3

தேம்பாவணி, சீறாப்புராணம், பிற கிறித்தவ இசுலாமியக் காப்பியங்கள்

பாடம் - 1

இரட்சணிய யாத்திரிகம்

1.0 பாட முன்னுரை

தமிழிலக்கியங்களுள் அளவாலும் தரத்தாலும் எண்ணிக்கையாலும் மிகுந்து நிற்பவை செய்யுள் அல்லது கவிதை இலக்கியங்களே. அவற்றுள்ளும் காப்பியங்கள் எனப்படும் தொடர்நிலைச் செய்யுள்கள் தனியிடம் பெறுகின்றன. பக்தி மொழி எனப் பாராட்டப்படும் தமிழில் பல்வேறு சமயங்களைச் சேர்ந்த காப்பியங்கள் உள்ளன. உலகப் பெருஞ்சமயங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் கிறித்துவம் சார்ந்த காப்பியங்கள் உள்ளன. அவை தமிழுக்குப் பெருமை சேர்க்கின்றன. அவற்றுள் தலைசிறந்த ஒன்றாக விளங்கும் இரட்சணிய யாத்திரிகத்தைப் பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

1.1 நூலாசிரியர்

தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியதில் ஐரோப்பியக் கிறித்துவச் சமயத் தொண்டர்களுக்குப் பெரும் பங்குண்டு. ஐரோப்பியக் கிறித்துவத் தமிழ்த் தொண்டர்களைப் போல, தமிழ்க் கிறித்துவத் தொண்டர்களும் தம் படைப்புகளால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை ஆவார்.

1.1.1 வாழ்க்கை வரலாறு ● பிறப்பு

தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் கரையிருப்பு என்னும் சிற்றூரில் 1827ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23ஆம் நாள் பிறந்தவர் கிருஷ்ணபிள்ளை. தந்தையார் சங்கர நாராயண பிள்ளை; தாயார் தெய்வநாயகி அம்மையார். இவர்கள் வைணவ சமயத்தினர். ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் கல்வியறிவும் மிக்கவர்கள். கிருஷ்ண பிள்ளையின் தந்தை கம்பராமாயணத்தைத் தொடர் சொற்பொழிவாக விளக்கியுரைக்கும் திறம் பெற்றவர். தம் புதல்வருக்கும் தக்க ஆசிரியர்கள் வாயிலாகத் தமிழ்ப் பயிற்சியும் வடமொழிப் பயிற்சியும் கொடுத்தார்.

● கிறித்துவராதலும் பணிசெயலும்

சாயர்புரம் திருமறைக் கல்லூரியில் தமிழாசிரியராகக் கவிஞர் பணியாற்றினார். அப்பொழுது, இயேசு பெருமானின் அறக்கருத்துகளினால் ஈர்க்கப்பெற்றுக் கிறித்துவராக மாறினார். தமது முப்பதாம் வயதில் சென்னையிலுள்ள தூய தாமசு ஆலயத்தில் திருமுழுக்குப் பெற்றார். அது முதல் ஹென்றி ஆல்பிரடு கிருஷ்ணபிள்ளை என வழங்கப்பட்டார். இவர் சென்னையில் தினவர்த்தமானி என்ற இதழின் துணையாசிரியராகவும், மாநில உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். பின்னர், பாளையங்கோட்டை சி.எம்.எஸ்.கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், திருவனந்தபுரம் மகாராசர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி செய்தார். மேலும் கிறித்தவ இலக்கியச் சங்கத்தின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

● இறப்பு

தமது 73ஆம் வயதில் கி.பி. 1900ஆம் ஆண்டு, பிப்ரவரி 3ஆம் நாள் மறைந்தார்.

● சமகால அறிஞர்கள்

இவர் காலத்தில் தஞ்சை வேதநாயக சாஸ்திரியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆகிய தமிழ் அறிஞர்கள் வாழ்ந்தனர்.

1.1.2 ஆசிரியரது படைப்புகள் இரட்சணிய யாத்திரிகம் என்னும் காப்பியத்தை இயற்றிப் பெரும் புகழ் கொண்டவர் கிருஷ்ண பிள்ளை. இவர் இரட்சணிய யாத்திரிகம் மட்டுமன்றி வேறு பல அரிய நூல்களையும் இயற்றியுள்ளார். இறைவனைப் புகழும் இனிய தேவாரப் பாடல்கள் அடங்கிய இரட்சணிய மனோகரம் என்னும் நூலையும், போற்றித் திரு அகவல், இரட்சணிய சரிதம் என்னும் செய்யுள் நூல்களையும் இயற்றியுள்ளார். அவ்வாறே இலக்கண சூடாமணி என்னும் இலக்கண நூல், பாளையங்கோட்டை எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை கிறித்துவரான வரலாறு என்ற தன் வரலாற்று நூல் ஆகியவற்றை உரைநடையில் படைத்துள்ளார். காவிய தரும சங்கிரகம் என்ற இலக்கியத் தொகுப்பு நூலையும் உருவாக்கியுள்ளார். வேதப்பொருள் அம்மானை, பரத கண்ட புராதனம் ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவர் எழுதியதாகக் கூறப்படும் இரட்சணிய குறள், இரட்சணிய பால போதனை ஆகிய நூல்கள் இப்போது கிடைக்கவில்லை.

1.2 இரட்சணிய யாத்திரிகம்

● இரட்சணிய யாத்திரிகப் பெருமை

கிறித்துவத் தமிழ்க் காப்பியங்களுள் சிறப்பு வாய்ந்த காப்பியம் இரட்சணிய யாத்திரிகம். ஆங்கில நாட்டவரான ஜான் பனியன் என்பவர் எழுதிய திருப்பயணியின் முன்னேற்றம் (PILGRIM’S PROGRESS) என்னும் நூலைத் தழுவித் தமிழ்ப் பண்பாடு ஒரு சிறிதும் தவறாமல் எழுதப்பட்ட நூல் இரட்சணிய யாத்திரிகம்.

● காப்பியம் பிறந்த கதை

இயேசு பெருமானின் திருவருளால் ஆட்கொள்ளப்பெற்று, கிறித்துவம் தழுவிய கிருஷ்ணபிள்ளை, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் முதுமொழிக்கு ஏற்ப, தமது இறை அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்பினார். மேலும் இயேசு பெருமானின் பெருமையைப் புகழ்ந்து, அவரைப் போற்ற வேண்டும் என்ற விருப்பமும் அவர் உள்ளத்தில் எழுந்தது. இந்தப் பின்னணியில்தான் அவர், திருப்பயணியின் முன்னேற்றம் என்ற ஆங்கில நூலைப் படிக்க நேர்ந்தது. ஜான் பனியன் எனும் மேலை நாட்டு இறையடியார், தமது சிறைவாசத்தின்போது தாம் கண்ட கனவின் விளக்க நூலான திருப்பயணியின் முன்னேற்றம் என்ற ஆங்கில நூலை எழுதினார். இந்த நூல் கவிஞர் வாழ்ந்த காலத்தில் பெரும் புகழ் பெற்று, பலராலும் பாராட்டப்பட்டது. இந்நூலின் கருத்தாலும் செய்தியாலும் பெரிதும் கவரப்பட்ட கவிஞர், இந்நூலைத் தழுவித் தமிழில் காப்பியம் ஒன்று இயற்ற முற்பட்டார். அதுவே இரட்சணிய யாத்திரிகம்.

இனி, இக்காப்பியத்தின் அமைப்பு, காப்பியத்தின் கருப்பொருள், காப்பியம் எழுதப்பட்ட நோக்கம், காப்பியத்தில் கூறப்படும் செய்தி அல்லது கதை, தமிழ்க் காப்பிய இலக்கணம் இந்நூலில் பொருந்தியுள்ள தன்மை முதலிய செய்திகளைக் காண்போம். இதனால் இக்காப்பியப் பண்புகளை நாம் ஒருவாறு அறிய முடியும்.

1.2.1 காப்பிய அமைப்பு இரட்சணிய யாத்திரிகம் சிறப்புப் பாயிரம் எனும் பகுதியோடு தொடங்குகிறது. இப்பகுதியில் கடவுள் வாழ்த்து, நூல் இயற்றக் காரணம், நூலின் வழி, அதன் எல்லை, நுதலிய பொருள், நூற்பயன், யாப்பு, பதிகம் என்பவற்றுடன் சிறப்புப் பாயிரத்தின் பாடல்கள் முடிகின்றன. அதையடுத்து மூன்று பாடல்கள் இடம்பெறுகின்றன. நூலில் 3622 பாடல்கள் உள்ளன. இந்த நூல் ஐந்து பருவங்களாகவும் 47 படலங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது. முதலாவது வரும் ஆதி பருவத்தில் 19 படலங்களும் (1097 பாடல்கள், தேவாரம் 31), தொடர்ந்து வரும் குமார பருவத்தில் 4 படலங்களும் (714 பாடல்கள், தேவாரம் 23), நிதான பருவத்தில் 11 படலங்களும் (803 பாடல்கள், தேவாரம் 10), ஆரணிய பருவத்தில் 10 படலங்களும் (739 பாடல்கள், தேவாரம் 12), இரட்சணிய பருவத்தில் 3 படலங்களும் (250 பாடல்கள், தேவாரம் 48), முடிவுரையில் 20 தேவாரங்களும் அமைந்துள்ளன. சிறப்புரை 19 (16+3) பாடல்களாகும்.

பருவம் என்பது பெரும் பிரிவு, படலம் அப்பருவத்தினுள் அமையும் சிறுபிரிவு. எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை இந்த நூலில், பண்ணோடு பாடப் பெற்ற சைவத் தேவாரப் பாடல்களை அடியொற்றி 144 பாடல்கள் இயற்றியிருக்கிறார். தேவாரப் பண்ணையும், நடையையும் கையாண்டு தேவாரம் என்னும் தலைப்பிலேயே பருவந்தோறும் இடையிடையே அந்த இசைப் பாடல்களை அமைத்துள்ளார். இந்த நூலில், கீழ்க்குறிப்பிடுமாறு அப்பாடல்கள் அமைந்துள்ளன.

ஆதி பருவம்                                                     தேவாரம்                                              பண்

சுமை நீங்கு படலம்             11                     திருநாமப்பதிகம்                                      காந்தாரம்

ஜீவ புஷ்பகரணிப் படலம்    10                    விசுவாசக் காட்சி                                     காந்தாரம்

உபாதி மலைப் படலம்        10                     - – - – - – -                                             இந்தளம்

31

குமார பருவம்

விசிராந்திப் படலம்              13                    கையடைப்பதிகம்                                  தக்கராகம்

10                     காலைத்துதி                                         காந்தாரம்

23

நிதான பருவம்

சிறைப்படு படலம்              10                    வேட்கையின்

விதும்பல்                                              திருத்தாண்டகம்

10

ஆரணிய பருவம்

விடாத கண்டப் படலம்       12                     பிழை நினைந்திரங்கல்                          நேரிசை

12

இரட்சணிய பருவம்

இகபர சந்திப் படலம்         12                     கடைக்கணி                                          இந்தளம்

11                      போற்றித்திருவிருத்தம்

பூர்வ சுருதி

25                     உத்தர சுருதி

48

முடிவுரை

10                      உண்மை வற்புறுத்தல்                            பழம்

பஞ்சுரம்

10                     அந்திப்பலி

20

144

இவ்வாறாக, இந்நூலில் ஆங்காங்கே 144 தேவாரப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

1.2.2 காப்பிய நோக்கம் காப்பியம் எழுதப்பட்டதன் நோக்கத்தை ஆசிரியரே நூலின் சிறப்புப் பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

● நோக்கம்

‘இந்நூல் ஏதோ வெறும் பொழுதுபோக்குக்காகச் செய்யப்பட்ட புதுமையான கதையுமன்று; பாம்பின் நஞ்சை ஓர் அழகிய செப்புப் பாத்திரத்தில் வைத்துக் கொடுப்பதைப் போல, சிற்றின்பச் செய்திகளைக் கொடுக்கின்ற நூலும் அல்ல. இது மனிதச் சமுதாயத்துக்கு ஆத்தும மீட்பை வழங்குகிற அரிய மருந்து போன்ற படைப்பாகும்’ என்று இக்காப்பியத்தைத் தாம் இயற்றிய நோக்கத்தைக் கவிஞர் விளக்கியுள்ளார்.

வெற்று நேரப் போக்காய்ப் புகல்வினோதமு மன்று

புற்ற ராவிடம் பொதிந்த செப்பெனக் கவிபுனைந்து

சிற்றின் பத்திறம் திருத்திய காதையு மன்று

மற்றிது ஆத்தும ரட்சணை வழங்குமோர் மருந்தாம்

(சிறப்புப் பாயிரம் 14)

என்பது இக்கருத்தமைந்த கவிஞரின் பாடலாகும்.

(வினோதம் = புதுமை; புற்றரா = புற்றில் உள்ள பாம்பு; ரட்சணை = மீட்பு)

பொதுவாக, காப்பியங்களில் வாசகர்களுக்குச் சுவையூட்டுவதற்காக, சிற்றின்பச் சுவை வளர்க்கும் செய்திகள் கூறப்படுவதுண்டு. ஆனால், கவிஞர் இந்த நூலில் அப்படிப்பட்ட செய்திகளை விலக்கி, இறைவனை அடையும் நெறியையே முக்கியப்படுத்தும்வண்ணம் பாடியுள்ளார்.

● புண்ணியப் பயணப் படகு

மேலும், தீயவழியில் சென்று, தீய செயல்களாகிய கடலில் மூழ்கி அழியும் மக்களை, அழிவில்லாத நிலைத்த வாழ்வை நல்கும் இறைவனின் வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு ‘புண்ணியத் தனி மரக்கலம்’ இது என்றும் தம் நூலை அவர் வருணித்துள்ளார். இவ்வாறு கவிஞர் இந்நூலைப் படைத்ததன் நோக்கத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.

தீமைகளும் குற்றங்களும் மலிந்த தீயவாழ்வை விட்டு அனைத்து நன்மைகளின் வடிவமாக விளங்கும் இறைவனைச் சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை மனிதர்கள் எவருக்கும் பொதுவாகவே உண்டு. ஆனால் அதற்கான வழியைத்தான் மனிதர்கள் பின்பற்றுவதில்லை. அவ்வழியைக் காட்டக்கூடிய நூல் இது என்று கவிஞர் இப்பாடலில் விளக்கியுள்ளார்.

1.2.3 மூல நூல்கள் பல்வேறு பாவச் செயல்களிலும் அக்கிரமங்களிலும் ஈடுபட்டு அமைதி இல்லாமல் வாழும் ஒருவன், இறைவனின் நற்செய்தியை ஏற்று அவரது திருநாட்டைச் சென்று சேர்வதற்காக மேற்கொள்ளும் புனிதப் பயணத்தை ஜான் பனியனின் மூல நூல் விவரிக்கிறது.

புனிதப் பயணத்தில் செல்பவன், சாத்தானும் பிறரும் ஏற்படுத்தும் பல்வேறு தடைகளையும் பிற சோதனைகளையும் கடந்து செல்கிறான். இது மெய்வழியைக் காண, அடைய விரும்பும் அனைத்து மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டமும் ஆகும். இது ஓர் ஆன்மிகப் பயணம், புனிதப் போர். இப்போரில் வெற்றி பெற்று இறைவனின் திருவடிகளையும் திருநாட்டையும் அடைதற்குரிய வழிமுறைகள், விவிலியத் திருமறை (The Bible)யிலும் விவரிக்கப்படுகின்றன. ஆகவேதான், இவ்விரு நூல்களின் கருத்துகளையும் தழுவி, கிருஷ்ணபிள்ளை இக்காப்பியத்தை இயற்றியுள்ளார்.

1.2.4 காப்பியக் கதை ஐந்து பருவங்களில் காப்பியம் கூறிச் செல்லும் கதையை இங்குச் சுருங்கக் காண்போம்.

● ஆன்மிகனின் மனக்கலக்கம்

இரட்சணிய யாத்திரிகக் கதைத்தலைவன் கிறித்தவன் அல்லது ஆன்மிகன் என வழங்கப்படுபவன். இவன் குற்றங்குறைகள் மிகுந்த ஒரு சாதாரண மனிதன். உலக வாழ்வின் ஆசாபாசங்களில் சிக்கித் தவிக்கும் இவன், தனது பாவ நிலையை உணர்ந்து மனம் வருந்துகிறான். தனது பாவ வாழ்வு இப்படியே தொடருமானால், தனக்கு அழிவு உறுதி என உணர்ந்து மனம் கலங்குகிறான். ஆனால் இந்தக் கேட்டில் இருந்து விடுதலை பெற வழி தெரியாமல் தவிக்கிறான். தனது குற்றங்குறைகளை உணருகின்ற உண்மையான ஒரு மனிதனுடைய மனப்போராட்டங்களைக் கவிஞர் இப்பகுதியில் வருணித்துள்ளார். இந்தத் தீமை நிறைந்த வாழ்வில் இருந்து விடுபட்டு நன்மைகள் நிறைந்த ஓரிடத்தை அடைய வேண்டுமென்ற ஏக்கத்தையும் புலப்படுத்துகிறார்.

● குருவின் அறிவுரையும் குடும்பத்தார் எதிர்ப்பும்

இந்நிலையில் நற்செய்தியாளன் என்னும் ஒரு குரு அவனைச் சந்தித்து. அவனுக்கு மீட்சி (விடுதலை) பெறும் வழியை எடுத்துரைக்கிறார். இதனால் மனம் மாறிய ஆன்மிகன், தான் வாழும் நாச தேசத்தை விட்டு இறைவனின் முத்தித் திருநாட்டை நோக்கிப் புனிதப் பயணம் செல்ல முடிவு செய்கிறான்.

இதனை அறிந்த அவனது மனைவி மக்களும், உற்றார் உறவினரும், நண்பர்களும் அவனைத் தடுக்கின்றனர். எனினும் மனம் தளராது அவன் பயணத்தைத் தொடங்குகிறான். மென்னெஞ்சன் என்னும் நண்பன் ஒருவனும் அவனுடன் கிளம்புகிறான். தீய வழியை விடுத்து நாம் நல்ல வழியில் செல்ல வேண்டுமானால் சான்றோர்கள் மற்றும் அறிஞர்களுடைய துணை எந்த அளவுக்கு நமக்குத் தேவைப்படுகிறது என்பதையும் கவிஞர் இதனால் வெளிப்படுத்துகிறார். நல்ல நண்பர்களின் துணையையும் நாம் நாடவேண்டிய அவசியத்தையும் கவிஞர் குறிப்பாக உணர்த்துகிறார்.

● வழியில் நேர்ந்த விபத்து

ஆன்மிகனும் மென்னெஞ்சனும் சற்றுத்தூரம் சென்ற உடனேயே, வழிதெரியாது அவநம்பிக்கை என்னும் சேற்றில் விழுகின்றனர். இதனால் மனம் சோர்ந்த மென்னெஞ்சன், தான் தப்பிப் பிழைத்தால் போதுமென்று, தன் ஊருக்கே திரும்பிவிடுகிறான். ஆனால் ஆன்மிகனுக்கு, சகாயன் என்பானின் உதவி கிடைக்கிறது. அதனால் சேற்றிலிருந்து எழுந்து பயணத்தைத் தொடர்கிறான். இப்படிப் பல சோதனைகளும் எதிர்ப்புகளும் வழியிலே இவனுக்கு எதிர்ப்படுகின்றன. அவற்றை மன உறுதியோடு தாண்டி முன்னேறுகிறான். இடுக்க வாயில் என்னுமிடத்தில் வியாக்கியானி என்பவனைச் சந்திக்கிறான். அவனது ஊக்க உரைகளால் உரம் பெறுகிறான். நல்வழி நோக்கிச் செல்லுகின்ற பயணம், எளியதாக அமைவதில்லை; துன்பங்களும் தொல்லைகளும் அடுக்கடுக்காக வந்து, நம்மை வழி தவறச் செய்யும். எனினும் அசையாத ஊக்கத்தோடு நாம் அப்புனிதப் பயணத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்னும் கருத்தை இப்பகுதிகள் உணர்த்துகின்றன.

● சிலுவைக் குன்று தந்த விடுதலை

தனது பயணத்தில் கிறித்தவன் சிலுவைக் குன்றினைக் காணுகின்றான். அதனைக் கண்ட அளவில், அதுவரை அவனது முதுகை அழுத்திக் கொண்டிருந்த பாவச்சுமை அறுந்து விழுகிறது. இறைவனைத் துதித்தபடி முன்னேறும் அவன், இடையில் பயணிகள் இளைப்பாறும் ஒரு சத்திரத்தில் தங்கி ஒய்வு பெறுகிறான். அங்கு விவேகி, யூகி, பக்தி, சிநேகிதி என்னும் நான்கு நல்ல பெண்மணிகள் அவனை அன்புடன் உபசரிக்கின்றனர். அவர்களுள் பக்தி என்பவள், கிறித்து பெருமானின் சிலுவைப்பாடுகளையும் அதனால் மனிதர் பெறும் மீட்சியின் (விடுதலையின்) அருமையையும் விளக்கிச் சொல்கிறாள். பின்னர் அப்பெண்கள் தந்த போர் வீரனுக்குரிய உடைகளைப் பூண்டு, பயணம் தொடர்கிறான். மனிதர்களைப் பாவங்களின் பிடியிலிருந்து விடுதலை செய்ய வல்லவர், மனித குலத்துக்காகத் தம் உயிரைச் சிலுவையிலே தியாகம் செய்த கிறித்து பெருமான் என்னும் கிறித்துவக் கோட்பாட்டை ஆசிரியர் இப்பகுதியில் தெளிவுபடுத்திவிடுகிறார். பாவக் கட்டுகளில் இருந்து விடுதலை பெற்றுத் தன் மீட்சிப் பயணத்தை மனிதன் தொடர வேண்டும் என்னும் செய்தியையும் கவிஞர் வெளிப்படுத்துகிறார்.

● மாயாபுரிக் கலவரம்

வழியில், நிதானன் என்னும் சான்றோனுடைய நட்பு வாய்க்கிறது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே சென்று, மாயாபுரி என்னும் நகரத்தை அடைகின்றனர். பல்வேறு அக்கிரமச் செயல்களில் அச்சமின்றி மூழ்கியுள்ளனர் அந்நகர மக்கள், அவர்களுக்கு இவர்கள் இருவரும் அறிவுரை கூறுகின்றனர். இதனால் சினம் கொண்டு இவர்களை அந்நகர மக்களும் போர்ச் சேவகர்களும் நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்கின்றனர். இவர்கள் இருவரும் சிறையில் தள்ளப்படுகின்றனர். நிதானன் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறான். இறையருளால் ஆன்மிகன் எப்படியோ தப்பி, தன் பயணத்தைத் தொடர்கின்றான். தீயவழிகளில் மனம் துணிந்து செல்லும் மனிதர்களை நாம் நல்வழிப்படுத்த முயலும் பொழுது, நாம் அடையக் கூடிய பல்வேறு துன்பங்களை இப்பகுதி உணர்த்துகிறது.

● மீட்சிப் பயணத்தின் வெற்றி முடிவு

மீண்டும், பயணத்தில் நம்பிக்கை என்னும் இன்னொரு நண்பனின் துணையைப் பெறுகிறான். பற்பல துன்பங்களைத் தாண்டி இறுதியில் மரண ஆற்றையும் கடந்து, உச்சிதப் பட்டணம் சேருகின்றனர். அங்கு இவர்களை இறைத்தூதர்கள் வரவேற்கின்றனர். இயேசு பெருமான் அரியணையில் வீற்றிருக்கும் கோலத்தைக் கண்டு களிக்கின்றனர். நீடு வாழ்வு பெறுகின்றனர். ஆகவே தான் இந்நூல் இரட்சணிய யாத்திரிகம், அதாவது மீட்சிப் பயணம் எனப் பெயர் பெற்றது. இரட்சணியம் என்றால் மீட்சி அல்லது ஆன்ம விடுதலை என்றும் யாத்திரிகம் என்றால் புனிதப் பயணம் என்றும் பொருள்படும். மனிதன் இறைவனது ஒளிபொருந்திய திருநாட்டை நோக்கி மேற்கொள்ளும் மீட்சிப் பயணம், தடைகளும் இடர்களும் மிகுந்தது. எனினும் மன உறுதியோடும் நம்பிக்கையோடும் பயணம் செய்யும் மனிதர்க்கு அது தோல்விப் பயணம் ஆகாது. மாட்சி மிகுந்த வெற்றி தரும் மகிழ்ச்சிப் பயணமே ஆகும் என்னும் மிகப் பெரிய உண்மையை இக்காப்பியம் உணர்த்துகிறது.

1.2.5 காப்பியத் தன்மை தமிழில் காப்பியத்தைப் பெருங்காப்பியம் என்றும், சிறுகாப்பியம் என்றும் இரு வகையாகப் பகுப்பது மரபு. பெருங்காப்பிய இலக்கணத்தைத் தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் விரிவாகக் கூறுகிறது. பெருங்காப்பியம் வாழ்த்து, வணக்கம், வருபொருள் இவற்றுள் ஏதாவதொன்று முன்வர, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்கள் பற்றிப் பேச வேண்டும். மலை, கடல், நாடு, நகர், பருவம் முதலியவற்றை வருணிக்க வேண்டும். பல உட்பிரிவுகள் கொண்டிருக்க வேண்டும். சிறப்பாகத் தனக்குச் சமமானவர் இல்லாத தலைவனைப் பாட வேண்டும். இவ்வாறு பல விதிகளை அந்த இலக்கண நூல் வகுக்கிறது.

● தனக்கு இணையானவர் இல்லாத தலைவன்

இரட்சணிய யாத்திரிகத் தலைவனாக விளங்கும் ஆன்மிகனைத் தனக்கு இணையில்லாத தலைவனாகக் கருதமுடியாது. அவன் அன்றாட மனித வாழ்வின் ஆசையின் கட்டுகளில் சிக்கித்தவிக்கும் ஒரு சாதாரண மனிதனே. எனினும் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் (உள்ளுவது = எண்ணுவது) என்ற குறளுக்கு ஏற்ப, தனது இழிந்த பாவ வாழ்க்கையை வெறுத்து உயர்ந்த பேரின்ப வாழ்வை அடைய விரும்புகிறான். அதனை அடையக் குடும்பத்தார், உற்றார், நண்பர்கள் ஆகிய அனைவரது எதிர்ப்பையும் மீறி, மீட்சிப் பயணம் மேற்கொள்ளத் துணிகின்றான். நீண்ட தனது புனிதப் பயணத்தில் தடைகள் பலவும் தாண்டி, துன்பங்கள் பலவும் பொறுத்து, இறுதியில் வான வீட்டை அடைகிறான். அவ்வகையில் தன்னேரில்லாத் தலைவனாகவே அவன் இறுதியில் உயர்கிறான். அதனால் இந்தக் காப்பியம் அந்த இலக்கணத்தைத் தழுவி எழுதப்பட்டது எனலாம்.

● பிற கூறுகள்

அவ்வாறே இரட்சணிய யாத்திரிகத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியில் தந்தை, மைந்தர், தூய ஆவியார் என விளங்கும் திரியேக (மூவொருமை)க் கடவுள் வணக்கம் இடம் பெறுகிறது. நூல் இயற்றிய காரணத்தை இரு பாடல்களால் ஆசிரியர் கூறுகிறார். மேலும் நூல் சொல்லும் பொருள், நூலின் பயன், யாப்பு முதலிய செய்திகளையும் தனித் தனிப் பாடல்களால் ஆசிரியர் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார்.

நூலின் உட்பிரிவுகளை இவ்வாசிரியர் பருவம், படலம் என அமைத்துக் கொள்கிறார். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களையும் கொடுக்கும் நடையினதாக இரட்சணிய யாத்திரிகம் விளங்குவதைக் காப்பியக் கதைப் போக்கால் நன்கு உணரலாம். காப்பியத்தில் உச்சநிலை, காப்பியத் தலைவன் வீடுபேறு அடைவதாகவே விளங்குகிறது.

● வருணனைகள்

மேலும் காப்பியத்தில் நாட்டு வருணனை, நகர வருணனை, ஆற்று வருணனை ஆகியன ஆதிபருவத்தில் பரம ராச்சியப் படலத்தில் சிறப்புற இடம்பெற்றுள்ளன. விண் நாட்டில் பாயும் ஆற்றைச் சீவ கங்கை என்றே ஆசிரியர் சுவைபட வருணிக்கிறார்.

காப்பியத்தில் திருமணம், முடிசூடுதல், போர், வெற்றி முதலியன அமைந்திருக்க வேண்டுமெனத் தண்டியலங்காரம் கூறுகிறது. இவற்றுள் பயணம், போர், முடிசூடல் முதலியன இக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன. எனினும் முக்தியை நோக்கி நடக்கும் இப்பேரின்பக் காப்பியத்தின் கதைப் போக்குக்கு ஒவ்வாத நிகழ்ச்சிகள் இதில் இல்லை. ஆசிரியர் பாயிரத்திலே தெரிவித்தபடி, இது சிற்றின்ப வருணனைகளை நீக்கிய நூலாகவே படைக்கப்பட்டுள்ளது. எனவே பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவற்றை நிறைவு செய்யும் ஓர் அரிய பெரிய காப்பியமாகவே இரட்சணிய யாத்திரிகம் திகழ்கிறது.

1.3 காப்பியக் கதைமாந்தர்

இரட்சணிய யாத்திரிகத்தின் கதை மாந்தர்கள் ஒருவகையில் தனித்தன்மை வாய்ந்தவர்கள்; புதுமையானவர்கள். அதற்குக் காரணம் அக்காப்பியத்தின் முற்றுருவகத் தன்மை ஆகும். ஒரு கதையில் பாத்திரங்கள், கதை நிகழ்ச்சிகள் எல்லாமே உருவகங்களாக அமைந்தால், அது முற்றுருவகம் எனப்படும். அம்மாந்தர்களைப் பற்றிக் காண்போம்.

1.3.1 தலைமை மாந்தர் இரட்சணிய யாத்திரிகத்தின் தலைமைக் கதைமாந்தர் யார் என்பதில் முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. பொதுவாக மக்கள் இது ஒரு கிறித்துவக் காப்பியம் என்பதால் இயேசு கிறித்துவே இதன் தலைமை மாந்தர் எனக் கருதுவதுண்டு. ஆனால் முன்னரே சுட்டப்பட்டவாறு, பல்வேறு சோதனைகளின் இடையே மீட்சிப் பயணம் மேற்கொள்ளும் ஆன்மிகனது பயணத்தைப் பற்றியே இக்காப்பியம் பேசுவதால், அவனே இக்காப்பியத் தலைவன். அவனை ஆட்கொண்டு வழிநடத்தும் இறைவனாக இயேசு கிறித்து விளங்குகிறார். ஆனால் வி. ஞானசிகாமணி குறிப்பிடுவது போல, கம்ப ராமாயணத்துக்கு இராமர் காப்பியத் தலைவனாக விளங்குவதுபோல இரட்சணிய யாத்திரிகத்திற்குக் கிறிஸ்து தலைவரல்லர். இரட்சணிய யாத்திரை செய்பவன் கிறித்துவனே (ஆன்மிகனே) அன்றி, கிறிஸ்து அல்லர்.

● தனித்தன்மை கொண்ட தலைமை மாந்தர்

இரட்சணிய யாத்திரிகத்தின் கதைமாந்தர் அனைவருமே உருவகப் பண்பினர் என்பது முன்னரே சுட்டப்பட்டது. அவர்கள் இடையிலும் தலைமை மாந்தராக அமையும் ஆன்மிகன் அல்லது கிறித்தவன் தனிச் சிறப்புடைய ஒரு பாத்திரமாகக் கருதப்பட வேண்டும். வழக்கமாகப் பெருங்காப்பியங்களில்அமையும் தலைவனைப் போன்று, இவன் தன்னிகரற்ற  உயர்ந்த மானிடப் பிறவியோ, தெய்வப் பிறவியோ, அரசனோ, வள்ளலோ அல்லன். அன்றாட மனித வாழ்வில் நாம் சாதாரணமாகச் சந்திக்கிற ஆசைப் பற்றுகளும் பலவீனங்களும் நிறைந்த ஒரு சாமானியன். ஆனால், அவனிடம் ஓர் உயர்ந்த நாட்டம் இருக்கிறது. பாவங்களும், அக்கிரமங்களும் அசுத்தங்களும் நிறைந்த தன் சொந்த நாட்டை விட்டு, தூய்மைக்கும் அறத்துக்கும் மொத்த உருவமாகத் திகழும் இறைவன் வாழும் பேரின்ப நாட்டை அடைய வேண்டுமென்ற நீங்காத தாகம் அது. அதனால், அவனது பாத்திரப் படைப்பை ஆசிரியர் பரிணாம வளர்ச்சி கொண்ட ஒன்றாக அமைக்கிறார். படிப்படியாகப் பற்பல இடர்களையும் தடைகளையும் தாண்டி, பலமுறை கீழே விழுந்து மீண்டும் எழுந்து, தடுமாறி, பின் மனம் தேறி இப்படியாகப் புனிதப் பயணம் செல்லும் ஒருவனாக அவன் படைக்கப்பட்டுள்ளான். இறுதியில் அவன் தன் இலட்சியத்தை அடைவதாகக் காப்பியம் முடிவதால், அவன் தனக்கு நிகர் இல்லாத தலைவனாகக் காப்பிய முடிவில் உயர்ந்தும் விளங்குகிறான். மனித வாழ்வின் போராட்டங்களின் இடையே, இலட்சியப் பயணம் செல்ல விரும்பும் ஒவ்வொருவரும் இத்தலைவனின் பாத்திரத்தில் தங்களையேகண்டு கொள்ள இயலும். இந்த வகையான தனிச் சிறப்புக் கொண்டதாக விளங்குவது இந்தத் தலைமைப் பாத்திரம்.

1.3.2 பிற கதை மாந்தர்கள் யாத்திரிகத்தின் பிற கதை மாந்தர்கள் பெரும்பாலும் உருவக மாந்தர்களே ஆவர். அதாவது, மனித வாழ்வில் காணப்படும் பண்புகளே குணங்களே கதைமாந்தர்களாக உருவகம் செய்யப்பட்டுள்ளன. சான்றாக, உறுதியான நெஞ்சின்றி, ஆபத்தைக் கண்டு அஞ்சி நடுங்கி, கொண்ட கொள்கையில் இருந்து தவறும், எடுத்த இலட்சியத்தைக் கைவிட்டுவிடும் மனப்போக்கு மென்னெஞ்சன் என்ற பாத்திரமாக உருவகிக்கப்படுகிறது. அவ்வாறாக அமையும் காப்பிய மாந்தரை அதாவது கதாபாத்திரங்களை நன்மைப் பாத்திரங்கள், தீமைப் பாத்திரங்கள், இவை இரண்டு நிலைகளிலும் சேராத நிலைதடுமாறும் பாத்திரங்கள் என ஆய்வாளர்கள் பகுத்துக் கூறுகின்றனர். சில சான்றுகளைக் காண்போம்.

● நன்மைப் பாத்திரங்கள்

உயர்ந்த நல்ல இலட்சியங்களுக்காக உயரிய பண்புகளோடு செயல்படும் கதை மாந்தர் இவ்வகையினர். மேலான கொள்கைகளைப் பதற்றம் இல்லாமல், ஆரவாரம் இல்லாமல், தாமும் பின்பற்றி, பிறரையும பின்பற்றச் செய்யும் சிறந்த மனப்பாங்கு நிதானன் என்னும் கதை மாந்தர் ஆகிறது. வாழ்க்கைப் பயணத்தில் நாம் தடுமாறி விழும்போது, நமக்கு நல்ல புத்தி சொல்லி, நம்மை நல்வழியில் நடத்துகின்ற நற்பண்பு  நற்செய்தியாளன் என்னும் பாத்திரமாக இங்கு உருவகம் ஆகிறது. நம்பிக்கையை இழந்து மனம் சோர்ந்து கலங்கும் நேரத்தில் நமக்கு ஊக்கமூட்டும் உயரிய பண்பு நம்பிக்கை என்னும் கதைமாந்தராகப் படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே குரு, சகாயன், யூகி, பக்தி, சிநேகிதி முதலிய கதைமாந்தரை விவரிக்கலாம்.

சான்றாக, ஆரணிய பருவத்தின் விடாத கண்ட படலத்தில் வரும் நம்பிக்கை என்னும் கதைமாந்தரைக் குறிப்பிடலாம். நம்பிக்கையும் கிறித்தவனும் முக்தி வழியில் சென்று கொண்டிருக்கும் பயணத்தில், ஒரு கொடிய பாலை வழியில் வழி தப்பிச் செல்கின்றனர். தங்கள் தவறை உணர்ந்து, சரியான வழிக்குத் திரும்ப முயலும் நேரத்தில் மழையும், புயலும், இடியும் தாக்கவே, அருகிலிருந்த ஒரு குகையில் ஒதுங்குகின்றனர். அப்போது அக்குகைக்கு அருகே வாழ்ந்து வந்த விடாத கண்டன் என்னும் இராக்கதன் இவர்களைக் கண்டு, இவர்களைப் பிடித்து, ஒரு சிறையில் அடைத்துத் துன்புறுத்துகிறான். இதனால் மனம் சோர்ந்து போகும் கிறித்தவன், தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடக் கருதுகிறான். அப்போது, நம்பிக்கை அவனுக்கு ஆறுதல் கூறி, ஊக்கம் ஊட்டித் துன்பங்கள் வருவது இயல்பே; நாம் மனம் தளரக் கூடாது; இறையருள் நம்மைக் காக்கும் எனப் பேசி, கிறித்தவனின் தற்கொலை முயற்சியைத் தடுத்து விடுகிறான். இவ்வாறு செயல்படும் நன்மைப் பாத்திரங்கள் பல உள்ளன.

● தீமைப் பாத்திரங்கள்

தீய பண்புகளைத் தாமும் வெளிப்படுத்தி, பிறரையும் தீய வழிக்கு இழுக்கும் செயல்களையும் பண்புகளையும், தீமைப் பாத்திரங்களாகக் காப்பியம் வடிவமைக்கிறது. எல்லாத் தீமைக்கும் ஒட்டு மொத்த வடிவமாய் நம்மால் விவரிக்கப்படும் சாத்தானே (இருட்சக்தியே), இக்காப்பியத்தின் அழிம்பன் ஆகிறான். அவன் நல்லோரையும் நல்லவைகளையும் அழிக்க முனைபவன் என்பதால் அப்பெயர் பெறுகிறான். அவ்வாறே மற்றவர்களை நல்வழியில் செல்லவிடாமல் தடுக்கும், ஊக்கத்தைத் குலைக்கும் பண்புகள் இங்கு அவநம்பிக்கை, விடாதகண்டன் முதலியவை தீமைப் பாத்திரங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

சான்றாக, இதே பகுதியில் இடம் பெறும் விடாத கண்டன் என்னும் இராக்கதனைத் தீமைப் பாத்திரங்களுக்குச் சான்றாகச் சுட்டலாம். முக்தி வழியில் செல்லுகின்ற பயணிகளுள் வழி தப்பி, தான் வாழும் சந்தேகத் துருக்கம் என்னும் மலைப் பகுதிக்கு வந்துவிடக் கூடியவர்களைப் பிடித்து, அவர்களைச் சிறைப்படுத்தி, அவர்களைத் தன் மனைவியாகிய நீலிக்கு உணவாகக் கொடுக்கும் வழக்கம் உடையவன் அக்கொடியவன். அவ்வாறே, கிறித்துவனும் நம்பிக்கையும் வழி தப்பி அங்கு வந்தபோது, அவர்களை விடாதகண்டன் பிடித்து, சிறையில் அடைத்து வேதனைப்படுத்துகிறான். அவர்களைத் தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுகிறான். இத்தகைய தீமைப் பாத்திரங்கள் பல இக்காப்பியத்தில் இடம் பெறுகின்றன.

