வரும் மயக்கத்தையே உயிரளபெடை என அவர் கூறுகிறார். இம்மயக்கம் செய்யுளில் மட்டுமே நிகழும். செய்யுளில் இசை நீட்டம் வேண்டும் போது, இரண்டு மாத்திரை உடைய நெடில் உயிரானது அம்மாத்திரையைவிட நீண்டு ஒலிக்கும். அப்போது அந்த நெடிலின் இனமான குறில் உயிர் அதனை அடுத்து எழுதப்படும்.

(எ.டு) ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஓஒ

மேற்கூறிய உயிர் மயக்கங்கள் தவிரத் தொல்காப்பியர் காலத்தில் வேறு வகையாகச் சொற்களில் இரண்டு உயிர்கள் சேர்ந்து வருவது பெரும்பாலும் இல்லை. அவ்வாறு இரண்டு உயிர்கள் சேர்ந்து வரும்போது, அவற்றிற்கு இடையே விட்டிசை தோன்றும். இவ்விட்டிசையைத் தடுக்க யகரம், வகரம் என்னும் உடம்படுமெய் இடையே தோன்றும்.

(எ.டு)

மணி + அழகு = மணியழகு ;     பல + அரசர் = பலவரசர்.

(மணி+ய்+அழகு)                           (பல+வ்+அரசர்)

விட்டிசை = இரண்டு உயிர் எழுத்துகள் அடுத்தடுத்து நிற்கும் போது அவற்றுக்கிடையே தோன்றும் ஒலித்தடை. அஆ என்பதை ஒலித்துப் பார்த்தால் இத்தடையை உணரலாம்.

2.2.2 மெய்யொலிகள் ககரம் முதல் னகரம் இறுதியாக உள்ள பதினெட்டும் மெய்யொலிகள். இவை ஒவ்வொன்றும் அரை மாத்திரை ஒலியளவு பெறும். இவற்றைத் தொல்காப்பியர் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகையாகப் பாகுபாடு செய்கிறார். இக்கால மொழி நூலார் வல்லினத்தை வெடிப்பொலிகள் (Plosives) என்றும் மெல்லினத்தை மூக்கொலிகள் (Nasals) என்றும் இடையினத்தை இடையின ஒலிகள் என்றும் குறிப்பிடுவர்.

வல்லினம்        - க, ச, ட, த, ப, ற

மெல்லினம்     - ங, ஞ, ண, ந, ம, ன

இடையினம்    – ய, ர, ல, வ, ழ, ள

இதுவரை முதலெழுத்துகளாகிய உயிரும் மெய்யும் பற்றிப் பார்த்தோம். இனி, தொல்காப்பியர் காலத் தமிழில் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்று சார்பெழுத்துகள் எவ்வாறு வழங்கின என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

2.2.3 குற்றியலிகரம் இருத்தல் – இச்சொல்லில் உள்ள இகரம் முழுமையான, ஒரு மாத்திரையுடைய இகர உயிர் ஆகும். நாடு + யாது – நாடியாது என்பதில் உள்ள இகரத்தை ஒலித்துப் பாருங்கள். அத்துடன் கேள் + மியா – கேண்மியா, செல் + மியா – சென்மியா எனும் புணர்மொழிகளில் வரும் இகரத்தையும் ஒலித்துப் பாருங்கள். இவற்றில் இகரம் குறைந்து ஒலிப்பதை உணரலாம். இதுவே குற்றியலிகரம் ஆகும். இது அரைமாத்திரை பெறுவது.

நிலைமொழி ஈற்றில் உள்ள குற்றியலுகரத்தின் முன், வருமொழி முதலில் யகரம் வரும்போது குற்றியலுகரம் இகரமாய்த் திரிபடைகிறது. கேள், செல் எனும் சொற்களுடன் மியா எனும் அசைச்சொல் புணரும்போது அவ்வசைச் சொல்லில் உள்ள இகரமும் குறுகுகிறது என்பதனை மேற்கண்ட எடுத்துக் காட்டுகளிலிருந்து உணர்கிறோம்.

2.2.4 குற்றியலுகரம் இதனை மொழி இறுதிக் குற்றியலுகரம், மொழி முதல் குற்றியலுகரம் என இரு வகைப்படுத்தி விளக்குகிறார் தொல்காப்பியர்.

மொழி இறுதிக் குற்றியலுகரம்

தனி நெட்டெழுத்தைத் தொடர்ந்தோ, உயிரெழுத்து, இடையின எழுத்து, ஆய்த எழுத்து, வல்லின எழுத்து, மெல்லின எழுத்து ஆகிய ஐவகை எழுத்துகளைத் தொடர்ந்தோ வரும் ஒரு சொல்லின் இறுதியில் க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறு வல்லின மெய்களின் மேல் ஏறி வரும் உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறுகி அரை மாத்திரையாய் ஒலிக்கும். இதுவே தொல்காப்பியர் குற்றியலுகரத்திற்குக் கூறும் இலக்கணம்.

(எ.டு) நாடு, முரசு, மாரபு, எஃகு, கொக்கு, பந்து

தனிக்குறிலை அடுத்த வல்லின மெய்யின் மேல் ஏறிவரும் உகரம் குறுகவில்லை. எனவே அது முற்றியலுகரம் எனப்படும்.

(எ.டு) கடு, தபு.

மொழி முதல் குற்றியலுகரம்

மொழிக்கு முதலிலும் குற்றியலுகரம் வரும் என்று தொல்காப்பியர் கூறுகிறார். இது அவர் காலத் தமிழின் ஒலியமைப்பில் குறிப்பிடத்தக்க இயல்பாகும். மொழி முதலில் குற்றியலுகரம் வருவது நுந்தை (உன் தந்தை) என்ற ஒரு சொல்லில் மட்டுமே என்கிறார் தொல்காப்பியர். (தொல். எழுத்து. 67). இச்சொல்லில் மொழி முதலில் வரும் மெல்லின நகர மெய்யின் மேல் ஏறி வரும் உகரம், அடுத்து வரும் மற்றொரு நகர மெய்யின் ஒலிச் சார்பால் இசைமை குறைந்து குற்றியலுகரமாக ஒலிக்கிறது. பின் வந்த நன்னூலில் மொழிமுதல் குற்றியலுகரம் கூறப்படவில்லை.

குற்றியலுகரம் பற்றிய மொழியியல் கருத்து

வல்லின மெய்கள் சொற்களின் இறுதியில் வந்தால் அவற்றை ஒலிப்பது கடினம். காட், அஃத், பஞ்ச், மார்ப் என்பவற்றை எளிமையாக உச்சரிக்க முடியுமா? இவற்றின் இறுதியில் குற்றியலுகரம் வரும்போது காடு, அஃது, பஞ்சு, மார்பு எனச் சொற்களை ஒலிப்பது எளிமையாக உள்ளது. இவ்வாறு ஒலிப்பு முயற்சி எளிமைக்காகக் குற்றியலுகரம் பயன்படுகிறது என்பது மொழிநூலார் கருத்து (டாக்டர்.மு.வ.மொழிநூல், பக்.24)

இவ்வாறு உகரமானது சொல்லின் இறுதியில் வல்லின மெய்களைச் சார்ந்து நின்று அவற்றை ஒலிப்பதை எளிமையாக்குகிறது. அத்தோடு அல்லாமல் தானும் இசைமையில் நலிவடைந்து குற்றியலுகரமாகி விடுகிறது. இது தொல்காப்பியர் காலத் தமிழின் ஒலியமைப்பில் குறிப்பிடத்தக்க ஓர் இயல்பு எனலாம்.

2.2.5 ஆய்தம் தொல்காப்பியர் கூறும் மூன்றாவது சார்பொலி ஆய்தம். இது தற்காலத் தமிழ் நெடுங் கணக்கில் உயிர் எழுத்துகளின் வரிசைக்கும், மெய் எழுத்துகளின் வரிசைக்கும் நடுவில் உள்ளது. தொல்காப்பியர் காலத்தில் ஆய்தம் ஒரு நுண்ணிய ஒலியாக வழங்கியுள்ளது. ஆய் என்ற சொல்லுக்கு நுண்மை என்று பொருள் கூறுகிறார் தொல்காப்பியர். (தொல். உரியியல்) எனவே ஆய்தத்தை அவர் ஒரு நுண்ணிய ஒலியாகவே கருதியிருக்கிறார் என்று கூறலாம்.

வடமொழியில் நுட்பமான ஒலி ஹ என்று கூறப்படுகிறது. அதைக் காட்டிலும் மிக நுட்பமான ஒலியைத் தமிழில் தரவல்லது ஆய்தம் என்று டாக்டர் மு. வரதராசனார் குறிப்பிடுகிறார். (மொழி நூல், ப. 55).

தொல்காப்பியர் ஆய்தத்தைத் தனிமொழி, புணர்மொழி என்ற இருவகை மொழிகளில் வைத்து விளக்குகிறார். (தனிமொழி – ஒருசொல்; புணர்மொழி – இருசொல்.)

தனிமொழி ஆய்தம்

ஆய்தம் ஒரு தனிக்குறிலுக்கும் வல்லின உயிர்மெய்க்கும் நடுவே வரும்.

(எ.டு) எஃகு, கஃசு, பஃது, அஃகு

(எஃகு – ஒரு வகை உலோகம் ; கஃசு – கால் பலம் கொண்ட எடையளவு ; பஃது – பத்து, அஃகு – சுருங்கு)

இச்சொற்களில் தனிக்குறிலின் முன்னர் வரும் ஆய்தம், தனது நுண்ணிய ஒலியால் தன்னை அடுத்து வரும் வன்மையான ஓசையுடைய வல்லின எழுத்துகளை உரசொலிகளாக (Fricatives) மாற்றி விடுகின்றது என்று மொழிநூலார் கூறுகின்றனர். உரசொலி என்றால் என்ன என்பதைக் காண்போம்.

கீழ்க்காணும் எடுத்துக் காட்டுகளில் ககரம் எவ்வாறு ஒலிக்கிறது எனப் பாருங்கள்.

கடல்     - k ஒலி

தங்கம்     - g ஒலி

அகம்     - h ஒலி

இம்மூன்றில் இரு உயிர் ஒலிகளுக்கு நடுவே (அ+க்+அ+ம்) வரும் ககரம் நுண்மையாகி h ஒலியைப் பெறுகிறது. இதுவே உரசொலி எனப்படும். ஆய்தமும் இவ்வாறே தன்னை அடுத்து வரும் வல்லின மெய்யின் வன்மையை மாற்றி மென்மையாக்கி (உரசொலியாக்கி) விடுகிறது. ஆய்தம் இடம்பெறும் சொற்களை உச்சரித்துப் பார்த்து இந்த உண்மையை நீங்களே உணரலாம்.

புணர்மொழி ஆய்தம்

தொல்காப்பியர் புணர்மொழி ஆய்தம் பற்றி இரு விதிகளைத் தந்துள்ளார்.

1) வகர மெய்யில் முடியும் அவ், இவ், உவ் என்ற மூன்று சுட்டுச் சொற்களின் முன்னர் வல்லினம் வரும் பொழுது, வகரமெய் ஆய்தமாகத் திரியும். (தொல். எழுத்து. 379)

(எ.டு) அவ் + கடிய = அஃகடிய

2) தனிக்குறிலை அடுத்து ல், ள் என்று முடியும் சொற்களுக்கு முன்னர் வல்லின மெய்களை முதலாகக் கொண்ட சொற்கள் வந்தால், ல் என்பது ற் என்றும், ள் என்பது ட் என்றும் திரியும். இவ்வாறு திரிவதோடன்றி, ல், ள் ஆகிய இரண்டும் ஆய்தமாகவும் திரியும் (தொல். எழுத்து. 369, 399)

(எ.டு)     கல் + தீது      = கற்றீது, கஃறீது

முள் + தீது     = முட்டீது, முஃடீது

மேலும் தொல்காப்பியர் காலத் தமிழில், குறில் எழுத்தை அடுத்துக் கான் என்னும் எழுத்துச் சாரியை வரும்போது இடையே ஆய்தம் தோன்றி வழங்கியுள்ளது. இவ்வழக்கைத் தொல்காப்பியத்திலேயே காணலாம். ம + கான் = மஃகான். (தொல். எழுத்து. 28)

மேற்கூறியவற்றால் தொல்காப்பியர் காலத் தமிழில் சார்பொலிகள் மூன்றும், குறிப்பாகக் குற்றியலுகரமும் ஆய்தமும் ஒலித்தற்குக் கடினமான வல்லின ஒலிகளை, மிகவும் எளிமையாக ஒலித்தல் பொருட்டே வழங்கியுள்ளன என்பது தெளிவாகிறது.

2.3 ஒலிகளின் ஒலிப்பு முறை

தமிழில் உள்ள உயிரொலிகள், மெய்யொலிகள், சார்பொலிகள் ஆகியவற்றை எவ்வாறு ஒலிக்க வேண்டும் அல்லது உச்சரிக்க வேண்டும் என்பது பற்றித் தொல்காப்பியர் விரிவாக விளக்கிக் காட்டுகிறார். இதற்கெனவே அவர் எழுத்ததிகாரத்தில் பிறப்பியல் என்ற தனி இயல் ஒன்றை ஆக்கியுள்ளார். இவ்வியலில் அவர் கூறியுள்ள கருத்துகளில் பெரும்பாலானவை இன்றைய மொழி நூலார்க்கு உடன்பாடாக இருக்கின்றன.

இக்கால மொழி நூலார் ஒலியியலில் ஒலிப்பான்களையும் (Articulators) ஒலிப்பு முனைகளையும் (Point of articulation) ஒலிப்பு முறைகளையும் (Manners of articulation) அடிப்படையாகக் கொண்டு ஒலிகளின் உச்சரிப்பு முறையை விளக்குவர்.

தொல்காப்பியரும் பிறப்பியலில் இதே போலத் தமிழ் எழுத்துகளின் ஒலிப்பு முறை பற்றிக் கூறியுள்ளார். அவர் குறிப்பிடும் நா, இதழ் ஆகிய இரண்டும் இயங்கும் உறுப்புகள். இவை ஒலிப்பான்கள் ஆகும். இவ்வுறுப்புகள் தொடுகின்ற பல், அண்ணம் ஆகிய இரண்டும் இயங்கா உறுப்புகள். இவை ஒலிப்பு முனைகள் ஆகும். அங்காத்தல் (வாயைத் திறத்தல்), உதடு குவிதல், நாக்கு ஒற்றல், நாக்கு வருடல், உதடு இயைதல் முதலியன அவர் கூறும் ஒலிப்பு முறைகள் ஆகும்.

2.3.1 ஒலிகளின் பொதுப்பிறப்பு உந்தியின் அடியாகத் தோன்றி எழுகின்ற காற்றானது தலை, மிடறு, நெஞ்சு என்னும் மூன்று இடங்களில் நிலைபெறும். இவ்வாறு நிலைபெறும் காற்று, பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் ஆகிய ஐந்து உறுப்புகளைப் பொருந்தி அமையும். வெவ்வேறு உறுப்புகள் ஒன்றோடு ஒன்று பொருந்தி அமைதலால் எழுத்துகள் வேறு வேறு வகையாகப் பிறக்கின்றன என்கிறார் தொல்காப்பியர்.

இங்கு ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். உந்தியின் அடியாகத் தோன்றி எழுகின்ற காற்று என்பதற்கு உந்தியால் (உதரவிதானத்தால்) உந்தித் தள்ளப்பட்டு நுரையீரலிலிருந்து வெளியேறும் காற்று எனப் பொருள் கொள்ள வேண்டும். இதுவே இக்கால அறிவியல், மொழியியல் உண்மைகளுக்குப் பொருந்துவது ஆகும்.

(உந்தி = நெஞ்சின் அடியே உள்ள வயிற்றுப் பகுதி (Diaphragm) இதனை உதரவிதானம் என்று கூறுவர்; மிடறு = தொண்டைப் பகுதியில் உள்ள குரல் வளை; அண்ணம் = மேல்வாய்; நெஞ்சு = நுரையீரல் (Lungs); தலை = பல், இதழ், நாக்கு, அண்ணம், மூக்கு ஆகிய உறுப்புகள் உள்ள பகுதி. (Buccal Cavity))

காற்று நுரையீரலில் (நெஞ்சில்) இருக்கும் போது அங்கே உயிர்க்கப்படுகிறது. உயிர்க்கப்பட்ட காற்று, தொண்டைப் பகுதியில் உள்ள குரல்வளை மடல்கள் (Vocal Cords) வழியே வரும் போது ஓசையாக (sound) மாறுகிறது ; தலைப்பகுதியில் உள்ள பல், நா, இதழ், அண்ணம் ஆகிய நான்கு ஒலியுறுப்புகளைக் கொண்ட வாய் வழியாகவும் மற்றும் மூக்கு வழியாகவும் வரும் போது எழுத்தொலியாக (Phone) மாறுகின்றது.

காற்று வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் வரும் போது இதழ், நா ஆகிய உறுப்புகள் தம்முள் இயங்கியும், பல், அண்ணம் ஆகியவற்றைப் பொருந்தியும் வெவ்வேறு வகையாகச் செயல்படுவதால் வெவ்வேறு ஒலிகள் பிறக்கின்றன.

2.3.2 உயிரொலிகளின் பிறப்பு ‘பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மிடற்றின்கண் பிறந்த காற்றால் ஒலிக்கும்’ என்கிறார் தொல்காப்பியர். மொழியியலார் இக்கருத்தை உடன்படுகின்றனர். மொழியியலார் ஆபர்கிராம்பி, உயிர் எழுத்துகளின் தன்மையைக் குறிப்பிடும்போது, “இவை உள்ளே இருந்து மிடற்று வழியாக வரும் காற்று, எந்த விதமான தடையுமின்றி வாயின் வழியாக வெளிப்படுவதால் பிறக்கின்ற தன்மையைக் கொண்டவை” என்கிறார். (Abercrombie, Elements of General Phonetics, p. 39.)

இக்கால மொழி நூலார் தமிழில் உள்ள உயிரொலிகளை அவற்றின் ஒலிப்புமுறை நோக்கி மூவகையாகப் பிரித்துள்ளனர். அவை வருமாறு:

இ, ஈ, எ, ஏ          – முன் உயிர்     (Front Vowels)

அ, ஆ                    – நடு உயிர்         (Central Vowels)

உ, ஊ, ஒ, ஓ     - பின் உயிர்       (Back Vowels)

இப்பாகுபாடு இவ்வெழுத்துகள் பிறக்கும்போது நாக்கு முறையே முன்னும், நடுவிலும், பின்னும் இருக்கும் நிலையை ஒட்டிச் செய்யப்பட்டது.

(ஐ, ஒள என்பன கூட்டொலிகள் ஆதலால் அவற்றை மொழி நூலார் குறிப்பிடவில்லை). தொல்காப்பியரும் மிகப் பழங்காலத்தில் உயிரொலிகளை மூவகையாகப் பிரித்துப் பிறப்பிலக்கணம் கூறியுள்ளார்.

அ, ஆ : வாயை அங்காந்து கூறும் முயற்சியால் பிறக்கும்.

இ,ஈ,எ,ஏ,ஐ : வாயை அங்காந்து கூறும் முயற்சியோடன்றி, மேல்வாய்ப் பல்லின் அடியை நாவிளிம்பு பொருந்தப் பிறக்கும்.

உ, ஊ, ஒ, ஓ, ஒள : இதழ் குவி முயற்சியால் பிறக்கும்.

இப்பாகுபாடு ஒலியுறுப்புகளின் முயற்சி அடிப்படையில் செய்யப்பட்டது. ஆயினும் நாம் இங்குக் கவனிக்க வேண்டியது, தொல்காப்பியர் பகுத்துக் காட்டிய அதே ஒலிகளையே மொழியியலாரும் பகுத்துக் காட்டியுள்ளனர் என்பது தான்.

2.3.3 மெய்யொலிகளின் பிறப்பு உள்ளே இருந்து வரும் காற்று வாய்வழியாகச் செல்லும்போது எங்கேயாவது ஓர் இடத்தில் நா, இதழ் ஆகிய ஒலிப்பான்களால் தடைப்படுத்தப்படுவதால் பிறக்கும் ஒலிகளே மெய்யொலிகள் ஆகும்.

வல்லின மெல்லின ஒலிகளின் பிறப்பு

தொல்காப்பியர் ஒவ்வொரு வல்லின எழுத்தையும், அதற்கு இனமான மெல்லின எழுத்தையும் சேர்த்து இரண்டு எழுத்துகளுக்கும் ஒரே பிறப்பு முறை கூறுகிறார். இடையின எழுத்துகளுக்குத் தனியே பிறப்பு முறை கூறுகிறார்.

க, ங :         முதல் நாவும் முதல் அண்ணமும் பொருந்தப் பிறக்கும்.

ச, ஞ :         இடை நாவும் இடை அண்ணமும் பொருந்தப் பிறக்கும்.

ட, ண :       நுனி நாவும் நுனி அண்ணமும் பொருந்தப் பிறக்கும்.

த, ந :           மேல்வாய்ப் பல்லின் அடியில் நா நுனி பரவிச் சென்று பொருந்தப் பிறக்கும்.

ப, ம :          மேல் இதழும் கீழ் இதழும் பொருந்தப் பிறக்கும்.

ற, ன :         நாவின் நுனி சிறிது வளைந்து மேல் நோக்கிச் சென்று அண்ணத்தைப் பொருந்தப் பிறக்கும்.

இவ்வாறு ஒரு வல்லின எழுத்துப் பிறக்கும் இடத்திலேயே அதற்கு இனமான மெல்லின எழுத்தும் பிறக்கிறது. இரண்டு எழுத்துகளுக்கும் பிறப்பு முயற்சியும் ஒன்றே. அவ்வாறாயின் ஒன்றை வல்லினம் என்றும், மற்றொன்றை மெல்லினம் என்றும் தொல்காப்பியர் வேறுபடுத்திப் பாகுபாடு செய்தது ஏன்? வல்லின ஒலிகளை ஒலிக்கும்போது காற்று வாய் வழியாக மட்டுமே வருகிறது. ஆனால் மெல்லின ஒலிகளை ஒலிக்கும் போது காற்று வாய் வழியாக வருவதோடன்றி, மூக்கின் வழியாகவும் வருகிறது; ஒலிகள் மென்மையாகிவிடுகின்றன. இதனாலேயே மொழிநூலார் இவற்றை மூக்கொலிகள் என்று அழைக்கின்றனர்.

இடையின ஒலிகளின் பிறப்பு

ய            :      அண்ணத்தை நாக்குச் சேரும்போது, மிடற்றிலிருந்து எழுந்த காற்றின் ஓசை, அவ்வண்ணத்தை   அணைந்து செறிவதால் பிறக்கும்.

ர, ழ       :      நுனி நா மேல் நோக்கிச் சென்று அண்ணத்தை வருடப் பிறக்கும்.

வ           :     மேல்பல்லும் கீழ் இதழும் பொருந்தப் பிறக்கும்.

ல, ள     :      நா விளிம்பு வீங்கி மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்த லகரமும், வருட ளகரமும் பிறக்கும்.

2.3.4 சார்பொலிகளின் பிறப்பு குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்ற சார்பொலிகள் மூன்றும் முதலெழுத்துகளைச் சார்ந்தே வரும். அவை தாமே தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாதவை. இவை மூன்றும் முதலெழுத்துகளில் எந்த மெய்யெழுத்துகளைச் சார்ந்து வருகின்றனவோ அவை பிறக்கும் இடத்திலேயே பிறக்கும் என்கிறார் தொல்காப்பியர். இம் மூன்று சார்பொலிகளும் பெரும்பாலும் வல்லின ஒலிகளைச் சார்ந்து வழங்குவதால் அவை பிறக்குமிடத்திலேயே பிறக்கும் என்பது தொல்காப்பியர் கருத்து எனலாம்.

2.4 ஒலிகளின் வரி வடிவம்

தமிழில் உள்ள ஒலிகளை எழுத்து என்ற சொல்லால் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இச்சொல் ஒலியைக் குறிக்கிறதா? அல்லது வரி வடிவத்தைக் குறிக்கிறதா? இன்று எழுத்து என்பது வரி வடிவத்தையே பெரும்பாலும் குறிக்கிறது. எழுதப்படுவது எழுத்து எனச் சிலர் கொள்கின்றனர். ஆனால் தொல்காப்பியர் எழுப்பப்படுவது எழுத்து எனப் பொருள் கொண்டுள்ளார். எழுப்புதல் = ஒலி எழுப்புதல், உச்சரித்தல். அளபெடை பற்றிய நூற்பாவில் எமூஉதல் என அவர் குறிப்பது ஒலியை எழுப்புதல் எனும் பொருள் தருவதாகும். இவ்வாறு எழுத்து என்பதை ஒலிவடிவத்தைக் குறிக்க அவர் பயன்படுத்தியிருந்தாலும் சில இடங்களில் எழுத்து என வரிவடித்தையும் குறிக்கிறார். தொல்காப்பியர் தம் காலத்து வரிவடித்தில் சில இயல்புகளை மட்டும் சுட்டிக் காட்டியுள்ளார்.

2.4.1 மெய்யொலிகளின் வரி வடிவம் மெய்யெழுத்துகள் புள்ளி இட்டு எழுதப்பட்டன.

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்

(தொல். எழுத்து. 15)

தொல்காப்பியர் இவ்வாறு கூறவே, அவர் காலத்துக்கு முன்பு குகைக் கல்வெட்டுகளில் மெய்யெழுத்துகள் புள்ளி இல்லாமல் எழுதப்பட்டன என்பதை முன்னைய பாடத்தில் பார்த்தோம். அதுவே தொல்காப்பியர் காலத்துக்கு முந்திய நிலை எனலாம்.

2.4.2 எகர ஒகரக் குறில்களின் வரி வடிவம் உயிரெழுத்துகளில் எகரம், ஒகரம் ஆகிய குறில்கள் இரண்டும் மெய்யெழுத்துகளைப் போலப் புள்ளி இட்டு எழுதப்பட்டன. புள்ளியில்லாத வடிவங்கள் ஏகார ஓகார நெடில்களுக்கு உரியவை.

எ், ஒ் (இவை எ, ஒ எனும் குறில்கள்)

எ, ஒ (இவை ஏ, ஓ எனும் நெடில்கள்)

18ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எகர ஒகரங்களில் இருந்த புள்ளியை நீ்க்கி, சிறு வடிவ மாற்றங்கள் செய்து இப்போதுள்ள வடிவங்களை உருவாக்கினார்.

2.4.3 மகர மெய்யின் வரி வடிவம் தொல்காப்பியர் காலத்தில் பகரத்துக்கும் மகரத்துக்கும் வடிவம் ஒரே மாதிரியாக இருந்தது. ப் என மேலே புள்ளியிட்டால் பகரம் ; உள்ளேயும் புள்ளியிட்டால் மகரம் என வேறுபடுத்தப்பட்டன.

2.4.4 உயிர்மெய் வரிவடிவம் மெய்யெழுத்துகளோடு அகர உயிர் சேரும்போது மெய்யின் புள்ளி நீங்கப் பெறும். புள்ளி நீங்கிய மெய்யின் வடிவமே அகர உயிர் சேர்ந்த உயிர்மெய்யின் வடிவமாகும் என்று தொல்காப்பியர் கூறுகிறார். நாம் தற்பொழுது, க் என்ற மெய்யோடு அகர உயிரைச் சேர்த்து உயிர்மெய்யாக எழுதும்போது, புள்ளி நீக்கிக் க என்று எழுதுகிறோம். இதைப் போலவே தொல்காப்பியர் காலத்திலும் இவ்வடிவம் எழுதப்பட்டது.

மெய்யெழுத்துகளோடு அகரம் நீங்கிய பிற பதினோர் உயிர்களும் சேரும்போது, அம்மெய்களின் வடிவம் வெவ்வேறு வகையாகத் திரித்து எழுதப்படும் என்று தொல்காப்பியர் கூறுகிறார். வெவ்வேறு வகை எவையென அவர் விரித்துக் கூறவில்லை. இன்றும் உயிர்மெய் வடிவங்களில் பல்வேறு வகை வேறுபாடுகளைக் காணலாம். (கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ)

2.4.5 சார்பொலிகளின் வரிவடிவம் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றும் புள்ளியுடன் எழுதப்பட்டன. சார்பெழுத்துகளைப் பற்றிக் கூறும்போது தொல்காப்பியர்,

அவைதாம்,

குற்றிய லிகரம் குற்றிய லுகரம்

ஆய்தம் என்ற

முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன

(தொல். எழுத்ததிகாரம், நூற்பா, 2)

என்று கூறுவதால், இவை மூன்றும் அவர் காலத்தில் புள்ளியிட்டு எழுதப்பட்டன என்பதை உணரலாம். இம் மூன்றனுள், குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஒரு புள்ளி இட்டும் ஆய்தம் மூன்று புள்ளி இட்டும் தொல்காப்பியர் காலத்தில் எழுதப்பட்டன என்று ஞா. தேவநேயப் பாவாணர் கூறுகிறார். (தொல்காப்பியம். எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியர் உரை, பின்னிணைப்பு – 1, ப. 281.)

2.5 ஒலிகளின் வருகை முறை

தொல்காப்பியர், தம்முடைய காலத்தில் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வழங்கிய சொற்களை எல்லாம் நன்கு ஆராய்ந்தார். அச்சொற்களில் எந்தெந்த எழுத்துகள் முதலில் வருகின்றன. எந்தெந்த எழுத்துகள் இறுதியில் வருகின்றன என்பனவற்றை வரையறுத்துக் கூறியுள்ளார். சொற்களுக்கு இடையில் எழுத்துகள், குறிப்பாக மெய்யெழுத்துகள் எவ்வாறு ஒன்றோடு ஒன்று மயங்கி (சேர்ந்து) வருகின்றன என்பது பற்றியும் விரிவான விதிகளைக் கூறியுள்ளார். இவ்வாறு சொல்லுக்கு முதலிலும், இறுதியிலும், இடையிலும் வரும் எழுத்துகள் பற்றி அவர் எழுத்ததிகாரத்தில் வரையறுத்துக் கூறிய விதிகள், அவர் காலத் தமிழின் ஒலியமைப்பைத் தெளிவாகக் காட்டுகின்றன.

