1) சடங்குகளும் நம்பிக்கைகளும்
2) வழிபாடுகளும் திருவிழாக்களும்
3) நாட்டுப்புற மருத்துவம்
4) நாட்டுப்புற நிகழ்த்து கலைகள்
5) நாட்டுப்புற விளையாட்டுகள்
6) நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
என்பனவாகும்.
நாட்டுப்புறவியல் மரபுகளை அறிந்து கொள்ளவும் எளிதில் புரிந்து கொள்ளவும் இப்பாடங்கள் உங்களுக்குத் துணை புரியும். பாடப் பகுதிக்குச் செல்லும் முன் நாட்டுப்புறவியல் மரபுகள் என்றால் என்ன என்பதை உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தமிழில் எழுத்திலக்கிய மரபில் கவனம் செலுத்தப்பட்ட அளவிற்கு நாட்டுப்புறப் பண்பாட்டு மரபில் கவனம் செலுத்தப்படவில்லை என்பதே உண்மை. நாட்டுப்புறவியல் மரபுகள் வாழும் மரபுகளாகும்; நாட்டுப்புற மக்களால் வளர்த்து எடுக்கப்படும் மரபுகளாகும். இவை அறிவு நிலைக்கு அப்பாற் பட்டு உணர்வு நிலையில் வடிவமைக்கப் பெற்றவை. இம்மரபுகள் எழுதப்படாத சட்டங்களாக நின்று நிலைத்து நாட்டுப்புற மக்களை வழி நடத்தி வருகின்றன.
எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே
(நூற்பா எண் : 387)
என்கிறது நன்னூல். ‘அறிவுடையோர் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் மரபாகும்’ என்பதே இதன் பொருள். சொல்லையும் பொருளையும் மட்டும் அல்லாது அவர்கள் மேற்கொண்ட செயல்களையும் அவ்வாறே பின்பற்றுவதும் மரபே. ‘பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியே மரபு’ (Tradition) என்கிறது தமிழ் அகராதி. ஒரு காலத்தில் செய்யப்படுகின்ற செயல்களில் உண்மையும் நன்மையும் இருப்பின் அவை பின்வரும் தலைமுறையினரால் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டு வழிவழியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றன. இவையே பின்னாளில் மரபாக நிலைத்துவிடுகின்றன. பழைமையைப் பேணுவதும் முன்னோர் வழியைப் பொன்னே போல் போற்றுவதும் மரபின் முக்கியக் கூறுகள் ஆகும். ஊர்தோறும் நாடுதோறும் மக்களினம் வாழும் இடந்தோறும் இம்மரபுகள் நீக்கமற நிறைந்துள்ளன.
மரபு என்ற சொல் இன்று மரபியல், மரபினம், மரபுக் கூறு, மரபுக் கலை, மரபுத் தொடர், மரபு நோய், மரபணு என்று பல்வேறு துறைகளில் பயன்பட்டு வருவதை நீங்கள் அறியலாம். இதில் நாட்டுப்புற மரபு என்பது சடங்குகள், நம்பிக்கைகள், வழிபாடுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் பாதுகாக்கப்படும் ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாடாகும்.
இந்த நாட்டுப்புற மரபுகள் நாட்டுப்புற மக்களால் பாதுகாக்கப்பட்டு வளர்த்து எடுக்கப்படுபவை. மனிதன் என்று தோன்றினானோ அன்றே நாட்டுப்புற மரபுகளும் தோற்றம் பெற்றுவிட்டன என்றுதான் கூற வேண்டும். நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இந்நாட்டுப்புற மரபுகள் பரந்து விரிந்தவை. நீண்ட பாரம்பரியம் உள்ளவை. இம்மரபுகளைப் பற்றிய அறிமுகமாகவே இத்தொகுதியில் உள்ள பாடங்கள் அமைந்துள்ளன.
சடங்கு என்பது மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வரன்முறை ஆகும். மனிதனும் மனித சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒழுக்கம் என்று கூட இதனைச் சொல்லலாம். ‘புனிதத் தன்மையின் பால் மக்கள் மேற்கொள்ளும் நடத்தைக் கோலங்களின் தொகுப்பே சடங்கு’ என்றும், ‘நம்பிக்கைகளின் அடிப்படையில் மக்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் புனிதச் செயல்களே சடங்குகள்’ என்றும் சடங்கு குறித்துப் பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. மேற்கூறிய கருத்துகளின் அடிப்படையில் ‘சடங்கு என்பது புனிதத்துவம் கருதி ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு முறையுடன், குறியீட்டு நிலையில் மக்களால் மேற்கொள்ளப்படும் செயல்பாடு’ என்று விளங்கிக் கொள்ளலாம்.
இவ்வகைப்பாட்டில் உள்ள வழிபாட்டுச் சடங்குகள் குறித்து ‘வழிபாடும் திருவிழாக்களும்’ என்ற இரண்டாம் பாடத்தில் எடுத்துரைக்கப்படுவதால் ஏனைய மூன்று சடங்கு முறைகள் மட்டுமே இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.
நாட்டுப்புற மக்களால் பல்வேறு வகையான வாழ்வியல் சடங்குகள் காலங் காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பிறப்புச் சடங்கு, பூப்புச் சடங்கு, திருமணச் சடங்கு, இறப்புச் சடங்கு ஆகியவை குறிப்பிடத் தக்கவை ஆகும்.
மக்கட்பேறு அல்ல பிற
(திருக்குறள்-61)
என்று வள்ளுவர் மக்கட் செல்வத்தின் பெருமையைச் சொல்லியுள்ளார். கிடைத்தற்கு அரிய இம்மக்கட் செல்வத்தைக் காக்கச் செய்யப்படும் சடங்குகளே பிறப்புச் சடங்குகள் எனப்படுகின்றன. பிறப்புச் சடங்கில் சேனை தொடுதல், தொட்டில் கட்டுதல், காது குத்துதல் ஆகிய சடங்குகள் நாட்டுப்புற மக்களின் வாழ்வில் சிறப்பிடம் பெறுபவையாகும். அவற்றை இங்குக் காண்போம்.
சேனை தொடுதல்
சேய்+நெய்+தொடுதல் என்பதே சேனை தொடுதல் என வழங்குகிறது. குழந்தை பிறந்தவுடன் பெரியவர்களை அழைத்துக் குழந்தையின் நாவில் இனிப்புக் கலந்த நெய் அதாவது எண்ணெய்யைத் தொட்டு வைக்கும் வழக்கத்தையே சேனை தொடுதல் என்பர். சேனை என்பதைக் ‘குழந்தை பிறந்தவுடன் புகட்டும் இனிப்புக் கலந்த திரவ உணவு’ என்கிறது தமிழ் அகராதி. சேனை தொட்டு வைக்கும் பெரியோரின் குண நலன்கள் குழந்தைக்கு வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இச்சடங்கு செய்யப்படுகின்றது.
தொட்டிலிடுதல்
குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கும் பழக்கம் தமிழரின் தனிப்பண்பாகும். குழந்தையை முதன்முதலில் தொட்டிலில் இடுவது நாட்டுப்புற மக்களால் ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்படுகிறது. குழந்தையின் தாய்மாமன் தொட்டில் துணி, தொட்டில் கம்பு, தொட்டில் கயிறு, புத்தாடை ஆகியவற்றைக் கொண்டு வந்து தொட்டில் கட்டி அதில் குழந்தையைக் கிடத்தி மூன்று முறை ஆட்ட வேண்டும். இவ்வாறு செய்வதே தொட்டிலிடுதல் சடங்காகும். தமிழரின் தாலாட்டுப் பாடல்களில் இது குறித்த செய்திகளைக் காணலாம்.
பச்சை இலுப்பை வெட்டி – என்கண்ணே உனக்கு
பால்வண்ணத் தொட்டில்கட்டி
தொட்டிலிட்ட அம்மானும் -என்கண்ணே
தூரவழி போறாரம்மா
என்ற தாலாட்டுப் பாடல் தொட்டிலிடுதல் குறித்து எடுத்துரைக்கும்.
காது குத்துதல்
குழந்தைகள் தொடர்பான சடங்குகளில் சிறப்பிடம் பெறுவது காது குத்துதல் சடங்காகும். அவரவர் தம் குல தெய்வக் கோயில்களில் குழந்தைகளுக்கு முடியெடுத்து காது குத்தும் சடங்கு அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாது நடத்தப்படுகிறது. குழந்தை பிறந்து ஓராண்டு முடிவதற்குள் குழந்தைக்கு மொட்டை போட்டுக் காது குத்த வேண்டும் என்பது வழிவழி வரும் மரபாக உள்ளது. குழந்தைக்குக் கருவில் உண்டான பாரம்பரியக் குறைகளை நீக்குவதற்காக இச்சடங்கு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
தீமை தரும் ஆவிகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கக் காது, மூக்கு ஆகிய பகுதிகளில் துளையிட்டு உலோக ஆபரணம் பூட்டுவதாகவும் கூறப்படுகிறது. வழிவழி வந்த பழக்கம் சடங்காகவே மாறிவிட்டது. தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இருந்து வருகிறது.
கண்ணான அம்மாளுக்கு – ஏனம்மா
காதுகுத்தப் போறாகன்னு
கிண்ணியில் சந்தனமும்
கிளிமூக்கு வெத்தலையும்
தங்கத்தினால் ஆபரணமும் – ஏனம்மாளுக்கு
கொண்டு வந்தார் தாய்மாமன்
என்று தாலாட்டுப் பாடல் எடுத்துரைக்கிறது. குழந்தையின் எதிர்காலம் சிறப்படையவும் உறவுகளை வலுப்படுத்தவும் பிறப்புச் சடங்குகள் மேற்கொள்ளப் படுகின்றன எனலாம். உங்களின் குழந்தைப் பருவத்திலும் இதுபோன்ற சடங்குகள் இடம்பெற்றிருக்கும்; நினைவுபடுத்திப் பாருங்கள்.
திருமணத்திற்கான தொடக்க நிலைச் சடங்கு இதுவாகும். மணமகன் வீட்டார் தம் உறவினருடன் பெண் வீட்டிற்குச் சென்று தாம்பூலம் மாற்றி மண ஒப்பந்தம் செய்து கொள்வது பரிசம் போடுதல் எனப்படும். இதனை உறுதி செய்தலை நிச்சயதார்த்தம், நிச்சய தாம்பூலம் என்றும் கூறுவதுண்டு. இச்சடங்கு திருமணத்திற்கு முன் ஒரு நல்ல நாளிலோ திருமணத்திற்கு முந்தைய நாளிலோ பெண் வீட்டில் வைத்து நடத்தப் பெறும். இன்னார்க்கு இன்னார் என்று மணமக்களை உற்றார் உறவினர் அறிய உறுதி செய்வதே இச்சடங்கின் நோக்கமாகும்.
முகூர்த்தக் கால் நடுதல்
மணப்பந்தலின் ஒரு கால்தான் முகூர்த்தக் கால் ஆகும். திருமணத்தின் போது மணமகன் இல்லத்திலும் மணவறையிலும் முகூர்த்தக் கால் நடுவது மரபாக இருந்து வருகிறது. மூங்கில் அல்லது பால் ஊறும் மரக் கிளைகளை மணமகன், மணப்பெண் இவர்களுக்கு மிக நெருக்கமான உறவினர்கள் சேர்ந்து இவர்களின் வீடுகளில் இடப்படும் மணப்பந்தலுக்கான முகூர்த்தக் காலாக நடுவார்கள். மூங்கிலும் பால் ஊறும் மரமும் தழைத்துச் செழிப்பது போல் மணமக்களின் வாழ்வும் செழிக்கும் என்ற நம்பிக்கை குறித்த சடங்கே இதுவாகும். பெரியோர்கள்,
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரிட்டு
மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்க
என்று மணமக்களை வாழ்த்தும் வழக்கமும் இதனால் ஏற்பட்டதே.
தாலி கட்டுதல் (தாலி –
வளைகாப்புச் சடங்கு
திருமணமாகிக் கருவுற்ற பெண்ணுக்கு ஐந்து, ஏழு அல்லது ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்புச் சடங்கு நடத்துவது நாட்டுப்புற மக்களின் மாறாத வழக்கமாக உள்ளது. இது கட்டுச் சோறு கட்டுதல், சோறாக்கிப் போடுதல், சீமந்தம் செய்தல் என்று நாட்டுப்புறங்களில் வழங்கப் படுவதுண்டு. பெண் வீட்டாரும் அவர்தம் உறவினர்களும் பல்வேறு உணவு வகைகளைச் சமைத்து மாப்பிள்ளையின் வீட்டிற்கு எடுத்துச் சென்று பெண்ணுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்திப் பிள்ளைப் பேற்றிற்காகப் பெண்ணைத் தாய் வீட்டிற்கு அழைத்து வருவர். இதுவே வளைகாப்புச் சடங்காகும். பிள்ளைப் பேறு என்பது பெண்ணிற்கு மறுபிறவி போன்றதாகும். கருவுற்ற பெண்ணிற்கும் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் எவ்விதத் துன்பமும் நேர்ந்துவிடக் கூடாது. தாயும் சேயும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக வளைகாப்புச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது.
இறப்புச் சடங்கில் கொள்ளி வைத்தல் என்பது மிக முக்கியமான சடங்காகும். சுடுகாட்டில் உடலுக்கு எரியூட்டும் முன் இறந்தவரின் மகன் நீர் நிறைந்த கலயத்தைத் தோளில் வைத்து மூன்று முறை உடலை வலம் வந்து குடம் உடைத்துக் கொள்ளி (தீ) வைக்கும் நிகழ்வே கொள்ளி வைத்தல் என்பதாகும். தாய் இறந்தால் தலைமகனும் தந்தை இறந்தால் இளைய மகனும் கொள்ளி வைக்க வேண்டும் என்ற வழக்கம் இன்று இருந்து வருகின்றது. வயதாகியோ, நோய்வாய்ப் பட்டோ இயல்பாக இறப்போர்க்கு மட்டுமே இறப்புச் சடங்குகள் மேற்கொள்ளப் படுகின்றன. அகால மரணம் அடைந்தோருக்கு (விபத்து, கொலை, தற்கொலை) எவ்விதச் சடங்கும் நிகழ்த்தப் படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
ஆதி மனிதர்களிடம் முதன்முதலில் தோன்றிய சடங்குகள் ஈமச் சடங்குகளே என்று கூறுவதுண்டு. இறந்தோரைப் புனிதப் படுத்துவதற்காகவும் இறந்தோரால் எவருக்கும் எத்தகைய தீங்கும் விளையக் கூடாது என்பதற்காகவும் இறப்புச் சடங்குகள் கடைப்பிடிக்கப் படுகின்றன எனலாம். இறந்தோருக்காகப் பாடப்படும் ஒப்பாரிப் பாடல்கள் நாட்டுப்புற இலக்கியத்திற்குக் கிடைத்த கொடையாகும்.
மானத்த நம்பியல்லோ
மக்களைத்தான் பெத்தோமையா
மக்களைத்தான் காப்பதற்கு
இப்போமழை பெய்யவேணும்
மழைக்குவரம் கேட்டு நாங்க
மருகுகிறோம் சாமி
(மானம் = வானம்,மழை, மருகுதல் = வாடுதல்)
என்று ஒப்பாரி பாடிக் கொண்டே சுடுகாட்டிற்குச் செல்வர். சுடுகாட்டிற்குச் செல்வோரை ஏனைய பெண்கள் வழிமறித்து மழைபெய்து விடும்; நம் பஞ்சமெல்லாம் தீர்ந்து விடும் வாருங்கள் என்று கூறித் திரும்ப அழைத்து வருவர். அன்றோ அடுத்த நாளோ மழை பெய்யும். தாய்மார்கள் விடும் கண்ணீரைப் பார்த்து வருணனும் கண்ணீர் விடுவான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ‘போலச் செய்தலாக’வே இம்மழைச் சடங்கு நடத்தப்படுகிறது.
பெண்கள் நிர்வாண பூசை செய்தல், கழுதைக்குத் திருமணம் செய்து வைத்தல், கொடும்பாவி கட்டி இழுத்தல் போன்ற சடங்குகளும் மழை வேண்டி மேற்கொள்ளப் படுவதுண்டு.
மழைச் சடங்குகள் சமூக நன்மை கருதி நாட்டுப்புற மக்களால் கூட்டாக ஒன்றிணைந்து செய்யப்படுபவை என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். மழை வேண்டிச் சடங்கு செய்தல் இன்றளவும் வழக்கமாக உள்ளது.
தானானை தானானை தானானை தானானை
வேளாருகிட்டச் சொல்லி கோளாறா ஓடொடச்சு
வட்டவட்ட ஓடொடச்சு குட்டமுள்ள முளைப்பயறு
ஆட்டாந்தொழு தெறந்து ஆட்டெருவு அள்ளிவந்து
மாட்டாந்தொழு தெறந்து மாட்டெருவு அள்ளிவந்து
கடுகுலயுஞ் சிறுபயறு காராமணிப் பயறு மிளகுளயுஞ் சிறுபயறு முத்தான மணிப்பயறு மொளபோட்ட ஒண்ணா நாளு ஓரெலையாம் முளைப்பாரி ஓரெலைக்குங் காப்புக் கட்டி ஒருபானை பொங்கலிட்டு
முளைப்பாரி போடுங்கம்மா முத்தாலம்மனைப் பாடுங்கம்மா
தானானை போடுங்கம்மா தையலரே ஒருகுலவை
ஓடு + ஒடச்சு = ஓடொடச்சு
ஆடு + ஆம் + தொழு = ஆட்டாந்தொழு
ஆட்டு எரு = ஆட்டுச் சாணம்
மாட்டு எரு = மாட்டுச் சாணம் இயற்கை உரம்
என்று முளைப்பாரிப் பாடல் பெண்களால் பாடப்படுவதுண்டு. முளைப்பாரி எந்த அளவிற்குச் செழித்து வளர்கின்றதோ அந்த அளவிற்கு விளை நிலங்களிலும் அந்த ஆண்டு பயிர்களும் செழித்து வளர்ந்து நல்ல விளைவைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இவ்வளமைச் சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.
வழிபாடுகளில் மட்டுமல்லாது திருமணச் சடங்கிலும் முளைப்பாரி தவறாமல் இடம்பெற்று வருவது குறிப்பிடத் தக்கதாகும். கோவலன், கண்ணகி திருமணத்தின் போது பெண்கள் தானிய முளைகளைக் கொண்ட குடங்களை ஏந்தி வந்ததை விரித்த பாலிகை முளைக்குட நிரையினர் என்று சிலப்பதிகாரம் சுட்டுகிறது.
மழைச் சடங்கும் முளைப்பாரிச் சடங்கும் தானியங்களின் செழிப்பையும், மனித வாழ்வில் செழிப்பையும் தூண்டச் செய்யும் வளமைச் சடங்குகளாகப் பெண்களால் தொன்று தொட்டு நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இச்சடங்கின் வழி நாட்டுப்புற மக்கள் இயற்கையின் மீது கொண்டுள்ள அசையா நம்பிக்கை வெளிப்படுவதையும் உணரலாம்.
மந்திரம் அதன் பயன்பாட்டு அடிப்படையில் தூய மந்திரம் (White Magic), தீய மந்திரம் (Black Magic) என்று வகைப்படுத்தப் படுவதுண்டு. தனிமனித நலனுக்கோ அல்லது ஒரு சமூக நலனுக்கோ பயன்படுத்தப்படுவது தூய மந்திரமாகும். தீய ஆவிகளை, தீங்கு விளைவிக்கும் சக்திகளை எதிரியின் மேல் ஏவி விடுதல், புதையல் எடுத்தல், பெண்களை வசியம் செய்தல் போன்ற செயல்பாடுகளுக்குப் பயன்படுவது தீய மந்திரமாகும். பில்லி, சூன்யம், ஏவல் போன்றவை தீய மந்திரச் சடங்குகளில் அடங்கும். தூய மந்திரச் சடங்குகளாக இருந்தாலும் சரி, தீய மந்திரச் சடங்குகளாக இருந்தாலும் சரி பலியிடுதல் என்பது (சில சடங்குகளில் நரபலியும் கொடுக்கப்படுவதுண்டு) தவறாமல் இடம்பெறும். நாளிதழ்களில் இதுபோன்ற செய்திகளை நீங்கள் அடிக்கடி காணலாம். மலையாள மாந்திரீகம் வலிமையுடையதாக நம்பப்படுவதுண்டு.
இதுவரை சடங்குகள் வகைப்படுத்தப்பட்டு அவை எந்த நோக்கத்திற்காக, எத்தகைய சூழலில், எந்தெந்த நிலைகளில் நிகழ்த்தப் படுகின்றன என்பது குறித்து விளக்கப்பட்டது. இதன்வழி சடங்குகள் தனி மனித மன நிலையிலும், கூட்டு மன (Society) நிலையிலும் நிகழ்த்தப்பட்டு வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
மனிதனின் பலம் நம்பிக்கையிலே
என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள். நம்பிக்கையானது மனிதனோடு பிறந்து மனிதனோடு அழிவதாகும். மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தானே இயங்குகிறது. நம்பிக்கைகள் தாமே மனிதனை இயக்குகின்றன. இதை எவராலும் மறுக்க முடியுமா? முடியாதுதானே.
‘இயற்கையின் புதிரான செயல்களை உணர இயலாத நிலையிலும், திடீர் நிகழ்வுகளுக்குச் காரணம் அறியாத நிலையிலும், மனிதமனம் தன்போக்கில் பதிவுசெய்து கொண்ட காரண காரியங்களே நம்பிக்கைகள்’ ஆகும். இந்நம்பிக்கைகள் மனித மனத்தின் வெளிப்பாடுகளாகும். குறிப்பிட்டுச் சொல்லப் போனால் மனிதனின் அச்ச உணர்வே இந்நம்பிக்கைகளின் தோற்றத்திற்குக் காரணம் எனலாம். மனித வாழ்வில் நம்பிக்கைகள் என்று தோன்றின என்று திட்ட வட்டமாகக் கூற இயலாது என்றாலும், இவை மக்களின் வாழ்வில் தொடர்ந்து இருந்து வருவனவாகும். தெய்வங்கள், தெய்வங்களின் தோற்றம், அருள், சக்தி, வழிபாடு, சடங்குகள், சாத்திரங்கள் இவை எல்லாமே நம்பிக்கைகளின் விளைவில் தோன்றியவையே. இந்நம்பிக்கைகளை வகைப்படுத்திக் காணலாம்.
நம்பிக்கை (Belief) திட நம்பிக்கை (Faith) மூட நம்பிக்கை (Superstition)
காரண காரியத் தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிவதை நம்பிக்கை (Belief) என்றும், நிச்சயம் பலன் உண்டு என்ற உறுதியான நம்பகத் தன்மையைக் கொடுப்பதைத் திட நம்பிக்கை (Faith) என்றும் (எ-டு, நான் நன்றாகத் தேர்வு எழுதியுள்ளேன். எனக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று உறுதியாக நம்புவது), காரண காரியம் அறியப் படாத நிலையில் உள்ளதை மூட நம்பிக்கை (Superstition) என்றும் குறிப்பிடுவதுண்டு. சிந்தனைத் திறன் மிக்க சமூகத்தில் மூட நம்பிக்கைகள் குறைவாகவும், சிந்தனைத் திறன் குறைந்த சமூகத்தில் மூட நம்பிக்கைகள் மிகுதியாகவும் இருக்கும். இவ்வாறு சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளைக் கொண்டு அச்சமூகத்தின் அறிவுத் திறனை அளவிட முடியும் என்று கூடக் கூறுவதுண்டு. நம்பிக்கை என்பது கற்றவர், கல்லாதவர், பணக்காரர், ஏழை என்ற பாகுபாடில்லாமல் அனைத்துத் தரப்பினரிடமும் வழக்கில் இருந்துவரும் ஒன்றாகும். ஒரு சமூகத்தினரின் நம்பிக்கைகள் மற்றொரு சமூகத்தினருக்கு மூட நம்பிக்கையாகத் தோன்றலாம். சான்றாக, பலியிடுதல் என்பது வைதீக மரபினருக்கு மூட நம்பிக்கையாகத் தோன்றுவதைக் கூறலாம். அதேபோல் வைதீக மரபில் உள்ள நம்பிக்கைகளை ஏனையோர் ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம். எனவே நம்பிக்கைகளை அவற்றின் பின்புலத்தில் வைத்துப் புரிந்து கொள்ள முயல வேண்டுமே தவிர மூட நம்பிக்கை என்று எவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிடக் கூடாது. ஏனெனில், நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் காரண காரியத்திற்கு உட்பட்டவை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
Belief என்ற நம்பிக்கையே நாட்டுப்புற மக்களிடம் வேரூன்றிக் காணப்படுகிறது. இது மரபின் முத்திரையாக, காரண காரியத்திற்கு இடம் கொடாமல் வழிவழியாகப் பின்பற்றப் பட்டு வருகிறது. மனிதன் தாயின் வயிற்றில் கருவாக இருப்பதில் இருந்து இறந்த பின் எரியூட்டப்படுவது வரை; ஏன்? இறந்த பின்பும் கூட அவன் ஆவியாக அலைகின்றானா, பேயாகத் திரிகின்றானா என்பது வரை, அனைத்து நிலைகளிலும், நாட்டுப்புற மக்களிடம் நம்பிக்கைகள் நிறைந்துள்ளன. இந்நம்பிக்கைகளுக்குப் பின்னால் ஏதேனும் ஒரு வலுவான உளவியல் (Psychological) காரணம் இருப்பதையும் நாம் அறிய முடியும்.
‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்ற நம்பிக்கை ஒரு மனிதனைத் தீமையைச் செய்ய விடாமல் தடுக்கிறது. சத்தியம் தொடர்பான நம்பிக்கை கட்டுப்பாட்டை வளர்க்கிறது. விதி, தலையெழுத்து பற்றிய நம்பிக்கை மனத்தைத் தேற்றிக் கொள்ள உதவுகிறது. இவ்வாறு உளவியல் ரீதியான சோகங்களுக்கு மருந்தாக நம்பிக்கைகள் செயல்படுகின்றன.
நாட்டுப்புற மரபில் நம்பிக்கை முடிச்சுகள் ஏராளம். நம்பிக்கைகளைத் தொகுத்தால் ஏடு கொள்ளாது என்னும் அளவிற்கு அவை நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்குக் காண்போம்.
நாட்டுப்புற நம்பிக்கைகள்
நாள் பற்றிய நம்பிக்கை சகுணம் பற்றிய நம்பிக்கை கண்ணேறு பற்றிய நம்பிக்கை சோதிடம் பற்றிய நம்பிக்கை
திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் திருமணம் நடந்தால் துன்பம் நேரும்.
பிறந்த நாள் மற்றும் பிறந்த கிழமைகளில் திருமணம் நடந்தால் துன்பம் நேரும்.
சனிக்கிழமை முதன்முதலில் நோயாளிகள் மருந்து சாப்பிடக் கூடாது.
சனிக்கிழமை ஒரு வீட்டில் இறப்பு நேரின் அது தொடரும்.
திங்கள் கிழமை பயணம் மேற்கொள்வது தீமை தரும்.
திருமணமான பெண்ணை வெள்ளிக் கிழமையன்று கணவன் வீட்டிற்கு அனுப்பக் கூடாது.
எந்த நல்ல காரியத்தையும் மாலை நேரத்தில் தொடங்கக் கூடாது.
இந்த நாள் இனிய நாள் என்று வரையறை செய்திருக்கும் நாட்டுப்புற மக்களின் அனுபவ அறிவு வியந்து போற்றுவதற்கு உரியதாகும்.
காலையில் சுமங்கலிப் பெண்கள் முகத்தில் விழிப்பது நல்லது.
பயணம் போகும்போது அழுக்குத் துணியோடு வரும் வண்ணாரைக் காண்பது நல்லது.
காகம் இடப் பக்கமிருந்து வலப் பக்கம் பறந்து செல்வதைப் பார்த்தால் நல்லது.
வௌவால் வீட்டில் பறந்தால் தீமை வரும்.
காகம் கரைந்தால் விருந்தினர் வருவர்.
நாய் ஓலமிட்டால் மரணம் நேரும்.
பல்லி தலையில் விழுந்தால் மரணம் நிகழும்.
பல்லி உடலில் விழுந்தால் ஆயுள் கூடும்.
பல்லி மேற்குத் திசையிலிருந்து ஒலி எழுப்பினால் நல்லது நடக்கும்.
நாட்டுப்புற நம்பிக்கைகளில் சகுணம் பற்றிய நம்பிக்கைகளே அதிகம் எனலாம்.
திருமணம் பற்றிக் கனவு கண்டால் தீயது நடக்கும்.
கனவில் தாமே இறந்துவிட்டதாகக் கனவு கண்டால் ஆயுள் பெருகும்.
மரணத்தைக் கனவில் கண்டால் சுகமாகும்.
