‘நாட்டுப்புறவியல்’ என்ற இச்சொல் சிறியதாயினும் இதன் பரப்பு (Area) பரந்துபட்டதாகும் இதன் பரப்பிற்குள் அடங்குவனவற்றை நாட்டுப்புறக் கலை, நாட்டுப்புறப் பண்பாடு, நாட்டுப்புற இலக்கியம் என வகைமைப்படுத்துவர். இவற்றுள் நாட்டுப்புற இலக்கியம் எனும் வகைமையில் பாடமாக அமைய இருக்கின்ற கதைப்பாடல்கள் இடம் பெறுகின்றன. இப்பாடத்தில் நாட்டுப்புறவியலின் தோற்றம், அதன் வகைமைகள், கதைப்பாடல்கள் பற்றிய குறிப்புகள், அதன் இயல்புகள் பற்றிய கருத்துகள் தொகுத்துக் கூறப்படுகின்றன.
முன்னோடிகள்
இந்தியாவில் இத்துறை ஆய்வு 1954ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் வளரத் தொடங்கியது. கார்லஸ் இ. கோவர் என்ற ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட ‘தென்னிந்திய நாட்டுப் பாடல்கள்’ என்னும் ஆங்கிலப் புத்தகமே இந்தியாவில் வெளியான முதல் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு நூல் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் இவரைப் பின்பற்றி பிஷப் கால்டுவெல், பீட்டர் பெர்சிவல் பாதிரியார், பாதிரியார் போன்றோர் தமிழக நாட்டுப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டனர். இவர்களுக்குப்பின் தமிழகத்தில் நாட்டுப்புறவியல் ஆய்வு வேரூன்றி வளரத் தொடங்கியது.
தொகுப்பு நூல்கள்
1943ஆம் ஆண்டு மு. அருணாசலம் ‘காற்றிலே மிதந்த கவிதை’ என்னும் பெயரில் ஒரு நூலை வெளியிட்டார். தமிழில் நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுத்து வெளிவந்த முதல் நூல் இது. இதைத் தொடர்ந்து பல தொகுப்பு நூல்கள் தமிழில் வெளிவரத் தொடங்கின. நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுத்து வெளியிட்டவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் கி.வா.ஜகந்நாதன், அ.மு.பரமசிவானந்தம், சோமலெ, நா.வானமாமலை, தமிழண்ணல், செ.அன்னகாமு, மு.வை.அரவிந்தன், ஆறு.அழகப்பன், பெ.தூரன், சு.சண்முகசுந்தரம் போன்றோர் ஆவர்.
ஆய்வு
இன்றைய நிலையில் தொகுத்து வெளியிடுகின்ற போக்கிலிருந்து மாறி, எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி பட்டத்திற்காக ஆய்வு செய்கின்ற நிலைக்கு நாட்டுப்புறவியல் ஆய்வு வளர்ந்துள்ளது. நாட்டுப்புறவியலுக்கு எனத் தமிழில் முதன் முதலில் நூல் வெளிவந்துள்ள காலத்தைக் கொண்டு கணக்கிடும் பொழுது ஏறக்குறைய 75 ஆண்டுப் பழமையுடையதாகவே நாட்டுப்புறவியல் துறை ஆய்வு அமைந்துள்ளது.
1) பாடல்கள்
2) கதைகள்
3) ஆடல்கள்
4) கூத்துகள்
5) பழமொழிகள்
6) விடுகதைகள்
7) கதைப்பாடல்கள்
8) விளையாட்டுகள்
9) தேவதைகள்
10) நம்பிக்கைகள்
11) பழக்க வழக்கங்கள்
12) கைவினைக் கலைகள்
13) நடை உடை பாவனைகள்
14) சடங்குகள்
15) புராண இதிகாசங்கள்
நாட்டுப்புற இயலின் வகைகளாக இந்தப் பதினைந்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிடுவதோடு இவ்வகைமைக்குள் அடங்காத சிறு வகைகளும் இருக்கலாம், இருத்தல் வேண்டும் என்றும் கூறிச் செல்கின்றது, தமிழ் நாட்டுப்புற ஆய்வறிஞர்கள் நாட்டுப்புற இயலை, நாட்டுப்புற இலக்கியம், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நம்பிக்கைகள் என்றும்; நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் மற்றும் நாட்டுப்புற மரபுகள் என்றும் பலவாறாக வகைமை செய்கின்றனர். ஆயின் நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புறப் பண்பாடு, நாட்டுப்புற இலக்கியம் என்ற வகைமையே பொருத்தமானதாக அமைந்துள்ளது.
நாட்டுப்புறக் கலைகள்
இந்த வகைமையில் நாட்டுப்புற ஆடல்கள், கூத்துகள், கைவினைக் கலைகள் முதலானவை இடம் பெறுகின்றன.
நாட்டுப்புறப் பண்பாடு
நாட்டுப்புற விளையாடல்கள், நாட்டுப்புற மருத்துவம், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், நாட்டுப்புற வழிபாடுகள் முதலானவை நாட்டுப்புறப் பண்பாடு என்ற வகைமைக்குள் இடம் பெறும் கூறுகளாகும்.
பாட்டி கதைகள் என்றழைக்கப்படும் கதைகளுக்கு உரிய இயல்புகள் நாட்டுப்புறக் கதைப் பாடல்களுக்கும் பொருந்தும். நாட்டுப்புறக் கதைகளுக்கும் நாட்டுப்புறக் கதைப் பாடல்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளுள் ஒன்று கதைப் பாடல்கள் பாடப் படுபவை, கதைகள் எடுத்துரைக்கப் படுபவை என்பதே. நாட்டுப்புறக் கதைகளை வகைப்படுத்த முயன்ற கி.இராஜநாராயணன், ‘இது பெரிய சமுத்திரம்; இதற்குள் எத்தனையோ அடங்கிக் கிடக்கின்றன’ என்று கூறுகின்றார்.
இதற்குள் மக்கள் வாழ்ந்த வரலாற்றையும் வாழும் வாழ்க்கையையும் புரிந்து கொள்ளத் துணை புரியும் தரவுகள் நாட்டுப்புறக் கதைகள் எனலாம்.
நாட்டுப்புறப் பாடல்களை,
1. தாலாட்டுப் பாடல்கள்
2. விளையாட்டுப் பாடல்கள்
3. தொழிற் பாடல்கள்
4. காதல் பாடல்கள்
5. திருமணப் பாடல்கள்
6. ஆட்டப் பாடல்கள்
7. சடங்குப் பாடல்கள்
8. தெய்வப் பாடல்கள்
9. இறப்புப் பாடல்கள்
என வகைப்படுத்தலாம். நாட்டுப்புறப்பாடல்கள் இவ்வாறு வகைப் படுத்தப்பட்டாலும் ஒன்றில் இடம்பெறும் பாடல்வரிகள் அடுத்த வகையிலும் இடம்பெறலாம். எடுத்துக்காட்டாகத் தாலாட்டில் இடம்பெறும் பாடல்வரி சிற்சில மாற்றங்களுடன் இறப்புப் பாடலில் இடம்பெற்றுள்ளதைப் பின்வரும் சான்று எடுத்துரைக்கும்:
(தாலாட்டுப் பாடல்)
வட்டக் கொடைபுடிச்சு – கண்ணே
வயல் பாக்கப் போனாரு
வயலும் பயிராகும் – ஒங்க மாமன்
வந்தெடமும் தோப்பாகும்
(கணவனை இழந்த பெண் பாடுவது)
வட்டக் கொடை புடிச்சு
என்னத் தேடியே போனீயன்னா, – நீங்க
வயல் பாக்கப் போனீயன்னா
வயலும் பயிராச்சோ
வந்தெடமும் தோப்பாச்சோ
இதுபோன்றே தாலாட்டுப் பாடலில் இடம்பெறும் பாடல்வரி காதல் பாடல்களிலும், தொழில் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். சூழலுக்கேற்ப மாறிச் செல்லும் பண்புடையவை நாட்டுப்புறப் பாடல்கள். இதே பண்பைக் கதைப் பாடல்களிலும் காணலாம். கதைப் பாடல்களில் இடம் பெறும் தாலாட்டு, இறப்புப்பாடல், தெய்வம் பற்றிய கதைகள் ஆகியவை நாட்டுப்புறப் பாடலான தாலாட்டிலும் இடம்பெறக் காணலாம். இவ்வாறு கொண்டும் கொடுத்தும் கொள்ளுகின்ற பண்பு காரணமாகவே நாட்டுப்புறக் கதைகளும் நாட்டுப்புறப் பாடல்களும் நாட்டுப்புறக்கதைப் பாடல்களும் ஒன்றோடு ஒன்று உறவு கொண்டவையாக அமைந்துள்ளன.
பொதுப்பண்புகள்
நாட்டுப்புறப் பாடல்கள் வகைமையில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களுமே (காதல், தொழில், விளையாட்டு, இறப்புப் பாடல்கள்) நாட்டுப்புறப் பாடல்களுக்கே உரிய பொதுவான பண்புகளைக் கொண்டு இலங்குவன. நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் பொதுவான பண்புகளைக் கொண்டிருப்பினும், பிற நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற பண்புகளையும் கொண்டுள்ளன. அவற்றுள் இரு பண்புகளை முக்கியமானவையாகக் கூறலாம். அவை
1) நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் எடுத்துச் சொல்லுகின்ற கதை
2) எடுத்துச் சொல்லுகின்ற கதையைப் பாடுவதற்கு ஆகின்ற காலம்
சொல்லுகின்ற கதைப் பொருளாலும், கால அளவாலும் வேறுபடுகின்ற காரணத்தால் கதைப்பாடல்களை நாட்டுப்புறக் காப்பியங்கள் என்றும் கூறுவதுண்டு.
நாட்டுப்புறப் பாடல்களும் நாட்டுப்புறக் கதைகளும் இணையும் முயற்சியில் உருவானதே நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் எனலாம்.
புகழேந்திப் புலவர் – யார் ?
அபிதான சிந்தாமணியில் புகழேந்திப் புலவரின் வரலாறு கூறப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘சந்திரன் சுவர்க்கி’ என்ற குறுநில மன்னன் புகழேந்திப் புலவரை ஆதரித்துள்ளான், பின்னர்ப் பாண்டிய மன்னனின் அவைக்களப் புலவராகப் பதவி ஏற்றுள்ளார். பாண்டிய இளவரசி சோழ மன்னனின் மனைவியானபோது புகழேந்திப்புலவர் சீதனமாகச் சோழ நாட்டுக்கு அனுப்பப்படுகிறார். அங்கே சோழநாட்டு அவைப் புலவரான ஒட்டக்கூத்தரின் காழ்ப்புணர்ச்சியால் (பொறாமையால்) வெறுக்கப்பட்டுச் சிறை வைக்கப்படுகின்றார். சிறையில் இருக்கும்பொழுது அவ்வழியாக வரும் பெண்களுக்குச் சுவையான பல கதைகளைக் கூறுகிறார். அவர் கூறிய கதைகளே புகழேந்தி கதைகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளன என்ற ஒரு செய்தி வழக்காக உலவி வருகின்றது.
புகழேந்தியின் பெயரிலுள்ள படைப்புகள்
புகழேந்திப் புலவர் ‘நளவெண்பா’ என்ற அரிய இலக்கியத்தைத் தரமாகவும் நயமாகவும் எழுதித் தமிழிலக்கிய வளத்தைப் பெருக்கியவர். பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தோன்றியுள்ள பல கதைகள் புகழேந்தியின் பெயரில் வந்துள்ளன. அல்லி அரசாணி மாலை, தேசிங்குராஜன் கதை, மதுரை வீரன் கதை போன்ற கதைகள் புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்டவை என்ற குறிப்பு அந்நூல்களில் காணப்படுகின்றது. அபிதான சிந்தாமணி குறிப்பிட்டுள்ள புலவரின் காலத்திற்கும் இந்நூல்கள் வெளிவந்துள்ள காலத்திற்கும் இடையே நூற்றாண்டு இடைவெளி உள்ளது. மேலும் புலமை மிக்க புலவர், பாமரர் நடைக்கு இறங்கிக் கதைப் பாடல்களைப் படைத்திருக்கவும் இயலாது. இதிலிருந்து நளவெண்பா இயற்றிய புகழேந்தி வேறு, நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் இயற்றிய புலவர்கள் வேறு என்பதை அறியலாம்.
புகழேந்தியும் – கதைப்பாடல்களும்
நளவெண்பா இயற்றிப் பெரும் புகழ் ஈட்டியவர் புகழேந்திப் புலவர். நளனுடைய கதை மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்க வேண்டும். அதன் விளைவாக அந்த நூலை இயற்றிய ஆசிரியரும் புகழ் பெற்று விளங்கி இருக்க வேண்டும். இக் காரணத்தினால், கதைப்பாடல்களை இயற்றிய ஆசிரியர்கள் தங்கள் கதைகளை மக்களிடம் பரவச் செய்வதற்கு வேண்டிய ஒர் உத்தியாகப் புகழேந்தியின் பெயரைப் பயன்படுத்தி இருக்கலாம். புகழேந்தி பெற்றுள்ள புகழ்காரணமாக அவரது பெயரில் தமது நூல் வருவதில் பெருமை கொண்டும் அவரது பெயரைத் தங்கள் நூலுக்குப் பயன்படுத்தியிருக்கலாம். எவ்வாறாயினும் நளவெண்பா இயற்றிய புகழேந்தி வேறு, அல்லி அரசாணி மாலை, பவளக் கொடிமாலை, ஏணியேற்றம், புலந்திரன் களவுமாலை போன்ற கதைப் பாடல்களை எழுதிய ஆசிரியர்கள் வேறு. புகழேந்தியின் பெயரால் வெளிவந்த இக்கதைப் பாடல்கள் பெற்ற வரவேற்பைப் பார்த்த பிற ஆசிரியர்கள் காத்தவராயன் கதை, மதுரை வீரன் கதை, தேசிங்கு ராஜன் கதை முதலியவற்றையும் புகழேந்தியின் பெயரிலேயே வெளியிட்டுள்ளனர் எனலாம்.
கதைப் பாடல்கள் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமான தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. இந்த நெருக்கமே இக்கதைப் பாடல்கள் எல்லாம் ஒரே புலவரால் இயற்றப்பட்டவை என்று கூறுவதற்குக் காரணமாகும். இந்த அளவிலேயே புகழேந்திப் புலவருக்கும் நாட்டுப்புறக் கதைப் பாடல்களுக்கும் இடையே உறவுநிலை உள்ளது.
நாட்டுப்புறக் கதைப் பாடல்களுக்கு வரையறை சொல்வதற்கு முன் அந்த இலக்கிய வகைமையின் அகக்கூறு (உள்ளடக்கம்), புறக்கூறு (வெளியமைப்பு), இழைவுக் கூறு (texture), பாடம் (text), சூழல் (context) முதலியவற்றையும் கருத்தில் கொண்டு வரையறுக்க வேண்டும் என்பர். இதன் அடிப்படையில் பின்வருமாறு கதைப்பாடலை வரையறை செய்யலாம்:
குறிப்பிட்டதொரு பண்பாட்டில், குறிப்பிட்ட சில சூழல்களில், வாய்மொழியாகப் பாடகர் ஒருவரோ ஒரு குழுவினரோ நாட்டார் முன் எடுத்துரைத்து, இசையுடன் நிகழ்த்தும் அல்லது நிகழ்த்திய ஒரு கதை தழுவிய பாடல் கதைப் பாடல் ஆகும்.
இந்த வரையறையையே தமிழில் கிடைத்துள்ள நாட்டுப்புறக் கதைப் பாடல்களுக்குரிய வரையறையாகக் கொள்ளலாம்.
அம்மானை
மதுரைவீரன் அம்மானை, இராமப்பய்யன் அம்மானை, கள்ளழகர் அம்மானை போன்றவை அம்மானை என்ற சொல் பாடல்களில் இடம் பெற்று வருவதால் இப்பெயர் பெற்றுள்ளன.
கும்மி
கும்மி
சிவகங்கைச் சரித்திரக் கும்மி, கட்ட பொம்மன் கும்மி போன்றவை கும்மிப் பாடலாக அமைவன. ‘கும்மி’ என்பது ஒரு வகையான இசையோடு பாடித் தாளத்தோடு கைகொட்டி வட்டமாகச் சுற்றி வந்து பாடுவதாகும். கதைப்பாடலாக வரும் கும்மி சிவகங்கை பகுதியிலும் நெல்லை மாவட்டத்திலும் மக்களால் நிகழ்த்தப் பெறுகின்றன.
கதை
சுடலை மாட சாமி கதை, சாஸ்தா கதை, சின்னத் தம்பி கதை போன்றவை நெல்லை, குமரி மாவட்டங்களில் வில்லுப்பாட்டு வடிவில் உடுக்கை, குடம், கட்டை, ஜால்ரா போன்ற இசைக் கருவிகளால் இசைத்து எடுத்துரைக்கப்படுபவை.
அண்ணன்மார்சுவாமி கதை உடுக்கை எனும் இசைக் கருவியின் துணையோடு கோவை, பெரியார், சேலம் மாவட்டங்களில் இசையோடு எடுத்துரைக்கப்படுகின்றது.
பாடப் படுதல்
கதைப்பாடல்கள் பெரும்பாலும் சிறுதெய்வங்களுக்காக எடுக்கப்படும் வழிபாட்டின்போதும் சடங்கின்போதும் பாடி எடுத்துரைக்கப் படுகின்றன. குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்த தெய்வ வழிபாட்டின்போது அந்த வட்டாரத்தைச் சேர்ந்த கதைப்பாடலே பாடப்படுகின்றது.
சென்னை போன்ற பெரு நகரங்களிலும் கதாகாலட்சேபம், உபன்யாசம் என்ற பெயரில் பாரத, இராமாயணக் கதைகள் எடுத்துரைக்கப்படுவதைக் காணலாம்.
இன்றைய நிலை
இன்று கிராமங்களிலும் தொலைக்காட்சியின் ஆட்சி ஆரம்பித்து விட்டது. அதனால் கதைப்பாடல் நிகழ்த்துவதற்குப் பதிலாக, தொலைக் காட்சியில் திரைப்படங்களைக் கிராம மக்கள் திரையிட்டுப் பார்க்க ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக கதைப்பாடல் நிகழ்த்துகின்ற கலை, அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.
‘குருவணக்கம்’ பாடும் மரபும் உண்டு. அவையடக்கம் பாடுவது, தான் பாடவந்த கதை இன்னது என ‘நுதலிப் புகுதல்’ ஆகிய மரபுகளும் இதனுள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இக்கதைப்பாடல்களில் நாட்டு வளம் கூறப்பெற்று கதை தொடங்கப்பெறும் ‘வாழி’ என வாழ்த்திக் கதை முற்றுப் பெறும் சொன்ன வரிகளே திரும்பத் திரும்ப வருவதுண்டு. மக்களின் கொச்சைப் பேச்சு, பழமொழிகள், உவமைகள் முதலியவற்றை இக்கதைப் பாடல்களில் காணலாம், நாட்டுப்புறப் பாடல்களெனப் போற்றப்படும் தாலாட்டு, கும்மி, பள்ளுப் பாடல், இறப்புப் பாடல்கள் முதலியனவும் கதைப் பாடல்களில் ஆங்காங்கே அமைந்துள்ளமையைக் காணலாம்.
கூலி குறைத்தவர்கள் குறைமரக்கால் இட்டவர்கள்
அங்காடிக் கூடையை அதிகவிலை யிட்டவர்கள்
பட்டரை நெல்லுதனில் பதரைக் கலந்தவர்கள்
என்ற வரிகள் பவளக்கொடி மாலை என்ற கதைப்பாடலில் இடம் பெற்றுள்ளன. இதே வரிகள் அல்லி அரசாணி மாலை கதைப்பாடலிலும் இடம் பெற்றுள்ளன.
கூலி குறைத்தவர்கள் குறை மரக்காலிட்டவர்கள்
அங்காடிக் கூடை தன்னை அதிகவிலை யிட்டவர்கள்
பட்டியில் நெற்களிலே பதரைக் கலந்தவர்கள்
இதே போல் இன்னும் பல தொடர்கள் ஒரே தன்மையதாக எல்லாக் கதைப் பாடல்களிலும் அமைந்திருப்பதைக் காணலாம். இது நாட்டுப்புற இலக்கிய வடிவங்களுக்கே உரிய முக்கியமான இயல்பாகும்.
1) அடுக்கியல் அமைப்பு : ஒரே கருத்து அடுக்கிச் சொல்லப்படுதல்
செட்டி தெருவிலே செண்டாடி வாரார்கள்
பார்ப்பாரத் தெருவிலே பந்தாடி வாரார்கள்
(அண்ணன்மார்சுவாமி கதை)
2) திருப்பியல் அமைப்பு: வந்த அடிகளே திரும்பத்திரும்ப வருதல்
வாணமடி பட்டு மண்மேல் கிடப்பாரும்
குத்துண்டு போர்க்களத்தில் கொலவையிட்டு நிற்பாரும்
(இராமப்பையன் அம்மானை)
3) கனவுக் காட்சி : கனவு அல்லது நிமித்தங்களைக் காணுதல் மெச்சும் பெருமாள் கதை, முத்துப்பட்டன் கதை, கட்டபொம்மன் கதை, தேசிங்குராசன் கதை முதலியவற்றில் கனவுக் காட்சிகள் நிகழ்கின்றன.
4) சோக முடிவு : பெரும்பாலான கதைப்பாடல்கள் சோக முடிவுகளைக் கொண்டுள்ளன. மதுரை வீரன் கதை, காத்தவராயன் கதை, தேசிங்குராசன் கதை முதலிய கதைப்பாடல்களில் வரும் கதைத் தலைவர்கள் இறந்து விடுகின்றனர்.
5) சூழலுக்கேற்ப அமைதல் : கதைப் பாடல்கள் நிலவியல் சூழல், சமூகச் சூழல், வட்டாரச் சூழல்களுக்கேற்ப மாற்றிப் பாடப்படுவதும் உண்டு.
6) தொகுத்துக் கூறல் : கதை பாடி வரும் பொழுதே அப்போதைக்கு அப்போது அதுவரை பாடிய முன் கதையைச் சுருக்கிப்பாடும் இயல்பு (தொகுத்துக் கூறல்) எனப்படும் இவ்வியல்பினைப் பெரும்பாலும் எல்லாக் கதைப் பாடல்களிலும் காணலாம்.
இவை தவிர இறந்தோர் மீண்டும் உயிருடன் வருதல், கதைக்குள் இடம்பெறும் கிளைக்கதைகளை முரண்படக் கூறுதல், மகாபாரதத்தோடு தொடர்புறுத்தல் போன்ற இயல்புகளையும் கதைப் பாடல்கள் கொண்டுள்ளன.
நாட்டுப்புற இலக்கியம் என்ற வகைமையில் நாட்டுப்புறக்கதைகள், பாடல்கள், கதைப் பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள் முதலியவை இடம் பெற்றுள்ளன. இவற்றுள் நாட்டுப்புறக் கதையும் நாட்டுப்புறப் பாடலும் இணையும் முயற்சியே நாட்டுப்புறக் கதைப் பாடலாகும்.
நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் எப்பொழுது தோன்றியவை என்பதை உறுதியாகக் கூற இயலவில்லை இருப்பினும் கிடைத்துள்ள பாடல்களில் புகழேந்தியால் எழுதப்பட்டதாகக் குறிப்புக் காணப்படுகின்றது. நளவெண்பாவின் ஆசிரியராகிய புகழேந்திப் புலவர் வாழ்ந்த காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. கிடைத்துள்ள கதைப்பாடல்கள் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை உள்ளவை. ஆகையால் பிற்காலப் புலவர்கள், புகழேந்திப் புலவரின் பெயருக்கு உள்ள வரவேற்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.
கதைப்பாடல்கள் கதை, கும்மி, குறம், அம்மானை, கதைப்பாடல், வனவாசம், சிந்து என்பது போன்ற பெயர் முடிவுகளைக் கொண்டுள்ளன. ‘பாலட்’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையாகக் ‘கதைப்பாடல்’ என்ற சொல்லைத் தமிழறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். இக்கதைப்பாடல் வரலாற்றுக் கதைப்பாடல், புராணக் கதைப் பாடல், சமூகக் கதைப்பாடல் என வகைமைப் படுத்தப்படுகின்றது. சில மரபுகள் எல்லாக் கதைப்பாடல்களிலும் இடம்பெற்றுள்ள தன்மை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இறுதியாகக் கதைப்பாடல்களுக்கேயுரிய இயல்புகளான அடுக்கியல் அமைப்பு, திருப்பியல் அமைப்பு, சோக முடிவு, முரண், சூழலுக்கேற்ப அமைதல், தொகுத்துக் கூறல், இறந்தவர் மீளவும் உயிர்பெற்று வருதல் முதலானவை சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.
பாடம் – 2
வரலாற்றுக் கதைப்பாடலில் இடம்பெறும் கதைப்பாடல்கள் எவை, அவற்றின் பின்னணி, அறியவரும் வரலாற்றுச் செய்தி மற்றும் அக்கதைப்பாடலில் இடம்பெற்றுள்ள சிறப்புச் செய்திகள் ஆகியவை இரு கதைப் பாடல்களின் துணைகொண்டு விளக்கப்பட உள்ளன.
1) இராமப்பய்யன் அம்மானை
2) தேசிங்குராசன் கதை
3) கட்டபொம்மன் கதைப்பாடல்
4) கான் சாகிபு சண்டை
5) ஐவர் ராசாக்கள் கதை
6) வெட்டும் பெருமாள் கதை
7) சிவகெங்கைக் கும்மி
8) இரவிக்குட்டிப் பிள்ளைப் போர்
9) புலித்தேவன் சிந்து
10) கன்னடியன் படைப் போர்
11) மருது பாண்டியர் கதை
12) குன்றுடையான் கதை
13) வீர வல்லாளன் கதை
14) கட்ட பொம்மன் கூத்து
கதை, கதைப்பாடல், அம்மானை, கூத்து, சிந்து, கும்மி எனும
மன்னர்களின் மரபு
கதையின் உள்ளே செல்வதற்கு முன்பு போரில் ஈடுபட்ட இரு மன்னர்களின் மரபு பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
விசுவநாத நாயக்கர் (1529-1564) தொடங்கி வைத்த நாயக்க வம்சத்தில் வந்தவர் திருமலை நாயக்கர் (1623-1659). இவரது தளபதியே இராமப்பய்யன். இவனே கதையின் தலைவன்.
இராமநாதபுர சேதுபதிகள் வம்சத்தில் வந்த இரண்டாம் சடைக்கன் சேதுபதியே இராமப்பய்யனை எதிர்த்துப் போரிட்டவன். இனி அம்மானை கூறும் கதையைப் பார்க்கலாம்.
இயல்பு
சேதுபதியின் மக்களான குமாரன், அழகன் ஆகிய இருவரும் களத்தில் காலனுக்கு இரையாகிவிட்டதைக் கேட்டதும் அவர்களுடைய அன்னை இரங்கி அழுவதைக் கதைப் பாடல் இயல்பாக விளக்கிப் படிப்போரைக் கசிந்து உருகச் செய்கிறது.
அமைப்பு
கதை நிகழ்ச்சியின் அடிப்படையில் இராமப்பய்யன் அம்மானையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இராமப்பய்யன் தலைமையிலான நாயக்கப் படையெடுப்பில் தொடங்கிச் சேதுபதி தன் படையுடன் இராமேசுவரம் சேர்ந்தது வரை ஒரு பகுதியில் அடங்கும். இரண்டாவது பகுதி இராயருக்கு உதவி செய்ய இராமப்பய்யன் வெங்களூர் சென்ற பயணத்தைக் குறிக்கும். மூன்றாவது பகுதியில் இராமேசுவரத்திற்குப் பாலம் கட்டுதல், நாயக்கர் படைக்கும் மறவர் சேனைக்கும் நடந்த தரைப்போர், பரங்கியர் கலந்து கொண்ட கடற்போர், வன்னியன் வெற்றிக்கும் சாவுக்கும் பிறகு சடைக்கன் அடைக்கலம், சிறைவாசம், சடைக்கன் விடுதலை, சேது நாட்டின் அரசைச் சேதுபதி மீண்டும் பெறல் ஆகியவையாகும்.
வரலாற்றையும் வாழ்வையும் இணைத்து இனிது விளக்குவது கதைப்பாடல் என்ற உண்மை இக்கதைப்பாடல் மூலம் நன்கு புலப்படுகிறது.
திருமலை நாயக்கர்
திருமலை நாயக்கரின் நம்பிக்கைக்கும் பாராட்டுக்கும் உரிய இராமப்பய்யன் பல போர்க்களங்களைக் கண்டவன்.
