அம்மா அழைக்கிறாள்
பாப்பா வருகிறாள்
என்னும் தொடர்களில் அம்மா, பாப்பா என்னும் பெயர்கள் உயிர் உள்ளவர்களைக் குறிக்கும்.
நிலம் அதிர்ந்தது.
நீர் ஓடுகிறது.
என்னும் தொடர்களில் உள்ள நிலம், நீர் என்னும் பெயர்கள் உயிரற்ற பொருள்களைக் குறிக்கும். ஆகவே, உயிர்ப்பொருள், உயிரற்ற பொருள் ஆகியவற்றின் தொழிலையே வினை என்கிறோம். பொருளின் புடை பெயர்ச்சியே வினை எனச் சுருக்கமாகக் கூறலாம். புடை பெயர்ச்சி என்பது அசைவு என்பதாகும்.
தமிழ்மொழியில் அடிச்சொற்கள் பல பெயர், வினைகளுக்குப் பொதுவாகவே உள்ளன. அலை, காய், பூ முதலியவற்றைச் சான்றாகக் கூறலாம்.
அலை வருகிறது
அலையைப் பார்
இத் தொடர்களில் அலை என்பது பெயர்ச் சொல்லாகும்.
வெயிலில் அலையாதே
ஏன் அலைகிறாய்
இத் தொடர்களில் அலை என்பது வினைச் சொல்லாகும். இவ்வாறு பெயருக்கும், வினைக்கும் பொதுவான சொற்கள் தமிழில் மிகுதியாக உள்ளன என்பதை மட்டும் இப்பொழுது நினைவிற் கொள்க.
• வினைப்பகுப்பு
வினைச்சொல் காலத்தைக் காட்டும்; வேற்றுமை உருபை ஏற்காது.
வினைச்சொல்லைத் தமிழில் தெரிநிலைவினை, குறிப்புவினை என இரண்டாகப் பகுத்திருக்கிறார்கள். தொழிலையும், அது நிகழும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டும் வினைகளைத் தெரிநிலை வினை என்றனர். இவ்வாறு வெளிப்படையாகக் காலத்தைக் காட்டாமல் குறிப்பால் காலத்தைக் காட்டுகின்ற சொற்களைக் குறிப்பு வினை என்றனர்.
எடுத்துக்காட்டு
அவன் வந்தான் – தெரிநிலைவினை
அவன் பணக்காரன் – குறிப்புவினை
இங்கே முதல் தொடரில் வந்துள்ள வந்தான் என்பது, வருதல் என்ற தொழிலையும், அத்தொழில் நிகழ்ந்த இறந்த காலத்தையும் வெளிப்படையாகக் காட்டுவதால் தெரிநிலை வினை ஆயிற்று.
இரண்டாவது தொடரில் வந்துள்ள பணக்காரன் என்பது, காலத்தைக் காட்டவில்லை. எனினும் அவன் நேற்றுப் பணத்தை உடையவனாக இருந்தான் என்றோ, இன்று பணத்தை உடையவனாக இருக்கிறான் என்றோ, நாளை பணத்தை உடையவனாக இருப்பான் என்றோ பொருள் தருகிறது. இத்தொடரில் நேற்று, இன்று, நாளை போன்ற சொற்களின் துணைகொண்டு மட்டுமே காலத்தைக் குறிப்பாக அறிய முடியுமாதலால் ‘பணக்காரன்’ என்பது குறிப்பு வினை ஆயிற்று.
செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே
(நன்னூல்:319)
என்பது நன்னூல் நூற்பா.
வரைந்தான் என்னும் வினைச்சொல்லைச் சான்றாக எடுத்துக் கொள்வோம். இதனால் அறியப்படும் ஆறு செய்திகளையும் கீழே காண்க.
வரைந்தவன் – (செய்பவன்) ஓவியன்
வரைய உதவியது – (கருவி) தூரிகை
வரைந்த இடம் – (நிலம்) ஓவியக்கூடம்
வரைதல் – (செயல்) ஓவிய வரைவு
வரையப்பட்டது – (செய்பொருள்) ஓவியம்
வரைந்த காலம் – (காலம்) இறந்தகாலம்
இந்த ஆறு கருத்துகளையும் ஒரு வினைச்சொல் உணர்த்துவதை நினைவிற் கொள்ள வேண்டும்.
வினைச் சொற்களை முற்றுவினை, எச்சவினை என இரண்டாகப் பிரிக்கலாம். எச்சவினையைப் பெயரெச்சம், வினையெச்சம் எனப் பிரிக்கலாம்.
வந்தான் – வினைமுற்று
வந்து - வினையெச்சம் (வந்து என்பதற்குப் பிறகு ஒரு வினைச்சொல் வந்தால்தான் கருத்து நிறைவு பெறும். எ-டு. வந்து போனான்)
வந்த - பெயரெச்சம் (வந்த என்பதற்குப் பிறகு ஒரு பெயர்ச்சொல் வந்தால்தான் கருத்து நிறைவு பெறும். எ-டு. வந்த பையன்)
ஒரு தெரிநிலை வினைமுற்றுச் சொல்லில் பகுதியால் செயலும், விகுதியால் வினை செய்தவரும், இடைநிலையால் காலமும் வெளிப்படையாகப் புலப்படும்.
(எ.கா) செய்தான் – தெரிநிலை வினைமுற்று
செய் – பகுதி – செய்தல் என்னும் வினையைக் குறித்தது.
ஆன் – விகுதி – உயர்திணை ஆண்பாலைக் குறித்தது.
த் – இடைநிலை – இறந்தகாலம் குறித்தது.
பெயரெச்சம் வினையெச்சங்களைப் பற்றி இத் தொகுப்பில் பின் ஒரு பாடத்தில் படிக்க உள்ளீர்கள். இப்பொழுது குறிப்பு வினையைக் குறித்துக் காண்போம்.
அவன் பொன்னன் – பொருட்பெயர் (பொன் = பொருள்,
பொன்னை உடையவன்)
அவன் கச்சியான் – இடப்பெயர் (கச்சி = இடம், கச்சி
என்னும் ஊரைச் சேர்ந்தவன்; கச்சி – காஞ்சி மாநகர்)
அவன் ஆதிரையான் – காலப் பெயர் (ஆதிரை = நாள்,
நட்சத்திரம். ஆதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன்)
அவன் ஆறுமுகன் – சினைப்பெயர் (முகம் – சினை,
ஆறுமுகங்களைக் கொண்டவன்)
அவன் கரியன் – குணப்பெயர் (கருமை= நிறப்பண்பு, கரிய நிறம் உடையவன்)
அவன் தச்சன் – தொழிற்பெயர் (தச்சு = தொழில்)
பிற திணை பால்களுக்குரிய குறிப்பு வினைமுற்றுச் சொற்களும் இவ்வாறே அமையும். தனியே பொன்னன், கரியன் எனும் பெயர்கள் குறிப்புவினைகள் ஆகா. தொடரில் இவை பயனிலையாக வரும்பொழுதே குறிப்புவினைமுற்றுகள் ஆகும். ‘பொன்னன் வந்தான்’ என்பதில் ‘பொன்னன்’ எழுவாயாக உள்ளது. ‘அவன் பொன்னன்’ என்பதில் ‘பொன்னன்’ பயனிலையாக உள்ளது. எனவே, இடமறிந்து குறிப்புவினை எது என அறிய வேண்டும்.
குறிப்புவினைச் சொற்கள் பெரும்பாலும் வடிவத்தில் பெயர்ச் சொற்களாகவே தோன்றுவதால், அவை தொடரில் வரும் இடத்தை வைத்தே குறிப்புவினையா என்பதை முடிவு செய்யவேண்டும். தனியே இச் சொற்களைச் சொன்னால் இவை பெயரே ஆகும்.
குறிப்புவினை என்பதும் வினைக்குறிப்பு என்பதும் ஒரே பொருள்படும் சொற்களே ஆகும். குறிப்புவினைச் சொல் வடிவால் காலம் காட்டுவதில்லை. எனவே, காலம் காட்டாது என முடிவு செய்திடலாகாது. பேசுவோர், கேட்போர் குறிப்பிற்கேற்ப, காலத்தை அது குறிப்பாக உணர்த்தும் என்பது நினைவில் இருக்க வேண்டும்.
தன்வினை, பிறவினை;
செய்வினை, செயப்பாட்டுவினை;
உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை
என்பன போன்ற பல வகைப்பாடுகள் உள்ளன.
கரையைச் சேர்வான்
என்னும் தொடரில், சேர்தலாகிய தொழிலை ஒருவன் செய்வான் என்பது பொருள்.
கரையில் சேர்ப்பான்
என்பது சொல்லாயின், வேறு யாரையோ அல்லது எதையோ சேரும்படி இவன் செய்வான் என்பது பொருளாகும், முன்னதில் சேரும் வினை இவனுடையது. பின்னதில் அவ்வினை வேறு ஒரு பொருளுக்கு உரியது.
சேர்வான் என்பது தன்வினையாகிறது.
சேர்ப்பான் என்பது பிறவினை ஆகிறது.
தன்வினை – பிறவினை
வருந்துவான் – வருத்துவான் இவற்றில் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை ஆயிற்று.
திருந்தினான் – திருத்தினான்
அடங்கினான் – அடக்கினான்
ஆடினான் – ஆட்டினான் இவற்றில் வல்லொற்று (ட்,ற்) இரட்டித்துப் (ட்ட், ற்ற்) பிறவினை ஆயிற்று.
மாறுவான் – மாற்றுவான்
பிறவினையாகும்போது வி, பி ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு.
நட – நடப்பி – நடப்பித்தான்
செய் – செய்வி – செய்வித்தான்
என்பனபோல வரும். சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.
இனி, செய்வினை, செயப்பாட்டுவினை என்னும் வினைப் பகுப்பினைப் பார்ப்போம்.
கொசு கடித்தது
நாயை அடிக்கிறான்
இத்தொடர்களில் உள்ள வினைச் சொற்கள் செய்வினைச் சொற்களாகும். இவற்றை வேறு ஒரு முறையிலும் கூறலாம்.
புத்தகம் (என்னால்) படிக்கப்படுகிறது.
நான் (கொசுவால்) கடிக்கப்பட்டேன்.
நாய் (அவனால்) அடிக்கப்படுகிறது.
இத் தொடர்களில் செயப்பாட்டு வினைகள் உள்ளன. செய்வினையில் படிக்கிறேன் என்றிருந்த சொல், செயப்பாட்டு வினையில் படிக்கப்படுகிறது என மாறுகிறது. படு என்னும் துணைவினைச் சொல் இவை அனைத்திலும் சேர்ந்து வருகிறது.
செய்வேன், பெறுவான்
என்பன போன்ற வினைச்சொற்கள் ஒரு வினையைச் செய்வதையோ, செய்யப் போவதையோ அறிவிக்கின்றன. இவற்றை உடன்பாட்டு வினைகள் என்கிறோம். ஒரு செயலைச் செய்வதற்கு உடன்பட்ட நிலையைத்தான் இவை அறிவிக்கின்றன.
வாரேன் (வர மாட்டேன் என்பது பொருள்)
செய்யேன் (செய்ய மாட்டேன் என்பது பொருள்)
செய்யான் (செய்ய மாட்டான் என்பது பொருள்)
பெறான் (பெற மாட்டான் என்பது பொருள்)
என்னும் சொற்கள் ஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையைப் புலப்படுத்துகின்றன. எனவே இவை எதிர்மறைவினைகள் என்று சுட்டப்படுகின்றன. உடன்பாட்டு வினைச் சொற்களின் இடையில் எதிர்மறை இடைநிலை வந்து எதிர்மறைப் பொருளை உணர்த்துகின்றது.
செய் + ஆ + ஆன் – செய்யான்
தெரி + அல் + அன் – தெரியலன்
வந்து + இல் + அன் – வந்திலன்
இச் சொற்களில், ‘ஆ’, ‘அல்’, ‘இல்’ ஆகியன எதிர்மறைப் பொருள் உணர்த்துகின்றன. பெரும்பாலும் எதிர்மறைக்கு ‘ஆ’கார இடைநிலையே வரும். இக்காலத்தில் மாட்டான், மாட்டேன் என்பன போன்ற சொற்களால் எதிர்மறையைக் குறிக்கிறோம்.
சுருங்கச் சொன்னால், எதிர்மறை இடைநிலைகள் வாராத வினைகள் எல்லாம் உடன்பாட்டு வினைகளே. அவற்றைப் பெற்றிருப்பன எதிர்மறை வினைகளாகும்.
வினைமுற்றுச் சொற்களில் எதிர்மறை இருப்பது போன்று பெயரெச்ச, வினையெச்சச் சொற்களோடு ‘ஆ’ சேர்ந்தும் எதிர்மறைப் பொருள்படும்.
செய்ய வந்தேன், செய்து வந்தான் தொடர்களில் இடம்பெற்றுள்ள செய்ய, செய்து என்னும் சொற்கள் தமக்குப் பின் ஒரு வினைமுற்றுச் சொல்லைக் கொண்டே முடிவதால், வினையெச்சம் என்று சொல்லப் பெறுகின்றன.
கேட்கும் செவி, காணும் கண் என்னும் தொடர்களில் உள்ள, கேட்கும், காணும் என்னும் சொற்கள் தமக்குப்பின் ஒரு பெயர்ச்சொல் கொண்டு முடிவதால், அவற்றைப் பெயரெச்சம் என்கிறோம். இப்பெயரெச்ச, வினையெச்சச் சொற்களும் ‘ஆ’ என்னும் எதிர்மறை இடைநிலை பெற்று வரும்.
கேள் + ஆ – கேளாச் செவி எதிர்மறைப் பெயரெச்சம்
காண் + ஆ – காணாக் கண்
பாராது இருந்தாள் எதிர்மறை வினையெச்சம்
எழுதாமல் இருந்தான்
எனவே, உடன்பாட்டு வினைகளே எதிர்மறை இடைநிலை பெற்று, வினைமுற்றுச் சொற்களிலும் எச்சச் சொற்களிலும் எதிர்மறையை உணர்த்தும் என்பதை அறிக.
வா, போ என்னும் வினைப் பகுதிகளை, ஒருவரை நோக்கிச் சொல்லும்பொழுது அவற்றை ஏவல் வினை என்கிறோம். அதாவது, ஒருவரை ஒரு வினை செய்யுமாறு கட்டளை இடுவதை ‘ஏவல்’ என்கிறோம்.
இதுபோல், வியங்கோள் வினை, காரண வினை என்னும் வினைகளும் உள்ளன. இவை யாவும் சூழலுக்கேற்ப ஏவல், வியங்கோள் முதலிய பொருள் தருமாறு பேசப்படுகின்றன. இவை குறித்து இனிக் காண்போம்.