இறந்தோர் கனவில் வந்து அழைத்தால் மரணம் வரும்.
கனவில் கோயிலைக் கண்டால் குடும்பத்தில் சண்டை வரும்.
வீடு தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் செல்வம் பெருகும்.
பெண்கள் கனவில் தண்ணீரைக் கண்டால் குழந்தை பிறக்கும்.
அதிகாலையில் காணும் கனவு பலிக்கும்.
நல்ல கனவு கண்டு விழித்தால் பின் தூங்கக் கூடாது.
உங்கள் கனவுகளை நினைவுபடுத்திப் பாருங்கள். காரண காரியங்களை நீங்களே அறிய முயலுங்கள்.
குழந்தைகளில் கையில் யானையின் வால் முடியைக் கட்டினால் கண்ணேறு கழியும்.
கண்ணேறு பட்ட குழந்தைகளுக்குச் சூடம், உப்பு, எலுமிச்சம் பழத்தால் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். காலடி மண், உப்பு, மிளகாய் கொண்டு திருஷ்டி சுற்றி நெருப்பில் போடுவர்.
கடை வியாபாரம் முடிந்து வெளியேறும் நிலையில் சூடம் ஏற்றி வைத்தால் கண்ணேறு படாது.
வியாபார நிறுவனங்களில் கழுதையின் படம் வைத்தால் கண்ணேறு படாது. இவை கண்ணேறு பற்றிய நம்பிக்கைகள் ஆகும்.
சோதிடத்தில் எடுத்துரைக்கப்படும் தீய பலன்களைப் போக்க, அதற்கான பரிகாரங்களை மேற்கொள்ளும் வழக்கமும் காணப்படுகிறது. சோதிடம் குறித்த நம்பிக்கைகளை இங்குக் காண்போம்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தரணி ஆள்வான்.
ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாது.
செவ்வாய் தோசமுள்ள ஆணும் பெண்ணும் திருமணம் செய்தால் நல்லது.
முருகன் வள்ளி தெய்வானையோடு காட்சியளிக்கும் படம் வந்தால் சோதிடம் பார்ப்பவர்க்கு இரு மனைவிகள் அமைவர்.
சோதிட நம்பிக்கைகள் மனித மனக் குழப்பங்களுக்குத் தற்காலிகத் தீர்வைத் தருகின்றன; ஆறுதலை அளிக்கின்றன.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற முதுமொழி அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்று கோயில் இல்லாத ஊர்களே இல்லை என்பது மட்டுமல்ல, குடிகள் இல்லாத இடத்திலும் கூடக் கோயில்கள் தோற்றம் பெற்றுள்ளன என்பதுதான் இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். இது எதனைக் காட்டுகிறது? தெய்வ வழிபாட்டின் மீது மக்கள் கொண்டுள்ள தீவிரமான ஈடுபாட்டையும் பலமான நம்பிக்கையையும்தானே காட்டுகிறது? நாட்டுப்புற மக்களிடம் இத்தகைய போக்கு இன்னும் அதிகம் என்றுதான் கூறவேண்டும்.
இப்பாடம் நாட்டுப்புற மக்களால் வழிபடப் படும் சிறுதெய்வங்களைப் பற்றியும் அவை தொடர்பான வழிபாட்டு முறைகள், விழாக்களைப் பற்றியும் விளக்குகிறது.
மேற்கண்ட கருத்துகளின் வழி ‘உயர் நிலையான ஒன்றை உள்ளத்தால் நெருங்கவும் உணர முற்படவும் மேற்கொள்ளப்படும் வழிமுறைகளே வழிபாடு’ என்று தெளிவு பெறலாம்.
இயற்கை வழிபாடு (Nature Worship)
மனிதனின் அச்ச உணர்வும் குற்ற மனப்பான்மையுமே வழிபாடு தோன்றக் காரணம் எனலாம். இயற்கையானது இடி, மழை, புயலின் வாயிலாக மனிதனுக்கு அச்சமூட்டியது. தான் செய்த குற்றமே இயற்கையின் சீற்றத்திற்குக் காரணம் என்று நம்பிய மனிதன் அவற்றையே வணங்கத் தொடங்கினான். அது அவனுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் ஊட்டியது. இதனால் இயற்கை வழிபாடு வழிபாட்டின் தொடக்கமாக அமைந்தது.
மர வழிபாடு (Tree Worship)
இயற்கைச் சக்திகள் பசுமையான மரங்களில் குடி கொண்டிருப்பதாக மனிதன் நம்பினான். அதுவே மர வழிபாடாய் மலர்ந்தது. நீங்கள் எந்தத் தெய்வக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கு அந்தத் தெய்வத்திற்கென்று ஒரு மரம் இருப்பதைக் காணலாம். இம்மரம் தலமரம், தலவிருட்சம் என்று கூறப்படும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு மரம் உண்டு.
தெய்வங்களுக்கான மரங்கள்
தெய்வம் மரங்கள்
சிவபெருமான் ஆலமரம்
மீனாட்சியம்மன் கடம்ப மரம்
விநாயகர் அரசமரம் வேப்பமரம்
மாரியம்மன் வேப்பமரம்
கண்ணகி வேங்கைமரம்
மரங்கள் வளமையின் குறியீடாய்க் கருதி வணங்கப்பட்டு வருகின்றன. நாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பாலும் ஏதாவதொரு மரத்தின் கீழ் அமைந்திருப்பதையும் மரத்தோடு இணைத்து அவை வழிபடப் படுவதையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.
போலிஉரு வழிபாடு (Fetishism)
‘மனிதனுக்கு நன்மை செய்யும் ஆற்றல், சில பொருட்களில் உள்ளீடாக அமைந்துள்ளது’ என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததே போலி உரு வழிபாடு ஆகும். பறவைகள், விலங்குகள், ஆயுதங்கள், பொம்மைகள், வேட்டைக் கருவிகள், இசைக் கருவிகள், வேளாண்மைக் கருவிகள், சிலுவை, முன்னோர் பயன்படுத்திய புனிதப் பொருட்கள் போன்றவை போலிஉரு வழிபாட்டில் இடம் பெறுவதுண்டு. குறிப்பிட்ட போலிஉரு குறிப்பிட்ட இன மக்களின் வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதுண்டு.
இன்று நீ்ங்கள் பார்க்கும் கரகம் எடுத்தல், குதிரை எடுப்பு, கல் நடுதல், சூலாயுதம், வேல் ஊன்றுதல் போன்றவையும் போலிஉரு வழிபாட்டின் வளர்ச்சியே ஆகும்.
முன்னோர் வழிபாடு (Ancestor Worship)
வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தனது முன்னோர்களையும் தாய், தந்தையரையும் போற்றும் வகையில் மனிதன் அவர்களைத் தெய்வமாக வணங்கத் தொடங்கினான். இதனால் முன்னோர்கள் நன்மைகளைச் செய்து காப்பதாகவும் நம்பினான். இதன் விளைவாகத் தோன்றியதே முன்னோர் வழிபாடு ஆகும். முன்னோர் வழிபாட்டிற்கு ஆவி பற்றிய நம்பிக்கையே அடிப்படை என்று கூறப்படுவதுண்டு.
போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகல் எடுத்தல், பத்தினிக்கல் வழிபாடு, சமாதி வைத்தல் போன்றவையும் இதனோடு தொடர்புடையவை ஆகும். சிறு தெய்வ வழிபாடுகள் முன்னோர் வழிபாட்டின் வளர்ச்சி நிலையே என்று உறுதியாகக் கூறலாம். சீனா, எகிப்து, உரோம் போன்ற நாடுகளிலும் முன்னோர் வழிபாடு இருப்பதை அறிய முடிகிறது.
மேற்குறிப்பிட்ட இயற்கை வழிபாடு, மர வழிபாடு, போலிஉரு வழிபாடு, முன்னோர் வழிபாடு ஆகிய நான்கும் தொடக்கக் கால வழிபாடுகளாக விளங்குகின்றன.
இதில் பெருஞ்சமயம், நாட்டுப்புறச் சமயம் என்ற இரு பிரிவுகள் உண்டு. நாட்டுப்புற மக்களின் வழிபாட்டு மரபுகள், சடங்குகள், நம்பிக்கைகள் போன்றவை நாட்டுப்புறச் சமயமாகக் கொள்ளப்படுகின்றன. பாமர மக்களால் ஆழமாக உணரப்பட்டும், பின்பற்றப்பட்டும், ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அளிக்கப்பட்டு வரும் மரபுத் தொகுதியாகவும் நாட்டுப்புறச் சமயம் விளங்குகிறது. ஆனால் பெருஞ்சமய மரபு இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.
நாட்டுப்புறச் சமய மரபிற்கு உட்பட்டவை நாட்டுப்புறத் தெய்வங்கள், சிறுதெய்வங்கள் என்றும்; பெருஞ்சமய மரபிற்கு உட்பட்டவை பெருந்தெய்வங்கள், புராணத் தெய்வங்கள் என்றும் பிரித்து வழங்கப் படுகின்றன, வணங்கப் படுகின்றன.
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்கள்
1. பிறப்பு, இறப்பு உடையவை பிறப்பு, இறப்பு அற்றவை
2. கிராமம், காடு, மலைப் பகுதிகளில் மிகுதியாக வணங்கப்படுவன. நகரங்களில் மிகுதி.
3. பாமர மக்களால் வழிபடப் படுபவை பெரும்பாலும் உயர்குடியைச் சேர்ந்தவர்களால் வழிபடப்படுபவை
4. வரையறைக்கு உட்பட்ட ஆற்றலை மட்டும் உடையவை அதீத ஆற்றல் உடையவை
5. குடும்பம், குலம், இனம், கிராமத்திற்கென்று தனித்தனிக் கோயில்கள் உண்டு. அனைத்தும் பொதுக் கோயில்களே
6. உயிர்ப் பலியிட்டு வழிபடப் படுபவை பலியிடலை ஏற்காதவை. மரக்கறி உணவையே விரும்புபவை
7. ஆரவாரமான வழிபாட்டை உடையவை அமைதியான வழிபாட்டைக் கொண்டவை.
8. அந்தணர் அல்லாதாரே பூசாரிகளாக இருப்பர். சாமியாடிகள், அம்மனாடிகள் உண்டு. பெரும்பாலும் அந்தணர்கள் அல்லது சைவ வேளாளர்கள் பூசாரிகளாக இருப்பர். சாமியாடுவதை விரும்புவதில்லை
9. செவிவழிக் கதைகளும், நாட்டுப்புறப் பாடல்களும் உண்டு. புராணங்களும் தல வரலாறுகளும் உண்டு.
சிறுதெய்வங்களுக்கும் பெருந்தெய்வங்களுக்கும் இருப்பிடம், உருவ அமைப்பு, கோயில் அமைப்பு, வழிபாட்டு முறை, விழாக்கள், நேர்த்திக் கடன் போன்றவற்றில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. இதை நீங்களும் நன்கு அறிவீர்கள்.
சிறுதெய்வங்களை இங்கு வகைப்படுத்திக் காண்போம்.
சிறுதெய்வங்கள்
வீட்டுத் தெய்வம் குல தெய்வம் இனத் தெய்வம் ஊர்த் தெய்வம் வெகுசனத் தெய்வம்
பெண்தெய்வங்கள் ஆண்தெய்வங்கள்
தாய்த் தெய்வங்கள் கன்னித் தெய்வங்கள் முதன்மைத் தெய்வங்கள் துணைமைத் தெய்வங்கள்
வீட்டுத் தெய்வம்
தங்களுக்குள் வழிகாட்டியாய் விளங்கி, வாழ்ந்து மறைந்த முன்னோர்களையோ, கன்னியாக இருந்த நிலையில் வாழ்ந்து மறைந்த பெண்களையோ, தங்களின் வீட்டுத் தெய்வமாக வழிபடும் மரபு காணப்படுகிறது. இது பெரும்பாலும் பெண் தெய்வமாகவே இருக்கும். இதனை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், வாழ்வரசி என்று கூறுவதுண்டு.
குலதெய்வம்
ஒரு குறிப்பிட்ட மூதாதையின் மரபில் தோன்றியதன் வாயிலாக ஒருவருக்கொருவர் உறவு கொண்டுள்ள குழுவே ‘குலம்’ (clan) ஆகும். இரத்த உறவுடைய பங்காளிகள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர். இவர்களுக்குள் திருமண உறவு நடைபெறாது. இவ்வாறு அமையும் ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனித் தெய்வமும் கோயிலும் இருக்கும். இதுவே குலதெய்வம் என்றும் குலதெய்வக் கோயில் என்றும் குறிப்பிடப்படும். ‘குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு’, ‘குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்காதே’ என்ற பழமொழிகள் குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும். பூப்புச் சடங்கு, திருமணம், காதணி விழா அழைப்பிதழ்களில் குலதெய்வத்தின் பெயர் தவறாது இடம் பெறுவதை நீங்கள் காணலாம்.
இனத்தெய்வம்
பல குலங்கள் சேர்ந்தது ஓர் இனம், ஒரு சாதி (caste) என்று கூறப்படும். ஒரு குறிப்பிட்ட சாதிக்கென்று உள்ள தெய்வங்கள் இனத்தெய்வங்கள், இனச்சார்புத் தெய்வங்கள், சாதி்த் தெய்வங்கள் என்ற பெயர்களில் வழங்கப் படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இனத்தாரின் தனித்துவத்தைக் காட்டும் வகையில் இத்தெய்வங்களின் வழிபாடுகள் சிறப்பாக அமையும். மிகுதியும் பெண் தெய்வங்களே இனத்தெய்வங்களாக இருக்கும். ஒரே மரபு வழிப்பட்ட குலத்தாரை ஒன்றிணைக்கும் சக்தியாக இனத்தெய்வங்கள் விளங்குகின்றன.
ஊர்த்தெய்வம்
வீட்டைக் காப்பது வீட்டுத் தெய்வம், குலத்தைக் காப்பது குல தெய்வம், இனத்தாரைக் காப்பது இனத்தெய்வம் என்றாலும் ஓர் ஊரில் வாழும் மக்கள் அனைவரையும் காப்பது ஊர்த்தெய்வமே ஆகும். ஊர்ச் சாமி, ஊர்த் தேவதை, கிராம தேவதை, ஊர்க்காவல் தெய்வம் என்ற பெயர்களில் இவை குறிப்பிடப்படுகின்றன. ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து ஊர்த்தெய்வங்களுக்கு மிக விமரிசையாகப் பெரிய கும்பிடு நடத்துவர்.
தமிழகக் கிராமம் ஒன்றை நீங்கள் வலம் வந்தால் மேற்கூறிய தெய்வங்களை அடையாளம் காணலாம்.
வெகுசனத் தெய்வங்கள்
சாதி, மதம், மொழி என்ற வேறுபாடில்லாமல் அனைவரும் சென்று வழிபடும் வகையில் அமைந்த சிறுதெய்வங்களே இங்கு வெகுசனத் தெய்வங்கள் என்ற பெயரில் விளக்கப்படுகின்றன. சிறுதெய்வ மரபிற்கும் பெருந்தெய்வ மரபிற்கும் இடைப்பட்ட ஒரு கலப்பு வழிபாட்டு மரபாக இவை வளர்ந்தும் வளர்த்தெடுக்கப் பட்டும் வருகின்றன.
சிறுதெய்வங்கள் பின்வரும் செயல்பாடுகளின் வழி வெகுசனத் தெய்வ நிலைக்கு மாற்றப்படுகின்றன.
சிறுதெய்வமாக இருந்து வளர்ந்ததாக இருந்தாலும், ஆதி அந்தம் இல்லாததாகவும் அவதாரக் கடவுளாகவும் பெருந்தெய்வங்களுக்கு உறவுடையதாகவும் மாற்றப்படும்.
பிரபலமான ஆற்றல் கொண்டவையாக, நோய்கள் துன்பங்கள் ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணம் கொடுப்பவையாக நம்பப்படும், பரப்பப்படும். பழிவாங்கும் உணர்வு, ஆவேசம், உக்கிரம் போன்றவை குறைக்கப்பட்டுச் சாந்தம், அமைதி போன்ற பெருந்தெய்வக் குணங்கள் இத்தெய்வங்களுக்குக் கற்பிக்கப்படும்.
கோயிலின் வருமானத்தைக் கொண்டு ஆகம விதிகளின்படி கோயிலும் தெய்வ உருவமும் மாற்றி அமைக்கப்படும். சைவப் படையல் தெய்வத்தின் முன்பாகவும் அசைவப் படையல் கோயிலுக்கு வெளிப்புறமும் படைக்கப்படும். திருவிழாக்கள் ஏழு நாட்கள் அல்லது பத்து நாட்கள் வரை நடைபெறும்.
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி, சமயபுரம் மாரியம்மன், கோட்டை மாரியம்மன், வீரபாண்டி மாரியம்மன், இராஜ காளியம்மன், வெக்காளியம்மன், அய்யனார், சனீஸ்வரன் போன்ற தெய்வங்கள் வெகுசனத் தெய்வங்களாக இன்று வழிபடப்பட்டு வருகின்றன.
இத்தெய்வங்கள் எல்லாச் சாதி, மத, மொழி மக்களுக்கும் பொதுவானவை என்று கருதப்படுகின்றன.
2) ஆற்றில் மிதந்து வந்த பெட்டிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுத் தோற்றம் பெற்றவை.
3) மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் புலம் பெயர்ந்த நிலையில் பூர்வீகத் தெய்வக் கோயிலில் இருந்து பிடிமண்ணாக எடுத்து வரப்பட்டுத் தோற்றம் பெற்றவை.
4) வேறு திசைகளிலிருந்து வந்து ஒருகுறிப்பிட்ட ஊர்மக்களை, வட்டார மக்களைப் பாதுகாத்ததன் வாயிலாகத் தோற்றம் பெற்றவை.
என்பனவாகும். இவ்வாறு தோற்றம் பெற்றவை ஆண் தெய்வங்களாகவோ பெண் தெய்வங்களாகவோ இருக்கும். வழிபடுவோரின் பொருளாதார நிலைக்கேற்பத் தெய்வமும் கோயிலும் சிறப்புப் பெறும். ஒவ்வொரு சிறுதெய்வத்திற்கும் ஏதேனுமொரு தோற்றக்கதை வாய்மொழி மரபில் கதையாகவோ, பாடலாகவோ வழங்கிவரும்.
சிறுதெய்வங்களுக்குக் கோயில் எழுப்பி வழிபடும் வழக்கம் பிற்காலத்தில் தோன்றியதே ஆகும். பெரும்பாலும் திறந்த வெளியில் மரத்தின் கீழேயே தெய்வமாகக் கருதி வழிபடத் தக்க கல், சூலாயுதம், வேல், அரிவாள், விளக்கு மாடம் போன்றவை இருக்கும். வேறு சில இடங்களில் பீடம் அமைக்கப்பட்டு மேற்கூறிய வழிபாட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். இதற்கு அடுத்த நிலையில் சிலைகள் (தெய்வச் சிலைகள், குதிரை, நாய்) உருவாக்கப்பட்டு அவை திறந்த வெளியிலோ கோயிலினுள்ளோ வைக்கப்பட்டிருக்கும். இக்கோயில்கள் கூடக் கூரை வேயப்பட்டதாக, சதுர வடிவிலோ வட்ட வடிவிலோ அமைந்திருக்கும். வட்ட வடிவமே தொன்மையான கோயில் அமைப்பாகும். வழிபடுவோரின் பொருளாதார நிலைக்கேற்பக் கோயில் அமைப்பும் தெய்வ உருவங்களும் மாறிக் கொண்டே இருக்கும். பெண் தெய்வக் கோயில்களில் பச்சை, மஞ்சள் வண்ணங்களும் ஆண் தெய்வக் கோயில்களில் சிவப்பு, வெள்ளை வண்ணங்களும் மிகுதியாகப் பயன்படுத்தப்படும்.
உருவ அமைப்பு
சிறுதெய்வங்கள் பலவற்றிற்கும் வழிபாட்டின் போது மட்டுமே புதிதாக உருவ வடிவங்கள் செய்யப்படுகின்றன. வழிபாடு முடிந்த நிலையில் அவற்றைச் சிதைத்துவிடும் வழக்கம் பல சிறுதெய்வக் கோயில்களில் காணப்படுகிறது. அம்மன் கோயில்களில் ‘சக்திக் கரகமே’ தெய்வ உருவமாகக் கருதி வழிபடப் படுகிறது. சிறுதெய்வங்களின் பெயரை மட்டுமே நினைவில் கொள்ள முடியுமே தவிர, அந்தத் தெய்வங்களுக்கான உருவங்களைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. அதையும் தாண்டி, சிறுதெய்வங்களுக்குச் சிலையெடுக்கப் பட்டிருந்தால் அவை பிரமாண்டமான உருவங்களைக் கொண்டிருக்கும். திறந்த வெளியில் குதிரையும் குதிரையின் மீது அமர்ந்திருக்கும் தெய்வமும் தனித்து, நின்றோ, அமர்ந்தோ இருக்கும்.
பெரிய உருவம், பிதுங்கிய நிலையில் உள்ள பெரிய கண்கள், கையில் சூலாயுதம், வேல், சாட்டை, கதாயுதம், அரிவாள், சிறியதும் பெரியதுமான பரிவாரத் தெய்வங்கள், வேட்டை நாய்கள் என்று பார்ப்போரைப் பயத்தில் ஆழ்த்துவனவாக அச்சம் ஊட்டுவனவாகக் காணப்படும். இரவு நேரங்களில் எளிதாகக் கோயிலின் பக்கம் சென்றுவிட முடியாது. ஆண் தெய்வங்கள் மட்டுமின்றிப் பெண் தெய்வங்களுக்கும் இத்தகைய பூதாகார வடிவம் ஏற்றுக் கொள்ளப் படுவதுண்டு. பாடத்தில் வரும் படங்களைப் பார்த்தால் இக்கூற்றின் உண்மை உங்களுக்குப் புரியும்.
சிறுதெய்வம் குறித்த கதைகள் உடுக்கைப் பாட்டு, வில்லுப் பாட்டு, கணியான் கூத்து போன்ற நாட்டுப்புறக் கலைகளின் வழிப் பாடலாக எடுத்துரைக்கப் படுகின்றன.
வெள்ளைக் குதிரையில அய்யனாரே
வேகமாய் வந்தருளும் அய்யனாரே
கோட்டைக் கருப்பசாமி நீங்க
குடியிருந்து காக்க வேணும்
மந்தையில மாரியாயி மலைமேல மாயவரே
மழைய எறக்கிவிடு மானுடங்க மனங்குளிர
மழைக்கு வரங்கேட்டு – நாங்க
மருகுகிறோம் சாமி
எலந்தை முள்ளால கோட்டைக்காரி எங்களை
ஏறிட்டுப் பாரம்மா சக்கதேவி
காட்டைக் காத்தது காளியாத்தா – கம்மாய்க்
கரையக் காத்தது அய்யனாரு
என்றவாறு அமையும் சிறுதெய்வங்களைப் பற்றிய பாடல்கள் வழிபாட்டின் போது பாடப்படும்.
பழமொழிகள்
யாரு கடன் தீர்ந்தாலும் மாரி கடன் தீராது
நம்புனவங்களுக்கு மகாராசா, நம்பாதவங்களுக்கு எமராசா.
குல தெய்வத்தை வழிபட்டால் கோடி நன்மை உண்டு.
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
என்பது போன்ற பழமொழிகள் சிறுதெய்வங்கள் குறித்துக் கூறப்படுவதுண்டு.
இவ்வழக்காறுகள் சிறுதெய்வ மரபு தலைமுறை கடந்து வருவதற்குத் துணை செய்கின்றன.
இனக்குழுச் சமுதாயத்தின் தொடக்கக் காலந்தொட்டுச் செழுமையின் அடையாளமாகவும் வலிமையின் குறியீடாகவும் பெண் கருதப்பட்டதால் பெண் வணங்குதற்கும் வழிபாட்டிற்கும் உரியவளானாள். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பெண் தெய்வப் பெயர்களும் பெண் தெய்வ வழிபாடுகள் பற்றிய குறிப்புகளும் நிறைந்து காணப்படுகின்றன.
பெண் தெய்வங்கள்
தாய்த் தெய்வங்கள் கன்னித் தெய்வங்கள்
மனித உயிர்கள் அனைத்தையும் பெற்றெடுத்தவள் என்ற அடிப்படையில் தாயாகவும், என்றும் மாறாத, அழியாத கன்னித் தன்மையுடையவள் என்ற அடிப்படையில் கன்னியாகவும் பெண் தெய்வங்களை வழிபடும் மரபு காணப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட இம்மரபு இருந்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
நாட்டுப்புறச் சிறுதெய்வங்களாக மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், சீலைக்காரியம்மன், திரௌபதையம்மன், நாச்சியம்மன், பேச்சியம்மன், கண்டியம்மன், வீருசின்னம்மாள், உச்சிமாகாளி, மந்தையம்மன், சோலையம்மன், ராக்காச்சி, எல்லையம்மன், அங்காளம்மன், பேச்சி, இசக்கி, பேராச்சி, ஜக்கம்மா போன்ற பெண் தெய்வங்கள் வணங்கப்பட்டு வருகின்றன. நன்மை அளிக்கும் தெய்வங்கள், தீமை அளிக்கும் தெய்வங்கள் என்று கூட இவற்றை வகைப்படுத்துவதுண்டு. சக்தியின் அவதாரமாக, வடிவமாகப் பெண் தெய்வங்கள் கருதப்பட்டு வணங்கப் படுகின்றன. பெண் தெய்வங்களில் பரவலாக வழிபடப் பட்டுவரும் மாரியம்மனின் இயல்புகளைப் பற்றிப் பார்ப்போம்.
மாரியம்மன்
தமிழகமெங்கும் பரவலாக மாரியம்மன் வழிபாடு காணப்படுகிறது. என்றாலும் தென் மாவட்டங்களில் இவ்வழிபாடு மிகுதி. கோட்டை மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், வீரபாண்டி மாரியம்மன் என்ற பெயர்களில் மாரியம்மன் வழிபாடு நிகழ்த்தப்படுகிறது.
மாரி – மழை. மாரியம்மன் வெம்மையைப் போக்கிக் குளிர்ச்சியைத் தருபவள், மழையாகப் பொழிந்து மண்ணில் உயிர்களைக் காப்பவள் என்ற நம்பிக்கையில் மழைத் தெய்வமாக வழிபடப்படுகிறாள். மாரியம்மன் வழிபாட்டுச் சடங்கின் போது சக்திக் கரகம் நீரால் நிரப்பப் படுவதும், அது அம்மனாக வழிபடப் படுவதும், வழிபாடு நிறைவடையும் நிலையில் கரகத்திலுள்ள நீர் நீர்நிலைகளில் விடப் படுவதுமாகிய செயல்கள் மாரியம்மன் மழைத் தெய்வமாக வணங்கப் படுவதற்குச் சான்றாக அமைகின்றன.
தீச்சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், ஆயிரங்கண் பானை எடுத்தல், சேத்தாண்டி வேடமிடுதல், முளைப்பாரி எடுத்தல் போன்றவை மாரியம்மனுக்காக மேற்கொள்ளப்படும் சடங்குகளாகவும் நேர்த்திக் கடன்களாகவும் விளங்குகின்றன.
காளியம்மன்
தமிழகத்தில் மாரியம்மனுக்கு அடுத்த நிலையில் காளியம்மன் பரவலாக வழிபடப்படுகிறது. காளி என்று வேதங்களில் குறிப்பிடப்படும் இத்தெய்வம் கோப ஆவேசம் கொண்ட தெய்வமாகக் கருதி வணங்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பாலை நிலத்திற்குரிய தெய்வமாகச் சுட்டப்படும் கொற்றவையே காளி என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழகக் கிராமங்களில் காளியம்மன் கோயில் தவறாது இருக்கும். பலியிடலும் அங்கமளித்தலும் (உடல் உறுப்புகளாக வடிவமைக்கப் பட்டுள்ள தகடுகளைக் காணிக்கையாகச் செலுத்துதல்) காளி வேடமிட்டு ஆடுதலும் காளியம்மன் வழிபாட்டில் குறிப்பிடத் தக்கவையாகும்.
ஏழு கன்னிமார்
கன்னித் தெய்வங்கள் ஏழு என்று குறிப்பிடும் வழக்கம் காணப்படுகிறது. ஏழு கன்னிமார், சப்த கன்னியர், ஏழு கன்னித் தெய்வங்கள் என்று இதனைக் கூறுவதுண்டு. ஏழு கன்னித் தேவதைகள் வானத்திலிருந்து இறங்கி வந்து, நீராடிக் களிப்பது, துன்பப் படுவோர்க்கு உதவுவது போன்ற கதைகள் பரவலாக உள்ளன. வனப் பகுதிகளிலும் மலையை ஒட்டிய பகுதிகளிலும் திறந்த வெளியில் கன்னித் தெய்வக் கோயில்கள் இருக்கின்றன. இவற்றை வன தேவதைகளாகக் கொண்டு வனத்தில் வழிபடும் வழக்கமும் காணப்படுகிறது. ஒரே கல்லில் ஏழு பெண் உருவங்கள் வடிவமைக்கப் பட்டு வழிபடப் படுகிறது. இத்தெய்வங்களுக்கு என்று தனித்த வழிபாட்டு முறைகள் இல்லை. பிற தெய்வங்களுடன் இணைத்தே வழிபடப் படுகின்றன.
