8

சொற்றொடரியல்

பாடம் - 1

சொற்றொடர் அறிமுகம்

1.0 பாட முன்னுரை

மொழி என்பது கருத்து விளக்கக் கருவியாகும். ஒருவர் தன் கருத்தை விளக்கப் பல சொற்களைப் பயன்படுத்துவார். ஒரு சொல் மட்டும் தனித்து நின்று, அவர் உணர்த்த நினைத்த கருத்துகள் அனைத்தையும் விளக்கிவிடாது. எனவே, ஒரு கருத்தை விளக்கப் பல சொற்கள் தேவைப்படுகின்றன.

சொற்றொடர் என்பது சொல்+தொடர் எனப் பிரியும். ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் மறைந்து நின்றோ, வெளிப்பட வந்தோ, பொருள் தொடர்போடு பொருந்தி, ஒரு கருத்தை விளக்குவது சொற்றொடர் எனப்படும்.

(எ.டு.) மரம்

இங்கே ‘மரம்’ என்ற ஒரு சொல் மட்டும் தனித்து வந்துள்ளது. இது, தான் குறித்து வரும் ஒரு பொருளை மட்டும் உணர்த்துகிறது. ஆனால் எதற்காக இது சொல்லப்பட்டது என்பதை அறிய முடியவில்லை. எனவே இது சொற்றொடர் அன்று.

(எ.டு.) வா

வா என்னும் சொல் ஏவல் பொருள் உணர்த்தும்போது ‘நீ’ என்னும் எழுவாய் மறைந்து வந்து ஒரு சொற்றொடர் ஆகிறது. இச்சொற்றொடரில் ‘நீ’ என்பது தோன்றா எழுவாய் ஆகும்.

(எ.டு.) பெண்கள் பள்ளிக்குச் செல்கின்றனர்.

இந்த எடுத்துக்காட்டில் பல சொற்கள் பொருள் தொடர்போடு பொருந்தி நின்று ஒரு சொற்றொடர் ஆகிறது.

(எ.டு.) மலை வெண்மை நீந்துவதற்கு வாழை.

இந்த எடுத்துக்காட்டுத் தொடரில் பல சொற்கள் இடம்பெறினும் அவைகளுக்கு இடையே எவ்விதப் பொருள் தொடர்பும் இல்லை. எனவே இவ்வெடுத்துக்காட்டுச் சொற்றொடர் ஆகாது.

சொற்றொடரில் பல சொற்கள் இடம்பெறுகின்றன. சொற்றொடரில் இடம்பெறும் சொற்களின் பொருள் தொடர்பை இப்பாடம் விளக்குகிறது. சொற்றொடர்கள் பல வகைப்படும். அவற்றையும் இப்பாடம் உணர்த்துகிறது. சொற்றொடர்களை வாக்கியங்கள் என்றும் குறிப்பிடுவர். அதனைப் பற்றியும்

அறியலாம்.

மேலும் இப்பாடம், சொற்றொடரியலை அறிமுகம் செய்வதால், சொற்றொடரியலுக்கு அடிப்படையான செய்திகளைப் பல்வேறு தலைப்புகளாகப் பிரித்துக்கொண்டு விவரிக்கிறது.

இப்பாடத்தில் இடம்பெறும் செய்திகள் முந்தைய பாடங்களில் கற்றவையாயினும், சொற்றொடரியல் நோக்கில் அவை பற்றிய செய்திகள் இங்கு விளக்கப்படுகின்றன என்பதறிக.

1.1 சொல் வகை

தமிழில் சொற்கள் நான்கு வகைப்படும். அவை வருமாறு:

1) பெயர்ச்சொல்

2) வினைச்சொல்

3) இடைச்சொல்

4) உரிச்சொல்

(எடு.)

மலை – பெயர்ச்சொல்

சென்றான் – வினைச்சொல்

ஐ – இடைச்சொல்

மா – உரிச்சொல்

சொற்களை இயல்பும் இடமும் நோக்கி வேறு நான்கு வகையாகப் பிரிப்பர். அவை வருமாறு:

1) இயற்சொல்

2) திரிசொல்

3) திசைச்சொல்

4) வடசொல்

இயற்சொல்:

இயற்சொல் என்பது தமிழ் வழங்கு நிலத்தில் கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் பொருள் விளங்குமாறு தொன்றுதொட்டு வழங்கிவரும் சொல்லாகும்.

(எ.டு.) மரம், வந்தான்

செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்

தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்

(நன்னூல்:271)

திரிசொல்:

திரிசொல் என்பது கற்றவர் மட்டுமே பொருள் உணரக்கூடியது. இஃது ஒரு பொருள் குறித்த பல சொல்லாகவும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும் வரும்.

(எ.டு)

கிள்ளை, தத்தை, சுகம் -

கிளி என்னும் ஒரு பொருள் குறித்த பல திரிசொல்.

வாரணம் -

யானை, கோழி, சங்கு முதலிய பல பொருள் குறித்த ஒரு திரிசொல்.

ஒரு பொருள் குறித்த பலசொல் ஆகியும்

பலபொருள் குறித்த ஒருசொல் ஆகியும்

அரிதுணர் பொருளன திரிசொல் ஆகும்

(நன்னூல் : 272)

திசைச்சொல்:

திசைச்சொல் என்பது செந்தமிழ் வழங்கும் நிலம் தவிர்த்த கொடுந்தமிழ் வழங்கும் நிலங்களில் வழங்கும் சொல்லும், வேற்றுமொழி பேசுவோர் தமிழ் நிலத்தில் வந்து தம் கருத்தைக் குறிக்க வழங்கும் சொல்லும் ஆகும்.

(எடு.)

சிறுகுளம் – இதனைப் ‘பாழி’ என்பர் பூழிநாட்டார்; ‘கேணி’ என்பர் அருவாநாட்டார்.

செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்

ஒன்பதிற்று இரண்டினில் தமிழொழி நிலத்தினும்

தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப

(நன்னூல் : 273)

வடசொல்:

வடசொல் என்பது, ஆரியத்திற்கும் தமிழுக்கும் உரிய பொது எழுத்தாலும், சிறப்பெழுத்தாலும் இவ்விருமொழிகளுக்கும் உரிய எழுத்தாலும் வழங்கப்படும் சொல்லாகும். இது தமிழ்ச்சொல்லுக்கு ஒப்பாக, வடதிசை மொழியான ஆரியத்திலிருந்து தமிழில் கலந்து வழங்கும் சொல்லாகும்.

(எடு.)

காரியம், காரணம் – பொது எழுத்தால் அமைந்தன.

போகி, சுத்தி – சிறப்பெழுத்தால் அமைந்தன.

கடினம், சலம் – இருவகை எழுத்தாலும் அமைந்தன.

பொதுவெழுத் தானும் சிறப்பெழுத் தானும்

ஈரெழுத் தானும் இயைவன வடசொல்

(நன்னூல் : 274)

மேலே குறிப்பிட்ட பெயர்ச்சொல் முதலிய நான்கையும், இயற்சொல் முதலிய நான்கையும் இணைத்து,

1) பெயர் இயற்சொல்

2) பெயர்த் திரிசொல்

3) வினை இயற்சொல்

4) வினைத் திரிசொல்

5) இடை இயற்சொல்

6) இடைத் திரிசொல்

7) உரி இயற்சொல்

8) உரித் திரிசொல்

9) திசைச்சொல்

10) வடசொல்

எனச் சொற்களைப் பத்தாகக் குறிப்பிடுவதும் உண்டு.

அதுவே

இயற்சொல் திரிசொல் இயல்பில் பெயர்வினை

எனஇரண்டு ஆகும் இடைஉரி அடுத்து

நான்கும் ஆம்திசை வடசொல்அணு காவழி

(நன்னூல் : 270)

சொற்கள் பற்றிய விரிவான செய்திகளை அவை தொடர்பான முந்தைய பாடங்களில் விரிவாகப் படித்திருப்பீர்கள். அவற்றை இங்கு நினைவுபடுத்திக் கொள்க.

இப்பாடம், தலைப்புக்கு ஏற்பச் சொற்றொடரில் இடம்பெறும் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என்னும் நான்கு வகையாகப் பிரித்து அவற்றைச் சுருக்கமாக விளக்குகிறது.

1.1.1 பெயர்ச்சொல் ஐம்புலனுக்கும் மனத்திற்கும் புலப்படும் பொருள்களைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். இஃது ஆறு வகைப்படும். அவை,

1) பொருட் பெயர்

2) இடப் பெயர்

3) காலப் பெயர்

4) சினைப் பெயர்

5) பண்புப் பெயர்

6) தொழிற் பெயர்

என்பன.

(எ.டு)

புலி, கல் – பொருட் பெயர்

வீடு, தமிழகம் – இடப் பெயர்

கிழமை, ஆண்டு – காலப் பெயர்

கை, கால் – சினைப் பெயர்

செம்மை, ஒன்று – பண்புப் பெயர்

வாழ்தல், புகழ்தல் – தொழிற் பெயர்

1.1.2 வினைச்சொல்வினைச்சொல் என்பது, பொருளினது செயலை உணர்த்தும் சொல்லாகும். வினை, தொழில், செயல் என்பவை ஒரு பொருள் குறித்த சொற்கள். தெரிநிலைவினை என்பது வினைமுதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படுபொருள் என்னும் ஆறின் காரணமாகவோ, அல்லது இவ்வாறில் பலவற்றின் காரணமாகவோ நிகழும்.

(எ.டு)

வனைந்தான் – தெரிநிலைவினை

வினைமுதல் – குயவன்

கருவி – தண்டு, சக்கரம், மண் முதலியன

இடம் – வனைதற்கு ஆதாரமான இடம்

செயல் – வனைவதற்கு முதற்காரணமாகிய செய்கை

காலம் – இறந்தகாலம்

செயப்படுபொருள் – குடம்

செய்பவன் கருவி நிலஞ்செயல் காலம்

செய்பொருள் ஆறும் தருவது வினையே

(நன்னூல் : 320)

வினைமுற்றும் வினையெச்சமும்

வினையைச் செயல் முற்றுப் பெறுவதையும் முற்றுப்பெறாமல் குறையாய் நிற்பதையும் கொண்டு இருவகையாய்ப் பிரிப்பர். வினையின் செயல் முற்றுப்பெறின் வினைமுற்று எனப்பெறும். முற்றுப்பெறாவிடின் எச்சம் எனப்படும். எச்சம் பெயரைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் என்றும், வினையைக்கொண்டு முடிந்தால் வினையெச்சம் என்றும் அழைக்கப்பெறும்.

(எடு.)

வந்தான் – வினைமுற்று

வந்த மாணவன் – பெயரெச்சம்

வந்து விழுந்தான் – வினையெச்சம்

தெரிநிலை வினையும் குறிப்பு வினையும்

இவ்வினைச்சொற்கள் காலத்தை, வெளிப்படையாகக் காட்டினால் தெரிநிலை வினை என்றும், வெளிப்படத் தோன்றாமல் குறிப்பாகக் காலம் காட்டினால் குறிப்புவினை என்றும் அழைக்கப்படும். மேலே காட்டிய வந்தான், வந்த, வந்து என்னும் வினைச்சொற்கள் இறந்த காலத்தைத் தெளிவாக உணர்த்துவதால் இவை தெரிநிலை வினைச்சொற்கள் எனப்படும்.

(எ.டு.)

(அவன்) நல்லவன் – குறிப்பு வினைமுற்று

நல்ல மாணவன் – குறிப்புப் பெயரெச்சம்

நன்று செய்தான் – குறிப்பு வினையெச்சம்

நல்லவன், நல்ல, நன்று என்னும் சொற்கள் வெளிப்படையாகக் காலம் காட்டாமல் குறிப்பாகக் காலத்தை உணர்த்துவதால் இவை குறிப்பு வினைகளாகும்.

பொருண்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள்

வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே

(நன்னூல் : 321)

அவைதாம்

முற்றும் பெயர்வினை யெச்சமும் ஆகி

ஒன்றற்கு உரியவும் பொதுவும் ஆகும்

(நன்னூல் : 322)

1.1.3 இடைச்சொல்இடைச்சொல் என்பது பெயரும் வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் இல்லாதது; இது பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொல்லாகும். இஃது ஒன்றும் பலவுமாக ஒரு சொல்லைச் சார்ந்து வரும். இஃது ஒன்பது வகைப்படும். அவை வருமாறு: 1) வேற்றுமை உருபுகள் – ஐ, ஆல் முதலியன

2) விகுதி உருபுகள் – ஆன், ஆள் முதலியன

3) இடைநிலை உருபுகள் – ப், வ், த் முதலியன

4) சாரியை உருபுகள் – அன், அத்து முதலியன

5) உவம உருபுகள் – போல, புரைய முதலியன

6) தம்பொருள் உணர்த்துவன – அ(சுட்டு), ஆ(வினா) முதலியன

7) ஒலிக் குறிப்பு முதலிய பொருள் உணர்த்துவன – ஓ ஓ, ஐயோ முதலியன

8) (செய்யுளில்) இசைநிறைக்க வருவன – “ஏஎ இவளொருத்தி…” முதலியன

9) அசைநிலையாய் வருவன – “மற்றுஎன்னை ஆள்க” முதலியன

வேற்றுமை வினைசா ரியையொப்பு உருபுகள்

தத்தம் பொருள இசைநிறை அசைநிலை

குறிப்பெனெண் பகுதியில் தனித்தியல் இன்றிப்

பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து

ஒன்றும் பலவும்வந்து ஒன்றுவது இடைச்சொல்

(நன்னூல்: 420)

1.1.4 உரிச்சொல்உரிச்சொல் என்பது, பொருளுக்கு உரிமை உடைய பண்பை உணர்த்தும் பெயராகும். பொருள்கள் உயிர்ப் பொருள்கள், உயிர் இல்லாப் பொருள்கள் என இருவகைப்படும்.

இவ்விருவகைப் பொருள்களுக்கு உரிய பண்பு, குணப்பண்பு, தொழிற்பண்பு என இருவகைப்படும்.

(எ.டு)

அறிவு, அச்சம் முதலியன – உயிர்ப் பொருள்களின் குணப் பண்பு

உண்ணல் முதலியன – உயிர்ப் பொருள்களின் தொழில் பண்பு

வண்ணம் முதலியன – உயிரில் பொருள்களின் குணப் பண்பு

தோன்றல் முதலியன – உயிரில்லாப் பொருள்களின் தொழில் பண்பு

இவ்வாறு உரிச் சொற்கள் ஒரு குணத்தையும் பல குணத்தையும் உணர்த்திப் பெயர் வினைகளைச் சார்ந்து வரும்.

(எ.டு)

சால, உறு, தவ முதலியன – மிகுதி என்னும் ஒரு குணம் குறித்தன.

கடி – காப்பு, கூர்மை, நாற்றம் முதலிய பலகுணம் குறித்து வரும்.

பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி

ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை

ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்

(நன்னூல்: 442)

1.2 பொருள் புணர்ச்சி

சொற்றொடர்கள் கருத்தை உணர்த்தப் பயன்படுகிறன. சொற்றொடரில் இடம்பெறும் சொற்கள் ஒன்றோடு ஒன்று பொருள் தொடர்பு கொள்வதால் கருத்து உணர்த்தப்படுகிறது. சொற்களின் இத்தொடர்பு ‘புணர்ச்சி’ எனப்படும். புணர்ச்சிக்குக் குறைந்தது இரண்டு சொற்கள் தேவை. இவ்விரண்டு சொற்களில் முதலில் நிற்கும் சொல் ‘நிலைமொழி’ எனப்படும். நிலைமொழியை அடுத்துவரும் சொல் ‘வருமொழி’ எனப்படும்.

(எ.டு) தாமரை மலர்ந்தது.

இத்தொடரில் ‘தாமரை’ என்பது நிலைமொழி. ‘மலர்ந்தது’என்பது வருமொழி. சொற்றொடரில் உள்ள சொற்களுக்கு இடையிலான பொருள் தொடர்பே பொருள்புணர்ச்சி எனப்படுகிறது. இஃது இரண்டு வகைப்படும். அவை,

வேற்றுமைப் புணர்ச்சி

அல்வழிப் புணர்ச்சி

சொற்றொடரில் நிலைமொழியும் வருமொழியும் பொருள்தொடர்போடுதான் புணரும் எனக் கூறமுடியாது.

(எ.டு) பவளக் கூர்வாய்ச் செங்கால் நாரை

இத்தொடரில் உள்ள முதல் இரண்டு சொற்களை எடுத்துக்கொள்ளலாம். பவளம் என்பது நிலைமொழி. கூர் என்பது வருமொழி. இந்நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் பொருள் தொடர்பு சரியாக அமையவில்லை. இங்குப் பவளம் என்பது செம்மை வண்ணத்தைக் குறித்து வந்துளளது. அதற்கும் கூர்மைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நிலைமொழிக்கும் வருமொழிக்கும் பொருள் தொடர்பில்லை என்பதை இலக்கணப்படி சொல்வதானால் ‘பவளம் என்னும் சொல் கூர் என்னும் சொல்லைத் தழுவாது தொடர்ந்தது’ என்பர். இவ்வாறு நிலைமொழியோடு வருமொழி பொருள் தொடர்பின்றிப் புணருமானால், நிலைமொழியும் வருமொழியும் சேர்ந்த அத்தொடரைத் ‘தழாத் தொடர்’ என்றும், பொருள் தொடர்போடு புணருமானால், அத்தொடரைத் ‘தழுவு தொடர்’ என்றும் கூறுவர்.

மெய்யுயிர் முதலீறு ஆமிரு பதங்களும்

தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப்

பொருளில் பொருந்துழி நிலைவரு மொழிகள்

இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே

(நன்னூல் : 151)

1.2.1 வேற்றுமைப் புணர்ச்சி ஒரு சொற்றொடரில் வேற்றுமைப் பொருளில் சொற்கள் புணர்வதை வேற்றுமைப் புணர்ச்சி என்பர்.

(எ.டு)

கம்பன் பாடினான்.

கம்பனைப் பாடினான்.

கம்பனோடு பாடினான்.

முதல்சொற்றொடரில் கம்பன் என்னும் பெயர் எழுவாயாக உள்ளது. இரண்டாம் சொற்றொடரில் அப்பெயர் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு ஏற்றதால் செயப்படுபொருளாக மாறிவிட்டது; மூன்றாம் சொற்றொடரில் ‘ஓடு’ என்னும் உருபு சேர்ந்ததால் உடன்நிகழ்ச்சிப் பொருளாக அப்பெயர் மாறியது. இவ்வாறு ஒரு பெயர் பல்வேறு பொருளைத் தருவதாக மாறுவதற்குக் காரணம் அப்பெயருடன் சேரும் ஐ, ஓடு முதலிய உருபுகள் ஆகும். இவ்வுருபுகள் பெயரை வேறுபடுத்துவதால் ‘வேற்றுமை உருபுகள்’ எனப்படுகின்றன. வேற்றுமை உருபுகள் ஆறு ஆகும்.

வேற்றுமை உருபுகள்

வேற்றுமை உருபுகள் பெயர்களையும் அவற்றின் உருபுகளையும் இனிக் காணலாம்.

1) இரண்டாம் வேற்றுமை – ஐ

2) மூன்றாம் வேற்றுமை – ஆல், ஆன், ஒடு, ஓடு

3) நான்காம் வேற்றுமை – கு

4) ஐந்தாம் வேற்றுமை – இன், இல்

5) ஆறாம் வேற்றுமை – அது, ஆது

6) ஏழாம் வேற்றுமை – கண்

வேற்றுமை உருபுகள் வெளிப்படையாகவும் வரும்; மறைந்தும் வரும். எவ்வாறு வந்தாலும் அவ்வேற்றுமைப் பொருளை அப்பெயருக்குத் தரும்.

(எ.டு)

பாடம் படித்தான்

பாடத்தைப் படித்தான்.

முதல் சொற்றொடரும் இரண்டாம் சொற்றொடரும் ஒரே பொருள் தருவதைக் காணலாம். முதல் சொற்றொடரில் பாடம் என்னும் பெயரில் ‘ஐ’ உருபு மறைந்து வந்துள்ளது. அதனால் அச்சொற்றொடரை இரண்டாம் வேற்றுமைத்தொகை நிலைத்தொடர் என்பர். இரண்டாம் சொற்றொடரில் பாடம் என்னும் அப்பெயரில், ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு, வெளிப்படையாக வந்துள்ளது. இதனை இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் அல்லது வேற்றுமை விரி என்பர்.

வேற்றுமைத் தொடர் தழுவு தொடராயும் தழாத் தொடராயும் வரும்.

(எ.டு)

பால் குடம் (பாலை உடைய குடம்)

பால் குடித்தான் (பாலைக் குடித்தான்)

முதல் தொடராகிய ‘பால் குடம்’ என்பதற்கு என்ன பொருள்? ‘இக்குடம் பாலை உடையது’ என்பதே பொருள். பால் என்பது குடத்தைத் தழுவாமல் ‘உடைய’ என்பதைத் தழுவி உள்ளதை இத்தொடர் காட்டுகிறது. எனவே இத்தொடர் தழாத் தொடர் ஆகும். இரண்டாம் தொடராகிய ‘பால் குடித்தான்’ என்பதில் பால் என்பது குடிக்கப்படும் பொருள். எனவே இத் தொடரில் உள்ள வினைமுற்றான ‘குடித்தான்’ என்பதைப் ‘பால்’ தழுவி வந்துள்ளது. எனவே இத்தொடர் தழுவு தொடர் ஆகும்.

1.2.2 அல்வழிப் புணர்ச்சி ஒரு சொற்றொடரில் வேற்றுமை அல்லாத பொருளில் சொற்கள் புணர்வது அல்வழிப் புணர்ச்சி எனப்படும்.

(எ.டு.) ஓடி விழுந்தான்

இச்சொற்றொடரில் வேற்றுமை உருபு எதுவும் மறைந்தோ வெளிப்பட்டோ வரவில்லை. அதனால் இது வேற்றுமை அல்லாத சொற்றொடர் ஆயிற்று. வேற்றுமை அல்லாத புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி ஆகும். அவை பதினான்கு வகைப்படும்.