நீ வாராய்
நீ செல்வாய்
இவற்றுள் வா, செல் என்னும் வினைப் பகுதிகளோடு ‘ஆய்’ என்னும் முன்னிலை ஒருமை விகுதி சேர்ந்துள்ளது.
நீவிர் காண்மின் (காணுங்கள் என்று பொருள்)
நீர் செல்லும்
என்னும் முன்னிலைப் பன்மைச் சொற்களும் அவ்வாறே முன்னிலைப் பன்மை விகுதிகளைப் பெற்றுள்ளன. ‘மின்’, ‘உம்’ என்பன முன்னிலைப் பன்மை விகுதிகளாகும்.
வாழ்க, வெல்க – வாழ்த்தல் பொருள்
வருக, செல்க – விதித்தல் பொருள்
அருள்க, கருணைசெய்க – வேண்டல் பொருள்
வீழ்க, கெடுக – வைதல் (ஏசுதல்) பொருள்
வியங்கோள் வினையில் ஒருமை, பன்மை என்னும் பாகுபாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மழை பெய்தால் பயிர் வளரும்
மழை பொழிந்ததாயின் குளம் குட்டைகள் நிரம்பும்
மழை பெய்யின் குடிநீர் கிடைக்கும்
மழை பெய்ததெனின் வெப்பம் தணியும்
மழை பெய்ததென்றால் நாடு செழிக்கும்
இத் தொடர்களில் மழை பெய்தல் ஆகிய செயல், பயிர் வளர்தல் போன்றவற்றுக்குக் காரணமாக அமைகிறது என்பது புலப்படுகிறது. இவற்றிலும் ஆல், ஆயின் முதலிய விகுதிகளே (பின்னொட்டுகள்) காரணப் பொருளைத் தெரிவிக்கின்றன. இவ்வாறு வரும் வினைகளைக் காரணவினை என்று இக்காலத்தில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் பழைய இலக்கண நூல்களில் இப்பெயர் இல்லை. இதுவரை வினைச்சொற்களால் சூழலுக்கு ஏற்ப உணர்த்தப்படும் பொருள்கள் சிலவற்றைப் பார்த்தோம்.
இவற்றை எடுத்துக்காட்டுகள்வழி தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
(எ.கா)
கட்டு இரண்டு கட்டுக் கீரை – பெயர்
பூக்களை மாலை கட்டு – வினை
சில சொற்களில் சிறுசிறு மாற்றங்களுடன் வினையிலிருந்து பெயர்ச்சொல் தோன்றக் காணலாம்.
வினை பெயர்
காண் கண்
எழுது எழுத்து
சேர் சேர்மானம்
சுடு சுடர்
குதி குதிரை
(வினை) ஆடு – ஆட்டம் (பெயர்)
(வினை) வாடு – வாட்டம் (பெயர்)
(வினை) நாடு – நாட்டம் (பெயர்)
(வினை) ஓடு – ஓட்டம் (பெயர்)
தொழிற் பெயர்களில் ஒரு வகை, தொழிலை மட்டுமே உணர்த்தும். அவை காலம் காட்டா. மேற்காட்டிய ஆட்டம், வாட்டம் முதலிய தொழிற்பெயர்கள் தொழிலை (ஆடுதல், வாடுதல்) மட்டுமே உணர்த்தும். உழவு, வரவு (வருகை), பொழிவு முதலியனவும் இத்தகையனவே.
இன்னொரு வகைக்குச் (காலம் காட்டும் தொழிற் பெயர்களுக்கு) சான்று:
தாங்கள் இங்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர் இவ்வாறு கூறியது நன்றாக இல்லை. இறந்த காலம்
இத் தொடர்களில் வரும் ‘வந்தது’, ‘கூறியது’ என்னும் சொற்கள் முறையே, வந்த செயல், கூறிய செயல் என்பவற்றையே சுட்டுகின்றன. இவ்வாறு காலம் காட்டும் தொழிற்பெயர்கள் வேறு சிலவும் உண்டு.
இனியும் கூட்டத்தில் பேசிக் கொண்டிருப்பது நன்றன்று.
அதோ, மழை வந்து கொண்டிருப்பது தெரிகிறதா?
நிகழ்காலம்
வந்தான் (வந்தவன்) நல்லவன்.
வந்தானைப் (வந்தவனைப்) பார்த்தேன்.
வெந்ததை உண்கிறோம்.
இத் தொடர்களில் உள்ள வந்தான், வெந்தது ஆகிய சொற்கள் வினையாலணையும் பெயர்களாகும். வினைமுற்றுச் சொற்கள் வினையாலணையும் பெயர்களாக வருகின்றன.
இவை போன்று வினையாலணையும் பெயர்கள் குறிப்பு வினையிலிருந்தும் அமையும்.
கரியவனைக் கண்டாயா?
கரியானை வரச் சொல்.
என்பன போன்றவை குறிப்பு வினைமுற்றுச் சொற்களில் இருந்து அமைந்தவையே. அஃறிணையிலும் இத்தகு பெயர்கள் அமையும்.
இவ்வாறு, பல்வகையான சொற்கள் வினைச் சொல்லில் இருந்து உருவாகிப் பெயர்களாகப் பயன்படுகின்றன. எனினும் இவை யாவும் வினை இயல்புகளோடு இருப்பது நோக்கத்தக்கது.
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை, உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை ஆகிய வினை வகைகள் குறித்து விளக்கம் தரப்பட்டது.
பின்னர், ஏவல், வியங்கோள் ஆகியன பற்றியும், காரணவினை என்பது பற்றியும் விரிவாகக் கூறப்பட்டது.
இறுதியில், வினைச் சொற்களில் இருந்து சிலவகைப் பெயர்ச்சொற்கள் எவ்வாறு அமைகின்றன, அவை எவ்வகை இயல்புகளைப் பெற்றுள்ளன என்பன சுட்டப்பெற்றன. இவ்வாறு வினைச்சொல் பற்றிய செய்திகள் பொது நிலையில் இப்பாடத்தில் விளக்கப்பெற்றன.
பாடம் 2
‘நான் வந்தேன்’ என்பது ஒரு தொடர். இதில் நான் என்பது தன்மை ஒருமை இடப்பெயர். நான் என்பதைத் தொடரமைப்பில் எழுவாய் என்று குறிப்பதுண்டு. தமிழ்த் தொடர்களில் எழுவாய்க்கேற்ற வினைமுற்றுச் சொல்லே வர வேண்டும் என்னும் வரையறை உள்ளது.
நான் வந்தேன்
நீ வருகிறாய்
அவள் வருவாள்
அது வருகிறது
நான், நீ, அவள், அது என வெவ்வேறு இடப்பெயர் எழுவாய்கள் வரும்போது வினைமுற்றுகளும் வெவ்வேறாய் வந்துள்ளன என்பதைக் காண்கிறீர்கள். இது போன்ற செய்திகளைச் சொல்லதிகாரப் பகுதியில் இலக்கண நூலார் உரைத்துள்ளனர்.
தன்மை வினைமுற்று பால் உணர்த்தாது; எனினும் ஒருமை-பன்மை வேறுபாடு உணர்த்தும். ‘வருகிறேன்’ என்பது ஒருவரைக் குறிக்கிறது. ‘வருகிறோம்’ என்பது பலரைக் குறிக்கிறது. இவ்வாறு, ஒருவரா பலரா என்னும் எண்ணிக்கையை மட்டும் இச்சொற்கள் வழி அறியலாம்.
இதுவரை பார்த்தவற்றால், தன்மை வினைமுற்றுகள் வினையை உணர்த்தும் (வருதல், காணுதல்). பேசுவோர் ஒருவரா, பலரா அல்லது ஒரு பொருளா, பல பொருளா என்பதை உணர்த்தும். (ஒருமை-பன்மை) பால் உணர்த்தா (ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால்) எனப் புரிந்து கொள்ளலாம். தன்மை வினைமுற்று பால் உணர்த்தாது என்பதும், பால்களுக்குப் பொதுவாக வரும் என்பதும் ஒரே பொருள்தான். (வினைச்சொற்களின் அடிப்படையான இயல்பு காலம் காட்டுதல். இதுபற்றிக் ‘காலம்’ எனும் பாடத்தில் (a02126) பின்னர் விரிவாகக் காண்போம்.)
பார்த்தேன் என்பது தன்மை ஒருமை வினைமுற்று.
பார்+த்+த்+ஏன்
பார் என்பது பகுதி
ஏன் என்பது விகுதி
இவற்றுக்கு இடையில் இரு தகர ஒற்றுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று சந்தி, மற்றொன்று காலம் காட்டும் இடைநிலை, ‘ஏன்’ என்னும் விகுதியால் அறியப்படுவன இரண்டு.
(1) தன்மை (இடம்)
(2) ஒருமை (எண்)
உண்டோம் என்பது தன்மைப் பன்மை வினைமுற்று.
உண்+ட்+ஓம்
இச்சொல்லில் உண் என்பது வினைப்பகுதி
ஓம் என்பது விகுதி.
ட் என்பது இறந்தகால இடைநிலை. இச்சொல்லிலும் ஓம் என்னும் விகுதியால் அறியப்படுவன இரண்டு செய்திகள்.
(1) தன்மை (இடம்)
(2) பன்மை (எண்)
ஆக, தன்மை வினைமுற்றுகளில் விகுதிகளே ஒருமை-பன்மை வேறுபாட்டை உணர்த்துகின்றன என அறிந்து கொள்கிறோம்.
இவற்றையே காலம் உணர்த்துவதன் அடிப்படையில், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என மேலும் இருவகையாகப் பிரிக்கலாம். தெரிநிலை வினைமுற்று – காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது. குறிப்பு வினைமுற்று – காலத்தைக் குறிப்பாகக் காட்டுவது.
இவற்றின் இயல்புகளை அடுத்தடுத்த பிரிவுகளில் முறையே காண்போம்.
நான் வருகிறேன்
நான் வருவேன்
இம்மூன்றும் தன்மை வினைமுற்றுகளே. இவை தமக்குள் எவ்வாறு வேறுபடுகின்றன? இவை உணர்த்தும் காலத்தால் வேறுபடுகின்றன. ‘வந்தேன்’ என்பது இறந்த காலம்; வருகிறேன் என்பது நிகழ்காலம்; வருவேன் என்பது எதிர்காலம். இவ்வினைமுற்றுகளில் காலத்தை உணர்த்தும் உறுப்புகள் எவை எனக் காண்போம்.
வா+ த்+ த் +ஏன்
வா+ கிறு +ஏன்
வா+ வ் +ஏன்
இவற்றில் ‘த்’ இறந்த காலத்தையும், ‘கிறு’ நிகழ்காலத்தையும், ‘வ்’ எதிர்காலத்தையும் உணர்த்துகின்றன. இவை இடைநிலைகள் எனப்படும். இவ்வாறு இடைநிலைகள் அமைந்த வினைமுற்றுகளையே தெரிநிலை வினைமுற்றுகள் என்கிறோம்.
பழந்தமிழில், இப்போது வழக்கில் இல்லாத ஒருவகைத் தன்மை வினைமுற்று இருந்தது. அவ்வினைமுற்று இடைநிலையால் அல்லாமல், விகுதியைக் கொண்டே காலம் உணர்த்தும். இதுபற்றி இப்பாடத்தின் இறுதியில் (2.4.1 & 2.4.2) காண உள்ளோம்.
தன்மை ஒருமை வினைமுற்றுகள் கீழ்வரும் மூன்று பால்களுக்கும் பொதுவாக உரியன.
(1) உயர்திணை ஆண்பால்
(2) உயர்திணைப் பெண்பால்
(3) அஃறிணை ஒன்றன்பால்
இவை பால் உணர்த்தாதனவாய், எண் (ஒருமை, பன்மை) மட்டுமே உணர்த்துவனவாய் வரும் என முன்னர்க் கூறியது நினைவில் இருக்க வேண்டும். இங்கு ஓர் ஐயம் தோன்றக்கூடும். வந்தேன் என்பது உயர்திணை ஆண்பாலையோ பெண்பாலையோ குறிக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அஃறிணை ஒன்றன்பாலை, அது எப்படிக் குறிக்கும்? விலங்கு, பறவை, மரம் போன்ற அஃறிணைப் பொருட்கள் ‘நான் வந்தேன்’ ‘நாங்கள் வந்தோம்’ என்று பேசுமா என்று நீங்கள் கேட்கலாம். அவை பேசுவதில்லைதான். ஆனால் கதைகளில் இலக்கியங்களில் அஃறிணைப் பொருள்கள் பேசுவது போலவும் பிறர் பேச்சைக் கேட்பது போலவும் வரும் நிகழ்ச்சிகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவ்வாறு வரும்போது அஃறிணைப் பொருள்களையும் தன்மை வினைமுற்று உள்ளடக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
வந்தேன் இச்சொற்கள் ஆண் – ஒருமை
கண்டேன் பெண் – ஒருமை
சென்றேன் அஃறிணை – ஒருமை
எனும் மூன்று பொருளுக்கும் பொருந்தி வரும்.
இன்றைய வழக்கில் தன்மை ஒருமை வினைமுற்றில் இடம்பெறும் விகுதி ஏன் என்பது மட்டும்தான்.
பேச்சு வழக்கில் என் விகுதி ஏன் விகுதியைப் போல் இடம் பெறுவதில்லை. பழைய இலக்கிய வழக்கில்தான் இது கையாளப் படுகிறது.
(எ.கா)
என் விகுதி வந்தனென்
வருகின்றனென்
வருவென்
அன் என்னும் விகுதியும் தன்மை, ஒருமைக்கு வரும் என்பர் இலக்கண நூலார். அன் படர்க்கையிலும் வரும் ஆதலால், அவ்விடங்களில் வினைமுற்றுடன் உள்ள பெயரை வைத்தே படர்க்கையா, தன்மையா என முடிவு செய்ய வேண்டும்.
(எ.கா)
வந்தனன் யான் – அன் விகுதி – தன்மை இடம்
வந்தனன் அவன் – அன் விகுதி – படர்க்கை இடம்
(எ.கா)
நான் கரியென் – என்
நான் கரியேன் – ஏன்
இத் தொடர்களில் கரியென், கரியேன் என்னும் சொற்கள் குறிப்பு வினைமுற்றுகள்.
இவை எவ்வாறு குறிப்பு வினைமுற்றுகள் ஆகின்றன? நான் கரியென் (நான் கரியவன்) எனும் தொடரில் வரும் ‘கரியென்’ என்பதன் பொருள் ‘கரியவனாக இருக்கிறேன்’ என்றோ, கரியவனாக இருந்தேன்’ என்றோ ‘கரியவனாக இருப்பேன்’ என்றோ வரும். சூழ்நிலையை ஒட்டித்தான் காலம் கண்டுபிடிக்க முடியும்.