ஆண்தெய்வங்கள்
முதன்மைத் தெய்வங்கள் துணைமைத் தெய்வங்கள்
அய்யனார் முத்தையா சாமி
சுடலை மாடன் அக்னி வீரன்
அண்ணன்மார் சாமி இலாட சன்னாசி
மதுரைவீரன் இருளப்ப சாமி
கருப்பசாமி சடையாண்டி
முனீஸ்வரன் ஒண்டி வீரன்
குருநாத சாமி மாயாண்டி
மாட சாமி
முதன்மைத் தெய்வங்கள்
தனித்த கோயில்களையும் வழிபாட்டு முறைகளையும் தன்னகத்தே கொண்ட தெய்வங்களே இங்கு முதன்மைத் தெய்வங்கள் என்ற நிலையில் விளக்கப்படுகின்றன. இவை ஊர்த் தெய்வங்களாகவோ, காவல் தெய்வங்களாகவோ வழிபடப்படும்.
தமிழகத்தில் பரவலாக அய்யனார் வழிபாடும், தென் தமிழகப் பகுதியில் சுடலை மாடன் வழிபாடும், கொங்கு மண்டலப் பகுதியில் அண்ணன்மார் சாமி வழிபாடும் சிறப்பாகக் காணப்படுகின்றன. அந்தந்தப் பகுதி மக்களின் வழிபாட்டு முறைகளுக்கு ஏற்ப ஆண்டு தோறும் விழா எடுக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் என்று தனித்த வழிபாட்டு முறைகள் உள்ளன. மேற்கூறிய தெய்வங்களுக்கு அடுத்த நிலையில் மதுரை வீரன், கருப்ப சாமி, முனீஸ்வரன் போன்ற தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. சில கிராமங்களில் இத்தெய்வங்களுக்குச் சிறப்பான முறையில் வழிபாடு நிகழ்த்தப் படுவதுண்டு. முதன்மைத் தெய்வங்களோடு இணைத்தும் இவை வழிபடப்படுவதுண்டு.
அய்யனார்
அய்யனார் தெய்வம் கிராமத்தைக் காக்கும் ஊர்ப் பொதுத் தெய்வமாக, காவல் தெய்வமாகப் பல்வேறு ஊர்களில் வழிபடப் படுகிறது. கூடமுடைய அய்யனார், செங்குளத்து அய்யனார், கொக்குளத்து அய்யனார் என்ற பெயர்களில் வணங்கப் படுகிறது.
அய்யனார் கோயில்கள் திறந்த வெளியில் பெரும்பாலும் கண்மாய்க் கரைகளில் நீர்நிலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வயல் வெளிகளில் ஆலமர நிழலில் கிழக்குப் பார்த்த வாசலுடன் அமைந்திருக்கும். வெள்ளைக் குதிரை, வேட்டை நாய், வீரர்கள் புடைசூழ அய்யனார் வீற்றிருப்பார். பிரமாண்டமான அளவில் அய்யனார் சிலை இருப்பதும் அதனைச் சுற்றித் துப்பாக்கி ஏந்திய போலீஸ், சிப்பாய்கள் நிற்பதும், நாய், பூதங்கள் போன்ற பல உருவங்கள் இருப்பதும் பார்ப்போரை மிரளச் செய்யும்.
அய்யனார் பெரிய கும்பிடின் போது பக்தர்கள் மண்குதிரைகளைக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் காணப்படுகிறது. இது குதிரையெடுப்பு, புரவியெடுப்பு, புரவிக்காணிக்கை என்று குறிப்பிடப் படுகிறது. காணிக்கைக் குதிரைகள் ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட மண்ணால் உருவாக்கப்பட்டு இருத்தல் வேண்டும், கும்பிடு முடிந்ததும் அக்குதிரைகள் உடைக்கப்பட வேண்டும் என்பது மரபாக உள்ளது. ஆண்டு தோறும் பல நூறு குதிரைகள் காணிக்கையாகச் செலுத்தப் படுகின்றன. முடிவில் உடைக்கப் படுகின்றன. பலி கொடுத்தல் என்ற சடங்கிற்காக மண் குதிரைகளை உடைக்கும் வழக்கம் காணப்படுவதாகக் கூறலாம். அய்யனாருக்குச் செய்யப்படும் அத்தனைச் சிறப்புகளும் அவரது வாகனமான குதிரைக்கும் செய்யப்படுகிறது. பல இடங்களில் குதிரையையே அய்யனாராக வழிபடும் நிலையும் காணப்படுகிறது.
தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் கிராமத்தார்க்கும் தீங்கு வரும்போது அய்யனார் இக்குதிரைகளில் ஏறி, விரைந்துவந்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.
சுடலை மாடன்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சுடலை மாடன் வழிபாடு சிறப்புப் பெற்று விளங்குகிறது. சுடலை என்பது சுடுகாட்டையும் மாடன் என்பது மாட்டுத் தலையை உடையவன் அல்லது காளையை வாகனமாக உடையவன் என்றும் பொருள்படும். காவல் தெய்வமாக வழிபடப்படும் சுடலை மாடன் கோயில்கள் சுடுகாட்டிற்கு அருகிலேயே அமைந்திருக்கும். சுடலை மாடனுக்கான கொடைவிழா மூன்று நாட்கள் வெகு சிறப்பாக நடத்தப்படும். சுடலை மாடன் வழிபாடு இரவிலேயே நிகழும். ஆடு, சேவல், பன்றி ஆகியவை பலி கொடுக்கப்படும். பூசாரி குருதி கலந்த உணவைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று குருதிச் சோற்றை (ஆவிகளுக்கு) வானை நோக்கிச் சூறையிடும் சடங்கு தவறாது இடம்பெறும்.
சுடலை மாடனுக்கென்று தனித்த உருவ அமைப்புக் கிடையாது. மண்பீடங்கள் மட்டுமே இருக்கும். கொடைவிழாவின் போது மட்டும் பீடத்தின் மீது உருவம் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். வழிபாடு முடிந்தவுடன் உருவம் அகற்றப் பட்டுவிடும். வில்லுப் பாட்டும் கணியான் கூத்தும் சுடலை மாடனோடு நெருங்கிய தொடர்புடைய வழிபாட்டுக் கலைகளாகும்.
அண்ணன்மார் சாமி
தமிழகத்தில் உள்ள கொங்கு மண்டலப் பகுதியில் அண்ணன்மார் சாமி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இப்பகுதியில் உள்ள ஊர்களில் தவறாமல் அண்ணன்மார் சாமி கோயில் இருக்கும். பொன்னர், சங்கர் என்ற இரு சகோதரர்களே அண்ணன்மார் என்ற பெயரில் தெய்வமாக வழிபடப்படுகின்றன. கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களின் குலதெய்வமாக அண்ணன்மார் சாமி விளங்குகிறது. பெரிய குதிரைகளின் மேல் அமர்ந்தவாறு பொன்னர், சங்கர் சிலைகள் அமைந்திருக்கும். அண்ணன்மார் சாமி கதைப் பாடல் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வழிபாட்டின் போது இக்கதை உடுக்கைப் பாட்டாகப் பாடப்படும். அண்ணன்மார் சாமி வழிபாட்டைப் பெரிய நோம்பி (பெரிய கும்பிடு) என்று கொங்கு நாட்டார் குறிப்பிடுவதுண்டு.
துணைமைத் தெய்வங்கள்
தலைமைத் தெய்வங்களுக்குத் துணையாகவோ, தனித்த நிலையில் சிறிய அளவிலோ, வழிபாட்டிற்கு உட்படுத்தப்படும் தெய்வங்களே இங்குத் துணைமைத் தெய்வங்களாகக் கொள்ளப்படுகின்றன. இவை பரிவாரத் தெய்வங்கள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. இந்தப் பரிவாரத் தெய்வங்களுக்கு என்று தனிப்பட்ட வழிபாடு கிடையாது. ஆனால், கோயிலுக்குள் நுழைவோர் முதன்மைத் தெய்வங்களை மட்டுமல்லாது பரிவாரத் தெய்வங்களையும் வணங்கிவிட்டே வெளியே வரும் வழக்கம் கொண்டுள்ளனர். இவை பெரும்பாலும் குல தெய்வங்களாகவோ இனத் தெய்வங்களாகவோ அமையும். பெருந்தெய்வ வழிபாட்டிலும் இப்பரிவாரத் தெய்வங்களைக் காண முடியும். இவை ஆண் தெய்வங்களாகவோ பெண் தெய்வங்களாகவோ அமையும். முதன்மைத் தெய்வங்கள் ஊர்க்காவலுக்கும் வேட்டைக்கும் செல்லும் போது பரிவாரத் தெய்வங்கள் உடன் செல்வதாகக் கூறப்படுகின்றது.
மக்கள் தங்கள் குல தெய்வங்களைப் பாதுகாக்கும் பொருட்டு முதன்மைக் கோயிலில் கொண்டுபோய்க் குல தெய்வங்களைப் பிரதி்ஷ்டை செய்து வழிபடும் வழக்கமும் காணப்படுகிறது. பெரிய கும்பிடின்போது தங்கள் குல தெய்வத்திற்குப் பலியும் படையலும் செய்து வழிபடுவதுண்டு. இத்தகைய தெய்வங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.
சிறுதெய்வ வழிபாடுகளில் தெய்வங்களை அலங்கரித்தல், பூசை செய்தல், படையல் போடுதல், நேர்த்திக் கடன் செலுத்துதல், ஆடியும் பாடியும் துதித்தல் போன்றவை வழிபாட்டு முறைகளாக அமைகின்றன.
சிறு தெய்வங்களுக்கான வழிபாடு ஆண்டிற்கு ஒரு முறையோ, இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையோ, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையோ நடைபெறும். இது பெரிய கும்பிடு, சாமி கும்பிடு, ஊர்த் திருவிழா, கொடை விழா, பெரிய நோம்பி என்று பல பெயர்களில் குறிப்பிடப்படும்.
பெரிய கும்பிடு வழிபாட்டு நடைமுறைகளைக் கீழ்க்காணுமாறு பகுத்துரைக்கலாம்.
பெரிய கும்பிடு வழிபாட்டு முறைகள்
ஆயத்த நிலைச் வழிபாட்டு நிலைச் நிறைவு நிலைச்
செயல்பாடுகள் செயல்பாடுகள் * செயல்பாடுகள்
சாமி உத் தரவு கேட்டல் கரகமெடுத்தல் பள்ளயம் பிரித்தல்
சாமி சாட்டுதல் சிலையெடுத்தல் சாமிப் பெட்டியைக் கோயிலில் வைத்தல்
காப்புக் கட்டுதல் சாமிப் பெட்டி தூக்குதல்
கம்பம் நடுதல் சக்திக்கெடாய் வெட்டுதல் வரவுசெலவு பார்த்தல்
முளைப்பாரி போடுதல் பொங்கல் வைத்தல்
வரிவசூல் செய்தல் நேர்த்திக் கடன் செலுத்துதல்
வேப்பிலைத் தோரணம் கட்டுதல் முளைப்பாரி எடுத்தல்
மஞ்சள் நீராடுதல்
சிலை அழிப்பு
கலை நிகழ்ச்சிகள்
(பள்ளயம் பிரித்தல் = கோயில் வழிபாட்டிற்கு வரி கொடுத்தோருக்குச் செய்யும் மரியாதை)
பெரிய கும்பிடிற்காகச் செய்யப்படும் தொடக்க நிலைச் செயல்பாடுகள்.
பெரிய கும்பிடில் வழிபாட்டு நிலையில் நடைபெறும் சடங்குச் செயல்பாடுகள்.
* பெரிய கும்பிடில் சடங்கு முடிந்த நிலையில் நிறைவாக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள்.
இந்தப் படிநிலைகள் சிறுதெய்வ வழிபாடுகளில் தவறாது அமையும்.
கரகத்தில் சாமியை எழச்செய்து கோயிலில் கொண்டுவந்து வைக்கும் சடங்கே ‘சக்திக் கரகம் எடுத்தல்’ எனப்படும். இதன் பின்னரே வழிபாடுகளும் சடங்குகளும் நடைபெறும். சிறுதெய்வங்களுக்குப் பெரும்பாலும் நிலையான தெய்வச் சிலைகளோ வேறு வகையான படிமங்களோ அமைக்கப் படுவதில்லை. கோயில் என்ற பெயரில் மேடை மட்டுமே இருக்கும். பெரிய கும்பிடு நடைபெறும் காலத்தில் தெய்வத்திற்குச் சக்திக் கரகம் எடுக்கப்படும். பூசைகள் நிகழ்த்துவதன் மூலம் அக்கரகத்தில் தெய்வம் எழுந்தருளும். அதுவே தெய்வமாகவும் வணங்கப்படும். மக்கள் அளிக்கும் படையலையும் சடங்குகளையும் அத்தெய்வம் ஏற்றுக் கொள்ளும்.
சாமிப்பெட்டி தூக்குதல்
தெய்வத்திற்குரிய ஆபரணங்கள், உடைகள், பூசைமணி, தாம்பூலம் போன்ற பொருட்கள் ஒரு பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்படும். இதுவே, சாமிப்பெட்டி எனப்படும். இது பிரம்புப் பெட்டியாகவோ அல்லது மரப் பெட்டியாகவோ இருக்கும். இப்பெட்டி தெய்வமாகவே மக்களால் வணங்கப்படும். பெரிய கும்பிடின் போது பெட்டிக்கும் பூசைகள் செய்யப்படும். பெட்டியில் உள்ள பொருள்களைக் கொண்டு சாமி அலங்கரிக்கப்படும். பெட்டி தூக்கும் உரிமையும் பாதுகாக்கும் உரிமையும் மரபு வழியாக மக்களுக்கு வழங்கப்படும்.
பலியிடுதல்
சிறுதெய்வ வழிபாட்டில் பலியிடலும் மாமிசப் படையலும் முக்கிய இடம் வகிக்கின்றன. பலியிடல் என்பது தொன்று தொட்டு இருந்துவரும் ஒரு சடங்கு முறையாகும். ஓர் உயிரைக் கொடுப்பதன் மூலம் இன்னொரு உயிர் காப்பாற்றப் படுகிறது; பாதுகாக்கப்படுகிறது; வளம் பெறுகிறது என்ற நம்பிக்கையே பலியிடலுக்கு அடிப்படையாக அமைகிறது. பலியிடலின் வாயிலாக இயற்கையையும் தெய்வங்களையும் திருப்திப் படுத்தவும் வசப்படுத்தவும் முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். தெய்வங்களுக்கு ஆட்டுக் கிடாய் பலியிடப் பட்டதையும் குருதி கலந்த உணவு படைக்கப் பட்டதையும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
சிறு தெய்வங்களுக்கு ஆடு, கோழி, பன்றி, எருமை போன்றவை பலியிடப் படுகின்றன. இப்பலிப் பொருட்களெல்லாம் ஆண் இனத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதற்கு என்ன காரணமென்று உங்களால் உணர முடிகிறதா? ‘பெண்ணினம் உற்பத்திக்கும் பெருக்கத்திற்கும் அவசியம்’ என்பதால் பலியிடப்படுவது இல்லை என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.
எது நடந்தாலும் அது தெய்வங்களின் மூலமே நடைபெறுகிறது’ என்று நம்பும் வழக்கம் கிராம மக்களிடம் மிகுதியாக இருந்து வருகிறது. இதனால் பலவிதமான வேண்டுதலை இறைவன் முன் வைக்கி்ன்றனர். அவ்வேண்டுதல் நிறைவேறினால் அதற்குப் பிரதிபலனாக நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
நம்பிக்கைகளுக்கும், நேர்த்திக் கடன்களுக்கும் மிகுந்த தொடர்புண்டு. தெய்வங்களின் மீது கொண்டுள்ள நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே நேர்த்திக் கடன்களும் அளிக்கப்படுகின்றன.
1) உடலை வருத்தும் நேர்த்திக் கடன்கள்
2) பொருளாக அளி்க்கப்படும் நேர்த்திக் கடன்கள்
3) உயிர்ப்பலியாக அளிக்கப்படும் நேர்த்திக் கடன்கள்
என்றவாறு நேர்த்திக் கடன்களைப் பலவாறு பகுத்துக் காணமுடியும்.
நேர்த்திக் கடன்
ஆண் தெய்வம் பெண் தெய்வம்
கால்நடை அளித்தல் பலியிடுதல்
பலியிடுதல் மாவிளக்கு எடுத்தல்
குருதி கொடுத்தல் ஆயிரங்கண் பானை எடுத்தல்
காவடி எடுத்தல் மடிப்பிச்சை ஏந்துதல்
பால்குடம் எடுத்தல் அங்கமளித்தல்
அலகு குத்துதல் தீச்சட்டி எடுத்தல்
அரிவாளின் மேல் நடத்தல் சேத்தாண்டி வேடமிடுதல்
ஆணிச் செருப்பு அணிதல் முளைப்பாரி எடுத்தல்
மார்பில் கத்தி போடுதல் பூக்குழி இறங்குதல்
உருள்தண்டம் தொட்டில் கட்டுதல்
ஆண் தெய்வங்களுக்கான நேர்த்திக் கடன்கள் வன்மைத் தன்மை உடையதாகவும், பெண் தெய்வத்திற்கான நேர்த்திக் கடன்கள், மென்மைத் தன்மை உடையதாகவும் அமைந்திருப்பதை இப்பட்டியலின் வழி உணரலாம்.
கொண்டாட்டமும் மகிழ்ச்சியும், பொழுது போக்கும் நல்லுறவுமே விழாக்களின் நோக்கமாகும்.
தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் விளக்குவனவற்றுள் திருவிழாக்கள் சிறப்பிடம் பெறுகின்றன. பண்டைக் காலத்திலிருந்தே விழாக்கள் நிகழ்ந்ததை மடியா விழாவின் யாணர் நன்னாடு என்று புறநானூறு கூறுகின்றது. மடியா என்பது ஆண்டு தோறும் என்று பொருள்படும்.
தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, மாதங்களே விழா எடுக்கச் சிறந்த மாதங்களாகக் கருதிப் பல்வேறு விழாக்கள் கொண்டாடப் படுகின்றன.
சிறுதெய்வ விழாக்களோடு அன்னக்கொடி விழா, பொங்கல் விழா, சித்திரைத் திருவிழா, தேர்த் திருவிழா போன்ற சிறப்பு விழாக்களும் நாட்டுப்புற மக்களால் கொண்டாடப் படுவதுண்டு.
அன்ன தானத்தை அன்றாட வாழ்க்கைச் செயல்பாடாகக் கொண்டுள்ள பாமர மக்கள் மனதில் அன்னக் கொடிகட்டிப் பரதேசிகளுக்கும் பசித்து வந்தவர்களுக்கும் அன்னமிட்டு மகிழ்ந்த சிறுத்தொண்டர் (பெரியபுராணம்) நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றே கூறவேண்டும்.
சிறுத்தொண்டரின் அன்னதான விரதத்தைச் சிறப்பிக்கும் வகையில் அவர் பிறந்த நாளாகக் கருதப்படும் சித்திரை மாதம் பரணி நட்சத்திர நாளன்று அன்னக்கொடி ஏற்றுதலும் அமுது படையல் விழாவும், திருச்சி, தஞ்சாவூர், தருமபுரி, சேலம், வடஆர்க்காடு, தென்ஆர்க்காடு மாவட்டக் கிராமங்களில் வெகுசிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த அன்னக்கொடி விழா சோழர் காலந்தொட்டு நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் விழாவிற்குத் தேவையான பொருளுதவி அளித்து விழாவில் கலந்து கொள்கின்றனர்.
அன்னதான விழாவில் ‘பிள்ளைக்கறி அமுது’ என்ற பிரசாதம் வழங்கப்படுகிறது. இதை வாங்கி உண்டால் குழந்தைப் பேறு கிட்டும் என்று நம்பப்படுகிறது. இது ஒரு சமய நிகழ்வாக அல்லாமல் சமுதாய நிகழ்வாக, பசிப்பிணி போக்கும் பெருவிழாவாக நிகழ்த்தப்படுகிறது. இவ்விழா தமிழர்களின் மனித நேயப் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தும் திருவிழாவாக விளங்குகிறது.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப வீடுகளைப் புதுப்பொலிவு பெறச் செய்வது போகிப் பண்டிகையின் நோக்கமாகும். சிலப்பதிகாரம் குறிப்பிடும் இந்திர விழாவே போகிப் பண்டிகை என்றும் கூறப்படுவதுண்டு. வீட்டு முற்றத்தில் கோலமிட்டுப் பொங்கல் பானையில் புத்தரிசி போட்டுப் பொங்கல் வைத்துப் ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரமிட்டு, மஞ்சளும் செங்கரும்பும் வைத்துப் படையல் இட்டு, இயற்கையை வழிபடுவது பொங்கல் திருநாளாகும்.
தன்னோடு தோளோடு தோள்நின்று உழைத்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப் பொங்கல் அமைகிறது. எருதுகளைக் குளிப்பாட்டி, பொட்டிட்டு, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பொங்கல் ஊட்டி, வீதி உலாவரச் செய்து மகிழும் இனிய திருநாளாக இது கொண்டாடப் படுகிறது. மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் தமிழரின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றதாகும். (மாடுபிடி விழா)
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
என்று கலித்தொகை கூறுவதன் வாயிலாக இந்த வீர மரபு தொன்று தொட்டு இருந்து வருவதை அறியலாம். தமிழ்த் திரைப்படங்களில் இவ்வீர விளையாட்டை நீங்களும் கண்டு வியந்திருக்கலாம்.
பொங்கல் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெறுவது காணும் பொங்கல் ஆகும். மணமாகாத பெண்கள் நல்ல கணவன் வாய்க்கப் பெற வேண்டும் என்பதற்காகப் பொங்கல் வைத்து வழிபடுவதால் இது கன்னிப் பொங்கல் என்றும், தை நாளில் உறவினர்களை எல்லாம் ஒன்றாக வைத்துக் காண்பதால் காணும் பொங்கல் என்றும் பெயர் பெறுவதாயிற்று.
இவ்வாறு பொங்கல் திருவிழா உழைப்பின் உயர்வை, உழவின் சிறப்பை, உறவின் பெருமையை எடுத்துக் கூறி உலகனைத்தும் பரவியிருக்கின்ற தமிழர்களை ஒன்றிணைக்கும் அற்புதத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
எங்கெங்கெல்லாம் தமிழினம் பரவி இருக்கின்றதோ, அங்கெல்லாம் தமிழ் மணம் பரப்பும், தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் விழாவாகப் பொங்கல் திருநாள் கொண்டாடப் படுவது தமிழ்ப் பண்பாட்டிற்குக் கிடைத்த பெருமையாகும்.
என்ன மாணவர்களே, பொங்கல் கொண்டாட்டத்தைக் கண்டு மகிழ்ந்தீர்களா?
சித்திரைத் திருவிழா
மதுரை மாநகரில் ஆண்டு தோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது சித்திரைத் திருவிழா ஆகும். மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் வைகை ஆற்றில் இறங்குதல் என்ற இரு நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்விழா கொண்டாடப்படுகிறது. புராண அடிப்படையில் நிகழும் பெருந்தெய்வ விழாவாக இருந்தாலும் நாட்டுப்புற மக்களின் பங்கேற்பும் பங்களிப்பும் இவ்விழாவின் சிறப்பம்சமாகும். அழகர் கோயிலிலிருந்து மதுரை வரையுள்ள கிராமங்களில் பெருந்தெய்வக் கடவுளான அழகர் சிறுதெய்வமாகவே கருதி வணங்கப்படுகின்றார். சிறுதெய்வக் கோயில்களில் மேற்கொள்ளப்படும் பலியிடல், மொட்டை போடுதல், நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றவை அழகர் கோயிலிலும் மேற்கொள்ளப் படுகின்றன. சைவ, வைணவச் சமய ஒற்றுமையின் குறியீடாகச் சித்திரைத் திருவிழாக் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
தேர்த்திருவிழா
நாட்டுப்புற வழிபாட்டில் தேரோட்டம், தேர் இழுத்தல் என்பது மிகமிகக் குறைவாகும். பெரும்பாலும் பெண் தெய்வங்களையே (மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன்) தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்து வரும் வழக்கம் காணப்படுகிறது. ஆண் சிறு தெய்வங்களுக்குத் தேர்த்திருவிழாக் கொண்டாடும் வழக்கம் இல்லை. மக்கள் அனைவரும் இறையருள் பெற வேண்டும் என்பதற்காகத் தெய்வங்களைத் தேரில் அலங்கரித்து அழைத்து வரும் வழக்கம் கிராமப் புறங்களிலும் நகர்ப் புறங்களிலும் காணப்படுகிறது.
தெய்வப் பெயர்கள் மேல்நிலையாக்கம் பெறுதல்:
மாரியாயி மாரியாத்தா ஸ்ரீகௌமாரியம்மன்
காளியாயி காளியாத்தா ஸ்ரீகாளீஸ்வரி
சிறுதெய்வக் கோயில்கள் பெருந்தெய்வக் கோயில்களைப் போன்று கருவறை, கோபுரம் எழுப்பிக் கட்டப்படுதல்.
சிறுதெய்வ உருவங்கள் பெருந்தெய்வ வடிவங்களாக மாற்றப்படுதல்.
பிராமணர்கள் பூசாரிகளாக நியமிக்கப் பட்டு, சைவப் பூசைகள் நடைபெறுதல்.
ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்குரிய தெய்வம் வெகுசனத் தெய்வமாக மாற்றப்படுதல்.
போன்ற செயல்பாடுகள் சிறுதெய்வங்கள் மேல்நிலையாக்கம் பெறுவதை உணர்த்தி நிற்கின்றன.
1. சிறுதெய்வம் 2. வெகுசனத் தெய்வம் 3. பெருந்தெய்வம்
தமிழர் பண்பாட்டை, வழிபாடு மற்றும் விழாக்களின் வழி மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும் என்னும் அளவிற்கு இவை பண்பாட்டுக் கருவூலமாய்த் திகழ்கின்றன.
பாடம் - 3
நாட்டுப்புற மருத்துவம்
இயற்கை மருத்துவம் சித்த மருத்துவம் மந்திர மருத்துவம்
கை மருத்துவம் குழந்தை மருத்துவம் பொது மருத்துவம்
நாட்டுப்புற மருத்துவத்தை உன்னிப்பாகக் கவனித்தால் இயற்கைப் பொருள்களை மருந்தாக உட்கொள்வதை விட உணவாகவே உட்கொள்வதைக் காணலாம். கீரை வகைகள், தண்டுகள், கசப்புக் காய்கறிகள், பழங்கள், இஞ்சி, மிளகு, சுக்கு, வெந்தயம் போன்ற பொருட்களை இயல்பாகவே அம்மா தினசரி சமையலில் பயன்படுத்துவதை நீங்கள் கண்டிருக்கலாம். இவையெல்லாம் நோயைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்குமே பயன்படுத்தப் படுகின்றன.
கை மருத்துவம்
“பாட்டி ஏங் குழந்தைக்கு அடிக்கடி நீரா வெளிய போகுது”
“அப்பிடியா, ரெண்டு சொட்டு தேனை எடுத்துக் குழந்தையோட நாக்குல தடவிவிடு. நின்று போகும்”.
“பாட்டி…… பாட்டி ஏங் குழந்தை சாப்பிடவே மாட்டீங்குது. அடிக்கடி அழுதுக்கிட்டே இருக்குது. என்னா செய்றது பாட்டி?
“வயித்தில அஜீரணக் கோளாறு இருக்கும். வெத்தலையக் கிள்ளி வாயில போட்டு மெல்லச் சொல்லு, சரியாப் போயிடும்”.
“பாட்டி. ஏம் மகனுக்குச் சளிப் பிடிச்சுக்கிட்டு மூக்குல தண்ணியா ஒழுகுது”.
“அப்படியா, நொச்சி இலைகளைப் புடுங்கி சட்டியில் போட்டு நல்லா வேக வச்சு நீராவி பிடிக்கச் சொல்லு. சளி ஓடிப் போயிடும்”.
