9

சங்க காலம்

பாடம் - 1

தமிழகத்தின் இயற்கை அமைப்பு

1.0 பாட முன்னுரை

ஆசியாக் கண்டத்தில் இந்தியா என்னும் நாடு அமைந்துள்ளது. விந்தியமலைத் தொடரும், சாத்பூராமலைத் தொடரும், ஆழ்ந்த நருமதைப் பள்ளத்தாக்கும், தபதி ஆறும், தண்டகாரணியக் காடுகளும் இந்தியாவை வட இந்தியா என்றும், தென் இந்தியா என்றும் இரு பகுதிகளாகப் பிரிக்கின்றன.

வட இந்தியாவில் எரிகுழம்புகள், நிலநடுக்கங்கள் போன்றவற்றால் தாக்குதலுக்கு உள்ளான அறிகுறிகள் உள்ளன. ஆனால் தென் இந்தியாவில் அவை காணப்படாததால் அது மனிதன் வாழ வசதி பெற்றதாக இருந்தது என்று ஆய்வாளர் கூறுகிறார்கள்.

தென் இந்தியாவில்தான் தமிழகம் என்னும் பெயர் பெற்ற நிலப்பரப்பு அமைந்துள்ளது. தமிழக நிலப்பரப்பு பல்வேறு காலங்களில் மாறுபட்ட எல்லைகளைக் கொண்டிருந்தது. சங்க காலத்திற்கு முற்பட்ட காலம், சங்க காலம், சங்க காலத்திற்குப் பிற்பட்ட காலம் என மூன்று காலக் கட்டங்களாகப் பிரித்து ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தமிழகத்தின் நிலப்பரப்பு எவ்வாறு இருந்தது என்றும், தற்காலத்தில் எவ்வாறு இருந்து வருகிறது என்றும் விரிவாகப் பார்ப்போம்.

1.1 சங்க காலத்திற்கு முற்பட்ட தமிழகத்தின் நிலப்பரப்பு

தமிழக நிலப்பரப்பின் எல்லைகள் அவ்வப்போது மாறுபட்டு வந்துள்ளன என்பதை நமக்குக் கிடைத்த நூல்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. பழங்காலத்தில் தமிழகம், தற்போது உள்ள குமரிமுனைக்குத் தெற்கே உள்ள கடலுக்கு அப்பாலும் வெகுதூரம் பரவி இருந்ததாகத் தெரிய வருகிறது.

பாண்டியன் ஒருவன், பஃறுளி ஆறும், குமரிமலையும் கடல்கோளால் மூழ்கி விட்டதால், தன்னுடைய நாட்டு எல்லையைப் பெருக்க வடக்கு நோக்கிப் படை எடுத்துச் சென்றான் என்பதைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோஅடிகள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

பஃறுளி யாற்றுடன் பன் மலை அடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு,

தென்திசை ஆண்ட தென்னவன் வாழி.

(சிலப்பதிகாரம், காடுகாண் காதை:19-22)

(குமரிக்கோடு – குமரிமலை; தென்னவன் – பாண்டியன்.)

இதே செய்தியைக் கலித்தொகையில் ஆசிரியர் சோழன் நல்லுருத்திரனார் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்,

மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்

மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடு இடம்படப்

புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை

வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்.

(கலித்தொகை, முல்லைக்கலி :104:1-4)

(மலிதிரை – மிகுதியான அலைகள்; தன் மண் – தன்னுடைய பாண்டிய நாடு; மேவார் – பகைவர்; வணக்கிய – அடக்கிய.)

இரண்டு கடல்கோள்கள் ஏற்பட்டதாகவும், அவற்றால் தமிழகத்திற்குப் பேரிழப்பு ஏற்பட்டதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடல் கோள்களுக்கு உட்பட்டு மூழ்கிப்போன நிலப்பகுதி இலெமூரியாக் கண்டம் (Lemuria) என்று அழைக்கப்பட்டது. இதனை சர் வால்டர் ராலே, பேரா.ஹெக்கல், சர் ஜான் ஈவான்ஸ், ஸ்காட் எலியட், சர் ஜே. டபிள்யூ, ஹோல்டர்ன்ஸ் ஆகிய ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இங்குதான் மக்கள் முதன்முதலில் தோன்றியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

1.2 சங்க காலத் தமிழகத்தின் நிலப்பரப்பு

வடக்கில் தக்காண பீடபூமியும், கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் கடல்களும் சங்க காலத் தமிழகத்தின் எல்லைகளாக அமைந்திருந்தன.

தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரத்தில் தமிழகத்தின் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன.

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)

என்பது பனம்பாரனார் கூற்று. இவ்வடிகளில் பனம்பாரனார் தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும், தென் எல்லையாகக் குமரிக் கடலையும் குறித்துள்ளார். அதுபோலவே, இளங்கோ அடிகளும் தாம் பாடிய சிலப்பதிகாரத்தில் தமிழகத்துக்கு வேங்கட மலையை வட எல்லையாகவும், கடலைத் தென் எல்லையாகவும் காட்டியுள்ளார்.

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்

தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு

(சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)

(நெடியோன் குன்றம் – திருமாலவன் குன்றம், வேங்கட மலை, திருப்பதி; தொடியோள் – குமரி; பௌவம் – கடல்; வரம்பு – எல்லை.)

சங்க காலத்துக்கு முன்பு கன்னியாகுமரிக்குத் தெற்கில் நெடுந்தூரம் பரவியிருந்த தமிழகம் சங்க காலத்தில் சுருங்கிவிட்டது. குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் புறநானூற்றில் சங்க காலத் தமிழகத்தின் எல்லையை அளவிட்டுக் காட்டியுள்ளார்:

தென்குமரி வடபெருங்கல்

குணகுட கடலா எல்லை

(புறநானூறு,17:1-2)

(வடபெருங்கல் – வேங்கடமலை; குண – கிழக்கு; குட – மேற்கு.)

புறநானூற்றில் கூறியிருப்பது போலவே மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும்,

தென்குமரி வடபெருங்கல்

குணகுட கடலா எல்லை

(மதுரைக்காஞ்சி:70-71)

என்று தமிழகத்தின் எல்லையைச் சுட்டியுள்ளார்.

வேங்கடத்துக்கு வடக்கில் வேறுமொழி (தெலுங்கு) இருந்து வந்தது என்பதனை மாமூலனார் அகநானூற்றில் பின்வருமாறு கூறியுள்ளார்.

பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,,,,,

(அகநானூறு, 211:7-8)

(உம்பர் – மேலே, வடக்கில்; மொழிபெயர் தேஎத்தர் – வேறு மொழி பேசும் நாட்டினர்.)

குறுந்தொகையில் மாமூலனார் கட்டி என்னும் மன்னனின் நாட்டுக்கு வடக்கில் வடுகர் (தெலுங்கர்) வாழ்ந்து வந்தனர் என்பதை,

குல்லைக் கண்ணி வடுகர் முனையது

வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்.

(குறுந்தொகை,11:6-7)

என்று கூறுகிறார்.

சங்க காலத் தமிழகத்தில் தற்போது உள்ள கேரளமும் சேர்ந்திருந்தது என்பது நன்னூல் குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. நன்னூலார் தமது இலக்கண நூலாகிய நன்னூலில் தமிழகத்தின் நான்கு எல்லைகளைச் சரிவரக் குறிப்பிட்டுள்ளார்.

குணகடல் குமரி குடகம் வேங்கடம்

(நன்னூல்,சிறப்புப்பாயிரம்:8)

என்று மேற்கு எல்லையாகக் குடகு மலை (மேற்குத்தொடர்ச்சி மலை) உள்ளதைச் சுட்டியுள்ளார். நன்னூல் இந்த எல்லைகளை உணர்த்துவதால், கி.பி 12ஆம் நூற்றாண்டில் மேற்கே குடகு வரை தமிழகம் பரவி இருந்தது தெரியவருகிறது.

அந்நாளில் தமிழகம் பல நூறு ஆண்டுகளாகப் பாண்டியநாடு, சோழநாடு, சேரநாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு முதலிய அரசியற் பிரிவுகளுக்குட்பட்டுக் கிடந்ததற்கு அதன் இயற்கை அமைப்புத்தான் காரணம் ஆகும்.

1.3 பிற்காலத் தமிழகத்தின் நிலப்பரப்பு

பொதுவாக மலைகள், ஆறுகள், காடுகள், போன்றவை ஒருபகுதியை இன்னொரு பகுதியிலிருந்து பிரித்து விடுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் இரு கடற்கரை ஓரங்களிலும் அமைந்து தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஒன்றாய் இணைகின்றன. இவ்விரு தொடர்களுக்கு இடையே சமவெளி ஒன்று அமைந்துள்ளது. மேற்குத் தொடருக்கு மேற்கிலும், கிழக்குத் தொடருக்குக் கிழக்கிலும் சமவெளிகள் உள்ளன. இவையேயன்றிப் பல குன்றுகளை அடுத்தும் சமவெளிகள் உள்ளன. இச்சமவெளிகளில் வாழ்ந்த மக்கள் ஆங்காங்குத் தனித்தனி நாட்டு மக்களாகவே வாழ்ந்து வந்தனர். பாண்டிய நாடு, சோழ நாடு, சேர நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு எனப் பழந்தமிழகம் பிரிந்து கிடந்ததை நாம் அறிவோம். இதன் காரணத்தால் அவரவருக்கு எனத் தனியான வட்டார மொழி, பண்பாடு, கலாச்சாரம் வேறுபட்டுக் காணப்பட்டது. இன்றைய கேரளம் சங்க காலத் தமிழகத்தில் இருந்த சேர நாடே ஆகும். சங்க காலத்தில் சேர நாட்டில் வழங்கிய தமிழ் காலப்போக்கில் சிறிது சிறிதாக மாறுபட்டுக் கேரளத்தில் ‘மலையாளம்’ என்ற தனி மொழியாக வழங்கலாயிற்று, இன்றும் வழங்கிவருகிறது. ஆக, கேரளநாடு தற்காலத்தில் தமிழகத்தோடு இல்லை. ஆகவே தமிழ்நாடு முற்காலத்தில் இருந்ததைவிடத் தற்காலத்தில் எல்லை சுருங்கியதாக இருக்கிறது.

1.4 பிற்காலத் தமிழகத்தின் இயற்கை அமைப்பு

இன்றைய தமிழக எல்லைக்குள் மலைத் தொடர்களும், மலைகளும், ஆறுகளும், அருவிகளும், காடுகளும், பள்ளத்தாக்குகளும், சமவெளிகளும் நிறையக் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்கே காண்போம்.

1.4.1 மலைத் தொடர்கள் மலைகள் ஒன்றையொன்று அடுத்து அடுத்து அமைந்து ஒரு நீண்ட சுவர்போல் எழும்பிக் காணப்படுவதால் இதனை மலைத்தொடர் என்பர். தமிழகத்தைப் பொருத்தவரையில் இருவேறு மலைத்தொடர்கள் இயற்கையாக அமையப்பெற்றுள்ளன. இவற்றுள் ஒன்று மேற்கு மலைத்தொடர். மற்றொன்று கிழக்கு மலைத்தொடர் ஆகும்.

மேற்கு மலைத்தொடர் (Western Ghats)

இம்மலைத்தொடர் மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் உள்ள தபதி ஆற்றுக்குத் தெற்கே தொடங்கி மராட்டியம், கோவா, கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் வழியாக நீண்டு தமிழ் நாட்டிலுள்ள கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் 1600 கி.மீட்டர் ஆகும். உயரம் 900 மீட்டர் ஆகும். இம்மலைத் தொடர் மராட்டியத்திலும், கர்நாடகத்திலும் ‘காயத்ரி மலைத்தொடர்’ எனவும், தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத் தொடர் எனவும், கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகின்றது.

இம்மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2695 மீ) ஆகும். இதுவே தென் இந்தியாவின் உயரமான சிகரம் ஆகும்.

தென் இந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகின்றன. இங்கு உருவாகிக் கிழக்கு நோக்கித் தக்காண பீடபூமி வழியாகப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கும் முக்கியமான ஆறுகளுள் ஒன்று காவிரி ஆறு ஆகும். தாமிரபரணி ஆறும் வேறுசில சிறுசிறு ஆறுகளும் இம்மலைத்தொடரில் தோன்றி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. அவற்றுள் சில மணிமுத்தாறு, கபினி ஆறு, மற்றும் பெரியாறு ஆகும்.

இம்மலைத்தொடர் முற்காலத்தில் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் மற்றும் செல்சு தீவுகளோடு இணைந்திருந்தது என்று புவியியலார் கூறுகின்றனர். இதுவே இலெமூரியாக் கண்டம் என்று முன்பே படித்தோம்.

இம்மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கணவாய்கள் அதிகமாக இல்லை. கணவாய் என்பது மலைகளுக்கு இடையே உள்ள சிறுவழி. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பாலக்காட்டுக் கணவாய், ஆரல்வாய்க் கணவாய், செங்கோட்டைக் கணவாய் ஆகியன இருக்கின்றன. இவை தவிர ஆழ்ந்த பள்ளத்தாக்குகளும், அருவிகளும் ஏராளமாக உள்ளன. ஆதலால் இம்மலைத் தொடர் வனப்புடனும். வளத்துடனும் இருக்கிறது. இவ்வளத்தினால் ஆயிரக்கணக்கான தாவர இனங்களும் நூற்றுக்கணக்கான வனவிலங்குகளும் அங்கு இருக்கின்றன.

கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats)

கிழக்கு மலைத்தொடர் மேற்கு வங்காளம் முதல் தமிழ்நாடு வரைகிழக்குக் கடற்கரையை ஒட்டி வருகிறது. இம்மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலைகள் போல் தொடர்ந்து காணப்படவில்லை. மாறாகப் பகுதி பகுதிகளாகக் காணப்படுகின்றது. ஏனென்றால் கோதாவரி, கிருஷ்ணா, மகாநதி, காவிரி போன்ற பெரிய ஆறுகள் இம்மலைத் தொடர் ஊடே செல்வதால் இடையிடையே தொடர்ச்சி இல்லாமல் அமைந்திருக்கிறது. இம்மலைத் தொடரில் மிக உயர்ந்த சிகரம் மகேந்திரகிரி ஆகும். இதன் உயரம் 1501 மீட்டர் ஆகும். இது ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ளது. மேலும் இம்மலைத் தொடர் மேற்கு மலைத்தொடரைவிட மிகவும் பழைமை வாய்ந்தது எனப் புவியியலாளர் கூறுகின்றனர். இக்கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் பெரும்பாலும் ஒரிசா, ஆந்திரா மாநிலங்களில் உள்ளன.

ஒரிசாவில் தொடங்கித் தமிழ் நாட்டிலுள்ள சென்னைக்கு அண்மையிலிருந்து மேற்கு முகமாக வளைந்து மேற்கு மலைத்தொடருடன் நீலகிரியில் இணைகிறது. மேலும் இம்மலைத்தொடர் தமிழகத்தை ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து பிரிக்கின்றது.

1.4.2 மலைகள் மலைகள் ஒரு நாட்டுக்கு இயற்கை அரண்களாக உயர்ந்து நிற்கின்றன. தமிழகத்தில் மேற்கு மலைத்தொடரில் நீலகிரி, ஆனைமலை போன்ற மலைகளும், கிழக்கு மலைத் தொடரில் சேர்வராயன் மலை, கொல்லி மலை, கல்ராயன் மலை, பச்சை மலை போன்ற மலைகளும் அமைந்துள்ளன. இம்மலைகள் ஒவ்வொன்றும் நீண்டுயர்ந்த தொடராக உள்ளன.

நீலகிரி

தென்னிந்தியாவில் உள்ள மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ளபெரிய மலைத்தொடர் நீலகிரி ஆகும். இது தமிழ்நாட்டின் மேற்குக் கோடியில் அமைந்த நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. மேலும் இம்மலை கேரள மாநிலத்தின் வடக்கிலும், கர்நாடக மாநிலத்தின் தெற்கிலும் நீண்டு பரவி அமைந்துள்ளது. இம்மலையில் அமைந்த மிக உயரமான சிகரம் தொட்டபெட்டா ஆகும். இது 2623 மீட்டர் உயரம் உடையது. தென்னிந்தியாவின் முக்கியக் கோடை வாசத்தலமான உதகமண்டலம் இம்மலையில் உள்ளது. இது சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற ஊராக விளங்குகிறது. இம்மலையில் தேயிலை, காப்பி, ஆரஞ்சு, ரப்பர் தோட்டங்கள் நிறைய உள்ளன. யூகலிப்டஸ் மரங்கள் மிகுதியாக வளர்கின்றன. இம்மரங்களிலிருந்து எடுக்கப்படும் தைலம் (எண்ணெய்) நீலகிரித் தைலம் என்று கூறப்படுகிறது. இம்மலையில் துதவர் (Todas), கோதர் (Kotas) போன்ற பழங்குடி மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். துதவர்களின் பழங்குடிசைகள் இன்றும் இம்மலையில் ஆங்காங்கே இருப்பதைக் காணலாம்.

ஆனை மலை

மேற்கு மலைத்தொடரில் அமைந்த மற்றொரு பெரிய மலைத் தொடர் ஆனைமலை ஆகும். இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சிக்கு அருகில் உள்ளது. மேலும் இது தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் பரவி அமைந்துள்ளது. இம்மலையில் தேயிலையும் காப்பியும் மிகுதியாகப் பயிராகின்றன. தேக்கு மரங்களும், பல்வகையான காட்டு மரங்களும், யானைகளும் மிகுதியாக உள்ளன. இம்மலையில் யானைகள் மிக அதிகமாக உள்ளதால் இம்மலைக்கு ஆனைமலை என்ற பெயர் வழங்கியது.

சேர்வராயன் மலை

தமிழ்நாட்டில் சேலம் மாநகரத்தின் அருகே சேர்வராயன் மலைஅமைந்துள்ளது. இம்மலையில்தான் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏர்க்காடு என்னும் கோடை வாசத்தலம் உள்ளது. இது கடல் மட்டத்துக்கு மேல் 1365 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சேர்வராயன் மலையில் ஏர்க்காட்டைச் சுற்றிலும் 67 கிராமங்கள் இருக்கின்றன. இக்கிராமங்களில் வாழும் மக்கள் தங்களின் காவல் தெய்வமாக வழிபடும் கடவுளின் பெயர் சேர்வராயன் என்பதாகும். சேர்வராயன் என்னும் கடவுள் இருக்கும் மலையாதலின் இம்மலை சேர்வராயன் மலை எனப்பட்டது. இம்மலையின் உச்சியில் (1620 மீட்டர் உயரத்தில்) சேர்வராயன் கோயில் என்ற கோயில் உள்ளது. இக்கோயிலில் சேர்வராயன் தன்னுடைய மனைவியார் காவேரி அம்மனோடு வீற்றிருக்கிறார். சேர்வராயன் மலையில் பெரும் அளவு கனிம வளங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இங்கு மேக்னசைட் (Magnesite) படிமங்கள் உள்ளன.

கொல்லி மலை

தமிழ் நாட்டின் நடுப்பகுதியில், தற்போதைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலைத் தொடர் கொல்லி மலை ஆகும். இதன் மொத்த நீளம் 27 கி.மீ. இம்மலைத் தொடர் 1000 முதல் 1300 மீட்டர் வரை உயரம் கொண்டது. கொல்லி மலை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. சங்க காலத்தில் இம்மலையை வல்வில் ஓரி என்பவன் ஆண்டு வந்தான். இதனைப் புறநானூற்றில் பெருஞ்சித்திரனார் என்ற சங்கப் புலவர்,

கொல்லி ஆண்ட வல்வில் ஓரி

(புறநானூறு, 158:5)

என்று குறிப்பிடுகிறார். வல்வில் ஓரியைக் கடையெழு வள்ளல்களில் ஒருவன் என்று சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. இம்மலையில் கொல்லிப் பாவை என்ற தெய்வப் பாவையின் (பெண்ணின்) சிலை இருந்ததாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

கல்ராயன் மலை

தமிழ்நாட்டில் தற்போதைய சேலம், விழுப்புரம் ஆகிய இரு மாவட்டங்களுக்கு இடையில் கல்ராயன் மலை ஒரு பெரிய தொடராக நீண்டு அமைந்துள்ளது. இம்மலையின் பெரும்பகுதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி வட்டத்தில் (Taluk) அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து அமைந்துள்ளது. வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரு பகுதி சராசரி 820 மீ உயரம் உடையது. இது சின்ன கல்ராயன் மலை எனப்படுகிறது. தெற்கு நோக்கி அமைந்துள்ள மற்றொரு பகுதி சராசரி 1365 மீ உயரம் உடையது. இது பெரிய கல்ராயன் மலை எனப்படுகிறது. தமிழ் நாட்டில் உள்ள கிழக்கு மலைத்தொடரில் பெரும்பகுதியைக் கல்ராயன் மலை கொண்டுள்ளது எனப் புவியியலார் கூறுகின்றனர்.

பச்சை மலை

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள துறையூர் என்னும் ஊரின் அருகில் பச்சை மலை உள்ளது. இம்மலை முழுவதும் பச்சை நிறத் தாவரங்களால் போர்த்தப்பட்டிருப்பதால் இம்மலை பச்சை மலை எனப்பட்டது. இம்மலை தொடர்ச்சியாக அமையாது விட்டுவிட்டு, ஆனால் அருகருகே அமைந்த ஏராளமான குன்றுகளால் ஆகியது. இம்மலை சுமார் 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

மேலே குறிப்பிட்ட மலைகளே அல்லாமல் தமிழ்நாட்டில் சவ்வாது மலை, ஏலகிரி, பழனி மலை, சிறுமலை, பொதிகை மலை போன்ற மலைகளும், எண்ணற்ற சிறு சிறு குன்றுகளும் உள்ளன.

1.4.3 ஆறுகள் தமிழகத்தில் ஓடும் ஆறுகள் தமிழகத்தின் பண்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பஃறுளி ஆறு வளப்படுத்திய இலெமூரியாக் கண்டத்தில் தமிழ் மொழியும், பண்பாடும் வளர்ந்து வந்துள்ளன. அதுபோலக் காவிரி, வைகை ஆகிய ஆறுகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவையாகும். பழங்காலத்தில் காவிரி ஆறு பாயும் பகுதியில் சோழப் பேரரசும், வைகை ஆறு பாயும் பகுதியில் பாண்டியப் பேரரசும் தோன்றின.

காவிரி ஆறு

காவிரி ஆற்றினை வட இந்தியாவில் ஓடும் கங்கை ஆற்றிற்குஒப்பாகக் கூறுவார்கள். இக்காவிரி ஆறு கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குடகு மலையில் 4400 அடி உயரத்தில் உள்ள தலைக்காவிரி என்ற இடத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கி.மீட்டர். கர்நாடகத்திலுள்ள குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா நகரம் இவற்றின் வழியாகப் பாய்ந்து, தமிழ் நாட்டில் உள்ள தர்மபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாகச் சென்று பூம்புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத்தில் வங்கக் கடலில் கலக்கின்றது. இக்காவிரி ஆறு பற்றிச் சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் உள்ளன.

கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று

நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல

(அகநானூறு, 62:9-10)

(கடும்புனல் – விரைந்தோடும் நீர்; நீத்தம் – வெள்ளம்; மண்ணுநள் – குளிப்பவள்.)

வாரல்எம் சேரி; தாரல்நின் தாரே

அலரா கின்றால் பெரும! காவிரிப்

பலர்ஆடு பெருந்துறை மருதொடு…..

(குறுந்தொகை,258:1-3)

(வாரல் – வாராதே; தாரல் – தாராதே; தார் – மாலை; அலர் – பழிச்சொல்.)

பெரிதாகிப் பாயும் காவிரி ஆறு திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே 15 கி,மீ தொலைவில் இரு கிளைகளாகத் தெற்கு வடக்காகப் பிரிகின்றது. தென்கிளையாக உள்ளது காவிரி ஆறு என்றும் வட கிளையாக உள்ளது கொள்ளிடம் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. கரிகால் சோழன் கட்டிய கல்லணை இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டதாகும். அதுபோலத் தமிழகத்திலுள்ள மிகப்பெரிய அணை ஒன்று காவிரி பாயும் மேட்டூரில் கட்டப்பட்டுள்ளது.

வெள்ளாறு

சேர்வராயன் மலை, கல்ராயன் மலை, பச்சை மலை ஆகிய மலைகளிலிருந்து உருவாகும் சிறுசிறு அருவிகள் ஒன்று சேர்ந்து வெள்ளாறு என்ற பெயருடன் தென் ஆற்காடு மாவட்டத்தில் ஓடிக் கடைசியில் பரங்கிப்பேட்டையில் போய்க் கடலில் கலக்கிறது. மழையினால் மட்டுமே இவ்வாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படுகிறது. வெள்ளாற்றைச் சோழர்கள் பலகாலம் வட எல்லையாகக் கொண்டிருந்தனர்.

பாலாறு

பாலாறு கர்நாடக மாநிலத்தில் நந்திதுர்க்கம் என்னும் மலைப்பகுதியில் தோன்றுகிறது. அது கிழக்காக ஆந்திர மாநிலத்துப் பகுதியில் ஓடிப் பின்பு தமிழ் நாட்டில் வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களைக் கடந்து சென்று சதுரங்கப்பட்டினத்தின் அருகில் கடலுடன் கலக்கிறது. பெருமழை பெய்தாலன்றி இவ்வாற்றில் வெள்ளம் பெருகுவதில்லை. இக்காரணத்தால் பாலாறு பெரும்பாலும் வறண்டே காணப்படும். ஆற்றுப்படுகைகளில் கிணறுகள் தோண்டி உழவர்கள் வேளாண்மை செய்கின்றனர்.

தென்பெண்ணை ஆறு

கர்நாடக மாநிலத்தில் சென்னவராயன் பேட்டை என்னும் இடத்தில் தோன்றும் தென்பெண்ணையாறு சேலம், தென் ஆர்க்காடு ஆகிய மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து கடலூருக்கு அருகில் கடலில் சங்கமம் ஆகின்றது. இந்த ஆறு தமிழகத்தின் முக்கியமான ஆறுகளில் ஒன்று என மகாகவி பாரதியார் கூறுகிறார்:

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்

கண்டதோர் வையை பொருநைநதி

(பாரதியார் கவிதைகள்-செந்தமிழ் நாடு-3)

வைகை ஆறு

வைகை ஆறு பழனி மலையில் தோன்றுகிறது; அது மதுரைமாநகருக்குச் சீரும் சிறப்பும் தருகின்றது. மதுரையைக் கடந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்து சென்று வங்கக் கடலோடு கலக்கின்றது. இது குறித்துச் சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றில்,

மையெழில் உண்கண் மடந்தையொடு வையை

ஏர்தரு புதுப்புனல்………………………….

(அகநானூறு,256:10-11)

(ஏர் – அழகு; புதுப்புனல் – புதுவெள்ளம்.)

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிபாடலின் 6,7,10,11,12,16,20,22 ஆகிய பாடல்கள் வையையைப் பாடுவனவாகவே அமைந்துள்ளன. இந்த ஆற்றிலும் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடுவதில்லை. மேற்குமலைத் தொடரில் பொழியும் மழை நீரை அணைகள் கட்டித் திருப்பி வைகையில் செலுத்துகின்றனர். இவ்வைகை ஆற்றுக்குத் துணை ஆறுகள் உண்டு. அவை சுருளியாறு, தேனியாறு, வராகநதி, மஞ்சளாறு முதலியன.

தாமிரபரணி ஆறு

தண்பொருநை என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு திருநெல்வேலி மாவட்டத்திற்கு மேற்கே மலைத்தொடரில் தோன்றி வருகிறது. இது ஓடும் வழிகளை எல்லாம் செழிக்க வைத்து வங்கக்கடலில் போய்க் கலக்கின்றது. இது மிகப்பழமை வாய்ந்த ஆறு ஆகும். இந்த ஆறு பற்றி வால்மீகி இராமாயணத்தில் கூறப்படுவதோடு, வரலாற்றுக் குறிப்புகளும் கிடைக்கப்பெறுகின்றன. ஒரு காலத்தில் இது இலெமூரியாக் கண்டம் இருந்தபோது இலங்கை வரை பாய்ந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

பழையாறு

கன்னியாகுமரி மாவட்டத்தின் தென் கோடியில் பல சிற்றாறுகள் ஓடுகின்றன. அவற்றுள் புகழ்பெற்றது பழையாறு என்பது. பல சிற்றாறுகள் ஒன்றுகூடிப் பழையாறு உருவாகின்றது. அச்சிற்றாறுகளில் ஒன்று மகேந்திரகிரியின் தென்புறம் தோன்றிப் பூதப்பாண்டி, கோட்டாறு, நாகர்கோயில், சுசீந்திரம் ஆகிய ஊர்களை அணைத்துச் சென்று மணக்குடி என்னும் இடத்தில் கடலில் கலக்கின்றது. இது உற்பத்தியாகுமிடத்தில் இதன் குறுக்கே பண்டைக் காலத்தில் கட்டப்பெற்ற அணை ஒன்று உள்ளது. இவ்வணைக்குப் பாண்டியன் அணை என்று பெயர் வழங்குகின்றது.

1.4.4 கடல்கள் தமிழகத்தின் கிழக்கில் வங்கக்கடலும், தெற்கில் இந்துமகா சமுத்திரமும், மேற்கில் அரபிக்கடலும் இயற்கையான அரண்கள் போன்று காட்சி தருகின்றன என்பதை அறிவோம். தொன்றுதொட்டே இக்கடல் அரண்கள் பற்றிப் பல குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. இதைச் சிலப்பதிகாரம்,

நாமநீர் வேலி யுலகிற்கு

(சிலப்பதிகாரம், மங்கல வாழ்த்துப்பாடல்:8)

(நாமநீர் – அச்சத்தைத் தருகின்ற கடல்; வேலி – அரண்.)

என்ற தொடரால் குறிப்பிடுகின்றது.