நான் நேற்றுக் கரியென்
நான் இன்று கரியென்
நான் நாளை கரியென்
எனவரும் தொடர்களில் ‘கரியென்’ எனும் வினைமுற்றின் காலத்தை அதன் முன்னே உள்ள நேற்று, இன்று, நாளை எனும் சொற்களைக் கொண்டு காணமுடிகிறதல்லவா! இவ்வாறு வருவதுதான் குறிப்பு வினைமுற்று.
நடக்கிறோம் நாங்கள்
உண்டோம், நடக்கிறோம் எனும் வினைமுற்றுகள் ஒருமை அல்ல, பன்மை என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பன்மையில் இவை உயர்திணையா அஃறிணையா? இவை இருதிணைக்கும் பொதுவானவை. உண்டோம், நடக்கிறோம் என உயர்திணைப் பொருள்களும் பேசலாம்; ஆடுமாடுகள் போன்ற அஃறிணைப் பொருள்கள் பேசுவதாகவும் இலக்கியம், கதை படைக்கலாம். தன்மை ஒருமை வினைமுற்று ஆண்பால், பெண்பால், அஃறிணை ஒருமை ஆகிய மூன்றுக்கும் பொதுவாக இருப்பதை முன்பு கண்டோம். அதுபோலவே தன்மைப் பன்மையும் உயர்திணை அஃறிணை ஆகிய இரண்டுக்கும் பொதுவாக வரும். அதாவது பலர்பால் பன்மைக்கும் (உயர்திணைப் பொருள்கள்) பலவின்பால் பன்மைக்கும் (அஃறிணைப் பொருள்கள்) தன்மைப் பன்மை வினைமுற்று பொதுவாக வரும்.
தன்மை ஒருமை வினைமுற்றைப் போலத் தன்மைப் பன்மை வினைமுற்றும் செயல், காலம், செயல் செய்தவர் என்ற மூன்றைக் குறிக்கும்
(1) வினைப் பகுதி – செயலை உணர்த்தும்
(2) காலங்காட்டும் இடைநிலை – காலம் உணர்த்தும்
(3) விகுதி – செயல் செய்தவர் அல்லது செய்தவைகளைக் குறிக்கும்.
(எ.கா)
உண்டோம்
உண்+ட்+ஓம்
உண் – வினைப்பகுதி
ட் – இறந்தகாலம் காட்டும் இடைநிலை
ஓம் – விகுதி
(எ.கா)
பிறந்தோம் – இறந்த காலம் – ‘த்’ இடைநிலை
வாழ்கிறோம் – நிகழ் காலம் – ‘கிறு’ இடைநிலை
படிப்போம் – எதிர் காலம் – ‘ப்’ இடைநிலை
இவ்வாறு இடைநிலைகள் அமைந்த தன்மைப்பன்மை வினைமுற்றுகளே தெரிநிலை வினைமுற்றுகள் ஆகும்.
இவ்வினைமுற்றுச் சொற்களில் தன்மைப் பன்மையை உணர்த்துவன விகுதிகளாகும். இன்றைய தமிழில் ‘ஓம்’ என்னும் விகுதியே தன்மைப் பன்மையைக் குறிக்க மிகுதியாகப் பயன்படுகிறது. ஆனால் பழங்காலத்தில், இந்த ‘ஓம்’ விகுதி குறிக்கும் பொருளில் அம், ஆம், எம், ஏம் ஆகிய விகுதிகளும் பயன்பட்டுள்ளன. (உண்டனம், உண்டாம், உண்டனெம், உண்டேம்) இவை எல்லாச் சொற்களுக்கும் ‘உண்டோம்’ என்பதுதான் பொருள்.
தன்மைப் பன்மையில் தெரிநிலை வினைமுற்றுகள் இவ்வாறு வரும் எனப் பார்த்தோம். அடுத்து, குறிப்பு வினைமுற்றுகள் பற்றிக் காண்போம்.
‘நல்லோம் யாம்’ என்பது சூழ்நிலையை ஒட்டி நாம் நேற்று நல்லோம், நாம் இன்று நல்லோம், நாம் நாளை நல்லோம் எனப்பொருள் தரும். இவ்வாறு வருவது தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று.
தெரிநிலை வினைமுற்றுச் சொற்களில் தன்மைப் பன்மைக்குக் கூறப்பெற்ற ஐந்து விகுதிகளும் குறிப்பு வினைமுற்றுச் சொற்களிலும் வரும்.
நல்லோம் யாம் – ‘ஓம்’ விகுதி
நல்லம் யாம் – ‘அம்’ விகுதி
நல்லாம் யாம் – ‘ஆம்’ விகுதி
நல்லெம் யாம் – ‘எம்’ விகுதி
நல்லேம் யாம் – ‘ஏம்’ விகுதி
இன்றைய வழக்கில் இருப்பது ‘ஓம்’ விகுதி மட்டுமே.
தெரிநிலை வினைச்சொற்களில் இடைநிலைகளே காலம் உணர்த்துவது இயல்பு. இதற்கு மாறாக, இங்கு நாம் காணப் போகின்ற தன்மை வினைமுற்று விகுதிகள் காலம் உணர்த்துவனவாக உள்ளன.
இவை இக்காலத்தில் வழக்கில் இல்லை ஆதலால் தெரிந்து கொள்ள வேண்டாம் என நினைத்தல் ஆகாது. பழைய நூல்களைப் படிக்கும்பொழுது இத்தகு சொற்கள் வரும் இடங்களில் பொருள் உணர்வதற்கு இவற்றைத் தெரிந்து கொள்வது தேவையாகிறது. இவ்வகையில், காலம் காட்டும் தன்மை ஒருமை மற்றும் தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகளை இனிக் காண்போம்.
இவற்றுள் கு, து, று என்பன எதிர்காலம் காட்டும் விகுதிகள் விகும்.
‘கு’ -‘உண்கு’ யான் – உண்பேன் யான்
என்பது பொருள் எதிர் காலம்
‘து’ – ‘வருது’ யான் – வருவேன் யான்
என்பது பொருள்
‘று’ – ‘சேறு’ யான் – செல்வேன் யான்
என்பது பொருள்
டு, து, று என்பன இறந்த காலம் குறிக்க வரும் விகுதிகள் ஆகும்.
‘டு’ – கண்டு யான் – கண்டேன் யான்
என்பது பொருள் இறந்த காலம்
‘து’ – வந்து யான் – வந்தேன் யான்
என்பது பொருள்
‘று’ – சென்று யான் – சென்றேன் யான்
என்பது பொருள்
நிகழ்காலப் பொருளில் விகுதிகள் எதுவும் பயன்படவில்லை. பழந்தமிழில் ‘அல்’ எனும் விகுதியும் தன்மை ஒருமை உணர்த்தும். கு டு து று போல ‘அல்’ விகுதி தானே காலம் காட்டாது. ஆயினும் எதிர்கால இடைநிலைகளாகிய ப், வ், என்பவற்றோடு மட்டுமே சேர்ந்து வரும். அதாவது அவ்விகுதி இடம்பெறும் தன்மை ஒருமை வினைமுற்று எதிர்காலச் சொல்லாக மட்டுமே இருக்கும்.
(எ.கா)
யான் உண்பல் (நான் உண்பேன்)
யான் வருவல் ( நான் வருவேன்)
இங்கு எடுத்துக் காட்டப்பெற்ற கண்டு, வந்து, சென்று என்பன போன்ற சொற்கள் இக்காலத் தமிழில் வினை எச்சச் சொற்களாக வரக்கூடியன. அவற்றுக்கும், முற்றுச் சொற்களாக வந்துள்ள இவற்றுக்கும் இடையே சொல் வடிவில் வேறுபாடு இல்லை என்றாலும், பொருளில் வேறுபாடு உள்ளது என்பதை நினைவிற்கொள்க.
இவற்றுள் டும், தும், றும் என்னும் மூன்றும் இறந்தகாலம் உணர்த்துவன ஆகும்.
(எ.கா).
‘டும்’ – உண்டும் யாம் (உண்டோம் யாம்) இறந்த காலம்
‘தும்’ – வந்தும் யாம் (வந்தோம் யாம்)
‘றும்’ – சென்றும் யாம் (சென்றோம் யாம்)
கும், தும், றும், என்னும் விகுதிகள் மூன்றும் எதிர்காலப் பொருளில் பயன்பட்டுள்ளன.
(எ.கா).
‘கும்’ – உண்கும் யாம் (உண்போம் யாம்) எதிர் காலம்
‘தும்’ – வருதும் யாம் (வருவோம் யாம்)
‘றும்’ – சேறும் யாம் (செல்வோம் யாம்)
நிகழ்காலப் பொருளில் மட்டுமே இவ்விகுதி ஏதும் வரவில்லை என்பது நினையத் தக்கது.
பாடம் 3
தன்மை எனும் சொல் பேசுபவரைக் குறிக்கும்.
முன்னிலை எனும் சொல் கேட்பவரைக் குறிக்கும்.
படர்க்கை எனும் சொல் பேசப்படுபவரைக் குறிக்கும்.
முன்னிலை வினைமுற்று என்பது ஒரு தொடரில் பயனிலையாக வருவதாகும்.
நீ வந்தாய்
நீ உண்கிறாய்
நீ செல்வாய்
எனும் தொடர்களில் உள்ள வினைமுற்றுச் சொற்கள் முன்னிலை வினைமுற்றுகள் ஆகும்.
முன்னிலை வினைமுற்றுச் சொற்கள் கீழ்க்காணும் விளக்கங்களைத் தருவனவாக அமையும். செயல் (வினை), காலம், இடம், எண் ஆகியன குறித்து அச்சொல் அறிவிக்கும் என்பதை ஓர் எடுத்துக்காட்டின் வழிக் காண்போம். வந்தாய் என்னும் முன்னிலை வினைமுற்றுச் சொல் வருதல் ஆகிய செயலையும் இறந்த காலத்தையும் முன்னிலையில் ஒருவரையும் சுட்டுகிறது.
முன்னிலை வினைமுற்றுச் சொற்கள் தன்மை வினைமுற்றுச் சொற்களைப் போன்றே திணை, பால் ஆகியவற்றைத் தெரிவிப்பதில்லை. ‘வந்தாய்’ என்னும் சொல் எதிரில் உள்ள ஒருவரை மட்டும் குறிக்கிறதே தவிர அவர் உயர்திணையா அல்லது அஃறிணையா என்பதையோ, அவர் ஆணா அல்லது பெண்ணா என்பதையோ தெரிவிப்பதில்லை. எதிரில் உள்ள ஒரு மனிதரைப் பார்த்தும் ‘வந்தாய்’ எனப் பேசலாம். எதிரில் உள்ள அஃறிணைப் பொருளாகிய ஒன்றனைப் பார்த்தும் பேசலாம். சான்றாக ஒரு நாயைப் பார்த்தும், ‘நீ இவ்வளவு நேரம் எங்கே போய் இருந்தாய்? எப்பொழுது இங்கு வந்தாய்?’ என்பன போலப் பேசலாம். அதே போல வந்தீர் என்னும் முன்னிலை வினைமுற்று உயர்திணையைக் குறிக்கவும் வரலாம்; அஃறிணையைக் குறிக்கவும் வரலாம். ஆகவே, முன்னிலை வினைமுற்றுச் சொற்கள் திணை, பால் உணர்த்தாமல் ஒருமை, பன்மை என்பவற்றுள் ஒன்றை மட்டும் உணர்த்தும் என்பதை அறிய வேண்டும்.
முன்னிலை வினைமுற்றுச் சொற்களைக் கீழ்வருமாறு பகுக்கலாம்.
இவ் அடிப்படையில் முன்னிலை ஒருமை வினைமுற்றுச் சொற்கள் குறித்து முதலில் அறிந்து கொள்வோம்.
வந்தாய் என்பது இறந்தகாலம் காட்டுகிறது.
வருகிறாய் என்பது நிகழ்காலம் காட்டுகிறது.
வருவாய் என்பது எதிர்காலம் காட்டுகிறது.
இச்சொற்களில் ‘வா’ என்னும் வினைப்பகுதிக்கும் ‘ஆய்’ என்னும் முன்னிலை ஒருமை விகுதிக்கும் இடையில் காலம் காட்டும் இடைநிலைகள் உள்ளன. முறையே த், கிறு, வ் என்பன (மேற்காணும் மூன்று சொற்களிலும்) மூன்று காலங்களையும் உணர்த்துகின்றன. இவற்றைப் பற்றி விரிவாகப் பின்னர் காலம் (a02126) என்னும் பாடத்தில் படிக்க உள்ளீர்கள்.
முன்னிலை ஒருமைத் தெரிநிலை வினைமுற்று விகுதிகளாக இ, ஐ, ஆய் என்பன உள்ளன. இவற்றுள் ஆய் என்னும் விகுதியே இக்காலத்தில் பெருவழக்காக உள்ளது.
நீ படித்தாய் ஓடினாய்
நீ நடந்தாய் உழுதாய்
நீ உண்டாய் சொன்னாய்
நீ சென்றாய் வந்தாய்
முதலிய சொற்களில் எல்லாம் ‘ஆய்’ விகுதி இருப்பதை அறிக. இவற்றைப் போல, பழங்காலத்தில் இகர விகுதியும் பயன்பட்டுள்ளது. ஒரு சான்று:
சென்றி என்பது இறந்தகாலம் உணர்த்தும் வினைமுற்று. இதற்குச் சென்றாய் என்று பொருள்.
செல்லாநின்றி என்பது நிகழ்காலம் உணர்த்துகிறது. ‘செல்’ என்னும் பகுதியோடு ஆநின்று என்னும் நிகழ்கால இடைநிலையும் ‘இ’கர விகுதியும் சேர்ந்துள்ளது. எனவே, இச்சொல் செல்கிறாய் என்னும் பொருளுடையதாகும்.
சேறி என்னும் தெரிநிலை வினைமுற்று ‘செல்வாய்’ என்னும் பொருளுடையது. இது எதிர்காலம் உணர்த்துவது. சென்றி, சொல்லாநின்றி, சேறி ஆகிய தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள் இக்காலத்தில் வழக்கில் இல்லை. ஆதலால் இவற்றின் பொருள்களை நினைவிற்கொள்ள வேண்டும். இகர விகுதியைப் போல் ‘ஐ’கார விகுதியும் முன்னிலையில் வரும்.