திருமலையின் எண்ணத்தை உணர்ந்த இராமப்பய்யன், சேதுபதியைத் தானே அடக்க, திருமலையின் அனுமதியைப் பெறுகின்றான். திருமலையின் அனுமதியோடு இராமநாதபுர சேதுபதி இரண்டாம் சடைக்கத்தேவன் மீது போர்தொடுக்கச் செல்கிறான் இராமப்பய்யன். செல்லும் வழியில் மானாமதுரையில் தங்கியிருந்த பொழுது, சடைக்கத் தேவன் தன் மருமகன் வன்னியனை அனுப்பி இவன் மீது போர் தொடுத்து வெற்றி பெறுகிறான். எழுபத்திரண்டு பாளையக்காரர்கள் இராமப்பய்யனுக்கு உதவி செய்தும் போரில் அவன் வெற்றி பெறவில்லை. போகலூர்க் கோட்டையிலே நடந்த போரிலும் வன்னியனே வெற்றி பெறுகிறான். இராமப்பய்யன் அரியாசபுரத்தை முற்றுகையிட்டுத் தாக்கும்போது சடைக்கத்தேவன் காயம் அடைந்து இராமேசுவரம் சென்றுவிடுகிறான். இந்நிலையில் இராமப்பய்யன், இராயருக்கு உதவி புரிவதற்காக வடக்கே அனுப்பப் பெற்று வெற்றி வாகை சூடுகிறான். மீண்டும் போகலூர்க் கோட்டையை முற்றுகையிட்டுச் சேதுபதியின் மக்களான குமாரன், மதியார் அழகன் ஆகியோரைப் பிடித்துச் சித்திரவதை செய்து கொல்கிறான். இராமேசுவரத்திலுள்ள சேதுபதியுடன் போரிட பரங்கியர் உதவியுடன் கப்பல் போரும் நடைபெறுகின்றது. வெற்றியும் தோல்வியும் இரு பக்கமும் மாறிமாறி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் வன்னியன் வைசூரி அம்மையினால் துன்பப்படுகிறான். பாம்பன் துறைப்போரில் வன்னியன் இறக்க, அவன் மனைவி ஈமத்தீயில் விழுந்து உயிர் துறக்கிறாள். பின்னர் சடைக்கத்தேவன் சரணடைய, சிறையில் அடைக்கப்படுகிறான். சிறையிருந்த காலத்தில் மாயன் (திருமால்) அருளால் அவன் கால் விலங்குகள் தெறித்தன. காவலர் மூலமாக இச்செய்தி அறிந்த திருமலை, சடைக்கத் தேவனை விடுவித்து, ஆடை ஆபரணம் கொடுத்து ‘ராமநாத சுவாமி நல்ல பெருந்தீவில் சென்றிருங்காண்’ என்று விடை கொடுத்து அனுப்பியதாகவும். விடைபெற்ற சேதுபதி சொக்கலிங்கம் மீனாட்சி துணையென்று வணங்கி.
ராமநாத சுவாமி நல்லபெரும் பட்டணத்தில்
செங்கோல் செலுத்திச் சேவடியைக் கைதொழுது
மாயன் அருளால் மண்டலத்தை ஆண்டிருந்தான்;
எனவும் கூறி, கதையாசிரியர் இராமப்பய்யன் அம்மானையை முடிக்கின்றார்.
இதே காலக்கட்டத்தில் சேதுபதியை ஆட்சி பீடத்திலிருந்து அகற்ற முந்தைய சேதுபதியின் சோர புத்திரனான தம்பி என்பான் அவனுக்குத் தொல்லைகள் கொடுத்து வந்தான். திருமலை நாயக்கனின் உதவியையும், தம்பி நாடினான். இதற்காகக் காத்திருந்த திருமலை, சேதுபதி மதுரை ஆட்சியை மதிக்காமலும் கப்பம் கட்டாமலும் இருந்து வருகிறான் என்ற சாக்கைச் சொல்லி மறவர் நாட்டின்மீது படையெடுத்தார்.
வரலாறு
நாயக்கர் வரலாற்றைப் பெருமளவு அறியத் துணைபுரிபவை சேசுசபைப் பாதிரிமார் எழுதிய கடிதங்களாகும். இதுவரை கூறப்பட்ட நாயக்கர் வரலாற்றுக்கும், இராமப்பய்யன் அம்மானையில் காணப்படும் வரலாற்றுத் தகவலுக்கும் பெரியதொரு வேறுபாடு இல்லை. இராமப்பய்யன் என்ற தெலுங்குப் பிராமணப் படைத்தலைவன் ஒருவன் திருமலை நாயக்கரின் படைத்தலைவனாய் இருந்தான் என்பதிலும், மறவர் நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான் என்பதிலும் எவ்வித மாறுபாடுமில்லை. மறவர் நாட்டுப் படையெடுப்பில் இராமப்பய்யன் வெற்றியடைந்து சடைக்கத்தேவன் சேதுபதியைத் திருமலை நாயக்கனிடம் ஒப்புவித்துச் சிறையில் அடைக்கச் செய்தான் என்பது அம்மானையில் காணப்படும் தகவலாகும். இதற்கு மாறாக, போரின் நடுவிலேயே இராமப்பய்யன் இறந்து விட்டானென்று வரலாறு சொல்லுகின்றது. ஆனால் கதைப்பாடல் சேதுபதியின் மருமகன் வன்னியத் தேவன் இறந்ததனால், சடைக்கத்தேவன் (சேதுபதி) திருமலையிடம் சரணடைந்தான் எனக் கூறுகிறது. சடைக்கத் தேவனின் தம்பி சோரபுத்திரனைப் பற்றிக் கதைப் பாடலில் குறிப்பிடப்படவில்லை. வன்னியைப் பற்றிய செய்தி அம்மானையில் தவிர வேறு எங்கும் காணப்படவில்லை. மறவர் படையைத் தோற்கடிக்க முடியாத இராமப்பய்யன் பரங்கியரின் உதவியை நாடினான் என்று அம்மானை கூறுகிறது. சேசு சபைக் கடிதமோ மதுரை நாயக்கன் மறவர் நாட்டுப் படையெடுப்பில் தனக்கு உதவியதற்காகப் போர்ச்சுக்கல் அரசனுக்கு மறவர் நாட்டில் கோட்டை கட்டிக் கொள்ளவும், பல மாதா கோயில்கள் கட்டிக் கொள்ளவும் அனுமதி வழங்கினான்; இன்னும் பல வசதிகளையும் அளிக்க முன்வந்தான் என்று உறுதி செய்கிறது.
சிறை வைக்கப்பட்ட சேதுபதி, பாதிரியாரின் வேண்டுகோளின்படி விடுதலையடைந்ததாக வரலாறு கூறுகின்றது. தெய்வ பக்தியால் சேதுபதியைக் கட்டியிருந்த விலங்குகள் தெறித்துவிடவே திருமலையால் விடுதலை செய்யப்பட்டான் என்று அம்மானை சொல்கிறது. ஆயின் வடநாட்டிலிருந்து வந்த திருத்தலப் பயணிகளான வயிராகிகளும் லாடசந்நியாசிகளும் திருமலை நாயக்கனிடம் முறையிட்டதனால் சேதுபதி விடுதலை செய்யப்பட்டான் என்றும் வரலாறு சொல்லுகின்றது. மேலும் மெக்கன்சி சேர்க்கையில் (Meckenzie Manuscripts) வடநாட்டிலிருந்து வந்த திருத்தலப் பயணிகள் திருச்சியில் சிறை வைத்திருந்த சேதுபதியாகிய சடைக்கத்தேவனை விடுவித்து, ஸ்ரீரங்கத்தில் அவனுக்கு முடிசூட்டி, இராமநாதபுரம் அழைத்துச் சென்று அரசு கட்டிலில் அமர்த்தினார்கள் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.
இவ்விரண்டு செய்திகளிலிருந்தும் சேதுபதி விடுதலையில் வடநாட்டுத் திருத்தலப் பயணிகள் ஈடுபட்டிருந்தார்கள் என்பது பொதுவாகத் தெளிவாகிறது.
இந்த அளவிலேயே கதைப்பாடல், வரலாற்றிலிருந்து மாறுபட்ட செய்திகளைக் கொண்டுள்ளதாக விளங்குகின்றது. கி.பி. 17ஆம் நூற்றாண்டு மதுரை நகர அரசியல் நிலையை அறிந்து கொள்ள இராமப்பய்யன் அம்மானை பெரிதும் துணைபுரிகின்றது. எனலாம்.
இத்தனைநாள் இக்கோட்டை வாங்கா திருந்தீகளோ
நாளைப் பகல் நாலு நாழியலுக் குள்ளாக
கோட்டைதனை வாங்காட்டால் கொன்றிடுவே னுங்களையும்
வைகைக்கரை நீளம் வாகாய்க் கழுவில் வைப்பேன்
(இராமப்பய்யன் அம்மானை, வரி 1225 – 1229)
என்று அச்சுறுத்துகிறான். போர்க் கைதிகளை நாகரிகமாக நடத்தாத படைத்தலைவன் மக்கட் பண்பில்லாதவன் ஆவான். இராமப்பய்யன் இக்கூற்றுக்குப் பொருத்தமானவன். போகலூர்க் கோட்டையைப் பிடிக்க ஏற்பட்ட சண்டையில் சேதுபதியின் மக்களான குமாரன், மதியாரழகனும் கைது செய்யப்படுகின்றனர். கைதிகளான அவர்கள் தோலை உரிக்குமாறு தச்சனுக்கு உத்தரவிட்டான்.
மதியாரழகனையும் மன்னன் குமாரனையும்
குப்புறவே தான் கிடத்திக் குறிமன்னர் பார்த்திருக்க
முதுகுத்தோல் தன்னை முறைமுறையாய்ச் செதுக்கச் சொன்னார்
(அம்மானை 1256 – 1258)
வீரர்களின் தோலை அவர்கள் துடித்துத் துடித்து விழ ஆசாரியும் உரித்தான். பிறகு அவர்களை முட்டு முட்டாக மொழியெலும்பைத் தறிக்கச் சொன்னான் இராமப்பய்யன். தனித்த கைதியின் உறுப்புகளைக் கூடையில் கொட்டி அவர்கள் மனைவியரின் தலையிலே ஏற்றிப் பாளையத்தைச் சுற்றிப் பறையடித்துப் பவனி வரச் செய்தவன். அதேபோல சேதுபதியின் படைத்தலைவன் வன்னி இறந்து விட்டானென்ற செய்தி கிடைத்ததும்,
குலுங்க நகைத்துக் கொற்றவரைத் தான்பார்த்து
வன்னியு மாண்டானென மன்னவரே கேட்டீர்களோ
என்று சொல்லி ராமய்யனும் இருபுயமும் தான் குலுங்க நகைத்து
(அம்மானை வரி 2105 – 2112)
இருந்தான். வன்னியின் வீரத்துக்கு அஞ்சலி செய்வதை விடுத்து, படை வீரனுக்குக் களங்கம் உண்டாகுமாறு நகைக்கிறான். வன்னியன் இறந்த பிறகு இராமப்பய்யனிடம் சரணடைந்த சேதுபதி இறுதிச் சண்டை செய்யாமலே போரில் வெற்றியை இராமப்பய்யனுக்கு நல்குகிறான். இந்நிகழ்ச்சிகள் இராமப்பய்யன் மனிதாபிமானமும், படைத் தலைவனிடம் இருக்க வேண்டிய பெருந்தன்மையும் இல்லாதவன் என்பதைக் காட்டுகின்றன.
இராமப்பய்யனின் ஆற்றல்
திருமலை நாயக்கரின் தளபதியான இராமப்பய்யனின் போர்த்திறன், சிந்தனை ஆற்றல், படை நடத்தும் பாங்கு, சூழ்நிலைக்குத் தக்கவாறு செயலாற்றும் போக்கு ஆகிய அனைத்தும் கதைப்பாடலில் விளக்கம் பெறுகின்றன. இராமப்பய்யனை எதிர்த்துப் போரிட்ட சடைக்கன் சேதுபதியின் மைத்துனனான வன்னியும் மாபெரும் வீரன். இவனை எதிர்க்கும் போது இராமப்பய்யன் ஆற்றலிழந்து காணப்படுவதாகக் கதைப்பாடல் உண்மையை எடுத்துரைக்கின்றது.
வன்னியென்றாலே நாயக்கர் படையினர்க்கு நடுக்கம் ஏற்படும். இராமப்பய்யனுடன் நடந்த மூன்று போர்களிலும் அவனே வெற்றி பெற்றான். இராமேசுவரம் தீவில் நடந்த ஆறு மோதல்களிலும் மறவர் படையும் நாயக்கர் படையும் வியப்புறச் சண்டை செய்தான், மறவர்படை சோர்வுற்றபொழுதும் பலம் குன்றிய போதும் ‘புலியை நரிபாய்ந்து போகும்மா’ என்று தனக்கே உரித்தான போர்க் குரலை யெழுப்பி வலுவூட்டியவன்.
வெற்றிகொண்டு வன்னி வீரியங்கள் பேசிவந்தான்
கோட்டை புகுந்தான் கோடையிடி வன்னியுந்தான் (846-850)
நிற்தூளியாக்கி நின்றானே வன்னியுந்தான் (1484)
என்று அவன் வீரம் பேசப்படுகிறது. மேலும் இராமப்பய்யன் சேதுபதியைத் தோற்கடிக்கப் பரங்கியர்கள் உதவியை நாடியதைக் கேள்வியுற்ற வன்னி,
பரங்கியும் பார்ப்பானும் பாரமோ என்று சொல்லி
வீரியங்கள் பேசி வன்னி வீரவாள் கைப்பிடித்துப்
(வரி 1550 – 1551)
பரங்கியர்களைத் தாக்கவே, அவர்கள்
கண்ணுக்கு மெட்டாமல் கருங்கடலிலோடினர் காண்
(வரி 1574)
என்று அம்மானை இசைக்கின்றது. வைசூரி நோயால் வாடிய நிலையிலும் கடைசி முறையாக ‘ஆனைத் திரளில் ஆளி சிங்கம் புகுந்தாப் போல்’ எதிரிகளைக் கலக்குகிறான் வன்னி. படைத் தலைவனாகிய தன்னுடைய சாவுக்குப் பிறகு எதிரியைச் சேதுபதியால் சமாளிக்க முடியாது என்று எடுத்துக்கூறியும் சரணடையக் கூறியும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்கிறான் வன்னி. போர் வேண்டாமென்று உரைத்தது அவனது அரசு உத்தியையும், வீணாகப் போர் வீரர்களை உயிர் இழக்காமல் காப்பாற்றியதையும் தெரிவிக்கும். ஒரு படைத் தலைவனுக்குரிய அனைத்துச் சிறப்புகளையும் கொண்டவனாகத் திகழ்ந்தவன் வன்னியத்தேவன்.
கதைப்பாடலின் தலைவனாக இராமப்பய்யன் இருந்தும், பொய்யுரைக்காமல் உண்மையை எடுத்துரைத்து வன்னியனை மக்கள் மறவாதிருக்கும் படி செய்து விட்டது இராமப்பய்யன் அம்மானை எனலாம்.
‘மலையைப் பாத்து நாய் குரைத்தால் அதை அசைக்க முடியுமோ’ என்பது இதன் பொருள். ‘சதுரகிரி பருவதம்’ என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு சிகரத்திற்குப் பெயர். இப்பழமொழி இன்றும் மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வழக்கிலுள்ளது. ‘மலையைப் பார்த்து நாய் குலைத்தால்’ என்றோ ‘சூரியனைப் பாத்து நாய் குலைத்தால்’ என்றோ வழங்குகின்றது. இரண்டிற்கும் பொருள் ஒன்றேயாகும்.
2) தேக்கிலையில் நீரதுபோல்
3) கோடிக்குறுவெள்ளம் கொண்டு வந்து விட்டாற்போல் இந்தப் பெருஞ்சேனை வெள்ளம் எங்கேயிருந்ததய்யா?
இவைதவிர, போருக்குச் செல்லும் முன் பூணும் அணிவகைகள், சேதுக் கரையோரம் காணப்படும் மீன்வகைகள் ஆகியவை பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. இராமப்பய்யன் அம்மானை சிறந்த வரலாற்றுப் பெட்டகமாகத் திகழ்வதோடு இலக்கிய நயம் பெற்றும் விளங்குகின்றது என்பதைச் சில சான்றுகள் கொண்டு அறிந்தோம். அடுத்து ‘தேசிங்குராசன்’ கதைப்பாடலைக் காணலாம்.
செஞ்சிக் கோட்டை
எண்ணற்ற மன்னர்களின் ஆட்சிப் பொறுப்பில் வளர்ச்சி அடைந்திருக்கிறது செஞ்சிக்கோட்டை. ஆயினும் செஞ்சிக் கோட்டை என்றவுடன் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற தேசிங்குராசன் நினைவே அனைவர்க்கும் எழுகிறது. நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் முகலாயப் பேரரசை எதிர்த்து, செஞ்சியில் சிற்றரசன் தேசிங்கு போராடினான். அவன் ஆட்சி புரிந்தது பத்தே மாதங்கள்தாம். எனினும் நீண்ட நாட்கள் அரசாண்டவனைப் போல் பேரும்புகழும் அவனுக்கு வாய்த்தன, இவ்வாறு அவன் புகழ் தமிழக மெங்கும் பரவக்காரணமாக அமைந்தது தேசிங்குராசன் கதைப் பாடலாகும்.
தேசிங்குராசன் கதைப்பாடல் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்ளப் பெருந்துணை புரிகிறது. தேசிங்கின் வாழ்க்கை வரலாறு மிகைப்படுத்தப்பட்டும் திரித்தும் இக்கதைப் பாடலில் கூறப்பட்டிருப்பினும் வீரச் சுவையை விளங்கக் காட்டுவதற்காகவே புகழேந்திப் புலவர் இக்கதைப்பாடலை இவ்வாறு இயற்றி உள்ளார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இக்கதைப்பாடலை ஒட்டி ஐந்து நூல்கள் கிடைத்துள்ளன. அவை தேசிங்கு கும்மி, தேசிங்கு ராசாப் பாட்டு, தேசிங்குராசன் சண்டை, தேசிங்குராசன் கதை, தேசிங்குராசன் சிந்து என்பவையாகும்.
பெற்றோர் இழப்பும் ஆட்சிப் பொறுப்பும்
தேசிங்கு எட்டு வயதுச் சிறுவனாக இருக்கும்போது அவன் பெற்றோர் இறந்து விடுகின்றனர். தேரணிசிங்கின் தம்பி தரணிசிங்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தேசிங்கை வளர்க்கிறான். தேசிங்கு தன் பதினெட்டாவது வயதில், செஞ்சியின் ஆட்சிப் பொறுப்பில் அமர்கின்றான்.
வரிப்பணமும் போரும்
மைய அரசிலிருக்கும் டில்லி பாதுஷா வரி செலுத்தும்படி ஆர்க்காட்டு நவாபுக்கு ஆணை அனுப்புகின்றான். நவாபு தன் ஆளுகைக்கு உட்பட்ட கோட்டைத் தலைவர்களுள் செஞ்சியை ஆளும் தேசிங்கு பன்னிரண்டு ஆண்டுகள் வரிப்பணம் கட்டவில்லை என்பதை அறிந்து, பணத்தை உடனே கட்டும்படி தோற்றமல்லன் என்பவன் மூலம் ஆணை அனுப்புகிறான். தேசிங்கு அதைக் கேள்வியுற்று
டாறு டாறாய்க் கிழித்துப் போடுவேன் சிற்றப்ப ராசாவே
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு சிற்றப்ப ராசாவே
பிறந்த அன்றைக்கே சாவிருக்குது சிற்றப்ப ராசாவே
வந்தவ னாரென்று கேட்டுப்பாரு சிற்றப்ப ராசாவே
என்று தன் வளர்ப்புத்தந்தை தரணிசிங்கிடம் கூறுகிறான், தரணிசிங் ஆளையனுப்பித் தோற்றமல்லனை வரவழைக்கிறான். “நவாபுவைப் போர்க்களத்தில் சந்திக்கிறேன்” என்று தோற்றமல்லனிடம் ஓலை கொடுத்து அனுப்புகிறான் தேசிங்கு. ஓலையில், “ஆண்பிள்ளையானால் நவாபுசாயபை இங்கே வரச் சொல்லும் அசல் பெண் பிள்ளையானால் நவாபுசாயபை அங்கே இருக்கச் சொல்லும் மீசை முளைத்த ஆண் பிள்ளையானால் சண்டைக்கு வரச் சொல்லும்” என்று எழுதப்பட்டிருந்தது கண்டு கோபமுற்ற நவாபு தன் ஆட்சிக்குட்பட்ட பாளையக்காரர்கள் அனைவரையும் திரட்டிக்கொண்டு, செஞ்சிக்கு அருகிலிருக்கும் தேவனூரில் தங்குகிறான். படைகளின் வருகையை, பூசை செய்து கொண்டிருக்கும், தேசிங்கிடம் தரணிசிங் கூற, ‘அரைக்கால் நாழி பொறு, பின்வந்து அவர்களைப் பத்தல் பத்தலாய்க் கிழிக்கிறேன்’ என்று கோபமாய்ப் பதிலளிக்கிறான். தேசிங்கின் படை வருவதற்கு முன் ‘சுபங்கிதுரை’ என்பவன் தேவனூரின் உள்ளே நவாபின் அனுமதியுடன் புகுந்து கொள்ளையடிக்கிறான். பாதிக்கப்பட்ட மக்கள் தேசிங்கிடம் முறையிடுகின்றார்கள்.
வரிப்பணம் செலுத்தி நவாபுடன் சமாதானம் செய்து கொள்ளலாம் எனக் கூறிய தரணிசிங்கின் அறிவுரையைப் புறக்கணித்து, வழுதாவூரிலிருக்கும் தன் நண்பன் மோவுத்துக்காரனுக்குச் செய்தி அனுப்புகின்றான் தேசிங்கு. திருமணக் கோலத்திலிருந்த அவன் திருமணச் சபையில் உள்ளவரை வணங்கி, விடை கொடுத்து அனுப்புமாறு கேட்கிறான். அவன் தாயார் ‘கங்கணம் கட்டியபின் சண்டைக்குப் போனால் குண்டுபாயுமடா மகனே’ என்று கூறி அழுகிறாள்.
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு என்னைப் பெற்ற தாயே
இரணகளத்தில் செத்துப்போனால் நல்லபதவியுண்டு
கத்தி முனையில் சாவேனானால் கனத்த பதவியுண்டு
என்று தாயிடம் வீரவுரை ஆற்றிவிட்டுப் புறப்படுகிறான் மோவுத்துக்காரன்.
தடையும் துணிச்சலும்
கோட்டைக்கு உள்ளிருந்து போரிடுமாறு வேண்டும் இராணியின் யோசனையைக் கேளாமல் அவளிடம் விடை பெற்றுக் கொண்டு, சிறுபடை பின் தொடரப் போர்க்களம் செல்கிறான் தேசிங்கு. அவன் வணங்கும் அரங்கநாதரே தடுத்தும் அவன் முன் வைத்த காலைப் பின் வைக்கவில்லை. தேசிங்கு படையுடன் போர்க்களம் நோக்கி வரும் செய்தியை நவாபுக்குக் கூறும் பங்காரு நாயக்கன் ஒரு சூழ்ச்சி செய்து, ஏரிகளை உடைத்துவிட்டுச் சாரங்கபாணி ஆற்றில் வெள்ளம் புரண்டு வரச் செய்கிறான். தேசிங்கு வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் ஆற்றைக் கடக்கிறான், முப்பது பேர்கள் மட்டுமே அவனைப் பின்தொடர முடிகிறது. ஏனையோர் திரும்பி விடுகின்றனர்.
போரும் வீரமரணமும்
போர் தொடங்குகிறது. முதல்போரில் மோவுத்துக்காரன் வீர மரணம் அடைகிறான். அவனையும் அவன் குதிரை நீலவேணியையும் நல்லடக்கம் செய்த தேசிங்கு, சீறும் புலியாகப் போர்க்களம் புகுந்து, சேத்துப்பட்டு தாவூத்துக்காரனை நவாபு என எண்ணிக் கொல்கிறான். தாவூத்துக்காரன் இறந்த செய்தியறிந்து பீதியுற்ற நவாபு தோற்றமல்லனைத் தேசிங்கிடம் சமாதானத் தூதாக அனுப்புகின்றான். தேசிங்கு அதனை ஏற்றுக் கொள்ளாமல் நவாபுவைத் தேடிப் புறப்படுகின்றான். அப்போது ரங்கநாதக் கடவுள் தோன்றித் தடுக்கின்றார். முன்வைத்த காலைப் பின்வைக்க மாட்டேன் என்று சொல்லிப் புறப்பட்ட தேசிங்கு ஒவ்வொரு பாளையக்காரனையும் கொல்கிறான். தேசிங்கின் குதிரை பாராசாரியின் கால்கள் நவாபால் வெட்டப்பட தேசிங்கு கீழே இறங்கிப் போரிடுகின்றான், நவாபும் அவன் படைகளும் ஓடி ஒளிய, எதிர்த்துப் போரிட எவருமில்லாத நிலையில் தேசிங்கு தான் மட்டும் தனியனாய் நாடு திரும்ப விரும்பவில்லை. எதிரியில்லாத தேசிங்கு கத்தியை மேலெறிந்து அதனைத் தன் மார்பில் தாங்கி வீர மரணம் அடைகின்றான்.
தேசிங்குராசன்
ஒளிந்திருந்த நவாபும் மற்றவரும் ஓடிவந்து தேசிங்கின் வீரத்தைக் கண்டு ‘உன்னைப் போலச் சூரன் ஒருவருமில்லை‘ எனப் பாராட்டிக் கண்ணீர் விடுகின்றனர். தேசிங்கு இறந்த செய்தி இராணியம்மாளுக்குத் தெரிவிக்கப் பட்டது. வீரமரணம் அடைந்த தேசிங்கின் உடலை எரிக்க மூட்டிய தீயிலேயே அவளும் வீழ்ந்து உயிரை விடுகின்றாள்.
வைகுந்த பதவி அடைந்தார்களய்யா ராஜாவும் ராணியும்
அரங்கர்பதம் சேர்ந்தானையா ராஜா தேசிங்கு
எனக் கதை முடிவடைகின்றது.
பெயர்கள்
நினைவுக் குறையாலும் பிழையான உச்சரிப்பு முறையாலும் கதைப்பாடல் பெயர்கள் மாறுபட்டும் உண்மைப் பெயர்களில் இருந்து திரிந்தும் காணப்படுகின்றன. எனவே, கதைப்பாடலில் காணப்படும் பெயர்களுள் உண்மையான பெயர்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளல் நலம்.
கதைப்பாடல் உண்மைப்பெயர்
தேசிங்கு தேஜ்சிங்
தேரணி ராஜன் சூலூபசிங்கு சொருப்சிங்
டில்லி பாதுஷா அவுரங்கசீப்
டில்லி துரை ஃபரூக்ஷியர்
தரணிசிங்கு ——-
மோவுத்துக்காரன் மோபத்கான்
நவாபு சதத்துல்லாகான்
தாவூத்துக்காரன் தவ்லத்கான்
தேசிங்கின் தந்தை பெயர் மட்டும் கதைப்பாடலில் முற்றிலும் மாறுபடுகிறது. தந்தை சொரூப்சிங் என்பதே வரலாற்றாசிரியர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. எனவே, தேரணிசிங்கு என்ற பெயர் சொருப்சிங்கின் பட்டப் பெயர்களுள் ஒன்றாக இருக்கலாம் அல்லது நாட்டுப் புறக் கலைஞர்களின் நினைவு மாறுபாட்டால் ஏற்பட்ட மாற்றமாகவும் இருக்கலாம். தேரணி சிங்கின் தம்பி தரணி சிங்கு என்று கதைப்பாடல் குறிப்பிடுகின்றது. இது பற்றி வேறு குறிப்புகள் கிடைக்கவில்லை.
குதிரையை அடக்குதல்
தேசிங்கு ராஜன் தன் ஐந்தாவது வயதில் டில்லி சென்று குதிரையை அடக்கி டில்லி பாதுஷாவிடம் பரிசு பெற்றான் என்று கதைப்பாடலில் கூறப்படும் செய்தி முற்றிலும் கற்பனையாகும். குதிரையை அடக்குவது பற்றிய இந்நிகழ்ச்சியை, சரித்திர நிகழ்ச்சி ஒன்றுடன் ஒப்பிடும்போது இது உண்மையின் அடிப்படையில் எழுந்த கற்பனை என்று கருதத் தூண்டுகிறது. சரித்திர நிகழ்ச்சியாவது: ‘பீதனூர் அரசன் வேண்டுகோளின்படி அவன் பகைவர்களை ஒடுக்குகின்றான் தேசிங்கு. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டிப் பீதனூர் அரசன் அவனுக்குப் பன்னீராயிரம் ரூபாய் விலைமதிப்புள்ள குதிரையும் ஒரு லட்ச ரூபாய் பணமும் பரிசாகத் தருகின்றான். அந்தக் குதிரை பிறர் ஏறமுடியாத முரட்டுத் தனம் உடையது. ஆயினும் தேசிங்கு அதைப் பழக்கிக் கொண்டான்!’
இந்நிகழ்ச்சிகளின் அடிப்படையிலேயே ‘குதிரையை அடக்கித் தந்தையைச் சிறை மீட்டதும் பரிசு பெற்றதுமான’ கதைப்பாடல் கற்பனைகள் தோன்றியிருக்கலாம்.
தேசிங்கின் மனைவி
தேசிங்கின் மனைவியாகிய இராணியம்மாள் டில்லி பாதுஷாவின் மகள் எனக் கதைப்பாடல் கூறுகிறது. இதற்கு ஆதாரம் எதுவுமில்லை. குதிரையை அடக்குவது என்ற ‘கற்பனையை ஒட்டிய கற்பனை’ என்று இதனைக் கொள்ளலாம்.
தேசிங்கின் ஆட்சிக்காலம்
தேசிங்கு பட்டம் ஏற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் நவாப் சதத்துல்லாகான், லாலா தோடர்மாலை அனுப்பி வைக்கிறான். தேசிங்கு பணம் கட்ட மறுக்கிறான். லாலா தோடர்மால் செய்தியைச் சதத்துல்லாகானுக்கு அறிவிக்கிறான். இந்நிகழ்ச்சிகள் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்குள் நடந்திருக்கலாம். செய்தி அறிந்த நவாபு ஒரு மாதத்திற்குள் படையுடன் வருகின்றான். போர் தொடங்குகின்றது. எனவே, தேசிங்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஒன்பது அல்லது பத்தாவது மாதத்தில் வீர மரணம் அடைகின்றான்.
தேசிங்கின் முடிவு
எதிரி யாருமின்மையால் கத்தியை மேலெறிந்து தன் மார்பில் தாங்கிக் கொண்டான் தேசிங்கு என்று கதைப் பாடல் கூறுகின்றது. சுடப்பட்டு இறந்ததாகச் சரித்திரம் கூறுகின்றது. தேசிங்கு எதிரிகளால் கொல்லப்பட்டான் என்று கூறுவது அவன் வீரத்துக்கு இழுக்கு என்பதால், அவன் இறுதிமுடிவு கதைப் பாடலில் இவ்வாறு திரித்துக் கூறப்பட்டிருக்கின்றது.
கருவாடு விக்கிற லப்பைக் கெல்லாம்
தோப்பா குடுப்பேனா
என்று அமைந்துள்ளது. இதேபோல் நவாப்போடு சண்டைக்குச் செல்லுமுன் தேசிங்கு அரங்கநாதரிடம் வேண்டிக் கொள்வதாக அமைந்த பின்வரும் அடிகளும் இந்து – முசுலீம் உறவைச் சுட்டுகின்றது.
இந்தவிசை நவாப்பு கையினாலே
நான் செத்துப் போனால்
துலுக்கர் வந்துனது கோவிலெல்
லாம் சூரையிடுவார்கள்
தேசிங்குராசன் சண்டை
பொதுமக்களிடம் வழக்கிலிருந்த காலம் வரை இந்து – முசுலீம் உறவுநிலை சீரடையவில்லை. ஆனால் வெள்ளையர்களின் சுரண்டல் ஆட்சியில் இந்நிலை மெல்ல மாற்றம் பெறுகின்றது. வெள்ளையன் என்ற பொது எதிரியை வீழ்த்த இந்து – முசுலீம் ஒற்றுமை குறித்து எழுத்து வாயிலாகவும் பேச்சு வாயிலாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இக்காலக்கட்டத்தில் ‘தேசிங்கு கதை’ வளர்ச்சி பெறுகின்றது. மோவுத்துக்காரன் என்ற பாத்திரம் இங்குச் சிறப்பிடம் பெறுகிறது. பிற்காலக் கதைப் பாடகனுக்கு மோபத்கான் பற்றிய செய்தி மக்களிடமிருந்தும் ‘கர்நாடக ராசாக்கள் சவிஸ்தார சரித்திரம்’ மற்றும் தென்னாட்டுப் பழங்கதைகள் என்ற நூல்களிலிருந்தும் கிடைத்திருக்கின்றது. இவ்வாறு கிடைத்த செய்திகளை ஆதாரமாகக் கொண்டு ‘தேசிங்குராசன் கதை’ பாடிய பாடகர்கள் மோவுத்துக்காரன் பாத்திரத்தை விரிவாக்குகின்றனர்.
தேசிங்குராசன்
இவன் இராஜபுத்திர பரம்பரையில் தோன்றியவன். தமிழ்நாட்டிலுள்ள செஞ்சியில் கோட்டை கட்டி வாழ்ந்தவன், மக்களின் மதிப்பைப் பெற்று மாவீரனாக விளங்கி வீர மரணம் அடைந்தவன். இத்தகைய அழியாப் புகழைப்பெற்ற தேசிங்கு ராஜனின் சிறப்பு மிக்க வரலாறு கதைப்பாடலாக மலர்ந்துள்ளது. டெல்லி பாதுஷாவே புகழ்ந்து பாராட்டிய மாவீரன். முரட்டுக் குதிரையின் பிடரியைப் பிடித்து அடக்கியாளும் ஆண்மை மிக்கவன்.
இன்றைக்குஞ் சாவு நாளைக்குஞ் சாவு
இருக்குது தலைக்கு மேலே
ஒன்றுக்கும் நீயஞ்ச வேண்டாம்
உறுதி கொள்ளுமையா
என்ற பாடலடிகள் அவன் அஞ்சா நெஞ்சத்தை எடுத்துக் காட்டுகின்றன. தேசிங்கு ராசன் திருவரங்கநாதரை நினைத்து வணங்கும் இறைப் பற்றாளன். அவன் வீரத்தை இசுலாமிய வீரன் ஒருவன் வியந்து கூறியது பின்வருமாறு:
செஞ்சிக் கோட்டைச் சிப்பாயையா இராஜா தேசிங்கு
கத்தி பிடித்த சிப்பாய் மகனும் இராஜா தேசிங்கு அவன்,
கண்ணையுருட்டிப் பார்த்தானானால் சிப்பாய் தேசிங்கு
கால் பலங்களும் கைப்பலங்களும் சிதறியோடுமே
டாறு டாறாய் தீர்த்துப் போடுவான் இராஜாதேசிங்கு
தேசிங்குராசன் தோற்று எதிரியின் கையில் பட்டு மானமிழப்பதை விரும்பாமல் தானே வாளை வீசி மாண்டு மடிந்ததை வியப்பாகப் பாராட்டிய ஆர்க்காட்டு நவாபு சதத்துல்லா அவனை நல்லடக்கம் செய்து ஒரு மாவீரனுக்கு மரியாதை செய்த பெருமையைப் பெறுகிறான்.
மோவுத்துக்காரன்
‘மோபத்கான்‘ என்ற பெயரே மாற்றம் பெற்று மோவுத்துக்காரன் என்று கதைப்பாடலில் இடம்பெற்றுள்ளது. தேசிங்கின் உற்ற நண்பனாக அறிமுகமாகும் மோவுத்துக்காரன் இசுலாம் சமயத்தைச் சார்ந்தவன். நட்புக்கும் வீரத்திற்கும் சிறந்த எடுத்துக் காட்டாய் விளங்கியவன். தன் இளமைப் பருவந்தொட்டே தேசிங்குக்கு நண்பனாக இருந்தான். இருவரும் காடுமலை சுற்றிக் கலங்கும்படிச் செய்வார்கள். பத்துப் பனைமரம் உயரம் கிளம்பி பல்டியடிப்பார்கள். இத்தகைய உயிர் நண்பனாகத் திகழ்ந்த அவனுடைய திருமண நாளில் தேசிங்கிடமிருந்து வீர அழைப்பு வருகின்றது. திருமணம் மோவுத்துக்காரனின் வாழ்வில் ஒரு மதிப்பில்லாச் சாதாரண நிகழ்ச்சியாகிவிடுகிறது. வீரப்போர் மதிப்பு மிக்க பேறாக மதிக்கப்படுகிறது. தாயாலும் தடுக்க முடியாத வீர வெற்றியுடைய மோவுத்துக்காரன் தாயின் திருவடிகளைப் பணிந்து கூறிய பின்வரும் வீரவுரை வரலாற்றுப் பெருமையுடையது.
சண்டை கெலித்து வந்தேனானால் தாலி கட்டுகிறேன்
போரைக் கெலித்து வந்தேனானால் புகழ்ந்து கட்டுகிறேன்
மாண்டு மடிந்து போவேனானால் மனது கலங்காதே
தாலிமுடியும் திருமணநாள் போலியான இன்பநாளாக வீரனால் கருதப்படுகிறது. போரில் குண்டடிபட்டு விழும் மோவுத்துக்காரன்,
அல்லாரே அல்லாரே என்று கீழே விழுந்தானாம்
அரிகோவிந்தா என்று சொல்லிக் கீழே விழுந்தானாம்
என்று கதைப்பாடல் விளக்குகின்றது. மோவுத்துக்காரனைப் போரில் இழந்த தேசிங்கு,
என்னுடன் வளர்ந்த பிராண
சினேகிதன் மோவுத்துக்காரன் போனான்
எந்தன் பலமும் பாதி போச்சுது
மோவுத்துக்காரனோடே
என்று புலம்புகின்றான். தேசிங்கிற்கு இணையான வீரனாகவே கதைப்பாடல் இவனைச் சிறப்பித்துப் பாடியுள்ளது.
கதைப்பாடலுக்கே உரிய நயங்களும் இதில் உண்டு. பாடலில் அமைந்த ஒலிநயம் குதித்தோடும் நீலவேணி (மோவுத்துக்காரனின் குதிரை), பாராசாரிக் (தேசிங்கின் குதிரை) குதிரைகள் போலவே குதித்துச் செல்கிறது.
தலை தலையாய் உருட்டிப் போடுறான் ராசா தேசிங்கு
டாறு டாறாய்க் கிழித்துப் போடுறான் ராசாதேசிங்கு
என்று கூறும் போது கேட்பார் செவிகளும் டாறு டாறாய்க் கிழிகின்றன.
தென்னங்குலை போல் புகுந்து வெட்டுறான் ராசாதேசிங்கு
சோளத்தண்டை வீசினாற்போல அறுத்துப் போடுகிறான்
வாழைத்தண்டை அறுத்தாற்போல வளைத்துப் போடுகிறான்
இப்படிப் பலப்பல உவமை நயங்கள் தேசிங்கின் வீரத்தை மேன்மேலும் சிறப்பிக்கின்றன. கதைப் பாடலுக்கே உரிய உத்தியான சகுனம் பார்த்தல் இதில் இடம் பெற்றுள்ளது. தேசிங்கும் மோவுத்துக்காரனும் போருக்குச் செல்வதற்கு முன் அரங்க நாதரை வேண்டி நிற்கிறான் தேசிங்கு. அப்பொழுது அரங்கநாதரின் மாலை கருகியது. முத்தாரங்கள் கழன்று விழுந்தன. நெற்றிமணியும் துளசிமாலையும் அறுந்து விழுந்தன. இது கண்டு அஞ்சாத தேசிங்கு, ‘போருக்கு நான் அஞ்சேன், போர் முகத்தில் எனக்கு வீரச்சாவு அளிப்பாயாக’ என வேண்டிக் கொண்டு கோவிலை வலம் வந்து போருக்குப் புறப்படுகிறான். ஆண்டவனே வந்து தடுத்தாலும் முன்வைத்த காலைப் பின்வைக்காத சுத்த வீரன் தேசிங்கு என அவனது வீரத்தைச் சிறப்பிக்க ஆசிரியர் கையாண்ட அற்புதமான உத்தியாகும் இது. நூலினுள் எங்கு நோக்கினும் ஆசிரியர் கையாளும் உத்திகள் அனைத்தும் தேசிங்கின் வீரத்தை வெளிப்படுத்தவே துணைநிற்கின்றன. எதிரிகளே வியந்து போற்றிய தேசிங்கின் வீரம் மக்களை வெகுவாகக் கவர்கிறது. அவனுடைய வீர மரணமும் அவன் மனைவியின் துயர முடிவும் மக்கள் மனத்தில் பதிந்து அவர்கள் மீது அனுதாபமும் அன்பும் கொள்ளச் செய்தன. தேசிங்கு உயிருடன் இருந்த போது அவனுக்குக் கிடைக்காத மக்கள் ஆதரவும் புகழும் அவன் இறந்தபிறகு அவனுக்கு மிகுதியாகவே கிடைத்தன. அவன் வரலாறு கலை வடிவம் பெற்றுக் கதைப் பாடல்களாக வளர்ச்சி பெற்றது.
வரலாற்றுக் கதைப் பாடல்களுள் காலத்தால் முந்தையது இராமப்பய்யன் அம்மானையாகும். சிறந்த வரலாற்றுக் கதைப்பாடல் தேசிங்குராசன் கதையாகும். இவை இரண்டையும் பற்றிப் படித்தோம்.
மதுரை நாயக்கர் வம்சத்துத் திருமலை நாயக்கர், ‘மறவர் சீமையில்’ வலுவான ஆட்சியை நடத்திவந்த சேதுபதியை (சேதுபதி இரண்டாவது சடைக்கத் தேவன்) அடக்கி வைக்காவிட்டால் தனது ஆட்சிக்குக் கேடு வரலாம் என எண்ணி அவனை அடக்க முற்பட்டுத் தோல்வியுற்றான். திருமலையின் தளபதியே இராமப்பய்யன். இவன், சேதுபதியை அடக்கி வருவதாகச் சூளுரைத்துப் போர் செய்கிறான். சேதுபதி சார்பில் அவனது மருமகன் வன்னியத்தேவன் போரிடுகிறான். போரின் இறுதியில் சேதுபதி கைதாகி, பிறகு இறைவனருளால் மீண்டும் தன் ஆட்சியைப் பெறுகிறான். இது கதைப்பாடல் சொல்லும் கதையாகும்.
கதைப்பாடல் நிகழ்வுகள் வரலாற்றோடு எந்த அளவிற்கு மாறுபட்டுள்ளன என்பது இப்பாடத்தில் சுட்டப்பட்டுள்ளது. கதைத்தலைவனான இராமப்பய்யன் போரின் நடுவிலேயே இறந்து விட்டானென வரலாறு கூறுகின்றது. ஆயின் அம்மானை அவன் கதை இறுதிவரை இருந்ததாகக் கூறுகின்றது. கதையின் எதிர்த் தலைவனான வன்னியத் தேவன் பற்றிய குறிப்பு அம்மானையில் மட்டுமே இடம்பெற, வரலாற்றில் இடம் பெறவில்லை.
அம்மானை மூலமாக அக்காலக்கட்டத்து வரலாற்றினையும் சமுதாய வாழ்க்கையையும் மரபு மற்றும் பழக்க வழக்கங்களையும் அறிய முடிகிறது. இவை தவிரப் போர்க்கால நடைமுறைகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது. சிறந்ததொரு வரலாற்றுக் கதைப் பாடலாக இருந்தாலும் சொற்றொடர் அழகு, எதுகை மோனை, வருணனை, பழமொழிகள், உவமைகள் ஆகியவையும் இடம்பெற்றுக் கதைப்பாடல் தன்னுடைய இலக்கியப் பண்பையும் விட்டுக் கொடுக்கவில்லை என்பதை மெய்ப்பிக்கின்றது.
நாயக்கர் ஆட்சிக்குப்பின் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் அவ்வரசை எதிர்த்துப் போராடியவன் தேசிங்கு. இவன் ஆட்சி புரிந்தது பத்துமாதங்கள்தாம். இருப்பினும் இவன் வரலாற்றில் நிலைத்ததொரு இடத்தைப் பிடித்து விட்டான்.
டில்லி பாதுஷாவின் ஆணைக்குட்பட்ட நவாபு, வரி செலுத்தும்படி செஞ்சிக்கு ஆணை அனுப்ப, தோற்றமல்லனை அனுப்புகிறான். வரி செலுத்த மறுத்த தேசிங்கு போரில் சந்திப்பதாகக் கூறிகிறான். போரில் நண்பன் மோவுத்துக்காரனை இழக்கிறான். இருப்பினும் இறுதிவரை போராடி வீர மரணம் அடைகிறான். அவனது மனைவியும் உடன்கட்டையேறுகிறாள். தேசிங்கின் வீரத்தைக் கண்ட நவாபு அவனது வீரத்தைப் பாராட்டுகின்றான் என்று கதைப்பாடல் முடிவடைகின்றது.
வரலாற்றிலிருந்து கதைப்பாடல் பல இடங்களில் வேறுபட்டுள்ளது என்பது இப்பாடத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தேசிங்கு, அவனது நண்பன் மோவுத்துக்காரனின் பண்பு நலன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பழைய கதைப் பாடல்களில் மோவுத்துக்காரன் பற்றிய குறிப்பு இல்லை. சமயப் பொறையை மிகவும் மதித்து இந்தக் கதைப் பாடல் பாராட்டிச் சிறப்பிக்கிறது. பெயர்களாலும் சடங்குகளாலும் வேறாகி மனத்தால் ஒன்றாகிவிடும் சமயவுணர்வை இந்தக் கதைப்பாடல் காட்டுகிறது.
உலக அனுபவம் இல்லாதவனும் முன் கோபியும் அவசரக்காரனும் மக்கள் ஆதரவோ பணியாளர் ஆதரவோ பெறாதவனுமான தேசிங்கு புகழ் பெறக் காரணம் அவனது வீரமே. நவாபு உட்பட எதிரிகளே வியந்து போற்றிய அவன் வீரம் அவனைப் பற்றிய வீர வழிபாட்டுக்கு அடித்தளமாகிறது. அந்த வீர வழிபாடே வீரச் சுவையுடைய கதைப் பாடலாக உருக்கொண்டு அவன் புகழை நிலைக்கச் செய்கிறது எனலாம்.
பாடம் – 3
1) நல்லதங்காள் கதை
2) முத்துப்பட்டன் கதை
3) சின்ன நாடான் கதை
4) சின்னத்தம்பி கதை
5) மம்பட்டியான் கதை
6) வெங்கலராசன் கதை
7) கௌதல மாடன் கதை
8) மதுரை வீரன் கதை
9) காத்தவராயன் கதை
10) கள்ளழகர் கதை
இவை போன்ற இருபதிற்கும் மேற்பட்ட கதைகள் சமூகக் கதைப்பாடல்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. பேராசிரியர் நா.வானமாமலை “சமூகச் சிக்கல்களை அடிக்கருத்துக்களாகக் கொண்டவை சமூகக் கதைப்பாடல்கள்” என்று குறிப்பிடுவதோடு, அக்கதைப் பாடல்களை எல்லாம் சமூக அடிக்கருத்துகளின் அடிப்படையில் ஐந்து வகைகளாகப் பிரிக்கின்றார்.
1) கலப்பு மணமும் அவற்றின் துன்பியல் விளைவுகளும். (முத்துப்பட்டன் கதை, மதுரை வீரன் கதை, சின்னநாடான் கதை)
2) சாதிய அடக்குமுறையும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த நாட்டார்களுக்கு உயர்சாதி மக்களால் விளைவிக்கப்படும் கொடுமைகளும் (சின்னத் தம்பி கதை)
3) தாய்வழி, தந்தைவழிச் சமூகக் குழுவினருக்கிடையே தாய்வழியினர் தந்தை வழியினரிடம் மணஉறவு தேடும் பொழுது ஏற்படும் சண்டைகள் – (தோட்டுக்காரி அம்மன் கதை, வெங்கலராசன் கதை)
4) பெண்களுக்குச் சொத்துரிமை மறுக்கப்படுதலும் அவற்றின் துன்பியல் விளைவுகளும் – (நல்லதங்காள் கதை)
5) சாதி சமயக் கட்டுப்பாடுகளைக் கடந்த மனிதாபிமானம் (கௌதல மாடன் கதை)
மேற்குறிப்பிட்ட கருத்துக்களினடிப்படையில் அமைந்துள்ள சமூகக் கதைப்பாடல்களில் பெரும்பாலானவை மதுரை, இராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் எழுந்தவையாகும். அதாவது கி.பி.16, 17, 18 ஆகிய நூற்றாண்டுகளில் இத்தகைய கதைப் பாடல்களில் பெரும்பாலானவை தோன்றின என முடிவுக்கு வருவதில் தவறில்லை. அக்கால அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளைக் கண்டறிந்தால் தமிழகத்தின் தெற்குப் பகுதியிலேயே பெரும்பாலான சமூகக் கதைப் பாடல்கள் ஏன் தோன்றின என்ற வினாவிற்குரிய விடை கிடைத்து விடும். அதனைச் சுருக்கமாகக் காணலாம்.
கள்ளழகர் அம்மானை, அண்ணன்மார் சுவாமிகதை ஆகிய இரு கதைப்பாடல்களும் வேட்டுவக் கவுண்டர்களுக்கும் வெள்ளாளக் கவுண்டர்களுக்கும் இடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்துகின்றன. மேலும் இவற்றில் இடம்பெறும் குலதெய்வம் பேணல், சிறு தெய்வ வழிபாடு போன்றவற்றைக் கவனிக்கும் போது இவை மிகப் பிற்பட்ட காலம் என மட்டுமே முடிவுக்கு வர இயலும். வீணாதிவீணன் கதையில் குலசேகரனது ஆட்சிப்பகுதியில் வீணனின் செயல்கள் சித்திரிக்கப்படுவதால் இக்கதை கி.பி.16ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். மதுரை வீரசுவாமி கதையில் திருமலை நாயக்கர் என்றொரு பாத்திரம் வருவதால் அதன் காலம் கி.பி.17ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். கதைப்பாடல்களில் வரும் நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு பார்த்தால் முத்துப்பட்டன் கதையும் நல்லதங்காள் கதையும் கி.பி.1658-1738க்குள் இடம் பெற்றிருக்கலாம் என்றும், சின்னநாடான் கதையின் காலம் கி.பி.18ஆம் நூற்றாண்டு என்றும் அவற்றை ஆராய்ந்தவர்கள் முடிவுக்கு வருகின்றனர்.
கி.பி.16,17,18ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்பேசும் பகுதிகளைப் பல இனத்தினர் கொள்ளைக் காடாகப் பயன்படுத்தினர். நாயக்கர்கள், முசுலீம்கள், மராத்தியர், கன்னடியர், டச்சுக்காரர், போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர் ஆகிய இனங்களின் கொள்ளை இடும் பகுதியாகத் தமிழகப் பகுதி இருந்தது. எங்கு நோக்கினும் களவு, கொள்ளை, லஞ்சம், வழிப்பறி ஆகியவை நடந்தன. பஞ்சமும் வாட்டியது. இவற்றால் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் தமிழ்நாட்டின் தென்பகுதி மக்களே. அதிலும் அடிநிலை மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்குச் சமூகத்தில் நிரந்தர இடமும் இல்லை, பாதுகாப்பும் இல்லை. ஆயின் இவர்களுக்கான சமூகக் கடமைகள் வரையறுக்கப்பட்டிருந்தன.
பிற்காலச் சோழர் காலத்தில் ஏதோ ஒரு வகையில் சமூகப் பாதுகாப்பு இருந்தது. ஆனால் நிலவுடைமைக் காலம் சிதறியபோது மக்களுக்குப் பாதுகாப்பு ஏதும் இல்லை. இக்காலத்தில் சமூக மதிப்புகள் மீறப்பட்டன. இந்தச் சமூக மீறல்களை நிலவுடைமைச் சிதறல் காலச் சமூகம் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை அனுமதிக்கிறது. எனினும் இந்தச் சமூக மீறல்கள் தம் எல்லை கடந்தால் மறுக்கப்படுகின்றன. சமூகக் கதைப்பாடல்களில் சமூக மரபுமீறலில் ஈடுபடுவோர் காவல் அதிகாரிகள் தொடர்பான பாத்திரங்களாகவே உள்ளனர். சமூகத்தில் பாதுகாப்புத் தன்மை குறைந்த காலத்தில் இத்தகைய பாத்திரங்கள் ஒருவேளை மக்களைக் கவர்ந்திழுத்திருக்கலாம். நிலவுடைமை வர்க்கம் இந்தச் சமூக மரபு மீறலாளர்களைக் கொன்று விடுகிறது. இத்தகைய சோக முடிவு இவர்களை மக்கள் கண்முன் நாயகர்களாக நிறுத்துகிறது. எனினும் இத்தகைய சோக முடிவு மட்டுமே சமூகக் கதைப்பாடல்களின் ஆக்கத்திற்குக் காரணமாக அமைந்துவிடவில்லை. இவர்களின் சமூக மரபு மீறல் சமூகப் பாதுகாப்பற்ற அடித்தட்டு மக்களைக் கவர்கின்றது. அன்னாரின் முணுமுணுப்புக் குரல்கள் மக்களை ஈர்க்கின்றன. எத்தனையோ பேர் கொல்லப்பட்டுச் சோக முடிவுக்குள்ளாகும் பொழுது இல்லாத பற்று, இவர்கள் சோக முடிவு அடையும் போது இவர்கள் மீது வருவதற்குக் காரணமே அந்த ஈர்ப்பாக இருக்கலாம். தம்மால் செய்ய இயலாத ஒன்றைச் செய்த இம்மரபு மீறலாளர்களை ஏற்றுக் கொள்ளும் மக்கள், இவர்களைக் கதைத் தலைவர்களாக்கிப் பாடல் வடிவில் உயர்த்திப் பிடிக்கின்றனர். பேராசிரியர் வானமாமலை வகைப்படுத்தியுள்ள சிக்கலைக் கருவாகக் கொண்ட சமூகக் கதைப் பாடல்கள் தோன்றியதற்கான காரணம், கி.பி.16,17,18ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய அரசியல், பொருளாதார, சமூகச் சீர்கேடுகளே ஆகும். தமிழகத்தின் தென்பகுதியான மதுரை, நெல்லை, இராமநாதபுரம் பகுதிகளிலேயே இச்சீர்கேடுகள் அதிகமாக நடைபெற்ற காரணத்தால் சமூகக் கதைப்பாடல்களும் இப்பகுதிகளிலேயே அதிக அளவில் தோன்றி மக்களிடையே பரவியுள்ளன எனலாம்.
இனி, சில சமூகக் கதைப்பாடல்களின் கதைச்சுருக்கங்களைக் காணலாம்.
முத்துப்பட்டன் கதை
முத்துப்பட்டன் நெல்லையில் வேதம் ஓதும் அந்தணன். இவன் தன் சகோதர்களுடன் முரண்பட்டு, ஒரு சிற்றரசனிடம் வேலை செய்கிறான். பின்னர், சகோதரர்கள் அவனைக் கூட்டிக்கொண்டு வருகின்றனர். இடையில் பொம்மக்கா, திம்மக்கா என்று சக்கிலியர் குடியில் பிறந்த இரு சகோதரிகளின் பாடலைக் கேட்டு மயங்கி அவர்களை விரும்புகிறான். அண்ணன்களிடம் இதைச் சொல்ல அவர்கள் மறுக்கின்றனர். இவன் கேட்கவில்லை. எனவே இவனைக் கற்குழிக்குள் தள்ளி மூடி விடுகின்றனர். தப்பி வந்த முத்துப்பட்டன், தன் காதலியரின் தந்தை வாலப்பகடையின் கருத்துப்படி குடுமி, பூணூல் நீக்கிச் சக்கிலியர் தொழிலையும் மேற்கொள்கிறான். திருமணம் நடக்கிறது. மலைக்காவல் சக்கிலியனான வாலப்பகடையின் காவல் இடத்தில் பசுக் கூட்டங்களை வன்னியர் கொள்ளை அடிக்கின்றனர் எனக் கேள்விப்பட்ட முத்துப்பட்டன் அவர்களோடு போரிட்டு விரட்டுகிறான். ஆனால் ஒருவன் மட்டும் ஒளிந்திருந்து இவனைக் கொன்று விடுகிறான். சாவதற்கு முன் தன்னை ஒளிந்திருந்து தாக்கியவனைக் கொன்று விட்டு முத்துப்பட்டனும் இறந்துபடுகிறான். முத்துப்பட்டன் இறந்ததை அறிந்த திம்மக்கா, பொம்மக்கா ஆகிய இருவரும் உடன் கட்டை ஏறுகின்றனர்.
மதுரை வீரன் கதை
மதுரை வீரன்
மதுரை வீரன் சக்கிலியர் குலத்தில் தோன்றி, பாளையக்காரர் பொம்மண நாயக்கர் மகளை மணம் செய்து கொள்கிறான். அவளுடன் தப்பி ஓடித் திருச்சி விசயரங்க நாயக்கனிடம் 1000 சேவகர்க்குத் தலைவனாக அமர்கிறான். மதுரை திருமலை நாயக்கர், திருடர்கள் தொல்லையை அடக்க உதவி கேட்ட பொழுது விசயரங்கன் 5000 சேனை வீரர்களுடன் மதுரை வீரனை மதுரைக்கு அனுப்புகிறான்.
மதுரைக்குப் போகும் வழியில் மதுரை வீரன் திருடர்களை அடக்கி ஒழிக்கிறான். மதுரையில் இவனை வரவேற்ற ஆரத்திப் பெண்ணான வெள்ளையம்மாள் மீது மையல் கொண்டு அவளை இரவில் கடத்தும்போது பிடிபடுகிறான். திருமலை மன்னர், இவனுக்கு மாறுகால் மாறு கை வாங்கும் தண்டனை கொடுக்கிறார். இவன் இறந்தபின் பொம்மியும் வெள்ளையம்மாளும் உடன்கட்டை ஏறுகின்றனர்.
சின்னநாடான் கதை
பல குடும்பங்களின் சொத்துக்கு ஒரே ஆண் வாரிசான சின்ன நாடான் அவன் சாதிக்குள்ளேயே பூவணைஞ்சு என்பவளை, சிறுவயதில் மணம் செய்து கொள்கின்றான். இவனுக்குப் பருவ வயது வந்தபின் ஐயம்குட்டி என்ற வண்ணார் குலப்பெண்ணை வைப்பாட்டியாகக் கொள்கிறான். இது உறவினர்களால் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பூவணைஞ்சு பருவ வயது எய்திய பின், அவளுடன் வாழ்ந்து வாரிசு உருவாக்க உறவினர்கள் இவனை வற்புறுத்துகின்றனர். ஆனால் சின்னநாடான் அவளுடன் வாழ மறுத்துத் தன் மனத்துக்கு இயைந்தவளான ஐயம்குட்டியுடன் வாழ்கிறான். பல தடவை கூறியும் மறுக்கவே, உறவினர்கள் ஜமீன்தாரின் இசைவுடன் சின்னநாடானைக் கொன்று விடுகின்றனர். அவனோடு வாழ்ந்த ஐயம்குட்டியும் அவனால் திருமணம் செய்யப்பட்ட பூவணைஞ்சும் உடன் கட்டை ஏறுகின்றனர்.
சின்னத்தம்பி கதை
இக்கதையில் வரும் சின்னத்தம்பி சக்கிலியர் குடியில் பிறந்தவன். அவ்வூரில் பயிர்களை எல்லாம் காட்டு விலங்குகள் அழிக்கவே அவ்வூர் மக்கள் மிகவும் துன்புற்றனர். பயிர்களை அழிக்கும் விலங்குகளைக் காவல்காரர்களான தேவர் இனத்தவராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்நிலையில் வலிமையும் துணிவும் கொண்ட வீரனாக விளங்கிய சின்னத்தம்பி தன் போன்ற இளைஞர்களுடன் சென்று விலங்குகளை வேட்டையாடிக் கொன்று ஒழித்தான். இதனால் அவனது ஆற்றலும் வீரமும் வெளிப்படவே மக்களால் மதிக்கப்படும் தலைவன் ஆனான். அவ்வூர் ஜமீன்தார் இவனது வீரத்தை மெச்சி இவனைத் தன் படைத் தலைவனாக நியமிக்கின்றார். இது தேவர் இனத்தவருக்கும் சக்கிலியருக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துகின்றது. இதன் விளைவாக, இவனை ஒழித்துக்கட்டச் சதி செய்து, புதையல் எடுத்தல், அதற்காக நரபலி கொடுத்தல் என்ற நம்பிக்கையின் பேரால் இவனை வஞ்சித்துக் கொலை செய்து விடுகின்றனர். இவனை மணந்து கொள்ள இருந்த மாமன்மகள் சோணைச்சி இச்செய்தி கேட்டதும் தூக்கிட்டுக் கொண்டு மடிந்தாள்.
தோட்டுக்காரி அம்மன் கதை
நாஞ்சில் நாட்டிலே கோனாண்டி ராசன், கொந்தனப்ப ராசன் என இரு குறுநில மன்னர்கள் கோட்டை கட்டி வாழ்ந்தனர். கோனாண்டியின் தவப்புதல்வி தோட்டுக்காரி மிகவும் அழகானவள். அவள் அழகில் மயங்கிய கொந்தனப்பன் மகன் குமரப்பராசன் அவளையே மணக்கவும் முடிவு செய்தான். தன் தந்தை மூலம் பெண் கேட்டுக் கோனாண்டிக்கு ஓலை அனுப்புகிறான். ஓலையைக் கிழித்தெறிந்த கோனாண்டி அதைக் கொண்டு வந்த தூதனையும் சிறுமைப்படுத்தி அனுப்புகிறான். இதனால் ஆத்திரமடைந்த குமரப்பன் கோனாண்டியைப் பழிவாங்கப் படையுடன் புறப்படுகிறான். குமரப்பனுக்கு வாய்ப்பாகத் தோட்டுக்காரி தன் தோழியருடன் பொய்கையில் நீராடிக் கொண்டிருந்தாள். இது கண்ட குமரப்பன் பொய்கையை முற்றுகையிட்டு அப்பெண்ணைப் பிடித்து வந்து தன் கோட்டையுள் சிறை வைத்தான். இதன் விளைவாகக் கோட்டையர் இருவருக்கும் கடும் போர் நடந்தது. போரில் எஞ்சியவன் குமரப்பன் மட்டுமே. இதனையறிந்த தோட்டுக்காரி சிறையிலிருந்து தப்பிச் சென்று அலைவாய்க்கரை அடைந்தாள். அங்கிருந்த வெள்ளியம்பாறை மீதில் தீ வளர்த்து அதனுள் பாய்ந்தாள். தோட்டுக்காரி தப்பியதை அறிந்து அவளைத் தேடி வந்த குமரப்பன் தோட்டுக்காரி தீப்பாய்ந்த நிகழ்ச்சியைக் கண்டு அவனும் அதே தீயுள் பாய்ந்து மாய்ந்தான். அரனார் அருளால் அவர்கள் முறையே தோட்டுக்காரி அம்மன், குமரப் பெருமாள் என்ற பெயரில் தெய்வங்கள் ஆயினர்.
வெங்கல ராசன் கதை
கேரள அரசன் ஒருவன் நாடார் சாதிப் பெண்ணை விரும்புகிறான். ஆனால் பெண்ணின் தந்தையான வெங்கல ராசன் பெண்ணைத் தர மறுக்கிறான். உடனே கேரள அரசன் அவளை வலிந்து பெற விரும்பிப் படையெடுத்து வந்து வெங்கலராசனின் கோட்டையை முற்றுகையிடுகிறான். அரசனின் மகள் தன் தலையைத் துண்டித்துக் கோட்டைக்கு வெளியே எறிந்து விடும்படி தன் தந்தையிடம் கூறுகிறாள்.
வெங்கலராசனும் அவ்வாறே தன் பெண்ணின் தலையைத் துண்டித்துக் கோட்டைக்கு வெளியே எறிந்து விடுகிறான். கேரள மன்னன் அவள் தலையையும் உடலையும் எடுத்துச் சென்று கோயில் கட்டிக் கொண்டாடுகிறான்.
நல்லதங்காள் கதை
நல்லண்ணன், நல்லதங்காள் என்ற இருவரும் உடன் பிறந்தோராவர். செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நல்லண்ணன் தன் தங்கை நல்லதங்காளை வேறொரு நாட்டானுக்கு மணமுடித்துக் கொடுத்தான். சீதனமாக ஏராளமான பொன்னும் பொருளும் அளித்தான். சில நாட்களில் நல்லதங்காள் குடும்பத்தில் வறுமை சூழ்ந்தது. கணவன் பேச்சையும் கேளாமல் அண்ணனிடம் உதவிபெற விரும்பித் தன் குழந்தைகளோடு வருகின்றாள் நல்லதங்காள். ஆனால் அவளது அண்ணனோ வேட்டைக்குப் போய் விட்டான், அவளது அண்ணி மட்டுமே வீட்டில் இருந்தாள். நல்லண்ணனின் மனைவி நல்லதங்காளையும் அவளது குழந்தைகளையும் கொடுமைக்கு உள்ளாக்குகின்றாள். அவளது கொடுமையைத் தாங்க மாட்டாத நல்லதங்காள் வீட்டை விட்டு வெளியேறிக் காடு சென்று தன் ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி எறிந்து விட்டுத் தானும் குதித்து மாள்கிறாள். வேட்டைக்குச் சென்று திரும்பிய அண்ணன் நடந்ததை அறிந்து தன் மனைவியையும் அவள் சுற்றத்தாரையும் தண்டிக்கிறான். நல்லதங்காளின் கணவனும் நடந்ததைக் கேள்வியுற்று மடிந்து விடுகிறான். இறுதியில் அண்ணனும் உயிரை விடுகின்றான். வறுமை மற்றும் அண்ணியின் கொடுமை காரணமாக இறந்த நல்லதங்காளின் கதையைத் தமிழ்நாடே அறியும். வயதான மற்றும் நடுத்தரப் பெண்களிடையே வரவேற்புப் பெற்ற கதை இது. இன்றும் கிராமத்து மக்களிடையே செல்வாக்குடன் திகழ்ந்து வரும் கதையாகும்.
கௌதல மாடன் கதை
இசுலாமிய இளைஞன் ஒருவன் சக்கிலியப் பெண்ணொருத்திக்கு உதவி செய்து உயிர் நீத்த தியாக வரலாறு இக்கதையாகும். தயிர், வெண்ணெய் விற்று வயிறு வளர்ப்பவள் பூவாயி என்னும் சக்கிலியப் பெண். அவள் ஒருநாள் தயிர் விற்பனைக்காகச் சென்று கொண்டிருந்த பொழுது காமுகன் ஒருவன் அவளைக் கெடுக்க முயல்கிறான். அப்போது அவ்வழிவந்த இசுலாமிய இளைஞன் ஒருவனின் உதவியைப் பூவாயி வேண்டினாள். அவனும் அவளைக் காப்பாற்றினான். சாதி சமயம் பாராமல் நாள்தோறும் அவளைக் காப்பாற்ற அவள் பின்னால் சென்று வந்து கொண்டிருந்தான். ஒருநாள் முன்னர்ப் பூவாயியைக் கெடுக்க வந்த காமுகனே மீண்டும் வந்து கெடுக்க முயல, இசுலாமிய இளைஞன் அவளைக் காப்பாற்ற மூர்க்கமாகப் போரிடுகிறான். போராட்டத்தில் இருவருமே மடிகின்றனர். இசுலாமிய இளைஞனைத் தன் சகோதரனாகக் கருதிய பூவாயி, அவன் மாண்ட துயரம் தாளாமல் தானும் தற்கொலை செய்து கொண்டு மடிந்து போகின்றாள். சாதி சமயங்களைக் கடந்த மனிதாபிமானத்தை இக்கதை உணர்த்துகிறது.
சொத்துரிமை தன் சாதிக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் மட்டுமின்றி, பெண்ணுக்குச் சொத்துரிமை இருக்கக் கூடாது என்பதிலும் நிலவுடைமைச் சிந்தனை அக்கறை கொண்டு இருந்தது. சொத்துரிமை வேண்டி, இழிநிலைக்குள்ளாகி, தன் குழந்தைகளுடன் தன்னை மாய்த்துக் கொண்டவளின் கதையே நல்லதங்காள் கதை ஆகும். பெண்ணே ஆடவனின் சொத்து எனக் கருதப்பட்டாள்.
சோழர் காலக் கல்வெட்டுகள் பலவற்றில், பல பொருள்களோடு பெண்ணையும் சேர்த்தே குறிப்பிடும் பழக்கம் காணப்படுகின்றது. இத்தகைய நிலவுடைமைத் தத்துவப் பெண்ணடிமைக் காலத்தில் பெண்ணுக்குச் சொத்துக் கிடையாது. முற்காலத்தில் தன் உழைப்பினால் சேர்ந்த தன் பிறந்த வீட்டுச் செல்வத்தைக் கொண்டு தனது தற்போதைய வறுமையைப் போக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு தன் அண்ணன் வீட்டிற்கு வருகின்றாள் நல்லதங்காள். ஆயின் திருமணமாகிக் கணவன் வீடு சென்றவளுக்கு அவள் உழைத்த சொத்து என்றாலும் கூட எவ்வித உரிமையும் இல்லை என்ற சிந்தனையில் ஊறிய நல்லதங்காளின் அண்ணி, நல்லதங்காளின் உரிமை விருப்பில் குறுக்கிடுகிறாள். அண்ணனும் வீட்டிலில்லாத நிலையில் அண்ணியை எதிர்க்க இயலாத நல்லதங்காள் தன் குழந்தைகளுடன் கிணற்றில் வீழ்ந்து இறக்கிறாள். நிலவுடைமைச் சிதறல் காலத் தொடக்கத்தில் நிலவுடைமைச் சமூக மதிப்புகள் நெகிழ்கின்ற தன்மையில் நல்லதங்காளின் உணர்வைக் காணலாம். இத்தகைய உணர்வால் அவள் இழிநிலைக்கு உள்ளாக்கப்பட்டுத் தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.
சுவாமிவிளையில் கோட்டை கட்டி வாழ்ந்த குறுநில மன்னனான வெங்கலராசன் கதையிலும் இதே அழிவே ஏற்படுகின்றது. மன்னன் முதல் மக்கள் வரை குலப்பெருமை பேசுவதை மிகச் சிறப்பாக மதித்துள்ளதைக் கதைப்பாடல்கள் விரிவாகக் கூறுகின்றன. இருப்பினும் இத்தகைய சமூகக் கதைப்பாடல்களில் உயர்குலத்தினரை மணந்துகொண்ட தாழ்குலத்தினர்களை ஏதேனும் ஒரு நிலையில் உயர்குலத்தினரோடு ஒப்பாக வைத்துக் காட்டும் முயற்சி உள்ளது. மதுரை வீரன் பொம்மியை மணந்து கொண்டது ஒரு மரபு மீறல். எனினும் மதுரைவீரன் காசி நகரத்துத் துளசிராசாவின் மகனாகக் காட்டப்படுகிறான். பொம்மக்கா, திம்மக்கா என்ற சக்கிலியச் சகோதரிகள் முத்துப்பட்டனை மணந்து கொண்டது ஒரு சமூக மரபு மீறல். எனினும் இவ்விருவரும் சிவனருளால் தோன்றியவர்களாகக் காட்டப்படுகின்றனர். இது உயர்குலத்தினரோடு மண உறவுகொண்ட தாழ்குலத்தினரை ஏதேனும் ஒரு விதத்தில் உயர்குலத்து மனிதரோடு தொடர்புபடுத்திக் காட்டும் முயற்சியாகும். இம்முயற்சி அந்தக் கால மரபு மீறல் சிந்தனையின் பலமும் பலவீனமும் ஆகும். மரபு மீறலும் முணுமுணுப்பும் அதிருப்தியும் தம்மளவில் பலம் பெறாத நிலையில் இதுதான் சாத்தியமாக இருந்திருக்கக் கூடுமோ என்று ஐயப்பட வேண்டி உள்ளது. ஆனாலும் கூட இந்தக் குறைந்தபட்ச அதிருப்தியைக் கூடப் பொறுத்துக் கொள்ள இயலாத நிலவுடைமை வர்க்கம் இவர்களைக் கொன்று விடுகின்றது. ஆயின் இந்த மீறலை ஏற்றுக் கொள்ளும் மக்களால் இத்தலைவர்கள் பாடல் வடிவில் உயர்த்திப் பிடிக்கப்படுகின்றனர்.
நானோ பதிவிரதை நன்மை யறியாமல்
தொட்டென்னை எடுத்துத் தூக்கியே வந்ததினால்
இனியெனக்கு நீ புருஷன் என்பதற்கோர் ஐயமில்லை
என்று கூறுவது அவளுடைய பண்பைப் பறைசாற்றுவதாக அமைகிறது. மதுரை வீரன் மீது வெள்ளையம்மாளுக்குக் காதலும் இல்லை, காமமும் இல்லை. இருப்பினும் மதுரை வீரன் கொல்லப்பட்டு உயிர் துறந்தவுடன் பொம்மியுடன் சேர்ந்து இவளும் உடன்கட்டையேறுகிறாள்.
மங்கிலியப் பெண்கள் எம்மை நகைப்பாரே
வாலைப் பகடை நம்மை இதற்கோ வருந்திப் பெற்றான்
சங்கடத்தைப் பார்ப்பதற்கோ, சண்டாளிகள் போய்வாரோம்
என்று சொல்லி முத்துப்பட்டன் இறந்து கிடக்கும் இடத்திற்கு வருகின்றனர். ஜமீன்தாரும் மனமிளகித் தீப்பாய அனுமதி அளிக்கிறான். இருவரும் உடன்கட்டை ஏறுகின்றனர்.
உற்று நினைத்தாளே ஒருகோடி யோசனையை
பர்த்தாவின் வார்த்தை தள்ளிப் பதறி நடந்தோமே
கணவனிட வார்த்தையது கடந்து நடந்தோமே
எங்கேயோ வானம் இடிந்ததென்று நானிருந்தேன்
தப்பாதே வானம் தலையி லிடிந்த தென்றாள்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பெண்புத்தி யாலேயல்லோ பிழை வந்து நேர்ந்த தென்றாள்
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. ‘பழிகார அண்ணனை நம்பி வந்தேனே, இனியும் உயிரோடு திரும்பினால் ஊரும் உலகமும் சிரிக்கும், செத்து மடிவதே சிறந்தது’ என முடிவு செய்து தன் குழந்தைகள் எழுவரையும் கிணற்றில் தள்ளிவிட்டுத் தானும் வீழ்ந்து மடிகின்றாள். தமிழ்நாட்டுப் பெண்களை மிகப்பெரிய வருத்தத்திற்குள்ளாக்கிய சோகக் கதை இது என்றால் அது மிகையாகாது.
வெங்கலராசன் கதையில் வரும் தலைவியும் இவ்வாறே கேரள அரசன் ஒருவனால் விரும்பப்படுகிறாள். தன்னால் தந்தைக்கும் கேரள மன்னனுக்கும் போர் வருவதை விரும்பாத கதைத்தலைவி தன் தலையைத் துண்டித்துக் கோட்டைக்கு வெளியே எறிந்துவிடும்படி, தன் தந்தையை வேண்டுகிறாள். அவளது தந்தையும் அவ்வாறே செய்கிறான்.
இவ்வாறாக, சமூகக் கதைப்பாடலில் இடம்பெறும் தலைவியர்கள் ஏதேனும் ஒரு காரணத்தினால் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். ஊராரின் ஏளனப்பேச்சிற்கு ஆளாக நேரிடலாம் என்ற காரணம் கருதியே அவர்கள் இவ்வாறு தங்கள் உயிரைப் போக்கிக் கொண்டிருக்கலாம்.
பூவையால் என்னுயிர் பொன்னுலகம் போகுதையா
என்று கதறி மதுரை வீரன் இறைவனை வேண்ட, அவனது அழுகுரலுக்கு இரங்கிய இறைவன்,
கம்பத் தடியில் காத்திருந்து பூசை கொள்வாய்
என்று வரம் கொடுக்கிறார். அது முதல் அவனை மதுரை வீரன் சுவாமி எனத் தெய்வமாக்கி மக்கள் வழிபடுகின்றனர். சின்னத்தம்பி கதையில் வரும் சின்னத்தம்பியும், அவன் இறந்த செய்தி கேட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சின்னத்தம்பி மாமன் மகள் சோணைச்சியும் தெய்வ நிலையடைகின்றனர். கொல்லப்பட்ட சின்னத்தம்பி பாப்பங்குடிக் ‘காட்டாளம்மன்’ அருளால் அத்தெய்வத்திற்குக் காவல் தெய்வம் ஆகின்றனர். தோட்டுக்காரி அம்மன் கதை நாயகியான தோட்டுக்காரி தீயில் பாய்ந்து உயிரை விட அவளைக் காதலித்தவனும் உடன் பாய்ந்து உயிரை விடுகின்றான். இவர்கள் இறைவன் அருளால் தோட்டுக்காரி அம்மை, குமரப்பெருமாள் என்ற பெயரில் தெய்வங்களாயினர்.
நல்லதங்காள் கதையில் இறந்துபோன நல்லதங்காளையும் அவளது குழந்தைகளையும் சிவனும் பார்வதியும் உயிர்ப்பிக்கின்றனர். ஆயின் “செத்தவர் இருப்பது சீமைக்கு ஆகாது” என்று கூறிய நல்லதங்காள் ஓர் ஆசாரியை அழைத்து வரச் செய்து தனக்கென ஒரு கோயில் அமைக்கப் பணித்தாள். ஆண்டுக்கொரு நாள் தமக்கு விழா எடுக்க வேண்டும் என வேண்டிய அவள் தன் பிள்ளைகளுடன் வன்னி மரங்களாக மாறிவிட்டாள். அவளது அண்ணனும் கணவனும் கைலாயம் போய்ச் சேர்கின்றனர். முத்துப்பட்டன் கதையில் முத்துப்பட்டனுடன் அவனுடைய இரு மனைவியரான திம்மக்காவும் பொம்மக்காவும் மாமனாரான வாலப்பகடையும் தெய்வமாக வணங்கப்படுகின்றனர்.
மரபு மீறலும் கேட்போரும்
சமூகக் கதைப்பாடலாசிரியர்கள், சிலரைத் தங்களுடைய கற்பனை ஆற்றலினால் உயிர் மீண்டெழச் செய்கின்றனர். பலரைத் தெய்வங்களாக்கி நிலை பெறச் செய்கின்றனர். இவ்வாறு மீண்டும் உயிர்பெற்றதாகக் கூறுவது உலக நடப்புக்கு மாறானது என்பதைக் கதைப்பாடாலாசிரியர்கள் உணராமல் இல்லை. இருப்பினும் கதை கேட்போரின் ஆறுதலுக்காக இவ்வாறு கூறி அவலத் தணிப்பு செய்ய முயல்கின்றனர். வரக்கூடாத பருவத்தில் முறையற்ற நிலையில் வரும் கொடுமையான சாவிலிருந்து மனித மனத்தை ஆறுதல் படுத்தவே இவ்வாறு இயல்புக்குப் புறம்பான நிகழ்ச்சிகளைக் கதையாசிரியர்கள் புகுத்தியுள்ளனர் என்று கருதலாம்.
“கதையின் உயிர்நாடியே கீழ்ச்சாதியில் பட்டன் மணம் செய்து கொண்டது, அவர்கள் வாழ்க்கையில் இணைந்து ஒன்றுபட்டது, அவர்களது நலனைப் பாதுகாக்க உயிர்விட்டது ஆகியவையே” என்கிறார் பேராசிரியர் வானமாமலை.
“18ஆம் நூற்றாண்டில் நிலவிய அயலார் ஆட்சியின் விளைவாகப் பழைமைச் சாதிமுறைகளைத் தகர்க்கும் புதிய சமுதாய மாற்றம் தலைதூக்க முயன்றதன் முன் அடையாளமாக இப்பட்டன் கதை அமைந்துள்ளதாகக் கருதலாம்” என்று குறிப்பிடுவார், மு.அருணாசலம்.
இதுவரை எடுத்துக்காட்டிய கதைத் தலைவர்களுள் முத்துப்பட்டன் பெருஞ்சிறப்புடையவன். குலச்சிறப்பும் கல்வி நலமும் அரசனிடம் செல்வாக்கும் உள்ளவன். உயர் குலத்தில் பிறந்த முத்துப்பட்டன், தாழ்வான குலத்தில் பிறந்து, உழைத்துப் பிழைக்கும் இளநங்கையரிடம் அழகையும் இனிமையையும் மானிடப் பண்பையும் கண்டான். அவர்களோடு மண உறவு கொள்ள வாலப்பகடையின் நிபந்தனைகள் அனைத்தையும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டான். தனது மனைவியரது உறவினரைத் தனது உறவினராக்கிக் கொண்டான். அவர்களுடைய வாழ்க்கைக்கு வரும் இடையூறுகளைப் போக்கப் போராடினான். சக்கிலியர்களைத் திரட்டிக் கொள்ளைக்காரர்களை விரட்டி, பொதிமாட்டுக்காரர்களுக்குப் பாதுகாப்பு அளித்தான். இதனால் ஏற்பட்ட மோதலில் தான் உயிர் நீத்தான்.
மேலும் பட்டவராயன் கோயிலின் முன்னுள்ள பாறையில் இக்கோயில் தோன்றிய காலம் 999 ஸ்ரீ என்று பொறிக்கப்பட்டுள்ளது. இது கொல்லமாண்டு. சுமார் 150 வருஷங்களுக்கு முன் இக்கோயில் தோன்றியது என விளங்குகிறது. மற்றொரு கல்வெட்டு இக்கோயில் சிங்கம்பட்டியாரால் கட்டப்பட்டதென்று கூறுகிறது. இக்கோயில் கட்டும்முன் இக்கோயிலில் உள்ள சிலைகள், இக்கோயில் இருக்கும் இடத்திற்குச் சுமார் நான்கு மைல் கீழேயுள்ள சுளியமுத்து பட்டவராயன் கோயிலில் இருந்ததாகவும் அது மிகவும் பழமையான கோயில் எனவும் அதுவே ஆதி பட்டவராயன் கோயில் எனவும் கூறுகிறார்கள். இவ்விரண்டு கோயில்களுக்கும் நேர்த்திக் கடனாகச் செருப்புகளைச் சேர்ப்பிக்கின்றார்கள். இது பகடை இனத்தவரின் தொழிலை நினைவூட்டுகின்றது.
குற்றாலக் குறவஞ்சியில் பொதிகை மலைக் குறத்தி தன் நாட்டைப் பற்றிக் கூறும்போது ‘திருக்குற்றால நாதர் தென் ஆரிய நாடு’, ‘கடவுள் ஆரிய நாடெங்கள் நாடே’ என்று வருணிக்கின்றாள். கர்நாடக ராஜாக்கள் சரித்திரத்திலும் இப்பகுதி ஆரிய நாடென்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாயக்க மன்னர் சாசனத்தில் தென்காசி முள்ளிநாட்டின் தென்பால் ஆரிய நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயின் இப்பகுதி கடந்த 350 ஆண்டுகளாகத் திருவனந்தபுரம் அரசர்கள் ஆட்சியில் இருந்து வந்தது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், மதுரைத் தளவாய் விசுவநாத நாயக்கனின் சேனைகளோடு தமிழகம் வந்த சக்கிலியர்கள் அல்லது பகடைகள், தங்களை நரபலியாகப் படைத்த நாயக்கர்களின் பிடியிலிருந்து தப்பித்து நாயக்கர் ஆட்சி பலமாக வேரூன்றாத இந்தப் பகுதியில் வந்து குடியேறியிருக்க வேண்டும்.
மேலும் மலையின் பல பகுதிகள் இக்கதையின் நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்படுத்திப் பெயரிடப்பட்டுள்ளன. பட்டவராயன் கோயிலுக்குக் கிழக்கேயுள்ள இடம் ‘பசுக்கிடைவிளை’ என்றழைக்கப்படுகிறது. இங்கேதான் வாலப்பகடையின் பசுக்கிடை இருந்ததாம். இப்பொழுதும் இங்கே பசுக்கிடை இருக்கிறது. ‘கச்சை கட்டி முடுக்கு’ என்றொரு மலைப்பாதை இருக்கிறது. இங்குதான் வன்னியருக்கும் பட்டவராயனுக்கும் சண்டை நடந்ததென்பர். ‘படுகளப்பாறை’ என்ற பாறையில்தான் பட்டன் இறந்து விழுந்து ஓடைக்கரையில் உருண்டதாகச் சொல்வர். சக்கிலியர்களும் தொட்டியர்களும் வாழ்ந்த இடம் ‘தொட்டியர் வலசை’ என்றழைக்கப்படுகிறது. இவையாவும் முத்துப்பட்டன் கதை உண்மையான கதை என்பதையே வலியுறுத்துகின்றன.
260 ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்ட சிற்றிலக்கியமான குற்றாலக் குறவஞ்சியில்,
செப்பருமலைமேல் தெய்வக் கன்னியர்தான்
ஆரியங்காவா, அருட்சொரிமுத்தே
என்ற அடிகள் இடம் பெற்றுள்ளன. முத்துப்பட்டன் கதையில் வரும் காப்புச் செய்யுளில்,
துட்டரை யடக்குகின்ற சொரிமுத்து ஐயன் வாசல்
பட்டன் மேல் வரவு பாடப் பால முக்கணன் காப்பாமே
என்று இடம் பெற்றுள்ளது. இவ்விரண்டையும் ஒப்பு நோக்குவோம். குற்றாலக் குறவஞ்சி ஆரிய நாட்டையும் சொரிமுத்து என்ற தெய்வத்தையும் குறிக்கிறது. காப்புச் செய்யுளும் சொரி முத்தைய்யன் வாசல் பட்டன் என்று கூறுகிறது. குறவஞ்சி பாடப்படுவதற்கு முன்பேயே சொரிமுத்தையன் கோயிலும் பட்டவராயன் கதையும் புகழ்பெற்றிருந்தன என்பதை உணர முடிகின்றது. சொரி முத்தையன் கோவில் தோன்றிச் சுமார் 400 ஆண்டுகள் இருக்கலாம். எனவே 260 ஆண்டுகளுக்கும் 300 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட அதாவது, கி.பி.1658-ற்கும் 1738-ற்கும் இடைப்பட்ட காலத்தில் முத்துப்பட்டன் கதை நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு ஆய்வாளர்கள் வருகின்றனர்.
பண்புடனே பெண்கேட்கப் பாவனையாய் ஒன்பது பேர
பரியத்துக்கு ஏற்ற பணத்தோடு
திண்ணமும் உப்பு புளி தேங்காயுடன் பழமும்
சேகரமாய்த் தான் வாங்கி வைத்து
என்று மணம் பேசல் ஒரு சடங்கு முறையாக நடத்தப்படுகின்றது. அரசர்கள், தூதன் வாயிலாக ஓலை கொடுத்து அனுப்பித் திருமணப் பேச்சைத் தொடங்கியிருப்பதைத் தோட்டுக்காரி அம்மன் கதை மற்றும் வெங்கலராசன் கதையில் காணலாம்.
அன்பா யும்மகள் தோட்டுக்காரி தன்னை
நல்ல வண்ணம் குமரப்ப ராசர்க்கு
நல்மணம் செய்து தாருமெனச் சொல்லி
உன்னிதமாக நீட்டு மெழுதியே
ஓட்டன் கையினில் நீட்டைக் கொடுத்திட
என, தோட்டுக்காரி அம்மன் கதையில் முறையாகப் பெண் கேட்கும் நிலையைக் காணலாம். இவ்வாறாக, பெற்றோர் மணம் பேசுவது சமூகத்தில் சிறப்பானதாகக் கருதப்பட்டுள்ளது.
பட்டி நிறைந்திருக்கும் பால் பசுவாம் சீதனங்கள்
ஏரி நிறைந்திருக்கும் எருமை மாடாம் சீதனங்கள்
காடு நிறைந்திருக்கும் கருப்பாடாம் சீதனங்கள்
மேட்டுக் கழனி முனைக் கழனி சீதனங்கள்
பள்ளக் கழனி பயிர்க்கழனி சீதனங்கள்
இத்தனை சீதனங்கள் பெற்றாளிளங் கொடியாள்
என்பதோடு என்னென்ன அணிகள் சீதனமாகப் பெற்றாள் என்பதையும் இக்கதைப்பாடல் தெரிவிக்கின்றது.
கோனாண்டி ராசனுக்குக் குழந்தையில்லை. அதற்காக அவனுடைய மனைவி வணங்காத தெய்வமில்லை. குழந்தை வரம் வேண்டித் தவமிருக்கும் கோனாண்டிராசன் மனைவிக்கு ஒரு கனவு தோன்றுகிறது.
மை விழியாள் கண்ணதிலே மாயக்கனாக் காண்பாளாம்
தெய்வலோகப் பொற்கிளிதான் திருமடியில் வரவுங் கண்டாள்
பாம்பரவம் மடியேறிப் படம் விரித்தாடக் கண்டாள்
என்று கனவு கண்டதாகக் கதை சொல்கிறது. பிள்ளைப்பேறு உறுதியாக வாய்க்கும் என்ற நம்பிக்கை கனவின் மூலம் ஏற்படுவதை இங்குக் காணலாம். நல்லதை முன்னறிவிப்புச் செய்யும் கனவுகள் போன்று தீயதை முற்சுட்டும் கனவுகளும் உண்டு. திருமணம் முடிந்தபின் முத்துப்பட்டன் காணுகின்ற கனவு,
நித்திரை தனிலே பொல்லாத சொப்பனம் துர்க்குறியாகவே கண்டானாம்
கருமயிலை காளைகிடைவிட்டோடி கசத்தில் விழுந்திறக்கக் கண்டானாம்
கையிலே கட்டிய காப்ப நூல்தன்னை கறையானரித்திடக் கண்டானாம்
இந்தக் கனவு குறிப்பிடும் செய்திகள் அனைத்தும் தீய நிகழ்ச்சிகளாகும். இவற்றைக் காணின் தீயவை நேரும் என்று உய்த்துணரும் நிலை உள்ளது. கனவை நம்புவது பற்றிய எண்ணம் மக்களுக்கு இந்நிலையில் இருந்ததனால் கதைப்பாடல் இந்த உத்தியை நன்கு பயன்படுத்திக் கதையைப் பின்னியுள்ளதாகக் கருதலாம்.
கனவை நம்புவது போன்றே சகுனம் பார்க்கும் பழக்கமும் மக்களிடையே காணப்படுகின்றது. கனவுகள் வருநிலை உரைப்பன என்ற நம்பிக்கையும் உண்டு. தீய சகுனங்கள் தீமை நடக்கவிருப்பதையும் நல்ல சகுனங்கள் நன்மை நடக்க இருப்பதையும் தெரிவிப்பதாக மக்கள் நம்பினர். நல்லதங்காள் கதைப்பாடலில், வீட்டைவிட்டுத் தன் குழந்தைகளுடன் நல்லதங்காள் புறப்படும் பொழுது பின்வரும் சகுனங்கள் நிகழ்வதாகக் கதைப்பாடல் கூறுகின்றது.
கன்னிகழியாப் பெண் கையில் நெருப்பெடுத்தாள்
வாழாக் குமரியவள் மீளா நெருப்பெடுத்தாள்
வாணியன் கூடையல்லோ வரக்கண்டாள் மங்கையரும்
ஓரி குறுக்காச்சு ஒற்றைப் பாப்பா னெதிரானான்
கூறியுள்ள நிமித்தக் குறிப்புகளைக் காணின் அவற்றுள் பல சாவுச் சடங்குகளுக்கு உரியவை என்பது நன்கு விளங்கும். நல்லதங்காள் இறக்கப் போவது, பின் நடக்க இருப்பது அதனை முன்னறிவிப்பன போன்று சகுனங்கள் அமைகின்றன. சகுனங்கள் என்பன அறிவிப்புக்களே அன்றி ஆற்றலுடையன என்று கூற முடியாது. கதைகளைப் படிப்போர், சகுனங்களைத் தரும் முறையைக் கொண்டு கதை நிகழ்ச்சிகள் இப்படித்தான் நடக்கும் எனச் சிந்தித்துக் காணும் நிலையில் அவை கதைப் பாடல்களில் புகுத்தப் பெற்றுள்ளன.
தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததால் கொல்லப்பட்ட தலைவன் தலைவியர் பின்வந்த சமுதாயத்தினரால் தெய்வங்களாக வணங்கப்படுகின்றனர். பாடப் பகுதியில் விளக்கப் பெற்றுள்ள கதைப்பாடல்களுள் முத்துப்பட்டன் கதைப்பாடல் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இக்கதை உண்மையா, கற்பனையா, எங்கு நடந்தது என்பனவும், அதற்குரிய காலம் இடம், வரலாறு மற்றும் இலக்கியச் சான்றுகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
மேலும் இக்கதைகளின் வாயிலாக அறிய வரும் தமிழ்ச் சமுதாயத்தின் சில பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
பாடம் – 4
புராண, இதிகாசங்களில் காணப்படும் சிறிய கதைத் துணுக்குகளை அடிப்படையாகக் கொண்டவையே பெரும்பாலான புராணக் கதைப் பாடல்கள். கதையின் அமைப்பு, கதைப்பின்னல் முறை, கதையின் முடிவு எல்லாம் பெரும்பாலான புராணக்கதைப் பாடல்களில் ஒரே மாதிரியாக அமைந்து உள்ளன. இங்கு அறிமுகப்படுத்தவிருக்கும் புராணக் கதைப் பாடல்களின் துணைக்கொண்டு புராணக் கதைப்பாடல் வரையறை, பாடுபொருள், பாத்திரங்கள், கதைப் பின்னல் முதலியவற்றைக் காணலாம்.
புராணச் சார்புக் கதைப்பாடல்
இதிகாசங்களில் காணப்படும் ஒரு சிறந்த சிறு நிகழ்ச்சியைக் கருவாகக் கொண்டு பரந்த அளவில் கற்பனை கலந்து பாடலாகப் புனைந்து எழுதப்பட்ட கதைப்பாடல்கள் புராணச் சார்புக் கதைப்பாடல்களாகும். பெரும்பாலான புராணக் கதைப்பாடலின் கதைக் கருக்களே இவற்றுக்கும் மூலக் கருத்துகள் ஆகும். புராணக் கதைப்பாத்திரங்களுடன் யதார்த்தத்தில் உள்ள புவியியல் பகுதிகளும் மன்னர்களும் கற்பனை மனிதர்களும் இவற்றில் இடம் பெறுவது உண்டு.
இவ்விரு வரையறைகளிலிருந்தும் தெரிய வருவது இரண்டிற்கும் அடிப்படைக் கருக்கள் பெரும்பாலும் இதிகாசக் கதைகளே என்பதுதான். இக்காரணங் கருதியே புராணக் கதைப்பாடலும் புராணச் சார்புக் கதைப் பாடலும் ‘புராணக் கதைப்பாடல்’ என்ற பிரிவிற்குள்ளேயே வகைப்படுத்தப் பட்டிருக்கலாம். இந்த அடிப்படையிலேயே இங்கும் பாடம் விரித்துரைக்கப்படுகின்றது.
பவளக் கொடி மாலையின் தொடக்கம் கலிவிருத்தத்தால் ஆன காப்புச் செய்யுளாக உள்ளது.
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
சோக வாரியி னால்வருந் துன்பமும்
போக ஆனை முகவனைப் போற்றுவாம்
(சோகவாரி = துன்பக் கடல்; ஆனை முகவன் = விநாயகர்)
என்ற வரும் முதல்பாடல் இறைக்காப்பை இனிது வேண்டுகிறது.
காப்புப் பாடலைத் தொடர்ந்து விநாயகர் துதி, கலைமகள் துதி, துரோபதை துதி ஆகியவை பாடப் பெறுகின்றன. வருணனைப் பகுதிகள் விரிவாகவும் பலவிதமான சிறப்புச் செய்திகளைத் தாங்கியும் வந்துள்ளன. மின்னொளியாள் குறம் கதைப்பாடலில் வரும் வருணனைப் பகுதி பின்வருமாறு.
தும்பசையத் தேன் சொரியும் சோழன் திருமடந்தை
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
சேற்றால் மடை அடைத்தால் செல்வம் குறையுமென்று
பணத்தால் மடை அடைத்தால் பாசி பிடிக்குமென்று
சோற்றால் மடை அடைக்கும் சோழன் திருமடந்தை
(தும்பு (தும்பி) = வண்டு)
இவ்வருணனைப் பகுதி மிகையாகவும் புதுமையாகவும் இருப்பதைக் காணலாம். இவை கதைப்பாடல்களுக்கு உரிய இயல்புகள் ஆகும். இதே போன்று மதுரை நகர் பற்றியும் விரிவான வருணனை அல்லியரசாணி மாலை கதைப்பாடலிலும் உள்ளது.
பொதுவாகப் புராணக் கதைகளின் தொடக்கம் மக்களைக் கவரும் வண்ணத்தில் அமைந்து காணப்படுகின்றன. அல்லி அரசாணி மாலையின் கதையின் தொடக்கம் அருச்சுனனின் பெருமைகளை விரித்துக் கூறுகின்றது. சான்று :
தாரார் தனஞ்செயனார் தர்மருக்கு நேரிளையோன்
போரானை வென்ற போர் வீமனுக் கிளையோன்
ஆனாலழகு மன்னன் அர்ச்சுன சுவாமியவன்
தோளாலழகன் தொய்வில்லாப் புகழ்வீரன்
மெட்டானவில்லி விசையன் பெருமாள் காண்
என்று அருச்சுனனின் பெருமைகளைத் தொடக்கமாகப் பறை சாற்றுகின்றது கதைப்பாடல். இதுபோன்ற கவர்ச்சியான தொடக்கத்தால் மக்கள் கவரப்படுகின்றனர். கதையைக் கவனிக்கத் தலைப்படுகின்றனர். இதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி எனக் கொள்ள முடியும்.
புராணக் கதைப்பாடல்களின் முடிவும் மங்களகரமாகவே முடிகின்றது. தெய்வநிலைக்கு உயர்த்தப்பட்ட புராணக் கதைப்பாடல் கதைப்பாத்திரங்கள் கதை முடிவில் உயிர் விடுவது இல்லை. எனவே எல்லாப் புராணக் கதைப்பாடல்களும் மங்களமான முடிவையே கொண்டு அமைந்துள்ளன.
கதையை நிறைவு செய்த பின்னர் கதை ஆசிரியர்கள் வாழ்த்துப் பாடல் பாடிச் சேர்த்துள்ள நிலையைப் பெரும்பான்மையான கதைப் பாடல்களில் காண முடிகின்றது. அவ்வாழ்த்துப் பாடலில் எல்லாத் தெய்வங்களும் வாழவேண்டும் என்றும் கதையைக் கேட்டோர், படித்தோர் அனைவரும் சுகவாழ்வு வாழ வேண்டும் என்றும் எல்லாக் கவலைகளும் தீரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். இதனை ‘வாழி பாடுதல்’ என்று கூறுவர்.
இந்தக் கதை தன்னை இவ்வுலகிற் கேட்டவர்கள்
கேட்டோர் கிளை தழைத்துக் கீர்த்தியுடன் தாம்வாழ்க
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி
மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்த்திருப்பார்
சொற்கள் மாறாது இம்மாதிரியான வாழ்த்துகள் பெரும்பாலும் எல்லாக் கதைப்பாடல்களிலும் காணப்படும்.
மகாபாரதத்தில் கதை மதிப்புடைய பல கிளைக் கதைகள் உண்டு. ஒவ்வொன்றும் தம்மளவில் தனித்த கதையாகவும் விளங்கும். மூலக் கதையில் காணப்படும் பல்வேறு திருப்பங்கள், பங்காளிகளுக்கு இடையிலான சொத்துப் பிரிவினையை மையமாகக் கொண்டிருத்தல்; கதை மாந்தர்கள் முழுமையும் கெட்டவன் என்றும் முழுமையும் நல்லவன் என்றும் இறுகலான தன்மையில் இல்லாமல் நல்லதும் கெட்டதும் கலந்த தன்மையில் இருத்தல்; பல்வேறு புத்தி, யுத்தி, சாதுர்யம், குயுக்தி போன்ற முறைகளினால் பிரச்சினைகளைத் தீர்க்க முயலும் கதைப்போக்கு; மிகவும் முக்கியமாகப் பாலியல் மதிப்பு என்பவற்றைக் கூறலாம். இவற்றோடு சேர்த்துப் பாரதக் கதைகளில் வரும் வீர சாகசங்களும் பராக்கிரமங்களும் மாயா ஜாலச் செயல்களும் மக்களைப் பிரமிப்பில் ஆழ்த்தத் துணை செய்கின்றன. மேலும் பாரதக் கதை சகோதரர்களுக்கிடையே ஒற்றுமை வேண்டும் என்பதை எடுத்துக் கூறுகின்றது எனினும், பங்காளிகளுக்கு இடையிலான சொத்துப் பிரிவினை குறித்த முரண்பாட்டையும் வலியுறுத்துகின்றது. இத்தகைய பன்முக மதிப்புகள் இராமாயணக் கதைகளில் இல்லை. இவையே புராணக் கதைப்பாடல்களில் மகாபாரதக் கதைகள் கூடுதலான செல்வாக்கைப் பெற்றிருப்பதற்கான காரணங்கள் என்பதில் தவறில்லை.
எடுத்துக்காட்டு :
அல்லி அரசாணிமாலை, மின்னொளியாள் குறம், ஏணியேற்றம், பவளக்கொடி மாலை முதலிய கதைப்பாடல்களின் கதைச்சுருக்கம் பின்வருமாறு அமையும்.
இந்நிலையில் கிருஷ்ணனின் ஆலோசனையின் படி அல்லி தன் மீது மோகம் கொள்ள வேண்டும் என்பதற்காக அருச்சுனன் மதுரைத் திருக்குளத்தில் மருந்து கலக்கி அவளது பெயரை உரக்கச் சொல்லிக் கொண்டே இருக்கிறான். இதனால் கோபமுற்ற அல்லியின் சேனைப் பெண்கள் அவனைக் கைது செய்து தண்டனை வழங்குகின்றனர். ஆனால் கிருஷ்ணன் உதவியால் அவன் தப்பி விடுகின்றான். அடுத்து ஆண்டி வேடம் புனைந்து அல்லியின் படம் வரைந்து அர்ச்சுனன் மடலூர்கின்றான். பாம்புகளை ஏவி அர்ச்சுனனைக் கொல்ல முயல, கிருஷ்ணன் அருளால் இம்முறையும் அர்ச்சுனன் தப்பி விடுகின்றான். பின்னர் கிருஷ்ணன் பாம்புப் பிடாரன் வேடம் புனைந்து அர்ச்சுனனைப் பாம்பாக்கி அல்லிக்கு வேடிக்கை காட்டியதோடு இந்தப் பாம்பிற்குப் பெண்களைக் கண்டால் பிடிக்கும் என்றும் சொல்லுகிறான். அதனால் அந்தப் பாம்பைத் தன்னோடு வைத்துக் கொள்கிறாள் அல்லி. இரவில் அல்லியின் மீது மூதேவி புகுந்து நித்திரையைக் கொடுக்க, அர்ச்சுனன் தன் சுய உருக்கொண்டு அல்லியோடு உறவு கொள்கிறான். மறுநாள் காலையில் வந்த பிடாரன் பாம்பு உருவில் இருந்த அருச்சுனனை எடுத்துப் போகின்றான். மீண்டும் கிருஷ்ணனும் அருச்சுனனும் முறையே பிராமணத்தியாகவும் பிராமணனாகவும் வேடம் புனைந்து அல்லியின் அரண்மனைக்குள் நுழைகின்றனர். அன்று இரவு அருச்சுனன் எவராலும் அறுக்கவியலாத தாலியை, கிருஷ்ணனிடம் பெற்று அல்லியின் கழுத்தில் கட்டி விட்டுக் கிருஷ்ணனோடு தப்பி விடுகின்றான். காலையில் தனக்கு நிகழ்ந்த கொடுமை கண்டு கொதித்தெழுந்த அல்லி அனைத்துத் தேசங்களிலும் உள்ள ராஜாக்களை வரச்சொல்லி, தனக்குத் தாலி கட்டியது யார் எனக் கண்டறிய, கொதிக்கும் நெய்யில் கைவிடச் சொல்லிச் சோதனை நடத்துகிறாள்.
அஸ்தினாபுரத்திலிருந்து வந்த பீமன் கொதிக்கும் நெய்யில் கைவிடாமல் அதைக் குடித்து விட்டுக் கொப்பரையையும் உருட்டி விட்டுச் செல்கிறான். அதனால் பாண்டவருடன் போரிடச் செல்கின்றாள் அல்லி. பீமனும் கிருஷ்ணனும் அல்லியிடம் தோற்க, சகாதேவன் தந்திரம் செய்து அல்லியைப் புலிக்கூண்டில் அடைக்கிறான். இந்நிலையில் அர்ச்சுனன் நடந்த உண்மையை மற்றவர்கள் முன்னிலையில் எடுத்துக்கூறி நான்கு மாதக் கர்ப்பமாக இருக்கும் அல்லியைத் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமெனக் கேட்கிறான். பாஞ்சாலி, சுபத்திரை, நாககன்னி ஆகியோர் (அர்ச்சுனன் மனைவிமார்) அல்லியிடம் பேசி அவளைத் திருமணத்திற்கு உடன்பட வைக்கின்றனர். அல்லி அர்ச்சுனன் திருமணம் நடந்தபின் அவர்களுக்குப் புலந்திரன் என்ற ஆண்பிள்ளை பிறக்கின்றது. அல்லி மதுரையில் மீளவும் ஆட்சி செலுத்துகின்றாள்.
பவள வனத்தில் பவளக் கொடியின் அழகைக் கேள்விப்பட்ட அருச்சுனன் அவள் மீது காதல் கொள்ள, பவளக் கொடியும் வேட்டை காரணமாகப் பவள வனத்திற்கு வருகிறாள். அந்நிலையில் செத்தவனைப் போல் அருச்சுனன் நடிக்க, கிருஷ்ணன் பெண் வடிவம் கொண்டு அவனைப் பார்த்துப் புலம்ப, இறந்தவன்போல் கிடக்கும் அருச்சுனனின் தோற்றத்தைக் கண்டு இதில் ஏதோ சதி உள்ளது என்றறிந்து யானைச் சங்கிலியால் கட்டச் செய்கின்றாள். கிருஷ்ணன் உதவியால் கட்டுக்கள் அவிழ்கின்றன. மையல் கொண்ட அருச்சுனனை அன்னப் பறவை வடிவம் எடுக்கச் செய்து தன்னை வேடனாக மாற்றிக் கொண்டு அரண்மனைக்குள் நுழைந்து வேடிக்கை காட்டுகிறான் கிருஷ்ணன். பவளக் கொடியும் அன்னத்தைப் பிரியமுடன் வாங்கித் தன் பள்ளியறையில் உள்ள பவளக் கூண்டில் கட்டுகிறாள். இரவில் சுய உருக்கொண்ட அர்ச்சுனன் பவளக் கொடியின் இசைவுடன் அவளைப் புணர்கின்றான். கிருஷ்ணனின் யோசனைப்படி பவளக் கொடிக்குச் சுயம்வரம் நடக்க, கிழப் பிராமணன் வடிவில் வந்து அர்ச்சுனன் கலந்து கொள்கிறான். பவளக் கொடி சுழற்றிய மாலை கிழப் பிராமணன் கழுத்தில் விழுகின்றது, இது கண்டு வருத்தமுற்ற பவளக்கொடியின் காதில் வண்டு வடிவில் வந்து அவனே அருச்சுனன் என்று உண்மையைச் சொல்லிவிடுகிறான். பவளக் கொடியும் மகிழ்ச்சியோடு இருக்கின்றாள்.
ஒன்பது நாட்களுக்குள் பவளத் தேருடன் வருவதாகச் சொல்லிச் சென்ற அருச்சுனன் வராத காரணத்தால் கோபமுற்ற அல்லி தன் படைகளுடன் பவள வனத்திற்கு வருகின்றாள். கிருஷ்ணன் தன் மாயையால் குளவிகளை ஏவி அல்லியின் சேனைகளை அழித்து விடுகின்றான். அல்லி படைகளுடன் வந்ததையறிந்த அர்ச்சுனன் பதறுகிறான். கிருஷ்ணன், தன்னையும் அருச்சுனனையும் மாண்டவர்கள் போலச் செய்து வெட்டியானாக வடிவமெடுத்துத் தருமருக்குச் சாவோலை கொண்டு செல்லும் வழியில் அல்லியைச் சந்திக்கின்றான். ஓலையில் உள்ள செய்தியறிந்து அல்லி பதறுகின்றாள். பவளக் கொடியும் வருகின்றாள். தருமர் முதலானோரும் வந்துவிடுகின்றனர். அல்லியிடமும் சுபத்திரையிடமும் வாக்குத் தவறிய அர்ச்சுனனை ஒன்றும் செய்ய மாட்டோம் என்று உறுதி பெற்று வைத்தியர் வடிவில் வந்த கிருஷ்ணன், மாண்டவன் போல் கிடக்கும் அருச்சுனனை எழுப்புகின்றார். பவளக் கொடி புலந்திரனுக்குப் பவளத் தேர் வழங்க, மாண்ட அல்லியின் சேனைகளைக் கிருஷ்ணன் எழுப்பி விடுகின்றார். எல்லாரும் பவளக் கொடியை விட்டு விட்டுத் தங்கள் நாடுகளுக்குத் திரும்புகின்றனர்.
துரியோதனன், அல்லி குறிப்பிட்ட நாளில் மதுரைக்கு வருகின்றான். சுபத்திராவை அடைவதற்கு முன் இந்த மாய ஏணியில் ஏறிப் புதுமை காண வேண்டுமென அல்லி துரியோதனனுக்குச் சொல்ல, மோக வெறியில் ஏணி மீது துரியோதனனும் ஏறுகின்றான். பத்தாம் படியில் சுபத்திராவின் அழகுப் பதுமையைக் கண்டதும் மிகவும் மோகமுற்று அந்தப் படியில் ஏற, உடனே ஏணி அவனைச் சிக்கெனக் கவ்விக் கொள்கிறது. துரியோதனனின் மோக வெறித்தனத்தைப் பற்றி அல்லி ஒரு கடிதம் எழுதி அதனை அவன் தலையில் செருகி ஏணியைக் காலால் உதைக்கின்றாள்.
ஏணி முதலில் அல்லியின் உறவினர்களான பாண்டியர்களிடம் போய்ச் சேர்ந்தது. அவன் தலையில் உள்ள கடிதத்தைப் படித்துப் பார்த்து விட்டு அவர்கள் ஏணியை உதைக்கின்றனர். அது மீண்டும் அல்லியிடம் வந்து சேருகின்றது. இவ்வாறு ஆதிசேஷன், மேகராசன், போகராசன், சோராம்பூ ராசன், கிருஷ்ணன், பாண்டவர்கள் ஆகியோரிடம் ஏணி சென்று திரும்புகிறது. எல்லாரும் கடித விவரங்களைப் படித்து, துரியோதனனை அவமானப்படுத்துகின்றனர். இறுதியில் ஏணியை அஸ்தினாபுரம் நோக்கி அல்லி தட்டுகிறாள். அங்கு, துரியோதன் மனைவியர் மற்றும் தம்பியர், கர்ணன் ஆகியோர் கண்டு அவமானங் கொள்கின்றனர். கர்ணன் அல்லியிடம் தூதாகச் சென்று அவனை விடுவிக்கக் கோருகின்றான். கர்ணன் மேல் கொண்ட மரியாதையினால் அல்லி துரியோதனனை விடுவிக்கிறாள்.
எனவே, அர்ச்சுனனைக் குறத்தி வேடமிட்டு மின்னொளியாளிடம் குறி சொல்ல அனுப்பினால் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்ற அல்லியின் ஆலோசனைக்குப் பாஞ்சாலி உடன்படுகிறாள். இதைக் கேள்வியுற்ற அர்ச்சுனன் முதலில் மறுத்தாலும் பின் உடன்படுகின்றான். அல்லி அவனுக்குக் குறத்தி வேடமிட்டு மின்னொளியாள் வீடு தவிர வேறு எந்த மனைவியர் வீட்டிற்கும் செல்லக் கூடாதென்று எச்சரித்து அனுப்புகிறாள். மின்னொளியாள் வீட்டிற்குக் குறத்தி வடிவில் வந்த அருச்சுனன், மின்னொளிக்குக் குறி சொல்கிறான். மின்னொளியாள் குறத்தியிடம் புருஷன் வரம் வேண்ட, குறத்தியும் தருகின்றாள். ஆனால் இக்கோலத்தில் இருந்தால் அர்ச்சுனன் வரமாட்டான் எனச் சொல்லி மின்னொளியைத் தானே குளிப்பாட்டி அணிகள் பூட்டி அலங்காரம் செய்கின்றான் குறத்தி வடிவில் வந்த அருச்சுனன். இருவரும் சேர்ந்து ஒரு கலத்தில் உணவருந்துகின்றனர். அரை நாழிகையில் அர்ச்சுனன் வருவானென்று சொல்லிக் குறத்தி மறைகின்றாள். சிறிது நேரத்தில் மின்னொளி முன் அருச்சுனன் நிற்க, குறத்தி வடிவில் வந்தது அர்ச்சுனனே என்பதையறிந்த மின்னொளி அவனுடன் கலக்கின்றாள். அல்லியும் பாஞ்சாலியும் மகிழ்கின்றனர்.
இவை தவிரப் புலந்திரன் களவு மாலை, அபிமன்னன் சுந்தரி மாலை என்ற கதைப்பாடல்களும் மேற்கண்டவற்றோடு தொடர்புடையவையே. அல்லியின் மகனான புலந்திரன், நூற்றுவர் தங்கை துற்சடையின் மகளான கலந்தாரியை மணந்து கொண்டதையும், ஐவர், நூற்றுவரிடையே ஏற்பட்ட பகைமை காரணமாகப் புலந்திரனும் கலந்தாரியும் பிரிந்ததையும், எவரும் அறியாமல் புலந்திரன் கலந்தாரியைக் களவிலே கூடி, கருவுறச் செய்து, பல்வேறு துன்பங்களிலிருந்து மீண்டு இனிதாகப் பிள்ளையைப் பெற்று வாழ்ந்த நிகழ்ச்சியையும் புலந்திரன் களவு மாலை கதைப்பாடல் தெரிவிக்கின்றது.
அபிமன்னன் சுந்தரிமாலை என்ற கதைப்பாடல், அருச்சுனன் மகன் அபிமன்னனும் சுந்தரியும் இளம் வயது முதல் ஒருவரை ஒருவர் விரும்புவதையும், இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட அன்புறவிற்குக் காரணம் அவர்களது பெற்றோர்கள் அவர்கள் பிறக்குமுன்பே செய்து கொண்ட ஒப்பந்தமே என்பதையும், பின்னால் ஏற்பட்ட தடைகளைக் கடந்து அவர்கள் திருமணம் புரிந்து கொண்டதையும் எடுத்துரைக்கின்றது.
இப்பகுதியில் எடுத்துரைக்கப்பட்டவை எல்லாம் மகாபாரதத்தோடு தொடர்புடையவை. இவற்றைப் புராணச் சார்புக் கதைப்பாடல் என்ற பிரிவில் வகைப்படுத்துவர். புராணக் கதைப்பாடல் என்ற வகையில் பஞ்ச பாண்டவர் வனவாசம், தருமர் அஸ்வமேத யாகம், சித்திராபுத்திர நயினார் கதை, சீதா கல்யாணம் போன்றவற்றை வகைப்படுத்துவர்.
ஆண்-பெண் பாத்திரங்கள்
அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு கதைப்பாடல்களும் ஓர் ஆண் ஒரு பெண்ணை அடைய எடுக்கும் முயற்சிகளையும், அவற்றால் ஏற்படும் பெருமை, சிறுமைகளையும் சொல்கின்றன. அல்லி அரசாணி மாலை, பவளக் கொடி மாலை, மின்னொளியாள் குறம் என்பவை அர்ச்சுனனின் காதல் முயற்சிகளையும் அவற்றில் அவன் பெறும் காதல் பரிசுகளையும் குறிப்பிடுகின்றன. ஏணியேற்றம் துரியோதனின் தகாத காதல் முயற்சியையும் அதில் அவன் அடையும் அவமானத்தையும் குறிப்பிடுகின்றது.