1) வினைத்தொகை – கொல்யானை

2) பண்புத்தொகை – செந்தமிழ்

3) உவமைத்தொகை – தாமரைமுகம்

4) உம்மைத்தொகை – இராப்பகல்

5) அன்மொழித்தொகை – பொற்றொடி (வந்தாள்)

6) எழுவாய்த்தொடர் – ஆசிரியர் வந்தார்

7) விளித்தொடர் – நண்பா வா

8) பெயரெச்சத்தொடர் – வந்த மனிதர்

9) வினையெச்சத்தொடர் – வந்து சேர்ந்தார்

10) தெரிநிலை வினைமுற்றுத்தொடர் – உறவினர் வந்தனர்

11) குறிப்பு வினைமுற்றுத் தொடர் – நண்பர் நல்லவர்

12) இடைச்சொற்றொடர் – மற்றொன்று

13) உரிச்சொற்றொடர் – மாநகர்

14) அடுக்குத்தொடர் – உண்மை உண்மை

அல்வழித்தொடர்கள் தழுவு தொடராகவும் தழாத் தொடராகவும் வரும்.

……….. ……… ……..அல்வழி

தொழில்பண்பு உவமை உம்மை அன்மொழி

எழுவாய் விளிஈர் எச்சம்முற்று இடைஉரி

தழுவு தொடர்அடுக்கு எனஈர் ஏழே (நன்னூல் : 152)

1.3 தொடர் பாகுபாடு

தொடர்மொழி ஆனது முற்றுத்தொடர்மொழி, எச்சத் தொடர்மொழி என இரண்டு வகைப்படும்.

1.3.1 முற்றுத் தொடர்முற்றுத் தொடர்மொழி என்பது, எழுவாயும் பயனிலையும் செயப்படுபொருள் முதலியவைகளோடு சேர்ந்தும் சேராதும் பொருள் முடிவு பெற்று நிற்கும் தொடராகும். இதனை வாக்கியம் என்றும் கூறுவர். எ.டு.

நன்னன் வந்தான்.

புலி மானை வேட்டையாடியது.

முதல் தொடரில் ‘நன்னன்’ எழுவாய். அந்த எழுவாய் ‘வந்தான்’ என்னும் வினைமுற்றைப் பயனிலையாகக் கொண்டு பொருள் முடிவு பெற்றது. அதேபோல் ‘புலி’ என்னும் இரண்டாம் தொடரின் எழுவாய் ‘மான்’ என்னும் செயப்படுபொருளையும் ‘வேட்டையாடியது’ என்னும் வினைப் பயனிலையையும் பெற்றுப் பொருள் முடிவு பெற்றது.

1.3.2 எச்சத் தொடர்எச்சத் தொடர்மொழி என்பது, பொருள் முடிவு பெறாது முற்றுத் தொடர்மொழிக்கு உறுப்பாக வரும் தொடராகும். (எ.டு.)

யானைத் தந்தம்

ஓடிய குதிரை

இவ்விரு தொடர்களும் எதற்காகக் கூறப்பட்டன என்னும் விளக்கம் பெறாமல் பொருள் எஞ்ச நின்றன. ‘யானைத் தந்தத்தை’ப் பற்றியும், ‘ஓடிய குதிரையை’ப் பற்றியும் கூறவேண்டிய காரணம் என்ன என்னும் வினாவிற்கான விடைப் பொருள் எஞ்சி நிற்க இத்தொடர்கள் அமைந்துள்ளன.

1.4 பொருளுணர்விற்குக் காரணம்

ஒரு சொற்றொடரின் பொருளை உணர்தற்கு நான்கு காரணங்கள் உள்ளன. அவை வருமாறு:

1) அவாய்நிலை

2) தகுதி

3) அண்மை

4) கருத்துணர்ச்சி

1.4.1 அவாய்நிலை அவாய்நிலை என்பது, சொற்றொடரில இடம்பெறும் ஒரு சொல், தான் உணர்த்த விரும்பிய கருத்தைத் தெரிவிக்க வேறு ஒரு சொல்லின் துணையை எதிர்நோக்கி நிற்கும் நிலையாகும். அச்சொற்களில் ஒன்றை மட்டும் கூறினால் கருத்துத் தொடர்பு இல்லாமல் தெளிவின்மை ஏற்படும்.

(எ.டு.) பாடத்தைப் படி

இத்தொடரில் ‘பாடத்தை’ என்று மட்டும் சொன்னால் பொருள் முற்றுப்பெறாது. பாடத்தை என்ன செய்யவேண்டும் என்னும் வினா எழும். அதேபோல் ‘படி’ என்று மட்டும் சொன்னால் எதைப் படிக்க வேண்டும் என்னும் வினா எழும். இவ்விரு சொற்களும் சேரும்பொழுதே தொடர்ப்பொருள் தெளிவாகும்.

1.4.2 தகுதி தகுதி என்பது பொருள் தொடர்பிற்குத் தடை ஏதும் இல்லாமையாகும்.

(எ.டு.) நீரால் எரி

நீரால் எப்பொருளையும் எரிக்க இயலாது. மாறாக நீர் எரியும் பொருளை நனைக்கப் பயன்படும். நீரின் இயல்பிற்கு மாறாக எடுத்துக்காட்டுத் தொடர் அமைந்துள்ளது. நீர் என்பதன் பொருள் தொடர்பிற்கு எரி என்பது தடையாக உள்ளது. இதனால் பொருள் தொடர்பு ஏற்படவில்லை.

(எ.டு.) நீரால் நனை

இத்தொடர் நீரின் இயல்பிற்கு ஏற்றதாக உள்ளது. அதனால் அத்தொடரின் கருத்தை எவ்விதத் தடையும் இல்லாமல் உணரமுடிகிறது. இங்குச் சொற்களின் பொருள் தகுதியால் தொடர்ப்பொருள் உண்டாகிறது என்பதை அறியலாம்.

1.4.3 அண்மை அண்மை என்பது தேவையற்ற இடைவெளி காரணமாகவும் பொருள் தொடர்பற்ற சொற்கள் இடையே வருவதனாலும் ஏற்படும் கருத்து வேறுபாட்டைத் தவிர்த்தல் ஆகும்.

(எ.டு.)

ஆண்-கள் சாப்பிடும் இடம்

புறப்படும் நண்பர் நேரத்தில் வந்தார்

முதல் தொடரில் ‘ஆண்கள்’ என்பது ஒரு சொல்லாகச் சேர்ந்திருந்தால் ஒரு பொருளும் ‘ஆண்-கள்’ என இடைவெளி விட்டு இருசொற்களாகப் பிரிந்திருந்தால் வேறுபொருளும் தரக்காணலாம்.

இரண்டாவது தொடரில் ‘புறப்படும்’ என்பதன் பக்கத்தில் ‘நேரத்தில்’ என்னும் சொல் வந்தால்தான் அத்தொடரின் பொருள் சிறக்கும். மாறாக இடையில் ‘நண்பர்’ என்னும் சொல் வந்திருப்பதால் தேவையற்ற பொருள் குழப்பம் ஏற்படக் காணலாம்.

1.4.4 கருத்துணர்ச்சி கருத்துணர்ச்சி என்பது, சொற்றொடரில் இடம்பெறும் ஒரு சொல் எப்பொருளைத் தரவேண்டும் என்னும் நோக்கத்திற்காகச் சொல்லப்பட்டதோ அப்பொருளை மொழிச் சூழலால் அறிதலாகும்.

(எ.டு.) தலையைச் சீவு

இச்சொற்றொடரின் பொருளை அதன் மொழிச்சூழல் அறியாமல் புரிந்து கொள்வது இயலாது. அரசன் குற்றாவளிக்குக் கொலைத் தண்டனை அளித்ததாகக் கொண்டால், ‘ஓர் ஆளின் தலையை வெட்ட ஆணையிட்டதாகப்’ பொருள்படும். தாய் தன் மகனிடம் தலைமுடியை ஒழுங்குபடுத்தக் கூறியதாகக் கொண்டால், ‘சீப்பினால் தலைமுடியை வாரிக்கொள்’ எனக் கூறியதாகப் பொருள்படும்.

1.5 வாக்கிய வகைகள்

கருத்து முற்றுப் பெற்ற சொற்றொடர் வாக்கியம் எனப்படும் என்பது மேலே குறிப்பிடப்பட்டது. இவ்வாக்கியங்களைக் கருத்து அடிப்படையிலும் அமைப்பு அடிப்படையிலும் வினை அடிப்படையிலும் வகைப்படுத்தலாம்.

1.5.1 கருத்து வகை வாக்கியங்கள் கருத்து வகையில் வாக்கியங்கள் நான்கு வகைப்படும். அவை:

1) செய்தி வாக்கியம்

2) கட்டளை வாக்கியம்

3) வினா வாக்கியம்

4) உணர்ச்சி வாக்கியம்

செய்தி வாக்கியம் என்பது, கூற வந்த செய்தியைத் தெளிவாகக் கூறுவதாகும்.

(எ.டு) திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.

கட்டளைவாக்கியம் என்பது, முன்னால் நிற்பவரை ஒரு செயலைச் செய்ய ஏவுவதாகும்.

(எ.டு) திருக்குறளைப் படி

வினா வாக்கியம் என்பது, ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமைவதாகும்.

(எ.டு.) திருக்குறளை எழுதியவர் யார்?

உணர்ச்சி வாக்கியம் என்பது, வியப்பு, அச்சம் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைவதாகும்.

(எ.டு) என்னே ! திருக்குறளின் பொருட் சிறப்பு.

1.5.2 அமைப்பு வகை வாக்கியங்கள்வாக்கியங்களை அமைப்பு வகையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை, 1) தனி வாக்கியம்

2) தொடர் வாக்கியம்

3) கலவை வாக்கியம்

தனி வாக்கியம் என்பது, ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ பெற்று ஒரு பயனிலையைக் கொண்டு முடிவதாகும்.

(எ.டு.)

பாரி வந்தான்.

பாரியும் கபிலனும் வந்தனர்.

தொடர் வாக்கியம் என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகளைப் பெற்றுவரும் வாக்கியமாகும்.

(எ.டு.) தமிழரசி போட்டியில் பங்கேற்றாள்; வெற்றி பெற்றாள்; பரிசு பெற்றாள்.

கலவை வாக்கியம் என்பது, முற்றுத் தொடராக அமைந்த ஒரு முதன்மை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல துணை வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியமாகும்.

(எ.டு.)

தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்று, அதன்வழி நடந்து, வாழ்க்கையில் முன்னேற அனைவரும் முயல வேண்டும்.

1.5.3 வினை வகை வாக்கியங்கள் வாக்கியங்களில் வினைகள், முற்றாகவோ எச்சமாகவோ இடம்பெறுகின்றன. அவ்வினைகளின் அடிப்படையில் அவற்றைப் பெற்று வரும் வாக்கியங்கள் பெயர் பெறுகின்றன. இவ்வாக்கியங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1) உடன்பாட்டு வினை / எதிர்மறை வினை வாக்கியங்கள்

2) செய்வினை / செயப்பாட்டு வினை வாக்கியங்கள்

3) தன்வினை / பிறவினை வாக்கியங்கள்

1) உடன்பாடு / எதிர்மறை வினை வாக்கியங்கள்

இவ்வகை வாக்கியங்களில் இடம்பெறும் வினைகள் உடன்பாட்டில் உள்ளனவா எதிர்மறையில் உள்ளனவா என்பதைக் கொண்டு இவ்வாக்கியங்கள் பெயர் பெறுகின்றன.

(எ.டு.)

உடன்பாட்டு வினை – காந்தியை அனைவரும் அறிவர்.

எதிர்மறை வினை – காந்தியடிகளை அறியாதார் இலர்.

2) செய்வினை / செயப்பாட்டுவினை வாக்கியங்கள்

இவ்வகை வாக்கியங்களில் இடம்பெறும் வினைகள் செய்வினைக்கு உரியனவா செயப்பாட்டுக்கு உரியனவா என்பதைக் கொண்டு இவ்வாக்கியங்கள் பெயர்பெறுகின்றன.

(எ.டு.)

செய்வினை – பேகன் போர்வை அளித்தான்.

செயப்பாட்டுவினை – பேகனால் போர்வை அளிக்கப்பட்டது.

3) தன்வினை / பிறவினை வாக்கியங்கள்

இவ்வகை வாக்கியங்களில் இடம்பெறும் வினைகளை எழுவாயே செய்கிறதா அல்லது தான் வினையாற்றாமல் பிறரை அவ்வினை செய்யத் தூண்டுகிறதா என்பதைக் கொண்டு இவ்வாக்கியங்கள் பெயர் பெறுகின்றன.

(எ.டு.)

தன் வினை – பாரி உண்டான்

பிற வினை – பாரி உண்பித்தான்

முதல் வாக்கியத்தில் பாரி என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.

இரண்டாம் வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.

1.6 தொகுப்புரை

சொற்றொடர்களில் இடம் பெறும் சொற்கள் நான்கு வகைப்படும். அவை பெயர், வினை, இடை, உரி என்பனவாகும். இச்சொற்களுக்கு இடையிலான பொருள்தொடர்பு, வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்னும் இருவகையில் அடங்கும்.

வேற்றுமையை ஆறாகவும் அல்வழியைப் பதினான்காகவும் குறிப்பிடுவர்.

சொற்றொடரில் சொற்கள் நிலைமொழி, வருமொழியாக நின்று பொருள் உணர்த்தும்.

சொற்றொடரில் நிலைமொழிக்கும் வருமொழிக்கும் பொருள் தொடர்பு பொருந்தி வருமானால் தழுவு தொடர் என்றும் பொருந்தவில்லை என்றால் தழாத் தொடர் என்றும் அழைக்கப்படும். வேற்றுமைத் தொடரும் அல்வழித் தொடரும் தழுவு தொடராகவும் தழாத் தொடராகவும் வரும்.

சொற்றொடரில் தொடர்கள் கருத்து முற்றுப்பெற்றும், முற்றுப்பெறாதும் வரும். கருத்து முற்றுப்பெற்ற தொடரை முற்றுத்தொடர் என்றும், முற்றுப்பெறாத் தொடரை எச்சத்தொடர் என்றும் குறிப்பிடுவர்.

சொற்றொடரின் பொருளுணர்விற்குக் காரணம் அவாய் நிலை, தகுதி, அண்மை, கருத்துணர்ச்சி என்பனவாகும்.

முற்றுத்தொடர், வாக்கியம் எனப்படும். அது கருத்து அடிப்படையிலும், அமைப்பு அடிப்படையிலும், வினை அடிப்படையிலும் வகைப்படுத்தப்படும் என்பனவற்றை இப்பாடம் உணர்த்துகிறது.

பாடம் - 2

தொகைநிலைத் தொடர்

2.0 பாட முன்னுரை

தொகைநிலைத் தொடர் என்பது, வேற்றுமை உருபுகள் முதலிய உருபுகள் நடுவே மறைந்து நிற்க, இரண்டு முதலிய சொற்கள் ஒரு சொல் தன்மையில் தொடர்வதாகும். ஒரு சொல் தன்மை என்பது பிளவுபடாது நிற்பதாகும்.

தொகைநிலைத் தொடர்,

1) வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்

2) வினைத் தொகைநிலைத் தொடர்

3) பண்புத் தொகைநிலைத் தொடர்

4) உவமைத் தொகைநிலைத் தொடர்

5) உம்மைத் தொகைநிலைத் தொடர்

6) அன்மொழித் தொகைநிலைத் தொடர்

என ஆறு வகைப்படும்.

வேற்றுமை வினைபண்பு உவமை உம்மை

அன்மொழி எனஅத் தொகைஆறு ஆகும்.

(நன்னூல் – 362)

தொகைநிலைத் தொடரில்,

1) பெயர்ச்சொல்லோடு பெயர்ச்சொல் தொடரும்.

2) பெயர்ச்சொல்லோடு வினைச்சொல் தொடரும்.

3) வினைச்சொல்லோடு பெயர்ச்சொல் தொடரும்.

4) வினைச்சொல்லோடு வினைச்சொல் தொடராது.

5) இடை, உரிச் சொற்கள் தொடரா.

6) ஒரு சொல்லோடு மற்றொரு சொல், பொருள் புணர்ச்சியில் தொடரும்.

7) சொற்களுக்கு இடையே உருபுகள் மறைந்து வரும்.

8) இரண்டு முதலாகப் பல சொற்கள் தொடரும்.

9) பல சொற்கள் தொடரினும் ஒரு சொல்போல் விளங்கும்.

10) உருபோடு சொல்லும் மறைந்து வரும்.

11) தொகை என்னும் சொல் உருபு மறைதல் எனப் பொருள்படும்.

பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை

முதலிய பொருளின் அவற்றின் உருபுஇடை

ஒழிய இரண்டு முதலாத் தொடர்ந்துஒரு

மொழிபோல் நடப்பன தொகைநிலைத் தொடர்ச்சொல்.

(நன்னூல்-361)

2.1 வேற்றுமைத் தொகை

வேற்றுமை எட்டு வகைப்படும். அவை,

1) முதல் வேற்றுமை

2) இரண்டாம் வேற்றுமை

3) மூன்றாம் வேற்றுமை

4) நான்காம் வேற்றுமை

5) ஐந்தாம் வேற்றுமை

6) ஆறாம் வேற்றுமை

7) ஏழாம் வேற்றுமை

8) எட்டாம் வேற்றுமை

இவற்றில் முதல் வேற்றுமை, எழுவாய் வேற்றுமை எனப்படும். எட்டாம் வேற்றுமை, விளி வேற்றுமை எனப்படும். எழுவாய் வேற்றுமை, விளி வேற்றுமை இரண்டிற்கும் உருபுகள் இல்லை. ஏனைய ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உள்ளன.

ஆறு வேற்றுமை உருபுகளும் வெளிப்பட்டு நின்றும் மறைந்து நின்றும் சொற்றொடரில் தம் பொருள் உணர்த்தும். உருபுகள் தோன்றாமல் மறைந்து நின்று சொற்றொடரில் பொருள் உணர்த்தும் தொடர்களே வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்கள் எனப்படும். வேற்றுமைகளும் அவற்றிற்குரிய உருபுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1) இரண்டாம் வேற்றுமை – ஐ

2) மூன்றாம் வேற்றுமை – ஆல், ஆன், ஒடு, ஓடு

3) நான்காம் வேற்றுமை – கு

4) ஐந்தாம் வேற்றுமை – இன், இல்

5) ஆறாம் வேற்றுமை – அது, ஆது

6) ஏழாம் வேற்றுமை – கண்

தொகை என்பது உருபு மறைதல் என்பதால் தொகைநிலைத் தொடரில் வேற்றுமைத் தொகை என்பது இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள ஆறு வேற்றுமைத் தொகைகளையே குறிக்கும்.

இரண்டு முதலாம் இடைஆறு உருபும்

வெளிப்படல் இல்லது வேற்றுமைத் தொகையே

(நன்னூல் – 363)

இவ்வேற்றுமைத் தொகைநிலைத் தொடர், வேற்றுமை உருபு மட்டும் மறைந்து வருதல், வேற்றுமை உருபும் பயனும் சேர்ந்து மறைந்து வருதல் என இரண்டு வகைப்படும்.

எடுத்துக்காட்டு :

பால் குடித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொகை

பால் குடம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

தலை வணங்கினான் – மூன்றாம் வேற்றுமைத் தொகை

பொன் வளையல் – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

என் மகள் – நான்காம் வேற்றுமைத் தொகை

குழந்தைப் பால் – நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

ஊர் நீங்கினான் – ஐந்தாம் வேற்றுமைத் தொகை

வாய்ப்பாட்டு – ஐந்தாம் வேற்றுமைத் உருபும் பயனும் உடன்தொக்க தொகை

நண்பன் வீடு – ஆறாம் வேற்றுமைத் தொகை

மலைக் கோயில் – ஏழாம் வேற்றுமை

தண்ணீர்ப் பாம்பு – ஏழாம் வேற்றுமைத் உருபும் பயனும் உடன் தொக்க தொகை

ஆறாம் வேற்றுமை, உருபு தொக்க தொகையாக மட்டுமே வரும்; உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாக வருவதில்லை.

2.2 வினைத் தொகை

வினைத்தொகை என்பது, பெயரெச்சத் தொடராகும். பெயரெச்சமாக வரும் வினையில், பெயரெச்சத்தின் விகுதியும், காலம் காட்டும் இடைநிலையும் கெட்டு, வினையின் முதல்நிலை மட்டும் நின்று அதனோடு பெயர்ச்சொல் தொடர்வதாகும். அதனால் வினைத்தொகையைக் காலம் கரந்த பெயரெச்சம் என்பர். கரந்த என்றால் மறைந்த என்பது பொருள்.

(எ-டு) வீசு தென்றல்

இத்தொடரை விரித்துக் கூறும்பொழுது, வீசிய தென்றல், வீசுகின்ற தென்றல், வீசும் தென்றல் என முக்காலத்திற்கும் பொருந்திவரக் காணலாம். இவ்வாறு வினைத்தொகை முக்காலமும் குறித்து வருமானால் அவை முக்கால வினைத் தொகைகள் எனப்படும்.

வீசிய, வீசுகிற, வீசும் என்னும் பெயரெச்சங்களின் விகுதியும் காலமும் கெட்டு, வீசுதல் என்னும் தொழிலின் முதல்நிலையான வீசு என்பது மட்டும் நின்று, தென்றல் என்னும் பெயரொடு வந்து வினைத்தொகை ஆயிற்று.

சில வினைச் சொற்களின் வினைப் பகுதியான முதல் நிலை விகாரப்பட்டும் வினைத்தொகை வரும்.

(எ-டு) வருபுனல்

இவ்வினைத்தொகையில் வா என்னும் வினைப் பகுதியான முதல்நிலை வரு எனத் திரிந்து புனல் என்னும் பெயரோடு வந்தது.

காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை

(நன்னூல் – 364)

2.3 பண்புத் தொகை

பண்புத் தொகை என்பது, ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து நிற்கப் பண்புப் பெயரோடு பண்பிப் பெயர் தொடர்வதாகும்.

பண்பு என்பது வண்ணம், வடிவம், அளவு, சுவை முதலியனவாகும்.

பண்பை உடையது எதுவோ அது பண்பி எனப்படும்.

ஆகிய என்பது, பண்புக்கும் பண்பிக்கும் உள்ள ஒற்றுமையை விளக்குவதற்காக வரும் இடைச்சொல். இதனைப் பண்பு உருபு என்பர்.

(எ-டு)

செந்தாமரை – வண்ணப் பண்புத் தொகை

வட்ட நிலா – வடிவப் பண்புத் தொகை

முத்தமிழ் – அளவுப் பண்புத் தொகை

இன்சொல் – சுவைப் பண்புத் தொகை

இவை விரியும்பொழுது, செம்மையாகிய தாமரை, வட்டமாகிய நிலா, மூன்றாகிய தமிழ், இனிமையாகிய சொல் என விரியும்.

மேலே கூறிய எடுத்துக்காட்டுகளில் செந்தாமரை என்பது செம்மை ஆகிய தாமரை என விரியும் எனப் பார்த்தோம். இவற்றுள் செம்மை என்பது பண்பு; ஆகிய என்பது பண்பு உருபு; தாமரை என்பது பண்பி. இதேபோல மற்ற எடுத்துக்காட்டுகளைப் பிரித்து அறிந்து கொள்க.