உண்டனை என்பது இதற்குச் சான்று. இது உண்டாய் என்னும் பொருளுடையது. இதுபோல் நிகழ்காலம் குறிப்பதாக இவ்விகுதி உண்கின்றனை என்று வருவதும் காண்க.
இதுவரை கூறியவற்றால் ஐ, ஆய், இ என்னும் மூன்று விகுதிகளும் முன்னிலை ஒருமைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்களில் வருகின்றன என்பது தெளிவாகும்.
நீ நல்லாய் – ஆய் விகுதி
இவை முன்னிலை
ஒருமையில் ஆண்பால் ஒருமை, பெண்பால் ஒருமை, அஃறிணை
ஒன்றன்பால் ஆகிய
மூன்றையும் குறிக்கும்.
நீ நல்லை – ஐ விகுதி
நீ அருளி – இ விகுதி
‘நல்லை’ என்னும் சொல் முன்னிலையில் இருக்கும் ஆண் ஒருவரையோ, பெண் ஒருவரையோ, அல்லது அஃறிணைப் பொருள் ஒன்றையோ குறித்துப் பேசுவதாக அமையும். நீ நல்ல இயல்பை உடையாய் எனும் பொருள் தருவதாக ‘நல்லை’ என்னும் சொல் குறிப்பு வினையில் பயன்படுகிறது. ‘அருளி’ என்பது ‘அருள் உடையவன் நீ’ என்று பொருள்படும்.
ஓர் ஆணைப் பார்த்தும் ‘நல்லாய்’ எனக் கூறலாம்.
ஒரு பெண்ணைப் பார்த்தும் ‘நல்லாய்’ எனக் கூறலாம்.
ஒரு நாய் போன்ற அஃறிணை உயிரைப் பார்த்தும் இவ்வாறு கூறலாம்.
குறிப்பு வினை இம் மூன்றற்கும் உரியது.
மேற்கண்டவற்றால் தெரிநிலை வினை, குறிப்பு வினை எனும் இரண்டிற்கும் முன்னிலை ஒருமைக்குரிய விகுதிகளாக ஐ, ஆய், இ எனும் மூன்றும் வருகின்றன என்பது விளங்கும். இவற்றுள் ஆய் விகுதி இன்றைய வழக்கில் உள்ளது என்பதும், ஐ, இ ஆகிய விகுதிகள் முற்கால வழக்குகள் என்பதும் நினைவிற்கு உரியன.
பார்க்கிறீர்கள்
பார்ப்பீர்கள்
என்பன முன்னிலைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுகளுக்குச் சான்றுகளாகும். இவ் வினைமுற்றுகள் பலரைப் பார்த்தும் பேசப்படலாம். அஃறிணையில் பலவற்றை நோக்கியும் பேசப்படலாம்.
முன்னிலைப் பன்மைக்குரிய வினைமுற்று விகுதிகள் இர், ஈர் என்பனவாகும். இதனை
இர் ஈர் ஈற்ற இரண்டும் இருதிணைப் பன்மை முன்னிலை என நன்னூல் ஆசிரியர் பவணந்தியார் (நூற்பா 336) கூறியுள்ளார்.
இன்றைய வழக்கில் நிற்கிறீர்கள், பேசினீர்கள் என்பன போல ரகர ஒற்றும், கள் விகுதியும் சேர்த்துப் பேசும் முறையே மிகுதியாக உள்ளது. இவை முன்னிலைப் பன்மை வினைமுற்றுகளாகும். இதே பொருளில் இந்த வினைமுற்றுகள் முற்காலத்தில் இர், ஈர் என்னும் விகுதிகளை மட்டும் பெற்றிருந்தன.
‘வந்தீர்கள்’ என்னும் இன்றைய வழக்கு முற்காலத்தில் ‘வந்தீர்’ என்று இருந்தது. இது இறந்தகாலம் உணர்த்துவது. இதுவே, நிகழ்காலப் பொருளில் வருகிறீர் அல்லது வருகின்றீர் என்பதாக வரும். எதிர்காலம் உணர்த்தும் பொழுது இச்சொல் ‘வருவீர்’ எனக் கூறப்படும்.
வேறு சில சான்றுகளைக் காண்போம்.
நீர் உண்டீர் – ‘ட்’ இடைநிலை – இறந்தகால வினைமுற்று
நீர் உண்கின்றீர் – ‘கின்று’ இடைநிலை – நிகழ்கால வினைமுற்று
நீர் உண்பீர் – ‘ப்’ இடைநிலை – எதிர்கால வினைமுற்று
மேற்காட்டப் பெற்ற ‘ஈர்’ விகுதியைப் போல முன்னிலைப் பன்மை தெரிநிலை வினையில் ‘இர்’ விகுதியும் வழங்கி வந்தது. இப்பொழுது இர் விகுதி மிகுதியும் வழக்கில் இல்லை.
நீர் உண்டனிர் – (இர் விகுதி) – இறந்த காலம்
நீர் உண்கின்றனிர் – (இர் விகுதி) – நிகழ் காலம்
நீர் உண்பிர் – (இர் விகுதி) – எதிர் காலம்
இவை முறையே உண்டீர்கள், உண்கிறீர்கள், உண்பீர்கள் என்னும் பொருள் உடையன. எனவே, முன்னிலைப் பன்மையில் தெரிநிலை வினைமுற்று விகுதிகளாக இர், ஈர் என்பன வரும் என இதுவரை பார்த்தோம். இவற்றில் உள்ள ரகர ஒற்றுதான் பன்மை உணர்த்துகிறது என்னும் உண்மை நினைவிற்கு உரியது.
இர் விகுதியும் இதுபோல் வரும். நீவிர் நெட்டையிர் (நீங்கள் நெடியவர்கள்), நீவிர் இன்சொல்லிர் (நீங்கள் இனிய சொற்களுக்குரியவர்கள்). இத்தொடர்களில் முன்னிலைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று விகுதியாக இர் விகுதி வந்துள்ளது. இர், ஈர் என்னும் இக்குறிப்பு வினைமுற்று விகுதிகள் உயர்திணையில் பலரையும், அஃறிணையில் பலவற்றையும் உணர்த்தக் கூடியனவாகும்.
இவ்வாறு பழங்காலத்தில் உண்டீர் நீர் என்று கூறினர். இத்தொடரில் உள்ள ‘நீர்’ என்பதற்கு நீயும் அவனும் அல்லது நீயும் அவளும் அல்லது நீயும் அதுவும் என்னும் பொருளாகும். ‘உண்டீர்’ என்பது முன்னிலையில் உள்ளவரையும் படர்க்கையில் உள்ளவரையும் சேர்த்துச் சுட்டும் வினைமுற்றாகும்.
இதுபோன்று வரும் இன்னொரு சொற்றொடர்.
உண்டனிர் நீவிர். (நீவிர் = (நீயும், அவனும்) என்பது. ஏவல் நிலையிலும் இவ்வாறு வரும்.
சான்று:
உண்மின் நீர் என்பதற்கு உண்ணுங்கள் நீங்கள் என்று பொருள். இத்தொடரிலும் நீர் என்பதற்கு நீயும், அவனும் என்று பொருள் கொள்ளலாம்.
மேற்காணும் தெரிநிலை வினைமுற்றுகளைப் போன்று குறிப்பு வினைமுற்றுச் சொற்களும் வருதல் உண்டு.
‘நல்லீர் நீர்’ என்னும் தொடரில் நல்லீர் என்பது குறிப்பு வினைமுற்று. நீயும் அவனும் நல்லவர்கள் என்பது இத்தொடருக்குரிய பொருள். அதாவது கேட்போரையும், பேசப்படுபவரையும் சேர்த்து நீர் என்று ஒரே சொல்லால் குறிக்கிறோம். இவ்வாறு இச்சொல்லுக்குப் பொருள் கூறுவது இடச் சூழலுக்கு ஏற்பவே அமையும். முன்னிலைப் பலரை ‘நீர்’ என்ற சொல்லால்தான் குறிக்கிறோம். முன்னிலை, படர்க்கை ஆகிய இரு இடங்களில் உள்ளவர்களையும் நீர் என்னும் சொல்லாலேயே குறிக்கிறோம். எனவே இடத்திற்கேற்பவே இப் பெயர்ச்சொல்லும், இதற்குரிய வினைமுற்றுச் சொல்லும் பொருள் கொள்வதற்கு உரியன.
இதுவரை முன்னிலை ஒருமை, முன்னிலைப் பன்மை ஆகியவற்றுக்குரிய தெரிநிலை வினைமுற்றுகளும், குறிப்பு வினைமுற்றுகளும் எவ்வாறு அமைகின்றன எனப் பார்த்தோம். இவற்றுக்குரிய வினைமுற்று விகுதிகளையும் தெரிந்து கொண்டோம். தன் மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை தேடுவதன் மூலம் மீண்டும் இவற்றை நினைவுபடுத்திக் கொள்க.
ஏவல் வினை தெரிநிலையில் மட்டும் உண்டு. குறிப்புவினையில் இல்லை. எனவே, ‘ஏவல்’ என்பது ஒரு வினைப் பகுதியானது விகுதி பெற்றோ, பெறாமலோ அமையும் சொல் எனலாம்.
பெரும்பாலும் ஏவல் வினைமுற்றுகள் ‘ஆய்’ விகுதி பெற்று, இலக்கிய வழக்கில் வருகின்றன.
வாராய் = வா
சொல்லாய் = சொல்
பாடாய் = பாடு
என்பன போல அமையும். முன்னிலை ஒருமை விகுதியாகிய ஆய் என்பதைப் பெறாமல் வா, சொல், உண் என்பன போலப் பகுதி மாத்திரமே நிற்கும் வினைச் சொற்களும் ஏவல் ஒருமை வினைமுற்றுகளேயாகும். பேச்சு வழக்கில் ஏவல் ஒருமைச் சொற்கள் பெரும்பகுதி விகுதி இல்லாமல் வருவதையே காணலாம்.
இவ்வாறன்றி ஆய், இ, அல், ஏல், ஆல் முதலிய விகுதிகளைப் பெற்றும் ஏவல் ஒருமை வினைமுற்றுச் சொற்கள் வருவதுண்டு.
வாராய் – (வருவாய்) – ஆய் விகுதி
சேறி – (செல்லுதி = செல்) – இ விகுதி
வாரல் – (வரவேண்டாம்) – அல் விகுதி எதிர்மறைப் பொருளில் அமைந்தன
திறவேல் (திறக்க வேண்டாம்) – ஏல் விகுதி
அழால் (அழ வேண்டாம்) – ஆல் விகுதி
ஏவல் வினை எதிர்காலத்துக்கு உரியது
முன்னிலை ஒருமை ஏவலில் பொதுவாக வா, போ, இரு, உண், பார் என்பன போன்ற வினைப்பகுதிகளைத்தான் பெரும்பாலும் பேசுகிறோம். ‘நீ வா’ என்பதற்குப் பதிலாக ‘வா’ என்று மட்டும் எதிரில் இருப்பவரை நோக்கிக் கூறும் பொழுது ‘நீ’ என்னும் எழுவாய் தோன்றா எழுவாயாக மறைந்திருக்கிறது. அதாவது கேட்பவரால் ‘நீ’ என்னும் சொல் தானாக உணரப்படுகிறது.
நன்னூல் பதவியலில் கூறப்படும் பகுபத உறுப்புகள் பற்றிய செய்திகளில் ‘நட, வா, மடி, சீ, விடு, கூ’ என்று தொடங்கும் நூற்பாவில் (நன்னூல்:136), ‘செய்’ என்னும் பொது ஏவல் வாய்பாட்டில் அமைந்த வினைப் பகாப்பதங்களை 23 மாதிரிகளாகப் பட்டியல் இட்டுள்ளார் நூலாசிரியர். தமிழில் உள்ள அனைத்து வினைப்பகுதிகளையும் இந்த 23 மாதிரிகளுள் அடக்கலாம்.
வா, போ போன்ற ஏவல் சொற்களில் விகுதி இல்லை என்றாலும், முன்னிலை ஏவல் விகுதி சேர்ந்து கெட்டிருப்பதாகவே கொள்வர்.
முன்னிலை இடத்தில் இவ்வாறு கட்டளைப் பொருளில் வரும் ஏவல் வினைமுற்றுச் சொற்கள், ஒருமை பன்மைக்கேற்ப, தனித் தனி விகுதிகளைப் பெற்று வரும். இவற்றுள், ஏவல் ஒருமை வினைமுற்றுகள் பற்றி இதுவரை பார்த்தோம்.
உண்ணிர் = (உண்ணுங்கள்)
உண்ணீர் = (உண்ணுங்கள்)
காப்பீர் = (காத்து இருங்கள்)
காண்மின் = (காணுங்கள்)
சென்மின் = (செல்லுங்கள்)
என்பன போன்று இவ்விகுதிகள் வினைப் பகுதியோடு சேர்ந்து வரும்.
செய்யும் என்னும் வாய்பாட்டில் அமைந்த வினைச்சொற்களும் முன்னிலைப் பன்மை ஏவலுக்குப் பயன்படுகின்றன.
நீர் செய்யும், கேளும்
நீர் வாரும், எழுதும்
நீர் உண்ணும், சொல்லும்
என்பன போன்று இச்சொற்கள் அமையும். இக்காலத்தில் செய்யும் எனும் சொல்லோடு கள் விகுதி சேர்த்துச் செய்யுங்கள் என்பது போல் வருவதே பெரும்பான்மை.
நீங்கள் செய்யுங்கள்
நீங்கள் தாருங்கள்
நீங்கள் பாருங்கள்
என்பன போல இச் சொற்கள் ஆளப்படுகின்றன.
வெல்க, வாழ்க – வாழ்த்தல் பொருள்
வீழ்க, ஒழிக – வைதல் பொருள்
வருக, உண்க – விதித்தல் பொருள்
அருள்க, கருணைபுரிக – வேண்டல் பொருள்
இவற்றை முன் குறிப்பிட்டவாறு வாழ்க நான், வாழ்க நீ, வாழ்க அவன் என்பன போன்று ஐம்பால் மூவிடத்திற்கும் பயன்படுத்தலாம்.
வருக, வாழிய, வாழியர் என்பன அதற்குச் சான்றுகள்.
• எதிர்மறை வியங்கோள்
உடன்பாட்டுப் பொருளில் வியங்கோள் வருவது போன்று எதிர்மறைப் பொருளிலும் இது கையாளப் பெறுவதுண்டு.
வாரற்க, கூறற்க, செல்லற்க
வாரல், செல்லல், பகரேல்
என்பன போன்று இச்சொற்கள் அமையும்.
இந்நிலையில் ஏவலுக்கும் வியங்கோளுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இரண்டும் ஒன்றுபோல் உள்ளதால் குழப்பமும், மயக்கமும் ஏற்படும்.