சங்க காலத்தில் கிழக்குக் கடற்கரையில் காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, காயல் போன்ற துறைமுகப்பட்டினங்கள் சிறப்புற்று விளங்கின. தமிழகத்தைச் சுற்றி மூன்று புறத்திலும் கடல் சூழ்ந்து இருந்ததால் முத்துக்குளிக்கும் தொழில் அயல்நாட்டுச் செலாவணியைத் தேடித் தந்தது. கடலால் சூழப்பட்டிருந்ததால் கிரேக்கர், ரோமர், பினீசியர் (அரேபியர்) சீனர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் ஆகியோர் வணிகம் செய்யத் தமிழகத்திற்குக் கடல் வழியாக வந்து சென்றுள்ளனர். ஏலம், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களும் தமிழகத்திற்கு அந்நியச் செலாவணியைத் தேடித் தந்தன. தமிழகம் வளர்ச்சி பெற உதவியதால் இக்கடல்கள் சூழ்ந்ததும் நன்மையையே அளித்தது. இருப்பினும், இக்கடல்கள் தீங்கு விளைவிக்கவில்லை எனவும் கூற இயலாது. கடல் கோள்கள் ஏற்பட்டுள்ளன. இயற்கைச் சீற்றமான புயல், கடல் அரிப்பு இவற்றால் தமிழகம் பல இன்னல்களைச் சந்தித்துள்ளது. நீண்ட மலைத்தொடர்களும், கடல்களும் இருந்தமையால் பேரரசுகள் தோன்றுவது கடினமாக இருந்தது.

1.4.5 பருவக் காற்றுகள் ஒரு நாட்டின் இயற்கை அமைப்பைப் பற்றி அறியும் போது அந்நாட்டில் வீசும் காற்றுகளைப் பற்றியும் அறிந்து கொள்வது அவசியம் ஆகிறது. தமிழகத்தில் இருவகையான காற்றுகள் இரு பருவங்களில் வீசுகின்றன. அவையாவன: 1. தென்மேற்குப் பருவக்காற்று, 2. வடகிழக்குப் பருவக்காற்று. தமிழகத்திற்கு மழையை வழங்குவன இப்பருவக்காற்றுகள்.

தென்மேற்குப் பருவக்காற்று

தென்மேற்குப் பருவக்காற்று சூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையில் வீசுகின்றது. இது இந்துமகா சமுத்திரத்தையும், அரபிக்கடலையும் கடந்து மேகங்களைக் கொண்டு வந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்புறத்தைத் தாக்குகின்றது. அதனால் அங்கெல்லாம் பெருமழை பெய்கின்றது. இதனால் அண்டை மாநிலமான கேரளத்திற்குக் குறைவின்றி நீர்வளம் கிடைக்கின்றது. இக்காற்று உயரமான மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து வீசுவதில்லை. இதனால் தமிழகத்திற்கு மிகுதியான மழை இல்லை எனலாம். இருப்பினும் இக்காற்று பாலக்காட்டுக் கணவாயின் வழியே நுழைந்து சேர்வராயன் மலைகளில் மோதுவதால் சிறிதளவு மழை பெய்கிறது. ஆகஸ்ட் மாதத்தின் இடையில் காவிரி ஆற்று ஓரங்களில் இக்காற்று மிகுதியாக வீசுவதால் தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி போன்ற இடங்களில் நல்ல மழை பெய்கிறது. ஆகஸ்டின் பிற்பகுதியிலும் செப்டம்பர் முழுவதிலும் இக்காற்று காஞ்சிபுரத்திற்கும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர்க்கும் இடைப்பட்ட கடலோர மாவட்டங்களுக்கும், மரக்காணம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களுக்கும் மழையைத் தருவதுண்டு.

வடகிழக்குப் பருவக்காற்று

இக்காற்று அக்டோபர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் வரையில் வீசுகின்றது. மேற்கு மலைத்தொடரின் கீழ்ப்புறம், சமவெளிப் பகுதிகளில் பொதுவாகத் தமிழகத்தில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நல்ல மழை பெய்வதுண்டு.

சில சமயங்களில் வடகிழக்குப் பருவக்காற்றால் அளவுக்கு மீறிய மழையும் பெய்வதுண்டு. வங்கக்கடலில் அவ்வப்போது தாழ்ந்த காற்றழுத்தம் ஏற்படுவதுண்டு. அதனால் புயல் காற்று வீசுகின்றது.

1.4.6 தட்ப வெப்ப நிலை தமிழகத்தைப் பொருத்தவரையில் தட்ப வெப்பநிலை நன்றாகவே இருக்கின்றது எனலாம். உயரமான மலைகளிலும், குன்றுகளிலும் அமைந்துள்ள இடங்கள் குளிராகவும், மற்ற நிலப்பரப்பில் உள்ள இடங்கள் சற்று வெப்பமாகவும் இருக்கின்றன.

1.5 இயற்கைசார் தொழில்கள்

நாட்டில் மக்கள் வாழ்வதற்குத் தொழில் மிகவும் இன்றியமையாதது. ஒரு தொழிலானது அந்நாட்டின் சுற்றுப்புறச் சூழலுக்கும், தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றாற் போல் அமைகின்றது. தமிழகத்தில் மழையை நம்பி நீர்ப் பாசனத்தைப் பெருக்கி விவசாயம் செய்கின்றனர். தமிழகத்தைச் சுற்றிக் கடல் இருப்பதால் மீன்பிடி தொழிலும், முத்துக்குளித்தல் மற்றும் உப்பளத் தொழிலும் (உப்பு விளைக்கும் தொழில்) பண்டைக்காலம் முதல் இந்நாள் வரை நடைபெற்று வருகின்றன.

மேற்கு மலைத் தொடரில் ஆனைமலைகள் சிறப்பானவை. இத்தொடர் முழுவதிலும் காடுகள் அடர்ந்து செழித்து வளர்ந்துள்ளன. இக்காடுகளில் உயரமான, தேக்கு மரங்கள் இருந்ததால் அந்நாளில் தச்சுவேலை நடைபெற்று வந்தது.

மரம் கொல் தச்சன் கை வல் சிறா அர்

(புறநானூறு, 206:11)

எண் தேர் செய்யும் தச்சன்

(புறநானூறு, 87:3)

அடர்ந்த காடுகளில் வன விலங்குகளும் சாதுவான விலங்குகளும் காணப்பட்டதால் வேட்டைத் தொழிலும் நடைபெற்று வந்தது. வேளாண் தொழிலுக்கும், வேட்டையாடுதலுக்கும், தச்சுவேலைகளுக்கும் உலோகத்திலான கருவிகள் தேவைப்பட்டதால் உலோகத் தொழிலும் நடைபெற்று வந்தது. நிறைந்த புல்வெளி காணப்பட்டதால் கால்நடை வளர்ப்பும் மிகுதியாக நடைபெற்று வந்தது.

1.5.1 வேளாண்மை பழங்காலம் முதல் உழவே தமிழகத்தின் முக்கியத் தொழில் ஆகும்.நாட்டின் பொருளாதாரத்திலும் இது முக்கிய இடம் வகிக்கின்றது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் வீசும் வடகிழக்குப் பருவக்காற்றுத் தமிழகத்திற்கு ஓரளவிற்கு மழையை அளிக்கின்றது. இதனால் இக்காலங்களில் நீர்நிலைகள் நிரம்பும் சூழ்நிலை உருவாகிறது. இந்நீரைக் கொண்டு மக்கள் வேளாண்மை செய்கின்றனர்.

பழந்தமிழகத்தில் நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு, தினை முதலிய தானியங்கள் பயிரிடப்பட்டன. தென்னையும், கரும்பும், பயிரிடப்பட்டன. மிளகு, ஏலம், இஞ்சி, இலவங்கம் முதலிய மலை விளை பொருட்கள் பழந்தமிழகத்தின் சிறந்த ஏற்றுமதிப் பொருள்களாக இருந்தன.

1.5.2 மீன் பிடித்தல், முத்துக்குளித்தல், உப்பு விளைத்தல் தமிழகத்தைச் சுற்றி மூன்று பக்கமும் கடல்கள் சூழ்ந்துள்ளதால் மீன்பிடி தொழிலும், முத்து எடுத்தல் தொழிலும், உப்புத் தொழிலும் சிறப்புற்று விளங்குகின்றன. முத்துக்குளித்தல் பற்றிப் பழங்கால இலக்கியங்களில் சான்றுகள் பல காணப்படுகின்றன.

1.6 தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் பழந்தமிழகத்தின் இயற்கை அமைப்பினைப் பற்றி அறிந்திருப்பீர்கள்.

சங்ககாலத்திற்கு முற்பட்ட தமிழகத்தின் நிலப்பரப்பு எவ்வாறு இருந்தது, அது சங்ககாலத்தில் எவ்வாறு இருந்தது என்றும், பிற்காலத்தில் தமிழகத்தின் இயற்கை அமைப்பு எவ்வாறெல்லாம் மாற்றம் அடைந்தது என்றும் விளங்கிக் கொண்டிருப்பீர்கள்.

பழங்காலத் தமிழகத்தில் என்னென்ன ஆறுகள் பெருகி ஓடின என்றும், இன்று அவ்வாறுகளின் நிலை என்ன என்றும் படித்து உணர்ந்திருப்பீர்கள். என்னென்ன மலைகள் பழந்தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன என்பது பற்றி அறிந்து கொண்டீர்கள். அன்று வாழ்ந்த மக்கள் திணை நில அடிப்படையிலான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர்கள் என்று தெரிந்து கொண்டீர்கள். அந்தந்த நில அமைப்புகளுக்கேற்ப அவர்கள் வேளாண்மை, தச்சுவேலை, வேட்டையாடுதல், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி தொழில், முத்துக்குளித்தல், உப்பு வாணிபம் போன்ற தொழில்களைக் கொண்டிருந்தனர் எனவும் நன்கு அறிந்திருப்பீர்கள்.

பாடம் - 2

தமிழக வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகள்

2.0 பாட முன்னுரை

உலக வரலாற்றில் தமிழக வரலாறானது மிகவும் முக்கியமானதாகத் திகழ்ந்திருந்தது தெரிய வருகிறது. தமிழக வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகள் தொல்பொருள் சான்றுகள், இலக்கியச் சான்றுகள், அயல் நாட்டவர் சான்றுகள் என மூன்று தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கப்படுகின்றன. தொல்பொருள் சான்றுகள் என்னும் தலைப்பின் கீழ் கல்வெட்டுகள், பட்டயங்கள், நினைவுச் சின்னங்கள், நாணயங்கள் ஆகியவை விளக்கப்படுகின்றன. இலக்கியச் சான்றுகள் என்னும் தலைப்பின் கீழ் தமிழ் இலக்கியச் சான்றுகள், பிறமொழி இலக்கியச் சான்றுகள் விளக்கப்படுகின்றன. அயல் நாட்டவர் சான்றுகள் என்னும் தலைப்பின் கீழ் அயல்நாட்டார் குறிப்புகள், ஐரோப்பியர் கால ஆட்சித்துறை ஆவணங்கள் விளக்கப்படுகின்றன. தமிழ் இலக்கியச் சான்றுகள் என்று கூறும்போது அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், திருக்குறள், பெரிய புராணம், தேவாரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், கலிங்கத்துப் பரணி, மூவருலா போன்ற இலக்கிய நூல்களும், தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம் போன்ற இலக்கண நூல்களும் தமிழக வரலாற்றை அறிவதற்குத் துணைபுரிகின்றன. மேலும் மகாபாரதம், இராமாயணம் ஆகிய வடமொழிக் காப்பியங்களில் காணப்படும் தமிழகத்தைப் பற்றிய குறிப்புகளும் துணைபுரிகின்றன. அயல் நாட்டவர் குறிப்புகளைப் பொருத்தவரையில் தாலமி, பிளினி, ஸ்திராபோ, மெகஸ்தனீஸ், யுவான் சுவாங் போன்ற அயல்நாட்டுப் பயணிகளின் குறிப்புகள் தமிழக வரலாற்றினை அறிந்து கொள்வதற்குத் துணைபுரிகின்றன. கி.பி 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியைத் தமிழகத்தில் நிலைநாட்டியதிலிருந்து அவர்கள் இந்தியாவை விட்டுச் செல்லும் வரை அவர்களால் பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் தமிழக வரலாற்றின் பெரும்பகுதியைக் கூறுகின்றன.

2.1 அடிப்படைச் சான்றுகள்

தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் இச்சொல் (தமிழகம்) மொழியையும் நாட்டையும், நாட்டில் வாழ்ந்த மக்களையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே தமிழ்நாடு, தமிழ் கூறும் நல்லுலகம் எனப் பழைய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது என்பதை முந்தைய பாடத்தில் பார்த்தோம்.

தென் இந்தியாவின் ஓர் அங்கமாக விளங்கும் தமிழகம் அதன் வரலாற்றில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து இருக்கின்றது. தமிழரின் மரபும், பண்பாடும், தமிழ் மொழியும் காலச்சூழல்களில் சிக்குண்டும், அந்நியக் கலப்புகள் பலவற்றுக்கு உட்பட்டும் சில மாறுதல்களை ஏற்றுக்கொண்டுள்ளன. இருப்பினும் தலைசிறந்த நாகரிகத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தது தமிழகம் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. பழந்தமிழகத்தின் வரலாறானது பண்டைய எகிப்து, பாபிலோனியா, சுமேரியா, உரோம், கிரீஸ் ஆகிய நாடுகளின் வரலாற்றுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது என்பது உண்மை. நமக்குக் கிடைக்கப்பெற்ற வரலாற்றுச் சான்றுகளே இதனை உறுதிப்படுத்துகின்றன.

பழங்காலத்தில், பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் வராலாற்று நிகழ்ச்சிகளை ஏடுகளில் எழுதிவைக்கும் வழக்கத்தை மக்கள் மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

பழங்காலத் தமிழர்கள் தங்கள் வரலாற்றினைக் குறித்து வைக்க வில்லையே தவிர, அவர்களுடைய வாழ்க்கை முறைகளை அறிய உதவும் புதைபொருட் சின்னங்கள், இலக்கியக் குறிப்புகள் ஆகியவை மிகுதியாகவே நமக்குக் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் பல சிறந்த இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. இது அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. இவற்றில் தமிழகத்தை ஆண்ட மன்னரைப் பற்றியும், அரசியல், பழக்க வழக்கங்கள் குறித்தும் ஆங்காங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

இவையேயன்றி அயல்நாட்டு அறிஞர் பெருமக்கள் தென் இந்தியா பற்றியும் பழந்தமிழர் வரலாறு பற்றியும், பண்பாடு, நாகரிகம் பற்றியும் விரிவாகக் குறித்து வைத்துள்ளனர். தமிழகத்தில் கோயில்களிலும் குகைகளிலும் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், வரையப்பட்டுள்ள ஓவியங்களும் அவ்வக்காலத்து மக்களின் வரலாற்றைக் கூறும்வண்ணம் அமைந்துள்ளன.

2.2 தொல்பொருள் சான்றுகள்

தமிழ்நாட்டு வரலாற்றை அறிய விழையும் மாணவர்களுக்குப் புதைபொருள் சான்றுகளும், நினைவுச் சின்னங்களும் பயன்படுகின்றன. நைல், யூப்ரடீஸ், டைகிரிஸ் ஆகிய நதிக்கரைகளில் நடத்திய அகழ்வாராய்ச்சிகளைப் பயன்படுத்தித் தமிழ் நாட்டிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அண்மைக் காலத்தில் கற்கால மனிதர்களைப் பற்றிய பல நினைவுச் சின்னங்கள் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூரிலும், புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேட்டிலும், தமிழ் நாட்டின் பிற இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அக்காலத்து மக்களின் நாகரிகத்தை அறிய அந்நினைவுச் சின்னங்கள் பயன்படுகின்றன.

தொல்பொருள் சான்றுகளை மூன்றாகப் பிரித்து ஒன்றன்பின் ஒன்றாகக் காணலாம். அவையாவன:

1. கல்வெட்டுகளும் பட்டயங்களும்

2. நினைவுச் சின்னங்கள்

3. நாணயங்கள்

2.2.1 கல்வெட்டுகளும் பட்டயங்களும் கல்வெட்டுகளும் பட்டயங்களும் (செப்பேடுகள்) தமிழ் நாட்டு வரலாற்றைப் பற்றிய பயன்தரும் உண்மைகளை அளிக்கின்றன. அவை தமிழ் நாட்டில் மட்டுமேயன்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் வழங்கும் நாடுகளிலும், மலேசியா, இலங்கை ஆகிய வெளிநாடுகளிலும் காணப்படுகின்றன. காலத்திற்கு ஏற்றவாறு கல்வெட்டுகளில் பயன்படுத்தியிருக்கும் எழுத்துகளும் மொழிகளும் மாறுபடுகின்றன. கல்வெட்டுகள் தோன்றிய துவக்கத்தில் அவை தமிழ் மொழியில் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டன. பல்லவர் காலத்தின் முதல் கட்டத்தில் பிராகிருத மொழியிலும், இடைப்பகுதியில் சமஸ்கிருத மொழியிலும், கடைசிக் கட்டத்தில் கிரந்தத் தமிழிலும் வெளியிடப்பட்டன. துறவிகள் வாழ்ந்து வந்த குகைச்சுவர்கள், கற்பாறைகள், நடுகற்கள், கோயில் சுவர்கள், கோயில் தூண்கள். சிற்பங்களின் அடித்தளங்கள், செப்பேடுகள் முதலியவை செய்திகளைப் பொறிக்கும் தளங்களாயின. குகைக் கல்வெட்டுகள் தமிழ் நாட்டில் பரவலாக உள்ளன. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், ஆனை மலை, அழகர் மலை போன்ற மலைகளில் உள்ள குகைகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. கல்வெட்டுகளும், செப்பேடுகளும் சமய அறப்பணிகள், கோயில்களுக்கு வழங்கிய நன்கொடைகள், மன்னர்களின் வெற்றிகள், வழக்குகள் மீது வழங்கிய தீர்ப்புகள், ஊர் மன்றங்கள் இயற்றிய சட்டங்கள், அவற்றின் செயல்கள், வாணிபம் போன்ற தகவல்களைக் குறிப்பிடுகின்றன.

அசோகரின் கிர்னார் கல்வெட்டு, கி.மு.3 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் சோழ, பாண்டிய அரசுகள் இருந்ததாகக் கூறுகின்றது. வட இந்தியாவில் காரவேலரின் காதிகும்பா கல்வெட்டும், சமுத்திர குப்தரின் அலகாபாத் கல்வெட்டும் தத்தம் காலங்களில் நிலவிய தமிழ் நாட்டின் அரசியல் நிலையை விளக்குகின்றன. களப்பிரர்களின் இருண்ட கால வரலாற்றினை வேள்விக்குடிச் செப்பேடும், தளவாய்புரம் செப்பேடும் அறிவிக்கின்றன.

பண்டைய தமிழர்கள், போரில் விழுப்புண்பட்டு மாண்ட வீரர்களுக்காக நட்ட நடுகற்களில் நாம் வரலாற்றுச் செய்திகளைக் காண்கிறோம். போரில் பகைவர் பலரைக் கொன்று வீரத்தை நிலைநாட்டி, விழுப்புண்பட்டு இறந்துபோன மறவரின் பெயரை ஒரு கல்லில் பொறித்து, அக்கல்லை நட்டு, அந்நடுகல்லுக்கு மயில் பீலி சூட்டிச் சிறப்புச் செய்தனர் என்பதைப் புறநானூறு,

அணிமயில் பீலி சூட்டிப் பெயர்பொறித்து

இனி நட்டனரே கல்லும்

(புறநானூறு, 264: 3-4)

எனக் கூறுகிறது.

தொல்காப்பியத்திலும் நடுகல் பற்றிச் சான்று கிடைக்கிறது. சங்க காலத்தைச் சார்ந்த நடுகற்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. தற்போது கிடைத்துள்ள பெரும்பாலான நடுகற்கள் பல்லவர்களின் காலத்தைச் சார்ந்தனவாகும். செங்கம் நடுகற்கள் பல்லவர் வரலாற்றிற்குச் சான்று பகர்கின்றன.

பல்லவர்கள் காலத்துச் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் பல்லவப் பேரரசின் பரப்பு, அப்பேரரசை ஆண்ட மன்னர்களின் வெற்றிகள், அறப்பணிகள் முதலிய உண்மைகளை உணர்த்துகின்றன.

பாண்டியர் வரலாற்றைக் காட்டும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பல கிடைத்துள்ளன. அவற்றுள் வேள்விக்குடிச் செப்பேடு, சின்னமனூர்ச் செப்பேடுகள், தளவாய்புரம் செப்பேடு, சிவகாசிச் செப்பேடு, குடுமியான்மலைக் கல்வெட்டு முதலியவை குறிப்பிடத்தக்கவையாம்.

பிற்காலச் சோழர்கள் வரலாற்றில் நாம் அடியெடுத்து வைக்கும்போது கல்வெட்டுச் சான்றுகள் நமக்குத் தீபம் போன்று பயன்படுகின்றன. திருவாலங்காட்டுச் செப்பேடு அரசியல் பற்றிய முக்கியமான தகவல்களைத் தந்துள்ளது. சோழர் ஆடசியில் கிராமங்களில் ஊராட்சிமுறை நிலவிய காரணத்தால் மக்கள் சுதந்திரத்துடன் வாழ்ந்து வந்ததை உத்திரமேரூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது. திருவிடை மருதூர்க் கல்வெட்டு வரிகொடுக்கத் தவறினோருக்கு வழங்கிய தண்டனையைப் பற்றிக் கூறுகிறது. திருவேண்டிபுரம் கல்வெட்டு, அன்பில் செப்பேடு, கரந்தைச் செப்பேடு, கன்னியாகுமரிக் கல்வெட்டு என்பன பிற முக்கிய கல்வெட்டுகளாகும். சோழர் எழுப்பிய கோயில்களின் சுவர்களில் அணிகலன்கள் போன்று காட்சி தரும் கல்வெட்டுகள் வரலாற்று உண்மைகள் பலவற்றைக் கொண்டுள்ளன.

2.2.2 நினைவுச் சின்னங்கள் பல்லவர், சோழர், மதுரை நாயக்கர் ஆகியோர் எழுப்பிய கோயிலகள் தத்தம் காலத்துக் கட்டடக் கலை வளர்ச்சியையும் பண்பாட்டு வளர்ச்சியையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் பல்லவர் எழுப்பிய மகாபலிபுரத்துக் கடற்கரைக் கோயில், காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயில், சோழர்கள் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரக் கோயில், தாராசுரம் கோயில், நாயக்கர் எழுப்பிய மதுரை மீனாட்சியம்மன் கோயில் முதலியவை சிறப்புற்று விளங்குகின்றன. தமிழ் நாட்டில் காணப்படும் பெரும்பாலான கோயில்களில் கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. வரலாற்று உண்மைகளை வழங்கும் சிற்பங்களும் உள்ளன.

2.2.3 நாணயங்கள் நாணயங்கள் வெவ்வேறு காலங்களில் நிலவிய பேரரசுகளின் பொருளாதார நிலையையும், ஆதிக்கத்தையும் எடுத்து இயம்புவதுடன் சரியான கருத்துகளை வழங்குகின்ற காரணத்தால் அவற்றை இலக்கியச் சான்றுகளுடன் ஒப்பிட்டும் கூறுவர்.

சங்க கால வரலாற்றுக்கு நாணயங்கள் பெரிதும் உதவி புரிகின்றன. அவை சங்க இலக்கியச் செய்திகள் பலவற்றையும் மெய்ப்பிக்கின்றன. ஆனால் அந்நாணயங்களில் பெரும்பான்மையானவை அந்நிய நாட்டு நாணயங்கள் ஆகும். அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்த ரோமாபுரி நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன. இவை ரோமாபுரிக்கும் தமிழகத்திற்கும் இடையே நடைபெற்று வந்த செழிபபான வாணிபத்தைப் புலப்படுத்துகின்றன. ‘Periplus of the Erithraean sea’ என்னும் கிரேக்க நூலின் வாயிலாக இவ்வாணிபத்தைப் பற்றி அறிய முடிகிறது.

பழம் பாண்டிய மன்னரின் நாணயங்கள் சில சதுர வடிவிலும், நீண்டசதுர வடிவிலும் கிடைத்துள்ளன. இவற்றின் ஒருபுறம் மீன் சின்னமும், மறுபுறம் யானை போன்ற விலங்கின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயங்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

பல்லவர்களும் பாண்டியர்களும் சிறந்த செப்பு நாணயங்களை வெளியிடுவதில் சிறப்புப் பெற்று விளங்கினர். அக்காலத்துத் தமிழகத்தின் பொருளாதார நிலையையும், அரசுகளுக்கிடையில் ஏற்பட்டிருந்த நல்லுறவையும் அறிவதற்கு இந்நாணயங்கள் பயன்படுகின்றன.

2.3 இலக்கியச் சான்றுகள்

இலக்கியத்தைப் படைக்கின்ற ஆசிரியர்கள் தாங்கள் இயற்றும் இலக்கியங்களில் தங்கள் கருத்தை வெளிக் கொண்டு வரும்போது அவற்றுடன் தமது காலத்துக்கு முன் நிகழ்ந்த நிகழ்சசிகளையும், தமது காலத்தில் நிகழும் நிகழ்ச்சிகளையும் நன்கு அறிந்து எழுதுகிறார்கள். இவ்வகையான இலக்கியங்கள் ஒரு நாட்டின் வரலாற்றில் இடம் பெற்றுள்ள நிகழ்வுகளைச் சுட்டுவதால் இலக்கியங்கள் இன்றையளவும் தமிழக வரலாற்றை அறிய உதவும் முக்கியச் சான்றுகளாக விளங்குகின்றன.

தமிழக வரலாற்றுக்கான இலக்கியச் சான்றுகளை நாம் இரு பிரிவுகளாகப் பிரித்துக் காணலாம். அவையாவன:

1. தமிழ் இலக்கியச் சான்றுகள்

2. பிற இந்திய மொழி இலக்கியச் சான்றுகள்

2.3.1 தமிழ் இலக்கியச் சான்றுகள் பொதுவாகச் சங்க காலத்தைப் பற்றி இன்றும் அறிஞர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இருப்பினும் நாம் இங்குக் கி.பி. முதலாம், இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளைச் சங்க காலமாகக் கருதலாம். இச்சங்க காலத்தை மூன்றாவது சங்க காலம் என்பர். அதாவது கடைச் சங்க காலம் எனலாம். இதற்கு முன்னர் முதல் இரண்டு சங்கங்கள் இருந்ததாக முன்னரே படித்திருக்கிறோம்.

தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இரண்டாவது சங்க காலத்தில் எழுந்த நூல் என்பது பல அறிஞர்களின் கருத்து. இந்நூலில் தமிழ்ச் சமுதாயத்தை விளக்கும்வண்ணம் எண்ணற்ற கருத்துகள் காணப்படுகின்றன.

சான்று:

ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப்பெயர்

ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே

(தொல்காப்பியம்–பொருள்-அகத்திணையியல்-23)

(ஆயர்-முல்லை நில மக்கள் பெயர்; வேட்டுவர்-குறிஞ்சி நில மக்கள் பெயர்; ஆடுஉ-ஆண்; கிழவர்-தலைவர்.)

தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர் ஆயர், வேட்டுவர் போன்ற பிரிவினர் வாழ்ந்து வந்தனர் என்பது இதன் வழியாக நமக்குக் கிடைக்கின்றது.

சங்க காலத்தில் எழுந்த பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் அக்கால அரசியல், சமுதாய, பொருளாதார வரலாறுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. சில சான்றுகள் காண்போம்.

எட்டுத்தொகையில் ஒன்றான அகநானூறு அகப்பாடல்களின் தொகுப்பாக இருந்தாலும் இந்நூலில் பல வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. நந்தர்கள் வடநாட்டில் பாடலிபுத்திரத்தை ஆண்டு வந்தபோது பகைவர் தமது நாட்டைக் கைப்பற்றி விடுவார்கள் என்று எண்ணித் தம்மிடமுள்ள விலை மதிப்பறியாச் செல்வங்களைப் பாதுகாக்க, அவற்றைப் பேழை ஒன்றில் வைத்து அதைக் கங்கை ஆற்றின் அடியில் புதைத்து மறைத்து வைத்த வரலாற்று நிகழ்ச்சியைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் உணர்த்துகின்றது.

பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

சீர் மிகு பாடலிக் குழீஇ கங்கை

நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ

(அகநானூறு, 265: 4-6)

(சீர்மிகு – புகழ் மிக்க; பாடலி – பாடலிபுத்திரம்; குழீஇ – திரண்டு, திரண்டிருந்த செல்வம்; நீர் முதல் – நீரின் அடியில்; கரந்த – மறைத்த; நிதியம் – செல்வம்.)

சங்க காலத்தில் சேர நாட்டை ஆண்ட சேர மன்னர்களில் புகழ் வாய்ந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவன் அரபிக் கடலில் கடற்கொள்ளை நடத்தி வந்த கடம்பர்களை வென்று அவர்களுடைய காவல் மரமாகிய கடம்பு மரத்தை அறுத்து, அதைக் கொண்டு வெற்றி முரசு செய்தான் என்ற வரலாற்றுச் செய்தியை அகநானூறு பின்வருமாறு குறிப்பிடுகிறது.

சால் பெருந் தானைச் சேர லாதன்

மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய

பண்அமை முரசின் கண் அதிர்ந் தன்ன

(அகநானூறு, 347: 3-5)

(மால்கடல்-பெரியகடல்; சேரலாதன்-இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)

மௌரியர் தமிழகத்தில் நிகழ்த்திய படையெடுப்பையும் அவர்களுக்கு வடுகர் துணை நின்றதையும் மாமூலனார் அகநானூற்றில் கூறியுள்ளார். தலையாலங்கானத்துப் போர் நிகழ்ச்சி, பாரி மூவேந்தரை ஓட்டியமை ஆகிய வரலாற்று உண்மைகளையும் அகநானூறு உணர்த்துகின்றது.

புறநானூறு என்னும் சங்க இலக்கிய நூல் பழந்தமிழர் வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. பண்டைக் காலத்தில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களின் வீரம், கொடை, ஆட்சிமுறை போன்றவற்றையும், குறுநில மன்னர், வேளிர், கடையெழுவள்ளல்கள் ஆகியோர் குறித்த வரலாற்றையும் புறநானூறு கூறுகிறது.