பண்புத்தொகையில் ஒருவகை இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும். இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பது, ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து நிற்கப் பொதுப் பெயரோடு சிறப்புப் பெயரோ, சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ ஒரு பொருள் குறித்து வருவதாகும்.

(எ-டு)

தலைவர் அப்துல்கலாம்

பலா மரம்

முதல் தொடரில் தலைவர் என்னும் சொல் பொதுப் பெயர். அப்துல்கலாம் என்னும் பெயர் சிறப்புப் பெயர். இத்தொடர் பொதுப் பெயரோடு சிறப்புப் பெயர் தொடர வந்த இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பொதுப் பெயரும் சிறப்பு பெயரும் ஒருவரையே குறித்து வந்தது கவனிக்கத்தக்கது.

இரண்டாம் தொடரில் பலா என்பது மர வகைகளில் ஒன்றின் சிறப்புப் பெயர். மரம் என்பது பொதுப் பெயர். இத்தொடர் சிறப்புப் பெயரொடு பொதுப் பெயர் தொடர வந்த இருபெயரொட்டுப் பண்புத் தொகை. சிறப்புப் பெயரும் பொதுப் பெயரும் ஒரு பொருளையே குறித்து வந்தன.

தலைவர், பலா என்னும் சொற்கள் பண்புப் பெயர் ஆகாவிடினும் பண்புத் தொகை போல ஆகிய என்னும் உருபு பெற்று ஒரு பொருளைச் சிறப்பிப்பதனால் இத்தொடர்கள் பண்புத் தொகைத் தொடர்களாகக் கருதப் பெறுகின்றன.

பண்பை விளக்கும் மொழிதொக் கனவும்

ஒருபொருட்கு இருபெயர் வந்தவும் குணத்தொகை

(நன்னூல்-365)

2.4 உவமைத் தொகை

உவமைத் தொகை என்பது, போல முதலிய உவமை உருபுகள் மறைந்து நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச் சொல் தொடர்வதாகும்.

போல என்பதோடு புரைய, ஒப்ப, உறழ, அன்ன, இன்ன முதலியனவும் உவம உருபுகளாகும்.

(எ-டு.) பவளவாய்

இது பவளம் போலும் வாய் என விரியும். இவற்றுள், பவளம் என்பது உவமானம்; போலும் என்பது உவமை உருபு; வாய் என்பது உவமேயம். (உவமானம் – உவமையாகும் பொருள்; உவமேயம் – உவமிக்கப்படும் பொருள்.)

இவ்வுவமைத் தொகை வினை, பயன், மெய், உரு என்பன பற்றி வரும். (மெய் – வடிவம்; உரு – வண்ணம்.)

(எ-டு.)

புலி மனிதன் – வினையுவமைத் தொகை

மழைக்கை – பயனுவமைத் தொகை

துடியிடை – மெய்யுவமைத் தொகை

பவளவாய் – உருவுவமைத் தொகை

இவை விரியும் பொழுது, புலி போலும் மனிதன், மழை போலும் கை, துடி போலும் இடை, பவளம் போலும் வாய் என விரியும்.

உவம உருபிலது உவமத் தொகையே (நன்னூல் – 366)

2.5 உம்மைத் தொகை

அளவுப் பொருளில் இரண்டு சொற்கள் தொடர்ந்து வர அவற்றின் இடையிலும் இறுதியிலும் உம்மையாகிய உருபு மறைந்து நிற்பது உம்மைத் தொகை எனப்படும். அவ்வளவுகள் எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு ஆகும்.

எ-டு :

ஒன்றேகால் – எண்ணல் அளவை உம்மைத் தொகை

தொடியேகஃசு – எடுத்தல் அளவை உம்மைத் தொகை

மரக்கால் படி – முகத்தல் அளவை உம்மைத் தொகை

அடி அங்குலம் – நீட்டல் அளவை உம்மைத் தொகை

இவற்றை விரித்துக் கூறும் பொழுது, ஒன்றும் காலும், தொடியும் கஃசும், மரக்காலும் படியும், அடியும் அங்குலமும் என விரியும்.

மற்ற தொகைநிலைத் தொடர்களில் காணப்படாத தனிச் சிறப்பு இவ்வும்மைத் தொகைக்கு உண்டு. மற்ற தொகைநிலைத் தொடர்களில் உருபு இரண்டு சொற்களுக்கு இடையில் மட்டுமே மறைந்து வரும். உம்மைத் தொகையில் இரண்டு சொற்களுக்கு இடையிலும் இரண்டாம் சொல்லின் இறுதியிலும் உம் என்னும் உருபு மறைந்து வருவதைக் காணலாம்.

எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்

எனும் நான்கு அளவையுள் உம்மிலது அத்தொகை

(நன்னூல்- 368)

2.6 அன்மொழித் தொகை

அன்மொழி என்பது அல் + மொழி எனப் பிரியும். அல் என்பதற்கு அல்லாத என்பது பொருள். மொழி என்றால் சொல் என்று பொருள். கூறப்படும் தொகைநிலைத் தொடரிலே இடம் பெறாத (அல்லாத) சொற்களைச் சேர்த்துப் பொருள் கொள்வதால் இத்தொகை நிலைத்தொடர் அன்மொழித்தொகை எனப்பட்டது. இது, வேற்றுமைத்தொகை முதலிய ஐவகைத்தொகை நிலைத் தொடர்மொழிகளுக்கு உரிய உருபுகள் தத்தம் பொருள்பட மறைந்து நிற்பதோடு மட்டுமல்லாது அவற்றிற்குப் புறத்தே அத்தொகைநிலைத் தொடர்களோடு தொடர்புடைய பிறசொற்களும் மறைந்து நின்று பொருள் உணர்த்தல் ஆகும். இது,

1) வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

2) வினைத்தொகைப் புறத்து பிறந்த அன்மொழித்தொகை

3) பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

4) உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

5) உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

என ஐந்து வகைப்படும்.

2.6.1 வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை இரண்டாம் வேற்றுமைத் தொகை முதல் ஏழாம் வேற்றுமைத் தொகை வரை சேர்த்து ஆறு வகைப்படும்.

(எ-டு) பூங்குழல் வந்தாள்

பூங்குழல் என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர், ‘பூவையுடைய குழலை உடையாள்’ என விரியும்போது இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

(எ-டு) பொற்றொடி வந்தாள்

பொற்றொடி என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைநிலைத் தொடர், ‘பொன்னாலாகிய தொடியினை உடையாள்’ என விரியும்போது மூன்றாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

(எ-டு) கவியிலக்கணம்

கவியிலக்கணம் என்னும் நான்காம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர், ‘கவிக்கு இலக்கணம் சொல்லப்பட்ட நூல்’ என விரியும்போது, நான்காம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

(எ-டு) பொற்றாலி

பொற்றாலி என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர், ‘பொன்னின் ஆகிய தாலியினை உடையாள்’ என விரியும்போது, ஐந்தாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

(எ-டு) கிள்ளிகுடி

கிள்ளிகுடி என்னும் ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர், ‘கிள்ளியினது குடியிருக்கும் ஊர்’ என விரியும் போது, ஆறாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

(எ-டு) கீழ் வயிற்றுக் கழலை

கீழ் வயிற்றுக் கழலை என்னும் ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை நிலைத் தொடர், ‘கீழ் வயிற்றின் கண் எழுந்த கழலையைப் போன்றவன்’ என விரியும்போது, ஏழாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

2.6.2 வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை (எ-டு) தாழ்குழல் பேசினாள்

தாழ்குழல் என்னும் வினைத்தொகை, ‘தாழ்ந்த குழலினை உடையாள்’ என விரியும்போது, வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

2.6.3 பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை(எ-டு) கருங்குழல் கருங்குழல் என்னும் பண்புத் தொகைநிலைத் தொடர் ‘கருமையாகிய குழலினை உடையாள்’ என விரியும்போது, பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

2.6.4 உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை(எ-டு) தேன்மொழி தேன்மொழி என்னும் உவமைத் தொகைநிலைத் தொடர் ‘தேன் போன்ற மொழியை உடையாள்’ என விரியும்போது, உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

2.6.5 உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை(எ-டு) உயிர்மெய் உயிர்மெய் என்னும் உம்மைத் தொகைநிலைத் தொடர் ‘உயிரும் மெய்யும் கூடிப் பிறந்த எழுத்து’ என விரியும்போது, உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

ஐந்தொகை மொழிமேல் பிறதொகல் அன்மொழி

(நன்னூல்-369)

2.7 தொகைநிலைத் தொடர்கள் பொருள் சிறக்கும் இடம்

தொகைநிலைத் தொடர் மொழிகள், இரண்டு சொற்கள் ஒரு சொல் நடையவாய் நிற்கும் முன்னர்க் கூறப்பட்டது. ஆயினும் அவ்விரண்டு சொற்களில் எச்சொல்லில் பொருள் சிறக்கும் என அறிவது தேவையாகிறது. தொகைநிலையாய் வரும் இரு சொற்களில் முதலில் நிற்கும் சொல்லை முன்மொழி என்றும் இரண்டாவது நிற்கும் சொல்லைப் பின்மொழி என்றும் குறிப்பிடுவர். தொகைநிலைத் தொடர்களில் எம்மொழியில் பொருள் சிறக்கும் என்பதை நான்கு வகையாகப் பிரித்துக் காணலாம். அவை :

1) முன்மொழியில் பொருள் சிறத்தல்

2) பின்மொழியில் பொருள் சிறத்தல்

3) அனைத்து மொழிகளிலும் பொருள் சிறத்தல்

4) புறமொழிகளில் பொருள் சிறத்தல்

2.7.1 முன்மொழியில் பொருள் சிறத்தல் வேற்றுமைத் தொகை, பண்புத் தொகை, வினைத்தொகை, உவமைத் தொகைகளிலே, முன்மொழிகள் இனம் விலக்கி நிற்குமானால் அம்முன்மொழிகளில் பொருள் சிறக்கும்.

(எ-டு.)

வேங்கைப்பூ – வேற்றுமைத் தொகை

வெண்டாமரை- பண்புத் தொகை

ஆடுபாம்பு – வினைத் தொகை

வேற்கண் – உவமைத் தொகை

முதல் தொடர் ஆறாம் வேற்றுமைத் தொகையாகும். பல வகைப் பூக்களில் தன் இனம் பலவற்றையும் விலக்கி வேங்கை மரத்தின் பூவை மட்டும் குறிப்பதால் முன்மொழியில் பொருள் சிறக்கிறது.

இரண்டாவது தொடரில் பல வகைத் தாமரைகளில் ஓர் வகையை மட்டும் குறித்துத் தாமரைப் பூவின் ஏனைய இனங்களை விலக்கியமையால் முன் மொழியில் பொருள் சிறக்கிறது.

இவ்வாறே வினைத்தொகை, உவமைத் தொகைகளிலும் முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலால் அம்மொழிகளில் பொருள் சிறந்தது.

2.7.2 பின்மொழியில் பொருள் சிறத்தல் வேற்றுமைத் தொகை, பண்புத் தொகைகளிலே, முன் மொழிகள் இனம் விலக்காமல் நின்றால், பின் மொழிகளில் பொருள் சிறக்கும்.

(எ-டு)

கண்ணிமை – வேற்றுமைத் தொகை

செஞ்ஞாயிறு – பண்புத் தொகை

இவ்வெடுத்துக் காட்டுகளில் வந்துள்ள இமை, ஞாயிறு என்பன இனம் இல்லாதனவாகும். அப்படி இருந்தும் கண் என்பதும், செம்மை என்பதும் இனத்திலிருந்து பிரித்துக் காட்டுதற்கு வராமல் வெறும் அடைமொழியாய் வந்துள்ளன. இதனால் இத்தொடர்களில் பின்மொழியில் பொருள் சிறந்தது.

2.7.3 அனைத்து மொழிகளிலும் பொருள் சிறத்தல் உம்மைத் தொகைகளில் அனைத்து மொழிகளிலும் இனம் விலக்கலும், விலக்காமையுமின்றித் தொகைச் சொற்கள் நிற்றலால், அவ்வனைத்து மொழிகளிலும் பொருள் சிறந்தது.

(எ-டு)

இராப்பகல்

கபில பரணர்

2.7.4 புறமொழிகளில் பொருள் சிறத்தல் அன்மொழித் தொகைகளில் சொல்லுவோனுடைய கருத்து இவ்விரு மொழிப் பொருள் மேல் செல்லா, இவ்விரு மொழியும் அல்லாத அயலாக நிற்கும் புறமொழி மேல் செல்வதால், அப்புறமொழி மேல் பொருள் சிறந்தது.

(எ-டு)

பொற்றொடி

உயிர்மெய்

பொற்றொடி என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை ‘பொன்னால் ஆகிய தொடியை உடையாள்’ என்னும் பொருளிலும், உயிர்மெய் என்னும் உம்மைத் தொகை ‘உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்து’ என்னும் பொருளிலும் அன்மொழித் தொகைகளாக வந்துள்ளன. உடையாள், எழுத்து என்பனவற்றின் மேல் பொருள் சிறத்தலால் புறமொழியின் மேல் பொருள் சிறந்தது.

முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி

எனும்நான்கு இடத்தும் சிறக்கும் தொகைப் பொருள்

(நன்னூல்-370)

2.8 தொகைநிலைத் தொடர்கள் பல பொருள்படுதல்

தொகைமொழித் தொடர்கள் ஒரு பொருளை மட்டும் குறித்து வருமானால் பொருள் மயக்கம் ஏற்படாது தொகைநிலையில் வரும்பொழுது, மொழிச்சூழலாலும், விரித்துப் பொருள் காண்போரின் பொருள் கொள்ளும் நிலையினாலும் பலபொருள்பட்டுப் பொருள் மயக்கம் ஏற்படுகிறது. இவ்வாறு தொகையை விரித்துப் பொருள் கொள்ளும்போது கீழ் எல்லையாக இரண்டு பொருளும், மேல் எல்லையாக ஏழு பொருள் வரையிலும் தொகைநிலைத் தொடர், பொருள் மயங்க நிற்கும்.

(எ-டு)

அ) தெய்வ வணக்கம் – இரண்டு பொருள்

1) தெய்வத்தை வணங்கும் வணக்கம் – இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்க தொகை.

2) தெய்வத்திற்கு வணங்கும் வணக்கம் – மூன்றாம் வேற்றுமை உருபும்

பயனும் உடன்தொக்க தொகை.

ஆ) தற்சேர்ந்தார் – மூன்று பொருள்

1) தன்னைச் சேர்ந்தார் – இரண்டாம் வேற்றுமைத் தொகை

2) தன்னொடு சேர்ந்தார் – மூன்றாம் வேற்றுமைத் தொகை

3) தன்கண் சேர்ந்தார் – ஏழாம் வேற்றுமைத் தொகை

இ) சொல்லிலக்கணம் – நான்கு பொருள்

1) சொல்லினது இலக்கணம் – ஆறாம் வேற்றுமைத் தொகை

2) சொல்லுக்கு இலக்கணம – நான்காம் வேற்றுமைத் தொகை

3) சொல்லின்கண் இலக்கணம் – ஏழாம் வேற்றுமைத் தொகை

4) சொல்லினது இலக்கணம்

சொன்ன நூல் – அன்மொழித் தொகை

ஈ) பொன்மணி – ஐந்து பொருள்

1) பொன்னலாகிய மணி – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (கருவிப் பொருள்)

2) பொன்னாகிய மணி – பண்புத் தொகை

3) பொன்னின்கண் மணி – ஏழாம் வேற்றுமைத் தொகை

4) பொன்னோடு சேர்ந்த மணி – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (உடனிகழ்ச்சிப் பொருள்)

5) பொன்னும் மணியும் – உம்மைத் தொகை

(உ) மர வேலி – ஆறு பொருள்

1) மரத்தைக் காக்கும் வேலி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

2) மரத்தாலாகிய வேலி – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

3) மரத்திற்கு வேலி – நான்காம் வேற்றுமைத் தொகை

4) மரத்தினது வேலி – ஆறாம் வேற்றுமைத் தொகை

5) மரத்தின் புறத்தில் வேலி – ஏழாம் வேற்றுமைத் தொகை

6) மரமாகிய வேலி – பண்புத் தொகை

(ஊ) சொற்பொருள் – ஏழு பொருள்

1) சொல்லால் அறியப்படும் பொருள – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

2) சொல்லினது பொருள் – ஆறாம் வேற்றுமைத் தொகை

3) சொல்லுக்குப் பொருள் – நான்காம் வேற்றுமைத் தொகை

4) சொல்லின் கண் பொருள் – ஏழாம் வேற்றுமைத் தொகை

5) சொல்லும் பொருளும் – உம்மைத் தொகை

6) சொல்லாகிய பொருள் – பண்புத் தொகை

7) சொல்லானது பொருள் – எழுவாய்த் தொடர்

தொக்குழி மயங்குந இரண்டு முதலேழ்

எல்லைப் பொருளின் மயங்கும் என்ப

(நன்னூல் – 373)

2.9 தொகுப்புரை

இப்பாடம் தொகை என்றால் என்ன என்று விளக்குகிறது. தொகைநிலைத் தொடர்கள் வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை என ஆறு வகைப்படும். இவ்வாறு தொகைநிலைத் தொடர்களின் உட்பிரிவுகளையும் அவை எப்பொருள்களில் வரும் என்பதையும் இப்பாடம் விளக்குகிறது.

தொகைநிலைத் தொடர்கள் முன்மொழியில் பொருள் சிறப்பன, பின்மொழியில் பொருள் சிறப்பன, அனைத்து மொழிகளிலும் பொருள் சிறப்பன, புறமொழியில் பொருள் சிறப்பன என நான்கு வகைப்படும். இந்நான்கு வகைகளுக்குரிய தொகைநிலைத் தொடர்களைப்பற்றியும் இப்பாடம் விளக்குகிறது.

தொகைநிலைத் தொடர்மொழிகளை விரித்துப் பொருள் கொண்டால் இரண்டு முதல் ஏழு பொருள் வரை தரும் என்பதையும் இப்பாடம் விளக்குகிறது.

பாடம் - 3

தொகாநிலைத் தொடர்

3.0 பாட முன்னுரை

தொகாநிலைத் தொடர் என்பது சொற்கள், வேற்றுமை, அல்வழிப் பொருளில், உருபுகள் இருந்து மறையாமலும், உருபுகளே இல்லாமலும் தொடரும் தொடராகும்.

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் என்பது, வேற்றுமைக்கு உரிய உருபுகள் மறையாமல் வெளிப்பட்டுத் தொடரும் தொடராகும்.

அல்வழித் தொகாநிலைத் தொடர் என்பது, அல்வழிக்கு உரிய தொகைகளான வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை ஆகியன நீங்கலாக, தமக்கெனத் தனி உருபுகள் இல்லாத ஏனைய தொகாநிலைத் தொடர்கள் தொடரும் தொடராகும். இத்தொகாநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும். அவை,

(1) வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

(2) எழுவாய்த் தொடர்

(3) விளித் தொடர்

(4) வினைமுற்றுத் தொடர்

(5) பெயரெச்சத் தொடர்

(6) வினையெச்சத் தொடர்

(7) இடைச் சொற்றொடர்

(8) உரிச் சொற்றொடர்

(9) அடுக்குத் தொடர்

வேற்றுமைத் தொடர்களில், உருபு விரிந்தவிடத்து வேற்றுமைத் தொகாநிலைத் தொடராகும்; வினைத்தொகை விரிந்தவிடத்து பெயரெச்சத் தொடராகும்; பண்புத்தொகையும் உம்மைத்தொகையும் விரிந்தவிடத்து இடைச் சொற்றொடராகும்; உவமைத் தொகைவிரிந்தவிடத்து முன்னது இடைச் சொற்றொடராகும்; பின்னது இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினையெச்சத் தொடராகும். அன்மொழித் தொகை விரிந்தவிடத்து வேற்றுமை முதலிய தொகாநிலைத் தொடர் முதல் ஏற்பனவாகும்.

(எ.டு.)

பால் குடித்தான் – வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்

பாலைக் குடித்தான் – வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

வாழ் மனை – வினைத் தொகை

வாழ்ந்த மனை

வாழ்கிற மனை

வாழும் மனை – பெயரெச்சத் தொடர்

செந்தமிழ் – பண்புத்தொகை

செம்மை ஆகிய தமிழ் – இடைச் சொற்றொடர்

பால் பழம் – உம்மைத் தொகை

பாலும் பழமும் – இடைச் சொற்றொடர்

தாமரைக் கண் – உவமைத் தொகை

தாமரை போன்ற கண் – உவமை விரி

தாமரை போன்ற – இடைச் சொற்றொடர்

போன்ற கண் – இடைச் சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சத்தொடர்

கார்குழல் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை

கார் போன்ற குழலை உடைய பெண் – உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை பெண்

என்னும் முதல் கொண்டு முடிந்தது.

முற்றுஈர் எச்சம் எழுவாய் விளிப்பொருள்

ஆறுஉருபு இடைஉரி அடுக்குஇவை தொகாநிலை

(நன்னூல் : 374)

3.1 வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

உருபுகள் பெற்றுவரும் வேற்றுமைகள் இரண்டு முதல் ஏழு வரை மொத்தம் ஆறு என முன்னர்க் கூறப்பட்டது. இந்த ஆறு வேற்றுமைகளின் உருபுகள் வெளிப்பட நின்று தொடரும் தொடர் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் எனப்படும்.

(எ.டு.)

பாடத்தைப் படித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

கத்தியால் குத்தினான் – மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

மகளுக்குக் கொடுத்தான் – நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

ஏணியில் இறங்கினான் – ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

நண்பனது வீடு – ஆறாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

வான்கண் நிலா – ஏழாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

3.2 வினைமுற்றுத் தொடர்

வினைமுற்று என்பது ஓர் எழுவாயின் செயல் நிலையைக் காட்டி வாக்கியத்தை முடிக்கும் சொல்லாக அமையும்.

(எ.டு.) கம்பன் பாடினான்.

இவ்வாக்கியத்தில் ‘பாடினான்’ என்னும் வினைக்குக் காரணமான பெயர் ‘கம்பன்’. எனவே கம்பன் என்பது இவ்வாக்கியத்தின் எழுவாய். கம்பன் செய்த செயலைக் குறிப்பிடும் வினைச்சொல் ‘பாடினான்’ என்பது. இது வினைப் பயனிலை என்றும் வினைமுற்று என்றும் அழைக்கப்படும்.