மேற்கூறிய உரையாடல்களை உங்கள் வீட்டிலோ அல்லது உறவினர் வீட்டிலோ நீங்கள் கேட்டிருக்கலாம். இதுதான் கை மருந்து. கை வைத்தியம், பச்சிலை வைத்தியம் என்ற பெயர்களில் நாட்டுப்புற மக்களால் வழங்கப்படுகிறது. இம்மருத்துவ முறைகள் முன்னோரிடமிருந்து மரபு வழியாகப் பயிலப்பட்டு மேற்கொள்ளப் படுபவையாகும். வீட்டிற்கு அருகில் எளிதில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு உடனடியாக இம்மருந்துகள் தயாரிக்கப்பட்டு உரிய நோய்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. கை மருத்துவத்தால் குணமாகாத நோய்களுக்கே மருத்துவரையோ, பிற மருத்துவ முறைகளையோ நாடுவர்.
குழந்தை மருத்துவம்
குழந்தைகளுக்கான நோய்களில் பெரும்பாலானவை கை மருத்துவத்திலேயே குணப்படுத்தப் படுகின்றன. குழந்தை மருத்துவத்தில் தாய்ப்பால் மிகவும் சிறப்பிற்கு உரியதாகும். குழந்தை பிறந்து ஓராண்டிற்குத் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கூடும் என்பது மருத்துவ உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். குழந்தைகளுக்கான மருந்துகளைத் தாய்ப்பால், தேனோடு கலந்து கொடுக்கும் வழக்கத்தை நாட்டுப்புறங்களில் காணலாம்.
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் குறைபாடுகள் சளி, இருமல், கக்குவான், உடற்கட்டிகள், மந்தாரம் (சீரணக் கோளாறு) போன்றவையாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சலைப் போக்குவதற்குத் தேங்காய் எண்ணெயில் சூடத்தைப்(கற்பூரம்) போட்டுக் காய்ச்சிக் காலில் தேய்ப்பது, மஞ்சளையும் வெள்ளைப் பூண்டையும் சேர்த்துத் தட்டிச் சாறெடுத்து, அதனைச் சூடு செய்து நெற்றியில் தேய்ப்பது போன்ற மருத்துவ முறைகள் கையாளப் படுகின்றன.
குழந்தை தலைகுப்புற விழுந்தாலோ, குழந்தையைத் தலைகீழாகத் தூக்கினாலோ குடல் இடம் மாறிவிடும். இதனைக் குடல் ஏற்றம் என்பர். இதனால் குழந்தைக்கு வயிற்று உளைச்சலும் பேதியும் ஏற்படும். தொடர்ந்து அழுது கொண்டும் இருக்கும். இந்நிலையில் குடல் தட்டுதல் என்ற சிகிச்சை முறை மேற்கொள்ளப்படும். அதாவது குழந்தையைக் குப்புறப் படுக்க வைத்து வயிற்றுப் பகுதியைத் தட்டி விடுவர். அவ்வாறு செய்தவுடன் குடல் சரியாகிவிடும். அழுகையும் நின்றுவிடும்.
உணவுப் பொருட்களில் சில வெப்பத்தையும் சில குளர்ச்சியையும் அதிகரிக்கும் தன்மை கொண்டவையாகும். இத்தகைய உணவுப் பொருட்களைச் சீராகச் சேர்த்துக் கொடுப்பதன் மூலமாகக் குழந்தைகளை நோய்களிலிருந்து காக்கலாம்; நலம் சேர்க்கலாம்.
விசக்கடி மருத்துவம்
இயற்கை சூழ்ந்த பகுதிகளில் தங்களின் வாழிடத்தையும் வேளாண் முறைகளையும் கொண்டவர்கள் நாட்டுப்புற மக்கள். இவர்கள் வாழும் பகுதிகளில் விசம்(நஞ்சு) கொண்ட பூச்சிகளும் ஊர்வனவும் உயிர் வாழும். இத்தகைய விசப் பூச்சிகளின் தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவற்றிற்கான மருந்துகளை நாட்டுப்புற மக்கள் அறிந்து வைத்துள்ளனர். எப்படிப்பட்ட விசத்தையும் முறிக்கும் தன்மையுள்ள மருந்துகளைத் தங்கள் கைவசம் எப்பொழுதும் வைத்திருப்பதைக் காணலாம்.
எளிதில் கிடைக்கும் இயற்கைப் பொருட்கள், குறைந்த செலவு, பூரண நிவாரணம், உடனடித் தீர்வு போன்றவை இயற்கை மருத்துவத்தின் சிறப்பு என்பதை இப்பொழுது நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் அல்லவா?
பொது மருத்துவம்
எல்லா வயதினருக்கும் உரிய கை மருத்துவ முறைகளே பொது மருத்துவம் என்ற பெயரில் இங்கு விளக்கப்படுகின்றன. நோய்கள் தோன்றுவதற்கான காரணங்கள் பலவாகும். நோய்களுக்கான காரணங்களும் அறிகுறிகளுமே அந்நோய்களுக்கான மருந்தைத் தயார் செய்வதற்கு உதவுகின்றன. பொதுவாக நோய்கள் தோன்றுவதற்குப் பின்வரும் காரணங்கள் அடிப்படையாக அமைகின்றன. அவை சீரற்ற உணவு முறை, தட்ப வெப்பநிலை மாற்றம், நீர் மாசுபாடு, அதிக உழைப்பு, தூக்கமின்மை, மிதமிஞ்சிய உடலுறவு ஆகியவையாகும்.
இவற்றின் பொருட்டு மனிதனுக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் நாட்டுப்புற மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும். இம்மருந்துகள் மேற்பூச்சு மருந்துகளாகவும் (உடல் பகுதிகளில் தடவப்படுவதின் வாயிலாக நோயைப் போக்குவன) உள் மருந்துகளாகவும் (மருந்துகளை உட்கொள்வதன் வாயிலாக நோயைப் போக்குவன) பயன்படுத்தப் படுகின்றன. சில நோய்களுக்கு மேற்பூச்சு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சில நோய்கள் உள்மருந்துகளினால் மட்டுமே குணமாகும். இம்மருந்துகள் பச்சையாகவோ, சாறு எடுத்தோ, நீர், பால், தேன் இவற்றுடன் கலந்து காய்ச்சிய நிலையிலோ நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும்.
மனித உடலில் தோன்றும் அதிகப்படியான வெப்பத்தினாலும் மிகையான குளர்ச்சியினாலுமே பெரும்பாலான நோய்கள் உண்டாகின்றன. அதிகப்படியான உடல் வெப்பத்தினைப் போக்கக் கீழ்வரும் மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. வெப்பம் தொடர்பான நோய்க்குக் குளிர்ச்சியான மருந்தும் (உடல் சூட்டைத் தவிர்க்க மோர் குடிப்பது) குளிர்ச்சி தொடர்பான நோய்களுக்குச் சூடான மருந்தும் கொடுப்பது (சளி பிடித்தால் ஆவி பிடிப்பது) இயற்கை மருத்துவத்தின் பொது முறையாகும்.
கோடை காலங்களில் கழுத்துப் பகுதியில் வீக்கம் காணப்பட்டால் அதனை அம்மைக் கட்டு(mumbs) என்று கூறுவர். வீக்கமுள்ள பகுதியில் வேப்பிலையோடு மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசினால் அம்மைக் கட்டு பூரண குணமாகிவிடும். இதேபோல் அம்மை நோய் கண்டவர்களுக்கு உடலில் வேப்பிலை தடவப்படும். அம்மைக் கொப்புளங்கள் வற்றிய நிலையில் வேப்பிலையுடன் மஞ்சள் அரைத்துப் பூச நோய் பூரண குணமாகும்.
கோடைகாலத்தில் தோன்றும் மற்றொரு நோய் அக்கி என்பதாகும். அக்கி உள்ளவர்களுக்குச் சிறிய, பெரிய கொப்புளங்கள் உடல் முழுவதும் பரவிக் காணப்படும். இதற்குச் செந்நிற மண் சாந்தினால் அக்கி உள்ள இடங்களில் படம் வரையப்படும். இவ்வாறு ஒருவாரம் செய்தால் அக்கி மறைந்துவிடும். ஏனெனில் காவி மண் நீரை உறிஞ்சி வெப்பத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. இதனால் உடலில் உள்ள அசுத்த நீர் செம்மண்ணால் நீக்கப்பட்டு நோய் குணமாகின்றது.
கண் பகுதியில் ஏற்படும் கண்கட்டி என்பதும் உடல் வெப்பத்தினால் உண்டாவதாகும். இதற்குக் கறிவேப்பிலையைப் பாலுடன் கலந்து அரைத்துக் கட்டியின் மீது தடவினாலோ, உமிழ்நீரைக் கட்டியின் மீது தடவினாலோ, கைவிரலை உள்ளங்கையில் தேய்த்து மிதமான சூட்டில் கட்டியின் மீது தொடர்ந்து வைத்தாலோ கண்கட்டி நீங்கிவிடும்.
உடலின் சூட்டைத் தணிக்க உடல் முழுவதும் எண்ணெய் வகைகளைப் பூசிக் கொள்வதும் எண்ணெய்க் குளியல் செய்வதும் களிமண்ணை உடலில் பூசிக் கொள்வதும் அருவி, நீர்நிலைகளில் அதிக நேரம் நீராடுவதும் நாட்டுப்புற மக்களிடம் காணப்படும் வழக்கமாகும்.
வயிற்றுப் போக்கு
வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் வெந்நீரில் உப்புப் போட்டுக் குடித்தால், மாதுளம் பழத்தின் தோலை அரைத்துத் தண்ணீரில் ஊற்றிக் கசாயம் செய்து குடித்தால், தேயிலை நீரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து குடித்தால் வயிற்றுப் போக்கு உடனே நின்றுவிடும்.
கபம்
மிதமிஞ்சிய சளியாலும் சளி கெட்டிப் படுவதாலும் ஏற்படும் நோய் இதுவாகும். இது கோழை கட்டுதல் என்றும் கூறப்படும். வெள்ளைப் பூண்டை அரைத்து ஒரு துணியில் கட்டி அதனை விளக்கில் காட்டிச் சுடவைத்து அத்துணியைப் பிழிந்து இஞ்சிச் சாற்றோடு கலந்து குடித்தால் கபம் நீங்கும். மேலும் வெள்ளைப் பூண்டைச் சுட்டு அல்லது வேகவைத்துக் கடைந்து தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை குடித்தாலும் குப்பைமேனிக் கீரையை அரைத்துச் சாறு குடித்து வந்தாலும் இந்நோய் குணமாகிவிடும்.
இருமல்
சுக்கு, உப்பு இரண்டையும் அரைத்துத் தொண்டையில் பூசினாலோ, பனைக் கற்கண்டோடு மிளகு சேர்த்து உண்டாலோ இருமல் நின்றுவிடும்.
வாதநோய்
பெருங்காயம், கடுகு, நல்ல மிளகு, வசம்பு, கருஞ்சீரகம், வெள்ளைப் பூண்டு இவற்றைச் சேர்த்து அரைத்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் வாத நோய்கள் தீரும்.
மூல நோய்
மூல நோய் உள்ளவர்கள் தேங்காய் நாரின் சாறெடுத்துக் குழந்தைகளின் சிறுநீரில் சேர்த்து, மூலத்தில் தேய்த்தால் குணமாகும். பசும் பாலை, ஆடு அல்லது மாட்டுக் கொழுப்பில் குழைத்து மூலத்தில் தடவிவந்தாலும் மூல நோய் குணமாகும்.
கால் வீக்கம்
கால் வீக்கம் இருந்தால், நல்லெண்ணெய், சாம்பிராணி, எலுமிச்சம் பழச்சாறு இவற்றைச்சேர்த்துச் சூடாக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கால் வீக்கம் குறையும். பச்சரிசி மாவை வேக வைத்து வீக்கத்தில் கட்டினாலும் வீக்கம் குறைந்துவிடும்.
மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை நோய்க்கு இன்றுவரை நாட்டுப்புற மருத்துவமே சிறப்பாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நோய் உள்ளவர்கள் கீழாநெல்லி (வேர் தவிர்த்து) இலையை அரைத்துப் பசும்பாலுடன் சேர்த்துத் தொடர்ந்து மூன்று வேளை (வாரம் ஒருமுறை) குடித்து வந்தால் மஞ்சள் காமாலை பூரண குணமாகும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் உள்ளவர்கள் ஆமணக்கு வேரை நீரில் போட்டுக் காய்ச்சிக் கசாயம் செய்து கசாயத்துடன் பசும்பாலும் சர்க்கரையும் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர மலச்சிக்கல் தீரும். கொன்றை இலை, கொன்றை இலைக் கொழுந்து இவைகளை நீர்வீட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தாலும் மலச்சிக்கல் தீரும்.
இளநரை
இளைஞர்களை மனம் நோகச் செய்வது இளநரையாகும். உடலில் பித்தம் அதிகமாவதால் இளநரை ஏற்படுகிறது. இதற்கு நெல்லிச் சாறு, செஞ்சந்தனம். மகிழம்பூ ஆகியவற்றைச் சேர்த்துத் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து காய்ச்சித் தலையில் தேய்த்துவந்தால் பித்தம் தணியும். இளநரையும் நீங்கும். கண்ணிற்கும் குளிர்ச்சி உண்டாகும்.
தாய்ப்பால் குறைவு
பிள்ளை பெற்ற தாய்மார்களுக்குப் பால் சுரக்கக் காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டினாலோ அல்லது வெள்ளரி விதையை அரைத்து மார்பில் பூசினாலோ அல்லது ஆலம் விழுது. ஆலம் விதைகளை அரைத்துப் பசும்பாலில் கலந்து காய்ச்சிக் குடித்தாலோ நன்கு பால் சுரக்கும்.
தலையும் நோவும் தனக்கு வந்தால் தெரியும் என்பது பழமொழி. தலைவலி சிலருக்குத் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு எப்பொழுதாவது வரும். இத்தலைவலியைப் போக்க, செஞ்சந்தனக் கட்டையை உரைத்து நெற்றியில் பூசுவர். கரிசலாங் கண்ணிக் கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணெய்யில் சேர்த்து மூக்கிலிடுவர். மேலும் கடுமையான இருமலும் தலைவலியும் சளியும் இருந்தால் காட்டுப் பகுதியில் மண்டிக் கிடக்கும் நொச்சி இலைகளைப் பறித்து வந்து மண்சட்டியில் போட்டு நீர் விட்டுக் கொதிக்க வைத்து அதிலிருந்து வரும் நீராவியை மூக்கு வழியாக உள்ளே இழுத்து ஆவி பிடிக்கும் முறையைப் பின்பற்றுவர். தலைவலிக்கு இதுபோன்ற எளிய மருத்துவ முறைகளை மேற்கொண்டு நலம் பெறலாம்.
காது வலி
ஐம்புலன்களில் காது மிக முக்கியமான உறுப்பாகும். காதில் ஏற்படும் வலியினைப் போக்கத் தேங்காய் எண்ணெயில் மிளகு, வெள்ளைப் பூண்டு போட்டுக் காய்ச்சி இளஞ்சூடாகக் காதில் ஊற்றினாலோ அல்லது உள்ளியைப் (வெங்காயம்) பிழிந்து காதில் விட்டாலோ காது வலி உடனடியாகக் குணமாகும்.
பல் வலி
பற்களில் ஏற்படும் வலியினைப் போக்க வேப்பிலைக் கொழுந்து, மஞ்சள், திருநீறு இவற்றைச் சேர்த்து அரைத்துக் கன்னத்தில் பூசினால் பல் வலி மற்றும் வீக்கம் குறையும். புழு விழுந்த பல்லில் சூடம் அல்லது கிராம்பு வைத்தால் குணமாகும். மிளகு, உப்பு ஆகியவற்றை அரைத்துப் பல்லில் தேய்த்தாலும் வலி நீங்கும்.
வயிற்று வலி
வயிற்று வலிக்கான காரணம் மிகையான உணவும் உண்ட உணவு செரிக்காமையுமே ஆகும். வெற்றிலையில் உப்புச் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும். வெற்றிலை உமிழ்நீரைப் பெருக்கும். உப்பு வாயுவை அகற்றும். இரண்டும் கலந்து உருவாகும் உமிழ்நீர்ப் பெருக்கால் செரிமானம் சரியாகும். இதனால் வயிற்று வலி தீரும்.
மூட்டு விலகுதலும் எலும்பு முறிவும்
நாட்டுப்புற மருத்துவ முறையில் மூட்டு விலகுதல், எலும்பு முறிவு போன்ற சிக்கலான நோய்களுக்குத் தாவர எண்ணெய்களைப் பயன்படுத்திக் குணப்படுத்தும் முறை இன்றும் இருந்து வருகிறது. இதேபோல் கழுத்து, இடுப்பு, கால் பகுதிகளில் ஏற்படும் நரம்புச் சுளுக்குகளுக்கும் நரம்புகளை நீவி விட்டுச் சுளுக்கெடுக்கும் முறையும் காணப்படுகிறது. எலும்பு, நரம்பு தொடர்பான சிகிச்சை முறைகளை ‘முரட்டு வைத்தியம்’ என்று நாட்டுப்புற மக்கள் குறிப்பிடுகின்றனர்.
சித்தர்கள் சித்த மருத்துவ முறைகளைப் பாடல் வடிவில் மறைபொருளாக ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்துச் சென்றுள்ளனர். இந்த ஓலைச் சுவடிகளைப் பின்பற்றியே இன்றும் சித்த மருத்துவ முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தின் தனித் தன்மைகளை இங்கு விளக்கமாகக் காண்போம்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் மேலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று (குறள் : 941)
என்கிறார் வள்ளுவர்.
மருத்துவ நூலோர் குறிப்பிடும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் அளவில் குறைந்தாலும் மிகுந்தாலும் நோய் உண்டாகும் என்பதே வள்ளுவரின் கருத்துமாகும். மேலும் அவர் மருந்து என்னும் அதிகாரத்தில் (95) மருத்துவம் குறித்துச் சிறப்பாக விளக்கியுள்ளார்.
வாதம்
சித்த மருத்துவம் கூறும் வாதம் என்பது உடல் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் வாயுவைக் குறிப்பதாகும்.
பித்தம்
பித்தம் என்பது உடலில் உயிர் தங்குவதற்கு ஆதரவு நிலையாக இருக்கும் உடல் வெப்பத்தைக் குறிப்பதாகும். இந்த வெப்பம் உணவு எரிக்கப்பட்டுச் சக்தியாக மாற்றப்படும் போது உண்டாவதாகும்.
கபம்
கபம் என்பது உடலின் குளிர்ச்சியைக் குறிப்பிடுவதாகும்.
இதன் அடிப்படையிலேயே 1482 வகையான நோய்கள் வாதத்தினால் ஏற்படுபவை என்றும், 1483 வகையான நோய்கள் பித்தத்தினால் வருபவை என்றும், 1483 வகையான நோய்கள் கபத்தால் தோன்றுபவை என்றும் சித்த மருத்துவர்களாலும் மருத்துவ நூல்களாலும் குறிப்பிடப்படுகின்றன.
புராதனக் காலத்தில் இயற்கையின் இயக்க விதிகளைப் புரிந்துகொள்ள இயலாத மனிதன் தன் மன ரீதியான அச்சத்தைப் போக்கவும் இயற்கையினைக் கட்டுப்படுத்தவும் அதனிடமிருந்து சில பயன்களைப் பெறவும் உருவாக்கப்பட்டதே மந்திர மருத்துவமாகும்.
மந்திர மருத்துவம் நாட்டுப்புற மருத்துவத்தின் ஒரு கூறாக விளங்கி வருகிறது. நோயின் தன்மை அறியப்பட்ட நோய்களுக்கும் மருந்து. மருத்துவம் இல்லாத நோய்களுக்கும் தீராத நோய்களுக்கும் மந்திர மருத்துவத்தின் துணை நாடப்படுகிறது.
நோய்களுக்குரிய காரணங்கள்
மந்திர மருத்துவத்தில் நோய்கள் உண்டாவதற்குக் கீழ்க்காணும் காரணங்கள் கூறப்படுகின்றன. அவை தெய்வக் குற்றம், தீய ஆவிகளின் செயல், கண்ணேறு, செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், முன்னோர் செய்த பாவம், வசிய மருந்து உண்ணுதல் என்பனவாகும். இவற்றால் ஏற்படும் நோய்களுக்கு மக்கள் மந்திர மருத்துவ முறையையே நாடுகின்றனர்.
தீர்வுகள்
மந்திர மருத்துவத்தில் நோய்கள் மந்திரித்தல். திருநீறு போடுதல், கோளாறு பார்த்தல், பார்வை பார்த்தல், கோடாங்கி கேட்டல், வேப்பிலை அடித்தல், அக்கி எழுதுதல், கயிறு, ஓலை, தகடு மந்திரித்தல், நேர்த்திக் கடன் செய்தல் என்ற முறையில் தீர்த்து வைக்கப்படுகின்றன.
திடீரெனக் கைகால்கள் செயலிழத்தல், பைத்தியம் பிடித்தல், பார்வைக் கோளாறு போன்றவை செய்வினையால் விளையும் தீய ஆவிகளின் செயல்களாக நம்பப்படுகின்றன. இதுபோன்ற நோய்களைப் போக்கச் செய்வினை எடுத்தல், யந்திரங்கள் அடங்கிய தாயத்துகளை நோயாளிக்கு அணிவித்தல், பேயோட்டுதல் போன்ற மந்திரச் சடங்குகள் மேற்கொள்ளப் படுகின்றன.
அம்மை நோயினைத் தெய்வக் குற்றமாகக் கருதி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செய்யப்படுகிறது. நாட்டுப்புறங்களில் குழந்தைகளுக்குக் காய்ச்சல், இருமல், சளி வந்தால் மருத்துவரை நாடாமல் முதலில் மந்திரிப்பவர்களையே நாடும் முறை இன்றும் வழக்கில் உள்ளது.
மருந்தும் மந்திரமும்
மருந்து மருத்துவ முறை உடலியல் நோய்களையும் மந்திர மருத்துவ முறை உளவியல் நோய்களையும் போக்குகிறது எனலாம். மந்திர மருத்துவம் முழுக்க முழுக்க நம்பிக்கை மருத்துவம் என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.
புராதனக் காலத்தில் இயற்கையின் இயக்க விதிகளைப் புரிந்துகொள்ள இயலாத மனிதன் தன் மன ரீதியான அச்சத்தைப் போக்கவும் இயற்கையினைக் கட்டுப்படுத்தவும் அதனிடமிருந்து சில பயன்களைப் பெறவும் உருவாக்கப்பட்டதே மந்திர மருத்துவமாகும்.
மந்திர மருத்துவம் நாட்டுப்புற மருத்துவத்தின் ஒரு கூறாக விளங்கி வருகிறது. நோயின் தன்மை அறியப்பட்ட நோய்களுக்கும் மருந்து. மருத்துவம் இல்லாத நோய்களுக்கும் தீராத நோய்களுக்கும் மந்திர மருத்துவத்தின் துணை நாடப்படுகிறது.
நோய்களுக்குரிய காரணங்கள்
மந்திர மருத்துவத்தில் நோய்கள் உண்டாவதற்குக் கீழ்க்காணும் காரணங்கள் கூறப்படுகின்றன. அவை தெய்வக் குற்றம், தீய ஆவிகளின் செயல், கண்ணேறு, செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், முன்னோர் செய்த பாவம், வசிய மருந்து உண்ணுதல் என்பனவாகும். இவற்றால் ஏற்படும் நோய்களுக்கு மக்கள் மந்திர மருத்துவ முறையையே நாடுகின்றனர்.
தீர்வுகள்
மந்திர மருத்துவத்தில் நோய்கள் மந்திரித்தல். திருநீறு போடுதல், கோளாறு பார்த்தல், பார்வை பார்த்தல், கோடாங்கி கேட்டல், வேப்பிலை அடித்தல், அக்கி எழுதுதல், கயிறு, ஓலை, தகடு மந்திரித்தல், நேர்த்திக் கடன் செய்தல் என்ற முறையில் தீர்த்து வைக்கப்படுகின்றன.
திடீரெனக் கைகால்கள் செயலிழத்தல், பைத்தியம் பிடித்தல், பார்வைக் கோளாறு போன்றவை செய்வினையால் விளையும் தீய ஆவிகளின் செயல்களாக நம்பப்படுகின்றன. இதுபோன்ற நோய்களைப் போக்கச் செய்வினை எடுத்தல், யந்திரங்கள் அடங்கிய தாயத்துகளை நோயாளிக்கு அணிவித்தல், பேயோட்டுதல் போன்ற மந்திரச் சடங்குகள் மேற்கொள்ளப் படுகின்றன.
அம்மை நோயினைத் தெய்வக் குற்றமாகக் கருதி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செய்யப்படுகிறது. நாட்டுப்புறங்களில் குழந்தைகளுக்குக் காய்ச்சல், இருமல், சளி வந்தால் மருத்துவரை நாடாமல் முதலில் மந்திரிப்பவர்களையே நாடும் முறை இன்றும் வழக்கில் உள்ளது.
மருந்தும் மந்திரமும்
மருந்து மருத்துவ முறை உடலியல் நோய்களையும் மந்திர மருத்துவ முறை உளவியல் நோய்களையும் போக்குகிறது எனலாம். மந்திர மருத்துவம் முழுக்க முழுக்க நம்பிக்கை மருத்துவம் என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.
இருவகை மருத்துவர்
பகுதிநேர மருத்துவர், முழுநேர மருத்துவர் என இருவகையினராக இம்மருத்துவர்கள் காணப்படுகின்றனர். முழுநேர மருத்துவர்கள் பரம்பரை பரம்பரையாக, ‘சித்த வைத்திய சாலை’ ‘சித்த மருத்துவ மனை’ என்ற பெயரில் எலும்பு முறிவு, விசகடி, உடல் நோய்கள் போன்றவற்றிற்கு மருத்துவம் செய்து வருகின்றனர். பரம்பரை மருத்துவர்கள் சில மருந்துகளை. மருத்துவ முறைகளைப் பரம்பரைச் சொத்தாகக் கருதி மிகக் கமுக்கமாகப் (Secret) பாதுகாத்து வருகின்றனர். மூலிகை மருந்துகளையோ, மருத்துவ முறைகளையோ வெளிப்படையாகச் சொன்னால் பலிக்காது என்ற நம்பிக்கையும் இவர்களிடம் காணப்படுகிறது.
மருத்துவர்களின் இயல்பு
நாட்டுப்புற மருத்துவர்கள் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைக்கு உரியோராகவும் மனநல நிபுணர்களாகவும் எளிதில் தொடர்பு கொள்வோராகவும் விளங்குவது குறிப்பிடத் தக்கதாகும். இவர்களில் சிலர் எவ்வித ஊதியமும் இன்றித் தொண்டுள்ளத்தோடு மருத்துவம் செய்யும் போக்கினையும் நாட்டுப்புறங்களில் காணலாம்.
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல் (குறள் : 949)
என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, அதாவது மருத்துவ நூலைக் கற்றவன் நோயுற்றவனுடைய வயது, நோயின் அளவு, நோயின் காலம் இவற்றை அறிந்து ஆராய்ந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கேற்ப நாட்டுப்புற மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
மருத்துவப் பழமொழிகள்
பழமொழிகளில் மருத்துவக் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை:
1) பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.
2) சனிதோறும் நீராடு
3) ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டும் போக்கும்
4) ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
5) நோயைக் கட்ட வாயைக் கட்டு
6) நாற்பது வயதில் நா குணம்
7) ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
8) பிள்ளை இல்லையென்றால் முல்லையாற்றில் முழுகு (குளி)
போன்றனவாகும்.
நாட்டுப்புறப் பாடலில் மருத்துவம்
ஒரு தாயின் தாலாட்டு குழந்தைக்கு மருத்துவம் கூறுகிறது
வயிற்றுலைச்சல் மிஞ்சிப்போய் – கண்ணே உனக்கு
வயிற்றுவலி வந்திருச்சா
வெற்றிலையும் உப்பும் வச்சு -கண்மணியே
வெறுவயிற்றில் தின்னிடம்மா
என்ற பாடல் வயிற்று வலிக்கு மருந்து சொல்கிறது.
மருத்துவ நம்பிக்கைகள்
நாட்டுப்புற மக்களை நம்பிக்கைகளே வழிநடத்துகின்றன. மருத்துவம் குறித்தும் இம்மக்களிடம் நம்பிக்கைகள் காணப்படுகின்றன.
1) அமாவாசை நாளில் நோய் தீவிரமாகும்.
2) கை, கால்களில் ஏற்படும் சுளுக்கு இரட்டைப் பிறவியர் தடவினால் நீங்கும்.
3) தெய்வக் குற்றங்களால் நோய் ஏற்படும்.
4) தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன் செய்தால் நோய்கள் நீங்கும்.
5) ஏவல், பில்லி, சூனியம். தீய ஆவிகள் இவற்றால் நோய்கள் வரும்.
இத்தகைய நம்பிக்கைகள் இன்றளவும் நாட்டுப்புற மக்களிடம் நிலவுகின்றன.
