5

( குறள் : 675 )

இங்கே ஒடு - என்பது தான் இருந்த இடத்திலிருந்து ( பிரிந்து ) சென்று பொருளொடு , கருவியொடு , காலத்தொடு , வினையொடு , இடனொடு என எண்ணப்படும் பொருள்தோறும் சென்று பொருந்தியது .

( ஈ ) எண்ணிடைச் சொற்கள் வினைச்சொல்லோடு வந்தாலும் பெயர்ச்சொல்லோடு வருவதுபோலவே வரும் .

எடுத்துக்காட்டு :

கற்றும் கேட்டும் அறிவு பெற்றார் ( உம்மை )

உண்ணவென உடுக்கவென வந்தான் ( என )

3.2 மேலும் சில இடைச்சொற்கள்

( அ ) இதுவரை கண்டவை அல்லாத , பெரும்பாலும் செய்யுளில் வருகின்ற சில இடைச்சொற்களையும் அவற்றின் பொருள்களையும் சில எடுத்துக்காட்டுகளுடன் அட்டவணையிற் காணலாம் .

இடைச்

சொல்

பொருள்

எடுத்துக்காட்டு

தில்

ஆசை , காலம் , ஒழிந்த சொல்லின் பொருள் ( சொல்லாமல் விட்டுப் போன பொருள் )

“ அரிவையைப் பெறுகதில்

அம்ம யானே ” ( தலைவியைப்

பெறுவேனாக என்ற ஆசையை உணர்த்துகிறது)

மன்

ஒழிந்த சொல்லின் பொருள் , ஆக்கம் , கழிதற் பொருள் , மிகுதிப் பொருள் , நிலை பெறுதற் பொருள் , இவற்றுடன் அசை நிலையாகவும் வரும் .

“ கூரியதோர் வாள் மன் ”

இப்போது ஒடிந்து விட்டது

எனும் ஒழிந்த சொற்பொருளை

உணர்த்துகிறது .

மற்று

வினையை மாற்றுதற் பொருள் , வேறு என்னும் பொருள் ஆகியவற்றைத் தரும் .

அசை நிலையாகவும் வரும் .

“ மற்றொன்று சூழினும் ”

- வேறொன்று எனும்

பொருளை உணர்த்துகிறது .

மற்றை

முதலில் சொன்ன

பொருளுக்கு இனமான

பொருளைக் குறிப்பது

இரண்டு ஆடைகள் உள்ளன .

ஒன்றைக் கொடுக்கும்போது

‘ மற்றையது கொண்டுவா ’

என்றால் முதலில் கண்ட

பொருளுக்கு இனமான

மற்றொரு ஆடையைக் குறிக்கும் .

கொல்

ஐயப்பொருள் தரும்

அசைநிலையாகவும்

வரும்

அவன் கண்ணன் கொல்

முருகன் கொல் - ஐயப் பொருள் .

அந்தில்

ஆங்கு

இடப்பொருள் தரும் .

அசை நிலையாகவும் வரும்

“ ஆங்காங்கு ஆயினும்

ஆக ” - இடப்பொருள்

அம்ம

‘ கேளுங்கள் ’ எனும்

பொருள் தரும் .

உரையசையாகவும்

வரும்

“ அம்ம வாழிதோழி ” ஒன்று சொல்கிறேன் , கேள் எனும் பொருள் அமைந்துள்ளது .

ஆ ) மேலே காட்டப் பெற்றவை அன்றி நன்னூல் உரையாசிரியர் காட்டும் வேறு சில இடைச்சொற்களும் உண்டு .

அவற்றுள் சிலவற்றைக் காணலாம் .

1 ) சுட்டு , வினா = சுட்டுப்பொருளை உணர்த்தும் அ , இ , உ என்பனவும் , வினாப் பொருளை உணர்த்தும் எ , ஏ , யா , ஆ , ஓ என்பனவும் இடைச்சொற்களே ஆகும் .

சுட்டு

:

அவன் , இவள் , உவை

வினா

:

எவன் , ஏவன் , யாது

அவளா , இவரோ

2 ) முன் , பின் எனும் இடைச்சொற்கள் காலப் பொருளையும் இடப் பொருளையும் தருவன .

