4

20.ஆம் நூற்றாண்டுக் காப்பியங்கள்

பாடம் - 1

இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்கள்

1.0 பாட முன்னுரை

ஒரு நாட்டின் சமுதாய ஒழுகலாறுகளை, பண்பாட்டு அசைவுகளை, கலாச்சாரத் தோற்றங்களைத் தன்னுள் கொண்டதாய் ஒவ்வொரு இலக்கிய வடிவமும் திகழ்கிறது. அத்தகைய இலக்கிய வகைமைகளுள் காப்பியமே இவை அனைத்திற்கும் இடமளிப்பதாகக் காணப்படுகின்றது. தனிப்பட்ட மனித வாழ்க்கையினை மையமாகக் கொண்டு இயற்றப்பட்டாலும் சமூக வாழ்வியலைத் தெளிவுபடுத்துவதாகக் காப்பியங்கள் அமைகின்றன. இக்காப்பியங்கள் தமிழ் இலக்கியங்களில் மட்டுமல்லாமல் உலக இலக்கியங்கள் அனைத்திலும் காணப்படுகின்றன. காலந்தோறும் இக்காப்பியங்கள் வடிவம், பாவிகம், கதைக் களன், அமைப்பு முறை ஆகியவற்றால் மாறுபட்டுத் திகழ்கின்றன.

1.1 காப்பியம்

ஒரு சமுதாயம் ஒரு குறித்த காலத்தில் எவ்வகை இலக்கியத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்குமோ, எவ்வகை இலக்கியத்தைக் கற்று மகிழ்ந்து இன்புறுமோ அவ்வகை இலக்கியம் அக்காலத்தில் உண்டாவது இயல்பு. சமுதாயத்தின் நிலைக்கும் சூழ்நிலைக்கும் அவற்றில் உண்டாகும் இலக்கியத்திற்கும் மிக நெருங்கிய, விட்டு விலகாத தொடர்புண்டு என்பர் எஸ்.வையாபுரிப் பிள்ளை. அதன்படி, காப்பியங்கள் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அக்காலத் தேவைக்கேற்பத் தோன்றியுள்ளன.

காப்பியம் என்னும் சொல்லுக்குத் தமிழ்ப் பேரகராதி “நால்வகை உறுதிப் பொருள்களையும் கூறுவதாய்க் கதை பற்றி வரும் தொடர்நிலைச் செய்யுள்” என்று பொருள் கூறுகிறது. காப்பியம் என்பது உயர்ந்த குறிக்கோள் உடைய தலைவனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் தொடர்நிலைச் செய்யுள் எனலாம். காப்பியம் என்னும் சொல் சீவக சிந்தாமணியில் முதன் முதலில் இடம் பெற்றுள்ளது. இதனைக் ‘காப்பியக் கவிகள்’ (சீவக.சிந். – 1585) என்னும் சொல்வழி உணரலாம்.

1.1.1 காப்பிய இலக்கணம் தமிழில் கிடைக்கப் பெற்ற முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் காப்பியத்திற்குரிய இலக்கணம் எதையும் வரையறுக்கவில்லை. கி.பி.12ஆம் நூற்றாண்டில் தோன்றிய தண்டியலங்காரம் என்னும் நூலே காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. ‘பெருங்காப்பிய நிலை பேசுங்காலை’ எனத் தொடங்கிக் ‘கற்றோர் புனையும் பெற்றியது என்ப’ என முடிவுறும் நூற்பாவில் அந்நூல் காப்பிய இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறது. அந்நூற்பா வருமாறு:

பெருங்காப்பிய நிலை பேசுங்காலை

வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றில் ஒன்று

ஏற்புடைத்தாகி முன்வர இயன்று

நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்

தன்னிகர் இல்லாத் தலைவனை உடைத்தாய்…..

இந்நூற்பா உணர்த்தும் காப்பிய இலக்கணப் பொருளாவது:

(1)வாழ்த்து, வணக்கம், வருபொருள் ஆகியவற்றில் ஒன்றினைப் பெற்று வரும்.

(2)அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் கொண்டதாகக் திகழும்.

(3)தன்னேரில்லாத தலைவனை உடையது.

(4)மலை, கடல், நாடு, நகர், பருவம், இருசுடர் ஆகியவற்றை உள்ளடக்கி வரும்.

(5)நன்மணம் புரிதல், பொன்முடி கவித்தல், புனல் விளையாட்டு, சிறுவரைப் பெறுதல், புலவியில் புலத்தல், கலவியில் கலத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெறுதல் வேண்டும்.

(6)மந்திரம், தூது, செலவு, போர், வெற்றி ஆகியவற்றைப் பெற்று வரும்.

(7)சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் உட்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைப் பெறும்.

(8)இலக்கிய நயமும் பாவமும் பெற்று விளங்கும்.

(9)கற்றோரால் இயற்றப் பெறுவதாக அமையும்.

1.1.2 காப்பியக் காலம் காப்பியக் காலம் எனத் தமிழில் எக்காலத்தையும் அறுதியிட்டுக் கூறவியலாது. கி.மு. 2ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரம் தொடங்கி, கால இடைவெளி விட்டுக் காப்பியங்கள் தோற்றம் பெறுவதைக் காப்பியங்களின் கால வரலாறு உணர்த்துகின்றது. ஒரே சீராக அன்றி, நெருங்கியும் இடைவிட்டும் இருபதாம் நூற்றாண்டு வரை காப்பிய இழை காணப்பெறுகின்றதெனக் கூறுவர்.

1.1.3 காப்பிய வகைகள் தமிழில், பெருங்காப்பியம், சிறுகாப்பியம், வளர்ச்சிக் காப்பியம், கலைக் காப்பியம் எனக் காப்பியம் பல வகைப்படும்.

பெருங்காப்பியம்

பெருங்காப்பியம் என்பது தண்டியலங்காரத்தில் கூறப்படும் இலக்கணங்களோடு கவிஞர்களால் இயற்றப்பெறுவது. ஐம்பெருங் காப்பியங்கள் எனப் போற்றப்பெறுவன சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியனவாம்.

சிறு காப்பியம்

சிறு காப்பியம் என்பது தண்டியலங்காரத்தில் கூறப்படும் பெருங்காப்பிய இலக்கணத்தில் ஏதேனும் சில குறைந்து வருவதாகவோ அல்லது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினுள் ஏதேனும் ஒன்று குறைந்து வருவதாகவோ கவிஞர்களால் இயற்றப்பெறுவது ஆகும்.

பிற்காலத்தில் இக்காப்பியங்கள் தொடர்நிலைச் செய்யுளின் வகையைச் சார்ந்தது என்றும், தொடர்நிலைச் செய்யுளிலும் பொருள் தொடர்நிலையைச் சார்ந்தது என்றும் அறிஞர்கள் கருதினர்.

உதயணகுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி, நாககுமார காவியம் ஆகியவை சிறுகாப்பியங்களாகும்.

வளர்ச்சிக் காப்பியம்

இக்காலத்தில் இலக்கியத் திறனாய்வாளர்கள் காப்பியங்களை இருவகைப் பிரிவுகளாகப் பாகுபடுத்தியுள்ளனர். ஒன்று வளர்ச்சிக் காப்பியம், இரண்டு கலைக் காப்பியம்.

வளர்ச்சிக் காப்பியம் (வளர்நிலைக் காப்பியம்) என்பது பழங்கதை நிகழ்ச்சிகள் வாய்மொழியாகப் பரவிப் பல கிளைக் கதைகளைத் தன்னுள் கொண்டு உருப்பெறுவது; ஓர் இனம் அல்லது மக்கள் கூட்டத்தால் உருவாக்கம் பெற்ற கவிஞரால் இலக்கிய வடிவமாகப் படைக்கப்பெறுவது.

பிற முதன்மையான காப்பியங்கள்

பெருங்காப்பிய இலக்கணத்தோடு பொருந்திய கம்பராமாயணம், பெரிய புராணம் போன்றனவும், வில்லிபுத்தூரார் பாரதம், சீறாப்புராணம், தேம்பாவணி போன்றனவும் முதன்மையான காப்பியங்களுள் அடங்கும். இவற்றைத் தவிர வேறு சில காப்பியங்களும் தமிழில் காணப்படுகின்றன. 20ஆம் நூற்றாண்டில் இரட்சணிய யாத்திரிகம், பாரதசக்தி மகா காவியம், இராவண காவியம், பூங்கொடி போன்ற காப்பியங்களும் மிகச் சிறந்த காப்பியங்களாகத் திகழ்கின்றன. சான்றாக,

மகாபாரதம், இராமாயணம், ஹோமரின் இலியதம் போன்ற காப்பியங்களைக் குறிப்பிடலாம்.

கலைக் காப்பியம்

கலைக் காப்பியம் என்பது கவிஞர் தம் கற்பனையில் விளைவது. கற்பனைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களையும் அவற்றின் அடிப்படையில் நிகழ்ச்சிகளையும் கொண்டு இலக்கிய வடிவமாக வடிவெடுப்பது. இதற்குச் சான்றாக, 20ஆம் நூற்றாண்டில் உருப்பெற்ற காவியங்களான பாரத சக்தி மகா காவியம், இராவண காவியம் போன்ற காப்பியங்களைக் குறிப்பிடலாம்.

1.2 காப்பியப் பண்புகள்

காப்பியத்திற்கென ஒருசில தனித்த பண்புகள் உண்டென அறிஞர்கள் கருதுகின்றனர். காப்பியம் வீரப்பண்பு உடையதாகவும் நாடகத் தன்மை உடையதாகவும் இருக்கும். சமுதாயக் குரல் ஆங்காங்கே காப்பியத்துள் அமைந்து இருக்கும். தேசியப் பண்பு இருக்க வேண்டும். அவ்வக்கால இடச்சூழல், அறக்கருத்து, கதையமைப்பு, பாத்திரப் படைப்பு, கிளைக் கதை ஆகியன அமைந்து இருக்க வேண்டும். இத்தகைய காப்பியப் பண்புகளை உலக மொழிகள் அனைத்திலும் காணலாம். ஹோமரது இலியட், ஒடிசி போன்ற பழம்பெரும் காப்பியங்கள் தொடங்கி, உலக மொழிகளில் தோன்றியுள்ள பிற காப்பியங்களிலும் இத்தகைய பண்புகள் இருப்பதைக் காண முடிகின்றது.

1.2.1 காப்பியங்களின் பொதுவியல்புகள் தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களை நோக்கும்போது முதல்நூல், வழிநூல், சார்புநூல், எதிர்நூல் என நான்கு வகையாகத் திகழ்வதைக் காணலாம். தமிழில் காணப்பெறும் காப்பியங்கள் குறித்து ஓர் அறிஞர் எடுத்துரைக்கையில், காப்பியத்தின் தொடர்ச்சியாக மற்றொரு காப்பியம் அமைவது; ஒரு காப்பியத்தின் எதிராகப் பிறிதொரு காப்பியம் உருவாவது; ஒரு காப்பிய ஆக்கத்தில் ஓராசிரியருக்கு மேல் ஈடுபடுவது; ஒரு காப்பியக் கூறு பிறிதொரு காப்பியம் ஆவது எனக் காப்பியங்கள் உருவாவதைப் பல வகையாகக் குறிப்பிட்டுள்ளார்.

1.3 பெருங்காப்பிய, சிறு காப்பியப் போக்குகள்

பெருங்காப்பியங்களுள் முதல் நூலாகத் திகழும் சிலப்பதிகாரம் மூல நூலாகத் திகழ்கிறது. அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொள்ளாது சாதாரணக் குடிமக்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அமைந்துள்ளது. சமணத் துறவியாகிய இளங்கோவடிகளால் இயற்றப்பட்டிருப்பினும் அக்காலச் சூழலில் காணப்பட்ட பிற சமயங்களையும் இடையிடையே போற்றிப் பாடுகிறது. மூன்று கோட்பாடுகளை முன்னிறுத்தி அக்கோட்பாடுகளை ஊடுபாவாகக் கொண்டு அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எழுந்த மணிமேகலை, சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்டது. மணிமேகலை உயர்ந்த சிந்தனைகளைத் தன்னுள் கொண்டு அச்சிந்தனைகளைக் காப்பியம் முழுமையும் செலுத்தி நிற்கிறது. சமயம் சார்ந்த பல கருத்துகள் புகுத்தப்படினும், சமூகப் புரட்சிக்குரிய சில சிந்தனைகளையும் முன் வைத்துச் செல்கிறது.

பின்வந்த சீவகசிந்தாமணி வடமொழி நூலைத் தழுவி எழுந்த காப்பியமாகத் திகழ்கிறது. சாதாரணக் குடிமகன் பாட்டுடைத் தலைவனாக நிறுவப்பட்ட நிலையிலிருந்து மாறி, அரசன் பாட்டுடைத் தலைவனாகப் பாடப்பட்ட தன்மையைக் கொண்டுள்ளது. சமணக் கருத்துகள் பலவற்றை வலியுறுத்திக் கூறுகிறது.

பின்வந்த குண்டலகேசி, வளையாபதி இரண்டிலும் சாதாரணக் குடிமக்கள் தலைமைப் பாத்திரப் படைப்புகளாக இடம் பெறுகின்றனர். இவ்விரு நூல்களும், சமண, பௌத்த சமயங்களைச் சார்ந்தனவாகக் கருதப்படுகின்றன. இவ்விரு காப்பியங்களும் முழுமையாகக் கிடைக்கவில்லை.

சிறு காப்பியங்களில் பழையனூர் நீலி கதையில் இடம்பெறும் கதாபாத்திரம் கொண்டு தமிழில் எழுந்த சமண நூலாக நீலகேசி திகழ்கிறது. இக்காப்பியம் பௌத்த நூலாகிய குண்டலகேசிக்கு எதிராக எழுந்ததாக அறிஞர்கள் கூறுவர். பிற காப்பியங்களான யசோதர காவியம், உதயணகுமார காவியம், நாககுமார காவியம் போன்றன பிறமொழிக் காப்பியங்களைத் தழுவி எழுதப் பெற்றனவாகக் காணப் பெறுகின்றன.

தமிழில் மூல நூல்களாகத் திகழும் சிலப்பதிகாரம், மணிமேகலை, நீலகேசி போன்றன சாதாரண மக்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டுள்ளன. முதற் காப்பியம் பிற சமயக் கடவுளர்களையும் காட்சிப்படுத்த, பின் எழுந்த காப்பியங்கள் குறிப்பிட்ட சமயம் குறித்தும் கடவுள் குறித்தும் படைக்கப்பட்டுள்ளன. இம்மூன்று காப்பியங்களுள்ளும் பெண்களே தலைமை மாந்தர்களாகக் காட்டப்பெற்றுள்ளனர். சிலப்பதிகாரத்தில் இல்லறத்தின் சிறப்பும், பெருமையும் எடுத்துரைக்கப் படுகின்றன. பின் இரு காப்பியங்களிலும் துறவு சிறந்ததாகக் காட்டப்பெறுகிறது.

தமிழில் தோன்றிய பிற காப்பியங்கள் அரசர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டனவாகவும், அந்தந்த வழிபடு கடவுளைப் போற்றும் தன்மையனவாகவும் திகழ்கின்றன. புறச் சமயக் காழ்ப்பு உடையனவாகத் திகழ்கின்றன. இவை மட்டுமின்றி, பின்வரும் கம்பராமாயணம், பெரிய புராணம், வில்லிபுத்தூரார் பாரதம், திருவிளையாடற் புராணம் போன்றன சமயச் சார்பும் இறைசார்பும் உடையனவாகத் தோற்றமளிக்கின்றன.

1.4 இருபதாம் நூற்றாண்டில் மலர்ந்த காப்பியங்கள்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இரட்சணிய யாத்திரிகம் ஒரு கிறித்தவத் தமிழ்க் காப்பியம். இக் காப்பியம் ஜான்பன்யன் என்பவரால் எழுதப்பட்ட புண்ணியப் பயணியின் முன்னேற்றம் (The Pilgrim’s Progress) என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. இந்நூலின் ஆசிரியர் ஹென்றி ஆல்பிரடு கிருட்டிணப் பிள்ளை.

1948ஆம் ஆண்டில் வெளியான பாரத சக்தி மகா காவியம் சுத்தானந்த பாரதியாரால் இயற்றப்பட்டது. “சுத்தானந்தன் தமது வாழ்வையே உருக்கி இக்காவியத்தை வார்த்திருக்கிறார்” என வ.வே.சு.ஐயர் குறிப்பிட்டுள்ளார்.

1979இல் வெளிவந்த அரங்க.சீனிவாசனின் மனித தெய்வம் காந்தி காதை மற்றொரு சிறந்த பெருங்காப்பியமாகக் கருதத்தக்கது. கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற காப்பியமாக இதனையும் கருதலாம்.

1946இல் பதிப்பிக்கப்பட்டு 23 ஆண்டுகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு 1971இல் இரண்டாம் பதிப்பாக இராவண காவியம் வெளிவந்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் புலவர் குழந்தை. “தமிழ் இலக்கியத்தில் அணிகலனாய் இருக்கத் தகுந்த அருமையான காவியம்” என்று இதனை நாரண. துரைகண்ணன் புகழ்கின்றார்.

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மற்றொரு காப்பியம் பூங்கொடி. இந்நூலின் ஆசிரியர் முடியரசன். இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலையை அடியொற்றித் தோன்றியது பூங்கொடி.

இக்காப்பியங்களைத் தவிர, வேறு பல காப்பியங்களும் தமிழில் வெளிவந்துள்ளன. பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு பல காப்பியங்கள் உருவாகி உள்ளன.

கண்ணகி புரட்சிக் காப்பியம் (பாவேந்தர் பாரதிதாசன்), கண்ணகி வெண்பா (மு.இரா. கந்தசாமிக் கவிராயர்), விதியோ வீணையோ (கவிஞர் தமிழ்ஒளி), மாதவி காப்பியம் (கவிஞர் தமிழ்ஒளி), சிலம்பின் சிறுநகை (சாலை இளந்திரையன்), மணிமேகலை வெண்பா (பாவேந்தர் பாரதிதாசன்), குண்டலகேசி (இரா.குமரன்), சாலி மைந்தன் (ஆ.பழனி), மாதவ மேகலை (நா.மீனவன்) போன்ற வழி நூல்கள் உருவாகியுள்ளன.

பாரதிதாசன்

(பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக)

சங்க இலக்கியப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு பாரி காதை (ரா.ராகவையங்கார்), சான்றாண்மை (புலவர் அடிகளாசிரியர்), மாங்கனி (கண்ணதாசன்) ஆகிய சிறு சிறு வழிநூல்கள் எழுந்தன.

நாட்டிற்கு உழைத்த நற்பெரும் தலைவர்களைக் காப்பிய நாயகர்களாகக் கொண்டு இயேசு காவியம் (கண்ணதாசன்), காந்தி புராணம் (பண்டித அசலாம்பிகை அம்மையார்), மனித தெய்வம் காந்தி காதை (அரங்க. சீனிவாசன்), மகாத்மா காந்தி காவியம் (இராமானுஜக் கவிராயர்), நேரு காவியம் (கோ.செல்வம்), நேதாஜி காவியம் (புலவர் வாய்மைநாதன்), பெரியார் காவியம் (பா.நாராயணன்), அண்ணா காவியம் (கவிஞர் ஆனந்தன்), கலைஞர் காவியம் (கபிலன்) எனப் பல காப்பியங்கள் தோன்றியுள்ளன.

1.5 இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்களின் போக்கு

உயர்குடி மக்களையும் அரசர்களையும் தலைமை மாந்தர்களாகக் கொண்டு இயற்றப்பட்ட காப்பியங்களிலிருந்து மாறுபட்டதாக 20ஆம் நூற்றாண்டுக் காப்பியங்கள் இயற்றப்பட்டுள்ளன எனலாம்.

1.5.1 இரட்சணிய யாத்திரிகம் சாதாரண குடிமகன் ஒருவன் தன் பாவத்திலிருந்து விடுதலை பெற விரும்பி இரட்சிப்பினை நோக்கிச் செல்வதாகப் படைக்கப்பட்டுள்ளது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினுள் வீடுபேற்றைக் குறித்துப் பேசுவதாக இந்நூல் உள்ளது. இல்லறம், துறவறம் என்ற இரண்டினையும் சுட்டிக்காட்டி, வீடுபேறு சிறந்ததென முந்தைய காப்பியங்கள் பேச, இந்நூல் வீடுபேற்றைக் குறித்துப் பேசுவதாக அமைந்துள்ளது எனலாம்.

இரட்சணிய யாத்திரிகம் 5 பருவங்களையும், 47 படலங்களையும் கொண்டுள்ளது. ஆதி பருவம் 19 படலங்களையும், குமாரபருவம் 4 படலங்களையும், நிதான பருவம் 11 படலங்களையும், ஆரணிய பருவம் 10 படலங்களையும் கொண்டுள்ளன. மொத்தம் 3622 பாடல்களையும் தேவாரம் என்னும் தலைப்பில் இறை வணக்கப் பகுதிகளையும் இந்த நூலில் காணலாம்.

1.5.2 பாரதசக்தி மகாகாவியம் பிற காப்பியங்களிலிருந்து ஒரு சில கோணங்களில் மாறுபட்டதாய் அமைந்துள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் கடவுள் வாழ்த்தைப் பெறவில்லை. சூளாமணியும் சிந்தாமணியும், கம்பராமாயணமும் வாழ்த்து என்னும் உறுப்பைப் பெற்றுள்ளன. இந்த இடைக்காலக் காப்பியங்களின் மரபைப் பின்பற்றிச் சுத்தானந்தர் கடவுள் வாழ்த்தைத் தன் நூலில் அமைத்துள்ளார். ஒவ்வொரு காண்டத்திலும் தொடக்கத்தில் மட்டுமன்றி, பல்வேறு இடங்களிலும் கடவுள் வாழ்த்தை அமைத்துள்ளார்.

கடவுள் வாழ்த்து இடம் பெற்று உள்ளதாயினும் இந்நூலை இயற்ற, இதன் சிறப்புகள் விளங்க, இது நிலைத்து நிற்க அருளிட வேண்டும் என்னும் நோக்கில் வெளிப்படையாக இடம் பெறவில்லை.

பாரத சக்தி மகா காவியத்தில் கவி சுத்தானந்த பாரதி அரசர்களையும் அவதாரப் பிறப்புகளையும் சமயச் சான்றோர்களையும் குறிப்பிட்டு, பின்னர் ஜராதுஷ்டிரன், கிறிஸ்து, முகம்மது ஆகியோரையும் குறிப்பிட்டு நானகன், இராமதாஸ், இராமமோஹன், தயானந்தன், பரமஹம்சர் ஆகியோரையும் குறிப்பிட்டு, பின்னர் 20ஆம் நூற்றாண்டில் கதை தொடங்குவதாகப் படைத்துள்ளார். இவ்வாறு கால மயக்கம், இட மயக்கம் கொண்டதாகத் தமிழ்க் காப்பியங்கள் வேறு ஏதும் காணப்பெறவில்லை.

இப்பெருங் காப்பியம் சித்தி காண்டம், கௌரி காண்டம், சாதன காண்டம், தானவ காண்டம், சுத்த சக்தி காண்டம் என்னும் 5 காண்டங்களையும் 136 படலங்களையும் கொண்டதாய் அமைந்துள்ளது. கலிவிருத்தம், கலித்துறை, ஆசிரிய விருத்தம், நேரிசை, இன்னிசை, ஆசிரியப்பா, குறள்வெண்பா ஆகிய யாப்பு அமைதிகளைப் பெற்றுக் கலவை வடிவமாகக் காணப்பெறுகின்றது. முந்தைய காப்பியங்களில் இத்தகைய யாப்பு வடிவங்களைக் காணவியலவில்லை எனலாம்.

இரட்சணிய யாத்திரிகத்தைப் போன்று, சுத்தானந்தரின் பாரதசக்தி மகாகாவியமும், தத்துவக் கருத்துகள் உள்ளிட்ட ஒரு தொடர் உருவகக் காப்பியம் ஆகும். இத்தகைய உருவக அமைப்புகளைச் செவ்விலக்கிய மரபில் காண இயலவில்லை. இடைக்காலத்தில் எழுந்த சில நூல்களிலும் சிந்தாமணியிலும் அத்தகைய கருத்தோட்டம் காணப்படினும் தமிழ்க் காப்பிய மரபில் இத்தகைய மரபைக் காண இயலவில்லை.

1.5.3 மனித தெய்வம் காந்தி அரங்க.சீனிவாசன் எழுதிய மனித தெய்வம் காந்தி காதை என்னும் காப்பிய நூல் 5 காண்டங்கள், 77 படலங்கள், 5183 விருத்தப் பாக்கள் கொண்டு அமைந்துள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் போன்ற காப்பியங்களைப் போன்றே இந்நூலிலும் கிளைக் கதைகள் இடம் பெற்றுள்ளன.

காந்தியடிகள் சிரவணன் கதையைப் படித்தார், அரிச்சந்திரன் நாடகம் பார்த்தார் எனக் கூறும் வகையில், சிரவணன் கதை 47 பாடல்களிலும் அரிச்சந்திரன் கதை 126 பாடல்களிலுமாக இவ்விரு கிளைக் கதைகள் இடம் பெற்றுள்ளன.

பெருங்காப்பியங்களிலும் சிறு காப்பியங்களிலும் காப்பியத் தலைமகனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடல் புனையும் மரபு காணப்பெறவில்லை எனலாம். ஆனால் மனித தெய்வம் காந்தி காதை காந்தியின் பிள்ளைமைப் பருவத்தைக் குறித்துப் பாடியுள்ளது. பரத கண்டத்தில் கால்பதித்த அயலாரின் மனக்கோட்டையைத் தகர்த்து எறியும் விதத்தில் சிற்றில் சிதைத்தது எனப் பாடியுள்ளது. இதனைக் கீழ்வரும் பாடல் உணர்த்துகின்றது.

இந்நெடும் பரதகண்டம் எம் அடிப் படுதலாலே

பன்னெடுங் காலம் ஆள்வோம் பார்மின்” என்று

அயலார் கட்டும்

அந்நெடு மனத்தின் கோட்டை அடித்தளம்

அழிந்ததென்ன

நன்னெடு மறுகில் சிற்றில் சிதைத்தனள்

நளினத் தாளால்!

சிற்றிலக்கியத் தாக்கத்தின் காரணத்தால் இக்கவிஞர் பிள்ளைத் தமிழ் என்னும் இலக்கிய வகைமையைத் தன் சிறு காப்பிய நூலில் பயன்படுத்தியிருக்கலாம். காப்பிய வளர்ச்சியில் காணப்பெறும் மற்றுமொரு பரிமாணமாக இதனைக் கருதலாம்.

  1.5.4 இராவண காவியம் புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம். பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களைக் கொண்டதாய் அமைந்துள்ளது. 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. காப்பியப் பாகுபாடு வருமாறு:

முதல் நூல், வழி நூல், சார்பு நூல், எதிர் நூல் என்னும் நால்வகையுள் எதிர்நூல் வழி தோன்றியதாகும். கம்பராமாயணத்திற்கு எதிராக எழுந்த எதிர் நூல் இராவண காவியம். எதிர்நூல் எழுவது தமிழ் இலக்கிய உலகில் புதிதல்ல. நீலகேசிக்கு எதிராக முன்னரே குண்டலகேசி தோன்றியுள்ளதைச் சான்றாகக் கூறலாம்.

இராவண காவியம் பாடப்பட்ட முறையில் பல்வேறு நிலைகளில் மாறுபட்ட தன்மையதாய்த் திகழ்கின்றது. நீலகேசி, குண்டலகேசி இரண்டும் எதிரெதிராகத் தோன்றிய நூல்களாயினும் வெவ்வேறு கதை மாந்தர்கள் காவிய முதன்மை மாந்தர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். கம்பராமாயணத்தில் எதிர்முகத் தலைவனாகப் பாடப்பட்ட இராவணனை இராவண காவியம் காவிய நாயகனாகப் படைத்துள்ளது. இத்தகைய போக்கினைத் தமிழ் இலக்கிய உலகில் எங்கும் காணவியலாது எனலாம்.

காப்பிய நாயகனை, உயர்த்திக் காட்டுவது காப்பிய மரபுதான். ஆயினும் இராவண காவியத்தில் ஆசிரியர் ஏன் இந்நூலை இயற்றினார் என்பதற்குக் காரணம் கூறுகின்றார். ஆரியப் பண்பாட்டைத் திராவிடப் பண்பாட்டில் ஏற்றி மொழி, நாடு, மக்கள் என அனைவரின் பெருமையையும் மாற்றிக் காட்டிய தன்மையினை எடுத்துக்காட்டி அதனை மாற்றி, தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ் மக்கள் ஆகியோரின் பெருமையை உயர்த்த இந்நூலை இயற்றியதாக இக்கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.

பொய்மையை மெய்ம்மை என நம்பி வாழும் தமிழ் மக்கள் உண்மையை உணர்ந்துகொள்ளப் பாடியதாகக் குறிப்பிட்டுள்ளார். இப்பொருள் உணர்த்தும் அப்பாடல் வருமாறு:

கரும்பை வேம்பென வேம்பைக் கரும்பென

விரும்பி வாழுமெய் யாமை வெருவுற

அரும்பி யுண்மை யருந்தமிழ் மக்கள்முன்

திரும்பி வாழ்ந்திடச் செய்யுமிக் காவியம்.

இவ்வாறு இக்காப்பியக் கவிஞர் நூல் எழுதுவதற்கான காரணத்தை எடுத்துரைத்துள்ளதைப் போல, பிற காப்பியக் கவிஞர் எவரும் எடுத்துரைத்துள்ளதாகத் தெரியவில்லை. காவியம் எழுந்த காலத்தின் சமூகச் சூழல் கவிஞர் இவ்வாறு கூறக் காரணமாக அமைந்திருக்கலாம்.

இந்நூல் திருவள்ளுவர் ஆண்டு 2023இல் எழுதப்பட்டதென்றும், கிறித்தவ ஆண்டு 1946இல் இயற்றப்பட்டதாகவும் இந்நூலில் புலவர் குழந்தை குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாது, நூற்பயனை இந்நூலாசிரியர் கூறுவதும் புதுமையாகக் காணப்படுகின்றது.

வாழ்வியல் அறங்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நூலும் இயற்றப்பட்டு, அதன் ஊடாகத் தலைவன் வாழ்வினைப் புகுத்தி, தான் கூறும் அறங்களை வெளிப்படுத்திக் கவிஞர் பாடுவர். தமிழர்களது அடிமை வாழ்வை வீழ்த்தி, இழந்த உரிமையை மீண்டும் பெறும்படி காவியம் படிப்போரை உணரச் செய்வதே காப்பிய நூற்பயனாக இந்நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். இதைப் போலவே காப்பியம் நிறைவுறும் தறுவாயில் வாழ்த்துப் பாடி முடிப்பது தமிழ்க் காப்பிய மரபில் காணவியலாத ஒன்று. ஆனால் இந்நூலில் தமிழ்மொழி, தமிழினம், தமிழர்கள் வாழுமாறு வாழ்த்து நிறைவுறும் பாங்கு காணப்பெறுகின்றது.

இவ்வாறு ஒருசில நிலைகளில் இராவண காவியம் வேறுபட்டு அமைந்துள்ளது. பிற காப்பிய ஆசிரியர்கள் அவையடக்கம் பாடுவது போலவே இந்நூலிலும் அவையடக்கப் பாடல் காணப்படுகிறது. பெருங்காப்பியம் போன்றே நாட்டு வருணனை, நகர வருணனை, நாயகன் தோற்றம் எனப் பலவற்றைத் தன்னுள் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது.

காவியத்தின் வடிவமைப்பில் ஆசிரியர் கலிவிருத்தம், வஞ்சி விருத்தம் விரவி வர யாப்பினைப் பயன்படுத்தியுள்ளார். செவ்வியல் இலக்கியங்களைப் போன்று இந்நூலுள் நாடகத் தன்மை மிகுந்து அமைந்துள்ளது.

1.5.5 பூங்கொடி இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையின் நகலாக, பூங்கொடிக் காப்பியம் அமைந்துள்ளது. மணிமேகலை பௌத்தம் பரவக் காரணமாகத் திகழ, பூங்கொடிக் காப்பியத் தலைவி பூங்கொடி, தமிழ்மொழி வளரத் தொண்டு செய்வதாகப் படைக்கப்பட்டுள்ளாள். மணிமேகலையில் காணப்பெறும் காட்சிகள், கதாபாத்திரங்கள் போன்று இந்நூலிலும் படைக்கப்பட்டுள்ளன.

மணிமேகலையில் பளிக்கறையில் மணிமேகலை நுழைந்தபோது தொடர்ந்து வந்த உதய குமரன் உள் நுழையாது வெளியில் காத்திருந்தது போல் பூங்கொடிக் காப்பியத்தில் கோமகன் என்னும் கதைத் தலைவன் பூங்கொடியைத் தொடர்ந்து சென்றான். அவள் நூலகத்தில் நுழைந்ததால், அவ்விடத்தில் தன் விருப்பத்தைக் கூறாது விலகினான் என அமைக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம்.

மணிமேகலையில் இடம் பெற்றுள்ள கதை மாந்தர்கள் போன்றே பூங்கொடியில் கதை மாந்தர்கள் இடம் பெற்றுள்ளமைக்குக் கீழ்வருவன சான்றுகளாகும்:

மணிமேகலை                                                      பூங்கொடி

மாதவி                                                                அருள் மொழி

வயந்த மாலை                                                     அல்லி

சித்ராபதி                                                            வஞ்சி

காய சண்டிகை                                                   சண்டிலி

அறவணஅடிகள்                                                  மறைமலையடிகள்

உதயகுமரன்                                                       கோமகன்

மணிமேகலை 30 காதைகளில் அமைய, பூங்கொடி 31 காதைகளில் அமைந்துள்ளது. பூங்கொடிக் காப்பியத்தின் காதைப் பெயர்கள் மணிமேகலை காப்பியத்தின் காதைப் பெயர்களோடு ஒத்துக் காணப்படுகின்றன.

மணிமேகலை                                                         பூங்கொடி

விழாவறை காதை                                                   விழாவயர் காதை

மலர்வனம் புக்க காதை                                            பூங்கா புக்க காதை

பளிக்கறை புக்க காதை                                            படிப்பகம் புக்க காதை

மணிமேகலா தெய்வம் வந்து                                      தாமரைக்கண்ணி தோன்றிய

தோன்றிய காதை                                                    காதை

பாத்திரம் பெற்ற காதை                                           ஏடு பெற்ற காதை

சிறை செய் காதை                                                  சிறை படு காதை

சிறை விடு காதை                                                   சிறை விடு காதை

இவ்வாறு பலநிலைகளில் செவ்விலக்கியத்தோடு ஒத்துப் போகும் இக்காப்பியம் தான் தோன்றிய காலச் சூழலுக்கு ஏற்றவாறு மாறுபட்டுத் தோன்றுகிறது. இந்நூலாசிரியர் முடியரசன் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர். ஆதலால் பூங்கொடிக் காப்பியத்தில் மொழிப் போராட்டம், ஆலயங்களில் தமிழ்ப் போராட்டம், தமிழிசைப் போராட்டம் என இருபதாம் நூற்றாண்டின் பின்னணியில் தம் காப்பியத்தைப் படைத்துள்ளார். தமிழ்மொழிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்ட எதிர்ப்பை முன்வைத்துப் படைத்துள்ளதால் இக்காப்பியத்தில் சிலர் மொழிப் போராட்ட வீரர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.

1.6 இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்களின் இலக்கிய நயம்

இருபதாம் நூற்றாண்டின் காப்பியங்கள் செவ்விலக்கியக் காப்பியங்களிலிருந்து சில நிலைகளில் மாறுபட்டுக் காணப்படினும் இலக்கிய நயத்தில் ஒரு சிறிதும் குறையாத வளம் உடையனவாய் அமைந்துள்ளன. வருணனை, உவமை, உருவகம், அணி, பின்னோக்கு, கற்பனை நாடக முறைமை, திணை வருணனை, சந்த வேறுபாடு எனப் பெருங்காப்பியங்கள் மற்றும் சிறு காப்பியங்களுக்கு நிகராக அமைந்துள்ளன.

இலக்கிய வாசகன் உய்த்துணர்ந்து மகிழும் வண்ணம் தான் கூறப்புகுந்த செய்தியினைக் கவிஞன் இலக்கிய நயம்பட, பல்வேறு உத்திகளைப் புகுத்திக் கூறிச் செல்வான். இத்தகைய உத்திகளையும் இக்காப்பியங்களில் காண முடிகின்றது. ஒவ்வொரு காப்பியத்திலிருந்து ஒரு சான்றினைக் காண்போம்.

1.6.1 தேசிய உணர்வு மனித தெய்வம் காந்தி காதை என்னும் காப்பியம் காந்தியின் குழந்தைப் பருவக் குறும்புகளை எடுத்துரைக்கிறது. சின்னஞ்சிறு குழந்தையொன்று வீதியில் விளையாட ஓடி வருகிறது. அங்கே ஏற்கெனவே ஒரு சில குழந்தைகள் வீதியில் மணல் வீடு கட்டி மகிழ்ச்சியோடு ஆடிக் கொண்டுள்ளனர். குழந்தைக் காந்தி தன் சின்னஞ்சிறு கால்களைத் தரையில் அழுத்தமாகப் பதித்து நடந்து வருகின்றது. அப்படி நடந்து வருதலைக் கவிஞர் அக்குழந்தையின் ஒவ்வோர் அடியும் எடுத்து வைக்கும்போது, “இப் பரதகண்டத்தை ஆளவந்த அயலாரே! நீங்கள் பல ஆண்டுகள் எங்கள் நாட்டை ஆள முடியாது. இதோ நானே நடை பயிலத் தொடங்கிவிட்டேன்” என்பது தொனிக்கக் கவிதை புனைந்துள்ளார்.

மேலும் அக்குழந்தை தன் பிஞ்சுக் கால்களால் அச்சிற்றில்களை ஓங்கி உதைத்ததாம். அப்படிச் சிதைக்கும் காட்சியில் அயலாரின் அடி ஆழத்தில் இந்தியாவை வெகுகாலம் ஆளலாம் எனக் கட்டிய மனக்கோட்டை சிதையும் வண்ணம் ஓங்கிச் சிதைத்ததாகக் கவிஞர் புனைகின்றார்.

மகாத்மா காந்தி பாரத தேசத்திற்குத் தேடித் தந்த சுதந்திரவுணர்வை, அவரது மனவலிமையை உலகிற்கு உணர்த்த இக்காட்சியைக் கவினுறப் படைத்துக் காட்டியுள்ளார் எனலாம். இத்தகைய சுவையான இலக்கிய மணம் கமழும் காட்சிகளை இக்காப்பியத்தில் ஆங்காங்கே காணமுடிகின்றது.

1.6.2 உவமை பூங்கொடிக் காப்பியத்தில் 19ஆம் காதையான கோமகன் மீண்டும் தோன்றிய காதையில் கோமகனின் செயல்பாடுகள் காட்டப்படுகின்றன. பூங்கொடி மீது காதல் கொண்ட கோமகன் பூங்கொடியின் தோழி அல்லியின் உதவியை நாடினான். அல்லி, பூங்கொடியின் காமம் கடந்த தன்மையை எடுத்துக் கூறி, கோமகனை விலக்கினாள். இந்நிலையில், இதனைத் தெரிந்து கொண்ட பூங்கொடியின் பாட்டி வஞ்சி, கோமகனைச் சந்தித்து, பூங்கொடியிடம் கோமகன் தன்னுடைய காதலை மீண்டும் வெளிப்படுத்துமாறு வலியுறுத்துகிறாள். இதனை, இக்கவிஞர் அழகான உவமையின் மூலம் பொருத்தமுற எடுத்துரைத்துள்ளார்.

நெய்யின்றி ஒளியிழந்து கிடக்கும் விளக்கில் மீண்டும் திரியைத் தூண்டி நெய்யை ஊற்றிட அது எவ்வாறு சுடர்விட்டுப் பிரகாசிக்குமோ அதுபோல, கோமகனது காமம் தளர்வுற்ற வேளையில் வஞ்சி அவனைத் தூண்டி அவனது உணர்வுகளை மேலெழச் செய்தனள் எனக் காட்டுகிறார். அப்பாடல் வருமாறு:

திரியின் பிழம்பு சிறிது சிறிதாகக்

குறுகி அணைந்து மறையும் நிலையில்

குறை திரி தூண்டிக் குறையா நெய்யும்

ஊற்றிட நிமிர்ந்தொளி ஓங்குவதென்ன

சாற்றிய காமம் தளர்ந்திறும் நிலையில்

செற்றிருந் தோனை விறலிதூண்ட

இதில் மனத்தை விளக்காகவும், ஆசை வார்த்தைகளை நெய்யாகவும், அவளது செயலைத் திரிதூண்டும் செயலாகவும் படைத்துக் காட்டியிருப்பது படித்து இன்புறுதற்குரியது. வலிவிழந்த எண்ணம் வலுப்பெற்று மீண்டும் மேலெழுவது ஒளியிழந்த விளக்கு மீண்டும் நெய் பெற்று ஒளிர்வதோடு உவமிக்கப்படும் தன்மை ஆசிரியரது கற்பனைத் திறத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. குறை திரி, குறையா நெய் என்னும் தொடரில் குறை என்ற சொல்லை நேர் பொருளாகவும் எதிர்மறைப் பொருளாகவும் பயன்படுத்தியிருப்பது கவிஞரது இலக்கியத் திறத்திற்கும் சொல் வளத்துக்கும் ஒரு சான்று.

1.6.3 வருணனை இக்காப்பியத்தைப் போன்று சுத்தானந்தரின் பாரதசக்தி மகாகாவியம் பலவிடங்களில் பெருங்காப்பியங்களை நினைவிற்குக் கொண்டு வருவதாய் அமைந்துள்ளது. கற்பனை கலந்தும் கலவாதும் வரும் வருணனைப் பகுதிகள் பல இக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன. பாரதப் புண்ணிய பூமியைப் பற்றிக் கவியோகியார் பாடும்போது, அங்கு இரப்பவர் இல்லை; இரப்பவர்க்கு இல்லை எனக் கூறுவார் இல்லை; மறைப்பவரும் இல்லை; மக்களிடையே உயர்வு தாழ்வு காணும் பேதமுடையோரும் இல்லை; அன்பை என்றும் துறக்க வேண்டுபவரும் இல்லையென மக்கள் மனோபாவத்தை எடுத்துரைக்கிறார். இந்த அடிகளைக் காணும்போது கம்பரின் கோசலை நாட்டு வருணனையில் இடம்பெறும்.

‘வண்மையில்லையோர் வறுமையின்மையால்’ என்னும் பாடல் வரி நினைவுக்கு வருகிறது.

இரப்பவர் இல்லை ‘இல்லை’ என்பவரில்லை; உள்ளங்

கரப்பவரில்லை; பேதங் காண்பவரில்லை; அன்பைத்

துறப்பவரில்லை, வஞ்சந் தொல்லையும் இல்லை, தன்னை

மறப்பவரில்லை, உண்மை மறுப்பவரில்லை மாதோ?

(பாரத சக்தி மகாகாவியம்)

என வரும் பாடல் கவிஞரின் கற்பனை ஆற்றலைக் காட்டுகின்றது.

1.6.4 பிற காப்பியச் செல்வாக்கு இராவண காவியம் காப்பியச் சுவையில் குறைந்ததல்ல! புலவர் குழந்தை இராவணன் மண்டோதரி காதல் பற்றிக் குறிப்பிடும்போது இராவணன் கூற்றாகப் படைத்துள்ள பாடல் திருக்குறளைப் பிரதிபலிப்பதாக விளங்குவதைக் காணலாம்.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும் (1094)

என்னும் இத்திருக்குறளைப் புலவர் குழந்தை,

என்னை நோக்காதி யானோக்க

இருகண் கொண்டு நிலனோக்கும்

என்னும் அடிகளில் அவ்வாறே கையாண்டு இருப்பது திருக்குறள் மீது அவருக்குள்ள அவாவினைக் காட்டுகின்றது.

மண்டோதரி நாணத்தால் தன் கைகளைக் கொண்டு கண்களைப் பொத்திக் கொள்வதைக் கவிஞர் முற்றுருவமாகப் படைத்துள்ளார்.

பூங்கைப் போதால் முகமதியம்

பூத்த குவளை மலர் மூடும்

- (காட்சிப் படலம் 86 :1-2)

இந்த அடிகளில் கைகளைத் தாமரைப் போதாகவும் முகத்தை நிலவாகவும், கண்களைக் குவளையாகவும் உருவகித்து, தாமரைப் போது, முகமதியத்தில் பூத்த குவளையை மூடிக் கொண்டது நாணத்தால் என மண்டோதரியின் செயலை வருணிப்பது இராவண காவியத்தில் நிறைந்து கிடக்கும் இலக்கிய இன்பத்திற்கு ஒரு சான்று எனலாம்.

1.7 தொகுப்புரை

இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்கள் என்னும் இப்பாடம் கீழ்வரும் கருத்துகளை உள்ளடக்கி நிற்கிறது:

அவ்வக் காலச் சூழல்களுக்கு ஏற்ப இலக்கியங்கள் தோன்றுகின்றன. அவற்றுள் ஒன்று காப்பியம் எனலாம்.

காப்பியங்களுக்குரிய இலக்கணத்தைத் தொல்காப்பியம் கூறவில்லை. இலக்கண நூலான தண்டியலங்காரம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணத்தை எடுத்துரைத்துள்ளது.

தன்னேரில்லாத் தலைவனைக் கொண்டதாய் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினைப் பெற்று வருவது பெருங்காப்பியம்.

நாற்பொருள்களுள் ஒன்று குறைந்து வருவது சிறுகாப்பியம்.

மக்களிடையே வாய்மொழி மரபில் பயின்று வந்து, மக்கள் கூட்டத்தால் உருவாக்கப்பட்டு ஏட்டிலக்கியமாக மலர்வது வளர்ச்சிக் காப்பியம்.

கவிஞர்களது கற்பனை வளத்தால் உருப்பெறுவது கலைக் காப்பியம். பெருங்காப்பியங்கள், சிறு காப்பியங்களின் பெயர்கள் காட்டப்பெற்றுள்ளன.

காப்பியக் காலம் எது என அறுதியிட்டுக் கூற இயலாது என்பதும் கி.பி. 2ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு கால இடைவெளியில் காப்பியங்கள் தோன்றியுள்ளன என்பதும் பெறப்பட்டுள்ளன.

தமிழில் தோன்றிய முதல் காப்பியத் தலைவர்கள் மூவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் தோன்றிய தழுவல் மற்றும் சார்பு நூல்களில் அரசர்கள் பாட்டுடைத் தலைவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தொடக்கத்தில் பிற சமயங்களையும் எடுத்துரைத்த காப்பியப் போக்கு பின்னர் மெல்ல மாறித் தனித்தொரு சமயம் சார்ந்த தன்மையதாகப் படைக்கப்பட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் பல காப்பியங்கள் தோன்றி உள்ளன. இக்காப்பியங்களில் இரட்சணிய யாத்திரிகம், மனித தெய்வம் காந்தி காதை, பாரத சக்தி மகாகாவியம், பூங்கொடி, இராவண காவியம் ஆகிய முக்கிய ஐந்து நூல்களின் போக்குகள் குறித்தும் இலக்கிய நயம் குறித்தும் கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

இரட்சணிய யாத்திரிகம் சாதாரணக் குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு விளங்கினும், அதில் சமயத் தலைவராகிய இயேசுவின் வரலாறும் இடம் பெற்றுள்ளது. பெருங்காப்பியமாகக் கருதப்படினும் வீடுபேறு குறித்து இக்காப்பியம் பெரும்பாலும் பேசுகிறது.

அடுத்து இடம் பெற்றுள்ள பாரதசக்தி மகா காவியம் உயர்ந்த இலட்சியம் கொண்ட கதாபாத்திரத்தினைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ளது.

கடவுள் வாழ்த்து, காப்பியப் பாவகை, கால இடமயக்கம், உருவக முறை ஆகியவற்றால் மாறுபட்ட போக்கினதாக அமைந்துள்ளது.

மணிமேகலை போன்றே பூங்கொடி அமைந்திருப்பினும் பல நிலைகளில் மாறுபட்டதாய் அமைந்துள்ளது. அதில், தமிழ்மொழி, தமிழிசை, தமிழ் நூல்கள் தோற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 20ஆம் நூற்றாண்டின் காலச் சூழலுக்கு ஏற்றபடி அமைந்துள்ளது.

கம்பராமாயணத்துக்கு எதிராகத் தோன்றிய இராவண காவியம் வாழ்த்து, அவையடக்கம், காலம் கூறல், ஆசிரியர் யாரெனக் கூறல் எனப் பல புதுவகைப் போக்குடன் காட்சியளிக்கிறது.

20ஆம் நூற்றாண்டில் எழுந்த பிற காப்பியங்கள் அரசியல் தலைவர்களைப் பாட்டுடைத் தலைவர்களாய்க் கொண்டு அவர்தம் பெருமையைப் பற்றிப் பேசுகின்றன.

பெருங்காப்பியங்களுக்கு அதாவது செவ்வியல் இலக்கியங்களுக்கு ஏற்ப 20ஆம் நூற்றாண்டுக் காப்பியங்களும் இலக்கிய நயம் உடையனவாய்க் காணப்படுகின்றன.

பாடம் - 2

பாரத சக்தி மகாகாவியம்

2.0 பாட முன்னுரை

இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்களுள் பாரத சக்தி மகா காவியத்திற்கு ஒரு சீரிய இடம் உண்டு. பாரத நாட்டு மக்களின் அற்புத சக்தி உலகை உய்விக்கும் உயர்சக்தியாக, ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்மநேயக் கூட்டம், ஒரே யோக விஞ்ஞானச் சமுதாயம் காண வேண்டும் என்னும் இலட்சியத்தை இது முன்னிலைப்படுத்துகிறது. இது புதுயுகத்தின் பூரண வேதம். இவ்வகையில் இக்காப்பியம் தனிச் சிறப்புடையதாக உள்ளது. காலவரையறையோ இடவரையறையோ இல்லாமல் பாரத மக்களின் ஆற்றலை, சிந்தனையை வெளிப்படுத்தும் பாங்கில் பண்டைக் காலச் சிந்தனை தொடங்கி அண்ணல் காந்தியடிகள் வரையுள்ள எல்லாமே இக்காவியத்தில் இடம் பெற்றுள்ளன. இவ்வகையில் இக்காவியம் தனி இயல்புடையதாகத் திகழ்கிறது எனலாம். இக்காவியத்தின் மற்றொரு சிறப்பு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஓர் இலட்ச வெண்பொற்காசுகளை இராசராசன் விருதாகப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இது எளிய நடையில் அமைந்துள்ளதால் இசைக் கருவிகளுடன் பாடிச் சுவைப்பதற்கு ஏற்றது.

இத்தகைய சிறப்புகள் பொதிந்துள்ள பாரத சக்தி மகாகாவியம் குறித்த செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

2.1 பாரத சக்தி மகாகாவியம்

பாரத சக்தி மகாகாவியம் கவியோகி சுத்தானந்த பாரதியாரின் படைப்புகளுள் ஒன்றாகும். சமயோக வேதம் என்னும் சிறப்பினை இக்காவியம் பெற்றுள்ளது. இதன் முதல் பதிப்பு 1948லும் விரிவுபடுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு 1969லும் வெளிவந்தன.

இந்நூலுக்கு அண்ணல் காந்தி அடிகள், அன்னிபெசண்ட் அம்மையார், சுவாமி சிவானந்தர், ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள், வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை, நவநீத கிருட்டிண பாரதியார், மட்டக்களப்பு மகாகவி, மகா மகோபாத்யாய உ.வே. சாமிநாதையர், திரு.வி. கல்யாண சுந்தரனார் முதலிய சான்றோர்கள் பாராட்டுரையும் டாக்டர் மு.வரதராசனார் சிறப்புப் பாயிரமும் அளித்துள்ளனர். இந்நூலின் சீர்மையை அவை விளக்கும்.

இக்காப்பியம் பற்றிய மிக வியப்பூட்டும் செய்தி, இது 50,000 (ஐம்பதாயிரம்) அடிகளால் ஆனது என்பதாகும். இக்காவியம்,

(1) சித்தி காண்டம்

(2) கௌரி காண்டம்

(3) சாதன காண்டம்

(4) தானவ காண்டம்

(5) சுத்த சக்தி காண்டம்

என்னும் ஐந்து காண்டங்களைக் கொண்டது. இக்காவியம் படலம் என்னும் அமைப்பு உடையது. ‘மங்கல வாழ்த்துப் படலம்’ முதல் ‘சுத்தவாணிப் படலம்’ ஈறாக 147 படலங்களைக் கொண்டுள்ளது.

மக்கள் அனைவரும் சாதி, சமய, இன, மொழி வேற்றுமை இன்றிச் சன்மார்க்க நெறியில் சமயோக வாழ்வு பெறுவதை நோக்கமாக இக்காப்பியம் முன்னெடுத்துச் செல்கிறது. இச்சமயோகம் பற்றி இந்நூலில் பல இடத்தும் பேசப்பட்டுள்ளது. மகாகவி சுத்தானந்த பாரதியார்

மனத்தைத் திருத்தி இனத்தைத் திருத்தி

காமம் வெகுளி கலக்கம் இல்லாது

உள்ளம் களிக்க உலகம் செழிக்க

எல்லா உயிர்க்கும் இறைவன் ஒருவனே

எல்லா உடலும் இறைவன் ஆலயமே…

எனும்சம யோகமே இதயத் துடிப்பாய்

அகப்புறத் தூய்மையும் அஞ்சா உரிமையும்

அமரத் தன்மையும் அடைந்து மாந்தர்

வாழும் வகையை வழங்கும் சக்தியே-

சமயோ கந்தரும் பாரத சக்தியாம்.

(பாரத சக்தி மகாகாவியம், பாரத சக்தி மலர்ச்சி, 23)

என்று சமயோகம் பற்றியும் அதனை வழங்கும் பாரதசக்தி பற்றியும் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

இக்காப்பியம் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்களுள் தலையாயதாகும். இக்காப்பியம் கவியோகி சுத்தானந்த பாரதியின் ஆன்மிகப் பயணம் பற்றியது என்று உறுதியாகக் கூறலாம். சத்தியன், சுத்தன், சக்தி, மாவலி, கலியன், மோகி ஆகிய காப்பிய மாந்தர்கள் பண்பின் உருவகங்களாக அமைந்துள்ளனர். அவ்வகையில் இஃது ஓர் உருவகக் காப்பியமாக (Allegory) அமைந்துள்ளது.

2.1.1 ஆசிரியர் பாரத சக்தி மகா காவியத்தின் ஆசிரியர் கவியோகி சுத்தானந்த பாரதியார் ஆவார். இவர் சடாதரையர் என்பாருக்கும் காமாட்சி அம்மை என்பாருக்கும் நான்காவது பிள்ளையாகப் பிறந்தார். இவர் பிறந்த ஊர் சிவகங்கையாகும். பிறந்தநாள் 11.5.1897 என்பதாகும். 92 ஆண்டுகள் நிலவுலகில் வாழ்ந்தார்.

இவர் தெய்வ சிகாமணிப் புலவரிடம் முறையாகத் தமிழ் பயின்றார். தேவார, திருவாசகங்களையும், தாயுமானவர், கம்பர் ஆகியோர் படைப்புகளையும், திருக்குறளையும், கைவல்யம், ஞானவாசிட்டம் முதலிய நூல்களையும், மெய்கண்ட சாத்திரங்களையும் விரும்பிக் கற்றார். இசைப் பயிற்சியும் பெற்றார். இளமையிலேயே யோக வாழ்க்கையை மேற்கொண்டார். இவர் ‘ஓம் சுத்த சக்தி’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்தார். தியானம், பக்திப் பாடல்களையே வழிபாடாகக் கொண்டு வாழ்ந்தார். தமிழினிடத்தும் நாட்டினிடத்தும் மனித சமுதாயத்திடத்தும் அன்பு பூண்டு வாழ்ந்தார்.

வாழ்வைத் தவத்துக்கே நிலைக்களம் ஆக்கிய சுத்தானந்த பாரதியார் பல இதழ்களையும் நடத்தியுள்ளார். பாலபாரதி, சமாசபோதினி, தொழிற்கல்வி, இயற்கை, தமிழ் சுயராஜ்யா ஆகியவை அவர் நடத்திய இதழ்களாகும்.

அவர் பன்மொழிப் புலமையாளராகவும் இருந்தார். ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி, தெலுங்கு, வடமொழி ஆகியவை அவர் அறிந்த பிற மொழிகளாகும்.

அவர் கைவண்ணத்தில் பல படைப்புகள் உருப்பெற்றன. குண்டலகேசி, வளையாபதி ஆகிய இரண்டையும் ஆசிரியப்பாவில் படைத்துள்ளார். கவிக்குயில் பாரதியார், சிலம்புச் செல்வம், திருக்குறள் இன்பம், தமிழா கேள் முதலிய பல நூல்களைப் படைத்துள்ளார். ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார். பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் யூகோவின் Les Miserables என்ற நாவலை ஏழைபடும் பாடு என மொழிபெயர்த்துத் தந்தார். தாந்தே (Dante), வால்ட் விட்மன் (Walt Whitman) முதலியோர் வாழ்க்கை வரலாற்றையும் படைப்புத் திறனையும் நூலாக்கியுள்ளார்.

தாந்தே                                                   வால்ட்விட்மன்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

சுவாமி சுத்தானந்தர் நாடக ஆசிரியராகவும் நாடக நடிகராகவும் திகழ்ந்துள்ளார். “இந்தியாவில் முதல் விடுதலைக்கொடி நாட்டித் திருக்குறள் ஆட்சி நிறுவிய வீரசக்தி வேலுநாச்சியார்” என்னும் நாடகத்தை இயற்றியுள்ளார். அந்நாடகத்தில் நடித்தும் உள்ளார். மற்றொரு குறிப்பிடத்தக்க நாடகம் காலத்தேர் (The Car of Times) என்னும் இனிய காவிய நாடகம் ஆகும்.

இவ்வாறு தம் வாழ்நாளெல்லாம் தமிழின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டவர் கவியோகி சுத்தானந்தர் என்றால் அது மிகையாகாது.

2.1.2 கதைக்கரு இக்காப்பியத்தின் கருப்பொருள் தத்துவச் சாயல் உடையதாகும். நன்மையும் தீமையும் மோதுகின்றன. முடிவில் நன்மை வெற்றி பெறுகிறது. தீமையும் தன் இயல்பு மாறி நன்மையின் பக்கம் சாய்கிறது. சாத்வீகம் என்னும் பண்பு மேலோங்கி நிற்கிறது. உலகம் போரும் பூசலும் அற்று, மக்கள் அனைவரும் ஒரே இறைவன்; ஒரே இனம் என்னும் இலட்சிய வாழ்க்கை வாழ்ந்து சமயோகம் புரிந்து மேன்மையுற வேண்டும் என்பது பாரதசக்தி மகாகாவியத்தின் கருப்பொருளாகும்.

2.2 கதை மாந்தர்

கதை நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்பவர் கதை மாந்தர்கள் ஆவர். இக்காப்பியத்துள் கதை மாந்தர்கள் பலர் உள்ளனர். அக்கதை மாந்தர்களை இருவகைப்படுத்தலாம். அவை, (1) தலைமை மாந்தர் (2) துணைமாந்தர் எனலாம்.

பாரத சக்தி மகா காவியத்தின் தலைமை மாந்தராகச் சுத்தன் திகழ்கிறான். அவனே காப்பியத்தின் நடுநாயகமாக உள்ளான். அவனைச் சுற்றியே எல்லா மாந்தர்களும் எல்லா நிகழ்ச்சிகளும் அமைந்துள்ளன. ஏனைய காவிய மாந்தர்களான சத்தியன், சித்திமான், கௌரி, போகன், கலியன், மாவலி, சுந்தரி, சக்தி, தூமகேது முதலியவர்கள் துணைமாந்தர்களாக உள்ளனர்.

இனி, காப்பியத் தலைமகனாகிய சுத்தன் பற்றிய கருத்துகளை ஒருவாறு தொகுத்துக் காண்பது காப்பிய நோக்கைப் புரிந்துகொள்ள உதவும்.

2.2.1 சுத்தன் பிறப்பு

பூரணம் பெறும் பாரத புண்ணிய பூமியில் மனு, மதி ஆகியோரின் வழித்தோன்றல்கள் பலர் தோன்றினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பரதன், தென்னவர், வளவர், சேரர், பிரகலாதன், இராமன், சீதை, மாருதி, கண்ணன், பாண்டவர், புத்தன், மகாவீரர், அசோகன், அப்பர், சம்பந்தர், சுந்தரர், வாதவூரடிகள், ஆதிசங்கரர், கிறித்து, முகம்மது, கோவிந்தசிங், இராமதாசு, இராம்மோகன், தயானந்தன், பரமஹம்சர் முதலியோர் இவர்களின் வழியில் இறுதியில் வந்தவன் சத்தியன். அவன் சித்திமாநகரை அறநெறி பிறழாமல் ஆண்டு வந்தான். நாட்டு நன்மையே நாட்டமாகக் கொண்டு பண்புடன் அரசாட்சி புரிந்தான். அவன் மனைவி இந்திரை ஆவாள். மன்னன் சத்தியன், அரசி இந்திரை ஆகியோரின் நல்லறப் பயனாய்ச் சுத்தன் பிறந்தான். கவியோகி சுத்தானந்தர், சுத்தனின் பிறந்தநாள் குறிப்பையும் பெருமையையும் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறார்.

ஆவணி மூலத்தில் அவத ரித்தவன்

பூவணி யாகவே பொலிவன்; புண்ணியர்

நாவணி எனத்திரு நாமம் ஓதுவார்

பாவணி புலவர்கள் இவனைப் பாடுவார்

(பாரத சக்தி மகாகாவியம், சித்திகாண்டம்-10, சுத்தநாமப் படலம் : 60)

(ஆவணி மூலம் = ஆவணித் திங்கள் மூல நட்சத்திரம்; பூ அணியாக = உலகிற்கு அழகாக)

கல்வி

கல்வி கற்கும் அகவையை அடைந்ததும் சத்தியன் தன் மகன் சுத்தனைத் தன் குலகுருவிடம் கல்வி கற்க ஒப்படைத்தான். சுத்தன் தன் ஆசானிடம் பன்னிரண்டாண்டுகள் கல்வி பயின்றான். செந்தமிழ், ஆரியம், ஆங்கிலம், இந்தி மொழிகளை எல்லாம் கற்றான். யோகம், தருமம், நீதிநெறி முறைகளையும், கணக்கு மற்றும் அறிவு நூல்களையும் கற்றான்.

ஏட்டினில் எத்தனை கற்றாலும் அவற்றுடன் உலக நடையைக் கற்றுணரவே கல்வி முழுமை பெறுகிறது. சுத்தனும் தன் தந்தையின் ஆணையின்படி அமைச்சன் சித்திமானுடன் ‘நீதி ஆட்சி நிலவு நன்னாடெலாம்’ காணப் புறப்பட்டான். அவன் வருகையை அறிந்த மன்னர்கள் வரவேற்றனர். அவனை அரியணையில் அமரச் செய்தனர்; அரசியல் சிறப்பை எல்லாம் அவனுக்கு எடுத்து மொழிந்தனர்; பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தனர்.

கலியன் முதல் வீழ்ச்சி

சுத்தன் பஞ்சவடியில் சாந்தமா முனிவரின் அருளைப் பெற்றான். கலியன் அரக்கர்களின் துணையோடு கலகம் செய்ய முற்படுவதை, சாந்த முனிவர் சுத்தனுக்குத் தெரிவித்தார். அவன் வேண்டுகோளை ஏற்றுச் சுத்தனுக்கு இராமாயணக் கதையை உரைத்தார். அதனைக் கேட்டு சுத்தன் மகிழ்ந்திருந்தான். அச்சமயம் கலிநகர் சென்ற ஒற்றர்கள் வந்தனர். அவர்கள் சுத்தனும் அமைச்சன் சித்திமானும் சித்திமாநகர்க்குத் திரும்பிச் செல்வதே உத்தமம் என்றனர். சாந்த முனிவர் பக்த இராமதாசர், சிவாஜி வரலாற்றையும் அவர்களுக்கு உரைத்தார். இச்சமயம் பஞ்சவடியிலேயே கலியனின் வீரர்கள் நுழைந்தனர். சொல்ல ஒண்ணாக் கொடுமைகளைப் புரிந்தனர். சுத்தனும் சித்திமானும் போரை எதிர்கொண்டு இறுதியில் வென்றனர். பின்னர்ச் சித்தி மாநகர்க்குப் புறப்பட்டனர்.

இறையருள் நாட்டமும் மன அமைதியும் வேண்டிய சுத்தன் போர் வந்தபோது அஞ்சாமல் எதிர்கொண்டு வெற்றி பெற்றதால், அவன் கடமை உணர்ச்சி மிகுந்த மன்னன் என்பதை அறியலாம்.

சுத்தன், கௌரி சந்திப்பு

மன்னன் சத்தியன் அரசாட்சியை மகனிடம் ஒப்படைத்துவிட்டுத் துறவு பூண எண்ணினான். தன் எண்ணத்தை அரசவையில் வெளிப்படுத்தினான். அமைச்சர்கள் அவன் கருத்திற்கு இசைவு தந்தனர். மன்னனாக முடிசூடுவதற்கு முன் மகனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்னும் தன் எண்ணத்தையும் அரசன் வெளிப்படுத்தினான்.

சுத்தன் பிறந்த நாள் விழாவில் அழகுக் கன்னியர் பலரும் பங்கு கொண்டனர். எவரிடத்தும் சுத்தன் தன் காதல் உணர்வை வெளிப்படுத்தவில்லை. கௌரியைக் கண்ட மாத்திரத்தில், ‘திண்ணென மின்சாரத்தீ தெறிப்பது போல்’ உணர்ந்தான். இவனுக்கே அவள் பிறந்தாள், அவளுக்கே இவன் பிறந்தான் என்னும்படி அவ்விருவரும் உள்ளம் கலந்தனர்.

கௌரியைச் சுத்தனுக்கு மணம் முடிக்க மன்னன் எண்ணினான். சாந்த முனிவரின் கருத்தும் அதற்கு இசைவாக இருந்தது. ஆனால் சுத்தன் கௌரியை மணக்க விரும்பினாலும் கலியனை அழித்த பின்னரே மணம் புரிய இசைந்தான். சாந்த முனிவர் அவன் கௌரியை மணப்பதால் பல நன்மைகள் உண்டாகும் என்றும் நல்ல செயல்களைத் தள்ளிப்போட வேண்டாம் என்றும் கூறச் சுத்தன் கௌரியை வாழ்க்கைத் துணையாக ஏற்க இசைந்தான்.

சாந்த முனிவரின் மகள் பார்வதி பெற்ற மகள் கௌரி. அவளைக் கவியோகி அறிமுகம் செய்யும் பாங்கு அறியத்தக்கது.

மங்கலப் புன்னகை மலர்ந்த பொன்முகம்

பங்கய வேல்விழி பவள மூரல்வாய்

பொங்கிள மயில் ஒயில் அன்னம் போன்றவள்

(சித்தி காண்டம், 17, பஞ்சவடிப்படலம் : 113-115)

முதற்பார்வையிலேயே சுத்தனின் உள்ளத்தைக் கவர்ந்தாள். அவனுக்கு வாழை, மா, பலா ஆகியவற்றின் கனிகளையும் முதிர் பருப்புகளையும் பச்சிலைகளையும் ஆவின் பாலையும் அமுதாகப் படைத்து ஓம்பினாள்.

சாந்த முனிவர் இராமனின் வரலாற்றையும், இராவணன் வரலாற்றையும், அனுமன் வரலாற்றையும் விரிவாகச் சுத்தனுக்குக் கூறினார். அதனைக் கேட்ட சுத்தன் மகிழ்ந்தான்.

இன்பத்தில் இன்பமாம் இராம நாமத்தில்

அன்புடைத் தாஸரின் அரிய மாக்கதை

உன்புது வாக்கினால் உரைத்தி

(சித்தி காண்டம், 19, ஒற்றுக்கேள்விப் படலம் : 10-12)

திருமணம்

இராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கையையும் விவேகானந்தர் வாழ்க்கையையும் சாந்த முனிவரால் சுத்தன் அறிந்து மகிழ்ந்தான். இல்லற வாழ்வே இனிதெனப் பாரத முனிவர் கூறக் கேட்ட சுத்தன் கௌரியை மணந்தான். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்தியன், சித்திமான், பாரத முனிவர் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர். சுத்தனும் கௌரியும் சிவனும் சக்தியும் போலத் தவ வாழ்க்கையில் திளைத்தனர்.

அரங்கேற்றல்

மன்னன் சத்தியன் மகனுக்கு முடிசூட்ட எண்ணினான். ஆட்சியின் பொறுப்பை எண்ணி அவன் அதனை ஏற்கத் தயங்கினான். அவனை ஊக்குவித்து ஆட்சியை ஏற்குமாறு செய்தாள் கௌரி. மன்னனாகச் சுத்தனும் அரசியாகக் கௌரியும் முடிசூட்டப்பட்டனர். மக்கள் பசியும் பட்டினியும் இன்றி, தீய ஒழுக்கங்கள் இன்றி வாழ்வதற்கு வழி செய்வதாகச் சுத்தன் வாக்குறுதி அளித்தான். சாந்த முனிவர் கூறிய கண்ணனின் வாழ்விலும் அவன் நிகழ்த்திய கீதைப் பேருரையிலும் சுத்தன் ஆழ்ந்து தோய்ந்தான். பீஷ்மனின் தியாக வாழ்விலும் வீர வாழ்விலும் உள்ளம் பறிகொடுத்தான்.

போர் அறம்

கலியன் சித்தியைக் கவரத் திட்டம் போட்டான். அது முறியடிக்கப்பட்டது. சத்தியன் போர்க்கோலம் பூண்டான். சுத்தன் போரில் வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகளைக் கூறினான்.

பாலரைப் பெண்டிரைப் பசுவினைப்

பண்புடை முனிவரை, கவிஞரை,

சீயரைக் கல்வியின் செல்வரை

சேமமாய்க் காமினோ சேனையீர்

(கௌரி காண்டம் – 29, படையெழுந்த படலம் :89-92)

வீரர்களுக்கு எழுச்சியூட்டப் பிரதாப சிங்கனின் வரலாற்றைச் சுத்தன் சொன்னான். அவ்வீர வரலாற்றைக் கேட்ட சித்தியின் வீரர்கள் கிளர்ச்சியுற்றுக் கலியின் படைகளைப் புறங்காட்டச் செய்தனர். சுத்தனும் போர்க்களம் புக ஆயத்தமானான். செருக்களத்தில் போர் வீரர்களுக்குத் தொண்டு செய்யக் கௌரியும் புறப்பட்டாள். போரில் புறங்காட்டிய கலியனைக் கொல்லாது ‘நாளை வாளுடன் வா’ என விடுத்தான். போரில் வெற்றி பெற்றும் அமைதியையே அவன் உள்ளம் நாடியது.

பொல்லாங்கு அறியாப் பொதுஜனங் களையே

ஊனும் கள்ளும் உயிர்க்கொலை வெறியும்

ஏற்றிப் போரில் இழுத்து நிறுத்திப்

பீரங்கி வாயில் பிணிபடச் செய்யும்

அதர்மக் கொடுமை அழியுநாள் என்றோ?

(கௌரி காண்டம் – 34, உறுதிப் படலம் : 64-68)

பகைவனுக்கு அருளும் பண்பு

யானையைக் குழியில் தள்ளி வீழ்த்துவது போல் சுத்தனை வீழ்த்தக் கலியன் செய்த சதியை இளைய வீரன் வடிவம் பூண்ட கௌரி தடுத்தாள். சுத்தனைக் காத்தாள். ஆனால் அவளோ பகைவரின் அம்பிற்கு இரையானாள். அவளைப் பிரிந்த சுத்தன் அவளுக்காகக் கண்ணீர் வடித்தான். போரில் மீண்டும் கலியன் தோற்றான். தன்னை அடிபணிந்த கலியனைச் சுத்தன் விடுதலை செய்தான். ஆனால் கலியன் மீண்டும் படையெடுப்பதையே எண்ணினான். சத்தியன் இடத்திலே கலிநகர் இருப்பதால் வெகுண்ட வீரர்கள் மீண்டும் அவனைக் கைது செய்து சிறையில் இட்டனர்.

பல்கலைக் கழகம்

போரில் உயிர்துறந்த தன் மனைவி கௌரியின் நினைவாகப் பல்கலைக் கழகம் ஒன்றைச் சுத்தன் நிறுவினான்.

குடியாட்சி மலர்ந்தது

நல்லோரிடத்தில் ஆட்சியை ஒப்படைத்து விட்டுத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு தவம் செய்யவே சுத்தன் விரும்பினான். இமயத்திலிருந்து திரும்பிய சாந்த முனிவர் நடந்தவற்றை அறிந்தார். சுத்தனை இமயத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினார்.

சுத்தன் இமயம் செல்லும்முன் நாட்டில் குடியரசாட்சி முறையை நடைமுறைப் படுத்தினான்.

முடியர சாட்சி முடிந்தது நண்பீர் !

குடியர சாட்சிக் கொடியை உயர்த்தினேன்

வாழ்க வாழ்க மானிட உரிமை

அச்சமும் அநீதியும் அடிமையும் ஒழிக !

தலைநிமிர் கவேசம த்துவ தருமம்.

(சாதன காண்டம், 2, சாசனப் படலம் : 34-38)

தொண்டுள்ளம்

சுத்தன் அன்னையையும் அமைச்சனையும் மற்றுள்ளோரையும் பிரிந்து தவம் செய்யப் புறப்பட்டான். அவன் அன்னை இந்திரை நாட்டைக் காக்கும் பணியை மேற்கொண்டாள். பல துறவிகளையும் வழிகளில் கண்டு அவர்களோடு வாதிட்டு வென்று காமபுரியை அடைந்தான். சாருவாகம், சாக்தம் என்னும் சமய நெறிகள் அங்குச் செல்வாக்குப் பெற்றிருந்தன. ஆடவரும் பெண்டிரும் கள்ளருந்தலிலும் காமக் களியாட்டங்களிலும் ஈடுபடுவதை கண்டு திகைத்தான். காமி-வாமி என்னும் இருவரும் தலைமை ஏற்க ஒழுக்கச் சீர்கேடுகள் காமபுரியில் மலிந்திருந்தன. சுத்தன் காரணமாக வாமியும் காமியும் அவர்களின் படைகளும் சண்டையிட்டுக் கொண்டன. சண்டையில் இருபடைகளிலும் பெரும் அழிவு ஏற்பட்டது. பின்பு சுத்தன் காமபுரி மக்களைச் சந்தித்து அவர்களுக்கு இறை உணர்வையும் ஆன்ம இருப்பையும் உணர்த்தி அவர்களை நல்வழிப்படுத்தினான். மழையின்றி மக்கள் வாடியதைக் கண்டு, கடவுளைத் தொழுது மழை பொழியச் செய்தான்.

புத்தர், மகாவீரர்

காமபுரியை நீங்கிப் புத்தபுரியை அடைந்தான். தருமசேனர் புத்தரின் வாழ்க்கை வரலாற்றையும் கருத்துரைகளையும் அவனுக்கு விளக்கிக் கூறினார். அதன்பின் ஜீனவரன் என்னும் சமண சாது மகாவீரரின் வாழ்க்கை வரலாற்றையும் தத்துவங்களையும் கூறச் சுத்தன் அறிந்து தேர்ந்தான்.

இயேசு கிறித்து, நபிகள் நாயகம்

இயேசுதாசு என்னும் கிறித்தவர் சுத்தனுக்கு இயேசு கிறித்துவின் வரலாற்றையும் போதனையையும் கூறினார். அவற்றைக் கேட்டுச் சுத்தன் மெய்யுணர்வு எய்தினான். அப்துல்லா என்னும் சான்றோர் மௌல்வி நபி நாயகம் அவர்களின் வாழ்க்கையையும் இசுலாமிய சமய உண்மைகளையும் சுத்தனுக்கு அறிவுறுத்தினார்.

குருநானக், கபீர்

சுந்தர சிங் என்னும் சீக்கியர் குருநானக்கின் வாழ்க்கை வரலாற்றையும் சமய நெறிகளையும் சுத்தனுக்கு விவரித்துரைத்தார். சீக்கியரிடத்தில் விடை பெறுமுன் கபீர்தாசின் வாழ்க்கைச் சிறப்பைத் தான் அறிந்தபடி அவர்களின் நெஞ்சம் நெகிழ இசைத்தான்.

ஜரதுஷ்ட்ரர்

பின்னர் ஆரியமான் என்பவரோடு அக்கினி நகரை அடைந்தான் சுத்தன். ஆரியமான் ஜரதுஷ்ட்ரர் வாழ்க்கை வரலாற்றையும் அவர்தம் கருத்துரைகளையும் சுத்தனுக்கு அறிவுறுத்தினார்.

வைதிகம்

சுத்தன் தேவதாசுடன் வேதபுரிக்குச் செல்லும் வழியில் தீயவர்களால் நையப் புடைக்கப்பட்டு, காலொடிந்தும் அவர்களுக்கு அன்பு காட்டினான். தேவதாசின் பணிவிடையாலும் சக்தியின் அருளாலும் உடைந்த கால் ஒட்டிக் கொண்டது. தன் சமய அனுபவங்கள் அனைத்தும் நூலாக்கித் தன்பால் நேயமுடையோர்க்குச் சுத்தன் அளித்தான். அவர்கள் வன்கொடுமை வழிவிடுத்து நன்னெறியில் நின்றனர்.

வேதபுரி சாதிப்பிரிவினைகளால் சிதைவுற்றிருந்தது. வேத நெறிகள் பின்பற்றப்படவில்லை. போலி ஞானங்கள் பேசியே வேதியர்கள் பொழுதினைக் கழித்தனர். சில சாதியார் கோயிலுள் நுழையவும் தடை விதித்தனர். இறைவனை மறந்தனர். சுத்தனை அரட்டர்கள் மறித்து,

என்ன சாதிஎம் மதம்குலம் கோத்திரம் என்னே?

என்ன கோயிலில் எவ்வகை எவ்வுருத் தொழுவாம்?

உன்னை உய்விக்கும் குருபெயர் உரை

(சாதன காண்டம், 18, வேதபுரிப் படலம் : 126-128)

(உய்விக்கும் = வழிநடத்தும்)

என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்.

அவற்றிற்கு அவன்

மனிதச் சாதியான், மனிதரின் குலம் ; உலகு எல்லாம்

எனது கோயிலாம் இதயத்தில் இருப்பதுஎன் இறையாம்.

மனதை வென்றவன் மமதையைக் கொன்றவன் குருவாம்

புனித நெஞ்சுஉரை போதமே வேதமென்று அறிவீர்.

(சாதன காண்டம், 18, வேதபுரிப் படலம் : 129-132)

(மமதையைக் கொன்றவன் = அகந்தையை அழித்தவன்)

வேதபுரியில் திருமால் நெறியினரின் வேதநெறிக்கு மாறான வாழ்க்கையைக் கண்ட சுத்தன் வெம்பினான். வேதப்பொருளை அனைவரும் அறியச் சுத்தன் சொற்பெருக்காற்றினான். தயானந்தரின் தூய வாழ்வை விவரித்தான். சங்கரரின் வாழ்க்கை உணர்த்தும் உண்மைகளை வெளிப்படுத்தினான்.

சைவம்

பின்னர் ஒப்புயர்வு அற்ற ஞானச் சிவகிரியைச் சுத்தன் அடைந்தான். அங்கே சத்திய உருவாய் உள்ள சதானந்த யோகியைக் கண்டு மனம் உருகி வழிபட்டு அவரையே குருவாகத் தேர்ந்தான். அவர் அவனுக்கு ஞானத்தைக் கற்பித்தார். அவர் அவனுக்குச் சிவஞானபோதம் என்னும் சைவ சித்தாந்த மெய்ப்பொருள் நூலைக் கற்பித்தார். மாணிக்கவாசகர், அப்பர், தாயுமானவர், வள்ளலார் ஆகியோரின் குறிக்கோள் வாழ்க்கையை விளங்க உரைத்தார். அவர் காட்டிய வழியில் நின்று அற்புதமான சித்தியினை அடைந்தான்.

வேதாந்தம்

சாந்த முனிவர் துணையால் சுத்தன் அண்ணாமலையில் உள்ள அருணஹம்ஸ பகவனைக் கண்டான். அருணஹம்ஸ பகவன் சாந்த முனிவரையும் சுத்தனையும் வரவேற்று உண்ணச் செய்தார். அவர் அருளால் பரமானந்த நிட்டை சித்தனுக்குக் கிட்டிற்று. உண்மை அறிவே யோக சித்தருக்கு உரியது என்பதைக் கண்டான்.

பின்னர், புதுவை யோகி அரவிந்தர் நிலையத்தைச் சாந்த முனிவரும் சுத்தனும் அடைந்தனர். அங்கு அவன் அரவிந்தர் தவவாழ்வையும் அலிப்பூர்ச் சிறையில் யோகசித்தி அடைந்ததையும் அறிந்தான்.

சமரச சன்மார்க்கம்

அதன் பின் வடலூர் சென்று இராமலிங்கர் அமைத்த சுத்த சமரச சன்மார்க்கச் சங்கத்தைக் கண்டான். ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உலகிற்குத் தந்த வள்ளல் அவர் என்னும் உண்மையை அறிந்தான்.

இமயப் பயணம்

அங்கிருந்து இமயமலைக்குச் சுத்தனும் சாந்த முனிவரும் சென்றனர். தவம் செய்தற்கு ஏற்ற இடமான இமயம் ஆத்தும சக்தியின் அணிவளர் முடிபோல் காட்சி அளித்தது. அகத்தியரும், திருமூலரும், சத்தியதரிசியும், பரஞ்சோதியும் சிவனருள் பெற்றதும் இமயம் என்பதை அறிந்தான். பல யோக முறைகளையும் கற்றான்; குண்டலினிக் கனலால் குளிரைப் போக்கும் வழிவகை தெரிந்தான். சிவானந்தரைக் கண்டு அவர் அமைத்த சமயோக சமரசத்தையும் சாந்த முனிவரும் சுத்தனும் கண்டனர். பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய இடங்களையும் கண்ட பின்னர் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டிச் சாந்த முனிவர்,

சுத்தநீ இங்கே சக்தி சதாசிவன்

அருளை நோக்கி அருந்தவம் செய்வாய்

(சாதன காண்டம், இமாலயப் படலம் : 201-202)

எனக் கூறினார். சுத்தனும் அதன்படி தவம் செய்து சுத்த சக்தியாஞ் சுடர் தவக் கனலில் ஊற்றாகிப் பொலிந்தான்.

சாந்த முனிவர் அருளால் சுத்தன் சமயோக சித்தியை அடைந்தான். தன்னைச் சூழநின்ற சங்கத்தார்க்குத் தான் அவதாரமோ, இறைவனோ, குருவோ இல்லை; உழைத்திடும் தொண்டர் கூட்டத்துள் ஒருவன் என்று பணிவுடன் மொழிந்தான்.

தானவ நாட்டில்

போகரின் வரவால் தானவர் நாட்டில் தன் தந்தை சத்தியன் செய்த பணிகளை அறிந்தான்; சுந்தரியும் சக்தியும் செய்த உதவிகளை அறிந்தான். மாவலியின் நாட்டு மக்கள் மறவழி மறந்து அறவழி திரும்பினர். ஒழுக்கநெறி நின்றனர். நிலைமை மாறியதை அறிந்த மாவலி சினம் கொண்டான். தனக்கு எதிராகச் செயல்படும் அனைவரையும் பீரங்கியால் சுட்டொழிக்க ஆணை இட்டான். போக முனிவர் இறையருளை இதயத்து இருத்தி அரக்கர்கள் செயல்படாமல் மந்திரம் செபித்தார்; சத்தியனும் உளம் கசிந்து இறைவன் அருளை வேண்டினான்.

அடுத்த நாள் மாவலியின் ஆணையால் சத்தியனும் போகரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை அறிந்த அன்பர்கள் சுந்தரியின் தலைமையில் சிறை புக ஆயத்தம் ஆயினர். சுந்தரியும் சிறைப்பட்டாள். சிறைப்பட்டவர்களை விடுவிக்க வேண்டிச் சக்தி உண்ணாநோன்பு இருந்தாள். அன்பர்கள் அனைவரையும் விடுவிக்கக் கிளர்ச்சி செய்தனர். மாவலி அனைவரையும் சுட ஆணையிட்டான். சக்தி அதனைத் தடுத்தாள். அச்சமயம் விமானங்கள் குண்டுகள் பொழிந்தன. எங்கும் இருள்சூழ அன்பர்கள் சிறையைத் தகர்த்து அனைவரையும் விடுவித்தனர். சத்தியனும் போகனும் சுந்தரியும் சக்தியும் விமானம் ஏறிச் சீகரம் சென்றனர்.

இவ்வாறு தானவ நாட்டில் நிகழ்ந்தவற்றைச் சுத்தனுக்குப் போகன் உரைத்தான்.

பாரத சக்தி

இமயத்தில் தன்னைச் சூழ இருந்த யோகசித்தி எய்திய அன்பர்களுக்குச் சில கருத்துரைகளைச் சுத்தன் வழங்கினான். மக்களை வருத்தும் மாவலி, தூமகேது உள்ளிட்ட அரக்கர் அழியவேண்டும். நாட்டினைத் திருத்தி வளமாக்க வேண்டும். அதற்கேற்ற தருணம் வாய்த்துள்ளது. தொண்டு செய்ய ஆயத்தமாகுங்கள் என்று தொண்டர்களை ஊக்கினான். பாரத சக்தியின் பெருமையைப் பலபட எடுத்துரைத்தான்.

அரக்கர் தீமையை வேருடன் அழித்திடும் ; தணலைச்

சுரக்கும் திவ்விய சுதந்தரச் சுடர்பெறும் சக்தி

இரக்கம் அன்புஅருள் ஈகைதி யாகவிவேகம்

பரக்க நல்கிடும் செல்வமாம் பாரத சக்தி

(சுத்தசக்தி காண்டம்,1, புதுநாட்படலம் : 149-152)

(தணல் = நெருப்பு ; திவ்விய = தெய்வத் தன்மை)

சித்திமான் நிகழ்வுரை

பாரத முனிவரும் சித்திமானும் சுத்தனைச் சந்தித்தனர். சித்திமான் சுத்தனின் தவ ஆற்றலைப் புகழ்ந்தான். கலியனும் தூமகேதுக்களும் செய்த கொடுமைகளை எடுத்துரைத்தான். அவர்களின் கொடுமைகளிலிருந்து மக்களுக்கு விடுதலை தந்திட வேண்டுமெனவும் கூறினான். சுத்தன் துறவறம் பூணச் சென்றதும் இந்திரை தகவுற அரசு நடத்தியதும் நாட்டைக் காத்ததும் கலியனின் ஆட்கள் பல்வகை வேடம் பூண்டு நாட்டில் நுழைந்ததும் அதனை அறிந்து சபையினர்க்குத் தெரிவித்ததும், கலியன் படையெடுத்துச் சித்தியைக் கைப்பற்றியதும் அவனைத் தூமகேது சிறைபிடித்ததும் சொன்னான். நாடு அயலவர் கைப்பட்டதற்காகச் சுத்தன் கண்ணீர் சிந்தினான். அரக்கரால் சூழப்பட்ட சித்தியை வீரர்கள் கடும்போர் புரிந்து மீட்டனர் என்பதை எல்லாம் கூறிச் சித்திமான் சுத்தனை நாட்டிற்கு எழுந்தருள வேண்டினான்.

கௌரி – சக்தி வருக

சக்தியைச் சுத்தன் கண்டான். போரில் உயிர் துறந்த கௌரி சக்தியின் வடிவம் பெற்றாள் என்பதை அறிந்தான்.

வருக கௌரியே, வருகநின் வாழ்வுஇனிப் பொலிக !

தருக நின்னைஇத் தரைமிசை தருமம்ஓங் கிடவே

வருக சக்தியே பாரத சக்தியாய் வாழ்க

தருக நின்னையே தானவர் குலந்திருந் திடவே.

(சுத்த சக்தி காண்டம், 6, சக்தி விஜயப்படலம் : 37-40)

சுத்தன் தன் உள்ளத்து எழும் கருத்துகளை எல்லாம் அறிந்து போற்றியவள் சக்தி என்று அவளைப் பாராட்டினான்.

போர் தொடுப்போம்

மானுடத்தின் மீது தீரா நேயமும் அன்பும் உடையவன் சுத்தன். எனினும் அரக்கர் போர் தொடுத்தால் தாமும் போர் தொடுப்பது பொருந்தும் என்றான் சுத்தன்.

தீரமும் வேண்டும் ; உள்ளத் திண்மையும் வேண்டும் ; ஆத்ம

வீரமும் வேண்டும் ஊணர் வெறிஎழப் படைந டத்தி

போரினை தொடுத்தால், யாமும் போருக்குப் போர்தொடுத்து

வேரொடும் தீமை சாய விடுதலை வழங்கு வோமே

(சுத்த சக்தி காண்டம், 6, சக்தி விஜயப் படலம் : 121-124)

யோக சித்திப் படலம்

சுத்தன் யோக சித்திப் படலம் என்னும் நூலைத் தீட்டி மானுடம் பயன் பெறத் தந்தான். அதனைக் கடவுள் இயல், உலகியல், அறவியல், அறிவியல், அன்பியல், நடையியல், இல்லறவியல், குலவியல், தொழிலியல், அருளரசியல், யோகவியல், சித்தியியல் என 12 இயல்களாகப் பகுத்துக் கொண்டான். இந்நூல் வாழ்வியலுக்கு நன்னெறி வகுத்துத் தருவது, சான்றாக, வறுமை வரக் காரணம்

வீண்அணி ஆடை விருந்து மணச் செலவு

காண்வறுமை காட்டி விடும்

(சுத்தசக்தி காண்டம், 8, யோகசித்திப் படலம் : 405-406)

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. இதற்குச் சான்றாக, பகீரதன் உள்ளான் என்பது சுத்தன் சிந்தனை.

தங்கு முயற்சியால் சாராதது ஒன்றில்லை

கங்கை கொணர்ந்தோன் கரி.

(சுத்தசக்தி காண்டம், 8, யோகசித்திப் படலம் : 423-424)

இயற்கைதரும் சக்திகளை யந்திரத்தில் ஊக்கிச்

செயற்கரிய நன்மையெலாம் செய்.

(சுத்த சக்தி காண்டம், 8, யோகசித்திப் படலம் : 463-464)

(கங்கை கொணர்ந்தோன் = பகீரதன்; கரி = சாட்சி)

என்று இயற்கையில் நிரம்பிக் கிடக்கும் ஆற்றலைக் கண்டு அதனை எந்திரங்களின் உதவியால் பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது இதன் பொருள்.

இவ்வாறு பற்பல நற்சிந்தனைகளைத் தன் தொண்டர்களுக்கு வழங்கினான் சுத்தன்.

தொண்டர் பணிக்குழுக்கள்

சுத்தன் தன் தொண்டர்களை எல்லாம் 12 குழுக்களாக வகுத்துத் தொண்டு செய்யப் பணித்தான். அக்குழுக்கள் ஆவன :

(1) கடவுள் குழு (2) உலகக் குழு (3) அறவோர் குழு (4) அறிஞர் குழு (5) அன்புக் குழு (6) நன்னடைக் குழு (7) இல்லறக் குழு (8) குலக்குழு (9) தொழிற்குழு (10) அரசியற்குழு (11) யோகக் குழு (12) சித்தர் குழு

பாரத முனிவன் தொண்டர்களுக்குக் கூறிய காந்தி அண்ணலின் ஆன்மிக ஆற்றலை அறிந்த சுத்தன் அவர் (காந்தி அண்ணல்) புத்தனைப் போன்றும் கிறித்துவைப் போன்றும் கருணை உள்ளம் கொண்டு தன் உயிரை மன்னுயிர்க்காகத் துறந்தார். அவ்வாறே தொண்டர்கள் மக்கள் சேவைக்குத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றான். நாத்திகம் ஒழியவும் மகளிர் சிறக்கவும் ஒழுக்கம் சீர்பெறவும் எனத் தொண்டுகளைத் தொண்டர்கள் செய்யலாயினர். அல்லல் ஒழிந்து அறம் தலைநிமிரத் தக்க வகையில் அவர்களின் தொண்டு திகழ்ந்தது. அரக்கர்களின் அடிமை விலங்கை உடைத்தெறியும் சூழலைத் தொண்டர்கள் உண்டாக்கினர்.

சுத்தன் அருள்

மோகியின் மோகவலையில் கட்டுண்டு அடாதன செய்த கலியன் சுத்தனின் அருளால் திருந்தினான். அடிமை வாழ்க்கை ஒழிந்ததெனத் தெளிவுற்றான்.

ஆவியினும் அரியநலம் ஆகியதன் உரிமையினைப்

பாவமெனும் படுசிறையில் பந்தனைசெய் கலியவனும்

சீவனிலே சுத்தவொளி புகுந்திடவே திருந்தி வந்தான்

ஏவரெமை இனியடிமை என்றடக்க வல்லவரே

(சுத்தசக்தி காண்டம், 15, கலி பணித்த படலம் : 5-8)

(பந்தனை = கட்டுதல், பிணித்தல் ; சீவன் = உயிர், ஆன்மா)

சுத்தனின் பதமலர் துதித்து நாயினேன்

சித்தமும் திருந்தினன் செய்கை சீர்உற்றேன்

அத்தகு குருபணிக்கு ஆசை கொண்டினும்

இத்தகு மானிடம் ஏந்தி நிற்கின்றேன்.

(சுத்தசக்தி காண்டம், 15, கலி பணித்த படலம் : 213-216)

என்ற கலியனின் வாய்மொழி அவன் திருந்திச் சுத்தனின் மானுடத் தொண்டிற்காகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதைப் புலப்படுத்துகிறது.

சுந்தரியின் கணவன் மாவலி அவன் மாமன் சீகரனால் வரவேற்கப்பட்டான். அவன் சுத்தனின் பெருமைகளைக் கூறினான், சத்திய யோகச் சங்கத்தின் பெருமைகளையும் கூறினான். அவற்றைக் கேட்ட மாவலியும் ஆணவம் அழிய

சென்றது செல்க ; நானும் திருந்தினேன்; அறிந்தேன் உண்மை ;

நன்றிது நானும் சுத்த நாயகன் சேவை செய்வேன்

என்று கூறினான்.

2.2.2 கலியன் நற்பண்புகள், நற்செயல்கள் உடைய சுத்தனின் எதிர்நிலைத் தலைவனாகக் கலியன் படைக்கப்பட்டான். இவன் சத்தியனின் உடன் பிறந்தான் ஆவான். சித்தி நகரின் கீர்த்தியை அழிப்பதை நோக்கமாகக் கொண்டான். அவன் பொறாமையின் வடிவமாய் விளங்கினான். அவன் பொறாமைக்குச் சுத்தனின் புகழ் காரணமாயிற்று. சுத்தனை எதிர்க்கக் கலிநகர் ஒன்றையும் அமைத்துக் கொண்டான். மந்திர மாயங்கள் மாறுபாடு செய்து சுத்தனை அழிக்கத் திட்டமிட்டான். அண்ணனுக்குப் பின் நாட்டை ஆள எண்ணிய எண்ணம் ஈடேறாமல் ஆனதற்குக் காரணம் சித்தன் என்பதை நினைத்து மனம் வெந்தான் கலியன். அதனைக் கண்டு வருந்திய அவன் மனைவி மோகி அண்ணன் மாவலியின் படை உதவியால் சித்தியைக் கைப்பற்றலாம் எனத் தன் சூழ்ச்சியை வெளிப்படுத்தினாள். அவள் உரை கேட்ட கலியன்

கவலையும் ஒழிந்தது ; கனவு மெய்த்தது ;

புவனமும் கிடைத்ததுன் பொன்சொ லால்இனி

எவரும்என் நிகரில்

(சுத்தசக்தி காண்டம், 13, பொறாமைப் படலம் : 69-71)

என்று விம்மிதமுற்றான் கலியன்.

சித்தியைக் கைப்பற்றப் படைகளைப் பெருக்கினான். சத்தியனின் தம்பியாயினும் அரக்க குணம் உடையவன் கலியன். தீக்குணங்களின் உறைவிடம்.

நச்சராப் போன்ற நெஞ்சன் ; நல்லதை வெறுக்கும் தீயன்

பச்சைமோ கினிபி டித்த பாதகன் ; காமக்கள்ளன்

(கௌரி காண்டம், 11, வாழ்க்கைப் படலம் : 105-106)

கலியன் சூழ்ச்சி

சத்தியன் மணிமுடியைத் தரப் பாரத முனிவன் சுத்தனுக்கு அதனைச் சூட்டினான். மக்கள் மகிழ்ந்தனர். சித்தி நகரம் விழாக்கோலம் பூண்டது. இதனை ஏற்காத கலியன் மோகினியின் எண்ணப்படி காலிக் கூட்டத்தையும் காவி உடுத்திய போலிக் கூட்டத்தையும் புண்ணியம் பேசிடும் கேலிக் கூட்டத்தையும் சித்தியுள் நுழையச் செய்தான். சமயம் கிட்டும்போது சித்தியைப் கைப்பற்றவும் திட்டமிட்டான். மக்களும் போலித் துறவிகளை உண்மைத் துறவிகள் என எண்ணி உணவு அளித்து இருப்பிடமும் தந்தனர். போலித் துறவியான அகம்பரனின் பெருமைகளை அவனுடைய போலிச் சீடர்கள் மக்கள் இடையே பரவச் செய்தனர். பெண்களுடன் கூடிக் களித்தனர்.

சிறைவாசம்

சுத்தன் ஒற்றர்களின் வழியாகக் கலியன் சூழ்ச்சியை அறிந்தான். தன் அமைச்சன் சித்திமானோடு கலந்து பேசினான். வஞ்சகர் தங்கியிருந்த சித்தினி பவனத்தை வளைத்து அனைவரையும் சிறைப்பிடித்தான்.

கலியனின் சதித்திட்டம் வெளிப்பட்டது. அகம்பரனுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. கலியன் போர் செய்ய எத்தனித்தான். கலியன் சித்திக்கு உரிமை கொண்டாடினான். கலியன் ஏவலால் மாயன் என்பவன் சித்திக் கோட்டையை முற்றுகை இட்டான். சித்தியைச் சேர்ந்த விசயன் போரில் மாயனை வென்றான்.

மேலும் மேலும் தோல்வியைக் கண்டாலும் கலியன் அடங்கவில்லை. சத்தியனே படை நடத்தி வாகை சூடினான். கலியன் சுத்தனோடு நடத்திய போரிலும் தோல்வியைத் தழுவினான். சுத்தனின் அடிபணிந்து இனிச் சித்தியின் பக்கம் வருவதில்லை என்றும் தன்னை விடுதலை செய்யும்படியும் வேண்டினான். சுத்தன் அவனை விடுவித்தான். எனினும் கலியன் மீண்டும் போர்தொடுக்கும் வஞ்சத்தோடு சத்தியனைக் காணும்போது தன் நாடு பறிபோனதை எண்ணி மனம் பதைத்தான். தன் ஆணவத்தால் சிறையில் அடைக்கப்பட்டான். சிறையிலிருந்து மோகியோடு தப்பித்து விமானத்தில் தானவர் தீவை அடைந்தான். மீண்டும் படை திரட்டிச் சித்தியின் மீது போர் தொடுக்க எண்ணினான். தானவர் தலைவன் மாவலி கலியனுக்கு உதவ முன்வந்தான்.

மீண்டும் சிறைவாசம்

கலியனும் சித்தியின் படை ஆற்றலையும் நன்கு அறிந்திருந்தான். சத்தியனும் அவன் மகன் சுத்தனும் படையின் வலிமையோடு மனவலிமையும் உடையவர்கள். படைக்கலங்களால் அவர்களை வெல்ல முடியாது. அவர்கள் வரம் பெற்ற ஆற்றலர். எனவே அவர்களை வாதிலும் வெல்ல இயலாது. பூத சக்தியினாலும் அவர்களை வெல்ல இயலாது வெளிப்படுகிறது. ஆனால் வஞ்சனை செய்து சித்தியைக் கைப்பற்றலாம் எனத் தன் மைத்துனன் மாவலிக்கு உரைத்தான் கலியன்.

கலியன் சித்தி நாட்டில் புகுந்து அடாச் செயல்கள் செய்ய மக்களைத் தூண்டினான். அறவழியில் சென்ற மக்கள் மறவழியில் சென்றனர். அவனால் பெண்கள் மானம் இழந்தனர். செல்வர்கள் செல்வம் இழந்தனர். இல்லற உறவு கெட்டது. உறவாடியே மக்களைக் கெடுத்தான். செல்வத்தை அளவில்லாது சேர்த்துக் கொண்ட மன்னனென முடி சூட்டிக் கொள்ளத் திட்டமிட்டான். இதனை அறிந்த மாவலி தூமகேதுவை அனுப்பி அவனைச் சிறையில் அடைக்க ஆணை இட்டான். கலியனும் சிறையில் அடைக்கப்பட்டான். மோகியைத் தூமகேது கைப்பற்றிக் கொண்டான்.

மனமாற்றம்

சிறைப்பட்ட கலியன் தன் இரக்கம் கொண்டான். தன் தமையன் சத்தியனுக்கும் நாட்டிற்கும் இழைத்த கொடுமைகளை எண்ணி வருந்தினான். சுத்தனைச் சார்ந்து தொண்டு செய்வதை விரும்பினான்.

ஐயனை என்னுடை அண்ணல் மைந்தனைத்

துய்யனை அடைந்தினித் தொண்டு செய்தலே

உய்வழி என்றனன்

(சுத்தசக்தி காண்டம், 4, தூமகேதுப் படலம் : 57-59)

(ஐயன் = தலைவன் ; துய்யன் = தூயவன்)

சுத்த சமயோகியரின் இடையறாத தொண்டால் நாட்டில் அமைதிப் புரட்சி நடந்தது. மக்கள் தூமகேதுவின் ஆட்சியை வெறுக்கத் தொடங்கினர். செயலற்ற தூமகேது கள்ளுண்ட மயக்கில் மோகியின் சொற்களை நம்பினான். நாட்டில் அமைதிப் புரட்சி நடக்கக் கலியனே காரணம் என்றாள் மோகி. கலியனைக் கொல்ல அவனைத் தேடிப் புறப்பட்டான் தூமகேது.

சிறையிலிருந்து தப்பிய கலியன் நேரே மோகியின் தங்குமிடம் சென்று அவளைக் கண்டான். அவளைக் கொடுஞ்சொற்களால் பலவாறு வசை பாடினான்.

நேர்மை கெட்ட நீலிநீ இருக்கும்

வீடும் வேசை விடுதியா வதுவே

பள்ளியும் வெறிதரும் கள்ளுக் கடையே

புசிக்கும் இடமும் புலால்கடை நாற்றமே.

(சுத்தசக்தி காண்டம், 15, மோகி இறுதிப் படலம் : 53-57)

இறுதியில் கலியன் அவளைக் கொலை செய்தான்.

அரண்மனைக்குள் புகுந்த கலியன் அவையைக் கூட்டினான். தான் திருந்தியவனாக வந்திருப்பதைக் கூறினான். சுத்தன் யோகசித்தியால் தன்னை மறக்காமல் மறைப்பெனும் மாயையை நீக்கிக் காத்தான்; அமைச்சன் சித்திமானைப் போற்றிப் பாராட்டினான்; தன் தவறுகளுக்கு எல்லாம் மன்னிக்க வேண்டினான். சித்திமானும் கலியன் கூறக் கேட்டு ‘இனி நீ கடவுளின் அடியவன், மலைமேல் தவம் இயற்றும் சுத்தன் உன்னை ஏற்பான்’ என நல்லுரை கூறினான். சுத்தன் கலியனை ஏற்றுக் கொண்டான்.

2.2.3 கௌரி அழகு

சாந்த முனிவரின் மகள் பார்வதியின் மகள் கௌரி. மகர யாழ் மீட்டுவதில் வல்லவள். சாந்த முனிவரின் வேண்டுகோளின்படி சுத்தனையும் சித்திமானையும் விருந்தாக ஏற்றுப் போற்றினாள். சுத்தனைக் கண்டதும் அவன் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டாள். கவியோகி சுத்தானந்தர் கௌரியின் இயல்பினை இவ்வாறு சுவைபடக் கூறுகிறார்:

மங்கலப் புன்னகை மலர்ந்த பொன்முகம்

பங்கய வேல்விழி பவள மூரல்வாய்

பொங்குஇள மயில்குயில் அன்னம் போன்றவள்

புங்கவன் அருளினில் பொலியும் கௌரியே.

(சுத்தசக்தி காண்டம், 17, பஞ்சவடிப் படலம் : 113-116)

(பங்கயம் = தாமரை ; மூரல் = முறுவல், புன்னகை ; புங்கவன் = முனிவன்)

காதல்

இத்தகு அழகுப் பதுமையாய் விளங்கிய கௌரியைத் தன் பிறந்த நாளில் கண்டு மகிழ்ந்தான் சுத்தன். கவியோகி காதலர் சந்திப்பைத் தமக்கே உரிய பாணியில் பாவாக வடித்துத் தந்துள்ளார்.

பெண்ணொடு பெண்அளாவிப் பெருமைகள் பேசும்சுத்தன்

எண்ணமும் விழியும் உள்ளே இருந்தனன் ; கௌரிவந்தாள்

திண்ணென மின்சா ரத்தீ தெறிப்பது போலுணர்ந்தான்

கண்ணொடு கண்அளாவிக் கருத்துறக் கலந்த தம்மா

(கௌரி காண்டம், 2, சுத்த ஜயந்திப் படலம் : 805-808)

பெண்ணோடு பெண்அளாவி = மகளிர் பேச்செல்லாம் சுத்தனைப் பற்றி இருந்தது என்பது கருத்து. திண்ணென மின்சாரத்தீ = காதல் உணர்ச்சி வேகத்தைக் கவிஞர் இவ்வாறு அற்புதமாகக் கூறியுள்ளார். மேலும் சுத்தனும் கௌரியும்

அவனையே கண்டகௌரி அவனையே எங்கும் கண்டாள் ;

அவளையே கண்டசுத்தன் அவளையே எங்கும் கண்டான்

இவனுக்கே அவள்பிறந்தாள் அவளுக்கே இவன் பிறந்தான்

(கௌரி காண்டம், 2, சுத்த ஜயந்திப் படலம் : 809-811)

என்னுமாறு உள்ளம் ஒன்றினர். காதலர் ஆயினர்.

கலைவளம்

கௌரி பாண்டியர் மரபினில் வந்த பாவை ஆவாள். அறிவும் ஆற்றலும் ஒருங்கே உடையவள்; கற்பின் செல்வி. குண்டலி சக்தியை எழுப்பும் ஆற்றல் உடையவள்; கலைகளின் தாயகமாக விளங்கினாள்.

காவியக் கலையும் ஓவியக் கலையும்

ஆவியை உருக்கும் அமுதயாழ்க் கலையும்

வேதக் கலையும் விரிதமிழ்க் கலையும்

மாதவக் கலையும் மாசறப் பயின்றாள்

(கௌரி காண்டம், 3, கௌரி குலப் படலம் : 263-266)

என்பது சுத்தானந்தர் வாக்கு. இவை மட்டும் அன்றிப் போர்க்கலைப் பயிற்சியும் பெற்றவள். ‘சுத்தனுக்கு இவளே சக்தியாவாள்’.

இவ்வாறு கௌரியின் பெருமையும் சுத்தனுக்கு ஏற்ற சுடர்க்கொடி என்று பொருத்தமும் கூறப்பெற்றன.

உறுதிமொழி

கலியன் கேட்டை நீக்கும் தன் பணிக்கு அவள் துணைநிற்க வேண்டும் எனத் தன் உள்ளக் கிடக்கையைச் சுத்தன் உணர்த்தினான். அக்கருத்தை உடன்பட்டுக் கௌரி கூறிய உறுதிமொழி எண்ணத்தக்கது.

உன்மனம் ஒன்றே என்மன மாகும்

ஊடும் பாவும் கூடியே ஆடை

பீடுறும் ஆண்பெண் பிழையறக் கூடி

ஈருட லுக்கும் ஓருயி ராகிப்

பாருள் வளமும் பயிரும் போலே

இகமும் பரமும் இணைந்திட வாழ்வதே

சுகமாம் ; அதுவே சுத்தான்ம வாழ்வாம்.

(கௌரி காண்டம், 5, கௌரி காதற் படலம் : 162-168)

திருமணம்

மன்னன் சத்தியன் தன்மகன் சுத்தன்-கௌரி திருமண ஏற்பாட்டினைச் செய்தான். மணமக்களை,

தவம்பெற்ற தவமணி சாந்த கௌரியும்

சிவம்பெற்ற சுத்தனும் திகழ்கநீடு என்றார்

(கௌரி காண்டம், 8, ஊர்மகிழ் படலம் : 263-266)

என்று மன்னரும் மக்களும் வாழ்த்தினர்.

இல்லறம்

ஆன்றோர் கூறிய அறிவுரையின்படி கௌரி-சுத்தன் இல்லறம் அமைந்தது. அவர்கள் வாழ்க்கை ‘பண்ணுடன் பனுவல் போலே, சத்தியும் சிவனும் போலே’ அமைந்தது.

(பனுவல் = நூல், பாட்டு)

வாழ்க்கைத் துணை

கலியன் சித்தியைக் கைப்பற்றும் கருத்துடன் சூழ்ச்சிகள் பல செய்தான். கலிநகர் வீரர்களைப் பல இடங்களிலும் ஊடுருவச் செய்தான். கலியனின் சூழ்ச்சியைச் சத்தியனும் சுத்தனும் சித்திமானும் முறியடித்தனர்.

கௌரி கணவனிடத்து அன்பும் மதிப்பும் நாட்டுப் பற்றும் உடையவள். கலியனின், கொடுமையைக் கட்டுடன் அழிக்கச் சுத்தன் புறப்பட்டான். தானும் அவனோடு போர்க்களம் செல்லக் கௌரி ஆயத்தமானாள். அவள் உள்ளம்

நாதா, யாதும் தீதுவ ராமல்

யானும் உம்முடன் இருந்துபோர்க் களத்தில்

உதவி செய்க உவந்தே யருள்க

(கௌரி காண்டம், 32, போரணிந்த படலம் : 46-48)

என்பதால் விளங்குகிறது.

கணவனை விட்டுப் பிரியத் தயங்கினாள் கௌரி. அவனிடத்து அவள் கொண்டுள்ள அன்பினைக் கீழ்க் காணுமாறு வெளிப்படுத்தினாள்:

ஞானச் சுடரே, நானுன் பாதி

பிறந்தும் பிரியேன் இறந்தும் பிரியேன் ;

வீட்டிலும் பிரியேன் ; காட்டிலும் பிரியேன்

நாட்டிலும் பிரியேன் ஞாலத் துயிரே

(கௌரி காண்டம், 32, போரணிந்தப் படலம் : 68-71)

(ஞாலம் = உலகம்)

கணவனின் அன்பிற்கு இனியவள். அவன் பாராட்டிற்கு உரியவளாகக் கௌரி திகழ்ந்தாள். அழகாலும் பண்பாலும் அறிவாலும் ஒழுக்கத்தாலும் யோகத்தாலும் உயர்ந்து விளங்கினாள் கௌரி எனச் சுத்தன் பாராட்டியதால் அவளின் ஒப்பற்ற தன்மை புலப்படுகிறது.

கௌரி தன் எண்ணத்தாலும் உயர்ந்து விளங்கினாள். பகை சினம் தவிர்த்து உலகில் அன்பும் அறமும் ஆன்மநேயமும் தழைத்திட விரும்பினாள். போர் இல்லா உலகம் அமைய விரும்பினாள்.

ஓர்குல மாகப் பாரெலாம் வாழ்ந்தால்

போரெனும் பேச்சே வாரா தொழியும்

வெளிவே டங்களும் விதவித மதங்களும்

மண்பொன் வெறியும் மனத்தின் விகாரமும்

உள்ள மட்டிலும் உலகம் கலகமே

(கௌரி காண்டம், 34, உறுதிப் படலம் : 102-106)

தன்னுயிர் நீத்தாள்

போர்க்களத்தில் கணவனுக்குத் தீங்கு நேராமல் காக்கப் போர் வீரனாகப் போர்க்கோலம் பூண்டு அவனைத் தொடர்ந்தாள் கௌரி. பகைவரின் படுகுழியிலிருந்து கணவனைக் காத்தாள். அச்செயலில் தன் உயிரையும் துறந்தாள். சுத்தன் அவள் இழப்பைத் தாங்கொண்ணாமல் கதறினான்.

என்னுயிர்க்கு உயிரே ஆனாய் என்விழி மணியே ஆனாய்

இன்னுயிர்த் துணைவி யானாய் இறுதிமூச்சு எனக்கே ஈந்தாய்

மன்னுயிர் உள்ள மட்டும் வான்நிலம் உள்ள மட்டும்

அன்னையின் அன்பு மிக்காய் ஆருனை மறப்பார் ஈங்கே

(கௌரி காண்டம், 35, இறுதிப் படலம் : 108-111)

2.2.4 சக்தி சக்தி தோற்றம்

கௌரியின் மறுவடிவம் சக்தி. சுத்தனைச் சற்றும் பிரிய எண்ணாத கௌரி சக்தி என்னும் பெயரில் அரக்கர் நாட்டில் பிறந்தாள். சாந்தமுனிவர் இதனை,

சக்திபெற் றெழுந்தது தான வத்திலே

உத்தம நின்பணிக் குதவி ஆகவே

(சாதன காண்டம், 1, கருணைப் படலம் : 123-124)

என முன்னறிவிப்பாக வெளியிட்டார்.

சக்தி சீகரன் மகள் சுந்தரிக்கும் அரக்கன் மாவலிக்கும் பிறந்தவள். மாவலி சுந்தரியைச் சீகரனிடமிருந்து கடத்திவந்து மணந்து கொண்டான். அத்தகைய அரக்கனின் மகள் சக்தி என்றாலும், அவள் கவியோகி சொல்வது போல்

செருகுல வாணர் நாப்பண் சேற்றினில் பூவைப் போல

வருகுல மணியாம் சக்தி வாய்மையும் தூய கற்பும்

கருவிலே திருவும் கொண்ட கன்னிகை ஆனாள்.

(தானவ காண்டம், 6, மாவலி எழுந்த படலம் : 89-91)

(செருகுல வாணர் = போரையே வாழ்வாகக் கொண்ட அரக்கர்கள் ; கருவிலே = பிறப்பிலேயே)

மேலும் அவள் புகையற்ற தீப்போலப் பொலிவுடன் திகழ்ந்தாள். முழுநிலவு போன்ற முகத்தாள்; பாலைவனத்தின் இடையே அமைந்த சோலை போன்றவள். புன்னகை முத்துகளை உதிர்க்கும் அமுதச்செல்வி. அன்புத் தேனால் ஆன செம்பொன் கொடி போன்றவள். போகனையும் சத்தியனையும் முதன்முதலில் காணும்போதே ‘வணக்கம் ஓம்’ எனக் கூறி வணங்கினாள். தன் உள்ளே கௌரியின் உயிர் கலந்தது என்னும் மெய் உணர்வை,

தண்ணருள் சோதி யாகத் தவத்தணல் வீசி என்னுள்

பெண்ணுயிர் புகுந்து கௌரி எனப் பெயர் பேசிற்று.

(தானவ காண்டம்,12 , சக்தி விருப்பப் படலம் : 71-72)

(தன்னருள் சோதி = அருள் ஒளி ; தவத்தணல் = தவமாகிய தணல் -உருவகம்; தணல் = தீ)

அவள், சுத்தன் தன் சித்தத்தின் உள்ளே புகுந்தான் என்றும் தானும் அவனும் ‘கிரணமும் சுடரும் போலப்’ பிரிவற்ற நேயம் பூண்டதாகவும் கூறினாள்.

இசைப் பயிற்சி

போகனிடம் குழலும் யாழும் பயில மாவலி தன் மகள் சக்தியை அனுமதித்ததை நோக்கத் தந்தையின் வாஞ்சைக்குரிய மகள் அவள் என்பதை அறியலாம். சத்தியன் குழலும் யாழும் அவளுக்குக் கற்பித்தான்.

கலைக் கோயில்

மாவலி தன் மகளின் விருப்பத்திற்கு இணங்க இசை, கூத்து, நாடகம், அரிய சிற்பம் இவற்றைப் பயிலுவதற்காக ஒரு கலைக்கோயிலையும் உருவாக்கினான். அக்கலைக் கோயிலில் சக்தி பாடிய பாடலைக் கேட்டுத் தானவர் தீய பண்புகள் மாறி, பரம்பொருள் ஒன்றென அறிந்தனர். பாட்டிற்கு ஏற்ப நடனம் ஆடும் திறனையும் சக்தி பெற்றாள். சன்மார்க்கக் கலைச் சங்கம் அமைவதற்குச் சக்தி துணை நின்றாள். அதன் வளர்ச்சிக்கு நிதி உதவியும் செய்தாள்.

துணிச்சல்

தானவ நாடு மெல்ல மெல்ல ஆன்மீகத் துறையில் நுழைவதையும் மங்கையும் மதுவும் துறக்கப்படுவதையும் அறிந்த மாவலி இதற்குக் காரணமான சத்தியனையும் போகனையும் சக்தியையும் சுட்டழிக்க ஆணை பிறப்பித்தான். மூவரும் அஞ்சாது இறையுணர்வில் ஈடுபட்டனர். சக்தி மிகத் துணிச்சலோடு தன் தந்தை மாவலியைத் தடுத்துக் ‘குடிவெறியால் கொடுமை செய்திடத் துணிந்தாய். சுடவேண்டும் என்றால் முதலில் என்னைச் சுடு’ என்று நின்றாள்.

போகத்தையும் போதையையும் தவிர்த்து ஆணும் பெண்ணும் பிரமசரியம் காத்துக் காமம் கடந்து சமயோக நேயம் பூண்டு வாழ வேண்டும் எனச் சக்தி வற்புறுத்தினாள். சிறைப்பட்டாலும் குண்டடிபட்டாலும் ஊர் தோறும் சென்று தொண்டு செய்யவேண்டும் என ஆன்ம நேயர்களை ஊக்குவித்தாள்.

தன் தந்தை மாவலி அடாத செய்த போது சக்தி எதிர்த்து நின்றாள். தொண்டர்கள் கள்ளுக் கடை மறியலில் ஈடுபட்டபோது மாவலி கள்குடிச் சட்டம் போட்டான். பெண்ணின்பத்தை வெறுத்தோரை இழிவுபடுத்தினான். சத்தியனையும் போகனையும் சுந்தரியையும் மெய்த்தொண்டர்களையும் சிறைப்படுத்தினான். இத்தகு நிலைமையை அறிந்த சக்தி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை ஆனால் உண்ணா நோன்பு இருந்து உயிர் துறப்பேன் என வெகுண்டாள். சொல்லியபடியே உண்ணாநோன்பு இருந்தாள். மக்கள் மாவலியைத் தூற்றினர். மாவலி மனம் மாறவில்லை. மாறாகப் பீரங்கியால் அவளைச் சுட்டுத் தீர்த்திட ஆணையிட்டான். தானவர்கள் ஆணையை நிறைவேற்றத் தயங்கினர். சுத்தனை மனத்தில் நிறுத்திப் போற்றினாள் சக்தி. மக்கள் வீறுகொண்டு எழுந்தனர். திடீர் என வானில் மின்னலிட்ட விமானங்களிலிருந்து குண்டுகள் விழுந்தன. தொண்டர்கள் சிறையைத் தகர்த்து அனைவரையும் விடுவித்தனர். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட போகனும் சத்தியனும் சுந்தரியும் சக்தியோடு விமானம் ஏறிச் சீகர நாட்டை அடைந்தனர்.

தொண்டு

தூய தொண்டு வாழ்வையே தன் வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவள் சக்தி. சுத்தனை எப்போதும் தன் உள்ளத்தில் கொண்டு அவன் வழியில் உலக உயர்விற்கும் பாடுபட்டாள்; சீல வாழ்க்கையும் செவ்விய சிந்தையும் கொண்டாள்.

அண்ணல் சுத்தனுக்கு அன்பை அளித்தவள்

கண்ணு லகைஅவனெனக் காண்பவள்

கண்ணும் சோறும் அவனென்று உணர்பவள்

எண்ணம் எண்ணாம் எலாம்அவன் எண்ணமே

(சுத்த சக்தி காண்டம், 3, திருத்தொண்டர் படலம் : 231-234)

சாதி வேற்றுமையின்றி, சமய வேற்றுமையின்றி, மக்கள் அனைவரும் அடிமைத் தளையைக் களைந்து உரிமை பெற்று வாழ வேண்டும். இறை உணர்வுடன், தன்னலம் மறந்து வாழ வேண்டும் எனச் சக்தி உழைத்தாள்.

மாவலியும் கலியும் தவறுணர்ந்து மனம் திருந்தி வாழச் சக்தி துணை நின்றாள்.

2.2.5 மாவலி மாவலி தோற்றம்

மாவலி அரக்கர் குலத் தோன்றல். ஆதி போகனுக்கும் இருள் மாயைக்கும் பிறந்த தானவர் மரபிலே வந்தவன்; இவன் தந்தை சிங்கன்; தாய் கமலி. மாவலியுடன் பிறந்தவர்கள் அனலன் என்னும் தம்பியும், மோகி என்னும் தங்கையும் ஆவர். அனலன் தன் அண்ணனுக்கு எதிரியாக ஆனான். மோகி சத்தியனின் தம்பி கலியனை மணந்தாள். அவனும் தன் அண்ணன் சத்தியனுக்கு எதிராகச் செயல்பட்டான். மாவலியின் அன்பிற்கு இலக்கானான்.

பேராசை

பொதுவாக, அரக்கர்க்கு உரிய இயல்புகள் அனைத்திற்கும் உரியவன் மாவலி. அனைத்தையும் தனது என்னும் பேராசை கொண்டவன்.

எனதுடல், எனதுயிர், எனது செல்வமே

எனதுலகு, எனதுவிண், எனது போகமே

எனதுஇசை, எனதுஅறிவு எனது கட்டளை

எனதுஎனது எனும்அவர் இழிபொ றாமையே

(தானவ காண்டம், 6, மாவலி எழுந்த படலம் : 253-56)

(விண் = ஆகாயம் ; போகம் = இன்பம் ; இசை = புகழ்)

இராக்கத மணம்

காம வெப்பம் கரை கடந்திடச் சீகர மன்னன் மகள் சுந்தரியை மாவலி கடத்தி வந்து திருமணம் புரிந்து கொண்டான். அவள் இணக்கமின்றி அவள் கற்பையும் சூறையாடினான். மாவலியின் ஆட்சியில் அரக்கர்கள் பகலில் உறங்கி இரவில் காமவேட்டையாடுவதில் கைதேர்ந்தவர்கள்.

தானவ நாட்டில் எவ்விடத்தும் கள்ளும் ஊனும் குருதியும் நாறின; பொன்னையும் போக போக்கியங்களையும் பெண்களையும் அரக்கர்கள் நாடித் திரிந்தனர்.

நாத்திகன்

மாவலி கடவுள் மறுப்பாளன்; நாத்திகன். கடவுள் என்ற சொல்லையும் கேட்க விரும்பாதவன். ஏசுவின் புகழ்பாடும் ‘கடவுள் ஆட்சி கதிர் விட்டு ஒளிர’ என்ற அடியைக் கேட்டுச் சினந்தான்.

கடவுளும் கிடவுளும் கலந்துஎன் காதினைக்

குடைந்திடின் அவர்களைக் கொன்று போடுவேன்

திடமுறு லூஸிஃபர் செருக்கைப் பாடினால்

அடைகுவர் மதிப்பு

(தானவ காண்டம், 8, மாவலி எழுந்த படலம் : 113-116)

லூஸிஃபர் – பிதா (இறைவன்)வை எதிர்த்தவன் பிதாவால் சபிக்கப்பட்டவன் என்பதால் அவன் நாத்திகன் என்பதை அறியலாம்.

காமமிகு கணவன்

மாவலி முரடன். ஆயினும் தன் மனைவி சுந்தரியிடம் ஆழ்ந்த காமமுடையவன். அவள் புன்னகை மந்திரத்தில் கட்டுண்டு கிடந்தான்.

சுந்தரி வந்துஒரு சுடரும் மென்னகை

அந்தமாய் அவனுளம் அழிய வீசினாள்

(தானவ காண்டம், 8, மாவலி இசைந்த படலம் : 91-92)

(அந்தமாய் = அழகாய்)

சுந்தரியின் சொல்கேட்டுப் போகனையும் சத்தியனையும் மாவலி விடுதலை செய்தான்.

பிற மகளிர் உறவு

அழகிய மனைவி சுந்தரி இருந்தும் மாவலி பிற மகளிரோடும் காமக் களியாட்டங்களில் ஈடுபட்டான். சுந்தரி அவன் செயலைக் கடிந்தாள். அவனை ‘இனி ஒருக்காலும் தீண்டேன்’ என்று விரதம் பூண்டாள். மாவலி அவள் இருக்க ஒரு மனையும், உண்ண இருவேளை உணவும் அளித்தான். மனைவியைப் புறக்கணித்து வாழும் அவன் கொடுமனம் இதனால் தெளிவாகிறது.

மகளிடம் அன்பு பாராட்டல்

மகள் சக்தியிடத்து அளப்பரிய அன்புடையவன். அவள் போகனிடத்தும் சத்தியனிடத்தும் இசை பயில மாவலி அனுமதி வழங்கினான்.

பூமுகச் செல்வி யேநீ

இங்குவந்து இருக்கும் இந்த எளியநல் இசைவா ணர்கள்

எம்குணம் அறிந்து வாழு மட்டும்மென் இசையை மீட்டாய்

மங்கலம் உனக்கு உண்டு.

(தானவ காண்டம், 12, சக்தி விருப்பப் படலம் : 145-148)

என்று மாவலி அனுமதியும் ஆசியும் வழங்கினான்.

சக்தி யாழ் மீட்டி இசைத்த ‘திராய்ப் போர்ப் பாட்டினைக் கேட்ட மாவலி’ அதில் உள்ளம் தோய்ந்தான். தன் மகளைப் பாராட்டினான்.

மதுரக்கீதம் மாந்திய மயக்கில் என்சேயே

நலம்பெறு நாதசக்தி நயத்தினை இன்றுகண்டேன்

இவளவு கற்றநீஉன் இச்சைஒன்று இயம்பாய்

(தானவ காண்டம், 15, யாழிசைப் படலம் : 138-140)

என்று பாராட்டி அவள் விருப்பம் ஒன்றையும் கேட்டான். சக்தி இசையையும் மற்ற கலைகளையும் இந்த நாட்டு மக்கள் எளிதில் கற்றிடக் கலைக்கோயில் ஒன்றைத் தன் தந்தை அமைத்துத் தரவேண்டுமெனக் கேட்டாள். அவள் கருத்திற்கேற்ப, கலைக்கோயில் ஒன்றையும் அழகுற அமைத்துத் தந்தான்.

இதனால் மாவலி தன் மகளிடம் கொண்ட அன்பும் இசையின்பால் அவன் கொண்ட ஆர்வமும் அறியலாம்.

தன் கொள்கைக்கும் பகு

மாவலி கொடுமை

த்தறிவிற்கும் மாறாகக் கடவுளின் பெயராலும் கலைகளின் பெயராலும் அரக்கர்கள் மனந்திருந்தி வாழ்வதை அறிந்து மாவலி மனம் கொதித்தான். போகனும் சத்தியனும், சுந்தரியும், சக்தியும், சன்மார்க்கத் தொண்டர்களும் தனக்கு எதிராகச் செயல்படுவதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இந்திரர்க்கும் கிடைத்திடாச் சித்திராங்கிகளின் ஆட்டமும் பாட்டமும் காமுகர் களியாட்டங்களும், ஊனும் கள்ளும் ஒழியாது உண்டு மயங்கலும் போதை தலைக்கேறி விரசமாய்ப் பாடலும் தானவத்தின் தனிவாழ்க்கை ஆகும். இன்னும் சொன்னால் ஆணும் பெண்ணும் அறிவிழந்தனர்; நெறி பிறழ்ந்தனர். இப்படி எல்லாம் இருந்த தானவ நாடு கலைக்கோயில் திருப்பணியாலும் அன்பர்களின் முயற்சியாலும் படிப்படியாகத் திருந்தியது. இவ்வாறு திருந்தியதை அறிந்த மாவலி இம்மாற்றங்களுக்கு எல்லாம் காரணமானவர்களைச் சுட்டொழிக்கத் துணிந்தான். போகன், சத்தியன், சுந்தரி ஆகியோரைச் சிறையில் இட்டான். தந்தையின் அடாச்செயலைக் கண்டு அதனைச் சக்தி எதிர்த்தாள். உண்ணாநோன்பு மேற்கொண்டாள். மாவலியின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மக்களுக்கு உதவியாக விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. சிறைச்சாலை உடைக்கப்பட்டது. சிறைக்காவலர் செய்வது அறியாது திகைத்தனர். போகனும் சத்தியனும் சுந்தரியும் சக்தியும் விமானம் ஏறிச் சீகரம் சென்றனர். மாவலியின் எண்ணம், ஆணவம், அகங்காரம் தூள் தூள் ஆயிற்று.

அறிவியல் வளர்ச்சி

தானவ நாடு அறிவியல் முன்னேற்றம் கண்ட நாடு. குண்டுகள், கண்ணிகள், நச்சுப் புகை, சூத்திரப் படகுகள், விமானங்கள், கரி, இரும்பு, எண்ணெய், மின்சாரம், வானொலி இவ்வளவு இருந்தும் மாவலியால் வெற்றி பெற இயலவில்லை. ஆயுத ஆற்றலைவிட ஆன்மிக ஆற்றல் மிக்க வலிமை வாய்ந்தது என்பதை மாவலி ஏற்கவில்லை.

தன் தோல்விக்கெல்லாம் தன் தம்பி அனலன்தான் காரணம் என்று மாவலி எண்ணினான். ‘அனலனின் ஆணவபுரியை அசுர பீரங்கிகள் வைத்துத் தகர்ப்பேன்; காஸ்மிக் கதிர்களைக் கக்குவேன்; இங்கே விசையை இப்படி அழுத்தினால் அங்கே அனல் பற்றி எரியும்; குண்டுகள் பொழிவேன்; காந்த வெடிகளால் கப்பலை உடைப்பேன்; அறிவியல் கருவிகளை அழிவிற்குப் பயன்படுத்துவேன்’ என்று முழங்கினான்.

உறவு முரிந்தது

வக்கிரன் சொல்லைக் கேட்டுத் தன்னால் உயர்ந்த கலியனையும் மோகியையும் சிறைப்படுத்த ஆணை இட்டான். தூமகேது கலியனைச் சிறைக்கு அனுப்பிவிட்டு மோகியைத் தான் கைப்பற்றிக் கொண்டான். இறுதியில் அவளும் கலியனால் கொல்லப்பட்டாள்.

மாவலியும் அனலனும்

தானவ மன்னன் மாவலியும் ஆணவ மன்னன் அனலனும் உடன்பிறப்பினராயினும் ஒருவரை ஒருவர் மாய்த்து ஒழிப்பதிலேயே செருக்குற்று இருந்தனர். இருவரும் அழிவு தரும் படைக்கருவிகளைப் படைத்துக் கொண்டு போரில் அவற்றைப் பயன்படுத்தினர். உறவை மறந்து உறுபகையால் மோதிக் கொண்டனர். அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த தம்பி, நெப்போலியனைப் போல, அணுகுண்டு வெறிபிடித்த இட்லரைப் போல, மூர்க்கமாய்ப் போர் செய்கின்றானே என்று பதறினான் மாவலி. அனலன் சினந்து கோபால்ட் குண்டை வீசினான்; வெடிகளை வீசினான். இரு தரப்புப் படைகளும் மோதிக் கொண்டன.

ஆயிரம் கப்பல் செல்லும் ஆயிரம் கப்பல் வீழும்

ஆயிரம் படைகள் ஏகும் ஆயிரம் படைகள் சாகும்

ஆயிரம் பொறிகள் முட்டும் ஆயிரம் பொறிகள் வெட்டும்

ஆயிரம் ஆயுதங்கள் அனற்பட்ட பஞ்சு மாமே

(சுத்த சக்திக் காண்டம், 17, அணுப்போர்ப் படலம் : 51-54)

(பொறிகள் = போர் இயந்திரங்கள்)

எங்கும் பிணக்குவியல்கள். ஊர்கள் மண்ணாயின. கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்தன. பல்லாண்டுகளாகச் சேர்த்த படைகள் அழிந்தன. அண்ணனும் தம்பியும் போரிட்டனர். ஒருவர் கையை ஒருவர் வெட்டப் பாய்ந்தனர். இறுதியில் அனலன் தலை துண்டிக்கப்பட்டு இறந்தான். ‘ஆள்வன்இவ் ஆணவத்தை அவுணன் யான்’ என்று முழங்கிய மாவலியை நோக்கிக் குண்டுகள். உயிருக்கு அஞ்சி, ‘தப்பினேன், பிழைத்தேன்’ என்று ஓடினான் மாவலி. சுந்தரி விடுத்த கடிதம் எரி நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலாயிற்று. அவனிடம் கொண்ட இரக்கத்தால் அவள் எழுதிய கடிதத்தில், ‘உன்னுயிரும் மன்னுயிரும் வேறில்லை. உயிருக்குயிராய் ஒருபொருள் உள்ளது. அதுவே பரம்பொருள். அன்பும் அருளும் மேற்கொண்டு உலகில் அழகாய் வாழலாம். போரால் நாடுகள் சுடுகாடுகள் ஆயின. பசுவள நாடு பாலையாயிற்று. மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடுகின்றனர். மானமிழந்து மக்கள் வாழ்கின்றனர். இந்நிலை தீரச் சங்கத் தொண்டர்கள் கூடி அருள் குடியரசை அமைத்துள்ளோம். அதில் இணைந்து புகழ்பெறுவாய்’ என்று தன் உள்ளத்தை வெளிப்படுத்தினாள். கடிதத்தைக் கண்டதும் அவளைக் கொல்லவே துணிந்தான் மாவலி. மீண்டும் குண்டுகள் விழுந்தன. இனி உயிர் பிழைப்பது தவிர வேறொன்றும் இல்லை என எண்ணிச் சீகரம் சேர்ந்தான். சீகரன் அவனை வரவேற்று அவனுக்கு நன்மைகள் கூறித் திருத்தினான். அவனும் சுத்தனுக்குச் சேவை செய்ய முன்வந்தான்.

2.3 காப்பியச் சிறப்பு

கவியோகி சுத்தானந்தரின் ஆன்மிகப் பயணமாகப் பாரதசக்தி மகாகாவியம் விளங்குகிறது. ஆன்மிக வளம் மிகுந்த நாடு பாரதம் என்பதைச் சுட்ட சுத்தானந்தர் பல சமயச் சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் ஆன்மிக அனுபவங்களையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். பக்த இராமதாசர், குருநானக், ஜரதுஷ்டிரர், இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், கௌதம புத்தர், மகாவீரர், ஏசு பெருமான், நபிகள் நாயகம், கபீர்தாசர், வேத முனிவர்கள், தயானந்தர், ஆதி சங்கரர், மெய்கண்டார், அப்பர், மாணிக்கவாசகர், வள்ளலார், அரவிந்தர், சிவானந்தர் ஆகியோர் வரலாறுகள் காப்பிய நோக்கத்திற்கு ஏற்ப இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அப்பெருமக்கள் உரைத்த சமய உண்மைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. அவையாவன : வைதிகம், பௌத்தம், சமணம், கிறித்தவம், இசுலாம், சீக்கியம், சைவ சித்தாந்தம், வைணவம் என்பன.

வரலாற்று நாயகர்கள் பிம்பிசாரன், அசோகன், வீர சிவாஜி,  தேஜ் பகதூர், குரு கோவிந்தசிங், பிரதாப் சிங், திருமாவளவன், செங்குட்டுவன், இளஞ்செழியன், மாஜினி, கரிபால்டி, இலெனின் ஆகியோரின் வரலாற்று நிகழ்வுகளும் இந்நூலில் பதிவாகியுள்ளன. அண்ணல் காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டமும் அவர் வரலாறும் சிறப்பிடம் பெறுகின்றன.

இந்திய இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம், தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், குண்டலகேசி, வளையாபதி ஆகியனவும் காப்பிய ஓட்டத்தில் கவிதையாக்கப்பட்டுள்ளன. புராண நாயகன் கண்ணன் வரலாறும் அவன் குருச்சேத்திரப் போரில் அர்ச்சுனனுக்கு அறிவுறுத்திய பகவத் கீதையும் இந்நூலுள் குறிப்பிடப்பட்டுள்ளன. உலகக் காப்பியங்களில் ஒன்றாகிய சொர்க்க நீக்கம் (Paradise Lost) என்பதில் உள்ள சாத்தானின் வீழ்ச்சி, உலக மகாகவி ஓமரின் (

omer) இலியாத்தில்(Iliad) உள்ள திராயப் போர் நிகழ்ச்சி (Battle of Troy) ஆகியவையும் பேசப்பட்டுள்ளன.

நன்மையின் சார்பில் சுத்தன், சத்தியன், சித்திமான், போகன், சாந்தர், பாரத முனி, கௌரி, சுந்தரி, சக்தி ஆகிய காவிய மாந்தர்கள் உள்ளனர். தீமையின் பக்கலில் மாவலி, மோகி, கலியன், தூமகேது, துன்மதி முதலியோர் உள்ளனர். நன்மைக்கும் தீமைக்கும் நல்லவர்க்கும் தீயவர்க்கும் இடையே நிகழும் போராட்டத்தில் நன்மை வெற்றி பெறுகிறது. தீமை-தீயவர் நல்லவர்களாகத் திருந்துகின்றனர். கவிஞனின் நோக்கம் தீயவரை அழிப்பதன்று; தீமையை அழிப்பதே எனக் கருதலாம். இதற்கு உறுதுணையாக அமைவது ஆன்மிக ஆற்றல் ஆகும். இந்த ஆன்மிக ஆற்றலைத்தான் பாரத சக்தியாகக் கவிஞர் படைத்துக் காட்டுகிறார்.

அறிவியல் வளர்ச்சிக் கருவிகளான மின்னாற்றல், வானொலி, அணுக்குண்டு, பீரங்கி, துப்பாக்கி, விமானம் முதலியன இக்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இதனால் இக்காப்பியம் ஆன்மிகச் சாதனை குறித்துப் பேசினாலும் இருபதாம் நூற்றாண்டிற்கு உரியதாக விளங்குகிறது.

சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலார் காலம் வரையில் சமய வேற்றுமைகள், சாதி வேற்றுமைகள், சாத்திரக் குப்பைகள் மக்களிடையே ஒற்றுமை நிலவத் தடையாக இருந்தன. வள்ளலார் உலக மக்களெல்லாம் வேற்றுமை உணர்வின்றித் தம் சங்கத்தில் சேர்ந்து பயன்பெற அழைத்தார். கவியோகி சுத்தானந்தரும் சமயோக சமாஜம் என்னும் அமைப்பின்வழி உலக மக்கள் வேற்றுமைகள் இன்றி ஒன்றுபட்டு ஆன்மிக ஆற்றலால் போரும் பூசலும் அற்ற புதிய சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார். சமயோக சமாஜத்திற்கு, அதன் இலட்சியத்திற்குக் காப்பிய வடிவம் தந்த பெருமை கவியோகிக்கு உரியது. இவ்வகையிலும் இக்காப்பியம் சிறப்பு மிக்கதாகத் திகழ்கிறது.

பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் மேலும் ஒரு சிறப்பு இக்காப்பியத்திற்கு உண்டு. இக்காப்பியம் கம்பனின் இராமகாதை போன்று அடி அளவால் மிகப் பெரியது. 50000 அடிகளால் ஆனது.

2.4 தொகுப்புரை

சித்தியின் மன்னன் சத்தியன் இந்திரை ஆகியோரின் மகனாய், சித்தியின் மன்னனாய், கௌரியின் கணவனாய் இருந்த சுத்தன் உலக நன்மைக்காக – அமைதிக்காகப் பல வீரர்களின் வரலாற்றையும், சமயத் தலைவர்களின் வரலாற்றையும் அச்சமயங்களின் தத்துவங்களையும் அறிந்தான். இமயம் சென்று சமயோக சமாஜம் கண்டு, யோக சித்திகளை அறிந்தான். தன் தொண்டர்களை உழைக்கவும் கடவுள் நெறியில் நிலைக்கவும் பணித்தான். உலகில் அரக்கத்தன்மை அழியவும் மக்கள் மொழி, மதம், இனம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து சமயோகத்தில் திளைக்கவும் வழிகாட்டினான். சுத்தனின் ஆன்மிகப் பயணம் உலக அமைதிப் பயணமாக நிறைவு பெறுகிறது எனலாம்.

கலியன் மண்ணாசையால் தன் அண்ணன் சத்தியனைப் பகைத்தான். அவன் மகன் சுத்தனையும் பகைத்தான். மாவலியின் உதவி பெற்றுச் சித்தியைக் கைப்பற்றினான்; பின்னர் அதனை இழந்தான். தூமகேதுவால் சிறைப்பட்டான். நல்லறிவு பெற்று நல்லவனாய்த் திருந்திச் சுத்தனுக்கே ஆட்பட்டான்.

மாவலி அரக்கன் தான் என்னும் அகங்காரத்தால் அடாதன செய்து இறுதியில் மனம் திருந்தி, சுத்தன் சேவையில் தன்னை இணைத்துக் கொண்டான்.

அன்பும் பண்பும் அழகும் நிரம்பியவளாக, சுத்தனுக்கு ஏற்ற தூய மனைவியாக, அவன் உயிரோம்பத் தன் உயிரையே தியாகம் புரிந்த தூயவளாகக் கௌரி இக்காப்பியத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளாள்.

பாடம் - 3

இராவண காவியம்

3.0 பாட முன்னுரை

தமிழ்க் காப்பிய இலக்கிய வரலாறு மிகத் தொன்மை வாய்ந்ததாகும். தமிழில் தோன்றிய முதற்காப்பியம் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் ஆகும். அக்காப்பியம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரை எண்ணற்ற காப்பியங்கள் கவிஞர்கள் பலரால் படைக்கப்பட்டுள்ளன. அக் காப்பியங்களுள் ஒன்று, புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்ட இராவண காவியம். இக்காப்பியம் 1946இல் வெளிவந்தது.

இராவண காவியம் சில தனித்தன்மைகளைத் தன்னகத்துக் கொண்டுள்ளது. இராமாயணத்திற்கு எதிர்நிலைக் காப்பியமாக இராவண காவியம் திகழ்கிறது. இராமாயணத்தின் தலைமை மாந்தன் இராமன். இராவண காவியத்தின் காப்பியத் தலைவன் இராவணன். இராமாயணம் பக்தி உணர்ச்சியின் வெளிப்பாடு என்றால் இராவண காவியம் தன்மான இயக்க உணர்வின் வெளிப்பாடாகும். இராமாயணத்தின் எதிர்நிலைத் தலைவன் (Villain) இராவணன்; இராவண காவியத்தின் எதிர்நிலைத் தலைவன் இராமன். இராமாயணத்திற்கும் இராவண காவியத்திற்கும் நீண்ட கால இடைவெளி உள்ளது என்றாலும், இராமாயணம் படைக்கப்பட்ட காலம் முதல் இந்திய மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து அவர்களை இயக்கி வந்துள்ளது.

இத்தகைய செய்திகளைக் கொண்டுள்ள இராவண காவியத்தைப் பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

இராவண காவியம் எதற்காக?

இராவண காவியம் புலவர் குழந்தையால் எதற்காக எழுதப்பட்டது? வான்மீகி இராமாயணமும் கம்பராமாயணமும் நாட்டில் வழங்கி வந்தபோது இராவண காவியம் ஏன் எழுதப்பட்டது என்பது ஓர் அடிப்படையான வினா ஆகும். மாணவர்களாகிய நீங்களும் இதுபற்றி அறிந்து கொள்ள வேண்டிய கடமை உண்டு.

இந்தியத் துணைக் கண்டத்தில் மிகத் தொன்மையான குறிப்பிடத்தக்க நாகரிகங்கள் இரண்டு. ஒன்று திராவிட நாகரிகம், மற்றொன்று ஆரிய நாகரிகம். இந்த இரு நாகரிகங்களின் இணைப்புத்தான் இந்திய நாகரிகம் எனப்படும். மிகத்தொன்மையான காலத்தில் இந்தியத் துணைக் கண்டம் முழுதும் திராவிட நாகரிகம் பரவியிருந்தது. அதன்பின்னர் இந்தியத் துணைக் கண்டத்தில் ஆரிய நாகரிகம் நுழைந்தது. தொடக்கக் காலத்தில் இரு நாகரிகங்களுக்கு இடையில் இணக்கமான சூழ்நிலை இல்லை. ஆரிய நாகரிகம் சிந்துவெளி மற்றும் கங்கை வெளிப் பகுதியில் பரவியபோது திராவிட நாகரிகம் தென்னக அளவில் சுருங்கியது. இத்தகைய சூழலில், ஆரிய மேலாண்மை பெற்ற காலக் கட்டத்தில் வான்மீகியின் இராமாயணம் வடமொழியில் தோன்றியது.

வான்மீகிக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர்த் தோன்றிய கம்பர் தமிழில் இராமாயணக் கதையைக் காப்பியமாகத் தந்தார். அவருக்கு முன்பே இராம காதை தமிழ்நாட்டில் வழங்கி வந்தது. ஆழ்வார்கள் திருமாலின் பெருமையைப் பாடினர். வான்மீகி இராமாயணமும் ஆழ்வார்களின் பாசுரங்களும் இராமன் திருமாலின் அவதாரம் எனக் கருதக் காரணங்கள் ஆயின. கம்ப இராமாயணம் தோன்றிய காலத்திலிருந்தே மக்களின் செல்வாக்கைப் பெற்றது. ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற பழமொழி கம்பரின் கவித்துவ ஆற்றலைப் புலப்படுத்தும். தேசியக் கவி பாரதியாரும் ‘கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று கம்பரால் தமிழ்நாடு உயர்வு பெற்றதைப் பாராட்டினார். கம்பர் பெயரில் மன்றங்கள், கழகங்கள் தோன்றின. அவை கம்பர் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டன.

சுயமரியாதை இயக்கச் சார்பாளரான புலவர் குழந்தை பகுத்தறிவுத் தந்தை பெரியாரிடத்தில் ஈடுபாடு உடையவர். திராவிடச் சிந்தனை மிக்கவர். ஆரிய இராமனைத் திராவிடர் எனும் இனவுணர்வின்றிப் போற்றுவதை ஏற்காதவர்; கடுமையாக எதிர்ப்பவர். இராமனின் பெருமை பேசும் இராமாயணத்தைப் போன்று இராவணனின் பெருமை பேசும் காப்பியம் ஒன்றைப் புனையக் கருதினார் புலவர் குழந்தை. எனவே, இராவணனைத் தன்னேரில்லாத் தலைவனாகவும் இராமனை எதிர்நிலைத் தலைவனாகவும் (Villain) கொண்டு இராவண காவியம் படைத்தார். அதன்வழி இராவணனின் பெருமை பேசப்பட்டது. இராமனின் தீயொழுக்கம் பேசப்பட்டது.

நிகழ்ச்சி வேறுபாடு

இராமன் மிதிலையில் வீதிவழிச் செல்லும்போது கன்னிமாடத்தில் இருந்த சீதையைக் கண்டு காதலுற்றதாகவும் அவ்வாறே சீதையும் இராமனைக் கண்டு காதலுற்றதாகவும் கம்பர் கூறுகிறார். இராவணனும் வண்டார்குழலியும் சோலையில் தனிமையில் கண்டு காதலுற்றதாக இராவண காவியம் பேசும். சூர்ப்பணகை திருமகளின் மந்திரத்தை உச்சரித்து அழகிய உருவம் பெற்றாள் என்றும் இராமனைத் தன்னை மணந்து கொள்ளும்படி கேட்டாள் என்றும் கம்பர் கூறுவார். காமவல்லி இயல்பிலேயே நல்லழகி என்றும், அவளை இராமன் காம உணர்ச்சியால் கைப்பற்ற முயன்றான் என்றும், அவன் விருப்பத்திற்கு அவள் இணங்காமையால் இலக்குவனால் உருச்சிதைக்கப்பட்டாள் என்றும் இராவண காவியம் கூறும். சீதையை உருட்டியும் மிரட்டியும் அடைய வேண்டுமெனக் கம்பராமாயணத்தில் இராவணன் துடிக்க, இராவண காவியத்தில் இராவணன் அவளைத் தன் உடன்பிறப்பாகக் கருதிப் போற்றுகிறான். இவ்வாறு கம்ப இராமாயணத்திற்கும் இராவண காவியத்திற்கும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன.

பெயர் வேறுபாடு

இராமாயணத்தில் வரும் காப்பிய மாந்தர்களின் பெயர்கள் இராவண காவியத்தில் மாற்றம் பெறுகின்றன.

கம்ப இராமாயணம்                       இராவண காவியம்

மண்டோதரி                                     வண்டார்குழலி

இந்திரசித்து                                       சேயோன்

விபீடணன்                                        பீடணன்

சூர்ப்பணகை                                    காமவல்லி

இவ்வாறு காவிய மாந்தரின் பெயர்களிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளதையும் காணலாம்.

இராவண காவியம் பகுத்தறிவின் அடிப்படையில் படைக்கப்பட்ட காப்பியமாகும். இக்காப்பியம் தோன்றுவதற்கு முன் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள் கடவுள் புகழ் பாடும் காப்பியங்களாக, பக்தி நெறிப்பட்ட காப்பியங்களாக இருந்தன. போர்க்களத்தில் ஏவிய கணைகள் (அம்புகள்) மந்திரத் தன்மை உள்ளனவாகவும் மாயம் நிறைந்தவையாகவும் இருந்தன. இத்தன்மைகள் எவையும் இல்லாமல் இயல்பான நிகழ்வுகள் இக்காப்பியத்துள் இடம் பெற்றுள்ளன.

3.1 இராவண காவியம்

புலவர் குழந்தையின் இராவண காவியம் பழந்தமிழ் மரபைப் பின்பற்றி எழுதப்பட்ட காப்பியமாகும். பழைய யாப்பு மரபினைப் பின்பற்றிக் கலிவிருத்தம், கொச்சகம் முதலிய யாப்பு வகைகளால் இக்காப்பியம் யாக்கப்பட்டுள்ளது.

இக்காப்பியம் ஐந்து காண்டங்களால் ஆனது. அவை, 1) தமிழகக் காண்டம், 2) இலங்கைக் காண்டம், 3) விந்தக் காண்டம், 4) பழிபுரி காண்டம், 5) இலங்கைக் காண்டம்.

இக்காப்பியக் காண்டம் ஒவ்வொன்றும் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நூலில் அமைந்துள்ள மொத்தப் படலங்கள் ஐம்பத்தேழாகும். பாயிரம் உட்பட ஐந்து காண்டத்திலும் உள்ள மொத்தப் பாக்கள் 3100.

இக்காப்பியத்தின் தொடக்கப் படலம் தமிழகக் காண்டத்தின் தமிழகப் படலமாகும். இக்காப்பியத்தின் நிறைவுப் படலம் போர்க் காண்டத்தில் உள்ள இறுவாய்ப் படலம் ஆகும்.

புலவர் குழந்தை தாம் படைத்த இக்காவியத்தைத் தமிழர்க்குக் காணிக்கையாக்கியுள்ளார். தமிழர்கள் தம் பண்பாட்டுச் சிறப்பை அறிந்து வாழ்வதற்காக இராவணனின் பெருமை படைப்பதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தமிழன் செந்தமிழ்க்காக வாழ்ந்தஇரா

வணன்பெருஞ்சீர் இனிது பேசும்

செந்தமிழின் பூங்காவாம் இராவணகா

வியம்எனும்இத் தேம்பா நூலைத்

தந்தமிழின் பண்பாட்டை அறிந்துநடைப்

பிடித்தினிது தகவே வாழப்

பைந்தமிழின் பேரேடா வருங்காலத்

தமிழர்க்குப் படைக்கின் றேனே

(செந்தமிழ்க்கா = செந்தமிழ்க்காக; தேம்பா = இனிய பாக்களால்; பேரேடா = பேரேடு ஆக)

3.1.1 ஆசிரியர் புலவர் குழந்தை ஓலவலசுப் பண்ணைக்காரர்குடியில் 1-7-1906இல் பிறந்தார். முத்துச்சாமிக் கவுண்டர், சின்னம்மையார் என்பவர்களின் ஒரே மகனாவார். இவர் திண்ணைப் பள்ளியில் கற்ற காலம் மொத்தமாக எட்டு மாதங்களேயாம். இயற்கையிலேயே கவிபாடும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர். இசைப் பாடல்களே இவர் முதன் முதலாகப் பாடிய பாடல்கள். ஆசிரியர் உதவியின்றித் தாமே முயன்று தமிழ் கற்றுச் சீரிய புலமை எய்தினார். அதன் அடையாளமாக 1934இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் புலவர் பட்டம் பெற்றார். ஆசிரியராகவும் தலைமைத் தமிழாசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் புலவர் குழந்தை தம்மை இணைத்துக் கொண்டார். சுயமரியாதைக் கொள்கையில் உறுதியுடையவராய்த் திகழ்ந்தார். இறை நம்பிக்கை இல்லாதவர். 1938, 1948 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டார். வேளான் என்னும் மாத இதழை நடத்தினார். விதவை மணம், கலப்பு மணம், சீர்திருத்தமணம் ஆகியவற்றை முன்னின்று நடத்தினார். திருக்குறள் குழந்தை உரை என்ற நூலினை இருபத்தைந்து நாட்களில் எழுதி வெளியிட்டார்.

புலவர் குழந்தை தமிழ்ச் செய்யுள் மரபினைச் சிதையாமல் காக்க வேண்டும் என்னும் கருத்துடையராவார்.

பிற படைப்புகள்

இராவண காவியத்தைத் தவிர, புலவர் குழந்தை மரபுவழி யாப்பில் அமைந்த அரசியலரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, உலகப் பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல் ஆகியவற்றைப் படைத்துள்ளார். இவற்றுள் அரசியலரங்கம் சிந்துப்பாவில் தமிழக வரலாற்றினைச் சுவைபடக் கூறுகிறது. காமஞ்சரி என்னும் நாடகநூல் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம் போல ஒரு நாடகக் காவியமாகும்.

புலவர் குழந்தை பழந்தமிழ் நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார். திருக்குறள், தொல்காப்பியப் பொருளதிகாரம், நீதிக்களஞ்சியம் ஆகியவை அவரால் விளக்கவுரை எழுதப்பட்ட நூல்களாகும்.

புலவர் குழந்தையின் யாப்பிலக்கண நூல்கள் எளிமையாக யாப்பிலக்கணத்தை, கவிதை இயற்றும் நெறிகளை விளக்குகின்றன. அவ்வகையில் யாப்பதிகாரம், தொடையதிகாரம் ஆகியவை சூத்திர வடிவில் இலக்கண நெறிகளை விளக்குவனவாகும்.

புலவர் குழந்தை சில ஆய்வு நூல்களையும் இயற்றியுள்ளார். அவை தொல்காப்பியர் காலத் தமிழர், திருக்குறளும் பரிமேலழகரும், பூவாமுல்லை என்பனவாம். நாட்டு வரலாற்று நூல்கள் கொங்குநாடு, தமிழக வரலாறு ஆகியவையும் தனி மனித வாழ்க்கை வரலாற்று நூல்கள் தீரன் சின்னமலை, அண்ணல் காந்தி ஆகியவையும் குறிப்பிடத்தக்கன. மேலும் பல நூல்களை இயற்றித் தமிழுக்கு அரும்பணி ஆற்றியுள்ளார். அவை கொங்குநாடும் தமிழும், கொங்குக் குல மணிகள், அருந்தமிழ் விருந்து, அருந்தமிழ் அமிழ்து, சங்கத்தமிழ்ச் செல்வம், ஒன்றே குலம், தமிழெழுத்துச் சீர்திருத்தம் என்பனவாம்.

கதைக்கரு

இராவண காவியத்தின் கதைக்கரு புரட்சித் தன்மை உடையது. மரபு வழியாகப் போற்றிப் பேசப்பட்ட இராமனின் பெருமை இக்காப்பியத்தில் இடம் பெறவில்லை. இலங்கை மாமன்னன் வேள்வியின் பெயரால் உயிர்க்கொலை புரிவதைத் தடுத்து நிறுத்தி நல்வழிப்படுத்த முனைகிறான். அதன் காரணமாக இராவணனுக்கும் இராமனுக்கும் போர் நடக்கிறது. உயிர்க்கொலை மறுப்பு இக்காப்பியத்தின் கருப்பொருள் ஆகும்.

3.1.2 கதைச்சுருக்கம் காவியப் போக்கை அறிந்து கொள்ள இராவண காவியத்தின் கதைச் சுருக்கம் தரப்படுகிறது.

பழந்தமிழகம்

பழந்தமிழகம் ஐந்து பிரிவாக அமைந்திருந்தது. அவையாவன: பெருவளநாடு, தென்பாலி நாடு, திராவிடம், சேரநாடு, சோழநாடு என்பனவாம். முதற் கடல்கோளில் தென்பாலியும் கிழக்கு நாட்டின் பெரும்பகுதியும் இரையாயின. இரண்டாம் கடல்கோளுக்குப் பெருவள நாட்டின் பெரும் பகுதியும் கிழக்கு நாட்டின் எஞ்சிய பகுதிகளும் அழிவுற்றன. மூன்றாம் கடல்கோளால் திராவிடத்தின் ஒரு பகுதி மறைந்தது.

இராவணன் பிறப்பு

இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையிலிருந்து தமிழகத்தை ஆண்டு வந்தான் தமிழர் இனத் தலைவனாகிய விச்சிரவாவு. அவன் மனைவி கேகசி. அவர்களுக்கு இராவணன், கும்பகன்னன், பீடணன் என்ற மூன்று ஆண்மக்களும் காமவல்லி என்னும் ஒரு பெண்மகளும் பிறந்தனர். தன் தந்தை விச்சிரவாவுக்குப் பின்னர் இராவணன் தமிழகத்தை ஆண்டான்.

திருமணம்

மலைவளம் காணச் சென்ற இராவணனும் முல்லை நாட்டு மன்னன் மாயோனின் மகள் வண்டார் குழலியும் ஒருவரை ஒருவர் கண்டு காதலுற்றனர். இராவணன் வண்டார் குழலியை மணந்து கொண்டான். இல்லறப் பயனாய் அவர்களுக்குச் சேயோன் என்னும் மகன் பிறந்தான்.

தாடகை

தமிழகத்தின் வடக்கெல்லையிலிருந்து ஆரியர் விந்தக் காடுகளில் குடியேறினர். அவர்கள் வேள்வியில் உயிர்களைப் பலி கொடுத்து உண்டு வந்தனர். தமிழர்கள் அதனைத் தடுத்தனர். அப்படியும் அவர்கள் உயிர்க்கொலை வேள்வியைத் தொடர்ந்து செய்து வந்தனர். உயிர்க்கொலையைத் தடுக்க வேண்டி இடைவள நாட்டை ஆண்டு வந்த தமிழரசியான தாடகையின் வேண்டுகோளை ஏற்று இராவணன் சுவாகு என்னும் படைத்தலைவனை அனுப்பினான். சுவாகு இடைவள நாட்டில் நிகழ்ந்த புலைவேள்வியை அகற்றினான். கோசிகன் என்னும் ஆரிய முனிவன் வேள்வி செய்ய இயலாது மனமுடைந்தான்.

தசரதன்

வடநாட்டில் சரயு ஆற்றின் கரையிலுள்ள அயோத்தியைத் தசரதன் என்னும் சிற்றரசன் ஆண்டு வந்தான். கோசலை, சுமத்திரை என்னும் இரு மனைவியரும் பல காதல் மனைவியரும் இருந்தனர். மேலும் கேகயன் மகள் கைகேசியைத் தன் நாட்டை அவளுக்குப் பரிசமாகக் கொடுத்து மணந்து கொண்டான்.

தசரதன் பிள்ளையில்லாது வருந்தினான். வசிட்டரின் அறிவுரைப்படி கலைக்கோட்டு முனிவனைக் கொண்டு குதிரை வேள்வி செய்தான். ஓர் ஆண்குதிரை படையுடன் நாடு முழுவதும் சுற்றித் திரும்பியது. முனிவர்கள் வேள்வி செய்தனர். தசரதன் தன் மனைவியர் கோசலை, சுமத்திரை, கைகேசி ஆகிய மூவரையும், வேள்வியாசிரியன் கலைக் கோட்டு முனிவர் முதலிய முனிவர் மூவர்க்குக் காணிக்கை ஆக்கினான். அம் மூவரும் பொருளைப் பெற்றுக் கொண்டு அவர்களை மன்னனிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றனர். சில திங்கள்கள் கழிந்தன. கோசலை இராமனையும், சுமத்திரை இலக்குவனையும், சத்ருக்கனையும் கைகேசி பரதனையும் பெற்றெடுத்தார்கள். மக்கள் நால்வரும் மணப்பருவம் அடைந்தனர்.

கோசிகனுடன் இராமலக்குவர்

வேள்வி செய்ய ஏற்பட்ட தடைகளால் மனம் உடைந்த கோசிகன் அயோத்தி சென்றான். அங்குத் தசரதனைச் சந்தித்து இராம இலக்குவனை அழைத்துக் கொண்டு இடைவள நாட்டிற்குத் திரும்பினான். முனிவர் சொற்படி, அங்கு வந்த தாடகையை இராமலக்குவர் கொன்றனர். கோசிகன் தன் குடிலுக்குச் சென்று வேள்வி செய்யத் தொடங்கினான். வேள்வியைச் சுவாகுவும் மாரீசனும் தடுத்தனர். இராமன் அம்பால் சுவாகு இறந்தான்; மாரீசன் உயிர் பிழைத்துச் சென்றான்.

சுவாகு இறந்ததை அறிந்த இராவணன் விந்த நாட்டை ஆண்டு வந்த தன் தங்கை காமவல்லியின் பாதுகாப்பிற்காகக் கரன் என்னும் படைத்தலைவனை அனுப்பி வைத்தான்.

இராமன் திருமணம்

மிதிலைக்குச் சென்ற கோசிகன் தன்னோடு இராமனையும் இலக்குவனையும் அழைத்துச் சென்றான். அங்கு அவர்கள் சனகனின் விருந்தினராக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். அங்குக் கோசிகனின் கட்டளைப்படி இராமன் வில்லை ஒடித்தான்.

இராமன் சீதையை மணந்தான்; ஊர்மிளையை இலக்குவனும், மாளவியைப் பரதனும், சுதகீர்த்தியைச் சத்துருக்கனும் மணம் புரிந்து கொண்டனர்.

இராமன் காடேகுதல்

தசரதன் இராமனிடம் பற்றும் பரிவும் கொண்டிருந்தான். பரதனுக்குரிய நாட்டை இராமனுக்கு உரிமையாக்கக் கருதிய தசரதன் பரதனையும் சத்ருக்கனையும் அவன் பாட்டன் ஊருக்கு அனுப்பினான். இராமன் குடிமக்களிடம் நெருங்கிப் பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றான். தசரதன் தக்க தருணத்தில் அரசர்களையும் குடிமக்களையும் கலந்து இராமனுக்கு இளவரசுப் பட்டம் கட்ட முடிவு செய்தான். இதனை அறிந்த கைகேசியின் தோழியாகிய மந்தரை கைகேசியிடம் இராமனுக்கு முடிசூட்டுவதைத் தடுக்கும்படி கூறினாள். சம்பரனைப் போரில் வெற்றி கொள்ளக் கைகேசி உதவியதால், அவளுக்குத் தசரதன் இருவரங்கள் அளித்தான். அவ்வரங்களில் ஒன்றால் பரதன் நாடாளவும், மற்றொன்றால் இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காடாளவும் கைகேசி தசரதனிடம் வரம் கேட்டாள். தசரதன் கைகேசியிடம் கெஞ்சியும் இணங்காமல் அவள் உறுதியாக இருந்தாள். தசரதனின் எண்ணம் ஈடேறாமையால் இராமன் காடேக வேண்டியதாயிற்று. இராமனும் இலக்குவனும் சீதையும் காட்டிற்குச் சென்றனர்.

குகனுடைய உதவியால் கங்கையைக் கடந்த மூவரும் வழிநெடுக முனிவர்கள் வரவேற்கச் சித்திரகூட மலையை அடைந்தனர். இராமன் காடேகியதை அறிந்து தசரதன் மாண்டான். தந்தையின் இறப்புச் செய்தியைக் கேட்ட பரதன் அயோத்திக்குத் திரும்பினான். தந்தையை அடக்கம் செய்தான். பின்பு இராமனைத் தேடிப் படைகள் சூழச் சித்திரகூடம் சேர்ந்தான். பரதன் இராமனை நாடாள வரும்படி வேண்டினான். ஆனால் இராமன் நாடு பரதனுக்கு உரியது என்று கூற, பரதன் அதனை இராமனுக்குக் கொடுத்துவிட்டதாகக் கூறினான். அதனை ஏற்காத இராமன், பெற்றோரின் ஆணைப்படி பதினான்கு ஆண்டுகள் கழித்து வரும் வரை தன் சார்பாக நாட்டை ஆண்டு வருமாறு பரதனைக் கேட்டுக் கொண்டான். பரதன் இராமனின் மிதியடியைப் பெற்றுக் கொண்டு நந்தியூரில் தங்கி மிதியடியை அரியணை ஏற்றி வணங்கி வந்தான், சத்ருக்கன் ஆட்சி செய்தான்.

சித்திரகூடத்தை விட்டுச் சரபங்கன் நிலையை (ஆசிரமம்) மூவரும் அடைந்தனர். அங்கிருந்த முனிவர்கள் தாங்கள் வேள்வி செய்யத் தடையாக இருப்பதைக் கூறி, தங்களைக் காக்கும்படி வேண்டிக் கொண்டனர். பின் அகத்தியன் நிலையை (ஆசிரமம்) அடைந்து அவனிடம் ஒரு வில்லும் இரு அம்புக் கூடும் பெற்றுக் கொண்டு பஞ்சவடி என்னும் இடத்தில் தங்கினர்.

இராமனும் காமவல்லியும்

இராமன் ஒரு நாள் தனித்துலாவிய காமவல்லியைக் கண்டு அவள்பால் காமுற்றான். அவள் கையைப் பிடித்திழுத்து வற்புறுத்தினான். அவனுடைய விருப்பத்திற்கு உடன்படாததால் இலக்குவனால் அவள் உறுப்புகள் அறுக்கப்பட்டன. காமவல்லி இறந்தாள். கரனும் அழிக்கப்பட்டான்.

இராவணன் சீதையைக் கவர்தல்

தன் தங்கையும், கரனும் அழிந்த செய்தியை இராவணன் தூதரால் அறிந்தான். உடனே அவன் விந்தம் சென்று காமவல்லி வளர்த்த மானை விட்டு இராமலக்குவரைப் பிரிக்கச் செய்தான். வீரர்களைக் கொண்டு அவர்களை வளைத்துக் கொள்ளுமாறு செய்து சீதையைக் கவர்ந்து சென்று அவளைத் தன் தங்கையின் நிலையில் வைத்துப் போற்றினான். இராமலக்குவர் இலைக்குடிலில் சீதையைக் காணாது வருந்தித் தேடி ஒரு முனிவன் குடிலை அடைந்தனர். அம்முனிவனால் இராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டு இலங்கை சென்றதையும் வாலியால் துரத்தப்பட்ட சுக்கிரீவன் வரலாற்றையும் கேட்டறிந்தனர். பின்னர், இராமலக்குவர் மதங்கரிடத்தில் நிகழ்ந்தது கூறினர். அனுமன் அவ்விடம் வர அவர்களை அவனுக்கு மதங்கர் அறிமுகப்படுத்தினார். அவர்கள் அவனுடன் சென்று சுக்கிரீவனைக் கண்டு அவனுடைய உதவியை வேண்டினார். வாலியைக் கொன்று தனக்கு அரசு ஈந்தால் தான் சீதையை மீட்க உதவுவதாகச் சுக்கிரீவன் நிபந்தனை விதித்தான். இராமன் அதற்கிசைந்து சுக்கிரீவனை வாலியோடு போரிடச் செய்து, மறைந்திருந்து அம்பெய்து வாலியைக் கொன்றான். சுக்கிரீவனைக் கிட்கிந்தையின் மன்னன் ஆக்கினான்.

இராவணன் சீதை சந்திப்பு

இராவணன் தன் மனைவியோடு சீதையைக் காண வந்தான்; இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவன் படையோடு இலங்கைக்கு வரப்போவதைச் சீதைக்குக் கூறினான். சீதை தன்னால் இலங்கை போர்க்களம் ஆவதை எண்ணி மனம் வருந்தினாள். சீதை தன் தோழி திரிசடையிடம் இலங்கை போர்க்களம் ஆவதைப் பீடணனைக் கொண்டு தடுக்க வேண்டுமெனக் கூறினாள். பீடணன் சுக்கிரீவனைப் போலத் தானும் அரசனாக வேண்டுமென எண்ணித் தன் நண்பன் நீலனிடம் தன் கருத்தை வெளிப்படுத்தி அதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டினான்.

இலங்கையில் அனுமன்

இராமன் சீதையைத் தேட அனுமனை இலங்கைக்கு அனுப்பினான். இலங்கை சென்ற அனுமன் ஓர் ஆரியனால் பீடணன் மனையை அடைந்தான். பீடணன் அவனை வரவேற்றுத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான். அனுமன் அவன் எண்ணம் ஈடேற உதவுவதாகக் கூறினான். பின்னர் திரிசடையுடன் சென்று சீதையைத் தனியே கண்டு இராமன் படையுடன் வந்து இலங்கையை அழித்து உன்னை மீட்டுச் செல்வான் என்று கூறினான். சீதை இராவணனின் பெருமைகூறி, இராமனைத் தனியே வரும்படி கூறு என்று அனுமனுக்கு உணர்த்தினாள்.

அனுமனை வாயிற் காவலர்கள் பிடித்து இராவணனிடம் கொண்டு சென்றனர். இராவணன் அனுமனைக் குறித்து அறிந்தான். சுக்கிரீவன் அயலானோடு சேர்ந்து வாலியைக் கொன்றதை இராவணன் கடிந்து கூறினான். இராமனைத் தனியாக வந்து மன்னிப்புக் கேட்டு மனைவியை அழைத்துச் செல்லும்படி இராமனிடம் கூறும்படி சொல்லி அனுமனை அனுப்பி வைத்தான்.

அதிகாயன் தூது

அனுமன் சென்று கூற, இராமன் பணிய மறுத்துப் படையுடன் இலங்கைப் புறத்தே சென்று தங்கினான். இதனை அறிந்த இராவணன் அதிகாயனை இராமனிடம் தூது அனுப்பினான். இராமன் தூதுவனிடம் தான் போருக்குத் தயார் எனக் கூறி அனுப்பினான்.

பீடணன் வெளியேறல்

இராவணன் பேரவையைக் கூட்டி இராமனை முறியடிப்பதென முடிவு செய்தான். அப்போது பீடணன் அவையில் எழுந்து இராமனின் திறமையைக் கூறிச் ‘சீதையை விட்டு அவனோடு உறவு கொள்வோம்; விந்த நாட்டை விட்டேனும் பகையின்றி வாழ்வோம்’ என்றான். இராவணன் சினமுற்றுப் பீடணனை அவையை விட்டு வெளியேறுமாறு கூற, அவனும் வெளியேறினான்.

பீடணன் தன் படைத்தலைவர்களுடன் இராமனைச் சரண் புகுந்தான். இராமன் அவனை இலங்கை மன்னனாக முடி சூட்டினான். பீடணன் இலங்கையை வெல்லும் வழியையெல்லாம் இராமனுக்கு உணர்த்தினான்.

இராவணன் இதனையறிந்து படைகளைத் திரட்டிப் போருக்குத் தயாரானான். ஒற்றரை நிலைமையை அறிந்து வர ஏவினான். பீடணன் ஒற்றரை இராமனுக்குக் காட்டிக் கொடுத்தான். ஒற்றர்கள் சிறைப்பட்டனர். தமிழர் படைக்கும் ஆரியர் படைக்கும் போர் மூண்டது. இரு தரப்பிலும் பலர் மாண்டனர்.

இராமன் கும்பகன்னன் போர்

போர் நடந்தது. அப்போரில் கும்பகன்னன் கொல்லப்பட்டான். தன் தம்பி கும்பகன்னன் இறந்த செய்தி கேட்டுக் கதறி அழுதான் இராவணன். சேயோன் தன் தந்தையைத் தேற்றிவிட்டுப் போர்க்களம் புகுந்தான். கூட்டமாக இருந்த ஆரியப்படையோடு தனியாகப் போரிட்டான். சேயோனைக் கொல்ல இதுவே தக்க தருணம் என்று பீடணன் இராமனிடம் கூற, இராமனின் ஏவலின்படி இலக்குவன், பீடணன், சுக்கிரீவன், அனுமன் முதலியோர் பெரும்படையுடன் அவனை வளைத்துப் போர் செய்தனர். சேயோனின் தேர்ப்பாகனும் குதிரைகளும் மாண்டனர். அவன் அம்பும் கூடும் வறிதாயிற்று. பின்னர் அவன் வாட்போரில் ஈடுபட்டான். இலக்குவனின் அம்பால் தலை கொய்யப்பட்டுச் சேயோன் போர்க்களத்தில் மாண்டான்.

இராவணன் மாண்டான்

தன் மகன் சேயோன் போரில் இறந்ததைக் கேட்டுக் கதறிப் புலம்பிய இராவணன் போர்க்களம் புகுந்தான். இராமனுக்கும் அவனுக்கும் கடும் போர் நடந்தது. இலக்குவன் முதலியோர் அவனை வளைத்துக் கொண்டு போரிட்டனர். இராமனால் இராவணனின் தேர்ப்பாகன் கொல்லப்பட்டான். பீடணனனால் அவன் குதிரைகள் மாண்டன. இராவணன் வெகுண்டு பீடணனை நோக்கி வாளை உயர்த்தினான். இலக்குவன் குறுக்கிட்டு அம்பொன்றால் அதனைத் தடுக்க, அவ்வாளை இலக்குவன் மேல் ஓச்சினான். அப்போது மாதலி என்பான் கூரிய அம்பொன்றை இராமனிடம் கொடுத்து இராவணனைக் கொல்லுமாறு கூறினான். இராமன் விட்ட அம்பு இராவணனின் தலையைக் கொய்து வீழ்த்தியது. அவன் உடல் மண்ணில் புரண்டது. இராவணன் இறப்பை அறிந்த அவன் மனைவி வண்டார்குழலி உயிர்நீத்தாள்.

சீதை மீட்சி

பீடணன் சீதையை அழைத்து வந்து இராமனிடம் சேர்த்தான். இராமன் பீடணனை இலங்கைக்கு அரசனாக்கினான்; பின்னர் இலக்குவனோடும் சீதையோடும் அயோத்தி சென்றான். சுக்கிரீவன் கிட்கிந்தைக்குச் சென்றான்.

அயோத்தியில் இராமன்

இராமன் அயோத்தியில் முடிசூடி மன்னனானான். ஓர் ஆரியன் மாண்ட பிள்ளையுடன் அரண்மனைக்கு வந்து ‘சூத்திரன் ஒருவன் உன் நாட்டில் தவம் செய்வதால் இப்பிள்ளை மாண்டான்’ எனக் கூறினான். அதனைக் கேட்ட இராமன் ஆரியன் வழி காட்டக் கானகம் சென்று உண்ணா நோன்பிருந்த சம்புகன் என்னும் தமிழ்மகனை வெட்டிச் சாய்த்துத் தன் நகரை அடைந்தான்.

ஒரு நாள் ஓர் ஒற்றன் இராமனிடம் அயலான் மனையில் பல மாதம் இருந்தவளை அழைத்து வந்து வைத்துக் கொண்டான் என ஊரார் பழி கூறுகின்றனர் என்று உரைத்தான். இராமன் அதைச் சீதையிடமும் கூறினான். சீதை அதைப் பொருட்படுத்த வேண்டா எனக் கூறியும் கேளாமல் இலக்குவனை ஏவிச் சீதையைக் காட்டில் விடச் செய்து நாடாண்டான்.

3.2 கதைமாந்தர்

புலவர் குழந்தையின் இராவண காவியம் இராவணனைத் தலைவனாகக் கொண்டு இயங்குவதாகும். இராவண காவியத்தின் இராவணனைத் தவிர இராமன், இலக்குவன், சீதை, பரதன், கும்பகன்னன், பீடணன், காமவல்லி, வண்டார்குழலி முதலிய பல காப்பிய மாந்தர்கள் வலம் வருகின்றனர். எனினும் நெஞ்சில் நிற்கும் கதைமாந்தர்கள் என்ற வகையில் இராவணன், கும்பகன்னன், பீடணன், இராமன், வண்டார்குழலி, சீதை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

3.2.1 இராவணன் இராவண காவியத்தின் தலைவன் இராவணன். இராம கதையின் காப்பியத் தலைவன் இராமன். எதிர்நிலைத் தலைவன் இராவணன். இராவண காவியத்தின் காப்பியத் தலைவன் இராவணன், எதிர்நிலைத் தலைவன் இராமன். கம்பனின் இராமகாதை தோன்றி ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் கழித்து அதனை மறுக்கும் நோக்கில் இராவண காவியம் தோன்றியதால் காப்பிய மாந்தர்களின் பண்புநலனிலும் இயக்கத்திலும் நோக்கத்திலும் அதன் எதிரொலியைக் காணலாம்.

இராவணன் பெயர் விளக்கம்

இராவணன் என்னும் பெயர் சிறப்பிற்குரியது. அவன் பெற்றோர் அவனுக்கு இராவணன் என்னும் பெயரிட்டு அழைத்தனர்.

ஈன்றவர் உவந்து மக்கட்கு இராவணன் இவனாம் என்ன

ஆன்றபேர் இட்டு நாளும் அன்பொடு நலம்பா ராட்டி

(இலங்கைக் காண்டம் ;1 இராவணப் படலம், 4)

(ஈன்றவர் = பெற்றோர் ; ஆன்ற = பொருந்திய)

இராவணன், அதாவது இரு ஆவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்று பொருள். மேலும் இராவணன் என்பதற்குப் பிறர்க்கில்லா அழகன் என்னும் பொருளும் உண்டு.

தமிழ்ப்பற்று

மழலைப் பருவத்திலேயே தமிழ் உணர்ச்சி மிக்க குழந்தையாக இராவணன் திகழ்ந்தான். தமிழ்மொழியைச் சொந்தத் தாய்மொழி என்றும் தமிழகம் எங்கள் தாயகம் என்றும் கொண்டான். அவன் அன்னை கேகசி அவனைப் பாலும் சோறும் ஆகிய அமிழ்து உண்ணெனப் பணித்தபோது அவன் ‘தமிழ் உண்டேன் அமிழ்து வேண்டாம்’ என்று உரைத்தான் என்பது அவன் தமிழ்க்காதலைக் காட்டுகிறது.

இராவணன் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழுதறக் கற்றான். இசைத் தமிழைக் கற்றுப் பல்லோர் போற்றும் இசைத்தமிழ்ப் புலவன் ஆனான். யாழிசை வல்லவன் ஆனான். நாடகத்தமிழ் நயங்களைக் கற்றுத் தேர்ந்தான். அகமும் புறமும் ஆன பொருளதிகாரம் முற்றும் கற்றான். தானே தமிழிசை நூலும் ஆக்கித் தந்தான். வில் போரும் வாள் போரும் செய்வதில் வல்லவனாய்த் திகழ்ந்தான்.

பண்புநலன்

இராவணன் குடிமக்களின் பழிச்சொல்லுக்கு அஞ்சிச் செங்கோல் ஆட்சி புரிந்தான். துலாக்கோல்போல் நடுவுநிலை பிறழாத நன்னெஞ்சன்; கதிரவன் தனக்கென எதையும் விரும்பாதது போலத் தனக்கென எதையும் விரும்பாதவன்; நிலம் போன்ற பொறுமை சான்றவன்; அடக்கம் நிறைந்தவன்; உயிர்களை அன்னை போன்று போற்றுபவன்; தனக்கு நிகர் தான் என்னும் தகவுடையவன். முன்னையோர் போற்றிய வழியைப் போற்றி ஒழுகுபவன்.

இவ்வாறு புலவர் குழந்தை இராவணனின் தமிழ்மொழிப் பற்றையும் அவன் கலைத்திறனையும் இயல்பையும் விவரிக்கின்றார்.

இராவணனின் காதல்

இராவணனின் காதல் களவு வழிப்பட்டதாகும். மலைவளம் காணச் சென்ற இராவணன் அங்கு முல்லை நாட்டு மன்னன் மாயோன் மகள் வண்டார்குழலி என்னும் பெயராளைக் கண்டு காதலுற்றான். அவளைக் கண்ட அளவில் ‘மனமும் இரு கண்ணும் கருத்தும் ஒருங்கே பறிகொடுத்தான்; அவளைப் பற்றிய சிந்தனையில் மூழ்கினான்; அவளை இன்னாரெனத் தெரியாது தடுமாறினான்’.

யாரோ இவள்தான் எவ்வூரோ

அயலோ இக்குன் றினளோதான்

பேர்ஏ தோயா ரோஇவளைப்

பெற்றோர் பருவம் உற்றனளோ

ஓரேன் நானே அதுவன்றி

ஒப்பொன் பானும் உடையாளோ

காரோ மானாக் கருங்குழலாள்

கருத்தும் எதுவோ அறியேனே

(2.இலங்கைக் காண்டம், 3. காட்சிப்படலம், 78)

பண்டைத் தமிழ் மரபிற்கு ஏற்ப, இராவணன் வண்டார் குழலியின் அழகால் ஈர்க்கப்பட்டு மயங்குவதை இதனால் அறியலாம்.

வண்டார் குழலியின் உள்ளமும் உணர்வும் தன்பால் உள்ளதை இராவணன் குறிப்பால் உணர்ந்தான். அவன் அவளிடம் ‘நின்னைப் பிரியேன் பிரியேன்’ என உரைத்தான்.

இராவணன் தான் முதல் நாள் சந்தித்த அதே இடத்தில் அவளை மறுநாளும் கண்டு மகிழ்ந்தான். அவனும் அவளும் ‘உளம்’ கலந்து ஒன்றாயினர்.

அவளைப் பிரிந்து இராவணன் பிரிவுநோயால் வாடுவது போல வண்டார்குழலியும் அவனைப் பிரிந்து பிரிவு நோயால் வாடி நொந்தாள்.

இராவணனைத் தன் மகள் வண்டார்குழலி விரும்புவதை அறிந்த மாயோன் தன் அமைச்சரை அவன்பால் அனுப்பி அவன் கருத்தை அறிந்தான். இராவணன் வண்டார்குழலியை நெஞ்சாரக் காதலிப்பதை வெளிப்படுத்தினான். அவளை மணந்து கொள்ளவும் இசைவு தெரிவித்தான்.

இராவணனின் காதல் உள்ளமும் உணர்வினால் ஒன்றிய வண்டார்குழலியை மணந்து வாழும் வேட்கையும் தெளிவாகின்றன.

அரசியல்

அரசியல் நெறி உணர்ந்த அறிஞனராகவும் இராவணன் திகழ்ந்தான். இராவணன் செந்தமிழ்ப் பொருள் நூல்களைக் கற்று அவற்றின்படி அரசு நடத்தினான். நடுவுநிலைமையும் இன்சொல்லும் ஈகையும் பொறுமையும் அஞ்சாமையும் ஆண்மைத்திறமும் கொண்டு ஆட்சி புரிந்தான். ஈட்டலும் காத்தலும் வகுத்தலும் வழுவிலாது செய்தான். வினையாற்றும் திறன் மிக்கானாய், வினைக்குரியோர்களைத் தேர்ந்து, வினையின் விளைவையும் நாடிச் செயல்பட்டான். ஆற்றல் மிக்க நல்லமைச்சரின் துணை கொண்டு நல்லாட்சி நடத்தினான்; அவனிடம் மறதியும் இல்லை; சோம்பலும் இல்லை. எங்கும் குறையொன்றும் இல்லாதபடி ஆட்சி புரிந்ததால், மாதம் ஒரு முறை நடக்கும் குறைகேட்கும் மண்டபத்திற்கு மக்கள் வரவும் இல்லை. ஆண்டுக்கொரு முறை மன்னர்கள் அனைவரையும் அழைத்து அரசியல் நெறிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்தினான். தமிழ் வளர்க்கும் அரும்பணியிலும் கவனம் செலுத்தினான்.

கல்வியின் தேவை

கல்வியின் இன்றியமையாமையை நன்கு அறிந்த இராவணன் அதன் வளர்ச்சிக்குரிய வழிவகைகளை ஆராய்ந்து செயல்படுத்தினான்.

தமிழ் வளர்ச்சி

இராவணன் தாய்மொழியாம் தமிழிடம் தணியாத வேட்கை உடையவன் ஆவான். தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கஞ் செறிந்த பல கருத்துகளைக் கவிஞர் முன்வைத்துள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்க சில: மொழியின் சொல் வழக்கும் பொருள் வழக்கும் பின்னாளில் இருப்போர்க்கு ஐயம் தருமானால், அதனைப் போக்க, காலத்திற்கு ஏற்ற வழிநூல்களை ஆக்கித் தரல் வேண்டும். பழந்தமிழ் நூல்களைப் போற்றுதலோடு அமையாது, அவற்றை நன்கு ஆராய்ந்து தாம் கற்றுணர்ந்தவற்றை ஐந்திணை இயற்கையோடு கலந்து இன்றைய வாழ்விற்கு உகந்தபடி இலக்கண, இலக்கிய நூல்களையும் இசை, கூத்து நூல்களையும் படைத்தளிக்க வேண்டும். தாய்மொழியாம் தமிழ் நிலத்தை அறிவென்னும் ஏரால் உழுது ஆராய்ந்தெடுத்த மொழியாகிய நெல்விதையை விதைத்து, அணி என்னும் நல்லெருவை இட்டு, கருத்தென்னும் நீரைப் பாய்ச்சிப் பா என்னும் விளைச்சலைப் பெற வேண்டும் என்று புலவர்களை இராவணன் வேண்டுவதாக நூலாசிரியர் காட்டியுள்ளார்.

இராவணன் தமிழ்ப்பணியில் குறிப்பிடத்தக்கவை, புலவர்கள் ஆக்கித் தந்த அருந்தமிழ் நூல்களை எல்லாம் தன் அவையில் அரங்கேற்றியது; தக்க தமிழ்ப் புலவர்களைக் கொண்டு மாணாக்கர்க்குத் தமிழ் கற்பித்துத் தமிழகம் எங்கும் சென்று தமிழ் பரப்ப வழி செய்தது; அவ்வாறு தமிழ்ப் பணியில் ஈடுபட்டோர்க்குப் பொருளுதவி செய்தது; புலவர்க்குப் பரிசு வழங்கியது, அவர் பாடல்களைத் தொகுத்தளித்தது முதலியனவாம்.

வளம் பெருக்கல்

நீர்வளமும் நிலவளமும் பெருக வழி கண்டான் இராவணன். வேளாளரின் உழவுத்தொழிலால் ஆட்சி நடைபெறுகிறதே அன்றி மன்னர்களின் ஈகையால் அன்று என்னும் உண்மையை உணர்ந்து இராவணன் செயல்பட்டான். உணவுத் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் உணவு கிடைக்க ஏற்பாடு செய்தான். அலுவலர்கள் மக்களை அச்சுறுத்தாமலும் பார்த்துக் கொண்டான். உலக மக்கள் மன்னர்க்காக உள்ளனர் என்ற எண்ணத்தை மறந்து, மன்னர்கள் மக்களுக்காக உள்ளனர் என்னும் உண்மையை உணர்ந்து ஆட்சி புரிந்தான். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து மக்கள் நிறைவாழ்வு வாழ வகை செய்தான்.

வேள்வி

இடைவள நாட்டைத் தாடகைப்பேர் தமிழரசி ஆண்டு வந்தாள். ஆரியர் செய்யும் உயிர்க்கொலை வேள்வியை ஒழித்து நாட்டைப் புனிதமாக்க எண்ணினாள். அதற்காக இராவணனின் உதவியை வேண்டினாள். அவன் அவளுக்கு உதவச் சுவாகுவோடு மறவர்களையும் அனுப்பினான். சுவாகு தாடகையின் மகன் மாரீசனோடு இணைந்து ஆரியர்கள் கொலை புரியாதும் அவர் சோமக் கள்ளுண்ணாதும் காத்து வந்தனர். இவர்களின் காவலையும் மீறிக் கோசிகன் என்னும் ஆரியன் வேள்வி செய்தான். இதனை அறிந்த தாடகை தானே படையுடன் வந்து வேள்வித் தீயில் இடஇருந்த உயிர்களைக் காப்பாற்றி விடுவித்தாள். அவனையும் நாட்டைவிட்டுப் போகச் செய்தாள்.

பெண்மை போற்றிய புரவலன்

மதிவலி அமைச்சர்கள் கூறியபடி தன் படை வீரர்களின் துணையோடு இராவணன் சீதையைக் கவர்ந்தான். அவளைத் தேரில் தென்னிலங்கைக்குக் கொண்டு வந்தான். சீதை இராவணன் பால் ‘மானம் காத்து ஓம்ப வேண்டும்’ என வேண்டினாள். இராவணன் அவளிடம் ‘பெண்களுக்குத் தீமை செய்வது தமிழர் இயல்பன்று; தமிழர் பெண்களுக்குத் தீமை செய்ததும் இலர். பெண்ணடிமை என்பதும் தமிழகம் அறியாதது’ என்று கூறினான். மேலும் அவன்,

வஞ்சியே உனைநான் வஞ்சியேன், தமிழர்

வழக்கமும் பழக்கமும் அன்றே

(4. பழிபுரி காண்டம், 4. சிறைசெய்படலம், பா. 47)

(வஞ்சியே = வஞ்சிக்கொடி போன்றவளே; வஞ்சியேன் = வஞ்சனை புரியேன்)

என்றுரைத்தான். சீதையைத் தன் தங்கையாகவே இராவணன் கருதினான். பெண் கொலை புரிந்த இராமனைத் துறந்துவிடும்படி வற்புறுத்தினான். தன் கணவனுக்குத் தீங்கு நேரா வண்ணம் காக்க வேண்டினாள். அதனை ஏற்று இராவணன், பெண்ணே வருந்தாதே. உனக்காக வேண்டி அவனைக் கொல்லாது விடுகிறேன். உன்னைத் தேடிக் கொண்டு இராமன் இங்கு வருவான் ஆயின்

உயர்தமிழ்ப் பெண்கள் முன் னிலையில்

பொன்றினும் மறவா இயன்றநல் அறிவு

புகட்டியே போக்குவன்

(4 பழிபுரி காண்டம், 4. சிறை செய்படலம், பா. 51)

(பொன்றினும் = இறப்பு நேரினும்)

என்று கூறினான்.

இராமன் இங்கு வரவில்லை என்றால் படை மறவர்களால் அவனைப் பற்றிக் கொண்டு வரச் செய்து, அவன் தன் செயலை எண்ணி அறிவு வந்தது என உணரச் செய்து அவனோடு உன்னையும் அனுப்பி வைப்பேன் என்றான்.

இராவணன் பெண்களிடம் மதிப்பும் அன்பும் உடையவன் என்பதும் பகைவனுக்கு அருளும் பண்பும் உடையவன் என்பதும் தெளிவாகின்றன.

தந்தையும் மகனும்

இராவணன் தன்மகன் சேயோனிடம் அளவற்ற அன்புடையன். இராமலக்குவரைப் போரில் வென்று வருவேன். இன்றெனில் போர்க்களத்தே மாய்வேன் எனச் சேயோன் சூளுரைத்தான்.

உய்யாமல் எரிமுன்னர் வைத்தூறு போல

ஒன்னாரை அறவென்று வருவேன்அவ் வாறு

செய்யேனேல் எதிராளர் வாள்வீசி யாடச்

செஞ்சோரி பாயும் களப்பட்டு ஒழிவேன்

(5. போர்க்காண்டம், 3. அடிமைப் படலம், 73)

(உய்யாமல் = தப்பாமல்; வைத்தூறு = வைக்கோல்போர்; ஒன்னார் = பகைவர்; செஞ்சோரி = இரத்தம்)

சேயோனின் வஞ்சினமொழி இராவணனுக்குப் பேருவகை தந்தது. அவன் தன் மகனைத் தழுவிக் கொண்டு பாராட்டினான்.

சேயோன் இலக்குவன் அம்பினால் கொல்லப்பட்டது அறிந்து இராவணன் உயிர் கலக்கமுற்று, கண்ணீர் ஊற்றுப் பெருகிட அழுது மண்ணில் விழுந்து புரண்டான். அவன்,

குழந்தை யோஎனும் கோமக னேயுளங்

குழைந்தை யோஎனும் கோளர்கை அம்பினால்

விழுந்தை யோஎனும் வேறு படைத்துணை

இழந்தை யோஎனும் என்செய்கு வேன்எனும்

(5. போர்க்காண்டம், 12. கையறுநிலைப் படலம், 10)

(கோமகன் = அரசிளங்குமரன்; கோளர் = தீயர்; குழைந்தையோ = வருந்தினாயோ)

என்று பலவாறு கூறிப் புலம்பினான்.

போர்க்களத்தில் இராவணன் இராமன் அம்பால் கொல்லப்பட்டான். இராவணனின் சிறப்பைத் தமிழ் மக்களின் உரிமை இழப்பாகப் புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்.

கொடியன் அம்பினால் கோமகன் தன்முடி

கடமை மேய கனிதமிழ் மக்களின்

உடைமை யாய உரிமைகள் போல்விழ

அடிமை போல அவிழ்ந்தது சோரியே

(5. போர்க்காண்டம், 13. இறைவீழ்படலம், பா. 26)

இராவணன் காதலனாய், கல்வியின் தேவையை உணர்த்தவனாய், ஆரியர் செய்த உயிர்க்கொலை வேள்வியை ஏற்காதவனாய், பாசமிகு அண்ணனாய், தந்தையாய், பெண்மை போற்றும் பேரறிவாளனாய்த் திகழ்ந்தான் என்பதை இராவண காவியத்தின்வழி அறியலாம்.

3.2.2 இராமன் இராவண காவியத்தின் தலைவன் இராவணன் என்றால் அதன் எதிர்நிலைத் தலைவன் இராமன் ஆவான். இராவணனின் பெருமை பேசும் இராவண காவியம், தெய்வமாகப் போற்றப்படும் இராமனைச் சிறுமதி படைத்தவனாகக் காட்டுகிறது.

பிறப்பு

கோசல நாட்டு மன்னன் தசரதன்; அவன் மகன் இராமன்.

பெண் கொலை

கோசிகன் இராமலக்குவரை இடைவள நாட்டிற்கு அழைத்துச் சென்றான். கோசிகன் தாடகையைக் கொடுமையின் உருவமாக இராமலக்குவரிடம் கூறினான்.

தோழியரின்றி, படைக்கலம் ஏதுமின்றித் தனித்து வந்த தாடகையின் மீது ‘பெண்ணென்றும் பாராமல்’ இராமன் அம்பெய்து கொன்றான்.

தாடகையின் மகன் சுவாகுவும் இராமனால் கொல்லப்பட்டான். புலவர் குழந்தை இராமனைத் ‘தறுதலை ராமன்’, ‘இறைக்குணம் சிறிதுமில்லான்’, ‘நஞ்சினும் கொடிய பாவி’ என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.

காமவல்லி என்னும் மற்றொரு பெண் கொல்லப்படவும் இராமன் காரணமாக இருந்தான்.

காமவல்லியின் கொலைக்குக் காரணமாக இருந்த இராமலக்குவரைக் கரன் எதிர்த்தான். அவனும் இராமன் அம்புக்கு இரையானான்.

வாலி வீழ்ந்தான்

இராமன் சுக்கிரீவனின் நட்பைப் பெற்றான். அவன் கருத்தை ஏற்ற இராமன் வாலியை மறைந்திருந்து அம்பு தொடுத்து வீழ்த்தினான். வாலி அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தான். எல்லாவற்றிற்கும் ஆன பதிலாக இராமன்

எனது நண்பற்குப் பகைவன் நீ எனக்குமே பகைவன்

உனைஒ றுப்பது முறைமையே உனைக்கொல்வ தாக

உனது தம்பிக்கு முன்னரே கொடுத்தனன் உறுதி

(4 பழிபுரிகாண்டம், 6 நட்புக்கோட்படலம், 39)

என்று பதில் இறுத்தான்.

இராமன் தன் நண்பன் சுக்கிரீவனுக்காக முறையற்ற பழிக்குரிய செயலைச் செய்தமையை இதனால் அறியலாம்.

பீடணன் அடைக்கலம்

தன் அண்ணன் இராவணனிடம் மாறுபட்டுத் தன்னிடம் அடைக்கலம் புகுந்த பீடணனை இராமன் ஆதரித்தான்.

கும்பகன்னன் வீழ்ச்சி

இராமனுக்கும் கும்பகன்னனுக்கும் இடையே நடந்த போரில், இராமனுடைய அம்பொன்று கும்பகன்னன் உயிரைப் பறித்தது. புலவர் குழந்தை ‘தமிழர் தங்கள் உரிமையைப் பறிப்பான் போல உயிரினைப் பறித்தான் அந்தோ’ என்பதால் கும்பகன்னனின் இறப்பு எத்தகைய இழப்பு என்பதை அறியலாம்.

இராமன் தான் செய்த செயல்களைக் குற்றம் உடையன என்றோ பழி தருவன என்றோ எண்ணாமல் தான் செய்ததே சரி என்னும் இயல்புடையவன் என்பது தெளிவு.

சீதை காதலன்

இராமன் தன் மனைவியிடத்து அன்புடையவன் ஆவான். குடிசையினுள் சீதை இல்லாமையை அறிந்து இராமன் துடித்தான். சீதையைக் கொடியவர்கள் கொன்று விட்டார்களோ என அஞ்சினான். சோலைகளைப் பார்த்தும் விலங்குகளைப் பார்த்தும் பறவைகளைப் பார்த்தும் என் மனைவியை எனக்குக் காட்டுங்கள் என்று கதறினான். மனைவியைப் பிரிந்து அவன் புலம்பிய காட்சியால் மனைவியிடத்து அவன் காதல் உள்ளம் புலனாகிறது.

இராமன் எதிர்நிலைத் தலைவனாகப் பெண் கொலை புரிந்தான், உறவினரிடையே புகுந்து, அவர்கள் இடையே இருந்த பகைமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான். இரண்டகம் செய்தவர்களை ஆதரித்தான் என்பனவற்றை உளங்கொள்வது சாலப் பொருத்தமாகும்.

3.2.3 பீடணன் புலவர் குழந்தை பீடணனைத் திருந்திலாப் பீடணன் என்னும் தீயன், இளைய பாழ்ம்பாவி, தமிழர் பேரினத்துக்கு அந்தோ நோய், புன்கோடரிக் காம்பு என்றிவ்வாறு எல்லாம் இழித்துரைக்கிறார்.

மக்கள் பழிப்புரை

பீடணன் அண்ணனுக்கு இரண்டகம் செய்து ஆட்சி அதிகாரத்தைப் பற்றியதால் மக்களின் பழிப்பிற்கு ஆளானான் எனத் தெரியலாம்.

3.2.4 சீதை சனகன் மகளும் இராமனின் மனைவியுமான சீதையின் பண்புநலன்களை இவண் காண்போம்.

சீதை மணம்

மிதிலை மன்னன் சனகனின் வளர்ப்பு மகள் சீதை. வில்லினை வளைப்பவர்கட்கு அவளை மணம் முடித்துக் கொடுக்க எண்ணிச் சனகன் ஒரு சொத்தை வில்லை நாட்டி வைத்தான். அவ்வில்லை இராமன் வளைத்து முரித்தான். சீதையை மணந்தான்.

சீதை கானகம் செல்லல்

கைகேசி தசரதனிடம் பெற்ற வரங்களின்படி இராமன் கானகம் சென்றான். சீதையும் உடன் சென்றாள். கணவனைப் பிரிந்து வாழ விரும்பாத அவள் உள்ளம் வெளிப்படுகிறது.

இராமனின் கருத்துப்படி சீதை தன்னிடம் உள்ள அணி மணிகளை எல்லாம் ஆரியர்க்குத் தானமாக நல்கினாள். கணவன் சொல்லிற்குக் கட்டுப்பட்டு நடக்கும் அவள் இயல்பு இதனால் தெளியலாம்.

மரவுரியைத் தரித்துக் கொள்ளும் வகையறியாது சீதை திகைத்தாள். அவளுக்கு இராமன் மரவுரியை உடுத்து விட்டான்.

சீதையின் பண்பு

காட்டில் முனிவர்கள் இராமனைச் சந்தித்து, தாங்கள் உயிர்க்கொலை வேள்வி செய்ய உறுதுணை புரிய வேண்டுமெனக் கேட்டனர். ‘நாம் போர் செய்வதை விட்டுவிட்டுக் காட்டில் தவம் புரிவது முறையாகும்’ என்று நன்மையானவற்றைக் கூறினாள் சீதை. அதற்கு இராமன் முனிவர்களுக்குச் சொன்ன சொல்லைத் தவறமாட்டேன் என்றான்.

பகையின்றி அமைதியாக வாழ வேண்டும் என்னும் சீதையின் எண்ணம் இதனால் விளக்கமுறுகிறது.

அனுமன் சீதையைக் கண்டு இராமன் இலங்கையை அழித்து அவளை மீட்பதாகக் கூறக் கேட்டபோதும் இராவணன் பெருமையைக் கூறி, போர் வேண்டாம் என்றே தடுத்தாள். மேலும் அவள்,

கனவிலுமே தமிழர்பகை காணுதல்தீது எனவுறையும்

புனைமணிமா மதில்இலங்கை போந்துஇன்னே தமிழிறைவன்

தனைவணங்கி மன்னிப்புத் தான்கேட்டுக் கொண்டுஅடியாள்

தனை அடைந்தே அயோத்திநகர் தனைஅடையச் சொல்லீரே

(4. பழிபுரிகாண்டம், 10. ஏவற்படலம், பா. 42)

(புனைமணி = அழகு செய்யப்பட்ட; தமிழ் இறைவன் = இராவணன்)

என்று மொழிந்தாள்.

தமிழரிடம் பகை பாராட்டாமல் இலங்கைக்கு வந்து இராவணனை வணங்கி அவனிடம் மன்னிப்புக் கோரித் தன்னை அயோத்திக்கு அழைத்துச் செல்லும்படி இராமனிடம் கூறும்படி அனுமனிடம் செய்தி சொன்னாள்.

சீதை இலங்கைக்கு அழிவில்லாமல் தான் மீட்கப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள் எனலாம்.

சீதை இராவணனின் பெருமைகளைப் பேசினாள். ஏறக்குறைய 50 பாடல்களில் அவன் பெருமைகளைப் பேசினாள். சீதை இராவணனின் இறப்பிற்காகக் கண்ணீர் சிந்தினாள்.

அத்தகைய சீதையை ஊரவர் அயலான் ஊரில் இருந்தவள் என்று பழிப்பதாகக் கூறி அவளைக் காட்டில் விட்டு வரும்படி செய்தான் இராமன்.

சீதை நல்ல பண்பு நலன்கள் மிக்கவளாக, போரை விரும்பாத புனிதையாக, நல்லதே போற்றும் நற்செல்வியாகத் திகழ்ந்தாள் என்பதை அறியலாம்.

3.3 காப்பியச் சிறப்பு

காப்பிய அமைப்பு, கதை, கதை மாந்தர் என்பன எல்லாக் காவியங்களிலும் உள்ள பொதுக் கூறுகள் ஆகும். இவற்றிற்கு மேல் அக்காப்பியத்திற்கே உரிய சிறப்புக் கூறுகள் உண்டு. இராவண காவியத்தில் சிறப்புக் கூறுகளாகக் கருதத்தக்கவை தமிழின் சிறப்பு, தமிழர் பண்பாடு, காப்பியத்தில் அமைந்த கருத்து வெளிப்பாட்டிற்கு உதவி புரியும் கவிதை அழகு முதலியவை ஆகும். மேற்கூறிய சிறப்புக் கூறுகளை வெளிப்படுத்தும் பாங்கில் இக்காப்பியம் அமைந்துள்ளது என்று கூறலாம்.

3.3.1 தமிழ்மொழி புலவர் குழந்தை தமிழும் தமிழரும் மேன்மையுறத் தேவையான கருத்துகளை இராவண காவியத்தில் முன் வைத்துள்ளார். இராவணன் தமிழர் தலைவன் எனப் போற்றப்படுகிறான்.

இனித்த பாலினும் தேனினும் இன்சுவைக்

கனித்தொ கையினும் கட்டிக் கரும்பினும்

நினைத்த வாயும்சொல் நெஞ்சும் இனித்திடும்

தனித்த மிழ்ப்பெருந் தாயினைப் போற்றுவாம்

(இராவண காவியம், 1, பாயிரம் பா. 8)

மிக்க இனிமையுடையது என்று தமிழ் பாராட்டப்படுகிறது.

3.3.2 தமிழ் உணர்ச்சி காப்பிய மாந்தர் வாயிலாகவும் தமிழின் பெருமை பேசப்படுகிறது. பிள்ளைப் பருவத்தில் இராவணன் தமிழ் கற்கத் தொடங்கினான். ஆசான் தமிழ் எனச் சொல்ல இராவணன் மழலைவாயால் தமிழ்மொழி என்றான். மறுபடியும் தமிழ்மொழி என்று சொல்ல இராவணன் தமிழ்மொழி எமது சொந்தத் தாய்மொழி என்றான். அன்னை இராவணனை ‘அமிழ்து உண்ணும்’ என்றால் அவன் ‘அப்போதே தமிழ் உண்டேன் இந்த அமிழ்து எனக்கு வேண்டாம் போ’ என்பான். ‘அமிழ்து அது தமிழ்தான்’ என்று சொல்ல, ‘அமிழ்து அமிழ்து அமிழ்தாம் அன்னாய்! ஆம் அது தமிழ்தான் ஆம் அது தமிழ்தான்’ என்பான்.

மாயோன் மகள் வண்டார்குழலியும் தாய்மொழியாம் தமிழை ஆர்வத்துடன் கற்றாள். தமிழைச் சொல்லியும் எழுதியும் உணர்ந்தும் போற்றினாள். தமிழைப் பழுதறக் கற்றாள்.

இராவணன் தமிழ் ஆடவர்களில் சிறந்தவன் என்பதைத் ‘தாமரைத் தார்அணி தமிழநம்பி’ என்றும் வண்டார்குழலி மகளிருள் சிறந்தவள் என்பதைத் ‘தாமரைப் பூமுகத் தமிழநங்கையும்’ என்றும் புலவர் குழந்தை குறிப்பிடுவதில் அவரின் தமிழ்நெஞ்சம் பளிச்சிடுகிறது.

3.3.3 அணிநலம் சொல்லின்பமும் நடையின்பமும் கருத்தின்பமும் கவிதைக்கு அழகு செய்கின்றன. அதனை மேலும் நயப்படுத்துவது, மெருகூட்டுவது அணிநலனாகும். அத்தகைய அணிநலம் இராவண காவியத்தில் அமைந்திருக்கும் பாங்கினைச் சுருக்கமாகக் காண்பது இப்பாடப் பிரிவின் நோக்கமாகும்.

இராவணன் வண்டார்குழலியைத் தனிமையில் கண்டான். தன் உள்ளத்தை அவளிடம் பறிகொடுத்தான். அவளும் தன் உள்ளத்தில் அவன் உருவைப் பதித்துக் கொண்டாள். இராவணனைக் கண்டு நாணமுற்ற அவள் செயலைக் கவிஞர் உருவக அழகு மிளிரச் சுவைபடக் கூறுகிறார்.

பூங்கைப் போதால் முகமதியம்

பூத்த குவளை மலர்மூடும்

(2. இலங்கைக் காண்டம், 3.காட்சிப் படலம், 86)

அழகிய கையாகிய மலரால் முகமாகிய மதியத்தில் பூத்த (கண்ணாகிய) குவளை மலரை மூடுவாள் என்பது இதன் பொருள்.

காரைப் போர்த்த முகமதியம்

கவிழ்ந்து நாணி இருகையும்

சேரக் கட்டித் தழுவுதல்போல்

(2. இலங்கைக் காண்டம், 3.காட்சிப் படலம், 87)

கரிய மேகமாகிய (கூந்தலால்) போர்க்கப்பட்ட முகமாகிய மதியம் என்பது இதன் பொருள்.

இவ்விரு சான்றுகளிலும் உருவக அணி சிறப்பாக அமைந்து கவிதைக்குச் சுவை ஊட்டுவதைக் காணலாம்.

அணியின்பம் கவிதைக்கு அழகு சேர்க்கும். சொற்களைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதால் ஒருவகையான கவிதை இன்பம் கூடுவதுண்டு.

இராவணன் தங்கை இராமலக்குவரால் உறுப்புகள் சிதைக்கப்பட்டு உயிர்நீத்தாள் என்ற செய்தியை மறவர்கள் இராவணனிடம் கூறினர். அச்சூழலைப் புலவர் குழந்தை அழகுறப் புனைகிறார்.

என்னெனத் தங்கைஎன்ன இனிதென இல்லை என்ன

எனஅரும் தங்கைக்குஎன்ன இயன்றதை உரைமின் என்ன

என்னெனச் சொல்வோம் என்ன இலைஇலை நலமோஎன்ன

மன்னவர் மன்னா என்ன மன்னனும் தங்காய்என்ன

(4. பழிபுரிகாண்டம், 3. செவிகோட்படலம், 3)

‘என்ன’ என்ற சொல் திரும்பத் திரும்ப அமைந்து மறவர் உணர்ச்சியையும் இராவணனின் உணர்ச்சியையும் மெல்ல மெல்ல உணர்த்திக் கவிதைக்கு அழகு சேர்க்கிறது.

3.4 காப்பியத்தில் செய்தி

இராவண காவியம் தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளாக ஒழுக்கமுடைமை, உயிர்க்கொலை மறுப்பு, விருந்தோம்பல், பிறன்மனை நோக்காப் பேராண்மை முதலியவற்றைக் கூறுகிறது. வடவர் திராவிடர் என்ற பகுப்பில் வடவர் பண்பாட்டிலிருந்து திராவிடர் பண்பாடு வேறுபட்டிருப்பதால் காப்பியச் செய்தியாக இப்பண்பாட்டுக் கூறுகள் இடம் பெற்றுள்ளன.

பண்பாடு

இராவண காவியம் தமிழர்களின் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது. மாந்தர்களுக்குள் இருக்கும் நல்லுறவின் வெளிப்பாடாக விளங்குவதுதான் பண்பாடு எனலாம். மிகப் பழமையான இனமான தமிழர் இனம் பண்பட்ட இனமாக மிளிரப் பண்பாடு அடிப்படையாகும்.

ஒழுக்கமுடைமை, உயிர்க் கொலை மறுப்பு, விருந்தோம்பல், பிறன்மனை நோக்காப் பேராண்மை முதலியன இப்பண்பாட்டின் விளக்கங்களாக இராவண காவியத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

3.5 தொகுப்புரை

புலவர் குழந்தையின் இராவண காவியம் இராமாயணத்திற்கு எதிராகத் தோன்றியது. இராவணனைக் காவிய நாயகனாகக் கொண்டது. இராமனை எதிர்நிலைத் தலைவனாகக் (Villain) கொண்டது. தமிழரின் தமிழின் சீர்மையைப் பேசுவது. இராவணன் பெருமையைப் புகழ்வது.

இராவணன் தன் பாட்டி தாடகையையும் தங்கை காமவல்லியையும் இராமனால் இழந்தான். உயிர்க்கொலை வேள்வியைத் தமிழர் ஆட்சியில் கடுமையாக எதிர்த்தான். சீதையைக் கவர்ந்து சென்றான். அவளைத் தந்தையைப் போல, தமையனைப் போலப் போற்றினான். சீதையே இராவணனின் உள்ளம் அறிந்து போற்றினாள் என்பதை அறிய முடிகிறது.

பாடம் - 4

பூங்கொடிக் காப்பியம்

4.0 பாட முன்னுரை

இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்களுள் பூங்கொடிக் காப்பியத்திற்கு ஒரு தனி இடமுண்டு. இந்தக் காப்பியம் தமிழ், தமிழ் உணர்வு, தமிழ்ப் பண்பாடு, தமிழர் முதலியவற்றை முன்னிலைப்படுத்துகிறது. இவ்வகையில் இந்தக் காப்பியம் தனித்தன்மை உடையதாக உள்ளது. மேலும் காப்பியங்களில் பொதுவாக இடம்பெறும் நம்பத்தகாத செய்திகள் இந்தக் காப்பியத்தில் இல்லை. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பல தமிழ்ச் சான்றோர், தமிழறிஞர்கள், தமிழ் உணர்வினர் இந்தக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளனர். இவ்வகையிலும் பூங்கொடிக் காப்பியம் தனித்தன்மை உடையதாகத் திகழ்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பூங்கொடிக் காப்பியத்தைப் பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

4.1 பூங்கொடிக் காப்பியம்

பூங்கொடிக் காப்பியம் கவிஞர் முடியரசனின் படைப்புகளுள் ஒன்றாகும். ‘மொழிக்கொரு காப்பியம்’ என்னும் சிறப்பினை இந்தக் காப்பியம் பெற்றுள்ளது. ‘தமிழ்த் தெய்வ வணக்கம்’ நீங்கலாக, ‘விழவயர் காதை’ முதலாக ‘விடுதலைக் காதை’ ஈறாக முப்பத்தொரு காதைகள் இந்தக் காப்பியத்தில் உள்ளன. 5243 பாடல் வரிகள் உள்ளன. தமிழ்நாட்டு மொழிப் போராட்ட வரலாற்றில் இடம் பெற்றவர்களும் தமிழ்மொழி, தமிழிசை முதலியவற்றின் வளர்ச்சியில் ஈடுபட்டவர்களும் இந்தக் காப்பியத்தில் குறிப்பாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளனர்.

மணிமேகலையும் பூங்கொடியும்

பௌத்த சமய உண்மைகளை உணர்த்த அறச்செல்வியாக ஒரு மணிமேகலை சீத்தலைச் சாத்தனாரால் படைக்கப்பட்டாள். அதுபோல மொழி வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு இல்லறம் துறந்து, பொதுநலம் போற்றித் தன்னலம் மறந்த தமிழ்ச்செல்வி பூங்கொடியாகக் கவிஞர் முடியரசனால் படைக்கப்பட்டுள்ளாள்.

4.1.1 ஆசிரியர் இக்காப்பியத்தை இயற்றியவர் கவிஞர் முடியரசன். 1920ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 7ஆம் நாள் பெரியகுளம் என்னும் ஊரில் பிறந்தார். இயற்பெயர் துரைராசு என்பதாகும். தனித்தமிழ் உணர்வினால் தூண்டப்பெற்றுத் தனித்தமிழில் முடியரசன் எனத் தன் பெயரை மாற்றிக்கொண்டார். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றார்.

பாரதிதாசன் தொடர்பும் தமிழ் உணர்வும்

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைப் பரம்பரையின் முன்னணிக் கவிஞர் முடியரசன். கடவுள் மறுப்புக் கொள்கையுடையவர். தமிழ்மொழி, இனம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் தம் வாழ்நாளின் இறுதிவரையிலும் உழைத்தவர். கவிஞர் முடியரசன் தமிழைத் தெய்வமாகப் போற்றி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதில் உள்ளம் மகிழ்ந்தவர்.

படைப்புகளும் பட்டமும்

பூங்கொடி, முடியரசன் கவிதைகள், கவியரங்கில் முடியரசன், பாடும் பறவை, காவியப்பாவை, வீரகாவியம், ஊன்றுகோல் ஆகிய படைப்புகளைக் கவிஞர் முடியரசன் எழுதியுள்ளார். இவருடைய பாடல்கள் சில இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தவத்திரு குன்றக்குடி அடிகளார் கவிஞர்க்குக் கவியரசு எனப் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தார்.

‘தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லை’ என்பதற்கேற்ப மக்கள் மனத்தில் ‘இறவாமல்’ வாழும் உயர்ந்த கவிஞர் முடியரசன் என்பதில் ஐயமில்லை.

4.1.2 கதைக்கரு இந்தக் காப்பியத்தின் கருப்பொருள் புதுமையானதாகும். தாய்மொழியாகிய தமிழ்மொழியின் உரிமையைக் காப்பதற்காக மேற்கொண்ட மொழிப் போராட்டம் இதன் கருப்பொருள் ஆகும். தொன்மை சான்ற ஒருமொழிக்கு அதற்குரிய இடத்தை ஆட்சியாளர் வழங்காதபோது அறப்போராட்டத்தின் வழி அதனைப் பெறமுயல்வது தவறாகாது என்று மொழிப்போராட்டம் குறித்துப் பூங்கொடிக் காப்பியம் கூறுகிறது.

4.2 கதைமாந்தர்

கதை நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்பவர் கதை மாந்தர்கள் ஆவர். காப்பியங்களில் ஒருவர்க்கு மேற்பட்ட கதை மாந்தர்கள் உள்ளனர். கதை மாந்தர்களைத் தலைமை மாந்தர், துணைமாந்தர் என இருவகைப்படுத்தலாம்.

பூங்கொடிக் காப்பியத்தின் தலைமை மாந்தராக, கதைத் தலைவியாகத் திகழ்பவள் பூங்கொடி ஆவாள். பிற மாந்தர்கள் அனைவரும் துணைமாந்தர் எனப்படுவர்.

4.2.1 பூங்கொடி காப்பியத் தலைவி பூங்கொடி காப்பியத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை காப்பியத்துள் இடம்பெறுகிறாள். காப்பியக் களங்களாக உள்ள மணிநகர், கடல்நகர், வேங்கைநகர் ஆகிய முந்நகர்களுக்கும் சென்று, தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் கதைத் தலைவியாகப் பூங்கொடி உள்ளாள்.

அழகும் இளமையும் உடைய இலட்சியப் பெண்ணாகப் பூங்கொடி படைக்கப்பட்டுள்ளதால் அவள் பல இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும் எதிர் கொள்கிறாள். அன்னை அருண்மொழியாலும் மலையுறையடிகளாலும் அவள் இலட்சியப் பெண்ணாக உருவாக்கப்பட்டு, பெருநிலக்கிழாரின் அன்பாலும் ஆதரவாலும் ஈர்க்கப்படுகிறாள். தான் உயிராகப் போற்றிய மொழியுரிமைக் காப்பிற்காக நடத்திய அறப்போராட்டத்தில் சிறைப்பட்டு நோய்வாய்ப்பட்டு இறுதியில் உயிர் துறக்கிறாள். எந்தப் போராட்டமும் பெண்களின் பங்கினைப் பெறும்போதுதான் முழுமை பெறுகிறது என்பதற்கு இந்தக் காப்பியம் சான்றாகிறது. பூங்கொடிக் காப்பியத்தின் நடுநாயகமாக விளங்க, அவளை அருண்மொழி, மலையுறையடிகள், கோமகன், வஞ்சி, பெருநிலக்கிழார், கோனூர் வள்ளல், சண்டிலி முதலிய காப்பிய மாந்தர்கள் சுற்றி வருகின்றனர்.

மொழி உணர்வு

இளமையிலேயே தந்தை வடிவேலுவை இழந்த பூங்கொடி, தாயின் அரவணைப்பாலும் மலையுறையடிகளின் அறிவுரையாலும் தமிழ்ப் பணியைத் தலைமைப் பணியாகக் கொண்டு சமுதாயத் தொண்டாற்றுகின்றாள்

அவள் தோழி தாமரைக்கண்ணி பூங்கொடியைப் பற்றிக் கூறுபவை பூங்கொடியின் தமிழ் உணர்வினையும் தமிழ்ப் பணியையும் எடுத்துரைக்கின்றன.

மொழிவளம் பெறவும் மூடச் செயலால்

இழிநிலை யுற்றோர் எழுச்சி பெறவும்

தொண்டுகள் ஆற்றும் தூயவள்….

மேம்படு தமிழே மேவிய மூச்சாய்

வாழும் குறிக்கோள் வாழ்வினள்

(கடல்நகர் புக்க காதை, 17 – 23)

இதில், தமிழே உயிர் மூச்சாகக் கருதி வாழ்பவள் அவள் என்று ஆசிரியர் சுட்டுகிறார்.

மனத்திண்மை

கோமகன் என்பவன் தமிழ்ப்பணி புரிவதாகத் தன்னைக் காட்டிக்கொண்டு பூங்கொடியின் காதலைப் பெற முனைந்தான். அவனுக்குப் பூங்கொடியின் பாட்டி வஞ்சி உதவ முன்வந்தாள். பூங்கொடியைக் கோமகன் வேங்கை நகர்க்கும் பின்தொடர்ந்தான். பூங்கொடி தன் வாழ்க்கைக் குறிக்கோளை அப்பொழுது அவனிடம் வெளிப்படுத்தினாள்.

உள்ளத்து எழூஉம் உணர்ச்சிகள் அடக்கி

உள்ளம் துறந்தேன் உலகம் துறந்திலேன்

எள்ளத் தனையும் எழுச்சியில் விழாஅது

தெள்ளத் தெளிந்து திருமணம் ஒரீஇ

இனமும் மொழியும் ஏற்றமுற்று ஓங்க

மனம்வைத்து உழைத்திட வாழ்வு கொடுத்துள்ளேன்

(கோமகன் மீண்டும் தோன்றிய காதை, 284 – 289)

தான் கொண்டுள்ள குறிக்கோளிலிருந்து கொஞ்சமும் நெகிழாத் தன்மை கொண்டவள் என்பதனை இக்கூற்று வெளிப்படுத்துகிறது. அவள், தான் வாழ்க்கையைத் துறக்கவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில், இல்லறத்தில் ஈடுபட்டு வாழும் இல்வாழ்க்கையை அதாவது திருமண வாழ்க்கையை மட்டும் விட்டுவிடுவதாகவும் குறிப்பிடுகிறாள். மாறாகத் தமிழ் மொழியும் தமிழ் இனமும் சிறப்படைவதற்குரிய வாழ்க்கையை வாழ்வேன் என்று குறிப்பிடுகின்றாள். தன்னை விரும்பி, தன்னை வாழ்க்கைத் துணையாக்கி வாழ விரும்பும் கோமகனிடம், தன் குறிக்கோளை மிகவும் உறுதியாக எடுத்துக் கூறுகிறாள். இது அவளது மன இயல்புகளை மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறது.

பன்மொழிப் புலமை

தாமரைக்கண்ணியும் விபுலானந்தரும் கூறியபடி ஆங்கிலம், கன்னடம், மலையாளம் முதலிய பன்மொழிகளில் பூங்கொடி பயிற்சி பெற்றனள். தமிழ்த்தூதுக் குழுவில் இடம் பெற்று அயல்நாடுகளுக்குச் சென்றாள். அயல்நாடுகளில் உள்ள தமிழறிஞர்களின் துணையோடு தமிழின் தொன்மையையும் நீர்மையையும் எடுத்துரைத்தாள். சான்மார், கமிலர், உருதின் முதலிய அறிஞர்களை அயல்நாட்டுப் பயணத்தில் சந்தித்தாள். அச்சந்திப்புகளில் அவள் தேடித் தொகுத்த ஏடுகளினால் புதுப்புது நூல்களை எல்லாம் தமிழுக்குத் தந்தாள்.

பொருளியல் நூலும் புதுப்புதுப் படைப்பும்

அறிவியல் நூலும் அருங்கவித் திரட்டும்

உளநூல் நிலநூல் உண்மைத் தத்துவம்

பலவர லாறும் படைத்தனள் தமிழில்,

(அயல்நாடு சென்றுவந்த காதை, 148 – 151)

4.2.2 மலையுறையடிகள் பூங்கொடிக் காப்பியத்தின் இரண்டாவது காதையாகிய ‘பழியுரை காதையில்’ மலையுறையடிகள் அறிமுகமாகிறார். அருண்மொழியின் கணவன் வடிவேல் பகைவரால் கொலை செய்யப்பட, வாடி வருந்திய அவளுடைய வருத்தம் நீங்க ஆறுதல் கூறி அவளைத் தமிழ்த் தொண்டு செய்ய ஆற்றுப்படுத்தினார். வெருகன் என்பவனால் கற்பை இழந்த அல்லி என்னும் வேதியர் குலப்பெண்ணை அரவணைத்துக் கொண்டார். அவர் குறளகப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

பூங்கொடியிடம் அன்பு

பூங்கொடிக்கு மீனவன், எழிலி ஆகியோரின் வரலாற்றை எடுத்துக் கூறி அவளைத் தமிழிசைப் பணியில் ஈடுபடுத்திய பெருமை மலையுறையடிகளையே சாரும்.

கோமகன் கொலை காரணமாகப் பூங்கொடி சிறைப்பட்டாள் என்பது அறிந்து வருந்தி அருண்மொழியோடு மலையுறையடிகள் வேங்கை நகர்க்கு வந்தமையால் பூங்கொடிபால் அவர் கொண்ட அன்பு எத்தகையது என்பதை அறியலாம். பூங்கொடி மலையுறையடிகள் பற்றிக் கூறியன:

இவரே எளியனை இத்துறைப் படுத்தினர்

கவலை தவிர்ந்திட நல்வழி காட்டினர்

தாயின் மனமும் தந்தையின் நிலையும்

ஏயும் பெருமகன் எம்முயர் தலைவர்

(கிழார்திறம் அறிந்த காதை, 89 – 92)

(எளியன் = எளிமையானவள்; ஏயும் = பொருந்திய)

அயல்நாடு செல்லும் தமிழ்த்தூதுக் குழுவில் பூங்கொடி இடம் பெறுவதால்,

புதுமைக் கலைகள் தமிழில் பூக்கும்

அருமைத் தமிழும் அவ்விடை மலரும்

(அயல்நாடு சென்று வந்த காதை, 30 – 31)

(அவ்விடை = அவ்விடம்)

என்று அவள் மீதுள்ள அன்பினாலும் நம்பிக்கையினாலும் மலையுறையடிகள் இவ்வாறு கூறுகின்றார்.

மன உறுதி

முத்தமிழ் மாநாட்டில் மலையுறையடிகள் ஆற்றிய சொற்பெருக்கு, சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம் நாடகத்தில் வரும் பாண்டிய மன்னன் புருடோத்தமனின் வீரவுரையை ஒத்தது மலையுறையடிகள் நிகழ்த்திய உரை:

ஆருயிர் கொடுப்பதுஅறப்போர் ஆகும்

வேறுயிர் எடுப்பது மறப்போர் ஆகும்

அதனதன் பெற்றிமை அறிகதில் அம்ம!

முதற்போர் புரிய முனைந்தனம் இன்றே

போரெனில் உயிர்பல போதலும் இயல்பே,

சீரிய இப்பெரும் போரினில் புகுவோம்

யாரென யாரென இயம்புதிர் இன்றே

இருப்பதும் ஓருயிர் இறப்பதும் ஓர்முறை

தடுத்திட ஒல்லுமோ? சாவதும் ஒருதலை

விடுக்கும்அவ் ஓருயிர் வீணிற் செலவிடாது

அடுத்தநம் தாய்மொழி அரியணை வீற்றிடத்

தொடுத்திடும் போரில் விடுத்திடத் துணிக

துணிவோர் எவரோ அவரே வருக!

துணிவிலர் ஆயின் தொலைவில் செல்க

(அறப்போர் நிகழ்த்திய காதை, 139 – 152)

(தில் = விழைவு என்னும் பொருள்தரும் இடைச்சொல்)

சமுதாய உணர்வு

தாய்மொழி காக்கும் போரில் ஈடுபாடு கொண்ட மலையுறையடிகள் பல்வேறு சமூகப் பணிகளையும் மேற்கொண்டிருந்தார். பல அமைப்புகளையும் நடத்தி வந்தார். கல்விக் கழகம் அமைத்தார். படிப்பகம் நிறுவினார். தம் கொடைவண்மையால் கவிஞர் பலர் உயிர் காத்தார். மங்கையர் வாழ்வில் புதுமை மலர அரிவையர் மன்றம் அமைத்தார். குறளகம் கண்டார்.

மலையுறையும் மறைமலையும்

மலையுறையடிகள் என்னும் பாத்திரம் தனித்தமிழ் மலையாம் மறைமலையடிகளை நினைவுபடுத்துவதாகும்.

மலையுறையடிகள் பிறர்க்கு உதவும் நன்னெஞ்சம் உடையவராய், பொதுப்பணிகள் பலவற்றைத் தாமே முன்னின்று நடத்தியதை அறியலாம்.

4.2.3 பெருநிலக்கிழார் பூங்கொடிக் காப்பியத்தில் அமைந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் பெருநிலக்கிழார் ஆகும். இக்காப்பியத்தில் இருபதாவது காதையாகிய ‘பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை’யில் அவர் முதன்முதலில் குறிக்கப்படுகிறார்.

இசை ஈடுபாடு

மாளிகையில் எப்போதும் இசைமுழக்கம் ஒலித்தவண்ணம் இருந்தது என்பதால் அவர்க்கு இசைக் கலையின்பால் இருந்த ஈடுபாடு தெரிகிறது. பூங்கொடியின் இசைத்திறனைக் கூறக்கேட்டு அவளைத் தம் மாளிகைக்கு அழைத்துச் சிறப்பித்தார். அவள் அவர்க்குத் தமிழிசையின் நுட்பம் எல்லாம் தெரிவித்தாள். மேலும் முத்துத்தாண்டவர், அருணாசலக்கவி, வேதநாயகர் முதலியோர் பாடிய தமிழிசைப் பாடல்களை எல்லாம் பாடி அவரை மகிழ்வித்தாள். அப்பாடல்களில் பெருநிலக்கிழார் தம் உள்ளத்தைப் பறிகொடுத்தார்.

பூங்கொடியுடன் நட்பு

தம் பெருமாளிகையின் ஒரு பகுதியை நூல்நிலையம் அமைக்கப் பூங்கொடிக்கு விட்டுக் கொடுத்தார். பூங்கொடி, கோமகன் கொலையுறச் சிறையகம் புகுந்தாள். அவள் சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் பெருநிலக்கிழார் தம் மனையிலேயே அவளைத் தங்குமாறு வேண்டினார். இளமைப்பருவத்தில் இழந்த தம் மகளை ஒத்துப் பூங்கொடி இருந்ததால் அவளைத் தம் மகளாகவே கருதினார்.

பூங்கொடிக் காப்பியத்தில் பெருநிலக்கிழார் என்னும் பாத்திரம் துணைப் பாத்திரமாயினும் காப்பியத் தலைவியின் தமிழிசைக்கும் நூலக அமைப்பிற்கும் துணையான பாத்திரம் எனில் அது மிகையன்று.

4.2.4 தாமரைக்கண்ணி ‘தாமரைக்கண்ணி தோன்றிய காதையில்’ கவிஞர் முடியரசன் தாமரைக்கண்ணி என்னும் கதை மாந்தரை அறிமுகப்படுத்துகிறார். கோமகனைக் கண்டு அஞ்சிய பூங்கொடியை மணிநகரிலிருந்து கடல் நகர்க்குக் கொண்டு சேர்த்த பெருமை தாமரைக்கண்ணியையே சாரும்.

தமிழ் உணர்வு

தாமரைக்கண்ணி தமிழ் உணர்வு உடையவள். அவள் வருகை தமிழ் வாழ்த்தோடு தொடங்குகிறது.

தமிழ்மொழி வாழ்க! வாழ்க!….

உலக மொழியுள் உயர்ந்தாய்’ என்கோ!

அலகிலாக் காலம் கண்டாய் என்கோ!

சங்கம் வளர்த்தாய் சான்றோர் பலரால்

பொங்கும் புதுநூல் பூண்டாய் என்கோ

ஆயிரம் பகைதாம் ஆர்ப்பரித் துறினும்

தூவென இகழ்ந்து தோள்வலி காட்டி

எழிலரசு ஓச்சும் தமிழே என்கோ”

(தாமரைக்கண்ணி தோன்றிய காதை, 130 – 138)

(அலகிலா = அளவில்லாத; ஆர்ப்பரித்து = ஆரவாரித்து; தூஎன = இகழ்ச்சிக் குறிப்பு; தோள்வலி = தோளின் வலிமை; எழில் = அழகு, ஓச்சும் = செலுத்தும்.)

பூங்கொடியிடம் அன்பு

தாமரைக்கண்ணி, கோமகன் பூங்கொடியிடம் காதல் கொண்டுள்ளதை அறிந்தவள். கோமகனே பூங்கொடியைத் தொடரும் சூழல் உள்ளதால் படிப்பகத்திலிருந்து தெருவழியே செல்லாமல் பொழிலின் பின்புற வழியாகச் செல்ல அறிவுரை கூறினாள். அவ்வழியாகச் செல்லின் சுடுகாடு இடைப்படும் என்பதைக் கூறினாள். சுடுகாட்டு வழியே செல்லப் பூங்கொடி அஞ்சினாள். தாமரைக்கண்ணி பேயென ஒன்றில்லை எனக் கூறிப் பூங்கொடியையும் அல்லியையும் ஊக்கப்படுத்தினாள்.

பூங்கொடியைத் தொடரும் கோமகனுக்கு

நின்னை

நயவாப் பெண்டிரை நாடுதல் சிறுமதிச்

செயலாய் முடியும், சிந்தித்து ணர்க.

(கடல்நகர் புக்க காதை, 30 – 31)

(நயவா = விரும்பாத)

என்று அறிவுரை கூறி அவளை விடுவித்தாள். பூங்கொடியின் மீதுள்ள அன்பினால் இவ்வாறு அறிவுரை கூறி உதவி செய்தாள்.

கல்விப்பணி

கோமகன் பூங்கொடியை அடைதற் பொருட்டுப் பாவலர் படிப்பகம் ஒன்றை ஏற்படுத்திப் போலியாகப் பொதுப் பணி செய்வதைத் தாமரைக்கண்ணி அறிந்து அதனைப் பூங்கொடிக்குத் தெரிவித்தாள்.

பூங்கொடி பன்மொழிப் பயிற்சி பெறவேண்டிய தேவையை உணர்ந்து அவளுக்கு அதை உணர்த்திய பெருமை தாமரைக்கண்ணியையே சாரும்.

தாமரைக்கண்ணி தான் கற்ற தொல்காப்பியப் பெருநூலைப் பூங்கொடிக்குக் கற்பித்தாள்.

பூங்கொடி என்னும் காப்பியத் தலைவியின் ஆளுமை முழுமையுறத் தாமரைக்கண்ணி ஆற்றிய பணி சிறப்புடையதாகும்.

4.3 காப்பியச் சிறப்பு

காப்பிய அமைப்பு, கதை, கதை மாந்தர் என்பவற்றிற்கும் அப்பாற்பட்ட நிலையில், பல சிறப்புக் கூறுகள் பூங்கொடிக் காப்பியத்தில் அமைந்துள்ளன. குறிப்பாக, ஆசிரியர் முடியரசன், தமிழ் மொழியின் சிறப்பு, தமிழிசையின் பெருமை, தமிழின் தனித்தன்மை ஆகியவற்றையும் சிறப்பாக இக்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளார். காப்பியமே ஒரு வகையில் மேற்குறிப்பிட்ட சிறப்புக் கூறுகளை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடலாம்.

4.3.1 தமிழின் சிறப்பு தமிழ்மொழிக்கு மந்திர வலிமை உண்டு. முதலை உண்ட பாலனை மீட்டுத் தந்தது தமிழ், திருமறைக்காட்டில் அடைத்த கதவைத் திறக்கச் செய்தது தமிழ், கணிகண்ணன் முன் செல்லத் திருமழிசை ஆழ்வார் பின்செல்லத் திருமால் திருமகளோடு பாம்பணையைச் சுருட்டிக் கொண்டு அவருக்குப் பின்னால் ஓடச்செய்தது தமிழ். இத்துணைப் பெருமையையும், தமிழுக்குச் சொன்னவர்களே இன்று அதை மறந்து தமிழ்மொழிக்கு மந்திரவலிமை உண்டா என்று கேட்பது வஞ்சகம் அன்றோ?

சிவனும் தமிழும்

தமிழைக் கடவுளரும் விரும்பிச் சுவைத்தனர். சிவபெருமான் தன்னுருவை மறைத்து, மீன்கொடியை ஏந்தி, வேப்ப மாலையைச் சூடி, சவுந்தர பாண்டியனாக வந்து மதுரையை ஆண்டான். மலைமகள் உமையாள் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்தாள். மயில்வேல் முருகன் உக்கிரகுமாரனாக உருவெடுத்தான். இவ்வாறு சிவனும் உமையும் மயில்வேலனும் தென்னாட்டு மொழியாம் தீந்தமிழின் சுவையை உண்பதற்காக முறையே சவுந்தர பாண்டியனாகவும், தடாதகைப் பிராட்டியாகவும் உக்கிரகுமாரனாகவும் உருத்தாங்கி வந்தனர். அதுமட்டுமா? கைலாயத்திலிருந்த சிவன் தென்திசை நோக்கி வந்து ஆடியதும் தமிழ்ச் சுவையை நுகர்வதற்காகத்தானே! மேலும் சிவன் தமிழ்ப் புலவர்களின் கூட்டத்தில் தானும் ஒரு புலவனாக அமர்ந்து, தமிழை ஆய்ந்து சுவைத்தான். திருவாசகத்தைத் திருவாதவூரர் ஆன மாணிக்கவாசகர் சொல்லச் சொல்லச் சிவன் தன் கைப்பட ஏட்டில் எழுதி நாட்டிற்கு அளித்தான். சுந்தரரைத் தமிழில் பாடுமாறு இறைவன் வேண்டுகோள் விடுத்தான்.

இறைவன் விரும்பும் சிறப்புடையது தமிழ்மொழி என்பதைக் கவிஞர் முடியரசன் எத்துணை அழகாகக் கூறுகிறார். கவனியுங்கள்.

கடகரி உரியன் கடும்புலி அதளன்

சடையினை மறைத்து மணிமுடி தரித்து

விடைக்கொடி விடுத்து வேம்பலர் முடித்துத்

தொடுகழல் மாறன் வடிவொடு வந்ததூஉம்

மடவரல் மனையாள் மலைமகள் உமையாள்

தடாதகைப் பெயரினைத் தாங்கி வந்ததூஉம்

மயில்மேல் அமர்வோன் அயில்வேல் உடையோன்

எயில்சூழ் மதுரை எழில்நகர் அதனுள்

உக்கிர குமரன் உருவொடு வந்ததூஉம்

தெக்கண மொழியாம் தீந்தமிழ்ச் சுவையைக்

கூட்டுண எழுந்த வேட்கையால் என்றே

பாட்டினில் குருபரர் பாடி வைத்தனர்; …..

வழிபடு தமிழை விழைகுவர் இறைவரென்று

எழிலுற உணர்த்திட இவையிவை சான்றாம்….

(சொற்போர் நிகழ்த்திய காதை, 188 – 215)

(கடகரி = மதயானை; உரியன் = உடையவன்; கடும்புலி = கொடியபுலி; அதளன் = தோலாடை அணிந்தவன்; விடைக்கொடி = எருதுக்கொடி; வேம்பு + அலர் = வேப்பம்பூ; மடவரல் = பெண்; எயில் = மதில்; கூட்டுண = கூடிஉண்ண; கடுக்கவின் கண்டன் = நஞ்சுண்ட அழகிய கண்டத்தை உடையவன், சிவன்.)

இவையெல்லாம் இறைவனுக்குத் தமிழின்பால் உள்ள விருப்பத்தை விளக்கும். பூங்கொடி கடவுள் விரும்பும் மொழி தமிழ்மொழி என்பதற்குப் பல சான்றுகளைத் தந்து நிறுவினாள்.

4.3.2 தமிழிசை உள்ளத்தை உருக்கி இன்ப உணர்ச்சியை அள்ளித்தரும் இசையில் மொழிவேற்றுமை புகுத்துவது இழிவாகும். குழலும் யாழும் தரும் இசையில் மொழி உண்டா? அந்த இசையில் பழியேதும் உண்டா? தமிழில் இசைவளம் உண்டா? இசையுணர்வு உடையோர் எந்த மொழியாக இருந்தாலும் விருப்புடன் அதனை ஏற்கின்றனர். எனவே மொழிவெறி இசையில் புகவேண்டாம் என வம்புகள் மொழிந்தனர் சிலர்.

இசையில் மொழிவெறி புகுத்துதல் இழிவெனக் கூறுவோர் கருத்தைப் பூங்கொடி மறுத்துரைத்தாள். குயில், காகம் முதலிய பறவைகள் தம் குரலால் ஒலிக்கின்றனவே ஒழிய இரவல் குரலில் அவை பாடுவதில்லை. பகுத்தறிவுடைய மக்களே நமக்குள்ள மொழியில் பாடாது பயிற்சிக்குரிய மொழியால் பிதற்றுகின்றோம். பொருள் உணர்ந்து பாடும்போதுதான் ஊனும் உயிரும் நெஞ்சுடன் குழைந்து உருகிப் பேரின்பம் தருகிறது. குழல் தரும் இசையில் மொழியில்லையே என்றால், அந்த இசையே போதுமே. அதற்குமேல் வாய்ப்பாட்டு எதற்கு? வேறோரு மொழியில் பாடுவோர் கூட்டமும் தேவையா? குழல், யாழ் முதலிய இசைக்கருவிகள் தரும் இசையே போதுமானது. இவ்வாறு பூங்கொடி கூறுவது வாய்மொழி இசை தாய்மொழி இசையாக அமைதல் வேண்டும் என்பதற்காகவேயாம்.

பூங்கொடிக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ள இசைத்தமிழ் என்ற பகுதியில் இசைத்தமிழ் பற்றிய செய்திகளையும் தமிழிசை இயக்கம் பற்றிய செய்திகளையும் காணலாம்.

மேலும், காப்பியத் தலைவி பூங்கொடி நாவலூர் அமுதத்தைச் சந்தித்தது அவள் வாழ்க்கையின் ஒரு மைல்கல்லாகும். பூங்கொடி தமிழிசை வளர்ச்சியில் ஈடுபட அது ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

இசை ஆர்வம்

தமிழில் உள்ள சிதைந்தும் குறைந்தும் கிடக்கும் இலக்கியச் செல்வங்களை எல்லாம் ஓரிடத்துக் கொணர்ந்து நூலகம் அமைத்துக் காத்தது நாவலூர் அமுதத்தின் சீரிய பணியாகும். கலைமகள் நூலகத்தில் வழக்கம்போல் ஏடுகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் இரு சுவடிகளைக் கண்டார் அச்சுவடிகள் இரண்டும் தமிழ் இசையும் கூத்தும் பற்றியவையாகும். அச்சுவடிகளைக் கலைமகள் நூலகத்திலிருந்து விலைகொடுத்துப் பெற்றார். அச்சுவடிகளைப் பூங்கொடியின்பால் ஒப்படைத்து, அவற்றின் வரலாற்றினையும் நுட்பத்தினையும் மலையுறையடிகளிடம் கேட்டுத் தெளியுமாறு ஆற்றுப்படுத்தினார்.

இசைப்பயிற்சி

தமிழிசையை நன்கு அறிந்த தன் அன்னை அருண்மொழியிடமே தமிழிசையின் நுட்பங்களை அறியப் பூங்கொடி விரும்பினாள். ஆனால் அருண்மொழி கொடுமுடி என்னும் ஊரில் வாழும் ஏழிசைச் செல்வியாம் எழிலியிடம் இசைத்தமிழ்ச் சுவடியின் நுட்பங்களை அறியும்படி ஆற்றுப்படுத்தினாள். பூங்கொடி எழிலியிடம் இசையின் இலக்கண நுணுக்கம், பாடல்திறன், பாடும் முறை முதலியவற்றை அறிந்து இசையரங்கு ஏறினாள்.

பூங்கொடி தமிழிசையோடு யாப்பிலக்கணமும் பாவகையும் பா இனமும் எழிலியிடமே பயின்று, கவிதை இயற்றவும் இசைத்துறைப் பாடல்கள் புனையவும் கற்றுத் தேர்ந்தாள்.

தமிழிசை வளர்ச்சி

மலையுறையடிகள் தமிழிசை வளர்ச்சி கருதி, தமிழிசைப் பள்ளி நிறுவி, மாணவர்களைப் பயிற்றுவித்து, திசைதொறும் தமிழிசையைப் பரப்ப எண்ணினார். பகுத்தறிவுப் பாடல்களைப் புனைந்து மாணவர்களைக் கற்கச் செய்து தம் கொள்கைகளைப் பரவச் செய்ய வேண்டும் என்னும் தம் விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

தமிழிசைப் பள்ளி தொடங்கப்பெற்று, தமிழிசையின் நுட்பங்களை மாணவர்கட்குக் கற்பித்து வருங்கால், தமிழிசை பயில்வதில் வேட்கை கொண்ட சண்டிலியையும் தன் மாணவியாகப் பூங்கொடி ஏற்றாள்.

பெருநிலக்கிழார் இசை ஆர்வம்

வேங்கை நகரில் வாழும் பெருநிலக்கிழார் இசை ஆர்வம் உடையவர். அவர் மாளிகையில் எப்போதும் தமிழிசை ஒலித்தவண்ணம் இருக்கும்.

பண்ணும் இசையும் பயில்வோர் ஒலியும்

தண்ணுமைக் கருவி தந்திடும் முழக்கும்

தெரிதரு யாழில் விரிதரும் இசையும்

முறிதரு கருவிகள் மோதுநல் லொலியும்

காய்வேய்ங் குழலின் கனிந்தநல் லிசையும்

ஆய்நூற் புலவர் அறைந்தநாற் கருவியும்

கற்பார் மிடற்றுக் கருவியும் கலந்து

பொற்புடன் வழங்கும் புத்திசை வெள்ளம்

மாடமிசைப் பிறந்து மறுகிடைப் பரந்தது.

(பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை, 80 – 88)

(பண் = இராகம்; தண்ணுமைக் கருவி = மத்தளம்; முறிதரு கருவிகள் = வெண்கலத்தால் ஆன இசைக் கருவிகள்; வேய்ங்குழல் = புல்லாங்குழல்; மிடற்றுக் கருவி = கண்டக் கருவி; மறுகு = வீதி)

பெருநிலக்கிழார் பூங்கொடியின் இசைத்திறனைக் கேள்வியுற்று, தன் மாளிகைக்கு அழைப்பித்து, அவள் வழங்கிய இசைத்தேனை நுகர்ந்து இன்புற்றார். இளம்பருவத்தில் இறந்த தன் மகளே மீளவும் உயிர்பெற்று எழுந்தது போலப் பூங்கொடியைக் கண்டு அகமகிழ்ந்தார்.

தமிழிசை இயக்கம்

தமிழ்நாட்டில் தமிழிசை நலிவுற்றிருந்தது. அந்நிலையை மாற்றித் தமிழ்நாட்டில் தமிழிசை மலர்ச்சியுற வேண்டும் என்பதை இக்காப்பியம் வற்புறுத்துகிறது.

தமிழிசையின் தொன்மை

தமிழிசை மிகவும் தொன்மையானது. யாழும் குழலும் தமிழர்தம் இசைக்கருவிகளே. பாணனும் பாடினியும் தமிழிசை பாடி மகிழ்வித்தனர். அவர் பாடிய பண்ணும் இசையும் தமிழ்மொழிக்குரியன. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என வகைப்படுத்தப்பட்ட ஐந்திணைக்கும் பண்ணும் யாழும் வகுக்கப்பட்டன. சிலப்பதிகாரத்தில் காணப்படும் கானல்வரி, ஆய்ச்சியர் குரவை, வேட்டுவவரி ஆகியவை அக்காலத் தமிழிசைக்குச் சான்றாக உள்ளன. பண் சுமந்த பாடல்களாகத் தேவார, திருவாசகப் பாடல்களும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்களும் திகழ்கின்றன.

தமிழிசைச் சிறப்பு

தமிழிசைக்குச் சிறப்புகள் பல உண்டு. மனம், மொழி, மெய் என்னும் முக்கோணங்களையும் தன்வயமாக்கும் திறன் தமிழிசைக்கு உண்டு. விலங்கும் அரவும் கூடத் தமிழிசை கேட்டு மயங்கும்.

கவிஞர் தமிழிசையின் சிறப்பைக் கூறுவதற்கு அப்பர் தேவாரத்தைப் பயன்படுத்துகிறார்.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும்

(இசைப்பணி புரிந்த காதை, 240 – 242)

போன்று அஃது உளத்திற்கு உவகை ஊட்டுவது.

(மாசில் = குற்றமில்லாத; மதியம் = மதி; திங்கள் = நிலவு; மூசு = மொய்த்தல்)

தமிழிசையின் நிலை

தமிழ் இசைச்செல்வம் உடைய மொழியாயினும் அது பிற்காலத்தில் புறந்தள்ளப்பட்டது. அயல்மொழி இசை ஆட்சி பெற்றது. தமிழிசைக்குத் தடைகள் அமைக்கப்பட்டன.

கூவும் குயிலும் காகமும் தம் குரலால் பாடுகின்றன. அவை இரவல் குரலால் பாடுவதில்லை. இசைக்கு மொழியில்லை என்றால் கருவி இசையே போதுமானது; மிடற்றிசை வேண்டாமே! என்று பூங்கொடி இசைக்கு மொழி வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினாள்.

இவ்வாறு தமிழிசை குறித்த செய்திகளைப் பூங்கொடிக் காப்பியம் தெளிவுபடுத்துகிறது.

4.3.3 தமிழின் தனித்தன்மை பூங்கொடிக் காப்பியம் தமிழகச் சூழலை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட காப்பியமாகும். தாய்மொழி தமிழை ஆட்சி மொழியாக, அறிவியல் மொழியாக, அனைத்துத் துறைகளிலும் ஆளும் மொழியாக ஆக்க வேண்டும் என்னும் குறிக்கோளோடு இக்காப்பியம் படைக்கப்பட்டுள்ளது. பிறமொழிகளைப் பேசும் சூழல் தமிழகத்தில் இருப்பினும், தமிழின் தூய்மை காக்கப்பட வேண்டும் என்பது தமிழ்வல்லோர் கருத்தாகும். அதற்கேற்பப் பூங்கொடிக் காப்பியத்தில் வரும் மாந்தர்களின் பெயர்களும் ஊர்களின் பெயர்களும் தூய தமிழாக அமைந்துள்ளன.

காப்பிய மாந்தர்கள் பூங்கொடி, அருண்மொழி, அல்லி, தாமரைக்கண்ணி, வஞ்சி, தேன்மொழி, எழிலி, பொன்னி, ஏலங்குழலி, நாவலூர் அமுதம் முதலிய பெண்பாற் பெயர்கள் தூய தமிழ்ப் பெயர்களாகும்.

மலையுறையடிகள், பெருநிலக்கிழார், கோனூர் வள்ளல், மயில்வாகனர், கோமகன், திருமகன், தங்கத்தேவன் முதலிய ஆண்பாற் பெயர்களும் தூய தமிழ்ப் பெயர்களாக உள்ளன.

மணிநகர், கடல்நகர், கூடல்நகர், வேங்கைநகர், கோனூர், நெல்லூர், நாவலூர், மயில் நகர் ஆகிய ஊர்ப் பெயர்களும் தனித்தமிழ்ப் பெயர்களாக உள்ளன.

4.4 காப்பியத்தில் செய்தி

பூங்கொடிக் காப்பியம், தமிழர்களின் ஒற்றுமை, தமிழ் மொழிக்காப்பு, தமிழை ஆட்சி மொழியாக்கல், பிறமொழிக் கலப்பிலிருந்து தமிழைக் காப்பாற்றுதல், மேற்குறிப்பிட்டவைகளைச் செயல்படுத்த மொழிப்போராட்டம் நடத்துதல் போன்றவற்றை, தமிழர்கள் செய்ய வேண்டுமெனப் பல அறிவுரைகளை – கருத்துகளைக் கூறுகின்றது.

4.4.1 தமிழர் ஒற்றுமை சாதி, சமய, இன வேறுபாடுகள் நம் ஒற்றுமையைக் குலைக்கின்றன. அதனால், ஒன்றுபட்டு, ஒற்றுமையாகச் செயல்பட்டு, தமிழுக்கு ஆற்றவேண்டிய பணிகளை ஆற்றமுடியாமல் போய்விட்டது. இனியாவது தமிழர்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று வேண்டுகிறார் முடியரசன். இக்கருத்தைப் பூங்கொடி எனும் கதை மாந்தர் மூலம் வெளிப்படுத்துகிறார்.

முத்தமிழ் மாநாடு ஒன்றைத் தன் சுய முயற்சியால் நடத்துகிறாள் பூங்கொடி. அம்மாநாட்டில் அவள் பேசும்பொழுது, தமிழர் ஒற்றுமையை வலியுறுத்துகிறாள்.

பிறப்பால் வழக்கால் பேசும் மொழியால்

இனத்தால் தமிழர் எனுமொரு நினைவே

கருத்தால் கொண்டுளோம் காலம் நமதே!

தாய்மொழி காக்கும் தணியா வேட்கை

சேய்கள் நம்பால் செம்மையில் கிளர்ந்தது.

வாகையும் சூடுவோம் வளர்தமிழ் பாடுவோம்

ஓகையில் ஆடுவோம் ஓங்குக ஓங்கவே

(அறப்போர் நிகழ்த்திய காதை, 62 – 68)

(வாகை = வெற்றி; ஓகை = மகிழ்ச்சி)

என்று குறிப்பிடுகிறாள்.

தமிழர் ஒற்றுமையாயிருந்தால் பல சாதனைகளைப் படைக்கலாம் என்று நம்பினார் முடியரசன். எனவே, ஒன்றுபட்டு வாழ்ந்து, பல கடமைகளைத் தமிழர் செய்யவேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

4.4.2 தமிழ் ஆட்சி மொழி காப்பியத்தின் கிளைக் கதையில் இடம்பெறும் மீனவன் இறைவழிபாட்டில் தமிழுக்கு உரிமை கோரி மறியல் செய்தான்.

இழிவாம் இச்செயல்! இனிமேல் தமிழால்

வழிபாட்டு உரையை வழங்குக

(மீனவன் வரலாறுணர்ந்த காதை 112 – 113)

என்று வேண்டினான். வழிபாட்டு மொழி வடமொழியாய் இருந்தமையால் மறையோர் அவன் கருத்தை ஏற்க மறுத்ததோடு, கயவர்களைக் கொண்டு அவனைத் தாக்கவும் செய்தனர்.

தமிழக எல்லையில் தமிழே ஆட்சிமொழியாக வேண்டும் என்றால் கடவுள் வழிபாட்டிலும் தமிழ் என்பது அதில் அடக்கம்தானே? கடவுள் வழிபாட்டிற்குக் கோயில் எழுப்பியோர் தமிழர். கோயிலில் உறையும் கடவுளும் தமிழர்க்கே உரியவர் ஆவார். உள்ளம் உருக அக்கடவுளை வழிபடுவோரும் தமிழர்களே!

4.4.3 தமிழ்மொழிக் காப்பு தமிழ்மொழியை நலிவுறாமல் காப்பது தமிழ்மொழிக் காப்பு ஆகும். தமிழைக் காக்கும் பணியில் அதனை வளப்படுத்துவதும் அடங்கும். அதனை வளப்படுத்தும் பணிகளில் ஒன்று பிறமொழிகளில் காணக் கிடக்கும் அரிய கருத்துகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருவதுமாகும்.

பிழையின்றிப் பேசல் எழுதல்

தமிழ்மொழிக் காப்புப் பணியில் மற்றொன்று, பிழைபடத் தமிழைப் பேசியும் எழுதியும் வருவோரைக் கண்டு நல்லறிவூட்டி அவர்களைத் திருத்துவதுமாகும்.

நூல்கள் படைத்தல்

பல்துறை சான்ற பொருளியல் நூல்கள், அறிவியல் நூல்கள், உள நூல்கள், நில நூல்கள், தத்துவ நூல்கள் முதலிய நூல்களையும் தமிழில் படைத்துத் தருதல் தமிழ்வளர்ச்சிக்கு ஆக்கம் தரும்.

காத்தல்

தமிழில் இருக்கும் கலைச்செல்வங்களை, இலக்கண இலக்கியங்களைச் சிதைவுறாமல் காப்பதும் தமிழ் வளர்ச்சிப் பணியாகும்.

4.4.4 பிறமொழிக் கலப்பை எதிர்த்தல் தாய்மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பதை மொழிக்கலப்பு எனலாம். ஒவ்வொருவரும் தம் தாய்மொழியில் பேசும்போதும், எழுதும்போதும், பிறமொழிச் சொற்களைக் கலப்பதைத் தவிர்ப்பது நல்லது. இக்கருத்திற்கு மாறாகத் தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களை நீக்கினால் தமிழ் வளராது என்றும் சிலர் கூறுகின்றனர். செம்பொன்னோடு செம்பு கலந்தால்தான் நல்ல அணிகலன்களை உருவாக்க முடியும் என்பது மொழிக் கலப்பை ஏற்போர் கருத்து. செம்பொன்னோடு செம்பு கலக்கும்போது அளவிற்கு அதிகமாகக் கலந்துவிட்டால் செம்பொன்னில் அணிகலன்கள் செய்ய முடியாது.

தமிழ்மொழி பிறமொழிகளின் உதவியின்றித் தனித்தியங்கும் தகுதி உடையது என்பதை மொழிநூல் வல்லார்கள் கூறுகின்றனர். அவ்வகையில் தமிழ் உயர்தனிச் செம்மொழியாக விளங்குகின்றது. தமிழில் பிறமொழிக் கலப்பை ஆதரிப்பது இனிப்பான அமிழ்தம் இருக்க, அதன் சுவைக்காக வெல்லத்தை அதனோடு கலப்பது போன்றதாகும்.

கவிஞர் முடியரசன் மொழிக்கலப்பை ஆதரிக்காதவர். அவர் மொழிக்கலப்புப் பற்றிக் கூறியிருக்கும் கருத்தை நோக்குங்கள்:

அமிழ்தம் இனிக்க அச்சு வெல்லம்

கலப்போர் உலகிற் கண்டோம் இல்லை

உலப்பிலாத் தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி

கலப்பிலா தியங்கும், கற்றவர் அறிவர்;

செம்பு கலந்தணி செய்வதும் இயற்கை,

செம்பும் மிகவே சேர்த்திடப் பெறுமேல்

கலன்செய அப்பொன் பயன்படாது ஒழியும்

(மலையுறையடிகள் வாழ்த்திய காதை, 52 – 58)

(அமிழ்தம் = சாவாமல் முதுமையடையாமல் காப்பது, தேவர் உலகில் இருப்பது; அச்சுவெல்லம் = வெல்லத்தில் ஒருவகை, மிகவும் இனிப்பானது; உலப்பிலா = கெடுதல் இல்லாத; கலன் = அணிகலன், நகைகள்)

4.4.5 மொழிப்போராட்டம் பூங்கொடிக் காப்பியம் மொழி பற்றிய சிந்தனையை முன்னெடுத்துச் செல்கிறது. தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளிலிருந்து எழுபது வரையிலான காலக் கட்டத்தில் மொழிப்போராட்டம் வீறுபெற்றிருந்தது. ஐயமிலாப் புன்மொழியைத் திணிக்கும் முயற்சி நடந்தது. தாய்மொழி வளர்ச்சி போதிய அளவும் இல்லாதபோது, போதிய கல்வியறிவு இல்லாத நாட்டில், பிறமொழியைப் பயில்வது நலம் பயக்காது. இத்தகைய சூழலில்தான் மொழிப்போராட்டம் தொடர்ந்தது. அது போன்றதொரு மொழிப்போராட்டத்தைப் பூங்கொடிக் காப்பியத்தின் கதைக் கருவாக்கிப் படைத்துள்ளார் கவிஞர் முடியரசன்.

மொழிப்போராட்டத்தில் நோக்கம் என்ன என்பதையும் நோக்க வேண்டும். தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள தமிழ், ஆட்சியின் துறைகளில் எல்லாம் இடம் பெறவேண்டும். ஆட்சியியலில் வேற்றுமொழி இடம் பெறல் தவிர்க்கப்படல் வேண்டும். இதன் இன்றியமையாமையைப் பலமுறை ஆள்வோர்க்கு எடுத்துரைத்தும் ஆள்வோர் செவிசாய்க்கவில்லை. இச்சூழலில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் மொழிப்போராட்டத்தில் இறங்கினர். கவிஞர் முடியரசன் பூங்கொடியின் குரலில் இதனை,

துறைதொறும் துறைதொறும் தூயநற் றமிழே

ஆட்சி புரியும் மாட்சிமை வேண்டும்

ஆட்சியின் பெயரால் அயன்மொழி புகுதலைச்

சான்றோர் வெறுப்பர் தமிழகம் மறுக்கும்

ஆன்றமைந் தடங்கிய அறவோர் கொதிப்பர்

ஆதலின் அரசியல் ஆயத் துள்ளீர்

மேதகு பெரியீர் ஆவன புரிக

என்று பலகால் எடுத்தெடுத் திசைத்தும்

நன்று புரிந்திட நயந்திலர் அவரே.

(சொற்போர் நிகழ்த்திய காதை 224 – 232)

(மாட்சிமை = சீரிய தன்மை; ஆன்று அமைந்து அடங்கிய = உயரிய பண்புகள் பொருந்திய)

மொழிப்போராட்டத்தில் சிறைப்பட்ட பூங்கொடி நோய்வாய்ப்பட்டு, சிறையிலிருந்து வெளிவரும் முன்னரே உயிர் நீத்தாள்.

இவ்வாறு மொழியுணர்ச்சிக்காகவும் தன் தாய்மொழி ஆட்சியுரிமை பெறுவதற்காகவும் தமிழ் வாழ்க்கைத் துறைகள் பலவற்றிலும் உரிய பங்காற்றுவதற்காகவும் ஒரு மொழிப்போராட்டத்தைப் பூங்கொடி நடத்தியதைப் பூங்கொடிக் காப்பியத்தால் அறியலாம்.

4.5 தொகுப்புரை

கவிஞர் முடியரசனின் பூங்கொடிக் காப்பியம் ‘மொழிக்கொரு காப்பியமாக’ அமைந்துள்ளது. தமிழ்மொழி, இசைத்துறையிலும், வழிபாட்டு நிலையிலும் ஆட்சித் துறையிலும் புறக்கணிக்கப்பட்டது. தாய்மொழி என்ற நிலையிலும் தமிழுக்குரிய இடம் மறுக்கப்பட்டது. இந்நிலைமைகளை மாற்றி இசைத்துறையிலும், வழிபாட்டு நிலையிலும் ஆட்சித் துறையிலும் தமிழை நிலைநிறுத்திப் பூங்கொடி மொழிப்போராட்டம் நடத்தினாள். அப்போராட்ட முடிவில் தன் உயிரையே தியாகம் செய்தாள்.

பூங்கொடி என்ற இளமங்கையின் வாழ்க்கை உருவாக்கத்திற்குக் காரணமானவர்கள் சுட்டிக்காட்டப்பட்டனர்; நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டப்பட்டன.

பூங்கொடி என்னும் காப்பியத்தலைவி ஓர் இலட்சியமாகத் திகழ்கிறாள். மாசுமறுவற்ற ஒரு பாத்திரமாகக் கவிஞர் முடியரசன் அவர்கள் பூங்கொடி பாத்திரத்தைப் படைத்துள்ளார் எனலாம்.

பாடம் - 5

ஏனியட்

5.0 பாட முன்னுரை

வெர்ஜிலின் முற்றுப் பெறாத காப்பியமான ஏனியட் உரோமானியர்களின் தேசியக் காப்பியமாகும். இது, கி.மு. இருபதாம் ஆண்டில் இயற்றப்பட்டது. உரோமப் பேரரசின் சரித்திரச் சிறப்பையும், புகழையும் போற்றுகிறது; உரோமப் பேரரசு ஏனியாஸ் என்னும் மாவீரனால் நிறுவப்பட்ட கதையைக் கூறுகிறது. சரித்திரத்தையும் தொன்மவியலையும் கதைப்பின்னலில் ஒருங்கிணைக்கிறது. கிரேக்கக் கவிஞரான ஹோமரின் இலியட் (Illiad) மற்றும் ஒடிசி (odyssey)யின் பாணியைத் தழுவியது. பன்னிரண்டு காண்டங்களைக் கொண்டது. ஏனியாஸ், டிடோ, டர்னஸ் ஆகியோரை முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டது. உள்நாட்டுப் பூசல்களை முடிவுக்குக் கொண்டு வந்த மாமன்னன் அகஸ்டஸின் ஆட்சிச் சிறப்பின் குறியீடாகத் திகழ்கிறது. இலக்கிய நயத்தால் சிறந்தது. போர் பற்றிய சொல்லோவியங்களான வருணனைகளைக் கொண்டது. விரிந்த களப்பரப்பைக் கொண்டது. வீரத்தின் ஆற்றல் மற்றும் விதியின் வலிமையைக் கதைக் கருவாக முன்வைக்கிறது. உரோம் மக்களின் கடவுளர் பற்றியும் நம்பிக்கைகள் பற்றியும் பேசுகிறது. இச்செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

5.1 ஏனியட்

கிரேக்கர்களுக்கும் ட்ரோஜன்களுக்கும் இடையே நடந்த ட்ரோஜன் போரின் (Trojan War) முடிவிலிருந்து தொடங்கும் கதையே ஏனியட். வானுலகத்தின் அரசியான ஜுனோவின் (Juno) தணியாத கோபத்தால் விளைந்தது இக்கதை. ட்ரோஜன்களின் மீது தீராத வெறுப்புக் கொண்ட ஜுனோ, ட்ராய் (Troy) நகரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறாள். சிதறுண்ட தனது மக்களை அழைத்துக் கொண்டு ட்ராயின் இளவரசன் ஏனியாஸ் (Aeneas) தெற்கு நோக்கிப் பயணம் செய்கிறான். ஜுனோவின் கோபம் அவர்களை நிலத்திலும் கடலிலும் தொடர்கிறது. இறவா வரம் பெற்ற வீனஸ் என்னும் தேவதை, ஏனியாஸின் அன்னை. அவளது பூரணமான அருள் ஏனியாஸைக் காக்கிறது. ஜுனோவின் கோபத்தைக் காட்டிலும் பெரியது விதியின் வலிமை. செயல்வீரனான ஏனியாஸ், பிறப்பிலிருந்தே பெரும் புகழுக்குரியவன். இத்தாலியின் பேரரசு ஒன்றை நிறுவுவான் என்பதே அவனது விதி. அதன்படி ஏனியாஸ் பல இடர்களை மீறி வெற்றி பெறுகிறான்.

5.1.1 ஆசிரியர் வெர்ஜில் வரலாறு கி.மு. 70ஆம் ஆண்டில், உரோம் (Rome) நகரத்திற்கு வடக்கேயுள்ள மான்டுவா (Mantua) என்னும் ஊரில் வெர்ஜில் பிறந்தார். வெர்ஜிலின் தந்தை பெரும் செல்வர். வெர்ஜிலுக்குச் சிறந்த கல்வி புகட்டினார். வெர்ஜில் அரசியலிலோ வணிகத்திலோ தலைசிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பினார். தேர்ந்த மேடைப் பேச்சாளனாக வளர வெர்ஜிலை அவரது 17ஆம் வயதில் உரோம் நகருக்கு அனுப்பி வைத்தார். இயற்கையிலேயே கூச்ச சுபாவமுள்ள வெர்ஜில் மேடைப் பேச்சைக் காட்டிலும் எழுத்திலேயே நாட்டம் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாது உள்நாட்டுப் பூசல்களும் பகையும் நிரம்பிய உரோம் நாட்டின் அரசியல் அவரை வெகுவாகக் கவரவில்லை. அவர் நேப்பில்ஸ் (Naples) சென்று தத்துவம் பயின்றார். இக்காலக் கட்டத்தில் கவிதை எழுதத் தொடங்கினார். மாமன்னன் அகஸ்டஸின் ஆட்சியின் கீழ் உரோம் நாட்டில் அமைதி பிறந்தது. இந்தச் சூழலில்தான் வெர்ஜில் ஏனியடை இயற்றினார். வெர்ஜில் அவர் தொடங்கிய காப்பியத்தை முடிக்கும் வரை வாழவில்லை. முற்றுப் பெறாத இக்காப்பியத்தை எரித்துவிடவே விரும்பினார். அகஸ்டஸின் குறுக்கீட்டால் இக்காப்பியம் காப்பாற்றப்பட்டது.

5.1.2 ஏனியட் எழுந்த காலம் கி.மு. 44ஆம் ஆண்டின் ஜூலியஸ் சீசரின் (Julius Ceasar) மறைவுக்குப் பின்னர் உரோம் அரசியல் குழப்பங்களுக்கு உள்ளானது. வெர்ஜில் பிறந்த கி.மு.70ஆம் ஆண்டிலும் இந்நிலை மாறவில்லை. உள்நாட்டுப் பூசல்களால் பிளவுபட்ட உரோமில் வீதிச் சண்டைகளும் கலவரங்களும் அதிகரித்தன. இச்சூழ்நிலையில் கி.மு.31ஆம் ஆண்டில் உரோமில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. மாமன்னன் அகஸ்டஸ் உள்நாட்டுப் பூசல்களை முடிவுக்குக் கொண்டு வந்தான். முதல் முறையாக வெர்ஜிலுக்குத் தனது நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை பிறந்தது. அகஸ்டஸின் ஆட்சிச் சிறப்பைப் போற்றும் காப்பியமாகவே வெர்ஜில் ஏனியட்டைப் படைத்தார். உரோமானியர்கள் தங்கள் நாட்டின் வரலாற்றையும் வல்லமையையும் தொன்மக் கதைகளையும் பற்றிப் பெருமை கொள்ளும் விதத்தில் அமைந்தது இக்காப்பியம்.

5.1.3 ஐரோப்பியக் காப்பியங்களும் தமிழ் காப்பியங்களும் இலக்கிய வடிவங்களிலேயே மிகவும் பழமை வாய்ந்தது காப்பியம். கிரேக்கக் கவிஞரான ஹோமரின் இலியட் மற்றும் ஒடிசி ஆகிய இரண்டும் ஐரோப்பியக் காப்பியங்களின் முன்னோடியாகக் கருதப்படுகின்றன. கிரேக்க நாட்டின் சரித்திரத்தையும் தொன்மக் கதைகளையும் பாடுபொருளாகக் கொண்ட இவ்விரண்டு காப்பியங்களும் வாய்மொழி மரபைச் சார்ந்தவை. இலியட், ட்ரோஜன் போரைப் பற்றியது. ஒடிசி, ட்ரோஜன் போரின் முக்கியப் பங்கு வகிக்கும் யுலிஸஸ் (Ulysses) என்னும் வீரன் தன் தாய்நாடு திரும்பும் கதையைக் கூறுகிறது. ஹோமருக்குப் பின்னர் இத்தாலியப் பெருங்கவிஞரான வெர்ஜில் காப்பிய வடிவத்தை மேலும் செழுமைப்படுத்தினார். அவரது தலைசிறந்த காப்பியமான ஏனியட் உரோமானிய வீரன் ஏனியாஸின் கதையைப் பாடுகிறது. ஆங்கில இலக்கியத்தின் முதல் காப்பியமாகப் போற்றப்படுவது பியோவுல்ப் (Beowulf) என்னும் காப்பியம். வாய்மொழி மரபில் தோன்றிய இக்காப்பியம் ஸ்காண்டினேவிய (Scandinavian) மாவீரனான பியோவுல்ப்பின் கதையையும் புகழையும் கூறுகிறது. 17ஆம் நூற்றாண்டில் வெளிவந்த மில்டனின் (Milton) சொர்க்க நீக்கம் (Paradise Lost) என்பது காப்பிய வடிவத்தின் உச்சமாகக் கருதப்படுகிறது. இது, ஆதாமும் ஏவாளும் சொர்க்கத்தை விட்டு வெளியேற்றப்பட்ட கதையை விவரிக்கிறது. இக்காப்பியம் இலக்கிய நயத்திலும் சுவையிலும் ஒப்பற்றது.

சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, சீவக சிந்தாமணி, குண்டலகேசி ஆகியவை தமிழின் ஐம்பெருங்காப்பியங்களாகும். இவற்றுள் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் தமிழின் முதல் காப்பியமாகும். தமிழ்க் காப்பியங்கள் உத்திகளிலும், கட்டமைப்பிலும், நடையிலும் ஐரோப்பியக் காப்பியங்களைப் பெரும்பாலும் ஒத்துள்ள போதிலும் அவை எடுத்தாளும் பாடுபொருளும் கதைக்கருவும் பெரிதும் மாறுபட்டவையாகும். தமிழ்க் காப்பியங்கள் போரைப் பின்னணியாகக் கொண்டவையல்ல. அவை நாட்டின் சரித்திரத்தைச் சித்திரிக்கும் நோக்கோடு இயற்றப்படவில்லை. தமிழரின் கலை, பண்பாடு, சமூகவியல், அரசாட்சி, இறைநிலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் விதமாகவே அமைந்துள்ளன. இக்காப்பியங்கள் பெரும்பாலும் சமணர்களால் இயற்றப்பட்டவை. ஆகையால் இவற்றில் துறவுநிலை ஒரு முக்கியக் கதைக் கருவாக முன் வைக்கப்படுகிறது. ஐரோப்பியக் காப்பியங்களில் ஆண்களே தலைமைப் பாத்திரங்களாக உள்ளனர். இவ்வாறின்றி தமிழ்க் காப்பியங்கள் குறிப்பாகச் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பெண்களைப் போற்றும் காப்பியங்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

5.1.4 ஹோமரும் வெர்ஜிலும் கிரேக்கப் புலவர் ஹோமர் இயற்றிய காப்பியங்களான இலியட் மற்றும் ஒடிசியின் பாணியை வெர்ஜில் கையாண்டுள்ளார். இலியட் மற்றும் ஒடிசியின் கதையைப் போலவே ஏனியட்டின் கதைப் பின்னலும் ட்ரோஜன் போரைப் பின்னணியாகக் கொண்டது. ட்ரோஜன் போருக்குப் பின்னர் வீடு திரும்பத் துடிக்கும் யுலிஸஸ் கடவுளரின் கோபத்தால் 12 ஆண்டுகள் கடலிலும் நிலத்திலும் அலைந்து திரியும் கதையைச் சொல்கிறது ஒடிசி, ஏனியடின் முதல் ஆறு காண்டங்களில் நாட்டை இழந்த ட்ரோஜன்களோடு ஏனியாஸ் இத்தாலியை அடைய அலைகிறான். ஏனியட்டின் கதையிலும் கடவுளரின் குறுக்கீடு உள்ளது. ஏனியட்டின் இரண்டாவது ஆறு காண்டங்கள் இலியட்டை ஒத்து அமைந்துள்ளன. இலியட் ட்ரோஜன் போரை விரிவாக விவரிக்கிறது. ஏனியட்டின் காப்பியத்தின் கடைசி ஆறு காண்டங்கள் இத்தாலியில் ட்ரோஜன்கள் நிகழ்த்தும் போரைப் பற்றிக் கூறுகின்றன.

ஹோமரின் பாதிப்பு இருப்பினும் ஏனியட் தனக்கெனத் தனித்துவத்தைப் பெற்றுத் திகழ்கிறது. இலியட் மற்றும் ஒடிசி தனிமனித சாகசங்களையும் வீரத்தையும் போற்றுகின்றன. ஆனால் ஏனியட் ஒரு பேரரசின் சரித்திரத்தைச் சித்திரிக்கிறது. ஹோமரின் காப்பியங்கள் வாய்மொழி மரபைச் சார்ந்தவை. எனவே சொல்லிலும் நடையிலும் ஹோமர் எளிமையைக் கையாண்டார். ஏனியடின் மொழிநடை சற்று ஆழமானது. அழகிய படிமங்களும் குறியீடுகளும் நிறைந்தது. தத்துவத்தின் தாக்கத்தையும் ஏனியடில் காணமுடிகிறது. அதுமட்டுமல்லாது உரோமின் சரித்திரமும் தொன்மக் கதைகளும் வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் சென்ற படிப்பினைகளைக் குறியீடுகளின் மூலமாக ஏனியட் உணர்த்துகிறது.

5.2 ஏனியட் கதை அமைப்பும் பாடுபொருளும்

முற்றுப் பெறாத காப்பியமான ஏனியட் 12 காண்டங்களைக் கொண்டது. முதல் ஆறு காண்டங்கள் ஏனியாஸ் தனது மக்களோடு புதிய நாடொன்றை அமைக்கத் தென்திசை நோக்கி மேற்கொண்ட பயணத்தை விவரிக்கின்றன. கடைசி ஆறு காண்டங்கள் ட்ரோஜன் மக்கள் ஏனியாஸின் தலைமையில் இத்தாலியில் நடத்திய பெரும் போரைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன.

5.2.1 ஏனியட் – கதைக் களம் ஏனியடின் கதைக்களம் கி.மு.12ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆசியா மைனரில் (Asia Minor) இருந்த மாபெரும் ட்ராய் நகரம் வீழ்ந்த பிறகு ட்ரோஜன்கள் மெடிட்டரேனியன் (Mediterranean) கடலில் சிறிய மரக்கலங்களில் இத்தாலி நோக்கிச் சென்றனர் என்பது வரலாறு. அவர்கள் உரோம் நகரில் இன்றும் ஓடும் டைபர் (Tiber) நதிக்கரையை அடைந்தனர். வரலாற்றின்படி, ட்ராய் கி.மு.1184ஆம் ஆண்டில் அழிந்தது. கி.மு.753இல் உரோம் உருவாக்கப்பட்டது. இவை இரண்டிற்கும் இடையேயான 400 ஆண்டுக் கால இடைவெளியை வெர்ஜில் ஒரு கவிஞனுக்கே உரிய கற்பனை நயத்தோடு கையாள்கிறார்.

5.2.2 ஏனியட் – கதைச் சுருக்கம் ட்ரோஜன் போரில் வெற்றி பெறும் கிரேக்கர்கள் ட்ராய் நகரத்தை எரித்துச் சாம்பலாக்குகிறார்கள். நாட்டை இழந்த ட்ரோஜன்கள் ட்ராய் இளவரசன் ஏனியாஸின் தலைமையில் தென்திசையை நோக்கிப் பயணம் செய்கிறார்கள். இத்தாலியில் ஏனியாஸ் ஒரு பேரரசை நிறுவுவான் என்பதே விதியின் கூற்று.

ஜுனோவின் இன்னல்களும் ஏனியாஸின் செயல்களும்

ட்ரோஜன்களின் முக்கிய எதிரி ஜுனோ என்னும் வானுலகத்து அரசி அவர்களைப் பல இன்னல்களுக்கு உட்படுத்துகிறாள். சுமார் ஏழு வருடங்கள் ட்ரோஜன்கள் கடலிலேயே அலைகின்றனர். இத்தாலியை அவர்கள் நெருங்கும்போது, ஜுனோ கடலில் கடும்புயலை ஏற்படுத்துகிறாள். புயலில் சிக்கித் திசை மாறித் தவிக்கும் ட்ரோஜன்கள் ஆப்பிரிக்காவிலுள்ள கார்த்தேஜ் நகரை அடைகிறார்கள். கார்த்தேஜின் அரசி அழகிய டிடோ (Dido) ஆவாள். ஏனியாஸுக்கும் மற்ற ட்ரோஜன்களுக்கும் அவள் அடைக்கலம் தருகிறாள். ட்ரோஜன் பெரும்போரையும் அதன் விளைவையும் ஏனியாஸ் டிடோவுக்கு விவரிக்கிறான். மனைவியைப் பறிகொடுத்த ஏனியாஸ் தன் தந்தையோடும் மகனோடும் தப்பிய கதையைக் கூறுகிறான். வழியில் தந்தையை இழக்க நேரிட்ட சோகத்தையும் எடுத்துரைக்கிறான். இதற்கிடையே ஏனியாஸின் அன்னையான வீனஸ் தேவதை அவனைப் பற்றிக் கவலை கொள்கிறாள். கார்த்தேஜின் காக்கும் கடவுள் ஜுனோ. ஏனியாஸுக்கு எதிராக டிடோவின் மனதை ஜுனோ மாற்றிவிடக் கூடும் என்று அஞ்சுகிறாள். மகனைக் காக்கும் பொருட்டு டிடோவை ஏனியாஸின் மீது காதல் கொள்ளச் செய்கிறாள். காதல் வயப்பட்ட ஏனியாஸ் தனது இலட்சியத்தை மறக்கிறான். இவ்வாறு ஒரு வருடம் மகிழ்வாகக் கழிகிறது. கடவுளரின் அரசனான ஜூப்பிட்டர் (Jupiter) குறுக்கிட்டு ஏனியாஸை எச்சிக்கிறார். அவனை நம்பி வந்த ட்ரோஜன்களையும் அவனது கடமையையும் நினைவூட்டுகிறார். கடவுளரின் கட்டளைப்படி நடக்கும் ஏனியாஸ் மனம் வருந்துகிறான். இத்தாலியை நோக்கி மீண்டும் பயணம் மேற்கொள்ள முடிவு செய்கிறான். இதனால் மனமுடைந்த டிடோ தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.

சிசிலியில் ட்ரோஜன்கள்

இத்தாலியை நோக்கிப் பயணிக்கும் ட்ரோஜன்கள், புயல் காரணமாக விரைவிலேயே சிசிலியின் (Sicily) கரையை வந்து சேர்கின்றனர். சிசிலி அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான நாடு. அங்குதான் ஏனியாஸின் தந்தை அஞ்சிசேஸின் (Anchises) உடல் முந்தைய பிரயாணத்தின்போது புதைக்கப்பட்டுள்ளது. சிசிலியின் அரசன் அசெஸ்டீஸ் (Asestes) அவர்களை வரவேற்கிறார். சிசிலியில் அஞ்சிசேஸின் நினைவு நாளை ட்ரோஜன்கள் கொண்டாடுகின்றனர். வழிபாட்டிற்கும் வீர விளையாட்டிற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அஞ்சிசேஸின் கல்லறையில் ட்ரோஜன்கள் வழிபடுவதைக் கோபத்தோடு காண்கிறாள் ஜுனோ. துன்பங்களைக் கொடுக்கும் தேவதையான ஐரிஸை (Iris) ட்ரோஜன் பெண்களிடம் அனுப்புகிறாள். ஐரிஸ் கப்பல்களை எரித்துவிட்டு அவர்களைச் சிசிலியிலேயே தங்கிவிடுமாறு அறிவுறுத்துகிறாள். சுமார் ஏழு வருடங்கள் நாடற்று அலைந்து திரிந்த ட்ரோஜன் பெண்களுக்கு, இந்த ஆலோசனை ஏற்புடையதாகப்படுகிறது. அவர்கள் மரக்கலங்களை எரிக்க முற்படுகின்றனர். இதைக் கண்ட ஏனியாஸ், மனமுடைந்து ஜூப்பிட்டரை வேண்டுகிறான். பெரும் மழையைத் தருவித்து ஜூப்பிட்டர் நெருப்பை அணைத்து மரக்கலங்களைக் காக்கிறார்.

தந்தையின் அறிவுரை

சோர்வுற்ற ஏனியாஸ் வானத்தில் அவனது தந்தையின் உருவைக் காண்கிறான். அவர் ஏனியாஸுக்கு ஆறுதல் கூறுகிறார். ஜூப்பிட்டரின் கட்டளைப்படி, தான் அவன் முன் தோன்றியதாகக் கூறுகிறார். மேலும், ஏனியாஸ் இத்தாலியை அடையும் முன் பாதாள லோகத்தை அடைந்து அங்குள்ள அவர்னஸ் (Avernes) சதுப்பு நிலத்தில் தன்னைத் தேடிக் காண வேண்டும் என்று கூறுகிறார். அங்கு அவர் அவன் எப்படிப்பட்ட நகரை அமைக்க வேண்டும் என்றும் எப்படிப்பட்ட வழித்தோன்றலை அவன் பெறுவான் என்றும் காட்டுவதாகக் கூறி மறைகிறார். அதன்படி பாதாள உலகின் வழியே சொர்க்கத்தை வந்தடைகிறான் ஏனியாஸ். அங்குத் தந்தையைக் காண்கிறான்.

ஏனியாஸின் நம்பிக்கை

அஞ்சிசேஸ் உரோமின் நல்ல எதிர்காலத்தைக் காட்டுகிறார். அங்கு வருங்காலத்தில் தோன்றவிருக்கும் பேரரசர்களின் அணிவகுப்பையும் அவர்கள் புரியவிருக்கும் மகத்தான செயல்களையும் ஏனியாஸ் காண்கிறான். ஏனியாஸுக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை பிறக்கிறது. இதன்பின் ஏனியாஸ் பூலோகம் திரும்புகிறான். மேலும் இத்தாலியை நோக்கிய பயணத்திற்குத் தயாராகிறான்.

ஜுனோவின் தொல்லைகளும் ஏனியாஸின் வெற்றியும்

அவர்களை நட்புக்கரம் நீட்டி இத்தாலியின் மன்னன் லாட்டினஸ் (Latinus) வரவேற்கிறான். அவனது மகள் லாவினியா (Lavinia) வெளிநாட்டவன் ஒருவனையே மணக்க வேண்டும் என்பது கடவுளின் முடிவு. ஆகையால் அவளை ஏனியாஸுக்கு மணமுடிக்க உறுதி செய்கிறான். இதைக் காணப் பொறுக்காத ஜுனோ புதிய இடர்களை உருவாக்குகிறாள். துன்பத்தின் மறுவுருவான அலக்டோ (Allecto) என்னும் தேவதையை அங்கு அனுப்புகிறாள். லாவினியாவின் தாய், அரசி அமாடாவை (Amata) ஏனியாஸுக்கு எதிராகத் தூண்டுகிறாள். அமாடா, லாவினியாவை அழைத்துச் சென்று, ஒரு மலைக் குகையில் மறைத்து வைக்கிறாள். பிறகு அலக்டோ ரூட்டிலியத்தின் இளவரசன் டர்னஸைக் காண்கிறாள். லாவினியாவை மணக்க எண்ணியிருந்த டர்னஸை ஏனியாஸுடன் போர் செய்யுமாறு தூண்டுகிறாள். லாட்டியம் கொடிய போர்க்களமாக மாறுகிறது. பெருத்த சேதத்திற்குப் பின், ஏனியாஸ் டர்னஸுடன் நேருக்கு நேர் மோதுகிறான். டர்னஸை வீழ்த்தி லாவினியாவை மணக்கிறான்.

5.3 ஏனியட் - கருத்துக் களஞ்சியம்

ஏனியட்டின் கதை, பல தளங்களில் இயங்குகிறது. உரோம் நாட்டின் வரலாற்றுப் புகழ், தொன்மக் கதைகள் மற்றும் நம்பிக்கைகளை எடுத்துக் கூறுவதோடு காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்ட சில அழியா உண்மைகளையும் பாடுபொருளாகக் கொண்டது. இக்காப்பியத்தின் அடிப்படைக் கருத்துகள் :

உரோமின் வரலாற்றுச் சிறப்பு

விதியின் வலிமை

அழிவிலிருந்து ஆக்கத்தை நோக்கிய பயணம்

5.3.1 உரோமின் வரலாற்றுச் சிறப்பு உரோமின் சரித்திரச் சிறப்பை ஏனியட் குறியீடுகளின் மூலமாகப் போற்றுகிறது. உரோமப் பேரரசு எழுந்த வரலாற்றை அந்நாட்டின் தொன்மக் கதைகளோடு வெகு அழகாக இணைத்துப் பாடுகிறார் வெர்ஜில். உரோமை ஆட்சி புரிந்த வெவ்வேறு மன்னர்களின் முன்னோடியாகத் திகழ்கிறான் ஏனியாஸ். அவனது வீரமும், விடாமுயற்சியும் தன்னலமற்ற பண்பும் அவனுடைய வழித்தோன்றல்களிடத்தும் காணலாம். இப்பண்புகளே உரோம் ஒரு மாபெரும் வல்லரசாக வளரத் துணைபுரிந்தன. பிற காப்பியங்களைப் போல் அல்லாது ஒரு நாட்டின் பெருமையைப் பாடுவதால் ஏனியட் உரோமின் தேசியக் காப்பியமாகப் போற்றப்படுகிறது.

5.3.2 விதியின் வலிமை விதி மிகவும் சக்தி வாய்ந்தது. மனிதர்களின் வாழ்வு அவர்களின் விதி வழியேதான் அமைகிறது. விதியை மீறிய சக்தி எதுவும் இல்லை. இவ்வுண்மையை உணர்ந்தவர்கள் வாழ்க்கையில் ஏமாற்றங்களையும் துன்பங்களையும் சோர்வின்றி எதிர்கொள்ளும் வல்லமை படைத்தவர்களாகிறார்கள். ஏனியட் காப்பியக் கதை இக்கருத்தை வலியுறுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. இக்காப்பியத் தலைவனான ஏனியாஸின் வாழ்க்கைப் பாதை ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டது. ஏனியாஸ் விதியை எதிர்த்துப் போராடாமல் அதன் வழியிலேயே சென்று வெற்றி அடைகிறான். தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகள் தனக்கென எழுதப்பட்ட விதிக்குப் புறம்பாக இருக்கும் சூழ்நிலைகளில் அவற்றைக் கைவிடுகிறான். நாணல் போல வளைந்து கொடுத்து விதியை எதிர்கொள்ளும் ஏனியாஸின் மனம் இதனால் மேலும் உறுதியடைகிறது. இடர்களையும் இழப்புகளையும் அவன் சந்திக்க நேர்கையில் இக்குணமே அவனைக் காப்பாற்றுகிறது. கார்த்தேஜின் அரசியான டிடோ மற்றும் ரூட்டிலியத்தின் இளவரசனான டர்னஸ் இதற்கு நேர் எதிரான பாத்திரங்களாக உள்ளனர். விதியின் காரணத்தால் ஏனியாஸைச் சந்திக்கும் டிடோ அதே விதியின் வசத்தால் அவனை இழக்க நேரிடும்போது ஏமாற்றமடைந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள். தனது விதியைப் புரிந்து கொள்ளாத டர்னஸ் இறுதியில் ஏனியாஸின் வாளுக்கு இரையாகிறான். பழங்காலம் தொட்டே உரோமானியர்கள் விதியின் வல்லமையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களுடைய தொன்மங்களும் கடவுளர் பற்றிய கதைகளும் இதைப் பிரதிபலிக்கின்றன. வெர்ஜில் இயற்றிய ஏனியட்டின் மையக் கருவாகவும் இதுவே இயங்குகிறது.

அழிவிலிருந்து ஆக்கத்தை நோக்கிய பயணம்

ஏனியட்டில் பயணம் ஒரு முக்கியக் குறியீடாகத் திகழ்கிறது. மனிதனின் வாழ்க்கைப் பயணத்தையே இது சுட்டுகிறது. ஏனியாஸ் மற்ற ட்ரோஜன்களோடு மேற்கொள்ளும் பயணம், அழிவிலிருந்து வாழ்க்கைக்கான புதிய அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவே பொருள் கொள்கிறது.

5.3.3 உரோமானியர்களின் கடவுளரும் நம்பிக்கைகளும் ஏனியட், உரோமானியர்களின் நம்பிக்கைகள், கடவுளர் மற்றும் தொன்மக் கதைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. உரோமானியர்களின் தொன்மக் கதைகள் அவர்கள் வழிபட்ட பல்வேறு கடவுளரைப் பற்றியன. உரோமானியக் கடவுளரின் வரிசைப்படி ஜூப்பிட்டரே முதல் தெய்வம். கடவுளரின் அரசனான ஜூப்பிட்டரின் கீழ்ப் பல்வேறு சிறு தெய்வங்கள் செயல்பட்டன. மனிதர்களின் வாழ்வில் இத்தெய்வங்களின் குறுக்கீடு எப்போதும் நிகழ்ந்து கொண்டேயிருந்தது. மனிதர்கள் தெய்வங்களின் கைப்பாவைகளே என்று உரோமானியர்கள் நம்பினர். அதுமட்டுமின்றி விதியின் வலிமையிலும் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. கனவுகள், சகுனங்கள், எதிர்காலத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அறிகுறிகள் ஆகியவற்றிற்கும் உரோமானியர்கள் முக்கியத்துவம் அளித்தனர். இவை, விதியின் திட்டத்தை முன்னரே அறிவிப்பன என்று நினைத்தனர்.

5.4 ஏனியட் - கதைமாந்தர்கள்

ஏனியட் கதை மாந்தர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஏனியாஸ், டிடோ, டர்னஸ் ஆகியோராவார்.

5.4.1 ஏனியாஸ் மானிடனான அஞ்சிசேஸுக்கும் வானுலகத்துத் தேவதையான வீனஸுக்கும் பிறந்தவன் ஏனியாஸ். இத்தாலியில் பெரும் வல்லரசு ஒன்றை நிர்மாணிக்கப் பிறந்தவன். இதன் காரணமாகவே ட்ராயின் வீழ்ச்சிக்குப் பிறகு, கடவுளர், ஏனியாஸ் உயிர் தப்ப வழிவகுக்கின்றனர். ஏனியாஸ் ஒரு செயல் வீரன். தன்னலமற்ற மக்கள் தலைவன். நாடற்று அலையும் ட்ரோஜன்கள் மனச் சோர்வு அடையும் தருணங்களில் அவர்களுக்கு உற்சாகமூட்டி வழிநடத்துகிறான். கார்த்தேஜின் அரசி டிடோவைப் பிரிய மனமில்லாதபோதிலும் ட்ரோஜன்களின் எதிர்காலத்தைக் கருதி அவளைத் துறக்கிறான். விதியின் ஆற்றலை நன்கு அறிந்தவன் ஏனியாஸ். விதி தனக்கென இட்ட இலட்சியப் பாதையில் இன்னல்கள் பல இருப்பினும் அவற்றை மனத்திடத்துடன் எதிர்கொள்கிறான். மகனைக் கையில் பிடித்துக் கொண்டும் தந்தையை முதுகில் சுமந்து கொண்டும் ட்ராய் நகரை விட்டுத் தப்பும் ஏனியாஸ் கருணையும் அன்பும் நிறைந்தவனாகச் சித்திரிக்கப்படுகிறான். பாதாள உலகில் புதைக்கப்படாத ஆத்மாக்கள் படும் துன்பத்தைக் காணும் ஏனியாஸ், இத்தாலியப் பெரும் போரில் எதிரிகளும் மரியாதையுடன் புதைக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொள்கிறான். பெரியோர்களின் அறிவுரைக்கும் கடவுளரின் கட்டளைக்கும் எப்போதும் அடிபணிந்தே நடக்கிறான். ஏனியாஸின் போர்த் திறனும் வீரமும் இத்தாலியில் நடக்கும் போரில் வெளிப்படுகின்றன.

5.4.2 டிடோ கார்த்தேஜின் அரசியான டிடோ, ஏனியடின் முதல் நான்கு காண்டங்களில் இடம் பெறுகிறாள். கணவன் கொலையுண்ட பிறகு தாய்நாட்டை விட்டு வெளியேறுகிறாள் டிடோ. ஆப்பிரிக்கச் செல்வர்களின் உதவியோடு கார்த்தேஜின் அரசியாகிறாள். பொறுப்பும் கடமையுணர்ச்சியும் நிறைந்த அரசியாகத் திகழ்கிறாள். மக்களின் அன்பையும் மதிப்பையும் பெறுகிறாள். பல ஆப்பிரிக்கச் செல்வர்கள் அவளை மணக்க முன் வருகின்றனர். கணவனை மறக்க இயலாத டிடோ அவன் நினைவிலேயே வாழ்ந்துவிட உறுதி கொள்கிறாள். இவ்வாறிருக்க ஏனியாஸின் வருகை அவளை மாற்றுகிறது. டிடோ கடவுளரின் விளையாட்டில் ஒரு கைப்பாவையாகவே இயக்கப்படுகிறாள். ஏனியாஸைக் காக்கும் பொருட்டு வீனஸ், டிடோவை அவன்பால் காதல் கொள்ளச் செய்கிறாள். இதுவே டிடோவின் அழிவிற்கு வழிவகுக்கிறது. ஏனியாஸைப் போலக் கடமைகளுக்காக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாதவள் டிடோ. விதியின் வலிமையைப் புரிந்து கொள்ளாத டிடோ ஏமாற்றங்களைச் சந்திக்கும் மனப்பக்குவம் இல்லாதவள். ஓர் அரசியாகத் தனக்கிருக்கும் கடமைகளை மறக்கும் டிடோ மக்களின் அவச் சொல்லுக்கு ஆளாகிறாள். ஏனியாஸின் மீது அவள் கொண்ட அன்பு ஆப்பிரிக்கக் கனவான்களைக் கோபமடையச் செய்கிறது. இந்நிலையில் கடமை கருதி, ஏனியாஸ் அவளைப் பிரிய நேரிடுகிறது. அனைத்தையும் இழந்த டிடோ, தன்னை மாய்த்துக் கொள்கிறாள். ஏனியட்டில் டிடோ மற்றும் டர்னஸின் பாத்திரங்கள் ஏனியாஸுக்கு நேர் எதிராகவே படைக்கப்பட்டுள்ளன. டிடோ மற்றும் டர்னஸின் உணர்ச்சிக் கொந்தளிப்பு, ஏனியாஸின் விவேகத்திற்கும் கடமையுணர்ச்சிக்கும் மாறாக உள்ளதைக் காண்கிறோம்.