நாட்டுப்புற மருத்துவம் உடல், மனம், சமூகம் என்ற மூன்றையும் குணப்படுத்தும் சக்தியுள்ளதாக விளங்கி வருகிறது. பண்பாட்டின் பிரிக்க முடியாத கூறாக இன்றளவும் நிலைத்து வருகிறது. நவீன மருத்துவ முறைகளின் அசுரத் தாக்குதலுக்கு இடையேயும் எதிர்த்து நின்று சாகாவரம் பெற்றதாய்த் திகழ்ந்து வருகிறது.
எத்தகைய நோயாக இருப்பினும், உணவைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் சில உணவுகளைத் தவிர்ப்பதன் வாயிலாகவும் நோயிலிருந்து விடுதலை பெறலாம் என்ற அடிப்படைத் தத்துவத்தை வெளிப்படுத்துவதாக நாட்டுப்புற மருத்துவம் விளங்கி வருகிறது.
இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைக்கும் உணவுப் பழக்கத்திற்கும் மக்கள் மாற மனங்கொண்டு வருகின்றனர். இதனால் நாட்டுப்புற மருத்துவ முறைகளும் புத்தொளி பெற்று வருகின்றன.
நோயைத் தடுப்பது நவீன மருத்துவம். நோயை மறுப்பது நாட்டுப்புற மருத்துவம். நோயைத் தடுப்பதைக் காட்டிலும் நோயை மறுப்பது ஒருபடி உயர்ந்ததுதானே?
தமிழ் மருத்துவம் வளர்ப்போம்! உலக உயிர்களைக் காப்போம்! சரிதானே?
பாடம் - 4
நாட்டுப்புற மக்களின் மரபு வழியான பழக்க வழக்கங்கள், வழிபாடுகள், சடங்குகள், நம்பிக்கைகள் போன்ற பண்பாட்டு உணர்வுகளின் வெளிப்பாட்டு வாயில்களாக நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் விளங்குகின்றன. இக்கலைகள் நாட்டுப்புறக் கலைஞர்களாலும் மக்களாலும் இன்றளவும் நிகழ்த்தப் பட்டும் பாதுகாக்கப் பட்டும் வருகின்றன.
தமிழ்ப் பண்பாட்டைக் கற்க விரும்புவோர் நாட்டுப்புற நிகழ்த்து கலைகளைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். இதனைக் கருத்தில் கொண்டே நாட்டுப்புற மக்களால் ஆடப் பெற்றும் நிகழ்த்தப் பெற்றும் வரும் நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் (Folk Performing Arts) இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.
கூத்து, ஆட்டம், நடனம், ஆடல், விளையாட்டு, வேடிக்கை போன்ற சொற்கள் கலைகளைச் சுட்டும் வகையில் பயன்படுத்தப் படுகின்றன. கூத்து என்ற சொல்லே கலைகளைக் குறிக்கப் பயன்பட்ட மிகப் பழமையான சொல்லாகும். இன்னும் கூடக் கூத்து என்ற பெயரிலேயே பல கலைகள் வழங்கப் படுகின்றன. சங்க காலத்தில் நிகழ்ந்த கூத்துகளை வேத்தியல் கூத்து (அரசவையில் ஆடப்படுவது), பொதுவியல் கூத்து (பொது இடங்களில் ஆடப்படுவது) என்றும்; கூத்தில் ஈடுபட்டோரைக் கூத்தர், பாணர், பொருநர், விறலியர் என்றும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதைக் காணலாம். இன்றும் கூடக் கலைகளில் பங்கு பெறுவோரைக் கூத்தாடி என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. சிலப்பதிகாரத்திலும் பல்வேறு வகையான ஆடல்களையும் கூத்துகளையும் இளங்கோவடிகள் சொல்லிச் செல்கின்றார். இலக்கியங்கள் குறிப்பிடும் பொதுவியல் கூத்தே நாட்டுப்புற நிகழ்த்து கலைகளாக வளர்ச்சி பெற்று இன்று ஆடப்பட்டு வருகின்றன எனலாம்.
வகைகள்
பொதுவாக நாட்டுப்புறக் கலைகளை,
1) நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் (Folk Performing Arts)
2) நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் (Folk Material Arts)
என்று பகுத்து விளக்குவது உண்டு. இப்பாடத்தில் முதல் வகையான நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் மட்டுமே விளக்கிக் கூறப்படுகின்றன.
நாட்டுப்புற மண்ணில் முகிழ்த்து, மண்ணின் மணத்தோடு நாட்டுப்புற மக்களால், கலைஞர்களால் மரபு வழியாக நிகழ்த்திக் காட்டப்படும் கலைகளே நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் எனப்படும். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று அண்ணல் காந்தியடிகள் கூறியதைப்போல, நாட்டுப்புற நிகழ்த்து கலைகளும் கிராமப் புறங்களில்தான் நிகழ்த்தப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வாழ்ந்து வருகின்றன.
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளை நிகழ்த்துவதற்கென்று குறிப்பிட்ட இடமோ, களமோ, அரங்கமோ கிடையாது. எங்கு வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் (கோயில், ஊர்மந்தை, தெருக்கள்) நிகழ்த்திக் கொள்ளும் சுதந்திரப் போக்கைக் கொண்டவையாகும். சிறுதெய்வ வழிபாடுகளின் போது எங்கெல்லாம் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் கலைஞர்களும் சென்று ஆடுவார்கள். தெய்வங்களை அலங்கரித்து ஊர்வலம் வரும்போது, அதன் முன்னால் கலைஞர்கள் ஆடிச் செல்வதை நீங்களும் பார்த்திருக்கலாம். நாட்டுப்புற நிகழ்த்து கலைகளுக்கான ஆடுகளம் விரிந்த பரப்பைக் கொண்டது என்பதை இதன்வழி அறியலாம்.
வட்டாரத் தன்மை
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் பெரும்பாலானவை வட்டாரத் தன்மை கொண்டவையாகும். வட்டாரத் தன்மை என்றால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே அந்தக் கலைகளைப் பார்க்க முடியும். ஒரு கலை தமிழகம் முழுவதும் செல்வாக்குப் பெற்றிருக்கின்றது என்றோ, நிகழ்த்தப்படுகிறது என்றோ கூறிவிட முடியாது. குறிப்பிட்ட கலைகள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வழக்கில் இருக்கும். குறிப்பாகத் தெருக்கூத்து என்ற நிகழ்த்து கலையைத் தமிழகத்தின் வட பகுதிகளில் மட்டுமே காணமுடியும். அதேபோல வில்லுப்பாட்டு, கணியான் கூத்து, கழியலாட்டம் போன்ற கலைகளைத் தமிழகத்தின் தென் பகுதிகளில் மட்டுமே காணமுடியும். வட்டாரத் தன்மையுடைய இக்கலைகள் அந்தந்தப் பகுதி மக்களால் நிகழ்த்தப் பட்டும், செல்வாக்குப் பெற்றும் விளங்கும்.
நிகழ்த்தப்படும் முறை
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் கைகள், கால்கள், இடுப்பு போன்ற உடல் உறுப்புகளின் இயக்கங்களே மிகுதியாகக் காணப்படும். முக பாவங்களையோ, அபிநயங்களையோ காண இயலாது. இக்கலைகள் வட்ட வடிவ முறையிலோ நேர்கோட்டு முறையிலோ நிகழ்த்திக் காட்டப்படும். இதில் வட்ட வடிவ முறையே தொன்மையானதும் தொடக்கக் கால ஆட்ட முறையுமாகும். இம்முறையே நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் மிகுதியாகக் காணப்படும். பார்வையாளர்களும் வட்டமாக நின்றோ அமர்ந்தோ கலைகளைக் கண்டு மகிழ்வர்.
பெயர் பெறும் முறை
நாட்டுப்புற நிகழ்த்து கலைகள், கலைகளில் பயன்படுத்தப் பெறும் கருவிகள், கலைகளில் ஈடுபடும் இனத்தார், கலை நிகழ்த்தப் பெறும் இடம் என்ற அடிப்படையில் பெயர் பெறுகின்றன. குறிப்பாகக் கலைகளில் பயன்படுத்தப் பெறும் கருவிகளின் அடிப்படையிலேயே (கரகாட்டம், காவடியாட்டம், வில்லுப் பாட்டு, தப்பாட்டம், பாவைக் கூத்து) மிகுதியும் பெயர் பெறுகின்றன.
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் திட்டவட்டமான இலக்கண வரையறைகள் கிடையாது. எளிய பயிற்சிகளால் எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியவை; நெகிழ்ச்சித் தன்மை உடையவை. இக்கூறுகளே நாட்டுப்புற நிகழ்த்து கலைகளை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களே ! நீங்களும் ஆடத் தயாரா?
* தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், பகல் வேடம், இலாவணி, உடுக்கைப் பாட்டு, சேவையாட்டம், ஒயிலாட்டம், கணியான் கூத்து, வில்லுப் பாட்டு.
கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தேவராட்டம், கோலாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கைச்சிலம்பாட்டம், சக்கையாட்டம், மரக்காலாட்டம், தப்பாட்டம், புலியாட்டம்.
வில்லுப் பாட்டு, உடுக்கைப் பாட்டு, இலாவணி
ஒயிலாட்டம், சேவையாட்டம்.
தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், இராஜாராணி ஆட்டம்.
கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், மரக்காலாட்டம், புலியாட்டம்.
கோலாட்டம், சக்கையாட்டம், கைச்சிலம்பாட்டம், கழியல் ஆட்டம்.
குறவன் குறத்தி ஆட்டம்.
(இவற்றைப் பற்றிய விளக்கங்களையும் படங்களையும் இப்பாடத்தின் இறுதியில் காணலாம்.)
மேற்கூறிய வகைப்பாடுகள் தவிர, நிகழ்த்துவோர், நிகழ்த்து சூழல், நிகழ்த்து கலைக் கருவிகள் போன்ற அடிப்படையிலும் வகைப்படுத்திக் காணலாம். நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் ஒவ்வொன்றிற்கும் அந்தந்தக் கலைகளுக்கேயான ஓர் ஈர்ப்பு விசை உண்டு. அது பாடலாகவோ இசையாகவோ ஆட்ட முறைகளாகவோ இருக்கலாம்.
1) வழிபாட்டுக் கலைகள்
2) சடங்குக் கலைகள்
3) வாழ்க்கை வட்டச் சடங்குக் கலைகள்
என்றவாறு பிரித்து விளக்கலாம். மேற்கூறிய சூழல்களில் நிகழ்த்து கலைகள் தவறாது இடம் பெறுவது கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
தெய்வங்கள் கலைகள்
சிவபெருமான் - கூத்து
திருமால் - குடக்கூத்து, மரக்காலாடல்,
(மகாவிஷ்ணு) சேவையாட்டம்
தேவர்கள் - தேவராட்டம்
திரௌபதை - கரகாட்டம்
காளியம்மன் - காளியாட்டம்
தெய்வங்களால் நிகழ்த்தப்பட்ட கலைகள் தெய்வங்களுக்காகத் தெய்வ வழிபாட்டில் ஆடப்படுவதாகக் கூறப்படுகிறது.
கிரேக்க நாட்டில் பாக்கஸ், டியோனைகஸ், அப்பல்லோ, டிமிட்டர் ஆகிய தெய்வங்களின் வழிபாட்டிலிருந்து கலைகள் தோன்றியதாகக் கூறப்படுகின்றது.
இதைப்போன்றே குறிப்பிட்ட சில கலைகள் குறிப்பிட்ட சில தெய்வ வழிபாடுகளில் மட்டுமே நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்பதும் இங்கு அறியத் தக்கதாகும்.
குறிப்பிட்ட தெய்வ வழிபாட்டில் நிகழ்த்தப்படும் கலைகள்
தெய்வங்கள் கலைகள்
சிவபெருமான் - வில்லுப் பாட்டு
பெருமாள் சாமி - சேவையாட்டம்
அழகர் சாமி - பிருந்தாவனக் கும்மி,ஒயிலாட்டம்
முருகப் பெருமான் - காவடியாட்டம்
மன்மதன் - இலாவணி
சுடலை மாடன் - கணியான் கூத்து
திரௌபதை - தெருக்கூத்து
மாரியம்மன் - கரகாட்டம்
காளியம்மன் - காளியாட்டம்
ஜக்கம்மாள் - தேவராட்டம்
கெங்கையம்மன் - கொக்கலிக் கட்டையாட்டம்
அண்ணன்மார் சாமி - உடுக்கைப் பாட்டு
இத்தெய்வ வழிபாடுகளில் குறிப்பிட்ட நிகழ்த்து கலைகள் ஆடப் பெறாமல் வழிபாடு முழுமை பெறுவதில்லை. வழிபாட்டையொட்டி நடைபெறும் திருவிழாக்களில் பலவிதமான வேடங்கள் பூண்டு நகைச்சுவையாக ஆடியும் பாடியும் கலைகள் நிகழ்த்தப் படுவதுண்டு.
தமிழகக் கலை மரபை உலகறியச் செய்த நிகழ்த்து கலை கரகாட்டம் ஆகும். இது தமிழர்களின் அடையாளமாய் விளங்கும் பாரம்பரியக் கலை. இக்கலையை நீங்களும் பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள். உங்களுக்குத் தெரியுமா? இது சடங்கிலிருந்து தோன்றிய கலை வடிவமாகும். அது எவ்வாறு என்று பார்ப்போம்.
சக்திக் கரகம்
மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன் ஆகிய அம்மன் கோயில் வழிபாடுகளில் சக்திக் கரகமெடுத்தல் என்னும் சடங்கு தவறாமல் நடைபெறும். (கரகம் என்பது வெண்கலத்தாலான சிறுகலசம் ஆகும். புனித நீர் வைக்கப்படும் குடம் அல்லது கலசத்தைக் கரகம் என்று கூறுவதுண்டு) இது சக்திக் கரகம் என்றும் கூறப்படும். அம்மன் வழிபாட்டின் முதல் நாளன்று இரவு கரகமெடுத்தல் சடங்கு நடைபெறும். ஊருக்கு அருகிலுள்ள நீர்நிலைக்குச் சென்று கரகத்தில் நீர்நிரப்பி வாய்ப் பகுதியில் தேங்காய் வைத்துக் கட்டி அதன் மேல் கூம்பு வடிவத்தில் பூக்களைச் சுற்றி அலங்காரம் செய்யப்படும். அலங்காரம் செய்த சக்திக் கரகத்தை அம்மன் கோயில் பூசாரி தலையில் வைத்து, தெய்வ அருள் வந்து ஆவேசமாக ஆடுவார். அந்த நிலையில் தங்களை மறந்து செயல்படுவர். பின்னர் சக்திக் கரகம் கோயிலில் வைக்கப் பட்டுப் பூசை செய்யப்படும். வழிபாடு முடியும்வரை சக்திக் கரகமே ஊர்மக்களால் அம்மனாக வணங்கப்படும். வழிபாடு முடியும் நாள் இரவு சக்திக் கரகம் கோயிலிலிருந்து, பூசாரியால் அருள் வந்த நிலையில் எடுத்துவரப் பட்டு, கரகத்திலுள்ள நீர் மீண்டும் நீர்நிலையில் கலந்து விடப்படும். இத்துடன் அம்மன் வழிபாடு முடிந்துவிடும். இப்பொழுது நாம் பார்த்தது சக்திக் கரகமெடுத்தல் என்னும் சடங்கு. இச்சடங்கே பின்னாளில் கரகாட்டம் என்ற நிகழ்த்து கலையாக மாறியது.
கரகாட்டம்
கரகாட்டத்தில் முதன்மையான ஆட்டக் கருவியாக விளங்குவது கரகம். இது ஆட்டக் கரகம் என்று வழங்கப்படும். ஆட்டக் கரகத்தின் அமைப்பு மற்றும் அலங்காரத்தை வைத்துத் தோண்டிக் கரகம், செம்புக் கரகம், அடுக்குக் கரகம் என்று குறிப்பிடுவதுண்டு. கரகாட்டத்தில் செம்புக் கரகம் வைத்து ஆடும் முறையே பரவலாகக் காணப்படுகிறது. ஆட்டக் கரகத்தில் தேவையான அளவு அரிசி நிரப்பப் படுகிறது. அதன் வாய்ப் பகுதியில் கூம்பு வடிவிலான கட்டை வைக்கப்பட்டுக் கரகத்தோடு இணைத்துக் கட்டப் படுகின்றது. இது கரகக் கட்டை எனப்படும். அதன் மேல் செயற்கைப் பூ அலங்காரம் செய்யப்பட்ட அலங்காரக் கூடை (டோப்) கவிழ்த்தப் படுகிறது. உச்சியில் தக்கையால் செய்யப்பட்ட அழகான கிளி செருகப் படுகின்றது. இப்பொழுது ஆட்டத்திற்கான கரகம் தயார். சக்திக் கரகத்திலிருந்து இது மாறுபட்டிருக்கிறது அல்லவா !
கரகாட்டம் கரகாட்டம்
ஒப்பனை செய்து கொண்ட ஆட்டக்காரர்கள் அலங்கரிக்கப்பட்ட கரகத்தைத் தலையில் வைத்துக் கொண்டு, அது கீழே விழுந்து விடாதபடி நையாண்டி மேளத்தின் தாள முறைக்கேற்ப மெதுவாக, வேகமாக, மிகவேகமாக, சுழன்றும், குதித்தும், குத்த வைத்தும், புரண்டும் ஆடுகின்றனர். சபை வணக்கம், ஒன்னாங்காலம், தெம்மாங்கு, நையாண்டி, பவளக்கொடி மெட்டு, கட்டபொம்மன் மெட்டு என்று அமையும் நையாண்டி மேளத்தின் இசைப்பு முறைக்கேற்ப நீண்ட நேரம் தொடர்ந்து ஆடுகின்றனர். ஆட்டத்தின் போது கண்ணைக் கட்டிக் கொண்டு தேங்காய் உடைத்தல், கண்ணால் ஊசி எடுத்தல், ஏணியில் ஏறுதல், தீப்பந்தம் சுற்றுதல் போன்ற வித்தைகளைச் செய்து காட்டிப் பார்வையாளர்களைப் பரவசமடையச் செய்கின்றனர். காண்போரைக் கவர்ந்திழுக்கும் திறமையான ஆட்டக் கலையாகக் கரகாட்டம் திகழ்கின்றது.
மேற்கூறிய விளக்கங்களின் அடிப்படையில் சக்திக் கரமெடுத்தல் என்னும் சடங்கைப் போலச் செய்யும் கலையாகக் கரகாட்டம் வளர்ச்சி பெற்றிருப்பதை அறியலாம். அம்மன் கோயில் வழிபாடுகளில் சக்திக் கரகமெடுத்தலையும், தொழில் முறையான கரகாட்ட நிகழ்வையும் ஒருசேரக் காணலாம். எனினும் கரகாட்டம் புனிதமானதாகக் கருதப்படுவதில்லை என்பது அறியத் தக்கதாகும்.
இலங்கையில் மாரியம்மன் மற்றும் கண்ணகி வழிபாட்டின்போது கரகமெடுத்தல் சடங்கு நிகழ்த்தப் படுவதாகவும் கரகமெடுப்போர் உடுக்கின் இசைக்கேற்ப ஆடுவதாகவும் கூறப்படுகிறது.
இதைப் போலவே காவடியாட்டம், முருக வழிபாட்டில் இடம்பெறும் காவடியெடுத்தல் என்ற சடங்கிலிருந்தும், காளியாட்டம் காளியம்மன் சடங்கிலிருந்தும் தோற்றம் பெற்றுள்ளன.
மேற்கூறியவாறு நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் சடங்கிற்கு உரியவையாகவும் வழிபாட்டிற்கு உரியவையாகவும் வாழ்க்கை வட்டச் சடங்குகளில் நிகழ்த்தப்படும் முக்கியத்துவத்தைப் பெற்றவையாகவும் விளங்குகின்றன. கலைகள் இச்சூழலில் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. மேலும் அரசியல் நிகழ்வுகள், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், இன விழாக்கள் போன்றவற்றிலும் நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் தொழிற் கலைகளாக நிகழ்த்திக் காட்டப்படுகின்றன.
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் கதைகள் பாடலாகவோ, ஆடலுடன் கூடியதாகவோ, ஆடல், பாடல் உரையாடல்களின் வழியோ இசையுடனும் இசைக் கருவிகளுடனும் எடுத்துரைக்கப் படுகின்றன. இக்கதைகளின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தெய்வக் கதைகள், சமூகக் கதைகள் எனப் பகுக்கலாம்.
கலைகள் இதிகாச, புராண, காப்பியக் கதைகள் சிறுதெய்வக் கதைகள்
தெருக்கூத்து மகாபாரதம், இராமாயணம், சிறுத்தொண்டர் கதை, வள்ளி திருமணம், அரிச்சந்திரன் கதை. ஐயனார் சரித்திரம், காத்தவராயன் கதை.
தோற்பாவைக் கூத்து இராமாயணம் நல்ல தங்காள்
பொம்மலாட்டம் இராமாயணம்
சேவையாட்டம் இராமாயணம்
ஒயிலாட்டம் இராமாயணம்
வில்லுப் பாட்டு இராமாயணம், மகாபாரதம், சிறுத்தொண்டர் கதை, வள்ளி கதை. சுடலை மாடன் கதை, சாஸ்தா கதை, அம்மன் கதைகள்.
கணியான் கூத்து இராமாயணம், மகாபாரதம், சிறுத்தொண்டர் கதை, கோவலன் கதை, அரிச்சந்திரன் கதை சுடலைமாடன் கதை, சாஸ்தா கதை, அம்மன் கதைகள்.
உடுக்கைப் பாட்டு பார்வதி கதை, கோவலன் கதை அண்ணன்மார் சுவாமி கதை,
காத்தவராயன் கதை, நல்லதங்காள் கதை, மதுரைவீரன் கதை.
இலாவணி மன்மதன் கதை
பகல் வேடம் இராமாயணம், மகாபாரதம்
இராமாயணம், மகாபாரதக் கதைகள் முழுவதுமாகக் கலைகளில் இடம் பெறுவதில்லை. முக்கியக் கதை நிகழ்வுகள் மட்டுமே நிகழ்த்திக் காட்டப் படுகின்றன. சிறுதெய்வக் கதைகள் அந்தந்தத் தெய்வ வழிபாட்டில் தவறாது எடுத்துரைக்கப் படுகின்றன.
கலைகள் வரலாற்று நிகழ்வு மாந்தர் கதைகள் சமூக நிகழ்வு மாந்தர் கதைகள் தலைவர்கள் கதை
தெருக்கூத்து மாடுபிடி சண்டை, கணவனின் உயிர்காத்த கற்பக வள்ளி, சத்தியவதி
வில்லுப் பாட்டு ஐவர் ராசாக்கள் கதை, கன்னடியன் போர், தம்பிமார் கதை முத்துப் பட்டன் கதை காந்தி மகான் கதை
கணியான் கூத்து முத்துப் பட்டன் கதை
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளின் பாடுபொருள்கள் இதிகாச, புராணக் கதைகளாகவும் சிறுதெய்வக் கதைகளாகவுமே பெரிதும் அமைந்துள்ளன. சமூகக் கதைகளை நிகழ்த்திக் காட்டுவது மிகக் குறைவாகக் காணப்படுகிறது.
புதிய கதைகளை உருவாக்குவதில் கலைஞர்களுக்கு உள்ள சிரமங்கள், புதிய கதைகளைப் பார்வையாளர்கள் புரிந்து கொள்வதில் ஏற்படும் தடுமாற்றங்கள் போன்ற காரணங்களால் மக்களால் நன்கு அறியப்பட்ட கதைகளே திரும்பத் திரும்ப நிகழ்த்து கலைகளில் இடம்பெற்று வருகின்றன.
நிகழ்த்து கலைகளும் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகளும்
கலைகள் இசைக் கருவிகள்
தாளக் கருவிகள் பிற கருவிகள்
கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, குறவன் குறத்தியாட்டம் நையாண்டி மேளம் (தவில்) நாகசுரம்
தப்பாட்டம் பறை, தப்பு சலங்கை
தேவராட்டம் தேவதுந்துமி சலங்கை
வில்லுப் பாட்டு குடம், உடுக்கை ஆர்மோனியம், வில்,ஜால்ரா.
கணியான் கூத்து மகுடன் சலங்கை
கைச்சிலம்பாட்டம் பம்பை கைச்சிலம்பு
சக்கையாட்டம் சக்கைக் குச்சி
சேவையாட்டம் சேவைத்தப்பு சேமக் கலம்
தெருக்கூத்து டோலக் ஆர்மோனியம், சத்தக் குழல், ஜால்ரா
ஒயிலாட்டம் பானைத் தாளம், டோலக் ஜால்ரா, சலங்கை
இலாவணி டேப்
உடுக்கைப் பாட்டு உடுக்கு (உடுக்கை)
தோற்பாவைக் கூத்து டோலக் ஆர்மோனியம், ஜால்ரா
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளின் வெற்றியில் இசைக் கருவிகளின் பங்கு குறிப்பிடத் தக்கது என்பதை இதன் வழி உணரலாம்.
தமிழகத்தில் இதுபோன்று மரபு வழிப்பட்ட இசைக் கருவிகள் ஏராளமாகப் புழக்கத்தில் உள்ளன. இவை சடங்கு, வழிபாட்டுச் செயல்பாடுகளிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை தோலிசைக் கருவிகள் என்பது குறிப்பிடத் தக்கது.
தெருக்கூத்து
தெருக்கூத்து உடை ஒப்பனை
அரங்கக் கலைக் கூறுகளைக் கொண்டது தெருக்கூத்து. ஏதேனுமொரு கதையை அடிப்படையாகக் கொண்டு கதை மாந்தர்களுக்கு ஏற்ப வேடம் புனைந்து ஆடியும், பாடியும், உரையாடியும், கதையை நிகழ்த்திக் காட்டும் நாடகப் போக்கைக் கொண்டது தெருக்கூத்து.
கோடைக் காலத்தில் நிகழுத் திரௌபதை வழிபாட்டில் பத்து நாட்கள் மகாபாரதக் கதை கூத்தாக நிகழ்த்தப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் நிகழ்த்தப்படும் கதைக்கேற்பவும் கதை மாந்தர்களின் பண்பிற்கேற்பவும் உடை ஒப்பனைகள் மாறுபடுகின்றன. தெருக்கூத்தில் முக ஒப்பனையே தொடக்கமாக அமைகின்றது. முத்து வெள்ளை, செந்தூரம், கண் மை, வண்ணச் சாந்து போன்ற பொருட்கள் முக ஒப்பனைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. முக ஒப்பனை முடிந்த பின் கல்யாண முருங்கை என்னும் கனமற்ற மரத்தால் செய்து அலங்கரிக்கப்பட்ட புஜக்கட்டை, கிரீடம் ஆகியவை முக்கியக் கதை மாந்தர்களுக்குப் பொருத்தப் படுகின்றன. ஒப்பனையில் மரக்கட்டைகள் பயன்படுத்துவதால் இக்கலையைக் கட்டைக் கூத்து என்றும் கூறுவதுண்டு. மேலும் உலோகத்தாலான நெற்றிப் பட்டம், பெரிய மீசை, காதுக் கட்டை, மார்புப் பதக்கம், அங்க வஸ்திரம், கழுத்திலும் மார்பிலும் வாகு வளையம் ஆகியவை அணியப் படுகின்றன. பின்னர் வைக்கோல் மற்றும் துணிகளால் செய்யப்பட்ட குடை போன்ற பாவாடை இடுப்பில் கட்டப்பட்டு, கால் சட்டையும், காலில் சலங்கைகளும் அணியப்படுகின்றன. பெண் கதை மாந்தர்களுக்கு எளிமையான உடை ஒப்பனை முறையே மேற்கொள்ளப் படுகிறது.
தெருக்கூத்தில் பயன்படுத்தப்படும் உடை ஒப்பனைகள் சாதாரண மனிதர்களைக் காவிய நாயகர்களாகவும் தெய்வங்களாகவும் மாற்றும் தன்மை உடையவையாக உள்ளன. தெய்வ வேடம் புனைவோரை மக்கள் வணங்கும் போக்கும் காணப்படுகிறது.
பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், காளையாட்டம், காளியாட்டம் போன்ற நிகழ்த்து கலைகளில் குதிரைக் கூடு, மயில் கூடு, காளைக் கூடு, காளியின் முகமூடி (Mask), கூடுதலான கைகள் இவைகளைக் கலைஞர்கள் மாட்டிக் கொண்டு ஆடும் முறை காணப்படுகிறது. நிகழ்த்து கலைகளில் நகைச்சுவையூட்டும் கோமாளி, பபூன், கோணங்கி, கட்டியக்காரன், தொப்பைக் கூத்தாடி ஆகியோரின் உடை ஒப்பனைகள் பார்த்த மாத்திரத்திலேயே நகைச்சுவையை வரவழைப்பதாக உள்ளன.