கட்டளைப் பொருளில் மட்டும் வரும்.
முன்னிலைக்கு மட்டும் உரியது
ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.
வியங்கோள் :
வாழ்த்தல், வைதல், விதித்தல், வேண்டல், என்னும் பொருள்களில் வரும்.
தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூவிடங்களுக்கும் உரியது.
ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.
பாடம் 4
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால் ஆகிய ஐந்து பால்களுள் முதலில் ஆண்பால் உணர்த்தும் வினைமுற்றுகளுக்கு உரிய விகுதிகள் பற்றித் தெரிந்து கொள்வோம்.
அவன் சொன்னான்
அவன் சென்றான்
என்பன போன்று பேசுவோம். இவற்றுள் ‘சொன்னான்’ ‘சென்றான்’ என்பன வினைமுற்றுச் சொற்கள். இவை, சொல்லுதல், செல்லுதல் என்னும் வினைகளைச் செய்தவன் என்பதைத் தெரிவிக்கின்றன. அவ்வினை செய்தவன் உயர்திணை, ஆண்பால், ஒருவன் என்பதை அச்சொல்லின் கடைசியில் உள்ள ‘ஆன்’ என்னும் விகுதியே உணர்த்துகிறது.
தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள் காலம் காட்டுவனவாகும். காலம் மூவகைப்படும். இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என அவற்றைக் குறிக்கிறோம்.
இறந்த காலம் என்பது ஒரு செயல் நடந்து முடிந்தமையைக் குறிக்கும். இதற்கு எடுத்துக்காட்டு ‘வந்தான்’ என்பது. நிகழ் காலம் என்பது செயல் நடந்து கொண்டிருப்பதைக் குறிக்கும். இதற்கு எடுத்துக்காட்டு ‘நடக்கிறான்’ என்னும் சொல். எதிர்காலம் என்பது செயல் நிகழ இருப்பதைக் குறிக்கும். ‘நடப்பான்’ என்பது இதற்குச் சான்று. வினைச் சொற்கள் காலம் காட்டுவதைப் பற்றிப் பின்னர் (a02126 என்னும் பாடத்தில்) விரிவாகப் படிப்பீர்கள். இவ்வாறு காலம் காட்டும் வினைச் சொற்களுக்குத் தெரிநிலை வினை என்று பெயர்.
நடந்தான், நடக்கிறான், நடப்பான் என்பன போன்ற சொற்களில் இறுதியில் உள்ள ஆன் என்பது ஆண்பால் வினைமுற்று விகுதி.
குறிப்பாகக் காலம் உணர்த்தும் குறிப்பு வினைமுற்றுச் சொற்களிலும் இறுதியில் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் விகுதி இடம் பெற்றிருக்கும்.
ஒரு செய்தி இங்கு நினைவிற்கு உரியது. பெயர்ச்சொற்கள் பலவற்றிலும் அன், ஆன் போன்ற விகுதிகள் இடம் பெறல் உண்டு. இதனைப் பெயர்ச்சொற்கள் பற்றிய பாடத்தில் படித்திருப்பீர்கள். ஒரு விகுதி, பெயர் விகுதியா, வினைமுற்று விகுதியா என்பதை இடமறிந்து தெரிந்து கொள்ள வேண்டும். ‘ஆன்’ என்னும் விகுதி ஒன்றுதான் என்றாலும், அது வருகிற இடம் நோக்கி இருவேறு பெயரைப் பெறுகிறது என்பது நினைவில் கொள்ள வேண்டும்.
தெரிநிலை வினைமுற்றுகள் மூன்று காலத்திற்கும் கீழ்வருமாறு அமையும்.
இறந்த காலம் – படித்தான் (ஆன்)
நிகழ் காலம் – படிக்கிறான் (ஆன்)
எதிர் காலம் – படிப்பான் (ஆன்)
இவை அனைத்திலும் ஆண்பால் விகுதியாக ஆன் வந்திருப்பது போல் ‘அன்’ விகுதியும் ஆண்பால் குறிக்க வருவதுண்டு.
எடுத்துக்காட்டுகள்:
இறந்த காலம் – படித்தனன் (அன்)
நிகழ் காலம் – படிக்கின்றனன் (அன்)
எதிர் காலம் – படிப்பன் (அன்)
தெரிநிலை வினைமுற்றில் இவ்வாறு, அன், ஆன் விகுதிகள் படர்க்கை ஆண்பால் ஒருமை விகுதிகளாக வருவதைப் போல் குறிப்பு வினைமுற்றிலும் வரும். அதனை இனிக் காண்போம்.
• பெயரும் குறிப்பு வினைமுற்றும்
‘உழவன் வந்தான்’ எனும் தொடரில் உள்ள உழவன் என்னும் சொல் பெயர் அல்லது எழுவாய்.
‘அவன் உழவன்’ எனும் தொடரில் உள்ள உழவன் எனும் சொல் குறிப்பு வினைமுற்று. எனவே, ஒரு சொல் தொடரில் வரும் இடம் நோக்கியே, அது பெயர் (அல்லது) குறிப்பு வினைமுற்று என்று முடிவு செய்ய வேண்டும்.
அவன் தச்சன் அன்
அவன் எழுத்தாளன்
அவன் மலையன்
அவன் அருளாளன்
என்னும் தொடர்களில் எல்லாம் குறிப்பு வினைமுற்று விகுதியாக ‘அன்’ வந்துள்ளது. இது போல் ‘ஆன்’ விகுதியும் வரும். இதற்கு எடுத்துக்காட்டு:
அவன் புதூரான் – ஆன்
அவன் வெளியூரான்
அவன் சடைமுடியான்
அவன் தூரிகையான்
இத்தொடர்களில் கடைசியில் உள்ள சொற்கள் யாவும் குறிப்பு வினைமுற்றுகளாகும். இவற்றுள் ஆன் விகுதி வந்துள்ளதைக் காண்க.
இதுவரை படர்க்கை ஆண்பால் வினைமுற்றுச் சொற்களில் ‘அன்’ என்பதும், ‘ஆன்’ என்பதும் விகுதிகளாக வரும் என அறிந்தோம். ஒரு விகுதி, பெயரின் ஈற்றில் (ஈறு = கடைசி) வந்தால் அது பெயர் விகுதி எனப்படும். வினைமுற்றுச் சொற்களின் ஈற்றில் வந்தால் அதற்கு வினைமுற்று விகுதி என்று பெயர். இவற்றை நன்கு நினைவிற் பதித்தல் வேண்டும்.
குறத்தி வந்தாள்
வள்ளி வந்தாள்
என்பன போன்ற தொடர்களில் உள்ள ‘வந்தாள்’ என்னும் சொல் சான்றாகும். இதில் உள்ள ‘ஆள்’ என்னும் விகுதி, பெண்பாலைச் சுட்டும் வினைமுற்று விகுதியாகும். ஆண்பால் விகுதிகள் போன்று, பெண் பால் விகுதிகளும் பெயர் விகுதியாதல் உண்டு.
உமையாள் வந்தாள்
என்பதில் உமை என்பதோடு சேர்ந்துள்ள விகுதி பெண்பால் உணர்த்தும் பெயர் விகுதி. பெயர் விகுதியும், வினைமுற்று விகுதியும் வடிவில் ஒன்றே. ‘ஆள்’ என்பது பெயரோடு சேர்ந்து வந்தால் பெயர் விகுதி, வினையோடு சேர்ந்து முற்றுப் பொருள் தரின் அதுவே வினைமுற்று விகுதி என்பது நினைவிற்குரியது.
சாந்தி வந்தாள் – (இறந்த காலம்) ஆள்
சாந்தி வருகிறாள் – (நிகழ் காலம்)
சாந்தி வருவாள் – (எதிர் காலம்)
மூன்று கால வினைமுற்றுச் சொற்களிலும் ‘ஆள்’ விகுதி இறுதியில் உள்ளமை நோக்கத்தக்கது. இதுபோல் ‘அள்’ விகுதியும் வருவதுண்டு.
அவள் நடந்தனள் – இறந்த காலம் அள்
அவள் நடக்கின்றனள் – நிகழ் காலம்
அவள் நடப்பள் – எதிர் காலம்
இவ் எடுத்துக்காட்டுத் தொடர்கள் அனைத்திலும் அள் விகுதி தெரிநிலை வினைமுற்று விகுதியாக வந்துள்ளமை காணலாம். இதுபோல் குறிப்பு வினைமுற்றுகளிலும் அள், ஆள் எனும் விகுதிகள் வரும். இது பற்றி அடுத்துக் காண்போம்.
அவள் இன் சொல்லள்
அவள் மனையாள் – ஆள்
அவள் நல்லாள்
இத் தொடர்களில் அள், ஆள் என்னும் விகுதிகளை உடைய குறிப்பு வினைமுற்றுச் சொற்கள் வந்துள்ளன. இக்காலத்தில் குறிப்பு வினைமுற்றுகளை மிகுதியாக நாம் பயன்படுத்துவது இல்லை எனினும் இலக்கியப் பயிற்சிக்கு இத்தகு செய்திகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அமைச்சர்கள் வந்தனர்
மாணவர்கள் சென்றனர்
எனும் இத்தொடர்களில் வந்தனர், சென்றனர் என்னும் சொற்கள் பலர்பால் உணர்த்தும் வினைமுற்றுச் சொற்களே. இச்சொற்களின் இறுதியில் ‘அர்’ விகுதி வந்து அவை பலர்பால் உணர்த்தின. ‘அர்’ விகுதி பலர்பால் உணர்த்துவதாக வினைமுற்றில் வருவதுபோல் அக்காலத்தில் ஆர் விகுதியும் வந்துள்ளது. ‘வீரர்கள் நடந்தனர்’ என்று இப்போது குறிப்பதைப் பழங்காலத்தில்
‘வீரர் நடந்தார்’
என்றே எழுதியுள்ளனர். இன்று நாம் இவ்வாறு எழுதினால் வீரர் ஒருவர் நடந்ததாகப் பொருள் கொள்வோம். இத்தொடர் அக்காலத்தில் பலரையே சுட்டும். ஒருவனைக் குறிக்க வேண்டும் என்றால் அக்காலத்தில் ‘வீரன் நடந்தான்’ என்றே எழுதுவர்.
பலர்பாலைக் குறிக்கும் வினைமுற்றுகளுக்கு மேலும் சில சான்றுகள் காண்போம். அடைப்புக் குறிக்குள் பொருளும் தரப்பெற்றுள்ளது.
உழவர் வந்தார் = (உழவர்கள் வந்தனர்)
புலவர் பாடினார் = (புலவர்கள் பாடினார்கள்)
பாணர் பாடினார் = (பாணர்கள் பாடினார்கள்)
பலர்பால் படர்க்கை வினைமுற்றுகளில் அர், ஆர், ப, மார் எனும் விகுதிகள் பயன்படுகின்றன. இவை தெரிநிலை வினைமுற்றுகளில் வருவது குறித்து இனிக் காண்போம்.
மாணாக்கர் படித்தனர் (மாணவர்கள் படித்தார்கள்)
நடிகையர் நடித்தனர் (நடிகையர்கள் நடித்தார்கள்)
பகைவர் ஓடினார் (பகைவர்கள் ஓடினார்கள்)
மகளிர் அணிந்தார் (மகளிர் அணிந்தார்கள்)
தெரிநிலை வினைமுற்றில் ப, மார் எனும் விகுதிகளும் பலர்பால் உணர்த்தப் பயன்பட்டுள்ளன. இவை இக்காலத்தில் பயன்பாட்டில் மிகுதியாக இல்லாதவையே என்றாலும் தெரிந்து கொள்வதற்காகக் கீழே சில சான்றுகள் தரப்பெறுகின்றன.
ப விகுதி
இது இறந்தகாலப் பொருளிலும், எதிர்காலப் பொருளிலும் மட்டும் வரும்.
சான்று : என்ப, கூறுப முதலியன
‘என்ப’ என்பதற்கு என்றார்கள் என்றும், என்று கூறுவார்கள் என்றும் இடத்திற்கேற்பப் பொருள் கொள்ளலாம்.
மார் விகுதி
இவ்விகுதியும் இன்றைய வழக்கில் இல்லாத ஒன்று. இவ்விகுதியைப் பெற்றுவரும் வினைச் சொல்லிற்குச் சான்று:
கொண்மார் வந்தார்
உண்மார் வந்தார் – என்பன
(கொண்மார் = கொள்வார்)
இங்கு மார் விகுதி, பெயரோடு வரும் மார் விகுதியில் இருந்து வேறானது. இதுவே பெயரோடு வரும்போது தேவிமார், குருமார், தாய்மார் என்பன போல அமையும். இதை நினைவிற் கொள்ள வேண்டும்.
அவர் காஞ்சியார்
இவர் கோவையார் ‘ஆர்’ விகுதி
அவர் பாடகர்
இவர் நடிகர் ‘அர்’ விகுதி
தெரிநிலை வினையில் உரைக்கப் பெற்ற ‘ப’, ‘மார்’ எனும் விகுதிகள் குறிப்பு வினைமுற்றில் வருவதில்லை.
எனவே, இதுவரை படர்க்கைக்கு உரியனவாக உயர்திணையில் கீழ்க்காணும் வினைமுற்று விகுதிகள் வரும் என்பதை அறிந்தோம்.
ஆண்பாலுக்கு உரியன – அன், ஆன்
பெண்பாலுக்கு உரியன – அள், ஆள்
பலர்பாலுக்கு உரியன – அர், ஆர், ப, மார்
இவற்றுள் ப, மார் எனும் இரண்டு தவிர்த்த ஏனையவை தெரிநிலை வினை, குறிப்பு வினை எனும் இரண்டிலும் பயன்படுவதையும் அறிந்தோம். இனி அஃறிணைக்குரிய படர்க்கை வினைமுற்றுகள் பற்றிப் பார்ப்போம்.
அஃறிணை ஒன்றன் பாலுக்கு உரிய வினைமுற்று விகுதிகள் மூன்று. அவை து, று, டு என்பன. இவை தெரிநிலை வினைமுற்றுகளில் வருவதைப் பற்றி முதலில் காண்போம்.
நிகழ்காலத்தில் இது வருவதற்குச் சான்றுகள்:
ஓடுகிறது, மேய்கிறது, நிற்கிறது போன்றவை.
இறந்தகாலத்தில் ‘து’ விகுதி வருவதற்குச் சான்றுகள்:
ஓடியது, மேய்ந்தது முதலியன.