வாக்கியத்தின் இறுதியில் இடம்பெற வேண்டிய வினைமுற்று முதலில் இடம்பெற்று ஆறு வகைப் பெயரையும் கொண்டு முடியும். இது வினைமுற்றுத் தொடர் எனப்படும்.

(எ.டு.)

செய்வாள் அவள் – பொருட்பெயர் கொண்டு முடிந்தது

குளிர்கிறது நிலம் – இடப்பெயர் கொண்டு முடிந்தது

வந்தது கார் – காலப் பெயர் கொண்டு முடிந்தது

வணங்கியது கை – சினைப் பெயர் கொண்டு முடிந்தது

சிறந்தது நன்மை – பண்புப் பெயர் கொண்டு முடிந்தது

உயர்ந்தது வாழ்க்கை – தொழில் பெயர் கொண்டு முடிந்தது

பொதுவியல்பு ஆறையும் தோற்றிப் பொருட்பெயர்

முதல்அறு பெயர்அலது ஏற்பில முற்றே

(நன்னூல் : 323)

வினைமுற்று இரு வகைப்படும்.

1) தெரிநிலை வினைமுற்று

2) குறிப்பு வினைமுற்று

தெரிநிலை வினைமுற்று வினைமுதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படுபொருள் என்னும் ஆறையோ அவற்றில் சில, பலவற்றையோ காட்டும். மேலே எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்ட வினைமுற்றுகள் யாவும் தெரிநிலை வினைமுற்றுகள் என்பதை அறியலாம்.

செய்பவன் கருவி நிலம்செயல் காலம்

செய்பொருள் ஆறும் தருவது வினையே

(நன்னூல் : 320)

குறிப்பு வினைமுற்று என்பது, வினைமுதல், கருவி, இடம், செயல் காலம், செயப்படுபொருள் என்னும் ஆறில் செய்பவனை மட்டும் காட்டும். இதுவும் பொருட்பெயர் முதலிய ஆறையும் கொண்டு முடியும்.

(எ.டு.)

நல்லன் அவன் – பொருட்பெயர் கொண்டு முடிந்தது

நல்லது நிலம் – இடப்பெயர் கொண்டு முடிந்தது

நல்லது கார் – காலப்பெயர் கொண்டு முடிந்தது

நல்லது கண் – சினைப்பெயர் கொண்டு முடிந்தது

நல்லது வெண்மை – பண்புப்பெயர் கொண்டு முடிந்தது

நல்லது பணிவு – தொழில்பெயர் கொண்டு முடிந்தது

பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள்

வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே

(நன்னூல் : 321)

3.3 எச்சத் தொடர்

பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் தொடர் எச்சத் தொடர் ஆகும். இஃது இரு வகைப்படும்.

1) பெயரெச்சத் தொடர்

பெயரெச்சம் என்பதைப் பெயர் + எச்சம் எனப் பிரிக்கலாம். பெயர்ச் சொல்லைப் பற்றி முந்தைய பாடத்தில் விளக்கப்பட்டது. எச்சம் என்பது ‘முற்றுப்பெறாத வினைச்சொல்’ ஆகும். முடிக்கும் சொல்லாகப் பெயரைப் பெற்றுவரும் எச்சம் பெயரெச்சம் எனப்படும். எச்சமும் பெயரும் சேர்ந்த தொடர், பெயரெச்சத் தொடர் எனப்படும்.

இனிப் பெயரெச்சம் என்றால் என்ன என்பதைக் காணலாம். பெயரெச்சம்,

- செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் வாய்பாட்டில் வரும்.

- இறந்தகாலம் (செய்த), நிகழ்காலம் (செய்கின்ற), எதிர்காலம்

(செய்யும்) என்னும் முக்காலத்தையும் காட்டும்.

- செயலைக் காட்டும்.

- செயலுக்குரிய வினைமுதலின் பால் என்ன என்பதைக்காட்டாது

- வினைமுற்றால் அறியப்பெறும் வினைமுதல், கருவி, இடம்,

செயப்படுபொருள் ஆகியவற்றைக் காட்டாது.

- ஆறுவகைப் பெயர்களையும் கொண்டு முடியும்.

(எ.டு.)

படித்த இளைஞன் – எச்சம் பொருட்பெயர் கொண்டு முடிந்தது.

பார்த்த ஊர் – எச்சம் இடப்பெயர் கொண்டு முடிந்தது.

கடந்த தை – எச்சம் காலப்பெயர் கொண்டு முடிந்தது.

முறிந்த கால் – எச்சம் சினைப்பெயர் கொண்டு முடிந்தது.

சுவைத்த இனிப்பு – எச்சம் பண்புப்பெயர் கொண்டு முடிந்தது.

முடிந்த தேர்தல் – எச்சம் தொழிற்பெயர் கொண்டு முடிந்தது.

செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டில்

காலமும் செயலும் தோன்றிப் பாலொடு

செய்வது ஆதி அறுபொருள் பெயரும்

எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே (நன்னூல் : 340)

2) வினையெச்சத் தொடர்

வினையைக் கொண்டு முடியும் எச்சம், வினையெச்சம் எனப்படும். எச்சம் வினைகொண்டு முடியும்போது அது வினையெச்சத் தொடர் ஆகிறது. வினையெச்சம்,

- தொழிலையும் காலத்தையும் காட்டும்.

- செயலுக்குரிய வினைமுதலின் பால் என்ன என்பதைக்காட்டாது

- செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என்னும் இறந்தகால

வாய்பாட்டில் வரும்.

- செய என்னும் நிகழ்கால வாய்பாட்டில் வரும்.

- செயின், செய்யிய, செய்யியர், வான், பான், பாக்கு என்னும்

எதிர்கால வாய்பாட்டில் வரும்.

- வினையைக் கொண்டு முடியும்.

(எ.டு.) படித்து வந்தான்.

இவற்றுள், படித்து என்பது, படித்தல் என்னும் தொழிலும், இறந்த காலமும் காட்டி, அத்தொழிலை நிகழ்த்தும் வினைமுதலின் பால் என்ன என்பதைக் காட்டாமல் வினைச்சொல்லை முடிக்கும் சொல்லாகப் பெற்று வந்துள்ளது.

தொழிலும் காலமும் தோன்றிப் பால்வினை

ஒழிய நிற்பது வினையெச் சம்மே (நன்னூல் : 342)

3.4 எழுவாய்த் தொடரும், விளித்தொடரும்

முதல் வேற்றுமையும் எட்டாம் வேற்றுமையும் கொண்ட தொடர்களை முறையே எழுவாய்த் தொடர் என்றும், விளித்தொடர் என்றும் கூறுவர்.

எழுவாய்த் தொடர்

எட்டு வேற்றுமைகளில் முதல் வேற்றுமை எனப்படுவது எழுவாய் வேற்றுமை, வேற்றுமைகளுக்குரிய ஐ முதலிய உருபுகள் ஏற்காமல், திரிபில்லாத பெயராய் விளங்குவது எழுவாய் வேற்றுமையாகும். இது வினை, வினா, பெயர் ஆகியவற்றைப் பயனிலையாகப் பெற்று எழுவாய்த் தொடராக வரும். பெயர் மட்டும் தனித்து வரும்பொழுது எழுவாய் ஆகாது. பெயர் தனக்குரிய பயனிலையைக் கொண்டு முடியும் பொழுதே அது எழுவாய் என்னும் தகுதி பெறும் என்பது அறிக.

(எ.டு.)

பாரதிதாசன் பாடினார்

பாரதி வாழ்க

இத்தொடர்களில் ‘பாரதிதாசன்’ ‘பாரதி’ என்னும் எழுவாய்கள் முறையே ‘பாடினார்’, ‘வாழ்க’ என்னும் வினைமுற்றுகளைப் பயனிலையாகப் பெற்று முடிந்தன.

(எ.டு.)

காந்தி தலைவர்

இவர் பெரியார்

‘இத்தொடர்களில் ‘காந்தி’, ‘இவர்’ என்னும் எழுவாய்கள், முறையே ‘தலைவர்’, பெரியார்’ என்னும் பெயர்களைப் பயனிலையாகக் கொண்டு முடிந்தன.

(எ.டு.)

அவன் யார்?

மலர் யாது?

இத்தொடர்களில் ‘அவன்’, ‘மலர்’ என்னும் எழுவாய்கள், முறையே ‘யார்’, ‘யாது’ என்னும் வினாப்பெயர்களைப் பயனிலையாகக்கொண்டு முடிந்தன.’

மேலே காட்டிய எழுவாய்ப் பெயர்கள் வேற்றுமை உருபுகளை ஏற்காமலும், தம் பெயரில் எவ்வித் திரிபும் இல்லாமலும் பயனிலைகளைப் பெற்று வந்துள்ளமை காண்க.

விளித் தொடர்

எட்டாம் வேற்றுமை, ‘விளி வேற்றுமை’ எனப்படும். இவ்விளி வேற்றுமையினுடைய உருபுகள், படர்க்கைப் பெயரின் ஈற்றில் மிகுதலும், திரிதலும், கெடுதலும், இயல்பாதலும், ஈற்றயல் எழுத்துத் திரிதலுமாம்.

இது ஏவல் வினையைக் கொண்டு முடியும். விளியும் ஏவல்வினையும் சேர்ந்த தொடர் விளித் தொடர் எனப்படும்.

விளி வேற்றுமையின் உருபுகள், தம்மையேற்ற பெயர்ப்பொருளை, முன்னிலையில் அழைக்கப்படும் (விளிக்கப்படும்) பொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட விளிக்கப்படும் பொருளே இவ்வுருபுகளின் பொருளாகும்.

(எ.டு. )

கம்பனே, கேளாய் – கம்பன் என்பதன் ஈறு ஏகாரம் பெற்று வந்துள்ளது. – மிகுதல்

தம்பீ, கேளாய்

-தம்பி என்பதன் ஈறு ஈகாரமாயிற்று.

-திரிதல்

செல்வ, கேளாய்

-செல்வன் என்பதன் ஈறு போயிற்று

-கெடுதல்

அம்மா கேளாய்

-இயல்பு

முருகா கேளாய் -

முருகன் என்பதன் ஈற்று எழுத்துக் கெட்டு ஈற்றயல் எழுத்து க – கா ஆயிற்று – அயல் திரிதல்

எட்டன் உருபே எய்துபெயர் ஈற்றின்

திரிபு குன்றல் மிகுதல் இயல்புஅயல்

திரிபும் ஆம்பொருள் படர்க்கை யோரைத்

தன்முக மாகத் தான்அழைப் பதுவே (நன்னூல் : 303)

3.5 இடைச் சொற்றொடர்

இடைச்சொல் என்பது, பெயரும் வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் அற்றது; பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொல்லாகும். இஃது ஒன்பது வகைப்படும். அவை,

(1) வேற்றுமை உருபுகள் – ஐ, ஆல் முதலியன

(எ.டு) தேனைக் குடித்தான் (தேன்+ஐ)

(2) விகுதி உருபுகள் – ஆன், ஆள் முதலியன

(எ.டு) நடந்தான் (நட+த்+த்+ஆன்)

(3) இடைநிலை உருபுகள் – ப், வ், த் முதலியன

(எ.டு) நடந்தாள் – (நட+த்+த்+ஆள்)

(4) சாரியை உருபுகள் – அன், அத்து முதலியன

(எ.டு) மரத்தை (மரம்+அத்து+ஐ)

(5) உவம உருபுகள் – போல, புரைய முதலியன

(எ.டு) புலி போலப் பாய்ந்தான் (போல)

(6) தம்பொருள் உணர்த்துவன – அ (சுட்டு), ஆ (வினா) முதலியன

(எ.டு) அப்பொருள் – அ+பொருள் (சுட்டு)

அவனா – அவன்+ஆ (வினா)

(7) ஒலிக் குறிப்பு முதலிய பொருள் உணர்த்துவன – ஓ ஓ, ஐயோ முதலியன

(எ.டு) ஐயோ! ஐயோ!

(8) (செய்யுளில்) இசைநிறையாய் வருவன

(எ.டு) “ஏஎ இவளொருத்தி…”

(9) அசைநிலையாய் வருவன

(எ.டு) “மற்று என்னை ஆள்க”

இசைநிறை என்பது, வேறுபொருள் உணர்த்தாது செய்யுளில் ஓசையை நிறைத்து நிற்பது.

அசைநிலை என்பது, வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச்சொல்லோடும் வினைச் சொல்லோடும் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்பது.

உவம உருபுகளாயும் ஒலிக்குறிப்பாயும், செய்யுளில் இசைநிறையாயும் அசைநிலையாயும் வரும் இடைச்சொற்களைத் தொடர்ந்து வரும் தொடர்கள் இடைச் சொற்றொடர் எனப்படும். இவையேயன்றி என, மற்று முதலிய இடைச்சொற்களைத் தொடர்வனவும் இடைச் சொற்றொடர் எனப்படும்.

3.6 உரிச் சொற்றொடர்

உரிச்சொற்கள் பெயர் அல்லது வினைச்சொற்களுக்கு அடையாய் நின்று தொடர வருவது உரிச்சொற்றொடர் எனப்படும். உரிச்சொல்லைப் பற்றிய செய்திகள் முந்தைய பாடத்தில் கூறப்பட்டன. அவற்றை நினைவு கொள்க.

- இசையும் குறிப்பும் பண்பும் ஆகிய பல்வேறுபட்ட குணங்களை

உணர்த்தும் பெயராய் வரும்.

- பல சொல் ஒரு பண்பையும், ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தும்.

- பெயர், வினைகளை விட்டு நீங்காது அவற்றிற்கு அடையாய் வரும்.

- செய்யுளுக்கு உரியனவாய் வரும்.

இசை, ஓசை, குறிப்பு என்பன மனத்தினால் உணரப்படுவன. பண்பு ஐம்பொறிகளால் உணரப்படுவது.

(எ.டு)

சால, உறு, தவ, நனி, கூர், கழி – மிகுதி என்னும் ஒரு குணம் குறித்தது.

கடி – காப்பு, கூர்மை, நாற்றம், அச்சம் முதலிய பல குணம் குறித்தது.

(எ.டு) தடக்கை – பெயர்க்கு அடையாக வந்தது.

நனி வருந்தினான் – வினைக்கு அடையாக வந்தது.

“வாரணம் பொருத மார்பு” – இதில் வாரணம் என்பது யானையைக் குறித்துச் செய்யுளில் வழங்கி வந்துள்ள சொல் ஆகும்.

பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி

ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை

ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல் (நன்னூல் : 442)

3.7 அடுக்குத் தொடர்

ஒரு சொல் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், துன்பம், அசைநிலை, இசைநிறை முதலிய காரணம் பற்றி இரண்டு முதல் நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத் தொடர் எனப்படும். வந்த சொல்லே திரும்பவும் வரும் என்பதறிக.

அசைநிலைக்கு இரண்டு முறையும், பொருள் நிலைக்கு இரண்டு அல்லது மூன்று முறையும், இசைநிறைக்கு இரண்டு, மூன்று அல்லது நான்கு முறையும் ஒரு சொல் அடுக்கி வரும்.

அடுக்குத் தொடரில் அடுக்கிவரும் சொல், பெயர் அல்லது வினைச் சொல் ஆகும்.

(எ.டு)

“ஏஏ யம்பல் மொழிந்தனள் யாயே” – அசைநிலை (2 முறை)

வா வா; போ போ போ -

விரைவு (பொருள்நிலை – 2 /3 முறை)

வருக வருக; வாழ்க வாழ்க, வாழ்க -

உவகை (பொருள்நிலை – 2 / 3 முறை)

பாம்பு பாம்பு; தீத்தீத்தீ -

அச்சம் (பொருள்நிலை – 2 / 3 முறை)

ஐயோ ஐயோ; இழப்பு இழப்பு இழப்பு -

அவலம் (பொருள்நிலை – 2 / 3 முறை)

“நல்குமே நல்குமே நல்குமே நாமகள்” – இசைநிறை (3 -முறை)

“பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ” – இசைநிறை (4- முறை)

அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒருசொல்

இரண்டு மூன்று நான்கு எல்லைமுறை அடுக்கும்

(நன்னூல் : 395)

3.8 தொகுப்புரை

தொகாநிலைத் தொடர்கள், வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்முதல் அடுக்குத் தொடர் ஈறாக ஒன்பது வகைப்படும் என இப்பாடம் விளக்குகிறது.

வேற்றுமைத் தொகாநிலைத் தொடரின் ஆறு வகைகளை இப்பாடம் விளக்குகிறது.

அல்வழித் தொகாநிலைத் தொடரின் எட்டு வகைகளையும் அவை குறித்து வரும் பொருள்களையும் இப்பாடம் விவரிக்கிறது.

பாடம் - 4

மரபுத் தொடர்

4.0 பாட முன்னுரை

ஒரு பொருளை அறிவுடையவர்கள் எந்த முறையால் எப்படிச் சொன்னார்களோ அப்பொருளை அச்சொல்லால் அவர்கள் சொல்லிய முறையிலேயே சொல்வது மரபு ஆகும்.

விலங்கு/பறவை – இளமைப் பெயர்

குதிரை, ஆடு, கழுதை

குரங்கு, பாம்பு, பூனை – குட்டி

பசு, ஒட்டகம், கவரி – கன்று

புலி, நாய், நரி, பன்றி – குருளை

அணில், கீரி – பிள்ளை

பறவை – குஞ்சு

விலங்கு/பறவை – எழுப்பும் ஒலி

குதிரை – கனைத்தல்

கழுதை, மாடு, ஆடு – கத்துதல்

நாய் – குரைத்தல்

நரி, ஓநாய் – ஊளையிடல்

யானை – பிளிறுதல்

இவ்வாறு குதிரைக் குட்டி என்றும் குதிரை கனைத்தது என்றும் கூறுதலே அறிவுடையோர் தொன்றுதொட்டுக் கடைப்பிடித்து வரும் மொழி வழக்காகும். மொழியின் பல்வேறு கூறுகளில் இம்மரபு எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை இனி அறியலாம்.

எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்

செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே

(நன்னூல் – 388)

4.1 வினை

உணவு என்பது கடினமான பொருள்களையும் மென்மையான பொருள்களையும் நீர்ப் பொருள்களையும் தொட்டுச் சுவைப்பதற்கு உரிய பொருள்களையும் உள்ளடக்கியது.

காய், கனி, முறுக்கு முதலியன கடினமான பொருள்கள். கடினமான பொருள்களைத் தின்னல் என்பது மரபு.

சோறு என்பது கடித்துத் தின்பதற்கு உரிய பொருள் அன்று. மென்மையான பொருள். இதனை உண்ணல் என்பது மரபு.

பால், மோர், பழச்சாறு முதலியவை நீர்ப்பொருள். இவற்றைப் பருகுதல் என்பது மரபு.

ஊறுகாய், பச்சடி முதலியவற்றை தின்னவோ, உண்ணவோ, பருகவோ இயலாது. இவற்றைத் தொட்டு நக்குதல் மரபு.

இப்பொருள்கள் அனைத்தையும் குறிக்கும் பொதுச் சொல் உணவு. உணவின் இவ்வகைகளைக் குறிப்பன சோறு முதலிய சிறப்புச் சொற்கள். உணவின் வகைகளைத் தனித் தனியே சாப்பிட்டதாகக் குறிப்பிடும் போது அவற்றிற்கு உரிய சிறப்பு வினைகளான தின்னல், உண்ணல் முதலியவற்றைப் பயன்படுத்த வேண்டும். உணவு வகை அனைத்தையும் சாப்பிட்டதாகக் குறிக்கும் போது அவற்றிற்கு உரிய பொதுவான வினையான சாப்பிட்டல் என்பதைப் பயன்படுத்த வேண்டும் என்பது மரபு. இதன்படி உணவு தின்றான், உணவு குடித்தான், உணவு நக்கினான் எனச் சிறப்புப் பொருள்களுக்கு உரிய வினையால் குறிப்பிடுவது மரபு அன்று. உணவு அயின்றான், மிசைந்தான் என்று சொல்வது மரபு. இக்காலத்தில் சாப்பிட்டான் எனச் சொல்வதை மரபு எனக் கொள்ளலாம்.

இவ்வாறு வெவ்வேறு வினைகளுக்கு உரிய பல பொருள்களையும் தொகுதியாகக் குறிப்பிடும்போது, அவற்றின் பொதுச் சொல்லையும், அப்பொதுச் சொல்லிற்கு உரிய பொது வினையையும் பயன்படுத்துதல் மரபு. சிறப்புப் பொருள்களுக்கு உரிய வினையைக் கொண்டு முடிதல் கூடாது.

மக்களை அழகுபடுத்தும் அணிகள் பல. அவை அனைத்தையும் குறிக்கும் பொதுச் சொல் அணி.

திலகம் இடுதல்

மாலை, பூ சூடுதல்

மணப்பொருள்கள் பூசுதல்

சேலை, சட்டை உடுத்தல்

தாலி கட்டுதல்

இவைகளை எல்லாம் குறிக்கும் பொதுச் சொல்லான அணி / நகை என்பதை அணிதல் என்னும் பொது வினையால் குறிப்பிட வேண்டும்.

இசைக் கருவிகள் பல. கொட்டுதல், ஊதுதல், முழங்குதல் முதலியன அவற்றின் சிறப்பு வினைகள். இவை அனைத்தையும் இயம்புதல் அல்லது இசைத்தல் என்னும் பொதுவினையால் குறித்தல் மரபு.

படைக் கருவிகள் பல. வெட்டுதல், எய்தல், எறிதல், சுடுதல், வெடித்தல், குத்துதல் என்பன சிறப்பு வினைகள். அக்காலத்தில் படை வழங்கினார், படை தொட்டார் என்பது மரபு. இக்காலத்தில் படைக் கருவிகளைப் பயன்படுத்தினார் எனல் தகும்.

வேறுவினைப் பல்பொருள் தழுவிய பொதுச்சொலும்

வேறவற்று எண்ணுமோர் பொதுவினை வேண்டும்

(நன்னூல் – 389)

4.2 ஒரு சொல் குறித்த பல பொருள்கள்

ஒரு சொல் ஒரு பொருளைக் குறிப்பதும் உண்டு; பல பொருளைக் குறிப்பதும் உண்டு.

(எ-டு:)

மரம் – ஒரு பொருள் குறித்தது

தாமம் -

மலர் மாலை, அச்சம், இடம், உடல், ஒழுங்கு, கயிறு, ஒளித்தொகுதி, கொன்றை மரம், நகரம், பறவைகளின் கழுத்து ஆரம், பூ, பெருமை, போர்க்களம், மணிகள் கோத்த அணிகலன், மலை, மாலை, தலைப்பின்னல் வகையில் ஒன்று, யானை, விருப்பம், வீடு எனப் பல பொருள் குறித்தது.

இவ்வாறு, பல பொருள் குறித்த சொல் ஒரு தொடரில் வரும் பொழுது எவ்வாறு பொருள் கொள்வது என்பதற்குச் சான்றோர்கள் வழிகாட்டியுள்ளனர். பல பொருள் குறித்த சொல்லை ஒரு தொடரில் பயன்படுத்தும் பொழுது, வினை, சார்பு, இனம், இடம் என்பனவற்றைக் குறிக்கும் சொற்களைச் சேர்த்துச் சொல்லி அதன் பொருளைத் தெளிவுபடுத்துதல் மரபு.

மா என்னும் சொல் மாமரத்திற்கும் வண்டிற்கும் குதிரைக்கும் இலக்குமிக்கும் பொதுவான பல பொருள் ஒரு சொல்.

இப்பொருள்களுள்,

(எ-டு:)

மா காய்த்தது – மரம் என்பதைக் காய்த்தது என்னும் வினை காட்டுகிறது.

மா மொய்த்த மலர் – வண்டு என்பதை மலர் என்னும் சார்பு காட்டுகிறது.

மா, யானை, தேர், காலாள் – குதிரை என்பதை யானை, தேர்,காலாள் என்னும் இனம் காட்டுகிறது.

மா தங்கும் திருமால் – இலக்குமி என்பதைத் தங்கும் இடமாகிய திருமால் (இன் மார்பு) என்னும் இடம் காட்டுகிறது.

இவ்வாறு இல்லாமல் மா ஏறினான், மா யாது என்றால் மா என்பதன் பொருள் விளங்காது. அதனை விளக்குவதற்காக மா என்பதனோடு மேலே குறிப்பிட்டவாறு வேறுபடுத்திக் காட்டும் சிறப்புச் சொல்லையும் அறிஞர் சேர்த்துச் சொல்வது மரபு ஆகும்.

வினைசார்பு இனம்இடம் மேவி விளங்காப்

பலபொருள் ஒருசொல் பணிப்பர் சிறப்பெடுத்தே

(நன்னூல்-390)

4.3 எழுத்து மாறாச் சொற்றொடர்கள்

சில சொற்றொடர்களில் இடம் பெறும் எழுத்துகளைப் பிரித்துக் கூறுவதாலும் சேர்த்துக் கூறுவதாலும் பொருள் வேறுபாடு எழும்.

(எ-டு)

தலைவிதிவசம்

நாகன்றேவன்போத்து

பலகையொலி

தாமரைக்காடு

இத்தொடர்கள் என்ன பொருளில் கூறப்பட்டன என்பது கேட்போர்க்கும் படிப்போர்க்கும் விளங்கா நிலையில் உள்ளன.

முதல் தொடரைத் ‘தலைவிதி – வசம்’ எனப் பிரித்தால் ‘தலைவிதியின் காரணமாக’ என்றும் ‘தலைவி – திவசம்’ எனப் பிரித்தால் ‘மனைவிக்குத் திவசம்’ என்றும் இரு பொருள்படும்.

இரண்டாவது தொடரை ‘நாகன்றே வன்போத்து’ எனப் பிரித்தால், ‘இளம் பெண்எருமை அன்று, முதிர்ந்த எருமைக் கடா’ என்றும், ‘நாகன் றேவன் போத்து’ எனப் பிரித்தால் ‘நாகனும் தேவனும் போத்தும்’ என்றும் பொருள்படும்.

மூன்றாவது தொடரைப் பலகை ஒலி எனப் பிரித்தால் ‘மரப்பலகையின் ஒலி’ என்றும், ‘பல கை ஒலி’ எனப் பிரித்தால் ‘பல கைகள் எழுப்பும் ஒலி’ என்றும் பொருள்படும்.

நான்காவது தொடரைத் ‘தாமரைக் காடு’ எனப் பிரித்தால் ‘தாமரை நிறைந்துள்ள நீர்நிலை’ என்றும், ‘தா மரைக் காடு’ எனப் பிரித்தால் ‘தாவுகின்ற மான்கள் நிறைந்த காடு’ என்றும் பொருள்படும்.

இவ்வாறு வடிவ வேறுபாடு இல்லாமல் ஒலி அழுத்தம் இடைவெளி ஆகியவற்றால் பொருள் வேறுபடும் தொடர்களைத் தக்க பொருள் விளங்குமாறு இசையறுத்துக் கூறுதல் மரபு.

இசையறுத்துக் கூறுதல் என்பது, கூறப்பட்ட சொற்களின் இறுதியும் முதலும் தோன்ற, ஒலி வேறுபாடு தோன்றக் கூறுதல்.

எழுத்தியல் திரியாப் பொருள்திரி புணர்மொழி

இசைத்திரி பால்தெளிவு எய்தும் என்ப

(நன்னூல் – 391)

4.4 ஒரு பொருள் குறித்த பல பெயர்கள்

ஒரு பொருளைக் குறித்துப் பல பெயர்கள் ஒரு தொடரில் இடம் பெறுமானால், அப்பெயர்கள் எல்லாம், பொருள் ஒன்றையே குறிக்கின்றன என்பதை வெளிப்படுத்த ஒரு முடிக்கும் சொல்லைக் கொண்டு முடிப்பது மரபு.

(எ-டு)

பொய்யில் புலவர், முப்பால் ஆசிரியர், தமிழ்வேதம் தந்த தலைமகன், திருவள்ளுவர் வந்தார்.

இத்தொடரில் பொய்யில் புலவர், முப்பால் ஆசிரியர், தமிழ்வேதம் தந்த தலைமகன் என்பன எல்லாம் திருவள்ளுவரையே குறிப்பிடுகின்றன. எனவே வந்தார் என்னும் ஒரு முடிக்கும் சொல்லைக் கொண்டு முடிப்பது மரபாகும்.

சில சமயங்களில் மேலே குறிப்பிட்டவாறு, பல பெயர்களும் ஒரே பொருளைக் குறிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றால், அத்தொடரில் இடம் பெறும் ஒவ்வொரு பெயர்க்கும் ஒரே வினையைக் கொடுத்து முடிப்பதும் மரபாகும்.

(எ-டு)

முக்கண்ணனே வருக; நஞ்சுண்ட கண்டனே வருக; மாதொரு பாகனே வருக; தென்னாடுடையே சிவனே வருக.

இத்தொடரில் முக்கண்ணன், நஞ்சுண்ட கண்டன், மாதொரு பாகன், தென்னாடுடைய சிவன் என்னும் பெயர்கள் எல்லாம் சிவனாகிய ஒரு பொருளையே குறித்து வந்துள்ளன. அந்நிலையில் அப்பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் வருக என்னும் ஒரே வினையைப் பயன்படுத்துவது மரபாகும்.

ஒருபொருள் மேல்பல பெயர்வரின் இறுதி

ஒருவினை கொடுப்ப தனியும் ஒரோவழி

(நன்னூல் – 392)

4.5 இயற்பெயரும் சிறப்புப் பெயரும்

ஒருவரை அல்லது ஒரு பொருளைக் குறிக்கும் இயற்பெரும் சிறப்புப் பெயரும் ஒரு தொடரில் இடம் பெறுமாயின் சிறப்புப் பெயரை முன்னர்ச் சொல்லி இயற்பெயரைப் பின்னர்ச் சொல்வது மரபு.

(எ-டு) பேரறிஞர் அண்ணாதுரை

இத்தொடரில் பேரறிஞர் என்பது சிறப்புப் பெயர். அண்ணாதுரை என்பது இயற்பெயர். இவ்விரண்டில் சிறப்புப் பெயரை முன்னரும் இயற்பெயரைச் சிறப்புப் பெயரின் பின்னரும் பயன்படுத்தலே மரபு.

சிறப்புப் பெயர்கள், திணை, நிலம், சாதி, குடி, உடைமை, குணம், தொழில், கல்வி ஆகியன பற்றி வரும்.

(எ-டு)

குறிஞ்சிக் கபிலன் – திணை

சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் – இடம் (ஊர்)

அந்தணர் நச்சினார்க்கினியர் – சாதி

பாண்டியன் அறிவுடைநம்பி – குடி

செல்வர் மணியன் – உடைமை

நற்சோணை – குணம்

நடிகர் கணேசன் தொழில்

முனைவர் அமுதன் – கல்வி

திணைநிலம் சாதி குடியே உடைமை

குணம்தொழில் கல்வி சிறப்பாம் பெயரோடு

இயற்பெயர் ஏற்றிடின் பின்வரல் சிறப்பே

(நன்னூல் – 393)

4.6 மூவகைச் சொல்

மூவகைப் பெயர்கள் என்பன, உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், விரவுப் பெயர் என்னும் படர்க்கை இடத்திற்கு உரிய பெயர்கள் ஆகும்.

(எ-டு)

மாதவி – உயர்திணைப் பெயர்

மாடு – அஃறிணைப் பெயர்

இலட்சுமி – விரவுப் பெயர்

உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாகி இருதிணையிலும் பயன்படுத்தப்படும் பெயர் விரவுப் பெயர் ஆகும். மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டில் இலட்சுமி என்னும் பெயரை உயர்திணையில் பெண்ணுக்கும் பெயராகச் சூட்டுகிறார்கள். அஃறிணையில் மாட்டுக்கும் பெயராகச் சூட்டுகிறார்கள். எனவே அப்பெயர் விரவுப் பெயராயிற்று. இம்மூவகைப் பெயர்களோடு சுட்டுப் பெயர் சார்ந்தால், அச்சுட்டுப் பெயர் அம்மூவகைப் பெயர்க்கும் பின்னால் வரும். வினை நிகழ்ச்சி ஏதும் இல்லை என்றால், அப்பெயர்க்கு முன்னும் பின்னும் வரும். இது செய்யுள் வழக்கு, பேச்சு வழக்கு என்னும் இரண்டில் பேச்சு வழக்குக்கு உரிய மரபு.

(எ-டு)

மாதவி ஆடினாள். அவளைப் பாராட்டினர்.

மாடு மேய்ந்தது. அதனை விரட்டினர்.

இலட்சுமி தெய்வம். அவளுக்குப் படைத்திடுக.

இலட்சுமி வந்தது. அதற்குப் புல் இடுக.

முதல் தொடரில் மாதவி என்பது உயர்திணை இயற்பெயர். அவள் என்னும் சுட்டுப் பெயர் இரண்டாம் வேற்றுமை உருபு ஏற்று அவளை என வந்தது. அவள் என்னும் சுட்டுப் பெயரை முதலில் பயன்படுத்தினால் அச்சுட்டுப் பெயர் யாரைக் குறிக்கிறது என்னும் ஐயம் ஏற்படும். அதனால் இயற்பெயரை முதலில் சொல்லி அவ்வியற்பெயரைக் குறிக்கும் சுட்டுப் பெயரை அடுத்துக் கூறுதல் மரபு. இம்முறை செய்யுளுக்குப் பொருந்தாது என்பதை நினைவில் கொள்க.

4.7 அடைமொழி

பேச்சு வழக்கில், இடம்பெறும் தொடர்களில், அடையும் சினையும் முதலும் இடம் பெறும். அவ்வாறு வருகையில் ஓர் அடையும் ஒரு சினையும் ஒரு முதலும் என வருதலும், இரண்டு அடை ஒரு முதலைச் சிறப்பித்து வருதலும் மரபாகும். செய்யுளில் இம் மரபை மீறி வருவதும் உண்டு.

அடை என்பது அடைமொழியைக் குறிக்கும். இஃது இனமுள்ள அடைமொழி, இனமில்லா அடைமொழி என இருவகைப்படும்.

(எ-டு) நிலப்பூ

பூக்கள் நிலத்திலும் நீரிலும் மலர்வன. இவ்வகைகளில் ஒன்றை மட்டும் பிரித்துக் காட்ட நிலப்பூ எனச் சொல்லப்பட்டது. பூ என்பதற்கு நிலம் அடையாக வந்தது. இஃது இனமுள்ள அடைமொழி எனப்படும்.

(எ-டு) செஞ்ஞாயிறு, உப்பளம்

ஞாயிறு ஒன்று மட்டுமே உண்டு. அதற்கு இனம் இல்லை. இனம் இல்லாதிருந்தும் செம்மை என்பது அடையாக வந்தது. அதே போல் அளம் என்னும் சொல் உப்பு விளைவிக்கும் இடத்தைக் குறிக்கும். இருந்தும் உப்பு என்னும் சொல் அளம் என்பதற்கு இனமில்லாத போதும் அடையாக வந்தது. எனவே செஞ்ஞாயிறு, உப்பளம் என்பன இனமில்லா அடைமொழி எனப்படும்.

சினை என்பது ஒரு முதற்பொருளின் உறுப்பைக் குறிக்கும். இது பெயர்ச்சொல் வகைகளில் ஒன்று.

(எ-டு) கை, கால், தலை முதலியன.

முதல் என்பது ஒரு தொடரில் வினையை நிகழ்த்தும் பொருட்பெயர். சினைக்கும் இது முதற்பொருளாக அமையும்.

(எ-டு)

செங்கால் நாரை

கருஞ்சிறு காக்கை

முதல்தொடரில் நாரை முதற்பொருள். கால் என்பது நாரையின் உறுப்பாகிய சினை. அச்சினையாகிய கால் எத்தன்மையது என்பதைக் காட்டுவது செம்மை என்னும் அடைமொழி. இத்தொடர் அடை, சினை, முதல் என்னும் வரிசையில் அமைந்துள்ளது. இவ்வாறு அமைவதே மரபு.

இரண்டாம் தொடரில் காக்கை என்னும் முதலுக்கு கருமை, சிறுமை என்னும் இரண்டு அடைமொழிகள் வந்துள்ளன. இவ்வாறு வருவதும் மரபாகும்.

செய்யுள் வழக்கு இவற்றிற்கு மாறாக இரண்டு அடைகள் சினையைச் சிறப்பித்து வருதலும், இவ்வரையறை கடந்து வருதலும் உண்டு.

அடைசினை முதன்முறை அடைதலும் ஈரடை

முதலோடு ஆதலும் வழக்கியல் ஈரடை

சினையொடு செறிதலும் மயங்கலும் செய்யுட்கே

(நன்னூல்-403)

4.8 இரக்கும் சொற்கள்

ஈ, தா, கொடு என்னும் சொற்கள் ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து பெறக் கேட்பதாக அமைந்த சொற்களாகும்.

ஈ என்பது, தாழ்ந்த நிலையில் உள்ளவர், தன்னிலும் உயர்ந்த நிலையில் உள்ளவரிடம் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும் சொல்லாகும்.

(எ-டு) அப்பா, எனக்கு இப்பொருளை ஈவாயாக.

தா என்பது, தனக்கு ஒத்தவரிடம் ஒருவர் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும் சொல்லாகும்.

(எ-டு) நண்பா உன் புத்தகத்தைத் தா.

கொடு என்பது, உயர்ந்த நிலையில் உள்ள ஒருவர், தன்னிலும் தாழ்ந்த ஒருவரிடம் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும் சொல்லாகும்.

(எ-டு) மகனே, எனக்குத் தண்ணீர் கொடு.

இவ்வாறு தகுதி அறிந்து ஈ, தா, கொடு என்னும் சொற்களைப் பயன்படுத்துவது மரபு.

ஈதா கொடுஎனும் மூன்றும் முறையே

இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்புரை

(நன்னூல் – 407)

4.9 தொகுப்புரை

மரபு என்றால் என்ன என்பதை இப்பாடம் விளக்குகிறது. தொடர்களில் இடம்பெறும், உணவு முதலிய பொதுச் சொற்கள் பெறவேண்டிய வினைச் சொற்களையும், எழுத்து மாறாச் சொற்களையும், இரக்கும் சொற்களையும் மரபாகப் பயன்படுத்தும் முறையை இப்பாடம் உணர்த்துகிறது.

பல பொருள் குறித்த ஒரு சொல்லைத் தொடரில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிவிக்கிறது.

ஒரு தொடரில் இடம் பெறும் இயற்பெயர், சிறப்புப் பெயர் ஆகியவற்றையும், ஒரு பொருள் குறித்த பல பெயர்களையும், மூவகைப் பெயர்களையும் பயன்படுத்தும் மரபை உணர்த்கிறது.

இவற்றோடு அடைமொழி, இரக்கும் சொற்கள் ஆகியவற்றைத் தொடர்களில் பயன்படுத்தும் மரபையும் அறிவிக்கிறது.

பாடம் - 5

வினா, விடை, பொருள்கோள்

5.0 பாட முன்னுரை

தொடர்களை வினையெச்சத் தொடர், பெயரெச்சத் தொடர், எழுவாய்த் தொடர் எனப் பிரிப்பது போல வினாத்தொடர், விடைத் தொடர் என்றும் பிரிக்கலாம். இவ்வாறு பிரிப்பது பேச்சு வழக்கு, செய்யுள் வழக்கு இரண்டிற்கும் பொதுவானது.

செய்யுளில் இடம்பெறும் தொடர்களைப் பொருள் கொள்வதற்கான வழிமுறைகளைக் குறிப்பிடுவது, பொருள்கோள் என்பதாகும். தமிழில் செய்யுள் தொடர்களைப் பொருள் கொள்வதற்கும், உரைநடைத் தொடர்களைப் பொருள் கொள்வதற்கும் வேறுபாடு உள்ளது. உரைநடை என்பது தொடர் அமைப்பில் பேச்சு வழக்கோடு நெருங்கிய தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

5.1 வினா

தாம் எதிர்பார்க்கும் கருத்தைப் பெறுவதற்கு ஒருவரிடம் எவ்வாறு வினவ வேண்டும் என்பதை விளக்குவது வினாப்பகுதி. வினா ஆறு வகைப்படும். அவை,

1) அறிவினா

2) அறியாவினா

3) ஐயவினா

4) கொளல்வினா

5) கொடைவினா

6) ஏவல் வினா

என்பனவாகும்.

ஒரு வினா, யாரிடம் யார் வினவுவது என்பதைப் பொருத்து வேறுவகையாக மாற்றம் பெறும் என்பது கவனிக்கத்தக்கது. இதனை விரிவாக வினா வகைகளை விளக்கும்போது காணலாம்.

அறிவறி யாமை ஐயுறல் கொளல்கொடை

ஏவல் தரும்வினா ஆறும் இழுக்கார்

(நன்னூல் – 385)

5.1.1 அறிவினா விடையை நன்கு அறிந்த ஒருவர், மற்றவர்க்கு அந்த விடை தெரிந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய வினவும் வினா அறிவினா எனப்படும்.

எ-டு: திருக்குறளை எழுதியவர் யார்?

என மாணவர் ஆசிரியரிடம் கேட்பது இத்தகைய வினாவாகும். திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் என ஆசிரியர் விடையை அறிந்திருந்தும், மாணவர் அதனை அறிந்திருக்கின்றனரா என்பதைக் கண்டறிய வினவுவதால் இதனை அறிவினா என்பர்.

5.1.2 அறியாவினா தெரியாத ஒரு கருத்தைத் தெரிந்து கொள்வதற்காக, அக்கருத்தை நன்கு அறிந்த ஒருவரிடம் வினவி அறிதல் அறியாவினா எனப்படும்.

எ-டு: திருக்குறளை எழுதியவர் யார்?

என ஆசிரியர் மாணவரிடம் கேட்பது அறியாவினா எனப்படும். மாணவர் இவ்வினாவிற்கான விடை தமக்குத் தெரியாத நிலையில் அதன் விடையை அறிவதற்காக ஆசிரியரிடம் வினவி அறிவது அறியாவினா ஆகும்.

5.1.3 ஐயவினா இதுவா அதுவா எனத் தெளிய முடியாத நிலையில் ஒரு பொருளை ஐயுற்று வினவும் வினா ஐயவினா எனப்படும்.

எ-டு: அங்கே கிடப்பது பாம்பா? கயிறா?

இவ்வெடுத்துக்காட்டில் கிடப்பது ஒரு பொருள் எனத் தெரிகிறது. ஆனால், அது பாம்பு போலவும் தெரிகிறது. கயிறு போலவும் தெரிகிறது. இவ்வாறு இரண்டில் எது எனத் தெளிவு பெற முடியாத நிலையில் அடுத்தவரிடம் தமக்கு ஏற்பட்ட ஐயத்தைத் தீர்த்துக் கொள்ள வினவப்படும் வினா, ஐயவினா எனப்படும்.

5.1.4 கொளல்வினாஒரு பொருளைப் பிறரிடம் இருந்து பெறுவதற்காக வினவப்படும் வினா, கொளல்வினா எனப்படும். எ-டு: துவரம் பருப்பு உள்ளதா?

என ஒருவர் கடைக்காரரிடம் வினவுவதன் காரணம் அப்பருப்பை வாங்க வேண்டும் என்பதே ஆகும். இவ்வாறு ஒரு பொருளைக் கொள்வதற்காக வினவப்படும் வினா, கொளல்வினா எனப்படும்.

5.1.5 கொடைவினா பிறருக்குக் கொடுப்பதற்காக ஒருவர் மற்றவரிடம் வினவுவது கொடை வினா எனப்படும்.

எ-டு: நண்பா, சாப்பிடுகிறாயா?

என ஒருவர் தன் நண்பனிடம் வினவுவதன் நோக்கம் அவர்க்கு உணவு அளிப்பதே ஆகும். இவ்வாறு கொடுக்கும் நோக்கத்தோடு வினவப்படும் வினா கொடைவினா எனப்படும்.

5.1.6 ஏவல்வினா ஒருவர் ஒரு செயலை மற்றவரைச் செய்விக்க வேண்டும் என்பதற்காக வினவுவது ஏவல்வினா எனப்படும்.

எ-டு: எழிலா, பள்ளிக்குப் போகிறாயா?

எனத் தந்தை தன் மகனை வினவுவது ஏவல்வினா ஆகும். இவ்வினாவின் நோக்கம் தன் மகன் பள்ளிக்குப் போகிறானா என்பதை அறிவதற்காக வினவுவது அன்று. பள்ளிக்கு மகன் போக வேண்டும் என்பதே அவ்வினா வினவப்பட்டதன் நோக்கமாகும். எனவே, இத்தகைய வினா, ஏவல்வினா எனப்படும்.

5.2 விடை

வினாக்களுக்குத் தக்கவாறு கூறப்படும் விடை எட்டு வகைப்படும். அவை,

1) சுட்டு விடை

2) மறை விடை

3) நேர்விடை

4) ஏவல் விடை

5) வினா எதிர் வினாதல் விடை

6) உற்றது உரைத்தல் விடை

7) உறுவது கூறல் விடை

8) இனமொழி விடை

என்பன ஆகும்.

சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்

உற்றது உரைத்தல் உறுவது கூறல்

இனமொழி எனும்எண் இறையுள் இறுதி

நிலவிய ஐந்தும் பொருண்மையின் நேர்ப

(நன்னூல் – 386)

5.2.1 சுட்டுவிடை ஒன்றைக் கருதி அல்லது சுட்டிக்காட்டிச் சொல்லும் விடை சுட்டுவிடை எனப்படும்.

‘சென்னைக்குப் போகும் வழி யாது?’ என்னும் வினாவிற்கு ‘இது’ என்று சொல்வது சுட்டுவிடை எனப்படும்.

‘மாவீழ் நொச்சி என்பதற்குப் பொருள் யாது?’ என்பதற்கு ‘வண்டு விரும்பித் தேன் உண்ணும் நொச்சிப் பூ’ என்று விளக்கம் கருதிக் கூறும் விடை முதலியன சுட்டுவிடை ஆகும்.

5.2.2 மறைவிடை வினாவிற்கு எதிர்மறையாகக் கூறும் விடை மறைவிடை எனப்படும்.

செழியா, விளையாடினாயா? என்னும் வினாவிற்கு ‘விளையாட வில்லை’ எனக் கூறுவது மறைவிடை எனப்படும்.

இங்கு மறை என்பது எதிர்மறை எனப் பொருள்படும்.

5.2.3 நேர்விடை நேர்விடை என்பது வினாவிற்கு உடன்பட்டுக் கூறும் விடையாகும்.

செழியா, விளையாடினாயா? என்னும் வினாவிற்கு ‘விளையாடினேன்’ எனக் கூறுவது நேர்விடை எனப்படும்.

5.2.4 ஏவல்விடை வினாவில் உள்ள செயலை வினவியவரைச் செய்யச் சொல்வது ஏவல்விடை எனப்படும். வினவியவரையே ஏவுவதால் ஏவல்விடை எனப்பட்டது.

கபிலா, நீ பாடுவாயா? என்னும் வினாவிற்கு, ‘நீயே பாடு’ என்பது ஏவல்விடை எனப்படும்.

5.2.5 வினா எதிர் வினாதல் விடை வினவப்பட்ட வினாவிற்கு விடையாக வினாவாகவே விடை அளிப்பது வினா எதிர் வினாதல் விடை எனப்படும்.

கபிலா, நீ பாடுவாயா? என்னும் வினாவிற்கு, ‘நான் பாடாமல் இருப்பேனா’ என விடையளித்துத் தான் அச்செயலைச் செய்யவிருப்பதை உறுதி செய்வது, வினா எதிர் வினாதல் விடை எனப்படும்.

5.2.6 உற்றது உரைத்தல் விடை வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நேர்ந்ததை விடையாகக் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும்.

நீ படித்தாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலித்தது’ எனத் தனக்கு நேர்ந்ததைக் கூறுவதால் இஃது, உற்றது உரைத்தல் விடை எனப்பட்டது. இஃது இறந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் விடையளிப்பதாகும்.

5.2.7 உறுவது கூறல் விடை வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நிகழ உள்ளதை விடையாகக் கூறுவது உறுவது கூறல் விடை எனப்படும்.

நீ படிப்பாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலிக்கும்’ எனத் தனக்கு நிகழ உள்ளதைக் கூறுவதால் இதனை, உறுவது கூறல் விடை எனப்பட்டது. இஃது எதிர்கால வினை கொண்டு முடியும்.

5.2.8 இனமொழி விடைஒன்றை வினவ அதற்கு இனமான வேறு ஒன்றைக் கூறுவது இனமொழி விடை எனப்படும். ‘துவரம் பருப்பு உள்ளதா’ என்னும் வினாவிற்குக் ‘கடலைப் பருப்பு உள்ளது’ என விடை கூறுவது, இனமொழி விடை எனப்படும்.

துவரம் பருப்பு இல்லை எனக் கூறாமல், அதற்கு இனமான கடலைப் பருப்பு உள்ளது எனக் கூறியதால், இனமொழி விடை எனப்படும்.

மேலே கூறப்பட்ட எண்வகை விடைகளுள் முதல் மூன்றையும் செவ்வன் இறை என்றும், ஏனைய ஐந்தையும் இறை பயப்பன என்றும் குறிப்பிடுவர். (செவ்வன் – நேரடியான, இறை – விடை; இறை பயப்பன – விடை தருவன; பயத்தல் – தருதல்)

வினாவிற்குச் சொல்லப்படும் விடை நேரடியாக அமைவது செவ்வன் இறை எனப்படும். சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை என்னும் மூன்றும் செவ்வன் இறை ஆகும்.

வினாவிற்குச் சொல்லப்படும் விடைகள் நேரடியாக அமையாமல் வேறுவகையாக அமைந்தாலும், அவையும் வினாவிற்குரிய விடைப் பொருளைத் தருதலால் இறை பயப்பன எனப்பட்டன. ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்னும் ஐந்தும் இறை பயப்பன ஆகும்.

5.3 பொருள்கோள்

செய்யுளில் இடம்பெறும் சொற்களை அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால் எல்லாச் செய்யுள்களுக்கும் சரியான பொருள் கிடைக்காது. யாப்பு முதலிய காரணங்களுக்காகச் சொற்களை முன்பின்னாக மாற்றுதல் முதலிய பல நிலைகளில் சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் பொருள் கொண்டால் அச்செய்யுளின் பொருள் விளங்கும். இவ்வாறு செய்யுளில் காணப்படும் தொடர்களைப் பொருள் கொள்ளும் முறையை விளக்குவது பொருள்கோள் ஆகும். பொருள்கோள் எட்டு வகைப்படும். அவை,

1) ஆற்றுநீர்ப் பொருள்கோள்

2) மொழிமாற்றுப் பொருள்கோள்

3) நிரனிறைப் பொருள்கோள்

4) விற்பூட்டு பொருள்கோள் (பூட்டுவிற் பொருள்கோள்)

5) தாப்பிசைப் பொருள்கோள்

6) அளைமறிப் பாப்புப் பொருள்கோள்

7) கொண்டுகூட்டுப் பொருள்கோள்

8) அடிமறி மாற்றுப் பொருள்கோள்

என்பனவாகும்.

யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண்

தாப்பிசை அளைமறி பாப்புக் கொண்டுகூட்டு

அடிமறி மாற்றுஎனப் பொருள்கோள் எட்டே

(நன்னூல் – 411)

5.3.1 ஆற்றுநீர்ப் பொருள்கோள் சொற்களை அங்கும் இங்கும் மாற்றுதல் முதலிய வழிகளில் பொருள் கொள்வதற்கு இடம் இன்றி, ஆற்று நீர் ஒரே தொடர்ச்சியாக ஒரு திசை நோக்கி ஓடுவதுபோல், செய்யுளில் சொற்கள் உள்ளவாறே வரிசை மாற்றாமல், தொடர்ச்சியாகப் பொருள்கொள்ளும் முறைக்கு ஆற்றுநீர்ப் பொருள்கோள் என்பது பெயர்.

(எ-டு:)

சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்

மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்

செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே

(சீவகசிந்தாமணி – 53)

இப்பாட்டு, சொல் என்னும் எழுவாயைத் தொடர்ந்து, அதன் பல்வேறு செயல்கள், கருவிருந்து, ஈன்று, நிறுவி, இறைஞ்சி என எச்சங்களாக இடம்பெற, காய்த்த என்னும் வினைப் பயனிலையை இறுதியில் பெற்று முற்றுப் பெற்றது. இப்பாட்டில் எச்சொல்லையும் இடம் மாற்றியோ வேறு வகையில் முன்பின்னாகக் கொண்டோ பொருள் கொள்ளாமல், சொற்கள் அமைந்துள்ள நிலையிலேயே பொருள் கொண்டுள்ளமை காணலாம். இவ்வாறு இப்பாடலில் சொற்களும், அவற்றின் பொருளும் ஆற்றுநீர் போல் தொடர்ச்சியாகச் செல்வதால் இப்பாடல் ஆற்றுநீர்ப் பொருள்கோள் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆயிற்று.

மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்

அற்றற்று ஒழுகும் அஃதுயாற்றுப் புனலே

(நன்னூல் – 412)

5.3.2 மொழிமாற்றுப் பொருள்கோள் செய்யுளின் ஓர் அடியில் உள்ள சொற்களை மட்டும் முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டால் செய்யுளுக்கு உரிய சரியான பொருள் கிடைக்கும் என்பதற்காக அச்செய்யுளின் சொற்களை வரிசை முறை மாற்றிப் பொருள் கொள்வது, மொழிமாற்றுப் பொருள்கோள் எனப்படும்.

(எ-டு:)

சுரைஆழ அம்மி மிதப்ப வரையனைய

யானைக்கு நீத்து முயற்கு நிலைஎன்ப

கானக நாடன் சுனை

இப்பாடலில் சொற்கள் அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால் பொருத்தமில்லாப் பொருள் தரும் நிலை ஏற்படும். அதாவது ‘நீர்நிலையில் சுரை ஆழ்ந்து போகிறது என்றும் அம்மி மிதக்கிறது’ என்றும் முதல் அடி பொருள்படும். அதேபோல் இரண்டாவது அடி, ‘அந்நீர்நிலையில் யானை நிலையாக நிற்க இயலாமல் நீந்துகிறது’ என்றும், ‘முயல் நிலையாக நிற்கிறது’ என்றும் பொருள்படும்.

இவ்வாறு பொருள் கொள்வது நடைமுறைப் பொருள் கொள்ளும் முறைக்கு ஒவ்வாது. அதனால், முதல் அடியில் உள்ள சுரை என்னும் சொல்லை மிதப்ப என்பதனோடும் (சுரை மிதப்ப), அம்மி என்பதை ஆழ என்பதனோடும் (அம்மி ஆழ) கொண்டு சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும்.

இவ்வாறே இரண்டாவது அடியில் யானை என்பதை நிலை என்பதனோடும் (யானைக்கு நிலை), முயல் என்பதை நீத்து என்பதனோடும் (முயலுக்கு நீத்து) சேர்த்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு ஓர் அடியில் உள்ள சொற்களை முன் பின்னாக மாற்றிச் சரியான பொருள் கொள்வதால் இது மொழிமாற்றுப் பொருள்கோள் ஆயிற்று.

ஏற்ற பொருளுக்கு இயையும் மொழிகளை

மாற்றியோர் அடியுள் வழங்கல்மொழி மாற்றே

(நன்னூல் – 413)

5.3.3 நிரனிறைப் பொருள்கோள் ஒரு வரிசையில் உள்ள பொருளை வேறு ஒரு வரிசையில் உள்ள பொருளோடு பொருத்துகிறபோது அவ்வரிசையைப் பொருள் பொருத்தமுறப் பொருத்துவது நிரல்நிறைப் பொருள்கோள் எனப்படும்.

(எ-டு:)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது (குறள் – 45)

இப்பாடலில் முதல் வரிசையில் அன்பு, அறன் கூறப்பட்டுள்ளன. இரண்டாவது வரிசையில் பண்பு, பயன் கூறப்பட்டுள்ளன. இல்வாழ்க்கையில் அன்பு பண்பாகவும், அறன் பயனாகவும் அமைய வேண்டும் என்பது குறளின் கருத்து.

இவ்வாறு முதல் வரிசையில் முதலில் உள்ளதோடு இரண்டாம் வரிசையில் முதலில் உள்ளதையும், முதல் வரிசையில் இரண்டாவதாக உள்ளதோடு இரண்டாவது வரிசையில் இரண்டாவது உள்ளத்தையும் பொருத்திப் பார்ப்பது நேர் நிரல்நிறைப் பொருள்கோள் எனப்படும்.

இதற்கு மாறாக முதல் வரிசையில் முதலில் உள்ளதை இரண்டாவது வரிசையில் இரண்டாவது உள்ளதோடும் முதல் வரிசையில் இரண்டாவது உள்ளத்தை இரண்டாம் வரிசையில் முதலில் உள்ளதோடும் பொருந்திப் பார்ப்பது எதிர்நிரல்நிறைப் பொருள்கோள் எனப்படும்.

(எ-டு:)

களிறும் கந்தும் போல நளிகடற்

கூம்பும் கலனும் தோன்றும்

தோன்றல் மறந்தோர் துறைகெழு நாட்டே

(களிறு – யானை; கந்து – யானை கட்டும் தறி; கூம்பு – பாய் மரம்; கலன் – தோணி.)

இப்பாடலில் முதல் வரிசையில் களிறு, கந்து. இரண்டாம் வரிசையில் கூம்பு, கலன் என உள்ளன. களிறு என்பதைக் கலன் என்பதோடும் கந்து என்பதை கூம்பு என்பதோடும் பொருந்துவதால் இது எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்.

இவ்வாறு பொருந்திப் பார்ப்பது செய்யுளுக்கு உரியது என்பது கவனத்திற்கு உரியது. பெயர்களோடு வினைகளும் நிரனிறையாக வரும்.

(எ-டு:)

பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்

வேறு நிரனிறீஇ முறையினும் எதிரினும்

நேரும் பொருள்கோள் நிரனிறை நெறியே

(நன்னூல் – 414)

5.3.4 பூட்டுவிற் பொருள்கோள் விற்பூட்டுப் பொருள்கோள், பூட்டுவிற் பொருள்கோள் என இருவகையாகவும் இதனைக் குறிப்பிடுவர்.

செய்யுளைச் சொற்கள் உள்ளவாறே பொருள் கொள்ளாது, அதன் இறுதியில் உள்ள சொல்லைச் செய்யுளின் முதலில் உள்ள சொல்லோடு கொண்டு வந்து இணைத்துப் பொருள் கொள்வது பூட்டுவிற் பொருள்கோள் எனப்படும்.

வில்லில் கயிறு கட்டப்படும். அவ்வாறு கட்டும்போது வில்லின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள கயிற்றைக் கொண்டு வந்து வில்லின் மேற்பகுதியில் இணைப்பர். அதுபோல் செய்யுளின் கடைசி அடியின் இறுதியில் உள்ள சொல்லை அதன் முதல் அடியில் முதலில் உள்ள சொல்லோடு கொண்டுவந்து சேர்த்துப் பொருள் கொள்வது, பூட்டுவிற் பொருள்கோள் எனப்படும்.

(எ-டு:)

திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர்

இறந்துபடின் பெரிதாம் ஏதம் – உறந்தையர்கோன்

தண்ணார மார்பில் தமிழர் பெருமானைக்

கண்ணாரக் காணக் கதவு (முத்தொள்ளாயிரம்)

இப்பாடலைச் சொற்கள் உள்ள வரிசை முறையிலேயே பொருள் கொண்டால் ‘தீமைகளை வெளிவரச் செய்யுங்கள்’ என்பதாகப் பொருள்படும். இப்பாடலின் இறுதியில் உள்ள கதவு என்னும் சொல்லை இச்செய்யுளின் முதற் சொல்லாகச் சேர்த்துப் பொருள் கொள்ளும் போது இப்பாடலின் சரியான பொருள் கிடைக்கிறது. அதாவது ‘கதவைத் திறந்து விடுங்கள். திறக்காவிட்டால் உறந்தையின் மன்னனைக் காணாமல் பெண்கள் இறந்துவிடும் பெரும் துன்பம் ஏற்படும்.’ என்பது அப்பாடலின் பொருள். கதவு என்னும் சொல்லைச் செய்யுளின் முதலில் கொண்டு சேர்த்துப் பார்த்தால் மட்டுமே இப்பொருள் கிடைக்கும்.

எழுவாய் இறுதி நிலைமொழி தம்முள்

பொருள்நோக்கு உடையது பூட்டுவில் ஆகும்

(நன்னூல் – 415)

5.3.5 தாப்பிசைப் பொருள்கோள் தாம்பு என்னும் சொல் தாப்பு என வந்துள்ளது. தாம்பு என்பதற்குக் கயிறு என்பது பொருள். இங்கு ஊஞ்சல் எனப் பொருள்படுகிறது. இசை என்றால் சொல் என்பது பொருள்.

ஒரு செய்யுளின் நடுவில் நிற்கும் சொல் ஊஞ்சல் போல் முன்னும் பின்னும் சென்று சேர்ந்து பொருள் தரும் முறையைத் தாப்பிசைப் பொருள்கோள் எனக் கூறுவர்.

(எ-டு:)

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு (குறள் – 255)

இக்குறளில் சொற்கள் அமைந்துள்ளவாறு பொருள் கொண்டால், ‘உணவு உண்ணாமல் ஒருவன் இருந்தால் உயிர் நிலைக்கும்’ என முதல் தொடர், பொருள்படும். இக்குறளின் நடுவில் உள்ள ஊண் என்னும் சொல்லை இக்குறளின் முன்னும் பின்னும் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும். அதாவது ‘ஊன் உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு’ எனப் பொருள் கொள்வது குறளின் நோக்கத்திற்கு ஏற்ற பொருள் கொள்வதாக அமையும்.

இடைநிலை மொழியே ஏனைஈர் இடத்தும்

நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை

(நன்னூல் – 416)

5.3.6 அளைமறி பாப்புப் பொருள்கோள் அளை + மறி + பாம்பு என்பது அளைமறி பாப்பு என வந்துள்ளது. அளை என்றால் வளை அல்லது புற்று என்று பொருள். பாப்பு என்பது பாம்பு எனப் பொருள்படும். புற்றுக்குள் முதலில் தன் தலையை நுழைக்கும் பாம்பு தன் உடல் முழுவதையும் இழுத்துக்கொண்டபின் தலையைப் புற்றின் வாய்ப் பகுதியிலும் வாலைப் புற்றின் அடிப்பகுதியிலுமாக மாற்றி வைத்துக் கொள்கிறது. அது போலச் செய்யுளின் முதலில் உள்ள அடியை இறுதியிலும், இறுதியில் உள்ள அடியை முதலிலும் மாற்றிப் பொருள் கொள்ளும் முறைக்கு அளைமறி பாப்புப் பொருள்கோள் என்று பெயர்.

(எ-டு:)

தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து

தண்டூன்றித் தளர்வார் தாமும்

சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து

நாற்கதியில் சுழல்வார் தாமும்

மூழ்ந்த பிணிநலிய முன்செய்த

வினையென்றே முனிவார் தாமும்

வாழ்ந்த பொழுதினே வானெய்து

நெறிமுன்னி முயலா தாரே

இப்பாடலில் உள்ள ‘வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே’ என்னும் அடியை இப்பாடலில் முதலில் அமைத்தும், முதலில் உள்ள ‘தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார்’ என்னும் தொடரை இறுதியிலும் சேர்த்துப் பொருள் கொண்டால் மட்டுமே இப்பாடலின் பொருள் சரியாக அமையும்.

இவ்வாறு இறுதி அடியை முதலிலும் முதல் அடியை இறுதியிலும் இணைத்துப் பொருள் கொள்ளும் முறையே அளைமறி பாப்புப் பொருள்கோள் எனப்படும்.

செய்யுள் இறுதி மொழியிடை முதலினும்

எய்திய பொருள்கோள் அளைமறிப் பாப்பே

(நன்னூல் – 417)

5.3.7 கொண்டுகூட்டுப் பொருள்கோள் செய்யுளில் உள்ள சொற்களை அவை அமைந்துள்ளவாறே பொருள் கொள்ளாமல், அதன் பல அடிகளிலும் உள்ள சொற்களைத் தேவையான இடங்களில் சேர்த்துப் பொருள் கொள்ளும் முறைக்குக் கொண்டுகூட்டுப் பொருள்கோள் எனப்படும்.

(எ-டு:)

தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்

வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி

அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே

வங்கத்துச் சென்றார் வரின்

இப்பாடலில் உள்ள சொற்களை அவை அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால் ‘கூந்தல் தேங்காய் போலத் திரண்டு உருண்டுள்ளது’ என்றும் ‘மேனி வெண்கோழி முட்டை உடைத்தது போல் உள்ளது’ என்றும், ‘அஞ்சனம் என்னும் கண்ணுக்குத் தீட்டும் மை போலக் கருப்பாக உள்ள பசலை’ என்றும் பொருள் கொள்ள வேண்டிவரும். அவ்வாறு கொள்வதால் பொருள் சிறக்காது. மாறாக ‘வங்கத்துச் சென்றார் வரின், அஞ்சனத் தன்ன பைங்கூந்தலை உடையாள் மேனி மேல், தெங்கங்காய் போலத் திரண்டு உருண்ட கோழி வெண்முட்டையை உடைத்தது போல உள்ள பசலை தணிவாம்’ எனச் செய்யுளின் பல அடிகளிலும் உள்ள சொற்களை வெவ்வேறு அடிகளுக்கு மாற்றிப் பொருள் கொண்டாலே பொருள் சிறக்கும். இவ்வாறு பொருள் கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோள் எனப்படும்.

யாப்படி பலவினும் கோப்புடை மொழிகளை

ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே

(நன்னூல் – 418)

5.3.8 அடிமறி மாற்றுப் பொருள்கோள் கொண்டு கூட்டுப் பொருள்கோள் என்பது ஒரு செய்யுளில் வெவ்வேறு அடிகளில் உள்ள சொற்களைத் தேவைக்கேற்பச் செய்யுளின் பிற அடிகளில் உள்ள சொற்களோடு பொருத்திப் பொருள் காண்பது என மேலே கூறப்பட்டது. அடிமறி மாற்றுப் பொருள்கோள் என்பது, செய்யுளில் உள்ள அடிகளையே மேலும் கீழுமாக எங்கு வேண்டுமானாலும் மாற்றிப் பொருள்கொள்ளும் முறையாகும். அவ்வாறு மாற்றிப் பொருள் கொண்டாலும் செய்யுளின் பொருள் மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.

(எ-டு:)

மாறாக் காதலர் மலைமறைந் தனரே

ஆறாக் கண்பனி வரலா னாவே

ஏறா மென்தோள் வளைநெகி ழும்மே

கூறாய் தோழியான் வாழு மாறே

இச்செய்யுளின் எந்த ஓர் அடியையும் மேலும் கீழுமாக எங்கே வேண்டுமானாலும் மாற்றிப் பொருள் கொண்டாலும் இச்செய்யுளின் பொருளில் மாற்றம் ஏற்படாது. அதாவது ஒவ்வோர் அடியிலும் ஒரு கருத்து முற்றுப் பெற்றுள்ளதோடு அடுத்த அடிக்குப் பொருள் தொடர்பற்றுத் தனித் தனிக் கருத்தாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது.

(எ-டு:)

ஏற்புழி எடுத்துடன் கூட்டுறும் அடியவும்

யாப்பீறு இடைமுதல் ஆக்கினும் பொருளிசை

மாட்சியும் மாறா அடியவும் அடிமறி

(நன்னூல் – 419)

5.4 தொகுப்புரை

இப்பாடம், வினா என்றால் என்ன என்பதையும் வினாத் தொடர்களின் வகைகளையும் விளக்குகிறது.

வினாவிற்கு ஏற்றவாறு பதில் அளிப்பது விடையாகும். இப்பாடல் விடை என்பதன் வேறு பெயரான இறை என்பதையும் அதன் வகைகளையும் விவரிக்கிறது.

பேச்சு அல்லது உரைநடை வடிவங்களில் உள்ள சொற்களை வரிசை மாறாமல் கொள்வதே முறையாகும். ஆனால் செய்யுளில் அவ்வாறு பொருள் கொள்ள யாப்பிலக்கணம் முதலிய காரணங்கள் வாய்ப்பளிப்பதில்லை. இந்நிலையில் செய்யுளைப் பொருள் கொள்ளும் முறையைப் பொருள்கோள் என்னும் பகுதி உணர்த்துகிறது.

பாடம் - 6

வழு, வழாநிலை, வழுவமைதி

6.0 பாட முன்னுரை

சொற்றொடர்களைப் பிழையின்றிப் பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிப்பது இலக்கண நோக்கங்களில் ஒன்று. சொற்றொடர்களில் ஏற்படும் பிழையை இலக்கணத்தில் வழு எனக் குறிப்பிடுகின்றனர். வழுக்கள் யாவை என்றும் அவை எங்கெங்குச் சொற்றொடர்களில் வருகின்றன என்றும் அறிந்தால்தான் அவற்றை நீக்கிப் பயன்படுத்த முடியும்.

திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றபோது வழுக்கள் சொற்றொடர்களில் ஏற்படுகின்றன.

இவ்வழுக்களை நீக்கித் திணை முதலிய ஏழினையும் பயன்படுத்துவது வழாநிலை ஆகும்.

அறிஞர்கள் பயன்படுத்திய தொடர்களிலும் மக்கள் வழக்கிலும் வெவ்வேறு காரணங்களால் நிலைபெற்றுவிட்ட, இலக்கண முறைக்கு மாறானவற்றை அமைதி கூறிச் சான்றோர் ஏற்றுக் கொண்டனர். அவற்றை விளக்குவது வழுவமைதி ஆகும்.

திணை முதலிய ஏழைப் பற்றியும் விரிவாக முந்தைய பாடங்கள் விளக்கி உள்ளன. அவற்றை இங்கே நினைவு கூர்வது பொருத்தமாகும். இங்கு இவ்வேழிலும் ஏற்படும் வழுக்களையும், அவற்றைக் களைவற்கான வழாநிலைகளையும், இலக்கண மரபிற்கு மாறாகப் பயன்படுத்தப்படும் வழுவமைதிகளையும் பற்றிக் காணலாம்.

திணையே பாலிடம் பொழுது வினாஇறை

மரபாம் ஏழும் மயங்கினாம் வழுவே (நன்னூல் : 375)

6.1 திணை

திணை உயர்திணை, அஃறிணை என இருவகைப்படும். மக்கள், தேவர், நரகர் முதலியோர் ஆறறிவு படைத்தவர் ஆதலின் அவர் உயர்திணை ஆவர். இவர்களைத் தவிர்த்த உயிர் உள்ளவையும் இல்லாதவையும் அஃறிணையாகும்.

மக்கள் தேவர் நரகர் உயர்திணை

மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை

(நன்னூல் :261)

6.1.1 திணை வழுநிலை சொற்றொடர்களில் ஒரு திணைக்கு உரிய பெயரைப் பயன்படுத்துகிற போது அத்திணைக்கு உரிய வினையைக் கொண்டுதான் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்காவிட்டால் அது திணை வழுவாகும்.

(எ.டு.) அப்பா வந்தது.

இச்சொற்றொடரில் ‘அப்பா’ என்னும் பெயர் உயர்திணைக்கு உரியது. இச்சொல் எழுவாயாக வந்துள்ளது. ‘வந்தது’ என்பது வினைப் பயனிலை. இஃது அஃறிணைச் சொல், அப்பா என்னும் உயர்திணை எழுவாய்க்கு, முடிக்கும் சொல்லாக ‘வந்தது’ இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயர்திணை எழுவாய்க்கு அஃறிணையும், அஃறிணை எழுவாய்க்கு உயர்திணையும் பயனிலையாக வருவது வழுவாகும்.

6.1.2 திணை வழாநிலை ஒரு திணைக்கு உரியதாக வரும் பெயருக்கு ஏற்றாற் போல அதன் முடிக்கும் சொல்லாக வரும் வினையும் அத்திணைக்கு உரியதாக அமைவது திணை வழாநிலையாகும்.

(எ.டு.)

கண்ணகி பாடினாள்

மாடு ஓடியது

முதல் தொடரில் ‘கண்ணகி’ என்னும் உயர்திணைப்பெயர், ‘பாடினாள்’ என்னும் உயர்திணைக்குரிய வினைமுற்றைக் கொண்டு முடிந்தது. இரண்டாவது தொடரில் ‘மாடு’ என்னும் அஃறிணைப் பெயர் ‘ஓடியது’ என்னும் அஃறிணை வினைமுற்றைக் கொண்டு முடிந்தது. இவ்விருதொடர்களும் இலக்கண முறைக்கு ஏற்றதாக உள்ளமையால் வழாநிலைத் தொடர்களாகும்.

6.1.3 திணை வழுவமைதி உயர்திணைப் பெயரை அஃறிணைப் பெயர் சார்ந்து வரும் பொழுதும், உயர்திணைப் பெயரோடு அஃறிணைப் பெயரும் எழுவாயாக வரும் பொழுதும், முடிக்கும் சொல்லை எத்திணையில் அமைப்பது என்னும் சிக்கல் எழுகிறது. இங்கெல்லாம் சிறப்பு, மிகுதி, இழிவு என்னும் காரணங்களால் ஏதேனும் ஒரு திணையின் முடிபை அத்தொடர்களுக்கு அளிப்பதால் இவை திணை வழுவமைதி ஆகின்றன.

(எ.டு)

தம்பி பொன் பெரியது

தம்பி நாடு பெரியது

தம்பி வாழ்நாள் பெரியது

தம்பி மூக்குக் கூரியது

தம்பி நன்மை பெரியது

தம்பி நடிப்புப் பெரியது

என வருதலே திணை வழாநிலையாகும். ஆனால் இதற்கு மாறாக இலக்கியங்களிலும் மக்கள் வழக்கிலும் கீழே குறிப்பிட்டவாறு காணப்படுவதால் வழுவமைதியாயிற்று.

(எ.டு)

தம்பி பொன் பெரியவன்

தம்பி நாடு பெரியவன்

தம்பி வாழ்நாள் பெரியவன்

தம்பி மூக்குக் கூரியன்

தம்பி நன்மை பெரியவன்

தம்பி நடிப்புப் பெரியவன்

இந்த ஆறு தொடர்களில் ‘தம்பி’ என்னும் உயர்திணைப் பெயரைத் தொடர்ந்து ‘பொன், நாடு, வாழ்நாள், மூக்கு, நன்மை, நடிப்பு’ என்னும் பொருள் முதலிய ஆறு அஃறிணைப்பெயர்கள் சார்ந்து வந்தமையால், அத்தொடர்கள், அவ்வஃறிணைப் பெயர்களுக்கு உரிய முடிக்கும் சொல் பெறாமல் தம்பி என்னும் உயர்திணைக்கு உரிய முடிக்கும் சொல் பெற்று முடிந்தன. இவ்வாறு வருவது திணை வழுவமைதி ஆகும்.

இவ்வாறு உயர்திணைக்கு உரிய சொற்களைத் தொடர்ந்து அஃறிணையின் பொருட் பெயர் முதலிய ஆறு பெயர்களும் சார்ந்து வருமானால் உயர்திணை முடிக்கும் சொல்லாகும் என இத்திணை வழுவமைதி உணர்த்துகிறது.

உயர்திணை தொடர்ந்த பொருள்முதல் ஆறும்

அதனொடு சார்த்தின் அத்திணை முடிபின

(நன்னூல் : 377)

உயர்திணைப் பெயரோடு அஃறிணைப் பெயரும் எழுவாயாக வரும் பொழுது வினைமுடிபை எத்திணையில் அமைப்பது என்னும் சிக்கல் ஏற்படுகிறது.

(எ.டு.) முகிலனும் நாயும் விளையாடினர்.

இந்தத் தொடரில் ‘முகிலன்’ உயர்திணைப் பெயர் ; ‘நாய்’ அஃறிணைப் பெயர். இவ்விரண்டு பெயர்களும் எழுவாயாக வந்துள்ளன. எழுவாய்களின் செயலான ‘விளையாடுதல்’ என்பதை உயர்திணை வினைமுற்றில் (விளையாடினர்) தருவதா? அன்றி அஃறிணை வினைமுற்றில் (விளையாடின) தருவதா? என ஐயம் ஏற்படுகிறது. இந்நிலையில் சிறப்பு என்னும் காரணத்தால், உயர்திணை, அஃறிணை என்னும் இருதிணையில், உயர்திணை சிறப்புடையது ஆதலின், விளையாடினர் என்ற உயர்திணைப் பலர்பால் வினைமுற்று கொடுக்கப்பட்டது.

சிறப்பின் காரணமாக அன்றி மிகுதி, இழிவு காரணமாகவும் முடிக்கும் சொல்லின் திணை மாறிவரும்.

(எ.டு.)

யானை, குதிரை, தேர், காலாள் படை வந்தன – மிகுதி

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா – இழிவு

முதல் தொடரில் காலாள் என உயர்திணை இடம் பெறினும் ஏனைய படைகள் மூன்று அஃறிணையில் இடம் பெறுவதால் மிகுதி கருதி அஃறிணை முடிவு பெற்றது.

இரண்டாம் தொடரில் மூர்க்கன் என்னும் உயர்திணை வரினும் இழிவு கருதி அஃறிணை முடிவு பெற்றது.

திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும்

மிகவினும் இழிபினும் ஒருமுடி பினவே

(நன்னூல் : 378)

6.2 பால்

ஆண்பால், பெண்பால், பலர்பால் என்னும் மூவகைப் பால்களும் உயர்திணைக்கு உரியன.

(எ.டு.)

முருகன் – ஆண்பால்

வள்ளி – பெண்பால்

அறிஞர் – பலர்பால்

ஆண்பெண் பலரென முப்பால் உயர்திணை (நன்னூல் : 262)

(எ.டு.)

ஒன்றன்பால், பலவின்பால் என்பன அஃறிணைக்கு உரியன.

மயில் – ஒன்றன்பால்

கற்கள் – பலவின்பால்

ஒன்றே பலவென்று இருபாற்று அஃறிணை (நன்னூல் : 263)

இவற்றை முந்தைய பாடங்கள் நன்கு விளக்கி இருக்கும். அவற்றை நினைவில் கொண்டு வருக.

6.2.1 பால் வழுநிலை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் ஐந்து பால்களுக்கு உரிய பெயர்கள் எழுவாயாகவோ வினை நிகழ்த்தும் பொருளாகவோ வரும்பொழுது, இவற்றிற்கான வினை அவற்றிற்கு உரிய பாலில் அமையாமல் வேறு பாலில் அமைதல் வழுவாகும்.

(எ.டு.)

அவன் ஓடினாள்

அவள் பாடினான்

அறிஞர் வந்தான்

அது தாவின

அவை பறந்தது

முதல் தொடரில் ‘அவன்’ என்பது ஆண்பால்; ‘ஓடினாள்’ என்னும் வினைமுற்றுப் பெண்பால்.

இரண்டாம் தொடரில் ‘அவள்’ என்னும் சொல் பெண்பால்; ‘பாடினான்’ என்னும் வினைமுற்று ஆண்பால்.

மூன்றாம் தொடரில் ‘அறிஞர்’ என்னும் சொல் பலர்பால்; ‘வந்தான்’ என்னும் வினைமுற்று ஆண்பால்.

நான்காம் தொடரில் ‘அது’ என்னும் சொல் ஒன்றன்பால்; ‘தாவின’ என்னும் சொல் பலவின்பால் வினைமுற்று.

ஐந்தாம் தொடரில் ‘அவை’ என்னும் சொல் பலவின்பால்; ‘பறந்தது’ என்னும் சொல் ஒன்றன்பால் வினைமுற்று.

இந்த ஐந்து தொடர்களிலும் எழுவாய் ஒரு பாலிலும் அதற்குரிய வினைமுற்று வேறு பாலிலும் வந்துள்ளன. இதனால் இவ்வைந்து தொடர்களும் இலக்கண முறைக்கு மாறான பிழையான தொடர்களாகும். இவையாவும் வழுவான தொடர்கள்.

6.2.2 பால் வழாநிலைஒரு பாலுக்கு உரிய எழுவாய் அதற்குரிய பாலைச் சேர்ந்த பயனிலை கொண்டு முடிதல் பால் வழாநிலையாகும். மேலே காட்டிய எடுத்துக்காட்டுகளைக் கீழே கொடுத்துள்ளவாறு மாற்றிப் பால் பொருத்தமுற அமைத்தால் வழாநிலைத் தொடர்களாகும். அவன் ஓடினான்

அவள் பாடினாள்

அறிஞர் வந்தனர்

அது தாவியது

அவை பறந்தன

இவ்வாறு தொழிலைச் செய்யும் எழுவாய்க்கு ஏற்ப வினையின் பாலும் பொருத்தமுற இருப்பதே பால் வழாநிலை எனப்படும்.

6.2.3 பால் வழுவமைதி எழுவாய் எந்தப் பாலைச் சேர்ந்ததோ அதே பாலைக் குறிப்பதாக அதன் பயனிலையும் இருக்கவேண்டும். மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு ஆகிய காரணங்களால் பால் வேறுபாட்டோடு எழுவாயும் பயனிலையும் தொடர்களில் பயன்படுத்தப்படுகின்றன.

(எ.டு.) தந்தை வந்தார்.

இத்தொடரில் ‘தந்தை’ என்னும் ஆண்பால் சொல் எழுவாயாக வந்துள்ளது. இச்சொல் ‘வந்தார்’ என்னும் பலர்பால் வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளது. எழுவாய் ஆண்பால். பயனிலை பலர்பால். இவ்வாறு பயன்படுத்துவது இலக்கண முறைப்படி பிழையாகும். அதாவது வழுவாகும். ஆனால் தந்தை என்னும் சிறப்புக்கு உரியவரை ஒருமையில் அழைப்பது பொருந்தாது என்பதால், வந்தார் என்னும் பலர்பால் வினைமுற்று முடிவு கொடுக்கப்பட்டது. இவ்வாறு உயர்வு என்னும் காரணம் கருதி வேறு பாலில் பயனிலை வருவதை பால் வழுவமைதி என்பர்.

உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும்

இழிப்பினும் பால்திணை இழுக்கினும் இயல்பே

(நன்னூல் : 379)

திணை வழுவமைதியில் காட்டிய எடுத்துக்காட்டை இங்கே காணலாம்.

(எ.டு.) முகிலனும் நாயும் விளையாடினர்.

இத்தொடரின் எழுவாயாக ‘முகிலன்’என்னும் ஆண்பாற் சொல்லும் ‘நாய்’ என்னும் ஒன்றன்பால் சொல்லும் வந்துள்ளன; வினைமுற்றாக ‘விளையாடினர்’ என்னும் பலர்பால் சொல் வந்துள்ளது. இத்தொடரில் எழுவாயின் பால்களான ஆண்பால் ஒன்றன்பால் இரண்டோடும் அவற்றின் வினைமுற்றிற்கு மாறான பலர்பால் வினைமுற்று இடம் பெற்றுள்ளது. ‘முகிலனும் நாயும் விளையாடினான்’ என்றோ, ‘முகிலனும் நாயும் விளையாடியது’ என்றோ எழுவாய்க்கு ஏற்ப வினைமுடிவு கொடுக்க முடியாத நிலையில் பன்மைப் பொருளை உணர்த்தி, திணை வேறுபட்ட எழுவாய்களின் பால்களோடு பொருந்தி வராவிடினும், பலர்பால் வினைமுடிவு கொடுப்பதே சிறப்பு. இதனால் இது திணை, பால் இரண்டிற்கும் பொதுவான வழுவமைதியாகும்.

6.3 இடம்

தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூவகைப்படும். தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் குறிப்பிடுவது தன்மை. தனக்கு முன்னால் உள்ள ஒருவரையோ, பலரையோ குறிப்பிடுவது முன்னிலை, தன்மைக்கும் முன்னிலைக்கும் அயலாக உள்ளவற்றைக் குறிப்பிடுவது படர்க்கை.

(எ.டு.)

நான், நாம் – தன்மை

நீ, நீங்கள – முன்னிலை

அவன், அவள், அவர்,

அது, அவை – படர்க்கை

தன்மை முன்னிலை படர்க்கை மூவிடனே (நன்னூல் : 266)

6.3.1 இட வழுநிலை தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்களில் ஒன்றின் இடத்திற்கு உரிய எழுவாய், சொற்றொடரில் இடம்பெறும் போது பயனிலை அதற்குரியதாக அமையாமல் வேறு இடத்திற்கு உரியதாக அமையுமானால் வழுவாகும்.

(எ.டு.)

நான் பேசினான்

நீ பேசினேன்

அவன் பேசினாய்

முதல் தொடரில் ‘நான்’ என்பது தன்மை இடத்திற்குரிய எழுவாய். ‘பேசினான்’ என்பது படர்க்கை இடத்துக்கு உரிய வினைமுற்று.

இரண்டாம் தொடரில் ‘நீ’ என்பது முன்னிலை இடத்திற்குரிய எழுவாய். ‘பேசினான்’ என்பது தன்மை இடத்திற்கு உரிய வினைமுற்று.

மூன்றாம் தொடரில் ‘அவன்’ என்பது படர்க்கை இடத்துக்குரிய எழுவாய், ‘பேசினாய்’ என்பது முன்னிலை இடத்துக்கு உரிய வினைமுற்று.

இவ்வாறு ஓர் இடத்திற்கு உரிய எழுவாய்க்கு வேறு இடத்திற்குரிய பயனிலை வருவது வழுவாகும்.

6.3.2 இட வழாநிலை ஓர் இடத்திற்கு உரிய எழுவாய்க்கு அதே இடத்திற்குரிய பயனிலை வருதல் இடவழாநிலையாகும். மேலே கூறிய எடுத்துக் காட்டுக்களைக் கீழே உள்ளவாறு வழுக்களைந்து அமைக்கலாம்.

(எ.டு.)

நான் பேசினேன்.

நீ பேசினாய்

அவன் பேசினான்

இவ்வாறு தன்மை இடத்துக்கு உரிய எழுவாய், தன்மை வினைமுற்றோடும், முன்னிலை இடத்துக்கு உரிய எழுவாய், முன்னிலை வினைமுற்றோடும், படர்க்கை இடத்துக்குரிய எழுவாய், படர்க்கை வினைமுற்றோடும் வருதல் இடவழாநிலையாகும். ஒருமை எழுவாய்க்கு ஒருமைப்பயனிலையும் பன்மை எழுவாய்க்கு பன்மைப் பயனிலையும் வருதல் வேண்டும்.

6.3.3 இட வழுவமைதி இருவேறு இடங்களுக்கு உரிய எழுவாய் ஒரு தொடரில் வரும் பொழுது, அவ்வெழுவாய்களின் பயனிலை எந்த இடத்திற்கு உரியது என்னும் சிக்கல் எழுகிறது.

(எ.டு.)

நானும் நீயும் போகிறோம்.

நீயும் அவனும் போவீர்

நானும் அவனும் போனோம்.

இவ்வெடுத்துக்காட்டுகளில் முதல்தொடரில்,‘நான்’ என்னும் தன்மை ஒருமை எழுவாயும், ‘நீ’ என்னும் முன்னிலை ஒருமை எழுவாயும் ‘போகிறோம்’ என்னும் தன்மைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளன.

இரண்டாவது தொடரில் ‘நீ’ என்னும் முன்னிலை ஒருமை எழுவாயும், ‘அவன்’ என்னும் படர்க்கை ஒருமை எழுவாயும் ‘போவீர்’ என்னும் முன்னிலைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளன. மூன்றாவது தொடரில் ‘நான்’ என்னும் தன்மை ஒருமை எழுவாயும், ‘அவன்’ என்னும் படர்க்கை ஒருமை எழுவாயும் ‘போனோம்’ என்னும் தன்மைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளன.

இவ்வாறு முடிவது இலக்கணப்படி சரியன்று. ஆயினும் வேறுவகையில் குறிப்பிடுவது பொருத்தமன்று என்பதால் இவ்வாறு குறிப்பிடுவது வழுவமைதி ஆயிற்று.

இருநோக்கு இவளுண்கண் உள்ளது (குறள் : 1091)

என்னும் குறளில் ‘இரு நோக்கு’ என்னும் பலவின்பால் எழுவாய், ‘உள்ளது’ என்னும் ஒன்றன்பால் வினைமுற்றைக் கொண்டு முடிந்தது. இவ்வாறு ஒருமையும் பன்மையும் மயங்கல் இலக்கணமன்று ஆதலின் வழுவமைதியாகும்.

ஒருமையின் பன்மையும் பன்மையின் ஒருமையும்

ஓரிடம் பிறவிடம் தழுவலும் உளவே (நன்னூல் : 380)

6.4 காலம்

காலம் மூன்று வகைப்படும். அவை இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பன.

வினையின் இயல்பு, காலம் காட்டுதல் என்பது முந்தைய பாடங்களில் கூறப்பட்டது. அதனை நினைவில் கொள்க.

இறப்பெதிர்வு நிகழ்வெனக் காலம் மூன்றே (நன்னூல் : 382)

6.4.1 கால வழுநிலை ஒரு காலத்திற்குரிய வினையை வேறு காலத்தில் கூறுவது வழுவாகும்.

(எ.டு.)

நேற்று சாப்பிடுவான்

இப்பொழுது சாப்பிட்டான்

நாளை சாப்பிடுகிறான்

முதல் தொடரில் ‘நேற்று’ என்னும் சொல் கடந்த காலத்தைக் குறிக்கிறது. ‘சாப்பிடுவான்’ என்பது எதிர்கால வினைமுற்று.

இரண்டாவது தொடரில் ‘இப்பொழுது’ என்னும் சொல் நிகழ்காலத்தைக் குறிக்கிறது. ‘சாப்பிட்டான்’ என்பது இறந்தகால வினைமுற்று.

மூன்றாவது தொடரில் ‘நாளை’ என்னும் சொல் எதிர் காலத்தைக் குறிக்கிறது. ‘சாப்பிடுகிறான்’ என்பது நிகழ்கால வினைமுற்று.

இவ்வாறு இந்த மூன்று தொடர்கள் ஒவ்வொன்றிலும் இடம்பெற்றுள்ள இரண்டு சொற்களும் ஒரே காலத்தில் இல்லாமல் வெவ்வேறு காலத்தில் உள்ளமை கால வழுவாகும்.

6.4.2 கால வழாநிலைமூன்று காலங்களில் ஒன்றின்காலத்தைக் குறிக்கும் ஒரு சொல் இடம்பெறும் பொழுது அதே காலத்திற்கு உரியதாகக் காலமும் வினையும் இருத்தல் கால வழாநிலையாகும். (எ.டு. )

நேற்று சாப்பிட்டான்

இப்பொழுது சாப்பிடுகிறான்

நாளை சாப்பிடுவான

இவ்வாறு காலத்தைக் குறித்து வரும் சொற்களுக்கு ஏற்ப ஒவ்வொரு தொடரிலும் காலம் காட்டும் வினை இடம்பெறுவது கால வழாநிலையாகும்.

6.4.3 கால வழுவமைதி மூன்று காலத்திலும் இடைவிடாது தன் தொழிலைச் செய்யும் பொருள்களை நிகழ்காலத்தில் குறிப்பிடுவது கால வழுவமைதி ஆகும்.

(எ.டு.) சூரியன் கிழக்கில் தோன்றுகிறது

இத்தொடரின் எழுவாயான சூரியன், கிழக்கில் தோன்றுவது முக்காலத்திலும் நிகழும் இயல்பான நிகழ்ச்சியாகும். இது நிகழ்காலத்திற்கு மட்டும் உரிய நிகழ்ச்சியாகக் கூறுவது சரியன்று, இதனை, ‘நேற்றுச் சூரியன் கிழக்கில் தோன்றினான்; இன்று கிழக்கில் தோன்றுகிறான்; நாளை கிழக்கில் தோன்றுவான்’ என ஒவ்வொரு முறையும் மூன்று காலத்திலும் சொல்வது பொருத்தமாகாது. எனவே இதனை நிகழ்காலத்தில் மட்டும் சொல்வது வழுவமைதி ஆயிற்று. விரைவு, மிகுதி, தெளிவு என்னும் மூன்று காரணங்களுக்காகவும் இக்காரணங்கள் இல்லாமலும் முக்காலங்களையும் ஒன்றை வேறொன்றாகக் கூறுவது வழுவமைதி ஆகும்.

(எ.டு.)

வந்துவிட்டேன் வந்துவிட்டேன்

பார்த்தேன் பார்த்தேன்

நாளை பள்ளிக்குப் போகிறேன்

நான் சிறுவயதில் இந்தத் திடலில்தான் விளையாடுவேன்

முதல் தொடரில், ‘வருவேன்’ என்று எதிர் காலத்தில் கூறவேண்டிய வினைமுற்று, விரைவுப் பொருளின் காரணமாக ‘வந்துவிட்டேன்’ என இறந்த காலத்தில் கூறப்பட்டது.

இரண்டாவது தொடரில், ‘பார்க்கிறேன்’ என நிகழ்காலத்தில் கூற வேண்டிய வினைமுற்றுப், பலமுறை பார்ப்பதை உணர்த்தல் வேண்டி மிகுதிப்பொருளின் காரணமாகப் ‘பார்த்தேன்’ என இறந்த காலத்தில் கூறப்பட்டது.

மூன்றாம் தொடரில், ‘போவேன்’ என்று எதிர்காலத்தில் கூற வேண்டிய வினைமுற்றுத், தெளிவுப் பொருளின் காரணமாகப் ‘போகிறேன்’ என நிகழ்காலத்தில் கூறப்பட்டது.

நான்காவது தொடரில், ‘விளையாடினேன்’ என்று இறந்த காலத்தில் கூறவேண்டிய வினைமுற்று, எவ்வித காரணமும் இன்றி ‘விளையாடுவேன்’ என எதிர்காலத்தில் கூறப்பட்டது.

இவ்வாறு ஒரு காலத்திற்கு உரிய வினையை வேறு காலத்தில் கூறுவது இலக்கணம் அன்றாயினும் அறிவுடையோர் ஏற்பதனால் கால வழுவமைதி ஆயிற்று.

6.5 வினா

வினாக்கள் ஆறு வகைப்படும் என்பது முன்னர்க் கூறப்பட்டது. அவற்றை நினைவில் கொள்க. வினாவின் வகைகள்,

1) அறிவினா

2) அறியாவினா

3) ஐயவினா

4) கொளல்வினா

5) கொடைவினா

6) ஏவல்வினா

என்பனவாகும்.

6.5.1 வினா வழுநிலை வினாவின் எழுவாயாக வரும்பெயர்களின் திணை, பால் ஆகியனவும் வினாப் பயனிலைகளில் வரும் திணை, பால் ஆகியனவும் மாறி வருதல் வழுவாகும்.

(எ.டு.)

திணைவழு வினாக்கள்:

அங்கே கிடப்பது கட்டையா? மனிதனா?

பால்வழு வினாக்கள்:

அங்கே வருகிறவன் ஆணா? பெண்ணா?

மேலே கூறிய முதல் எடுத்துக்காட்டில் ‘கிடப்பது’ என்னும் அஃறிணைப் பெயர் எழுவாய்க்கு, வினாப் பயனிலையாக வருவன ‘கட்டை’ என்னும் அஃறிணைப் பெயரும் ‘மனிதன்’ என்னும் உயர்திணைப் பெயருமாகும்.

இரண்டாவது பிரிவு எடுத்துக்காட்டில் ‘வருகிறவன்’ என்னும் ஆண்பால் பெயர் எழுவாய்க்கு வினாப் பயனிலையாக வருவன ‘ஆண்’ என்னும் ஆண்பால் பெயரும் ‘பெண்’ என்னும் பெண்பால் பெயருமாகும்.

இவ்வாறு வினாத் தொடரின் எழுவாய்க்கு உரிய திணை, பால் ஆகியவற்றிற்கு மாறாக வினாப் பயனிலைகள் வருமானால் அது வினா வழுவாகும்.

இதேபோல் ஒரு வினாத் தொடரில் முதலும் சினையும் கலந்து (மயங்கி) வருதல் கூடாது. மயங்கி வருமானால் வழுவாகும்.

(எ.டு.) என்னைக் கண்டது கண்ணோ? கவிஞனோ?

இத்தொடரில் கவிஞன் என்பது முதல் குறித்த பெயராகும். கண் என்பது அம்முதலின் சினையாகும். இவ்விரண்டையும் ஒரு வினாத் தொடரில் சேர்த்து வினவுவது வழுவாகும்.

வினாவினும் செப்பினும் விரவா சினைமுதல்

(நன்னூல் : 387)

6.5.2 வினா வழாநிலை வினாவில் இடம்பெறும் எழுவாயின் திணையும் பாலும் மாறாமல் வினாப் பயனிலை வருவதே இலக்கண நெறிக்கு ஏற்புடையதாகும். இவ்வாறு இலக்கண நெறிக்கும் மாறுபாடு இல்லாமல் வரும் வினாத் தொடர்கள் வினா வழாநிலைத் தொடர்கள் எனப்படும்.

(எ.டு.)

அங்கே கிடப்பது கட்டையா? அல்லது அங்கே கிடப்பவன் மனிதனா?

என்று கேட்கலாம். ஆயினும் இவ்வினா ஒரே தொடராக அமையவில்லை. ஒரே தொடராக அமைக்க இவ்விரண்டையும் குறிக்கும் சிறப்புச் சொல்லால் கூறவேண்டும்.

(எ.டு.) அங்கே கிடக்கும் உரு மனிதனா? கட்டையா?

இத்தொடரில் இடம்பெற்றுள்ள ‘உரு’ என்பது மனிதன், கட்டை என்னும் இரண்டு திணைகளுக்கும் உரிய வடிவம் குறித்த சிறப்புச் சொல்லாகும்.

அதேபோல், வினாக்களில் இடம்பெறும் இருபால்களையும் குறிக்கும் சிறப்புச் சொல்லைப் பயன்படுத்தினால், வினாக்களில் பால் வழு தோன்றாது.

(எ.டு.) அங்கே வரும் மனிதர் ஆணா? பெண்ணா?

இத்தொடரில் இடம்பெற்றுள்ள ‘மனிதர்’ என்னும் சொல் ஆண், பெண் என்னும் இரு பாலிற்கும் உரியதாகும் என்பதால் வழு ஏற்படாது. இவ்வாறு இலக்கண நெறிக்கு ஏற்ப வினவுவது வினா வழாநிலையாகும்.

ஐயம் திணைபால் அவ்வப் பொதுவினும்

மெய்தெரி பொருண்மேல் அன்மையும் விளம்புப

(நன்னூல் : 376)

6.6 விடை

விடை எட்டு வகைப்படும் என்பது முன்னர்க் கூறப்பட்டது. அவற்றை இங்கு நினைவில் கொள்க.

(1) சுட்டுவிடை

(2) மறைவிடை

(3) நேர்விடை

(4) ஏவல்விடை

(5) வினாஎதிர்வினாதல் விடை

(6) உற்றதுஉரைத்தல்விடை

(7) உறுவதுகூறல்விடை

(8) ஏவல்விடை

என்பன விடை வகைகளாகும்.

6.6.1 விடை வழுநிலை விடையில் இடம்பெறும் எழுவாயின் திணையும் பாலும் மாறுபட்டு வரும் விடைத்தொடர்கள் விடை வழுநிலைத் தொடர்கள் எனப்படும்.

(எ.டு. )

இது மகள்

இது பறவைகள்

முதல் தொடரில் எழுவாய் ‘இது’ அஃறிணைச் சுட்டுப் பெயர்; ‘மகள்’ என்னும் பெயர்ப் பயனிலை உயர்திணைக்கு உரியதாகும்.

இரண்டாம் தொடரின் எழுவாய் ‘இது’ ஒன்றன்பால்; ‘பறவைகள்’ என்னும் பெயர்ப் பயனிலை பலவின்பால்.

இவ்வாறு ஒரு விடைத் தொடரில் திணை மயங்கி வருவதும், பால் மயங்கி வருவதும் விடை வழுநிலை ஆகும்.

இதேபோல் ஒரு விடைத் தொடரில் முதலும் சினையும் கலந்து (மயங்கி) வருவதும் கூடாது. மயங்கி வருமானால் வழுவாகும்.

(எ.டு.) மரம் முறிந்தது; கிளை முறிந்தது.

இத்தொடரில் மரம் முறிந்ததோ? மரத்தின் கிளை முறிந்ததோ? என்னும் ஐயம் எழுவதால் இவ்வாறு கூறுதல் விடை வழுவாகும்.

வினாவினும் செப்பினும் விரவா சினைமுதல் (நன்னூல் : 387)

6.6.2 விடை வழாநிலை ஒருவன் வினவிய பொருள் தன்னிடம் இருந்தால் உண்டு என்று கூறுதல் விடை வழாநிலை. அப்பொருள் இல்லை என்றால் அதனை இல்லை எனக் கூறுவதற்கு மாறாக அதனை நேரடியாகச் சொல்லாமல் அவன் வினவியதற்கு இனமாகத் தன்னிடம் உள்ள ஒன்றையோ பலவற்றையோ கூறுவதால், அவன் கேட்ட பொருள் தன்னிடம் இல்லை என உணர்த்துவதும் விடை வழாநிலை ஆகும்.

(எ-டு.)

‘துவரம் பருப்பு உளதோ வணிகரே’ என்று வினவிய ஒருவனுக்கு, அவ்வணிகர் துவரம் பருப்பு தன்னிடம் இல்லை என்றால், அதனை இல்லை என்று நேரடியாகக் கூறாமல் ‘உளுத்தம் பருப்பு உள்ளது’ என்றோ, ‘உளுத்தம் பருப்பும், பயிற்றம் பருப்பும் உள்ளது’ என்றோ தன்னிடம் உள்ளதைக் கூறுவார். இவ்வாறு விடையை நேரடியாகக் கூறாமல், வேறு வகையாகக் கூறுதல் விடை வழுவன்று; விடை வழாநிலையே ஆகும்.

தம்பால் இல்லது இல்லெனின் இனனாய்

உள்ளது கூறி மாற்றியும் உள்ளது

சுட்டியும் உரைப்பர் சொற்சுருங் குதற்கே (நன்னூல் : 406)

6.7 மரபு

அறிஞர் ஒரு பொருளை எச்சொல்லால் எவ்வாறு கூறினரோ அப்பொருளை அச்சொல்லால் அவர் வழங்கியவாறு பயன்படுத்துவதே மரபு எனப்படும். முந்தைய பாடத்தில் மரபு பற்றிக் கூறப்பட்டவற்றை நினைவில் கொள்க.

(எ.டு.) நாய் குரைத்தது

6.7.1 மரபு வழுநிலை அறிஞர் ஒரு பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினர் என அறியாமல், அதற்கு மாறுபட வழங்குவது மரபு வழுவாகும்.

(எ.டு.)

நாய் பேசியது

பசுவின் பிள்ளை

நாய் எழுப்பும் ஒலியை அறிஞர் குரைத்தல் என்பது மரபு. அதேபோல் மனிதர் கருத்து அறிவித்தலைப் பேசுதல் என்பது மரபு. முதல் தொடர் இவ்விரு மரபுக்கும் மாறுபட்டு அமைந்துள்ளது. நாய் பேசியது என்பது மரபு வழு.

பசு ஈன்றதைக் கன்று என்பது மரபு. மக்களின் குழந்தையைப் பிள்ளை என்பதும் மரபு. இவற்றிற்கு மாறாகப் பசுவின் பிள்ளை என்பது வழக்கன்று. மரபு வழுவாகும்.

6.7.2 மரபு வழாநிலை அறிஞர் ஒரு பொருளைக் கூறியவாறே கூறுவது மரபு எனப்பட்டது. அதற்குத் தக்கவாறு மொழியை வழங்குவது மரபு வழாநிலையாகும்.

(எ.டு.)

நாய் குரைத்தது

பசுவின் கன்று

எனக் கூறுவர் அறிஞர் என்பதால் அவ்வாறு வழங்குவதே மரபு வழாநிலை.

மேலும் பொருள்கள் இனமுள்ளனவும் இனமில்லாதனவும் உலகில் காணப்படுகின்றன.

(எ.டு.) தாமரை, ஞாயிறு

தாமரை இனத்தில் வெண்மையானதும் உள்ளது, செம்மையானதும் உள்ளது. இவ்வாறு ஞாயிறு என்னும் சூரியனில் வெவ்வேறு வண்ணம் உள்ளவை இல்லை. தாமரை எனத் தனியாகச் சொன்னால் எந்தத் தாமரை என்னும் வினா எழும். அதனால் அதனைச் செந்தாமரை என்றோ வெண்டாமரை என்றோ அடைமொழியுடன் சொல்ல வேண்டும். ஞாயிறு எனத் தனியாகச் சொன்னால் எந்த ஞாயிறு என்னும் வினா எழாது. எனவே ஞாயிறு எனத் தனிச் சொல்லால் குறிப்பதே முறை. அதனால்

செந்தாமரை, வெண்டாமரை ஞாயிறு

எனக் குறிப்பிடுவது மரபு வழாநிலை ஆகும்.

பொருள்முதல் ஆறாம் அடைசேர் மொழியினம்

உள்ளவும் இல்லவும் ஆமிரு வழக்கினும் (நன்னூல் : 401)

இனமுள்ள அடைமொழியோடு பொருள்களைக் குறிப்பிடுவதால், அதன் இனத்தையும் அதற்கு இனமல்லாததையும் அத்தொடர், உணர்த்துவது மரபு வழாநிலையாகும்.

‘வெள்ளைச் சேவல் வென்றது’ என்பது இனமுள்ள அடைமொழித் தொடர். இதனால் சேவலின் இனமான பிற கோழிகள் தோற்றன என்னும் பொருள் கிடைக்கிறது. இவ்வாறு இத்தொடர் அச்சேவலின் இனத்தைப் பற்றியும் பொருள் உணர்த்துகிறது.

மேலும், வெள்ளைச் சேவலின் உரிமையாளர் வென்றார் என்னும் பொருளும் அறியப்படுவதால் இனமல்லாததைப் பற்றியும் இத்தொடர் உணர்த்துகிறது.

அடைமொழி இனமல் லதும்தரும் ஆண்டுறின் (நன்னூல் : 402)

6.7.3 மரபு வழுவமைதி பொருள்கள் இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள் என இருவகை ஆகும். இவற்றுள் இயற்கைப் பொருளை இத்தன்மை உடையது எனக் கூறுவது மரபு வழுவமைதியாகும்.

(எ.டு.)

மலை பெரியது

தீ சுடும்

மழை பொழியும்

இவ்வாறு மலை, தீ, மழை முதலிய இயற்கைப் பொருள்களைக் குறிப்பிடும்போது, அவற்றின் தன்மைகளையும் இணைத்துச் சொல்வது மரபு வழுவமைதியாகும்.

மலை என்றாலே மலைப்பைத் தரும் அளவிற்குப் பெரியது எனக் கூறாமலே பெறப்படும்.

தீ என்றாலே அது சுடும் தன்மை உடையது என்பது சொல்லாமலே அறியப்படும்.

மழை என்றாலே அது நீர் பொழியும் தன்மை உடையது என்பது விளங்கும்.

தன்மைகளை வெளிப்படக் கூறுதல் ‘மிகைபடக் கூறுதல்’ ஆகும். அவ்வாறு கூறுதல் வழுவாயினும் அறிஞர் அவ்வாறே கூறிவருவதால் அவை வழுவமைதி ஆயிற்று.

செயற்கைப் பொருள்களைக் குறிப்பிடும் பொழுது, காரணச் சொல்முன்வர ஆக்கச் சொல் பின்வரக் கூறுதல் வழாநிலையாகும். காரணச் சொல் இன்றி ஆக்கச் சொல் பெற்றும், ஆக்கம் இன்றிக் காரணச் சொல் பெற்றும், ஆக்கச் சொல்லும் காரணச் சொல்லும் மறைந்து வரக் கூறவதும் மரபு வழுவமைதியாகும்.

(எ.டு.) மருந்து தடவியதால் புண் குணம் ஆயிற்று

இத்தொடரில் ‘ஆயிற்று’ என்பது ஆக்கம். ‘மருந்து’ குணம் ஆவதற்குக் காரணம். ஆக்கமும் காரணமும் இடம் பெற்றுள்ளதால் இத்தொடர் மரபு வழாநிலைத் தொடராகும்.

(எ.டு.) எண்ணெய் தடவியதால் மயிர் கருப்பாயிற்று.

என்பதும் ஆக்கச் சொல்லும் காரணமும் பெற்ற மரபு வழாநிலைத் தொடர். இத்தொடரை,

எண்ணெய் தடவியதால் மயிர் கருத்தது

என்று ‘ஆயிற்று’ என்னும் ஆக்கச் சொல் இன்றியும் குறிப்பிடக் காணலாம்.

மயிர் கருப்பாயிற்று.

எனக் காரணம் இன்றியும் இத்தொடரைக் குறிப்பிடலாம்.

மயிர் கருத்தது

எனக் காரணமும் ஆக்கமும் இன்றியும் குறிப்பிடலாம். இம்மூன்று தொடர்களும் மரபு வழுவமைதி ஆகும்.

காரண முதலா ஆக்கம் பெற்றும்

காரணம் இன்றி ஆக்கம் பெற்றும்

ஆக்கம் இன்றிக் காரணம் அடுத்தும்

இருமையும் இன்றியும் இயலும் செயும்பொருள்

(நன்னூல் : 405)

தொடர்ப்பொருள் வெளிப்படையாக அமையுமாறு கூறுதல் வழாநிலை. தொடரானது வெளிப்படையாக ஒரு பொருளும் குறிப்பாக வேறு பொருளும் உணர்த்துவது மரபு வழுவமைதி ஆகும்.

(எ.டு.) அவர் வைர நகை அணிந்தவர்

இத்தொடரின் பொருள் ஒருவர் வைர நகை அணிந்துள்ளார் என்னும் தகவலாகும். ஆனால் அந்தக் காரணத்திற்காக அன்றி ‘அவர் பெரும் செல்வந்தர்’ என்பதைக் குறிப்பாக உணர்த்துவதால் இத்தொடர், குறிப்புப் பொருள் உணர்த்தும் தொடர் ஆயிற்று. இவ்வாறு தொடரில் இல்லாத பொருளையும் ஒரு தொடரின் வழியாக அறிவிப்பது மரபு வழுவமைதி ஆகும்.

முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே (நன்னூல் : 408)

செய்யுளில் வரும் உவமை, உருவகங்களில் இரு திணைகளும் தம்முள் மயங்குதலும், சினையும் முதலும் தம்முள் மயங்குதலும் மரபு வழுவமைதியாகும்.

(எ.டு.)

மல்லன் மலையனைய மாதவரை வைதுரைக்கும் (சீவக. 2789)

என்னும் பாடல் அடியில் ‘மாதவர்’ என்னும் உயர்திணை, ‘மலை’ என்னும் அஃறிணையோடு மயங்கிற்று.

(எ.டு.)

தாழிரும் தடக்கையும் மருப்பும் தம்பியர்

தோழர்கள் தாள்களாச் சொரியு மும்மதம்

ஆழ்கடற் சுற்றமா அழன்று சீவக

ஏழுயர் போதகம் இனத்தொ டேற்றதே (சீவக. 775)

என்னும் பாடலில் ‘தோழர்’ என்னும் உயர்திணை முதல், கை, மருப்பு, தாள் ஆகிய சினைப் பெயர்களான அஃறிணையோடும் முதல் சினைகளோடும் மயங்கின.

உருவக உவமையில் திணைசினை முதல்கள்

பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே (நன்னூல் : 410)

6.8 தொகுப்புரை

இந்தப் பாடம், சொற்றொடர்களில் இடம்பெறும் திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு ஆகியவற்றில் ஏற்படும் வழுக்களைச் சுட்டிக்காட்டுகிறது.

வழுக்களை நீக்கி மொழியைப் பிழையறப் பயன்படுத்தும் மொழி மரபுகளான வழா நிலைகளைப் பற்றி அறிவிக்கிறது.

சான்றோர்களிடத்தும் மக்களிடத்தும் சில காரணங்களால் இலக்கண மரபிற்கு மாறுபட்டுக் காணப்படும் தொடர்களை ஏற்க வேண்டியதன் மொழிச் சூழல்தான் வழுவமைதி என்பதை உணர்த்துகிறது.