2.5.1 மொழி முதல் எழுத்துகள் 1)  பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும்.

2)  மெய்யெழுத்துகள் தனித்து மொழிக்கு முதலில் வாரா; உயிர்களோடு சேர்ந்து உயிர் மெய்களாக   மட்டுமே மொழிக்கு முதலில் வரும்.

3)  க, த, ந, ப, ம எனும் ஐந்து மெய் எழுத்துகளும் எல்லா உயிர்களோடும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும்.

4)  சகர மெய் அ, ஐ, ஒள – என்னும் மூன்று உயிர்கள் அல்லாத பிற ஒன்பது உயிர்களோடு மட்டுமே கூடி மொழி முதலில் வரும்.

5)  வகர மெய் உ, ஊ, ஒ, ஓ – என்னும் நான்கு உயிர் நீங்கிய பிற எட்டு உயிர்களோடு கூடி மட்டுமே மொழி முதலாகும்.

6)  ஞகர மெய் ஆ, எ, ஒ – என்னும் மூன்று உயிர்களோடு கூடி மட்டுமே மொழி முதலாகும்.

(எ.டு) ஞாலம் (உலகம்) ; ஞெகிழி (கொள்ளிக்கட்டை) ; ஞொள்கிற்று (சுருங்கிற்று)

7)  யகர மெய் ஆகார உயிரோடு கூடி மட்டுமே மொழி முதலாகும்.

(எ.டு) யாடு (ஆடு) ; யாண்டு (ஆண்டு)

8)  குற்றியலுகரம் நுந்தை என்ற ஒரு சொல்லில் மட்டும் மொழி முதலாகும்.

மேற்கூறிய கருத்துகளை நோக்கின் தொல்காப்பியர் காலத்தில் 94 எழுத்துகள் மட்டுமே மொழிக்கு முதலில் வந்துள்ளன என்பது அறியப்படும். இதைக் கீழ்வரும் பட்டியல் காட்டும்.

பன்னீர் உயிர் மொழிமுதல்                                  12

க த ந ப ம x 12 உயிர்                                                  60

சகர மெய் x அ ஐ ஒள நீங்கிய 9 உயிர்                9

வகர மெய் x உ ஊ ஒ ஓ நீ்ங்கிய 8 உயிர்            8

ஞகர மெய் x ஆ எ ஒ என்னும் 3 உயிர்               3

யகர மெய் x ஆ என்னும் உயிர்                             1

மொழி முதல் குற்றியலுகரம்                               1

மொத்தம்                                                                       94

2.5.2 மொழி இறுதி எழுத்துகள் தொல்காப்பியர் மொழி இறுதியில் வரும் உயிர் எழுத்துகளையும், மெய்யெழுத்துகளையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

மொழி இறுதி உயிர்கள்

1)   ஒளகாரம் நீங்கிய பதினோர் உயிர்களும் தனித்தோ மெய்யோடு சேர்ந்தோ மொழிக்கு இறுதியில்  வரும். குறில்கள் தனித்து இறுதியில் வருவது அளபெடையில் ஆகும்.

(எ.டு) பலாஅ

எகரம் மெய்யோடு சேர்ந்து ஈற்றில் வராது. அளபெடையில் தனித்து மட்டுமே ஈறாகும்.

(எ.டு) ஏஎ

2)   ஒளகாரம் ககர, வகர மெய்களோடு சேர்ந்து மட்டும் மொழி இறுதியில் வரும்.

(எ.டு) கௌ, வௌ

3)   ஒகர உயிர் நகர மெய் ஒன்றோடு மட்டும் சேர்ந்து இறுதியில் வரும்.

(எ.டு) நொ (துன்பப்படு)

4)   உகர உயிர் சகர மெய்யோடு கூடி இரு சொற்களில் மட்டும் இறுதியாகும்.

(எ.டு) உசு (உளுந்து) ; முசு (குரங்கு)

5)   உகர உயிர் பகர மெய்யோடு சேர்ந்து ஒரு சொல்லில் மட்டும் ஈறாகும். அச்சொல் தன்வினை, பிறவினை என்னும் இரண்டு பொருளிலும் வரும்.

(எ.டு) தபு

இதனை படுத்து(தாழ்த்தி)க் கூற, நீ சா எனத் தன்வினையாகும்; எடுத்து (உயர்த்தி)க் கூற, நீ    ஒன்றினைச் சாவப் பண்ணு எனப் பிறவினையாகும்.

6)   குற்றியலுகரம் மொழி இறுதியில் வல்லின மெய்களின் மேல் வந்து இறுதியாகும்.

மொழி இறுதி மெய்கள்

1)   மெல்லின ஒலிகளில் ஙகர மெய் ஒழிந்த ஐந்தும், இடையின ஒலிகள் ஆறும் ஆகிய பதினொரு மெய்களும் மொழிக்கு இறுதியில் வரும்.

2)   நகர மெய் இரு சொற்களில் மட்டுமே இறுதியாகும்.

(எ.டு) பொருந் (பொருந்துதல்) ; வெரிந் (முதுகு)

3)   ஞகர மெய் ஒரு சொல்லில் மட்டுமே இறுதியாகும்.

(எ.டு) உரிஞ் (உராய்தல்)

4)   வகர மெய் நான்கு சொற்களில் மட்டுமே இறுதியாகும்.

(எ.டு) அவ், இவ், உவ் (இவை மூன்றும் சுட்டுப் பெயர்கள்) தெவ் (பகை)

2.5.3 மொழி இடை மெய்ம்மயக்கம் மொழி இடையில் ஒரு மெய் தன்னோடும் பிற மெய்யோடும் சேர்ந்து வருவதை மெய்ம்மயக்கம் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். க ச த ப எனும் நான்கு மெய்களும் தம்மொடு தாம் மட்டுமே மயங்கி வரும் ; பிற மெய்களோடு மயங்கி வாரா. ர, ழ எனும் இரு மெய்களும் பிற மெய்களோடு மட்டுமே மயங்கி வரும் ; தம்மோடு தாம் மயங்கி வாரா. ஏனைய பன்னிரண்டு மெய்களும் தம்மொடு தாமும், தம்மொடு பிறவுமாக மயங்கி வரும். ஆகவே தம்மொடு தாம் மயங்குவன ர ழ நீங்கிய பதினாறு மெய்களும் ஆகும். இம்மயக்கத்தைத் தொல்காப்பியர் உடனிலை எனக் குறிப்பிடுகிறார். தம்மொடு பிற வந்து மயங்குவன க ச த ப நீங்கிய பதினான்கு மெய்களும் ஆகும். இம்மயக்கத்தை மெய்ம்மயக்கு எனக் குறிப்பிடுகிறார்.

உடனிலை

ஒரு மெய்யின் முன்னர் அதே மெய் மயங்கி வருதல் உடனிலை என்பதை மேலே கண்டோம். இதை நன்னூலார் உடனிலை மெய்ம்மயக்கம் என்று குறிப்பிடுவார்.

(எ.டு)

பக்கம்     - பக்க்அம்

முந்நீர்     - முந்ந்ஈர்

பாட்டு     - பாட்ட்உ

தெவ்வர்     - தெவ்வ்அர்

மெய்ம்மயக்கு

ஒரு மெய்யின் முன்னர் அம்மெய் அல்லாத பிற மெய்கள் மயங்கி வருவது மெய்ம்மயக்கு ஆகும். இதனை நன்னூலார் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனக் குறிப்பிடுகிறார்.

(எ.டு)

மார்பு     - மார்ப்உ

வீழ்து     - வீழ்த்உ

பந்து     - பந்த்உ

அம்பு     - அம்ப்உ

காட்சி     - காட்ச்இ

மேலே கூறப்பட்டவை இரண்டு மெய்களின் மயக்கம் பற்றியாகும். மொழி இடையில் மூன்று மெய்கள் அடுத்தடுத்துச் சேர்ந்து வருவதையும் தொல்காப்பியர் எடுத்துக் காட்டுகிறார்.

மூன்று மெய்களின் மயக்கம்

ய, ர, ழ ஆகிய மூன்று மெய்களின் முன்னர், க, ச, த, ப ஆகிய நான்கு மெய்கள் இரட்டித்து வரும்.

வாய்ப்பு     - (ய்ப்ப்)

தேர்ச்சி     - (ர்ச்ச்)

வாழ்க்கை     - (ழ்க்க்)

வாழ்த்து     - (ழ்த்த்)

ங, ஞ, ந, ம ஆகிய நான்கு மெய்கள் இரட்டித்தும், தமக்கு இனமான வல்லின மெய்களாகிய க, ச, த, ப ஆகிய நான்கோடு முறையே சேர்ந்தும் வரும்.

மெய்ம்மை     (ய்ம்ம்)

வீழ்ந்தது     (ழ்ந்த்)

இதுகாறும் தொல்காப்பியர் தமிழ் எழுத்துகளின் மொழி முதல், இடை, இறுதி வருகை முறை பற்றிக் கூறியவற்றைப் பார்த்தோம். இவ்விதிகள், தமிழ் மொழியின் அமைப்பை அவர் காலத்திற்குப் பின்பும் பன்னெடுங் காலமாகச் சிதைந்து விடாது காத்து வந்துள்ளன. தமிழில் பிறமொழிச் சொற்கள், குறிப்பாக வடமொழிச் சொற்கள் வந்து கலக்கும்போது அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள இவ்விதிகள் இடம் தரவில்லை. சான்றாக, க, ச, த, ப ஆகிய மெய்களை அடுத்து அம்மெய்களே வரவேண்டும்; பிற மெய்கள் வருதல் கூடாது என்பது தொல்காப்பியர் வரையறுத்துக் கூறிய விதி. ஆனால் தொல்காப்பியர் காலத்திற்குப் பின்பு சங்க காலம் தொட்டுத் தோன்றிய பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் வாக்யம், அக்ரமம், சுக்லம், வச்ரம், வாத்யம் போன்ற வடமொழிச் சொற்கள் வந்து கலந்தன. இச்சொற்களின் இடையில் க்ய், க்ர், க்ல், ச்ர், த்ய் என்ற மெய்ம்மயக்கங்கள் காணப்படுகின்றன. இவை தொல்காப்பியரின் விதிக்குப் புறம்பானவை. எனவே இச்சொற்கள் அவ்விலக்கியங்களில் தொல்காப்பியர் கூறிய தமிழ் ஒலியமைப்பிற்கு ஏற்பக் கீழ்க் கண்டவாறு மாற்றி ஏற்றிக் கொள்ளப்பட்டன.

அக்ரமம்      – அக்கிரமம்         இவற்றில் தமிழில் வரக்கூடாத மெய்க்கூட்டுகளின் இடையே உயிரெழுத்து  ஒன்றைநுழைத்துத் தமிழின் ஒலியமைப்பு காக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

சுக்லம்         – சுக்கிலம் (மருந்து)

வச்ரம்          – வச்சிரம் (இந்திரனது படை)

வாத்யம்     - வாத்தியம் (இசைக்கருவி)

இதுபோலத் தமிழ் மொழியின் ஒலியமைப்பைக் காலந்தோறும் தனித் தன்மையுடன் பேணிக் காப்பதற்கு ஏற்ற விதிமுறைகளைத் தொல்காப்பியர் வகுத்திருப்பது தனிச் சிறப்பாக உள்ளது.

2.6 தொகுப்புரை

தொல்காப்பியர் காலத் தமிழில் உயிரும் மெய்யுமாகிய முப்பது எழுத்துகளே அடிப்படை ஒலிகளாக வழங்கின. இவற்றைச் சார்ந்து குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்ற மூன்று சார்பெழுத்துகள் வழங்கின. குற்றியலுகரமும், ஆய்தமும் தாம் சார்ந்து வரும் வல்லின எழுத்துகளின் கடினமான ஒலியமைப்பை எளிமைப்படுத்தவே வழங்கியுள்ளன. எனவே இவை தொல்காப்பியர் காலத் தமிழ் ஒலியியலில் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன. தமிழில் உள்ள உயிரொலிகள், மெய்யொலிகள் ஒவ்வொன்றையும் உச்சரிக்க வேண்டிய முறை பற்றித் தொல்காப்பியர் மிகவும் திறம்படக் கூறியுள்ளார். அவர் கூறி உள்ள கருத்துகள் பெரும்பாலானவை இக்கால மொழிநூலார்க்கு உடன்பாடாக உள்ளன. பண்டைத் தமிழில் மெய்யெழுத்துகள், எகர ஒகரக் குறில் உயிர்கள், சார்பெழுத்துகள் முதலிய எழுத்துகள் புள்ளி இட்டு எழுதப்பட்ட இயல்பினைத் தொல்காப்பியர் தெரிவிக்கிறார். அவருடைய காலத்தில் சொற்களின் முதலில் எந்தெந்த எழுத்துகள் வந்தன எந்தெந்த எழுத்துகள் வரவில்லை என்பன பற்றித் தெளிவாக வரையறுத்துக் காட்டுகிறார். சொல்லுக்கு இடையில் நிகழும் மெய்ம்மயக்கம் பற்றி விரிவான விதிகளைக் கூறியுள்ளார். இவ்விதிகள் அவரது காலத் தமிழ் மொழியின் ஒலியமைப்பினை நன்கு காட்டுகின்றன. மேலும் இவ்விதிகள் அவர் காலத்திற்குப் பின்பு பல நூற்றாண்டுகள் வரையிலும் தமிழின் ஒலியமைப்பைச் சிதைந்து விடாது காத்துள்ளன. இவற்றையெல்லாம் இப்பாடத்தில் அறிந்து கொள்ள முடிகிறது.

பாடம் - 3

தொல்காப்பியர் காலத் தமிழ் - உருபனியல்

3.0 பாட முன்னுரை

ஒரு மொழியில் காணப்படும் சொற்களின் உள் அமைப்பை ஆராய்வதே உருபனியல் என்று புளூம்பீல்டு என்ற ஆங்கில மொழியியல் அறிஞர் குறிப்பிடுகிறார்.(Bloomfield, Language, P. 194). ஆங்கிலத்தில் ‘Morphology’ என்று கூறப்படுவதையே, இக்காலத் தமிழ் மொழிநூல் அறிஞர்கள் உருபனியல் என்று மொழி பெயர்த்துக் கூறுகின்றனர். இதனைச் சொல்லியல் எனவும் குறிப்பிடுகின்றனர்.

தமிழ் மொழியில் உள்ள சொற்களை இக்கால மொழிநூலார் உருபனியல் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆராய்ந்து காண்கிறார்கள். ஏறத்தாழ இதே அடிப்படையிலேயே தொல்காப்பியரும் அவருடைய காலத் தமிழ் மொழியில் வழங்கிய சொற்களை ஆராய்ந்துள்ளார். அவர் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என நால்வகைப் படுத்தி விளக்கியுள்ளார். இங்குத் தொல்காப்பியர் காலத் தமிழின் உருபனியல் அல்லது சொல்லியலைக் காண்பதே இப்பாடத்தின் நோக்கம்.

3.1 சொல்லின் இலக்கணம்

தொல்காப்பியர் சொல்லைக் கிளவி, சொல், மொழி என்னும் மூன்று சொற்களால் குறிப்பிடுகிறார். சொல் எவ்வாறு அமைகிறது? அது எவ்வாறு பாகுபடுத்தப்படுகிறது? என்பன பற்றித் தொல்காப்பியர் கூறியுள்ள இலக்கணக் கருத்துகளோடு இன்றைய மொழிநூலார் கூறும் கருத்துகள் ஒன்றியுள்ளன.

3.1.1 தொல்காப்பியமும் உருபனியலும் சொற்கள் உருவாகும் முறையைத் தொல்காப்பியர் விளக்குகிறார். சொல் ஓர் எழுத்தினாலும், இரண்டு எழுத்தினாலும் அதற்கு மேற்பட்ட பல எழுத்துகளினாலும் அமையும் என்று குறிப்பிடுகிறார். (தொல். எழுத்து. 45) இவ்வாறு எழுத்துகள் இணைவதால் அமையும் சொல் பொருள் தந்தால்தான் சொல் எனப்படும் என்பதை,

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே

(தொல்.சொல். 157)

என்று தெளிவுபடுத்துகிறார். எல்லாச் சொல்லும் என்று கூறியது பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நால்வகைச் சொற்களையுமாம்.

எழுத்தினால் ஆகியது சொல்; அது பொருள் தருவது என்று தொல்காப்பியர் கூறியதை இன்றைய மொழிநூலார் உருபனுக்குக் (சொல்லுக்கு) கூறும் விளக்கத்தோடு தொடர்புபடுத்திக் காண்போம்.

உருபன் உருவாதல்

ஓர் ஒலியன் தனித்து நின்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட ஒலியன்கள் சேர்ந்து நின்றோ பொருள் தருமாயின் அது உருபன் (Morpheme) எனக் கூறப்படும்.

(எ.டு) ஆ, ஈ – தனி ஒலியன் உருபனாதல். வா, போ, செய், மலர், மரம் – ஒலியன்கள் இணைந்து உருபனாதல்

ஆ, ஈ என்பன தொல்காப்பியர் குறிப்பிடும் ஓரெழுத்து ஒரு மொழியில் அடங்கும். வா, போ ஆகியவற்றை மொழிநூலார் இரண்டு ஒலியன்களால் ஆகிய உருபன்களாகக் கொள்வர். ஆனால் தொல்காப்பியர் இவற்றை ஓரெழுத்து ஒரு மொழிகளாகவே கொள்வார்.

உருபன் பொருள் தருதல்

மொழிநூலார் உருபன்களைத் தனி உருபன்கள் (Free morphemes), கட்டு உருபன்கள் (Bound morphemes) என இரு வகையாகப் பகுப்பர். இவை இரண்டுமே பொருள் உடையன. ஒரு மொழியில் தாமே தனித்து வந்து பொருளோடு இயங்குவனவற்றைத் தனி உருபன்கள் என்று கூறுவர். பொருள் உடையனவாயினும் தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமல் வேறு தனி உருபன்களோடு இணைந்து இயங்குவனவற்றைக் கட்டு உருபன்கள் என்று கூறுவர்.

(எ.டு) மலர், மலரை, மலரான், மலர்க்கண்.

இச்சொற்களில் வரும் மலர் என்பது தனி உருபன். அது தனியே நின்று பொருள் தருகிறது. அதனோடு இணைந்து இயங்கும் ஐ, ஆன், கண் என்னும் வேற்றுமை உருபுகள் கட்டு உருபன்கள். இவை தமக்கெனத் தனிப் பொருள் உடையன. ஆயினும் தனித்து வழங்கும் ஆற்றல் இல்லாதவை. ஆகவே மலர் என்ற தனி உருபனோடு (பெயரோடு) சேர்ந்து வழங்குவதைக் காணலாம்.

(எ.டு) செய்தான்

இச்சொல்லில் செய் என்பது வினை அடிச்சொல். இது தனி உருபன். இதனோடு இணைந்து வந்துள்ள த் என்பது இறந்த காலம் காட்டும் இடைநிலை. ஆன்என்பது ஆண்பால் காட்டும் விகுதி. இவை இரண்டும் கட்டுருபன்கள். எனவே செய்தான் என்பது ஒரு தனி உருபனும் இரண்டு கட்டு உருபன்களும் இணைந்த ஒரு சொல்லாகும்.

இவ்வாறு ஓர் உருபன் தனித்தோ ஒன்றுக்கு மேற்பட்ட உருபன்கள் தொடர்ந்தோ பொருள் உணர்த்தி வரும்போது அவை சொற்கள் என அழைக்கப்படுகின்றன என்று மொழிநூலார் கூறுவர். உருபுகள் இணைந்து பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பொருள் தந்து இயங்குவதைத்தான் தொல்காப்பியரும் சொல்லதிகாரத்தில் விளக்குகிறார்.

தமிழில் உள்ள வேற்றுமை உருபுகள், காலம் காட்டும் இடைநிலைகள், விகுதிகள் முதலியவற்றை மொழிநூலார் கட்டுருபன்கள் என்று கூறுகின்றனர். தொல்காப்பியர் இவற்றை இடைச்சொற்கள் என்று குறிப்பிடுகின்றார். இடைச்சொற்கள் பொருள் உடையன : ஆனால் தனித்து வழங்கும் ஆற்றல் இல்லாதவை ; பெயர், வினைகளைச் சார்ந்து வழங்கும் இயல்பினை உடையன என்று இடையியலில் கூறுகிறார். எனவே இக்கால மொழிநூலார் உருபன், உருபனியல் பற்றித் தந்துள்ள விளக்கங்கள் தொல்காப்பியர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவாகச் சொன்ன இலக்கணங்களை அடியொற்றியே அமைந்துள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

3.1.2 உலக மொழிகளில் சொல் பாகுபாடு உலக மொழிகள் அனைத்திலும் பெயர்ச் சொல், வினைச் சொல் என்ற சொல் பாகுபாடு உள்ளது. தமிழைப் போலவே பழைமை வாய்ந்த மொழி கிரேக்க மொழி. இம்மொழியில் உள்ள சொற்களை, பிளேட்டோ (கி.மு. 427-347) என்ற அறிஞர் பெயர், வினை என்று இரண்டாகப் பகுத்தார். அவரை அடுத்துவந்த அவருடைய மாணவர் அரிஸ்டாடில் (கி.மு. 384-322) என்பவர் பெயர், வினை, முன்னிடைச் சொல் (Preposition), இணைப்புச் சொல் (Conjunction) என நான்கு வகையாகச் சொல்லைப் பகுத்தார். வடமொழியின் மிகப் பழைய இலக்கண நூல் நிருக்த நிகண்டு என்பது. இது கி.மு. எட்டாம் நூற்றாண்டில் தோன்றியது என்பர். இந்நூலை இயற்றிய யாஸ்கர் என்பாரும் சொல்லைப் பெயர் (நாமம்), வினை (ஆக்கியாதம்), முன்னொட்டுச் சொல் (உபசருக்கம்), முன் அல்லது பின் இணைவுச் சொல் (நிபாதம்) என்று நான்கு வகையாகவே பகுத்துள்ளார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த தொல்காப்பியரும் சொல்லை நான்கு வகையாகப் பகுத்துள்ளார். உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் பெயரும், வினையுமே முதன்மைச் சொற்களாகக் கருதப்படுகின்றன.

3.1.3 தொல்காப்பியத்தில் சொல் பாகுபாடு தொல்காப்பியர் சொல்லை முதலில் பெயர்ச்சொல், வினைச்சொல் என இரண்டாகப் பிரிக்கிறார். பின்னர், அவ்விரண்டையும் சார்ந்து வழங்கும் இடைச்சொல், உரிச்சொல் ஆகிய இரண்டையும் சேர்த்துச் சொல் நான்கு வகைப்படும் என்கிறார். இதனை,

சொல் எனப்படுப பெயரே வினை என்று

ஆயிரண்டு என்ப அறிந்திசி னோரே

இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்

அவற்று வழி மருங்கின் தோன்றும் என்ப

(தொல்.சொல். 160, 161)

என்ற நூற்பாக்களில் குறிப்பிடுகிறார்.

(அறிந்திசினோர் = அறிந்தோர்; அவற்றுவழி மருங்கின் = அவற்றைச் சார்ந்து)

பெயரும் வினையும் மொழியின் அடிப்படைச் சொற்கள் ஆதலானும், தனித்து இயங்கும் ஆற்றல் உடையன ஆதலானும் தொல்காப்பியர் அவற்றை முதலில் கூறினார். தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாதனவும் பெயர் வினைகளையே சார்ந்து வழங்கும் இயல்பு உடையனவும் ஆகிய இடைச்சொல்லையும் உரிச்சொல்லையும் பின்பு கூறினார்.

உலக மொழிகள் பலவற்றிலும் காணப்படும் சொல் பாகுபாட்டில் பெயரே முதலில் கூறப்படுகிறது. தொல்காப்பியரும் தமிழ்ச் சொல் பாகுபாட்டில் பெயரை முதலாவதாக வைத்துக் கூறுகிறார்.

3.2.1 பெயர்ச்சொல் இலக்கணம் பெயர்ச்சொல் ஒரு பொருளைக் குறிப்பது ; திணை, பால், எண், இடம் காட்டுவது; வேற்றுமை உருபுகளை இறுதியில் ஏற்று வருவது; வினையால் அணையும் பெயர் ஒன்றைத் தவிர ஏனைப் பெயர்கள் காலம் காட்டா. இவையே தொல்காப்பியர் பெயர்ச் சொல்லுக்குக் கூறும் இலக்கணங்கள். (தொல்.சொல். 157,162,71)

மொழிநூலார் பெயர்ச்சொல் பொருளைக் குறிப்பது எனவும், திணை, பால், எண், இடம் உணர்த்துவது எனவும், வேற்றுமை உருபை ஏற்பது எனவும் கூறியுள்ள வரையறைகள் இங்கு ஒப்பிடத்தக்கன.

3.2.2 திணை அடிப்படையில் பெயர்ப் பாகுபாடு தமிழில் பெயர்ச்சொற்கள் திணை, பால் காட்டும். எனவே தொல்காப்பியர் பெயர்களைத் திணை அடிப்படையில் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், விரவுப் பெயர் என மூவகையாகப் பிரிக்கிறார். இவற்றுள் விரவுப் பெயர் என்பது உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக வழங்கும் பெயர்கள் ஆகும். அவர் காலத் தமிழில் சாத்தன், சாத்தி ஆகிய சொற்கள் உயர்திணையில் முறையே ஒருவனையும், ஒருத்தியையும் குறிக்க வழங்கின. அதே சொற்கள் அஃறிணையில் முறையே எருதையும் பசுவையும் குறிக்கவும் வழங்கின.

(எ.டு)

சாத்தன் வந்தான்

சாத்தன் வந்தது

சாத்தி வந்தாள்

சாத்தி வந்தது

இவ்வாறு இருதிணைக்கும் பொதுவாக வழங்கும் பெயர்களே விரவுப் பெயர்கள் எனப்பட்டன.

3.2.3 பதிலிடு பெயர்கள் தொல்காப்பியர், உயர்திணைப் பெயர்கள், அஃறிணைப் பெயர்கள், விரவுப் பெயர்கள் பலவற்றைப் பெயரியலில் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் சுட்டுப் பெயர்கள். வினாப் பெயர்கள், மூவிடப் பெயர்கள், எண்ணுப் பெயர்கள் போன்றவற்றை இக்கால மொழிநூலார் பதிலிடு பெயர்கள் (Pronouns) என்று குறிப்பிடுகின்றனர். பதிலிடு பெயர் என்றால் என்ன என்பதைச் சற்று விளக்கமாகக் காண்போம்.

ஒரு பொருளை நேரடியாகக் குறிக்கும் பெயராக அமையாமல் அப்பெயருக்குப் பதிலாக (substitute) நின்று அப்பொருளை உணர்த்தும் பெயரைப் பதிலிடு பெயர் என்று மொழிநூலார் அழைக்கின்றனர்.

கண்ணன் வந்தான் என்பது ஒரு தொடர். இதை அவன் வந்தான் என்றும் கூறலாம். கண்ணன் என்ற பெயர் நேரடியாக ஒரு பொருளைக் குறிப்பதால் அதைத் தனிப்பெயர் (proper noun) என்று மொழிநூலார் கூறுகின்றனர். அவன் என்பது பொருளை நேரடியாகக் குறிக்காமல் அப்பொருளைக் குறிக்கும் கண்ணன் என்ற பெயருக்குப் பதிலாக வழங்குகிறது. எனவே அவன் என்ற பெயரைப் பதிலிடு பெயர் என்று கூறுகின்றனர். இனித், தொல்காப்பியர் குறிப்பிடும் பதிலிடு பெயர்களைப் பற்றிக் காண்போம்.

சுட்டு, வினாப் பெயர்கள்

தொல்காப்பியர் காலத் தமிழில் அ, இ, உ என்ற மூன்றும் சுட்டெழுத்துகளாக வழங்கின. இவற்றுள் அகரம் சேய்மையில் உள்ள பொருளைச் சுட்டும் ; இகரம் அண்மையில் உள்ளதைச் சுட்டும் ; உகரம் இரண்டுக்கும் நடுவில் உள்ளதைச் சுட்டும். யா என்பது வினா எழுத்தாக வழங்கியது. இவை நான்கும் சுட்டு, வினா அடிச்சொற்கள் ஆகும். இவற்றோடு அன், அள், அர் முதலான பால் காட்டும் விகுதிகள் சேர்வதால் சுட்டு, வினாப் பெயர்கள் உருவாகின்றன. தொல்காப்பியர் குறிப்பிடும் சுட்டு, வினாப் பெயர்கள் வருமாறு :

பால்                    அ          இ             உ            யா

ஆண்பால்       அவன்   இவன்     உவன்   யாவன்

பெண்பால்      அவள்    இவள்     வள்        யாவள்

பலர்பால்         அவர்      இவர்       உவர்     யாவர்

ஒன்றன்பால் அது         இது          உது       யாது

பலவின்பால்  அஃது     இஃது       உஃது     யாவை

அவை   இவை     உவை

அவ்       இவ்          உவ்        யா

(அவ், இவ், உவ் என்பன அவை, இவை, உவை என்ற சொற்களைப் போலப் பன்மைப் பொருளில் வழங்கின.)

மேற்காட்டிய அனைத்துப் பெயர்களும் பதிலிடு பெயர்களாக வருவனவே என்பதை அறிவீர்கள்.