எதிர்காலத்தில் ‘து’ விகுதி வருவதற்குச் சான்றுகள்:
ஓடுவது, நடப்பது
ஆகியன. எனினும் எதிர்காலப் பொருளில் இச்சொற்களின் பயன்பாடு இன்று குறைவாகவே உள்ளது.
று, டு ஆகியனவும் அஃறிணை ஒன்றன்பால் விகுதிகளே. இவற்றுள் ‘டு’ குறிப்பு வினைமுற்றிலேயே பயன்படுகிறது. ‘று’ எனும் விகுதியும் குறிப்பு வினைமுற்றில் வருகிறது. தெரிநிலை வினைமுற்றில் இது இறந்த காலத்தில் மட்டும் வருகிறது. அதற்குச் சான்று:
போயிற்று, தாவிற்று என (போனது, தாவியது எனும் பொருளில்) வரும்.
எடுத்துக்காட்டு:
‘று’ விகுதி – பிழையிற்று (பிழை உடையது)
‘டு’ விகுதி – பொருட்டு (பொருளை உடையது)
இச்சொல்லாட்சிகளும் இக்காலத்தில் குறைவாகவே பயன்படுத்தப் படுகின்றன.
பறவைகள் பறக்கின்றன
மரங்கள் வளர்கின்றன
இவ்வினைமுற்றுகள் பலவின்பாலுக்கு உரியன. இவற்றுள் ‘அ’ எனும் விகுதி வினைமுற்று விகுதியாக வந்துள்ளது. இவ்விகுதி,
மாடுகள் மேய்ந்த
பறவைகள் பறக்கின்ற
என்பன போலவும் முற்காலத்தில் பயன்பட்டுள்ளது. இவற்றுக்கும் மேய்ந்தன, பறக்கின்றன என்பதே பொருள்.
‘ஆ’ எனும் வினைமுற்று விகுதி எதிர்மறை வினைமுற்றுகளில் மட்டுமே வரும்.
அவை மேயா
அவை பறவா
அவை வளரா
இவற்றுக்கு மேய மாட்டா, பறக்க மாட்டா, வளர மாட்டா என்பது பொருள்.
இவற்றுள் அகர விகுதி மட்டும் குறிப்பு வினைமுற்றிலும் பயன்படுகின்றது. இனி அதனைக் காண்போம்.
கரிய, பெரிய, நல்ல என்பன போன்ற சொற்களை குறிப்பு வினைமுற்றுகளாகப் பயன்படுத்தலாம்.
மலைகள் பெரிய (பெரியனவாக உள்ளன)
யானைகள் கரிய (கரியனவாக உள்ளன)
அவை நல்ல (நல்லவையாக உள்ளன)
எனும் பொருள்பட வரும். இவ்வாறு வருவனவற்றைப் பேசுவோர் கேட்போர் கருத்திற்கேற்ப,
நேற்று இம்மலைகள் பெரிய
இன்று இம்மலைகள் பெரிய
நாளை இம்மலைகள் பெரிய
எனக் குறிப்பாகக் காலம் காட்டுமாறு பயன்படுத்தலாம். இவ்வாறு ‘அ’கரம் குறிப்பு வினைமுற்று விகுதியாகப் பயன்படுவதை நினைவிற் கொள்க.
பாடம் 5
பெயரெச்சம், வினையெச்சம் ஆகிய எச்சச் சொற்கள் பற்றியும், அவற்றின் வகைகளையும், அவை தொடர்பான சில மரபுகளைப் பற்றியும் இந்தப் பாடத்தில் காண்போம்.
(2) பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ கொண்டு முடிவதாய் அமையும்.
(3) காலம் காட்டும் செயலை உணர்த்தும்.
(4) திணை, பால், எண், இடம் உணர்த்தாது.
(5) வினைப்பகுதியைக் கொண்டிருக்கும், எச்சத்திற்கு உரிய விகுதியைப் பெற்றிருக்கும்.
(எ.கா) (1) பெயர்ச்சொல் கொண்டு முடிவன :
வந்த பையன்
உண்ட குதிரை
(2) வினைச்சொல் கொண்டு முடிவன:
உண்டு வந்தான்
ஓடி வந்தது
வினைச் சொல்லைக் கொண்டு முடியும் ‘உண்டு’ என்னும் எச்சச் சொல்லை, ‘உண்+ட்+உ’ எனப் பிரிப்பர். இதில் உள்ள ‘உ’ என்னும் விகுதியைக் கொண்டு, திணை, பால், எண், இடங்களை அறிய இயலாது. அடுத்து வரும் வினைச் சொல்லைக் கொண்டே பொருள் முழுமை பெறும்.
வினைமுற்றுச் சொல்லாகிய ‘உண்டான்’ என்பதை, ‘உண்+ட்+ஆன்’ எனப் பிரிப்பர். இதிலுள்ள ‘ஆன்’ என்னும் விகுதியைக் கொண்டு, உயர்திணை, படர்க்கை, ஆண்பால், ஒருமை என அனைத்தையும் அறிகின்றோம்.
எனவே, பொருள் எஞ்சி நிற்பது எச்சம் எனவும், பொருள் முற்றுப்பெற்று நிற்பது முற்று எனவும் அழைக்கப்பட்டன.
(எ.கா) பெயரெச்சம் – உண்ட பையன்
வினையெச்சம் – உண்டு வந்தான்
(எ.கா) படித்த பாடம்.
கொடுத்த பணம்
‘செய்த’ என்னும் வாய்பாடு இறந்தகாலம் காட்டும். ‘செய்கின்ற’ வாய்பாடு நிகழ்காலம் காட்டும். ‘செய்யும்’ வாய்பாடு எதிர்காலம் காட்டும்.
(எ.கா) செய்த – படித்த சிறுவன்
செய்கின்ற – படிக்கின்ற சிறுவன்
செய்யும் – படிக்கும் சிறுவன்
இவற்றுள் ‘செய்யும்’ என்னும் வாய்பாடு, தொல்காப்பியர் காலத்தில் நிகழ்காலத்தைக் குறிப்பதாக இருந்துள்ளது. நன்னூலார் காலம் முதற்கொண்டு எதிர்காலத்தைக் குறிக்கத் தொடங்கியது.
(எ.கா) த் – படித்த பாடம்
ட் – கண்ட காட்சி
ற் – தின்ற கரும்பு
இன் – போயின போக்கு
2. ‘செய்கின்ற’ என்னும் பெயரெச்ச வடிவம், ‘கிறு’, ‘கின்று’, ‘ஆநின்று’ என்னும் இடைநிலைகளால் நிகழ்காலத்தைக் காட்டும். இவற்றுள் ‘ஆநின்று’ இடைநிலை இன்றைய வழக்கில் இல்லை.
(எ.கா) கிறு – உண்கிற சிறுவன்
கின்று – உண்கின்ற சிறுவன்
ஆநின்று – உண்ணாநின்ற சிறுவன்
3.‘செய்யும்’ என்னும் பெயரெச்ச வடிவம், ‘உம்’ என்னும் விகுதியால் எதிர்காலத்தை உணர்த்தும்.
(எ.கா) படிக்கும் சிறுவன்
பாடும் சிறுமி
(எ.கா)
(1) செய்பவன் – உண்ட சாத்தன், பாடும் புலவன்
(2) கருவி – உண்ட தட்டு, வெட்டும் வாள்
(3) நிலம் – உண்ட அறை, வாழும் இல்
(4) செயல் – உண்ட ஊண், வாழும் வாழ்க்கை
(5) காலம் – உண்ட நாள், துயிலும் காலம்
(6) செயப்படுபொருள் – உண்ட சோறு, கற்கும் நூல்
(ஊண் = உணவு; இங்கு உண்ட செயல் எனப் பொருள் தரும்.)
(எ.கா)
தன்மை ஒருமை – உண்ட நான்
தன்மைப் பன்மை – உண்ட நாம் (நாங்கள்)
முன்னிலை ஒருமை – உண்ட நீ
முன்னிலைப் பன்மை – உண்ட நீவிர் (நீங்கள்)
படர்க்கை ஆண்பால் – உண்ட செல்வன்
பெண்பால் – உண்ட செல்வி
பலர்பால் – உண்ட மக்கள்
ஒன்றன்பால் – உண்ட பசு
பலவின்பால் – உண்ட பசுக்கள்
அ, உம் ஆகிய இரண்டு விகுதிகள் தெரிநிலைப் பெயரெச்சத்தில் இடம்பெறுகின்றன.
(எ.கா)
இறந்தகாலப் பெயரெச்சம் – கேட்ட பாட்டு
(‘ட்’ இறந்தகால இடைநிலை)
நிகழ்காலப் பெயரெச்சம் – கேட்கின்ற பாட்டு
(‘கின்று’ நிகழ்கால இடைநிலை)
எதிர்காலப் பெயரெச்சம் – கேட்கும் பாட்டு
(‘உம் பெயரெச்ச விகுதி)
இறந்தகாலத்தையும், நிகழ்காலத்தையும் இடைநிலைகள் உணர்த்துகின்றன. எதிர்காலத்தை விகுதி உணர்த்துகிறது
குறிப்புப் பெயரெச்சம் ‘அ’ என்னும் விகுதியைப் பெற்று வரும்.
(எ.கா) சிறிய பையன்
புதிய பாடம்
அழகிய கவிதை
இவை முறையே சிறுமை, புதுமை, அழகு ஆகிய பெயர்களின் அடியாகப் பிறந்தவை. நேற்றுச் சிறிய பையன், இன்று சிறிய பையன், நாளை சிறிய பையன் எனச் சூழ்நிலைக்கு ஏற்பக் குறிப்புப் பெயரெச்சம் காலத்தைக் குறிப்பாக உணர்த்தும்.
(எ.கா) போகும் போது – போம்போது
ஆகும் பொருள் – ஆம்பொருள்
கூவும் குயில் – கூங்குயில் (கூம்குயில்)
போகும், ஆகும், கூவும் எனும் சொற்களில் இடையில் வரும் குவ்வும் வுவ்வும் (கு = க்+உ, வு = வ்+உ) கெட்டன.
செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்களில் இடம்பெறும் ‘கு’, ‘வு’ என்னும் உயிர்மெய்கள் மட்டுமே இவ்வாறு கெடுவனவாகும். ஏனைய உயிர்மெய்கள் இங்ஙனம் கெடுவதில்லை. ‘பாடும் பாட்டு’ என்பது (‘டு’ என்னும் உயிர்மெய் கெட்டு) ‘பாம் பாட்டு’ என வருவதில்லை.
(எ.கா) தெண்கடல் திரைமிசைப் பாயுந்து
நீர்க்கோழி கூப்பெயர்க்குந்து
(எ.கா)
வெந்திறலினன் விறல்வழுதியொடு
இங்கு, ‘வெந்திறலினன் ஆகிய விறல்வழுதி எனப் பொருள்பட்டு, குறிப்பு வினைமுற்று பெயரெச்சமானது.
இது, காலம் காட்டுவதில்லை. முக்காலத்திற்கும் பொதுவானதாக அமையும்.
(எ.கா) பெய்யாத மழை
சொல்லாத சொல்
வீசாத தென்றல்
பெய்+ஆ+த்+அ – பெய்யாத. இதில் உள்ள ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை. ‘அ’ பெயரெச்ச விகுதி.
• ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
எதிர்மறைப் பெயரெச்சத்தில் வரும் அகர விகுதி, தான் ஊர்ந்துவரும் தகர மெய்யுடன் (த்) சேர்ந்து மறைந்து வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா) பெய்யா மழை
பேசாப் பேச்சு
உலவாத்தென்றல்
பெய்யாத, பேசாத, உலவாத என வரவேண்டியன, (த்+அ=த) த என்ற ஈறு மறைந்து பெய்யா, பேசா, உலவா என வந்தன.
தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் ஆகிய இரண்டுமே அடுக்கி வருவனவாகும்.
(எ.கா) தெரிநிலைப் பெயரெச்சம் – கற்ற கேட்ட பெரியார்
குறிப்புப் பெயரெச்சம் – நெடிய பெரிய மனிதர்
(எ.கா) வந்த மன்னன் – வந்த வடகாசி மன்னன்
கொல்லும் யானை – கொல்லும் காட்டுள் யானை
வடகாசி, காட்டுள் என வந்தவை இடைப் பிறவரலாகும்.
(எ.கா) ஓடி வந்தான்
கிழித்துக் கொடுத்தான்
(எ.கா) தன்மை ஒருமை – உண்டு வந்தேன்
தன்மைப் பன்மை – உண்டு வந்தோம்
முன்னிலை ஒருமை – உண்டு வந்தாய்
முன்னிலைப் பன்மை – உண்டு வந்தீர்
படர்க்கை ஆண்பால் – உண்டு வந்தான்
பெண்பால் – உண்டு வந்தாள்
பலர்பால் – உண்டு வந்தார்
ஒன்றன்பால் – உண்டு வந்தது
பலவின்பால் – உண்டு வந்தன
செய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்குஇன வினையெச் சம்பிற
ஐந்து ஒன்று ஆறும்முக் காலமும் முறைதரும் (343)
என்பது நன்னூல் நூற்பா.
வாய்பாடு காலம்
(1) செய்து இறந்தகாலம்
(2) செய்பு
(3) செய்யா
(4) செய்யூ
(5) செய்தென
(1) செய நிகழ்காலம்
(1) செயின் எதிர்காலம்
(2) செய்யிய
(3) செய்யியர்
(4) வான்
(5) பான்
(6) பாக்கு
• இறந்தகாலம் காட்டுவன
(1) செய்து – (1)
இவ்வாய்பாடு உகரம், இகரம், யகர ஒற்று ஆகிய மூன்று ஈறுகளுள் ஒன்றைப் பெற்று வரும்.
(எ.கா) உ- நடந்து வந்தான்
இ – ஓடி வந்தான்
ய் – போய் வந்தான்
(2) பகுதி விகாரப்பட்டும் வரும்
புகு – புக்கு வந்தான்
(3) விகுதி விகாரப்பட்டும் வரும்
தழுவி – தழீஇக் கொண்டான்
(2) செய்பு – உண்குபு சென்றான் (உண்டு)
(3) செய்யா -
எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.
(எ.கா) பெய்யாக் கொடுக்கும்
(பெய்து கொடுக்கும் என்பது பொருள்)
(4) செய்யூ – காணூஉ மகிழ்ந்தான் (கண்டு) (அளபெடையாக எழுதப்பெறுவது உண்டு.)
(5) செய்தென – மருந்து தின்றென நோய் தீர்ந்தது. (தின்று – தின்றதால்)
• நிகழ்காலம் காட்டுவது
செய – ‘இது நிகழ இது நிகழ்ந்தது’ என்னும் நிலையில் நிகழ்காலம் காட்டும்.
