இன்று உலகம் முழுவதும் பல ஆயிரக் கணக்கான மொழிகள் பேசப் பெறுகின்றன. இவற்றில் சில மொழிகள் எழுதவும் பெறுகின்றன. வேறு சில மொழிகள் மக்களின் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளன; அவற்றுக்கெனத் தனி வரிவடிவம் இன்று வரை உருவாகவில்லை; இதனால் எழுத்து வழக்கிலும் அவை இல்லை. மிகச் சில மொழிகள் எழுதப் பெறுகின்றன; அவற்றுக்கெனத் தனி வரிவடிவமும் உண்டு. ஆனால் அவை மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கில் பயன்படுத்தப் பெறும் மொழிகளாக இல்லை; இலக்கிய, இலக்கண, சமய நூல்களுக்குரிய மொழிகளாக மட்டுமே அவை வாழ்கின்றன.
இந்த மூன்று வகைகளுள் தமிழ்மொழியை எந்த வகைக்கு உட்பட்டதாகக் கருதலாம்?
முதல் வகைப்பட்டதாகக் குறிப்பிடுவோமா? ஆம்! தமிழ்மொழி பல ஆயிரம் ஆண்டுகளாகப் பேசப் பெற்று வருகின்றது. இலக்கியங்கள், இலக்கணங்கள் எழுதப் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. கல்வெட்டுகளில், செப்பேடுகளில், நடுகற்களில் எழுதப் பெற்றுள்ளது. எனவே மக்களின் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும பயன்படுத்தப் பெறும் மொழியாகத் தமிழ்மொழி திகழ்கின்றது என்று குறிப்பிடுவோம். தமிழ் மொழியின் எழுத்து வழக்கில் பயன்படுத்தப்படும் வரிவடிவ வளர்ச்சியைப் பற்றிய கருத்துகளை இந்தப் பாடத்தின் வழி அறிந்து கொள்வோம்.
இந்தப் பொது இயல்புக்கு உட்பட்டதாகவே தமிழ் மொழியும் திகழ்கின்றது. தமிழ் மொழியின் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் பல்வேறு மாற்றங்கள் காலம் தோறும் நிகழ்ந்துள்ளன.
இந்தப் பாடம் தமிழ்மொழியின் எழுத்து வழக்கில் நிகழ்ந்துள்ள வரிவடிவ மாற்றங்களைத் தொகுத்தளிக்கின்றது. இதன்வழி, தமிழ் வரிவடிவங்கள் காலந்தோறும் மாற்றம் பெற்று, இன்றைய நிலையை அடைந்த வரலாற்றை அறிந்துகொள்ள இயலும்.
• பேச்சு மொழியும் எழுத்து மொழியும்
பேச்சு மொழி உள்ளத்து உணர்ச்சியின் தூண்டுதல்களை இயல்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. எழுத்து மொழியில் தொடர் அமைப்பு இருப்பதைப் போன்றே பேச்சு மொழியிலும் தொடர் அமைப்புக் காணப் பெறுகின்றது. ஆனால் எழுத்து மொழியின் தொடர் அமைப்பின் அளவைவிடப் பேச்சு மொழியின் தொடர் அமைப்பின் அளவு சிறியது. பேச்சு மொழித் தொடர் அமைப்பில் சராசரியாக 3 1/2 சொற்கள் இடம் பெறுவதாக மீடர் என்னும் அறிஞர் குறிப்பிடுகின்றார். பேச்சு மொழியின் இந்த இயல்புகளால் இதில் எளிமை, தெளிவு, சுருக்கம் முதலானவை இயல்பாக இடம் பெற்றுள்ளன எனலாம்.
• ஒலிப்பு முறை
ஒரு பேச்சு மொழிக்கு உரிய ஒலிப்பு முறை அம்மொழியைப் பேசும் மக்களிடையே ஒத்த தன்மையதாக அமைவது இல்லை ; வாழும் இடச் சூழலுக்கு ஏற்ப மாறுபட்டு அமைகின்றது. அதாவது ஒரு மொழிக்கு உரிய ஓர் எழுத்தை அல்லது சொல்லை அம்மொழி பேசும் மக்கள் அனைவரும் ஒரே முறையில் ஒலிப்பது இல்லை, சொல்வது இல்லை. இந்த இயல்பால் ஒரு மொழிக்கு உள்ளேயே பல்வேறு கிளைமொழிகள் உருவாகி விடுகின்றன.
• கிளைமொழி
Dialect என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு உரிய தமிழாக்கமாகக் கிளைமொழி என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மொழியின் பேச்சு வழக்கில் காணப்பெறும் ஒலி வேறுபாடுகளின் தனித் தன்மையால் கிளைமொழி உருவாகின்றது. இதனால் கிளைமொழியைத் தனி ஒரு மொழியாக நாம் குறிப்பிடுவது இல்லை.
தமிழகத்தில் தொல்காப்பியர் காலத்திலேயே கிளைமொழிகள் வழக்கில் இருந்துள்ளன. தமிழ் மரபு இலக்கண அறிஞர்கள் கிளை மொழியைத் திசைச்சொல் என்று குறிப்பிடுகின்றனர். பண்டைத் தமிழகத்தில் 12 வகையான கிளைமொழிகள் வழக்கில் இருந்துள்ளன. இதற்கான விளக்கத்தைத் தொல்காப்பியத்தின் உரைகள்வழி நாம் அறிந்து கொள்ளலாம். தற்காலத்தில் காணப்பெறும் கிளைமொழி வகையாக நான்கினைக் குறிப்பிடுகின்றனர். அவை,
(1) வட்டாரக் கிளைமொழி (Regional Dialect)
(2) சமூகக் கிளைமொழி (Social Dialect)
(3) சாதிக் கிளைமொழி (Caste Dialect)
(4) காலக் கிளைமொழி (Temporal Dialect)
என்பன ஆகும்.
• காலம் கடந்து வாழும் தன்மை
பேச்சு மொழியை விட எழுத்து மொழியின் ஆயுட்காலம் மிகுதியாகும். குறிப்பிட்ட மொழியைப் பேசும் மக்கள் கூட்டம் அழிவுறும் போது அம்மொழியும் அழிந்து விடுகின்றது. ஆனால் அவர்களால் எழுத்து மொழியில் உருவாக்கப் பெற்ற இலக்கியங்கள், இலக்கணங்கள், கல்வெட்டுகள் ஆகியவை எல்லாம் காலம் கடந்தும் நிற்கின்றன; உதவுகின்றன. சில நேரங்களில் பேச்சு மொழியில் நிகழும் மாற்றங்களால் அம்மொழி முற்றுமாக மற்றொரு மொழியாகத் திரிந்து விடுவதும் உண்டு. இந்த நிலையிலும் அந்த மொழியின் இயல்பைக் காலம் கடந்தும் காப்பாற்றுவது அம்மொழியின் எழுத்து மொழியே ஆகும்.
(1) ஓவிய எழுத்து முறை (Pictography)
(2) அசை எழுத்து முறை (Syllabic Writing)
(3) ஒலியன் எழுத்து முறை (Phonetic Writing)
என்பன ஆகும்.
சொல்லைக் குறிக்கும் வகையில் ஓர் எழுத்து எழுதப் பெறுகின்றது. இந்த எழுத்து முறையில் மலையைக் குறிப்பிட, என்று எழுதப் பெறுகின்றது. இந்த ஓர் எழுத்தே ஒரு சொல்லுக்கு உரிய பொருளை அளிக்கும். அதைக் கீழ்வருமாறு விளக்கலாம்.
ஓர் ஓவியம் = ஓர் எழுத்து = ஒரு சொல்=
மலை என்ற சொல்.
இது போன்றே கிணற்றைக் குறிப்பிட என்று எழுதப் பெறுகின்றது. அதாவது மலை, கிணறு என்னும் ஓவியங்களே எழுத்து வடிவமாக வாசிக்கப் பெறுகின்றன.
மலை, கிணறு என்பவை எல்லாம் பருப்பொருள்கள். இவற்றை ஓவிய வடிவில் எழுதுவது எளிது. கண்ணுக்குத் தெரியாத மனத்தால் உணரத்தக்க நுண்பொருள்களாகத் திகழும் அன்பு, அச்சம், ஆசை முதலியவற்றைக் குறிக்கும் சொற்களையும் ஓவிய எழுத்துகளில் எழுத இயலும் என்பதுதான் இந்த எழுத்து முறையின் தனிச்சிறப்பு.
நன்மை என்ற பண்பைக் குறிப்பிட, ஒரு பெண்ணைக் குறிக்கப் பயன்படுத்தும் ஓவிய எழுத்தையும் குழந்தையைக் குறிக்கப் பயன்படுத்தும் ஓவிய எழுத்தையும் சேர்த்து எழுதினால் போதுமானது. இது போன்ற ஓவிய எழுத்துமுறை சப்பான் மொழியிலும் சீன மொழியிலும் காணப்பெறுவதாகப் பொற்கோ குறிப்பிடுகின்றார்.
அசை எழுத்து முறையில் உயிர் எழுத்து, உயிர்மெய் எழுத்து, மெய் எழுத்து ஆகியவற்றைத் தனித்தனியே குறிக்கும் வகையில் எழுத்து வடிவங்கள் அமைந்திருக்கும். இந்திய மொழிகள் எல்லாம் அசை எழுத்து முறையில் தான் எழுதப் பெற்று வருகின்றன. தமிழ் மொழியிலும் உயிர் எழுத்து, மெய்எழுத்து, உயிர்மெய் எழுத்து என்று பகுத்து எழுதப் பெற்று வருவது நாம் அறிந்த ஒன்றுதானே?
• ஒலியும் வடிவமும்
ஒவ்வொரு மொழிக்கும் உரிய ஒலி வடிவத்தைக் குறிக்கும் எழுத்து வடிவத்தை வரிவடிவம் என்று அழைக்கின்றோம்.
ஒரு சில மொழிகள் மற்றொரு மொழிக்குரிய எழுத்து வரிவடிவில் எழுதப் பெறுகின்றன. சான்றாக ஹிந்தி, மராத்தி, சமஸ்கிருதம், சிந்தி ஆகிய மொழிகளைக் குறிப்பிடலாம். இம்மொழிகள் எல்லாம் தேவநாகரி என்னும் வரிவடிவத்தில் எழுதப் பெற்று வருகின்றன. இது போன்று ரோமன் எழுத்து வடிவத்தில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், டச்சு முதலான மொழிகள் எழுதப் பெற்று வருகின்றன என்பதை இங்கு ஒப்பிட்டு நினைத்துப் பார்க்கலாம்.
• தொடர்பால் ஏற்படும் மாற்றம்
தமிழர் வடமொழி பேசுபவர்களுடன் கொண்டிருந்த தொடர்பால் தமிழகத்தில் புதிய வரிவடிவங்களே தோன்றி உள்ளன. அவற்றை நாம் கிரந்த எழுத்துகள் என்று குறிப்பிடுகின்றோம். வடமொழிச் சொற்களைத் தமிழ் மொழிச் சொற்களுடன் கலந்து எழுதுகையில் வடமொழிச் சொற்களை எழுதக் கிரந்த எழுத்துகள் உருவாக்கப் பெற்று உள்ளன. ஷ, ஸ, ஜ போன்றவை கிரந்த எழுத்துகள் ஆகும்.
• பொருளால் ஏற்படும் மாற்றம்
தமிழ் மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்திய பொருள்களின் தன்மைக்கு ஏற்பவும், அம்மொழியின் வரிவடிவம் பெரிதும் மாற்றம் பெற்றுள்ளது. இதை நாம் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் பகுதியில் இப்பாடத்தில் கற்க உள்ளோம்.
உயிர் எழுத்துகள தமிழி வட்டெழுத் துகள் மெய் எழுத்துகள் தமிழி வட்டெழுத் துகள்
• குகைக் கல்வெட்டும் பிராமியும்
இந்தியாவின் வடபகுதியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் ஆட்சி புரிந்தான். இவன் ஆட்சிக்காலத்தில் பிராமி என்னும் எழுத்து வடிவங்கள் அங்குப் பயன்படுத்தப் பெற்றுள்ளன. தமிழகக் குகைக் கல்வெட்டுகளும் இதே காலத்துக்கு உரியவை ஆகும். இந்தக் குகைக் கல்வெட்டு எழுத்து வடிவங்களுக்கும் வடநாட்டில் பயன்படுத்தப் பெற்ற பிராமி எழுத்து வடிவங்களுக்கும் சிற்சில ஒற்றுமைகள் உள்ளன. இதனால் பிராமி என்னும் பொது எழுத்து வடிவில் இருந்து தமிழ்நாட்டில் குகைக் கல்வெட்டு எழுத்துகள் உருவாகின, வடநாட்டில் பிராமி எழுத்துகள் உருவாகின என்பர். இக்கருத்தின் அடிப்படையில் வடபிராமி, தென்பிராமி என்று பெயரிட்டு அழைப்பதும் உண்டு. தமிழகக் கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குகைக் கல்வெட்டு எழுத்து வடிவங்களைத் தமிழ்-பிராமி என்று பெயரிட்டு அழைப்பார்.
• தமிழின் தனித்தன்மை
தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகள் வடஇந்திய பிராமி எழுத்துகளில் இருந்து சிற்சில நிலைகளில் வேறுபடுகின்றன. அவ்வேறுபாடுகள் தமிழின் தனித்தன்மைக்கு உரியவை ஆகும். இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு தமிழி என்று தனிப்பெயர் இடுதலே சிறப்புடைத்து என்பார் கல்வெட்டு அறிஞர் நாகசாமி. இவர் தம் கருத்துக்கு அரணாக இரு சான்றுகளை எடுத்துக் காட்டி விளக்குகின்றார்.
கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த சமவயங்க சுத்த என்னும் நூலில் 18 வகையான எழுத்துகளின் பெயர்கள் பட்டியல் இடப்பெற்று உள்ளன. அவற்றுள் தமிழி என்பதும் ஒன்று.
பிராகிருத மொழியினர் தமிழ் எழுத்துகளைத் தமிழி, திராவிடி என்று குறிப்பிடுகின்றனர். திராவிடி என்பது பிற்காலப் பெயர். இப்பெயர் கி.பி.5,6 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய நூலாகக் கருதப் பெறுகின்ற லலித விஸ்தாரம் என்னும் நூலிலேயே இடம் பெற்றுள்ளது.
எனவே குகைக் கல்வெட்டு எழுத்துகளைத் தமிழி என்றே குறிப்பிடுவோம். தமிழி எழுத்து வடிவங்களைக் கீழே இடம் பெற்றுள்ள படத்தில் காணலாம்.
• உருமாற்றங்கள்
கி.பி.மூன்றாம் நூற்றாண்டு அளவில் தமிழி எழுத்து வடிவங்களில் உருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அம்மாற்றங்கள் இரண்டு பிரிவுகளைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஒன்று தமிழ் என்று அழைக்கப்படும் எழுத்துகளின் தொடக்கமாக அமைகின்றது. மற்றொன்று வட்டெழுத்து என்று அழைக்கப்படும் எழுத்துகளின் தொடக்கமாக அமைகின்றது. அதாவது தமிழகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தமிழ் எழுத்து எழுதப் பெற்று வந்துள்ளது. வேறு சில பகுதிகளில் வட்டெழுத்து எழுதப் பெற்று வந்துள்ளது.
• தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும்
பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பகுதியில் தமிழ்மொழியை எழுத வட்டெழுத்து வடிவம் பயன்படுத்தப் பெற்றுள்ளது. அதே காலத்தில் பல்லவர்களும் சோழர்களும் ஆட்சி செய்த பகுதியில் தமிழ் எழுத்து வடிவங்களில் தமிழ்மொழி எழுதப் பெற்றுள்ளது. மன்னர்களுக்கு இடையே நிகழ்ந்த போர்களின் விளைவான ஆட்சி பரவலினால் வட்டெழுத்தில் எழுதும் முறை தமிழகம் முழுவதும் பிற்காலத்தில் பரவியுள்ளது. தமிழ் எழுத்து, வட்டெழுத்து ஆகியவற்றிற்கு இடையே எழுத்து எண்ணிக்கை நிலையில் வேறுபாடு இல்லை. எழுத்துகளை எழுதும் முறையில்தான் வேறுபாடு காணப்பெறுகின்றது. இரு எழுத்து வடிவங்களுக்கும் உரிய வரிவடிவ அட்டவணைகளின் வாயிலாக இதனை அறியலாம்.
மலையாள மொழி பேசப் பெற்ற பகுதிகளிலும் வட்டெழுத்துகள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இதனால் தெக்கன் மலையாளம், நாநாமோன என்று வட்டெழுத்துகளை வேறுபெயர்களிட்டுக் குறிப்பிடுவதும் உண்டு..
இதுவரை தமிழ் வரிவடிவ வளர்ச்சியைத் தமிழி, தமிழ், வட்டெழுத்து ஆகிய எழுத்துகள் வழி அறிந்தோம். தமிழ் வரிவடிவம் நூற்றாண்டு தோறும் வளர்ச்சி பெற்று வந்துள்ளதைக் கீழ்வரும் அட்டவணை வழி அறிந்து கொள்ளலாம்.
அட்டவணையில் தென்னக பிராமி தமிழி என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது. அட்டவணையின் நடுவில் தமிழி எழுத்துகள் அளிக்கப் பெற்று உள்ளன. இரண்டு பக்கங்களில் வட்டெழுத்துகளும் தமிழ் எழுத்துகளும் நூற்றாண்டு வாரியாக வளர்ந்த முறை குறிப்பிடப் பெற்று உள்ளது. அதில் தமிழ் எழுத்துகள் இன்றைய வடிவ வளர்ச்சியை அடைந்து உள்ளதைக் கூர்ந்து பாருங்கள். அந்த அட்டவணை இதோ.
எழுத்துகளின் வரிசை முறையை அறிதலைப் பொறுத்த வரையில் இலக்கண நூல்களே பெரிதும் உதவுகின்றன. கல்வெட்டுகளில் வரிசை முறை தொடர்பான சிந்தனை இடம்பெறத் தக்க சூழல் உருவாகவில்லை.
(1) மெய் எழுத்துகள் புள்ளி இட்டு எழுதப் பெறும்.
(2) உயிர் எழுத்தோடு இணையும் மெய் எழுத்து, புள்ளி இன்றி எழுதப் பெறும்.
(3) உயிர் எழுத்துகளில் எ, ஒ ஆகிய இரண்டு எழுத்துகளும் குறில் எனில் புள்ளி இட்டு எழுதப் பெறும்.
இம்மூன்று கருத்துகளுமே தமிழ் எழுத்து வடிவ வரலாற்றில் மிக முக்கியமானவை; தொடக்கக் காலத் தமிழ்க் கல்வெட்டுகள் வழி மீட்டுருவாக்கம் செய்ய முடியாதவை.
எழுத்துகளின் மேல் புள்ளி இட்டு எழுதினால் ஓலை கிழிந்து விடும். இதனால் புள்ளி இன்றியே ஓலைச் சுவடிகளில் எழுதுவர். ஓலைச் சுவடிகளை வாசிக்கும் நிலையில் பொருள் நோக்கில் தான் எ, ஒ – குறில் வடிவங்களையும், மெய், உயிர்மெய் வேறுபாட்டையும் அறிய இயலும். தொடக்கக் காலத் தமிழ்க் கல்வெட்டுகளிலும் புள்ளி இட்டு எழுதியதாகத் தெரியவில்லை. இவற்றால் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள எழுத்துகளின் வடிவம் தொடர்பான கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன.
தமிழ் எழுத்து வடிவ மாற்றம் __________________________
வீரமாமுனிவர் வீரமாமுனிவர் வீரமாமுனிவர் வருகைக்குப் பின்பு
1. எ், ஒ் – குறில்கள் 2. எ, ஒ – நெடில்கள் 1, எ, ஒ – குறில்கள் 2. ஏ, ஓ – நெடில்கள்
தமிழ் எழுத்து வடிவ மாற்றம்
இந்த வடிவ மாற்றத்திற்கு அறிஞர் கருத்தில் கொண்ட அடிப்படைச் சிந்தனைகள் இரண்டு. அவை,
(1) தமிழ் எழுத்து வடிவத்தில் புள்ளி இடப்பெற்றால் மாத்திரை அளவு குறைகின்றது என்பது பொருள்.
எ.டு:
க – என்ற எழுத்துக்கு ஒரு மாத்திரை. இந்த எழுத்தின் மேல் புள்ளி இட்டு க் என்று எழுதினால் மாத்திரை குறைகின்றது; அரை மாத்திரையாக அமைகின்றது.
(2) தமிழ் எழுத்து வடிவத்தில் நீட்சியை உருவாக்கினால் மாத்திரை அளவு கூடுகின்றது என்பது பொருள்.
எ.டு:
கி – என்ற எழுத்துக்கு ஒரு மாத்திரை. இந்த எழுத்தை நீட்டிக் கீ என்று எழுதினால் மாத்திரை கூடுகின்றது ; இரண்டு மாத்திரையாக அமைகின்றது.
இந்த இரு அடிப்படைச் சிந்தனைகள் வழிதான் தமிழ் எழுத்து வடிவங்களில் குறில், நெடில் வேறுபாடுகள் எல்லாம் வெளிப்படுத்தப் பெறுகின்றன. இந்த அடிப்படையில் தான் எ, ஒ எழுத்துகள் மீது புள்ளி இட்டுக் குறில் எழுத்துகளாக எழுதி உள்ளனர். எ, ஒ எழுத்துகளை வடிவ நிலையில் நீட்டித்து நெடில் எழுத்துகளாக எழுதி உள்ளனர். இவற்றில் வீரமாமுனிவர் காலத்தில் உருவாக்கப் பெற்ற எ, ஒ – நீட்டித்து நெடில் குறில் வேறுபாட்டை உணர்த்தும் முறை, தமிழ் எழுத்துகளின் பொது வடிவ அமைப்புச் சிந்தனையுடன் ஒத்துள்ளதைக் கவனிக்கலாம்.
• மரபிலக்கணமும் வரி வடிவமும்
தமிழ் எழுத்து வரிசை முறையை நாம் அறிந்து கொள்ள மரபிலக்கண நூல்கள் பெரிதும் உதவுகின்றன. தமிழ் எழுத்துகள் அகர முதல் னகர இறுவாய் என்றே தொல்காப்பியத்தில் அறிமுகம் செய்யப் பெற்றுள்ளன. மேலும் எழுத்துகளின் பிறப்பு முறையை விளக்குகையிலும் அகர வரிசை தெளிவாகப் பின்பற்றப் பெற்றுள்ளது. பிற்காலத்தில் ஒரு சில இலக்கண நூல்களில் தமிழ் எழுத்துகள் 5ஆம் எழுத்து, 15ஆம் எழுத்து என்று அவற்றின் வரிசை இடத்தின் அடிப்படையில் குறிப்பிடப் பெற்றுள்ளன. இது போன்ற தமிழ் எழுத்துகளின் வரிசை முறைச் சிந்தனையைக் கல்வெட்டுகளில் காண்பது அரிது.
இயல்பாக நிகழும் எழுத்து வடிவ மாற்றங்களுக்குத் தனிமனிதர்கள் காரணமாக அமைவது இல்லை. எழுது பொருள்களின் தன்மையே முதன்மைக் காரணமாக அமைகின்றது. தொடக்கக் காலத்தில் என்று எழுதப் பெற்ற க என்னும் எழுத்து காலப் போக்கில் இன்றைய நிலையை அடைந்தது. இதற்கு ஓலைச் சுவடியில் எழுதும் பொழுது கையை எடுக்காமல் எழுத்துகளை எழுதி வந்ததே காரணம் என்று குறிப்பிடுகின்றனர். இத்தகு மாற்றம் மெல்ல மெல்ல நிகழ்ந்ததால் அம்மாற்றம் நிகழ்ந்த காலத்தைத் துல்லியமாக நம்மால் வரையறுக்க முடியவில்லை.
தமிழி எழுத்துகளிலிருந்து தமிழ் எழுத்துகளாகவும் வட்டெழுத்துகளாகவும் மாற்றம் பெற்ற காலத்தை இன்று வரை நம்மால் வரையறுக்க முடியவில்லை. மேலும் ஒரே கல்வெட்டில் தமிழ் எழுத்துகளும் வட்டெழுத்துகளும் பயன்படுத்தப் பெற்றதையும் காண முடிகின்றது. இவற்றிற்கெல்லாம் அடிப்படை எழுத்து மாற்றங்கள், பண்டைக் காலத்தில் இயல்பாக நிகழ்ந்து வந்ததாகத்தான் இருக்க வேண்டும்.
எழுத்துகளின் வடிவ நிலையைத் திட்டமிட்டு மாற்ற முற்படுகையில், அதற்குத் தூண்டுகோலாக இருந்தவரை அறிய இயலும். வடிவ மாற்றம் நிகழ்வுற்ற காலத்தையும் அறிய இயலும். வடிவ மாற்றம் மேற்கொள்ளப் பெற்றதற்குரிய காரணத்தையும் அறிந்து கொள்ள முடியும். இத்தகு நிலையையே நாம் எழுத்துச் சீர்திருத்தம் என்று குறிப்பிடுகின்றோம்.
தமிழ் உயிர்மெய் எழுத்துகளில் கா முதல் னா வரை உள்ள எழுத்துகளிலும், கொ முதல் னொ வரை உள்ள எழுத்துகளிலும், கோ முதல் னோ வரை உள்ள எழுத்துகளிலும் ணகர, றகர, னகர எழுத்துகள் மட்டும், ஏனைய எழுத்துகள் போன்று எழுதப் பெறாமல் எழுதப் பெற்று வந்தன. அதாவது என்றே எழுதப் பெற்று வந்தன.
கை முதல் னை வரையிலான 18 எழுத்துகளில் ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகள் மட்டும் என்று எழுதப் பெற்று வந்தன. ஏனைய எழுத்துகள் எல்லாம் ை எனும் துணை எழுத்து இட்டு (கை, சை, தை…) எழுதப் பெற்று வந்தன.
மேற்சொல்லப் பெற்ற இரு நிலைகளிலும் ஓர் ஒத்த ஒழுங்கு முறை இல்லாமல் இருந்தது. மேலும் அச்சு வார்ப்புகளிலும், தட்டச்சு எந்திரங்களிலும் ஆகிய எழுத்துகளுக்குத் தனி அச்சு வார்க்க வேண்டி இருந்தது. எனவே இந்த எழுத்துகளை எல்லாம் இந்த எழுத்துகளை ஒத்த ஏனைய எழுத்துகளைப் போன்றே எழுத வேண்டும் என்னும் கருத்து தந்தை பெரியார் என்று போற்றப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்களால் முன் வைக்கப் பெற்றது. அவர் தம் பத்திரிகையை அப்புதிய வடிவ எழுத்துகளைப் பயன்படுத்தி அச்சிட்டார். அவரது கருத்து காலப் போக்கில் வலுப்பெற்றது. பின்னர்த் தமிழக அரசின் ஆணையால் மாற்றி அமைக்கப் பெற்ற புதிய எழுத்து வடிவங்கள் உலகம் முழுவதும் வழக்குப் பெற்றுள்ளன. அவ்வாறு மாற்றி அமைக்கப் பெற்றவை தொடர்பான விவரம் பின்வருமாறு:
பேச்சு மொழி, எழுத்து மொழி இரண்டைப் பற்றியும் அறிந்து கொண்டோம். மூன்று வகையான எழுத்து முறைகளைத் தெரிந்து கொண்டோம். தமிழின் வரிவடிவம் பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் வகைகள் பற்றியும் அறிந்து கொண்டோம். எழுத்துகளில் இயற்கையால் ஏற்பட்ட மாற்றங்களையும், சீர்திருத்தங்களால் விளைந்த மாற்றங்களையும் பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டோம்.
தமிழ் எழுத்து வடிவங்கள் மாற்றி அமைக்கப் பெற வேண்டும் என்பவர்களும் உள்ளனர். தமிழ் மொழியை அறிவியல் துறையில் இன்னும் விரிவாகப் பயன்படுத்தும் நோக்கில் ரோமன் எழுத்து வடிவில் எழுதலாம் என்னும் கருத்து அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களால் முன்வைக்கப் பெற்றுள்ளது. கு, கூ என்று எழுதும் முறையை மாற்றி கு என்று எழுதலாம் என்ற கருத்தும் முன் வைக்கப் பெற்றுள்ளது. ஐ, ஒள என்னும் எழுத்துகளை அய், அவ் என்று எழுதினால் போதும் என்ற கருத்தும் முன்வைக்கப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் தமிழ் எழுத்து வடிவத்தில் மாற்றம் தேவை இல்லை என்ற கருத்தும் வழக்கில் உள்ளது. ஆனால், தமிழ் எழுத்து வடிவ வளர்ச்சியை உற்று நோக்குகையில் தேவையான நிலைகளில் மாற்றம் தவிர்க்க இயலாததாக அமைந்து விடுவதை நம்மால் உணர முடிகின்றது.
பாடம் - 2
காலந்தோறும் தமிழ் மொழி பல்வேறு மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் வானொலி, பத்திரிகை, அனைவர்க்கும் கல்வி தருவதை நோக்கமாகக் கொண்ட பாட நூல்கள், அறிவியல் செய்திகளைத் தமிழில் தரும் முயற்சி, சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனங்கள் ஆன திரைப்படம், தொலைக்காட்சி முதலியவற்றின் மூலம் பொதுக் கிளைமொழி (Standard Dialect) எங்கும் பரவியுள்ளது. இப்பொதுமொழி அனைத்துக் கிளைமொழிகளின் பண்பையும் கொண்டதாகும். மொழியியல் அறிஞர்கள் பேச்சுமொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ஆவர். எனவே இப்பொதுமொழியை அவர்கள் ஆர்வத்துடன் ஆராய்கின்றனர். இத்தகைய பொதுமொழியைக் கொண்ட இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் பற்றிய செய்திகள் இப்பாடப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலை நாட்டாரின் வருகையினால் தமிழ் உரைநடை வளர்ச்சி பெற்றது. புதிய புதிய கலைச்சொற்கள், புதிய புதிய இலக்கணக் கூறுகள், புதிய புதிய வாக்கிய அமைப்புக்கள், புதிய சொல்லாக்கங்கள், புதிய துணைவினைச் சொற்கள் போன்றவை தமிழ் மொழியில் தோன்றின. இருபதாம் நூற்றாண்டுத் தமிழைப் பற்றிப் பல்வேறு அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். அவர்களுள் வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், ச.அகத்தியலிங்கம், செ.வை. சண்முகம், பொன்.கோதண்டராமன், மு.சண்முகம் பிள்ளை, கு.பரமசிவம், ஆந்திரனோ போன்றோர் குறிப்பிடத்தக்கோர் ஆவர்.
மரம் – மர maram > marஏ
மரன் - மர maran > marஏ
அவன் - அவ avan > avE
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாடகங்களில் சமுதாயத்தின் கீழ்மட்ட மக்களின் பேச்சுமொழி இடம் பெற்றது. இதன் விளைவாக மூக்கின உயிரொலி தனி ஒலியன் ஆனது என்று விளக்குகிறார் தெ.பொ.மீ. இதனைக் குறிக்க அந்த எழுத்தின் மீது ~ இந்தக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
(1) வந்தேன் வந்தாய் - – வந்தே~ வந்ே~த
(2) ஆம் ஆ – - ஆ~ ஆ (வியப்பிடைச் சொல்)
(3) ஊ~ – குழந்தையைப் பயமுறுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சொல் அல்லது பேய்க் கதையைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது கேட்டுக் கொண்டிருக்கிறோம். என்பதைக் காட்டப் பயன்படுத்தப்படும் சொல். இதை ‘ஊம்’ கொட்டுதல் என்பர்.
(4) ஓ~ ஓ – - ஆம் வியப்பிடைச் சொல்
(5) ஈ ஈ~ – ஈ ஈ யெனச் சிரித்தல்
(6) வந்து~ வேலையைச் செய்
வந்து வேலையைச் செய் = = வந்து உன் வேலையைச் செய் வந்து அந்த வேலையைச் செய்
குரு
kuru pimple
guru teacher (கு – ஒலிப்புடை வெடிப்பொலி)
பாவம்
pãvãm sin
bãvãm expression (பா – ஒலிப்புடை வெடிப்பொலி)
இவ்வாறு ஒலிப்புடை வெடிப்பொலிகளைப் பயன்படுத்துதல் நகர்ப் புறங்களில் வாழ்வோர், கற்றோர் ஆகியோரது பேச்சிலேயே பெரிதும் உள்ளது; கிராமப்புறங்களில் அந்த அளவுக்கு ஆட்சி பெறவில்லை.
• உயிரொலியன்களின் வருகை முறை
இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் பேச்சில் எல்லா உயிர் எழுத்துகளும் சொல்லின் முதலிலும் இடையிலும் வருகின்றன. சொல்லின் ஈற்றில் எ, ஒ வருதல் இல்லை. ஈ, ஊ ஆகிய இரண்டும் தீ, பூ ஆகிய ஓரசைச் சொற்களில் ஈற்றில் வருகின்றன.
ஈரிதழ் ஒலிக்கு முன்னரும் நாவளை ஒலிக்குப் பின்னரும் வரும்பொழுது எகரம் ஒகரமாகிறது.
பெண் > பொண்ணு >
மிடா > மெடா > மொடா
• மெய்யொலியன்களின் வருகை முறை
க், ச், த், ப், ம், ந், ஞ், வ், ய் ஆகிய மெய்கள் சொல்லின் முதலில் வருகின்றன. ட், ர், ல் ஆகிய மெய்கள் பிறமொழிச் சொற்களில் மொழி முதலில் வருகின்றன.
டப்பா
ரப்பர்
லட்டு
பதினெட்டு மெய்களும் மொழியிடையில் தனித்து வருகின்றன.
ம், ன், ண், ழ், ல், ள், ர், ய் ஆகியவை சொல்லின் இறுதியில் வருகின்றன.
இரண்டு உயிர்களுக்கிடையே ப், த், ச், ட், க், ம், ன், ஞ், ண், ல், ள், வ், ய் ஆகிய மெய்கள் தனித்தும் இரட்டித்தும் வரும். இவற்றில் மூக்கொலி, மருங்கொலி, அரையுயிர் ஆகியன குறில் எழுத்தை அடுத்து மட்டுமே வரும். ங், ந் ஆகிய இரண்டும் உயிர்களிடையே தனித்து வரும். ற்ற் சொல்லின் இடையிலும் உயிர்களின் இடையிலும் வரும்.
எழுத்துத் தமிழில், குறிப்பாகப் பத்திரிகைத் தமிழில் க், ச், ட், த், ந், ம், ய், ர், ல், வ், ஸ், ஜ், ஷ் முதலியன சொல்லின் முதலில் இடம் பெறுகின்றன. அந்தச் சொற்கள் மிகுதியும் பிற மொழிச் சொற்கள் ஆகும்.
(ட-t) டவல், டானிக், டெலிகிராம்
(L-d) டப்பா, டாக்டர், டீசல், டெட்டால், டைனமோ
(ல) லட்சம், லாகிரி, லீலை, லினன்
(ஷ) ஷர்பத், ஷாப்
(ஜ) ஜம்பம், ஜாக்கிரதை, ஜீன், ஜேப்பு, ஜோடி
(ஹ) ஹால், ஹோட்டல்
(க்ஷ) க்ஷத்திரியர், க்ஷவரம், க்ஷயரோகம், க்ஷேமம்
அவ்வாறே, க், ச், த், ட், ப், ம், ன், ண், ய், ர், ல், வ், ழ், ள் ஜ், ஸ் ஆகியவையும் பிற மொழிச் சொற்களின் மொழியிறுதியில் இடம் பெறுகின்றன.
• மெய்ம்மயக்கம்
இன்றைய தமிழில் ஒரு சொல்லின் முதலிலோ இறுதியிலோ இரண்டு அல்லது மூன்று மெய்கள் மயங்கி வருவது இல்லை. அப்படி வந்தாலும் கடன் வாங்கும் சொற்களில் வருகிறது.
சான்று:
ட்ரை = முயற்சி செய்
ட்வென்ட்டி = இருபது
இன்றைய எழுத்துத் தமிழில் கீழ்க்கண்ட புதிய மெய்ம்மயக்கங்கள் இடம் பெறுகின்றன.
(ட்ன்) சட்னி
(ட்ல்) இட்லி
(ட்ஜ்) பேட்ஜ்
(ன்ச்) இன்சூரன்ஸ்
(ன்ய்) சூன்யம்
(ன்ஜ்) இன்ஜின்
(ன்ஷ்) பென்ஷன்
(ஸ்க்) நமஸ்காரம்
(ஸ்ட்) போஸ்டர்
(ஸ்த்) ஆஸ்தி
(ஸ்ப்) பரஸ்பரம்
(ஸ்ர்) ஆஸ்ரமம்
(ஸ்ல்) இஸ்லாம்
(ஸ்வ்) சரஸ்வதி
(ர்ண்) வர்ணனை
(ர்ன்) கவர்னர்
(ர்ர்) குர்ரான்
(ர்ஜ்) கர்ஜனை
(ல்ஷ்) கால்ஷியம்
பழந்தமிழில் தவிர்க்கப்பட்ட மெய்ம்மயக்கங்கள் விரைந்தொலித்தலில் அல்லது கடன் வாங்கப்பட்ட சொற்களில் இடம் பெறுகின்றன.
கட்டில் > கட்லு
திருகு > த்ருகு
பண்ணினாய் > பண்ணாய்
பல்லில் > பல்ல்ல
மூன்று மெய்கள் மயங்கி வருதலும் உண்டு. விரைந்தொலித்தலால் மெய்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாகி விடுவதுண்டு.
இலை > எலை
இடம் > எடம்
கிடைக்கும் > கெடைக்கும்
திரை > தெரை
உரல் > ஒரல்
குடை > கொடை
முதல் > மொதல்
• இகர எகரங்கள் ஒகரமாதல்
பிறப்பு > பொறப்பு
பிணம் > பொணம்
பெட்டி > பொட்டி
பெண் > பொண்ணு
• இகரம் உகரமாதல்
பிட்டு > புட்டு
பிள்ளை > புள்ளை
• உகரம் இகரமாதல்
புல்லு > பில்லு
புறா > பிறா
• ஒளகாரத் திரிபு
ஒளகாரம் ‘அவ்’ என்றே உச்சரிக்கவும் எழுதவும் படுகிறது.
ஒளவை > அவ்வை
வேள்வி, கத்தி என்ற சொற்களின் இறுதியில் உள்ள இகரத்திற்கேற்ப இச்சொற்களோடு இணையும் ‘கு’ என்ற வேற்றுமை உருபில் உள்ள உகரம் இகரமாக மாறுகிறது.
வேள்விக்கு > வேள்விக்கி
கத்திக்கு > கத்திக்கி
இவ்வாறே, ண், ன் ஆகிய ஒலிகள் அடுத்து வரும் ப, ச ஆகிய ஒலிகளுக்கேற்ப அவற்றிற்கு இனமான ம், ஞ் என்ற மூக்கொலிகளாக முறையே மாற்றம் பெறுகின்றன.
செண்பகம் > செம்பகம்
வன்சினம் > வஞ்சினம்
எண்பது > எம்பது
நன்செய் > நஞ்செய்
புன்செய் > புஞ்செய்
நாழி > நாளி
உழக்கு > உளக்கு
கோழி > கோளி
வாழை > வாளை
வழி > வளி
மூழை > மூளை
• ள் > ழ் ஆதல்
விளக்கு > விழக்கு
பளிங்கு > பழிங்கு
தளிகை > தழிகை
இளமை > இழமை
• ற் > ச் ஆதல்
சோழநாட்டுப் பகுதியில் நுனியண்ணத் தடையொலியும் இடையண்ணத் தடையொலியும் மயங்கி வருகின்றன.
வெற்றிலை > வெச்சிலை
முற்றிலை > முச்சிலை
கற்றை > கச்சை
இவனைப் > இவனைப்
பார்க்க பாக்க
இங்கு > இங்காக்க
அங்கு > அங்காக்க ‘ஆக்க’ என்ற அசைநிலை சேர்க்கப்பட்டுள்ளது.
சேற்று நிலம் > சேத்து நிலம்
ஆற்றுக் கால் > ஆத்துக்கால் ற்ற் > த்த்
இப்படிக் > இப்படிக்
கொத்த > கொற்ற
அப்படிக் > அப்படிக்
கொத்த > கொற்ற த்த் > ற்ற்
இன்றைய தமிழில் மேலும் சில இழி வழக்குகள் காணப்படுகின்றன.
• ழ் > ய் ஆதல்
வாழைப்பழம் > வாயப்பயம்
கோழி முட்டை > கோயி முட்டை
• ய் > ச் ஆதல்
உயிர் > உசிர்
மயிர் > மசிர்
பழம் > பயம்
வட ஆர்க்காட்டுத் தமிழில் ழ > ச ஆகிறது.
இழு > இசு
சிதம்பரத் தமிழில் ழ > ஷ ஆகிறது.
திருவிழா > திருவிஷா
தென்மாவட்டங்களில் ழ > ள ஆவதைக் காணலாம்.
பழம் > பளம்
‘அவர்கள்’ என்ற சொல் பிராமணத் தமிழில் அவா அல்லது அவாள் எனவும், வடஆர்க்காட்டுத் தமிழில் அவுங்க எனவும், நெல்லை மாவட்டத் தமிழில் அவிய எனவும் வழங்குகிறது. S > J ஆவது மதுரைத் தமிழின் சிறப்புக் கூறு ஆகும்.
Saman > Jaman (சாமான் > ஜாமான்)
தென் தஞ்சைத் தமிழில் ‘எண்பது’ என்ற சொல் ‘எண்பளது’ என்று ஆகி ‘எம்பளது’ என்று மாற்றம் பெறுகிறது.
• அண்ண இனமாதல்
அண்ண ஒலிகளாகிய பிற ஒலிகள் ச, ஞ என்று மாற்றம் பெறுவதை அண்ண இனமாதல் எனலாம்.
அடித்தான் > அடிச்சான்
கலைத்தான் > கலைச்சான்
எரிந்தது > எரிஞ்சது
உடைந்தது > உடைஞ்சது
• பல்லொலியாதல்
நுனிநா நுனியண்ணத் தடையொலி (ற்) இரட்டித்து வரும்போது பேச்சுத் தமிழில் இரட்டித்த தகரமாகிறது.
குற்றம் > குத்தம்
வித்தாங்க > விற்றாங்க
பற்று வரவு > பத்து வரவு
• ந > ன ஆதல்
நுனிநாப் பல் மூக்கொலியாகிய நகரம் நுனியண்ண மூக்கொலியாகிய னகரமாக உச்சரிக்கப்படுகிறது.
இந்நாடு > இன்னாடு
முந்நீர் > முன்னீர்
முந்நூறு > முன்னூறு
• ழகர மெய் மறைதல்
பேச்சுவழக்கில் ழகர மெய் மறைதலை இக்காலத் தமிழில் காண முடிகிறது.
வாழ்வரசி > வாவரசி
தாழ்வாரம் > தாவாரம்
• நாவளை ஒலியாதல்
ன்ற் > ண்ண் என்று மாற்றம் பெறுகிறது.
கன்று > கண்ணு
ஒன்று > ஒண்ணு
• யகர, ரகரம் கெடல்
ஆராய்ச்சி > ஆராச்சி
காய்ச்சி > காச்சி
பார்த்து > பாத்து
மேற்குறிப்பிட்ட ஒலி மாற்றங்கள் குறிப்பிடத் தக்கவையாக இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் விளங்குகின்றன.
• சிறப்புப் பெயர் (Personal Noun)
குறிப்பிட்ட ஒரு மனிதன், இடம் அல்லது ஒரு பொருளின்பெயரைக் குறிப்பது சிறப்புப் பெயராகும். இச்சிறப்புப் பெயர்கள் பன்மை உருபை ஏற்பதில்லை.
இராமன், சீதை, சென்னை இராமன்கள், சென்னைகள் என்று வருவதில்லை.
• பொதுப்பெயர் (Common Noun)
சிறப்புப் பெயர் அல்லாதன எல்லாம் பொதுப் பெயராகும். இவை பன்மை ஏற்று வரும். இவற்றுள்ளும் சில பன்மையை ஏற்பதில்லை. எண்ணப்படு பெயர் (Count Noun), திரட்பெயர் (Quantitative Noun) என்றும் இவற்றைப் பிரிக்கலாம்.
எண்ணப்படு பொருட்பெயர் – பன்மை உருபை ஏற்கும்
பையன்+மார் – பையன்மார்
வீடு+கள் – வீடுகள்
பால்
தண்ணீர் திரட்பொருட்பெயர் – பன்மை உருபை ஏற்காது.
காற்று
• உயிருடைய பொருட்பெயரும் உயிரில்லாப் பொருட்பெயரும்
மனிதன், நாய் போன்றன உயிருடைய பொருட் பெயர்கள். நாற்காலி போன்றவை உயிரில்லாப் பொருட்பெயர். இவை முறையே இக்காலத் தமிழில் ஏழாம் வேற்றுமை இடப் பொருளை உணர்த்த ‘இடம்’ என்னும் உருபையும் ‘இல்’ என்னும் உருபையும் பெறுகின்றன.
மனிதனிடம்
நாயிடம்
நாற்காலியில்
உயிருடைய பொருட்பெயர்கள் ‘ஐ’ உருபைக் கட்டாயம் பெற்றுவரும் என்றும் உயிரில்லாப் பொருட்பெயர்கள் அவ்வுருபை ஏற்றோ ஏற்காமலோ வரும் என்றும் கூறுவர்.
• பருப்பொருட் பெயரும் நுண்பொருட் பெயரும் (Concrete and Abstract Noun)
உருவம் உள்ளதையும் கண்ணால் காணக் கூடியதையும் பருப் பொருள்கள் என்றும், உருவம் இல்லாததையும் கருத்தளவிலேயே நினைக்கக் கூடிய பொருட்களையும் நுண் பொருள்கள் என்றும் பிரிப்பர். நுண்பொருட் பெயர்களோடு மூன்றாம் வேற்றுமை உருபு ‘ஓடு’, வினையெச்ச உருபாகிய ‘ஆய்’ ஆகிய இரண்டும் மயங்கி வரும் என்பார் செ.வை.சண்முகம். இவற்றையெல்லாம் இயற்பெயர்கள் என்போம்.
காற்று (காற்றோடு, காற்றாய்)
• ஆக்கப் பெயர்கள் (Derived Nouns)
வேறொரு சொல் வகையிலிருந்து ஆக்கிக் கொள்ளப்பட்ட பெயர்களை ஆக்கப் பெயர்கள் என்போம். இக்காலத் தமிழில் வழங்கும் சில ஆக்கப் பெயர்களாக மு.சண்முகம் பிள்ளை தமது இக்காலத் தமிழ் என்ற நூலில் குறிப்பிடுவன பின்வருமாறு:
(1) த்துவம் – என்னும் உருபு பெறல்
முதலாளி > முதலாளித்துவம்
முக்கியம் > முக்கியத்துவம்
(2) அம் – என்னும் உருபு பெறல்
திருப்பு > திருப்பம்
ஓட்டு > ஓட்டம்
நெருக்கு > நெருக்கம்
அடங்கு > அடக்கம்
(3) பது – என்னும் உருபு பெறல்
எடு > எடுப்பது
கொடு > கொடுப்பது
உண் > உண்பது
(4) ப்பு – என்னும் உருபு பெறல்
சிரி > சிரிப்பு
விரி > விரிப்பு
(5) வு – என்னும் உருபு பெறல்
வாழ் > வாழ்வு
தேய் > தேய்வு
(6) ஆளி – என்னும் உருபு பெறல்
பேச்சு > பேச்சாளி
நோய் > நோயாளி
(7) மை – என்னும் உருபு பெறல்
பெரு > பெருமை
சிறு > சிறுமை
(8) வந்தன் / வந்தர் – என்னும் உருபு பெறல்
செல்வம் > செல்வந்தன் / செல்வந்தர்
தனம் > தனவந்தன் / தனவந்தர
(9) மான் – என்னும் உருபு பெறல்
நீதி > நீதிமான்
கல்வி > கல்விமான்
சக்தி > சக்திமான்
(10) ஐ – என்னும் உருபு பெறல்
கொல் > கொலை
வில் > விலை
• பெயர்ச் சொல்லில் எதிர்மறை வடிவம்
பெயர்ச் சொல்லில் எதிர்மறைப் பொருளை உணர்த்த ‘அ’ என்ற முன்னொட்டு சேர்க்கப்படுகிறது. சில சொற்களில் ‘அவ’ என்ற முன்னொட்டும் சேர்க்கப்படுகிறது.
நாகரிகம் > அநாகரிகம்
நீதி > அநீதி
மானம் > அவமானம்
நம்பிக்கை > அவநம்பிக்கை
• பதிலிடு பெயர்கள் (pronouns)
ஒரு பெயர்ச் சொல்லுக்குப் பதிலாக இட்டு வழங்கும் இன்னொரு பெயரையே பதிலிடு பெயர்கள் என்கிறோம். பால் வேறுபாடு காட்டாமல் எண் வேறுபாட்டைக் காட்டும் இப்பெயர்களைப் பின்வருமாறு பிரித்துக் காட்டலாம்.
பதிலிடு பெயர்கள் – வரைபடம்
உள்ளே (click here)
சுட்டுப் பெயர்களே படர்க்கை மூவிடப் பெயர்களாக இடம் பெறுகின்றன. சுட்டு்ப் பெயர்களே திணை,பால்காட்டுவன; இதனடிப்படையில் இலக்கணப் புலவர்கள் பெயர்ச் சொற்களை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால் என்று பிரித்துள்ளனர்.
அந்த, இந்த என்ற சொற்கள் இக்காலத் தமிழில் சுட்டுப் பெயரடைகளாகப் பயன்படுகின்றன.
• ஆண்பால் விகுதி
அன், ஆன், வன், காரன்.
அன் = திருடன், செவிடன், அரசன்
ஆன் = மச்சான், அத்தான், வண்ணான்
வன் = குயவன்
காரன் = வேலைக்காரன், வீட்டுக்காரன்
• பெண்பால் விகுதி
அள், த்தி, ஆத்தி, ச்சி, காரி, வி
அள் = மகள்
த்தி = குறத்தி, பள்ளத்தி
ஆத்தி = பாப்பாத்தி, வண்ணாத்தி
ச்சி = பள்ளச்சி, செட்டிச்சி
காரி = வேலைக்காரி, வீட்டுக்காரி
வி = புதல்வி, தலைவி
• பலர்பால் விகுதி
அர், அர்கள், வர், வர்கள், மார், மார்கள், கள்
அர் = அரசர், திருடர்
அர்கள் = அரசர்கள், திருடர்கள்
வர் = புதல்வர், செல்வர்
வர்கள் = புதல்வர்கள், செல்வர்கள்
மார் = அண்ணன்மார், தம்பிமார், தாய்மார்
மார்கள் = அண்ணன்மார்கள், தம்பிமார்கள், தாய்மார்கள்
கள் = ஆண்கள், பெண்கள், தம்பிகள்
• ஒன்றன்பால் விகுதி
ஒன்றன்பால் காட்டும் விகுதிகளைத் தமிழ்ப் பெயர்ச்சொற்களில் காண முடிவதில்லை.
• பலவின்பால் விகுதி
ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிக்கும் அஃறிணைப் பெயர்களே பலவின்பால் பெயர்களாகும்.
க்கள், கள் ஆகியவை பலவின்பால் உணர்த்தும் விகுதிகளாக அமைகின்றன.
க்கள் = பூக்கள்
கள் = ஆடுகள்
அண்ணனார், அண்ணியார்,
வரதராசனார், துணைவேந்தர் அவர்கள்,
தலைவர் அவர்கள். அம்மையார் அவர்கள், காந்தி அடிகள்.
படர்க்கையில் உயர்வு ஒருமையைக் காட்ட ‘ஆர்’, ‘ஆர்+கள்’, ‘அவர்கள்’ முதலியவற்றைச் சேர்ப்பது வழக்கமாக அமைகிறது. தன்மையிலும், முன்னிலையிலும் பன்மையே உயர்வு ஒருமைக்குப் பயன்படுத்தப் படுகிறது. முன்னிலையில் பன்மை வடிவங்கள் உயர்வு ஒருமையைக் குறிக்கப் பயன்படுகின்றன.
நீ, நீர், நீங்கள்
என்பன முறையே தாழ்ந்தோரையும், சமநிலையில் உள்ளோரையும், உயர்ந்தோரையும் குறிக்கப் பயன்படுகின்றன. உயர்வைக் குறிக்கும் ஒருமைப் பெயர்கள் முன்னிலை ஏவல் வினைகளையும் பாதிக்கின்றன. இவ்வகையில் ஏவல் சொல் தாழ்ந்த நிலையினருக்கும், ‘உம்’ விகுதி சேர்த்த அமைப்பு சமமான நிலையில் உள்ளவர்க்கும், ‘உம்+கள்’ சேர்த்த அமைப்பு உயர்ந்த நிலையில் உள்ளவர்க்கும் பயன்படுத்தப்படுகிறது.
நட, நடவும், நட(வு)ங்கள்.
‘அருளும்’ என்ற துணைவினை மிகுந்த மரியாதையைக் காட்டுகிறது.
சான்று: நடந்தருளும்
அருள்ஞானிகள், அரசர் போன்றோருக்கு இத்துணைவினை பயன்படுத்தப்படுகிறது. படர்க்கையும் உயர்வைக் குறிக்க ஆளப்படுகிறது. தமிழில் ‘தாம், தாங்கள்’ என்ற இரு பாகுபாட்டு வடிவங்கள் உள்ளன. கடவுளை மட்டுமின்றி அருள்ஞானிகளையும் துறவிகளையும் பற்றி முன்னிலை உயர்வாகப் பேச இந்தப் படர்க்கை வடிவங்கள் சேர்க்கும் முறை உண்டு. சில நேரங்களில் தொடரின் முடிவு அஃறிணை ஒருமையாக அமைந்தும் உயர்வைக் குறிக்க வரும்.
சாமி வந்தது.
இவ்வாறு கூறுவது உயர்வாகக் கூறும் முறையாகும்.
ஆண்பால் அல்லது பெண்பால் ஒருமையைப் பயன்படுத்துவது மதிப்புடையதாக இல்லாத இடங்களில் அஃறிணை ஒன்றன்பால் விகுதியைப் பயன்படுத்திச் சுட்டுவது மரியாதையாகக் கருதப்படுகின்றது.
அண்ணன் வந்தது
அக்காள் வந்தது, தங்கை வந்தது.
பெண்களிடம் பேசும்போது ‘அம்மா’ என்ற சொல் உயர்வைக் குறிக்க இடம்பெறுகிறது.
வந்தாயா = சமமானவரைக் குறிக்க
வந்தாயாம்மா = பெண்ணை அல்லது தங்கையைக் குறிக்க
வந்தாயாப்பா = இளையோர் உள்ளிட்ட ஆடவரைக் குறிக்க
வந்தாங்கொ = படர்க்கையில் மிக முக்கியமானவர்களைக் குறிக்க
இவையும் உயர்வு குறிக்கும் வடிவங்களாகின்றன.
• இறந்த காலம்
இறந்த காலம் காட்டும் இடைநிலைகளாக இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் பின்வருவன அமைகின்றன.
(1) த் ~ ச் ; த்த் ~ ச்ச்
(2) ந்த் ~ ஞ்ச்
(3) ண்ட்
(4) ன்ன்
(5) இ ~ இன் ~ ன்
சான்று:
(1) செய்தான் > செய்தா~
(2) கொண்டான் > கொண்டா~
(3) நின்றான் > நின்னா~
(4) அறிந்தான் > அறிஞ்சா~
(5) பாய்ந்தான் > பாஞ்சா~
6) ஒடுங்கினான் > ஒடுங்க்னா~
(7) நட்டான் > நட்டா~
(8) உண்டான் > உண்டா~
(9) தின்றான் > தின்னா~
(10) கேட்டான > கேட்டா~
(11) பார்த்தான் > பாத்தா~
(12) விற்றான் > வித்தா~
(13) முடித்தான் > முடித்தா~
(14) படித்தாள் > படிச்சா
துணைவினை என்ற முறையில் ‘கொண்டு’ என்பது சில மாற்றங்களுக்கு உட்பட்டு இறந்த காலத்தை உணர்த்துகிறது.
கொண்டு > கொணு > க்ணு ~ க்னு
சான்று : எடுத்துக்ணு
கொண்டு > கொடு > க்டு
சான்று: எடுத்துக்டு
• நிகழ்காலம்
நிகழ்கால உருபுகளாக ‘ற், க்ற்’ ஆகியன அமைகின்றன.
சான்று:
போகிறாள் > போறா
கேட்கிறாள் > கேக்றா
• எதிர்காலம்
‘ப், ப்ப்’ வடிவிலி உருபன் (ற), ‘வ்’, மெய்கள் மகர மெய்யாக ஓரினமாக்கப்படுதல் முதலியவை எதிர்காலத்தைக் குறிக்கப் பயன்படுகின்றன.
தின்பான் > தின்னுவா~
தின்குவா > தின்பா > திம்மா~
• துணை வினைகள்
வினைகளுக்குப் புதிய பொருள்களை உண்டாக்குவதற்குத் துணை வினைகள் பயன்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் துணை வினைகளாவன:
வை = செய்து வை
போ = செய்யப் போகிறான்
கொண்டிரு = செய்து கொண்டிருந்தான்
விடு = வந்து விடுவான்
தொலை = கொடுத்துத் தொலை
தள்ளு = விட்டுத் தள்ளு
அழு = கொடுத்து அழு
ஆயிற்று = பணம் கேட்டு ஆயிற்று
• இருபதாம் நூற்றாண்டில் வானொலி, இதழ்கள், தொலைக்காட்சி, திரைப்படம், பாட நூல்கள், அறிவியல் வளர்ச்சி போன்றவற்றின் காரணமாகத் தமிழ் மாற்றம் பெற்றது. மேனாட்டார் வரவாலும் அச்சு இயந்திர வருகையினாலும் நிகழ்ந்த உரைநடை வளர்ச்சியின் காரணமாகவும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மாற்றம் பெற்று வளர்ந்தது.
• உயிர் ஒலியன்களில் மூக்கின உயிர்களும், மெய்யொலியன்களில் ஒலிப்புடைத் தடையொலிகளும் புதியவையாக நிலைத்தன.
• ஒலியன்களின் வருகை முறையில் புதிய மெய்ம்மயக்கங்கள் இடம் பெற்றன. கடன் வாங்கிய சொற்களில் ர, ல, ட போன்றவை மொழி முதலில் இடம் பெறத் தொடங்கின.
• பேச்சுத் தமிழில் ஒலிமாற்றங்கள் அதிகமாக நிகழ்ந்தன.
• பெயர்களுள் ஆக்கப் பெயர்கள் குறிப்பிடத் தக்கவை. புதுப்புது விகுதிகளை இணைத்து இவ்வகைப் பெயர்கள் உருவாக்கப் பெற்றன.
• உயர்வு ஒருமைப் பெயர் சமுதாயத்தில் ஒருவரை மதிப்பதன் விளைவாக நிகழ்ந்த கருத்து வெளிப்பாடாக அமைகிறது.
• துணை வினைகள் இல்லாமல் இக்காலத் தமிழ் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவை பேச்சிலும் எழுத்திலும் கலந்து விட்டன.
பாடம் - 3
இப்பல்வேறு ஊடகங்கள் மக்களுக்குச் சொல்லும் கருத்துகள் மற்றும் செய்திகள் மிகப் பல. அரசியல், சமுதாயம், இலக்கியம், விளையாட்டு, தத்துவம், சமயம் இவை சார்ந்த பல செய்திகளை மக்களுக்கு அறிவித்து மக்களைச் சிந்திக்கச் செய்கின்றன. இவ்வுள்ளடக்கங்களைத் தெரிவிப்பதற்கு இவ்வூடகங்கள் மொழியைக் கையாளும் திறம் தெளிவாக அமைய வேண்டும். அப்போதுதான் மக்களிடம் அவை தெரிவிக்கும் கருத்துகள் சென்று சேரும். மொழியைக் கவனமாகப் பயன்படுத்திக் கருத்துகளைத் தெரிவிக்கவில்லையெனில் மக்கள் இவ்வூடகங்களோடு தொடர்பு கொள்வதை விட்டு விடுவர். எனவே பல்வேறு ஊடகங்களின் கருத்துத் தெரிவிப்பில் மொழியின் பங்கு யாது, பல் ஊடகங்களின் தமிழ் எத்தகைய அமைப்பு உடையது என்பன குறித்த செய்திகள் இப்பாடப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.
• அச்சு ஊடகங்கள்
(1) நாளிதழ்கள்
(2) வார, மாத இதழ்கள்
• மின்னணு ஊடகங்கள்
(1) வானொலி
(2) தொலைக்காட்சி
(3) திரைப்படம்
இவற்றுள் நாளிதழ்கள் அன்றாடம் முக்கியச் செய்திகளை வெளியிடுகின்றன. வார மாத இதழ்களாகிய பருவ இதழ்கள் ஒரு வார அல்லது ஒரு மாதச் செய்திகளுள் முக்கியமானவற்றைத் தெரிவு செய்து அவற்றைக் கட்டுரை, தலையங்கம் போன்ற வடிவங்களில் எழுதி மேலும் அவற்றோடு இலக்கியங்கள் மற்றும் பொழுது போக்குச் செய்திகளைச் சேர்த்து வெளியிடுகின்றன.
1940களில் பொதுவுடைமை இயக்க இதழ்கள் தமிழில் வளர்ந்தன. புதுஉலகம், ஜனசக்தி, தீக்கதிர், தாமரை, செம்மலர் முதலியன பொதுவுடைமை இயக்க இதழ்களுள் குறிப்பிடத் தக்கவை.
• பேச்சு வழக்கில் இருக்கும் தமிழே உயிருள்ள தமிழ். அதைக் கொச்சை நீக்கி எழுத வேண்டும்.
• கடின நடையில் எழுதக் கூடாது.
• புரிகிற தமிழில் எழுதினால் மட்டும் போதாது;
• பேசுகிற தமிழில் எழுத வேண்டும்.
இதழாளர் கையேடு என்ற நூலில் சி.பா. ஆதித்தனார் குறிப்பிடும் மேற்குறிப்பிட்ட கருத்துகள் பத்திரிகை மொழி குறித்த பொன் விதிகள் எனலாம். பத்திரிகைகள் எளிய நடையில் செய்திகளை எழுதுதல் வேண்டும். எளிய நடையை உருவாக்குவன பின்வருவன ஆகும்.
• சிறிய சொற்கள்
• மக்கள் பேசும் சொற்கள்
• சிறிய சிறிய தொடர்கள்
• சிறு சிறு பத்திகளாகப் பிரித்து எழுதுதல்
• ஆங்காங்கே சிறு உள்தலைப்புகள் இட்டு எழுதுதல்
தான் சொல்ல வரும் கருத்தை மக்களுக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிற நாளிதழ்களும் சஞ்சிகைகளும் கையாளும் மொழியைப் பின்வருமாறு பிரித்துக் காணலாம்.
• கட்டுரை இயல்பு மொழி அல்லது எளிய மொழி.
• கவர்ச்சி மொழி
புலனாய்வு இதழ்கள் எனப்படும் அரசியல் சமுதாய வார இதழ்கள் குறிப்பாக அரசியல் செய்தியைத் தம் கவனமான மொழிப் பயன்பாட்டின் வாயிலாகப் பொழுது போக்குக்கு ஏற்றதாக ஆக்கிவிடுகின்றன. செய்தித் தெரிவு (content selection) மொழிப் பயன்பாடு (language use) ஆகிய இரு நிலைகளில் இதழியல் உத்திகளை இவ்விதழ்கள் கையாண்டு ஒன்றிலிருந்து மற்றொன்று தனித்து நின்று தமக்கெனத் தத்தம் வாசகர்களைத் தக்க வைத்துக் கொள்கின்றன. இவ்வகையில் குறிப்பிடத் தக்க மொழிப் பயன்பாட்டு உத்திகள் கட்டுரை இயல்பு மொழியும் கவர்ச்சி மொழியும் ஆகும்.
செய்தி தரும் முறையில் இவை செந்தமிழையோ பல்வகை மொழிக் கலப்பினையோ பயன்படுத்துவது இல்லை. இயல்பான மொழியில் எளிய நடையில் ஒரு கட்டுரை அமையும் முறை போலச் செய்திதரும் முறை இவ்விதழ்களில் உண்டு. சொல் ஜாலங்களும் பிறமொழிச் சொற்களும் மிகவும் குறைந்து ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மட்டுமே காணப்படும். ஆனால் பிறமொழிக் கலப்பு அதிகம் இன்றி எளிய, முறையான தொடரமைப்புகளுடன் இந்த நடை செய்தியை முழுமையாகத் தரும்.
சான்றுகள்:
• திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்புப் பற்றிய கருத்தரங்கம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். (தினத்தந்தி, 29.02.2004)
• பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. (தினமலர், 19.01.2004)
• நடிகர் ரஜினி ரிஷிகேஷத்தில் 25 நாள் ஓய்வுக்குப் பிறகு நேற்றுக் (சனிக்கிழமை) காலை சென்னை திரும்பினார். அவரைப் பத்திரிகையாளர் சோ நேற்று மாலை சந்தித்துப் பேசினார். ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்தது. (தினகரன், 26.11.1995)
குமுதம், ஆனந்தவிகடன், கல்கி போன்ற இதழ்களின் தலையங்கங்கள், முத்தாரம், கல்கண்டு போன்றவற்றின் சிறு குறிப்பு விளக்கப் பகுதிகள், மங்கையர் மலர், ராஜம் போன்ற மகளிர் இதழ்களில் சில கட்டுரைப் பகுதிகள், ஜூனியர் விகடனில் ஒருசில அரசியல் செய்திப் பகுதிகள் மற்றும் தனி ஒருவர் எழுதும் சில தொடர் கட்டுரைகள், இந்தியா டுடேயின் செய்திக் கட்டுரைகள் போன்றன இவ்வகை எளிய நடையைக் கையாண்டு எழுதப்படுகின்றன. தமிழில் மொழிக் கலப்பின்மையை எதிர்பார்ப்போருக்கு இத்தகைய மொழிப் பயன்பாட்டு முறை விரும்பத் தக்கதாக அமையும்.
சான்றுகள்:
• டாக்டர் ஜான்சன் பிரபல ஆங்கில இலக்கிய மேதை. இவர் தெருவில் செல்லும்போது கம்பங்கள் ஏதும் தென்பட்டால் ஒவ்வொன்றையும் தொட்டு விட்டுத்தான் போவார். ஏதாவது ஒன்றைத் தொடாமல் விட்டு விட்டால் பழையபடி பின்னால் போய் முதலிலிருந்து ஒவ்வொன்றாகத் தொட்டு விட்டுத்தான் செல்வாராம். மேதையின் மனத்திற்குள் எப்படி ஒரு குழந்தைத் தனம். (கல்கண்டு, 07.12.1995, பக். 29)
• ஜூலை மாதம் இருபத்தாறாம் தேதி வீரசிகாமணியில் ஆரம்பித்த ஜாதிக் கலவரம் இன்னும் தென் மாவட்டங்களைக் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக நெல்லை மாவட்டம் முழுவதும் கலவரத் தீயின் கோர ஜுவாலைகள் படர்ந்து கொண்டிருக்க, இப்போது தென்காசிப் பகுதி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. (ஜூனியர்விகடன், 26.11.1995, பக்.8)
இந்தக் கட்டுரை இயல்பு மொழி அல்லது எளிய மொழியில்,
(1) விவரங்களைத் தெரிவிக்கும் விளக்க நடை
(2) கலப்பின்மை
(3) வாசகனுக்கு எவ்விதச் சிக்கலுமின்றிக் கருத்தைத் தெரிவிக்கும் பாங்கு
(4) பாமர வாசகனும் எளிதில் புரிந்து கொள்ளும் நடை
(5) எளிய கருத்துப்பரிமாற்ற முறை
முதலியன அமைகின்றன.
• பேச்சு மொழியில் எழுதுதல்
• ஆங்கில மொழிக் கலப்புடன் எழுதுதல்
• குறிப்பிட்ட ஆயத்தச் சொல் மற்றும் சொற்றொடர் அமைப்புகளைக் கையாண்டு வேறுபடுத்துதல்
• பேச்சுமொழிப் பயன்பாடு
பொதுவாகத் தமிழ் இதழ்கள் பேச்சு மொழியினைப் பயன்படுத்தி எழுதுதல் என்ற முறையை விரும்பிக் கையாளுகின்றன. பேச்சுமொழி இவ்விதழ்களின் நடையில் இரண்டறக் கலந்து அமைகின்றது. மக்களின் பேச்சு வழக்கில் உள்ளது போலவே சொற்களும் சொற்றொடர்களும் பயன்படுத்தப் படுகின்றன.
• பெயர் + ஒட்டுக்கள் = பேச்சில் உள்ளது போலவே எழுதுதல்
திடீர் + என்று = திடீர்னு
சைக்கிள் + இல் = சைக்கிள்ல
• தேவைப்படும் அளவிற்குச் சொற்களைச் சுருக்கிக் கொள்ளுதல்.
பண்ணுகின்ற = பன்ற
• பேச்சு வழக்குச் சார்ந்த திரிபுடைச் சொற்களை எவ்விதத் தயக்கமுமின்றிக் கையாளுதல்.
லேசில்
• மரூஉச் சொற்களைப் பயன்படுத்துதல்
ஒன்று = ஒண்ணு
சான்றுகள்:
• திருச்சி புறநகர் மாவட்டக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் நேர்காணல் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் பல தலைகள் உருளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (தினமலர், 19.01.2004, பக். 15)
• திடீரென டமால் சத்தத்துடன் செல்போன் வெடித்தது. (தினமலர். 23.01.2004, பக். 7)
• சபரிமலை ஓட்டல்களில் கொள்ளை விலை. கலெக்டர் நடவடிக்கை. (தினமலர், 26.11.1995, பக். 7)
• யாருடைய டெலிபோனையும் மத்திய அரசு ஒட்டுக் கேட்கவில்லை என்று பிரதமர் திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறார். (தினத்தந்தி, 29.02.2004, பக். 13)
• சினிமாவிலும் காசு இல்லை; பயாஸ்கோப்பிலும் காசு இல்லைனா வயித்துப் பாட்டுக்கு என்ன பண்றதுன்னுதான் சின்னக் குடை ராட்டினம் ஒண்ணு வாங்கினேன். (ஆனந்தவிகடன், 26.11.1995, பக். 2)
• மரபுத் தொடர்கள்
பேச்சு வழக்குச் சார்ந்த சில மரபுத் தொடர்கள் (Idioms) பயன்படுத்தப்பட்டு வாசகனை ஈர்ப்பதாய் மொழிநடை அமைகிறது.
குழிதோண்டிப் புதைத்து. (பாக்யா, டிச. 1-7, 1995, பக். 53)
நோண்டி வெளியே எடுத்து. (முத்தாரம், 1-7, டிச. 1995, பக்.23)
கொடிகட்டிப் பறக்கிறார். (தராசு, 5.12.1995, பக்.20)
தூள் கிளப்புகிறார். (குங்குமம், 24.11.1995, பக். 7)
சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. (தினமலர், 20.01.2004, பக். 11)
போன்றவை சான்றுகள்.
• பழமொழி கலத்தல்
பேச்சு வழக்குச் சாயல் கலந்த தொடர்களைப் பயன்படுத்தும் போது பழமொழிகளைக் கலந்து எழுதும் நடை எளிமையான கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவுகிறது.
சான்று:
விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் கேட்குதோ என்று ஜாடை மாடையாகத் திட்டித் தீர்க்கிறாராம். (நக்கீரன், டிச. 5, 1995, பக். 15)
• குறியீடு
அரசியல் சீர்கேடுகளைக் குறிப்பிட்டு எழுதும்போது பேச்சு வழக்கில் உள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி எழுதி வாசகனுக்கு மகிழ்ச்சியூட்டும் மொழிநடையும் உண்டு.
சுருட்டல் கிங் (தராசு, 5.12.1995, பக். 20)
ஆல் இன் ஆல் அழகுராஜா (நெற்றிக்கண், 4.12.1995, பக். 11)
அல்லி நகரத்துச் சிங்கம் (நக்கீரன், 5.12.1995, பக். 15)
போன்றவை சான்றுகள்.
• வட்டாரப்படுத்தல்
பேச்சு வழக்கில் எழுதும் போது வட்டாரப்படுத்தி எழுதும் போக்கும் உண்டு.
நம்மூர் மணிரத்னம் அல்ல (குங்குமம், 24.11.1995, பக். 16)
நம்மூர் இசையமைப்பாளர் ரகுமான் (ராணி, 26.11.1995, பக். 23)
என்பவை சான்றுகள்.
இவ்வாறு பேச்சு மொழியைப் பயன்படுத்தி எழுதுதல் ஆசிரியர் – வாசகன் இருவருக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறைத்து ஒரு நெருக்கத்தைத் தோற்றுவிக்கிறது.
• ஆங்கில மொழிக் கலப்பு
ஆங்கில மொழிச் சொற்களை, சொற்றொடர்களைக் கலந்து எழுதுவதில் பத்திரிகைகள் ஆர்வம் காட்டுகின்றன.
• ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்திலேயே தருதல்.
• ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ச் சொற்களுக்கு அடுத்து அடைப்புக் குறிக்குள் தருதல்.
• ஆங்கிலச் சொற்களைத் தமிழில் ஒலிபெயர்த்துத் தருதல்.
• ஆங்கிலச் சொற்களைச் சொல்லின் ஒருபாதியளவு தருதல்.
என்று பத்திரிகைகள் பல முறைகளில் ஆங்கிலச் சொற்களைக் கலந்து எழுதுகின்றன.
சான்றுகள்:
இன்று எதிர்பாராமல் கிடைத்த Free Time இல் என் புது டி.வி. கம்பெனியான விசேஷ் விஷன் பற்றி நிறைய யோசித்தேன். மாலை பேட்டா கம்பெனிக்காரர்கள் நடத்திய Star Quiz நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.
உந்து சக்தி (Driving Force) யார்? (பாக்யா. டிசம். 1-7.1995, பக். 25)
என்பது ஆங்கிலச் சொல்லை அடைப்புக் குறிக்குள் தருவதற்குச் சான்று.
அவர் ஸ்டைல் (இந்தியாடுடே, 5.12.1995, பக். 7)
என்பது ஆங்கிலச் சொற்களை ஒலிபெயர்த்துத் தமிழில் தருவதற்கான சான்று ஆகும்.
தற்காலத் தமிழில் அதாவது பேச்சு வழக்கில் ஆங்கிலச் சொற்கலப்பு அளவு கடந்து காணப்படுவது கண்கூடு. பேச்சு வழக்கு நடை இதழ்களில் விரும்பிக் கையாளப்படுவதால் ஆங்கில மொழிச் சொற்களும் இயல்பாகவே கலந்து காணப்படுகின்றன. இவ்வாறு ஆங்கில மொழிக் கலப்பு இதழுக்கு ஒரு தற்பெருமை சார்ந்த நடையைத் தருவதற்கு உதவுகிறது.
• முரண் சொற்களைக் கலந்து எழுதுதல்.
• பெயர் + கள் என்ற அமைப்பை உயர்திணைக்குப் பயன்படுத்துதல்.
• ஒப்பிட்டு எழுதுதல்.
• குறிப்பிடத் தக்க சொற்களைப் பயன்படுத்துதல்.
போன்ற வழிமுறைகள் அவற்றுள் சில.
சான்றுகள்:
• நடிகர்களிடம் அவரவர் ஹனிமூன் பற்றிக் கேட்ட கட்டுரையில் தனிமூன், பனிமூன், பட்டினிமூன் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டு முரண்சுவை பயக்கின்றன. (ஆனந்தவிகடன், 26.11.1995, பக். 21)
• பல மல்லேஸ்வரிகள். (பாக்யா, 1-7 டிசம். 1995, பக். 26)
• குறிப்பிடத் தக்க சொற்கள்
வெச்சுக்குவோம்
கெட்டுப்போயிடுத்து
லடாய்
படாபடா வாய்ப்பு
விலாவாரியா
உட்டாலக்கடி உருவம்
சொதப்பியதில்
நிறைய்ய்ய
அதிர்ஷ்ட்டமான
தெரிய்ய்ய
உற்சாகிகள்
• மொழி
சொல், தொடர், ஒலியின் கூறுபாடுகள், பேச்சுத்திறன் ஆகிய வெவ்வேறு தளங்களிலும் மொழியே செயல்படுகிறது.
• சொல்
இக்காலக் கட்டத்தில் பேச்சுமொழிச் சொற்களும் பிறமொழிச் சொற்களுமே அதிக அளவில் தகவல் தொடர்பில் பயன்படுத்தப் படுவதால் வானொலியிலும் இம்முறையிலான சொற்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
மதுரை வானொலியின் மகளிர் நிகழ்ச்சிகள் பற்றி ஆராய்ந்த வி.அநுராதா தமது நூலில் அந்நிகழ்ச்சிகளின் மொழிநடை பற்றிச் சுட்டுகிறார். அந்நிகழ்ச்சிகளில் பேச்சு மொழிச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் கலந்து வந்துள்ள முறையை அவர் விளக்குகிறார்.
சான்று:
பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் கிராம மூதாட்டி ஒருவர் நேர்காணப் பட்டார். மிகச் சாதாரணமாக, ‘எனக்கு வயது கரெக்டா 80 ஆகுதுங்க’ என்றும், ‘அந்தக் காலத்துல பொம்பளைங்க ஃப்ரீயாப் பேசமுடியாது; நைட் நேரத்துல வெளியே போக முடியாது’ என்றும் ஆங்கிலச் சொற்களை அடுக்கிப் பேசினார். (வானொலியும் மகளிர் நிகழ்ச்சிகளும், பக். 51)
இச்சான்று நாட்டுப்புற மகளிர்க்கான நிகழ்ச்சி; அதிலும் கூட ஆங்கிலச் சொற்கலப்பைக் காணமுடிகிறது. எம்மொழிச் சொல்லாயினும் மக்களுக்குப் புரியக் கூடிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற அணுகுமுறையை இங்குக் காணமுடிகிறது.
• தொடர்
நீண்ட வாக்கியங்கள், கலவை வாக்கியங்கள், கூட்டு வாக்கியங்கள் வானொலி மொழிக்கு உகந்தவை அல்ல. எனவே நிகழ்ச்சிக்கு எழுதுபவர் எளிய தனிவாக்கியங்களைப் (simple sentence) பயன்படுத்தி எழுத வேண்டும்.
சான்று:
“குழந்தை வளர்ப்பு ஒரு கலை” என்ற வானொலி உரை எளிய தொடர்களைக் கொண்டுள்ளது. அவ்வுரையின் முன்னுரை பின்வருமாறு:
“குழந்தையின் முதல் உலகம் அதன் வீடும் பெற்றோரும்தாம். குழந்தைகளை நன்கு வளர்ப்பதில் தொடக்கம் முதலே பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு நிரம்பச் சுதந்திரமும் கொடுத்துவிடக் கூடாது. அதே சமயத்தில் அதிகமான அடக்குமுறையும் கூடாது.” (வானொலியும் மகளிர் நிகழ்ச்சியும், பக். 52)
இதே முறையில் அவ்வுரை முழுவதும் எளிய தொடர்களில் அமைகிறது.
• ஒலி
வானொலியின் ஒலி அமைப்பில் பேசுபவரின் உச்சரிப்புத் திறன், ஏற்ற இறக்கம், குரல் வளம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சான்று:
பழம் என்ற சொல்லை உரையில் பயன்படுத்தினால் பேசுபவர் சரியாக உச்சரிக்க வேண்டும். அப்படி உச்சரிக்க இயலாது எனில் கனி என்ற சொல்லைப் பயன்படுத்திப் பேச வேண்டும். மாறாக பலம் என்று பேசினால் நேயர் பொருளைத் தவறாகக் கொள்ள நேரிடும். குழந்தை என்ற சொல் இடம் பெறும் போது ழ உச்சரிக்கச் சிரமமாயின் பிள்ளை என்ற சொல்லைப் பயன்படுத்திப் பேச வேண்டும். பேசுபவர் தம் குரலில் சரியான ஏற்ற இறக்கத்தைத் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தினால்தான் வானொலி மொழி நேயருக்கு ஆர்வம் ஊட்டுவதாக அமையும். நிகழ்ச்சியின் இறுதி வரை நேயர் கவனித்துக் கேட்பார். அது மட்டுமன்றி வானொலியில் உரை நிகழ்த்துபவர் நல்ல குரல் வளம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். அச்சமின்றி, கூச்சமின்றி, நடுக்கமின்றிப் பேச வேண்டும்.
• பேச்சுத் திறன்
(1) உரை நிகழ்த்துபவர் வானொலி நேயருடன் சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பேசித் தம் உள்ளக் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். தேவையற்ற சொற்களைத் தவிர்க்க வேண்டும். அலங்காரம், வருணனை இல்லாமல் தகவலை ஆற்றொழுக்காகச் சொல்ல வேண்டும்.
(2) நிகழ்ச்சி நேர்காணல், உரையாடல் போன்றவையாக இருப்பின் எதிராளியின் கருத்தை அறிந்து கொண்டு அக்கருத்துக்கு ஏற்றவாறு பேச்சினை அமைத்துக் கொண்டு பேச வேண்டும்.
(3) தம் கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் அறிஞர் தம் கருத்துகளைப் பொருத்தமாக எடுத்தாண்டு உரை நிகழ்த்த வேண்டும்.
இவ்வாறு அறிஞர் கருத்துகளை இணைத்துப் பேசினால் கேட்கும் நேயருக்கு, நிகழ்ச்சியின் மையக் கருத்து பற்றிக் கூற்று நிகழ்த்துவோரின் கருத்தும் அறிஞர்களின் கருத்தும் ஒருசேரக் கிடைக்கும்.
சான்று:
பெண் குழந்தைகள் ஆண்டு என்ற தலைப்பில் அமைந்த நேர்காணல்.
“ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று கூறிச் சென்றார் பாரதியார். ஆனால் இங்கு நடப்பதென்ன? பெண் சிசுக் கொலைகள். ஒரு கன்னிப்பெண் எல்லா நகைகளையும் அணிந்து கொண்டு இரவு நேரத்தில் தனியாகத் தெருவில் நடந்து சென்றால் அப்போது அவளுக்கு எந்தத் தீங்கும் நேராதிருந்தால் அதுதான் ராம ராஜ்ஜியம் என்று காந்தியடிகள் கூறியுள்ளார். ஆனால் இன்று நிலைமை என்ன? பட்டப் பகலிலேயே நகைத் திருட்டும் கற்பழிப்பும்தான் அன்றாடக் காட்சிகளாய் மிகுந்துவிட்டன.” (வானொலியும் மகளிர் நிகழ்ச்சிகளும், பக். 58-59)
இச்சான்றில் பெரியோர்களின் கருத்தும் நேயருக்குக் கிடைப்பதைக் காணலாம்.
(4) பேசுபவர் தம் கருத்தில் உறுதியாக நின்று பேச வேண்டும். தாம் சொல்ல வரும் கருத்தை ஐயமின்றித் திட்டவட்டமாக எடுத்துரைக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நான்கு பண்புகளும் பேசுபவரின் பேச்சுத் திறத்தை உள்ளடக்கியவை. இவை சிறந்தால் வானொலி மொழி சிறந்து, கருத்து நேயரைச் சென்றடையும்.
தொலைக்காட்சி பல்வேறு நிகழ்ச்சிகளைத் தருகின்றது. தனியார் அலைவரிசைகளும் தமிழில் அரசு அலைவரிசையாகிய பொதிகையும் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தருகின்றன. பொதுவாக 30 நிமிடங்கள் ஒரு நிகழ்ச்சி என்றால் அதில் ஏறக்குறைய 14 நிமிடங்கள் விளம்பரங்களுக்குப் போய்விட எஞ்சிய நேரமே நிகழ்ச்சிக்குத் தரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியை வழங்கும் அறிவிப்பாளர் முதலிலும், இடையிடையேயும், இறுதியிலும் பேசுவார். நேர்காணல் நிகழ்ச்சி என்றால் அவர் பங்கு அதிகமாக இருக்கும். இத்தகைய அறிவிப்பாளர்கள் பேசும் தமிழில் ஆங்கிலச் சொற்கலப்பு அளவு கடந்து அமைகிறது. சான்றாக வணக்கம் என்பதற்குப் பதில் ஹாய் என்ற சொல்லும், நிகழ்ச்சியை முடிக்கும் போது பை என்ற சொல்லும் பயன்படுத்தப் படுவது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களும் ஆங்கிலச் சொற்கலப்புப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பேச்சுத் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாங்கே அமைகிறது.
தொலைக்காட்சி அலைவரிசைகளில் அதிகமாக இடம் பெறும் நிகழ்ச்சிகள் நாடகங்கள். இந்த நாடகங்களின் உரையாடல்களில் மொழி அதிகமான கவனத்துடன் எழுதப்படுகின்றது என்று கூற முடியாவிட்டாலும் இங்கும் பேச்சுத் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படுவதைக் காணலாம்.
செய்திகள் (News Programme) தமிழகத்தில் எல்லா மாவட்ட மக்களுக்கும் புரியும் வகையில் தரமான பொதுத்தமிழில் (Standard Common Tamil) எழுதப்படுகின்றன. இத்தமிழில் வட்டார மொழிக் (Dialect) கலப்பிற்கு இடமில்லாத வகையில் எழுதப்படுவது அதன் சிறப்பு ஆகும்.
தற்காலப் பேச்சுத் தமிழில் ‘வந்து’ என்ற இடைச்சொல் பொருளற்ற முறையில் எல்லாத் தொடர்களிலும் கலந்து பேசப்படுகிறது. இதனைக் குறித்துப் பேசுவோர் எள்ளளவும் கவலைப்படுவதில்லை. இதே அமைப்பு அப்படியே தொலைக்காட்சியிலும் காணப்படுகிறது.
விளம்பரத் தமிழிலும் கேட்போரைக் கவர்ந்திழுக்கும் சொற்களே தெரிந்தெடுக்கப் படுகின்றன. இவ்வகையிலும் ஆங்கிலச் சொற்கலப்பு அதிகம் இடம் பெறுகிறது.
தொலைக்காட்சி என்ற கவர்ச்சி ஊடகம் 24மணி நேரமும் பிற அலைவரிசைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் தருவதில் மொழி பற்றி மிகுந்த அக்கறை கொள்ளாமல் பேச்சுத் தமிழைப் பதிவு செய்யும் வகையி்ல் தன் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்கிறது. 1) உடனுக்குடன் செய்தி தருதல், 2) விரைவாகத் தருதல், 3) பொழுது போக்கு என்ற வகையில் தன் நேயர்களைத் தக்க வைத்தல் என்ற மூன்றிலும் கவனம் செலுத்தும் தனியார் அலைவரிசைகள் உள்ளடக்கத்தை விட மொழி மீது குறைவான கவனமே கொள்கின்றன எனலாம்.
தொடக்கக் காலத்தில் திரைப்படங்கள் நாடகப் பாணியில் அமைக்கப்பட்டன. இலக்கிய வளர்ச்சிக்கும் இவை அடித்தளமாக அமைந்தன. எனவே செந்தமிழில் உரையாடல்கள் அமைந்தன. வசனங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. வசனங்களைச் சரியாகப் பேசி உச்சரித்து நடித்த நடிகர்கள் புகழ் பெற்றனர். பி.யு. சின்னப்பா, எஸ்.வி. சுப்பையா, சிவாஜி கணேசன் முதலானோர் இதற்கு முன்னோடிகள் ஆவர்.
அன்று புராண, வரலாற்றுப் படங்களே மிகுதியாய் உருவாக்கப்பட்டன. இளங்கோவன், பாரதிதாசன், சுரதா, கம்பதாசன் போன்றோர் சிறந்த உரையாடல்களைச் செந்தமிழில் எழுதினர். அண்ணா திரைப்பட வரலாற்றில் கதையின் கருத்திலும் உரையாடல்களை எழுதுவதிலும் புதுமையைக் கையாண்டவர். அவரது ஓர் இரவு, நல்லதம்பி, வேலைக்காரி போன்றவை அடுக்குமொழி, பொருள் பொதிந்த சொற்கட்டு போன்ற சிறப்புடைய உரையாடல்களைக் கொண்டவை. அண்ணா அமைத்துத் தந்த தமிழ் அழகு என்று எல்லாராலும் போற்றப்பட்டது. இவரைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி இவரைப் போலவே சிறப்பாக எழுதினார். பராசக்தி, திரும்பிப்பார், மனோகரா, பூம்புகார், இருவர் உள்ளம் போன்ற பல படங்களை இவரது திரைத் தமிழ் வெற்றி பெறச் செய்தது.
திருவாரூர் கே. தங்கராசுவும் மிகச்சிறந்த திரை உரையாடல் எழுதிப் புகழ்பெற்றார். இரத்தக் கண்ணீர் இன்று வரை இவருக்குப் புகழ் சேர்க்கிறது.
அவரை அடுத்து, திரைக்கதை உரையாடல் எழுதிய ஸ்ரீதர் கரடுமுரடான வசனங்களாக இல்லாமல் எளிய தமிழில் சுருக்கமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் எழுதினார். மக்கள் வரவேற்பை இத்தகைய மொழிநடை பெற்றது. ஸ்ரீதர் எழுதிய முதல் நாடகமான ரத்தபாசம் அவரது முதல் திரைப்படமாகவும் வந்தது. அதை அடுத்து அவர் கதை வசனம் எழுதி வந்த படம் எதிர்பாராதது என்ற திரைப்படம்.
காந்தியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான எஸ்.டி.சுந்தரம் எழுதிய கவியின் கனவு என்ற நாடகம் வீர வசனங்களுக்குப் பெயர் பெற்றது. கல்கியின் கள்வனின் காதலி கதைக்குத் திரை உரையாடல் எழுதும் பொறுப்பு இவருக்குக் கிடைத்தது.
இல்லற ஜோதி என்ற திரைப்படத்திற்குக் கண்ணதாசன் எழுதிய வசனம் இலக்கிய ரசனை ததும்பும் வசனமாக நின்று தனி முத்திரை பதித்தது. அவர் திரைப்படங்களுக்கு எழுதிய பாடல்கள் கருத்துச் செறிவும் கவிதை நயமும் கொண்டு எளிய நடையில் அமைந்தன. எனவே ரசிகர்களுக்கு இவரது பாடல்கள் மிகவும் பிடித்தன.
புராணப் படங்களுக்குத் தெளிவாகவும் எளிமையாகவும் வசனம் எழுதி மக்களை ஈர்த்தவர் ஏ.பி. நாகராஜன், எளிய வசனங்களும் இப்படங்கள் வெற்றி பெற்றதற்கு ஒரு காரணம் ஆகும்.
புராணக் கதைகளைத் திரைப்படமாக்கும் முறையினின்று மாற்றி, சமூகக் கதைகளைக் கொண்டு வந்த பெருமை சக்தி கிருஷ்ணசாமிக்கு உரியது. வீரபாண்டியக் கட்டபொம்மன் திரைப்படத்திற்கு வீரவசனம் எழுதிய பெருமை இவருக்கு உண்டு.
கருத்தாழம் மிக்க வசனங்களை எழுதிப் புகழ் பெற்றவர் ஆரூர்தாஸ். இவர் வாழவைத்த தெய்வம் என்ற படத்திற்கு எழுதிய வசனம் இப்படத்திற்கு வெற்றியைத் தேடித் தந்தது. சிறந்த வசனகர்த்தா என்ற விருதினைப் பெற்றவர் இவர். வீரத்திருமகன், நானும் ஒரு பெண், காக்கும் கரங்கள் போன்ற பல படங்களுக்கு இவரது வசனத்தால் பெருமை உண்டு.
குடும்பச் சிக்கல்களை மையப்படுத்திய கதைகளையும் உரையாடல்களையும் தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பாக அமைத்த பெருமை கே.எஸ். கோபால கிருஷ்ணனைச் சாரும். குமுதம், சாரதா, தெய்வத்தின் தெய்வம், கற்பகம், படிக்காத மேதை, கைகொடுத்த தெய்வம், தெய்வப் பிறவி போன்ற பல திரைப்படங்களில் இவர் வரைந்த உரையாடல்கள் திரைத் தமிழுக்குப் பெருமை சேர்த்தவை.
புதுமையான கதைக் கருக்களையும் புதிய பாணி உரையாடல்களையும் திரைப்படங்களில் புகுத்தியவர் கே.பாலச்சந்தர் ஆவார். நீர்க்குமிழி, எதிர்நீச்சல், மேஜர் சந்திரகாந்த், புன்னகை, தாமரை நெஞ்சம் போன்ற பல படங்களில் இவரது தமிழ் உரையாடல் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
பாக்கியராஜ் மிகச் சிறந்த உரையாடல் ஆசிரியர் ஆவார். இத்துறையில், எம்.எஸ். சோலைமலை, ஜி.பாலசுப்ரமணி, ஆர்.கே. சண்முகம், பாலமுருகன், துறையூர் மூர்த்தி, ஏ.எல். நாராயணன், மணிவண்ணன், டி. ராஜேந்தர், லியாகத் அலிகான் போன்றோரும் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.
• ஊடகங்கள் மொழியைக் கவனமாகப் பயன்படுத்தினால்தான் கூறவரும் கருத்து கேட்போரைச் சென்று சேரும்.
• பத்திரிகைத் தமிழில் தந்தை பெரியார் முதன் முதலில் ஆடம்பரம் அற்ற தமிழைப் பயன்படுத்திக் கருத்து இதழியலை வளர்த்தார்.
• திரு.வி.க. எளிய சிறுசிறு தொடர்களைப் பயன்படுத்தித் திருப்புமுனையாக அமைந்தார்.
• சி.பா. ஆதித்தனார் கொச்சை நீக்கி எழுதப்பட்ட பேச்சு வழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்தார். கடின நடையை எதிர்த்தார்.
• இன்றைய நாளிதழ்களில் செந்தமிழிலும் அல்லாமல், பல்வகை மொழிக் கலப்பும் இல்லாமல், இயல்பான மொழியில் எளிய நடையில் ஒரு கட்டுரை அமையும் முறைபோலக் கட்டுரை இயல்பு மொழி பயன்படுத்தப் படுகிறது.
• கவர்ச்சி மொழியும் உண்டு. பேச்சு மொழிப் பயன்பாடு, ஆங்கில மொழிக் கலப்பு, குறிப்பிட்ட ஆயத்தச் சொற்கள், சொற்றொடர்கள் பயன்பாடு, குறியீடு, பழமொழி, மரபுத் தொடர் கலப்பு, வட்டாரப் படுத்தி எழுதுதல் போன்றவை கவர்ச்சி மொழி உருவாக்கத்தில் முக்கியமானவை.
• வானொலி மொழியில் மொழி, ஒலி, உச்சரிப்புத் திறன் முதலியவற்றிற்குப் பங்கு அதிகம்.
• தொலைக்காட்சி மொழியில் பேச்சு மொழி முக்கியத்துவம் பெறுகிறது. ஆனாலும் ஆங்கில மொழிச் சொற்கலப்பு அதிகமாக இடம் பெறுவது பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. செய்திகள் எல்லாருக்கும் புரியும் வகையில் பொதுத் தமி்ழில் அமைகின்றன.
• திரைப்பட மொழி செந்தமிழில் ஆரம்பித்து, கடின நடை உடையதாகிப் பின்னர் சமூகக் கதைகளைச் சொல்ல ஆரம்பித்த போது பேச்சுத் தமிழுக்கு மாறி மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து வந்ததைக் காண்கிறோம்.
பாடம் - 4
• இலக்கிய மொழி
இலக்கியங்களில் கையாளப்படும் மொழி ஒருவகையில் வரலாற்று ஆவணம் ஆகும். ஏனெனில் காலந்தோறும் மொழி வளர்ந்து வந்திருக்கிற வளர்ச்சியை இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன. தமிழில் சங்க காலம் தொடங்கித் தற்காலம் வரை இலக்கியங்களில் காணப்படும் மொழியை ஆராய்ந்து பார்த்தால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துள்ள நிலை புலனாகிறது. எனவே இவ்வகையிலும் இலக்கிய மொழி ஒரு சிறந்த வரலாற்றுப் பதிவாக ஆகிறது.
கவிதை, உரைநடை, மரபுக் கவிதை, புதுக்கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் இவ்விலக்கியங்களில் மொழி கையாளப்பட்டுள்ள பாங்கு, இலக்கியத்தைச் சுவைத்துப் படிப்பவருக்கு இலக்கிய நயத்தை உணர்த்துவதுடன் மகிழ்ச்சியையும் பயப்பதாகும்.
(1) சிறப்பு மிக்க சொல்லாட்சி
(2) உவமை, உருவகம் போன்ற உத்திகள்
(3) சரியான தொடர் அமைப்புகள்
இம்மூன்று பண்புகளை உள்ளடக்கிய கவிதைகள் வெற்றி பெறுகின்றன. சில சான்றுகளை நாம் இப்பாடத்தில் காண்போம்.
• சிறப்பு மிக்க சொல்லாட்சி
எந்த ஒரு சிறந்த கவிதையும் தனிமனிதப் பண்பைக் கூறி அதிலிருந்து பொதுப்பண்பும் உலகப் பண்பும் விளங்குமாறு செய்ய வேண்டும். இதனைத்தான் ‘The essence of poetry is universality’ என்று கால்ரிட்ஜ் விளக்குகிறார். சங்க அகப் பாடல்கள் தனிமனிதக் காதல் உணர்வை வெளிப்படுத்துபவை. இதிலிருந்து இக்கவிதைகள் உலகப் பொதுப்பண்பை – உலகத்திற்கே பொதுவான பண்பாகிய காதல் என்ற உணர்வை – வெளிப்படுத்துகின்றன. இத்தகைய கவிதைகளுள் பல மொழிப் பயன்பாட்டின் காரணமாகச் சிறப்புப் பெற்று, மக்கள் மனத்தில் நிலைத்து நிற்பவை.
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.
என்ற சங்கப் பாடலில் (குறு.40) தலைவன் பேசுகிறான்.
‘என் தாயும் உன் தாயும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையிலும் உறவினர் அல்லாதவர்கள். நானும் நீயும் முன் பின் தெரிந்தவர்களா? இல்லை. இப்படி எந்த வழியிலும் உறவே அற்ற நம் இருவரது மனமும் செம்மண்ணில் விழுந்த மழை நீர் எப்படித் தன்நிறம் மாறிச் சிவந்த நிறமுடையதாக மாறுகிறதோ, செம்மண்ணும் எப்படி மழை நீருடன் கலந்து குழைந்து சேறாகி விடுகிறதோ அதுபோல நம் மனங்கள் ஒன்றோடு ஒன்று காதல் என்ற உணர்வால் கலந்தனவே’ என்று தலைவன் தலைவியிடம் பேசும் இப்பாடல், உலகத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி எல்லா மக்களிடமும் காணக்கூடிய ஒரு பொது உணர்வான ஆண் பெண் காதல் பற்றிப் பேசுகிறது.
காதல் என்ற கருத்தை எளிய முறையில் இப்பாடல் விளக்குவதற்குக் காரணம் இதில் கையாளப்பட்டிருக்கும் சொற்களும் உவமையும்தாம். (யாய் – ஞாய், எந்தை – நுந்தை. யான் – நீ) ஆகிய முரண் சொற்கள் இருவரும் வேறு வேறு குடிப்பிறந்து வந்தவர்கள் என்ற சுவையைத் தோற்றுவிக்கப் பெரிதும் கை கொடுக்கின்றன. அதே போல யார் ஆகியரோ? எம்முறைக்கேளிர்?, எவ்வழி அறிதும்? என்ற வினாத்தொடர்களில் உள்ள வினாச் சொற்கள் தொடர்ந்து வந்து மனத்தில் தொடர் வினாக்களை எழுப்புகின்றன. முரண்சொற்களும் வினாத்தொடரும் தொடர்ந்து வருதல் என்ற உத்தி ஒரே கருத்தை மூன்று முறை சுட்டிப் படிப்பவரின் மனத்தில் கருத்தை ஆழமாகப் பதிக்கிறது.
இதனை அடுத்து அமையும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற உவமை, சொல்ல வரும் காதல் என்ற கருத்தைத் துல்லியமாக எடுத்துரைக்கிறது. இவ்வாறு
(1) முரண்சொற்கள் – சொல்
(2) வினாத்தொடர் – தொடர்
(3) தொடர்ந்து வருதல், தகுந்த உவமை – உத்தி
ஆகிய மொழிசார்ந்த கூறுகள் இப்பாடலில் இடம் பெற்று இலக்கிய நயமுடையதாகப் பாடலை உயர்த்துகின்றன அல்லவா?
• உவமை, உருவகம் போன்ற உத்திகள்
பாரதிதாசனின் இன்பத் தமிழ் என்ற பாடல் பின்வருமாறு அமைகிறது.
தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ!
(பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1 : 95)
தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி மிகுந்த தமிழ்ப் புலமையுடன் வாழ்வில் விளங்கிய பாரதிதாசன் தமிழ் மொழிமேல் கொண்டிருந்த பற்று அளப்பரிது. அவரது தமிழ்ப் பற்றினை மேற்குறிப்பிட்ட கவிதை சுட்டுகிறது.
இப்பாடலில் தமிழை அவர் அமுது, தேன், கனி, நிலவு, மணம், வாழும் நகரம், அசதியை மாற்றும் தேன், பிறவிக்குத் தாய், இதயத் தீ போன்று பலவாறு வர்ணிக்கிறார். இவை சிறந்த உருவகங்களாகின்றன. இவ்வர்ணனைகளே இக்கவிதைக்கு உயிரூட்டுகின்றன. இவ்வர்ணனைகள் பொருத்தமுடையனவாய் இக்கவிதையில் அமைந்திருக்கின்றன. “கவிதை என்பது கற்பனை நிகழ்ச்சிகளின் பதிவு மட்டுமன்று அதற்கு மேம்பட்டது. சம்பவங்கள் உயிரோட்டமான ஈர்க்கும் நடையில் விளக்கப்பட வேண்டும்” என்ற டேவிட் டைஸனின் கருத்துக்குப் பாரதிதாசனின் இக்கவிதை மிகுதியும் பொருத்தமுடையதாகிறது. இதனால்தான் சி.என்.அண்ணாதுரை “பாரதிதாசனின் கவிதைகளை எண்ணி மகிழ ஒருவருக்கு இலக்கண அறிவு அதிகம் தேவை என்ற அவசியம் இல்லை. அவரது கவிதைகளை நாம் வாசிக்கும் போழுது அவரது கருத்து நம் இரத்தத்தில் கலந்து, உணர்வு நம் நாடி நரம்புகளில் பெருக்கப்படுகிறது” என்று போற்றுகிறார்.
ஓர் இலக்கியப் படைப்பாளன் தான் சொல்ல வரும் கருத்துக் குறித்த உணர்ச்சிப் பெருக்கினை வெளிப்படுத்தச் சிறந்த உத்திகள் கைகொடுக்கின்றன. அவ்வுத்திகளும் பொருத்தமாய் அமைந்து எளிய சொற்களில் தெரிவிக்கப்படும் போது அக்கவிதை படிப்போர் மனத்தில் பதிகிறது.
• தொடர்
இருபதாம் நூற்றாண்டின் சிறந்த தமிழ்க் கவிஞர்களுள் ஒருவரான கண்ணதாசனின் கவிதைகளில் சொற்கள் தொடர்ந்து அழகாக அமைந்து இனிய தொடர்களை உருவாக்குகின்றன. ஒருவரை வருணிக்க வேண்டுமென்றால் அவர் பெயர்த் தொடரைக் கையாளுகிறார்.
முத்துமணிப் பல்லக்கு
முளைத்தெழுந்த சிறுகீரை
தத்துங்கிளி தேவ
தாரு உதிர்த்தஇலை
கொத்து மலர்ஒன்றாய்க்
கூடிச் சமைத்தமுகம்
பத்து மாதங்கூடப்
பாலன்வய தாகவில்லை
செத்துக் கிடக்கின்றான்.
(தொகுதி V, 187 : 1-5)
என்ற வருணனை இறந்து கிடக்கும் ஒரு சிறு குழந்தையை வர்ணிப்பதாகும். இங்குப் பெயர்த் தொடர்கள் கையாளப்பட்டுள்ளதைக் காணலாம்.
செயலின் தொடர்ச்சியைக் காட்ட இவரது கவிதைகளில் கையாளப்படும் தொடர் வினையெச்சத் தொடராகும்.
என்குரல் தூரங் கேட்டால்
எகிறிக்கால் பிளந்து வந்து
என்னுடல் மீதில் ஏறி
என்னவோ சொல்ல எண்ணி
முன்வாயில் முகத்தை வைத்து
முழுஉடல் நடுங்க ஆடும்
என்னுயிர் சீசர்க் கேநான்
எசமான னல்ல தோழன்.
(தொகுதி iv, 122: 1-4)
சீசர் என்ற தன் வளர்ப்பு நாய் இறந்த போது பாடிய இரங்கல் பா ஆகும் இது. இங்கு, நாய் தன் நன்றியைக் காட்டச் செய்யும் செயலின் தொடர்ச்சியை விவரிக்க எச்சத்தொடர் வந்துள்ளது.
சில வாக்கியங்கள் ஏவல் பொருளுமல்லாது வியங்கோள் பொருளுமின்றி அனுமதிப் பொருளைத் தருகின்றன. கவிஞரது உள்ளத்து உணர்வை உள்ளவாறே விளக்க அனுமதி வாக்கியங்கள் பயன்படுகின்றன.
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்.
i & ii. 95 :1-2)
கவிஞரின் எண்ணத் துணிவினை விளக்க இத்தொடரமைப்பு உதவுகிறது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாக்கியங்களை இணைப்பதற்குப் பல உருபன்கள் பயன்படுகின்றன. இவ்வாறு அமையும் இணைப்புத் தொடர்களில் தொடர்களை இணைக்கப் பெரும்பாலும் பயன்படும் சொல் ‘உம்’ ஆகும்.
பரபரப் பாகப் பறந்துசெல் வாரும்
சுறுசுறுப் பாகத் தொடர்ந்துசெல் வாரும்
அதுஇது என்றே அலையும் பேர்களும்
மதுமங் கைஎன மயங்கிநிற் பாரும்
மாளிகை எழுப்ப மனந்துடிப் பாரும்
மண்குடில் விளக்கில் வாழும் மனிதரும்
பள்ளியை நோக்கிப் பறக்கும் பாலரும்
படம்நா டகம்எனப் பார்க்கும் ரசிகரும்
ஐயா பசியென அலறும் நொண்டியும்
வெய்யில் கருதாது வேலைசெய் வார்களும்
பரந்த உலகில் பங்குதா ரர்கள்
(ப. 57, 1-11)
இவ்வெடுத்துக்காட்டில் உள்ளபடி தொடர்களை இணைத்துப் பெரிய தொடர்களை உருவாக்க ‘உம்’ என்ற இடைச்சொல் பயன்படுகிறது.
போல், போல, போலே, போலும், போலவும், போலவே, போன்று, போன்ற, ஆக, நிகர், என, அன்ன, அனைய, ஒக்க என்னும் இந்த உவம உருபுகள் பயன்படுத்தப்பட்டு ஒப்புமைத் தொடர்கள் அமைகின்றன.
கள்வர் மனம்போல் காரிருள் சூழும் வேளையில்
(i & ii, 11 : 16-17)
இலக்கியக் காதல் வழக்கம் போல எல்லாம் நடக்க
(i & ii, 11 : 13-14)
என்பன சான்று.
(1) சொல்லாட்சி
(2) குறியீடு, உருவகம் ஆகிய உத்திகள்
(3) தொடரமைப்பு
என்று பிரிக்கலாம்.
• சொல்லாட்சி
அப்துல் ரகுமானின் பால்வீதி என்ற தொகுப்பைச் சான்றாகக் கொண்டு சில கவிதைகளைக் காணலாம். அப்துல் ரகுமான் தகுந்த இடத்தில் தகுந்த சொற்களைக் கையாளுவதில் கவனம் செலுத்துகிறார். கவிதையில் பொருத்தமான இடத்தில் பொருத்தமான சொற்களைக் கையாண்டால் அக்கவிதை மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடிக்கும்.
தன் காதலியின் அன்பற்ற தன்மையைச் சுட்டிக் காட்டக் ‘கருமிக் கண்கள்’ என்ற சொல்லாட்சி இவரது கவிதை ஒன்றில் கையாளப்பட்டுள்ளது. “என்னை உன் கருமிக் கண்களுக்குள் கண்ணீராகச் சேர்த்துக் கொள்” என்பது செய்தி. (பால்வீதி, பாடல் எண். 19) இங்குக் கருமி என்ற அடைமொழி பொருத்தமான சொற்பயன்பாடு உடையதாகிறது.
தீப மரத்தின்
தீக்கனி உண்ண
விட்டில் வந்தது
கனியோ
விட்டிலை உண்டது
(பாடல். 14)
விட்டில் தீபத்தினை அனுபவிக்கத் தீபத்தின் அருகில் வந்தது. ஆனால் தீபம் விட்டிலை உண்டு விட்டது. இங்குக் கனியோ என்பதில் ‘ஓ’ என்ற இடைச்சொல் ஆனால் என்ற பொருளைத் தந்து பொருத்தமான சொல்லாக அமைகிறது.
சில பாடல்களில் ஓரிரு சொற்கள் மட்டுமே பாடலின் முழுப்பொருளையும் தந்து விடுகின்றன.
ஒற்றை நெருப்பு உதட்டின் வாசிப்பில்
புல்லாங்குழலே உருகுகிறது
என்ற கவிதையில் ஒற்றை நெருப்பு, உதடு ஆகிய சொற்கள் கவிதை மெழுகுவர்த்தி பற்றிப் பேசுகிறது என்று தெரிவிக்கின்றன. நேர் எதிர் பொருட்களைத் தரும் முரண் சொற்களைப் பயன்படுத்திக் கருத்தைத் தெரிவிக்கும் முறையையும் புதுக்கவிதைகளில் காணலாம். விளையாட்டு என்ற கவிதையில் தன் காதலியின் செயலைக் குறிப்பிடும் தலைவன்.
யதார்த்தப் பகலில்
குறளாய்க் கொடை இரந்து
ஏகாந்த இரவில்
விசுவரூபம் கொண்டு
என்னையே புதைக்கும்
நிழல் நீ
என்று குறிப்பிடுகிறான். பகலில் என்னிடம் இரந்து நிற்கும் நீ இரவில் என்னை வருத்துகிறாய் என்று காதல் குறித்துப் பேசுகிறான். இங்கு அன்பு, கோபம் என்ற பொருளைத் தர குறள் x விசுவரூபம் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. (குறள் = வாமன அவதாரம்) இவை தவிர, பகல் x இரவு ஆகிய சொற்கள் பொழுது மாறுபாட்டைக் குறிக்க இடம் பெறுகின்றன.
முரண்தொடை என்ற கவிதையில் மட்டும் ஆதி அந்தம், சமாதி தொட்டில், நீலாம்பரி பூபாளம், வைகறை அந்தி, இருட்டு ஒளி, புன்னகை கண்ணீர் ஆகிய எதிர்ச்சொற்கள் முரண் பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளன.
• குறியீடு, உருவகம் ஆகிய உத்திகள்
குறியீடு இல்லாமல் புதுக்கவிதை புனைவது இயலாது என்று கூறும் அளவிற்குக் குறியீடு சிறந்த உத்தியாகப் பயன்படுத்தப் படுகிறது.
புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களில் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி
என்ற கவிதையில் நம்நாட்டுத் தேர்தல் முறையை எள்ளி நகையாடுவதற்குப் புராணக் கருத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. புறத்திணை என்ற சொல் இப்பொருளைப் பெறுவதற்கு மிகுந்த உதவியாக அமைகிறது.
மின்னல் என்ற கவிதையில் மின்னல் பல வகைகளில் உருவகிக்கப்படுகிறது. மின்னல் இப்படிப்பட்டது என்ற ஒரே கருத்து வெவ்வேறு விதமாக உருவகிக்கப்படுவதைப் பின்வரும் வரிகளில் காணலாம்.
வான உற்சவத்தின்
வாண வேடிக்கை
முகிற்புற்றுக் கக்கும்
நெருப்புப் பாம்புகள்
கறுப்பு உதட்டின்
வெளிச்ச உளறல்
இடிச் சொற்பொழிவின்
சுருக்கெழுத்து
இங்கு ஒவ்வொரு உருவகத்தையும் நின்று நிதானித்து, படிப்பாளி சுவைக்கலாம். மரபுக் கவிதைகளில் போல தொடர்ந்த ஆர்வமூட்டும் கருத்தோட்டத்திற்கும் இறுதிவரை கொண்டு சென்று கருத்தை முடிக்கும் முறைக்கும் புதுக்கவிதையில் இடமில்லை. ஒவ்வொரு பத்தியிலும் ஒவ்வொரு வகையான உத்தியை வெளிப்படுத்தும் முறை இங்கு அமைகிறது.
• தொடரமைப்பு
புதுக்கவிதைகள் பின்வரும் தொடரமைப்புகளைக் கொண்டு விளங்குகின்றன.
(1) தனி வாக்கியம்
(2) கலவை வாக்கியம்
(3) பெயர்த் தொடர்
அப்துல் ரகுமானின் பால்வீதி கவிதைத் தொகுப்பில் தொடரமைப்புகள் குறிப்பிட்ட வரிசை முறையில் அல்லது வரிசை முறையிலிருந்து மாறி வருகின்றன. அப்படி மாறி வரும் பொழுது எழுவாய் அல்லது பயனிலை குறைவுபடுகிறது. அனுமதி வாக்கியமாகிறது. தலைமைப் பெயர் உருவகிக்கப்படுகிறது. தொடர் வினாவாக முடிகிறது. கலவை வாக்கியங்கள் குறிப்பிட்ட தம் வரிசை முறையிலிருந்து மாறுதல், வினாவாக முடிதல், பயனிலை இன்றி முடிதல், நிகழ்காலப் பொருளைத் தரும் எதிர்கால இடைநிலையைக் கொண்டு முடிதல் ஆகிய வகைகளில் அமைகின்றன.
யதார்த்தப் பகலில்
குறளாய்க் கொடையிரந்து
ஏகாந்த இரவில்
விசுவரூபம் கொண்டு
என்னையே புதைக்கும்
நிழல் நீ
என்பது கலவை வாக்கியத்திற்குச் சான்று.
தொடக்கத்தில் இலக்கணம், தத்துவம், சமயக் கொள்கைகளை விளக்குவதற்கு உரைநடை பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில் கலை, அறிவியல் மற்றும் பிறவற்றையும் விளக்குவதற்கு உரைநடை பயன்படுகிறது. படைப்பிலக்கியங்களாகிய நாவல், சிறுகதை முதலியவையும் உரைநடை மொழியால் ஆக்கம் பெறுபவை. இவற்றின் மொழிக்கும் கட்டுரை மொழிக்கும் வேறுபாடு உள்ளது.
• செந்தமிழ் நடையின் தொடக்கக் காலம்
நாவலர் வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் போன்றோர் செந்தமிழ் நடையில் எழுதினர். கா.சு. பிள்ளை, விபுலானந்தர் முதலியோரது நடையும் இவ்வகையினதே; ஆனால் எளிமையானது. அவ்வை துரைசாமிப் பிள்ளை உரையாசிரியர்களின் நடையைப் பின்பற்றினார்.
• பாரதியின் நடை
உரைநடை வரலாற்றில் பாரதியின் நடை ஒரு திருப்புமுனையாகும். இதனால் இவரது காலத்தை உரைநடை வரலாற்றில் பாரதி காலம் என்றே குறிப்பிடுகிறோம். பாரதியின் நடை உணர்ச்சியூட்டும் நடை மட்டுமன்று; எளியதும் தர்க்கரீதியானதும் பேச்சு வழக்கு நிறைந்ததும் ஆகும்.
பொய் இல்லாவிட்டால் பார்வை நேராகும் கவனி!
பொய் தீர்ந்தால் நேரே பார்க்கலாம். பயம் தீர்ந்தால்
நேரே பார்க்கலாம் கவனி!
பொய் தீர்ந்தால் பயம் தீரும், பயம் தீர்ந்தால்
பொய் தீரும்.
என்பது பாரதியின் நடைக்கு எடுத்துக்காட்டு. கவிதை அழகுடன், அதே வேளை உரைநடையின் தெளிவுடனும் கட்டுரைகளை எழுதியவர் பாரதியார். புதிய சொற்களைப் படைப்பதிலும் இவர் கைதேர்ந்தவர். புரட்சி, பொதுவுடைமை போன்ற சொற்களைப் படைத்தவர் பாரதியாரே. உரைநடையில் பழமொழிகளையும் சேர்த்து இவர் எழுதியமையால் பேச்சுச் சாயல், தெளிவு, வேகம் முதலியன இவர் நடையில் அமைந்தன.
• கட்டுரை நடை – வளர்ச்சி நிலை
பாரதிக்குப் பின்னர் கட்டுரை நடையை வளர்த்தெடுத்துச் சென்றோர் பலர். மணிக்கொடிக் காலம் என்பதன் மையமாகிய வ.ரா. எனப்படும் வ. ராமசாமி பேச்சுநடையில் எழுதினார். படிப்பவனைச் சிந்திக்கத் தூண்டியது இவர் எழுதிய பாங்கு. உரைநடை வரலாற்றில் தமக்கெனத் தனிநடையை உருவாக்கியவர் ரா.பி. சேதுப்பிள்ளை. ஓசைச் சிறப்பு, சொல்லின்பம், எதுகை, மோனை முதலியன அடங்கிய இனிய நடை இவரது கட்டுரைகளில் அமைந்திருந்தது. இவரது ஊரும் பேரும், வேலும் வில்லும், அலையும் கலையும் ஆகிய நூல்கள் பல அருமையான கட்டுரைகளைக் கொண்டவை.
“இராவணன் லெள்ளிமா மலையை அள்ளி எடுத்தபோது
இறைவனுடைய சேவடிக் கொழுந்தின் ஊற்றத்திற்கு ஆற்றாது,
நசையினால் பாடிய இசையினுக்கு இரங்கி நெடிய நாளும் கொடிய வாளும் தந்தான்” – - வீரமாமுனிவர் நாடு -
என்ற பகுதி ரா.பி. சேதுப்பிள்ளையின் நடைக்கு எடுத்துக்காட்டு.
• மு. வரதராசனின் நடை
ரா.பி. சேதுபிள்ளை அவர்களைத் தொடர்ந்து சிந்தனைச் செறிவு மிக்க நடையைத் தந்தவர்கள் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் மற்றும் கா.அப்பாதுரை போன்றோர். இவர்களைத் தொடர்ந்து தனித்துவம் வாய்ந்த நடையில் எழுதியவர் மு. வரதராசனார். எளிமை, இனிமை, தெளிவு இவரது நடையில் கலந்திருந்தன. இவருக்குப் பின் பலர் இவரைப் பின்பற்றி இவரைப் போலவே எழுதினர். வ.சுப. மாணிக்கம் அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்.
(1) விவரிப்பு நடை மூலம் செயல்களையும் உரையாடல்களையும் கூறுதல்.
(2) வினா விடை முறையில் இடையில் பல கருத்துகளைக் கூறிச் செல்லல்.
இதற்கு அவரது ஒருபிடி சோறு என்ற கதையிலிருந்து சில பகுதிகளைக் காணலாம்.
சேரிப் பகுதியில் வாழும் ராசாத்தி தன் ஒரே மகனுடன் வாழ்கிறாள். கணவன் இல்லை. வேலை கிடைக்கும்போது வேலையையும், வேலை இல்லாத போது வறுமை காரணமாக விபச்சாரத்தையும் மேற்கொள்பவர்கள் இப்பகுதியில் உள்ள சேரி மக்கள். இவள் மகன் சிறுவன் மண்ணாங்கட்டி. இவன் பக்கத்து வீட்டு மாரியாயி தன் கணவனுக்கென்று வைத்திருந்த சோற்றைத் திருடித் தின்று விடுகிறான். ராசாத்திக்கும் மாரியாயிக்கும் வாய்ச்சண்டை வலுக்கிறது. சிறுவன் ஓடி விடுகிறான். சிறிது நேரத்தில் கர்ப்பிணியான ராசாத்தி மூன்று நாளாய்ச் சாப்பிடாததால் துடிக்கிறாள். வேலைக்கு அவசரமாகச் செல்லும் மாரியாயி அரிசி கொடுத்துக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கச் சொல்லிவிட்டுப் போகிறாள். மிகத் துன்பப்பட்டு, அதைக் காய்ச்சிக் குடிக்கப் போகும் வேளையில் மகன் வந்து தனக்குத் தருமாறு பிடுங்குகிறான். கஞ்சி கொட்டி விடுகிறது. அதில் ஒரு கை அள்ளிக் கொண்டு ஓடி விடுகிறான். வயிற்றுவலி அதிகமாகி உயிரற்ற குழந்தையைப் பிரசவித்து இறக்கும் நிலைக்கு வருகிறாள் ராசாத்தி. தன் மகனை ஒருபிடி சோற்றுக்கு அடித்து விட்டோமே என்று வருந்தியவாறே இறக்கிறாள். தன் தாய் இறந்துவிட்டதைக் கண்ட சிறுவன் அதே நாளில் தன் தாயை நினைத்துத் தனியே வருந்திக் கொண்டிருக்கிறான். பக்கத்து வீட்டு மாரியாயி சாப்பிடச் சொல்லித் தேற்றிச் சோறு தருகிறாள். ஒருபிடி சோற்றைப் பார்த்துத் தாயை நினைக்கிறான். அடைத்து வைத்திருந்த துக்கம் பீறிட வாய்விட்டு அழுகிறான்.
இக்கதையில் ஆரம்பத்தில் மண்ணாங்கட்டியை விவரிப்பு நடையில் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். தொடர்ந்து வரும் பகுதி வினா விடையுடன் கூடிய விவரிப்பு நடையில் அமைகிறது.
“இப்பொழுது மண்ணாங்கட்டிக்கு ஏகக் குஷி. ஏன் தெரியுமா? அடுத்த அடுப்பிலிருந்து சோற்றைத் திருடித் தின்ற எக்களிப்புதான்.”
இதேபோன்று வாசகனின் மனத்தில் தோன்றக்கூடிய ஐயங்களை ஊகித்து அவற்றைக் கேள்வியாக்கிப் பதிலும் தந்து எழுதுகிறார். மாரியாயி, ராசாத்தி இருவரின் வாக்குவாதம் அமையும் விவரிப்புப் பகுதி அம்மக்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதைச் சொல்லுகிறது. ராசாத்தியின் வயிற்று வலி பற்றிக் கூறியவுடன், சண்டையை மறந்துவிட்டு மாரியாயி உதவுதல் காட்டப்படுகிறது. தன்னிடம் இருக்கும் அரிசியைக் கஞ்சி காய்ச்சிக் கொடுக்க முடியாத தன் நிலையை, லாரி நிறைய விறகு வந்து நிற்பதைக் காட்டிச் சொல்கிறாள். தான் சம்பாதிக்கப் போக வேண்டிய கட்டாயத்தையும் மாரியாயி கூறுகிறாள். உடனே காட்டப்படும் விவரிப்பு நடை கலந்த பகுதி பின்வருமாறு:
“அரிசி இருக்கா?” என்று தலையை நிமிர்த்தி எழுந்து உட்கார்ந்து கொண்டாள் ராசாத்தி.
“இருக்கு…. ஒன்னால கஞ்சி காய்ச்சிக்க முடியுமா?”
“ஓ!…… அதெல்லாம் முடியும்……. சீக்கிரம் கொண்டா”
ராசாத்தி என்ற பாத்திரத்தின் உணர்ச்சி வேகம், கதை வளர்ச்சி, பாத்திர இயல்பு முதலியவற்றை ஒரு சேர இப்பகுதி எடுத்துக் காட்டுகிறது. அரிசி இருக்கா? என்ற கேள்வியின் வேகம் இம்மக்களின் வறுமை என்ற கருத்தை ஆழமாகப் புலப்படுத்துகிறது. ஒருபிடி சோற்றுக்காக இம்மக்கள் படும் அவலம், சாராசரிக் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வில் வயிற்றுப்பாடு என்ற அவலம் விளைவிக்கும் இன்னலை இக்கதை சரியாகப் புலப்படுத்துகிறது என்றால் இதற்கு ஜெயகாந்தனின் விவரிப்பு நடை, வினாவிடை நடை, தகுந்த சொல்லாட்சி, சுருக்கம் போன்ற மொழிசார்ந்த கவனமே காரணம் எனலாம்.
(1) புதுமை வேட்கை உள்ள இலக்கியப் படைப்பாளிகளின் எழுச்சி.
(2) குறிப்பிடத் தக்க சமூக இயக்கங்களின் (தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம், மார்க்சியக் கொள்கைப் பரவல்) வளர்ச்சி.
(3) மக்களின் வாழ்வில் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும் சமுதாய அமைப்புச் சார்ந்த குற்றங்களையும் ஊழல்களையும் போக்க வேண்டும் என்ற சிந்தனைப் புரட்சி.
(4) அச்சு இயந்திர வரவால் ஏற்பட்ட வாசகர் பெருக்கம்.
(5) தொலைக்காட்சியின் தாக்கம்.
(6) சமூக மதிப்பு மாற்றங்கள்.
(7) ஒடுக்கப்பட்டோரிடையே (தலித் மக்கள், பெண்கள்) ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு
ஊர் முழுதும் மகா தோரணங்கள் கட்டி வாழை
கமுகுகள் நாட்டிப் பந்தல் அலங்கரித்து மணமகனையும்
மணமகளையும் சுகந்த பனிநீரால் திருமஞ்சனம் சூட்டி
திவ்யமான வஸ்திராபரணங்கள் பூட்டி, ஸ்வர்ணமயமாயும்
நவரத்தின கஜிதமாயும் அலங்கரிக்கப்பட்ட கலியாண
மண்டபத்தில், கோடி சூரியர்கள் போலத் தீபகோடிகள்
பிரகாசிக்க, சமுத்திர கோஷம் போல நானா பேத
வாத்யங்கள் முழங்க, மயிற் கூட்டங்கள் போல்
நாட்டியப் பெண்கள் நடனம் செய்ய, குயிற்கூட்டங்கள்
போல் பாடினிகள் சுப சோபனம் பாட, கோதானம்,
பூதானம் முதலிய மாதானங்களுடன் கனகசபையின்
கலியாணம் நடந்தேறியது.
(பிரதாப முதலியார் சரித்திரம் , 139-140)
1935 வரை ஏறக்குறைய 43 நாவல்கள் எழுதிய ஆரணி குப்புசாமி முதலியாரின் நடை வடமொழிக் கலப்பில் அவர்காலப் பேச்சு வழக்கு முதலியன கலந்து எளிய தன்மை உடையதாய் அமைந்து இருந்தது. வடுவூர் கே. துரைசாமி அய்யங்காரின் நடையும் தெளிவுடன் கூடிய வசன நடையாக இருந்தது. எனவே, இவர்களது நடை மக்களைக் கவர்ந்தது. வை.மு. கோதை நாயகி அம்மாளின் நடையும் உவமைகள், அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி முதலியன அழகு செய்யப் பெண்களின் பிரச்சனைகளை எடுத்துரைத்தது.
மணிக்கொடி எழுத்தாளரான புதுமைப்பித்தன் (1906-1948) எழுதிய குறுநாவல்களாகிய சிற்றன்னை, துன்பக்கேணி முதலியவை வாழ்க்கையின் நடப்பு உண்மைகளைச் சுட்டி வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டின.
“பசி ஐயா பசி! பத்தும் பசி வந்திடப் பறந்து போகும் என்று வெகு ஒய்யாரமாக உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே! அங்கு நீர் ஒருநாள் இருந்தால் உமக்கு அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்.”
என்பது இவரது நடைக்குச் சான்று. இவர் நேரடியாகப் பேசும் நடைத்திறன் வாசகர்களைக் கவர்ந்தது.
• தனித்தமிழ் நடை
மறைமலையடிகளார் (1876-1950) வடசொற்களைத் தவிர்த்து எழுதுமாறு வலியுறுத்திய தனித்தமிழ்நடை எளிமையுடையதாய் அமைந்தது.
• அழகுத் தமிழ் நடை
இவரது தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட திராவிட இயக்க எழுத்தாளர்கள் தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி எழுதினர். இவ்வகையில் அண்ணாதுரை, கருணாநிதி போன்றோர் பயன்படுத்திய அடுக்குமொழி, மரபுத் தொடர்கள், அடைமொழி, உவமை, வினாத்தொடரின் தொடர்ச்சி, எழுவாய் பயனிலையின் வினா முறை மாற்றம், முரண் தொடர், புரட்டன், எத்தன், ஏமாளி, எத்திப் பிழைப்போர் போன்ற தனித்தன்மை கொண்ட சொல்லாட்சி போன்றவை குறிப்பிடத்தக்கனவாய் அமைந்து அழகுத் தமிழ்நடையை உருவாக்கின.
• கவர்ச்சி நடை
தமிழ் நாவல் நடை வரலாற்றில் இளஞாயிற்றின் உதயமென வந்து மறுமலர்ச்சி தந்தவர் எனப் போற்றப்படுபவர் கல்கி. இவரது நடையில் ஒரு விதக் கவர்ச்சி இருந்தது. கல்கியின் நடையில் வருணனை, கற்பனை, வரலாற்று நாவலாக மாற்றும் திட்டப் பாங்குகள், எளிமை முதலியன கலந்த ஈர்ப்பு நடை அமைந்திருந்தது. வருணனைச் சிறப்பு, பாத்திர உருவாக்கம், உரையாடல் அமைக்கும் பாங்கு, தம் வாசக வட்டத்தைப் பார்க்காமல் அவர்களோடு உரையாடும் முறை முதலியன இவரது நடைக்குக் கவர்ச்சியைத் தந்தது.
காவேரி தீரம் அமைதி கொண்டு விளங்கிற்று.
உதயசூரியன் செம்பொற்கிரணங்களால் நதியின்
செந்நீர்ப் பிரவாகம் பொன்னிறம் பெற்றுத்
திகழ்ந்தது. அந்தப் புண்ணிய நதிக்குப்
‘பொன்னி’ என்னும் பெயர் மிகப்
பொருத்தமாய்த் தோன்றியது.
(பார்த்திபன் கனவு -ப.1)
என்பது சான்று.
நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல் சேரியில் வாழும் மக்களையும் மையமாக வைத்து எழுதியவர் ஜெயகாந்தன். ஆங்கில மொழிச் சொற்கலப்பைப் பற்றிக் கவலைப்படாமல் அச்சொற்களைத் தம் எழுத்துகளில் சேர்த்து எழுதினார் இவர். பேச்சு மொழிப் பயன்பாடு இவரிடம் இயல்பாகவே அமைந்தது.
நவீனத் தமிழ் வாசகர்களை உருவாக்கிய க.நா. சுப்பிரமணியம் (1912-1988) தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கைப் பின்னணியைச் சித்திரித்துள்ளார். வாசகர்களைத் தொடர்ந்து கதையை வாசிக்கத் தூண்டும் ஈர்ப்புத் தன்மையை இவரது கதையில் காண இயலும். மொழிநடையில் எவ்விதக் குழப்பமும் விளைவிக்காத சிறுசிறு தொடர்களில் தெளிவாகப் பொருளைப் புலப்படுத்தும் முறை இவருடையது.
“கிளம்பிய ஆடுகளை எல்லாம் திரும்பவும் கொண்டுவந்து அதே இடத்தில் நிப்பாட்டினார்கள். பிறகு ரவைக்குக் கிடை போடும் இடத்தில் இவர்களுக்குள் விவகாரம் வைத்துக் கொள்வார்கள். அன்று அவள் குத்திப் போடுவதற்காகச் சீக்கிரமே வீடு திரும்பி விட்டாள்.”
“ஏலே வசங்கெட்ட பயபுள்ள, பாங்கு தெரிஞ்சிதான் நடக்கியா?
ஏமுலே எங்கேயாவது தேனையும் தவிட்டையும் கொண்டுகிட்டுப் போங்களேமுலே”
(கி.ரா., கிடை -163)
(நிப்பாட்டுதல் = நிறுத்துதல்; ரவை = இரவு; தேத்திப்போட = உரலில் தானியத்தைக் குத்திக் கஞ்சி காய்ச்ச)
இது ராஜநாராயணனின் கரிசல் வட்டாரத் தமிழுக்குச் சான்று.
ஸ்கூட்டரின் கீழ் பூமியை நழுவ விட்டான்.
(இராஜேந்திர குமார், இடிமின்னல், இந்துமதி ப.10)
இராஜாவின் தோளைக் கொத்தினாள்.
(இராஜேந்திர குமார், தப்பிக்க நேரமில்லை ப.28)
அந்த லாரி அவனை நீளமாய்ச் சிவப்புப் பெயிண்டில்
கோடிழுத்த மாதிரித் தேய்த்தது.
(இராஜேந்திர குமார், நீலநிற நிமிடங்கள், ப.10)
இவை சான்றுகள்.
• இலக்கியத்தில் பேசப்படும் கருத்து வாசகனைச் சென்றடைவதற்கு மொழியும் முக்கியப் பங்காற்றுகிறது.
• ஒரே கருத்தில் பலர் இலக்கியம் படைக்கும் போது அப்படைப்புகளில் வேறுபடுவதற்குப் படைப்பாளனின் ஆளுமையும் வாழ்க்கைப் பின்னணியும் குறிப்பாக அவர்கள் மொழியைக் கையாளும் திறனும் முக்கியக் காரணிகளாகின்றன.
• தமிழ் இலக்கியம் வடிவ நிலையில் பல மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது. கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என்று அவை அமைகின்றன.
• கவிதையில் மரபுக் கவிதையாயினும் புதுக்கவிதையாயினும் சொல்லும் தொடரும் மொழியைக் கையாளும் விதத்தை மாற்றப் பெரும்பணி ஆற்றுகின்றன. உவமை, உருவகம், குறியீடு, கற்பனை போன்ற உத்திகள் இன்றியமையா இடம் பெறுகின்றன.
• கட்டுரை மொழி செந்தமிழில் தொடங்கி, எளிய தமிழாகப் பாரதியால் உருப்பெற்று, மிகவும் எளிய நடையாக மு.வ.வின் நடையில் பரிணாமம் பெறுகிறது.
• சிறுகதை மொழியில் கூறவரும் கருத்தைப் புரிய வைக்கத் தகுந்த சொற்பயன்பாடும் தொடரமைப்புக்களும் உதவுகின்றன.
• நாவல்களில் இலக்கிய நடை வடசொல் கலப்புடைதாய், தனித் தமிழாய், அடுக்கு மொழியாய், கவர்ச்சி நடையாய், பேச்சுநடைச் சாயல் மிக்கதாய் வளர்ந்து இன்று மாறுபட்டதாயும் கலக மொழிநடையாயும் பரிணமித்து நிற்கிறது.
• இவ்வாறு இலக்கியத்தில் சொல்ல வரும் கருத்தை மனத்தில் பதிய வைக்கவும் அக்குறிப்பிட்ட இலக்கியத்தை மக்கள் மனத்தில் நீங்கா இடம்பெறச் செய்யவும் மொழி குறிப்பிட்ட பங்காற்றுகிறது.
பாடம் - 5
• மொழிக் கலப்பு ஏன்?
நம்மிடம் இல்லாத புதிய பொருள்களை (புதிய கண்டுபிடிப்புகள் காரணமாக) நாம் பிற நாட்டாரிடமிருந்து பெற்றுப் பயன்படுத்தும்போது அப்பொருள்களுக்குரிய பிறமொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறோம். குறிப்பிட்ட ஒரு துறையில் ஒரு மொழி சிறப்புப் பெற்றிருந்தால் அம்மொழியில் அத்துறையைக் கற்கும்போது அத்துறை சார்ந்த பிற மொழிச் சொற்கள் நம்மொழியில் இடம் பெறுகின்றன. அரசியல், சமயம், வணிகம் காரணமாகத் தொடர்பு கொள்ளும்போது தொடர்பு கொள்ளப்படுகின்ற பிறநாட்டுச் சொற்கள் நம் மொழியில் இடம் பெறுகின்றன. எனவே,
• புதிய பொருட் பயன்பாடு
• குறிப்பிட்ட துறையைக் கற்றல்
• அரசியல், சமயம், வணிகம் காரணமாகத் தொடர்பு
என்ற மூன்று காரணங்கள் மொழிக் கலப்பிற்கு அடிப்படையாகின்றன. தமிழில் சமண, பௌத்த சமயக் கருத்துகள், சொற்கள் புகுந்தன. தமிழகத்தில் நாயக்கர், இசுலாமியர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் அவர்தம் மொழிச் சொற்கள் தமிழில் புகுந்தன.
கடன் தரும் மொழி – Donor Language
கடன் பெறும் மொழி – Borrowing Language
(2) நிறைவுபடுத்த விரும்பும் மனப்பான்மை – Need Filling Motive
வேற்று மொழிச் செல்வாக்கால் சொந்த மொழியில் சொற்களை இடம் பெயர்த்து அமைத்துக் கொள்வதை மொழியியலார் Loan Shift எனக் கூறுகின்றனர்.
சான்று: விமானம் (வானவூர்தி)
பிற மொழிகளில் ஒரு சொற்றொடர் குறிக்கும் கருத்தைச் சொந்த மொழியிலுள்ள சில சொற்களைக் கூட்டிச் சொற்றொடராக்கி அக்கருத்தை வெளிப்படுத்தும் முறையும் உண்டு. இம்முறையை Loan Translation என்பர்.
சான்று: Water Falls – நீர்வீழ்ச்சி
பிற மொழிச் சொல்லையும் சொந்த மொழிச் சொல்லையும் சேர்த்து ஒரு சொல்லை உருவாக்கும் முறையை Loan Blend என்பர்.
சான்று: தசநான்கு (நெடுநல்வாடை – 115)
இவ்வாறு ஏற்படும் மொழிக் கலப்பினை இரண்டு வகையாகப் பிரித்துக் காணலாம்.
• பிற மொழிகளிலிருந்து சொந்த மொழிக்கு வந்தவை.
• சொந்த மொழியிலிருந்து பிற மொழிக்குச் சென்றவை..
இம்முறையில் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த சொற்கள் பற்றியும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற சொற்கள் பற்றியும் விரிவாகக் காண்போம்.
கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பின் தமிழகத்தின் ஒரு பகுதியை முஸ்லிம்கள் ஆண்டனர். அப்போது அரபு, உருது, பார்சிச் சொற்கள் தமிழில் புகுந்தன. கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் விஜய நகர நாயக்கர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியை ஆளத் தொடங்கிய போது தெலுங்குச் சொற்கள் தமிழில் புகுந்தன. கி.பி. 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மேலை நாட்டார் தொடர்பு ஏற்படவே போர்ச்சுக்கீஸ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலச் சொற்கள் தமிழில் கலந்தன.
• இயற்சொல் – சாதாரண எளிய சொற்கள்
• திரிசொல் – இலக்கியச் சொற்கள். ஒரு பொருள் பல சொல்லும் பல பொருள் ஒரு சொல்லும் இதில் அடங்கும்.
• திசைச்சொல் – கிளைமொழிச் சொற்கள்
• வடசொல்
இந்நான்கு சொற்களுள் வடசொல் என்பதனையும் சேர்த்துக் கூறுவது தொல்காப்பியர் காலத்திலேயே வடசொல் தமிழில் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. வடசொற்களைத் தமிழில் எடுத்தெழுதுவது பற்றியும் தொல்காப்பியர் சிந்தித்துள்ளார்.
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
(தொல். சொல். 395)
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்
(தொல். சொல். 396)
என்று விளக்குகிறார். தமிழ் மொழி மரபுக்கேற்ப மாற்றி எழுத வேண்டும் என்றும், சிதைந்து வருவனவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகிறார்.
நன்னூல் ஆசிரியர் வடமொழிக்கும் தமிழுக்கும் பொது எழுத்தால் ஆகியனவற்றைத் தற்சமம் என்றும் வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்தாலானவற்றையும், திரிதல் முதலிய விகாரம் பெற்றுத் தமிழில் வழங்குவனவற்றையும் தற்பவம் என்றும் கூறுகின்றார். வடிவம் மாறி அமைவது தற்பவம் ; வடிவம் மாறாதது தற்சமம் என்று இதனை சு. சக்திவேல் விளக்குகிறார்.
தமிழில் ர கரமும், ல கரமும், யகரமும் சொல்லின் முதல் எழுத்தாக வருவதில்லை. இவ்வாறு வரும் வட சொற்களைத் தமிழில் எழுதும் போது,
‘ர’ கர முதல் சொல்லுக்கு அ, இ, உ என்பவற்றில் ஒன்றும்; ‘ல’ கர முதல் சொல்லுக்கு இ, உ என்பவற்றில் ஒன்றும்; ‘ய’ கர முதல் சொல்லுக்கு ‘இ’ கர உயிரும் தமிழில் வடசொல் அமையும்போது வரவேண்டும் என ஒரு நன்னூல் நூற்பா (148) விளக்குகிறது.
சமண, பௌத்த சமயங்களின் தொடர்பால் வடமொழிச் சொற்கலப்பு அதிகமாயிற்று. சங்க இலக்கியங்களில் பல வடமொழிச் சொற்களைக் காண முடிகின்றது.
ஆதி (குறுந்தொகை, 293 : 4), (திருக்குறள், 1)
யாமம் (குறுந்தொகை, 6 : 1)
அரமியம் (அகநானூறு, 122 : 5)
நேமி (கலித்தொகை, 105 : 9)
ஆரம் (கலித்தொகை, 79 : 12)
காரணம் (கலித்தொகை, 60 : 12)
கமலம் (பரிபாடல், 2 : 14)
போகம் (பரிபாடல், 5 : 79)
மிதுனம் (பரிபாடல், 11 : 6)
அவுணர் (திருமுருகாற்றுப்படை, 59)
அங்குசம் (திருமுருகாற்றுப்படை, 110)
உரோகிணி (நெடுநல்வாடை, 163)
சாலேகம் (நெடுநல்வாடை, 125)
பாக்கியம் (திருக்குறள், 1141)
யவனம் (புறநானூறு, 56 : 18)
யூபம் (புறநானூறு, 15 : 21)
கலித்தொகையிலும் பரிபாடலிலும் வடமொழிச் சொற்கள் நிறைய உள்ளன. சிலப்பதிகாரத்தில் காணப்படும் சில வடசொற்கள் பின்வருவன.
சாவகர் (சிலம்பு. 15 : 190)
சாரணர் (சிலம்பு. 15 : 192)
தானம் (சிலம்பு. 15 : 43)
தருமம் (சிலம்பு. 10 : 163)
ஞானம் (சிலம்பு. 15 : 42)
விஞ்சை (சிலம்பு. 15 : 36)
இயக்கி (சிலம்பு. 15 : 116)
இந்திரன் (சிலம்பு. 5)
அந்தி (சிலம்பு. 4)
மணிமேகலையில் காணப்படும் சமஸ்கிருதச் (வடமொழி) சொற்கள் பின்வருவன:
கருமம்
பாவனை
கந்தன்
நரகர்
அநித்தம்
துக்கம்
கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்தே சமஸ்கிருதத்தின் உண்மையான செல்வாக்குக் காலம் தொடங்கியது; தமிழகம் சமஸ்கிருதக் கல்வியின் மையமாகத் திகழ்ந்தது. இரண்டாம் நரசிம்மனின் அவைக்களத்தில் தண்டி முனிவர் இடம் பெற்றிருந்தார். இக்காலக் கட்டத்தின் தொடக்கத்தில் செப்புப் பட்டயங்கள் சமஸ்கிருதத்தில் வெளியிடப்பட்டன.
• மணிப்பிரவாள நடை
பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மணிப்பிரவாள நடை என வழங்கப்பட்ட புதிய நடை தமிழகத்தில் தோன்றியது. மணியையும் பவளத்தையும் மாற்றி மாற்றிச் சேர்த்துத் தொடுத்தாற்போல சமஸ்கிருதத் தொடர்களையும் தமிழ்த் தொடர்களையும் மாற்றி மாற்றிக் கட்டிய நடைப்போக்கு மணிப்பிரவாள நடை ஆகும். ஏறக்குறைய 17ஆம் நூற்றாண்டு வரை இந்நடை வழக்கிலிருந்தது. ஆழ்வார்களின் தமிழ்ப் பாக்களில் உள்ள தொடர்களைக் கொண்டு வைணவர்கள் உபநிடதங்களிலும் புராணங்களிலும் உள்ள சமஸ்கிருதத் தொடர்களை விளக்குவர். சைவர்களும் இந்நடையை மிகவும் எளிமைப்படுத்திக் கையாண்டனர்.
• பிற்காலத்தில் வடசொல் கலப்பு
திருப்புகழிலும், வில்லிபுத்தூரார், தாயுமானவர் பாடல்களிலும் சமஸ்கிருதத் தொடர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. சாதாரண மக்களின் பேச்சுத் தமிழிலும் சமஸ்கிருதச் சொற்கள் புகுந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் வடசொற் கலந்து எழுதப்பட்ட போக்கினைப் புலப்படுத்துகிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய தமிழ்மொழித் தூய்மை இயக்கம் குறிப்பாக வடமொழிச் சொற்களுக்கு எதிரான இயக்கமாக அமைந்தது. ஆனால் பிற இந்திய மொழிகளை ஒப்பிடும் போது தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து குறைவாகவே கடன் பெற்றுள்ளது.
• வடசொற்களைத் தமிழில் எழுதும் போது எழும் சிக்கல்கள்
வடசொற்களைத் தமிழில் எடுத்து எழுதும் போது சில சிக்கல்கள் எழுகின்றன. அதனை நீக்கச் சில வழிமுறைகளும் கையாளப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத் தக்கவற்றை இங்குக் காண்போம்
(1) தமிழில் ஒலியன்கள் வருகை பெறும் முறைக்கேற்ப மாற்றி எழுதப்படுகிறது. ரகர மெய்யானது முன்னால் ‘இ’ சேர்த்து எழுதப்படுகிறது.
ரிஷி – இருடி
ரிஷபம் - இடபம்
ஈகாரம் இகரமாகவும் ஆகரம் ஐகாரமாகவும் மாற்றம் பெறுகிறது.
கௌரீ – கவுரி
சீதா(சீத) - சீதை
(2) வடமொழியில் உள்ள ஒலியன் தமிழ்மொழிக்கேற்பச் சமன்பாடு பெறுவது மற்றொரு முறை.
மாசம் – மாதம்
விஷம் - விடம்
ஹர - அரன்
பக்ஷி - பட்சி – பச்சி
(3) சில குறிப்பிட்ட இடங்களில் இடையில் உகரம் சேர்த்துத் தமிழில் மாற்றப்படுகிறது.
ஸ்ரகரா – சருக்கரை
(4) மொழி முதலில் அ, இ, உ சேர்த்து எழுதும் முறை பின்பற்றப்படுகிறது.
ரத்ன - அரத்தினம்
இரத்தினம்
லட்சுமி - இலட்சுமி
லேகியம் – இலேகியம்
லோக – உலோகம்
(5) தமிழில் வருகை முறையில் இல்லாதபடி அமையும் வடமொழி ஒலிச் சேர்க்கைகள் இருவழிகளில் எழுதப்படுகின்றன.
1. சுரபத்தி
2. ஓரினமாதல்
ர், ல், ய் என்பனவற்றுடன் சேர்ந்து வரும் மெய்களைப் பிரிக்க இகரச் சுரபத்தி இடம் பெறுகிறது.
ப்ரஹ்மன் – பிரமன்
ப்லவ – பிலவ
பாக்ய - பாக்கியம்
ஒலிச் சேர்க்கையில் இரண்டாவது ஒலி வகர அல்லது மகர மெய்யாய் இருக்குமாயின் உகரச் சுரபத்தி இடம் பெறுகிறது.
பத்மம் – பதுமம்
பக்வ - பக்குவம்
கர்மா - கருமம்
ஓரினமாதல் முறையில் மூக்கொலி அல்லது தடையொலியாய் இருக்கும் முதல் மெய்யின் தன்மைக்கு ஏற்பவோ அல்லது இரண்டாம் மெய்யின் தன்மைக்கு ஏற்பவோ ஓரினமாகும் அமைப்பு பின்பற்றப்படுகிறது.
சிம்ஹம் – சிம்மம்
கன்யா – கன்னி
அக்ஷா - அக்கம்
புஸ்தக் – புஸ்தகம்
கஷ்டம் - கட்டம்
கர்மா - கம்மம்
(6) மெய்யொலி இழக்கப்படுதலும் சில இடங்களில் மெய்யொலி இரட்டித்தலும் என ஒருமுறை பின்பற்றப்படுகிறது.
ஸ்ரமண - சமண
மாணிக்யம் - மாணிக்கம்
tabeg, tapah ஆகிய சொற்களிலிருந்து தவக்காய், தவளைக்காய், தவளை ஆகிய சொற்கள் வந்தன. கத்தரிக்காய் என்ற பொருளில் பயன்படும் வழுதுணங்காய் என்ற சொல்லும் இம்மொழியிலிருந்து வந்ததாகும். ஆஸ்ட்ரிக் மொழிகளிலுள்ள niyor என்ற சொல்லிலிருந்து முதிராத தேங்காயிலுள்ள இனிய நீராகிய இளநீர் என்ற சொல் வந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. misei, bisai என்னும் ஆஸ்ட்ரிக் மொழிச் சொற்களிலிருந்து மீசை, வீசை என்னும் சொற்கள் இடம் பெற்றன.
மிகுதியும் வழக்கில் உள்ள எதிரொலிச் சொற்களையும் (echo words) முண்டா மொழிகளிலிருந்தே பெற்றோம்.
சாப்பாடு – கீப்பாடு
பணம் - கிணம்
வீடு - கீடு
என்பனவற்றில் எதிரொலிச் சொல்லான இரண்டாவது சொல் பொருள் முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால்,
சம்பளம் – கிம்பளம்
என்ற எதிரொலிச் சொற்களில் இரண்டாம் சொல் இலஞ்சமாக முறையின்றிப் பெறும் பணமான கையூட்டைக் குறித்து நின்று பொருள் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம்.
சேமியா
கிச்சடி
கசாயம்
பட்டாணி
கோசும்பரி
வாங்கி
ஸொஜ்ஜி
முதலியன உணவு பற்றிய சொற்கள்
கங்காளம்
கிண்டி
ஜாடி
சாலிகை
குண்டான்
முதலியன சமையல் பாத்திரங்கள் பற்றியவை.
கண்டி
சாகி
லாவணி
அபங்கம்
டோக்ரா
முதலியன இசை தொடர்பான மராத்திச் சொற்களாகும்.
காமட்டி
கைலாகு
வில்லங்கம்
சாவடி
கோலி (சிறுவர் விளையாட்டு)
அபாண்டம்
கில்லாடி
இண்டி மாமா
கலிங்கம்
கொட்டு
சந்து
சலவை
ஜாஸ்தி
சுங்கு
சொண்டி
தடவை
தரகரி
திமிசு
நீச்சு
பீருடை
போன்ற சொற்களும் கலந்துள்ளன.
• இந்தி
குமரகுருபரர் காசியில் சில காலம் வாழ்ந்தார். எனவே அவரது பாடல்களில் இந்திச் சொற்கள் காணப்படுகின்றன. மத்திய அரசாங்கப் பொது மொழியாக இந்தி இருப்பதனால் வழக்குத் தமிழிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது.
• சான்று
நயாபைசா (புதுக்காசு)
காதி (கைத்தறித் துணி)
• உருது
நவாபுகள் ஆட்சிக் காலத்திலும், ஆங்கில ஆட்சியின் பொழுதும் நிர்வாகத் தொடர்பான பல உருதுச் சொற்கள் வழக்கில் இருந்தன. இன்றும் அவை வழக்கில் உள்ளன. தமிழில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உருதுச் சொற்கள் கலந்துள்ளன எனத் தமிழ்ச் சொற்களஞ்சியம் குறிப்பிடுகிறது.
நசர், சராய், கோரி, கெடுபிடி, கெழுவு அல்லது கெவு, கைதி, சப்பரம், சராசரி, செலாவணி, சாட்டி, சாமான், சாலேசுரம், சீனி, சுக்கான், சேடை, சீட்டு, தயார் போன்றவை அவற்றுள் சில ஆகும்.
• சிங்களம்
கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே தமிழர்கள் இலங்கையோடு தொடர்பு கொண்டிருந்தனர். பழங்காலத்தில் இலங்கையில் ஆண்ட எலாரா போன்ற மன்னர்களுள் சிலர் தமிழராவர். இலங்கையுடனான இத்தகைய உறவின் விளைவாகச் சில சிங்களச் சொற்கள் தமிழில் வந்து புகுந்தன. ஈழம், முருங்கை, பில்லி, அந்தோ போன்ற சொற்கள் சிங்களத்திலிருந்து தமிழுக்கு வந்தவை.
• மலாய்
சவ்வரிசி என்பதிலுள்ள சவ் என்பது மலாய் மொழிச் சொல்லான sagu என்பதிலிருந்து வந்ததாகும். கிடங்கு, கிட்டங்கி என்னும் சொற்கள் gadong என்ற மலாய்ச் சொல்லிலிருந்து வந்தவை. மலாக்கா, மணிலா என்னும் இடப் பெயரிலிருந்து வேர்க்கடலையைக் குறிக்கும் மல்லாக் கொட்டை, மணிலாக் கொட்டை ஆகிய பெயர்கள் ஆக்கப்பட்டிருக்க வேண்டும்.
• சீனம்
சீனர்களோடும் நமக்குத் தொடர்பு உண்டு. தமிழ் மாலுமிகளுடன் சீனர்கள் தொடர்பு கொண்டிருந்தனர். யுவான்சுவாங் தென்னகத்திற்கு வருகை புரிந்தார். படகு வகையைச் சார்ந்த சாம்பான் என்ற சொல், பெரிய மண்கலத்தைக் குறிக்கும் காங்கு என்ற சொல், பீங்கான் என்ற சொல் ஆகியன சீனத்திலிருந்து நமக்குக் கிடைத்த சொற்கள்.
• கிரேக்கம்
கிறித்து பிறப்பதற்கு முன்னரே கிரேக்கர்களும் உரோமர்களும் தமிழர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தனர். பெரிபுளுஸ் (Periplus) என்னும் நூல் மற்றும் தாலமி, பிளினி ஆகியோர் எழுதிய நூல்களிலிருந்து இதனை அறிகிறோம். மத்திகை, சுருங்கை, கன்னல், ஓரை ஆகிய சொற்கள் கிரேக்க மொழியினின்று வந்தவை. குருசு (Cross) என்பது இலத்தீன் மொழிச் சொல்லாகும்.
• ஹீப்ரு (எபிரேயம்)
கிறித்தவப் பாதிரியார்கள் மூலம் ஹீப்ரு மொழிச் சொற்கள் தமிழில் புகுந்தன. ஏசு, யூதர், சாலமன் முதலிய சொற்கள் ஹீப்ரு மொழிலிலிருந்து வந்தவை.
• அரபு மொழி
அரபு மொழி முஸ்லிம்களின் சமய மொழியாகும். திருக்குர்ரான் இம்மொழியில் உள்ளது. தமிழ் முஸ்லீம்களுக்காகப் புதிய குறியீடுகளும் அடையாளப் புள்ளிகளும் தமிழ் வரிவடிவத்தில் சேர்க்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன. அதனை அச்சுத்தமிழ் என்றனர். இஸ்லாமியர் சிலர் அரபுத் தமிழிலும் நூல் எழுதினர். அரபு மொழி வரிவடிவத்தில் தமிழ்ச் சொற்களை அப்படியே எழுதுவதுதான் அரபுத் தமிழ் எனப்பட்டது. முஸ்லிம்களின் பேச்சுத் தமிழில் அரபு மொழியின் சட்ட, சமுதாயச் சொற்கள் காணப்படுகின்றன. பெர்சியன் உருது மொழிகள் வழியாகவும் அரபுச் சொற்கள் தமிழில் புகுந்தன.
வசூல், தபா, ரஜா, இமாம், இலாக்கா, பிஸ்மில்லா, உருசுகாயம், ஜேப்பி, சைத்தான், தாக்கீது, தவாலி, நகரா, மக்கர், மகால், இசும், சுன்னத்து, ஆஜர், இரிசால், மௌஸ், முகாம், முசாபர், முன்ஷி, மொபசல், மஹார், யுனானி, லாயக்கு, ரத்து, ரஜா, ஹிக்கிம், ஷராப், ஜப்தி, ஜபர்தஸ்து, ஜாமீன், தணிக்கை, மகசூல், முசாபயு, ஜில்லா, கொசுவர், சுன்னி (முஸ்லிம்களில் ஒரு பிரிவு) முதலியவை தமிழில் புகுந்த அரபிய மொழிச் சொற்களாகும
• பெர்சியன் (பார்சி)
இந்தி, உருது வழியே பெர்சியன் சொற்கள் தமிழில் புகுந்தன. தமிழுக்கு வந்த பெர்சியச் சொற்களில் பெரும்பாலானவை ஆட்சித்துறைச் சொற்கள். சமயம் சார்ந்தனவும் வழிபாடு சார்ந்தனவுமான சில சொற்களும் புகுந்துள்ளன.
டபேதார், டவாலி, திவான், முகர், ரவாணா, ரஸ்தா, ஜாகீர், சர்தார், ஹவல்தார், தர்க்கா, நமாஸ், லங்கர், கானா முதலியன சான்றுகள். அங்கூர், சால்வை, துக்கான், ஷோக், சிப்பந்தி, லுங்கி, ரசீது, ஷால், அவுல்தார், சமீன், மாலீசு, முகூர், ரஸ்தா போன்ற சொற்களும் தமிழில் புகுந்தன. தயார், சுமார் ஆகிய இரு சொற்களும் பிறமொழிச் சொற்கள் என்று கூறமுடியாத அளவிற்குத் தமிழ்மொழிச் சொற்களாகவே இன்று புழக்கத்தில் உள்ளன.
• துருக்கி
துருக்கி மொழியிலிருந்து துப்பாக்கி போன்ற சொற்கள் தமிழில் வந்து சேர்ந்தன.
• போர்ச்சுகீசியம்
மேலை நாட்டார் 15ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவிற்கு வரத் தொடங்கினர். முதலில் இந்தியாவிற்கு வந்தவர்கள் போர்ச்சுகீசியர்கள். அவர்கள் கொண்டு வந்த பொருள்கள் பறங்கி என்ற முன்னொட்டுடன் சுட்டப்படுவதை இன்றும் காணலாம். பறங்கிக்காய், பறங்கிச் சக்கை முதலியன சான்றுகள். ஊர்ப் பெயர்களிலும் பறங்கி மலை, பறங்கிப் பேட்டை என இருத்தலைக் காணலாம். பறங்கி என்ற சொல் Frank என்ற சொல்லினின்று வந்தது. கடுதாசி, பேனா, வாத்து, சா(தேநீர்), இலஞ்சி, திராவி, அலமாரி, மேசை, சாவி, ஆயா, அன்னாசி, கோப்பை, பீப்பாய், வராந்தா, கிராதி, கொரடா, ஏலம், சன்னல், மேஸ்திரி, தோசை, பிஸ்கோத்து, புனல் (funnel), பொத்தான், தம்பாக்கு (தாமிரமும் துத்தநாகமும் கலந்த ஒன்று) போன்ற சொற்கள் சான்று.
• டச்சு (டானிஷ்)
போர்ச்சுகீசியர்களுக்குப் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனி மூலமாக இந்தியாவிற்கு வணிகத்தின் பொருட்டு வந்தவர்கள் டச்சுக்காரர்கள். கழிவறையைக் குறிக்கும் கக்கூஸ் என்ற சொல் kakhuis என்னும் சொல்லிலிருந்து வந்தது. துட்டு என்னும் சொல் duit என்னும் டச்சு நாணயம் என்ற பொருள் தரும் சொல்லில் இருந்து வந்ததாகும். பப்ளிமாஸ், உலாந்தா, தோப்பு போன்ற சொற்கள் தமிழில் வந்து புகுந்தன.
• பிரெஞ்சு
பாண்டிச்சேரி பிரெஞ்சு இந்தியாவின் தலைமை இடமாக விளங்கிற்று. பாண்டிச்சேரி பிரெஞ்சு நாகரிகத்தின் சின்னமாக விளங்குகின்றது. ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு தமிழிலுள்ள பிரெஞ்சுச் சொற்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. போத்தல், ஆசு (சீட்டுக்கட்டு), லாந்தர், தம்பூர், ரோஜு வடி, லோந்து, கும்பினியான், கம்யூன்கள், டாக்குத் துரை, ஆஸ்பத்திரி, பீரோ, ஆனிசு, உச்சே, காப்பித்தான், கப்பே, குழுசியார், திருங்கு, நொத்தாரிசு, பத்தாயி, பொர்மா போன்றவை தமிழில் கலந்த பிரெஞ்சுச் சொற்களாகும்.
• ஆங்கிலம்
பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே கிழக்கிந்தியக் கம்பெனி மூலமாக இந்தியாவுடன் வாணிகம் செய்தவர்கள் ஆங்கிலேயர். பின்னர் 200 ஆண்டுகள் நம்மை அவர்கள் ஆண்டதன் விளைவாக எல்லாத் துறைகளிலும் ஆங்கிலம் செல்வாக்குப் பெற்றது. தமிழில் கலந்து தமிழ்ச் சொற்களாகவே மாறி விட்ட பல ஆங்கிலச் சொற்கள் உள்ளன. ஒரு காலத்தில் வடசொற்களைக் கலந்து பேசியது போல, இன்று கற்றவர் பேச்சில் ஆங்கிலச் சொற்கள் அளவின்றிக் காணப்படுகின்றன. ஆங்கிலம் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பயிற்று மொழியாக இருப்பதனாலும் எண்ணற்ற ஆங்கிலச் சொற்கள் தமிழில் புகுந்துள்ளன.
கோர்ட், காலரா, சோப்பு, சினிமா, ஷாப், டஜன், டிக்கெட், போலீஸ், பஸ், ஸ்டாண்டு, பில், பேப்பர், பங்களா, பென்சில், மோட்டார், மீட்டிங்கு, உயில், ஏக்கர், ஓட்டல், கேசு, ஈரங்கி (
• தமிழ்-சமஸ்கிருதம்
தமிழ் சமஸ்கிருதம்
அனல் அனலா
உலக்கை உலூகலா
குடம் குடா
கள்வன் களா
தண்டம் தண்டா
பள்ளி பள்ளி
மயில் மயூரா
மாலை மாலா
முரசு முரஜா
வளை வலயா
வள்ளி வல்லி (கொடி)
எருமை ஹெரம்பா
உடுக்கை ஹு டுக்கா
பிண்டம் பிண்டா
பழம் பலம்
ஏலம் ஏல
கைதை கைதகா
புற்று புத்திக
முதலியன சில சான்றுகள்.
தமிழ் கிரேக்கம்
அரிசி ஒரிசா oryza
இஞ்சி சிஞ்சிபெர் zingiber
கருவா (பட்டை) கர்பியன் karbion
தமிழ் சப்பானிய மொழி
கவ்வு கமு
காயல் காய
படகு பஸேகோ
பல் பா
புகை ஃபோக்
பாம்பு பாபு
அடி அசி
பிடி பிசி
போன்றவை சான்று.
தமிழ் ஆங்கிலம்
அணைக்கட்டு Anicut
ஓலை Olla
பச்சிலை Patchouli
கஞ்சி Conjee. Congee
கட்டுமரம் Catamaran
கணக்கப்பிள்ளை Conicopoly
கயிறு Coir
கறி Curry
காசு Cash
குயில் Koel
குருந்தம் Corundum
கூலி Coolie
தேக்கு Teak
தோப்பு Tope
பிண்ணாக்கு Pooneac
பூசை Puja
மாங்காய் Mango
வெட்டிவேர் Vetiver
வெற்றிலை Betel
மிளகுத்தண்ணீர் Mulligatanney
சுருட்டு Cheroot
பந்தல் Pandal
பலகணி Balcony
கொப்பரை Copra
துத்தநாகம் Tootnague
பணம் Fanam
பாளையக்காரர் Poligar
பேட்டை Pettah
ஆயா Ayah
சட்டி Chatty
ஆயக்கட்டு Ayacut
சந்தனம் Sandal
சுண்ணாம்பு Chunam – chunaming
தோணி Dhoney – Doney
கிட்டங்கி Godown
மரக்கால் Mercal
வீசை Viss
வண்டி Bandy
பண்டாரம் Pandara
தட்டி Tatty
காணி Cawney
சோலை Sola
எருக்கு Yercum
சாயம் Chay
முதலியார் Modeliar
தோட்டி Toty
இஞ்சி Ginger
மொழிக்கு மொழி இவ்வாறு சொற்களைக் கடன் வாங்குவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைகிறது. கடன் வாங்கல் பற்றிய ஆய்வு விரிந்த அளவில் செய்யப்பட வேண்டும்.
• தமிழில் வடசொற் கலப்பு காலந்தோறும் இருந்து கொண்டே வந்திருக்கிறது. தமிழில் வடசொற் கலப்பு அளவிறந்த வகையில் உள்ளது.
• முண்டா மொழி தமிழுடன் உறவு கொண்ட தொன்மையான மொழி ஆகும்.
• தமிழில் மேலைநாட்டு மொழிகள் பலவும் கீழை நாட்டு மொழிகள் பலவும் தம் ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
• பிற நாட்டு மொழிகள் பலவற்றிலும் தன் ஆதிக்கத்தைத் தமிழ் செலுத்தியுள்ளது.
• மொழிக் கலப்பு என்பது உலக மொழி வரலாற்றில் தவிர்க்க முடியாததாகிறது. பிற மொழிகளுடன் கலப்பு உள்ள மொழியே வளரும் என்பது மொழியியல் நியதியும் ஆகும்.
பாடம் - 6
சங்க இலக்கியங்கள் பிற்காலத்தில் தொகுக்கப் பெற்றன. அத்தொகுப்பு நூல்களில் சிற்சில உரைக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. பாடல்களின் கீழே திணை, துறை தொடர்பான குறிப்புகள் உரை நடையில் எழுதப் பெற்று உள்ளன. பாடியவர், பாடப் பெற்றவர் பெயர், சூழல் தொடர்பான குறிப்புகளும் உரைநடையில் எழுதப் பெற்று உள்ளன. இக் குறிப்புகள் யாப்பு வடிவினவாக அமையவில்லை; இதுபோன்றே உரைநடைத் தன்மைக்கு உரிய பேச்சு வடிவத்தையும் சார்ந்து இல்லை. சான்றாக ஒன்றைக் காணலாம்:
திணை: வாகை துறை: அரச வாகை: இயன்மொழியுமாம்.
பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற்
பிணியிருந்த யானைக் கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை
வலிதிற் போய்க் கட்டி லெய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது
(புறநானூறு. 17)
இந்த நடை, சிலப்பதிகாரக் காலத்தில் மேலும் வளர்ந்து உள்ளது. சிலப்பதிகாரம் செய்யுள் வடிவில் அமைந்தது. அதில், செய்யுளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உரைநடையில் சில குறிப்புகள் இடம் பெற்று உள்ளன. இதனால், சிலப்பதிகாரத்தை ‘உரை இடை இட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்று குறிப்பதும் உண்டு. பாடல் வரிகளுக்கு முன்பும் பின்பும் இடம் பெற்றுள்ள இந்த உரைநடைக்குச் சான்று வருமாறு :
மணமதுரையோடரசு கேடுற வல்வினைவந் துருத்தகாலைக்
கணவனையங் கிழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள்
என்றலு மிறைஞ்சியஞ்சி யிணைவளைக்கை யெதிர்கூப்பி
நின்ற வெல்லையுள் வானவரு நெடுமாரி மலர்பொழிந்து
குன்றவருங் கண்டு நிற்பக் கொழுநனொடு கொண்டு போயினார்
இவள்போலு நங்குலக்கோ ரிருந்தெய்வ மில்லை யாதலின்
(வஞ்சிக் காண்டம், குன்றக் குரவை, உரைப்பாட்டு மடை)
இதுவரை தொடக்கக் காலத் தமிழ் உரைநடைக்குச் சான்றுகள் இரண்டு வழங்கப் பெற்றன. இவற்றின் அடிப்படையில் அக்காலத் தமிழ் உரைநடையின் தன்மைகளாகக் கீழ் வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
• செய்யுள் ஓசையில் இருந்து விடுபட்டவை.
• தமக்கெனத் தனி ஒரு வடிவ வரையறை இல்லாதவை.
இதனால், வடிவ நிலையில் எந்த விதமான இலக்கண வரையறைக்கும் உட்படாதவை.
• கூட்டுச் சொற்களால் ஆனவை.
• பேச்சு வழக்குச் சொற்கள் இல்லாதவை.
• இலக்கியம் கற்கத் துணை நிற்பவை.
இவ்வகை உரைநடை தமிழ்மொழியில் கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல்தான் சுவடிகளில் எழுதப் பெற்று உள்ளது. சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலான காப்பியங்கள், தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் ஆகியவற்றுக்கு உரிய உரைகள் கிடைத்துள்ளன.
தமிழ் மொழியில் முதன்முதலில் ஏட்டில் எழுதப் பெற்ற முதல் உரை இறையனார் அகப்பொருள் உரை ஆகும். இறையனார் அகப்பொருள் என்னும் பொருள் இலக்கண நூலுக்கு நக்கீரரால் சொல்லப்பட்டுப் பிற்காலத்தில் ஏட்டில் எழுதப் பெற்ற உரைதான் இது. இந்த உரையின் ஒரு சிறு பகுதி வருமாறு:
“சந்தனமும், சண்பகமும், தேமாவும், தீம்பலவும், ஆசினியும், அசோகமும், கோங்கும், வேங்கையும், குரவமும் விரிந்து, நாகமும், திலகமும், நறவும், நந்தியும், மாதவியும், மல்லிகையும், மௌவலொடு மணங்கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும்……. வண்டு துவைப்பத் தண்தேன் துளிப்பதோர் வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்”
இந்த நடையில் ஓர் ஓசை ஒழுங்கு நிலவுகிறது. ஆனால் இது செய்யுளுக்கு உரிய ஓசை அல்ல. இது செய்யுளுக்கு உரிய சொற்களால் எழுதப் பெற்ற உரைநடைப் பகுதி. இதனால் ஓசை ஒழுங்கு இயற்கையாக அமைந்துவிட்டது. மேலும் இதில் நீண்ட தொடர் அமைப்பைக் காண முடிகின்றது. இதே நூலில் ஒரு பத்தியின் அளவு ஒரு பக்கத்திற்கு மேலாகவும் அமைந்து உள்ளது.
இத்தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், சார்பின் தோற்றத்து
எழுத்துக்களிற் குற்றியலிகரத்தின் ஒரு மொழிக் குற்றியலிகரத்திற்கு
இடமும் பற்றுக்கோடும் உணர்த்துதல் நுதலிற்று
(தொல்.எழுத்.2:34. உரை)
இதே உரைப்போக்கு 13ஆம் நூற்றாண்டு வரை தொடர்கின்றது. 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர் நச்சினார்க்கினியர். இவர் எழுதி உள்ள உரையிலும் நீண்ட தொடர்கள் இடம் பெற்று உள்ளன. கூட்டுச் சொற்கள் இடம் பெற்று உள்ளன. பேச்சு வழக்குச் சொற்கள் தவிர்க்கப் பெற்று உள்ளன. சான்று ஒன்று வருமாறு :
ஆய்தமென்ற ஓசைதான் ‘அடுப்புக் கூட்டுப் போல’ மூன்று
புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு ஆய்தமென்ற முப்பாற் புள்ளியு’
மென்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட்டெழுதுப.
இதற்கு வடிவு கூறினார், ஏனையொற்றுக்கள் போல உயிரேறாது
ஓசைவிகாரமாய் நிற்பதொன்றாகலின்….
(தொல்.எழு.நூன்மரபு: 2, உரை)
நண்டிற்கு மூக்குண்டோவெனில், அஃது ஆசிரியன்
கூறலான் உண்டென்பது பெற்றாம்
(தொல்:பொருள்:மரபியல்:31, உரை)
கி.பி. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பேராசிரியரின் உரை இது
மாசு உண்ணாச் சுடர் உடம்பாய் – ஹேயப் பிரத்யநீகமாய்ச் சுத்த
சத்துவமாகையாலே நிரவதிக பேரொளி உருவமான திவ்விய விக்கிரகத்தை
யுடையையாய்
(திருவாய்மொழி:பாட்டு 230, உரை)
• முற்றிலும் பேச்சுத் தமிழில் அமைந்த உரைநடை
• பேச்சுத் தமிழ் கலந்த உரைநடை
• இலக்கணத் தூய்மையுடன் அமைந்த உரைநடை
இனி, இவற்றை ஒவ்வொன்றாகப் படித்து அறிந்து கொள்வோம்.
“ஆள் கழுக்கு மழுக்கென்று மணலிலெ பிடுங்கி
யெடுத்த வள்ளிக் கிழங்காட்டமா யிருக்கிறான்.
முகம் பரந்த முகமாய் ஆன வாகனனாய்
இருக்கிறான். அவள் சென்னப் பட்டணத்துக்குப்
போயிருந்து வந்தவள்”.
இந்தச் சான்றுப் பகுதியில் கூட்டுச் சொற்கள் இடம் பெற்று உள்ளன. பேச்சு வழக்காக இருந்தாலும் சந்தி விதிகளை நீக்கி எழுதும் வழக்கம் அக்காலத்தில் இல்லை.
இவர்களின் உரைநடை சாதாரணப் பொது மக்களை மனங்கொண்டு எழுதப் பெற்றது. பேச்சு வழக்குச் சொற்களைப் பெரிதும் பயன்படுத்தி உள்ளனர். நீண்ட தொடராக அமைந்துள்ளது. என்றாலும் தொடர் அமைப்பு பேச்சு வழக்கை ஒட்டியதாகவே அமைந்து உள்ளது. இதற்குச் சான்றாகத் தத்துவ போதக சுவாமிகளின் உரைநடையைக் குறிப்பிடலாம். அது வருமாறு:
இரண்டாஞ் சல்லாபத்திலே நம்மாலே உபதேசிக்கப்
பட்டதெல்லாம் ஒன்றாய்த் தெளிஞ்சாயானால் இப்பாலும்
அறிய வேண்டியதை சங்கோசப் படாமல் கேழ்ப்பாயாக
இதே காலக்கட்டத்தில் வாழ்ந்த கால்டுவெல் ஐயரின் (1714-1761) உரைநடையும் நீண்ட தொடர் உடையதாகவே அமைந்து உள்ளது. சந்தி பிரித்து எழுதுதல், எளிமை, தெளிவு என்னும் பண்புகள் உடையதாகவும் அமைந்துள்ளது. இவரும் ஐரோப்பாவில் இருந்து தமிழகம் வந்த பாதிரியார்தான். இவர் உரைநடைக்குச் சான்று ஒன்று பார்ப்போமா?
“தேவ நற்கருணை வாங்கும் போதெல்லாம் இப்புத்தகத்தில்
அடங்கியிருக்கிற செபத்தியானங்கள் ஒவ்வொன்றையும்
முறையாய் வாசிக்க வேண்டு மென்று நினைக்க
வேண்டாம். ஒரு மாதத்தில் சில தியானங்களையும்
அடுத்த மாதத்தில் மற்றும் சில தியானங்களையும்
வாசித்தால் எப்போதும் எழுப்புதல் உண்டாக ஏதுவாக
இருக்கும்.”
இதே காலக் கட்டத்தில் இலக்கியம் எழுதுவதற்கு உரைநடை பயன்படுத்தப் பெற்று உள்ளது. என்றாலும் இந்த முயற்சி தொடரவில்லை. வீரமாமுனிவர் பரமார்த்த குரு கதை என்று ஓர் இலக்கியத்தை உரைநடையில் எழுதி உள்ளார். அதில் சிறு பகுதி:
“ஒரு நாய் திருடின ஆட்டுக்கறிக் கண்டத்தை வாயிலே கவ்விக் கொண்டு நடுவாற்றிலே நீந்திப் போகையில்
ஆறு கபடாகத் தண்ணீரிலே வேறொரு பெரிய
மாம்மிசத் துண்டைக் காட்டினதாம்….தோன்றினதினாலே
கவ்வியிருந்த ….. சென்ற தென்றான்”
இதில் பேச்சு வழக்குச் சொற்கள் இடம் பெற்று உள்ளன. நடுவாற்றிலே (நடுஆற்றிலே), தோன்றினதினாலே (தோன்றியது அதனாலே), கவ்வியிருந்த (கவ்வி இருந்த), சென்ற தென்றான். (சென்றது என்றான்) என்ற கூட்டுச் சொற்களும் பயன்படுத்தப் பெற்று உள்ளன.
ஐரோப்பியப் பாதிரிமார்களிடம் தம் உரைநடை எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதிலும் தெளிவு இருந்து உள்ளது. ஞானப்பிரகாச சுவாமிகள் இதைக் குறிப்பிட்டு உள்ளார். சிலுவைப் பாதையின் ஞானமுயற்சி (1849) என்னும் நூலின் பாயிரத்தில் அவர் கருத்துப் பதிவாகி உள்ளது. அதன் சாரத்தை நுஃமான் இப்படி வரையறுத்து அளித்து உள்ளார் (1988). அவ் வரையறை வருமாறு:
• யாவரும் எளிதில் வாசித்து உணரக் கூடியதாய் இருத்தல்
• மிகுந்த புணர்ச்சி விகாரங்கள் இல்லாது இருத்தல்
• செந்தமிழுடன் கொடுந்தமிழும் கலந்து இருத்தல்
• சில வாக்கியங்கள் இலக்கண விதிகளையும் மீறி அமைதல்
இந்த வரையறைகளே புதிய உரைநடை வளர்ச்சியின் தனித் தன்மைகள் எனலாம்.
“தமிழ் கற்கப் புகும் சைவ சமயிகள்
முன்னர்ப் பால பாடங்களைப் படித்துக்
கொண்டு இலக்கணச் சுருக்கத்தைக்
கற்றறிந்து இயன்றவரை பிழையில்லாமல்
எழுதவும் பேசவும் பழகுக.”
என்று ஆறுமுக நாவலர் குறிப்பிடுகின்றார். சாதாரணத் தமிழ் உரை நடையைப் படிக்கவும் எழுதவும் இலக்கண அறிவு தேவை என்பது நாவலர் கருத்து.
இலக்கணத் தூய்மையை விரும்பும் நாவலர் மொழித் தூய்மையைக் கட்டாயப் படுத்தவில்லை. அவர் எழுதிய நூல்களில் ஆங்கிலச் சொற்களும், சமஸ்கிருதச் சொற்களும் மிகுதியாக இடம் பெற்று உள்ளன.
ஆறுமுக நாவலரின் உரைநடைக்குச் சான்று வருமாறு :
“கடவுள் என்றும் உள்ளவர்; அவருக்குப் பிறப்பும்
இறப்பும் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர்; அவர்
இல்லாத இடம் இல்லை. அவர் எல்லாம் அறிந்தவர்,
அவர் அறியாதது ஒன்றும் இல்லை. அவரது அறிவு
இயற்கை அறிவு, ஒருவர் அறிவிக்க அறிபவர் அல்லர்.”
இதில், ஐரோப்பியப் பாதிரிமார்களின் உரைநடையில் இருந்து வேறுபட்ட தன்மைகள் இரண்டைக் கவனிக்கலாம்.
• சிறு சிறு தொடர்கள்.
• பேச்சு மொழி புறக்கணிப்பு; செந்தமிழ்ச் சொல் பயன்பாடு.
ஆறுமுக நாவலரின் ஒட்டு மொத்த உரைநடைப் படைப்புகளையும் ஆராய்ந்து உள்ளனர். அவர்கள் மூன்று முக்கியப் பண்புகளைச் சுட்டிக் காட்டி உள்ளனர். அவை,
• கல்வி அறிவு உடைய வித்துவான்கள், கல்வி அறிவு குறைந்தவர்கள், கல்வி அறிவு இல்லாதவர்கள் ஆகிய யாவருக்கும் எளிதில் பொருள் விளங்குவது.
• பெரும்பாலும் இயற்சொற்களைக் கொண்டு இருப்பது அவசியமான இடத்து மட்டும் பிற சொற்களைப் பயன்படுத்துவது.
• பெரும்பாலும் சந்தி பிரித்து எழுதுவது.
“தமிழில் வசன நடை (உரைநடை) இப்போதுதான்
பிறந்தது. பல வருஷமாகவில்லை. தொட்டில் பழக்கம்
சுடுகாடு மட்டும். ஆதலால் இப்போதே நமது
வசனம் உலகத்தில் எந்தப் பாஷையைக் காட்டிலும்
தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும்.
கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான்
உத்தமமென்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம்
எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம்,
ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை
எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே
அமைந்து விட்டால் நல்லது”
இது பாரதி வாழ்ந்த கால உரைநடை வளர்ச்சியை அறியப் போதுமான சான்று. பாரதி 1882இல் பிறந்து 1921இல் இயற்கை எய்தினார். இக்காலத்தில் பேசுவது போல் எழுத வேண்டும் என்பது ஒரு கட்சியாக இருந்து உள்ளது. இதற்கு மாற்றுக் கருத்து உடையவர் இருந்ததைப் பாரதியின் கருத்துத் தெளிவாக்குகின்றது.
பாரதிக்குப் பின்னர் உரைநடை வளர்ச்சியில் குறிப்பிடத் தக்கவர்கள் பலர் உள்ளனர். புதுமைப்பித்தன், திரு.வி.க, மறைமலை அடிகள் முதலானவர் தமக்கெனத் தனி உரைநடைப் பாணியை உருவாக்கி உள்ளனர்.
• நிர்வாகத் தேவை
• மதப் பிரச்சாரம்
• பத்திரிகைத் துறை வளர்ச்சி
• கல்வி வளர்ச்சி
ஆங்கிலேய அரசு 1835இல் அச்சகம் அமைக்க அனுமதி வழங்கியது. இதுவரை பாதிரிமார்கள் மட்டுமே அச்சகம் நிறுவி இருந்தனர். அரசின் புதிய ஆணையால் அச்சகம், அதை ஒட்டிய தமிழ் உரைநடை இரண்டும் வளர்ந்தன. இந்நிலையில், 1849இல் ஆறுமுக நாவலர் சென்னையில் அச்சகம் நிறுவினார். தமக்கெனத் தனி உரைநடையை வளர்த்தெடுத்தார்.
ஆங்கிலேய அரசு மேலும் ஒரு வகையில் தமிழ் உரைநடை வளர்ச்சிக்குத் துணை புரிந்து உள்ளது. 1812இல் சென்னைக் கல்விச் சங்கம் (The College of Fort St. George) அரசால் நிறுவப் பெற்றது. இதனால் நூல் நிலையம், புத்தக விற்பனை நிலையம், அச்சகம் ஆகிய துறைகள் வளர்ந்தன. இதனால் தமிழ் உரைநடையும் வளர்ச்சி பெற்றது.
இதே போன்று ஆறுமுக நாவலரின் உரைநடைப் படைப்புகளுக்கும் சமயம் பரப்புவதே நோக்கமாக இருந்தது. பாதிரிமார்களுக்கு எதிராக நாவலர் பிரச்சாரம் செய்தார்; சைவ சமயத்தைப் பரப்பினார். பேச்சு வழக்குக்கு எதிரான எளிய செவ்விய தமிழ் உரைநடையைக் கட்டமைத்தார்.
ஆக, உரைநடை வளர்ச்சியில் மதப் பிரச்சாரம் முன்னிலை வகித்தது எனலாம்.
செய்யுள் / சூத்திரம் – விளக்கம் எழுதுதல் (கி.பி. 8 முதல்)
சமயம் பரப்ப – நூல் எழுதுதல் (கி.பி. 18 முதல்)
உரைநடையில் இலக்கியம் எழுதுதல் (கி.பி. 19 முதல்)
உரைநடையில் அறிவியல் முதலான அத்தனையும் எழுதுதல் (கி.பி. 20 முதல்)
என்னும் படி நிலை வளர்ச்சியில் தமிழ் உரைநடை வளர்ந்து உள்ளது. தமிழ் மொழியில் உரைநடை வளர்ந்தது ஒரு நிலை. இன்றோ உரைநடையில்தான் தமிழே வளர்கின்றது. அந்த அளவிற்கு உரை நடையின் தேவை அதிகரித்து உள்ளது எனலாம்.