ஒப்பனை
தொழில் முறையாக நிகழ்த்தப் பெறும் கலைகளில் மட்டுமே கலைஞர்கள் என்ற பிரிவினர் இடம்பெறுகின்றனர். பிற கலைகளில் ஆடும் விருப்பமுள்ள யாவரும் கலந்து கொண்டு ஆடலாம், பாடலாம். ஆடுவோர் பார்வையாளர்களாக மாறுவதையும் பார்வையாளர்கள் ஆடுவோராக மாறுவதையும் பல கலைகளில் காணமுடியும். இங்கு எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது. பல கலைகள் இத்தகைய சுதந்திரப் போக்கையே கொண்டவையாகும்.
கலைகள்
நிகழ்த்தும் இனத்தார்
1. கணியான் கூத்து – கணியான்
2. தோற்பாவைக் கூத்து – மராட்டியர்
3. தேவராட்டம் – கம்பளத்து நாயக்கர்
4. சேவையாட்டம் – கம்பளத்து நாயக்கர்
5. தப்பாட்டம் – பறையர்,அருந்ததியர்
6. தீபகேலி கோலாட்டம். – சௌராஷ்டிரர்.
குறிப்பிட்ட இனத்தாரால் நிகழ்த்தப்பட்டு வரும் இக்கலைகள் தனித்துவம் கொண்டவையாகவும் அவ்வினத்தாரின் சடங்கு மற்றும் வழிபாடுகளில் முக்கியத்துவம் பெறுபவையாகவும் விளங்குகின்றன.
நிகழ்த்து கலைகள் மட்டுமன்றி, நாட்டுப்புற இசைக் கருவிகள் பலவும் குறிப்பிட்ட இனத்தார்களால் மரபு ரீதியாக இசைக்கப்பட்டு வருகின்றன.
வழிபாட்டு நிகழ்வுகளில் நிகழ்த்தப்பட்டு வந்த கலைகள் தொழில்முறைக் கலைகளாக மாற்றம் பெற்றுவரும் இன்றைய நிலையில், கலைகளில் பெண்களின் பங்கேற்பு சற்று அதிகரித்து வருகிறது. பெண்கள் பங்குபெறும் கலைகள் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஆண்களால் மட்டுமே ஆடப்பட்டு வந்த பல கலைகளில் (தப்பாட்டம், ஒயிலாட்டம், சக்கையாட்டம், தேவராட்டம், தெருக்கூத்து) பெண்கள் பயிற்சி பெற்றுத் (குறிப்பாகக் கல்லூரிப் பெண்கள்) திறமையாக நிகழ்த்திக் காட்டி வருகின்றனர். இந்நிலை நாட்டுப்புற நிகழ்த்து கலைகளின் வளர்ச்சி நிலையைப் புலப்படுத்துவதாக உள்ளது எனலாம்.
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளை வளர்த்தெடுப்பதில் குறிப்பிட்ட இனத்தார் ஈடுபட்டுவருவதையும் கலைஞர்களின் பங்களிப்பினையும் அவர்கள் காட்டும் ஆர்வத்தையும் முனைப்பையும் மேற்கூறிய கருத்துகள் எடுத்துரைக்கின்றன.
பாடம் - 5
மனிதன் என்று தோன்றினானோ அன்றே விளையாட்டும் தொடங்கிவிட்டது என்று கூறலாம். வாழ்க்கையே ஒரு விளையாட்டுத்தான். வாழ்க்கைப் பயணத்தில் விளையாடாத மனிதர்களும் இல்லை; விளையாட்டுக் காட்டாத மனிதர்களும் இல்லை. அதனால்தான் மனிதன் பிறந்தது முதல் இறக்கும் நிலைவரை வயதிற்கு ஏற்றாற்போல் ஏதாவதொரு விளையாட்டை ஆடும் வகையில் விளையாட்டுகளை உருவாக்கி வைத்திருக்கின்றான்.
செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்று
அல்லல் நீத்த உவகை நான்கே
(தொல்காப்பியம், நூற்பா, எண்.1205)
என்ற நூற்பாவின் வழி விளையாட்டு உவகை தரக்கூடியது என்கிறார் தொல்காப்பியர். விளையாட்டாவது விரும்பி ஆடும் ஆட்டம் என்கிறார் தேவநேயப் பாவாணர். பொழுது போக்கிற்குரிய மகிழ்ச்சியான செயல் என்று தமிழ்ப்பேரகராதி பொருள் தருகின்றது. விரும்புகின்ற ஆட்டம், இன்பம் விளைவிக்கும் ஆட்டம், விதிகளை வகுத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் என்றும் பல்வேறு விளக்கங்கள் எடுத்துரைக்கப் படுகின்றன. விளையாட்டு அனுபவித்து மகிழக் கூடியது. விளையாடுவோர் மட்டுமின்றிக் காண்போரையும் களிப்படையச் செய்து இன்பமூட்டுவது. இத்தகைய சிறப்பு வாய்ந்த விளையாட்டுகளை விளக்கமாகக் காண்போமா!
நாட்டுப் புறங்களில் வாழும் மக்களால் தொன்று தொட்டு, மரபு வழியாக ஆடப்பட்டு வரும் விளையாட்டுகளை நாட்டுப்புற விளையாட்டுகள் எனலாம்.
நாட்டுப் புறங்களில் மட்டும்தான் விளையாட்டுகள் இருக்கின்றனவா நகர்ப் புறங்களில் இதுபோன்ற விளையாட்டுகள் ஆடப்படுவது இல்லையா என்று உங்கள் மனத்தில் எழும் வினா கேட்கிறது. உங்கள் ஐயத்தையும் இப்பொழுதே தீர்த்து வைத்துவிடலாம். தொன்று தொட்டு, மரபு வழியாக என்று கூறினேனல்லவா, இது நகர்ப்புற விளையாட்டுகளுக்குப் பொருந்தாது; நாட்டுப்புற விளையாட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? இந்த நாட்டுப்புற விளையாட்டுகள் அந்தந்தப் பகுதி மண்ணின் மணத்தோடும் மரபோடும் இன்றுவரை ஆடப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும். கண்டும் கேட்டும் ஆடியும் பாடியும் குரு இல்லாத, சீடரைப்போல் வளர்ந்து, இடம்விட்டு இடம் நகர்ந்தும் மணம் பரப்பியும் இவை வந்துள்ளன. இந்த விளையாட்டுகள், என்று பிறந்தவை? யாரால் உருவாக்கப்பட்டவை? – என்பது போன்ற வினாக்களுக்கு விடை காண முடியாத தொன்மை உடையவை.
உள்ளடக்கம்
நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை நிலை, சமூக உணர்வு, குழு மனப்பான்மை, பண்பாடு, பழக்க வழக்கங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியவையாக, மக்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் நிலைக்களன்களாக, நாட்டுப்புற விளையாட்டுகள் விளங்குகின்றன. காலங்களைத் தாண்டித் தம் இருப்பைக் காட்டிவரும் நாட்டுப்புற விளையாட்டுகளில் பொதுக் கூறுகள் சில இயல்பாகவே அமைந்துள்ளன.
விளையாடக் கூடிவிட்டனர் வேடிக்கைச் சிறுவரெல்லாம். பட்டு(தொட்டு) வருவது யார்? அதையும்தான் பார்த்துவிடுவோமே.
தப்பா ஒண்ணு
தவளை ரெண்டு
குச்சி மூணு
பிஸ்கோத்து நாலு
தேளு அஞ்சு
தேளுக்குட்டி ஆறு
வைக்கக் கடலை
வாழைத் தோப்பு
சுண்டக் கடலை
சுருங்கி விழு !
இது பட்டு வருபவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பாடப் பெறும் பாடல். விளையாட்டில் கலந்து கொள்ளும் அனைவரையும் நெருங்கி வட்டமாக நிற்க வைத்து ஒருவர் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு, ஒவ்வொருவராகத் தொட்டுக் கொண்டே வருவார். இறுதியில் சுருங்கி விழு என்று சொல்லி யாரைத் தொடுகின்றாரோ, அவர் பட்டுவர வேண்டும். இதே போன்று வேறு சில பாடல்களும் உள்ளன. இந்த முறையில் மட்டுமின்றி சாட் பூட் திரி, காயா? பழமா?, ஒத்தையா? ரெட்டையா? போன்ற வேறு முறைகளும் பட்டு வருபவரைத் தேர்ந்தெடுப்பதற்கு வழக்கத்தில் உள்ளன.
கட்சி பிரித்தல்
குழு விளையாட்டுகளில் கட்சி பிரித்து ஆடும் முறை காணப்படுகிறது. உத்தி பிரித்தல், அணி பிரித்தல் என்றும் இது கூறப்படுவது உண்டு. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தலைவர் நியமிக்கப்படுவார். தங்கள் கட்சிக்கான விளையாட்டு உறுப்பினர்களைத் தலைவர்களே தேர்ந்தெடுப்பர். தலைவர்கள் தவிர்த்த ஏனையோர் உத்தி உத்தியாகப் (இருவர் இருவராக) பிரிந்து வந்து, சிங்கம் வேண்டுமா? யானை வேண்டுமா?, தாமரைப் பூ வேண்டுமா? மல்லிகைப் பூ வேண்டுமா? என்று தலைவர்களிடம் கேட்பர். தலைவர்கள் எப்பெயரை விரும்புகின்றனரோ அப்பெயருக்கு உரியவர்கள் அந்தந்தத் தலைவரின் கட்சியில் இடம் பெறுவர். இரு கட்சியாகப் பிரிந்த பின்னர் விளையாட்டுத் தொடங்கப்படும்.
விளையாட்டினைத் தொடங்கும் முறை
இரு கட்சியினராகப் பிரிந்த நிலையில் எந்தக் கட்சி முதலில் விளையாடத் தொடங்குவது என்பதை முடிவு செய்வதற்குச் சில தேர்வு முறைகள் பின்பற்றப் படுவதுண்டு. இதனையே தற்பொழுது டாஸ் போடுதல் என்று கூறுகிறோம். உடைந்த ஓட்டில் எச்சில் தடவி உயரே போட்டுப் பார்த்தல், நாணயத்தைச் சுண்டிவிட்டுப் ‘பூவா? தலையா?’ பார்த்தல் ஆகிய முறைகள் பின்பற்றப் படுவதுண்டு. நவீன விளையாட்டுகளிலும் இம்முறை பின்பற்றப்பட்டு வருவதைக் காணலாம்.
விளையாட்டினை இடையில் நிறுத்துதல்
விளையாட்டு நிகழும் போது இடையில் நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தூவாச்சி, பாஸ் என்று கூறிச் சிறிது இடைவெளி விட்டுப் பின் மீண்டும் ஆட்டத்தைத் தொடருவதுண்டு. நவீன விளையாட்டுகளில் Time Pass கேட்கும் முறை இருப்பதைக் காணலாம்.
தோற்றவரின் நிலை
விளையாட்டின் இறுதியில் யாராவது தோற்க நேர்ந்தால்
தோத்தான் தொம்பான்
சோறு போட்டாத் திம்பான்
என்று கேலி செய்து பாடுவதுண்டு. சில விளையாட்டுகளில் தோற்றவர் மேல் குதிரை ஏறுதல், தலையில் குட்டுதல், கோலிக் குண்டைக் கை முட்டியால் தரை மீது தேக்கச் செய்தல், பாடிக் கொண்டே குறிப்பிட்ட தூரம் வரை ஓடித் திரும்பச் செய்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படுவது உண்டு. இத்தகைய தண்டனைகள் இழிவாகக் கருதப்படுவது இல்லை. தண்டனைகளே தனி விளையாட்டுப்போல் அமைவதும் உண்டு.
நேர்மை, மதிப்பு, விதிமுறை
மேற்கூறியவை தவிர விளையாட்டில் பங்கு பெறுவோர் நேர்மையாக நடத்தல், உடன் ஆடுவோர், எதிர்த்து ஆடுவோர், நடுவர், பார்வையாளர் ஆகியோரை மதித்தல், விளையாட்டு விதிமுறைகளுக்குக் கட்டுப்படுதல் போன்றவையும் விளையாட்டில் கடைப்பிடிக்கத் தக்கவையாகும். விளையாட்டில் இவ்வளவு விசயங்கள் இருக்கின்றனவா என்று கேட்கத் தோன்றுகின்றதா? விளையாட்டு வேடிக்கையானது மட்டுமல்ல; விவேகமானதும் கூட. இனி, விளையாட்டுகளைப் பார்ப்போம்.
விளையாட்டுகள் கீழ்க்காணும் அடிப்படைகளில் வகைப்படுத்தப் படுகின்றன.
கால அடிப்படை
* வேனிற் காலம் * மழைக் காலம்
* வேனிற் கால விளையாட்டுகள்:
புளியங் கொட்டை விளையாட்டுகள், கிட்டிப் புள், பச்சைக் குதிரை, பந்து, கபடி, காற்றாடி, கள்ளன்-போலீஸ், கண்ணாமூச்சி, எலியும் பூனையும், பூசணிக்காய் விளையாட்டு, பல்லாங்குழி, தாயம், பம்பரம், கும்மி, கோலாட்டம்.
* மழைக் கால விளையாட்டுகள்:
பல்லாங்குழி, தாயம், தட்டா மாலை, ஆடுபுலி ஆட்டம், சில்லுக் கோடு, கொழுக்கட்டை.
ஆடுகளம்
* வீட்டிற்கு உள்ளே (அக விளையாட்டுகள்) வீட்டிற்கு வெளியே (புற விளையாட்டுகள்)
* பல்லாங்குழி, தாயம், தட்டா மாலை, ஒத்தையா? ரெட்டையா?, கரகர வண்டி, ஆடுபுலி ஆட்டம், கொழுக்கட்டை ஆகியவை அக விளையாட்டுகள்.
பம்பரம், கிட்டிப் புள், கபடி, சில்லுக் கோடு, பந்து, காற்றாடி, கள்ளன்-போலீஸ், பச்சைக் குதிரை, கும்மி, கோலாட்டம் ஆகியவை புற விளையாட்டுகள்.
கருவிகள்
ஒரு கருவி ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகள்
பம்பரம், பந்து, பட்டம், காற்றாடி, சில்லுக் கோடு, ஒத்தையா? ரெட்டையா?, தட்டா மாலை,
கிட்டிப் புள், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், உறியடி, தாயம், நொண்டி கோலாட்டம்.
பங்குபெறுவோர்
தனி நபர் இருவர் குழு
சீதைப் பாண்டி, பட்டம், காற்றாடி, கரகர வண்டி.
பல்லாங்குழி, தாயம், பிஸ்ஸாலே, சில்லுக் கோடு, ஆடுபுலி ஆட்டம், கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், ஒத்தையா? ரெட்டையா?, கொழுக்கட்டை.
பச்சைக் குதிரை, பம்பரம், கபடி, கண்ணாமூச்சி, பூசணிக்காய், எலியும் பூனையும், ஒருகுடம் தண்ணி ஊத்தி, குலைகுலையா முந்திரிக்காய், கள்ளன்-போலீஸ், எறிபந்து, கும்மி, கோலாட்டம், சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம்.
பால் மற்றும் வயது
ஆண்கள் இருபாலர் பெண்கள்
* சிறுவர் சிறுமியர்
ஆடுபுலி ஆட்டம், கபடி, சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம், சிலம்பாட்டம், வண்டிப் பந்தயம்.
பல்லாங்குழி, தாயம், சில்லுக் கோடு, தட்டா மாலை, கும்மி, கோலாட்டம், பாண்டி.
* கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை, பந்து, பச்சைக் குதிரை, பம்பரம், புளியங் கொட்டை, கபடி, கள்ளன் போலீஸ்.
கண்ணா மூச்சி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி.
கரகர வண்டி, சில்லுக் கோடு, பூப்பறிக்க வருகிறோம், கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், பல்லாங்குழி, கொழுக்கட்டை, நொண்டி.
பாடல்
பாடல் உள்ளவை பாடல் இல்லாதவை
ஒரு குடம் தண்ணி ஊத்தி, பூப்பறிக்க வருகிறோம், குலைகுலையா முந்திரிக்காய், பிஸ்ஸாலே, கண்ணா மூச்சி, கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், கபடி, கொழுக்கட்டை, கும்மி, கோலாட்டம்.
பல்லாங்குழி, தாயம், ஒத்தையா? ரெட்டையா?, ஆடுபுலி ஆட்டம், சல்லிக்கட்டு, உறியடி, வழுக்கு மரம்.
திறன்
உடல் திறன் அறிவுத்திறன் வீர விளையாட்டு
கபடி, சிலம்பாட்டம், உறியடி, வழுக்கு மரம், இளவட்டக் கல், பச்சைக் குதிரை, கும்மி, கோலாட்டம்.
பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம்
சல்லிக் கட்டு.
செயல்கள்
ஓடுதல் பிடித்தல் தொடுதல் ஒளிதல் தேடுதல் கண்டு பிடித்தல்
பந்து, கிட்டிப்புள், கள்ளன்-போலீஸ்
கள்ளன்-போலீஸ், எலியும் பூனையும், நொண்டி, கபடி.
கண்ணா மூச்சி, கள்ளன்-போலீஸ், கபடி, நொண்டி.
கள்ளன்-போலீஸ், கண்ணா மூச்சி
கள்ளன்-போலீஸ், எறிபந்து, கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்
கண்ணா மூச்சி, கள்ளன்-போலீஸ்
வரைபடம்
* வரைபடம் உள்ளவை வரைபடம் இல்லாதவை
* தாயம், ஆடுபுலி ஆட்டம், சில்லுக் கோடு, நொண்டி, கபடி.
பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், கண்ணா மூச்சி, பச்சைக் குதிரை, சல்லிக் கட்டு, உறியடி.
மேற்கூறிய வகைப்பாடுகள் அன்றி நேரம், நடுவர், பார்வையாளர், உடல் உறுப்பு என்ற முறையிலும் பலவாறு வகைப்படுத்தலாம்.
நாட்டுப்புற விளையாட்டுகளை எவ்வாறு வகைப்படுத்தினாலும் விளையாட்டின் முக்கியக் கூறுகளான உடல் திறனும் அறிவுத் திறனும் அனைத்து விளையாட்டுகளிலும் இடம்பெற்று இருப்பதைக் காணலாம்.
ஓடி விளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
மாலை முழுதும் விளையாட்டு என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா
என்று பாரதியார் அறிவுறுத்துவதைப் போல் மாலை நேரமானதும், ஊர்ப் பொது மரத்தில் பறவைகளெல்லாம் ஒன்றுகூடி ஆரவார ஒலி எழுப்புவதைப் போல், இளையோர் எல்லாரும் கூடி ஆர்ப்பரித்து விளையாடும் காட்சி காண்போரையும் மகிழச் செய்வதாகும்.
இளவயதினர் எல்லாரும் ஓரிடத்தில் வந்து கூடி விளையாட்டைத் தீர்மானிக்கின்றனர். விளையாட்டின் தன்மைக்கேற்ப வீடும் வீதியும் ஊர் மந்தையும் விளையாட்டுக் களமாகின்றன. இவர்களின் விளையாட்டுக்களம் மிகவும் விரிந்தது. தனியாக, இருவராக, குழுவாக இணைந்து விளையாடி மகிழ்கின்றனர். இளையோர் விளையாட்டுகள் பெரும்பாலும் குழு நிலையில் அமைந்து அனைவரையும் தம்பால் இணைத்துக் கொள்ளும் விரிந்த தளத்தைக் கொண்டவையாக உள்ளன.
எந்தவோர் ஆசிரியரின் உதவியுமின்றி இளையோர்களே கூடித் தீர்மானிக்கும் அவர்தம் விளையாட்டுகளில், கற்பனைத் திறனும் சிந்தனையாற்றலும் நடிப்புத் திறனும் அபரிமிதமான சக்தியும் வெளிப்படுகின்றன. இவ்விளையாட்டுகள் பொழுதுபோக்கு நிலையில் அமைந்தாலும் மன மகிழ்ச்சியையே அடிப்படையாகக் கொண்டவை. பெரியோரது விளையாட்டுகளில் இதனைக் காண்பதரிது.
இது நீங்களும் கடந்து வந்த பருவம்தான். எங்கே உங்களது இளமைக் கால நினைவுகளை நினைத்துப் பாருங்கள் !
இளையோர் விளையாட்டுகள் சிறுவர் விளையாட்டுகள், சிறுமியர் விளையாட்டுகள், இருபாலரும் ஆடும் விளையாட்டுகள் என்று வகைப்படுத்தி இங்கு விளக்கப்படுகின்றன.
சிறுவர்கள் பச்சைக் குதிரை, பம்பரம், கிட்டிப்புள், பந்து, கோலிக் குண்டு, புளிய முத்து, கபடி, கள்ளன் போலீஸ் போன்ற விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். சான்றாகப் பச்சைக் குதிரை விளையாட்டு எவ்வாறு ஆடப்படுகிறது என்று காண்போம்.
பச்சைக் குதிரை
விளையாட்டின் தொடக்கத்தில் பட்டு வருபவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வர். பட்டு வருபவர் காலை நீட்டித் தரையில் குறுக்காக அமர்ந்து கொள்ளவேண்டும். விளையாட்டில் பங்குகொள்ளும் ஏனைய சிறுவர்கள் நீ்ட்டிய காலில் படாமல் குதித்துத் தாண்ட வேண்டும். பின்னர் கால் மேல் கால், கால் மேல் கை, கை மேல் கை என்று அமர்ந்திருப்பவர் உயரத்தைக் கூட்டிக்கொண்டே வருவார். அந்த உயரங்களையும் தாண்டிவிட்டால் அமர்ந்தவர் எழுந்து குனிந்து நிற்பார். அதையும் அவர் முதுகில் கை ஊன்றித் தாண்ட வேண்டும். அதிலும் உயரம் கூடிக் கொண்டே போகும். யாரால் குறிப்பிட்ட உயரத்தைத் தாண்ட முடியவில்லையோ அவர் தோற்றவராகக் கருதப்படுவார். தோற்றவர் தரையில் அமர்ந்து காலை நீட்ட வேண்டும். மறுபடியும் ஆட்டம் தொடரும், சிறுவரது உடல் திறனைக் காண்பதற்குரிய விளையாட்டாக இது அமையும். நவீன விளையாட்டுகளில் ஒன்றான உயரத் தாண்டுதல் (
கபடி
சிறுவர்கள் ஆடும் கபடி விளையாட்டும் மிகச் சிறந்த உடல் திறன் விளையாட்டாகும். உடல் திறனோடு மூச்சுப் பயிற்சியை வளர்க்கும் களமாகவும் இது விளங்குகிறது.
ஓடுதல், தாவுதல், குதித்தல், வளைதல், தாண்டுதல், சுழலுதல் போன்ற செயல்களை உள்ளடக்கியனவாகச் சிறுவர் விளையாட்டுகள் அமைந்து காணப்படுகின்றன.
சிறுமியரின் பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டு ஆடப்படும் முறை குறித்துத் தெரிந்து கொள்வோமா?
பூப்பறிக்க வருகிறோம்
சிறுமியர் குழுவாக இணைந்து ஆடும் விளையாட்டு இது. சிறுமியர் பூக்குழு, பூப்பறிக்கும் குழு என இரு குழுக்களாகப் பிரிந்து எதிர்எதிர் வரிசையில் நின்று கொள்வர். பூக்குழுவில் இடம்பெறும் சிறுமியர் ஒவ்வொருவரும் ஒரு பூவின் பெயரைத் தங்களுக்குச் சூட்டிக் கொள்வர் (சிலர் தங்கள் பெயருக்குப் பின்னால் தேவி பூ, கமலா பூ, எழில் பூ என்று சூட்டிக் கொள்வதும் உண்டு). யார் யார் எந்தப் பூவின் பெயரைச் சூட்டியுள்ளனர் என்பது பூப்பறிக்கும் குழுவிற்குத் தெரியாது. பூப்பெயர் தெரியாத நிலையில் தேவி பூ, கமலா பூ என்று பெயரைக் குறிப்பிட்டே அழைப்பதும் உண்டு. பூப்பறிக்கும் குழுவினருக்குத் தனிப் பெயர் சூட்டப்படுவதில்லை.
பூப்பறிக்க வருகிறோம்
முதலில் பூப்பறிக்கும் குழு எதிர்வரிசையில் நிற்கும் பூக்குழுவை நோக்கி, “பூப்பறிக்க வருகிறோம்”, “பூப்பறிக்க வருகிறோம்” என்று பாடிக் கொண்டே முன்னேறிச் செல்வர். பின்பு பூக்குழுவினர் “எந்தப் பூவைப் பறிக்கிறீர்?” “எந்தப் பூவைப் பறிக்கிறீர்?” என்று பாடிக் கொண்டு முன்னோக்கி வருவர். பூக்குழு முன்னோக்கி வரும்போது பூப்பறிக்கும் குழுவினர் பின்னோக்கிச் செல்வர். மீண்டும் பூப்பறிக்கும் குழுவினர் “தேவி பூவைப் பறிக்கிறோம்”, “தேவி பூவைப் பறிக்கிறோம்” என்று பாடிக் கொண்டு முன்னோக்கிச் செல்வர். இப்படியாக இரு குழுவினரும் பாடிக் கொண்டே முன்னோக்கியும் பின்னோக்கியும் சென்று வருவர்.
இறுதியில், பறிக்கப் போகும் பூ அடையாளப் படுத்தப்பட்டவுடன் அடையாளப் படுத்தப்பட்ட சிறுமியும் பூவைப் பறிக்கும் குழுவிலிருந்து ஒரு சிறுமியும் முன்னால் வந்து எதிர்எதிர் நின்று கொள்வர். குழுவிலுள்ள ஏனையோர் ஒருவர் பின் ஒருவராகக் கயிறு இழுக்கும் போட்டியில் நிற்பதைப் போல் நின்று கொள்வர். பின் பூப்பறிக்கும் குழுவினர் தாங்கள் விரும்பிய பூவைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொள்வர். பூவைப் பறித்துத் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு மீண்டும் விளையாட்டைத் தொடருவர். கடைசிப் பூவைப் பறிக்கும் வரை விளையாட்டுத் தொடர்ந்து கொண்டே இருக்கும். (இவ்விளையாட்டில் இடம்பெறும் பாடல் விளையாட்டுப் பாடல்கள் என்னும் பகுதியில் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.)
பூக்களின் பெயர்களை அறிதல், மாதங்களின் பெயர்களை அறிதல், இழுவைப் போட்டி, உடல் திறன் என்று மகிழ்ச்சியாக இவ்விளையாட்டு ஆடப்பெறும்.
பூப்பறித்தல்
சிறப்பு
சிறுமியர் விளையாட்டில் ஓடுதல், குதித்தல், சுழலுதல், நொண்டுதல், பாடுதல் என்ற செயல்கள் முதன்மையாய் அமைகின்றன. மேலும், கீழ்ப்படிதல், பொறுப்புடன் நடந்து கொள்ளுதல், பாதுகாப்புணர்வு போன்றவற்றின் பயிற்சிக் களமாகவும் சிறுமியர் விளையாட்டுகள் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
சிறுமியர் விளையாட்டுகள்
எலியும் பூனையும் விளையாட்டில் பங்கு பெறுவோர் வட்டமாக நின்று கொள்ள வேண்டும். அவர்களில் ஒருவர் எலியாகவும் ஒருவர் பூனையாகவும் நடிக்க வேண்டும். எலியாக நடிப்பவர் வட்டத்திற்கு உள்ளேயும் பூனையாக நடிப்பவர் வட்டத்திற்கு வெளியேயும் இருக்க வேண்டும். இப்பொழுது பூனை, “எலி என்னா செய்யுது?” என்ற வினாவோடு பாடலைத் தொடங்கும். அதற்கு வட்டத்தில் நிற்போர் “தூங்குது”என்று பதில் கூற வேண்டும். மீண்டும் “எலி என்னா செய்யுது?” என்று பூனை கேட்கும். தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும். எலியின் செயல்களுக்கு ஏற்ப வட்டத்தில் உள்ளோர் “எழுந்திரிக்கிது, பல் தேய்க்கிது, சாப்பிடுது, சட்டை போடுது” என்று பதில் கூறிக் கொண்டே வரவேண்டும். கடைசியாக “வெளியே வரப் பாக்குது” என்று கூறியவுடன் பூனை எலியைப் பிடிக்கத் தயாராகிவிடும். பூனை வட்டத்திற்கு உள்ளே வந்துவிட்டால் எலி வெளியே ஓடி விடும். பூனை வெளியே வந்தால் எலி வட்டத்திற்குள் ஓடிவிடும். வட்டத்தில் நிற்போர் எலிக்கு ஆதரவாகச் செயல்படுவர். அதையும் மீறிப் பூனை எலியைப் பிடித்துவிட்டால் ஆட்டம் முடிந்துவிடும். பின் வேறு இருவர் எலியும் பூனையுமாக மாறி விளையாட்டைத் தொடருவர். யார் திறமையானவர் எலியா? பூனையா? – என்று பலம் பார்ப்பதும், சிறியோரின் நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதும் இந்த விளையாட்டின் அடிப்படையாகும். என்ன ! கார்ட்டூன் தொலைக்காட்சியில் டாம் அண்டு ஜெர்ரி (Tom & Jerry) பார்ப்பதைப்போல் இருக்கிறதா? இந்த எலியும் பூனையும் விளையாட்டே Tom & Jerry என்று உறுதியாகக் கூறலாம்.