பதிற்றுப்பத்து என்னும் நூல் சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றிக் கூறுகிறது. இந்நூல் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை போன்றவர்களைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.

பத்துப்பாட்டில் ஒன்றான பொருநராற்றுப்படை என்னும் நூல் கரிகால் சோழனின் சிறப்பினைக் கூறுகிறது. மற்றொரு நூலான பட்டினப்பாலை பண்டைய தமிழகம் மேற்கொண்டிருந்த தரை மற்றும் கடல் வழி வாணிபத்தைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.

இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்டைய தமிழகத்தின் அரசியல், வாணிபம், சமயம் போன்ற வரலாற்று உண்மைகளை அளிக்கின்றன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுத்துச் செய்த விழாவில் இலங்கை வேந்தன் கயவாகு கலந்து கொண்ட நிகழ்ச்சி சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்

எம்நாட்டு ஆங்கண் இமய வரம்பனின்

நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்

வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட

(சிலப்பதிகாரம், வரந்தருகாதை: 160-163)

பல்லவர்கள் வரலாறு பற்றித் தேவாரமும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும் கூறுகின்றன. சோழர்களைப் பற்றிய வரலாறு நமக்குச் சோழர் காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்களான மூவருலா, கலிங்கத்துப் பரணி, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் போன்றவற்றில் கிடைக்கப் பெறுகின்றது.

2.3.2 பிற இந்திய மொழி இலக்கியச் சான்றுகள் இராமாயணம், மகாபாரதம் ஆகிய வடமொழிக் காப்பியங்களில் தமிழகத்தைப் பற்றியும், தமிழக மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. அயோத்தியில் தசரதன் கூட்டிய அரசர்கள் பேரவையில் பாண்டிய மன்னன் ஒருவன் வந்திருநதான் என வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. பாரதப் போரில் பாண்டவர்களைச் சேர, சோழ, பாண்டிய வீரர்கள் ஆதரித்ததாக வியாசரின் பாரதம் குறிப்பிடுகிறது.

மகேந்திரவர்மன் வடமொழியில் எழுதிய மத்த விலாசப் பிரசகனம் என்னும் நூலில் பௌத்தரும, சமணரும பின்பற்றிய பழக்க வழக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

முஸ்லீம் படையெடுப்பாளர்கள் தமிழர்களைத் துன்புறுத்திய செயல் கங்கா தேவி தெலுங்கு மொழியில் இயற்றிய மதுராவிஜயம் என்னும் நூலில் உணர்த்தப்படுகிறது.

நவாபுகளின் ஆட்சிக் காலத்தில் அரபு, உருது ஆகிய மொழிகளில் தோன்றிய இலக்கியங்கள் அக்காலத் தமிழக மன்னர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளன.

2.4 அயல் நாட்டவர் சான்றுகள்

அயல்நாட்டவர் சான்றுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. அயலவர் குறிப்புகள்

2. ஐரோப்பியர் கால ஆவணங்கள்

2.4.1 அயலவர் குறிப்புகள் தமிழர்களைப் பற்றி அயல் நாட்டவர் கூறுவன அயலவர் குறிப்புகள் எனப்படும். பெரும்பாலும் அயல் நாட்டைச் சேர்ந்த கல்வியில் சிறந்தோர் குறிப்பிடுவதாகும். கி.மு. நான்காம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த மெகஸ்தனீஸ் என்ற கிரேக்கர் தாம் இயற்றிய இண்டிகா என்னும் நூலில் பாண்டிய நாட்டைப் பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளார்.

பெரிபுளூஸ் என்ற நூலிலும், ரோம ஆசிரியர்களான ஸ்டிராபோ, பிளினி, தாலமி ஆகியோரின் நூல்களிலும் சங்க காலத் தமிழகத்தின் நகரங்கள், துறைமுகப்பட்டினங்கள் பற்றியும், அயல் நாட்டு வாணிபம் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன.

2.4.2 ஐரோப்பியர் கால ஆவணங்கள் வாஸ்கோடகாமாவின் வருகையின் விளைவாக இந்தியாவில் அரசியல், பொருளாதாரம், சமூகம், சமயம் ஆகியவற்றில் புரட்சிகரமான மாற்றங்கள் தோன்றின. கி.பி. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோர் வாணிகத்தின் பொருட்டும் கிறித்துவ சமயத்தைப் பரப்பும் பொருட்டும் இந்தியாவிற்கு வந்தனர். இவர்கள் வாணிகத் தளங்களையும் சமய இருப்பிடங்களையும் அமைத்துக் கொண்டு தத்தம் பணிகளைத் தொடங்கினர். இவ்வாணிகர்களும், கிறிஸ்தவப் பாதிரியார்களும் தங்கள் தாய் நாடுகளுக்கு எழுதிய கடிதங்களும் குறிப்புகளும் அக்காலத்துத் தமிழக அரசியல் பண்பாட்டு நிலைகளைப் பற்றித் தெளிவுபடுத்துகின்றன.

கி.பி.19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ் நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தைப் பற்றி அறிய அவர்களது ஆவணங்கள், அவர்கள் இயற்றிய சட்டங்கள், தாய்நாட்டு மன்னர்களுடன் ஏற்படுத்திய ஒப்பந்தங்கள், கடிதப் போக்குவரத்துகள் முதலியவை பயன்படுகின்றன. ஐரோப்பியர் ஆட்சிக் காலத்து ஆவணங்களும், அதற்குப் பின்னர் தோன்றிய ஆவணங்களும் சென்னை ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம் இராஜாக்கள், சிவகங்கை இராஜாக்கள் ஆகியோரது ஆவணக் காப்பகங்கள், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், கொடைக்கானல் இயேசு சபை ஆவணக்காப்பகம், திருச்சிராப்பள்ளி, வேலூர், நாகர்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள கிறிஸ்துவ சமய அலுவலகங்கள் ஆகியவற்றில் பாதுகாக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தமிழ் நாட்டு வரலாற்று உண்மைகளைக் கொண்டுள்ளன. தற்காலத்தில் எழுந்த உரைநடை இலக்கியங்கள், நாவல்கள், சிறுகதைகள் ஆகியவை தமிழக மக்களது சமுதாயம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை உணர்த்துகின்றன.

2.5 தொகுப்புரை

இதுகாறும் நீங்கள் தமிழக வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகளைப் பற்றி நன்கு படித்து உணர்ந்திருப்பீர்கள். தமிழக வரலாற்றினை அறிந்து கொள்ளக் கல்வெட்டுகள், செப்பேடுகள், நினைவுச் சின்னங்கள் பெரிதும் பயன்படுகின்றன என்பதை அறிந்தீர்கள். தமிழக வரலாற்றினைத் தொகுக்கத் தமிழ் இலக்கியங்கள் எந்த அளவு பயன்பட்டுள்ளன என்பதைத் தமிழ் இலக்கியச் சான்றுகள் வாயிலாக அறிந்தீர்கள். அயல்நாட்டுடன் தமிழர்கள் சிறந்ததொரு வாணிகத்தை மேற்கொண்டிருநதனர். என்பதை ரோமாபுரி நாணயங்கள் வாயிலாக அறிந்தீர்கள். முஸ்லீம் படையெடுப்பாளர்கள் தமிழர்களைத் துன்புறுத்திய செயலை உணர முடிந்தது. இராமநாதபுரம் இராஜாக்கள், சிவகங்கை ராஜாக்கள் ஆகியோர் ஆவணக் காப்பகங்கள் வைத்திருந்தது தெரிய வருகிறது.

பாடம் - 3

வரலாற்றிற்கு முந்தைய தமிழகம்

3.0 பாட முன்னுரை

இந்தியா என்று அறியப்படும் தேசத்தின் தென்பகுதியாக உள்ள தமிழகம் என்ற நிலப்பரப்பு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இப்பழந்தமிழகம் என்ற நிலப்பரப்பைப் பற்றி நான்கு பெருந்தலைப்புகளின் கீழ்க் காண இருக்கின்றோம்.

வரலாற்றிற்கு முந்தைய தமிழகம் என்ற தலைப்பில் இந்தியாவில்தான் தொல்லுயிர்கள் வளர்ச்சியுற்றன என்பது பற்றிக் காண இருக்கிறோம்.

பழந்தமிழகப் பின்னணி என்ற தலைப்பில் தமிழகம் எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு, வேறு ஒரு அயல் இனத்தின் ஆதிக்கம் தன் மீது செலுத்தப்பட்டாலும் இன்றையளவிலும் தன் தனித்தன்மையினின்றும் மாறுபடாமல் காணப்படுகிறது என்பதையும், இலெமூரியாக் கண்டம் எவ்வாறு இருந்து தற்போது எவ்வாறு மாறியது என்பதையும் காணலாம்.

தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலிலும், சிலப்பதிகாரத்திலும் பழந்தமிழகம் எவ்வாறு இருந்தது என்பது பற்றிய சான்றுகள் கிடைக்கின்றன என்பதனைக் காணலாம்.

பழந்தமிழகப் புவியியல் கூறுகள் என்னும் தலைப்பில் பழந்தமிழகம் எவ்வாறு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்தாளப்பட்டிருந்தது என்பது பற்றிக் காணலாம்.

நாகரிகப் பாதையில் பழந்தமிழகம் என்னும் தலைப்பில் பழங்கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம் எனப் பழந்தமிழர் நாகரிகப் பாதையில் நடையிட்டுச் சென்றனர் என்பது பற்றிக் காணலாம்.

3.1 வரலாற்றிற்கு முந்தைய தமிழகம்

தொல்லுயிர்கள் வளர்ச்சியுற்றுப் பெருகிய நிலம் இந்தியாதான் என ஆய்வாளர் கூறுவர். தென் இந்தியா, கங்கை நதி பாயும் நிலப்பரப்புக்கும் இமய மலைக்கும் மண்ணியல் அடிப்படையில் வேறுபட்டது. இன்றுள்ள இந்தியப் பெருங்கடல் அன்று பெரு நிலப்பரப்பாக ஆப்பிரிக்கா வரை நீண்டு இருந்தது. பின்னர்க் கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டது. எஞ்சிய பகுதியே இன்றைய தென் இந்தியாவாகும். இதன் பாறைகள் மிகவும் பழைமையானவை. இவை உயிர்கள் தோன்றும் முன்பு உலகில் இருந்த கருங்கல் படிவப்பாறை வகையினைச் சேர்ந்தவையாகும். சிந்து கங்கைச் சமவெளி பல ஆயிரக்கணக்கான சதுரக்கல் அளவு பரந்து விரிந்தது. இது இமயமலை உண்டாகும் முன்பு கடலாக இருந்து, பின் கடல் பகுதி மறைந்து, மலை ஆறுகள் கொணர்ந்த வண்டல் மண்ணினால் சமவெளியானது என்பர் ஆராய்ச்சியாளர்.

இவ்வாராய்ச்சியின் பயனாகத் தமிழக வரலாறு தொன்மையான வரலாறு என்றும், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய முதுபெரும் வரலாறு என்றும் கூறலாம்.

இத்தகைய வரலாறு கொண்ட தமிழகத்தின் இயற்கை அமைப்புகளைக் காண்போம். விந்தியமலைத் தொடரும், சாத்பூரா மலைத் தொடரும் நருமதை, தப்தி ஆறுகளும், தண்ட காரணியக் காடுகளும் வட இந்தியா, தென் இந்தியா என்று இந்தியாவை இரு பிரிவாகப் பிரிக்கின்றன. வட இந்தியாவில் பல்வேறு அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்தன. ஆதலால் அங்கு வாழும் மக்களின் மொழி, கலை, பண்பாடு முதலியவற்றில் மாறுதல்கள் பல ஏற்பட்டன. ஆனால் தமிழகத்தே இவ்வகை மாற்றங்கள் ஏதும் நிகழாமல் தமிழர்களின் தனித்தன்மை இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

3.2 பழந்தமிழகப் பின்னணி

விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பகுதியான அன்றைய திராவிட தேசம், இன்றைய பொதுவழக்கில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் மாநிலங்களைக் குறித்தாலும் கூட மொழி, கலாச்சார, தொல்லியற் பின்னணியில் நோக்கும்போது இக்குறிப்பானது தமிழகத்திற்குப் பெரும்பாலும் பொருந்தும் எனலாம். தமிழகம் இந்தியக் கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகக் காணப்பட்டாலும் கூட, இதன் மொழி, கலாச்சாரம் ஆகியவை தொல்லியல் பாரம்பரியம் கொண்டவை ஆகும்.

தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

சான்று:

வையக வரைப்பில் தமிழகம் கேட்ப

(புறநானூறு, 168 :18)

இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க

(பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5)

இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய

( சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38)

சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்

(மணிமேகலை, 17: 62)

சங்க இலக்கியங்களில் இச்சொல் மொழியையும், நாட்டையும், நாட்டில் வாழ்ந்த மக்களையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே தமிழ் நாட்டகம், தமிழ் கூறு நல்லுலகம் எனப் பழந்தமிழ் நூல்களில் இடம் பெற்றுள்ளது.

சான்று:

தமிழ் கூறு நல்லுலகத்து

(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்: 3)

‘தமிழகம்’ என்ற சொல் கிரேக்கரால் தமரிகெ என்றும், உரோமரால் தமிரிக்கா, தமரிகே எனவும் வழங்கப்பட்டது. கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்குரிய காரவேலனின் காதி கும்பாக் கல்வெட்டில் தமிழகம் திரமிள தேசம் எனக் குறிப்பிடப்படுகிறது. இவ்வடிவம் ஒரு பரந்த அடிப்படையில் தென் இந்திய மொழிகள் பேசப்படும் நாடுகளைக் குறிக்கும் ஒரு வடிவமாகவே பயன்படுத்தப்படுகிறது, எனினும் தொடக்கத்தில் இன்றைய கேரள மாநிலத்தை உள்ளடக்கிய பண்டைய தமிழகத்தையே இது குறித்து நின்றது. இதனையே வடமொழியாளர் திராவிட என அழைத்தனர்.

3.2.1 தனித்த பண்டைய தமிழகம் திராவிட மொழிகளுள் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பேசப்படும் மாநிலங்களிலிருந்து தமிழகத்தை ஒரு தனித்துவமான கூறாக ஆக்கி விடலாம். திராவிட மொழிகள் பேசப்படும் மாநிலங்களில் மிகப்பழைய இலக்கியப் பாரம்பரியமுடைய மாநிலம் தமிழகம்தான். கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளின் மீது வடமொழி ஏற்படுத்திய தாக்கத்தினைப் போன்று தமிழ் மொழியின் மீது அது மிகுதியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சங்க இலக்கியங்களில் வடமொழிச் சொற்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. ஆரிய சமூக அமைப்பில் தமிழகம் இணைந்து கரைந்து போகாமல் தனித்துவத்தைக் காத்துக் கொண்டு நின்றது எனலாம். சுருங்கக் கூறின் தென் இந்தியாவில் ஆரியமயமாக்கும் திட்டம் தோல்வி கண்ட இடமாகவே தமிழகம் விளங்குகிறது.

3.2.2 இலெமூரியாக் கண்டம் இந்தியாவில் மிகப் பழைய பாறை அமைப்பைக் கொண்டுள்ள தென்னிந்தியா, புவியியல் வரலாற்றில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்த ஒரு நிலப்பரப்பாகும். இந்தத் தென் இந்தியா முன்பு ஒருபுறம் தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றுடனும், மறுபுறம் மலேயாத் தீபகற்பத்தின் ஊடாக ஆஸ்திரேலியாவுடனும் இணைந்திருந்தது. இப்பெரிய பரப்பு இலெமூரியாக் கண்டம் எனப்பட்டது.. பின்னர் இக்கண்டம் கடற்கோள்கள் போன்ற பேரழிவுகளால் சிதைவுற்றுத் தற்போதைய அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் உருவாகின எனப் புவியியலார் கூறுகின்றனர்.

இவ்வாறேதான் தமிழகத்தின் தென் பகுதியிலுள்ள பாண்டி நாட்டைச் சேர்ந்த பகுதிகள் குமரிக் கண்டம் எனப்பட்ட இலெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதியாக விளங்கின என்றும் கூறப்படுகிறது. ஆனால் இலெமூரியாக் கண்டம் இருந்ததைப் பற்றிய கருத்துகளில் இன்னும் ஆராய்ச்சியாளர்களிடையே முரண்பாடுகள் உள்ளன. இருப்பினும், குமரிக் கண்டம் பற்றிய சான்றுகள் ஓரளவு நம்பகமானவை எனக் கொள்ளப்படுகின்றன. மாறிமாறி வந்த கடற்கோள்களினால் பாண்டி நாட்டைச் சேர்ந்த 49 நாடுகளாகிய ஏழ் தெங்கநாடு , ஏழ் குன்ற நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் குணக்கரை நாடு, ஏழ் குறும்பனை நாடு ஆகியன மறைந்தன என ஆய்வாளர் கூறுவர். இவற்றுள் குமரியாறும், பஃறுளியாறும், பேராறும், குமரிக்கோடும் மகேந்திர மலையும் அடங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய கடற்கோள்களினால் தமிழகத்தின் எல்லை சுருங்க, வேங்கடம் இதன் வட எல்லையாகவும், குமரி இதன் தென் எல்லையாகவும் ஆயின. இதனையே தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம்,

வட வேங்கடம் தென் குமரி

ஆயிடைத்

தமிழ் கூறு நல்லுலகம்

(தொல். சிறப்புப் பாயிரம்: 1-3)

என்றும், சிலப்பதிகாரம்,

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்

தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாடு

(சிலப்பதிகாரம், வேனிற்காதை, 1-2)

என்றும் குறிக்கின்றன.

அக்காலத் தமிழகம் செந்தமிழ் நாடு எனவும், கொடுந்தமிழ் நாடு எனவும் பிரிக்கப்பட்டிருந்தது. செந்தமிழ் நாடான பாண்டிய நாட்டுடன் அதனைச் சூழ்ந்த வைகை ஆற்றின் வடக்கும், மருத ஆற்றின் தெற்கும், மருவூரின் மேற்கும், கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம் செந்தமிழ் நாடு எனப்பட்டது. கொடுந்தமிழ் நாடு என்பது செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்திருந்த தென் பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, கற்கா நாடு, வேணாடு, பூழி நாடு, பன்றி நாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு, சீத நாடு, மலாடு, புனல் நாடு என்னும் பன்னிரண்டு பகுதிகள் ஆகும்.

3.2.3 பழந்தமிழகத்தின் பிரிவுகள் தென்னிந்தியாவின் புவியியல் கூறுகளை ஆராய்ந்தவர்கள் இந்நிலப்பரப்பை மூன்று தலையாய கூறுகளாகப் பிரித்தனர். அவையாவன:

1. ஈர்ப்புப் பகுதிகள்

2. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

3. ஓரளவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

தமிழகம் இவ்வட்டவணையில் ஈர்ப்புப் பகுதியாக விளங்குகிறது. இதில் காணப்படும் பல்வேறு தனித்துவம் வாய்ந்த புவியியல் கூறுகளையும் புவியியலார் இனங்காணத் தவறவில்லை. இதனால் இதன் கலாச்சார வளர்ச்சியில் பல்வேறு வகையான தரங்கள் இருப்பதையும் கண்டனர். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த புவியியல் கூறுகளை இனங்கண்டு அவற்றைத் தனித்தனிக் கூறுகளாகப் பிரித்து ஆராய்ந்தனர்.

பழந்தமிழரும் நிலங்களைப் பிரித்து ஆராய்ந்து இருந்தனர். இதற்கான சான்றுகள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் போன்ற இலக்கிய, இலக்கண நூல்களில் உள்ளன. ஒவ்வோர் இடத்திலும் காணப்பட்ட தரையின் தோற்றம், கால நிலை, தாவரங்கள், மிருகங்கள், நீர்நிலை வசதிகள், மண்வகை, மனிதச் செயற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிலங்களைப் பிரித்திருந்தனர். இவை ஒவ்வொன்றும் பழந்தமிழரைப் பொறுத்தவரையில் தனித்தனியான உலகங்களாகவே காட்சியளிக்கின்றன. இதனையே தொல்காப்பியர்,

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச்,

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

(தொல். பொருள்,5)

எனச் சுட்டிக்காட்டுகின்றார். மேற்கூறிய பகுப்பில் பாலைநிலம் அடங்காததற்குக் காரணம் தமிழகத்தில் வனாந்தரம் அல்லது மிகமிக வறண்ட நிலப்பரப்பு காணப்படாமையே ஆகும். காடும் மலையுமாகிய நிலங்கள் வறட்சி எய்தும்போது பாலை நிலப்பண்பைப் பெற்றதால் இதனை ஒரு தனிப் புவியியல் கூறாகத் தொல்காப்பியர் காணவில்லை.

3.3 பழந்தமிழகப் புவியியல் கூறுகள்

இன்றைய தமிழகம் பண்டைய தமிழகத்தை விடப் பரப்பளவில் குறைந்தே காணப்படுகிறது. இது இந்தியாவின் தென்கிழக்கு மூலையிலே உள்ளது. வரலாற்றுக்கு முந்தைய தமிழகம் இன்றைய கேரளம், ஈழம் (இலங்கை) ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. இதுவே கலாச்சார வட்டத்தில் இணைந்திருந்தது.

3.3.1 புவியியல் அமைப்பு பொதுவாகத் தமிழகத்தின் புவியியல் அமைப்புகளை உற்று நோக்கும்போது தோற்ற அமைப்பில் இது தலைகீழாக அமைந்த முக்கோணம் போலவே காட்சியளிக்கிறது. தரைத் தோற்ற அமைப்பிலும் பொதுவாகக் கிழக்கே சரிந்துதான் உள்ளது. வட இந்தியாவில் உள்ளது போன்று மிக உயர்ந்த மலைகளோ, மிக நீண்ட ஆறுகளோ, தார்ப்பாலைவனம் போல் அகன்ற மணற்பாலை நிலங்களோ இல்லாத ஒரு பகுதியாகவே தமிழகம் விளங்குகிறது. இது நிலநடுக் கோட்டின் வடக்கில் வெப்ப மண்டலத்தில் அமைந்திருப்பதாலும், மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருப்பதாலும், கடலிலிருந்து பருவக்காற்று வீசுவதாலும் சம தட்பவெப்ப நிலையை உடையதாக விளங்குகிறது.

பழந்தமிழர் ஓர் ஆண்டின் காலநிலையை ஆறு பிரிவுகளாகப் பிரித்துப் பார்த்தனர். இவை முறையே கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் ஆகும்.

தமிழகத்திலுள்ள மலைத் தொடர்கள், குன்றுகள், காடுகள், ஆறுகள் ஆகியன இந்நிலப்பகுதியைப் பல்வேறு கூறுகளாகப் பிரித்துள்ளன. இதனையே சங்க இலக்கியங்களில் வரும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் போன்ற நிலப்பிரிவுகள் உணர்த்துகின்றன. இப்பிரிவுகளைத் திருத்தொண்டர் புராணம் பின்வரும் பாடலில் விளக்கிக் கூறுகிறது.

தா இல் செம்மணி அருவியாறு இழிவன சாரல் ;

பூவில் வண்டினம் புதுநறவு அருந்துவ புறவம் ;

வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம் ;

நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல்.

(திருத்தொண்டர் புராணம், 1083)

(சாரல்=மலைப்பகுதி; நறவு=தேன்; புறவம்=காடு; வாவி=குளம்; நித்திலம்=முத்து; பரத்தியர்=மீனவ மகளிர்; உணக்குதல்=உலர்த்துதல்)

இவ்வாறு பிரித்துக் கூறப்பட்ட நிலப்பகுதிகள் ஒவ்வொன்றும் தனித்தனி உலகமாகவே இலக்கியங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்த ஆற்றுப் படுகைகளே வரலாற்றுக் காலத் தமிழக அரச வம்சங்களின் மையமாக விளங்கின. சேரர் பெரியாற்றையும், சோழர் காவிரியாற்றையும், பாண்டியர் தாமிரபரணியையும், வைகையையும் மையமாக வைத்து எழுச்சி பெற்றனர். இம்மூவேந்தரில் பாண்டியர் ஆட்சி செய்த நிலப்பரப்பே பெரிதாகக் காணப்பட்டது. சங்க இலக்கியங்கள் சித்திரிக்கும் நிலப்பாகுபாடு கூட நாகரிக நிலையில் பல்வேறு படிகளிலிருந்த சங்க காலத் தமிழகத்தின் நாகரிகத்தையே எடுத்துக் காட்டுகின்றது. எதிர்வரும் பகுதிகளில் ஐவகை நிலப்பாகுபாடுகளைப் பார்ப்போம்.

3.3.2 குறிஞ்சி தமிழகத்தின் மலைப்பகுதிகளில் குறிஞ்சிப் பூ அதிகமாகக் காணப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு பழந்தமிழர் மலைகளையும், அவற்றைச் சார்ந்த இடங்களையும் குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழகத்தின் குறிஞ்சி நிலப் பகுதியாக மேற்குக் காற்றாடி மலைகள், கிழக்குக் காற்றாடி மலைகள், நீலகிரி, பழனி, ஆனைமலை போன்றவற்றைக் கூறலாம். இவற்றுள் மேற்குக் காற்றாடி மலைத் தொடர்கள் அரபிக்கடலை அண்டியும், கிழக்குக் காற்றாடி மலைத்தொடர்கள் வங்கக்கடலைச் சார்ந்தும் அமைந்துள்ளன.

இவ்வகையான மலைகளில் வாழ்ந்த மக்கள் குறவர் என அழைக்கப்பட்டனர். இம்மலைப் பகுதியிலும், அடர்ந்த பெருங்காட்டிலும் யானை, புலி, கரடி போன்ற விலங்குகளும், மயில் போன்ற அழகிய பறவைகளும் காணப்பட்டன. சிறுசிறு ஆறுகள், அருவிகள் இக்குறிஞ்சி நிலப்பகுதிக்கு நீர்வளம் தந்தன. இங்கு வாழ்ந்த மக்கள் அவர்களின் நிலப்பகுதியில் அவ்வளவாக மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. இருப்பினும் தினை விதைத்தலையும், வேட்டையாடுதலையும் முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தனர். இந்நிலப்பரப்பில் முருக வழிபாடு இருந்தது. மேலும் வழிபாட்டு நெறிகளாகப் பலியிடுதல், வெறியாட்டு போன்றவை இருந்ததைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். இங்கு மக்கள் வாழ்ந்த இடங்களைச் சிறுகுடி என்று அழைத்தனர். குறிஞ்சி நில மக்களின் தலைவர்கள் வெற்பன், சிலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.

3.3.3 முல்லை காடு அடர்ந்த நிலப்பரப்பே முல்லை நிலமாகும். இந்நிலப்பரப்பிற்குஒரு தனித்துவம் அங்கே காணப்படும் முல்லைப் பூவாகும். இன்றைய திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள் முல்லை நிலத்தைச் சேர்ந்தவைகளாகும். இங்கு வாழ்ந்தோர் ஆயர் அல்லது இடையர் என அழைக்கப்பட்டனர். இவர்களின் முக்கியமான தொழில் ஆடு மாடுகளை மேய்ப்பதாகும். இவர்கள் இந்நிலப்பரப்பில் கிடைக்கும் பொருட்களான பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றைப் பிற நிலப்பரப்பில் உள்ளவர்களிடம் கொடுத்துப் பண்ட மாற்றாகத் தமக்கு வேண்டியவைகளைப் பெற்றனர். இங்கு மக்கள் வாழ்ந்த இடங்களைச் சேரி என்று அழைத்தனர். இவர்களின் தலைவர்கள் குறும்பொறை நாடன் என்று அழைக்கப்பட்டனர்.

3.3.4 மருதம் ஆற்றுப்படுகைகள் சேர்ந்த வளமான இடங்கள் மருதம் எனஅழைக்கப்பட்டன. இங்குக் காணப்பட்ட மருதப் பூவே இந்நிலத்திற்கு இப்பெயரை வழங்கியது. தமிழக ஆறுகளாகிய காவிரி, பெண்ணாறு, பவானி, நொய்யல், அமராவதி, பாலாறு, தாமிரபரணி, வைகை போன்றன இந்நிலப்பரப்பில் அடங்கும். இந்நில அமைப்பில் அடங்கும் தரை அமைப்பிற்கு ஏற்பத் தமிழக ஆறுகள் வட இந்திய ஆறுகளைப் போல் அல்லாது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியே பாய்கின்றன.

காவிரி ஆறு மைசூர் மாநிலத்திலுள்ள பிரமகிரியிலிருந்து ஊற்றெடுக்கிறது. இவ்விடம் தலைக்காவிரி எனவும் அழைக்கப்படுகிறது. தஞ்சை வரை ஓடி அங்கிருந்து முக்கோண வடிவில் வங்கக்கடலில் இணைகின்றது. கங்கையைப் போன்று காவிரியும் புனித நதியாகக் கருதப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களது தலைநகர்கள் ஆற்றங்கரைகளிலேதான் அமைந்திருந்தன. சேர மன்னருள் ஒரு குறிப்பிட்ட மரபினரது தலைநகரான கரூர் அமராவதி ஆற்றங்கரையிலும், பாண்டியரின் தலைநகராகிய மதுரை வைகை ஆற்றங்கரையிலும் அமைந்திருந்தன.

மருத நிலத்தில் காணப்பட்ட சமமான தரைப் பகுதி, செழிப்புள்ள மண், போதிய நீர் வசதி ஆகியன ஏனைய நிலங்களைவிட இதனை வளமானதாக ஆக்கின. நெல், கரும்பு போன்றவை விளைய ஏற்ற இடமாக அமைந்ததால் இந்நிலப்பரப்பு தன்னிறைவு அடைந்து மக்கள் நிலையாகத் தங்கும் நகர வளர்ச்சிக்கு அடிகோலியது எனலாம். இப்பகுதியில் மக்கள் வாழ்ந்த இடங்கள் நகர், ஊர் என அழைக்கப்பட்டன. இம்மக்களின் தலைவர்கள் ஊரன், மகிழ்நன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.

