2

பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லி பாரதம், பெருங்கதை

பாடம் - 1

பெரியபுராணம் : காப்பிய அறிமுகம்

1.0 பாட முன்னுரை

பெரியபுராணம் என்பது சைவ சமய அடியார்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விவரிக்கும் நூல். இதற்குத் திருத்தொண்டர் புராணம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. சைவ சமய இலக்கியங்களைப் பன்னிரண்டு தொகுதிகளாகப் பகுத்துள்ளனர். இப்பகுப்பைப் பன்னிரு திருமுறை என்று அழைப்பர். இப்பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையாகப் பெரியபுராணம் விளங்குகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றிலும், சைவ சமய உலகிலும் மிகச் சிறந்த இடத்தைப் பெரியபுராணம் பெற்று விளங்குகின்றது. சிலப்பதிகாரத்தை அடுத்துப் பெரியபுராணத்தை மட்டுமே தமிழ்க்காப்பியமாக அறிஞர்கள் போற்றி உள்ளனர். தமிழ்நாட்டில் வாழ்ந்த சைவ அடியார்கள், அடியார்கள் வாழ்வில் நிகழ்ந்த சமய நிகழ்ச்சிகள், இறைவன் அடியார்க்கு அருள் செய்த இறைச் செயல்கள் ஆகிய இவற்றைத் தமிழ்ப் பண்பாடு சிறந்து விளங்கப் புலவர் இயற்றி உள்ளார். பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் அடியார்கள். இவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்த புலவர் காப்பியமாகப் பாடி உள்ளார். அடியார்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து காப்பியம் உருவான காலம் வரை ஏறத்தாழ ஆறு அல்லது ஏழு நூற்றாண்டுகள் இடைவெளி உண்டு. இக்கால இடைவெளியில் வாழ்ந்த அடியார்களின் வரலாற்றை இரண்டு புலவர் பெருமக்கள் பாடி உள்ளனர். அவை:

1) சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகை

2) நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி

என்பவையாகும்.

இந்த இரண்டு நூல்களும் பெரியபுராணத்திற்கு அடிப்படை நூல்கள் ஆகும்.

பெரியபுராணக் காப்பியம் பற்றிய அறிமுகமாக இந்தப் பாடப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

1.1. ஆசிரியர் வரலாறு

பெரியபுராணத்தின் ஆசிரியர் சேக்கிழார் ஆவார். இவரது இயற்பெயர் அருண்மொழித் தேவர் என்பதாகும். இளமையில் இந்தப் பெயரிலேயே அழைக்கப்பட்டார். இவரது உடன் பிறந்தார் பாலறாவாயர் என்பவர்.

1.1.1. சேக்கிழார் பிறப்பு தமிழ்நாட்டின் வடபகுதியைப் பண்டைய காலத்தில் தொண்டை நாடு என்று கூறுவர். இந்நாட்டைப் பல பகுதிகளாகப் பிரித்து இருந்தனர். இப்பகுதிகளைக் கோட்டம் என்று அழைப்பர். அவ்விதம் பிரிக்கப்பட்ட 24 கோட்டங்களுள் புலியூர்க் கோட்டமும் ஒன்று. இப்புலியூர்க் கோட்டத்தின் உள் பிரிவாகிய குன்றைவள நாட்டின் தலைநகரம் குன்றத்தூர் ஆகும். இவ்வூரில் வாழ்ந்த வேளாளர் குலத்தில் சேக்கிழார் பிறந்தார்.

குடியும் குடியேற்றமும்

பண்டைநாளில் கரிகால் சோழமன்னன் நாற்பத்து எண்ணாயிரம் வேளாளர் குடும்பங்களைத் தொண்டை நாட்டில் குடி அமர்த்தினான். அவற்றுள் ஒன்றே சேக்கிழார் பிறந்த குடியும். உழவுத் தொழிலில் மேம்பட்ட வேளாளர் குடியில் சேக்கிழார் குடும்பம் சிறப்பு மிக்கது. இக்குடும்பமே சேக்கிழார் பிறந்த குடும்பம்.

1.1.2. சோழ நாட்டில் அமைச்சர் பணி அருண்மொழித் தேவர் இளமையிலேயே கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்து விளங்கினார். இதனை அறிந்த சோழ மன்னன் அவரைச் சோழநாட்டின் அமைச்சராக நியமித்தான். உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டத்தையும் தந்து சிறப்பித்தான். அருண்மொழித்தேவர் சிறந்த சிவ பக்தர். சோழநாட்டுச் சைவக் கோயில்களில் ஒன்றாகிய திருநாகேசுவரம் கோயிலின் இறைவனிடத்தில் மிகுந்த பக்தி உடையவர். இக்கோயில் போன்றே தனது ஊராகிய குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரில் கோயில் ஒன்றைக் கட்டினார்.

1.1.3. காப்பியம் எழுதியமை சேக்கிழார் வாழ்ந்த காலத்தில் சைவ சமயத்தார் பலர் வேற்றுச் சமய இலக்கியங்களில் சுவை கண்டு மூழ்கிப் போய் இருந்தனர். இதற்குச் சோழ மன்னனும் விதிவிலக்கல்ல. சோழ மன்னன் சமண சமயக் காப்பியமாகிய சீவக சிந்தாமணியில் மூழ்கிக் கிடந்தான். காப்பியச் சுவையில் ஆழ்ந்து கிடந்தான். இதனைக் கண்ட சேக்கிழார் சமண சமயக் காப்பிய மயக்கத்திலிருந்து சோழ மன்னனை மீட்க எண்ணினார். சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் கூறும் திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய நூல்கள் பற்றி மன்னனிடம் எடுத்துக் கூறினார். சிவனடியார்களின் வரலாற்றைக் கேட்டு மகிழ்ந்தான் மன்னன். இறைவனின் அருளைப் போற்றினான்; சிவனடியார்களை வணங்கினான். அடியார்களின் வரலாறுகளை யாவரும் அறிந்துகொள்ளும்படி செந்தமிழ்ப் பெருங்காப்பியமாகப் பாடுமாறு சேக்கிழாரைக் கேட்டுக்கொண்டான்.

1.1.4. இறைவன் அருள் பெற்றமை அரசனது வேண்டுகோளை ஏற்றுச் சேக்கிழார் தில்லையை அடைந்தார் (தில்லை = சிதம்பரம்). சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். காப்பியம் பாடுவதற்கு இறைவன் அடியெடுத்துக் (காப்பியம் பாடுவதற்கு முதல் சொல்லை எடுத்துக் கூறுதல்) கொடுத்தார். “உலகு எலாம்” என்ற ஒலி வானில் ஒலித்தது. இதனைக் கேட்டுத் தில்லை வாழ் அந்தணர்கள் மகிழ்ந்தனர். இறைவனுக்குச் சாற்றிய திருநீற்றையும் (விபூதி) மாலையையும் சேக்கிழாருக்கு அணிவித்தனர். சேக்கிழாரும் மகிழ்ந்து தில்லையில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து காப்பியம் பாடத் தொடங்கினார். இறைவன் அடியெடுத்துக் கொடுத்த “உலகு எலாம்” என்ற சொல் தொடரை முதல் செய்யுளின் முதல் சீராக அமைத்தார். சிவனடியார்கள் அறுபத்து மூவரின் வரலாற்றையும் பாடி முடித்தார்.

1.1.5. பெரியபுராணம் அரங்கேற்றம் செய்தமை காப்பியம் பாடி முடிக்கப்பெற்ற செய்தி அறிந்த சோழ மன்னன் தில்லையை அடைந்தான். சேக்கிழாரும் தில்லை வாழ் அந்தணர்களும் மன்னனை எதிர் கொண்டு அழைத்தார்கள். சேக்கிழாரின் சிவ வேடப் பொலிவைக் கண்ட மன்னன் அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அப்போது “வளவனே! சேக்கிழார் செய்த அடியார் வரலாற்றை நீ கேட்பாயாக” என்று வானத்தில் ஓர் ஒலி எழுந்தது. இதனைக் கேட்டு அனைவரும் பரவசம் அடைந்தனர்.

தொண்டர் கூட்டம்

திருத்தொண்டர் புராணத்தைக் கேட்க வருமாறு சிவனடியார் அனைவருக்கும் மன்னன் திருமுகம் (கடிதம்) அனுப்பினான். சைவத் தத்துவ அறிஞர்களும், புலவர்களும், சிற்றரசர்களும் தில்லையில் குழுமினர். சேக்கிழாரும் சித்திரைத் திங்களில் திருவாதிரை (27 நட்சத்திரங்களுள் ஒன்று) நாளில் பெரியபுராணத்தைக் கூறத் தொடங்கினார். அடுத்த ஆண்டு சித்திரைத் திங்கள் அதே திருவாதிரை நாளில் கூறி முடித்தார். தில்லை வாழ் அந்தணர்கள் பெரியபுராணத்தைச் சிவனாக எண்ணி வழிபட்டனர்.

மன்னனின் சிறப்புப் பெற்றமை

சோழ மன்னன் பெரியபுராணத்தை யானை மீது ஏற்றிச் சேக்கிழாரோடு தானும் யானை மீது அமர்ந்து வெண்சாமரம் (ஒருவகை விசிறி) வீசினான். யானையும் வீதி உலா வந்தது. சேக்கிழாரும், மன்னனும், அடியார்கள் புடைசூழக் கோயிலுக்கு வந்து நடராசர் முன்பு பெரியபுராணத்தை வைத்து வழிபட்டனர். மன்னன் சேக்கிழாருக்குத் தொண்டர் சீர்பரவுவார் (அடியார் புகழைப் போற்றுபவர்) என்ற பட்டத்தை வழங்கி வணங்கினான். பின்னர் மன்னன் பெரியபுராணத்தைச் செப்பு ஏட்டில் எழுதித் திருமுறைகளில் ஒன்றாக, பன்னிரண்டாம் திருமுறையாகச் சேர்த்து வைத்தான். சேக்கிழாரின் இந்த வரலாற்றைச் சேக்கிழார் புராணம் என்ற நூல் விரிவாக விளக்கி உள்ளது.

1.2. காலம்

பெரியபுராணம் பற்றிய கால ஆராய்ச்சியை இரு வகைகளில் செய்ய முடியும். ஒன்று, பெரியபுராணத்தில் இடம் பெற்றுள்ள அடியார்களின் காலம். இரண்டு, பெரியபுராணத்தைப் பாடிய சேக்கிழாரின் காலம்.

1.2.1 அடியார்களின் காலம் பெரியபுராணத்தில் இடம்பெற்றுள்ள அடியார்களின் காலம் வேறு; அந்த அடியார்களின் வரலாற்றைக் காப்பியமாகப் பாடிய சேக்கிழாரின் காலம் வேறு. பெரியபுராணத்தில் நாயன்மார்கள் அறுபத்து மூவரின் வரலாறு இடம் பெற்றுள்ளது. மேலும் சில அடியார்கள் பற்றிய குறிப்புகள் உண்டு என்றும் கூறுவர். ஆனால் அறுபத்து மூவர் என்ற பெயரே மரபாகப் போற்றப்பட்டுள்ளது. இந்த நாயன்மார்கள் வாழ்ந்த காலம் பல்லவர் காலம் ஆகும். பல்லவர்களின் ஆட்சிக் காலம் ஆறாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுவர். இந்த முந்நூறு ஆண்டுகளில் தமிழகத்தில் பெரும் சமயப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. சமண சமயத்திற்கும், பௌத்த சமயத்திற்கும் எதிராகச் சைவ சமயத்தாரும், வைணவ சமயத்தாரும் போராடி உள்ளனர். சைவ அடியார்களில் சிறப்புடையவர்களான திருஞானசம்பந்தர், அப்பர் அடிகள் முதலியோர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் இந்தப் போராட்டத்தை வெளிப்படுத்தி உள்ளன. இப்போராட்டம் மிகுந்திருந்த காலத்தில்தான் சைவ அடியார்கள் சமயத் தொண்டு புரிந்து உள்ளனர்; வேறு சமயங்களை எதிர்த்துப் போராடி உள்ளனர். சைவ சமயக் கோயில் வழிபாடு பல்லவர் காலத்தில்தான் சைவ அடியார்களால் பெருகியது. இன்று தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான சைவக் கோயில்கள் சைவ அடியார்களின் வரலாற்றோடு தொடர்பு உடையவை அல்லது சைவ அடியார்களால் பாடல் பெற்றவை. சைவ அடியார்கள் வாழ்ந்த காலம் பல்லவர்களின் ஆட்சிக் காலமாகிய ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து ஆகும்.

1.2.2 சேக்கிழாரின் காலம் பெரியபுராணம் பாடிய சேக்கிழாரின் காலம் குறித்து ஆராய்ச்சியாளர் பலரும் பல்வேறு கருத்துகளைக் கூறி உள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் தர்மவரம் வட்டத்திலுள்ள முத்தூர்ச் சிவன் கோயிலில் வீரராசேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டு சோழனின் நான்காம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டது. இதில் உத்தம சோழப் பல்லவராயனுடைய மகன் சிவன் கோயிலுக்குத் திருநந்தா விளக்கு (கோயிலில் பயன்படுத்தப்படும் விளக்குகளுள் ஒன்று) வைத்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மன்னனது காலம் கி.பி. 1207 முதல் 1252 வரை. இக்காலம் பற்றிய கருத்தை அறிஞர் மு.இராகவையங்கார் மறுத்துக் கூறியுள்ளார்.

சேக்கிழாரின் வரலாற்றைக் கூறும் நூல் சேக்கிழார் புராணம் என்பதாகும். இந்நூல், சேக்கிழார் காலத்தில் வாழ்ந்த சோழ மன்னனை அநபாயன் என்று குறிப்பிட்டுள்ளது. சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் தம்மை ஆதரித்த சோழ மன்னனை அநபாயன் என்றே பத்து இடங்களில் குறிப்பிட்டுள்ளார். சேக்கிழார் போன்றே சோழர் காலத்தில் வாழ்ந்த இன்னொரு புலவர் ஒட்டக்கூத்தர் என்பவர். இவர் தம்மை ஆதரித்த மன்னனையும் அநபாயன் என்றே கூறியுள்ளார். சேக்கிழாரும் ஒட்டக்கூத்தரும் கூறும் அநபாயன் பற்றிய செய்திகள் ஒத்துக் காணப்படுகின்றன. ஒட்டக்கூத்தர் குறிப்பிடும் அநபாயன் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் ஆவான். எனவே சேக்கிழாரை ஆதரித்த அநபாயன் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் என்று கருதலாம்.

இரண்டாம் குலோத்துங்கனுடைய மகன் இரண்டாம் இராசராச சோழன் ஆவான். இவனது 17ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டு திருமழபாடி சிவன் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில்,

“ஜயங்கொண்ட சோழ மண்டலத்து…….

குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள்

ராமதேவனான உத்தம சோழப் பல்லவராயன்”

என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. இத்தொடரில் உள்ள குன்றத்தூர் என்பது ஊரின் பெயர். இவ்வூரில்தான் சேக்கிழார் பிறந்தார். சேக்கிழான் என்பது வேளாள மரபைச் சேர்ந்த ஒரு குடியின் (குடும்பத்தின்) பெயர். இக்குடியில்தான் சேக்கிழார் பிறந்தார். மாதேவடிகள் ராமதேவன் என்பது ஒருவரின் பெயர். உத்தம சோழப் பல்லவராயன் என்பது சேக்கிழாருக்குச் சோழன் அளித்த பட்டப் பெயர் ஆகும். மாதேவடிகள் ராமதேவன் என்பது சேக்கிழாருக்கு அவர் முன்னோர்கள் வைத்த இயற்பெயராக இருக்கலாம் என்று அறிஞர் க.வெள்ளைவாரணன் குறிப்பிடுகின்றார். எனவே இக்கல்வெட்டு, பெரியபுராண ஆசிரியர் சேக்கிழாரையே குறிப்பிட்டுள்ளது என்று கருதுகின்றனர்.

இவற்றால் சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலும் அவன் மகன் இரண்டாம் இராசராச சோழன் காலத்திலும் வாழ்ந்தவர் என்பது தெரிய வருகின்றது. இவர்களுள் சேக்கிழார் குறிப்பிடும் அநபாயன் என்ற பெயருடையவன் இரண்டாம் குலோத்துங்கன் ஆவான். எனவே இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழார், அம்மன்னனின் மகன் காலத்திலும் வாழ்ந்துள்ளார் என்பது தெரிய வருகின்றது. இரண்டாம் குலோத்துங்கனின் காலம் கி.பி. 1133 முதல் 1146 வரை ஆகும். இவன் காலத்தவரே சேக்கிழார் என்ற கருத்தை வரலாற்றறிஞர்கள் மா.இராசமாணிக்கனாரும், மு.இராகவையங்காரும் உடன்பட்டு எழுதி உள்ளனர்.

வரலாற்று அறிஞர் சதாசிவ பண்டாரத்தார், சேக்கிழார் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவர் என்பதை விரிவாக விளக்கி உள்ளார். இவற்றை எல்லாம் ஆராய்ந்த அறிஞர் க.வெள்ளை வாரணனார், சேக்கிழார் “இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் தொடங்கி அவன் மகன் இரண்டாம் இராசராசன் காலத்திலும் இவனது மகன் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியின் முற்பகுதியிலும் வாழ்ந்துள்ளார்” என்று முடிவு கூறி உள்ளார். எனவே சேக்கிழாரின் காலம் 12ஆம் நூற்றாண்டு என்பது உறுதிப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டில்தான் பெரியபுராணமும் இயற்றப்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது.

1.3 பெரியபுராணத்தின் மூலங்கள்

சேக்கிழார் பெரியபுராணத்தை இயற்றுவதற்கு மூல நூல்களாய் இருந்தவை பலவாகும். தேவாரப் பதிகங்களும், சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திரு அந்தாதியும் பெரியபுராணத்திற்கு முதன்மைத் தரவுகளைத் தந்துள்ளன. இவை அன்றி வேறு சில நூல்களையும் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் குறிப்பிடுவார். அவை:

காரைக்கால் அம்மையார் பாடிய

* மூத்த திருப்பதிகம்

* இரட்டை மணிமாலை

* அற்புதத் திருவந்தாதி

சேரமான் பெருமாள் இயற்றிய

* திருக்கயிலாய ஞான உலா

* பொன் வண்ணத்து அந்தாதி

* திருவாரூர் மும்மணிக்கோவை

மேலும் பதினோராம் திருமுறையில் உள்ள

● நக்கீரர் நூல்கள்

● கல்லாடர் நூல்

● பட்டினத்தார் நூல்கள்

● நம்பியாண்டார் நம்பி நூல்கள்

நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கும் கோயில்களுக்கும் சேக்கிழார் நேரில் சென்றிருக்க வேண்டும்; அங்குள்ள மக்கள் இடையே வழங்கி வந்த அடியார் பற்றிய கதைகளையும் சேக்கிழார் திரட்டி இருக்க வேண்டும் என்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுகின்றார். சேக்கிழாருக்கு முன்னரே நாயன்மார்கள் வரலாறு தமிழக எல்லையைக் கடந்து கருநாடகம், ஆந்திரம் முதலிய இடங்களிலும், கம்போடியா முதலிய நாடுகளிலும் வழக்கில் இருந்தன. இவையும் சேக்கிழாருக்கு மூலங்களாகப் பயன்பட்டிருக்கலாம் என்று அ.ச. ஞானசம்பந்தன் கூறியுள்ளார்.

1.4 பெரியபுராணமும் காப்பியக் கொள்கையும்

வடமொழி இலக்கிய மரபில் பெருங்காப்பியத்திற்கு என்று சில இலக்கண வரையறைகள் உண்டு. தமிழில் தண்டி அலங்காரம் என்ற நூல் இந்த இலக்கணத்தை விரிவாகக் கூறி உள்ளது. இதில் கூறும் இலக்கணங்கள் அனைத்தும் பொருந்தி வருவது பெருங்காப்பியம் என்றும், ஒரு சில குறைந்து வருவது சிறு காப்பியம் என்றும் வகை செய்வது உண்டு. அந்த இலக்கண வரையறைகளை இனிக் காண்போம்.

1.4.1 காப்பிய இலக்கணம் 1) வாழ்த்து, தெய்வ வணக்கம், நூலின் பாடுபொருள் ஆகியன நூலின் தொடக்கத்தில் அமைதல் வேண்டும்.

2) அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றின் பயனைத் தருவதாக நூல் அமைதல் வேண்டும்.

3) காப்பியத்தின் தலைவன் தனக்கு நிகர் யாரும் இல்லாதவனாக இருக்க வேண்டும்.

4) காப்பியத்தில் நாடு, நகர், கடல், மலை, காடு ஆகியவை பற்றிய வருணனைகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

5) திருமணம், முடிசூட்டுதல், நீர் விளையாட்டு, காதல் நிகழ்ச்சிகள் முதலியன இடம் பெற்றிருக்க வேண்டும்.

6) தூது செல்லுதல், போர் செய்தல், வெற்றியடைதல் முதலிய நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

7) சருக்கம், இலம்பகம், படலம் முதலியவற்றில் ஏதாவது ஒன்றின் பெயரில் காப்பியம் பல பிரிவுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

மேலே கூறப்பெற்ற இலக்கணத்தின்படி காப்பியங்கள் அமைந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இக்காப்பிய மரபு தமிழில் சில காப்பியங்களுக்குப் பொருந்தியும் சில காப்பியங்களுக்குப் பொருந்தாமலும் உள்ளது. இதனால் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் இடையே பெரும் விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. சேக்கிழார் என்னும் நூலை எழுதிய சி.கே சுப்பிரமணிய முதலியார் மேலே கூறிய காப்பிய இலக்கணங்களைப் பெரியபுராணத்தில் பொருத்தி ஆராய்ந்துள்ளார்; பெரியபுராணம் ஒரு காப்பியமே என்று நிறுவி உள்ளார். வேறு சிலர் பெரியபுராணம் ஒரு தொகுப்பு நூலே தவிரக் காப்பியம் அன்று என்று கூறி உள்ளனர். அடியார் பலரின் வரலாற்றைத் தொகுத்துத் தருவதே பெரியபுராணம். எனவே அது காப்பியம்தான் என்று ஏற்றுக்கொள்வர் சிலர்.

சேக்கிழார் வகுத்த காப்பியம் அதற்கு முன்னர்த் தோன்றிய காப்பியங்கள் போல் அல்லாமல் தனித்துவம் உடையது என்று அ.ச.ஞானசம்பந்தன் கூறுகின்றார். காப்பியங்களுக்கு இலக்கணம் கூறுகின்ற நூல்கள் ஒன்று கூடத் தமிழில் உள்ள காப்பியங்களை முன் உதாரணமாகக் கொள்ளவில்லை. வடமொழிக் காப்பிய அடிப்படையைத்தான் கொண்டுள்ளன என்று அவர் விளக்கி உள்ளார். எனவே பெரியபுராணக் காப்பியக் கொள்கையை, தண்டியின் காப்பிய இலக்கணம் கொண்டு ஆராயக் கூடாது என்பது இவரது முடிவு.

சேக்கிழார் அவருக்கு முன் தோன்றிய எந்த ஒரு காப்பியத்தையும் பின்பற்றவில்லை என்பதும் அவரது முடிவு. சுந்தரரின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பியமாகக் கூறும் சேக்கிழார், இடையிடையே ஏனைய அடியார்களின் வரலாற்றையும் இணைத்துப் பாடியுள்ளார். இது தமிழ்க் காப்பிய மரபில் ஒரு புது மரபாகும். இக்காப்பியத்தில் தனக்கு நிகரில்லாத தலைவனாகச் சுந்தரரைச் சேக்கிழார் காட்டுகிறார் என்கிறார் அ.ச.ஞா.

1.4.2 பெரியபுராணத்தில் காப்பிய இலக்கணம் பெரியபுராணம் தனித் தனியாகப் பல வரலாறுகளைக் கூறுவது என்று சிலர் கருதுகிறார்கள். அது தவறு. இப்புராணம் பெருங்காப்பியமாக ஒரு பழைய சரித்திரத்தைச் சொல்வது என சி.கே. சுப்பிரமணிய முதலியார் கருதுகிறார். திருக்கயிலாய மலையில் (சிவனுக்குரிய மலை/இருப்பிடம்) உள்ள ஆலால சுந்தரர், தென்திசையில் வாழ்வதற்காகவும், திருத்தொண்டத் தொகை என்னும் நூலைப் படைப்பதற்காகவும் பூவுலகில் பிறந்தார். அவருடன் கமலினி, அநிந்திதை என்னும் இரு பெண்மணிகளும் பிறந்தனர். இவர்களே பெரியபுராணத்தில் சுந்தரமூர்த்தி நாயனாராகவும், பரவை நாச்சியாராகவும், சங்கிலியாராகவும் இடம் பெற்றுள்ளனர்.

சுந்தரமூர்த்தி இந்த இரு பெண்களையும் மணந்து கொண்டார். திருத்தொண்டத் தொகை பாடினார். பல்வேறு கோயில்களுக்கும் சென்று சிவனை வழிபட்டுப் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். அக்கோயில்களைப் பற்றியும், சிவபெருமான் புகழையும் பாடினார். அப்பாமாலைகள் திருப்பாட்டு என வழங்கப்பட்டன. பின்னால் அப்பர், சம்பந்தர் ஆகியவர்களின் பாடல்களோடு சேர்த்துத் தேவாரம் என்னும் பொதுப் பெயர் பெற்றன. பின்னர் இறைவன் ஆணையால் வெள்ளை யானை மீது ஏறிக் கயிலாயம் சென்றடைந்தார். இந்திரன், பிரம்மன், திருமால் முதலிய தேவர்களும், முனிவர்களும் அவரை எதிர் கொண்டு அழைத்தனர். அவரின் வருகை கயிலாயம் முழுவதும் பேரொளியாய் வீசியது.

இவ்வாறாகச் சுந்தரர் வரலாறு பெரியபுராணத்தில் பாடப் பெற்றுள்ளது. இதன் வழிச் சுந்தரரே காப்பியத் தலைவன் என்று கொண்டனர். பரவை நாச்சியாரும், சங்கிலியாரும் தலைவியர் ஆவர். இவர்களின் வரலாற்றின் இடையே ஏனைய அடியார்களின் வரலாறுகள் கூறப்பெற்று ஒரு முழுக் காப்பியமாகப் பெரியபுராணம் விளங்குகிறது என்று அறிஞர்கள் கூறுவர். காப்பிய இலக்கணம் பெரியபுராணத்தில் அமைந்துள்ளதைப் பின் வருமாறு பட்டியலிட்டுப் பார்க்கலாம்.

காப்பிய இலக்கணம் பெரியபுராணத்தில் காப்பிய இலக்கணம்

1) தெய்வ வணக்கம், பாடுபொருள், வாழ்த்து. 1. உலகு எலாம் எனத் தொடங்கும் பெரியபுராண முதல் பாடல் தெய்வ வணக்கம் ஆகும். இப்பாடலிலேயே வாழ்த்தும் அடங்கும். அடியார் பெருமை பாடுபொருள் ஆகும்.

2) அறம், பொருள், இன்பம், வீடு. 2. அடியார்கள் வாழ்க்கையில் இந்த நான்கும் வெளிப்பட்டு உள்ளன.

3) காப்பியத் தலைவன், தலைவி. 3. சுந்தர மூர்த்தி நாயனார், பரவை நாச்சியார், சங்கிலியார்

4) மலை, நாடு, நகரம், காடு, கடல் – வருணனைகள் 4. கயிலைமலை, சோழநாடு, திருவாரூர், காடும் கடலும், கண்ணப்ப நாயனார்,

அதிபத்த நாயனார் புராணத்தில் வருணிக்கப்பட்டுள்ளன.

5) பருவகால வருணனைகள்: காலை, மாலை பொழுது – வருணனைகள் 5. திருஞானசம்பந்தர் புராணம் முதலியவற்றில் அமைந்துள்ளன.

6) மணம் முடித்தல், காதல் நிகழ்ச்சிகள். 6. சுந்தரர் புராணத்தில் உள்ளன.

7) முடிசூட்டுதல் 7. கழறிற்றறிவார் புராணம்

8) தூது 8. சுந்தரர் புராணம்

9) போர், வெற்றி 9. புகழ்ச் சோழ நாயனார் புராணம்

10) காப்பியப் பகுப்பு 10. பதின்மூன்று சருக்கங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

1.4.3. பெரியபுராணத்தில் புதிய காப்பிய மரபு பெரியபுராணம், காப்பிய இலக்கணங்களுக்கு ஏற்ப அமையவில்லை என்று கூறுவாருக்கு மறுமொழியாக அது ஒரு புதிய காப்பிய மரபு உடையது என்பார் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்.

“காப்பிய இலக்கணத்திற்கு ஒத்துவராத உதிரிக் கதைகளை ஒன்று சேர்த்துக் காப்பியம் பாடிவிட்டார். எனவே காப்பிய இலக்கணம் அதில் அமையவில்லை என்று கூறுவது அவரது காப்பியத்தில் புதைந்து கிடக்கும் பேராற்றலைக் காண விரும்பாமல் கண்களை மூடிக் கொள்வதாக அமையும். யாரோ கூறிய காப்பியப் புற அமைப்பு இலக்கணத்தைப் பெரியபுராணத்தில் தேட முயன்று அது கிடைக்காததால் இதனைக் காப்பியமன்று என்று கூறுவது அறியாமை ஆகும். பெரியபுராணமாகிய காப்பியத்திற்கு அதுவே இலக்கணம் ஆகும். அதன் புற அமைப்பு முறை தமிழ்க் காப்பிய உலகில் புதிதாக வடிவமைக்கப்பட்டது ஆகும்” என்பது அவர் தரும் விளக்கமாகும்.

1.5 காப்பியப் பகுப்பும் கதையும்

சேக்கிழார் பெரியபுராணத்தின் புற வடிவு அமைப்பில் அவருக்கு முந்தைய காப்பிய மரபை ஓரளவு பின்பற்றி உள்ளார். காண்டம், இலம்பகம், சருக்கம் முதலியன காப்பியங்களைப் பாகுபடுத்தும் உட்பிரிவுகளின் பெயர்கள் ஆகும். காண்டம் சிலப்பதிகாரத்திலும், இலம்பகம் சீவக சிந்தாமணியிலும் பயின்று உள்ளன. இதே போல் பெரியபுராணக் கதை அமைப்பைச் சேக்கிழார் சருக்கம் என்ற பெயரில் வகைப்படுத்தி உள்ளார்.

1.5.1 காப்பியப் பகுப்பு பெரியபுராணம் பதின்மூன்று சருக்கங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.

இந்தப் பதின்மூன்று சருக்கங்களில் முதல் சருக்கமும், பதின்மூன்றாம் சருக்கமும் சேக்கிழார் தாமே படைத்துக் கொண்டவை. முதல் சருக்கம் கயிலைமலைச் சிறப்பினைக் கூறும் முகமாகத் திருமலைச் சருக்கம் என்று கூறப்பட்டது. பதின்மூன்றாம் சருக்கம் சுந்தரர் வெள்ளை யானை மீது ஏறிக் கயிலாயம் செல்வதை விவரிக்கும் முகமாக வெள்ளானைச் சருக்கம் எனப்பட்டது. ஏனைய பதினொரு சருக்கங்கள், திருத்தொண்டத் தொகைப் பாடல்களின் முதல் சீரையே பெயராகப் பெற்றவை. சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையில் பதினொரு பாடல்கள் உள்ளன. இப்பாடல்களின் முதல் சீர், அல்லது முதல் ஓரிரு சீர்கள், அல்லது பாடலின் முதல் அடி இவற்றின் பெயரால் பெரியபுராணச் சருக்கங்களின் பெயர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரியபுராணப் பாடல்கள் பெரும்பாலும் விருத்தப் பாக்களால் ஆனவை. மொத்தப் பாக்களின் எண்ணிக்கை – 4286. இவற்றுள் கொச்சகக் கலிப்பா, கலிவிருத்தம், கலித்துறை முதலியனவும் அடங்கும்.

இப்புராணத்துள் நாயன்மார் அறுபத்து மூவரின் வரலாறுகள் பாடப்பட்டுள்ளன. இவரல்லாது ஒன்பது தொகையடியார் வரலாறும் கூறப்பட்டுள்ளது. தொகையடியார் என்பது குறிப்பிட்ட அடியார்களின் குழுக்களைக் குறிப்பது. அவர்கள் வருமாறு:

1) தில்லை வாழ் அந்தணர்

2) பொய் அடிமையில்லாத புலவர்

3) பத்தராய்ப் பணிவார்

4) பரமனையே பாடுவார்

5) சித்தத்தைச் சிவன் பால் வைத்தார்

6) திருவாரூர்ப் பிறந்தார்

7) முப்போதும் திருமேனி தீண்டுவார்

8) முழுநீறு பூசிய முனிவர்

9) அப்பாலும் அடிச்சார்ந்தார்

1.5.2 அடியார் புராணம் பெரியபுராணத்துள் இடம்பெற்றுள்ள அடியார்கள் சிலரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் குறிப்பாக இங்கே தரப்பட்டுள்ளன.

அதிபத்த நாயனார்

இவர் மீன் பிடிப்பவர். முதலில் கிடைக்கும் மீனைச் சிவனுக்குப் படைப்பவர்; அந்த முறையில், நவரத்தினம் இழைத்த பொன் மீனைச் சிவனுக்குப் படைத்தவர்.

இயற்பகை நாயனார்

இவர் சிவன் அடியார்க்குத் தன் மனைவியையே தானமாகத் தந்தவர்.

கண்ணப்ப நாயனார்

“நில்லு கண்ணப்ப”

இவர் வேடர். சிவபெருமான் கண்களிலிருந்து குருதி வழிவதைக் கண்டு தம் கண்களைத் தோண்டி எடுத்துச் சிவனுக்கு அளித்தவர்.

கழற்சிங்க நாயனார்

சிவ பூசைக்குரிய பூவை மோந்ததற்காகத் தன் மனைவியின் கையை வெட்டியவர்.