தமிழில் சுட்டு, வினாப் பெயர்கள் ஒழுங்குபட அமைந்துள்ள முறையை டாக்டர் கால்டுவெல் மிகவும் பாராட்டுகின்றார். இத்தகைய பண்பட்ட ஒழுங்கு முறையையும் இவற்றிற்கு இணையான சொல் வடிவங்களையும் உலக மொழிகள் எதிலும் காண இயலாது என்று அவர் வியந்து கூறுகின்றார். (Caldwell, A Comparative Grammar of the Dravidian Languages, P.422.)

மூவிடப் பெயர்கள்

தன்மை, முன்னிலை, படர்க்கை என இடப்பெயர் மூன்று. கீழ்க்காணும் பட்டியலில் இடப்பெயர்களையும் அவை உணர்த்தும் திணை, பால் ஆகியவற்றையும் காணலாம்.

இடம்                   பெயர்                                திணை                    பால்

தன்மை               யான் (ஒருமை)     உயர்திணை        ஆண், பெண் இருபாலுக்கும்     பொது.

யாம், நாம்

(பன்மை)                   உயர்திணை         தன்மையில் பலரைக் குறிக்க வரும்.

முன்னிலை     நீ ஒருமை)               இருதிணைக்கும்

பொது                        இருதிணையிலும் உள்ள           ஒருமைகளைக் குறிக்க வரும். (ஆண்பால், பெண்பால், அஃறிணை ஒருமை)

நீயிர் (பன்மை)     இருதிணைக்கும் பொது     இருதிணையிலும் பன்மை குறிக்க வரும்.

படர்க்கை          தான் (ஒருமை)     இருதிணைக்கும் பொது     இருதிணையிலும் உள்ள    ஒருமைகளைக் குறிக்க வரும் (ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால்)

தாம் (பன்மை)     இருதிணைக்கும் பொது     இருதிணையிலும் பன்மை  குறிக்க வரும் (பலர்பால், பலவின்பால்)

மேற்காட்டியவற்றிலிருந்து :

1. இடப்பெயர்கள் பால் பொதுவானவை என்பதையும்.

2. முன்னிலை, படர்க்கை இடப்பெயர்கள் இருதிணைக்கும் பொதுவானவை என்பதையும்

3. மூன்று இடப்பெயர்களும் ஒருமை – பன்மை வேறுபாடு உடையவை என்பதையும் உணரலாம்.

படர்க்கைப் பெயர்களில் மாற்றம்

தொல்காப்பியர் காலத்தில் தான், தாம் ஆகிய இரண்டும் படர்க்கைப் பெயர்களாக வழங்கின. தான் என்பது படர்க்கை ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது படர்க்கைப் பன்மையைக் குறிக்கும்.

(எ.டு) தான் வந்தான், தான் வந்தாள், தான் வந்தது. தாம் வந்தார், தாம் வந்தன.

இவ்விரு பெயர்களோடு, அவன், அவள், அவர், அது, அவை முதலான ஐம்பால் காட்டும் சுட்டுப் பெயர்களும் படர்க்கைப் பெயர்களாகத் தொல்காப்பியர் காலத்தில் வழங்கத் தொடங்கின. சுட்டுப் பெயர்கள் படர்க்கைக்கு வழங்கத் தலைப்படவும் தான், தாம் ஆகிய படர்க்கை வடிவங்கள் சிறிது சிறிதாகச் செல்வாக்கு இழக்கத் தொடங்கின. காலப்போக்கில், இவ்விரு வடிவங்களும் படர்க்கை அல்லாத பெயர்களுடனும் சேர்ந்து வலியுறுத்தல் பொருளைத் தரும் சொற்களாகி விட்டன.

(எ.டு) நான்தான் வந்தேன். நீதான் வந்தாய்.

தன்மையில் இருவகைப் பன்மை வடிவங்கள்

தொல்காப்பியர் தன்மை ஒருமைக்கு யான் என்ற ஒரு வடிவம் மட்டுமே கூறியிருக்க, பன்மைக்கு யாம், நாம் என்ற இரு வடிவங்களைக் கூறியுள்ளார். காரணம் தன்மைப் பன்மை இருவகைப் பொருளை உணர்த்துகிறது. அவை இரண்டையும் உணர்த்த இரு வேறு பன்மை வடிவங்கள் தேவைப்பட்டன.

தொல்காப்பியர் காலத் தமிழில் நாம் என்பது தன்மையொடு முன்னிலையாரையும் (கேட்போரையும்) உளப்படுத்தும் (உட்படுத்தும்) ன்மைப் பன்மையாக வழங்கியது. நாம் என்பதற்கு நானும் நீயும் என்பது பொருள். இதனை உளப்பாட்டுத் தன்மைப் பன்மை என்று மொழிநூலார் கூறுவர். யாம் என்பது முன்னிலையாரை உளப்படுத்தாது தன்மையாரை மட்டும் உணர்த்தும் தன்மைப் பன்மையாக வழங்கியது. இதனை உளப்படுத்தாத் தன்மைப் பன்மை என்று கூறுவர்.

நாம் வந்தாம் (யானும் நீயும்) யாம் வந்தேம் (யானும் என்னைச் சேர்ந்தோரும்)

தற்காலத் தமிழில் இவ்விரு பன்மைகளை உணர்த்த முறையே நாம், நாங்கள் என்பன வழங்குகின்றன.

எண்ணுப்பெயர்கள் (Numerals)

எண்ணுப் பெயர்கள் மூவிடப் பெயர்களைப் போலப் பதிலிடு பெயர்களாகவே வழங்குகின்றன.

யானை வந்தது     - நேர்ப் பெயர்

அது வந்தது             – படர்க்கைச் சுட்டுப்பெயர்

ஒன்று வந்தது        – எண்ணுப்பெயர்

‘ஒன்று’ என்பது இங்கு ‘யானை’ என்பதற்குப் பதிலிடு பெயராக வந்தது.

ஒன்று, இரண்டு முதலான எண்ணுப் பெயர்களின் அடியாகத் தோன்றும் உயர்திணைப் பெயர்களைத் தொல்காப்பியர் எண்ணியற் பெயர் என்று குறிப்பிடுகிறார் (தொல்.சொல். 167).

ஒன்று            – ஒருவன், ஒருத்தி, ஒருவர்

இரண்டு        – இருவர்

ஆறு               – அறுவர்

3.2.4 அஃறிணையில் பன்மை உணர்த்தும் முறை அஃறிணையில் ஒரு பொருளைக் குறிக்கும் இயற்பெயர்ச் சொற்களைப் பன்மை ஆக்குவதற்கு அச்சொற்களின் பின் கள் விகுதி சேர்த்துக் கொள்வதும் உண்டு என்று தொல்காப்பியர் கூறுகிறார். (தொல். சொல். 171)

(எ.டு)     யானை     யானைகள்

மரம்     மரங்கள்

இவ்வாறு ‘சேர்த்துக் கொள்வதும் உண்டு’ எனக் கூறியிருப்பதை நோக்கும்போது, அவர் காலத்தில் கள் விகுதி சேர்க்காமலும் அஃறிணைப் பன்மை உணர்த்தப்பட்டது என்பது தெரிய வருகிறது. கள் விகுதியொடு வாராத அஃறிணை இயற்பெயர்கள், அவை கொண்டு முடியும் வினைகளை வைத்து, ஒருமை, பன்மை உணரப்படும் என்கிறார் தொல்காப்பியர்.

( எ.டு)     யானை வந்தது     (ஒருமை)

யானை வந்தன.     (பன்மை)

இதுகாறும் தொல்காப்பியர் காலத் தமிழில் பெயர்ச்சொல் எவ்வாறெல்லாம் பாகுபடுத்தப் பட்டிருந்தது என்பதையும் அப்பாகுபாட்டின் சிறப்புகளையும் அறிந்து கொண்டோம். இனிப், பெயர்ச்சொல்லின் தலையாய இலக்கணமாகிய வேற்றுமை பற்றிக் காண்போம்.

3.3 வேற்றுமை

பெயர்ச் சொல்லின் தலையாய இலக்கணம் வேற்றுமை உருபுகளை ஏற்று வருவதாகும். வேற்றுமை உருபுகள் பெயர்ச் சொற்களின் இறுதியில் வந்து, அச்சொற்களின் பொருளை வேறுபடுத்துகின்றன. இக்காரணத்தால் இவை வேற்றுமை எனப்பட்டன. இவை தமக்கெனப் பொருள் இருந்தாலும் தனித்து இயங்காத கட்டுருபன்கள் ஆகும் என்பதை முன்னர்க் கண்டோம்.

(எ.டு)     சாத்தன் கொடுத்தான்

சாத்தனைக் கொடுத்தான்.

சாத்தனுக்குக் கொடுத்தான்.

3.3.1 வேற்றுமைப் பாகுபாடு தொல்காப்பியர் வேற்றுமையை முதலில் ஏழு எனக் கூறிப் பின்பு விளி என்பதையும் சேர்த்து வேற்றுமை எட்டென வரையறுக்கிறார்.

வேற்றுமை தாமே ஏழ் என மொழிப

விளி கொள்வதன்கண் விளியொடு எட்டே

(தொல்.சொல். 63,64)

தொல்காப்பியர் மொழிப என்று கூறுவதை நோக்குமிடத்து, அவர்க்கு முன்பு இருந்த இலக்கண ஆசிரியர்கள், தமிழில் வேற்றுமைகள் ஏழு என்றே கொண்டிருந்தனர் என்பதும், விளியை ஒரு தனி வேற்றுமையாகக் கொள்ளவில்லை என்பதும் புலனாகின்றன. எனவே தொல்காப்பியரே, விளி என்பதை ஒரு தனி வேற்றுமையாகக் கொண்டு அதனை எட்டாம் வேற்றுமை என்று கூறினார் எனலாம்.

தொல்காப்பியர் முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும் எட்டாம் வேற்றுமையை விளி வேற்றுமை என்றும் குறிப்பிடுகிறார். இவற்றிற்கு என்று தனி வேற்றுமை உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையுள்ள ஆறு வேற்றுமைகளுக்கே உருபுகள் உண்டு. அவை முறையே ஐ, ஒடு, கு, இன், அது, கண் ன்பனவாகும். மூன்றாம் வேற்றுமைக்கு ஒடுவுடன் ஆன் உருபும் உண்டு; ஆறாம் வேற்றுமைக்கு அது உருபுடன் அ உருபும் உண்டு. ஏழாம் வேற்றுமைக்குக் கண் உருபுடன் கால், புறம், அகம் போன்ற பல உருபுகளும் உண்டு.

3.3.2 வேற்றுமை – சில கருத்துகள் முந்தைய பாடங்களில் ( C0 2125, C0 2126) தமிழ் வேற்றுமைகள் பற்றி விரிவாகப் படித்திருக்கிறீர்கள். இங்கு வேற்றுமை தொடர்பாகத் தொல்காப்பியர் காலத் தமிழில் இருந்த சில சிறப்பியல்புகளை மட்டும் காண்போம்.

மூன்றாம் வேற்றுமைப் பொருள்

மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஒடு என்பது வினைமுதல், கருவி, உடனிகழ்ச்சி ஆகிய பொருள்களை உணர்த்தும் என்கிறார் தொல்காப்பியர்.

கொடியொடு துவக்குண்டான்    :        (நீர்நிலையில் உள்ள தாமரை போன்ற கொடியால் கட்டப்பட்டான்)

- கொடி கட்டியது என வருவதால் வினைமுதல் பொருள்.

ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் :     (ஊசியால்தைக்கப்பட்ட பருத்தி, பட்டுத்துணிகள்)

- ஊசி இங்கே தைக்கும் கருவி. ஆகவே கருவிப்பொருள்.

ஆசிரியனொடு மாணாக்கர் வந்தார் :     ஆசிரியன் – மாணாக்கர் இருவர் செயலும் உடன் நிகழ்வதால் உடனிகழ்ச்சிப் பொருள்.

ஆன் உருபு வினைமுதல், கருவி, ஏது ஆகிய பொருள்களில் வரும்.

சாத்தனான் முடியும் இக்காரியம்     வினை முதல்பொருள்

மண்ணான் அமைந்த குடம்                 கருவிப்பொருள்

வணிகத்தான் பெற்ற பொருள்            ஏதுப்பொருள்

ஒடு, ஆன் என வேறுவேறு உருபுகள் இருப்பினும் அவை உணர்த்தும் பொருள்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் இவை ஒரே வேற்றுமையைச் சார்ந்தவையேயாகும்.

தொல்காப்பியருக்குப்பின் ஒடு, ஆன் என்பவற்றின் திரிபாகிய ஓடு, ஆல் என்பவைகளும் தனி உருபுகளாகக் கொள்ளப் பட்டன. பின் வந்த மாற்றத்தில் ஆல், ஆன் உருபுகள் கருவி, வினை முதல் பொருளுக்கும், ஒடு ஓடு உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளுக்கும் என வரையறுக்கப்பட்டன. நீங்கள் முன்பு பயின்ற பாடங்களில் இதனை அறிந்திருப்பீர்கள்.

ஆறாம் வேற்றுமைப் பொருளில் உயர்திணைத் தொகை

ஆறாம் வேற்றுமை உடைமைப் பொருள் (கிழமைப் பொருள்) உடையது என்பதனை அறிவீர்கள். கிழமை தற்கிழமை (தன்னிலிருந்து பிரிக்க முடியாத உடைமை), பிறிதின்கிழமை (பிரிக்கப்படக்கூடிய உடைமை) என இருவகைப்படும் எனவும் அறிவீர்கள்.

சாத்தனது இளமை     தற்கிழமை

சாத்தனது வீடு              பிறிதின்கிழமை

உடைமை என்பது அஃறிணைப் பொருள்களையே குறிக்கும். ஆறாம் வேற்றுமைப் பொருளில் உயர்திணைத் தொகை வந்தால் அதனை எப்படி விரித்துப் பொருள் கொள்வது?

கண்ணன் மகன் – கண்ணனது மகன் என அது உருபு வராது. கண்ணனுக்கு மகன் என நான்காம் வேற்றுமை உருபை இங்கே சேர்க்க வேண்டும்.

இது தொல்காப்பியர் காட்டும் வழி (தொல். சொல். 95)

வேற்றுமை மயக்கம்

ஓர் உருபு வரவேண்டிய இடத்தில் அதற்குத் தொடர்பில்லாத வேறோர் உருபு வந்தால், அத்தொடருக்குரிய பொருளுக்கு ஏற்ப உருபை மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்.

கிழங்கு மணற்கு ஈன்ற முளை

இத்தொடரில் கு உருபின் பொருள் இல்லை. மணலின் கண் ஈன்ற முளை என ஏழாம் வேற்றுமை உருபு வருவதே பொருத்தம். ஆகவே பொருள் கொள்ளும்போது கண் உருபைச் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு உருபுகள் மயங்கி வருவது உருபுமயக்கம் எனப்படும்.

மேற்கூறியவற்றால் தொல்காப்பியர் காலத் தமிழில் பெயர்ச்சொற்கள் திணை பால் அடிப்படையில் பாகுபடுத்தப் பட்டிருந்ததையும், பதிலிடு பெயர்கள் ஒழுங்குபட அமைந்திருந்த தன்மையினையும், பெயர்கள் ஏற்ற வேற்றுமையின் சில இயல்புகளையும் கண்டோம்.

3.4 வினைச்சொல்

எந்த ஒரு மொழியிலும் ஒரு தொடருக்கு இன்றியமையாத உறுப்பாகத் திகழ்வது வினைச் சொல்லே. தமிழில் வந்தான். வந்தாள், வந்தார் போன்ற பால்காட்டும் வினைமுற்றுச் சொற்கள் தனியே நின்று தொடர்களாகவும் அமைகின்றன. அத்தோடன்றி இத்தகு சொற்கள், பல இலக்கணக் கூறுகளை உணர்த்தும் ஆற்றல் வாய்ந்தவையாகவும் உள்ளன. சான்றாக, வந்தான் என்பது வருதல் என்ற தொழிலையும், தொழில் செய்தவனையும், தொழில் நிகழ்ந்த காலத்தையும் ஒருசேர உணர்த்தும் சொல்லாகத் திகழ்கின்றது. இவ்வாறு ஒரே வினைச்சொல் பல்வேறு இலக்கணக் கூறுகளை விளக்கி நிற்பதால் சொல் பாகுபாட்டில் அது முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

3.4.1 வினைச்சொல் இலக்கணம் வினைச்சொல் வேற்றுமை உருபுகளை ஏற்காது; காலம் காட்டும் என்கிறார் தொல்காப்பியர். (தொல். சொல். 200)

வினைச்சொற்களில் காலத்தை வெளிப்படையாகக் காட்டும் சொற்களே அல்லாமல், காலத்தைக் குறிப்பாகக் காட்டும் சொற்களும் வழங்கின.

3.4.2 வினைச்சொல் வகைகள் வினைச்சொல்லானது வினை, குறிப்பு என இரு வகைப்படும். இவ்விரு சொற்களும் காலம் காட்டும் என்கிறார் தொல்காப்பியர். (தொல். சொல். 203)

வினை, குறிப்பு என்று தொல்காப்பியர் குறிப்பிட்ட இருவகை வினைச்சொற்களைப் பிற்கால இலக்கண ஆசிரியர்கள் முறையே தெரிநிலை வினை, குறிப்பு வினை என்று தெளிவாகக் குறிப்பிடலாயினர். காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினை.

(எ.டு)     உண்டான்     - இறந்தகாலம்

உண்ணாநின்றான்     - நிகழ்காலம்

உண்பான்     - எதிர்காலம்

பொருளை உணர்த்தும் பெயர், பண்பை உணர்த்தும் பெயர் முதலியவற்றின் அடியாகத் தோன்றிக் காலத்தைக் குறிப்பாகக் காட்டுவது குறிப்பு வினை எனப்படும்.

(எ.டு)     பொன்     +     அன்     =     பொன்னன்

நல்     +     அன்     =     நல்லன்

நல்லன் என்ற குறிப்பு வினை நேற்று நல்லன், இன்று நல்லன், நாளை நல்லன் என்று மூன்று காலத்தையும் குறிப்பாகக் காட்டுவதைக் காணலாம்.

பொருளையோ பண்பையோ உணர்த்தாத அல்லன், இலன், இலர் போன்ற குறிப்பு வினைமுற்றுகளும் உண்டு.

3.4.3 திணை அடிப்படையில் வினைப் பாகுபாடு தொல்காப்பியர் தெரிநிலை வினை, குறிப்பு வினை என்று இருவகையாக அமையும் வினைச்சொற்களைத் திணை அடிப்படையில் உயர்திணை வினைகள், அஃறிணை வினைகள், விரவு வினைகள் (இரு திணைப் பொது வினைகள்) என மூவகையாகப் பிரிக்கிறார். இந்த மூவகைப்பட்ட வினைகளையும் வினைமுற்று, எச்சம் என்ற இருவகை அமைப்பில் விளக்கிக் காட்டுகிறார்.

3.4.4 வினைமுற்றுகள் வினைமுற்றுகள், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும். தொல்காப்பியர் காலத்தில் தெரிநிலை வினைமுற்றுகள் இருவகை அமைப்பில் தோன்றின.

1. வினையடி + காலம் காட்டும் இடைநிலை + ஈறு (விகுதி)

(எ.டு) செய் + த் + ஆன் = செய்தான்

2. வினையடி + ஈறு

(எ.டு) உண் + உம் = உண்ணும் (அவன் உண்ணும்.)

பெயர் அல்லது பண்பு அடிச்சொல் + ஈறு என்ற அமைப்பில் குறி்ப்பு வினைமுற்றுகள் தோன்றின.

(எ.டு)     பொன்     + அன்     = பொன்னன் ;

நல்     + அன்     = நல்லன்.

வினைமுற்றுகளில் ஈறு கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பர் தொல்காப்பியர் (தொல். சொல். 10). வினைமுற்றுகள் ஈறு (விகுதி) கொண்டே திணை, பால், இடம், எண் ஆகியவற்றை உணர்த்துகின்றன. எனவே தொல்காப்பியர் ஒவ்வொரு வினைமுற்றையும் பற்றிக் கூறும் பொழுது அதற்குரிய ஈறுகளை எல்லாம் குறிப்பிடுகிறார்.

உயர்திணை வினைமுற்றுகள்

தன்மை ஒருமை, தன்மைப் பன்மை, படர்க்கை ஆண்பால், படர்க்கைப் பெண்பால், படர்க்கைப் பலர்பால் வினைமுற்றுகள் ஆகிய ஐந்தும் உயர்திணைக்கு உரியன. இவற்றிற்கு உரிய ஈறுகள் வருமாறு :

தன்மை ஒருமை                  – கு, டு, து, று, என், ஏன், அல் (7)

தன்மைப் பன்மை                – கும், டும், தும், றும், அம், ஆம், எம், ஏம் (8)

படர்க்கை ஆண்பால்          – அன், ஆன் (2)

படர்க்கைப் பெண்பால்      – அள், ஆள் (2)

படர்க்கைப் பலர்பால்         – அர், ஆர், ப, மார் (4)

இந்த 23 ஈறுகள் தெரிநிலை வினைமுற்றுக்கே கூறப்பட்டவை. இவற்றில் ஏற்புடையன குறிப்பு வினைமுற்றிலும் வரும்.

(எ.டு)     உண்டேன், கரியேன்     - தன்மை ஒருமை வினைமுற்று

உண்டேம், கரியேம்     - தன்மைப் பன்மை வினைமுற்று

உண்டான், கரியன்     - படர்க்கை ஆண்பால் வினைமுற்று

உண்டாள், கரியள்     - படர்க்கைப் பெண்பால் வினைமுற்று

உண்டனர், கரியர்     - படர்க்கைப் பலர்பால் வினைமுற்று

யார் எனும் வினாப்பொருள் உணர்த்தும் குறிப்பு வினைமுற்று உயர்திணையில் மூன்று பாலுக்கும் உரியது. எ-டு அவன் யார், அவள் யார், அவர் யார்?

அஃறிணை வினைமுற்றுகள்

படர்க்கை ஒருமை, (ஒன்றன்பால்) படர்க்கைப் பன்மை (பலவின்பால்) ஆகிய இரண்டு வினைமுற்றுகளும் அஃறிணைக்கு உரியன. படர்க்கை ஒருமை வினைமுற்று து, று, டு என்னும் மூன்று ஈறுகளையும், படர்க்கைப் பன்மை வினைமுற்று அ, ஆ, வ என்னும் மூன்று ஈறுகளையும் இறுதியில் கொண்டு வரும். இந்த ஈறுகளில் சில குறிப்பு வினைமுற்றுகளிலும் வரும்.

(எ.டு)     உண்டது, கரியது     - அஃறிணை ஒருமை வினைமுற்று

உண்டன, கரியன     - அஃறிணைப் பன்மை வினைமுற்று

எவன் எனும் வினாக் குறிப்பு வினைமுற்று அஃறிணையில் இரண்டு பாலுக்கும் உரியது.

(எ.டு) அஃது எவன்? அவை எவன்?

இருதிணைப் பொது வினைமுற்றுகள்

முன்னிலை வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று, செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று ஆகியன உயர்திணை, அஃறிணை என்னும் இரு திணைகளுக்கும் பொதுவானவை. மேலும் இல்லை, வேறு எனும் குறிப்பு வினைமுற்றுகளும் இருதிணைப் பொதுவானவையேயாகும்.

முன்னிலை வினைமுற்று

இது முன்னிலை ஒருமை வினைமுற்று, முன்னிலைப் பன்மை வினைமுற்று என இருவகையாக வரும். இவை பால் காட்ட மாட்டா ; ஒருமை பன்மை ஆகிய எண் வேறுபாடு மட்டுமே காட்டும்.

முன்னிலை ஒருமை வினைமுற்று இ, ஐ, ஆய் என்னும் மூன்று ஈறுகளையும், பன்மை வினைமுற்று இர், ஈர், மின் என்னும் மூன்று ஈறுகளையும் பெற்று வரும். குறிப்பு வினைமுற்று இவற்றுள் ஏற்பன கொண்டு வரும்.

(எ.டு)     உண்டனை, உண்டாய், கரியை     - முன்னிலை ஒருமைவினைமுற்று.

உண்டீர், உண்மின், கரியீர்                 – முன்னிலைப் பன்மை வினைமுற்று.

மேலும் நட, வா, போ, உண், செய் போன்ற தெரிநிலை வினையடிகள் எல்லாம் முன்னிலைக்கு உரியன. இவை ஏவல் பொருளில் வழங்கும்; ஒருமையை மட்டும் உணர்த்தும் ; எதிர்காலம் காட்டும்.

வியங்கோள் வினைமுற்று

வியங்கோள் வினைமுற்று படர்க்கையில் மட்டுமே வரும். தன்மையிலும் முன்னிலையிலும் வாராது என்கிறார் தொல்காப்பியர். க, அல் என்னும் ஈறுகள் வியங்கோள் வினைமுற்று விகுதிகளாக அவர் காலத்தில் வழங்கின.

(எ.டு) அவன் செல்க, அவள் செல்க, அது செல்க, கூறல் (கூறுக).

சிறுபான்மையாக ‘நீ வாழ்க’ என முன்னிலையிலும், ‘யான் உறைக’ எனத் தன்மையிலும் வியங்கோள் வினைமுற்று வருவதை உரையாசிரியர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

செய்யும் எனும் வாய்பாட்டு வினைமுற்று நிகழ்காலம் மட்டும் காட்டும். இது பலர்பால் படர்க்கை, முன்னிலை, தன்மை ஆகியவற்றில் வாராது. ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் படர்க்கைப் பெயர்களோடு மட்டுமே பொருந்தி வரும்.

(எ.டு) அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும்.

3.4.5 எச்சங்கள் தொல்காப்பியர் மேற்கூறிய இருதிணைப் பொது வினைமுற்றுகளைக் கூறிய பின்னர் எச்சங்களைப் பற்றிக் கூறுகிறார். வினைமுற்றில் ஈறு குறைந்து நின்றால் அது எச்சமாகும். எச்சங்களும் இருதிணைப் பொதுவினைகளேயாகும்.

இவ்வாறு வரும் எச்ச வினைகள் ஒரு வினையைக் கொண்டு கொண்டு முடியும் போது வினையெச்சம் என்றும், ஒரு பெயரைக் கொண்டு முடியும் போது பெயரெச்சம் என்றும் அழைக்கப்படுகின்றன. தொல்காப்பியர் இவ்விரண்டு எச்சங்களையும் முறையே வினை எஞ்சு கிளவி என்றும் பெயர் எஞ்சு கிளவி என்றும் குறிப்பிடுகிறார்.

(எ.டு)     செய்து வந்தான் (வினையெச்சம்)

செய்த சாத்தன் (பெயரெச்சம்)

வினையெச்சம்

தொல்காப்பியர் வினையெச்சம் என்றால் என்ன என்பதை வரையறை செய்யவில்லை. ஆனால் அதன் அமைப்பைப் பல வாய்பாடுகள் கொண்டு விளக்கிக் காட்டுகிறார். செய் என்ற வினையடியிலிருந்து வினையெச்ச வாய்பாடுகளை உருவாக்கிக் காட்டுகிறார். அவர் குறிப்பிடும் வினையெச்ச வாய்பாடுகள் மொத்தம் ஒன்பது. இவற்றை,

செய்து, செய்யூ, செய்பு, செய்தென,

செய்யியர், செய்யிய, செயின், செய, செயற்கு என

அவ்வகை ஒன்பதும் வினை எஞ்சு கிளவி

(தொல்.சொல். 230)

என்ற நூற்பாவில் கூறுகிறார். அவர் காலத் தமிழில் வழங்கிய வினையெச்சங்களை எல்லாம் இந்த ஒன்பது வாய்பாடுகளில் அடக்கிக் காட்டுகிறார். இவற்றைச் சான்றுகளுடன் காண்போம்.

1.     செய்து               – உண்டு வந்தான்

2.     செய்யூ              – உண்ணூ வந்தான் (உண்டு வந்தான்)

3.     செய்பு                – நகுபு வந்தான் (சிரித்தவாறு வந்தான்)

4.     செய்தென       – மருந்து உண்டெனப்பிணி நீங்கிற்று

5.     செய்யியர்       – உண்ணியர் வந்தார் (உண்ண வந்தார்)

6.     செய்யிய         – உண்ணிய வந்தான் (உண்ண வந்தான்)

7.     செயின்             – உண்ணின் மகிழ்வேன் (உண்டால் மகிழ்வேன்)

8.     செய                  – உண்ண வந்தான்

9.     செயற்கு          – உணற்கு வந்தான் (உண்பதற்கு வந்தான்)

வினையெச்சம் அடுக்கி வரல்

வினையெச்சங்கள் பலவாக ஒரு தொடரில் அடுக்கியும் வரும். அவ்வாறு வரினும் ஒரு வினை கொண்டே முடிய வேண்டும் என்கிறார் தொல்காப்பியர். (தொல்.சொல். 235)

(எ.டு) உண்டு தின்று ஆடிப் பாடி மகிழ்ந்து வந்தான்.

பெயரெச்சம்

தொல்காப்பியர் செய்யும், செய்த என்னும் இரண்டு வாய்பாடுகளை மட்டுமே பெயரெச்சத்திற்குக் கூறுகிறார். இந்த இரு வாய்பாடுகளைக் கொண்டு வரும் பெயரெச்ச வினைகள் நிலம் (இடம்), பொருள் (செயப்படுபொருள்), காலம், கருவி, வினைமுதல் (தொழில் செய்பவன்), வினை (தொழிலை உணர்த்தும் பெயர்) ஆகிய ஆறனை உணர்த்தும் பெயர்களைக் கொண்டு முடியும் என்கிறார் தொல்காப்பியர். இவற்றிற்கான சான்றுகள் வருமாறு :

உண்ணும், உண்ட    – வீடு (நிலம்)

- சோறு (பொருள்)

- நாள் (காலம்)

- வட்டில் (கருவி)

- சாத்தன் (வினைமுதல்)

- ஊண் (வினை)

குறிப்பு வினையெச்சம், குறிப்புப் பெயரெச்சம்

தொல்காப்பியர் எல்லா வினைச்சொற்களும் தெரிநிலையிலும் குறிப்பிலும் வரும் என்கிறார். எனவே வினையெச்சங்களும் பெயரெச்சங்களும் குறிப்பு வினையிலும் வரும் என்பது அவர் கருத்து.