3.3.5 நெய்தல் நெய்தல் பூவே நெய்தல் நிலத்திற்குத் தனித்துவத்தை அளித்தது. தமிழகத்தைச் சுற்றியுள்ள கடற்கரை நிலப்பரப்பு நெய்தல் நிலமாகும். இங்கு வாழ்ந்த மக்கள் பரதவர், நுளையர், வலைஞர் என அழைக்கப்பட்டனர். மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், முத்துக் குளித்தல் போன்றவை இங்கு வாழ்ந்த மக்களின் முக்கியத் தொழிலாக அமைந்திருந்தன. பண்டமாற்று முறையே இந்நிலத்தில் நடைபெற்றதாகத் தெரிகின்றது. இங்கு மக்கள் வாழ்ந்த இடங்களைப் பாக்கம், பட்டினம் என அழைத்தனர். இவர்களின் தலைவர்கள் சேர்ப்பன், புலம்பன் என்று அழைக்கப்பட்டனர்.

கடற்கரைப் பகுதிகளான இந்நிலப் பகுதியில் துறைமுகங்கள் யாவும் அமைந்திருந்தன. கடல் வழியாகப் பல அயல்நாடுகளுடன் வாணிபம் நடைபெற்றது. தமிழகத்து மிளகு முதலிய நறுமணப் பொருள்களுக்கும் முத்துகளுக்கும் ஈடாகப் பொன்னையும், மதுவையும் பண்டமாற்றாகப் பெற்றுச் செல்லக் கிரேக்கரும், உரோமானியரும் மரக்கலங்களில் வந்து சென்றதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. எளிய மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வந்தாலும் செல்வச் செழிப்பாக வாழ்வைக் களித்தனர். வாணிபம் வளர்ச்சியுற்றதால் துறைமுகப்பட்டினங்கள், நகரங்கள் வளர்ச்சி பெற்றன. சேரரின் துறைமுகங்களாக முசிறி, தொண்டி, மாந்தை, நறவு ஆகியன விளங்கின. சோழரின் துறைமுகப் பட்டினங்களாகக் காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், பொதுகை அல்லது அரிக்கமேடு ஆகியன விளங்கின. கொற்கை, சாலியூர், காயல் ஆகியன பாண்டியரின் துறைமுகங்களாகும். சங்க இலக்கியம் பெருமைப்படுத்திக் கூறும் ‘மருங்கூர்ப்பட்டினமும்’ நெய்தல் நிலப்பரப்பில் இருந்தது.

விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்

இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து’

(அகநானூறு -227: 19 -20)

3.3.6 பாலை பழந்தமிழகத்தின் வறட்சியான நிலப்பரப்பினைப் பாலை நிலம் என அழைத்தனர். இப்பகுதியில் காணப்பட்ட பாலைப்பூவே இப்பெயருக்குக் காரணமாக அமைந்தது. மேற்கூறிய நால்வகை நிலங்களும் வறட்சி அடையும்போது அவை பாலை நிலம் என்று அழைக்கப்பட்டன.

முல்லை நிலமாகிய காடுகளும், குறிஞ்சி நிலமாகிய மலைகளும் நெடுங்காலம் மழை பெய்யாமையால் காய்ந்து வறட்சி அடையும் போது பாலை என்னும் நிலப்பரப்பாகக் காட்சி அளிக்கும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இந்நிலப்பரப்பில் வாழ்ந்தவர்களை மறவர், எயினர், வேடர் எனப் பலவாறு அழைத்தனர். இம்மக்கள் வாழ்ந்த பகுதிகளைக் குறும்பு என அழைத்தனர். இவர்களின் தலைவர்களாக மீளி, காளை என்ற விருதுப்பெயர் கொண்டோர் விளங்கினர்.

3.4 நாகரிகப் பாதையில் பழந்தமிழகம்

வரலாற்றிற்கு முந்தைய காலத்துத் தமிழக வரலாற்றை நாகரிகத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட மாறுதல்களையும், பயன்படுத்திய கருவிகளையும் அடிப்படையாகக் கொண்டு நான்கு காலங்களாக வகைப்படுத்தலாம். அவையாவன:

1. பழங்கற்காலம், 2. இடைக் கற்காலம், 3. புதிய கற்காலம், 4. இரும்புக் காலம்

இவற்றை வரையறை செய்யத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைத்துள்ள புதைபொருட் சின்னங்கள் உதவுகின்றன. இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய அகழ்வாராய்ச்சிகளில் ஒன்று ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த புதைபொருட்கள் இங்கு ஏராளமாகக் கிடைத்துள்ளன. அணிகலன்கள், இரும்பாலாகிய கருவிகள், உரல்கள், மனித எலும்புக் கூடுகள் போன்றன இவற்றுள் அடங்கும்.

3.4.1 பழங்கற்காலம் பழங்கற்காலத்திய தமிழ் மக்களைப் பற்றிய சான்றுகள் பலகிடைத்துள்ளன. செங்கற்பட்டு மாவட்டத்தில் பல்லாவரத்திற்கு அண்மையில் கற்களினாலான கோடரிகள், உளிகள், கத்திகள் ஆகிய கருவிகள் சில கிடைத்துள்ளன. இக்கருவிகள் மிகவும் கரடுமுரடாகச் செதுக்கப்பட்டுள்ளன. கல்லால் ஆன கருவிகளோடு மரத்தாலான ஈட்டிகளையும் தண்டுகளையும் அக்கால மக்கள் கையாண்டதும் தெரிய வருகிறது. தமிழகத்தில் வட ஆர்க்காடு மாவட்டத்திலும், பழங்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பழங்கற்கால மக்கள் தமிழகத்தில் பரவி வாழ்ந்தனர் என்று அறியலாம்.

மேலும் பழங்கற்கால மக்கள் ஓரிடத்திலும் நிலையாகத் தங்கி வாழ்ந்ததாகத் தெரியவில்லை.

3.4.2 இடைக்கற்காலம் பழங்கற்காலத்துக்கும் புதிய கற்காலத்திற்குமிடையே இடைக்கற்காலம் என்ற ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அக்கால அளவில் வாழ்ந்த மக்கள் மிகச்சிறிய கற்கருவிகள் செதுக்கிக் கொண்டனர் எனத் தெரிய வருகிறது. உதாரணமாக சிக்கிமுக்கிக்கல்லாலும், அகேட் (Agate) செர்ட் (Chert), ஜாஸ்பர் (Jasper) போன்ற இரத்தினக் கற்களாலும் இக்கருவிகள் அமைக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் சாயர்புரத்திலும், கருநாடக மாநிலத்தில் பிரமகிரியிலும் கிருக்ஷ்ணா, கோதாவரி போன்ற ஆற்றுப்படுகைகளிலும் இக்கருவிகள் கிடைத்துள்ளன. பெரும்பாலும் இடைக்கற்காலத்தில் மக்கள் வேட்டையாடி வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அவர்கள் மான், பன்றி, ஆடு, எலி போன்றவைகளை உணவாக உட்கொண்டனர் என்பது தெரியவருகிறது. இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கும் வழக்கம் அப்போதே தொடங்கிவிட்டது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

3.4.3 புதிய கற்காலம் புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையில் பல சீர்திருத்தங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் கற்கருவிகளை ஒழுங்காகவும், வழுவழுப்பாகவும் செதுக்கியுள்ளனர் என்று ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. இக்கற்கருவிகள் படிக்கட்டுக்கல் (Traprock) என்ற ஒரு வகைக் கல்லினால் செய்யப்பட்டுள்ளன. கற்களால் உளிகள், சம்மட்டிகள் போன்றவைகளை ஒழுங்காகச் செதுக்கி அவற்றிற்கு மெருகூட்டியுள்ளனர் என்பது திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், வடஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி செய்தபோது தெரிய வந்தது.

இவர்கள் ஆங்காங்குக் குடியேறி நிலையான வாழ்க்கையில் அமர்ந்துவிட்டனர். இக்கற்காலத்தில்தான் மனிதன் நெருப்பு உண்டாக்கக் கற்றுக் கொண்டுள்ளான் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஆடைகளை நெய்துள்ளனர். ஆடு, மாடுகளை வளர்த்துள்ளனர். குறிப்பாகத் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வாழ்க்கை வசதிக்கான பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எடைக்கற்கள், அம்மி, குழவிகள், கற்சட்டிகள் இவற்றுள் அடங்கும். இவர்களிடம் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் காணப்பட்டது.

3.4.4 இரும்புக் காலம் தமிழகத்தில் புதிய கற்காலத்தைத் தொடர்ந்து இரும்புக் காலம் தொடங்கிற்று. ஆனால் வட இந்தியாவில் புதிய கற்காலத்தை அடுத்துச் செம்புக் காலம் தொடங்கிற்று. அதனை அடுத்தே அங்கு இரும்புக் காலம் தொடங்கியது. புதிய கற்காலத்துக்கும் இரும்புக் காலத்துக்கும் இடையில் செம்பு அல்லது வெண்கலக்காலம் ஒன்று தமிழகத்தில் நிகழாதது வியப்பாக உள்ளது. இந்நிலைக்கு இருவேறு காரணங்கள் காட்டப்படுகின்றன. ஒன்று, மக்கள் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்குக் குடிபெயர்ந்து வந்தபோது, முதன்முதலாக இரும்பைத் தம்முடன் கொண்டு வந்திருக்கலாம். மற்றொன்று, தமிழகத்தில் புதிய கற்காலத்தின் இறுதியில் வாழ்ந்த மக்கள் இரும்பைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம். இவற்றுள் இரண்டாம் காரணமே பொருத்தமானதாகத் தோன்றுகிறது. மண்பாண்டங்கள் செய்வதற்குத் தகுதியான மண்ணைத் தேடியபோது, பலவகையான மண்ணையும், பாறைகளையும் ஆராய்ந்து பார்த்திருப்பார்கள். பச்சை மண்பாண்டங்களைச் சூளையில் இட்டுச் சுட்டிருப்பார்கள். அப்போது அவர்கள் தற்செயலாக இரும்பைக் கண்டுபிடித்திருக்கலாம்.

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கண்டபோது அங்கே கற்கருவிகளுடன் கத்தி போன்ற இரும்புக் கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் செங்கற்பட்டில் பெரும்பேயர் என்னும் இடத்திலும், கேரளத்தில் தலைச்சேரி என்னும் இடத்திலும் இவ்வாறே கற்கருவிகளும், இரும்புக் கருவிகளும் கலந்தே கிடைத்துள்ளன. எனவே தமிழகத்தில் புதிய கற்காலம் முடிவுறும்போதே இரும்புக் காலமும் தொடங்கிவிட்டது என்று கருத இடம் ஏற்படுகிறது.

3.5 தொகுப்புரை

இப்பாடத்தில் வரலாற்றிற்கு முந்தைய தமிழகம் எவ்வாறு இருந்து எவ்வாறாக மாறியது என்பது விளக்கப்பட்டது.

இலெமூரியாக் கண்டம் என்ற ஒரு கண்டம் எவ்வாறு அமையப் பெற்றிருந்தது என்பதனை அறிந்தீர்கள். மேலும் பழந்தமிழகத்தின் பிரிவுகள் பற்றியும் அறிந்தீர்கள்.

தமிழகத்தின் புவியியல் அமைப்பைப் பற்றியும், சங்க இலக்கியங்களில் பழந்தமிழர் நிலப்பரப்பை எவ்வாறு எல்லாம் பிரித்துப் பார்த்தனர் என்பது பற்றியும் படித்து உணர்ந்து கொண்டீர்கள்.

பாலை என்ற ஒரு நிலப்பரப்பு இல்லை என்றும், குறிஞ்சி, முல்லை நிலப்பரப்புகள் வறட்சியை எய்தும்போது பாலை எனப் பாகுபடுத்திப் பார்த்தனர் பழந்தமிழர் என்றும் அறிந்து கொண்டீர்கள்.

இவற்றையெல்லாம் விட, பழந்தமிழர் அறிவில் வளர்ச்சியுற்று இருந்தனர் என்றும், நாகரிகப் பாதையில் பழந்தமிழகம் இருந்து வந்தது என்பது பற்றியும் படித்து உணர்ந்தீர்கள்.

பாடம் - 4

தமிழக அயலகத் தொடர்புகள்

4.0 பாட முன்னுரை

இப்பாடம் பண்டைய தமிழர்கள் அயல் நாட்டாருடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை விளக்குகிறது.

அப்பண்டைய தமிழர்கள் வாணிபத் தொடர்பினை அயலகத்தாருடன் மேற்கொண்டதோடு தூதுவர்களையும் அயல் நாட்டுக்கு அனுப்பியுள்ளனர் என்பது பற்றியும் விளக்க முற்படுகிறது.

மேலை நாட்டாருக்கு என்னென்ன பொருள்களை ஏற்றுமதி செய்தனர் என்றும், என்னென்ன பொருள்களை இறக்குமதி செய்தனர் என்றும் இப்பாடம் விளக்குகிறது.

மேல் நாட்டாருடன் மட்டுமன்றிக் கீழை நாட்டாருடனும் வாணிபத் தொடர்பு மேற்கொண்டிருந்தனர் என்றும், தமிழகத்தின் வடபகுதியில் உள்ள வடஇந்தியருடனும் தொடர்பு கொண்டிருந்தனர் என்றும் விளக்குகிறது. இத்தகைய தொடர்பால் என்னென்ன மாற்றங்கள் சமயம், மொழி, பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் போன்றவற்றில் ஏற்பட்டிருக்கின்றன என்பது பற்றி எல்லாம் மிகவும் விரிவாக விளக்குகிறது.

4.1 பண்டைய தமிழரின் அயலகத் தொடர்புகள்

பண்டைய தமிழர் வாழ்விற்கு இன்றியமையாதது பொருள் என்று கருதினர். உயிர் வாழ்வதற்குத் தேவையான கூறுகளாக உள்நாட்டுப் பொருள்களையும், அயல்நாட்டுப் பொருள்களையும் கருதலாயினர். அத்தகைய பொருள்களைப் பெறச் சோம்பல் இல்லாமல் கடுமையாக உழைத்து வளம் சேர்த்தனர். இம்முயற்சியின் ஒரு கூறாக,

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

(கொன்றை வேந்தன்,39)

என்ற முதுமொழிக்கு ஏற்பக் கடல் கடந்த நாடுகளுடன் வாணிபம் செய்து பொருள் ஈட்டினர்.

பழந்தமிழர்கள் மலைகளுடனும், காடுகளுடனும், கடலுடனும் கலந்து உறவாடினார்கள். இவர்கள் பண்டைக் காலத்திலேயே அயல்நாடுகள் பலவற்றுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். இதற்கான சான்றுகளை அயல்நாட்டுக் குறிப்புகளைக் கொண்டும், நம்முடைய பழைய இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளைக் கொண்டும் அறிந்து கொள்ளலாம்.

4.1.1 அயல்நாட்டுக் குறிப்புகள் பழந்தமிழர்கள் மேற்கே கிரீஸ் (கிரேக்கம்), ரோமாபுரி, எகிப்து முதல் கிழக்கே சீனா வரையில் கடலோடிப் பிழைத்தார்கள். இந்நாடுகள் மட்டுமின்றிப் பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா போன்ற மேலை நாடுகளுடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள். மேலும் வடஇந்திய நாடுகளுடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

தமிழகத்துப் பண்டங்களான ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ஆகியவற்றிற்கு மேற்கு ஆசிய நாடுகளில் மிகுந்த தேவை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்ட பழந்தமிழர்கள் இவை போன்ற பொருள்களை அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.

இலவங்கம்

யூதர்களின் ஆதி சமயத் தலைவர் மோசஸ் (Moses) என்பவர், தாம் நிகழ்த்தி வந்த இறைவழிபாட்டில் ஏலக்காயைப் பயன்படுத்தினார் என்று பழைய ஏற்பாடு (Old Testament) கூறுகிறது. மோசஸ் கோயில் கட்டி வழிபாடு செய்தது கி.மு. 1490இல் என்பர்.

தென் அரேபியா நாட்டு அரசி ஷேபா (Sheba), இஸ்ரேல் நாட்டின் மன்னன் சாலமன் (Solomon) என்பவனைக் காணச் சென்றபோது, அவனுக்குப் பரிசுப்பொருள்களாக ஏலக்காய், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களைக் கொண்டு போனதாகப் பழைய ஏற்பாட்டில் ஒரு குறிப்புக் காணப்படுகிறது. சாலமன் ஆண்ட காலம் கி.மு.1000 என்பர்.

சாலமனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சேரநாட்டுத் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் மயில் தோகை, அகில் மரங்கள், யானைத் தந்தம், குரங்குகள், வெள்ளி போன்ற பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன என்ற குறிப்பும் அறியப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட சான்றுகளால் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழந்தமிழர் மேலை நாட்டாரோடு வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை அறியலாம்.

4.1.2 பழந்தமிழ் இலக்கியக் குறிப்புகள் கிரேக்கம், ரோமாபுரி ஆகிய நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்த வாணிகர், தொழிலாளர் முதலானோரை யவனர் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கிரேக்கர்கள் தங்கள் நாட்டையும், மொழியையும் அயோனெஸ் (Iaones) என்று கூறிக் கொள்வராம். அதுவே தமிழில் யவனர் எனத் திரிந்தது என்பர். ஆனால் அச்சொல் கிரேக்கர்களையும், ரோமர்களையும் ஒரு சேரக் குறிப்பதாக வழங்குகிறது. யவனர்களோடு வாணிபம் செய்த தமிழர்கள் அவர்களுடைய நாடுகளிலிருந்து தங்கத்தையும், மதுவையும் இறக்குமதி செய்தனர். தங்கத்தின் விலைப்பொருட்டாக மிளகினை ஏற்றுமதி செய்தனர். யவனர்கள் வாணிகர்களாக மட்டுமன்றி, தமிழக மன்னர்களின் அரண்மனையில் கைவினைக் கம்மியராகவும் (கம்மியர்- உலோக வேலை செய்பவர்), காவல்காரராகவும் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பெரிய துறைமுகப்பட்டினங்களில் யவனர்களுக்குத் தனி இருப்பிடங்கள் இருந்தன. இவை போன்ற குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன.

பொன்னொடு வந்து மிளகொடு மீளுதல்

முசிறி என்னும் சேரநாட்டுத் துறைமுகப்பட்டினத்தில், யவனர்களின் மரக்கலங்கள் பொன்னைக் கொண்டுவந்து கொட்டிவிட்டு, அதற்கு விலையாக மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்வதாக அகநானூறு குறிப்பிடுகிறது.

யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளங்கெழு முசிறி

(அகநானூறு, 149:9-11)

(நன்கலம் = நல்ல கப்பல்; கறி = மிளகு)

மதுவை இறக்குமதி செய்தல்

யவனர்கள் நல்ல மரக்கலங்களில் கொண்டுவந்த குளிர்ச்சி பொருந்திய நறுமணமிக்க மதுவை, ஒளி பொருந்திய வளையல்கள் அணிந்த இளம்பெண்டிர், பொன்னால் செய்யப்பட்ட கிண்ணங்களில் ஊற்றித் தர, அவ்வினிய மதுவை நாள்தோறும் பருகி மாறன் என்னும் பாண்டிய அரசன் களிப்புடனும், அமைதியுடனும் வாழ்ந்தான் எனப் புறநானூறு கூறுகின்றது.

யவனர், நன்கலம் தந்த தண்கமழ் தேறல்

பொன்செய் புனைகலத்து ஏந்தி நாளும்

ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து

ஆங்குஇனிது ஒழுகுமதி ஓங்குவாள் மாற

(புறநானூறு, 56: 18-21)

(தேறல் = மது; ஒண்தொடி = ஒளி பொருந்திய வளையல்; மடுப்ப = ஊற்றித் தர)

கைவினைக் கம்மியர்

யவனர்கள் செய்த நல்ல வேலைப்பாடு அமைந்த பாவை தனது கையில் ஏந்தியிருக்கும் அழகிய அகன்ற விளக்கு நிறையும்படி எண்ணெய் ஊற்றினர் என நெடுநல்வாடை கூறுகிறது.

யவனர் இயற்றிய வினைமாண் பாவை

கைஏந்து ஐ அகல் நிறைய நெய்சொரிந்து

(நெடுநல் வாடை: 101-102)

(ஐ = அழகிய; நெய் = எண்ணெய்)

காவல்காரர்கள்

யவனர்கள் பாண்டிய மன்னனின் அரண்மனையில் காவல் மிக்க கோட்டை வாசலைக் கொலைவாள் ஏந்திக் காவல் காத்து நின்றதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

கடிமதில் வாயில் காவலிற் சிறந்த

அடல்வாள் யவனர்

(சிலம்பு, ஊர்காண் காதை: 65-66)

யவனர் இருக்கை

பண்டைய தமிழகத்தில் கீழைக் கடற்கரையில் அமைந்திருந்த பெரிய துறைமுகம் காவிரிப்பூம்பட்டினம். இங்கு அயல்நாட்டு வாணிகம் செழித்திருந்தது. இப்பட்டினத்தில் கடற்கரையை ஒட்டி யவனர்களுக்கு என்று ஒரு தனி இருப்பிடம் இருந்தது. அது காண்போரை மேற்செல்ல விடாமல் தடுக்கும் அளவிற்கு அழகுடையதாக விளங்கியது எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

காண்போரைத் தடுக்கும்

பயனறவு அறியா யவனர் இருக்கை

(சிலம்பு, இந்திர விழவூரெடுத்த காதை: 9-10)

(இருக்கை = இருப்பிடம், சேரி)

இனி மேலை நாட்டாருடனும், கீழை நாட்டாருடனும் கொண்ட கடல்வழி வாணிபத் தொடர்பு பற்றியும், வட இந்தியருடன் கொண்ட கடல் மற்றும் தரைவழி வாணிபத் தொடர்பு பற்றியும் விரிவாகக் காண்போம்.

4.2 மேலை நாட்டாருடன் வாணிபத் தொடர்பு

தமிழகத்துக்கு மேற்கே அமைந்துள்ள நாடுகளைப் பொதுவாக மேலை நாடு என்பதுண்டு. அம்மேலை நாடுகளுடன் பழந்தமிழர்கள் நன்கு வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதைப் பல இலக்கியங்கள் வாயிலாகக் காணமுடிகிறது.

4.2.1 எகிப்து தமிழகத்திற்கும் எகிப்திற்குமிடையே ஏற்பட்டிருந்த வாணிபத் தொடர்பு மிகப் பழைமையானதாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் (Periplus of the Erithraean Sea) என்னும் நூலை டபிள்யூ.எச்.ஸ்காபி என்பவர் பதிப்பித்துள்ளார். அவர் அந்நூலின் பதிப்புரையில் கிரேக்க மக்கள் அநாகரிகத்தினின்று விழித்தெழுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்துக்கும் பண்டைய இந்திய நாடுகளுக்கும் இடையே வாணிபத் தொடர்பு இருந்தது என்றும், பாரசீக வளைகுடாவின் வடக்கே இரு நாடுகளும் ஒன்றோடு ஒன்று பண்ட மாற்றத்தைச் செய்து கொண்டன என்றும் குறிப்பிடுகின்றார்.

பண்டைய தமிழகத்திலிருந்து ஏற்றுமதியான பண்டங்களுள் சிறப்பானவை மஸ்லின் துணியும், ஏலம், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களுமாம். தமிழக வணிகர்கள் இச்சரக்குகளை மரக்கலங்களில் ஏற்றிச் சென்று ஏடன் வளைகுடாவிற்கு இருபுறமுள்ள துறைமுகங்களில் இறக்கினர். பினீஷியர் அல்லது அரேபியர் அச்சரக்குகளைத் தம்வசம் ஏற்றுக் கொண்டு எகிப்துக்கு எடுத்துச் சென்றனர்.

எகிப்தின் பதினேழாம் அரச பரம்பரையினர் காலத்தில் (கி.மு. 1500-1350) அந்நாட்டில் இறக்குமதியான சரக்குகள் பல தந்தத்தினால் கடையப்பட்டவை என அறிகின்றோம். இவை தென் இந்தியாவில் இருந்துதான் ஏற்றுமதியாயிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

தமிழர்களைப் போல எகிப்தியரும் கப்பல்களைக் கட்டி வாணிபத்தில் ஈடுபடலாயினர். இவர்கள் கட்டிய கப்பல்களில் ஏழு பாய்மரங்கள் விரிக்கப்பட்டதாகக் குறிப்புக் கிடைக்கின்றது.

4.2.2 கிரேக்கம் கிரேக்கர்கள் தமிழகத்துடன் வாணிபத்தில் இறங்கியது சுமார் கி.மு. 5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் எனலாம். எவ்வாறு எனில் முதன்முதலில், ஹிப்பாலஸ் (

ippalos) என்னும் கிரேக்கர், பண்டைய தமிழகத்தின் மேற்கே தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மாதங்களில் காற்று வீசுகிறது எனக் கண்டறிந்தார். இதுவே தென்மேற்குப் பருவக்காற்று ஆகும். இதனைச் சாதகம் ஆக்கிக் கிரேக்கர்கள் பெரிய பெரிய மரக்கலங்களைத் தமிழகத்தின் மேலைக் கரைக்குச் செலுத்தி நங்கூரம் பாய்ச்சினர் என்று ஒரு குறிப்பு உணர்த்துகிறது. பெரிப்ளூஸ் என்னும் ரோம நூலில், அரேபியாவிலிருந்தும், கிரேக்கத்திலிருந்தும் சரக்குகளை ஏற்றி வந்த நாவாய்கள் அதாவது மரக்கலங்கள் முசிறியில் நிறையக் கிடந்ததாக ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. இவ்வாறு பண்டைய தமிழர்கள் கிரேக்கர்களுடன் கொண்ட வாணிபத் தொடர்பால், தமிழ்ச்சொற்கள் பல கிரேக்க மொழியில் நுழைந்து இடம் பெறலாயின. சொபோகிளிஸ், அரிஸ்டோ பேனீஸ் போன்ற கிரேக்க அறிஞர்களின் நூல்களில் இச்சொற்களைக் காண முடிகிறது.

அரிசி என்னும் தமிழ்ச்சொல் அரிஸா எனவும், இஞ்சி அல்லது இஞ்சிவேர் என்னும் தமிழ்ச் சொல் ஜிஞ்ஜிபேராஸ் எனவும், இலவங்கத்தைக் குறிக்கும் கருவா என்னும் தமிழ்ச்சொல் கர்ப்பியன் எனவும் உருமாற்றம் அடைந்து கிரேக்க மொழியில் நுழைந்து வழங்கின. கிரேக்க வாணிகர்கள் இப்பொருள்களுடன் அவற்றின் தமிழ்ப் பெயர்களையும் தமிழகத்திலிருந்து கொண்டு சென்று கிரேக்க நாட்டில் பயன்படுத்தினார்கள் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

4.2.3 ரோமாபுரி தமிழகத்து நறுமணப் பொருள்களின் சுவையையும் ஏனைய ஏற்றுமதிப் பண்டங்களின் பெருமையையும் கிரேக்கர்களின் மூலமே ரோமாபுரி மக்கள் அறிந்து கொண்டனர். எனினும் கி.பி. முதலாம் நூற்றாண்டு வரையில் ரோமரின் வாணிபம் பெரும் அளவு விரிவடையவில்லை. அகஸ்டஸ் ஆட்சியில்தான் தமிழகத்துடன் வாணிபத் தொடர்பு ஏற்படலாயிற்று. இவர் கி.மு. 30இல் எகிப்தை வென்று அதன்மேல் தமது ஆட்சியை நிலை நாட்டினார். இவ்வெற்றி அவருக்கு எதிர்பாராத நற்பலனையும் தந்தது. அது யாதெனில் அவருக்குத் தமிழகத்துடன் முதன்முதலாக நேரடியான வாணிபத் தொடர்பு ஏற்பட்டதே ஆகும். அதனையடுத்துத் தமிழகத்துக்கும் ரோமாபுரிக்கும் இடையிலான கடல் வாணிபம் பெருமளவுக்கு ஓங்கி வளரலாயிற்று. அகஸ்டஸின் சம காலத்தவர் ஸ்டிராபோ (Strabo) என்ற நூலாசிரியர். இவர் பூகோள நூல் ஒன்றை எழுதியுள்ளார். எரித்திரியக் கடலின் பெரிபுளூஸ் என்ற ஒரு வரலாற்று நூல் கி.பி. 60இல் தோன்றியது. இதன் ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. மேலும் கி.பி. 70இல் பிளினி (Pliny) என்பார் எழுதியுள்ள உயிரியல் நூல் ஒன்றும், கி.பி. 160 இல் தாலமி (Ptolemy) என்பார் எழுதியுள்ள பூகோள நூல் ஒன்றும் கிடைத்துள்ளன. இந்நூல்களில் பண்டைத் தமிழகத்திற்கும் ரோமாபுரிக்கும் இடையே நிகழ்ந்த கடல் வாணிபத்தைப் பற்றிய சான்றுகள் பல உள்ளன. இந்நூல்கள் மட்டுமன்றிச் சங்க இலக்கியங்களிலும் அதற்கான பல சான்றுகள் உள்ளன. இவற்றை ஏற்கெனவே பார்த்தோம்.

தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் சிலவும் கடல் வாணிபத்தைப் பற்றி அறிய உதவுகின்றன. புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு என்னும் ஊரில் ஓர் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவ்வாராய்ச்சியின் போது ரோமாபுரி நாணயங்கள் கிடைக்கப்பெற்றன. இந்நாணயங்கள் மூலம் பண்டைய தமிழருக்கும் ரோமாபுரி மக்களுக்கும் கடல் வாணிபத் தொடர்பு இருந்து வந்தது தெரியவருகிறது.

மேலே குறிப்பிட்ட ஸ்டிராபோ, பிளினி, தாலமி போன்ற ரோம ஆசிரியர்கள் தாங்கள் எழுதிய நூல்களில் தமிழகத்தின் துறைமுகங்களைப் பற்றியும் கூறியுள்ளனர். அவற்றுள் பல துறைமுகங்களின் பெயர்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. சேரநாட்டுத் துறைமுகப் பட்டினங்களான தொண்டியைத் திண்டிஸ் என்றும், முசிறியை முஸிரிஸ் என்றும் குமரியைக் கொமாரி என்றும், தமிழகத்தின் கீழைக் கடற்கரைத் துறைமுகங்களான கொற்கையைக் கொல்சாய் என்றும், நாகப்பட்டினத்தை நிகாமா என்றும், காவிரிப்பூம்பட்டினத்தைக் கமரா என்றும், புதுச்சேரியைப் பொதுகே என்றும், மரக்காணத்தைச் சோபட்மா என்றும், மசூலிப்பட்டினத்தை மசோலியா என்றும் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்துடன் ரோமாபுரியினர் மேற்கொண்டிருந்த வாணிபம் அவர்களுடைய பேரரசின் ஆதரவின் கீழ் செழிப்புடன் வளர்ந்து வந்தது எனலாம். இவ்வாணிபத்தின் வளர்ச்சிக்கு ரோமாபுரிப் பேரரசர் அகஸ்டஸ் பெரிதும் ஊக்கம் அளித்தார்.