சிறுத்தொண்ட நாயனார்

சிவன் அடியார் உணவு உண்பதற்காகத் தன் ஒரே மகனையும் அரிந்து கறி சமைத்தவர்.

திருஞான சம்பந்தர்

உமாதேவியாரால் ஞானப்பால் ஊட்டப் பெற்றவர். திருத்தலங்கள் தோறும் சென்று தேவாரம் பாடியவர்.

திருநாவுக்கரசர்

சைவ சமயத்தில் சேர்ந்ததற்காக மன்னன் தந்த பல தண்டனைகளில் இருந்து சிவன் அருளால் தப்பித்தவர். திருக்கோயில்களில் உழவாரத் தொண்டு செய்தவர்; தேவாரம் பாடியவர். அப்பர் என்று போற்றப்பட்டவர்.

திருநாளைப்போவார்

தில்லை நடராசரைத் தரிசிக்க வேண்டித் தீயில் மூழ்கி எழுந்தவர். நந்தனார் என்னும் பெயர் பெற்றவர்.

திருநீலகண்ட நாயனார்

மனைவியின் சபதத்தால் அவளைத் தீண்டாது முதுமை வரை இல்லறம் நடத்தி இறைவன் அருளால் இளமை பெற்றவர்.

திருமூல நாயனார்

இடையன் உடலில் தாம் புகுந்து மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து திருமந்திரம் எனும் நூலைப் படைத்தவர்.

நமிநந்தியடிகள்

தண்ணீரால் விளக்கு எரித்தவர்.

மங்கையர்க்கு அரசியார்

திருஞான சம்பந்தரை வரவழைத்து, பாண்டிய நாட்டைச் சைவ சமய நாடாக்கியவர்.

மூர்க்க நாயனார்

சூதாட்டத்தால் கிடைத்த பொருளைக் கொண்டு சிவன் அடியாரை வழிபட்டவர்.

மெய்ப்பொருள் நாயனார்

வஞ்சனையால் தம்மைக் கொல்லும் சிவ வேடதாரியைக் காப்பாற்றித் தம் உயிரை விட்டவர்.

1.6. காப்பியப் பங்களிப்பு

பெரியபுராணம் தமிழ் இலக்கிய உலகிற்கும், சமுதாயத்திற்கும், சமயத்திற்கும் அளித்த பங்களிப்பு அனைவராலும் போற்றுவதற்கு உரியது.

1.6.1. சிலம்பும் பெரியபுராணமும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரியபுராணத்திற்குக் குறிப்பிடத்தக்க இடம் உண்டு. சங்க காலத்தை அடுத்த காலத்தில் சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் இளங்கோவடிகளால் படைக்கப்பெற்றது. தமிழ்நாட்டைக் களமாகக் கொண்டு தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களைத் தலைமையாகக் கொண்டு தமிழ் மணம் கமழ அக்காப்பியம் படைக்கப்பட்டது. இந்த அடிப்படையில் அமைந்த தமிழ்க் காப்பியம் ஒன்று, அதன் பிறகு பல நூற்றாண்டுகள் வரை படைக்கப்படவில்லை. சீவக சிந்தாமணி முதலிய காப்பியங்கள் தழுவல் காப்பியங்களாகவே அமைந்தன. இதன் பின்னர் 12ஆம் நூற்றாண்டில்தான் பெரியபுராணம் தமிழ்க் காப்பியமாக உருவாக்கப்பட்டது. சிலப்பதிகாரம், பெரியபுராணம் இரண்டுமே காப்பிய இலக்கணங்களுக்கு உட்படாது புதிய ஒரு காப்பிய மரபினை வெளிப்படுத்திய பெருமைக்கு உரியவை.

1.6.2. அடியார்களும் பெரியபுராணமும் தமிழில் இயற்றப்பட்ட பெரும் பகுதிக் காப்பியங்கள் வட மொழியிலிருந்து தழுவி இயற்றப்பட்டவையே. இவற்றிலிருந்து விதிவிலக்காகத் தமிழ்நாட்டைக் களமாகக் கொண்டது பெரியபுராணம். தமிழ்நாட்டில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பாடுபொருளாகக் கொண்டது. ஏனைய காப்பியங்களும் புராணங்களும் புராண மரபுப்படி கடவுளர் செயல்களையே பெரும் பகுதி விவரிப்பன. பெரியபுராணம் மனிதர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கு முதன்மை கொடுத்தது; ஒருவகையில் அடியார்களின் வரலாறாக இது அமைக்கப்பட்டது.

பல்லவர் காலம் முதல் நானூறு அல்லது ஐந்நூறு ஆண்டுகள் துண்டு துண்டாக வழங்கி வந்த அடியார் வரலாற்றை ஒருங்கிணைத்துக் காப்பியமாகப் பாடப்பட்டதே பெரியபுராணம் ஆகும். வாய்மொழியாக மக்களிடம் வழங்கி வந்த நாயன்மார்களின் இந்த வரலாற்றைத் தொகுத்துக் கூறும் ஒன்றாகவும் பெரியபுராணம் செயல்பட்டுள்ளது.

1.6.3. சமுதாயமும் பெரியபுராணமும் தமிழ் இலக்கிய வரலாற்றுக்குச் செய்த பங்களிப்புப் போலத் தமிழ்ச் சமுதாயத்திற்கும் பெரியபுராணம் தொண்டாற்றி உள்ளது. மனிதர்களைக் கோயிலுக்குள் கொண்டு சென்ற பெருமை பெரியபுராணத்திற்கு உண்டு. நாயன்மார் அறுபத்து மூவரின் உருவங்களைக் கோயிலில் வைத்து வழிபாடு செய்வதற்குப் பெரியபுராணமே காரணம் ஆயிற்று. வாழ்ந்து மறைந்த சிறந்த மனிதர்களைக் கோயிலிலே வழிபட வைத்தது. சாதியால் பிளவுபட்டு நின்றது சோழர் காலச் சமுதாயம். சமுதாயத்தின் கடைக்கோடியில் தீண்டத்தகாதவராக இருந்தவரையும் கோயிலில் இடம்பெறச் செய்தது.

பெரியபுராணம் அனைத்துச் சாதியினரையும் சிவ வழிபாட்டின் மூலம் ஒருங்கிணைத்தது. சிவனுக்கு முன்னர்ச் சாதி வேறுபாடு இல்லை என்பதை உணர வைத்தது. பசுமாட்டினை உரித்துத் தின்னும் சாதியில் இழிந்தவரே ஆயினும் அவரையும் இறைவனாக எண்ணி ஏனைய மனிதரை வணங்க வைத்தது.

சமுதாயப் படிநிலையில் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள் வேடர், புலையர், வண்ணார், குயவர் ஆகியோர். இவர்களுக்கு உயர்ந்த சாதியார்க்கு இணையான மதிப்பை வழங்கியது பெரியபுராணம். சிவன் அடியார்களைச் சாதிய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக விவரித்தது, இதன் வாயிலாக, சாதி அடிப்படையிலான சமுதாயத்தில் சாதியற்ற சமத்துவ விதை விதைத்தது.

இவ்வாறாக இலக்கிய வரலாற்றிற்கும் சமுதாயத்திற்கும் பல்வேறு நிலைகளில் பெரியபுராணம் பங்களிப்புச் செய்துள்ளதை அறிய முடிகிறது.

1.7 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை பெரியபுராணம் பற்றிக் காப்பிய அறிமுக நிலையில் சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

பெரியபுராணக் காப்பியம் பற்றிய பொதுச் செய்திகளை அறிந்திருப்பீர்கள்.

இக்காப்பியத்தின் ஆசிரியரான சேக்கிழாரின் வரலாறு பற்றியும், பெரியபுராணம் இயற்றப்படுவதற்குரிய காரணங்கள் பற்றியும், நூல் அரங்கேற்றம் பற்றியும் தெரிந்துகொண்டிருப்பீர்கள்.

பெரியபுராண அடியார்களின் காலம் பற்றியும் சேக்கிழார் காலம் பற்றியும் அறிந்திருப்பீர்கள்.

பெரியபுராணத்தின் மூல நூல்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்திருப்பீர்கள்.

பெரியபுராணக் காப்பியக் கொள்கை, காப்பிய அமைப்பு, அடியார் சிலரின் வரலாறு ஆகியவற்றை அறிந்திருப்பீர்கள்.

பெரியபுராணம் தமிழ் இலக்கிய உலகிற்கும், சமுதாயத்திற்கும், சமயத்திற்கும் ஆற்றிய பங்களிப்பைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

பாடம் - 2

பெரியபுராணம் : இலக்கியச்சுவை

2.0 பாட முன்னுரை

பெரியபுராணத்தைப் படிக்கும் பொழுதெல்லாம் பக்திச்சுவை வெளிப்படுவது போல இலக்கியச் சுவையும் படிப்போரைக் கவர்வதாய் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், காப்பியங்களிலும், பக்தி நூல்களிலும் நல்ல பயிற்சி உடையவர் சேக்கிழார். இந்த அனுபவத்தினால் இலக்கிய மணம் கமழப் பெரியபுராணத்தைப் பாடி முடித்தார். சொல்லாட்சி, கற்பனை, வருணனை, உவமைகள், அணி நலன்கள் முதலிய அனைத்தும் பெற்றுப் பெரியபுராணம் ஒப்பற்ற காப்பியமாக விளங்குகிறது. இவற்றைப் பற்றி விளக்கும் வகையில் இந்தப் பாடப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

2.1 இலக்கிய நோக்கில் பெரியபுராணம்

அறிவும், மன உணர்வும், கற்பனையும் கலந்து செயல்பட்டு இன்பம் தருவன அழகுக் கலைகள் எனப்படும். இலக்கியம் அழகுக் கலைகளுள் தலை சிறந்தது. ஓர் இலக்கியத்தின் சிறப்பை நான்கு வகையாகப் பொருள் கொண்டு அறிய முடியும். அவை புதுமை, பெருமை, பொதுமை, பொருண்மை எனப்படும். இவற்றைப் பற்றி இலக்கியக் கலை எனும் நூல் விரிவாக விளக்கி இருக்கிறது. இந்த நான்கு வகையாலும் பெரியபுராணம் சிறப்புடன் திகழ்வதை உணர முடியும்.

புதுமை

புதுமை இருவகைப்படும். பாடுபொருள், உணர்த்தும் முறை என்பன அவை. பெரியபுராணம் பாடுபொருளால் புதுமையானது. தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரியபுராணத்திற்கு முன்பு அடியார் வரலாற்றைக் காப்பியமாக யாரும் பாடவில்லை. உணர்த்தும் முறையிலும் காப்பியம் சிறந்துள்ளது. முன்னைய காப்பிய இலக்கணங்களிலிருந்து மாறுபட்டுப் புதுமரபை உண்டாக்கி உள்ளது.

பொதுமை, பொருண்மை, பெருமை

ஓர் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகள் பரந்துபட்ட மனித இயற்கையைச் சித்திரிப்பதாக இருக்க வேண்டும். உலகக் கண்ணோட்டம் உடையதாக இருக்க வேண்டும். பெரியபுராணத்தில் இடம்பெற்றுள்ள அடியார்களின் வாழ்க்கை இவற்றிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இதுவே இலக்கியத்தின் பெருமை ஆகும். இதனால் பொருண்மை (இலக்கிய உள்ளடக்கம் அல்லது பாடுபொருள்) சிறப்புடையதாகிறது. புதுமை, பொதுமை, பொருண்மை என்ற மூன்றிலும் சிறந்து விளங்கும் காரணத்தால் பெரியபுராணம் உலகப் பொதுமைப் பண்பு உடையதாகச் சிறப்படைந்துள்ளது.

இவ்வாறு இலக்கியக் கலையில் சிறந்து விளங்கும் பெரியபுராணத்தின் கலைச் சுவையை இனி வரும் பகுதியில் விரிவாகப் படிப்போம்.

2.2 கற்பனை வளம்

இலக்கியத்தைப் பாடும் புலவர்கள் உள்ளதை உள்ளவாறே பாடுவது இல்லை. உள்ளதில் சிறிது குறைத்தும் சிறிது கூட்டியும் பாடுகிறார்கள். அதனால்தான் இலக்கியம் என்பது கலை ஆகிறது. கற்பனையைச் சேர்த்துக் குழைத்துத் தரும் இலக்கியத்தைத்தான் வாசகன் விரும்பிச் சென்று படிக்கிறான். உள்ளம் விரும்புமாறு அமையும் கற்பனைக்கும் வாழ்க்கையே அடிப்படையாகிறது. வாழ்க்கையின் அனுபவமே அத்தகைய கற்பனையைத் தூண்டுகிறது. சேக்கிழார் பெரியபுராணத்தில் சிறந்த கற்பனை நயங்களை அமைத்துப் படைத்துள்ளார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. ஓரிரண்டு சான்றுகளை இங்கே பார்ப்போம்.

2.2.1 மரபும் கற்பனையும் காப்பியப் புலவர்கள் ஆற்று வளம், நாட்டு வளம், நகர் வளம் முதலியவற்றைப் பாடுவது மரபு. இவ்வாறு பாடும் கவிஞனின் அகமன உணர்வையும் சிந்தனை ஓட்டத்தையும் அப்பாடல்கள் மூலம் அறிய முடியும். ஆறு, நாடு, நகர் என்பவற்றை வருணிக்கும் பொழுது அந்தப் புலவனுடைய கற்பனைக்கு வடிவு கொடுக்க வாய்ப்பு ஏற்படுகிறது. புலவனுடைய அடி மனத்தில் எது நிறைந்துள்ளதோ அதன் அடிப்படையில்தான் கற்பனை பிறக்க முடியும்.

மரங்களும் வேள்வியும்

திருஞானசம்பந்தர் பிறந்த ஊரை வருணிக்கும் சேக்கிழார் வேள்வி மரபினை நினைவு கூர்கிறார். ஞானசம்பந்தர் பிறந்த ஊரில் மரங்கள் கூட வேள்வி செய்கின்றன. இதனைப் பின்வரும் பாடல் அழகாக வருணித்துள்ளது.

பரந்தவிளை வயல்செய்ய பங்கயமாம் பொங்குஎரியில்

வரம்பில்வளர் தேமாவின் கனிகிழிந்த மதுநறுநெய்

நிரந்தரம்நீள் இலைக்கடையால் ஒழுகுதலால் நெடிதுஅவ்வூர்

மரங்களும்ஆ குதிவேட்கும் தகையஎன மணந்துஉளதாம்

(பெரிய, திருஞானசம்பந்தர் புராணம். 7)

(பரந்த = அகன்ற; செய்ய = சிவந்த; பங்கயம் = தாமரை; பொங்கு = பெருகும்; எரி = தீ; தேமா = மாமரம்; கனி = மாங்கனி; நீள் = நீண்ட; மதுநறுநெய் = மாங்கனிச்சாறு; இலைக்கடை = மாவிலை நுனி; ஆகுதிவேட்கும் = வேள்வி வேட்கும்; தகைய = தன்மையை உடையன)

அகன்ற வயலில் உள்ள செந்தாமரை மலர், தீ எரிவது போல விளங்குகிறது. உயர்ந்து வளர்ந்துள்ள மாமரத்தில் பழங்கள் கனிந்து காணப்படுகின்றன. மிகுதியாகக் கனிந்ததால் அவற்றிலிருந்து கனிச்சாறு மா இலையில் வழிகிறது; மா இலையில் இருந்து தாமரை மலர் மீது சிந்துகிறது. இக்காட்சி, அந்தணர் வேள்வியின் போது தீயில் நெய் வார்ப்பது போல, சேக்கிழாருக்குத் தோன்றுகிறது. இதனையே புலவர் மரங்களே வேள்வி செய்யும் பக்தி மிக்க ஊர் என்று வருணிக்கிறார்.

2.2.2 இயற்கையும் கற்பனையும் இயற்கையாக நிகழும் சில நிகழ்ச்சிகள் புலவனின் கற்பனைக்கு வித்தாகின்றன.

இருளும் ஒளியும்

ஞாயிறு மறைகிறது; இருள் சூழ்கிறது; நிலவு தோன்றுகிறது. இவை இயற்கை நிகழ்வுகள். புலவனின் கற்பனை இவற்றை இயல்பாகப் பார்க்கத் தூண்டவில்லை; கற்பனையில், உவமையில் சமய உணர்வு வெளிப்படுகிறது.

வஞ்ச மாக்கள்தம் வல்வினை யும்அரன்

அஞ்செ ழுத்தும் உணரா அறிவிலார்

நெஞ்சும் என்ன இருண்டது நீண்டவான்

(பெரிய. தடுத்தாட் கொண்ட புராணம். 159)

(வஞ்ச = வஞ்சனை; மாக்கள் = மக்கள்; வல்வினை = தீவினை; அரன் = சிவன்; அஞ்செழுத்து = ஐந்தெழுத்து (நமசிவாய); அறிவிலார் = மூடர்கள்; நீண்ட = பெரிய / அகன்ற)

ஞாயிறு மறைகிறது; இருள் சூழ்கிறது. இது இயற்கையான நிகழ்வு. வஞ்சனையுடைய தீயவர்களின் தீவினையைப் போலவும், சிவபெருமானின் ஐந்தெழுத்தை ஓதாத அறிவற்றவர் மனம் போலவும் இருள் சூழ்கிறது; தீயவர்களின் மனமும் அறிவற்றவர் மனமும் இருண்டு ஒளி இல்லாமல் கிடப்பது போலப் பூமியில் இருள் பரவுகிறது என்று சேக்கிழார் இதை வருணிக்கிறார்.

கற்பனை நயம்

இரவுப் பொழுதில் நிலவு தோன்றுகிறது; இது இரவு என்னும் மங்கையின் புன்முறுவல் போல் தோன்றுகிறது. திருநீற்றின் பேரொளி போலவும் தோன்றுகிறதாம்.

நறுமலர்க் கங்குல் நங்கைமுன் கொண்டபுன்

முறுவல் என்ன முகிழ்த்தது வெண்ணிலா

(பெரிய. தடுத்தாட் கொண்ட புராணம். 160)

(நறு = வாசனை மிக்க; கங்குல் = இரவு; புன்முறுவல் = புன்சிரிப்பு; முகிழ்த்தது = தோன்றியது)

அண்ணல்வெண் நீற்றின் பேரொளி

போன்றது நீள்நிலா

(பெரிய. திருக்கூட்டச் சிறப்பு. 6)

(அண்ணல் = தலைமை; வெண்நீறு = திருநீறு / விபூதி; பேரொளி = மிக்க ஒளி; நீள் = நீண்ட)

வாசனை மிக்க மலர்களைச் சூடியவள் இருள் என்னும் நங்கை. இவள் புன்னகை ஒளி போல நிலவு தோன்றுகிறதாம். நிலாவின் ஒளி திருநீற்றின் ஒளி போல விளங்குகிறதாம். இவ்வாறு சேக்கிழாரின் கவிதை கற்பனை நயத்தோடு அமைக்கப்பட்டுள்ளதைப் படித்து மகிழ முடியும்.

2.2.3 நகர வருணனையும் கற்பனையும் காப்பியங்களின் கவிச்சுவையைப் புலவர்கள் தம் வருணனைத் திறத்தின் மூலம் மிகுதிப்படுத்த முடியும். காப்பியங்களில் அமைந்துள்ள நாட்டு வருணனை, நகர வருணனை முதலியன புலவரின் கற்பனைத் திறனுக்கு எடுத்துக்காட்டாக அமையும். கவிதைச் சுவையை உணர விரும்புவோர்க்கு, காப்பியங்களில் உள்ள இத்தகைய வருணனைகள் நல்ல விருந்து. சேக்கிழாரின் நகர வருணனைகள் அவர் கற்பனைத் திறனுக்குத் தக்க சான்றுகள் ஆகும்.

இந்திரன் நகருக்கும் மேலானது

சேக்கிழார், தாம் அமைச்சர் பதவி வகித்த சோழநாட்டின் இரண்டாவது தலைநகராகிய கருவூரை இந்திரன் நகருக்கும் மேலானது என வருணிக்கிறார்.

மாமதில் மஞ்சு சூழும் மாளிகை நிரைவிண் சூழும்

தூமணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும்

தேமலர் அளகம் சூழும் சிலமதி தெருவில் சூழும்

தாம்மகிழ்ந்து அமரர் சூழும் சதமகன் நகரம் தாழ

(பெரிய. எறிபத்த நாயனார் புராணம். 3)

(மஞ்சு = மேகம்; நிரை = வரிசை; விண் = வானம்; தூ = தூய; வாசம் = நறுமணம்; தேமலர் = தேன்மலர் (தேன் சிந்தும் மலர்); அளகம் = கூந்தல்; மதி = நிலவு (நிலவு போன்ற முகத்தை உடைய பெண்கள்); அமரர் = தேவர்; சதமகன் = இந்திரன்)

சோழ நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள மதில்கள் மேலே மேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன; மேகங்களைச் செல்ல விடாமல் மதில்கள் தடுக்கின்றன; தெருவில் உள்ள மாளிகைகள் விண்ணை முட்டும் அளவு உயர்ந்து நிற்கின்றன; தூய மணிகளால் ஆன தோரணங்கள் அம்மாளிகைகளின் வாயிலில் தொங்கவிடப்பட்டுள்ளன; மலர்ச்சோலை எங்கும் நறுமணம் கமழ்கின்றது; தேன் சிந்தும் மலர்களை மகளிர் கூந்தலில் சூடி மகிழ்கின்றனர்; மதி போன்ற முகத்தை உடைய மகளிர் வீதியில் உலா வருகின்றனர்; தேவர்கள் மகிழ்ச்சியாக அந்த நகரைச் சூழ்ந்துள்ளனர்; இந்திரனின் நகரமும் ஒப்பாகாத வகையில் இந்த நகரம் சிறப்புடன் விளங்குகிறதாம்.

கடல் ஒலியும் கற்பனையும்

சேரர்களின் தலைநகராகிய கொடுங்கோளூரை வருணிப்பதில் சேக்கிழாரின் கற்பனை எல்லையற்ற இலக்கிய இன்பத்தைத் தருவதாய் உள்ளது. நகரில் பல்வேறு ஒலிகள் தோன்றுகின்றன; அவை கடல் ஒலியை விட ஓங்கி ஒலிக்கின்றன. என்னென்ன ஒலிகள் நகரில் தோன்றின என்பதைச் சேக்கிழார் பட்டியல் இடுகிறார்:

காலை எழும்பல் கலையின்ஒலி

களிற்றுக் கன்று வடிக்கும்ஒலி

சோலை எழும்மென் சுரும்பின்ஒலி

துரகச் செருக்கால் சுலவும்ஒலி

பாலை விபஞ்சி பயிலும்ஒலி

பாடல் ஆடல் முழவின்ஒலி

வேலை ஒலியை விழுங்கிஎழ

விளங்கி ஓங்கும் வியப்பினதால்.

(பெரிய. கழறிற்றறிவார் நாயனார் புராணம். 2)

(பல்கலை = வேதம் ஓதல் முதலிய பல கலைகளின் ஒலி; களிறு = யானை; வடிக்கும் = வசப்படுத்தும்; சுரும்பு = வண்டு; துரகம் = குதிரை; சுலவும் = சுழலும்; பாலை விபஞ்சி = பாலை யாழ்; முழவு = இசைக்கருவி; வேலை = கடல்)

சேர மன்னர்களின் தலைநகரில் பல்வேறு ஒலிகள் தோன்றுகின்றன; வேதம் ஓதுதல் முதலிய பல்வேறு கலைகளினால் ஒலி எழுகின்றது; ஒரு பக்கத்தில் யானைக் குட்டியை வசப்படுத்துவோர் ஒலி எழுப்புகின்றனர்; ஆரவாரம் செய்கின்றனர்; சோலை எங்கும் தேனைத் தேடி வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன; குதிரைகள் செருக்கு மிகுந்து சுழன்று ஒலியெழுப்புகின்றன; ஒரு பக்கத்தில் பாலை யாழைச் சிலர் வாசிக்கின்றனர்; அதனால் இசை எழுகின்றது; ஆண்களும் பெண்களும் ஆடிப் பாடி மகிழ்கின்றனர்; இதனால் முழவு ஒலி எழுகின்றது; இந்த ஒலிகள் யாவும் ஒன்று சேர்ந்து கடலின் ஒலியையும் விஞ்சும் வண்ணம் ஓங்கி ஒலிக்கின்றன. இவ்வாறாகச் சேக்கிழாரின் கற்பனை நயம் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.

2.3 சொல்லாட்சி

பெரியபுராணம் ஒர் இலக்கியக் கடல். இதில் மூழ்கி இலக்கிய நயங்களை முத்தாகக் கொண்டு வந்தவர் பலர். கடலை ஆராய்வார்க்குப் புதுப்புதுப் பொருள்கள் கிடைக்கும். அது போன்று இலக்கியக் கடலை ஆராய்வாருக்குப் புதுப்புது நயங்கள் கிடைக்கும். இலக்கிய நயத்தில் சொல்லாட்சித் திறன் முதன்மையான இடத்தைப் பெறுகிறது. ஒரு சொல்லே கூட இலக்கியம் முழுவதையும் வளைத்துத் தன்னுள் இணைத்துக் கொண்டிருக்கும். அத்தகைய ஆற்றல் சொற்களுக்கு உண்டு. சேக்கிழார் பெரியபுராணத்தைப் பக்திக் காப்பியமாகப் படைத்திருப்பினும், அதனுள் இலக்கிய நயங்களுக்கும் சொல்லாட்சிகளுக்கும் குறைவில்லாமல் படைத்துள்ளார் என்பர்.

2.3.1 சொல்லும் பொருளும் ஆரூரில் சுந்தரர் பரவை நாச்சியாரைக் காண்பதும், கண்டு காதல் கொள்வதும் அகப்பொருள் சுவைபடச் சேக்கிழாரால் புனையப்பட்டுள்ளன. பரவையாரைக் கண்டது முதல் சுந்தரர் காதல் மயக்கம் ஏறிப் பித்தராய்ப் புலம்பத் தொடங்குகிறார். பரவை, பரவை என்று அவள் பெயரையே திரும்பத் திரும்பக் கூறுகிறார். இந்தப் பரவை என்ற சொல்லை வைத்தே சேக்கிழார் சொல் விளையாட்டுச் செய்கிறார்.

பாடல் இதோ:

பேர்பரவை பெண்மையினில்

பெரும்பரவை விரும்புஅல்குல்

ஆர் பரவை அணிதிகழும்

மணிமுறுவல் அரும்பரவை

சீர் பரவை ஆயினாள்

திருஉருவின் மென்சாயல்

ஏர் பரவை இடைப்பட்ட

என்ஆசை எழுபரவை.

(பெரிய. தடுத்தாட் கொண்ட புராணம். 148)

(பேர்பரவை = இவள் பெயர் பரவை; பெரும் பரவை = பெரு+ உம்பர் + அவை – பெரிய தேவர் அவை (தேவர் கூட்டம்); ஆர் பரவை = பரவு + ஐ – வாழ்த்தும் தெய்வம்; அரும்பரவை = அரும்பர் +அவை; முல்லை அரும்புகள் போன்ற பற்களை உடையவள்; சீர்பரவை = சிறந்த பரவை எனும் கூந்தலை உடைய இலக்குமி; ஏர் பரவை = அழகிய பரப்பு; எழு பரவை = ஏழு கடல்கள்)

இப்பாடலின் பொருள் வருமாறு:

அவள் பெயரோ பரவை; தேவர் கூட்டம் விரும்பும் திலோத்தமை முதலிய அழகிகளும் வாழ்த்தும் தெய்வம் போன்றவள்; அழகிய, வரிசையான முல்லை அரும்புகளை ஒத்த பற்களை உடையவள்; சிறந்த பரவை என்னும் கூந்தலை உடைய இலக்குமியைப் போன்றவள்; மென்மையான இவளது உருவத்தின் சாயலாகிய அழகிய பரப்பில் அகப்பட்ட என் ஆசை ஏழு கடல்கள் அளவுக்குப் பெரியது.

இவ்வாறு பரவையை வருணிக்கும் சேக்கிழார் பரவை என்ற சொல்லை வைத்துக் கவிநயம் தோன்றப் பாடலைப் புனைந்துள்ளார்.

ஏழு கடல்கள் அளவுக்கு எழுந்த காதல் தாகத்தைக் கூறும் இப்பாடலில் பரவை என்ற சொல் பின்வரும் ஏழு பொருள்களில் பயின்று வரக் காணலாம்.

1) ஒரு பெயர்

2) தேவர் அவை

3) வாழ்த்தும் தெய்வம்

4) முல்லை அரும்பு

5) கூந்தல்

6) பரப்பளவு

7) கடல்

2.3.2 சொல்லும் எண்ணிக்கையும் சொல் விளையாட்டு மூலம் இலக்கிய நயத்தை வெளிப்படுத்திய சேக்கிழார் ஒன்று, இரண்டு என எண்ணிக்கையை வைத்தும் பாடல் படைத்துள்ளார்.

அப்பாடல் வருமாறு:

செம்மை வெண்ணீற்று ஒருமையினார்

இரண்டு பிறப்பின் சிறப்பினார்

மும்மைத் தழல்ஓம் பியநெறியார்

நான்கு வேதம் முறைபயின்றார்

தம்மை ஐந்து புலனும்பின்

செல்லும் தகையார் அறுதொழிலின்

மெய்ம்மை ஒழுக்கம் ஏழ்உலகும்

போற்றும் மறையோர் விளங்குவது

(பெரிய. சண்டேசுர நாயனார் புராணம். 2)

(செம்மை = பெருமை / சிறந்த; வெண்ணீறு = திருநீறு / விபூதி; ஒருமையினார் = ஒருமை நேயம் உடையவர்; இரண்டு பிறப்பு = இரு பிறப்பு / அந்தணர்க்கு நிகழ்த்தப்படும் உபநயனம் என்னும் சடங்கிற்கு முன் உள்ள பிறப்பும் பின் உள்ள பிறப்பும் என இரண்டு; மும்மைத் தழல் = மூன்று தீ (அந்தணர்களால் வளர்க்கப்படும் முத்தீ); நான்கு வேதம் = ரிக், யசுர், சாம, அதர்வணம் ஆகிய நால் வேதங்கள்; ஐந்து புலன் = கண், காது, மூக்கு, வாய், உடம்பு ஆகிய பொறிகளால் அடையும் புலன் உணர்வுகள். அறுதொழில் = ஆறு தொழில் (ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அந்தணர் தொழில்கள் ஆறு); ஏழ் உலகம் = உலக வகைப்பாடு / மேல் ஏழ் உலகம், கீழ் ஏழ் உலகம்)

ஒன்று முதல் ஏழு வரை

இப்பாடலில் ஒன்று இரண்டு என எண்ணிக்கையால் அமைந்தவை வருமாறு:

1) ஒருமையினார் – ஒருமைநேயம்

2) இரண்டு பிறப்பு – இருபிறப்பு

3) மும்மைத்தழல் – முத்தீ

4) நான்கு வேதம் – நால்வேதம்

5) ஐந்து புலன் – ஐம்புலன்கள்

6) அறு தொழில் – ஆறு தொழில்

7) ஏழ் உலகம் – ஏழுலகம்

இப்பாடலின் பொருள்:

சேக்கிழார் சண்டேசுர நாயனார் புராணத்தைப் பாடும்போது சோழநாட்டுச் சேய்ஞலூர் என்ற ஊரை வருணிக்கிறார். அவ்வூரின் அடியார்கள் பற்றி விவரிக்கிறார். பெருமைமிக்க திருநீற்றை அணிந்து ஒருமைப்பாட்டு உணர்வுடன் விளங்குபவர்; இருபிறப்பினை உடைய அந்தணக் குலத்தில் தோன்றியவர்; முத்தீ வளர்க்கும் தன்மை உடையவர்; நான்கு வேதங்களையும் முறையாகப் பயின்றவர்; தம் ஐந்து புலன்கள் வழிச்செல்லாமல் அவற்றை அடக்கித் தம் பின்னே வரச்செய்தவர்; அந்தணர்க்குரிய ஆறு தொழில்களையும் மேற்கொண்டவர்; இத்தகைய ஏழ் உலகும் போற்றும் மறையோராகிய அந்தணர் நிறைந்தது அந்த ஊர் என்று சேக்கிழார் வருணிக்கிறார். இவ்வாறாகச் சேக்கிழார் இயலும் இடங்களில் எல்லாம் சொல் விளையாட்டை மேற்கொண்டுள்ளார்; கவிநயம் புலப்படப் பெரியபுராணத்தை இயற்றி உள்ளார் என்பதை அறிய முடிகிறது.

2.4. அணிநலன்கள்

கவிதைக்குப் பொலிவு ஊட்டுவதாகவும், உணர்ச்சிக்கு அடிப்படையாகவும் திகழ்வது கற்பனை. இக்கற்பனையே பல அணிநலன்களுக்கு அடிப்படையாகத் திகழ்கிறது. மங்கைக்கு அணிகலன்கள் (நகைகள்) அழகு ஊட்டுவது போல, கவிதைக்கு அணிநலன்கள் அழகு ஊட்டுகின்றன என்பர் அறிஞர். கவிஞர்கள் தம் கருத்துகளைத் தெளிவாகவும் விளக்கமாகவும் அழகாகவும் உரைப்பதற்கு அணிகளே துணை செய்துள்ளன என்று திறனாய்வாளர்கள் கூறியுள்ளனர். இத்தகு அணிநலன்கள் பலவற்றைச் சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் அமைத்துள்ளதைப் படித்து மகிழ முடியும். ஒரு சில அணிகளை இங்கே காண்போம்.

2.4.1 சொல் பின்வரு நிலையணி ஒரு முறை வந்த சொல் வேறு வேறான பொருளில் மீண்டும் மீண்டும் வருவது சொல் பின்வரு நிலையணி எனப்படும். இந்த அணிக்குத் தக்க எடுத்துக்காட்டாகத் தடுத்தாட் கொண்ட புராணத்தில் வரும் பேர்பரவை எனத் தொடங்கும் பாடலைக் (148) கூறலாம். இப்பாடலில் உள்ள பரவை என்ற சொல் மீண்டும் மீண்டும் வேறு வேறு பொருளில் வந்ததை முன்பே கண்டோம்.