நான்கு கதைகளிலும் 3 பெண்களும் (அல்லி, பவளக் கொடி, மின்னொளியாள்) 3 ஆண்களும் (அருச்சுனன், கண்ணன், துரியோதனன்) முதன்மைக் கதைப் பாத்திரங்களாகவும் மற்றையோர் துணைமைக் கதைப் பாத்திரங்களாகவும் வருகின்றனர். அனைத்துக் கதைப்பாடல்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவையே. அதனால் அல்லியும் அருச்சுனனும் முறையே பெண்களுள் முதன்மையானவளாகவும் ஆண்களுள் முதன்மையானவனாகவும் இடம் பெற்றுள்ளனர். இக்காரணம் கொண்டு இவ்விரு பாத்திரங்களையும் பற்றிச் சற்று விரிவாகக் காணலாம்.
வாராத அருச்சுனரை வணங்குவேனோ
என்றும்,
வணங்கின அருச்சுனனை வாவென்று தானழையாள்
என்றும் மதிக்காமல் பேசியதாகப் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன. சூழ்ச்சியால் தன்னைக் கருவுறச் செய்த அருச்சுனனை ஏற்றுக்கொள்ள இறுதி வரையில் முரண்டு பிடிப்பவளைப் போலக் காட்டப்படுகின்றாள். ஆயின் தன் வயிற்றில் அருச்சுனன் குழந்தை வளருகின்றது என்பதனாலும் மணமுடித்த பின்னாலும் தான் பாண்டிய நாட்டை ஆளலாம் என்பதாலும் திருமணத்திற்கு உடன்படுகிறாள். இதிகாசங்களில் மாபெரும் வீரர்களாகச் சித்திரிக்கப்பட்ட பீமன், கிருஷ்ணன் ஆகியோர் கூட அல்லியிடம் தோற்று ஓடுவதாகவும், ஏணியேற்றம் கதையில் துரியோதனன் அல்லியிடம் சவுக்கடி படுவதாகவும் பேசப்படுகின்றனர்.
அருச்சுனனின் பிற மனைவியரைக் கிளி, பூனை என வருணித்துத் தன்னைப் புலி, சிங்கம் என வர்ணித்துக் கொள்ளும் அல்லி, அருச்சுனனின் பிற மனைவியரை விட ஒரு மேலாதிக்கத் தன்மை கொண்டு விளங்குகிறாள்.
அல்லியின் பெண்ணாதிக்கத் தன்மையும் ஒரு வரன்முறைக்குட் பட்டதாகவே உள்ளது. எந்த ஆணுக்கும் அடங்க மறுத்த அல்லி, அருச்சுனனின் மகனுக்குத் தாய் என்ற நிலையில் அருச்சுனனை மணக்கச் சம்மதிக்கிறாள். இதே போன்று பவளக் கொடி மாலையில் அருச்சுனன் இறந்து விட்டான் என்ற செய்தி கேட்டுத் தன் அல்லித் தன்மையை விட்டுவிட்டுப் புலம்புகிறாள்.
புருஷனை நானிழந்து பூமியிலே நிற்பேனோ
. . . . . . . . . . . . . . . .
தீப்பாயந்து போவேனென்று செப்பியழுதாளே
(பவளக்கொடிமாலை)
இவ்விடத்தில் சாதாரணப் பெண்கள் நிலைக்கு வந்து விடுகின்றாள். மகாபாரதத்தில் வரும் பாஞ்சாலி, அதன் கிளைக் கதைகளில் வரும் நளாயினி, தமயந்தி மற்றும் இராமாயணத்தில் வரும் சீதை ஆகியோர் ஆணுக்கு அடங்கியவர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். மேலும் ‘ஆடவனே மகளிர்க்கு உயிர்’ என்று குறிப்பிடும் பண்டைய சங்கப் பாடல் முதற்கொண்டு குறள் போன்றவை வரை இத்தகைய சித்திரிப்பைக் காணலாம். ஆயின் புராணக் கதைப்பாடல்கள் பாடப்பட்ட களத்தையும் காலத்தையும் நோக்கும் பொழுது ‘அல்லி’ பாத்திரப் படைப்பு யதார்த்தமாக இல்லை, என்றாலும் ஓரளவுக்கேனும் ஆணாதிக்கத்தை வெறுப்பவளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது அக்காலத்திய மரபு மீறல் சிந்தனையின் வெளிப்பாடு எனலாம்.
இதிகாச வீரபுருஷனாகப் பேசப்படும் அருச்சுனன் புராணக் கதைப்பாடல்களில் பெண்களின் பாலுணர்வு விருப்பத்தை நிறைவேற்றும் வகை மாதிரிப் (Typical character) பாத்திரமாக வருகின்றான். பலதார மணமுறையின் சின்னமாக விளங்குகிறான் அருச்சுனன். அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துக் கதைகளுமே அருச்சுனனின் காதல் விருப்பத்தையும் பெண்களை அடைய அவன் செய்யும் முயற்சிகளையும் அதற்குத் துணைபோகும் கிருஷ்ணனின் மாயச் செயல்களையும் கூறுகளாகக் கொண்டுள்ளன. பொதுவாக இலக்கியங்கள் பெண்ணின் அழகையும் ஆணின் வீரத்தையும் வருணிக்கும் இயல்புடையன. ஆனால் கதைப் பாடல்களில் பெண்களின் அழகு மட்டுமன்றி அருச்சுனனின் அழகும் வர்ணிக்கப்படுகின்றது.
அழகிலே மதனரடி அரிவையர்க்கு மணவாளர்
அருச்சுனரைப் பார்த்தாலே அருங்களைகள் தீர்ந்து விடும்
(அல்லி அரசாணி மாலை)
இவன் அல்லியைக் கண்டு பயந்து ஓடுபவனாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளான். பவளத்தேர் கொண்டு வரத் தாமதித்த அருச்சுனன் மேல் கோபம் கொண்டு அல்லி அவன் மீது படையெடுத்து வந்த பொழுது,
எங்கே யொளித்து இருப்பேன் காண் மைத்துனரே
மதி மயக்க மாச்சுது மாயவிரே என்ன செய்வேன்
(பவளக்கொடி மாலை)
என்று புலம்பும் அருச்சுனன், மின்னொளியாள் வீட்டிற்குப் போகின்ற வழியில் பல பெண்கள் அவனை அழைத்தும் அல்லிக்குப் பயந்து,
வெட்டத் துணிவாளே வீரியத்தைச் செய்வாளே
கணவனென்றும் பாராளே கண்டித்தும் போட்டிடுவாள்
என்று சொல்லி அல்லி சொன்ன இடத்திற்கு மட்டுமே செல்கின்றவனாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளான். இவனது வீர தீரப் பிரதாபங்கள் எதுவும் கதைப் பாடல்களில் பேசப்படவில்லை.
ஏணியேற்றம் கதையில் வரும் வீரனான துரியோதனனும் அல்லியால் அவமானப்படுத்தப் படுபவனாகவும் அவளிடம் சவுக்கடி பெறுபவனாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளான். இதிகாச நாயகர்களான அருச்சுனனும் துரியோதனனும் பெண் மோகம் கொண்டு அலைபவர்களாகவும் அவர்களை அடைவதற்குக் குறுக்கு வழியில் முயற்சி செய்பவர்களாகவும் கீழான முறையில் புராணக் கதைப்பாடல்களில் காட்டப்பட்டுள்ளனர். கதைப் பாத்திரங்களைவிட, கதைகளுக்கே அதிக முக்கியத்துவத்தைப் புராணக் கதைப்பாடகர்கள் தருவதால் கதைப் பாத்திரங்களைச் சிறந்த மனிதர்களாகக் காட்டத் தவறிவிட்டனர் எனலாம்.
குழந்தைச் செல்வம் வாய்க்காத சேராம்பூராஜன் குழந்தை வேண்டி, பலவிதமான விரதங்கள் மேற்கொண்டு இறைவனை வேண்டுகிறார். அப்பொழுது முழுமுதற் கடவுளான சிவபெருமான் தோன்றிப் பிள்ளை இல்லாததற்குக் காரணங்கள் யாவை என்பதனைப் பின்வருமாறு விளக்குகிறார்.
கூலி குறைத்தவர்கள் குறைமரக்கால் போட்டவர்கள்
அங்காடிக் கூடையை அதிகவிலை இட்டவர்கள்
பட்டரை நெல்லுதனில் பதரைக் கலந்தவர்கள்
குளமடைத்துக் குருவிக் கூண்டைக் கலைத்தவர்கள்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . நீங்கள்
ஏது தவம் பண்ணினாலும் எதினாலும் பிள்ளையில்லை
என்பது சிவன் வாக்கு. நற்செயலும் நல்லறமும் கொண்டவர்களே குழந்தைப் பாக்கியம் பெறத் தகுதியானவர்கள். தனக்கு ஏற்பட்டுள்ள குறையை எண்ணிப் பார்க்கும் போது தான் செய்த குறைகள் நினைவுக்கு வந்து அவை திருத்தப்பட வேண்டும் என்பது இங்குக் குறிப்பாகச் சுட்டப்படுகிறது. இறைக் கூற்றாக இது உணர்த்தப்படுவதினால் இதைப் பற்றி மக்கள் எந்த அளவுக்குச் சிறப்பாகச் சிந்தித்துள்ளனர் என்பதை அறியலாம். குழந்தை பிறக்க வேண்டும் என்று கருதிப் பலவிதமான தானதர்மங்களைச் செய்ததையும் பலவிதமான விரதங்கள் மேற்கொண்டதையும் தோட்டுக்காரி அம்மன் கதை, பவளக்கொடி மாலை ஆகிய கதைப் பாடல்களில் காணலாம். பவளக் கொடி மாலையில் சேராம்பூராஜன் பிள்ளைப்பேறு வேண்டிச் செய்த விரத முறை பின்வருமாறு:
இலையிலே சாதமுண்டா வென்னதவமென்று சொல்லி
தரையையவர் மெழுகிச் சாதங்களுண்டார்கள்
கடுமையான வாழ்வை மேற்கொண்டு தங்களை வருத்தினால் பழிபாவங்கள் கரைந்து குழந்தைப்பேறு கிடைக்கும் என்று தமிழர்கள் நம்பியிருக்கிறார்கள். குழந்தைச் செல்வத்தை எந்த அளவுக்கு மக்கள் மதித்துள்ளனர் என்பது இவ்வெடுத்துக் காட்டால் நன்கு விளங்கும். தவப்பயனால் கிடைத்ததை உவப்புடன் பேணி உயர்வாக மதித்துக் காத்தல் வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்துவதற்காகவும், நீண்ட நேரம் கதையை நீட்டுவதற்கு உதவும் உத்திமுறையாகவும் கதைப்பாடல் ஆசிரியர்கள் குழந்தைப் பிறப்பைப் பற்றி மிக விரிவாகவும் சுவையாகவும் எழுதிப் பாடியுள்ளனர் எனலாம்.
ஆணைச் சார்ந்தே பெண் தன்னுரிமை இழந்து வாழவேண்டும் என்ற நிலையில்தான் அன்றைய சமுதாய அமைப்பு இருந்தது. ஆயின் கால வளர்ச்சியால் ஏற்பட்ட சிந்தனை மலர்ச்சியால் பலவிதமான மாற்றங்கள் சமுதாயத்தில் பின்னர்த் தோன்றியுள்ளன. அவ்வாறு தோன்றியதன் அடையாளமாகப் புராணக் கதைப்பாடலில் இடம்பெறும் அல்லி பாத்திரப் படைப்பைக் கூறலாம். ஆணைச் சார்ந்து வாழாதவளாகப் படைக்கப்பட்டாலும் அருச்சுனன் இறந்து விட்டதாக அறிந்ததும்
புருஷனை நானிழந்து பூமியிலே நிற்பேனோ
. . . . . . . . . . . . . . . .
தீப்பாய்ந்து போவேனென்று செப்பியழுதாளே
(பவளக்கொடிமாலை)
என்று கதைப்பாடலாசிரியர் அல்லி புலம்புவதாகக் கூறுவதிலிருந்து சாதாரணப் பெண்கள் நிலைக்கு அவள் வந்து விடுவதைக் காணலாம். பெண்கள் பெரும்பாலும் சமுதாயச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்களாக விளங்க, ஆண்கள் அதற்கு மறுதலையாக நடந்து கொள்வதையும் புராணக் கதைப்பாடல்கள் விளக்குகின்றன.
சமுதாயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து வாழும் வழக்கம் இருந்துள்ளதை அருச்சுனன் கதைப் பாத்திரம் மூலம் அறியலாம். அது பலவகையில் சரியானது அன்று என்பதே கதைப் பாடல்கள் உணர்த்தும் கருத்து. இக்கருத்தைப் பல பெண்களை மணக்க விரும்பும் இதிகாசப் பாத்திரமான அருச்சுனன் மூலம் உணர்த்துவதோடு அவனுக்கு ஏற்படும் இன்னல்களையும் இழிவையும் கதைப்பாடல்கள் விளக்கிச் செல்கின்றன. ஏற்கனவே சுபத்திரை, அல்லி முதலிய பெண்களை மணந்த அருச்சுனன் பவளக் கொடியை எப்பாடுபட்டாவது மணக்க வேண்டும் என்று கூறும் போது
ஏன் காணும் வாள்விசயா இந்தமதி யுந்தனுக்கு
தோள்மாலை போட்டதொரு தோளிமார் தங்களிலும்
பாஞ்சாலன் பெற்ற பெண்ணைப் பத்தினியை மாலையிட்டீர்
அவளிலும் அதியழகோ ஆரணங்கு இவளழகு
. . . . . . . . . . . . . . . .
வேண்டாங்காண் வாள்விசயா வெறுத்துவிடும் இவளாசை
என்று கிருஷ்ணன் அறிவுறுத்துவது சிந்திக்கத்தக்கதாக அமைகிறது. ஒருத்தியை மனைவியாக ஏற்று அவளைத் தவிர வேறு பெண்ணை நாடாமல் ஒட்டிய உறவுடன் நின்று வாழும் ஆண்களே இல்லறமும் நல்லின்பமும் காக்கும் ஆண்மையாளர் என்பது கதைப்பாடல்கள் காட்டும் உண்மை. கணவன், வீட்டை விட்டு வெளியே செல்வதைக் கண்டதும் ஐயுற்று அமைதியிழக்கும் அவல நிலையில் பெண்கள் சிலர் வாழ்கிறார்கள். அந்த அளவுக்கு ஒழுக்கம் குன்றிய ஆண்கள் இருக்கிறார்கள். இந்த உண்மையை அருச்சுனன் வாழ்வைக் கொண்டு பவளக் கொடி மாலை ஆசிரியர் உணர்த்த விரும்புகிறார். பெண் பித்தனான அருச்சுனன் ஒரு முக்கியமான செயல் செய்வதற்காக வெளியே புறப்பட,
எவளுடைய வாசல் செல்ல
எழுந்தீர் காணெழில் விஜயா
என்று அவனது மனைவி கேட்பதோடு, அவன் சொன்ன எந்த
விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் சில அடையாளங்களை அவனது உடம்பின் மேல் பதித்து
குறியுங் குறையாமல் கொப்பெனவே வாரும்
என்று சொல்லி அனுப்புகிறாள். இத்தகைய வாழ்வில் எந்த அளவுக்கு அன்பும் ஆர்வமும் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
பல பெண்களை மணந்த அருச்சுனன், மீண்டும் மீண்டும் மணமாகாத பெண்களைக் காணும் பொழுது அவர்களது அழகில் மயங்கி அவர்களை அடைய முற்படுவதைப் பல புராணக் கதைப்பாடல்கள் வாயிலாக அறிந்தோம். இதே போன்று மணமான துரியோதனன் செயல்படுகிறான். ஆனால் அது தவறான செயலாகக் கருதித் தண்டிக்கப்படுகிறான். காரணம் அருச்சுனன் மணமாகாத பெண்ணை அடைய விரும்ப, துரியோதனனோ அருச்சுனனின் மனைவியான சுபத்திரையை அடைய விரும்புகிறான். அதனால் தண்டிக்கப்படுவதை ஏணியேற்றம் கதைப் பாடல் வழி அறிய முடிகின்றது. சமுதாயம் இதனை அனுமதிக்கவில்லை என்பதையே இக்கதைப் பாடல் அறிவுறுத்துகின்றது.
மணமான ஓர் ஆடவன் மணமாகாத ஒரு பெண்ணைக் காதலிப்பதை அந்த ஆடவனின் மனைவியரே ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் மணமான ஓர் ஆடவன் வேறொருவனுக்கு மணம் முடித்த ஒரு பெண்ணின் மீது விருப்பம் கொள்ளுதலைச் சமூகத்தில் உள்ள எவரும் ஒப்புக் கொள்ளவில்லை. மணமான பெண்விஷயத்தில் கற்பு பேணப்படுகிறது. இதனைப் பாரம்பரிய இலக்கியங்கள் சொல்வதைவிட அழுத்தமாகவும் ஜனரஞ்சமாகவும் புராணக் கதைப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. ஏணியேற்றம் கதைப்பாடல் சமுதாயச் சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டது.
வரலாற்றுக் கதைப்பாடல்களிலும், சமுதாயக் கதைப்பாடல்களிலும், இடம்பெறாத ஒன்று புராணக் கதைப்பாடலில் இலக்கிய யதார்த்தமாகக் காணப்படுகின்றது. பண்டைய இலக்கியங்களில் பாலுணர்வு வர்ணனைக்கு ஒரு வரம்பு இருக்கிறது. இலை மறை காயாகப் பேசப்பட்ட இச்செய்திகள் புராணக் கதைப்பாடலில் வெட்ட வெளியில் விரிந்து கிடக்கும் பாதையைப் போலக் காட்டப்படுகின்றன. ஆண் பாத்திரத்தின் அழகும் ஆண் மீது பெண்கள் கொள்ளும் காதல் உணர்வும் வெளிப்படையாகவே பேசப்படுகின்றன. இவ்வாறு வெளிப்படுத்துவதில்ஓர் உள்ளார்ந்த உளவியல் மகிழ்வு கதை சொல்பவருக்கும் கேட்பவர்களுக்கும் இருந்திருக்கக் கூடும்.
புராணக் கதைகளும் புராணக் கதைப்பாடல்களும் ஒரே பாடுபொருளைக் கொண்டிருப்பினும் பாடுகளத்தால் இரண்டும் வேறுபடுகின்றன. பாடமாக இடம் பெற்றுள்ள கதைப்பாடல்கள் அனைத்தும் கிராமங்களையே பாடுகளமாகக் கொண்டுள்ளன.
புராணங்களில் வரும் கதை நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் மட்டுமே கருவாகக் கொண்டு விளங்குவது புராணக் கதைப்பாடல் என்றும், புராண இதிகாச நிகழ்வுகளைக் கருவாகக் கொண்டு பரந்த அளவில் கற்பனை கலந்து பாடப்படுவது புராணச் சார்புக் கதைப்பாடல் என்றும் வரையறை செய்தாலும் இரண்டிற்கும் பாடுபொருளாக அமைவன புராண மற்றும் இராமாயண, மகாபாரதத்தில் இடம்பெறும் சிறு சிறு நிகழ்வுகளே. இவற்றுள் இராமாயணத்தை விட, பாரதக் கதைகளே மிகுந்த அளவில் கதைப்பாடலாகப் பாடப் பெற்றுள்ளன. இக்காரணங்களால் புராணம் மற்றும் புராணச் சார்புக் கதைப்பாடல்கள் ஆகிய இரு வகைகளும் ‘புராணக் கதைப்பாடல்’ என்று ஒரு கூறாக வகைப்படுத்தி இப்பாடம் எடுத்துச் சொல்லியுள்ளது.
அமைப்பைப் பொறுத்தவரையில் அனைத்துக் கதைப்பாடல்களும் பொதுவாக ஒரே புற அமைப்புடையனவே. இவை இறைவணக்கம், காப்பு, அவையடக்கம், நாட்டு வருணனை, நகர வருணனை, கதை, வாழி என்னும் அமைப்பில் அமைந்து உள்ளன.
கதைப் பாத்திரங்கள் இதிகாசங்களிலும் புராணங்களிலும் இடம் பெறுவது போன்று புராணக் கதைப்பாடலில் சித்திரிக்கப்படுவது இல்லை. பாத்திரங்களைவிடக் கதைநிகழ்வுக்கே புராணக் கதைப்பாடல் முக்கியத்துவம் தருகின்றது. இதனைப் புராணக் கதைப்பாடல்களில் இடம் பெறும் அருச்சுனன், துரியோதனன் நிலை கொண்டு உணரலாம்.
அறிமுகப்படுத்தப்பட்ட புராணக் கதைப்பாடல்கள் அனைத்திலும் அல்லியும் அருச்சுனனும் இடம் பெற்றுள்ளனர். அல்லி ஆண் வர்க்கச் சார்பை மறுப்பவளாக, ஆணவம் மிக்கவளாகச் சித்திரிக்கப்பட, இதிகாச நாயகர்களான அருச்சுனனும் துரியோதனனும் பெண் மோகம் கொண்டு அலைபவர்களாகக் கீழான நிலையில் சித்திரிக்கப்பட்டுள்ளனர்.
வாழ்வு பல படிநிலைகளைக் கொண்டதாக உள்ளது. அவற்றுள் ஒன்றாக இடம்பெறும் குழந்தைப் பிறப்பு மற்றும் ஆண், பெண் உறவுநிலை ஆகிய முறைகள் கதைப்பாடலில் இடம்பெற்று, கதையை வளர்க்கத் துணை செய்கின்றன. மேலும் அறவாழ்க்கை மேற்கொண்டோருக்கே குழந்தைச் செல்வம் வாய்க்கும் என்றும் ஒருவன் ஒருத்தி என்ற நிலையே இல்லறம் சிறக்க வழி என்றும் அது மாறுபடும் போது என்னென்ன இன்னல்களைச் சமுதாயத்தில் சந்திக்க நேரிடும் என்றும் புராணக் கதைப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன.
பாடம் – 5
கந்தனுக்கு முன் பிறந்த நல்ல கணபதியே முன் நடவாய்
(கட்ட பொம்மன் கதைப்பாடல்)
என்று விநாயகருக்கும்,
மதனதுரை கானு கதை பாட வரந்தர வேணுமடி மதுரை மீனாட்சி
(கான் சாகிபு சண்டை)
என்று மீனாட்சிக்கும்,
தாயே சரஸ்வதியே தப்பாமல் என் நாவில் நீயே குடியிருப்பாய்
(வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல்)
என்று சரஸ்வதிக்கும் காப்புப் பாடுவர். காப்போடு கதையைத் தொடங்குவதால் பாடுவோருக்கும் கேட்போருக்கும் நலம் விளையும் என்று நம்புகின்றனர்.
அணைஞ்ச பெருமாள் புலவரெந்தன் குருநாதன்
அவருடைய மலர்ப்பாதம் அடியேன் என்றும் மறவேன்
(தோட்டுக்காரி அம்மன் கதை)
மகாபாரதக் கதையை வகுத்துரைத்த சாஸ்திரத்தில்
பூபால ரைவர் பெருந்துரி யோதிரனும்
வென்று புவியாண்டு விஷ்ணுபதம் சேர்ந்த கதை
ஒன்று மறியாதான் உரைத்தேன் புவிமீதில்
(வைகுந்த அம்மானை)
கூறப்போகும் கதையின் குறிப்பைத் தரும் ஆசிரியர் தன் பெயரையோ தன் குறிப்பையோ வெளிப்படுத்தாது, அவையஞ்சி அடக்கமாக ஒதுங்கி நிற்பதை மேலே காட்டிய பாடலடிகள் சுட்டுகின்றன.
மைக்குழல் தோட்டுக்காரி
மடிந்து பின் பிறந்த வாறும்
செப்பமாய்ப் புவியோர் கேட்கச்
செப்புவேன் புலனுள் ளோர்க்கே
(தோட்டுக்காரி அம்மன் கதை)
என்பது போன்று பாடுவார்கள்.
இந்தக்கதை தன்னை இவ்வுலகிற் கேட்டவர்கள்
கேட்டோர் கிளை தழைத்துக் கீர்த்தியுடன் தாம் வாழ்க
(பவளக் கொடி மாலை)
காப்புத் தொடங்கிக் கதைப்பாடல் முடிவு வரை சொல்லப்பட்ட கூறுகள், அனைத்துக் கதைப்பாடல்களிலும் கதை தொடங்குவதற்கு முன்னும் கதை முடிந்த பின்னும் பின்பற்றப்படும் அமைப்புகளாகும். இதுபோன்ற அமைப்பைச் சிற்றிலக்கிய வகைமைகளுள் இடம்பெறும் பள்ளு, குறவஞ்சி இலக்கியங்களிலும் காணலாம். பள்ளு, குறவஞ்சி இலக்கியங்களின் தாக்கம் காரணமாகக் கதைப்பாடல்களிலும் இக்கூறுகள் இடம் பெற்றிருக்கலாம்.
தேசிங்குராசன் கதையை வியப்பூட்டும் நிகழ்ச்சியைக் கொண்டு தொடங்கியுள்ளதைக் காணலாம். அவனுடைய வீரக்கதையைத் தொடங்கும் போது,
தெய்வலோகத்தில் பிறந்த குதிரை
திசை தப்பி வருகுது பார்
என்று கூறப்படுகிறது. இத்தகைய குதிரையை யாரால் அடக்க முடியும் என்ற வினா எழுகிறது.
தெய்வ வரத்தினால் பிறந்த பிள்ளை
வந்து ஏறவேணும்
பூமிபாரம் தீர்க்க வந்தவன்
இப்புரவி ஏறவேணும்
தேசிங்குராசன் ஒருவனால் மட்டுமே இந்தக் குதிரையை அடக்க முடியும் என்ற கருத்தை அறிவித்துக் கதைத் தலைவனை ஆசிரியர் அறிமுகப்படுத்துகின்றார். கதையின் முக்கிய நோக்கத்துக்குப் பொருத்தமாகவும் மக்களின் ஆவலைத் தூண்டுவதற்காகவும் தொடக்கம் இவ்வாறு அமைக்கப்படுகிறது.
கதைப்பாடல்களில் பெரும்பாலும் கொல்லப்பட்டவர்களின் உயிர் ஆவியுருவில் வரம்பெற்றுத் தெய்வமாகிப் பூசை பெறுவதே காட்டப்படுகிறது. ஆரவல்லி சூரவல்லி கதையில் அல்லிராஜனும், கோவலன் கதையில் கோவலனும், நல்லதங்காள் கதையில் நல்லதங்காளும் அவளுடைய ஏழு குழந்தைகளும் இறந்த பின்னர் அதிசய ஆற்றலால் மீண்டும் உயிர்பெற்று உடம்போடு எழுவதைக் காட்டுகின்றனர்.
கதைப்பாடலாசிரியர்கள் அவல முடிவுகளைத் தங்களால் இயன்ற அளவு மாற்ற முயல்கிறார்கள். இறந்தவர்கள் உயிர்பெற்று வாழ்வது முறையில்லை என்பதை அவர்கள் உணராமல் இல்லை. இருப்பினும் கதை கேட்போரின் ஆறுதலுக்காகச் செத்தவர்களை உயிர்த்தெழுப்பி அவலத் தணிப்புச் செய்ய முயற்சி செய்கின்றனர். இதனை
ஆண்டாண்டு தோறும் அழுதாலும் பூமியிலே
மாண்டிறந்து போனவர்கள் வருவதில்லை
என்ற ஆரவல்லி சூரவல்லி கதையில் வரும் பாடலடிகள் மெய்ப்பிக்கின்றன.
அப்போது பஞ்சவர்ணம் ஆண்டவனார் ஏது செய்தார்
(காத்தவராயன் கதை)
அப்போது தாதியர்கள் அரிவையர்கள் ஏது செய்தார்
(காத்தவராயன் கதை)
இச்சொல் மக்களின் கவனத்தைப் பாடுபவர் பக்கம் ஈர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. ‘அப்போது’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதுபோல் ‘இப்படி’ என்ற சொல்லையும் பாடகர் பயன்படுத்துவர்.
இப்படியாகவே இவர்கள் இருக்கையில்
இப்படிக்குத் தானுமங்கே இருக்கின்ற வேளையில்
(காத்தவராயன் கதை)
இச்சொல், முன்சொன்ன கதையை நினைவுபடுத்தப் பயன்படும். அடுக்கிச் சொல்லும் முறையும் இக் கதைப்பாடலாசிரியர்களிடம் காணப்படுகின்றது.
கதைப்பாடல்களின் பொது அமைப்பு இவ்வாறு ஒருமுறையோடு காணப்படுகிறது. கதைக்குக் கதை பொருளிலும் கருத்திலும் வேறுபாடு காணப்படும். ஆயினும் அமைப்புக் கூறுகளில் ஓர் ஒற்றுமை இயல்பாக இருப்பதைக் காணலாம்.