5.4.3 டர்னஸ் டிடோவைப் போலவே டர்னஸின் பாத்திரமும் ஏனியாஸுக்கு எதிர்மறையாகப் படைக்கப்பட்டுள்ளது. டிடோ உணர்ச்சிகளின் அடிமையென்றால் டர்னஸ் அகந்தையும் கோபமும் வடிவானவன். வீரத்திற்கும் போர்த்திறனுக்கும் பெயர் பெற்றவன். ஒரு தலைவனுக்கான எல்லாக் குணங்களும் இருப்பினும், அவனது கோபமே அவனை வீழ்த்துகிறது. ஏனியாஸுடனான போரில் ஜுனோ அவனைக் கப்பலில் தப்பிச் செல்ல அறிவுறுத்துகிறாள். வீரத்தைப் பெரிதென எண்ணும் டர்னஸ் இதை ஏற்க மறுக்கிறான். இறுதியில் அவன் விரும்பியது போல வீரமரணமே அடைகிறான்.

5.5 ஏனியட் - உத்திகள்

வெர்ஜிலின் ஏனியட், முற்றுப் பெறாத காப்பியமே. காப்பியத்தின் சில பகுதிகள் மெருகேற்றப்பட்டு மீண்டும் எழுதப்பட வேண்டும் என்று எண்ணிய வெர்ஜில் இறக்கும் தறுவாயில் இப்படைப்பை எரித்து விடவே விரும்பினார். இருப்பினும் ஏனியட் இலக்கிய நயத்திலும் சுவையிலும் சிறந்தது. அழகிய படிமங்களும், காப்பிய உவமைகளும், குறியீடுகளும், வருணனைகளும் நிரம்பியது. ஹோமரின் காப்பியங்களைப் போல வாய்மொழி மரபைச் சாராத ஏனியட் கவிதை நயத்தில் ஒப்பற்றது.

5.5.1 குறியீடு ஏனியட்டில் நெருப்பு ஒரு முக்கியக் குறியீடாக விளங்குகிறது. அழிவையும் கட்டுக்கடங்காத உணர்ச்சிக் கொந்தளிப்பையும் இக்குறியீடு சுட்டுகிறது. ஹெலனின் (

elen) மீது, பாரீஸ் (Paris) கொண்ட காதல் தீயே, ட்ராயின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. டிடோவின் அழிவிற்கும் அவள் ஏனியாஸ் மீது கொண்ட காதல் தீயே காரணம். டர்னஸின் தணியாத கோபத்தைச் சித்திரிக்கும்போதும் இக்குறியீடே இடம் பெறுகிறது.

5.5.2 கலைப்பண்புக் கூறு (Motif) காப்பியம் முழுவதும் மீண்டும் மீண்டும் இடம்பெறும் கலைப்பண்புக் கூறுகள், கனவுகள், சகுனங்கள், எதிர்காலத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அறிகுறிகள் காப்பியத்தின் கதையை முன்நகர்த்துகின்றன. இவை யாவும் எதிர்காலத்திற்கான விதியின் திட்டத்தை மறைமுகமாக அறிவித்தபடியே உள்ளன. அதேபோன்று ஒரு புதிய நகரை நிர்மாணிக்கும் முயற்சியும் ஒரு முக்கியக் கலைப்பண்புக் கூறாக உள்ளது. இரண்டாம் காண்டத்தில் ஏனியாஸ் ட்ராயின் வீழ்ச்சி பற்றி விவரிக்கும் போது தாய் நாட்டை விட்டு வெளியேறிய டிடோவும் கார்த்தேஜில் புதிய அரசை நிறுவிய கதையை அறிகிறோம். மூன்றாவது காண்டத்தில், பலமுறை ட்ரோஜன்கள் ஒரு புதிய வல்லரசை அமைக்கப் போராடுவது சித்திரிக்கப்படுகிறது. ஒரு நாட்டை நிர்மாணிப்பதற்கான முயற்சியும் அம்முயற்சியைத் தகர்த்தெறியும் தடங்கல்களும் ஆக்கத்திற்கும் அழிவிற்கும் இடையேயான போராட்டத்தைக் குறிக்கின்றன.

வெர்ஜில் சொல்லோவியங்களான வருணனைகளை இயற்றுவதில் தேர்ச்சி பெற்றவர். ஏனியடில் உள்ள கடல் மற்றும் போர்க்களம் பற்றிய காட்சிகளே இதற்குச் சான்று.

5.6 தொகுப்புரை

ஏனியாஸ், இத்தாலியில் ஒரு பேரரசை நிறுவுதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளும், அதற்காக அவன் அனுபவித்த தொல்லைகளும் இக்காப்பியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. ஜுனோவின் தொல்லைகளை முறியடித்து, அதில் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகள் நிரல்பட எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

காப்பியம் எவ்வாறு ஒரு கதைக் களஞ்சியமாகவும், சிறந்த உத்திகளைக் கையாண்டுள்ளதாகவும் திகழ்கிறது என்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தனிமனிதனின் செயல்களுக்குப் பின்னரும், கடவுளின் செயல்பாடும், விதியின் கட்டுப்பாடும் இருக்கின்றன என்ற மக்களின் நம்பிக்கையையும் இக்காப்பியம் வெளிப்படுத்துகிறது.

பாடம் - 6

குறுங்காப்பியங்கள்

6.0 பாட முன்னுரை

இருபதாம் நூற்றாண்டில் பல குறுங்காப்பியங்கள் தமிழில் தோன்றியுள்ளன. அவற்றுள் மூன்று குறுங்காப்பியங்கள் இந்தப் பாடப் பகுதியில் இடம் பெறுகின்றன. அவையாவன: வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாரின் அகலிகை வெண்பா, பாலபாரதி ச.து.சு.யோகியாரின் அகல்யா, கவிஞர். தமிழ் ஒளியின் வீராயி ஆகியவையாகும். இவற்றைப் பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

6.1 குறுங்காப்பியங்கள்

இதிகாசங்களிலும் காப்பியங்களிலும் இடம்பெற்றுள்ள ஒரு கிளைக்கதை அல்லது ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு காவிய மாந்தர் இறவா வரம் பெற்று உலகில் நின்று நிலவுவது உண்டு. காலத்திற்குக் காலம், கால மாறுபாட்டைக் கருத்தில் கொண்டு படைப்பாளிகள் அந்தக் கிளைக்கதைகளையோ நிகழ்ச்சிகளையோ காவிய மாந்தர்களையோ மறுபடைப்பிற்கு உட்படுத்துவது உண்டு. பாரதியின் பாஞ்சாலி சபதம் அத்தகைய மறுபடைப்பாகும். அவ்வாறே வான்மீகியின் இராமாயணத்தில் உள்ள அகலிகையை வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாரும், பாலபாரதி ச.து.சு.யோகியாரும் புதிய வார்ப்பில் உருவாக்கியுள்ளனர். தமிழ்ஒளி வீராயி என்னும் குறுங்காப்பியத்தின் வழியாக முதலாளித்துவத்தின் கொடுமையையும் சாதியக் கொடுமையையும் வெளிப்படுத்தியுள்ளார். இம்மூன்று குறுங்காப்பியங்களும் பழமையையும் புதுமையையும் இணைக்கும் பாலமாக இருப்பதைக் காணலாம்.

6.2 அகலிகை வெண்பா

அகலிகை வெண்பா என்பது அகலிகையைப் பற்றிய வெண்பா என்னும் பொருளைத் தரும். அதாவது இந்நூல் அகலிகையின் வரலாற்றை வெண்பா யாப்பினால் தருகிறது. இந்நூல், கடவுள் வாழ்த்து, அவையடக்கம் நீங்கலாக மூன்று காண்டங்களால் ஆனது. முதலாவதாகிய இந்திர காண்டம் 109 வெண்பாக்களால் ஆனது. இரண்டாவதாகிய அகலிகை காண்டத்தில் 116 வெண்பாக்கள் உள்ளன. மூன்றாவது காண்டம் கௌதம காண்டம். இதில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை 68 ஆகும். ஆக மூன்று காண்டங்களும் 293 வெண்பாக்களால் ஆக்கப்பட்டுள்ளன.

அகலிகையின் மீது வேட்கையுற்ற இந்திரன், அகலிகையின் கணவனது வடிவத்தில் ஆசிரமத்தில் நுழைந்து அவள் கையைப் பற்றுதலும், அவ்வளவில் வந்தவன் தன் கணவன் அல்லன் என்பதை உணர்ந்து அவனுக்கு அறவுரைகளைக் கூறுதலும், வந்தவன் இந்திரன் என்பதை அறிந்த அளவில், தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள அவனோடு வாதிடுவதும் கற்பனைத் திறத்துடன் புனையப்பட்டுள்ளன. காம வேட்கை மிக்க இந்திரனிடமிருந்து தான் தப்ப முடியாது என்ற அளவில் அவள் மயக்கம் அடைய, இந்திரன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதும் அகலிகையின் கணவன் கௌதமன், நிகழ்ந்தது அறிந்து, இந்திரனையும் அகலிகையையும் சபிப்பதும் அகலிகை வெண்பாவில் அழகுறச் சித்திரித்துக் கூறப்பட்டுள்ளன.

6.2.1 ஆசிரியர் அகலிகை வெண்பா என்னும் குறுங்காப்பிய ஆசிரியர் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் 14.08.1857ஆம் ஆண்டு பழனியப்ப முதலியார்க்கு மகனாகப் பிறந்தார். மண்ணுலகில் 80 ஆண்டுகள் புகழுடன் வாழ்ந்த அவர் 12.10.1946இல் இயற்கை எய்தினார்.

சொக்கநாதப் பிள்ளையும் பிறரும் இவர்தம் தமிழ்ப்புலமைக்கு வித்திட்டவர்கள் ஆவர். அவர்களிடம் தமிழ்ப் புராணங்களையும் இதிகாசங்களையும் சிற்றிலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார். உ.வே.சாமிநாத அய்யர், மு.ரா. அருணாசலக் கவுண்டர், பூண்டி அரங்கநாத முதலியார் ஆகியோரிடம் நட்பும் தொடர்பும் கொண்டிருந்தார்.

கால்நடை மருத்துவப் பிரிவில் பணியாற்றியமையால் அது தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கால்நடைக்காரர் புத்தகம், இந்தியாவில் கால்நடைகளுக்குக் காண்கிற உயிரிழப்பு நோய்கள் ஆகியவை கால்நடைத் துறையில் பணியாற்றும் தமிழர்களின் நலன் கருதி மொழிபெயர்க்கப் பட்டவையாகும்.

தமிழ் இலக்கியத் துறைக்கு வளம் சேர்க்கும் வகையில் ஆங்கிலக் கவிஞர் மில்டனின் Paradise Lost முதற்காண்டத்தைச் சுவர்க்க நீக்கம் என்னும் பெயரில் மொழியாக்கம் செய்தார். கோம்பி விருத்தம், நெல்லைச் சிலேடை வெண்பா, தனிக்கவிதைத் திரட்டு, கம்பராமாயண சாரம் என்பன வெ.ப.சுப்பிரமணிய முதலியாரின் பிற நூல்கள் ஆகும்.

6.2.2 காவிய மாந்தர் இனி, காவிய மாந்தர்களின் பண்பு நலன்களைக் காண்போம்.

அகலிகை

அகலிகை கோதம (கௌதம) முனிவனின் மனைவி; களங்கமில்லா அழகுடையவள்.

விரூபமிலள் என்றபொருள் மேவுபெயர் மின்னாள்

மரீஇயதுஉரு ஒன்றுமொரு மாசும் – இராதபெண்வேறு

இல்என்று உணர்த்திடுதற்கு என்னில் அவள்அழகு

சொல்லும் தரமுடைய தோ?

- (அகலிகை வெண்பா – 55)

(விரூபமிலள் = களங்கமில்லா அழகு; மின்னாள் = மின்னல் எனத்தக்கவள்; மரீஇயது = பொருந்தியது)

என்று அவள் களங்கமற்ற அழகு பேசப்படுகிறது.

திருப்பாற்கடலில் இருந்து அமுது தோன்றியபோது அவ் அமுதை ஒத்த அகலிகையும் தோன்றினாள். முழு அழகே ஒரு பெண் உருவைக் கொண்டு வந்தது போன்று முற்றிய அழகை உடையவள்.

அவள் முகம், மதியை ஒத்திருந்தது; அவள் குளிர்ச்சி பொருந்திய கண்கள், அம்மதியில் உள்ள மானை ஒத்திருந்தன. அவள் மொழி, மதி பொழியும் அமுதை ஒத்துள்ளது; ஆம்பல் மலரை ஒத்த வாயிதழ்களின் உள்ளே உள்ள பற்கள், மதியில் விளையும் முத்தைப் போல் ஒளி சிந்தின. மின்னலைப் போன்று அழகுடைய அவள் புருவங்கள், மன்மதனின் கையில் உள்ள கரும்பு வில்லை ஒத்துள்ளன. அவள் கண்கள், மன்மதனின் கையில் உள்ள பூங்கணைகளை ஒத்துள்ளதால் அவளுக்கு வில்லும் அம்பும் மிகையானவை ஆகும்.

நேர்மையான முறையில் அடைய முடியாத அகலிகையைத் தவறான முறையிலாவது அடைவது என இந்திரன் முடிவு செய்தான். ஆசிரமம் உள்ள வனத்தைச் சென்று அடைந்தான்; நள்ளிரவில் சேவலைப் போலக் கூவினான். கோதமன் காலைக் கடன்களைக் கழித்தற்பொருட்டுத் தவச்சாலையிலிருந்து வெளியேறினான். இந்திரன் கோதமன் உருவில் ஆசிரமத்துள் நுழைந்தான். அகலிகை தன் கணவன் கோதமனே இல்லம் மீண்டான் என்று எண்ணி அவனை வரவேற்றாள். இந்திரன் அவள் கையைப் பற்றினான். அவன் தன் கையைப் பற்றிய முறையிலேயே அவனைத் தன் கணவன் இல்லை என்பதறிந்து ‘சீ, விட்டிடு’ என வேண்டினாள். அவன் அவளை வலியப் பற்றிக் கொண்டான். அவள் புலியால் பற்றப்பட்ட மான் போலவும் வலைப்பட்ட மயில் போலவும் துயருற்றாள். மாறுவேடத்தில் வந்தவன் இந்திரன் என்பது அறியாள். வந்தவன் தன்னைக் கற்பழித்துவிடுவான்; இனி உயிர் வாழ்வதில் பொருளில்லை. இறந்து விடலாம் என்றாலோ வந்தவன் தடையாக இருக்கின்றானே என்று கண்ணீர் வடித்தாள். ‘என் கணவன் இத்தீச்செயலைக் காணின் அவன் கோபத்தீய்க்கு ஆளாகிவிடுவாய்’ என்று வந்தவனுக்கு எச்சரிக்கை விடுத்தாள். அப்போது இந்திரன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். தன்னை விட்டுவிடும்படி பலமுறை அவனிடம் அவள் மன்றாடினாள். காமக் கனலால் வெந்த அவன் அவளின் வேண்டுகோளை ஏற்காமல், ஆள்வழக்கில்லா இந்தக் காட்டில் வலிந்து நான் இன்பந் துய்த்தால் என்னைத் தடுப்பவர் யாருமில்லை. என் விருப்பத்திற்கு இணங்கினால் வெளியில் யாருக்கும் இது தெரியப் போவதில்லை; உன் கணவனுக்கும் உன்னைப் பற்றிய ஐயம் ஒன்றும் வாராது. இங்கு நடப்பதை நானும் வெளியில் சொல்ல மாட்டேன்; நீயும் சொல்லமாட்டாய்; பிறர்க்கு இது தெரியப் போவதில்லை. ஒருவனுடைய வருவாயில் ஆறில் ஒரு கூறு இந்திரனாகிய எனக்குரியது; உன் கணவன் செய்யும் தவப்பயனில் ஆறில் ஒரு கூறு எனக்குரியது. அது போலவே உன் பங்காகிய ஆறில் ஒரு கூறையும் எனக்குக் கொடுக்கக் கடவாய். உனக்குச் சிந்தாமணி முதலிய செல்வங்களையும் அமுதத்தையும் தருவேன்’ எனப் பலவாறாக உரைத்தான்.

இந்திரன் பலவாறாகக் கூறக் கேட்ட அகலிகை அவனுடைய கருத்திற்கு இசைய மறுத்தாள். தன் கற்பைக் காப்பாற்ற வேண்டுமெனக் கெஞ்சினாள். அவன் மீது ஆணையிட்டாள்; தெய்வங்களின் மீது ஆணையிட்டாள்.

அகலிகையின் ஆணை மொழிகளைக் கேட்டும் சற்றும் அயராத இந்திரன், ‘மயிலே, மயிலே இறகொன்று கொடு என்றால் கொடுக்காது, அதன் தோகையைப் பறித்தால்தான் கொடுக்கும். அத்தகையவள் நீ. கருப்பஞ்சாறு ஆலையிற் பிழியப்படுவதுபோல, அகிலை எரித்துப் புகைபெறுதல் போலப் பெண் இன்பத்தை வலிந்து பெறுவதே வழி. நீ என்ன தடுத்தாலும் என் எண்ணம் நிறைவேறாமல் தடுக்கும் உன்முயற்சி வெற்றி பெறாது’ என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான். இந்திரனின் கொடுமொழிகளைக் கேட்ட அகலிகை மயக்கமுற்று விழுந்தாள். இந்திரன் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டான். அதனைக் கவிஞர் ‘தேவர்கோன் அந்தோ தனது கருத்தை முடித்தான்’ என்று கூறுகிறார்.

பெண்ணின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் கற்பென்னும் திண்மையினை இந்திரனால் அகலிகை இழந்தாள்.

இந்திரனால் கற்பழிக்கப்பட்டதை அறிந்த அகலிகை “புழுத்தான் எரியும் அழல் எய்தினால் என்ன துடித்தாள். நஞ்சுண்டவர்க்கு மருந்துண்டு. கற்பிழந்த தனக்கு மருந்தில்லையோ? உயிர் போயினும் கற்பைக் காக்க வேண்டும் என்னும் உறுதியின்றிப் போனேனே, இதைவிட வேறு குற்றமுண்டோ?” என்று கூறிப் புலம்பி அழுதாள். பின்பு தன் கணவன் தன்னைக் கல்லாகுமாறு சபித்ததும், ”நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு இருந்தேனே, அத்தகைய நான் கல்லாதல் பழிசேர் வாழ்வினும் இனிதானது. கற்புடைய பெண்டிரைப் பிறர் விரும்பார். பொய்க் கற்புடைய நான் இந்திரனால் இந்நிலையை அடைந்தேனே! பொறுமை மிக்க என் கணவன் என்னைக் கல்லாக வேண்டுமெனச் சபித்தது என்பால் உள்ள கருணையினால் அல்லவா?” என்று பன்னிப் பன்னிப் பேசி உள்ளம் வேதனையால் துடித்தாள் அகலிகை.

கல்லாக ஆவதற்கோ, கோதமனுடைய மனைவி என்னும் தகுதியை இழந்ததற்கோ அவள் கவலையுறவில்லை. அவனுக்குத் தொண்டு செய்யும் வாய்ப்பு இல்லாமல் போயிற்றே என்பதற்காக அகலிகை கலங்கினாள். கோதமனின் சாபத்தால் அகலிகை கல்லுருவானாள்.

பின்னர், மிதிலை நகர் செல்லும் இராகவனின் பாதத்தூளி படக் கல்லுரு நீத்து அகலிகை பெண்ணுருவானாள். அகலிகை பெற்ற உரு தூயது; மாசு மறு இல்லாதது. நான்முகன் தந்த உரு மாய்ந்தது. இந்த உரு இராகவனின் பாதத்தூளிபட வந்த உரு; இதற்கு மாசும் இல்லை, மாய்வும் இல்லை என்று விசுவாமித்திரன் கூறுவதுபோல மாசு மறுவற்றதாகும்.

இவ்வாறு அகலிகை வெண்பாவில் அகலிகை தூயவளாகப் படைக்கப்பட்டுள்ளாள். கற்பிழந்தாள் என்னும் குற்ற நிகழ்விற்கு அவள் காரணம் இல்லை. மயக்கமுற்ற அவளுடைய விருப்பமின்றியே, விலங்குணர்ச்சியோடு அவள் கற்பை இந்திரன் கவர்ந்து கொண்டான். கற்பைப் பொறுத்த மட்டில் அகலிகை இலக்கியப் பார்வையில் மனித நேயம் கலந்த ஒரு திருப்புமுனை என்றே கருதலாம்.

கோதமன்

அழகின் பேருருவமாகத் திகழ்ந்த நான்முகனின் மகள் அகலிகையை மணக்கக் கோதமனும் இந்திரனும் விரும்பினர். நான்முகன் ஒரு நிபந்தனையை முன் வைத்தான். அதன்படி கோதமன் இந்திரன் ஆகிய இருவரில் எவர் ஒருவர் நீரில் நெடுநேரம் மூழ்கியிருப்பதில் வெற்றி பெறுகிறாரோ அவரே அகலிகையை மணம் புரிதற்கு உரியவர் ஆவார். சபதத்தை ஏற்றுக்கொண்டு, நீரில் மூழ்கிய இந்திரன் கோதமன் நீரிலிருந்து எழுவதற்கு முன்பே நீரிலிருந்து எழுந்து அகலிகையை மணக்கும் வாய்ப்பை இழந்தான். போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திரன் மறுபடியும் ஒரு போட்டியை வைக்க வேண்டுமெனத் தன் தகுதியும் நேர்மையும் இழந்து நான்முகனைக் கேட்டுக் கொண்டான். நான்முகன் அவன் கருத்தை ஏற்காமல் இகழ்ந்தான்.

சீசீ இனையமொழி செப்புதலும் சீர்மைத்தோ!

ஆசை மதியை அழித்ததோ! – நீசர்

புகலுமொழி சொற்றாய் புரந்தரபோ போபோ

அகலஒழி என்றான் அயன்

- (அகலிகை வெண்பா – 12)

(சீர்மைத்தோ = பெருமைக்கு உரியதோ; நீசர் = இழிந்தவர்; புகலுமொழி = கூறும் சொற்கள்; சொற்றாய் = சொன்னாய்; புரந்தரன்= இந்திரன்)

ஆனால் கோதமன் இந்திரன் கருத்தை ஏற்று மற்றுமொரு போட்டியை நடத்தும்படி நான்முகனை வேண்டினான். நான்முகன் கோதமனின் வேண்டுகோளை ஏற்றான். ஒரு போட்டியையும் வைத்தான்.

இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்ற கோதமன், அகலிகையை மணந்தான். இரு போட்டியிலும் தோல்வியைத் தழுவி அகலிகையைத் தழுவ முடியாத இந்திரன், மனம் நொந்தான். அகலிகையின் அழகில் மயங்கிய இந்திரன் அவளை மறக்க முயலாமல் அவளை அடைவதிலேயே நாட்டம் கொண்டான்.

நள்ளிரவில் சேவலைப் போலக் கூவி, கோதமனை ஆசிரமத்திலிருந்து அப்புறப்படுத்தினான். ஆசிரமத்துள் கோதமனைப் போல நுழைந்து அகலிகையின் கையைப் பற்றிய அளவிலேயே அவன் தன் கணவன் இல்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவன் அவள்பால் கொண்ட தன் காதலையெல்லாம் வெளிப்படுத்தினான். அவளுக்கு அடிமையாக இருந்து தொண்டு செய்வதாகக் கூறினான். புலிவாய்ப்பட்ட புள்ளிமான்போல மயக்கமுற்று வீழ்ந்தவளை நுகர்ந்து, தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான்.

கோதமன் பொழுது விடியாமை கண்டு ஆசிரமத்திற்கு விரைந்து மீண்டான்; ஏதோ சூழ்ச்சி நிறைவேறிற்று என்பதை உணர்ந்தான். கோதமன் ஆசிரமத்துள் நுழையவும் இந்திரன் ஆசிரமத்திலிருந்து வெளியேறியதைக் கண்ட கோதமன் ஊழிக்காலத்து உருத்திரனைப் போலக் கண்சிவந்து அவனைக் கொன்று விடுவது போல் நோக்கினான். விலங்குகள் கூட மயங்கி விழுந்த விலங்கைக் கூடுவது இல்லை. நீயோ விலங்கினும் இழிந்தவனாய் ஆனாய். எதனை விரும்பினாயோ அதனையே உன் உடலெங்கும் கொள்க என இந்திரனைச் சபித்தான். தன் மனைவியிடம் தகாது நடந்து கொண்ட இந்திரனைக் கடிந்து கொண்டது நியாயமானதே ஆகும். அகலிகையின்பால் தவறேதும் இல்லை எனத் தெளிந்த கோதமன் அவள் மயக்கம் தெளிய உதவினான். மீண்டும் மீண்டும் தனக்கு நேர்ந்த பெரும்பழியை எண்ணி அவள் துன்பத்தால் துடிப்பதைக் கண்ட கோதமன் ‘பொல்லாத வன்பழி’ தீர்வதற்கு அவளைக் கல்லாகுமாறு சபித்தான். பழியோடு வாழ்வதிலும் கல்லாக இருப்பது மேல் என அவ்வாழ்வை விரும்பி ஏற்றுக் கொண்டாள். இராமனின் பாதத்தூளியால் தான் சாபத்திலிருந்து விடுதலை பெற்றதும் கோதமனுக்குத் தொண்டு செய்யும் பேறு வேண்டும் என்று கேட்டதால், கோதமனின் நல்லுள்ளமும் தூய உள்ளமும் வெளிப்படுகின்றன. கோதமன் அகலிகையை ஆற்றுவிக்கும் பகுதி கவனத்திற்குரியது.

வஞ்சன் உடல் நிறையை மாற்றினான்; அன்றிஉன்றன்

நெஞ்சில் நிறைசிறிதும் நீங்கிலதால் – நெஞ்சம்

நினைவிழந்த பின்னர் நிகழ்ந்த செயலுக்கு

உனையிகழ்ந்து கொள்ளுவதுஎன் னோ

- (அகலிகை வெண்பா – 263)

(உடல் நிறை = உடல் சார்ந்த கற்பு; என்னோ = என்ன)

இந்திரன் அவள் உடற்கற்பை அழித்தான். அவள் நெஞ்சினால் கற்பழியவில்லை; மயக்கமுற்ற பின்னர் நடந்தவற்றிற்கு அவளைக் குறை கூறுவது தகாது எனக் கூறினும் கோதமன் அகலிகையைக் கற்பிழந்தவளாகக் கருதவில்லை என்பது கவனத்திற்கு உரியது.

கோதமனால் சாபமுற்ற இந்திரன் பொருட்டு, தேவர்கள் கோதமனைக் கண்டு சாப விடுதலை கோரினர். நிலைமையை உணர்ந்த கோதமன் இந்திரனுக்குச் சாபவிடுதலை அளித்தான். இன்னா செய்தார்க்கும் இனியவை செய்யும் பண்பாளனாகக் கோதமன் காட்சியளிக்கிறான்.

இராமனின் பாதத்தூளியால் கல்லுரு நீங்கிய அகலிகையை விசுவாத்திரனின் வேண்டுகோளால் மனைவியாகக் கோதமன் ஏற்றுக் கொண்டான்.

இந்திரன்

இந்திரன் அகலிகையின் அழகில் தோய்ந்து அவளைத் தன்னவள் ஆக்கிக் கொள்ள எண்ணினான்.

இந்திரனின் உள்ளம் கவர்ந்தவள் அகலிகை என்றாலும் அவள் கோதமனின் மனைவியான பின்னர், அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்று இந்திரன் முயல்வது அறத்திற்கு மாறுபட்டதாகும். காம எண்ணமே மிக்கிருந்ததால் அறத்திற்கு மாறுபட்டது அவன் வேணவா என்பதை அவன் உணர மறந்தான். திசை காட்டும் கருவியின் சிற்றூசி வடதிசையை நாடுவது போல அவன் மனம் அவளையே நாடியது.

வேகின்றேன்; வேகின்றேன்; வெவ்வியதோர் தீப்பற்றி

வேகின்றேன்; அந்தோ ! விளிந்தேனே – வேக

நரகத்தீத் தானும் நலியுமோ? இந்த

விரகத்தீப் போல வெகுண்டு

- (அகலிகை வெண்பா – 66)

என்ற இந்திரன் கூற்று அவன் காமத்தால் உற்ற துயரத்தை விளக்கும்.

அனைவரும் அறிய, அடைய முடியாதவளைத் தவறான வழியில் அடைவேன் என்று இந்திரன் முடிவு செய்தது காமத்தீயின் வேகத்தைப் புலப்படுத்துகிறது. அவ்வெண்ணத்தின் முடிவாக ஒருநாள் நள்ளிரவு கோதமனை ஆசிரமத்திலிருந்து வெளிப்படுத்தி, கோதமன் உருவிலேயே ஆசிரமத்தில் நுழைந்தான். காம உணர்வு தலைப்பட அவன் அவள் கையைப் பற்றிய அளவிலேயே அவன் தன் கணவன் இல்லை என்றுணர்ந்து அவனை வெருட்டினாள்; மருட்டினாள். அவன் இந்திரன் என்றறிந்த போது மன்றாடினாள். அவன் கொஞ்சமும் மனம் மாறவில்லை. அவளை அடைவதிலேயே கருத்தாக இருந்தான். நீ என்னைத் தடுத்தாலும் உன் முயற்சி வெற்றி பெறாது என்று இந்திரன் கூறக்கேட்ட அகலிகை மயக்கமுற்று விழுந்தாள்.

இந்திரன் அகலிகையின் கற்பைக் கெடுத்தான். பொழுது விடியாமை கண்டு ஆசிரமத்திற்குத் திரும்பிய கோதமன் இந்திரன் எதிர்ப்பட்டான். இதனைத்

தூயஅவி வவ்விஅதைத் துய்த்தோடு இழிதிருட்டு

நாயெனவிண் வேந்துஏக நாடு அமயம்

- (அகலிகை வெண்பா-227)

(அவி = வேள்வியில் இடுபொருள்; வவ்வி = கவர்ந்து; துய்த்து = உண்டு, நுகர்ந்து; விண்வேந்து = இந்திரன்)

என்று கவிஞர் குறிப்பிடுகிறார். வேள்வியில் இடும் அவிர்பாகத்தை நாயொன்று திருட்டுத்தனமாகத் திருடி உண்டுவிட்டு ஓடுவதுபோல இந்திரன் ஓடினான் என்பது இதன்பொருள்.

விண்வேந்தனாகிய இந்திரன் பிறன்மனை நயந்த பேதைமையால் குலைந்தான்.

உட்கு அடங்கி ஒடுங்கி. நடுநடுங்கி

வெட்கி மெலிந்து வெளிறிஒளி – மட்கி

உலைந்தான் ; குலைந்தான் ; உடைந்தான் ; இடைந்தான்

அலைந்தான் மலைந்தான் அவன்

- (அகலிகை வெண்பா- 229)

(உட்கி = அஞ்சி; வெட்கி = நாணமுற்று; மட்கி = மழுங்கி; மலைந்தான் = மலைப்புற்றான்)

என்று கவிஞர் இந்திரனின் அவலநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

இந்திரன் கோதமனின் சாபத்திற்கு உள்ளானான். பெண்ணின்பம் வேண்டி அகலிகையின் கற்பைச் சூறையாடியதால் எதனை நீ விரும்பினாயோ அந்த உருவை உன் உடல் எங்கும் கொள்க எனக் கோமதன் சபித்தான். எவரும் காணாதபடி மறைந்து வாழும் அவல வாழ்விற்கு இந்திரன் ஆளானான்.

இந்திரனின் நிலைமையை அறிந்த தேவர்கள் கோதமனைச் சந்தித்துச் சாப விடுதலை அளிக்கும்படி வேண்டினர். அவர்களின் சொல்லைச் செவிமடுத்த கோதமன் இந்திரன் உடம்பில் உள்ள பெண்குறிகளை ஆயிரம் கண்ணாக ஆகும்படி சாபவிடுதலை தந்தார்.

இந்திரன் தேவர்களுக்கெல்லாம் தலைவனாயினும், பிறன்மனை நயந்த காரணத்தால் தாழ்வுற்றான். விலங்கினும் கேடாக நடந்து இழிவுற்றான்.

6.3 அகல்யா

பாலபாரதி ச.து.சுப்பிரமணிய யோகியாரின் அகல்யா ஆறு பகுதிகளாக அமைந்துள்ளது. அவையாவன: ஆரம்பம், திருமணம், கற்புக்கனல், சூழ்ச்சி, மீட்சி, முடிவு என்பனவாம். கலிவெண்பா என்னும் யாப்பில் 486 அடிகளால் ஆன ஒரு சிறு காப்பியம்.

இக்குறுங்காப்பியத்தை அறிஞர்கள் “யோகியாரின் அகல்யா ஒரு புதிய அழகிய அற்புத சிருஷ்டி” என்று உளமாரப் பாராட்டுகின்றனர்.

ஒரு பழைய கதை கவிஞரின் கற்பனைத் திறனில் புத்தம் புதிய வடிவுடன் வெளிப்படுவதை அகல்யாவில் காணலாம்.

6.3.1 ஆசிரியர் அகல்யா என்னும் குறுங்காப்பியத்தைப் படைத்தவர் பாலபாரதி ச.து.சுப்பிரமணிய யோகியார் ஆவர். அவர் 30.09.1904இல் பிறந்து, 60 ஆண்டுகள் வாழ்ந்து 23.07.1963இல் மறைந்தார். இவர் தந்தை துரைசாமி அய்யர், தாய் மீனாட்சியம்மாள். இவர் சேலம் மாவட்டம் சங்ககிரியில் பிறந்தவர்.

இவர், நாட்டு விடுதலைப் போராட்டத்திலும் வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார். 1931இல் தடையுத்தரவை மீறியதற்காக எட்டுத் திங்கள் சிறையிலிடப்பட்டார். அக்காலம் அவர்க்குக் கவிதை இயற்றவும் நூல்கள் இயற்றவும் உதவியது. யோகியாரின் மகள் இராசேசுவரி, பச்சிளம் குழந்தைப் பருவத்தில் இயற்கை எய்திய துயரத்தின் பாதிப்பால் அவர் எழுதிய கண்மணி ராஜம் ஓர் அற்புதப் படைப்பு; கவிஞரின் அவலப் படைப்பு.

யோகியார் ஆங்கிலப் புலமையும் வடமொழிப் பயிற்சியும் உடையவர். தேசியக் கவிஞர் சி.சுப்பிரமணிய பாரதியார் நமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்கு உழைத்தல் என வாழ்ந்தது போல யோகியார்

போதெல்லாம் பாட்டு, பொழுதெல்லாம் சங்கீதம்

யாதுக்கும் அஞ்சோம் ; அவனியெலாம் எம்உடைமை;

சூதுக்கும் வஞ்சனைக்கும் சூட்சிக்கும் மாந்தர்செயும்

வாதுக்கும் மாமருந்து யாங்கள்செயும் வண்கவிதை

என்று வாழ்ந்து காட்டியவர்.

6.3.2 காவிய மாந்தர் இனி, காவிய மாந்தர்களின் பண்புநலன்களைக் காண்போம்.

அகல்யா

ச.து.சுப்பிரமணிய யோகியாரின் அகல்யா ஒரு புதுமைப்படைப்பு. அவர் அகல்யாவின் அழகினை எதிர்மறைச் சொற்களால் வடித்துப் புதுக்கியுள்ளார். கலிவெண்பாவின் கவிநடையில் காப்பியம் உள்ளத்தை அள்ளிச் செல்கிறது.

பூவாத பூங்கமலம் புரையாத மணிவிளக்கம்

மோவாத முத்தாரம் முளையாத செங்கரும்பு

காம்பின்றித் தன்னிலேதான் கவின்விரியும் கற்பகக்கா

கூம்புமிருள் மொட்டிலே குமையாத மின்னல்வெள்ளம்

குவியாத சந்திரிகை குலையாத வானநிதி

அவியாத மீனரசி அலையாத அமுதகும்பம்

- (தமிழ்க்குமரி – ப.39)

(புரையாத = குற்றமில்லாத; மோவாத = முகராத; குமையாத = அழியாத; சந்திரிகை = நிலவு)

அகல்யா நான்முகனின் மகள். அழகின் திருவுருவாகப் படைக்கப்பட்டவள். ச.து.சுப்பிரமணிய யோகியார் அகல்யாவின் அழகை வடித்துத் தரும் அழகே, அழகு. அவ்வழகினை

அன்னையிலாக் கன்னிகையே யாருனக்கு யௌவனம்எனும்

புன்னகையைத் தந்தானே, புதுவயிரப் பெட்டகமே!

நள்ளிரவில் கனவாகி நாளோடும் பூத்தவளே!

தெள்ளியதோர் தேன்வடிவே, தெய்விகமாம் பேரழகே!

யாகக்கனற் கனவே, அருமறைக்கு நாயகியே

போகத்துப் பூங்கனவே, போதத்து அகலிகையே

- (தமிழ்க்குமரி – ப.40)

(யாகக் கனல் = வேள்வித்தீ; அருமறை = அரிய வேதங்கள்; போகம் = இன்பம்; போதம் = அறிவு)

என்று போற்றுகிறார் கவிஞர்.

இந்த அழகே கௌதமனையும் இந்திரனையும் அகல்யாவின்பால் ஈர்க்கக் காரணமாயிற்று. நான்முகன் வைத்த போட்டியில் அவளை அடையும் வெறியில் இருவரும் கலந்து கொண்டனர். உலகை முதலில் சுற்றிவருபவனுக்குத தன் மகளை மணம் செய்து வைப்பதாக அவள் தந்தை நிபந்தனை விதித்தான். இந்திரன் வானவில்லில் சிறகுகள் அமைத்து வட்டமதியைத் தட்டாகக் கொண்டு வால்மீன்களைக் குதிரைகளாகப் பூட்டி மேகத்தேரில் மின்னல் வேகத்தில் மண்ணுலகையும் விண்ணுலகையும் சுற்றி வந்தான். கௌதமன் அண்டங்கள் அனைத்தும் ஆவின் உள்ளே அடங்கிக் கிடப்பதறிந்து அதனையே முதலில் சுற்றி வந்து வெற்றி பெற்றான். கௌதமனுக்கு அகலிகை மனைவியானாள்.

அகலிகை கௌதமனை மணந்து கொண்டதால் வாழ்க்கையில் பெரும் சரிவை அவள் எதிர்கொண்டாள். காலைக் கதிரவன் போலும் ஒளிவீசும் பொன்மலையில் வாழ்ந்த அகலிகை ஓலைக்குடிசையில் வாழ நேர்ந்தது. கற்பகச் சோலை நிழலிலே கண்ணயர்ந்த அகலிகை பச்சைமரச் சோலையிலே கண்ணயர நேர்ந்தது. எனினும் அவள் முகத்தில் ஏமாற்றத்தின் அடையாளம் இல்லை. மாறாக அமைதி தவழ்ந்தது அவள் முகத்தில்.

அகல்யாவை மணக்க முடியாமல் ஏமாற்றமடைந்த இந்திரன் அந்தரத்தில் ஆடும் பம்பரம் போல ஆடி அயர்ந்து விட்டான். அவன் அவள் நினைவாகவே பித்தேறிக் காணப்பட்டான். நீராடப் போகும் அகல்யாவைக் கண்ட இந்திரன் உள்ளத்தில் வெறி கொண்டான். அவன் நிலையைக் கவிஞர் பின்வரும் கண்ணிகளில் ஓவியமாக்கியுள்ளார்.

மத்துருட்டும் தயிரென்ன மனதுருட்டும் காமத்தீ

பித்துருட்டும் பேயாட்டப் பெருஞ்சூறை ஆனதுவே

தானுண்ணும் காதல்தனை யுண்ண வானரசன்

தேனுண்ணும் ஈப்போலத் தயங்கித் திகைத்தானே

போதக் கனற்சுடராம் புதுமைக் கவிமலர்நின்

காதல் விளக்கணையும் காமவிட்டில் போலவந்தான்

- (தமிழ்க்குமரி – ப.48)

இளம்பருவத்தில் அகல்யாவும் இந்திரனும் ஒருவருக்கொருவர் காதலித்தனர். ஆனால் அவர்கள் காதல் இன்பத்தைத் துய்த்ததில்லை. கௌதமனின் வஞ்சகத்தால் இந்திரன் அகல்யாவைப் பெற முடியாமற் போயிற்று. ஆனாலும் இந்திரன் அவளை அடைய எண்ணினான். இந்திரன் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான்.

மற்றொருவன் தாரம் நீ, ஆனாலும் வானரம்கைப்

பற்றுமலர் மாலை பறித்தணைத்தல் பாவமுண்டோ?

- (தமிழ்க்குமரி – ப.49)

என்று தன் நியாயத்தை உரைக்கும் இந்திரன் அவளிடம் கெஞ்சினான்.

போனவஞ்சம் போகட்டும் ; புதுவஞ்சம் வேண்டா

ஏழைஎன்னைக் காப்பாயோ? தேவியுன்னை வேண்டுகிறேன்

- (தமிழ்க்குமரி – ப.50)

இந்திரன் அவள் காதல் மயக்கத்தில் வீழ்ந்தான். அவளிடம் உயிர்ப்பிச்சை வேண்டினான்.

அவன் பேசப்பேச அமைதி குலைந்து அவனை உற்று விழித்தாள் அகல்யா; வெகுண்டாள்.

யாரைநீ சொன்னாய்? அடகெடுவாய் மதியிலாய்

வேரை அறியாதே வெற்றிலையை வேட்கின்றாய்?

கற்புக் கனல்நான் ; காமச்சிறு புழுநீ

அற்பம்நீ என்பால் அன்புரைக்க வந்தாயோ?

- (தமிழ்க்குமரி, ப.50-51)

தன்பால் காதல்மொழி பேசிக் காதலைப் புதுப்பிக்க வந்த இந்திரனைக் ‘காமச்சிறு புழு’ என்றும், ‘அற்பம்’ என்றும் அகல்யா சாடினாள். கௌதமனின் மனையாட்டியாகிய தன்னை வைப்பாட்டியாகக் கருதினானே என்று சினந்தாள். உயிர்ப்பிச்சை கேட்கும் இந்திரனை நோக்கிக் கற்புக்கு உயிர்ப்பிச்சை யார் தருவார்? வெட்கமில்லாதவனே, விண்ணுக்கு அரசனா நீ? காமப் புண்ணுக்கு அல்லவா அரசனாக இருக்கிறாய். தேவர்க்குத் தேவனே, தீமைக்கு அரசன் நீ என்று அவள் இடித்துக் கூறினாள். அவள் கடுமொழி கேட்டு இந்திரன் தலைகவிழ்ந்தான். அறிவு தடுத்தும் ஆசை உடைத்துச் செல்ல முடிவில் ‘தொடுவான்போல் ஆனாலும் தொடுவேன் அவளை’ என்றான்.

ஒருநாள் இரண்டாம் யாமத்தில் இந்திரன் சேவற்கோழி போலக் குரலெழுப்பினான். அந்தக் குரலைக் கேட்ட முனிவன் சந்தி செய்யப் புறப்பட்டான். முனிவன் உருவில் இந்திரன் குடிசைக்குள்ளே புகுந்தான். முகத்தில் புன்னகை தவழ அகல்யா நாணற்பாய்மேல் உறங்கக் கண்டான், இந்திரன்.

ஆங்கவளைக் கண்டான் ; அழகுண்டான், கொண்டான்

தீங்குதடுப் பாரில்லை; தீமைபுரிந்து விட்டான்

- (தமிழ்க்குமரி- ப.55)

இந்திரன் அகல்யாவிடம் தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டான்.

அகல்யா உறக்கநிலையில் தன்னோடு கூடி மகிழ்ந்தவன் தன் கணவனே எனக் கருதினாள்.

என்றுமில்லாப் பேராசை என்கணவர் கொண்டாரே

இன்றுகண்டேன் பேரின்பம் யானென்று இணங்கிவிட்டாள்

- (தமிழ்க்குமரி- ப.55)

இந்திரன் ஆசிரமத்திலிருந்து பூனைபோல வெளிப்பட்டுச் செல்வதைக் கண்ட கௌதமன், இந்திரன் மேனியெங்கும் பெண்குறி ஆயிரமாக ஆகும்படி சாபமிட்டான். அகல்யாவும் கௌதமனின் சாபத்திற்கு ஆளானாள். இல்லற நெறியினைக் காக்கத் தவறியதற்காக அவள் கல்லாகும்படி சபிக்கப்பட்டாள். அகல்யா அவனிடம் கழுவாய் வேண்டினாள். இராமனுடைய பாதத்தூளி உன்மீது படும்போது சாபம் நீங்கும் என்று அகல்யாவிற்குக் கௌதமன் சாபவிடுதலையும் தந்தான். அகல்யா கணவனின் சாபத்தின்படி கல்லானாள்.

கௌதமன்

பல்லாண்டுகள் கழிந்தன. இராமனும் இலக்குமனும் விசுவாமித்திரனோடு மிதிலைக்குப் போகும் வழியில் புல்வெளியில் கல்லாய்க் கிடந்த அகல்யா, இராமனின் பாதத்தூளி பட்டுப் பெண்ணானாள். இராமன் அகல்யா தவறிழைக்கவில்லை என்றும் பிறர் அவளைத் தவறாகக் கருதினார்கள் என்றும் கூறினான்.

நீபிழைத்தாய் அல்லை நினைப்பிழைத்தார் எல்லோரும்

ஆயிழைநீ தருமத்துக்கு அறிகுறியாய் நின்றாயே

ஆதலினால் துன்பமுறேல் அன்னாய்

(தமிழ்க்குமரி, ப.58)

(பிழைத்தாய் அல்லை = பிழைபுரிந்தாய் இல்லை; நினைப்பிழைத்தார் = உன்னைத் தவறாகப் புரிந்து கொண்டனர்; ஆயிழை = தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவளே; துன்பமுறேல் = வருந்தாதே)

ச.து.சு.யோகியாரின் கௌதமன், தன்மானமும் குலமானமும் போற்றுபவன். அகல்யாவின் கணவன்; அகல்யாவைப் போட்டியில் வென்று மனைவியாக்கிக் கொண்டான். இந்திரனின் காம இச்சைக்கு அறியாமல் அகல்யா பலியானதை அறிந்து அவளைக் கல்லாகச் சபித்தான். இந்திரன் ஆயிரம் பெண்குறிகள் மேனியெல்லாம் பெறச் சபித்தான். கல்லான அகல்யா இராமனின் பாதத்துளி பட்டுப் பெண்ணான போது விசுவாமித்திரன் கூறியும் இராமன் கூறியும் அவளை ஏற்றுக் கொள்ள மறுத்தான்.

அகல்யாவைக் கௌதமன் ஏற்க மறுத்ததால் இராமன் கோபமுற்றான். சூழ்நிலை இறுக்கமாவது கண்டு விசுவாமித்திரன் கௌதமனிடம் தன்கருத்தைக் கூறினான். இந்திரன் பிழைசெய்தானே அன்றி இவள் பிழைசெய்யவில்லை; மனக்குற்றமில்லாதவள்; உன் மனைவியை ஒதுக்கி வைத்தால் உண்டாகும் பழியிலிருந்து நீ தப்ப முடியாது. நீ இட்ட சாபத்தை அவள் ஏற்றுக் கழித்தாள். அவளை ஏற்றுக்கொள்ளாமல் பின்னரும் கொடுமை செய்வது அறமன்று. இந்திரன் குற்றம் செய்தான்; அவனாலே அகல்யா குறையுற்றாள். நிகழ்ந்தது உடற்குற்றமே அன்றி உயிர்க்குற்றம் ஆகாது. அவளை ஏற்றுக்கொள் என்றான்.

விசுவாமித்திரன் எவ்வளவு கூறியும் கௌதமன் ஏற்கவில்லை. தனக்கும் தன் குலத்திற்கும் பழியை உண்டாக்கிய அவளின் கண்ணீரைக் கண்டு நான் இரக்கமுற்று அவளை ஏற்றுக்கொண்டாலும் உலகத்தார் அவளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றான். மேலும் கௌதமன்

வஞ்சமகள் வாலிபத்தில் வானரசைக் காதலித்தாள்

அப்போதைக் காதலன்றே இப்போது இப்பிழையாக

எப்போதும் இழிந்தவளாய் எளிமையுறச் செய்ததுவே

ஆதலினால் அகலிகையை யான்ஏற்கேன்

(தமிழ்க்குமரி, ப.60-61)

(அப்போதைக்கு = அப்போது; அந்தப் போதைக் காதல் = காதல் மயக்கம்)

என்று முடிவாகக் கூறினான்.

கௌதமன் கூறியதைக் கேட்ட இராமன் காட்டமாக அவனைச் சாடினான். கொடுமைக்கு ஆளானவளை மீண்டும் கொடுமைப்படுத்துவதா? வந்தது நீதான் என நினைத்து இப்பழிக்கு ஆளானாள். பேயான நீ அவள் பெருமையைக் குலைத்துவிட்டாய். இந்திரனை அவள் காதலித்தாள் என்று தெரிந்திருந்தும் அவளை மணந்து கொண்டது ஏன்? விளையாட்டுத் தோழனாய் இருந்தான் இந்திரன். அந்த உறவில் தவறு காண்பது பிழையாகும். மனம் குற்றப்பட்டால்தான் உடல் குற்றப்படும். வெளியே புறப்பட்டுச் சென்ற கணவன் திரும்பி வந்ததாகவே அவள் கருதினாள்.

கண்ணால் உனைக்கண்டாள் ; வானரசைக் காணவில்லை

எண்ணத்து உனைஏற்றாள் ; வானரசை ஏற்கவில்லை

தேகத்தால் நினைத்தழுவும் வானரசைத் தீண்டவில்லை

(தமிழ்க்குமரி – ப.63)

என்றெல்லாம் அவள் மாசுமறுவற்ற தன்மையை எடுத்துக் கூறிவரும் இராமன் ஒரு கட்டத்தில் மனம் கொதிப்பேறினான்.

நீ ஏற்க மாட்டாயோ? நினைஏற்கச் சொன்னதுயார்?

தீயேற்குமோ வேள்விச் சிதைஈரம் புகைதந்தால்?

அவள்உன்னை ஏற்பாளேல் ; அதுவன்றோ பெருந்தன்மை

தவளை ஒன்றுபாம் பேற்கும் தனிச்சிறப்புக் காண்போமே !