இருபாலர் விளையாட்டுகள் போலச்செய்தல் என்ற பண்பைக் கொண்டவையாகவும் நடிப்புக் கூறுகளை உள்ளடக்கியவையாகவும் அமைந்துள்ளன. கூடியாடும் உணர்வையும் பெருமகிழ்ச்சியையும் ஊட்டும் இவ்விளையாட்டுகளில் பாலினப் பாகுபாடு (ஆண் பெண் பேதம்) தோன்றுவதில்லை. ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினம்தான் என்ற சமத்துவத் தத்துவத்தைப் பறை சாற்றுவனவாக இருபாலர் விளையாட்டுகள் உள்ளன. உண்மைதானே சகோதர, சகோதரிகளே?
கபடி, சிலம்பம், சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம், வண்டிப் பந்தயம், புலியாட்டம், ஆடுபுலியாட்டம், மான்கொம்பாட்டம், சுருள்கத்தி சுழற்றுதல், வடம் இழுத்தல் போன்ற விளையாட்டுகள் ஆடவர் விளையாட்டுகளாக நாட்டுப்புற மக்கள் மரபில் இன்றும் ஆடப்பெற்று வருகின்றன.
கபடி விளையாட்டு
சடுகுடு, பலிஞ்சடுகுடு, கபடி என்றெல்லாம் கபடி விளையாட்டு அழைக்கப்படுகிறது. இது இளைஞர்களும், சிறுவர்களும் விரும்பி ஆடும் போட்டி விளையாட்டு ஆகும்.
கிராமத்து மந்தைகளிலும் ஆற்று மணலிலும் இவ்விளையாட்டு ஆடப்படும். இது விதிமுறைகளுடன் கூடிய விளையாட்டு ஆகும். ஆடுவோர் இரு அணியினராகப் பிரிந்து அணிக்கு ஏழு பேராகவோ, ஒன்பது பேராகவோ, சேர்ந்து ஆடுவர். பாடிச் செல்வது கபடி விளையாட்டின் அடிப்படையாகும். முதல் அணியைச் சேர்ந்தவர் பாடிக் கொண்டே இரண்டாம் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று, ஒருவரையோ, இருவரையோ தொட்டு வெளியேற்றி வரவேண்டும். அதேபோல் இரண்டாம் அணியினரும் செய்ய வேண்டும். எந்த அணி அதிகப் புள்ளிகள் எடுக்கின்றதோ அது வெற்றி பெற்றதாகக் கருதப்படும். கபடி விளையாட்டு இன்று உலகம் முழுவதும் பரவி ஒலிம்பிக்கில் இடம்பெறும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
எல்லைக்கோடு
ஏறுகோடு
நடுக்கோடு
ஏறுகோடு
எல்லைக்கோடு
கபடிப் பாடல்கள்
நாந்தான் வீரன்டா
நல்லமுத்து பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா
தங்கச் சிலம்பெடுத்துத்
தாலிகட்ட வாரன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு.
கீத்து கீத்துடா
கீரைத் தண்டுடா
நட்டு வச்சன்டா
பட்டுப் போச்சுடா
போச்சுடா போச்சுடா…..
சிலம்பாட்டம்
தமிழக நாட்டுப்புற மக்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக விளங்கும் கருவி விளையாட்டு சிலம்பாட்டம் ஆகும். சிலம்பு விளையாட்டு, குச்சி விளையாட்டு, கம்பு விளையாட்டு, சிலம்புக்கலை என்றும் இது வழங்கப்படும். சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள் உண்டு. கம்புகளை மாறிமாறி அடித்து ஒலி எழுப்புவதால் சிலம்பம், சிலம்பாட்டம் எனப்பெயர் பெற்றது எனலாம். இது தற்காப்புக் கலையாகவும் போர்க் கலையாகவும் விளங்குகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் ஆகும். சிலம்பாட்டம் கற்றுக் கொடுக்கச் சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்கள் சிலம்பாட்டம் விளையாடும் போது, பார்ப்பதற்கு ஆர்வமாகவும் வியப்பாகவும் இருக்கும். ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் இன்று சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர்.
பொங்கல் திருவிழா, கோயில் விழாக்கள், ஊர்வலங்கள் இவற்றில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும்.
வழுக்கு மரம்
ஆடவரின் உடல் திறனைச் சோதிப்பது வழுக்கு மரம் விளையாட்டு ஆகும். நன்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்ட உயரமான மரம் நடப்படும். அதனை மேலும் வழுவழுப்பாக்கப் பலவிதமான எண்ணெய்கள் திரும்பத் திரும்பத் தடவப்படும். மரத்தின் உச்சியில் பண முடிப்பு வைக்கப்படும். வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பண முடிப்பை எடுக்கும் திறன் உள்ளவர் யார் என்பதைக் கண்டறிவதுதான் போட்டி. அவ்வளவு எளிதாக அந்தப் பண முடிப்பை எடுத்துவிட முடியாது. இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இப்போட்டியில் கலந்து கொள்வார்கள். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு இவ்விளையாட்டைக் கண்டு களிப்பார்கள். வழுக்கு மரத்தில் ஏறிப் பண முடிப்பை எடுக்கும் இளைஞர் சிறந்த வீரராகக் கருதப்படுவார். அவருக்கு மேலும் பணமும் பாராட்டுகளும் கிடைக்கும். தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கிராமப் புறங்களில் இவ்விளையாட்டு நடத்தப்படும்.
வழுக்கு மரம்
ஆடுபுலி ஆட்டம்
ஆடவரால் விளையாடப்படும் வரைபட ஆட்டம் ஆடுபுலி ஆட்டம் ஆகும். இது பதினைந்தாம் புள்ளி என்றும் வழங்கப்படும். அறிவுத் திறனை வளர்க்கக் கூடிய இந்த விளையாட்டிற்கு இருவர் வேண்டும்.
ஒருவர் ஆடுகளின் சார்பாகவும், ஒருவர் புலியின் சார்பாகவும் விளையாட வேண்டும். மண் தரையிலோ அல்லது கல், சாந்துத் தரையிலோ ஆட்டத்திற்குரிய வரைபடத்தை வரைந்து கொள்ள வேண்டும். ஆடுகளின் சார்பாக விளையாடுபவர் பதினைந்து காய்களையும் (கற்கள் அல்லது புளியங் கொட்டை) புலியின் சார்பாக விளையாடுபவர் மூன்று காய்களையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஆடுகளுக்குரிய காய்களை வைத்துக் கொண்டே வரவேண்டும். அப்பொழுது புலி ஆடுகளி்ன் இருப்பு முறைக்கேற்ப நகர்ந்து கொண்டும் ஆடுகளை வெட்டிக் கொண்டும் வரும். புலி நகர முடியாத அளவிற்கு ஆடுகள் சுற்றி வளைத்துக் கொண்டால் புலி தோற்றதாகக் கருதப்படும். ஆடுகள் அனைத்தையும் புலி வெட்டிவிட்டால் புலி வெற்றி பெற்றதாகக் கருதப்படும். ஆடுவோரின் திறமையைப் பொறுத்து ஆட்டத்தின் காலம் நீளும்.
அறிவுக் கூர்மைக்கும் சிந்தனையை ஒருமுகப் படுத்துவதற்கும் இவ்விளையாட்டு சிறந்த பயிற்சியாகும். இந்தோனேசியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் இவ்விளையாட்டு உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
உறியடி விளையாட்டில் ஆடவரின் உடல்திறன் எவ்வாறு வெளிப்படுகிறது என்று காண்போம். வைணவக் கோயில் திருவிழாக்களில் உறியடித்தல் என்னும் சடங்கு, வழிபாட்டின் ஓர் அங்கமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. ஆயர் பாடியில் கண்ணன் வெண்ணெய் திருடி விளையாடியதை நினைவு கூரும் வகையில் உறியடித்தல் சடங்கு நடத்தப் படுவதாகக் கூறப்படுகிறது.
உறியடி
வடிவில் மூங்கில் கழிகள் நடப்பட்டிருக்கும். கழியின் மையப் பகுதியில் ஓர் உருளையும் அதன்வழி ஒரு கயிறும் தொங்கவிடப்பட்டிருக்கும். கயிற்றின் ஒரு முனையில் ஒரு மண் பானையைக்கட்டி, மறு நுனியை ஒருவர் பிடித்துக் கொள்வார். அந்தப் பானையினுள் வண்ணக் கலவை நீர் நிரப்பப் பட்டிருக்கும். இப்பொழுது அந்தப் பானையைக் கம்பு கொண்டு அடித்து உடைக்க வேண்டும். இது எளிதான செயல்தானே என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். அது அவ்வளவு எளிதான செயலன்று. ஏனென்றால் பானையை உடைக்க முன்வருபவர் கண்ணைக் கட்டிக் கொள்ள வேண்டும். கண்ணைக் கட்டி இரண்டு மூன்று முறை அவரைச் சுற்றி விட்ட பின்பே கையில் கம்பைக் கொடுத்து அனுப்புவர். இந்நிலையில் அவர் எந்தத் திசையில் நிற்கின்றார் என்று அவருக்கே தெரியாது.
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல என்று கூறுவார்களே அந்த நிலைதான் அவருக்கு. அந்த நிலையையும் தாண்டி அவர் பானை அருகில் வந்துவிட்டால் பானை மேலும் கீழும் இழுத்து விடப்படும். இந்தத் தடைகளை எல்லாம் மீறி அவர் பானையை உடைத்து வெற்றி பெற வேண்டும். வேறு சில இடங்களில் கண்ணைக் கட்டாமல் ஒரு காலை மட்டும் மடக்கிக் கட்டி நொண்டியடித்துக் கொண்டே பானையை உடைக்க வேண்டும். பானையை உடைக்க விடாமல் சுற்றியிருப்போர் அவர் மீது மஞ்சள் நீரை ஊற்றுவர். இதுபோன்ற தடைகளை எல்லாம் மீறிப் பானையை உடைப்பவருக்குப் பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்படும். உறியடி விளையாட்டின் போது ஊரே திரண்டுவிடும். உற்சாகம் கரை புரண்டோடும்.
நாட்டுப்புற மரபில் வீர விளையாட்டாகக் கருதிப் போற்றப்படுவது சல்லிக் கட்டு ஆகும். தமிழர் திருநாளாம் தைத்திருநாளின் ஓர் அங்கமாக ஊர்கள் தோறும் சல்லிக் கட்டு வெகு விமரிசையாக நடத்தப்படுவதுண்டு. எருது கட்டு, மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல், மாடு பிடித்தல் என்று பல பெயர்களில் வழங்கப் பெறும் இவ்விளையாட்டினைப் பார்ப்போம்.
முரட்டுக் காளைகளை விரட்டிப் பிடித்து வீரத்தை வெளிப்படுத்தும் போட்டி விளையாட்டாக, சல்லிக் கட்டு நிகழ்த்தப் படுகின்றது. சல்லிக் கட்டில் பயன்படுத்துவதற்கு என்றே காளைகள் வளர்க்கப்பட்டு, அவற்றிற்குப் பயிற்சி அளிக்கப் படுகின்றது. இவ்வாறு பயிற்சி பெற்ற காளைகள் சல்லிக் கட்டு நடைபெறும் இடங்களுக்கு அழைத்து வரப்பட்டு, போட்டிக்கு விடப்படுகின்றன. காளைகள் வாடி வாசல் என்ற பகுதியிலிருந்து வெளிக்கிளம்பி எதிர்ப்பட்டோரை எல்லாம் முட்டித் தள்ளியும் மிதித்தும் ஓடிவரும்.
காளைகளின் போக்கை அறிந்த, காளைகளைப் பிடிக்கப் பயிற்சி பெற்ற, காளைகளின் சாகசம் அறிந்த இளைஞர்கள் சீறிவரும் காளைகளின் மீது துணிச்சலாகப் பாய்ந்து திமிலை இறுகப் பற்றியோ, கொம்பைப் பிடித்து மடக்கியோ அடக்குவர். அனுபவமில்லாத சிலர் காளைகளால் காயப்படுவதுமுண்டு. காளைகளைப் பிடித்து அடக்கியோருக்குப் பலவிதமான பரிசுகள் வழங்கப் பெறும்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சல்லிக் கட்டு மிகவும் பிரபலம். பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா நல்லூரில் ஆண்டு தோறும் சல்லிக் கட்டு விழாவைத் தமிழக அரசே ஏற்று நடத்துகிறது. உலகின் பல நாடுகளிலும் காளைகளோடு தொடர்புடைய விளையாட்டுகள் நிகழ்த்தப்பட்டு வந்தாலும், தமிழரின் மறப் பண்பாட்டைப் பறை சாற்றும் சல்லிக் கட்டு தனிச் சிறப்புடையது என்பதைப் பார்த்தோர் அறிவர்.
சல்லிக் கட்டு
பல்லாங்குழி என்பது பதினான்கு குழி, பரல்+ஆடும்+குழி = பரலாடும் குழி, பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்றும் பாண்டி விளையாட்டு என்றும் வழங்கப் படுகிறது. சீதைப் பாண்டி என்பது ஒருவர் மட்டுமே தனித்து ஆடும் பல்லாங்குழி விளையாட்டு ஆகும். இது மிக அரிதாகவே ஆடப்படுகிறது.
இருவர் சேர்ந்து ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் மரம், இரும்பு, வெண்கலத்தாலான பல்லாங்குழிகள் பயன்படுத்தப்படும். இதில் பதினான்கு குழிகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏழு குழிகள் என்று பிரித்துக் கொண்டு எதிர்எதிர் அமர்ந்து ஆட வேண்டும். குழிகள் ஒவ்வொன்றிலும் ஐந்து ஐந்து காய்கள் (புளியங் கொட்டைகள்) இட்டு நிரப்பப்படும். முதலில் ஆடுபவர் ஏதாவதொரு குழியில் உள்ள காய்களை எடுத்துப் பிரித்து விளையாடத் தொடங்குவார். அவ்வாறு பிரித்து விளையாடி வரும்போது குழி வெறுமையாக இருந்தால் அந்தக் குழியைத் துடைத்து அடுத்த குழியிலுள்ள காய்களை எடுத்துக் கொள்வார். இதனைத் துடைத்து எடுத்தல் என்று கூறுவர். பின் அடுத்தவர் ஆடத் தொடங்குவார். இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் ஆடிக் கொண்டு வரும்போது காய்கள் அனைத்தும் ஒருவருக்கே சொந்தமாகிவிட்டால் ஆட்டம் முடிவுற்றதாகக் கருதப்படும். அனுபவமும் சிந்திக்கும் திறனும் எண்களின் கணிப்பும் இவ்விளையாட்டில் வெற்றியைத் தேடித் தரும்.
பல்லாங்குழி
தாயம்
தாயம் ஒரு வரைபட விளையாட்டு ஆகும். கட்டம் வரைந்து கொண்டு மரம் அல்லது வெண்கலத்தாலான கட்டைகளை உருட்டியோ, சோழிகளைக் கொண்டோ தாயம் விளையாடப்படும். ஆடவர், மகளிர் இருவரும் இவ்விளையாட்டை ஆடுவர். இவ்விளையாட்டைக் குறைந்தது இருவர் ஆட வேண்டும். தாயக் கட்டையை உருட்டும் போது ஓர் எண் மட்டும் விழுந்தால் அது தாயம் எனப்படும். தாயம் விழுந்தால்தான் விளையாட்டைத் தொடங்க முடியும். தாயம் விழுந்த பின் பெருக்கல் குறிகள் உள்ள இடத்தில் காயை வைத்து ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். ஐந்து காய்கள் வரை பயன்படுத்தப்படும். வரைபடத்தில் மையத்தில் உள்ள பெருக்கல் குறியில் யார் காயைச் சென்று சேர்க்கின்றாரோ அவரே வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார். தாயம், பகடை, பரம பதம் ஆகிய விளையாட்டுகள் ஒரே தன்மை உடையவையாகும்.
விளையாட்டுப் பாடல்களை உருவாக்குவோரும் சிறுவர் சிறுமியர்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தி நெறிப்படுத்துவோரும் மகளிராகவே உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
பெண்கள் வட்டமாகச் சுற்றிவந்து பாடிக் கைகுவித்தடிக்கும் விளையாட்டு கும்மி ஆகும்.
நாட்டுப்புறப் பெண்களுக்கே உரிய விளையாட்டாகவும் பெண்களைத் தெய்வ வழிபாட்டுச் சூழலில் ஒன்றிணைக்கும் கருவியாகவும் கும்மி விளையாட்டு விளங்குகிறது. கும்மி நிகழ்த்துதலின் போது பெண்களால் பாடப்படும் பாடல் கும்மிப் பாட்டு என வழங்கப்படுகிறது. கும்மியானது கும்மி கொட்டுதல், கும்மி விளையாட்டு, முளைப்பாரிப் பாட்டு, கும்மி தட்டுதல், கும்மி ஆட்டம் எனப் பலவாறு கூறப்பட்டாலும் கும்மி தட்டுதல், கும்மிப் பாட்டு என்பதே பெருவழக்காக உள்ளது.
கும்மி, திருவிழாக் காலங்களில் இரவு பகல் இருவேளைகளிலும், பிற நாட்களில் நிலவொளியில் பொழுது போக்குக்காகவும் பெண்களால் விரும்பி ஆடப்படுகிறது. பருவமுற்ற பெண்களுக்குச் சடங்கு நிகழ்த்தும் போதும் கும்மி கொட்டுதல் உண்டு.
குலவையிட்டுக் கும்மி ஆட்டத்தைத் தொடங்குவதும் முடிப்பதும் கும்மியின் மரபாக உள்ளது. கும்மியில் கொட்டப்படும் கைத்தாளமே பக்க இசையாகவும் ஆட்டத்தை வழிநடத்தும் கூறாகவும் அமைந்துள்ளது. கைதட்டுதலின் தாள எண்ணிக்கையில் ஒருதட்டுக் கும்மி, இரண்டுதட்டுக் கும்மி, மூன்றுதட்டுக் கும்மி என்று கும்மி ஆட்டங்கள் தரப்படுத்தப் படுகின்றன.
கும்மி விளையாட்டின் போது கும்மி கொட்டும் பெண்கள் பார்வையாளர்களாக மாறுவதும் பார்வையாளர்கள் கும்மி கொட்டுபவர்களாக மாறுவதும் இயல்பான ஒன்றாகும்.
கைகளை உட்புறம், வெளிப்புறம் தட்டிக் கொண்டே கால்களை மாறிமாறி எடுத்து வைத்து வட்டத்தில் முன்னோக்கி நகர்தல், குனிந்து நிமிர்தல், உட்புறமும், வெளிப்புறமும் தட்டுதல் ஆகிய ஆட்டக் கூறுகள் கும்மியில் மேற்கொள்ளப் படுகின்றன.
அம்மன் கோயில் திருவிழாக்களில் முளைப்பாரி எடுப்பது ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தப்படும். அந்நிலையில் கும்மி கொட்டிப் பாடுவதுண்டு.
தானானே தானானே
தானானே தானானே
கும்மியடிக்கிற ரெக்கத்தில
கூட்டமென்னடி பெண்டுகளா
முந்தாங்கி படுது எந்திரிங்க
மூனுபணந்தாரே(ங்) கும்பிடுங்க (தானானே)
கும்மியடிக்கிற ரெக்கத்திலே
கூடியிருக்கிற அண்ணம்மாரே
முந்தாங்கிப்படுது எந்திரிங்க
மூனுபணந் தாரே(ங்) கும்பிடுங்க (தானானே)
(ரெக்கத்திலே = இடத்திலே)
வயது வித்தியாசமின்றி ஆடப்படும் கும்மி விளையாட்டைப் பெண்களும், சிறு தெய்வச் சடங்குகளும், வழிபாடுகளுமே பாதுகாத்து வருகின்றன
மகளிர் விளையாட்டுகள் மன மகிழ்ச்சியையும், பொழுது போக்கையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. பெண்கள் தங்களின் அறிவுத் திறத்தையும், உடல் திறத்தையும், கணித அறிவையும் மேம்படுத்திக் கொள்ள மகளிர் விளையாட்டுகள் வாய்ப்பளிக்கின்றன எனலாம்.
கும்மி
விளையாட்டுப் பாடல்கள் சிலவற்றைக் காண்போம்.
1) சொல் புதிது ; சுவை புதிது ; சொற்கூட்டும் இனிது.
நீயும் நானும் கூட்டு
பாடு ஒரு பாட்டு
சில்லரையை நீட்டு
சிவகாசி வேட்டு
திண்டுக்கல்லுப் பூட்டு
திருப்பித்தலைய ஆட்டு
2) பாட்டு இதோ ; பட்டு வருபவர் யார்? பார்த்துவிடுவோம்.
தத்தலி புத்தலி
மக்கான் சுக்கான்
பாலு பரங்கி
ராட்டினம் பூட்டினம்
சீ சல் ஓடிப்போ
3) இவர்கள் எந்தப் பூவைப் பறிக்க வருகிறார்கள்?
பூப்பறிக்க வருகிறோம் பூப்பறிக்க வருகிறோம்
எந்த மாதம் வருகிறீர்? எந்த மாதம் வருகிறீர்?
ஐப்பசி மாதம் வருகிறோம் ஐப்பசி மாதம் வருகிறோம்
எந்தப் பூவைப் பறிக்கிறீர்? எந்தப் பூவைப் பறிக்கிறீர்?
தேவி பூவைப் பறிக்கிறோம் தேவி பூவைப் பறிக்கிறோம்
யாரை விட்டுப் பறிக்கிறீர்? யாரை விட்டுப் பறிக்கிறீர்?
எழிலை விட்டுப் பறிக்கிறோம் எழிலை விட்டுப் பறிக்கிறோம்
என்று வந்து பறிக்கிறீர்? என்று வந்து பறிக்கிறீர்?
இன்று வந்து பறிக்கிறோம் இன்று வந்து பறிக்கிறோம்.
4) கேலிப் பாட்டிற்குக் கூலி வேண்டுமா ! அதோபார் மொட்டைத் தலை
மொட்டையும் மொட்டையுஞ் சேந்துச்சாம்
முருங்கை மரத்தில் ஏறுச்சாம்
கட்டை எறும்பு கடுச்சுச்சாம்
காலுகாலுன்னு கத்துச்சாம்
5) ஒன்னுரெண்டு சொல்லிக்கோ ! ஓடிப்போயிப் பிடிச்சுக்கோ !
ஒன்னு ஓடிவா கண்ணு
ரெண்டு ரோசாப்பூச் செண்டு
மூனு முகட்டுமேல தேனு
நாலு நாய்க்குட்டி வாலு
அஞ்சு அவரைக்காய்ப் பிஞ்சு
ஆறு அந்தாபாரு தேரு
ஏழு பானையில கூழு
எட்டு டமடமக் கொட்டு
ஒன்பது ஓலைப்பாயப் போட்டு
பத்து படுக்கப்போட்டு மொத்து
இப்பாடல்கள் சிறியோரால் காலங்காலமாகப் பாடப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வளர்த்தெடுக்கப்பட்டும் வந்துள்ளன ; வருகின்றன.
உள்ளங் கவரும் சந்த நடை, எளிய சொற்கூட்டு, திரும்ப வரல், எளிதில் திருப்பிச் சொல்லும் மொழி நடை, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஓசை நயம், இனிமை என்றவாறு அமைந்திருப்பது விளையாட்டுப் பாடல்களின் தனிச்சிறப்பாகும்.
விளையாட்டுகளில் பாடப் பெறும் பல பாடல்கள் இன்று மறந்து போய்விட்டன; இல்லையில்லை மறைந்தே போய்விட்டன. விளையாட்டுகளும் பல மறைந்து வருகின்றன. நாட்டுப்புற இசை மரபில் விளையாட்டுப் பாடல்களுக்குத் தனி இடமுண்டு என்பதை எவராலும் மறுக்க முடியாது. அவற்றைத் தொகுத்துப் பாதுகாப்பது நமது கடமையாகும்.
ஓடுதல், தாவிப் பாய்தல், குதித்தல், தாண்டுதல், சொற்பயிற்சி, நாப்பயிற்சி, கணக்கு போன்ற பயிற்சிகளை வளர்ப்பவையாகவும் ஐம்புலன்களுக்கும் ஒரு சேர இன்பம் ஊட்டுவனவாகவும் விளையாட்டுகள் அமைந்துள்ளன.
சிறுவர், சிறுமியர்கள் விளையாட்டில் காட்டும் உற்சாகத்தை அறிந்து, அவர்களின் உள இயல்பினைப் புரிந்து, கல்வி விளையாட்டாகப் போதிக்கப்பட வேண்டும். “A sound mind in a sound body” என்பது விளையாட்டுகளின் வாயிலாகவே சாத்தியமாகும்.
உடல் திறன், உள்ளக் கிளர்ச்சி, வீரப் பண்பு, மதி வன்மை, குழு மனப்பான்மை, இசை, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளுதல், நீண்ட ஆயுள் போன்றவை விளையாட்டில் ஈடுபடுவோருக்கு விளையாட்டுகள் வழங்கும் கொடையாகும்.
பண்பாட்டுச் செயல்பாடாய், நாட்டுப்புற மரபில் செழித்து வளர்ந்து, மக்களை மகி்ழ்வித்து, அனைவரையும் ஒன்றிணைத்து, மனித நேயத்தை வளர்த்துவரும் நமது பண்பாட்டு மரபை நாமும் வளர்த்தெடுக்க வேண்டாமா? விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் அவற்றைப் பாதுகாத்து வருங்காலச் சந்ததிகளுக்கு நாம் வாரிக் கொடுப்போம் ; வளம் சேர்ப்போம்.
பாடம் - 6
தமிழரின் புழங்கு பொருள் பண்பாட்டின் (Material Culture) பழமையை அறிவதற்கு ஆதாரமாக விளங்குபவை நாட்டுப்புறக் கைவினைக் கலைகள், மனித வாழ்க்கையோடு நெருங்கிய உறவு இக்கைவினைக் கலைகளுக்கு உண்டு. தத்தித் தவழும் குழந்தை அழுதால் கிலுகிலுப்பையை ஆட்டி மகிழ்ச்சிப் படுத்துவதில் தொடங்கி, இறந்த பின்பு அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் சுடுகாடு கொண்டு செல்வது வரை கைவினைக் கலைகளின் பங்களிப்பு மனித வாழ்வில் தொடர்ந்து வருவதை நாம் காணலாம். இத்தகைய கைவினைக் கலைகள் பற்றிய விளக்கம், வகைப்பாடு, தஞ்சை வளர்க்கும் கலைகள், தனித் தன்மைகள், கைவினைக் கலைகள் பண்பாட்டோடு கொண்டுள்ள உறவு, கலைகளின் இன்றைய நிலை ஆகியவை குறித்து விளக்குவதாக இப்பாடம் அமைகிறது.
இயற்கைப் பொருட்களான மண்ணைக் கொண்டு உருவத்தையும், கல். மரத்தைக் கொண்டு சிற்பத்தையும், வண்ணத்தைக் கொண்டு ஓவியத்தையும் கலைத் தன்மையோடு மனிதன் உருவாக்கி வந்துள்ளான். இவையெல்லாம் மனிதனின் கைவினை நுட்பத்திற்கும் கலை உணர்விற்குமான சான்றுகளாகும்.
பல தரப்பட்ட இக்கைவினைக் கலைகளை வகைப்படுத்தி அறிவதன் வாயிலாகப் பல்வேறுபட்ட கலைப் பொருட்களையும் அவற்றின் சிறப்புகளையும் நன்கு உணர்ந்து கொள்ளலாம். நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் எவையெவை என்பதை இங்கு விளக்கி அறிவோம்.
நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
மண்சார்ந்த கலைகள் மரம்சார்ந்த கலைகள் ஓலைசார்ந்த கலைகள் காகிதம்சார்ந்த கலைகள் பிற கலைகள்
மண்மாண் புனைபாவை அற்று
(குறள் : 407)
என்று வேளார்களின் கலை நுட்பத் திறனைச் சிறப்பிக்கின்றார் வள்ளுவர்.
