கி.பி. ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில் புத்த சமயம் வீழ்ச்சியடைந்து விட்டது. சமண சமயம் சங்க காலத்தில் நுழைந்து, களப்பிரர் காலத்தில் காலூன்றிப் பல்லவர் காலத்தில் ஆட்சிப் பீடத்தையே கைப்பற்றிவிட்டது. இதனால் தமிழ் இலக்கியமும், தமிழர் சமயங்களான சைவமும், வைணவமும் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை வீழ்ச்சி அடைந்திருந்தன.
இந்நிலையை முற்றிலும் மாற்றி அமைத்த பெருமை சைவக்குரவர் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசரையே சாரும். சமணராக இருந்த அப்பெரியார்தான் சைவத்திற்கு மாறியதோடு அல்லாமல் மகேந்திர வர்ம பல்லவனையும் சமயம் மாற்றினார். இதுவே சைவ சமயத்தின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். சமணப் பள்ளிகள் இடிக்கப்பட்டுப் பல சைவ ஆலயங்கள் எழுப்பப்பட்டன. நாவுக்கரசர், ஞானசம்பந்தர் முதலிய சைவ நாயன்மார்கள் மட்டும் அன்றி, பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் போன்ற வைணவ ஆழ்வார்களும் பக்திப் பாடல்களைப் பாடி, பக்தியுடன் தமிழ்மொழியும் வளரத் துணை புரிந்தனர் எனலாம். கி.பி.ஏழாம் நூற்றாண்டு முதல், பிற்காலச் சோழர் ஆட்சி தொடங்கிய பத்தாம் நூற்றாண்டு வரையுள்ள அக்காலக் கட்டத்தை, சைவ-வைணவ மறுமலர்ச்சிக் காலம் எனலாம். செந்தமிழ் நிலத்தில் சைவம் புத்துயிர் பெற்றது போல வைணவமும் புத்துயிர் பெற்று வளரத் தொடங்கியது. அச்சமயங்களுடன் தமிழ்மொழியும் வளரத் தொடங்கியது. சமண, பௌத்தத் தாக்கத்தால் தமிழ்மொழியுடன் வடமொழிச் சொற்கள் சில கலந்துவிட்டன. தேவாரம், திருவாசகம் போன்ற சைவ நூல்களும், ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும் பக்தி இலக்கியக் காலத்தில் தமிழ் மொழிக்குக் கிடைத்த மாபெரும் இலக்கியச் செல்வங்களாகக் கருதப்படுகின்றன. இவையும், அவிநயம் போன்ற இலக்கண நூல்களும் பல்லவர் காலத்திய தமிழ்மொழியை அறிந்து கொள்ளத் துணையாக விளங்குகின்றன. சாசனம், செப்பேடு, கல்வெட்டுகள் போன்றனவும் அக்கால மக்கள் பேச்சு மொழியை அறியப் பெருந்துணை புரிகின்றன.
சைவ இலக்கியங்கள்
ஆசிரியர்கள் நூல்கள்
1 சம்பந்தர் திருக்கடைக்காப்பு 1,2,3ஆம் திருமுறைகள்
2 அப்பர் தேவாரம் 4,5,6ஆம் திருமுறைகள்
3 சுந்தரர் திருப்பாட்டு ஏழாம் திருமுறை
இவை மூன்றும் தேவாரம் என்னும் பொதுப்பெயரால் குறிக்கப் படுகின்றன.
4 மாணிக்கவாசகர் திருவாசகம் திருக்கோவையார் 8ஆம் திருமுறை
5 திருமாளிகைத் தேவர்
முதலிய ஒன்பதின்மர் திருவிசைப்பா திருப்பல்லாண்டு… 9ஆம் திருமுறை
6 திருமூலர் திருமந்திரம் 10ஆம் திருமுறை
7 திரு ஆலவாய் உடையார்
முதலிய பன்னிருவர் திருமுகப் பாசுரம் மூத்த திருப்பதிகம்… 11ஆம் திருமுறை
8 சேக்கிழார் பெரியபுராணம் 12ஆம் திருமுறை
வைணவ இலக்கியங்கள்
ஆசிரியர்கள் நூல்கள்
1 பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
2 பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
3 பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
4 திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் – பதிகம்
5 திருமழிசையாழ்வார் திருச்சந்த விருத்தம் – நான்முகன் திருவந்தாதி
6 நம்மாழ்வார் திருஆசிரியம், திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி
7 மதுரகவியாழ் வார் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாடல்
8 பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
9 ஆண்டாள் நாச்சியார் திருமொழி, திருப்பாவை
10 திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் போன்ற நூல்கள்
11 தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி
12 குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி
• உயிர் ஒலிகளின் பிறப்பு
முன் FRONT VOWEL நடு CENTRAL VOWEL பின் BACK VOWEL
உயர்
Mid எ ஏ e e: ஒ ஓ o o:
தாழ்
Low அ ஆ a a:
• மெய்யொலிகளின் பிறப்பு
பிறப்பும் பிறப்பு
முறைகளும்
Manner &
Modification வகைப்பாடு (Classification)
இத பல்லிதழ் பல் லொலி அண் அண்ண வளைநா பின்
னண்ண
ஒலி
Velar
ஒலி
நாமடி
ஒலி
Retroflex
ஒலி
Palatal
பல்
ஒலி
Alveolar
ழொலி ஒலி Dental
Labio
dental
Bilabial
ஒலிப்பில் தடையொலி/
வெடிப்பொலி
(Stop/Plosive) ப (p) த (t) ச (c) ட () க (k)
ஒலிப்பு தடையொலி/
வெடிப்பொலி
(Stop/Plosive) ப (b) த (d) ச (j) ட ( ) க (g)
ஒலிப்பில் உரசொலி F ஸ (s) S னூ ( )
உரசொலி வ (v) Z
ஒலிப்பு மூக்கொலி
(Nasal) ம (m) ந ன ( ) ஞ (ம) ண ( ) ங (n்)
ஒலிப்பு உரப்புஒலி
(Trill) ற ( )
ஒலிப்பு பிரிவளி
ஒலி
(Lateral) ல (l) ழ ள
( ) (l)
ஒலிப்பு வருடொலி
(Flap) ர (r)
சான்று:
முதலில் இறுதியில்
அ அமை பல
ஆ ஆமை பலா
இ இறை ஆடி
ஈ ஈற்று ஈ
உ உறு ஒரு
ஊ ஊறு பூ
எ எழு -
ஏ ஏழு -
ஒ ஒரு நொ
ஓ ஓடு போ
• மாற்றங்கள்
உயிரெழுத்துகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிப் பார்ப்போம்.
• நெடில் குறிலாதல்
இம்மாற்றம் உயிரெழுத்துகள் மாத்திரையில் குறைந்து ஒலிப்பதை நமக்கு உணர்த்துகிறது. குறிப்பாக மெய்களுக்கு அல்லது மெய்ம் மயக்கங்களுக்கு முன்னர் நெட்டுயிர்கள் குற்றுயிர்களாக ஆவது என்பது பல்லவர் காலத்துப் பெரு வழக்கு ஆகும். கூரம் செப்பேடு போன்றவற்றில் இம்மாற்றங்கள் காணப்படுகின்றன.
சான்று:
நீக்கி > நிக்கி
ஆழாக்கு > ஆழக்கு
தீந்தமிழ் > திந்தமிழ்
வீற்றிருந்தருளி > விற்றிருந்தருளி
மூன்று > முன்று
• அசையில் அளவு மாற்றம்
மெய்யினையும் அதைத் தொடர்ந்து உயிரினையும் உடைய அசைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மெய்யும் உயிரும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட அளவினை உடையனவாக இருத்தல் வேண்டும். அதாவது மெய் அரை மாத்திரை அளவினையும், உயிர்க்குறில் ஒரு மாத்திரையையும், உயிர்நெடில் இரண்டு மாத்திரைகளின் அளவையும் பெற்று இருத்தல் வேண்டும். ஆனால் நீரில் உப்புக் கரைவது போல அசையில் உள்ள மெய்யின் அளவு உயிருடன் கலந்துவிடுகிறது. இந்நிலையில் உயிருடன் கூடிய மெய்யொலி மறைவதில்லை. ஆனால் உயிரின் அளவே குறைக்கப்படுகிறது.
• உயிர்கள் மறைதல்
உயிர்கள் குறிப்பாக வெடிப்பொலிகளுக்கும் ர்/ல் ஆகியவற்றிற்கும் இடையில் உள்ள உயிர்கள் அடிக்கடி மறைந்து மெய்ம்மயக்கங்களுக்கு வழி வகுக்கின்றன.
• அசை புகுத்தப்படுதல்
மெய்ம்மயக்கங்களைத் தவிர்க்க மெய்களின் இடையில் உயிர்கள் புகுத்தப்படுகின்றன.
அ) இகரம் புகுத்தப்படுதல்
பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கும் போது இகரம் பயனாகின்றது. முந்தைய அல்லது அடுத்த எழுத்து இதழொலியாகவோ, நாவளையொலியாகவோ இருக்குமாயின் உகரம் வருகிறது. தமிழ் இயற்சொற்களிலும் விரைந்து ஒலிப்பதால் ஏற்படும் மயக்கங்களைத் தவிர்க்க உயிரெழுத்து வருகின்றது. தகர, ரகர மெய்களைப் பொறுத்த வரையில் மயக்கங்கள் தோன்றுவது இயல்பாகின்றது.
சான்று:
தரிசி > த்ரிசி > திரிசி
பலா > ப்லா > பிலா
புறா > ப்றா > பிறா
ஆ) உகரம் புகுத்தப்படுதல்
மெய்ம்மயக்கத்தைத் தவிர்க்கப் பிறிதொரு உயிரான உகரமும் புகுத்தப்படுகிறது. இம்மாற்றம் சற்றுப் பிந்தையது எனலாம்.
சான்று:
மகிழ > மக்ழ > மகுழ
விழிஞம் > வ்ழிஞம் > வுழிஞம்
• அகரம் இகரமாதல்
பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகக் கவனிக்கப்பட வேண்டிய மாற்றம் என்று இதனைக் கூறலாம்.
சான்று:
மங்கலம் > மங்கிலம்
மேலன > மேலின
கடா > கிடா
• ஐகாரம் மாற்றம்
அ) ஐகாரம் அகரமாதல்
சான்று:
ஐந்து > அஞ்சு
தலை > தல
பனைக்காய் > பனங்காய்
ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கூரம் செப்பேட்டில் ஐந்தே என்பது அயிந்தே எனக் காணப்படுகின்றது.
ஆ) ஐகாரம் எகரமாதல்
சான்று:
அரசர் > அரைசர் > அரெசர்
தலை > தலெ
சினை > சினெ
எல்லை > எல்லெ
அரைசர் > அரெசர் என்று சொன்னாலும், சொல்லின் இடையிலுள்ள எகரம் அகரமாகவே எழுதப்படும். (எனினும், சொல்லிடை எகரம் அகரமாக ஒலிக்கப்படவில்லை. அரெசர் என்ற வடிவத்திலுள்ள அகரம் கீழ்நடு உயிர். ஆனால் சொல்லிடை அகரம் முன்தாழ் இடை உயிராக மாறுகின்றது.)
• ஒளகாரம் எல்லா இடங்களிலும் வருதல்
இக்காலக் கட்டத்தில் ஒளகாரம் சொல் முதல், இடை, கடை என்னும் எல்லா இடங்களிலும் வருவதாக அவிநயம் கூறுகிறது. இவ்வாறு உயிரெழுத்துகள் பல்லவர் காலத்தில் மாற்றங்கள் பெற்று, தமிழ்மொழியில் நிகழ்ந்த மாறுதல்களைச் சுட்டி நிற்கின்றன.
மெய்யெழுத்துகள்
சான்று
க் கூடு
ச் சூடு
ட் படி
த் பதி
ப் பாடு
ம் மாடு, மனம்
ஞ் ஞாலம்
ந் நாலு
ண் மணம், தண்
ன் தன்
ல் கலம்
ள் களம், ஒளி
ழ் பழம், ஒழி
வ் வலம்
ர் அரிய
ற் அறிய
• மாற்றங்கள் (Change of Consonants)
மெய்யெழுத்துகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிப் பார்ப்போம்.
• மொழி முதல் யகரம் கெடுதல்
யகரம் கெடுதல் சங்க காலத் தமிழிலும், சங்கம் மருவிய காலத் தமிழிலும் தொடங்கி விட்டாலும் மிகுதியாகக் காணப்படுவது பல்லவர் காலத் தமிழிலேயே ஆகும்.
சான்று:
யாராலும் - ஆராலும்
யானை - ஆனை
யாக்கை - ஆக்கை
• யகரமும், றகரமும்
தொல்காப்பியர் காலத்தில் நாவளை ஒலியாக இல்லாதிருந்த யகரமும் றகரமும் வடமொழிச் செல்வாக்கால் பல்லவர் காலத்தில் நாவளை ஒலியாகின்றன. நுனியண்ண ஒலியான றகரத்தின் உச்சரிப்பு மாறிற்று. இரட்டை றகரம் பல்லின ஒலியாகிய தகரமாகி, இரட்டைத் தகரமாக ஒலிக்கப்படுகின்றது.
சான்று:
முற்று > முத்து
பற்றேதும் > பத்தேதும்
ஆற்றுக்கால் > ஆத்துக்கால்
சேற்று நிலம் > சேத்துநிலம்
கொற்றவன்குடி > கொத்தவன்குடி > கொத்தகுடி
கி.பி.எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலேயே இம்மாற்றங்களைக் காணலாம். இருபதாம் நூற்றாண்டுப் பேச்சுத் தமிழில் ற் ற் > த் த் மாற்றம் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. பல்லவர் காலத்தில் ஏற்பட்ட இம்மாற்றம் தற்காலத்தில் நிலைத்து விட்டதை உணர முடிகிறது.
• மெய்யொலிகள் இடையண்ணச் சாயல் பெறுதல்
சில மெய்யொலிகள் இடையண்ண ஒலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி அண்ணச் சாயலுடன் ஒலிக்கப்படுகின்றன.
அ) ஞகரமாதல்
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அப்பர் தேவாரத்தில் பல இடங்களில் பல்லொலி இடையண்ண ஒலியாக மாறும் போக்கினைக் காணலாம்.
சான்று:
கைந்நின்ற > கைஞ்ஞின்ற (அப்பர் தேவாரம், கோயில், 5-5)
மெய்ந்நின்ற > மெய்ஞ்ஞின்ற
செய்ந்நின்ற > செய்ஞ்ஞின்ற
மைந்நின்ற > மைஞ்ஞின்ற
மேற்கூறிய சான்றுகளில் இடையண்ண அல்லது முன்னுயிர் எழுத்தாகிய இகரம் மாற்றத்திற்குக் காரணமாகிறது. எனினும் வேறு பல இடங்களிலும் காரணம் கூற முடியாத மாற்றம் காணப்படுகிறது.
நெகிழ்த்து > ஞெகிழ்த்து
முந்நாழி > முஞ்ஞாழி
நகர் > ஞகர்
கிளைமொழி வழக்குகளிலும், மலையாளத்திலும் தொடர்ந்து பயன்படுத்தப் பெற்ற ஞகர மெய்யே இம்மாற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
ஆ) சகரமாதல்
தகரம் இரட்டித்து வரும்போது அதன் முன்னர் இடையண்ண ஒலி அல்லது முன்னுயிர் வருமாயின் அண்ணச் சாயல் பெற்று, சகரமாகிறது.
சான்று:
வித்தை > விச்சை - திருவாசகம் 6.21
பித்தேற்றி > பிச்சேற்றி - திருவாசகம் 8.5
பித்தன் > பிச்சன் - திருவாசகம் 6.9
• தடையொலிகள் ஒலிப்புடையொலியாதல் (Plosives become Voiced)
பல்லவர் காலத்தில் வெடிப்பொலிகள் ஒலிப்புடை ஒலிகளாக உச்சரிக்கப் பட்டதற்குச் சான்றுகள் உண்டு. ஆனால் இது எல்லாக் கிளைமொழிகளிலும் ஒரே மாதிரியாகக் காணப்படவில்லை.
தமிழ் இடப் பெயர்களோ, சிறப்புப் பெயர்களோ கல்வெட்டுகளில் வடமொழியில் வெட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் வடமொழி ஒலிப்புடை ஒலிகள் கூட ஒலிப்பிலா ஒலிகளாக வடமொழியில் எழுதப்பட்டுள்ளன. இவையே வேறிடங்களில் ஒலிப்புடை ஒலியாக எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுச் சான்றுகளை இரு தலைப்புகளின் கீழ்க் கொண்டு வரலாம்.
அ) உயிர்களுக்கு இடையில் வரும் வெடிப்பொலிகள்.
சான்று பரக (g) ன்.
ஆ) இன மூக்கொலியை அடுத்து வரும் வெடிப்பொலிகள்.
சான்று நிலைதாங்கி (g)
மூன்றாம் நந்திவர்மனுடைய ஆவணங்களில்,
நிலைதாங்கி (g)
விளங்கா (g) டு
நந்தா (d) விளக்கு
இன மூக்கொலிகளுக்குப் பிறகு வரும் வெடிப்பொலிகள் ஒலிப்புடைய ஒலிகளாக மாறியது முதல் கட்டம்.
அடுத்த கட்டமாக உயிரிடைத் தடையொலிகள் ஒலிப்பு ஒலிகளாக மாறின.
• ஒருங்கிணைவு (merger of sounds)
ஏறக்குறையச் சிறிது வேறுபாட்டை உடைய இருவேறு ஒலிகள் பல்லவர் காலத்தில் ஒரே ஒலியாக மாறின.
அ) நகர னகர மெய்களின் ஒருங்கிணைவு
நுனிநா பல் மூக்கொலியான நகரமும், நுனிநா நுனியண்ண மூக்கொலியான னகரமும் ஒன்றாதல் பல்லவர் காலத்தில் காணப்பட்ட ஒரு பெரிய மாறுதலாகும். தொல்காப்பியர் காலத்திலேயே இம்மாற்றத்திற்கான அடிப்படை அமைந்துள்ளது. எனினும் இம்மாற்றம் பல்லவர் காலத்தில்தான் மிகுதியாகக் காணப்பட்டது. நகரத்திற்குப் பதிலாக னகரம் பத்து விழுக்காடு எழுதப்பட்டுள்ளது. ஆனால் னகரத்திற்குப் பதிலாக ஞகரம் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது.
இம்மாற்றம் சொல்லின் இடை, இறுதி, முதல் இரட்டித்து வருமிடம் என்ற வரிசையில் ஏற்பட்டது எனலாம். னகரம் நகரத்தின் இடத்தைப் பிடித்தது. இக்காலக் கட்டத்தில்தான் நகரம் மொழிக்கு இறுதியில் வருவது மறைந்தது. தொகையாக வரும் சொற்களில் தவிர நகரம் சொல் இடையில் இடம்பெறுவதும் இல்லை. எனவே, சொல்லுக்கு முதலில் நகரமும் பிறவிடங்களில் னகரமும் எழுதும் மரபு பல்லவர் காலத்தில் தான் தொடங்கியிருக்கலாம் என்று கூற இயலும்.
சான்று
நல்லானை – அப்பர் தேவாரம் 6, திருக்கீழ்வேளூர் – 50.5)
நம்பன் – அப்பர் தேவாரம் 6, திருமுண்டீச்சுரம் – 7.3)
ஆ) ளகர ழகர மெய்களின் ஒருங்கிணைவு
சில கிளைமொழிகளில் குறிப்பாகத் தென் மாவட்டக் கிளை மொழிகளில் ளகர மெய்யும் ழகர மெய்யும் ஒன்றாதல் மற்றொரு எழுத்து மாற்றமாகும். இங்கு இரு மாற்றங்கள் கவனிக்கத் தக்கன.
வட மாவட்டக் கிளைமொழிகளில் ளகர மெய் ழகர மெய்யுடன் ஒன்றாகிறது. ஏழாம் நூற்றாண்டிலேயே ஆள் என்பது ஆழ் என நாடாழ்ச்சி என்ற சொல்லில் எழுதப்பட்டது. ஆள் (ஆளுதல்) என்ற வேர் தொடர்ந்து ஆழ் என்னும் மாற்று வடிவத்தைப் பெற்றுள்ளது. வைணவச் சான்றோர்களின் பெயரான ஆழ்வார் என்பது முதலில் ஆள்வார் என்றே இருந்திருக்க வேண்டும். அரசர்கள் ஆள்வார் என்றே அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுக் கூறுகின்றது.
தென் மாவட்டங்களில் வலுவாக நிலை பெற்றுவிட்ட மாற்றமாகிய ழகரமும் ளகரமும் ளகரமாக ஒன்றாதல் மிகவும் முக்கியமானது. இந்த ஒன்றாதலின் சுவடுகள் எட்டாம் நூற்றாண்டிலேயே காணப்படுகின்றன.
சான்று:
கிழமை > கிளமை
கிழக்கு > கிளக்கு
புகழ் > புகள்
• பிற மாற்றங்கள்
ஒரு மெய் மற்றொரு மெய்யாதல் பல்லவர் காலத்தில் இருந்து வந்துள்ளது.
அ) பகரம் வகரமாதல்
உயிரிடையே பகரம் வகரமாகிறது. நிபந்தம் > நிவந்தம். சில இடங்களில் பகரம் மகரமாக மாறிய மாற்றம் பல்லவர் காலத்துக்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும்.
சான்று: நிபந்தம் > நிமந்தம்
ஆ) மகரம் வகரமாதல்
சில இடங்களில் சொல் முதல் மகரம் வகரமாக ஒலிக்கப்படுகின்றது.
சான்று: மிருக > விருக
இ) இறுதி மெய் உகர முடிவு பெறல்
பண்டைக் காலத்தில் வெடிப்பொலிகள் மட்டுமே மொழிக்கு இறுதியில் வருவதில்லை. அவை உகர முடிவையே கொண்டன. ஆனால், இடைக்காலத்தில் வெடிப்பொலி அல்லாத மெய்களும் சில உயிர்களும் கூட உகர முடிவைப் பெறத் தொடங்கின.
ஒலிப்புடை எழுத்துதான் அளபெடுக்கும். அஃது என்ற சொல்லோடு மெய்ம்முதல் சொல் தொடருமானால் ஆய்தம் மறையும் எனத் தொல்காப்பியத்திலேயே கூறுப்பட்டுள்ளது. உயிர் முதல் சொல்லால் தொடரும் போது மாற்றம் பெறாது.
பிற்காலத்தில் ஆய்தம் தனி ஒலி என்றும் அது தடையொலியிலிருந்து வேறுபட்டது என்றும் கருதினர். திருக்குறள் காலத்தில் ஆய்தம் தனி ஒலியாகக் கருதப்பட்டது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரத்தில் ஆய்தம் ஒலிக்கூறாக இணைந்துள்ளது. பெருங்கதையில் ஆய்தம் தனி ஒலியாக யகர மெய்யுடன் எதுகையில் வருகிறது.
சான்று:
“கய்ந் நவிலாளனை எஃகுள்ளடக்கி
எஃகொழி களிற்றின் வெய்துயிர்த் துயங்கி”
நம்மாழ்வாருடைய திருவாய்மொழியிலும் ஆய்தம் யகரத்துக்கு எதுகையாக வருதலைக் காணலாம். இக்காலத்தே தோன்றிய அவிநயமும் இக்கொள்கையை ஏற்றுக் கொள்கிறது.
“ஆய்தமும் யவ்வும் அவ்வோடு வரினே
ஐயென் எழுத்தொடு மெய்பெறத் தோன்றும் ”
என்ற அவிநய நூற்பா ஆய்தம் யகரத்தை ஒத்தது என்று கூறுகின்றது.
பல்லவர் கால வேள்விக்குடிச் செப்பேட்டில் ஈது ~ இஃது ~ இது என்ற வடிவங்கள் ஒரே பொருளில் காணப்படுகின்றன. இதனாலும் ஆய்தம் யகர ஒலி பெற்றமை விளங்கும்.
அதனுடைய சரியான உச்சரிப்பு இன்னதென்று தெளிவாகத் தெரியவில்லை. அஃதை > அகுதை என்று குறிப்பிட்டிருப்பது ஆய்தத்தின் உச்சரிப்பைக் காட்டுவதாக இருக்கலாம்.
எஃஃகிலங்கிய கையர் என்பது ஆய்தம் அசை மெய்யாக அளபெடுத்து வருவதற்குச் சான்றாகும். ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரத்தில் ஆய்தம் வருகிறது.
சான்று:
அழகு > அழஃகு
இந்த ஆய்தம் ஒலிப்புடையதாகும்.
இவ்வாறாக, பண்டைத் தமிழிலிருந்து பல்லவர் காலத் தமிழ் சில வகைகளில் வேறுபட்டிருப்பதைக் கண்டோம். சங்கத் தமிழின் பல கூறுகள் தொடர்ந்தும் சில கூறுகள் மறைந்தும் வரக் காண்கிறோம். சங்க மருவிய காலத் தமிழின் சில புதிய கூறுகளின் எண்ணிக்கை பல்லவர் காலத்தில் அதிகரித்தும் சில புதிய கூறுகளைப் பெற்றும் பல்லவர் காலத் தமிழ் வளர்ந்தது எனலாம்.
• பல்லவர் காலத் தமிழை அறிய உதவும் இலக்கியங்கள், இலக்கணம், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற செய்திகளை அறிந்து கொண்டீர்கள்.
• அந்தக் காலக் கட்டத்தில் தமிழ் மொழியில் ஏற்பட்ட உயிர் எழுத்து மாற்றங்களையும் உயிரின் ஒலியளவில் ஏற்பட்ட மாற்றங்களையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
• பல்லவர் காலத்தில் உயிரெழுத்துகள் மட்டுமன்றி மெய்யெழுத்துகளும் எத்தகைய மாற்றங்களுக்கு உள்ளாயின என்பதனையும், தனி ஆய்தத்தின் தோற்றச் சிறப்பினையும் பல சான்றுகள் மூலம் நீங்கள் நன்கு உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.
பாடம் - 2
• சைவ – வைணவ இலக்கியங்கள்
அ) சைவ நூல்கள்
தெய்வத் தமிழ் என வழங்கிய பக்தி இலக்கியத்தை வளர்த்த பல்லவர்கள் கி.பி. ஆறு முதல் கி.பி. ஒன்பது வரை தமிழகத்தை ஆண்டனர். இவர்கள் தமிழுக்குப் பல சிறப்புகள் வந்து சேரக் காரணமாயிருந்தனர். இவர்கள் காலத்தில்தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தி இலக்கியங்களைப் பாடிப் பரப்பினர்.
ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், பிற நாயன்மார்களும் பாடிய பாடல்கள் ஆயிரக்கணக்கானவை. தமிழ்நாட்டின் பல சிவன் கோயில்கள் இவர்களின் பாடல் பெற்ற இடங்களாக உள்ளன. மறைந்த பாடல்கள் போக, இப்போது உள்ள இவர்தம் பாடல்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஏழாயிரம் இருக்கும். அடுத்த நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரின் பாடல்கள் ஆயிரம் ஆகும். இந்த மூன்று நாயன்மார்களின் பாடல்கள் எண்ணாயிரமும் தேவாரம் என்ற பெயரால் சிறந்த பக்தி இலக்கியமாக விளங்குகின்றன. எட்டாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் சிவபெருமானைப் பற்றிப் பாடிய பக்திப் பாடல்கள் திருவாசகம் எனப்படும். திருக்கோவையாரும் இவர் தம் நூலேயாகும். இவையிரண்டுமாக 1050 பாடல்கள் தமிழ்மொழிக்குக் கிடைத்த களஞ்சியம் எனலாம்.
இவை தவிர, பன்னிரு திருமுறைகளில் தொகுக்கப்பட்ட தனியடியார்கள் பலர் பாடிய பாடல்களும், பக்தி இலக்கியக் காலத்தில் சைவத்தை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்மொழி வளரவும் பெருந்துணை புரிந்தன எனலாம்.
ஆ) வைணவ நூல்கள்
ஆழ்வார்கள் பன்னிருவர் இயற்றிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் நூல் தொகுதியைப் பல்லவர் காலத் தமிழ்மொழியை அறிய உதவும் மற்றோர் ஆதாரமாகக் கொள்ள முடியும். எளிய தமிழ் உருவாக இந்நூல்கள் காரணமாக அமைந்தன என்றும் கூறலாம்.
சங்கம் மருவிய காலத்தை அடுத்த இருண்ட காலத்தில் களப்பிரர் ஆதிக்கத்தில் வைணவ சமயமும் ஒளி குன்றி இருண்டது. களப்பிரர் ஆட்சி அகன்று, பல்லவரும் பாண்டியரும் செந்தமிழ் நிலத்தே செங்கோல் ஓச்சிய போது, சைவம் புத்துயிர் பெற்றது போல வைணவமும் புத்துயிர் பெற்றது.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகிய பன்னிருவர் இயற்றிய இலக்கியங்களும் தமிழ் மொழியின் வளர்ச்சியை நன்கு உணர்ந்து கொள்ளும் சான்றுகளாக விளங்குகின்றன.
பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட அவிநயம், யாப்பருங்கல விருத்தி ஆகிய இலக்கண நூல்களும் இலக்கண அமைப்பினை அறிந்து கொள்ளச் சிறப்பாக உதவுகின்றன.
• பிற சான்றுகள்
பல்லவர் காலத் தமிழ்மொழியை ஆராயக் கல்வெட்டுகளே நமக்குக் கிட்டியுள்ள மூலாதாரங்களாகும். பல்லவர் காலத்தில் தோன்றிய கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளன. ஆதிபல்லவ சாசனங்களில் பிராமியும் தமிழும் தழுவித் தோன்றிய கிரந்த எழுத்துகளும் உள்ளன. இக்கல்வெட்டுகள் எல்லாம் தமிழ்மொழியின் வளர்ச்சியையும் பேச்சு மொழியின் சாயலையும் நன்கு உணர்த்துவனவாக உள்ளன.
இலக்கிய மொழிக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் மொழிக்கும் இடையே பல வேற்றுமைகள் உண்டு. இலக்கிய மொழியில் ஏறாத பல பேச்சு வழக்குகள் கல்வெட்டு மொழியில் ஏறியிருக்கக் காணலாம். எனவே இவற்றை ஆராய்ந்தால் அவ்வக் கால மக்கள்தம் பேச்சு மொழியினை நன்கு அறிய முடியும்.
கல்வெட்டுகள் தவிரப் பாகூர்ச் செப்பேடு, சின்னமனூர்ச் செப்பேடு, வேள்விக்குடிச் சாசனம் போன்ற பல செப்பேடுகளும், சாசனங்கள், ஆவணங்கள் ஆகியனவும் பல்லவர் காலத் தமிழ் மொழியின் அமைப்பை விளக்கும் ஆதாரங்களாக விளங்குகின்றன.
இறந்தகாலம் அல்லாதன காட்டும் விகுதியான பகர வகர மெய் வழக்கு சங்க காலத்திலேயே முடிந்து விட்டது எனலாம்.
நிகழ்காலம் காட்டத் தனி இடைநிலை ஆட்சிக்கு வந்ததே பல்லவர் காலத்து மொழி வளர்ச்சி எனலாம்.
கின்று என்ற நிகழ்கால இடைநிலை முதன்முதலில் பரிபாடலில்தான் வந்துள்ளது. அதன் பின்னர்ச் சிலம்பிலும் மணிமேகலையிலும் அதன் வழக்குப் பெருகி, பின்பு பல்லவர் காலத்தில் நிலைத்து விட்டது. தேவார, திருவாசகங்களில் இவ்விடைநிலை பெருவழக்காக உள்ளது எனலாம்.
சான்று:
மயங்குகின்றேன் (திருவாசகம், 6 : 2)
ஆழ்ந்திடுகின்றேன் (திருவாசகம், 81)
அரற்றுகின்றேன் (திருவாசகம், 10)
நிகழ்கால இடைநிலைகளான கின்று, கிறு தவிர அப்பர் தேவாரத்தில் ஆநின்று என்ற இடைநிலையையும் காணலாம். இறந்த கால இடைநிலை இன் பல்லவர் காலத்திலும் பெருவழக்காக வழங்கக் காண்கிறோம்.
மூக்கொலியுடன் வரும் சில வடிவங்கள் பிறவினைகளாகக் கொள்ளப்படுகின்றன.
சான்று:
தன்வினை பிறவினை
அழுந்து அழுந்து
தவிந்தன தவிந்தன
இடைக்காலத் தொடக்கத்தில் தன்வினை பிறவினை பாகுபாடு இல்லை என்பதைச் சான்றுகள் புலப்படுத்துகின்றன.
எதிர்மறை வினைமுற்றை உணர்த்தப் பல்லவர் காலத்தில் கில் என்னும் புதிய இடைச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
சான்று:
உண்கிலான்.
இந்த அடிப்படையில் கிற்பான் போன்ற உடன்பாட்டுச் சொற்கள் உருவாக்கப் பட்டிருக்கலாம்.
இலாத, இலாது, இலான் போன்றவை செய்கு என்னும் சொல்லின் ஈற்றில் உள்ள குகரத்துடன் சேர்ந்து செய்கிலான் போன்ற எதிர்மறை வடிவத்தில் வருகின்றன. செய்+கு+இலான் என எதிர்மறைப் பொருளில் வருகிறது. இலான் என்பது கில் என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்த தனி எதிர்மறைச் சொல் என்று தவறாக எண்ணப்பட்டு விட்டது. அதனால் செய்+கிலான் = செய்கிலான் என்று புணர்வதாகக் கருதிப் பல்லவர் காலத்தில் வழங்கப்பட்டது.
• இல் என்னும் வடிவம் – வேறுபட்ட வடிவம்
திருவாசகத்தில் எதிர்மறை வழக்கு முற்றிலும் வேறுபட்ட வடிவில் காணப்படுகின்றது.
சான்று:
பாடிற்றிலேன் (பாடவில்லை)
தேடிற்றிலேன் (தேடவில்லை)
ஓடிற்றிலேன் (ஓடவில்லை)
சங்க காலத் தமிழில் இறந்தகாலத்தில் எதிர்மறையைக் குறிக்க வினைமுற்றுகளுடன் அல் என்னும் குறிப்பு வினையைச் சேர்த்துக் கூறுவர்.
சான்று:
அல்லேன் (பதிற்றுப்பத்து, 74 : 23)
அல்லம் (புறநானூறு, 60 : 6)
• ‘இல்’ என்னும் வடிவம் – இயல்பான வடிவம்
பல்லவர் காலத்தில் மேற்கூறப்பட்ட அல் வடிவம் மாறி இல் என்ற வடிவம் வழக்குப் பெற்று விட்டது எனலாம்.
சான்று:
அறிந்திலேன் (அப்பர் தேவாரம், 5.91.8)
அறிந்திலை (அப்பர் தேவாரம், 5.45.6)
அறிந்திலன் (அப்பர் தேவாரம், 4.113.11)
சான்று:
தருவாய் (அப்பர் தேவாரம், 4.94.6)
கண்டாய் (அப்பர் தேவாரம், திரு இராமேச்சுரம் 4.61.4)
• செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
சங்கத் தமிழில் அகர உருபை இறுதியாகக் கொண்ட செய எனும் வாய்பாட்டு வினையெச்சத்தில் -ப்ப்- இடையில் வரும்.
சான்று:
(கொடு+ப்ப்+அ) = கொடுப்ப
(சாய்+ப்ப்+அ) = சாய்ப்ப
பல்லவர் காலத்திலோ இடையில் -க்க்- என்ற வடிவம் மிகுதியாக வருகிறது.
குறுந்தொகையில் முப்பத்தைந்து இடங்களில் -ப்ப்- வர, ஓரிடத்தில் மட்டும் -க்க்- வருகிறது. ஆனால் அப்பர் தேவாரத்திலோ -க்க்- என்ற வடிவம் ஐம்பத்து மூன்று இடங்களில் வர, -ப்ப்- என்ற வடிவம் இருபத்தெட்டு இடங்களில்தான் பயின்று வந்துள்ளது.
• செய்யும் என்னும் ஏவல் வினை
இவ்வடிவம் சங்க இலக்கியத்தில் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. பல்லவர் காலத்திலோ இவ்வழக்குப் பெருகி, வழக்கில் நிலைத்து விட்டது எனலாம்.
சான்று:
காணும் வாரும்
• செய்யேல் என்னும் ஏவல் வினை
செய்யேல் ஏவல் வினைகள் பல்லவர் காலத் தமிழில் மிகுதியாக ஆங்காங்கே காணப்படுகின்றன.
சான்று:
அஞ்சேல் (சம்பந்தர் தேவாரம், 1.130.1)
• செய்யாம் என்னும் உடன்பாட்டு வினைமுற்று
இவ்வடிவத்தில் உள்ள உடன்பாட்டு வினைமுற்று சங்க இலக்கியத்தில் காணப்பட்டது. பல்லவர் காலத்திலோ முற்றிலும் வழக்கொழிந்து விட்டது.
சான்று:
செல்லாம் பழைய வடிவங்கள் ( பதிற்றுப் பத்து, 57:6)
காணாம் (அகநானூறு, 110:19)
சான்று:
அருள் – எழுந்தருளி
இரு – நினைந்து இருந்தேன்
பெறு – அடையப் பெற்றோம்
கொள் – கண்டு கொண்டேன்
போ – அழிந்து போனேன்
ஒழி – எய்த்தொழிந்தேன்
இடு – அழித்திட்டார்
வை – எழுதியவை
சான்று:
ஆள் – அலாம் > ஆளலாம்
உய்ய – அலாம் > உய்யலாம்
செய்ய - அலாம் > செய்யலாம்
வினைச்சொற்களின் இலக்கண அமைப்பு, பல்லவர் காலத்தில் மேற்கூறப்பட்ட பலவித மாற்றங்களை அடைந்து தமிழ்மொழி வளர்ச்சியினை வெளிப்படுத்தி நிற்கிறது.
hasta > attam கை
hastin > atti யானை
mukti > mutti முத்தி
vrata > viratam விரதம்
மேலும் சொற்பொருளில் மாற்றமும் புதிய சொல்லாட்சியும் ஏற்பட்டன.
சங்க காலத்தில் சமயச் சார்பற்ற பொருளில் கையாளப்பட்ட சொற்களும் சமயப் பொருள் பெற்றுவிட்டன.
சொல் சங்க காலப் பொருள் பல்லவர் காலப் பொருள்
இறைவன் அரசன் கடவுள்
கோயில் அரண்மனை கடவுள் உறைவிடம்
பணிதல் பணிவாக இருத்தல் கடவுளை வணங்குதல்
தாழ்தல் தாழ்வாக இருத்தல் கடவுளை வணங்குதல்
இவ்வாறு பண்டைத் தமிழிலிருந்து பல்லவர் காலத் தமிழ் பல வகைகளில் வேறுபட்டிருப்பதைக் காண முடிகிறது. சங்கத் தமிழ், சங்கம் மருவிய காலத் தமிழ் ஆகியவற்றின் சில இலக்கணக் கூறுகள் தொடர்ந்தும், சில மறைந்தும், சில வேறு வடிவம் பெற்றும், சில புதிய கூறுகள் உருவாகியும், பல்லவர் காலத்தில் பெருகியும் தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ப வளர்ந்து வந்த வளர்ச்சி நிலையினை நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள்.
• பல்லவர் காலத் தமிழ் மொழியின் இலக்கண அமைப்பை அறிந்து கொள்ளுவதற்கு முதலில் மூல ஆதாரங்களான அக்காலக் கட்டத்தில் தோன்றிய இலக்கியங்கள், இலக்கணங்கள் ஆகியன பற்றி அறிந்திருப்பீர்கள். அவை பற்றி மட்டுமன்றிப் பிற சான்றுகளான கல்வெட்டுகள், சாசனங்கள் போன்றவற்றையும் நன்கு தெரிந்து கொண்டிருப்பீர்கள்!
• பல்லவர் காலத் தமிழின் பெயரியல் அமைப்பில் ஏற்பட்ட சில மாற்றங்களைச் சான்றுகளுடன் உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.
• அடுத்து வினையியல் அமைப்பியலும் அதன் வகைகளிலும் உண்டாகியுள்ள பல்லவர் கால மொழி மாற்றங்களைத் தெளிவாக உணர்ந்திருப்பீர்கள்!
• மொழி காலத்திற்கேற்ப மாறிவரும் இயல்புடையது என்பதால், பல்லவர் காலத்தில் சொல் வழக்கில் ஏற்பட்ட சில மாற்றங்களையும் சான்றுகளுடன் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
பாடம் - 3
கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் பிற்காலச் சோழர்கள் தமிழகத்தில் அரசாண்டனர். தமிழ் மக்களின் அரசியல் வாழ்வு தழைத்தது. சமுதாயப் பொருளாதார நிலை உயர்ந்தது. எனவே, கலை வாழ்வில் கருத்தூன்றி மிகப் பெரிய கோயில்கள் பலவற்றைப் பெரும் பொருட்செலவில் கட்டினர். இலக்கியத் துறையிலும் பல கலைக் கோயில்கள் எழுந்தன. பௌத்தர்களும் சமணர்களும் பல காவியங்களைப் படைத்தனர். கம்பர் போன்ற பெருங்கவிஞர்கள், வடமொழிக் காப்பியங்களைத் தம் இயல்பு குன்றாமல் தமிழில் படைத்தனர். பலர் புராணங்களை அப்படியே மொழி பெயர்த்தனர். சிலர் புராணங்களில் அமைந்த கிளைக் கதைகளை நூலாக்கினர். சிற்றிலக்கியங்கள் பலவும் இக்காலத்தில் எழுந்தன. இலக்கண நூல் ஆசிரியர்கள் பலர் தோன்றிப் பற்பல வகை இலக்கண நூல்களை இயற்றினர்.
திருமால் அடியார்களான ஆழ்வார்கள் பாடிய பாடல்களையெல்லாம் நாதமுனி தொகுத்து நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று பெயரிட்டார். அது வைணவ இலக்கியங்களின் தொகுதியாக விளங்கியது.
ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை தவிரச் சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய மூன்று காப்பியங்களும் இக்காலத்தில் தோன்றின. சோழர் காலத்தில் ஐஞ்சிறு காப்பியங்களும் தோன்றின. சோழர் காலத்தைக் காப்பியக்காலம் என்றே கூறுலாம்.
காப்பியங்கள் மட்டுமன்றிக் கம்பராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம், நளவெண்பா போன்ற புராணங்களும் மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப் பரணி போன்ற சிற்றிலக்கியங்களும் தோன்றின.
இத்தகைய இலக்கிய வளம் கொண்ட சோழர் காலத்தில்தான் நன்னூல், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், வச்சணந்தி மாலை போன்ற சிறந்த இலக்கண நூல்களும் எழுதப்பட்டன.
அ – அது
ஆ - ஆடு
இ - விடு
ஈ - வீடு
உ - குடை
ஊ - கூடை
எ - எரி
ஏ - ஏரி
ஒ - ஒடு
ஓ - ஓடு
• மாற்றங்கள்
மொழி முதலில் எல்லா உயிர்களும் சொல்லில் இடம் பெறுவதாகத் தொல்காப்பியம் கூறுவது போலவே நன்னூலும் வீரசோழியமும் கூறுகின்றன.
மொழி இறுதியிலும் எல்லா உயிரும் வருவதாகத் தொல்காப்பியம் கூறுவதுபோல நன்னூலும் கூறுகிறது. ஆனால், வீரசோழியமோ எகர ஒகரங்களைத் தவிரப் பிற உயிர்கள் அனைத்தும் மொழியிறுதியில் வருவதாகக் கூறுகின்றது.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு சோழர் காலத்தில் உயிரெழுத்து அடையும் மாற்றங்களைக் காணலாம்.
• அகர மாற்றம்
அ) அகர இகர மாற்றம் (அ > இ)
மெய்யெழுத்தோடு கூடிய அகரம் இகரமாக மாறுவது பல இடங்களில் காணப்படுகிறது.
சான்று:
அதனுக்கு > அதினுக்கு
சுலபம் > சுலிபம்
மேலன > மேலின
ஆ) அகர உகர மாற்றம் (அ > உ)
சான்று:
கொண்டது > கொண்டுது
புகுந்தது > புகுந்துது
• இகர மாற்றம்
முன்னுயிரான இகரம் அகரமாகவும் சில இடங்களில் எகரமாகவும் ஒலிக்கப்படுகின்றது:
அ) இகர அகர மாற்றம் (இ > அ)
பின்னால்வரும் அகர ஒலிக்கு ஏற்ப இகர ஒலியும் அகரமாக மாறும் இடங்கள் பலவுண்டு.
சான்று:
அதியமான் > அதயமான்
ஞாயிறு > ஞாயறு
வயிறு > வயறு
ஆ) இகர எகர மாற்றம் (இ > எ)
அகரக் கீழுயிருக்கு ஏற்ப மேலுயிரான இகரம்எகர நடுவுயிராக உச்சரிக்கப்படுகிறது.
தமிழ்ப்படுத்தப்பட்ட வடமொழிச் சொற்களில்தான் இம்மாற்றம் பெரும்பாலும் காணப்படுகிறது. எனினும் சிறுபான்மைத் தமிழ்ச் சொற்களிலும் காணப்படுகிறது.
சான்று:
பிறவும் > பெறவும்
நிலம் > நெலம்
• உகர மாற்றம்
பின்னுயிரான உகரம் சில இடங்களில் இகரமாகவும் பல இடங்களில் ஒகரமாகவும் ஒலிக்கப்படுகின்றது.
அ) உகர இகர மாற்றம் (உ > இ)
சான்று:
அமுது > அமிது
அருளின > அரிளின
செலுத்தி > செலித்தி
அமுதசாகரர் > அமிதசாகரர்
ஆ) உகர ஒகர மாற்றம் (உ > ஒ)
கி.பி. 11ஆம் நூற்றாண்டிலிருந்துதான் தமிழ்ச் சொற்களிலுள்ள உகரம் ஒகரமாகக் காணப்படுகின்றது.
சான்று:
குலைதர > கொலைதர
குந்தள அரசர் > கொந்தள அரசர்
குலோத்துங்க > கொலோத்துங்க
உபாதி > ஒபாதி
• எகர மாற்றம் (எ > இ)
இகரம் எவ்வாறு எகரமாக ஒலிக்கப்படுகின்றதோ, அது போலவே எகரமும் இகரமாக ஒலிக்கப்படுகின்ற சொற்கள் தமிழில் பல காணப்படுகின்றன.
சான்று:
பெயரால் > பியரால்
செலவு > சிலவு
எனக்கு > இனக்கு
எடுத்து > இடுத்து
அகரம் ஐகாரமாதலும் காணப்படுகின்றது. இம்மாற்றம் சங்க காலத் தமிழில் சகர யகர மெய்களுக்கு முன்னர்க் காணப்படுகின்றது.
சான்று:
அரசர் > அரைசர்
அரசு > அரைசு
முரசு > முரைசு
இந்த அகர ஐகார மாற்றம் சோழர் காலத்து இலக்கிய மொழிகளிலும் காணப்படுகின்றது.
சான்று:
சமயம் > சமையம்
தச்சன் > தைச்சன்
அகரத்திற்கு முன்னரோ பின்னரோ இடையண்ண ஒலி தொடர்ந்து வராத போதும் அகரம் ஐகாரமாக மாறுகிறது.
சான்று:
அத்தை > ஐத்தை
அத்தான் > ஐத்தான்
இம்மாற்றத்தை இக்காலக் கிளை மொழியிலும் காணமுடியும்.
• இகர ஐகார யகரத்தின் தாக்கம்
இம்மூன்று ஒலிகளை அடுத்து வரும் மூக்கொலியும் (ந), அதன் இனமாகிய பல்லொலியும் (த) இடையண்ணத்தின் சாயல் பெற்று வருகின்றன.
சான்று:
எரிந்து > எரிஞ்சு
ஐந்து > அஞ்சு
விளைந்த > விளைஞ்ச
காய்ந்த > காய்ஞ்ச
• உகர இகர மாற்றம்
சொல்லிறுதி உகரம் இடையண்ணத் தடையொலியாகிய சகரத்தை அடுத்து வருவதால் இகரமாக மாறும்.
சான்று: கழஞ்சு > கழஞ்சி
• இடையண்ண உயிர் ஐகாரத்தின் தாக்கம்
இடையண்ண ஒலியாகிய ஐகாரத்தை அடுத்து மூக்கொலிகள் வரும்போது அவை இடையண்ண மூக்கொலிகளாகின்றன.
சான்று:
ஐந்நூறு > ஐஞ்ஞூறு
• இடையண்ண மெய்யொலியினால் ஐகாரம் தாக்கமடைதல்
இடையண்ண மெய்யாகிய சகரத்தின் தாக்கத்தால் ஐகாரம் எகரமாகிறது.
சான்று:
அரசர் > அரைசர் > அரெசர்
தலை > தலெ
சினை > சினெ
எல்லை > எல்லெ
சான்று:
இக்கோயில்
>
யிக்கோயில்
இரண்டு > யிரண்டு
இறை > யிறை
அகரத்தைத் தொடர்ந்தோ அல்லது அதற்கு முந்தியோ இதழுயிர் வருமாயின் அகரம் இதழ்ச்சாயல் பெற்று ஒகரமாகிறது.
சான்று:
வானகப்படி > வானகொப்படி
அனுபவித்து > அனுபொவித்து
புறவரி > புறொவரி
செப்பருந்திறத்து > செப்பொருந்திறத்து
ஆ) இகர உகர மாற்றம்
இகரம் தனக்கு முன்னரோ பின்னரோ இதழ் ஒலிகளையோ நாவளை ஒலிகளையோ பெற்று வருமாயின் உகரமாக உச்சரிக்கப்படுகிறது.
சான்று:
களிறு > களுறு
தமிழ் > தமுழ்
தம்பிரான் > தம்புரான்
முசிறி > முசுறி
மதில் > மதுல்
இ) எகர ஒகர மாற்றம்
எகரத்திற்கு முன்போ பின்போ இதழ் ஒலியோ, நாவளை ஒலியோ அல்லது நுனியண்ண ஒலியோ வந்தால் எகரம் ஒகரமாக மாற்றமடைகிறது.
சான்று:
தென்றிசை > தொன்றிசை
செம்பாதி > சொம்பாதி
நெளிற்று > நொளிற்று
செவிடு > சொவிடு
செந்தாமரை > சொந்தாமரை
எப்பேர்ப்பட்ட > எப்போர்ப்பட்ட
‘சொவிடு’ என்ற வடிவம் பின்னர் ‘சோடு’ என்றாகியது. ஒப்புமையாக்கத்தால் செந்தாமரை என்பது சொந்தாமரையானது.
சான்று:
கங்கா > கங்கை > கெங்கை
தண்டா > தண்டம் > தெண்டம்
பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு வடமொழிச் சொற்களில் மட்டுமல்லாது பிற சொற்களிலும் இம்மாற்றம் ஏற்படலாயிற்று.
சான்று:
கல் > கெல்
களிறு > கெளிறு
இவ்வாறு உயிரெழுத்துகள் பல மாற்றங்களை அடைய வேண்டிய சூழலுக்கு உள்ளாகின. பேச்சுத் தமிழின் அடிப்படையான பல மாற்றங்களுக்கு வழி வகுத்தன என்று கூறலாம்.
மெய்யொலிகள் சான்று
க் காண்
ச் சாண்
ட் படை
ப் படி
ம் மடி
ண் எண்
ன் என்
ய் காய்
வ் வதி
ப் பதி
ர் கார்
ல் கால்
ழ் பாழ்
மெய்யொலிகளின் பட்டியல்
க் ச் ட் ற் த் ப்
ண் ன்
ய் ழ் ர் ல் வ் ள்
• மாற்றங்கள்
மெய்யெழுத்து மாற்றங்கள் வருமாறு:
• மெய்கள் இடையண்ணச் சாயல் பெறல்
அ) இரட்டித்து வரும் தகரம் இரட்டித்த சகரமாதல்
முன்னே வரும் ஒலிக்கு ஏற்பப் பின்வரும் ஒலிகள் இடையண்ணச் சாயல் பெற்று ஒலிக்கப்படுவதுண்டு.
‘த்த்’ எனத் தகரம் இரட்டித்து வர, அதன் முன்னர் இடையண்ண ஒலி அல்லது முன்னுயிர் வரும் போது தகரம் சகரமாக மாறிவருகிறது.
சான்று:
வைத்த > வைச்ச
காய்த்த > காய்ச்ச
சிலப்பதிகாரக் காலத்திலிருந்தே இடையண்ண மூக்கொலி இரட்டித்து வருகிறது.
சான்று:
அஞ்ஞை
மஞ்ஞை
முஞ்ஞை
சோழர் காலத்தில் நுனிநாப் பல் ஒலியான தகர நகரம் போற்றப்பட்டு வந்த சூழலிலும், இடையண்ண ஒலியின் தாக்கத்தால் தகரம் சகரமாகி விட்ட நிலையைக் காண்கிறோம். சோழர் கால இறுதியில் மொழியிறுதி உகரமும் இகரமாகிறது.
வைத்து > வைச்சு > வச்சி
சோழர் காலத்துத் தமிழில் பல்லிணை மூக்கொலியே தொடர்ந்தது. மலையாளத்திலோ இடையண்ண மூக்கொலி தொடர்ந்தது. இடையண்ணமாதல் தமிழில் குறைந்த வழக்கு. ஆனால், பேச்சு வழக்கில் இந்த மாற்றம் உண்டு.
சான்று:
வைத்து > வைச்சு > வச்சி
• இடையண்ண ஒலி பல்லிசைச் சாயல் பெறுதல்
இடையண்ண ஒலிகள் பல்லிசைச் சாயல் பெறுதல் சோழர் காலத்தில் நிலைத்து விட்டது.
சான்று:
ஞாயிறு > நாயிறு
சண்டேஸ்வர > தண்டேஸ்வர
செருமுனை > திருமுனை
இதன் விளைவாகக் கொங்கு நாட்டில் ஞகர மெய் இடையண்ண வெடிப்பொலிக்கு முன்னர் மட்டுமே வந்து பிற இடங்களில் வழக்கிழந்து விட்டது.
• தடையொலிகளின் ஒலிப்பு ஒலி
பல்லவர் காலத்தில் தடையொலிகள் ஒலிப்புப் பெற்றமையைக் கல்வெட்டுச் சான்றுகளின் மூலம் உணரலாம். இரு சூழல்களில் ஒலிப்பில்ஒலிகள் ஒலிப்பு ஒலிகளாக மாறுகின்ற தன்மையைக் கண்டோம்.
(1) உயிர்களுக்கு இடையில்
(2) மூக்கொலிகளை அடுத்து வரும் சூழலில்
உயிரிடைத் தடையொலிகள் ஒன்பதாம் நூற்றாண்டில்தான் ஒலிப்பு ஒலிகளாக இருந்தன. அதற்கு முன்பு வரை ஒலிப்பில் ஒலிகளாகத்தான் விளங்கின. இத்தடையொலிகள் ஒரே சொல்லின் ஒரே சூழலில் வெவ்வேறு வகையாக ஒலித்தன. இன மூக்கொலிக்குப் பின்வரும் தடையொலிகள் முதலில் ஒலிப்புடையனவாக இருந்திருத்தல் வேண்டும். அதற்கு முன்பே பின்னண்ணத் தடையொலியைத் தாக்கியிருக்க வேண்டும்.
சான்று: அங்கனம் > அங்ஙனம்
ஆனால் சோழர் காலத்திலோ பிற தடையொலிகளிலும் மூக்கின ஒலியின் தாக்கம் தொடர்கிறது எனலாம்.
சான்று:
பெரும்பாணப்பாடி > பெரும்மாணப்பாடி
அம்பது > அம்மது
முதலில் மலையாளத்தில் நிகழ்ந்த இம்மாற்றம் பின்பு தமிழிலும் வளரத் தொடங்கிற்று.
• சில மெய்யொலிகள் ஒருங்கிணைதல்
பதினோராம் நூற்றாண்டுச் சோழர் கால இலக்கணமான வீரசோழியம் ளகர மெய் முடிவிற்குரிய சந்தி விதிகளை ழகர மெய் முடிவிற்கும் விரிவுபடுத்துகிறது.
சான்று:
வாள் + நாள் > வாணாள்
வாழ் + நாள் > வாணாள்
அ) ளகர ழகரம்
பதினோராம் நூற்றாண்டில் கேள் என்பது கேழ் எனக் கேழ்வி என்ற சொல்லில் எழுதப்பட்டுள்ளது. பின்னர்ப் பிற சொற்களிலும் இம்மாற்றம் காணப்படுகிறது.
சான்று:
களம் > கழம்
உப்பளங்களுக்கு > உப்பளங்கழுக்கு
வளம் > வழம்
ஆ) ழகர ளகரம்
ழகர மெய்யும் ளகர மெய்யும் ளகர மெய்யாக ஒன்றாதலைச் சில இலக்கண நூல் ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தென் மாவட்டங்களில் வலுவாக நிலைபெற்று விட்ட மாற்றமாகிய ழகரமும் ளகரமும் ளகரமாக ஒன்றாதல் மிகவும் முக்கியமானது. இந்த ஒருங்கிணைதலின் அடையாளங்கள் எட்டாம் நூற்றாண்டிலேயே காணப்படுகின்றன.
சான்று:
கிழமை > கிளமை
கிழக்கு > கிளக்கு
புகழ் > புகள்
இ) லகர ளகரம்
இதுபோலவே லகர, ளகர மெய்களின் ஒருங்கிணைவும் காணப்படுகிறது. தற்போதைய ஈரோட்டுக் கிளைமொழியில் லகர ளகரமெய்கள் ஒன்றாகின்றன. இம்மாற்றத்திற்கான சுவடுகள் பழைய கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் மாற்றம் மிகக் குறைவாகவே காணப்படுவதால், அவற்றை எழுத்துப் பிழைகள் எனத் தள்ளிவிடலாம்.
• மெய் மயக்கம்
ஒன்பதாம் நூற்றாண்டு, பத்தாம் நூற்றாண்டுகளில் தமிழ்மொழியில் றகர ரகர மெய் மயக்கம் தோன்றியது. உயிரிடையே ஏற்பட்ட இம்மாற்றம் பதினோராம் நூற்றாண்டிலும் இருந்து வந்தது.
சான்று:
1 ற்க > ர்க்க மேற்கு > மேர்க்கு
ற்ப் > ர்ப்ப ஏவற்படி > ஏவர்ப்படி
2 ர்க்க > ற்க் கார்க்களிறு > காற்களிறு
3 ர்க்க > ற்க ஊர்க்கால் > ஊற்கால்
4 ர்- > ற்- தரை > தறை
5 ற்- > ர்- நிறுத்து > நிருத்து
• உயிர்களிடையே தடையொலி இழப்பு
உயிர்களிடையே தடையொலிகள் இழக்கப்படும் போக்கு ககர, சகர மெய்களைப் பொறுத்த வரையில் ஆங்காங்கே காணப்படுகின்றன.
சான்று:
வைகாசி > வையாசி
இசைத்த > இயைத்த
இகல் > இயல்
இச்சான்றுகளில் உயிரிடை வெடிப்பொலி இழக்கப்பட்டு இடையின யகர மெய் புகுந்துள்ளது.
இடையண்ணத் தடையொலியான சகரத்தைப் பொறுத்த வரையில் இலக்கிய மொழி யகரத்தைப் பெற்றிருக்க, தமிழில் சில கிளைமொழிகளும் பிற திராவிட மொழிகளும் சகரத்தைப் பெற்றுள்ளன.
சான்று:
இலக்கிய மொழி கிளைமொழி / பிற திராவிட மொழி
உயர்ந்த உசந்த
குயவர் குசவர்
பையன்கள் -பயங்க(ள்) பசங்க(ள்)
பெயர் ஹெசரு (கன்னடம்)
• பிற மெய் மாற்றங்கள் (சில மெய்கள் மறைதல்)
அ) யகர மெய் மறைதல்
வேர்களின் இறுதியில் வரும் யகர மெய் பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் தமிழ்மொழியில் மறைந்து வருகிறது.
சான்று:
வாய்க்கால் > வாக்கால்
செய்த > சேத
மேய்ந்த > மேந்த
ஆ) ரகர மெய் மறைதல்
பதினோராம் பன்னிரண்டாம், பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில், ரகர மெய்யானது, நெடில் தடையொலி, இரட்டைத் தடையொலி, ந்த், இடையீடு, அரையுயிர் ஆகியவற்றிற்கு முன் மறைகிறது எனலாம்.
சான்று:
கீர்த்தியை > கீத்தியை
கார்த்திகை > காத்திகை
தளர்ந்த > தளந்த
அவர் நாடு > அவநாடு
பெண்டிர > பெண்டி
வார்த்து > வாத்து
இ) சில வடிவ மாற்றங்கள்
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூலான நேமிநாதம் சில சொற்களின் வடிவ மாற்றங்களைக் குறிப்பிட்டுள்ளது. (நேமிநாதம் : சொல், நூற்பா, 36)
சான்று:
பெயர் > பேர்
பெயர்த்து > பேர்த்து
பொழுது > போது
இவ்வாறு சோழர் காலத்தில் மெய்களில் ஒரு மெய் வேறு மெய்யாக மாறியும், சில மெய்கள் ஒருங்கிணைந்தும், சில இடையண்ணச் சாயல் பெற்றும், சில மெய்கள் பல்லின மெய்யின் தாக்கத்திற்கு உள்ளாகியும் பல்வேறு விதமான மாற்றங்களை அடைந்து தமிழ் மொழியின் வளர்ந்த நிலையினை உணர்த்தி நிற்கின்றன.
• சோழர் காலத் தமிழை அறிய உதவும் இலக்கிய, இலக்கணங்கள், பிற ஆதாரங்களான கல்வெட்டுகள், செப்பேடுகள், சாசனங்கள், ஆவணங்கள் போன்ற செய்திகளை அறிந்து கொண்டீர்கள்.
• அந்தக் காலக் கட்டத்தில் தமிழ் மொழியில் ஏற்பட்ட பல்வேறு உயிரெழுத்துகளின் மாற்றங்களையும், ஒலிப்பு முறைகளில் ஏற்பட்ட வேறுபாட்டினையும் புரிந்து கொள்ள முடிந்தது.
• சோழர் காலத்தில் உயிரெழுத்துகள் மட்டுமன்றி மெய்யெழுத்துகளும் எத்தகைய மாற்றங்களுக்கெல்லாம் ஆளாகின என்பதையும், அதற்கான சான்றுகளையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டிருப்பீர்கள்!
பாடம் - 4
முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் போன்ற வரலாற்றுச் சிறப்புள்ள மாவீரர்கள் பல நாடுகளை வென்றனர். கலைகளை வளர்த்துச் சமயங்களைச் செழிக்கச் செய்தனர். சமயங்களைச் சிறப்பிக்க இலக்கியங்கள் பல எழுதப்பட்ட காலம் அது. சோழர்கள் காலத்தில்தான் நம்பியாண்டார் நம்பி, நாயன்மார்களின் பாடல்களைச் சைவத் திருமுறைகளாகத் தொகுத்தார். நாதமுனி, ஆழ்வார்களின் பாசுரங்களைத் திரட்டி, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமாகத் தொகுத்தார்.
நாயன்மார்களும், ஆழ்வார்களும் பிற சமயச் செல்வாக்கினை அகற்றித் தமிழ்ச் சமயங்களான சைவ, வைணவத்திற்கு மன்னனிடமும் மக்களிடமும் ஆதரவு பெற்றுத் தந்தனர். இத்தகைய சூழலுக்குப் பிறகு தான் தத்தம் சமயப் பெருமை கூறும் காப்பியங்களை உருவாக்கும் போக்குத் தமிழில் வளர்ந்தது.
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ நாட்டை ஆண்டவன் மூன்றாம் குலோத்துங்கன். அவன் வைணவன். இம்மன்னன் காலத்தில் சடையப்ப வள்ளலின் ஆதரவைப் பெற்ற கம்பர் இராம அவதாரம் என்ற நூலை எழுதிச் சிறப்பித்தார். வைணவமும் கம்பராமாயணம் என்ற அந்த உயரிய காப்பியத்தைப் பெற்றது. இவ்விரு காப்பியங்களேயன்றி, கந்த புராணம், திருவிளையாடற் புராணம், அரிச்சந்திர புராணம், தணிகைப் புராணம் முதலிய இலக்கியங்களும் வீரசோழியம், நேமிநாதம், வச்சணந்தி மாலை, பன்னிருபாட்டியல், அகப்பொருள் விளக்கம், யாப்பருங்கலம், தண்டியலங்காரம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களும் இக்காலத்தே தோன்றின. சோழர் காலத் தமிழை அறியத் தக்க சான்றுகளாக இவை உதவுகின்றன.
• பிற சான்றுகள்
சோழர் காலத் தமிழ் மொழியை அறிய மேற்கூறிய இலக்கிய இலக்கண நூல்களேயன்றி, அக்காலக் கட்டத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளும், சோழ மன்னர்களின் ஆவணங்களும் மற்றும் சாசனங்களும், செப்பேடுகள் போன்றனவும் பெரிதும் துணையாய் நிற்கின்றன.
சோழர் காலத் தமிழில் நீம் (சீவக சிந்தாமணி 1932.3) என்ற வடிவமும், நீங்கள் (அப்பர் தேவாரம், 4457) என்ற இரட்டைப் பன்மையும் வழக்கத்திற்கு வந்துள்ளன.
சங்க கால அஃறிணை கள் விகுதி சங்கம் மருவிய காலத்தில் உயர்திணையுடன் வந்துள்ளது. அதுவும் இரட்டைப் பன்மைச் சொற்களாக வருவதும் நோக்கத் தக்கது. சோழர் காலத்திலோ பதிலிடு பெயர்களிலும் இப்பண்பினைக் காண முடிகிறது.
சான்று:
யாங்கள், நாங்கள் தன்மைப் பன்மைப் பதிலிடு பெயர்கள்
எங்கள், நங்கள்
நீங்கள், நீர்கள் முன்னிலைப் பன்மைப் பதிலிடு பெயர்கள்
நுங்கள், உங்கள்
தங்கள், தாங்கள் படர்க்கைப் பன்மைப் பதிலிடு பெயர்கள்
அவர்கள், இவர்கள்
பெரிய புராணத்திலும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும் இத்தகைய மாற்றங்கள் மிகுந்து காணப்படுகின்றன.
சோழர் கால இலக்கண நூலான நன்னூல் கீழ்வரும் உருபுகளை வேற்றுமைக்குரிய உருபுகளாகக் கூறியுள்ளது.
மூன்றாம் வேற்றுமை – ஆல், ஆன், ஓடு, ஒடு
ஐந்தாம் வேற்றுமை - இன், இல்
ஆறாம் வேற்றுமை - அது, ஆது, அ
ஏழாம் வேற்றுமை - கண், இடத்தில் முதலிய ஏறத்தாழ இருபத்தெட்டு உருபுகள்
தொல்காப்பியர் ஆறாம் வேற்றுமை உருபாக அது என்பதை மட்டுமே குறிப்பிடுகிறார். ஆனால் நன்னூலாரோ,
ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும்
பன்மைக்கு அவ்வும் உருபாம்
(நன்னூல் : 300)
என்று ஒருமைக்கும், பன்மைக்கும் தனித்தனியே உருபுகளைக் கூறியுள்ளார். இது சோழர் காலத்தில் ஏற்பட்ட மாற்றமாகும்.
வேற்றுமை மயக்கமாக ஐகார வேற்றுமை குகர வேற்றுமையாக மாறி வந்துள்ள போக்கைச் சோழர் காலத்தில் காணமுடிகிறது.
சான்று:
வேந்தைச் சூடினாள் > வேந்துக்குச் சூடினாள்
நான்கா வதற்கு உருபாகும் குவ்வே
கொடைபகை நேர்ச்சி தகவு அது வாதல்
பொருட்டுமுறை ஆதியின் இதற்குஇதுஎனல் பொருளே
(நன்னூல்: 298)
என்று சோழர் காலத்தில் எழுதப்பட்ட நன்னூலிலேயே பொருட்டு என்ற நான்காம் வேற்றுமைச் சொல்லுருபின் ஆட்சி குறிக்கப்பட்டுள்ளது எனலாம்.
சான்று:
செல்லல் பொருட்டு (செல்வதற்கு)
அதன் பொருட்டு (அதற்கு)
ஐந்தாம் வேற்றுமையுருபும், நின்று அல்லது இருந்து என்ற சொல்லுருபுகளால் உணர்த்தப் பெற்றது.
சான்று:
மலையினின்று வீழ் அருவி (மலையின் வீழ் அருவி)
மரத்திலிருந்து வீழ்ந்தான் (மரத்தின் வீழ்ந்தான்)
இவ்வாறாகச் சோழர்கால இலக்கணக் கூறுகள் பெயரியல் அளவில் பல மாற்றங்களைப் பெற்று இன்றைய பேச்சுத் தமிழுக்கு அடித்தளம் இட்டன என்று கூறலாம்.
• ஆண்பால் விகுதி
சோழர் கால இலக்கண நூல்களுள் ஒன்றான வீரசோழியம் ஆண் பாலுக்குரிய விகுதிகளாகக் கன், மன் என்ற இரு புதிய விகுதிகளைக் கூறுகின்றது.
சான்று:
கன் – கிறுக்கன்
மன் - கருமன்
• பெண்பால் விகுதி
பெண்பாலுக்குரிய விகுதியாக மி, சி, ஆட்டி, ஆத்தி போன்றவற்றை வீரசோழியம் குறிப்பிடுகின்றது.
சான்று:
மி – சிறுமி
சி - ஆய்ச்சி
ஆட்டி - வெள்ளாட்டி
ஆத்தி - வண்ணாத்தி
சங்க இலக்கியத்தை ஒப்பிடும்போது கன் என்ற புதிய விகுதி சோழர் காலத்தில் தோன்றியுள்ளது. மி, சி போன்ற பெண்பால் விகுதிகள் சிலப்பதிகாரத்திலும் கலித்தொகையிலும் இடம் பெற்றுள்ளன. ஆட்டி, ஆத்தி போன்றன சோழர் காலத்தில் தோன்றிய புதிய விகுதிகளாகும்.
• பலர் பால் விகுதி
வீரசோழிய இலக்கணமாவது, அர்கள், ஆர்கள், கள், மார் போன்றவற்றைப் பலர்பால் விகுதியாகக் குறிப்பிடுகின்றது. சங்க இலக்கியத்திலேயே இவ்விகுதிகள் மிகவும் குறைந்து காணப்பட்டன. கள் விகுதியானது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஆங்காங்கே ஏறக்குறைய 25 இடங்களில் காணப்படுகின்றது.
காலங்கள், வினை வகைகள், வினைமுற்று, வினையெச்சம், வினைமுற்றோடு சேரும் இடைச்சொற்கள் இவற்றிலெல்லாம் சோழர் காலத் தமிழில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன.
வினை எனப்படுவது… , , , , , ,
நினையுங் காலைக் காலமொடு தோன்றும் ,
(தொல். வினை.1)
என்று கூறப்படுவதிலிருந்து வினையின் பண்புகளுள் காலம் காட்டுவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது என்பதை உணரலாம்.
சோழர் கால இலக்கணமான நன்னூல் இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலத்திற்குரிய இடைநிலைகளைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
இறப்பு – த், ட், ற், இன்
நிகழ்வு - கிறு, கின்று, ஆநின்று
எதிர்வு - ப், வ்
நன்னூலுக்கு முந்தைய இலக்கண நூலான வீரசோழியம்தான் நிகழ்கால இடைநிலைகளை முதன் முதலில் கூறுகின்றது. அவை வருமிடங்களையும் தெளிவாக்குகிறது எனலாம்.
கின்று – பலர்பால், ஒன்றன் பால், பலவின்பால்
கிறு – பிற இடங்கள்
இறந்த கால இடைநிலை -ன்- கம்பராமாயணத்திலும் பெரிய புராணத்திலும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும் மிகுந்த வழக்கில் வருகின்றது.
சான்று:
போன (பெரிய புராணம், 4074 : 3)
ஆன (பெரிய புராணம், 18 : 3)
போனாள் (நா.தி.பி, 2270 : 4)
நிகழ்கால இடைநிலை கின்று சோழர் கால இலக்கியமான பெரிய புராணத்தில் மிகுதியாக இடம்பெற்றுள்ளது.
சான்று:
மொழிகின்றோம் (பெரிய. கழறிற். புராணம் – 174)
ஏகுகின்றோம் (பெரிய. ஏயர். புராணம் – 367)
மற்றொரு நிகழ்கால இடைநிலையான கிறு கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ளது.
சான்று:
பார்க்கிறேன் – கம்பராமாயணம், 1: 1185 :4
உதிக்கிறான் - கம்பராமாயணம், 6 : 2152:4
பழங்கால வழக்கில் இருந்த எதிர்கால இடைநிலையான -த்- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும், காப்பியங்களான கம்ப ராமாயணத்திலும், பெரிய புராணத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சான்று:
புகுதிர் – நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், 1917:3
அஞ்சுதும் - பெரிய புராணம், 2.849:4
அறிதும் – கம்ப ராமாயணம், 1.235:4
சங்கத் தமிழில் எதிர்கால இடைநிலையான ககரம் அம்முடன் சேர்ந்து வரும்.
சான்று:
வருகம்
காண்கம்
இவ்வடிவம் பெரியபுராணக் காலத்தில் காணப்படவில்லை. ஆனால் ககரம் ஏன் விகுதியுடன் சேர்ந்து காணப்படுகின்றது.
சான்று:
உரைக்கேன் – பெரிய புராணம், 120 : 53
• ‘ஆய்’ விகுதி
இடைக்காலத்தில் சோழர் காலத் தமிழில் எதிர்கால இடைநிலைகளுடன் ஆய் விகுதி இணைந்து ஏவல்வினை உருவாகியிருப்பதைப் பெரிய புராணத்தில் காண முடிகிறது.
சான்று:
வருவாய் – பெரிய புராணம், 3740:1
வாராய் – பெரிய புராணம், 3740:3
• ‘ஈர்’ விகுதி
ஈர் விகுதியும் எதிர்கால இடைநிலையுடன் இணைந்து ஏவல் வினையாக வருகிறது. இதைப் பெரியபுராணத்திலும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும் காணமுடிகிறது.
சான்று:
பேசுதீர் – பெரிய புராணம். 2655:1
பேசீர் – நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். 1868:3
இருப்பீர் - பெரிய புராணம் 3906:4
• ‘ஈர்கள்’ விகுதி
இரட்டைப் பன்மை விகுதியான ஈர்கள் என்ற விகுதி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றது.
சான்று:
உரையீர்கள் – நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், 1795:2
• ‘மின்கள்’ விகுதி
மற்றொரு ஏவல் இரட்டைப் பன்மை விகுதியாகிய மின்கள் பெரிய புராணத்திலும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.
சான்று:
கேண்மின்கள் – நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், 1795:2
தொகுமின்கள் - பெரிய புராணம், 2082:4
• ‘செய்யாதே’ வாய்பாட்டு ஏவல் வினை
இந்த வாய்பாட்டில் வருகின்ற எதிர்மறைப் பொருளைத் தரும் ஏவல் வினைகள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் காணப்படுகின்றன.
சான்று:
தகர்த்தாதே – நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், 5543
செய்யாதே - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், 1852
சான்று:
தடந்தோள் வாழ்க!
பரந்து கெடுக!
போற்றி அருளுக!
விரைந்து நடக்க!
சான்று:
சங்க காலம்
காண்டி
செய்வி
இரீஇ – புறநானூறு, 150:8
போர்ப்பித்து – புறநானூறு, 286:5
அறிவித்து – கலித்தொகை, 136:15
இகர விகுதி சோழர் கால இறுதியிலேயே மறைந்து விட்டது. செய், வை, பண்ணு ஆகிய புதிய துணை வினைகள் காரண வினை உருவாக்கத்திற்கு உதவுகின்றன.
சான்று:
செய் – வாழச் செய்தாய் (நா.தி.பி, 470:4)
வை – செல்ல வைத்தனன் (நா.தி.பி, 27/9:4)
பண்ணு - ஓடமிட வென்னைப் பண்ணி (நா.தி.பி, 2971:2)
மேற்கூறியன தவிர, காண், கொள் போன்ற துணைவினைகளும் அக்காலத்தில் காரண வினை காட்டுவனவாக விளங்கி அதன் பின்னர் வழக்கிழந்து விட்டன.
சான்று:
காண் – உண்ணக் கண்டான் (நா.தி.பி, 1542:4)
கொள் - உய்யக் கொண்டான் (நா.தி.பி, 216:3)
இவ்வெதிர்மறை ஒட்டு பொதுவாக வினைச்சொற்களின் இடையில், கால இடைநிலை வழங்கும் இடத்தில் அதற்குப் பதிலாக வழங்கும்.
ஆ, ஆத் ஆகிய ஒட்டுகளையுடைய எதிர்மறை வினை சோழர் காலத்தில் மிகுதியாகப் பழக்கத்தில் இருந்து வந்தது. அல், இல் போன்ற சங்க கால எதிர்மறை ஒட்டுக்கள் சோழர் காலத்தில் வழக்கிழந்து விட்டன. சங்கத் தமிழில் இடம் பெற்ற ஆம் என்ற எதிர்மறையும், சங்கம் மருவிய காலத் தமிழில் இடம் பெற்ற ஆத் என்ற எதிர்மறையும் சோழர் காலத்தில் நிலைபெற்றுவிட்டன. ஆத் என்பது சற்று வடிவம் மாறி ஆப் என நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் வழங்கப்படுகின்றது. இந்நிலை சங்க காலத்திலிருந்து தமிழ்மொழி வளர்ச்சி பெற்று வந்துள்ளதை உணர்த்துகிறது எனலாம்.
சான்று:
அயராப்பாய – (நா.தி.பி, 3769.1)
நில்லாப்பாய் - (நா.தி.பி, 3746.2)
• தன்மை வினைமுற்று விகுதி
அ) தன்மைப் பன்மை விகுதி
தன்மைப் பன்மை காட்டும் வினைமுற்று விகுதியாகிய எம் என்பது சோழர் காலத்தில் ஆங்காங்கே காணப்படுகின்றது.
சான்று:
ஆயினெம் - (பெருங்கதை 3.15-1)
உண்டனெம் - (கம்பராமாயணம், 2.667:4)
சங்க நூல்களில் தன்மைப் பன்மை காட்டும் ஓம் விகுதி ஓரிரு இடங்களில் காணப்பட, சோழர் காலத்திலோ மிகுந்து காணப்படுகின்றது.
சான்று:
காண்கின்றோம் – (கம்பராமாயணம், 1:1137:1)
இருக்கின்றோம் - (பெரிய புராணம், 3700:2)
அறிந்தோம் - (நா.தி.பி, 531:3)
ஆ) தன்மை ஒருமை விகுதி
வினைமுற்று விகுதிகளில் தன்மை ஒருமை விகுதியைக் குறிக்கும் அன் விகுதியும், என் விகுதியும் புழக்கத்தில் இருந்தன.
சான்று:
-அன் – உண்டனன்
-என் - உண்பென்
• முன்னிலை வினைமுற்று விகுதி
ஐ, ஆய் என்னும் விகுதிகள் முன்னிலை ஒருமையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட விகுதிகளாகச் சோழர் காலத்தில் வழக்கத்தில் இருந்து வந்தன.
சான்று:
-ஐ – உண்கின்றனை
-ஆய் - இயம்புகின்றாய் இருக்கின்றாய்
பல்லவர் காலத்தில் விகுதிகள் குறில்களாக இருக்க (அம், அன்), சோழர் காலத்தில் நெடில்களாக (ஆன்) மாறத் தொடங்கின.
சான்று:
கண்டத்தன்
-
(அப்பர் தேவாரம், 5.19.5.)
பங்கினன் - (அப்பர் தேவாரம், 5.19.9.)
உண்டு என்ற உடன்பாட்டுச் சொல் இருதிணை ஐம்பாலுக்கும் உரியது என்று கூறும் நேமிநாதர் அன்று, அல்ல ஆகிய எதிர்மறைச் சொற்களையும் தம் நூலில் எடுத்தாண்டுள்ளார். அன்று என்பது வடிவத்தால் ஒருமை, அல்ல என்பது வடிவத்தால் பன்மை. எனினும், இவையிரண்டும் ஒருமை, பன்மை வேறுபாடின்றிச் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்டன என்ற செய்தியும் தெரிய வருகிறது.
சான்று:
மை கிடையாமை ஒழியாமை (பெரிய புராணம், 4034:2) (நா.தி.பி, 4681)
அல் அடையாமல் அறியாமல் (பெரிய புராணம், 2289:3) (கம்ப ராமாயணம், 6:2035:4)
மே காணாமே அறியாமே (பெரிய புராணம்,1326:31 (நா.தி.பி, 79:2)
சோழர் காலத்தில் ஆல், ஏல், இல் என்பன நிபந்தனை எச்ச உருபாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சான்று:
ஆல் – தொழுதால் (நா.தி.பி, 1244:2)
ஏல் - அறிதியேல் (நா.தி.பி, 573)
இல் - உறங்காவிடில் (நா.தி.பி, 59:3)
தொல்காப்பியர் கூறிய செய்த, செய்யும் என்னும் இரு பெயரெச்ச வாய்பாடுகளோடு நன்னூலார் செய்கின்ற என்னும் வாய்பாட்டுடன் மூவகைகளை விளக்கியுள்ளார். இது சோழர் கால மொழி வளர்ச்சி என்று கூறலாம்.
மேற்கூறிய இம்மாற்றங்களே அன்றிப் பழைய வடிவமான செயின், செய்தால் என மாற்றமடைந்தது. படி (சொன்னபடி, எழுதியபடி), இடத்து (வந்தவிடத்து; கேட்டவிடத்து) ஆகியன இடைச்சொற்களாகவும் பயன்படுத்தப் பட்டன. இவ்வாறு சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம் ஆகிய பல்வேறு காலங்களைக் கடந்து, சோழர் காலத்தில் தமிழ் வளர்ச்சி பெற்றுப் புதிய உருவங்களைப் பெற்றுள்ளது என்று கூறமுடியும்.
சான்று:
தற்பவம்: இடபம், விடபம்
நாகம், மேகம்
தலம், தனம்
சபை, சேனை
அரன், அரி
மோகம், மகி
பக்கம், தக்கணம்
சுகி, போகி, சுத்தி
செபம், ஞானம்
தற்சமம்: அமலம், கமலம், குங்குமம்
சுகி, போகி, சுத்தி
தற்பவம் = வடமொழிக்கே உரிய சிறப்பு எழுத்தாலும்; சிறப்பு, பொது இருவகை எழுத்தாலும் அமைந்து, தமிழுக்கு ஏற்ப மாறுபட்டு (விகாரம் அடைந்து) தமிழில் வழங்கும் வடசொல்.
தற்சமம் = வடமொழிக்கும் தமிழுக்கும் பொதுவான எழுத்துகளால் அமைந்து மாறுபடாமல் (விகாரம் அடையாமல்) தமிழில் வழங்கும் வடசொல்.
இவ்வடமொழிச் சொற்களேயன்றிச் சிங்களம் (பில்லி, சூன்யம், முருங்கை), மலாய் (கிட்டங்கி) முதலிய பிறமொழிச் சொற்களும் அரசியல் வரவால் தமிழில் புகுந்து நிலைத்துவிட்டன.
• சோழர் காலத் தமிழின் இலக்கண அமைப்பைத் தெரிந்து கொள்வதற்கு அக்காலத்தில் தோன்றிய மூல ஆதாரங்களான இலக்கண, இலக்கிய நூல்கள் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள்! அவை மட்டுமன்றிப் பிற சான்றுகளான அரசர்களின் ஆவணங்கள், குகைக் கல்வெட்டுகள், சாசனங்கள் போன்றவற்றையும் நன்கு தெரிந்து கொண்டிருப்பீர்கள்!
• பல்லவர் காலத் தமிழ் மொழியின் பெயரியல் அமைப்பில் ஏற்பட்ட பதிலிடு பெயர்கள், வேற்றுமை உருபுகள், சொல்லுருபுகள் இவற்றின் தோற்றம், பெயரில் பால் காட்டும் விகுதிகள் போன்றவற்றில் எற்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் விளக்கமாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்!
• பெயரியலை அடுத்து வினையியல் அமைப்பிலும்; பல வகை வினைகளின் அமைப்பு, புதிய கால இடைநிலைகளின் தோற்றம், வினையெச்ச வடிவ மாற்றங்கள் ஆகியன குறித்து நன்கு உணர்ந்திருப்பீர்கள்!
• வடமொழித் தாக்கத்தால் தமிழில் உண்டான தற்சமம், தற்பவம் எனும் அமைப்பினைச் சான்றுகளுடன் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்!
பாடம் - 5
இந்தப் பாடம் நாயக்கர் காலத் தமிழில் ஏற்பட்ட மாற்றங்களைக் கூறுகிறது. பல்லவர், சோழர் காலத்தில் ஏற்பட்ட ஒலி மாற்றங்கள், இலக்கண மாற்றங்கள் மட்டுமன்றி, எழுத்தளவிலும் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கிக் கூறியுள்ளது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்:
• நாயக்கர் காலத்தில் எழுந்த இலக்கிய இலக்கண நூல்கள் பற்றிய செய்திகளை அறியலாம்.
• அக்காலக் கட்டத்தில் தமிழ்மொழியில் எழுந்த ஒலி மாற்றங்களைச் சான்றுகளுடன் உணர்ந்து கொள்ளலாம்.
• தமிழ்மொழியின் பல்வேறு இலக்கணக் கூறுகள் முந்தைய தமிழ் வழக்கிலிருந்து மாறும் விதங்களைச் சில சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.
• ஐரோப்பியர் வருகையால் தமிழில் தோன்றிய உரைநடை வழக்கையும், வீரமாமுனிவர் தமிழ் வரிவடித்தில் ஏற்படுத்திய மாற்றங்களையும் அறிந்து கொள்ளலாம்.
• நாட்டுப்புற மொழியியலின் போக்கும் விளக்கப்படுவதால், தமிழ் இலக்கியத்தில் உரைநடை வடிவம் மற்றும் பேச்சு மொழியின் தாக்கம் ஆகியவற்றை நன்கு உணர்ந்து கொள்ளலாம்.
அக்காலக் கட்டத்தில் சோழர் ஆட்சிக் காலம் போன்று பெரிய காப்பியங்களும் புராணங்களும் தோன்றவில்லை. எனினும், பல சிற்றிலக்கியங்களும் சில இலக்கண நூல்களும் தோன்றின. அக்காலத்திய மொழி வரலாற்றை அறியச் சிறந்த ஆதாரங்களாக இவை விளங்குகின்றன.
புகழேந்தியாரின் நளவெண்பாவும், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணமும், வில்லிபுத்தூராரின் வில்லிபாரதமும், அருணகிரியாரின் திருப்புகழும், தாயுமானவரின் தனிப்பாடல்கள் பலவும் நாயக்கர் கால மொழிநிலையை அறியப் பேருதவி புரிகின்றன.
வீரமாமுனிவர் எழுதிய போர்த்துக்கீசியம் – தமிழ் – இலத்தீன் அகராதியும் மக்கள் பேசும் பேச்சு வழக்குக் கூறுகளைக் கொண்டுள்ளது. சீகன்பால்கு ஐயர் 1709இல் தரங்கம்பாடிக்கு வந்தவர். கிறித்துவ வேதமான பைபிளைத் தமிழ்ப்படுத்தியவர். தமிழ்-இலத்தீன் ஆகிய இரு மொழிகளுக்கும் பொதுவாக வழங்கும் பல சொற்களை எடுத்துக்காட்டியுள்ளார்.
இவ்வாறு மேலைநாட்டினர் சிலர், இலக்கண நூல்களையும் மொழி ஆய்வு நூல்களையும் எழுதினர். அவை நாயக்கர் கால இறுதியில் தமிழ்மொழிக் கூறுகள் சிலவற்றை அறிவதற்குச் சிறந்த ஆதாரங்களாகவும் விளங்குகின்றன.
உயிர் ஒலிகள்
இ ஈ உ ஊ
எ ஏ ஒ ஓ
அ ஆ
மெய் ஒலிகள்
க் ச் ட் ற் த் ப்
ஞ் ண் ன் ம்
ய் ந் ழ் ர் ல் வ்
ள்
• இகரம் உகரமாதல்
வளைநா ஒலி அல்லது இதழொலியை அடுத்து ரகரமோ, ழகரமோ, லகரமோ வரும்போது, அம்மெய்யோடு சேர்ந்த உயிரொலியான இகரம் உகரமாகிறது.
சான்று:
துளிர் > துளுரு
தமிழ் > தமுழு
மதில் > மதுலு
அ) அகரம் இகரமாதல்
இரு மெய்களுக்கு இடையில் அகரம் வரும்போது இகரமாகவோ உகரமாகவோ மாறும்.
சான்று:
தண்டனை > தண்டினை
வஞ்சனை > வஞ்சினை
ஆ) அகரம் உகரமாதல்
சான்று:
வந்தது > வந்துது
• இகரம் யிகரமாதல்
இம்மாற்றம் பல்லவர் காலத்திலும் உள்ளது.
சான்று:
இது > யிது
இனி > யினி
• எகரம் அகரமாதல்
தற்காலப் பேச்சுவழக்கிலும் இந்த மாற்றம் நிலைத்து விட்டது.
சான்று:
எல்லாம்
>
அல்லாம்
வேண்டாம் > வாண்டாம்
• ஐகார மாற்றம்
ஐகாரம் அகரமாகவும் எகரமாகவும் பலவிடங்களில் வழங்குகிறது.
அ) ஐகாரம் அகரமாதல்
சொல்லின் முதல், இடை, கடை என மூன்று நிலைகளிலும் இம்மாற்றம் நிகழ்கிறது.
சான்று:
சொல் முதல் : ஐம்பது > அம்பது
சொல் இடை : வளையல் > வளயல்
சொல் கடை : தலை > தல
ஆ) ஐகாரம் எகரமாதல்
சான்று:
நைவேத்யம் > நெய் வேத்தியம்
• யகர மாற்றம்
யகரம் எகரமாகியும் மறைந்தும் பல சொற்களில் வழங்கப்படுகிறது.
(யகரம் அரையுயிர் என்பதால் உயிரொலி மாற்றத்திலேயே கூறப்பட்டுள்ளது)
அ) யகரம் எகரமாதல்
சான்று:
யமன் > எமன்
யாது > ஏது
ஆ) யகரம் மறைதல்
மொழி முதல் யகரம் பல்லவர் காலத்திலேயே மறைந்து விட்டது.
சான்று:
யார் > ஆர்
யாண்டு > ஆண்டு
• உயிர்நெடில் அளவு குன்றல்
உயிர்மெய் நெடில்களை அடுத்தோ மெய்ம் மயக்கங்களுக்குப் பிறகோ உயிர்கள் தம் மாத்திரையில் குறைந்து ஒலிக்கப்படுகின்றன.
சான்று:
காண்பாம் > காண்பம்
தண்ணீர் > தண்ணி
(அ) வடமொழிச் சொற்கள் தமிழில் புகுந்தமை.
(ஆ) அவ்வடமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல்.
(இ) அச்சொற்களைத் தமிழில் எழுதக் கிரந்த வரிவடிவங்கள் பின்பற்றப்பட்டமை.
(ஈ) சொல்லிறுதி ஒலிகள் சில இழக்கப்பட்டமை.
• வடமொழிச் சொற்கள் தமிழாக்கப்படல்
வடமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்யும்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.
(அ) ஷ > ச
சான்று:
ரிஷி > ரிசி
வேஷம் > வேசம்
(ஆ) க்ஷ > க
சான்று: க்ஷணம் > கணம்
(இ) ஷ்ட் > ஸ்தி
சான்று: கஷ்டம் > கஸ்தி
(ஈ) அம் > ஐ
சான்று: மாதம் > மாத்தை
(உ) ஐ > அல்
சான்று: கார்த்திகை > காத்தியல்
(ஊ) ஹ்ய் > ங்
சான்று: அஸஹ்ய > அசிங்கம்
(எ) ர் > ழ்
சான்று: அமிருத் > அமிர்தம் > அமிழ்தம்
• மொழியிடை ஒலிப்புடை, ஒலிப்பிலா வெடிப்பொலிகள்
வெடிப்பொலிகள் சொல்லின் முதலில் தனித்து வரும் போதும், சொல்லின் இடையில் இரட்டித்து வரும்போதும் ஒலிப்பிலா வெடிப்பொலிகளாகின்றன. அவையே இரண்டு உயிர்களின் இடையே வரும்போதும் மூக்கொலியை அடுத்து வரும்போதும் ஒலிப்புடை ஒலிகளாகின்றன.
(அ) ஒலிப்பிலா வெடிப்பொலிகள்
சான்று:
சொல் முதல் : கன்று
இரட்டிக்கும் போது : பக்கம்
(ஆ)ஒலிப்புடை வெடிப்பொலிகள்
சான்று:
இரு ஒலிகளுக்கிடையில்
:
அகம்
மூக்கொலி அடுத்து : சுங்கம்
(இ) மொழி முதல் ஒலிப்புடை ஒலிகள்
வடமொழிச் செல்வாக்கால் மொழி முதலிலும் ஒலிப்புடை வெடிப் பொலிகள் தோன்றின.
சான்று:
ப(b)லம்
கு(g)ண்டு
• பிறமொழி மாற்றங்கள்
(அ) றகரம் வளைநா மூக்கொலியாதல் (ற > ண)
சான்று:
கன்று > கண்ணு
ஒன்று > ஒண்ணு
(ஆ) டகரம் சகரமாதல் (ட > ச)
சான்று:
மாட்சி > மாச்சி
காட்சி > காச்சி
(இ) யகரம் ககரமாதல் (ய > க)
சான்று: இடையூறு > இடைகூறு
(ஈ) னகரம் இழக்கப்படுதல் (ன>Ø)
னகர மெய் நெடில் உயிர்மெய்களுக்குப் பின்னர் இழக்கப்படுகிறது.
சான்று: நான்முகன் > நாமுகன்
(உ) ரகர லகர மெய்கள் இழக்கப்படுதல் (ர/ல > Ø)
மொழியிறுதியில் ரகர லகர மெய்கள் ஒலிக்கப்படுவதில்லை.
சான்று:
தண்ணீர் > தண்ணி
தூண்டில் > தூண்டி
(ஊ) ரகர, யகர மெய்கள் இழக்கப்படுதல் (ர/ய > Ø )
மொழியிடையில் இவ்விரு மெய்களும் இழக்கப்படுகின்றன.
சான்று:
பார்த்து > பாத்து
வாய்க்கால் > வாக்கா
• மெய்ம்மயக்கம்
நாயக்கர் காலத்தில் வடமொழிச் சொற்களின் தாக்கத்தினால் தமிழ் மொழியில் மெய்ம்மயக்கங்கள் மிகுந்திருந்தன.
-ம்ச்-, -ல்ச்-, -த்ண்-, -த்வ்-, -பர்-, -த்ர்-, -ச்ர்-
போன்ற மெய்ம்மயக்கங்கள் வில்லிபாரதத்தில் காணப்படுகின்றன. வடமொழி ஒலிகளான ஸ, ஷ, க்ஷ ஆகியன தமிழில் புகுந்தமையால் கீழ்க்காணும் மெய்ம்மயக்கங்கள் ஏற்பட்டன.
St. Sn, Sm. Sp. Sk. St, Kr, Ks
• உறழ்ச்சி
பல சொற்கள் உறழ்நிலைகளில் (இருவேறு ஒலிகளும் ஒரே இடத்தில் வழக்கத்தில் இருத்தல்) ஒலிக்கப்படுதலைக் காணலாம்.
சான்று:
ச ~ ட மனுசன் ~ மானுடன்
ண் ~ ட் நண்பு ~ நட்பு
ண் ~ ம் சண்பகம் ~ சம்பகம்
ர் ~ ல் பந்தர் ~ பந்தல்
ற ~ ல கழறுக ~ கழலுக
ய ~ வ கோயில் ~ கோவில்
• ஓரினமாக்கம்
ஓர் ஒலிக்கு முன்னரோ, பின்னரோ வருகின்ற மற்றோர் ஒலி அதன் ஒலி உச்சரிப்புக்கு ஏற்ப மாறிவிடுகிறது.
சான்று:
மாண்பு > மாம்பு
மாட்சி > மாச்சி
செல்வம் > செல்லம்
இன்சொல் > இஞ்சொல்
மேற்கூறிய ஒலி மாற்றங்களேயன்றிப் பல்லவர், சோழர் கால மாற்றங்களான நகர னகர மெய்கள் ஒன்றாதல், ரகர றகர மெய்கள் ஒன்றாதல் போன்றவை, நாயக்கர் காலத்திலும் தொடக்கத்தில் வழக்கிலிருந்து பின்பு நிலைத்துவிட்டன.
இவர்களுள் வீரமாமுனிவர் தமிழ் அகராதி அமைப்புக்கு வித்திட்டவர்; பேச்சு வழக்குச் சொற்களுக்கு இலக்கணம் வகுத்தவர்; அவற்றோடு தமிழில் சிறந்த எழுத்துச் சீர்திருத்தம் செய்த பெருமை அவரையே சாரும்.
மெய்யெழுத்துப் போலவே எ, ஒ என்னும் குறில் எழுத்துகள் இரண்டும் புள்ளி பெறும் என எழுத்து வரிவடிங்களைப் பற்றி இலக்கண நூல்களான தொல்காப்பியமும் நன்னூலும் குறிப்பிடுகின்றன. வீரமாமுனிவர் தொன்னூல் விளக்கம் என்னும் தம் நூலில் இவ்வரி வடிவங்களின் சில மாற்றங்களைக் குறிப்பிடுகின்றார்.
பழைய விதி புதிய மாற்றம்
குறில் எ்,ஒ் எ,ஒ
நெடில் எ,ஒ ஏ,ஓ
பழைய விதி குறில் நெடில் புதிய மாற்றம் குறில் நெடில்
எகர, ஏகாரம் கெ கெ கே
ஒகர, ஓகாரம் கெ்ா கொ கொ கோ
பழைய வடிவம் புதிய வடிவம்
ரகரம் ா ர
வீரமாமுனிவர் தமிழ் வரிவடிவில் செய்த இத்தகைய மாற்றம் இன்றும் நமக்குப் பயனுள்ளதாக விளங்கி வருகிறது.
• தொழிற்பெயர் உருவாதல்
பல் என்னும் வேர் வினையாவதற்குக் குகரச் சொல்லாக்க அசையைப் பெறுவதற்கு முன்னர் ஓர் உகரத்தைப் பெறுகின்றது.
சான்று:
பல் + உ+கு > பலுகு
ககரத்தை இரட்டிக்க இது தொழிற்பெயராகிறது.
சான்று:
பலுக்கு
• பல சொற்கள் சொல்லாக்க விகுதியைப் பெற்றுப் புதிய சொற்களாகின்றன.
சான்று:
அழு + கு > அழுகு
தரு + கு > தருகு
• ‘மை’ விகுதியுடைய பெயர்ச்சொற்கள்
வெண்மை, பொறுமை போன்ற மை விகுதியில் முடியும் வழக்கு ஒப்புமையாக்கமாக, பண்புப் பெயரான கனிவு என்பதற்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது.
சான்று:
கனிவு + மை > கனிமை
• எதிர்மறை வடிவம்
செய என்ற வினையெச்சம் எதிர்மறை வடிவமான இல்லை என்பதுடன் சேர்ந்து எதிர்மறையைக் காட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சான்று:
அவன் செய்யவில்லை (செய + இல்லை)
இவை போன்ற புதிய சொற்கள் சொல்லாக்க முறையில் நாயக்கர் காலத்தில் தோன்றியுள்ளன.
• கொண்டு – கருவிப் பொருள் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை உருபான ஆல், ஆன் என்பனவற்றிற்குப் பதிலாகக் கொண்டு என்ற சொல் வேற்றுமை உருபாகச் செயல்படுகிறது.
சான்று:
வாளால் வெட்டினான் > வாள் கொண்டு வெட்டினான் .
• பொருட்டு, ஆக – கொடைப் பொருள் ஒற்றுமை
நான்காம் வேற்றுமை உருபான கு என்பதற்கு இணையாகப் பொருட்டு, ஆக என்ற சொற்களே செயல்படுகின்றன.
சான்று:
அவனுக்காக/அவன் பொருட்டு வாங்கி வந்தேன்.
• இருந்து, நின்று – நீங்கல் பொருள் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை உருபு இன், இல் என்பனவற்றிற்கு இணையாக இருந்து, நின்று என்ற சொற்கள் வழக்கில் வந்துவிட்டன.
சான்று:
வீட்டிலிருந்து/வீட்டினின்று நீங்கினான்.
• உடைய – உடைமைப் பொருள் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை அது, அ என்ற உருபுகளுக்கு இணையாக உடைய என்ற சொல்லைப் பெற்று நிற்கிறது.
சான்று:
அவனது சட்டை > அவனுடைய சட்டை
என கைகள் > என்னுடைய கைகள்
• இல், இன் போன்ற இடப்பொருள் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை கண் என்ற உருபு மட்டுமல்லாமல் இதனோடு இடப்பொருள் வேற்றுமையை உணர்த்த இல், இன், உள், கடை, பால், வாய், தலை, இடை, வழி போன்ற சொற்களும் பயன்படுத்தப்பட்டன.
சான்று:
மலையில், அடவிபால், கடலிடை, நிழற்கண், மடைவாய்
மலை – இல் (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், 28 : 11)
அடவி – பால் (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், 99 : 5)
கடல் – இடை (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், 29 : 6)
நிழற் – கண் (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், 23 : 3)
மடை – வாய் (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், 99 : 4)
தென்மாவட்டக் கிளைமொழிகளில் வைத்து என்ற சொல்லுருபு இடம்பெறுகிறது.
சான்று:
ஊரில் வைத்து உன்னைப் பார்த்தேன்.
• தன்மை
தொல்காப்பியர் நான் என்று தன்மை ஒருமையைக் குறிக்க வில்லை. எனினும் நாயக்கர் காலத்தில், ஒப்புமையாக்கத்தால் யாம் என்ற சொல்லுக்கு இணையாக நாம் இருப்பதைப் போன்று, யான் என்ற சொல்லுக்கு இணையாக நான் என்ற தன்மை ஒருமை தோன்றியுள்ளது எனலாம்.
யாம் > நாம்
யான் > நான்
•முன்னிலை
முன்னிலை உருபேற்கத் திரிந்த வடிவமாகிய நுன், நும் என்பனவற்றிற்குப் பதிலாக உன், உம் என்பன வழக்கில் வந்துள்ளன. முன்னிலை வடிவமான நீயிர் என்ற சொல் நீர் எனத் திரிந்த வடிவத்தைப் பெற்றுள்ளது.
நுன் > உன் ; நும் > உம்
நீயிர் > நீர்
• படர்க்கை
படர்க்கையின் பழைய உருவங்களான பால் பாகுபாடு இல்லாத தான், தாம் என்னும் வடிவங்களுக்குப் பதிலாக அவன், அவள் என்ற பால் பாகுபாட்டுச் சொற்கள் வழக்கில் வந்துவிட்டன.
தான், தாம் > அவன்/அவள்
• இறந்தகாலம்
(அ) இறந்த கால இடைநிலைகளாக -த்-, -த்த்-, -ச்ச்-, -ந்த்-, -இன்-, -இ-, -ன்- போன்றன வழக்கில் காணப்படுகின்றன.
சான்று:
-த்த்- படித்தான்
-ந்த்- தொலைந்தார்
-இன்- ஆடினான்
-இ- ஆக்கிய
(ஆ) இக்காலக் கட்டத்தில் இறந்தகால இடைநிலையாக னகர ஒற்று காணப்படுகிறது.
சான்று: -ன்- சொன்னான்
(இ) பேச்சுத் தமிழில் சில இடங்களில் அண்ணச்சாயல் இடைநிலையாகக் காணப்படுகிறது.
சான்று:
இடி-ஞ்-சு > இடிந்து
தெரி-ஞ்-சு > தெரிந்து
மாய்-ஞ்-சு > மாய்ந்து
(ஈ) சங்ககாலத்தில் இகரம் இறந்தகால இடைநிலையாகும். இது வினையெச்சத்திலும் பெயரெச்சத்திலும் காணப்படுகிறது. அது போல நாயக்கர் காலத்திலும் இகரமும் இன்னும் காணப்படுகின்றன.
• நிகழ்காலம்
நிகழ்கால இடைநிலையான கிறு என்பது நாயக்கர் கால இலக்கிய வழக்கில் காணப்படவில்லை. ஆனால் பேச்சுத் தமிழில் வழங்கி வந்ததாக வீரமாமுனிவரின் இலக்கண நூல் குறிப்பிடுகின்றது.
• எதிர்காலம்
நாயக்கர் காலத் தமிழில் எதிர்கால இடைநிலை கி என்பது வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
சான்று:
உரைக்கியம்
• பெயரெச்சம்
செய்யா என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் சங்கத் தமிழில் தொடங்கி, சங்கம் மருவிய காலத்தில் வழக்கு மிகுந்து, நாயக்கர் காலத் தமிழில் நிலைத்து விட்டது. செய்யா வாய்பாடு செய்யாத என மாறி வழக்கிற்கு வந்து விட்டது.
சான்று:
உணராத (வில்லிபாரதம், 3.5 : 6-2)
• வினையெச்சம்
சங்க காலத்தில் செய்யூஉ, செய்பு என்ற வினையெச்ச வாய்பாடுகள் மிகுந்து காணப்பட, நாயக்கர் காலத்தில் இவை குறைந்து செய்யூஉ என்ற வினையெச்சம் ஓரிரு இலக்கியங்களில் மட்டுமே காணப்படுகின்றது.
• எதிர்மறை வினையெச்சம்
சங்கம் மருவிய காலத் தமிழில் மல் என்ற விகுதி கொண்ட எதிர்மறை வினையெச்சம் மிகவும் குறைந்து காணப்பட, நாயக்கர் காலத் தமிழில் மிகுதியாகவே காணப்படுகிறது.
சான்று:
ஆடாமல் (வில்லிபாரதம், 1.8 : 6-1)
• நிபந்தனை வினையெச்சம்
செய்தால் என்ற நிபந்தனைப் பொருள்தரும் வடிவத்திற்குப் பதிலாகச் செய்கின்றால் என்ற மற்றொரு வடிவமும் வளர்ச்சி அடைந்துள்ளது. நிகழ்கால வடிவமான கின்று என்பதுடன் சேர்ந்து இவ்வெச்சம் உருவாகியுள்ளது.
சான்று:
நீர் ஆடுகின்றால் (ஆடினால்)
• பிற எச்சங்கள்
(அ) ‘செய்யப்பட்டிருந்தாலும் கூட’
செய்தால் + உம் என்பது வினையெச்சமாக வளர்ச்சியுறுகிறது. இவ்வினையெச்சம் ‘செய்யப்பட்டிருந்தாலும் கூட’ என்ற பொருளைத் தருகிறது.
(ஆ) ‘செய்து முடிந்தவுடன்’
செயலும் {செய் + அல் (தொழிற்பெயர் விகுதி) + உம்} என்பது புதிய வினையெச்சமாக வளர்ச்சியுறுகிறது. இது ‘செய்து முடிந்தவுடன்’ என்னும் பொருளைத் தருகிறது. நாயக்கர் காலத்தில் இவ்வழக்கு மிகுந்துள்ளது.
(இ) ‘மை’ விகுதியுடைய வினையெச்சம்
பழங்காலத்திலேயே மை விகுதி எதிர்மறைப் பெயரெச்சத்துடன் வந்துள்ளது.
சான்று:
செய்யாமை கூறாமை
பின்பு, உடன்பாட்டுப் பெயரெச்சத்துடன் செயலையும் குறிக்கின்ற தொழில் அல்லது பண்புப் பெயரை உருவாக்க இணைக்கப்பட்டுள்ளது.
சான்று:
செய்தமை செய்கின்றமை
• தன்மை விகுதிகள்
(அ) ‘என்’ விகுதி
இந்த ஒருமை விகுதி சங்க நூல்களில் மிகுதியாகப் பயின்றுவர நாயக்கர் காலத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே வந்துள்ளது.
சான்று:
வந்தனென் (வில்லிபாரதம், 4.1 : 12-4)
தணிந்தென் (வில்லிபாரதம், 3.5 : 98-3)
(ஆ)‘அன்’ விகுதி
சங்கத் தமிழில் அன் ஒருமை விகுதி குறைவாகக் காணப்பட, நாயக்கர் காலத்தில் பெருவழக்காகிவிட்டது.
சான்று:
அகற்றுவன் (வில்லிபாரதம், 7.14 : 216-4)
(இ) ‘அல்’ விகுதி
இந்த ஒருமை விகுதி இவர்கள் கால வழக்கில் மிகுந்து காணப் படுகிறது.
சான்று:
கவர்ந்திடுவல் (வில்லிபாரதம், 7.14 : 238-1)
காப்பல் (வில்லிபாரதம், 7.13 : 252-4)
(ஈ) ‘ஓம்’ விகுதி
சங்க காலத்தில் ஓம் விகுதி மிகவும் குறைந்து காணப்பட, நாயக்கர் காலத்தில் மிகுதியான இடங்களில் காணப்படுகின்றது.
சான்று:
இழந்தோம் (வில்லிபாரதம் , 8.17 : 262-2)
• முன்னிலை விகுதிகள்
முன்னிலை விகுதிகள் ஏவல் வினை விகுதிகளாகவே செயல்படுகின்றன. சில இடங்களில் விகுதிகள் இன்றியும் செயல்படுகின்றன.
(அ) விகுதியின்மை
முன்னிலை வினை பெரும்பாலும் ஒருமையில் விகுதியைப் பெறுவதில்லை.
சான்று:
சொல், நட, ஆடு.
(ஆ)‘ஆய்’ விகுதி
ஆனால், சில இடங்களில் ஆய் விகுதி இணைந்து ஏவல் வினைகளாக உருவாகியிருப்பதைக் காணலாம்.
சான்று:
கேளாய் (வில்லிபாரதம், 3.12 : 11-4)
கூறுவாய் (வில்லிபாரதம், 10.18 : 233-4)
(இ) ‘ஈர்’ விகுதி
ஈர் என்ற விகுதி முன்னிலை வினையடிகளுடன் சேர்ந்து ஏவல் வினைச் சொற்களாக வழங்கி வருவதைக் காண முடிகிறது.
சான்று:
அஞ்சலீர் (வில்லிபாரதம் , 3.1 : 28-4)
(ஈ) ‘உம்’ விகுதி
செய்யும் என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் அடிப்படையில் உம் விகுதி இணைக்கப்பட்டு ஏவல் வினையாக வழங்கி வந்துள்ளது.
சான்று:
சொல்லும்
(உ) ‘ம்’, ‘ரும்’ விகுதிகள்
ம், ரும் போன்ற விகுதிகள் வினையடியுடன் சேர்ந்து ஏவல்வினை உருவாக்கப்பட்டுள்ளது.
சான்று:
போ-ம் > போம்
வா-ரும் > வாரும்
(ஊ) ‘கொள்’ விகுதி
ஏவல் வினைப் பன்மையை உணர்த்தக் கொள் விகுதி சேர்க்கப் பட்டுள்ளது.
சான்று:
சொல்லும் – கொள் > சொல்லுங்கொள்
(எ) ‘மின்கள்’ விகுதி
இரட்டைப் பன்மை விகுதியாக மின்கள் மிகுதியாக வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சான்று:
வம்மின்கள் (வில்லிபாரதம், 7.12 : 87-3)
• படர்க்கை விகுதிகள்
(அ) ‘ஆள்’ பெண்பால் விகுதி
பெண்பால் ஒருமையை உணர்த்தும் ஆள் விகுதி பழங்காலத்தில் எதிர்மறையில் மிகுந்துவர, நாயக்கர் காலத்தில் உடன்பாட்டுப் பொருளிலேயே வந்துள்ளது.
சான்று:
பொறுப்பாள்
கண்டெடுப்பாள்
(ஆ)‘ஆர்’ பலர்பால் விகுதி
உயர்திணைப் பன்மை காட்டும் ஆர் விகுதியும் இக்காலக் கட்டத்தில் உடன்பாட்டுப் பொருளில் வந்துள்ளது.
சான்று:
நிற்கின்றார் (வில்லிபாரதம், 9.18 : 16-2)
(இ) ‘து’ அஃறிணை ஒருமை விகுதி
அஃறிணையில் ஒருமையை உணர்த்தும் இவ்விகுதியானது அது என மாற்றம் பெற்றுள்ளது.
சான்று:
உரைத்து > உரைத்தது
படித்து > படித்தது
(ஈ) ‘ஓய்’, ‘ஓன்’, ‘ஓள்’ விகுதிகள்
இவ்விகுதிகள் சங்க காலத் தமிழில் வினைமுற்றாகவோ வினையாலணையும் பெயராகவோ காணப்படுகின்றன. ஆனால் நாயக்கர் காலத்தில் இவ்விகுதிகள் காணப்படவில்லை.
• வியங்கோள் விகுதி
தமிழ் இலக்கணத்தில் வியங்கோள் வினை விகுதிகளாக க, இய, இயர் என்பன கூறப்பட்டாலும், நாயக்கர் காலத்தில் மிகுதியாக வழக்கில் இருந்தது க விகுதி மட்டும்தான்.
சான்று:
வாழ்க ஓடுக
• புதிய விகுதிகள் தோன்றல்
வடமொழிச் செல்வாக்கால் ஒப்புமையாக்கம் காரணமாகப் பல புதிய விகுதிகள் தோன்றியுள்ளன. காரன், சாலி, அரவு போன்ற விகுதிகள் மிகுதியாக வழக்கில் வந்துவிட்டன. காரர் என்ற விகுதி சங்கம் மருவிய கால வழக்கிலேயே வந்துவிட்டது எனலாம்.
சான்று:
காரர் : மாலைக்காரர்
காரன் : வீட்டுக்காரன்
சாலி : புத்திசாலி
அரவு : தோற்றரவு
• துணை வினைகள்
வீரமாமுனிவர் தம் இலக்கண நூலில் சில துணை வினைகளின் பயன்பாட்டை விளக்கியுள்ளார். முதன்மை வினைகளுடன் சேர்ந்து ஒரே வினையைப் போல இவை செயல்படுகின்றன.
(அ) ‘இரு’
சான்று:
பார்த்து இரு
(ஆ) ‘போடு’
சான்று:
எழுதிப் போடு
(இ) ‘கொள்’
சான்று:
செய்து கொள்
(ஈ) அருள்
சான்று:
எழுந்து அருள்
இவ்வாறு நாயக்கர் காலத் தமிழில் பல பழைய வடிவங்கேளாடு புதிய வடிவங்களும் வழக்கில் வந்து நிலைபெற்றுவிட்டன. இம்மாற்றங்கள் அனைத்தும் தமிழ்மொழியின் வளர்ச்சியினைப் புலப்படுத்துவதை அறியலாம்.
இத்தகைய சூழலில் மக்கள்தம் பேச்சு வழக்குக் கூறுகளும் ஆராயப்பட்டு அதற்குரிய ஆய்வு நூல்களும் மேலை நாட்டினரால் வெளியிடப்பட்டன. நாயக்கர் காலத்தில் சிற்றிலக்கியத்தின் பெருக்கத்தால் நொண்டி நாடகங்கள், பள்ளேசல்கள், குறவஞ்சி இலக்கியங்கள் பல எழுதப்பட்டன. இவற்றில் பேச்சு வழக்குக் கூறுகள் பல காணப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடலான வாய்மொழி இலக்கியமும் ஏட்டு வடிவம் பெறத் தொடங்கியது. எனவே, பழைய கடிய செய்யுள் வழக்கு நடை மாறி மக்கள் பேச்சு வழக்கு நடை நடைமுறைக்கு வந்துவிட்டது. நாயக்கர் காலத்தில் மொழி மாற்றங்கள் ஏற்பட இத்தகைய சூழல்கள் காரணங்களாக அமைந்து விட்டன.
நாயக்கர் கால இறுதியில் உரைநடை என்ற புதிய நடையின் போக்கும், பல நாட்டுப்புற இலக்கியங்களும், பேச்சு வழக்குக் கூறுகளும் மொழிமாற்றங்களை வெளிப்படுத்தும் சிறந்த ஆதாரங்களாக விளங்குகின்றன.
• நாயக்கர் காலத் தமிழில் வடமொழிச் செல்வாக்கால் உண்டான பல்வேறு ஒலி மாற்றங்களை அறிந்து கொள்ள முடிந்தது.
• தமிழ்மொழியில் உரைநடையின் தாக்கத்தாலும் பேச்சுமொழியின் செல்வாக்காலும் இலக்கண அமைப்புகளில் ஏற்பட்ட ஏராளமான மாற்றங்களை உணர முடிந்தது.
• நாயக்கர் காலத் தமிழ் வரிவடிவில் வீரமாமுனிவர் செய்த எழுத்துச் சீர்திருத்தம் மிக முக்கியமானது என்பது புலனாகிறது.
• தமிழ்மொழியில் எழுந்த இலக்கிய இலக்கணங்கள், எளிய நாட்டுப்புற இலக்கிய வகைகள் ஆகிய இவையனைத்தும் நாயக்கர் காலத்தில் நிகழ்ந்த மொழி மாற்றங்களை அறிந்து கொள்ளும் ஆதாரங்களாக விளங்குவதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்!
பாடம் - 6
கி.பி. 1676இல் ஏகோஜி என்னும் மராட்டிய மன்னன் தஞ்சையைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த பின்னர், ஏறத்தாழ நூற்று எண்பது ஆண்டுகள் மராட்டியரது ஆட்சி நடைபெற்றது. அக்காலக் கட்டத்தில் தமிழ், தெலுங்கு, மராட்டி, வடமொழி ஆகிய மொழிகளில் எல்லாம் பல்வேறு இலக்கியங்கள் எழுதப்பட்டன.
தஞ்சை சரபோஜி மன்னர் உலகப் புகழ் வாய்ந்த நூலகமான சரசுவதி மகாலை உருவாக்கியதால் பல நன்மைகள் ஏற்பட்டன. இலக்கியம், இசை, நடனம், வேதாந்தம், காவியம், மருத்துவம், வானவியல் தொடர்பான பல சுவடிகள் அவர் காலத்தில் தொகுக்கப்பட்டன. கிடைத்தற்கு அரிய நூல்கள், நாணயங்கள், ஓவியங்கள், பழஞ்சுவடிகள் பல கண்டறிந்து தொகுக்கப்பட்டன.
இம்மராட்டியரது ஆட்சிக் காலத்திலே தூது, உலா, நாடகம், கோவை, சதகம், அம்மானை, புராணம், சாத்திரங்கள் என இவை தொடர்பான எழுபது நூல்கள் தோன்றி, தமிழைச் சிறந்தோங்கச் செய்தன. புலவர்கள் முயன்றி ருந்தால் ஒப்பற்ற பெரிய காப்பியங்களையும் இயற்றியிருக்க முடியும். சில நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அரசியல் தாக்கத்தால் இலக்கியப் படைப்பில் பெரும்பயன் விளையவில்லை. எனினும், சிறிய அளவிலேனும் படைப்புகள் வெளிவந்த வண்ணம்தான் இருந்தன.
• பிற ஆதாரங்கள்
மராட்டியர் காலத் தமிழை இலக்கியங்கள் மட்டும் அன்றிக் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆவணங்கள் போன்றன கொண்டும் அறிய முடியும். மராத்தி மொழிக் கல்வெட்டுகள் நாகரி எழுத்துகளில் பொறிக்கப்பட்டன. அரசு ஆவணங்கள் பல மோடி எழுத்துகளில் எழுதப் பெற்றுள்ளன. செ.இராசு அவர்கள் எழுதியுள்ள தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள், தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் என்ற தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் இரு நூல்களைக் கொண்டும் மராட்டியர் காலத் தமிழ்மொழியை ஓரளவு அறிந்து கொள்ள இயலும்.
இலக்கண ஆசிரியர்கள் வடமொழி எழுத்துகளை நீக்கி எழுத வேண்டும் என்று கூறி வந்த போதும், கல்வெட்டுகளில் முதலிலிருந்தே வடமொழி எழுத்துகள் – கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப் பட்டன. இலக்கியத்தில் முதன் முதலில் 15ஆம் நூற்றாண்டிலிருந்தே அதாவது அருணகிரியாரின் திருப்புகழிலிருந்தே ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, முதலிய எழுத்துகள் எழுத்துத் தமிழில் கலந்தன. தமிழ் மரபுக்கு மாறாக, ரகரமும் (ரீங்காரம், ருது போன்ற சொற்கள்) லகரமும் (லோகம், லீலை போன்ற சொற்கள்) சொல்லுக்கு முதலில் வரத் தொடங்கின.
உயிர் எழுத்துகள்
இ ஈ உ ஊ
எ ஏ ஒ ஓ
அ ஆ
மெய் எழுத்துகள்
க் ச் ட் ற் த் ப் ங் ஞ் ண் ன் ம் ய் ந் ழ் ர் ல் வ் ள்
• அகர மாற்றம்
அகரம்; இகரமாக, எகரமாக, ஐகாரமாகப் பல இடங்களில் வந்து வழங்கப்படுகின்றது.
அ) அகர இகர மாற்றம் (அ > இ)
சான்று:
கஜம் > கிஜம்
பரிபாலனம் > பரிபாலினம்
ஆ) அகர எகர மாற்றம் (அ > எ)
இம்மாற்றம் சோழர் காலத்திலிருந்தே தொடர்ந்து வந்தாலும் மராட்டியர் காலத்தில் மிகுந்து காணப்படுகிறது.
சான்று:
கங்கை > கெங்கை
கருடன் > கெருடன்
தசமி > தெசமி
லட்சுமணன் > லெட்சுமணன்
ரகுநாதன் > ரெகுநாதன்
யஸ்வத்தம்பா > யெஸ்வத்தம்பா
இ) அகர ஐகார மாற்றம்
உயிர்க்குறில் அகரமானது உயிர்நெடில் ஐகாரமாகவும் மாறுபட்டுள்ளது.
சான்று:
மற்றுமுள்ள > மைத்துமுள்ள
• இகர மாற்றம்
இகர ஒலியானது அகரமாகவும், எகரமாகவும், யிகரமாகவும், யெகரமாகவும் பலவிடங்களில் பயின்று வந்துள்ளது.
அ) இகர அகர மாற்றம் (இ > அ)
மராட்டியர் காலத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இம்மாற்றம் காணப்படுகின்றது.
சான்று:
மதிள் > மதள்
ஆ) இகர எகர மாற்றம் (இ > எ)
சான்று:
நிலம் > நெலம்
விலை > வெலை
இ) இகர யிகர மாற்றம் (இ > யி)
அரை உயிரான யகரத்தின் சாயல் பெற்ற இகரம் யிகரமாக ஒலிக்கப்படும் இடங்களும் உண்டு.
சான்று:
இதின்மேல் > யிதின் மேல்
இதுக்கு > யிதுக்கு
இந்த > யிந்த
இவர்கள் > யிவர்கள்
இலாகா > யிலாகா
இறை > யிறை
இந்தியக் கரை > யிந்தியக் கரை
ஈ) இகர யெகர மாற்றம் (இ > யெ)
இகரம் எகரமாக மாறுவதுடன் யகரச் செல்வாக்குப் பெற்று யெகரமாகவும் மாற்றமடைகின்றது.
சான்று:
இலை > எலை > யெலை
பிணை > பெணை
• ஈகார மாற்றம்
உயிர்க்குறில் இகரத்தைப் போலவே உயிர்நெடில் ஈகாரமும் மேற்கூறிய மாற்றங்களை அடைகின்றது.
அ) ஈகார யீகார மாற்றம் (ஈ > யீ)
சான்று:
ஈசன் > யீசன்
ஈழம் > யீழம்
• எகர மாற்றம் (எ > யெ)
எகர ஒலியானது யகர ஒலிச் சாயலைப் பெற்று யெகரமாக ஒலிக்கும் இடங்களைக் காணலாம்.
சான்று:
எருது > யெருது
எப்பேர்ப்பட்ட > யெப்பேர்ப்பட்ட
எங்களுர் > யெங்களூர்
எல்லை > யெல்லை
எழுதி > யெழுதி
• ஏகார மாற்றம் (ஏ > யே)
எகரத்தைப் போன்று ஏகாரமும் யகர ஒலியின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.
சான்று:
ஏழு > யேழு
ஏகோசி > யேகோசி
• ஐகார மாற்றம் (ஐ அய்)
உயிர் நெடில் ஐகாரமானது ‘அய்’ என ஒலிக்கப்படும் இடங்கள் பல உள்ளன.
சான்று:
கை எழுத்து > கய் எழுத்து
ஐ நெஸ > அய் நெஸ்
ஐவேஜி > அய்வேஜி
ஐயங்கார் > அய்யங்கார்
கையிலே > கய்யிலே
வைக்கிறது > வய்க்கிறது
தையலம்மை > தய்யலம்மை
• உகர மாற்றம்
உயிரொலி உகரமானது சில இடங்களில் இகரமாகவும் சில இடங்களில் எகரமாகவும் ஒலிக்கப்படுகின்றது.
அ) உகர இகர மாற்றம் (உ > இ)
சான்று:
புஞ்சை > பிஞ்சை
புறம் > பிறம்
ஆ) உகர எகர மாற்றம் (உ > எ)
சான்று:
சுவர் > செவர்
இவ்வாறு உயிரொலிகள் பல இடங்களில் மாற்றமடைந்து மராட்டியர் காலத் தமிழ்மொழி வளர்ச்சியைப் பறைசாற்றி நிற்கின்றன.
• சகர மாற்றம் (ச > த)
வல்லிடை ஒலியான சகரம் பல்லொலியாக மாறுகிறது.
சான்று:
சண்டேசுவரர் > தண்டேசுவரர்
சாசனம் > சாதனம்
• றகர மாற்றம்
மராட்டியர் கால றகர ஒலியானது தகரமாகவும், டகரமாகவும் ரகரமாகவும் காணக்கிடக்கின்றது.
அ) றகர தகர மாற்றம் (ற > த)
தற்காலத் தமிழில் காணப்படும் றகர தகர மாற்றம் சோழர் காலத்திலேயே காணப்பட்டாலும் மராட்டியர் காலத்தில் மிகுந்துள்ளது. றகரம் இரட்டிக்கும் போது மட்டுமே தகரமும் இரட்டித்து இத்தகைய மாற்றம் ஏற்படுகின்றது எனலாம்.
சான்று:
மற்றும் > மத்தும்
இற்றை > இத்தை
பெற்ற > பெத்த
ஆற்றுக்கு > ஆத்துக்கு
முற்றிலும் > முத்திலும்
கற்ற > கத்த
கிணற்றில் > கிணத்தில்
வற்றாத > வத்தாத
நேற்று > நேத்து
பிதற்றி > பிதத்தி
கற்றவர் > கத்தவர்
ஆ) றகர டகர மாற்றம் (ற > ட)
மேலும் றகரம் டகரமாக ஒலிக்கும் இடங்களும் உண்டு.
சான்று:
வென்றோன் > வெண்டோன்
இருக்கின்ற > இருக்கிண்ட
உற்சாகம் > உட்சாகம்
இ) றகரமானது மேலும் பல மாற்றங்களுக்கு உள்ளாகி உள்ளது.
ற > க, ன, ண, ச
தெற்கு > தெக்க (ற > க)
மணிக்குன்றம் > மனிக்குன்னம் (ற > ன)
கொன்ற > கொண்ண (ற > ண)
நாற்சாரி > நாச்சாரி (ற > ச)
ஈ) றகர ரகர மாற்றம் (ற > ர)
றகர ரகர ஒருங்கிணைவு பல்லவர் காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வந்த போதும் மராட்டியர் காலத் தமிழில் மிகுந்துள்ளதைக் காண முடிகிறது.
சான்று:
ஆறு > ஆரு பொறுக்க > பொருக்க
அறியாத > அரியாத மறக்க > மரக்க
பதற > பதர உறவாடி > உரவாடி
நூறு > நூரு >
• தகர சகர மாற்றம் (த்த > ச்ச)
றகரம் தகரமானதைப் போலவே தகரமும் சகரமாகிற இடங்கள் பல உள்ளன. தகரம் இரட்டித்து வரும்போது சகரமும் இரட்டித்து இத்தகைய மாற்றங்களுக்கு உள்ளாகிறது எனலாம்.
சான்று:
அவித்த > அவிச்ச
நடப்பித்த > நடப்பிச்ச
பிறப்பித்தோம் > பிறப்பிச்சோம்
• பகர வகர மாற்றம் (ப > வ)
இம்மாற்றம் தமிழ்மொழியில் மராட்டியர் காலத்தில் எங்கோ ஓரிரு இடங்களில் மட்டுமே காணப்படுகின்றது.
சான்று:
பாவாசி > வாவாசி
• ரகர றகர மாற்றம் (ர > ற)
அக்காலக் கட்டத்தில் ரகரமானது றகரமாகப் பலவிடங்களில் ஒலிக்கப்பட்டுள்ளது. றகர ரகர ஒருங்கிணைவே இதற்குக் காரணமாக இருக்கலாம்.
சான்று:
தெரிய > தெறிய
மாரன் > மாறன்
நெருக்கு > நெறுக்கு
ராத்திரி > றாத்திரி
ராணி > றாணி
ராஜா > றாஜா
அரண்மனை > அறண்மனை
பெரிய > பெறிய
வரிசை > வறிசை
நகரம் > நகறம்
அவர்கள் > அவற்கள்
தர்மம் > தற்மம்
பண்ணினார் > பண்ணினாற்
செய்தார் > செய்தாற்
• நகர னகர மாற்றம்
நகர னகர ஒருங்கிணைவு காரணத்தால் பலவிடங்களில் நகரம் னகரமாகக் காணப்படுகின்றது.
சான்று:
நம் > னம்
நாம் > னாம்
நாங்கள் > னாங்கள்
நாடு > னாடு
நாழிகை > னாழிகை
நாணயில் > னாணயில்
நாலாசாதி > னாலாசாதி
நாயக்கர் > னாயக்கர்
நாச்சியார் > னாச்சியார்
நாட்டாமை > னாட்டாமை
• னகர மாற்றம்
னகர ஒலியானது மராட்டியர் காலத்தில் ணகரமாகவும் ளகரமாகவும் சில இடங்களில் ஒலிக்கப்பட்டுள்ளது. ணகரமாக ஒலிக்கப்படும்போது, அடுத்துள்ள றகரம் டகரமாகிறது.
அ) னகர டகர மாற்றம் (ன > ண)
சான்று:
செல்லா நின்ற > செல்லா நிண்ட
வென்றோன் > வெண்டோன்
ஆ) னகர ளகர மாற்றம் (ன > ள)
சான்று:
புத்திரன் > புத்திராள்
பவுத்திரன் > பவுத்திராள்
• வகர பகர மாற்றம் (வ > ப)
மராட்டியர் காலத் தமிழில் சில இடங்களில் வகர ஒலியானது பகரமாகக் காணப்படுகின்றது.
சான்று:
அசுவமேதம் > அசுபமேதம்
ரேவதி > ரேபதி
• ழகர, ளகர, ஷகர மாற்றம்
இம்மூன்று மாற்றங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாக விளங்குகின்றன.
அ) ழகர ளகர மாற்றம் (ழ > ள)
இம்மாற்றங்களும் பல்லவர் சோழர் காலங்களிலேயே காணப்படுகின்றன.
சான்று:
கீழத்தெரு > கீளத்தெரு
சோழ > சோள
பழைய > பளைய
பழம் பஞ்சாரம் > பளம் பஞ்சாரம்
ஆ) ழகர ஷகர மாற்றம் (ழ > ஷ )
வடமொழிச் செல்வாக்கால் சிலவிடங்களில் தமிழ் ஒலிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சான்று:
சோழ மண்டலம் > சோஷ மண்டலம்
இ) ளகர ழகர மாற்றம்
ழகரம் ளகரமாவதைப் போல ளகரமும் ழகரமாக மாறுவது இக்காலக் கட்டத்தில் ஏற்பட்ட ஒலி மாற்றமாக உள்ளது.
சான்று:
வளமை > வழமை
ஈ) ஷகர ழகர மாற்றம்
தமிழ் வடமொழித் தாக்கம் பெற்றது போல வடமொழி ஷகரமும் தமிழின் சிறப்பு ஒலியான ழகரமாக ஒலிக்கப்படுகின்றது.
சான்று:
அபிஷேகம் > அபிழேகம்
பாஷை > பாழை
பிரதோஷம் > பிரதோழம்
தோஷம் > தோழம்
புருஷோத்துமன் > புருழோத்துமன்
கிஷ்ணதேவராயர் > கிழ்ணதேவராயர்
பாஷை > பாழை
தோஷம் > தோழம்
ரிஷப > ரிழப
இவ்வாறாக மெய்யொலிகள் நாம் எதிர்பாராதவாறு பற்பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதற்குச் செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் சான்றுகள் பல காணப்படுகின்றன.
சான்று:
நான், யான் – தன்மை ஒருமை
(கோ.கோ. 55.3, 12.3)
நாம், நாங்கள் - தன்மைப் பன்மை
(கோ.கோ. 55.4, 161.4)
இவன், இவள் - படர்க்கை ஒருமை
(பெண்பால்) (கோ.கோ. 88.2)
அவர் – படர்க்கைப் பன்மை (பலர்பால்) (கோ.கோ. 160.4)
அது – படர்க்கை ஒருமை (ஒன்றன் பால்) (கோ.கோ. 46.4)
சான்று:
ஐ - உங்களை (கோ.கோ. 9 : 2)
கு – பெற்றார்க்கு (கோ.கோ. 10 : 4)
ஒடு – சிலைதன்னொடு (கோ.கோ. 61 : 2)
ஆல் - அங்குசத்தால் (கோ.கோ. 46 : 4)
இல் - காலடியில் (கோ.கோ. 69 : 1)
இன் - தேமொழியின் (கோ.கோ. 69 : 2)
• இறந்தகால இடைநிலைகள்
ந்த், த்த், இன் போன்ற இறந்தகால இடைநிலைகளை அக்காலக் கட்டத்தில் காணமுடிகிறது.
சான்று:
ந்த் – சார்ந்தனன் (கோ.கோ. 12 : 3)
த்த் - முடித்தேன் (கோ.கோ. 25 : 4)
இன் - எழுதினேன் (கோ.கோ. 25 : 3)
• நிகழ்கால இடைநிலைகள்
கின்று என்ற நிகழ்கால இடைநிலை இக்காலத் தமிழில் காணப்படுகின்றது.
சான்று:
நிற்கின்றது நிற்கின்றனன் (கோ.கோ. 40 : 4) (கோ.கோ. 63 : 4)
• எதிர்கால இடைநிலைகள்
பழங்காலத்திலிருந்து இருந்துவந்தது போலவே மராட்டியர் காலத்திலும் வ, ப்ப் ஆகியன எதிர்கால இடைநிலைகளாக வழக்கத்தில் உள்ளன.
சான்று:
வ – நீங்குவர் (கோ.கோ. 28 : 2)
ப்ப் - இருப்போம் (கோ.கோ. 34 : 4)
• ஏவல் ஒருமை (விகுதி பெறாமை)
சான்று:
போ பார் (கோ.கோ. 29 : 2) (கோ.கோ. 32 : 4)
• ஏவல் பன்மை (உம், மின் விகுதிகள்)
சான்று:
உம் – சூழும் (கோ.கோ. 8 : 3)
மின் - இருமின் (கோ.கோ. 161 : 2)
சான்று:
அல் – மொழியல் (கோ.கோ. 10 : 2)
இல் - அறிந்திலம் (கோ.கோ. 68 : 4)
ஆத் - உறாது அறியாதவன் (கோ.கோ. 26 : 1) (கோ.கோ. 28 : 4)
ஓம், ஏன் என்ற விகுதிகளும் எதிர்மறை வினையை உணர்த்தப் பயன்படுத்தப்பட்டன.
சான்று:
ஓம் – அடையோம் (கோ.கோ. 10 : 2)
ஏன் - இரேன் (கோ.கோ. 29 : 3)
• பெயரெச்சம்
மராட்டியர் காலத் தமிழ் வினைப்பகுதிகள் அ, உம் ஆகிய விகுதிகளைப் பெற்றுப் பெயர்களைக் கொண்டு முடிந்துள்ளன.
சான்று:
அ – சிதைத்திட்ட (கோ.கோ. 46 : 2)
உம் - இருக்கும் (கோ.கோ. 23 : 3)
• வினையெச்சங்கள்
இ, உ ஆகிய விகுதிகள் வினைப்பகுதியின் எச்சங்களாக வர வினையைக் கொண்டு முடிந்துள்ளன.
சான்று:
இ – தேடி (கோ.கோ. 16 : 3)
உ - உற்று எண்ணாது (கோ.கோ. 21 : 3) (கோ.கோ. 58 : 3)
• நிபந்தனை எச்சங்கள்
ஒரு வினை நிபந்தனை எச்சமாக மாறுவதற்கு இன், அல்லது ஆல் என்ற விகுதியைப் பெற்று நிபந்தனை எச்சமாகின்றது.
சான்று:
இன் – குறித்திடின் (கோ.கோ. 34 : 4)
ஆல் - ஒழிந்தால் (கோ.கோ. 42 : 3)
• குறையெச்சங்கள்
அ என்ற விகுதி குறையெச்ச விகுதியாக வருவதை மராட்டியர் காலத் தமிழில் காணலாம்.
சான்று:
உற (கோ.கோ. 21 : 4)
மகிழ்ந்திட (கோ.கோ. 27 : 2)
• தன்மை
முதலாவது இடமான தன்மை, ஒருமை பன்மை என்ற பாகுபாட்டைக் குறிக்கும் விகுதிகளையுடையது.
அ) தன்மை ஒருமை
தன்மை ஒருமை விகுதிகளாக அன், ஏன் என்ற விகுதிகள் பயன் படுத்தப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது.
சான்று:
சார்ந்தனன் வருவன் – அன் விகுதி (கோ.கோ. 12 : 3) (கோ.கோ. 55 : 3)
அறிவேன் முடித்தேன் - ஏன் விகுதி (கோ.கோ. 9 : 3) (கோ.கோ. 25 : 4)
ஆ) தன்மைப் பன்மை
தன்மைப் பன்மை விகுதிகளாக அம், ஓம், தும் போன்ற விகுதிகளை அக்காலக் கட்டத்தில் வழங்கிய தமிழில் காணலாம்.
சான்று:
கொண்டனம் பழித்தனம் – அம் விகுதி (கோ.கோ. 21 : 4) (கோ.கோ. 58 : 4)
அடையோம் பெற்றோம் - ஓம் விகுதி (கோ.கோ. 10 : 2) (கோ.கோ. 21 : 4)
கூறுதும் அறிதும் – தும் விகுதி (கோ.கோ. 44 : 4) (கோ.கோ. 47 : 2)
• முன்னிலை
முன்னிலையிலும் ஒருமை, பன்மை என்ற வேறுபாடு வேறுபட்ட விகுதிகளின் பயன்பாட்டால் அறிய முடிகிறது.
அ) முன்னிலை ஒரு மை
ஐ, ஆய் என்பன முன்னிலை ஒருமையைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளன.
சான்று:
ஒன்றினை மொழியலை – ஐ விகுதி (கோ.கோ. 45 : 2) (கோ.கோ. 48 : 4)
செய்தாய் கண்டாய் – ஆய் விகுதி (கோ.கோ. 43 : 3) (கோ.கோ. 22 : 3)
ஆ) முன்னிலைப் பன்மை
ஈர், உம் போன்ற விகுதிகள் முன்னிலைப் பன்மைக்குப் பயன்பட்டு வேறுபடுகின்றன.
சான்று:
செய்தீர்
அறிவீ ர் – ஈர் விகுதி
சொல்லும் தேடும் - உம் விகுதி
• படர்க்கை
படர்க்கை விகுதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் திணை வேறுபாடு, பால் வேறுபாடு, ஒருமை பன்மை வேறுபாடு ஆகியன நன்கு உணர்த்தப்பட்டன.
அ) படர்க்கை ஒருமை
படர்க்கை ஒருமையிலும் ஆண் பெண் வேறுபாட்டை உணர்த்த வெவ்வேறு வினை விகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
(1) ஆண்பால் (உயர்திணை)
இக்காலத் தமிழில் காணப்படுவதைப் போன்றே அக்காலக் கட்டத்திலும் அன் விகுதி ஆண்பால் ஒருமையைக் குறிக்கப் பயன்பட்டது.
சான்று:
என்றனன் (கோ.கோ. 77 : 2)
நிற்பன் (கோ.கோ. 59 : 3)
(2) பெண்பால்(உயர்திணை)
அள், ஆள் ஆகிய இரு வினை விகுதிகளும் பெண்பால் ஒருமையைக் குறித்து வழங்குவதைக் காணமுடிகிறது.
சான்று:
அள் – நிற்கின்றனள் (கோ.கோ. 63 : 4)
ஏகினள் (கோ.கோ. 73 : 3)
ஆள் – சொல்கின்றாள்
தேடுவாள்
(3) ஒன்றன் பால் (அஃறிணை)
அஃறிணையில் ஒருமையைக் குறிக்க அது என்ற விகுதி பயன் படுத்தப்பட்டுள்ளது.
சான்று:
வளர்த்தது
நிற்கின்றது
ஆ) படர்க்கைப் பன்மை
உயர்திணைப் பன்மையும் அஃறிணைப் பன்மையும் என இரு பன்மைகள் படர்க்கையில் காணமுடிகின்றது.
(1) பலர்பால் (உயர்திணை)
உயர்திணையில் பலரைக் குறிக்க அர், ஆர் போன்ற விகுதிகள் பயின்று வந்துள்ளன.
சான்று:
அர் – நீங்குவர் (கோ.கோ. 28 : 2)
சாற்றுவர் (கோ.கோ. 30 : 4)
ஆர் - தந்தார் (கோ.கோ. 37 : 4)
வருவார் (கோ.கோ. 31 : 4)
(2) பலவின் பால் (அஃறிணை)
ஓரிரு இடங்களில் மட்டுமே பலவின்பாலைக் குறிக்க அ விகுதி பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களைக் காணமுடிகிறது.
சான்று:
கண்டன
கேட்டன
மேற்கண்ட இலக்கணக் கூறுகளின் மாற்றங்களே அன்றி வேறு சில மாற்றங்களும் காணப்படுகின்றன. நிகழ்கால விகுதியான கிறு அஃறிணை வினைமுற்றுச் சொற்களில் கெட்டுவிட்டது.
சான்று:
தோன்றுகிறது > தோன்றுது
பாய்கிறது > பாயுது
செய்யேன் என்ற வாய்பாட்டு எதிர்மறை வினைமுற்று மறைந்து, செய்ய மாட்டேன், செய்யவில்லை என்ற வாய்பாட்டு எதிர்மறை வினைகள் மிகுதியாக வழக்கத்திற்கு வரத் தொடங்கிவிட்டன.
• வடமொழிச் சொற்கள்
இம்மொழிச் சொற்களுள் பல கடன் வாங்கப் பட்டு வடமொழியின் உச்சரிப்புக்கு ஏற்ப அவ்வாறே உச்சரிக்கப்பட்டன. புராணங்கள், வழிபாடுகள், அரசியல் என்று பல நிலைகளில் இவ்வடமொழிச் சொற்கள் கடனாகப் பெறப்பட்டன.
அ) வடமொழிச் சொற்களாகவே இருந்தமை
கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி் வடமொழிச் சொற்கள் எந்த மாற்றமுமின்றி எழுதப்பட்டன.
சான்று:
சாஸ்திரி
உத்ஸவம்
யதாஸ்து
போஜனம்
ஆ) நன்னூலார் கூறிய விதியைப் பின்பற்றிப் பல வடமொழிச் சொற்களைக் கிரந்த எழுத்துகளை நீக்கித் தமிழ் வரிவடிவத்தில் எழுதும் வழக்கமும் மராட்டியர் காலத்தில் இருந்து வந்தது.
சான்று:
பக்ஷம் > பட்சம்
பாஷை > பாசை
ரிஷபம் > இடபம்
ஸ்வரூபம் > சுரூபம்
ஸ்வஸ்தி > சுவத்தி
ஸீதா > சீதை
ஹரா > அரன்
• ஆங்கிலச் சொற்கள்
வடமொழிச் சொற்கள் போன்றே ஆங்கிலச் சொற்களும் வந்து தமிழில் புகுந்தன. ஆங்கிலேயர் வருகை நாயக்கர் கால இறுதியிலேயே இருந்து வந்ததால் ஆங்கிலச் சொல்லின் தாக்கத்திற்குத் தமிழ் மொழியும் ஆளாகிவிட்டது என்று கூற இயலும்.
அ) ஆங்கிலச் சொற்கள் மாற்றமின்றிப் பயன்படுத்தப்பட்டமை
மராட்டியர் காலக் கல்வெட்டுகளில் பல இடங்களில் ஆங்கிலச் சொற்கள் தமிழுக்கு ஏற்றபடி எந்த மாற்றமும் பெறாமல் அவ்வாறே பயன்படுத்தப் பட்டுள்ள நிலையைக் காண முடிகிறது.
சான்று:
Committee – கம்மிட்டி
Collector – கலெக்டர்
Senior – சீனியர்
Deputy – டெபுடி
Late – லேட்
ஆ) ஆனால் வேறு சில இடங்களில் ஆங்கில மொழிச் சொற்கள் தமிழ் ஒலிப்புக்கேற்பச் சற்று மாற்றமடைந்து காணப்படுகின்றன.
சான்று:
English – இங்கிலீசு
Fund – பண்டு
Agent office - ஏஜண்டாபீசு
Cent – செண்டு
Colonel – கர்னல்
• பிறமொழிச் சொற்கள்
வடமொழியும் ஆங்கிலமும் அல்லாத வேறு சில மொழிச் சொற்கள் பல தமிழில் பயன்படுத்தப் பட்டுள்ளன.
அ) அரபு மொழிச் சொற்கள்
சான்று:
இலாக்கா
இமாம்
கசர்
கொசுறு சைத்தான்
தணிக்கை
மகசூல்
ஜாமீன்
ஆ) பெர்ஷியன் மொழிச் சொற்கள்
சான்று:
திவான்
ஜாமின்
தர்க்கா
சர்தார் சுமார்
பீங்கான்
லுங்கி
ஸர்க்கார்
ஷால்
இ) உருது மொழிச் சொற்கள்
சான்று:
கைதி
கெடுபிடி
சாமான்
சீட்டு அசல்
அஸ்திவாரம்
கச்சேரி
கஸகஸா
ஈ) தெலுங்கு மொழிச் சொற்கள்
சான்று:
பாளயம்
உப்புசம்
கோமுட்டி
பத்தர்
சொக்காய் கொலுசு
கண்ணராவி
கபோதி
கம்மல்
கெடுவு
சுலுவு
உ) மராட்டிய மொழிச் சொற்கள்
சுமார் 55 சொற்கள் மராத்தி மொழியிலிருந்து தமிழுக்கு வந்துள்ளன. அவற்றில் 23 சொற்கள் இன்றும் பேச்சு வழக்கில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சான்று:
(1) உணவு வகைகள்
கச்சாயம்
கிச்சடி
கேசரி
கோசும்பரி சேமியா
வாங்கி
ஸொஜ்ஜி
(2) சமையல் பாத்திரங்கள்
கங்காலம்
கிண்டி
ஜாடி
சாலிகை
குண்டான்
(3) இசை தொடர்பானவை
சாகி
லாவணி
தண்றி
அபங்கம்
டோக்ரா
(4) பிற சொற்கள்
லாகு = = ஆதரவு
காமாட்டி = = அறிவு
ஜம்பம் உணர்ச்சி
கோலி சிறுவர் விளையாட்டு
சாவடி
தண்டி = ஓர் எடை
ஊ) கன்னட மொழிச் சொற்கள்
சான்று:
கெலி (வெல்) அட்டிகை
தண்டால்
ஏகத்தாஸம்
கெடுபிடி
கொஸ்து
எட்டன்
சமாளித்தல்
பட்டறை
எ) போத்துக்கீசியச் சொற்கள்
மேலைநாட்டாரின் வருகையை அடுத்துப் போர்த்துக்கீசியச் சொற்கள் பல தமிழில் கலந்து நடைமுறைக்கு வந்துவிட்டன.
சான்று:
கடுதாசி
சன்னல்
துவாலை
பாதிரி
பீப்பா
மேஜை
மேஸ்திரி
வராந்தா
ஆசியா
ஏ) பிரெஞ்சு மொழிச் சொற்கள்
போர்த்துக்சீசியரைப் போன்றே பிரெஞ்சுக்காரர்களும் வாணிபத்திற்காகத் தமிழகம் வந்ததன் விளைவாக அவர்தம் சொற்களும் தமிழில் கலந்து மராட்டியர் காலத் தமிழில் காணப்படுகின்றன.
சான்று:
ஆஸ்பத்திரி
டாக்டர்
புட்டி
லாந்தர்
தாம்பூர்
காரோட்டு (கிழங்கு)
ஐ) மலையாள மொழிச் சொற்கள்
கன்னடம், தெலுங்கு மொழிச் சொற்கள் போன்றே சுமார் 50 மலையாள மொழிச் சொற்களும் தமிழ் மொழியில் காணப்படுகின்றன.
சான்று:
அச்சி
அடியந்திரம்
கச்சவடம்
பட்டி
ஜன்மி
நேரியல்
பிரதமன்
தரவாடு
இவற்றில் பல சொற்கள் நாஞ்சில் நாட்டுத் தமிழில் காணப்படுகின்றன.
சான்று:
தமிழ் மொழிக்கேற்ற வரிவடிவம்
Admiral - அமரால்
Contract - கொந்திறாத்து
தமிழ் மொழிபெயர்ப்பு
Junior General - சின்ன சென்னறல்
Factory – பெத்திரி வீடு
• தமிழ் இலக்கியங்களில் பேச்சு வழக்குச் சொற்கள்
மராட்டியர் காலச் சிற்றிலக்கியங்களில் தமிழ்ப் பேச்சு வழக்குச் சொற்கள் பல காணப்படுகின்றன.
சான்று:
அஞ்சு
கவுத்தாலே
தெண்டனிட்டு
கிட்டே
கடுதாசி
முந்தாநாத்து
ஒண்டி
சும்மா
பலவந்தம்
சாமான்யம்
• மராட்டியர் செப்பேட்டில் பேச்சு வழக்குச் சொற்கள்
சான்று:
கரபாத்திரம்
விருத்தி
ஆஜ்ஞை
உலுப்பை
விருது
வின்னாசம்
சம்பு
செறுவாடு
• மராட்டியர் காலப் பட்டயங்களில் காணப்படும் பேச்சு வழக்குச் சொற்கள்
மராட்டியர் காலத் தமிழ் மொழியானது கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பேச்சு மொழிச் சொற்களைக் கொண்டிருப்பதோடு, பட்டயங்களிலும் அத்தகைய சொற்களைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
சான்று:
அஞ்சாவது
இத்தைவரை
இப்போ
குடுக்கிறது
சிலவு
துடங்கின
முன்னாலே
நடக்குது
தண்ணீ
நாலாவுது
புதுப்பிச்சு
மனுசர்
ரொக்கம்
இன்றைய பேச்சுத் தமிழின் சாயல்கள் பல மராட்டியர் காலத்திலேயே வழக்கத்திற்கு வந்துவிட்டன என்று கூற இயலும். “தமிழ் மொழித் தூய்மை இயக்கம்” என்ற இயக்கம் இன்றைய இருபதாம் நூற்றாண்டில் தலையெடுக்காவிடில் தமிழ் மொழியில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் பிறமொழிச் சொற்களைத்தான் கண்டிருக்க முடியும். மொழி என்பது கடன் வாங்கும் இயல்பைக் கொண்டிருப்பினும் எல்லை உடையதாக இருப்பதால்தான் இத்தகைய பிறமொழித் தாக்குதல்களைக் கடந்தும் தமிழ் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று கூற இயலும்.
• மராட்டியர் காலத் தமிழை அறிய உதவும் சிற்றிலக்கியங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பட்டயங்கள் போன்றன மூல ஆதாரங்களாக விளங்குவதை அறிந்து கொண்டீர்கள்.
• அந்தக் காலக் கட்டத்தில் தமிழ் மொழியில் ஏற்பட்ட உயிர், மெய், ஒலி மாற்றங்களும் அவற்றிற்குக் காரணமாகும் வடமொழித் தாக்கத்தைப் பற்றியும் நன்கு புரிந்து கொண்டிருப்பீர்கள்.
• மராட்டியர் காலத் தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் இலக்கணக் கூறுகளின் மாற்றத்தையும், அவை தற்காலத்தோடு பொருந்தியிருக்கும் மொழி அமைப்பையும் விளங்கிக் கொள்ள முடிந்தது.
• மராட்டியர் காலத் தமிழில் புகுந்த பிறமொழிச் சொற்களின் ஆதிக்கத்தையும், பேச்சு மொழிச் சொற்கள், இலக்கியங்கள் போன்ற ஆதாரங்களில் செல்வாக்குப் பெற்று விளங்கியமை ஆகிய பல மொழி மாற்றக் காரணிகளையும் நன்கு உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.