பாண்டிய மன்னன் ஒருவன் தன் தூதுவர் இருவரைத் தம் அரசவைக்கு அனுப்பி வைத்ததாக அகஸ்டஸ் கூறுகிறார். ரோமாபுரியுடன் தமிழகம் மேற்கொண்டிருந்த கடல் வாணிபம் காலப்போக்கில் பல மாறுதல்களுக்கு உட்பட்டது. ரோமாபுரிப் பேரரசின் ஆட்சி முடிவுற்றபின் ரோமரின் வாணிபம் தமிழகத்தில் மட்டுமின்றி மசூலிப்பட்டினம், ஒரிஸ்ஸா கடற்கரையிலும் பரவலாயிற்று.

ரோமாபுரியுடன் தொடர்ந்து தமிழகம் கடல் வாணிபத்தில் தொடர்புகொண்டிருந்ததால் ரோமாபுரி வாணிகர்கள் தமிழகத்திலேயே தங்கிக் குடியேறிவிட்டார்கள். தமிழகத்திற்கு வாணிபம் செய்ய வந்த கிரேக்கரும், யூதரும், சிரியரும் ரோமர்கள் குடியேறி வாழ்ந்த இடங்களில் அவர்களோடு இணைந்து வாழ்ந்து வந்தார்கள். அவ்வாறு வாழ்ந்து வந்த அவர்களிடமிருந்தே தமிழகத்தினைப் பற்றிய செய்திகளைத் தாம் கேட்டறிந்ததாகப் பிளினி கூறுகின்றார். வாணிபம் விரிவடைய விரிவடையத் தமிழகத்திலே குடியேறிவிட்ட ரோமர்களின் தொகையும் வளர்ந்து வந்தது. அதனால் அவர்களுடைய சேரி ஒன்று மதுரை மாநகருடன் இணைந்து இருந்ததாகத் தெரிகிறது. அக்காலத்தில் வாழ்ந்தவர்களிடையே புழக்கத்தில் இருந்த பொன், வெள்ளி நாணயங்களும், செப்புக் காசுகளும் இப்போது நமக்கு அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கப் பெற்றுள்ளன.

கி.பி. 324 முதல் கி.பி. 337 வரை கான்ஸ்டன்டைன் என்னும் பேரரசன் ரோமாபுரியை ஆண்டு வந்தான். இவன் தனது இறுதிக் காலத்தில் இந்தியத் தூதுவர் ஒருவரைத் தன் அரசவைக்கு வரவழைத்தான் என்ற குறிப்பு ரோமாபுரி வரலாற்றில் இருக்கின்றது என்பர்.

4.2.4 பாபிலோனியா தமிழகத்துக்கும் பாபிலோனியாவுக்கும் இடையே கடல் வாணிபம் நடந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பாபிலோனியாவில் நிப்பூர் என்னும் இடத்தில் முரஷீ என்பவரும் அவர் மக்களும் நடத்தி வந்த காசு வாணிபத்தில் கணக்குப் பதியப்பட்ட களிமண் தகடுகள் சிலவற்றில் பாபிலோனியர் தமிழக வாணிகருடன் கொண்டிருந்த பற்று வரவுகள் குறிக்கப்பட்டுள்ளன. அதே காலத்தில் தமிழ் வாணிகர்கள் பாபிலோன் நகரத்தில் குடியேறி அங்கேயே தங்கித் தம் தொழிலை நடத்தி வந்ததற்கும் இத்தகடுகள் சான்று பகர்கின்றன.

4.3 கீழை நாட்டாருடன் வாணிபத் தொடர்பு

பண்டைய தமிழர்கள் மேலை நாட்டாருடன் மட்டும் கடல் வாணிபம் கொண்டிருக்கவில்லை. கீழை நாடுகளான சீனம், மலேசியா, ஜாவா, வட போர்னியா போன்ற நாடுகளுடனும் கடல் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர்.

4.3.1 சீனம் சீனத்துடன் தமிழகம் மேற்கொண்டிருந்த வாணிபத் தொடர்பு மிகவும் பழைமையானதாகும். இத்தொடர்பு கி.மு. 1000 ஆண்டளவில் தொடங்கியிருக்கலாம் என்பர். தமிழகத்துப் பண்டங்கள் கி.மு.7ஆம் நூற்றாண்டிலேயே சீனத்தில் இறக்குமதியாயின என்று அந்நாட்டு வரலாறுகள் அறிவிக்கின்றன.

சீனத்துப் பட்டாடைகளையும், சருக்கரையையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. இதனால் இன்றளவும் பட்டுக்குச் சீனம் என்றும், சர்க்கரைக்குச் சீனி என்றும் தமிழில் பெயர் வழங்கி வருகின்றது. மேலும் தமிழில் பல பொருள்களைக் குறிக்கும் சொற்கள் சீனம் என்ற பெயரோடு சேர்ந்து வழங்குவதை இன்றையளவும் நம்மால் காணமுடிகிறது.

சான்று :

சீனாக் களிமண்

சீனப் பட்டாடை

சீனாக் கற்கண்டு

சீனாச் சரக்கு

சீனாக் கிழங்கு

சீனாப் பூண்டு

இச்சான்றுகள் மூலம் தமிழகம் சீனாவுடன் வாணிபத் தொடர்பு கொண்டுள்ளது நன்கு தெரிய வருகிறது.

பண்டைய தமிழகமும் சீனாவும் கொண்டிருந்த வாணிபத் தொடர்பின் எச்சங்களாகத் தமிழகத்தில் கிடைத்த சீன நாணயங்கள் விளங்குகின்றன என்றால் மிகையாகாது. சீன தேசத்து இலக்கியங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தோடு நிலவிய வாணிப உறவுகள் பற்றிக் குறிக்கின்றன. கி.மு. 2ஆம் நூற்றாண்டின் சீன நாணயம் தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் பட்டுக்கோட்டை வட்டம் ஒலயக் குன்னம் என்ற ஊரிலும், மன்னார்குடி வட்டத்திலுள்ள தாலிக்கோட்டை என்ற கிராமத்திலும் அதிக சீன நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் சீனத்திற்கும் பண்டைய தமிழகத்திற்கும் இடையே பெரும் வாணிபத் தொடர்பு இருந்து வந்தது தெரியவருகிறது.

4.3.2 தென்கிழக்கு ஆசிய நாடுகள் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தாய்லாந்துடன் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பண்டைய தமிழகம் கடல் வாணிபத் தொடர்பினை வைத்திருந்தது தெரிய வருகிறது. அங்கு இந்தியாவிற்குச் சொந்தமான கர்னீலியன் மணிகள், கண்ணாடி மணிகள், கர்னீலியன் முத்திரைகள் போன்றவை கிடைத்துள்ளன. மேலும் சோழ மன்னரின் செப்பு நாணயமும் கிடைத்துள்ளது. இதன் மூலம் பண்டைய தமிழர் அந்நாட்டுடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

பிலிப்பைன் தீவுகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் பல புதைபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கத்திகள், கோடாரிகள் ஈட்டிகள் போன்ற கருவிகள் கி.பி. முதலாம் நூற்றாண்டில் தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்த கருவிகளைப் பெரிதும் ஒத்துள்ளன. இச்சான்று சீனம், ஜாவா போன்ற கீழை நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வாணிபத் தொடர்பின் பழைமையைக் காட்டுகிறது.

கிழக்காசிய நாடுகளுக்கும், ரோமாபுரிக்குமிடையே நடைபெற்று வந்த கடல் வாணிபத்தில் தமிழகமும் பெரும்பங்கு ஏற்று வந்தது. சீனம், மலேசியா, ஜாவா போன்ற நாடுகளிலிருந்து பல பண்டங்களைக் கொள்முதல் செய்து அவற்றை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது எனக் கூறுகின்றனர்.

4.4 வட இந்தியருடன் வாணிபத் தொடர்பு

ஒரு நாட்டு மக்கள் கடல் கடந்து சென்று அயல் நாடுகளில் தங்கி வாணிபம் செய்து வரவேண்டுமென்றால் அந்நாட்டில் உள்நாட்டு வாணிபம் மிகவும் செழிப்பான முறையில் நடைபெற்று வந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. எனவே, தமிழ் நாட்டின் உள்நாட்டு வாணிபம் செழித்து ஓங்கியிருந்தது எனலாம். பண்டைய தமிழகத்து வாணிகர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடிக் கொண்டு, வண்டிகளிலும், பொதிமாடுகளின் மேலும் தம் பண்டங்களை ஏற்றிச் சென்று ஊர் ஊராக விற்பனை செய்தனர். இதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

சான்று :

பல் எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி

(பெரும்பாணாற்றுப்படை :65)

(எருத்து – எருது; உமணர் – உப்பு வாணிகர்; பதி – ஊர்; நெடு நெறி – நெடிய வழி.)

உள்நாட்டு வாணிபத்தைப் பொருத்தவரையில் பெரும்பாலும் பண்டமாற்று முறையே காணப்பட்டது.

தென் இந்தியாவுக்கும், வட இந்தியாவுக்கும் இடையே கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே மிகப் பெரிய அளவுக்கு வாணிபம் நடைபெற்று வந்தது. தமிழகத்தைப் பொருத்தமட்டில் ஒவ்வொரு ஊரும் ஒருசில பண்டங்களுக்குப் பெயர் பெற்று இருந்தது.

மெகஸ்தனிஸ் என்பவர் பாண்டிய நாட்டு முத்துக்களை மிகவும் புகழ்ந்து கூறுகிறார்.

கௌடில்யர் தாம் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் தாமிரபரணி, பாண்டிய கவாடம் ஆகிய இடங்களில் கிடைத்த முத்துக்களைப் பற்றியும், மதுரையில் நெய்யப்பட்ட பருத்தி ஆடை வகைகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். உறையூர், பருத்தி நெசவில் பெயர் பெற்று விளங்கியது. தமிழகத்துப் பொருள்கள் வடநாட்டுக்கு வங்கக் கடல் வழியாகவே பெரும்பாலும் சென்றன. தரை வழியாக நடைபெற்ற வாணிபம் மிகவும் குறைவுதான் எனலாம்.

4.5 அயலவர் தொடர்பால் ஏற்பட்ட மாற்றங்கள்

பழந்தமிழர்கள் பிறநாட்டாருடனும், வடஇந்தியருடனும் வாணிபத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதால் அவர்களுக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்கள் பழந்தமிழரின் மொழி, சமயம், சமூக வாழ்வு ஆகியவற்றில் நிகழ்ந்தன.

4.5.1 மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள் பழந்தமிழர் கிரேக்கர், ரோமானியருடன் வாணிபத் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டனர் என்பதை அறிவோம். இதன் விளைவாகக் கிரேக்க ரோமானிய மொழிகளில் தமிழ்ச் சொற்கள் இடம் பெறலாயின. அதேபோல் சீனாவுடன் ஏற்பட்ட தொடர்பால் அந்நாட்டிலிருந்து இறக்குமதியான பொருள்களுக்குத் தமிழில் சீனாக்களிமண், சீனாக்கற்கண்டு, சீனாப்பட்டு எனவும் பெயர்கள் வழங்குகின்றன. மேலும் தமிழில் சர்க்கரையைக் குறிக்கச் சீனி என்ற சொல்லும் வழங்குவதைக் காணலாம்.

வடஇந்தியருடன் கொண்ட வாணிபத் தொடர்பால் வடஇந்தியர் எனக் கூறப்படும் ஆரியர் தமிழகத்தில் நுழையலானார்கள். இவ்வாரியர்கள் தமிழ் மொழியைக் கற்கலானார்கள். தமிழ் மொழியைக் கற்றதும் நாளடைவில் தம்முடைய ஆரிய எழுத்துகளின் ஒலிகளையும், ஆரிய மொழிச் சொற்களையும் தமிழில் நுழைக்கலாயினர். ஆரிய எழுத்து ஒலிகளும், சொற்களும் தமிழில் கலந்தாலும் அவற்றுக்கு எனத் தமிழர் ஒரு ஒதுக்கிடத்தையே அளித்தனர். இதன் காரணமாக அவற்றைத் தமிழில் பயன்படுத்துவதற்கு என்று தனி இலக்கண விதிகளைக் கடைப்பிடிக்கலாயினர். ஆரிய மொழியின் கூட்டெழுத்து வடிவங்கள், எழுத்துப் புணர்ச்சி முறைகள், சொற்சேர்க்கை மரபுகள் தமிழில் இடம்பெறவில்லை. அந்த ஆரிய எழுத்து ஒலிகளையும் சொல் அமைப்புகளையும் தமிழில் சேர்ப்பதற்காகவே பிற்காலத்தில் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டன.

ஆரிய, தமிழ் மொழிகளுக்குள் ஏற்பட்ட கலப்பினால் பிராகிருதம் என்ற புதுமொழி ஒன்றும் உருவாயிற்று. அச்சமயத்தில் திராவிட மொழிகள் வழங்கும் இடங்கள் யாவற்றிலும் பிராகிருத மொழி பரவி வந்தது.

தமிழரின் மொழி, இலக்கியம் ஆகிய துறைகள் எல்லாவற்றிலும் ஆரியர்கள் தலையிட்டு அவற்றைத் தம் இயல்புக்கு ஏற்ப மாற்றிவிட முனைந்தனர். அதற்குச் சான்றாக மக்கள் பெயர்கள், கடவுளரின் பெயர்கள், ஊர்கள், ஆறுகள், மலைகள் முதலியவற்றின் பெயர்கள் யாவும் தமிழ் வடிவத்தை இழந்தன என்பர். இதற்கு மாறாக அப்பெயர்கள் எல்லாம் ஆரிய வடிவத்தை ஏற்றன. அதே சமயத்தில் காலப்போக்கில் ஆரியர் தாம் பேசிவந்த சமஸ்கிருதத்தையே மறந்துவிட்டனர். தமிழையே தம் தாய்மொழியாக ஏற்றுக் கொள்ளலாயினர். இவ்வாறாக அயலவர் தொடர்பால் பல மாற்றங்கள் தமிழகத்தில் ஏற்பட்டன.

4.5.2. சமயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் வட இந்தியராகிய ஆரியர் பண்டைய தமிழகத்தில் இருந்த சமயக் கோட்பாடுகளையும், தெய்வ வழிபாட்டு முறைகளையும் மாற்ற முற்பட்டனர்.

ஆரியரின் கடவுள்ர் தமிழகத்தில் சிறு தெய்வங்களாகவே இருந்தனர். பண்டைய தமிழரின் மாயோனும், சேயோனும் தொடர்ந்து தெய்வங்களாக இருந்தனர். ஆனால் நாள்பட நாள்பட ஆரிய மதக் கொள்கைகளைத் தமிழர்கள் பின்பற்றலாயினர். ஆரியரின் முயற்சியால் கடவுளர்களின் தமிழ்ப் பெயர்கள் வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்டன.

பௌத்த துறவிகளும், சமண முனிவர்களும் தமிழகத்துக்குள் நுழைந்தனர். கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே குண்டூர் மாவட்டத்தில் பௌத்த சமயமானது நுழைந்து நிலைத்துவிட்டது எனப் பட்டிபுரோலு கல்வெட்டுகள் கூறுகின்றன. அசோகர் காலத்திலேயே காஞ்சி மாநகரில் பௌத்தம் நிலைபெற்றுச் சிறப்புடன் விளங்கிற்று.

அதுபோலவே மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே சமண சமயம் தமிழகத்தில் பரவிவிட்டது என்பதை நாம் அம்மாவட்டங்களில் கிடைத்த குகைக் கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் ஆண், பெண் ஆகிய இருபால் துறவிகளுக்கும் சமணப்பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்த செய்திகளைச் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கூறுகின்றன.

4.5.3 சமூக வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் பழந்தமிழர்கள் கிரேக்கர், ரோமானியர் போன்றோருடன் ஏற்படுத்திய வாணிபத் தொடர்பால் தமிழகத்துக்குள் கிரேக்கர், ரோமானியர், மற்றும் யூதர்கள் குடியேறலாயினர். இதன் காரணமாகப் பண்டைய தமிழர்களின் கலாச்சாரமும், ரோம கிரேக்க கலாச்சாரமும் இணையலாயிற்று.

வடஇந்தியருடன் கொண்ட வாணிபத் தொடர்பால் ஆரியர்கள் தமிழகத்துள் வாழ இடம் தேடினர். அதன் பின்னர் மன்னரின் ஆதரவை நாடிக் குடியேறினர். அவர்கள் தமிழருடன் போர் புரியவில்லை. போரிட்டு நாடுபிடிக்கவும் இல்லை. ஆரியரின் ஊடுருவல் நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. அவர்கள் தமிழரோடு தமிழராய்க் கலந்து தமிழரின் வாழ்க்கையையே தாமும் வாழ்ந்து, தமிழரின் வாழ்க்கை மரபுகளில் பல மாறுதல்களைப் படிப்படியாய் உண்டாக்கினார்கள். மெல்ல மெல்லத் தமிழர்கள் பழக்கவழக்கங்களை மேற்கொண்டு தமிழ்க்குடிகளாகவே மாறி விட்டனர். இருவேறு இயல்புகள் படைத்த தமிழர் ஆரியர்களுக்கிடையே இனக்கலப்பும் உண்டாயிற்று. இக்கலப்புகள் யாவும் மெல்ல மெல்லக் காலப்போக்கில் ஏற்பட்டனவேயன்றித் திடீரென்று ஒரு சில நாட்களில் அல்ல. வெகுகாலமாகத் தனிச் சிறப்புடனும் தூய்மையுடனும் வளர்ந்து வந்த ஒரு நாகரிகமும் பண்பாடும் இடையில் நுழைந்த ஒரு மக்களினத்தின் முயற்சியால் வழக்கிழந்து அழிந்து மறைந்து போய்விட்டன. சுருக்கமாகச் சொன்னால் தமிழகம் ஆரிய நாடாகிவிட்டது என்று கூறினால் அது மிகையாகாது.

வட நாட்டாருடன் கொண்ட வாணிபத் தொடர்பால் தமிழகத்துக்கு மற்றொரு சீர்கேடு விளையலாயிற்று. இனம், குலம் ஆகிய வேறுபாடுகளினால் இடர்ப்பட்டுத் தடுமாறாத தமிழரின் சமூகம் காலப்போக்கில் பல ஜாதிகளாகப் பிரிந்தது. மக்களுக்குள் பிறப்பிலேயே உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. இவ்வாறாகச் சமூகவாழ்விலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

4.6 தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் அயலகத் தொடர்பால் தமிழகத்தில் எவ்வாறு எல்லாம் மாற்றங்கள் நடைபெற்றன என்பதைப் படித்து அறிந்திருப்பீர்கள்.

தமிழர்கள் மேலை நாட்டாருடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு செழிப்பாக வாழ்ந்தது பற்றிப் படித்திருப்பீர்கள்.

பண்டைய தமிழர்கள் கீழை நாட்டாருடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்ததைப் படித்து உணர்ந்தீர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக வட இந்தியருடன் கொண்ட வாணிபத் தொடர்பால் ஆரியர் தமிழகத்துள் நுழைந்ததும், அவர்களால் மொழியிலும், இலக்கியத்திலும், சமூக வாழ்விலும், சமயக் கோட்பாட்டிலும் சொல்ல முடியாத அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டன என்பது பற்றியும் நன்கு படித்து அறிந்திருப்பீர்கள்.

பாடம் - 5

சங்க கால மன்னர்கள்

5.0 பாட முன்னுரை

இப்பாடத்தில் சங்க கால மன்னர்களைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சங்க காலத்தில் தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது என்றும், அவர்களின் ஆட்சிக்கு இடையே குறுநில வேந்தர்களும் தன்னாட்சி நடத்தி வந்தனர் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

சேர மன்னர்களைப் பற்றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சேர மன்னர்கள் இமயம் வரை படையெடுத்து வெற்றி வாகை சூடினர் என்பது பற்றியும், சோழ மன்னரும் அவ்வாறே வெற்றி கொண்டனர் என்பது பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

குறுநில வேந்தர்கள் என்று கூறப்படும் வேளிர், கோசர் போன்றோர் தமிழகத்தின் வடதிசையில் இருந்து வந்து குடியேறினர் என்பது பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது.

5.1 தமிழ்ச் சங்கம்

பழந்தமிழ் நாட்டில் தமிழ் மொழியினைப் பேணி வளர்ப்பதற்காகச் சங்கம் என்ற ஒரு அமைப்பு இருந்து வந்ததாகத் தெரிய வருகிறது. இச்சங்கத்தைப் பாண்டிய மன்னர்கள் அமைத்திருந்தனர். தமிழ்ப் புலவர்கள் சங்கத்தில் வீற்றிருந்து தமிழை ஆராய்ந்ததுடன் பல நூல்களை இயற்றினர். அதோடு மட்டுமல்லாமல் பிற புலவர்கள் இயற்றிய நூல்களை மதிப்பீடு செய்தும் வந்தனர். இதில் அமர்ந்திருந்த புலவர்கள் பல இலக்கியங்களைத் தமிழில் படைத்துத் தமிழ் மொழியின் மேன்மையை உலகிற்கு உணர்த்தினர். இதனையே ஔவையார் கூறும்போது,

பாண்டிய நன்னாடுடைத்து நல்ல தமிழ்

என்றார்.

இச் சங்கமானது தமிழகத்தின் தென்பால் அமைந்திருந்தது. இதனால் இன்றைய தமிழகத்தின் தென்பால் அமைந்துள்ள மதுரை மாநகரம் தமிழ் வளர்த்து மணம் பரப்பி நின்றது என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக உணர முடிகிறது.

தொல் ஆணைநல் ஆசிரியர்

புணர் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின்

நிலம் தரு திருவின் நெடியோன் போல

(மதுரைக் காஞ்சி : 761-763)

தமிழ் நிலை பெற்ற, தாங்கு அருமரபின்

மகிழ்நனை, மறுகின் மதுரையும்…….

(சிறுபாணாற்றுப்படை: 66-67)

(தமிழ் வீற்றிருந்த தெருவினை உடைய மதுரை. மறுகு-தெரு.)

தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே

(புறநானூறு, 58 :13)

(கெழு = பொருந்திய; கூடல் = புலவர்கள் கூடும் மதுரை; தண்கோல் = குளிர்ச்சி பொருந்திய செங்கோல்.)

தமிழ்ச் சங்கமானது மூன்று இருந்ததாகக் கருதுகின்றனர். அவை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகும். இங்கு நாம் கடைச்சங்கத்தின் மூலமாக எழுந்த இலக்கியங்களில் காணப்படும் மன்னர்களைப் பற்றிக் காணலாம்.

5.2 சங்க கால மன்னர்கள்

சங்க காலத்தில் தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என முப்பெரும் பிரிவுகளாகப் பிரிந்து காணப்பட்டது. மேற்குக் கடற்கரைப்பகுதி சேர நாடு என்றும், கிழக்குக் கடற்கரையின் வடபகுதி சோழ நாடு என்றும், அதன் தென் பகுதி பாண்டிய நாடு என்றும் வழங்கப்பட்டன. அவற்றை முறையே சேர, சோழ, பாண்டிய அரச வம்சத்தினர் ஆண்டு வந்தனர்.

கொற்கையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த பாண்டிய அரசனின் மூன்று மகன்கள் மூவிடங்களுக்கும் சென்று சேர, சோழ, பாண்டிய அரசுகளை நிறுவினர் என்ற செய்தியும் நிலவுகின்றது.

சங்க இலக்கியத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மன்னர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால் அவர்களுடைய அரசியல் வரலாற்றைத் தொடர்ச்சியாக எழுதுவதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கவில்லை.

சங்க கால மன்னர்களை இங்கு நாம் பெரும் மன்னர்கள், குறுநில மன்னர்கள் என்று பிரித்துக் காணலாம். பெரும் மன்னர்கள் என்போர் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் ஆவர். குறுநில மன்னர்கள் என்போர் வேளிர், கோசர் போன்ற சிற்றரசர்கள் ஆவர்.

5.3 சேர மன்னர்கள்

செந்தமிழ் வேந்தர் மூவருள் (சேரர், சோழர், பாண்டியர்) சேரர் சிறந்தவராவர் என்ற கொள்கை, பழங்கால மக்களிடையேயும், அக்காலப் புலவர்களிடையேயும் நிலவியிருந்தது. இவர்களுக்கு வானவர் என்ற பெயரும் உண்டு.

சேர நாட்டையாண்ட சேர மன்னர்கள் இரு கிளையினராகக் காணப்படுகின்றனர். ஒருவர் உதியன் சேரலாதன் வழி வந்தவர்கள், மற்றொருவர், இரும்பொறை என்ற பெயரால் அழைக்கப்படுவோர். இவர்களுள் முன்னவர் வஞ்சியைத் தலைநகராகக் கொண்ட உள்நாட்டுப் பகுதியினையும், பின்னவர் தொண்டியைத் தலைநகராகக் கொண்ட கடற்கரைப் பகுதியையும் ஆண்டவராவர். சேர மன்னர்கள் விற்கொடியைக் கொண்டிருந்தனர்.

5.3.1 உதியன் சேரலாதன் சங்க காலச் சேர மன்னர்களுள், வரலாறு விளங்க வாழ்ந்த முதல் சேர மன்னன், உதியன் சேரலாதன். இவன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன், உதியன் சேரலாதன், உதியஞ்சேரல் என்றெல்லாம் அழைக்கப் பெறுகிறான். வெளியன் வேண்மான் என்னும் வேளிர் குலத் தலைவன் மகள் நல்லினி இவனுடைய மனைவி ஆவாள். இவன் மைந்தர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்னும் இருவரும் ஆவர்.

உதியன் சேரலாதன் ஆற்றிய அரிய செயல்கள் இரண்டு ஆகும். ஒன்று தன் நாட்டு எல்லையை விரிவாக்கியது. மற்றொன்று பாரதப் போரில் பெருஞ்சோறு அளித்தது ஆகும்.

உதியன் சேரலாதன், தமிழகம் முழுமையும் தன் ஒரு குடைக்கீழ் வைத்து உலகாண்ட பேரரசன், இவன் கிழக்கு மேற்கு ஆகிய பெருங்கடல்களை எல்லையாகக் கொண்ட நாட்டை ஆண்டு வந்தான். இம்மன்னனைப் போற்ற வந்த முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர், “அரசே! கீழ்க்கடலும் நினதே, மேலைக்கடலும் நினதே, ஆதலின் ஞாயிறு தோன்றுவதும் உன் கடலிலேயே, மறைவதும் உன் கடலிலேயே” என்று கூறுகிறார். இதனை,

நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்

வெண் தலைப் புணரிக்குட கடல் குளிக்கும்

(புறநானூறு: 2: 9-10)

என்ற அவருடைய பாடல் அடிகளால் அறியலாம்.

உதியன் சேரலாதன் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியைப் பாராட்டிய புலவர்கள், முரஞ்சியூர் முடிநாகராயரும், மாமூலனாரும், கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமானும், இளங்கோவடிகளும் ஆவர். பாண்டவர் ஐவரும், கௌரவர் நூற்றுவரும் மேற்கொண்ட பாரதப் போரில் அப்போர் முடியும் வரையில் இரு திறப்படையினருக்கும் இவன் பெருஞ்சோறு அளித்தான் என்று இவர்கள் குறிப்பிடுகின்றனர். இவன் பெருஞ்சோறு அளித்ததை முரஞ்சியூர் முடிநாகராயர்,

அலங்கு உளைப்புரவி ஐவரொடு சினைஇ

நிலம் தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை

ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

(புறநானூறு, 2 : 13-16)

என்று கூறுகிறார்.

இக்கருத்துப் பற்றி ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

உதியன் சேரலாதன் தன் எல்லையை விரிவுபடுத்த வேண்டிக் கரிகால் சோழனோடு போரிட்டுத் தோல்வியுற்றான் என்றும், அப்போரில் முதுகில் ஏற்பட்ட புண்ணிற்கு நாணி வடக்குத்திசை நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டான் என்றும் மாமூலனார் அகநானூற்றில் குறிப்பிடுகிறார்.

கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்

பொருது புண் நாணிய சேரலாதன்

அழிகள மருங்கின் வாள் வடக் கிருந்தென

(அகநானூறு, 55: 10-12)

5.3.2 இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேர மன்னர்களுள் சிறந்தோனாகிய செங்குட்டுவனையும், சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளையும் பெற்றெடுத்த பெருமைக்குரிய பேரரசன் ஆவான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இம்மன்னன் குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் எனவும், குடக்கோ நெடுஞ்சேரலாதன் எனவும் அழைக்கப் பெற்றவன் ஆவான். இவன் உதியன் நெடுஞ்சேரலாதனின் மைந்தன் ஆவான். இவனுக்கு இரு மனைவியர். முதல் மனைவி நற்சோணை என்பவள் ஆவாள். இரண்டாவது மனைவி வேள்விக் கோமான் பதுமனின் மகள் ஆவாள். நற்சோணையின் வயிற்றில் தோன்றியவர்கள் செங்குட்டுவனும், இளங்கோவடிகளும் ஆவர். செங்குட்டுவன்,

நெடுஞ்சேரலாதற்குச்

சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்

(பதிற்றுப்பத்து, பதிகம் – 5ஆம் பத்து: 2-3)

என்று பதிற்றுப்பத்துப் பதிகத்தில் குறிக்கப்படுவது காணலாம்.

நெடுஞ்சேரலாதன், இமயமும் குமரியும் இருபால் எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்தான். பெரும்படையுடன் வடநாடு சென்று ஆரிய அரசர்களை வென்று அவ்வெற்றிக்கு அறிகுறியாக இமயமலை மீது தன் அரசின் அடையாளமாகிய வில்லினைப் பொறித்து மீண்டான் என்பது வரலாறு.

அமைவரல் அருவி இமையம் வில் பொறித்து

(2ஆம் பத்து-பதிகம்: 4)

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பெற்ற மற்றொரு பெரிய வெற்றி கடற்கொள்ளையர் கடம்பரை வென்றதாகும். இவன் ஆட்சிக் காலத்தில் கடம்பர் என்பார் மேலைக் கடலில் ஒரு தீவில் வாழ்ந்திருந்தனர் என்றும், அவர்கள் அத்தீவு வழியாகச் செல்லும் வாணிகக் கப்பல்களை வழிமறித்துக் கொள்ளையடித்தனர் என்றும் கூறுவர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கப்பல் படையுடன் சென்று அவர்களை வென்று அவர்களுடைய காவல் மரமாகிய கடம்ப மரத்தினை வெட்டி அதில் வீரமுரசம் செய்தான் என்பதை அகநானூறு பின்வருமாறு குறிப்பிடுகிறது.

சால்பெருந் தானைச் சேர லாதன்

மால்கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய

பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன

(அகநானூறு, 347:2-4)

(தானை = படை; மால் கடல்= பெரிய கடல்; ஓட்டி = பகைவர்களை விரட்டி; அறுத்து = வெட்டி; இயற்றிய = செய்த.)

நெடுஞ்சேரலாதன் ஆன்றோர்களை ஆதரித்தான். இம்மன்னன் தனக்கு வரும் திறையினைப் பரிசிலர்க்கும், புலவர்க்கும் வாரி வழங்கிய வள்ளல் ஆவான். இவன் தன்னைப் புகழ்ந்து பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்ற புலவருக்கு, தன் ஆட்சிக்கு உட்பட்ட உம்பற்காடு என்னும் பகுதியில் உள்ள ஐந்நூறு ஊர்களையும், தென்னாட்டிலிருந்து வரும் வருவாயில் ஒரு பாகத்தையும் கொடுத்தான். இவன் ஐம்பத்து எட்டு ஆண்டுகள் அரசு புரிந்தான். இச்செய்திகளைப் பதிற்றுப்பத்தில் உள்ள இரண்டாம் பத்திற்கு அமைந்த பதிகம் குறிப்பிடுகிறது.

5.3.3 பல்யானைச் செல்கெழுகுட்டுவன் இம்மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் உடன் பிறந்தவன் ஆவான். இவனது காலத்தில் யானைப்படை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருந்தது. இவன் யானைகள் மிகுந்திருந்த உம்பற்காட்டை வென்று தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான் என்று கூறுவர்.

பல வெற்றிமேல் வெற்றி கண்ட பல்யானைச் செல்கெழுகுட்டுவன் சிறந்த கொடையாளியாகவும் இருந்தான். ஒரு சமயம் பாலைக் கௌதமனார் என்ற புலவர் வேண்ட, பத்துப் பெரு வேள்விகள் செய்தான். இருபத்தைந்து ஆண்டுகள் நாட்டை ஆண்டபின் காட்டிற்குச் சென்று கடுந்தவம் மேற்கொண்டான் என்று பதிற்றுப்பத்துப் பதிகம் கூறுகிறது.

நெடும்பார தாயனார் முந்துறக் காடு போந்த

பல்யானைச் செல்கெழு குட்டுவன்

(பதிற்றுப்பத்து, பதிகம் – 3: 10-11)

5.3.4 கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன் ஆவான். ஒரு சமயம் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அவையில் இருக்கும்போது ஒரு நிமித்திகன் வந்து அவனிடம் உன் இளைய மகன் இளங்கோவே ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு உரிய தகுதி உடையவன் என்று கூறினான். அதைக் கேட்ட இளங்கோவடிகள் மூத்தோன் இருக்க இளையோன் அரசனாதல் அறம் இல்லை என்று கூறிக் குணவாயில் கோட்டம் புகுந்து தவக்கோலம் பூண்டார். பின்பு முறைப்படி செங்குட்டுவன் ஆட்சிக்கு வந்தான் என்று கூறுவர்.

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் பல வெற்றிகளைப் பெற்றான். கடலிடையே வாழ்ந்த கொள்ளையர்களாகிய கடம்பர்களை வென்று, அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த காரணத்தால் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் எனக் கூறப்பெற்றான்.

மோகூர்ப் பழையனை வென்று தன் நண்பன் அறுகைக்கு நேர்ந்த இழிவைப் போக்கினான். நேரிவாயில் என்னுமிடத்தில் தன்னை எதிர்த்து வந்த ஒன்பது மன்னர்களை வெற்றி கொண்டான்.

இவ்வாறு இவன் பெற்ற வெற்றிகள் பலப்பல. ஆயினும் அவை எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்த வெற்றிகள் இரண்டு.

ஒன்று, இவனின் தாய் இறந்தவுடன் அவளது படிமத்தைக் கங்கையில் நீராட்டச் சென்றபோது அவனை எதிர்த்த வட இந்திய மன்னர்களை வெற்றி கொண்டதாகும். மற்றொன்று, கண்ணகிக்காகச் சிலை செய்ய வேண்டிக் கல் கொணர இமயம் சென்றபோது, எதிர்த்த கனக விசயர் என்ற மன்னரை வென்று, அவரது தலை மீது கல்லை ஏற்றித் தமிழகம் கொண்டு வந்ததாகும்.

இச்செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் கட்டி விழா எடுத்து, அவ்விழாவிற்கு இலங்கை வேந்தன் கயவாகுவை அழைத்துச் சிறப்பித்தான். இதன் மூலம் இம்மன்னனின் காலம் கயவாகுவின் காலமாகிய கி.பி. 177-199 என்பது தெரிய வருகிறது.

5.3.5 களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இம்மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவன் ஆவான். இவன் முடிசூட்டுகின்ற காலத்தில் அரசமுடியும், கண்ணியும் காணாமல் போனதால் களங்காய்களால் ஆன கண்ணியையும், நாரால் பின்னப்பட்ட முடியையும் அணிந்து கொண்டான். ஆதலால் இவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் எனப்பட்டான்.

நார்முடிச் சேரல் பல வெற்றிகளைக் கொண்டவன் ஆவான். கடம்பின் பெருவாயில், வாகைப் பெருந்துறை என்னும் இரு இடங்களில் நடைபெற்ற போரில் நன்னன் என்ற மன்னனை வென்று அவனிடம் தான் முன்பு இழந்த பூழி நாட்டை மீட்டுக் கொண்டான். இதனை அகநானூறு,

இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்

பொலம் பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய

வலம்படு கொற்றம் தந்த வாய்வாள்

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்

இழந்த நாடு தந்து

(அகநானூறு, 199: 19-23)

என்று குறிப்பிடுவது காணலாம்.

(செரு = போர்; பொருது = போர் செய்து; களத்து = போர்க்களத்து; ஒழிய = மடிய; கொற்றம் = வெற்றி; வாய் வாள் = கூரிய வாள்; இழந்த நாடு = பூழி நாடு; தந்து = பெற்று.)

மேலும் நார்முடிச் சேரல் அதியமான் நெடுமான் அஞ்சியின் குலத்தில் தோன்றிய நெடுமிடல் என்பவனை யானைப் படை கொண்டு வென்று அவனது நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட செய்தி பதிற்றுப்பத்தில் சிறப்பாகப் பேசப்படுகிறது.

நெடுமிடல் சாய, கொடுமிடல் துமிய

பெருமலை யானையொடு புலம்கெட இறுத்துக்

பிழையா விளையுள் நாடு அகப்படுத்து

(பதிற்றுப்பத்து , 32: 10-11,14)

(சாய = தோற்று வீழ; புலம்கெட = பகைவர் நாடு அழியும்படி; இறுத்து = தங்கி; பிழையா விளையுள் = தவறாத விளைச்சல்; நாடு அகப்படுத்து = நாட்டைக் கைப்பற்றி.)

5.3.6 ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் தம்பி ஆவான். நறவு என்னும் கடற்கரை நகரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டின் வடமேற்குப் பகுதியை ஆட்சி புரிந்தவன் ஆவான். ஒரு சமயம் தமிழகத்து வட எல்லைக்கு அப்பால் உள்ள தண்டகாரணியம் என்ற காட்டில் வாழும் கொள்ளையர்கள் தமிழகத்துள் புகுந்து அங்கே உள்ளவர்களுக்கு உரிய ஆட்டு மந்தைகளைக் கவர்ந்து சென்றனர். இதனை அறிந்த ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டகாரணியம் படை எடுத்துச் சென்று கொள்ளையரோடு போரிட்டு வென்று ஆட்டு மந்தைகளை மீட்டுக் கொணர்ந்தான் ஆதலால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப் பெயர் பெற்றான்.

5.3.7 அந்துவஞ்சேரல் இரும்பொறை இம்மன்னன் சேர மன்னர்களின் இருபிரிவில் ஒரு பிரிவான இரும்பொறை மரபில் வந்தவன் ஆவான். இம்மன்னனைப் பற்றி அறிந்துகொள்வதற்குச் சான்றுகள் அவ்வளவாகக் கிடைக்கப் பெறவில்லை. இருப்பினும் ஒரு சான்று மூலம் இம்மன்னனைப் பற்றி அறிந்து கொள்ளமுடிகிறது. ஒரு சமயம் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி இவனுடன் பகை கொண்டு இவனது தலைநகராகிய கருவூரை முற்றுகையிட்டான். அவ்வமயம் யானை மீது ஏறித் தனியே வந்த கிள்ளி சேரர் படைக்குள் புகுந்துவிட்டான். இதனை அறிந்த உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர், தனித்து வந்தவனுக்குக் கேடு விளைவித்தல் அறமாகாது என எண்ணி, அவனுக்கு ஊறு ஏதும் ஏற்படாதவண்ணம் காக்குமாறு இரும்பொறையை வேண்டிக்கொண்டார். இச்செய்தி புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (புறம்,13) சுட்டப்பட்டுள்ளது. இவனைப் பற்றி அறியக் கூடியன இவ்வளவே.

5.3.8 பிற சேர மன்னர்கள் சங்க காலத்தில் சேர நாட்டினைத் திறம்பட ஆண்ட சேர மன்னர்கள் மேலே கூறியவர்கள் மட்டுமின்றி இன்னும் பலர். அவர்கள் வீரத்திலும், கொடையிலும் தங்களுடைய முன்னோர்களைப் போலச் சிறந்து விளங்கினர். அவர்களைப் பற்றிப் புறநானூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு ஆகிய நூல்களால் அறிந்து கொள்ளலாம். அம்மன்னர்கள் வருமாறு:

செல்வக் கடுங்கோ வாழியாதன்-புறநானூறு

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை–

பதிற்றுப்பத்து பதிகம் புறநானூறு

இளஞ்சேரல் இரும்பொறை–பதிற்றுப்பத்து பதிகம், புறநானூறு

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை–புறநானூறு

குட்டுவன் கோதை–புறநானூறு

கோக்கோதை மார்பன்–அகநானூறு

சோழிய ஏனாதி திருக்குட்டுவன்–புறநானூறு

மாந்தரம் பொறையன் கடுங்கோ–அகநானூறுமாரி வெண்கோ–புறநானூறு

யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை–புறநானூறு

5.4 சோழ மன்னர்கள்

மூவேந்தருள் (சேரர், சோழர், பாண்டியர்) நடுவண் வைத்துச் சிறப்பிக்கப் பெறுபவர் சோழர் ஆவர். இச்சோழ மன்னர்கள் கிள்ளி, செம்பியன், சென்னி, வளவன் எனவும் அழைக்கப்பெற்றனர். இன்றைய அளவுக்கும் சோழ அரசின் தோற்றமும் தொன்மையும் அறிய முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்க்கு உரியது என்றாலும், அப்பெருமை சோழர்களுக்கும் உரித்து ஆகும். சோழ நாடானது செந்தமிழ் நாட்டினைச் சேர்ந்த பன்னிரு நாடுகளில் புனல் நாடு, பன்றி நாடு, அருவா நாடு என்ற நாடுகளை (இன்றைய தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை) உள்ளடக்கிய நாடு ஆகும். சோழ நாட்டில் உறையூர், கழார், குடந்தை, குராப்பள்ளி, புகார், வல்லம், பிடவூர், வெண்ணி போன்று பல பேரூர்கள் இருந்திருந்தாலும் சோழ நாட்டிற்குத் தலைநகராம் சிறப்புற்றிருந்தவை தொடக்கத்தில் உறையூரும், பின்னர்ப் புகாருமே ஆகும்.

சோழ நாடு சங்க இலக்கியங்களில் பாராட்டப் பெற்றிருக்கின்றது. சங்க இலக்கியங்களில் மிகவும் பழையன எனக் கருதப்பெறும் பாடல்களால் தொகுக்கப்பட்டுள்ள புறநானூற்றில் பல சோழ மன்னர்களைப் பற்றிய செய்திகள் பொதிந்து கிடக்கின்றன. பல புலவர்கள் சோழ மன்னர்களைப் பற்றிப் பாடியிருந்தாலும் அவர்கள் வரலாறு ஒன்றும் திட்டவட்டமாகக் கிடைக்கவில்லை எனலாம். சங்க இலக்கியங்கள் மட்டும் அல்லாமல் பிறநாட்டு வரலாற்றுப் பேரறிஞர்களாலும் சோழ நாடு பாராட்டப் பெற்றுள்ளது. கி.பி. முதல் நூற்றாண்டில் எழுதப்பெற்ற செங்கடற் செலவு என்னும் பொருளுடைய எரித்திரியக் கடலின் பெரிப்ளூசு என்ற நூலில், அந்நூலை எழுதிய ஆசிரியர் புகார் நகரைக் கடற்கரை நாடு என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னாட்டு நெல் களஞ்சியம் என்று சொல்லும் அளவிற்குச் சிறப்புடன் அமைந்திருந்த சோழ நாட்டினை ஆண்ட மன்னர்களைப் பற்றி ஒருவர் பின் ஒருவராகக் காணலாம். இம்மன்னர்களின் சின்னம் புலிக் கொடியாகும், ஆத்தி மாலையை இவர்கள் அடையாள மாலையாகக் கொண்டிருந்தனர்.

5.4.1 உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி சங்க காலச் சோழ மன்னர்களுள் காலத்தால் முதற்கண் வைத்துச் சிறப்பிக்கப் பெறுபவன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி ஆவான். இவன் அழகினை உடைய பல தேர்களைக் கொண்டவன் ஆதலின் இப்பெயர் பெற்றான் என்பர். இவனைப் பற்றிப் புறநானூற்றில் இரண்டு பாடல்கள் (புறம் 4, 266) உள்ளன. இப்பாடல்கள் இவனுடைய வீரம், நால்வகைப் படைப் பெருமை, கொடை ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.

5.4.2 கரிகால் சோழன் இவன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன் ஆவான். தாயின் வயிற்றில் இருக்கும்போதே அரச உரிமையைப் பெற்ற சிறப்புடையவன். இதனைப் பொருநராற்றுப்படை பின்வருமாறு கூறுகிறது.

உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்

தாய்வயிற் றிருந்து தாயம் எய்தி

(பொருநராற்றுப்படை: 130,132)

(உருவம் = அழகிய; பஃறேர் = பல்+தேர் பலதேர்கள்; இளையோன் = உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி; சிறுவன் = மகன்.)

உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி இறந்துபட்டபோது கரிகாலன் மிகவும் இளையவனாக இருந்தான். அரசைக் கைப்பற்றும் சூழ்ச்சியுடன் அவனுடைய தாயத்தார் அவனைச் சிறைப்பிடித்து வைத்து, சிறையைத் தீக்கு இரையாக்கினர். தீயிலிருந்து தப்பித்துச் செல்லும்போது அவன் கால்கள் தீப்பட்டுக் கருகிவிட்டன. இக்காரணத்தால் அவன் கரிகாலன் அதாவது கரிய காலை உடையவன் என அழைக்கப்பட்டான். சங்க இலக்கியத்தில் இவனைக் கரிகால் என்று அன் என்ற ஆண்பால் விகுதி சேர்க்காமல் குறிப்பிட்டுள்ளனர்.

பெருவளக் கரிகால்

(அகநானூறு, 125: 18)

பெரும்பெயர்க் கரிகால்

(அகநானூறு, 246: 8)

மேலும் இவன் வளவன், கரிகால் வளவன், கரிகால் பெருவளத்தான், திருமாவளவன் என்ற பெயர்களாலும் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளான்.

கரிகால் சோழன் சிறிது காலம் ஆட்சி புரியாமல் இருந்தாலும் பின்னர் சோழ நாட்டின் ஆட்சிப் பீடத்தில் முறைப்படி அமர்ந்தான். ஆட்சியைப் பிடித்தவுடன் தன் பகைவர்களைக் குறிப்பாகத் தன் தாயத்தார்க்குத் துணை நின்றவர்களை வென்றான்.

இம்மன்னன் தஞ்சாவூர்க்கு 24 கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் நிகழ்ந்த போரில் தன்னை எதிர்த்து வந்த சேர மன்னன் நெடுஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், பதினொரு வேளிரையும் ஒருங்கே தோல்வியுறச் செய்தான்.

இருபெரு வேந்தரும் ஒரு களத்து அவிய

(பொருநராற்றுப்படை:146)

(இருபெரு வேந்தர் = சேர, பாண்டியர்; அவிய = மடிய.)

கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்

பொருது புண் நாணிய சேரலாதன் (அகநானூறு, 55: 10-11)

(பொருது = போர் செய்து; புண் = முதுகில் ஏற்பட்ட புண்.)

காய்சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்

ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்

சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்

இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய

பதினொரு வேளிரொடு வேந்தர் சாய

(அகநானூறு, 246: 8-12.)

(மொய்ம்பு = வலிமை; பெரும்பெயர் = பெரிய புகழ்; வெண்ணி வாயில் = வெண்ணிப்பறந்தலை என்னும் இடம்; வேந்தர் = சேர, பாண்டியர்.)

இவ்வெண்ணிப் போர் மூலம் பெரும் புகழடைந்தான் கரிகாலன். இப்போர் தமிழகத்து மன்னர்களின் மேலாண்மையைக் கரிகாலனுக்கு வழங்கியது.

வெண்ணிப் போரில் தோல்வியுற்ற வேளிர் பதினொருவரில் உயிர் பிழைத்துத் தப்பிய ஒன்பதின்மர் வாகை என்னும் இடத்தில் கரிகால் சோழனை மீண்டும் போரில் எதிர் கொண்டனர். இப்போரிலும் கரிகால் சோழன் வெற்றி கொண்டான். பின்பு பகைவர் நாடுகளில் சோழப்படை புகுந்து பெரும் அழிவை விளைவித்தது. ஒளியர், அருவாளர், வடவர், குடவர், தென்னவர், பொதுவர் போன்ற பகைவர் பலரையும் வென்று அடக்கினான் கரிகால் சோழன்.

பல் ஒளியர் பணிபு ஒடுங்க

தொல் அருவாளர் தொழில் கேட்ப

வடவர் வாட, குடவர் கூம்ப,

தென்னவன் திறல் கெட

(பட்டினப்பாலை: 274-277)

கரிகால் சோழன் சேரமன்னன், பாண்டிய மன்னன், வேளிர் போன்றோரை ஒருங்கே தோற்கடித்ததால் தமிழகம் முழுவதும் அவனுடைய ஆட்சியின் கீழ் வந்தது. இருப்பினும் வட நாட்டுக்கும் சென்று இடையில் உள்ள மன்னர்களை எல்லாம் வென்றான். இமயம் வரை சென்று அங்குத் தன் நாட்டின் புலிக் கொடியை நாட்டி விட்டு வந்தான்.

கரிகால் சோழன் சிறந்ததொரு கப்பற்படையையும் கொண்டிருந்தான். இப்படையுடன் இலங்கை மேல் போர் தொடுத்தான் அதில் வெற்றியும் எய்தினான். இதுபற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொண்டு வந்து, அவர்களைக் கொண்டு காவிரியாற்றின் கரையை உயர்த்தி அமைத்தான்.

பொன்னிக் கரை கண்ட பூபதி

(விக்கிரம சோழன் உலா-26)

கரிகால் சோழன் காலத்தில் தமிழகம் செழிப்புற்று விளங்கியது. சமணப்பள்ளிகள் பலவும், பௌத்தப் பள்ளிகள் பலவும் பூம்புகாரில் சச்சரவு ஏதும் இன்றி அமைதியாக நடைபெற்று வந்தன.

தவப்பள்ளி தாழ் காவின்

(பட்டினப்பாலை: 53)

கரிகால் சோழன் தன்னைப் பட்டினப்பாலை என்னும் நூல் கொண்டு புகழ்ந்து பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசு அளித்தவன் ஆவான். இதனைக் கலிங்கத்துப் பரணி,

தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்

பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்

பண்டு பட்டினப் பாலை கொண்டதும்

(கலிங்கத்துப்பரணி, 198: 2-4)

என்று குறிப்பிடுகிறது.

கரிகால் சோழன் சோழ நாட்டில் உள்ள காடுகளை அழித்து, அவற்றை விளைச்சல் நிலங்களாக மாற்றினான். பாசன வசதிக்காகக் குளங்கள் வெட்டினான். கல்லணையைக் கட்டினான். இவன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் முக்கியத் துறைமுகப் பட்டினமாக விளங்கியது.

5.4.3 நலங்கிள்ளி – நெடுங்கிள்ளி நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்னும் இவ்விரு மன்னர்களும் கரிகால் சோழன் வழி வந்தவர்கள். கரிகால் சோழன் மறைவிற்குப் பிறகு வாரிசு உரிமைப் போர் ஏற்பட்டது. இதன் விளைவால் காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு நலங்கிள்ளி சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். நெடுங்கிள்ளி உறையூர், ஆவூர் போன்ற ஊர்களைக் கைப்பற்றி ஆவூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டு வந்தான். இவ்விருவருள் நலங்கிள்ளி மிக்க ஆற்றல் வாய்ந்தவன். இம்மன்னன், “பகைவர்கள் பணிந்து வந்துகேட்டால், என் அரசையும் தருவேன். அவர்கள் என்னை மதிக்காவிடின் அவர்களை யானையின் காலின் கீழ் அகப்பட்ட மூங்கிலைப் போல நசுக்குவேன்” என்று கூறியவன் ஆவான்.

கழைதின் யானைக் கால் அகப்பட்ட

வன் திணி நீள் முளை போல

(புறநானூறு, 73: 9-10)

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளியின் தலைநகராகிய ஆவூரைக் கைப்பற்ற எண்ணி, தன் தம்பியான மாவளத்தானை அனுப்பி ஆவூர்க் கோட்டையை முற்றுகையிடவைத்தான். இதனைக் கண்ட நெடுங்கிள்ளி போர் புரியாமல் கோட்டை வாயிலை அடைத்துக்கொண்டு உள்ளே அடங்கியிருந்தான். இதனை அறிந்த கோவூர் கிழார் என்னும் புலவர் நெடுங்கிள்ளியிடம் சென்று அறவுரை கூறினார். “நீ நின் மக்களைப் பசியும், பிணியும் அண்டாதவாறு காக்க வேண்டும் அறம் உடையவனாயின் இந்நாடு நினதென்று கூறிக் கோட்டை வாயிலைத் திறந்துவிடு. மறம் உடையவனாயின் போர் செய்யத் திறந்து விடு” என்று உரைத்தார்.

அறவை ஆயின் நினது எனத் திறத்தல்

மறவை ஆயின் போரொடு திறத்தல்

அறவையும் மறவையும் அல்லை யாக

(புறநானூறு,44: 11-13)

கோவூர் கிழார் கூறிய அறிவுரை கேட்டு, ஆவூர்க் கோட்டையை நலங்கிள்ளியிடம் ஒப்படைத்துவிட்டு நெடுங்கிள்ளி உறையூர்க் கோட்டைக்குச் சென்று அடைத்துக்கொண்டான். நலங்கிள்ளி பெரும்படையுடன் சென்று உறையூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். இதனை அறிந்த கோவூர் கிழார் இம்முறை நலங்கிள்ளியிடம் சென்று நீங்கள் இருவரும் ஒரே சோழர் குடியில் வந்தவர்கள். ஒரே குடியில் வந்த உங்களுக்குள் ஏன் இந்தப் போர் எனக் கூறிச் சமாதானம் செய்து வைத்தார். இருப்பினும் காரியாறு என்னும் இடத்தில் இரு மன்னர்களுக்கும் போர் மூண்டது. இறுதியில் நெடுங்கிள்ளி போரில் மடிந்தான். காரியாற்றுப் போர் மூலம் சோழப்பேரரசின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

5.4.4 கிள்ளிவளவன் கிள்ளிவளவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். இவன் புலவர்களை ஆதரிப்பதிலும், போர் வல்லமையிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான்.

இக்கிள்ளிவளவன், தென் பெண்ணையாற்றின் கரையில் உள்ள திருக்கோவிலூர் என்னும் இடத்தில் ஆட்சி புரிந்து வந்தவனாகிய மலையமான் திருமுடிக்காரியுடன் போர் புரிந்து வெற்றி பெற்றான்.

கிள்ளிவளவன் சேரருடன் போர் புரிந்து கரூரைச் சூறையாடினான். பின்பு பாண்டியருடனும் போர் புரிந்தான் என நக்கீரர் கூறுகிறார். அப்போரில் கிள்ளிவளவன் தோற்கடிக்கப்பட்டான் எனத் தெரிகிறது.

இம்மன்னன் செம்பியன் எனவும் அழைக்கப்பட்டான். இவன் குளமுற்றம் என்னும் ஊரில் இறந்தான். எனவே இவனைக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்றும் அழைத்தனர்.

5.4.5 பிற சோழ மன்னர்கள் சோழ மன்னர்களில் மேலே கூறப்பட்டவர்களைப் போல் பெரிதும் போற்றப்படாமல் இருந்தாலும் இன்னும் சில சோழ மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவன் செங்கணான் என்னும் மன்னன் ஆவான். இம்மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறையைக் கழுமலம் என்னும் இடத்தில் நடந்த போரில் தோற்கடித்தான். இவன் சிவபெருமானிடத்தில் பக்தி கொண்டு ஆற்றிய சமயப் பணி குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

கோப்பெருஞ்சோழன் என்னும் மன்னன் பிசிராந்தையார் என்னும் புலவரின் நண்பனாக இருந்தான். இவன் அறநெறி தவறாமல் சிறிது காலம் ஆட்சி புரிந்து வந்தான்.

தித்தன் என்னும் மன்னன் உறையூரில் இருக்கை அமைத்து ஆட்சி புரிந்து வந்தான்.

கோப்பெரு நற்கிள்ளி, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி போன்றோரும் சோழ மன்னர்களாகச் சோழ நாட்டின் ஒரு பகுதியில் ஆட்சி புரிந்து வந்தனர்.

5.5 பாண்டிய மன்னர்கள்

பாண்டிய நாடு தென்புலம் என்றும் பாண்டிய மன்னர்கள் தென்புலம் காவலர் பெருமான் என்றும் அழைக்கப் பெறுவர். தென்புலம் என்பது பழனி மலைக்குத் தெற்கே உள்ள நிலப்பகுதியாகும். பாண்டிய அரசிற்கு நீண்டதொரு வரலாறு உண்டு. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்குப் பாண்டிய மன்னன் தூதுவரை அனுப்பினான் என்பது வரலாறு. பாண்டிய நாடு பெருமையோடு விளங்கியதற்குக் காரணம் பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, கடல்கடந்து பண்டைய காலத்திலே வாணிபம் மேற்கொண்டதுதான். பாண்டிய நாட்டின் தெற்கே கடல்கோள் நடந்ததால் பெரும் நிலப்பரப்பு நீரில் மூழ்கிப் போய்விட்டது எனப் புவியியலாளர் கூறுவர். அப்படிப்பட்ட பாண்டிய நாட்டைப் புகழ் பெற்ற மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர்.

பண்டைய காலத்தில் பாண்டியர் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். கடல்கோள் காரணமாக அக்கபாடபுரத்திலிருந்து மதுரைக்குத் தலைநகரை மாற்றிப் பாண்டியர் ஆட்சி புரிந்தனர். இம்மதுரைக்குக் கூடல் நகர் என்ற வேறு பெயரும் உண்டு. இம்மாநகரம் வைகையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இம்மதுரையில்தான் மூன்றாவது சங்கம் அமைத்துப் பாண்டிய மன்னர்கள் தமிழ் வளர்த்தனர். பாண்டிய நாட்டின் கடலில் எடுக்கப்பட்ட முத்துக்கள் அயல்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ப்பட்டன. பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையில் மாட மாளிகைகளும், அகன்ற வீதிகளும் காணப்பட்டன. பாண்டிய மன்னர்கள் நீதி வழுவாது நல்ல முறையில் ஆட்சி புரிந்தனர். மேலும் புலவர்களைப் போற்றி வந்தனர்.

இனிப் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர்களைப் பற்றிக் காண்போம்.

5.5.1 வடிம்பலம்ப நின்ற பாண்டியன் சங்ககாலப் பாண்டிய மன்னகளுள் காலத்தால் மிகவும் முற்பட்டவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் ஆவான். இவனுடைய அரசவையில்தான் தொல்காப்பியம் அரங்கேறியது என்பர். இவன் முடிசூட்டிக் கொண்டு நெடுங்காலம் ஆண்டு வந்ததால் இம்மன்னன் நெடியோன் என்று பாராட்டப்பெற்றான்.

நிலம்தந்த பேர் உதவி

பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்

(மதுரைக் காஞ்சி: 60-61)

5.5.2 பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முதுகுடுமிப் பெருவழுதி என்னும் இயற்பெயருடைய இவன் யாகசாலைகள் பல அமைத்து, யாகங்கள் (வேள்விகள்) செய்ததால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப் பெயர் பெற்றான். இவன் வேள்விகள் செய்வதற்கு உதவிய அந்தணர்களுக்கு வேள்விக்குடி என்னும் சிற்றூரைத் தானமாக அளித்தான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது.

இவன் பகைவரோடு போர் செய்யும்போது அறநெறியைக் கடைப்பிடித்தான். பகைவர் நாட்டினுள் படையுடன் புகுந்தவுடன், முதற்கண் போர் நடைபெறும் இடத்தில் உள்ள பசுக்கள், அந்தணர்கள், பிணியுடையோர், பெண்கள், புதல்வரைப் பெறாதவர்கள் ஆகியோரைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பறையடித்து அறிவித்துவிட்டு, அதற்குப் பின்னரே போர் செய்யத் தொடங்குவான் என்று புறநானூறு கூறுகிறது.

ஆவும், ஆன்இயல் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும், பேணித்

தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்

(புறநானூறு, 9:1-5))

(ஆ – பசு; ஆன் இயல் – பசுவின் இயல்பை உடைய; கடி விடுதும் – விரைவாகச் செலுத்துவோம்; அரண் – பாதுகாப்பான இடம்; சேர்மின் – சென்று சேருங்கள்)

5.5.3 தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

இவன் சங்க காலப் பாண்டியருள் சிறந்து விளங்கிய பாண்டிய மன்னன் ஆவான். மிக இளமைக் காலத்திலேயே அரசபதவியை அடைந்தான். ஒரு சமயம் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்னும் வேளிர் ஐவரும் ஒன்று கூடிப் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தனர். தலையாலங்கானம் என்ற இடத்தில் நடந்த போரில் பாண்டியன் அப்பகைவர் எழுவரையும் தோற்கடித்து வெற்றி பெற்றான். இதனால் இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் எனப்பட்டான்.

பொருதும் என்று தன்தலை வந்த

புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க

ஒருதான் ஆகிப் பொருதுகளத்து அடலே

(புறநானூறு , 76: 11-13)

(பொருதும் என்று = போர் செய்வோம் என்று கூறி; தன்தலை வந்த = தன்மீது படையெடுத்து வந்த; நல் வலம் = நல்ல வலிமை; அடங்க = கெடும்படி)

ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட

(புறநானூறு , 2: 16)

(ஆலங்கானத்து = தலையாலங்கானத்தே; அமர் கடந்து = போர் செய்து வென்ற)

இப்பாண்டிய மன்னன் பெற்ற வெற்றியைச் சின்னமனூர்ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. பத்துப்பாட்டில் அமைந்து இருக்கும் மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை ஆகிய பாட்டுகளுக்குப் பாட்டுடைத் தலைவனாக இம்மன்னன் இருக்கின்றான்.

5.5.4 கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி இப்பாண்டிய மன்னன் சங்ககாலப் பாண்டிய மன்னருள் இறுதியில் வாழ்ந்தவனாவான். இவன் ஒரு சிறந்த வீரனாகத் திகழ்ந்தான். இவன் காலத்தில் பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கானப்பேரெயில் என்னும் கோட்டை உள்ள பகுதியை வேங்கைமார்பன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். உக்கிரப் பெருவழுதி வேங்கை மார்பனை வென்று கானப் பேரெயிலைக் கைப்பற்றித் தனக்கு உரியதாக்கிக் கொண்டான். எனவே இவன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனப்பட்டான். கானப் பேரெயில் தற்போது சிவகங்கைக்குக் கிழக்கே 16 கி.மீ தொலைவில் காளையார் கோயில் என்னும் பெயரில் உள்ளது.

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி யாவருடனும் பகைமை பாராட்டாமல் மாரி மாவெண்கோ என்ற சேர மன்னனுடனும், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னனுடனும் நட்புப் பூண்டிருந்தான். இந்நட்பினைப் பாராட்டி ஔவையார் புறநானூற்றில் (பாடல் எண் 367) வாழ்த்தியுள்ளார். இப்பாண்டிய மன்னன் சிறந்த புலவனாகவும், புலவர்களைப் போற்றிய புரவலனாகவும் இருந்தான். இவனது அரசவையில்தான் திருக்குறள் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்று கூறுவர். திருக்குறளைப் பாராட்டும் வகையில் இவன் பாடியதாக அமைந்த ஒரு வெண்பா திருவள்ளுவ மாலையில் காணப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக எட்டுத்தொகையுள் ஒன்றான அகநானூற்றைத் தொகுப்பித்தவன் இம்மன்னனே என்றும் கூறுவர். இப்பாண்டிய மன்னனைப் பற்றிய குறிப்புகள் இறையனார் அகப்பொருள் உரையிலும், சிலப்பதிகார உரையிலும் காணப்படுகின்றன. உக்கிரப் பெருவழுதியைப் பற்றி ஐயூர் மூலங்கிழாரும், ஔவையாரும் புறநானூற்றில் பாடியுள்ளனர்.

5.5.5 பிற பாண்டிய மன்னர்கள் பாண்டிய மன்னருள் மேலும் ஒரு சில மன்னர்கள் புகழ் பெற்று விளங்கினர். அப்பாண்டிய மன்னர்களைப் பற்றி அகநானூற்றிலும் பிற இலக்கியங்களிலும் சுட்டப்பட்டிருந்தாலும் செய்திகள் அவ்வளவு விரிவாகக் கூறப்படவில்லை. அவர்களுள் சில மன்னர்கள் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன், ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன், கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி, கீரஞ்சாத்தன், கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன், மதிவாணன், மாலை மாறன், மாறன் வழுதி, முடத்திருமாறன், வெற்றிவேற் செழியன் ஆவர்.

5.6 குறுநில மன்னர்கள்

மூவேந்தர் என்று சொல்லக்கூடிய பெருமை வாய்ந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பகுதியில் அவர்களுக்குக் கீழ் பல குறுநில மன்னர்கள் (சிற்றரசர்கள்) சிறுசிறு பகுதிகளுக்குத் தலைவர்களாக விளங்கினர். சில குறுநில மன்னர்கள் மூவேந்தர்களை எதிர்த்து வென்று தமது பகுதிகளைச் சுதந்திரமாக்கிக் கொண்டதும் உண்டு. வேளிர், கோசர் போன்ற குறுநில மன்னர்கள் தமிழகத்திற்கு வட திசையிலிருந்து வந்து குடியேறியவர்கள் ஆவர்.

5.6.1 வேளிர் வேளிர் என்பவர்களைப் பற்றிப் பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இவ்வேளிர் வடதிசையிலிருந்து அகத்தியருடன் தமிழகம் வந்து 18 குடிகளாக அமர்ந்தனர் என்றும், சேர, சோழ, பாண்டிய பேரரசுகள் தோன்றிய காலம் முதற்கொண்டே அமைந்திருந்தனர் என்றும் கூறுவர். இவர்களின் முன்னோர் திருமால் வழிவந்தவர் என்றும் கூறுவர். எவ்வாறு எனில் வடதிசையில் உள்ள துவாரகை என்னும் ஊரிலிருந்து வந்தவர்கள் என்றும் கூறுவர். பெரும்பாலும் மலைப்பகுதிகள் அவர்களது ஆட்சியின் கீழ் இருந்தன. அங்குச் செல்வம் மிக்க நகரங்கள் இருந்தன. நகரங்களைச் சுற்றிக் கோட்டைகள் எழுப்பப்பட்டிருந்தன. குறுநில மன்னர்களான வேளிர் இலக்கியத்தையும், கலையையும் போற்றி ஆதரித்தனர். கொடையில் நிகரற்று விளங்கினர்.

பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதிகமான், நள்ளி ஆகிய கடை ஏழு வள்ளல்கள் வேளிர்கள் ஆவர்.

ஆய் அண்டிரன்

வேளிர் குடி வழி வந்தவர்களில் சிறப்புப் பெற்றவன் ஆய் அண்டிரன் ஆவான்.

பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்

(புறநானூறு , 240: 3)

(அருகா = குறைவறக் கொடுக்கும்)

இக்குறுநில மன்னன் பொதியை மலையை ஆண்டு வந்தான். கொங்கு நாட்டைத் தனக்குப் பணிய வைத்தான். ஆய் அண்டிரன் சிறந்த பண்பாளன் என்று ஔவையார் பாடியுள்ளார்.

பாரி

பாரி என்பவன் கபிலரின் நண்பனாவான். இப்பாரி வேளிர் குலத் தலைவனாவான். பாண்டிய நாட்டில் பறம்பு மலை சூழ்ந்த முந்நூறு ஊர்களைக் கொண்ட பகுதியை ஆட்சி புரிந்து வந்தான். இப்பாரியின் கொடையும் வீரமும் பற்றிக் கபிலர் புறநானூற்றில் பல பாடல்களில் பாடியுள்ளார். இவன் முல்லைக் கொடி பற்றிப் படரும் பொருட்டு, அதற்குத் தன் பெரிய தேரையே நல்கிய ஈகைத் திறத்தைச் சிறுபாணாற்றுப்படை பின்வருமாறு கூறுகிறது.

சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய

பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்

பறம்பின் கோமான் பாரியும்…….

(சிறுபாணாற்றுப்படை: 89-91)

இப்பாரியின் பறம்புமலையைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் முற்றுகையிட்டனர் என்று கபிலர் கூறுகிறார்.

அதிகமான் நெடுமான் அஞ்சி

அதிகமான் நெடுமான் அஞ்சி சங்க காலத்து வேளிர்களில் சிறப்புப் பெற்று விளங்கினான். தற்போதைய தர்மபுரி மாவட்டம் அக்காலத்தில் அவனது ஆட்சியின் கீழ் இருந்தது என்பர். தகடூர் அவனது ஆட்சிக்குத் தலைநகராக இருந்தது. ஔவையாரின் சிறந்த நண்பனாக அஞ்சி விளங்கினான். இவன் ஔவையாருக்கு இறவாப் பேற்றினை நல்கும் அரிய நெல்லிக்கனியைக் கொடுத்து உதவினான். இந்த அதிகமான் சேர வேந்தனின் மேலாண்மையைப் புறக்கணித்துத் தன்னாட்சி பெற முயன்றான் என்றும் கூறுவர். அப்போது சேர நாட்டை ஆண்டு வந்த பெருஞ்சேரல் இரும்பொறை தகடூர் மீது படையெடுத்து வெற்றி கொண்டான்.

மேலே கூறப்பட்டவர் இல்லாமல் ஓரி, நன்னன், பேகன், நள்ளி போன்ற வேளிரும் சிறப்புடன் ஆட்சி புரிந்தனர்.

5.6.2 கோசர் வேளிரைப் போலவே கோசர் என்ற குடியினரும் தமிழகத்தின் வட திசையிலிருந்து தமிழகம் வந்து குடி அமர்ந்தவர் ஆவர். கோசர்களுக்கும் வேளிர்களுக்கும் பகைமை இருந்து கொண்டே இருந்தது எனக் கூறுவர். இக்கோசர் மூவேந்தர்களுக்கும் உறுதுணையாக இருந்தனர். துளு நாட்டைக் கோசர்கள் ஆண்டு வந்தனர் என்றும் கூறுவர். அசோகரின் கல்வெட்டுகளில் கூறப்பட்டிருக்கும் சத்திய புத்திரர்கள் கோசர்களாக இருக்கலாம் என்றும் கூறுவர். சங்க இலக்கியத்தில் அகநானூற்றில் இவர்கள் வாய்மொழிக் கோசர் (உண்மையே பேசும் கோசர்கள்) எனக் கூறப்படுகின்றனர்.

வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை

வளம்கெழு கோசர்

(அகநானூறு, 205: 8-9)

(நிலைஇய = நிலைபெற்ற; சேண் =நெடுந்தூரம்; நல்லிசை = நல்ல புகழ்)

அகுதை, திதியன், குறும்பியன், ஆதன் எழினி, நமும்பன் ஆகியோர் கோசரில் சிறந்த வீரர்கள் என்று போற்றப்பட்டனர்.

5.7 தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் சங்க காலத்தில் தமிழகம் மூவேந்தர்களால் அரசாட்சி செய்யப்பட்டு வந்தது என்பதைப் பற்றிப் படித்து உணர்ந்திருப்பீர்கள். சங்க கால மன்னர்கள் வடதிசை நோக்கிச் செல்லும்போதெல்லாம் எதிர்கொண்ட வட இந்திய மன்னர்களை வென்று இமயம் வரை சென்றனர் என்பது பற்றிப் படித்தீர்கள். சங்க கால மன்னர்கள் சிறந்த ஆற்றல் பெற்றவர்கள் என்றும், போரிலும், கொடையிலும் புலமையிலும் சிறப்புற்றிருந்தனர் என்றும் அறிந்திருப்பீர்கள்.

மூவேந்தர்கள் மட்டுமன்றிக் குறுநில மன்னர்களும், வேளிர்களும் தமிழகத்தே ஆட்சி புரிந்து வந்தனர் என்றும் படித்து அறிந்தீர்கள்.

பாடம் - 6

சங்க கால அரசியல்

6.0 பாடமுன்னுரை

இப்பாடத்தில் சங்க கால அரசியல் எந்த நிலையைப் பெற்றிருந்தது என்பது பற்றிய செய்திகளைத் தக்க சான்றுகளுடன் காண முடிகிறது. மன்னனின் நிலை என்ன என்பதை அறிய முடிகிறது. அரசாளும் பதவியைத் தொன்றுதொட்டு மன்னனின் மூத்த மகனே பெற்று வந்தான் என்ற உண்மையை அறிந்து கொள்ள முடிகிறது. மன்னனுக்கு என்று தனி வாள், முரசு, கொடி, மாலை, காவல் மரம், அமைச்சர், தூதுவர், ஒற்றர், படை போன்றவைகள் துணை புரிந்தன என்பது பற்றி அறியமுடிகிறது.

சங்க காலத்தில் ஊர்கள் அடங்கியதை ஊராட்சி என்றும், நகர்ப் புறங்கள் நிறைந்த இடத்தை நகராட்சி என்றும் கூறும் வழக்கம் இருந்தது தெரியவருகிறது.

பண்டைய தமிழகத்தில் வாணிபம் மிகவும் செழித்து ஓங்கி இருந்தது. ஆதலால் நாட்டின் பொருளாதார நிலையும் வளர்ச்சியுற்று இருந்தது.

இப்பாடத்தின் கீழ் சங்ககால மக்களின் வாழ்க்கை முறையையும் படித்துணர்வது அவசியமாகிறது. அதனால் அவர்களின் வாழ்க்கை முறையானது, இல்லற வாழ்வு, உணவு, குலம், கல்வி, கலை, விளையாட்டு என்றெல்லாம் சிறுசிறு தலைப்பின்கீழ் விளக்கப்படுகின்றது.

6.1 சங்க கால அரசியல்

சங்க காலத் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று பேரரசர்கள் இருந்தனர். இம்மூவருக்குள்ளே ஆதிக்கப் போட்டிகளும், போர்களும் அடிக்கடி நடைபெற்று வந்தன. மூவேந்தர்களுள் வலிமை பெற்றவன் அவ்வப்போது பிற வேந்தர்களை அடக்கி ஆதிக்கம் செலுத்தினான். கரிகால் சோழன் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் அவனது ஆதிக்கத்தின் கீழ் வந்தது. சேரன் செங்குட்டுவன் காலத்தில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் அம்மன்னனிடம் இருந்தது. பாண்டியன் நெடுஞ்செழியன் பிற தமிழ் வேந்தர்களின் மேல் ஆதிக்கம் செலுத்தினான். மூவேந்தர்களே மட்டுமின்றிச் சில குறுநில மன்னர்களும் மலைகள் போன்ற இடத்தைப் பெற்று ஆட்சி செலுத்தி வந்தனர்.

6.1.1 மன்னன் சங்க காலத் தமிழகத்தில் மன்னனின் முடியாட்சி நிலவியது. மன்னனைக் கோ, வேந்தன், கோன், இறைவன் எனப் பல பெயர்கள் இட்டு அழைப்பது உண்டு.

அரியணை உரிமை பொதுவாக மன்னனின் மூத்த மகனுக்குக் கிடைத்தது. வாரிசு உரிமை என்பது சொத்து உரிமை போன்றே காணப்பட்டது. பெண்களுக்கு வாரிசு உரிமை இல்லை. மன்னன் அரசாட்சி செய்து கொண்டிருக்கும்போது வாரிசு இன்றி இறந்தால் மக்கள் யானையின் உதவியுடன் மன்னனைத் தேர்ந்தெடுத்தனர்.

மன்னனுக்கு அவை (அரசவை) இருந்தது. அவ்வவையில் அரசுப் பணிகள் செய்யப்பட்டன. மன்னனே அவைக்குத் தலைவனாக இருந்தான். அவையில் அரசனோடு அரசியும் வீற்றிருக்கும் வழக்கம் இருந்தது. இவர்களோடு அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், புலவர்களும், மன்னனின் நண்பர்களும் கலந்து உரையாடினர். வேந்தர்களுக்கு அவையிருப்பது போலக் குறுநில மன்னர்களுக்கும் அவை இருந்தது. பாரியின் அவையில் கபிலரும், அதிகமான் அவையில் ஔவையாரும், செங்குட்டுவன் அவையில் பரணரும் அமர்ந்திருந்தனர். அவையில் இலக்கியங்கள் பற்றி விவாதங்கள் நடைபெற்றன. அரசனுக்கு ஆலோசனை வழங்கி நல்லாட்சியை ஏற்படுத்துவதே அவை உறுப்பினர்களின் முக்கியப் பணியாகும். அவையோர் மன்னன் அறம் தவறிச் செயல்பட்டபோது அவனுக்கு அறவுரை கூறி அவனை நல்வழிப்படுத்தினர்.

அறன் அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்

திறன் அறிந்தான் தேர்ச்சித் துணை

(திருக்குறள்,635)

இக்குறள், அரசன் அமைச்சர்களைத் தேர்ச்சித் துணையாகக் கொண்டான் என்பதைக் காட்டுகிறது.

பொதுமக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு நீதி வழங்குவதே அவையில் நடைபெற்ற முக்கியப் பணியாகும். அவ்வப்போது மன்னன் ஆணைகளைப் பிறப்பித்தான். அவ்வாணைகள் முரசு கொட்டி மக்களுக்கு அறிவிக்கப்பட்டன.

பொதுவாக அரசவை காலையில் கூடுவது வழக்கம். அதற்கு நாளவை என்றும் நாளிருக்கை என்றும் பெயர்கள் வழங்கி வந்தன. நாளவை என்பதற்கு நாளோலக்கம் (the durbar of a king) என்று பொருள்.

செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்

எம்மன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே

(புறநானூறு, 54:4-3)

(சேரனது தலைமை உடைய அவைக்களத்தின்கண் செம்மாந்து சென்று புகுதல் எம்மைப் போன்ற வாழ்க்கையை உடைய இரவலர்க்கு எளிது. எம்மன-எம் அன்ன, எம்மைப் போன்ற.)

அரசவையில் இசை முழங்கிக் கொண்டிருக்கும். இதற்குச் சான்று மலைபடுகடாமில் காணப்படுகிறது.

இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப

துறை பல முற்றிய பைதீர் பாணரொட

(மலைபடுகடாம்: 39-40)

(இசையை எக்காலமும் கேட்கின்ற செல்வத்தினை உடைய அரசனுடைய அவை)

ஆட்சியை மேற்கொண்டிருக்கும் மன்னனை அரச பதவியிலிருந்து நீக்க இயலாது. இருப்பினும் மன்னனே தானாக முன்வந்து மனம் நொந்து அரச பதவியை விட்டு விலகலாம். இதற்கான சான்றுகள் சங்க காலத்தில் கிடைக்கப்பெறுகின்றன. கரிகால் சோழன் வெற்றி கண்ட வெண்ணிப்போரில் சேரன் பெருஞ்சேரலாதன் முதுகில் காயமுற்றான். இந்த இகழ்ச்சியினைத் தாங்க முடியாமல் அச்சேர மன்னன் தன்னை மாய்த்துக் கொண்டான் என்பதனை இலக்கியம் வாயிலாக அறிய முடிகிறது. சேரன் கணைக்கால் இரும்பொறையைக் கழுமலம் என்னுமிடத்தில் சோழன் செங்கணான் தோற்கடித்தான். பின்பு சேரன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான். சிறையில் குடிக்கத் தண்ணீர் கேட்டபோது சிறைக்காவலன் இரும்பொறையை மதிக்காததால், அவன் நீரும் உணவும் உண்ணாமல் இருந்து உயிர் துறந்தான். இதுபோன்ற சம்பவங்களிலிருந்து மன்னர்கள் தாங்களாகவே அரச பதவியை விட்டுப் போகின்றனர் என்பது தெரிகிறது.

அரண்மனையில் பல பெண்களைக் கொண்ட அந்தப்புரம் இருந்தது. இளவரசர்கள் அரசுப் பிரதிநிதிகளாகச் செயலாற்றினர். அரசருக்கான செலவுகள் பொதுநிதியிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்பட்டன.

அரசு வருவாய் பணமாகவும், பொருளாகவும் பெறப்பட்டது.

மன்னர் அரச முடியையும், அடையாளங்களையும் கொண்டிருந்தனர். குறுநில மன்னர்களுக்கு அத்தகைய அரச முடியும் அடையாளங்களும் இல்லை.

6.1.2 முரசு போர் முரசு அரசரின் அதிகாரத்திற்கு அடையாளமாக விளங்கியது.அம்முரசு அரண்மனையில் உள்ள கட்டிலில் வைக்கப்பட்டு நன்கு பாதுகாக்கப்பட்டது. அமைதிக் காலத்தில் திருவிழாவை அறிவிப்பதற்காக முரசு கொட்டப்பட்டது. முரசு கொட்டுவதற்கு என்று பரம்பரை ஒன்று இருந்து வந்தது. போர் ஏற்படும்போது அது முரசு கொட்டி அறிவிக்கப்பட்டது. போரில் வீரர்களுக்கு உற்சாகம் ஏற்படும் வகையில் முரசு கொட்டப்பட்டது. இம்முரசு போரில் வெற்றி பெற்றதையும் அறிவித்தது. பகைவர் நாட்டை வென்று அந்நாட்டின் காவல் மரத்தை வெட்டி அதை யானையின் மீது ஏற்றித் தம் நாட்டிற்கு கொண்டு வந்து அம்மரத்திலிருந்து போர் முரசு செய்தனர்.

6.1.3 வாள் சங்ககால மன்னர்கள் வாளையும் பெற்றிருந்தனர். போர் முரசு போல் மன்னர் வாளையும் போற்றி வணங்கி வந்தனர். அதனை நீரில் நீராட்டி மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர்.

6.1.4 கொடி சங்க காலத்தில் மன்னர்கள் தங்களுக்கு என்று ஒரு அடையாளச் சின்னமாகக் கொடியைக் கொண்டிருந்தனர். சேரர் வில்கொடியையும், சோழர் புலிக்கொடியையும், பாண்டியர் மீன்கொடியையும் கொண்டிருந்தனர். போரின்போது பகைவரின் கொடியை அழிப்பது வீரர்களின் நோக்கமாக இருந்து வந்தது. கோட்டையில் கொடி பறக்கவிடப்பட்டது. பேரரசுகளின் தலைநகரிலும், அகன்ற தெருக்களிலும் கொடிகள் பறக்கவிடப்பட்டன. குறுநில மன்னர்கள் தனிக் கொடியைப் பெற்றிருந்தனர். அவர்கள் பேரரசருக்குக் கப்பம் கட்டி ஆட்சி செலுத்துபவர் என அறியலாம். கைப்பற்றப்பட்ட நாடு, வெற்றி பெற்ற நாட்டின் அடையாளச் சின்னத்தையும் கொடியில் பதித்துப் பறக்க விட வேண்டுமென்ற வழக்கம் நடைமுறையில் இருந்தது.

6.1.5 மாலை சங்க கால மன்னர்கள் பல்வேறுபட்ட மாலைகளைப் பெற்றிருந்தனர். போர்க்களத்தில் பல்வேறு மன்னர்களின் படையைப் பிரித்து அறியும் பொருட்டு வேறுபட்ட மாலைகள் அணியப்பட்டன. சிற்றரசர்களும் மாலை அணிந்து கொண்டனர். சான்றாக ஆய் அண்டிரன் சுரபுன்னை மாலையையும், சேரர் பனம்பூ மாலையையும், சோழர் ஆத்திப்பூ மாலையையும் பாண்டியர் வேப்பம்பூ மாலையையும் அணிந்திருந்தனர்.

6.1.6 காவல் மரம் சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் மரம் இருந்தது. அம்மரம் தெய்வத் தன்மை பெற்றிருந்ததாக எண்ணப்பட்டது. காவல் மரம் வெட்டப்பட்டால் அந்நகரம் அழிந்துவிடும் என்பது நம்பிக்கையாக இருந்து வந்தது.

6.1.7 அமைச்சர் அரசருக்கு ஆலோசனை கூறுவதற்கு அமைச்சர்கள் இருந்தனர். தவறான ஆலோசனை கூறி அதனால் தீமை விளையுமாயின் ஆலோசனை வழங்கிய அமைச்சர்கள் ஏளனம் செய்யப்பட்டனர்.

அரசுப் பதவியில் இருப்பவர்கள் சிறப்பாகச் செயல்பட்டால் அவர்களுக்கு மன்னன் பட்டங்கள் வழங்கிச் சிறப்புச் செய்தான். சான்றாக எட்டி, காவிதி, ஏனாதி போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.

6.1.8 தூதுவர் சங்க கால மன்னர்கள் தூதுவர்களை நியமித்திருந்தனர். தூது செல்லுதல் அவர்களது பணியாகும். பொதுவாகத் தூதுவர்கள் நடுவராக இருந்து வந்தனர். ஔவையார் அதிகமான் நெடுமான் அஞ்சியின் தூதுவராகத் தொண்டைமான் அவைக்குச் சென்றார். பெரும்புலவரான கோவூர்கிழார் தூதுவராகச் செயல்பட்டு, நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆகிய இரு மன்னர்களுக்கும் இடையே நடந்த போரைத் தவிர்த்து அவர்கள் இருவருக்கும் இடையில் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்குப் பாடுபட்டார்.

6.1.9 ஒற்றர் சங்க கால மன்னர்கள் தூதுவர்களைப் போல் ஒற்றர்களையும் நியமனம் செய்தனர். ஒற்றர் முறை நிரந்தரமான அமைப்பாக இருந்து வந்தது. இவ்வொற்றர்கள் பல்வேறு வகைப்பட்ட சத்தங்களை எழுப்பித் தங்கள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர். ஒற்றர்கள் உள்நாட்டு மக்களையும், அயல் நாட்டினரையும் உளவு பார்த்து வந்தனர். மேலும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், அரச குடும்பத்தினர், பகைவர்கள் ஆகியோர்களை உளவு பார்த்து வந்தனர். இவர்கள் மாறுவேடங்களில் இருந்து வந்தனர். ஒற்றர்கள் கூறுவது மற்ற ஒற்றர்கள் மூலம் அறிந்து கொள்ளப்பட்டது. ஓர் ஒற்றர் கூறுவதை உண்மையானது என்று முடிவு செய்யாமல், ஒற்றர்களுக்கு ஒற்றராகச் செயல்படும் மற்றோர் ஒற்றரின் கருத்தைக் கேட்டு உறுதி செய்யப்பட்டது. மூன்றாவது ஒற்றரையும் கேட்டுச் செய்திகள் சேகரிக்கப்பட்டன. ஒற்றர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாமல் தனியாகச் செயல்பட்டனர். ஒற்றர் தவறாகச் செயல்பட்டால் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

6.1.10 படை சங்க கால மன்னர்கள் எப்போதும் தம்முடைய அண்டை நாடுகளைக் கைப்பற்றும் எண்ணத்துடனே இருந்து வந்தனர். இதற்காகப் போர்க்கருவிகள், காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை போன்றவைகளை நிரந்தரமாக வைத்திருந்தனர். இப்படைகளில் வீரம் பொருந்திய மறவர், மள்ளர், எயினர், மழவர், வல்லம்பர், பரதவர் போன்றோர் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். சங்ககால மன்னர்கள் பல இடங்களை வெற்றி கொண்டுள்ளார்கள். சான்றாக, கரிகால் சோழன், நெடுஞ்செழியன், செங்குட்டுவன் ஆகியோரைக் கூறலாம். இவர்களுள் கரிகால் சோழன் வட இந்தியா மட்டும் அல்லாமல் இலங்கைக்கும் படையெடுத்துச் சென்று வெற்றிகொண்டான்.

6.2 சங்க கால ஆட்சி முறை

பொதுவாகச் சங்க காலத்தில் நற்குணங்கள் நிறைந்த மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். ஒரு சிலர் கொடுங்கோலாட்சியும் செய்து வந்தனர். மன்னர்கள் மக்களின் நல்வாழ்விற்காக அரும்பாடுபட்டனர் என்பதும் புரிகிறது. ஒற்றர்கள் வாயிலாக மக்கள் நிலையை மன்னர்கள் அறிந்து அதற்கு ஏற்றவாறு பணியாற்றி வந்தனர்.

சங்க காலத்தில் ஊராட்சி, நகராட்சி என்ற அமைப்புகள் இருந்தன.

6.2.1 ஊராட்சி ஊராட்சி பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. சோழப் பேரரசு காலத்தில் ஊராட்சி ஓங்கி வளர்ந்து இருந்தது. ஊர்களில் சிற்றூர், பேரூர், மூதூர் எனப் பலவகை ஊர்கள் இருந்தன. இவ்வூர்களில் ஆட்சி எவ்வாறு நடைபெற்று வந்தது என்பதைக் காண்போம்.

ஊரின் நடுவில் மக்கள் கூடிப் பேசுவது வழக்கமாக இருந்து வந்தது. இவ்வாறு கூடின கூட்டத்திற்கு மன்றம், பொதியில், அம்பலம், அவை என்னும் பெயர்கள் இருந்ததாகப் பழங்காலத்து இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. மன்றம் என்பது ஊர் நடுவிலுள்ள மக்கள் கூடிய இடம் எனவும், அம்பலம், பொதியில் என்னும் இரண்டும் சிறுமாளிகையைக் குறிப்பிடுகின்றன என்றும் அதன் நடுவில் ஒரு பீடம் இருந்ததாகவும் கருதுகின்றனர்.

பொதியில் சாணத்தால் மெழுகப்பட்டிருந்தது எனப் பட்டினப்பாலை கூறுகிறது.

அந்தி மாட்டிய நந்தா விளக்கின்

மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ

வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்

(பட்டினப்பாலை: 247-249)

(அந்தி-இருள் சூழும் மாலை நேரம்; மாட்டிய- கொளுத்திய; நந்தா விளக்கு-அணையாத விளக்கு; வம்பலர்-புதியவர்கள்; கந்து-தூண்).

சில ஊர்களில் பெரிய மரத்தடியில் மன்றம் கூடியது. குறிப்பாக, வேப்ப மரத்தடியில் இது அமைந்திருந்தது எனப் புறநானூற்றுப் பாடல்கள் மூலம் அறிகிறோம்.

மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப

(புறநானூறு, 371:7)

இம்மன்றத்தில் முதியோர்கள் கூடினர். அக்கூட்டத்தில் மக்களிடையே நிகழ்ந்த வழக்குகளைத் தீர்க்கும் பணி நடைபெற்று வந்தது. சில சமயங்களில் ஊர்ப் பொதுக்காரியங்களையும், சமூக நலத் திட்டங்களையும் மன்றத்தார் பொறுப்பேற்று நடத்தி வந்தனர்.

6.2.2 நகராட்சி சங்க காலத் தமிழகத்தில் சில நகரங்கள் இருந்தன. ஊர்களில் சிற்றூர், பேரூர், மூதூர் என இருந்தமை போல் நகரங்களில் பட்டினம், பாக்கம் எனச் சில இருந்தன. இவற்றில் பட்டினம் என்பது கடலோரத்தில் இருந்த நகரத்தைக் குறித்தது. பாக்கம் என்பது பட்டினத்தின் ஒரு பகுதியானது எனலாம்.

சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த நகரங்களுள் சிறந்தவை புகார் (காவிரிப்பூம்பட்டினம்) கொற்கை, மதுரை, வஞ்சி அல்லது கரூர், முசிறி, காஞ்சி முதலியவை.

நகரங்கள் வணிகத்தினாலும், தொழில் சிறப்பினாலும் வளமுற்றிருந்தன. குறிப்பாக, மதுரையும் காவிரிப்பூம்பட்டினமும் சிறப்புற்று வளர்ந்திருந்தன.

இரவு நேரங்களில் நகரங்கள் பாதுகாக்கப்பட்டன. ஊர்க்காவலர் என்பவர்கள் பாதுகாவலுக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

6.2.3 வருவாய் நிதியின்றி நிருவாகத்தை நடத்த முடியாது. ஆதலால் நாட்டிற்கான வருமானம் பல வழிகளில் திரட்டப்பட்டது. நிலவரி அரசின் முக்கிய வருவாய் ஆகும். விளைச்சலில் ஆறில் ஒரு பாகம் அரசுக்கு வரியாக வசூலிக்கப்பட்டது. இவ்வருவாய்களுடன் சிற்றரசர்கள் செலுத்திய திறையும் அரசாங்கத்தின் வருவாயில் முக்கிய இடம் வகித்தது. மன்னன் போர் புரிந்து ஒரு நாட்டை வென்றால் பெரும்பாலும் அந்நாட்டிலிருந்து செல்வங்களைக் கைப்பற்றுவது வழக்கம். இதுபோன்று கைப்பற்றப்பட்ட செல்வங்களும் அரசிற்கு வருவாய் ஆகும். குற்றம் புரிந்தோரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. பொருள்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது வரி வசூலிக்கப்பட்டது. இது போன்ற வரிகளை மக்கள் பொருளாகவோ அல்லது பணமாகவோ அரசுக்குச் செலுத்தலாம்.

வரி வசூலிப்பதற்கு என்று தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். வாரியத்தில் வரி வசூலித்த அதிகாரி வாரியர் என்று அழைக்கப்பட்டார். வரி பற்றிய கணக்குகளைப் பராமரித்தவர் ஆயக் கணக்கர் எனப்பட்டார். வரிவசூலிப்பது போல் வரிவிலக்கும் சங்க கால அரசியலில் இருந்ததாகத் தெரிகிறது. கோயில் கட்டுதல், நீர்ப்பாசனத்திற்காகக் கால்வாய்கள் மற்றும் குளங்கள் வெட்டுதல், பிற பொதுப்பணிகள் வழங்குதல் போன்ற செலவுகளுக்கு அரசின் வருவாயிலிருந்து செலவு செய்தனர்.

6.2.4 நாணயங்கள் அரசாங்கத்தால் நாணயங்கள் அச்சிடப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. நாணயங்கள் தயாரிப்பதற்கு என்று பொற்கொல்லர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு அரசரும் ஒரு அடையாளத்தை அவர்கள் நாட்டு நாணயத்தில் பொறித்துக் கொண்டனர். இதற்குச் சான்றாகச் சேர நாட்டு நாணயத்தில் வில்லும், சோழ நாட்டு நாணயத்தில் புலியும், பாண்டிய நாட்டு நாணயத்தில் மீனும் பொறிக்கப்பட்டிருந்தன.

பொன் என்பது தங்க நாணயமாகும். தாமரை மொட்டுப் போன்ற நாணயம் காசு என்று கூறப்பட்டது.

6.3 சங்க காலப் பொருளாதாரம்

நாடு வளம் பெற்று இருக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் பொருளாதாரம் செழிப்பாக இருத்தல் அவசியம் ஆகிறது. நாடு வளம் பெறுவதற்குப் பல விதமான தொழில்கள் சிறப்புடன் நடைபெறுதல் அவசியம். சங்க காலத்தில் விவசாயம் மிக முக்கியத் தொழிலாக விளங்கியது. இதனுடன் நெசவுத்தொழில், கால்நடை வளர்த்தல், மட்பாண்டத் தொழில், மீன் பிடித்தல், தோல் வேலை, முத்துக் குளித்தல், உள்நாட்டு வாணிபம், அயல்நாட்டு வாணிபம் போன்ற தொழில்களும் சிறப்புற்று விளங்கின.

6.3.1 விவசாயம் சங்க காலத்தில் விவசாயம் மக்களின் முக்கியத் தொழிலாக இருந்தது.இத்தொழில் நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்தது. இதனைக் கண்ட புலவர்கள் விவசாயத்தின் பெருமையினை எடுத்துக் கூறியுள்ளனர். அக்காலத்தில் பசிப்பிணியைப் போக்குவதற்குக் காரணமான விவசாயம் பெருமைக்குரிய தொழிலாகவும் எண்ணப்பட்டது. விவசாயம் செய்யப்பட்ட தானியங்களில் நெல் முக்கிய இடத்தை வகித்தது. காலம் செல்லச் செல்ல நெற்பயிர் விளைவித்தோருக்குச் சமுதாயத்தில் மதிப்புக் கூடியது. வரகு, தினை ஆகியவை நெல்லுக்கு அடுத்த இடத்தை வகித்தன. கானம், உளுந்து, சாமை, அவரை, மொச்சை, பயறு, கரும்பு ஆகியவைகளும் பயிரிடப்பட்டன. இவைகளோடு பருத்தியும், பலவகைப்பட்ட மூலிகைகளும் விவசாயம் செய்யப்பட்டன. இஞ்சி, மிளகு, தென்னை, கமுகு, புளி, மா, பலா, வாழை போன்றவைகளும் பயிரிடப்பட்டன.

மருத நிலம் நீர் வளம் பெற்றிருந்ததால் அங்கு விவசாயம் மிகுதியாக நடைபெற்றது. ஏனெனில் ஆறுகள் ஓடுவதாலும், நீர் நிலைகள், குளம், ஏரி போன்றவைகள் இருப்பதாலும் இப்பகுதியை மருத நிலம் என்றனர்.

காவிரி ஆறு வளப்படுத்திய பகுதியில் நடைபெற்ற விவசாயத்தைப் பற்றிப் பல சங்க பாடல்கள் கூறுகின்றன. கரிகால் சோழன் காடுகளை அழித்து அவற்றை விளை நிலமாக மாற்றினான். விவசாயம் செழிப்பாக நடைபெற்று வந்ததால் நாட்டின் பொருளாதாரம் சற்று ஓங்கியே காணப்பட்டது.

6.3.2 கால்நடை வளர்த்தல் விவசாய நிலங்களை உழுது சமன் செய்வதற்குக் காளைகளும் எருதுகளும் தேவைப்பட்டன. பாலையும் பாலால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களையும் சங்க கால மக்கள் அன்றாட உணவாக உட்கொண்டனர். ஆடு மாடுகளை மேய்த்துப் பின்பு அவற்றை விற்பனை செய்தனர். தயிர், மோர், நெய் போன்றவற்றைத் தயாரித்தனர். இடையர்கள் இத்தொழிலை மேற்கொண்டனர். கிராமப்புறங்களில் பொருளாதார நிலை இடையர்களால் வளர்ச்சியடைந்திருந்தது என்று கூறலாம்.

6.3.3 நெசவுத் தொழில் சங்க காலத்தில் பருத்தி, பட்டு ஆகியவற்றால் ஆடைகள் நெய்தனர். உயர்ந்த துணிகளைச் சங்க காலத்தில் தயாரித்ததாகச் சங்க நூல்கள் கூறுகின்றன. பெரிபுளூஸ் என்ற நூல் ஆசிரியர் தமிழகத்தின் துணிகளைப் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார். பட்டாடையின் மேன்மை பற்றிப் பொருநராற்றுப்படை கூறுகின்றது. பருத்தி நூல் நூற்பதில் மக்கள் திறமை பெற்றிருந்தனர். நூல் நூற்ற பெண்கள் பருத்திப் பெண்டிர் என அழைக்கப்பட்டனர். ஆடைகளைத் தைப்பதற்கும் அவர்கள் அறிந்திருந்தனர். கலிங்கம் என்னும் துணி வகை கலிங்க நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சங்க காலத்தில் துணிகளின் மூலம் பொருளாதாரமும் உயர்ந்தது.

6.3.4 மட்பாண்டத் தொழில் மட்பாண்டத் தொழில் வளர்ச்சியடைந்திருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் தனிப்பட்ட இடங்களில் குயவர் குடியிருப்புகள் இருந்தன. குயவர்கள் குடம், பானை, குவளை ஆகியவற்றைத் தயாரித்து, காளவாய்களில் சுட்டு எடுத்தனர்.

6.3.5 மீன் பிடித்தல் பரதவர் என்னும் குலத்தார் மீன் பிடிக்கும் தொழிலை மேற் கொண்டனர். கட்டு மரங்களிலும், படகுகளிலும் அவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்தனர். பரதவப் பெண்கள் ஆண்கள் பிடித்து வந்த மீன்களைத் தலையில் சுமந்து கடைவீதிக்குக் கொண்டு சென்று அவைகளைப் பண்டமாற்று முறைப்படி விற்றனர். இதனால் மீன்பிடிக்கும் தொழிலாலும் பொருளாதாரம் மேன்மை அடைந்தது எனலாம்.

6.3.6 தோல் வேலை தோல் பொருட்கள் செய்யும் தொழிலும் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நின்றது. தோலாலும், மரத்தாலும் கால் அணிகள் செய்து கொண்டனர்.

6.3.7 முத்துக் குளித்தல் முத்துக் குளிக்கும் தொழில் மூலமாகத் தமிழ் நாட்டின் வாணிபமும் பொருளாதாரமும் வளர்ந்தன. தமிழ் நாட்டு முத்துக்கள் ரோமப் பேரரசிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

6.3.8 உள்நாட்டு வாணிபம் உள்நாட்டு வாணிபத்திற்குப் பண்டமாற்று முறை பயன்படுத்தப்பட்டது. நெல்லுக்குப் பதில் உப்பு விற்கப்பட்டது. மோரும், நெய்யும் நெல்லுக்கு மாற்றப்பட்டன. தேனும், கிழங்கும் விற்று மீனும், கள்ளும் பெற்றுக் கொண்டனர். நெய்தல் நிலத்துப் பரதவர் உப்புடன் மருத நிலத்திற்குச் சென்று நெல் பெற்றுக் கொள்வர். குறிஞ்சி நிலத்துத் தேனும் கிழங்கும், நெய்தல் நிலத்து மீனுக்கும் கள்ளுக்கும் விற்கப்பட்டன. இவ்வாறான பண்டமாற்று முறையால் உள்நாட்டுப் பொருளாதாரம் தாராளமாக இருந்தது.

6.3.9 அயல் நாட்டு வாணிபம் அயல் நாட்டு வாணிபத்திற்குத் தங்க நாணயம் பயன்படுத்தப்பட்டது. இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருந்ததால் தமிழகத்திற்குச் சாதகமான வாணிபம் நிலவியது. புகார் முக்கியத் துறைமுகப்பட்டினமாகச் சங்க காலத்தில் விளங்கியது. ரோமாபுரியுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த காரணத்தினால் தமிழகத்திற்குப் பெரும் செல்வம் கிடைக்கப் பெற்றது. இதன் காரணமாகச் சங்க காலத்தில் பொருளாதாரம் வளம் பெற்றது. ரோமாபுரி வாணிகர்கள் அரேபியாவின் தென் பகுதியிலுள்ள துறைமுகங்களைப் பயன்படுத்தித் தமிழகத்துடன் நீண்ட நாள் வாணிபத்தில் ஈடுபட்டனர். இதற்குச் சான்று ரோமாபுரி நாணயங்கள் தமிழகத்தில் கிடைக்கப் பெற்றதேயாகும்.

எகிப்தியர், பினீசியர், கிரேக்கர் ஆகியோரும் வாணிபத் தொடர்பு மேற்கொண்டிருந்தனர். மேலும் சீனா, மலேயா, சுமத்திரா போன்ற நாடுகளும் தமிழகத்துடன் வாணிபத் தொடர்பில் இருந்தன. மிளகு, இலவங்கம் போன்ற பொருள்கள் தமிழகத்தின் ஏற்றுமதியில் முதலிடம் பெற்றிருந்தன என்பதனை முந்தைய பாடங்களில் படித்து அறிந்தோம். ஆடை வகைகள், வாசனைத் திரவியங்கள், தந்தம், அரிய வகை மரங்கள், உயர்வகைக் கற்கள், மருந்து முதலியனவும் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களாகும். கண்ணாடி, உலோகப் பாத்திரங்கள், துணி வகைகள், மதுபானங்கள் போன்ற பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பொதுவாக அயல்நாட்டு வாணிபத்தால் பொருளாதாரம் நிறைவு பெற்று இருந்தது.

6.4 சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை

தமிழகத்து வரலாற்றுக்குட்பட்ட காலம் சங்க காலம் ஆகும். இக்காலத்தில் தமிழரின் நாகரிகம் முழு வளர்ச்சியுற்றிருந்தது. மூன்று பேரரசுகள் சங்க காலத்தில் அமைந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இம்மூன்று பேரரசுகளை ஆண்ட மன்னர்கள் தங்கள் நாட்டிற்கு நன்மையைச் செய்து மேன்மையடையச் செய்தனர். ஒவ்வோர் மன்னர்க்கும் இடையே ஆதிக்கப்போட்டி நடைபெற்று வந்தாலும் நாட்டின் நலனில் அக்கறை கொண்டிருந்தனர். இச்சங்க காலத்தின் அரசியலில் மக்களின் பங்கும் அவசியமாகிறது. எனவே அக்கால மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகிறது.

சங்க காலத்தில் நாடானது நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு அந்நிலத்தின் வழியே மக்களும் தங்களது வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர். குறிப்பாகக் காடும் காட்டைச் சார்ந்த இடத்தை முல்லை என்றும், மலையும், மலையைச் சார்ந்த இடத்தை குறிஞ்சி என்றும், வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த பகுதியை நெய்தல் என்றும் பிரித்து அவ்வந்நிலத்தை ஒட்டியே வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறு நிலத்தை ஒட்டிவாழ்ந்த சங்க கால மக்கள் மொழிக்கு மட்டும் இலக்கணம் வகுத்துக் கொள்ளாமல் அவர்களுடைய வாழ்க்கை முறைக்கும் இலக்கணம் வகுத்துக் கொண்டு வாழ்ந்த பெருமைக்குரியவர் ஆவர்.

6.4.1 இல்லறம் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களில் வாழ்ந்த மக்கள் உழைத்துப் பொருள் ஈட்டுவர், காதலிப்பர், மணமுடிப்பர், இல்லற வாழ்வில் இருந்து இன்பமுறுவர். அக்காலத்தில் இல்லற வாழ்க்கையைப் பெரிதும் போற்றினர்.

இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்று கொன்றைவேந்தனில் ஔவையார் குறிப்பிடுவது போல் இல்லறத்தில் சிறந்து இருந்தனர்.

இல்லறத்தைச் சங்க காலத்தில் அகம் எனக் கொண்டிருந்தனர். இதற்குச் சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய அகப்பொருளைப் பாடும் இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன.

களவு, கற்பு எனத் தம் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள் சங்க காலத் தமிழர்கள் ஆவர். தாமாகக் கூடுவது களவு வாழ்க்கை என்றும், பெரியோர்களால் கூட்டப்பட்ட வாழ்க்கை கற்பு வாழ்க்கை என்றும் கொண்டிருந்தனர். மேலும் மடல் ஏறுதல் என்ற ஒன்றினையும் பின்பற்றினர். ஒருவன் தான் காதலித்த பெண்ணை மணக்க வாய்க்காதபோது மடல் ஏறுவது வழக்கமாகும். பனங்கருக்கினால் குதிரை ஒன்று செய்து அதன்மேல் அவன் ஏறி அமர்ந்து தன் காதலியின் வடிவம் தீட்டிய கொடி ஒன்றைத் தன் கையில் ஏந்தித் தெருத்தெருவாகச் செல்வான். அக்குதிரையை ஊர்ச் சிறுவர்கள் இழுத்துச் செல்வர். இதனையே மடல் ஏறுதல் என்பர்.

6.4.2 உணவு அரிசிச் சோற்றையே பண்டைய தமிழர் தம் சிறப்பு உணவாகக் கொண்டனர்.

இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த

அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு

(சிறுபாணாற்றுப்படை :193-194)

வரகு, சாமை ஆகியவற்றைச் சமைத்து உண்டார்கள். நெல்லில் பலவகை தமிழகத்தில் விளைந்தது. சங்க கால மக்கள் உணவில் மிளகு, கடுகு, உப்பு, புளி, வெண்ணெய், கருவேப்பிலை போன்றவைகளைச் சேர்த்துக் கொண்டார்கள். நுங்கு, இளநீர், பலாப்பழம், வாழைப்பழம், மாம்பழம் போன்றவைகளையும் உண்டார்கள். கொள்ளுப் பருப்பு, பயிற்றம் பருப்புகளையும் உணவில் சேர்த்துக் கொண்டார்கள்.

பண்டைத் தமிழகத்தில் ஊன் உண்ணும் பழக்கம் பரவலாக இருந்தது. ஊனுக்காக ஆடு, மான், முயல், மீன், நண்டு, கோழி, உடும்பு முதலியவைகளை உண்டார்கள்.

கள்ளுண்ணும் வழக்கம் பழந்தமிழகத்தில் மிகவும் விரிவாகக் காணப்பட்டது. குறிப்பாக, மன்னர், பாணர், புலவர், கூத்தர், பொருநர், விறலியர் அனைவருமே கள்ளினை உண்டு களித்தனர். இயற்கையாகக் கிடைத்த பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள் ஆகியவற்றையும், யவனர்களால் கப்பலில் கொண்டு வரப்பட்ட தேறலையும் (தேறல் – தெளிந்த மது), காய்ச்சி இறக்கிய மதுவையும் உண்டனர். யவனர் இரட்டைப்பிடிச் சாடிகளில் மரக்கலம் வழியே கொண்டு வந்த மதுவை உண்டதற்கான சான்றுகள் அரிக்கமேட்டுப் புதைகுழிகளில் காணப்பட்டன.

6.4.3 குலம் தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள் மக்கள் செய்துவந்த தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன. இடையர், உழவர், எயினர், கம்மியர், குயவர், குறவர், கூத்தர், கொல்லர், தச்சர், பரதவர், வணிகர், வேடுவர் எனப் பல குலங்கள் தோன்றியிருந்தன. இவர்களுக்குள் திருமணம் செய்து கொள்வதில் தடை ஏதும் இல்லாமல் இருந்து வந்தது என்பர். ஒவ்வொரு குலமும் தமிழகத்தில் விலக்க முடியாத ஓர் உறுப்பாகவே செயல்பட்டு வந்தது.

6.4.4 கல்வி சங்க காலத் தமிழர் கல்வியின் சிறப்பை நன்கு உணர்ந்திருந்தனர். கல்வி எல்லோருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தது. கல்வி கற்பவன் மன்னனாகவும் இருக்கலாம் அல்லது எளிய குடியில் பிறந்தவனாகவும் இருக்கலாம். எந்த ஒரு கட்டுப்பாடும் அக்காலத்தில் காணப்படவில்லை. எக்குலத்தவரும் கல்வி பயிலலாம். ஒவ்வோர் ஊரிலும் கல்வி கற்பிக்கும் கணக்காயர் என்பவர்கள் இருந்தனர். ஊர்தோறும் கல்வி கற்பிக்கும் கணக்காயர் இருக்க வேண்டிய இன்றியமையாமையைத் திரிகடுகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

கணக்காயர் இல்லாத ஊரும்…. …… ….

நன்மை பயத்தல் இல்

(திரிகடுகம், 10)

(கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் இருத்தல் ஒருவனுக்கு எவ்வித நன்மையும் தருவது இல்லை. கணக்காயர்-ஆசிரியர்; பயத்தல்-தருதல்; இல்-இல்லை).

கல்வி பயிற்றுவிக்கப்படும் இடம் பள்ளி எனப்பட்டது. பெரும்பாலும் திண்ணைகளிலேயே பள்ளிகள் நடைபெற்று வந்தன. கல்வி பயிலும்போது மாணவர்கள் ஓலையின் மேல் எழுத்தாணி கொண்டு எழுதினர்.

மாணவர்கள் கல்வி பயிலும்போது இரந்துண்ணும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது என அறிகின்றோம்.

இரந்தூண் நிரம்பா மேனியொடு

(குறுந்தொகை,33:3)

(இரந்து பெறும் உணவினால் நன்கு வளராத மேனியோடு. மேனி-உடம்பு.)

மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பொருள் கொடுத்தும் தொண்டுகள் புரிந்தும் பயின்றனர். அக்காலத்தில் கபிலர், பரணர், நக்கீரர் போன்ற பெரும்புலவர் பலர் வாழ்ந்து வந்தனர். மாணவர்கள் தொல்காப்பியம், காக்கைபாடினியம் ஆகிய இலக்கண நூல்களைப் பயின்றதாகத் தெரிகிறது. ஏரம்பம் என்ற ஒரு கணித நூல் பழந்தமிழகத்தில் வழங்கி வந்தது. அதனை மாணாக்கர் பயின்றனர். இவ்வாறாகக் கல்வி நல்ல நிலையில் இருந்து வந்தது.

6.4.5 கலை பண்டைய காலத்தில் கலைகளில் ஓவியம், இசை, கூத்து, நாடகம் ஆகியவை மிக உயர்ந்த நிலையை எட்டியிருந்ததாகத் தெரிகிறது. ஓவியத்திற்கு என்று ஒரு நூல் வழக்கில் இருந்ததாகவும் கூறுவர். சுவர்களின் மேல் வண்ண ஓவியங்கள் தீட்டியிருந்தனர். எளிதில் அழிந்து போகக் கூடிய வண்ணங்களை ஓவியர்கள் பயன்படுத்தியிருந்தனர்.

இசை, நாடகம், நாட்டியம், கூத்து ஆகிய கலைகளின் வளர்ச்சியைப் பற்றிய விளக்கங்களை சிலப்பதிகார அரங்கேற்று காதையில் விரிவாகக் காணலாம். ஆண்களும், பெண்களும் கூத்திலும், இசையிலும் மேம்பட்டிருந்தனர். மன்னன் முன்பு தம் கலையாற்றலைக் காட்டிப் பெரும் பரிசில்களைப் பெற்று வந்தனர் பழந்தமிழ் மக்கள். கரிகால் சோழனின் மகள் ஆதிமந்தியின் கணவன் ஆட்டனத்தி என்பான் நடனத்தில் ஈடு இணையற்று விளங்கினான்.

நாட்டியம், கூத்து ஆகிய கலைகளைப் பற்றிய பல விரிவான நூல்கள் அக்காலத்தில் தமிழில் இருந்தன. அவை அனைத்தும் காலப்போக்கில் அழிந்து விட்டன.

அரங்கின் முன்பு மூன்று வகையான திரைகள் தொங்கவிடப்பட்டன. திரையை எழினி என்று குறிப்பிட்டனர்.

கூத்தில் பதினொரு வகை இருந்ததாகத் தெரிகிறது. அவையாவன: கடையம், மரக்கால், குடை, துடி, அல்லியம், மல், குடம், பேடு, பாவை, கொடுகொட்டி, பாண்டரங்கம் என்பன.

இவ்வாறாகச் சங்க காலத்தில் கலை நன்கு வளர்ச்சியுற்றிருந்தது.

6.4.6 விளையாட்டு குழந்தைகள் தெருக்களில் மணல் வீடு கட்டி விளையாடினர். தேர் உருட்டி விளையாடினர். இளைஞர்கள் ஏறு தழுவி விளையாடினர். பெண்கள் மணற்பாவை வனைந்து விளையாடினர்; கழங்குகளைக் கொண்டு அம்மானை ஆடி வந்தனர்; ஊஞ்சல் கட்டி ஆடியும் வந்தனர்.

மேலே கூறப்பட்ட பல பிரிவின் கீழ் நாம் சங்க காலத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தனர் என்பது பற்றி நன்றாகக் கற்றுணர்ந்தோம்.

6.5 கடவுளும் சமயமும்

தமிழகத்தில் தமிழருக்கு முன்பு வாழ்ந்திருந்த ஆதிகுடிமக்களின் கடவுள் கொள்கைகளும், தமிழ் மக்களின் சமயக் கொள்கைகளும், ஆரியரின் சமயக் கொள்கைகளும் ஒன்று கலந்து சங்க காலத்து மக்கள் சமுதாயத்தில் இடம் பெற்றிருந்தன. தமிழர் உயிர் துறந்த வீரர்களுக்கு வீரக்கல் நட்டு வணங்கினர். அக்கல் நடுகல் எனப்பட்டது. அந்நடுகல்லுக்கு மலர்மாலை அணிவித்து மயிற்பீலி சூட்டிச் சிறப்புச் செய்தனர்.

அணிமயில் பீலி சூட்டிப் பெயர் பொறித்து

இனி நட்டனரே கல்லும்

(புறநானூறு, 264:3-4)

பழந்தமிழர் பேய், பூதம் போன்றவைகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

கவைத் தலைப் பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க

(பதிற்றுப்பத்து,13:15)

மேலும் தெய்வம் மரத்தின் அடியில் தங்கியிருந்தது என நம்பினர்.

கடவுள் மரத்தமுள் மிடை குடம்பைச்

(அகநானூறு. 270-12)

பழந்தமிழ் மக்கள் தாங்கள் வாழ்ந்து வந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து நிலங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கடவுளர் உண்டு என எண்ணி அவர்களை வழிபட்டனர். குறிஞ்சி நில மக்கள் சேயோனையும், முல்லை நில மக்கள் மாயோனையும், மருத நில மக்கள் வேந்தனையும், நெய்தல் நில மக்கள் வருணனையும், பாலை நில மக்கள் கொற்றவையையும் கடவுளராக வழிபட்டனர்.

ஆரியர்கள் பல வேள்விகளை அரசனின் உதவியுடன் செய்தனர். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னன் சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்திருந்தவன். அம்மன்னன் அந்தணருக்குப் பல வேள்விச் சாலைகளை அமைத்துக் கொடுத்தான். ஆதலால் இவனுக்குப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பெயர் வந்தது. கடவுளை நம்பிவந்த சங்க காலத்தில் ஊழையும், கடவுளையும் பொய்யெனக் கருதியவர்களும் வாழ்ந்து வந்தனர். கடவுள் என்ற சொல் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. சிவனே முழுமுதற் கடவுளாகக் கொள்ளப்பட்டான்.

சிறு தெய்வவழிபாடும் சங்க காலத்தில் நிலவி வந்தது. கள்ளி நிழற் கடவுள், கூளி போன்ற சிறுதெய்வங்களுக்கும் வழிபாடு நடத்தப்பட்டது.

6.6 சங்க காலத்தின் இறுதி

மதுரை மாநகரில் நடைபெற்று வந்த கடைச்சங்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிவுற்றது. பாண்டிய நாட்டில் மிகக் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. இப்பஞ்சம் சுமார் பன்னிரண்டாண்டு நீடித்ததாகத் தெரிகிறது. இதனால் பலர் வெளியில் சென்று வாழ்ந்தனர்.

மேலும் ஆரியப் பண்பாட்டின் கலப்பினால் பழந்தமிழரின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்பட்டது.

களப்பிரர் என்னும் பிரிவினர் தமிழகத்துள் படையெடுத்துச் சேர, சோழ, பாண்டியர்களை வென்று ஆட்சி புரிந்தனர். இவர்களது காலத்தில் பல இலக்கியங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்பர். இக்குலத்தவரின் காலத்தில் யாதொரு முன்னேற்றத்தையும் தமிழகம் அடையவில்லை. பலகலைகள் அழிந்தன. இவைகளோடு பழைய பண்பாடும் அழியத் தலைப்பட்டது. இவ்வாறாச் சங்க கால அரசியல் ஒரு முடிவுக்கு வந்தது.

6.7 தொகுப்புரை

சங்க காலத்தில் மன்னராட்சி அதாவது முடியாட்சிதான் நடைபெற்று வந்தது என்று படித்து உணர்ந்திருப்பீர்கள்.

அரச பதவியானது வாழையடி வாழையாக வந்தது என்பது பற்றியும் அறிந்திருப்பீர்கள்.

சங்ககால மக்கள் பொருளாதார நிலையில் மேம்பட்டு விளங்கினர் என்பது பற்றி விளக்கமாகப் படித்துணர்ந்தீர்கள்.

சங்க காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை பல பிரிவாகப் பிரிக்கப்பட்டுச் சான்றுகளுடன் விளக்கப்பட்டதை நன்கு படித்துப் புரிந்து கொண்டீர்கள்.