(எ.டு)     நன்கு பேசினான், இனிது பேசினான்     (குறிப்பு வினையெச்சம்)

நல்ல மகன், இனிய மனைவி                   (குறிப்புப் பெயரெச்சம்)

இதுகாறும் தொல்காப்பியர் காலத்தில் வினைச்சொல் எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் பார்த்தோம். இனி, அவர் காலத்தில் இடைச்சொற்களும் உரிச்சொற்களும் எவ்வாறு வழங்கின என்பதைப் பற்றிக் காண்போம்.

3.5 இடைச்சொல்லும் உரிச்சொல்லும்

பெயரும் வினையும் தமக்கு உரிய பொருளை உணர்த்தித் தனித்து இயங்கும் ஆற்றல் வாய்ந்தவை. இடைச்சொல்லுக்கும், உரிச்சொல்லுக்கும் தனித்தனிப் பொருள் உண்டு. ஆனால் அவை பெயரையும் வினையையும் சார்ந்தே தம் பொருளை உணர்த்துகின்றன. இடைச் சொற்கள் பெயரையும் வினையையும் சார்ந்து வந்து அவற்றின் பொருளைப் பலவாறு வேறுபடுத்துகின்றன. உரிச்சொற்கள் பெயருக்கும் வினைக்கும் முன்னால் வந்து அவற்றின் பொருளைச் சிறப்பிக்கும் அடைகளாக (attributes) விளங்குகின்றன. எனவே இவ்விரு வகைச் சொற்களும் தொல்காப்பியர் காலத் தமிழ்ச் சொல்பாகுபாட்டில் இன்றியமையாத இடம் பெறுகின்றன.

3.5.1 இடைச்சொல் இலக்கணம் இடைச்சொற்கள், பெயரையும் வினையையும் சார்ந்து வழங்கும் இயல்பை உடையன : தாமாகத் தனித்து வழங்கும் இயல்பை உடையன அல்ல என்கிறார் தொல்காப்பியர்.

இடை எனப்படுவ

பெயரொடும் வினையொடும்

நடைபெற்று இயலும் : தமக்கு இயல்பு இலவே

(தொல்.சொல். 251)

3.5.2 இடைச்சொல் பாகுபாடு புணர்ச்சியில் நிலைமொழி வருமொழிகளுக்கு இடையே வரும் சாரியைகள், பாலுணர்த்தும் உருபுகள், வினைச்சொற்களில் காலம் காட்டும் உருபுகள், வேற்றுமை உருபுகள், அசைநிலைச் சொற்கள், இசை நிறைக்க வருபவை, உவம உருபுகள் முதலியனவும் ஏ, ஓ, உம், மன், கொல், என, என்று, மற்று என்பன போலத் தத்தமக்குச் சில பொருள்களை உடையவையும் ஆகியன இடைச்சொற்கள் ஆகும்.

3.5.3 இடைச்சொல் – வேற்றுமைச் சொல் இடைச்சொற்கள் தாம் சார்ந்து வரும் பெயர், வினைகளின் பொருளை வேறுபடுத்தும் ஆற்றல் வாய்ந்தவையாக உள்ளன. வேற்றுமை உருபுகள் பெயர்ச் சொற்களின் இறுதியில் வந்து, அச்சொற்களின் பொருளை வேறுபடுத்துவதையும் கால இடைநிலைகள் வினைச்சொற்களி்ன் நடுவே நின்று அச்சொற்களின் காலப் பொருளை வேறுபடுத்திக் காட்டுவதையும் முன்னர்ப் பார்த்தோம். சாரியைகள் மற்றும் ஏ, ஓ, உம் முதலான இடைச்சொற்கள் எவ்வாறு பெயர், வினைகளின் பொருளை வேறுபடுத்துகின்றன என்பது பற்றிச் சிறிது காண்போம்.

சாரியைகள்

புணர்ச்சியில் பெயரும் வினையும் நிலைமொழி, வருமொழிகளாய்ப் புணரும்போது, அவற்றின் இடையே அதாவது நிலைமொழியின் இறுதியில் வருவன சாரியைகள் எனப்படும். இன், வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக்கு, இக்கு, அன் முதலியனவற்றைச் சாரியைகள் என்கிறார் தொல்காப்பியர்.

சாரியைகள் பொருள் வேறுபாட்டிற்குக் காரணமாய் வருவதை ஒரு சான்று கொண்டு காண்போம்.

குளம் + மீன் > குளம் + அத்து + மீன் > குளத்து மீன்

இங்கு ‘அத்து’ என்னும் சாரியை ஏழாம் வேற்றுமைக்குரிய இடப்பொருளில் வருகிறது. (குளத்தில் உள்ள மீன்)

ஏ, ஓ, உம் போன்ற இடைச்சொற்கள்

இவை பெயர், வினைச் சொற்களி்ன் பின்னால் வந்து பிரிநிலை, வினா, எச்சம் போன்ற பல பொருள்களை உணர்த்துவதைக் காணலாம்.

(எ.டு)

சாத்தனே வந்தான்

சாத்தனோ வந்தான்

சாத்தனும் வந்தான்

‘சாத்தனே வந்தான்’ என்பதில் ஏகார இடைச்சொல் சாத்தன் மட்டுமே வந்தான் என்று பலரினின்று அவனைப் பிரித்துக் காட்டியதால் பிரிநிலை ஆயிற்று ‘சாத்தனோ வந்தான்’ என்பதில் ஓகார இடைச்சொல் வினாப் பொருளில் வந்தது. ‘சாத்தனும் வந்தான்’ என்பதில் உம் இடைச்சொல், கொற்றனும் வந்தான் என்ற எச்சப் பொருளைத் தந்து நிற்கிறது. இவ்வாறு இடைச்சொற்கள் தாம் சார்ந்து வரும் பெயர் வினைகளின் பொருளைப் பலவாறு வேறுபடுத்துகின்ற காரணத்தால், தொல்காப்பியர் அவற்றை,

இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே

(தொல்.சொல். 455)

என்று குறிப்பிடுகிறார்.

3.5.4 உரிச்சொல் இலக்கணம் உரிச்சொல் இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாய் வரும். பெயரையும் வினையையும் சார்ந்து வரும். ஒரு சொல் ஒரு பொருளுக்கே உரியதாய் வருவதும் உண்டு ; ஒரு சொல் பல பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு. பல சொல் ஒரு பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு. இதுவே தொல்காப்பியர் உரிச்சொல்லுக்குக் கூறும் இலக்கணம்.

உரிச்சொற்கள் முழுச்சொற்களாக உள்ளன. அவற்றிற்குத் தனிப் பொருள் உண்டு. ஆனால் அப்பொருளில் தனித்து வழங்கும் இயல்பு உடையன அல்ல. பெயரையும், வினையையும் சார்ந்து அவற்றிற்கு முன்னால் வரும்போதே தம் பொருள் உணர்த்துகின்றன. ஒரு சான்று காண்போம். மல்லல் என்பது ஓர் உரிச்சொல். இதற்கு வளம் என்று பொருள். இதனை,

மல்லல் வளனே

(தொல்.சொல். 305)

என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். மல்லல் என்னும் சொல் பொருளுடையதாயினும் தனித்து வழங்காது. மல்லல் மூதூர் என்ற தொடரில் மூதூர் என்ற பெயர்ச் சொல்லைச் சார்ந்து வழங்கும்போது தன் பொருளை உணர்த்துகிறது.

3.5.5 உரிச்சொல் பொருண்மை நிலை தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் உரியியலில் 120 உரிச்சொற்களைக் குறிப்பிடுகிறார். அவற்றிற்கு உரிய பொருளை வழக்கில் பயிலும் சொற்களைக் கொண்டு உணர்த்துகிறார். இவை வினையடைகளாகவும், பெயரடைகளாகவுமே தொல்காப்பியரால் கூறப்பட்டுள்ளன என்று கமீல் சுவலபெல் என்னும் திராவிட மொழியியல் அறிஞர் கூறுகிறார். தொல்காப்பியர் உரிச்சொற்களின் பொருண்மை நிலையை மூன்று வகையாகப் பிரித்து விளக்குகிறார்.

1. ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்

மழ               – இளமை;

வாள்           – ஒளி ;

யாணர்       – புது வருவாய்.

(எ.டு)     மழ களிறு     (இளமையான களிறு)

வாள் முகம்     (ஒளி பொருந்திய முகம்)

யாணர் ஊர்     (புது வருவாயினை உடைய ஊர்)

மழ, வாள், யாணர் ஆகிய மூன்று சொற்களும் பெயர்ச்சொற்களுக்கு முன் வந்து அச்சொற்களைச் சிறப்பிக்கும் அடைகளாக நின்றமையின் பெயரடைகள் ஆயின.

2. ஒரு சொல்லுக்குப் பல பொருள்

கடி என்ற ஓர் உரிச்சொல் கூர்மை, காப்பு, புதுமை, விரைவு முதலான பல பொருள்களைத் தரும்.

(எ.டு)     எம் அம்பு கடிவிடுதும்     (எம் அம்பினை விரைவாக விடுவோம்)

கடி நுனைப் பகழி     (கூர்மையான நுனியை உடைய அம்பு)

இங்கே கடி என்ற உரிச்சொல் முதல் எடுத்துக்காட்டில் வினையடையாகவும், பின்னர்ப் பெயரடையாகவும் வந்தது காணலாம்.

3. பலசொல்லுக்கு ஒரு பொருள்

உறு, தவ, நனி என்ற மூன்று உரிச்சொற்களும் மிகுதி என்ற ஒரு பொருளில் வரும்.

(எ.டு)     உறு புகழ்                      (மிக்க புகழ்)                          – பெயரடை

தவச் சிறிது                 (மிகவும் சிறிது)                   – வினையடை

நனி வருந்தினை      (மிகவும் வருந்தினை)    – வினையடை

3.6 தொகுப்புரை

தொல்காப்பியர் தம் காலத்தில் வழங்கிய சொற்களை வகைப்படுத்தித் திறம்பட நன்கு ஆராய்ந்து விளக்கிக் காட்டியுள்ளார். இக்கால மொழிநூலாரின் உருபனியல் பற்றிய சிந்தனை மிகப் பழங்காலத்தில் தொல்காப்பியர்க்கு இருந்துள்ளது. அவர் பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் தமிழ்மொழியின் அடிப்படைச் சொற்களாகக் கூறுகிறார். அவற்றைச் சார்ந்து வழங்கும் இயல்புடையனவாக இடைச்சொல்லையும் உரிச்சொல்லையும் குறிப்பிடுகிறார். பெயர்ச் சொற்களைத் திணை அடிப்படையில் பாகுபாடு செய்கிறார். அவர்காலத்தில் வழங்கிய மூவிடப் பெயர்கள், சுட்டுப் பெயர்கள், வினாப் பெயர்கள், எண்ணுப் பெயர்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கிக் காட்டுகிறார். இவற்றை மொழிநூலார் பதிலிடு பெயர்கள் என்று குறிப்பிடுகின்றனர். பெயர்ச்சொல் ஏற்கும் வேற்றுமை உருபுகளையும் அவற்றின் பொருள்களையும் வரையறுத்துக் கூறுகிறார். வினைச்சொல்லைத் தெரிநிலை, குறிப்பு என இருவகைப்படுத்தி விளக்கிக் காட்டுகிறார். அவரது காலத்தில் திணை அடிப்படையில் வழங்கிய பல்வகை வினைமுற்றுகளையும் எச்சங்களையும் விரிவாக விளக்கி்க் கூறுகிறார். இடைச்சொற்கள் பெயரையும் வினையையும் சார்ந்து அவற்றின் பொருளை வேறுபடுத்தும் இயல்பினை விவரிக்கிறார். உரிச்சொற்களின் பொருண்மை நிலையினை விளக்கிக் காட்டுகிறார். இவை தொல்காப்பியர் காலத் தமிழில் பெயரடைகளாகவும் வினையடைகளாகவும் வழங்கியுள்ளன . இவற்றையெல்லாம் இப்பாடத்தின் வழி அறிந்து கொள்ள முடிந்தது.

பாடம் - 4

தொல்காப்பியர் காலத் தமிழ் - தொடரியல்

4.0 பாட முன்னுரை

தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் ஒலியனியலைப் பற்றியும், சொல்லதிகாரத்தில் உருபனியலைப் பற்றியும் விளக்கமாகக் கூறியுள்ளார். கடந்த இரு பாடங்களில் இவற்றை விரிவாகப் பார்த்தோம். ஒலியனியலுக்கும் உருபனியலுக்கும் தனித்தனி அதிகாரங்களை வைத்த தொல்காப்பியர், தொடரியலுக்கு எனத் தனி அதிகாரம் வைக்கவில்லை. சொல்லதிகாரத்திலேயே உருபனியலோடு, தொடரியலைப் பற்றியும் விளக்குகின்றார். தொடரில் வரும் எழுவாய், பயனிலை ஆகிய இரண்டனுக்கும் இடையே உள்ள இயைபினை (Concord) விளக்கிக் காட்டுகிறார். (இயைபு = தொடர்பு, பொருத்தம்) தொடரில் சொற்களின் வரன்முறை (Word Order) பொருள் உணர்வு பற்றியதால் அதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். தொடரில் பொருள் மயக்கம் கூடாது என்பதை வலியுறுத்திக் கூறுகிறார். பொருள் மயக்கம் இன்றித் தொடர்ப் பொருளைத் தெளிவாகக் கூறுவதற்கான நெறிமுறைகளைக் குறிப்பிடுகிறார். மேலும் அவர் காலத் தமிழில் வழங்கிய பல்வேறு தொடர் வகைகளையும் ஆங்காங்கே குறிப்பிட்டு விளக்கிச் செல்கிறார். இவ்வாறு தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் பல்வேறு நிலைகளில் கூறியுள்ள தொடரியல் கருத்துகளின் வழி நின்று, தொல்காப்பியர் காலத் தமிழின்தொடரியல் இப்பாடத்தில் விளக்கப்படுகிறது.

4.1 தொல்காப்பியமும் தொடரியலும்

எழுத்தினது இலக்கணத்தைச் சொல்லின் துணைகொண்டே அறிய முடியும். அதே போலச் சொல்லினது இலக்கணத்தைத் தொடர் அல்லது வாக்கியத்தின் துணை கொண்டே அறிய முடியும். சான்றாக, படி என்ற பெயர்ச்சொல், ஏறுகின்ற படி (ஏணிப்படி, மாடிப்படி), அளக்கின்ற படி என்ற இருவேறு பொருளைத் தருவது. அது என்ன பொருளில் வருகிறது என்பதைத் தெளிவாக அறிவதற்கு அதனை அடுத்து வரும் வினைச் சொற்களின் உதவி தேவைப்படுகிறது.

படி ஏறினான் (ஏணிப்படி, மாடிப்படி)

படி அளந்தான் (அளக்கின்ற படி)

இவை ஒவ்வொன்றும் தொடராகும். இவ்வாறு படி என்ற ஒரு பெயர்ச்சொல்லின் இருவேறு பொருள்களைத் தொடர் நிலையில்தான் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆகவே, தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் பெயர், வினை, இடை, உரி எனும் நால்வகைச் சொற்களின் இலக்கணத்தைச் சொல்வதற்கு முன்னரே, தொடரியல் பற்றிய இலக்கணங்களைக் கூறுகிறார். சொல்லதிகாரத்தின் முதல் நான்கு இயல்களாகிய கிளவியாக்கம். வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு ஆகியவை தொடரிலக்கணம் கூறுபவையே ஆகும்.

சொல்லதிகாரத்தின் முதலாவது இயலாக அமைந்துள்ளது, கிளவியாக்கம். கிளவி – சொல் ; ஆக்கம் – சொற்களால் ஆகிய தொடர்.

தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவராகிய தெய்வச்சிலையார், கிளவி ஆக்கம் = “சொல்லினது தொடர்ச்சி”, “சொற்கள் ஒன்றோடொன்று பொருள் மலோகும் நிலைமை” என விளக்கம் தருகிறார். (தொல். சொல். 1 தெய்வச்சிலையார் உரை)

இக்கால மொழிநூல் அறிஞர்களும் கிளவியாக்கம் என்னும் இயலைத் தொடரியல் பற்றிப் பேசும் இயலாகவே கருதுகின்றனர். டாக்டர் பி. எஸ். சுப்பிரமணிய சாத்திரியார் என்பவர் “கிளவியாக்கம் என்னும் இயல் வாக்கியத்தில் அமையும் எழுவாய் பயனிலை ஆகியவற்றின் இயைபைப் பற்றிப் பேசுகிறது” என்று கூறுகிறார். டாக்டர் ச. அகத்தியலிங்கம் “கிளவியாக்கம் என்னும் இவ்வியலின்கண் எழுவாய் – பயனிலை பெயரடை, பெயர் போன்றவற்றில் காணப்படும் இயைபு, வாக்கியங்களில் காணப்படும் பல்வேறு சொற்களின் முறைவைப்பு, இரு வாக்கியங்கள் இணையும் பொழுது ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல செய்திகள் காணப்படுகின்றன” என எடுத்துக் காட்டுகிறார். (திராவிட மொழிகள் 1-ப-163)

ஒரு பெயர்ச்சொல்லோடு வெவ்வேறு வேற்றுமை உருபுகள் சேர்வதால் தொடரின் பொருள் வேறுபடுகின்றது.

(எ.டு)

கண்ணாடியைப் பார்த்தான்

கண்ணாடியால் பார்த்தான்

கண்ணாடியில் பார்த்தான்

இவ்வாக்கியங்களில், ஐ, ஆல், இல் முதலிய வேற்றுமை உருபுகள் தொடர்ப் பொருளை வேறுபடுத்திக் காட்டுவதை உணர்கிறீர்கள். ஆனால்,

பாலோடு தேன் கலந்தான்

பாலில் தேன் கலந்தான்

என்ற தொடர்களில் ஒடு என்ற மூன்றாம் வேற்றுமை உருபும், இல் என்ற ஏழாம் வேற்றுமை உருபும் ஒரே பொருளைத்தான் தருகின்றன. இவ்வாறு வெவ்வேறு வேற்றுமை உருபுகள் தொடர்ப் பொருளை வெவ்வேறாக மாற்றுகின்ற காரணத்தாலும், தொடரில் தம் பொருள் இழந்து ஒரே பொருளில் வரும் காரணத்தாலும் தொடரியலில் வேற்றுமை முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புலப்படும். ஆகவே, கிளவியாக்கத்தை அடுத்து அமைந்துள்ள வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு ஆகியவற்றில் தொல்காப்பியர் வேற்றுமைகளைத் தொடரியல் அடிப்படையில் ஆராய்ந்துள்ளார்.

மேலே கூறியவற்றால், தொல்காப்பியத்தில் உள்ள சொல்லதிகாரம் உருபனியலோடு தொடரியலைப் பற்றியும் கூறுகிறது என்னும் கருத்து தெளிவாகும். இனி, தொல்காப்பியர் எழுவாய் – பயனிலை இயைபு, சொற்களின் வரன்முறை, தொடரில் பொருள் மயக்கம், தொடர் வகைகள் முதலியன பற்றிக் கூறும் தொடரியல் கருத்துகளைக் காண்போம்.

4.2 எழுவாய் - பயனிலை இயைபு

ஒரு தொடரில் அமைய வேண்டிய தலையாய உறுப்புகளாகக் கருதப்படுவன எழுவாய் (Subject), பயனிலை (Predicate) ஆகிய இரண்டும் ஆகும். எழுவாய் பெயர்ச்சொல்லாக இருக்கும். பயனிலை பெரும்பாலும் வினைச்சொல்லாக இருக்கும்; சிறுபான்மை பெயர்ச்சொல்லாக இருக்கும். எழுவாய் எனப்படும் பெயர்ச்சொல், பயனிலை எனப்படும் வினைச்சொல்லைக் கொண்டு முடியும்போது அது தொடர் அல்லது வாக்கியம் என்று கூறப்படுகிறது.

தமிழில் பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இரண்டும் திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டும். உலக மொழிகள் பலவற்றில் பெயர்ச்சொற்கள் மட்டுமே பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டுகின்றன. வினைச்சொற்கள் பெரும்பாலும் இவற்றைக் காட்டுவது இல்லை. சான்றாக ஆங்கில மொழியில்,

e came என்ற தொடரில்

e என்ற பெயர்ச்சொல் ஆண்பால், ஒருமை, படர்க்கை ஆகியவற்றைக் காட்டுகிறது. ஆனால் அது கொண்டு முடியும் came என்ற வினைச்சொல் இவற்றைக் காட்டவில்லை.

தமிழில் அவன் வந்தான் என்ற தொடரில் அவன் என்ற பெயர்ச்சொல் உயர்திணை, ஆண்பால், ஒருமை, படர்க்கை ஆகியவற்றைக் காட்டுகிறது. அச்சொல் கொண்டு முடியும் வந்தான் என்ற வினைச்சொல்லும் இவற்றைக் காட்டுகிறது. எனவே தமிழில் ஒரு தொடரில் எழுவாயாக அமையும் பெயர்க்கும் அது கொண்டு முடியும் பயனிலையாகிய வினைக்கும் இடையே திணை, பால், எண், இடம் ஆகியவற்றில் இயைபு காணப்படுகிறது. இந்த இயைபே எழுவாய் – பயனிலை இயைபு என்று கூறப்படுகிறது.

தொல்காப்பியர் கிளவியாக்கத்தில் பல நூற்பாக்களில் எழுவாய் – பயனிலை இயைபு பற்றிப் பேசுகிறார். அவற்றில் சிலவற்றை இங்கு விளக்கமாகக் காண்போம்.

4.2.1 திணை, பால், இயைபு தமிழ் வினைச்சொற்களின் இறுதியில் வரும் பால் ஈறுகளைத் தொல்காப்பியர் எடுத்துரைக்கிறார். னகர ஒற்று ஆண்பாலையும் ளகர ஒற்று பெண்பாலையும், ரகர ஒற்று, ப, மார் என்பன பலர்பாலையும் குறிக்க வரும். து, று, டு என்பன அஃறிணை ஒன்றன் பாலையும் அ, ஆ, வ என்பனபலவின் பாலையும் குறிக்க வரும். இப்பதினோரெழுத்துகளும் வினைச் சொற்களின் இறுதியில் பால் உணர்த்த வேண்டித் தவறாது வரும் என்று தொல்காப்பியர் கூறுகிறார். (தொல்.சொல். 10)

ஆயினும் அனைத்துப் பெயர்ச்சொற்களும் இந்தப் பால் ஈறுகளைப் பெற்று வருவதில்லை. அவன், ஒருவன், பாண்டியன், தலைவன் போன்றஆண்பால் பெயர்ச்சொற்களிலும் அவள், மகள், மனையாள் (மனைவி) போன்ற பெண்பால் பெயர்ச்சொற்களிலும் அவர், நால்வர், அரசர், மாந்தர், தோழிமார், தாய்மார் போன்ற பலர்பால் பெயர்ச் சொற்களிலும் அது, ஒன்று என்பன போன்ற ஒரு சில ஒன்றன்பால் பெயர்ச்சொற்களிலும் பல, சில என்பன போன்ற ஒரு சில பலவின்பால் பெயர்ச் சொற்களிலும் திணை, பால் உணர்த்தும் ஈறுகள் இடம்பெறுகின்றன. ஆனால், ஆடூஉ, நம்பி, விடலை, கோ, பாரி போன்றவை ஆண்பால் பெயர்கள். இவற்றில் ஆண்பாலுக்குரிய னகர ஈறு இல்லை. மகடூஉ, நங்கை, தோழி, தாய், தந்தை, மங்கை, ஒளவை போன்றவை பெண்பால் பெயர்கள். இவற்றில் பெண்பாலுக்குரிய ளகர ஈறு இல்லை. அஃறிணைச் சொற்களில் மரம், மண், மலை, கடல், யானை, நாய், பூ போன்ற எண்ணற்ற சொற்களில் ஒன்றன்பால், பலவின்பால் ஈறுகள் இல்லை. இத்தகைய சொற்களில் அவை உணர்த்தும் பொருளைக் கொண்டு தான் திணை, பால் அறிய வேண்டும்.

பாலீறு பெற்று வினைச்சொற்களும், பாலீறு பெற்றோ பெறாமலோ பெயர்ச்சொற்களும் திணை, பால் உணர்த்துவது தமிழின் இயல்பு. எனவே தொல்காப்பியர், ‘ஒரு தொடரில் எழுவாயாக வரும் பெயர்ச்சொல் என்ன திணை, பாலை உணர்த்துகிறதோ, அவற்றைத்தான் பயனிலையாகிய வினைச்சொல்லும் உணர்த்த வேண்டும்’ என்று கூறுகிறார். இதனை,

வினையின் தோன்றும் பால் அறி கிளவியும்

பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும்

மயங்கல் கூடா தம்மர பினவே

(தொல். சொல். 11)

என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

(பால்அறி கிளவி = பால் உணர்த்தும் சொல் ; மயங்கல் கூடாது = முரண்படக் கூடாது)

திணை, பால் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடும் எழுவாய் – பயனிலை இயைபினைக் கீழ்க் காணும் ஐந்து வாய்பாடுகளில் அடக்கிக் கூறலாம்.

வாய்பாடு – 1          ஆண்பால் எழுவாய்     + ஆண்பால் பயனிலை

அவன்     வந்தான்

பாண்டியன்     வென்றான்

பாரி     கொடுத்தான்

வாய்பாடு – 2         பெண்பால் எழுவாய்     + பெண்பால் பயனிலை

அவள்     வந்தாள்

தலைவி     நடந்தாள்

மங்கை     பாடினாள்

வாய்பாடு – 3          பலர்பால் எழுவாய்     + பலர்பால் பயனிலை

அவர்     வந்தார்

நால்வர்     சென்றனர்

தாய்மார்     மகிழ்ந்தனர்

வாய்பாடு – 4          ஒன்றன்பால் எழுவாய்     + ஒன்றன்பால் பயனிலை

அது     வந்தது

நாய்     ஓடிற்று

யானை     பிளிறியது

வாய்பாடு – 5          பலவின்பால் எழுவாய்     + பலவின்பால் பயனிலை

அவை     வந்தன

மரங்கள்     பூத்தன

நாய்கள்     குரைத்தன

4.2.2 இடம், எண் இயைபு மேலே கண்ட படர்க்கைப் பெயர்ச்சொற்களும் அவை கொண்டு முடியும் வினைச்சொற்களும் வெளிப்படையாகப் பால் காட்டுவன. எனவே அவற்றிற்கு இடையே உள்ள திணை, பால் இயைபு பற்றித் தொல்காப்பியர் விரிவாகப் பேசினார். யான், யாம், நாம் ஆகிய தன்மை இடப்பெயர்களும் நீ, நீயிர் ஆகிய முன்னிலை இடப்பெயர்களும் படர்க்கை இடப்பெயர்களைப் போலப் பால் காட்டுவது இல்லை. ஒருமை, பன்மை என்ற எண்ணை மட்டுமே காட்டும். எனவே இவ்விரு வகைப் பெயர்களும் தொடரில் எழுவாயாக வரும்போது, ஒருமைப் பெயர்கள் ஒருமை வினை கொண்டும் பன்மைப் பெயர்கள் பன்மை வினை கொண்டும் முடிய வேண்டும் என்ற இயைபைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்தினார். இந்த இயைபினைக் கீழ்க்காணும் நான்கு வாய்பாடுகளில் அடக்கிக் கூறலாம்.

வாய்பாடு – 1      தன்மை ஒருமை எழுவாய்     + தன்மை ஒருமைப் பயனிலை

யான்       வந்தேன்

வாய்பாடு – 2     தன்மைப் பன்மை எழுவாய்     + தன்மைப் பன்மைப் பயனிலை

யாம்     வந்தேம்

நாம்     செல்வாம்

வாய்பாடு – 3     முன்னிலை ஒருமை எழுவாய்     + முன்னிலை ஒருமைப் பயனிலை

நீ     வந்தாய்

வாய்பாடு – 4     முன்னிலைப் பன்மை எழுவாய்     + முன்னிலைப் பன்மைப் பயனிலை

நீயிர்     வந்தீர்

மேலே கூறியவற்றால் தொல்காப்பியர் காலத் தமிழில் எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே திணை, பால், எண், இடம் ஆகியவற்றில் இயைபு காணப்படுவது தெளிவாகிறது. இந்த இயைபு பற்றிய ஒன்பது வாய்பாடுகளும் இன்று வரையிலும் நீடித்திருப்பன ஆகும்.

4.2.3 தொடரில் வழுக்கள் எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே திணை, பால், எண், இடம் பற்றிய இயைபு இல்லாமல் மாறி அமையுமானால் அது வழு (குற்றம்) என்று கூறப்படும். வழு, திணை வழு, பால் வழு, எண் வழு, இட வழு என நால்வகைப்படும்.

திணை வழு      – அவன் வந்தது ;       அது வந்தாள்

பால் வழு           – அவன் வந்தாள் ;     அவை வந்தது

எண் வழு           – நீ வந்தீர் ;                     நீயிர் வந்தாய்

இட வழு            – நான் வந்தான் ;         அவன் வந்தேன்

இத்தகைய வழுக்கள் இல்லாமல் எழுவாய் பயனிலைத் தொடர்கள் அமைய வேண்டும் என்பதையே தொல்காப்பியர் கிளவியாக்கத்தில் வற்புறுத்திக் கூறுகிறார்.

4.2.4 எண்ணுநிலைத் தொடர் ஒரு தொடரில் ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்கள் இணைந்து எழுவாய்களாக வருவது உண்டு. அவ்வாறு வரும்போது அப்பெயர்கள் எல்லாவற்றின் இறுதியிலும் உம் என்ற இடைச்சொல் சேர்ந்து வரும். ஆங்கிலத்தில் உம் என்பதற்கு இணையாக and என்பது வரும். ஆனால் இது அம்மொழியில் ஓரிடத்தில் மட்டுமே வரும்.

Rama and Sita came

The Chera the Chola and the Pandya came

ஆனால் தமிழிலோ,

இராமனும் சீதையும் வந்தனர்

சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்

என்று தொடர்களில் வரும் எல்லாப் பெயர்களின் இறுதியிலும் உம் வரும்.

இவ்வாறு வரும் உம், எண்ணப்படும் பொருளில் வழங்குவதால் எண்ணும்மை என்று கூறப்படுகிறது. எழுவாய்தோறும் எண்ணும்மை பெற்று வரும் தொடர்களை எண்ணுநிலைத் தொடர் என்று இக்கால மொழிநூலார் குறிப்பிடுகின்றனர். எண்ணும்மைப் பொருளில் வெவ்வேறு திணைக்கும், பாலுக்கும், இடத்திற்கும் உரிய பெயர்கள் ஒரு தொடரில் இணைந்து வரும்போது அவை எத்தகைய வினைகளைப் பயனிலையாகப் பெற்று முடியும் என்பது பற்றித் தொல்காப்பியர் கிளவியாக்கத்தில் கூறுகிறார்.

(1) உயர்திணைக்கு உரிய தன்மைப் பெயர்ச்சொல்லும் அஃறிணைப் படர்க்கைப் பெயர்ச்சொல்லும் எண்ணும்மைப் பொருளில் இணைந்து எழுவாய்கள் ஆகும் போது அவை உயர்திணைக்குரிய தன்மைப் பன்மை வினையைப் பயனிலையாகப் பெற்று முடியும். (தொல். சொல். 43)

(எ.டு) யானும் என் நாயும் செல்வேம்.

தன்மைப் பெயரும் படர்க்கைப் பெயரும் எழுவாய்களாக வரும் தொடர் தன்மை வினையைக் கொண்டு முடிவது இலக்கண முறைப்படி இடவழு என்றாலும் இடவழுவமைதியாக (வழுவை இலக்கணமாக அனுமதித்துக் கொள்ளல்) ஏற்றுக் கொள்ளப்பட்டது.

(2) செய்யுளில் உயர்திணைப் பெயரும் அஃறிணைப் பெயரும் எண்ணும்மைப் பொருளில் வரும்போது அவை பெரும்பாலும் அஃறிணை வினைகளைப் பயனிலையாகக் கொண்டு முடியும். (தொல். சொல். 51)

இவ்வாறு இருதிணைச் சொற்கள் எழுவாய்களாக வரும்போது ஏதேனும் ஒரு திணைக்குரிய வினைச்சொல் பயனிலையாக வருவது வழு. எனினும் இதனைத் திணை வழுவமைதியாக ஏற்றுக் கொள்கின்றனர்.

(எ.டு) “முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா”.

சிறுபான்மை இத்தகைய பெயர்கள் உயர்திணை வினைகொண்டும் முடியும்.

(எ.டு) “தானும் தன் புரவியும் தோன்றினான்”

(3) வியங்கோள் வினைமுற்று இருதிணைக்கும் பொதுவானது. ஆகவே வியங்கோள் வினைமுற்றைக் கொண்டு முடிகின்ற எண்ணு நிலைத் தொடரில் உயர்திணைப் பெயரும் அஃறிணைப் பெயரும் விரவி எழுவாய்களாக வருவது உண்டு. (தொல். சொல். 45)

(எ.டு) ஆவும் ஆயனும் செல்க. நாயும் வேடனும் செல்க.

4.2.5 முற்றும்மைத் தொடர் இவ்வளவு என்று வரையறுக்கப்பட்ட சினைப் பெயர்ச்சொல்லும் முதல் பெயர்ச்சொல்லும் எழுவாயாக நின்று வினையொடு தொடரும் பொழுது அத்தொகுதிப் பெயருக்கு இறுதியில் உம் கொடுத்துக் கூற வேண்டும் இந்த உம்மை முற்றும்மை என்று கூறப்படும்.

(எ.டு) இரு கண்ணும் சிவந்தன. மூவேந்தரும் வந்தனர்.

4.3 சொற்கள் வரன்முறை (Word Order)

ஒரு தொடர் அமைவதற்குக் காரணம் சொற்களே ஆகும். ஆனால் சொற்கள் பல இருப்பதால் மட்டுமே ஒரு தொடர் அமைந்து விடுவது இல்லை. சான்றாக,

“இராமன் மரம் அந்த ஐ கறுப்பு பார்த்தான் இல் பூனை”

என்பதை எடுத்துக் கொள்வோம். இதில் எட்டுச் சொற்கள் உள்ளன. இருப்பினும் இதை ஒரு தொடர் என்று கூற முடியாது. காரணம், இச்சொற்கள் இம்முறையில் வரும்போது குறிப்பிட்ட ஒரு பொருளை உணர்த்தவில்லை. ஆனால் இதே சொற்களை,

“இராமன் அந்த மரத்தில் கறுப்புப் பூனையைப் பார்த்தான்”

என்று ஒரு முறைப்பட அமைக்கும் போது பொருள் உணர்த்தப்படுகிறது. இவ்வாறு சொற்கள் ஓர் ஒழுங்கான முறையில் ஒன்றன்பின் ஒன்றாக வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை உணர்த்தும் போதே தொடர் அமைகிறது. எனவே தொடர் அமைப்பில் சொற்களின் வரன்முறை என்பது இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது.

உலக மொழிகள் சிலவற்றில் தொடர் இலக்கணம் திட்பம் உடையதாக உள்ளது. இந்த மொழிகளில் ஒரு தொடரில் முறைப்பட அமைந்த சொற்களில் ஒரு சொல்லை இடம் மாற்றி அமைத்தாலும் பொருள் இல்லாமல் போய் விடுகிறது, அல்லது பொருள் மாறி விடுகிறது. சான்றாக ஆங்கில மொழியில்,

John Came John Killed Jack

என்ற தொடர்களில் சொற்கள் இம் முறைப்படிதான் வர வேண்டும். இவற்றில் முதல் தொடர், Came John என்று மாறி வரும்போது பொருள் இல்லை. இரண்டாவது தொடர், Jack Killed John என்று மாறி வரும்போது வேறு ஒரு பொருள் தரக்கூடிய தொடராக மாறி விடுகிறது.

உலக மொழிகள் வேறு சிலவற்றிலோ தொடர் இலக்கணம் நெகிழ்ச்சி உடையதாக உள்ளது. இந்த மொழிகளில் குறிப்பிட்ட அமைப்புடைய தொடர்களில் முறைப்பட அமைந்த சொற்களில் ஒரு சொல்லை இடம் மாற்றி அமைத்தாலும் பொருள் மாறுவது இல்லை. சான்றாகத் தமிழில்,

“இராமன் வந்தான்”

“இராமன் மரத்தைப் பார்த்தான்”

என்ற தொடர்களில் சொற்கள் இம் முறையில் அன்றி, இடம் மாறி அமைந்தாலும் பொருள் மாறுவது இல்லை. இத்தொடர்களில் முதலாவது தொடர். வந்தான் இராமன் என்று மாறி வந்தாலும் பொருள் மாறவில்லை. இதற்குக் காரணம் தமிழில் எழுவாயாக வரும் பெயர்க்கும் பயனிலையாக வரும் வினைக்கும் இடையே திணை, பால், எண், இடம் ஆகியவற்றில் இயைபு காணப்படுவதே ஆகும். இரண்டாவது தொடரில் உள்ள மூன்று சொற்களையும்,

“இராமன் பார்த்தான் மரத்தை”

“மரத்தை இராமன் பார்த்தான்”

“மரத்தைப் பார்த்தான் இராமன்”

“பார்த்தான் இராமன் மரத்தை”

“பார்த்தான் மரத்தை இராமன்”

என்று எப்படி மாற்றி அமைத்தாலும் தொடரின் பொருள் மாறவில்லை. இதற்குக் காரணம் இராமன் என்ற எழுவாயும் பார்த்தான் என்ற பயனிலையும் இயைந்திருப்பதுதான். மேலும் மரம் என்ற செயப்படு பொருளை உணர்த்தும் பெயரோடு ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு இறுதியில் சேர்ந்து வருவதும் ஆகும். பெயர்ச் சொற்களின் இறுதியில் வரும் ஐ, ஆல் போன்ற சில வேற்றுமை உருபுகள் தொடரமைப்பை நெகிழ்ச்சியுறச் செய்து விடுகின்றன. இருப்பினும் இச்சொற்களை, இராமன் மரத்தைப் பார்த்தான் என்ற வரன்முறையில் கூறுவதே முறையான தொடர் அமைப்பாகும்.

இவ்வாறு சொற்களின் வரன்முறையில் நெகிழ்ச்சி காணப்படுவதால், தமிழில் எல்லாத் தொடர்களிலுமே இத்தகைய நெகிழ்ச்சி காணப்படுகிறது என்று கூற முடியாது. சான்றாக,

“கை மேல் வளையல்”

“தண்ணீர் மேல் படகு”

என்ற தொடர்களில் உள்ள சொற்களை,

“வளையல் மேல் கை”

“படகு மேல் தண்ணீர்”

என்று மாற்றினால் வேறு பொருள் தரும் தொடர்களாக மாறி விடுகின்றன.

எனவே தமிழிலும் தொடர் அமைப்பில் சொற்களின் வரன்முறை ஓர் இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது எனலாம். இதை நன்கு உணர்ந்த தொல்காப்பியர், தொடரில் சொற்கள் எவ்வாறு தொடர்ந்து அமைய வேண்டும் என்பது பற்றிக் கிளவியாக்கத்தில் பல நூற்பாக்களில் பேசுகிறார்.

4.3.1 வண்ணச் சினைச்சொல் பண்பை உணர்த்தும் ஒரு பெயரடைச் சொல், உறுப்பை உணர்த்தும் ஒரு சொல், முழுப்பொருளை உணர்த்தும் ஒரு சொல் என மூன்று சொற்கள் சேர்ந்து வரும் தொடர் அமைப்பைத் தொல்காப்பியர் வண்ணச் சினைச்சொல் என்கிறார். அடை, சினை (உறுப்பு) முதல் என்ற வரிசை முறையில் வண்ணச் சினைச்சொல் வர வேண்டும்.

(எ.டு) “செங்கால் நாரை” (செந்நிறமான காலை உடைய நாரை)

இதில்,

செம்மை     - அடை     (பெயரடை)

கால்     - சினை     (உறுப்பின் பெயர்)

நாரை     - முதல்

என அடை, சினை, முதல் என்ற வரிசை முறையில் சொற்கள் வந்துள்ளன. இதைக் கால் செந்நாராய் என்று மாற்றினால் காலை உடைய செந்நிறமான நாரை எனப் பொருள் மாறிவிடும்.

இவ்வாறு பெயரடை, பெயருக்கு முன்னாலேயே வரும் என்பதைத் தொல்காப்பியர் உணர்த்துகிறார்.

பிற பண்பு குறித்த வண்ணச் சினைச்சொல்லுக்கு மேலும் சில சான்றுகள் :

“சிறு கண் யானை”

“நெடுங் கை வேழம்”

“பெருந் தலைச் சாத்தன்”

4.3.2 இயற்பெயரும் சுட்டுப்பெயரும் இயற்பெயரும் சுட்டுப்பெயரும் சேர்ந்து ஒரே பயனிலையைக் கொண்டு முடியும்போது, இயற்பெயர் முன் நிற்கும் ; சுட்டுப்பெயர் பின் நிற்கும்.

(எ.டு)

“சாத்தன் அவன் வந்தான்”

“பொன்னி அவள் மகிழ்ந்தாள்”

“தலைவர் அவர் பேசினார்”

இயற்பெயரும் சுட்டுப்பெயரும் தனித்தனிப் பயனிலைகளைப் பெற்று ஒரு தொடர் வாக்கியம் போல வரும்போதும் மேலே கூறியவாறு இயற்பெயரே முன் நிற்கும் ; சுட்டுப் பெயர் பின்னர் நிற்கும்.

(எ.டு)

“சாத்தன் வந்தான் ; அவனுக்குப் பொருள் தருக”

“பொன்னி வந்தாள் ; அவளுக்குப் பூக் கொடுக்க”

“கபிலர் வந்தார் ; அவருக்குப் பரிசில் தருக”

“பசு வந்தது ; அதற்குப் புல் இடுக”

4.3.3 இயற்பெயரும் சிறப்புப்பெயரும் ஒருவருடைய இயற்பெயரையும் சிறப்புப் பெயரையும் சேர்த்துத் தொடரில் எழுவாயாகக் கூறும்போது, சிறப்புப் பெயரை முன்னும், இயற்பெயரைப் பின்னும் கூற வேண்டும்.

(எ.டு) “தெய்வப் புலவர் திருவள்ளுவர் வந்தார்”

தெய்வப் புலவர் என்ற சிறப்புப் பெயரும் திருவள்ளுவர் என்ற இயற்பெயரும் சேர்ந்து, ஒரே எழுவாயாக நின்று வந்தார் என்ற பயனிலையை ஏற்பதைக் காணலாம்.

சிறப்புப் பெயர் முன்னும், இயற்பெயர் பின்னும் வருவதற்கு மேலும் சான்றுகள் :

“பாண்டியன் நெடுஞ்செழியன்”

“சோழன் நலங்கிள்ளி”

“சேரன் செங்குட்டுவன்”

“அறிஞர் இளவழகனார்”

“பேராசிரியர் வரதராசனார்”

4.4 தொடரில் பொருள் மயக்கம்

சொற்கள் ஓர் ஒழுங்கான முறையில் பொருள் நோக்கில் தொடர்ந்து அமைவதே தொடர். இவ்வாறு அமையும் ஒரு தொடர் பெரும்பாலும் ஒரு பொருளையே தரும். சில வேளைகளில் ஒரு தொடர் இரு பொருள்களைத் தந்து நிற்றல் உண்டு. அப்போது தொடரில் பொருள் மயக்கம் ஏற்படும். இத்தகைய பொருள் மயக்கத்தை இரண்டு பிரிவில் அடக்கலாம் என்று டாக்டர். ச. அகத்தியலிங்கம் கூறுகிறார். ஒன்று, பல பொருள் தரும் ஒரு சொல்லினால் உண்டாவது. இது சொல் மயக்கம் (Lexical ambiguity) எனப்படும். மற்றொன்று, சொற்களின் அமைப்பினால் உண்டாவது. இது அமைப்பு மயக்கம்(Structural ambiguity) எனப்படும். (டாக்டர். ச.அகத்தியலிங்கம், திராவிட மொழிகள். ப.170)

தொடரில் பொருள் மயக்கம் கூடாது. பொருள் தெளிவு இன்றியமையாதது. இதை நன்கு உணர்ந்த தொல்காப்பியர் இவ்விரு மயக்கமும் இல்லாமல் தொடர்ப் பொருளை (இரு வேறு பொருளை) எங்ஙனம் தெளிவாக உணர்த்த வேண்டும் என்பது பற்றி விளக்கமாகக் கூறுகிறார்.

4.4.1 சொல் மயக்கம் பல பொருள் தரும் ஒரு சொல்லானது, தான் உணர்த்தும் பல்வேறு பொருளுக்கும் உரிய பொது வினையைக் கொண்டு முடிந்தால் தொடரில் பொருள் மயக்கம் ஏற்படும். சான்றாக, மா என்னும் சொல், பல பொருள் தரும் ஒரு சொல்லாகும். இதற்கு மரம், விலங்கு என்று பல்வேறு பொருள்கள் உண்டு. மா என்னும் இச்சொல் வீழ்ந்தது என்ற வினைச்சொல் கொண்டு முடியும் போது,

மா வீழ்ந்தது

என்ற தொடர் அமைகின்றது. வீழ்ந்தது என்ற வினை, மா என்ற சொல் உணர்த்தும் மரம், விலங்கு என்னும் இரு பொருள்களுக்கும் உரிய பொது வினையாக உள்ளது. எனவே மா மரம் வீழ்ந்ததா? விலங்கு வீழ்ந்ததா? என்பதைத் தெளிவாக அறிய முடியவில்லை. இதனால் பொருள் மயக்கம் ஏற்படுகிறது. எனவே இத்தகைய நிலையில் தொல்காப்பியர் தொடரில் சொல்லின் பொருளை வெளிப்படுத்திச் சொல்ல வேண்டும் என்கிறார்.

“மா மரம் வீழ்ந்தது”

என்றும்,

“விலங்கு மா வீழ்ந்தது”

என்றும் மா என்ற சொல்லின் இருவேறு பொருள்களை வெளிப்படையாகச் சொல்லித் தொடரை அமைத்தல் வேண்டும். (தொல். சொல். 54, 55) இதனால் பொருள் மயக்கம் தவிர்க்கப்படுகிறது.

4.4.2 அமைப்பு மயக்கம் சொற்களின் அமைப்பினால் பொருள் மயக்கம் உண்டாவது அமைப்பு மயக்கம் எனப்படும்.

(எ.டு) புலி கொன்ற யானை

இத்தொடரில், யானை புலியைக் கொன்றதா? புலி யானையைக் கொன்றதா? என்பது தெளிவாக இல்லை. எனவே பொருள் மயக்கம் ஏற்படுகிறது. இத்தகைய மயக்கத்தைத் தவிர்க்கும் முறையைத் தொல்காப்பியர் வேற்றுமை மயங்கியலில் குறிப்பிடுகிறார். (தொல். சொல். 96) அதன்படி இம்மயக்கத் தொடரை, இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வருமாறு விரித்து,

“புலியைக் கொன்ற யானை”

என்றும், மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஆன் (ஆல்) வருமாறு விரித்து,

“புலியால் கொல்லப்பட்ட யானை”

என்றும் பொருள் மயக்கம் நீங்குமாறு இருவேறு தொடர்களாக்கித் தெளிவாகக் கூற வேண்டும் என்று தெளிவுறுத்துகிறார்.

4.5 தொடர் வகைகள்

தொல்காப்பியர் காலத் தமிழில் பல்வகைத் தொடர்கள் வழங்கின. தொல்காப்பியர் அத்தொடர் வகைகள் எவை எவை என்பதைத் தொகுத்துக் கூறவில்லை. எனினும் அவர் சொல்லதிகாரத்தில் உள்ள வேற்றுமை இயல், விளி மரபு, வினையியல், எச்சவியல் ஆகியவற்றில் ஆங்காங்கே அவர் காலத்தில் வழங்கிய பல்வேறு தொடர்களைப் பற்றியும் அவற்றின் அமைப்புப் பற்றியும் கூறுகிறார். அவர் கூறியுள்ளனவற்றின் வழிநின்று அவர் காலத் தமிழில் கீழ்க்கண்ட தொடர் வகைகள் அமைந்திருந்தன எனலாம்.

1.   எழுவாய்த் தொடர்

2.   வினைமுற்றுத் தொடர்

3.   வேற்றுமைத் தொடர்

4.   விளித் தொடர்

5.   வினையெச்சத் தொடர்

6.   பெயரெச்சத் தொடர்

7.   அடுக்குத் தொடர்

இத்தொடர்கள் பற்றித் தொல்காப்பியர் கூறுவனவற்றைச் சுருக்கமாகக் காண்போம்.

4.5.1 எழுவாய்த் தொடர் தொல்காப்பியர் குறிப்பிடும் வேற்றுமைகள் எட்டு. அவற்றுள் முதல் வேற்றுமையே எழுவாய்த் தொடர் எனக் கூறப்படுகிறது. எழுவாயாக நிற்கும் பெயர், ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது எழுவாய்த் தொடர் எனப்படும். எழுவாயோடு ஏற்படும் உறவின் அடிப்படையில் பயனிலையை வகைப்படுத்தும் முயற்சியை இக்கால மொழிநூலார் பலரும் மேற்கொண்டுள்ளனர். தொல்காப்பியரும், எழுவாய் கொண்டு முடியும் பயனிலைகளை ஆறு வகையாகப் பாகுபடுத்துகிறார். இதனை,

பொருண்மை சுட்டல், வியங்கொள வருதல்,

வினைநிலை உரைத்தல், வினாவிற்கு ஏற்றல்,

பண்பு கொள வருதல், பெயர் கொள வருதல், என்று

அன்றி அனைத்தும் பெயர்ப் பயனிலையே

(தொல். சொல். 67)

என்ற வேற்றுமை இயல் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

(பெயர்ப் பயனிலை = பெயர்ச்சொல் ஏற்கும் பயனிலை)

(1) பொருண்மை சுட்டல் : பொருளினது உளதாம் தன்மையைச் சுட்டல்.

“கடவுள் உண்டு”

(2) வியங்கொள வருதல் : வியங்கோள் வினை பயனிலையாக வருதல்.

“அரசன் வாழ்க”

(3) வினைநிலை உரைத்தல் : தெரிநிலை வினை பயனிலையாக வருதல்.

“சாத்தன் வந்தான்”

(4) வினாவிற்கு ஏற்றல் : வினாச் சொல் பயனிலையாக வருதல்.

“அவன் யார்?”

(5) பண்பு கொள வருதல் : பண்பு அடியாகத் தோன்றும் குறிப்பு வினை பயனிலையாக வருதல்.

“கொற்றன் கரியன்”

(6) பெயர் கொள வருதல் : பெயர்ச்சொல் பயனிலையாக வருதல்.

“சாத்தன் வணிகன்”

4.5.2 வினைமுற்றுத் தொடர் பெயர் முன்னும் வினை பின்னுமாக வந்து அமைவது எழுவாய்த் தொடர். இதற்கு நேர் மாறாக வினை முன்னும் பெயர் பின்னுமாக வந்து அமைவது வினைமுற்றுத் தொடர். தமிழில் பெயர், வினை இரண்டுமே திணை, பால், எண், இடம் ஆகியன காட்டுவதால் இவ்வாறு மாறி அமைய முடியும்.

“வந்தான் சாத்தன்”

தொல்காப்பியர் காலத் தமிழில் வினைமுற்றுத் தொடர்களே மிகுதியாக வழங்கின. தொல்காப்பியரும் தொல்காப்பியத்தில் எழுவாய்த் தொடர்களைக் காட்டிலும் வினைமுற்றுத் தொடர்களையே அதிகம் கையாண்டுள்ளார்.

என்மனார் புலவர்

(தொல். எழுத்து. 6)

யாப்பு என மொழிப யாப்பு அறி புலவர்

(தொல். பொருள். 383)

4.5.3 வேற்றுமைத் தொடர் இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையுள்ள ஆறு வேற்றுமைகளுக்குத் தனித் தனி உருபுகள் உண்டு. உருபுகளுக்குத் தனித் தனிப் பொருள் உண்டு. வேற்றுமை உருபுகள் பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்து வினைகளையோ பெயர்களையோ கொண்டு முடிவது வேற்றுமைத் தொடர் எனப்படும். சில வேற்றுமைத் தொடர்களில் உருபுகள் தொக்கு (மறைந்து) நிற்பதும் உண்டு. வேற்றுமைத் தொடர் ஆறு வகைப்படும். அவை வருமாறு :

(1)     இரண்டாம் வேற்றுமைத் தொடர்     - மரத்தை வெட்டினான்.

(2)     மூன்றாம் வேற்றுமைத் தொடர்       – மண்ணால் செய்த குடம்.

(3)     நான்காம் வேற்றுமைத் தொடர்        – கரும்பிற்கு வேலி.

(4)     ஐந்தாம் வேற்றுமைத் தொடர்           – காக்கையின் கரியது களம்பழம்.

(5)     ஆறாம் வேற்றுமைத் தொடர்             – சாத்தனது வீடு.

(6)     ஏழாம் வேற்றுமைத் தொடர்              – வீட்டின்கண் இருந்தான்.

மேலே காட்டிய வேற்றுமைத் தொடர்கள் உருபு தொக்கு, மரம் வெட்டினான், மண்குடம், சாத்தன் வீடு என்பன போல வேற்றுமைத் தொகைகளாகவும் வரும்.

4.5.4 விளித் தொடர் தொல்காப்பியர் கூறியுள்ள எட்டாம் வேற்றுமை, விளித்தொடர் என்று கூறப்படும்.

“நம்பீ வா”

“அன்னாய் கேள்”

“மகனே பார்”

4.5.5 வினையெச்சத் தொடர் ஓர் எச்ச வினையும், அது கொண்டு முடியும் வினைச்சொல்லும் சேர்ந்த தொடர் வினையெச்சத் தொடர் எனப்படும். இது, தெரிநிலை வினையெச்சத் தொடர், குறிப்பு வினையெச்சத் தொடர் என இரண்டு வகைப்படும்.

தெரிநிலை வினையெச்சத் தொடர்

தெரிநிலை எச்ச வினை, ஒரு வினையைக் கொண்டு முடியும் தொடர் தெரிநிலை வினையெச்சத் தொடர் எனப்படும்.

“உண்டு வந்தான்”

“உண்ண வந்தான்”

குறிப்பு வினையெச்சத் தொடர்

குறிப்பு எச்ச வினை, ஒரு வினையைக் கொண்டு முடியும் தொடர் குறிப்பு வினையெச்சத் தொடர் எனப்படும். இதை இக்கால மொழிநூலார் வினையடைத் தொடர் என்று கூறுவர்.

“நன்கு பேசினான்”

“மெல்ல வந்தான்”

பல வினையெச்சங்கள் அடுக்கி வரல்

வினையெச்சங்கள் ஒரு தொடரில் பலவாக அடுக்கியும் வரலாம். அவ்வாறு வரினும் அவை ஒரு வினை கொண்டே முடிய வேண்டும் என்கிறார் தொல்காப்பியர். (தொல். சொல். 235)

“உண்டு தின்று ஆடிப் பாடி மகிழ்ந்து வந்தான்”

4.5.6 பெயரெச்சத் தொடர் ஓர் எச்ச வினை, ஒரு பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் எனப்படும். இது, தெரிநிலைப் பெயரெச்சத் தொடர், குறிப்புப் பெயரெச்சத் தொடர் என இரு வகைப்படும்.

தெரிநிலைப் பெயரெச்சத் தொடர்

தெரிநிலை எச்ச வினையானது, ஒரு பெயரைக் கொண்டு முடிவது தெரிநிலைப் பெயரெச்சத் தொடர் எனப்படும். தெரிநிலைப் பெயரெச்சம் கொண்ட இடம், செயப்படு பொருள், காலம், கருவி, வினைமுதல் (எழுவாய்), வினைப்பெயர் ஆகிய ஆறு வகையான பெயர்களைக் கொண்டு முடியும் என்கிறார் தொல்காப்பியர் (தொல். சொல். 236)

வாழுமில்                  – இடம்

கற்குநூல்,                 – செயப்படு பொருள்

துயிலுங்காலம்,     - காலம்,

வெட்டும் வாள்       – கருவி

வந்த சாத்தன்          – வினைமுதல் (எழுவாய்)

உண்ணும் ஊண்     – வினை

குறிப்புப் பெயரெச்சத் தொடர்

குறிப்பு எச்ச வினையானது, ஒரு பெயரைக் கொண்டு முடிவது குறிப்புப் பெயரெச்சத் தொடர் எனப்படும். இதனை, இக்கால மொழி நூலார் பெயரடைத் தொடர் என்பர்.

“நல்ல மக்கள்”

“இனிய மனைவி”

4.5.7 அடுக்குத் தொடர் பேசுவோனுக்குத் திடீர் என்று ஓர் உணர்ச்சி ஏற்பட, வாக்கியத்தில் முன்னும் பின்னும் வெவ்வேறு சொற்களை அமைக்காமல், ஒரே சொல்லையே திரும்பத் திரும்ப இருமுறை, மும்முறை கூறுதல் உண்டு. இதுவே அடுக்குத் தொடர் எனப்படும். விரைவு துணிவு போன்ற பொருள் காரணமாக அடுக்குத் தொடர் அமையும் என்கிறார் தொல்காப்பியர் (தொல். சொல். 421, 424).

“பாம்பு பாம்பு பாம்பு”

“தீ தீ தீ”

“போ போ போ”

4.6 தொகுப்புரை

இதுகாறும் தொல்காப்பியர் காலத் தமிழ்மொழியின் தொடரியலைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். தொடரில் எழுவாயாக வரும் பெயர்க்கும். அது கொண்டு முடியும் பயனிலையாகிய வினைக்கும் இடையே திணை, பால், இடம், எண் ஆகியவற்றில் இயைபு காணப்பட வேண்டும் என்பதைத் தொல்காப்பியர் நன்கு விளக்கிக் கூறியுள்ளார். ஏறத்தாழ 2300 ஆண்டுகட்கு முன்பு தொல்காப்பியர் கூறியுள்ள இந்தத் தொடரியல் கோட்பாடு தமிழ் மொழி வரலாற்றில் காலம்தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இன்று நம்முடைய காலத் தமிழிலும் இது அப்படியே கடைப்பி்டிக்கப்பட்டு வருகிறது. ஒரு தொடரில் எழுவாய்கள் பலவாக வரும் போது, எழுவாய்தோறும் உம் கொடுத்துக் கூற வேண்டும் என்று தொல்காப்பியர் கூறியுள்ள விதியும் இன்றையத் தமிழின் தொடர் அமைப்பில் பேணப்படுகிறது. தொடரில் சொற்களின் வரன்முறை ஓர் இன்றியமையாத இடத்தைப் பெறுவதால் அதைப் பற்றியும் தொல்காப்பியர் கூறியுள்ளார். தொடரில் பொருள் மயக்கம் வரல் கூடாது என்பதை வற்புறுத்தியுள்ளார். பொருள் மயக்கம் வரும் இடங்களில் தொடர்ப் பொருளை மயக்கம் இல்லாமல் எங்ஙனம் தெளிவாக உணர்த்த வேண்டும் என்பது பற்றி விளக்கமாகக் கூறியுள்ளார். மேலும் அவர் காலத் தமிழில் வழங்கிய பல்வேறு தொடர்களைப் பற்றியும் சொல்லதிகாரத்தில் ஆங்காங்கே விளக்கிக் காட்டியுள்ளார். சுருங்கக் கூறின் தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் தமிழ் மொழியின் தொடரியல் கோட்பாடுகள் பலவற்றைத் திறம்பட ஆராய்ந்து கூறியுள்ளார் எனலாம்.

பாடம் - 5

சங்ககாலத் தமிழ்

5.0 பாட முன்னுரை

தமிழ்மொழி வரலாற்றில் தொல்காப்பியர் காலத்தை அடுத்து இடம் பெறுவது சங்க காலம். பாண்டிய மன்னர்களால் நிறுவப்பட்ட தமிழ்ச் சங்கத்தில் புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்த காலம் என்பதால் இது சங்ககாலம் எனப்பட்டது. இது கி.பி. முதல் இரு நூற்றாண்டுகளைக் குறிக்கும் என அறிஞர்கள் கருதுகின்றனர். சங்ககாலத் தமிழின் வரலாற்றை அறிவதற்குச் சங்க இலக்கியம் என்று கூறப்படும் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தலைசிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன.

ஒரு மொழியில் காலந்தோறும் படிப்படியாகவே மாற்றங்கள் நிகழ்வது இயற்கை. தொல்காப்பியர் காலத்திற்கு இருநூறு ஆண்டுகள் பிற்பட்டதே சங்ககாலம். எனினும் சங்ககாலத்தில் வழங்கிய தமிழ், தொல்காப்பியர் காலத் தமிழிலிருந்து பெரும்பாலும் வேறுபடவில்லை. “தொல்காப்பியர் காலத்தமிழில் காணப்படும் இலக்கணப் போக்குகள் பல சங்ககாலத் தமிழில் நிலைபெறுகின்றன. குறிப்பிடத்தக்க சில மாற்றங்களைத் தவிரச் சங்ககாலத் தமிழ் முழுக்க முழுக்கத் தொல்காப்பியர் காலத் தமிழே ஆகும்” என்று டாக்டர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் குறிப்பிடுவது இங்கே கருதத்தக்கது.

இப்பாடத்தில் தொல்காப்பியர் காலத் தமிழ்மொழியின் ஒலியனியல், உருபனியல் ஆகியவை குறித்த இலக்கணங்கள் சங்ககாலத் தமிழில் எந்த அளவு நிலைபெற்றுக் காணப்படுகின்றன என்பது பற்றியும், எந்த அளவு வழக்கொழிந்து போயின அல்லது செல்வாக்கு இழந்து போயின என்பது பற்றியும் காணலாம். மேலும் தொல்காப்பியர் காலத் தமிழிலிருந்து சங்ககாலத் தமிழ் பெற்றுள்ள மாற்றங்களும் வளர்ச்சிகளும் சுட்டிக் காட்டப்படுகின்றன.

5.1 சங்ககாலத் தமிழ் இலக்கியங்கள் - ஓர் அறிமுகம்

சங்ககால இலக்கியம் என்று கூறப்படுவன எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு, பரிபாடல் ஆகிய தொகை நூல்கள் எட்டுத்தொகையுள் அடங்குவன. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய நெடும்பாடல்கள் பத்தும் பத்துப்பாட்டுள் அடங்கும்.

தெ. பொ.மீனாட்சிசுந்தரனார், ச.அகத்தியலிங்கம், செ.வை.சண்முகம், சு.சக்திவேல் போன்ற தமிழ்மொழி வரலாற்று ஆசிரியர்கள் எட்டுத்தொகையில் உள்ள பரிபாடல், கலித்தொகை ஆகிய இரு நூல்கள் சங்ககாலத்தில் தோன்றியவை அல்ல ; சங்ககாலத்தை அடுத்த சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை எனக்கொள்கின்றனர். பரிபாடலில் மட்டும் நான் என்ற புதிய தன்மை ஒருமை வடிவம் காணப்படுவது கொண்டும், கலித்தொகையில் மட்டும் கள் எனும் அஃறிணைப் பன்மை விகுதி உயர்திணைப் பன்மையில் வருவது கொண்டும் அவர்கள் இம்முடிவுக்கு வருகின்றனர்.

இவ்வழக்குகள் மிகச் சிறுபான்மையானவை. அகநானூற்றில் (43-ஆம் பாடல்) பாடிய நல்லந்துவனாரே பரிபாடலிலும் கலித்தொகையிலும் பாடியுள்ளார். ஆகவே கலித்தொகையும் பரிபாடலும் சங்ககால இலக்கியங்கள் என்று கொள்வதே பொருந்தும்.

எனவே இப்பாடத்தில் பாட்டும் தொகையும் ஆகிய பதினெட்டு நூல்களையும் சங்ககால நூல்களாகவே கொண்டு அவற்றின் வழிநின்று சங்ககாலத் தமிழ்மொழியின் இயல்புகள் காட்டப்படுகின்றன.

5.2 ஒலியனியல்

ஒலியனியலைப் பொறுத்தவரை ஒருசில மாற்றங்களைத் தவிர, தொல்காப்பியர் காலத் தமிழே சங்க காலத்தில் வழங்கியுள்ளது. ஐ, ஒள என்னும் கூட்டொலிகள், மொழி முதல் மற்றும் இறுதியில் வரும் எழுத்துகள் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள விதிகளிலிருந்து சங்ககாலத் தமிழ் ஒருசில மாற்றங்களைப் பெற்று வளர்ந்துள்ளது.

5.2.1 ஐ, ஒள – கூட்டொலிகள் உயிரொலிகளில் ஐ, ஒள என்னும் இரண்டும் கூட்டொலிகளாகும். தொல்காப்பியர் காலத்தில் ஐகாரம், ஐ என்றும் அய் என்றும் இரு வகையாக எழுதப்பட்டது. ஆனால் ஒளகாரம் அவர் காலத்தில் ஒள என்று மட்டுமே எழுதப்பட்டது; அவ் என்று எழுதப்படவில்லை.

இதற்கு நேர் மாறாகச் சங்க காலத்தில் ஐகாரம், ஐ என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது ; அய் என்று எழுதப்படவில்லை. சான்றாகச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் ஐவர், ஐந்து, ஐம்பது போன்ற சொற்கள் அய்வர். அய்ந்து, அய்ம்பது என்றாற் போல எந்த ஓரிடத்திலும் எழுதப்படவில்லை. ஆனால் ஒளகாரமோ சங்ககாலத் தமிழில் ஒள என்றும் அவ் என்றும் இரு வகையாக எழுதப்பட்டுள்ளது.

பௌவம் (கடல்) என்ற சொல் பௌவம் என்றும் பவ்வம் என்றும் எழுதப்பட்டுள்ளது. இதேபோலக் கௌவை (அலர், பழிச்சொல்) என்ற சொல் கவ்வை என்றும் கௌவை என்றும் எழுதப்பட்டுள்ளது.

நிறையிரும் பௌவம் குறைபட முகந்துகொண்டு

(குறிஞ்சிப்பாட்டு : 47)

பவ்வம் மீமிசைப் பால்கதிர் பரப்பி

(பொருநராற்றுப்படை : 135)

பகல்வரின் கவ்வை அஞ்சுதும்

(அகநானூறு, 118 :6)

ஊரனொடு எழுந்த கௌவையோ பெரிதே

(அகநானூறு, 186 :7)

5.2.2 மொழிமுதல் எழுத்துகள் (1)     சகர மெய் அ, ஐ, ஒள என்னும் மூன்று உயிர்கள் நீங்கலாகப் பிற ஒன்பது உயிர்களோடு சேர்ந்து மட்டுமே மொழிக்கு முதலில் வரும் என்றார் தொல்காப்பியர். ஆனால் சங்க கால இலக்கியங்களில் சகரமெய் அகர உயிரோடு சேர்ந்து ஏறத்தாழ இருபது சொற்களிலும், ஐகார உயிரோடு சேர்ந்து ஒரு சொல்லிலும் முதலாகியுள்ளது. ஒளகாரத்தோடு மட்டு்ம் சேர்ந்து மொழி முதலாகவில்லை.

சகடம்                  (வண்டி)     (நற்றிணை, 4 : 9)

சங்கம்                  (ஒரு பேரெண் – எண்ணிக்கை)     (பரிபாடல், 2 : 13)

சடை                    (மயிர் முடி)     (புறநானூறு, 166 : 1)

சண்பகம்            (மலர்)     (கலித்தொகை, 150: 21)

சதுக்கம்              (நான்கு தெருக்கள் கூடுமிடம்)     (திருமுருகாற்றுப்படை,225)

சந்தி                      (தெருக்கள் கூடுமிடம்)     (திருமுருகாற்றுப்படை,225)

சையம்                (குடகு மலை)     (பரிபாடல், 11: 14)

(2)    ஞகர மெய் ஆ, எ, ஒ ஆகிய மூன்று உயிர்களோடு கூடி மட்டுமே மொழி முதலில் வரும் என்றார் தொல்காப்பியர். சங்ககாலத் தமிழில் இம்மூன்று உயிர்களோடு மட்டும் அல்லாமல், அ, இ என்னும் இரண்டு உயிர்களோடு சேர்ந்தும் ஞகர மெய் மொழி முதலாகியுள்ளது.

ஞமலி     (நாய்)     (அகநானூறு, 140 : 8)

ஞிமிறு     (வண்டு)     (அகநானூறு, 124: 15)

(3)     தொல்காப்பியர் காலத்தில் யகர மெய் ஆகார உயிரோடு கூடி மட்டும் மொழி முதலாகியது. சங்க இலக்கியத்தில் சில சொற்களில் அகர உயிரோடும், ஊகார உயிரோடும் கூடி யகர மெய் மொழி முதலாகிறது.

யவனர்         (அகநானூறு, 149 : 9)

யூபம்     (யாகத் தூண்)     (புறநானூறு, 15 : 21)

யவனர் என்ற சொல் தமிழ் நாட்டில் வணிகம் செய்ய வந்த கிரேக்க, உரோம வணிகர்களை ஒரு சேரக் குறிக்கும் சொல்லாகும். இச்சொல் அயோனிஸ் (Iaones) என்ற கிரேக்க மொழிச் சொல்லின் திரிபாகும்.

மேற்குறிப்பிட்டவை தவிரத் தொல்காப்பியர் காலத் தமிழுக்கும் சங்ககாலத் தமிழுக்கும் இடையே மொழி முதல் எழுத்து பற்றிய இலக்கணத்தில் மாற்றம் எதுவும் இல்லை. இந்தச் சில மாற்றங்களுக்கும் காரணம் தமிழ்நாட்டுக் கிளைமொழிகளிலிருந்தும், பிறநாட்டு மொழிகளிலிருந்தும் சொற்களைக் கடன்வாங்கியமையாக இருக்கலாம் என்று தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் கருதுகிறார்.

5.2.3 மொழி முதல் துணை தொல்காப்பிய இலக்கணத்தின்படி ர, ல ஆகிய மெய்யெழுத்துகள் மொழிமுதலில் வராதவை. சங்ககாலத் தமிழில் இவ்வெழுத்துகளை முதலாகக் கொண்ட வடமொழிச் சொற்கள் கலந்தன. ஆனால் அவை அப்படியே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அ, இ, உ என்னும் எழுத்துகளுள் ஒன்றை மொழி முதலில் துணையாகக் கொண்டே ஏற்றுக்கொள்ளப்பட்டன. சான்றாக ராமன் என்ற வடசொல், இராமன் என்று சங்ககாலத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதே போல ரோகிணி (ஒரு நட்சத்திரத்தின் பெயர்) என்ற சொல் உரோகிணி என்று எழுதப்பட்டுள்ளது.

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை (புறநானூறு, 378: 18)

உரோகிணி நினைவனள் நோக்கி (நெடுநல்வாடை, 163)

5.2.4 மொழி இறுதி எழுத்துகள் ஒளகாரம் நீங்கலான பதினோர் உயிர்களும், ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் பதினொரு மெய்களும், குற்றியலுகரமும் மொழிக்கு இறுதியில் வரும் என்கிறார் தொல்காப்பியர். இவையாவும் சங்க காலத் தமிழில் மொழிக்கு இறுதியில் வருகின்றன.

தொல்காப்பியர் காலத் தமிழில், சொல்லின் இறுதியில் இரண்டு மெய்கள் மயங்கி (சேர்ந்து) வருவதை ஒரு சொல்லில் மட்டுமே காணமுடியும். அச்சொல் போன்ம் என்பதாகும். ஆனால் சங்க இலக்கியத்தில் தின்ம் (தின்னும்) கொண்ம் (கொள்ளும்) தேய்ம் (தேயும்) சான்ம் (சாலும்) சென்ம்(செல்லும்) போன்ற மெய்ம்மயக்கங்களும் வருகின்றன.

உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்

(கலித்தொகை, 105:38)

இரும்பேர் ஒக்கலொடு தின்ம் எனத் தருதலின்

(புறநானூறு,150 : 13)

பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்ம் என

(புறநானூறு, 159 : 29)

அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என

(நற்றிணை, 68 : 2-3)

5.2.5 ஒலி மாற்றங்கள் தொல்காப்பியர் குறிப்பிடாத ஒலி மாற்றங்கள் சிலவும் சங்ககாலத் தமிழில் காணப்படுகின்றன.

மொழி முதல் யகரம் மறைதல்

தொல்காப்பியர் காலத் தமிழில் வழங்கிய யாடு, யாறு, யாமை, யார், யானை, யாண்டு, யாளி, யாழ், யாப்பு போன்ற பல சொற்கள் சங்ககாலத் தமிழிலும் பயில்கின்றன. ஆனால் சங்ககாலத்தில் இச்சொற்களில் சில மொழி முதலில் உள்ள யகர மெய்யை இழந்து ஆகாரத்தை முதலாகக் கொண்ட சொற்களாகவும் வழங்குகின்றன.

யாடு          ஆடு

யாறு         ஆறு

யாமை     ஆமை

யாளி         ஆளி

யார்            ஆர்

யாண்டு    ஆண்டு

யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்

(மதுரைக்காஞ்சி : 359)

ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்

(நெடுநல்வாடை : 30)

கொடுந்தாள் யாமை பார்ப்பொடு கவரும்

(அகநானூறு, 117 : 16)

வயல் ஆமைப் புழுக்கு உண்டும்

(பட்டினப்பாலை : 64)

மொழி முதல் சகரம் மறைதல்

சங்ககாலத் தமிழில் சகர மெய்யை முதலாகக் கொண்ட சொற்கள் சிலவும், சகர மெய்யை இழந்து உயிரெழுத்துடன் தொடங்குவனவாக உள்ளன. எடுத்துக்காட்டாகச் சான்றோர் என்ற சொல், முதலில் உள்ள சகர மெய் நீங்கி ஆன்றோர் என வழங்குகிறது. சான்றோர், ஆன்றோர் இரண்டும் ஒரே பொருளைத் தருகின்றன.

சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே (குறுந்தொகை, 102 : 4) அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை (குறுந்தொகை, 184 : 1)

இதே போலச் சங்ககாலத்தில் வேறு சில சொற்களும் முதலில் உள்ள சகர மெய்யை இழந்து வழங்குகின்றன.

சிப்பி     இப்பி     (நற்றிணை, 87 : 7, புறநானூறு, 53 : 1)

சிறகு     இறகு     (சிறுபாணாற்றுப்படை : 76)

மேலே கூறிய இருவகை ஒலிமாற்றங்களும் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.

மேலும் சில ஒலி மாற்றங்கள்

(1) இரட்டைத் தகரம் இரட்டைச் சகரமாதல்.

ஆய்த்தி – ஆய்ச்சி (கலித்தொகை, 106: 32)

(2) வகரம் பகரமாதல்.

பிரிவு – பிரிபு (நற்றிணை, 1 : 2)

(3) னகரம் ஞகரமாதல்.

,அன்னை – அஞ்ஞை

(அகநானூறு, 145 : 22)

(4) சகரம் யகரமாதல்.

பசலை – பயலை (கலித்தொகை, 15 : 13)

(5) ஒப்புமையாக்கத்தால் ஒலி மாற்றம்

ஒருவன், ஒருத்தி என்பனவே மரபுச் சொற்கள். ஒருத்தி என்ற சொல்லின் ஒப்புமை நோக்கி ஒருவன் என்ற சொல் ஒருத்தன் என்றாகிறது. பின்னர் அது சுருங்கி ஒத்தன் என்று வழங்குகிறது. பேச்சு மொழியின் செல்வாக்கால் இம்மாற்றம் நிகழ்ந்தது எனலாம்.

எல்லா ! இஃது ஒத்தன் என் பெறான் (கலித்தொகை, 61 : 1)

5.3 உருபனியல் - பெயர்ச்சொல்

சங்ககாலத் தமிழில் மூவிடப்பெயர்களில் ஏற்பட்ட சிற்சில மாற்றங்களைக் காணலாம். மேலும் அஃறிணைப் பன்மை உணர்த்தும் முறை, உயர்வு ஒருமைப் பெயர்கள், உயர்திணையில் இரட்டைப் பன்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இயல்புகளைச் சங்ககாலத் தமிழில் காணலாம்.

5.3.1 மூவிடப் பெயர்கள் ஒரு மொழியில் பொதுவாகச் சொற்களும் சொற்றொடர்களும் மாறும் இயல்பை உடையவை. ஆயின் மூவிடப்பெயர்கள் அத்தன்மையன அல்ல ; என்றும் மாறா இயல்பினை உடையனவாக விளங்குவன. எனினும் காலப்போக்கில் இவையும் சிறிது மாறுதல் அடைகின்றன. அந்த மாறுதல் மிக மிகச் சிறிதே. சங்ககாலத் தமிழிலும் மூவிடப் பெயர்கள் சிறு மாறுதல்களை மட்டுமே பெற்றுள்ளன.

தன்மை இடப்பெயர்

தொல்காப்பியர் காலத்தில் தன்மை ஒருமைப் பெயராக யான் மட்டுமே வழங்கியது. ஆனால் சங்ககாலத் தமிழில் யான் என்பதோடு நான் என்ற புதிய வடிவமும் வழங்குகிறது. ஆயினும் யான் என்பதே மிகுதியாக வழங்குகிறது. தமிழ் மொழி வரலாற்றில் பரிபாடலில்தான் முதன்முதலாக நான் வருகிறது. அது இரண்டு இடங்களில் மட்டும் வருகிறது.

நல்லாள் கரை நிற்ப நான் குளித்த பைந்தடத்து

(பரிபாடல், 6 : 87)

அவன் கள்வன் ; கள்வி நான் அல்லேன்

(பரிபாடல், 20 : 82)

தன்மைப் பன்மையில் யாம், நாம் என்னும் பழைய வடிவங்களே வழங்கின. யாம் என்பதற்கு இணையாக யான் இருக்கிறது ; நாம் என்பதற்கு இணையாக நான் என்பது ஒப்புமை ஆக்கமாகச் சங்க காலத்தில் வந்தது எனலாம். தொல்காப்பியர் காலம் போலவே சங்க காலத்தி்லும் தன்மை இடம் உயர்திணைக்கு மட்டுமே உரியதாக இருந்தது.

முன்னிலை இடப்பெயர்

நீ, நீயிர் என்பன தொல்காப்பியர் காலத்தில் வழங்கிய முன்னிலைப் பெயர்கள். சங்ககாலத் தமிழில் நீயிர் என்பதோடு நீர் என்ற பிறிதொரு வடிவமும் காணப்படுகிறது. நீயிர் என்பதை விட இதுவே மிகுதியாக வழங்குகிறது. நீயிர் நான்கு இடங்களில் பயில, நீர் என்பதோ பதினாறு இடங்களில் பயில்கிறது.

குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே

(புறநானூறு, 110 : 1)

முன்னிலை இடப்பெயர்கள் வேற்றுமை உருபேற்கும் போது நீ என்பது நின் என்றும், நீயிர் என்பது நும் என்றும் குறுகும் என்பர் தொல்காப்பியர். சங்ககாலத்தில் நின் என்பதோடு உன் என்பதும், நும் என்பதோடு உம் என்பதும் புதிய வடிவங்களாக வழங்குகின்றன.

படர்க்கை இடப்பெயர்

படர்க்கைக்குரிய இடப்பெயர்கள் தான், தாம் என்பவை. இவை இருதிணைப் பொதுப்பெயர்கள் ஆகும். ஆயினும் இவற்றுக்குப் பதிலாகத் தொல்காப்பியர் காலத்திலேயே அவன், அவள், அவர், அது, அவை முதலான ஐம்பால் வேறுபாடு காட்டும் சுட்டுப் பெயர்கள் படர்க்கை இடத்தை உணர்த்த வந்துவிட்டன. இதனால் தான், தாம் ஆகியன சிறிது சிறிதாகச் செல்வாக்கு இழக்கத் தொடங்கின.

சங்ககாலத் தமிழிலும் சுட்டுப் பெயர்களே படர்க்கை இடத்தில் மிகுதியாக வழங்குகின்றன. இருப்பினும் தான், தாம் ஆகியவையும் மிகச் சிறுபான்மையாகப் படர்க்கையில் வழங்குகின்றன. இவை இரண்டும் தமக்கு முன்னேரோ பின்னரோ வரும் வினை கொண்டும், பெயர் கொண்டும் பால் வேறுபாடு அறியப்படுகின்றன.

யாரும் இல்லைத் தானே கள்வன் (ஆண்பால்)

(குறுந்தொகை, 25 : 1)

தான் அஃது அறிந்தனள் கொல்லோ (பெண்பால்)

(நற்றிணை, 53 : 1-2)

செல்ப என்ப தாமே (பலர்பால்)

(நற்றிணை,73 : 6)

5.3.2 அஃறிணைப் பன்மை உணர்த்தும் முறை அஃறிணைப் பன்மைக்குரிய விகுதி கள் என்பது, மரம்+கள்= மரங்கள். இவ்விகுதி பெறாமலே ஒருமைச் சொல் பன்மை உணர்த்தும் முறை தொல்காப்பியர் காலத்தில் இருந்தது. பெயர்ச்சொல்லுக்குப் பின்வரும் வினைமுற்று ஒருமையாக இருந்தால் பெயர்ச்சொல் ஒருமை. வினைமுற்று பன்மையாக இருந்தால் பெயரும் பன்மைச் சொல் ஆகும்.

(எ.டு)     மரம் வீழ்ந்தது

மரம் வீழ்ந்தன

சங்ககாலத் தமிழிலும் அஃறிணைப் பன்மை உணர்த்தப்படும் முறையில் கள் விகுதி சேராமலும், சேர்ந்தும் வருவதைக் காணலாம்.

கள் விகுதி இல்லாமல் வரும் அஃறிணைச் சொற்கள் தம் முன்னோ பின்னோ வரும் பலவின்பால் வினைமுற்றுகளால் பன்மை என அறியப்படுகின்றன. இம்முறையே சங்க இலக்கியத்தில் மிகுதியாகக் காணப்படுகிறது.

கலுழ்ந்தன கண்ணே

(நற்றிணை, 12 : 10)

நெகிழ்ந்தன வளையே

(நற்றிணை, 26 : 1)

கண், வளை எனும் அஃறிணைச் சொற்கள் முறையே கலுழ்ந்தன, நெகிழ்ந்தன எனும் பன்மை வினைமுற்றுகள் கொண்டு முடிந்திருப்பதைக் காணலாம்.

சங்க இலக்கியத்தில் அஃறிணை ஒருமைப் பெயர்ச் சொற்களோடு கள் விகுதி சேர்த்துப் பன்மையாக்குதல் 25 இடங்களில் காணப்படுகிறது.

மயில்கள் ஆல (ஐங்குறுநூறு, 29: 1)

கண்களும் கண்களோ (கலித்தொகை, 39 : 42)

5.3.3 உயர்வு ஒருமைப் பெயர்கள் தொல்காப்பியர் காலத்தில் ஒருவனையும் ஒருத்தியையும் உயர்வு அல்லது மரியாதை கருதி, ஒருவர் என்று குறிப்பிடும் வழக்கம் இருந்தது. அவன், அவள் என்று குறிக்கப்படும் ஓர் ஆணையும் பெண்ணையும் உயர்வு கருதி அவர் என்று குறிப்பிடும் வழக்கமும் இருந்தது.

சங்ககாலத் தமிழில் யாம், நீயிர், நீர், தாம் என்னும் பன்மை இடப் பெயர்களும் உயர்வு ஒருமைப் பெயர்களாக வழங்குகின்றன.

பெரும்பேது உறுவள் யாம் வந்தனம் எனவே

(நற்றிணை, 6 : 11)

இந்த அகப்பாடல் வரியில், தலைவன் தன் உயர்வு தோன்றத் தன்னை யாம் என்று குறிப்பிடுகிறான்.

படர்க்கையில் தாம் என்ற பன்மைப் பெயரும், அவர், இவர் என்பன போன்ற பன்மைச் சுட்டுப் பெயர்களும் உயர்வு ஒருமைப் பெயர்களாக வழங்குகின்றன.

செல்ப என்ப தாமே

(நற்றிணை, 73 : 6)

இவ்வரியில், தலைவி, தாம் என்று பன்மைச் சொல்லால் தலைவனைக் குறிப்பிடுகிறாள்.

கண்ணீர் அருவி ஆக

அழுமே தோழி அவர் பழமுதிர் குன்றே

(நற்றிணை, 88 : 8-9)

இவ்வரிகளில் தோழி தலைவனை அவர் என்று கூறுவது காண்க.

மேலும் காதலர், சான்றோர் போன்ற பலர்பால் விகுதிபெற்ற சொற்கள் ஒருவரைக் குறிக்கும் உயர்வு ஒருமைப் பெயர்களாகச் சங்க நூல்களில் பயில்கின்றன.

நன்றே காதலர் சென்ற ஆறே

(ஐங்குறுநூறு, 431 : 1)

சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே

(குறந்தொகை, 102 : 4)

5.3.4 உயர்திணையில் இரட்டைப்பன்மை (Dual plural) விகுதிகள் அரசன் என்ற சொல் படர்க்கை ஒருமைப்பெயர். மரியாதை காரணமாக அரசனை அரசர் என்று பழந்தமிழ் மக்கள் கூறினர். அரசர் என்ற பன்மைச் சொல் ஒருவரை மட்டும் குறிக்க வந்ததனால், அரசர் பலரைக் குறிக்க, அரசர் என்பதோடு அஃறிணைப் பன்மை விகுதியாகிய கள் என்பதைச் சேர்த்து அரசர்கள் என்றனர்.

உலகு ஏத்தும் அரசர்கள்

(கலித்தொகை, 25 : 3)

அர்+கள் அல்லது இர்+கள் என்னும் இரட்டைப் பன்மை விகுதி கொண்டு உயர்திணைப் பன்மையை உணர்த்துதல் தமிழ்மொழி வரலாற்றில் முதன்முதலில் கலித்தொகையிலேயே காணப்படுகிறது.

5.3.5 பால் காட்டும் புதிய சொற்கள் சங்ககாலத்தில் உயர்திணைப் பெயர்ச்சொற்களில் பால் காட்டுவதற்குச் சில புதிய சொற்கள் வந்து வழங்குகின்றன. ஆளன் என்பது ஆண்பாலையும் ஆட்டி என்பது பெண்பாலையும் ஆளர் என்பது பலர்பாலையும் குறிக்க வருகின்றன.

ஆளன்     - பண்பிலாளன்     (புறநானூறு, 194: 5)

ஆட்டி     - அயல் இல்ஆட்டி     (நற்றிணை, 65: 1)

ஆளர்     - இருபிறப்பாளர்     (திருமுருகாற்றுப்படை, 182)

மொழியியலார் இவற்றைச் சங்ககாலத்தில் புதியனவாகத் தோன்றிய விகுதிகள் எனக்குறிப்பிடுகின்றனர். ஆனால் இவற்றில் உள்ள அன், இ, அர் போன்றவை முன்பே இருந்த விகுதிகள் என்பதை நாம் உணரமுடிகிறது.

5.4 உருபனியல் - வினைச்சொல்

வினைச்சொல்லைப் பொறுத்தவரை சங்ககாலத் தமிழ் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைத் தவிரப் பெரும்பாலும் தொல்காப்பியர் காலத் தமிழாகவே உள்ளது. தெல்காப்பியர் ஒவ்வொரு வினைமுற்றுக்கும் உரிய விகுதிகள் பற்றி மிகவும் விரிவாகக் கூறுகிறார். சங்ககாலத் தமிழில் அவ்விகுதிகளுள் பல வழங்குவதையும் ஒரு சில வழக்கிழந்து போனதையும் அறிய முடிகிறது. மேலும் சில புதிய வினைமுற்று விகுதிகளும் காணப்படுகின்றன. தமிழ்மொழியின் தொடர் அமைப்பி்ல் வினையெச்சம், பெயரெச்சம் ஆகியன இன்றியமையாத இடம் பெறுகின்றன. இவற்றிற்கு உரிய வாய்பாடுகள் பற்றித் தொல்காப்பியர் விரிவாகக் குறிப்பிடுகிறார். இவை யாவும் சங்கத்தமிழில் காணப்படுகின்றன. மேலும் சில புதிய வாய்பாடுகளும் காணப்படுகின்றன.

5.4.1 தன்மை வினைமுற்று தொல்காப்பியர், தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகளாக, கு, டு, து, று, என், ஏன், அல் ஆகிய ஏழு விகுதிகளைக் கூறுகிறார். இவை யாவும் சங்கத் தமிழில் வழங்குகின்றன. டு, து, று ஆகிய விகுதிகள் இசின் என்ற அசைச்சொல்லோடு சேர்ந்து வழங்குகின்றன. மேலும் தொல்காப்பியர் கூறாத அன் என்னும் புதிய விகுதியும் சங்ககாலத் தமிழில் வந்து வழங்குகிறது.