முன் பிறந்தான் , பின் பிறந்தான்

-

காலப் பொருள்

முன் அமர்ந்தான் , பின் அமர்ந்தான்

-

இடப் பொருள்

3 ) இனி எனும் சொல் கால , இடங்களின் எல்லைப் பொருளைத் தருவது .

எடுத்துக்காட்டு

இனிச் செய்வான் ( காலப் பொருள் )

இனி நம் தெரு ( இடப்பொருள் )

4 )

ஐயோ , அந்தோ

எனும் சொற்கள் :

இவை இரக்கப் பொருள் தருவன .

ஐயோ - அச்சப் பொருளும் தருவது

5 )

சீ , சிச்சீ எனும்

சொற்கள் :

இவை இகழ்ச்சிப் பொருள் தருவன .

3.3 இசை நிறை

இசை நிறை என்பது வேறு பொருளை உணர்த்தாது செய்யுளில் ஓசையை நிறைத்து ( முழுமையாக்கி ) நிற்பது , இசைநிறைக்கும் இடைச்சொற்களாக ஏ , ஒடு , தெய்ய ஆகியன குறிக்கப்படுகின்றன .

ஏகார இடைச்சொல் ஆறு பொருளில் வரும் என்பதை முன்னரே கண்டோம் .

அவற்றில் ஒன்று இசைநிறை என்பதையும் நீங்கள் அறிவீர்கள் .

எடுத்துக்காட்டு

எழுத்து அது முதல் சார்பென விரு வகைத்தே ( நன் - 58 )

• ஒடு - இசைநிறைத்தல்

ஒடு என்னும் இடைச்சொல் வேறு பொருள் தராது இசை நிறைக்க வந்துள்ளது .

எடுத்துக்காட்டு

விதைக்குறு வட்டில் போதொடு பொதுள

விதை உடைய தட்டில் மலர் நிறைந்துள்ளது என்பது இதன் பொருள் . இங்கு ஒடு என்பது வேறு பொருள் தராது இசைநிறைத்தது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1 .

தத்தம் பொருளை உணர்த்தி வரும் இடைச்சொற்கள் எத்தனைப் பொருள்களில் வரும் ?

[ விடை ]

2 .

ஏகார இடைச்சொல் என்னென்ன பொருள்களில் வரும் ?

[ விடை ]

3 .

ஓஓ கெட்டேன் - இத்தொடரில் அமைந்துள்ள இடைச்சொல் எது ?

அது என்ன பொருளைத் தருகிறது ?

[ விடை ]

4 .

என , என்று - இடைச்சொற்கள் எத்தனைப் பொருள்களில் வரும் ?

அவை யாவை ?

[ விடை ]

5 .

எல்லாரும் வந்தார் - இதில் உம்மை என்ன பொருளில் வந்துள்ளது ?

[ விடை ]

6 .

வினாப் பொருளைத் தரும் இடைச்சொற்கள் யாவை ?

[ விடை ]

3.4 அசை நிலை

அசை நிலை என்பது வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச் சொல்லோடும் வினைச்சொல்லோடும் சேர்த்துச் சொல்லப்படுவது .

பொருள் இல்லாததாக வரும் சொல் அசைச்சொல் .

பேச்சுத்தொடரில் இடம்பெறும் அசைநிலையை உரையசை என்பர் .

ஏ , ஓ என்பன அசைநிலையாகவும் வரும் என முன்பு எடுத்துக்காட்டுடன் கண்டோம் .

ஏனைய அசைநிலை இடைச்சொற்களை இங்குக் காணலாம் .

( உரையசை கட்டுரையில் வரும் அசைநிலை .

கட்டுரை - பேச்சு )

3.4.1 அசைநிலை இடைச்சொற்கள்

அசைநிலை

இடைச்சொல்

எடுத்துக்காட்டு

மன்

“ அது மன் கொண்கன்தேரே ”

மற்று

“ மற்று என்னை ஆள்க ”

கொல்

“ கற்றதனால் ஆய பயன்என் கொல் ”

அந்தில்

“ அந்தில் கழலினன் கச்சினன் ”

ஆங்கு

“ ஆங்கத் திறனால் ”

அம்ம

“ அது மற்றம்ம ” ( பேச்சில் வரும் அசைநிலை

- உரையசை )

மா

“ உப்பின்று புற்கை உண்கமா கொற்கையோனே ” ( மா என்னும் அசைச்சொல் வியங்கோளை அடுத்து வருவது .