(தமிழ்க்குமரி – ப.63)

என்று கூறியவன் கௌதமனை அவள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கச் சொன்னான். அவ்வாறே அவள் காலில் அவன் விழும்போது அவனை விழாமல் மேலெடுத்து அவள் தாழ்ந்தாள். அவ்வாறு அவள் தாழாமுன் கௌதமன் அவளை எடுத்துத் தழுவிக் கொண்டான்.

அகல்யா இந்திரனின் காம இச்சைக்குப் பலி ஆனாலும் உள்ளத்தாலும் உடலாலும் குற்றம் இல்லாதவள் என்பது பெறப்படுகிறது.

இந்திரன்

‘அகல்யா’வில் வரும் இந்திரன் இளமைக் காலந்தொட்டு அகல்யாவை அறிந்தவன். அகல்யாவின் விளையாட்டுத் தோழன். நான்முகன் வைத்த போட்டியில் இந்திரன் தோல்வியுற்றான். போட்டியில் கௌதமன் வென்றான். அதனால் அகல்யா அவன் மனைவியானாள். அகல்யாவின் அழகால் கவரப்பட்டு அவளை அடைய முனைந்தான். தன் காம இச்சையை அவளிடம் வெளிப்படுத்தியும் அவள் அவன் கருத்திற்கு இசையவில்லை. நள்ளிரவில் கௌதமனின் ஆசிரமத்தை அடைந்து சேவற்கோழி போலக் குரல் காட்ட, வைகறைப் பொழுது வந்தது எனக் கருதிக் கௌதமன் ஆசிரமத்தை விட்டு வெளியேறினான். இந்திரன் கௌதமன் உருவில் உறக்கத்தில் இருந்த அவள் உடலில் கலந்தான். ‘இன்று கண்டேன் பேரின்பம்’ என்று அகல்யாவும் இணங்கிவிட்டாள். சதி நடந்திருப்பதை உணர்ந்த கௌதமன் உடன் ஆசிரமம் திரும்பினான். இந்திரன் பூனை போலப் பதுங்கிச் சென்றான். நடந்த நிகழ்ச்சிக்குக் காரணம் இந்திரன் என்பது அறிந்த கௌதமன் அவன் மேனியெல்லாம் பெண்குறி உண்டாகச் சபித்தான். இந்திரன் குன்றிப் போனான்.

6.4 வீராயி

கவிஞர் தமிழ்ஒளியின் காப்பியம் வீராயி. சிதைந்த சேரி, வீராயி தப்பினாள், நிலைபெற்ற உறவு, வாழ்வில் இடி, அண்ணன் எங்கேடி, கொலைகாரன், மன்றினில் வீரன், சிதறிய குடும்பம், தேயிலைத் தோட்டத்திலே, மாரி இறந்தான், காதலன் கிடைத்தான், கண்ணீர் வெள்ளம், கப்பல் ஏறினர், மங்கையுடன் வந்தான், பறைச்சியா?, பயப்படாதே, புரட்சி மணம், நாடு செய்த தீமை, முடிந்தது வாழ்வு ஆகிய உட்பிரிவுகளால் ஆனது.

இக்காப்பியத்தில் எண்சீர் ஆசிரிய விருத்தங்களும் ஆறுசீர் ஆசிரிய விருத்தங்களும் சிந்துப்பாக்களும் கலிவெண்பாவும் ஆசிரியமும் விரவி வந்துள்ளன.

6.4.1 ஆசிரியர் கவிஞர் தமிழ்ஒளி 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் நாள் பிறந்து, 1965ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 29ஆம் நாள் 40 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார். தந்தை பொ.சின்னையா, தாய் செங்கேணியம்மாள். தலைமகன் ஆனதால் தன் தாயின் தாய் வீட்டில் (பாட்டி வீட்டில்) குறிஞ்சிப் பாடியை அடுத்த ஆடூரில் பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் விஜயரங்கம். பெற்றோர் செல்லமாக அழைத்த பெயர் பட்டுராசு. கவிஞர் அவராகச் சூட்டிக் கொண்ட தமிழ்ஒளி என்ற பெயர் அவரைப் புரட்சிப் பாவலராக அடையாளப்படுத்தியது.

கவிஞர் தமிழ்ஒளி புதுவைக் கல்வே கல்லூரியிலும் கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலும் பயின்றவர். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் அன்பிற்கு ஆட்பட்டவர்.

தமிழ் இதழ்களில் பணியாற்றிச் சிறந்த இதழாளராகவும் தமிழ்ஒளி திகழ்ந்தார். அவ்வகையில் குறிப்பிடத்தக்க இதழ்கள் முன்னணியும் ஜனயுகமும் ஆகும்.

கவிஞர் தமிழ்ஒளி பன்முகப் படைப்பாளியாகவும் கவிஞராகவும் விளங்குகிறார். அவரின் காவியப் படைப்புகள் கவிஞனின் காதல், நிலைபெற்ற நிலை, வீராயி, மேதின ரோஜா, விதியோ வீணையோ?, மாதவி காவியம், கண்ணப்பன் கிளிகள், புத்தர் பிறந்தார், கோசலைக்குமரி ஆகியனவாம்.

கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைத் தொகுப்புக்களான தமிழ்ஒளியின் கவிதைகள், மக்கள் கவிதைகள் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாம். குழந்தைக்கான பாடு பாப்பா என்ற கவிதைத் தொகுப்பும் அவருடையதாகும்.

கவிஞர் தமிழ்ஒளியின் சிலப்பதிகாரம் நாடகமா? காவியமா?, திருக்குறளும் கடவுளும், தமிழும் சமஸ்கிருதமும், தமிழ்ச் சமுதாயம் ஆகிய கட்டுரைகளும் சிறந்த படைப்புகளாகும்.

கவிஞர் தமிழ்ஒளி சிறுகதை படைப்பதிலும் தம் பங்களிப்பைச் செய்துள்ளார். அவையாவன அறிவூட்டும் 100 அற்புதக் கதைகள், குருவிப்பட்டி, உயிரோவியங்கள் என்பன. மாமாவின் சாகசம் என்ற குறுநாவலையும் படைத்துள்ளார்.

தமிழ்ஒளி நாடகங்களாகக் கவிஞர் விழா, சிற்பியின் கனவு ஆகியவற்றைத் தீட்டியுள்ளார்.

முதலில் திராவிட இயக்கத்திலும், அடுத்துப் பொதுவுடைமை இயக்கத்திலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றிவர் கவிஞர் தமிழ் ஒளி.

6.4.2 காவிய மாந்தர் இனி, காவிய மாந்தரைப் பற்றிக் காணலாம்.

வீராயி

கவிஞர் தமிழ்ஒளியின் வீராயி காப்பியத்தலைவி. காப்பியத் தொடக்கத்திலிருந்து முடிவு வரை துன்பமும் துயரமும் சூழ வாழ்ந்து முடிந்தாள். பிற கதைமாந்தர் அனைவரும் அவளது துன்பத்துக்குக் காரணமாகவோ அல்லது துன்பம் துடைப்பவர்களாகவோ உருவாக்கப்பட்டிருக்கின்றனர்.

மருதூரைச் சேர்ந்தவர்கள் வேடப்பனும் அவன் மகள் வீராயியும். வெள்ளத்தால் மருதூர்ச்சேரி அழிந்தது. வைக்கோற் போரில் ஏறி வேடப்பனும் வீராயியும் உயிர் பிழைத்தனர். வைக்கோற் போர் பயணத்தில் வேடப்பன் இறந்தான். வீராயி ஆதரவு அற்றவள் ஆனாள். அச்சூழலில் அவளுக்கு ஆதரவாக மாரியும் அவன் மகன் வீரண்ணனும் இருந்தனர்.

பருவவானில் வண்ணமதிபோல் வீராயி வளர்ந்தாள். அவள் அழகில் புதுப்பட்டி சமீன்தார் உள்ளம் இழந்தான். செய்த வேலைக்குக் கூலி வாங்கச் சென்றவிடத்தில் முரட்டுக் குணமும் காமமும் மதுக்குடியும் உடைய சமீன்தாரின் காம வேட்டைக்குப் பலியாக இருந்த அவள் வீரண்ணனால் காப்பாற்றப்பட்டாள். சமீன்தார் வீரண்ணனின் கோடரிக்கு இரையானான்.

வீரண்ணன் தக்க சமயத்தில் வந்து காப்பாற்றி இராவிடில் அவள் சமீன்தாரின் காம இச்சைக்கு இரையாகி இருப்பாள்.

வீரண்ணனுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதை அறிந்து வீராயி துன்பமுற்றாள்; துடித்தாள். அடிபட்ட மானாக, ஒடிபட்ட கிளையாக, தழலில் பட்ட தளிராக, பெரும்பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையாக என்றெல்லாம் அவள் துயரம் பேசப்பட்டுள்ளதால் அவள் உற்ற துயரின் ஆழம் புலப்படுகிறது.

ஆதரவற்ற வீராயி மாரியுடன் பல இடங்களில் சுற்றித் திரிந்தாள். அவர்களை அன்புடன் ஆதரித்து உணவிடுவார் எவருமிலர். சொந்த நாட்டில் வாழ வழியின்றி உயிர் வாழ்வதை விடக் கடல்தாண்டி உழைத்துப் பிழைக்க எண்ணினாள். ‘சுமையற்ற தொழிலும் சுகமான சம்பளமும்’ கிடைக்கும் என்ற கங்காணியின் சொல்லை நம்பி ஆப்பிரிக்காவிற்குக் கப்பலில் புறப்பட்டனர் வீராயியும் மாரியும்.

ஆப்பிரிக்கா நாட்டில், முதலாளி ஒருவனிடம் வீராயியையும் மாரியையும் கங்காணி விலைபேசி விற்றுவிட்டான். அவர்கள் அங்குத் தேயிலைத் தோட்டத்தில் உழைத்தார்கள். வெள்ளை முதலாளி சவுக்கால் அவர்களை அடித்து விரட்டி வேலை வாங்கினான். வீராயியின் வாழ்க்கை கண்ணீரும் கம்பலையுமாய்க் கழிந்தது.

மாரியின் அன்பிலும் ஆதரவிலும் ஓரளவு ஆறுதல் கொண்ட வீராயி மற்றும் ஒருமுறை அனாதை ஆனாள். மாரி பாம்பு தீண்டி இறந்தான். அவள் துன்பத்திற்கு ஆளானாள்.

அண்ணன் இறந்தவுடன் – என்

ஆவி துறந்திருப்பேன்

புண்ணியத் தந்தையினால் – அதைப்

பொறுத்துக் கொண்டிருந்தேன்

கண்இரண் டில்லைஇன்று – பினர்

காட்சியும் தப்பிடுமோ?

மண்ணில் உயிர்விடுவேன் – என

மங்கை துணிந்துவிட்டாள்

- (வீராயி, ப.57)

(அண்ணன் = மாரியின் மகன் வீரண்ணன்; புண்ணியத் தந்தை = வீரண்ணனின் தந்தை; காட்சியும் தப்பிடுமோ = காட்சி கிடைத்திடுமோ)

வீராயி, தன் இடையில் செருகி வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்துத் தன் நெஞ்சில் பாய்த்திட எத்தனித்தபோது ஆனந்தன் என்னும் மற்றொரு தேயிலைத் தோட்டத் தொழிலாளி அவளைத் தடுத்தான். அவன் ‘நாளை கழிந்துவிட்டால் நம் நாட்டிற்குச் சென்றிடலாம்’ எனக் கூறினான். ஆனால் அவளோ தன்னை மாய்த்துக் கொள்வதிலேயே கருத்தாக இருந்தாள். ‘என்னைக் கொன்ற பின்னர் உன்னையும் மாய்த்துக்கொள்’ என்று அவள் இருகால்களையும் பற்றிக் கொண்டான். அவள் சட்டெனக் குனிந்து அவன் கைகளை நீக்கிவிட்டு

கெட்ட உலகினிலே – உம்

கேண்மை சிறப்புடைத்தாம் !

தட்டிடேன் உங்கள்சொலை – இது

சத்தியம் என்றுரைத்தாள்.

- (வீராயி- ப.60)

வீராயி சாகும் எண்ணத்தை விட்டாள்.

முதலாளியின் கொடிய கண்களில் ஆனந்தனும் வீராயியும் அகப்பட்டுக் கொண்டனர். முதலாளி ஆனந்தனைச் சாட்டையால் அடித்தான். மேலும் அவன் தன் ஆட்களை வரச் செய்து ஆனந்தனைச் சிறையில் இடச் செய்தான். வீராயி வேலையை இழந்தாள். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆனந்தன் அவளைத் தேடினான், முடிவில் அவளைக் கண்டான்.

தேடிய செல்வம் புழுதியில் – விழுந்து

எதிரில் கிடப்பதைக் கண்டதும்

ஓடி எடுத்து

- (வீராயி- ப.63)

அவள் மேனியில் விழி ஒட்டி நின்றான். முதலாளி தன் கற்பைக் குலைக்க முனைந்ததையும் கூறிக் கதறினாள்.

ஆப்பிரிக்காவிலிருந்து தாயகம் புறப்படும் கப்பலில் ஆனந்தன் வீராயியை அழைத்துக் கொண்டு தன் ஊராகிய மருதூர்க்கு வந்தான். வீராயி ஆனந்தனோடு அவன் வீட்டில் இருந்தாள்.

புதுப்பட்டிக்காரர்கள் வீராயி மாரியின் மகள் என்றும் பறைச்சி என்றும் ஆனந்தனின் தந்தை செல்லப்பக் கவுண்டரிடம் கூறினர். அவரும் சாதியிலே தன்னை ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்ற அச்சம் கொண்டார். மகனையும் வீராயியையும் வசை பாடினார். மனைவிக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

தொலையட்டும் கழுதையது பறைக்குட்டி யோடு !

துளியேனும் இடங்கொடுத்தால் உன்கழுத்து துண்டு

- (வீராயி- ப.67)

வீராயியை ஆனந்தன் திருமணம் புரிந்து கொள்ள முடிவு செய்தான். கவுண்டருக்கும் பறைச்சிக்கும் திருமணம் என்ற செய்தி பரவியது. செய்தி கேட்ட கவுண்டர்,

வேரினிலே பிடிக்கின்ற புழுஇந்தப் பையன்

விடவேண்டாம் இருவரையும் கொல்லுங்கள்

- (வீராயி- ப.71)

என்று தன் அடியாட்களுக்கு ஆணை இட்டார். அவர்கள் குடிசையைச் சூழ்ந்து கொண்டு சிதைத்தார்கள். ஆனந்தன் அஞ்சாமல் வீராயியை அணைத்த வண்ணம் நின்றான். குண்டர்களின் கொடுந்தாக்குதலுக்கு ஆளான வீராயியும் ஆனந்தனும் உயிர் துறந்தனர்.

தாழ்ந்த குலத்தில் பிறந்த வீராயி துன்பங்களை வாழ்நாள் முழுதும் எதிர் கொண்டாள். தன் கற்பைக் காத்துக்கொள்ளக் கடுமையாகப் போராடினாள். ஆனால் வாழ்க்கைப் போராட்டத்தில் இறப்பைத் தழுவிக் கொண்டாள்.

6.5 காப்பியச் சிறப்பு

இப்பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள அகலிகை வெண்பா, அகல்யா, வீராயி ஆகிய மூன்று குறுங்காப்பியங்களும் அடிப்படையில் பெண் மாந்தர்களைப் பற்றிய காப்பியங்களாகும். மூன்று குறுங்காப்பியங்களிலும் பெண்மையின் அவலம் சித்திரிக்கப்பட்டுள்ளது. ‘அகலிகை வெண்பா’வும் ‘அகல்யா’வும் வான்மீகி இராமாயணத்திலுள்ள அகலிகை கதையை மையப்படுத்தியுள்ளன. இவ்விரு குறுங்காப்பியங்களிலும் இருபதாம் நூற்றாண்டின் கண்ணோட்டத்தில் அகலிகை பார்க்கப்பட்டுள்ளாள். ‘வீராயி’ தமிழ்ஒளியின் புத்தம் புதுப்படைப்பு ஆகும். இதில் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருத்தி வாழ்நாள் முழுதும் நடத்திய போராட்டம் பேசப்பட்டுள்ளது.

மூன்று குறுங்காப்பியங்களிலுமே பெண்கள் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள மேற்கொண்ட போராட்டம் இடம் பெற்றுள்ளது.

6.5.1 கற்பு : அகலிகையும் அகல்யாவும் அகலிகை வெண்பாவில் அகலிகை இந்திரனால் கற்பழிந்தாள். கோதமன் உருவில் வந்த இந்திரனைத் தன் கணவர் என்றே கருதி அவனை எதிரேற்றாள். அகலிகை, அவன் அவள் கையைப் பற்றிய அளவிலேயே அவன் தன் கணவன் இல்லை என்பதுணர்ந்தாள். அவன் கைப்பிடி இறுகியது. அவள் வலைப்பட்ட மயில்போலத் துடித்தாள். வந்தவன் தன் கணவன் இல்லை என்பதறிந்தாள். அவனால் கற்பழிக்கப்பட்டு வாழ்வதில் பொருள் இல்லை. விடிவதற்கு முன் இறந்துவிடுவதே நல்லது என்று எண்ணினாள். என் கணவன் உன்செயல் அறிந்தால் உன் கதி என்னாகும். அவரின் கோபத்தீக்கு ஆளாவாய். உலகமே பொசுங்கிப் போகும் என்றாள் அகலிகை. அப்போதுதான் இந்திரன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். அவள் தன்னைக் காதலிப்பாள் என்று எண்ணினான். ஆனால் அவன் எண்ணத்திற்கு உடன்படாமல் ‘விட்டிடு எனை, விட்டேவிடு’ என்று கெஞ்சினாள். அவன் அவள் அழகு தன்னை நோகடிப்பதாகக் கூறினான். தன் உள்ளம் முற்றும் அவள் களவுகொண்டதாகவும் களவு கொடுத்த தான் அவளைப் பற்றிக் கொண்டதில் தவறில்லையாகவும் கூறினான். தேவர்களுக்கு மன்னனாக இருப்பதை விட அவளுக்கு அடிமையாக இருப்பதாகத் தெரிவித்தான். அவள் இசையாமை கண்டு உன் கணவன் இல்லாதபோது உன்னை நான் வலிந்து இன்பந்துய்த்தால் என்னைத் தடுப்பவர் யார் என்று அச்சுறுத்தினான். இங்கு நடக்கும் நிகழ்ச்சியினை யாரும் அறிய மாட்டார்கள். நான் உன் கைப்பற்றியது நல்வினைப் பயனால் என்று அறிந்து என் விருப்பத்திற்கு இணங்கு. உன் கணவன் தான் செய்யும் தவத்தில் ஆறு ஒரு கூறு எனக்கு அளிப்பதைப் போல நீயும் எனக்கு ஒரு கூறு அளிப்பாய் என்பன முதலாகப் பல்வேறு கருத்துகளை இந்திரன் அவளுக்குக் கூறினான். அவள் எதற்கும் இணங்காதபோது அவளை வலிந்து பற்றினான். அவன் வன்மொழிகளைக் கேட்டு அவள் மயங்கி வீழ்ந்தாள். இந்திரன் தன் கருத்தை முடித்துக் கொண்டான். இந்திரன் செயலைக் கவிஞர் கீழ்வருமாறு கூறுகிறார்.

செம்மான் தனைப்பற்றித் தின்னப் புகுந்தபுலி

அம்மான் பதறியுணர் வற்றுறினும் – சும்மா

தினாது விடாவாறே தேவர்கோன் அந்தோ

தனாது கருத்தைமுடித் தான்

- (அகலிகை வெண்பா- 224)

(தினாது = தின்னாது; விடாவாறு = விடாதவாறு; தனாது = தன்னுடைய)

இந்திரனோடு அவள் போராடியும் முடிவில் அவள் கற்பிழக்கலானாள்.

அவள் இந்திரனை விரும்பி ஏற்றுக் கொள்ளாதபோது கோதமனின் சாபத்திற்கும் அவள் இலக்கானாள். குற்றம் புரிந்த இந்திரன் தன் மேனியெல்லாம் ஆயிரம் பெண்குறிகள் பெறக் கோதமனால் சபிக்கப்பட்டான். குற்றம் செய்யா அகலிகையும் கல்லாகும்படி சபிக்கப்பட்டாள்.

அகலிகை அவன் பாதங்களில் விழுந்து வணங்கித் தனக்கு அருள் செய்ய வேண்டும் எனக் கோதமனை வேண்டினாள். இந்திரனால் உண்டான உடல்மாசைப் போக்கத்தான் கல்லாகும்படி சபித்தேன். நீ நெஞ்சில் களங்கமில்லாதவள். மயக்கமுற்ற நிலையில் நிகழ்ந்த செயலுக்கு உன்னை இகழ்வதில் பொருள் இல்லை என்று கோதமன் கூறுவதிலிருந்து அகலிகையின் உடற்கற்பு மாசுண்டது; உள்ளக் கற்பு மாசில்லாதது என்பதை அறியலாம்.

இராமனின் பாதத்தூளிபட்டுக் கல்லுரு நீங்கி அகலிகை பெண்ணுருவானாள். அவள் தூயவள் என்பதைக் கவிஞர் பின்வருமாறு கூறுகிறார்.

முந்தஇவள் உற்றஉரு முண்டகத்தோன் கைசமைத்து

இந்தவுரு நின்திருத்தாள் ஈந்ததால் – அந்தஉரு

மாசடையும் ; மாய்வுமுறும் மற்றிவ் வுருஎன்றும்

ஆசடையும் வீவுமில தாம்.

- (அகலிகை வெண்பா-283)

(முண்டகத்தோன் = நான்முகன்; கைசமைத்து = உருவாக்கியது; திருத்தாள் = இராமனுடைய பாதங்கள்; மாசடையும் = குற்றப்படும்; மாய்வுறும் = அழியும்; ஆசடையும் வீவும் = குற்றப்படுதலும் அழிவுறுதலும்)

அகலிகையின் முன்னைய உரு நான்முகனால் உண்டாக்கப்பட்டது. அவ்வுரு களங்கம் உறக் கூடியது; அழியக்கூடியது. இராமனுடைய பாதத் தூளியால் உண்டான இவ்வுரு களங்கமில்லாதது; அழியாதது.

கற்பையிழந்த அகலிகை கணவனின் பரிவிற்கு இலக்காவதையும் இராமனின் கருணைக்கு இலக்காவதையும் அறியலாம்.

அகல்யா

அகல்யா என்ற குறுங்காப்பியத்திலும் கற்பு கருப்பொருளாக அமைந்துள்ளது. கௌதமனின் மனைவி அகல்யை. அவளும் இந்திரனும் விளையாட்டுத் தோழர்கள். அகல்யாவின் அழகுக் கவர்ச்சியில் மனத்தைப் பறிகொடுத்த இந்திரன் அவளை அடைய எண்ணினான். நான்முகன் வைத்த போட்டியில் தோல்வியுற்று அவளை மணக்க முடியாத இந்திரன் வஞ்சனையால் அவளை அடையத் திட்டமிட்டான். ஒரு நாள் நள்ளிரவில் கௌதமனை ஆசிரமத்தினின்றும் போக்கி, அவன் வடிவில் இந்திரன் ஆசிரமத்தினுள் நுழைந்தான். மூரல் கலையாத மோகக் கவிமகள் நாணற் பாய்மேல் உறங்கக் கண்டான் இந்திரன். தீங்கு தடுப்பார் இல்லை; தீமை புரிந்து விட்டான். அவளும்,

என்றுமிலாப் பேராசை என்கணவர் கொண்டாரே

இன்றுகண்டேன் பேரின்பம் யான்என்று இணங்கிவிட்டாள்

(தமிழ்க்குமரி- ப.55)

வெளியே சென்ற கௌதமன் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து ஆசிரமம் திரும்பினான். இந்திரன் பூனை என வெளியே போனான். உண்மையறிந்த கௌதமன் இந்திரன் மேனியெல்லாம் பெண்குறி ஆயிரமாகத் தீமையுறச் சபித்தான். இல்லறம் பிழைத்ததற்காகக் கல்லாகக் கிடக்கும்படி அகல்யாவிற்கும் சாபமிட்டான்.

பல்லாண்டுகள் கழித்துக் கல்லாகக் கிடந்த அகல்யா இராமனின் பாதத்தூளி பட்டுப் பெண்ணுருப் பெற்றாள். அவள் வரலாற்றை அறிந்த இராமன் அவள் தாள்களில் விழுந்து வணங்கினான்.

நீபிழைத்தாய் அல்லை ; நினைப்பிழைத்தார் எல்லோரும்

ஆயிழைநீ தருமத்துக்கு அறிகுறியாய் நின்றாயே

ஆதலினால் துன்பமுறேல் அன்னாய்

- (தமிழ்க்குமரி- ப.58)

என்று இராமன் கூறுவதால் அவள் பிழைபுரியவில்லை என்பதையும் உலகத்தார் அவளைப் பிழையாக உணர்ந்தனர் என்பதையும் அவள் வணங்கத்தக்கவள் என்பதையும் அறியலாம். எச்செயலும் மனம் கலந்த அளவில்தான் அதன் பயனுக்கேற்ப மதிப்புப் பெறும் என்பதை ‘அகல்யா’ குறிப்பாக வெளிப்படுத்துகிறது எனலாம்.

இராமனும் இலக்குவனும் விசுவாமித்திரனும் அகல்யாவை உடன் அழைத்துக் கொண்டு கௌதமனைக் காணச் சென்றனர். கௌதமன் அவர்களை வரவேற்றான். எனினும் அகல்யாவைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அகல்யா கண்டும் காணாமல் இருந்த கௌதமனின் அடிபணிந்தாள். இக்காட்சியைக் கண்ட இராமன் கோபமுற்றான். சூழ்நிலையின் இறுக்கத்தை உணர்ந்த விசுவாமித்திரன்

மதிபடைத்த கோதமனே !

பெண்பிழைத்த தில்லை ; அவள்பிறன் பிழைக்கப்

பிழையுற்றாள்

- (தமிழ்க்குமரி- ப.59)

என்பதைக் கூறி அவளை ஏற்கச் சொன்னான். முன்னரே அவள் நடந்த நிகழ்ச்சிக்குரிய தண்டனையைப் பெற்றுவிட்டாள். அப்படிப்பட்ட அவளை மேலும் துன்புறுத்துவது தகாது

குற்றமுற்றான் வானரசன் ; குறையுற்றாள் நின்மனைவி

உடற்குற்றம் என்றாலும் உயிர்க்குற்றம் ஆமோதான்?

கிடக்கட்டும் ஏற்றுக்கொள் கிளிமொழியை

- (தமிழ்க்குமரி, ப.59-60)

என்று விசுவாமித்திரன் அகல்யாவின் சார்பாகப் பன்னிப் பன்னிப் பேசினான்; என்றாலும் கௌதமன் அவளை ஏற்க முன்வரவில்லை. கௌதமன் தன்பக்க நியாயத்தை எடுத்துரைத்தான். அவளால் இல்லறம் வசையாயிற்று. தான் செய்த பிழையைச் சாபத்தால் தீர்த்தாள். எனக்கு உண்டான பழியை என் குலத்திற்கு உண்டான பழியைத் தீர்க்கவல்லவளா? கண்ணீர் சிந்தும் அவளை நான் ஏற்றாலும் உலகோர் அவளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிறுகுழந்தை என்றாலும் தீயைத் தீண்டினால் சுடத்தானே செய்யும். இளமைக் காலத்தில் இந்திரனைக் காதலித்தாள். அதுதான் இப்போது இழிசெயலாக விளைந்திருக்கிறது. ஆதலினால், அகலிகையை நான் ஏற்கமாட்டேன் என்று உறுதிபடக் கூறினான் கௌதமன்.

கௌதமனின் சிந்தனைப் போக்கை அறிந்த இராமன் கோபமுற்றான். ‘யாரை நீ சொன்னாய்? பிச்சைச் சிறுதருமம் பேசலாமோ? கொடுமைக்கு ஆளானவளை மீண்டும் கொடுமைப்படுத்துவதா? வந்தது நீதான் என்று நினைத்து உனக்காகவே இப்பழியுற்றாள். பேயான நீயோ அவள் பெருமையைக் குலைத்துவிட்டாய். நெஞ்சில் வஞ்சமில்லாதவள், அவள் தேகவஞ்சம் ஏற்றாள் என்று பேசும் நீதான் பெரும்வஞ்சன். இந்திரனைக் காதலித்தாள் என்று அறிந்திருந்தும் அவளை மணந்துகொண்டாயே? விளையாட்டுத் தோழனாய் இந்திரன் இருந்தான் என்பதால் அவளுக்குக் குற்றம் கற்பிக்கிறாயே, அவளைப் பழி கூறாதே. எப்படியானாலும் ஏற்பட்ட இழிதன்மை போகாதா? இதுதான் அறமா? அவள் ஏமாந்துவிட்டாளே. அது குற்றம்தானே என்றால் முக்காலும் உணர்ந்த முனிவனாகிய நீயும் ஏமாந்தாயே. நீ போட்டியில் வஞ்சித்து வெற்றி பெற்று இந்திரனை வஞ்சித்தாய். அவன் உன்னை வஞ்சித்துவிட்டான். எந்தப் பாவமும் அறியா அகல்யா பழிகொண்டாள்’ என்றான் இராமன்.

இராமன் மேலும்,

யார்குற்றம் நின்குற்றம் அவன்குற்றம் அறமகளின்

சீர்குற்றம் உற்றதில்லை சினக்குற்றம் செய்தாயே

- (தமிழ்க்குமரி- ப.62)

(சினக்குற்றம் = கோபமாகிய குற்றம்)

என்று கூறினான். கௌதமன் அவள் உடற்களங்கம் உற்றாள் என்றதற்கு இராமன் ‘உடற்குற்றம் எங்குவரும் உளக்குற்றம் இல்லை என்றால்’ என்று மடக்கினான். அவள் இந்திரனைக் காணவில்லை; உன்னைத்தான் கண்டாள். எண்ணத்திலும் நீதான் இருந்தாய்; உன்னைத் தழுவினாளே தவிர இந்திரனைத் தீண்டவில்லையே என்று அடுக்கடுக்காக வினாவும் விடையுமாக இராமனிடமிருந்து கேள்விக் கணைகள் புறப்பட்டன. ஒரு கட்டத்தில் இராமன் சினத்தின் சிகரத்தில் நின்று பேசினான்; ‘நீ என்ன அவளை ஏற்பது; அவள்தான் உன்னை ஏற்க வேண்டும். தவளை ஒன்று பாம்பு ஏற்கும் தனிச்சிறப்புக் காண வேண்டும். ஆதலினால் அவள் அடிபணிந்து பொறுத்திட வேண்டிடு’ என்று கூறினான்.

இராமன் கூறியபடி அகல்யாவின் அடிபணியக் குனிந்த கௌதமனைத் தடுத்து, அவள் அடிதாழ அவன் அவளைத் தழுவிக் கொண்டான்.

6.5.2 வீராயி போராட்டம் வீராயி குறுங்காப்பியத் தலைவி வீராயி. வாழ்க்கையில் எதிர்கொள்ளும் போராட்டங்களை இக்காப்பியம் சித்திரிக்கிறது. சமுதாய மதிப்போ பொருளாதாரப் பின்புலமோ இல்லாத ஒரு பெண்ணுக்கு ஏற்படும் அவலங்களுக்கு எல்லை இல்லை.

மருதூர்ச்சேரி முழுதும் வெள்ளத்தில் அழிந்துவிட, வைக்கோற்போரில் ஏறி உயிர் தப்பிய வேடப்பன், வீராயி ஆகிய இருவரில் வேடப்பனும் இறந்துவிட வீராயி மயக்கமுற, அவள் பறைச்சி என்பதால் சாதி இந்துக்கள் காப்பாற்ற முன்வராதபோது பறைச்சிறுவன் வீரண்ணன் உதவியினால் அவள் காப்பாற்றப்பட்டாள். உற்றார் உறவினர் யாரும் இல்லா நிலையில் மாரி அவளுக்கு உதவினான். அவன் அவளுக்குத் தந்தையாக உதவினான். வீரண்ணன் அண்ணனாகத் துணைநின்றான்.

வண்ணமதிபோல் வளர்ந்த அவளை வேட்டையாடப் புதுப்பட்டி சமீன்தார் எண்ணமிட்டான். அதற்கான வாய்ப்பு அவனுக்குக் கிட்டிற்று. வயலில் வேலை செய்துவிட்டு, கூலி வாங்கத் தன் வீடு வந்தவளைக் கெடுக்க முயலும்போது, வீரண்ணன் இடைப்பட்டு அவனைக் கோடரியால் தாக்கி, அவளைக் காப்பாற்றினான். வீரண்ணன் அங்கு வந்திராவிட்டால் அந்த ஏழைப் பெண்ணின் வாழ்வு அலங்கோலமாகியிருக்கும்.

வயிற்றுப் பிழைப்பிற்காக வாழ்க்கையைத் தேடி மாரியோடு வீராயி ஆப்பிரிக்கா சென்று தேயிலைத் தோட்டத்தில் சேர்ந்து வாழ்க்கை நடத்தினாள். கங்காணியின் சொல்லை நம்பி வந்தவர்களுக்குத் தொல்லைதான் மிஞ்சியது. ‘ஓய்வு ஒழிச்சல்’ இன்றி உழைக்க வேண்டியிருந்தது. சாட்டையினால் அடியுண்டு உழைத்தனர். வீராயிக்குத் துணையாக இருந்த மாரி பாம்பு தீண்டி இறந்தான். வாழ்க்கையில் அவளுக்கென இருந்த ஓர் ஆதரவையும் அவள் இழந்தாள். தற்கொலை முயற்சியில் ஈடுபட அவளை அதிலிருந்து காப்பாற்றிய ஆனந்தனின் அன்பிற்குப் பாத்திரமானாள். ஆனந்தனும் வீராயியும் ஆப்பிரிக்காவிலிருந்து தாயகம் மீண்டனர். செல்லப்பக் கவுண்டர் மகன் ஆனந்தனும் வேடப்பன் மகள் வீராயியும் வாழ்க்கையில் இணையச் சாதி தடைவிதித்தது. சாதியத்தின் கொடுமைக்கு இருவரும் பலியானார்கள்.

வாழ்க்கை போராட்டம் நிரம்பியது என்பதையும் சத்தியத்தைக் கடந்த மனிதநேயம் வெற்றி பெற வேண்டும் என்பதையும் வீராயியின் காப்பியச் செய்தி எடுத்துரைக்கிறது.

6.5.3 கவிஞர் நோக்கு கற்பென்னும் திண்மையைப் பெண்மைக்குரிய சிறப்பாகச் சான்றோர்கள் வகுத்தனர். இந்திய இதிகாசங்களில் ஒன்றாகிய இராமாயணத்தில் அகலிகையின் வரலாற்றின் வழிக் கற்பைப் பற்றிய கணிப்புகள் வெளிப்படுகின்றன. கற்புடைமை என்பது பெண்ணிற்குரியதாகப் போற்றப்பட்டது. எக்காலத்தும் அதனை அவள் இழந்துவிடக் கூடாது. அகலிகை என்ற பெண் இந்திரனால் கற்பிழந்தாள் என்ற கதைக்கரு இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களின் கண்ணோட்டத்தில் பெற்ற பரிணாம வளர்ச்சியை ‘அகலிகை வெண்பா’வும் ‘அகல்யா’வும் விவரிக்கின்றன.

அகலிகை வெண்பாவில் அகலிகையின் உள்ளத்தைக் கவரப் பல்வேறு கவர்ச்சி உறுதிமொழிகளை இந்திரன் கூறினும் அவற்றையெல்லாம் அகலிகை பொருட்படுத்தவில்லை. தன் கணவனையே மேலாகப் போற்றினாள். பலாத்காரமாக அவளை அடையப்போவதாக அவன் கூறியபோது மனந்தளர்ந்து மயக்கமுற்று விழுந்தாள். அவள் விருப்பமின்றியே தன் விருப்பத்தை அவன் நிறைவேற்றிக் கொண்டான். கோதமன் நடந்ததறிந்து இந்திரனையும் அகலிகையையும் சபித்தான். இராமனால் சாப நீக்கம் பெற்ற அகலிகையைக் கோதமன் ஏற்றுக் கொண்டான்.

அகல்யாவில் பெண்ணியம் வீறுபெற்று எழுகிறது. இளம்பருவத் தோழனாகிய இந்திரன் அகல்யாவின் அன்பிற்காக ஏங்கினான்; கெஞ்சினான். அகல்யா அவன் எண்ணத்திற்கு இசையவில்லை. இந்திரன் தக்க தருணத்தில் ஆழ் உறக்கத்திலிருந்த அகல்யாவிடம் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான். கௌதமனின் உருவில் வந்த இந்திரனைக் கௌதமனாகவே கண்டாள்; கொண்டாள். அவள் தவறு ஒன்றுமில்லை. ஆணாகிய இந்திரன் வஞ்சனைக்கு அவள் ஆளானாள்; கணவனின் வன்சொல்லுக்கும் ஆளானாள். கௌதமன் தந்த சாபத்தை அனுபவித்தும் கௌதமன் அவளை ஏற்க மறுத்தான். பெண்மையின் சார்பாக விசுவாமித்திரனும் இராமனும் கருத்துப் போர் நடத்தினர். இந்திரனால் அவள் உடல் மாசுண்டது; ஆனால் அவள் உள்ளம் மாசுற்றதில்லை. அவளை ஏற்கவேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. விடாப்பிடியாக இருந்த கௌதமனை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலுக்கு அகல்யா இராமனால் தள்ளப்பட்டாள். அவன் பிழை பொறுத்து அவள் அவனை ஏற்றாள்.

கற்பிழந்த பெண்ணிற்குக் கருணை காட்ட வேண்டுமே அன்றி அவளை மீண்டும் மீண்டும் வதைக்கக் கூடாது என்பது கவிஞர்களின் கண்ணோட்டம் எனக் கருதலாம்.

6.6 காப்பியச் செய்தி

அகலிகை வெண்பா, அகல்யா, வீராயி ஆகிய மூன்று குறுங்காப்பியங்களும் தரும் காப்பியச் செய்திகளை இனி நோக்குவோம்.

6.6.1 பெண்ணியம் அகலிகை வெண்பாவும் அகல்யாவும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் பெண்களுக்குக் கேடு செய்யக்கூடாது என்பதைக் காப்பியச் செய்தியாக அறிவுறுத்துகின்றன. ‘பிறன் மனை நயத்தல்’ மாந்தனின் மாண்பினைச் சிதைத்து அவனை இழிநிலைக்கு ஆளாக்கும் என்பதைக் காப்பியம் உணர்த்துகிறது.

அகலிகை வெண்பாவில் வரும் வானவர் கோனாகிய இந்திரன் அகலிகையைத் தன்செல்வம் என்றும், சுடர் என்றும் ஏனைய பெண்களை வடு என்றும் கருதினான். மரங்களுள் கற்பகத்தரு, ஆவினுள் காமதேனு, மணிகளுள் சிந்தாமணி என்று கூறும்படி பெண்களுள் மாசிலாமகள் அவள், அத்தகைய அவள் தனக்கு உரியவள் என்று எண்ணினான்.

மாற்றான் மனைவி என்றும் எண்ணாமல், காட்டின் நடுவே ஆசிரமத்தில் தவமுனிவனாகிய கோதமனுக்குப் பணிவிடை புரியும் பாவை என்றும் எண்ணாமல், வஞ்சக நெஞ்சால் அவளைக் கவர நினைத்தது பெரும் பிழையாகும். மக்களையும் மன்னுயிர்களையும் வானவர்களையும் காக்க வேண்டிய இந்திரன் அபலைப் பெண்ணொருத்தியின் கற்பினைக் கெடுக்க முனைவானாயின் அவன் மன்னன் என்னும் தகுதியை இழந்து விடுகிறான். அவன் வேட்கை நிறைவேறிற்று; ஆனால் அவன் வாழ்வோ குலைந்தது. உண்மையில் இந்திரனின் வன்சொற்களைக் கேட்டு, அவனால் தன் கற்பிற்குத் தீங்கு உண்டாகும் என்பதறிந்து, மனம் தளர்ந்து மயக்கமுற்று வீழ்ந்த அகலிகையைத்தான் இந்திரன் கெடுத்தான்; உடலளவில் அவள் மாசுற்றாள்.

இந்திரனோடு எதிர்த்துப் போராடி, முடிவில் அவனிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள வேறுவழியின்றி, மனந்தளர்ந்து மயக்கமுற்றாள். உடல் அவள் வயமில்லாத நிலையில் இந்திரன் தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டான். இந்திரனின் நிலை விலங்கினும் கீழானது.

மயங்கு நிலையுற்ற மாவைப் பிறமா

முயங்க முயலாதால் மூர்ச்சித்து . உயங்கும்

இலங்கிழைபால் இன்பத்தை எய்தி இழிந்த

விலங்கினும்நீ தாழ்ந்தாய் மிகுந்து

- (அகலிகை வெண்பா-230)

(மா= விலங்கு ; முயங்க = கூட, தழுவ ; உயங்கும் = சோரும்; இலங்குஇழை = அகலிகை)

இந்திரன் தவறிழைத்தான். அதனால் கோதமனின் சாபத்திற்கு ஆளானான். ஆனால் எந்தக் குற்றமும் இழைக்காத அகலிகையும் கோதமனால் கல்லாகுமாறு சபிக்கப்பட்டாள். தான் கற்பழிக்கப்பட்டதை அறிந்த அகலிகை எரியில் விழுந்த புழுப்போலத் துடித்தாள்; துவண்டாள். ஆனாலும் கௌதமனின் சாபத்திற்கும் இலக்கானாள்.

நின்னை அறியாமல் நேர்மாசு நீங்கஅதை

உன்னி உனித்துன் புறல்தவிரத் – துன்னிஉள

பொல்லாத வன்பழியும் போய்ஒழிய நின்மேனி

கல்லாக என்றான் கனிந்து

- (அகலிகை வெண்பா-238)

(மாசு = களங்கம்; உன்னிஉனி = எண்ணி எண்ணி; துன்னிஉள = அடைந்த; கனிந்து = இரக்கம் கொண்டு, பரிவுற்று)

கோதமன் அவளிடம் இரக்கம் கொண்டு, அவள் அறியாமல் சுமந்த களங்கம் அவளை வருத்தாதவாறு அவளைக் கல்லாகும்படி சபித்தான். ஆடையில் படியும் அழுக்கை நீக்க உவர் மண்ணைப் பயன்படுத்தல் போல உன் உடற்குற்றம் நீக்க உன்னைக் கல்லாகும்படி சபித்தேன் என்றான் கோதமன்.

இராமனின் பாதத்தூளிபட்டு எழுந்த அகலிகை மாசுமறுவற்றவள். நான்முகனால் படைக்கப்பட்ட மாயும் உடல் மாய்ந்தது.

இந்திரனின் அடாத செயலால் அபலைப் பெண்ணாகிய அகலிகை உற்ற துன்பம் அளப்பரியது. இந்திரனும் தான் செய்த குற்றத்திற்கு உரிய தண்டனை பெற்றான். குற்றம் செய்யாத அகலிகையும் தண்டனை பெற்றதுதான் ஆணாதிக்கச் சமுதாயத்தின் வன்மையைப் புலப்படுத்துகிறது எனலாம்.

அகல்யா குறுங்காப்பியமும் அகலிகையின் வாழ்க்கையைத்தான் பாடுபொருள் ஆக்கியுள்ளது. அகலிகையின் கதை பெண்ணின் பெருமை பேசும் காப்பியமாகப் பாலபாரதி ச.து.சுப்பிரமணிய யோகியின் சிந்தனை வண்ணத்தில் உருவாகியுள்ளது. அகலிகை வெண்பாவிற்கும் அகல்யாவிற்கும் பெருத்த வேறுபாடில்லை. எனினும் படைப்பாளியின் உளப்பாங்கிற்கும் சமுதாய நிலைக்கும் ஏற்பக் காவியம் புதுப்புனைவு பெறும். அகல்யாவைப் பொறுத்தமட்டில் கவிஞனின் கற்பனையும் கவிதை ஆற்றலும் பழைய கதையைப் புதிய கோணத்தில் உருவாக்கியுள்ளன எனின் அது மிகையன்று.

6.6.2 சாதியம் வீராயி முழுக்க முழுக்கச் சமுதாயக் காப்பியம் ஆதலின் இந்தியச் சமுதாயத்தில் வேர் விட்டிருக்கும் சாதியத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.

கடும் வெள்ளத்தால் வைக்கோற்போரில் ஏறி உயிர் பிழைத்த பறையர் இனத்தைச் சேர்ந்த வேடப்பனையும் வீராயியையும் சாதி இந்துக்கள் காப்பாற்ற முன்வரவில்லை. இதற்கு ஆன காரணத்தைக் கவிஞர் தமிழ்ஒளி விவரிக்கிறார்.

பயப்பட்டார் பறையர்களைத் தொட்டெடுத்துவிட்டால்

பார்ப்பவர்கள் என்சொல்வார் என்றொதுங்கிப் போனார்

- (வீராயி-9)

இத்தகைய சாதிய உணர்வுதான் அவளின் முடிவிற்கும் காரணமாயிற்று. ஆப்பிரிக்காவில் தேயிலைத் தோட்டத்தில் உடல் உழைப்பைத் தரும் ஆனந்தனின் அன்பிற்கு ஆட்பட்டாள். ஆப்பிரிக்காவில் வாழப் பிடிக்காமல் வீராயி ஆனந்தனோடு தாயகம் திரும்பினாள். மருதூரில் உள்ள தன் வீட்டிற்கு அவளை அழைத்து வந்தான்; தன் வீட்டிலேயே அவளைத் தங்க வைத்தான். புதுப்பட்டிக்காரர்கள் ஆனந்தன் தந்தை செல்லப்பக் கவுண்டரிடம் வீராயி பறைச்சி என்பதைக் கூறி வைத்தனர். பறைச்சியை வீட்டிற்குள் தங்க வைத்திருக்கும் அவனோடு உறவு கொள்வதைத் தவிர்ப்பதாகவும் கூறினர். உண்மை அறிந்த செல்லப்பக் கவுண்டர் வெகுண்டார். காதலர்களை வீட்டைவிட்டு வெளியே தள்ளினார்.

ஒளிவிழியால் காதலினைப் பரிமாறி நின்ற

தப்பேதும் அறியாத காதலரைச் சீறித்

தாக்கியுமே வெளித்தள்ளி ஆர்ப்பாட்டம் செய்தார்

- (வீராயி – 66)

மகன் ஆனந்தன் பறைச்சியினை அழைத்து வந்ததால் மானம் போய் விட்டதாக வருந்தினார்.

ஆனந்தனும் தந்தையின் ஆர்ப்பரிப்பையும் வசையையும் கேட்டுச் சினமுற்றான். அவளுக்கு ஆறுதல் கூறினான்.

துடுக்கடக்கப் போகின்றேன் மேல்சாதித் திமிரை

தூரப்போய் நீநின்று ; பயப்படவே வேண்டாம்

நடுக்கடலில் தப்பித்தோம் இங்கென்ன மானே !

நமக்கென்றும் சாவுண்டு ; வீணாக மாண்டு

விடுவதிலும் போராடி உயிர்விடுதல் நன்று

- (வீராயி – 68)

வீராயியைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதைப் பறையறைந்து ஊரார்க்குத் தெரிவித்தான், ஆனந்தன். இச்செய்தியைக் கேட்ட செல்லப்பக் கவுண்டர் தன் குலமானம் அழிவது கண்டு,

வேரினிலே பிடிக்கின்ற புழுவிந்தப் பையன்

விடவேண்டாம் இருவரையும் கொல்லுங்கள்

- (வீராயி – 71)

என்று அடியாட்களை ஏவிவிட்டான். அவர்கள் ஆனந்தனும் வீராயியும் வாழும் குடிசையைக் கூளத்தைச் சிதைப்பதுபோல் சிதைத்தார்கள். காதலர்கள் அடியாட்களால் தாக்கப்பட்டு இறந்தனர்.

சாதியத்தின் கொடுமைக்குக் காதலர்கள் பலியானார்கள்.

காதலர்களின் மண உறவிற்கும் சாதி தடையாக இருக்க அதே சமயத்தில் மற்றொரு பக்கம் வன்முறைப் பாலியலில் சாதி தடையாக இல்லை. வீராயியின் அழகில் மயங்கிய புதுப்பட்டி சமீன்தார் அவளை வன்முறையாகக் கற்பழிக்க எத்தனித்தபோது சாதி தடையாக இல்லை. செல்வாக்குடையவர்களின் மனப்போக்கு சாதியின் இருப்பைத் தீர்மானிக்கிறது.

இவ்வாறு வீராயி காப்பியத்தில் சாதியின் வன்கொடுமை காதலர்களின் இறப்பிற்குக் காரணமாக இருக்கிறது. மனிதநேயம் மறுக்கப்படுகிறது என்பதைக் காணலாம்.

6.7 தொகுப்புரை

வெ.ப.சுப்பிரமணிய முதலியாரின் அகலிகை வெண்பா, பாலபாரதி ச.து.சுப்பிரமணிய யோகியாரின் அகல்யா, கவிஞர் தமிழ்ஒளியின் வீராயி ஆகிய மூன்று குறுங்காப்பியங்கள் பற்றிய கருத்துகள் இப்பாடப் பகுதியில் கூறப்பட்டுள்ளன. முன்னிரு குறுங்காப்பியங்களும் ஒரு பழங்கதையைக் கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் கருப்பொருள் கற்பு. இந்திரனால் கற்பிழந்த அகலிகையைப் பற்றி அவளுடைய கணவன் கௌதமன் மற்றும் இராமன், விசுவாமித்திரன் ஆகியோர் கொண்ட கருத்துகள் அவ்விரு குறுங்காப்பியங்களில் ஆராயப்பட்டுள்ளன. வீராயி என்னும் குறுங்காப்பியத்தில் வீராயி என்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்களும், சாதிய வெறிக்குத் தன் காதலனோடு பலியாவதும் பேசப்பட்டன.