தமிழகத்தில் மண்ணாலான புழங்கு பொருட்கள், தெய்வ உருவங்கள், குதிரைகள் போன்றவற்றைக் கலைத் திறனோடு செய்யும் கைவினைஞர்கள் வேளார், குயவர் என அழைக்கப்படுகின்றனர். மண் சார்ந்த தொழில்களே இவர்களது பூர்வீகமான குலத் தொழிலாகும். வேளார் இன மக்கள் அடுப்பு, மண் சட்டி, பானை, குளுமை (தானியங்களைப் பாதுகாக்கும் மட்கலம்) போன்ற பொருட்களை அன்றாடம் செய்து விற்றுத் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர். மேலும், தோண்டி, குடம், கலையம், விளக்கு, முகூர்த்தப் பானை, தாளப் பானை, கடம், பூத்தொட்டி, அகல் என்று பலவகையான பொருட்களையும் கலைத் தன்மையோடு உருவாக்கி வருகின்றனர்.
பானைகள் ஏழைகளின் குளிர்சாதனப் பெட்டியாக விளங்கி வருகின்றன. மண் பாண்டத்தில் சமைப்பதும், மண் பானைச் சோறும் மருத்துவப் பயன்பாடு மிக்கவை ஆகும். கைவினைக் கலைஞர் ஒருவர் மண்ணிலேயே நாகசுரத்தை உருவாக்கி இசையோடு வாசித்தும் காட்டிச் சாதனை செய்துள்ளார் என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.
சுடுமண் சிற்பங்கள்
சிற்பக் கலைக்குரிய பத்துச் செய்பொருட்களில் மண்ணும் ஒன்று என்பதைத் திவாகர நிகண்டு,
கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
பத்தே சிற்பத் தொழிலுக் குறுப்பாவன
என்ற பாடலின் வாயிலாக எடுத்துரைக்கிறது.
தெய்வங்களுக்கு மண் சிலை வடித்து வழிபடுவது தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்துவரும் வழக்கமாகும். சிறுதெய்வக் கோயில்களில் கம்பீரமாக அமைந்துள்ள அய்யனார், முனியப்பன், மதுரை வீரன், மாரியம்மன், முத்தாலம்மன், காளியம்மன், பேச்சியம்மன் போன்ற தெய்வ உருவங்களும், குதிரை, யானை, காளை போன்ற தெய்வ வாகனங்களும் வேளார்களால் கலை நேர்த்தியுடன் செய்யப்பட்டு வருகின்றன.
களிமண்ணை எடுத்து வந்து நன்றாகக் காயவைத்துக் கல், தூசி நீக்கி, நீருற்றிப் புளிக்க வைத்து, ஆற்று மணல், வைக்கோல் சேர்த்து மிதித்துக் குழைத்துப் பெரிய பெரிய தெய்வ உருவாரங்களும் குதிரைகளும் செய்யப்படுகின்றன. பின்பு அவை நெருப்பில் போட்டுச் சுடுமண் சிற்பங்களாக மாற்றப்படுகின்றன. வண்ணங்கள் பூசப்பட்டுக் கோயிலில் நிலைநிறுத்தப்பட்டு வழிபாட்டிற்கு உரியவை ஆகின்றன. குதிரை ஓடுவது போன்றும் நிற்பது போன்றும் அதன்மேல் தெய்வங்கள், அரசர்கள் அமர்ந்திருக்கும் நிலையிலும் சிற்பங்கள் மண்ணாலேயே வடிவமைக்கப் படுகின்றன. மண் சிற்பங்களில் விதவிதமான ஆபரணங்கள் செய்தல், முக பாவங்களை அமைத்தல், உடல் நெளிவு சுழிவுகளை அழகு படச் செய்தல் போன்றவற்றை வேளார்கள் கலை நுட்பத்துடன் செய்து காட்டுகின்றனர்.
கல்லால் சிற்பங்களை வடிப்பதற்கும் மண்ணால் சிற்பங்கள் செய்யப் படுவதற்கும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. அதாவது கற்சிற்பங்கள் மேலிருந்து கீழ்நோக்கி உருவாக்கப்படும். ஆனால் மண் சிற்பங்கள் கீழிருந்து மேலாகச் செய்யப்படும். மேலும் கல் சிற்பங்களில் வண்ணங்களைத் தீட்ட இயலாது. மண் சிற்பங்களில் தேவையான வண்ணங்களைத் தீட்டி அழகுக்கு அழகு சேர்க்கலாம்.
மண் சார்ந்த இக்கைவினைப் பொருட்கள் கலைப் பொருட்களாக மட்டுமின்றித் தமிழரின் வாழ்க்கையோடும் வழிபாட்டோடும் பிரிக்க முடியாத கூறாகவும் அமைந்துள்ளன. சுடுமண் கலை வடிவங்களைத் தெய்வங்களுக்கு நேர்த்திக் கடனாக வாங்கி வைத்து வழிபடும் வழக்கம் நாட்டுப்புற மக்களிடம் உள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமடைவதற்குத் தெய்வத்திடம் வேண்டிக் கொள்கின்றனர். நோய் குணமடைந்தவுடன் பாதிக்கப்பட்ட உடல் உறுப்பினைப் போன்று மண்ணால் செய்து அதனைத் தெய்வத்திற்குக் காணிக்கை ஆக்குகின்றனர்.
பழங்கால அரண்மனைகளிலும், கோயில் தேர்களிலும் (திருவாரூர் தேர், ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்), செட்டிநாட்டு மாளிகைகளிலும், வீட்டு நிலைகளிலும் நேர்த்தியான கைத்திறன் மிக்க மர வேலைப்பாடுகளைக் காணலாம். பல ஊர்களில் உள்ள தெய்வங்கள் மரப் பொம்மைகளாகவே உள்ளன. குழந்தைகள் விளையாடுவதற்கெனக் குதிரை, யானை, ஆண், பெண் வடிவங்களில் மரப்பாச்சிப் பொம்மைகள் செய்யப்படுகின்றன.
மரப்பாச்சி
மரப்பாச்சி என்பதற்கு மரப் பொம்மை, மரப் பாவை என்பது பொருளாகும். கோயில்களுக்கு அருகில் உள்ள கடைகளில் மரப்பாச்சி பொம்மைகள் விற்கப்படுவதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். குழந்தைகள் குறிப்பாகப் பெண்குழந்தைகள் மரப்பாச்சி பொம்மைகளின் மேல் மிகுந்த விருப்பம் கொண்டு வாங்கி, விளையாடி மகிழ்கின்றனர்.
பொம்மைக்கும் பொம்மைக்கும்
கல்யாணமாம் – நம்ம
பூலோகமெல்லாம் கொண்டாட்டமாம்
என்று பொம்மைக் கல்யாணம் செய்து வைத்துக் குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்வதுண்டு. இந்த இனிய அனுபவத்தை உங்கள் மூத்தோரிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்வார்கள். மரப்பாச்சிகள் அழகிய வேலைப்பாடுகளோடு மிக நேர்த்தியாகச் செய்யப்படுகின்றன. வண்ணம் பூசப்பட்டும், வண்ணம் பூசப்படாமலும் மரப்பாச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
நம்பிக்கைகள்
பெண்ணிற்கு நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகவில்லை என்றால் ஒரு சோடி மரப்பாச்சி பொம்மைகள் வாங்கி வந்து அவற்றிற்குத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் காணப்படுகிறது. அவ்வாறு செய்தால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
நாட்டுப்புறப் பாடல் ஒன்று பனைமரத்தின் பயன்களைப் பட்டியலிடுவதைக் கேளுங்கள்.
பனைமரமே பனைமரமே
ஏன் வளர்ந்தாய் இத்தூரம்
நான் வளர்ந்த காரணத்தை
நாட்டாரே சொல்லுகிறேன்
எழுதுகிற பிள்ளைகளுக்கு
எழுத்தோலை நானாவேன்
அழுகின்ற குழந்தைக்குக்
கிலுகிலுப்பை நானாவேன்
வண்ணக்கொட்டான் நானாவேன்
சின்னக்கொட்டான் நானாவேன்
நீரிறைக்கக் கயிறாவேன்
நிழல்தரும் குடிலாவேன்
இப்பாடலை இசையோடு பாடிக் குழந்தைகளுக்குப் பனைமரத்தின் பயன்களை எடுத்துச் சொல்லுங்கள்; இயற்கை நமக்கு வழங்கும் கொடைகளை உணரச் செய்யுங்கள். செய்வீர்களா?
விளையாட்டுப் பொருள்கள்
குழந்தைகள் விளையாடும் கிலுகிலுப்பை பனை ஓலையாலேயே செய்யப் படுகிறது. ஓலையில் சின்னஞ்சிறு கூடுபோல் முடைந்து உள்ளே சிறிய சிறிய கற்களைப் போட்டு வண்ணமிட்டுப் பயன்படுத்தப்படுகிறது. கிளி, மயில், பூனை, யானை போன்ற உருவ பொம்மைகளும் குழந்தைகள் விளையாடி மகிழ ஓலையால் உருவாக்கப்படுகின்றன. இதில் பல வண்ணங்களில் சேர்க்கையும் பல வடிவங்களின் அமைப்பும் நெஞ்சை ஈர்க்கும் வகையில் விளங்கும்.
விற்பனை
பனை ஓலையால் பின்னிச் செய்யப்பட்ட தொப்பிகளை வெளிநாட்டவர்கள் விரும்பி வாங்கி அணிகின்றனர். இராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், வேளாங்கன்னி போன்ற கடற்கரைச் சுற்றுலாத் தலங்களில் பனை ஓலைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
கைவேலை
பனை ஓலைகளைக் கொண்டு பொருட்கள் செய்யும் கைவேலை குறிப்பிடத் தக்கதாகும். இயற்கை பனை ஓலைகளுக்குத் தந்துள்ள உறுதியும் குளிர்ச்சியும் சுகாதாரமும் பனைப் பொருட்கள் உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாய் அமைந்துள்ளன. பனை நாரால் முடையப்படும் பெட்டி, கயிற்றுக் கட்டில் போன்றவை பல வருடங்கள் உழைக்கும் உறுதி பெற்றவை. பனை நாரின் மேல்பகுதி வழுவழுப்புத் தன்மையுடன் இருப்பதால் எளிதில் தண்ணீர் பட்டு அறுந்து போவதில்லை: இதனால் நீண்ட நாட்களுக்கு அது பயன்படுகிறது.
கோரைப் பாய்
பாய் பின்னும் தொழில் பல தலைமுறைகளாகத் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் தயாரிக்கப்படும் கோரைப் பாய்கள் உலகப் புகழ் பெற்றவை. பத்தமடையில் வாழும் இஸ்லாமியர்கள் பாய் தயாரிக்கும் தொழிலில் பெரிதும் ஈடுபட்டுள்ளனர். பாயில் போடப்படும் டிசைன்கள் வண்ணங்கள் இவற்றையெல்லாம் தம் முன்னோரிடமிருந்து கற்றுக் கொள்கின்றனர்.
பாயில் படங்கள் வரையவும் எழுத்துகள் எழுதவும் தனித் திறமை வேண்டும். கோரைப் பாயில் ஒற்றைப் பல் பாய், இரட்டைப் பல் பாய், பட்டுப் பாய் (திருமணப் பாய்). தடுக்குப் பாய், பந்திப் பாய் எனப் பல்வேறு அமைப்பில் பாய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
திருமணக் காலமான தை, மாசி, பங்குனி, வைகாசி போன்ற மாதங்களில் திருமணப் பாய்கள் அதிகமாக விற்பனையாகின்றன. தைப்பொங்கல் விழாவின் போது புதிய பாய்கள் வாங்கும் வழக்கம் நாட்டுப்புற மக்களிடம் காணப்படுகிறது.
உடல் நலம்
கோரைப் பாயில் படுத்து உறங்குவது உடல் நலத்திற்கு நல்லதாகும். கோரையினை இரண்டாகக் கிழித்துப் பார்த்தால் அதன் உள்ளே ஒருவகையான பஞ்சு போன்ற பகுதி இருக்கும். இதில் சிறுசிறு துளைகள் காணப்படும். இது வெப்பத்தினைத் தணிக்கும் தன்மை கொண்டதாகும். இதனால் உடலின் வெப்பம் சீராக்கப்படுகிறது; உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது. குறைந்த விலைக்கு இக்கோரைப் பாய்கள் கிடைக்கின்றன.
களிமண் கொண்டு கூடுகளுக்கான அச்சுகள் உருவாக்கப்படுகின்றன. அதன்மேல் காகிதங்கள், துணிகள் ஒட்டப்பட்டுப் பின் வண்ணங்கள் தீட்டப் படுகின்றன. இத்தகைய கூடுகள் கலையழகுடன் செய்யப்பட்டு ஆட்டங்களில் பயன்படுத்தப் படுகின்றன. ஆட்டக் கலைஞர்கள் கூடுகளைச் சுமந்து கொண்டு வெகுநேரம் ஆட வேண்டி இருப்பதால் அவை அதிகக் கனமின்றி இருக்கக் (light weight) காகிதத்தாலேயே இக்கூடுகள் செய்யப்படுகின்றன. அலங்கரிக்கப் பட்ட கூடுகளை ஆட்டக் கலைஞர்கள் சுமந்து கொண்டு ஆடும் பொழுது உண்மையான குதிரையின் மீது அமர்ந்து சவாரி செய்து வருவது போன்றும், மயிலே நம் முன்னால் தோன்றி நடனம் ஆடுவது போன்றும் தோற்றமளித்துப் பார்வையாளர்களைப் பரவசப் படுத்தும். இத்தகைய தோற்றத்திற்குக் காரணம் கைவினைக் கலைஞர்களின் கலைத் திறனே ஆகும்.
தசரா முகமூடிகள்
தசரா முகமூடிகளை உருவாக்கும் கலைஞர்கள் பாணர் என அழைக்கப் படுகின்றனர். முகமூடி செய்வதைத் தங்கள் பரம்பரைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். முகமூடிக்கான அச்சுகளைப் பாணர்கள் களிமண் கொண்டு செய்கின்றனர். களிமண் அச்சின் மீது காகிதங்களை ஒட்டி, வண்ணமிட்டு முகமூடிகள் தயாரிக்கின்றனர். புராண மாந்தர்கள் (பிரம்மன், விஷ்ணு, விநாயகர், ஆஞ்சநேயர், இராவணன்) ஆண், பெண், தெய்வங்கள் (காளி, சுடலை மாடன்), மனிதர்கள் (கிழவன், கிழவி, காவலர்) விலங்குகள் (புலி, குரங்கு, கரடி, மாடு) போன்ற முகமூடிகள் தசரா விழாவிற்காகப் பாணர்களால் செய்யப்படுகின்றன.
இவ்வாறாகக் காகிதம் சார்ந்த கலைப் பொருட்கள் நிகழ்த்து கலைகளிலும் வழிபாட்டிலும் சிறப்புப் பெற்று விளங்குகின்றன.
நாடோடி வாழ்க்கை நடத்தும் தொம்பர் இன மக்கள் மூங்கிலினால் உருவாக்கப்பட்ட பொருட்கள், மரச் சீப்புகள், மாட்டுக் கொம்பு ஆகியவற்றால் உருவாக்கப்படும் கலைப் பொருட்கள் செய்வதைத் தங்களது பரம்பரைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்கள் சல்லிக் கட்டுக் காளைகளின் கொம்புகளைச் சீவிக் கூர்மைப்படுத்துதல், காடுகளில் தாமாக இறந்து போன காட்டு எருமைகளின் கொம்புகள், அவற்றின் எலும்புகளைச் சேகரித்துப் பக்குவப் படுத்திக் கலைப் பொருட்கள் செய்தல் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயில் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
மாட்டுக் கொம்பினைக் கொண்டு மயில், கொக்கு, புறா போன்ற உருவங்களைக் கலை நேர்த்தியுடன் செய்கின்றனர். கொக்கு ஒற்றைக் காலில் நிற்பது, தாய்க் கொக்கு உணவினைக் குஞ்சுக்கு ஊட்டுவது, கொக்கு வாயில் மீனைப் பிடித்துக் கொண்டு இருப்பது, பறவைகள் பறப்பது போன்ற வடிவங்களில் கொம்பு சார்ந்த கலைப் பொருட்கள் உருவாக்கப் படுகின்றன. இவற்றை வீட்டு அலங்காரப் பொம்மைகளாகப் பலர் வாங்கிச் செல்கின்றனர்.
பச்சை குத்துதல்
உடலில் பச்சை வண்ணத்தில் ஊசி கொண்டு குத்திப் பல்வேறு வடிவங்களை வரைந்து அழகுபடுத்திக் கொள்வது பச்சை குத்துதல் எனப்படும். மார்பு, மேல் கை, முன்னங் கை, கால் போன்ற உடற் பகுதிகளில் பச்சை குத்தப் படுகிறது. குறவர் என்ற இனத்தைச் சேர்ந்தோர் பச்சை குத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மஞ்சள் பொடியுடன் அகத்திக் கீரை சேர்த்து அரைக்கின்றனர். அதனை ஒரு துணியில் கட்டி, தீயிலிட்டு எரித்துக் கரியாக்கிக் கொள்கின்றனர். நீர் கலந்து அதனைப் பசையாக்குகின்றனர். கூர்மையான ஊசியினால் அந்தப் பசையைத் தொட்டுத் தோலில் குத்திக் குத்தி எடுத்துத் தேவையான உருவங்களை வரைகின்றனர். பச்சை குத்தப்பட்ட பின் சுடுநீரால் கழுவி அதனைச் சுத்தம் செய்கின்றனர். இப்பொழுது பச்சை குத்திய இடம் அழகாகத் தோற்றம் அளிக்கும். இது எந்நிலையிலும் அழியாது.
தெய்வ வடிவங்கள், கோலங்கள், தேள், பாம்பு போன்ற உருவங்கள், பெயர்கள் போன்றவை பச்சை குத்துதலில் இடம் பெறுகின்றன. குறிப்பாகப் பெண்கள் அழகிற்காகவும் அடையாளத்திற்காகவும் இக்கலையைப் பயன்படுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சின்னங்கள், திரைப்பட நடிக, நடிகையர் படங்களைப் பச்சை குத்திக் கொள்ளும்பழக்கம் இன்றைய இளைஞர்களிடம் காணப்படுகிறது. தற்பொழுது மருதாணிப் பசை கொண்டு இத்தகைய உருவங்கள் அச்சினால் உடலில் வரையப் படுகின்றன. இதனால் பச்சை குத்துதல் கலை இன்று வழக்கொழிந்து வருகிறது. இக்கலை தமிழகத்தில் மட்டுமல்லாது ஆசியாவின் பிற பகுதிகளிலும் அமெரிக்கா, நியூசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பரவிக் காணப்படுகிறது. ஜப்பானியரின் அக்குபஞ்சர் மருத்துவ முறையானது பச்சை குத்துதல் கலையோடு தொடர்பு படுத்திக் காணத் தக்கதாகும்.
கோலம்
கோலம் என்றாலே அழகு என்றுதான் பொருள். கோலமிடுவதில் பெண்கள் தனித்த ஈடுபாடு கொண்டவர்கள் என்பதை அறிவோம். மாக்கோலம், பூக்கோலம், பொடிக்கோலம் என்று அவர்களின் கை வண்ணத்தில் கண்ணைக் கவரும் கோலங்களைக் கண்டு களிக்கலாம். எறும்பு, பறவைகள், அணில் போன்றவற்றிற்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக அரிசி மாவு, தானியப் பொடிகளால் கோலமிடும் பழக்கம் நாட்டுப் புறங்களில் காணப்படுகிறது.
கோவில் விழாக்களிலும் பொங்கல் விழாவின் போதும், பூப்பு, திருமண நிகழ்வுகளிலும் வண்ணக் கோலங்கள் வாசலை அலங்கரிக்கும். சதுரம், பூக்கள், இயற்கைக் காட்சிகள் என்று பல வடிவங்களில் இக்கோலங்கள் அமையும். இத்தகைய கோலங்கள் தெய்வங்களை ஈர்க்கும்; செல்வ வளம் பெருகச் செய்யும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
தமிழகக் கலைகளில் தஞ்சைக் கலைகளுக்குத் தனிச் சிறப்புண்டு. தஞ்சைப் பகுதியில் செழித்துவரும் கலைகள் எண்ணிலடங்காது. இதைப் போலவே தஞ்சைக் கலைகளுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் அளவிட முடியாது. இதற்குச் சான்றாகத் தஞ்சாவூர் வீணைகள், தலையாட்டிப் பொம்மைகள், ஐம்பொன் சிலைகள், தேர்ச் சிற்பங்கள், தஞ்சாவூர்த் தட்டுகள் இவற்றின் கலை நேர்த்தியைக் கூறலாம்.
வீணை
தஞ்சாவூருக்குத் தெற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நாட்டரசன் கோட்டை. இவ்வூரில் வீணைகள் சிறப்பாக உருவாக்கப் படுகின்றன. வீணை செய்யப்படும் பிற ஊர்களில் வீணையின் பாகங்கள் தனித்தனியே செய்யப்பட நாட்டரசன் கோட்டையில் மட்டும் ஒரே கலைஞரால் முழு வீணையும் செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும். வீணை செய்யும் கலைத் தொழில் பல காலமாகப் பரம்பரை பரம்பரையாக இங்கு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. பலா, வாகை மரங்களைக் கொண்டு வீணைகள் செய்யப் படுகின்றன. இம்மரங்களே செதுக்கவும் இழைத்துத் தேவையான வடிவங்களை உருவாக்கவும் ஏற்றவையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏகாந்த வீணை, ஒட்டு வீணை என்ற இருவகையான வீணைகள் தச்சர்களால் செய்யப்படுகின்றன.
ஏகாந்த வீணை
ஒரே மரத்துண்டினால் வீணையின் பகுதிகளான குடம், தண்டியாளியின் தலை ஆகிய பாகங்கள் செய்யப்படுவது ஏகாந்த வீணை எனப்படும்.
ஒட்டு வீணை
குடம், தண்டியாளியின் தலைப் பகுதி இவை தனித்தனியாகச் செய்யப்பட்டு, ஒன்றாகப் பொருத்தப்படும் வீணை ஒட்டு வீணை எனப்படும்.
சிறப்பு
தெய்வீகத் தொழிலாகக் கருதப்படும் வீணைத் தொழிலில் பொறுமையும் நிதானமும் தொழில் நுணுக்கமும் மிகவும் அவசியமாகும். மீன், மயில், படகு போன்ற வெவ்வேறு வடிவங்களில் வீணைகள் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதை அரும்பொருள் காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ள வீணைகளின் வாயிலாக அறியலாம். தஞ்சையில் வீணை செய்வதில் தேர்ச்சி மிக்க கைவினைஞர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தமிழகக் கைவினைக் கலையின் பெருமை சொல்லும் தஞ்சாவூர் வீணைகள் வெளிநாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும். மிருதங்கப் பானை, உடுக்கை, நாகஸ்வரம், புல்லாங்குழல், உடுக்கை, தாளப் பானை (கடம்) என்று இசைக் கலையோடு தொடர்புடைய பல கைவினைக் கலைப் பொருட்களும் இங்கு உருவாக்கப் படுகின்றன.
பிற கலைகள்
தென்னாட்டின் நெற்களஞ்சியமான அந்தத் தஞ்சைப் பகுதியில் நெல்மணி, ஏலக்காய் முதலியவற்றைக் கொண்டு அழகுற மாலை தொடுக்கின்றனர். தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மை, தஞ்சாவூர் தட்டு, தூபக்கால் (விளக்கு) போன்றவற்றின் அழகைக் கண்டு மேலை நாட்டினரே வியந்து போற்றுகின்றனர். மேலும் பல்வேறு வடிவங்களில் அமைந்த வெண்கலத்தாலான பாக்கு வெட்டிகள் மீன் வடிவப் பல்லாங்குழிகள், வெற்றிலைப் பெட்டிகள், ஆபரணப் பெட்டிகள், உண்டியல், அகல் விளக்குகள் போன்றவையும் தஞ்சையில் பிரசித்தி பெற்றவையாகும்.
கைவினைக் கலைகளில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் எளிதில் கிடைப்பவையாகும். ஆற்றோரங்களில் விளையும் மூங்கில், கோரைப் புல், வைக்கோல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள களிமண், ஆற்று மணல், மலைப் பகுதிகளில் உள்ள மரம், இயற்கைச் சாயம் என்று அனைத்துப் பொருட்களும் கிராமங்களை ஒட்டிய பகுதிகளிலேயே கிடைக்கக் கூடியவையாகும். இத்தகைய எளிய மூலப் பொருட்களே தம்முள் கலந்து கைவினைக் கலைஞர்களின் கைத்திறத்தால் கண்களைக் கவர்ந்து உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கலைப் பொருட்களாக மிளிர்கின்றன. குறிப்பிட்ட கைவினைக் கலைத் தொழில்கள் குறிப்பிட்ட இனத்தாராலேயே பரம்பரை பரம்பரையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதனால் கைவினைக் கலைகள் காலம் கடந்து நிலைத்து வாழும் தன்மையைப் பெற்று விளங்குகின்றன. மேலும் இக்கலைகளைக் கற்றுக் கொள்வதற் கென்று பயிற்சிக் கையேடுகளோ, நூல்களோ இல்லை. வாய்மொழியாகப் பயிற்றுவிக்கப்பட்டு, ஒன்றைப் போலச் செய்வதின் வாயிலாகவே வளர்ந்து வருவதும் இக்கலைகளின் தனிச் சிறப்பாகும்.
மங்கலப் பொருள்
நாட்டுப்புற மக்களின் திருமணங்களில் மணமேடையில் மண்ணால் செய்த அரசாணிப் பானை மங்கலப் பொருளாக வைத்து வழிபடப் படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணத்தின் போது மங்கலப் பொருட்களையும் பட்டுச் சேலையையும் வண்ண ஓலைப் பெட்டிகளில் வைத்து எடுத்துச் செல்வதையே இன்றும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் திருமணத்தில் கலந்து கொள்வோருக்கு அழகிய வண்ண ஓலை விசிறி, பூக்கூடைகளைப் பரிசாகக் கொடுத்து மரியாதை செய்யும் வழக்கமும் கொடுத்தனுப்பும் மரபும் காணப்படுகிறது. மேற்கூறியவை எல்லாம் கைவினைக் கலைகள் பண்பாட்டோடு இரண்டறக் கலந்துள்ளதற்குச் சான்று கூறுபவையாகும். விநாயக சதுர்த்தியன்று களிமண்ணால் விநாயகர் உருவம் செய்து வழிபடும் வழக்கமும் உள்ளது. ‘பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது’ என்ற பழமொழி இதன்பொருட்டு உருவானதே ஆகும்.
காணிக்கை
நாட்டுப்புற மக்களால் காவல் தெய்வமாக வணங்கப்படும் அய்யனார் வழிபாட்டின் போது குதிரை எடுப்பு விழா நடைபெறும். மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை அய்யனாருக்குக் காணிக்கையாகச் செலுத்துவதே இவ்விழாவின் அடிப்படை நோக்கமாகும். ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா தவறாமல் நடைபெறும். ஆண்டு தோறும் புதிய சுடுமண் குதிரைகள் காணிக்கை ஆக்கப்படும்.
நம்பிக்கை
தச்சர்கள் மரவேலையைத் தொடங்குவதற்கு முன்பு தச்சுக் கழித்தல் என்ற சடங்கை மேற்கொள்கின்றனர். இச்சடங்கு செய்யப்படுவதால் மரங்களில் உள்ள பேய், பிசாசு போன்ற கெட்ட ஆவிகள் வெளியேறிவிடும் என்ற நம்பிக்கை தச்சர்களிடம் காணப்படுகிறது. திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் மரப்பாச்சிப் பொம்மைகளை வாங்கிக் கோயில்களில் உள்ள தல விருட்சங்களில் தொட்டில் கட்டியோ, ஊஞ்சல் கட்டியோ வழிபட்டால் குழந்தைப் பேறு கிட்டும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.
இறப்புச் சடங்கு
இறப்புச் சடங்கில் மண்ணாலான கொள்ளிக் குடம் உடைக்கும் சடங்கு இடம் பெறுவது அறியத் தக்கதாகும்.
எனினும், பூம்புகார் கைவினைப் பொருள் வளர்ச்சிக் கழகம், காதி மற்றும் கிராமத் தொழில் வளர்ச்சி வாரியம், தென்னகப் பண்பாட்டு மையம் போன்றவை நாட்டுப்புறக் கைவினைக் கலைகளை வளர்த்தெடுப்பதில் முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.
நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் கிராமத்தின் இயற்கை அழகையும் கிராம மக்களின் எளிய வாழ்க்கை முறையையும் கற்பனைத் திறனையும் வெளிக்காட்டுவனவாகும். இக்கைவினைக் கலைகள் மரபின் படிவங்களாகும்; பண்பாட்டின் அடையாளங்களாகும்; தமிழ் மரபின் அறுந்து படாத தொடர்ச்சியாகும். இத்தகைய சிறப்பு மிக்க பாரம்பரியக் கலைகளை வாழ்விப்பதும் வளர்த்தெடுப்பதும் தமிழர்களின் கடமையாகும்.