● நிலைதடுமாறும் பாத்திரங்கள்

மேலே பார்த்த இரு வகையிலும் சேராமல் அதாவது நல்லவர்களாகவும் இல்லாமல், தீயவர்களாகவும் இல்லாமல் உறுதியின்றி வாழ்கின்ற மக்களையும் காப்பியத்தில் காண்கிறோம். இவர்களைத் தற்கால வழக்கில் ‘இரண்டும் கெட்ட நிலையினர்’ எனலாம். இணங்கு நெஞ்சன் யார் எதைச் சொன்னாலும் நல்லது கெட்டது என்று பாராமல் இணங்கிவிடும் பாத்திரம். மாயசாலகன் இப்படியும் அப்படியும் எப்படியும் மாற்றி மாற்றிப் பேசுபவன். மாயவேடன் நல்லவனாகவும் தீயவனாகவும் மாறிமாறி வேடம் போட்டு, பிறரையும் ஏமாற்றித் தன்னையும் ஏமாற்றிக் கொள்பவன். அறிவீனன் எனும் பாத்திரம் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்டாலும், அப்பொருளின் மெய்ப்பொருளைக் காணக்கூடிய அறிவு இல்லாதவன். இவ்வாறு இரட்சணிய யாத்திரிகக் கதை மாந்தர் பல திறத்தினராக அமைந்து காப்பிய வாசகர்களுக்குச் சுவை கூட்டுகின்றனர்.

சான்றாக, ஆரணிய பருவத்தில் அறிவீன வர்ச்சிதப் படலத்தில் வரும் அறிவீனனைக் குறிப்பிடலாம். இவனுக்கும் முத்திநகர் சென்று சேர வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. அதனால் முத்தி வழி செல்லும் பயணிகளுடன் சென்று சேர்ந்து கொள்கிறான். ஆனால், முத்திநகர்ப் பயணிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் எதுவும் அவனிடத்தில் இல்லை. முத்திநகர் வாயிலில் காட்டுவதற்கு உரிய சான்றிதழும் இல்லை. அவற்றைப் பெற்றுக் கொள்ளும் வழிகளையும் அதற்குரிய அறிவுரைகளையும் கிறித்தவனும் நம்பிக்கையும் அவனுக்கு எடுத்துக் கூறியும் அவன் கேட்கவில்லை. தன் சொந்தப் பெருமைகளைப் பேசி, பிறரையும் குற்றம் கூறுகிறான். இதனால் அப்பயணத்தில் அவன் பின்தங்கி விடுகிறான். இத்தகைய இருமனம் கொண்ட தடுமாறும் பாத்திரங்கள் சிலரும் காப்பியத்தில் இடம்பெறுகின்றனர்.

1.4 காப்பியத்தின் இலக்கியத் திறன்

3622 பாடல்களைக் கொண்டு விளங்குவது இரட்சணிய யாத்திரிகம். சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதலிய தமிழறிஞர்கள் இக்காப்பியத்தைப் போற்றிப் பாராட்டியுள்ளனர். அவ்வாறே, இராபர்ட் கால்டுவெல், ஜி,யூ.போப், ஜான் மர்டாக் முதலிய ஐரோப்பியத் தமிழறிஞர்களும் இக்காப்பியத்தால் பெரிதும் கவரப்பட்டுள்ளனர். இனி, இக்காப்பியத்தின் இலக்கியத் திறத்துக்குச் சில சான்றுகள் காண்போம்.

1.4.1 அணி நலன்கள் இரட்சணிய யாத்திரிகக் காப்பியத்தில் தமிழ் இலக்கணம் கூறும் பல்வேறு அணிகள் மிகச் சிறப்பாக ஆளப்பட்டுள்ளன. உவமை அணியைக் கவிஞர் மிகச் சிறப்பாகவும் மிகுதியாகவும் கையாளுகிறார். காப்பியத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை, கருத்து ஆழமும் புதுமையும் செறிந்த பல்வேறு உவமைகளை நாம் காணமுடிகிறது. சில சான்றுகளைக் காண்போம்.

● காற்றில் அகப்பட்ட சருகு

கதைத் தலைவனாகிய ஆன்மிகன், தன் கையிலுள்ள வேத நூலை விரித்துப் படித்ததனால், தன் வாழ்வின் அவல நிலையை உணர்ந்து தவிக்கிறான். தப்பிப் பிழைக்கும் வழியறியாது தவிக்கும் அவன் மனநிலையை, உலவையில் சருகென உழலும் உள்ளத்தான் என உவமை நயம்படப் பேசுகிறார் ஆசிரியர். அதாவது காற்றில் அகப்பட்ட சருகினைப் போல அவனது மனநிலை உள்ளதாம்.

● செக்கும் சுக்கும்

இவ்வாறே, இன்னோரிடத்தில் இயேசு பெருமானின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பாடும்போது சுவையான ஓர் உவமையைப் பயன்படுத்துகிறார். ஒரு குற்றமும் அறியாத, செய்யாத இயேசுக்கு, யூத மக்களின் கூக்குரலுக்குப் பயந்து, ரோம ஆளுநன் ஆகிய பிலாத்து மரணத் தீர்ப்பு வழங்கி விடுகிறான். அவனது மனச்சான்று இதனால் அவனைத் துன்புறுத்துகிறது. மனச்சாட்சியின் உறுத்தலால் மனம் கலங்கும் பிலாத்து இயேசுக்கு எதிராகக் கூக்குரல் எழுப்பிய மக்கள் முன், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துவரச் சொல்லி, அதில் தன் கைகளைக் கழுவி, ‘இந்த நீதிமானின் இரத்தப் பழிக்கு நான் பொறுப்பாக மாட்டேன், நீங்களே பொறுப்பு’ என்று கூறுகிறான். பிலாத்துவின் அந்தச் செயல் எப்படி உள்ளதென்றால் ஒரு பெரிய செக்கினை விழுங்கிவிட்டு அது சீரணிப்பதற்காகச் சுக்குநீர் பருகியது போல் உள்ளதென நயம்படப் பாடுகிறார்.

செக்கினை விழுங்கிப் பின்சீர ணித்திடச்

சுக்குநீர் அருந்துமச் சூழ்ச்சி ஒக்குமால்

(குமார பருவம், இரட்சணிய சரிதப் படலம், 261)

என்பவை அப்பாடல் அடிகள்

● நெருப்பு ஆறும் வெண்ணெய்ப் பாலமும்

இவ்வாறே, வேறு ஓரிடத்தில், ஓர் அரிய இறையியல் உண்மையை விளக்குதற்கு, சுவையான உவமை ஒன்றைக் கையாளுவதைக் காண்போம். மனித குலம் இயல்பிலேயே பாவத்தில் ஊறியது; பாவத்தில் திளைப்பது. அதனால் கடவுளின் கடுங்கோபத்துக்கு உள்ளாவது. கடவுளின் கோபத்தைத் தணிப்பதற்கு, மனிதன் ஒரு சில புண்ணியச் செயல்கள் செய்தால் போதும் என்று கருதுகிறான். இது தவறான எண்ணம். இயல்பிலேயே, பிறவியிலேயே பாவத் தன்மையுடைய மனித குலம், இயேசு பெருமானின் சிலுவைத் தியாக மரணத்தை நம்பி ஏற்பதாலேயே விடுதலை பெறும் என்பது கிறித்துவ இறையியல் கோட்பாடு. இதனைப் பின்வரும் உவமையால் கிருஷ்ணபிள்ளை விளக்குகிறார்.

மண்ணை விழுங்கக் கொதித்தெழும்பி

வரும் தீயாற்றைக் கடப்பதற்கு

வெண்ணெய்ப் பாலம் சமைப்பார்போல்

வேத நாதன் வெகுளிசுய

புண்ணி யத்தால் தீருமெனப்

புலம்ப வேண்டாம் புரைதீர்ந்த

அண்ணல் ஏசு குருதிமுகந்து

அவிக்க வாரும் செகத்தீரே

(நிதான பருவம், இரட்சணிய நவநீதிப்படலம், 7)

(தீயாறு = நெருப்பு நதி; வெகுளி = கோபம்; வேதநாதன் = இறைவன்; செகத்தீரே = உலக மக்களே; குருதி = இரத்தம்; முகந்து = அள்ளி; அவிக்க = அணைக்க)

அதாவது இந்த உலகத்தையே விழுங்கி விடுவதற்காக, எழும்பி வரும் நெருப்பு ஆற்றைக் கடப்பதற்கு வெண்ணெயினால் பாலம் கட்டுவது எவ்வளவு பேதமையோ, அது போன்றதுதான் கடவுளின் கோபத்தை நமது சில நற்செற்கைகளால் தணித்து விடலாம் எனக் கருதுவதும் என்கிறார் கவிஞர். இவ்விடத்தில் மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை தமது காப்பியத்தில் பயன்படுத்தும் ‘வெண்ணெய் ஆறும் மயிர்ப் பாலமும்’ என்ற உவமையை ஒப்பு நோக்கலாம்.

● உருவக அழகு

இரட்சணிய யாத்திரிகக் காப்பியத்தில் நெஞ்சைக் கவரும் உருவகங்கள் பல அமைந்துள்ளன. இறைவனால் முதன் முதல் படைக்கப்பட்ட ஆதி மனிதர்கள் கள்ளம் கபடம் அற்றவர்களாக, ஆடை அணிகலன்கள் இன்றித் தூய வடிவினராக விளங்கியதைப் பின்வரும் பாடலில் உருவகம் செய்கிறார்.

ஒழுக்கமே கலன்களாக உடைபரிசுத்த மாக

இழுக்கறு கருமம் மேனிக்கு இடுநறுஞ் சாந்தமாக

பழுக்குமன் பத்திஅன்ன பானமாய்ப் பகல்கள் எல்லாம்

வழுக்கறு மரபிற் போக்கி மாதவம் புரிவர் நாளும்

(ஆதி பருவம், இராஜதுரோகப் படலம், 8)

(கலன்கள் = நகைகள்; இழுக்கறு = குற்றமற்ற; கருமம் = செயல்; சாந்தம் = சந்தனம்; அன்ன பானம் = உணவும் நீரும்)

அதாவது, ஆதி மானிடர் ஒழுக்கத்தையே அணிகலன்களாகவும், தூய்மையை உடையாகவும், குற்றமற்ற செய்கைகளை உடலில் பூசும் சந்தனமாகவும், அன்பினால் பழுக்கும் பக்தியை உணவாகவும், நீராகவும் கொண்டு, எல்லா நாளும் நெறி தவறாத மிகப்பெரிய தவத்தைச் செய்து வந்தனர் என்பது கருத்து.

இவ்வாறே சிலேடை அணி, மடக்கு முதலிய சொல்லணிகள், சுவையணி முதலிய பல அணிகளும் இரட்சணிய யாத்திரிகப் பாக்களில் பரவலாக அமைந்துள்ளன.

● நகைச்சுவை

கவிஞர் மிகவும் நகைச்சுவையாக எழுதக் கூடியவர். கவிஞரது நிதானி மாயாபுரியின் கடைவீதி வழியாக வருகிறான். சத்தியம் இருந்தால் வாங்குவதாக அறிவிக்கிறான். மாயாபுரி அங்காடி வணிகர், சத்தியத்தைத் தவிரப் பிற எல்லாம் எங்களிடம் உண்டு, அவற்றை வாங்கலாமே! என்று தூண்டினர். நிதானி மறுத்துவிடுகிறான். அக்குற்றத்திற்காக, முழுப் பொய்யன் என்னும் நீதிபதி அளிக்கும் தீர்ப்பு இது:

சத்தியமென் றுரைதந்த

அத்தனையும் பொய்அபத்தம்

எத்தனைவிட் டிடல்என்றான்

புத்தியிலா முழுப்பொய்யன்.

(நிதான பருவம், நிதானி கதி கூடு படலம், 68)

(அபத்தம் = பொய்யுரை)

இப்படிப் பல சுவையான பாடல்கள் உள்ளன.

1.4.2 மொழிநடைச் சிறப்பு கிருஷ்ணபிள்ளை, காப்பியம் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் வடசொல் கலப்பற்ற செறிவுள்ள தமிழ் நடையில் பாடியுள்ளமை தெரிகிறது. ஆனால், பின்னாளில் தமது நண்பர்களின் ஆலோசனைப்படி, பலருக்கும் பயன்படவேண்டும் என்ற கருத்தில் அனைவரும் எளிதில் பொருள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற விருப்பத்தில் கடினச் சொற்களை (திரிசொற்கள்) விலக்கிவிட்டதாகக் குறிப்பிடுகிறார். இருப்பினும், தம் காலப்போக்கிற்கு ஏற்ப, வடசொற்களை ஆங்காங்குப் பயன்படுத்தி உள்ளார். மணிப்பிரவாள நடையென இது அழைக்கப்படும். சான்றாக, ஆத்தும ரட்சணை, ஜீவகோடிகள், வியாக்கியானி, பரம ராஜ்யம், ஜீவகங்கை முதலிய தொடர்களைக் குறிப்பிடலாம்.

மொழி நடையின் போக்கேயன்றி, காப்பிய நடையில் சந்தச் சிறப்பு மிகுந்து, கற்பார்க்குச் சுவை கூட்டுகிறது. மடைதிறந்த வெள்ளம் போன்று சொற்கள் பாயும் ஓசைநயம் மிக்க பல பாடல்களைக் கவிஞர் படைத்துள்ளார். ஒரு சான்று இது:

புதுவிரை மதுமலர் பொதுளிய முதுசினை

பொழிலுழை தழுவுவ புயல்;

வதுவையி னதிபதி பொருவரு கிருபையின்

மலைதலை பொழிவன மழை;

அதிரிடி முழவெழ வரிமுரல் சுருதியின்

அகவுவ மகளிரின் மயில்;

மதுரிய நறைகுட மடிபடி யுகுபயன்

அளவிய விளைவன வயல்

(ஆரணிய பருவம், ஆனந்த சைலப் படலம், 5 )

(புது விரை = புதியமணம்; பொதுளிய = நிரம்பிய; முரலுதல் = மென்மையாக இசைத்தல்; பொழில் = சோலை; புயல் = மேகம்; வதுவை = திருமணம் இங்கு மணமகளாம் திருச்சபையைக் குறித்தது; வரிமுரல் = வரிவரியான வண்டுக் கூட்டங்களின் ஒலி; மதுரிய நறை = இனிக்கும் தேன்)

1.4.3 பிற இலக்கியங்களின் செல்வாக்கு விவிலியத் திருமறையையும், ஜான் பனியனது திருப்பயணியின் முன்னேற்றம் என்னும் நூலையும் முதல் நூல்களாகக் கொண்டு, காப்பியம் படைத்த கிருஷ்ண பிள்ளை, பிற தமிழ் இலக்கியங்களின் செல்வாக்கும் தமது காப்பியத்தில் தோன்றிடச் செய்கிறார்.

● கம்பராமாயணச் செல்வாக்கு

கிறித்துவக் கம்பர் என்று போற்றப்படும் கிருஷ்ண பிள்ளை, தமது காப்பியத்தை இயன்றமட்டில் கம்பராமாயணச் செய்யுள் நடையையும் அதன் போக்கையும் ஒட்டியே எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பல சான்றுகள் தரலாம். ஒன்று இது:

வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறைய

பொய்யோஎனும் இடையாளொடும் இளையானொடும்

போனான்

மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ

ஐயோஇவன் வடிவென்பதோர் அழியாஅழ குடையான்

(கம்பராமாயணம் – 2016)

இது கம்பரின் பாடல்.

(வெய்யோன் = சூரியன்; மையோ = கருமை நிறமோ; மரகதமோ = மதிப்புமிக்க ஒளிவீசும் கல்; முகில் = மேகம்)

வானோமகி தலமோசுடர் மதியோவயங் கொளிர்வான்

மீனோவிரி கடலோமழை முகிலோஒரு விதியில்

ஆனாநெறி யமைத்தாக்கிய அகிலாண்டஅச் சுதன்ஓர்

ஊனாடிய திருமேனிகொண் டுதித்தார்உல குவப்ப

(ஆதிபருவம், சுவிசேஷ மார்க்கப் படலம், 19)

(மகிதலம் = மண்ணுலகம்; முகில் = மேகம்; ஒரு விதியில் = ஒரு கட்டளையில்; ஆனாநெறி = குற்றமில்லாத வகை; அகிலாண்ட = அனைத்துலக; அச்சுதன் = தலைவன்; ஊன்ஆடிய = சதையோடு கூடிய; திருமேனி = மனித உடல்)

இது கிருஷ்ண பிள்ளையின் பாடல்.

காப்பியத்தின் முதற்பாடலே, “உலகம் யாவையும் தாமுள வாக்கலும்” எனத் தொடங்கும் கம்பரின் பாடலை நினைவூட்டும் வண்ணமாக, “உலகம் யாவும் புரந்தருள் உன்னதர்” எனத் தொடங்குகிறது.

1.5 காப்பியத்தின் பிற சிறப்புகள்

கிறித்தவ சமயக் காப்பியமாக விளங்கும் இரட்சணிய யாத்திரிகத்துக்கு, பிற காப்பியங்களுக்கு அமையாத பல பிற சிறப்புகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

1.5.1 முற்றுருவகப் பண்பு இரட்சணிய யாத்திரிகம், ஒரு முற்றுருவகக் காப்பியம் என்று முன்னரே குறிப்பிட்டோம். ஒரு பாடலிலோ சில பாடல்களிலோ இவ்வாறு முற்றுருவகத் தன்மை அமைவதுண்டு; ஆனால் முழு நூலுமே முற்றுருவகமாக அமைவது அரிது. அவ்வாறு தமிழில் அமைந்த காப்பியம் இரட்சணிய யாத்திரிகம் மட்டுமே. பிரபோத சந்திரோதயம் என்னும் வடமொழி நாடக நூலின் தமிழ்ப் பெயர்ப்பிலும் இத்தன்மை காணப்படுவதாக டாக்டர் வ. ஞானசிகாமணி கூறுகின்றார்.

இரட்சணிய யாத்திரிகத்தைப் பொறுத்தவரை, காப்பியக் கதை முழுவதுமே, தூய இறைவனை இந்த மாய உலகில் வாழ்ந்தபடி நாடி நிற்கும் ஒரு மனித மனத்தின் போராட்டங்களை உருவக நடையில் விவரிப்பதுதான். இக்காப்பியத்தில் மனிதப் பண்புகளே கதைமாந்தர்களாக உருவகிக்கப் படுகின்றனர் என்பதை முன்னரே கண்டோம். ஆன்மிகன், மென்னெஞ்சன், சகாயன், நிதானி, அவநம்பிக்கை, அழிம்பன், மெய்விசுவாசி, மறைக்கிழவன், அறிவீனன், முழுப்பொய்யன், வியாக்கியானி என அனைத்துக் கதைமாந்தர்களுமே இவ்வாறு அமைந்தவர்கள்தாம். கதை மாந்தர்கள் மட்டுமல்ல, கதையில் வரும் பல இடங்களும் ஊர்களும் கூட இவ்வாறு உருவக இயல்புடையனவே. சான்றாக, எழிற் சத்திரம், நாசபுரி, மாயாபுரி, தருமபுரி, தரும சேத்திரம், துன்பமலை, ஆனந்த சைலம் முதலிய இடப் பெயர்களைச் சுட்டலாம். கதைமாந்தரும் இடங்களும் மட்டுமல்ல, காப்பியத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிகளும் உருவக அடிப்படை உடையனவே.

சான்றாக, கிறித்தவனும் அழிம்பனும் செய்யும் போர், நன்மை, இறையறிவு, ஒளி, நல்லறம் ஆகியவற்றை முறையே தீமை, அவித்தை, இருள், பாவம் என்பன எதிர்த்துப் போரிடுதல் போன்றது என ஒரு பாடல் குறிப்பிடுகிறது.

1.5.2 வழிநூலில் தனிவழி ஜான் பனியனது பில்கிரிம்ஸ் பிராகிரஸ் என்னும் நூலை முதல் நூலாகக் கொண்டே, ஆசிரியர் இக்காப்பியத்தை வழி நூலாகப் படைத்தார். எனினும் முழுக்க முழுக்க அந்நூலை இவர் அப்படியே மொழிபெயர்ப்புச் செய்யவில்லை. நம் நாட்டுச் சூழலுக்கும் தம் கவியாற்றலுக்கும் ஏற்பப் பல்வேறு மாற்றங்களைச் செய்து, ஒரு முதல் நூல் போலவே தோன்றுமாறு படைத்துள்ளார். முன்னது உரைநடை நூல். அந்த ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான மோட்சப் பிரயாணம் என்பதும் உரைநடை நூலே. அதன் ஆசிரியர் சாமுவேல் பவுலய்யர் ஆவார். கிருஷ்ண பிள்ளையோ அதனைச் செய்யுள் வடிவில் காப்பியமாக்கினார். வால்மீகியின் கதையைத் தமிழ் நெறிப்படுத்தி அமைத்த கம்பரைப்போல, ஜான் பனியனிடம் கதையையும் கருத்தையும் வாங்கிக் கொண்டு, தாம் அதைப் புதிய வடிவில் பொலிவுற அமைத்தார். முதல் நூலில் உள்ள மரியாதை, நாத்திக சாத்திரி முதலிய பாத்திரங்களை இவர் நீக்கிவிடுகிறார். பிரபஞ்சன், தூர்த்தன், காமமோகிதன் முதலிய புதிய பாத்திரங்களைப் படைத்துக் கொள்கிறார். முதல் நூலில் உள்ள கதை மாந்தர்கள் சிலரின் பெயரையும் செயலையும் மாற்றி அமைத்துக் கொள்கிறார். சான்றாக, மூலநூலில் கிறித்தவன் என இருப்பதை, வேதியன், ஆன்ம விசாரி, மறைவாணன், சூரியன் முதலிய பல பெயர்களால் வழங்குகிறார். உண்மை (faithful) என்று மொழியெர்ப்பில் உள்ளதை நிதானி என்று வழங்குகிறார்.

1.5.3 தமிழ்ப் பண்பாட்டு நெறி முன்னரே கூறியது போன்று, கம்பரின் அடிச்சுவட்டில் கிறித்தவக் கம்பர் கிருஷ்ண பிள்ளையும் இக்காப்பியத்தைப் பல நிலைகளிலும் தமிழ்ச் சூழலுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும், தமிழ்ச் சமய, இலக்கிய மரபுகளுக்கும் ஏற்ப அமைத்துப் பாடியுள்ளார்.

● தேவாரப் பாடல்கள்

சிறப்பாக, தமிழ்ப் பக்தி மரபுக்கேற்ப, காப்பியத்தில் பல இடங்களில் தேவாரப் பாடல்கள் பலவற்றை நெஞ்சை உருக்கும் வகையில் பாடியுள்ளார். ஒரு சான்று இங்குத் தரப்படுகிறது:

சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்ச்

சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே

எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவம்தீர்ந்து

அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே?

(தேவாரம் எண்.1. ஆதிபருவம், உபாதி மலைப்படலம்)

(நிஷ்களமாய் = குற்றமில்லாததாய்; ஒருசாமியமும் = ஒப்பு ஒன்றும்; சித்தாய் = பேரறிவாய்; திரித்துவமே = மூவரும் ஒருவராய் விளங்கும் இறைக்கோட்பாடு; கடைத்தேறுவன் = மீட்பு அடைவேன்; அத்தா = தலைவா)

தாயே தந்தைதமர் குருசம்பத்து நட்பெவையும்

நீயே எம்பெருமான் கதிவேறிலை நிண்ணயம்காண்

ஏயே என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை

ஆயே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே?

(தேவாரம் எண்-8 ஆதிபருவம், உபாதிமலைப்படலம்)

(தமர் = உறவினர்; சம்பத்து = செல்வம்; நிண்ணயம் = உறுதியானது; ஆயே = தாயே)

● அக இலக்கிய மரபு

அவ்வாறே, கிறித்துவின் சிலுவைத் தியாகத்தை வருணிக்கும்போது, தமிழ் அக இலக்கிய மரபைப் பின்பற்றி, அதனை மடல் ஊர்தலுக்கு ஒப்பிடுகிறார். தன் காதலியின்பால் தான் கொண்ட மாறாக் காதலை அவளது உற்றாருக்கும் ஊராருக்கும் உணர்த்த, பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையில் ஏறி, அது தன் உடலைக் கிழிக்கக் கிழிக்க, காதலன் ஊர்வலம் வரும் செயலே மடல் ஊர்தல் எனப்படுவது. இது தமிழ் இலக்கிய மரபுக்கே உரியது.

● சமய இலக்கியத் தொடர்கள்

அவ்வாறே “கடவுளின் வார்த்தை” என இறைமகன் இயேசு அழைக்கப்படுவதை விளக்கும்போது, அவரைப் “பிரணவ தெய்வம்” (ஓம்) எனப் பாடுகிறார். சீவகங்கை, சரண பங்கயம் முதலிய சொற்களையும், சரணாகதித் தத்துவம், மும்மலம், நயன தீட்சை, பரிச தீட்சை, மார்ச்சால நியாயம், அபயவரத அஸ்தம் முதலிய சைவ சமயக் கோட்பாடுகளையும் கிறித்து நெறி உண்மைகளை விளக்கிடத் தயங்காமல் பயன்படுத்துகிறார்.

இவ்வாறாக, காப்பியத்தில் தமிழ் மணமும் தமிழ்ப் பண்பாட்டு நெறிகளும் மிளிரச் செய்கிறார்.

1.6 தொகுப்புரை

அன்பு மாணவர்களே! இப்பாடத்தில் கிறித்தவக் கம்பர் என்று பாராட்டப் பெறும் கிருஷ்ணபிள்ளை இயற்றிய இரட்சணிய யாத்திரிகம் என்னும் தமிழ்க் காப்பியம் பற்றி அறிந்தீர்கள். காப்பியத்தில் அமைந்துள்ள கவிதை நயங்கள், கற்பனை வளம் இவற்றைச் சுவைத்தீர்கள். அருமை மிக்க வாழ்வியல் கருத்துகளையும் பெற்றீர்கள்.

பாடம் - 2

தேம்பாவணி

2.0 பாட முன்னுரை

கலைகளுள் சிறந்ததாகவும் காலத்தால் அழிக்க முடியாததாகவும் விளங்குவது இலக்கியக் கலை. இலக்கிய வடிவங்களுள் பழைமையானது, இனிமையானது கவிதை வடிவம். கவிதை இலக்கியங்களில் சிறப்புமிக்கது காப்பிய வடிவம். நீண்ட தொடர்நிலைச் செய்யுள்களாக அமையும் காப்பியங்கள், கற்போர் நெஞ்சில் நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றன. இத்தகைய சிறந்த காப்பியங்கள் பல தமிழில் உள்ளன. அவற்றுள், கிறித்துவ சமயம் சார்ந்த செய்திகளைக் கூறும் தேம்பாவணி, தமிழிலக்கிய வரலாற்றில் தனித்து விளங்குகிறது. அக்காப்பியத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தி, அக்காப்பியத்தின் சுவையை ஓரளவு நுகரச் செய்வதே இப்பாடத்தின் நோக்கமாகும்.

2.1 நூலாசிரியர் அறிமுகம்

தேம்பாவணி என்னும் தமிழ்க் காப்பியத்தைப் படைத்து வழங்கியவர் வீரமாமுனிவர். இவர் இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவர். கிறித்தவ சமயத் தொண்டுக்காகத் தமிழகம் வந்து, தமிழின் சிறப்பினால் ஈர்க்கப்பட்டு, தமிழ்த் தொண்டராகவும் தமிழறிஞராகவும் மாறிவிட்ட அவரது வாழ்வையும் பணியையும் பற்றிக் காண்போம்.

2.1.1 வீரமாமுனிவரது வாழ்வும் பணியும் வீரமாமுனிவர் என்பது அவரது இயற்பெயர் அல்ல. கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பதே அவரது இயற்பெயர். கிறித்தவ சமயப் பணி செய்வதற்காக, அவர் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். கி.பி.1710இல் இந்தியாவுக்கு வந்தார். கோவா, கொச்சி, அம்பலக்காடு வழியாக, மதுரை மாவட்டத்தில் உள்ள காமநாயக்கன் பட்டியை வந்தடைந்தார். தமது சமயப்பணி தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டுமெனில், தமக்குத் தமிழறிவு மிகவும் இன்றியமையாதது என்று நன்குணர்ந்தார். மேலும் தமிழகம் வந்து தமிழராகவே மாறி, தம் பெயரையும் தத்துவ போதகர் என மாற்றிக் கொண்டு, தமிழ்ப்பணியும் புரிந்த இராபர்ட்-டி-நொபிலி என்னும் மேலைநாட்டு இறையடியாரைப் பற்றி இவர் கேள்விப்பட்டார். அவர்போலவே, தாமும் இறைப்பணியைச் செய்திட விரும்பினார். அதனால், இவரும் தமது பெயரைத் தைரியநாதர் என்று மாற்றிக் கொண்டார். பின்னாளில் மக்கள் இவரை வீரமாமுனிவர் என்றே அழைத்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தார்தாம் இப்பெயரை இவருக்குச் சூட்டினர் என்பர் சிலர்.

● தோற்ற மாற்றம்

வீரமாமுனிவர் பெயர் மாற்றம் செய்து கொண்டதோடு, இந்நாட்டில் இருந்த சமயத் தொண்டர்களைப் போலவே, தாமும் நெற்றியில் சந்தனம் பூசி, காதில் முத்துக் கடுக்கன் அணிந்து, காவி அங்கி உடுத்தி, புலித்தோல் பதிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டார். இப்படி, தோற்ற மாற்றம் செய்துகொண்டது மட்டுமல்ல, காய்கறி உணவை மட்டுமே உண்டு, சைவ உணவினராகவும் மாறிவிட்டார். தமிழின் மீது இவருடைய பற்றை என்னென்பது! தோற்றத்தில் மட்டுமின்றி, உணவு முறையிலும் மாறியது மேலும் சிறப்பானது.

● சமயப் பணி

இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி மற்றும் ஏலாக்குறிச்சி, கோனான்குப்பம் முதலிய பல இடங்களில் சமயத் தொண்டு புரிந்தார். தாம் சமயப்பணி புரிந்த இடங்களிலேயே, பல்வேறு தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையும் அகராதிகளையும் எழுதி வெளியிட்டார். தமிழ்நாட்டுக்கு வந்து தமிழராகவே வாழ்ந்தார் வீரமாமுனிவர். 1747ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே உயிர்நீத்தார். உலகில் வாழ்ந்த சமய மற்றும் மொழித்தொண்டர்கள் வரிசையிலே இவ்வாறு தமக்கென ஓர் அழியாத, தனித்துவமான இடத்தைத் தேடிக் கொண்டார் பெஸ்கி எனப்பட்ட வீரமாமுனிவர்.

2.1.2 வீரமாமுனிவரது படைப்புகள் தத்தம் தாய்மொழியிலே புலவர்கள் பல்வேறு இலக்கியங்களைப் படைப்பது பொதுவழக்கு. தமது தாய்மொழி யல்லாத பிறமொழிகளை அறிஞர்கள் கற்று அதில் ஆழ்ந்த புலமை பெறுவதும் உலகில் காணக்கூடியதே. எனினும் ஒருவருக்குத் தம் தாய்மொழி யல்லாத பிறமொழியில் இலக்கியம், இலக்கணம், அகராதி முதலிய அனைத்துத் துறைகளிலும் அரிய நூல்கள் பல படைக்கும் அளவுக்கு ஆற்றலும் அரும் புலமையும் அடைவது மிகமிக அரிய செயலாகும். செயற்கரிய அச்செயலைச் செய்து, உலக வரலாற்றிலேயே தனித்து நிற்பவருள் ஒருவராக வீரமாமுனிவர் திகழ்கிறார்.

● நூல்கள்

இத்தாலி நாட்டில் பிறந்து, தமது முப்பதாம் வயதிலேயே தமிழகம் வந்த அவர், தமிழில் சிற்றிலக்கியங்கள், இலக்கணம், உரைநடை, அகராதி, இசைப்பாடல்கள் முதலிய பல துறைகளில் நூல்கள் படைத்தார். அதோடு மட்டுமல்லாமல் இலக்கியப் படைப்புகளுள் மிக அரியதாகக் கருதப்படும் தேம்பாவணி எனப்படும் காப்பியம் ஒன்றையும் இயற்றி வெற்றி கண்டுள்ளார்.  மேலும் அவர், திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களையும், சதுரகராதி எனப்படும் அகராதியையும், தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் எழுதியுள்ளார். இவற்றுள் தொன்னூல் விளக்கம், குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படும் பெருமையுடையது. இப்படிப் பல்வேறு வகையான நூல்களைப் படைத்த ஒரு புலவரைக் காண்பது, தமிழில் மட்டுமன்று; உலகின் பிற மொழிகளிலும் கூட மிக அரிய ஒன்றாகும்.

2.2 காப்பிய அறிமுகம்

இனி, தேம்பாவணி எனப்படும் இக்காப்பியத்தின் சிறப்புகளையும் பண்புகளையும் காண்போம். இன்னொரு கிறித்தவக் காப்பியமான இரட்சணிய யாத்திரிகத்தைப் போலவே, இத் தமிழ்க் காப்பியமும் பிறமொழிக் காப்பியம் ஒன்றைத் தழுவி, தமிழ் நெறிக்கேற்ப எழுதப்பட்டதாகும். ஸ்பானிய நாட்டு ஆகிருத நகரில் வாழ்ந்த ஆகிர்த மரியாள் என்னும் கன்னி இறைநகரம் (City of God) என்னும் நூலை, அன்னை மரியின் ஆணைப்படி எழுதியதாகக் கூறியுள்ளார். அன்னை மரியினால் தமக்கு உரைக்கப்பட்ட சூசையப்பரின் வரலாற்றையே தாம் நூலாக எழுதியுள்ளதாக அவர் கூறுகிறார். அந்நூலைத் தழுவி, தமிழ் மரபுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஏற்ப வீரமாமுனிவர் தேம்பாவணியை இயற்றியிருக்கிறார். மேலைநாட்டு நூலின் மொழிபெயர்ப்பு எனத் தோன்றாத வகையில், இக்காப்பியத்தை வீரமாமுனிவர் உருவாக்கியுள்ளார். இங்கு வந்து, தன்னைத் தமிழராக ஆக்கிக் கொண்டு ஒரு காப்பியத்தைத் தழுவி எழுதுவது என்றால், அதுவும் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ப என்பது வியப்பைத் தருகிறதல்லவா? காப்பியத்தின் சிறப்புகளைத் தொடர்ந்து காண்போமா?

2.2.1 காப்பியக் கருவும் கதையும் இத்தமிழ்க் காப்பியத்தின் கதைத் தலைவராக விளங்குபவர் இயேசுபெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையே ஆவார். வளன் என்றும் குறிக்கப்படும் இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு விவிலியத் திருமறையில் ஐந்தே இடங்களில் சிற்சில வரிகளிலேயே இடம் பெறுகிறது. எனினும், ஆகிர்த மரியாளின் மூலநூலைத் தழுவி, வீரமாமுனிவர் சூசையின் வரலாற்றை விரிவான காப்பியமாக வடித்துள்ளார்.

● காப்பியத் தொடக்கம்

சூசை எனப்படும் வளனார் பிறந்த நாடான யூதேயா நாட்டு வளமும், அதன் தலைநகராகிய எருசலேம் நகரச் சிறப்பும் கூறிக் காப்பியத்தைத் தொடங்குகிறார் ஆசிரியர். பின்னர் சூசையின் முன்னோரில் சிறந்த தாவீது என்னும் பேரரசனின் வரலாற்றைக் கூறுகிறார். சூசை பன்னிரு வயதிலேயே துறவு மேற்கொள்ளத் துணிவதும், பின்னர் இறைவனின் ஆணைப்படி நாடு திரும்புவதும் முதலிய பல செய்திகள் கூறப்படுகின்றன.

● கதைச் சுருக்கம்

கடவுளின் திருவுள்ளப்படி சூசைக்கும் மரிக்கும் திருமணம் நிகழ்கிறது. அவர்கள் இல்லற வாழ்வில் இணைக்கப்பட்டாலும் துறவு நெறியிலேயே வாழ்கின்றனர். இறையாற்றலால் மனித உறவின்றி அன்னை மரியிடம் பிறக்கும் தெய்வக் குமரனாம் இயேசுவை அவர்கள் வளர்த்து வருகின்றனர். வானவரின் கட்டளைப்படி செயல்படும் அவர்கள், அக்கட்டளையால் அரசன் ஏரோதன், திருக்குழந்தைக்குச் செய்ய இருந்த துன்பத்தினின்று நீங்க, எகித்து (எகித்து = எகிப்து நாடு) நாடு செல்கின்றனர். அந்நாட்டுக்கு வானவர்களின் துணையுடன் செல்லும் இத்திருக்குடும்பத்தினர் பயணம் பற்றியும், வானவர்கள் இவர்களுக்கு எடுத்துரைத்த விவிலியக் கதைகள் பற்றியும் காப்பியம் கூறுகிறது. ஏரோதன் ஆட்சியின் கொடுமைகள் சித்திரிக்கப்படுகின்றன. இவ்வரசன் இறந்தபிறகு, இவர்கள் தாய் நாடு திரும்புகின்றனர். திருமறை பல நாடுகளிலும் வளரும் பாங்கு விளக்கப்படுகிறது. திருமகன் இயேசு குழந்தையாகவே பல அருஞ்செயல்கள் புரிவதும் கூறப்படுகின்றது. பின்னர் சூசை நோயால் துன்பம் அடைந்து இறந்து, புண்ணிய ஆன்மாக்களுக்குத் திருமகனின் தூதராகச் செல்கிறார். இறைமகன் இயேசுவும் திருப்பாடுகளை அடைந்து, இறந்து உயிர் பெற்றபின், சூசையும் மீண்டும் உயிர்பெற்று எழுகிறார். அவருக்கு விண்ணுலகிலும் மண்ணுலகிலும் திருமுடி சூட்டப்பெறுகிறது. இவ்வாறு வளனார் பெருமையையும் வரலாற்றையும் கூறிக் காப்பியம் நிறைவடைகிறது.

2.2.2 காப்பிய அமைப்பு தேம்பாவணிக் காப்பியம் பாயிரம் எனப்படும் முகவுரையும், படலங்கள் எனப்படும் முப்பத்தாறு சிறு பிரிவுகளும் கொண்டு விளங்குகிறது. இந்த முப்பத்தாறு படலங்களையும் மூன்று காண்டங்களாகப் பிரித்து வெளியிட்டுள்ளனர். தமிழ்க் காப்பியங்களின் அமைப்புக்கும் மரபுக்கும் ஏற்ப, பாயிரப் பகுதியில் நூல் எழுதப்பட்ட வரலாறு கூறப்படுகிறது. அதில் அவையடக்கமாக ‘கடலையே நக்கிக் குடிக்க முற்பட்ட ஒரு பூனையைப் போல, ஊமையன் போன்ற நானும் சொல்லுவதற்கு அரிய வளனாரின் வரலாற்றை வடிக்க முற்பட்டேன்’ எனக் கூறுகிறார். உவமையின் அழகை எண்ணிப் பாருங்கள். எத்துணைத் தன்னடக்கம்! பின்னர் காப்பிய மரபுப்படி நாட்டு வளம், நகர் வளம் முதலியன நன்கு வருணிக்கப்படுகின்றன.

● மூவர் பெருமை

காப்பியத்திலுள்ள முப்பத்தாறு படலங்களிலும் காப்பியத் தலைவனாகிய சூசை, அவரது துணைவியாகிய மரியாள், அவர்களால் வளர்க்கப்படும் தெய்வீகத் திருக்குழந்தையாகிய இயேசு ஆகிய மூவரது பேராற்றலும் பெருமைகளும் நன்கு விரித்துரைக்கப்படுகின்றன.

● விவிலியக் கதைகளும் செய்திகளும்

விவிலியத் திருமறையில் பழைய ஏற்பாடு எனும் முற்பகுதியில் இடம்பெறும் பல கதைகள், வானவர்களின் வாய்மொழியாகக் கூறப்படுகின்றன. அவ்வாறே புதிய ஏற்பாடு எனும் விவிலியப் பிற்பகுதியில் இடம் பெறும் அரிய செய்திகளும் வரலாறுகளும் காப்பியக் கதையின் ஊடாகவே எடுத்துரைக்கப்படுகின்றன.

● தமிழ் மரபும் மொழிநடையும்

தமிழ் மரபுக்கேற்ற உவமைகளும் மரபுத் தொடர்களும் மட்டுமன்றி, பழங்கதைகளும் கூட ஆங்காங்கே பயன்படுத்தப்படுகின்றன. மேலை நாட்டவர் ஒருவர் படைத்த காப்பியம் எனச் சற்றும் நினைக்கத் தோன்றாதவாறு, மிக உயர்ந்த மொழி நடையும், இலக்கியத் திறன்களும் காப்பியம் முழுவதும் வெளிப்படுகின்றன.

2.2.3 காப்பியத்தின் மூல நூல்கள் இக்காப்பியத்தின் மூலநூல் ஆகிர்த மரியாள் என்பார் எழுதிய இறைநகரம் என்ற நூலே என்பது முன்னரே சுட்டப்பட்டது. எனினும், விவிலியத் திருமறை (Bible)யும் இதற்கு முதல் நூல் என்பதை நாம் மறக்கலாகாது. எல்லாக் கிறித்தவ இலக்கியங்களுக்கும் விவிலியமே முதல் நூலாக அமைகிறது. தேம்பாவணிக்கும், விவிலியமே முதல் நூல் எனலாம். தேம்பாவணியில் விரித்துரைக்கப்படும் சூசையின் வரலாறு, விவிலியத்தில் ஐந்தே இடங்களில் மிகச் சில வரிகளிலேயே கூறப்படுவதால், ஆகிர்த மரியாளின் நூலைத் தழுவி ஆசிரியர் காப்பியம் அமைக்கிறார். எனினும் விவிலியத்தின் இருபிரிவுகளிலும் கூறப்படும் ஏராளமான கதைகளையும் வரலாறுகளையும் ஆசிரியர் நூல் முழுவதும் பலவகைகளிலும் எடுத்துரைப்பதால், இக்காப்பியம் விவிலியத் திருமறையின் சாரமாகவே பல இடங்களில் காணக் கிடைக்கிறது. ஆகவே விவிலியமும், இறைநகரம் என்ற நூலும் ஆகிய இரண்டுமே, இக்காப்பியத்தின் மூல நூல்கள் எனக் கருதத்தக்கன.

2.3 காப்பியக் கதை மாந்தர்

தேம்பாவணி ஒரு தலைசிறந்த கிறித்தவக் காப்பியம். இது, இயேசு பெருமானைக் காப்பியத் தலைவராகக் கொண்டு, அவர் புகழ் பாடும் நூல் என்று மக்கள் பொதுவாகக் கருதுவதுண்டு. ஆனால், இந்நூல் இயேசுவாகிய திருக்குழந்தையின் பெருமையைப் பாடினாலும், இயேசு பெருமான் இக்காப்பியத் தலைவர் அல்லர். அருளுடையவரும், மகிமைக்குரியவரும் ஆகிய புனித சூசையே இக்காப்பியத்தின் தலைவராவார். இவர் இயேசுவாகிய குழந்தைக்கு இம்மண்ணுலகில் வளர்ப்புத் தந்தையாக விளங்கும் பேறு பெற்றவர். இவரையும், இவரது அன்புத் துணைவியும் கடவுளின் தாயுமாகிய கன்னி மரியையும் இவர்கள் இல்லத்தில் வளரும் திருக்குழந்தையாகிய இயேசுவையும் மையமாகக் கொண்டே இக்காப்பியம் அமைந்துள்ளது. எனினும் சூசையின் வரலாற்றை முழுமையாகக் கூறுவது இக்காப்பியத்தின் முதன்மையான நோக்கங்களுள் ஒன்றாகும். மேலும் வானதூதர், பிற இறையடியார் உள்ளிட்ட பலரைக் கதை மாந்தர்களாகப் பெற்று, காப்பியம் சுவையாக வளர்ந்து செல்வதைக் கற்பார் உணரலாம். கதைமாந்தர் சிறப்பினை இனிப் பார்க்கலாமா?

2.3.1 காப்பியத்தின் மையமாகிய மூவர் முன்னரே சுட்டியபடி, இயேசுவும் அவரது பெற்றோராகிய புனித சூசையும், அன்னை மரியும் அடங்கிய திருக்குடும்பமே இக்காப்பியத்தின் மைய மாந்தர் ஆவார். கடவுளின் மனித அவதாரத்திலும் உலக மீட்பிலும் பாராட்டுதற்கு உரிய வகையில் புனித கன்னிமரிக்கும் சூசைக்கும் உள்ள பங்கினை, கவிஞர் இக்காப்பியத்தில் சிறப்பாகப் புலப்படுத்தியுள்ளார். காப்பியத்தில் அனைத்துப் பகுதிகளும் சூசை, அன்னை மரியாள், இயேசு ஆகிய இம்மூவருள் ஒருவரைப் பற்றியோ அல்லது மூவரையும் இணைத்தோ பல செய்திகளைப் பாடிச் செல்வதைக் காப்பியத்தின் படலங்கள் ஒவ்வொன்றும் கூறும் செய்திகளினால் உணரலாம். ஆகவே வளனாம் சூசையைத் தலைவனாகக் காப்பியத்தில் கொண்டாலும் திருக்குடும்பப் பெருமையினை விரித்துப் பேசவே கவிஞர் காப்பியத்தை இடமாக்கிக் கொண்டார் எனலாம்.

அவ்வகையில் காப்பிய நாயகனாகப் புனித சூசையையும், உலக நாயகியாக அன்னை மரியையும், உலக நாயகனாகத் திருமகன் இயேசுவையும் வருணித்துப் பாடுகிறார் கவிஞர். இறைவன் இயேசுவையும் மரியன்னையையும் உயர்த்தும் அளவிற்கு, காப்பிய நாயகன் சூசையை உயர்த்தி, நாயகன் எனக் குறிக்காவிடினும், அதனைக் குறிப்பால் பெறவைக்கிறார். முப்புறத்து இணையில் மூவர், ஆவிநோய் செய் புரையழிக்கும் மூவர் (உயிருக்குத் தீங்கு செய்யும் குற்றங்களை அழிக்கும் மூவர்) என்னும் தொடர்களில் மூவரையும் இணைத்துப் போற்றுகிறார்.

● மூவர் பெருமை

எகித்து நாட்டினர் இம்மூவரையுமே உயிராகப் போற்றுகிறார்கள். ‘அம்மையே! மகனே! அரிய தவத்தின் தலைவனாகிய சூசையே! உங்களையே உயிராகக் கருதி, உங்கள் நிழலில் வாழ்ந்த எங்களை விட்டுப்பிரிந்து செல்கிறீர்களே! நல்ல நண்பர்களைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் போகாதீர்கள்! அன்பின் உறுதியைப் போற்றுங்கள்’ என்று புலம்புகிறார்கள்; கெஞ்சுகிறார்கள். அப்பாடல் பின்வருமாறு:

அம்மையே! மகவே! வாய்ந்த

அருந்தவத் திறைவ சூசை!

நும்மையே! உயிரென் றாக

நுதலிநும் நிழலில் வாழ்ந்த

நம்மையே அகன்று போதீர்!

நட்பிடை அகலா தன்பின்

செம்மையே பேண்மின் என்னாச்

சென்றுமீண் டெவரும் போனார்

(மீட்சிப் படலம் – 41)

(மகவே – குழந்தையே; அருந்தவத்து – அருமையான தவத்தையுடைய; நுதலி – நினைத்து; போதீர் – போகிறீர்கள்; பேண்மின் – போற்றிக் காப்பாற்றுங்கள்)

இம்மூவரும் ஒன்றுபோல உலகமக்களின் நலத்துக்காகவும் மீட்புக்காகவும் வறுமை வாழ்வை ஏற்று வாழ்வதை ‘ஓர் வறியோர் போல்’ எனக் கவிஞர் வருணிக்கிறார்.

● மூவர் பங்கு

மேலும் நல்லதோ தீயதோ அனைத்திலும் திருக்குடும்பத்தார் மூவருக்கும் பங்குள்ள தன்மையையும் பல இடங்களில் காப்பியத்தில் காண்கிறோம். மனிதனை மீட்க இறைவன் உலகத்தில் உருவெடுத்திருந்தாலும் அப்பணியை நிறைவுறச் செய்வதில் மூவருமே பங்கு பெறுகின்றனர். சூசை நோயுற்று வருந்தும்போது அத்துன்பத்தைத் தாங்க முடியாத அன்னைமரி தம் மகனிடம் அவரது நோய் தணிக்க வேண்டுகிறார். அதற்கு மறுமொழியாக ‘இத்துன்பம் நல்லதாகும். தேனினும் இனிய துயரச் செய்தியைக் கேள்’ எனக் கூறுகிறார் திருமகன். அதாவது நோயை அனுபவிக்கும் பங்கு இவருடையது. வருந்திப் பாடுபட்டு, உடற்காயங்களைப் பெறுவது என்னுடைய பங்கு. இருவர் தம் பாடுகளையும் கண்டு நெருப்புப் போன்ற துன்பத்தை அனுபவிப்பது உன்னுடைய பங்கு என்று அன்னைமரியிடம் இயேசு கூறி மனித குல மீட்புப் பணியில் மூவருக்கும் பங்கு உண்டு என உணர்த்துகிறார்.

● மூவர் அருள்

மனிதர்களுக்கு வேண்டும் வரங்களை அருள்வதிலும் மூவரும் குறைவில்லாதவர் என்று காப்பியத்தில் காட்டப்படுகிறது. விண்ணுலகத்தை அடைந்த சூசைக்கு, பிதா முடிசூட்டுகிறார். அம்முடியில் உள்ள ஏழு மணிகளின் தன்மைகளை விளக்கும்போது ‘அன்னையின் அருளை வேண்டுபவர்களுக்கு, அவ்வருளைப் பெறுமாறு நீ அருள் புரிய உனக்கு நான் மூன்றாம் மணியைத் தந்தேன்’ என்று கூறுகிறார். அதாவது அன்னையின் அருளைப்பெற, சூசையின் அருள் வேண்டும். அவ்வருளை அருளும் ஆற்றல் இறைவனால் அன்னைக்கு அருளப்படுகிறது. ஆகவே ஒருவர் அன்னையின் அருளைப் பெறும்பொழுது, சூசை, இறைவன் ஆகியோரும் துணையாகின்றனர். மூவரின் பங்காலும் கேட்கும் வரம் கிடைக்கிறது என்பது கருத்தாகும். மூவரும் ஒருங்கிணைந்து அருள்வது என்பது எத்தகைய பேறு! அத்தகைய பேற்றினைப் பெற வேண்டுமென்று தோன்றுகிறதா?

2.3.2 தலைமை மாந்தர் ஒரு காப்பியத்திற்குச் சிறந்த அமைப்பும் அழகும் தருவது தலைமை மாந்தர் படைப்பே. தேம்பாவணியின் முதன்மையான தலைமை மாந்தர் சூசையே என முன்னரே விளக்கப்பட்டது. எனினும் சூசையின் வாழ்வு அன்னை மரியின் வாழ்வோடு பிரிக்க முடியாதபடி கலந்தது. ஆதலால் இருவர் சிறப்பும் இணைத்தே பேசப்படுகிறது. ஆதி மனிதனது தீவினையால் மனிதர்கள் அனைவரும் கருவிலேயே மாசுடையவர்களாகப் பிறக்கின்றனர் என்பது கிறித்தவக் கோட்பாடு. அந்த மாசு இல்லாதவராகத் தோற்றமெடுத்தது மரியின் சிறப்பென்பது கத்தோலிக்கச் சமயக் கோட்பாடு. அதனைக் காப்பியத்தில் பல இடங்களிலும் கவிஞர் வெளிப்படுத்துகிறார்.

● பழியில்லாப் பிறப்பு

‘இவ்வுலகத்தில் மனிதனாகப் பிறந்து, உலக மக்களின் பாவங்களை நீக்கப் போகும் இறைமகனின் தாயாக இருக்க வேண்டியவள், முன்னோர்களிடமிருந்து வழிவழியாக வருகின்ற பாவ இயல்பு இன்றிப் பிறந்தாள். தூய அறிவு, ஆற்றல், ஒளிக்காட்சி, அருள், துணிவு, மதிநுட்பம் முதலிய அழியாத பல வரங்களைப் பெற்று, எல்லா உலகும் ஆச்சரியப்படுமாறு அன்னை மரி பிறந்தாள்’ என்று கவிஞர் பாடியுள்ளார். அப்பாடல் பின்வருமாறு:

சேயாக மனுக்குலத்தில் சேர்ந்துதித்து

வையகத்தார் சிதவை நீக்கத்

தாயாக வளர்கன்னித் தாய்வயிற்றில்

பழம் பழிசேர் தவறில் லாது

தூயாகம் அறிவு ஆண்மை சுடர்காட்சி

வலி அருள் மாண் துணிவு சூழ்ச்சி

வீயாத வரங்கொடுபெற் றெவ்வுலகும்

வியப்பெய்த வேய்ந்தா ளன்றோ

(திருமணப் படலம் – 5:27)

(சேய் – குழந்தை; வையகத்தார் – உலக மக்கள்; சிதவை – குற்றங்கள், பாவங்கள்; தூயாகம் – தூய மனம், ஆகம் என்பது அகம் என்பதன் நீட்டல் விகாரம்; சுடர் காட்சி = தெய்வ ஒளிக்காட்சி; வீயாத – அழியாத; ஏய்ந்தாள் – பிறந்தாள்)

ஆனால் தலைவிக்குத்தான் மாசில்லாத பிறப்பு உண்டே தவிர, கிறித்தவக் கொள்கைப்படி தலைவனுக்கு இல்லை. எனினும் தலைவன் தலைவியருக்கிடையே பொருத்தம் பிறப்பிக்கக் கருதி சூசையும் அத்தகு பழி இல்லாத பிறப்பு உடையவனாக விளங்க வேண்டுமென இறைவன் கருதியதாகக் கவிஞர் பாடுகிறார்.

● இல்லறத்தில் துறவறம்

கன்னி மரி எவ்வாறு கன்னிமைத் தன்மை நீங்காது வாழ்ந்தாளோ, அவ்வாறே சூசையும் துறவு நெறியே பூண்டு வாழ்ந்ததாகக் காப்பியம் கூறுகிறது. இருவரும் இறைக் கட்டளைப்படி இல்லறத்தில் இணைந்து வாழ்ந்தாலும், துறவுநெறியையே மேற்கொண்டிருந்ததாகக் காப்பியம் விவரிக்கிறது. இதனை ஈரறம் பொருத்து படலம் என்ற பகுதியில் கவிஞர் அழகுற விளக்குகிறார்.

● சூசையின் பெருமை

கன்னி மரிக்கு சூசையைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழலும் இறைக்கட்டளையும் ஏற்பட்டது. திருமணத்திற்கு முன், துறவு வாழ்வையே விரும்பிய கன்னி மரியாளுக்குக் கலக்கம் ஏற்பட்டது. அப்போது இறைவன் அவளுக்குக் காட்சி தந்து சூசையின் இயல்புகளைப் பின்வருமாறு கூறுகிறார்: “வேதத்திற்கு நிகரானவன்; அறத்தின் வடிவானவன்; கொடையில் மேகத்திற்கு இணையானவன்; ஞான அறிவில் கதிரொளி போன்றவன்; அருளில் கடலுக்கு நேரானவன்; தீயையொத்த வனத்திற்குக் கூடக் கிடைக்காத தவவலிமை அவனுடையது; தாயினும் சிறந்த தயை உடையவன் அவன்; வானுடையோர்க்கு உரிய காட்சியனாய் உள்ளவன்; உன்நிலைக்கு ஏற்ற தகுதியுடையவன்.” இறைவனே சூசையை இப்படிப் புகழ்ந்து பாராட்டினால் வேறென்ன வேண்டும்?

● மரியாளின் திருமணக் கோலம்

மணமகள் மரியாள், வெளிப்படையான மணக்கோலங்களை வெறுத்தாள். அதாவது மலர்கள், அணிகள் முதலியவற்றைத் தவிர்த்தாள். இறைவன் திருவடிகளே நிலையான அழகைத் தருவன என எண்ணினாள். அவளுக்கு வானவர் அறத்தை மணியாக அளித்தனர். காதணியாகத் தூய உணர்வினை மாட்டினர். மாலையாக அருளைச் சூட்டினர். ஆடையாகத் தவத்தைக் கட்டினர். இவற்றோடு அவள் கோவிலுக்குச் செல்லும்போது மக்கள் மகிழ்ந்து பாராட்டினர் என்று கவிஞர் பாடுகிறார்.

வானாரும் எய்திஅற மேமணிஎன்று அணிந்தார்

மீனாரும் ஓதிமிளிர் தோடுஎனவேய் குகின்றார்

தேனாரும் மாலைத்திரள் என்றுஅருள்சேர்க் குகின்றார்

கானாரும் வாய்த்ததவ மேகலையாய் வனைந்தார்

(திருமணப் படலம், 86)

(கலையாய் = ஆடையாக; வனைந்தார் = கட்டினர்)

● மரியாளின் மாண்புகள்

மேலும், இவளை ஒருவன் காமநோக்கில் பார்த்தால் அவனது காம நெருப்பு அவிந்து விடுமாம். இவள் பார்க்காமல் கண்ணை மூடினால் அச்சமும் கலக்கமும் ஏற்படுத்துமாம். விழித்துப் பார்த்தால் பரமகதியைக் காட்டுமாம். அக்கண்கள், கதிரவன் ஒளியை மறைக்கும் அளவிற்கு ஒளி பெற்றவை என்று மரியின் கண்களை வருணித்துப் பாடுகிறார் வீரமாமுனிவர்.

காமக்கனல் ஆற்றின நோக்கியகண்

வீமக்கருள் விட்டன மூடியகண்

ஏமக்கதி காட்டும் விழித்தவிரு கண்,

வாமக்கதிர் வாட்டும் களித்த கணே

(திருமணப் படலம் – 90)

(வீமக்கருள் = காம நெருப்பு; கணே = கண்ணே)

● சூசையின் இயல்பு

மரியின் இயல்புகளைப் பாடிய கவிஞர், அதே இயல்புகளைச் சூசைக்கும் உரியதாகப் பாடுகிறார். வேறோரிடத்தில் சிறுவனாகிய சூசைக்கும் விண்ணவர்கள் அருளை ஊட்டி, அறத்தை முடியாகச் சூட்டுகிறார்கள். தவத்தைப் பூணாகப் பூட்டுகிறார்கள். அறிவைப் பொற்செங்கோலாகக் காட்டுகிறார்கள். இவ்வாறு அறம், அருள், அறிவு, தவம் ஆகிய அடிப்படைப் பண்புகள் தலைமக்களாகிய இருவருக்கும் உரியனவாகக் காட்டப்படுகின்றன.

● இருவரும் நிகரானவர்கள்

மேலும் பல நிலைகளில் இருவரையும் சரிநிகராகக் கவிஞர் காட்டுகின்றார். இறுதிப் படலமாகிய முடிசூட்டு படலத்தில் இறைத் தந்தையாகிய பிதா, திருமகனாகிய இயேசுவின் வேண்டுகோளை ஏற்று ஏழுமணிகள் பதித்த முடியைச் சூசைக்குச் சூட்டுகிறார். அதேபோல, மரியாளுக்கும் இறைவன் முடிசூட்டுவதாகச் சூசையப்பர் காட்சி காண்கின்றார். மரியாள் தானறியாத வகையில் கருவுற்றது கண்டு ஐயுற்ற சூசையின் ஐயம் நீங்கியபின், சூசை காணும் காட்சியில் இவ்வாறு நிகழ்கிறது. மேலும் காப்பியத்தில் பல இடங்களில் புதுமைச் செயல்களையும் அருஞ்செயல்களையும் இருவரும் நிகழ்த்துகின்றனர். முடநோயால் துன்புற்ற பெண்ணைக் கண்டு தேவமகன் முகத்து ஆறும் என்று தலைவன் கூறியதும் நோய் தீர்கிறது. அவ்வாறே காந்தரி என்ற பெண்ணைப் பற்றியிருந்த காமப்பேயை மரியாள் ஓட்டுகிறாள்.

இவர்கள் இருவரும் ஒரே மனத்தினராக இல்லற வாழ்விலும் துறவறம் பேணியமை, காப்பியத்தில் படம் பிடித்துக் காட்டப்படுகிறது. இவ்வாறு காப்பியத்தின் தலைமாந்தர்களாகிய சூசையும் மரியும் பலவகைகளில் சிறந்து நிற்கின்றனர்.

2.3.3 பிற மாந்தர் இக்காப்பியத்தில் திருக்குடும்பத்தினராகிய மூவருக்கு அடுத்த நிலையில் சிறந்து விளங்கும் பிற மாந்தர் பலர் உளர். இவர்களுள் வானவரே மிக முக்கியமானவர்களாகக் கருதத்தக்கவர்.

● வானவர்

தலைமாந்தரை நீக்கிப் பார்த்தால் அதிகமான படலங்களில் இடம் பெறுவோர் இவர்களே. கிறித்தவம் அல்லாத பிற சமயங்களில் பல்வேறு தேவர்களைப் பற்றிக் கூறப்படுகின்றன. அமரர்கள் எனப்படும் அவர்களைப் பற்றி, காப்பியங்களில் ஆங்காங்கே கூறப்படும். எனினும் தேம்பாவணியில் வானவர் இடம்பெறும் அளவு மிகுதியாக இல்லை எனலாம். பிற சமயத்தினர் கூறும் தேவர்களுக்கும், விவிலியத் திருமறையின் அடிப்படையில் தேம்பாவணி பாடும் வானவர்களுக்கும் பல்வேறு வேற்றுமைகள் உள்ளன. கண் இமையாதவர், கால்கள் நிலத்தில் படியாதவர்கள், சூடிய மலர்கள் வாடாதவர்கள், பெண் ஆண் பாகுபாடு உடையவர்கள் என்றெல்லாம் பிறர் கூறுவர். ஆனால் அவை இங்குப் பொருந்தா. வானவர்களின் இயல்புகளைத் திருமறை அடிப்படையில் வீரமாமுனிவர் விளக்கிச் செல்கிறார்.

● வானவர் சிறப்பு

இவர்கள் இறைவனின் ஏவல் கேட்டு அவன் வழி நடப்பவர். இறையடியார்களுக்கு வலிமை தரும் உறுதி கூறுபவர். அவன் அருளிய வரங்களைப் பெற்று, துன்புறுவோரைத் தேற்றும் செயல்வீரர். கண்ணால் காணக்கூடிய உருவம் உடையோர் அல்லர். உடல் இல்லா உயிரினர். விண்ணில் உள்ள இறைவனைச் சூழ்ந்து நிற்கும் வீரர்கள் என்றெல்லாம் அவர்களைப் பற்றி விவரிக்கிறார் கவிஞர்.

தேம்பாவணியில் வரும் வானவர்கள், பல்வேறு பணிகளைச் செய்கின்றனர். இவர்களுள் காபிரியேலும் மிக்காயேலும் இறைவனின் செய்தியைக் கன்னி மரியிடமும் சூசையிடமும் எடுத்துரைத்ததாக விவிலியத் திருமறையில் குறிப்பிடப்படுபவர்கள். மேலும் இவர்கள் வானவர் அணித்தலைவர்களாகக் கருதப்படுபவர்கள். இவர்களோடு அறஞ்சயன், சட்சதன் எனக் கவிஞரால் தமிழ் மரபிற்கேற்பப் பெயர் புனையப்பட்ட வானவர்களும் பிறரும் காப்பியத்தில் இடம் பெறுகின்றனர்.

● வானவர் அரவணைப்பு

திருக்குழந்தை இயேசுவைத் தம் கைகளில் ஏந்தி, தேவத் தாய்க்கே காட்டுகின்றனர் மிக்காயேலும், காபிரியேலும். எகித்து நாடு நோக்கிப் பயணம் செய்யும் திருக்குடும்பத்தினரை வானவர் சூழ்ந்து கொண்டு செல்கின்றனர். வழியில் அவர்கள் களைப்பையும் கவலையையும் போக்கப் பல வரலாற்றுக் கதைகளை அவர்களுக்குச் சொல்லிக் கொண்டே வருகின்றனர். இறைநீதியின் ஆற்றலையும் இறைவனின் அருளையும் அக்கதைகள் வெளிப்படுத்தின. பாரவோன் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து இசுரேலயர்களை இறைவன் விடுவித்த வரலாறு, இறைவன் பெரு வெள்ளத்தால் மனித குலத்தின் பெரும் பகுதியை அழித்த வரலாறு, சோசுவன் எனும் தலைவனின் கதை, சேதையோன் என்பானின் வெற்றி வரலாறு, சம்சோன் என்னும் மாவீரனின் வீழ்ச்சி வரலாறு முதலிய பல கதைகளை வானவர்கள் அவர்களுக்குச் சொல்லி வந்தனர்.

மேலும், இந்த வானவர்கள் அன்னை மரியும் புனித சூசையும் மனஞ் சோர்ந்து ஐயுற்றுக் கலங்கிய நேரங்களில் அவர்களுக்கு இறைவனின் திருவுள்ளத்தை வெளிப்படுத்தும் செய்திகளை உரைத்தனர்.

● வானவர் பணிவிடை

மேலும் இத்திருக் குடும்பத்தினரை அடிக்கடி வானவர் போற்றிப் பாடுகின்றனர். பல்வேறு முறைகளில் அவர்கள் திருக்குடும்பத்தினரை வணங்குவதாகவும் அவர்களுக்குப் பணி விடைகள் செய்வதாகவும் கவிஞர் பாடுகின்றார். சிலர், அவர்களுக்கு அழகிய விசிறி கொண்டு வீசுகின்றனர். சிலர் அவர்களுக்கு வெண்கொற்றக் குடைகளைப் பிடிக்கின்றனர். சிலர் இறைவனின் திருச்செய்திகளைக் கொண்டு வருகின்றனர். சிலர் அவர்களது முகஅழகைப் போற்றிக் காக்கின்றனர். எல்லாரும் அவர்களைப் புகழுகின்றனர்; பணிந்து கொள்கின்றனர். இவற்றையெல்லாம் புலப்படுத்தும் அப்பாடல் பின்வருமாறு:

ஒருவர் கவரிகள் இடஇட அணுகுவர்

ஒருவர் கவிகைகள் எழஎழ மருகுவர்

ஒருவர் பணிவிடை முடிதர விழைகுவர்

ஒருவர் இறையவன் விடைமொழி கொணர்குவர்

ஒருவர் எழுதிய முகவெழில் கருதுவர்

ஒருவர் அதிசயம் உறஇனி துருகுவர்

ஒருவர் புகழிட நிகரில மெலிகுவர்

ஒருவர் புகழுவர் பணிகுவர் எவருமே

(ஐயநீங்கு படலம் 8:69)

(கவரிகள் – அரசர்களுக்குப் பயன்படுத்தும் விசிறிகள்; கவிகைகள் – அரசனின் இருக்கைக்குமேல் உள்ள அரசகுடை; விடைமொழி – பதில் செய்தி)

மேலும் இவர்கள் நோயின் கொடுமையால் நொந்த சூசைக்குச் செய்த தொண்டுகளை இன்னொரு பாடலில் கவிஞர் பின்வருமாறு பாடியுள்ளார்.

ஆடு வார்திரு நாமங்கள் ஆடுவார்

பாடு வார்பிணி யோன்துதி பாடுவார்

தோடு வார்வெறித் தொங்கலிட் டோடுவார்

வீடு வார்நயம் செய்குவர் வீடிலார்

(பிணி தோற்றுபடலம் 33:19)

(திருநாமங்கள் – உயர்ந்த பெயர்கள்; பிணியோன் – நோயுற்றவன்;  தோடு – இதழ்; வார் – பொருந்திய; வெறித்தொங்கல் – மணம்வீசும் மாலை; வீடுவார் – அழிவார்)

இப்படிப் பல்வேறு பணிகளைச் செய்யும் வானவர் திருவீடாம் இறைவனின் நாட்டை அடைவதற்கு வழி காட்டுவோராகவும் உள்ளனர். திருவீடு அடைய வேண்டும் எனில், பாமாலையாம் தேம்பாவணியை அணிந்து, பயன் பெறுவதே நல்லவழி எனவும் பாடுகின்றனர்.

2.4 காப்பியமும் விவிலியமும்

தேம்பாவணிக் காப்பியத்தை ஆழ்ந்து கற்பவர்கள், இந்நூல் விவிலியத் திருமறைச் செய்திகளை, சூசையப்பர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, காப்பியப் போக்கில் உரைக்க எழுந்ததே என எளிதில் உணரலாம். அந்த அளவுக்குத் தேம்பாவணி, விவிலியத் திருமறையின் சாரமாக விளங்குகிறது. காப்பியம் முழுவதும் விவிலிய மறையின் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு எனும் இரு பிரிவுகளிலும் அமைந்துள்ள வரலாற்றுக் கதைகளும், உண்மைகளும் பல முறைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர், பல இடங்களில் விவிலியத் திருமறையை விதித்த நுண் அருநூல் வேதம் (கடவுள் வகுத்த நுட்பமான அரிய நூல்), திவ்வியநூல் (தெய்வீக நூல்), பரமன் அருளிய சுருதிநூல் (கடவுள் கொடுத்த திருமறை நூல்) என்றெல்லாம் பாராட்டுகிறார். திருமறைக் கருத்துகளை அம்மறையைப் பின்பற்றுபவர்கள் ஆழமாக உணர்ந்து கொள்ளவும் பிறசமயத்தினரும் தெரிந்து கொள்ளவுமே தேம்பாவணி படைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட திருமறை  விளக்கங்களே நூலில் நிறைந்து காணப்படுகின்றன. சில சான்றுகளைக் காண்போம்.

2.4.1 விவிலியக் கிளைக்கதைகள் விவிலியத்தில் இடம்பெறும் வரலாற்றுக் கதைகள் தேம்பாவணிக் காப்பியத்தில் பல நிலைகளில் எடுத்துரைக்கப்படுகின்றன. விவிலியக் கதைகள், தக்க நேரத்தில் உண்மைகளை வெளிப்படுத்தி, காப்பிய மாந்தரை ஊக்குவிப்பதற்காகவே காப்பியத்தில் கிளைக்கதைகளாக எடுத்துரைக்கப் படுகின்றன. சான்றாக, ஏரோது அரசனுக்குப் பயந்து தெய்வக்குழந்தையை ஊர்விட்டு ஊர் எடுத்துச்செல்ல வேண்டியநிலை, சூசைக்கும் மரிக்கும் மனச்சோர்வைத் தருகிறது. அப்போது உடன் வரும் வானவர்கள் இறைவனின் பேராற்றலையும் இறைநீதியின் பெருவன்மையையும் விவிலியக் கதைகள் வழியாக அவர்களுக்கு எடுத்துரைக்கின்றனர்.

● மோயீசன் கதை

எகித்து அரசன் பாரவோன் இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இசுரவேலரைப் பலவாறு கொடுமை செய்தான். மக்கள் அல்லற்பட்டு அழுதனர். அப்போது இறைவன் அவர்கள் கூக்குரலைக் கேட்டு, மோயீசன் என்னும் ஒரு தலைவனை உருவாக்கினார். அவன் கையில் ஒரு கோலையும் தமது ஆற்றலையும் வழங்கினார். எனினும் பாரவோன் மன்னன் இசுரயேல் மக்களை நாட்டை விட்டு வெளியே விடவில்லை. அரசனைப் பணியவைக்க, இறைவன் அவர்களுக்கு வெப்பமிக்க இரத்தம், தவளை, உண்ணிகள், ஆலங்கட்டிமழை, செறிந்த இருள் முதலிய ஒன்பது துன்பங்களையும் இறுதியில் பத்தாவதாக எகித்தியரின் தலைப்பிள்ளைகளின் இறப்பையும் கட்டளையிட்டார். பிறகுதான் பாரவோன் மன்னன் அவர்களை விடுவித்தான். இந்த வரலாற்றை விரித்துரைத்து வானவர்கள், திருக்குடும்பத்தினருக்கு ஊக்கமூட்டுகின்றனர்.

● சேதையோன் கதை

மேலும் வானவர்கள், சேதையோன் என்ற மாவீரனின் வெற்றி வரலாற்றைச் சூசைக்கு விளக்கிக் கூறுகின்றனர். சேதையோன் ஓர் உழவன். மிக்க வீரம் படைத்தவன். இறைவன் தனது யூத மக்களைப் பகைவர்களிடமிருந்து மீட்க, சேதையோனைப் படைத்தளபதியாகத் தேர்ந்து கொண்டார். இதனை இறைத்தூதன் ஒருவன் மூலம் சொல்லி அனுப்பினார். முதலில் இறைத்தூதனின் அழைப்பை ஐயுற்ற சேதையோன், பின்னர் இறைக்கட்டளையை ஏற்றுக் கொண்டு, தன் யூத மக்களை ஒன்று திரட்டினான். பகையரசரும் ஒன்று திரண்டனர். அவர்களது படையின் பெருக்கமோ அளவிட முடியாதவை. எனினும் இறைவன் செய்த திருவிளையாடலால் சேதையோனுக்கும் அவன் பின்னின்ற யூதருக்குமே வெற்றி கிட்டியது. 32,000 வீரரைத் திரட்டினான். இதனைக் கண்ட இறைவன் ‘யான் வெல்வதற்கு இவ்வளவு படை தேவையா?’ என எண்ணினார். “போருக்கு அஞ்சுவோர் நீங்கிச் சினம்மிக்க வீரர் மட்டும் நிற்பாராக” எனக் கட்டளையிட்டார். அவருள் 10,000 பேர் நின்றனர். மீண்டும் இறைவன் “ஆற்றின் நீரை நாவால் நக்கி உண்போர் நீங்க, கையால் அள்ளிப் பருகுவோர் நிற்க” என்று கட்டளையிடவும், 3000 பேர் அணி வகுத்தனர். எதனையும் திருவிளையாடலாக நடத்தும் தேவன் போருக்குரிய வேல் எதுவும் இன்றி, ஒவ்வொருவருக்கும் ஓர் எக்காளம், ஒரு மண்பானை, ஒரு விளக்கு ஆகியவற்றைக் கொடுக்குமாறு கூறினார். மூன்று அணியாகப் பிரிந்து பகைவரின் இடத்திற்கு ஓசையின்றிச் சென்றனர். தீபத்தை மறைக்கப் பானையைப் பயன்படுத்தினர். பகைவரிடம் சென்று எக்காள ஒலி எழுப்பிப் பானைகளை உடைத்ததும், திடுக்கிட்டெழுந்த பகைவர் தடுமாறினர். தங்களைத் தாங்களே பகைவரெனக் கருதி, தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொண்டு, தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர்.

● யோசேப்பு கதை

இவ்வாறே, சித்திரக்கூடப் படலத்தில், சூசை முனிவர்களுக்கு விளக்கிக் கூறிய யோசேப்பு எனப்படும் ஆணரன் என்பவனின் வரலாறு, நம் உள்ளத்தைக் கவரும் நல்ல கதையாகும். ஆணரன் தன் சொந்த சகோதரர்களாலேயே பகைக்கப்பட்டான்; துன்புறுத்தப்பட்டான். எனினும் அவனது உண்மை, நேர்மை, தூய்மை, இறைப்பற்று முதலியவற்றால் உயர்நிலையை அடைந்தான். இறுதியில் தன்னைப் பகைத்து அழிக்க முயன்ற சகோதரர்களையே காப்பாற்றும் இறைத் தொண்டன் ஆனான் அந்த ஆணரன்.

இவ்வாறு பல்வேறு கிளைக்கதைகளாக, விவிலியக் கதைகள் காப்பியத்தில் வெளிப்படுகின்றன. அவையெல்லாம் இறைவனின் அளவிட முடியாத கருணையை எடுத்துக்காட்ட விளக்கப்பட்டன.

2.4.2 விவிலியக் கோட்பாடுகள் விவிலியக் கதைகள் மட்டுமன்று, விவிலிய உண்மைகள்,  கொள்கைகள், கோட்பாடுகள் முதலியனவும் காப்பியத்தில் நன்கு விளக்கப் பெறுகின்றன. சான்றாக விவிலியத் திருமறையின் வழிநின்று, இறைவனின் இயல்புகளைக் காப்பிய ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். சூசையின் வாய்மொழியாக, இறைவனின் ஆறு பண்புகளை எடுத்தியம்பும் பாடல் இதோ:

தன்வயத்த னாதல், முதலில னாதல்,

தகும்பொறி உருவில னாதல்

மன்வயத் தெல்லா நலமுள னாதல்,

வயின்தொறும் வியாபக னாதல்

பின்வயத் தின்றி ஒருங்குடன் அனைத்தும்

பிறப்பித்த காரண னாதல்

பொன்வயத் தொளிர்வான் முதலெலா உலகும்

போற்றுமெய் இறைமையின் நிலையே

(ஞாபகப் படலம், 157)

(தன்வயத்தனாதல் – தானே தனித்து இயங்குதல்; முதலிலனாதல் – தொடக்கம் இல்லாதவன் ஆதல்; பொறி உருவிலனாதல் – வடிவம் இல்லாதவன் ஆதல்; வயின் தொறும் – எல்லா இடத்திலும்; வியாபகன் ஆதல் – பரவிஇருத்தல்)

இதே செய்தியைத் தன்நேரில்லான் தன் வயனாகி என வரும் இன்னொரு பாடலிலும் மீண்டும் கூறி, கற்பார் நெஞ்சில் இந்த உண்மையைப் பதிய வைக்கிறார்.

● பத்துக்கட்டளைகள்

மேலும் விவிலிய மறையில் இறைவன் மனிதகுலம் அனைத்துக்கும் வழிகாட்டியாக, சட்ட விதிகளாக, மோயீசன் வழியாக வழங்கியருளிய பத்துக் கட்டளைகளை முனிவர் எடுத்துரைக்கிறார். இரு கல்லில் அமைந்த பத்துக் கட்டளைகளையும் கவிஞர் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்:

மின்னல்லால் நிகர்ப்பரிதோர்

எழுத்துத் தீட்டி விதித்திருகல்

என்னல்லால் இறைமையுளார்

உமக்கில் லாவீர் எனைமெய்மை

தன்னல்லால் சாட்சிவையீர்

திருநாள் ஆடித் தவிர்கில்லீர்

மன்னல்லா ரணமிதென்று

ஒருகல் கொள்முவ் வாசகமே

தந்தையாயை வணங்குமின்நீர்

கொலையே செய்யீர் தவிர்காம

நிந்தையாய் ஊடுஇல்லீர்

கரவீர் பொய்யீர் நிலைப்பிறரில்

சிந்தையாய் இரீர்பிறர்கைப்

பொருளை வெஃகீர் தீங்கிதென்று

எந்தையாய்ந் திரண்டாங்கல்

தீட்டி வைத்த ஏழ்விதியே

(சீனயிமா மலைகாண் படலம், 21,22)

(மின்னல்லால் – மின்னலைத் தவிர; திருநாள் – பரிசுத்தமான நாள்; ஒருகல் – முதல் கற்பலகை; மன்னல்லாரணம் – காமநிந்தை,  தீயஒழுக்கத்தால் வரும் பழி; கரவீர் – ஏமாற்ற வேண்டாம்; வெஃகீர் – விரும்பவேண்டாம்; இரண்டாங்கல் – இரண்டாம் கற்பலகை)

இவ்விரு பாடல்களிலும் குறிக்கப்பட்டுள்ள பத்துக் கட்டளைகள் பின்வருமாறு:

1.     என்னைத் தவிரத் தெய்வங்கள் ஒருவரும் உமக்கு இல்லை என்று கொள்ளக் கடவீர்.

2.     உண்மைக்கே அன்றிப் பொய்மைக்கு ஆணையிட்டு என்னைச் சாட்சியாக வையாதீர்.

3.     குறிக்கப்பட்ட திருநாட்களை முறைப்படி கொண்டாடத் தவறாதீர்.

4.     தந்தையையும் தாயையும் வணங்குவீர்.

5.     கொலையே செய்யாதீர்.

6.     தவிர்க்கத்தக்க காமம் பழிப்புக்கு உரியதெனக் கொண்டு அதனோடு உறவாடாதீர்.

7.     களவு செய்யாதீர்.

8.     பொய் சொல்லாதீர்.

9.     பிறர் மனைவி மீது சிந்தையே கொள்ளாதீர்.

10.     பிறர் கைப்பொருளை விரும்பாதீர்.

● திருச்சிலுவையின் சிறப்பு

இயேசு பெருமான் மனிதகுலத்தின் உயர்வுக்காக உயிர் நீத்த திருச்சிலுவை, கிறித்தவ நம்பிக்கைக்கு ஆதாரமான அடிப்படையாக விளங்குகிறது. தாம் உயிர்விடப் போகும் சிலுவையைப் பற்றித் திருமகன் தாமே வருணித்துப் பாடும் பாடல் ஒன்றைக் கவிஞர் காப்பியத்தில் அமைக்கிறார்.

ஏரணியே! என்னன்பே! என்னன்பிற்கு இரதமிதே!

சீரணியே! உயர்வீட்டைத் திறக்கும் கோலிதே!இன்பத்து

ஆரணியே! எங்கணும்நான் ஆண்டு ஓச்சும் செங்கோலே!

பேரணியே! எனதுயிரின் பேருயிரே! வாழியவே!

(மீட்சிப்படலம், 30:119)

(ஆரணி – அருமையான ஆபரணமே, ஓச்சும் – ஆட்சி செலுத்தும்)

என்ற இப்பாடலில் வீரமாமுனிவரின் சிலுவைப் பற்றும் வெளிப்படுகிறது. எவ்வாறெல்லாம் இயேசு சிலுவையை நோக்குகிறார் என இப்பாடலில் தெளிவுபடுத்துகிறார். இவ்வாறு பல்வேறு விவிலியக் கோட்பாடுகளையும் உண்மைகளையும் காப்பியத்தில் அமைத்துள்ளார் கவிஞர்.

2.5 காப்பியத்தின் இலக்கியத் திறன்

தேம்பாவணி கிறித்தவ சமயக் கோட்பாடுகளை எடுத்துரைக்கும் காப்பியம் எனினும், ஒரு சிறந்த தமிழ்க் காப்பியத்துக்குரிய இலக்கியச் சுவைகளை வெளிப்படுத்துவதிலும் அது முன்னிற்கிறது. ஒரு வெளிநாட்டவர் எழுதிய தமிழ்க் காப்பியம் என்று எண்ணத் தோன்றாத அளவு சொற்சுவையிலும், பொருட்சுவையிலும், அணிநலங்களிலும் சிறந்து விளங்குகிறது. இதற்குச் சில சான்றுகளை மட்டும் காண்போமா?

2.5.1 அணி நலம் தமிழ்ச் செய்யுளுக்கு அழகு சேர்ப்பன, அதில் பயின்றுவரும் பல்வேறு அணிகள் ஆகும். தண்டியலங்காரம் எனப்படும் அணி இலக்கண நூல் பல்வேறு சொல்லணிகளையும், பொருளணிகளையும் பற்றிப் பேசுகிறது. இவற்றுள் பெரும்பாலான அணிகளைத் தம் காப்பியத்துள் பயின்றுவரச் செய்துள்ளார் வீரமாமுனிவர். அது மட்டுமன்றி வீரமாமுனிவர் தாம் எழுதிய இலக்கண நூலான தொன்னூல் விளக்கத்திலும் அணிவகைகளைப் பற்றி விளக்கியுள்ளார்.

அணிகளிலெல்லாம் சிறந்ததாகத் தாயணி என அழைக்கப்படுவது உவமையணியே. தேம்பாவணியில் அரிய இனிய உவமைகள் ஏராளம் காணப்படுகின்றன. சில சான்றுகளைக் காண்போம்.

● உவமைச் சுவை

மனத்தூய்மைதான் தலைசிறந்த அறம். அத்தகைய மனத்தில் பாவக்கறை சேர்ந்துவிட்டால், அந்த மனமே அதற்காக வருந்தினால் ஒழிய அக்கறைகள் அகலா. இதற்கு உவமை காட்ட விரும்புகிறார் வீரமாமுனிவர். மண் கால்களில் ஒட்டிக் கொள்வதில்லை. ஆனால் அந்த மண்ணுடன் தண்ணீர் கலந்து சேறாகிவிட்டால், அச்சேறு கால்களில் ஒட்டிக் கொள்கிறது. பிறகு, அச்சேற்றைக் கழுவித் தூய்மை செய்யவும் நீர்தான் தேவைப்படுகிறது. ஆகவே பாவத்துக்குக் காரணமாகிய மனமே, பாவத்தைப் போக்கிக்கொள்ளவும் துணை செய்வதால், மனம் நீர் போன்றது என நயம்படப் பாடுகிறார்.

புனம்செயும் பங்கமே புனம்ஒழித்தென

மனம்செயும் பங்கமும் மனநொந்து ஆற்றலின்

தினம்செயும் புகர்வினை தெரிகிலார் அறத்து

இனம்செயும் பயன்பட ஈட்டல் ஏலுமோ?

(வாமன்ஆட்சிப் படலம், 37)

இப்படிப் பல இனிய உவமைகளைக் காப்பியத்தில் ஆங்காங்கே அழகாகக் கையாளுகிறார். அவ்வுவமைகளில் பலவும் உலகியல் வாழ்வில் அன்றாடம் நாம் காணும் அனுபவங்களாகவே உள்ளன. சான்றாக ஓரிடத்தில், பிறரது பற்றுகளை அறுக்கக் கூற முற்பட்டு, தான் பற்று விருப்பம் கொள்ளல், பிறர் வீட்டுத் தீயை அணைக்கப் போய்த் தன் வீடு பற்றி எரிதலைப் போன்றது என்கிறார்.

● உருவக அழகு

காப்பியத்தில் நம் நெஞ்சைக் கவரும் பல உருவகங்களும் பயின்று வருகின்றன. தவ நெறிநின்றார் பெருமையைப் பாடும்போது, தவத்தை மரக்கலமாகவும், ஊக்கத்தை அதன் நீண்ட நடுமரமாகவும், தெய்வபக்தி, தெய்வ பயம் ஆகியவற்றைப் பாய்களாகவும், வரத்தைக் காற்றாகவும், தியானத்தை மீகாமனாகவும் (மாலுமி), பாவ வினைகளைக் கடல் நீராகவும் காட்டி, அந்நீரைக் கிழித்தெறிந்து அவர்கள் வீட்டுலகில் சேர்வார்கள் என்று பாடுவது உருவகத்திற்குச் சிறந்த சான்றாகும்.

உள்ளிய தவநவ் வேறி

ஊக்கநீள் மரத்தை நாட்டி

விள்ளிய அன்பும் உட்கும்

வியனிரு பாயும் பாய்த்தி

தெள்ளிய வரக்கால் வீசத்

தியானமீ காமனா கஊர்ந்து

அள்ளிய வினைநீர் ஈர்ந்து

அரிதில் வீட்டுலகிற் சேர்வார்

(மீட்சிப் படலம், 82)

●தற்குறிப்பேற்றம்

உலகில் இயல்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளின் மேல் கவிஞர்கள் தம் குறிப்பை ஏற்றி வைத்து, காரணம் கற்பித்துப் பாடுவது இலக்கிய மரபு. பொதுவாகக் கதிரவன் தோற்றம், மறைவு, நிலவின் இயக்கம், கொடிகளின் அசைவு போன்றனவற்றை இவ்வாறு பாடுவர். தமிழ் இலக்கிய மரபுகளை நன்குணர்ந்த வீரமாமுனிவரும் இவ்வணியை நன்றாகப் பயன்படுத்துகிறார். திருக்குடும்ப மூவர் எருசலேம் நகரை அடைந்தபோது அந்நகர மாளிகையில் இருந்த கொடிகள், இவர்களை இந்நகருக்குள் வராதீர்கள் அங்கேயே நின்று விடுங்கள் என்று கூறுவது போல் ஆடுகின்றனவாம். இயேசுபாலகனுக்கு அந்நகர அரசன் இழைக்கக் கருதும் தீமையை எண்ணி, அவ்வாறு கூறுகின்றனவாம். அத்துடன், அந்த மாளிகைக் கொடிகள், ஆடுகின்ற ஆலயக் கொடிகளை நோக்கி வருகின்றார் எட்டுத் திக்குகளையும் காக்க வல்லவர். ஆதலின் அவர் வருவதைத் தடைசெய்யாமல் நில்லுங்கள்.

அல்உமிழ் இருளின் இருண்டநெஞ்சு அவன்செய்

அரந்தையின் வெவ்வழல் ஆற்ற

வில்உமிழ் பசும்பொன் மாடங்கள் நெற்றி

விரித்தபூங் கொடிகள்தம் ஈட்டம்

எல்உமிழ் மூவர் வருகைகண்டு அரசன்

இயற்றிய வஞ்சனைக்கு அஞ்சி

‘நில்லுமின்! நின்மின்‘ எனஇடை விடாது

நீண்டகை காட்டுவ போன்றே

ஒண்புடைக் கொடிகாள் நில்லுமின் நின்மின்;

உயிர்அருந் துயர்அற வந்த

எண்புடை காக்கும் அருள்புரி நாதன்

இவன்என அமர்த்திடல் போன்றே.”

(மகன் நேர்ந்த படலம் 59,60)

என்று அமர்த்தியதாகவும் பாடுகிறார். கொடிகள், பிற கொடிகளை நோக்கிக் கூறுவதாகப் பாடுவது வீரமாமுனிவர் செய்த புதுமையாகும்.

2.6 காப்பியத்தின் தனிச்சிறப்புகள்

தமிழில் அமைந்த காப்பியங்களுள், ஒவ்வொன்றுக்கும் ஒரு சில தனித்தன்மைகள் உள்ளன. அவ்வகையில், தேம்பாவணிக்குரிய தனிச் சிறப்புகளாக, பலவற்றைச் சுட்டலாம். சிலவற்றை மட்டும் இங்குக் காண்போம்.

2.6.1 ஆசிரியரின் தனித்தன்மை தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. அதுவும் சமயப் பணி புரிவதற்காகத் தமது முப்பதாம் வயதில் இங்கு வந்த முனிவர் ஒருவரால் எழுதப்பட்ட காப்பியம் என்பது வியப்பூட்டும் செய்தியாகும். மேலும் பன்மொழிப் புலமை வாய்ந்த ஒருவரால் படைக்கப்பட்ட காப்பியம் இதுவாகும். வீரமாமுனிவர், இத்தாலியம், இலத்தீன், போர்த்துகீசியம் முதலிய மேலைநாட்டு மொழிகளிலும் தமிழ், வடமொழி, தெலுங்கு, மலையாளம் போன்ற கீழை நாட்டு மொழிகளிலும் புலமை பெற்றவர். மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்.

2.6.2 தமிழ் மரபு தேம்பாவணி ஆசிரியர், வெளிநாட்டவரே ஆயினும், காப்பியக் கதைத் தலைவர் சூசை வாழ்ந்ததும் தமிழ் மண்ணில் இல்லை. எனினும், காப்பியம் முழுக்கத் தமிழ் மணம் கமழ்வதாக, தமிழ்ப் பண்பாட்டில் தோய்ந்ததாகவே படைக்கப் பெற்றுள்ளமைக்குப் பல சான்றுகள் கூறலாம். பிற தமிழ்க் காப்பியங்களைப் போலவே, சீரிய உலகம் மூன்றும் என மங்கலச் சொற்களைப் பெய்தே, தமது தேம்பாவணிக் காப்பியத்தைத் தொடங்குகிறார் ஆசிரியர். இறைவனை வணங்க முற்படும்போது, மேனாடுகளில் வழங்கும் கிறித்தவ மரபுகளைச் சாராது, தமிழ் மரபையே சார்ந்து, இறைவனது பாதங்களையே முதலில் வணங்குவதையும், இறைவனது பாதங்களை மலராகக் காண்பதையும் இங்குக் காண்கிறோம். இறைவனுக்கு வாகனங்களை உரிமை செய்து பாடுவன தமிழகச் சமயங்கள். அத்துடன், இறைவனுக்குரிய கொடிகளாகச் சிலவற்றைக் குறிப்பதும் இங்குள்ள சமய மரபு. இதனைப் பின்பற்றி வீரமாமுனிவரும் திருமகன் இயேசுவை மேக வாகனத்தில் வருபவராகவும், அவரது முன்னோரான தாவீது அரசனைச் சிங்கக் கொடியோன் என்றும் பாடுகிறார்.

மேலும் இறைவனது திருமேனிக்கு வண்ணம் (நிறம்) குறித்துப் பாடுவது, இறைவனைத் தரையில் தலைபட வணங்குவது, கை கூப்பி வணங்குவது, மலர்கள் தூவி வழிபாடு செய்வது, பல்வகை விளக்குகளை ஆலயத்தில் ஏற்றுவது, தேர்த்திருவிழா காண்பது முதலிய பல தமிழ்ச் சமய மரபுகளைத் தம் காப்பியத்தில் வீரமாமுனிவர் இணைத்துள்ளதைக் காண்கிறோம். ஓரிரு இடங்களில் தாம் கூறவரும் செய்திகளுக்கு உவமையாகத் தமிழ்நாட்டுப் புராணச் செய்திகளையும் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு தமிழ் மரபுக்கேற்ப, தம் காப்பியத்தைக் கவிஞர் அமைத்துள்ளமை புலனாகிறது.

2.6.3 வாழ்வியற் கோட்பாடுகள் இக்காப்பியத்தின் மற்றொரு சிறப்பு, இது சூசையப்பரின் வரலாற்றைக் கதையாகக் கூறும் நோக்கத்தோடு அமையாது, வரலாற்றின் ஊடே பல அரிய வாழ்வியற் கோட்பாடுகளை வெளிப்படுத்துவதாகும். சான்றாக, அறத்தின் மாட்சியும், அறநெறி செல்வோர் தம் பெருமைகளும் காப்பியம் எங்கணும் மிகவும் வலியுறுத்திக் கூறப்படுகின்றன. அறநெறி வாழ்வதற்குத் தேவையான பண்புகளாகிய ஊக்கமுடைமை, தவம், தியானம், ஞானம், இரக்கம் போன்றவையும் நன்கு வலியுறுத்தப்படுகின்றன. இயேசு பெருமானின் தியாக வாழ்வை முன்னிறுத்திப் பல உண்மைகள் விவரிக்கப்படுகின்றன. திருக்குடும்பத்தார் மூவரும் உலக மக்களின் மீட்புக்காகவும் நலத்துக்காகவும் வறுமை வாழ்வையும் துறவு நெறியையும் மேற்கொண்ட தன்மை எடுத்தோதப்படுகிறது. காம உணர்ச்சிகளின் கேடுகள், புலனடக்கத்தின் உயர்வு, உண்மைத் துறவுக்கும் பொய்த் துறவுக்கும் உள்ள வேறுபாடு, தாழ்மை, அன்புடைமை, புகழுடைமை, கல்விச் சிறப்பு, ஈகைச் சிறப்பு, கற்பின் மாண்பு முதலிய மிக உயரிய கோட்பாடுகள் காப்பியம் எங்கணும் பல்வேறு வகைகளில் கதைகளாக, கருத்துகளாக, உரையாடல்களாக, உவமைகளாக வெளிப்படுத்தப்படுவது இக்காப்பியத்தின் தனிச் சிறப்பாகும்.

2.7 தொகுப்புரை

இவ்வாறு, தமிழ்க் கிறித்தவக் காப்பியங்களுள் தனிச்சிறப்புடன் விளங்கும் தேம்பாவணியின் ஆசிரியர் பற்றி அறிந்தீர்கள். காப்பியம் கூறும் செய்திகள் பற்றியும், காப்பியத்தின் இலக்கியத் திறன்கள் பற்றியும் இப்பாடத்தின் வழித் தெரிந்து கொண்டோம். கிறித்தவ நெறி பற்றிய அறிவையும், தமிழ்க் காப்பியச் சுவையையும் ஒருசேரப் பெறும் பயன் இதனால் விளைந்ததன்றோ?

பாடம் - 3

பிற கிறித்தவக் காப்பியங்கள்

3.0 பாட முன்னுரை

சிறந்த இலக்கியங்கள் பலவற்றின் கருவூலமாக விளங்கும் தமிழுக்குக் கிறித்தவ சமயம் வழங்கியுள்ள இலக்கியக் கொடைகள் பலவாகும். அவற்றுள்ளும் காப்பியங்களின் வரிசையில் அமைவன பல. அத்தகு கிறித்தவக் காப்பியங்களுள் எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை இயற்றிய இரட்சணிய யாத்திரிகமும், வீரமாமுனிவர் படைத்த தேம்பாவணியும் பற்றி முன்னைய இரு பாடங்களிலும் விரிவாக விளக்கப்பட்டன. பலரும் நன்கறிந்த இவ்விரு காப்பியங்களே அன்றி, வேறு சில கிறித்தவக் காப்பியங்களும் உள்ளன. அவற்றைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ளலாமா?

சுகாத்தியர் (Scot) எழுதிய சுவிசேட புராணம், ஜான் பால்மர் எழுதிய கிறிஸ்தாயணம், சாமிநாத பிள்ளை எழுதிய ஞானாதிக்க ராயர் காப்பியம், ஈழத்துப்பூராடனார் எழுதிய இயேசு புராணம், அருளப்பர் நாவலர் எழுதிய திருச்செல்வர் காவியம், கனகசபைப் பிள்ளை எழுதிய திருவாக்குப் புராணம், மாணிக்கவாசகம் ஆசீர்வாதம் எழுதிய திரு அவதாரம், சங்கைஸ்தொஷ் ஐயர் எழுதிய கிறிஸ்து மான்மியம், ஆரோக்கியசாமி எழுதிய சுடர்மணி, கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம் ஆகிய நூல்களும் கிறித்தவக் காப்பியங்களாக, கிறித்தவ இலக்கிய ஆய்வாளர்களால் சுட்டப்படுகின்றன. எனினும், இவற்றுள் பல நூல்கள் இப்போது அச்சில் இல்லை. பல நூல்கள் கிடைப்பதற்கு அரியனவாக உள்ளன.

மேற்சுட்டப்பட்ட நூல்களில் திருவாக்குப் புராணம், திரு அவதாரம், கிறிஸ்து மான்மியம், சுடர்மணி, இயேசு காவியம் ஆகிய ஐந்து காப்பியங்களைப் பற்றிய செய்திகளை இப்பாடத்தில் தொகுத்துக் காண்போம்.

3.1 நூலாசிரியர்கள் அறிமுகம்

மேற்கூறிய ஐந்து கிறித்தவக் காப்பியங்களை எழுதிய சான்றோர், வெவ்வேறு சமுதாயத்தவராகவும் வெவ்வேறு சமயப் பிரிவினராகவும் இருந்தாலும், தமிழால் ஒன்றுபடுகின்றனர். கிறித்துவின் வாழ்வினையும், விவிலியக் கோட்பாடுகளையும் காப்பிய வடிவில் பாடும் நோக்காலும் இவர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். இனி, ஆசிரியர்களைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாமா?

3.1.1  கனகசபைப் பிள்ளை திருவாக்குப் புராணம் என்பதின் ஆசிரியர் கனகசபைப் பிள்ளை. இலங்கையிலுள்ள அளவெட்டி என்னும் ஊரில் 1815ஆம் ஆண்டு பிறந்தார். இவரது முழுப் பெயர் ஜெர்மையா எவாட்த் கனகசபைப் பிள்ளை என்பதாகும். இவரது பெற்றோரும் முன்னோரும் சைவ சமயத்தவர்கள். இவர்கள் கிறித்தவ சமயத்தின் சீர்திருத்தச் சபைப் பிரிவினரால் ஈர்க்கப்பட்டுக் கிறித்தவர்களாக மாறியவர்கள்.

● கனகசபைப் பிள்ளையின் திறனும் பணியும்

பழந்தமிழ்ப் புலவர்களின் மரபு சார்ந்த நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். திருவாக்குப் புராணமேயன்றி, பல தனிப் பாடல்களையும், ஒரு நிகண்டு நூலையும், அழகர்சாமி மடல் என்னும் ஒரு பிரபந்த நூலையும் இவர் இயற்றியுள்ளார்.

3.1.2 சங்கை ஸ்தொஷ் கிறித்து மான்மியம் என்னும் நூலின் ஆசிரியர் பற்றிய செய்திகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. எனினும், இவரது பெயர் சங்கைத் தொஷ் ஐயர் என்பதும், இந்நூல் தரங்கம்பாடி லுத்தரன் மிசன் அச்சகத்தில் 1891ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளன. இவரது பெயரை வைத்து அருட் பணியாளரோ என எண்ணத் தோன்றுகிறது. எனினும் இக்கருத்தை உறுதி செய்யக் கூடிய சான்றுகள் எதுவும் இப்போது கிட்டவில்லை.

3.1.3 மாணிக்கவாசகம் ஆசீர்வாதம் திரு அவதாரம் என்னும் நீண்ட காப்பியத்தை எழுதியவர் மாணிக்கவாசகம் ஆசீர்வாதம் என்பவர். திருநெல்வேலி மாவட்டத்தில் டோனாவூருக்கு அருகிலுள்ள சூரங்குடி என்னும் சிற்றூரில் 1865ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் இளமையிலேயே அவரது பெற்றோரால் இறைப் பணிக்கென ஒப்படைக்கப்பட்டவர்.

3.1.4 ஆரோக்கியசாமி சுடர்மணி என்னும் பெயரில் இயேசுபெருமானின் வாழ்க்கை வரலாற்றை என். ஆரோக்கியசாமி எழுதியுள்ளார். 1912இல் விழுப்புரத்தை அடுத்த கோலியனூரில் பிறந்தவர். திண்டிவனத்திலும், தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பிற இடங்களிலும், பல பள்ளிகளில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். சிறந்த கணித ஆசிரியர். கணிதப் பாடத்தை விளையாட்டாகவும், ஜால வேடிக்கையாகவும் கற்பிக்கும் கணித ஜாலம் என்ற புதிய போதனா முறையை உருவாக்கி, அதனை நூல் வடிவிலும் கொண்டு வந்து, தமிழகமெங்கும் பரப்பியவர். இக்காப்பியமே அன்றி, சிலுவைப் பாதை, செபப் பாமாலை, வேளாங்கண்ணி மாதா சரித்திரம், மறைத் தொண்டர் புராணம் போன்ற வேறு பல நூல்களையும் எழுதியுள்ளார். விரைந்து கவிபாட வல்ல ஆற்றலால் இவர் ஆசுகவி எனப் பாராட்டப்பட்டார். இவரது சுடர்மணி நூலை 1976இல் இவரது மகன் ஆ.பி.அந்தோணி இராசு திருச்சியில் முதற் பதிப்பாக வெளியிட்டார்.

3.1.5 கண்ணதாசன் இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்து, தமிழ் மக்களின் இதயம் கவர்ந்த காப்பியமாக விளங்கும் இயேசு காவியத்தின் ஆசிரியர் கண்ணதாசன். கடல் மடை திறந்த வெள்ளம் போல் கவிபாடவல்ல இவர் கவியரசு என அனைத்துத் தமிழ் மக்களாலும் பாராட்டப்படுபவர். தமிழ்த் திரைப்படங்களில் கருத்துச் செறிவும் வாழ்வியல் தத்துவங்களும் நிறைந்த பல பாடல்களை எழுதிய பாடலாசிரியராகவும் விளங்கியவர்.

● இலக்கியமும் அரசியலும்

இவரது இலக்கியப் படைப்புகள் பல திறத்தன. நாடகம், சிறுகதை, நாவல், பாடல்கள், கட்டுரை எனப் பல்வகை இலக்கியப் படைப்புகளை உருவாக்கியுள்ள அவர், கவிதைத்துறையில் பெரும் சாதனை செய்தவர். தமது புகழ்மிகு வாழ்வின் இறுதிக் கட்டத்தில், கிறித்தவரல்லாத அவர், இயேசு பெருமானின் வாழ்வைக் காவியமாக அமைத்து, இறவாப்புகழ் தேடிக் கொண்டார். தமது காவியத்தை அவரே இறவாக் காவியம் எனக் கருதுவதாகக் குறிப்பிட்டுப் பெருமிதம் கொண்டார். இக்காவியமே அன்றி, மாங்கனி, ஆட்டனத்தி ஆதிமந்தி ஆகிய குறுங்காப்பியங்களையும் கவிஞர் கண்ணதாசன் படைத்துள்ளார்.

3.2 காப்பிய அறிமுகம்

நாம் பாடப் பகுதியில் தேர்ந்து கொண்டுள்ள ஐந்து காப்பியங்களின் ஆசிரியர்களைப் பற்றி ஓரளவு அறிந்து கொண்டோம். இனி, இக்காப்பியங்களின் அமைப்பு முறையையும் அவை கூறும் செய்திகளையும் பற்றி அறிய முற்படலாமா?

3.2.1 காப்பியங்களின் கருவும் கதையும் தமிழில் உள்ள கிறித்தவக் காப்பியங்களுள் முதன்மை வாய்ந்தவைகளாகப் போற்றப்படுபவை இரட்சணிய யாத்திரிகமும் தேம்பாவணியும் ஆகும். எனினும் அவை கிறித்தவ சமய மூலவரான இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாற்றை நேரடியாகப் பாடுவன அல்ல. அவற்றின் பாடுபொருள் கிறித்துவின் வாழ்க்கையன்று. இரட்சணிய யாத்திரிகம், கிறித்தவன் ஒருவனின் ஆன்மிக வாழ்வுப் பயணத்தைச் சித்திரிப்பது. தேம்பாவணி, இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசையப்பரின் வரலாற்றை விரித்துரைப்பது. இவ்விரு காப்பியங்களின் ஊடே, இயேசு பெருமானின் வாழ்வும் போதனைகளும் சொல்லப்படுகின்றனவே தவிர நேரடியாக இயேசு பெருமானின் வாழ்வும் அறஉரைகளும் விளக்கப்படவில்லை. ஆனால் பிற்காலத்தில் எழுந்த கிறித்தவக் காப்பியங்கள் பலவும் இயேசு பெருமானின் வாழ்வையும் பணிகளையும் நேரடியாகப் பாடின. இங்குப் பேசப்படும் ஐந்து காப்பியங்களுள் திருவாக்குப் புராணம் ஒன்று மட்டும் மேற்கூறியதற்கு விதிவிலக்கு எனலாம். இக்காப்பியத்தில் திருவாக்கு எனக் குறிக்கப்படுவது விவிலியம் எனப்படும் திருமறையாகும். விவிலியத் திருமறை, கடவுளின் வாக்காகக் கருதப்படுவதால், திருவாக்கு எனச் சுட்டப்பட்டது.

● திருவாக்குப் புராணத்தின் உள்ளடக்கம்

விவிலியத் திருமறை, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாடு கிறித்து பெருமானின் மானிடப் பிறப்புக்கு முற்பட்ட செய்திகளையும், புதிய ஏற்பாடு அதற்குப் பிற்பட்ட செய்திகளையும் கூறுகிறது.

திருவாக்குப் புராண ஆசிரியரும், தமது காப்பியத்தை இரு பகுதிகளாகப் பிரித்து, விவிலியத்தின் இரு ஏற்பாடுகளின் செய்திகளையும் பாட விழைந்துள்ளார். ஆனால் முதல் பாகத்தைப் பாடி முடித்த அவரால், இரண்டாம் பாகத்தைப் பாடி முடிக்க இயலவில்லை. இரண்டாம் பாகத்தில் சுவிசேட காண்டம் என்ற தலைப்பில் அமைந்த 67 பாடல்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. முழுமையான இரண்டாம் பாகம் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

● பிற நான்கு காப்பியங்களின் கருவும் கதையும்

மேற்குறிப்பிட்ட திருவாக்குப் புராணம் என்ற காப்பியத்தைத் தவிர, பிற காப்பியங்களான திரு அவதாரம், கிறித்து மான்மியம், சுடர்மணி, இயேசு காவியம் ஆகிய நான்கும் இயேசு பெருமானின் மானிட வாழ்வை மிக விளக்கமாகப் பாடுகின்றன. அவரது பிறப்புத் தொடங்கி, அவர் இறந்து உயிர்த்தெழுந்து விண்ணகம் ஏறிச் செல்லும் நிகழ்வு வரையும் உள்ள அவரது மாண்புமிக்க திருப்பணிகளையும் இவை பேசுகின்றன.

விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் தொடக்கத்தில், மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய இயேசுவின் சீடர்கள் அவரது வாழ்வையும் பணிகளையும் தத்தம் நோக்கில் நான்கு நூல்களாக வடித்துள்ளனர். அவற்றை நற்செய்தி நூல்கள் (GOSPELS) என்று கூறுவது பொது மரபு. இந்நான்கு காப்பியங்களும், அந்த நான்கு நற்செய்தி நூல்களின் தழுவலாகக் கவிதை நடையில் உள்ளன. தமிழ் மரபுக்கேற்ப ஓரளவு கற்பனைச் சுவையோடு அமைந்த மறுபதிப்புகள் போலத் தோன்றுகின்றன. ஆகவே, இயேசு பெருமானே இக்காப்பியங்களின் கருப்பொருள் எனலாம். அவரது புனித வாழ்வே இவற்றின் கதை அல்லது பாடு பொருள்.

3.2.2 காப்பியங்களின் மூல நூல் பொதுவாக, அனைத்துக் கிறித்தவ இலக்கியங்களுக்கும் விவிலியத் திருமறையே மூல நூலாகும். எனினும், இரட்சணிய யாத்திரிகத்துக்கும் தேம்பாவணிக்கும் பிற மேனாட்டார் நூல்களும் மூல நூலாகியுள்ளன. ஆனால், இப்பாடத்தில் இடம்பெறும் ஐந்து காப்பியங்களும் விவிலிய மறையையே முழுவதும் சார்ந்துள்ளன எனலாம். திருவாக்குப் புராணம், விவிலியப் பழைய ஏற்பாட்டை அடியொற்றி அமைந்துள்ளது. பிற நான்கு காப்பியங்களும் புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்தி நூல்களையே (GOSPELS) தம் மூல நூல்களாக அமைத்துக் கொண்டுள்ளன.

3.2.3 காப்பியங்களின் அமைப்பு முறை நான்கு காப்பியங்கள் கிறித்து பெருமானின் வரலாற்றையும், திருவாக்குப் புராணம் எனும் காப்பியம் பழைய ஏற்பாட்டு வரலாற்றையும் பேசினாலும், ஒவ்வொன்றின் அமைப்பு முறையும் தனித்தன்மைகளோடு விளங்குகிறது. தமிழ்க் காப்பிய இலக்கணத்தைப் பெரிதும் தழுவியே இவை அமைந்துள்ளன.

● திருவாக்குப் புராணம்

திருவாக்குப் புராணம் இரண்டு பாகங்களைப் பெற்றுள்ளது. முதற்பாகம் ஜநந காண்டம், யாத்திரைக் காண்டம் என்னும் இரண்டு காண்டங்களை உடையது. இக்காண்டங்கள், விவிலியத் திருமறையின் பழைய ஏற்பாட்டிலுள்ள ஆதியாகமத்தையும், யாத்திராகமத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொரு காண்டத்திலும் படலம் எனப்படும் பல சிறு பிரிவுகள் உள்ளன. ஜநந காண்டத்தில் பத்துப் படலங்களும், யாத்திரைக் காண்டத்தில் எட்டுப் படலங்களும் உள்ளன. நூலின் இரண்டாம் பகுதி, சுவிசேட காண்டம் எனத் தலைப்பிடப் பெற்றுள்ளது. 67 பாடல்கள் மட்டும் இதில் இடம் பெற்றுள்ளன. பிற பிரிவுகள் எதுவும் இல்லை. நூலின் தொடக்கத்தில் தமிழ்க் காப்பிய அமைப்பு முறைக்கேற்ப, கடவுள் வாழ்த்து, அவையடக்கம், பதிகம் ஆகியன அமைந்துள்ளன. இந்நூலின் பதிகம் 111 விருத்தப் பாக்களை உடையது. ஆசிரியர் தாம் பாடக் கருதிய கிறித்தவ வேதச் செய்திகளை யெல்லாம் தொகுத்து, இதில் இனிமையாகப் பாடியுள்ளார்.

● திரு அவதாரம்

திரு அவதாரம் என்னும் காப்பியம், கடவுள் வாழ்த்து, பாயிரம் நீங்கலாக, 2294 விருத்தப்பாக்களால் அமைந்துள்ளது. பால காண்டம், உத்தியோக காண்டம், ஜெய காண்டம், ஆரோகண காண்டம் என நான்கு காண்டங்களால் ஆனது. ஒவ்வொரு காண்டமும் பல்வேறு பர்வங்களாகப் (பருவங்களாக) பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பர்வத்தின் உள்ளேயும் உட் தலைப்புகளுடன் நிகழ்ச்சி தொடர்பான பாடல்கள் அமைந்துள்ளன. படிப்பவர்களுக்குத் துணை புரியும் வகையில் உட்தலைப்புகளோடு விவிலியத்தில் வரும் நற்செய்தி நூல் ஆதாரங்களும் தரப்பட்டுள்ளன.

● கிறிஸ்து மான்மியம்

கிறிஸ்து மான்மியம் தேவதூதன் கன்னிமரியாளிடம் வந்த சருக்கம் முதல் கிறிஸ்து பரமண்டலமேறிய சருக்கம் முடிய 39 சருக்கங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. விருத்தப் பாக்களால் அமைந்த இந்நூலில் வேறு வகையான பகுப்புகள் எவையும் காணப்படவில்லை.

● சுடர்மணி

சுடர்மணி என்னும் காப்பியம், பாயிரம் நீங்கலாக, பால காண்டம், உபதேச காண்டம், மீட்புக் காண்டம், உத்தான காண்டம் ஆகிய நான்கு காண்டங்களைப் பெற்று விளங்குகிறது. பால காண்டத்தில் தூதுப் படலம், அவதாரப் படலம், காட்சிப் படலம், நசரைப் படலம் ஆகிய 4 படலங்கள் உள்ளன. உபதேச காண்டத்தில் திருமுழுக் காட்டுப் படலம், சோதனைப் படலம், சீடரைச் சேர்த்த படலம் முதலிய 30 படலங்கள் காணப்படுகின்றன. மீட்புக் காண்டத்தில் ஊர்வலப் படலம், திங்கள் படலம் முதலிய 10 படலங்களும், உத்தான காண்டத்தில் எருசலைப் படலம், திபேரியாப் படலம், ஆரோகணப் படலம் ஆகிய முன்று படலங்களும் உட்பிரிவுகளாக அமைந்துள்ளன.

● இயேசு காவியம்

இயேசு காவியத்தில் பாயிரப் பாடலுடன், பிறப்பு என்ற முதல் பாகமும், தயாரிப்பு என்ற இரண்டாம் பாகமும், பொது வாழ்வு என்ற மூன்றாம் பாகமும், பாடுகள் என்ற நான்காம் பாகமும், மகிமை என்ற ஐந்தாம் பாகமும் 149 உட்தலைப்புகளுடன் அமைந்துள்ளன. இவையன்றி வேறு சில சிறு தலைப்புகளும் பொருள் விளக்கத்திற்காக ஆங்காங்கே தரப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட இவ்வைந்து காப்பியங்களுள் இயேசு காவியத்தையும், கிறித்து மான்மியத்தையும் தவிர்த்த பிற மூன்று காப்பியங்களும், தமிழ்க் காப்பிய மரபுகளைப் பெரிதும் தழுவ முயன்றுள்ளமை தெரிகிறது. பாயிரப் பகுதியில் கடவுள் வாழ்த்து, குரு வணக்கம், அவையடக்கம் முதலிய பகுதிகள் சிலவற்றில் இடம்பெறுவதும் காப்பியப் பகுப்பு முறைகளும் இவ்வுண்மைக்குச் சான்றுகளாவன.

3.3 காப்பியக் கதைமாந்தர்

இவ்வைந்து காப்பியங்களும் விவிலிய வரலாற்றையே பெரிதும் தழுவி நிற்பதால், விவிலிய வரலாற்றில் குறிப்பாக இயேசுபெருமானின் வாழ்க்கை வரலாற்றில் இடம்பெறுவோரே, இக்காப்பியங்களின் கதைமாந்தர் ஆகின்றனர். இவர்களைப் பற்றி இக்காப்பியங்களில் கூறப்பட்டுள்ள முறையும், விவிலியப் போக்கைப் பெரிதும் தழுவியே நிற்கிறது எனலாம். இனி, இவர்தம் பண்புகள் சிலவற்றைக் காண்போம்.

3.3.1 காப்பியத் தலைமை மாந்தர் மாண்பு திருவாக்குப் புராணத்தைத் தவிரப் பிற நான்கு காப்பியங்களும் இயேசு பெருமானையே காப்பிய நாயகராகக் கொண்டு அமைகின்றன. விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த இறைமகன் இயேசு கிறித்துவின் பெருமையையே இவை பலவாறு பேசுகின்றன. எனினும் விவிலிய வரலாற்றுக் கதைகளுக்கும் கருத்தோட்டதிற்கும் புறம்பாகவோ மாறாகவோ பேசுவதில்லை.

● இயேசுவின் பெருமை

சுடர்மணி என்னும் காப்பியம், இயேசுவை உலக மீட்பர், வள்ளல், அண்ணல், தூயோன் என்றெல்லாம் பாராட்டுகிறது. இவ்வாறு பல அடைமொழிகளால் பாராட்டுவதோடு, அவரது மனித வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகளின் வழியாகவும் அவரது பெருமையை வெளிப்படுத்துகிறது.

சான்றாக, நயீம் என்ற ஊருக்குத் தம் சீடர்கள் புடைசூழ இயேசு சென்றபோது, அங்கே தன் மகனை இழந்த ஒரு தாயைக் காண்கிறார். அவளது மகன் ஒரு பாடையில் (இறந்த உடல்கள் எடுத்துச் செல்லப்படும் ஒரு படுக்கை) வைத்து எடுத்துச் செல்லப்படுகிறான். அதன் பின்னால் அழுது புலம்பிக் கொண்டே இறந்தவனது தாய் செல்கிறாள். இயேசு பெருமான் அவளை அன்புடன் அழைத்து, “பெண்ணே! அழவேண்டாம். உன் மகன் எனது சொல்லைக் கேட்டு, உயிருடன் எழுவான்” என்று ஆறுதலாகப் பேசுகிறார். அவ்வாறே, தமது சொல்லின் ஆற்றலால், அம்மகனை உயிரோடு எழுப்பி, அத்தாயிடம் ஒப்படைக்கிறார். இந்த நிகழ்ச்சியைக் கவிஞர் உருக்கமாக வருணிக்கிறார்.

இறைவனின் இரக்கம் இங்கே

எண்ணிடில் வியப்பே தோன்றும்

குறையுளோர் வந்து நின்று

குறைசொல்லி இரக்கா முன்னர்

குறைகண்ட இறையே முந்திக்

குறைதீர்த்த பண்பு…

(அற்புதப் படலம்:389)

(இரக்கம் = கருணை; இரக்கா முன்னர் = வேண்டிக் கொள்வதற்கு முன்பே)

என்று இயேசுவின் கருணை உள்ளத்தைப் பாராட்டுகிறார். அதாவது, வாழ்வில் குறையுள்ளவர்கள், தம்குறையை வந்து இயேசுவிடம் தாமாகச் சொல்லிக் குறை தீர்க்குமாறு வேண்டிக் கொள்வதற்கு முன்பாகவே, தாமே அவர்களது குறைகளைத் தீர்த்து வைக்கும் இரக்கமுடையவர் என்று அவரைப் போற்றுகிறார்.

3.3.2 பிற கதைமாந்தர் பண்புகள் இக்காப்பியங்களில் இடம்பெறும் பிற கதை மாந்தர் என்று கருதும் போது, இயேசு பெருமானின் வாழ்வுடன் இணைந்த மக்களையே குறிப்பிட வேண்டும். இயேசு பெருமானின் பன்னிரு மாணாக்கர்கள், அவரது மானிடப் பெற்றோரான அன்னை மரியாள், தந்தை சூசை மற்றும் இயேசுவின் அருட்செயல்களாலும் அருளுரைகளாலும் பயன்பெற்றோர் முதலியோர் இக்காப்பியங்களில் சிறப்பாக இடம்பெறுகின்றனர். இவர்களைப் பற்றிய வருணனைகளும் விளக்கங்களும் விவிலியத்தையே பெரிதும் தழுவி அமைவதால், தனித்தன்மை உடையனவாக இவற்றைக் கருத முடியாது. எனினும், ஒருசில இடங்களில் இத்தகு கதைமாந்தர் சிறப்பான வருணனைகளுக்கு உரியவராகின்றனர்.

● செல்வன்

கிறிஸ்து மான்மியத்தில் வரும் இலாசரு சருக்கம் எனும் பகுதியில் தன்னைச் சுற்றி வாழும் ஏழையரைப் பற்றிக் கவலை கொள்ளாத செல்வனைப் பற்றிய வருணனையைச் சுட்டலாம். இந்தச் செல்வன், பல்வேறு செல்வ வசதிகள் உடையவனாகவும், அழகு மிக்கவனாகவும், நல்ல உணவு வகைகளையும் சுகபோகங்களையும் விரும்புபவனாகவும் உள்ளான். பொன் நகைகளை அணிந்து கொள்வதிலும் நாட்டமுடையவன். ஆனால் பிறர்க்கு நன்மை செய்வதில் நாட்டமில்லாதவன். தன்மனம் போல் வாழ முற்படுபவன். நல்ல நூல்களின் அறிவுரைகளை இவன் கேட்கமாட்டான் என்று இவனது இழிவான இயல்புகளை வருணிக்கிறார். அக்கருத்துடைய பாடல் பின்வருமாறு:

பாக்கியம் நிறைந்தவன் பருத்த தோளினன்

தேக்கிய வழகினன் செழித்த வீட்டினன்

நாக்கினுக் கின்பொருள் நாடும் சிந்தையான்

போக்கிய மொன்றையே பொருளெனக் கொள்வான்

பொன்மணி அணிகளைப் பூணு றுப்பினான்

நன்மை செய்பவரை நாடாத கண்ணினான்

தன்மனப் படியெல்லாம் செய்யும் தன்மையான்

தொன்மைநூல் கேட்டிடாத் தொளைகொள் காதினான்

(இலாசரு சருக்கம் 20:1,2)

(பாக்கியம் = பேறுகள், வசதிகள்; தேக்கிய = நிறைந்த; போக்கியம் = சுகங்கள்; தொன்மை நூல் = பழைய நல்ல புத்தகங்கள்; தொளைகொள் காதினான் = ஓட்டைக் காது உடையவன்)

● பரிசேயர்

இவ்வாறே இயேசு காவியத்தில், இயேசுவைக் குற்றம் காணவும் பழிதூற்றவும் கருதிய பரிசேயர் முதலிய சமயத் தலைவர்களைப் பற்றி அமையும் சித்திரிப்புகளையும் சுட்டலாம். சான்றாகக் கீழ்க்குறிப்பிடும் வரிகளைச் சுட்டலாம்.

செய்த சோதனை வெற்றி பெறாமலே

கையி ழந்த வெறும்மறை நூலினார்

தொட்ட இடம் அத்தனையும்

தோல்வியுற்ற பரிசேயர்

(கையிழந்த = ஆற்றல் இழந்த; மறை நூலினார் = வேதத்தைப் போதிக்கும் சமயத் தலைவர்கள்)

இயேசுவை அவமானப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வெற்றி பெறாததால், ஆற்றல் இழந்த வெறுமையான மறை நூல் போதகர்கள், எடுத்த செயல் எல்லாவற்றிலும் தோல்வியே அடைந்த பரிசேயர்கள் என்பது இப்பாடற் கருத்து.

3.4 காப்பியங்களும் விவிலியமும்

முன்னரே கூறியபடி, இவ்வைந்து காப்பியங்களும் விவிலியத்தையே மூல நூலாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன. திருவாக்குப் புராணம் விவிலியப் பழைய ஏற்பாட்டைத் தழுவி நிற்க, ஏனைய காப்பியங்கள் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களையே சார்ந்து நிற்கின்றன.

3.4.1 விவிலியச் செய்திகள் விவிலிய வரலாற்றின் கவிதை வடிவங்களாகவும் தமிழ்ப் பதிப்புகளாகவும் இக்காப்பியங்கள் விளங்குவது முன்னரே சுட்டப்பட்டது. இயேசு காவியம், சுடர்மணி ஆகிய இரண்டையும் தவிர, பிறநூல்கள் விவிலிய வரலாற்றைப் பெரும்பாலும் விவிலியத்தில் உள்ளவாறே எடுத்துக் கூறுகின்றன.

● நோக்கம்

கற்பனை கலவாமல் செய்யுள் நடையில் விவிலிய வரலாற்றைத் தருவதையே இவை நோக்கமாகக் கொண்டுள்ளன. கற்பனை கலந்து பாடினால் அது, விவிலிய இறைச் செய்திகளின் புனிதத் தன்மையை மாசுபடுத்தும் என்ற நோக்கில் இவர்கள் கற்பனை கலவாமல் பாடியிருக்கலாம்.

● விவிலியம் கற்க

கிறிஸ்து சமய வித்தியா சாலை மாணாக்கரும் பிறரும் சத்திய வேத நூலைக் (BIBLE) கற்றுக் கொள்வதற்கு உபயோகமாக மெக்காதர் ஐயரால் புராண நடையாகச் செய்விக்கப்பட்டது என்ற ஒரு குறிப்பு திருவாக்குப் புராணத்தின் முதல் பக்கத்தில் காணப்படுகிறது. இக்குறிப்பும் மேற்கூறிய உண்மையை உறுதிப்படுத்தும். சான்றாக, கிறித்து பெருமான் ஒரு மலை மீது அமர்ந்து செய்த அருட்பொழிவைப் பாடும் திரு அவதார ஆசிரியர், அக் கருத்துகளை அதிக மாற்றமின்றி அப்படியே தருகிறார். இது அத்தகைய ஒரு பாடல்:

இருதய சுத்தம் உள்ளோர் என்றுமே பாக்ய ராவார்

ஒருவருங் காணக் கூடா உன்னதரைத் தரிசிப் பாரே

இருசமா தானம் செய்வோர் இன்புறும் பாக்ய ராவார்

அருள்நிறை தெய்வம் தம்மின் அன்புறும் புத்ரர் ஆவார்

(உத்தியோக காண்டம்: முதற்பகுதி – 144)

(பாக்யர் = பேறு பெற்றவர்கள்; தரிசிப்பார் = காண்பார்; புத்ரர் = புத்திரர் = பிள்ளைகள்)

3.4.2 விவிலியக் கோட்பாடுகள் இக்காப்பியங்கள், விவிலியத்திலுள்ள வரலாற்றையும் நிகழ்வுகளையும் விவரிப்பதோடு, அந்த நிகழ்வுகளின் ஊடாக விவிலியக் கருத்துகளையும், கோட்பாடுகளையும் கூட நயமாக வெளிப்படுத்துகின்றன. இதனைச் சில சான்றுகள் கொண்டு காண்போம்.

● பாவக் கறை

சுடர்மணி ஆசிரியர் பால காண்டத்தில் மனித குலத்தின் ஆரம்ப வரலாற்றைக் கீழ்வருமாறு விளக்கிப் பாடுகிறார்:

இறைவனின் படைப்பே நாமும்

இயற்கையின் கூற்றை நோக்கின்

முறைப்படி முதல்ம னுக்கள்

மூலமே பிறந்தோம் என்றும்

குறையவர் செய்த தேனும்

குவலயத் துள்ளோர் எல்லாம்

கறையொடு பிறந்தோம் என்றும்

காண்டலும் எளிதே அன்றோ!

(தூதுப் படலம் :15)

(முதல் மனுக்கள் = முதல் மனிதர்கள் ஆகிய ஆதாமும் ஏவாளும்; குவலயம் = உலகம்)

இப்பாடலில் இறைவனின் படைப்புகளாகிய நாம் எல்லோரும் ஆதி மனிதர்களான நம் முன்னோர் மூலம் பிறந்தோம். அது மட்டுமல்ல, அவர்கள் செய்த பாவத்தின் விளைவாக, நாம் அனைவருமே அந்தப் பாவக் கறையோடு பிறக்கிறோம் என்ற கிறித்தவக் கோட்பாடு வெளிப்படுத்தப்படுகிறது.

● தொண்டு உள்ளம்

இன்னோரிடத்தில், இயேசுவிடம் வந்து தன் இரு மக்களும் இறையரசில் இயேசுவின் இரு புறமும் அமர அருள் செய்ய வேண்டுமென்று கேட்ட ஒரு தாயைப் பற்றி, கவிஞர் கீழ்வருமாறு பாடுகிறார்:

இறையரசு அதிலே மக்கள்

இருபுறம் அமர வேண்டி

இறைவரைக் கேட்கும் அன்னை

எண்ணம்இவ் வுலகப் பற்றே

நிறைகுண நல்லோர் இந்த

நிலையற்ற வாழ்வை எள்ளிக்

குறைவற்ற சேவை செய்யக்

குறிப்பதே இறைவாக்கு அன்றோ?

(இல்லறப்படலம், 813)

இப்பாடலில், நல்ல குணங்கள் நிறைந்தவர்களை நிலையில்லாத இந்த உலக வாழ்வை வெறுத்து, குறைவில்லாத தொண்டு செய்வதற்காகத் தூண்டுவதே இறைவனின் வாக்கு என்னும் கருத்து வெளிப்படுத்தப்படுகிறது.

● ஓய்வு நாள்

இயேசு காவியத்தில் கண்ணதாசனும் விவிலியக் கோட்பாடுகளைப் பல இடங்களில் விளக்கி உரைக்கிறார். சான்றாக, ஓர் இடம். இயேசுவின் சீடர்கள், ஓய்ந்திருக்க வேண்டிய நாளில், தங்கள் பசியைத் தீர்ப்பதற்காக, வயலிலுள்ள கதிர்களைக் கொய்து தின்றார்கள். இதனைக் குறை கூறும் மதத்தலைவர்களான பரிசேயர்களுக்கு இயேசு பதில் கூறுவதை,

ஆலயத்தை விடப்பெரிய ஒருவன் இங்கே

அமர்ந்துள்ளான் என்பதைநீர் அறிதல் வேண்டும்

நாலுதிசை தன்னிலும்நான் வேண்டும் ஒன்று

நாள்தோறும் பலியல்ல இரக்கம் மட்டும்

மேலான பரிசேயர் குற்றம் காண்பீர்

விழியெழுதும் கோல்போல அதனைக் காணேன்

காலமிது ஓய்வுநாள் மனிதர்க் காக

காண்கின்ற மனிதரெல்லாம் ஓய்வுக் கல்ல!

(இயேசு காவியம், 28)

(பலிகள் = இறைவனுக்குப் படைக்கப்படும் விலங்குகள் முதலியவை; பரிசேயர் = யூத சமயத் தலைவர்களில் ஒரு சாரார்; விழி எழுதும் கோல் = கண்ணுக்கு மை எழுதும் ஒரு சிறு கோல்)

என்று பாடுகிறார்.

ஓய்வு நாளைக் கடைப்பிடித்தல் முதலிய சமய விதிகள் எல்லாம் மனிதர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. மனிதர்கள், விதிகளுக்காக உண்டாக்கப்படவில்லை என்ற இயேசுவின் கொள்கை விளக்கத்தைக் கவிஞர் மிக அழகாக இங்குக் கூறியுள்ளார்.

● இறை ஆட்சி

இயேசு காவியத்தின் இறுதிப் பகுதியில் அமையும் ஒரு பாடல், கிறித்தவ சமய அடிப்படைக் கோட்பாட்டையும், ஆதார நம்பிக்கையையும் பிழிந்து (essence) தருவதாக அமைந்துள்ளது.

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்

என்பது சத்தியமே

புண்கள் இருக்கும் வரையில் மருந்து

தேவை நித்தியமே

விண்ணர சமையும் உலகம் முழுதும்

இதுதான் தத்துவமே

எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே

இயேசுவை நம்புவமே!

(இயேசு காவியம் – 149)

(நித்தியம் = நிலையான உண்மை;  விண்ணரசு = கடவுளின் ஆட்சி.)

இயேசு பெருமான் மீண்டும் உலகுக்கு வரவிருத்தல், இவ்வுலகில் இறைவனின் ஆட்சியை அமைக்கவிருத்தல் முதலிய கோட்பாடுகள் இப்பாடலில் புலப்படுத்தப்படுகின்றன.

3.5 காப்பியங்களின் இலக்கியச் சிறப்பு

சொல்லும் செய்தியால், கதைப் போக்கால் இவை கிறித்தவக் காப்பியங்களாக அமைந்தாலும், கவிச் சுவையாலும் இலக்கிய நயங்களாலும் சிறந்த தமிழ்க் காப்பியங்களாகத் திகழ்கின்றன. முன்னரே சுட்டப்பட்டது போல, இவற்றுள் சில, இலக்கியச் சுவைக்கும் கற்பனை நயத்துக்கும் அதிக முக்கியத்துவம் தராவிடினும், அனைத்துக் காப்பியங்களிலுமே ஆசிரியர்களின் இலக்கியத் திறன் நன்கு வெளிப்படுகிறது. சுடர்மணியும் இயேசு காவியமும் கவித்திறனில் சிறந்து விளங்குகின்றன. கிறிஸ்து மான்மியத்தின் நடைத்திறமும் சிறப்புடையது.

3.5.1 அணி நயங்கள் பல அழகிய அணிகளும் உருவகங்களும் இக்காப்பியங்களில் இடம் பெறுகின்றன.

● உவமைகள்

இறையடியார்களின் அறவுரை கேட்பதில் ஆர்வமும் உணர்வும் இல்லா மக்கள் நிலை, கிறிஸ்து மான்மியம் ஆசிரியர் சங்கை ஸ்தொஷ் கண்ணில்லாக் குருடர்கள் நிலையை ஒத்தது என்கிறார். எப்படிப் பார்வையற்றவர்களுக்கு இரவும் பகலும் ஒன்றாகவே இருக்குமோ, அது போலவே விண்ணில் இருந்து ஒருவர் மண்ணுக்கு இறங்கிச் சென்று அறிவுறுத்தினாலும், உணர்வில்லாதவர்கள் திருந்த மாட்டார்கள் என்கிறார் அவர்.

சுடர்மணி காவியத்தில் எண்ணற்ற இனிய உவமைகள் விரவிக் கிடக்கின்றன. சான்றாக,

அரையனின் ஆணை கேட்டே

அங்குள கொலைஞர் எல்லாம்

இரையதைத் தேடி யோடும்

இளமறிக் கூட்டம் போலும்

கரையதை உடைத்துப் பாயும்

கனத்தநீர்த் தேக்கம் போலும்

புரையிலார் உயிர் குடிக்கப்

புகுந்தனர் ஊரில் என்னே

(காட்சிப் படலம் : 103)

(அரையன் = அரசன்; கொலைஞர் = கொலை செய்யும் அரசனின் சேவகர்கள்; இள மறி = இளமையான மான்குட்டி; நீர்த் தேக்கம் = அணைக்கட்டு; புரையிலார் = குற்றம் இல்லாதவர்கள்.)

என்ற பாடலைப் பார்க்கலாம்.

இதில் பல உவமைகள் உள்ளன. ஏரோது என்னும் அரசனின் ஆணைப்படி, இளங்குழந்தைகளைக் கொல்லுவதற்குப் புறப்பட்ட கொலைகாரர்களுக்கு மான் கூட்டத்தையும் நீர்த்தேக்கத்தையும் உவமை காட்டுகிறார் கவிஞர். நம் உள்ளத்தைத் தீய எண்ணங்களிடம் ஈர்க்கும் சாத்தானின் செயலை விவரிக்கும்போது, பள்ளத்தில் பாயும் நீர்போல் நம் உள்ளம் பாவமாகிய பாதாளத்தில் விழுமாறு செய்கிறான் அவன் என்று உவமை நயம்பட விவரிக்கிறார். மரணத்தைத் திருடனுக்கு ஒப்பிட்டு இயேசு பேசியுள்ளதையும் கவிதையாக்குகிறார் கவிஞர்.

● கண்ணதாசனின் உவமைகள்

சிறந்த உவமைகளைத் தடையின்றிப் பயன்படுத்தும் ஆற்றல் பெற்ற கவிஞர் கண்ணதாசன். இயேசு காவியத்தில் பல உவமைகளைப் பயன்படுத்துகிறார். சான்றாக, நூற்றிலோர் பூவைப் போல நுவலரும் முகத்தைக் காட்டி அன்னை மரி அமர்ந்திருந்ததாகப் பாடுகிறார். அதாவது, நூற்றுக்கணக்கான பூக்களுக்கு நடுவே தனியழகுடன் விளங்கும் ஒரு பூவைப் போல, விவரிக்க முடியாத தன் அழகு முகத்தைக் காட்டி நிற்கிறாளாம் அவள்.

இன்னோரிடத்தில், தூண்டிற்புழுவைப் போல மரியாள் துடித்ததாகவும் பாடுகிறார். மீன்களைப் பிடிப்பதற்காக மீனவர்களின் தூண்டில் என்னும் கருவியிலே மாட்டி வைக்கப்படும் புழுவை இங்கு உவமையாக்கியுள்ளார். மரியும், சூசையும் குழந்தையாகிய இயேசுவைக் காணாமல் எருசலேம் நகரில் அடைந்த துயரத்தைப் பாடும்போது ஆயிரங்காலம் தேடியலைந்து தோண்டி எடுத்த தம் தோன்றாப் பொருளை மீண்டும் தொலைத்த வேதனை கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.

3.5.2 வருணனைத் திறம் கவிஞர்களுக்கு எதையும் வருணிப்பது என்பது கைவந்த கலையாகும். அதிலும் காப்பியம் படைக்கும் கவிஞர்களுக்கு இது இயல்பாகவும் எளிதாகவும் அமையக்கூடிய ஒன்றாகும். இதற்கு இக்காப்பியப் புலவர்களும் தக்க சான்றாகின்றனர்.

● இயற்கை வருணனை

சுடர்மணி காப்பியத்தில் அமையும் வருணனைப் பகுதிகள் பலவாகும். குறிப்பாக இயற்கை வருணனையாக அமையும் பாடல்கள் நயமானவை. சான்றுக்கு ஒரு பாடலைக் காண்போம்:

பகலவன் நாளும் வந்து

பணிந்துபின் மேற்கே செல்வன்

உகந்திரு மதியும் அல்லில்

உறவொடு தோன்றி மீள்வன்

மிகுந்திடும் வெயிலில் மேகம்

மேல்நின்று நிழலை ஈவன்

சுகமதை அருளக் காற்றும்

சுழன்றெங்கும் சூழ்ந்து நிற்பன்

(தூதுப்படலம் -7)

(பகலவன் = ஞாயிறு (சூரியன்); உகந்திடும் = விரும்பிடும்; மதி = நிலவு; அல் – இரவு;  மீள்வன் – மீண்டும் வருவான்;  ஈவன் – கொடுப்பான்.)

இப்பாடலில் ஒவ்வொரு நாளும் ஞாயிறு தோன்றுவதையும், நிலா குளிர்ச்சி தருவதையும், மேகங்கள் நிழல் தருவதையும், காற்று சுகம் தருவதையும் அழகாக வருணித்துள்ளார். இறைவன் முதன் முதல் படைத்த ஏதேன் என்னும் இன்ப வனத்தின் காட்சி இது. தற்குறிப்பேற்ற அணியைப் பயன்படுத்தி இவரும் சில பாடல்களைப் பாடியுள்ளார். சான்றாக மரியன்னைக்கு நிழல் கொடுக்க மரங்களிடையே போட்டி நிலவியதாகப் பாடுகிறார் கவிஞர். இயல்பாக நிழல் கொடுக்கும் மரங்களைப் போட்டி போட்டுக் கொண்டு மரியன்னைக்கு நிழல் கொடுப்பதாகப் பாடுவது கவிஞரின் கற்பனையாகும்.

● கடலும் தாவரங்களும்

இயேசு காவியத்தில் பல பாடல்களில் கவிஞர் கண்ணதாசனின் வருணனைத் திறன் மிகச் சிறப்பாக வெளிப்படுகிறது. சில சான்றுகளைக் காண்போமா?

நூலின் பாயிரப் பகுதியில், இந்நூலைப் பாடத் துணிந்த தம் முயற்சியையே கவிஞர் அடுக்கடுக்கான உவமைகளோடு வருணிக்கிறார். பொங்கி வருகிற கடலில் புகுந்து கடலையே அளவெடுக்கப் போனது போலவும், உலகத்திலுள்ள மரங்கள் செடி கொடிகள் இவற்றை எல்லாம் கணக்கெடுக்கப் போனது போலவும், ஒரு தங்கத்தை எடுத்து அதில் விதவிதமான நகைகளைச் செய்ய முயலும் பொற்கொல்லனைப் போலவும், தாம் மிகப்பெரிய முயற்சியில் இறங்கிவிட்டதாகப் பாடுகிறார் கவிஞர். இக்கருத்தை வெளிப்படுத்தும் பாடல் பின்வருமாறு:

பொங்குமாங் கடலில் புகுந்தள வெடுக்கப்

போயினேன் வெற்றிபெற் றேனா?

பூமியின் தருக்கள் செடிகொடி யோடும்

புல்லினைத் தொகையெடுத் தேனா?

தங்கமொன் றெடுத்துப் பலவகை நகைகள்

தட்டயான் நல்லதட் டானா?

தாய்த்தமிழ் ஆசை வாய்த்தநூற் பற்றுத்

தந்ததால் துணிந்துவிட் டேனா?

(பொங்குமாங் கடல் = அலைகள் பொங்கும் கடல்; தருக்கள் = மரங்கள்; தட்டான் = பொன்னால் நகைகள் செய்பவன்; நூற் பற்று = புத்தகத்தின் மேல் கொண்ட விருப்பம்)

● மரியன்னை அழகு

சிறு சிறு சொற்களால் மரியன்னையின் அழகை இன்னொரு பாடலில் அவர் வருணிக்கிறார். இது தமிழின் சங்கப் பாடல்களை நினைவூட்டுகிறது.

நிலவெனும் வதனம் நெற்றி

நெடுமழை அனைய கூந்தல்

மலரெனும் கண்கள் கைகள்

மரியம்மை அழகின் தெய்வம்

(இயேசு காவியம் – 3)

(வதனம் = முகம்; நெடுமழை = மழை தரும் மேகம்;  அனைய = போன்ற)

இப்பாடலில் நிலவு போன்ற முகத்தையும், மழை தரும் கார்மேகங்கள் போன்ற கூந்தலையும், மலர்கள் போன்ற கண்களையும் கைகளையும் பெற்றுள்ளதால் மரியன்னை அழகின் தெய்வமாக விளங்குவதாகப் பாடுகிறார்.

● சிலுவைக் காட்சி

இயேசுவின் சிலுவை குறுக்கும் நெடுக்குமான இரு மரத் துண்டுகளின் இணைப்பு. இது விண்ணகமும் மண்ணகமும் கூடுவது போல அமைந்துள்ளதாகக் கவிஞர் பாடுகிறார். சிலுவையில் இயேசுவின் தலையில் முள் கிரீடத்தை வைத்தார்கள். அப்பொழுது ஒரு கணம் இந்த உலகம் நடுங்கியதாகக் கவிஞர் பாடி உருகுகிறார். அந்த வரிகள் இவை:

வானகமும் வையகமும் கூடுவதைக் குறிப்பதுபோல்

சிலுவை வைத்து

மானமெனும் ஓர்பண்பை மனிதகுலம் காண்பதற்கு

மனது வைத்து

தானமொடும் தவம்பெருக முள்ளாலே மகுடத்தைத்

தலையில் வைத்து

ஞானமகன் நின்றவுடன் ஞாலமெல்லாம் ஓர்பொழுது

நடுங்கிற் றம்மா

(இயேசு காவியம் – 135)

(தானம் = புண்ணியச் செயல்; ஞாலம் = உலகம்)

3.5.3 சொல்லாட்சி சரியான சொற்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுவது நல்ல உரைநடை. சிறந்த சொற்கள் சிறந்த முறையில் அமைவது கவிதை. அவ்வகையில் இக்காப்பியங்களில் மிகச் சிறப்பான சொல்லாட்சிகளை நிறையக் காண முடிகிறது.

● தனித் தமிழ்ச் சொற்கள்

திருஅவதாரம் ஆசிரியர் பெதும்பை (இளம்பெண்), அருட்பரன் (அருள்தரும் இறைவன்) முதலிய இலக்கிய வழக்குச் சொற்களைக் கையாள்கிறார். வடசொற்கள் பலவற்றையும் தாராளமாகப் பயன்படுத்தும் இவ்வாசிரியர் அருளன் முதலிய தமிழ்ச் சொல் ஆக்கங்களையும் பயன்படுத்துகிறார். அருளப்பர் எனப்படும் யோவான் ஸ்நானகனுக்கு அவர் குறிக்கும் சொல் இது.

● சந்தச் சிறப்பு

சந்தச் சிறப்பு மிக்க பாடல்கள் பலவும் இக்காப்பியத்தில் அமைந்துள்ளன. சான்றாக ஒரு பாடலைக் காண்போம்:

வலைதனை விட்டுச் சீமோன்

வர, பிலவேந் திரன்தன்

வலைதனை வீசி, அண்ணன்

வழிவர, மேலும் சேசு

வலைதனைப் பழுது பார்க்கும்

வேறிரு வலைஞர் தம்மை

வலைதனை விட்டென் பின்னே

வாருங்கள் என்ற ழைத்தார்

(கலிலேயாப் படலம் -288)

(சீமோன், பிலவேந்திரன் = இயேசுவின் இரு சீடர்கள் சகோதரர்கள்; வலைஞர் = வலைகளை வீசி மீன் பிடிப்பவர்)

3.6 தொகுப்புரை

திரு அவதாரம், திருவாக்குப் புராணம், கிறிஸ்து மான்மியம், சுடர்மணி, இயேசு காவியம் ஆகிய ஐந்து காப்பியங்களைப் பற்றிப் பல செய்திகளை இப் பாடத்தில் தெரிந்து கொண்டோம். இக்காப்பியங்களின் ஆசிரியர்கள் பற்றியும், இக்காப்பியங்களை அவர்கள் படைத்த சூழல்கள், நோக்கங்கள் பற்றியும் அறிந்து கொண்டோம். இக்காப்பியங்கள் விவிலியக் கருத்துகளையும் செய்திகளையும் கூறும் முறைகள் பற்றியும், இவற்றின் இலக்கியத் திறன்களையும் உணர்ந்து கொண்டோம். தமிழிலுள்ள பெரிய காப்பியப் பரப்பில், ஒரு முக்கியமான பகுதியைப் பற்றிய அறிவும் தெளிவும் இப்பாடத்தினால் நாம் பெற்ற பயனாகும்.

பாடம் - 4

இசுலாமிய இரட்டைக் காப்பியங்கள்

4.0 பாட முன்னுரை

இசுலாமிய அடிப்படையில் தோன்றிய காப்பியங்கள் பல. அவை பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள் என ஏறத்தாழ இருபத்தாறு காப்பியங்கள் உள்ளன.

இசுலாமியக் காப்பியமாக முதலில் தோன்றியது கி.பி. 1648இல் எழுதப்பட்ட கனகாபிசேக மாலை என்னும் நூல் ஆகும். இருப்பினும் இசுலாமியத் தமிழ்க் காப்பியங்களுள் சீறாப்புராணமும், சின்னசீறாவும் தலைசிறந்த காப்பியங்களாகக் கருதப்படுகின்றன. இவை இசுலாமிய இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.

சீறாப்புராணம், சின்ன சீறா ஆகிய இரண்டும் இசுலாமிய சமயத் தீர்க்கதரிசி (இறைத் தூதர்) ஆகிய நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் காப்பியங்கள் ஆகும். இவை இறைவன் ஒருவன் என்ற கொள்கையை வற்புறுத்துகின்றன; நன்மைக்கும் தீமைக்கும், உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே ஏற்படும் போராட்டங்களைப் பாடுகின்றன; ஒழுக்க நெறிகளைக் கூறுகின்றன.

சீறாப்புராணத்தின் தொடர்ச்சியாக முடிவுபெறாத பகுதியை முடித்துப் பாடுவது சின்னசீறா ஆகும். எனவே சீறாப்புராணமும் சின்ன சீறாவும் சேர்ந்து நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை நிறைவு செய்கின்றன.

இசுலாமிய நெறித் தோன்றலின் இறுதித் தூதராகிய  நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இக்காப்பியங்களின் சிறப்பினையும் அவை தமிழ்க் காப்பிய  இலக்கியத்தை வளப்படுத்தியமையையும் பற்றி இப்பாடம் கூறுகிறது.

4.1 சீறாப் புராணம்

சீறாப் புராணம் = சீறாவைக் கூறும் புராணம். சீறத் என்பது சீறத்துன்னபி என்ற அரபுத் தொடரின் சுருக்கம் ஆகும். இதற்கு நபிகள் நாயகத்தின் வரலாறு என்று பொருள். சீறா என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் தமிழ் வடிவம். புராணம் என்பது பழமையான வரலாறு எனப் பொருள்படும். திருநபி அவர்களின் வரலாற்றைக் கூறும் புராணம் என்பது இதன் பொருள்.

4.1.1 ஆசிரியர் சீறாப் புராணத்தை உமறுப் புலவர் (கி.பி.1642-1703) என்பவர் இயற்றினார். உமறுப் புலவர் பிறந்த ஊர் கீழக்கரை என்றும், நாகலாபுரம் என்றும் இரு வேறு கருத்துகள் உண்டு. உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார். உமறுப் புலவர் மார்க்க மேதை செய்கு சதக்கத்துல்லா அப்பாவிடம் காப்பியம் இயற்றக் கருப்பொருள் பெற்றார். வடநாட்டுப் புலவர் வாலை வாருதியை எட்டையபுரம் அவைக்களத்தில் தன் புலமையால் வென்றார்.

● நண்பர்கள்

உமறுப் புலவர் அக்காலத்தில் வாழ்ந்த படிக்காசுப் புலவர். நமசிவாயப் புலவர், கந்தசாமிப் புலவர் ஆகியோரின் நெருங்கிய நண்பர்.

● ஆதரித்தவர்கள்

இவரை ஆதரித்த வள்ளல்கள் இருவர். ஒருவர் சீதக்காதி, இன்னொருவர் பரங்கிப் பேட்டை அபுல்காசிம் மரைக்காயர்.

4.1.2 காப்பிய அமைப்பு இக்காப்பியம் மூன்று காண்டங்களைக் கொண்டது. அவை:

1)   விலாதத்துக் காண்டம்

2)   நுபுவ்வத்துக் காண்டம்

3)   ஹிஜ்ரத்துக் காண்டம்

என்பவை ஆகும்.

● விலாதத்துக் காண்டம்

சீறாப் புராணத்தின் முதல் காண்டம் விலாதத்துக் காண்டம் ஆகும். விலாதத் என்ற அரபுச் சொல்லுக்குப் பிறப்பு என்பது பொருள். இதில் நபிகள் நாயகத்தின் பிறப்பும், இளமையும், தொழில் முயற்சியும் முதலில் கூறப்படுகின்றன. பின்னர், கதீஜா நாயகியாரின் உறவு, அவர்கள் திருமணம், பாத்திமா பிறப்பு ஆகிய செய்திகள் கூறப்படுகின்றன.

இது இருபத்து நான்கு படலங்களைக் கொண்டு உள்ளது.

● நுபுவ்வத்துக் காண்டம்

இது இரண்டாவது காண்டம். நுபுவ்வத் என்ற அரபுச் சொல்லின் பொருள் தீர்க்க தரிசனம் என்பதாகும். இது நபிகள் நாயகம் நபித்துவம் என்னும் நபிப் பட்டம் பெற்றதைப் பாடுகிறது. வானவர் தலைவர் ஓதிய திருக்குர்ஆன் வேத உரைகள் நபிகள் நாயகத்திற்கு வெளிப்படுத்தப்பெற்றதும், அதனை நபிகள் நாயகம் மக்களுக்கு எடுத்துரைத்து அறிவுரை கூறியதும் கூறப்படுகின்றன. மேலும் தீமைகள் செய்து வந்த குறைசிகள் எனும் குலத்தவரின் கொடுமைகளும் இக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளன. முஸ்லீம்களின் பொறுமையைப் பற்றியும், இசுலாம் உறுதி பெற்றது பற்றியும் இக்காண்டம் தெரிவிக்கிறது.

இதில் இருபத்தொரு படலங்கள் உள்ளன.

● ஹிஜ்ரத்துக் காண்டம்

இது மூன்றாவது காண்டம். ஹிஜ்ரத் என்ற அரபுச் சொல்லுக்கு இடம் பெயர்தல் என்பது பொருள்.

மக்காக் குறைசிகள், நபிகள் நாயகத்திற்குக் கொடுமைகள் பல செய்தனர். நபிகள் நாயகம் மக்காவை விட்டு, மதீனாவிற்கு வரவேண்டுமென்று அங்குள்ள மக்கள் அழைத்தனர். அந்த அழைப்பை நபிகள் நாயகம் ஏற்றார். இசுலாமிய அறநெறிகளை வளர்க்க மக்காவை விட்டு மதீனா நகர் சென்றார். அங்கு இசுலாமிய அறநெறி வளர்த்த வரலாறும் இக்காண்டத்தில் விவரிக்கப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு முடிவுபெறவில்லை. உறனிக் கூட்டத்தார் படலத்துடன் முடிகிறது. நபிகள் நாயகத்தின் ஐம்பத்தேழாவது வயதுவரை நடந்த நிகழ்ச்சிகளோடு சீறாப் புராணம் நிறைவு அடைகிறது. இது நாற்பத்தேழு படலங்களால் ஆனது.

4.2 சமயக் கருத்துகள்

இசுலாமிய சமயத்தைச் சேர்ந்த சீறாப்புராணம் இசுலாமியக் கோட்பாடு, கடமைகள், இறைத் தூதின் பெருமை ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.

4.2.1 இசுலாமியக் கோட்பாடு இறைவன் ஒருவனே. முகம்மது அவனுடைய தூதர் என்று கூறுவது கலிமா என்னும் இசுலாமிய மூலமந்திரம். இதனை உறுதியாக ஏற்பது ஈமான் என்னும் நம்பிக்கை. இந்த நம்பிக்கையைச் செயல்படுத்துவது அமல் ஆகும். இவை மூன்றும் மிகச்சிறப்பாகப் பொருந்துவதே இசுலாமாகும். இதனை,

ஒருத்தன்நா யகனவற்கு உரிய தூதெனும்

அருத்தமே யுரைகலி மாஅந் நிண்ணயப்

பொருத்தம்ஈ மான்நடை புனைத லாம்அமல்

திருத்தமே இவைஇசு லாமில் சேர்தலே

(தொழுகை வந்த வரலாற்றுப் படலம் – 2 (1297)

(கலிமா = மூலமந்திரம்; ஈமான் = நம்பிக்கை; அமல் = செயல்படுத்துதல்)

எனப் பாடுகிறார் உமறுப் புலவர்.

இறைவன் ஒருவனே. இறைவனின் தூதர் முகம்மது நபி என்ற மூலமந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும். மேலும் தொழுகை, ஏழை வரி, நோன்பு, புனித யாத்திரை செய்தல் என்பன போன்ற நற்செயல்களும் இணைந்ததே இசுலாம் என்பதை இப்பாடலில் உமறுப் புலவர் தெளிவுபடுத்துகிறார்.

4.2.2 கடவுள் கோட்பாடு சீறாப் புராணக் கடவுள் வாழ்த்துப் பாடல்களில், முதல் மூன்று பாடல்களும் உருவமற்ற ஓர் இறைவனைப் பணிந்து வணங்குவதைத் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாய் முதல்பாடலில்,

திருவினும் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்

தெளிவினும் தெளிவதாய்ச் சிறந்த

மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய்

மதித்திடாப் பேரொளி யனைத்தும்

(கடவுள் வாழ்த்துப் படலம் – 1)

(மரு = மணம்)

என்று இறைவனைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.

● எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே

அழகுக்கெல்லாம் மேலான அழகன். காணப்படுகின்ற அனைத்துப் பொருள்களிலும் உள் உறைந்து திகழ்கின்ற உண்மைப் பொருள். தெளிந்த அறிவினும் சிறந்த அறிவுடையவன். மணக்கும் பொருள்களிலும் சிறந்த மணமாய் விளங்குபவன். அணுவினுக்கும் நுண்ணிய தூளானவன். ஒப்பற்ற ஒளிகள் அனைத்தினும் மேலான ஒளியானவன். உலகினைக் காத்து இரட்சிக்கின்ற இறைவனை மனத்தின் கண் இருத்துவோம் என்ற கருத்துகளை இப்பாடல் கூறுகிறது. இறைவன் ஒருவனே என்ற இசுலாமியக் கடவுள் கொள்கையை இப்பாடல் எடுத்துரைக்கிறது.

மேலும் தீன்நிலை கண்ட படலத்தில், இந்த உலகம் அனைத்தையும் படைத்த ஆண்டவனின் உண்மைத் தூதர் முகம்மது ஆவார் என்றும், அவருடைய அறிவுரைகளைப் பின்பற்றி நடப்பவர் சுவர்க்கம் எனும் வீடுபேற்றை அடைவர் என்றும் குறிப்பிடுகிறார்.

4.2.3 இசுலாமியக் கடமைகள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இசுலாமியர்களின் தலைசிறந்த கடமைகள் ஐந்தாகும். அவை ஐம்பெருங்கடமைகள் என்று அழைக்கப்படுகின்றன.

1)     கலிமா (மூலமந்திரம்)

2)     தொழுகை

3)     நோன்பு

4)     சக்காத்து (ஏழைவரி)

5)     ஹஜ் (புனித யாத்திரை)

மேற்குறிப்பிட்ட ஐந்தும், சீறாவில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளன.

ஒரே பாடலில் கலிமா, ஐந்துவேளை தொழுகை, நோன்பு, சக்காத்து, ஹஜ் ஆகிய ஐந்தும் பற்றிக் குறிப்பிடுகிறார். அக்கருத்து,

தீதுஇலா மறைப்பொரு ளாய்த்திகழ் ஒளியாய்

நிறைந்தஅல்லாச் செகத்தின் மேல்தன்

தூதராய் உமையிருக்க அனுப்பினதுங்

காலம்ஐந்தும் தொழுக என்றுங்

காதலுடன் சக்காத்து நோன்பு கச்சும்

பறுல்எனவே கழறும் ஐந்தும்

(லுமாம் ஈமான் கொண்ட படலம் – 5 (4682))

(தீதுஇலா = தீமை இல்லாத; அல்லா = அல்லாஹ் (பரம்பொருளாகிய ஓர் இறை); செகம் = உலகம்; தொழுகை = ஐந்துவேளை தொழுகை; சக்காத்து = ஈகை (ஏழைவரி);  நோன்பு = இரமளான் எனும் அரபு மாதத்தில் முப்பது நாள்கள் பகல் பொழுதில் உண்ணாமல் பருகாமல் இருத்தல்;  கச்சு,  ஹஜ்ஜூ = துல்ஹஜ் எனும் அரபு மாதத்தில், பொருள் வசதியும் உடல்நலமும் உடைய முசுலீம்கள் அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் கட்டாயமாக மேற்கொண்டு செல்லும் மக்கா புனிதப்பயணம்; பறுல் = இறைவன் விதித்துள்ள கட்டாயக் கடமை)

என்னும் பாடலிலுள்ளது.

● கட்டாயக் கடமைகள்

இப்பாடல், தீமை இல்லாத தூய்மையான திருக்குர்ஆனின் உட்பொருளானவன், ஒளிவடிவானவன், எங்கும் நிறைந்தவன் அவனே அல்லாஹ். அகில உலகம் அனைத்திற்கும் அந்த இறைவனின் இறுதித் தூதராக அனுப்பப்பட்டு வந்தவர் நபிகள் நாயகம் என்று குறிப்பிடுகிறது. மேலும் ஐந்து வேளையும் தொழுகை செய்தல், அன்போடு ஈகை அளித்தல், நோன்பு இருத்தல், ஹஜ் என்னும் புனிதப் பயணம் மேற்கொள்ளுதல் ஆகிய ஐந்தும் இசுலாமியர்களின் கட்டாயக் கடமைகளாகும் என்ற கருத்தை வழங்குகிறது.

4.2.4 நபியின் பெருமை அராபிய நாட்டின் மக்காவில் ஆமீனாவிற்கும், அப்துல்லாவிற்கும் முகம்மது நபி பிறந்தார். நபிகள் நாயகத்தின் பிறப்பை உமறுப் புலவர், மக்கள் குலம் ஈடேற வழிகாட்டியாகப் பிறந்தார் என்கிறார்.

● பிறப்பின் சிறப்பு

இவ்வுலகில் நபிகள் நாயகம் வெயிலிலே நிழலாகவும், பாவம் எனும் நோய்க்கு மருந்தாகவும், இசுலாமிய மார்க்கம் செழிக்க நல்ல மழையாகவும், மிகப்பெரிய உலகத்திற்கு ஒருமணி விளக்காகவும், குறைசிக் குலத்திற்கே சிறப்புத் தருபவராகவும் பிறந்தார். இதனை,

பானுவின் கதிரால் இடருறும் காலம்

படர்தரு தருநிழல் எனலாய்

ஈனமும் கொலையும் விளைத்திடும் பவநோய்

இடர்தவிர்த் திடும்அரு மருந்தாய்த்

தீனெனும் பயிர்க்கோர் செழுமழை எனலாய்

குறைஷியின் திலதமே எனலாய்

மானிலந் தனக்கோர் மணிவிளக்கு எனலாய்

முகம்மது நபிபிறந் தனரே

(நபி அவதாரப்படலம் – 257)

(பானு = ஞாயிறு; இடர் = துன்பம்; பவநோய் = பாவம் எனும் நோய்; ஈனம் = இழிவான செயல், தீன் = இசுலாமிய சமயம்; குறைஷி = அராபிய நாட்டு ஒரு குலத்தினர்; திலதம் = சிறப்பு)

என்று பாராட்டுகிறார் உமறுப் புலவர்.

● இருள் போக்கும் ஞாயிறு

ஞாயிறு, இறைவன் அளித்த விளக்கு. நபிகள் நாயகம் இறைவனால் அருட்கொடையாக அளிக்கப்பட்ட மணிவிளக்கு. ஞாயிறு தோன்றியதால் உலகின் இருள் ஒழிந்தது; ஒளிபிறந்தது. நபிகள் நாயகம் பிறந்ததால் அஞ்ஞானமும் துன்பமும் ஒழிந்தன; ஞானமும் இன்பமும் பிறந்தன என்று நபியின் பிறப்பில் சிறப்புக் காண்கிறார் புலவர். நாயகம் ஏன் பிறந்தார்கள்? அவர்களது பிறப்பால் அடையப் போகும் நன்மை யாது என்பனவற்றையும் மிக அழகாகக் கூறுகிறார்.

● இருள் போக்கும் முழுநிலவு

உலக நெறிமுறைகள் தவறிவிட்டன; மயக்கும் மதங்கள் மிக அதிகமாகி விட்டன; துறவறம் போலித் தன்மையாகி விட்டது; இல்லற வழிமுறைகள் அழிந்தன; எனவே விளக்கு இல்லாத வீடுபோல் உலகம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இவற்றிற்குக் காரணமான இசுலாம் அல்லாத தன்மையாகிய குபிர் என்னும் அஞ்ஞானத்தை நீக்கி, அறநெறியாகிய இசுலாத்தை விளக்கக் குற்றமில்லாத முழு நிலவு போல முகம்மது நபி பிறந்தார் எனப் பாடுகிறார். இவ்வாறு முகம்மது நபி பிறப்பினால் ஏற்பட்ட சிறப்பினை முதலில் குறிப்பிடுகிறார்.

இங்ஙனமாகச் சீறாப் புராணத்தில் இசுலாமியத் திருத்தூதரான நபிகள் நாயகத்தின் பிறப்பின் உயர்வையும் பெருமையையும் அறியவைத்துள்ளார் உமறுப் புலவர்.

4.3 வருணனை

காப்பியத்திற்குத் தேவையான கூறுகளில் ஒன்று வருணனை. சீறாப் புராணத்திலும், பல்வேறு வகையான வருணனைகள் இடம் பெற்றுள்ளன. பெண் வருணனை, ஞாயிற்றின் தோற்றமும் மறைவும் பற்றிய வருணனை, இயற்கை வருணனை ஆகியவை அமைந்துள்ளன. காப்பிய ஆசிரியர்களின் வருணனைச் சிறப்புகளில் ஒன்று கேசாதி பாத வருணனை ஆகும். கேசம் என்றால் தலைமுடி என்று பொருள். பாதம் என்பது காலின் பாதத்தைக் குறிக்கும். தலைமுடி முதல் காலின் பாதம் வரை உள்ள உடல் உறுப்புகளை வருணிப்பதைக் கேசாதி பாத வருணனை என்பார்கள்.

● இசுலாமும் வருணனையும்

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு உடையவர்களாக இருந்த பெண் பாத்திரங்களை வருணிக்க முடியாது. இசுலாமிய வரம்பு இத்தகைய வருணனைக்குத் தடையாக அமைந்துள்ளது. எனவே உமறுப் புலவர் தன் தனித்திறனை நபிகள் காட்டிய அற்புதங்கள் ஒன்றினில் அமைத்துப் பாடுகிறார்.

4.3.1 பெண் வருணனை திமிஷ்கு நாட்டு மன்னன் ஹபீபு, தன்னுடன் ஒரு சதைக் கட்டியை எடுத்து வந்து, அதற்கு உயிர் கொடுத்து ஒரு பெண் உருவாக அமைக்கும்படி நபிகளிடம் கேட்டார்.

நபிகள் நாயகம் இறை ஆணைப்படி ஜம் ஜம் எனும் கிணற்று நீரைத் தெளித்து இறைவனை இரந்து வேண்டினார். தசைக்கட்டி பெண் உருவாக மாறியது. அதை உமறுப் புலவர் சிறப்பாகப் பாடியுள்ளார்.

● கண்ணின் செயல்கள்

நபிகள் நாயகம் தசைக் கட்டியிலிருந்து உருவாக்கிய பெண்ணின் கேசாதி பாத வருணனையினை உமறுப் புலவர் கண்ணியத்துடன் பாடியுள்ளார். அந்தப் பாடலில் கண்ணைப் பற்றி மிகவும் சிறப்பாக வருணனை செய்துள்ளார்.

மடற்குழை கிழித்துத் தடக்குழல் குழைத்து

வரியளி யினைச்சிறைப் படுத்திக்

கடற்குளம் தேறாது அலைதரச் செய்து

கணைஅயில் கடைபடக் கறுவி

விடத்தினை அரவப் படத்திடைப் படுத்தி

மீனினம் பயப்படத் தாழ்த்தித்

திடக்கதிர் வடிவாள் எனக்கொலை பழகிச்

சிவந்துஅரி படர்ந்தமை விழியாள்

(தசைக்கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம் – 20 : 1958)

(மடற்குழை = விரிந்த காது; கிழித்து = ஊடுருவி; தடக்குழல் = நீண்ட தலைமுடி; குழைத்து = தளர்ந்திடச் செய்து; வரியளியினை = கோடுகள் கொண்ட சிறகுகளை உடைய வண்டுகளை; தேறாது = தெளியாது; கணை = அம்பு; அயில் = வேல்; படக்கறுவி = சினந்து; விடம் = நஞ்சு; அரவப் படம் = பாம்பின் படம்; திடக்கதிர் = உறுதியும் ஒளியும்; அரிபடர்ந்த = செவ்வரி படர்ந்த)

தசையிலிருந்து உருவான பெண்ணின் கண்கள் அவளது காதுகளை ஊடுருவித் தாக்கின; தலைமுடியினைத் தாழ்வுறச் செய்தன; வண்டுகளைச் சிறைப்படுத்தின; கடல்களிலும் குளங்களிலும் அலையை வற்றச் செய்து; அம்பு, வேல் போன்ற கருவிகள் கோபத்தால் செயல்படாதவாறு செய்தன; நஞ்சினைப் பாம்பிடம் போக்கி, கெண்டை மீன் இனத்தை அஞ்சிடுமாறு தாழ்வுபடுத்தின; வாளை ஒப்பக் கொலைத் தொழிலைக் கற்றதாகி, சிவப்பு ஏறி வரிபடர்ந்த கண்களாயின என எந்த விதமான விரசமுமில்லாமல் இசுலாமியர்களின் மரபை மீறாமல் அதே நேரத்தில் காப்பிய நயமும் குன்றாத வகையில், மேற்குறிப்பிட்ட பாடலில் பெண்ணின் உறுப்புகளை வருணித்துப் பாடியுள்ளார் உமறுப் புலவர்.

● தனித்தன்மை

பொதுவாகப் பெண்களை வருணிப்பது இசுலாமிற்கு ஏற்புடையது இல்லை என்பதை உணர்ந்து, குறை சொல்லாதவாறு மிகவும் பக்குமாகப் பாடியமை உமறுப் புலவரின் தனித்தன்மையாகும்.

4.3.2 ஞாயிறு வருணனை நபிகள் நாயகம் பிறந்ததனால் என்ன என்ன நிகழ்ந்தன என்பதனைச் சீறாப் புராணத்தில் உமறுப் புலவர் மிகவும் சிறப்பாகக் கூறியுள்ளார்.

● ஞாயிற்றின் தோற்றம்

ஞாயிற்றின் தோற்றத்திற்கும் மறைவிற்கும் நபிகள் நாயகம் பிறந்ததை ஒப்பிட்டுக் கூறியுள்ளார். அதன் பயனாக அறியாமை என்னும் இருள் மறைந்தது; வறுமை என்னும் அந்தகாரம் அழிந்தது. இதனை அறிந்த ஞாயிறு என்னும் பகலவன் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தான்; மகிழ்ச்சி எனும் கடலிலே மூழ்கினான். இவ்வாறு கடலில் குளித்து மகிழ்ச்சி அடைந்து, இருளை அகற்றும் தன் கதிர்களைப் பரப்பிக் கொண்டு ஞாயிறு எழுந்தான். இதனை உமறுப் புலவர்,

தரையினில் பரந்தகுபிர் இருட் குலமும்

சாற்றிய கலிஇருட் குலமும்

வரைவிலாது ஒடுங்க முகம்மது நபிஇம்

மானிலத்து உதித்தனர் என்றே

கரையிலா உவகை ஆனந்த வெள்ளக்

கடலிடைக் குளித்துறக் களித்து

விரைவினில் திமிரக் கடற்பகை துறந்து

வெய்யவன் கதிர்கள் விட்டு எழுந்தான்

(நபிஅவதாரப் படலம், 108 (273)

(தரை = உலகம்; குபிர் = ஒன்று என்னும் இறைநெறி மறுப்பு; மானிலம் = உலகம்; உதித்தனர்= பிறந்தார்; உவகை = மகிழ்ச்சி; வெய்யவன் = சூரியன்; கதிர் = ஒளி)

என்று அழகு ஓவியமாகப் பாடியுள்ளார்.

மேலும் நபிகள் நாயகத்தைக் காண்பதில் பகலவன் (ஞாயிறு) மகிழ்வும் ஆனந்தமும் தூய்மையும் விரைவும் அடைந்ததாக உமறுப் புலவர் காட்டுகிறார்.

ஞாயிறு தோன்றியதைப் பாடிய உமறுப் புலவர், ஞாயிறு மறைந்ததையும் பாடியுள்ளார். அதை இங்கே காண்போம்:

● ஞாயிற்றின் மறைவு

அபூஜகில் என்பவன் நபிகள் நாயகத்தின் பகைவன். தீயகுணத்தை உடையவன். தீமைகள் செய்தே வாழ்பவன். அவன் ஒருநாள், ஆலயத்தினுள் சென்று தான் வழிபடும் தெய்வத்தின் முன் நின்றான். துரோகியான அவன் முகத்தைக் கூடப் பார்க்கக் கூடாது என எண்ணினான் பகலவன். கோபம் ஏற்பட்டது. உடனே ஓடி மறைந்தான் என்பதை,

எதிரி னின்றுதன் தேவ தைதனைப் புகழ்ந்து ஏத்திக்

கதிர்கொள் பொன்முடிக் கோயிலின் வாயிலைக் கடந்த

சதியன் தன்முகம் நோக்குதல் தவறுஎனச் சிவந்து

கொதிகொதித்து அழன்று அருக்கன்மேல் கடலிடை குதித்தான்

(கபீபு ராசா வரிசை வரவிடுத்த படலம்,  29:2002)

(தேவதை = குலதெய்வம்; கதிர்கொள் = ஒளியான; சதியன் = சதிகாரன் (அபூ ஜகில்); அருக்கன் = சூரியன்)

என்னும் பாடலில் உமறுப் புலவர் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

ஞாயிற்றிடம் காணப்படுகின்ற இயற்கையான சிவந்த நிறத்தையும், வெப்பத்தையும் தீயோன் அபூ ஜகிலின் செயலால் ஏற்பட்டவை என்று கூறுகிறார். மாலையில் மறையும் ஞாயிற்றின் இயற்கைச் செயலினைத் தீயோனைப் பார்த்ததால் நிகழ்ந்தது என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு காட்சிப் படுத்தியிருப்பது உமறுப் புலவரின் கற்பனை வளத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்து உள்ளது.

4.3.3 குறிஞ்சி நிலக்காட்சி ஞாயிற்றின் தோற்றம் மறைவு போன்ற இயற்கைக் காட்சிகளை வருணித்த உமறுப் புலவர் குறிஞ்சி நிலக் காட்சியையும் வருணித்துள்ளார்.

● குறத்தியர் பாடல்

குறிஞ்சி நிலத்தில் தினைப் பயிர்கள் உள்ளன. அவற்றின் இலைகள் நீண்டவை; அவற்றின் பளுவான கதிர்கள் காரணமாக அந்த இலைகள் வளைந்தன. குறத்தியர் மணம் தரும் பூக்களைத் தலை முடியில் சூடியுள்ளனர். தினைக் கதிர்களை உண்ணச் சிவந்த வாய் உடைய கிளிகள் வந்திருந்தன. கிளிகளை விரட்டக் கவண் கல்லைக் குறத்தியர் எறிந்தனர்; பாடினர். கிளிகளும் ‘கீச்’ என ஒலி எழுப்பின. இந்த இனிய ஓசைகள் பாடலாகக் கேட்டன. காட்டுப் பசுக்கள் அப்பாடலைக் கேட்டு உறங்கின. இத்தகைய வளமான மலைச்சாரலைப் போர் வீரர்கள் அடைந்தனர் என்பதனை உமறுப் புலவர்,

நீட்டுஇலை மிடறு சாய்த்த

நெடுங்கதிர் தினையின் சார்பில்

கோட்டலர் கமழும் கூந்தல்

குறத்தியர் கவண்கல் ஏந்திப்

பாட்டிசை மிழற்றும் செவ்வாய்ப்

பசுங்கிளி கடியும் ஓதை

கேட்டுஇனிது ஆமா துஞ்சும்

கிளைவரைச் சாரல் போந்தார்

(பதுறுப் படலம், 31:3382)

(நீட்டுஇலை = நீண்ட இலை; மிடறு = கழுத்து; சாய = வளைய; கோட்டலர் = மரக்கிளைகளில் பூத்த மலர்கள், வயிற்பூ, வாவிப்பூ, அயற்பூ எனப் பிரிப்பர்; கமழும் = மணக்கும்; கவண்கல் = பொடிக்கற்களை வைத்துச் சுழற்றி எறிவதற்காக இரு பக்கங்களிலும் நீண்ட சிறு கயிறு கட்டப்பெற்ற சிறியதான தொட்டில்; கூந்தல் = தலைமுடி; மிழற்றும் = பாடும்; கடியும் = விரட்டி ஓட்டும்; ஓதை = ஒலி; துஞ்சும் = தூங்கும்; ஆமா = காட்டு மாடு; கிளை = கன்றுகள்; வரை = மலை; சாரல் = அடிவாரம்)

என்று பாடியுள்ளார்.

4.4 சமயப்பொறை

இசுலாமிய சமயத் தத்துவங்களையும் நெறிமுறைகளையும் காப்பியத்தில் சொல்வதோடு நின்றுவிடாமல் வாய்ப்பு வரும்போதெல்லாம் சமயப்பொறையுடன் பொதுவான கருத்துகளையும் உமறுப் புலவர் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

4.4.1 பிற சமயத் தெய்வங்கள் பொதுவாகச் சமயச் சார்பான காப்பியங்களெல்லாம் அந்த அந்தச் சமயத்தைச் சார்ந்த தெய்வங்களைப் பற்றிப் பாடும். ஆனால் உமறுப் புலவர் பிற சமயத் தெய்வங்களைப் பற்றியும் பாடியுள்ளார். எடுத்துக்காட்டாக இலட்சுமியையும் காளியையும் கூட இசுலாமியத் தமிழ்க் காப்பியத்தில் இடம்பெறச் செய்துள்ளார்.

● இலட்சுமியும் செல்வமும்

நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையார் கொடை அளிப்பதில் மேகம் போன்றவர். வீரமும் கல்வியும் வெற்றியும் மிக்கவர். செல்வம் பொருந்தியிருக்கும் அவரது வீட்டில் செல்வ நாயகியான இலட்சுமி பெருமையோடு அமர்ந்திருக்கிறாள்

………………………………………………………………………..வனசத்து

இலகு செல்வியும் இவர்மனை முன்றில்வீற் றிருந்தாள்

(புகைறா கண்ட படலம் – 2 (540)

(வனசத்து இலகு செல்வி = தாமரையில் இருக்கும் இலட்சுமி; முன்றில்= வீடு)

எனப் பாடுகிறார்.

4.5 தமிழ் மரபு

சீறாப் புராணத்தில் தமிழ்ப் பண்பாடு விளக்கப்பட்டுள்ளது. இசுலாமிய மரபுகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. நானில வருணனையும், பாலை நில வருணனையும் காணப்படுகின்றன. போர்க்களக் காட்சிகள் தமிழகத்துப் போர்களோ எனக் கருதுமாறு பாடப்பெற்றுள்ளன. இயற்கை கடந்த நிகழ்ச்சிகள் மிகுதியாக உள்ளன. கற்பனைகளும் அணிகளும் நிறைந்து விளங்குகின்றன.

● இரு பண்பாட்டின் பாலம்

உமறுப் புலவர் கம்பராமாயணத்தில் நல்ல புலமையும் ஈடுபாடும் கொண்டவர். சீவக சிந்தாமணியையும் நன்கு கற்றவர். இத்தகைய பின்புலத்தில் இசுலாம், தமிழ் ஆகிய இருபெரும் பண்பாடுகளையும் இணைத்து அழியாக் காப்பியம் பாடிய பெருமை உமறுப் புலவருக்கே உரியது. இரண்டு பண்பாடுகளைக் கலந்து பாடினாலும் இரண்டுமே தம் தம் தனித்தன்மையை இழந்து விடாதபடி பாடியிருப்பது மற்றொரு சிறப்பு. இவ்வாறு சீறாப் புராணத்தில் சிறப்பும் தனித்தன்மையும் பொருந்தி அமைந்துள்ளன.

● கடவுள் வாழ்த்து

தமிழ்ப் புலவர்கள் காப்புப் பாடல் பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உருவமற்ற ஓர் இறைக்கோட்பாடு இசுலாமியத்தின் அடிப்படை. இறைவனைப் போற்றுதல், முகம்மது நபி, பிற மதிப்பிற்குரிய சான்றோர்கள் ஆகியோரைப் போற்றுதல் என்னும் மரபில் தனித்தனியாக 17 பாடல்களில் கடவுள் வாழ்த்தை உமறுப் புலவர் பாடியுள்ளார்.

4.5.1 தமிழ் மரபும் காளி வழிபாடும் பாலை நிலத்தைப் பாடும்போது காளியின் சித்திரத்தினைக் கண்முன் கொண்டு நிறுத்துகிறார். காளியைப் பாலை நிலத்துக்குரிய கடவுளாகவும் பேய்களை அவளுடைய படைகளாகவும் பாடுவது தமிழ் மரபு. இதனையே உமறுப் புலவர்,

மூஇலை நெடுவேல் காளிவீற் றிருப்ப

முறைமுறை நெட்டுடல் கரும்பேய்

ஏவல்செய் துஉறைவது அலதுமா னிடர்கால்

இடுவதற்கு அரிது …

(சுரத்தில் புனல் அழைத்த படலம் – 8  (687)

என்று பாடுகிறார்.

இந்தப் பாடலில் தமிழ்நாட்டில் கொற்றவை என்று போற்றி வணங்கப்படும் காளியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் காண முடிகிறது.

4.5.2 தமிழ் மரபும் போரும் சீறாப் புராணத்தில் தமிழ்நாட்டுப் போர்க் கருவிகளையே சொல்லிப் போரைக் காட்டுகிறார் உமறுப் புலவர். பதுறுப் படலத்தில்,

பரிசைகே டகம்வாள் சொட்டை

பட்டயம் சுரிகை தண்டம்

எரிசெய்வேல் சவளம் குந்தம்

இடுசரத் தூணி வல்வில்

வரிசையில் நிரையும் ஏந்தும்

வயவரும் பரியும் மற்றும்

விரல்இட மின்றி எங்கும்

நெருங்கின படையின் வெள்ளம்

(பதுறுப் படலம் – 24 (3375)

(பரிசை = கவண்கல் போன்றவற்றைத் தடுப்பதற்குரிய தட்டி; கேடகம் = வாள் முதலியவற்றைத் தடுப்பது; பட்டயம் = பட்டாக்கத்தி; சரிகை = சூரிக் கத்தி; சவளம் = ஈட்டி; குந்தம் = குந்தளம்; இடுசரத் தூணி = அம்புகள் நிறைந்த கூடு; வயவர் = வீரர்;  பரி = குதிரை)

எனப் பரிசை, கேடகம், வாள், சொட்டை, பட்டயம், சுரிகை, தண்டம், வேல், சவளம், குந்தம், சரத்தூணி, வில் முதலிய தமிழ்நாட்டுப் படைக்கருவிகளைப் பட்டியலிட்டுள்ளார்.

● வீரனின் ஆயுதம்

வாளை இழந்த வீரனைத் தாக்கினான் மற்றொரு வீரன். வாளால் அவன் கையை வெட்டி வீழ்த்தினான். வெட்டுண்டு விழுந்த தனது கையை எடுத்தான். அதையே ஆயுதமாகக் கொண்டு தன்னை வெட்டிய வீரனை அடித்து வீழ்த்தினான் என்று உமறுப் புலவர் பதறுப் படலத்தில் பாடியுள்ளார்.

வெற்றி வாள்கணை பொருதுஅழிந்

திடலும்வெம் சினத்தின்

முற்றி நின்றனன் கண்டு ஒரு

திறலவன் முன்னி

இற்று வீழ்ந்திடத் தோளினை

வாளினால் எறிந்தான்

அற்ற தோள்எடுத்து அவன்தனைச்

சிதைத்தனன் அவனே

(பதுறுப் படலம் – 146  (3497)

(கணை = அம்பு; பொருது = போரிட்டதால்; வெம்சினம் = கடுமையான கோபம்; திறலவன் = வீரன்; முன்னி = நெருங்கி; இற்று வீழ்ந்திட = துண்டித்து வீழ்ந்திடுமாறு)

இவ்வாறு கை வெட்டப்பட்ட வீரர்களின் வீரச் செயல்கள் பற்றி உரைக்கிறார் உமறுப் புலவர்.

4.6 சின்ன சீறா

உமறுப் புலவர் இயற்றிய சீறாப்புராணம் முழுமை பெறவில்லை. இக்குறையை நிறைவு செய்ய ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றியதே சின்ன சீறா.

● ஆசிரியர்

இது பனீ அகமது மரைக்காயர் என்பவரால் பாடப்பெற்றது.

● அமைப்பு

இதைச் சீறாப் புராணத்தின் தொடர்ச்சியாக 30 படலங்களில் 1823 பாடல்களில் பாடி முடித்துள்ளார். சின்ன சீறாவில் உள்ள பாடல்கள் விருத்தப் பாவில் அமைந்துள்ளன.

4.6.1 உள்ளடக்கம் இந்நூல் நபிகள் நாயகத்தின் கடைசி ஆறு ஆண்டுகள் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பாடுகிறது. உமறுப் புலவர் தமது சீறாப் புராணத்தில் எழுதி முடிக்காத பகுதியைப் பனீ அகமது மரைக்காயர் எழுதி இதன் மூலம் நிறைவு செய்துள்ளார்.

நபிகள் நாயகம் ஒன்பது பிற நாட்டு மன்னர்களோடு கொண்ட கடிதத் தொடர்பைப் பற்றியும், அவர்களை இசுலாத்தில் சேர அழைத்ததைப் பற்றியும் சின்ன சீறாவில் காணலாம். கைபர், ஹுனைன், தபூக் முதலான போர்களையும், மக்காவின் வெற்றியையும், மக்கா வெற்றிக்குப் பிறகு அரபுநாடு அனைத்தும் இசுலாமியத்தில் இணைந்ததையும் பனீஅகமது மரைக்காயர் பாடியுள்ளார். நபிகள் நாயகம் இறையடி சேர்ந்ததுடன் சின்ன சீறா நிறைவு பெறுகிறது.

தமிழ்க் காப்பியங்களில் புலவர் பெருமக்கள் நாடு, நகரம், அவதாரம் போன்ற படலங்களைக் கற்பனை மிகுந்த பாடல்கள் பாடி அழகுபடுத்துவர். சின்ன சீறாவில் புலவருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே காப்பியத்தின் இடையில் ஆங்காங்கே சில இடங்களில் கற்பனை நயம் தோன்றுமாறு பாடியுள்ளார்.

4.7.1 அன்னத்தின் மயக்கம் நபிகள் நாயகம் அரசாண்ட மதீனா நகரில், தாமரை மலர் நிறைந்த குளங்கள் இருந்தன. அக்குளங்களைச் சூழ்ந்திருந்த வண்டலில் முத்துகள் அதிகமாக இருந்தன. பசுமையான கொண்டையைத் தலையில் கொண்ட அன்னம், இந்த முத்துக் கூட்டத்தை முட்டைகளோ என எண்ணியது. அவற்றினை அணைத்துத் தூங்கியது. இக்கற்பனையினை,

கருமுகை வெள்வாய்ப் பீலிக்

கம்புகால் ஊன்றி ஊர்ந்து

மருமலி கமல வாவி

வண்டலில் உயிர்த்த முத்தைப்

பொருவரும் பசிய சூட்டுப்

பொற்புறும் எகினம் அண்டத்

திரளென அணைத்து உறங்கும்

செறிவள மதீனாத் தன்னில்

(சின்ன சீறா; நூம் கிறக்கிலுக்கு

நிருபம் அனுப்பின படலம் : 2)

(முகை = மொட்டு; கமல வாவி = தாமரைக் குளம்; எகினம் = அன்னம்; பீலி = நத்தை; கம்பு = சங்கு; மரு = மணம்; பசிய சூட்டு = பச்சைக் கொண்டை; அண்டம் = முட்டை)

என்னும் பாடலில் எடுத்துரைக்கிறார்.

4.7.2 நானில மக்கள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் ஆகிய நான்கு நிலங்களில் வாழும் மக்களையும், அவர்தம் தொழில்களையும் பின்வருமாறு பனீ அகமது மரைக்காயர் பாடுகிறார்:

குறிஞ்சியில் வாழ்ந்தோர் குறவர். கொடுமை தரும் மறவர் பாலையில் வாழ்ந்தனர். இடையர் (பொதுவர்) பசுமாடுகளையும் எருமைகளையும் எப்பொழுதும் வைத்திருப்பார்கள். முல்லையில் அவர்கள் வாழ்ந்தனர். வெறி ஊட்டும் மது உண்டு களித்திருக்கும் மள்ளர் மருத நிலத்தைச் சார்ந்தவர் என்பது கருத்தாகும். இதனைப்

பறிதலைக் குறவர் வைகும்

பருப்பதக் கடறும் வெய்ய

மறவர்வாழ் பாலைக் காடும்

மறிஉடைப் பொதுவர் செங்கண்

நெறிமருப்பு எருமை ஆன்ஆ

நிதம்பயில் முல்லைக் காடும்

வெறிமது அருந்தும் மள்ளர்

விளைத்தசொல் பழனக் காடும்

(சுதாம் படலம் : 45)

(பருப்பதக் கடறு = கல்லும் முள்ளும் நிறைந்த மலைப்பகுதி; பொதுவர் = ஆயர்; நெறி மருப்பு = வளைந்த கொம்பு; ஆன், ஆ = காளை, பசு; மள்ளர் = மருத நிலத்து மக்கள்)

என நான்கு நில வகை மக்களைக் கூறிப் பாடுகிறார்.

4.7.3 கடலும் பெண்ணும் அலை ஆடும் கடலை நடனம் ஆடும் ஒரு பெண்ணாக உருவகம் செய்துள்ளார் பனீஅகமது மரைக்காயர். முத்துகள் அந்தப் பெண்ணின் பற்களாம்; செந்தாமரை மொட்டுகள் அவளது மார்பகங்களாம்; பாசிக் கொத்துகள் அவளது கூந்தலாம்; சிவந்த பவளக் கொடிகள் அவளது விரல்களாம்; சங்கு அவளது கழுத்தாம்; அலைகள் அவள் கைகளாம்; காற்று அவள் கால்களாம். புலவரின் இந்த உருவகத் திறன் சிறப்பாக அமைந்துள்ளது.

முத்துஎனும் எயிறும் செந்தா

மரைமுகை முலையும் பாசிக்

கொத்தெனும் குழலும் துப்பின்

கொடியெனும் விரலும் பேழ்வாய்

நத்துஎனும் களமும் கொண்ட

நளிர்கடல் என்னும் மாது

சித்திரத் திரைக்கை காட்டிக்

காலினால் நடனம் செய்தாள்

(அபசி நஜாசா ராஜாவுக்கு நிருபம்

அனுப்பின படலம் : 36)

(எயிறு = பல்; முகை = மொட்டு; குழல் = கூந்தல்; துப்பு = பவளம்; களம் = கழுத்து)

இந்தப் பாடலில் கடலில் உள்ள பொருள்களைப் பெண்ணின் உறுப்புகளாக உருவகம் செய்து பாடியிருப்பது கவிஞரின் கவிதைத் திறமையை வெளிப்படுத்துகிறது. அலையைக் கடலின் கையாகவும், காற்றைக் காலாகவும் காட்டிப் பெண் நடனம் செய்வதாகப் பாடும் புலவரின் கவிநயமும் சிறப்பாக உள்ளது.

4.8 தொகுப்புரை

இசுலாமிய இரட்டைக் காப்பியங்கள் என்று போற்றப்படும் சிறப்புக்கு உரியவை சீறாப் புராணமும், சின்ன சீறாவும் ஆகும். சீறாப் புராணத்தை உமறுப் புலவரும், சின்ன சீறாவைப் பனீ அகமது மரைக்காயரும் பாடியுள்ளனர்.

சீறாப்புராணம், நபிகள் நாயகத்தின் ஐம்பத்தேழு வயதுவரை உள்ள வரலாற்றைத் தெரிவிக்கிறது. சீறாப் புராணம் முடிந்த இடத்திலிருந்து நபிகள் நாயகத்தின் இறப்பு வரையிலான 63 வயது வரையுள்ள வரலாற்றைச் சின்ன சீறா தெரிவிக்கிறது.

இரண்டு காப்பியங்களும் இசுலாமியத் தன்மைக்கு உட்பட்டு, வருணனைகளையும் இலக்கிய நயங்களையும் கொண்டுள்ளன.

பாடம் - 5

முற்கால இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள்

5.0 பாட முன்னுரை

இசுலாமிய அடிப்படையில் தோன்றிய காப்பியங்களில் இரட்டைக் காப்பியங்கள் என்ற தலைப்பில் புகழ்பெற்ற சீறாப்புராணம், அதன் தொடரான சின்ன சீறா ஆகிய இரண்டைப் பற்றியும் முன்பாடத்தில் படித்தோம். இவை தவிர, பிற இசுலாமியக் காப்பியங்களும் சிறு காப்பியங்களும் இருபத்தாறு எனக் கணக்கிடுகின்றனர். இவற்றுள் முதல் மூத்த காப்பியம் கனகாபிசேக மாலை. அதன்பின் கி.பி. 1807 முதல் கி.பி.1821 வரையுள்ள காலக்கட்டத்தில் தோன்றிய ஒன்பது காப்பியங்களில் வண்ணக் களஞ்சியப் புலவர் இயற்றியவை மூன்று காப்பியங்கள். அவை: (i) இராஜ நாயகம் (ii) குத்பு நாயகம் (iii) தீன்விளக்கம் ஆகியவையாகும். இவை பற்றிய செய்திகளை இப்பாடத்தில் காண்போம்.

5.1 கனகாபிசேக மாலை

இசுலாமிய அடிப்படையில் முஸ்லீம் புலவர்களால் பாடப்பெற்ற தமிழ்க் காப்பியங்களுள் காலத்தால் மூத்தது கனகாபிசேக மாலை.

5.1.1 ஆசிரியர் இதனைப் பாடியவர் செய்கு நயினார் கான். இவர் முகவை மாவட்டத்தில் இராஜகம்பீரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். கவிச்சக்ரவர்த்திகளுக்கு எல்லாம் பொன் போன்றவர் எனப் பொருள்படும் கனகக் கவிராயர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். அப்பெயர் பின்னர் கன கவிராயர் எனச் சுருக்கம் பெற்றது.

5.1.2 பெயர்க் காரணம் கனகம் + அபிசேகமாலை என்பதன் பொருள், பொன் + புனிதமாக்குதல் என்பதாகும். ஓர் அரசனுக்கு முடிசூட்டும் பொழுது அவனைக் குளிக்கவைத்தல், பொன்னால் குளிப்பாட்டுதல் எனப் பொருள்படும். இக்காப்பியத்தில் எட்டு மன்னர்கள் ஒருவர்பின் ஒருவராக ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்றனர். எனவே முடிசூட்டப்படுதல் என்னும் செய்திகள் ஒரு மாலையாகப் பாடப்படுகின்றன என்பதால் இப்பெயர் பொருந்துகிறது. எட்டு மன்னர்கள் 1) முகம்மது நபி (2) அபூபக்கர் (3) உமறு (4) உதுமான் (5) அலி (6) ஹஸன் (7) ஹுஸைன் (8) செயினுலாபிதீன் ஆகியோர் ஆவர்.

இக் காப்பியம் நான்கு பரம்பரையின் வரலாற்றுக் கதையைக் கூறுகின்றது.

5.1.3 காப்பிய அமைப்பும் சிறப்பும் இக் காப்பியத்தில் காண்டம், சருக்கம் என்னும் பகுப்புகள் இல்லை. 35 படலங்களில் 2791 பாடல்கள் உள்ளன. பிற இசுலாமியக் காப்பியங்களில் இடம்பெறாத நூற்பயன் கூறும் முறை இதில் காணப்படுகிறது. 38 செய்யுட்களைக் கொண்ட பதிகப் படலமும் அமைந்துள்ளது. பின்னர் நாட்டுப் படலம், நகரப் படலம் ஆகிய படலங்கள் இடம் பெற்றுள்ளன. பதிகப் படலம் வருபொருள் உரைத்தலாக அமைந்திருக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள சக்ருவான் என்பவளின் சுயம்வரம் பிற இசுலாமியக் காப்பியங்களில் இல்லை.

5.2 காப்பியச் செய்திகள்

நபிபெருமான், வானவர் தலைவர் ஜிபுறாயிலுடன் உரையாடுகின்ற காட்சியிலிருந்து கதை தொடங்குகின்றது. பெருமானாரின் பேரர்களுக்கு (ஹசன், உசைன்) எதிர்காலத்தில் நிகழப்போகும் துன்ப நிகழ்ச்சியை வானவர் தலைவர் கூறினார். அதுவே ஆர்வ நிலையைத் தூண்டுவதாக அமைகிறது. உசைனாரின் (நபி பேரர்) வரலாறும், கர்பலா என்னுமிடத்தில் நடந்த படுகொலையும் கனகாபிசேக மாலையின் பாடுபொருள்கள். உசைனார் படுகொலைக்குப்பின் எதிராளிகள் அழிக்கப்பட்டனர். அன்னாரின் மகனான செயினுலாபீதீன், அரசுப் பதவி ஏற்கிறார். பின்னர் இன்பியல் காப்பியமாக முடிவுறுகிறது.

5.2.1 நபிகள் நாயகத்தின் மறைவு முகம்மது நபிகள் அவர்களின் மறைவு அறிந்து நாடு துன்பத்தில் மூழ்கியது. இதனைப் பல பாடல்களில் வருணித்துள்ளார் கவிஞர். வான் இரங்கி அழுதது. வானோர் இரங்கி அழுதனர். சந்திரன், சூரியன், நட்சத்திரம் ஆகியவையும் இரங்கி அழுதன. நெருப்பு இரங்கி அழுதது. காற்று இரங்கி அழுதது. பூமி கரைந்து இரங்கி அழுதது. பொழுது இரங்கி அழுதது. உணவு வகைகள் இரங்கி அழுதன. எல்லாமே திகைத்து அழுதன. உலகில் உள்ள உயிருள்ளவை உயிரற்றவை எல்லாமே இரங்கி அழுதன. இஸ்லாமிய மார்க்கமே அழுதது என்பதை,

வான்இரங்க வானோர்

மதிபானு உடுஇரங்க

வான்இரங்க வாரி

யயர்ந்துத்தீ இரங்கக்

கான்இரங்கப் பூமி கரைந்து

இரங்கப் போதி இரங்கத்

தீன்இரங்க யாவும் திகைத்து

இரங்கியே அழுத

(முதன் முறைப் படலம் – 152 (264)

(வான் = வானம்; வானோர் = வானவர்கள்; மதி = சந்திரன்; பானு = சூரியன்; உடு = நட்சத்திரம்; கான் = காற்று; போதி = பொழுது; தீன் = உணவு, இஸ்லாமிய மார்க்கம்)

எனப் பாடியுள்ளார்.

படைப்பினங்களுக்குக் காரணம் முகம்மது என்ற கருத்தை வெளிப்படுத்துவதற்காகவே நபிகள் நாயகத்தின் மறைவால் படைப்பினங்கள் எல்லாமே இரங்கி அழுதன எனப் பாடினார்.

5.2.2 மன்னனின் கடமை உணர்வு ஆட்சியில் உள்ள அரசன், தாய் போன்று தன் மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை உடையவன் ஆவான். இதனைப் புலவர்,

தோயம்மா உவரி சூழ்ந்த

வசுமதி உறுவோ ரியார்க்கும்

தாய்என இருந்து காக்கும்

தகுதியே மன்னர்க் காகும்

(உதுமான் வதைப் படலம் – 85  (982)

(தோயம் = நீர்; உவரி = கடல்; வசுமதி = வசுதை, பூமி)

என்று பாடுகிறார்.

கடலால் சூழப்பட்ட உலகில் வாழ்கின்றவர்களுக்கு அவர்களுடைய மன்னன், தாய் போல் பணிபுரிந்து பாதுகாக்க வேண்டும்; சுயநலம் மறந்து, தன் பிள்ளைகளின் நலமே தன்னலம் என வாழ்கின்ற தாய் போன்று அரசன் தன் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது இப்பாடலின் பொருள்.

5.2.3 திருக்குறள் ஈடுபாடு திருக்குறள் கருத்துகள் கனகாபிசேக மாலையில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, கைசர் நாட்டை உமறு கத்தாபின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்து வரும் மகதி என்பாரின் செங்கோன்மையைப் பற்றிக் கூறும்போது, இறை மாட்சி அதிகாரக் கருத்துகளை அமைத்துப் பாடுகிறார்.

படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு முதலியவற்றைப் பாதுகாப்பு (அரண்) ஆகக் கொண்டு, கடுஞ்சொல் கூறாது காட்சிக்கு எளியவராய், மகதி என்பவர் துன்பமில்லாதவாறு நேர்மையான ஆட்சி செய்தார். மேலும் தன் வெண்கொற்றக் குடையின் கீழ் சிறிதும் கோல் கோடாமல் ஆட்சி செய்து பாதுகாத்தார். இதனை,

படைகுடி கூழமைச்சு நட்பு

அரண் படைத்தியாதுங்

கடுமொழி இலராய்க் காட்சிக்கு

எளியராய்க் கைசறுள்ளார்

இடறிலராகி ஓங்கல் எவர்க்குமே

சரியாய்த் தன்சீர்

குடையினால் நிழற்றிச் செங்கோல்

சிறிதுங் கோடாது காத்தார்

(மகதியரசியற் படலம் – 26  (541)

என்று குறிப்பிடுகிறார். இதில் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பவை பற்றிக் கூறும் வள்ளுவரின் திருக்குறள் செல்வாக்கைக் காணலாம்.

5.3 இராஜ நாயகம்

இசுலாமியக் காப்பிய வரலாற்றில் இராஜநாயகம் எனும் காப்பியத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. இவ்வரலாறு விவிலியத்தில் (BIBLE) இடம் பெற்றுள்ள தாவீதையும் சாலோமனையும் பற்றிக் கூறுகிறது.

5.3.1 ஆசிரியர் இக்காப்பியத்தைப் பாடியவர் முகம்மது இப்ராகீம் புலவர். இவர் வண்ணம் பாடுவதில் வல்லவர். ஆதலால் வண்ணக்களஞ்சியப் புலவர் என்னும் பட்டப் பெயரால் அழைக்கப் பெற்றார்.

இவர் இராமநாதபுர மாவட்டம் முதுகுளத்தூரின் பக்கத்திலுள்ள சிற்றூராகிய மீசலில் பிறந்தார். பின்னர் மதுரையில் வாழ்ந்தார்.

மதுரையில் அமைந்த ஆதீன மடத்தின் தலைவரிடம் தமிழ், வடமொழி ஆகியவற்றைக் கற்றார்.

தஞ்சையை ஆண்ட அரசர் இவரது சிறப்பு அறிந்து, சிங்கமுகப் பொற்சிவிகை பரிசளித்தார் எனக் குறிப்பிடுகின்றனர்.

இராமநாதபுர இராசசிங்க மங்கலத்தின் பக்கத்திலுள்ள தும்பட்டிகா என்ற கோட்டையில் இறந்தார்.

வண்ணக் களஞ்சியப் புலவர் ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும், பரந்த கல்வி ஞானமும், அசையாத சமயப் பற்றும், கற்பனை வளமும் பெற்றிருந்தார். அந்தப் புலமைகளை இராஜநாயகத்தில் உரிய இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.

5.3.2 பெயர்க் காரணம் நாயகம் என்றால் தலைவன் என்று பொருள். எனவே இராஜநாயகம் என்றால் அரசர்களுக்குத் தலைவன் என்பது பொருள். அரசர்களுக்கு அரசராகத் திகழ்ந்தவர் சுலைமான் நபி. எல்லா நபிமார்களுள்ளும் தலைவராகத் திகழ்பவர் நபி சுலைமான் ஆவர். எனவே இராசாக்களுக்கும் தலைவர் என்னும் பொருளில் இராஜநாயகம் எனப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

5.3.3 நூல் அமைப்பு இது, நாற்பத்தாறு படலங்களையும் 2240 செய்யுட்களையும் உடையது. இதில் காண்டப் பிரிவு இல்லை. காப்பிய இலக்கணங்கள் அனைத்தும் முழுமை பெற்று, பொருளாலும் அமைப்பாலும் சிறந்து விளங்கும் பெருங்காப்பியம் ஆகும்.

● திருக்குர்ஆனும் விவிலியமும்

விவிலியத்தில் இடம் பெற்றுள்ள பல பெயர்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. அவை சிறு மாற்றங்களுடன் இடம் பெற்றுள்ளன. விவிலியத்தில் இடம் பெற்றுள்ள சாலோமோன், தாவீது என்னும் இரு பெயர்களும் திருக்குர்ஆனில் முறையே சுலைமான் நபி, தாவூது நபி என அழைக்கப் பெற்றுள்ளன. விவிலியம் ஹிப்ரூ மொழியில் எழுதப்பட்டது. திருக்குர்ஆன் அரபி மொழியில் எழுதப்பட்டது. எனவே இரு மொழிகளின் ஒலி மாறுபாட்டிற்கு ஏற்ப, பெயர்களை ஒலித்தலில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டன. எனவே விவிலியத்தில் தாவீது எனவும், திருக்குர்ஆனில் தாவூது எனவும் கூறப்பட்டது.

● விவிலியக் கதைகள்

அறிவுள்ள சாலமனும் ஷீபாவும், தாவீதும் கோலியாத்தும் போன்ற கதைகள் எல்லாம் மக்களிடையே மிகவும் அறிமுகமானவை என்பதை அறிவீர்கள்.

திருக்குர்ஆனில் கூறப்படும் தாவூது நபி, சுலைமான் நபி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது இராஜநாயகம்.

5.4 இயற்கை வருணனை

காப்பியங்களில் இயற்கை வருணனைகள் இடம் பெறுவது இயல்பு. இயற்கை இனிமையானது; இன்பந்தருவது. வருணனைகளில் அணிகளை அமைத்துப் பாடுவர் கவிஞர். வண்ணக்களஞ்சியப் புலவர் உவமையும் உருவகமும் கலந்து இயற்கை வருணனையைப் பாடுகிறார்.

5.4.1 சோலையும் மன்னனும் சுலைமான் நபி ஒரு சோலைக்கு வந்தார். அந்தச் சோலையை ஒரு சிறு மன்னனாகப் புலவர் உருவகப்படுத்துகிறார். பெரிய மன்னரான, இராஜ நாயகரான சுலைமான் நபி, அச்சோலைக்கு வருவதால் சோலையான சிறு மன்னன் தனது வரியைச் (Tax) செலுத்துவதாகப் பாடுகிறார்.

சுலைமான் நபி காலடியில் மகிழ மலர்கள் உதிர்கின்றன. அவை, அந்தச் சோலையாகிய சிற்றரசன் வரியாகச் செலுத்தும் பட்டை தீட்டிய பதுமராக மாணிக்கக் கற்களாகக் காட்சி தருகின்றன. புன்னை அரும்புகள் முத்துகளாகக் காட்சி அளிக்கின்றன. புலவரின் உருவகக் கற்பனை அழகாக அமைந்துள்ளது.

வரம்செய்வோன் நபிவரவு அறிந்து

எழில் பொழின் மன்னன்

திருந்து சாணை செய்பதும

ராகங்களைத் திறையாகப்

பொருந்தவே இடற்கு இணைதரு

மகிழலர் புன்னை

அரும்பு எலாந்தர ளங்களை

இடுவது ஒத்தருளும்

(எறும்புகள் விருந்திடு படலம் – 6)

(எழில் = அழகு; பொழில் = சோலை; சாணை = பட்டை தீட்டுதல்; திறை = வரி; பதுமராகம் = நவமணிகளில் ஒன்று; அரும்பு = பூக்கள்; தரளம் = முத்து)

என உவமையும் உருவகமும் இணைந்த இப்பாடல் மூலம் இயற்கை வருணிக்கப்படுகிறது. இவ்வாறு காப்பியத்தின் பல இடங்களில் இயற்கை வருணனை மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

5.4.2 பளிங்கும் கண்களும் உயர்ந்த நிலைமாடத்தில் (upstairs) பளிங்கினால் (marble) ஆகிய தளம் அமைக்கப்பட்டிருந்தது. அத் தளத்தில் பெண்கள் சிலர் நின்றிருந்தார்கள். அவர்கள் கண்களின் சாயல் பளிங்குத் தளத்தில் தெரிகிறது. அந்த ஒளிரும் கண்களின் தோற்றத்தை, குளத்தில் உள்ள மீன்கள் என நினைக்கிறது மீன்கொத்திப் பறவை. அப் பறவை அந்தரத்தில் வேகமாக வந்து பற்றக் கருதி, பளிங்குத் தரையில் மோதியது.

பொருது வெண்பளிங்குத் தளத்தில் நின்றிடில்அத்

தளம்குளிர் புனல்என நெடிய

கருவிழி இரண்டு கயல்எனத் தோன்றக்

கண்டுவந்து உடல்அசை யாது

விரிசிறை அசைத்துஅந்த ரத்தின்நின்று எழில்சேர்

மீன்எறி பறவைவீழ்ந் திடுமே

(நகரப் படலம் – 3 (13)

(கயல் = மீன்; சிறை = சிறகு; எழில் = அழகு; தளம் = தரை; புனல் = தண்ணீர்; விழி = கண்)

இவ்வாறு புலவரின் கற்பனைத் திறம் சிறப்புற அமைந்து வியப்பும் மகிழ்ச்சியும் அடையச் செய்கிறது.

5.5 குத்பு நாயகம்

கனகாபிசேக மாலைக்கு அடுத்த நிலையில் சிறந்த காப்பியமாகக் கருதப்படுவது குத்பு நாயகம் ஆகும்.

● பெயர்க் காரணம்

குத்பு என்னும் அரபுச் சொல்லின் பொருள் புனிதத் தன்மையிலே மிக உச்ச நிலை அடைந்தவர் என்பதாகும். குத்பு நாயகம் என்று அழைக்கப்படுபவர் முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ஆவார். இவரது வாழ்க்கை வரலாற்றினைப் பாடுவது குத்பு நாயகம் என்னும் காப்பியம்.

● ஆசிரியர்

இக்காப்பியத்தை இயற்றியவர் வண்ணக் களஞ்சியப் புலவர் என்னும் முகம்மது இப்ராகீம்.

● காப்பிய அமைப்பு

இக் காப்பியத்துள் காண்டப் பகுப்பு இல்லை. 39 படலங்கள், 1707 செய்யுட்களால் ஆனது. காப்பிய நாயகரின் மரபியல் படலம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

5.5.1 காப்பிய நாயகர் சிறப்பு முகியித்தீன் ஆண்டகையினைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட காப்பியங்கள் பல. ஒவ்வொருவரும் அப்பெரியாரின் வாழ்க்கையின் வெவ்வேறு சிறப்புகளை, தம்மைக் கவர்ந்த செய்திகளை, தத்தம் காப்பியங்களில் முக்கியத்துவம் கொடுத்து விரிவாகவும் சுருக்கமாகவும் பாடியுள்ளனர். இவர் இறை நேசச் செல்வர்களுக்கு எல்லாம் தலைசிறந்தவர் எனப் போற்றப்படுவார். இவரால் காதிரிய்யா தரீக்கா (தரீக்கா = நெறி/பாதை) என்ற சூபிச ஞானப் பாதை நிறுவப்பட்டது. இதனைப் பின்பற்றி ஒழுகுபவர்கள் உலகத்தின் பல பாகங்களிலும் உள்ளனர். இவர் முகம்மது நபியின் நேரடி வழித் தோன்றியவர் ஆவர்.

5.6 கவித்திறன்

காப்பியம் முழுவதிலும் கவிஞர் தனது கவித்திறனை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பழைய தமிழ் மரபையும் பின்பற்றியுள்ளார். உவமையையும் உருவகத்தையும் பயன்படுத்திக் காப்பியத்திற்குச் சிறப்புச் செய்துள்ளார்.

5.6.1 தமிழ் மரபு நாட்டுப் படலமும் நகரப் படலமும் (படலங்கள் 2, 3) தமிழ் நாட்டையும் தமிழ் நகரத்தையுமே காட்டுகின்றன. தமிழ் மரபு போற்றுவதிலும் புலவர் சிறந்து நிற்கிறார். கவிஞரின் கவிதையில் அரபு நாடு தமிழ் நாடு ஆகிறது.

● மருத நிலக் காட்சி

ஜெயிலான் நாட்டு மருத நிலத்தில், உழத்தியர் நாற்றினை நடுகின்றனர். முகத்தில் சேற்றுத் துளிகள் தெறித்தன. அப்போது உழத்தியர் எழுப்பிய இனிய குரவை ஒலி விண்ணை எட்டியது. அவ்வொலியைக் கேட்டு வானவர், வான் உலக மகளிர் ஆகியோர் வியப்பு அடைந்தனர். அவர்கள் உழவர் பெண்களைப் பார்த்தனர். அந்தப் பார்வையால் கண்ணேறு பட்டுவிடாதவாறு மதன் இட்ட திட்டிப் பொட்டாகச் சேற்றுத் துளிகள் விளங்கின எனத் தமிழ் நாட்டு மருத நிலக் காட்சியைப் புலவர் கற்பனைத் திறத்தோடு பின்வருமாறு பாடுகிறார்:

தேன்இனிது அருந்திக் களித்திரு விழியுஞ்

சிவப்புற நாற்றினை நடுவார்

கூனிய பிறைஒண் மதிநுதன் முகத்துங்

குயத்தினுஞ் சேதகந் தெறித்த

லான்இங்கு இவர்கள் குரவையின் ஒலியால்

அடைய அற்புதத்தொடு நோக்கும்

வானவர் மகளிர் விழியினே றணுகா

வகைமதன் இடுவது ஒத்திடுமே

(நாட்டுப் பாடலம் – 24 (64))

(தேன் = கள்; விழி = கண்; கூனிய பிறை = வளைந்த பிறை; மதி = சந்திரன்; நுதன் = நெற்றி; மதன் = மதனன்; குயம் = மார்பகம்; சேதகம் = சேறு)

பெண்கள் கை கோத்து ஆடும் கூத்து, குரவை இடுதல் (மகிழ்ச்சி ஒலி) எனக் கற்பனையுடன் அரபு நாட்டைத் தமிழ்நாடாக்கிப் பாடியுள்ள அழகு பலமுறை கற்று அனுபவிப்பதற்குரியது.

5.6.2 உவமை உருவகம் உவமையும் உருவகமும் அமைத்து, காப்பிய நாயகராம் நாயகம் முகியித்தீன், பகுதாது வந்த பொழுது அடைந்த நன்மைகளை விளக்குகிறார்.

ஒளி பொருந்திய மணி இருளை நீக்கும். முகியித்தீன் என்னும் மணி அறியாமை என்னும் இருளை நீக்கவே உலகில் தோன்றியுள்ளார். உடலிலே நோய் உள்ளது. அந்த நோயைத் தீர்க்க மருந்து உதவுகிறது. ஒரு மனிதனிடத்தில் இடம் பெற்றிருக்கும் பாவங்கள் நோய்க்குச் சமம். பாவம் செய்தோர் மீட்சி பெற்றால் சொர்க்கம் அடைவர். எனவே அப்பாவ நோய் தீர்க்கும் மருந்தாக நபிகள் நாயகத்தின் பேரர் குத்பு நாயகம் எனும் முகியித்தீன் தோன்றினார் என்னும் கருத்து அமைய,

வளஞ்செறி பகுதாது என்னும்

பதியில்வந் துற்றேன் என்றார்

உளஞ்செறி இருளை மாற்ற

உதித்துஒளிர் மணியாய் நாளும்

களஞ்செறி பவநோய் தீர்த்துக்

கதியின்பந் தரும்அரு மருந்தாய்

நளஞ்செறி புகழ்கள் ஓங்கு

நபியுல்லா பேரர் தாமே

(கல்வி நெறிப் படலம் – 40 (232)

எனப் பாடுகிறார்.

வண்ணக்களஞ்சியப் புலவர், கணவன் என்னும் சொல்லின் பெண்பாலாகக் கணவி (மனைவி) என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி ஆகும். தமிழ் இலக்கியத் திருமண மரபுகள் இசுலாமிய மரபுகளுக்கு உடன்படாதவை ஆயினும் புலவர் தமிழ் மரபு பேணுதலைக் காணலாம். பகுதாதில் நிகழ்ந்த ஒரு திருமண நிகழ்ச்சி தமிழ்நாட்டு விழாவாக வருணிக்கப்படுகிறது.

5.7 காப்பியச் செய்திகள்

காப்பியத்தில், மனிதர்களின் உணர்வுகளையும், அவற்றின் வெளிப்பாடுகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறார். மேலும், பிள்ளைச் செல்வத்தின் மேன்மை, ஒரு நாட்டின் ஆட்சியில் அமைச்சர் பெறும் சிறப்பிடம், மனிதனின் புனிதத் தன்மை ஆகியவை பற்றிய செய்திகளையும் காப்பியத்தில் கூறியுள்ளார்.

5.7.1 பெண்ணின் துடிப்பு கருப்பமுற்ற பெண்ணின் உடல் மாறுபடும். அவளது உள்ளப்போக்கு, பிள்ளை பெறும் நேரத்து வேதனை, இவற்றோடு உடலில் தோன்றிய மெய்ப்பாடுகள் ஆகியவற்றின் நுணுக்கங்களைப் (பாடல்கள் 1289 – 1297) பாடியுள்ளார்.

வாய் வெளுத்தது, மயக்கம் தோன்றியது, தூக்கத்தினால் கண்கள் அடிக்கடி மூடின, முகம் சோம்பலாக இருந்தது, எல்லா மணமும் குறிப்பாகக் கறி, பூ போன்றவற்றின் மணம் வெறுப்பூட்டியது. இவற்றினை,

வாய்இதழ் வெளுத்தன

மயக்கந் தோன்றின

தூயகண் சொருகின

முகமும் சோம்பின

காயன வாசமும்

கறியின் வாசமும்

மேய பூவாசமும்

வெறுப்ப தாயின

(இறந்து வந்து மணஞ்செய் படலம் – 12 (1290)

என கருப்பமுற்ற பெண்ணின் இயல்பினை எடுத்துரைக்கிறார்.

5.7.2 முதிய தாயின் தோற்றம் வயது முதிர்ந்த தாயின் முதுமைத் தோற்றம் மிக அற்புதமாக வருணிக்கப்படுகிறது. கண்கள் ஒளி மங்கின. நாணல் போன்ற கூந்தல் நரைத்து நரம்புகள் தெரிந்தன. வறட்சி பெற்ற உடல் கூனித் தள்ளாடினாள். தளர்ச்சியுற்ற நடையால் நடந்து வந்தாள் என்பதனை,

நகையறப் பெயர்ந்து விழிஒளி மழுங்கி

நாணல்போல் கூந்தல் நரைத்துத்

தொகையுற நரம்பு தெரிதர வறழ்ந்து

சுருதியும் அடைத்து உடல் கூனித்

தகுநடை அயர்ந்த விருத்தை வாய்புலம்பித்

தளர்ந்து தள்ளாடியே நடந்து

(அபாபக்கரில் கம்மாமிப் படலம் – 10 (447)

(வறழ்ந்து = உலர்ந்து; தகுநடை = தகுந்த நடை)

என வருணிக்கிறார். மேலும் அவள் இருமிக் கொண்டு, அடிக்கடி இளைப்பொடு களைத்துப் பெருமூச்சு விட்டாள் என்றும் பாடுகிறார்.

5.7.3 குன்ம நோயாளனின் துடிப்பு குன்ம நோயாளன் ஒருவன் வயிற்று வலியால் துடித்த காட்சியைப் புலவர் பாடுகிறார். அதில் நோய் உடையவன் துடித்த துடிப்புக் காட்டும் மெய்ப்பாடுகள் ஐந்து பாடல்களில் (1240 -1244) வருணிக்கப்படுகின்றன. குன்மந் தீர்த்த படலம் என அப்படலத்திற்குப் பெயரும் அமைத்தார் புலவர். ஈரல் பற்றி எரிவு கண்டு அவன் தன் கைகள் இரண்டினால் வயிற்றைப் பற்றி, வீழ்ந்து உருண்டான்; புரண்டான்; எழுந்தான்; விம்மினான்; கண்ணீர் சொரிந்தான்; அலறினான்; திகைத்தான்; சோர்ந்தான்; வெம்பினான்; நெருப்பில் விழுந்த புழுப்போல் துடித்தான் என்பதனை,

வாய்ந்த தங்கரம் இரண்டினும்

பற்றினர் வயிற்றை

வீழ்ந்து உருண்டனர் புரண்டனர்

எழுந்தனர் விம்மிச்

சேர்ந்த கண்ணினீர் சொரிந்தனர்

அலறினர் திகைத்தார்

சோர்ந்து வெம்பினர் நெருப்பினில்

கிரிமிபோல் துடித்தார்

(குன்மந் தீர்த்த படலம் – 23 (1241)

என, அவனது மெய்ப்பாடுகளை, நோய் வருத்தத்தால் பெற்ற துன்பங்களை எடுத்துரைக்கிறார்.

5.7.4 பிள்ளைச் செல்வம் குழந்தை இல்லாதவர் அதிகம் வருத்தம் அடைவார்கள். செல்வம் எவ்வளவுதான் இருந்தாலும் குழந்தை இல்லை என்பது ஒரு பெருங்குறை. கொள்ளை கொள்ளையாய்ச் செல்வம் இருந்தாலும் பிள்ளை இல்லை என்றால் அது பெரிய வறுமை ஆகும். பிள்ளை இல்லாத குறை என்பது, தேன் மலரைப் போன்ற அழகிய கண்ணின் கருமணியில் வெள்ளைப் புரை வளர்ந்தது போன்ற குறை ஆகும் என்று பாடுகிறார்:

பிள்ளையற்ற பெருஞ்செல்வம் எவ்விதக்

கொள்ளை உற்றிடினுங் குறையே அன்றோ

கள்ளையுற்ற மலர்க்கண் மணியில்ஓர்

வெள்ளையுற்றது போலும் விளங்கலே

(முகியித்தீன் இப்னி அறபி

உதித்து ஓங்கு படலம் – 33 (997)

(பிள்ளை = குழந்தை; கள் = தேன்; கண்மணி = கண்களில் உள்ள மணி)

மேலும் பிள்ளை இல்லாதவர் பெற்ற பெருஞ்செல்வம் மணமற்ற மலர் என்று குறிப்பிடுகிறார். வானத்தில் ஒளி வீசும் வெண்ணிலா மனிதர்கள் இல்லாத பூமியில் நிலவை வீசுவது பயனற்றது என்றும், அது பிள்ளையில்லாதார் பெற்ற செல்வம் போன்றது (பாடல்-999) என்றும் பாடுகிறார்.

மலடானவர் உண்ணும் உணவு வேம்பு போன்று கசப்பானது. கிருமியை (புழுக்களை)ச் சாப்பிடுவது போன்றதாகும் என்றும் பல உவமைகளால் ஒரு கருத்தை விளங்க வைக்கும் திறமையினைக் காணலாம்.

5.7.5 அமைச்சர் திருக்குறளில் அமைச்சு என்னும் அதிகாரத்தில் அமைச்சின் சிறந்த பண்புகளையும், அமைச்சரின் இன்றியமையாமையையும் குறிப்பிடுகின்றார் வள்ளுவர்.

ஓர் அரசனின் கடமை அறிவுரை கூறும் அமைச்சரைப் பாதுகாத்தல். அது உயிர் போன்ற கடமை ஆகும். அமைச்சரின் அறிவுரைகளை ஆராய்ந்து ஒழுகுதல் அரசன் கடமை ஆகும். அரசனை இடித்துரைக்கும் ஆற்றல் பெற்றவர் அமைச்சர். எனவே அமைச்சனின் ஆலோசனைகளைக் கேட்டு ஒழுகவேண்டும். இல்லையெனில் அரசும், செல்வமும் வேருடன் அரசனை விட்டு நீங்கும். அமைச்சர் கூறும் காரணங்களை உணர்ந்து துன்பம் வருமுன் தடுத்துக் கொள்ளவேண்டும். அரசன் தனக்குத் தீமை வராமல் அமைச்சர் ஆலோசனையைக் கேட்டு ஒழுகவேண்டும் என்பதனை,

பிரித்து இடித்துரைக்கும் அமைச்சரை உயிர்போல்

பேணிஆய்ந்து ஒழுகிடா மன்னர்

விருப்புறு பெருஞ்செல் வமும்உயர் அரசும்

வேரோடுங் கெடுவதா தலினால்

கருப்பொருள் உணர்ந்து வருமுனந் தடுத்துக்

காப்பவன் ஒருவரற் றிவன்தன்

மருட்குடி யிருக்கு மனப்படி செயுமந்

திரியினால் வந்தகேடு என்பார்

(கலையருட் படலம் – 53(684)

(கருப்பொருள் = காரணப் பொருள்)

என அமைச்சரின் தேவையினை அறிவுறுத்துகிறார்.

5.7.6 மனிதப் புனிதன் ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணநலன்களை ஒரு பாடலில் கூறுகிறார். மனிதன் புனிதன் ஆகவேண்டும் என்றால் புலன்கள் வழி மனத்தைச் செல்ல விடக்கூடாது; கட்டுப்படுத்த வேண்டும்; தவம் புரியவேண்டும்; கல்வி, ஞானம் இவை கற்றிருக்க வேண்டும்; நல்ல அறிவு உடையவராக இருக்க வேண்டும்; அன்புடையவராக இருக்க வேண்டும். உலகியல் நடைமுறைகளைத் தெரிந்து இருக்க வேண்டும். பூமியைப் போன்ற பொறுமை உடையவராக இருக்க வேண்டும். இதனை,

பொறிவழி மனம்பு காது

புரிதவம் ஞானம் கல்வி

அறிவுசீர் ஒழுக்கம் அன்போடு

உலகியல் அகிலம் போன்ற

பொறைநிறை அமைத்து வாழ்தல்

சுகம்எனும் புனிதம் மேவு

நெறியினி ஒருவ ரோங்கு

மகிழ்வொடு நிகழ்த்து வாரால்

(கிலிறு நபி வாய்மைப் படலம் -1(172)

(பொறி = ஐம்பொறிகள்; சீர் = சிறந்த; பொறை = பொறுமை; அகிலம் = பூமி)

என்று பாடுகிறார். இவ்வாறாக, மனிதப் புனிதர் யார் என வரையறுத்துப் பாடுகிறார் புலவர்.

5.8 தீன் விளக்கம்

தீன் எனும் அரபுச் சொல்லின் பொருள் இசுலாமிய நெறி என்பதாகும். தமிழகத்திற்கு இசுலாமிய நெறியினைப் பரப்ப வந்த செய்யிது இப்ராகீம் அவர்களைப் பற்றிய விளக்கத்தினைக் கூறும் நூல் தீன் விளக்கம் எனப் பெயர் பெற்றது.

● ஆசிரியர்

இக்காப்பியத்தினை இயற்றியவர் மீசல் வண்ணக்களஞ்சியப் புலவர் ஆவர். இவர் மூன்று காப்பியங்களைப் பாடியவர் என்பதை முன்பே பார்த்தோம்.

● காப்பிய நாயகர்

செய்யது இப்ராகீம், நபிகள் நாயகத்தின் பதினெட்டாம் தலைமுறையில் தோன்றிய நபிநேசச் செல்வர் ஆவார். தமது 42ஆம் வயதில் மதீனாவிலிருந்து பாண்டிய நாடு வந்தார். பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பாண்டிய நாட்டில் விக்கிரம பாண்டியன் ஆட்சி செய்தான். அப்பொழுது விக்கிரம பாண்டியனுக்கும் செய்யிது இப்ராகீமுக்கும் போர் நடந்தது. அப்போரில் இவர் வெற்றி பெற்றார். இவ் வரலாற்றுச் செய்திகளும் இக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன. இசுலாமிய நெறியைத் தமிழகத்தில் நிலைநாட்டினார். பின் கீழைக்கரையின் பக்கத்திலுள்ள ஏர்வாடியில் இறந்தார். அங்குள்ள தர்க்காவில் சாதிமத பேதமின்றி மக்கள் அருள்பெற்று வருகின்றனர். இது இத்தல புராண வரலாறும் ஆகிறது.

5.8.1 காப்பிய அமைப்பு இது, 22 படலங்களால் ஆனது. 1713 விருத்தப் பாடல்களைக் கொண்டுள்ளது. இதில் 10 படலங்களில் 920 பாடல்கள் போர் பற்றிய வருணனைப் பாடல்களாக விளங்குகின்றன. கடவுள் வாழ்த்து, நாடு, நகரப் படலங்கள், பத்துப் போர்ப் படலங்கள், மீதி ஒன்பது படலங்களில் பிற செய்திகள் அமைந்துள்ளன. பெரும்பாலான படலங்கள் போர் நிகழ்ச்சிகளாக விளங்குகின்றன.

அரசாட்சிப் படலம், செய்யிது இப்றாகீம் பவுத்திர மாணிக்க நகரில் (கீழக்கரை, ஏர்வாடி சார்ந்த பகுதிகள்) செங்கோல் செலுத்தி ஆண்டதைக் கூறுகிறது.

செய்யிது இசுகாக்கு மங்கலப் படலம் திருமண நிகழ்ச்சியைக் கூறுகிறது. இறுதியில் உள்ள தலைமுறை விருத்திப் படலம் இறைநேசச் செல்வரின் தலைமுறையினரது வரலாற்றை விளக்குகிறது. சேதுபதி சந்ததி பெற்ற படலம் செய்யிது இப்றாகீமின் ஆன்மீக ஆற்றலைக் கூறுகிறது. பூம்பொழில் நுகர்தல், புனல் விளையாடல், புலவியிற் புலத்தல், கலவியிற் களித்தல் ஆகிய காப்பிய மரபுகள் இடம்பெறவில்லை. சமயச் சான்றோர்களது தியாக வரலாற்றில் இவற்றிற்கு இடமில்லை. எனவே இவை பாடப்பெறவில்லை.

இக்காப்பியம் வீரகாவியம் என்னும் நிலையில் வைத்துப் பேசப்படும் அளவுக்கு உயர்வானது.

வரலாற்று நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் போர்ச் செய்திகள் முக்கியம் பெறுகின்றன. இயற்கை வருணனை, கற்பனை, கிளைக் கதைகள், பெண்கள் பற்றிய வருணனை, பாத்திர வருணனை போன்றவை மிகக் குறைவு. செய்யிது இசுஹாக்கு திருமணத்தின்போது ஊர்வலம் காண வந்த ஏழு பருவ மாதர் பற்றித் தமிழ்க் காப்பிய மரபுப்படி பாடப்படுகிறது. வேறு பெண் வருணனையே இல்லை எனலாம்.

5.8.2 வருணனை இக்காப்பியத்தில் இயற்கை வருணனை மிகக் குறைவு. இருந்தாலும் பொருத்தமான உவமை உருவகங்களால் சில இடங்களை அழகு படுத்துகிறார்.

● வீரர்களின் எழுச்சி

போர் வீரர்கள் போர் புரிந்தார்கள்; எதிர்த்தார்கள். அவர்களுடைய வீரத்தைப் பொங்கி எழும் கடல் என்றும், சண்டமாருதக் காற்று என்றும், இடி என்றும் உவமைகளைப் பயன்படுத்திப் பாடியுள்ளார்.

வடவைபோல் கொதிப்பன்

சண்டமாருதம் போல்எதிர்ப்பன்

இடிகள்போல் எதிர்ப்பன்

போரில் ஏழுலகம் இவனுக்கு ஈடோ

கடிதினில் எதிர்த்து

யானும் கையிழந்தேன் இங்கே

உடல் உயிரொடுமே சேர்ந்தது

ஊன்றிய விதி ஒன்றாமே

(ஒன்பதாம் போர்புரி படலம் -44(253)

(வடவை = ஊழிக்காலம், உலகமழியும் காலம் கடல் பொங்குதல்; சண்டமாருதம் = மிகக் கடுமையாக வீசும் காற்று).

5.8.3 உவமை ● நிமிர்ந்த நெற்கதிர்களும் புலவரும்

நெற்கதிர்களின் பல்வேறு தோற்றங்களை உவமையாக அமைத்துப் பாடியுள்ளார். பயிர்கள் நிமிர்ந்து நிற்றலை, ஒப்பற்ற தமிழ்ப் புலவர்களை மேன்மை உடையோர் கண்டு வரவேற்று அன்பாகப் பேசும்போது, அப்புலவர்கள் இறுமாந்து நிற்பது போல நின்றன என்று குறிப்பிடுகிறார்:

. . . . . . . . . . . . . . . . . . . . மேலவர்கள்

அயர்ந்தோர் கொடும் புலவரை உபசரித் தன்பால்

இயம்பு போதிறு மாந்திடலென இறுமாந்து

(நாட்டுப் படலம் – 17  (46)

● சூல்முதிர்ந்த நெற்கதிர்களும் பெண்களும்

செந்நெல் கதிர்கள் பால் பிடித்து முற்றியபோது, கர்ப்பம் முதிர்ந்த கற்புடைய பெண்கள் தலை கவிழ்ந்து நிற்பது போல நின்றன. நன்கு முற்றிய நெற்கதிர்கள் சாய்ந்து கிடந்ததை, துன்பம் மிகு உலகில் ஆன்றவிந்த சான்றோரின் தலை நிமிராத் தன்மையினைக் காட்டுகிறது என்கிறார்.

சூல்முதிர்ந்து கற்புடையர் போற்குனிந்து தொல்லுலகின்

மேன்முதிர்ந் துயர் பாசநீத்தவர்கள் எவ்விளைவு

பான்முதிர்ந்து வந்திடினுமே தலைக்கொளாப் பண்பாய்ச்

சேன்முதிர்ந்துறு பணை களிற் சாய்ந்தன செந்நெல்

(நாட்டுப் படலம் – 18  (47)

(சூல் = கர்ப்பமுடைய; பான் முதிர்ந்து = பால் முற்றிய நெல்; பணை = வயல்)

நெற்கதிர்கள் வாயிலாகப் பல உண்மைகளைத் தமிழிலக்கியங்களும் கூறுகின்றன. அம் மரபை வண்ணக் களஞ்சியப் புலவர் போற்றுவதைக் காணலாம்.

எல்லையற்ற பெரும்படை கடல் போல் இருக்கிறது. அப்படையில் வலிமை உடைய குதிரைகள் இருந்தன. குதிரைகளின் பிடரிமயிர், கடலின் நுரை எனக் காட்சி தந்தது. வீரமிகு குதிரைகள் செல்வதால் மேல் எழுந்த தூசிகள் சூரியனை மூடியது போல் இருந்தன. அவை மேகங்களிலிருந்த நீரைக் குடித்தன. குதிரைகள் முன் சென்றன என்பதனை,

கரையிலாப் பெருஞ்சேனை வாருதியினைக் கடுப்ப

நுரைகளாம் எனக்கவரிகள் இரட்ட நுண்துகள்போய்ப்

பருதி போர்த்திட முகில் படலத்திடை படிந்து

செருகி நீர்ப்பசை உண்டிட நடத்தினர் தேசி

(நான்காம் போர் புரி படலம் -11(865)

(சேனை = வீரர்கள்; வாருதி = கடல்; கவரி = குதிரையின் பிடரிமயிர் தொகுப்பு; நுண்துகள் = சிறிய தூசுகள்; பருதி = சூரியன்; முகில் = மேகம்; உண்டிட = பருக; கடுப்ப = ஒப்ப)

என உவமையும் கற்பனையும் செய்யுளில் அமைத்துக் குதிரைகள் சென்ற காட்சியினை விவரிக்கிறார்.

5.8.4 அவலச் சுவை பாட்டுடைத் தலைவர் செய்யிது இப்ராகீமுக்கும், விக்கிரம பாண்டியனுக்கும் 10 நாட்கள் புனிதப் போர் பாண்டிய நாட்டில் நடைபெற்றதாக இக் காப்பியம் பாடுகிறது.

விக்கிரம பாண்டியனின் மகன் இந்திர பாண்டியன் போர்க்களத்தில் இறந்தான். இந்தச் செய்தியை அறிந்த மன்னன் அழுது புரண்டான். இதைப் பதின்மூன்று பாடல்களில் பாடியுள்ளார். தாயின் புலம்பலும் 16 செய்யுட்களில் இடம் பெற்றுள்ளன. அவலச்சுவையை நெஞ்சு உருகும்படி பாடியுள்ளார். இதோ அந்தத் தாயின் புலம்பலைக் கேட்போம்.

முன்ன முதியவனோ முப்பதுக்கோ ராறுகுறை

சின்ன வயதிலிந்தத் தீவினையுந் தான்வருமோ

மன்னவர்கள் போற்றிசெயு மைந்தா உனைஇழந்தே

இன்னமுயிர் வைத்திருந்தே னென்னைப்போல் நீலியுண்டோ

(ஏழாம் போர் புரி படலம் -90 (1149)

(முப்பத்துக்கோராறு குறை = 24; மைந்தன் = மகன்)

உனக்கு அதிக வயதா ஆகிவிட்டது. உனக்கு இப்பொழுது வயது இருபத்தி நான்குதானே ஆகின்றது! சின்ன வயதுதானே! இந்தத் தீவினைக்கு ஆளாக வேண்டுமோ! நீ இன்று இருந்தால் என் அருமை மகனே! உன்னை மன்னர் புகழ்ந்து இருப்பார்கள். நான் உன்னை இப்பொழுது இழந்து தவிக்கின்றேன். நீ இளைய வயதில் உலகை விட்டுப் பிரிந்த பின்பும் நான் உயிரை வைத்திருக்கின்றேனே. நானும் இறந்து போயிருக்கக்கூடாதா? நான் ஒரு கொடியவளாகிவிட்டேன் எனக் கதறினாள்.

5.9 தொகுப்புரை

இந்தப் பாடத்தில் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களான கனகாபிசேக மாலை, இராஜநாயகம், குத்பு நாயகம், தீன் விளக்கம் ஆகியவை பற்றி அறிந்து கொண்டோம். இவற்றில் கூறப்படும் நபிகள் நாயகம், ஹஸன், ஹுஸைன், நபி சுலைமான், முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, செய்யிது இப்ராகீம் ஆகியோரின் வாழ்க்கையின் சிறப்புகள் பற்றியும் தெரிந்து கொண்டோம். காப்பியங்களின் பெயர்க்காரணம், ஆசிரியர், அமைப்பு, காப்பியங்களில் இடம் பெறும் சிறப்புச் செய்திகள், இலக்கிய நயம் ஆகியவை பற்றியும் அறிந்துகொண்டோம்.

பாடம் - 6

இக்கால இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள்

6.0 பாட முன்னுரை

இக்காலத்தில் எழுதப்பெற்ற இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள் பத்து. இவற்றுள் முகம்மது நபி அவர்களைக் காப்பிய நாயகராகக் கொண்டு மரபுக் கவிதை, புதுக்கவிதை ஆகியவற்றில் ஏழு நூல்கள் எழுதப்பட்டுள்ளன. மரபுக் கவிதைகளில் (1) நாயக வெண்பா, (2) நெஞ்சில் நிறைந்த நபிமணி, (3) இறை பேரொளி நபிகள் நாயகம் – அருட் காவியம்,    (4) ஞானவொளிச் சுடர் ஆகிய நான்கு நூல்கள் உள்ளன.

புதுக்கவிதையில் (1) நாயகம் ஒரு காவியம், (2) நாயகம் எங்கள் தாயகம்,  (3) அண்ணலே யாரஸூலுல் லாஹ் என மூன்றும் உள்ளன.

பத்துக் காப்பியங்களில் யூசுப் ஜுலைகா, மஹ்ஜபீன் புனித பூமியிலே, பிரளயம் கண்ட பிதா (நூஹ் நபி வரலாறு) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இங்கு,

1)     நாயக வெண்பா

2)     யூசுப் ஜுலைகா

3)     மஹ்ஜபீன் – புனித பூமியிலே

ஆகிய மூன்று காப்பியங்களையும் பற்றிப் படிப்போம்.

6.1 நாயக வெண்பா

மனித குலத்திற்கு வழிகாட்ட இறைவனின் தூதராக வந்த நபிகள் நாயகத்தின் வரலாற்றினை வெண்பாவில் பாடுவது நாயக வெண்பா.

6.1.1 ஆசிரியர் முகவை மாவட்டத்தின் பனைக்குளம் என்னும் ஊரைச் சார்ந்த முதுபெரும் புலவர் மு.அப்துல் மஜீது என்பவர் பாடியுள்ளார்.

இவர் கவிப்பூஞ்சோலை, இலக்கியப் பூங்கா, தமிழ்நாட்டு இஸ்லாமியப் புலவர்கள், பெருமானார் அருள் வேட்டல் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

6.1.2 அமைப்பு திருநபியின் வரலாற்றை வெண்பாவில் 632 பாடல்களாகப் பாடியுள்ளார். இதுவும் சீறாப்புராணம் போன்று விலாதத்து, நுபுவ்வத்து, ஹிஜ்ரத்து என மூன்று காண்டங்களை உடையது.

6.2 நபிநாயகத்தின் பெருமை

நபிகள் நாயகத்தின் பெருமைகளைக் காப்பியத்தில் பல இடங்களில் அப்துல் மஜீது விளக்குகிறார். அவை கவிஞரின் கற்பனை வளத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாய்த் திகழ்கின்றன.

6.2.1 நபிநாயகத்தின் அகவனப்பும் ஆகவனப்பும் நபி பெருமானாரின் அக வனப்பினையும், ஆக வனப்பினையும் புலவர் ஆறு வெண்பாக்களில் வருணிக்கிறார். (அகம் = மனம்; அகவனப்பு = மனம் பற்றிய வனப்பு; ஆக = மொத்த; ஆகவனப்பு = மொத்த வனப்பு)

இரக்கமான கண்களும், அமைதியான தோற்றமும், ஞானம் பேசும் வாயும், உறுதியான தோள்களும், இருளை நீக்கும் ஒளியுடைய சந்திரன் போன்ற முகமும் கொண்டுள்ள நபிநாயகம் ஒப்பில்லாத புதுமைகளைத் தோற்றுவிக்க வந்தார். மேலும் மிக உயர்ந்த குணங்களையும் உடையவர் நபி பெருமானார். இதனை,

அருள்ஒழுகும் கண்ணும் அமைதி குடிகொண்டு

தெருள்ஒழுகு வாயும் திண்தோளும் – இருள்சீத்து

ஒளிரும் மதிமுகமும் ஒப்பில் புதுமை

மிளிரும் அவரிடத்து மிக்கு

(விலாதத்துக் காண்டம்-107)

(தெருள் = அறிவின் தெளிவு, ஞானம்; சீத்து = கீறி, துடைத்து; மதி = சந்திரன்)

எனப் புலவர் பாடுகிறார்.

6.2.2 நபி நாயகத்தின் இல்வாழ்க்கை நபிகள் நாயகமும் கதீஜாவும் இல்வாழ்க்கையில் நல்வாழ்க்கை வாழ்ந்த பெருமையினை, அறத்திற்கு வித்தாக, இரக்கத்திற்கு வீடாக, தீமைகளைப் போக்கும் மருந்தாக இருவரும் அன்பால் இணைந்து வாழ்ந்தனர் என்று குறிப்பிடுகின்றார்.

அறநெறிக்கு வித்தாய் அருளிருக்கும் வீடாய்

மறநெறிகள் போக்கும் மருந்தாய் – திறநெறிசேர்

ஆண்டகையும் நாயகியும் அன்பால் பிணிப்புண்டு

காண்டகையர் ஆனார் கனிந்து

(விலாதத்துக் காண்டம் – 186)

(திறநெறி = உயர்நெறி; ஆண்டகை = தலைவர்; பிணிப்பு = இணைதல்; காண்டகையர் = காண்பதற்குத் தகுதி வாய்ந்தவர்)

என்னும் செய்யுள் அதனை அழகுற வெளிப்படுத்துகிறது.

6.2.3 நபிநாயகத்தின் அடக்கமான பண்பு நபிகள் நாயகத்தின் மதினா வாழ்வில், உணவு இருந்தால் உண்பார். இல்லையெனில் பட்டினி என்பதையும் பிறர்க்குக் காண்பிக்கமாட்டார்; மகிழ்ச்சியோடு இருப்பார்; பிறருக்கு உதவுவார் என்பதனை,

உண்டி இருந்திடில் உண்பார் மற்றுண்டிடும்

பண்டம் இலையாயின் பட்டினியை – விண்டுஎவர்க்கும்

காட்டாதிருந்தே களிப்புறுவார் கையுழைக்க

மாட்டார்க்கு உதவிடும் வள்ளல்.

(ஹிஜ்ரத்துக் காண்டம் – 83)

(உண்டி = உணவு; பண்டம் = பொருள்; களிப்பு = மகிழ்ச்சி)

என்ற பாடலில் எடுத்துரைக்கிறார்.

6.3 நாயக வெண்பாவில் கவிநயம்

நாயக வெண்பாவில், கவிஞர் தனது தமிழ்ப் புலமையாலும், கற்பனை ஆற்றலினாலும் சிறந்த உவமைகளைக் கையாண்டுள்ளார். உவமைகளின் வாயிலாகக் காப்பிய நிகழ்ச்சிகளைச் சுவையாக எடுத்துரைத்துள்ளார். அதைப்போல் பல நிகழ்ச்சிகளைச் சிறந்த வருணனைகளின் வாயிலாகவும் விளக்கியுள்ளார்.

6.3.1 கொடி அசைதல் கதீஜாவின் அரண்மனையில் பறக்கும் கொடி அசைவது, பெருமானாரை அழைப்பது போல இருந்தது என்கிறார் புலவர். இது பழைய தமிழ் இலக்கியங்களை நினைவூட்டுவது போல அமைந்துள்ளது. அந்தப் பாடல்:

பாவைஉளம் நெருங்கப் பார்த்திபரும் தானெருங்க

ஏவலார் முன்கதிஜா இல்நெருங்க – மேவியொளிர்

தையல் மனைமேல் தவழும் கொடிநபியைக்

கையால் அழைத்தது கண்டு

(விலாதத்துக் காண்டம் -142)

(பார்த்திபர் = நபிகள் நாயகம்; இல், மனை = வீடு;  தையல் = பெண் (கதீஜா)

பெருமானார் கதீஜாவின் வீட்டிற்குச் செல்கிறார். அங்குள்ள கொடிகள் காற்றில் அசைந்தாடுகின்றன. அக்கொடிகள் அசைந்தாடுவது, பெருமானாரை வரவேற்று அழைப்பது போல இருந்தது என்று தற்குறிப்பேற்ற அணி நயம் தோன்ற இப்பாடலில் அப்துல் மஜீது பாடுகிறார்.

6.3.2 கடலில் மூழ்கும் கலம் நாயக வெண்பாவில் அக்கால அரபு மக்களின் பிற்போக்கு நிலைகளை 25 பாடல்களில் பாடுகிறார். அரபுநாடு பாவங்கள் பெருகிய இடமாக இருந்தது. மக்கள் அலைகடலில் அகப்பட்ட துரும்புபோலத் துன்புற்றனர். அவர்களின் வாழ்க்கை இருண்ட வாழ்க்கையாக இருந்தது. மேலும் அவர்கள் அறியாமையாலும் இனப் பிரிவுகளாலும் சண்டையிட்டனர். பெண்குழந்தையை உயிரோடு புதைத்தனர்.  இவ்வாறு அவர்கள் வாழ்ந்த மற (தீய) வாழ்க்கையைக் கடலில் மூழ்கும் கலம்போல இருந்தது என்று குறிப்பிடுகின்றார். இதனை,

சேரிடத்தை விட்டுத் திசைதடு மாறிப்போய்க்

காருவருள் மூழ்கும் கலம்போலப் – பாரினிலே

மக்கிகள் வாழ்வு மறவழியில் ஆழ்ந்திற்று

தக்காரங் கில்லாத தால்

(நுபுவ்வத்துக் காண்டம் – 9)

(கலம் = கப்பல்; கார் உவருள் = இருண்ட கடலினுள்; மக்கிகள் = மக்கமா நகரத்தினர்)

என்னும் பாடல் விளக்குகிறது.

6.3.3 கடல் அலை முழக்கம் முஸ்லீம்கள் ஹபசா என்னும் நாட்டிற்குச் சென்று அங்கு அமைதியோடு இருக்க விரும்பி, பாலை நிலத்தைத் தாண்டிச் சென்றனர்; கடலைக் கண்டனர். அந்த முசுலீம்களின் மன உறுதியைப் புகழ்வதுபோல, கடல் அலைகளின் முழக்கம் இருந்தது என்று குறிப்பிடுகிறார்.

சொத்திழந் தின்பச் சுகம்இழந்தே சூழ்சம்

பத்துஇழந்து இஸ்லாத்தின் பற்றிழக்கா-உத்தமரைப்

பார்த்து மனமகிழ்ந்து பண்பாடி வாழ்த்தினபோல்

ஆர்த்தனவே முந்நீர் அலை

(நுபுவ்வத்துக் காண்டம் -119)

(சம்பத்து = செல்வம்; முந்நீர் = கடல்)

எனக் கடல் அலை முழக்கத்தினைப் பாடியுள்ளார் கவிஞர்.

6.3.4 போரின் தன்மை ஹிஜ்ரத்துக் காண்டத்தில் பத்று என்னும் இடத்தில் நடந்த போரினைக் கூறும்பொழுது நான்கு (18 முதல் 21 வரை) பாடல்களில் அனைத்தையும் மிகச் சுருக்கமாகப் பாடுகிறார். இஸ்லாமியர்களின் (தீனவர்களின்) முன் போய் எதிர்ப்பாளர்கள் போரிட்டது கடலைக் கடல் எதிர்த்துப் போர் செய்வது போல் இருந்தது என்றும், யானையோடு யானை போர் செய்வது போல் இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். மேலும் நீரோடு நீர் பொங்குவது போன்றும், தீயில் காற்றுப் புகுந்தது போன்றும் போர் நடந்தது என்கிறார். போரில் தலைகள் உருண்டன. இரத்தம் பாய்ந்தோட, கைகள் அறுந்தன. கால்கள் பெரிய மரம் போல வீழ்ந்தன. தோள்கள் இரத்தத்தில் மூழ்கிக் கிடந்தன எனப் பலவாறு வருணிக்கிறார்.

புனலில் புனல்பு குந்தது போலும்

அனலில் புயல்புகுந் தாற்போல் – சினந்தனர்கள்

தீனவரும் மக்கத் திருநகர் செம்மையில்

யீனவரும் முன்னே எதிர்த்து.

(ஹிஜ்ரத்துக் காண்டம் – 20 பத்றுப் போர்)

(புனல் = தண்ணீர், அனல் = நெருப்பு, தீனவர் = இஸ்லாத்தைப் பின்பற்றியவர்; மக்கத் திருநகர் = அராபிய நாட்டிலுள்ள மக்கமாநகர்)

6.3.5 முற்றிய நெற்கதிர் வயல்களில் நெற்பயிர்கள் வளமாக ஓங்கி வளர்ந்து இருந்தன. நெல் கதிர்கள் குலை குலையாகச் சாய்ந்து குனிந்து இருந்தன. இந்தக் காட்சியானது, நல்லவர்கள், பெரியவர்களை ஆர்வத்துடன் எதிர்கொண்டு சலாம் (வணக்கம்) கூறித் தழுவி வரவேற்பது போல இருந்தது என்று கூறுகிறார்.

நல்லார் பெரியோரை நாடி எதிர்கண்டால்

எல்லையில் பேர் அன்புபூண்டு ஏற்றசலாம்-சொல்லித்

தலைசாய்த்து மெய்க்கண் தழுவுதல்போல் செந்நெல்

குலைசாய்த்த செய்க்கண் குனிந்து

(விலாதத்துக் காண்டம் – 26 நாட்டுச் சிறப்பு)

(சலாம் = வணக்கம்; மெய்க்கண் = உடல்; செய் = வயல்)

6.3.6 அரபு நாட்டுச் சாலைகள் அரபு நாட்டில் உள்ள சாலைகளை வருணிக்கின்ற பொழுது, பாடுகின்ற சாலைகள், பெண்கள் கூடிப் பந்தாடுகின்ற சாலைகள், அறச்சாலைகள், தேரோடும் வீதிகள், காவல் அதிகமான வீதிகள் என அவைகளைப் பற்றிக் கூறுகின்றார்.

பாடுகின்ற சாலை பசுந்தொடியார் கூடிப்பந்து

ஆடுகின்ற சாலை அறச்சாலை – நீடியநல்

தேர்நடத்துஞ் சாலை சிறந்த நகர்க்காவல்

போர்நடத்துஞ் சாலை புறத்து

(விலாதத்துக் காண்டம் – 33 நகரச் சிறப்பு)

(பசுந்தொடியார் = பெண்கள்; நீடிய = நீண்ட)

தமிழ்நாட்டு நகர்களின் சாலைகளைக் கண்டு மகிழ்ந்த காட்சியாக அரபு நாட்டை வருணித்துப் பாடுகிறார்.

6.3.7 பாலை நில வருணனை பாலை நில வருணனையினை மிகச் சிறப்பாகப் பாடியுள்ளார். இந்தப் பாலை மணலின் ஆவி, வானம் வரை சென்றடைந்து அனலை வெளியிடும். நா வறண்டு போகும். இந்த அளவு பாலை நிலம் வறட்சியானது. அதன் கொடுமையைவிட மக்கா நகரிலுள்ள கொலை வெறியர்களான குறைசியர்களின் கொடுமை மிகுதியானது. அதற்கு அஞ்சிய நல்லவர்கள், அந்தப் பாலை வனத்திலே நடந்தார்கள் என்று அழகாகப் பாடுகிறார்.

ஆவிவான் புக்கி அனல்கக்கும் பாலையிலே

நாவறள நொந்து நடந்ததே – பாவக்

கொலைவாள் குறைசியர்செய் கோறலினுக்கு அஞ்சித்

தொலைவாழச் சென்ற தொகை

(நுபுவ்வத்துக் காண்டம் -114)

(ஆவி = மணலில் வெளிப்படும் புகை; நொந்து = வருந்தி; வான் = வானம்; குறைசியர் = குறைசிக் குலத்தவர்; அனல் =நெருப்பு; கோறல் = கொல்லுதல்)

மேலும் விலங்குகள் நீர் இல்லாமல் வருந்துகின்றன. மருந்துக்குக் கூட நீர் இல்லை. அத்தகைய வற்றிய வறண்ட தன்மையுடையது பாலை. எங்கும் கரிந்த நிலை. கள்ளியில் இருக்கும் பாம்பு கோபத்துடன் விடத்தினை உமிழ்ந்ததால் பாலைச்செடிகள் எல்லாம் எரிகின்றன என்றும் பாடுகிறார்.

6.4 யூசுப் ஜுலைகா

மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள தெய்வீகக் காதலை வெளிப்படுத்தும் ஒரு காப்பியம். இக்காப்பியத்தில் பல அறவுரைகள் கூறப்பட்டுள்ளன.

6.4.1 ஆசிரியர் யூசுப் ஜுலைகா என்ற காப்பியத்தைப் பாடிய கவிஞர் சாரண பாஸ்கரன் ஆவார். இவர் தஞ்சை மாவட்டம் கூத்தா நல்லூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் டி.எம்.எம். அகமது. இவர் 12ஆவது வயதிலிருந்தே இசைப்பாடல்கள் இயற்றும் திறமை பெற்றிருந்தார். வேதாந்த வரகவி சாது ஆத்தனார் என்பவர் இவருக்கு இலக்கணப் பயிற்சி அளித்தார். சாரண பாஸ்கரன் என்னும் புனைபெயரை ந.மு. வேங்கடசாமி நாட்டார் இவருக்குச் சூட்டினார்.

(அ) இவரது உரைநடை நூல்கள்

i)  சிந்தனைச் செல்வம்

ii) பாலயோகியின் பிரார்த்தனை

iii) காந்திஜியின் கடைசி வாரம்

iv) சாகாத ஜின்னா

(ஆ)  இவரது கவிதை நூல்கள்

i) மணியோசை

ii) சாபம்

iii) சங்கநாதம்

iv) இதயக்குமுறல்

v) மணிச்சரம்

vi) நாடும் நாமும்

vii) சாரண பாஸ்கரன் கவிதைகள்

viii) யூசுப் சுலைகா

6.4.2 அமைப்பு இக்காப்பியம் 66 இயல்களைக் கொண்டு, 864 பாடல்களால் ஆனது. நிலைமண்டில ஆசிரியப்பா, நேரிசை ஆசிரியப்பா அகிய பா வகைகளும், கலிவிருத்தம், ஆசிரிய விருத்தம் ஆகிய பாவினங்களும் கலந்துள்ளன. ஆசிரிய விருத்தத்தில் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களே அதிகமாக உள்ளன. அரபுச் சொற்கள் மிக மிகக் குறைவு. இவரது பாடல்களில் பாரதியின் எளிமை, பாரதிதாசனின் வீரம், கம்பனின் கற்பனை, உமறுவின் சொல்லாட்சி, குறளின் தோற்றம், குணங்குடியாரின் ஒலிநயம் ஆகியவற்றைக் காணலாம். இவற்றில் எளிய சொற்களே உள்ளன.

● சுருக்கம் கருதியமை

இசுலாமியத் தமிழ்க் காப்பியக் கடவுள் வாழ்த்து முறை பின்பற்றப்படாமல் இறை வாழ்த்து மட்டும் காணப்படுகிறது. நாட்டு வளம், நகர் வளம் விளக்கப்படவில்லை. வரலாற்றுக் கதை கூறுவதிலே கவிஞர் சுருக்கம் பேணுகிறார்.

● விவிலியமும் திருக்குர்ஆனும் கூறும் கதை

இது, சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைத்தூதர் நபி யூசுபின் வாழ்க்கை வரலாற்றைப் பாடும் நூல். 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட விவிலியத்திலும் இவரது வரலாறு கூறப்படுகிறது. இதற்குப் பின் 550 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய குர்ஆனும் கூறும் வரலாறு இது. திருக்குர்ஆனும் விவிலியமும் கூறுகிற இறைவன் எடுத்துக் கூறும் சரித்திர நிகழ்ச்சிகளே இந்நூல். மக்களுக்குப் படிப்பினை தரும் நூல். மாசற்ற காதல் கதை கூறும் நூல். இதில் வரலாற்றுக் கதை கூற வந்த கவிஞரிடம் காப்பிய இலக்கண மரபைப் போற்றாமல் கதை சொல்லும் விரைவு காணப்படுகிறது.

6.4.3 கதைச் சுருக்கம் இசுலாமிய வரலாற்றின்படி யூசுபும், அவரது தந்தை யாகூபும் இறைத்தூதர்கள். இவர்களின் கதையே இக்காப்பியத்தின் கதைக்கரு ஆகும்.

● ஆணழகர் யூசுப்

அழகே உருவான ஆணழகர் யூசுப். தனது சகோதரர்களால், பொறாமையால் கிணற்றில் தள்ளப்பட்டார். வணிகர்களால் காப்பாற்றப்பட்டார். மன்னர் தைமூனின் திருமகள் ஜுலைகா. இவள் ஆணழகன் ஒருவனைக் கனவில் கண்டாள். தன் கனவுக் காதலனையே எண்ணி நினைந்து உருகுகிறாள். இறைவனிடம் இறைஞ்சுகிறாள். மீண்டும் கனவில் சந்திக்கிறாள். ஆனால் அவள் மிஸ்று நாட்டு முதல் அமைச்சரான அஜீஸுக்கு மணம் முடித்துக் கொடுக்கப்படுகிறாள். அவர் தனது கனவில் தோன்றிய ஆண் அழகர் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறாள். ஏமாற்றத்தை அறிந்து அவளது உணர்ச்சியை மதித்து ஒதுங்கி வாழ்கிறார் அஜீஸ். கனவுக் காதலனைத் தவிர, காற்றும் தன்னைத் தீண்டக்கூடாது என வாழ்கிறாள் ஜுலைகா. அஜீஸ், அவளுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்.

● யூசுப்பும் ஜுலைகாவும்

வணிகர் ஒருவர், மிஸ்று நாட்டுக்கு ஆணழகர் யூசுபைக் கொண்டு வருகிறார். காட்சிப் பொருளாக வைத்துப் பொருள் சம்பாதிக்கிறார். அவரது அழகைக் காணக் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுகின்றனர். இச்செய்தி நகர் எங்கும் பரவுகிறது. இதனை அமைச்சர் அஜீஸ் அறிந்தார். அடிமையை அரண்மனைக்குக் கொண்டு வரச் சொல்கிறார். அப்பொழுது ஜுலைகா, தன் கனவுக் காதலன் அவரே என உணர்கிறாள். அவரின் எடைக்கு எடை தங்கம் கொடுத்து யூசுபை அடிமையாகப் பெறுகிறாள் ஜுலைகா. அவரைத் தன்வயமாக்கச் செய்யும் முயற்சிகள் தோல்வி அடைகின்றன. அந்நாட்டு உணவு அமைச்சர் ஆகிறார் யூசுப். அஜீஸின் மரணத்திற்குப்பின் முதலமைச்சர் ஆகிறார். அஜீஸின் மரணத்தால் விதவை ஆகிய ஜுலைகாவை யூசுபிற்கே மணமுடித்து வைக்கிறார் மன்னர்.

6.5 மஹ்ஜபீன் - புனித பூமியிலே

தமிழகத்தில் புகழ்பெற்ற முஸ்லீம் நாவலாசிரியர் ஹஸன் எழுதிய இரண்டு வரலாற்று நாவல்களைக் காப்பியமாகப் பாடியவர் இலங்கை ஜின்னாஹ் ஷரீபுத்தீன் ஆவார். சுல்தான் சலாஹுத்தீன் அவர்களின் வீரச் செயல்களும், அவர் தனது எதிரியான இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட்டுடன் செய்த போரும், அவனது உறவினர்களை விடுதலை செய்து உதவிய செயலும் இக்காப்பியத்தில் சிறப்பிடம் பெறுகின்றன.

● கதைக் கரு

மூன்றாம் சிலுவைப் போரில் ஜெருசலத்தை மீட்க முடியாத நிலையில் சுல்தான் சலாஹுத்தீனுடன் ரிச்சர்ட் சமயப்பொறையை நிலைநாட்டும் பொருட்டுச் சமாதானத்தை மேற்கொண்டதைக் கதைக் கருவாகக் கொண்டுள்ளது.

இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற அயல்நாடுகள் பாலஸ்தீனத்தைப் போர்க்களமாகக் கொண்டு நடத்திய போரை மையமாகக் கொண்டு பாடப்பட்டது.

● ஆசிரியர்

இக்காப்பியத்தை டாக்டர். ஜின்னாஹ் ஷரீபுத்தீன் என்பவர் எழுதினார். இவர் இலங்கை, மருதமுனை புலவர்மணி ஆ.மு. ஷரீபுத்தீன் அவர்களின் மகன். இவரது பிற கவிதை நூல்கள்:

1) முத்து நகை

2) பாலையில் வசந்தம்

3) மஹ்ஜபீன் (582 பாடல்கள்)

4) புனித பூமியிலே (1000 பாடல்கள்)

5) ஜின்னாஹ்வின் இரு குறுங்காவியங்கள்

6.5.1 தனிச் சிறப்பு தமிழகத்தில் புகழ்பெற்ற முஸ்லீம் நாவலாசிரியர் ஹஸன் எழுதிய இரண்டு வரலாற்று நாவல்களின் உரைநடைச் சொற்களையே கொண்டு கவிதையாக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக,

பருவமடைந்தது முதல் தந்தையைத் தவிர்த்து வேறு ஆடவருடன் பழகாது முழு இஸ்லாமியப் பண்பாட்டிலே வளர்ந்திருந்த அப்பேதைப் பெண்ணுக்கு, காமத்தினால் கண்ணிழந் திருந்த அக்கயவனின் பேச்சு அருவருப்பையும் ஆத்திரத்தையும் மூட்டியது

என்பது புதின உரைநடை. இதனைக் கவிதையாக்கி,

பருவமுற்ற நாளிருந்து தந்தை யன்றிப்

பிறஆண்க ளோடுபழ காத பெண்ணாள்

அருவருக்கும் அவன்வார்த்தை கேட்டு மீறும்

அழுகையுடன் ஆத்திரமும் கொண்டாள் …

(மஹ்ஜபீன் -2, அழகின் குற்றம் – 41)

எனப் பாடுகிறார்.

6.5.2 வருணனை இன்பமும் துன்பமும் என்னும் ஆறாவது பகுதியில் அஷ்ரப், மஹ்ஜபீனின் நினைவால் தூக்கமின்றித் துன்பம் அடைந்தான். படுத்து வெகுநேரமாகியும் அஷ்ரபுக்குத் தூக்கம் வரவில்லை. பின் நிலாக் காலத்தில் சந்திரன் நன்கு உயர்ந்து வந்த பிறகும் கூட உறங்காமல் புரண்டான். இதனை மிகவும் சிறப்பாக வருணித்துள்ளார்.

வானப்பந்தலில் நிலவு வெளிச்சத்தை அள்ளித் தந்து, குளிர் தருகிறது. அது உலகு எங்கும் பளிங்கு வில்லைப் போலச் சுற்றுகின்றது.  வானத்தில் உலவும் நிலவுக்குக் களங்கமுண்டு. ஆனால் அஷ்ரபின் இதயத்துள் உலவும் நிலவுக்குக் (மஹ்ஜபீன்) களங்கமில்லை. அது கருமேகம் மூடாத நிலவு, இன்ப உணர்வை வழங்கும் நிலவு எனப் பின்வருமாறு வருணிக்கிறார்:

ஒளியைஅள்ளிக் குளிர்நீரில் தோய்த்து எடுத்தே

உலகுஎங்கும் வீசியேவான் பந்தல் மீது

பளிங்குவில்லைப் போல்சுற்றும் நிலவைக் கண்டு

புன்னகைத்தான் தனிமையிலே அஷ்ரப் நெஞ்சுள்

களங்கமற்ற மதியொன்று நினைவு வானில்

கருமேகம் மூடாமல் ஒளியைச் சிந்தி

வழங்கும்இன்ப உணர்வுகளால் துயில்அ ழிந்தே

வான்நோக்கிப் படுத்திருந்த போதி லம்மா

(மஹ்ஜபீன் – 154)

(மதி = சந்திரன்; துயில் = உறக்கம்)

எனக் களங்கமற்ற காதலி அஷ்ரபின் உள்ளத்தில் இருப்பதைச் சிறப்பாக எடுத்துரைக்கிறார் கவிஞர்.

6.5.3 உவமை பரங்கியர் வைத்த தீ என்ற இரண்டாவது பகுதியில் அலைகளில் அசைந்தாடி மிதந்து வருகின்ற கப்பலையும், அக் கப்பல் பாய் விரித்துக் கொள்ளும் அழகையும் மிக அற்புதமாகப் பெண்ணோடு ஒப்பிட்டு உவமிக்கின்றார்.

அக்காத் துறையை நோக்கி மரக்கலங்கள் அசைந்துவரும் காட்சியை அழகிய தெய்வப் பெண்கள் பலர் அசைந்து நடந்து வருகின்ற அழகோடு ஒப்பிட்டு உவமிக்கிறார் கவிஞர் ஜின்னாஹ்.

சலனமற்றுத் துயிலுகின்ற கடலைத் தட்டித்

துயில்எழுப்ப வேண்டும்என்றோ காற்றும் தன்னைப்

பலமாக அசைத்த’தக்காத்’ துறையை நோக்கிப்

படிப்படியாய் வேகத்தைக் கூட்டிற் றன்றோ

அலையடங்கிக் கிடக்கஅதன் மீது சற்றே

அசைந்துவரும் ஆரணங்கின் எழிலைக் காட்டி

நிலைகொண்டு நின்றபல மரக்க லங்கள்

நீண்டுஉயர்ந்து பாய்மரங்கள் விரிக்கச் செய்யும்

(புனித பூமியிலே – 41)

(சலனம் = அசைவு; துயில் = உறக்கம்;  ஆரணங்கு = பெண்; எழில் = அழகு)

எனத் துறைமுகம் எழில் பெறுகிறது என்று குறிப்பிடுகின்றார்.

இந்த வகையில், மரக்கலங்களை அழகிய தெய்வப் பெண்களின் நடை அழகோடு ஒப்பிடுகிறார். அம்மரக்கலங்கள் பாய்விரித்த காட்சியை இன்னும் அழகுற உயிர்த்துடிப்பாக உவமை மூலம் பின்வருமாறு பாடுகிறார்:

பட்டுமஞ்சந் தனில்உறங்கிக் கண்வி ழித்தே

பக்கமிரு கைஉயர்த்திச் சோம்பல் நீக்கும்

கட்டழகுப் பெண்களைப்போல் காற்றைக் கண்டு

காத்திருந்த கப்பல்கள் பாய்வி ரிக்க

(புனித பூமியிலே – 42)

(மஞ்சம் = படுக்கை)

எனப் பட்டு மெத்தையில் படுத்து உறங்கிய கட்டழகுப் பெண்கள் காலைப் பொழுதில் இருகைகளையும் மேலே உயர்த்திச் சோம்பல் முறித்துக் கொள்வதைப் போல, அக்கப்பல்கள் பாய் விரித்ததாக உவமித்து வருணிக்கிறார்.

6.5.4 கற்பனை இருட்டைப் போர்த்திக் கொண்டு இரவு நித்திரை கொள்கிறது என்பதைக் கற்பனை நயம்படக் கவிஞர் பாடும்போது, இரவை ஒரு பெண்ணாகக் கொண்டால் இருள்தான் அவளது போர்வை. இருளாகிய போர்வைக்குள்ளே முகம் புதைத்துக் கொண்டு இரவாகிய பெண் நித்திரை செய்கின்றாள் என்று கூறுகின்றார். இக்கருத்தை,

முன்னிருட் போர்வை யுள்ளே

முகம்பதித்து இரவு துஞ்ச

தன்னுடல் போர்த்தி யாரும்

தனைஅறி யாத வாறே

மன்னவன் கான்ராட் வாழும்

மாளிகை தன்னை நோக்கிச்

சென்றதோர் உருவம் காவல்

செய்பவர் உறங்க லுற்றார்

(புனித பூமியிலே – 85)

(துஞ்ச = தூங்க)

என்ற பாடலில் குறிப்பிடுகிறார்.

● காதலியின் அழகு

அஸீஸின் காதலி ஆன். அவளது அழகைக் கவிஞர் வருணிப்பதைப் பாருங்கள்.

ஆனின் பாதங்களைப் பார்த்து, வண்டுக் கூட்டங்கள் தாம் முன்பு எப்பொழுதும் பார்க்காத அழகிய மலர்கள் என நினைத்து மொய்ப்பதற்கு நெருங்கின. அப்பொழுது கால் அசைக்க, தண்டைகள் ஒலி எழுப்பின. வண்டுகள் திசைமாறி ஓடின. அவளது அழகிய இரு கரிய கண்களும் கெண்டை மீன்கள் என்று நினைத்துக் கொக்கு உற்றுப் பார்த்தது. மீன்கள் என்றால் நீரில் அல்லவா இருக்கும். இவை தரையில் எப்படி வந்தன என மனம் மாறியது கொக்கு எனப் பாடும் பாடல் இதோ:

அண்டின மலர்என் நோக்கில்

அளிகளும் மென்தாள் பார்த்தே

தண்டைகள் குலுங்க அஞ்சித்

திசைமாறித் திரும்பி ஓடும்

கெண்டைஎன்று எண்ணிக் கண்ட

கொக்குஒன்றும் உற்று நோக்கித்

தண்டலை அன்றே இஃது

தரைஎன மனம்மா றிற்றே

(புனித பூமியிலே – 940)

(அளிகள் = வண்டுகள்;  தாள் = அடி;  தண்டலை = சோலை)

எனக் கற்பனை தோன்ற இனிமையாகப் பாடியுள்ளார்.

6.6 தொகுப்புரை

இக்காலக் காப்பியங்களில் நாயகவெண்பா, யூசுப் ஜுலைகா, மஹ்ஜபீன் – புனித பூமியிலே ஆகிய மூன்று காப்பியங்களைப் பற்றி அறிந்து கொண்டோம். இவற்றின் ஆசிரியர்கள் பற்றியும், கதைக்கருப்பொருள் பற்றியும் தெரிந்து கொண்டோம். உவமை முதலிய கற்பனை நயங்களைச் சில எடுத்துக்காட்டுகளால் அறிந்து சுவைத்தோம்.