(எ.கா) செல்வன் சூரியன் உதிக்க வந்தான்.
இவ்வாய்பாடு, ஏனைக் காலங்களையும் காட்டுவது உண்டு.
(எ.கா) (1) காரணப் பொருள் உடையதாய் இறந்த காலம் காட்டும்.
(எ.கா) மழை பெய்ய நெல் விளைந்தது. (மழை பெய்ததால்)
(2) காரியப் பொருள் உடையதாய் எதிர் காலம் காட்டும்.
(எ.கா) நெல் விளைய மழை பெய்தது. (நெல் விளையுமாறு)
• எதிர்காலம் காட்டுவன
(1) செயின் – மழை பெய்யின் குளம் நிறையும்
(2) செய்யிய – உண்ணிய வருவான் (உண்ண)
(3) செய்யியர் – உண்ணியர் வருவான் (உண்ண)
(4) வான் – பெறுவான் வருவான் (பெற)
(5) பான் – கற்பான் வருவான் (கற்க)
(6) பாக்கு – தருபாக்கு வருவான் (தர)
இவை செய்யுள்களில் மட்டும் காணப்படுகின்றன.
1. பின் – உண்டபின் வந்தான் (இறந்தகாலம்)
2. முன் – உண்ணு முன் வருவான் (எதிர்காலம்)
‘பின்’ என்னும் சொல் இறந்த காலத்தில் இடம்பெறும். ‘முன்’ என்னும் சொல் எதிர்காலம் குறித்துவரும். ஏனைய நான்கு சொற்களும் முக்காலத்திலும் இடம் பெறுவனவாகும்.
எந்தெந்த வாய்பாடுகள் எவ்வெவ்வாறு வினைமுடிவு கொள்ளும் எனக் காண்போம். வினைமுதல் = எழுவாய் அல்லது செயலைச் செய்யும் கருத்தா.
(எ.கா) முருகன் வந்து சென்றான்
‘வந்து’ என்னும் எச்சத்திற்குரிய எழுவாய் முருகன். ‘சென்றான்’ என்னும் முற்றுக்குரிய எழுவாயும் முருகனே. எனவே இது தம் வினைமுதல் வினை கொண்டது ஆகும்.
செய்து, செய்பு, செய்யா, செய்யூ, வான், பான், பாக்கு ஆகியன தம் வினைமுதல் வினைகொண்டு முடிவனவாகும்.
(எ.கா)
(1) செய்து – முருகன் கண்டு வந்தான்
(2) செய்பு – முருகன் காண்குபு வந்தான்
(3) செய்யா – மழை பெய்யாக் கொடுக்கும்
(4) செய்யூ – வள்ளி காணூஉ வந்தாள்
(5) வான் – வள்ளி கொள்வான் வருவாள்
(6) பான் – வள்ளி கற்பான் வருவாள்
(7) பாக்கு – செழியன் உண்பாக்கு வருவான்
• சினை வினையும் முதல் வினையும்
சினைக்கு உரிய வினையெச்சம், சினைக்கு உரிய வினைமுற்றால் முடிவது இயல்பு. முதலுக்கு உரிய வினைமுற்றால் முடிவதும் உண்டு.
சினைவினை சினையொடும் முதலொடும் செறியும்
(நன்னூல் : 345)
கை ஒடிந்து வீழ்ந்தது – சினைவினை கொண்டது.
செல்வன் கை ஒடிந்து வீழ்ந்தான் – முதல்வினை கொண்டது.
(எ.கா)
(1) செய்தென – மழை பெய்தெனப் புகழ்பெற்றது – தன் வினைமுதல் வினை
- மழை பெய்தென மரம் குழைந்தது – பிற வினைமுதல் வினை
(2) செய – தான் உண்ண வருகிறான்
பிறர் உண்ணக் காண்கிறான்
(3) செயின் – மழை பெய்யின் புகழ்பெறும்
- மழை பெய்யின் குளம் நிறையும்
(4) செய்யிய – மழை பெய்யிய முழங்கும்
- மழை பெய்யிய வேண்டினர்
(5) செய்யியர் – மழை பெய்யியர் எழுந்தது
- மழை பெய்யிய வணங்கினர்
(6) பின் – செழியன் பசித்தபின் உண்டான்
- வண்டி நின்றபின் இறங்கினர்
(7) முன் – சாத்தன் உண்ணுமுன் வணங்குவான்
- நோய் வருமுன் காப்போம்
(எ.கா) வந்து நின்றான் – இறந்தகாலம் காட்டியது.
(எ.கா) மெல்ல வந்தான் விரைவாக வந்தான்.
செய்யாமல், செய்யாமே, செய்யாது ஆகிய வாய்பாடுகளில் எதிர்மறை வினையெச்சம் அமையும்.
(எ.கா) செய்யாமல் – உண்ணாமல் சென்றான்
செய்யாமே – உண்ணாமே சென்றான்
செய்யாது – உண்ணாது சென்றான்
• ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்
வினைப்பகுதி, ‘ஆ’ என்னும் எதிர்மறை இடைநிலை ஆகியவற்றைப் பெற்று, வினையெச்ச விகுதி மறைந்த நிலையில், வினை முற்றைக் கொண்டு முடியும் வினைச்சொல் வடிவம், ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) உண்ணா வந்தான்
(உண்ணாது வந்தான் என்பது பொருள்)
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்ச வாய்பாடும் வடிவமைப்பில் இதுபோலவே அமைதலின், இடம் அறிந்து பொருள் கொள்ளுதல் அவசியம் ஆகும்.
• வினையெச்சம் அடுக்கி வருதல்
ஒரு வினையெச்சச் சொல், ஒரு வினைமுற்றைக் கொண்டு முடிவது இயல்பு. பல வினையெச்சச் சொற்கள் அடுத்தடுத்து அடுக்கி வந்து, ஒரே வினைமுற்றைக் கொண்டு முடிவதும் உண்டு.
(எ.கா) வந்து குளித்து உண்டு உறங்கிப் பேசிச் சென்றான்.
இதில் பேசி என்னும் வினையெச்சம் சென்றான் என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிகிறது. அவ்வாறே பிற வினையெச்சங்களும் வந்து சென்றான், உண்டு சென்றான் என அதே வினைமுற்றைக் கொண்டு முடிகின்றன.
• வினையெச்சத்தில் இடைப்பிறவரல்
ஒரு வினையெச்சத்திற்கும், அது கொண்டு முடியும் வினைமுற்றுக்கும் இடையில், பொருள் பொருத்தம் உடையனவாக வரும் பிற சொற்களும் ஏற்றுக் கொள்ளப்படும்.
(எ.கா)
உழுது வந்தான் – உழுது ஏரொடு வந்தான்
வந்து போயினான்- வந்து சாத்தன் அவ்வூர்க்குப் போயினான்.
• வினையெச்சம் வினைமுற்றை அடுத்துவரல்
வினைமுற்றுக்கு முன்னால் வரக்கூடிய வினையெச்சம், வினைமுற்றுக்குப் பின்னால் வருவதும் உண்டு.
(எ.கா)
வந்து போயினான் – முன்னால் வந்தது
போயினான் வந்து – பின்னால் வந்தது
செய்யுளில் இவ்வாறு வருதல் இயல்பு.
(எ.கா)
பசிவந்திடப் போம் பறந்து (நல்வழி)
(போம் = போகும்)
இப்பாடலில் போகும் என்னும் வினைமுற்றை அடுத்து, பறந்து என்னும் வினையெச்சம் வந்துள்ளது.
தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று ஆகிய இரண்டும் முற்றெச்சமாக அமையும் இயல்பினவாகும்.
(1) தெரிநிலை வினைமுற்று எச்சமாதல்
‘கண்டனன் வணங்கினான்’ – இதில் ‘கண்டனன்’ என்னும் முற்று கண்டு என எச்சப்பொருள் தருகிறது.
(2) குறிப்பு வினைமுற்று எச்சமாதல்
‘அவன் வில்லினன் வந்தான்’ – இதில் வில்லினன் என்பது, வில்லினன்ஆகி என எச்சப்பொருள் தருகிறது.
சொல்திரி யினும்பொருள் திரியா வினைக்குறை
(நன்னூல் : 346)
(வினைக்குறை = வினையெச்சம்)
(1) ‘செய’ வாய்பாடு – ‘செய்து’ எனத் திரிதல்
அ. ஞாயிறு பட்டு வந்தான்
‘பட’ என வரவேண்டியது திரிந்து வந்தது.
ஆ. மழை பெய்து நெல் விளைந்தது
‘பெய’ என வரவேண்டியது திரிந்து வந்தது.
வினையெச்சம், பல வாய்பாடுகளையும் சொல் வடிவங்களையும் பெற்றுவரும். தம் வினைமுதல் வினையாலும், பிற வினைமுதல் வினையாலும் முடிவுபெறும். முற்றுச் சொல் எச்சப்பொருள் தருவதும் உண்டு.
இருவகை எச்சங்களும் எதிர்மறைப் பொருள்தரல், அடுக்கி வரல், இடைப்பிறவரல் ஆகிய இயல்புடையனவாகும்.
இவற்றை இப்பாடம் விளக்கியிருக்கிறது.
பாடம் 6
காலத்தின் வகைகளையும், வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர் ஆகியன காலம் காட்டும் முறைகளையும், கால மயக்கங்களையும் குறித்து இந்தப் பாடத்தில் காணலாம்.
• இறந்தகாலம்
செயல் நிகழ்ந்து முற்றுப் பெற்றதைக் குறிப்பது இறந்தகாலம் எனப்படும்.
(எ.கா) உண்டான்.
இது, உண்ணுதலாகிய செயல் நிகழ்ந்து முற்றுப் பெற்றதைக் குறிக்கின்றது.
• நிகழ்காலம்
செயல் தொடங்கி, முற்றுப் பெறாத நிலை நிகழ்காலம் ஆகும். செயல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது இதன் பொருளாகும்.
(எ.கா) உண்கின்றான்.
இது, உண்ணுதல் தொழில், தொடங்கப் பெற்று, முற்றுப்பெறாமல் நிகழ்ந்து கொண்டுள்ளது. ஆதலின், இது நிகழ்காலம் உணர்த்துகின்றது.
• எதிர்காலம்
செயல் தொடங்கப் பெறாத நிலை எதிர்காலம் எனப்படும். செயல் இனி நிகழ உள்ளது எனச் சுட்டுவது இதன் நிலையாகும்.
(எ.கா) உண்பான்
இது, உண்ணுதல் செயல் நிகழாத நிலையை, இனி நிகழ உள்ள நிலையைச் சுட்டுகின்றது. ஆகவே, இது எதிர்காலச் சொல்லாகும். இவற்றைக் குறித்து,
இறப்பு எதிர்வு நிகழ்வு எனக் காலம் மூன்றே (382)
என நன்னூல் உரைக்கும்.
(இறப்பு – இறந்தகாலம்; எதிர்வு – எதிர்காலம்)
பெயர்ச்சொல் வகையுள் வினையாலணையும் பெயர் மட்டும் காலம் காட்டுவதாகும்.
(எ.கா)
வினைமுற்று – முருகன் வந்தான்
பெயரெச்சம் – வந்த முருகன்
வினையெச்சம் – வந்து சென்றான்
வினையாலணையும் பெயர் – வந்தவனைக் கண்டேன்
இவற்றைக் குறித்து இனி விரிவாகக் காண்போம்.
வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்
(தொல்.சொல்.198)
எனத் தொல்காப்பிய நூற்பா குறிக்கும்.
வினைச்சொல் வகைகளில் பெரும்பங்கு வகிப்பது வினைமுற்று ஆகும். எனவே, வினைமுற்று காலம் காட்டுதலை முதலில் தெரிந்து கொள்வோம்.
இடைநிலை, பகுதி, விகுதி ஆகியவற்றுள் ஒன்றால் வினைமுற்று காலம் காட்டி நிற்கும்.
வினைப்பகுதி, காலம் காட்டும் இடைநிலை, பால்காட்டும் விகுதி என்பதாக வினைமுற்றின் பகுபத உறுப்பிலக்கணம் அமையும்
(எ.கா) உண்டான் – உண்+ட்+ஆன்
உண் – வினைப்பகுதி
ட் – காலம் காட்டும் இடைநிலை
ஆன் – படர்க்கை உயர்திணை ஆண்பால் வினைமுற்று விகுதி
காலம் காட்டும் இடைநிலை, இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவானதாக அமையும்.
தன்மை ஒருமை – உண்டேன்
தன்மைப் பன்மை – உண்டோம்
முன்னிலை ஒருமை – உண்டாய்
முன்னிலைப் பன்மை – உண்டீர்
படர்க்கை ஆண்பால் – உண்டான்
படர்க்கைப் பெண்பால் – உண்டாள்
படர்க்கைப் பலர்பால் – உண்டார்
படர்க்கை ஒன்றன்பால் – உண்டது
படர்க்கைப் பலவின்பால் – உண்டன
என வந்தனவற்றுள் ‘ட்’ இடைநிலை இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாக வந்துள்ளதைக் காண்க.
• இறந்தகாலம் காட்டுவன
த், ட், ற், இன் ஆகிய நான்கும் இறந்த காலம் காட்டும் இடைநிலைகள் ஆகும்.
தடறஒற்று இன்னே ஐம்பால் மூவிடத்து
இறந்த காலம் தரும்தொழில் இடைநிலை (142)
என்பது நன்னூல்.
(எ.கா)
த் – செய்தான் (செய்+த்+ஆன்)
ட் – உண்டான் (உண் + ட் + ஆன்)
ற் – தின்றான் (தின்+ற்+ஆன்)
இன் – தாவினான் (தாவு+இன்+ஆன்)
• நிகழ்காலம் காட்டுவன
ஆநின்று, கின்று, கிறு என்னும் மூன்றும் நிகழ்காலம் காட்டும் இடைநிலைகளாகும்.
ஆநின்று கின்று கிறுமூ விடத்தின்
ஐம்பால் நிகழ்பொழுது அறைவினை இடைநிலை
(143)
(நிகழ்பொழுது – நிகழ்காலம்; அறை – கூறு)
என்பது நன்னூல்.
(எ.கா)
ஆநின்று – உண்ணாநின்றான்
கின்று – உண்கின்றான்
கிறு – உண்கிறான்
இவற்றுள், ‘ஆநின்று’ இடைநிலை இன்றைய வழக்கில் இல்லை.
• எதிர்காலம் காட்டுவன
ப், வ் என்பன எதிர்காலம் காட்டும் இடைநிலைகள் ஆகும்.
பவ்வ மூவிடத்து ஐம்பால் எதிர்பொழுது
இசைவினை இடைநிலை யாம்; இவை சிலஇல
(நன்-144)
(எதிர்பொழுது – எதிர்காலம்; இசை – கூறு; இவை சில இல – இந்த இடைநிலைகள் இல்லாத இடங்களில் பகுதியோ விகுதியோ காலம் காட்டும்)
(எ.கா) ப் – உண்பான் (உண்+ப்+ஆன்)
வ் – செல்வான் (செல்+வ்+ஆன்)
• தனித்து நின்று காலம் காட்டல்
முன்னிலை விகுதியுடன் பொருந்தி, எதிர்காலப் பொருளுடையதாக வரும் பகுதி, சில இடங்களில் அவ்விகுதி குறைந்து, தனித்துநின்று அதே பொருள் தருவது உண்டு.
(எ.கா) உண்ணாய் – உண்
நடவாய் – நட
இப்பகுதிகள் தனித்துநின்ற போதிலும், முன்னிலை விகுதி குறைந்தனவாய், எதிர்காலம் காட்டுவனவாகவே கருதப்படும். முன்னிலை ஒருமை ஏவலாக வரும் வினைப்பகுதிகளே இவ்வாறு எதிர்காலம் காட்டும்.
• இரட்டித்து நின்று காலம் காட்டல்
இடைநிலை இல்லாது பகுதியின் ஒற்று (மெய்) இரட்டித்து இறந்தகாலம் காட்டுவது உண்டு.
தனிக்குறிலை அடுத்து கு, டு, று என்னும் மூன்று உயிர்மெய்யும் வரும் வினைப் பகுதி சில ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டும்.
(எ.கா) புகு – புக்கான்
தொடு – தொட்டான்
பெறு – பெற்றான்
(1) தன்மை ஒருமை விகுதி
கு, டு, து, று என்னும் தன்மை ஒருமை விகுதிகள் காலம் காட்டும்.
‘கு’ எதிர்காலம் காட்டும். ‘டு’ இறந்த காலம் காட்டும். ‘து’, ‘று’ ஆகியன இறந்தகாலம், எதிர்காலம் ஆகிய இரண்டையும் காட்டுவனவாகும்.
(எ.கா)
கு – உண்கு யான் (உண்பேன்) – எதிர்காலம்
டு – உண்டு யான் (உண்டேன்) – இறந்தகாலம்
து – வந்து யான் (வந்தேன்) – இறந்தகாலம்
- வருது யான் (வருவேன்) – எதிர்காலம்
று – சென்று யான் (சென்றேன்) – இறந்தகாலம்
- சேறு யான் (செல்வேன்) – எதிர்காலம்
காலம் காட்டும் இவ்விகுதிகள், இன்றைய வழக்கில் இல்லை.
(2) தன்மைப் பன்மை விகுதி
கும், டும், தும், றும் எனும் தன்மைப் பன்மை விகுதிகள் காலம் காட்டும்.
‘கும்’ எதிர்காலம் காட்டும், ‘டும்’ இறந்த காலம் காட்டும். ‘தும்’, ‘றும்’ என்பன இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் காட்டுவனவாகும்.
(எ.கா)
கும் – உண்கும் யாம் (உண்போம்) – எதிர்காலம்
டும் – உண்டும் யாம் ( உண்டோம்) – இறந்தகாலம்
தும் – வந்தும் யாம் ( வந்தோம்) – இறந்தகாலம்
- வருதும் யாம் (வருவோம்) – எதிர்காலம்
றும் – சென்றும் யாம் (சென்றோம்) – இறந்த காலம்
- சேறும் யாம் (செல்வோம்) – எதிர்காலம்
இந்த நான்கு விகுதிகளும் இன்றைய வழக்கில் இல்லை.
(3) முன்னிலை விகுதி
முன்னிலை ஒருமையில் இடம்பெறும் இகர விகுதியும், பன்மையில் இடம்பெறும் மின் விகுதியும் எதிர்காலம் காட்டி நிற்பனவாகும்.
(எ.கா)
இ – சேறி (செல்வாய்) – செல்+தி-சேல்+தி-சேறி.
மின் – காண்மின் (காணுங்கள்)
இவை மட்டுமின்றி, ‘ஆய்’ என்னும் ஒருமை விகுதியும், ‘உம்’ என்னும் பன்மை விகுதியும் எதிர்காலம் உணர்த்துவனவாகும்.
(எ.கா) ஆய் – வாராய் (வருவாயாக)
உம் – வாரும் (வாருங்கள்)
(4) வியங்கோள் விகுதி
க, இய, இயர் என்னும் வியங்கோள் விகுதிகள் எதிர்காலம் காட்டிவரும்.
(எ.கா) க – வாழ்க தமிழ்
இய – வாழிய தமிழ்
இயர் – வாழியர் தமிழர்
(5) படர்க்கை விகுதி
‘ப‘ என்னும் உயர்திணைப் படர்க்கைப் பலர்பால் விகுதி இறந்த காலமும் எதிர்காலமும் காட்டுவதாகும். ‘மார்’விகுதி எதிர்காலம் காட்டும்.
(எ.கா) ப – உண்ப (உண்டார்) – இறந்தகாலம்
என்ப (என்பார்) – எதிர்காலம்
மார் – உண்மார் (உண்பார்) எதிர்காலம்
(6) செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதி
‘செய்யும்’ என்னும் வாய்பாட்டு வினைமுற்றில் உள்ள ‘உம்’ விகுதி நிகழ்காலமும், எதிர்காலமும் உணர்த்தும். படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின் பால் ஆகியவற்றில் மட்டுமே இது இடம்பெறும்.
(எ.கா)
படர்க்கை ஆண்பால் – அவன் உண்ணும்
(உண்கிறான்) – (உண்பான்)
படர்க்கைப் பெண்பால் – அவள் உண்ணும்
(உண்கிறாள்) – (உண்பாள்)
படர்க்கை ஒன்றன்பால் – அது உண்ணும்
(உண்கின்றது) – (இனி உண்ணும்)
படர்க்கைப் பலவின்பால் – அவை உண்ணும்
(உண்கின்றன) – (இனி உண்ணும்)
(7) எதிர்மறைவினை முக்காலமும் காட்டல்
எதிர்மறை வினைமுற்றில் வரும் ‘ஆ’ எனும் விகுதி குறிப்பிட்ட காலத்தைக் காட்டுவதில்லை. எனவே, முக்காலத்திற்கும் உரியதாகக் கருதப்படுகின்றது.
(எ.கா) குதிரைகள் உண்ணா (இருந்தன, இருக்கின்றன, இருக்கும்)
(எ.கா) பண்பு – சாத்தன் கரியன்
பொருள் – சாத்தன் பொன்னன்
சாத்தன் நேற்று கரியன், இன்று கரியன், நாளை கரியன் என முறையே இறந்தகாலமும், நிகழ்காலமும், எதிர்காலமும் உணர்த்திவரும்.
வினையாலணையும் பெயர், பெயர்ச்சொல்லைப் போன்று வேற்றுமை உருபு ஏற்கும். வினைச்சொல்லைப் போன்று காலம் காட்டும்.
செயலைக் குறிப்பதுடன், செய்தவனையும் குறிப்பது வினையாலணையும் பெயரின் இயல்பாகும்.
(எ.கா) வந்தானைக் கண்டேன்
வந்தவன் சென்றான்
வினையாலணையும் பெயர், வினைமுற்றைப் போலவே இருதிணை ஐம்பால் சொற்களில் காலம் காட்டுவது ஆகும்.
(எ.கா) த் – படித்த பாடம்
ட் – உண்ட சோறு
ற் – சென்ற சாத்தன்
இன் – போயின போக்கு
(எ.கா) கிறு – உண்கிற சாத்தன்
கின்று – உண்கின்ற சாத்தன்
ஆநின்று – உண்ணாநின்ற சாத்தன்
(எ.கா) படிக்கும் சிறுவன்
பாடும் சிறுமி
வரும் வண்டி
இவை பன்னிரண்டனுள் முதல் ஐந்தும் இறந்தகாலம் காட்டும்; அடுத்துள்ள ஒன்று நிகழ்காலம் காட்டும்; ஏனைய ஆறும் எதிர்காலம் காட்டுவனவாகும்.
செய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்குஇன வினையெச் சம்பிற
ஐந்துஒன்று ஆறுமுக் காலமும் முறைதரும் (343)
என்பது நன்னூல். (விளக்கம்: பாடம் 5 (a02125) – 5.5, 5.6 காண்க)
- வந்து சென்றான் (உகர ஈறு)
- போய் வந்தான் (யகரமெய் ஈறு)
(2) செய்பு – உண்குபு வந்தான் (உண்டு)
(3) செய்யா – உண்ணாச் சென்றான் (உண்டு)
(4) செய்யூ – உண்ணூச் சென்றான் (உண்டு)
(5) செய்தென – உண்டெனச் சென்றான் (உண்டு)
செய – (1) ‘கொற்றன் வெள்ளி முளைக்க வந்தான்’
இங்கு, வருதலும் முளைத்தலும் ஒரேகாலத்தில் நிகழ்ந்தன.
இது நிகழ்காலம் காட்டிற்று.
(2) ‘மழைபெய்ய நெல் விளைந்தது’
காரணப் பொருள் உடையதால் இறந்தகாலம் காட்டிற்று. மழை பெய்த காரணத்தால் நெல் விளைந்தது என்பது காரணப்பொருள்.
(3) ‘நெல் விளைய மழை பெய்தது’
காரியப் பொருள் உடையதாய் எதிர்காலம் காட்டிற்று. நெல் விளைவதற்காக மழைபெய்தது என்பதால் காரியப் பொருள் ஆயிற்று.
(2) செய்யிய – மழை பெய்யிய மரம் வளர்ப்போம். (பெய்வதற்கு)
(3) செய்யியர் – மழை பெய்யியர் மரம் வளர்ப்போம். (பெய்வதற்கு)
(4) வான் – மழை பெய்வான் மரம் வளர்ப்போம். (பெய்ய)
(5) பான் – மழை காண்பான் மரம் வளர்ப்போம். (காண)
(6) பாக்கு – மழை வருபாக்கு மரம் வளர்ப்போம். (வர)
(எ.கா)
(1) செய – செய்து
(1) ஞாயிறு பட்டு வந்தான் (ஞாயிறு பட வந்தான் என்பது பொருள் – நிகழ்காலம்)
2. செய – ‘வான்‘ஈறு
யான் கொள்வான் பொருள் கொடுத்தான்
(யான் கொள்ளப் பொருள் கொடுத்தான் என்பது பொருள் – நிகழ்காலம்)
கால மயக்கத்தை இறந்தகாலத்தில் மயங்குவன, நிகழ்காலத்தில் மயங்குவன, எதிர்காலத்தில் மயங்குவன என மூவகைப்படுத்தலாம்.
• விரைவுப்பொருள்
எதிர்காலத்திலும் நிகழ்காலத்திலும் வரவேண்டிய சொற்களை விரைவுப்பொருள் கருதி, இறந்தகாலச் சொல்லால் குறிப்பிடுவது உண்டு.
உணவு உண்டு கொண்டிருப்பவன், தன் வருகையை எதிர்நோக்கி அருகில் காத்திருக்கும் நண்பனிடம் ‘உண்டேன்; வந்தேன்’ என்கின்றான். ‘உண்கின்றேன்; வருவேன்’ என்று சொல்ல வேண்டியவன் விரைவு கருதி இவ்வாறு கூறுகின்றான். இன்னும் உணவு உண்ணத் தொடங்காத ஒருவனும் இவ்வாறான சூழலில் ‘உண்டேன்; வந்தேன்‘ என்கின்றான். ‘உண்பேன்; வருவேன்‘ எனச் சொல்ல வேண்டியவன் விரைவுப் பொருள் காரணமாக மாற்றி உரைப்பது ஏற்கப்படுகின்றது.
• உலக வழக்கு
எதிர்காலச் சொல், உலக வழக்கில் இறந்தகாலச் சொல்லால் சுட்டப்படுவது உண்டு.
‘நாளை அவன் வந்தால் நீ என்செய்வாய்’ என்பது இதற்கான சான்றாகும். வருவனேல் என எதிர்காலச் சொல்லில் வர வேண்டியது, ‘வந்தால்‘ என இறந்தகாலச் சொல்லாக இடம்பெற்றுள்ளது.
• முக்கால வினைச்சொல்
செயல்நிகழும் காலத்தின் அடிப்படையில் பொருள்களின் இயக்கத்தை மூன்று காலங்களுள் ஒன்றில் அமைத்துக் கூறுகின்றோம். ஆனால், மூன்று காலத்திற்குமான செயல்களையுடைய பொருள்களின் நிலையை எக்காலத்தில் வைத்துக் கூறுவது?
மலை இருக்கின்ற தன்மை மூன்று காலத்திற்கும் உரியது. மலை இருந்தது, மலை இருக்கின்றது, மலை இருக்கும் என மூன்று காலத்திலும் அமையும். அதன் நிலையை ஒரு வாய்பாட்டால் சொல்ல வேண்டுமானால் என்ன செய்வது?
நிகழ்காலச் சொல்லில் அமைத்துக் கூறினால், அது ஏனைய காலங்களையும் உள்ளடக்கி நிற்பதாக அமையும்,
முக்கா லத்தினும் ஒத்தியல் பொருளைச்
செப்புவர் நிகழுங் காலத் தானே (நன்.383)
(ஒத்தியல் – ஒத்து அமைகின்ற; செப்புவர் – கூறுவர்)
(எ.கா) மலை இருக்கின்றது
ஆறு ஓடுகின்றது
‘நான் சிறுவயதில் இம்மரத்தடியில் அமர்ந்து படிப்பேன்’- இங்கு, ‘படித்தேன்‘ என இறந்தகாலத்தில் வரவேண்டியது, ‘படிப்பேன்’ என எதிர்காலச் சொல்லாக மயங்கி வந்தது.
பெயர்ச்சொல் வகையுள் வினையாலணையும் பெயர் மட்டும் காலம் காட்டுகின்றது. அதன் இயல்பு வினைமுற்றை ஒத்து உள்ளது.
இடைநிலையே காலம் காட்டும் பொறுப்பேற்கின்றது. சிறுபான்மை, பகுதி காலம் காட்டுதலும் உண்டு. விகுதி காலம் காட்டுதல் பழங்காலத்தில் இருந்தது; இன்றைய வழக்கில் இல்லை.
முக்காலச் சொற்களும் சிற்சில காரணங்களால் தங்களுக்குள் மயங்கி வருதல் உண்டு.
இக்கருத்துகளைப் பற்றி இந்தப் பாடத்தில் தெளிவாக அறிந்து கொண்டோம்.