(காண்க: சொல்லாட்சி – சொல்லும் பொருளும்)

2.4.2 சொல் பொருள் பின்வரு நிலையணி செய்யுளில் ஓரிடத்தில் வந்த சொல் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீண்டும் மீண்டும் அதே பொருளில் வந்து கருத்தை விளக்குவது சொற்பொருள் பின்வரு நிலையணி எனப்படும். இதற்குப் பரவையாரின் இளமை அழகை வருணிக்கும் சேக்கிழாரின் பாடலைச் சான்றாகக் கூறலாம்.

மான்இளம் பிணையோ தெய்வ

வளர்இள முகையோ வாசத்

தேன்இளம் பதமோ வேலைத்

திரைஇளம் பவள வல்லிக்

கான்இளம் கொடியோ திங்கள்

கதிர்இளம் கொழுந்தோ காமன்

தான்இளம் பருவம் கற்கும்

தனிஇளம் தனுவோ என்ன

(பெரிய. தடுத்தாட் கொண்ட புராணம். 134)

(பிணை = பெண்மான்; முகை = மொட்டு; வேலை = கடல்;  திரை = அலை; தனு = வில்)

பரவையார் தெய்வாம்சம் மிக்க இளமையோடு காட்சி தருகின்றார். அவரின் இளமை எவற்றை நினைவூட்டுகிறது என்பதைச் சேக்கிழார் கற்பனை செய்து பார்க்கிறார். இளைய பெண் மான் நினைவிற்கு வருகிறது.  இளைய அரும்பு மணம் கமழ்கிறது; தேனின் இளம் சாறு இனிக்கிறது; காட்டில் உள்ள இளம்கொடி காற்றில் அசைந்து ஆடுகிறது;  திங்களின் இளம் பிறை காட்சிக்கு இனிமையாகிறது.

இளமையும் அழகும்

மான் பிணையின் இளமையும், முகையின் இளமையும், தேனின் இளமையும், கொடியின் இளமையும், பிறையின் இளமையும் அழகு செய்கின்றன. இவையாவும் பரவையார் அழகுக்கு ஒப்பாகின்றன. இத்தகு இளமை காமன் வில் பயிலும் இளமை ஆகின்றது. இவ்வாறு இளமை என்ற பொருள் தரும் இளம் என்ற சொல் மீண்டும் மீண்டும் அதே பொருளில் வந்து பாடலுக்கு அழகு சேர்ப்பதை உணர முடிகிறது.

2.5. மெய்ப்பொருள் நாயனார் புராணம்

நண்பர்களே! இதுவரையும் இரண்டு பாடங்களில் பெரியபுராணம் பற்றிய பொதுவான செய்திகளை அறிந்து கொண்டோம். காப்பியத்தைப் பற்றிய அறிமுகச் செய்திகளையும் கவிதை நயம் பற்றிய செய்திகளையும் அறிந்தோம். இனிப் பெரியபுராணத்தில் உள்ள அறுபத்து மூன்று அடியார்களில் ஒருவராகிய மெய்ப்பொருள் நாயனார் என்பவரைப் பற்றிய புராண வரலாற்றை அறிய இருக்கிறோம்.

2.5.1 நாயனாரின் இறைப்பற்று மெய்ப்பொருள் நாயனார் திருக்கோவலூரில் வாழ்ந்த மன்னர் ஆவார். அடியார்கள் திருநீறு பூசி, உருத்திராட்ச மாலை அணிந்து காட்சி தரும் திருவேடத்தையே மெய்ப்பொருள் (உண்மைக் காட்சி / உண்மைப் பொருள்) எனக் கொண்டவர். இதனால் மெய்ப்பொருள் நாயனார் என்று அழைக்கப்பட்டார். இவர் மலையமான் குலத்தில் தோன்றியவர். பகைவர்களை வென்று நாட்டுக்கு நன்மை செய்பவர். சிவன் அடியார்களின் கருத்து அறிந்து பணி செய்பவர். தமது செல்வம் எல்லாம் சிவனடியார் செல்வமே என்று கருதுபவர். சிவன் கோயில்களில் பூசை, விழா முதலியவற்றை இடைவிடாமல் செய்து இறைவழிபாட்டில் ஈடுபட்டவர்.

மங்கையைப் பாகம் ஆக

உடையவர் மன்னும் கோயில்

எங்கணும் பூசை நீடி

ஏழ்இசைப் பாடல் ஆடல்

பொங்கிய சிறப்பின் மல்கப்

போற்றுதல் புரிந்து வாழ்வார்

தங்கள்நா யகர்க்கு அன்பர்

தாள்அலால் சார்புஒன்று இல்லார்.

(பெரிய. மெய்ப்பொருள் நாயனார் புராணம், 3)

(மங்கை= பெண்; பாகம் = பகுதி; உடையவர் = சிவன்; மன்னும் = நிலைபெற்ற; மல்க = பெருக; நாயகர் = தலைவர்; அலால் = அல்லாது; சார்பு = பற்றுக்கோடு)

சக்தியை இடப்பாகத்தில் உடைய சிவன் கோயில்களில் ஏழிசைப் பாடல் ஆடல் நிகழச் செய்தார்; பூசைகள் செய்ய ஆணையிட்டார்; சிவனைப் போற்றி வாழ்ந்தார். சிவனடியார்களின் திருவடிகளையே துணையாகக் கொண்டிருந்தார்.

2.5.2 நாயனாரின் வெற்றி மெய்ப்பொருள் நாயனாரிடம் முத்தநாதன் என்பவன் பகை கொண்டு இருந்தான். அவனுக்கும் நாயனார்க்கும் பலமுறை போர்கள் நிகழ்ந்தன. ஒரு முறை கூட முத்தநாதன் வெற்றி பெற முடியவில்லை. ‘நேர் நின்று போர் புரிந்தால் இந்த நாயனாரை வெல்ல முடியாது’ என்று அவன் எண்ணினான். நாயனார் சிவன் மீது கொண்ட பக்தியையும் திருநீற்றின் மேல் கொண்ட பற்றையும் அறிந்தான். அடியார் போல் வேடம் பூண்டு நாயனாரைக் கொல்வதற்காகச் சூழ்ச்சி செய்தான்.

வஞ்சனை வேடம்

முத்தநாதன் கொண்ட வஞ்சனை வேடத்தைச் சேக்கிழார் பின்வரும் பாடலில் வருணித்துள்ளார்.

மெய்எலாம் நீறு பூசி

வேணிகள் முடித்துக் கட்டிக்

கையினில் படைக ரந்த

புத்தகக் கவளி ஏந்தி

மைபொதி விளக்கே என்ன

மனத்தின்உள் கறுப்பு வைத்துப்

பொய்த்தவ வேடம் கொண்டு

புகுந்தனன் முத்த நாதன்

(பெரிய. மெய்ப்பொருள் நாயனார் புராணம், 7)

(மெய் = உடல்; நீறு = திருநீறு / விபூதி; வேணி = சடை / முடி; படை =ஆயுதம் / கருவி; புத்தகக் கவளி = புத்தகப்பை / சுவடிகள் அடுக்கிக் கட்டப்பட்டு இருக்கும் சுவடிக்கட்டு; மை = குற்றம் / இருட்டு / புகை; கறுப்பு = வஞ்சனை).

இப்பாடலின் பொருள் வருமாறு:

முத்தநாதன் உடல் முழுவதும் திருநீறு பூசி இருந்தான்; சடைமுடியை முடித்துக் கட்டி இருந்தான்; தன் கையில் ஆயுதம் மறைத்து வைத்த சுவடியை வைத்திருந்தான்; மையை / இருளை மறைத்து வைத்திருக்கும் விளக்கின் ஒளியைப் போல மனத்தில் வஞ்சனையை மறைத்து வைத்திருந்தான்; இவ்வாறு பொய்யான தவக் கோலம் பூண்டு திருக்கோவலூருக்குள் நுழைந்தான்.

தொழுது வென்றார்

பொய் வேடம் புனைந்த முத்தநாதன் அடியாரின் அரண்மனையை அடைந்தான். வாயில் காப்போர் சிவனடியார் என்று எண்ணி அவனைப் போக விட்டனர். பல வாயில்களையும் கடந்து மன்னரின் பள்ளியறை வாயிலை அடைந்தான். அங்கிருந்த தத்தன் என்னும் வாயில் காப்போன் “மன்னர் உறங்கும் நேரம்” என்று முத்தநாதனைத் தடுத்தான். அதனையும் மீறி “மன்னனுக்கு உறுதிப் பொருளைக் (வீடுபேறு தருவதற்குரிய வழி முறை) கூறப் போகிறேன் என்னைத் தடுக்காதே” என்று, தத்தனை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். கண் விழித்த நாயனார், முத்தநாதனைச் சிவன் அடியார் என்று எண்ணி வணங்கினார். “அடியவரே இங்கு வந்ததன் நோக்கம் என்ன” என்று பணிந்து கேட்டார். முத்தநாதன், “இறைவன் அருளிச் செய்த ஆகமங்களுள் ஒன்று என்னிடம் இருக்கின்றது. அது வேறு எங்கும் இல்லாதது. அதனை உமக்குக் கூறவே வந்தேன்” என்று பொய் கூறினான். இதனைக் கேட்ட நாயனார் அகம் மகிழ்ந்தார். அந்த ஆகமத்தைக் கூற வேண்டினார். முத்தநாதன் “உன் மனைவி இங்கே இருத்தல் கூடாது. நீயும் நானும் தனித்து இருந்து அந்த ஆகமத்தை அறிய வேண்டும்” என்றான். உடனே மன்னன் அரசியாரை அனுப்பி விட்டுப் பொய் வேட அடியாரைப் பீடத்தில் அமர்த்தித் தான் கீழே அமர்ந்து, “அன்பரே அருள் செய்க” என்றார்.

வஞ்சகனின் செயல்

வஞ்சக வேடம்

முத்தநாதன் தன்னுடைய கைகளில் வைத்திருந்த வஞ்சகமாகிய சுவடிப் பையை மடிமேல் வைத்து ஏட்டுச் சுவடியைப் பிரிப்பவன் போல் பாவனை செய்தான். மெய்ப்பொருள் நாயனார், தன்னைப் பணிந்து வணங்கும் சமயத்தில் உடைவாளை உருவி அவரை வெட்டினான். தான் செய்ய நினைத்ததைச் செய்து முடித்தான். அப்போதும் நாயனார், அவனது உடம்பில் உள்ள தவவேடமே உண்மையான உறுதிப் பொருள் என்று எண்ணி அவனை வணங்கினார். தாம் கொண்ட கொள்கையில் இருந்து மாறாது வெற்றி பெற்றார். நாயனாரை முத்தநாதன் கொலை செய்த நிகழ்ச்சியைக் கூற வரும் இடத்தில், “வாளால் வெட்டிக் கொலை செய்தான்” என்று கூறுவதற்குச் சேக்கிழாரின் மனம் ஒப்பவில்லை. எனவே “அவன் எண்ணியதைச் செய்து முடித்தான்” என்று கூறினார். முத்தநாதன் கொலை செய்யினும் அவன் வெற்றி பெறவில்லை. கொலையே செய்தாலும் அவன் சிவனடியார் உருவத்தில் இருப்பவன்; எனவே நாயனார் அவனை வணங்கினார். அதாவது தான் கொண்ட கொள்கையில் அவர் கடைசி வரை உறுதியாக இருந்தார். எனவே, வென்றவர் நாயனாரே என்கிறார் சேக்கிழார்.

கைத்தலத்து இருந்த வஞ்சக்

கவளிகை மடிமேல் வைத்துப்

புத்தகம் அவிழ்ப்பான் போன்று

புரிந்துஅவர் வணங்கும் போதில்

பத்திரம் வாங்கித் தான்முன்

நினைந்தஅப் பரிசே செய்ய

மெய்த்தவ வேட மேமெய்ப்

பொருள்எனத் தொழுது வென்றார்

(பெரிய. மெய்ப்பொருள் நாயனார் புராணம், 15)

(தலம் = இடம்; கவளிகை = சுவடிக்கட்டு; புரிந்து = விரும்பி; பத்திரம் = உடைவாள்; பரிசே = அவ்வாறே / தான் நினைத்தவாறே; மெய்த்தவ வேடம் = உடம்பில் பூண்டிருந்த வேடம்; மெய்ப்பொருள் = உண்மையான பொருள்; தொழுது = வணங்கி)

நாயனாரின் செயல்

முத்தநாதன் உள்ளே நுழைந்தபோதே அவனைத் தத்தன் கவனித்து வந்தான். முத்தநாதன் செய்த செயலைக் கண்டு நொடிப் பொழுதில் அரசனை அணுகினான்; அங்கிருந்த முத்தநாதனை வாளினால் கொல்லப் போனான். அப்பொழுது குருதி கொப்புளிக்க வீழ்ந்து கொண்டிருந்த நாயனார் “தத்தனே இவர் நம்மவர்; சிவனடியார்” என்று தடுத்துச் சாய்ந்தார்.

“தத்தா நமர்”

இதனைச் சேக்கிழார்,

நிறைத்தசெங் குருதி சோர

வீழ்கின்றார் நீண்ட கையால்

தறைப்படும் அளவில் தத்தா

நமர்எனத் தடுத்து வீழ்ந்தார்

(பெரிய. மெய்ப்பொருள் நாயனார் புராணம், 16)

(நிறைத்த = நிறைந்த / மிகுந்த; செங்குருதி = இரத்தம்; சோர = வழிய; தறை = மண்; நமர் = நம்மவர்)

என்று விவரித்துள்ளார். சாய்ந்த நாயனாரைத் தாங்கிய தத்தன் “எனக்கு உள்ள பணி யாது” என்று வினவினான். நாயனாரும் “இந்த அடியார்க்கு வழியில் எவராலும் தீங்கு நேராதவாறு காத்து, இவரைக் கொண்டு போய் விட்டு விடு” என்று ஆணை இட்டார். ஆணைப்படியே தத்தன் அந்த வஞ்சகனை அழைத்துச் சென்றான். அரண்மனையில் நிகழ்ந்ததை அறிந்தவர்கள் எல்லாரும் ஆங்காங்கே முத்தநாதனை வளைத்துக் கொண்டனர். அவர்களுக்கு எல்லாம் அரசர் சொன்னதைத் தத்தன் எடுத்துக் கூறி விலக்கினான். ஒருவாறு மக்களிடம் இருந்து முத்தநாதனைக் காப்பாற்றி, வாள் ஏந்தி மக்கள் வாராத இடத்தில் அவனை விட்டான்.

இறையடி சேர்ந்தமை

அரண்மனைக்குத் திரும்பிய தத்தன், நாயனாரிடம் செய்தியைத் தெரிவித்தான். இதனைக் கேட்ட நாயனார் கூறுவதாகச் சேக்கிழார் பாடுவதைப் படியுங்கள்:

சென்றுஅடி வணங்கி நின்று

செய்தவ வேடம் கொண்டு

வென்றவர்க்கு இடையூறு இன்றி

விட்டனன் என்று கூற

இன்றுஎனக்கு ஐயன் செய்தது

யார்செய்ய வல்லார் என்று

நின்றவன் தன்னை நோக்கி

நிறைபெரும் கருணை கூர்ந்தார்

(பெரிய. மெய்ப்பொருள் நாயனார் புராணம், 21)

(ஐயன் = தத்தன் / மதிப்பிற்கு உரியவன்; நிறை = நிறைந்த; கருணை = அருள்)

இப்பாடலின் பொருள் வருமாறு:

முத்தநாதனை விடுத்து வந்த தத்தன் அரசனை வணங்கி, “தவ வேடத்தால் வெற்றி அடைந்தவர்க்கு எந்த இடையூறும் இல்லாமல் விட்டு வந்தேன்” என்று கூறினான். அதனைக் கேட்ட நாயனார் “இன்று எனக்கு இந்த உதவியைச் செய்தவர் மதிப்பிற்குரியவரே; வேறு யார் இந்த உதவியைச் செய்ய வல்லவர்” என்று, தத்தனை அருளோடு நோக்கிக் கூறினார்.

பின்பு எல்லாரிடமும் திருநீற்று நெறியை (சிவவழிபாட்டை) அன்புடன் பாதுகாக்குமாறு வேண்டினார். தில்லை இறைவனை நினைத்து வேண்டிடச் சிவபெருமான் மெய்ப்பொருள் நாயனார்க்குக் காட்சி கொடுத்து, அவரைத் தமது திருவடி நிழலில் சேர்த்து அருளினார்.

இவ்வாறாக மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றைச் சேக்கிழார் விவரித்துச் செல்கிறார்.

2.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை பெரியபுராண இலக்கியச் சுவை பற்றிய சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்:

பெரியபுராண இலக்கியச் சுவை பற்றிப் பொதுவாக அறிந்து கொள்ள முடிந்தது.

இலக்கிய நயங்களாகக் கருதப்படும் கற்பனை, சொல்லாட்சி, அணிநலன்கள் ஆகியன பற்றிப் புரிந்து கொள்ள முடிந்தது. இவை பெரியபுராணத்தில் எவ்வாறு அமைந்து கிடக்கின்றன என்பதைப் பாடல்கள் வழி அறிந்து கொள்ள முடிந்தது.

63 நாயன்மார்களில் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றை முழுவதும் படித்துத் தெரிந்து கொள்ள முடிந்தது.

பாடம் - 3

கம்பராமாயணம் : காப்பிய அறிமுகம்

3.0 பாட முன்னுரை

உலகப் புகழ் பெற்ற காப்பியங்களைத் தந்த புலவர் பெருமக்கள் பலர் உண்டு. ஹோமர், வர்ஜில், மில்டன், தாந்தே, கதே முதலிய புலவர் பெருமக்கள் உலகக் கவிஞர்கள். இந்தக் கவிஞர்களுக்கு இணையாக வைத்துப் புகழப்படுபவர் கம்பர். தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்படும் புலவர் இவரே. உலக இலக்கியங்களாகப் புகழப்படும் இந்திய இதிகாசங்கள் இரண்டு. ஒன்று வான்மீகியின் இராமாயணம்; மற்றொன்று வியாசரின் மகாபாரதம். இந்திய மொழிகள் அனைத்திலும் இந்த இதிகாசங்கள் தழுவலாக எழுதப்பட்டன.

கம்பரின் இராமாயணம்

தமிழ்மொழியிலும் இராமாயணம் பற்றிய குறிப்புகள் பலவுண்டு. தமிழகத்தின் எண்ணற்ற பகுதிகளில் இராமாயண நிகழ்வுகள் நடந்ததற்கான புராணக் கதைகள் உண்டு. சோழர் காலத்தில் வாழ்ந்த கம்பர் செந்தமிழில் இராமகாதையைப் பாடினார். இவருக்கு முன்னரும் பின்னரும் இவ்வளவு சிறப்புடைய இராமாயணத்தை எவருமே பாடவில்லை என்று கூறுவர். கம்பர் தமது காப்பியத்திற்கு இராமகாதை என்று பெயர் வைத்திருப்பினும், கம்பரின் கவிச் சிறப்புக் கருதிப் பிற்காலத்தில் அதைக் கம்பராமாயணம் என்றே அழைத்தனர்.

இராம அவதாரம்

இதிகாசத் தலைவன் இராமன் திருமாலின் பத்து அவதாரங்களுள் ஓர் அவதாரமாகக் கருதப்படுகிறான். இலங்கை மன்னன் இராவணனை வதம் செய்வதற்காகப் பூமியில் அவதரிக்கிறான். அயோத்தி மன்னன் தசரதன் மகனாகப் பிறக்கிறான். சீதையை மணப்பது முதல் இராவண வதம் வரையிலான கதை நிகழ்வுகள் இராமனைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளன. இந்தக் கதை நிகழ்ச்சிகளைக் கவிதை ரசம் சொட்டச் சொட்டக் கம்பர் இராமாயணமாகப் பாடியுள்ளார்.

கம்பரைப் பற்றிய அறிமுகமும் கம்பராமாயணத்தைப் பற்றிய அறிமுகமும் இப்பாடத்தில் இடம் பெற்றுள்ளன.

3.1 கவிச்சக்கரவர்த்தி கம்பர்

கம்பராமாயணத்தைத் தமிழில் இயற்றிய பெரும் புலவர் கம்பர். கம்பர் கவிச்சிறப்பு தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாக அறிஞர்களால் போற்றப்படுகிறது. கவிச் சக்கரவர்த்தி கம்பரைப் பற்றி மகாகவி பாரதியார் தமது சுயசரிதையில் “கம்பர் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்” என்று குறிப்பிட்டு உள்ளார். “கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பர் பிறந்த தமிழ்நாடு” என்றும் அவர் பாராட்டி உள்ளார். “அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே கவி” (அம் – அழகிய; புவி – உலகம்) என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை போற்றி உள்ளார். தமிழ்மொழிக்குத் தவச் சிறப்புத் தந்தது என்ற பொருளில் நாமக்கல் கவிஞர், “தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே” என்று புகழ்ந்து உள்ளார். “கல்வியிற் பெரியன் கம்பன்” எனவும் “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” எனவும் வரும் பழம் தொடர்கள் கம்பரின் சிறப்பை வெளிப்படுத்தும்.

3.1.1 கம்பர் – பெயர் கம்பர் தஞ்சை மாவட்டத்துத் திருவழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். இதனைத் தனிப்பாடல் ஒன்று விவரிக்கிறது. கம்பர் என்ற பெயர் பற்றிப் பல்வேறு கதைகள் வழங்குகின்றன. கம்பர் உவச்சர் குலத்தில் (பூசாரிக் குலம்) பிறந்தமையால் பெற்ற பெயர் என்று கூறுவர். காளி கோயிலில் பூசை செய்யும் மரபினர் என்று உவச்சர்கள் சுட்டப்பெறுகின்றனர். கம்பர் குழந்தையாகக் காளி கோயில் கம்பத்தின் அருகே கிடந்தமையால் இப்பெயர் பெற்றார் என்பர். கம்பங் கொல்லையைக் காத்து வந்தமையால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறுவர். காஞ்சிபுரத்தில் உள்ள இறைவனாகிய ஏகம்பன் தேவாரப் பதிகங்களில் ‘கம்பன்’ என்றே சுட்டப்படுகிறான். அந்தப் பெயர் இவருக்கும் இடப்பட்டது என்பர்.

3.1.2 கம்பர் – காலம் கம்பரது காலத்தைப் பற்றி மூன்று வேறு கருத்துகள் நிலவுகின்றன.

இராமாயணத்தின் தொடக்கத்தில் “கம்பர் தனியன்கள்” என்ற தலைப்பில் 17 பாடல்கள் உள்ளன. இவற்றில் ஒரு பாடலில் எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழின் மேல் என்ற தொடர் அமைந்துள்ளது. இத்தொடர் இராமாயணம் எழுதப்பட்ட காலத்தை உணர்த்துவதாக உள்ளது.

இப்பாடலை ஆதாரமாகக் கொண்டு கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றிய காலம் கி.பி. 885 என்று அறிஞர்கள் கூறுவர். ஆனால் இத்தனியன்கள் கம்பர் காலத்திற்கும் பின்னால் 16ஆம் நூற்றாண்டில் யாரோ சிலர் எழுதி இடைச் செருகலாகச் சேர்த்திருக்க வேண்டும் என்று வையாபுரிப் பிள்ளை கருதுகிறார்.

இதே போல் ஆவின் கொடைச் சகரர் என்ற பாடலை ஆதாரமாகக் கொண்டு கம்பர் காலம் கி.பி. 978 என்று சிலர் விளக்கி உள்ளனர். இது முதலாம் இராசராச சோழனுக்கு முன்பு இருந்த உத்தம சோழன் காலம் ஆகும். இந்தக் காலத்தையும் சில சான்றுகள் கொண்டு அறிஞர்கள் மறுத்து உள்ளனர்.

கம்பருடைய காலம் மூன்றாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலம் என்று அறிஞர் பலரும் கூறி உள்ளனர். மூன்றாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு ஆகும். கி.பி. 1376இல் பொறிக்கப்பட்ட ஒரு கன்னடக் கல்வெட்டை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். அந்தக் கல்வெட்டு தோன்றிய காலத்திற்கு முன்பு இரண்டு தலை முறை காலமாகக் கம்பராமாயணம் கன்னட நாட்டில் வழங்கி வந்ததைத் தெரிவிக்கிறது. எனவே கி.பி. 1325க்கு முன்பே கம்பர் காவியம் தோன்றி இருக்க வேண்டும் என்று மா.இராசமாணிக்கனார் கருதுகிறார்.

கம்பர், சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவருக்குப் பிற்பட்டவர் என்பது அறிஞர் பலரும் ஒப்புக் கொண்ட உண்மை. கம்பர் சோழ மன்னனோடு மாறுபட்டு ஆந்திர நாட்டில் சில காலம் தங்கினார். அவர் தங்கி இருந்த நாடு ஓரங்கல் என்பது ஆகும். அந்த நாட்டின் அரசன் பிரதாபருத்திரன் ஆவான். அவன் காலம் கி.பி. 1162 – 1197 வரை ஆகும். இதே கால கட்டத்தில் சோழப் பேரரசனாக இருந்தவன் மூன்றாம் குலோத்துங்கன் ஆவான். இவன் காலம் கி.பி. 1178 – 1208 வரை ஆகும். எனவே கம்பர் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று முடிவு கூறலாம்.

3.1.3 கம்பர் இயற்றிய நூல்கள் வடமொழியில் வான்மீகி எழுதிய இராமாயணத்தைக் கம்பர் தமிழில் இராமகாதையாக இயற்றினார். அவர்தம் நூல்களுள் இதுவே தலைசிறந்த நூல் ஆகும். இதுவன்றி வேறு சில நூல்களையும் எழுதியதாகக் கம்பர் பற்றிய கதைகள் கூறுகின்றன. கம்பர் உழவுத் தொழிலையும் உழவரையும் பாராட்டி எழுதிய நூல்கள் ஏர் எழுபது, திருக்கை வழக்கம் என்பன. கலைமகளின் (சரசுவதி) அருளைப் போற்றி எழுதிய நூல் சரசுவதி அந்தாதி ஆகும். நம்மாழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவர் மீது கம்பர் கொண்ட ஈடுபாட்டைச் சடகோபர் அந்தாதி என்னும் நூல் வெளிப்படுத்துகிறது. கம்பர் செய்ததாக மும்மணிக்கோவை என்ற நூலையும் தனிப்பாடல் ஒன்று தெரிவிக்கிறது.

3.1.4 கம்பரைப் பற்றிய கதைகள் கம்பர் பற்றிய பல்வேறு கதைகள் வழங்குகின்றன. கம்பரின் தந்தை ஆதித்தன் என்றும், மகன் அம்பிகாபதி என்றும் அக்கதைகள் கூறுகின்றன. அம்பிகாபதி பெரும் கவிஞனாக விளங்கி உள்ளான். சோழ மன்னனின் மகள் அமராவதி இவன் மேல் காதல் கொண்டாள். இக்காதல் காரணமாக அம்பிகாபதி மன்னனால் கொல்லப்பட்டதாகக் கதை ஒன்று கூறுகின்றது. மகனின் பிரிவால் கம்பர் பெருந்துயர் அடைந்தார். இந்தத் துயரமே இராமனைப் பிரிந்த தயரதன் துயராகவும், இந்திரசித்தைப் பிரிந்த இராவணன் துயராகவும் கம்ப இராமாயணத்தில் வெளிப்படுவதாகக் கூறுவர்.

கம்பரும் சடையப்ப வள்ளலும்

வெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த வள்ளல் ஒருவன் சடையப்ப வள்ளல் என்று புகழப்பட்டான். இவனே கம்பரை ஆதரித்த வள்ளல் ஆவான். தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலைக் கம்பர் பத்து இடங்களில் இராமாயணத்தில் குறிப்பிட்டு உள்ளார். இந்த இடங்களில் வள்ளலின் கொடை, பண்பு, புகழ், பெருமை முதலியவற்றை நன்றியோடு பாராட்டியுள்ளார். இராமாயணத்தில் இராமன் முடிசூடும் சடங்கு நிகழ்கிறது. முடியினை வசிட்டன் புனைந்தான் என்று கூறாமல், வெண்ணெய் நல்லூர்ச் சடையன் வழி முன்னோன் எடுத்துக் கொடுக்க வசிட்டன் முடி சூட்டினான் என்று கம்பர் பாடியுள்ளார்.

கம்பரும் சோழ மன்னனும்

சோழ மன்னனுக்கும் கம்பருக்கும் மனவேறுபாடு இருந்தது என்பதைப் பல்வேறு கதைகள் சுட்டுகின்றன. எடுத்துக்காட்டாக,

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ

உன்னையறிந் தோதமிழை ஓதினேன் – என்னை

விரைந்துஏற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ

குரங்குஏற்றுக் கொள்ளாத கொம்பு

(தனிப்பாடல் திரட்டு)

(ஓதினேன் = படித்தேன்; வேந்து = மன்னன்; கொம்பு = கிளை)

என்னும் பாடல் இதை வெளிப்படுத்துகிறது.

மேலே சுட்டி உள்ள பாடல் சோழ மன்னனை வெறுத்துக் கம்பர் அந்த நாட்டை விட்டு நீங்கும்போது பாடியதாகத் தெரிகிறது. சோழ மன்னனுக்கும் கம்பருக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. உடனே கம்பர், “மன்னவன் நீ ஒருவன் தானா? நீ ஆதரிப்பாய் என்று எண்ணியா நான் தமிழைக் கற்றேன்? என்னை ஆதரிக்காத மன்னர் உலகில் உண்டோ? குரங்கை ஏற்றுக்கொள்ளாத கிளையைப் பார்த்தது உண்டா? அதுபோல என்னை ஆதரிக்காதவர்களைப் பார்த்தது உண்டா?” என்று கூறி நீங்கினார்.

இதேபோல் சோழ அரசவைப் புலவர் ஒட்டக் கூத்தருக்கும் கம்பருக்கும் போட்டியும் பூசலும் இருந்தமை பற்றிய செய்தியும் உண்டு.

கம்பரும் இராமாயண அரங்கேற்றமும்

கம்பர் இராமகாதையை எழுதி முடித்த பிறகு அதனை அரங்கேற்றம் செய்ய விரும்பினார். திருவரங்கம் சென்று அங்குள்ளோரை வேண்டினார். திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்யக் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் தில்லைத் தீட்சிதர்கள் இதற்கு ஒப்புக் கொண்டால் அரங்கேற்றம் செய்யலாம் என்று கூறிவிட்டனர். உடனே கம்பர் தில்லைக்குச் சென்றார். தில்லைத் தீட்சிதர்கள் மூவாயிரம் பேர். இவர்களை ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் கூட்டி ஒப்புதல் வாங்குவது இயலாமல் இருந்தது. ஒரு சமயம் குழந்தை ஒன்று பாம்பு தீண்டி இறந்து போனது. இதற்காகத் தீட்சிதர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி இருந்தனர். அங்குச் சென்ற கம்பர், தமது இராமாயணத்தில் நாகபாசப் படலம் என்ற பகுதியில் எழுதிய பாடல்கள் சிலவற்றைப் பாடினார். உடனே குழந்தை பிழைத்து எழுந்தது. இதனைக் கண்ட தீட்சிதர்கள் மகிழ்ந்து கம்பரைப் போற்றினர். பின்னர்க் கம்பர் இராமாயணத்தை அரங்கேற்ற ஒப்புதலையும் தந்தனர். கம்பர் மீண்டும் திருவரங்கம் சென்று அரங்கேற்றம் செய்ய முனைந்தார். திருவரங்கத்தார் வேண்டுகோளுக்கு இணங்கச் சடகோபர் அந்தாதி பாடி, இரணிய வதைப் படலத்தை விரிவாக விளக்கிக் கூறினார். இதன் பின்னர் இராமாயண அரங்கேற்றம் நிகழ்ந்தது.

இவ்வாறாகக் கம்பர் பற்றிய பல்வேறு கதைகளை அபிதான சிந்தாமணி என்னும் நூல் விரிவாகக் கூறியுள்ளது.

3.2 தமிழ் இலக்கிய வரலாற்றில் இராமாயணம்

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியம் தொடங்கி இராமாயணம் பற்றிய குறிப்புகள் பல கிடைத்துள்ளன. வெண்பா யாப்பில் அமைந்த இராமாயணமும், ஆசிரியப்பாவில் அமைந்த இராமாயணமும் முன்பு இருந்து, பின்பு அழிந்திருக்க வேண்டும் என்று மயிலை. சீனி வேங்கடசாமி போன்றோர் கருதுகின்றனர்.

3.2.1 புறநானூறும் இராமாயணமும் மக்கள் இடையே வழக்கத்தில் இருந்த சில இராமாயணக் கதை நிகழ்ச்சிகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. புறநானூற்றில் வரும் ஒரு குறிப்புக் கருதத்தக்கது.

குரங்குகள் அணிந்த நகைகள்

மிகுந்த ஆற்றல் உடைய இராமன் சீதையுடன் காட்டிற்குச் சென்றான். அப்போது வலிமையுடைய இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான். விண் வழியே கொண்டு செல்லும்போது அவள் அணிந்து இருந்த மதிப்புமிக்க நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே போட்டுக்கொண்டே சென்றாள். அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன. எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்து கொள்வது என்னும் அறிவு அவற்றுக்கு இல்லை. அதனால் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக்கொண்டன. இதைப்போல், இளஞ்சேட் சென்னி என்ற வள்ளலிடம் இசைக் கலைஞன் பரிசாகப் பெற்ற விலை மதிக்க முடியாத பொன் நகைகளை, அவனது வறுமை மிக்க உறவினரும் சுற்றத்தாரும் அணிந்து கொள்ளும் முறை தெரியாமல் உடம்பில் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக் கொண்டனர். இது வறுமைத் துன்பத்தையே கண்டு வந்த கலைஞனுக்கு நினைக்க நினைக்கச் சிரிப்பைத் தந்தது என்று அவன் கூறுவதாக ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் புறநானூற்றில் பாடியுள்ளார். இராமாயண நிகழ்ச்சி சங்கப் பாடலில் இவ்வாறு உவமையாகப் பாடப்பட்டுள்ளது. தெரிந்த ஒன்றைக் காட்டித் தெரியாததை விளக்குவதே உவமையின் முதன்மையான பயன்பாடு. எனவே, இராமாயணக் கதை, அன்று மக்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றாக இருந்திருக்கிறது.

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை

நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்கு

(புறம். 378)

(கடும் = கடுமை; தெறல் = சினத்தல் / அழித்தல்; வலி = வலிமை; அரக்கன் = இராவணன்; வௌவிய = கவர்ந்த; ஞான்று = அப்போது; மதர் அணி = மதிப்புமிக்க அணிகள்; இழை = அணிகலன்கள்; செம்முகப் பெருங்கிளை = சிவந்த முகத்தை உடைய குரங்கின் கூட்டம்; பொலிந்து = நகைகளை அணிந்து பொலிவு பெறுதல்.)

3.2.2 அகநானூறும் இராமாயணமும் மேலே குறிப்பிட்டதைப் போன்று அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும் இராமாயணக் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.

பறவைகளின் ஒலியும் இராமனும்

காதலில் ஈடுபட்டிருக்கும் தலைவி ஒருத்தியைப் பற்றி ஊரார் பழி தூற்றிக் கொண்டிருந்தனர். இதற்கு அலர் தூற்றுதல் என்று பெயர். ஒருநாள் அத்தலைவன் வந்து அத்தலைவியையே மணம் செய்துகொண்டான். அன்றே ஊரார் பழி தூற்றுவதை நிறுத்திக்கொண்டனர். இதனால் அத்தலைவியைப் பற்றி ஊர் முழுதும் ஒலித்துக் கொண்டிருந்த பழிப்பேச்சின் ஓசை உடனடியாக நின்றுவிட்டது. இதற்குப் புலவர் ஓர் உவமையை அழகாகக் கூறியுள்ளார். இலங்கைப் படையெடுப்பின்போது இராமன் ‘தொன்முதுகோடி’ எனப்படும் தனுஷ்கோடியில் வந்து தங்கி இருந்தான். அவ்வாறு தங்கி இருந்த இடம் பறவைகள் ஓயாது ஆரவாரம் செய்து கொண்டிருந்த ஆலமரத்தின் நிழல். இராமன் இலங்கைப் படையெடுப்பு தொடர்பாகத் தன் தோழர்களோடு கலந்து உரையாடிக் கொண்டிருந்தான். பறவைகளின் ஓசை தடங்கலாக இருந்தது. தன் கையை உயர்த்திக் காட்டினான். உடனே அத்தனை பறவைகளும் அமைதி கொண்டு அடங்கிவிட்டன. இதைப்போல, தலைவன் தலைவியை மணமுடித்துக் கைப்பிடித்த உடனேயே, அதுவரை ஊரெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த பழிப்பேச்சுகள் அடங்கின என்று தோழி கூறுவதாக அந்தப் பாடலில் புலவர் இராமாயண நிகழ்ச்சியை உவமையாகக் கையாண்டுள்ளார்.

அப்பாடல் வரிகள் இதோ:

வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி

முழங்குஇரும் பௌவம் இரங்கு முன்துறை

வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த

பல்வீழ் ஆலம் போல

ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே.

(அகம். 70)

(வெல்வேல் = வெற்றி பொருந்திய வேல்; கவுரியர் = பாண்டியர்; தொன்முது கோடி = பழமையான தனுஷ்கோடி எனும் ஊர்; இரும் = பெரிய; பௌவம் = கடல்; இரங்கு = ஒலிக்கும்; முன்துறை = துறைமுகம்; வெல்போர் = வெற்றி பொருந்திய போர்; அருமறை = மந்திர ஆலோசனை / போருக்கு முன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம்; அவித்த = அடங்கிய; வீழ் = விழுது; ஆலம் = ஆலமரம்; அவிந்தன்று = அடங்கியது; அழுங்கல் = ஆரவாரம்)

மேலே கூறப்பெற்ற இரண்டு நிகழ்ச்சிகளுமே வான்மீகி இராமாயணத்திலோ, கம்பராமாயணத்திலோ இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3.2.3 சிலம்பும் இராமாயணமும் இராம அவதாரம் பற்றிய புராணக் கதையைச் சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது. இராமாயணக் கதை சுருக்கமாகச் சிலப்பதிகாரத்தில் இரு இடங்களில் பேசப்படுகிறது.

ஊர்காண் காதை

தாதை ஏவலின் மாதுடன் போகிக்

காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்

வேத முதல்வன் பயந்தோன் என்பது

நீஅறிந் திலையோ நெடுமொழி அன்றோ

(சிலம்பு. ஊர்காண் காதை. 46-49)

(தாதை = தந்தை / தயரதன்; மாது = பெண் / சீதை; வேதமுதல்வன் = நான்முகன் / பிரம்மன்; வேதமுதல்வன் பயந்தோன் = பிரம்மனைப் பெற்றெடுத்த திருமால்; நெடுமொழி = பழங்கதை.)

இராமன் தன் தந்தையாகிய தயரதன் ஆணையின் பேரில் மனைவியுடன் காட்டினை அடைந்தான் (வனவாசம் சென்றான்). அந்தக் காட்டில் வாழும் வாழ்க்கையிலும் மனைவியை இழந்து பெருந்துன்பம் அடைந்தான். பிரம்மனை ஈன்ற திருமாலுக்கே இந்த நிலை என்பது உனக்குத் தெரியாதா? எல்லாரும் அறிந்த கதையல்லவா?

இப்பகுதி, கோவலனுக்குச் சொல்லப்படும் ஆறுதல் மொழியாக இடம்பெற்று உள்ளது.

ஆய்ச்சியர் குரவை

திருமாலைப் போற்றி இடைக்குல மக்கள் பாடும் ஆய்ச்சியர் குரவையிலும் அவனது இராம அவதாரம் பற்றிய குறிப்பு வருகிறது.

மூஉலகம் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்

தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான்போந்து

சோஅரணும் போர்மடியத் தொல்இலங்கை கட்டழித்த

சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே

(சிலம்பு- ஆய்ச்சியர் குரவை)

(மூஉலகு = மூன்று உலகம் / மேலுலகம், கீழ் உலகம், பூமி ; ஈரடி = கால்கள்; நிரம்பா வகை = குறைவுபடும்படி; சேப்ப = சிவக்க; சோ அரண் = சோ என்ற மதில்; சீர் = புகழ்.)

திருமாலின் பத்து அவதாரங்களுள் வாமன அவதாரமும் ஒன்று. வாமன அவதாரத்தில் மாவலி மன்னன் தானமாகத் தந்த மூன்றடி மண்ணையும் அளந்து பெறுவதற்காக வாமனன் பேருருக் கொண்டான். மூன்று உலகத்தையும் இரண்டு அடிகளால் அளந்தான். அத்தகைய திருவடிகள் சிவக்க, இராமன் தன் தம்பியோடு, காட்டிற்குச் சென்றான். சோ என்னும் அரணையும் தொன்மையுடைய இலங்கையையும் அழித்தவன் அவனே. அத்தகையவனுடைய புகழைக் கேட்காத செவிதான் என்ன செவியோ என்று ஆய்ச்சியர் குரவைப் பாடல் விவரிக்கிறது.

சிலம்பு தரும் செய்தி

சங்க இலக்கியங்கள் கூறும் இராமாயணச் செய்தி வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறாதது. ஆனால் சிலப்பதிகாரம் கூறும் செய்தி வான்மீகி இராமாயணத்தை அடி ஒற்றியது. மேலும் திருமால் அவதாரமாக இராமன் கருதப் பெற்றதையும் விவரிப்பது.

3.2.4 பிற்கால இராமாயணங்கள் கம்பருக்கு முன் தமிழ்நாட்டில் நிலவிய இராமாயணம் பற்றிய செய்திகளை இதுவரை தெரிந்து கொண்டோம். இவையே தமிழ் இலக்கியத் தொடக்க காலத்தில் உள்ள செய்திகளாக அறிய முடிகிறது. பின்னாளில் பல்லவர் காலத்தில் ஆழ்வார்கள் இராம அவதாரத்தின் பல்வேறு செய்திகளைப் பாடி இருக்கிறார்கள். இவை யாவும் கம்பருக்கு முன் உள்ள இராமாயண இலக்கியங்களாக அறிய முடிகிறது. கம்பருக்குப் பின்னரும் தமிழில் இராமாயணங்கள் தோன்றி உள்ளன. அவை வருமாறு.

3.3. காப்பிய அமைப்பும் கதையும்

கம்பராமாயணம் ஆறு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு காண்டமும் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அவை :

ஒவ்வொரு காண்டத்திலும் அமைந்துள்ள படலங்களின் எண்ணிக்கை வருமாறு :

1). பால காண்டம் - 22 படலங்கள்

2). அயோத்தியா காண்டம் - 12 படலங்கள்

3). ஆரணிய காண்டம் - 11 படலங்கள்

4). கிட்கிந்தா காண்டம் - 17 படலங்கள்

5). சுந்தர காண்டம் - 15 படலங்கள்

6). யுத்த காண்டம் - 39 படலங்கள்

மொத்தம், காண்டங்கள் – 6, படலங்கள் – 116.

இனிக் கம்பராமாயணத்தில் காண்டங்கள் தோறும் அமைந்துள்ள கதைப் பாங்கினை அறியலாம்.

3.3.1 பால காண்டம் (இராமனின் இளமைக்கால நிகழ்ச்சிகள்) இராவணனை வதம் செய்வதற்காக மனிதப் பிறப்பு எடுக்கப் பரம்பொருள் எண்ணம் கொண்டது. அரசை ஆள்வதற்கு மகன் வேண்டும் என்று யாகம் செய்தான் தயரதன். பரம்பொருள் தயரதனுக்கு மகனாகப் பிறக்கிறது. இராமன் அவதரிக்கிறான். தம்பியர் பிறக்கின்றனர். இதற்கு முன்பாக அமைந்துள்ள நாட்டுப் படலம், நகரப் படலம், அரசியல் படலம் ஆகியவற்றுள் ஓர் இலட்சியச் சமுதாயத்தைக் கம்பர் படைத்தளிக்கிறார்.

இராமனும் விசுவாமித்திரரும்

இராமனும் தம்பியரும் கல்வி, கேள்வி, வில்வித்தைகளைக் கற்றுச் சிறந்து விளங்கினர். விசுவாமித்திர முனிவர் தயரதனிடம் வந்து யாகத்தைக் காவல் செய்ய இராமனை அனுப்புமாறு கேட்கிறார். பலவாறு வருந்தும் தயரதன் இறுதியில் இராமனை அனுப்புகிறான். தம்பி இலக்குவனும் உடன் செல்கிறான். இதன் பின்னர் தாடகை என்னும் அரக்கியைக் கொல்கிறான் இராமன். தாடகை வதை, இராவணன் வதைக்கு முன் அறிகுறியாகக் காட்டப்பெற்றுள்ளது. பின்னர் விசுவாமித்திரர் யாகம் தொடங்குகிறார். பல்வேறு அரக்கர்களின் தாக்குதல்களில் இருந்து இராமனும் இலக்குவனும் யாகத்தைக் காக்கின்றனர்.

இராமனின் திருமணம்

பின்னர் முனிவர் அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு மிதிலை நகருக்குச் செல்கிறார். வழியில், தன் கணவரின் சாபத்தால் கல்லாகிக் கிடந்த அகலிகை மீது இராமனின் பாதத் தூசி பட்டதும் அவள் மீண்டும் பெண் உருவம் அடைகிறாள். அவளைக் கணவரிடம் சேர்க்கிறான். மிதிலையில் இராமன் சீதையைக் காணுகிறான். இருவரும் காதல் கொள்கின்றனர். இராமன் வில்லை வளைத்து ஒடித்து வெற்றி பெற்றுச் சீதையை மணம் முடிக்கிறான்.

வில் வளைத்தல்

இராமன் – சீதை மணம் தமிழரின் அக மரபுப்படி காதலில் தொடங்கித் திருமணத்தில் முடிகின்றது. பின்னர் அனைவரும் அயோத்திக்குத் திரும்புகின்றனர்.

3.3.2 அயோத்தியா காண்டம் (இராமன் வனவாசமும் பரதன் ஆட்சியும்) இந்தக் காண்டத்தில், அயோத்தியில் நடந்த நிகழ்ச்சிகள் கூறப்பெற்றுள்ளன. இராமனுக்கு முடிசூடுவது பற்றித் தயரதன் அவையைக் கூட்டி ஆராய்கிறான். இதுவே அயோத்தியா காண்டத்தின் தொடக்கம் ஆகிறது.

கூனியும் கைகேயியும்

இராமன் முடிசூடுவதற்கு இடையூறாக மந்தரை என்னும் சூழ்ச்சிக்காரக் கூனி தோன்றுகிறாள். மந்தரையின் சூழ்ச்சியால் கைகேயியின் (இராமனின் சிற்றன்னை) மனம் மாறுகிறது. கைகேயி தயரதனிடம் சென்று முன்பு அவனிடம் தான் பெற்ற இரு வரங்களைத் தரும்படி வேண்டுகிறாள். ஒரு வரத்தின் மூலம் இராமன் வனவாசம் செல்லவும், மற்றொரு வரத்தின் மூலம் தன் மகன் பரதன் நாடாளவும் உரிமை பெறுகிறாள். புத்திர சோகத்தால் தயரதன் புலம்புகிறான்.

இராமனும் பரதனும்

இராமனும் பரதனும்

இராமன், இலக்குவன், சீதை ஆகியோர் கானகம் செல்கின்றனர். தயரதன் சோகத்தால் மரணமடைகிறான். பரதன் அயோத்தி திரும்புகிறான். நடந்தவற்றை அறிந்து வேதனை அடைகிறான். தயரதனின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. பின்னர்ப் பரதனும் மற்றவரும் இராமனைத் தேடிக் கானகம் செல்கின்றனர். இராமனைப் பரதன் சந்திக்கிறான். அரசாட்சியை ஏற்குமாறு வேண்டுகிறான். இராமன் மறுத்து விடுகிறான். அனைவரும் தயரதன் மரணத்தைக் கேட்டுத் துயரம் அடைகின்றனர். இறுதியில் இராமன் தன் பாதுகைகளைத் (செருப்பு) தருகிறான். அதனைப் பெற்றுக் கொண்ட பரதன் நாடு திரும்பி நந்திக்கிராமத்தில் பாதுகைகளை அரியணையில் வைத்து அங்கிருந்து ஆட்சி செய்கிறான்.

இக்காண்டத்தின் கதைப்பகுதி இத்துடன் நிறைவடைகிறது. இக்காண்டத்தில் குகன் என்னும் படகோட்டியை இராமன் சகோதரனாக ஏற்றுக் கொள்வது சிறந்த பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.

3.3.3 ஆரணிய காண்டம் (சீதையின் பிரிவும் இராமனின் துயரும்) ஆரணிய காண்டம் விராதன் வதைப் படலத்துடன் தொடங்குகிறது. அரக்கர்களின் பாவச் செயல்களை இராமன் நேருக்கு நேர் அறியும் வாய்ப்பை முழுமையாய்த் தருபவன் விராதனே ஆவான். இதன் பின்னர்ச் சரபங்கன் பிறப்பு நீங்கு படலத்தில் இராமனின் அவதார இரகசியம் வலியுறுத்தப்படுகிறது. தண்டக முனிவர்களுக்கு இராமன் அடைக்கலம் தருகிறான். இங்கு இராமன் பத்தாண்டுகள் வாழ்கிறான். அகத்தியர் தெய்வீகப் படைக்கருவிகளை இராமனுக்கு வழங்குகிறார். பின்பு பஞ்சவடி என்னும் காட்டுப் பகுதிக்குச் செல்லும் வழியில் சடாயு என்னும் கழுகு அரசனின் நட்பு ஏற்படுகிறது. இவ்வாறாகப் பதின்மூன்று ஆண்டுகள் கழிந்ததைக் கம்பர் விரைவாகக் கூறி விடுகிறார்.

சூர்ப்பணகை வருகை

அடுத்து இராவணனின் தங்கை சூர்ப்பணகை வருகிறாள். இராமன் மீது காதல் கொள்கிறாள். அவள் விருப்பம் நிறைவேறவில்லை. இலக்குவன் அவள் மூக்கை அறுத்து விடுகிறான். இதனால் கோபம் கொண்ட சூர்ப்பணகை சீதையின் அழகை இராவணனிடம் எடுத்துக் கூறி ஆசையை வளர்க்கிறாள்.

சீதையைக் கவர்தல்

இராவணன் தன் மாமனை மாயமான் உருவில் ஏவி இராமனையும் இலக்குவனையும் சீதையிடமிருந்து பிரிக்கிறான். சீதை, தனித்து இருக்கும் வேளையில் அவளைச் சிறையெடுக்கிறான் (கவர்ந்து செல்கிறான்). இராவணனின் இச்செயல் காப்பியத்திற்குத் திருப்பு முனையாக மாறுகிறது. சீதையைக் கவர்ந்து செல்லும் இராவணனுடன் சடாயு சண்டையிட்டு வீழ்கிறான்

மாயப் பொன்மான்

பின்னர் இராம இலக்குவர்களைக் கண்டு, சீதையை இராவணன் கவர்ந்து சென்றதைக் கூறி உயிர் விடுகிறான். யாருமற்ற சூழலில் இராமன் சீதை நினைவில் ஆழ்ந்து வருந்துகிறான். இத்துடன் ஆரணிய காண்டம் நிறைவு பெறுகிறது.

3.3.4 கிட்கிந்தா காண்டம் (இராமனும் வானரப் படைகளும்) இராமனுக்கும் வானரத் தலைவன் சுக்கிரீவனுக்கும் இடையே ஏற்படும் நட்பைக் கூறுவது கிட்கிந்தா காண்டம். அனுமன் என்னும் தொண்டன் இராமனுக்கு வாய்த்த நிகழ்ச்சியைக் கூறுகிறது.

இராமனும் அனுமனும்

அனுமப் படலத்தில் அனுமன் இராமனைச் சந்திக்கிறான். சுக்கிரீவனுடன் நட்புக் கொள்ளச் செய்கிறான். சுக்கிரீவனின் மனைவியை அவன் அண்ணன் வாலி கவர்ந்து கொள்கிறான். இதனால் வாலியைக் கொல்வதற்கு இராமன் உதவியைச் சுக்கிரீவன் வேண்டுகிறான். அதற்குக் கைம்மாறாகச் சீதையைத் தேடுவதற்கும் இலங்கைப் படையெடுப்பிற்கும் வானரப் படை உதவும் என்று கூறுகிறான். இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு முடி சூட்டுகிறான்.

அனுமனின் இலங்கைப் பயணம்

பின்னர்க் கார்காலம் வருகிறது. கார்காலம் கழிந்ததும் அங்கதன் தலைமையில், அனுமனும் பிறரும் சீதையைத் தேடித் தென்திசை நோக்கிச் செல்கின்றனர். வழியில் சடாயுவின் அண்ணன் சம்பாதியைப் பார்க்கின்றனர். சம்பாதி சீதை இலங்கையில் சிறை இருப்பதைக் கூறுகிறான். வானரப் படை இராம நாமம் கூறச் சம்பாதிக்கு முன்பு இழந்த இறக்கை முளைக்கிறது. இலங்கை செல்லக் கடலைக் கடப்பது யார் என்ற பிரச்சனை ஏற்படுகிறது. சாம்பவான் அனுமனின் பேராற்றலைக் கூறுகிறான். அனுமன் இலங்கை செல்ல உடன்பட்டு மயேந்திர மலை உச்சியை அடைந்து கடலைக் கடக்க விஸ்வரூபம் எடுக்கிறான். இத்துடன் கிட்கிந்தா காண்டம் நிறைவடைகிறது.

3.3.5 சுந்தர காண்டம் (அனுமனின் தூது) சுந்தர காண்டம் என்ற பெயர் குறித்து அறிஞர்கள் பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்தி உள்ளனர். இதற்கு முன்பு உள்ள காண்டங்களில் பால காண்டம் இராமனது இளைய பருவத்தால் பெயர் பெற்றது. ஏனையன இடத்தால் பெயர் பெற்றன. அதே போல் சுந்தர காண்டத்திற்கும் இடத்தால் பெயர் இட்டிருக்க வேண்டும். இட்டிருந்தால் இலங்கைக் காண்டம் என்ற பெயர் இருந்திருக்கும்.

சுந்தர காண்டம் என்ற பெயருக்கான காரணங்கள் வருமாறு:

1) ஏனைய காண்டங்களின் கதையை விடச் சுந்தர காண்டத்தின் கதை சுவை அழகு மிக்கதாய் உள்ளது.

2) அனுமனின் பெருமையை விளக்கும் அழகிய பாடல்களைக் கொண்டது.

3) அனுமனுக்குச் சுந்தரன் என்ற பெயர் உண்டு. அனுமன் பற்றிய நிகழ்ச்சிகளையே பெரிதும் விவரிப்பதால் இக்காண்டம் சுந்தர காண்டம் என அவன் பெயராலேயே அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

4) இராமன், சீதை இருவருடைய அழகு இக்காண்டத்தில் இனிதாகக் கூறப்பட்டுள்ளது.

5) இராமன் சீதை இருவரின் பிரிவு நிலையில் நுகரப் பெறும் துன்பச் சுவை, இக்காண்டத்தில் கவிதை அழகுடன் பாடப்பட்டுள்ளது. இவ்வாறாகச் சுந்தர காண்டத்தின் பெயர்க் காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் அனுமன்

சீதையைத் தேடி அனுமன் இலங்கை நகரத்தை வந்து அடைகிறான். பல்வேறு இடங்களில் சீதையைத் தேடுகிறான். அசோக வனத்தில் துயரமே உருவாகச் சீதை காட்சி அளிக்கிறாள். அங்கு இராவணன் வருவதையும் அவனைக் கண்டு சீதை உடல் நலிவதையும் அனுமன் இருகண்களால் காண்கிறான். சீதை உயிர்விடத் துணிந்தபோது அனுமன் இராம நாமத்தைக் கூறிக் காக்கிறான். பின் இராமன் தந்த அடையாள மோதிரத்தைச் சீதையிடம் அளிக்கிறான். சீதை மகிழ்கிறாள். பின்பு சீதையிடம் இருந்து அடையாளமாகச் சூளாமணியைப் (ஓர் அணி) பெற்றுக் கொண்டு அசோக வனத்தை அழிக்கிறான். இராவணனுக்குப் புத்திமதி கூறுகிறான். இறுதியில் அனுமன் வாலில் தீயிட, அத்தீயால் இலங்கையை அழித்துத் திரும்பி, இராமனிடம் சீதையைக் கண்டதைக் கூறுகிறான். இக்கதை நிகழ்வோடு சுந்தர காண்டம் நிறைவு பெறுகிறது.

3.3.6 யுத்த காண்டம் (இராமனும் இராவணனும் போரிடல்) இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே நிகழும் போர் நிகழ்ச்சிகளை விவரிப்பது யுத்த காண்டம். போர் மூளும் சூழலில் இராவணன் மந்திராலோசனை நிகழ்த்துகிறான். அதுபோது வீடணன் (இராவணன் தம்பி) அறவழி எடுத்துக் கூறுகிறான். அதனை மதியாத இராவணன் வீடணனை நாடு கடத்துகிறான்.

போர் நிகழ்ச்சி

இராமன் வீடணனுக்கு அடைக்கலம் தருகிறான். இராமன் கடலில் பாலம் இட்டு இலங்கையை அடைகிறான். முதல் நாள் போர் நிகழ்கிறது. இதில் இராவணன் தோற்று அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கிறான். இதனைக் கண்ட இராமன் “இன்று போய் நின் துணையோடு நாளை வருக” என்று அனுப்புகிறான். மானம் இழந்து வெறுங்கையோடு இலங்கை மீண்ட இராவணன் தன் தம்பி கும்பகருணனைப் போருக்கு அனுப்புகிறான். கும்பகருணனும் போரில் இறக்கிறான். இதனைத் தொடர்ந்து பல படைத்தலைவர்கள் போரில் மாள்கின்றனர்.

வீரமும் களத்தே போட்டு….

அடுத்து இந்திரசித்து களம் புகுகிறான். இவன் இராவணனின் மகன். இந்திரசித்து பிரமாத்திரத்தை (ஆற்றல் மிக்க அம்பு) விட்டு இலக்குவன் முதலியோரை வீழ்த்துகிறான்.

இலக்குவன் மயக்கம்

இதனைக் கண்ட இராமன் சோர்ந்து வீழ்கிறான். வீடணனால் மயக்கம் தெளிந்த அனுமன் மருத்து மலையைக் கொண்டு வர அனைவரும் உயிர் பெறுகின்றனர்.

மருத்து மலை

இந்திரசித்து இலக்குவனோடு போர் புரிந்து உயிர் துறக்கிறான். புத்திர சோகம் இராவணனையும் அவன் மனைவி மண்டோதரியையும் வாட்டுகிறது. இறுதியில் இராம இராவண யுத்தம் நிகழ்கிறது. இராமன் அயன் படையை (பிரம்மன் அம்பு) விடுக்க இராவணன் மாய்கிறான். வீடணனுக்கு முடிசூட்டி இலங்கைக்கு அதிபதி ஆக்குகிறான் இராமன்.

அக்கினிப் பிரவேசமும் முடி சூடலும்

சீதை தன் கற்பு நெறியை நிரூபிக்க அக்கினிப் பிரவேசம் செய்கிறாள். இடையில் இராமன் குறித்த காலத்தில் வராததை அறிந்து பரதன் அக்கினிப் பிரவேசம் செய்து உயிர் விட எண்ணுகிறான். அனுமன் விரைந்து சென்று இராமன் வருகையைச் சொல்கிறான். நிறைவாக இராமனுக்கு முடி சூட்டப் பெறுகிறது. இவ்வாறு முடி சூட்டுவதோடு காப்பியம் இனிதே நிறைவடைகிறது.

3.4. தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை கம்பராமாயணம் பற்றிக் காப்பிய அறிமுக நிலையில் சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்க்கை வரலாற்றை முழுவதும் அறிந்திருப்பீர்கள். கம்பர் பற்றி வழங்கும் கதைகள் மற்றும் அவர் இயற்றிய நூல்களைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

கம்பர் வாழ்ந்த காலத்தை அறிந்திருப்பீர்கள்.

தென்னிந்திய மொழிகளில் இராமாயணம் இயற்றப்பட்ட வரலாற்றை அறிந்திருப்பீர்கள்.

பண்டைய தமிழ் இலக்கியங்களில் இராமாயணம் பற்றிய நிகழ்ச்சிகள் எவ்வாறு பதிவாகி உள்ளன என்பதைத் தெரிந்திருப்பீர்கள்.

கம்பராமாயணக் காப்பிய அமைப்பும் ஒவ்வொரு காண்டத்தில் உள்ள கதை அமைப்பும் பற்றி அறிந்திருப்பீர்கள்.

பாடம் - 4

கம்பரின் கவிநயம்

4.0 பாட முன்னுரை

கவிஞர் என்பவர் கலை உலகின் படைப்புக் கடவுள்; பிரம்மா. படைப்புக் கடவுளையும் மிஞ்சிய அழியாத சிற்பங்களை உருவாக்கிய கலைஞர். காரணம்: பிரம்மன் படைத்த உயிர்களுக்கு எல்லை உண்டு; இறுதி உண்டு. மாபெரும் கவிஞர்கள் கவிதைகளில் படைக்கும் உயிர்களுக்கு எல்லை இல்லை; இறுதி இல்லை. இதனால்தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்,

அயன்படைப் பினையும் திருத்தி

அழகு செய்திடுவோன்

(அயன் = பிரம்மன்; படைப்பு = உயிர்களை உருவாக்குதல்)

என்று கம்பரைப் புகழ்ந்துள்ளார். பிரம்மன் படைப்புகளையும் திருத்தி அழகு செய்பவர் கம்பர் என்பது இப்பாடலின் பொருள். கம்பரின் புலமைச் சிறப்பை உணர்ந்த அறிஞர் பெருமக்கள் பலவாறு பாராட்டி மகிழ்ந்து உள்ளனர்.

“கல்வியில் பெரியன் கம்பன்”

“கவிச்சக்கரவர்த்தி கம்பன்”

“கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்”

“விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்”

முதலான தொடர்கள் எல்லாம் கம்பர் புலமையைப் பாராட்டி எழுந்தவையே; இவை பல நூற்றாண்டுகளாக வழங்கப்பட்டு வருபவை.

விண்ணமுதின் சுவை கெடுத்த

கம்பன் பாடல்

(விண்ணமுது – தேவர்களின் அமிர்தம்)

என்று நாமக்கல் கவிஞர் கம்பர் கவிதையைப் பாராட்டுகிறார்.

வானவரின் அமுதத்தை விடக் கம்பர் கவி சுவை நிறைந்தது. இத்தகு சுவை மிகுந்த கம்பர் கவி நயத்தை, இந்தப் பாடம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இப்பாடத்தின் முதல் பகுதி கம்பரும் உலகக் கவிஞர்களும் எவ்வாறு கவிதையில் ஒன்றுபடுகின்றனர் என்பதை விவரிக்கிறது. இரண்டாம் பகுதி கம்பராமாயணக் கவிச்சுவையை விவரிக்கிறது.

4.1 கம்பரும் உலகக் கவிஞர்களும்

கம்பராமாயணம் உலக இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்க கவிதை வளம் மிக்கது. உலக இலக்கியங்களாகக் கருதத்தகும் இலக்கியங்களோடு கருத்து அளவிலும் கவிதை அளவிலும் நெருங்கிய தொடர்பு உடையது. கம்பன் கவிதையுடன் ஒரு சில உலகக் கவிஞர்களின் கவிதையை இணைத்துப் பார்ப்பதாக இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அவை,

கம்பரும் ஹோமரும்

கம்பரும் ஷேக்ஸ்பியரும்

கம்பரும் ஸ்பென்சரும்

கம்பரும் மில்டனும்

4.1.1 கம்பரும் ஹோமரும் ஹோமர் கிரேக்கக் கவிஞர். இலியட் (Iliad), ஒடிஸி (odyssey) என்னும் இரு காப்பியங்களை இயற்றியவர். இவருடைய காலம் கி.மு. 1200க்கும் கி.மு. 700க்கும் இடைப்பட்டது. ஹோமர் கண்ணிழந்தவர். இவர் ஒரு பாணர். ஊர் ஊராகச் சென்று லயர் (Lyre) என்ற ஐரோப்பிய யாழில் வாசித்தபடி இந்தக் காப்பியங்களைப் பாடினார் என்று கூறுவர். இவருக்குப் பின்னால் வந்த புலவர்களுக்கு எல்லாம் ஹோமரின் காப்பியங்கள் வற்றாத இலக்கியக் களஞ்சியங்களாகப் பயன்பட்டன. பண்டைய கிரேக்கர்களுடைய வரலாற்றின் பெரும் பகுதியை அறிவதற்கு இவருடைய காப்பியங்களே பெரிதும் துணை செய்கின்றன.

ஒற்றுமை

ஹோமருக்கும் கம்பருக்கும் பல்வேறு வகைகளில் ஒற்றுமை உண்டு. கவிதைகளில் காப்பிய அடிப்படையிலும், சுவை அடிப்படையிலும் ஒற்றுமை உண்டு. இருவரையும் ஒப்பிட்டுக் கம்பனும் ஹோமரும் என்னும் தலைப்பில் ஆ.ரா. இந்திரா எழுதிய நூலை இங்குக் குறிப்பிடலாம்.

ஹெலனும் சீதையும்

காப்பியத்தின் கதை அமைவதற்குரிய சில அடிப்படை நிகழ்ச்சிகள் இலியட்டிலும் இராமாயணத்திலும் ஒன்று போலவே அமைந்துள்ளன. ஸ்பார்ட்டா நகரத்து மன்னனான மெனிலேயஸின் மனைவி ஹெலன் என்பவள். ட்ராய் நகரத்து மன்னனின் மகன் பாரிஸ் என்பவன். இவன் ஹெலனின் அழகைக் கேள்விப்பட்டு அவளைக் கவர்ந்து செல்கிறான். ஹெலனை மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் கிரேக்கர்கள் ஆகமெம்னான் என்பவன் தலைமையில் ட்ராய் நகரை முற்றுகை இடுகிறார்கள். கிரேக்கர்களுக்கும் ட்ரோஜர்களுக்கும் போர் நிகழ்ந்ததற்கு முக்கியக் காரணம் அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து சென்றமைதான். இராவணன் சூர்ப்பணகை மூலம் சீதையின் அழகைக் கேள்விப்படுகிறான். சூழ்ச்சி செய்து இராமனிடம் இருந்து சீதையைக் கவர்ந்து வருகிறான். இராம இராவண யுத்தத்திற்கும் அடிப்படைக் காரணம் அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து சென்றமையே.

ஹெக்டரும் கும்பகர்ணனும்

பாரீஸ் செய்த தகாத செயலை அவன் மூத்த சகோதரன் ஹெக்டர் ஒப்புக் கொள்ளவில்லை. பாரீஸைக் கடிந்து சினந்து கொள்கிறான். “பெண்பித்தா! நெடுந்தொலைவில் இருந்து ஒரு பெண்ணைக் கவர்ந்து கொண்டு வந்தாயே! ஒரு வீரனின் மனைவியைக் கவர்ந்து கொண்டு வந்தாயே! இதனால் உன் தந்தைக்கும், அவர் நாட்டிற்கும், ஏன் நம் அனைவருக்குமே எவ்வளவு சீரழிவு தெரியுமா? உனக்கு எவ்வளவு தலைக்குனிவு……! பெண்பித்தா, நீ பிறவாமலேயே இருந்திருக்கலாம்” என்று கடிந்து உரைக்கிறான்.

இராவணன் செயலை அறிந்த அவன் தம்பியாகிய கும்பகர்ணனும் ஹெக்டரைப் போல்தான் செயல்படுகிறான். இராவணனைப் பார்த்து,

சிட்டர் செயல் செய்திலை

குலச் சிறுமை செய்தாய்

(கம்ப. யுத்த காண்டம், இராவணன் மந்திரப்படலம், 53.)