உப்பின்றிச் சோறு உண்க என்பது பொருள் ) தான்

நீதான் வர வேண்டும் .

மேற்காட்டிய எல்லா எடுத்துக்காட்டுகளிலும் இடைச்சொற்கள் வேறு பொருள் இன்றி அசைநிலையாக வருவதை உணரலாம் .

3.4.2 முன்னிலை அசைச்சொற்கள்

சில அசைச் சொற்கள் முன்னிலை இடத்தில் வருபவை .

மியா , இக , மோ , மதி , அத்தை , இத்தை , வாழிய , மாள , ஈ , யாழ என்னும் பத்து இடைச்சொற்களும் முன்னிலை இடத்து வரும் .

எடுத்துக்காட்டு

கேண்மியா

கேண்மோ

கேண்மதி

கேள் என்று பொருள்

இவை எல்லாம் பழைய வழக்கு ; இக்காலத்தே இவை வழக்கு ஒழிந்தன .

எனினும் இலக்கியங்களில் காணலாம் .

3.4.3

எல்லா இடத்திலும் வரும் அசைச் சொற்கள்

யா , கா , பிற , பிறக்கு , போ , சின் , போலும் , இருந்து , இட்டு , தாம் , தான் , போன்ற பல அசைச்சொற்கள் தன்மை , முன்னிலை , படர்க்கை என்னும் மூவிடங்களிலும் வரும் .

எடுத்துக்காட்டு

போலும்

-

மகிழ்ந்தனை போலும்

இருந்து

-

எழுந்திருந்தேன்

தாம்

-

நீர்தாம்

3.5 குறிப்பால் பொருள் உணர்த்தும் இடைச்சொற்கள்

பொருளை வெளிப்படையாக உணர்த்தாமல் குறிப்பாக உணர்த்தும் சில குறிப்புச் சொற்கள் இடைச்சொற்களாகக் குறிக்கப்படுகின்றன .

3.5.1 ஒலிக் குறிப்பாக வரும் இடைச்சொற்கள்

அம்மென , இம்மென , கோவென , சோவென , துடுமென , ஒல்லென , கஃறென , சுஃறென , கடகடவென , கலகலவென , திடுதிடுவென , நெறுநெறுவென , படபடவென ஆகிய இவை ஒலிக்குறிப்புச் சொற்கள் .

எடுத்துக்காட்டு

கோவெனக் கதறி அழுதான்

சோவென மழை பெய்தது

கலகலவெனச் சிரித்தாள்

நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது

3.5.2 அச்சக் குறிப்பைத் தரும் இடைச்சொற்கள்

துண்ணென , துணுக்கென , திடுக்கென , திக்கென போன்றவை அச்சக் குறிப்பை வெளிப்படுத்தும் சொற்கள் .

எடுத்துக்காட்டு

அவள் துணுக்குற்றாள்

திடுக்கெனத் தூக்கிப் போட்டது

துண்ணெனத் துடித்தது நெஞ்சம்

3.5.3 விரைவுக் குறிப்புச் சொற்கள்

பொள்ளென , பொருக்கென , கதுமென , சடக்கென , மடக்கென , திடீர் என போன்றவை விரைவுப் பொருளில் வரும் .

எடுத்துக்காட்டு

பொள்ளெனப் பொழுது விடிந்தது

திடீரென மறைந்து விட்டான்

பிற விரைவுக் குறிப்புச் சொற்களையும் இலக்கியங்கள் வழி அறிந்து கொள்ளலாம் .

இன்று வழக்கில் இல்லாத பல ஒலிக்குறிப்புச் சொற்கள் இலக்கியங்களில் மட்டுமே காணக்கிடக்கின்றன .

இலக்கியங்களைப் படிக்கும்பொழுது அச்சொற்களின் குறிப்புப் பொருளை அறிந்து கொள்ளலாம் .

3.6 தொகுப்புரை இடைச்சொல் வகைகள் பகுதி இரண்டில் , நான்கு வகை இடைச்சொற்களின் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன .