7

இடைச்சொல், உரிச்சொல்

பாடம் - 1

இடைச்சொல்லின் பொது இலக்கணம்

1.0 பாட முன்னுரை

நாம் நம்முடைய கருத்துகளைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு மொழிதான் துணை புரிகிறது. மக்கள் வாழ மொழி வேண்டும். மொழி வாழ இலக்கணங்கள் வேண்டும். இலக்கண நூலார் இலக்கியச் சொற்களையும் பேச்சு வழக்குச் சொற்களையும் ஆராய்ந்து சொல் இலக்கணத்தை வரன்முறைப்படுத்தியுள்ளனர்.

பட்டயப் பாடத்தில் சொல் வகைகள் பற்றிய அறிமுகம் உங்களுக்கு உண்டாயிற்று. இடைச்சொல் பற்றிய இந்தப் பாடம் ‘இடைச்சொல்லுக்குப்’ பொதுவான விளக்கம் தருகிறது. இடைச்சொற்கள் இலக்கிய வழக்கிலும் பேச்சு வழக்கிலும் என்ன பயனைத் தருகின்றன என்பதைத் தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட சில இலக்கண நூல்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. இடைச்சொல்லைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் சொல், சொல் வகைகள் குறித்து மறுபடியும் நினைவூட்டிக் கொள்வது நல்லது.

1.1 சொல் - விளக்கம்

எழுத்து என்பது ஒலியும், வடிவும் கொண்டு விளங்குவது. எழுத்துகள் தனியாகவோ இரண்டு முதலாகச் சில எழுத்துகள் சேர்ந்தோ நின்று ஒரு பொருளைக் குறிக்குமானால் அதைச் சொல் என்கிறோம். பொருள் தராத வெறும் எழுத்தொலி சொல் ஆகாது.

சொல் என்பதைப் ‘பதம்’ என்றும் நன்னூலார் குறிப்பிடுகிறார். பதவியலில் சொல்லின் அமைப்பைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்.

1.1.1 ஓரெழுத்து ஒருமொழி ஒரே எழுத்தில் அமைந்து பொருள் தரும் சொற்களை ஓர் எழுத்து ஒரு மொழி என்பர். சிறப்பான ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் நாற்பத்திரண்டு என்று குறிப்பிடுகின்றார் நன்னூலார்.

எடுத்துக்காட்டு

ஆ (பசு), ஈ, ஏ (அம்பு), ஓ (மதகு), தா, போ முதலிய எழுத்துகளை ஓரெழுத்துச் சொற்கள் என்பர்.

இரண்டு முதலான எழுத்துகளில் அமையும் சொற்கள் பலவெழுத்துச் சொற்கள் ஆகும்.

எடுத்துக்காட்டு

அணி

அறம்

விரும்பு

1.2 சொல் பகுப்பு

இடைச்சொல்லைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குச் சொல் பகுப்பு முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஓர் எழுத்து தனித்து நின்றோ, சில எழுத்துகள் சேர்ந்து நின்றோ, பொருள் தந்தால்தான் சொல் என்று ஆகும் என்பதைக் கண்டோம். ஒரு சொல் எவ்வாறு அமைகிறது, எவ்வாறு பொருளை உணர்த்துகிறது என்று அறிதல் அவசியம். அதற்குச் சொல்லில் அமைந்துள்ள உறுப்புகளைப் பகுத்துக் கண்டறிய வேண்டும். சொல்லில் அமைந்துள்ள உறுப்புகள் தாம் பொருள் தெளிவைத் தருகின்றன.

சொற்களின் அமைப்பு அடிப்படையில் அவை பகுபதம், பகாப்பதம் என இரண்டு வகைப்படும்.

1.2.1 பகுபதம் பகுபதம் என்றால் பகுத்துப் பார்க்கக் கூடிய சொல் என்று பொருள்.

பகுபதம் பல உறுப்புகளைக் கொண்டிருக்கும் சொல். பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறும் பகுபத உறுப்புகள் ஆகும். இவற்றுள் விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை ஆகிய நான்கும் இடைச்சொற்களே ஆகும்.

பகுபத உறுப்புகளின் தன்மைகளை இனி விரிவாகக் காண்போம்.

• பகுதி

பகுதி எப்போதும் பகுபதத்தின் முதலில் நிற்கும்; பெயர், வினை, இடை, உரி என்னும் நான்குவகைச் சொற்களுள் ஒன்றாக அமையும்.

எடுத்துக்காட்டு

கண்ணன் – கண் – பெயர்ப் பகுதி

வந்தான் – வா – வினைப் பகுதி

மற்றவன் – மற்று – இடைப் பகுதி

கடியன் – கடி – உரிப் பகுதி

• விகுதி

விகுதி எப்போதும் சொல்லின் கடைசியில் நின்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தும்.

எடுத்துக்காட்டு

கண்ணன் – அன் – ஆண் பாலை உணர்த்துகிறது.

வந்தேன் – ஏன் – தன்மை ஒருமையை உணர்த்துகிறது

வந்தது – து – ஒன்றன்பாலை உணர்த்துகிறது

வந்தீர் – ஈர் – முன்னிலைப் பன்மையை உணர்த்துகிறது.

இவ்வாறு விகுதி சொல்லின் இறுதியில் இருப்பதால் இதனை இறுதிநிலை என்றும் கூறுவார்கள்.

• இடைநிலை

இடைநிலை எப்போதும் சொல்லின் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலத்தையாவது அல்லது பகுதி விகுதி இணைப்பையாவது காட்டும். பெயர் இடைநிலை, வினை இடைநிலை என இடைநிலை இரண்டு வகைப்படும்.

பெயர் இடைநிலை காலம் காட்டாது. வினை இடைநிலை காலம் காட்டும்.

எடுத்துக்காட்டு

அறிஞன் – அறி + ஞ் + அன்

இதில் ‘ஞ்’ என்பது பெயர் இடைநிலை. இது பகுதியையும் விகுதியையும் இணைத்தது.

வந்தான் – வா + த்(ந்) + த் + ஆன்

இதில் ‘த்’ என்பது வினை இடைநிலை. இது இறந்த காலம் காட்டியது.

• சந்தி

சந்தி என்பது புணர்ச்சி. இது சொற்களை இணைக்கிறது. சொல்லில் பகுதிக்கு அடுத்து வருவது.

எடுத்துக்காட்டு

படித்தான் – படி + த் + த் +ஆன்

என்று பகுக்க வேண்டும். இதில் பகுதியாகிய படி என்பதற்கு அடுத்துள்ள ‘த்’ சந்தி ஆகும். அதற்கு அடுத்துள்ள ‘த்’ காலம் காட்டும் இடைநிலை ஆகும்.

• சாரியை

சாரியை பெரும்பாலும் விகுதிக்கு முன்னால் நிற்கும். புணர்ச்சி அல்லது இன்னோசை ஏதேனும் ஒரு காரணம் பற்றி வரும். சிறுபான்மை சொல்லின் இறுதியில் நின்று இன்னோசையை உணர்த்தும்.

எடுத்துக்காட்டு

பட்டினத்தான் – பட்டினம் + அத்து + ஆன்

இச்சொல்லில் ‘அத்து’ எனும் சாரியை புணர்ச்சி பற்றி வந்தது. ஊரின் பெயரால் ஒருவனை அழைக்க, பட்டினம் + ஆன், ஆகிய இரண்டு சொற்களையும் இணைத்துப் பொருள் தர இந்த ‘அத்து’ துணை புரிகிறது அல்லவா? ஆகையால் இது புணர்ச்சி காரணமாக வந்தது.

நெஞ்சம் – நெஞ்சு + அம்

இதில் நெஞ்சுதான் பொருள் தரும் சொல். அம் என்பது அதனோடு இன்னோசைக்காகவே சேர்ந்துள்ளது.

• விகாரம்

பகுபத உறுப்புகளுள் விகாரமும் ஒன்று. இங்கு விகாரம் எனப்படுவது, பகுபத உறுப்புகள் ஒன்றொடொன்று இணையும் போது ஏற்படும் சிறு திரிபுகள் (மாற்றங்கள்) ஆகும்.

எடுத்துக்காட்டு

வந்தான் – என்ற சொல்லில் ‘வா’ என்பது பகுதி.

இப்பகுதி, ஏனைய உறுப்புகளோடு சேரும்போது ‘வ’ எனக் குறுகியது. அதனால் இது விகாரம் என்று கூறப்படும்.

• சொல்லும் உறுப்புகளும்

ஒரு பகுபதத்தில் எத்தனை உறுப்புகள் இருக்கின்றன என்று பகுத்துப் பார்க்க வேண்டும். இரண்டு முதல் ஆறு உறுப்புகள் உடைய பகுபதங்கள் உண்டு.

எடுத்துக்காட்டு

கண்ணன் – கண் + அன் = பகுதி + விகுதி என இரண்டு உறுப்புகள் மட்டுமே இருக்கின்றன.

வந்தனன் – என்ற சொல்லைப் பகுத்துப் பார்த்தால் அதில் ஆறு உறுப்புகள் இருப்பதை அறியலாம்.

வந்தனன் = வா + ந் + த் + அன் + அன்

பகுதி, சந்தி, இடைநிலை, சாரியை, விகுதி, விகாரம் ஆகிய ஆறு உறுப்புகளையும் இந்தச் சொல்லில் காணலாம். (‘வா’ என்பது ‘வ’ எனத் திரிந்தது விகாரம்).

1.2.2 பகாப்பதம் பகுக்க முடியாத பதம். பகுத்தால் பொருள் தராது.

எடுத்துக்காட்டு

கண்

பிரித்தால் பொருள் தராது.

படி

1.3 சொல் வகைகள்

தமிழில் இலக்கண நோக்கில் அமைந்த சொல் வகைகள் நான்கு. அவை,

1) பெயர்ச்சொல்

2) வினைச்சொல்

3) இடைச்சொல்

4) உரிச்சொல்

இவை தவிர இலக்கிய வழக்கியல் நோக்கில் சொற்களை மேலும் நான்கு வகைப்படுத்தி உள்ளனர். அவை,

1) இயற்சொல்

2) திரிசொல்

3) திசைச்சொல்

4) வடசொல்

பெயர், வினை இவற்றை இடமாகக் கொண்டு, அவற்றைச் சார்ந்து வருகின்ற இடைச்சொல், உரிச்சொல் குறித்து இனி வரும் பாடங்களில் விரிவாகக் காண்போம்.

1.4 இடைச்சொல்லின் இலக்கணம்

பெயர், வினை, இடை, உரி எனச் சொற்கள் நான்கு வகைப்படும் என்பதை முன்பே கண்டோம். இனி இடைச்சொல்லின் இலக்கணத்தையும் அதன் இயல்புகளையும் இலக்கண நூல்கள் வழி அறிந்து கொள்ளலாம்.

இடைச்சொல்லின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் சொல்லதிகாரம் ஏழாவது இயலும் (இடையியல்), நன்னூல் சொல்லதிகாரம் நான்காவது இயலும் (இடையியல்) விளக்கிக் கூறுகின்றன.

பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் ஆகியவற்றை ஒட்டி நின்று அவற்றின் பொருளைச் சிறப்பாக எடுத்துக் கூறும் தன்மையுடையவை இடைச்சொற்கள் ஆகும். இடைச்சொற்களுக்கு என்று தனியாக வேறு ஒரு செயலும் இல்லை. இந்தக் கருத்தைக் கூறும் நூற்பா:

இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்

நடைபெற்று இயலும் தமக்கு இயல்பு இலவே

(தொல்.சொல்.251)

(இடை = இடைச்சொல்)

இடைச்சொற்கள் பெயர், வினை என்னும் இரண்டு வகைச் சொற்களுக்கும் முன்னாலும் பின்னாலும் இணைந்து நின்று அப்பெயர், வினைகளின் பொருளை தெளிவுபடுத்தும். பெரும்பாலும் இவ்வகைச் சொற்கள் இருசொற்களுக்கு இடையே வருவதால் இவற்றை இடைச்சொல் என்று அழைக்கிறோம்.

எடுத்துக்காட்டு

ஐயோ இறந்தான் = ஐயோ என்னும் இடைச்சொல் வினைக்கு முன்னே வந்துள்ளது.

கொன்றான் கூகூ = என்பதில் வினையின் பின்னே கூகூ என்னும் இடைச்சொற்கள் வந்தன.

மற்றொன்று = மற்று என்னும் இடைச்சொல் பெயருக்கு முன் வந்தது.

குழையன் = அன் என்னும் இடைச்சொல் பெயருக்குப் பின் வந்தது.

இந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து, இடைச்சொல் வினைச் சொல்லுக்கும் பெயர்ச்சொல்லுக்கும் முன்னோ பின்னோ வருவதைக் கண்டோம்.

1.5 இடைச்சொல் வகைகள்

நன்னூல் கூறும் இடைச்சொல் வகைகள் குறித்து ஈண்டுக் காண்போம்.

1) வேற்றுமை உருபுகள்

2) வினை விகுதிகள், காலம் காட்டும் இடைநிலைகள்

3) சாரியைகள்

4) உவம உருபுகள்

5) ஏ, ஓ, என்று போன்ற தம் பொருளை உணர்த்தும் சொற்கள்

6) செய்யுளில் இசையைக் கூட்ட (நிறைக்க) வரும் சொற்கள்

7) செய்யுளில் அசைநிலையாக வருபவை

8) அச்சம், விரைவு முதலியவற்றைக் குறிப்பால் உணர்த்துபவை

இவ்வாறு இடைச்சொல் எட்டு வகைப்படும். இக்கருத்தை நன்னூல் பின்வருமாறு கூறுகிறது:

வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள்

தத்தம் பொருள இசைநிறை அசை நிலை

குறிப்பு என் எண் பகுதியில் தனித்து இயல் இன்றிப்

பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து

ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச் சொல்

(சூத்திரம் – 419)

(ஒப்பு உருபு = உவம உருபு)

இனி இவ்வகைகளின் விளக்கங்களைப் பாடம் இரண்டு மற்றும் மூன்றில் விரிவாகக் காண்போம்.

1.6 தொகுப்புரை

சொல் என்றால் அது பொருள் தர வேண்டும். தமிழில் ஓர் எழுத்து மட்டுமே தனித்து நின்று பொருள் தந்து சொல் ஆகிறது. சொற்கள் இலக்கண நோக்கில் பொதுவாகப் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும். இவற்றுள் இடைச்சொல் பெயரையும் வினையையும் சார்ந்து இயங்கும் தன்மை உடையது. இடைச்சொல் எட்டு வகைப்படும்.

பாடம் - 2

இடைச்சொல் வகைகள் - I

2.0 பாட முன்னுரை

இடைச்சொல் எட்டு வகைப்படும். அவற்றுள் வேற்றுமை உருபுகள், வினை உருபுகள், சாரியைகள், உவம உருபுகள் ஆகிய நான்கு இடைச்சொல் வகைகள் இந்தப் பாடத்தில் விளக்கப்படுகின்றன.

வேற்றுமை உருபுகளாகிய ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகியன இடைச்சொற்களாய்ப் பெயருக்கு இறுதியில் நிற்கும் இயல்புகள் விளக்கப்படுகின்றன.

வினை உருபுகள் என்பன வினை விகுதிகளும், காலம் காட்டும் இடைநிலைகளும் ஆகும்.

2.1 வேற்றுமை உருபுகள்

முதலில், இடைச்சொல் வரிசையில் முதலாவதாகச் சொல்லப்படும் வேற்றுமை உருபுகள் பற்றிக் காணலாம். வேற்றுமை என்பது வேறுபாடு. பெயர்கள் தாம் ஏற்கும் வேற்றுமை உருபுகளுக்கு ஏற்பப் பொருள் வேறுபடும், அது வேற்றுமை எனப்படும். வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்தே வரும் இடைச்சொற்கள் ஆகும். அவை தனித்து வருவதில்லை.

எடுத்துக்காட்டு

1)கண்ணன் கண்டான்

2)கண்ணனை (க்) கண்டான்

முதல் வாக்கியத்தில் கண்ணன் பார்க்கிறான், இரண்டாவதில் கண்ணனை வேறொருவன் பார்க்கிறான். முதல் வாக்கியத்தில் கண்ணன் எழுவாய்; இரண்டாவதில் கண்ணன் செயப்படுபொருள். இந்த வேற்றுமையை உண்டாக்கியது ஐ என்னும் உருபு. இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் உருபுகளை வேற்றுமை உருபு என்று அழைக்கிறோம். இங்கு எடுத்துக்காட்டிய ஐ இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும். இது செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறப்படுகிறது.

எஞ்சியுள்ள வேற்றுமை உருபுகள் எவ்வாறு இடைச்சொல்லாக நின்று பொருளை வேறுபடுத்திக் காட்டுகின்றன என்பதைக் காண்போம்.

வேற்றுமைகள் உருபு

1)முதல் வேற்றுமை

(எழுவாய் வேற்றுமை) ——-

2)இரண்டாம் வேற்றுமை ஐ

3)மூன்றாம் வேற்றுமை ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்

4)நான்காம் வேற்றுமை கு

5)ஐந்தாம் வேற்றுமை இன், இல்

6)ஆறாம் வேற்றுமை அது, உடைய

7)ஏழாம் வேற்றுமை கண்

8)எட்டாம் வேற்றுமை(விளி வேற்றுமை) ——-

எடுத்துக்காட்டு

2) கண்ணனைக் கண்டான் – ஐ – உருபு

3) வாளால் வெட்டினான் – ஆல் – உருபு

4) கூலிக்கு வேலை செய்தான் – கு – உருபு

5) மலையின் வீழ் அருவி – இன் – உருபு

6) கம்பரது கவித்திறம் – அது – உருபு

7) அவையின் கண் இருந்தான் – கண் – உருபு

இவ்வாறு வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்து (இறுதியில்) நின்று பெயர்ப்பொருளை வேறுபடுத்திக் காட்டுவதைக் கண்டோம்.

தமக்கென்று பொருள் இன்றித் தாம் சார்ந்த பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவதால் இவை இடைச்சொற்கள் ஆகின்றன.

2.2 வினை உருபுகள்

• வினைச்சொல்

ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல். வினைச்சொல் பகுதி, விகுதி, சந்தி, சாரியை, இடைநிலை, விகாரம் என்னும் ஆறு உறுப்புகளையும் பெற்றுவரும். இவ்வுறுப்புகள் குறைந்து வரும் வினைச்சொற்களும் உண்டு. என்றாலும் பகுதி, விகுதி, இடைநிலை என்னும் மூன்று உறுப்புகளும் முக்கியமானவை.

பகுதி – வினையை (செயலை)க் காட்டும்

இடைநிலை – காலத்தைக் காட்டும்

விகுதி – திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டும்

இங்கு இடைச்சொல் வரிசையில் இரண்டாவதாகச் சொல்லப்படும் வினை உருபுகளாகிய விகுதிகள் பற்றியும், இடைநிலைகள் பற்றியும் காணலாம்.

2.2.1 வினை விகுதிகள் ஒருவினைச் சொல்லில் முதலில் இருப்பது பகுதி. அதனால் பகுதியை முதல் நிலை என்பர். விகுதி எப்போதும் சொல்லின் இறுதியில் இருக்கும். அதனால் அதனை இறுதி நிலை என்பர். பகுதி, விகுதியாகிய முதல் நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையில் இருப்பது இடைநிலை ஆகும். வினைச்சொல்லின் விகுதி பால், இடம் முதலியவற்றை உணர்த்தும் இடைச்சொல்லாகும்.

தன்மை வினைமுற்று விகுதிகளும், முன்னிலை வினைமுற்று விகுதிகளும் எண், இடம் என்ற இரண்டை மட்டுமே காட்டும். திணையையும் பாலையும் காட்டா.

எடுத்துக்காட்டு

நடந்தேன் – ஏன் – தன்மை ஒருமை

நடந்தோம் – ஓம் – தன்மைப் பன்மை

நடந்தாய் – ஆய் – முன்னிலை ஒருமை

நடந்தீர் – ஈர் – முன்னிலைப் பன்மை

படர்க்கை வினைமுற்று விகுதிகள் திணை, பால், எண், இடம் என்ற நான்கையும் காட்டும்.

செய்கிறான் – இது செய்+கிறு+ஆன் என்பதாகும். இதில்

செய் – பகுதி (வினை /செயல்)

கிறு – இடைநிலை (நிகழ்காலத்தைக் காட்டும்)

ஆன் – விகுதி (திணை, பால், எண், இடம் காட்டுகிறது)

திணை – உயர்திணை

பால் – ஆண்பால்

எண் – ஒருமை

இடம் – படர்க்கை

‘ஆன்’ என்னும் விகுதி பல பொருள்களைச் சுட்டி நிற்கிறது. இவ்வாறே பெண்பால் படர்க்கை விகுதிகள் (அள், ஆள்), பலர்பால் படர்க்கை விகுதிகள் (அர், ஆர், ப) ஆகியவை திணை, பால், எண், இடம் உணர்த்தும் இடைச்சொற்களாம்.

2.2.2 காலம் காட்டும் இடைநிலைகள் வினைச்சொல்லில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்பது இடைநிலை என்று பார்த்தோம். அது காலத்தைக் குறிப்பது ஆகும். காலம் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூவகைப்படும். அந்த மூன்று காலங்களுக்கும் உரிய இடைநிலைகளை இங்கே காண்போம்.

பொதுவாக ஒரு வினைச்சொல்லுக்குப் பகுதியும் பால், இடம் காட்டும் விகுதியும் இன்றியமையாதன என்பதனை மேற்காட்டிய சான்றுகளால் தெளியலாம். மேலும் வினைச்சொல்லில் காலம் காட்டும் உருபு நடுவில் இருக்கும். அதனை இடைநிலை என்பர். (இடை = சொல்லின் நடுவில், நிலை = நிற்பது)

• இறந்த காலம் காட்டும் இடைநிலைகள்

இறந்த காலம் காட்டும் இடைநிலைகளாக த், ட், ற், இன் ஆகியன குறிக்கப்படுகின்றன. இவ் இடைநிலைகள் இறந்த காலத்தை எவ்வாறு உணர்த்துகின்றன என்பதை வினைச்சொற்களைப் பகுத்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டு

பகுதி கால இடைநிலை விகுதி

செய்தான் = செய் + த் + ஆன்

உண்டான் = உண் + ட் + ஆன்

கற்றான் = கல் + ற் + ஆன்

ஓடினான் = ஓடு + இன் + ஆன்

செய்து முடித்த அல்லது நிகழ்ந்து முடிந்த ஒன்றைத்தான் இறந்த காலத்தில் கூறுவோம். செய்தான் என்ற வினைச்சொல்லில் செய் என்ற பகுதிக்கும் ஆன் என்ற விகுதிக்கும் இடையில் த் என்ற இடைநிலை நின்று இறந்த காலத்தைச் சுட்டுகிறது. இதே போல, ட், ற், இன் ஆகியவையும் இறந்த காலம் சுட்டுகின்றன.

• நிகழ்காலம் காட்டும் இடைநிலைகள்

நிகழ்காலத்தைக் காட்டும் உருபுகளாகக் கிறு, கின்று, ஆநின்று என்னும் மூன்று உருபுகள் குறிக்கப்படுகின்றன. உண்கிறான், உண்கின்றான், உண்ணா நின்றான் என்பன நிகழ்கால வினை முற்றுகள். கிறு, கின்று என்னும் இடைநிலைகள் இன்று வழக்கில் உள்ளன. ஆநின்று என்னும் (உண்ணா நின்றான்) இடைநிலை உலக வழக்கில் இன்று இல்லாதது.

எடுத்துக்காட்டு

பகுதி கால இடைநிலை விகுதி

உண்கிறான் = உண் + கிறு + ஆன்

பாடுகின்றான் = பாடு + கின்று + ஆன்

செய்யாநின்றான் = செய் + ஆநின்று + ஆன்

ஒரு செயல் நிகழ்ந்து கொண்டிருப்பதைச் சுட்டுவதற்கு, பகுதிக்கும் விகுதிக்கும் இடையே நிகழ் காலத்தைக் குறிக்கும் கால இடைநிலைகள் வந்துள்ளன.

• எதிர்காலம் காட்டும் இடைநிலைகள்

எதிர்காலத்தைக் குறிக்கும் இடைநிலைகள் ப், வ் என்ற இரண்டும் ஆகும். நிகழப்போகும் ஒரு செயலைக் கூறுவதற்கு இவ் இடைநிலைகள் பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டு

பகுதி கால இடைநிலை விகுதி

காண்பான் = காண் + ப் + ஆன்

செய்வான் = செய் + வ் + ஆன்

காண், செய் என்னும் வினைப்பகுதிகள் பால், இட விகுதிகளோடு இணையும்பொழுது இடையில் ப், வ் என்னும் கால இடைநிலைகள் நின்று எதிர்காலத்தை உணர்த்தின.

2.3 சாரியைகள்

இங்கு இடைச்சொல் வரிசையில் மூன்றாவதாக உள்ள சாரியைகள் பற்றிக் காண்போம். பகுபத உறுப்புகள் ஆறனுள் சாரியையும் ஒன்று என்பதை ஏற்கெனவே படித்துள்ளீர்கள்.

சார் + இயை = சாரியை, அதாவது சார்ந்து வருவது சாரியை ஆகும். இஃது ஒரு வினைச்சொல்லில் இடைநிலைக்குப் பின்னரும் விகுதிக்கு முன்னரும் வரும். சாரியைக்கு என்று தனிப்பட்ட பொருள் எதுவும் இல்லை.

ஒரு பதத்தின் (சொல்லின்) முன்னர் விகுதியோ, பதமோ (சொல்லோ), வேறொரு உருபோ, புணருமிடத்து (சேரும் போது) ஒரு சாரியை அல்லது பல சாரியைகள் வருதல் உண்டு. வாராதிருத்தலும் உண்டு.

எடுத்துக்காட்டு

விகுதிப்புணர்ச்சியில் சாரியை

நடந்தனன் = நட + த்(ந்) + த் + அன் + அன்

நட - பகுதி

அன் சாரியை

த் - சந்தி பெற்று வந்தது

(ந்) - விகாரம்

த் - இறந்த கால இடைநிலை

அன் - சாரியை

அன் - விகுதி

நடந்தான் = நட + த் (ந்) + த்+ ஆன்

நட - பகுதி

அன் சாரியை

த்(ந்) - சந்தி பெறாது வந்தது

த் - இறந்த கால இடைநிலை

ஆன் - விகுதி

பதப்புணர்ச்சியில் சாரியை

ஒரு சொல்லுடன் மற்றொரு சொல் இணைவது பதப்புணர்ச்சி எனப்படும்.

புளி + காய் = புளியங்காய் – அம் சாரியை

நெல் + குப்பை = நெல்லின் குப்பை – இன் சாரியை

புளி + கறி = புளிக்கறி சாரியை பெறாது

வந்தவை

நெல் + குப்பை = நெல் குப்பை

உருபு புணர்ச்சியில் சாரியை

ஒரு சொல்லுடன் ஒரு வேற்றுமை உருபு இணைவது உருபு புணர்ச்சி எனப்படும்.

அவ் + ஐ – அவற்றை

(அவ்+அற்று+ஐ) – அற்றுச் சாரியை

பெற்று வந்தது.

தன் + ஐ – தன்னை – சாரியை பெறாது

வந்தது

ஆவினுக்கு - ஆ + இன் + உ + கு

இன், உ, அத்து

ஆகிய பல

சாரியைகள்

வந்தன.

மரத்தினுக்கு - மரம் + அத்து + இன் + கு

இவ்வாறு சொற்கள் புணரும்போது சாரியைகள் இடையில் தோன்றுவதைக் கண்டீர்கள்.

• சாரியை வகைகள்

சாரியைகள் இரண்டு வகைப்படும் என்பர்.

1) பொதுச் சாரியைகள்

2) எழுத்துச் சாரியைகள்

2.3.1 பொதுச் சாரியைகள் ஒரு பதம் விகுதியுடன் புணரும்போதோ, ஒரு பதம் மற்றொரு பதத்துடன் புணரும்போதோ, ஒரு பதம் வேற்றுமை உருபுடன் புணரும்போதோ இடையே சாரியைகள் தோன்றும். அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன் ஆகிய பதினேழும் பொதுச் சாரியைகள் என்று (நன்னூல் நூ. 243) குறிப்பிடுகின்றது. அச்சூத்திரத்தில் ‘பிற’ என்று சொல்லப்பட்டிருப்பதைக் கொண்டு தன், தான், தாம், ஆம், ஆ, து என்பனவும் பொதுச் சாரியைகளாகக் காட்டப்படுகின்றன.

எடுத்துக்காட்டு

மேலே குறித்தவற்றுள் அற்று, இற்று, அத்து போன்றவை இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன.

வந்தனன் வா+த்+(ந்)+த்+அன்+அன் அன் விகுதிப் புணர்ச்சியில் வந்தது

பதிற்றுப்பத்து பத்து + இற்று + பத்து இற்று பதப் புணர்ச்சியில் வந்தது

பலவற்றை பல + அற்று + ஐ அற்றுச் சாரியையும், அத்துச் சாரியையும்

வேற்றுமைப் புணர்ச்சியில் வந்தன

மரத்தால் மரம் + அத்து + ஆல்

தம், தான், ஆம், ன் ஆகிய சாரியைகள் எவ்வாறு சொற்களில் இணைந்து வருகின்றன என்பதைக் காணலாம்.

எல்லார்தம்மையும் - தம் – சாரியை

அவன்தான் - தான் – சாரியை

புற்று + சோறு – புற்றாஞ்சோறு - ஆம் – சாரியை

ஆன் (பசு) – ன் – சாரியை

இவ்வாறு சாரியைகள் சொல்லுக்கு இடையிலும் சில இடங்களில் சொல்லுக்கு இறுதியிலும் சார்ந்து நின்று வருவதால் இவை பொதுச் சாரியைகள் என்றாயின.

2.3.2 எழுத்துச் சாரியை உயிர், மெய் முதலான எழுத்துக்களைச் சுட்டும்போது அந்த எழுத்துக்களோடு சில சாரியைகளைச் சேர்த்துச் சொல்லுதல் இலக்கண மரபு.

அ என்ற எழுத்தை அகரம் என்று சொல்லுதல்

ஆ என்ற எழுத்தை ஆகாரம் என்று சொல்லுதல்

அ, ஆ என்ற எழுத்துக்களைச் சுட்ட கரம், காரம் என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டன. அல்லவா? அந்த இரண்டு சொற்களும் (கரம், காரம்) சாரியைகள் ஆகும். இவை எழுத்தைச் சுட்ட வந்ததால் எழுத்துச் சாரியை என்பர். ஏனைய எழுத்துகளைச் சுட்டி உரைக்க வரும் சாரியைகளைக் கீழே காணலாம்.

எழுத்துக்கள் சாரியை பெயர்

குறில் எழுத்துகள்

அ, இ, உ கரம் அகரம், இகரம், உகரம்…

நெடில் எழுத்துகள்

ஆ, ஈ, ஊ காரம் ஆகாரம், ஈகாரம், ஊகாரம்

ஐ, ஓள காரம்/கான் ஐகாரம் ஒளகாரம்

ஐகான் ஒளகான்

மெய் எழுத்துகள் அ க,ச,ட,த,ப,ற

ஆய்தம் கான்/கேனம் அஃகான் அஃகேனம்

உயிர்மெய்யெழுத்துகள் கரம் ககரம், சகரம்,ஞகரம்….

மெய் எழுத்தைக் க எனக் குறிப்பிடுவதோடு ககரம் எனவும் குறிப்பிடலாம். அவ்வாறு குறிப்பிடும் போது அ, கரம் என இரு சாரியைகள் சேர்ந்து வருகின்றன எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு எழுத்துகளைச் சுட்டுவதற்குப் பயன்படும் கரம், காரம், கான், கேனம் ஆகியவை சாரியைகள் என்று அழைக்கப்படுகின்றன. எழுத்துகளுள் உயிர்மெய் நெடில்கள் சாரியை சேர்த்து வழங்கப்படுவதில்லை என்பதை அறியவும்.

2.4 உவம உருபுகள்

இனி, இடைச்சொல் வரிசையில் நான்காவதாக உள்ள உவம உருபுகள் பற்றிக் காணலாம்.

இரு பொருள்களுக்கு இடையே ஒப்புமையை உணர்த்துவதற்காக உவமைக்கும் பொருளுக்கும் இடையில் வரும் இடைச்சொல்லை உவம உருபு என்று கூறுகிறோம்.

2.4.1 உவமை ஒரு பொருளோடு மற்றொரு பொருளுக்கு உள்ள ஒப்புமையை எடுத்துக்கூறும்போது அது உவமை ஆகிறது.

எடுத்துக்காட்டு

மொழியின் இனிமையைச் சுட்ட விரும்பிய ஒருவன் ஒப்புமை நோக்கில் தேன் போன்ற மொழி என்று கூறும்போது மொழிக்குத் தேன் உவமை ஆகிறது.

இத்தொடரில் தேன் – உவமை; மொழி – பொருள்; ‘போன்ற’ என்பது உவம உருபு.

2.4.2 உவம உருபுகள் நன்னூல் – 366ஆம் சூத்திரம், உவம உருபுகளைப் பட்டியல் போட்டுக் காட்டுகிறது. போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர், நிகர், அன்ன, இன்ன என்னும் பன்னிரண்டும் இவை போல்வன பிறவும் உவம உருபுகள் ஆகும் என்று கூறுகிறது.

இவ்வுருபுகள் அனைத்தும் ஒப்புமைப் பொருளையே உணர்த்தி நிற்பதைக் காணலாம்.

எடுத்துக்காட்டு

தளிர் புரை மேனி (தளிர் போலும் மென்மையான உடல்)

செவ்வான் அன்ன மேனி (செவ்வானத்தைப் போன்ற சிவந்த உடல்)

2.5 தொகுப்புரை

வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்து நின்று பொருளை வேறுபடுத்திக் காட்டுகின்றன. வினைச்சொல்லில் இறுதியில் நிற்கும் விகுதிகளும் இடையில் நிற்கும் காலம் காட்டும் இடைநிலைகளும் பொருள் தெளிவினைத் தந்து நிற்கின்றன. சொல்லைச் சார்ந்து இயைந்து வரும் சாரியைகளும் ஒப்புமைப் பொருளை உணர்த்தும் உவம உருபுகளும் செய்யுள் வழக்கிலும் உலகியல் வழக்கிலும் இடைச்சொற்களாக சிறந்து விளங்குகின்றன. இவற்றை இந்தப் பாடம் விளக்கியிருக்கிறது.

பாடம் - 3

இடைச்சொல் வகைகள் - II

3.0 பாட முன்னுரை

எட்டு வகை இடைச்சொற்களுள் வேற்றுமை உருபுகள், வினை உருபுகள், சாரியை உருபுகள், உவம உருபுகள் என்னும் நான்கு வகை இடைச்சொற்களைப் பற்றி இதற்கு முந்தைய பாடத்தில் பார்த்தோம். இந்தப் பாடத்தில் எஞ்சிய நான்கு வகை இடைச்சொற்கள் பற்றிக் காணலாம்.

தத்தம் பொருளை உணர்த்தி வருபவை, இசை நிறைக்க வருபவை, அசை நிலையாக வருபவை, குறிப்பால் பொருள் உணர்த்துபவை ஆகிய இடைச்சொற்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

3.1 இடைச்சொல் பொருள்கள்

இடைச்சொல் தனியே நின்று பொருள் உணர்த்தாது என்பதை முன்பே அறிவீர்கள். பெயரோடு அல்லது வினையோடு சேர்ந்து நின்று, சில இடைச்சொற்கள் சில பொருள்களை உணர்த்தும். இவற்றையே தத்தம் பொருளை உணர்த்துவன என நன்னூலார் குறிப்பிடுகின்றார். (நூற்பா 421) பொருள் உணர்த்தும் சில இடைச்சொற்களே அசைநிலையாகவும் இசை நிறைக்கவும் வருவது உண்டு.

தெரிநிலை, தெளிவு, ஐயம், முற்று, எண், சிறப்பு, எதிர்மறை, எச்சம், வினா, விருப்பம், ஒழிந்தசொல், பிரிநிலை, கழிவு, ஆக்கம் ஆகியவை அவ் இடைச்சொற்களுக்குரிய பொருள்கள் ஆகும். இனி எடுத்துக்காட்டுகள் கொண்டு அவ்விடைச் சொற்கள் உணர்த்தும் பொருள்களைப் புரிந்து கொள்ளலாம்.

3.1.1 ஏகார இடைச்சொல்ஏகார இடைச்சொல் பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம் எனும் பொருள்களை உணர்த்தி நிற்கும். இச்சொல் அசைநிலையாகவும் இசைநிறைக்கவும் வருவதுண்டு. எடுத்துக்காட்டு

1)பிரிநிலை

இவனே வெற்றி பெற்றான் – இதில் ஏ என்பது பலருள் ஒருவனைப் பிரித்துச் சுட்டுகிறது. ஆகவே பிரிநிலை.

2)வினா

நீயே சொன்னாய்? இதில் நீயே என்பது நீயோ என்னும் வினாப் பொருள் உணர்த்துகிறது.

3)எண்

அறமே பொருளே இன்பமே வீடே எனப் பொருள் நான்கு – இதில் அறமும் பொருளும் இன்பமும் வீடும் என எண்ணிச் சொல்வதால் ஏ எண்ணுப் பொருள் உணர்த்துகிறது.

4)தேற்றம்

செய்யவே செய்தான். இதில் ஏ தேற்றப் (உறுதிப்) படுத்துகின்றமையால் தேற்றம் (நிச்சயம்).

5)இசை நிறை

ஏயே இவளொருத்தி பேடி! இதில் வரும் ஏ, ஏ என்பன வேறு பொருள் இல்லாமல் இசையை மட்டும் நிறைத்து நிற்கின்றன.

6)ஈற்றசை

‘எழுத்து அது முதல் சார்பென விரு வகைத்தே’ (நன்னூல், நூற்பா-58) – இதில் ஏ ஈற்று அசையாக நிற்கிறது. அதாவது வேறுபொருள் இல்லாமல் வெறும் அசையாக நிற்கிறது.

3.1.2 ஓகார இடைச்சொல்‘ஓ’ என்னும் இடைச்சொல் ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை என்னும் பொருள்களில் வரும். அசைநிலையாகவும் வரும். எடுத்துக்காட்டு

1)ஒழியிசை

படிக்கவோ வந்தாய் – இது படிப்பதற்கு வரவில்லை, விளையாட வந்தாய் என்ற ஒழிந்த (மறைந்திருக்கிற) பொருளைத் தந்தது. ஆகவே ஒழியிசை.

2)வினா

நீயோ கண்ணன்? இதில் ஓ வினாப் பொருளில் வந்தது.

3)சிறப்பு

ஓ ஓ கொடியது – இதில் ஓ இழிவு சிறப்புப் பற்றி வந்தது. (மிக இழிவு)

ஓ ஓ பெரியர் – இதில் ஓ உயர்வு சிறப்புப் பற்றி வந்தது. (மிக உயர்வு)

4)எதிர்மறை

அவனோ கேட்பான் – இதில் அவன் கேட்க மாட்டான் என்று பொருள்படுதலால் ஓ எதிர்மறை.

5)தெரிநிலை

அலியை நோக்கி, இது ஆணோ? அதுவுமன்று; பெண்ணோ? அதுவுமன்று. இக்கூற்றில் அலி என்பது தெரியநிற்றலால் ஓ தெரிநிலை.

6)கழிவு

ஓ ஓ கெட்டேன் – இதில் கடந்த நிகழ்ச்சிக்கு வருந்துவதால் ஓ கழிவுப் பொருளில் வந்தது.

7)பிரிநிலை

இவனோ கொண்டான் – பலருள் ஒருவனைப் பிரித்துக் காட்டுவதால் ஓ பிரிநிலை.

8)அசை நிலை

பார்மினோ! (பாருங்கள்) இதில் ஓ வேறொரு பொருளுமின்றி அசையாகவே நிற்கிறது.

3.1.3 என, என்று – இடைச்சொற்கள்என, என்று ஆகிய இந்த இரண்டு இடைச்சொற்களும் வினை, பெயர், குறிப்பு, இசை, எண், பண்பு ஆகியவற்றை உணர்த்தும் சொற்களோடு இயைந்து (சேர்ந்து) வரும். எடுத்துக்காட்டு

1)வினை:

மகன் பிறந்தான் எனத் தந்தை மகிழ்ந்தான்.

மகன் பிறந்தான் என்று தந்தை மகிழ்ந்தான். வினையொடு இயைந்து வந்தது.

2)பெயர்:

அழுக்காறு என ஒருபாவி – அழுக்காறு என்று ஒருபாவி – இங்கு அழுக்காறு என்னும் பெயரோடு (பெயர்ச்சொல்லோடு) இயைந்து வந்தன.

3)குறிப்பு:

‘பொள்ளென’ ஆங்கே புறம்வேரார் பொள்ளென்று ஆங்கே புறம்வேரார் – பொள் என்ற விரைவுக்குறிப்பு

மொழியோடு இயைந்து வந்தன.

4)இசை:

ஒல்லென ஒலித்தது. ஒல்லென்று ஒலித்தது. ஒல் என்ற இசைக்குறிப்புச் சொல்லோடு வந்தன.

5)எண்:

நிலமென நீரென தீயென வளியென வானெனப் பூதங்கள் ஐந்து’. நிலமென்று நீரென்று தீயென்று வளியென்று வானென்று பூதங்கள் ஐந்து – எண்ணொடு இயைந்தன.

6)பண்பு:

வெள்ளென விடிந்தது. வெள்ளென்று விடிந்தது – பண்பைக் குறிக்கும் சொல்லோடு இயைந்தன.

3.1.4 உம்மை இடைச்சொல்உம் என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் என்னும் எட்டுப் பொருளில் வரும். எடுத்துக்காட்டு

1)எதிர்மறை :நாள் தவறினும் நாத்தவறான் – இதில் நாள் தவறாது என்று பொருள் படுதலால் உம்மை எதிர்மறை.

2)சிறப்பு :அறிஞருக்கும் எட்டாப்பொருள் – இதில் பல நூல்களையும் கற்ற அறிஞருக்கும் என்று அறிஞரை உயர்த்துவதால் உயர்வு சிறப்பு

நாயும் தின்னாச் சோறு. இதில் கக்கியதைத் தின்னும் நாயும் என்று நாயை இழிவு படுத்துவதால் இழிவு சிறப்பு.

3)ஐயம் :பத்தாயினும் எட்டாயினும் கிடைக்கும். இதில் ஒன்றைத் துணிந்து கூறாமையால் ஐயத்தை உணர்த்தியது.

4)எச்சம் :இராமனும் வருந்தினான் – இதில் இராமன் வருந்துமுன் இலக்குமணனும் வருந்தினான் என்று பொருள் கொண்டால் – இது இறந்தது தழீஇய எச்சவும்மை.

:

இராமன் வருந்திய பின் இலக்குமணனும் வருந்தினான் என்று பொருள் படின் – இது எதிரது தழீஇய எச்சவும்மை.

5)முற்று :எல்லாரும் வந்தார் – இது முற்றுப் பொருளைத் தருதலால் இது முற்றும்மை.

6)எண் :நிலமும் நீரும் தீயும் வளியும் வெளியுமெனப் பூதம் ஐந்து – இதில் பொருள்களை எண்ணுதலால்

எண்ணும்மை.

7)தெரிநிலை :அலியை நோக்கி, ‘ஆணும் அன்று பெண்ணும் அன்று’ என்று சொன்னால் அலி என்பது தெரிய நிற்றலால் – தெரிநிலை.

8)ஆக்கம் : தஞ்சாவூர் நகரும் ஆயிற்று – இதில் ஊராயிருந்த தஞ்சாவூர் இப்போது நகரம் ஆயிற்று என்று ஆக்கப்பொருள் தருதலால் – ஆக்கம். (வளர்ச்சி)

மேலே நாம் கண்ட முற்றும்மை சில இடங்களில் எச்சப்பொருளைத் தருவதும் உண்டு. எல்லாரும் வந்திலர் – இதில் சிலர் வந்தனர் என்ற எஞ்சிய பொருள் – எச்சப் பொருள் அமைந்துள்ளது.

3.1.5 சில எண்ணிடைச் சொற்கள் நாம் இதுவரை அறிந்துள்ள எண் இடைச்சொற்கள் ஏ, ஓ, என, என்று, உம், ஆகியனவாகும். இவற்றுடன் எனா, என்றா, ஓடு, ஒடு ஆகியவையும் எண் இடைச்சொற்களாக வரும். இவை பற்றிய சில சிறப்பு இலக்கணங்களைக் காண்போம்.

(அ) சொற்களிடையே எண் இடைச்சொல் மறைந்து வருவது செவ்வெண் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

கண்ணனும் முருகனும் வந்தனர் என்பதைக் கண்ணன் முருகன் இருவரும் வந்தனர் என உம்மையை நீக்கிச் சொல்வது செவ்வெண். இவ்வாறு செவ்வெண் வரும்போது இருவரும் எனும் தொகைச் சொல் இடம் பெறும்.

அதேபோல் ஏ, என்றா, எனா என்னும் எண்ணிடைச் சொற்கள் எண்ணி வரும்போதும் தொகைச்சொல் வரும்.

எடுத்துக்காட்டு:

சாத்தனே கொற்றனே இருவரும் வந்தனர்.

சாத்தன்என்றா கொற்றன்என்றா இருவரும் வந்தனர் .

சாத்தன் எனா கொற்றன்எனா இருவரும் வந்தனர்.

(ஆ) உம், என்று, என, ஓடு எனும் இந்நான்கு எண் இடைச்சொற்களும் எண்ணிச் சொல்லும்போது தொகை பெற்றும் வரலாம். பெறாமலும் வரலாம்.

எடுத்துக்காட்டு:

சாத்தனும் கொற்றனும் இருவரும் வந்தனர்.

சாத்தனும் கொற்றனும் வந்தனர்.

சாத்தனோடு கொற்றனோடு இருவர் உளர்.

சாத்தனோடு கொற்றனோடு உளர்.

சாத்தனும் கொற்றனும் ஆகிய இருவர் உள்ளனர்

என்பது பொருள்

என்று, என, ஒடு என்னும் இம்மூன்று இடைச்சொற்களும் எண்ணப்படும் பொருள்தோறும் நிற்கும். சில சமயங்களில் ஓரிடத்தில் நிலைத்து நின்று, எண்ணப்படும் பொருள்தோறும் சென்றும் பொருந்தும்.

எடுத்துக்காட்டு:

என்று

‘வினைபகை என்று இரண்டின் எச்சம்’

(குறள் : 674)

இதில் என்று என்னும் இடைச்சொல் தான் நின்ற இடத்திலிருந்து பிரிந்து (விலகி) வினை என்று, பகை என்று என எண்ணப்படும் பொருள்கள்தோறும் சென்று பொருந்தியது.

என என்பதும் ‘என்று’ போலவே செயல்படும்.

‘பகைபாவம் அச்சம் பழியென நான்கும்’

(குறள் :146)

இங்கே, என – என்பது ஓரிடத்தில் நின்று பகையென, பாவமென, அச்சமென, பழியென, என்று எண்ணப்படும் பொருள்தோறும் சென்று பொருந்தியது.

ஒடு

‘பொருள் கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்’

(குறள் : 675)

இங்கே ஒடு – என்பது தான் இருந்த இடத்திலிருந்து (பிரிந்து) சென்று பொருளொடு, கருவியொடு, காலத்தொடு, வினையொடு, இடனொடு என எண்ணப்படும் பொருள்தோறும் சென்று பொருந்தியது.

(ஈ) எண்ணிடைச் சொற்கள் வினைச்சொல்லோடு வந்தாலும் பெயர்ச்சொல்லோடு வருவதுபோலவே வரும்.

எடுத்துக்காட்டு:

கற்றும் கேட்டும் அறிவு பெற்றார் (உம்மை)

உண்ணவென உடுக்கவென வந்தான் (என)

3.2 மேலும் சில இடைச்சொற்கள்

(அ) இதுவரை கண்டவை அல்லாத, பெரும்பாலும் செய்யுளில் வருகின்ற சில இடைச்சொற்களையும் அவற்றின் பொருள்களையும் சில எடுத்துக்காட்டுகளுடன் அட்டவணையிற் காணலாம்.

இடைச்சொல் பொருள் எடுத்துக்காட்டு

தில் ஆசை, காலம், ஒழிந்த சொல்லின் பொருள்

(சொல்லாமல் விட்டுப் போன பொருள்) “அரிவையைப் பெறுகதில்அம்ம யானே” (தலைவியைப்

பெறுவேனாக என்ற ஆசையை உணர்த்துகிறது.)

மன் ஒழிந்த சொல்லின் பொருள், ஆக்கம்,

கழிதற் பொருள், மிகுதிப் பொருள், நிலை

பெறுதற் பொருள், இவற்றுடன் அசை நிலையாகவும் வரும். “கூரியதோர் வாள் மன்”

இப்போது ஒடிந்து விட்டது

எனும் ஒழிந்த சொற்பொருளை

உணர்த்துகிறது.

மற்று

வினையை மாற்றுதற் பொருள், வேறு

என்னும் பொருள் ஆகியவற்றைத் தரும்.

அசை நிலையாகவும் வரும். “மற்றொன்று சூழினும்”

- வேறொன்று எனும்

பொருளை உணர்த்துகிறது.

மற்றை முதலில் சொன்ன

பொருளுக்கு இனமான

பொருளைக் குறிப்பது இரண்டு ஆடைகள் உள்ளன. ஒன்றைக் கொடுக்கும்போது

‘மற்றையது கொண்டுவா’

என்றால் முதலில் கண்ட

பொருளுக்கு இனமான

மற்றொரு ஆடையைக் குறிக்கும்.

கொல் ஐயப்பொருள் தரும்

அசைநிலையாகவும்

வரும் அவன் கண்ணன் கொல்

முருகன் கொல் – ஐயப் பொருள்.

அந்தில்

ஆங்கு இடப்பொருள் தரும்.

அசை நிலையாகவும்

வரும் “ஆங்காங்கு ஆயினும் ஆக”- இடப்பொருள்

அம்ம ‘கேளுங்கள்’ எனும்

பொருள் தரும்.

உரையசையாகவும்

வரும் “அம்ம வாழிதோழி” ஒன்று சொல்கிறேன், கேள் எனும் பொருள் அமைந்துள்ளது.

ஆ) மேலே காட்டப் பெற்றவை அன்றி நன்னூல் உரையாசிரியர் காட்டும் வேறு சில இடைச்சொற்களும் உண்டு. அவற்றுள் சிலவற்றைக் காணலாம்.

1) சுட்டு, வினா = சுட்டுப்பொருளை உணர்த்தும் அ, இ, உ என்பனவும், வினாப் பொருளை உணர்த்தும் எ, ஏ, யா, ஆ, ஓ என்பனவும் இடைச்சொற்களே ஆகும்.

சுட்டு : அவன், இவள், உவை

வினா : எவன், ஏவன், யாது

அவளா, இவரோ

2) முன், பின் எனும் இடைச்சொற்கள் காலப் பொருளையும் இடப் பொருளையும் தருவன.

முன் பிறந்தான், பின் பிறந்தான் – காலப் பொருள்

முன் அமர்ந்தான், பின் அமர்ந்தான் – இடப் பொருள்

3) இனி எனும் சொல் கால, இடங்களின் எல்லைப் பொருளைத் தருவது.

எடுத்துக்காட்டு

இனிச் செய்வான் (காலப் பொருள்)

இனி நம் தெரு (இடப்பொருள்)

4) ஐயோ, அந்தோ

எனும் சொற்கள் : இவை இரக்கப் பொருள் தருவன.

ஐயோ – அச்சப் பொருளும் தருவது

5) சீ, சிச்சீ எனும்

சொற்கள்: இவை இகழ்ச்சிப் பொருள் தருவன.

3.3 இசை நிறை

இசை நிறை என்பது வேறு பொருளை உணர்த்தாது செய்யுளில் ஓசையை நிறைத்து (முழுமையாக்கி) நிற்பது, இசைநிறைக்கும் இடைச்சொற்களாக ஏ, ஒடு, தெய்ய ஆகியன குறிக்கப்படுகின்றன.

ஏகார இடைச்சொல் ஆறு பொருளில் வரும் என்பதை முன்னரே கண்டோம். அவற்றில் ஒன்று இசைநிறை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

எடுத்துக்காட்டு

எழுத்து அது முதல் சார்பென விரு வகைத்தே (நன் – 58)

ஒடு – இசைநிறைத்தல்

ஒடு என்னும் இடைச்சொல் வேறு பொருள் தராது இசை நிறைக்க வந்துள்ளது.

எடுத்துக்காட்டு

விதைக்குறு வட்டில் போதொடு பொதுள

விதை உடைய தட்டில் மலர் நிறைந்துள்ளது என்பது இதன் பொருள். இங்கு ஒடு என்பது வேறு பொருள் தராது இசைநிறைத்தது.

3.4 அசை நிலை

அசை நிலை என்பது வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச் சொல்லோடும் வினைச்சொல்லோடும் சேர்த்துச் சொல்லப்படுவது. பொருள் இல்லாததாக வரும் சொல் அசைச்சொல். பேச்சுத்தொடரில் இடம்பெறும் அசைநிலையை உரையசை என்பர்.

ஏ, ஓ என்பன அசைநிலையாகவும் வரும் என முன்பு எடுத்துக்காட்டுடன் கண்டோம். ஏனைய அசைநிலை இடைச்சொற்களை இங்குக் காணலாம். (உரையசை கட்டுரையில் வரும் அசைநிலை. கட்டுரை – பேச்சு)

3.4.1 அசைநிலை இடைச்சொற்கள்அசைநிலை இடைச்சொல் எடுத்துக்காட்டு

மன் “அது மன் கொண்கன்தேரே”

மற்று “மற்று என்னை ஆள்க”

கொல் “கற்றதனால் ஆய பயன்என் கொல்”

அந்தில் “அந்தில் கழலினன் கச்சினன்”

ஆங்கு “ஆங்கத் திறனால்”

அம்ம “அது மற்றம்ம” (பேச்சில் வரும் அசைநிலை

- உரையசை)

மா “உப்பின்று புற்கை உண்கமா கொற்கையோனே” (மா என்னும் அசைச்சொல் வியங்கோளை அடுத்து வருவது. உப்பின்றிச் சோறு உண்க என்பது பொருள்)

தான் நீதான் வர வேண்டும்.

மேற்காட்டிய எல்லா எடுத்துக்காட்டுகளிலும் இடைச்சொற்கள் வேறு பொருள் இன்றி அசைநிலையாக வருவதை உணரலாம்.

3.4.2 முன்னிலை அசைச்சொற்கள் சில அசைச் சொற்கள் முன்னிலை இடத்தில் வருபவை.

மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ என்னும் பத்து இடைச்சொற்களும் முன்னிலை இடத்து வரும்.

எடுத்துக்காட்டு

கேண்மியா

கேண்மோ கேள் என்று பொருள்

கேண்மதி

இவை எல்லாம் பழைய வழக்கு; இக்காலத்தே இவை வழக்கு ஒழிந்தன. எனினும் இலக்கியங்களில் காணலாம்.

3.4.3 எல்லா இடத்திலும் வரும் அசைச் சொற்கள்யா, கா, பிற, பிறக்கு, போ, சின், போலும், இருந்து, இட்டு, தாம், தான், போன்ற பல அசைச்சொற்கள் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்களிலும் வரும். எடுத்துக்காட்டு

போலும் – மகிழ்ந்தனை போலும்

இருந்து – எழுந்திருந்தேன்

தாம் – நீர்தாம்

3.5 குறிப்பால் பொருள் உணர்த்தும் இடைச்சொற்கள்

பொருளை வெளிப்படையாக உணர்த்தாமல் குறிப்பாக உணர்த்தும் சில குறிப்புச் சொற்கள் இடைச்சொற்களாகக் குறிக்கப்படுகின்றன.

3.5.1 ஒலிக் குறிப்பாக வரும் இடைச்சொற்கள்அம்மென, இம்மென, கோவென, சோவென, துடுமென, ஒல்லென, கஃறென, சுஃறென, கடகடவென, கலகலவென, திடுதிடுவென, நெறுநெறுவென, படபடவென ஆகிய இவை ஒலிக்குறிப்புச் சொற்கள். எடுத்துக்காட்டு

கோவெனக் கதறி அழுதான்

சோவென மழை பெய்தது

கலகலவெனச் சிரித்தாள்

நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது

3.5.2 அச்சக் குறிப்பைத் தரும் இடைச்சொற்கள்துண்ணென, துணுக்கென, திடுக்கென, திக்கென போன்றவை அச்சக் குறிப்பை வெளிப்படுத்தும் சொற்கள். எடுத்துக்காட்டு

அவள் துணுக்குற்றாள்

திடுக்கெனத் தூக்கிப் போட்டது

துண்ணெனத் துடித்தது நெஞ்சம்

3.5.3 விரைவுக் குறிப்புச் சொற்கள்பொள்ளென, பொருக்கென, கதுமென, சடக்கென, மடக்கென, திடீர் என போன்றவை விரைவுப் பொருளில் வரும். எடுத்துக்காட்டு

பொள்ளெனப் பொழுது விடிந்தது

திடீரென மறைந்து விட்டான்

பிற விரைவுக் குறிப்புச் சொற்களையும் இலக்கியங்கள் வழி அறிந்து கொள்ளலாம்.

இன்று வழக்கில் இல்லாத பல ஒலிக்குறிப்புச் சொற்கள் இலக்கியங்களில் மட்டுமே காணக்கிடக்கின்றன. இலக்கியங்களைப் படிக்கும்பொழுது அச்சொற்களின் குறிப்புப் பொருளை அறிந்து கொள்ளலாம்.

3.6 தொகுப்புரை

இடைச்சொல் வகைகள் பகுதி இரண்டில், நான்கு வகை இடைச்சொற்களின் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. ஏகாரம் ஓகாரம் முதலிய இடைச்சொற்கள் இலக்கியங்களிலும் வழக்குகளிலும் எவ்வெப் பொருள்களில் பயின்று வந்துள்ளன என்பது விரிவாக எடுத்துரைக்கப் பட்டிருக்கிறது. ஒலிக்குறிப்புச் சொற்கள் சில இன்று புதிதாக வழக்கில் வந்துள்ளன. இவற்றையெல்லாம் இந்தப் பாடம் விளக்கியிருக்கிறது.

பாடம் - 4

உரிச்சொல்லின் பொது இலக்கணம்

4.0 பாட முன்னுரை

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனச் சொற்கள் நான்கு வகைப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். சென்ற பாடத்தில் ‘இடைச்சொல்’ குறித்து விளக்கப்பட்டது. இந்தப் பாடத்தில் உரிச்சொல் பற்றிக் கூறப்படுகிறது.

4.1 உரிச்சொல்

உரிச்சொல் என்பதை உரி + சொல் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும். உரி என்பது உரிய (உரிமை) என்ற பொருளைத் தருவதாகும். உரிச்சொல் எதற்கு உரியது என்றால் செய்யுளுக்கு உரியதாகும். உரிச்சொற்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கில் பயின்று வராத சொற்களாகும்.

உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் உரிய சொல் என்றும் கூறுவார்கள். உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்கும்.

4.1.1 உரிச்சொல்லின் பொது இலக்கணம்உரிச்சொல்லின் பொது இலக்கணத்தை நன்னூலார், பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி

ஒரு குணம் பலகுணம் தழுவிப் பெயர் வினை

ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்

என்று தமது நன்னூலில் (நூற்பா 442) குறிப்பிடுகின்றார்.

1. உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயர் ஆகும்.

2.ஒரு சொல் ஒரு பண்பை உணர்த்தலாம்; ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தலாம்.

3.உரிச்சொல், பெயர்ச்சொற்களோடும் வினைச்சொற்களோடும் சேர்ந்து அவற்றின் பண்பை உணர்த்த வரும்.

4. உரிச்சொல் செய்யுளுக்கு உரிய சொல்லாக வரும்.

எடுத்துக்காட்டு:

நனி பேதை - நனி எனும் உரிச்சொல் பேதை எனும் பெயர்ச் சொல்லோடு சேர்ந்து வந்தது.

நனி = மிகுதி, பேதை = அறிவற்றவன்

சாலத் தின்றான் - சால எனும் உரிச்சொல் தின்றான் எனும் வினைச்சொல்லோடு சேர்ந்து வந்தது.

சால = மிகவும்

மல்லல் ஞாலம் - மல்லல் எனும் உரிச்சொல் வளம் எனும் ஒரு பண்பை உணர்த்தும்.

கடி மலர்

கடி நகர் - கடி எனும் உரிச்சொல் முறையே மணம் மிக்க மலர்.

காவல் மிக்க நகர் எனப் பல பண்புகளை உணர்த்துகிறது.

4.1.2 உரிச்சொல் உணர்த்தும் பண்புகள்உரிச்சொல் உணர்த்தும் பண்புகள் இரண்டு ஆகும். அவை :

1. குணப் பண்பு

2. தொழிற் பண்பு

உரிச்சொல் பல்வேறு பண்புகளை உணர்த்தும் என முன்னர்க் கண்டோம். அவற்றுள் பொருளின் பண்புகளை உணர்த்துவது குணப்பண்பு ஆகும்.

எடுத்துக்காட்டு:

மாதர் வாள் முகம்

இங்கு மாதர் எனும் உரிச்சொல் விருப்பம் எனும் குணத்தை உணர்த்துகிறது.

(மாதர்= விரும்பத்தக்க, வாள் முகம் = ஒளிமிக்க முகம்)

இமிழ் கடல்

இங்கு இமிழ் எனும் உரிச்சொல் ஒலித்தல் எனும் தொழிற்பண்பை உணர்த்துகிறது.

4.2 உயிர்ப்பொருள், உயிர் அல்லாத பொருள்

உரிச்சொல்லின் பொது இலக்கணத்தைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். இனி உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின் விளக்கங்களைக் காண்போம்.

4.2.1 உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின் பகுப்பு

ஓரறிவு உயிர் முதலாக ஐந்து அறிவு உயிர் ஈறாக உள்ள அனைத்தும் உயிர் உடைய பொருள்கள் ஆகும். இலக்கண நூலார் உயிர்களை ‘அறிதல் உணர்வு’ அடிப்படையில் பகுத்துள்ளனர். மெய்யால் அதாவது உடம்பால் உற்று உணரும் உணர்ச்சி மட்டுமே கொண்ட உயிரினங்கள் ஓரறிவு உடையவாகும். மெய்யோடு நாக்கு, மூக்கு, கண், செவி ஆகிய ஐம்பொறிகளாலும் அறியும் ஆற்றலுடைய மனித உயிர்களை ஐந்து அறிவு உடையவாகும் என்கிறார் நன்னூலார். தொல்காப்பியர் மனம் என்பதையும் ஓர் அறிவாகக் கொண்டு அதனை ஆறாவது அறிவு என்று கூறுகின்றார்.

உயிர் இல்லாத உடம்பு முதலான உலகத்துப் பொருள்கள் எல்லாம் உயிர் அற்ற பொருள்களாகும்.

இதுவரை உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின் பகுப்பு முறையை அறிந்து கொண்டீர்கள். இனி அவ்விரு பொருள்களின் வகைகளை விரிவாகக் காண்போம்.

4.3 உயிர் உடைய பொருள் வகைகள்

உயிர் உடைய பொருள்களை ஐந்து வகைகளாகப் பிரித்துள்ளார்கள் என்பதை முன்னரே கண்டோம். இப்பகுதியில் ஐந்து வகை உயிர்களையும் விளக்கமாகப் பார்ப்போம்.

• ஓர் அறிவு உயிர்

மெய் அதாவது உடம்பால் தொடுதல் உணர்வை மட்டுமே உடைய உயிர்கள் ஓர் அறிவு உயிர்கள்.

எடுத்துக்காட்டு: செடி, கொடி, புல், மரம்

• ஈரறிவுயிர் (இரண்டு அறிவு உயிர்)

மெய் உணர்வோடு, சுவை அறியும் நாக்கு உடையவை இரண்டு அறிவு உடைய உயிர்களாகும்.

எடுத்துக்காட்டு: சிப்பி, சங்கு

• மூவறிவுயிர் (மூன்று அறிவு உயிர்)

மெய், நாக்கு ஆகியவற்றோடு நாற்றத்தை (வாசனை) அறியும் மூக்கு உடையவை மூன்று அறிவு பெற்ற உயிர்கள்.

எடுத்துக்காட்டு: கறையான், எறும்பு

• நாலறிவுயிர் (நான்கு அறிவு உயிர்)

மெய், நாக்கு, மூக்கு ஆகியவற்றோடு காணும் ஆற்றல் பெற்ற கண் உடைய உயிர்கள் நான்கு அறிவு பெற்றவை.

எடுத்துக்காட்டு: தும்பி, வண்டு

• ஐயறிவுயிர் (ஐந்து அறிவு உயிர்)

மெய், நாக்கு, மூக்கு, கண் ஆகியவற்றோடு கேட்கும் திறனுடைய செவி உடைய உயிர்கள் ஐந்தறிவு பெற்றவையாகும்.

எடுத்துக்காட்டு: விலங்குகள், பறவைகள், மனிதர்

இவ்வாறு ஐந்து வகைகளாக உயிர்ப் பொருள்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

4.4 உயிர் உடைய பொருள்களின் பண்புகள்

இப்பகுதியில் உயிர் உடைய பொருள்களின் பண்புகள் விளக்கப்படுகின்றன. அதாவது, உயிர் உடைய பொருள்களின் பொதுவான குணங்களும் அவற்றிற்கு உரிய தொழில் பண்புகளும் (செய்கைகள்) விளக்கப்படுகின்றன.

4.4.1 உயிர் உடைய பொருள்களின் குணப்பண்புகள் உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று குறிப்பிடுகின்றார் நன்னூலார் (நூற்பா 452). அவையாவன: அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறைவு, பொறை, (பொறுமை) ஓர்ப்பு (தெளிவு), கடைப்பிடி, மையல் (மயக்கம்), நினைவு, வெறுப்பு, உவப்பு (மகிழ்வு), இரக்கம், நாண், வெகுளி (கோபம்), துணிவு, அழுக்காறு (பொறாமை), அன்பு, எளிமை, எய்த்தல் (சோர்வு), துன்பம், இன்பம், இளமை, மூப்பு, இகல் (பகை), வென்றி (வெற்றி), பொச்சாப்பு (பொல்லாங்கு), ஊக்கம், மறம், மதம் (வெறி), மறவி (மறதி) ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின் பண்புகளாகும்.

4.4.2 உயிர் உடைய பொருள்களின் தொழில் பண்புகள் உயிர் உடைய பொருள்களின் தொழில் பண்புகள் (குணங்கள்) ஐந்து. அவையாவன:

துய்த்தல் (அனுபவித்தல்), துஞ்சல் (தூங்குதல்), தொழுதல், அணிதல், உய்த்தல் (பிழைத்தல்) ஆகிய இக்குணங்கள் ஐந்தும் எல்லா உயிர் உடைய பொருள்களுக்கும் பொதுவானவையாகும். (நன்னூல், 453)

இனி உயிர் அற்ற பொருள்களின் பண்புகளையும் உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களுக்கு உரிய பொதுவான தொழில் பண்புகளையும் பார்ப்போம்.

4.5 உயிர் அல்லாத பொருள்களின் குணப் பண்புகள்

உயிர் அல்லாத பொருள்களின் பண்புகள் வட்டம், இருகோணம், முக்கோணம், சதுரம் முதலிய பலவகை வடிவங்களும், நறுநாற்றம், துர்நாற்றம் என்னும் இரு நாற்றங்களும், வெண்மை, செம்மை (சிவப்பு), கருமை, பொன்மை (மஞ்சள்), பசுமை என்னும் ஐந்து வண்ணங்களும், கைப்பு (கசப்பு), புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு (காரம்), இனிப்பு என்னும் ஆறு சுவைகளும், வெம்மை (வெப்பம்), தண்மை (குளிர்ச்சி), மென்மை, வன்மை, நொய்மை (நைதல்), திண்மை, இழுமெனல் (வழவழப்பு), சருச்சரை (சொரசொரப்பு) என்னும் எட்டு ஊறுகளும் (தொடு உணர்வுகளும்) உயிர் அற்ற பொருள்களின் பண்புகளாகும். (நன்னூல், 454)

4.5.1உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின் பொதுவான தொழில் பண்புகள்உயிர் உடைய பொருள்களுக்கும் உயிர் அற்ற பொருள்களுக்கும் உரிய பொதுவான தொழில் பண்புகளை இங்கே காண்போம். உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும். (நன்னூல், 455) ‘தோன்றல், மறைதல், வளர்தல், சுருங்கல், நீங்கல், அடைதல், நடுங்கல், இசைத்தல், ஈதல் என்பன எல்லாவற்றிற்கும் பொதுவானவையாகும்.

இசைத்தல் = ஒலித்தல்

எடுத்துக்காட்டு:

‘பிள்ளை பிறந்தான்’ – தோன்றல் எனும் தொழில் பண்பு

பிள்ளை எனும் உயிர்ப்பொருளுக்கு வளர்தல் போன்ற ஏனைய தொழில் பண்புகளும் பொருந்தி வருவதைக் காணுங்கள்.

அடுத்து, உயிர் அற்ற பொருள்களுக்கும் மேற்கூறியுள்ள பண்புகள் உள்ளன என்பதைக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளால் அறியலாம்.

எடுத்துக்காட்டு:

பிறை தோன்றிற்று – தோன்றல் எனும் தொழிற்பண்பு

மழை கொடுத்தது – ஈதல் எனும் தொழிற்பண்பு

உயிர் அல்லாத பல்வேறு பொருள்களுக்கும் மேற்கூறிய பண்புகள் பொருந்தி வருவதை நீங்களே சொல்லிப் பாருங்கள்.

4.6 தொகுப்புரை

இப்பாடம் உரிச்சொல்லின் பொது இலக்கணத்தை விளக்குகிறது. உரிச்சொற்கள் செய்யுளுக்கு உரியன என்றும் அவை பெயர், வினைகளைத் தழுவி வருபவை என்றும் தெரிவிக்கிறது. குணப்பண்பு, தொழிற்பண்பு எனும் பண்புகளை உணர்த்தும் தன்மை உடையவை உரிச்சொற்கள். அவ்வாறு உணர்த்தும்போது ஒரு பொருள் குறித்த பல சொல் எனவும் பல பொருள் குறித்த ஒரு சொல் எனவும் இருவகைப்படும்.

உயிர் உடைய பொருள்களின் வகைகளையும் அவற்றின் குணப்பண்புகளையும் தொழில் பண்புகளையும் தெளிவாக்கியிருக்கிறது.

உயிர் அற்ற பொருள்களின் குணப்பண்புகளையும், உயிர் உடையது மற்றும் உயிர் அற்றது ஆகிய இருபொருள்களுக்கும் பொதுவான தொழில் பண்புகளையும் இப்பாடம் விளக்கியிருக்கிறது.

பாடம் - 5

உரிச்சொல் வகைகள் - I

5.0 பாட முன்னுரை

உரிச்சொல், ஒரு குணம் குறித்த உரிச்சொல், பல குணம் குறித்த உரிச்சொல் என இரண்டு வகைப்படும் என்பதை முன்னரே கண்டோம். இந்தப் பாடத்தில் ஒருகுணம் குறித்த உரிச்சொல் பற்றிய விளக்கங்களைக் காண்போம்.

திரிசொல் என்னும் சொல்வகை பற்றி முன்பு படித்திருக்கிறீர்கள். இத்திரிசொற்களும் ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் வரும். திரிசொற்களுள் பெயர், வினை, இடை, உரி என நால்வகைச் சொற்களும் உண்டு. இங்கு நாம் காண்பது ஒரு பொருள் குறித்து வரும் பல உரிச்சொற்களை மட்டுமேயாகும்.

5.1 ஒரு குணம் தழுவிய உரிச்சொற்கள்

பல உரிச்சொற்கள் ஒரே குணம் (பொருள்) குறித்து வருவது உண்டு. மிகுதி என்னும் பொருள் தரும் உரிச்சொற்களையும், சொல் என்னும் பொருள் தரும் உரிச்சொற்களையும் ஓசை என்னும் பொருள் தரும் உரிச்சொற்களையும் நன்னூலார் வரிசைப்படுத்திக் கூறுகிறார்.

5.1.1 மிகுதி என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் ‘சால உறுதவ நனிகூர் கழிமிகல்’

(நன்னூல், நூற்பா 456)

சால, உறு, தவ, நனி, கூர், கழி என்னும் ஆறு உரிச்சொற்கள் ‘மிகுதி’ என்னும் ஒருகுணத்தை (பொருளை) உணர்த்தும் சொற்களாகும். இச்சொற்கள் பெயருக்கும் வினைக்கும் அடையாக வந்து மிகுதி என்னும் பொருள் தருகின்றன. உரிச்சொற்கள் செய்யுளுக்கு உரியன என்பது உங்களுக்குத் தெரியும். இவ் உரிச்சொற்கள் செய்யுளில் ‘மிகுதி’ என்ற பொருளில் எவ்வாறு பயின்று வந்துள்ளன என்பதை இனிக் காண்போம்.

• சால என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“சாலவும் நன்று” – மிகவும் நல்லது

• உறு என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“உறு பொருள் கொடுத்தும்” (மிகுதியான பொருளைக் கொடுத்தும்)

• தவ என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“ஈயாது வீயும் உயிர் தவப் பலவே”

(பிறர்க்குக் கொடுக்காமல் மறைந்து போகும் மக்கள் பலர் ஆவர்).

• நனி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்”

(கல்லாதவர்களும் மிக நல்லவர்களே, கற்றவர்கள் முன்னிலையில் தம் அறியாமை தோன்றப் பேசாது இருந்தால்)

• கூர் என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“களி கூர் மனம்” (மகிழ்ச்சி மிகுந்த மனம்)

இன்றைய எழுத்து வழக்கிலும் ‘அன்பு கூர்ந்து’, ‘அருள் கூர்ந்து’ என வருவதைக் காணலாம்.

• கழி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“கழி பேருவகை” (மிகப் பெரும் மகிழ்ச்சி)

செய்யுளில் ஐந்துக்கு அதிகமான சீர்களைத் கொண்ட நீண்ட அடியைக் ‘கழி நெடிலடி’ என்று குறிப்பிடுவதை அறிந்திருப்பீர்கள்.

மேற்காட்டிய சான்றுகளில் இடம் பெற்ற உரிச்சொற்கள் மிகுதி என்னும் பொருளைக் குறிப்பதைத் தெரிந்து கொண்டீர்கள்.

5.1.2 சொல் என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் ‘சொல்’ என்னும் பெயர்ச்சொல் வார்த்தை எனப் பொருள் படும். சொல் என்னும் வினைச் சொல்லுக்குச் சொல்வாய் என்பது பொருள். செய்யுளில் சொல் என்பதைக் குறிக்கப் பல உரிச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நன்னூலார் சொல் என்னும் ஒரு பொருளைக் குறிக்கின்ற பதினாறு உரிச்சொற்களைக் கூறியுள்ளார். (நூற்பா, 458) அவையாவன:-

மாற்றம், நுவற்சி, செப்பு, உரை, கரை, நொடி, இசை, கூற்று, புகறல், மொழி, கிளவி, விளம்பு, அறை, பாட்டு, பகர்ச்சி, இயம்பல்.

இப்பதினாறு உரிச்சொற்களும் செய்யுளில் பயின்று வந்துள்ளன. அவற்றுள் சிலவற்றை விளக்கமாகக் காண்போம்.

• மாற்றம் என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“கோவலர் வாய் மாற்றம் உணர்ந்து” (கோவலர்களின் வாய்ச்சொல்லை உணர்ந்து)

• நுவற்சி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“பொழுதறிந்து நுவல்” (காலம் அறிந்து சொல்)

• செப்பு என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“செப்பலுற்றேன்” (சொன்னேன்)

• உரை என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“உரைப்பார் உரைப்பவை எல்லாம்” (சொல்வார் சொல்பவை எல்லாம்)

• கரை என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“அறங்கரை நாவின்” (அறத்தைச் சொல்கின்ற நாவினையுடைய)

• நொடி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு

“ஆயிழையார் தாம் நொடியும் (பெண்கள் சொல்லும்)

• இசை என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“இசைத்தவை எல்லாம்” (சொன்னவை எல்லாம்)

• கூற்று என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“உற்றது நாங்கள் கூற உணர்ந்தனை” (நடந்ததை நாங்கள் சொல்ல உணர்ந்தாய்)

• புகறல் என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“புகன்ற அன்றியும்” (சொன்னவை அல்லாமலும்)

• மொழி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

”கண்டது மொழிமோ” (கண்ட உண்மையைச் சொல்வாயாக)

• கிளவி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“கிளக்கும் கிளவி” (சொல்லும் சொல்)

• விளம்பு என்னும் உரிச்சொல்

“விளம்பினர் புலவர்” (புலவர்கள் சொன்னார்கள்)

• அறை என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே!”

இதன்பொருள் ‘இறைவன் அடியைத் தொழுது சொல் இலக்கணத்தைச் சொல்லுவேன் என்பதாகும். அறைகுவன் என்றால் சொல்லுவேன் என்று பொருள்.

• பாட்டு என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“அறம் பாடின்று” அறநூல் சொல்லிற்று என்பது பொருள்.

• பகர்ச்சி எனும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“பகர்ந்தனர் புலவர்” புலவர்கள் சொன்னார்கள் என்பது பொருள்

• இயம்பல் என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

‘இடிபோல இயம்பினானே’

இத்தொடரின் பொருள் ‘இடியைப் போல உரத்துச் சொன்னான் என்பதாகும்.

மேலே நாம் கண்ட செய்யுள் எடுத்துக்காட்டுகளில் சொல் என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் பல உரிச்சொற்களை விளக்கமாகக் கண்டோம்.

இனி ஓசை என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களைத் தெரிந்து கொள்வோம்.

5.1.3 ஓசை என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் ஓசை என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் 22 ஆகும். (நன்னூல் நூற்பா – 459) அவையாவன:- முழக்கு, இரட்டு, ஒலி, கலி, இசை, துவை, பிளிறு, இரை, இரங்கு, அழுங்கு, இயம்பல், இமிழ், குளிறு, அதிர், குரை, கனை, சிலை, சும்மை, கௌவை, கம்பலை, அரவம், ஆர்ப்பு.

இவற்றை எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.