(சிட்டர் = பெரியோர்),

என்று சினந்து கூறுகிறான்.

“பெரியோர் செய்யும் செயலை நீ செய்யவில்லை. நம் குலத்திற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தினாய்” என்று கடிந்து உரைக்கிறான். “பேசுவது மானம்; இடையே பேணுவது காமம்” என்று கோபப்படுகிறான்.

ஆன்டெனரும் இந்திரசித்தும்

கிரேக்கர்களுக்கும் ட்ரோஜர்களுக்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இருசாராரும் தனித்தனியே மந்திராலோசனை நடத்துகின்றனர். ட்ரோஜர்களிடையே ஒருவிதமான பதட்டமும் குழப்பமும் நிலவுகின்றன. அப்போது ஆன்டெனர் என்னும் சிந்தனையாளன் அனைவரையும் பார்த்துப் பேசத் தொடங்குகிறான். “எல்லாரும் சற்றுக் கவனியுங்கள். என்னுடைய ஆன்மா என்னைச் சொல்லும்படி கட்டளை இட்டுள்ளது. இப்போதே ஹெலனையும் அவளுடன் கொண்டு வந்த செல்வத்தையும் கிரேக்கர்களுக்குத் திரும்ப அளித்து விடுவோம், அதுதான் செய்யத்தக்கது. சத்தியத்திற்கு எதிராக நாம் போரில் ஈடுபடுவது முறையா? செய்யத்தக்க இதைச் செய்தல் தவிர வேறு எந்த வகையிலும் நமக்கு நன்மையில்லை” என்று கூறுகிறான். இதனைக் கேட்ட பாரீஸ் வெகுண்டு உரைக்கிறான். ஹெலனை விட முடியாது என்று முழங்குகிறான்.

இதுபோன்ற ஒரு காட்சி இராமாயணத்திலும் வருகிறது. இந்திரசித்து இராவணனின் மகன், சீதையை விடுமாறு வேண்டுகிறான்.

…….ஆசை தான்அச்

சீதைபால் விடுதி யாயின்

அனையவர் சீற்றம் தீர்வர்

போதலும் புரிவர் செய்த

தீமையும் பொறுப்பர் உன்மேல்

காதலால் உரைத்தேன் என்றான்

உலகுஎலாம் கலக்கி வென்றான்

(கம்ப. யுத்த காண்டம், இந்திரசித்து வதைப் படலம், 9.)

(சீற்றம் = சினம்; விடுதி = விட்டு விடுவாய்; போதல் = செல்லுதல்; காதலால் = அன்பால்)

“தந்தையே! உன்மேல் உள்ள அன்பால் உரைக்கிறேன் கேட்பாயாக! சீதை மீது நீ கொண்ட ஆசையை ஒழித்து அவளை விட்டுவிட்டால் அவர்கள் சினம் தணிவார்கள்; நீ செய்த தீமையையும் பொறுத்துக் கொள்வார்கள்; இலங்கையை விட்டும் நீங்கிச் செல்வார்கள்” என்று கூறுகிறான். இதனைக் கேட்ட இராவணன்

யாக்கையை விடுவது அல்லால்

சீதையை விடுவது உண்டோ

(கம்ப. யுத்த காண்டம், இந்திரசித்து வதைப் படலம், 9.)

(யாக்கை = உடல் / வாழ்க்கை)

“உயிரை விட்டு மடிவேனே தவிரச் சீதையை விடுவேனோ” என்று கடிந்து உரைக்கிறான்.

இவ்வாறாகக் கம்பனுக்கும் ஹோமருக்கும் பல்வேறு ஒற்றுமைகளைப் பார்க்க முடிகிறது. கதை அமைப்பிலும் கவிதைச் சுவையிலும் இந்த ஒற்றுமைகளைப் படித்து மகிழலாம்.

4.1.2 கம்பரும் ஷேக்ஸ்பியரும் இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியர். கி.பி. 1564 முதல் 1616 வரை வாழ்ந்தவர். ஷேக்ஸ்பியர் சிறந்த நாடக ஆசிரியர். 37 நாடகங்களை இயற்றியவர். உலகக் கவிஞர்கள் காலம் கடந்து ஒன்றுபடுபவர்கள். இனம், மொழி, நாடு, எல்லை கடந்து ஒன்றுபடுபவர்கள். இலக்கிய வடிவம் வேறுபட்டாலும், கருத்தாலும் சிந்தனையாலும் ஒன்றுபடுவர். கம்பருக்கும் ஷேக்ஸ்பியருக்கும் உள்ள இலக்கிய ஒற்றுமைகளைக் கம்பனும் ஷேக்ஸ்பியரும் என்னும் நூலில் எஸ். இராமகிருஷ்ணன் விவரித்துள்ளதைப் படித்து மகிழ முடியும்.

கூனியும் இயாகோவும்

தயரத மன்னனின் மனைவியாகிய கைகேயியின் சூழ்ச்சியே இராமாயண நிகழ்ச்சியின் மெய்யான தொடக்கம். அவள் மனம் மாறி இராமனைக் கானகத்திற்கு அனுப்புகிறாள். தயரதன் மரணம் அடைகிறான். அயோத்தியை அவலம் சூழ்கிறது.

இதே போல் ஒத்தெல்லோ நாடகத்தில் வரும் தலைவனும் கைகேயியை ஒத்தே காணப்படுகிறான். கைகேயியின் மனத்தை மாற்றக் கூனி வருவது போல் ஒத்தெல்லோவின் மனத்தை மாற்ற இயாகோ வருகிறான்.

“இராமனைப் பெற்றெடுத்த எனக்கு இடர் உண்டோ” என்று எண்ணும் நல்லவள் கைகேயி. இராமனைத் தன் மகனாகப் பெறாவிட்டாலும் பெற்ற தாய் போல் விளங்கியவள்; இராமனை வளர்த்தவள். இராமன் முடி சூட்டு விழாவை எண்ணி மகிழ்ந்து கொண்டிருப்பவள். அப்படிப்பட்டவளின் முன் கூனி தோன்றுகிறாள்.

இன்னல்செய் இராவணன் இழைத்த

தீமைபோல்

துன்னரும் கொடுமனக் கூனி

தோன்றினாள்

(கம்ப. அயோத்தியா காண்டம், மந்தரை சூழ்ச்சிப் படலம், 48.)

(இன்னல் = கேடு; இழைத்த = செய்த; துன்னு = நெருங்கு)

கேடுகளைச் செய்பவனான இராவணன் செய்த கொடுமைகள் எல்லாம் ஒன்றாகத் திரண்டு வந்தால் எப்படியிருக்குமோ, அதைப் போல் கூனி வந்தனள். அவள் தீமை செய்யும் கொடிய மனத்தினை உடையவள் என்று குறிப்பிடுகிறார் கம்பர்.

ஒத்தெல்லோ நாடகத்தில் கூனியைப் போன்ற குணம் உடையவனாக இயாகோ படைக்கப்பட்டுள்ளான். ‘சாத்தானை நினைத்தால் உடனே தோன்றுவான்’ என்பது பழமொழி. கடவுள் எண்ணியவுடன் தோன்றார். இதேபோல் எமிலியா (இயாகோவின் மனைவி) நினைத்தவுடனே இயாகோ தோன்றுகிறான்.

ஒத்தெல்லோவின் மனைவியாகிய டெஸ்டிமோனா தன் கைக்குட்டையை இயாகோவிடம் கொடுக்கிறாள். அக்கைக்குட்டை, ஒத்தெல்லோ அன்புடன் தன் மனைவிக்குக் கொடுத்தது. கைக்குட்டையை வைத்தே இயாகோ டெஸ்டிமோனாவின் நடத்தைக்குக் களங்கம் கற்பிக்கிறான். அவளுக்கு ஆசை நாயகன் உண்டென்று கலகம் உண்டாக்குகிறான். வெள்ளை உள்ளம் கொண்ட ஒத்தெல்லோ, கூனியால் கைகேயி மனம் மாறுவதைப் போல மனம் மாறுகிறான். டெஸ்டிமோனாவை வாழ்வின் உயிர் மூச்சாகக் கருதும் ஒத்தெல்லோ இறுதியில் அவள் கழுத்தை நெரித்துக் கொலை செய்கிறான்.

இவ்வாறு கதைமாந்தர் படைப்புகளிலும் பிற பல்வேறு நிலைகளிலும் கம்பனும் ஷேக்ஸ்பியரும் ஒத்து விளங்குவதை அறிய முடிகிறது.

4.1.3 கம்பரும் ஸ்பென்சரும் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர் தாம் எழுதிய காப்பியத்திற்குப் பன்னிரண்டு விருத்தங்களில் தற்சிறப்புப் பாயிரம் (நூலுக்கான முன்னுரை) பாடி உள்ளார்.

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் ஸ்பென்சர். இவர் எழுதியது ஃபேரி க்வீன் (Fairie Queen) என்ற நூல். இது தமிழில் தேவதை அரசி என்று பொருள்படும். இவர் பன்னிரண்டு காண்டங்கள் எழுதத் திட்டமிட்டு ஏழாம் காண்டம் எழுதத் தொடங்கிய நேரத்தில் இறந்துவிட்டார். இவர், முதல் காண்டத்திற்குச் செய்திருக்கும் ஒன்பது அடிச் செய்யுள்கள் நான்கும் தற்சிறப்புப் பாயிரமாக அமைந்துள்ளன.

ஒற்றுமை

கம்பருடைய தற்சிறப்புப் பாயிரமும், ஸ்பென்சருடைய தற்சிறப்புப் பாயிரமும் ஒப்பிலக்கிய நோக்கில் ஒற்றுமை பெற்றுத் திகழ்கின்றன. காலம், நாடு, மொழி, பண்பாடு இவற்றால் வேறுபட்டிருந்தும் இப்புலவர்கள் இலக்கியத்தால் ஒன்றுபட்டு உள்ளனர்.

கம்பரின் கடவுள் வாழ்த்து

கம்பர் வைணவச் சமயம் சார்ந்த ஒரு காப்பியத்தைப் படைத்தாலும் தற்சிறப்புப் பாயிரத்தில் கடவுளைப் பொதுவாகத்தான் சுட்டுகிறார். உலகை உருவாக்குவதும், அதனை நிலைப்படுத்துவதும், அதனை அழிப்பதும் ஆகிய செயல்களைச் செய்யும் இறைவனுக்கு வணக்கங்கள் என்று கூறுகிறார் கம்பர்.

ஸ்பென்சரின் கடவுள் வாழ்த்து

இதே போன்று ஸ்பென்சரும் பொதுக் கடவுளைப் பாடி உள்ளார். கிரேக்க ரோமானிய இலக்கிய மரபில் கலை இலக்கியங்களுக்கு ஒன்பது தெய்வங்கள் உண்டு. அவற்றில் தலைமை உடையதும் கவிதைக்குரியதும் ஆன க்ளியோ என்ற தெய்வத்தைக் காப்புச் செய்ய அழைக்கிறார் ஸ்பென்சர். தாம் சார்ந்திருந்த கிறித்துவ சமயக் கடவுள் எதனையும் காப்புச் செய்ய அழைக்கவில்லை என்பது திறனாய்வாளர்கள் கருத்து.

நன்றிக் கடன்

கம்பர், தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைக் காப்பியம் நெடுகிலும் பாடி உள்ளார். அதே போல் ஸ்பென்சர் தனக்கு அயர்லாந்து நாட்டில் உயர்ந்த பதவி அளித்து ஆதரித்த முதலாம் எலிசபெத் ராணியை நன்றியோடு பாடி உள்ளார். ராணி சூரியனை ஒத்த பார்வையால் தன்னைக் காத்து உயர்த்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

அவையடக்கம்

கம்பரும் ஸ்பென்சரும் அவையடக்கமாகத் தங்களைத் தாழ்த்தியும், தாம் நூல் எழுதுவதை உயர்வாகவும் கருதிப் பாடி உள்ளனர்.

பூனையும் பாற்கடலும்

ஒரு பூனையானது, பாற்கடல் முழுவதையும் தன் நாவால் நக்கிக் குடித்து விட எண்ணுவது போல, ராமகாதையைப் பாடத் தான் ஆசைப்பட்டதாகக் கம்பர் கூறுகிறார்.

புல்லாங்குழலும் ட்ரம்ஸட்டும்

ஸ்பென்சர், இடையர்கள் பற்றிச் சிறு கவிதைகளைச் செய்த தான் பேரிக்வீன் என்னும் பெரிய காப்பியத்தைச் செய்யத் தகுதியற்றவர் என்று பாடுகிறார். சிறு நாணலில் புல்லாங்குழல் வாசித்த தான், பெரிய ட்ரம்ஸட் வாசித்தல் போல ஆசைப்பட்டதாகவும் பாடியுள்ளார்.

இவ்வாறு கம்பரும் ஸ்பென்சரும் கால, நில, மத வேறுபாடுகளைக் கடந்து கலை இலக்கியத்தால் ஒன்றுபடுவதை அறிய முடிகின்றது.

4.1.4 கம்பரும் மில்டனும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் மில்டன். இவர் இயற்றியதே சுவர்க்க நீக்கம் (Paradise Lost) என்னும் காப்பியம் ஆகும். உலக இலக்கியங்களில் சுவர்க்க நீக்கம் புகழ் பெற்ற காப்பியமாகப் போற்றப்படுகிறது. மனிதனின் வீழ்ச்சி என்ற நிகழ்ச்சியைப் பொருளாகக் கொண்டது இக்காப்பியம். வேறு வேறு காலங்களில் வாழ்ந்திருந்தாலும் கம்பரும் மில்டனும் காவியத்தால் ஒன்றுபடுகின்றனர்.

ஒற்றுமை

இருவருடைய நூல்களிலும் பாயிரம் அமைந்துள்ளது. மில்டனின் காப்பியம் இரண்டாவதாக ஒரு பாயிரத்தையும் கொண்டுள்ளது. இது சுவர்க்க நீக்கத்தின் ஒவ்வோர் உட்பகுதிக்கும் முன்னுரையாக அமைந்துள்ளது. இருவர் காப்பியங்களிலும் கடவுள் வாழ்த்து இடம் பெற்று உள்ளது. மில்டன் கிறித்துவச் சமயத்தின் பரிசுத்த ஆவியை வணங்குகிறார். கம்பர் சடையப்ப வள்ளலைப் போற்றுவது போலவே, மில்டன் ஆண்ட்ரூ மார்வல் என்பவரைப் போற்றி உள்ளார்.

சுவர்க்க நீக்கம்

நரகில் சிறைப்பட்ட சாத்தான் கூட்டத்தினர் உணர்வு பெற்று எழுகின்றனர்; ஒன்று கூடுகின்றனர். மனிதனின் வீழ்ச்சியைத் திட்டமிடுகின்றனர். இவ்வாறான சதி ஆலோசனையே சுவர்க்க நீக்கத்தின் கதைத் தொடக்கமாக அமைகின்றது. சாத்தான் மனிதனை வீழ்ச்சி அடையச் செய்கிறான். இது கதைப் போக்கில் நெருக்கடியான சூழலை உண்டாக்குகிறது. இறைவன் தன் குமாரன் மூலம் தீயவர்களைத் தண்டிக்கிறார். இது கதையின் இறுதிப் பகுதி. இவ்வாறு சுவர்க்க நீக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

கம்பராமாயணம்

இராவண வதமே இராமாயணத்தின் கதைப் பொருள் ஆகும். இக்கதைப் பொருளின் தொடக்கம் சூர்ப்பணகை சூழ்ச்சி மூலம் தொடங்குகிறது. ஆனால் இதற்கும் முன்பே இராம அவதாரம், இராமன் சீதை திருமணம், இவர்கள் வனவாசம் மேற்கொள்ளல் ஆகிய நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சீதையை இராவணன் கவர்ந்து செல்வது கதையில் நெருக்கடியைத் தோற்றுவிக்கிறது. இராவணன் வதம் கதையின் இறுதிப் பகுதி.

இராவணனும் சாத்தானும்

இரண்டு காப்பியங்களிலும் இராவணனும் சாத்தானும் எதிர்நிலைப் பாத்திரங்களாக அமைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இவர்கள் இருவரையும் தீமைக்கே உரிய பாத்திரங்களாகக் கவிஞர்கள் படைக்கவில்லை. நல்ல பண்புகளும், தீய பண்புகளும் அமையப் பெற்றவர்களாகவே படைத்துள்ளனர்.

இராவணனின் இயல்பு

இராவணனும் அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தவன், பெருவீரன், கயிலை மலையைத் தன் கைகளால் தூக்கியவன். ஆயிரம் மறைகளை உணர்ந்தவன். நாரதரே பாராட்டும்படி இசைக்கலையில் தேர்ச்சி பெற்றவன். சீதையிடம் கொண்ட முறையில்லாத காமம் அவனது அழிவிற்கு வித்தாகிறது. காமம் அவன் மானத்தை அழித்தது.

சாத்தானின் இயல்பு

சாத்தான், தன் நிலையிலிருந்து ஒரு படி உயர்ந்தால் இறைவனுடைய நிலையை அடைய முடியும். ஆனால் செருக்கும், கேவலமான ஆசையும் அவனுடைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. சாத்தான் மாவீரன்; அறிவும் ஆண்மையும் நிரம்பியவன்; அன்புள்ளம் கொண்டவன். தன்னோடு நரகில் வீழ்ந்தவர்களைக் கண்டு கண்ணீர் வடித்தான். இத்தகைய இயல்புடைய சாத்தானின் செருக்கும், ஆசையும் அவனை அழித்தன.

இவ்வாறு பல்வேறு நிலைகளில் கம்பரும் மில்டனும் காவியத்தால் ஒன்றுபட்டு விளங்குவதை அறியமுடிகிறது.

4.2 கம்பரின் கவித்திறன்

ஓர் இலக்கியம் காலத்தை வென்று வாழ்வதற்குக் காரணம் அதன் கவிதைப் பண்பு என்று கூறுவர். இலக்கியத்தின் பாடு பொருளும் நோக்கமும் காரணங்கள்தாம். என்றாலும் இவற்றையும் தாண்டிக் கவிதைப் பண்புகள் தலைமைக் காரணங்கள் ஆகின்றன. கம்பராமாயணம் காலம் கடந்து வாழ்வதற்குக் கதை மட்டுமே காரணம் அன்று. அக்கதையைச் சொன்ன விதமும் காரணம் ஆகும். கவிதைப் பண்பு சிறக்க அமைவதற்குத் தேர்ந்த சொல்லாட்சி ஒரு காரணம். இனிய ஓசை நயம் இன்னொரு காரணம். வளமான கற்பனை பிறிதொரு காரணம். கற்பனை விரியும் வருணனைகள், உவமைகள், உணர்ச்சிகள் கவிதையைச் சிறக்கச் செய்யும். செய்யுளுக்கு உரிய அணிநலன்கள் கவிதைக்கு மெருகு சேர்க்கும். இவை யாவும் கம்பரின் கவிதையில் உண்டு. எனவே தான் கம்பர் கவித்திறன் கற்றவரால் பாராட்டப் பெறுகிறது. கம்பரின் கவிப்பண்பை விளக்குவதே இப்பகுதியின் நோக்கம்.

4.2.1 சொல்லாட்சி கவி புனையும் கம்பரிடம் தமிழ்ச் சொற்கள் ஓடி வந்து எம்மையும் கவிதையில் சேர்த்து விடு, சேர்த்து விடு என்று கெஞ்சுமாம். இவ்வாறு ஒரு நாட்டுப்புற வழக்கு உண்டு. கம்பரின் கவிதையில் சொற்சேர்க்கை உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. இடத்திற்கும், சூழலுக்கும், காலத்திற்கும் தக்கவாறு சொற்கள் கவிதையில் அமைந்த விதம் படித்து இன்பம் அடைவதற்கு உரியது.

‘கைவண்ணம்’ என்னும் சொல்

கம்பர் வண்ணம் என்ற சொல்லை வேறுவேறு பொருள்களில் கையாண்டு ஒரு கவிதையைப் புனைந்துள்ளார். இச்சொல்லை வைத்தே பாதி இராமாயணக் கதையைக் கூறி முடித்து விடுவதாக அறிஞர்கள் கூறுவர். அப்பாடல் வருமாறு:

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்

இனிஇந்த உலகுக் கெல்லாம்

உய்வண்ணம் அன்றி மற்றோர்

துயர்வண்ணம் உறுவது உண்டோ

மைவண்ணத்து அரக்கி போரில்

மழைவண்ணத்து அண்ண லேஉன்

கைவண்ணம் அங்குக் கண்டேன்

கால்வண்ணம் இங்குக் கண்டேன்

(கம்ப. பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.)

(இவ்வண்ணம் = இப்படி; நிகழ்ந்த வண்ணம் = நிகழ்ந்தபடி; உய்வண்ணம் = உய்யும் வழி; துயர்வண்ணம் = துன்பம்; மைவண்ணம் = கருநிறம்; மழைவண்ணம் = மேக நிறத்தை ஒத்த கரிய நிறம்; கைவண்ணம் = கையின் திறமை; கால் வண்ணம் = காலின் திறம்)

இராமனுடைய திருவடி பட்ட அளவில் கல்லாகக் கிடந்த அகலிகை உயிர் பெற்ற பெண்ணாக மாறுகிறாள்; சாப விமோசனம் பெறுகிறாள். அதனைக் கண்ட விசுவாமித்திர முனிவர் இராமனைப் புகழ்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. “கரிய நிறத்தை உடைய இராமனே! இனி இந்த உலகிற்குத் துன்பம் உண்டோ? நின் வில் ஆற்றலால் தாடகை என்ற அரக்கி மாண்டாள். உன் கைத்திறமையை அங்குப் பார்த்தோம். உன் பாதம் பட்டவுடன் அகலிகை உயிர் பெற்று எழுந்தாள். உன் காலின் திறமையை இங்குப் பார்த்தோம்” என்று விசுவாமித்திரர் இராமனைப் புகழும் பாடலில் வண்ணம் என்ற ஒரு சொல் நிறம், திறம் (திறமை) என்னும் இரு பொருளில் திரும்பத் திரும்ப வந்து கவிதையைச் சிறப்படையச் செய்துள்ளதைப் படித்து மகிழலாம்.

மையோ மரகதமோ (இராமனின் அழகு)

கம்பரே சொற்கள் கிடைக்காமல் தடுமாறிய இடம் உண்டு. இவ்வாறு சொன்னால் நம்ப முடிகிறதா? இராமன் அழகைக் கம்பர் வருணிக்கிறார். கவிதையால் வடிக்க இயலாத அழகு இராமனின் அழகு. இராமனின் அழகுக்குப் பல உவமைகளை வரிசையாகக் கூறுகிறார். என்றாலும் அந்த அழகை வார்த்தைக்குள் கொண்டு வரமுடியவில்லை. இறுதியில் ‘ஐயோ’ என்று கம்பர் மனம் தளருகிறார்.

பாடல் இதோ:

வெய்யோன்ஒளி தன்மேனியின்

விரிசோதியின் மறையப்

பொய்யோஎனும் இடையாளொடும்

இளையானொடும் போனான்

மையோமர கதமோமறி

கடலோமழை முகிலோ

ஐயோஇவன் வடிவுஎன்பதோர்

அழியாஅழகு உடையான்.

(கம்ப. அயோத்தியா காண்டம், கங்கைப் படலம், 1.)

(வெய்யோன் = சூரியன்; சோதி = ஒளி; பொய்யோ எனும் இடையாள் = இருக்கிறதோ இல்லையோ என்று ஐயப்படுவதற்குரிய மிகச் சிறிய இடையை உடைய சீதை; இளையான் = இலக்குவன்; மை = கண்ணில் பூசும் அஞ்சனமாகிய மை; மரகதம் = பச்சைக் கல்; முகில் = மேகம்; வடிவு = உருவம்)

கைகேயி சூழ்ச்சியாலும் வரத்தாலும் இராமன் வனவாசம் (காட்டு வாழ்க்கை) மேற்கொள்கிறான். அயோத்தியை விட்டு நீங்கிக் கானகத்திடையே செல்லும் இராமனின் பேரழகைக் கம்பர் இப்பாடலில் வருணிக்கிறார். சூரியன் ஒளி இராமனின் உடல் ஒளியினால் மறைகிறது. அப்படிப்பட்ட சோதியை உடைய உடம்பினைக் கொண்டவன் இராமன். இவன் சீதையோடும் இலக்குவனோடும் காட்டின் இடையே நடந்து செல்கிறான். அவன் உடம்பின் அழகு புலவரைக் கவர்கிறது. இராமன் அழகினை மை என்று கூறலாமா என்று நினைக்கிறார் புலவர். இல்லை இல்லை அது மரகதக் கல்லுக்குத்தான் உவமை ஆகும் என்று எண்ணுகிறார். மீண்டும் ஐயம் ஏற்படுகிறது. மையும் இல்லை மரகதக் கல்லும் இல்லை, கடல் போன்ற நீல நிறத்தினை உடையவன் என்கிறார். அதிலும் நிறைவடையாது மழை முகில் போன்ற நிறத்தை உடைய அழகன் என நினைக்கிறார். எந்த உவமையிலும் அவன் அழகைக் கூற முடியவில்லை. மனம் சோர்ந்து ஐயோ இவன் உருவம்தான் அழியாத அழகுடையதாக இருக்கிறது என்று கூறுகிறார். கம்பர் இராமன் அழகை வருணிக்கும் சொல்லாட்சி படித்து இன்புறத்தக்கது.

4.2.2 ஓசை நயம் குறிப்பிட்ட சில எழுத்துகளைப் பயன்படுத்தும்போது, ஓசை நயம் தோன்றுகிறது. சான்றாக, மெல்லின எழுத்துகள் மிகுந்து வரும் கவிதை மெல்லிய ஓசையைத் தரும்; மென்மையான சூழலை விளக்க இத்தகு எழுத்துகள் அமைந்த சொற்களை மிகுதியும் பயன்படுத்துவர். அதே போல் போர் முதலிய நிகழ்ச்சிகளை வருணிக்க வல்லெழுத்துகள் மிகுதியாக உள்ள சொற்களைப் பயன்படுத்துவர். வல்லெழுத்து வல்லோசை மிகுந்து, போரின் கடுமையை வெளிப்படுத்தும். இவ்வாறு சூழலுக்குத் தக்கவாறு ஓசை நயம் தோன்றக் கவி பாடுவதில் கம்பர் வல்லவர்.

வஞ்சியென நஞ்சமென வந்த வஞ்சமகள் (சூர்ப்பணகையின் நடையழகு)

அழகிய உருவம் அமைந்த தோற்றத்துடன் சூர்ப்பணகை வருகிறாள். அரக்கி உருவத்தை மறைத்து வஞ்சனை உள்ளத்தோடு வருகிறாள். மிக அழகிய உருவம்; அதே நேரத்தில் வஞ்சக உள்ளம்; இதனைக் கம்பர் தமக்கே உரிய கவித்திறத்துடன் புனைந்துள்ளார்.

பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்

செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியள் ஆகி

அஞ்சொலிள மஞ்ஞைஎன அன்னம்என மின்னும்

வஞ்சிஎன நஞ்சம்என வஞ்சமகள் வந்தாள்

(கம்ப. ஆரணிய காண்டம், சூர்ப்பணகைப்படலம், 31.)

(பஞ்சி = செம்பஞ்சுக் குழம்பு, கை சிவக்கப் பூசப்படும் ஒரு கலவை; ஒளிர் = ஒளிவிடும்; விஞ்சு = மிக்க; குளிர் = குளிர்ச்சி; பல்லவம் = தளிர் / கொழுந்து; செஞ்செவிய = மிகவும் சிவந்த; கஞ்சம் = தாமரை; அம்சொல் = அழகிய / இனிய சொல்; மஞ்ஞை = மயில்; வஞ்சி = பெண் / கொடி; நஞ்சம் = விடம்; வஞ்சம் = வஞ்சனை)

சூர்ப்பணகை நடந்து வருகிறாள்; மின்னல் கொடி போல வருகிறாள்; அன்னம் போல நடந்து வருகிறாள்; இனிமையான சொல்லைப் பேசும் மயில் போல அசைந்து அசைந்து ஒயிலாக நடந்து வருகிறாள்; சிவந்த தாமரை போன்ற பாதங்களை உடைய அவள் நடந்து வருவது போன்ற ஒரு கற்பனையை நம் கண் முன் இப்பாடல் அடிகளே உணர்த்தி விடுகின்றன. மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்! கற்பனையில் உங்கள் முன்னால் ஓர் அழகிய பெண் ஒயிலாக அசைந்து நடந்து வருவது போன்ற ஒரு பாவனை தோன்றுவதை உணர்வீர்கள்.

இவ்வாறு கம்பர் பல்வேறு பாடல்களை ஓசை நயம் தோன்றப் படைத்துள்ளதைப் படித்து மகிழ முடியும்.

உறங்குவாய் உறங்குவாய் (கும்பகர்ணனின் தூக்கம்)

ஓசை நயத்தைப் படித்து இன்புற இன்னும் ஒரு பாடலை எடுத்துக் கூறலாம். யுத்தகாண்டத்தில் முதல் நாள் போரில் இராவணன் தோற்றுத் திரும்புகிறான். தன் தம்பி கும்பகர்ணனைப் போருக்கு அனுப்ப எண்ணுகிறான். எனவே தன் படைவீரர்களுக்குக் கும்பகர்ணனை அழைத்து வருமாறு ஆணையிடுகிறான். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் கும்பகர்ணனைப் படை வீரர்கள் எழுப்புகின்றனர். அவர்கள் கும்பகர்ணனை எழுப்பும் நிகழ்ச்சியைச் சுவை மிக்கதாகக் கம்பர் புனைந்துள்ளார். கும்பகர்ணனைக் கையாலும் தடியாலும் உலக்கையாலும் இடித்து இடித்து எழுப்புகின்றனர்.

இதோ அந்தப் பாடலைப் படியுங்கள்.

உறங்குகின்ற கும்பகன்ன உங்கள்மாய வாழ்வெல்லாம்

இறங்குகின்றது இன்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்

கறங்குபோல வில்பிடித்த காலதூதர் கையிலே

உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்

(கம்ப. யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம், 45.)

(கறங்கு = காற்றாடி; கால தூதர் = எம தூதர்)

உறங்குகின்ற கும்பகர்ணனே! உங்களுடைய மாய வாழ்க்கை இன்றோடு வீழ்ச்சி அடையத் தொடங்குகிறது; இதனை எழுந்து நீ பார்ப்பாயாக; காற்றாடி போல வில் பிடித்த எம தூதர்களின் கையில் நிரந்தரமாகக் கிடந்து இனி உறங்குவாயாக என்பதே இப்பாடலின் பொருள் ஆகும். இந்தப் பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். கைகளாலும் கம்புகளாலும் உலக்கையாலும் குத்திக் குத்திக் கும்பகர்ணனை எழுப்பும் அந்த நிகழ்ச்சியை, இப்பாடலின் ஓசை நயம் பாவனையாக வெளிப்படுத்துவதை உணர முடியும். உலக்கையால் குத்துவது போன்று ஓசை அமைந்துள்ளதை உணர முடியும்.

இவ்வாறான பாடல்கள் பல கம்பராமாயணத்தில் அமைந்துள்ளன. படித்து இன்புறுங்கள்.

4.3 வருணனை

கம்பராமாயணக் காப்பியத்தின் உயிர் நாடியே வருணனைத் திறம்தான். கம்பராமாயணக் கவிதைகள் மிகுதியாகப் புனையப்பட்டதற்கு வருணனையே காரணம். நாடு, நகர், ஆறு, மாலை, காலை, காடு என்று பல்வேறு நிலைகளில் இயற்கை வருணனை ஒருபுறமும், நிகழ்ச்சி வருணனை இடம் பெற்றுள்ளன. இவ்வாறு காப்பியம் முழுவதும் வருணனைகளால் ஆக்கப்பட்டிருப்பதைப் படித்து அறிய முடியும்.

4.3.1 மருத நில வருணனை கோசல நாட்டின் வளத்தைக் கம்பர் வருணிக்கிறார். ஐந்து நிலங்களை (மலை, காடு, வயல், பாலை, கடல்) வருணிப்பது புலவர்களின் மரபு. கம்பர் மருத நில (வயல்) வளத்தைக் கற்பனையோடு வருணித்துள்ளார். மருத நிலத்தில் இயல்பாக உள்ளவை எல்லாம் புலவருக்குக் கற்பனையைத் தூண்டுகின்றன. மருத நிலம் அரசனாகக் கம்பரின் கற்பனையில் உருவாகிறது.

அரசனின் அரியணை

தண்டலை மயில்கள் ஆடத்

தாமரை விளக்கம் தாங்கக்

கொண்டல்கள் முழவின் ஏங்கக்

குவளைகண் விழித்து நோக்கத்

தெண்திரை எழினி காட்டத்

தேம்பிழி மகர யாழின்

வண்டுகள் இனிது பாட

மருதம்வீற் றிருக்கும் மாதோ

(கம்ப. பால காண்டம், நாட்டுப் படலம், 4.)

(தண்டலை = சோலை; விளக்கம் = விளக்கு; கொண்டல் = மேகம்; முழவு = இசைக்கருவி; ஏங்க = ஒலிக்க; குவளை = மலர்; திரை = அலைகள்; எழினி = திரைச்சீலை; தேம்பிழி = பிழிந்து எடுக்கப்பட்ட தேன்; மகரயாழ் = வீணை; மருதம் = நிலம் / நிலமாகிய அரசன்)

மருத நிலம் செழிப்போடு காணப்படுகிறது. கம்பருக்கு அது அரசன் அரியணையில் வீற்றிருப்பதைப் போலத் தோன்றுகிறது. தாமரை மலர்கள் விளக்குகளை ஏற்றி நிற்கின்றன; மேகங்கள் இசைக் கருவிகளை முழக்குகின்றன; மகரயாழ் வாசிப்பது போல வண்டுகள் பாடுகின்றன; நீர் நிலைகளில் எழும் அலைகள் நாடக அரங்கின் திரைச் சீலைகள் போல் காட்சி தருகின்றன; அங்கே மயிலாகிய நாட்டியப் பெண் நடனம் ஆடுகிறாள்; குவளை மலர்கள் ஆகிய விழிகளால் அவையினர் விழித்துப் பார்க்கின்றனர்; இவ்வாறான அரசவையில் மருதமாகிய அரசன் வீற்றிருக்கிறான்.

இவ்வாறாகக் கம்பர் மருத நிலத்தை வருணித்துள்ளார்.

4.3.2 நாட்டு வருணனை பொதுவாக ஒரு நாட்டின் சிறப்பினைக் குறிப்பிடும்பொழுது அல்லது வருணிக்கும்பொழுது, அங்கு எவையெல்லாம் கிடைக்கின்றன என்று பட்டியலிடுவது மரபு. ஆனால், கம்பர் கோசல நாட்டை வருணிக்கும்பொழுது ‘இல்லை இல்லை’ என்று சுட்டியே அதன் பெருமையை மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். இது கம்பரின் கவிதை உத்தி.

இல்லை இல்லை எதுவுமே இல்லை

கோசல நாட்டில் வறுமை இல்லை; வறியவர்கள் இல்லை, எனவே அங்கு ஈகை என்பதும் இல்லை; பகைவர் இல்லாமையால் அங்கு வலிமை என்ற ஒன்று இல்லை; அந்நாட்டில் பொய் பேசுவோரே இல்லை; எனவே அங்கு உண்மை என்ற ஒன்று இல்லை; அனைவரும் கற்று இருத்தலால் அறியாமை என்று தனியே ஒன்று இல்லை. எவையெல்லாம் இல்லை என்பதைப் படித்து மகிழுங்கள்!

வண்மை இல்லைஓர் வறுமை இன்மையால்

திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்

உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்

வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால்.

(கம்ப. பால காண்டம், நகரப்படலம், 53.)

(வண்மை = ஈகை / வள்ளன்மை; திண்மை = வலிமை; செறுநர் = பகைவர்; வெண்மை = அறிவின்மை; மேவலால் = பொருந்துவதால்)

கம்பர் கற்பனையின் உச்சம் என்று இக்கவிதையைச் சொல்ல வேண்டும். கம்பர் தான் கனவு கண்ட ஒரு நாட்டையே இவ்வாறு வருணித்துள்ளார். இவ்வாறான பாடல்கள் ஏராளமாகக் கம்பராமாயணத்தில் உள்ளன. அவற்றைப் படித்து மகிழலாம்.

4.4 கற்பனை

கம்பராமாயண வருணனைகளுக்கு அடிப்படை கற்பனையே. கம்பர் கவிதையில் சுவை மெருகை ஊட்டுவதில் கற்பனை முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. காவிய இன்பமே கற்பனையில்தான் பிறக்கிறது. கம்பராமாயணம் காலந்தோறும் நின்று நிலவுவதற்குக் கம்பர், கற்பனையைச் சொன்ன விதமும் ஒரு காரணம். கம்பர் கற்பனைகள் ஒரு சிலவற்றை இப்பகுதியில் பார்ப்போம்.

4.4.1 அம்பின் செயல் இராமனுக்கும் இராவணனுக்கும் போர் நடைபெறுகிறது. இறுதியில் இராம பாணம் (இராமனது அம்பு) இராவணன் மார்பைத் துளைத்துச் செல்கின்றது. இராவணன் மரணத்தைத் தழுவுகிறான். கணவன் மாண்டதைக் கண்டு மண்டோதரி புலம்புகிறாள். அம்பு இராவணனின் உடலைச் சல்லடைக் கண்களாக ஓர் இடம் விடாமல் துளைத்துச் சென்றுள்ளது. இதனைக் கம்பர் பாடும் அழகே தனி.

எங்குள்ளது எங்குள்ளது எனத் தேடும் அம்பு

வெள்எருக்கம் சடைமுடியான் வெற்புஎடுத்த

திருமேனி மேலும் கீழும்

எள்இருக்கும் இடன்இன்றி உயிர்இருக்கும்

இடம்நாடி இழைத்த வாறோ

கள்இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை

மனச்சிறையில் கரந்த காதல்

உள்இருக்கும் எனக்கருதி உடல்புகுந்து

தடவியதோ ஒருவன் வாளி

(கம்ப. யுத்த காண்டம், இராவணன் வதைப் படலம், 237.)

(வெள் எருக்கம் = செடி வகை / சிவபெருமான் அணியும் மலர்; வெள்எருக்கம் சடைமுடியான் = சிவபெருமான்; வெற்பு = மலை / கயிலாயமலை; எள் = மிகச்சிறிய வித்து; நாடி = தேடி; வாளி = அம்பு; இழைத்தவாறோ = செய்தவிதமோ; கள் = தேன்; கரந்த = மறைத்த; தடவியதோ = தேடியதோ)

இராவணன் அம்பு பட்டு வீழ்ந்து கிடக்கிறான். இராமனின் அம்பு இராவணன் உடல் முழுவதும் துளைத்துள்ளதை மண்டோதரி பார்க்கிறாள். சிவபெருமான் உறையும் மலையைக் கைகளால் எடுத்த வலிமை உடையது அவனது திருமேனி. அத்திருமேனியில் எள் இருக்கக் கூட இடம் இல்லாமல் அம்பு துளைத்து உள்ளது. அம்பு இராவணன் உடலில் புகுந்து அவன் உயிர் இருக்கும் இடத்தை மட்டும் தேடவில்லை. இராவணன் சீதையை மனச் சிறையில் வைத்து மறைத்த காதலைத் தேடித் தேடி அம்பு துளைத்து உள்ளதாம். சானகியைப் பற்றிய நினைவைக் கூட அம்பு விட்டு வைக்கவில்லையாம். கம்பர் கற்பனை, கவிதைச் சுவையின் உச்சத்திற்கே படிப்பவரைக் கொண்டு செல்கிறது. இராமன் அம்பு இராவணன் உடல் முழுவதும் துளைத்ததைக் கம்பர் சீதையின் நினைவு எங்குள்ளது? எங்குள்ளது? என்று தேடித் தேடிச் சென்றதாகப் புனைந்துள்ளார்.

4.4.2 அனுமன் கண்ட காட்சி இலங்கைக்குச் சென்ற அனுமன் சீதையைக் காண்கிறான். இராமனின் கணையாழியைச் சீதையிடம் (மோதிரம்) கொடுக்கிறான். சீதையிடம் இருந்து சூளாமாணியைப் (ஓர் அணி) பெற்றுத் திரும்புகிறான். மீண்ட அனுமன் பிரிவுத்துயரால் வாடும் இராமனை அடைந்து “கண்டேன் சீதையை” என்று கூறுகிறான். இதனைக் கம்பர் கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் என்று பாடுவார்.

களிநடம் புரியக் கண்டேன்

அடுத்த பாட்டில் ‘நங்கையைக் காணவில்லை’ என்று கூறுவான். பின் எதனைத் தான் கண்டான் அனுமன்? கம்பரின் கற்பனை இதற்கு மறுமொழி தருகிறது.

இதோ பாடல்:

விற்பெருந் தடந்தோள் வீர

வீங்குநீர் இலங்கை வெற்பில்

நற்பெரும் தவத்தள் ஆய

நங்கையைக் கண்டேன் அல்லேன்

இற்பிறப்பு என்பது ஒன்றும்

இரும்பொறை என்பது ஒன்றும்

கற்புஎனும் பெயரது ஒன்றும்

களிநடம் புரியக் கண்டேன்

(கம்ப. சுந்தர காண்டம், திருவடி தொழுத படலம், 29.)

(தடம் = அகன்ற; வீங்கு = மிக்க; வெற்பு = மலை; தவத்தள் = தவத்தை உடையவள்; ஆய = ஆகிய; இற்பிறப்பு = உயர் குடிப்பிறப்பு; இரும்பொறை = பொறுமை; களிநடம் = களிப்பால் ஆடும் கூத்து)

“வில்லினையும் பெரிய தோளினையும் உடைய வீரனே! நீர் மிக்க, கடல் சூழ்ந்த இலங்கை மலையில் தவத்தை உடையவள் ஆகிய சீதையை நான் காணவில்லை. மாறாக உயர்ந்த குடிப்பிறப்பு என்னும் பண்பும், சிறந்த பொறுமை என்னும் பண்பும், கற்பு என்னும் திண்மையும் ஒருங்கு கூடி மகிழ்ச்சியால் கூத்தாடிக் கொண்டிருந்ததைத்தான் கண்டேன்” என்று அனுமன் கூறுவதாக இப்பாடல் புனையப்பட்டுள்ளது. சீதையைக் காணவில்லை. ஆனால் மானுட குலத்தின் உயர்ந்த பண்புகளை அவ்விடத்தில் கண்டேன் என்று கூறுவது கம்பரின் உயர்ந்த கற்பனையைக் காட்டுகின்றது.

இவ்வாறு கற்பனை வளம் நிறைந்த எண்ணற்ற பாடல்கள் கம்பராமாயணத்தில் அமைந்துள்ளன. அவற்றைப் படித்து மகிழுங்கள்.

4.5 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை கம்பராமாயணம் பற்றியும் கம்பரின் கவிநயம் பற்றியும் சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

உலகமகா கவிஞர்களும் கம்பரும் கவிதையால் ஒன்றுபடும் தன்மையை அறிந்திருப்பீர்கள்.

ஹோமர், ஷேக்ஸ்பியர், ஸ்பென்சர், மில்டன் முதலிய உலகக் கவிஞர்களுக்கும் கம்பருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை ஒப்பியல் தன்மையுடன் அறிந்திருப்பீர்கள்.

கம்பர் கவிதைகளில் காணப்பெற்ற சொல்லாட்சித் திறன், ஓசை நயம், வருணனைச் சிறப்பு, கற்பனை நயம் ஆகியவற்றைக் கம்பராமாயணப் பாடல்களின் துணையோடு அறிந்திருப்பீர்கள்.

பாடம் - 5

வில்லி பாரதம்

5.0 பாட முன்னுரை

இந்திய இலக்கிய வரலாற்றில் இதிகாசங்கள் என்று போற்றப்படும் காவியங்கள் இரண்டே. அவை இராமாயணமும் மகாபாரதமும் ஆகும். (இதிகாசம் = மிகப் பழமையான பெரிய கதை). திருமாலின் அவதாரங்கள் (பிறப்புகள்) பத்து. அவற்றுள் இராம அவதாரம் இராமாயணத்திலும், கிருஷ்ணன் அல்லது கண்ணன் அவதாரம் மகாபாரதத்திலும் இடம் பெற்று உள்ளன. மகாபாரதத்தில் கண்ணன் முதன்மை பெற்று இருந்தாலும் பஞ்ச பாண்டவர்களே தலைமைப் பாத்திரங்களாக விளங்குகின்றனர். சந்திர குலத்தைச் சேர்ந்தவன் துஷ்யந்த மன்னன். இவனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவன் பரதன். இந்தப் பரதனது வம்சத்தைப் பாடுவதால் பாரதம் என்று இந்நூல் அழைக்கப்பட்டது. பரதனது வம்சத்தைச் சேர்ந்தவர்களே பாண்டவர்களும் கௌரவர்களும் ஆவர். இவர்கள் வாழ்க்கையையும், இவர்கள் தமக்குள்ளே நடத்திய போரினையும் மகாபாரதம் விரிவாக விவரித்துள்ளது.

மகாபாரதம்

பரத வம்சத்தினரைப் போரில் வல்லவர்கள் என்று ரிக் வேதம் கூறுகிறது. பரதனைக் குறித்த செய்திகளைச் சில பிராம்மணங்கள் கூறியுள்ளன. (ரிக்வேதம், பிராம்மணம் – வடமொழி நூல்கள்.) இவர்களுடைய நாடு குரு நாடு என்று பெயர் பெற்றது. இந்த நாட்டைப் பற்றிய குறிப்பை யசுர் வேதம் வழங்கி உள்ளது. பரத வம்சத்தவரான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஏற்பட்ட பாகப்பிரிவினை இறுதியில் போரில் முடிந்தது. பாண்டவர்கள் சூதாட்டத்தால் தம் நாடு, மக்கள், சொத்து, மனைவி அனைத்தையும் கௌரவர்களிடம் இழந்தனர். இதனால் அவர்கள் வனவாசம் செல்ல நேரிட்டது. வனவாசம் முடிந்த பின்னர்க் கௌரவர்கள் பாண்டவர் நாட்டைத் திருப்பித்தர மறுத்தனர். சூதாட்டத்தில் வைத்து இழந்த பாண்டவர் மனைவி, அரசவையில் கௌரவர்களால் துகில் உரியப்பட்டு அவமானப்படுத்தப்பட்டாள். இதனால் இரு தரப்பார்க்கும் பாரதப் போர் மூண்டது. பாரதக் கதையின் முதன்மையான சூத்திரதாரியாகக் (வாழ்க்கை நிகழ்வுகளை ஆட்டி வைப்பவனாக) கண்ணன் காணப் பெறுகிறான். இறுதியில் கௌரவர் குலமே அழிகிறது. பாண்டவர் மட்டுமே உயிரோடு இருக்க, ஏனைய அனைவரும் போரில் மடிகின்றனர். இந்த நிகழ்ச்சிகளே மகாபாரதமாக உருவெடுத்தன. கால ஓட்டத்தில் இம் மகாபாரதத்தில் ஏராளமான கிளைக் கதைகளும், தத்துவங்களும் சேர்ந்தன. இச்சேர்க்கையில் ஒன்றே புகழ் பெற்ற பகவத் கீதை என்பது. கண்ணன் போர்க்களத்தில் நின்று பாண்டவருள் ஒருவனான அருச்சுனனுக்கு உபதேசம் செய்தவையே கீதையாகும். மக்கள் இடையே வாய்மொழியாகப் பாடப்பட்டு வந்த இந்தக் கதை வியாசர் என்னும் முனிவரால் வடமொழியில் தொகுத்து வைக்கப்பெற்றது.

வில்லி பாரதம்

மகாபாரதத்தின் செல்வாக்கு இந்தியப் பகுதி முழுவதும் பரவியுள்ளது. இந்திய மொழிகளில் ஏராளமான மகாபாரதங்கள் பலரால் பாடப்பெற்றுள்ளன. தமிழ்நாட்டிலும் சங்க காலத்திலேயே மகாபாரதம் செல்வாக்குச் செலுத்தி இருந்தது. என்றாலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இடைக்காலத்தில் வில்லிபுத்தூரார் எழுதிய வில்லி பாரதமே சிறந்த பாரதமாகப் போற்றப்பெற்றுள்ளது. நண்பர்களே! இந்தப் பாடப் பகுதியில் தமிழ்நாட்டில் உள்ள மகாபாரதச் செல்வாக்கினையும் வில்லி பாரதம் பற்றிய செய்திகளையும் அறிய இருக்கிறோம்.

5.1 பண்டைத் தமிழ் இலக்கியங்களில் மகாபாரதச் செய்திகள்

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் மகாபாரதம் பற்றிப் பல செய்திகளும் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இவை, மகாபாரதம் எந்த அளவுக்குச் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பதனை எடுத்துரைக்கின்றன.

5.1.1. புறநானூறு பாண்டவர்களும் கௌரவர்களும் போரிட்டபோது தமிழ் மன்னன் ஒருவன் இருபடையினருக்கும் பெருஞ்சோறு அளித்ததாகச் சங்க இலக்கியங்கள் கூறியுள்ளன. பெருஞ்சோறு என்பது போர் வீரர்களுக்கு விருந்தாக அளிக்கப் பெறும் உணவு ஆகும். இதனை அளித்ததால் அத்தமிழ் மன்னன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்று அழைக்கப்பெற்றான்.

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ

நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை

ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

(புறநானூறு – 2)

(அலங்கு = அசைகின்ற; உளை = பிடரி மயிர்; புரவி = குதிரை; ஐவர் = பாண்டவர் / தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன்; பொலம் = பொன்; தும்பை = வலிமை காரணமாகப் போர்புரியும் வீரர்கள் அணியும் பூ / தும்பைப் பூ; ஈரைம்பதின்பர் = நூற்றுவர் / துரியோதனன் முதலிய நூறு சகோதரர்கள்; ஒழிய = சாவ; பதம் = சோறு, உணவு; வரையாது = அளவில்லாது)

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது. துரியோதனன் முதலிய கௌரவர் நூற்றுவரும் பாண்டவர் ஐவரோடு பகைத்துப் போரிட்டனர்; போரிட்டு மாண்டனர். அப்போர்க்களத்தில் சேரலாதன் போர் வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்துச் சிறப்புச் செய்துள்ளான் என்பது இப்பாடலின் பொருள்.

5.1.2. சிறுபாணாற்றுப்படை காவெரி ஊட்டிய கவர்கணைத் தூணிப்

பூவிரி கச்சைப் புகழோன் தம்முன்

(சிறுபாணாற்றுப்படை அடிகள், 238-239)

(கா = காடு, வனம், காண்டவ வனம்; எரி = தீ; காவெரி ஊட்டல் = காண்டவ வனம் எரியூட்டப் பெறுதல்; கவர் = பல; கணை = அம்பு; தூணி = அம்பு வைக்கும் கூடு; கச்சை = ஆடை வகை)

என்ற பாடல் பாண்டவருள் அருச்சுனனையும் வீமனையும் குறிப்பிடுகிறது.

காட்டிற்கு எரி ஊட்டியவனும், அம்புகள் நிரம்பிய அம்புக் கூட்டை உடையவனும், கச்சையை அணிந்தவனும் ஆகிய புகழை உடையவன் அருச்சுனன். அவனுடைய தம் முன் (மூத்தவன்) வீமன் ஆவான் என்பது இப்பாடல் வரிகளின் பொருள். மேலும் வீமனின் சமையல் சிறப்பும் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5.1.3. பிற இலக்கியங்கள் பதிற்றுப் பத்தின் பாடல் (14) ஒன்று, கௌரவர் நண்பனாகிய கர்ணனை அக்குரன் என்று கூறியுள்ளது. கர்ணன் ஞாயிற்றின் மகனாகக் கலித்தொகைப் பாடல் ஒன்றில் குறிக்கப்பெற்றுள்ளான் (முல்லைக் கலி, 28). துரியோதனன் முதலியோர் சூழ்ச்சியால் பாண்டவர் தங்கி இருந்த அரக்கு மாளிகை தீ வைக்கப்படுகிறது. அத்தீயிலிருந்து வீமன் தன் சகோதரர்களைக் காப்பாற்றிய நிகழ்ச்சியை மற்றொரு கலித்தொகைப் பாடல் (பாலைக்கலி, 25) விவரித்துள்ளது.

பெரும்பாணாற்றுப்படையில், பாண்டவர் ஐவரும் கௌரவர் நூற்றுவரைப் போர்க்களத்தே வென்ற செய்தி கூறப்பட்டுள்ளது.

ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்

பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்

ஆராச் செருவின் ஐவர் போல

(பெரும்பாணாற்றுப்படை அடிகள், 415-417)

(ஈரைம் பதின்மர் = கௌரவர் நூற்றுவர்; பொருது = சண்டை இட்டு; களத்து = போர்க் களத்து; அவிய = இறக்க; பேர் = பெரிய; அமர்க் கடந்த = வெற்றி பெற்ற; கொடிஞ்சி = தேரின் ஒரு பகுதி; ஆரா = தணியாத; செரு = போர்; ஐவர் = பாண்டவர்)

பெரிய வெற்றியைப் பெற்றவர் பாண்டவர்; இவர்கள் நெடிய தேரினையும் தீராத போர் வேட்கையையும் உடையவர்கள்; கௌரவர்கள் நூறு பேரும் போர்க்களத்தில் இறக்குமாறு இவர்கள் பெரிய வெற்றியைப் பெற்றார்கள் என்பது இவ்வரிகளின் பொருள்.

இவ்வாறான பலவேறு குறிப்புகள், சங்க காலத்திலேயே தமிழகத்தில் மகாபாரதம் நிலவி இருந்ததைத் தெரியப்படுத்துகின்றன.

5.2 தமிழில் பாரத நூல்கள்

தமிழில் உள்ள இலக்கியக் குறிப்புகள் சங்க காலத்திலேயே பாரத நூல் தமிழில் இருந்திருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றன. பெரும்பான்மையான சங்க இலக்கியங்களுக்குக் கடவுள் வாழ்த்தைப் பெருந்தேவனார் பாடியுள்ளதாக அறிய முடிகிறது. இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப்பட்டுள்ளார். இவர் பாடிய பாரத நூல் முழுவதும் கிடைக்கவில்லை. இவர் சங்க காலத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.

பாரத வெண்பா

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பாரத வெண்பா என்ற ஒரு நூல் தோன்றியுள்ளது. இந்நூலை இயற்றியவர் பெயரும் பெருந்தேவனார் என்பதாகும்.

வில்லி பாரதம்

இந்நூலுக்குப் பின்னர் வில்லிபுத்தூரார் பாரதம் பாடியுள்ளார். இந்நூல் இவர் பெயரையே முன் ஒட்டாகக் கொண்டு வில்லி பாரதம் என்று அழைக்கப்படுகின்றது.

வில்லிபுத்தூரார் பாடிய பாடல்களோடு வேறு சில பாடல்களையும் சேர்த்துப் பாடியோர் நல்லாப்பிள்ளை, முருகப்பிள்ளை ஆகியோர் ஆவர். இவர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, வில்லி பாரதத்தை நிறைவு செய்ததாகக் கூறுவர். 18ஆம் நூற்றாண்டில் அட்டாவதானம் அரங்கநாதக் கவிராயர் என்பவர் 2477 பாடல்கள் பாடி வில்லி பாரதக் கதையோடு சேர்த்து விட்டதாகத் தெரிகின்றது.

அருணிலை விசாகன் பாரதம்

அருணிலை விசாகன் பாரதம் என்ற ஒரு நூல் 13ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. இதனை மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னன் கல்வெட்டால் அறிய முடிகிறது. இதனை இயற்றிய புலவர், குன்றவத்தனக் கோட்டத்து இல்லத்தூர் நாட்டு அரும்பாக்கமுடைய அருண்நிலை விசாகன் திரைலோக்ய மல்லன் வத்ஸ ராஜன் என்பவர் ஆவார்.

5.3 வில்லிபுத்தூரார்

தமிழில் எழுதப்பெற்ற பாரதங்களுள் சிறப்புடையதாகப் போற்றப்படுவது வில்லி பாரதம் ஆகும். இதனை வில்லிபுத்தூரார் இயற்றியுள்ளார். இப்பெயர் இயற்பெயரா என்பது தெரியவில்லை. ஆயின் வில்லிபுத்தூர் ஆழ்வாரின் பெயரினை இவருக்குச் சூட்டியதாகத் தெரிகிறது.

பிறப்பு

இவர் தென் பெண்ணை ஆறு பாய்கிற திருமுனைப்பாடி என்னும் பகுதியில் உள்ள சனியூரில் பிறந்துள்ளார். இவர் தந்தை வீரராகவாசாரி ஆவார். இவர் வைணவ அந்தணர்.

5.3.1. வில்லிபுத்தூரார் காலம் வில்லிபுத்தூராரின் காலத்தைத் திட்டவட்டமாய் அறிய இயலவில்லை. வக்க பாகையில் அரசனாக இருந்தவன் கொங்கர் கோன் வரபதி ஆட்கொண்டான் ஆவான். இவனே வில்லிபுத்தூராரை ஆதரித்தவன். இவனை இரட்டைப் புலவர்களும் பாடி உள்ளனர். இதே இரட்டையரே இராச நாராயணச் சம்புவராயன் என்ற காடவர் குல மன்னனையும் பாடி உள்ளனர். ஆக, வரபதி ஆட்கொண்டான், வில்லிபுத்தூரார், இரட்டைப் புலவர்கள், சம்புவராயன் ஆகியோரை ஒரே காலத்தைச் சேர்ந்தவராகக் கருத முடியும்.

இவர்களுள் சம்புவராயன் காலம் கி.பி. 1331 – 1383 என்று வரலாற்று ஆசிரியர்களால் வரையறை செய்யப்படுகிறது. ஆதலால் வில்லிபுத்தூரார் காலம் கி.பி. 14ஆம் நூற்றாண்டு என்று கொள்வதற்கு இடம் உண்டு.

ஆதரித்த வள்ளல்

கொங்கர் கோன் வரபதி ஆட்கொண்டான் என்பவன் வில்லிபுத்தூராரை ஆதரித்த வள்ளல் ஆவான்.

5.4. பாரதம் பாடிய செய்தி

வில்லிபுத்தூரார் பாரதம் பாட நேர்ந்தது பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. அவற்றுள் சில வருமாறு:

5.4.1. இலக்கிய வரலாறு கூறும் செய்தி வில்லிபுத்தூரார்க்கும் அவர் தம்பிக்கும் சொத்துப் பாகம் பற்றி வழக்கு உண்டாயிற்று. இருவருமே அரசனிடம் மதிப்புப் பெற்றிருந்த புலவர்கள். தம்பி அரசனிடம் சென்று முறையிட்டார். அரசன் வில்லிபுத்தூரார் புலமையை மதிப்பவன். எனவே அவரைக் கண்டிக்க மனம் ஒப்பவில்லை. ஆனால் இருவரின் வழக்கையும் தீர்க்க வேண்டும். இதற்கு அரசன் ஒரு வழியைக் கண்டறிந்தான். இருவரையும் அழைத்து நீங்கள் இருவரும் “மகாபாரதத்தைத் தமிழில் பாடித் தந்தால் உங்கள் வழக்கைத் தீர்க்கிறேன்” என்று சொன்னான். அவ்வாறே இருவரும் உடன்பட்டனர். வில்லிபுத்தூரார் பாரதம் பாடத் தொடங்கினார். இப்பெருங்காப்பியத்தைப் பாடி முடிக்கும் தறுவாயில் இவருக்கும் ஞானம் பிறந்தது. தாயபாகச் சண்டையினால்தானே (தாயபாகம் = உடன்பிறந்தாருள் பாகப்பிரிவினை) பாரதப்போர் ஏற்பட்டது; பெரிய அழிவும் நேர்ந்தது என்பதை உணர்ந்தார். உடனே தம்பியை அழைத்து அவருக்குரிய பாகத்தை அளித்து விட்டார். பாரதத்தின் முற்பகுதியை இவர் பாடப் பிற்பகுதியை இவர் தம்பி பாடி முடித்ததாக இலக்கிய வரலாறு கூறுகிறது.

5.4.2. புலவர் புராணம் கூறும் செய்தி புலவர் புராணம் என்னும் நூல் இக்கதையையே வேறு விதமாகக் கூறுகிறது. அது வருமாறு:

ஆண்டான் பிள்ளை என்ற அரசன் தமிழிலே பாரதம் வேண்டும் என்று ஆவல் கொண்டான். பாரதம் பாடத் தக்கவர் வில்லிபுத்தூராரே என்றும் கண்டு கொண்டான். ஆனால் திருமால் அடியவர் ஆன வில்லி, பாரதம் பாடுவதற்கு இசைய மாட்டார் எனவும் எண்ணினான். இதற்கிடையில் வில்லியும் அவர் தம்பியும் பாண்டிய மன்னனைப் பார்க்கும் பொருட்டு மதுரை சென்றனர். அச்சமயத்தில் மன்னன் ஒரு பார்ப்பனக் கிழவியை வில்லியின் இல்லத்திற்கு அனுப்பினான். கிழவி மூலம் வில்லி மனைவியிடமும் அவர் தம்பி மனைவியிடமும் பூசலை ஏற்படுத்தினான். சகோதரர்கள் மதுரையில் இருந்து திரும்பினர். குடும்பத்தில் பிரச்சனை பெரிதாகிச் சொத்துப் பாகப் பிரிவினை வரை சென்றது. வழக்கு மன்னனிடமும் வந்தது. அரசன் எதிர்பார்த்தபடியே பாரதம் பாடி முடித்தால் வழக்கை முடிப்பதாகக் கூறினான். வில்லியும் பாரதம் பாடி முடித்தார்.

காதறுக்கும் ஆணை

சிறப்பான முறையில் பாரதம் பாடியதைக் கண்ட மன்னன் புலவருக்குப் பெரும் பொருள் பரிசளிக்க எண்ணினான். ஆனால் புலவர் அதனை மறுத்து வேறு ஓர் உரிமையைப் பெற்றார். அதாவது தன்னோடு சந்தப் பாடல் (இசைப்பாடல்) பாடித் தோற்பவர் காதை அறுத்து விட ஆணையைப் பெற்றார். காதினை அறுக்கும் குறட்டையும் (கருவி) பெற்றார். பின்னர்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். தம்மோடு போட்டி இட்டுத் தோற்றவர் காதுகளை எல்லாம் குறட்டால் அறுத்து எறிந்தார்.

அறுபடாத காது

ஒரு சமயம் அனந்தன் என்ற புலவர் இவரோடு போட்டியிட்டுத் தோற்றார். வழக்கம் போல் வில்லி அவர் காதை அறுக்க முற்பட்டார். அப்போது புலவர் “அய்யா அனந்தனுக்குக் காது இல்லை. என் காதை அறுத்து விட்டால் உண்மையாகவே நான் அனந்தன் ஆகி விடுவேன்” என்று கூறினார். அனந்தன் என்பது ஆதிசேடனின் பெயர். ஆதிசேடன் பாம்பு. பாம்பிற்குக் காது இல்லை என்பது வழக்கு. புலவரின் நயத்தை உணர்ந்த வில்லி அவர் காதினை அறுக்காது விட்டு விட்டார்.

வில்லியும் தோல்வியும்

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த வில்லிபுத்தூரார் திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கு ஓர் வீட்டில் தங்கி இருந்த போது அருணகிரியாரின் அன்பர் ஒருவர் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடிச் சென்றார். இதனைக் கேட்டு வில்லி எள்ளி நகையாடினார். அருணகிரியாரைச் சந்தப்பாடல் பாடும் போட்டிக்கு அழைப்பு விடுத்தார். இப்போட்டியில் அருணகிரியார் வென்றதாகவும், காதறுக்கும் குறட்டையை அவர் வில்லிபுத்தூராரிடம் இருந்து வாங்கி விட்டதாகவும் அருணகிரியார் புராணம் கூறுகிறது.

5.5 காப்பிய அமைப்பும் கதையும்

வில்லி பாரதத்தில் தன்னிகர் இல்லாத காவியத் தலைவனாக எவரைக் கூறுவது என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. பாண்டவர்களே தலைமைக் கதை மாந்தர்கள். அவர்களுள் மூத்தவன் தருமன். காப்பியத்தின் போக்குப்படி தருமனே தலைவனாக வேண்டும். பாண்டவரையும் பாரதக் கதையையும் நிகழ்த்திச் செல்பவன் கண்ணன்; திருமாலின் அவதாரம். இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால் கண்ணன் காவியத் தலைவனாக வேண்டும். ஆனால் கதைப் போக்கு கண்ணனை மையப்படுத்தவில்லை. இதனால் தன்னிகர் இல்லாத தலைவன் என்ற காப்பிய இலக்கணம் வில்லி பாரதத்திற்குப் பொருந்தாது என்பார் தா.வே. வீராசாமி.

பாண்டவர்களின் முன்னோர் வரலாறு தொடங்கிப் பாண்டவர் – கௌரவர் போர் வரையும் நடந்து செல்லும் கதையை, வில்லிபுத்தூரார் பத்துப் பருவங்களாகப் பிரித்து உள்ளார். பத்துப் பருவங்களில் மொத்தம் 50 சருக்கங்கள் அமைந்து உள்ளன. பத்துப் பருவங்கள் வருமாறு:

ஆதி பருவம் - 8 சருக்கங்கள் (தொடக்கமும் இளமையும்)

சபா பருவம் – 2 சருக்கங்கள் (தூது)

ஆரணிய பருவம் – 8 சருக்கங்கள் (வனவாசம்)

விராட பருவம் – 5 சருக்கங்கள் (மறைந்து வாழ்தல்)

உத்தியோக பருவம் – 8 சருக்கங்கள் (போருக்கான ஏற்பாடுகள்)

வீட்டும பருவம் – 10 சருக்கங்கள் (போரில் வீடுமனின் தலைமை)

துரோண பருவம் – 5 சருக்கங்கள் (துரோணனின் தலைமை)

கன்ன பருவம் – 2 சருக்கங்கள் (கர்ணனின் தலைமை)

சல்லிய பருவம் – 1 சருக்கம் (சல்லியன் தலைமை)

சௌப்திக பருவம் – 1 சருக்கம் (துயில்வோரைக் கொல்லுதல்)

ஆகப் பருவங்கள் 10, சருக்கங்கள் 50.

5.5.1. ஆதி வரலாறு பாரதக் கதை பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொள்வோம். மகாபாரதத்தின் முதல் பருவம் ஆதி பருவம் ஆகும். இதில் பாண்டவர், கௌரவர் ஆகியோரின் முன்னோர் வரலாறு கூறப்பெற்றுள்ளது. பாண்டவர் முதலியோர் பிறப்புச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தொடக்கம் முதலே போட்டியும் பொறாமையும் இருந்து வந்தன. இந்த நிலையில் வீடுமன் திருதராட்டிரனோடு கலந்து பேசித் தருமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான். இதனால் துரியோதனன் பகை கொண்டான். பாண்டவரை வாரணாவத நகருக்கு அனுப்பினர். அங்கு அவர்கள் அரக்கு மாளிகையில் தங்கி இருக்கும் போது தீ வைத்துக் கொல்லச் சதி செய்யப்பட்டது. பாண்டவர்கள் அதிலிருந்து தப்பித்தனர். திரௌபதிக்குச் சுயம்வரம் (திருமணம்) ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அறிந்து அங்குச் சென்றனர். சுயம்வரப் போட்டியில் அருச்சுனன் வெற்றி பெற்றான். பின்பு திரௌபதி பாண்டவர் ஐவரையும் திருமணம் செய்து கொண்டாள்.

இராயசூய வேள்வி

பின்னர்த் திருதராட்டிரன் ஏற்பாட்டின்படி பாண்டவர்கள் இந்திரப்பிரத்தத்திலும், கௌரவர்கள் அத்தினாபுரியிலும் அரசாண்டு வந்தனர். தருமன் தன் தம்பியர் மூலம் திக்விசயம் செய்து இராயசூய வேள்வியைச் செய்து முடித்துச் சிறப்புடன் விளங்கினான். பாண்டவர்களின் சிறப்பினையும் புகழினையும் கண்டு துரியோதனனின் பொறாமை வளர்ந்தது.

5.5.2. சூதாட்டம் துகிலுரிதல்

கௌரவர் தருமனைத் தந்திரமாக அழைத்துச் சூதாடி அவனை வெற்றி கொள்ள நினைத்தனர். துரியோதனன் மாமனான சகுனி தருமனோடு சூதாடினான். தருமன் தன் நாடு, நகரம், சொத்து, சேனை, அரசு முதலிய அனைத்தையும் சூதாட்டத்தில் தோற்றான். இறுதியில் திரௌபதியையும் பந்தயப் பொருளாக வைத்துத் தோற்றான். துரியோதனன் பாண்டவர்களையும் திரௌபதியையும் அடிமைகளாக ஆக்கினான். திரௌபதியை மாதவிடாய்க் காலத்தில் துச்சாதனனைக் கொண்டு அரசவைக்கு இழுத்துவரச் செய்தான்; சொல்லத் தகாத இழிவுச் சொற்களைக் கூறினான். துச்சாதனனை விட்டு அவள் ஆடையை உரியச் செய்தான். திரௌபதி கண்ணனைச் சரணடைந்து துதித்து நின்றாள்; ஆடை உரிய உரிய வளர்ந்து கொண்டே வந்தது. துச்சாதனன் சோர்ந்து வீழ்ந்தான். திரௌபதியின் கற்பு ஆற்றலைக் கண்டு திருதராட்டிரன் முதலியோர் அஞ்சி நடுநடுங்கினர். பின்பு திருதராட்டிரன் பாண்டவர்களை விடுவித்து நாட்டையும் செல்வத்தையும் கொடுத்து அனுப்பினான். இதனை ஏற்காத துரியோதனன் மீண்டும் சூதின் மூலம் அவற்றைக் கவர்ந்து கொண்டான்.

5.5.3. வனவாசம் பின்பு பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழவும் ஓர் ஆண்டு எவரும் அறியாதபடி நாட்டின் உள்ளேயே மறைந்து வாழவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் வந்து கேட்டால் நாட்டையும் செல்வத்தையும் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி பாண்டவர்கள் திரௌபதியுடன் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டனர்.

பன்னிரு ஆண்டுகள் உருண்டோடின. பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கியது. இந்த ஆண்டில் எவரும் அறியாதபடி அவர்கள் மறைந்து வாழ வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மீண்டும் வனவாச வாழ்க்கை மேற்கோள்ள வேண்டியிருக்கும். இதனால் பாண்டவர்கள் விராட நாட்டில் விராட மன்னன் அரண்மனையில் மாறுவேடம் பூண்டு மறைந்து வாழ்ந்தனர். துரியோதனன், பாண்டவர்களைக் கண்டறிந்து மீண்டும் அவர்களைக் காட்டிற்கு அனுப்பத் திட்டங்கள் தீட்டினான். நான்கு திசைகளிலும் ஒற்றர்களை அனுப்பினான். விராட நாட்டில் பாண்டவர்கள் மறைந்து இருக்கலாம் என்பதை அறிந்து அந்நாட்டின் மீது படையெடுத்தான். பாண்டவர்கள் துணையோடு விராடன் வெற்றி பெற்றான். பதின்மூன்றாம் ஆண்டும் முடிந்தது. பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளிப்பட்டார்கள்.

5.5.4. தூது கீதை அருளல்

பின்னர்ப் பாண்டவர்கள் கண்ணன் முதலியோருடன் ஆலோசனை செய்து துரியோதனனிடம் தூது விடுக்க முடிவு செய்தனர். இறுதியில் கண்ணனே தூதாகச் சென்றான். இருப்பினும் துரியோதனன் பாண்டவர் நாட்டைத் திருப்பித்தர மறுத்து விட்டான். போரில் வென்று நாட்டை மீட்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இறுதியில் பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் பாரதப் போர் மூண்டது. இப்போரில் கண்ணன் பாண்டவர் பக்கம் நின்று வழிகாட்டினான். புகழ் பெற்ற பகவத் கீதை என்னும் தத்துவ மொழியை அருளினான்.

5.5.5. பாரதப் போர் பாரதப் போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. போர் மிகக் கடுமையாக நடந்தது. போர் நிகழ்ச்சிகள் மகாபாரதத்தில் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. போரில் வீடுமன், துரோணர், கர்ணன் முதலிய புகழ் பெற்ற வீரர்கள் மாண்டனர். இறுதியில் துரியோதனன் வீமனால் வீழ்த்தப்பட்டான். கௌரவர்கள் நூறு பேரும் மாண்டனர். துரோணரின் மகன் அசுவத்தாமனால் பாண்டவர் ஐவர் மட்டும் எஞ்சப் போர் முடிவிற்கு வந்தது. நிறைவாகத் தருமன் முதலியோர் அத்தினாபுரத்தில் அரசாண்டனர்.

வில்லிபுத்தூரார் மகாபாரதத்தை இத்துடன் நிறைவு செய்துள்ளார். ஆனால் மூல மகாபாரதத்தில் கதை இத்துடன் முடிவடையவில்லை. ஸ்திரீ பருவம், சாந்தி பருவம், அசுவமேத பருவம், ஆசிரம வாசிக பருவம், மௌசல பருவம் முதலான பருவங்களில் கதை மேலும் கூறப்பெற்றுள்ளது. பாரதப் போருக்குப் பின்னர் 36 ஆண்டுகள் கழித்துக் கண்ணன் தன் வம்சத்தோடு அழிந்தான் என்ற செய்தி கூறப்பெற்றுள்ளது. நிறைவாகப் பாண்டவர்களின் மரணமும், அவர்கள் சுவர்க்கத்திற்குச் சென்ற நிகழ்ச்சியும் கூறப்பெற்றுள்ளன.

5.6 வில்லி பாரதக் காப்பிய நலன்

வியாசர் பதினெட்டுப் பருவங்களில் மகா பாரதத்தைக் கூறினார். வில்லிபுத்தூரார் பத்துப் பருவங்களில் அதனைக் கூறினார். கதையைச் சுருக்கிக் கூறினும் காப்பியச் சுவையில் மேம்பட்டு நிற்குமாறு மகாபாரதத்தைப் படைத்துள்ளார். உவமையைக் கையாளுவதில் வில்லி பாரதம் புகழ் பெற்றுள்ளது. இதே போல், கற்பனை விரிந்து படர்ந்து சுவை மிக்கதாக அமைந்துள்ளது. வருணனைகளும் சிறப்பிடம் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி ஒரு சிறிது இங்குக் காண்போம்.

5.6.1 பாயிரச் சிறப்பு பாயிரம் என்பது ஒரு நூலுக்கு அமையும் முன்னுரை அல்லது முகவுரை போன்றது. இது சிறப்புப் பாயிரம் என்றும், தற்சிறப்புப் பாயிரம் என்றும் இரு வகைப்படும். நூலைச் சிறப்பித்துப் பிறர் பாடுவதைச் சிறப்புப் பாயிரம் என்பர். கடவுள் வாழ்த்து, காப்பியப் பாடுபொருள் முதலியன அமைய நூலாசிரியரே பாடுவது தற்சிறப்புப் பாயிரம் ஆகும். வில்லிபுத்தூரார் நூலுக்கு அவர் மகன் வரந்தருவார் என்பவர் சிறப்புப் பாயிரம் பாடி உள்ளார்.

தமிழாகிய அன்னை

சிறப்புப் பாயிரத்தின் முதற்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைந்து உள்ளது. பாண்டியன் அவையோடும் அகத்தியரின் பொதிய மலையோடும் தமிழ்ச் சங்கத்தோடும் தமிழ் அன்னை கொண்ட தொடர்பு கவிநயத்துடன் பாடப்பெற்றுள்ளது. அப்பாடல் இதோ:

பொருப்பிலே பிறந்து தென்னன்

புகழிலே கிடந்து சங்கத்து

இருப்பிலே இருந்து வைகை

ஏட்டிலே தவழ்ந்த பேதை

நெருப்பிலே நின்று கற்றோர்

நினைவிலே நடந்துஓ ரேன

மருப்பிலே பயின்ற பாவை

மருங்கிலே வளரு கின்றாள்

(வில்லி பாரதம். சிறப்புப் பாயிரம். 1)

(பொருப்பு = மலை – பொதிய மலை; தென்னன் = பாண்டியன்; வைகை = பாண்டிய நாட்டு ஆறு; பேதை = குழந்தை; ஏன மருப்பிலே பயின்ற பாவை = பூமி)

பிற்காலத் தமிழ் நூல்கள் தமிழை அன்னையாகவும், குழந்தையாகவும் வருணிப்பதில் தலைசிறந்துள்ளன. தமிழின் தொன்மையைக் கூறுவது என்றால் மூன்று சங்கங்கள் பற்றிய செய்தியையும் இணைத்துக் கூற வேண்டும். சங்கங்களை உருவாக்கி ஆதரித்த பாண்டிய மன்னர்களையும் உடன் பாராட்டிக் கூற வேண்டும். இச்செய்திகளை எல்லாம் வில்லிபுத்தூரார் அழகாகப் பாடியுள்ளார்.

இப்பாடலின் பொருளை அறிவோமா?

தமிழ்த்தாயின் பெருமை

அகத்திய முனிவன் வாழ்ந்த பொதிய மலையில் பிறந்தவள் தமிழ்த்தாய் ஆவாள். தென்னவன் ஆகிய பாண்டியன் புகழைக் கூறுவது தமிழ்த்தாயின் புகழைக் கூறுவதற்கு ஒப்பானது. பாண்டியன் புகழும் தமிழ்த்தாயின் புகழும் ஒன்றுடன் ஒன்று கலந்தவை. பாண்டியர் நிறுவிய தலை, இடை, கடைச் சங்கங்களில் இருந்து நிலை பெற்று வளர்ந்தவள் தமிழ்த்தாய். புலவர்கள் கவிதைகளை எழுதி ஆற்றிலும் நெருப்பிலும் இட்டுத் தம் கவிதைகளின் இறவாத் தன்மையை (அமரத் தன்மையை) வெளிப்படுத்துவர். அவ்வாறு தமிழ்க் கவிதைகளை எழுதி வைகை ஆற்றில் விட்ட போது தமிழன்னை அந்த ஆற்றில் எதிர் நீந்தித் தவழ்ந்து வந்தனள். நெருப்பிலே வேகாது மூழ்கி எழுந்து வந்தனள். இக்குறிப்புகள் திருஞான சம்பந்தர் வாழ்க்கையில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளைச் சுட்டுவதாக இருக்கலாம். திருமால் வராக (பன்றி) அவதாரம் எடுத்த போது பூமியைத் தன் கொம்பிலே ஏந்தி நின்றார். அத்தகு பூமா தேவியின் பக்கத்திலேயே தமிழ் அன்னை வளர்ந்து வருகிறாள். இதுவே இப்பாடலின் கருத்து ஆகும்.

விநாயகர் வணக்கம்

தற்சிறப்புப் பாயிரத்தின் முதற்பாடல் விநாயகர் வணக்கமாக அமைந்துள்ளது. இப்பாடல் தோன்றியதற்கான கதை ஒன்றும் உண்டு.

தனயனின் உதவி

வில்லிபுத்தூரார்க்கும் அவர் மகனுக்கும் மனவேறுபாடு தோன்றியதால் மகன் அவரை விட்டுப் பிரிந்தான். அதன் பின்னர் வில்லிபுத்தூரார் வரபதி ஆட்கொண்டான் விருப்பப்படி தமிழில் பாரதம் பாடி முடித்தார். பாரதத்தை அரங்கேற்றம் செய்யும் நேரமும் வந்தது. “ஆக்குமா றயனாம்” என்னும் பாடலை முதற்பாடலாகக் கொண்டு வில்லிபுத்தூரார் நூலை அரங்கேற்றம் செய்தார். உடனே புலவர்கள் “வியாசர் ஐந்தாம் வேதமாக மகா பாரதத்தைச் சொல்ல விநாயகப் பெருமான் தம் கொம்பே எழுத்தாணியாகக் கொண்டு மேரு மலையையே ஏடாகக் கொண்டு எழுதிய பெருமை பாரதத்திற்கு உண்டு. விநாயகர் வணக்கம் சொல்லாத இந்தப் பாரதத்தை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்று கூறினர். இதனைக் கேட்டு வில்லிபுத்தூரார் திகைத்து நின்றார். அப்போது கூட்டத்தில் மறைந்து இருந்த அவர் மகன் வரந்தருவார் எழுந்தார். “எம் தந்தை விநாயக வணக்கம் செய்தது உண்டு. ஆனால் கண்ணன் வரலாறு நிறைந்த பாரதக் கதையில் விநாயகருக்கு வணக்கம் வெளிப்படையாகக் கூற வேண்டுவதில்லை. அப்பாடலை யாம் அறிவோம்” என்று கூறி அப்பாடலைப் பாடினார். அந்தப் பாடல் இதோ:

நீடாழி உலகத்து மறைநாலொடு ஐந்தென்று நிலைநிற்கவே

வாடாத தவவாய்மை முனிராசன் மாபார தம்சொன்னநாள்

ஏடாக மாமேரு வெற்பாக அங்கூர் எழுத்தாணிதன்

கோடாக எழுதும் பிரானைப் பணிந்துஅன்பு கூர்வாமரோ

(வில்லி. தற்சிறப்புப் பாயிரம். 1)

(ஆழி = கடல்; மறை = வேதம்; மறைநால் = இருக்கு, யசுர், சாம, அதர்வணம்: வாடாத = கெடாத; முனிராசன் = வியாசர்; ஏடாக = ஓலையாக; மேரு = மலை; கோடு = கொம்பு)

விநாயகர் எழுதிய வேதம்

பாடலின் பொருள் அறிவோமா?

கடல் சூழ்ந்த உலகத்தில் நான்கு வேதங்களோடு சேர்த்து ஐந்தாம் வேதமாக வியாச முனிவன் பாரதத்தைப் படைத்தனன். அவ்வாறு வியாச முனிவன் பாரதத்தைச் சொல்ல விநாயகப் பெருமான் தன் கொம்பை எழுத்தாணியாகக் கொண்டு மேரு மலையாகிய ஏட்டில் எழுதினான். அவ்வாறு எழுதிய விநாயகப் பெருமானை அன்பு மேலிட வணங்குவோம் என்பது பாடலின் பொருள் ஆகும். இப்பாடலைக் கேட்ட புலவர்கள் மகிழ்ந்தனர். வில்லிபுத்தூராரும் பாரதத்தை அரங்கேற்றினார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இருந்த வேறுபாடும் மறைந்தது.

5.6.2 வருணனை காப்பிய வருணனைகளில் சிறப்பிடம் பெறக் கூடியது இரு சுடர்த் தோற்றம் பற்றியது ஆகும். இரு சுடர் என்பது நிலவையும் ஞாயிற்றையும் குறிக்கும். இரவு, பகல் என்று காலத்தை வருணிக்கும் புலவர். சூழ்நிலைக்கு ஏற்றவாறு சமூக நடைமுறையையும் அதில் இணைத்து விடுவார். சமூக நடைமுறை மட்டும் அல்லாது, மனித மனப்பண்புகளும் நடத்தைகளும் கூட அதில் இடம் பெறும்.

இயற்கை நிகழ்வுகள்

ஞாயிறு எழுவதும் மறைவதும், நிலவு எழுவதும் மறைவதும் இயற்கை நிகழ்வுகள். இந்த நிகழ்வுகளுக்குப் புலவர் கற்பனையாகச் சில காரணங்களைப் படைத்துக் காட்டுகிறார். இதோ பாடல்:

பஞ்சவர் வாழ்வுறு பதம்பொ றாமையின்

வஞ்சகம் இயற்றுவான் மனங்கொல் என்னவே

மிஞ்சிய குளிர்மதி மேற்பொ றாதுஇகல்

செஞ்சுட ரவன்குண திசையின் தோன்றினான்

(வில்லி. சபா பருவம் – 2 : 123)

(பஞ்சவர் = ஐவர் / பாண்டவர்; பதம் = பதவி; மிஞ்சிய = மிகுந்த; மதி = நிலவு; செஞ்சுடரவன் = ஞாயிறு; குணதிசை = கிழக்குத்திசை)

ஞாயிறு தோற்றம்

காலையில் கிழக்குத் திசையில் ஞாயிறு தோன்றுகிறது. மிகுந்த குளிர் உடைய நிலவின் மேல் பொறாமை கொண்டு தோன்றுவது போல ஞாயிறு உதயமாகிறாம். இது எவ்வாறு இருக்கிறது? பாண்டவர்களின் நல்ல வாழ்க்கையைக் கண்டு, வஞ்சகமாக அவர்களை அழிக்கத் திட்டமிடும் துரியோதனன் மனம் போல, ஞாயிறு திங்களை வீழ்த்தத் தோன்றுகிறதாம். இவ்வாறு புலவர் ஞாயிற்றின் தோற்றத்தை வருணித்துள்ளார். பாரதக் கதை சந்திர குலத்து மன்னர்களின் கதையாகும். எனவே, இதில் உட்பொருள் பொதிந்த ஒரு நயமும் உள்ளது அல்லவா?

கதிரவன் மறைவு

இதேபோல் கதிரவன் மறைவைச் சுட்டும்போதும் சில நிகழ்ச்சிகளை இணைத்துக் கூறியுள்ளார் புலவர். ஞாயிறு படை வீரர்களின் களைப்பைப் போக்குவதற்காக மறைகிறதாம் (வில்லி. சபா. 2 : 124). ஞாயிறு மறைவது எதனால் என்றால் திரௌபதிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு ஆற்றாது அதனால் மறைகிறதாம் (வில்லி. விராட. 3 : 46). ஞாயிறு மறைவு வீடுமன் மறைவை அவர் தந்தைக்குக் கூறுவதற்காகச் சென்றது போல உள்ளதாம் (வில்லி. வீட்டும. 10 : 46). இவ்வாறு வில்லிபுத்தூரார் ஞாயிறு மறைவது, தோன்றுவதை வைத்தே பல சுவையான செய்திகளைக் கூறியுள்ளதை அறிய முடிகின்றது.

5.6.3 கற்பனைகள் காவியங்கள் கற்பனைப் படைப்பாலும் உவமைகளின் நலத்தாலும் சிறப்பு அடைகின்றன. உவமைகளைக் கையாளுவதில் புலவனின் கற்பனை தெறித்து நிற்கும். வில்லிபுத்தூரார் பாரதக் காப்பியம் முழுவதும் தெளிந்த உவமைகளைக் கற்பனை ஆற்றலோடு படைத்துள்ளார். சான்றுக்குச் சிலவற்றை இங்குப் பார்க்கலாம்.

ஈண்டுநீ வரினும் எங்கள் எழில்உடை எழிலி வண்ணன்

பாண்டவர் தங்கட்கு அல்லால் படைத்துணை ஆக மாட்டான்

மீண்டுபோகு என்றுஎன்று அந்த வியன்மதில் குடுமி தோறும்

காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற

(வில்லி. உத்தியோக பருவம்- 26)

(எழில் = அழகு; எழிலி = மேகம்; எழிலி வண்ணன் = கண்ணன்; குடுமி = உச்சி; காண்தகு = காண்பதற்கு இனிய; பதாகை = கொடி)

பாண்டவர்க்கும் கௌரவர்களுக்கும் போர் தொடங்க இருக்கிறது. இருவருமே படை திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கண்ணனின் துணையைப் பெறுவதற்காகத் தருமர் துவாரகைக்குச் செல்கிறார். துரியோதனனும் துவாரகைக்குச் செல்கிறான். துரியோதனின் வருகையைப் புலவர் கற்பனையாக வருணித்துள்ளார். விண்ணை முட்டும் மதில்களின் மேல் கொடிகள் காற்றில் அசைந்து அசைந்து பறக்கின்றன. அவ்வாறு பறப்பது ‘நீ இங்கு வராதே’ என்று கூறிக் கைகளால் தடுப்பது போல உள்ளதாம். “துரியோதனனே! நீ இங்கே வரினும் எங்கள் கண்ணன் உனக்குத் துணை ஆக மாட்டான். பாண்டவர்க்கே துணை ஆவான். நீ மீண்டும் திரும்பிப் போவாயாக”, என்று மதில் உச்சியில் உள்ள கொடிகள் துரியோதனனைத் தடுத்துத் திரும்பிச் செல் என்று கூறுகின்றனவாம். இதற்குத் தற்குறிப்பேற்ற அணி என்று பெயர்.

நடுநடுங்கின

வீமனுக்கும் சராசந்தனுக்கும் மல்யுத்தம் (ஆயுதங்களின் துணை இல்லாமல் செய்யும் போர்) நடைபெறுகிறது. இருவருமே மல்யுத்தத்தில் தலைசிறந்தவர்கள். அவர்களின் கடுமையான போரைக் கண்டு உலகமே நடுநடுங்குகிறதாம். புலவரின் கற்பனையை, வருணனையைப் படியுங்கள்:

பூதலம் நடுங்க எழுகிரி நடுங்க

போதகத் தொடுதிசை நடுங்க

மீதலம் நடுங்கக் கண்டகண் டவர்தம்

மெய்களும் மெய்யுற நடுங்கப்

பாதலம் நடுங்க இருவர்மா மனமும்

பறையறைந்து அயர்வுடன் நடுங்கச்

சாதல்அங்கு ஒழிந்த இடர்எலாம் உழந்து

தங்களில் தனித்தனி தளர்ந்தார்

(வில்லி. சபா பருவம். 1 : 24)

(பூதலம் = பூமி; எழுகிரி = ஏழுமலைகள்; போதகம் = யானை / திசைகளைத் தாங்கிக் காக்கும் எட்டு யானைகள்; மீதலம் = விண்ணுலகம்; பாதலம் = கீழ் உலகம்; அயர்வு = தளர்ச்சி)

வீமனுக்கும் சராசந்தனுக்கும் நடைபெற்ற போரினைக் கண்டு பூமியானது நடுங்கியது; ஏழுமலைகளும் நடுங்கின; திக்கு யானைகள் தாங்கி இருக்கும் எட்டுத் திசைகளும் நடுநடுங்கின; விண்ணுலகம் நடுங்கியது; அப்போரைக் கண்டவர்களின் உடல்கள் மெய்யாகவே நடுங்கின; பாதாள உலகமும் நடுங்கியது. இவ்வாறு போரிட்ட இருவரும் மனம் தளர்ந்து சோர்ந்து மயங்கி வீழ்ந்தனர் என்று வில்லிபுத்தூரார் போரை வருணித்துள்ளார். இவ்வாறு வருணனை செய்துள்ளதைப் பல இடங்களில் படித்து மகிழ முடியும்.

வீடுமன் இல்லாத சேனை

வில்லிபுத்தூரார், தொடர்ச்சியாகப் பல உவமைகளைக் கூறிப் பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இதில் புலவரது கற்பனை சிறந்து தோன்றும். பாரதப் போர் நடந்து கொண்டு உள்ளது. பத்தாம் நாள் போர். அர்ச்சுனன் அம்புகளால் வீடுமர் உடலைத் துளைத்தெடுக்கிறான். உடல் முழுவதும் அம்புகள் பாய்ந்திருக்க வீடுமர் தேரிலிருந்து சாய்கிறார். போரில் மிகச் சிறந்த வீரரை இழந்து துரியோதனன் சேனை அவலம் அடைகிறது. புலவர் இக்காட்சியைப் பாடுகிறார்.

மதியிலா விசும்பும் செவ்வி மணமிலா மலரும் தெண்ணீர்

நதியிலா நாடும் தக்க நரம்பிலா நாத யாழும்

நிதியிலா வாழ்வும் மிக்க நினைவிலா நெஞ்சும் வேத

விதியிலா மகமும் போன்ற வீடுமன் இலாத சேனை

(வில்லி. வீட்டும பருவம் – 1 : 5)

(மதி = நிலவு; விசும்பு = வானம்; செவ்வி = செம்மை; தெண்ணீர் = தெளிந்தநீர்; மகம் = வேள்வி)

வீடுமன் இல்லாத சேனை எப்படி உள்ளது என்பதை வில்லிபுத்தூரார் பாடுகிறார். நிலவு இல்லாத வானம் போல் உள்ளதாம்; மணம் இல்லாத மலர் போல் உள்ளதாம்; நதியில்லாத நாடு போல் உள்ளதாம்; நரம்பு கட்டாத யாழ் போன்று உள்ளதாம்; செல்வம் இல்லாத வாழ்க்கை போல் உள்ளதாம்; நிலையற்ற தன்மை கொண்ட நெஞ்சு போன்று உள்ளதாம்; வேத நெறிப்படி செய்யாத வேள்வி போன்று உள்ளதாம்.

இது போன்று பல்வேறு பாடல்களைப் புலவர் கற்பனை நயம் தோன்றப் படைத்துள்ளதைப் படித்து மகிழ முடியும்.

5.7 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை வில்லி பாரதம் பற்றிச் சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

இந்திய இதிகாசங்களில் மகா பாரதம் பற்றிய பொதுவான செய்திகளை அறிந்திருப்பீர்கள்.

பண்டைய தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள மகா பாரதம் பற்றிய குறிப்புகளை அறிந்திருப்பீர்கள்.

தமிழில் வெளிவந்துள்ள பாரதம் பற்றிய நூல்களைத் தெரிந்திருப்பீர்கள்.

வில்லி பாரத ஆசிரியர் வில்லிபுத்தூரார் வாழ்க்கை வரலாற்றையும் அவர் காலத்தையும் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

வில்லி பாரதக் காப்பிய அமைப்பையும் கதையையும் அறிந்திருப்பீர்கள்.

வில்லி பாரதக் காப்பியச் சுவையைச் சில பாடல்களின் துணையோடு அறிந்திருப்பீர்கள்.

பாடம் - 6

பெருங்கதை

6.0 பாட முன்னுரை

பெருங்கதை சிறந்த தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. வட இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு இது இயற்றப்பட்டது. அதேசமயம் தமிழ்ச் சாயலோடு தமிழ்க் காப்பியமாகவே பாடப்பெற்றது. சங்க இலக்கியச் சொல்லாட்சியை மிகுதியாகக் கொண்டது; காப்பிய நயங்களில் சிறந்தது. சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் முதலிய காப்பியங்களோடு ஒப்ப வைத்து எண்ணப்படுவது. இப்பெருங்கதை பற்றிய அறிமுகமாக இப்பாடம் அமைக்கப்பட்டுள்ளது.

6.1 பெருங்கதை

வட இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் என்ற பெருமை இதற்கு உண்டு.

6.1.1 தனிச்சிறப்பு வேறு எந்தத் தமிழ்க் காப்பியத்திற்கும் இல்லாத தனிச் சிறப்புப் பெருங்கதைக்கு உண்டு என்று அறிஞர் கருதுவர். இது பலவகைக் கருவிகள், பழக்க வழக்கங்கள், கட்டட அமைப்புகள், விளையாட்டுகள் பற்றிய சமுதாயச் செய்திகளை எல்லாம் நுட்பமாகப் பேசும் ஒரு காப்பியம்.

உரையாசிரியர்களின் பாராட்டு

பெருங்கதை பற்றிப் பழைய உரையாசிரியர்கள் பலர் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இக்காப்பியத்தைப் பாராட்டி உள்ளார். “கபாடபுரத்தில் இருந்த இடைச் சங்கத்தில் இயற்றப்பட்டவை கலியும் குருகும் வெண்டாளியும் முதலிய செய்யுள் இலக்கியங்கள்; இந்த இலக்கியங்களை எல்லாம் ஆராய்ந்து செய்ததே உதயணன் கதை” என்று அவர் கூறியுள்ளார் (உதயணன் கதை – பெருங்கதை). பேராசிரியர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர். தொன்மை முதலிய இலக்கணக் கூறுகளை விளக்கும் இவர் இயைபு என்ற இலக்கணத்தை விளக்கி, அதற்குச் சான்றுகளாகச் சீத்தலைச் சாத்தனாரால் செய்யப்பட்ட மணிமேகலையையும், கொங்குவேளிரால் செய்யப்பட்ட இந்தப் பெருங்கதையையும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களே அன்றி நச்சினார்க்கினியர், மயிலை நாதர், நேமிநாத உரையாசிரியர், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், வீரசோழிய உரையாசிரியர் முதலியோர் உரைகளிலும் பெருங்கதை மேற்கோளாக இடம் பெற்றுள்ளது. இத்தகைய பெருமை பெற்ற பெருங்கதை, உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கையை விவரித்துச் செல்கிறது. இக்காப்பியத்தை இயற்றிய கொங்குவேளிர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். எனவே இக்காப்பியம் சமணக் கொள்கைகளை மிகுதியும் முன்னிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது. இப்பெருங்கதை பற்றிய அறிமுகமாக இப்பாடப் பகுதி அமைக்கப்பெற்றுள்ளது.

6.1.2 பெருங்கதை – பெயர் அறிமுகம் பெருங்கதை என்பதே அச்சிடப்பெற்ற இந்நூலின் பெயராக இப்போது விளங்குகிறது. இதற்குக் கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு இரண்டு பெயர்களும் உள்ளன.

கொங்குவேள் மாக்கதை

உ.வே. சாமிநாதையர் பெருங்கதையை முதன்முதலில் 1924இல் பதிப்பித்து வெளியிட்டார். அவர் பதிப்பிற்காக எடுத்துக் கொண்ட இரண்டு சுவடிகளில் கொங்குவேள் மாக்கதை என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. சாமிநாத தேசிகர் எழுதிய இலக்கணக் கொத்துப் பாயிர உரையில் (நூற்பா – 7) இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு,

கொங்குவேள் மாக்கதை முதலியவற்றோடு சேர்த்து”

என்பது அந்த உரையின் ஒரு பகுதி. தனிப்பாடல் ஒன்று

“உருத்தக்க கொங்குவேள் மாக்கதை”

(உரு = அழகு)

என்று கூறியுள்ளது. பெருந்தேவனார் பாரதம், கம்பராமாயணம், வில்லி பாரதம் என்பன போல, நூலாசிரியர் பெயரும் சேர்த்துக் கொங்குவேள் மாக்கதை என்ற பெயர் இக்காப்பியத்திற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

உதயணன் கதை

உதயணன் கதை என்ற பெயர் பழைய உரையாசிரியர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. உதயணன் கதை என்ற பெயரைச் சுட்டி உரையெழுதிய உரையாசிரியர்கள் வருமாறு:

பேராசிரியர் - தொல். பொருள். செய்யுளியல். 24

அடியார்க்கு நல்லார் - சிலம்பு. 4, 3, 41, 42

யாப்பருங்கல விருத்தியுரை - நூற்பா. 53, 69

வீரசோழிய உரை - யாப்புப்படலம். 9

தக்கயாகப் பரணி உரை - தாழிசை 33, 137, 258

எனவே, பழங்காலத்தில் பெருங்கதையின் பெயர் உதயணன் கதை என்பதாகவே இருந்தது என்பதை அறிய முடிகிறது.

பெருங்கதை

மாக்கதை என்பதற்கும் பெருங்கதை என்பதற்கும் தொடர்பு உண்டு. மா என்றால் பெரிய என்பது பொருள். மாக்கதை பெரிய கதை அல்லது பெருங்கதை என்றும் பொருள்படும். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார வேனிற்காதை 23 – 26 அடிகளுக்கு உரை எழுதும்போது, பெருங்கதை என்ற பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இதனை நோக்கப் பெருங்கதை என்ற பெயரும் பழங்காலத்திலேயே வழக்கில் இருந்துள்ளதை அறியலாம்.

6.1.3 பெருங்கதையின் முதல் நூல்கள் கம்பராமாயணத்திற்கு முதல் நூல் வான்மீகி ராமாயணம். வில்லி பாரதத்திற்கு முதல் நூல் வியாச பாரதம். இதே போல் பெருங்கதைக்கும் மூல நூல் உண்டு. முதல் நூல் என்பதும் மூல நூல் என்பதும் ஒரே பொருள்படும்.

காப்பியத்தின் நிகழ்ச்சிகள் நிகழும் இடம் வட இந்தியா என்று குறிப்பிடப்பட்டது. எனவே பெருங்கதையின் மூல நூலும் வடமொழியில்தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை உணர முடியும். இக்காப்பியத்தின் தலைவனாகிய உதயணன் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல்கள் வடமொழியில் பல உள்ளன. அவற்றுள் சில வருமாறு:

1) பிருகத் கதா சுலோக சங்கிரகம்

2) பிருகத் கதா மஞ்சரி

3) பிருகத்கதா சரித் சாகரம்

4) உதிதோதய காவியம்

5) இரத்னாவளி

6) பிரிய தர்சிகா

7) சொப்பன வாசவதத்தா

8) பிரதிஞ்ஞா யௌகந்தராயணம்

9) வாசவதத்தா

10) மிருச்ச கடிகம்

11) கருப்பூர மஞ்சரி

12) காதம்பரி

இவை அன்றி உதயண குமார காவியம் என்பதும் வச்சத் தொள்ளாயிரம் என்பதும் தமிழில் இயற்றப்பட்ட உதயணன் பற்றிய காவியங்கள் ஆகும். வச்சத் தொள்ளாயிரம் முழுவதும் கிடைக்கவில்லை என்பது தெரிகிறது.

சாதவாகனன் அரசவையில் அமைச்சராய் இருந்த குணாட்டியர் என்பவர் பிருகத் கதா எனும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினார். இக்கதையே உதயணன் கதை ஆகும். இந்தக் காப்பியமே பெருங்கதையின் மூல நூல் என்று கூறுவது உண்டு. ஆனால் குணாட்டியர் செய்த நூல் சைவ சமயத்தை மிகுதியும் போற்றி உள்ளது. கொங்குவேள் காப்பியம் சமண சமயத்தைப் போற்றி உள்ளது. எனவே குணாட்டியர் செய்த நூலை முதல் நூலாகக் கொண்டு வட மொழியில் வேறு நூல் உள்ளதா? அதுவும் சமணச் சார்புடையதாக உள்ளதா? என்பதை உ.வே.சாமிநாதையர் அவர்கள் ஆராய்ந்து உள்ளார்கள். கி.பி. 570 – 580 வரை ஆட்சி செய்த கங்கமன்னன் துர்விநீதன் என்பவன் பிருகத் கதையை முழுமையும் சமஸ்கிருதத்திலேயே மொழிபெயர்த்தான்.

உ.வே.சாமிநாதையர் இவற்றை எல்லாம் ஆராய்ந்து துர்விநீதன் சமஸ்கிருதத்தில் எழுதிய பிருகத் கதா என்னும் நூலே பெருங்கதையின் மூல நூலாக இருக்க வேண்டும் என்று முடிவு கூறியுள்ளார்.

6.2 கொங்குவேளிர் வரலாறு

பெருங்கதையின் ஆசிரியர் கொங்குவேளிர் என்று கூறுவர். கொங்கு நாட்டைச் சேர்ந்தவர்; வேளாள வகுப்பில் பிறந்தவர். சிற்றரசர்களுள் ஒருவர். இவர் பிறந்த ஊர் கொங்கு நாட்டில் உள்ள விசயமங்கலம் என்று தெரிய வருகின்றது. இவர் தமிழ்ப் புலவர் பலரை ஒன்று சேர்த்து ஆராய்ச்சி செய்யும் அமைப்பை ஏற்படுத்தி இருந்தார். அந்தக் கழகத்தில் புலவர் பலர் இடைவிடாமல் பழைய நூல்களை ஆராய்ச்சி செய்து வந்தனர். கொங்குவேளிரும் அவர்களோடு கலந்து தமிழ் ஆராய்ந்து விவாதித்து வந்தார்.

அடியார்க்கு நல்லார் என்னும் சிலப்பதிகார உரையாசிரியரின் கூற்றின்படி கொங்குவேளிர் காலத்தில் இடைச்சங்க நூல்கள் வழக்கத்தில் இருந்துள்ளதை அறிய முடிகின்றது. இவரும் இவரது காலத்துப் புலவர்களும் இடைச்சங்க நூல்களில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்ததும் தெரிய வருகின்றது.

6.2.1 கொங்கு மண்டல சதகம் கூறும் வரலாறு கொங்குவேளிரின் வாழ்க்கை வரலாற்றைக் கொங்கு மண்டல சதகம் என்னும் நூல் விவரித்துள்ளது.

அது வருமாறு:

நீதப் புகழ்உத யேந்திரன் காதை நிகழ்த்துதற்குக்

கோதற்ற மங்கையின் மூன்று பிறப்புற்ற கொள்கையன்றி

மேதக்க சொற்சங்கத் தார்வெள்க வேகொங்கு வேள்அடிமை

மாதைக்கொடு உத்தரஞ் சொன்னது வும்கொங்கு மண்டலமே

(கொங்கு மண்டல சதகம் – 99)

(நீதம் = தகுதி / நற்பேறு; உதயேந்திரன் கதை = உதயணன் கதை; கோது = குற்றம்; மங்கை = விசயமங்கலம் என்னும் ஊர்; மூன்று பிறப்பு = மூன்று பிறவி; மேதக்க = மேன்மை உடைய; வெள்கவே = வெட்கப்படுமாறு; அடிமை மாது = வேலைக்காரப் பெண்; உத்தரம் = மறுமொழி)

குற்றமற்ற மங்கை ஆகிய விசயமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர் கொங்குவேளிர். இவர் புகழ்மிக்க உதயணன் கதையைப் படைப்பதற்காக மூன்று பிறவி எடுத்தவர். உதயணன் கதையைப் படைத்துச் சங்கத்தில் அரங்கேற்றம் செய்தார். அப்போது சங்கத்தில் உள்ள புலவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவர்கள் வெட்கப்படுமாறு தம் வீட்டு வேலைக்காரப் பெண்ணின் மூலம் விடை தந்தார்.

சோதிடமும் மூன்று பிறவியும்

கொங்குவேளிர் நூல் செய்துவரும்போது, இவருக்கு விரைவில் மரணம் நேரும் என்று சோதிடர் கூறினர். இதனை அறிந்த கொங்குவேளிர் எப்படியாவது மரணத்தைத் தள்ளிப்போட்டு நூலை முடிக்க வேண்டும் என்று எண்ணினார். இதற்காக மூன்று பிறவி எடுக்கத் திட்டமிட்டார். இதன்படி இல்லறம் ஒரு பிறவி ஆயிற்று. இல்லறத்திலிருந்து நீங்கி, வானப்பிரத்தம் (மனைவியுடன் காட்டிற்குச் சென்று தவம் செய்தல்) மேற்கொண்டார். இது இரண்டாம் பிறவி ஆயிற்று. இதிலிருந்தும் நீங்கித் துறவறம் மேற்கொண்டார். இது மூன்றாம் பிறவி ஆனது. துறவறம் பூண்டு பெருங்கதையை நிறைவு செய்தார் என்று உ.வே.சாமிநாதையர் கூறுவார்.

மூன்று பிறவியின் இரண்டாவது பொருள்

உதயணன் கதையை இயற்றுவதற்கு மூன்று பிறவி எடுத்தார் என்பதற்கு வேறொரு பொருளும் உண்டு. இவர் முதற் பிறவியில் குணாட்டியராகப் பிறந்து பைசாச மொழியில் இக்காப்பியத்தைப் படைத்தார். இரண்டாவது பிறவியில் துர்விநீதனாகப் பிறந்து வடமொழியில் இக்காப்பியத்தைப் படைத்தார். மூன்றாவது பிறவியில் கொங்குவேளிராகப் பிறந்து தமிழில் பெருங்கதையைப் படைத்தார். இவ்வாறு பொருள் கொள்வதும் உண்டு.

6.2.2 காலமும் சமயமும் கொங்குவேளிரின் காலத்தைப் பற்றிச் சரியாகக் கணித்திடச் சான்றுகள் கிடைக்கவில்லை என்று உ.வே. சாமிநாதையரும், பொ.வே. சோமசுந்தரனாரும் கருதுகின்றனர். என்றாலும் இப்புலவர் கடைச்சங்க காலத்தை ஒட்டிய காலப் பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் ஊகிக்கின்றனர். திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணிக் காப்பியத்திற்கு முன்பும், சிலப்பதிகாரம், மணிமேகலை படைக்கப்பெற்ற காலத்தை ஒட்டியும் பெருங்கதை படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரிகிறது.

சமணர்

கொங்குவேளிர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். சமணக் கருத்துகள், தத்துவங்கள் பலவற்றைப் பெருங்கதையில் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6.3 காப்பிய அமைப்பும் கதையும்

பெருங்கதை ஐந்து காண்டங்களை உடையது. ஒவ்வொரு காண்டமும் காதை என்னும் பல உட்பிரிவுகளைக் கொண்டது. காதைகளில் பெருங்கதையின் கதை நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன.

6.3.1 காண்டங்கள் பெருங்கதையின் ஐந்து காண்டங்கள் வருமாறு :

ஐந்து காண்டங்களே அன்றித் துறவுக் காண்டம் என்று ஒரு காண்டம் இருந்ததாகவும், அது இறுதிக் காண்டம் ஆகும் என்றும், அது அழிந்து விட்டது என்றும் பொ.வே. சோமசுந்தரனார் கருதுகிறார். பெருங்கதை நூல் முழுவதும் கிடைத்தபாடில்லை. காண்டங்களின் உட்பிரிவுகள் ஆகிய காதைகள் பல அழிந்துள்ளன. உஞ்சைக் காண்டம் 58 காதைகளை உடையது. இவற்றுள் முதல் 31 காதைகள் அழிந்துள்ளன. இதே போல் ஐந்தாம் காண்டமாகிய நரவாண காண்டத்தில் 9 ஆம் காதைக்குப் பின் உள்ள காதைகள் அழிந்துவிட்டன. ஆறாம் காண்டமாகிய துறவுக் காண்டம் முழுவதும் அழிந்துள்ளது. காண்டங்களின் கிடைத்துள்ள காதை எண்ணிக்கை வருமாறு:

உஞ்சைக் காண்டம் – 27 காதைகள் (27+31=58)

இலாவாண காண்டம் – 20 காதைகள்

மகத காண்டம் – 27 காதைகள்

வத்தவ காண்டம் – 17 காதைகள்

நரவாண காண்டம் – 9 காதைகள்

6.3.2 உதயணன் கதை ஒவ்வொரு காதையிலும், உதயணன் பிறப்பு, திருமணம், துறவு ஆகியவை பற்றிய செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

உதயணன் பிறப்பு

கௌசாம்பி நகர வேந்தன் சதானிகன். இவன் மனைவி மிருகபதி. இவள் நிறைமாதக் கருப்பம் உடையவளாய் இருந்தாள். ஒரு நாள் செவ்வாடை உடுத்தி மாடியில் உறங்கிக் கொண்டிருந்தாள். சிவந்த ஆடையினால் அவளை ஓர் ஊன்தடி (மாமிசத்துண்டு) என்று கருதிய சிம்புள் பறவை அவளைக் கட்டிலோடு நெடுந்தொலைவு தூக்கிச் சென்றது. அவள் ஊன் இல்லை என்பதை அறிந்த பறவை விபுலம் என்னும் மலையில் விட்டுச் சென்றது. அப்பொழுதில் அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு உதயணன் என்று பெயரும் இடப்பட்டது.

வளர்ப்பும் நண்பனும்

மலையில் மிருகபதியின் தந்தை தவம் செய்து வந்தார். அவர் தன் மகளையும் பேரனையும் கண்டு மகிழ்ந்தார். பின்னர் அவரே அவர்களை வளர்த்து வந்தார். அதே மலையில் இருந்த பிரமசுந்தர முனிவரின் மகன் யூகி, உதயணனின் நண்பன் ஆனான். இருவரும் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று வளர்ந்து வந்தனர்.

யானையுடன் நட்பு

உதயணன் யாழிசையில் வல்லவன். அவனது யாழின் இசைக்கு மயங்கி ஒரு தெய்வீக யானை அவனிடம் வந்தது. தொடர்ந்து அவனிடமே தங்கியிருப்பதற்கு யானை மூன்று நிபந்தனைகளை விதித்தது; உதயணனின் ஒப்புதலையும் வேண்டிப் பெற்றது. அதன்படி, யானை உண்ணும் முன்பு உதயணன் உண்ணக் கூடாது; யானை மீது உதயணன் தவிர வேறு யாரும் ஏறக் கூடாது; முகபடாம் முதலிய அணிகளை அணிவிக்கக் கூடாது. இவ்வாறே உதயணனும் அதற்கு உடன்பட்டு, ஒழுகி வந்தான்.

யானைத் தோழன்

பின்னர் உதயணன் தன் மாமனது அரசையும் தந்தையின் அரசையும் பகைவரிடம் இருந்து கைப்பற்றி ஆண்டு வந்தான்.

யானையை அடக்கல்

உதயணன் ஒரு நாள் சோர்வு மிகுதியால் யானைக்கு உணவு தரும் முன்பாக, தான் உண்டு விட்டான். இதனால் யானையும் அவனைப் பிரிந்து சென்று விட்டது. வருத்தம் அடைந்த உதயணன், யாழை இசைத்துக் கொண்டே காடு மலைகளில் எல்லாம் யானையைத் தேடி அலைந்தான். இந்நிலையில் உச்சயினியை ஆண்ட மன்னன், ஓர் இயந்திர யானையைப் பயன்படுத்தி உதயணனைச் சிறைப்படுத்தினான். இதனை அறிந்த யூகி உதயணனை மீட்கத் திட்டம் இட்டான். இதன்படி உச்சயினியின் பட்டத்து யானையை மதம் கொள்ள வைத்துத் தெரு வீதிகளில் திரிய விட்டான். யானையை எவராலும் அடக்க இயலவில்லை. இறுதியில் மன்னன் உதயணனைச் சிறையில் இருந்து விடுவித்தான். யானையை அடக்க வேண்டினான். யானையை அடக்கிய உதயணன் அரசனின் நன்மதிப்பைப் பெற்றான்.

காதலும் திருமணமும்

பின்பு உச்சயினி மன்னன் மகள் வாசவதத்தைக்கு யாழ் கற்றுத்தரும் வேளையில், இருவருக்கும் காதல் மலர்ந்தது. உதயணன் வாசவதத்தையைச் சயந்தி நகரத்திற்கு அழைத்துச் சென்று, மணம் புரிந்து வாழ்ந்து வந்தான்.

காதல் மயக்கமும் யூகியின் சூழ்ச்சியும்

உதயணன் வாசவதத்தையுடன் கூடிக் காதல் வாழ்க்கை வாழ்ந்து வந்தான். காதல் மயக்கத்தில், அரசன் என்ற முறையில் ஆற்றவேண்டிய கடமையை மறந்தான். இதனால் இருவரையும் பிரித்தலே நாட்டுக்கு நன்மை என்பதை யூகி உணர்ந்தான். இருவரையும் பிரித்து வைக்கத் திட்டமும் தீட்டினான். அதற்கு முன்பாக, தான் (யூகி) இறந்துவிட்டதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பினான். அடுத்ததாக, வாசவதத்தையை யாரும் அறியாமல் வேறோர் இடத்திற்கு மாற்றி, அவள் தீயினால் மாண்டு விட்டதாகவும் செய்தி பரப்பினான். இருவரின் பிரிவையும் தாங்காத உதயணன் பெரிதும் மனம் கலங்கினான். அக்கவலையை மாற்ற இராசகிரியத்தில் இருந்த ஒரு முனிவரை அடைந்தான்.

உதயணனின் பல்வேறு திருமணங்கள்

இராசகிரியத்தில் இருந்தபோது அந்த நகரத்து அரசன் தங்கை பதுமாவதியை மணந்தான். பின்பு தன் நகராகிய கௌசாம்பிக்கு வந்தான். அங்கு, யூகியும் வாசவதத்தையும் மீண்டும் வருவதைக் கண்டு உதயணன் மகிழ்ந்தான். அதன் பின்னர், மானனீகை என்பவளையும், விரிசிகை என்பவளையும் மணந்து கொண்டு வாழ்ந்தான்.

உதயணன் துறவு

வாசவதத்தையின் மகன் நரவாண தத்தன் காந்தருவ உலகம் சென்றான். அவ்வுலகத்தை வெற்றி கொண்டு அங்கு ஆட்சி புரிந்தான். இதன் பின்னர் உதயணன், பதுமாவதியின் மகன் கோமுகனிடம் ஆட்சியை ஒப்படைத்தான். இறுதியில் துறவு மேற்கொண்டான்.

உறவு நீத்த துறவு

இதையே பெருங்கதைக் காப்பியத்தின் கதைச்சுருக்கமாக அறிய முடிகிறது.

6.4 கவிநயம்

பெருங்கதையைப் பல்வேறு உரையாசிரியர்கள் மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ளனர். இதிலிருந்தே இக்காப்பியத்தின் பெருமையை உணர முடியும். சங்க இலக்கிய அக மரபுகளையும் புற மரபுகளையும் (காதல், வீரம்) தழுவி இக்காப்பியம் படைக்கப்பெற்றுள்ளது. செறிந்த சொல்லாட்சி, சங்கப் பாடல்களை நினைவூட்டுகின்றன. கற்பனை, உவமை, வருணனை ஆகியன சங்கப் பாடல்களை மட்டும் இன்றிச் சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் நினைவூட்டுகின்றது. உயர்ந்த வாழ்க்கைக் குறிக்கோள்களையும் இக்காப்பியம் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. இத்தகைய சிறப்புமிக்க பெருங்கதையின் கவிதை நயத்தை இனி அறிந்து கொள்வோம்.

6.4.1 வாழ்வியல் தத்துவங்கள் எத்தகைய காப்பியமாயினும் அது, மனித வாழ்க்கையை மேம்படுத்துமாறு அமைக்கப்படுதல் வேண்டும். பெருங்கதை மனித வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள்களை ஆங்காங்கே கூறிச் செல்கின்றது. இத்தகைய குறிக்கோள்களை உ.வே. சாமிநாதையர் பெருங்கதைப் பதிப்புரையில் பட்டியலிட்டுள்ளார். அவற்றுள் சில வருமாறு:

தெய்வ வழிபாடு சிறந்தது.

பெரியோரை வணங்குதல் நல்லது.

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்.

கல்வி கற்றவனைப் பகைவனும் மதிப்பான்.

எந்தக் காலத்திலும் கல்வியைக் கைவிடக் கூடாது.

நல்ல துணைவர்களைப் பெற்றவன் கவலை இன்றி வாழ்வான்.

ஒரு காரியத்தைச் செய்ய நினைப்பவன் அதற்குரிய துணையையும் கருவியையும் முதலில் பெற வேண்டும்.

நன்றி பாராட்ட வேண்டும்.

காலத்தைக் கண்ணாக மதிக்க வேண்டும்.

யாரிடத்தும் பகை கொள்ளக் கூடாது; யாரையும் இகழக் கூடாது.

தருமத்தை உயிராக எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறான பல்வேறு வாழ்க்கைத் தத்துவங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் காப்பியத்தில் விளக்கப்பெற்றுள்ளதை அறிய முடிகின்றது.

6.4.2 தமிழர் வாழ்வும் பண்பாடும் பெருங்கதை வடமொழியிலிருந்து தழுவி எழுதப்பெற்ற நூலாக இருப்பினும், தமிழர் வாழ்வையும் பண்பாட்டையும் விளக்கமாகச் சொல்கிறது. நூல் எழுந்த காலத்தின் தமிழர் பண்பாட்டை, நாகரிகத்தை, பழக்க வழக்கத்தை விரிவாக அறிந்து கொள்ளும் வகையில் காப்பியம் படைக்கப்பட்டுள்ளது. சில பண்பாட்டுக் கூறுகள் வருமாறு:

அரண்மனை அமைப்பு – ஆட்சி முறை – அரசன் பண்பு – படை -ஆயுதங்கள் – எந்திரப் பொறிகள் – ஊர்திகள் – கோட்டைகள் – கைத்தொழில் – கோயில் – சாதி – சிற்பம் – இசை – கட்டடம் – நாணயங்கள் – பறவைகள் – விலங்கினங்கள் – மகளிர்க்குரிய விளையாட்டுகள் – கலைகள் – திருமணம் – சடங்கு முறைகள் – விழாக்கள்  முதலிய பல்வேறு பண்பாட்டுக் கூறுகள் இக்காப்பியத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

எந்திரப் பொறிகள்

எந்திரப் பொறிகள் பற்றிய விவரங்களை மட்டும் இங்கே நாம் காண்போம். பெருங்கதையில் பல்வேறு எந்திரப் பொறிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில வருமாறு:

1) காளைகள் இன்றி விரைந்து செல்லும் வண்டி.

(காளை – மாடு)

2) போருக்குப் பயன்படும் யானைப் பொறி.

இந்த யானைப் பொறி ஆயுதங்களையும் போர் வீரர்களையும் தன்னுள்   ஏற்றிக்கொள்ளும். போர் வீரர்கள் வெளியே தெரியாதவாறு மறைத்துக் கொள்ளும். உயிருள்ள யானை போல நடந்து செல்லும்.

3) ஆகாய வழியே செல்லும் விமானம்.

ஏற விரும்பியவர்களை ஏற்றிக் கொள்ளும். அவர்கள் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்கும்படி ஆகாய வழியே விரைந்து செல்லும்.

4) காலத்தைக் காட்டும் எந்திரம்.

நாழிகையை (மணியை) அளவிடும் கருவி. விண்மீன்கள் தோன்றுவதையும் மறைவதையும் புலப்படுத்தும் பொறி மண்டலம்.

6.4.3 வருணனை இலக்கிய நயத்தில் சுவை கூட்டுவது வருணனைப் பகுதி ஆகும். காப்பியங்களில் வருணனை ஓர் இலக்கணமாகவே ஆக்கப்பட்டுள்ளது. தமிழ்க் காப்பியங்களில் ஐவகை நில (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) வருணனைகள் இடம் பெறுவது உண்டு. புலவனின் கற்பனையை இந்த வருணனைகளில் கண்டு மகிழ முடியும். கொங்கு வேளிர் நிலங்களை வருணிப்பதில் சிறந்து விளங்கி உள்ளார். ஒரு சில எடுத்துக்காட்டுகளை இங்கே பார்ப்போம்.

முல்லை நில வருணனை

முல்லை நிலத்தில் வாழுகின்ற ஆடவர்கள் பொருள் தேடித் தம் மனைவியரைப் பிரிந்து செல்கின்றனர். மனைவியர் கணவர் பிரிந்ததனால் ஏற்பட்ட பிரிவுத் துயரத்தைத் தாங்கி ஆற்றி வாழ்கின்றனர். இது தமிழர்கள் முல்லைத் திணைப் பாடல்களுக்காக வகுத்த இலக்கிய மரபு ஆகும். கொங்குவேளிர் முல்லைத் திணையை வருணிக்கும் அழகைப் படித்து மகிழுங்கள்.

பாடல் இதோ:

பொருள்வயிற் பிரிவோர் வரவுஎதிர் ஏற்கும்

கற்புடை மாதரின் கதுமென உரறி

முற்றுநீர் வையகம் முழுதும் உவப்பக்

கருவி மாமழை பருவமொடு எதிரப்

பரவைப் பௌவம் பருகுபு நிமிர்ந்து

கொண்மூ விதானம் தண்ணிதின் கோலித்

திருவில் தாமம் உருவுபட நாற்றி

விடுசுடர் மின்னொளி விளக்கம் மாட்டி

ஆலி வெண்மணல் அணிபெறத் தூஉய்க்

கோல வனப்பின் கோடணை போக்கி

அதிர்குரல் முரசின் அதிர்தல் ஆனாது

தூநிறத் தண்டுளி தானின்று சொரிந்து

வேனில் தாங்கி மேனி வாடிய

மண்ணக மடந்தையை மண்ணு நீராட்டி

முல்லைக் கிழத்தி முன்னருள் எதிர

(பெரு. உஞ்சைக் காண்டம், 49 : அடிகள் 76 – 90)

(வரவுஎதிர் ஏற்கும் = பிரிந்தோர் வரவை எதிர்பார்க்கும்; கதும் = திடும் என்று / விரைந்து; உரறி = முழங்கி; முற்று = முழுமை; வையகம் = உலகம்; கருவி = தொகுதி / இடி மின்னல் முதலியவற்றின் தொகுதி; பருவம் = கார்ப்பருவம்; பரவை = கடல் / பரவி நிற்கும் நீர்; பௌவம் = கல்; பருகுபு = பருகி; கொண்மூ = மேகம்; விதானம் = மேற்புறம் கட்டி / மேற்கட்டி; திருவில் = வானவில்; தாமம் = மாலை; ஆலி = ஆலங்கட்டி / மழை; கோடணை = முழக்கம்; மண்ணுதல் = கழுவுதல்)

முல்லையும் காரும் (தலைவனும் தலைவியும்)

முல்லை நிலமே ஒரு தலைவியாம்; அவள் கணவன் கார் காலமாம். அவன் வாழ்க்கை நடத்துவதற்குப் பொருள் தேடிச் சென்றிருந்தானாம். கார் காலம் இடி முதலியவற்றால் முழங்குகிறது. அது பிரிந்து சென்ற கணவன் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கற்புடைப் பெண்ணின் நெஞ்சுக் குமுறல் போல உள்ளதாம். கார் காலம், கடல் நீரைப் பருகி விரைந்து வருகின்றது. அது தலைவன் பொருளைச் சம்பாதித்துத் தலைவியைக் காண விரைந்து வருவது போல உள்ளதாம். கார்காலத் தலைவனின் பிரிவாகிய வேனில் வெப்பத்தால் முல்லை நிலமாகிய தலைவி மேனி வாடிக் கிடக்கிறாள். ஆகையால் கார்த் தலைவன் தன் மேகத்தால் உலகமெல்லாம் ஒரு பந்தலைக் கட்டுகிறான். அப்பந்தலில் வான வில்லாகிய மாலையைக் கட்டித் தொங்க விடுகின்றான். மின்னலாகிய விளக்குகளை எல்லா இடத்திலும் மாட்டி வைக்கிறான். ஆலங்கட்டி மழையால் முல்லை நிலமாகிய தன் தலைவியை நீராட்டுகிறான். இவ்வாறு கார்காலமும் முல்லை நிலமும் அழகுற வருணிக்கப் பெற்றுள்ளதை அறிய முடிகின்றது. இது போன்று பல்வேறு வருணனைகளைக் காப்பியத்தில் படித்து மகிழலாம்.

6.4.4 உவமை நலன் பெருங்கதைக் காப்பியத்தின் சிறப்புகளுள் ஒன்று உவமை நலன் ஆகும். உவமைகளைக் கையாளுவதில் கொங்குவேளிரின் தனித்தன்மை வெளிப்பட்டுள்ளது. உரையாசிரியர்களும், பிற்கால ஆய்வாளர்களும் உவமையை விளக்குவதற்கு, கொங்குவேளிரின் பாடலையே மேற்கோள் காட்டினர்.

வாசவதத்தையின் அழகு

கொங்குவேளிர் உவமையை அமைத்து இயற்றிய பாடல்களுள் புகழ் பெற்றது ஒன்று உண்டு. அது வாசவதத்தையின் உருவ வருணனை ஆகும். கேசாதி பாதமாக (தலை முதல் கால் வரை) வாசவதத்தையின் எழில் உருவத்தைப் புலவர் பாடியுள்ள திறம் படித்து மகிழ்வதற்கு உரியது. உடலின் ஒவ்வோர் உறுப்பிற்கும் ஓர் உவமையைப் புலவர் அமைத்துள்ளார். பாடல் இதோ:

யாற்றுஅறல் அன்ன கூந்தல் யாற்றுச்

சுழிஎனக் கிடந்த குழிநவில் கொப்பூழ்

வில்லெனக் கிடந்த புருவம் வில்லின்

அம்பெனக் கிடந்த செங்கடை மழைக்கண்

பிறையெனச் சுடரும் சிறுநுதல் பிறையின்

நிறையெனத் தோன்றும் கறையில் வாள்முகம்

அரவென நுடங்கு மருங்குல் அரவின்

பையெனக் கிடந்த ஐதேந்து அல்குல்

கிளியென மிழற்றும் கிளவி கிளியின்

ஒளிபெறு வாயின் அன்ன ஒள்ளுகிர் ….

வேயெனத் திரண்ட மென்றோள் வேயின்

விளங்கு முத்தன்ன துளங்குஒளி முறுவல்

காந்தள் முகிழ்அன்ன மென்விரல் காந்தள்

பூந்துடுப்பு அன்ன புனைவளை முன்கை

(பெரு. வத்தவ காண்டம், 11: அடிகள் 64 – 79)

(யாற்று = யாறு / ஆறு; அறல் = மணல்; யாற்றுச்சுழி = நீர்ச்சுழி; நவில் = விரும்பத்தக்க; கடை = கண்ணின் ஓரப்பார்வை; மழை = கருமை; பிறையின் நிறை = முழுமதி; கறை = குற்றம்; வாள் = ஒளி பொருந்திய; அரவு = பாம்பு; மருங்குல் = இடுப்பு / வயிற்றுப் பகுதி; பை = பாம்பின் படம்; ஐது = அழகு / மென்மை; அல்குல் = பெண்ணின் வயிற்றுப் பகுதி; மிழற்றல் = மழலை பேசல்; ஒள் = ஒளி பொருந்திய; உகிர் = நகம்; வேய் = மூங்கில்; முறுவல் = பற்கள்; முகிழ் = மொட்டு; துடுப்பு = பூங்கொத்து.)

வாசவதத்தையின் வடிவ அழகை முழுவதுமாக உவமை மூலம் விளக்குகிறார் புலவர். யாற்றில் நீர் ஓடுவதால் மணல் வெளி நெளிந்து நெளிந்து அறல்பட்டுக் கிடக்கும். அதுபோல் அவளுடைய கூந்தல் கருமை நிறமாகவும் நெளிந்தும் கிடக்கிறது. ஆற்றில் ஓடும் நீரில் சுழி தோன்றும். இது நீர்ச்சுழி எனப்படும். அந்த நீர்ச்சுழி போலக் குழிந்தும் விரும்பத்தக்கதாகவும் அவளுடைய கொப்பூழ் அமைந்துள்ளது. வில்லைப் போலப் புருவம் அமைந்துள்ளது. வில்லிலிருந்து புறப்படும் அம்பு போல அவளுடைய கருங்கண் காணப்படுகின்றது. அவளுடைய சிறிய நுதல் (நெற்றி) நிலவின் பிறை போல ஒளி வீசுகின்றது. முழுமதி போல அவளுடைய ஒளி பொருந்திய முகம் காணப்படுகின்றது. அவளுடைய பேச்சு கிளியின் பேச்சுப் போல மழலைப் பேச்சாக உள்ளது. கிளியின் மூக்குப் போல நகம் காணப்படுகின்றது. தோள் மூங்கிலைப் போல உள்ளது. மூங்கிலில் உள்ள முத்துகள் போல அவளுடைய பற்கள் ஒளி வீசுகின்றன. காந்தள் மொட்டுகள் போல விரல்கள் காணப்படுகின்றன. காந்தள் பூங்கொத்துப் போல அவள் முன்கை அமைந்துள்ளது.

இவ்வாறு ஏராளமான உவமைகள் மூலம் படிப்போர் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வகையில், புலவர் பெருங்கதையைப் படைத்துள்ளார். நாமும் படித்து மகிழ்வோமாக.

6.4.5 உணர்ச்சிகள் (மெய்ப்பாடுகள்) காப்பிய மாந்தர்களின் உணர்வுகளை விளக்கும் நிகழ்ச்சிகள் இடம் பெறும்போது காப்பியம் விறுவிறுப்பைப் பெறும். உணர்ச்சிகளைச் சுவை என்றும் மெய்ப்பாடு என்றும் கூறுவர். மெய்ப்பாடு எட்டு வகைப்படும். அவை, ‘நகை, அழுகை, இழிவு, வியப்பு, அச்சம், சினம், மகிழ்ச்சி, பெருமிதம்’ என்பனவாம். மனிதர்களின் இந்த உணர்ச்சிகளை மையமாக வைத்துப் புலவர்கள் பாடல்களை இயற்றுவர். பெருங்கதையில் எட்டு வகை உணர்ச்சிகளும் சிறப்பான முறையில் அமைந்து கிடக்கின்றன. ஒன்றிரண்டு பாடல்களில் உள்ள உணர்வு நிலைகளை இனிக் காண்போம்.

அழுகைச் சுவை

உதயணன் வாசவதத்தையின் காதலில் மூழ்கிக் கடமையை மறந்து கிடந்தான். இதனால் அவன் தோழன் யூகி காதலரைப் பிரித்து வைக்கக் கருதினான். வாசவதத்தையைப் பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்து முன்பு அவள் இருந்த மாளிகைக்குத் தீ மூட்டினான். தீயில் வாசவதத்தை இறந்து விட்டதாக அனைவரும் கருதினர். உதயணன் கடுந்துயரில் சோர்ந்து போனான். தீப்பற்றிய அரண்மனையில் புகுந்து வாசவதத்தையைக் காஞ்சனமாலை தேடுகிறாள். தேடிக் காணாதவளாய், வாசவதத்தை இறந்து விட்டதாகக் கருதிப் புலம்புகிறாள். அவளின் புலம்பல் பகுதி அழுகைச் சுவைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அப்பாடல் பகுதி இதோ:

நாவலந் தண்பொழில் நண்ணார் ஓட்டிய

காவலன் மகளே கனங்குழை மடவோய்

மண்விளக் காகி வரத்தின் வந்தோய்…

பொன்னே திருவே அன்னே அரிவாய்

நங்காய் நல்லாய் கொங்கார் கோதாய்

வீணைக் கிழத்தீ வித்தக உருவீ…

புதையழல் அகவயின் புக்கனையோ…

(பெரு. இலாவாண காண்டம், 18 : அடிகள் 76 – 85)

(நாவலந் தண்பொழில் = நாவலந்தீவு / பாரதநாடு / நாவல் மரங்கள் நிறைந்த நாடு; நண்ணார் = பகைவர்; கனம் = பொன்; அன்னே = தாயே; கொங்கு = பூந்தாது / தேன் / மணம்; வித்தகம் = ஓவியம்; அழல் = நெருப்பு)

இப்பாடலின் பொருள் வருமாறு: “நாவலந் தீவினுள் பகைவரை வென்ற காவலன் மகளே! பொற்குழையை உடைய மடவோய்! உலகத்திற்கு விளக்குப் போன்றவளே! வரத்தினால் பிறந்தவளே! பொன்னே! செல்வமே! அன்னையே! நங்கையே! நல்லவளே! மாலை அணிந்தவளே! வீணை வித்தையில் சிறந்தவளே! ஓவியம் போன்ற உருவத்தை உடையவளே! நெருப்பில் புகுந்து உயிர் விட்டனையோ”.

6.5 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை பெருங்கதை பற்றிச் சில செய்திகளை அறிந்தீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

பெருங்கதை பற்றிய பொதுவான அறிமுகச் செய்திகளை அறிந்திருப்பீர்கள்.

பெருங்கதை பற்றி உரையாசிரியர் தந்த செய்திகளை உணர்ந்திருப்பீர்கள்.

பெருங்கதையின் பெயர் விளக்கம் தொடர்பான தகவல்களை அறிந்திருப்பீர்கள்.

பெருங்கதையின் ஆசிரியர் கொங்குவேளிர் வாழ்க்கை வரலாற்றை அறிந்திருப்பீர்கள்.

பெருங்கதையின் காப்பிய அமைப்பையும் கதையையும் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

பெருங்கதையின் கவிதை நயம், வாழ்வியல் தத்துவங்கள், வருணனைகள், உவமைகள், உணர்ச்சிகள் முதலியவற்றை அறிந்திருப்பீர்கள்.