டு     - பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசின்

(புறநானூறு, 150 : 24)

து     - ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே

(அகநானூறு, 38: 18)

று     - கண்ணும் படுமோ என்றிசின் யானே

(நற்றிணை, 61 : 10)

கேட்டிசின்     = கேட்டேன்

மறந்திசின்     = மறந்தேன்

என்றிசின்     = என்றேன்

அன்

அன் என்பதைத் தொல்காப்பியர் படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று விகுதியாக மட்டுமே கூறுகிறார். ஆனால் இது, சங்ககாலத் தமிழில் தன்மை ஒருமை வினைமுற்று விகுதியாகவும் வழங்கப்படுகிறது.

உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து

உரைக்கல் உய்ந்தனனே

(நற்றிணை, 17: 8-9)

ஓம்

தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகளாகத் தொல்காப்பியர் கும், டும், தும், றும், அம், ஆம், எம், ஏம் ஆகிய எட்டு விகுதிகளைக் கூறுகிறார். இவற்றுள் சங்ககாலத் தமிழில் டும் என்பது மட்டும் வழங்கவில்லை. பிற ஏழு விகுதிகளும் வழங்குகின்றன. மேலும் ஓம் என்ற புதிய விகுதி இரண்டு இடங்களில் வழங்குகிறது.

ஓம் – மறந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே

(ஐங்குறுநூறு, 112: 4)

5.4.2 முன்னிலை வினைமுற்று தொல்காப்பியர், முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகளாக இ, ஐ, ஆய் ஆகிய மூன்றையும் பன்மை வினைமுற்று விகுதிகளாக இர், ஈர், மின் ஆகிய மூன்றையும் குறிப்பிடுகிறார். இவை சங்ககாலத் தமிழிலும் வழங்குகின்றன. மேலும் ஈம்என்பது ஒரு புதிய விகுதியாக வழங்குகிறது. செய்யுளுள் ஆய் விகுதி ஓய் எனத்திரிந்து வழங்கும். மொழியியலார் இதனைத் தனி விகுதியாகக் கொள்வர்.

ஓய்     - பிறந்தோய் (பிறந்தாய்)

(புறநானூறு, 164 : 13)

ஈம்     - தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே

(அகநானூறு, 218 : 22)

இகர விகுதியோடு இசின் எனும் அசைச் சொல் சேர்ந்து வரும் வினைமுற்றுகள் பல காணப்படுகின்றன.

கண்டிசின் (காண்பாய்)

(அகநானூறு, 99 : 11)

5.4.3 படர்க்கை வினைமுற்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள படர்க்கை ஐம்பால் வினைமுற்று விகுதிகள் அனைத்தும் சங்ககாலத்தில் வழங்குகின்றன. அவை அன், ஆன், அள் ஆள், அர் ஆர், ப, மார் என்பனவாகும். இவற்றுடன் இவற்றின் திரிபுகளாகிய ஓன், ஓள், ஓர் என்பனவும் சங்கத்தமிழில் வழங்குகின்றன.

(எ.டு)

வந்தோன்     (நற்றிணை, 114 : 6)

நோக்கியோள்     (நற்றிணை, 55 : 9)

சென்றோர்     (அகநானூறு, 387 : 20)

இத்திரிபுகள் இசின் என்ற அசைச் சொல்லுடன் சேர்ந்தும் வரும்.

(எ.டு)

புகழ்ந்திசினோனே (புகழ்ந்தான்) – (அகநானூறு, 210 : 10)

இரட்டைப் பன்மை விகுதி – அர் – கள்

சங்ககாலத் தமிழில் அரசர்கள், ஐவர்கள் போன்ற உயர்திணைப் பெயர்ச்சொற்கள் அர்-கள் என்னும் இரட்டைப் பன்மை விகுதிகள் பெறவே. அச்சொற்கள் கொண்டு முடியும் வினைமுற்றுகளும் ஆர்-கள் என்னும் இரட்டைப் பன்மை விகுதிகள் பெற்று வழங்கத்தொடங்கின. இத்தகு வினைமுற்று, கலித்தொகையில் மட்டும் ஓரிடத்தில் வழங்குகிறது.

வாழ்வார்கள் (கலித்தொகை, 145 : 17)

அஃறிணை ஒருமை, பன்மை விகுதிகள்

அஃறிணை ஒருமை வினைமுற்று விகுதிகள் - து, டு, று ; பன்மை விகுதிகள் அ, ஆ, வ என்பன. இவற்றில் தொல்காப்பியர்காலத் தமிழுக்கும் சங்ககாலத் தமிழுக்கும் இடையே மாற்றம் இல்லை.

5.4.4 வியங்கோள் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று, படர்க்கையில் மட்டுமே வரும். தன்மையிலும் முன்னிலையிலும் வாராது என்கிறார் தொல்காப்பியர் (தொல்.சொல். 228), ஆனால் சங்ககாலத்தில் படர்க்கையில் மட்டுமன்றித் தன்மை, முன்னிலை ஆகிய இடங்களிலும் வருகிறது. க, இய, இயர் ஆகியன வியங்கோள் வினைமுற்று விகுதிகளாக வந்துள்ளன. வாழ்த்தல், வைதல், வேண்டுதல், விதித்தல் ஆகிய பொருள்களில் வியங்கோள் வினைமுற்று வருகிறது.

இவள் தந்தை வாழியர் (நற்றிணை, 8 : 4)

என்ற வரியில் வாழியர் (வாழ்க) எனும் வியங்கோள் வினைமுற்று படர்க்கையில் வந்துள்ளது.

பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக (புறநானூறு, 71 : 5-6)

(பிரிக = பிரிவேனாக)

இங்குப் பிரிக என்பது தன்மையில் வந்துள்ளது.

வல் விரைந்து செல்க பாக ! நின் நெடுந்தேர்

(அகநானூறு, 204 : 8-9)

இங்குச் செல்க என்பது முன்னிலையில் வந்துள்ளது.

5.4.5 வினையெச்சம் தொல்காப்பியர் சொல்லதிகாரம் வினையியலில், செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின், செய, செயற்கு என்னும் ஒன்பது வினையெச்ச வாய்பாடுகளைக் கூறுகிறார். (தொல்.சொல். 228) மேலும் அவர் பத்தாவது வினையெச்ச வாய்பாடாக, செய்யா என்னும் வாய்பாட்டையும் கூறுகிறார் (தொல்.எழுத்து. 223). இது அமைப்பில் எதிர்மறை போலக் காணப்படினும் உடன்பாட்டுப் பொருளையே தரும். சங்ககாலத் தமிழில் இப்பத்து வாய்பாட்டு வினையெச்சங்களும் பயில்கின்றன. செய்து, செய என்னும் வினையெச்ச வாய்பாடுகள் மிகுதியாகப் பயில்கின்றன.

செய்து     - இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே

(குறுந்தொகை, 34 : 3)

செய்தென     - மெல்லம் புலம்பன் பிரிந்தென

(குறுந்தொகை, 5 : 4)

செயின்     - வேம்பின் பைங்காய் என் தோழி தரினே

(குறுந்தொகை, 196 : 1-2)

செய     - அலமரல் வருத்தம் தீர

(நற்றிணை, 9 : 3)

(பிரிந்தென = பிரிந்ததால் ; தரின் = தந்தால்)

செய்யா – இவ்வாய்பாடு சங்ககாலத் தமிழில் உடன்பாடு, எதிர்மறை என்னும் இரு பொருளிலும் வழங்குகிறது.

உடன்பாடு     - நுதிவேல் கொண்டு நுதல் வியர் துடையா

(துடைத்து எனும் பொருள் – உடன்பாடு)

(புறநானூறு : 349)

எதிர்மறை     - பொழில் கொளக் குறையா மலர

(குறையாமல் எனும் பொருள்- எதிர்மறை)

(பரிபாடல், 8 : 92)

சங்ககாலத் தமிழில் தொல்காப்பியர் குறிப்பிடாத அல்லது அவர் காலத்தில் வழங்காத வினையெச்ச வாய்பாடுகள் சிலவும் காணப்படுகின்றன.

(1) செய்வான், செய்பான் என்னும் இருவகை வாய்பாட்டு வினையெச்சங்கள் காணப்படுகின்றன.

நீ்க்குவான் பாய்வாள் (பரிபாடல், 7 : 57)

காண்பான் யான் தங்கினேன் (கலித்தொகை, 97 : 7)

(2) வினையடியோடு மார் என்னும் ஈறு சேர்ந்து வரும் செய்மார் என்னும் வாய்பாட்டு வினையெச்சம் காணப்படுகின்றது.

அவரே, கேடில் விழுப்பொருள் தருமார்

வாடா வள்ளி அம் காடு இறந்தோரே

(குறுந்தொகை, 216 : 1-2)

(தருமார் = கொண்டு வரும் பொருட்டு)

(3) சங்க இலக்கியத்தில் பல இடங்களில் ஆயின் என்னும் சொல வினைமுற்றைத் தொடர்ந்து நின்று வினையெச்சமாகி நிபந்தனைப் பொருளில் செயல்படுகிறது.

செல்வை ஆயின் செல்வை ஆகுவை (புறநானூறு, 70 : 16)

(செல்வை ஆயின் = செல்வாய் ஆனால்; செல்வை ஆகுவாய் = செல்வத்தை உடையவன் ஆவாய்)

(4) தொல்காப்பியர் பெயரெச்சமும் வினையெச்சமும் எதிர்மறைப் பொருளில் வரும் என்கிறார். (தொல்.சொல். 238) ஆனால் அதற்குரிய வாய்பாடுகளை அவர் கூறவில்லை. சங்கத் தமிழில் செய்யாது, செய்யாமல், செய்யாமை என்னும் வாய்பாடுகளைக் கொண்ட எதிர்மறை வினையெச்சங்கள் காணப்படுகின்றன.

யானும் தன்னை அறியாது சென்றேன் (கலித்தொகை, 51 : 8)

கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடும் கூளி

(கலித்தொகை, 1 : 3)

சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்

(நற்றிணை, 61 : 6)

(சொல் வெளிப்படாமை = சொல்வது வெளியில் கேட்காதபடி)

வினைமுற்று வினையெச்சம் ஆதல்

சங்க இலக்கியத்தில் சில பாடல்களில் இரண்டு வினைமுற்றுகள் அடுத்தடுத்து வருகின்றன. அவ்வாறு வரும்போது, முதலில் வரும் வினைமுற்று வினையெச்சப் பொருளில் வருகிறது. இத்தகு வினையெச்சம் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. பிற்காலத்தில் வந்த நன்னூலார் இதனை முற்றெச்சம் என்கிறார்.

கண்டனம் வருகம் (கண்டு வருவோம்) (நற்றிணை, 182 : 7)

தந்தனை சென்மோ (தந்து செல்வாயாக)

(ஐங்குறுநூறு, 159 : 5)

5.4.6 பெயரெச்சம் தொல்காப்பியர் காலத்தில் செய்த, செய்யும் என்னும் இருவகை வாய்பாட்டுப் பெயரெச்சங்களே வழங்கின. சங்ககாலத்தில் இவ்விரு வகைகளோடு, செய்கின்ற என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சமும் வழங்குகிறது. இது நிகழ்காலத்திற்கு உரியது. முதன்முதலாகப் பரிபாடலில் ஒரே இடத்தில் மட்டும் வருகிறது.

செய்த – விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே

(குறுந்தொகை, 210 : 6)

செய்கின்ற – தீரமும் வையையும் சேர்கின்ற கண்கவின்

(பரிபாடல், 22 : 35)

செய்யும் - கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்

(நற்றிணை, 132 : 5)

பெயரெச்சம் எதிர்மறைப் பொருளில் வரும்போது, செய்யாத, செய்யா என்னும் வாய்பாடுகளில் வருகிறது. சங்க இலக்கியத்தில் செய்யா என்னும் வாய்பாடே மிகுதியாக வழங்குகிறது. இதனை ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று கூறுவர். செய்யாத என்னும் வாய்பாடு ஒரு சில இடங்களில் மட்டுமே வழங்குகிறது.

செய்யாத – வெயில் ஒளி அறியாத விரிமலர்த் தண்கா

(கலித்தொகை, 30 : 7)

செய்யா – பல் ஆ தந்த கல்லாக் கோவலர் (நற்றிணை, 364 : 9)

5.4.7 காலம் காட்டும் இடைநிலைகள் வினைச்சொல்லின் தலையாய இலக்கணம் காலம் காட்டுவது. வினைச்சொற்களில் வினை அடிச்சொல்லுக்கும் விகுதிக்கும் இடையே உள்ள இடைநிலைகள் என்னும் உருபுகள் காலம் காட்டுகின்றன. காலம் காட்டும் இடைநிலைகள் பற்றித் தொல்காப்பியர் எதுவும் கூறவில்லை.

சங்ககாலத் தமிழில் த், ட், ற், இ ஆகியன இறந்தகால இடைநிலைகளாக வருகின்றன. இவற்றுள் ட், ற் ஆகிய இரண்டும் த் என்பதன் திரிபுகள் என மொழிநூலார் கூறுவர். த் என்பதன் மாற்று வடிவங்களாக த்த், ந்த் ஆகியன வழங்குகின்றன எனவும், இ என்பது இய், இன் என்ற இரு வடிவங்களுடன் காணப்படுகிறது எனவும் மொழிநூலார் காட்டுகின்றனர்.

- த்         - தொழுதான்     (கலித்தொகை, 55 : 19)

- த்த்     - கொடுத்த     (நற்றிணை, 110 : 11)

- ந்த்     - வந்தனன்     (நற்றிணை, 40 : 11)

- ட்        - கண்டனம்     (குறுந்தொகை, 275 : 2)

- ற்        - சென்றார்     (அகநானூறு, 31 : 12)

- இய்    - போகியோன்     (குறுந்தொகை, 176 : 4)

- இன்    - அஞ்சினர்     (அகநானூறு, 26 : 16)

கின்று, ஆநின்று ஆகிய இரண்டும் நிகழ்கால இடைநிலைகளாக வழங்குகின்றன.

- கின்று – ஆகின்றது

(நற்றிணை, 227 : 9, அகநானூறு, 96 : 18)

சேர்கின்ற (பரிபாடல், 22 : 35)

- ஆநின்று – வாராநின்றனள் (ஐங்குறுநூறு, 397 : 3)

ப், வ், ஆகியன எதிர்கால இடைநிலைகளாக வழங்குகின்றன.

- ப் – காண்பேன் (நற்றிணை, 259 : 8)

- வ் – செல்வாள் (ஐங்குறுநூறு, 234 : 4)

5.5 தொகுப்புரை

தொல்காப்பியர் காலத் தமிழிலிருந்து, சங்ககாலத் தமிழ் பெரும்பாலும் வேறுபட்டு அமையவில்லை ; ஒத்தே அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்க ஒருசில மாற்றங்களைப் பெற்றுச் சங்ககாலத் தமிழ் வளர்ந்துள்ளது. மாற்றங்கள் ஒரு மொழியின் வளர்ச்சியைக் காட்டுவனவாகும்.

ஒலியனியலைப் பொறுத்தவரை, சகரமெய், ஞகர மெய், யகர மெய் ஆகியவை மொழி முதலாவதில் சிறு மாற்றங்கள் சங்கத் காலத் தமிழில் நேர்ந்துள்ளன. மொழிமுதலில் வரும் யகரமும் சகரமும் மறைதல் ஆகிய ஒலி மாற்றங்களும் நேர்ந்துள்ளன.

உருபனியலில், மூவிடப் பெயர்களில் நான், நீர் என்பன புதிய வடிவங்களாகச் சங்ககாலத் தமிழில் வந்து வழங்குகின்றன. கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி. அர் அல்லது இர் என்னும் பலர்பால் விகுதியோடு சேர்ந்து நின்று உயர்திணைப் பன்மையை உணர்த்தும் புதிய இலக்கணப் போக்கு சங்க காலத்தில் காணப்படுகிறது. மூவிடப் பெயர்களில் உள்ள யாம், நீயிர், நீர், தாம் என்னும் பன்மைப் பெயர்கள் உயர்வு ஒருமைப் பெயர்களாக வழங்குகின்றன. ஆளன், ஆட்டி, ஆளர் என்பன உயர்திணைப் பெயர்ச்சொற்களில் பால் காட்டும் விகுதிகள் போல வந்து வழங்குகின்றன.

தன்மை ஒருமை வினைமுற்றில் அன் விகுதியும் தன்மைப் பன்மை வினைமுற்றில் ஓம் விகுதியும் முன்னிலைப் பன்மை வினைமுற்றில் ஈம் விகுதியும் சங்ககாலத் தமிழில் புதிதாக வந்து வழங்குகின்றன. ஆர்-கள் என்ற இரட்டைப் பன்மை விகுதி கலித்தொகையில் பலர்பால் வினைமுற்றுக்கு உரியதாக முதன்முதலாக வருகிறது. வியங்கோள் வினைமுற்று, தொல்காப்பியர் காலத் தமிழில் படர்க்கையில் மட்டும் வந்தது. சங்ககாலத் தமிழில் தன்மை, முன்னிலை ஆகிய இடங்களிலும் வருகிறது. தொல்காப்பியர் குறிப்பிடாத சில வினையெச்சங்களும் சில எதிர்மறைப் பெயரெச்சங்களும் சங்ககாலத் தமிழில் வழங்குகின்றன.

சுருங்கக் கூறின், சங்ககாலத் தமிழ் மேலே குறிப்பிட்டவை போன்ற சில மாற்றங்களைத் தவிர மற்றபடி பெரும்பாலும் தொல்காப்பியர் காலத் தமிழாகவே உள்ளது எனலாம்.

பாடம் - 6

சங்கம் மருவிய காலத் தமிழ்

6.0 பாட முன்னுரை

தமிழ் மொழி வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து வரும் காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும். சங்கம் மருவிய காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. அக்காலத் தமிழ் மொழியின் வரலாற்றை அறிவதற்கு, அக்காலத்தில் தோன்றிய திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்கள் தலைசிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன.

தொல்காப்பியர் காலத் தமிழிலிருந்து சங்க காலத் தமிழ் பெரும்பாலும் வேறுபடவில்லை என்பதைக் கடந்த பாடத்தில் பார்த்தோம். சங்கம் மருவிய காலத் தமிழும் சில புதிய இலக்கணக் கூறுகளையும், சில மாற்றங்களையும் பெற்றிருப்பது தவிர முழுக்க முழுக்கச் சங்க காலத் தமிழாகவே உள்ளது என்று தமிழ்மொழி வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இப்பாடத்தில், தொல்காப்பியர் காலத் தமிழிலும், சங்ககாலத் தமிழிலும் ஒத்துக் காணப்படும் இலக்கணக் கூறுகள் சங்கம் மருவிய காலத் தமிழில் எந்த அளவு நிலைபெற்றுள்ளன என்பதும் எந்த அளவு வழக்கொழிந்து அல்லது செல்வாக்கிழந்து போயின என்பதும் விளக்கமாகக் காட்டப்படுகின்றன. மேலும் சங்ககாலத் தமிழிலிருந்து, சங்கம் மருவிய காலத் தமிழ் பெற்ற பல்வேறு மாற்றங்களும் விரிவாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன.

6.1 சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியங்கள் - ஓர் அறிமுகம்

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய மூன்றுமாம். சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் சமயச் சார்பு அவ்வளவாக இல்லை. ஆனால் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் சமயச் சார்பு மிகுதியாகக் காணப்படுகிறது. சமயப் பொதுமை நெறி பாராட்டுபவர். ஆனாலும் அவரது காப்பியத்தில் அவர் காலத்தில் வழங்கிய சமணம், சைவம், வைணவம் ஆகிய சமயங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதைக் காணலாம். மணிமேகலையை இயற்றிய சீத்தலைச் சாத்தனார் பௌத்த சமயத்தைச் சார்ந்தவர். இவர் தமிழில் மட்டுமின்றி, வடமொழியிலும் பௌத்தர்களின் தாய்மொழியாகிய பாலிமொழியிலும் வல்லுநராக இருந்தார்.

இவ்விரு காப்பியங்களிலும் சமயம் சார்ந்த கருத்துகள் மிகுதியாக இருப்பதால், சமயம் தொடர்பான வடமொழிச் சொற்கலப்பு அதிகமாக உள்ளது. சிலப்பதிகாரத்தை விட மணிமேகலையில் அக்கலப்பு பல மடங்கு அதிகமாக உள்ளது. பிற்காலத்தில் தோன்றிய வீரசோழியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள், வடமொழிச் சொற்கள் தமிழில் வந்து கலக்கும் போது அச்சொற்களில் உள்ள வடமொழி எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளாக மாற்றிக் கொள்வது பற்றிய ஒலிமாற்று விதிகளை உருவாக்குவதற்கு வழிகாட்டியது மணிமேகலை ஆகும்.

சங்கம் மருவிய காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் திருக்குறள் தலைசிறந்த நீதிநூலாகும். திருக்குறள் குறிப்பிட்ட சில மொழிநடைக் கூறுகளில், சங்க கால இலக்கியங்களை விடச் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்களையே பெரிதும் ஒத்து அமைந்துள்ளது. இதனால் மொழி வரலாற்றாசிரியர்கள் சிலர் திருக்குறளைச் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூலாகவே கொள்கின்றனர்.

6.2 ஒலியனியல்

ஒலியனியலில் சங்ககாலத் தமிழ், தொல்காப்பியர் காலத் தமிழிலிருந்து சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பெற்று வளர்ந்தது. இம்மாற்றங்கள் சங்கம் மருவிய காலத்தில் மேலும் அதிகமாகின்றன. தொல்காப்பியர் தமிழ்மொழியின் ஒலி அமைப்புப் பற்றி மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து கூறிய சில இலக்கணங்களைச் சங்க காலத் தமிழ் போற்றியிருக்க, சங்கம் மருவிய காலத் தமிழ் சற்று மீறியிருப்பதைக் காணமுடிகிறது.

6.2.1 மொழி முதல் எழுத்துகள் சகர மெய்

தொல்காப்பியர் காலத்தில் சகரமெய் அ, ஐ, ஒள என்னும் மூன்று உயிர்களோடு கூடி மொழி முதலில் வரவில்லை. ஆனால் சங்க காலத்தில் சகர மெய் அ, ஐ ஆகிய இரண்டு உயிர்களோடும் கூடி மொழி முதலில் வந்தது. சங்கம் மருவிய காலத்தில் சகரமெய் அகரத்தோடு கூடி மொழி முதலில் வருவது சங்க காலத்தைக் காட்டிலும் மிக அதிகமான சொற்களில் காணப்படுகிறது. இச் சொற்களில் பெரும்பாலானவை சமயத் தொடர்பு காரணமாக வடமொழி, பாலி மொழி ஆகிய பிறமொழிகளிலிருந்து தமிழில் வந்து கலந்தவையாக உள்ளன. சங்கம் மருவிய கால இலக்கியங்களில்,

சங்க தருமன்     (ஒரு முனிவன்)     (மணி. 5 ; 70)

சங்கமன்               (ஒரு வணிகன்)         (சிலம்பு. 23 ; 151)

சங்கரன்                (இறைவன்)                  (சிலம்பு. 10 ; 186)

சங்கரி                    (இறைவி)                     (சிலம்பு. 12 ; 20-3)

சஞ்சயன்              (தூதர் தலைவன்)     (சிலம்பு. 26 ; 137)

சதுமுகன்            (இறைவன்)                  (சிலம்பு. 10 ; 186)

சந்திரதத்தன்      (ஒரு வணிகன்)         (மணி. 16 ; 41)

சந்திர குரு           (சுக்கிரன், வெள்ளி)  (சிலம்பு. 14 ; 195)

சயந்தன்               (இந்திரன் மகன்)        (சிலம்பு. 3 ; 119)

சனமித்திரன்      (ஓர் அமைச்சன்)       (மணி. 25 ; 98)

போன்ற இயற்பெயர்ச் சொற்களிலும்

சக்கரம்                                       (மணி. 10 ; 26)

சங்கிலி                                      (சிலம்பு. 6 ; 99)

சத்தம்                                        (மணி. 29 ; 156)

சதங்கை                                   (சிலம்பு. 6 ; 84)

சமயம்                                        (மணி. 27 ; 80)

சரணாகதி                                 (மணி. 30 ; 5)

சமன்                                           (குறள். 118 ; 1)

சலம் (வஞ்சனை)                (குறள். 660 ; 1 956 ; 1)

போன்ற பிற பெயர்ச்சொற்களிலும் என நூற்றுக்கும் மேற்பட்ட சொற்களில் சகரமெய் அகரத்தோடு கூடி முதலாகிறது.

வினைச்சொற்களைப் பொறுத்தவரை, சங்கம் மருவிய காலத் தமிழில் ‘சமைப்பேன்’ (அமைப்பேன், செய்வேன்) என்ற ஒரே ஒரு வினைச்சொல்லில் மட்டும் சகரம் முதலாகியுள்ளது. இது தூய தமி்ழ்ச் சொல்லாகும் ; சங்கத் தமிழில் பயிலாத புதிய சொல்லாகும்.

வேந்தர், முடிமுதல் கலன்கள் சமைப்பேன் யான்

(சிலம்பு. 16 ; 113-114)

சகர மெய் ஐகாரத்தோடு கூடிச் சங்ககாலத் தமிழில் பரிபாடலில் சையம் என்ற ஒரு சொல்லில் மட்டும் மொழி முதலானது என்பதை முந்தைய பாடத்தில் கண்டோம். சங்கம் மருவிய காலத் தமிழில் மணிமேகலையில் மட்டும் மூன்று சொற்களில் மொழி முதலாக வருகிறது. இவை யாவும் சமயச் சொற்களாகவே உள்ளன.

சைதனியவான்     (மணி. 29 ; 176)

சைமினி                    (மணி. 27 ; 6)

சைவவாதி               (மணி. 27 ; 87)

சகர மெய் ஒளகாரத்தோடு சேர்ந்து மொழி முதலில் வருதல் சங்க காலத்தைப் போலவே, சங்கம் மருவிய காலத் தமிழிலும் காணப்படவில்லை.

யகர மெய்

சங்கம் மருவிய காலத் தமிழில் யகர மெய் ஓகார உயிரோடு சேர்ந்து மொழி முதலாவது குறிப்பிடத்தக்க புதிய இயல்பாக உள்ளது.

யோகத்து உறுபயன் கண்டால் (மணி. 3 ; 100-101)

ஒருநூற்று நாற்பது யோசனை (சிலம்பு. 25 ; 15)

(யோகம் = தவநெறி ; யோசனை = மிகத் தொலைவான தூரத்தைக் குறிக்கும் சொல்.)

6.2.2 மொழி முதல் துணை சங்கம் மருவிய காலத்தில் ரகர, லகர மெய்யை முதலாகக் கொண்ட வடமொழிச் சொற்கள் அ, இ, உ ஆகிய எழுத்துகளுள் ஒன்றைத் துணையாகக் கொண்டே வழங்குகின்றன.

ராமன்                    – இராமன்     (சிலம்பு. 15 ; 199, மணி. 27 ; 59)

ராவணன்             – இராவணன்     (மணி. 27 ; 54)

ராகுலன்               – இராகுலன்     (மணி. 9 ; 46)

ராசமாதேவி       – இராசமாதேவி     (மணி. 21 ; 76)

ரவி                          – இரவி     (மணி. 24 ; 58)

ரத்தினம்               – இரத்தினம்     (மணி. 10 ; 25)

லோகவிருத்தம்    – உலோக விருத்தம்     (மணி. 29 ; 149)

லோகாயதம்        – உலோகாயதம்     (மணி. 27 ; 78)

இவ்வாறு மொழி முதல் துணை இல்லாமல் லகரம் ஒரே ஒரு சொல்லில் மட்டும் முதலில் வந்துள்ளது.

(எ.கா) லோகம் (உலகம்) – மணிமேகலை, 12 ; 73

6.2.3 மொழி இடை மெய்ம்மயக்கம் மொழியின் இடையில் ஒவ்வொரு மெய்யெழுத்தும் எந்தெந்த மெய்யெழுத்துகளோடு மயங்கும், மயங்காது என்பது பற்றிய விதிகளை வரையறுத்துக் கூறியுள்ளார் தொல்காப்பியர். க்,ச்,த்,ப் ஆகிய நான்கு வல்லின மெய்களை அடுத்து அதே மெய்கள்தான் வரும் ; பிற மெய்கள் வாரா என்கிறார் அவர். சங்கம் மருவிய காலத் தமிழில் அளவுக்கு அதிகமான பிறமொழிச் சொற்கள் கலந்தன. அவற்றுள் பல சொற்கள் தமிழ் மொழியின் ஒலியமைப்பி்ற்கு மாறான க்ய், க்ர், ச்ர், த்ர், த்ன், ப்த், ஷ்ட் என்னும் மெய்க் கூட்டுகளைக் கொண்டிருந்தன. அச்சொற்களைத் திருவள்ளுவர், இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார் மூவரும் தமிழ் மொழியின் ஒலியமைப்பிற்கு ஏற்பக் கீழ்க்கண்டவாறு மாற்றி ஏற்றுக் கொண்டனர்.

பாக்யம் (க்ய்)               – பாக்கியம்            (குறள். 1141 ; 2)

சக்ரம் (க்ர்)                     – சக்கரம்                 ( மணி. 10 ; 26)

வச்ரம் (ச்ர்)                   – வச்சிரம்                (சிலம்பு. 5 ; 141)

சனமித்ரன் (த்ர்)          – சனமித்திரன்     (மணி. 25 ; 98)

ரத்னம் (த்ன்)                – இரத்தினம்          (மணி. 10 ; 25)

சப்தம் (ப்த்)                   – சத்தம்                    (மணி. 29 ; 156)

அஷ்டமி (ஷ்ட்)          – அட்டமி                 (சிலம்பு. 23 ; 134)

6.2.4 தனிக்குறில் முன்னர் ரகரமெய் வருகை தமிழ்ச் சொல்லில் ஒரு தனிமெய்யை அடுத்து ரகர மெய்யோ ழகர மெய்யோ வாரா என்பது தொல்காப்பிய இலக்கணம்.

ரகார, ழகாரம் குற்றொற்று ஆகா (தொல். எழுத்து. 49)

தொல்காப்பியர் கூறியுள்ள இந்த ஒலி இயல்பைச் சங்க காலத் தமிழ் மாறாமல் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இவ்விதியை மீறிச் சில சொற்கள் அமைந்துள்ளன. இவை வடசொல் ஒலி அமைப்பிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து (சிலம்பு. 3 ; 58)

வர்த்தித்தல் (மணி. 29 ; 256)

(வர்த்தனை = குரல் முதலிய ஏழு சுரங்களையும் ஏற்ற இறக்க முறையில் பாடுதல்; வர்த்தித்தல் = பொருந்துதல்)

6.2.5 ஒலிமாற்றங்கள் மொழி முதல் யகரம் மறைதல்

மொழி முதல் யகர மறைவு, சங்க காலத்தைப் போலவே சங்கம் மருவிய காலத்திலும் மிகுதியாகக் காணப்படுகிறது. யார் என்ற வினாப்பெயர், சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் பெரும்பாலான இடங்களில் ஆர் என்றே வழங்குகிறது.

ஆர் இக் கொடுமை செய்தார் (சிலம்பு. 7 ; 38-4)

ஆரும் இல் ஒரு சிறை (மணி. 4 ; 95)

மேலும் யானை, யாண்டு போன்ற சொற்களும் மொழி முதல் யகர மெய் கெட்டு வழங்குகின்றன.

ஆனைத் தீநோய் அரும்பசி களைய (மணி. 20 ; 35)

ஈர்ஆறு ஆண்டு அகவையாள் (சிலம்பு. 1 ; 24)

ழகர நகரப் புணர்ச்சி

நிலை மொழி இறுதியில் உள்ள ழகர மெய்யும் வருமொழி முதலில் உள்ள நகர மெய்யும் புணரும்போது, இரண்டும் இயைந்து ணகர மெய்யாக மாறும் புணர்ச்சி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.

வாழ்     + நாள்     = வாணாள்

வாழ்     + நர்     = வாணர் மண்

ஆள் வேந்தே நின் வாணாட்கள் (சிலப்பதிகாரம். 28 ; 125)

தாதையைக் கேட்கில் தன்குல வாணர் (சிலப்பதிகாரம். 15 ; 126)

6.3 உருபனியல் - பெயர்ச்சொல்

பெயர்ச்சொல்லைப் பொறுத்தவரை சங்கம் மருவிய காலத் தமிழ், சங்க காலத் தமிழிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பெற்று வளர்ந்துள்ளதனைக் காணலாம். மூவிடப் பெயர்களில் சில புதிய வடிவங்கள் முதன்முதலாக வழக்கிற்கு வருகின்றன. சுட்டு எழுத்துகளின் அடியாகப் பெயரடைகள், வினையடைகள் சில தோன்றி வழங்குகின்றன. கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதியின் ஆட்சி சங்க காலத்தைவிடப் பல நிலைகளில் பெருகிக் காணப்படுகின்றது. வேற்றுமையில், உருபுகளின் வடிவத்தில் சில மாறுதல்கள், புதிய உருபுகளின் வரவு என்ற வளர்ச்சி நிலைகள் காணப்படுகின்றன.

6.3.1 மூவிடப் பெயர்கள் சங்கம் மருவிய காலத் தமிழில் மூவிடப் பெயர்களில் சில புதிய வடிவங்கள் வந்து வழங்குகின்றன.

இடம்                            எண்                        பெயர் வடிவம்        உருபேற்கத் திரிந்த வடிவம்

தன்மை                       ஒருமை                   யான், நான்                  என்

பன்மை                     யாம், நாம்                    எம், நம்

யாங்கள்*                      எங்கள்*

முன்னிலை              ஒருமை                  நீ                                        நின், உன்

பன்மை                   நீயிர், நீர்                        நும், உம், நுங்கள்*

படர்க்கை                    ஒருமை                 தான்                               தன்

பன்மை                  தாம்                                தம், தங்கள்*

(*உடுக்குறி இட்டவை புதிய வடிவங்கள்)

தன்மை இடப்பெயர்

தன்மை ஒருமை இடப்பெயர்களில் பழைய வடிவமான யான் என்பதே அதிகமாக வழங்குகிறது. ஏறத்தாழ 120 இடங்களில் வழங்குகிறது. நான் என்பது சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் எட்டு இடங்களில் மட்டும் பயில்கிறது.

யாங்கள் என்ற தன்மைப் பன்மை வடிவம் முதன்முதலாக வந்து வழங்குகிறது. யாம் என்பது உயர்வு ஒருமைப் பெயராகவும் வழங்குகிறது.

யாம் உடைச் சிலம்பு முத்துடை அரியே (சிலம்பு. 20 ; 69)

இவ்வடியில், பாண்டியன் கண்ணகியிடம் தன் உயர்வு தோன்றத் தன்னை யாம் எனக் கூறிக் கொள்கிறான். ஆகவே, பன்மையைத் தெளிவாக உணர்த்த யாம் என்பதினின்று வேறுபட்ட வேறொரு வடிவம் தேவைப்பட்டது. இதனால் யாங்கள் என்ற புதிய வடிவம் சங்கம் மருவிய காலத்தில் வந்தது.

நீ போ யாங்களும் நீள்நெறிப் படர்குதும் (சிலம்பு. 11 ; 161)

யாங்கள் என்பது வேற்றுமை உருபேற்கும் போது, எங்கள் என வருகிறது. இது முதன்முதலாக மணிமேகலையில் மட்டும் ஓரிடத்தில் வருகிறது.

வெவ்வுரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின் (மணி. 25 ; 53)

முன்னிலை இடப்பெயர்

முன்னிலைப் பன்மையில் வேற்றுமை உருபேற்கத் திரிந்த வடிவங்களில் நுங்கள் என்பது புதிதாக வந்து வழங்குகிறது. இது சிலப்பதிகாரத்தில் மட்டும் ஓரிடத்தில் வழங்குகிறது.

முதிர் வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின்

(சிலம்பு. பதிகம் ; 45)

படர்க்கை இடப்பெயர்

தான், தாம் ஆகிய இரண்டும் படர்க்கை இடப்பெயர்கள். இவை சங்கம் மருவிய கால இலக்கியங்களில் மூன்று நிலைகளில் வழங்குகின்றன.

(1) சங்க காலத்தைப் போலவே இவை இரண்டும் படர்க்கை இடத்தில் மிகச் சிறுபான்மையாக வழங்குகின்றன.

தான் நோக்கி மெல்ல நகும் (குறள். 1094)

தாம் வீழ்வார் மென் தோள் (குறள். 1103)

(தான் = தலைவியைக் குறித்தது ; தாம் = காதலர்களைக் குறித்தது.)

(2) பெயர்களை அடுத்து அசைகளாக வருகின்றன. இத்தகைய போக்குச் சங்க மருவிய காலத்தில் மிகுதியாகக் காணப்படுகிறது.

கோவலன் தான் போன பின்னர் (சிலம்பு. 7; 52:7)

மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி (சிலம்பு. 19 ; 19)

(3) தான், தாம் ஆகியவற்றின் வேற்றுமை உருபேற்கத் திரிந்த வடிவங்கள் தன், தம் என்பன ஆகும். இவையும் பெயர்களின் பின்னர் அசைகளாக வருகின்றன.

பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்ட (சிலம்பு. 20 ; 74)

கனகவிசயர் தம் முடித்தலை நெரித்தது (சிலம்பு. 27 ; 50 – 51)

6.3.2 சுட்டுப் பெயர்கள் அவன், அவள், அவர், அது, அவை என்பன போன்ற சுட்டுப் பெயர்கள் படர்க்கை இடப்பெயர்களாகப் பயன்படுவது மிகுதியாயிற்று. தான், தாம் என்பன அசைகளாகவும் வருவதை மேலே கண்டோம். சங்கம் மருவிய காலத்தில் அவள், அது எனும் சுட்டுப் பெயர்களும் அசைகளாக வரத் தொடங்கின.

புகழ் மன்னும் புகார் நகர் அது தன்னில் (சிலம்பு. 1 ; 22)

வளையாச் செங்கோல் அது ஓச்சி (சிலம்பு. 7; 31)

ஆடகப் பூம்பாவை அவள் போல்வார் (சிலம்பு. 21 ; 34)

6.3.3 சுட்டுப் பெயரடைகளும் வினையடைகளும் அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயரடைகள் சங்கம் மருவிய காலத் தமிழில் காணப்படுகின்றன. இவை சங்க காலத் தமிழில் காணப்படவில்லை.

அப்படி, இப்படி என்னும் இரண்டும் சங்கம் மருவிய கால இலக்கியங்களில் சுட்டு வினையடைகளாக வழங்குகின்றன. இவையும் சங்க காலத் தமிழில் காணப்படவில்லை.

அப்படிக் கருதின் (மணி. 29 ; 400)

இப்படிக் காட்டிய (மணி. 29 ; 469)

6.3.4 பால் காட்டும் விகுதிகள் ஆளன் என்பதை ஆண்பால் விகுதியாகவும் ஆட்டி என்பதைப் பெண்பால் விகுதியாகவும் ஆளர் என்பதைப் பலர்பால் விகுதியாகவும் கொண்ட உயர்திணைப் பெயர்ச் சொற்கள் சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. இப் புதுமையான விகுதிகள் சங்க காலத்திலேயே பயிலத் தொடங்கிவிட்டாலும், இவற்றின் ஆட்சி சங்கம் மருவிய காலத்தில்தான் மிக அதிகமாக உள்ளது. (இவை தனியே பொருள்தரும் சொற்களே ஆயினும் விகுதிகள் போலப் பெயர்ப்பகுதிகளோடு சேர்த்து வழங்கப்பட்டன.)

ஆளன்     -பேரறிவாளன்                      (குறள். 215.2)

நான்மறையாளன்           (சிலம்பு. 11 ; 152)

உருவிலாளன்                   (மணி. 5 ; 6)

ஆட்டி     -குடமலையாட்டி                 (சிலம்பு. 12 ; 47)

மாமறையாட்டி                  (மணி. 13 ; 77)

குலப்பிறப்பாட்டி                (சிலம்பு. 13 ; 89)

ஆளர்     -ஊர்காப்பாளர்                     (சிலம்பு. 16 ; 50)

ஏவலாளர்                             (சிலம்பு. 13 ; 61)

வடமொழியாளர்               (மணி. 5 ; 40)

காரர் என்ற புதிய விகுதியும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் வருகிறது. வடமொழியில் உள்ள கார் என்ற விகுதியும் தமிழில் உள்ள அர் என்ற பலர்பால் விகுதியும் இணைந்து காரர் என்ற விகுதி தோன்றியது.

கஞ்சகாரர் (வெண்கலக் கொல்லர்) (சிலம்பு. 5 ; 28)

துன்னகாரர் (தையல்காரர்) (சிலம்பு. 5 ; 32)

மாலைக்காரர் (மாலை தொடுப்பவர்) (மணி. 28 ; 40)

6.3.5 கள் விகுதியின் செயல்பாடுகள் தொல்காப்பியர் கள் விகுதியை அஃறிணைப் பெயர்ச்சொற்களில் பன்மை உணர்த்துவதற்கு உரியதாக மட்டுமே குறிப்பிடுகிறார். சங்க காலத்தில் கள் விகுதி, அஃறிணைப் பன்மை உணர்த்தியதோடு, அர் என்ற பலர்பால் விகுதியோடு சேர்ந்து அர்கள் என நின்று உயர்திணைப் பன்மை உணர்த்தவும் வந்தது. சங்கம் மருவிய காலத் தமிழில் கள் விகுதி பெயர்ச்சொற்களில் ஐவகையாகச் செயல்படுகிறது.

(1)  அஃறிணைப் பன்மை உணர்த்தும் விகுதியாக வழங்குகிறது

சொற்கள்     (குறள். 1100 ; 1)

உயிர்கள்     (சிலம்பு. 10 ; 175)

மீன்கள்     (மணி. 29 ; 118)

(2)  உயர்திணைப் பலர்பாலுக்கு உரிய அர் விகுதியுடன் சேர்ந்து, அர்கள் என்னும் இரட்டைப் பன்மை விகுதியாக நின்று உயர்திணைப் பன்மையை உணர்த்துகிறது.

பூரியர்கள்     (குறள். 919 ; 2)

மற்றையவர்கள்     (குறள். 263 ; 2)

புத்தர்கள்     (மணி. 30 ; 114)

இவ்விருவகையும் சங்கம் மருவிய காலத்திற்கு முன்பிருந்தே வழங்கியவை. இனி வருபவை சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய புதிய வழக்குகள்.

(3)   உயர்திணைப் பன்மை உணர்த்தும் விகுதியாக வழங்குகிறது.

இரட்டையம் பெண்கள் இருவரும் (சிலம்பு. 30 ; 49-50)

ஒன்பது செட்டிகள் உடல் என்பு இலை காண் (மணி. 29 ; 195)

இத்தொடர்களில் பெண்கள், செட்டிகள் ஆகிய சொற்களில் கள் விகுதி உயர்திணைப் பன்மை விகுதியாக வருகிறது.

(4)  உயர்வு ஒருமை விகுதியாக வழங்குகிறது

சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் (சிலம்பு. 16 ; 18)

இவ்வரியில் வரும் நோன்பிகள், அடிகள் ஆகிய சொற்கள் கோவலனைக் குறிக்கின்றன. இங்குக் கள் விகுதி உயர்வு ஒருமை விகுதியாக வருகிறது. மேலும் கவுந்தியடிகள் (சிலம்பு. 11;166)அறவண அடிகள் (மணி. 12; 1) ஆகிய சொற்களிலும் கள் உயர்வு ஒருமை விகுதியாக வருகிறது.

(5)  மூவிடப் பெயர்களில் உள்ள பன்மை வடிவங்களில் சில, உயர்வு ஒருமைப் பெயர்களாகவும் வழங்கின. எனவே பன்மை காட்டுவதற்காக, அவற்றோடு கள் விகுதி சேர்த்து வழங்கப்பட்டது.

யாம்     + கள்     = யாங்கள்

எம்     + கள்     = எங்கள்

நும்     + கள்     = நுங்கள்

தம்     + கள்     = தங்கள்

மேலே கூறியவற்றை நோக்கும்போது, கள் விகுதி சங்கம் மருவிய காலத் தமிழின் வளர்ச்சியில் இன்றியமையாத பங்கு வகிப்பதை அறியலாம்.

6.3.6 உயர்வு ஒருமைப் பெயர்கள் இயற்பெயர்கள், ஆர் என்னும் பலர்பால் விகுதியைச் சிறப்பு விகுதியாகப் பெற்று, உயர்வு ஒருமைப் பெயர்களாக வழங்குகின்றன. சங்க காலத்தில் கலித்தொகையில் சாமனார் என்ற ஒரு சொல் மட்டும் ஆர் விகுதி பெற்று உயர்வு ஒருமைப் பெயராக வழங்கியது. சங்கம் மருவிய காலத்தில் இத்தகைய சொற்களின் வழக்கு மிகுதியாகக் காணப்படுகிறது.

அசோதையார்     (சிலம்பு. 17 ; 99)

நாரதனார்               (சிலம்பு. 24 ; 14.1)

மகளார்                   (சிலம்பு. 24 ; 15.2)

மகனார்                  (சிலம்பு. 16 ; 17)

வேலனார்             (சிலம்பு. 14 ; 1)

6.3.7 வேற்றுமை தொல்காப்பியர் கூறியுள்ள வேற்றுமை உருபுகள் சங்க காலத்தில் எத்தகைய மாறுதலும் பெறாமல் வழங்கின. சங்கம் மருவிய காலத்தில், சில வேற்றுமை உருபுகள் வடிவத்தில் சிறு மாறுதல் பெற்று வழங்குகின்றன. சில வேற்றுமைகளுக்கான பொருளை உணர்த்தப் புதிய சொல்லுருபுகள் வழங்குகின்றன. (சொல்லுருபு = தனியே பொருள்தரும் ஒரு சொல்லே உருபாக வருவது)

(1)  தொல்காப்பியர் மூன்றாம் வேற்றுமை உருபுகளுள் ஒன்றாகக் கூறிய ஆன் என்பது ஆல் என மாறி வழங்குகிறது.

பவள உலக்கை கையால் பற்றி (சிலம்பு. 7 ; 20.1)

(2)  அது என்னும் ஆறாம் வேற்றுமை உருபு. ஆது என நீண்டு ஒரு சில இடங்களில் வழங்குகிறது.

தனாது பாண்டு கம்பளம் (மணி. 29 ; 21)

(3)  கொண்டு என்னும் சொல்லுருபு மூன்றாம் வேற்றுமைக்கு உரிய கருவிப் பொருளை உணர்த்த வழங்குகிறது.

ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர் (சிலம்பு. 7 ; 19.1)

(திமில் கொண்டு = படகால்)

(4)  தொல்காப்பியர் காலத்திலும் சங்க காலத்திலும் உடனிகழ்ச்சிப் பொருளில் ஒடு உருபே வழங்கியது. சங்கம் மருவிய காலத்தில் ஒடு உருபேயன்றி உடன் என்ற சொல்லுருபும் வழங்குகிறது.

உயிருடன் சென்ற ஒரு மகள் (சிலம்பு, 25 ; 107)

(5)  உடைய என்பது ஆறாம் வேற்றுமைக்கு உரிய உடைமைப் பொருளை உணர்த்தும் சொல்லுருபாக வழங்குகிறது.

இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல் மணி. 29 ; 387)

6.4 உருபனியல் - வினைச்சொல்

வினைச்சொல் அமைப்பில் சில மாற்றங்களைத் தவிரப் பெரும்பாலும் சங்ககாலத் தமிழே சங்கம் மருவிய காலத்தில் வழங்குகிறது. சங்க காலத்தில் வழங்கிய வினைமுற்று விகுதிகளில் பெரும்பாலானவை சங்கம் மருவிய காலத்தில் வழங்குகின்றன. சில விகுதிகள் மட்டுமே வழங்கவில்லை. மேலும் சில புதிய வினைமுற்று விகுதிகள் வழக்கிற்கு வருகின்றன. தொல்காப்பியர் குறிப்பிட்டுக் கூறாத வினையெச்ச, பெயரெச்ச வாய்பாடுகள் பல சங்க காலத்தில் வழங்கியுள்ளன. இவை யாவும் சங்கம் மருவிய காலத்தில் வளர்ச்சியுற்று நிலை பெறுகின்றன. மேலும் புதிய வினையெச்ச வாய்பாடு ஒன்றும் வந்து வழங்குகிறது.

6.4.1 தன்மை வினைமுற்று தன்மை ஒருமை வினைமுற்றில் ஏன், என், அல், கு, அன் ஆகிய ஐந்து விகுதிகள் வழங்குகின்றன. ஏன் விகுதியே மிக அதிகமாக வழங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக, சங்க காலத்தில் புதிதாக வந்த அன் விகுதி அதிக இடங்களில் வழங்குகிறது.

உள்ளுவன் மன் யான் (குறள். 1125)

அம் சில் ஓதியை அறிகுவன் யான் (சிலம்பு. 11 ; 195)

(உள்ளுவன் = நினைப்பேன் ; அறிகுவன் = அறிவேன் ; தருகுவன் = தருவேன்.)

தன்மைப் பன்மை வினைமுற்றில் ஏம், அம், ஆம், ஓம், கும், தும், டும் ஆகிய ஏழு விகுதிகள் வழங்குகின்றன. சங்க காலத் தமிழில் வழங்கிய எம், றும் ஆகிய இரண்டும் வழங்கவில்லை. சங்க காலத்தில் இரண்டு இடங்களில் மட்டும் முதன்முதலாக வழக்கிற்கு வந்த ஓம் என்ற விகுதி சங்கம் மருவிய கால இலக்கியங்களில் 12 இடங்களில் பயில்கிறது.

பொன் ஆடி வந்த புதுப்புனல் மற்றையார்

முன் ஆடினோம் தோழி (சிலம்பு. 24 ; 4:3-4)

6.4.2 முன்னிலை வினைமுற்று முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகளாக இ, ஐ, ஆய், ஓய் ஆகிய நான்கும், முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகளாக இர், ஈர், மின், மின்கள் ஆகிய நான்கும் வழங்குகின்றன. பன்மை விகுதிகளுள், மின்கள் என்பது இரட்டைப் பன்மை விகுதி. இது சங்கம் மருவிய காலத்தில்தான் முதன் முதலாகப் பயில்கிறது. சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில் மட்டுமே இது வருகிறது.

நண்ணுமின்கள் நல் அறமே (சிலம்பு. 16 ; வெண்பா.1)

(நண்ணுமின்கள் = செய்யுங்கள்)

6.4.3 படர்க்கை வினைமுற்று படர்க்கை வினைமுற்றுகளில் இருதிணை ஐம்பால் காட்டும் விகுதிகளாகக் கீழ்க்கண்ட விகுதிகள் சங்கம் மருவிய காலத்தில் வழங்குகின்றன.

ஆண்பால்          – அன், ஆன்     (ஓன் – திரிந்த வடிவம்)

பெண்பால்         – அள், ஆள்     (ஓள் – திரிந்த வடிவம்)

பலர்பால்            -  அர், ஆர்       (ஓர் – திரிந்த வடிவம்)

ஒன்றன்பால்    – து,டு, று

பலவின்பால்     - அ, ஆ, ஐ

சங்ககாலத்தில் ஓன், ஓள், ஓர் ஆகிய விகுதித் திரிபுகள் வினைமுற்றுகளிலும் வினையாலணையும் பெயர்களிலும் வழங்கின, ஆனால் சங்கம் மருவிய காலத்தில் இவ்விகுதிகள் வினையாலணையும் பெயர்களில் மட்டுமே பெரும்பாலும் வழங்குகின்றன. வினைமுற்றுகளில் அவ்வளவாக வழங்கவில்லை.

ஆர்கள் என்ற இரட்டைப் பன்மை விகுதி சங்ககாலத்தில் கலித்தொகையில் வாழ்வார்கள் என்ற வினைமுற்றுச் சொல் ஒன்றில் மட்டும் வந்தது. இவ்விகுதி சங்கம் மருவிய கால நூல்களில் வழங்கும் வினைமுற்றுகளில் காணப்படவில்லை. ஆனால் பெயர்ச்சொற்களில் அர்கள் என்னும் இரட்டைப் பன்மை விகுதி வழங்குகின்றது என்பதை முன்னர்க் கண்டோம்.

இசின் அசைச்சொல் பெற்ற வினைமுற்றுகள்

சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் இசின் என்ற அசைச்சொல்லைக் கொண்டு முடியும் தன்மை, முன்னிலை, படர்க்கை வினைமுற்றுகள் நூற்றுக்கும் மலோக வழங்கியுள்ளன. ஆனால் சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியங்களில் இசின் ஈற்று வினைமுற்று ஒன்று மட்டுமே காணப்படுகிறது.

கேட்டிசின் வாழி நங்கை என் குறை

(சிலம்பு. 23 ; 17)

(கேட்டிசின் = கேட்பாயாக)

6.4.4 வினையெச்சம் தொல்காப்பியர் கூறியுள்ள பத்து வினையெச்ச வாய்பாடுகளில் செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யிய, செயின், செய, செயற்கு, செய்யா என்னும் ஒன்பது வாய்பாடுகள் சங்கம் மருவிய காலத்தில் வழங்குகின்றன. செய்யியர் என்ற ஒரு வாய்பாடு மட்டும் வழங்கவில்லை.

சங்ககாலத்தில் புதிதாகத் தோன்றிய வினையெச்ச வாய்பாடுகள் யாவும் சங்கம் மருவிய காலத்தில் வழங்குகின்றன. சில புதிய வினையெச்ச வாய்பாடுகளும் வழக்கிற்கு வருகின்றன.

(1) சங்க காலத்தில் செய்வான், செய்பான் என்னும் இரு வாய்பாடுகளைக் கொண்ட வினையெச்சங்கள் வழங்கின. சங்கம் மருவிய காலத்தில் செய்வான் என்ற வாய்பாட்டு வினையெச்சம் மட்டுமே வழங்குகிறது. செய்பான் என்ற வாய்பாட்டு வினையெச்சம் வழங்கவில்லை.

வலம்புரி தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய்வான்……………. (சிலம்பு. 7 ; 8:1)

(மாய்வான் = மறைந்து போகும்படி)

(2) செயின் என்ற வாய்பாடு சங்கம் மருவிய காலத் தமிழில் செயில் என்றும் வழங்குகிறது.

உண்ணற்க கள்ளை உணில் உண்க (குறள். 922 ; 1)

உணின் – உணில் = உண்ண விரும்பினால்)

(3) வினைமுற்றுகளை அடுத்து ஆயின், ஆனால், எனில், ஏல் ஆகியன சேர்ந்து வந்து அவை நிபந்தனை வினையெச்சங்களாகின்றன.

இன் உயிர் ஈவர் ; ஈயார் ஆயின் (மணி. 2 ; 44)

கண்டோர் உளர் எனில் காட்டும் (சிலம்பு. 16 ; 199)

(ஈயார் ஆயின் = கொடார் ஆயின் ; உளர் எனில் = உள்ளார் எனில்)

6.4.5 பெயரெச்சம் தொல்காப்பியர் கூறியுள்ள செய்த, செய்யும் என்னும் இருவகை வாய்பாட்டுப் பெயரெச்சங்களும் மிகுதியாக வழங்குகின்றன. சங்ககாலத்தில் செய்கின்ற என்னும் நிகழ்கால வாய்பாட்டுப் பெயரெச்சம் புதிதாக வந்து பரிபாடலில் மட்டும் ஓர் இடத்தில் வழங்கியது. சங்கம் மருவிய காலத்தில் இவ்வாய்பாட்டுப் பெயரெச்சங்கள் மிகுதியாக வழங்குகின்றன.

உருள்கின்ற மணிவட்டை (சிலம்பு. 29 ; உரைப்பாட்டு மடை)

செய்யா, செய்யாத என்னும் இருவகை வாய்பாட்டு எதிர்மறைப் பெயரெச்சங்களும் வழங்குகின்றன. செய்யாத என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சங்கள் சங்க காலத்தைக் காட்டிலும் அதிக அளவில் சங்கம் மருவிய காலத்தில் பயில்கின்றன.

செய்யா     புனையா ஓவியம் போல நிற்றலும் (மணி. 16 ; 131)

செய்யாத     களையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி

வளையாத செங்கோல் வளைந்தது (சிலம்பு. 19 ; 17-18)

6.5 தொகுப்புரை

தொல்காப்பியர் காலத் தமிழிலிருந்து சங்க காலத் தமிழில் ஏற்பட்ட மாற்றங்கள் சங்கம் மருவிய காலத் தமிழில் அதிகமாக வழங்குகின்றன. ஒலியனியலைப் பொறுத்தவரை, சங்ககாலத்தில் சகரமெய் அ, ஐ ஆகிய உயிர்களோடு கூடி மொழி முதலாவது ஏறத்தாழ இருபது சொற்கள் என்ற அளவில் காணப்பட்டது. இது சங்கம் மருவிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் என்ற அளவில் மிகுதியாகக் காணப்படுகிறது. யகர மெய் ஓகாரத்தோடு சேர்ந்து மொழி முதலாவது சங்கம் மருவிய காலத் தமிழில் முதன்முதலாகக் காணப்படுகிறது. அதேபோல், லகர மெய் மொழி முதலாவது சங்கம் மருவிய காலத் தமிழில்தான் முதன்முதலாகக் காணப்படுகிறது. வடமொழிச் சொல்லை ஏற்கும்போது தனிக் குறிலை அடுத்து ரகர மெய் வரும் போக்கு சில இடங்களில் காணப்படுகிறது. உருபனியலில் பெயர்ச் சொல்லைப் பொறுத்தவரை சங்கம் மருவிய காலத் தமிழ் பல்வேறு மாற்றங்களைப் பெற்று வளர்ந்துள்ளது. மூவிடப் பெயர்களில் யாங்கள், எங்கள், நுங்கள், தங்கள் ஆகிய நான்கு புதிய வடிவங்கள் முதன்முதலாக வழக்கிற்கு வருகின்றன. இவை மிகக் குறைவான இடங்களிலேயே வருகின்றன. கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சங்க காலத்தில் இரு வகைப்பட்ட நிலையில் செயல்பட்டது. சங்கம் மருவிய காலத்தில் அது ஐவகைப்பட்ட நிலையில் செயலாற்றுகிறது. கள் விகுதி சங்கம் மருவிய காலத் தமிழின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. வேற்றுமை உருபுகள் சிலவற்றின் வடிவத்தில் சிறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. ஒருசில வேற்றுமைகளின் பொருளை உணர்த்தப் புதிய உருபுகள் சில முதன்முதலாக வழங்க வந்துள்ளன. வினைச்சொல்லைப் பொறுத்தவரை சங்ககாலத் தமிழில் வழங்கிய வினைமுற்று விகுதிகள், வினையெச்ச, பெயரெச்ச வாய்பாடுகளே வழங்குகின்றன. சுருங்கக் கூறின் சங்கம் மருவிய காலத் தமிழ் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களைப் பெற்றிருப்பினும் பெரும்பாலும் சங்க காலத் தமிழாகவே உள்ளது ; சங்கத் தமிழில் தோன்றிய மாற்றங்கள் சங்கம் மருவிய காலத் தமிழில் மிகுந்த அளவில் வழங்கலாயின எனலாம்.