உரிச்சொல் எடுத்துக்காட்டு விளக்கம்

முழக்கு “முழங்கு முந்நீர்” ஓசையிடும் கடல்

இரட்டு “குடிஞை இரட்டும்” ஆந்தை ஒலிக்கும்

ஒலி “ஒலி புனல் ஊரன்“ ஒலிக்கும் நீரை

உடைய ஊர்த் தலைவன்

கலி “கலி கெழு மூதூர்” ஓசைமிக்க பழைய

ஊர்

இசை “பறை இசை அருவி” பறைபோல்

ஒலிக்கும் அருவி

துவை “பல்லியம் துவைப்ப” பலவாத்தியங்களும்

ஒலிக்க

பிளிறு “பிளிறு வார் முரசு” ஒலிக்கும் முரசு

இரை “இரைக்கும் அஞ்சிறைப் பறவைகள்” ஒலிக்கும் பறவைகள்

இரங்கு “இரங்கும் முரசு” ஒலிக்கும் முரசு

அழுங்கு “அழுங்கல் மூதூர்” ஒலிக்கும் மூதூர்

இயம்பல் “முரசியம்பின” முரசுகள் ஒலித்தன

இமிழ் “இமிழ் கடல் ” ஒலிக்கும் கடல்

குளிறு “குளிறு முரசம்” ஒலிக்கும் முரசு

அதிர் “அதிரும் கார்” மேகம் ஒலிக்கும்

குரை “குரைபுனல் ஆறு” ஒலிக்கும்

நீரையுடைய ஆறு

கனை “கனை கடல்” ஒலிக்கும் கடல்

சிலை “சிலைந்தார் முரசம்” ஒலிக்கும் முரசம்

சும்மை “சும்மை மிகு தக்கண நாடு” ஒலிமிகுந்த தென்னாடு

கௌவை “கௌவையோ பெரிதே” ஒலி பெரிதாயுள்ளது

கம்பலை “வினைக்கம்பலை” தொழிலின் ஓசைகள்

அரவம் “அரவத் தானை” ஒலிமிகுந்த சேனை

ஆர்ப்பு “ஆர்த்த பல்லியம்“ ஒலித்த பல வாத்தியங்கள்

இதுவரை ஓசை என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் பல உரிச்சொற்களைச் செய்யுள் எடுத்துக்காட்டுகள் கொண்டு விளக்கமாகக் கண்டோம்.

5.2 தொகுப்புரை

ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்களை விளக்கமாகப் பார்த்தோம்.

மிகுதி என்னும் குணத்தை உணர்த்தும் ஆறு உரிச்சொற்களை விளங்கிக் கொண்டீர்கள்.

சொல் என்னும் குணத்தை உணர்த்தும் பதினாறு உரிச்சொற்களின் விளக்கங்களை அறிந்து கொண்டீர்கள்.

ஓசை என்னும் குணத்தை உணர்த்தும் இருபத்திரண்டு உரிச்சொற்களைப் பற்றியும் தெரிந்து கொண்டீர்கள்.

பாடம் - 6

உரிச்சொல் வகைகள் - II

6.0 பாட முன்னுரை

பொருள்களின் பண்புகள் குணப்பண்பு, தொழிற்பண்பு என இருவகையாகப் பகுத்துச் சொல்லப்படுவதை முன்னர் அறிந்தோம். அப்பண்புகளைக் குறிப்பவையே உரிச்சொற்கள் என்பதையும் அறிந்திருக்கிறோம். அவற்றுள் சில உரிச்சொற்கள் ஒரு குணத்தைக் குறித்து வரும். அவை ஒருகுணம் தழுவிய பல உரிச்சொல் எனப்படும். வேறு சில உரிச்சொற்களுள் ஒரு சொல்லே பலகுணம் குறித்து வரும். அவை பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல் எனப்படும் என்பதை அறிவீர்கள். சென்ற பாடத்தில் ஓரு குணம் தழுவிய பல உரிச்சொற்களைப் பற்றி விரிவாகக் கண்டோம். இனி, இந்தப் பாடத்தில் பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல் குறித்த இலக்கண விளக்கங்களைக் காண்போம்.

முன்பு நீங்கள் பயின்ற திரிசொல் ஒரு பொருள் குறித்த பலசொல் ஆகியும், பலபொருள் குறித்த ஒரு சொல் ஆகியும் வருவது பற்றி நீங்கள் அறிவீர்கள். திரிசொல், பெயர், வினை, இடை, உரி என நால்வகைச் சொற்களிலும் உண்டு. இங்கு நாம் காண இருப்பது பலபொருள் தரும் ஓர் உரிச்சொல்லை மட்டுமே ஆகும்.

6.1 பலகுணம் தழுவிய உரிச்சொல்

பல குணம் தழுவிய உரிச்சொல்லின் இலக்கணத்தை நன்னூல் விளக்குகிறது.

கடிஎன் கிளவி காப்பே கூர்மை

விரையே விளக்கம் அச்சம் சிறப்பே

விரைவே மிகுதி புதுமை ஆர்த்தல்

வரைவே மன்றல் கரிப்பின் ஆகும்(நன்னூல் 457)

இதன் பொருள்: கடி என்னும் உரிச்சொல் காவல், கூர்மை, விரை (வாசனை), விளக்கம் (பிரகாசம்), அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஆர்த்தல் (ஒலித்தல்), வரைவு (நீக்கல்), மன்றல் (திருமணம்), கரிப்பு ஆகிய பதின்மூன்று பொருள்களை உணர்த்தும்.

கடி என்னும் ஓர் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களைத் தருதலால் இது பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல்லாகும். இனி, இவ் உரிச்சொல்லை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமாகக் காண்போம்.

6.1.1 கடி என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள்கள்கடி என்னும் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களில் செய்யுளில் பயின்று வந்துள்ளதைச் சான்றுகளுடன் பார்ப்போம். • காவல்

கடிநகர் அடைந்து = காவல் உடைய ஊரை அடைந்து.

இதில் கடி என்னும் சொல் காவல் என்ற பொருளைத் தருகிறது.

• கூர்மை

கடி நுனைப் பகழி = கூர்மையான நுனியைக் கொண்ட அம்பு.

இத்தொடரில் கடி என்பது கூர்மை என்ற பொருளில் வந்துள்ளது.

• விரை

விரை என்றால் வாசனை (மணம்) என்று பொருள்.

கடி மாலை சூடி = மணம் நிறைந்த மலர் மாலை சூடி

இங்குக் கடி என்னும் சொல் மணம் என்ற பொருளைத் தருகிறது.

• விளக்கம்

விளக்கம் என்பது இங்கு ஒளி, பிரகாசம் எனும் பொருள் தருவது.

‘கண்ணாடி அன்ன கடி மார்பன்’

ஒளி பொருந்திய மார்பு கொண்டவன். கடிமார்பன் என்பதில் கடி, விளக்கம் என்ற பொருளில் வருகிறது.

• அச்சம்

‘கடி யாமம் காக்கும் கைவிளக்கு’

அச்சம் தரும் யாமத்திற்குத் துணையாக உள்ள கைவிளக்கு என்பது பொருள். இங்குக் கடி, அச்சம் எனும் பொருளில் வருகிறது. (யாமம் = நள்ளிரவு)

• சிறப்பு

‘கடி அரண்’

வலிமையான கோட்டை என்பது பொருள். இங்குக் கடி என்பது சிறப்பு (வலிமை) எனும் பொருளில் வருகிறது.

• விரைவு

விரைவு = வேகம்.

‘எம் அம்பு கடி விடுதும்’

இத்தொடரின் பொருள், எம்முடைய அம்புகள் விரைவாகக் செலுத்தப்படும் என்பதாம். இங்குக் கடி என்னும் சொல் விரைவு என்ற பொருளில் வந்துள்ளது.

• மிகுதி

‘கடுங்கால் ஒற்றலின்’

மிகுதியான (கடுமையான) காற்று வீசுவதால் என்பது பொருள். இங்குக் கடி (கடும்) என்பது மிகுதி எனும் பொருளில் வந்தது.

• புதுமை

‘கடி மணச் சாலை’

புதுமை மணம் நிறைந்த இடம். இதில் கடி என்பது புதுமை என்னும் பொருளில் வந்துள்ளது.

• ஆர்த்தல்

ஆர்த்தல் என்றால் ஒலித்தல் என்பது பொருள்.

‘கடி முரசு’ = ஒலிக்கும் முரசு.

இங்குக் கடி என்னும் சொல் ஆர்த்தல் / ஒலித்தல் என்ற பொருளைத் தருகிறது.

• வரைவு

வரைவு என்றால் விலக்குதல் அல்லது நீக்குதல் என்று பொருள்.

‘கடிமது நுகர்வு’

கடிமது நுகர்வு – விலக்கத் தக்க மதுவை அருந்துதல். இத்தொடரில் கடி, விலக்கு என்ற பொருளில் வந்துள்ளது.

• மன்றல்

மன்றல் என்றால் திருமணம் என்று பொருள்.

‘கடிவினை முடுகு இனி’

திருமணத்தை விரைந்து நிகழ்த்து என்பது பொருள். இங்குத் திருமணம் என்ற பொருளில் வந்தது.

• கரிப்பு

கரிப்பு, காரச் சுவையைக் குறிக்கும். கடி என்பதற்குக் காரம் என்ற பொருளும் உண்டு.

‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’

கடிமிளகு = காரமான மிளகு. காரமான மிளகைத் தின்ற அறிவற்ற மந்தி என்பது இதன் பொருள். இங்குக் கடி, கார்ப்பு எனும் பொருளில் வந்தது.

இவ்வாறு, கடி என்னும் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களைத் தந்து பலகுணம் தழுவிய உரிச்சொல்லாகத் திகழ்வதைச் சான்றுகளுடன் பார்த்தோம்.

இனிக் கடி என்னும் சொல் திரிபு பெற்று வழக்கில் இருப்பதைக் காண்போம்.

6.1.2 கடி என்னும் உரிச்சொல் திரிபுகடி என்னும் உரிச்சொல் ‘கடு’ என்று திரிந்து வேறு சில பொருள்களையும் உணர்த்தும். கடு என்னும் சொல் இன்றும் வழக்கில் உள்ளது. எடுத்துக்காட்டு:

கடுஞ்சூல் = முதல் சூல்

கடு என்னும் சொல் முதல் என்னும் பொருளில் வந்துள்ளது.

கடும்புலி = கொடிய புலி

இதில் கடு என்னும் சொல் கொடிய என்ற பொருளில் வந்துள்ளது.

கடும்பகல் = நடுப்பகல்

இங்கே கடு என்ற சொல் நடு என்னும் பொருளைத் தருகிறது.

கடுக்காய் = துவர்ப்புக்காய்

இதில் கடு என்னும் சொல் துவர்ப்பு என்ற பொருளில் வந்துள்ளது.

இவ்வாறு கடி என்னும் சொல் கடு என்று திரிந்து வழக்கிலிருப்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

6.2 உரிச்சொல் - சில குறிப்புகள்

உரிச்சொல் தொடர்பான மூன்று பாடங்களில் சில உரிச்சொற்களை அறிந்திருக்கிறீர்கள். நன்னூலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவை மொத்தம் நாற்பத்தைந்து சொற்களே ஆகும். தொல்காப்பியத்தில் நூற்றிருபது சொற்கள் காட்டப்பட்டுள்ளன. தமிழில் உள்ள உரிச்சொற்கள் இவ்வளவு தானா? எல்லா வகைச் சொற்களுக்கும் இலக்கணம் கூறும் நன்னூலில் அனைத்து உரிச்சொற்களையும் குறித்து விளக்க முடியாது என்பதனால், உரிச்சொற்களைப் பற்றி விரிவாகக் கூறும் நிகண்டுகளில் அவற்றைக் காணலாம் என நன்னூலார் தெளிவுபடுத்துகிறார்.

6.3 தொகுப்புரை

ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல்லுக்கும் பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்லுக்கும் உள்ள வேறுபாட்டை இப்பாடம் விளக்கியது.

பல குணம் தழுவிய உரிச்சொல்லுக்கு விளக்கம் தந்துள்ளது.

கடி என்னும் உரிச்சொல் உணர்த்தும் பதின்மூன்று பொருள்களையும் சான்றுகளுடன் எடுத்து இயம்பி உள்ளது.