இன்றைய நிலையில் ஆய்வு வசதிக்காகவும், படிப்பு வசதிக்காகவும் இலக்கிய வகைமைகளைப் பிரித்துள்ளனர். மேலும் பிரித்து அறிவதற்காகச் சமீபகாலங்களில் புதிய சொற்கள் உருவாக்கப்பட்டன. சில சொற்களுக்குப் பொருள் வரையறை செய்யப்பட்டது. படித்தவர்களால் எழுதப்படும் இலக்கியங்கள் ஏட்டிலக்கியங்கள் அல்லது எழுத்திலக்கியங்கள் என்று சுட்டப்பட்டன. இதற்கு மாறாக மக்களால் படைக்கப்பட்டு வாய் மொழியாகப் பரவியுள்ள இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்கள் அல்லது நாட்டுப்புற இலக்கியங்கள் என்று சுட்டப்பட்டன. இவை வாய்மொழியாகப் பரவிக் கொண்டிருப்பதால் மக்கள் வாழ்வின் கடந்த காலத்தின் பதிவாகவும், நிகழ்காலப் படப்பிடிப்பாகவும் அமைகின்றன. இத்தகைய மதிப்பு வாய்ந்த நாட்டுப்புற இலக்கியங்களுள் உரைநடையாகக் கூறப்படும் கதை வகைமை மட்டும், நாட்டுப்புறக் கதை என்று சுட்டப்படுகின்றது. பழங்கதைகள், நாடோடிக் கதைகள், கிராமியக் கதைகள், தாத்தா சொன்ன கதைகள், நாட்டார் கதைகள் என்ற சொற்களாலும் நாட்டுப்புறக் கதைகள் சுட்டப்படுகின்றன. நாட்டுப்புறக் கதைகளைக் கேட்டும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை சேகரிப்பு மற்றும் பதிப்புப் பணிகள், வகைகள், அவற்றில் நிகழ்ந்துள்ள ஆய்வுகள், அவை கூறப்படும் சூழல்கள், நோக்கங்கள் மற்றும் பயன்கள் முதலியவை. அவற்றை இப்பாடத்தில் காணலாம்.
எடுத்துக்காட்டாக சகோதரியின் மகளை மணம் செய்து கொள்ளும் பழக்கமுள்ள சமுதாயத்தில் ஒருவன் அத்தகைய முயற்சிகளுக்காகச் செய்யும் சாகசங்கள் கதைகளில் சிறப்பித்துக் கூறப்படும். சகோதரி மகளை மணம் செய்வது பாவமானதாகக் கருதும் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இத்தகைய கதை நிகழ்வை நீதிக்குப் புறம்பானதாகக் கருதலாம் அல்லவா?
சூழலும் பொருளும்
எனவே மக்களிடம் வாய் மொழியாகப் பரவியுள்ள நாட்டுப்புறக் கதைகள் எங்கே தோன்றியிருந்தாலும் அவை பரவியுள்ள மக்கட் குழுக்களின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துபவையாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை. மேலும் ஒரு பண்பாட்டுக் குழுவினரிடையே கூட ஒரு கதையை ஒருவர் கூறுவதுபோல் மற்றவர் கூறுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒருவரே ஒரு கதையை மறுமுறை கூறும்போது பனுவலில் (Text) மாற்றம் காணப்படும். எனவே ஒரே கதை வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு பொருளில் கூறப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதனால்தான் நாட்டுப்புறக் கதையை ஒருவர் ஒருமுறை கூறுவதை ஒரு பனுவல் (Text) என்று கொள்வர்.
ஆட்சியாளர்களும் சேகரிப்பும்
வெள்ளையர் தங்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளைச் சேர்ந்த மக்களை நன்கு புரிந்து கொண்டால்தான் அவர்களைத் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்பதை உணர்ந்தனர். அதற்கு அம் மக்களின் நாட்டுப்புற இலக்கியங்கள் துணைபுரியும் என்று கருதி அவற்றைச் சேகரிக்கத் தொடங்கினர். மதங்களைப் பரப்பும் நோக்கத்தோடு பல நாடுகளுக்குச் சென்ற பாதிரியார்களும் அவ்வப்பகுதி மக்களைப் புரிந்துகொள்ளும் எண்ணத்துடன் நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். நாட்டுப்பற்றுக் காரணமாகத் தம் நாட்டு மக்களைப் புரிந்து கொள்ளவும் அவர்களின் தனித்தன்மையை விளக்கவும் அவர்களின் கலை கலாச்சாரத்தை அழிந்துவிடாமல் பாதுகாக்கவும் சிலர் சேகரிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இவ்வாறு சேகரிக்கப்பட்ட இலக்கியங்களுள் நாட்டுப்புறக் கதைகளும் அடங்கும். தமிழில் நடைபெற்ற சேகரிப்புப் பணி பற்றி இங்கு அறிந்து கொள்வது நல்லது.
கா.அப்பாதுரை அவர்களின் நாட்டுப்புறக் கதைகள், சு.அ.இராமசாமிப் புலவரின் தென்னாட்டுப் பழங்கதைத் தொகுதிகள், வை. கோவிந்தனின் தமிழ் நாட்டுப் பழங்கதைகள், கி.ராஜநாராயணனின் தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள், கு.சின்னப்ப பாரதியின் தமிழக கிராமியக் கதைகள், வை.கோவிந்தனின் பாரத நாட்டுப் பாட்டிக் கதைகள், அ.கா.பெருமாளின் நாட்டார் கதைகள் போன்ற பல தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. 1979ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தமிழகத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கதைத் தொகுப்புகள் மிகுதியாக வெளிவந்துள்ளன. அவற்றுள் க.கிருட்டினசாமியின் கொங்கு நாட்டுப்புறக் கதைகள், கி.ராஜநாராயணனின் தாத்தா சொன்ன கதைகள், ஆறு. இராமநாதனின் நாட்டுப்புறக் கதைகள் முதலானவை குறிப்பிடத்தக்கன.
சமீப காலங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்கெனச் சேகரிக்கப்பட்டு அச்சிடப்படாத நாட்டுப்புறக் கதைத் தொகுப்புகளுள் சில சிறந்த தொகுப்புகள் காணப்படுகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்போர், மக்கள் அவற்றை வெளிப்படுத்தும், அந்த மொழியிலேயே (பேச்சு நடையிலேயே) பதிவு செய்வார்கள். அச்சில் வெளிவரும்போது நடையைச் சிறிது மாற்றி அமைப்பது உண்டு. அந்த வகையில் இந்தப் பாடத்தில் நாட்டுப்புறக் கதைகள் இலக்கிய நடையில் தரப்பட்டுள்ளன.
தொகுப்பு நூல்களின் பட்டியல்
நாட்டுப்புறவியல் (1987-88) இதழில் தமிழகத்திலிருந்து இதுவரை வெளிவந்த நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அப்பட்டியலில் உள்ள தொகுப்புக்களுள் மூன்றில் ஒரு பங்குத் தொகுப்புக்கள் பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. பஞ்சதந்திரக் கதைகள், ஈசாப் கதைகள், உலக நாடோடிக் கதைகள், அரபுக் கதைகள், தெனாலிராமன் கதைகள், நவரத்தினமாலை (சோவியத் நாட்டுக் கதைகள்), ஆர்மீனிய நாடோடிக் கதைகள், கிரேக்க நாடோடிக் கதைகள் முதலியன அவற்றுள் சில.
அவை :
விலங்குக் கதைகள் (Animal Tales)
சாதாரணக் கதைகள் (Ordinary Folktales)
நகைச்சுவை மற்றும் துணுக்குக் கதைகள் (Jokes and Anecdotes)
வாய்பாட்டுக் கதைகள் (Formula Tales)
வகைப்படுத்தப்படாத கதைகள் (Unclassified Tales)
உலக நாடுகள் பலவற்றிலும் நாட்டுப்புறக் கதைச் சேகரிப்புப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன. சேகரிப்பாளர்கள் சேகரிப்புகளை வகைப்படுத்தி வெளியிடுகின்றனர். அவரவர் சேகரிப்புக்கேற்ப இந்த வகைப்பாடுகள் வேறுபடுகின்றன. நாம் கதைகளைப் பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்ளலாம்.
தோற்றக் கதைகள்
காரணக் கதைகள்
நீதிக் கதைகள்
நகைச்சுவைக் கதைகள்
இடப் பெயர்வுக் கதைகள்
வரலாற்றுக் கதைகள்
நம்பிக்கை விளக்கக் கதைகள்
இவ்வகைக் கதைகளுள் சிலவற்றை மட்டும் சான்றுகளுடன் காணலாம்.
தெய்வங்களின் தோற்றம் பற்றிப் பல்வேறு கதைகள் மக்களிடையே வழக்கப்பட்டுள்ளன.
வானம் மிக உயரத்தில் இருப்பதற்கான காரணம் என்ன? அணிலின் முதுகில் மூன்று கோடுகள் இருப்பதற்கான காரணம் என்ன? குயில் ’அக்கா அக்கா’ என்று கூவுவதற்கான காரணம் என்ன? என்பன போன்ற ஏராளமான வினாக்களுக்குக் காரணம் கூறும் கதைகள் மக்களிடையே வழங்கப்படுகின்றன.
வானமும் உயரமும்
வானம் மிக உயரத்தில் இருப்பதற்கான காரணம் கூறும் கதை ஒன்று வருமாறு:
“முன் ஒரு காலத்தில் வானம் பூமிக்கு மிகவும் பக்கத்தில் இருந்தது. மனிதர்களும் மரம் செடி கொடிகளும் குட்டையா இருந்தன. அப்படியிருக்கும் பொழுது ஒரு கிழவி தினந் தினம் மோரு வித்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள். தினமும் வானம் இடிந்து மோர்க்குடம் கவிழ்ந்துவிடும். இதனால் கிழவிக்குக் கோபம். ஒரு நாள் ‘என் மோர கொட்டி என் பொழப்பக் கெடுக்கும் வானமே! நீ பூமியிலிருந்து எட்டு வண்டி நூலைப் போட்டாலும் எட்டாத உயரத்துக்குப் போகணும். பத்து வண்டி நூலைப் போட்டாலும் பத்தாத உயரத்துக்குப் போகணும்’ என்று சாபம் போட்டாள். (அதாவது எட்டு-பத்து வண்டி நிறைய ஏற்றப்பட்ட நூலைப் பிரித்து நீட்டினால் எவ்வளவு தூரம் வருமோ அவ்வளவு தூரம் மேலே செல்லவேண்டும் என்று சாபமிட்டாள்) அன்றையிலேருந்து வானம் கண்ணுக்கெட்டாத தூரத்துக்குப் போய்விட்டது” என்று வானத்தின் உயரத்தைப் பற்றி ஒரு கதை வழங்குகிறது.
காட்சி
வானவெளிக்கு எல்லை ஏதுமில்லை. இது இயற்கை. இவ்வாறு அமைந்தற்குக் காரணம் இதுதான் என்று ஒரு காரணத்தைக் கற்பிக்கிறது இக்கதை. மதுரை மாவட்டத்தில் வழங்கப்படும் இக்கதையை, சி.பொன்னுத்தாய் என்பவர் பதிவு செய்துள்ளார்.
காட்சி
“ஒரு ஊரில் ஒரு ராசா இருந்தான். அவனுக்கு ஒரு பொண்ணு இருந்தாள். அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியரை நியமித்தான் ராசா. அந்த ஆசிரியருக்கு அந்த பொண்ணு மேல விருப்பம். அந்த பொண்ணிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். அவள் மறுத்தாள். அந்த ஆசிரியர் என்ன செய்தார் தெரியுமா? ராசாகிட்ட போயி உன் பொண்ணு ஜாதகத்தில் குற்றம் இருக்கிறது. அவளால் உனக்கும் இந்த நாட்டுக்கும் ஆபத்து. இதுலேயிருந்து நீயும் நாடும் தப்பிக்கவேண்டுமானால் அவளை ஒரு பொட்டியில வைத்து ஆற்றில் விட்டுவிடு என்றான். இதை நம்பின ராசாவும் அப்படியே செய்துட்டான். பெட்டி ஆற்றில் மிதந்துகொண்டே வந்தது. காட்டில் வேட்டையாடிக் கொண்டு இருந்த ஓர் இளவரசன் அந்தப் பொட்டியப் பாத்து, எடுத்து திறந்து பாத்தான். அதில் ஓர் அழகான பொண்ணு இருந்தாள். அவளிடம் கேட்டு உண்மையைத் தெரிந்துகொண்டான். பின்னர் அவளைத் திருமணம் செய்துகொண்டான். பின்னர் அவன் வேட்டையாடிய புலியைப் பெட்டியில அடைத்து ஆற்றில் விட்டான். காட்டில் காத்துக்கொண்டிருந்த ஆசிரியர் பெட்டிய கொண்டுபோய் ஒரு வீட்டில் வைத்தான். நல்லா அலங்காரம் செய்துகிட்டு கதவ சாத்தி தாழ்பாள் போட்டான். இராசா மகளை அனுபவிக்கப் போகின்ற ஆசையில் பெட்டியைத் திறந்தான். அடபட்டுக் கிடந்த புலி ஆசிரியர் மேல் பாய்ந்து கொன்றது.“
ஆசிரியர் தொழில் புனிதமானது. அத்தொழிலுக்குக் களங்கம் ஏற்படும் வகையில் தப்பு செய்ய நினைப்பவன் அழிவான் என்னும் நீதியை இக்கதை எடுத்துரைக்கிறது. இக்கதை தமிழகத்தில் மட்டுமல்ல காஷ்மீரிலும் சில மாற்றங்களுடன் வழங்கி வருகிறது.
காட்சி
“ஒரு ஊர்ல ஒரு குடியானவன் இருந்தான். அவன் தினமும் ஒரு சாமியாரை வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பாடு போடுவான். அதற்குப் பின்னர்தான் அவன் சாப்பிடுவான். இது அவன் மனைவிக்குப் பிடிக்கவில்லை. இதைத் தடுத்து நிறுத்த நினைத்தாள். ஒரு நாள் ஒரு சாமியாரை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு சாப்பிட இலை வாங்கப் போனான். சாமியார் விருந்தை எதிர்பார்த்து ஆசையோடு உட்கார்ந்திருந்தார். குடியானவன் மனைவி வீட்டில் இருந்த நெல்லு குத்துகிற உலக்கையைக் கழுவி, விபூதி பூசி, மாலை போட்டு சாமியாரு பார்வையில் படுகிற மாதிரி வைத்தாள். சாமியாருக்குப் புரியவில்லை. ‘உலக்கைக்கு ஏன் மாலை போட்டு வைத்திருக்கிறாய்’ என்று கேட்டார். ‘எங்கள் வீட்டுக்காரர் உங்களிடம் ஒன்றும் சொல்லவில்லையா’ என்று அவள் கேட்டாள். சாமியார் ‘இல்லை’ என்று சொன்னார்., அவள் உடனே முகத்தை சோகமா வைத்துக்கொண்டு ‘எங்க வீட்டுக்காரர் தினம் ஒரு சாமியாரை அழைத்துக்கொண்டு வந்து வயிறார சாப்பாடு போட்டு, இந்த உலக்கையால் நன்கு அடித்து அனுப்புவார்; அவருக்கு அப்படியொரு வேண்டுதல்’ என்றாள். இதைக் கேட்ட சாமியார் மெதுவாக நழுவி வீட்டை விட்டுப் போயிட்டார். அப்பொழுது அவள் வீட்டுக்காரன் வீட்டுக்கு வந்தான். சாமியாரைக் காணோம். பெண்டாட்டியைக் கூப்பிட்டு சாமியார் எங்கே என்று கேட்டான். ‘சாமியார் இந்த உலக்கையை கேட்டார். உங்கள் அம்மா வைத்திருந்த உலக்கையாச்சே, நான் தரமுடியாது என்று சொன்னேன். அவர் கோவித்துக்கொண்டு இப்பொழுதான் போனார்’ என்று சொன்னாள். ‘சாமியார் கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே! உலக்கயைக் கொடு’ என்று உலக்கையை கையில் எடுத்துக்கொண்டு சாமியாரை நோக்கி ஒடினான். இவன் உலக்கையோட வருவதைப் பார்த்த சாமியார் தன்னை அடிக்க வருவதாக நினைத்து ஓடினான். அவருக்கு எப்படியாவது உலக்கையை கொடுத்துவிட எண்ணி இவன் துரத்த, சாமியார் ஓடியே போயிட்டார்”.
இந்தக் கதை நகைச்சுவையை ஏற்படுத்துவதைக் காணலாம். நகைச்சுவையின் ஊடே உழைக்காமல் சாப்பிடுவோரையும் அவர்களுக்கு உணவு தருவோரையும் கேலி செய்வதாக அமைவதையும் காணமுடிகிறது. உழைக்கும் சமுதாயத்தில் உழைக்காதோர் கேலிக்குள்ளாவது இயல்புதானே?
இடப்பெயர்வுக் கதைகள்
மக்கள் பல்வேறு காரணங்களுக்காக இடம் பெயர்ந்து கொண்டேயிருப்பர். அவர்களின் இடப்பெயர்வு குறித்த நினைவுகள் கதைகளாக அவர்களிடையே வழங்கப்பட்டு வரும். இத்தகைய கதைகளை இடப்பெயர்வுக் கதைகள் எனலாம். மக்களின் இடப்பெயர்வு குறித்த வாய்மொழி வரலாறுகளாகவும் இத்தகைய கதைகளைக் கருதலாம்.
வரலாற்றுக் கதைகள்
வரலாற்றில் காணப்படும் அரசர்கள், தலைவர்கள், வீரர்கள், அவர்தம் அருஞ்செயல்கள் குறித்த கதைகளும் மக்களிடையே வழக்கில் உள்ளன. இவை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. இத்தகைய கதைகளை வரலாற்றுக் கதைகள் எனலாம்.
நம்பிக்கை விளக்கக் கதைகள்
மக்களிடையே பல்வேறு நம்பிக்கைகள், நோன்புகள் போன்றவை காணப்படுகின்றன. இவற்றை விளக்கும் கதைகளை நம்பிக்கை விளக்கக் கதைகள் என்று சுட்டலாம். நம்பிக்கை சார்ந்த செயல்களை எவ்வாறு செய்யவேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் என்ன நேரும் என்பனவற்றை விளக்குவனவாக இக்கதைகள் அமையும்.
இங்கே சுட்டப்பட்ட கதை வகைகளேயன்றி ஏராளமான பல கதைகள் மக்களிடம் வழக்கில் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்.
தியோடர் பென்பே (Theoder Benfey, 1809-1881) என்னும் செருமானிய-இந்தியவியல் அறிஞர் சமஸ்கிருதக் கதை இலக்கியங்களை ஆராய்ந்தார். இவர் பஞ்சதந்திரக் கதைகளைச் செருமானிய மொழியில் மொழி பெயர்த்தார். சமஸ்கிருத – ஐரோப்பியக் கதைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளை ஆராய்ந்தார். இறுதியில் கதைகள் இந்தியாவில் தோன்றி அங்கிருந்து ஸ்பெயின், கிரேக்க நாடுகள் வழியாக ஐரோப்பாவிற்குப் பரவின என்ற முடிவுக்கு வந்தார். பரவுதலை அடிப்படையாகக் கொண்ட அவருடைய கொள்கை புலம்பெயர்வுக் கொள்கை (Migrational Theory) என்று சுட்டப்பட்டது. பின்னர் இக்கொள்கை மறுக்கப்பட்டது.
இவ்வாறு பல்வேறு ஆய்வு முறைகளையும் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு நாட்டுப்புறக் கதைகள் உலகம் முழுவதும் ஆராயப்பட்டு வருகின்றன.
மாவட்ட அடிப்படையில் கதைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. தஞ்சை மாவட்ட நாட்டுப்புறக் கதைகளை அ.மா.சத்தியமூர்த்தி, மணலிசோமன் ஆகியோர் செய்துள்ளனர். மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகளை அய்யனாரும் குமரி மாவட்டக் கதைகளை ஸ்டீபன் மற்றும் ரோஸ்லெட் டேனிபாயும் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுகள் கதைகள் வழி சமுதாய அமைப்பையும், கதைகளின் அமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளன.
சிறுவர்கள் ஒன்றுகூடி விளையாடும்போது அவர்களுக்குள் கதைகள் பரிமாறிக் கொள்ளப்படுவதுண்டு. முன்பு கேட்ட கதைகளை நினைவில் வைத்திருந்து திரும்பிக் கூறல், அவற்றைக் கேட்டு மனதில் கொள்ள வேண்டும் என்று ஊன்றிக் கவனித்தல் முதலான செயல்கள் அவர்களின் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. மேலும், பழைய கதைகளை மாற்றுதல், புதிதாகப் படைத்தல் முதலான செயல்களால் அவர்களின் படைப்பாற்றல் திறன் வளர்கிறது. தங்கள் கருத்துகளைத் தங்களை ஒத்த தோழர்களிடம் பரிமாறிக் கொள்ள அவர்களுக்குக் கதைகள் உதவுகின்றன.
அலுவலகத்தில் வேலை பார்ப்போருக்குத் தங்கள் மேலதிகாரிகளை எதிர்த்துச் செயற்பட முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில் மேலதிகாரியின் ஆத்திரமூட்டும் செயல்களால் எரிச்சலடைகிறார்கள். அத்தகையோர் தங்கள் நண்பர்களுடன் தனியே பேசும்போது தங்கள் மேலதிகாரியைத் ‘திறமையில்லாமல் புகழ்பெறும் கதைப் பாத்திரம்’ ஒன்றோடு ஒப்பிட்டுக் கூறி மகிழ்கின்றனர். சான்றாகத் தன் மேலதிகாரியைச் சரியான ‘புண்ணாக்கு மாடன்’ என்று கூறுகிறார் ஒருவர். மற்றவர் புரிந்து கொண்டு சிரிக்கிறார். ஏனென்றால் புண்ணாக்கு மாடனைப் பாத்திரமாகக் கொண்ட கதையை அவர் அறிந்திருப்பதுதான். கதை வருமாறு:
காட்சி
ஒரு ஊரில் மாடன் என்பவன் வசித்து வந்தான். நல்ல உயரமும் பருமனும் உள்ளவன். நுகத்தடியைக் கைகளில் இடுக்கிக்கொண்டு மாடுகட்குப் பதிலாக ஏர் இழுப்பான். புண்ணாக்கு என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். புண்ணாக்கைத் தின்று கொண்டே ஏர் உழுவான். அதனால் அவன் ‘புண்ணாக்கு மாடன்’ என்று அழைக்கப்பட்டான். ஒரு நாள் அந்த ஊருக்கு வந்த பயில்வான் ஒருவன் தன்னை எதிர்த்துச் சண்டையிட இந்த ஊரில் யாரேனும் உண்டா என்று சவால் விட்டான். ஊரார் சேர்ந்து புண்ணாக்கு மாடனை முன்னால் தள்ளி விட்டனர். அவனுக்குச் சண்டையிடத் தெரியாது. பயில்வான் அவனைக் குத்தினான். புண்ணாக்கு மாடன் அவன் கைகளைத் தன் கைகளுக்கிடையே ஏர் நுகத்தடியைப் பிடிப்பதுபோல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். பயில்வானால் கைகளை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. எனவே புண்ணாக்கு மாடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தன் மேலதிகாரியும் இவ்வாறு திறமையில்லாமல் சந்தர்ப்பவசத்தால் அதாவது சூழலால் உயர் பதவியில் அமர்ந்துள்ளான் என்று கூறுவதன் வாயிலாக உயர் அதிகாரி மீதுள்ள ஆத்திரத்தை, அடக்கி வைக்கப்பட்ட தன் கோபத்தைத் தணித்துக் கொண்டு மன அமைதி அடைகிறான்.
காட்சி
அரசியல் மேடைகளில் மக்களுக்குக் கருத்துகளை எளிதில் விளக்க நாட்டுப்புறக் கதைகளைப் பயன்படுத்துவதை நாம் காண முடிகிறது.
நம்பிக்கை
பணக்காரனால் வஞ்சிக்கப்படும் ஏழை இளைஞன் திடீரென்று தனக்குக் கிடைக்கும் மிகுதியான ஆற்றலால் அப் பணக்காரனை வென்று அவன் மகளை மணந்து கொள்வது போல அமையும் கதைகள் அதனைக் கேட்போருக்கு மன அமைதியை ஏற்படுத்துகின்றன. தானும் அவ்வாறு வெற்றி கொள்ள முடியும் என்னும் தன்னம்பிக்கையை அவர்களுக்கு அத்தகைய கதைகள் ஏற்படுத்துகின்றன.
அறிவுரை
இவற்றைத் தவிர, பெரியவர்கள் இளையோருக்குக் கூறும் கதைகள் கருத்துக் கருவூலங்களாகக் காணப்படுகின்றன. அவை உலகிலுள்ள வேறுபட்ட பண்புடைய மக்களைப் பாத்திரங்கள் வாயிலாக அறிமுகப்படுத்துகின்றன. எவற்றைச் செய்யலாம் எவற்றைச் செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகின்றன. நல்ல செயல்களைப் பாராட்டி ஊக்கப்படுத்துக்கின்றன. தீய செயல்களைக் கண்டித்து விலக்கச் சொல்கின்றன. காடுகள், மலைகள், ஆறுகள், வயல்கள், கடல்கள், பறவைகள், விலங்குகள் முதலானவற்றைப் பற்றிப் பல்வேறு நிலைகளில் அறிவூட்டுகின்றன. கேலியும் கிண்டலுங் கலந்து கற்பனை நயத்துடன் மனத்தில் தைக்குமாறு நாட்டுப்புறக் கதைகள் கூறப்படுவதால் அவை மனித சமுதாயத்தை உருவாக்கும் மிகச் சிறந்த சாதனமாகச் செயற்படுகின்றன என்று கூறுவது மிகையாகாது.
பாடம் - 2
புதிர்
மறைபொருளை உள்ளடக்கிய – புதிர்மைப் பண்புடைய அனைத்தையும் சுட்டுவதற்குப் ‘புதிர்’ என்ற சொல் இன்று பயன்படுத்தப்படுகிறது. ஏதேனும் ஒரு செய்தியை மறைத்து மறைபொருளாகப் பேசினால் அவ்வாறு பேசுபவரைப் பார்த்து மற்றவர் ‘என்ன புதிர் போடுகிறாயா?’ என்று கேட்கும் வழக்கம் உள்ளது. ஒருவரின் செயல்பாடுகள் இரகசியமாக இருக்குமேயானால் அவரைக் குறிப்பிடும்போது ‘அவன் செய்யறது எல்லாம் புதிரா இருக்கே’ என்று கூறுவது வழக்கில் உள்ளது. இந்தச் சொல் எவ்வாறு உருவாயிற்று? ‘பிசி’ என்ற சொல்லே பின்னாளில் ‘பிதிர்’ என்றாகிப் பின்னர் ‘புதிர்’ என்று மாறியது என்று கி.வா.ஜகந்நாதன் போன்ற அறிஞர்கள் சுட்டுகின்றனர். மறைபொருளை உள்ளடக்கிய அனைத்தையும் சுட்டும் பொதுச் சொல்லாக ‘புதிர்’ என்ற சொல்லைக் கருதலாம். ஆங்கிலத்தின் Riddle என்ற சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் இது.
வெடி
தமிழகத்தின் வட மாவட்டங்களில் (திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம், சேலம், தர்மபுரி முதலானவை) விடுகதையைச் சுட்ட ‘வெடி’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘நான் ஒரு வெடி போடறன் நீ விடை சொல்’ என்று மக்கள் கூறுவதை இப்பகுதிகளில் காணலாம். ‘நான் ஒரு விடுகதை கூறுகிறேன் நீ விடை கூறு’ என்பதே இதற்குப் பொருள். ‘விடு’ என்ற சொல்லடியாகப் பிறந்த ‘விடி’ (விடு+இ) என்ற சொல்லே ‘வெடி’ என்று மாறி வந்திருக்க வேண்டும் என்று பேராசிரியர் பொற்கோ கருதுகிறார். ‘வெடி’ என்ற சொல் விடு, விடுவி என்ற பொருளுடையது என்பதை உணரலாம். விடுகதையில் ‘உள்ளடங்கியுள்ள மறைபொருளை விடுவி’ என்று எதிரில் உள்ளவரிடம் கூறுவதாக அமையும் சொல்லாக ‘வெடி’ என்னும் சொல்லைக் கருதலாம்.
அழிப்பாங் கதை
தமிழகத்தின் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை மற்றும் அதற்குத் தெற்கே உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் விடுகதையை ‘அழிப்பாங்கதை’ என்ற சொல்லால் சுட்டுகின்றனர். எழுத்தறிவில்லாத கிராமப்புற மக்களிடம் ’விடுகதை’ என்று கூறினால் அவர்களுக்குப் புரியவில்லை. அழிப்பாங்கதை என்றால் உடனே புரிந்து கொள்கின்றனர். அழிப்பு, அழிப்புக் கதை என்றும் சில இடங்களில் சுட்டப்படுகிறது. ‘கதையில் மறைபொருளாக வரும் சிக்கலை அவிழ்த்தால்’ என்ற பொருளில் இச்சொல் உள்ளது. ‘அவிழ்த்தல்’ என்பது ‘அழித்தல்’ என்று மாறி ‘அவிழ்ப்பான் கதை’ ‘அழிப்பாங்கதை’ யாகி இருக்கலாம். தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாடு பகுதிகளில் ‘நீ ஒரு கதபோடு, நான் அவிழ்க்கிறேன்’ என்று கூறும் வழக்கம் உள்ளது. ‘நீ ஒரு விடுகதை கூறு; (அதன் மறைபொருளை) நான் விடுவிக்கிறேன்’ என்று இதற்குப் பொருள்.
விடுகதை
‘மறை பொருளினின்றும் விடுவிக்கப்பட வேண்டிய கதை’ என்னும் பொருளுடைய விடுகதை என்னும் சொல் படித்தவர் மத்தியில் அதிகம் பழக்கத்தில் உள்ளது. தமிழகம் முழுதும் பரவலாக அறியப்பட்ட சொல்லாகவும் நூல்கள், பத்திரிக்கைகளில் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. பண்டைத் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் இச்சொல் இடம் பெறாததால் இச்சொல்லாட்சி மிக அண்மைக் காலத்தில் தமிழ் மொழியில் காலூன்றியுள்ளது என்று சில ஆய்வாளர்கள் சுட்டுவர். இக்கருத்து பொருத்தமாகத் தெரியவில்லை. விடுகதையைச் சுட்டுவதற்கு தெலுங்கில் விடிகதா (Vidikatha), கன்னடத்தில் ஒடகதே, (Odakatha), விடிகதா, (Vidikatha), மலையாளத்தில் விடிகதா, கடங்கதா என்னும் சொற்கள் பயன் படுத்தப்படுகின்றன. நான்கு திராவிட மொழிகளில் வழக்கில் உள்ள விடுகதை என்னும் சொல் பிற்காலத்தது என்று கூறுவது சரியல்ல. மக்களிடையே வழக்கிலிருந்த இச்சொல் இலக்கண இலக்கியங்களில் இடம் பெறாமல் இருந்திருக்கலாம்.
முதன்முதலில் மிகுதியான விடுகதைகளைத் தொகுத்து வெளியிட்ட வகையில் ரோஜா முத்தையாவின் (1961) விடுகதைக் களஞ்சியம் என்னும் நூல் முதன்மை பெறுகிறது. இந்நூலில் 1025 விடுகதைகள் உள்ளன. ஒவ்வொரு விடுகதையும் பயின்றுவரும் வரிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
வ.மு. இராமலிங்கம் (1962) வெளியிட்டுள்ள களவுக் காதலர் கையாண்ட விடுகதைகள் முற்றிலும் மாறுபட்ட நூல். மக்களிடமிருந்து தொகுக்கப்பெற்ற கதை அடிப்படையிலான விடுகதைகள் மட்டுமே இந்நூலில் உள்ளன. இவை யார்யாரிடமிருந்து சேகரிக்கப் பெற்றன என்ற விவரமும், விடுகதைகளின் மாற்று வடிவங்கள், திரிபு வடிவங்கள், குறிப்புரைகள் முதலியனவும் நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழில் முறையாகத் தொகுக்கப்பெற்ற முதல் விடுகதை நூல் என்று இந்நூலைக் குறிப்பிடலாம்.
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா (1962) பல்வேறு நாடுகளிலிருந்து வெளிவந்த 125 விடுகதைகளைத் தமிழாக்கம் செய்து வெளிநாட்டு விடுகதைகள் என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். ஈரான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பர்மா, இலங்கை, மலேயா போன்ற நாடுகளிலிருந்து நண்பர்கள் வாயிலாக விடுகதைகளைச் சேகரித்து இந்த நூலில் இணைத்துள்ளார்.
இன்றுவரை தமிழில் வெளிவந்துள்ள விடுகதைத் தொகுப்பு நூல்களிலேயே மிகுதியான எண்ணிக்கையைக் கொண்ட விடுகதைத் தொகுப்பு ச.வே. சுப்பிரமணியனின் (1977) தமிழில் விடுகதைகள் என்ற நூலேயாகும். இதில் 2504 விடுகதைகள் அடங்கியுள்ளன. விரிவான ஆய்வுரையுடன் கூடிய தொகுப்பு நூல் இது ஒன்றே; இந்த விடுகதைகள் அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளன. தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களும், வெண்பாக்களும் இந்நூலில் இணைக்கப் பெற்றிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆறு. இராமநாதன் (1982) வெளியிட்டுள்ள காதலர் விடுகதைகள் என்னும் நூலில் கதை அடிப்படையிலான 35 பாட்டு விடுகதைகள் இடம் பெற்றுள்ளன. சேகரித்த முறை, பதிப்பு முறை போன்ற செய்திகள் இந்நூலில் நுணுக்கமாகத் தரப்பட்டுள்ளன.
விடுகதைகளைப் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைந்த அளவிலேயே நிகழ்ந்துள்ளன. க.சாந்தி, இ.பாத்திமா மேரி ஆகியோர் விடுகதைகளை அமைப்பியல் அடிப்படையில் ஆராய்ந்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர். ஆறு. இராமநாதன் தமிழில் புதிர்கள் என்னும் தலைப்பில் (1978-2001) எழுதிய நூல் தமிழ் விடுகதைகள் பற்றி வெளிவந்த ஒரே ஆய்வுநூலாக உள்ளது.
சான்று-1 : பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது-அது என்ன?
விடை : பாம்பு
’வயிற்றாலே போகிறது’ என்ற தொடர் இரு பொருள் தருகிறது. பொதுவாக இச்சொல் பேச்சுவழக்கில் ’பேதி’ (Diarrhoea) என்ற பொருளையே தரும். எனவே இந்த விடுகதையைக் கேட்டும் ஒருவர் ’பிறந்தது முதல் தொடர்ந்து பேதி ஆகுமா? அப்படி ஆனால் ஒரு மனிதரால் பிழைக்க முடியுமா? என்று சிந்திப்பார். ஆனால் அத்தொடருக்கு மற்றொரு பொருள் ’வயிற்றால் (ஊர்ந்து) செல்லுதல்’ என்பதாகும். இப்பொருளைச் சிந்தித்தால் மட்டுமே விடையைக் கூறமுடியும். இவ்வாறு பிற விடுகதைகளையும் சிந்தித்து அறிக.
சான்று-2 :நாலு மூல சதுக்கம்
அம்பது பேரு அடக்கம் – அது என்ன?
விடை : தீப்பெட்டி.
சான்று-3 : களுத்துண்டு தலயில்ல
கையுண்டு உடலிருக்கு
காலில்ல – அது என்ன?
விடை : சட்டை
சான்று-4 : ஆழக்குழி தோண்டி
அதுல ஒரு முட்ட போட்டு
அண்ணாந்து பாத்தா
தொண்ணூறு முட்ட – அது என்ன?
விடை : தேங்காய்
சான்று-5 : ஆயிரம் தச்சர் கூடி
அழகான மண்டபங் கட்டி
ஒருவர் கண்பட்டு
உடைந்ததாம் மண்டபம் – அது என்ன?
விடை : தேன் கூடு
சான்று-6 : எட்டாத ராணியாம்
இரவில் வருவாள்
பகலில் மறைவாள் – அது யார்?
விடை : நிலா
சான்று-7 :ஆனை அசைந்து வர
அருமிளகு சிந்தி வர
கொத்தளத்துப் பெண்களெல்லாம்
கூடிக் குலவையிட – அவை யாவை?
விடை: மேகம், மழைத்துளி, தவளை.
சான்று-8:ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல
சூடு கொடுக்கும், தீ அல்ல
பளபளக்கும், தங்கம் அல்ல – அது என்ன?
விடை:சூரியன்
சான்று-9:கட்டின மாம்பளம் திட்டுன்னு விளுகுது
கண்டவன் ரெண்டு பேரு
எடுத்தவன் பத்து பேரு
திண்டவன் பதினாறு பேரு
ருசி பார்த்தவன் ஒருத்தன்- அது என்ன?
விடை:கண்டவன் ரெண்டு பேருண்ணா கண்ணு
எடுத்தவன் பத்து பேருண்ணா இருகை விரல்கள்
திண்டவன் பதினாறுண்ணா பல்லு
ருசி பார்த்தவன் ஒருத்தண்ணா நாக்கு
சான்று-10: வேலியிலே படர்ந்திருக்கும்
வெள்ளைப்பூ பூத்திருக்கும்
கனியும் சிவந்திருக்கும்
கவிஞர்க்கும் விருந்தாகும்- அது என்ன?
விடை: கோவைப்பழம்.
மேற்காட்டப்பட்ட விடுகதைகள் ஓரடியைக் கொண்டதாகவும் பல அடிகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளன. இறுதியில் அது என்ன? அவை என்ன? அவன் யார்? என்பது போன்ற வினாவுடன் முடிகின்றன. அறிவைக் குழப்புவதற்காகவே வடிவமைக்கப்பட்ட விளக்கங்கள் ஆர்வத்தைத் தூண்டிச் சிந்திக்கச் செய்கின்றன. மறைபொருளாக இருக்கும் விடையைக் கண்டுபிடித்தவுடன் சவாலில் வெற்றிபெற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.
சான்று-1: ஒருமரம் ஏறி
ஒரு மரம் பூசி
ஒரு மரம் பிடித்து
ஒரு மரம் வீசிப்
போகிறவன் பெண்ணே
உன் வீடு எங்கே?
பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே
நான் எப்போது வரட்டும்?
இந்த ராஜா செத்து
அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு
மரத்தோடு மரம் சேர்ந்த பிறகு வந்து சேர்….. அது என்ன?
விடை:ஒருவன் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டான். அவள் விருப்பத்தை அறிந்து அவளைத் தனிமையில் சந்திக்க விரும்பினான். அவளோ அவளுடைய தந்தையோடு தெருவில் சென்று கொண்டிருந்தாள். அவளுடைய தந்தைக்குத் தெரியாமலும் தெருவிலுள்ள பிறர் அறியாமலும் அவளோடு உரையாட நினைத்தான். அவன் நடந்து கொண்டே அவளிடம் நிகழ்த்தின உரையாடலே மேற்கண்ட விடுகதை.
ஒரு மரம் ஏறி-மரத்தாலான பாதக் குறட்டில் (செருப்பில்) ஏறி
ஒரு மரம் பூசி-சந்தன மரத்தை இழைத்து சந்தனத்தை மேலே பூசி
ஒரு மரம் பிடித்து-(வயதானவராகையால்) மர ஊன்று கோலைப்
பிடித்து
ஒரு மரம் வீசி-பனைமரத்தின் மட்டையாலான விசிறியை (கையில் பிடித்து)
வீசிக்கொண்டு போகிறவனின் பெண்ணே உன் வீடு எங்கே உள்ளது?
என்று அவன் கேட்கிறான். அவள் புரிந்து கொண்டு ‘பால் விற்கும் இடையர் வீட்டிற்கும் பானை செய்யும் குயவர் வீட்டிற்கும் நடுவில், ஊசி செய்யும் கொல்லன் வீட்டிற்கும் நூலைப் பாவோடும் சேணியன் (துணி நெய்பவர்) வீட்டிற்கும் அருகில்’ என்று கூறுகிறாள். அவன் மகிழ்ச்சியுடன் ‘சந்திப்பதற்கு எப்போது வரலாம்’ என்று கேட்டான். அதற்கு அவள் ‘சூரியன் மறைந்து (இந்த ராஜா செத்து) சந்திரன் உதயமான பிறகு (அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு), வீட்டிலுள்ளவர்கள் கதவைச் சாத்தும் போது கதவும் நிலையும் சேர்ந்து விடும், அந்தச் சமயத்தில் வந்து சேர்’ என்று கூறுகிறாள்.
இந்த விடுகதை தெருவில் நடைபெறும் ஒரு காதல் நிகழ்வை நம் கண்முன் நிறுத்துவதைக் காணலாம்.
சான்று-2:
காசிவாசிப் பிராம்மணரே
பகல்வந்த முறைக்கு நான் மைத்துனனே
மகனாராகிய மாமனார் கூப்பிடுகிறார்
சாப்பிட வாரும் பாட்டனாரே – அது என்ன?
விடை:ஒரு பிராமணர் தன் மகனையும் மனைவியையும் விட்டுவிட்டுக் காசி சென்றார். காசியிலேயே மனம் ஒன்றிப் பல ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்தார். பிறகு தன் ஊரையும் மனைவி மக்களையும் பார்க்கும் ஆசையால் ஊர் திரும்பினார். மனைவி இறந்த செய்தியையும் மகன் ஊரைவிட்டுச் சென்றுவிட்டதையும் ஊரார் வாயிலாக அறிந்தார். மகன் இருக்குமிடம் தெரியவில்லை.
பிறந்த மண்ணிலேயே எஞ்சிய காலத்தைக் கழிக்க முடிவு செய்த அவர், தனியாக வாழ விரும்பாமல், யாராவது ஒரு ஏழைப் பெண்ணை மணந்து வாழ எண்ணினார். பல ஊர்களுக்குச் சென்று பெண் தேடினார். ஒரு ஊரில் ஒரு குடிசை இருந்தது. அந்தக் குடிசையில் இருந்த பிராமணனுக்கு வயதுக்கு வந்த பெண் இருந்தாள். அவளை மணமுடித்துக் கொடுக்க அந்தப் பிராமணனுக்கு வசதி இல்லை. யாராவது இரண்டாம் தாரமாகக் கேட்டால் கொடுக்கலாம் என்று கருதியிருந்தான். காசிவாசிப் பிராமணரின் திருமண விருப்பத்தை அறிந்த உடன் ஏழை பிராமணன் தன் பெண்ணைக் கொடுக்க முன் வந்தான். திருமணம் நிச்சயமாயிற்று.
ஏழை பிராமணன் வீட்டில் ஒரு கிழவி இருந்தாள். அவளுக்கு ஏழை பிராமணனின் பூர்வீகம் தெரியும். மாப்பிள்ளையாக வர இருக்கும் காசிவாசிப் பிராமணரை உற்றுக் கவனித்தாள்.
சமையல் ஆன பிறகு திண்ணையிலிருந்த காசிவாசிப் பிராமணரை உணவுண்ண அழைத்து வருமாறு ஏழை பிராமணனின் சிறு பிள்ளையை அனுப்பினாள். ‘இந்தப் பாட்டைச் சொல்லி அவரைச் சாப்பிடக் கூப்பிடு’ என்று சொல்லியிருந்தாள். அவனும் அப்படியே போய்ச் சொல்லிக் கூப்பிட்டான். பாட்டைக் கேட்டதும் பிராமணருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. உள்ளே சென்று சாப்பிட்டார். அப்போது சிறுவனைப் பார்த்து, ‘இந்தப் பாட்டை யார் சொன்னார்கள்’ என்று கேட்டார். ‘பாட்டி’ என்று கூறினான் சிறுவன். ’அது யார்’ என்று கேட்டார் பிராமணர். ‘உங்களைத் தெரிந்து கொண்டவள்’ என்று உள்ளேயிருந்து பதில் கூறினாள் பாட்டி.
’பெரிய பாவத்திலிருந்து தப்ப வைத்தீர்கள்’ என்று கூறித் திருமணம் செய்து கொள்ளாமல் காசிக்கே சென்று விட்டார் பிராமணர்.
மேற்காட்டப்பட்ட சான்றுகளுள் முதல் சான்று மறைபொருளை உள்ளடக்கிய உரையாடலாக – பாடல் தன்மையுடன் அமைந்துள்ளது. விடை ஒரு கதை நிகழ்வாக – சம்பவமாக அமைந்துள்ளது. மரச் செருப்பு இன்று வழக்கொழிந்து விட்டது. மேலும் பால் விற்கும் தொழிலில் இன்று பல்வேறு சாதியினர் ஈடுபடுகின்றனர். ஊசி செய்தல், துணி நெய்தல் போன்ற தொழில்கள் இயந்திரங்களின் உதவியால் நடைபெறுகின்றன. இத்தகைய காலச் சூழலில் நமது கிராம மக்களின் வாழ்வியல் குறித்த செய்திகளை வரலாற்று அடிப்படையில் அறிந்திருப்பது இத்தகைய விடுகதைகளுக்கு விடை கூற வசதியாக இருக்கும்.
இரண்டாவது சான்று முதியவர்கள் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு அதனால் உறவு முறையில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பினைத் தெளிவுபடுத்துகிறது.
இது பாடல் வடிவில் அமைந்துள்ளது. விடை ஒரு கதையாக உள்ளது. ஆனால் உரைநடையில் அமைந்த கதை அடிப்படையிலான விடுகதைகளில் முதலில் ஒரு கதை அல்லது சம்பவம் கூறப்படும். அதில் உள்ள மறைபொருளை விடுவிக்குமாறு வினா எழுப்பப்படும். விடை சுருக்கமாக இருக்கும். இதற்கு ஒரு சான்று காணலாம்.
சான்று-3:
ஒருநாள் அரசன் ஊர் சுற்றி வரும்போது ஏழு தெருக்களிலும் ஏழுபேர் காவல் காத்தனர். அரசன் இரண்டாவது தெருவில் வரும்போது ஒரு நாய் அரசனைக் கடித்துவிட்டது. உடனே அரசன் அந்தக் காவலாளியை அழைத்து ‘அந்த நாயை உடனே கொல்லுதல் வேண்டும். நீ எவ்வாறு அதனைக் கொல்கிறாயோ அது போன்று நானும் உன்னைக் கொல்வேன்’ என்றான். இதனை எவ்வாறு நிறைவேற்றுவது?
விடை:நாயின் வாலைப் பிடித்து அடித்துக் கொன்றான். மனிதனுக்கு வாலில்லை. எனவே அரசன் எவ்வாறு காவலாளியைக் கொல்ல இயலும்?
விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன கதைகள் எல்லாம் இத்தகைய கதைகளே. இன்று மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ள ’மர்ம நாவல்கள்’ என்னும் எழுத்திலக்கிய வடிவம் இது போன்ற விடுகதைகளின் வளர்ச்சி என்று கூறலாம்.
கதை (அடிப்படையிலான) விடுகதைகளுக்கு வ. மு. இராமலிங்கம் வெளியிட்ட களவுக்காதலர் கையாண்ட விடுகதைகள் என்ற நூலும் ஆறு. இராமநாதனின் காதலர் விடுகதைகள் என்ற நூலும் சான்றுகளாக அமையும்.
அரனூரு காடை அம்பது முட்டையிடும் ஒரு காடை எத்தனை முட்டையிடும்?
இங்கே ’அரனூறு’ என்ற சொல் உச்சரிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அறநூறு (600) என்பதாக உச்சரிக்கப்படும். கேட்பவர் ’600 காடை 50 முட்டையிடும் என்றால் ஒரு காடை எத்தனை முட்டையிடும்’ என்று கணக்குப் போடத் தொடங்குவர். ’அரை நூறு (50) என்பதே சரி. இத்தகைய விடுகதைகளை வேடிக்கை விடுகணக்கு என்று கூறலாம். இவையேயன்றி உண்மையான கணக்காகவும் சில விடுகதைகள் அமைந்திருக்கும் ஒரு சான்று காணலாம்.
சான்று-1:கட்டியால் எட்டுக் கட்டி
கால் அரை முக்கால் மாத்து
செட்டியார் செத்துப் போனார்
சிறுபிள்ளை மூன்று பேரு
கட்டியை உடைக்காமலேயே பங்கு பிரிக்க
வேண்டும். எப்படி-?
விடை:1/4 கட்டி 5; 1/2 கட்டி 2: 3/4 கட்டி 1 (எட்டு தங்கக் கட்டிகளுள் நான்கு கால் கட்டிகள் ஒருவருக்கு. இரண்டு அரை கட்டிகள் இரண்டாமவருக்கு. ஒரு முக்கால் கட்டியும் ஒரு கால் கட்டியும் மூன்றாமவருக்கு)
சிந்திக்கச் செய்யும் உண்மையான கணக்காக இவ்விரு கணக்குகள் அமைந்துள்ளதை அறியவும்.
உரைநடையில் அமைந்த விடுகணக்குக்கு ஒரு சான்று வருமாறு:
சான்று-1:ஒரு குளத்தில் சில தாமரைகள் மலர்ந்திருந்தன. அவற்றில் சில வண்டுகள் மலர் ஒன்றுக்கு ஒவ்வொன்றாக அமர, ஒரு வண்டிற்கு இடமில்லை. பிறகு அவை மலர் ஒன்றுக்கு இரண்டிரண்டாக அமர, ஒரு மலர் மிகுந்திருந்தது. வந்த வண்டுகள் எத்தனை? மலர்கள் எத்தனை?
விடை:வந்த வண்டுகள் நான்கு
இருந்த மலர்கள் மூன்று
சான்று-1:பஞ்சு தனைத் தான்புசித்துத் தையலோடு
பலநாளும் போர்வையிட்டுப் படுத்துறங்கும்
தஞ்சமென விழுந்தவர்கள் தலையைத் தூக்கும்
தாழ்வில்லா மஞ்சத்தே அடுத்து வாழும்
வஞ்சியர் போல் மேல் விழுந்து மருவப்
பார்க்கும் வசியஞ் செய் திடுந்தாசி வேசியல்ல
அஞ்சலெனக் கண்டவரை வணங்கச் செய்யும்
ஆரணங்கே இக்கதையை அறிந்து சொல்லே.
விடை:தலையணை
சான்று-2:
ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும்
கண்டறியான் காடுறைவான் தீர்த்தக்
கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு
நல்தலை யொன்றுண்டு படுக்கும்போ
தலையில்லை பார்.
விடை:ஆமை
மேற்காட்டப்பட்ட சான்றுகள் இரண்டிலும் புதிர்மைப் பண்பு அமைந்துள்ளது. இரண்டிலும் அப்புதிர்மைப் பண்பு விடுவிக்கப்படுகின்றது. விடை ஒரு சொல்லால் அமைந்துள்ளது. இவையனைத்தும் உண்மை விடுகதைகளின் பண்புகள். ஆயினும் காட்டப்பட்ட இரண்டு சான்றுகளும் இலக்கண மரபிற்கு உட்பட்டதாக அமைந்துள்ளன. முதல் சான்று ‘எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் அமைந்துள்ளது. இரண்டாவது சான்று ‘வெண்பாவால்’ அமைந்துள்ளது. எனவே, இவற்றை எழுத்திலக்கிய விடுகதைகள் என்று சுட்டுவது பொருத்தமாக இருக்கும். இவ்வகை விடுகதைகள் இலக்கண மரபிற்கு உட்பட்டதாக இருக்கும். எழுத்திலக்கியச் சொற்கள் பயின்று வந்திருக்கும். குப்புசாமி நாயுடு (1933) என்பவரால் எழுதி வெளியிடப்பட்ட விவேக விளக்க விடுகவிப் பொக்கிஷம் எழுத்திலக்கிய விடுகதைக்குச் சிறந்த சான்றாகக் கூறலாம்.
• கூட்டம்
சிறுவர் சிறுமியர் மகிழ்ச்சியாக ஒன்று கூடும்போது அல்லது குடும்ப உறுப்பினர்கள் கூடும்போது அல்லது வயது வேறுபாடில்லாமல் பலரும் ஒன்று கூடும்போது விடுகதை அமர்வுகள் (Riddling Session) நடைபெறுகின்றன. ஒரு சில ஊர்களில் செயற்கையாக அத்தகைய சூழல்கள் உருவாக்கப்பட்டன. ஆண் பெண் வயது வேறுபாடில்லாமல் கூடியிருந்த சூழல்கள் அவை. விடுகதை போடுவதில் அனைவரும் மகிழ்ச்சியாக கலந்து கொண்டனர். ஒருவர் ஒரு விடுகதையைக் கூறி, விடை கூறுமாறு பிறரிடம் சவால் விடுத் தொனியில் கூற, குழுமியிருக்கும் அனைவரும் விடை தேடும் முயற்சியில் உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.
விடை கூறமுடியாத நிலை ஏற்பட்டபோது விடுகதை கூறியவர் வெற்றிப் பெருமிதத்துடன் விடை கூறினார். சில நேரங்களில் விடை தெரியாதவர்கள் பதிலுக்கு ஒரு விடுகதையைக் கூற, முன்பு விடுகதை கூறியவர் அதனை அறிந்திருக்கவில்லையாயின் இருவரும் அவரவர் கூறிய விடுகதைகளுக்கான விடைகளைப் பரிமாறிக் கொண்டனர். ஒருவரையொருவர் வெற்றி கொள்ள வேண்டும், தன் அறிவாற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்ற வேகமும், உற்சாகமும் இச்சூழல்களில் மக்களிடம் வெளிப்பட்டதை அறிய முடிந்தது.
• பணியிடம்
அடுத்து, வயல்களில் தொழில் செய்யும் சூழல்களில் விடுகதைகள் போடப்படும் என்று பல ஊர்களில் கூறப்பட்டது. பெண்கள் மட்டுமே பணி செய்யும் இடங்கள் என்றில்லாது ஆண்-பெண் இருசாராரும் பணி செய்யும் இடங்களிலும் இந்த விடுகதை விளையாட்டு விளையாடப்படுகிறது. இதனால் பணிக்கு எவ்வித இடையூறும் ஏற்படுவதில்லை. மாறாகப் பணியில் ஈடுபடுவோர் உற்சாகம் பெறுகின்றனர். இதனை விழுப்புரம் அருகில் உள்ள ஒர் ஊரில் வயலில் களையெடுக்கும் சூழலில் விடுகதை போடப்படுவதை நேரில் பார்த்தபோது அறிந்து கொள்ளமுடிந்தது.
• வகுப்பு
சில கிராமப்புற ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவர்களுக்கு விடுகதைகளைக் கூறி விடைகேட்கும் நிலையும் காணப்படுகிறது. இச்சூழல்களில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு விடுகதை கூறி விடை கேட்பதில்லை.
• தனிமை
சில விடுகதைகள் இரட்டை அர்த்தம் உடையன. மேலோட்டமாகப் பார்த்தால் பாலியல் சம்பந்தப்பட்டதாக விடுகதைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆழமாகச் சிந்தித்தால் அதற்கான விடை வேறாக இருக்கும். இத்தகைய விடுகதைகள் பருவ வயதுடைய அல்லது முதிய ஆண்களுக்குள்ளோ, பெண்களுக்குள்ளோ தனி இடங்களில் பரிமாறிக் கொள்ளப்படும். சில நேரங்களில் திருமண உறவுமுறையுடைய ஆண், பெண் இருசாராரும் தனித்திருக்கும்போது இத்தகைய விடுகதையைக் கூறிச் சுகம் காண்பர்.
அறிவைக் கூர்மைப் படுத்திக்கொண்டு பல்வேறு பொருட்களை ஒப்புமைப்படுத்தி உண்மை காணும் வேகத்தை விடுகதைகள் நல்குகின்றன. வெற்றி பெற்றே தீருவது என்ற வைராக்கிய உணர்வை விடுகதை அமர்வுகள் ஏற்படுத்துகின்றன. வெற்றி பெறும்போது ஏற்படும் மகிழ்ச்சி தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
• நினைவாற்றல்
கட்டுதிட்டமான அமைப்புடைய விடுகதைகளை மாற்றாமல் நினைவில் கொள்ள மக்கள் முயற்சி மேற்கொள்கின்றனர். இது மக்களின் நினைவாற்றலை வளர்க்கின்றது. விடைப் பொருட்கள் விடுகதைகளில் உவமை, உருவகம் வாயிலாக வர்ணிக்கப்படும். இத்தகைய வர்ணனைகள் அப் பொருளைப் பற்றிய அறிவை மக்களுக்கு ஏற்படுத்துகின்றன. விடு கணக்குகள் மக்களின் வாய்மொழிக் கணக்கறிவைப் பெரிதும் வளர்க்கின்றன.
• பணிச்சுமை
பணியில் ஈடுபட்டுள்ளபோது, போடப்படும் விடுகதைகள் மக்களின் பணிச்சுமையைக் குறைத்து உற்சாக மூட்டுகின்றன. இதனால் பணியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட முடிகின்றது.
• அறிவாற்றல்
ஆசிரியர் மாணவரின் அறிவுத்திறனைச் சோதிக்க விடுகதைகள் பயன்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் சிறுவர் சிறுமியரின் அறிவுத்திறனைச் சோதிக்கவும் விடுகதைகள் பயன்படுகின்றன.
• உளவியல்
இளைஞர்களுக்குப் பாலியல் அறிவை விடுகதைகள் நல்குகின்றன. காதலர்கள் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளவும் உதவுகின்றன. விடுகதைகளைப் படைப்பதன் வாயிலாக மக்கள் தங்கள் நுண்ணறிவினை வெளிப்படுத்துகின்றனர். உளவியல் அடிப்படையில் இது அவர்களை மகிழ்விக்கின்றது. ஏட்டிலக்கியங்கள் புதிர்களின் தன்மைகளை ஏற்றுத் தங்களை வளப்படுத்திக் கொள்கின்றன.
• பல்துறை
இன்றைய பத்திரிகைகளில் சிறுவர்களுக்கென ஒரு பகுதி ஒதுக்கப்படுகின்றது. அதில் விடுகதைகள் இடம் பெறுகின்றன. இதனைச் சிறுவர்கள் விரும்பிப் படிக்கின்றனர். வணிக அடிப்படையில் பத்திரிகை வளர்ச்சிக்கும் விடுகதைகள் பயன்படுகின்றன என்று கூறலாம். திரைப்படங்களிலும் விடுகதைகள் பொருத்தமாகக் கையாளப்படுகின்றன. இவை மக்களின் வரவேற்பைப் பெற்றுப் படத்தின் வெற்றிக்குத் துணை செய்கின்றன.
• பயன்களின் சான்றுகள்
விடுகதைகளால் ஏற்படும் பயன்களுக்கு ஒன்றிரண்டு சான்றுகள் வருமாறு:
சான்று-1:
அவனிதனில் ஓர் அற்புதத் தருவுண்டு
அதற்கு ஈராறு கிளைகளுண்டு
கிளைக்குக் கிளை நான்குண்டு
சீராரும் கிளைக்குச் சிறு கிளை ஏழுண்டு
கிளைக்குப் பத்துப் பத்துப் பத்துக் கிளையுமுண்டு
நீல இலை பாதி வெண்மை இலைபாதி ஆக இலை
ஒன்றாக – அது என்ன?
மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று ஆண்டு, மாதம், வாரம், நாள், இரவு, பகல் பற்றிய அறிவாகும். இதனையே இந்த விடுகதை விளக்குகின்றது. இதில் ஆண்டு ஒரு மரமாகவும், மாதம், வாரம், நாட்கள் முதலியன கிளைகளாகவும் இரவு பகல் இரண்டும் இலைகளாகவும் உருவகிக்கப்பட்டுள்ளன. ஓர் ஆண்டுக்குப் பன்னிரண்டு மாதங்கள் என்பதும், மாதத்திற்கு நான்கு வாரங்கள் என்பதும் வாரத்திற்கு ஏழு நாட்கள் என்பதும், மாதத்திற்கு முப்பது நாட்கள் என்பதும் ஒரு நாள் என்பது ஓர் இரவும் பகலும் சேர்ந்தது என்பதும் இவ்விடுகதை அறிவுறுத்தும் செய்திகளாகும்.
பள்ளிப் பிள்ளைகளுக்குப் புதிய பாடத்திட்டங்களையும், விடுகதைகள் வாயிலாகப் போதிக்கலாம் என்பதற்குப் பாஸ்பரஸ் பற்றிய பின்வரும் விடுகதையைச் சான்றாகக் கொள்ளலாம்.
சான்று-2:
நீருக்குள் இருக்கும்
மீனுமல்ல
வெளியில் வந்தால் எரியும்
நெருப்பு மல்ல – அது என்ன?
தமிழ்ச்சமுதாயத்தில் வயது வந்த அல்லது பருவ வயதடைந்த ஓர் ஆணும், பெண்ணும் இயல்பாகச் சந்தித்து உரையாடுவது கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, காதலர்கள் மறைபொருளாக உரையாடுவதாக விடுகதைகள் உருவாக்கப்படுகின்றன. (சான்றுக்குக் காண்க: விரிவு 2.3.2 சான்று-1) அவ்வாறே வயதான ஓர் ஆண், பேத்தி வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் நம்மிடையே காணப்படுகின்றது. இதனால் ஏற்படும் சிக்கல்களை விடுகதைகள் தெளிவுபடுத்துகின்றன. (சான்றுக்குக் காண்க பிரிவு :2.3.2 சான்று-2) இவ்வாறு பல்வேறு நிலைகளில் சமுதாயத்தைப் புரிந்து கொள்வதற்கு விடுகதைகள் துணையாக அமைகின்றன என்பதை அறியலாம்.
பாடம் - 3
இதுவரை வெளியிடப்பட்ட நாட்டுப்புறப் பாடல் தொகுப்புகளுள் குறிப்பிடத்தக்க ஒரு சில ஏடுகள் பற்றிச் சுருக்கமாகக் காணலாம்.
தமிழண்ணல் (1956) வெளியிட்ட தாலாட்டு என்னும் நூலில் பாண்டிய நாடு, ஈழநாடு, சோழநாடு, நாஞ்சில்நாடு, தென்பாண்டிநாடு, கொங்குநாடு, கவிஞர்கள் பாடிய தாலாட்டுக்கள், பிறமொழித் தாலாட்டுக்கள் என்ற தலைப்புக்களில் பாடல்களைத் தந்துள்ளார். தாலாட்டுப் பற்றி இவர் எழுதியுள்ள ஆய்வுரை குறிப்பிடத்தக்கது.
கி.வா. ஜகந்நாதன் பல பாடல் தொகுப்புகளை வெளியிட்டவர். மக்கள் எளிதில் புரிந்துகொள்வதற்காகப் பாடலுக்கு முன்னும் பின்னும் எளிய விளக்கங்களைத் தந்து பாடல்களை வெளியிட்டவர். இந்த விளக்கங்கள் கற்பித வர்ணனைகளாக அமைந்திருக்கும். ‘பெர்சி மக்வின்’ சேகரித்து, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தால் வெளியிடப்பட்ட மலையருவி எனும் நூலை இவர் பதிப்பித்துள்ளார். நல்லதொரு ஆய்வு முன்னுரையுடன் கூடிய பழைய பாடல்களை உள்ளடக்கிய தொகுப்பு நூலாக இதனைக் கருதலாம். பாடல்களில் திருத்தம் செய்து செப்பம் செய்திருப்பது இதன் குறையாகும்.
செ. அன்ன காமு (1959) வெளியிட்ட ஏட்டில் எழுதாக் கவிதைகள் என்னும் நூல் களப்பணி வாயிலாக அவரால் சேகரிக்கப்பட்ட பாடல்களைக் கொண்டதாக உள்ளது. அவருடைய அனுபவபூர்வமான குறிப்புகள் இத்தொகுப்பு நூலின் சிறப்பாகும்.
நா. வானமாமலையின் நாட்டுப்புறப் பாடல் பதிப்புப் பணி சிறப்பாகக் குறிக்கத்தக்கது. தமிழர் நாட்டுப் பாடல்கள் (1964) என்ற தொகுப்பு, சிறந்த ஆய்வு முன்னுரையுடன் வழங்கும் சொற்பொருள், சேகரிப்பாளர் பற்றிய விவரம், ஆழமான குறிப்புகள் போன்றவற்றுடன் வெளிவந்துள்ளது.
க. கிருட்டினசாமி (1978, 1980) பதிப்பித்து வெளியிட்ட கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள், கவிஞர் கோ.பெ.நா. (1986) பதிப்பித்த பாலை – மலைப் பாடல்கள் முதலிய நூல்களும் குறிப்பிடத்தக்கவை.
ஆறு. இராமநாதனை முதன்மைப் பதிப்பாசிரியாராகக் கொண்டு மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியிட்டுள்ள நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம் (2001) பத்துத் தொகுதிகள் குறிப்பிடத்தக்கவை. பாடல்களைச் சேகரித்த முறை, பாடகர்களின் கருத்துக்கள், பதிப்பாசிரியர்களின் கருத்துக்கள், வழக்குச் சொற்பொருள், பாடல் பற்றிய விவரங்கள் முதலான அனைத்து விவரங்களையும் கொண்ட சிறந்த பதிப்பாக இதனைக் குறிப்பிடலாம்.
• தாலாட்டுப் பாடல்கள்
குழந்தையை மகிழ்ச்சிப்படுத்தும் அல்லது தூங்க செய்யும் சூழல்களில் பாடப்படும் பாடல்கள்.
• குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள்
குழந்தை வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பாடல்கள் பாடப்படுகின்றன. குழந்தை தவழும்போதும், உண்ணும்போதும், சாய்ந்தாடும் போதும், அம்புலி தூக்கும்போதும் குழந்தைக்காகப் பாடப்படும் பாடல்களும் இதில் அடங்கும்.
• விளையாட்டுப் பாடல்கள்
விளையாடும் சூழல்களில் பாடப்படும் உடற்பயிற்சி விளையாட்டுப் பாடல்கள், வாய்மொழி விளையாட்டுப் பாடல்கள் ஆகியன இப்பகுதியில் வைக்கப்படும்.
• தொழிற் பாடல்கள்
தொழில் செய்யும் போது பாடப்படும் பாடல்கள் தொழிற்பாடல்கள். வேளாண்மைத் தொழிலும் வேளாண்மை அல்லாத தொழிலும் இதில் அடங்கும்.
• வழிபாட்டுப் பாடல்கள்
வழிபடும் சூழலில் வழிபடும் தெய்வங்கள் குறித்துப் பாடப்படும் பாடல் அனைத்தும் இப்பிரிவில் அடங்கும்.
• கொண்டாட்டப் பாடல்கள்
மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அனைத்துச் சூழல்களிலும் பாடப்படும் பாடல்களைக் கொண்டாட்டப் பாடல்கள் எனலாம். ஓய்வு நேரங்கள், மக்கள் ஈடுபடும் பொதுவான கொண்டாட்டங்கள், விழா எடுத்துக் கொண்டாடப்படும் சிறப்பான நிகழ்ச்சிகள், அதுபோன்ற கொண்டாட்டங்களில் பொதுமக்களே பாடுபவை, கலைஞர்கள் பாடுபவை, குடும்பக் கொண்டாட்டங்கள் என்று பலவாறான கொண்டாட்டச் சூழல்களில் பாடப்படும் பாடல்களை இவ்வகையில் அடக்கலாம்.
• இரத்தல் பாடல்கள்
ஊர் ஊராகச் சென்று யாசித்து வாழ்வோர் யாசிக்கும் சூழலில் பாடும் பாடல்கள் இதில் அடங்கும்.
• இழப்புப் பாடல்கள்
யாதேனும் ஒன்றை இழக்கும் சூழல்களில் பாடப்படும் பாடல்கள். உயிர் இழத்தலின் போது பாடப்படும் ஒப்பாரிப் பாடல்களும், (மகளிர் பாடுவன, கலைஞர்கள் பாடுவன) பொருட்களை இழந்து புலம்பும் பாடல்களும் இதில் அடங்கும்.
மேற்காட்டப்பட்ட பாடல்களுள் தாலாட்டுப் பாடல்கள், குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழிற்பாடல்கள் ஆகிய பாடல் வகைகளை மட்டும் இப்பாடத்தில் காணலாம்.
காட்சி
குழந்தையின் தாய்மட்டுமல்லாது குழந்தையின் பாட்டி, அத்தை, சகோதரி போன்ற உறவினர்களும் தாலாட்டுப் பாடுவர். பெண்கள் இலக்கியமாகத் திகழும் தாலாட்டினை ஆண்களும் பாடுவதை அருகிக் காணலாம். நெடுங்காலமாக எழுத்திலக்கியப் புலவர்களைக் கவர்ந்து வந்துள்ள இந்த இலக்கிய வகை எழுத்திலக்கியமாகவும் எழுதப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சிறு சிறு தாலாட்டுப் பாடல் நூல்கள் வெளிவந்துள்ளன. இத்தகைய பாடல்கள் ஓரளவு படித்தவர்களால் பாடப்படும் போது அவை மக்களிடையே பரவுகின்றன. எனவே இன்றைய நிலையில் மக்களிடையே உள்ள நாட்டுப்புறப் பாடல் வகைகளுள் தாலாட்டுப் பாடல்களே எழுத்திலக்கியத்தின் தாக்கம் மிகுதியாகப் பெற்ற இலக்கியமாகத் திகழ்கின்றது. தாலாட்டுப் பாடல்கள் அனைத்து சாதி மக்களிடமும் வழக்கத்தில் உள்ளன என்பது இப்பாடல் வடிவத்தின் சிறப்பாகும். இனி, தாலாட்டுப் பாடல்களுக்கு ஒரு சில சான்றுகள் காணலாம்.
நாட்டுப்புறப் பாடல்களுள் தாலாட்டு இலக்கிய வடிவம் பொருண்மையால் சற்று மாறுபட்டுக் காணப்படும். ஏனைய வடிவங்கள் இயல்பான வாழ்க்கையை எடுத்துக் கூற, தாலாட்டுப் பாடல்கள் இயல்புக்கு மாறான அதீதக் கற்பனையுடன் அமைந்திருக்கும். குழந்தையைப் பற்றிய தாயின் எதிர்பார்ப்புகளும், கனவுகளும் இதில் வெளிப்படுவதுண்டு. சில நேரங்களில் தாய் தன் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வடிகாலாகத் தாலாட்டுப் பாடல்களைப் பயன்படுத்திக் கொள்கிறாள். குடும்ப உறவுகளுக்கிடையே அவளுக்குள்ள உறவுகளும் தாலாட்டில் வெளிப்படுவதுண்டு. சான்றாகப் பின்வரும் தாலாட்டினைக் காணலாம்.
தாலாட்டுச் சான்று 1:
ஆராரோ ஆரரிரோ
ஆரடிச்சா ஏனழுதாய்
அடிச்சவரை சொல்லியழு
ஆக்கினைகள் சொல்லிடுறேன்
தொட்டாரைச் சொல்லியழு
தொழு விலங்கு போட்டுடுறேன்
அத்தை அடிச்சாளோ
அன்னமிட்ட கையாலே
மாமி அடிச்சாளோ
மருந்து போடும் கையாலே
அண்ணன் அடிச்சானோ
அல்லிப்பூ தண்டாலே
மாமா அடிச்சானோ
மல்லிகைப்பூச் செண்டாலே
தாலாட்டுப் பாடல்களில் தாய்மாமனின் புகழ் மிகுதியாய்ப் பேசப்படும். குழந்தை பிறந்தது முதல் அதனுடைய ஒவ்வொரு கட்டத்திலும் சீர் செய்ய வேண்டிய கடமை தாய்மாமனுக்கு உண்டு. அந்தக் கடமையைச் செய்யும் தாய்மாமனைப் பாராட்டிப் புகழும் போக்கினைத் தாலாட்டுப் பாடல்களில் காணமுடியும். பெண்களைப் பொறுத்தவரை தங்களின் தாய்வீட்டுப் பெருமை பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்வர். இத்தகைய மனப்போக்கு தாலாட்டுப் பாடல்களில் வெளிப்படும். மேற்காட்டப்பட்ட தாலாட்டிலுங் கூட அத்தை, மாமி ஆகியோர் அன்னமிட்ட கையாலும், மருந்து போட்ட கையாலும் குழந்தையை அடிப்பதாகக் கூறும் தாய் மல்லிகைப்பூச் செண்டால் மாமா அடிப்பதாகக் கூறுவதைக் காணமுடிகிறது.
தாய்மாமா தன் குழந்தைக்கு என்னென்ன சீர்கள் செய்வான் என்பதைப் பின்வரும் தாலாட்டு மிக எதார்த்தமாக வெளிப்படுத்துகிறது. மேலும் அத்தாலாட்டின் இறுதிப் பகுதி கற்பனையின் மிகச்சிறந்த வெளிப்பாடாகக் காணப்படுகிறது.
ஆரிராரோ ஆரிராரோ
எங்கள தம்பிய-ஒனக்கு
ராசன் பெத்த
என் ரவமணி கண்ணே
என் செண்டு பாட்டிலே
சோப்பு புட்டிய
சாராய புட்டிய
ஓமப் பொடிய
ஓரணாக் காசிய
வாங்கி வருவாரா ஒம் மாமன்
என் தம்பியிடும் கண்ணிரு
-நான் பெத்த என் கோயிலுமணி கண்ணே
ஒன் தாயார் மடிநொம்பி
ஒன் தாயார் மடிநொம்பி-எங்கள கண்ணே
ஒன் தந்தியார் தோள் நொம்பி
என் மஞ்சைக்கோ போய்பாஞ்சி-எங்கள தம்பிய
மாதுளன் வேரோடி
என் இஞ்சிக்கோ போய்பஞ்சி-எங்கள தம்பிய
எலுமிச்சன் வேரோடி
என்குட்ட குளம் நொம்பி-எங்கள கண்ணே
கொல்லைக்கோ போய் பாஞ்சி
என் வாய்க்கா வரப்பு நொம்பி-எங்கள தம்பிய
வயலுக்கோ போய்பாஞ்சி
என்வயலு பூத்தபூ-எங்கள செல்வத்த
உம்மா வயிர் நொம்பி
உம்மா வயிர் நொம்பி-எங்கள கண்ணே
உன் வயிற்றுக்கோ பால் கொடுத்து.
(ரவமணி – நவமணி, நொம்பி – நிரம்பி, பாஞ்சி – பாய்ந்து, கொல்லை – வயல், உம்மா-உன் அம்மா)
இப்பாடலில் தாய்மாமன் குழந்தைக்கு வாங்கி வருவதாகக் கூறப்படும் பொருட்களின் பட்டியல் வித்தியாசமானது. நவமணிக் கண்ணே, உனக்கு செண்டு பாட்டில் (மணப்பொருள்), சோப்பு, சாராயம், ஓமப்பொடி, ஓரணாக்காசு முதலியவற்றை தாய்மாமன் வாங்கிவருவான் என்று கூறுவது வித்தியாசமானது தானே! அணா (நாணயம்) புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் உருவான தாலாட்டு இது.
பெரியவர்கள் மல்லாந்து படுத்த நிலையில் இரண்டு கால்களையும் மடக்கிக் கால் நுனியில் குழந்தைகளை அமரச்செய்து, குழந்தையின் இரு கைகளையும் தன்னிரு கைகளால் பிடித்துக் கொண்டு கால்களால் குழந்தையை மெல்ல மேலே தூக்குவதும் பிறகு காலை இறக்குவதுமாகச் செய்து கொண்டு பின்வரும் பாடலைப் பாடுவர்.
அம்புலி அம்புலி
எங்கப் போன
ஆவாரங் காட்டுக்கு
ஏன் போன
குச்சி ஒடிக்க
ஏன் குச்சி
சோறாக்க
ஏன் சோறு
திங்க
எண்ண கொடத்துல
துள்ளி விளையாட
செறு மணல்ல
செரண்டு விளையாட
கடைசி நான்கடியைப் பாடும் போது குழந்தையைக் கால்களால் இயன்றவரை மேலே தூக்குவர். அது குழந்தைக்குப் பயத்தோடு கலந்த உற்சாகத்தை ஏற்படுத்தும். இதற்கு அம்புலி தூக்கல் என்று கூறுவர்.
குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்ளும் போது பேச்சு திருத்தமாக அமைய வேண்டி சில பாடல்களைக் கூறி, குழந்தையைப் பாடுமாறு கூறுவர்.
யாரு தச்ச சட்ட
தாத்தா தச்ச சட்ட
இந்தத் தொடர்களை விரைந்து பாடுமாறு குழந்தைகளிடம் கூற, அவர்கள் விரைந்து பாட இயலாமல் தடுமாறுவர். விரைந்து பாட முயலும்போது அவர்களின் பேச்சு திருத்தமுற அமையும்.
உடற்பயிற்சி விளையாட்டுக்களுக்குள் ஒருசில விளையாட்டுகளில் பாடல்கள் இடம் பெறுகின்றன. சான்றாக ஆண்கள் விளையாடும் சடுகுடு விளையாட்டை எடுத்துக் கொள்ளலாம். இதில் பாடல் பாடும் மரபு உண்டு. எதிரியின் எல்லைக்குள் நுழையும் போது பாடத் தொடங்கி கடைசி வார்த்தையைத் திரும்பத் திரும்பப் பாடுவர். பாடல் வாய்விட்டு சத்தமாகப் பாடப்படுவதால் அவர்கள் மூச்செடுப்பது நன்கு தெரியும். மூச்சை விடாமல் எதிரியிடம் சிக்காமல் நடுக்கோட்டைத் தொட வேண்டும் என்பது ஆட்ட விதி. ஒரு பாடல் வருமாறு:
காளைக் காளை வருகுது பார்
கருப்புக் காளை வருகுது பார்
சூரியனுக்கு வேண்டி விட்ட
துள்ளுக்காளை வருகுது பார்.
எதிரணியின் எல்லைக்குள் நுழையும் போது அந்த அணியினரைச் சீண்டுவது போலவும், சவால் விடுவது போலவும், சடுகுடுப் பாடல்கள் அமைவதுண்டு. தன்னையே ‘துள்ளுக்காளை’ (துடிப்பான – அடக்க முடியாத காளை) என்றுக் கூறிக் கொள்வதைப் பாடலில் காணலாம். இறுதிச் சொற்கள் திரும்பத் திரும்பப் பாடப்படும். மற்றொரு சான்று காணலாம்.
நான் தாண்டா ஒப்பன்
நல்லமுத்து பேரன்
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரேன்
தங்கச் சிலம்பெடுத்து
தாலி கட்ட வாரேன்
வாரேன் வாரேன்…..
இந்தப் பாடலும் எதிரணியினரைச் சீண்டி வம்புக்கு இழுப்பதாக அமைந்துள்ளதைக் காணலாம். எதிரணியில் மண உறவு முறையுடைய (மாமன் – மச்சான்) யாரேனும் இருந்தால் அவர்களைப் பார்த்தே ‘தங்கச் சிலம்பெடுத்து தாலி கட்ட வாரேன்’ என்ற வரிகள் பாடப்படும். எதிரணியிலுள்ள ஒருவரின் அக்கா அல்லது தங்கையைத் தாலி கட்ட வருவதாகக் கேலி செய்து அவரைச் சீண்டும் போக்கு பாடல்களில் காணப்படுகிறது. இதனால் தாக்கமுறும் எதிராளி விளையாட்டில் தீவிரமாக ஈடுபடுவார். இன்றைய நிலையில் சடுகுடு என்னும் விளையாட்டு ‘கபடி’ என்ற பெயரில் சர்வதேச விளையாட்டாக மாறிவிட்டது. அங்கே பாடல்களுக்கு இடமில்லை. விளையாட்டுக்கு உள்ளே நிகழும் உறவுப் பிணைப்புகளுக்கும் இடமில்லை.
மழவருது மழவருது
நெல்லு குத்துங்க
முக்காபடி அரிசி எடுத்து
முறுக்கு சுடுங்க
ஏர் ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்க
சும்மா இருக்குற மாமனுக்கு
சூடு போடுங்க.
இது சிறுவர்கள் கேலி செய்து பாடும் விளையாட்டுப் பாடல்தான். இங்கே உழைப்பு மதிக்கப்படுவதையும் சோம்பல் இகழப்படுவதையும் காணலாம்.
சிறுவர்களின் வளர்ச்சியின் போது பல் விழுதல், மொட்டையடித்தல், போன்ற நிகழ்வுகள் நடைபெறும். இந்த நிகழ்வுகள் சிறுவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாவதுண்டு. சான்றாக, பல் விழுந்த சிறுவனைப் பிற சிறுவர்கள் கேலி செய்து பாடும் பாடல் ஒன்று கீழே தரப்படுகிறது.
பொக்கப் பல்லு டோரியா
பொண்ணு பாக்கப் போறியா
பட்டாணி வாங்கித் தறேன்
பள்ளிக் கூடம் போறியா.
இப் பாடலில் பல் விழுந்து பொக்கை வாயாக இருப்பது கேலி செய்யப்படுகிறது. இந் நிலையில் உண்பதற்குக் கடினமான பட்டாணி வாங்கித் தருகிறேன் என்று கூறுவதும் கேலியே. பொதுவாக வயது முதிர்ந்த ஒருவர் பல்லை இழந்து பொக்கை வாயாக இருப்பார். அவர் தனக்குப் பெண் பார்க்கச் சென்றால் அது நகைப்பிற்குரியதாக இருக்கும். இங்கே சிறுவனைப் பெண் பார்க்கப் போகிறாயா என்று கேட்பதும் ஒருவகை கேலியே.
பொதுவாக விளையாட்டுப் பாடல்கள் அளவால் சிறியதாக இருக்கும். பல பாடல்கள் பொருளற்றவையாகவும் இருக்கும். அத்தகையப் பாடல்களில் ஒலிக்குறிப்பு மட்டுமே முக்கியத்துவம் பெறும். சிறுவர்கள் எளிதில் நினைவில் கொள்ளத்தக்கதாகவும் விளையாட்டுக்குத் துணை செய்வதாகவும் இத்தகைய பாடல்கள் அமைந்திருக்கும்.
ஏர்ப்பாடல் ஒன்றின் சில அடிகள் வருமாறு:
காளேஏஏ…..முந்தி முந்தி நாயகனே என் தோழி காளைகளே
முக்கண்ணனார் தன் மகனே
காளேஏஏ…..கந்தனுக்கு முன் பிறந்த என் தோழி காளைகளே
கற்பகமே முன் நடவாய்
காளேஏஏ…..வேலவர்க்கு முன் பிறந்த என் தோழி காளையரே
விக்கினரே முன் நடவாய்
காளேஏஏ…..வேம்படி வினாயகனே என் தோழி காளையரே
விக்கினரே முன் நடவாய்
இவ்வாறு தொடரும் இந்த ஏர்ப்பாடல் மாரியம்மன் வழிபாட்டுப் பாடலாகும். ‘என் தோழி காளையரே’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் வாயிலாக ஏர்ப்பாடல்களாக மாற்றிக் கொள்கின்றனர் பாடகர்கள். ஒரு சூழலில் பாடப்படும் பாடல் தேவை ஏற்படின் சில மாற்றங்களைச் செய்து வேறு சூழலில் பாடும் நிலை அனைத்து நாட்டுப்புறப் பாடல்களுக்குமான பொதுத் தன்மையாகும்.
கிணறு, குளம், குட்டை, கால்வாய்கள் முதலான நீர் நிலைகளிலிருந்து மேட்டுப்பாங்கான விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு மின் இயந்திரங்கள் இல்லாத காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டது ‘ஏற்றம்’.
ஏற்றம் பின் வருமாறு அமைந்திருக்கும் :
காட்சி
இந்த ஏற்றத்திலிருந்து நீர் இறைக்கும் போது பாடல்கள் பாடுவர். ஏற்றத்தின் மேலே மிதி மரத்திலிருந்து சென்று வருபவர் ஒருவர். கீழே சால் பிடித்து நீர் இறைப்பவர் ஒருவர். சால் பிடித்து நீர் இறைப்பவர் பாடல் பாடுவார். களைப்பு தெரியாமல் இருப்பது தான் இதன் முதல் நோக்கம். இறைக்கப்பட்ட சால்களின் எண்ணிக்கையை அறிவது அடுத்த நோக்கம். பாடலின் ஒவ்வொரு பத்தடிக்கும் இறைக்கப்பட்ட சால்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும். மொத்த நிலத்தின் அளவு, இறைக்கப்பட்ட சால்களின் எண்ணிக்கை, இன்னும் இறைக்கப்பட வேண்டிய சால்களின் எண்ணிக்கை முதலியவற்றை ஏற்றம் இறைப்பவர் நன்கு அறிந்திருப்பார். ஆபத்தான தொழில் ஆகையால் தெய்வங்களையெல்லாம் அழைத்துக் காப்பாற்றுமாறு வேண்டுவதை பல பாடல்களில் காணலாம். பாடல்கள் நீண்ட நேரம் பாடப்படும். பல பாடல்களில் பொருள் தொடர்ச்சி இருக்காது.
பிள்ளையாரே வாரும்
பிள்ளைப் பெருமாளே
நல்ல பிள்ளையாரே
நானென்ன படைப்பேன்
பச்சரிசி தேங்கா
பயிறும் பலகாரம்
கொள்ளுடன் துவரை
கோதுமை கடலை
பச்சரிசி தேங்கா
பயறும் பலகாரம்
இத்தனையும் சேர்த்து
எங்க பிள்ளையார்க்கு
எப்படிப் படைப்பேன்.
ஏற்றப் பாடல் ஒன்றின் தொடக்கம் இது. பிள்ளையார்க்கு என்னென்ன படைக்கப்படும் என்று பட்டியலிடுகிறது பாடல். ஏற்றப் பாடலின் மற்றொரு துணுக்கு வருமாறு.
தோழா துவளாதே-நமக்கு இப்ப
சோறு வரும் நேரம்
கஞ்சா துவளாதே
கஞ்சி வரும் நேரம்
மின்ன ஓடும் தோழா உனக்கு
என்னடாதான் தேவ
ஓடையிலே போற
ஒசந்த கொண்டகாரி
சாலையிலே போற-அவ
சாஞ்ச கொண்டகாரி
சாஞ்ச கொண்டகாரி அந்தத்
தையலுமே வந்தால் எனக்கு
சம்மதந்தான் அண்ணே.
பசியோடு பணி செய்கிறார்கள். ஒருவன் பசியால் துவள, இன்னொருவன் சாப்பாடு வந்துவிடும் என்று ஆறுதல் கூறுகிறான். பிறகு மகிழ்ச்சியூட்ட என்ன வேண்டும் என்று கேட்க, பசி நேரத்திலும் அவன் தேவை வேறாக உள்ளது. இவ்வாறு தொழில் செய்யும் நேரம் முழுக்கப் பாடல் நீண்டு செல்லும். தொழில் களைப்பைப் போக்க இப்பாடல் துணை செய்யும்.
இவ்வாறே நடவு நடுதல், களையெடுத்தல், நெல் தூற்றல் போன்ற பல்வேறு வேளாண் தொழிற் சூழல்களில் பாடல்கள் பாடப்படும்.
காலையிலே என்சாமி வந்தோம் நாங்க வந்தோம் நாங்க
காலப்புண்ண என்சாமி நோவுதுங்க நோவுதுங்க
நானிடிக்கும் என்சாமி நல்சுண்ணாம்பு நல்சுண்ணாம்பு
நல்லமெத்த என்சாமி கட்டுலாமே கட்டுலாமே
பெண்ணாடிக்கும் என்சாமி புது சுண்ணாம்பு புது சுண்ணாம்பு
புதுமெத்த என்சாமி கட்டுலாமே கட்டுலாமே
தொட்டிலிலே என்சாமி போட்டபிள்ள போட்டபிள்ள
தூக்கி பார்க்க நேரமில்ல நேரமில்ல
கட்டிடம் கட்டுவதற்குச் சுண்ணாம்பு இடிக்கும் பழக்கம் தற்போது மறைந்துவிட்டது. அச்சூழலில் பாடப்பட்ட இத்தகைய பாடல்கள் அருகிக் காணப்படுகின்றன. இவ்வாறு மாடு மேய்க்கும் போதும், கடலில் சென்று மீன் பிடிக்கும் போதும், சலவைத் தொழிலாளர்கள் துணிகளை வெளுக்கும்போதும் பாடல்கள் பாடும் பழக்கம் இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது.
இன்றைய நிலையில் தாலாட்டுப் பாடும் பழக்கம் அருகி வருகிறது. கிரிக்கெட் போன்ற மேலைநாட்டு விளையாட்டுகளின் இறக்குமதி காரணமாகச் செலவு ஏதும் இல்லாமல் உடற்பயிற்சியையும், மனப்பயிற்சியையும் நல்கி வந்த நமது விளையாட்டுகள் அருகி வருவது போலவே அச்சூழலில் பாடப்படும் பாடல்களும் அருகி வருகின்றன. வேளாண்மை மற்றும் பிற தொழில்கள் எந்திரமயமாகிவிட்ட காரணத்தால் அச்சூழல்களில் பாடப்பட்டு வந்த பாடல்களும் வெகுவேகமாக மறைந்து வருகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
பாடம் - 4
’உந்தன் பாட்டைப் பாடப் போகிறேன்; நல்வாக்குச் சொல்ல வேண்டும்; உள் நாக்குப் பேசவேண்டும்’ என்று மாரியம்மனை நினைத்து, பக்தியுடன் பாடப்படும் பாடலின் சில அடிகள் வருமாறு :
நன்னானே நானேநன்னே அம்மாடி எந்தாயே
நானே நன்னே நானே நன்னே கம்ப நதியாளே
நான் சொல்லப் போறேன் சொல்லப் போறேன்
அம்மாடி எந்தாயே
சுந்தரியே உந்தன் பாட்ட கம்ப நதியாளே
நான் பாடப் போறேன் பாடப்போறேன்
அம்மாடி எந்தாயே
பக்தியால் உந்தன் பாட்ட கம்ப நதியாளே
என் நாவுப் பிரியவேணும் அம்மாடி எந்தாயே
நல்வாக்கு சொல்ல வேணும் கம்ப நதியாளே
என் உதடு பிரிய வேணும் அம்மாடி எந்தாயே
உள்நாக்கு பேச வேணும் கம்ப நதியாளே
அம்மை நோய்க்கு மாரியம்மன் தெய்வமே காரணம் என்ற நம்பிக்கை மக்களிடையே காணப்படுகிறது. அம்மை நோய் வந்துற்ற சூழல்களில் மாரியம்மனை வேண்டிப் பாடினால் நோய் குணமாகும் என்றும் நம்பப்படுகிறது. அத்தகைய சூழல்களில் பூசாரியால் பாடப்படும் பாடலின் சில அடிகளே மேலே தரப்பட்டுள்ள பாடலாகும். ’கம்ப நதியாளே’ என்று இங்குச் சுட்டப்படுவது மாரியம்மனையேயாகும்.
கும்மி
தமிழகத்தின் வடமாவட்டங்களில் பொழுது போக்கிற்காக இரவு நேரங்களில் நிலாக் காலங்களில் மகளிர் கும்மியடித்து மகிழ்வர். பொங்கல் பண்டிகையின் இறுதியில் கரிநாளன்று கும்மியடித்து மகிழ்வது அதிகம். சில ஊர்களில் ஆண்கள் பாட பெண்கள் கும்மியடிப்பர். ஆண்களும், பெண்களும் கும்மியடித்துப் பாடுவதைச் சில ஊர்களில் அருகிய நிலையிலேயே காணமுடிந்தது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கும்மி வழிபாட்டுச் சடங்கோடு தொடர்புடையதாக உள்ளது. பூப்புச் சடங்கின் போதும் கும்மியடித்துப் பாடுவர். நின்று கொண்டே கைகொட்டிப் பாடுவதை ‘நிண்ணு கும்மி’ என்பர். குனிந்தும், நிமிர்ந்தும், சுற்றிவந்து கைகொட்டிக் கொண்டு பாடுவதைச் ’சுத்துக் கும்மி’ என்பர். கும்மியில் பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. ஆயினும் ’சுத்துக்கும்மி’ தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் கும்மி வடிவமாகும்.
கும்மியடி பெண்கள் கும்மியடி நல்ல
குடும்பம் வாழவே கும்மியடி
கேளுங்கடி பெண்கள் கேளுங்கடி நல்ல
திட்டங்கள் கூறுவேன் கேளுங்கடி (கும்மியடி)
பஞ்சம் பசிவரும் காரணத்தால்
மக்கள் பெருகுவதும் பெருங் காரணமே
மானிட மக்கள் பெருக்கத்தை நீக்கி
மாபெரும் திட்டத்தைத் தீட்டியுள்ளார் (கும்மியடி)
ஐம்பது கோடி ஜனத் தொகையால் மக்கள்
ஆயிரம் தொல்லை அடையுதடி
கட்டுக்கடங்காத மக்கள் தொகையினை
திட்டம் வகுத்துத் தடுத்திடுவோம் (கும்மியடி)
பள்ளியின் பெருமை சிறந்திடவே நல்ல
பாடுபடுதல் நம் கடனாகும்
நல்ல பாதையில் நாம் என்றும் சென்று
பாரினில் பெரும் புகழ் அடைந்திடுவோம் (கும்மியடி)
இது பள்ளியில் சிறுமிகளுக்குக் கற்றுத் தந்த கும்மிப் பாடலாகும். இது கும்மியடிக்கும் சூழலில் மக்களிடையே வாய் மொழியாகப் பரவியுள்ளது. மக்களுக்குத் தேவையான கருத்துகளைக் கும்மிப்பாடல் வாயிலாகப் பரப்புவது நல்ல பலனைத் தரும் என்பதற்கு இப்பாடல் சிறந்த உதாரணமாகும்.
உறுமி மேள ஆட்டப் பாடல்கள்
குறவன் குறத்தி வேடத்துடன் உறுமிமேள இசைக் குழுவின் இசையுடன் பாட்டுப் பாடி வசனங்களைப் பேசி ஆடும் ஆட்டம் உறுமி மேள ஆட்டமாகும். இது கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மிகுதி. இறப்பு நிகழ்ந்த வீடுகளில் ஆடப்பட்டாலும் பார்வையாளருக்கு மகிழ்வூட்டுதலே இதன் நோக்கம். பல்வேறு ஊர்வலங்களில் இந்த ஆட்ட நிகழ்ச்சியைப் பார்க்கலாம். இத்தகைய சூழல்களில் பாடப்படும் பாடல்களை உறுமி மேள ஆட்டப் பாடல்கள் என்று கூறலாம். நரிக்குறவர்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுவதால் அவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகப் பல்வேறு பாடல்கள் புனையப்பட்டு ஆட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய பாடல் ஒன்று வருமாறு:
மஞ்சகொல்ல நரிக் கொறவங்க
நாங்கள சாமி-திருச்சி
மண்டலத்த சுத்தி வருவங்க கேளுங்க சாமி அஆ
மண்டலத்த சுத்தி வருவங்க கேளுங்க சாமி
சாமிய மறக்க மாட்டோம் சாமி
சத்தியங்க செய்ய மாட்டோம்
குளிச்சு மொழுவ மாட்டோம் சாமி
கோவிலுக்கு போக மாட்டோம்
வாய்பொறட்டு பேசமாட்டோம் சாமி
போலீசு கச்சேரி போக மாட்டோம்
ஊரு ஊரு சென்றிடுவோம் சாமி
ஒன்றா வந்து சேர்ந்திடுவோம்
பச்சமணி பவள மணி நாங்கள சாமி இந்த
பட்டணத்தில் கட்டி வருவோம் கேளுங்க சாமி அஆ
பட்டணத்தில் கட்டி வருவோம் கேளுங்க சாமி
ஏழுபான பொங்க வப்போம் சாமி
எருமை கெடா வெட்டயிலே சாமி
எருமை கெடா வெட்டயிலே சாமி
ஏக சத்தம் போட்டிடுவோம்
நரிக்குறவர்களின் வாழ்க்கை முறை, இயல்புகள், தொழில், வழிபாடு முதலியன பற்றி இப்பாடல் தெளிவுபடுத்துகிறது. ஏழு பானைகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிப் பொங்கல் வைத்து எருமைக் கிடா வெட்டி வழிபடுவர் என்பதையும் பாடல் தெளிவுபடுத்துகிறது.
மணவிழாப் பாடல்கள்
குடும்பத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களில் திருமணவிழா முக்கியத்துவம் பெறுகிறது. திருமணத்தின் பல்வேறு சடங்குகளில் பாடல் பாடும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. மணமகன் வீட்டார் மணமகளையும் மணமகள் வீட்டார் மணமகனையும் கேலி செய்து பாடல் பாடுவதுண்டு. மணமகனின் அக்காள் மணமகளைக் கேலி செய்யும் பாடல் ஒன்று வருமாறு:
அரிசி திருடி மவ
ஆனமேல கோலம் வரா
அரிச்சந்திரன் பெத்த தம்பி
கால் நடயா வரான
கொள்ளு திருடி மவ
குதிரை மேல கோலம் வரா
கோவிலன் பெத்த தம்பி
கால் நடையா வரான
சோளக் குருத்துப் போல – என் தம்பி
சோக்கா வளந்துபுட்டான்
சோள சட்டி நாய்க்கன் மவ
என் தம்பிக்கு பாரியானா
கம்மங் குருத்துப் போல என் தம்பி
களுக்கா வளந்து புட்டான்
கரிசட்டி நாயக்கன் மவ
என் தம்பிக்கு பாரியானா
பதக்கு வரவரிசி
பதமா வடிக்க மாட்டா
பாவி மூஞ்சி பொண்ணுக்கு
பதக்குப் பணம் தந்தான
(கோலம்-ஊர்கோலம், ஊர்வலம்; பதக்கு-முகத்தல் அளவை)
மணப்பெண் ஊர்வலத்தில் யானை மேல் அமர்ந்துவர, மணமகன் நடந்து வருவதான நிலைமை ஏற்பட்டதை மணமகனின் சகோதரி சுட்டுகிறாள். அரிசி திருடி மகள், கொள்ளு திருடி மகள், கரிசட்டி நாயக்கன் மகள், பாவி மூஞ்சி பொண்ணு, பதக்கு அளவுள்ள வரகு அரிசியைக் கூட வடிக்கத் தெரியாதவள். இப்படிப்பட்ட பெண்ணுக்கு பதக்கு பணம் பரியமாகத் தந்து தன் தம்பி மணந்துள்ளான் என்று மணமகன் சகோதரி கேலி பேசுகிறாள். இதே போன்று மணமகள் வீட்டார் மணமகள் பெருமையை எடுத்து கூறி மணமகனைக் கேலி செய்வர். மணமகனைக் கேலி செய்யும் பாடல் ஒன்று வருமாறு:
ஆத்தங்கரை ஓரத்திலே
ஆட்டுக்குட்டி மேய்ச்சவரே
எந்தன் தங்கை மாலை சூட்ட
எத்தனை நாள் தவமிருந்த
குளத்தங்கரை ஓரத்திலே
குரங்கு குட்டி மேய்த்தவரே
எந்தன் தங்கை மாலை சூட்ட
எத்தனை நாள் தவமிருந்த
எயுதிக் குடுத்தாலும் வாசிக்கத் தெரியாது
பெரியோர் இடத்திலே பேசத் தெரியாது
சந்தணமிண்ணா கொயக்கத் தெரியாது
குனிஞ்சி நிமிர்ந்து நடக்கத் தெரியாது
எட்டுக்கு மேலியும் எண்ணத் தெரியாது
எயுதிக் கொடுத்தாலும் வாசிக்கத் தெரியாது
ஏலேலோ ஏலாலிலோ
ஆட்டுக் குட்டி, குரங்கு குட்டி மேய்த்தவன் தன் தங்கையை மணம் முடிக்க எவ்வளவு நாள் தவமிருந்தானோ என்று பெண்ணின் தமக்கை கேலி செய்கிறாள். அதுமட்டுமல்லாமல் மணமகனுக்குப் படிப்பறிவில்லாததையும் பெரியோர்களிடத்துப் பேசுதல், சந்தனம் குழைத்தல் போன்றவை கூடத் தெரியாது என்று கேலி செய்கிறாள். ’கேலிக்குக் கேலி’ சரியாகிவிடும். யாரும் வருத்தப்பட மாட்டார்கள்.
கஞ்சி குடுவ கொண்டு நானு
கருவேட்டு மண்ட சுட்டு
இஞ்சி தொய்யலுடனே வந்தேன்
இளங்கொடியாள் கொண்டு வந்தேன்
மாடறக்கும் காவலனே நானு
மங்கையாள் வாடுறளே
(நானு-நான்; கருவேட்டு-கருவாட்டு; தொய்யலுடனே-துவையலுடனே)
நோக்கர் என்ற இனத்தினர் ஒவ்வொரு வீட்டிலும் பாடி உணவு, காசு முதலியன வாங்கிச் செல்வர் என்றும் அவ்வாறு பிச்சை எடுக்க வந்த போது இப் பாடலைப் பாடினர் என்றும் அறிய முடிந்தது. அவர்கள் கஞ்சி வைக்கும் குடுவையாக சுரைக் குடுவையைப் பயன்படுத்துவர். முற்றிய சுரைக் காயிலிருந்து சுரைக்காயின் உள்பகுதியைத் தூய்மை செய்து அதனை உணவுக் குடுவையாகப் பயன்படுத்துவர். பொதுவாக மக்கள் கருவாட்டு மண்டையைத் தூக்கி எரிந்துவிடுவர். அதைச் சுட்டு உண்ணுதல் என்பது பிச்சை எடுக்கும் நோக்கர்களின் வறுமையைக் குறித்தது.
கணவனை இழந்த துயரம்
கணவனும், மனைவியும், சேர்ந்து படுத்திருந்தபோது மனைவியை விட்டுவிட்டு, கணவனைப் பாம்பு கடித்தது. கணவன் இறந்து விட்டான். அவனை இழந்து நிகழ்ந்ததை நினைத்து ஒப்பாரி பாடுகிறாள் ஒரு பெண்:
கருப்புக்கர வேஷ்டித்துண்டு
காராளனா போடுந்துண்டு
காராளனும் கன்னியாளும்
கலந்து படுக்கும் போது
கருந்தல நாகேந்திரன்
செவுரேறி வந்ததென்ன
கன்னிய விட்டுப் போச்சி-கன்னிக்கு வந்த
காராளன தொட்ட தென்ன
செவப்புக்கார வேஷ்டித்துண்டு
சீராளனா போடுந்துண்டு
சீராளனும் செல்வியாளும்
சேர்ந்து படுக்கும் போது
செந்தல நாகேந்திரன்
செவுரேறி வந்ததென்ன
செல்விய விட்டுப் போச்சி-செல்விக்கு வந்த
சீராளன தொட்டதென்ன (கருப்புக் கர-கருப்புக் கரைபோட்ட (வேஷ்டித்துண்டு). காராளன், சீராளன் என்பவை கணவனைக் குறித்தது. கன்னி, செல்வி என்பவை மனைவியைக் குறித்தது. நாகேந்திரன் நாகப் பாம்பு)
கணவனை இழப்பதால் பெண்கள் தங்களின் வாழ்க்கைக்கான அனைத்து நலன்களையும் இழக்க நேரிடுகிறது. கணவனை இழந்ததால் பூ, மஞ்சள், வளையல் போன்ற மங்கலப் பொருட்கள் பயன்படுத்துவதை அந்தப் பெண் இழக்க நேரிடுகிறது. வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த கணவனோடு மங்கல மகளிர் என்ற சமூக அந்தஸ்தையும் அப்பெண் இழக்கிறாள். அத்தகைய துயரங்கள் பாடல்களில் வெளிப்படுவதைப் பின்வரும் ஒப்பாரிப் பாடல் தெளிவுபடுத்துகிறது.
பூவாலழகியம்மா நான்
புண்ணியரோட மனைவியம்மா – நான்
புண்ணியர தோத்தேனே
பூவிழந்து போனேனே
நான் மஞ்சளழகியம்மா
மன்னவன் தேவியம்மா – நான்
மஞ்சளிழந்தேனே
மன்னவர தோத்தேனே
தங்க திருவளைய – நான்
தரிக்கையிலே போட்டளைய – இந்த
தருமரோட வாசலிலே
தவிடு பொடி ஆவுதே
(தோத்தேனே-தோற்றேனே, இழந்தேனே. வளைய-வளையல், போட்டளைய-போட்ட வளையல். தவிடுபொடி-கணவனை இழந்த பெண்ணின் வளையலை உடைப்பர். அதுவே சுட்டப்படுகிறது)
இந்தப் பாடல் ஒரு பெண் கணவனை இழந்ததால் பூ, மஞ்சள், வளையல் ஆகியவற்றை இழக்க நேர்ந்ததைச் சுட்டுகிறது.
பெண்களின் அவலம்
திருமணத்திற்கு மாப்பிள்ளையை முடிவு செய்யும் உரிமையைப் பெண்ணுக்கு அளிப்பதில்லை. பெற்றோர்களாலும் உறவினர்களாலும் பல்வேறு நோக்கங்களுக்காகத் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. அதனால் பாதிக்கப்படும் பெண்களின் அவலக் குரலைப் பாடல்களில் கேட்கலாம். பெண்ணைப் பெற்றவர்களின் விருப்பமின்றி ஒரு மொந்தைக் கள்ளுக்காகத் திருமணம் நிச்சயிக்கப்படுவதைப் பின்வரும் பாடல் தெளிவுபடுத்துகிறது. மணப்பெண் இத்திருமணத்தை மறுக்கவில்லை. அதனை மறுக்கக் கூடிய விவரமற்றவளாக அப்பெண் இருந்திருக்கிறாள். ஆனால் பின்னர் விவரம் தெரிந்தபோது நினைத்து வருந்துகிறாள்.
பத்தூரு பாதகனும் – என்ன பெத்த அம்மாவே
முட்டலூரு வண்ணானும்
பொண்ணுக் கேக்க வந்தாங்க – என்
தாயுந் தகப்பனும்
தகராறு பண்ணாங்க
அழகு பொருத்தண்ணு
ஆகாது இண்ணாங்க
கூடி பொருத்தண்ணு
கூடாது இண்ணாங்க
ஒரு மொந்த கள்ளுக்கு
ஒப்புக் கொண்டான் சித்தப்பனும் – எனக்கு
இப்ப தெரிஞ்சி புத்தி – எனக்கு
அப்ப தெரிஞ்சிருந்தா – நான்
பரிய பொட வெடுத்து
பந்தலிலே கட்ட மாட்டேன்
கூறை பொடவெடுத்து
கும்பலிலே கட்டமாட்டேன்
காக்கா சிலம்பக் குள்ள
கழுத்தையும் நீட்ட மாட்டேன்
குருவி சிலம்பக் குள்ள
குனிஞ்சுக் கொடுக்க மாட்டேன்
சோத்துக் காலெடுத்து-என்ன பெத்த அம்மாளே
மின்னையும் வக்க மாட்டேன்
(தன்னைப் பெண் கேட்டு வந்தவர்களைப் பாதகர்கள், துணிவெளுக்கும் வண்ணான் என்று இழிவு படுத்துகிறாள் ; கூறை-திருமணப் புடவை; குனிஞ்சி-தாலிகட்ட வாகாகக் குனிந்து அமர்தல்)
’பரியப்புடவை’ என்பது கணவன் வீட்டார் பரிசம் போடும்போது தரும் புடவை. தனக்கு அப்போது விவரம் இருந்திருந்தால் அந்தப் புடவையைக் கட்டியிருக்க மாட்டேன் என்றும், காக்கைச் சிலம்பும் (ஒலிக்கும்) காலை நேரத்தில் தாலி கட்டுவதற்காகக் கழுத்தை நீட்டி இருக்க மாட்டேன் என்றும், வலக்காலை எடுத்து வைத்து மணமகன் வீட்டிற்குச் சென்றிருக்க மாட்டேன் என்றும் ஒரு பெண் சுட்டுவதை இப்பாடலில் காணலாம்.
ஓராந்தான் திங்களுக்கு
ஓரிலையான் தினை பயிறு
ஈராந்தான் திங்களுக்கு
ஈரினையான் தினைபயிறு
என்று பத்து எண்கள் வரை அடுக்கிப்பாடுவதை நாட்டுப்புறப்பாடல்களில் காணலாம். சிறுவர் விளையாட்டுப் பாடல்களில் இவ்வகைப் பாடல்கள் மிகுதி. இது சிறுவர்களுக்கு அடிப்படை எண்ணல் அறிவை ஊட்டுவதாக அமைந்துள்ளது.
ஏற்றப்பாடல்களில் ஏற்றம் இறைக்கும் சால்களின் எண்ணிக்கை பத்து, இருபது, முப்பது என்று நூறு வரையும் அதற்கு மேலும் செல்வதுண்டு இத்தகைய பாடல்கள் மக்களுக்கு எண்ணலறிவை ஊட்டுவதோடு ஒரு ஏக்கர் நிலத்திற்கு எத்தனைச் சால்கள் இறைத்தால் போதுமானதாக இருக்கும் என்ற வேளாண் நீர்ப்பாசன அறிவையும் ஊட்டுவதாக அமையும்.
• கல்வியின் தேவை
கடந்த அரை நூற்றாண்டாக முறைசார் கல்வியின் முக்கியத்துவம் மக்களால் பெரிதும் உணரப்பட்டது. படித்தால் மட்டுமே சிறந்த எதிர்காலம் அமைய முடியும் என்று மக்கள் கருதினர். தெருக்கூத்தாடுவது முதலான நிகழ்த்துதல்களில் ஆர்வம் கொண்டிருக்கும் ஓர் இளைஞன் பள்ளிக்குச் சென்று படிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்பதைப் பின்வரும் பாடல் கேலியாக விமர்சிப்பதைக் காண்க.
தெருக்கூத்து நல்லா ஆடுவான் எங்கசின்ன மாமன்
ஸ்திரி பாட்டு வேஷம் போடுவான்
ஒருகூத்தா இருகூத்தா ஒன்பது கூத்தாடுவான்
ஒக்காந்து படிக்கச் சொன்னா கண்ண உருட்டி கண்ண விழிப்பான்
மத்தளம் நல்ல வாசிப்பான் எங்க சின்ன மாமா
வாசியிண்ணா மட்டும் ஓசிப்பான்
(ஸ்திரிபார்ட் வேஷம் – பெண் வேடம், படிக்கச் சொன்னா திருதிருவென விழிப்பான், வாசியின்னா-படி என்று கூறினால், ஓசிப்பான்-(படிப்பதற்கு) யோசிப்பான்)
அறுவடையின் போது நல்ல நெல்லைத் தாங்கள் எடுத்துக் கொண்டு கருக்காய் நெல்லை (முற்றாமல் உலர்ந்து கருமை நிற அரிசியையுடைய நெல்) கூலிவேலை செய்பவர்களுக்குத் தருவர். பண்ணை முதலாளிகள் வேலை செய்து கூலி கேட்டால் வெள்ளிக் கிழமை, செவ்வாய்க் கிழமை என்று காரணம் காட்டிக் கூலி கொடுக்காமல் இழுத்தடிப்பர். அந்தக் கூலி வேலை செய்யும் பெண்களை ’வாடி போடி’ என்று மரியாதையில்லாமல் அழைப்பர். இப்போக்கினை எதிர்த்துப் பேச இயலாத நிலை அடித்தட்டு மக்களுக்கு இருக்கும். இத்தகையப் போக்குகளை எதிர்க்கும் எதிர்ப்புக் குரலாக அவர்களின் பாடல்கள் காணப்படும். பின்வரும் பாடலைச் சான்றாகக் கூறலாம்.
தாளு நெல்லு ஒங்களுக்குச் சாமி
தங்குன கருக்கா எங்களுக்கா
போரு நெல்லு ஒங்களுக்கு சாமி
ஓடுன கருக்கா எங்களுக்கா
வேலசெய்து கூலிய கேட்டா
வெள்ளி செவ்வாயிங்குறிங்க
நாத்துக் கூலிய கேக்கப் போனா
நாள பின்னைண்ணு சொல்லறீங்க
எட்டிய குட்டிய யிங்குறத ஒங்க
சுறவாணத்தில் வச்சிக்குங்க
வாடி போடியிங்குறத ஒங்க
வாசப்படில வச்சிக்குங்க.
இவ்வாறே சாதி ஏற்றத் தாழ்வு காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை ஒடுக்கும் மேல் சாதியினரை நாட்டுப்புறப் பாடல்களில் பழித்தும் கேலி செய்தும், தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் போக்குகளைக் காண இயலும். கூலிப் போராட்டங்கள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் போன்றவை நாட்டுப்புறப் பாடல்களின் பாடுபொருளாக உள்ளதைக் காண முடிகிறது.
• மனச்சுமையை நீக்கல்
அடித்தட்டு மக்களிடையே அதிகமாகப் பழக்கத்தில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களுள் தாலாட்டு, விளையாட்டு, கொண்டாட்டப் பாடல்கள் தவிர்த்த ஏனைய பாடல்களின் இசை, துன்பத்தை வெளிப்படுத்துவதாகவே (துயர இசையாகவே) காணப்படுகிறது. பல்வேறு பாடல்களின் பொருண்மையும் உடல் துயரச் சம்பவங்களின் வெளிப்பாடுகளாகவே காணப்படுகின்றன. தங்கள் வாழ்க்கைத் துயரங்களை, தாங்கள் நேரடியாகவோ கேட்டுணர்ந்தோ அனுபவித்த துயரங்களைப் பாடல் வடிவில் வெளிப்படுத்தி அதன் வாயிலாக மக்கள் தங்கள் மனச்சுமையை இறக்கிவைக்கிறார்கள்.
ததிங்கணத்தோம் ததிங்கணத்தோம்
ததிங்கணத்தோம் ததிங்கணத்தோம்
ததிங் கணத் தோம் ததிங் கணத் தோம்
ததிங் கணத் தோம் ததிங் கணத் தோம்
அவன இவன ஏச்சிப் பொழைக்கிறவன்
அப்பவே போடுவான் ததிங்கணத்தோம்
அப்பன் பேச்சைக் கேக்காத பயலெல்லாம்
தப்பாமதா போடுவான் ததிங்கணத்தோம்
தாயின் சொல்லைத் தட்டிப் பேசறவன்
தண்ணிக்குப் போடுவான் ததிங்கணத்தோம்
ஆம்படையான் பேச்சைக் கேக்காத பொம்பளை
அறை வீட்டிலே போடுவா ததிங்கணத்தோம்
பொண்டாட்டி பேச்சைக் கேக்காத பயலெல்லாம்
பொழுதிறங்கினாப் போடுவான் ததிங்கணத்தோம்
அடுத்தவன் பொண்டாட்டிக்குப் பல்லைக் காட்டறவன்
முதுகிலே வாங்குவான் ததிங்கணத்தோம்
(’ததிங்கணத்தோம்’ என்ற ஒலிக்குறிப்புச் சொல் தொடக்கத்தில் ஒலிக்குறிப்பாகவும் பின்னர் என்ற பொருளிலும் கையாளப்படுகிறது)
உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரால்
எண்ணப்பட வேண்டா தவர்
என்கிறார் திருவள்ளுவர். உண்ணற்க கள்ளை என்பதைப் பின்வரும் நாட்டுப்புறப் பாடல் சுட்டுகிறது.
கள்ளெல்லாம் குடிக்காதேடா
கரும்புத்திக் கார பாவி
கள்ளெல்லாம் குடிக்காதேடா
நித்தம் கள்ளக் குடிக்காதேடா
பித்தம் போய் சிரசிலேறும்
பெண்டாட்டிய அடிக்காதேடா
புள்ளக் கொரு மாத்தம் வரும்
சாராயம் காய்ச்சுதல், சாராயத்தைக் குடித்து அதனால் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளுதல், அதனால் குடும்பத்தையே அழித்தல் போன்ற செயல்களைச் சுட்டிக் காட்டி அறிவுறுத்தும் பாடல்கள் தெருக்கூத்து மேடைகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஓரிரண்டு சான்றுகள் வருமாறு.:
போகாதேடா தம்பி போகாதேடா
போக்கிரி வேலைக்குப் போகாதேடா
வேலம்பட்டையை வெட்டாதேடா தேம்பி
வெல்லத்திலே போட்டு ஊற வைக்காதேடா
பானைமேல பான அடுக்காதேடா தம்பி
பாட்லு பாட்லா சாராயம் குடிக்காதேடா தம்பி
சந்திலேயும் வீயாதேடா.
சாராயம் காய்ச்சாதே! குடிக்காதே என்று அறிவுறுத்துகிறது இப்பாடல் வேலமரத்தின் பட்டையை வெட்டி, வெல்லத்தில் போட்டு ஊறவைத்து, பானை மேல் பானை அடுக்கி சாராயம் காய்ச்சி, பாட்டில் பாட்டிலாக சாராயம் இறக்குவர் என்று பாடலில் சுட்டப்படுகிறது.
சாராயத்தைக் குடித்துவிட்டு சந்தில் நிலை தடுமாறி விழாதே-(வீயாதடா) என்று சுட்டப்படுகிறது. சாராயத்தைக் குடித்தால் உடல் நலம் எவ்வாறு கெடும் என்பதைப் பின்வரும் பாடல் சுட்டுகிறது.
பட்டைச் சாராயம் குடியாதே-மனிதாநீ
பட்டைச் சாராயம் குடியாதே
பட்டைச் சாராயத்தாலே
கெட்டார் சிலது மக்கள்
விட்டு விடடா அதை
வீணாக சாகாதே (பட்டைச்)
பட்டைச் சாராயத்தாலே
கெட்டிடும் குடற்பயது
கொஞ்சம் கொஞ்சமாகக் குடல்
வெந்து நீ சாகவேண்டாம் (பட்டைச்)
மரப்பட்டைகளை ஊறவைத்து அதைச் காய்ச்சித் தயாரிக்கப்படும் சாராயம் பட்டைச் சாராயம் எனப்படுகிறது.
பாடம் - 5
நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
எண்மையும் என்று இவை விளங்கத் தோன்றி
குறித்த பொருளை முடித்தற்குவரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப
என்பது தொல்காப்பிய நூற்பா. இந்நூற்பாவிற்கு தே. லூர்து (1988: 5) பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்:
(நுண்மை – நுண்மை, ஆழ்ந்த அறிவு; சுருக்கம் – சுருங்கக் கூறுதல்; ஒளியுடைமை – விழுமியது (தெளிவாக விளங்கச் செய்தல் (clarity); எண்மை – எளிமை; குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் – ஒரு குறிப்பிட்ட கருத்தை உணர்த்துவதற்குத் துணையாக வரும்; ஏது நுதலிய – ஒரு சூழலில் (சந்தர்ப்பத்தில்) காரணம் காட்டுவதற்கு; முதுமொழி – பன்முறையும் வழக்கில் வழங்கி வந்த பழமையான மொழி.)
இந்த விளக்கத்தினைப் பின்வருமாறு தொகுத்துச் சுட்டலாம்.
“ஏதேனும் ஒரு சமூகச் சூழலில் ஒரு குறிப்பிட்ட கருத்தை உணர்த்துவதற்குத் துணையாக வரக்கூடிய (அல்லது பயன்படுத்தக் கூடிய) ஆழ்ந்த அறிவினைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் கூறும் பழமையான மொழி பழமொழி எனலாம்.” இந்த வரையறை பழமொழியை விளங்கிக் கொள்ளத் துணை செய்கிறது.
1. பழமொழி ஒரே மூச்சில் சொல்லக் கூடியதாய் இருக்க வேண்டும்.
2. சுருக்கம் அதன் மூலப் பண்பாகும்.
3. சிறந்த பொருள் தருவதாய், செறிவு மிக்கதாய் இருக்க வேண்டும்.
4. காராசாரமாகக் கூர்மையுடன் திகழவேண்டும்.
5. எல்லாவற்றையும் விட மக்களால் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, விரும்பப்பட்டு அன்றாட வாழ்க்கையில் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படல் வேண்டும். பழமொழி மீண்டும் மீண்டும் சொல்லப்படும் போதே (currency) பழைய மொழியாகும் என்பதே மேற்கண்ட கருத்தாகும். பழமொழியின் இயல்பாக தே. லூர்து மேலும் சிலவற்றைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
6. கோட்பாட்டளவில் பார்க்கும்போது ஒரு பழமொழியில் இரு சொற்கள் இருந்தே தீரும். ஒரு சொல்லில் பழமொழி அமையாது. ஆனால் ஒரு சொல்லைக் கொண்டமையும் வழக்காறுகள் உண்டு. எனினும் அவற்றைப் பழமொழி என்று கூறுவதில்லை.
7. பழமொழிகள் வாய்மொழி இலக்கிய வழக்காறுகளில் நிலைத்த தொடர்புடையனவையாம். (Fixed phrasegenre)
8. பழமொழி உரைநடை சார்ந்தது. எனினும் கவிதைக்குரிய எதுகை, மோனை, முரண்தொடை போன்ற ஒலிநயங்களைப் பழமொழியிலும் காணலாம்.
9. பழமொழி, பிறிதுமொழி அணிகளைப் போலக் கருதிய பொருளை மறைத்து ஒன்று சொல்லி மற்றொன்றை விளக்குவனவாக அமையும்.
10. பழமொழி, அது வழங்கும் இயற்கைச் சூழலைப் பொருத்தே பழமொழியாகும்.
11. பழமொழி உருவகமாகவும் அமையும்.
12. பழமொழி உவமைப் பண்பு கொண்டது.
13. பழமொழி நேர் பொருளும் உணர்த்தும்.
14. பழமொழி தற்சார்பற்றது
15. வாழ்க்கை அனுபவத்திலிருந்து சிக்கலைத் தீர்க்க உதவுவது பழமொழி.
16. சில பழமொழிகள் சில கதைகளைப் பிழிந்தெடுத்த சாறு போல அமைகின்றன.
பழமொழியின் இயல்புகளாக மேலே கூறப்பட்ட கருத்துகள் பழமொழிகளைப் புரிந்துகொள்ள, பிற இலக்கிய வகைகளிலிருந்து வேறு பிரித்து அறிய உதவும் என்பதில் ஐயமில்லை.
மக்களிடையே கருத்துகளை எடுத்துச் சொல்வதற்கு நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் சிறந்த முறையில் பங்காற்ற முடியும் என்பதை எழுத்திலக்கியப் படைப்பாளிகள் நன்கு உணர்ந்திருந்தாலுங் கூட அவற்றைத் தனியே சேகரித்துப் பாதுகாக்கவேண்டும் என்று முயற்சி செய்யவில்லை. இருப்பினும் இலக்கிய வகைகளுள் பழமொழி மட்டுமே மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு பழமொழி நானூறு என்ற தனி நூலாக உருவாக்கப்பெற்றது. இந்நூலின் ஒவ்வொரு வெண்பாவிலும் ஒரு பழமொழியைப் பொதிந்து முன்றுறையரையனார் இந்த நூலை உருவாக்கினார். இந்நூல் பழமொழிகளை உள்ளது உள்ளபடி சேகரித்து வைக்கவில்லையாயினும் தமிழ்ப் பழமொழியின் முதல் தொகுப்பாக இதனைக் கருதலாம். தொல்காப்பியர் பழமொழியைச் சுட்டுவதற்கு முதுமொழி என்ற சொல் பயன்படுத்தினாலும் சங்க இலக்கியத்திலேயே பழமொழி என்ற சொல்லாட்சி காணப்படுகிறது.
நன்றுபடு மருங்கில் தீதில் என்னும்
தொன்றுபடு பழமொழி
என்னும் அகநானூற்றுப்பாடல் தொடரில் பழமொழி என்ற சொல் பயன்படுத்தப்படுவதைக் காண்க. இதே பெயரில் பழமொழி நானூறும் உருவாக்கப்பட்டுள்ளது. பழமொழி நானூறு நூலைத் தொடர்ந்து தோன்றிய நீதி சதகங்களிலும், நாலடியார், இன்னாநாற்பது முதலான நீதி நூல்களிலும் பழமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்பர் பாடிய பழமொழிப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியைப் பயன்படுத்துகின்றார். இவையெல்லாம் நமக்கு கிடைக்கும் பழமொழிகளின் வரலாற்றுப் பதிவுகள்.
பாதுகாப்பு
பழமொழிகளைச் சேகரித்து அவற்றை உள்ளது உள்ளபடி பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வு முதன் முதலில் அயல் நாட்டிலிருந்து மதத்தைப் பரப்புவதற்கெனத் தமிழகத்திற்கு வந்த பாதிரியார்களையே சாரும். மக்களைப் புரிந்து கொள்ளவும் மக்களோடு நெருங்கிப் பழகவும் மிகுதியாக உதவக் கூடிய நாட்டுப்புற இலக்கிய வகையாகப் பழமொழிகளைக் கருதினர். எனவே அவற்றைச் சேகரித்து அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளோடு அவற்றை வெளியிட்டனர். பீட்டர் பெர்சிவல் (Peter Percivel) 1842இல் 1873 பழமொழிகளைக் கொண்ட பழமொழி அகராதியை ஆங்கில மொழிபெயர்ப்போடு வெளியிட்டார். இவரே தமிழில் பழமொழிகளைத் தொகுத்து ’உள்ளது உள்ளபடி’ வெளியிட்டதில் முதன்மையானவர். ஜான் லாசரஸ் 1894இல் தமிழ்ப் பழமொழி அகராதியைச் சுருக்கமான ஆங்கில விளக்கங்களுடன் வெளியிட்டுள்ளார். இத்தொகுப்பில் 9417 பழமொழிகள் உள்ளன. ஹெர்மான் ஜென்ஸன் 1897இல் தமிழ்ப் பழமொழிகளின் வகைப்படுத்தப்பட்ட தொகுப்பு என்னும் நூலை வெளியிட்டார். தமிழ்ப் பழமொழித் தொகுப்பாளர்களில் இவர் ஒருவரே அவை வழங்கப்படும் சூழல் பற்றிய சிந்தனையோடு பழமொழிகளைத் தொகுத்தவர் என்று தே.லூர்து குறிப்பிடுகிறார். மேலும் அயல் நாட்டினர் வெளியிட்ட பழமொழித் தொகுப்புகளில் காணப்படும் குறைபாடுகளையும் இவர் சுட்டியுள்ளார்.
பதிப்புகள்
தமிழகத்திலிருந்து செல்வக் கேசவராய முதலியார் என்பவர் இணைப் பழமொழிகள் (Parallel Proverbs) என்னும் தலைப்பில் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் என்னும் மொழிபெயர்ப்புடன் 1903ஆம் ஆண்டு பழமொழித் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். சமீபகாலத்தில் தமிழகத்திலிருந்து ஏராளமான பழமொழித் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. கி.வா. ஜகந்நாதன் சுமார் இருபதாயிரம் பழமொழிகள் கொண்ட தொகுப்பினை வெளியிட்டுள்ளார். சமீபகாலங்களில் வெளிவந்த பழமொழித் தொகுப்புகள் அனைத்தும் முன்னர் வெளிவந்த பழமொழித் தொகுப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட பழமொழிகளையும் கொண்டதாகவே அமைந்துள்ளன. பழமொழி அல்லாத சில மரபுத் தொடர்களையும், கதைத் துணுக்குகளையும், இலக்கியத் தொடர்களையும் பழமொழிகளாகக் கருதி அவற்றைப் பழமொழித் தொகுப்புகளில் சேர்த்துள்ள போக்கினைத் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை வெளிவந்த அனைத்துத் தொகுப்புகளிலும் காண முடிகின்றது.
ஆய்வுகள்
தமிழ்ப் பழமொழிகளை ஆராய்ந்தவர்கள் மிகக் குறைவு. சாலை. இளந்திரையன், தே. லூர்து, வ. பெருமாள், நா. வானமாமலை போன்ற ஒருசிலரே தமிழ்ப் பழமொழிகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தியவர்கள். இவர்களுள் தே. லூர்து பழமொழிகளை அவை வழங்கப்படும் சூழல்களை அடிப்படையாகக் கொண்டு நுணுக்கமாக ஆராய்ந்தார். மேலும் பழமொழிகளின் அமைப்புகளையும் இவர் ஆராய்ந்து பிற நாட்டுப் பழமொழிகளிலிருந்து தமிழ்ப் பழமொழிகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும் சுட்டியுள்ளார்.
நா. வானமாமலை திரிபுரிப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகள் – ஓர் ஒப்பாய்வு என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையும் குறிப்பிடத் தகுந்தது. இக்கட்டுரையில் திரிபுரி உழைக்கும் மக்களது பழமொழிகளுக்கும் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களது பழமொழிகளுக்கும் மிக நெருங்கிய ஒற்றுமை வேற்றுமைகள் காணப்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்துகின்றார்.
’பழமொழி பொய்யானா பழையதும் சுடும்’ என்ற பழமொழி பற்றிய பழமொழி தற்காலத்திலும் மக்கள் அதன் மேல் கொண்டுள்ள அழுத்தமான நம்பிக்கையைத் தெளிவாகப் புலப்படுத்தும் அரிய சான்றாகும். பழமொழி ஒரு பொழுதும் பொய்யாகாது’ (தே.லூர்து 1988 24, 25) பழமொழிகள் பயன்படுத்தப்படும் சூழல் மிகவும் இன்றியமையாதது. சூழல் பின்னணி தெரியாமல் பழமொழிக்குப் பொருள் கூறுவது தவறாகவே முடியும். எனவே சூழல் விளக்கங்களோடு அவை மக்களிடையே எவ்வாறு பயன்படுகின்றன என்பதைச் சில சான்றுகள் வாயிலாகக் காணலாம்.
நாய்க்கு வேலையில்ல நிக்க நேரமில்ல
என்று கூறினார்.
இந்தப் பழமொழியின் நேரடிப் பொருள் நாயின் இயல்பைச் சுட்டுவதாக உள்ளது. எந்த வேலையும் இல்லாமல் தெரு நாய் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டேயிருக்கும். ஓரிடத்தில் நிற்பதற்கு அதற்கு நேரமிருக்காது என்பதேயாகும். இங்கு மகனும் அவ்வாறே ஓரிடத்தில் நில்லாமல் வீணாகச் சுற்றிக் கொண்டிருப்பதாகத் தந்தை சுட்டிக்காட்டி இடித்துரைத்து அவனுக்கு அறிவு கூறும் போக்கு காணப்படுகிறது.
(ஆ) ஒரு குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்சனை மிகுதியாக இருக்கிறது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே பெற்றோர்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் வீட்டில் உள்ள பிள்ளை ஆடம்பரமான பொருள் ஒன்றினை வாங்கித் தருமாறு கேட்டு அடம்பிடிக்கிறது. இந்நிலையில் அப்பிள்ளையின் தந்தை பின்வரும் பழமொழியைக் கூறினார்.
குடல் கூழுக்கு அழுவுது
கொண்ட பூவுக்கு அழுவுதாம்
இந்தப் பழமொழியின் நேரடிப் பொருள் வயிற்றுக்குக் குடிக்கக் கூழ்கூடக் கிடைக்காத நிலையில் கொண்டைக்குப் பூ வாங்க இயலுமா? என்பதாகும். அதாவது அடிப்படைத் தேவைகளுக்கே பொருளாதார நெருக்கடி இருக்கும் போது ஆடம்பரச் செலவு செய்ய இயலுமா? என்று பிள்ளையின் ஆடம்பர ஆசையை இடித்துரைக்கிறது. ஆடம்பரப் பொருள் கேட்ட பிள்ளை உண்மையை உணர்ந்து அடங்கிவிட்டது.
தாரம் இழந்தவரைப் பொண்ணு பாக்கச்சொன்னார்
தனக்குப் பாப்பானா? தம்பிக்குப் பாப்பானா?
இந்தப் பழமொழியின் நேர்பொருள்: ஏற்கனவே தாரத்தை இழந்த அண்ணனிடம் சென்று தம்பிக்குப் பெண் பார்க்குமாறு கூறினால் அவன் தனக்குப் பெண் பார்ப்பானா அல்லது தம்பிக்குப் பெண் பார்ப்பானா? என்பதாகும். ஆனால் இந்தப் பழமொழி கூறப்பட்ட சூழலில் அதைக் கூறியவர் ஏற்கெனவே தன் பெண்ணுக்கு மணமகனைத் தேடிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரிடம் தன்னுடைய பெண்ணுக்கு மணமகன் தேடுமாறு மற்றொருவர் கடிதம் எழுத ’என் பெண்ணுக்கே மணமகன் தேவையாக இருக்க. நான் என் பெண்ணுக்கு மணமகன் தேடுவேனா? அல்லது அவர் பெண்ணுக்கு மணமகன் தேடுவேனா?’ என்ற பொருளில் பழமொழியைப் பயன்படுத்தினார். இங்கு இப்பழமொழி அறிவுரை ஏதும் கூறவில்லை. ஆனாலும் தன்னால் தன் உறவினருக்கு உதவ முடியவில்லை என்பதை நயமாக வெளிப்படுத்தும் தன்னிலை விளக்கமாக அமைந்துள்ளது. இவ்வாறு கூறியதன் வாயிலாக அதனைக் கூறியவர் தன்னுடைய இயலாமை குறித்துத் தனக்குத்தானே சமாதானப் படுத்திக் கொள்வதையும் தன் நிலையைப் பிறருக்குத் தெரிவிப்பதையும் அறிய முடிகிறது.
ஓர் அலுவலகத்தின் தலைவராக சிபாரிசின் பேரில் ஒருவர் பணி அமர்த்தப்பட்டார். அவரை விடத் தகுதி வாய்ந்தவர்கள் பலர் அந்த அலுவலகத்தில் பணியாற்றினர். அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட விட்டால் தன்னை மிஞ்சி விடுவார்களோ என்ற அச்சம் தலைவருக்கும் இருந்தது. எனவே அலுவலகத்தின் பல பணிகளைச் செய்யத் தகுதி வாய்ந்தவர்களை அவர் அனுமதிப்பதில்லை. அப்படியே செய்தாலும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களைச் செய்யவிடாமல் தடுத்து விடுவார். அதே நேரத்தில் அப்பணிகளை அவராலும் செய்ய இயலாது. இதனால் எரிச்சலுற்ற தகுதி வாய்ந்த பணியாளர்களில் ஒருவர் தன் நண்பரிடம் பின்வரும் பழமொழியைக் கூறினார்.
வைக்கப்போருல நாய் படுத்தாற்போல
தலைவர் உள்ளார்
இப்பழமொழியின் நேரடிப் பொருள் : வைக்கோல் போரில் (படப்பில்) நாய் படுத்திருக்கும் போது வைக்கோல் தின்பதற்காக மாடுகள் வந்தால் அவற்றைப் போர் அருகே நெருங்க விடாது. கடுமையாகக் குரைத்து மாடுகளை விரட்டிவிடும் நாய். அதே நேரத்தில் அதுவும் வைக்கோலைத் தின்னாது.
அலுவலக நண்பர் கூறிய சூழலில் அப்பழமொழி பின்வரும் பொருளைத் தருகின்றது. அதாவது தலைவர் முக்கியமான அலுவலகப் பணிகளைத் தானும் செய்ய மாட்டார், பிறரையும் செய்ய விடமாட்டார், இவ்வாறு கூறுவதால் அவர் தன்னுடைய மன எரிச்சலை வெளிப்படுத்துவதன் வாயிலாக ஆறுதல் பெறுகிறார். தொடர்ந்து தனக்குத் தொல்லை தரும் தலைவரை நாயோடு ஒப்புமைப் படுத்துவதால் அவருக்கு இத்தகைய ஆறுதல் கிடைக்கிறது. இதே சூழலில்,
நாய்கிட்ட கெடச்ச தேங்கா மூடிபோல
என்ற பழமொழியும் பயன்படுத்தப்படுவதுண்டு. இங்கு நாய் தேங்காய் மூடியை உருட்டிக் கொண்டே இருக்குமேயொழிய அதனால் அதனைத் தின்ன இயலாது. அதே நேரத்தில் பிறர் தின்பதையும் அனுமதிக்காது.
மேற்காட்டிய சான்றுகள் வாயிலாகப் பழமொழிகள் அறிவுரை கூறவும், தன் இயலாமையைக் குறித்துத் தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளவும் தன் மன உளைச்சலை வெளிப்படுத்தி அதன் வாயிலாக மகிழ்ச்சியடையவும் பயன்படுகின்றன என்பதை அறிய முடிகிறது. இதுபோன்ற பல பயன்பாடுகள் பழமொழிகளுக்கு உண்டு. மேலும், பழமொழியின் நேர் பொருள் பயன்படுத்தப்படும் சூழலுக்கு ஏற்பப் பொருள் கொள்ள முடிவதையும் அறியமுடிகிறது. ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒன்றுக்கு மேற்பட்ட பழமொழிகள் பயன்படுத்தப்படும் என்பதையும் கூட மேற்காட்டப்பட்ட சான்றுகள் வழி அறிய முடிகிறது.
ஆனி மாதத்தில் வானம் குமுறினால் தொடர்ந்து இரு மாதங்களுக்கு மழைபொழியாது என்பதனை
ஆனி குமுறினால்
அறுபது நாளைக்கு மழையில்லை
என வரும் பழமொழி சுட்டுகிறது.
மழையின் அறிகுறி பற்றிப் பின்வரும் பழமொழிகள் சுட்டுகின்றன.
அடிவானம் கருத்தால் அப்பொழுதே மழை
அந்தி ஈசல் அடை மழைக்கு அறிகுறி
எறும்பு முட்டைகொண்டு திட்டை ஏறின் மழைவரும்
தட்டாம்பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழைவரும்
பயிருக்கு எவ்வளவு தான் நீர்பாய்ச்சினாலும் மழை பொழிந்தால் தான் அது செழுமையாக வளரும். யார் சீராட்டினாலும் தாய்முகம் காணாத பிள்ளை வளமாக இருக்காது. இதனை
மழைமுகம் காணாத பயிரும்
தாய்முகம் காணாத பிள்ளையும்
என்ற பழமொழி தெளிவுபடுத்துகிறது.
வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை
அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிரு
அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்
எருவிலும் வலியது உழவே
வெண்ணை போல் உழவு, குன்று போல் விளைவு
ஆடி உழுது அடர விதை
ஆடிப்பட்டம் தேடி விதை
ஆடி விதைப்பு ஆவணி முளைப்பு
ஆடிக்கொரு விதை போட்டால் கார்த்திகைக்கு ஒரு காய் காய்க்கும்
ஆடி வாழை தேடி நடு
ஆடிப்பிள்ளை தேடிப் பிழை
அடை மழையில் நாற்று நட்டால் ஆற்றோடு போகும்
ஆவணி முதலில் நட்ட பயிர் பூவணி அரசர் புகழ் போலும்
பிடிபிடியாய் நட்டால் பொதி பொதியாய் விளையுமா?
உடையவன் பாராப்ப பயிர் உருப்படுமா?
களைபிடுங்காப் பயிர் கால் பயிர்
போன்ற ஏராளமான வேளாண் பழமொழிகள் வேளாண் அறிவியலை மக்களுக்கு உணர்த்துகின்றன. வேளாண்மைக்கு மழை இன்றியமையாதது. எனவே மழை அறிகுறி குறித்து அனுபவத்தின் வாயிலாக அறிந்து அவற்றைப் பழமொழிகளாகக் கூறிச் சென்றனர் முன்னோர். வேளாண் சமுதாயத்தில் உழவின் முக்கியத்துவம் சிறப்பாகக் கூறப்படுகிறது. ’ஆடி உழுது அடர்த்தியாக விதைக்க வேண்டும் என்பதையும், உழவன் வாயிலாக மண்ணை வெண்ணெய்போல் மென்மையாக்கினால் விளைவு சிறப்பாக இருக்கும் என்பதையும் எந்தெந்த மாதத்தில் விதைக்க வேண்டும் என்பதையும் வாழை, தென்னம் பிள்ளை முதலியவற்றை ஆடி மாதத்தில் வைக்க வேண்டும் என்பதையும் ஆவணி முதலில் நடவுப் பணிகள் முடிப்பதே சிறப்பு என்பதையும் இந்தப் பழமொழிகள் தெளிவுபடுத்துகின்றன. இதுபோன்று பல்வேறு நிலைகளிலும் மக்களின் அறிவுத் திறனை வெளிப்படுத்துவதாகப் பழமொழிகள் அமைந்துள்ளன.
உண்டால் தின்றால் உறவு
கொண்டால் கொடுத்தால் உறவு
அகத்தி ஆயிரம் காய்த்தாலும்
புறத்தி புறத்தியே
அகன்று இருந்தால் நீண்ட உறவு
கிட்ட இருந்தால் முட்டப் பகை
உள்ளூர் உறவும் சரி
உழுத மாடும் சரி
உறவுகள் பெண் எடுப்பதன் வாயிலாகவும், கொடுப்பதன் வாயிலாகவும் அமைகின்றன. நன்மைகள் ஆயிரம் வந்தாலும் சொந்தங்களைவிட்டு விட்டுப் பிறத்தியாரிடம் சென்று பெண் எடுத்தல் கூடாது. உறவுகள் சற்றுத் தூர இருப்பது நன்மை தரும். உள்ளூர் உறவு மதிப்பற்றது என்று இப்பழமொழிகள் சுட்டுகின்றன.
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்ற பழமொழிக்கு கம்பி நீட்டு என்ற மரபுத் தொடரின் பொருள் போல் ஒரே பொருள் கூற முடியாது. ஒரு பழமொழியின் குறுகிய வடிவம் மரபுத் தொடராக மாறலாம்.
தலைக்கு மேல் வெள்ளம் போகும்போது
சாண் போனால் என்ன முழம் போனால் என்ன
என்ற பழமொழியின் தலைக்குமேல் வெள்ளம் என்ற தொடர் மரபுத் தொடராக வழங்கி வருகின்றது.
நடக்கத் தெரியாதவன்
நட்டுவனார்க்கு வழிகாட்டுவானா?
என்பது பழமொழி. இதே பழமொழி
நடக்கத் தெரியாதவன்
நட்டுவனார்க்கு வழிகாட்டுகிறான் – அவன் யார்?
என்பது விடுகதை. இது பழமொழியாகச் செயல்படும் போது தனக்கே ஒன்றும் தெரியாதவன் பிறருக்கு எவ்வாறு வழிகாட்ட முடியும் என்ற பொருளில் பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்படும். அது விடுகதையாகச் செயல்படும் போது கைகாட்டி மரம் என்ற விடையைக் கூறுவதாக அமையும். பழமொழியில் வினா, ஒரு வாக்கியத்துக்குள்ளேயே அமைந்திருக்க விடுகதையில் வினா தனித்த ஒரு வாக்கியமாக அமைவதைக் காணலாம்.
இராமரும் சீதையும் காட்டில் தங்கி இருந்தனர். வனவாசம் முழுவதையும் வனத்தில் தான் கழிக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உணவினை இலக்குவன் தான் காட்டில் சேகரித்துக் கொடுக்க வேண்டும்.
காட்சி
ஒரு நாள் அவன் போயிருந்தான்-காய் கனிகளைச் சேகரிக்க. ஒரு மரத்தடியில் சீதை இராமனது மடியில் தலை சாய்ந்திருந்தாள். அவர்கள் தம்மை மறந்து இருந்தனர்.
அப்போது அங்க வந்த சயந்தன் சீதையின் அழகைப் பார்த்து மயங்கிப் போனான். அவளை அடைய வேண்டு என்ற ஆசை தோன்றியது. அவன் காக்கை வடிவம் எடுத்து மரத்தில் அமர்ந்தான். அவளை எப்படியாவது தொட்டால் போதும் என்று துடித்தான்.
அவளது மார்புச் சேலை விலக, சயந்தன் சட்டென்று இறங்கி மார்புப் பக்கம் கொத்தினான். லேசாக அவள் பதறினாள். இராமனுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வில் மட்டும் இருக்க அம்பில்லை. உடனே தரையில் உள்ள புல்லைக் கிள்ளி வில்லில் மாட்டி எய்தான். சயந்தனின் ஒரு கண் துளைக்கப்பட்டது. அவன் மறைந்து போனான்.
சீதை அவனிடம் ‘அம்பில்லாமல் எப்படி எய்தீர்கள்’ என்று கேட்டாள். அவனோ ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்று சொல்ல அவளுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அதுவே பின்பு பழமொழி ஆயிற்று.
“ஒருவர் நிறைய பேரிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் தொல்லை தாங்க முடியவில்லை. கடன்காரர்கள் தினமும் வீடு தேடி வர ஆரம்பித்தார்கள். அவர் அவ்வப்போது ஓடி ஒளிந்து கொள்வார்.
ஒரு நாள் அவர் வீட்டு வாசலில் இருக்கும் போது தூரத்தில் கடன்காரர்கள் வருவதைப் பார்த்து விட்டார். அவ்வளவு தான் வீட்டுக்குள்ளே புகுந்து குலுக்கைக்கு (குலுக்கை – நெல் கொட்டப் பயன்படும் அமைப்பு) உள்ளே ஒளிந்து கொண்டார். தன் மகனிடம் கடன்காரன் விசாரித்தால் ‘அப்பா இல்லை எனச் சொல்லி விடு’ என்று எச்சரித்து விட்டார்.
கடன்காரன் கதவைத் தட்டினான் பையன் எட்டிப்பார்த்தான். வந்தவர் ‘தம்பி! அப்பா இருக்காங்களா’ன்னு கேட்டான்.
காட்சி
உடனே மகன் டக்கென்று “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” என்று சொல்லிவிட்டான். வந்தவன் யோசித்தான். ‘வீட்டில் இல்லை என்று சொல்லாமல் குதிருக்குள் இல்லை’ என்று சொல்கிறானே! ஏதோ தப்பு இருக்கிறதே என்று குலுக்கைக்குள்ளே பார்த்தால் ஐயா அகப்பட்டுக் கொண்டார்.
சொல்லத் தெரியாமல் உளறுகிறவனுக்கு இதுவே பாடமாயிற்று. இவ்வாறு தமிழகத்தில் பல்வேறு பழமொழிக் கதைகள் வழக்கத்தில் உள்ளன. அவை பேச்சுகளை அர்த்தமுள்ளதாகவும் ஆழமாகவும் ஆக்குகின்றன என்பதில் ஐயமில்லை.
பாடம் - 6
நகைச்சுவைத் துணுக்குகள் ஒரு குறிப்பிட்ட நாட்டு மக்கள் அல்லது ஓர் இனம் அல்லது ஓர் ஊர், தனிமனிதர்கள், அரசியல் கட்சிகள் பற்றியவையாக அமைந்திருக்கும். இவற்றை உருவாக்கியவர் யார் என்று தெரியாது. அவர்கள் படித்தவர்களாகவோ அல்லது படிக்காதவர்களாகவோ இருக்கலாம். நகரத்தைச் சேர்ந்தவர்களாகவோ கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம். ஆயினும் இவை மக்களிடையே வாய்மொழியாக வழங்கி வருகின்றன. அரசியல், பொருளாதார, சாதி முதலிய காரணங்களால் ஒடுக்கி வைக்கப்பட்ட மக்கள் அதற்குக் காரணமானவர்களைக் கேலி செய்து நகைச்சுவைகளை உருவாக்குவதும் உண்டு.
சர்வாதிகார ஆட்சி காரணமாகத் தங்கள் கருத்துகளை வெளிப்படையாகக் கூற இயலாத நாடுகளைச் சேர்ந்த மக்கள் அந்த அரசு பற்றியும் ஆட்சியாளர்கள் பற்றியும் ஏராளமான நகைச்சுவைகளை உருவாக்கித் தங்களுக்குள் கூறிக் கொள்கின்றனர். இதன் வாயிலாகத் தங்களுக்குள் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தி ஆறுதல் தேடிக் கொள்கின்றனர்.
கதை சொல்லி கேட்பார்: ‘இந்த கதை உங்களுக்குத் தெரியுமா?’ என்று. ‘தெரியும்’ என்று பதில் வந்தால் ‘தெரிஞ்சவங்களுக்குச் சொல்லி என்ன பிரயோசனம்’ என்பார். ‘தெரியாது’ என்று பதில் வந்தால், ‘தெரியாதவங்களுக்குச் சொல்லி என்ன பிரயோசனம்’ என்பார். யாராவது ஒருவர் ‘கொஞ்சம் பேருக்குத் தெரியும், கொஞ்சம் பேருக்குத் தெரியாது’ என்று சொன்னால், அப்போது கதை சொல்லி ‘தெரிஞ்சவங்க தெரியாதவங்களுக்கு சொல்லுங்கோ’ என்று சொல்வார். இப்படி ஒரு கலகலப்பை உண்டாக்கிவிட்டுக் கதைகள் சொல்லத் தொடங்கிவிடுவார்.
‘செஞ்சி எத்தன், மதுரை எத்தன்’
என்று சுட்டுவதைக் கூறலாம்.
குன்னத்தூரார் கதைகள்
இது போலவே குறிப்பிட்ட ஊரினரின் அறியாமை அல்லது முட்டாள் தனத்தை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான நகைச்சுவைக் கதைகளும் துணுக்குகளும் கூறப்படுவதுண்டு. குமரி மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் என்னும் ஊரில் வாழும் மக்களைப் பற்றிய நகைச்சுவைக் கதைகளையும் துணுக்குகளையும் ஞா.ஸ்டீபன் சேகரித்து வேடிக்கைக் கதைகளில் அமைப்பியல் ஆய்வு என்னும் பெயரில் ஆய்வு செய்துள்ளார். அவர் சேகரித்த குன்னத்தூரான் நகைச்சுவைத் துணுக்குகள் சில வருமாறு.
மகாராஜாவும் மக்களும்
குன்னத்தூரான்கள் சிலர் திருவிதாங்கூர் அரண்மனைக்கு மகாராஜாவைப் பார்க்க வந்தனர். மகாராஜா அவர்களை இரண்டு நாள் தங்க வைத்தார். அவர்கள் சமைத்து உண்பதற்குத் தேவையான உணவுப் பொருட்களையும் எரியும் விளக்கு ஒன்றையும் கொடுத்தார். ஆனால் குன்னத்தூரார்கள் சமைக்கவில்லை.
பின்னர் மகாராஜா அவர்களிடம் ‘ஏன் சமைக்கவில்லை’ என்று கேட்டார். அதற்கு அவர்கள் ‘சமைப்பதற்கு எல்லாம் தந்தீர்கள், தீப்பெட்டி தரவில்லையே’ என்றனர். அதற்காகத்தான் எரியும் விளக்கு தந்துள்ளேன் என்றார் மகாராஜா. அப்போது குன்னத்தூரார்கள் ‘எரியும் விளக்கு வெளிச்சத்திற்குத் தானே ஆச்சி’ என்று பதிலளித்தனர்.
திருடனும் சாவியும்
குன்னத்தூரான் ஒருவன் கொஞ்சம் பொன்னும் பொருளும் சேர்த்து வைத்திருந்தான். அவற்றை ஒரு பெட்டிக்குள் பத்திரமாக வைத்துப் பூட்டி, சாவியை எப்போதும் மடியில் வைத்திருந்தான். ஒருநாள் அவன் வீட்டில் திருடர்கள் நுழைந்தனர்.
காட்சி
அந்தப் பெட்டியை அவர்கள் தூக்கிச் சென்றனர். குன்னத்தூரான் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தான். திருடர்கள் பெட்டியோடு வெளியில் செல்லும் போது குன்னத்தூரான் சிரித்துக் கொண்டே “சாவி என்னிடம் தானே உள்ளது; பெட்டியை என்ன செய்ய போகிறீர்கள்” என்றானாம்.
மழைநீரும் கிணற்றில் குதித்தலும்
ஒரு குடும்பத்தில் தாயும் மகளும் இருந்தனர். மகள் தாயுடன் ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டிருப்பாள். ஒரு நாள் நடந்த சண்டையின் போது மகள் கோபம் அடைந்து, “இனி நான் உன் முகத்தில் முழிக்க மாட்டேன். கிணற்றில் குதித்து சாகப் போகிறேன்” என்று சொல்லி வெளியே வந்தாள். மழை பெய்து கொண்டிருந்தது.
காட்சி
உடனே அவள் வீட்டிற்குள் வந்து முறம் (சுளகு) ஒன்றை எடுத்து மழைநீர் படாமல் தலைமீது பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்தாள்.
மாடும் ஓட்டையும்
ஒரு விவசாயி காளைமாடு ஒன்று வாங்கி வளர்க்க ஆசைப்பட்டான். நீண்ட நாட்களாக உழைத்துப் பணம் சேர்த்து, சந்தைக்குச் சென்று காளை மாடு ஒன்று வாங்கி வந்தான். வீட்டிற்கு வரும் வழியில் மாடு சிறுநீர் கழிப்பதைக் கண்ட விவசாயி அதிர்ச்சி அடைந்தான். ‘மாடு குடித்த தண்ணீர் எல்லாம் வயிறு வழியாக ஒழுகுகிறது; மாட்டின் வயிற்றில் ஓட்டை இருக்கிறது.
காட்சி
வியாபாரி நம்மை ஏமாற்றிவிட்டான்’ என எண்ணி மாட்டை வேகமாகச் சந்தைக்கு எடுத்துச் சென்று வியாபாரியிடம் திருப்பிக் கொடுத்துப் பணத்தைத் திருப்பிக் கேட்டானாம்.
• எருமைமாடும் தேனும்
குன்னத்தூரான் எருமை மாடு ஒன்று வளர்த்தான். ஒரு நாள் அதன் மூக்கின் அருகில் தேனீக்கள் வட்டமிடுவதைக் கவனித்தான்.
காட்சி
இதனைக் கண்ட குன்னத்தூரான் எருமையின் மூக்கில் தேன் இருக்கிறது என்று முடிவு செய்தான். தேனை எப்படி எடுப்பது என்பது அவனுக்குப் புரியவில்லை. இறுதியாக அவனுக்கு ஒரு யோசனை வந்தது. வெட்டுக் கத்தி எடுத்து எருமையின் மூக்கை ஓங்கி வெட்டினான். எருமை இறந்தது. மூக்கில் சளி மட்டுமே இருந்தது.
மேற்காட்டப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள் ஒரு குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்த மக்களை முட்டாள்களாகச் சித்தரித்துள்ளன. உண்மையில் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் முட்டாள்களா? இத்தகைய துணுக்குகளை யார் உருவாக்கியிருப்பார்கள்? என்ற வினாக்களை எழுப்பி ஆய்வு நிகழ்த்திய ஞா.ஸ்டீபன், அவ்வூரில் வசிக்கும் ஒதுக்கப்பட்ட ஏழை மக்களைப் பற்றி அண்டை ஊர்களில் வசிக்கும் மேல் தட்டு மக்கள் இத்தகைய துணுக்குகளை உருவாக்கியிருப்பார்கள் என்று முடிவுக்கு வருகிறார். மேலும், இக்கதைகள் ‘மூடர்கள்’ என்று இழிவுக்குள்ளாக்கப்பட்ட குன்னத்தூர் மக்களிடமும் தற்போது வழக்கில் உள்ளன என்று கூறுகிறார்.
“யேத்த…………இது சாதாரண அறுவா இல்ல. கொல்லுச்சாமி செஞ்ச ஜோக்கான உருக்கறுவா. இதை
நீ அறுத்து, ஒம் மக அறுத்து
ஒம் பேத்தி அறுத்து
ஒங்க வம்சமுமே அறுத்து வாழணும்….”
திருமணத்துக்கு நல்ல வாழ்த்துச் சொல் கேட்க வந்த பெண்ணுக்கு ‘அறுத்து வாழணும்’ என்ற மங்கல வாழ்த்து(!)க் கிடைக்கிறது. நாட்டுப்புற வழக்கில் ‘அவள் அறுத்தவள்’ என்றால் ‘தாலி அறுத்தவள்’ என்று பொருள். இதில் அமைகின்ற எதிர்பாராத ஆசாரியின் அப்பாவித்தனத்தில் விளைந்த நகைச்சுவையை நீங்கள் சுவைக்கலாம்.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாகா
மருந்தெனினும் வேண்டாற்பாற் றன்று.
இவ்வாறெல்லாம் விருந்து உபசரித்தல் குறித்து எழுத்திலக்கியங்களில் கூறப்பட்டாலும் எதார்த்த வாழ்க்கை வேறாக உள்ளதை அறிய முடிகிறது. இதனைப் பின்வரும் நகைச்சுவைத் துணுக்கு தெளிவுபடுத்துகிறது.
கணவன் மனைவி வீட்டினுள்ளிருந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியே தங்கள் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வருவதைப் பார்த்தார்கள்.
காட்சி
விருந்தினர் வந்தால் செலவாகுமே என்று பயந்து, “நான் அடிப்பதுபோல் அடிக்கிறேன் நீ அழுவது போல் அழவேண்டும். கணவன் மனைவி சண்டைபோட்டுக் கொண்டிருக்கும் வீட்டிற்கு விருந்தினர் வராமல் திரும்பி விடுவர்” என்று கூறி, அவ்வாறே அடிப்பதுபோல் அடித்தான். அவளும் அழுவது போல் அழுதாள். சற்றுநேரம் கழித்து கணவன் கதவைத் திறந்து வெளியே பார்த்தான். விருந்தினரைக் காணவில்லை. அவன் திரும்பிச் சென்று விட்டதாக மகிழ்ந்தான். மனைவியிடம் பெருமையாக ‘நான் அடிப்பதுபோல் அடித்தேனே எப்படி?’ என்று கூறினான். அதற்கு அவள் ‘நான் அழற மாதிரி அழுதேனே அது எப்படி?’ என்று கூறி மகிழ்ந்தாள். உடனே வீட்டிற்குப் பக்கத்தில் மறைந்திருந்த விருந்தாளி ‘நான் போற மாதிரி வந்தேனே, இது எப்படி?’ என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.
இந்த நகைச்சுவைத் துணுக்கில் எதார்த்தமான வாழ்க்கை சித்திரிக்கப்படுகிறது. எளிய மக்கள் அன்றாட உணவுக்கே அல்லல்படும்போது விருந்தினர்களை எவ்வாறு உபசரிக்க முடியும்? அத்தகைய வாழ்க்கைச் சூழலில் உருவான நகைப்பாக இதனைக் கருதமுடிகிறது.
ஒரு திருடன் தேங்காய் திருடுவதற்காகத் தென்னை மரத்தில் ஏறினான். மரத்தின் உச்சியில் இருக்கும் போது தோட்டக்காரன் அங்கு வந்துவிட்டான். தோட்டக்காரன் அவனைப் பார்த்துப் பேச, அதற்குத் திருடன் பதில் கூறுகிறான். அவர்களின் உரையாடல் வருமாறு :
‘யாருடா அது, மரத்து மேல என்ன செய்யிறே?’
‘புல்லு புடுங்குறத்துக்கு தென்ன மரத்தில் ஏறுனங்க’
‘தென்னை மரத்தில எப்படிடா புல்லு மொளைக்கும்?’
‘அதாங்க புல்லு இல்லேன்னு கீழே இறங்கிட்டு இருக்கேன்.’
இங்குத் திருடன் தன்னுடைய சமயோசித புத்தி காரணமாகத் தோட்டக்காரரிடமிருந்து தப்பிப்பதை அறிய முடிகிறது.
“ஓர் ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு மாணவன் பாடத்தைக் கவனிக்காமல் வகுப்பறையின் ஓரத்தில் ஓடிக்கொண்டிருந்த எலியையே கவனித்துக் கொண்டிருந்தான். அந்த எலி ஒரு வளையில் நுழைந்தது. அதன் வால் பகுதி மட்டும் உள்ளே நுழையாமல் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. இந்நிலையில் ஆசிரியர் அந்த மாணவனைப் பார்த்து ‘நான் நடத்தியது உன் மூளையில் நுழைந்ததா?‘ என்ற பொருளில் சுருக்கமாக ‘என்னடா நுழைந்ததா? என்று கேட்டார். எலியையே பார்த்துக் கொண்டிருந்த மாணவன் சட்டென்று ‘எல்லாம் நுழைந்தது. இன்னும் வால் மட்டும் நுழையவில்லை ஐயா என்றான்”.
இந்த நகைச்சுவைத் துணுக்கு வகுப்பறையில் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையிலும் சொல்லிக் கொடுப்பதைக் காதில் வாங்கிக் கொள்ளாத மாணவர்களை இடிந்துரைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
பொய் சொல்பவர்களை எள்ளிப் பேச இதுபோன்ற துணுக்குக் கதைகள் பிறந்து வழங்கின.
தனி மனிதர்களையோ, இனங்களையோ இயக்கங்களையோ, நாடுகளையோ, கேலி செய்து நகைச்சுவைகள் உருவாக்கப்படுகின்றன. இவை மக்களின் இயல்புகளையும், பண்பு நலன்களையும் மன ஓட்டங்களையும் புரிந்து கொள்ளவும் அவர்களின் நகைச்சுவை உணர்ச்சியை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. விருந்து உபசரித்தல் போன்ற எதார்த்தங்களைப் பற்றியும், மக்களின் சமயோசித புத்தி பற்றியும் உருவாக்கப்பட்ட நகைச்சுவைகள் சமுதாயத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளத் துணை செய்கின்றன. இவற்றைப் பற்றி இப்பாடம் சான்றுகளுடன் விளக்கியுள்ளது.