சிட்டு பறவாது சிறுகுருவி நாடாது
வக்கா பறவாது வனக்குருவி நாடாது
பறவை பறவாது பட்சிகள் நாடாது
காகம் பறவாது கருங்குருவி நாடாது
(காத்தவராய சுவாமி கதை)
இந்தப் பாடற் பகுதியின் அமைப்பு கூர்ந்து நோக்குவதற்கு உரியது. இரண்டாவது சீர் ஒரு சொல்லானும் நான்காவது சீர்கள் இன்னொரு சொல்லானும் மாற்றமின்றி வர, முதற் சீர்களுக்கு மூன்றாம் சீர் மோனை உடன்பாட்டுடன் வந்துள்ளன. பொருள் அழுத்தமும் ஒலிநயமும் உள்ள பாடற்பகுதியாக இப்பாடல் அமைந்துள்ளது. இவ்வாறு அமையும் பாடற்பகுதிகள் கதைப்பாடல்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இது மொழியின் நடையின் சிறப்புக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
பாடல் வரிகளுக்கு இடையே தனிச்சொற்கள் இடம்பெற்று, பாடல்களுக்குள் இடத்தை நிரப்புவதுடன் கருத்துத் தெளிவுக்கும் வழி வகுக்கின்றன.
பொன்னும் நவமணியும் பூமியும் காணிகளும் – அவன்
சாகிற மட்டுமன்றிச் சந்ததியும் அனுபவிக்கத்
தந்தான் மிகமகிழ்ந்தாள் தம்பிமார் அறுவரையும் – அங்கே
மறைவாயிருங்களென்று வாழ்வரசி ஏவினானே.
(ஏணியேற்றம்)
இரண்டு தனிச் சொற்கள் ஆசிரியருக்குக் கைகொடுத்து உதவியிருக்கும் முறையைச் சிந்தித்துப் பார்க்கலாம்.
எதிர் எதிராகப் போரிடக் காத்திருக்கும் அல்லியையும் நீன்முகனையும் உவமைகள் வாயிலாக விளக்கிக் காட்டும் பாங்கைக் காணலாம்.
எலியைக் கண்ட பூனைபோல் எழும்பினாள் அல்லியம்மாள்
பசுவைக் கண்ட புலியைப்போல் பாய்ந்தானே நீன்முகனும்
யானைகண்ட சிங்கம்போல் அல்லி எழும்பினாளே
கொக்கைக் கண்ட ராஜாளிபோல் குதிக்கிறான் நீன்முகனும்
(அல்லி அரசாணிமாலை)
இவ்வாறு எதிரெதிர் அடுக்காய் இணையிணையாக உவமைகள் வருவது சுவையான ஒன்றாகும்.
உவமை விளக்கம்
கதைப்பாடல்களில் உவமையைக் கூறி அதற்குரிய விளக்கம் கூறும் முறையும் உள்ளது.
கற்றாழை மேலே கல்லுவண்டி வந்தாக்கால்
கல்லுக்குச் சேதமோ கற்றாழைக்குச் சேதமோ
கல்லுவண்டிக்கு ஒக்குமையா காண்டீபன் பெற்றபிள்ளை
கற்றாழைக்கு ஒக்குமையா கண்ணில்லான் பெற்றபிள்ளை
(அபிமன்னன் சுந்தரி மாலை)
தேர்ப்பாகன் என்றுன்னைச் சேராதிருந்தேனே
இடையனார் கொண்ட கொம்பாய் ஏங்கியிருந்தேனே
காட்டில் காய்ந்த நிலவானேன் கர்த்தாவே
கானலிலே பெய்ந்த மழையானேன் பர்த்தாவே
(கர்ண மகராஜன் சண்டை)
தன் தவற்றைத் தானே உணர்ந்து மனம்மாறி முன்செய்த பிழையின் இழப்பைச் சிறப்பாக விளக்க இந்த அடுக்கு உருவகங்கள் நன்கு பயன்பட்டுள்ளன.
கான்சாகிபுவைப் பற்றி நவாப் முகம்மதலி கூறுவதில் பழமொழி ஒரு மாற்றத்துடன் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
வேலிக்கு நான்போட்ட முள்ளு இப்போ
காலுக்குப் பகையாக வந்ததே எனக்கு
(கான் சாகிபு சண்டை)
எவ்வித மாற்றமும் இன்றி,
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவதுண்டோ…
(கர்ண மகராஜன் கதை)
என்றும் பழமொழிகள் இடம்பெற்றுள்ளன.
ஒலிக்குறிப்புச் சொற்கள்
கதைப் பாடல்களில் ஒலிக் குறிப்புச் சொற்கள் நல்ல முறையில் பொருளை விளக்குவனவாகவும் மக்களுடைய ஆர்வத்தைப் பெருக்குவனவாகவும் உள்ளன. படைகள் போருக்குப் புறப்படும் காட்சியை விளக்கும் முறையைப் பார்க்கலாம்.
கணகணகண கணகணகணவென்று கத்திகள் மின்னுதுபார்
பளபளபள பளபளபளவென்று பட்டாக்கள் மின்னுதுபார்
தடதடதட தடதடதடவென்று குதிரைகள் நடக்குதுபார்
(தேசிங்குராசன் கதை)
கண்முன் காட்சியைக் காட்ட விரும்பும் கதையாசிரியரின் அரிய திறனாக இது காணப்படுகிறது.
பேச்சு வழக்குச் சொற்கள்
கதைப் பாடல்களில் பேச்சு வழக்கிலுள்ள சொற்களையும் மிகப் பொருத்தமாக ஆசிரியர்கள் பயன்படுத்தியுள்ளனர். அவை எளிதாகப் பொருளை விளங்கிக் கொள்வதற்குத் துணையாக அமைகின்றன.
சூரிய வனந்தாண்டிச் சுருக்காய் வருகிறாராம்
இடி விழுவான் சொன்ன சொல்லை
சொரணை கெட்ட பாதகனே
போன்ற பேச்சுவழக்குத் தொடர்களைக் காணலாம்.
வேற்று மொழிச் சொற்கள்
மக்கள் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தும் வேற்றுமொழிச் சொற்கள் கதைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. இசுலாமியக் கதைப் பாடல்களில் அரபுச் சொற்களும் ஆங்கிலக் கம்பெனியுடன் தொடர்புபடும் வரலாற்றுக் கதைப் பாடல்களில் ஆங்கிலச் சொற்களும் வந்துள்ளன. அவை இயல்பாகவும் பொருள் சிறப்புடனும் பயன்படுத்தப் பட்டிருப்பதனால் குறையாகத் தோன்றவில்லை.
சொல்லடுக்கு
ஒன்றைப் பெருமைப் படுத்துவதற்காக ஒரே சொல்லை இருமுறை அடுக்கும் மரபு உள்ளது.
பட்டணமாம் பட்டணமாம் காவிரிப்பூம் பட்டணமாம்
பட்டணமாம் பட்டணமாம் மதுராபுரிப் பட்டணமாம்
(கோவலன் கதை)
என்று கூறுவதைக் காணலாம். இந்தமுறை ஓர் ஒப்புக்கொள்ளப்பட்ட அமைப்புப் போன்று தோன்றுகிறது.
கூற விரும்பியதற்கு அழுத்தமும் பாடலுக்கு ஒலி அழகும் கொடுத்து, கதை விறுவிறுப்புக்கு வழிவகுக்கச் சில தொடர்கள் இரட்டித்துப் பாடப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.
அம்மா கேளும் அம்மா கேளும் என்னைப் பெற்ற தாயே
இதனை அடுத்து,
போய்விட்டு வாடா போய்விட்டு வாடா புத்தியுள்ள மகனே
(தேசிங்குராசன் கதை)
மகன், தாய் இருவரின் உணர்வும் உள்ளமும் இத்தொடர்களால் நன்கு விளங்கும்.
ஒரு காட்சியை உணர்ச்சியும் உண்மையும் புலப்படுமாறு விளக்குவதற்குச் சொற்களை அடுக்கிப் பாடியுள்ளனர். மாவுத்துக்காரனின் போராற்றலை விளக்கும் முறையைக் காணலாம்.
புலியைப் போலே புகுந்தானையா மோவுத்துக் காரனும்
தலைதலையாய் உருட்டிப்போடுகிறான் மோவுத்துக்காரனும்
சப்பைசப்பையாய் கிழித்துப் போடுகிறான் மோவுத்துக்காரனும்
(தேசிங்குராசன் கதை)
வியப்பு உணர்வினை விளக்க வியப்புச்சொல் ஒன்று இருமுறை அடுக்கி வருவதைப் பால நாகம்மாள் கதையில் பார்க்கலாம்.
அக்காடி அக்காடி அதிசயமாய்த் தோணுதடி
மக்கள் தொடர்புச் சாதனம்
கடந்த நூற்றாண்டுகளைப் பொறுத்தவரை கதைப்பாடல்கள் ஒரு நல்ல முறையான மக்கள் தொடர்புச் சாதனமாக (Mass Media) விளங்கி வந்துள்ளன. கதைப்பாடல்கள் மக்களின் சிறந்த பொழுது போக்காக இருந்து வந்துள்ளன. மக்களுக்காக அறிவுத்துறை நிறுவிய அருமையான பொழுது போக்காகக் கதைப் பாடல்களை மதிக்கலாம். குறிப்பாக, நாட்டுப்புறப் பெண்களில் மிகுதியானவர்களுக்கு இக்கதைப் பாடல்கள் பொழுதுபோக்காகவும் அறிவு விளக்கச் சாதனமாகவும் அமைந்துள்ளன.
உந்து கருவி
வில்லுப்பாட்டு, உடுக்கடிப் பாட்டு, கணியான் பாட்டு முதலிய பல கலைகள் தோன்ற, கதைப் பாடல் உந்து ஆற்றலாக விளங்கியது எனலாம்.
ஊடகம்
சமூக மாற்றங்களை எளிதில் புகுத்த முடியாத காலக் கட்டத்தில் கதைப்பாடல்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்கியுள்ளன. ஆகவே இக் கதைப்பாடல்களைச் சாதி சமயச் சீர்திருத்தங்களைச் செய்யத் தகுந்த ஊடகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
பதிவுச் சாதனம்
பாமர மக்களின் வாழ்க்கை முறைகளையும் இயல்புகளையும் பதிவு செய்துவைத்துள்ள சாதனம் கதைப் பாடல் எனலாம். காலங் காலமாக மாறிவரும் பண்பாட்டு இயல்புகளைக் காலமாற்றத்திற்குத் தக்கவாறு அறிவிக்கும் கருவி கதைப்பாடல் என்றும் கொள்ளலாம்.
அறிவுறுத்தும் கருவி
புராணங்களைப் பற்றிய அறிவு, உலக வாழ்வு பற்றிய ஞானம், பக்தியின் சிறப்பு, அறம் தொடர்பான சிந்தனை முதலியவற்றை நாட்டுப்புற மக்களுக்கு அறிவுறுத்திய சிறப்பினையுடையவை கதைப் பாடல்கள்.
பாமர மக்களுக்குப் பொழுது போக்காக இருந்த கதைப்பாடல் இன்று அறிஞர்களுக்கு ஆய்வுக்களமாகவும் அமைந்துள்ளது எனலாம்.
கதைப்பாடல் காப்பு அல்லது வழிபாடு, வணக்கம், வரலாறு, வாழ்த்து என நான்கு பிரிவுகளைக் கொண்டு அமைந்திருக்கும். கதைப்பாடலைத் தொடங்குமுன் பாடப்படுவது காப்பு ஆகும். அடுத்து இடம் பெறும் ‘வணக்கம்’ பகுதி சபைக்குத் தெரிவிப்பது அல்லது குருவிற்குத் தெரிவிப்பதாகும். வரலாறு என்பது வருணனையோடும் பின்னிணைப்போடும் கூறப்படும் கதையாகும். இறுதியில் கதையின் கதாபாத்திரங்களும் கதையைக் கேட்டவர்களும் ‘பல்லாண்டு வாழ்க’ என்று வாழ்த்தும் வாழ்த்தாகும். இங்குக் கூறப்பட்டுள்ள அமைப்பு முறை சில கதைப்பாடல்களில் முன் பின்னாகவும் அமைந்திருக்கும்.
கதைப்பாடலின் மொழி நடையின் மூலம் பாடலாசிரியர், மக்களைக் கவருவதற்காகக் கையாண்டுள்ள உத்திகளை அறியலாம். உவமைகள், உருவகங்கள், சொல்லடுக்கு, ஒலிக்குறிப்புச் சொற்கள், பழமொழிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, சுவை குறையாமல் மக்களுக்குக் கதை எடுத்துரைக்கப்படுகின்றது.
கதைப்பாடல்கள், கிராமப்புற மக்கள் மத்தியில் ஒரு மக்கள் தொடர்புச் சாதனமாக, ஒரு பொழுது போக்கும் கலையாகப் பயன்பட்டுள்ளது. மக்களுக்குப் பக்தி, புராணம் பற்றிய அறிவு, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் முதலியவற்றை அறிவுறுத்தும் கருவியாகவும் செயல்பட்டுள்ளது. தொலைக்காட்சியின் வரவிற்குப்பின் கதைப்பாடல்களைக் கேட்கும் வழக்கம் குறைந்தாலும், இக்கலை இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
பாடம் – 6
உணர்விலும் உடலமைப்பிலும் ஒரே மாதிரியாக விளங்கும் மனிதன், பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் வேறுபட்டுக் காணப்படுவதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது சாதிப் பிரிவினையே ஆகும். சாதி, இனப் பாகுபாட்டால் சமூகத்தில் விளைந்த சீர்கேடுகளைக் கதைப்பாடல்கள் தம் எல்லைக்கு உட்பட்டு விளக்கிக் காட்ட முயல்கின்றன. சாதிகளுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டு அவற்றின் பயனாகப் பலவிதமான சிக்கல்களும் போராட்டங்களும் ஏற்பட்டுள்ளதை விளக்கிக் கூறுகின்றன.
காத்தவராயன் கதைப்பாடலின் தலைவன் காத்தவராயன் தாழ்ந்த இனத்தவன். அவன் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவளான ஆரியமாலையைக் கண்டு மயங்கி அவளை மணக்க விரும்புகிறான். ஆரியமாலையும் அவ்வாறே விரும்புகிறாள். ஆரியமாலையை அவளைச் சார்ந்தோர் கட்டுக்காவலில் அடக்கிக் காக்க முற்படுகின்றனர். காத்தவராயனோ அக்காவலை உடைக்க முற்படுகின்றான். மந்திர, தந்திர வேலைகள் நடக்கின்றன. முடிவில் காத்தவராயன் கழுவிலேற்றிக் கொல்லப்படுகின்றான். இயற்கையான காதலுணர்வும் செயற்கையான சாதிப் பிரிவுணர்வும் முட்டி மோதி முரண்படும் போது நேர்கின்ற நிகழ்வுகள் இறுதியில் கொலையில் முடிவதை இக்கதைப்பாடலில் காண முடிகின்றது.
சின்னநாடான் கதையில் நாடார் குலத்தலைவன் ஒருவன் நாவிதப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சி விளக்கப்பட்டுள்ளது. நாவிதப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை, நாடார்களை ஆளும் உரிமையுடன் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அந்தக் குடும்பத்தையே கொன்று அழித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் ஏற்பட்ட கடுங்கொந்தளிப்பையும் பரபரப்பையும் கதைப்பாடல் விளக்கிக் காட்டுகின்றது.
முத்துப்பட்டன் கதையில் வரும் முத்துப்பட்டன் செருப்புத் தைப்பவனான வாலப்பகடையின் பெண்களைக் கண்டு காதலிக்கிறான். உயர் சாதியைச் சேர்ந்தவனான முத்துப்பட்டனை மணக்க வாலப்பகடையின் பெண்கள் விரும்பவில்லை. பகடையும் மறுக்கிறான். பூணூலை அறுத்தெறிந்துவிட்டு, மாடறுத்துத் தோலுரித்துச் செருப்புத் தைப்பவனாக மாறினால், தன் பெண்களை மணந்து கொள்ளலாம் எனப் பகடை கூறுகிறான். முத்துப்பட்டன் அவ்வாறே செய்து வாலப்பகடையின் பெண்களை மணந்து கொள்கின்றான்.
இந்தக் கதை முடிவுகளிலிருந்து பல உண்மைகளை உணரலாம். சாதி விட்டுச் சாதி மணஉறவு கொள்வதை அக்காலத்தில் பெருங்குறையாகக் கருதியுள்ளனர். பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் பிறர் அனுமதிப்பதே இல்லை. அத்தகைய வேற்றுச் சாதிக் கலப்புமணங்களைப் பொதுக் குறையாகக் கருதி அந்தச் சாதியினர் அனைவரும் கூட்டாக இணைந்து எதிர்த்துள்ளனர். சாதிக் காழ்ப்பு, ஒன்றுமறியாக் குழந்தையையும் இரக்கமின்றிக் கொல்லும் அளவிற்கு வலிமையுற்று இருந்தது. கீழ்ச்சாதிக் கலப்பு எந்த நிலையிலும் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை என்பதையே இது எடுத்துரைக்கின்றது. இந்த எண்ணம் இருப்பவர்கள் தங்களுக்குக் கீழான சாதியினரை எவ்வளவு தாழ்வாக மதித்திருப்பர் என்று எண்ணிப் பார்க்கலாம்.
வந்த ஒட்டனை ஏசிப் பறைந்தனன்
பறையாத பறைவார்த்தை பேசியே
பயலாரடா பெண் கேட்டு வந்தவன்
(தோட்டுக்காரி அம்மன் கதை)
என்று ஒட்டனை ஏசியும்,
எனக்கு இவன் சரிதானோடா
என்று கூறியும் பெண் கொடுக்க மறுக்கிறான். படைபலம், வெற்றிச்சிறப்பு, குலநலம் ஆகியவற்றில் கொந்தளப்பூ ராசன் தான் பெண் கொடுக்கத் தகுதி இல்லாதவன் என்று கோபத்துடன் பேசுகிறான். சிற்றரசர் இருவருக்குள்ளே இருந்த ஏற்ற இறக்கத்தை இக்கதைப் பாடல் கூறுகின்றது.
வள்ளியூரை ஆண்ட குலசேகர பாண்டியனுடைய படத்தைப் பார்த்து, கன்னடியன் என்னும் அரசனின் மகள் காதல் கொள்கிறாள். ஆகையினால் கன்னடியன் வள்ளியூர்க் கோட்டைக்கு மணத்தூது அனுப்புகிறான். தூதனைக் கண்ட குலசேகரபாண்டியன் கோபத்தால் துடித்துத் தனக்குப் பெண் தரக் கன்னடியன் தகுதியுள்ளவனா என்று கேட்கிறான். குலத்தாழ்ச்சி எடுத்துக் காட்டப்படுகிறது. கன்னடியன் படைபலத்தால் வலியவன். இருந்தும் குலத்தால் தான் உயர்ந்தவன் எனக் கருதிய குலசேகரன் பெண்ணெடுக்க மறுத்து விடுவதை, கன்னடியன் படைப்போர் கதைப்பாடலில் காணலாம்.
அரசர்கள் மத்தியிலும் குலப்பெருமை காணும் போக்கு இருந்துள்ளதை இதன் மூலம் அறிகிறோம். இவ்வாறு குலப்பெருமை பேசிய நாடுகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிந்ததைப் பற்றிக் கதைப்பாடல்கள் விரிவாகக் கூறுகின்றன.
சாதிகளுக்குத் தனித்தனியே பண்பாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள், செயல் திறன்கள், கலைத்திறன்கள் முதலிய பண்புகள் வேறுபாடுகளுடன், நிலைத்த தன்மைகளுடன் ஏற்பட்டுள்ளன. ஒரு சாதியினர் இன்ன தன்மையுடன் இன்னின்ன திறமையுடன்தான் இருப்பர் என்று நினைக்கும் அளவுக்கு அவர்களிடம் அவை இணைந்துள்ளன. இதனைக் கதைப்பாடல்கள் குறிப்புகளாகக் காட்டிச் செல்கின்றன.
காடு மலையுள்ள செடிகளிலே
காட்டுடன் ஆடு மேய்த்து மேய்த்து
———————–
பாடுபல பட்டு தண்ணீரூட்டி
பரமக் கோனாரும் பார்த்தடைத்து
பரமக் கோனாரும் பார்த்தடைத்து
(வெங்கலராசன் கதை)
என்று கூறுவதில் கோனார் எனப்படும் ஆயர்கள் ஆடுமாடுகளை மேய்த்துக் காவல் காத்தமை அறியப்படுகிறது.
வில்லெடுத் துயிர்வதை செய்கின்ற
வேடர்க் கஞ்சிப் புறாவந் தொதுங்கிட
(வெங்கலராசன் கதை)
என்ற குறிப்பின் வழி வேட்டையாடுவது வேடரின் தொழில் என்பதை அறியலாம்.
பாலன் வயது பதினா றதாக
வெள்ளிக் கோல் கையிலெடுத்து சரக்கும்
விரைவுடன் கொண்டுமே வாணிபம் செய்து
(வெங்கலராசன் கதை)
என்று சொல்வதில் வணிகர் தங்களுடைய பதினாறு வயதுப் பருவத்திலேயே தராசுங் கையுமாக வாணிபம் செய்யப் புறப்பட்டு விடுவதை அறியலாம்.
சாதிகளுக்கென்று தனித்துவமான சில முறைகள் இருப்பதையும் கதைப்பாடல்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. பரத்தையர் உறவு பலருக்கு அக்காலக் கட்டத்தில் இருந்தது. அத்தைகைய உறவு கொண்டு பரத்தையருடன் போனவரைத் திருப்பி அழைக்கும் பழக்கத்தை வணிகர்கள் ஏற்றுக்கொள்வதில்லை கோவலனை அழைக்க வேண்டும் என்று விரும்பிய கண்ணகியிடம் வேசியுடன் போனவரை வீட்டுக்கு நாமழைத்தால் வர்த்தகர்கள் நம்மை மதியார்கள் நம்மையொத்த அவ்வாறு அழைப்பது நமது சாதி முறையன்று என்று முதிய பெண்கள் கூறுவதாக, கோவலன் கதை எடுத்துரைக்கின்றது
வண்ணார் குலவழக்கம் ஒன்றினை மெச்சும் பெருமாள் பாண்டியன் கதை சுட்டிச் செல்கிறது. சமுதாயத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவன் மெச்சும் பெருமாள். அவனை வளர்த்த வளர்ப்புத் தாய் வண்ணார் சாதியைச் சேர்ந்தவள். வளர்ப்புத் தாயின் மகன் திருமணத்தில் மெச்சும் பெருமாள் கலந்து கொள்கிறான். ஆனால் அந்த மணமகளின் அழகில் தன்னைப் பறிகொடுக்கிறான். அவளை அடையவேண்டும் என்ற ஆசையை வளர்ப்புத்தாயிடம் வெளியிடுகின்றான். வளர்ப்பு மகனின் ஆசையைக் கேட்ட வண்ணாத்தி இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவித்து இறுதியில் மருமகளிடம் தெரிவிக்கின்றாள். மருமகள் வண்ணார் குலமுறை வழக்கத்தை எடுத்துக் கூறுகிறாள்.
நம்முடைய சாதியிலே
நாம் தவறி நடந்தோமானால்
சாதி விலக்கி வைப்பர்
தரக் குறைவாய்ப் பேசிடுவர்
நன்மை தீமைக்குச் சேரமாட்டார்
நம்மிடத்தில் சம்மந்தம் செய்யமாட்டார்
(மெச்சும் பெருமாள் பாண்டியன் கதை)
வண்ணார் குலத்தில் பெண்கள் ஒழுக்கம் தவறுவதைப் பெருந்தவறாகக் கருதியுள்ளார் என்பதை இப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. குசலவர் சுவாமி கதையில் ஒழுக்கம் தவறிய வண்ணாத்தியைக் கணவன் கண்டிக்கும் நிகழ்ச்சி வருகிறது
ஏது சொல்வான் அந்த மாட வண்ணான்
இராமனும் அங்கே ஒழுங்கோ பெண்ணே
இராவணன் கொண்டு போன இலட்சுமியை
இராமனும் கூட்டி வந்திருக்கிறானே
இராமனைப் போன்று தான் ஏற்றுக்கொள்வது இல்லை என்று உறுதியுடன் மறுத்து விடுகிறான், இதிலிருந்து அந்தக் குல இயல்பைக் கண்டறியலாம்,
இவ்வாறு சில சாதியினரிடம் காணப்பெற்ற தனித்தன்மையுடைய சிறப்பியல்புகளைக் கதைப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவை தமிழ்ச் சமூக நடைமுறைகளைப் பற்றி நன்கு தெரிவிக்கும் வாயில்களாகத் தோன்றுகின்றன.
சிவ வணக்கம் தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பிற தெய்வ வழிபாடு இருந்த போதிலும் சிவனையே பெருங்கடவுளாக மக்கள் மதித்து வந்தனர். சைவ சித்தாந்தம், தத்துவம் பற்றிய அறிவோ எண்ணமோ இன்றிச் சிவனை வணங்கி வந்துள்ளனர். இத்தைகைய வழிபாட்டு முறையைச் சைவம் என்று கூறுவதைக் காட்டிலும் சிவ வணக்கம் என்று கூறுவதே பொருத்தமாகும்.
மாணிக்க வாசகர் அம்மானை மாணிக்கவாசகரின் சைவசமய வாழ்க்கை நெறிகள் பற்றி விளக்குகிறது மாணிக்க வாசகர் சிறுவராக இருந்த போது சிவனை வணங்க வேண்டும் என்று அவருடைய தாய் கூறுவதாகக் கதைப்பாடல் உரைக்கிறது.
மாடுதனி லேறும் மாதவர் தன்னருளால்
வேறு வினை வராமல் வெற்றி கொள்வாய் என்மகனே
என்பது தாயின் அறிவுரை. அருச்சுனனுடைய மனைவியான மின்னொளியாள் சிவபூசை செய்ததாக மின்னொளியாள் குறம் குறிப்பிட்டுக் காட்டுகிறது. பிச்சைக்காரன் கதையில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமியைப் பற்றிய குறிப்பு உள்ளது.
பிச்சைக்காரன் அவரை வணங்கி வரம் பெறுகிறான். சிவனைத் தலைமைக் கடவுளாகப் பல கதைப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.
எனக்குத் தெய்வபலம் இல்லையடா சமேதாருமாரே
என்கைப் பலங்கொண்டு போறேனடா சமேதாருமாரே
கன்னியாகுமாரி மாவட்டத்துப் பறக்கை என்னும் ஊரிலுள்ள மதுசூதனப் பெருமாள் கோயிலில் ஆராட்டுத்திருவிழா நடந்ததைப் பற்றி வெங்கலராசன் கதை குறிப்பிடுகிறது. திருமால் வழிபாடு தமிழகத்தில் இருந்ததற்கு இவை சான்றுகளாக மட்டுமே அமைகின்றன. வைணவ சமயம் என்று கூறும் அளவிற்குச் செய்திகள் கதைப் பாடல்களில் அதிகம் இல்லை.
பள்ளி கொண்ட பெருமாள்
தத்துவ விளக்கங்கள் நிறைந்த சைவத்தைப் பற்றியோ வைணவத்தைப் பற்றியோ சற்றும் கவலைப்படாமல், சாதாரண நிலையில் சிவனைப் பற்றியும் திருமாலைப் பற்றியும் செய்திகளைக் கூறிக் கொண்டு கதைப்பாடல்கள் செல்கின்றன. சமயவுணர்வுகள் பற்றி ஆழமான சிந்தனைகள் கதைப் பாடல் ஆசிரியர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.
கடவுளால் உலகுக்குப் படைத்து அனுப்பப்பட்டதாகச் சில தெய்வங்களை வணங்குகின்றனர். சுடலை மாடன் முதலிய தெய்வங்களை இந்த நிலையில் கருதலாம். இத்தகைய தெய்வங்கள் இறைவனிடம் வரம் வாங்கி அரிய ஆற்றலுடன் உலகுக்கு வருவதாக நம்பினர். இவர்கள் அருள் செய்வதுடன் தங்களைப் பணியாதவர்களை அழிக்கவும் செய்வர் என்ற நம்பிக்கை மக்களிடம் வேரூன்றி இருந்தது. ஆகையினால் இந்தத் தெய்வங்களை அச்சத்துடன் வணங்கி வந்தனர். சுடலைமாடன் கதையில் வரும் பகுதி இந்த உணர்வை விளக்கும்.
சுடலைமாடன் பயிரழிவு செய்கிறான். அதனைக் கண்டவர் அவனிடம் வேண்டிப் பணிகின்றனர்.
எங்களுடைய இடமதிலே அட்டாதுட்டம்
செய்ய வேண்டாம்
ஆதாளிகள் போடவேண்டாம் உங்களுக்கு
நாங்களுமே ஊட்டுப் போட்டுத்
தருவோம் என்றார்
இயக்கி அம்மன் கதையில் வரும் இயக்கி, மானுடப் பிறவியில் தன்னைப் பழிசெய்தவனைப் பாழாக்கிக் கொல்கிறாள். அவனுக்குத் துணை நின்றவர்களையும் அழித்து இறுதியில் தன் தமையனுடன் சிவனிடம் வந்து வரம் வாங்குகிறாள். அழிவு செய்யும் ஆற்றலுடன் வரம் வாங்கி, தெய்வமாக வந்தவர்கள் என்று மக்கள் இவர்களை நம்புகின்றனர். அதனால் அச்சம் காரணமாக இவர்களை வணங்கி இவர்களுக்குப் படையல் செய்கின்றனர். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது வசதியுள்ளபோதோ இத்தெய்வங்களை வணங்கிச் சாந்தப்படுத்த முனைகின்றனர். இதுவே அம்மன் கொடை, சுடலைமாடன் கொடை என்று வழங்கப்படுகிறது.
இடைக்காலத்தில் இசுலாமிய சமயம் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது. இசுலாமிய அறிஞர்கள் சமய உண்மைகள் நிறைந்த பலவகையான இலக்கிய நூல்களைத் தமிழில் படைத்துள்ளனர். சிலர் கதைப்பாடல்களும் எழுதியிருக்கிறார்கள். அவற்றுள் முக்கியமாகக் கருதத்தக்கவை மலுக்குமுலுக்கு ராஜன் கதை, தமீமன்சாரிமாலை, ஒசியத்துக் கதை, செய்தத்துப்படைப் போர், நபுசுபடைப் போர், மூட்டை சுமந்த முடி மன்னர் முதலியவையாகும். கான் சாகிபு சண்டை என்பது ஒரு இசுலாமிய வீரனைப் பற்றிய கதை. இதில் சமயவுணர்வு அதிகம் இல்லை.
ஒசியத்துக்கதை இசுலாமிய சமய உணர்வுடன் அறக்கருத்துகளை மிகுதியாகத் தந்து சிறக்கிறது. செய்தத்துப்படைப்போர், நபுசு படைப் போர் ஆகியவை இசுலாமியர் சமயவுணர்வுடன் நடத்திய போர்களைப் பற்றிச் சுவையாக எடுத்துக் கூறுவன. மூட்டை சுமந்த முடி மன்னர் கதை பல நீதிகளைச் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது.
அரசன் ஆண்டியாவதும் ஆண்டி அரசனாவதும் இறைவனின் அருளால் நடக்கக் கூடியவை. ஆனால் இறைவனின் படைப்பில் அனைவரும் சமமானவர்கள்; சகோதரர்கள். இசுலாம் உணர்த்தும் இந்த உண்மையைத் தம் வாழ்வின் மூலம் விளக்கி, எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் இசுலாமியப் பேரரசின் ஆட்சித் தலைவராக (கலீபா) இருந்த உமறு. இவர் மாறுவேடத்தில் தம் தலைநகரை வலம் வந்த போது, அங்கு வந்த ஒரு வெளியூர்ப் பயணியின் மூட்டையை ஒரு கூலி ஆள்போலச் சுமந்து உதவிய வரலாற்று நிகழ்ச்சியைக் கூறும் கதைதான் மூட்டை சுமந்த முடிமன்னர் கதை ஆகும். தீயவை எவ்வளவுதான் வலியவையாக இருந்தாலும் இறைவன் அருளால் அழிக்கப்படும் என்பதை மலுக்குமுலுக்குராஜன் கதை விளக்கிக் காட்டுகிறது, கொடுமையே உருவான மலுக்குராஜன் வெட்டப்பட்டு இறப்பதை இந்தக் கதை கூறுகிறது.
நெட்டுடலாய் வளர்ந்த
நீள்முடி மலுக்கு ராஜன்
வெட்டுப்பட் டிறந்தவாறை
விளம்பிடப் புவியின் மீதில்
என்று கதையின் பொருள் குறிப்பாகச் சொல்லப்படுகிறது
சமயக் கருத்துகளைச் சற்றும் மாறுபடாது சரியான முறையில் தருவதிலும் இசுலாமியத் தமிழ் நூலாசிரியர் தவறவில்லை.
அவர்களுள் சிறந்தவர் காயல்பட்டினம் ஷெய்கு லெப்பை ஆவார். இவரால் இயற்றப்பட்ட தமீமன்சாரி மாலை நபிகள் நாயகத்தின் பெருமைகளைத் தமிழ் உலகிற்கு விளக்கும் கதைப் பாடலாகும். இக்கதை தமிழ்நாட்டு இயல்பை மனத்தில் கொண்டே இயற்றப்பட்டுள்ளது, வறுமைநிலை பற்றிய ஒரு விளக்கம்
உடுக்கக் கலையுமில்லை உண்டிருக்கச் சோறுமில்லை
படுக்கவொரு பாயுமில்லை பாராளும் மன்னவரே
என்ற பாடற் பொருளை எந்தத் தமிழனும் தனக்குப் புரியாத அந்நியத் தன்மையுடைய விளக்கம் என்று நினைக்கவே மாட்டான். இசுலாமியக் கதைப் பாடல்கள் சமயக் கருத்துகளிலிருந்து சற்றும் மாறுபடாமல் கதைப் பொருளை அமைத்துக் கொள்கின்றன. மேலும் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவும் எழுதப் பெற்றுள்ளன.
மேல் நாட்டாரின் வருகையினால் கிறித்தவ சமயம் தமிழ் நாட்டில் பரவியது. கிறித்தவ சமயவாதிகள் தமிழில் இலக்கியப் படைப்புக்களை உருவாக்கினர். அவற்றுள் கதைப்பாடலும் அடங்கும். கிறித்தவக் கதைப் பாடலுள் முக்கியமானது வீரமாமுனிவர் எழுதிய கித்தேரியம்மாள் அம்மானை. கித்தேரியம்மாள் ஏசுபெருமானைத் தினமும் வழிபடுபவள். அவளுடைய வாழ்க்கையில் துன்பங்கள் பல ஏற்படுகின்றன. ஆயின் அந்தத் துன்பங்களின் காரணமாக அவள் கடவுளை மறக்கவில்லை. இறைவனருளைப் பிறரும் பெறவேண்டி உருகிய கித்தேரியம்மாளுக்கு அந்த இறைவனருள் பெருந்துன்பத்துக்கு இடையில் கிடைக்கிறது. இந்தக் கதை இறையருளைப் பெறும் வாயிலாக அமைய வேண்டி எழுதப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் என்னென்ன சமயங்கள் இருந்தனவோ அவற்றுக்கெல்லாம் கதைப்பாடல்கள் எழுதப்பெற்றுள்ளன. அவரவர் சமய நம்பிக்கைக்கும் கொள்கைக்கும் ஏற்றவாறு கதைக்கருத்துகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக மக்களின் இயல்புகள் அனைத்தையும் நன்றாக உணர்ந்து அதற்கேற்பக் கதைகள் எழுதப்பட்டுள்ளதைக் காணலாம்.
கதைப்பாடல்கள் காட்டும் தமிழ்ச் சமூகம் சாதிப் பாகுபாட்டாலும் சமய வேறுபாட்டாலும் சிதறிச் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றது. இருப்பினும், சாதிகளால் ஏற்பட்ட சிக்கல்களும் சீர்கேடுகளும் சமயங்களால் மிகுந்த அளவுக்கு ஏற்பட்டதாகக் கருத முடியவில்லை. மேலும் சாதிப் பாகுபாட்டிலுள்ள இறுக்கமான ஏற்றத்தாழ்வு உணர்வு சமய வேறுபாட்டில் இருந்ததாகக் கூற முடியவில்லை.
பழக்க வழக்கங்கள்
பழக்கம் என்பது கற்கும் செயலாகும். தனிமனிதனின் செயல்கள் தொடர்ந்து அவனால் செய்யப்பட்டு வரும்போது நாளடைவில் இது பழக்கமாகிறது. பழக்கமானதும் ஒரு செயலின் வெளிப்பாடு முன்பு இருந்ததைவிட முறையாகப் பண்பட்டு வெளிவருவதைக் காணலாம். தனி மனிதன் ஒருவன் பழகிப்போன முறையில் திரும்பத் திரும்பச் செய்துவரும் ஒரு குறிப்பிட்ட செயலைப் பல மனிதர் ஒன்றாகச் சேர்ந்து செய்கின்றபொழுது, அது வழக்கம் எனப் போற்றப்படுகிறது. வழக்கம் என்பது சமுதாயத்திற்குரியதாக அமைந்து விடுகிறது. கதைப் பாடல்கள் கொண்டு தமிழ்ச் சமூகத்தின் பழக்கவழக்கங்கள் சிலவற்றைக் காணலாம்.
காஞ்ச மஞ்சள் குட மஞ்சள் கொல்லத் தரக்கு மஞ்சள்
சீரங்க மஞ்சள் திருநெல்வேலி ருக்கு மஞ்சள்
பச்சிலைக் கிச்சிலிக் கிழங்கு பாவையரும் தான் குளிப்பாள்.
காதலித்த பெண்களை மணக்க விரும்பி மடலேறுதல், குளத்தில் மருந்து கரைத்தல் போன்ற பழக்கங்கள் இருந்ததை அல்லியரசாணி மாலை வாயிலாக அறியலாம். பெண்கள் பருவமெய்தியதும் செய்யப்படும் சடங்கு முறைகளை மதுரைவீரசுவாமி கதை விளக்கிக் கூறுகிறது.
பொழுது விடிந்த பின்பு பொம்மன நாயக்கனுமே
பொம்மியம்மாளுக்குப் பொருந்தி சடங்கு செய்ய
கூட்டத்துடனே குடிசைக்குத் தான்வந்து
குடிசை பிடுங்கிக் கொளுத்தி விட்ட பிற்பாடு
பொம்மியம்மாள் தன்னைப் பொங்கமுடன் நீராட்டி
சாந்தி செய்ததாக விளக்கப்படுகிறது.
ஆணை பிரமாணம் பண்ண வேணும்
திருவிளக்கு உப்பு பால் வெடி
வேல்கத்தி பிரமாணம் பண்ண வேணும்
நல்லதம்பி தங்கைக்கு
சீராகச் சீதனங்கள் சிந்தை மகிழ்ந்தீந்து
காசிராஜன் பெண் வீட்டாருக்கு
பரியம் கொடுத்தானே பத்துலட்சம் பொன்நிதிகள்
என விளக்கிக் கூறுகிறது.
வாத்தியார் தன்னை யழைத்தார் சணத்தில்
நேரிட்டி ருத்தியே தீபமு மேற்றி
நிறை நாழி நெல் விடலை கடலை பயிறவல் தேன்
சீரிட்டு விக்ன விநாயக னருளால்
செல்வக்குமரனைப் பள்ளிக் கிருத்தி
பள்ளிக் கிருத்திப் பல நூலுங் கற்று
கல்வியின் தொடக்கம் ஒரு சடங்கு முறையாகச் செய்யப்படுகிறது. பிள்ளையாருக்குப் படையல் செய்து பெற்றோரும், பெரியோரும் கூடிக்குழுமி இருக்கும் இடத்தில் ஆசிரியர் மாணாக்கனுக்குக் கல்வி கற்பிக்கத் தொடங்க வேண்டும். கல்வி பெறுவதைப் புனிதமாகக் கருதியுள்ளனர் என்பது இதனால் விளங்கும். வீரர்கள், அரசர்கள் ஆகியோர் சிலம்பப் பயிற்சி பெற்ற குறிப்புகள் சில கதைப் பாடல்களில் காணப்படுகின்றன. மெச்சும் பெருமாள் கதை, சேர்வைக்காரன் கதை, சிதம்பர நாடார் கதை, ஐவர் ராஜாக்கள் கதை இவற்றில் வரும் கதைத் தலைவர்கள் சிலம்பம் படித்துத் தேறிய செய்திகள் தரப்பெற்றுள்ளன. ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் கல்வி கற்ற செய்தி அபிமன்னன் சுந்தரிமாலை, பூலங்கொண்டாள் கதை ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ளவை தவிரத் திருவிழா, உணவு, உடை, அணிகலன்கள், வழிபாடு, விளையாட்டு முதலியவற்றாலும் ஒரு சமுதாயத்தின் பண்பாட்டை அறிந்து கொள்ள இயலும்.
ஏறுவாடி மலைதனிலே இருந்த மலைக் குறத்தியவள்
மலைதனிலே வெகுநாளாய் மழைகள் தண்ணீரில்லாமல்
காட்டு வள்ளிக்கிழங்குடனே கனிபலதும் கிடையாமல்
———————–
இருந்தமலை விட்டிறங்கி எழுந்து மலைக் குறத்தியவள்
மறத்தியைப் போல் உடையுடுத்து வலதுகையில் சேயிடுக்கி
கொப்பிடுக்கி குழையிடுக்கி குறப்பெட்டியுந் தலையில் வைத்து
என்று தோட்டுக்காரி அம்மன் கதையில் நீண்டு செல்கின்றது. குறத்தியின் வருகை குறித்து இவ்வளவு விரிவாகக் கதைப்பாடல் விளக்கம் கூறியுள்ளதிலிருந்து குறிகேட்பதில் மக்களுக்கிருந்த ஆர்வத்தை அறியமுடிகிறது.
பாண்டியனின் மகளாகப் பிறந்த கண்ணகியால் மதுரை மாநகர் அழியப் போகிறது என்று சோதிடர் கூறுகின்றார். சோதிடர் அவ்வாறு கூறியதினால் கண்ணகியைப் பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டு விடுகின்றனர். சோதிடனின் கூற்றால் ஒருகதை நடக்க வழி பிறக்கிறது. இது கோவலன் கதையில் வரும் நிகழ்ச்சியாகும். இதுபோன்றே மதுரை வீரன் கதை நடைபெறுவதற்கும் அவனுடைய சாதகமே காரணமாக அமைகின்றது.
மாலை சுற்றித் தான் பிறந்தால்
மாமனுக் காகா தென்பர்
என்று மாலை சுற்றிப் பிறந்த காரணத்தைக் காட்டி அவனைப் பெட்டியில் அடைத்து ஆற்றோடு அனுப்பி விடுகின்றனர். காசிராஜனின் மகனான மதுரை வீரன் அவனது சாதகம் காரணமாக ஒரு தோட்டியிடம் வளரும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். சோதிட உரைகள் வாழ்க்கையின் போக்கை மாற்றிவிடும் தன்மையை இதனால் அறியலாம். மக்களின் சோதிட நம்பிக்கை கதைப்பாடலை வழிநடத்திச் செல்ல உதவும் உத்தியாகப் பயன்பட்டுள்ளதனைக் காணலாம்.
ஆயிரம் பெண்கள் ஆலாத்தி யெடுத்தார்கள்
சீரான பொற்கலத்தில் செஞ்சோறும் வெண்சோறும்
காட்டிச் சுழற்றிக் கதிரோன் முன் விட்டெறிந்தார்
‘கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்பது கண்ணேறு படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வந்த பழமொழியாகும்.
தன் வீட்டுக்கு வந்த பஞ்ச பாண்டவர்களையும் துரோபதையையும் ஆலாத்தி எடுத்து, கண்ணேறு போக்கி வரவேற்புச் செய்ததை ஆரவல்லி சூரவல்லி கதையில் காணலாம்.
பாண்டவர்கள் ஐவருக்கும் பாவை துரோபதைக்கும்
எடுத்தார்கள் ஆலத்தி ஏந்திழைகள் ரம்பையைப்போல்
சுண்ணாம்பும் சோறும் சுழட்டி எறிந்தார்கள்
சோறு, சுண்ணாம்பு முதலியவற்றைக் கலந்து பிண்டமாக்கித் தலையைச் சுற்றித் தூர வீசி எறிந்தால் கண்படாது என்று நம்பினர்.
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியவள் தான் புலம்பி
கண் துயிலும் வேளையிலே கனவுகண்டாள் மாதுமின்னாள்
தெய்வலோகப் பொற்கிளிதான் திருமடியில் வரவுங் கண்டாள்
பாம்பரவம் மடியேறிப் படம் விரித்தாடக் கண்டாள்
நல்ல கனவு தோன்றினால் நல்லது நடக்கும் என்று நம்பினர். மந்திரப் பூமாலை கண்ட கனவு அவளுக்குக் குழந்தை பிறக்கும் என்பதை அறிவுறுத்தும் தன்மையுடன் அமைகின்றது.
நல்லதை முன்னறிவிப்புச் செய்யும் கனவுகள் போன்று தீயதை முற்சுட்டும் கனவுகளும் உள்ளன. கள்ளழகர் அம்மானையில் அண்ணன்மார் இறந்து விட்டதைக் கனவின் வாயிலாகத் தங்கை அறிந்து புலம்புவது குறிப்பிடப்படுகிறது.
நான் பத்தினியாள் கண்டகனா பலித்ததே நம்பருக்கு
முற்றத்துப் பொன் முருங்கை முறிந்து விழக்கண்டேனே
சித்திர மணிவாசல் திருமதிலு மிடியக் கண்டேன்
இந்தக் கனவு குறிப்பிடும் செய்திகள் அனைத்தும் தீய நிகழ்ச்சிகளாகும். கதையின் நிகழ்ச்சிகளை முன்னறிவிப்புச் செய்யும் வாயில்களாகக் கனவுக் காட்சிகள் பெரும்பாலான கதைப்பாடல்களில் இடம் பெறுகின்றன. மக்களிடம் பொதுவாகக் காணப்படும் நம்பிக்கையின் அடிப்படையில் கனவுகள் கதைகளில் பயன்படுத்தப் பெற்றுள்ளன.
பல்லி நிமித்தம் பார்ப்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழ் மக்களிடம் இருந்து வரும் வழக்கமாகும். அது ஒலிக்கும் திசை, நேரம், முறை ஆகியவற்றைக் கொண்டு நல்லது அல்லது தீயது என்று தீர்மானிக்கின்றனர். சகுனங்கள் என்பன அறிவிப்புக்களேயன்றித் தீயதைத் தடுக்கும் ஆற்றலுடையன என்று கூறமுடியாது. கோவலன் கதையில் கோவலன் சிலம்பை விற்கச் செல்லும்போது பல தீய நிமித்தங்கள் ஏற்பட்டதாகக் கதைப்பாடல் கூறுகிறது.
பல்லி பலபல வென்னும்
பனை மரத்தி லாந்தை சீறும்
தலைப் பாகை தவறி விழும்
இத்தனைக் குறிகளாலும் கோவலனைச் செல்லவிடாமல் தடுக்க முடியவில்லை. ஆகையினால் கோவலன் சாவிலிருந்து தப்பவில்லை. நிமித்தங்கள், தீமை வரவுள்ளது என்பதை அறிவிக்கும் கருவிகளாகவே செயல்படுகின்றன.
தீய சகுனங்கள் நேருவது போன்று நல்ல சகுனங்கள் காணப்படுவதையும் கதைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. மதுரைவீரன் கதைப்பாடலில் வீரனின் வளர்ப்புத்தாய்க்குப் பிள்ளை இல்லை, பிள்ளை இல்லா வருத்தத்துடன் அவள் காட்டுக்குள் வரும்போது பல நல்ல சகுனங்களைக் காண்பதாகக் கதைப்பாடல் கூறுகிறது.
காணாத நற்குனம் கண்டாளே கண்களிக்க
காகம் வலமாச்சு காடை யிடமாச்சு
மங்கிலியப் பெண்கள் வாழ்த்திவரக் கண்டாளே
………………………………………………………………..
கண்டு மனம் மகிழ்ந்து காரிகையு மப்போது
என்று கூறும் பாடல் நல்ல குறிகளை அடுக்காகக் குறிப்பிடுவதைக் காணலாம். மக்கள் மட்டுமன்றி அக்கால அரசர்கள், செல்வர்கள் போன்றோரும் சகுனம் பார்த்துச் செயல்பட்டுள்ளனர். நிமித்தங்களைக் கண்டு கணித்துச் சொல்ல வல்லவர்களும் இருந்துள்ளனர்.
பாண்டவர் வனவாசம் கதைப் பாடலில் துரியோதனன் கேட்டுக் கொண்டதற்கிணங்கித் துரோணர் சகுனம் பார்த்துக் கூறுவதைப் பின்வரும் பாடலடிகள் உணர்த்துகின்றன.
பொல்லாச் சகுனங்கள் பொருந்தாது மன்னனுக்கு
………………………………………………………………….
பாம்பு குறுக்காச்சு பார்ப்பான் எதிரானான்
சாரை குறுக்காச்சு சந்திரன்மேல் பல்லி சொல்லும்
……………………………………………………………………
நெருப்பெடுத்துக் கூன்கிழவி நின்றிழவு தான் கொடுத்தாள்
அத்தனையும் தீய நிமித்தங்கள். துரியோதனின் அழிவைக் காட்டுவன. தமிழ்ச் சமுதாய மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஓர் இயல்பாகச் சகுனங்களைக் கொண்டவர்கள். அவர்களுடைய நம்பிக்கையை வாய்ப்பாகப் பற்றி இத்தகைய நிமித்தக் குறிப்புக்களை, கதைப் பாடலாசிரியர்கள் தங்கள் கதைகளில் ஒரு கூறாக இணைத்துள்ளனர். நிமித்தங்கள் பின்நிகழ்வுகளை முன்னதாகச் சுட்டும் குறிப்புகளாக மக்கள் நம்பினர். இந்நிலையில் நிமித்தங்கள் கதைப்பாடல் ஆசிரியர்களுக்கு நல்ல முறையில் கைகொடுத்து உதவியுள்ளன.
கதைப் பாடல்கள் ஒரு தலைமுறையினரிடமிருந்து மற்றொரு தலைமுறையினர்க்கு வழிவழியாக வருபவை. ஒரு கலைஞன் தன் குருவிடமிருந்தோ வேறோரு கலைஞனிடமிருந்தோ கதைப் பாடலை அறிகின்றான். ஆதலின் தான் பாடுவதற்கேற்ப, வேண்டிய கூறுகளை எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றை விட்டுவிடுகிறான். ஆகையால் சில செய்திகளும் சில நிகழ்ச்சிகளும் வருணனைகளும் திரும்பத் திரும்ப வருகின்றன.
கதைப் பாடல்களில் நாட்டுவளம், பன்னிரண்டு வருடப் பஞ்சம், மலட்டுத் தன்மை, தவமிருத்தல், சோதிடம் பார்த்தல், பிள்ளையை ஆற்றில் விடுதல், தீ நிமித்தம் காணல், போர் வருணனை போன்றவை திரும்பத் திரும்ப வருகின்றன. புராண, இதிகாசக் கதைப்பாடல்களில் இயற்கை கடந்த நிகழ்ச்சிகளைக் காணலாம். இத்தகைய நீண்ட மரபு கொண்டதாகக் கதைப்பாடல்கள் அமைந்துள்ளன. வழி வழியாகப் பாடப்பட்டு வரும் கதைப்பாடல்களில் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படும் இத்தகைய இலக்கிய மரபுகளைக் கதைப்பண்பு முனைப்புக் கூறு அல்லது எடுத்துரைக்கப்படும் கூறு என்று கூறுவர். அவற்றைக் காணலாம்.
மகாபாரதத்தோடு தொடர்புறுத்திப் பாடினால்தான் மக்கள் விரும்பிக் கேட்பர் என்ற காரணத்தால் கதைப் பாடலாசிரியன் இவ்வாறு செய்கின்றான் எனலாம்.
மரபுத் தொடர்
இராமப்பய்யன் அம்மானையில் இராமப்பய்யனையும் வன்னியையும் ஒரே அடையைக் கொடுத்தே எல்லா இடங்களிலும் கதைப்பாடகர் வருணிக்கிறார். மன்னன் புலிராமன், மன்னன் புலிவன்னி என்றே பாடகர் பாடுகின்றார். மகாபாரதத்தோடு தொடர்புறுத்தப்பட்ட பல்வேறு கதைப்பாடல்களில் இடம்பெறும் ஒரு பாத்திரத்துக்கு ஒரே அடை தரும் தொடரையே கையாளுகின்றனர். சான்று.
தோராவடிவழகி துரோபதை
தக்க புகழுடைய தருமர்
வெற்றி மதயானை வீமன்
தாம முடியான் சகாதேவன்
அடுக்குகள்
ஒரே கருத்து அடுக்கிச் சொல்லப்படுவதையும் கதைப் பாடல்களில் காணலாம். வரலாறு மற்றும் புராணக் கதைப் பாடலாயினும் இவ்வியல்பைக் காணலாம்.
ஆனைக் கொம்புக்கு கத்தி கட்டினான் நவாப்பு சைதுல்லா
அம்பாரிக் குள்ளே தொட்டில் கட்டினான் நவாப்பு சைதுல்லா
(தேசிங்குராசன் கதை)
தேவேந்திரனோ திருமாலோ என்பாரும்
பூவேந்தனென்பாரும் போசனிவன் என்பாரும்
மன்மதன்கா ணென்பாரும் மதிமந்திரி காணென்பாரும்
(இராமப்பய்யன் அம்மானை)
என்று அடுக்கிச் சொல்லப்படுகின்றது.
திருப்புக்கள் (Repetitions)
இராமப்பய்யன் கதையில் சண்டைக் காட்சி பின்வருமாறு பாடப்படுகின்றது:
வாண மடிபட்டு மண்மேல் கிடப்பாரும்
குத்துண்டு போர்க்களத்தில் கொலவையிட்டு நிற்பாரும்
குறை பிணமாய் நின்று கூத்தாடி நிற்பாரும்
அடுத்து, போகலூர்ப் போரையும் இவ்வாறே கதைப் பாடலாசிரியன் பாடுகின்றான்.
பாணமடிபட்டு மண்மேல் கிடப்பாரும்
குத்துண்டு போர்க்களத்தில் கொலவையிட்டு நிற்பாரும்
உண்டைபட்டு உருண்டு சோர்ந்து கிடப்பாரும்
என்று சிறிது மாற்றிப்பாடுகிறான். கதைப்பாடல்களில் கருத்துக்கள் ஒரேவரியில் முற்றி நிற்பதால் வரிகளை முன்பின் மாற்றி அமைத்தாலும் பொருள் சிதைவதில்லை.
கான் சாகிபு மக்களால் மதிக்கப்பட்ட மாவீரன். அவனைப் போரில் வென்று எதிரிகள் பிடித்துத் தூக்கிலிடுகின்றனர். ஆனால் அவன் சாகவில்லை. எவ்வளவு முயன்றும் அவனைச் சாகடிக்க இயலாமல் எதிரிகள் திணறும் பொழுது கான் சாகிபே முன்வந்து அவனுடைய உயிர் எங்கிருக்கிறது என்று கூறுகிறான். தலை முடியால் கட்டப்பட்ட ஒரு நகைப்பெட்டியின் உள்ளே உள்ள நரித் தலையில் தன் உயிர் இருப்பதாகவும், அப்பெட்டியை அறுத்தால் தன் உயிர் பிரிந்து விடும் என்றும் தெரிவிக்கிறான். அவ்வாறு செய்த பின் அவன் உயிர் பிரிவதாகக் கதை முடிகின்றது.
கதைத் தலைவர்கள் மட்டுமல்லாது கொடியவர்களின் உயிர் நிலையைப் பற்றியும் மீவியல் (Supernatural) செய்திகள் கூறப்பட்டுள்ளதாகக் கதைப் பாடல்கள் கூறுகின்றன. பால நாகம்மாள் கதையில் கொடிய மந்திரவாதியின் உயிர்நிலை ஏழுகடலுக்கு அப்பால் ஒரு மண் கோட்டைக்குள் இருக்கும் மண்பானை ஒன்றில் அடைக்கப்பட்டிருக்கும் கிளிக்குள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. மனித ஆற்றலுக்கு அப்பாலும் சில சக்திகள் இயங்குகின்றன என்பது மக்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை ஆதரவாகக் கொண்டு தங்கள் கற்பனை ஆற்றலால் இத்தகைய இயற்கை இகந்த நிகழ்ச்சிகளை அளவோடு புகுத்தித் தங்கள் படைப்புகளைக் கதைப் பாடல் ஆசிரியர்கள் தந்துள்ளனர் எனலாம்.
இவ்வாறு பல மரபுகள் கதைப்பாடல்களில் நிறைந்துள்ளன. அவை இம்மரபுகளைத் தொடர்ந்து காத்தும் வருகின்றன.
சாதியாலும், சமயத்தாலும் கட்டுண்ட தமிழ்ச் சமுதாயத்திற்கெனப் பொதுவான சில பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் உண்டு. அவற்றை அறிவதன் மூலம் தமிழ் மொழிபேசும் சமுதாயத்தினரின் பண்பாட்டை அறிய முடிகின்றது. சில பொதுவான பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் கதைப்பாடல்களில் இடம்பெற்றுக் கதையை நடத்திச் செல்லுகின்ற தன்மையைக் கதைப்பாடல்கள் மூலம் அறிகின்றோம். பொழுது போக்குக்காகக் கதைப் பாடல்கள் பாடப்பட்டன எனலாம். சமூகநீதியையும், பழக்க வழக்கங்கள், நன்மை தீமை ஆகியவை பற்றியும் அறியப் பெருந்துணையாக இவை உள்ளன.
கதைப்பாடல்கள் காலங்காலமாக வாய் மொழியாகப் பாடப்பட்டு வருகின்ற காரணத்தால் சில மரபுகளைப் பெற்றுள்ளன. இம்மரபுகள் பெரும்பாலும் அனைத்துக் கதைப் பாடல்களிலும் பின்பற்றப்பட்டிருப்பதைக் காணலாம். இம் மரபுகள் சில இடங்களில் தேவையில்லையென்றாலும் கூட மக்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்காகப் பின்பற்றப்பட்டுள்ளதை உணரலாம்.